காட்சி 3 (அமிர்தமும் பாரதமும் வீட்டு வாசலை அடைந்து, அமிர்தம் வீட்டிற்குள் செல்ல, பாரதம் அருள் புரியும் அபிநயத்துடன் வாசலில் நிற்கிறார். அமிர்தம் திரும்பி பார்த்து திகைக்கிறார்.) அமிர்தம்: குடி கெட்டுது................. அபிநயத்தை விட்டிட்டு கொஞ்சம் அடக்கமாக வாருங்கோ. விசயம் வெளியில தெரிஞ்சா, நீங்கள் மறைஞ்சிடுவீங்க......... கும்பிடப்போன தெய்வத்தை கூட்டிட்டு வந்த சாமியார் என்று ஒரு பெயரும் வைத்து, பாத்ரூமிற்கு போனாக்கூட போட்டோ எடுத்துப்போட ஒரு ஆள் வைக்க, அந்த அதிர்ச்சியிலயே நான் என் பேத்தியின்ர கல்யாணத்தை பார்க்காமல் போய் சேர்ந்துடுவன். பாரதம்: கோவில் கதவைத் திறந்தவுடனேயே அப்படி நின்று நின்று பழகிப்போயிட்டுது............... (இருவரும் வீட்டின் உள்ளே செல்கிறார்கள். உள்ளே அமிர்தத்தின் கணவர் தட்சணாமூர்த்தி அமர்ந்திருக்கிறார்.) அமிர்தம்: (பாரதத்தை நோக்கி) தெரியும் தானே........... இவர்தான் என் வீட்டுக்காரர், தட்சணாமூர்த்தி. பாரதம்: (சிரித்தபடி) தட்சணாமூர்த்தி தெற்கு நோக்கித்தானே இருப்பார்............... இவர் ஏன் வடக்கு பார்த்து இருக்கிறார்? தட்சணாமூர்த்தி: (ஒரு மாதிரி பாரதத்தை பார்த்தபடி) ம்................ வாடைக்காற்று முகத்தில அடிக்கட்டும் என்று இருக்கிறன். அது சரி, இது யார், புது ஆளா தெரியுது? பாரதம்: நான் ஒன்றும் புது ஆளில்லை, உங்களிற்கு முன்னாலேயே நான் இங்கே இருக்கிறன்................ தட்சணாமூர்த்தி: வடக்கு பார்த்து இருந்த நேரத்தில வாசலிற்குள்ளால ஒரு வில்லங்கம் வந்திருக்குது போல............... அமிர்தம்: சும்மா இருங்கோ, அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இவ என்ரை பெரியம்மாவோட மகள், பெயர் பாரதம். தட்சணாமூர்த்தி: உனக்கு ஒரு பெரியம்மா இருக்கிறதே எனக்கு தெரியாது.......... எந்த ஊரில இருக்கிறா? அமிர்தம்: இப்ப பெரியம்மா இல்லை… தட்சணாமூர்த்தி: பெரியம்மா என்றா எப்பவும் பெரியம்மா தானே........... அது என்ன இப்ப அவ பெரியம்மா இல்லை என்று, (மெதுவாக) ஏன் உங்களிக்குள்ள ஏதும் குடும்ப பிரச்சனையே......... அமிர்தம்: (சலிச்சபடி) இப்ப அவ உயிரோடு இல்லை அப்பா............... வீட்டுக்கு வந்த பிள்ளையை வா என்று சொல்லாமல், சும்மா வளவள என்று. தட்சணாமூர்த்தி: அதுவும் சரிதான், பாரதம் வா பிள்ளை. பாரதம்: நீங்கள் என்ன இப்படி அநியாயத்திற்கு உடனேயே ஒத்துப்போகிறீங்கள், எங்களின் வீட்டில என்றால் தாண்டவம் தான். ஒரு ஆட்டம் ஆடித்தான் அடங்குவம்........ அமிர்தம்: தாயே, அந்த ஆட்டத்தை எல்லாம் நீ மேல போய் ஆடு, இப்ப எங்களை மாதிரி இரு. தட்சணாமூர்த்தி: அது எங்க மேல? எங்கட வீட்ல மாடி கூட இல்லை. அமிர்தம்: மேயில போய் ஆடு என்றது மேல என்று வாய் தவறி வந்திட்டுது............ சும்மா சும்மா கேள்வி கேட்காதேங்கோ............. எனக்கு பிரசர் வந்துடும்.................. தட்சணாமூர்த்தி: பிரசரோட இங்கிலீசும் சேர்ந்து வருது............ சரி பிள்ளை நீ மேயில போய் ஆடு. சீச்சீ, என்ன இது, இந்த மனிசியோட சேர்ந்து நானும் மேயில ஆடு, மேல ஆடு என்று புலம்பிறன். இது அமிர்தத்தின்ரை ஏரியா, அவளே பார்த்துக் கொள்ளட்டும். பாரதம்: அது என்ன அவவின்ட ஏரியா, உங்கட ஏரியா? தட்சணாமூர்த்தி: பிள்ளை பாரதம், சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் அவளுடையது, பெரிய விசயங்கள் எல்லாம் என்னுடைய முடிவுப்படியே நடக்கும். அதால தான் எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்லை. (அமிர்தம் முறைக்கிறார்.) பாரதம்: