Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. முத்தையன்கட்டு சம்பவம்; அரசாங்கம் நீதியை நிலைநாட்டுமா? - சாணக்கியன் கேள்வி 10 AUG, 2025 | 10:01 AM (நா.தனுஜா) பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் தாம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து எவ்வகையிலும் மாறுபட்டவர்கள் அல்ல என்பதைத் தற்போதைய அரசாங்கம் நிரூபித்துவருகிறது. முத்தையன்கட்டு சம்பவம் தற்போதைய அரசாங்கம் நீதியை நிலைநாட்டுமா? அல்லது தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கைப் பாதுகாக்குமா? என்பதைப் பார்ப்பதற்கான மற்றுமொரு பரீட்சையாகும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது குறித்து சாணக்கியன் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, படையினரால் அழைக்கப்பட்டு, தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் முத்தையன்கட்டு ஏரியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் வசிப்பவர்கள் வழங்கிய தகவல்களின்படி, சிதைவுற்ற உலோகப்பொருட்களை எடுத்துச்செல்வதற்காக நான்கு இளைஞர்கள் முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு அவர்கள் தாக்கப்பட்டதாகவும், அங்கிருந்து தப்பிய நால்வரில் ஒருவர் காணாமல்போனதாகவும் அறியமுடிகிறது. அவ்வாறு காணாமல்போன இளைஞரின் சடலம் பின்னர் முத்தையன்கட்டு ஏரியிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதிலும், பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதிலும் தாம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து எவ்வகையிலும் மாறுபட்டவர்கள் அல்ல என்பதைத் தற்போதைய அரசாங்கம் நிரூபித்துவருகிறது. இச்சம்பவம் தற்போதைய அரசாங்கம் நீதியை நிலைநாட்டுமா? அல்லது தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கைப் பாதுகாக்குமா? என்பதைப் பார்ப்பதற்கான மற்றுமொரு பரீட்சையாகும் எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222201
  2. 10 AUG, 2025 | 09:31 AM ஆர்.ராம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவப்பிரசன்னம் அதிகமாகக் காணப்படுவதோடு போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் நடைமுறைகளில் இராணுவத் தலையீடு தீவிரமடைந்துள்ளதால் அச்செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறிதரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். வடமாகாண ஆளுநர், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், கரைச்சி மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் மற்றும் தவிசாளர்கள் ஆகியோருக்கும் குறித்த கடிதம் பிரதியிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போருக்கு முற்பட்ட காலத்தில் கரைச்சிப் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கிளிநொச்சி பொதுநூலகம் பொதுவிளையாட்டு மைதானம் என்பனவற்றுக்குரிய 13.5 ஏக்கர் காணி போருக்குப் பின்னர் இராணுவத்தினரால் முழுமையாக கையகப்படுத்தப்பட்டிருந்தது. இதில் 9 பரப்புக்காணி பொதுநூலகத்துக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 10வருடங்கால போராட்டத்தின் விளைவாக 5பரப்பு காணி மட்டும் விடுவிக்கப்பட்டு நூலக நிர்மாணத்தின் முதற்கட்டப் பணிகள் முடிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் கிளிநொச்சி மாவட்டத்தின் நகர வடிவமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பொதுநூலக காணியின் ஒருபகுதி இன்றளவும் இராணுவத்தால் விடுவிக்கப்படாதுள்ளமை தொடர்புடைய தரப்பினரின் திட்டமிடலிலும் செயற்பாடுகளிலும் மாவட்டத்தின் கல்வித்தளத்திலும் பாதகமான தாக்கங்களை உருவாக்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலக வளாகத்தின் ஒருபகுதி இராணுவ முகாமாக உள்ள சமநேரத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பயன்பாட்டுக்கு தேவையான காணியில் இராணுவ நினைவுத்தூபி அமைக்கப்பட்டு இராணுவத்தளமாக எல்லைப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த காணியின் ஒருபகுதியை இலவச இணைதள வலையமைப்பாக பிரகடனப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனைப்பயன்படுத்தி இளைஞர், யுவதிகளை குறித்த பகுதிக்குள் உள்ளீர்ப்பதன் மூலமாக சமூகவிரோதச் செயற்பாடுகளுக்கான பகிரங்க வெளியை ஏற்படுத்தியுள்னனர். 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் நடைபெற்றபோது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கல்வித் திணைக்களங்களின் மேற்பார்வையில் நடாத்தப்பட்டுவந்த முன்பள்ளிகள் இராணுவத்தினரின் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவினரால் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டு அங்கு கற்பிக்கின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் சிவில் பாதுகாப்பு பிரிவின் நிர்வாக ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 303 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 166பேரும், யாழ்ப்பாணத்தில் 12 பேருமாக 481 பேர் இராணுவப்படையணிச் சம்பளத்தைப் பெற்று கடமையாற்றுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நகரிலும், சில கிராமங்களிலும் பொதுப்பயன்பாட்டிடங்களை அண்மித்த பகுதிகளில் உணவகங்களையும் சிகை அலங்கரிப்பு நிலையங்களையும் இராணுவத்தினர் நடாத்திவருகின்றமையானது உள்ளூர் வர்த்தகர்களுக்கு வருமான இழப்பையும் சமூக முரண்நிலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சியின் முதன்மை அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் சுற்றுலாத்தளமான கௌதாரிமுனை கடற்கரைப் பகுதியை கட்டண அறவீட்டுடன் நிருவகிக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றமையானது பொருத்தமற்றதாகும். ஆகவே கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தின் தலையீட்டை உடனடியாக நீக்குவதோடு முன்பள்ளிகளை உடனடியாக மாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/222194
  3. பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி இந்தி 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஒன்பதாம் நூற்றாண்டில் (கி.