Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    3034
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    9
    Points
    15819
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20351
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    39343
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/03/24 in all areas

  1. சில தவறுகளால் தரவுத் தளத்தினை (database) பின்னோக்கி நகர்த்த வேண்டிய தேவையேற்பட்டு விட்டது. இந்த வகையில் நேற்று அதிகாலை 00:00 (ஐரோப்பிய நேரம்) இல் இருந்து இரவு 21 மணி வரை பதியப்பட்ட அனைத்து விபரங்களும் இழக்கப்பட்டு விட்டது. ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றோம்
  2. காவலூர் அகிலன் அகில் ஒரு முறை வீட்டில் உணவு சமைத்திருந்தோம் போராளிகளோடு உண்பதற்கு வந்திருந்தான் அண்ணா மேஜர் கஜன். அதற்குள் அவர்களுக்குள் ஏதோ போட்டி வந்துவிட்டது சரி சுட்டுப் பார்க்கலாம் வாருங்கள் என எல்லோரையும் அழைத்தான் அவர்களோடு அத்தானும் சேர்ந்துகொண்டார். (சாந்தன் அரசியல் துறைப்போராளி காணாமல் ஆக்கப்பட்டவர் பட்டியலில் உள்ளார்) போட்டி இளநீரைச் சுட்டு வீழ்த்த வேண்டும் என்பதே...! (நிற்க ஊருக்குள் துப்பாக்கிகள் பயன்படுத்துவது தடை ஆனால் இவர்கள்தான் ஆயுதங்களை வழங்குபவர்கள் திருத்தம் செய்பவர்கள் ஆதலால் கொஞ்சம் இப்படியான செயல்களைச் செய்வர் பலமுறை தண்டனைகளும் அனுபவித்திருக்கிறான்) எல்லோருமாகச் சுட்டுச் சுட்டு வீழ்த்தி தாங்கள் எப்படிச் சுட்டோம் என்பதைக் கூறிக்கொண்டிருந்தனர் சிலர் காம்புகளின் அடியிலும் சிலர் இளநீரின் முகப்பிலும் என சுட்டிருந்தனர் இறுதியாக அத்தானிடம் துவக்கு நீட்டப் பட்டது அவர் ஒரு அரசியல் போராளி என்பதால் அது (81 )என நினைக்கிறேன். அவரை கொஞ்சம் பகுடியாக கதைத்தும் விட்டனர் ஆனால் அவர் சிரித்தபடி தன் திறமையைக் காட்டினார் துரோணாச்சாரியார் சீடனே என்ன தெரிகிறது என அருச்சுனனிடம் கேட்கும் போது பறவையின் கண்மட்டுமே தெரிகிறது என அருச்சுனன் சொன்னதுதான் எனக்கு அன்று நினைவுக்கு வந்தது எல்லோரும் ஒரு இளநீரைச் சுட்டு வீழ்த்த அவர் ஒரு குலையையே வீழ்த்தினார் . அது தவறு ஒரு இளநீரை வீழ்த்த வேண்டும் என்றவும் அவர்கள் சொன்ன இளநீரை வீழ்த்தி நான் பழய போராளி (1986 காலப்பகுதியில் பயிற்சி பெற்றவர்) அரசியலில் மட்டுமல்ல துப்பாக்கி சுடுவதிலும் நான் ஞானி என்பதை நிருபித்தார் அத்தான். அன்றோடு அவரிடம் போட்டிக்குப் போவைதை விட்டுவிட்டார்கள் எங்கள் வீட்டுக்கு வரும் போராளிகள் அவர்களில் பத்துப் பதினைந்துபேர் வீரமரணம் அடைந்துவிட்டார்கள் ஆனால் ஓரிருவர் புலம்பெயர்தேசத்தில் வாழ்கின்றனர் அவர்களது உலகம் மிக அழகானது என்றே நினைத்திருந்தோம் ஆபத்தானது என்பதை ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. https://www.facebook.com/photo.php?fbid=2537090856468774&set=pb.100005036528824.-2207520000&type=3
  3. பொது இணக்கப்பட்டிற்கான சாத்தியம் சர்வகட்சி மாநாட்டின் இரு குழுக்களும் இணைந்து தமது இறுதியறிக்கையினை பங்குனி 15 ஆம் திகதி ஜெயாரிடம் கையளித்தன. அதனை அனைத்துக் கட்சிகளின் முன்னிலையில் பங்குனி 20 ஆம் திகதி ஜெயார் வெளியிட்டார். தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்ட மூன்று முக்கிய விட‌யங்கள் மிக ஆளமாக கலந்தாலோசிக்கப்பட்டு, கட்சிகளுக்கிடையே நான்கு விடயங்கள் தொடர்பாக பொது இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார். அந்த நான்கு விடயங்களையும் அவர் பின்வருமாறு விளக்கினார், 1. அரசை நடத்துவதற்கான பொறிமுறை. அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் மக்களின் பங்களிப்பினை உறுதிசெய்வதற்காக மத்திய அரசாங்கத்தில் இருக்கும் அதிகாரங்களை பரவலாக்குவது. ஆனால், எந்தெந்த அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது என்பது குறித்த தீர்மானங்கள் இதுவரையிலும் எட்டப்படவில்லை. 2. உள்ளூர் ஆட்சி மன்றங்களின் மீள் உருவாக்கம். ஐக்கிய தேசியக் கட்சி, கிராம அலுவலகர் மட்டத்தில் கிராம மண்டலங்களையும், உதவி அரசாங்க அதிபர் மட்டத்தில் பிரதேச மண்டலங்களையும் தன்னிச்சையாக உருவாக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்த மண்டலங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய விதம் குறித்து இதுவரை ஆராயப்படவில்லை. 3. பிரஜாவுரிமையற்றவர்கள் எனும் நிலையினை இல்லாதொழிப்பது. மகா சங்கத்தினர் இதற்கான பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றனர். 4. இனவன்முறைகளும் பயங்கரவாதமும். வன்முறைகளுக்கான காரணங்களும், அனைத்து வகையான பயங்கரவாத நடவடிக்கைகளும் முற்றாக இல்லாதொழிக்கப்படுதல் அவசியம். ஜெயவர்த்தன குறிப்பிட்ட "பொது இணக்கப்பாடு" என்பதனை அமிர்தலிங்கம் நிராகரித்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைப் பொறுத்தவரை அப்படியொரு பொது இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாக இதுவரையில் தாம் அறியவில்லை என்று அவர் கூறினார். இதற்கு ஜெயார் அளித்த பதில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. "எனது தீர்மானமே பொது இணக்கப்பாடு" என்று அமிர்தலிங்கத்தைப் பார்த்துக் காட்டமாகக் கூறினார் ஜெயார். பின்னர் அங்கிருந்தவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியையும் கொடுத்த ஜெயவர்த்தன, சர்வகட்சி மாநாட்டினை வைகாசி 9 ஆம் திகதிவரை தான் ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அமிர்தலிங்கம் மாநாட்டினை 7 வாரங்களுக்கு ஒத்திவைப்பதற்கான காரணத்தைக் கேட்டார். இதற்குப் பதிலளித்த ஜெயார், சர்வகட்சி மாநாட்டின் இரு குழுக்களும் தமது அறிக்கையினைத் தயாரிக்க 7 வாரங்கள் தேவைப்படுவதாகக் சர்வசாதாரணமாகக் கூறினார். இராணுவ நடவடிக்கைக்காக சர்வகட்சி மாநாட்டினை ஒத்திவைத்த ஜெயார் ஜெயார் சர்வகட்சி மாநாட்டினை வேண்டுமென்றே 7 வாரங்களுக்கு ஒத்திவைப்பதை உணர்ந்த அமிர்தலிங்கமும், குமார் பொன்னம்பலமும் , அதனை ஆட்சேபித்து கூட்டாக அவருக்கொரு கடிதத்தினை பங்குனி 23 ஆம் திகதி அனுப்பினார்கள். அக்கடிதத்தில் அரசாங்கம் மிகப்பெருமெடுப்பில் இராணுவ நடவடிக்கை ஒன்றை நடத்தத் திட்டமிடுவதாக தாம் அஞ்சுவதாகக் குறிப்பிட்டிருந்தனர். அக்கடிதம் பின்வருமாறு கூறுகிறது, "பயங்கரவாதத்தினை முற்றாக அழிக்கிறோம் என்கிற போர்வையில் தமிழர் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும் பெரும் எடுப்பிலான இராணுவ நடவடிக்கை ஒன்றினை அரசாங்கம் நடத்தப்போகின்றது என்கிற அச்சம் தமிழர்களின் மனதில் உருவாகியிருக்கிறது. இந்த இராணுவ நடவடிக்கைகளில் பெருமளவு அப்பாவிகள் கொல்லப்படவிருக்கிறார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்". இந்தக் கூட்டுக் கடிதத்தில் எழுப்பப்பட்டிருந்த அச்சம் நியாயமானது. ஜெயவர்த்தன உண்மையாகவே பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கை ஒன்றினைத் திட்டமிட்டு வந்தார். இஸ்ரேலில் இருந்து இராணுவ பயிற்சியாளர்களையும் , புலநாய்வு அதிகாரிகளையும் இந்த இராணுவ நடவடிக்கைக்காக அவர் தருவித்திருந்தார். தென்னாபிரிக்காவிலிருந்து இராணுவக் கவச வாகன‌ங்களும், நவீன ஆயுதங்களும் பெருமளவில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. இத்தாக்குதல் நடவடிக்கைக்கென்று புதிதாக கஜபா ரெஜிமெண்ட் எனும் படைப்பிரிவும் உருவாக்கப்பட்டு வந்தது. தேசியப் பாதுகாப்பு அமைச்சராக லலித் அதுலத் முதலி நியமிக்கப்பட்டதோடு பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிடவேண்டும் என்கிற தெளிவான கட்டளையும், அதனை அடைவதற்கான அனைத்து அதிகாரங்களும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஜெயாரின் சவாலினை ஏற்ற புலிகள் அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட சவாலினை புலிகளும் ஏற்றுக்கொண்டார்கள். பங்குனி 24 ஆம் திகதி பருத்தித்துறையில் அமைந்திருந்த பொலீஸ் நிலையத்தைப் புலிகள் தாக்கினார்கள். பங்குனி 26 ஆம் திகதி இரு விமானப்படை வீரர்களைக் கொன்றார்கள். சித்திரை 9 ஆம் திகதி முதலாவது கார்க்குண்டுத் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டார்கள். அரச அடக்குமுறைக்கெதிராக பொதுமக்களை அணிதிரட்டி போராட்டங்களை மேற்கொண்டார்கள். ஆத்திர மேலீட்டினால் ஆரியகுளத்தில் அமைந்திருந்த நாகவிகாரையும் பொதுமக்களின் தாக்குதலுக்கு உள்ளானது. இவை அனைத்தும் ஜெயாரை கோபத்தின் உச்சிக்கே இட்டுச் சென்றிருந்தன. தன்மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது அதைவிடவும் பலமாகத் திருப்பித் தாக்குவதே ஜெயாரின் நடைமுறையாக இருந்துவந்தது. பழிவாங்குதலை அரசியலில் ஒரு கொள்கையாகவே அவர் கைக்கொண்டு வந்திருந்தார். ஆகவே, தமிழ்ப் போராளி அமைப்புக்களை, குறிப்பாகப் புலிகளை முற்றாக இல்லாதொழிப்பது என்று அவர் கங்கணம் கட்டினார். தமிழ் மக்கள் மீதான தனது இராணுவப் பழிவாங்கல் நடவடிக்கைக்கான புறச் சூழலை அவர் தனது கட்டுப்பாட்டில் இருந்த ஊடகத்துறையினைக் கொண்டு மிகக் கச்சிதமாக உருவாக்கத் தொடங்கினார். இதற்காக இரண்டுவகையான விடயங்களை அவர் மேற்கொண்டார். முதலாவது தமிழ்ப் போராளி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முற்றாக அழிப்பது. இதனைச் செய்வதற்கு மிதவாதிகளான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இனிமேல் தேவையற்றவர்கள் எனும் நிலையினை மக்களிடையே உருவாக்குவது. ஏனென்றால், போராளிகளைக் கட்டுப்படுத்தும் நிலையினை முன்னணியினர் அப்போது இழந்திருந்தனர். இந்திய சஞ்சிகையான இந்தியா டுடேயிற்கு சித்திரை 30 ஆம் திகதி ஜெயார் வழங்கிய செவ்வியில் முன்னணியிர் தேவை அற்றுப் போய்விட்டது என்று பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார். தென்னிலங்கையின் பல ஊடகக்ங்களுக்கு தான் கொடுத்து வந்த செவ்விகளின் மூலமாகவும், தான் கலந்துகொண்ட