கற்க கசறும் ------------------ எல்லா மனிதர்களிடமும் ஏதோ ஒரு திறமையாவது இருக்கும் என்கின்றார்கள். ஆனாலும் அது என்ன திறமை எங்களிடம் வந்து இருக்கின்றது என்று பலராலும் கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமலேயே போய் விடுகின்றது. நாங்கள் சரியான திசையில் தேடுவதில்லை போல. ஒருவேளை இந்த அடிப்படையே பிழையாகவும் இருக்கலாம். திறமை என்று ஒன்று கட்டாயம் அமைவதும் இல்லை போலும். ஒரு வயதுக்குப் பின் ஒழுங்காக நித்திரை கொண்டு எழும்பினாலே, அதுவே பெரிய திறமை என்றாகி விடுகின்றது. ஆகவே இந்த திறமையை துப்பறியும் வேலையை இளமைக் காலத்தில் செய்தால் தான் அதைக் கண்டறியும் சாத்தியம் அதிகம் உண்டு. மேற்கத்தைய நாடுகளில் பாடசாலைகள், கல்லூரிகள், சூழல் என்பன ஒவ்வொருவரிடமும் இருக்கும் தனித்திறமைகளை கண்டறிய கொஞ்சம் அதிகமாகவே பிரயத்தனம் செய்கின்றார்கள். கீழைத்தேய நாடுகளில் சமூகங்களால் அங்கீகரிக்கப்பட்ட திறமைகளே ஒரு ஐந்து அல்லது ஆறு தான் இருக்கும். மற்றவை எல்லாமே உருப்படாத விசயங்கள். ஆகவே அங்கே யாராவது தன்னிடம் என்ன இருக்கின்றது என்று கண்டறிந்தாலும், அது அநேகமாக உருப்படாத ஒரு விசயமாகவே அங்கே கருதப்படவும் கூடும். மேற்கத்தைய நாடுகளுக்கு குடிபுகுந்த நாங்கள் எங்களின் வளரும் காலத்தில் தவறவிட்டவற்றை பிள்ளைகளின் மூலமாக இன்று இங்கே பிடித்து விடலாம் என்று நினைப்பதும் உண்டு போல. ஒரு எண்ணை ஒரு தாளில் எழுதி, அதை ஒருவரின் தலைக்கு பின்னால் பிடித்தால், அவர் கண்ணை மூடிக் கொண்டே அந்த எண்ணை சரியாக சொல்லும் ஒரு திறமை இருக்கின்றது என்கின்றார்கள். முதலில் இந்த விடயத்தை, திறமையை ஒரு கோர்வையாக புரிந்து கொள்ளவே எனக்கு நேரம் எடுத்தது. ஆனால் இதற்கு ஒரு ஆசிரியரும், குரு என்பதே சரியான பதம், மாணவர்களும் இருக்கின்றனர். இந்த திறமையில் அடுத்த அடுத்த படிகள் கூட இருக்கின்றன என்று ஒருவர் சொன்னார். இதனால் உருப்படியில்லாத விசயங்கள் என்று அன்று அங்கே சமூகம் பல திறமைகளை வகைப்படுத்திய விதத்தை முற்று முழுதாக தவறு என்றும் சொல்ல முடியவில்லை. இங்கு ஆரம்ப பள்ளிக்கூடத்திலேயே குழந்தைகளிடம் இருக்கும் இசைத் திறமையையும் கண்டுபிடித்து விட முயல்கின்றார்கள். இது அன்று அங்கே இருந்த சங்கீதப் பாடம் போல அல்ல. சித்திர ஆசிரியர் அடிக்கின்றாரே என்று சங்கீத ஆசிரியையிடம் ஓடிப் போகும் நிலை அல்ல இது. ஒரு தடவை ஒரு பாடசாலையில் சித்திரத்திற்கும் போகாமல், சங்கீதத்திற்கும் போகாமல் வகுப்பில் பதுங்கியிருந்த சிலரை சித்திர ஆசிரியர் அடித்து பிக்காசோவின் கிறுக்கு சித்திரங்கள் போல ஆக்கினார். பின்னர் அதே ஆசிரியர் கலப்பையை கீறு என்று ஒரு நாள் சொல்லும் போது, எம்ஜிஆரை மட்டும் பார்த்துக் கொண்டிருந்ததில், எம்ஜிஆர் படங்களில் தூக்கிக் கொண்டு திரிந்த கலப்பையை சரியாக பார்க்கவில்லை என்ற உண்மை புரிந்தது. புல்லாங்குழல் தான் வாசிக்கப் போகின்றேன் என்றார் மகள். 