பி 850 வாக்கில்) தெற்கு இந்தியாவில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஜயாலயச் சோழன் எனும் மன்னர் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். சோழ சாம்ராஜ்ஜியத்திற்கான அடித்தளம் இவ்வாறு தான் நிறுவப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் (கிபி 907 ஆம் ஆண்டு) சோழ சாம்ராஜ்ஜியத்தின் முதலாம் பராந்தக மன்னர் அரியணை ஏறி 48 ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் வந்த பலவீனமான மன்னர்களால் சோழ சாம்ராஜ்ஜியம் சரியத் தொடங்கியது. கிபி 985 ஆம் ஆண்டு முதலாம் ராஜராஜ சோழன் அரியணை ஏறியபோது சோழ சாம்ராஜ்ஜியம் மீண்டும் எழத் தொடங்கியது. முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவரின் மகன் ராஜேந்திர சோழன் தலைமையில் சோழர்கள், ஆசியாவில் மிகப்பெரிய ராணுவ, பொருளாதார மற்றும் கலாசார சக்தியாக உருவெடுத்தனர். ஒரு காலகட்டத்தில் சோழ சாம்ராஜ்ஜியம் தெற்கில் மாலத்தீவிலிருந்து வடக்கே வங்காளத்தில் கங்கை நதிக்கரை வரை பரவியிருந்தது. ரிச்சர்ட் ஈடன் தனது 'பாரசீக காலத்தில் இந்தியா (India in the Persianate Age)' புத்தகத்தில் சோழர்கள், "தஞ்சையின் மகா சோழர்கள்" என அறியப்பட்டதாக குறிப்பிடுகிறார். "ஒட்டுமொத்த தெற்கு கரை மீதான அவர்களின் கட்டுப்பாடு தற்போதும் கோரமண்டல் என நினைவுகூரப்படுகிறது. சோழமண்டல் என்கிற வார்த்தையின் மறுவிய வடிவம் தான் கோரமண்டல். இது சோழப் பேரரசின் ஆட்சி எல்லையைக் குறிக்கிறது" என எழுதியுள்ளார். ஸ்ரீவிஜய அரசுடனான மோதல் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நடராஜர் சிலை சோழப் பேரரசின் அடையாளமாக இருந்தது 11 ஆம் நூற்றாண்டில் கெமர் மற்றும் சோழ வணிகர்கள் வங்காள விரிகுடாவின் கரையோரம் அமைந்துள்ள நாடுகளின் பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்தனர். தங்கள் இருவரின் நலனும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்துள்ளது என சோழர்களும் கெமர்களும் உணர்ந்தனர். இந்தக் காலகட்டத்தில் கெமர் பேரரசும் மிகப் பெரிதாக, செல்வாக்கு மிக்கதாக இருந்தது. அவர்கள் தற்போதைய கம்போடியா, தாய்லாந்து மற்றும் வியட்நாமின் பல பகுதிகளை ஆட்சி செய்தனர். கம்போடியாவில் உள்ள பிரபலமான அங்கோர்வாட் கோவிலை கெமர் மன்னர்கள் கட்டினர். ஒய் சுப்பராயலு தனது 'சோழர்களின் கீழ் தென்னிந்தியா (South India Under the Cholas)' எனும் புத்தகத்தில், "பல கல்வெட்டுகள் சோழர்கள் மற்றும் கெமர்கள் இடையே நட்புறவு இருந்தையும், 1020 ஆம் ஆண்டில் இருவருக்கும் இடையே ரத்தினங்கள் மற்றும் தங்கரத பரிமாற்றம் இருந்ததையும் குறிப்பிடுகின்றன. அதிகரித்து வந்த ரஷ்ய, சீன மக்கள் தொகை மற்றும் ஆடம்பர பொருட்கள் மீதான அவர்களின் ஈடுபாட்டால் இரு அரசுகளும் பெரிதும் பலனடைந்தன" என எழுதியுள்ளார். இருவருக்கும் இருந்த ஒரே எதிரி - ஸ்ரீவிஜய அரசு தான். பௌத்தர்களான ஸ்ரீவிஜய அரசர்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல துறைமுகங்களை கட்டுப்படுத்தி வந்தனர். சீனா நோக்கிச் சென்ற அனைத்து கப்பல்களுக்கும் அவர்கள் வரி விதித்தனர். வரி செலுத்தாத கப்பல்களை அவர்களின் கப்பற்படை தாக்கி அழித்தது. ஸ்ரீவிஜய அரசின் தோல்வி ஸ்ரீவிஜய அரசர்களின் ராஜாங்கம் சோழ அரசர்களை கோபமடையச் செய்தது. சோழ மன்னர்களுக்கு நட்புறவான செய்திகளை அனுப்பிய அதே வேளையில் தற்போதைய நாகப்பட்டினம் துறைமுகம் இருக்கும் பகுதியில் பௌத்த மடம் கட்டுவதற்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தனர். மறுபுறம், சீன மன்னர்களிடம் சோழர்கள் சிறிய அரசு என்றும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்து வந்தனர். ராஜேந்திர சோழன் 1015-இல் சீனர்களுடன் ராஜாங்க உறவுகளை ஏற்படுத்தினார். அப்போது ஸ்ரீவிஜயர்களின் கொள்கையைப் பற்றி அறிந்த பிறகு விஜயதுங்கவ மன்னரிடம் தனது ராணுவ வலிமையைக் காட்ட முடிவு செய்தார். 1017ஆம் ஆண்டு நடந்த போரில் ராஜேந்திர சோழன் வென்று விஜயதுங்கவர்மனை சிறைபிடித்தார். அதன் பின்னர், ராஜேந்திர சோழனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு தனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தார் விஜயதுங்கவர்மன். வெற்றிக்குப் பிறகு வன்முறை பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை ஒன்றின் எச்சங்கள் ராஜேந்திர சோழன் ஆசியாவில் மிகப் பிரபலமான நபராக மாறினார். அவர் ராணுவ வெற்றிகளின்போது வன்முறையில் ஈடுபடுவதற்காக அறியப்பட்டார். அவர் போர் விதிகளை மீறுவதாக அவரின் எதிரிகள் குற்றம்சாட்டினர். சாளுக்கியர்கள் உடனான போரில் ஒட்டுமொத்த ராஜ்ஜியத்தையும் அழித்து, "பெண்கள் மற்றும் பிராமணர்களைக் கொல்லவும் தயங்கவில்லை" எனத் தெரிவிக்கப்படுகிறது. அனிருத் கனிசெட்டி தனது 'தென்னிந்தியாவின் தக்காணப் பிரபுக்கள்: சாளுக்கியர்கள் முதல் சோழர்கள் வரை (Lords of the Deccan, Southern India from Chalukyas to Cholas)' எனும் புத்தகத்தில், "இலங்கையின் வரலாற்றிலும் ராஜேந்திர சோழனின் வீரர்கள் கடுமையாக நடந்து கொண்டது பதிவு செய்யப்பட்டுள்ளது" என எழுதியுள்ளார். "அரச குடும்பத்தின் பெண்களை கடத்தி, அனுராதபுரத்தின் அரச கஜானாவை களவாடிச் சென்றனர். இது மட்டுமில்லை பௌத்த மடங்களின் ஸ்துபிக்களை உடைத்து ரத்தினத்தை எடுத்துச் சென்றனர்" என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலத்தீவு ஆக்கிரமிப்பு பட மூலாதாரம், UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான பொலன்னறுவா இலங்கை அரசாங்கம் மற்றும் சோழப் பேரரசின் பழமையான அரச நகரம். 1014-இல் ராஜராஜ சோழனின் மறைவுக்குப் பிறகு ராஜேந்திர சோழன் அரியணை ஏறினார். பாண்டியர்கள் மற்றும் சேரர்கள் உடனான சண்டைக்குப் பிறகு 1017-இல் முதலில் இலங்கையைத் தாக்கினார். இந்தத் தாக்குதலின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது அல்ல, மாறாக முடிந்த வரையில் தங்கம் மற்றும் இதர பொக்கிஷங்களை எடுத்து வர வேண்டும் என்பது தான் என அந்த காலத்து கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. எனினும், முடிவில் சோழர்கள் முதல் முறையாக முழு இலங்கைத் தீவையும் கட்டுப்பாட்டில் எடுத்தனர். அதற்கு ஓராண்டு கழித்து 1018-இல் ராஜேந்திர சோழன் மாலத்தீவிற்கும் லட்சத்தீவிற்கும் கடற்படைகளை அனுப்பி அவற்றை சோழ காலனிகளாக மாற்றினார். 1019-இல் வட கர்நாடகா மற்றும் தெற்கு மகாராஷ்டிராவிற்கு ராணுவப் படைகளை அனுப்பினார். 1021-இல் தென்னிந்தியாவின் பெரும்பகுதிகளைக் கட்டுப்படுத்திய சாளுக்கியர்களை வென்றார். கங்கை நீரை தெற்கிற்கு எடுத்துச் சென்றவர் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சோழர்கள் கட்டிய சிவன் கோவில் 1022-இல் தனது பேரரசை 1000 மைல்கள் தாண்டி கங்கையின் கரை மற்றும் அதற்கு அப்பாலும் விரிவுபடுத்தினார். வழியில் ஓடிசா மற்றும் வங்காளத்தின் சக்திவாய்ந்த பால சாம்ராஜ்ஜியத்தின் மன்னரான மகிபாலாவை தனது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்தார். "ராஜேந்திர சோழன் வங்காளத்திலிருந்து மிக விலையுயர்ந்த ரத்தினங்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் மற்றும் கலசங்களில் கங்கையின் புனித நீரையும் எடுத்துக் கொண்டு திரும்பினார். இந்த சாதனையின் நினைவாக அவருக்கு 'கங்கை கொண்ட சோழன்' என்கிற பெயர் கிடைத்தது. கங்கை கொண்ட சோழபுரத்தை தனது புதிய தலைநகராக அறிவித்தார். கங்கை கொண்ட என்றால் கங்கையை வென்றவர் என்று பொருள்" என ரிச்சர்ட் ஈடன் எழுதியுள்ளார். புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியரான ரோமிலா தாப்பர் தனது 'ஆதி இந்தியா (Early India)' புத்தகத்தில், "வெற்றிக்குப் பிறகு கங்கை நீரை தெற்கே எடுத்துச் சென்றது வடக்கு மீதான தெற்கின் வெற்றியின் சின்னம்" என எழுதியுள்ளார். சுமத்ராவிற்கு கப்பல் பயணம் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இந்தோனீசியாவில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்பன்னன் கோவில் ராஜேந்திர சோழன் தனது தலைநகரில் சிவனுக்கு ஒரு கோவிலை கட்டினார், இது 250 ஆண்டுகளுக்கும் மேலாக சைவ வழிபாடு மற்றும் சோழ கட்டடக்கலையின் அடையாளமாக திகழ்ந்தது. தலைநகரில் மிகப்பெரிய செயற்கை ஏரி ஒன்றை நிர்மாணித்தார் ராஜேந்திர சோழன். இதன் பரப்பளவு 16 மைகள் நீளமும் 3 மைல்கள் அகலமும் ஆகும். வங்காளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நதி இந்த ஏரியில் ஊற்றப்பட்டது, ஆனால் ராஜேந்திர சோழன் நீண்ட காலம் வடக்கு மீதான தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்த முடியவில்லை. மாலத்தீவு மற்றும் இலங்கை மீதான தனது வெற்றிகளால் குதூகலமடைந்த ராஜேந்திர சோழன் மற்றும் கடல்கடந்த பயணத்திற்கு திட்டமிட்டிருந்தார். இந்த முறை இந்தோனீசியாவில் உள்ள சுமத்ரா தீவுகளுக்கு தன்னுடைய கப்பற்படையை அனுப்பும் எதிர்பாராத முடிவை எடுத்தார். ஸ்ரீவிஜய அரசு மீதான கப்பற்படை வெற்றி பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 'The Golden Road' புத்தகத்தில் வில்லியம் டால்ரிம்பிள், சோழர்களின் வெளிநாட்டு பயணங்கள் பற்றி குறிப்பிடுகிறார். 