பல கூட்டங்களில் ஆற்றிய உரைகள் ஊடாகவும் ஜெயாரின் நிலைப்பாட்டினை நாட்டிற்கு நியாயப்படுத்தும் செயற்பாட்டில் லலித் அதுலத் முதலி ஈடுபட்டார். லங்கா கார்டியனின் மேர்வின் டி சில்வாவுக்கு வழங்கிய செவ்வியொன்றில், "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேசுவதில் என்ன பலன் இருக்கப் போகிறது?" என்ற கேள்வியை லலித் முன்வைத்தார். அதற்கான பதிலையும் தானே வழங்கினார், "அவர்களுடன் பேசுவதால் எந்தப் பயனும் எமக்குக் கிடைக்கப்போவதில்லை. அவர்கள் தமிழ் மக்களை இப்போது பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அவர்கள் பயங்கரவாதிகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். அரசாங்கம் பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் பேசாது" என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும், இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் ஜெயாரின் திட்டத்தினைத் தெளிவாகப் புரிந்துகொண்டனர். அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகனின் "பயங்கரவாத எதிர்ப்பு" நிலைப்பாட்டினை தனக்குச் சார்பாக ஜெயார் பாவிக்கத் தொடங்கியிருக்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டனர். தனக்குச் சார்பான நாடுகளின் உதவியினைக் கொண்டு தமிழ் ஆயுதப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிட ஜெயார் கங்க்கணம் கட்டியிருக்கிறார் என்பது அவர்களுக்கு நன்கு புரிந்தது. தான் பலமிழந்து போய்விட்டதை அமிர்தலிங்கம் உணரத் தலைப்பட்டார். சர்வகட்சி மாநாட்டில் பங்குனி 9 ஆம் திகதி சோபையிழந்து உரையாற்றிய அமிர்தலிங்கம் "எம்மை இந்த மாநாட்டிற்கு பேரம்பேசலில் ஈடுபட அழைத்தவரே எம்மீது வசைபாடி, எமது நம்பகத்தன்மையினை கேள்வி கேட்கும்போது, இம்மாநாடு கூட்டப்பட்டதற்கான உண்மை நோக்கம் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான சமரசத் தீர்வு ஒன்றினைக் காண்பதல்ல என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் உறுதியாக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார். மீண்டும் மீண்டும் குழுக்களை அமைத்து காலத்தைக் கடத்திய ஜெயார் ஜெயவர்த்தனா அரசியல்த் தீர்வில் நாட்டம் கொண்டிருக்கவில்லை என்பது வைகாசி மாதமளவில் இந்தியாவுக்கும், முன்னணியினருக்கும் தெளிவாகத் தெரிந்தது. சமாதான முயற்சிகளில் இருந்து அவர் பின்வாங்கத் தொடங்குகிறார் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டார்கள். வைகாசி 9 ஆம் திகதி பேசிய ஜெயவர்த்தனா தான் இரு குழுக்களை அமைப்பதாக அறிவித்தார். இதன்படி முதலாவது குழு அதிகாரப் பரவலாக்கத்திற்கான பொறிமுறை, வழங்கப்படும் அதிகாரங்கள் , அவற்றின் செயற்பாடுகள் குறித்து ஆராயும். இதற்கு பிரதமர் பிரேமதாச தலைவராக இருப்பார். இரண்டாவது குழு மக்களின் அவலங்கள் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடும். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கான சந்தர்ப்பங்களை அனைவருக்கும் சமமாகப் பகிர்வது, மொழி உரிமையினை நடைமுறைப்படுத்துவது ஆகியன குறித்து இக்குழு தீர்மானம் எடுக்கும். இதற்கு தேவநாயகம் தலைவராக இருப்பார். இதனையடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழ்க் காங்கிரஸ், கம்மியூனிஸ்ட் கட்சி ஆகியவை இதற்கான தமது அதிருப்தியை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தியதோடு, இந்தக் குழுக்களுக்கான அமர்வுகளில் தாம் பங்கெடுக்கப்போவதில்லையென்றும், சர்வகட்சி மாநாடு மீள ஆரம்பிக்கும் வேளையில் தாம் அதில் கலந்துகொள்வதாகவும் அறிவித்தன. சர்வதேசத்தை ஏமாற்றவே முன்னணியினரை ஜெயார் பாவிக்கிறார் ‍- போராளிகள் கூட்டத்தை ஒத்திவைத்துப் பேசிய ஜெயார், "இவ்விரு குழுக்களுக்கும் மிக முக்கியமான செயற்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வடக்கில் வாழும் பெருமளவு இளைஞர்கள் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியன தொடர்பாகச் செயற்படவிருக்கும் குழுமீது அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதிகாரப் பரவலாக்கம் என்பது சில அரசியட் கட்சிகளில் இருக்கும் சிலருக்கான தேவை மட்டுமே. கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் கவனம் செலுத்துவதென்பது எதிர்காலச் சந்ததியினரின் பெரும்பாலானவர்களுக்கு நாம் வழங்கும் உதவியாகும்" என்று கூறினார். ஜெயாரின் கருத்தினை தமிழ் இளைஞர்கள் எள்ளி நகையாடினார்கள். போராளி அமைப்புக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களை ஏளனமாகப் பேசினார்கள். "சர்வதேச சமூகத்தையும், மனிதவுரிமை அமைப்புக்களையும் ஏமாற்றுவதற்காகவே உங்களை ஜெயவர்த்தனா பாவித்து வருகிறார் என்று நாம் உங்களுக்கு முன்னரே கூறியிருந்தோம்" என்று அவர்கள் அமிர்தலிங்கத்தை விமர்சித்தார்கள். இதனை முன்னணியினர் பார்த்தசாரதியின் கவனத்திற்குக் கொண்டுசென்றபோது, "பொறுமையாக இருங்கள்" என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஜெயாரினால் அமைக்கப்பட்ட இக்குழுக்கள் வைகாசியில் ஐந்துமுறை கூடின. ஆனி 1 ஆம் திகதி நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்னணியினரும், தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரும் கலந்துகொண்டனர். இனப்பிரச்சினைக்கான இறுதியானதும் உறுதியானதுமான தீர்வினை உடனடியாக எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமிர்தலிங்கம் இக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழர் தாயகத்தில் அதிகரிக்கத் தொடங்கியிருந்த இராணுவ ஒடுக்குமுறைபற்றியும் சர்வகட்சி மாநாட்டின் கவனத்திற்கு அவர் கொண்டுவந்தார். அமிர்தலிங்கம் முன்வைத்த கோரிக்கையினை ஏறெடுத்தும் பார்க்கவும் ஜெயார் விரும்பவில்லை. அவர் அப்போதுதான் சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு இருவாரகால சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருந்தார். மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்திற்கான நடவடிக்கைகளை ஒழுங்குசெய்வதிலும் அவர் ஈடுபட்டிருந்தார். சீனாவிடமிருந்து பெருமளவு ஆயுதங்களைக் கோரியிருந்த ஜெயார், அவற்றைக் கொள்வனவு செய்வதற்கான நிதியினை ஜப்பானிடமும், தென்கொரியாவிடமும் கேட்டிருந்தார்.
  4. கடின உழைப்பிற்கு கிடைத்த அறுவடை.
  5. விழுகிறது தப்பில்லை, விழுந்தாலும் உடனே எழுந்து நிக்கணும்........! 😂
  6. நன்றியண்ணா, நான் அந்த நேரத்தில் எதனையும் பதிவேற்றவில்லை என்று நினைக்கிறேன். பார்த்த அளவிற்கு எவையும் நீக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
  7. இதற்குப் பெயர் ethnic cleansing இதுதான் இஸ்ரேலின் உண்மையான நோக்கம்.
  8. சில தவறுகளால் தரவுத் தளத்தினை (database) பின்னோக்கி நகர்த்த வேண்டிய தேவையேற்பட்டு விட்டது. இந்த வகையில் நேற்று அதிகாலை 00:00 (ஐரோப்பிய நேரம்) இல் இருந்து இரவு 21 மணி வரை பதியப்பட்ட அனைத்து விபரங்களும் இழக்கப்பட்டு விட்டது. ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றோம். ரஞ்சித் இதை மோகன் பதிந்துள்ளார். உங்கள் பதிவுகள் சரியாக உள்ளது என எண்ணுகிறேன். அடுத்த பதிவைப் போடமுதல் சரி பார்க்கவும்.
  9. சமாதானப் பேச்சுக்களை நீர்த்துப்போகச் செய்யும் ஜெயாரின் சூழ்ச்சி தான் அகப்பட்டிருக்கும் சிக்கலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சிங்களப் பேரினவாதத்தின் வான்கதவுகளை அகலத் திறந்தார் ஜெயவர்த்தன. சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்று தமது பரிந்துரைகளை முன்வைக்க அரசியட் கட்சிகளுக்கு மட்டுமே விடுக்கப்பட்டிருந்த அழைப்பினை இனவாத, மதவாத அமைப்புக்களுக்கும் அவர் விஸ்த்தரித்தார். இதன்படி ஜெயார், மகா சங்கத்தின் உச்ச பீடத்தினையும், அகில இலங்கை பெளத்த காங்கிரஸ், அகில இலங்கை பெளத்த சம்மேளங்களின் ஒருங்கிணைப்பு, அகில இலங்கை இந்து காங்கிரஸ் மற்றும் கிறீஸ்த்தவ முஸ்லீம் மத அமைப்புக்களையும் தமது அரசியல்ப் பரிந்துரைகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஜெயாரின் இந்தச் செயலினை தமிழர்களும் இந்தியாவும் ஒரு சதியாகவே பார்த்தனர். சர்வகட்சி மாநாட்டின் நோக்கத்தை வலுவிழக்கப்பண்ணி, தமிழரின் நிலையினை மேலும் பலவீனப்படுத்தி, சிங்கள பெளத்த தேசியவாதத்தினை பலப்படுத்தும் கைங்கரியமாக இதனை அவர்கள் நோக்கினர். மகாசங்கத்தின் உச்ச பீடமும், ஏனைய பெளத்த சிங்கள அமைப்புக்களும் தமிழருக்கெதிரான கடும்போக்கு நிலையினைக் கைக்கொண்டன. சிங்களத் தீவிரவாதத்திற்கு பெளத்த பிக்குவான கலாநிதி ராகுல தேரை தலைமை தாங்கினார். இணைப்பு சி இயினை முற்றாக நிராகரித்த அவர், மாவட்ட அபிவிருத்திச் சபைகளைக் கூட தமிழர்களுக்கு வழங்கக் கூடாது என்று கூறினார். "மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நாம் இப்போது வழங்கினால், அவர்கள் அதனைக் கொண்டு தமது கனவான தமிழ் ஈழத்தை ஒருநாள் அமைத்துவிடுவார்கள். இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை" என்று அவர் பிரகடனம் செய்தார். சிங்கள பெளத்த இனவாதிகளை சர்வகட்சி மாநாட்டிற்குள் இழுத்துவிட்டதன் மூலம் ஜெயார் எதிர்பார்த்த கால அவகாசத்தை அவரால் பெற்றுக்கொள்ள முடிந்தது. இக்கால அவகாசத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலிய படையினரின் உதவியையும், வெளிநாட்டுக் கூலிப்படைகளின் உதவியையும் அவரால் பெற முடிந்தது. சர்வகட்சி மாநாட்டின் கால எல்லையைத் தொடர்ச்சியாக நீட்டித்துவந்த ஜெயார், ஒவ்வொரு அமர்விற்கும் இடையிலான கால இடைவெளியினையும் நீட்டித்துக்கொண்டார். சர்வகட்சி மாநாட்டினை இருகுழுக்களாகப் பிரித்து காலத்தை இழுத்தடித்த ஜெயார் சர்வகட்சி மாநாடு ஆரம்பித்த 7 ஆம் நளான தை 20 ஆம் திகதி பேசிய ஜெயார், இந்த மாநாடு இரு குழுக்களாகப் பிரிக்கப்படுவதாக அறிவித்தார். முதலாவது குழு அரசாங்கத்தின் அமைப்புக்கள் தொடர்பாகச் செயறபடும் அதேவேளை மற்றைய குழு தீவிரவாதத்தினை முற்றாக அழிப்பதில் ஈடுபடும் என்றும், ஆகவே இந்தக் குழுக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து மாநாட்டு உறுப்பினர்கள் தமது பரிந்துரைகளை முன்வைக்கலாம் என்றும் கூறினார். இக்குழுக்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் சில தின‌ங்கள் நீண்டு சென்றன. முடிவில் பேசிய ஜெயார், இக்குழுக்கள் இரண்டினதும் நோக்கங்கள் ஒருபுள்ளியில் இணையவேண்டும் என்று கூறினார். இக்குழுக்களுக்குள் உள்வாங்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை மிகவும் அதிமனாதாகக் காணப்பட்டது. இவ்விரு குழுக்களையும் சேர்ந்த உறுப்பினர்களை தாம் எடுத்துக்கொண்ட தீர்மானங்கள் குறித்த அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு ஜெயார் பணித்தார். இவ்வறிக்கை உள்ளடக்கப்படவேண்டிய 7 பிரிவுகள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது. 