அது எப்படி நீங்கள் மட்டும்தான் பெரிய விசயத்தில முடிவு எடுப்பியள்? ஏன், அவவிற்கு முடியாதோ? தட்சணாமூர்த்தி: முடியாதோ முடியாதோ என்று முடிஞ்சு வைக்காதே பிள்ளை............. நீ ஒரு வில்லங்கம் பிடிச்ச ஆள். முதலில சின்ன விசயங்கள் எது, பெரிய விசயங்கள் எது என்று கேள். பாரதம்: சரி, சின்ன விசயங்கள் எது? தட்சணாமூர்த்தி: சின்ன விசயங்கள் என்றால் என்ன சமைக்கிறது, எந்த உடுப்பு போடுறது, எவ்வளவு காசு செலவழிக்கிறது, எவ்வளவு சேர்க்கிறது, வீடு வாங்கிறது, விற்கிறது, யாரோட கதைக்கிறது, யாரோட முறைக்கிறது............... இப்படியான விசயங்கள் தான், இதெல்லாம் அமிர்தத்தின்ர முடிவுதான், நான் தலையிடுறது இல்லை. பாரதம்: அப்ப எது பெரிய விசயங்கள்............ நீங்கள் முடிவெடுக்கிறது? இதைவிட வேற ஏதும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. தட்சணாமூர்த்தி: பெரிய விசயங்கள் என்றால் அமெரிக்கா ஈரானுக்கு அடிக்காலாமோ இல்லையோ, சைனீஸ் பொருளாதாரத்தை எப்படி தூக்கி நிறுத்திறது, மகிந்தவில எப்ப வழக்குப் போடுறது............ இது மாதிரியான் விசயங்கள்......... இவை எல்லாம் என்னுடைய தனிப்பட்ட முடிவுகள் தான், அமிர்தம் தலையிட மாட்டா.................... பாரதம்: (சிரித்தபடியே) இப்ப தெரியுது ஏன் உங்களுக்குள்ள சண்டை சச்சரவு இல்லை என்று. ம்............... எங்கட வீட்ல நிலமை வேற மாதிரி, சிவம் பெரிசா சக்தி பெரிசா என்று............ அண்டமே நடுங்கிப்போகும்................... (அமிர்தம் தொண்டையைச் செருமிகிறார். பாரதம் வாயை கையால் மூடுகிறார்.) தட்சணாமூர்த்தி: நான் வேணுமென்டால் உன்னுடைய வீட்டுக்காராரோட ஒருக்கால் கதைச்சுப் பார்க்கட்டே? அமிர்தம்: நீங்கள் ஓன்றும் கதைக்கவேண்டாம், அதுகள் நல்லாத்தான் இருக்குது. பாரதம் சும்மா கதை சொல்லிறா, பாரதத்தின்ரை வீட்டுக்காரர் நல்ல ஆள் தான். (லக்ஷனா உள்ளே வருகிறார்.) லக்ஷனா: (பாரதத்தை நோக்கி )அம்மாச்சி மாதிரியே இருக்கிறீங்கள், சகோதரம் என்றே சொல்லலாம். தட்சணாமூர்த்தி: சொல்லலாம் என்ன, சகோதரமே தான். லக்ஷனா: எனக்கு தான் இவங்களை தெரியவில்ல, அப்பப்பாவிற்கு தெரிஞ்சிருக்குது. தட்சணாமூர்த்தி: தெரியவில்லை என்று சொன்னால், பிரசரும் வில்லங்கமும் சேர்ந்து வரும்............. அம்மாச்சியின்ர பெரியம்மா மகள், பெயர் பாரதம். லக்ஷனா: நைஸ் டு மீட் யூ பாரதம் அம்மாச்சி. பாரதம்: நைஸ் டு மீட் யூ லக்ஷனா. லக்ஷனா: அட, உங்களிற்கு இங்கிலீஷ் தெரியுது, என்னுடைய பெயரும் தெரிஞ்சிருக்குது. வெளியில ஒருக்கா போட்டு உடனே வருகிறன்............ உங்களோட நிறைய கதைக்கவேணும் போல இருக்குது. தட்சணாமூர்த்தி: நானும் உன்னோட வருகிறன் பிள்ளை. (இருவரும் செல்கிறார்கள்.) அமிர்தம்: என்ன, வேலையலை காட்டிற மாதிரி தெரியுது. பேத்தியோட இங்கிலீசில நடக்குது. இந்த சித்து வேலையெல்லாம் காட்டக்கூடாது என்று முதலே சொல்லியிருக்கிறன். என்னுடைய பேத்திக்கு எப்பவும் என்னைத்தான் பிடிக்கும்......... பாரதம்: அது பிள்ளை சொன்னதை நான் அப்படியே திருப்பிச் சொன்னனான்.......... மற்றபடி உன்னுடைய பேத்தியை நான் என்ன கூட்டிக்கொண்டு கைலாயமே போகப் போகிறன்.............. எனக்கும் ஒரு பெண்பிள்ளை இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்..................ம்.......... அமிர்தம்: உங்களுக்கும் கவலையென்றால் எங்க போய் சொல்லுறது.......... சரி வாங்கோ போய் சாப்பிடுவம்............... (தொடரும்...................)