1017-இல் ராஜேந்திர சோழன் மற்றும் ஸ்ரீவிஜய அரசிற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ராஜேந்திர சோழனின் கப்பற்படை வென்றது. இது மலேசியாவின் கெடா ("கடாரம்") நகரில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ராஜேந்திரன் 'கெடாவை வென்றவர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். 1025-இல் ராஜேந்திர சோழன் தனது முழு கப்பற்படையையும் ஸ்ரீவிஜய அரசுக்கு எதிராக சண்டையிட அனுப்பினார். பால் முனோஸ் தனது 'ஆதி சாம்ராஜ்ஜியங்கள் (Early Kingdoms)' புத்தகத்தில், "இந்தப் போரில் வெற்றிக்குப் பிறகு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் அங்கோரைச் சேர்ந்த சூர்யவர்ம மன்னர், ராஜேந்திர சோழனுக்கு விலைமதிக்க முடியாத பரிசுகளை வழங்கினார். மிகப்பெரிய கப்பற்படை ஒன்றை அவர் அனுப்பினார். இவை சோழர்களின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நாகப்பட்டினத்தில் அணி சேர்க்கப்பட்டன" என எழுதியுள்ளார். வில்லியம் டால்ரிம்பிள் தனது 'தங்க சாலை (The Golden Road)' புத்தகத்தில், "இந்தப் போருக்கான வீரர்கள் மற்றும் யானைகளும் கூட கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டன. சோழர்கள் தங்களின் சண்டையை இலங்கையில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து ஆரம்பித்தனர்" என எழுதியுள்ளார். மேலும் அதில், "பல நாட்கள் கடல் பயணத்திற்குப் பிறகு அவர்கள் சுமத்ரா, தகுவா பா என்கிற தாய்லாந்து துறைமுகம் மற்றும் மலேசியாவில் உள்ள கேதா ஆகிய இடங்கள் மீது எதிர்பாரா தாக்குதலை நடத்தினர், அப்போது ஒரு தெற்காசிய அரசால் தங்கள் நாட்டிற்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட நீண்ட தூர ராணுவ நடவடிக்கை ஆகும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றிகரமான போர்களுக்குப் பிறகு ராஜேந்திரனின் ஆதிக்கம் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவியிருந்தது. இந்த வெற்றியின் பெருமையால் அதன் முழு விவரங்களை தஞ்சையில் உள்ள கோவில் சுவற்றில் 1027 ஆம் ஆண்டு எழுதினார். விஜய் மற்றும் சங்கீதா சகுஜா தங்களின் 'ராஜேந்திர சோழன், தென்கிழக்கு ஆசியாவிற்கான முதல் கடல் பயணம் (Rajendra Chola, First Naval Expedition to South-East Asia)' எனும் புத்தகத்தில், "இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு இடங்களில் நான்கு சுமத்ராவிலும், ஒன்று மலாய் தீபகற்பத்திலும் ஒன்று நிகோபார் தீவுகளிலும் உள்ளது" என எழுதியுள்ளார். அதில், "ராஜேந்திர சோழன் இன்று சிங்கப்பூர் என அழைக்கப்படும் இடத்தை கடந்து சென்றிருப்பது சாத்தியமே. இதற்கு காரணம் அங்கும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதில் ராஜேந்திர சோழனின் பல்வேறு பெயர்களில் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர். சீனாவுடன் நெருங்கிய உறவு பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. தெற்கிழக்காசியாவில் கடல் வழியாக ராஜேந்திர சோழன் நுழைந்ததன் நோக்கம் வெற்றி பெறுவது மட்டுமல்ல, ஒரு வர்த்தகப் போரில் ராணுவ பலத்தைப் பயன்படுத்தி கடல் வழித்தடங்களில் ஸ்ரீவிஜய அரசின் பிடியை வலுவிழக்கச் செய்வதே ஆகும் என வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். கென்னத் ஹால் எழுதிய 'Khmer Commercial Development and Foreign Contacts under Suryavarman I' எனும் புத்தகத்தில், "இந்தப் பயணங்களில் முக்கியமான நோக்கம் என்பது சீனா உடன் மிகவும் லாபகரமான வர்த்தகப் பாதையை உருவாக்குவது ஆகும். அந்த காலகட்டத்தில் மிளகு, மசாலா மற்றும் பருத்திக்கு சீனாவில் பெரிய அளவில் தேவை இருந்தது. இவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அளவில் லாபம் சம்பாதிக்க முடியும் என சோழர்கள் நம்பினர்" என எழுதியுள்ளனர். ஸ்ரீவிஜயர்களை தற்காப்பு நிலைப்பாட்டை எடுக்க கட்டாயப்படுத்திய பிறகு, ராஜேந்திர சோழன் சீனாவுக்கு தனது தூதுக்குழுவை அனுப்பினார். சீன பேரரசருக்கு தந்தம், முத்துகள், பன்னீர், காண்டாமிருகக் கொம்புகள் மற்றும் பட்டு ஆடைகள் போன்ற விலையுயர்ந்த பரிசுகளை எடுத்துச் சென்றார். அதற்குச் சில நாட்கள் கழித்து சீனாவின் குவான்சூ நகரில் கோவில் ஒன்று கட்டப்பட்டது. அதன் சில பகுதிகள் தற்போதும் உள்ளன. ஜான் கை தனது, 'தமிழ் வணிகர்களும் இந்து-பௌத்த புலம்பெயர்ந்தோரும் (Tamil Merchants and the Hindu-Buddhist Diaspora)" எனும் புத்தகத்தில், "1067-69 காலகட்டத்தில் சோழ இளவரசர் திவாகரன் சீனாவில் உள்ள கோவில்களை பராமரிக்க நிதிகள் வழங்கினார் என ஒரு சீன கல்வெட்டு குறிப்பிடுகிறது" என எழுதியுள்ளார். தமிழ் வணிகர்கள் சீனாவிலிருந்து கோரமண்டல் துறைமுகங்களுக்கு நறுமணக் கட்டைகள் (சந்தனக்கட்டை), தூபம், கற்பூரம், முத்துக்கள், பீங்கான் மற்றும் தங்கம் அடங்கிய கப்பல்களைக் கொண்டு வந்தனர். கெமர் பேரரசு உடனான உறவுகள் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சோழ மற்றும் கெமர் சாம்ராஜ்ஜியங்கள் இடையேயான ஒத்துழைப்பின் அடையாளமாக அங்கோர் வாட் கோவில் உள்ளது. ராஜேந்திர சோழனின் காலகட்டத்தில் சோழ மற்றும் கெமர் சாம்ராஜ்ஜியங்கள் இடையேயான ஒத்துழைப்பு, உலகின் மிகப்பெரிய அங்கோர்வாட் கோவில் கட்டுமானத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விஷ்ணு கோவில் தற்போதும் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தஞ்சையிலும் சிதம்பரத்திலும் கோவில்கள் கட்டப்பட்ட அதே காலகட்டத்தில் தான் இந்தக் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் இரு சக்தி வாய்ந்த மன்னர்கள் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். சிறந்த போர் வீரர் என்பதோடு, சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தார் ராஜேந்திர சோழன். பல கிராமங்களில் பல உயர்தர குருகுலங்களை நிறுவினார். இங்கு மாணவர்களுக்கு சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழி கற்பிக்கப்பட்டது. தஞ்சாவூர் தவிர்த்து ஸ்ரீரங்கம், மதுரை, ராமேஸ்வரம் உட்பட பல பிரம்மாண்டமான கோவில்களை அவர் கட்டினார். அவை இன்றளவும் கட்டடக்கலைக்குச் சான்றாகப் பார்க்கப்படுகின்றன. ராஜேந்திர சோழன் கடலை மட்டுமல்ல மக்களின் மனங்களையும் வென்றவர் எனக் கூறப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj4werp9lj2o