1. நாட்டின் இறைமையினையும், சுதந்திரத்தையும், ஒருமைப்பாட்டினையும் பாதுகாக்கும் பொறிமுறை. இப்பொறிமுறையூடாக அரசாங்கம் நாட்டின் அனைத்து இன மக்களும் நாட்டின் எந்தப் பகுதியிலும் சமாதானமான முறையில் வாழக்கூடியதும், எப்பகுதியிலும் சுதந்திரமாக தொழில் புரியக்கூடியதுமான சூழ்நிலையினை உருவாக்குவது. 2. அனைவருக்கும் கல்வியில் நீதியான சந்தர்ப்பங்களை வழங்குவது. 3. அனைவருக்கும் தொழில்வாய்ப்பில் நீதியான சந்தர்ப்பங்களை வழங்குவது. 4. காணிப்பிரச்சினையினைத் தீர்த்துக்கொள்ள பொறிமுறை ஒன்றை வகுப்பது. 5. நாட்டின் எந்த மூலையிலும் வாழும் ஒருவருக்குத் தேவையான பாதுகாப்பினை வழங்குவது. 6. பொருளாதார வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களை வழங்குவது. 7. ஏனைய விடயங்கள். சர்வகட்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை குலைத்து அதன் நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு ஜெயார் தொடர்ந்து செயற்பட்டு வந்தார். சர்வக்ட்சி மாநாட்டின் இரு குழுக்களுக்கும் அவர் வழங்கிய பணிப்புரையில் தமிழர்களின் உரிமைகள் மிகச் சாதுரியமாகத் தவிர்க்கப்பட்டிருந்தன. அதற்குப் பதிலாக தமிழர்களின் கவலைகள் குறித்துப் பேசலாம் என்கிற நிலையினை ஜெயார் ஏற்படுத்தியிருந்தார். இலங்கைத் தமிழர் சார்பாக இந்தியாவின் தலையீட்டினை முடக்கிய ஜெயார் சர்வகட்சி மாநாட்டின் இணைந்த குழு தை மாதத்தில் இரு தடவைகளும், மாசி மாதத்தில் மூன்று தடவைகளும் பங்குனியில் இரு தடவைகளும் கூடிப் பேசியது. ஆனால், இந்தக் கலந்துரையாடல்கள் எல்லாமே இலக்கற்று , எழுந்தமானமாக நடந்துகொண்டிருந்தன. சாமர்த்தியசாலியான‌ தொண்டைமான், தமிழர்களின் அவலங்களில் முக்கியமானது அவர்கள் தமக்கென்று ஒரு தேசத்தைக் கொண்டிருக்காமைதான் என்று கூறியதோடு, முதலில் அதற்கு அனைவரும் சேர்ந்து தீர்வொன்றினைக் காணவேண்டும் என்று கோரினார். இச்சந்தர்ப்பத்திற்காக அதுவரையில் காத்திருந்த ஜெயாரும், இந்தியாவிற்கும், உலகிற்கும் சர்வகட்சி மாநாட்டின் ஊடாக தான் சிலவிடயங்களைச் சாதித்துவிட்டதாகக் காட்ட இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொண்டார். பின்னர், மகா சங்கத்தின் தலைவர்களை தன்னுடன் பிரத்தியே சந்திப்பொன்றிற்கு ஜெயார் அழைத்தார். இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்களின் நலன்குறித்து மட்டுமே இந்தியா சட்ட ரீதியாக இலங்கையில் தலையீடு செய்ய முடியும் என்று மகா சங்கத்தினரைப் பார்த்து அவர் கூறினார். ஆகவே, நாடற்ற இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு பிரஜாவுரிமையினை வழங்கிவிட்டால் இலங்கையில் இந்தியா தலையீடு செய்யும் உரிமை இல்லாதுபோய்விடும் என்று அவர் வாதிட்டார். மேலும், பிரஜாவுரிமையற்று வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் எண்ணிக்கை மிகச் சிறியதுதான் என்று அவர் தெரிவித்தார். மகாசங்கத்தினரும் அதனை ஏற்றுக்கொண்டனர். சர்வகட்சி மாநாட்டுத் தீர்மானங்களில் பெளத்த மகாசங்கம் செலுத்திய அதிகாரம் சர்வகட்சி மாநாட்டின் பேச்சாளராக லலித் அதுலத் முதலி நியமிக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு நாள் மாநாட்டின் முடிவிலும் அவர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். இப்பத்திரிக்கையாளர் சந்திப்புக்களுக்கு நானும் போயிருந்தேன். அன்றைய அமர்வில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமையினைத் தீர்க்க மாநாட்டின் உறுப்பினர்கள் தீர்மானித்திருப்பதாகக் கூறினார். இதனை மாநாட்டின் முதலாவது பெரிய வெற்றியென்றும் புகழ்ந்தார். அவர் பேசிக்கொண்டிருக்கையில் பத்திரிக்கையாளர் கூட்டம் நடந்துகொண்டிருந்த அறையின் கதவு மெல்லத் திறந்தது. மகாசங்கத்தின் மகாநாயக்கர்கள் வெளியே நின்றிருப்பது அனைவருக்கும் தெரிந்தது. சிங்கள பெளத்தர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட கலாநிதி ராகுல தேரை எனும் பிக்கு பத்திரிக்கையாளர்களிடம் தாமும் பேச வேண்டும் என்று லலித் அதுலத் முதலியைப் பார்த்துக் கூறினார். லலித்தும் அதற்கு இணங்கினார். மகாசங்கத்தின் அதியுச்ச பீடத்தின் பரிந்துரைக்கு அமைய சர்வகட்சி மநாட்டு உறுப்பினர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினையினைத் தீர்த்துவைக்க ஏகமனதாகச் சம்மதித்துவிட்டதாக அறிவித்தார். ஆகவே, இலங்கை விவகாரத்தில் இந்தியா இனிமேல் தலையீடு செய்வதற்கு எந்த முகாந்திரங்களும் இல்லையென்றும் அவர் தீர்க்கமாகக் கூறினார். தொடர்ந்து பேசிய ராகுல தேரை, இலங்கைத் தமிழர்களின் எமது நாட்டின் பிரஜைகள். ஆகவே, அவர்கள் சார்பாக இந்தியா இலங்கையில் தலையீடு செய்ய எந்த உரிமையும் கிடையாது என்றும் வாதிட்டார். மகா சங்கத்தின் அதியுச்ச அமைப்பினால் விடுக்கப்பட்ட பரிந்துரை பின்வருமாறு கூறியது, "தம்மை இந்தியர்கள் என்று அழைத்துக்கொள்ளும் எந்தவொரு தனிநபரோ அல்லது குழுவோ எமது நாட்டில் இருக்க முடியாது. சிறிமா சாஸ்த்திரி ஆகியோரிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி அவர்களை அவர்களின் தாய்நாடான இந்தியாவிற்குத் திருப்பியனுப்பிவிடுவதன் ஊடாகவும், மீதமிருப்போருக்கு இலங்கைப் பிரஜாவுரிமையினை வழங்குவதன் ஊடாகவும் இதனை நாம் நிவர்த்திசெய்துகொள்ள முடியும். பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டிய இந்திய வம்சாவளித் தமிழர்களின் எண்ணிக்கை மகாசங்கத்தினர் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக இருந்தபோதிலும், அவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமையினை வழங்கி, பிரச்சினையினைத் தீர்த்துவைக்க மகாசங்கத்தினர் தடைவிதிக்கப்போவதில்லை" என்று கூறியிருந்தது. இந்தியாவுக்குத் திருப்பியனுப்புவதற்காக அடையாளம் காணப்பட்டிருந்த தமிழர்களை திருப்பியனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கையினையும் மகாசங்கத்தினரின் இந்த பரிந்துரை கோடிட்டுக் காட்டியிருந்தது. 1964 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் சிறிமாவுக்கும் சாஸ்த்திரிக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி 975,000 இந்திய வம்சாவளித் தமிழர்களில் 600,000 பேரை இந்தியாவுக்குத் திருப்பியனுப்ப இருந்ததுடன் மீதி 375,000 பேருக்கும் இலங்கைப் பிரஜாவுரிமையினை வழங்க இலங்கை ஒத்துக்கொண்டிருந்தது. இந்தியப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கவென்று வழங்கப்பட்ட 15 வருட கால அவகாசத்தில் 504,000 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். மீதி 96,000 பேரும் நாடற்றவர்களாகவே இருந்தனர். ஆகவே தொண்டைமான், இந்திய பிரஜாவுரிமையற்றிருந்த 96,000 பேருக்கும் இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டிருந்தார். மகாசங்கத்தினர் இலங்கைப் பிரஜாவுரிமை வழங்க சம்மதித்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் இவர்கள் தான்.
  10. பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையிழந்த தமிழர்கள் மூன்று படிப்பினைகள் 1984 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வகட்சி மாநாட்டிலிருந்து மூன்று முக்கிய படிப்பினைகளை தமிழ் மக்கள் கற்றுக்கொண்டார்கள். சிங்கள மக்களும், பெளத்த மத குருக்களும் ஒருபோதுமே தமிழர்களின் அபிலாஷைகளை வழங்க விரும்பப்போவதில்லை, சிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களின் பிரச்சினையினை அரசியல் ரீதியாகத் தீர்ப்பதற்கான எந்த விருப்பமும் இல்லை, தமிழ் மக்களின் பாதுகாப்பும், நலன்களும் தமிழ்ப் போராளிகளின் ஆயுத பலத்திலேயே தங்கியிருக்கிறது ஆகிய மூன்றுமே அந்தப் படிப்பினைகளாகும். 1984 ஆம் ஆண்டு தை மாதம் 10 ஆம் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பெரும் எடுப்புடன் சர்வகட்சி மாநாடு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் ராணுவப் பாதுகாப்புடன் மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை மண்டப வாயிலில் நான் சந்தித்தேன். மாநாடு குறித்த அமிர்தலிங்கத்தின் எண்ணங்கள் குறித்து அவரிடம் வினவினேன். "சர்வகட்சி மாநாடு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும், தமிழரைப் பொறுத்தவரையில் ஒரு திருப்புமுனையாக அமையும்" என்று மிகுந்த நம்பிக்கையோடு அவர் பதிலளித்தார். சர்வகட்சி மாநாட்டின் மீது அமிர் பெருத்த நம்பிக்கை வைத்திருந்தார். மாநாட்டின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு முடிந்தபின்னர் என்னுடன் பேசிய அமிர், "ஜெயவர்த்தன விசாலாமான‌ புன்னகையோடு என்னை மாநாட்டிற்கு வரவேற்றார்" என்று மகிழ்வுடன் கூறினார். அருகிலிருந்த சிவசிதம்பரமோ, "அவ்வளவும் நஞ்சு" என்று விரக்தியுடன் கூறினார். ஆனால், மாநாட்டின் அரம்ப நாள் அன்றே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் எல்லோருமே சிவசிதம்பரத்தின் கூற்றையே பிரதிபலித்தனர். தமிழர்களை ஜெயார் முற்றாகக் கைவிட்டு விட்டதாக அவர்கள் உணர்ந்தனர். சர்வகட்சி மாநாட்டினை ஜெயார் நடத்துவதே சிங்களவர்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் என்று அவர்கள் உணரத் தலைப்பட்டனர். மாநாட்டினை ஆரம்பித்துவைத்து முதலாவதாகப் பேசிய ஜெயார், மாநாட்டின் உண்மையான குறிக்கோள் எதுவென்பதை தனது பேச்சில் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டார். "முதலாவது நாம் எமது நாட்டின் இறையாண்மையினையும், சுதந்திரத்தையும் எவ்விலை கொடுத்தாவது காத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக நாட்டின் ஒருமைப்பாடு இதுவரை இருப்பதுபோல தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். மூன்றாவதாக, பிரிவினைவாதத்தினையும் வன்முறையினையும் முற்றாக அழிக்க அனைத்து அரசியற் கட்சிகளும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்" என்று அவர் கூறினார். ஒற்றையாட்சி நாட்டிற்குள் வாழ்வதை தமிழர்கள் முற்றாக எதிர்த்தே வந்திருந்தனர். ஆனால், நாட்டைத் தொடர்ந்தும் ஒற்றையாட்சிக்குள் ஒன்றுபட்ட நாடாக வைத்திருப்பதுதான் மாநாட்டின் முக்கிய குறிக்கோள் என்று ஜெயார் கூறியதன் மூலம் வெளிப்படையாகவே தமிழரின் கோரிக்கையினை நிராகரித்திருந்தார்.