'புல்லாங்குழல் கொஞ்சம் கஷ்டம் என்கின்றார்களே, புல்லாங்குழல் போல இருக்கும் வேறு ஏதாவது ஒன்றில் ஆரம்பிக்கலாமே.....................' என்று பணிவாக கேட்டுப் பார்த்தோம். ம்ஹூம்........... புல்லாங்குழல் தான் என்று ஒற்றைக் காலில் நின்றார். அவர் ஒற்றைக் காலில் நிற்கும் போதே அவரிடம் என்ன திறமை இருக்கின்றது எனறு நாங்கள் ஊகித்திருக்கவேண்டும். புல்லாங்குழல் விற்கும் கடைக்கு போனோம். அங்கு எல்லா கருவிகளும், வாத்தியங்களும் விற்பார்கள். 'நீங்கள் உடனடியாக வாங்க வேண்டும் என்றில்லை. ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டு போங்கள்.......... சரியாக வராவிட்டால் திருப்பிக் கொடுத்து விடுங்கள்................' என்றார் கடைக்காரர். பலத்த அனுபவசாலி என்று தெரிந்தது. எழுவாய்கள் இல்லாமலேயே, எவரையும் எதையும் குறிப்பிடாமலேயே, சில வசனங்களை மென்மையாகச் சொன்னார். ஒருவரை ஒருவர் பார்த்தோம். ஒன்றை வாங்குவது என்று முடிவெடுத்தோம். பலதை எடுத்து ஒவ்வொன்றாக விளக்கினார் கடைக்காரர். நீண்டு பெரிதாக, பளபளவென்று இருந்த ஒன்றை வாங்கினோம். இது தலைமுறை தாண்டியும் உழைக்கும் என்றார் கடைக்காரர். சில தீர்க்கதரிசனங்களை அவை சொல்லப்படும் போது நாங்கள், அதாவது உலகம், சரியாகக் காது கொடுத்துக் கேட்பதில்லை. புல்லாங்குழல் பாடசாலை போய் வர ஆரம்பித்தது. சில இரவுகளில் அதை வீட்டில் கழட்டி, பொருத்துவதும் தெரிந்தது. எங்கள் வீட்டில் இசை அருவியோ அல்லது வெள்ளமோ இன்னும் பாய ஆரம்பித்திருக்கவில்லை. திடீரென்று ஒரு நாள் மாலை நேரம் பக்கத்து வீட்டில் இருந்து 'கடார்.........படார்..............' என்று தகரக் கூரையில் தடியால் விடாமல் அடிப்பது போல சத்தம் வந்தது. பக்கத்து வீட்டின் பின் வளவுப் பக்கத்தில் இருந்தே சத்தம் வந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கம் சுவருக்கு மேலால் எட்டிப் பார்க்கவும் முடியாத அதி உயர் நாகரிகம் கொண்ட நாடுகள் இவை. ஒரு தடவை அயலவர் ஒருவர் இறந்து போய் ஆறு மாதங்களின் பின்னேயே அவர் இறந்து போனார் என்ற தகவல் தெரிய வந்தது. அந்த வீட்டில் சத்தமே வராமல் அழுதிருப்பார்கள் போல. சில நாட்கள் தொடர்ந்து மாலை வேளைகளில் அடிக்கும் சத்தம் வந்து கொண்டேயிருந்தது. பின்னர் ஒரு நாள் அந்த வீட்டுக்காரர் வந்து கதவைத் தட்டினார். தங்களின் பிள்ளை