  4. 10 AUG, 2025 | 10:09 AM நெடுந்தீவுக்கான போக்குவரத்து இடர்பாடுகளை குறைக்கும் முகமாக திங்கட்கிழமை (04) முதல் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையேயான படகுகள் சேவை பரீட்சார்த்தமாக அதிகரிக்கப்படுகின்றது. நெடுந்தீவுக்கான அதிகரித்த பயணிகள் மற்றும் சேவையில் ஈடுபட போதுமான படகுகள் இன்மை காரணமாக நெடுந்தீவுக்கு பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இதற்கமைய சனிக்கிழமை (09) குறிகட்டுவான் இறங்குதுறையில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர், நெடுந்தீவு பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இம்முடிவு எட்டப்பட்டது. இதற்கமைய திங்கட்கிழமை காலை 6.15 மணிக்கு முதலாவது படகும் 6.45 க்கு இரண்டாவது படகும் நெடுந்தீவிலிருந்து புறப்பட்டு மீளவும் முறையே 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கியும் பயணிக்கும். அதேபோன்று மாலை 2.30 மணிக்கும் 3.30 மணிக்கும் நெடுந்தீவிலிருந்து படகுகள் புறப்பட்டு குறிகாட்டுவனை வந்தடைந்து, குறிகாட்டுவானில் இருந்து மீளவும் 4.00 மணிக்கும் 4.45 மணிக்கும் புறப்பட்டு நெடுந்தீவை சென்றடைய கூடியவாறு படகு சேவைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/222202
  5. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் உண்மைகளை கூறுவதற்கு சோமரத்ன ராஜபக்ஷ தயாரில்லை; உள்ளகக் கட்டமைப்புக்களில் நம்பிக்கை இல்லை என சோமரத்னவின் மனைவி, சகோதரி சுட்டிக்காட்டு Published By: DIGITAL DESK 3 10 AUG, 2025 | 10:34 AM (நா.தனுஜா) சர்வதேச விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்ற சோமரத்ன ராஜபக்ஷவின் அறிவிப்பை அடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலும் அவர் அவ்வதிகாரிகளிடம் எதனையும் கூறமாட்டார் எனவும், ஏனெனில் கடந்தகாலங்களில் உண்மையைக் கூறியபோதிலும் நீதி கிட்டாததன் விளைவாக தாம் அக்கட்டமைப்புக்கள்மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி மற்றும் சகோதரி கேசரியிடம் தெரிவித்தனர். கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை மற்றும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் என்பன தொடர்பில் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டுமொரு சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதியமைச்சர் உள்ளிட்டோருக்கு அண்மையில் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விடயத்தில் சோமரத்ன ராஜபக்ஷவின் நிலைப்பாடு தொடர்பில் அவரது மனைவி செனாலி சம்பா விஜேவிக்ரம மற்றும் அவரது சகோதரி ரோஹினி ராஜபக்ஷ ஆகியோர் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெளிவுபடுத்தினர். அதன்படி பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியை கைதுசெய்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தனது கணவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது மிகப்பாரதூரமான குற்றச்சாட்டு எனவும், அக்குற்றத்தைப் புரியாத தனது கணவர் 29 வருடகாலமாகத் தண்டனை அனுபவித்துவருதாகவும் அவரது மனைவி செனாலி சம்பா விஜேவிக்ரம சுட்டிக்காட்டினார். அதேபோன்று தாம் நாட்டையும், இராணுவத்தினரையும் காட்டிக்கொடுப்பதாகத் தற்போது பலர் குற்றஞ்சாட்டுகின்ற போதிலும், தாம் நாட்டைக் காட்டிக்கொடுக்கவில்லை எனவும், மாறாக தனது கணவருக்கும், அவருடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏனைய நால்வருக்குமான நீதியையே கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை இவ்விடயத்தில் நாட்டுக்குள் தமக்கான நீதி கிடைக்காவிடின், தாம் சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியைக் கோரவிருப்பதாகவும், உள்நாட்டு அரசாங்கம் தமக்கு எவ்வித நிவாரணத்தையும் அளிக்காத நிலையில், தனது சகோதரர் சர்வதேச விசாரணையில் சகல விடயங்கள் தொடர்பிலும் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் ரோஹினி ராஜபக்ஷ தெரிவித்தார். அதுமாத்திரமன்றி சோமரத்ன ராஜபக்ஷவின் அறிவிப்பை அடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலும் அவர் அவ்வதிகாரிகளிடம் எதனையும் கூறமாட்டார் என்றும், ஏனெனில் கடந்தகாலங்களில் உண்மையைக் கூறியபோதிலும் நீதி கிட்டாததன் விளைவாக தாம் அக்கட்டமைப்புக்கள்மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி விளக்கமளித்தார். மேலும் தனது கணவர் மீதும், ஏனைய நால்வர் மீதும் சுமத்தப்பட்ட மிகமோசமான குற்றத்தை உண்மையிலேயே புரிந்தவர்கள் வெளியே சுதந்திரமாக இருப்பதாகவும், அக்குற்றத்தைப் புரியாதவர்கள் 29 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட செனாலி சம்பா விஜேவிக்ரம, தற்போது தனது கணவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கையையும், தமக்கான நீதியையுமே எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222206
  6. காசாநகரை முழுமையாக ஆக்கிரமிக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு - இஸ்ரேலிய தலைநகரில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் Published By: RAJEEBAN 10 AUG, 2025 | 09:51 AM காசாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் திட்டத்திற்கு எதிராக இஸ்ரேலிய தலைநகர் டெல்அவியில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இஸ்ரேலிய பிரதமர் இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவேண்டும், பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். காசாநகரை முழுமையாக கைப்பற்றும் நடவடிக்கை இராணுவரீதியிலான தீர்மானம் இல்லை, இது நாங்கள் மிகவும் நேசிக்கும் மக்களிற்கான மரண தண்டனை என ஹமாசிடம் பணயக்கைதியாக உள்ள ஒம்ரி மிரானின் மனைவி ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி இதில் உடனடியாக தலையிடவேண்டும் என மன்றாடினார். இந்த அரசாங்கம் இனவெறிபிடித்தது, அவர்கள் நாட்டின் நலனிற்கு எதிராக அனைத்தையும் செய்கின்றனர் என 69 வயது ரமி டார் தெரிவித்திருந்தார். அவரும் டிரம்ப் பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். வெளிப்படையாக தெரிவிப்பது என்றால் நான் எதிலும் நிபுணத்துவம் உள்ளவல் இல்லை, ஆனால் இரண்டு வருட யுத்தத்தின் பின்னர் வெற்றி என எதுவும் இல்லை என தனது கணவர் இரண்டு பிள்ளைகளுடன் பேரணியில் கலந்துகொண்ட 45 யனா தெரிவித்தார். இரண்டு தரப்பும் மேலும் உயிர்களை இழப்பது ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே என அவர் கருத்து தெரிவித்துள்ளார். பேரணியில் கலந்துகொண்டவர்கள் பணயக்கைதிகளின் படங்களுடன் காணப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் இஸ்ரேலிய அரசாங்கம் குறித்து சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், பெஞ்சமின் நெட்டன்யாகு மேலும் யுத்தத்தை தீவிரப்படுத்துவதை அமெரிக்க ஜனாதிபதி தடுத்து நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவத்தினால் கொல்லப்பட்ட காசா சிறுவர்களின் படங்களுடனும் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் காணப்பட்டனர். https://www.virakesari.lk/article/222200