மேலும், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தீர்வாக எதனையும் அவர் முன்வைக்க விரும்பவில்லை. அத்துடன், இணைப்பு "சி" இல் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை அடிப்படையாக வைத்தே முன்னணியினை இந்த மாநாட்டில் பங்கெடுக்கிறார்கள் என்று தெரிந்தும் அது பற்றிப் பேசுவதையும் அவர் முற்றாகத் தவிர்த்தார். ஜெயாரரின் பேச்சைக் கேட்ட அமிர்தலிங்கம் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார். பேச்சுவல்லமை கொண்ட தமிழ்க் காங்கிரஸின் உறுப்பினர் குமார் பொன்னம்பலமோ இணைப்பு "பி" மற்றும் இணைப்பு "சி" பற்றிக் கேள்வியெழுப்பியதுடன், "இந்த ஆவணங்களை தயாரித்தது யார்?" என்று கேள்வியெழுப்பினார். அதற்கு சாதுரியமாகப் பதிலளித்த ஜெயரவர்த்தன, "ஓ, அவையா? அவைதான் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவிருந்த ஆரம்ப ஆவணங்கள்" என்று கூறினார். "அப்படியானால், அவற்றினைத் தயாரித்தது யார்?" என்று குமார் பொன்னம்பலம் மீண்டும் கேட்டார். "மாநாட்டின் செயலாளரே அதனைத் தயாரித்தார்" என்று ஜெயார் பதிலளித்தார். அதற்கு நகைச்சுவையாகப் பதிலளித்த குமார் பொன்னம்பலம், "மாநாட்டிற்கென்று ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட ஆவணங்கள் எல்லாமே பெற்றொர்கள் என்றால், இணைப்பு சி மட்டும் அநாதைப் பிள்ளையாக நிற்கிறது" என்று முணுமுணுத்தார். இடைமறித்த தொண்டைமானோ இணைப்பு "சி" இனை தான் இந்த மாநாட்டிற்கான ஆவணமாகக் கருதுவாதக‌த் தெரிவித்தார். மாநாட்டில் கூட்டாகப் பேச முன்வந்த தமிழ்த் தலைவர்கள் மாநாட்டின் முதல் சில நாட்கள் கட்சித் தலைவர்கள் தமது ஆரம்ப அறிக்கைகளை பேச ஒதுக்கப்பட்டிருந்தன. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தை மாதம் 18 ஆம் திகதி தாம் செயற்பட வேண்டிய முறைகுறித்து கூடிப் பேசினார்கள். அதன்படி அமிர்தலிங்கம், குமார் பொன்னம்பலம், தொண்டைமான் ஆகியோ இணைப்பு சி இயினை முற்றாக ஏற்றுக்கொள்வதுடன் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சுயாட்சி பொறுந்திய பிராந்தியங்களை தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைத்து பேசி அழுத்தம் கொடுப்பதென்று முடிவாகியது. தை 19 ஆம் திகதி இந்த மூன்று தலைவர்களினாலும் அழுத்தம் கொடுத்துப் பேசப்பட்ட விடயங்கள் இணைப்பு சி இல் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை முற்றாக நடைமுறைப்படுத்துவதாகவே இருந்தது. அமிரின் மாநாட்டு உரை அமிர்தலிங்கமே முதலாவதாகப் பேசினார். "இணைப்பு சி இல் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே நாம் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கிறோம். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் எமது அவலங்களையும், பிரச்சினைகளையும் முற்றாகத் தீர்க்கப் போதுமானவையாக இல்லாதபோதும், அதனை அடிப்படையாக வைத்து தொடர்ந்தும் பேரம்பேசலில் ஈடுபடலாம் என்கிற எண்ணத்திலேயே இங்கு வந்திருக்கிறோம்" என்று பேசினார். தனது ஆரம்ப உரையினை அமிர் இரு பாகங்களாக வகுத்திருந்தார். முதலாவது பகுதியில் தமிழர்கள் சரித்திர காலம் தொட்டு வடக்குக் கிழக்கில் தம்மைத்தாமே ஆண்டு வந்த தனித்தன்மையான தேசத்து மக்கள் என்று கூறினார். 1619 இல் போர்த்துக்கேயரினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழரின் தேசம் பின்னர் ஒல்லாந்தராலும், அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயரினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடந்தது என்றும் அவர் கூறினார். அதுவரை தனித்தனியாக இருந்த தமிழ்த் தேசத்தையும், சிங்கள தேசங்களையும் 1833 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நிர்வாகத் தேவைக்காக ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தமிழர்களையும் சிங்களவர்களையும் சமமான இனங்களாக நடத்தினார்கள் என்றும் அவர் விளக்கினார். ஆனால், 1948 இல் நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் சிங்களவர்களால் தமிழர்கள் இரண்டாம்தர மக்களாக நடத்தப்பட்டதோடு, வஞ்சிப்பிற்கும் உள்ளானார்கள் என்று கூறினார். பின்னர் தமிழர் மீது நடத்தப்பட்ட சிங்களவர்களின் புறக்கணிப்பையும், வஞ்சகத்தையும் தொடர்ச்சியாகப் பட்டியலிட்டுக் கூறினார். தனது பேச்சின் இரண்டாவது பகுதியில் தமிழர்கள் இழக்கப்பட்ட தமது உரிமைகளுக்காக நடத்திய அகிம்சை வழி ஜனநாயகப் போரட்டங்களின் சரித்திரத்தைப் பட்டியலிட்டார் அமிர்தலிங்கம். மேலும், தமிழரின் ஜனநாயகவழிப் போராட்டங்களை அரசும், சிங்களக் காடையர்களும் வன்முறைகளைப் பாவித்து மிருகத்தனமாக அடக்கிய வரலாற்றையும் அவர் பட்டியலிட்டார்.தமிழர்கள் மீதான சிங்களவர்களின் வன்முறையே தமிழர்கள் தமது பாதுகாப்பினையும், நலன்களையும் இருப்பினையும் பாதுகாத்துக்கொள்ள தனிநாட்டைத் தவிர வேறு வழியில்லை எனும் எண்ணும் நிலைக்குத் தள்ளிச் சென்றதாக அவர் கூறினார். தனிநாட்டிற்கு மாற்றீடான, வடக்குக் கிழக்கில் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் தீர்வொன்று முன்வைக்கப்படுமிடத்து தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட தமிழர்கள் தயாராக இருப்பதாகக் கூறினார் அமிர்தலிங்கம். குமார் பொன்னம்பலத்தின் உரை குமார் பொன்னம்பலம் அடுத்ததாகப் பேசினார். தமிழர்களின் கோரிக்கை தனிநாடுதான் என்று அவர் கூறினார். மொத்தத் தமிழினமும் தனிநாட்டுக் கோரிக்கையின் பின்னால் அணிதிரண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால், சிங்களவர்களைப் போன்று பாதுகாப்புடனும், நலன்கள் விட்டுக் கொடுக்கப்படாமலும், சுய கெளரவத்துடனும், சம பங்காளிகளாக‌ சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ‌ தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமிடத்து தமிழர்கள் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் குமார் கூறினார். ஏனைய கட்சிகளிடமிருந்து இணைப்பு சி இற்குக் கிடைத்த ஆதரவு பின்னர் பேசிய தொண்டைமானும் அப்துள் அஸீஸும் இணைப்பு சி இல் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வாக இருக்கும் என்று தாம் நம்புவதாகக் கூறினர். இடதுசாரிகளான லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்மியூனிஸ்ட் கட்சி ஆகியனவும் இணைப்பு சி இனை வரவேற்றிருந்தன. அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் மாகாண சபைகளை அமைப்பதை தமது கட்சி ஆதரிக்கும் என்று கூறியது. இணைப்பு சி இற்கு மாநாட்டில் பங்கெடுத்த பெரும்பாலான கட்சிகள் ஆதரவளிக்க ஆரம்பித்ததையடுத்து ஜெயாரும் பிரேமதாசவும் கலக்கமடைந்தனர். இந்த சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வகையான அசெளகரியத்திற்கு முகம் கொடுத்தது என்பதனை தை மாதம் 25 ஆம் திகதி பிரேமதாச வழங்கிய உரை சுட்டிக் காட்டியிருந்தது. மேலுழுந்தவாரியாகப் பேசிய பிரேமதாச, எந்தவொரு முடிவிற்கு முன்வராதும் பிடிகொடுக்காத வகையிலும் பேசினார்.
  11. போதமும் காணாத போதம் – 07 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை மாலையில் சங்கிலி பெரியப்பாவை புலிகள் இயக்கம் சுட்டுக்கொன்றது. மூன்று பிள்ளைகளையும் அழைத்துச் சென்று வீதியில் கிடந்த கணவனின் உடலத்தின் முன்பாக விழுந்தரற்றினாள் கிடுகு பெரியம்மா. ஊர்ச்சனங்கள் கூடி அவளையும் பிள்ளைகளையும் ஆற்றுப்படுத்தி, சங்கிலியின் இறுதிச் சடங்கை செய்து முடித்தனர். சங்கிலி பெரியப்பா ஆயுதமேந்திய வேறொரு அமைப்பைச் சேர்ந்தவர். அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. அந்த நடவடிக்கைகளில் சங்கிலிக்கு பெரிய பங்கிருந்தது. பிறகான நாட்களில் தான் சார்ந்திருந்த ஆயுத அமைப்போடு முரண்பட்டு புலிகளிடம் சரணடைந்து விசாரணைகளைச் சந்தித்தார். உயிருக்கு அச்சமற்று உலகியலோடு மட்டும் அமைந்திருந்தார். கிணறு வெட்டுவது, வேலி அடைப்பது, வீடு வேய்வதென கூலியானார். ஆனாலும் மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டார். “பெடியள் உங்களில எதோ ஐமிச்சப்படுறாங்கள். அதுதான் இப்பிடி அடிக்கடி விசாரிக்கிறாங்கள். எனக்கு பயமாயிருக்கு” என்றிருக்கிறாள் பெரியம்மா. பதிலுக்கு “நான் பயப்பிடேல்ல, அதிகபட்சம் சுடுவாங்கள். அதுதானே நடக்கும்” என்றிருக்கிறார். பெரியம்மா மூன்று பிள்ளைகளுக்கு நடுவில் அவரை உறங்குமாறு கூறினாள். அவளுக்கு ஆறுதல் தருகிற ஒன்றைச் செய்வதில் பெரியப்பா பின் நின்றதில்லை. அப்படித்தான் உறங்கவும் செய்தார். குளித்து முடித்து குளத்திலிருந்து வீடு நோக்கி நடந்து சென்றவரை போராளிகள் அழைத்துச் சென்றனர். பெரிய புளியமரத்தின் கீழே நிற்கவைத்து அவருடைய தலைக்கு மேல் துரோகியென எழுதப்பட்ட சிறிய இரண்டடியிலான கரும்பலகையை அறைந்தார்கள். துரோகம் ஒழியட்டும் எனத்தொடங்கும் மரண தண்டனை அறிக்கையை வாசித்து முடித்த குரல் ஓய்வதற்குள் தோட்டாக்கள் பாய்ந்தன. வெளியேறிக் கொதித்த குருதியை வெடியோசைகள் அறைந்தன. சங்கிலி பெரியப்பாவின் உடலுக்கு கொள்ளிவைக்கும் போது சந்தனனுக்கு ஏழு வயது. மிச்ச இருவரும் அவனிலும் இளையவர்கள். தியாகம் துரோகம் எதுவுமறியாத மழலைகள். எச்சில் சிந்தும் அமுத உயிரிகள். சந்தனன் தோளில் கொள்ளிக்குடத்தை வைத்து சங்கிலி பெரியப்பாவின் உடலத்தை மூன்றுமுறை சுந்திவந்தான். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் தன்னிடமிருந்த கத்தி முனையால் கொள்ளிக்குடத்தைக் கொத்தினார் மார்க்கண்டு மாமா. சந்தனன் கொள்ளி வைத்து திரும்பிப் பார்க்காமல் அழைத்துச் செல்லப்பட்டான். ஆனாலும் அவன் எரியும் சிதையை ஒருகணம் திரும்பி நின்று பார்த்தான். தீயென எரியும் குருதி. நிணமுருக்கும் சுவாலை. மஞ்சள் சிவப்பென எழுந்தாடும் ஒரு போழ்தெனப் பிணையும் வெளிச்சம். அப்பாவென்று அழைத்தான். மார்க்கண்டு மாமா அவனை அணைத்தபடி கண்ணீர் உகுத்தார். காடாற்றும் சடங்குக்காக போயிருக்கையில் சாம்பலை அள்ளி சிறு மண்முட்டியில் போட்டனர். சந்தனன் கையில் வைத்திருந்து அந்த முட்டியைப் பார்த்தான். குருதி தளும்பிக் கிடந்தது. ரத்தமென பயந்தடித்து முட்டியைத் கை தவறிக் கீழே போட்டான். சாம்பல் மண்ணில் கலந்தது. மண்ணெனக் கிடந்த சாம்பலை அள்ளி வேறொரு முட்டியில் அடைத்து கடலில் கரைத்தனர். ஒரு பேரலையின் சீற்றம் சாம்பலை உள்வாங்கிக் கொண்டது. சந்தனன் ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தான். குருதியலைகள். ஓலங்கள் நிரம்பிய உடலங்கள் அதில் சுருள்கின்றன. திடுமென கடலின் இரைச்சல் கூடி “துரோகி சங்கிலி” என்று ஒலித்தது. கரையொதுங்கிக் கிடந்த மண்டையோடொன்றையெடுத்து வெறிகொண்டு வீசினான். “அப்பாவை ஏனம்மா சுட்டவே” சந்தனன் கேட்டான். காற்று மோதும் குப்பி விளக்கு அணையாது தப்ப “ துரோகம் செய்திட்டாராம். துரோகியாம்” பெரியம்மா சொன்னாள். “துரோகமென்றால் என்னம்மா” இதனைக் கேட்ட சந்தனனை அணைத்துச் சொன்னாள் “ நாங்கள் மனுஷராய் பிறந்தது. அதுவும் இந்த மண்ணில பிறந்தது. இதுதான் துரோகம்” என்றாள். நிலவேறி அலை மடித்து வெறித்திருந்த கடலில் சாம்பல் முட்டி மிதந்தது. இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தேழாம் திகதி. இருபத்தோராவது வயதில் சந்தனன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான். அவன் எழுதிய கடிதம் செத்தையில் செருகியிருந்தது. பெரியம்மா அதனை வாசித்ததும் அச்சத்தில் துண்டு துண்டாய் கிழித்து அடுப்பை மூட்டி ஒவ்வொன்றாக சாம்பலாக்கினாள். பிள்ளைக்கு எதுவும் நேரக்கூடாதென தெய்வத்திடம் இறைஞ்சி அழுதாள். ஏனைய இரண்டு பிள்ளைகளையும் வெளியே செல்ல வேண்டாமென கட்டளையிட்டாள். தன் பிள்ளையிடம் துளிர்த்த வன்மத்தை எண்ணி கசந்து அழுதாள். ஏற்கமுடியாதவொரு சூளுரையை சந்தானம் அளித்திருக்கிறான். அவனுள் தலைவிரித்து நிற்கும் அனலரவத்தின் விஷம் முறிக்க ஏது வழி? இதற்கெல்லாம் காரணம் தானன்றி வேறு யார்? சொல்லிச் சொல்லி வளர்த்தேனா? என்று நெஞ்சிலடித்து அழுதாள். ரத்தத்தால் பழியழிக்கும் வெறியூட்டிய மார்போ தன்னுடையதென தாய்மை கருக பேதலித்தாள். அன்றிரவு அடிப்படை ஆயுதப் பயிற்சிக்கான முகாமில் சேர்க்கப்பட்டான் சந்தனன். அங்கே பேண வேண்டிய ஒழுங்குகளையும், மீறல்களையும் பயிற்சி ஆசிரியர்களில் ஒருவர் அறிவுறுத்தினார். தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சந்தனன் அமர்ந்தான். அதிகாலையில் விசில் சத்தம் கேட்டதும், எழுந்திட வேண்டுமென கூறப்பட்டிருந்தது. மெல்லக் கண்களை மூடி உறங்கிப் போனான். ஆனால் பெரியம்மா இயல்பு குலைந்திருந்தாள். ஒருதடவையேனும் அவனை நேரில் சந்தித்து அறிவுரை சொல்லவேண்டுமென பதகளித்தாள். அம்மாவைச் சந்திக்க வீட்டிற்கு வந்தாள். அம்மாவைத் தனியாக அழைத்துச் சென்று நடந்தவற்றை சொன்னாள். “உடனடியாக சந்திக்க வாய்ப்பிருக்குமோ தெரியாது. எண்டாலும் கேட்டுப் பார்க்கிறேன்” என்றாள் அம்மா. வெளியே துப்ப இயலாத ஒரு நஞ்சைத் தன்னுள்ளே விழுங்க இயலாமலும் துடித்து நின்றாள் பெரியம்மா. சந்தனனுக்கு இயக்கத்தைப் பிடியாது. எப்போதும் குற்றம் சொல்லுவான். தந்தையைக் கொன்றவர்கள் என்பதைத் தாண்டியும் இயக்கத்திடம் குறைப்பட அவனுக்கு காரணங்களிருந்தன. அந்தப் புளியமரத்தை தாண்டும் போதெல்லாம் “அப்பா கடைசியா இதில தான் படுத்திருந்தவர். ரத்தம் வேரடி முழுவதும் பரவியிருந்தது. குப்புறக்கிடந்த வாயில் ரத்தமும் மண்ணும் ஒட்டிக்கிடந்தது. ரத்தம் குடித்து செழித்து நிற்கும் புளியம் மரம்” என்பான். ஆனால் இன்று இயக்கத்தில் இணைந்திருக்கிறான். அவனுள் நிகழ்ந்திருப்பது திரிபென நம்ப இயலவில்லை. அம்மாவும் பெரியம்மாவும் இரவோடு இரவாக ஓட்டோவில் புறப்பட்டனர். “நான் வரப் பிந்துமடா, நீ படு” என்ற அம்மாவின் கண்களில் ஒருவிதமான அவசரத்தைப் பார்த்தேன். “எங்க போறியள்” கேட்டேன். “கிளிநொச்சிக்கு, ஏன் நீயும் வரப்போறியோ” என்று அம்மா கேட்டாள். அது அழைப்பல்ல. இதற்கு மேல் கேளாதே என்கிற சமிக்ஞை. ஓட்டோ புறப்பட்டது. பெரியம்மாவின் கண்ணீர் வெளியெங்கும் பறந்தது. இரண்டு கைகளையும் கூப்பி ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லத் தொடங்கினாள். “இப்ப நடக்கிறதுக்கெல்லாம் நீ தான் காரணம் அக்கா” என்றாள் அம்மா. பெரியம்மா எதுவும் பதில் கதைக்கவில்லை. மூன்று மாத ஆயுதப் பயிற்சி முடித்த சந்தனனை சந்திக்க நாங்கள் போயிருந்தோம். உடல் பெருத்திருந்தான். புலிச்சீருடை அணிந்து மிடுக்கேறி நின்றான். பெரியம்மா அவனது கைகளைப் பிடித்து “சந்தனா, கடிதத்தில நீ எழுதியிருந்த எல்லாத்தையும் மறந்திடு. உன்னைத் தெய்வமாய் பார்த்தனான். ஆனா ரத்தம் கேக்கிற தெய்வமில்லை நீ” என்றாள். அந்தச் சொற்களில் எவற்றையும் பொருட்படுத்தவில்லையென அவன் உடல்மொழி கூறியது. தன்னுடைய கழுத்தில் கிடக்கும் குப்பியை தாயிடம் காட்டி “ இது கழுத்தில மட்டுமில்ல, எனக்குள்ளேயும் கிடக்கு” என்றான். பெரியம்மா அவனை கன்னத்தில் அறைந்து “நீ செத்தொழிஞ்சாலும் கவலையில்லை” என்று கத்தியபடி வெளியேறினாள். பெரியம்மாவுக்கு பின்னால் ஓடினேன். அம்மா சந்தனனிடம் “ நீ அவனைச் சுட்டுப் பழி தீர்க்க நினைக்கிறாய் எண்டு தெரிஞ்சாலே, அவ்வளவு தான்” என்றாள். என்ன நடந்தாலுமென்ன சாகத்தானே போகிறேன். அதிகபட்சம் என்ன செய்வார்கள். சுடத்தானே செய்வார்கள்” என்றான். சங்கிலிப் பெரியப்பாவை சுட்டுக்கொன்றவர் சரித்திரன். இன்றைக்கு முக்கிய பொறுப்பொன்றில் உள்ளவர். அன்று துரோகிகளை அழித்தொழிக்கும் பணியில் துடிப்புடன் இருந்தவர். இத்தனை வருடங்களில் பெரியம்மா சந்தனனுக்கு அடிக்கடி சொன்ன பெயர் சரித்திரன். எங்கு சரித்திரனைக் கண்டாலும் “அங்க பார், அவன் தான்” என்பாள். அப்படித்தான் சந்தனன் குருதியில் தீ மூண்டது. மெல்ல மெல்ல கங்குகள் பிணைந்து, காற்றில் தப்பிப் புகைந்து எரியத்தொடங்கியது. “அப்பாவைச் சுட்டவனை சுடுவேன்” என்று சந்தனன் முதன்முதலில் சத்தியம் செய்தது அந்தப் புளியமரத்தில் தான். அதற்கு ஒரே வழியாக இயக்கத்தில் சேர்ந்தான். ஆதிப்பலிக்கு ரத்தம் கேட்கும் உக்கிரம் அவனுள் உயர்ந்தது. சந்தனன் சொன்னதும் அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவனிடம் தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னாள். “இஞ்ச பார் சந்தனன், நீ சின்னப்பெடியனில்லை. உனக்கு நான் சொல்றது விளங்குமெண்டு நினைக்கிறன். பழிவாங்கத் துடிக்கிறது உனக்குத் தான் ஆபத்து.” என்றாள். சந்தனன் எதுவும் கதையாமலிருந்தான். புதிய போராளிகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் சந்திக்கும் நேரம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. படையணி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கிருந்து களமுனைக்கு கொண்டு செல்லப்படும் அணியோடு சேர்க்கப்பட்டான். சந்தனனிடமிருந்த ஆயுதத்தின் ஒயில் வாசனை அவனுக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் துணியால் துடைத்தான். இரண்டு நாட்கள் பயணம் செய்து, களமுனைக்கு வந்தடைந்தான். முன்னரங்கு. எப்போதும் விழிப்பு. பதுங்குகுழிகள் நீண்டிருந்தன. காப்பரண்கள் கொதித்தன. நாளுக்கு பத்து மணிநேரம் மோதல் நிகழும் படுகளம். சந்தனனுக்கு காவலரண் ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே அங்கிருந்தவர்களோடு அறிமுகமானான். துவக்கைத் தன்னுடைய நெஞ்சோடு அணைத்தபடி பதுங்குகுழிக்குள் அமர்ந்தான். அன்றிரவு எந்த மோதலும் நிகழவில்லை. உறக்கம் வாய்த்தது. சந்தனன் மட்டும் விழித்திருந்தான். அவனுடைய காவல் நேரம் தாண்டியும் கடமை செய்தான். டிகரில் வலது கையின் ஆட்காட்டி விரலை வைத்தபடி புளியமரத்தை நினைத்துக் கொண்டான். தேசத்துரோகியென எழுதப்பட்டு முதல் ஆணியில் அறையப்பட்டிருந்த தந்தை பெயரைச் சொன்னான். உள்ளம் எரிந்து கண்ணீர் புகைந்தது. அப்பா அப்பா என்றான். இயலாமை ஊறி இருள் திரண்டு நின்றது. அவனிருந்த திசை நோக்கி குண்டுகள் பொழிந்தன. போழ்தின் இருள் அழிந்து ஊழி பொழிந்தது. சந்தனன் சண்டையில் காயமுற்றான். அவனிருந்த மருத்துவ விடுதியின் தலைமைப் பொறுப்பதிகாரியாய் சரித்திரன் இருந்தார். மேனியெங்கும் நஞ்சின் சூறை தீப்பிடிக்க சந்தனன் யாரோடும் கதையாமலிருந்தான். வீட்டில் செய்த உணவுகளை சரித்திரன் மூலமாய் அம்மா கொடுத்தனுப்பினாள். சந்தனன் அந்த உணவுகளைத் தீண்டக் கூடவில்லை. சரித்திரனுக்கு அது கவலையாகவிருந்தது. சில நாட்கள் கழித்து சரித்திரன் தனது வாகனத்தில் சந்தனனை ஏற்றிக்கொண்டு சென்றான். அவன் எதுவும் கதையாமல் வீதியை வெறித்திருந்தான். மழை பெய்யத் தொடங்கியது. “நீ என்னைச் சுடத்தான் இயக்கத்துக்கு வந்தனியெண்டு கேள்விப்பட்டனான்” என்ற சரித்திரனை அதிர்ச்சியோடு பார்த்தான் சந்தனன். உன்ர தந்தையைச் சுட்டது நானெண்டு தெரிஞ்ச உனக்கு ஏன் சுட்டனான் எண்டு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை” என்று தொடர்ந்தார். “அதுதான் நல்லாய்த் தெரியுமே, தேசத்துரோகி, ஒருத்தனைக் கொல்ல நீங்கள் துவக்கெடுக்க முதல், இப்பிடியொரு பட்டம் வைச்சே கொலை செய்திடுவியள்” என்றான் சந்தனன். சரித்திரன் கொஞ்சம் இறுக்கமாக “அது பட்டமில்லை. தண்டனையோட முதலடி.” என்று சொன்னார். வாகனம் புளியமரத்தடியில் நின்றது. அங்கு நிறைய ஆணிகள் அறையப்பட்டிருந்தன. சரித்திரன் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, தன்னுடைய பிஸ்டலை அவனிடம் கொடுத்து என்னைச் சுடு என்றார். சந்தனன் வாகனத்தை விட்டு கீழே இறங்கினான். பிஸ்டலை சரித்திரனின் நெற்றி நோக்கி நீட்டினான். மூன்று வெடிகள் முழங்கின. துரோகத்தின் துருவேறிய ஆணிகள் சிதறுண்டு பறந்தன. கிளையில் துளிர்த்திருந்த இலைகள் மெல்லக் காற்றில் அசைந்தன. இராணுவ மிடுக்கோடு, பிஸ்டலை சரித்திரனிடம் கையளிக்க முன்னே நடக்கலானான். துரோகத்தின் ஆணிகள் சிதறிக்கிடந்த நிலத்தில் சந்தனன் அவதானமும் விழிப்பும் கூட்டியிருந்தான். புளியமரத்தின் கீழே இரண்டு பேரும் நின்று கதைக்கத் தொடங்கினார்கள். இத்தனை நாட்களும் ஆறாத தன்னுடைய காயத்தைப் பார்த்தான் சந்தனன். அது கொதியடங்கி ஆறியிருந்தது. https://akaramuthalvan.com/?p=1304
