இந்தியாவின் அழுத்தத்தினையடுத்து சர்வகட்சி மாநாட்டில் ஜெயார் முன்வைத்த பரிந்துரைகள் இணைப்பு - சி
தில்லியில் கலந்தாலோசிக்கப்பட்ட பரிந்துரைகள் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் இணைப்பு "சி" எனும் பெயரில் அனுப்பப்பட்டது.
தில்லியில் இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இணைப்பு "சி" பரிந்துரைகள்
சர்வகட்சி மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படவென முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளான இவை, இலங்கையின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையினையும் பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. சர்வகட்சி மாநாடில் பேசப்படப்போகும் விடயங்கள் இப்பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இடம்பெற்றிருந்தன.
1. ஒரு மாகாணத்திற்குள் அமைந்திருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஒரு பிராந்திய சபையாக ஒருங்கிணைவதற்கு அந்தந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் சம்மதமும், அம்மாவட்டங்களில் நடத்தப்படும் சர்வஜன் வாக்கெடுப்பும் அவசியமாகும்.
2.வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளில் ஏதாவது ஒன்று உறுப்பினர்களின் விலகினால் ஸ்தபிதம் அடையுமிடத்து, அம்மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்ட அபிவிருத்திச் சபைகளுடன் குறிப்பிட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை இணைத்துக் கொள்ளப்படலாம்.
3. உத்தேச பிராந்தியம் ஒவ்வொன்றும் விரும்பினால் தமக்கான பிராந்திய சபை ஒன்றினை உருவாக்கிக்கொள்ள முடியும். இப்பிராந்தியத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட கட்சியின் உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி இப்பிராந்தியத்தின் முதலமைச்சராக நியமிப்பார். இப்பிராந்தியத்தின் அதிகார சபைக்கான அமைச்சர்களை முதலைமைச்சரே நியமிப்பார்.
4. நாட்டின் இறையாண்மை, பூகோள ஸ்திரத்தன்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நாட்டின் அபிவிருத்தி உள்ளிட்ட, பிராந்திய அதிகார சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாத ஏனைய விடயங்கள் யாவும் ஜனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் பொறுப்பில் இருக்கும்.
5. பிராந்தியங்களின் செயற்பாடுகளுக்கான கொள்கைகளை அப்பிராந்தியங்களே உருவாக்க முடியும். பிராந்தியங்களுக்கான சட்டம் ஒழுங்கு, சமூக பொருளாதார அபிவிருத்தி, கலாசார விடயங்கள், நிலக் கொள்கை ஆகிய விடயங்கள் ஆகியவை பிராந்திய சபைகளினால் உருவாக்கப்படும்.
6. மேலும், பிராந்தியங்களுக்கான வரி அறவிடல், சேவைகளுக்கான கட்டணம், பிராந்திய அபிவிருத்திக்கான கடன்களை மக்களுக்கு வழங்குதல், இக்கடன்களுக்கான நிதியுதவியை மத்திய அரசிடமிருந்து ஒழுங்குசெய்தல் ஆகியவை பிராந்திய சபைகளால் மேற்கொள்ளப்படும். மத்திய அரசினால் நியமிக்கப்படும் பிரதிநிதிகளால் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் அளவு பரிந்துரைக்கப்படும்.
7. பிராந்தியங்கள் தமக்கான உயர் நீதிமன்றங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். நாட்டின் அரசியலமைப்பு மற்றும் மேல்முறையீடு தொடர்பான விடயங்களை உச்ச நீதிமன்றம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
8. ஒவ்வொரு பிராந்திய சபையும் தமக்கான அதிகாரிகள் மற்றும் பொதுச் சேவை அலுவலர்களை அப்பிராந்தியத்தில் இருந்து நியமிக்கும். வேறு பிராந்திய சபைகளில் வதியும் அதிகாரிகள் அலுவலர்களையும் ஒரு பிராந்திய சபை சேவைக்கு அமர்த்திக் கொள்ளலாம். பொதுச் சேவைக்கான ஆட்சேர்ப்பிற்காகவும், ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காகவும் பிராந்திய சபைகள் தாம் உருவாக்கும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உதவியை நாட முடியும்.
9. நாட்டின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப இராணுவத்திற்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கடமையில் அமர்த்தப்படும் பொலீஸ் உத்தியோகத்தர்கள் இப்பிராந்தியங்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு அமைவாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.
10. திருகோணமலை துறைமுகத்தினை மத்திய அரசினால் அமைக்கப்படும் துறைமுக அதிகார சபை பொறுப்பில் வைத்துக்கொள்ளும். துறைமுகமும் அதுஅமைந்திருக்கும் பிரதேசமும் துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் இருப்பதோடு இச்சபைக்கு வழங்கப்படவிருக்கும் அதிகாரங்கள் பற்றி விரிவாக பின்னர் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும்.
11. நிலப்பங்கீடு தொடர்பான தேசியக் கொள்கை ஒன்று அமைக்கப்படுவதோடு, இதன் அடிப்படையிலேயே குடியேற்றங்களை அரசாங்கம் முன்னெடுக்கும். பாரிய அபிவிருத்தித் திட்டங்களைத் தவிர்த்து ஏனைய குடியேற்றத் திட்டங்கள் அனைத்துக்குமான நிலப் பங்கீடு அந்தந்த பகுதிகளின் இன விகிதாசாரத்திற்கு அமைவாகவும், ஏற்கனவே இருக்கும் இனப்பரம்பலினை பாதிக்காத வகையிலும் மேற்கொள்ளப்படும்.
12. அரசியலமைப்பிற்கு அமைவாக உத்தியோகபூர்வ மொழியான சிங்களமும், தேசிய மொழியான தமிழும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமுல்ப்படுத்தப்படும். இதேவகையான சட்டங்கள் தேசிய கீதம், தேசியக் கொடி ஆகியவற்றிற்கும் நடைமுறைப்படுத்தப்படும்.
13. சர்வகட்சி மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களை அரசியல் யாப்பில் இணைத்துக்கொள்வதற்காகவும், இது தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும் ஆணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்படும். இதற்குத் தேவையான செயலகத்தினையும், சட்ட அலுவலக வசதிகளையும் மத்திய அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும்.
14. சர்வகட்சி மாநாட்டில் தீர்மானிக்கப்படும் விடயங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட மந்திரி சபையினாலும், ஏனைய கட்சிகளின் தீர்மானம் எடுக்கக் கூடிய அமைப்புக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்படுவதற்காக முன்வைக்கப்படும்.