  7. 10 AUG, 2025 | 09:19 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அன்றைய தினமே இலங்கை தொடர்பான விரிவான எழுத்துமூல அறிக்கை உயர்ஸ்தானிகரால் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதற்கமைய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான விரிவான எழுத்துமூல அறிக்கை, கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான 8 ஆம் திகதி உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். அதேவேளை இலங்கை தொடர்பில் நடைமுறையில் இருக்கும் இத்தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்குவரும் நிலையில், இலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானத்தைக் கொண்டுவரவிருப்பதாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. இருப்பினும் அத்தீர்மானத்தின் திருத்தப்படாத வரைபு மற்றும் அதன் மீதான வாக்கெடுப்புக்கான திகதி என்பன இன்னமும் வெளியாகவில்லை. இது இவ்வாறிருக்க பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் வெளிவிவகார, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழுவினர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222190
  8. முல்லைத்தீவில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தினரே பக்கத்து வீடுகளில் முகாம்களில் தங்கியுள்ளனர், இராணுவம் தொடர்ந்தும் அதே இனப்படுகொலை வெறியில் இருக்கின்ற வரைக்கும், எந்தவொரு தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பு இருக்கப்போவதில்லை- கஜேந்திரகுமார் Published By: RAJEEBAN 09 AUG, 2025 | 06:36 PM இராணுவம் தொடர்ந்தும் அதே இனப்படுகொலை வெறியில் இருக்கின்ற வரைக்கும், முல்லைத்தீவில் - வடக்குகிழக்கில் இருக்கின்ற எந்தவொரு தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பு இருக்கப்போவதில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- எங்களிற்கு கிடைத்த தகவலின் படி இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கொலை. அவ்வாறே எங்களிற்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் முகாமிற்கு சென்ற பிறகு அவரை கொலை செய்துதான் குளத்தில் போட்டிருக்கின்றார்கள் என அங்கிருக்ககூடியவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். ஆட்சி மாற்றத்தின் பின்னரும் வடக்குகிழக்கில் குறிப்பாக முல்லைத்தீவில், ஒன்றிற்கு இரண்டு என்ற அடிப்படையில்தான் இராணுவத்தினர் காணப்படுகின்றனர். ஒரு இராணுவசிப்பாய் இரண்டு பொதுமக்கள் என்ற அடிப்படையில்தான் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். அங்கு கொலை நடந்தால் கூட இராணுவத்திற்கு தெரியாமல் நடக்க முடியாத நிலைதான் அங்கு காணப்படுகின்றது. அதுதான் அங்கு காணப்படுகின்ற யதார்த்தம், ஆகவே இந்த நிலையிலே, ஒரு இனப்படுகொலையையே செய்திருக்கின்ற ஒரு இராணுவம் 16 வருடங்களாக அந்த இனப்படுகொலை தொடர்பாக எந்த வித பொறுப்புக்கூறலும் நடக்காமலிருக்க, அந்த இனப்படுகொலையில் ஈடுபட்ட நபர்களே பக்கத்து பக்கத்து வீடுகளில் முகாம்களில் தங்கியியுள்ளனர். பெண்களை துஸ்பிரயோகம் செய்தவர்களே பக்கத்தில வீதியில் நடந்து செல்கின்றார்கள். பிள்ளைகளை கடத்தி துஸ்பிரயோகம் செய்தவர்களே பக்கத்தில் வந்து நிற்கின்றார்கள். அவர்கள் பாடசாலைக்கு செல்கின்றார்கள், சிவில் பாதுகாப்பு படையினர் என தெரிவித்துவிட்டு முன்பள்ளிகளில் படிப்பிக்கின்றார்கள். ஆகவே அவர்கள் செய்த நேரடிகுற்றங்களிற்கு பொறுப்புக்கூற வைக்கப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்பது ஒன்று. ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்;துகொண்டுள்ள நிலையிலே தொடர்ந்தும் தண்டிக்கப்படாமல் தொடர்ந்தும் அந்த மக்கள் மத்தியில் இருப்பது என்பது, அந்த மக்களை இன்னும் இன்னும் மிக மோசமான ஒரு மனஉளைச்சலிற்கு, அவர்களின் மனதை உடைக்கின்ற ஒரு செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம். இராணுவத்தினர் முழுமையாக பொறுப்புக்கூறவைக்கின்ற வரைக்கும், இராணுவத்தில் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம், போர்க்குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்ட முழுப்பேரும் அதிலிருந்து முழுமையாக அகற்றப்படும் வரையிலாவது அந்த இராணுவம் வடக்குகிழக்கிலிருந்து அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைப்பதற்கு காரணம் எங்களிற்கு ஏதோ விசர் என்பதற்காக இல்லை. அவர்கள் அங்கிருக்க கூடாது , அந்த மக்களிற்கு அவர்கள் அங்கிருப்பதே ஒரு ஆபத்து. இராணுவம் தொடர்ந்தும் அதே இனப்படுகொலை வெறியில் இருக்கின்ற வரைக்கும், முல்லைத்தீவில் - வடக்குகிழக்கில் இருக்கின்ற எந்தவொரு தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பு இருக்கப்போவதில்லை. https://www.virakesari.lk/article/222181
  9. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க முயற்சிக்கின்றோம் - சுகாதார அமைச்சர் Published By: DIGITAL DESK 2 09 AUG, 2025 | 04:05 PM (எம்.மனோசித்ரா) அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தினை தடுப்பதற்கு சுகாதார அமைச்சின் சார்பில் சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. இனங்காணப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு வழங்கப்படும். எனவே பொது மக்களுக்கு தடையற்ற மருத்துவ சேவையை வழங்குவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சனிக்கிழமை (09) இடம்பெற்ற இலங்கை அவசர மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் வருடாந்த ஆய்வு மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு வேலை நிறுத்த போராட்டத்துக்குச் செல்வதற்கான காரணமொன்று இருக்கும் என நான் நினைக்கவில்லை. அவர்களுடன் நான் கலந்துரையாடினேன். சில இடங்களிலுள்ள பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன. தற்போது சேவையாற்றும் வைத்தியர்கள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் இணைக்கப்பாட்டுடனேயே பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு நாம் நியாயமான தீர்வொன்றை வழங்குவோம். மக்களுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும் என்பதே அனைவரதும் நோக்கமாகும். எவ்வாறிருப்பினும் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே நாம் அந்த சேவையை ஆற்றிக் கொண்டிருக்கின்றோம். கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளுக்கு தற்போது படிப்படியாக தீர்வினை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். எனவே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடாது என எதிர்பார்க்கின்றோம். கடந்த ஆட்சிக் காலங்களில் செயற்பட்டதைப் போன்றே தற்போதும் சில அதிகாரிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு நியாயமானதல்ல. சுகாதார அமைச்சின் அனைத்து அதிகாரிகளும் ஒரே இலக்குடனேயே பணியாற்றுகின்றனர். சுகாதாரத்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு என்ன காரணம் என்பதை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நன்கு அறியும். தட்டுப்பாடு நிலவும் மருந்துகளை விரைவாக கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. திங்களன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தினை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் சுகாதார அமைச்சின் சார்பில் நாம் முன்னெடுத்திருக்கின்றோம். எமது முயற்சி வெற்றியளிக்கும் என்று நம்புகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/222173