  12. போதமும் காணாத போதம் – 04 வீரையாவின் இடத்தைக் கண்டுபிடிக்கவே வாரங்களாயின. அவருக்கு முன்னால் இரத்த அழுத்தம் அதிகரித்து பதற்றத்துடன் அழுதபடி நின்றாள் அத்தை. எதையும் பொருட்படுத்தாமல் அத்தையளித்த சரைகளைப் பிரித்து பொருட்களைச் சரிபார்த்தார். சடங்குக்கு தேவையான பொருட்களின் பட்டியலை அத்தைக்கு தெரிவித்தது யாரென்று வீரையாவுக்குத் தெரியவில்லை. ஆனால் எல்லாப் பொருட்களும் உபரியாக வந்திருந்தன. ரெண்டு சரை சாம்பிராணித் தூளுக்குப் பதிலாக ஐந்து வந்திருந்த போதுதான் இது செவிடன் ரத்தினத்தோட ஆளென்று அடையாளம் கண்டார். வீரையாவுக்கு வன்னி முழுதும் பக்தர்கள் பெருகியிருந்தமையால் ஏற்படும் குழப்பம் தானன்றி வேறில்லை. “அழாதே” என்று சைகை செய்து, அமர்ந்து கொள்ளெனக் கட்டளையிட்டார். நிலத்தைக் கால்களால் விலக்கித் துப்பரவு செய்து கைகூப்பி அமர்ந்தாள் அத்தை. வீரையாவின் கண்களில் சிவப்பு தரித்திருந்தது. தனது இருப்பிலிருந்து மாடப்புறா ஒன்றை எடுத்தார். கால்களில் இடப்பட்டிருந்த கட்டினை அவிழ்த்தார். அதனது கண்களில் காய்கள் வளர்ந்திருந்தன. புறாவை அத்தையின் கையில் கொடுத்து குங்குமத்தை தடவினார். சாம்பலில் குருதி இறங்குவதைப் போல புறாவின் இறகுகளுக்குள் குங்குமம் புகுந்தது. அத்தை அருவருத்தபடி புறாவை இறுக்கிப் பிடித்திருந்தாள். வெறிகொண்ட கொடுங்கரமேந்தி சிறிய வெள்ளிக்கத்தியால் புறாவின் கழுத்தை அறுத்தார் வீரையா. அத்தையின் மூக்கின் கீழ்ப்பகுதியில் புறாவின் குருதிச் சாரல். சிந்தும் குருதியை குப்பியொன்றில் பிடித்து, ஏதேதோ மந்திரங்கள் சொல்லி அடைத்துக் கொண்டார். அத்தை கண்களை மூடிக்கொண்டு “என்ர தெய்வமே” என்று உடல் நடுங்கினாள். வீரையா ஒருபிடி திருநீற்றையள்ளி குப்பியிலிட்டார். புறாக்குருதியும் நீறும் குப்பியில் கலந்தன. காட்டின் திக்குகள் அறிந்து திருநீற்றை ஊதி “தெய்வம் உன்னோட இருக்கும், தெய்வம் உன்னோட இருக்கும்” என்று சொன்னார். கூப்பிய தனது கரங்களை இன்னும் இறுக்கியபடி “நீயொரு சக்தியுள்ள தெய்வமெண்டால் என்ர மகள காப்பாத்திப் போடு” என்ற அத்தைக்கு மேலே குருவியுண்டு கனிந்த காட்டுப்பழமொன்று உதிர்ந்தது. அந்தக் குப்பியை ஒரு சிறிய துணிப் பொட்டலமாக கட்டிக்கொடுத்து “ அவளின்ர கழுத்தில இது எப்பவும் இருக்கவேணும். அவளுக்கு இதைவிடவும் ஒரு காவலில்லை. துணையில்லை. விளங்குதோ” என்றார். அத்தை பயபக்தியோடு அதை வாங்கி, அவரது காலைத் தொட்டு வணங்கி எழும் போதுதான் காட்டுக்குள் சிலர் கதைக்கும் சத்தம் கேட்டது. வீரையா விழிப்புற்று தடயங்களை அழித்தார். பொருட்களை அள்ளிக் கொண்டார். புறாக்கூடையை எடுத்துக் கொண்டார். அத்தையை தன்னோடு அழைத்துச் சிறிது தூரம் ஓடிச் சென்றார். மறைவிடத்தில் பதுங்கினார்கள். அத்தைக்கு மூச்சுத் திணறியது. அகப்பட்டால் மரணமன்றி வேறேது என்றுரைத்தபடி சத்தம் கரையும் திசை வரை காதை வளர்த்தார் வீரையா. அது புதிய போராளிகளின் அணி. பயிற்சி முடித்து காடு வழியாக நடத்திச் செல்லப்படுகிறார்கள் என்பதை வீரையா விளங்கிக் கொண்டார். “சரி நீங்கள் தாறத தந்திட்டு கெதியா வெளிக்கிடுங்கோ” அத்தை தன்னுடைய பணப்பையிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டினாள். வீரையாவுக்கு அதில் திருப்தியில்லை. “எனக்கு நீங்கள் பிச்சை போடவேண்டாம். என்ர வேலைக்கு தகுந்த காசு குடுங்கோ” என்றார் வீரையா. “இந்த மாசம்தான் நான் சீட்டு எடுக்கப்போறன். காசு வந்ததும் உங்களிட்ட செவிடன் ரத்தினம் மூலமாய் சேர்ப்பிக்கிறன். அதுவரைக்கும் பொறுத்துக் கொள்ளுங்கோ” அத்தை சொன்னாள். வீரையா சரியென்று சொல்லி தலையசைத்து “ஊருக்குள்ள போகேக்க கவனமாய்ப் போ, எந்தக் கஷ்டம் வந்தாலும் என்ர பேரைச் சொல்லிப்போடாத, தெய்வத்தைக் காட்டிக் குடுத்த பாவம் உன்ர குலத்தையே அழிக்கும்” என்றார். “வீரையாவைச் சந்திக்க காட்டில் ஒரு பாதையிருக்கு. அது இயக்கத்திற்கும் தெரியாது, ஆர்மிக்கும் தெரியாது. அமெரிக்காவுக்கும் தெரியாது, அன்ரன் பாலசிங்கத்துக்கும் தெரியாது” என்று கள்வெறியில் புலம்பிய வியட்நாம் பெரியப்பாவை இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவினர் பிடித்துச் சென்றனர். இந்தச் செய்தியோடு ஊருக்குள் நுழைந்ததும் அத்தைக்கு திகில் பெருகிவிட்டது. குளித்து முடித்து சமையல் செய்தாள். உள்ளேயொரு ஆடை அணிந்து அதற்குள் உணவைப் பத்திரமாக பதுக்கிக் கொண்டாள். மீண்டும் மேலேயொரு ஆடை. மலங்கழிக்க செல்லும் பாவனையோடு போத்தில் தண்ணீரோடு காட்டிற்குள் புகுந்தாள். காடெங்கும் அசையும் மரத்தின் இலைகள், தன்னைக் கண்காணிக்கும் காலத்தின் கண்களென அத்தை பதறினாள். பதினைந்து நாட்களாக காட்டுக்குள்ளேயே அமர்ந்திருக்கும் பூதவதியின் நிலையெண்ணி அத்தையால் எதுவும் செய்ய இயலாமாலிருந்தது. பூதவதி காத்திருக்கும் கருங்காலி மரத்தடியில் வேறு ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருடைய கையில் சிறிய கோடாரியும், தலையில் பெரிய கடகமொன்றுமிருந்தது. அத்தை புதரொன்றுக்குள் படுத்துக் கொண்டாள். கருங்காலி மரத்தின் கீழே நின்றவர் பூமியின் கீழே புதையுண்டு போவதைப் பார்த்து கூக்குரலிட்டாள். சத்தம் எழவில்லை. சில நிமிடங்கள் கழித்து அவள் சுயத்திற்கு திரும்பிய போது பூதவதியின் மடியில் கிடந்தாள். “என்னம்மா, சின்னப்பிள்ளையள் மாதிரி காட்டுக்குள்ள எதையோ பார்த்திட்டு கத்தி மயங்கிப் போறியள்” “எடியே, அது எதோ இல்ல. எங்கட கருங்காலி முனி” “நீ முனியைப் பார்த்துக் கத்தி, புலி என்னப் பிடிச்சுக் கொண்டு போகப்போகுது” என்றாள் பூதவதி. “அது இனிமேல் நடக்காது. நான் வீரையாவ போய் பார்த்து காவலுக்கு எல்லாமும் செய்து எடுத்துக் கொண்டு வந்திட்டன்” சொல்லியபடி அந்தப் பொட்டலத்தைக் கொடுத்தாள். பொட்டலம், குருதிக் கறையோடு திருநீற்று வாசமெழும் வெள்ளை நிறச் சுண்டுவிரல் போலவிருந்தது. “இதை உன்ர கழுத்தில கட்ட வேணும். புலியில்லை. எலி கூட உன்னை நெருங்காது. வீரையா சும்மா ஆளில்லை. விளங்குதா” என்றாள் அத்தை. பூதவதி சாப்பிட்டு முடித்தாள். கழுத்தில் பொட்டலத்தை கட்டிவிட்டு அத்தை காட்டை விட்டுப் புறப்பட்டாள். பூதவதி காட்டின் நடுவே சீற்றம் கொண்டு உலரும் பேய் மகளாய் தேசம் பார்த்து வெறித்திருந்தாள். வீட்டுக்கு ஒருவர் கட்டாயமாக இயக்கத்தில் சேர்ப்பிக்கப்பட்டார்கள். பிள்ளைகளைக் காப்பாற்ற வழியற்று சனங்கள் காடுகளுக்குள் பாய்ந்தனர். இரவும் பகலும் துரத்தப்பட்டனர். படையில் பலாத்கார ஆட்சேர்ப்புக்கு எதிராகக் கொதித்தனர். தெய்வங்கள் உறைந்த வெளியில் பிள்ளைகள் பலி கேட்கப்பட்டனர். வீடுகளுக்கு நடுவே சின்னச் சுரங்கங்கள் வளர்ந்தன. மூச்சுப்பிடித்து மண்ணுக்குள் கிடந்தனர். புறாக்கூடுகளுக்குள், சுடுகாடுகளுக்குள், வைக்கோல் போருக்குள், பாழ் கிணற்றுக்குள், குளத்துக்குள் என காலத்தின் வேட்டைப்பற்களுக்குள் சிக்க விரும்பாத மாம்சங்களாய் தப்பிக்க எண்ணினர். “பூமியிலுள்ள எல்லாவற்றுக்கும் எங்கட சனங்களின் ரத்தம் தேவைப்படுகிறது” விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்டிருந்த வியட்நாம் பெரியப்பா சொல்லிக்கொண்டிருந்தார். வீரையா காட்டின் எந்தப் பகுதியில் இருக்கிறாரென அறியவே விசாரணை நடந்திருக்கிறது.