பாடசாலையில் ட்ரம்ப் பழகுவதாகச் சொன்னார். சில நாட்கள் சமாளித்துக் கொள்ளும்படி கேட்டார். வாத்தியக் கருவியை ஒரு மாதம் வாடகைக்கு எடுத்தார்களா, அல்லது சொந்தமாகவே வாங்கினார்களா என்று நான் கேட்கவில்லை . ஆனால் அவர் சில நாட்கள் என்று சொன்னதால் அவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள் என்று ஓரளவுக்கு புரிந்தது. பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்கள், கேடயங்களை பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு கொஞ்சமும் தயங்காத நாடுகள் மேற்கு நாடுகள். இங்கு ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய பாடசாலைப் பருவத்தில் நூற்றுக் கணக்கான பதக்கங்கள் கூட பெற்றுவிடுவார்கள். ஒரு போட்டி என்று சொல்லுவார்கள், ஆனால் அதில் பங்குபற்றும் எல்லோருக்கும் இங்கு பதக்கங்கள் கொடுப்பார்கள். இந்த நடைமுறைக்கு பின்னால் சில உளவியல் ஆராய்ச்சி முடிவுகள் இருக்கக்கூடும். பிள்ளைகளுக்கு முதல் ஒன்று இரண்டு பதக்கங்கள் கிடைக்கும் போது பெரும் பெருமைப்படும் பெற்றோர்கள், பின்னர் சில வருடங்களிலேயே ஒரு பெட்டியில் எல்லாவற்றையும் போட்டு மூடி, வீட்டின் கண்காணாத ஒரு இடத்தில் தள்ளி விடுவார்கள். புல்லாங்குழலுக்கும் கொடுத்தார்கள். பக்கத்து வீட்டு ட்ரம்பிற்கும் கொடுத்திருப்பார்கள். எதற்கும் தயங்கி நில்லாமல் சூரியனை சுற்றிக் கொண்டே விடாமல் சுழலுகின்றது பூமி. அதனால் அடுத்த வகுப்பும் வந்தது. ஒரு நூல் பிடித்தது போல வாழ்க்கை ஒரு கோட்டில் அசையாமல் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் வேலைக்கு போகும் பெருந்தெருவில், அங்கே காலை நேரங்களில் அசைய முடியாத வாகன நெரிசல் இருக்கும், எதேச்சையாக பக்கத்து வாகனத்தைப் பார்த்தேன். அங்கே ஒருவர் சாப்பிட்டுக் கொண்டே வாகனத்தை நெரிசலில் செலுத்த முயன்று கொண்டிருந்தார். பின்னர் ஒவ்வொரு நாளும் பார்க்க ஆரம்பித்தேன். அதே பெருந்தெருவில், அதே மனிதர்கள், அதே வேலைகளையே ஒவ்வொரு காலையிலும் செய்து கொண்டிருந்தார்கள். நானும் தான். அடுத்த வருட வகுப்புகள் ஆரம்பித்ததில் இருந்து பக்கத்து வீட்டில் இருந்து சத்தம் வருவதில்லையே என்ற எண்ணம் ஒரு நாள் வந்தது. புல்லாங்குழலையும் அந்த வருடம் காணவில்லை என்றும் தோன்றியது. அடுத்த நாள் விடிந்தது. புல்லாங்குழல் பள்ளிக்கூடம் போகவில்லை. 'ஏன்........ புல்லாங்குழல் தேவையில்லையா..........' என்றேன். 'இல்லை........... இந்த வருடம் வேறு வகுப்புகள்........ புல்லாங்குழல் இல்லை.........' என்றார். சங்கீதம் வராவிட்டால் சித்திரம் போல. அடுத்த தலைமுறைக்காக காத்துக் கொண்டிருக்கின்றது ஒரு புல்லாங்குழல்.