  10. முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன் : சந்தேகத்தில் 6 இராணுவத்தினர் கைது : மூவருக்கு விளக்கமறியல்! 09 AUG, 2025 | 08:08 PM முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 6 இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் 3 இராணுவத்தினரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை (8) முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போன நிலையில் இன்று காலை (09) குறித்த குடும்பஸ்தர் குளத்திலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த இளைஞனின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்ட நிலையில், சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த இராணுவ முகாமிற்கு சென்ற ஐவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு நபருக்கு முதுகு பகுதிகளில் பலத்த அடிகாயங்கள் ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என அழைப்பு எடுத்து வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடத்தியதில், முத்தையன்கட்டில் வசிக்கும் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடைய ஏழு மாத குழந்தையின் தந்தையே காணாமல்போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (07) இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் அதனையடுத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இராணுவ முகாம் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவ் இராணுவ முகாமிலுள்ள கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தகரங்கள் தருவதாக கூறி அப்பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு இராணுதினர் ஒருவரால் தொலைபேசியில் கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஐவர் சென்றுள்ளனர். இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களுக்கு தடிகள், கம்பிகளால் இராணுவத்தினர் துரத்தி துரத்தி குறித்த இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள குளம் வரை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதலால் என்ன செய்வதென்று தெரியாது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக ஓடி தப்பி வந்ததாகவும் 20 ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தம்மை தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் ஒருவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இராணுவ முகாமிற்கு சென்ற ஐந்து நபர்களில் நால்வர் திரும்பி வந்துள்ள நிலையில் ஒருவர் மாயமாகிய நிலையில், இன்று காலை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இன்றையதினம் இராணுவ முகாமிற்கு சென்ற இராணுவ வாகனம் வீதியில் பொதுமக்களால் வழிமறிக்கப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும் என கேட்டுள்ளனர். காணாமல்போன குறித்த இளைஞர் தப்பி ஒடும்போது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள முத்தையன்கட்டு குளத்தின் பின்பகுதியில் வீழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதி கிராம மக்கள் நீரில் இறங்கி நேற்று வெள்ளிக்கிழமை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோதும் குறித்த குடும்பஸ்தரின் சடலம் இன்றுகாலை மீட்கப்பட்டது. இந்நிலையில் குறித்த காணாமல்போன இளைஞனின் சகோதரரால் குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/222183
  11. மன்னார் சிந்துஜா மரணம் தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் கைது 09 AUG, 2025 | 08:16 PM மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் மரணத்துடன் தொடர்புடையதாக பணி நீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக ஐவரில் மூவர் இன்றைய தினம் சனிக்கிழமை (9) கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் 28 உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண்ணின் மரணத்திற்கு நீதி கோரி வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. மருத்துவக் கவனயீனத்தால் ஏற்பட்ட அதீத இரத்தப்போக்கு காரணமாக குறித்த இளம் தாயின் மரணம் சம்பவித்துள்ளது என மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளிவந்தது. இந்த நிலையில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக இரண்டு தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக குறித்த ஐவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குறித்த ஐவரில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும், இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர் களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை(9) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போது மன்னார் நீதவான் குறித்த மூவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் சந்தேக நபரான வைத்தியர் ஒருவரையும், தாதிய உத்தியோகத்தர் ஒருவரையும் கைது செய்ய உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார். இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/222178
  12. முல்லைதீவில் இளைஞன் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை முல்லைத்தீவு முத்தையன் கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டமை மற்றும் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தப்பியோடிய இளைஞர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இன்று (9) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் 7 இளைஞர்கள் சென்றதாகவும், அவர்கள் இராணுவத்தால் விரட்டப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளதுடன் தப்பியோடிய ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொலைபேசி ஊடாக உரையாடியதுடன் அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டேன். இது தொடர்பில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியிருந்தேன். பொலிஸார் இது தொடர்பில் நீதியான வகையில் விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர். அத்தோடு, எமது உயர்மட்ட அமைச்சர்களுக்கும் இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளேன். அவர்களும் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர். ஆகவே, இச் சம்பவம் தொடர்பில் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைத் தன்மையினை வெளிபபடுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார். -வவுனியா தீபன்- https://adaderanatamil.lk/news/cme3z7wt802bqqp4k1h7g2pps