“அது இயக்கத்திற்கும் தெரியாது. ஆர்மிக்கும் தெரியாது. அமெரிக்காவுக்கும் தெரியாது, அன்ரன் பாலசிங்கத்துக்கும் தெரியாது” என்று நான் சொல்லும்போதே எனக்கும் தெரியாது என்று சொல்லியிருக்கவேணும். அது என்ர பிழை தான். அதுக்காக என்னை நீங்கள் துரோகி எண்டு நினைக்க வேண்டாம். கிட்டண்ணா யாழ்ப்பாணத்தில இருக்கும் போது, அவருக்கு நிறைய மாம்பழங்கள் குடுத்திருக்கிறன்” என்றிருக்கிறார். கடுமையான மழை பெய்து கொண்டிருந்த அதிகாலையில் காட்டிற்குள் போராளிகளின் நடமாட்டத்தைப் பார்த்த வீரையா வேறொரு திக்கில் ஓட்டம் பிடித்தார். ஆனால் பச்சை நிறப்பட்டுத் துணியையும், கால்கள் கட்டப்பட்டிருந்த மாடப்புறாவையும் அவசரத்தில் விட்டுச் சென்றிருந்தார். அணியின் தலைமை அதிகாரி அந்த இடத்தை ஆய்வு செய்ய கட்டளையிட்டார். ஆழ ஊடுருவி அப்பாவிச் சனங்களைக் கொன்று குவிக்கும் வன்கவர் வெறிப்படையைத் தேடிய அணியினரின் கண்களில் வீரையாவின் தளம் சிக்கியது. மறைத்து வைக்கப்பட்ட திருநீற்று மூட்டையும், பெருந்தொகைப் பணமும், நகைகளும், அறுக்கப்பட்ட புறாத்தலைகளும் கைப்பற்றப்பட்டது. பல்வேறு புலனாய்வு விசாரணைகளுக்குப் பிறகு வீரையாவின் இடமென உறுதியாயிற்று. காடெங்கும் விரவி தேடத் தொடங்கினர் போராளிகள். பூதவதியைப் போல பலருக்கு வீரையா பொட்டலம் கட்டிக் காவல் செய்திருக்கிறார். சிலரைத் தான் இயக்கத்தாலும் நெருங்க முடிந்தது. ஆனால் வீரையாவை அவர்கள் அன்று மதியமே நெருங்கிப் பிடித்தனர். வீரையா தன்னிடமிருந்த புறாக்களை அவர்களை நோக்கி வீசி தற்காத்திருக்கிறார். காட்டிற்குள் மண்டியிட்டு கைகளை உயர்த்தி “தனது எஜமானர்களின் குருத்தையுண்டு வாழும் பிராணிகள் அழிந்துபோம்” என்று மட்டும் வீரையா அறம்பாடியிருக்கிறார். அவர் கைது செய்யப்பட்ட செய்தி, வன்னி நிலம் முழுக்க பாய்ந்தோடியது. அவரிடம் காவல் வாங்கியவர்கள் எச்சிலை விழுங்க முடியாமல் தொண்டையைப் பிடித்துக் கொண்டு மிரண்டனர். செவிடன் ரத்தினம் உட்பட வீரையாவிற்கும் சனங்களுக்கும் இடைத்தரகராக இருந்தவர்கள் பலரையும் இயக்கம் சடுதியாக கைது செய்தது. அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை கணக்கிடப்பட்டது. ஆனால் அவரிடம் சென்று வந்த சனங்களை விசாரணைக்கு அழைக்கவில்லை. அந்தக் குழப்பமே பலருக்கு உறக்கத்தை தரவில்லை. வீரையாவை இயக்கம் சுட்டுக் கொல்லுமென அத்தை நம்பினாள். பூதவதி காட்டை விட்டு வெளியேறும் எண்ணத்தில் இருந்தாள். அத்தை வேண்டாமென தலைப்பாடாய் அடித்துக் கொண்டாள். “எத்தன நாளைக்குத் தான் இப்பிடி காட்டுக்குள்ள இருந்து ஆந்தை மாதிரி முழிக்க ஏலும். நான் போறன். அங்க போய்ச் சாகிறன்” “எடியே, நான் கும்பிடுகிற தெய்வம் உன்னைக் காப்பாத்தும். நீ கொஞ்சம் குழம்பாம இரு” “இல்ல, இஞ்ச காப்பாத்திற உன்ர தெய்வம், எல்லா இடத்திலையும் காப்பாத்தும் தானே, என்னால இனியொரு நிமிஷமும் இஞ்ச இருக்கேலாது” பூதவதியை கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் அத்தை. கழுத்தில் கிடந்த பொட்டலத்தை அறுத்து எறிந்தாள் பூதவதி. கழுத்துப் புடைத்து கண்கள் சிறுத்து புறாவாக எழுந்து பறக்க முனைந்தாள். அடுத்த கணத்தில் அவளது தலை அறுபட்டு நிலத்தில் துடிக்க, காடு ஒரு குப்பியாக அவளது குருதியை நிரப்பிக்கொண்டது. அய்யோ என்ர பிள்ளை என்று அத்தை எழுப்பிய சத்தம் கேட்டு நள்ளிராப் போழ்தின் நாய்கள் மிரண்டன. தலைமாட்டில் கிடந்த லாம்பைத் தீண்டி ஊரெழும்பியது. அத்தை வெளிச்சம் எதுவுமின்றி காட்டுக்குள் நுழைந்தாள். பூதவதியின் இருப்பிடம் நோக்கி அலறித் துடித்தது தாய்மை. ஒவ்வொரு திரளிலும் காடு இருளால் அசைந்தது. அத்தை நெடுமூச்சு விட்டு பூதவதி…பூதவதி என்று அழைத்துக் கொண்டே கருங்காலி மரத்தைக் கடக்கும் போது, அதில் நின்ற உருவம் அவளை மறித்தது. அத்தைக்கு திடுக்கிடல் எதுவுமில்லை. “என்ர முனியப்பா, வழிவிடு. துர்க்கனவு. பிள்ளையைப் பார்க்கவேணும்” முனி எதுவும் கதைக்கவில்லை. அவளைப் போ என்பதைப் போல கையசைத்தது. அத்தை பூதவதியின் இருப்பிடத்திற்குப் போன போது அங்கு அவளில்லை. இருளின் தோல் கிழித்து தன் பிள்ளையைத் தேடினாள் அத்தை. இல்லை, இல்லை. பூதவதி இல்லை. கையில் அகப்பட்ட கற்றையான தலைமுடியைப் பற்றிக் கொண்டு கதறியழுதாள். அவளுடைய காலணிகள் அறுபட்டிருந்தன. பொட்டலத்தின் முடிச்சு அவிழாமல் கழன்று விழுந்திருந்தது. காடுறைத் தெய்வங்கள் கண் மலர்த்தி கசிந்த கண்ணீர் இரவை எரியூட்டின. கருங்காலி மரத்தின் கீழே நின்றிருந்த முனிக்கு தகவல் வந்தது. அது தனது ஆயுதத்தை எடுத்துக் கொண்டு வாகனம் நிற்கும் திசையை நோக்கிப் போனது. அந்தக் காட்டிற்குள் மறைந்திருந்த எட்டுக்கு மேற்பட்டவர்களை அழைத்துக் கொண்டு முனியின் வாகனம் புறப்பட்டது அத்தைக்கு தெரியவில்லை. ஐந்து நாட்கள் கழித்து பூதவதி இயக்கத்தின் பயிற்சி முகாமிலிருந்தாள். அவளுக்கு ஆயுதத்தை தொடப் பிடிக்கவில்லை. தன்னால் முடியாதென மறுத்தாள். சில நாட்களுக்குப் பின் பயிற்சிக்கு ஒத்துக் கொண்டாள். மூன்று மாதங்களில் பயிற்சி முடிந்திருந்தது. வீரையாவின் பொட்டலம் கட்டப்பட்டிருந்த கழுத்தில் இப்போது நஞ்சு மாலை அணிந்தாள். பயிற்சி நிறைவு பெற்று தர்மபுரத்தில் நிகழ்ந்த போராளிகள் சந்திப்பில் பூதவதியைச் சென்று அத்தை பார்த்தாள். அவளுக்குப் பிடித்த பயித்தம் பணியாரமும், முறுக்கும் கொண்டு போயிருந்தாள். “நீ ஓடி வந்திடு. உன்ன நான் எப்பிடியாவது காப்பாத்தி வைச்சிருப்பன்” “அம்மா, எங்களை மன்னார் சண்டைக்கு அனுப்பப் போயினம். அங்க இருந்து வட்டக்கச்சிக்கு ஓடி வர ஏலுமே” “உனக்கு உந்த நக்கல் புண்டரியம் மட்டும் உதிர்ந்து தீராது என்ன” “அம்மா, உன்னோட இருந்தால் சாகாமல் இருக்க முடியுமோ சொல்லு. இஞ்ச எப்பிடியாய் இருந்தாலும் மண்ணுக்குள்ள தான். இந்தச் சாவில ஒரு ஆறுதல்” “என்னடி பிரச்சாரம் பண்ணுறியே” “பின்ன, கருங்காலி முனி மட்டும் என்ன, பயந்து செத்துப்போன தெய்வமே, துணிஞ்சு நிண்டவர் தானே, அதுமாதிரி நானும் நிண்டு சாகிறன். விடன்” “கருங்காலி முனியும் நீயும் ஒண்டோடி, என்னடி கதைக்கிறாய். துவக்கை கையில தூக்கினால் உங்களுக்கு தெய்வமும் தெரியுதுல்ல. கருங்காலி முனி, அண்டைக்கிரவு நான் ஓடி வரேக்க வழி மறிச்சு நிண்டது. பிறகு கை காட்டி போ எண்டு உத்தரவு சொன்னதெல்லாம் உனக்குத் தெரியாது” “அண்டைக்கு அங்க நிண்டது முனியில்லை. புலி. மேஜர் பகீரதன். பத்து நாளுக்கு முன்னாலதான் கிபிர் அடியில வீரச்சாவு அடைஞ்சிட்டார். “நீ முனியெண்டு நினைச்சு அவரிட்ட கதைச்சதை என்னட்ட சொல்லிச் சிரிச்சவர்” என்றாள். “இவங்கள் முனியாவும் உருமறைப்பு செய்யத் தொடங்கிட்டாங்களே” “இப்ப அவரும் முனி தான். நீ போய்ப்பார். கருங்காலி மரத்தடியில நிற்பார்” பூதவதி சிரித்துக் கொண்டு விடைபெற்றாள். “என்ர தெய்வமே” என்று அத்தை தன்னுடைய பிராணத்தை இழுத்து வெளியேற்றினாள். வீட்டிற்கு வந்து அழுதழுது நொந்தாள். சனங்களை ஏமாற்றி காசு, நகை போன்றவற்றை வாங்கியமைக்காக வீரையாவுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதாக செய்திகள் உலவின. மன்னார் களமுனையில் பூதவதி சமராடினாள். பகைவர் அஞ்சும் போர்க்குணத்தோடு எல்லையில் நின்றாள். விடுமுறை அளித்தும் வீடு செல்ல மாட்டேனென அடம்பிடித்தாள். மன்னாரில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான களமெங்கும் அனலாடினாள். அத்தை வீட்டுக்கு வருமாறு கடிதத்துக்கு மேல் கடிதம் கொடுத்தனுப்பினாள். பூதவதி வருவதாயில்லை. முள்ளிவாய்க்காலில் அத்தையை கூடாரத்தில் வந்து பார்த்தாள். அத்தை இப்படியே இங்கேயே தங்கிவிடு என்று கைகூப்பினாள். பூதவதி கூடாரத்தை விட்டு தனது அணியினரோடு புறப்பட்டாள். சில நாட்களில் சனங்கள் நிலத்தைக் கைகூப்பி தொழுதனர். நிலம் அவர்களை மட்டுமல்ல தன்னையும் பறிகொடுத்தது. இறுதிப்போரில் காணாமல்போனவர்கள் பட்டியலில் பூதவதியுமொருத்தியானாள். அத்தை சோதிடர்கள் சொல்வதைக் கேட்டு பூதவதி வருவாள் என்று நம்பிக் காத்திருந்தாள். ஊருக்குள் எல்லோரும் மீளக்குடியமர்த்தப்பட்டனர். நீண்ட வருடங்களின் பின்னர் பன்றி வேட்டைக்குச் சென்று திரும்பியவர்கள் கருங்காலி மரத்தின் கீழே பெண்ணொருத்தி நின்று மறைவதைக் கண்டிருக்கிறார்கள். அவளுடைய கழுத்தில் சுண்டு விரலளவில் பொட்டலம் தொங்கிக் கொண்டிருந்ததாகவும், தோளில் புறாவொன்று கால்கள் கட்டப்பட்டு பறக்க முடியாமல் சிறகடித்ததாகவும் சொன்னார்கள். அத்தை மறுகணமே கருங்காலி மரம் நோக்கி ஓடிச் சென்று பூதவதி… பூதவதி… என்று நிலம் தோய அழுதாள். மரம் அசைய மேலிருந்து நறுமணம் கமழ பொட்டலங்கள் உதிர்ந்தன. அத்தை ஒன்றைப் பிரித்துப் பார்த்தாள். ரத்தம் கண்டி நாள்பட்டிருந்த பூதவதியின் கால் பெருவிரல். “என்ர தெய்வமே” யென அதைக் கண்களில் ஒத்திக்கொண்ட அத்தையை நடுநடுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தது காடு. அத்தையின் முன்னே தோன்றி நின்றனர் பல்லாயிரம் முனிகள். https://akaramuthalvan.com/?p=1167
  13. போதமும் காணாத போதம் – 03 திலகாவுக்கு புற்றுநோய் என்ற தகவலை சிவபாதசுந்தரம் மாமாவின் துவச வீட்டில் வைத்துத்தான் கேள்விப்பட்டோம். புதுக்குடியிருப்பிலிருக்கும் திலகாவை பார்க்க அம்மாவும் நானும் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டோம். தீர்ந்த போரின் சிறிய எச்சங்களையும் அழித்தொழிக்கும் தீவிரத்தோடு வேலைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. “சமாதானத்திற்கான போர்” வெற்றியின் வீரப்பிரதாபங்கள் வீதிகளின் இருமருங்கிலும் காட்சியாகியிருந்தன. அப்பாவிச் சனங்களின் குருதியாற்றின் தடயம் அழிக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட வீதியில் வாகனங்கள் விரைந்தன. “பேரழிவு முடிஞ்சுது எண்டு பார்த்தால், மிஞ்சியிருக்கிற எங்களுக்குள்ளேயும் அது ஒளிஞ்சு கிடக்குது போல. பாவம் திலகா. எத்தனை இடியைத் தான் தாங்குவாள்” அம்மா புலம்பினாள். “இப்ப எல்லாருக்கும் உந்தக் கோதாரி கான்சர் தான் வருகுது. சண்டையில உவங்கள் அடிச்ச பொசுபரசுதான் வேலையக் காட்டுதாம்” பக்கத்து இருக்கையிலிருந்தவர் சொன்னார். அம்மா வலதுகையின் ஆட்காட்டி விரலால் கண்ணீரைத் தொட்டுச் சுண்டினாள். மீண்டும் பொல பொலவென கண்ணீர் பெருகியது. “அதைச் சும்மா விடுங்கோ. துடைக்க துடைக்கத்தான் எங்கையோ இருந்து உடைப்பு எடுக்குது. ஒரு பிரயாணத்தில அழுது தீர்ந்து போகிற அளவுக்கா எங்கட உத்தரிப்புகள். அதை துடைக்காம விடுங்கோ” பக்கத்து இருக்கைக்காரர் சொன்னார். அவருடைய தலையின் ஒருபகுதி பள்ளமாக இருந்தது. நான் பார்ப்பதை விளங்கிக் கொண்டவர் “சுதந்திரபுரத்தில விழுந்த அஞ்சு இஞ்சி ஷெல். மண்டையோட்ட வைச்சு பிச்சை கேக்கிறனெண்டு நினைச்ச தெய்வம் இரங்கிக் காப்பாத்தி போட்டுது” என்றார். பேருந்திலிருந்து இறங்கினோம். திலகா வீட்டை அடைவதற்கு பிரதான வீதியிலிருந்து கொஞ்சத்தூரம் நடக்க வேண்டியிருந்தது. சிலவருடங்களுக்கு முன்பு நானும் தவேந்திரன் மாமாவும் இப்படியொரு பொழுதில் இந்தப் பாதை வழியாக நடந்து போனோம். பெருமூச்சை விட்டு ஆசுவாசமானேன். தவேந்திரன் மாமா இருபதாண்டுகளுக்கு மேலாக இயக்கத்திலிருந்தவர். பல களமுனைகள் கண்டவர். உடலெங்கும் விழுப்புண் தழும்புகள். போர் மறவர். பகையறிந்த பெயர் திலகா. உக்கிரம் கொண்டாடும் காளி. தாக்குதல்களில் அவளணி பெற்ற வெற்றிகள் பெருநிரை. தவேந்திரன் மாமாவுக்கும் திலகாவுக்கும் நீண்ட வருடங்கள் காதலுறவு. இரண்டு பேரின் தளபதிமாரும் ஒப்புதல் அளிக்க