  13. ஆபரேஷன் சிந்தூர்: எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன? - இந்திய விமானப்படை தலைவர் புதிய தகவல் பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கைகள் பற்றி விமானப் படை தலைவர் பேசினார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்த ஆண்டு மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த ராணுவ மோதலின்போது ஐந்து போர் விமானங்களும் ஒரு பெரிய விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தலைவர் மார்ஷல் ஏபி சிங் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதைப்பற்றி பேசியுள்ளார். இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கைகள் பற்றி விமானப் படை தலைவர் பேசினார். ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மே 6, 7 இரவு அன்று நடந்த தாக்குதலில் குறி வைக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருந்தது. இந்த நடவடிக்கைகளுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் தொடங்கியது. பெங்களூருவில் நடைபெற்ற 16வது ஏர் சீஃப் மார்ஷல் எல் எம் கத்ரே சொற்பொழிவில் ஏபி சிங் கலந்து கொண்டார். அப்போது, இந்த ராணுவ நடவடிக்கையின்போது இந்திய விமானப்படை குறைந்தது ஐந்து பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் மற்றும் ஒரு பெரிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தார். பெரிய விமானம் எலிண்ட் (ELINT) அல்லது ஏஇடபிள்யு&சி (AEW&C) ஆக இருக்கலாம் எனத் தெரிவித்தார். ஏபி சிங்கின் கூற்றுப்படி விமானம் தரையிலிருந்து 300 கிலோமீட்டர் தூரத்தில் குறிவைக்கப்பட்டது. இது தற்போது வரை மேற்கொள்ளப்பட்டதிலே தரையிலிருந்து வான் இலக்குகளைக் குறிவைக்கும் மிகப்பெரிய தாக்குதல் ஆகும் என்றார். '80-90 மணி நேரம் வரை நீடித்த உயர் தொழில்நுட்ப போர்' பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதலை 'உயர் தொழில்நுட்ப போர்' என்று விவரித்தார். இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதலை 'உயர் தொழில்நுட்ப போர்' என்று அவர் விவரித்தார். "இது இந்தியா சண்டையிட்ட உயர் தொழில்நுட்ப போர் என நான் கூறுவேன். இதில் அவர்களின் (பாகிஸ்தான்) வான் பாதுகாப்பு அமைப்புக்கு மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தினோம்" எனத் தெரிவித்தார். மேலும், "இந்த இழப்புகளைப் பார்த்த பிறகு, இனியும் இதைத் தொடர்ந்தால் அதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தனர். இது உயர்மட்ட அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது" என்றார். மே 7-10 வரை நடைபெற்ற ராணுவ மோதல் தொடர்பாக பல்வேறு வகையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மே 31 ஆம் தேதி, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான், பாகிஸ்தான் உடனான மோதலின்போது இந்திய விமானப்படை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்திருந்தார். இந்தியா - அமெரிக்கா உறவில் ஏற்பட்டுள்ள 'கசப்புணர்வு' பாகிஸ்தானுக்கு சாதகமாகுமா? 'இந்தியாவுக்கு பாகிஸ்தான் கச்சா எண்ணெய் விற்கலாம்' - பாகிஸ்தானின் எண்ணெய் வளம் பற்றிய ஒரு பார்வை இந்தியாவை விமர்சித்துவிட்டு பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்த டிரம்ப் - எந்த துறைகளுக்குப் பாதிப்பு? 'ஆபரேஷன் சிந்தூரை' நிறுத்த சொன்னது யார்? வேறுபடும் மோதி - டிரம்ப்! இந்திய விமானங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறிய பாகிஸ்தானின் கூற்றையும் அவர் முற்றிலுமாக மறுத்தார். எனினும், கடந்த மாதம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் மோதலில் 'ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது' எனத் தெரிவித்தார். ஆனால், எந்த நாடுகளின் விமானங்கள் பாதிக்கப்பட்டன என டிரம்ப் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னதாக ஐந்து இந்திய ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. எனினும், இந்தியா இந்தக் கூற்றை தொடர்ந்து மறுத்து வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78znz37862o
  14. மன்னாரில் காற்றாலை அமைத்தல், கனிய மணல் அகழ்வுக்கு எதிராக தொடர் போராட்டம் : பேசாலை கிராம மக்களும் இணைவு 09 AUG, 2025 | 02:46 PM மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2வது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (9) 7 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராம மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் தீவு பகுதியில் 2வது கட்டமாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) பாரிய காற்றாலைகளின் பாகங்கள் வாகனங்களில் மன்னார் நகர பகுதியை நோக்கி எடுத்து வரப்பட்ட நிலையில் மன்னார் தள்ளாடி சந்தியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் தள்ளாடி சந்தி மற்றும் மன்னார் சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக மக்களும்,பொது அமைப்புக்கள் இணைந்து சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில்,மக்களின் எதிர்ப்பையும் மீறி காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாகங்கள் மன்னார் நகர பகுதிக்கு பலத்த பொலிஸாரின் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது. எனினும் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம் பெற்று வந்தது.இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பேருந்துகள் மூலம் இன்றைய தினம் சனிக்கிழமை (09) வருகை தந்து குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கினர். குறிப்பாக மன்னார் தீவு பகுதியில் ஏற்கனபேவ அமைக்கப்பட்ட காற்றாலை மின் கோபுரங்களினால் மீனவர்கள் பாரிய அளவில் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு,காற்றாலைகள் காணப்படும் பகுதிகளில் வசித்து வருகின்ற மக்கள்,குறிப்பாக வயோதிபர்கள்,சிறுவர்கள்,கர்ப்பிணித்தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் காற்றாலை கோபுரங்கள் அமைத்ததன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினால் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக பேசாலை கிராமம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரிய வெள்ள நீர் தேங்கிய நிலையில் அவற்றை கடலுக்குள் செலுத்த தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர். மேலும் மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் கணிய மணல் அகழ்வுக்கு நாங்கள் ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம் எனவும் மன்னார் தீவை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் குறித்த இரு திட்டங்களையும் நிறுத்த ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து பதாகைகளை ஏந்தியவாறு மாவட்டச் செயலக பிரதான வீதியூடாக சென்று மீண்டும் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தனர். பின்னர் நகர சுற்றுவட்ட பகுதியில் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/222161