திருமணம் நடந்தேறியது. தவேந்திரன் மாமாவை இனி களம் செல்ல வேண்டாமென தலைமைச் செயலகம் உத்தரவு பிறப்பித்தது. அதனை ஏற்கமறுத்து அறிக்கை எழுதினார். ஒருநாள் இரவு தவேந்திரன் வீட்டு முற்றத்தில் வந்து நின்ற வாகனத்தை விட்டு, தலைவர் இறங்கினார். இருவருக்கும் திருமணப் பரிசு வழங்கி வாழ்த்தினார். தடல்புடலாக சமைத்து விருந்துண்டார்கள். “தவா நீ இனிமேல் சண்டைக்கு போகவேண்டாம். படையணி நிர்வாகத்தில வேலையைப் பார்” என்றார் தலைவர். “இல்லை அண்ணா நான் லைனுக்கு போறன், நிர்வாகம் எனக்குச் சரிவராது” என்று மறுத்தான் போட்டார். “நிர்வாகம் சரி வராட்டி என்னோட வந்து நில், அது உனக்கு சரிவருமோ” என்று தலைவர் கேட்டதும் தவேந்திரன் மாமாவுக்கு ஒன்றும் ஓடவில்லை. சரியென்று தலையசைத்தார். இரவு தீர்வதற்கு முன்பு வாகனம் அங்கிருந்து புறப்பட்டது. அம்மாவுக்கு ஆயிரம் தவிப்புக்கள். திலகாவின் விதி நினைத்து கலங்கினாள். ஊருக்குள் ஆங்காங்கே மனிதர்களின் நடமாட்டமிருந்தது. முழுதாய் சனங்கள் இன்னும் மீளக்குடியேற்றப்படவில்லை. போராளிகளின் புழக்கத்திலிருந்த வீடுகள் இராணுவம் முகாம்களாகியிருந்தன. திலகாவின் வீடு மாமரங்களுக்கு நடுவே இருந்தது. படலையை ஒட்டியிருக்கும் வைரவர் கோவில் கவனிப்பாரற்றுக் கிடந்தது. “இந்தக் கோயில கூட்டித் துப்பரவு செய்து குடுத்திட்டு போவம்” என்றாள் அம்மா. உள்ளே நுழைந்ததும் பாழடைந்து சிதைந்திருந்த பதுங்குகுழியைக் கண்டேன். தென்னங்குத்திகள் உக்கிக் கிடந்தன. அதனுள்ளிருந்து வெளியேறிய வீமனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அம்மா வீமன் என்றழைத்ததும் மூன்று கால்களால் கெந்திக் கெந்தி ஓடிவந்தான். அவனுக்கு முன்னங்கால் ஒன்று இல்லாமலிருந்தது. அவனுடைய குழைவும் வாலாட்டலும் வரலாற்றின் எஞ்சுதல். அம்மாவின் கையயும் முகத்தையும் நக்கித் துள்ளிக் குதித்தான். வீமனின் சத்தம் கேட்டு சாய்மனைக்கதிரையில் அமர்ந்திருந்த திலகா திரும்பினாள். அம்மாவை அடையாளம் கண்டவுடன் எழுந்தோடி வந்து கட்டியணைத்தாள். அவளுடைய உடலில் கலக்கத்தின் நடுக்கம், ஆற்றாமையின் அலைச் சீற்றம். ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்ல இயலாத ஆகக் கொடிய இருளில் அம்மாவும் திலகாவும் விம்மி அழுதனர். கொஞ்ச நேரம் எதுவும் கதையாமல் நின்றிருந்தோம். வீமன் தளர்ந்த தனது குரலினால் ஆனந்தம் பொங்க எட்டுத் திக்குகள் நோக்கி குரைத்தான். திலகா என்னை அணைத்து முத்தமிட்டாள். மாமரங்கள் பூத்திருந்தன. அன்றிரவு திலகாவுக்கு பிடித்த பால்புட்டை சமைத்துப் பரிமாறினாள் அம்மா. வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்து நிறையைக் கதைத்தோம். திலகா என்னிடம் “ உனக்கு உந்த பங்கர் ஞாபகம் இருக்கோடா” கேட்டாள். “நானும் மாமாவும் நாலு நாளில அடிச்ச பங்கரெல்லே, எப்பிடி மறக்கேலும்”. அம்மா அடுப்படியில் அப்பத்திற்கு மா தயாரித்தாள். பிடித்தது அப்பமா? தவேந்திரன் மாமாவா? என்று கேட்டால் திலகாவின் பதில் எப்போதும் அப்பமாகவிருக்கும். நாளைக்கு காலையில் குளத்தடிக்குச் சென்று மீன் வாங்கிவரவேண்டும். அங்குள்ள குளத்து மீனுக்கு நிகர்த்த உருசை எந்தச் சமுத்திர மீனுக்கும் இல்லை. வீமன் என்று குரல் கொடுத்தேன். பதுங்குகுழிக்கு மேலே வந்து நின்று, திக்குகள் பார்த்து என்னிடம் ஓடிவந்தான். “வீமன் உந்த பங்கருக்குள்ளேயே தான் இருக்கிறான். கூப்பிட்டால் தான் வெளிய வருகிறான்” திலகா சொன்னாள். “இவ்வளவு சண்டைக்குள்ளையும் உயிர் தப்பி நிண்டிட்டான். இவனைப் பார்த்ததும் என்னால நம்ப முடியேல்ல” என்றேன். “வீமனுக்கு முன்னங்கால் போன மூன்றாவது நாள் இஞ்ச இருந்து வெளிக்கிட்டனான். எங்கட மெடிக்ஸ் ஆக்களக் கூப்பிட்டு மருந்து கட்டி உந்த பங்கருக்குள்ளேயே விட்டிட்டு போனான். இத்தனை வருஷம் கழிச்சு திரும்ப வந்தால் வாலாட்டிக் கொண்டு வைரவர் கோயில் கருவறைக்குள்ள படுத்திருக்கிறான்.” வீமன் எனக்கருகே விழித்திருந்தான். அவனுடைய மூன்று கால்களையும் தடவிக் கொடுத்தபடியிருந்தேன். கண்கள் துஞ்சி சுகம் கண்டான். திடுமென விழித்தோடி பதுங்குகுழிக்குள் புகுந்தான். அம்மா சாயத்தண்ணி போட்டுக் கொண்டு வந்தமர்ந்து, “நாளைக்கு காலம்பிறயே வைரவர் கோயிலைத் துப்பரவு செய்யவேணும், வெள்ளன எழும்பு” என்றாள். “இப்ப எதுக்கு அதெல்லாம் செய்து முறியிறியள். சும்மா இருங்கோ. நீ ஆறுதலாய் எழும்படா” என்றாள் திலகா. “நீ சும்மா இரு. வளவோட வாசலில இருக்கிற தெய்வத்தை பூசிக்காம விட்டு இன்னும் தரித்திரத்த அனுபவிக்க ஏலாது” அம்மா இறுக்கமாகச் சொன்னாள். திலகா பதிலேதும் கதையாமல் சாயத்தண்ணியைக் குடித்து முடித்தாள். பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனவைகள் பற்றி எதுவும் கதைப்பதில்லை என அம்மா உறுதி பூண்டிருந்தாள். மூவரும் ஒன்றாக உறங்கச் சென்றோம். லாம்பைத் தணித்து தலைமாட்டில் வைத்துக் கொண்ட அம்மா “வெள்ளனவா எழும்பு, உன்னை எழுப்புறத ஒரு வேலையாக்கிப் போடாத” என்றாள். அருந்திய மருந்துகளின் வெக்கையில் உறங்கியிருந்த திலகாவை அம்மா போர்த்திவிட்டாள். என்னை உறக்கம் சேரவில்லை. இந்த வீட்டில் அளவற்ற ஒளியும் மகிழ்வும் நிறைந்திருந்த தருணங்கள் கண்ணுக்குள் நிறைந்தன. ஞாபகத்தின் ஒவ்வொரு துளியும் இரவின் தாழ்வாரத்தில் கோர லயத்துடன் விழத்தொடங்கின. அடுப்படிக்குத் தண்ணீர் குடிக்க போனேன். குடத்தைச் சரித்து செம்பில் நிறைத்தேன். ஆசுவாசத்திற்கு எதுவுமில்லை. மீண்டும் படுக்கைக்குப் போனேன். தணித்து வைக்கப்பட்டிருந்த லாம்பின் வெளிச்சம் விழிப்புக்கு துணையாகவிருந்தது .” “அழுதால் பயனென்ன நொந்தால் பயனென்ன ஆவதில்லை; தொழுதால் பயனென்ன நின்னை ஒருவர் சுடவுரைத்த பழுதால் பயனென்ன; நன்மையும் தீமையும் பங்கயத்தோன் எழுதாப்படி வருமோ; சலியாதிரு ஏழைநெஞ்சே” என்றுரைத்த பட்டினத்தாரை நெய்யென என்னுள் ஊற்றினேன். உறக்கம் அழிந்தது. அகலென மனம் சுடர்ந்தது. லாம்பைக் கையிலேந்தியபடி வீட்டின் வெளியே வந்தேன். காற்றணைத்தது. ஆனாலும் மாமரங்கள் அசையாதிருந்தன. இருளினுள்ளே உடல் நுழைத்து அசையாது நின்றேன். பதுங்குகுழியிலிருந்து வெளிச்சம் பிறந்திற்று. அது நொடிக்கு முன் அணைந்த லாம்பின் வெளிச்சத்தை ஒத்திருந்தது. மெல்லமாக வீமன் என்று குரல் கொடுத்தேன். அவன் வருவதாயில்லை. ஆனால் பதுங்குகுழிக்குள் அவனுடைய நடமாட்டத்தின் ஒலி துல்லியமாகக் கேட்டது. முன்னோக்கி பாதங்களை வைத்து பதுங்குகுழியை நெருங்கினேன். வீமன் வருவதற்கும் போவதற்குமான பாதையே இருந்தது. என்னால் உள்ளே செல்ல முடியவில்லை. உள்ளே கட்டளைகள் வழங்கும் சத்தம் கேட்டது. எக்கோ – த்ரீ, எக்கோ – த்ரீ ஓவர் ஓவர்.. நான் என்ர பக்கத்தால ஒரு அணியை அனுப்புறன். உங்கட எட்டில வைச்சு ஒரு தள்ளுத்தள்ளுங்கோ. விளங்குதா! “ஓமோம்…இனியவன் நீ ரெண்டு நாகத்த எடுத்துக் கொண்டு போ. அது காணும்…டெல்டா – பைவ் நான் சொல்றது விளங்குதா” சமர்க்களத்தின் உரையாடல்கள் தொடர்ந்தன. வீமன் யாரையோ நக்கிக்கொடுத்து குழையும் சிணுங்கல். ஒளியூறித் தளும்பும் பதுங்குகுழியின் மீது ஏறிநின்று “வீமன் வெளிய வா” என்று நானும் கட்டளையிட்டேன். சில நொடிகளில் வெளியே வந்து “ தம்பியா, சுகமோடா” என்று கேட்டார் தவேந்திரன் மாமா. அதிகாலையில் விழித்தெழும்பிய அம்மா தலைமாட்டில் கிடந்த லாம்பையும் என்னையும் காணாது தவித்தாளாம். அம்மாவின் திகைப்பும் அல்லலும் திலகாவை எழுப்பியிருக்கிறது. ஒரு டோர்ச் லையிற்றை கையில் பிடித்தபடி திலகா “வீமன்” என்று குரல் கொடுத்திருக்கிறாள். பதுங்குகுழியிலிருந்து பாய்ந்து சென்றிருக்கிறது. மூவருமாய் சேர்ந்து என்னைத் தேடிப் பார்த்திருக்கிறார்கள். திலகாவுக்கு கணத்தில் உறைத்து “வைரவர் கோவிலுக்கு போய் துப்பரவு செய்யிறானோ” என்றிருக்கிறாள். அங்கு சென்றிருக்கின்றனர். லாம்புமில்லை நானுமில்லை. முற்றத்திலிருந்த என்னுடைய காலடித்தடத்தைப் பார்த்து பதுங்குகுழியை வந்தடைந்து இருக்கிறாள் அம்மா. “அவன் இதுவரைக்கு வந்திருக்கிறான் திலகா. கால்தடம் இருக்கு” “இஞ்ச எதுக்கு வந்தவன். அதுவும் இந்த இருட்டுக்குள்ள” திலகா பங்கருக்கு மேலே ஏறி, மூடியிருந்த மண்ணையும் செடிகளையும் அகற்றி இடுக்கு வழியாகப் பார்த்தபோது உள்ளே நான் மயங்கிக் கிடந்திருக்கிறேன். திலகா பதறாமல் “அவனுள்ள படுத்திருக்கிறான்” என்று அம்மாவிடம் சொல்லியுள்ளாள். “பாம்பு பூச்சி இருந்தாலும்” என்று சொல்லி உள்ளே நுழைய முனைந்த அம்மாவுக்கு எந்தப்பக்கம் வாசலென்று தெரியவில்லை. “இருங்கோ வீமன் போகத்தான் ஒரு சின்ன வாசல் இருக்கு. நாங்கள் சைட்டால ஒரு பாதை வெட்டலாமென்று திலகா மண்ணை வெட்டி வீசியிருக்கிறாள்” அவளுக்கு நடப்பதெல்லாம் குழப்பத்தையே தந்தது. ஆனால் அம்மாவிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. வாசலை உண்டு பண்ணி உள்ளே நுழைந்த திலகாவுக்கு பதுங்குகுழியினுள்ளே அடர்ந்திருந்த வாசனை வெறிகொள்ளச் செய்தது. அவள் மூலை முடுக்கெல்லாம் தவா…தவா… என்று கதறியபடி மோதுண்டாள். ஆலாலமுண்டவனை பூமி குடைந்து தேடியரற்றும் அணங்கானாள். வெளியே நின்ற அம்மா உள்ளே ஓடிவந்தாள். திலகாவை அம்மா கட்டுப்படுத்தமுடியாமல் திணறினாளாம். என்னைத் தட்டியெழுப்பியும் சுயநினைவற்று மயங்கிக் கிடந்திருக்கிறேன். நடந்தவற்றையெல்லாம் பின்பு அம்மா சொன்னாள். அடுத்தநாள் பதுங்குகுழியைத் துப்பரவு செய்தோம். வைரவர் கோவிலில் இருந்த விக்கிரத்தையும், சூலத்தையும் தூக்கி வந்து பதுங்குகுழிக்குள் பிரதிஷ்டை செய்தோம். அந்த ஊரிலிருந்த சிலருக்கு அன்னதானம் கொடுத்தோம். மூன்று கால்களோடு வீமன் பதுங்குகுழிக்குள் உறங்கிக் கிடந்தான். “பங்கர் வைரவர்” என்றனர். அம்மாவும் நானும் அங்கிருந்து புறப்பட்ட போது பதுங்குகுழிக்குள் படுத்திருந்த வீமனிடம் “நாங்கள் போய்ட்டு வாறம் தவேந்திரன் மாமா” என்றேன். மூன்று கால்களும் திரிசூல இலைகளாய் எழுந்து ஒளிர விடைகொடுத்தான் எங்கள் வீமன். https://akaramuthalvan.com/?p=1134

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.