  15. 09 AUG, 2025 | 01:07 PM (எம்.மனோசித்ரா) ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஞாயிற்றுக்கிழமை (10) நாடளாவிய ரீதியில் 2587 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன. இம்முறை சிங்கள மொழி மூலம் 2,31,637 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 76,313 மாணவர்களும் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டு மொத்தமாக 3,07,951 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பரீட்சை நிலையங்களுக்கான முழுமையான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி தெரிவித்தார். கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து அதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே ஏதேனும் அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து தேவையான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும். யாழ்ப்பாணத்தில் தீவுகளில் நிறுவப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு வினாத்தாள்களைக் கொண்டு சேர்ப்பதற்கு கடற்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏதேனும் தேவை ஏற்படும் பட்சத்தில் விமானப்படை மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும். தடையற்ற மின் விநியோகம் தொடர்பில் இலங்கை மின்சாரசபையுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் குறித்து இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று அவசர மருத்துவ நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பரீட்சாத்திகள் காலை 8.30 மணிக்கு பரீட்சை மண்டபங்களுக்கு சென்று விட வேண்டும். முதலில் இரண்டாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படும். காலை 9.30க்கு பரீட்சை ஆரம்பமாகி 10.45க்கு நிறைவடையும். அதன் பின்னர் முற்பகல் 11.15க்கு முதலாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படும். 12.15க்கு பகுதி ஒன்று பரீட்சை நிறைவடையும். பரீட்சைக்கு தேவையான உபகரணங்கள் மாத்திரமமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படும். கைக்கடிகாரத்தை உபயோகிக்க முடியும். ஆனால் நவீன கைக்கடிகாரங்களை உபயோகிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்றார். https://www.virakesari.lk/article/222152
  16. 09 AUG, 2025 | 03:32 PM முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியில் கடந்த வியாழக்கிழமை (07) அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய் தேடப்பட்டுவந்த நபர் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களிடம் உடனடியாக வாக்குமூலங்களைப் பெறுவதுடன், துரிதகதியில் விசாரணைகளை மேற்கொண்டு, குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 07.08.2025 இரவு இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போன நிலையில் தேடப்பட்டுவந்த முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஐயன்கட்டு இடதுகரை, ஜீவநகர் பகுதியைச்சேர்ந்த 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்னும் குடும்பஸ்தர் முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இன்று சனிக்கிழமை (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறிப்பாக கடந்த 07.08.2025 வியாழக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்ட குறித்த நபர் உள்ளடங்கலாக முத்துஐயன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியைச் சேர்ந்த ஐவர், முத்துஐயன்கட்டுக் குளத்திற்கு அண்மைய பகுதியில் அமைந்துள்ள 63 ஆவது படைப்பிரிவு இராணுவ முகாம் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வாறு இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து அப்பகுதி மக்கள் குறித்த பகுதிக்குச் சென்றபோது, ஒரு இளைஞனை இராணுவத்தினர் மிகக் கொடூரமாகத் தாக்கிக்கொண்டிருந்ததாக நேரில் பார்வையிட்ட ஊர்மக்கள் தெரிவிக்கின்னர். இந்நிலையில் இராணுவத்தால் தாக்கப்பட்ட இளைஞனை ஊர்மக்கள் காப்பாற்றச் சென்றபோது அவர்களையும் இராணுவத்தினர் தாக்கமுற்பட்டுள்ளதாக மக்களால் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து ஊர் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற பலத்த முரண்பாட்டினையடுத்து, இராணுவத்தினர் இளைஞனை ஊர்மக்களிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு இராணுவத்தினரால் தாக்கப்பட்ட குறித்த இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார். இந்நிலையில் இராணுவத்தால் தாக்கப்பட்ட ஒருவர் காணாமல் போயிருந்தார். இவ்வாறு காணாமல்போயிருந்த நபரை ஊர்மக்கள் இணைந்து முத்துஐயன்கட்டுக்குளத்தில் தேடியதுடன், கடந்த 08.08.2025அன்று முத்துஐயன்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இத்தகைய சூழலிலேயே இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல் போயிருந்தநபர் 09.08.2025 இன்று காலை முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து சடலமாக இனங்காணப்பட்டிருந்தார். குறிப்பாக முத்துஐயன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முத்துஐயன்கட்டுப் பகுதியிலுள்ள இராணுவத்தினர் குறைந்தவிலையில் எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை வழங்கிவந்ததாகவும், இவ்வாறு இராணுவத்தால் இளைஞர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வந்த பின்னணியிலேயே இராணுவத்தால் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இந்த கொலைச்சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான சூழலில் சடலம் இனங்காணப்பட்ட குறித்த இடம் குற்றப்பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டு, சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் குறித்த இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் த.பிரதீபன் வருகைதந்திருந்தார். இந்நிலையில் நீதவானின் முன்னிலையில் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டதுடன், தடயவியல் பொலிசாரால் தடயவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் உடல்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சிக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகைதந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இராணுவத்தின் அடாவடிச் செயற்பாடுகள் குறித்து நீதிபதியிடம் முறையிட்டிருந்தார். அதேவேளை மக்களாலும் இதன்போது நீதிபதியிடம் முறையீடுகள் செய்யப்பட்டன. மக்களின் முறைப்பாடுகளை பொலீசாரிடம் வாக்குமூலமாகப் பதிவுசெய்யுமாறு நீதிபதியால் இதன்போது தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக மக்களிடம் வாக்குமூலங்களைப் பெறுமாறும், குற்றச்செயல்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது போலிசாரிடம் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222166
  17. பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, காஸாவில் வங்கி அமைப்பு செயல்படவில்லை என்பதால், சம்பளம் பெறுவது மிகவும் சிக்கலானதும், சில நேரங்களில் ஆபத்தானதுமாக இருக்கிறது. கட்டுரை தகவல் ருஷ்டி அபுஅலூஃப் காஸா செய்தியாளர் 9 ஆகஸ்ட் 2025, 03:56 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் கிட்டத்தட்ட இரண்டு வருடப் போருக்குப் பிறகு, ஹமாஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் ராணுவத் திறன் பலவீனமடைந்துள்ளது, அதன் அரசியல் தலைமை மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆனால், போர் நடந்து கொண்டிருந்த போதிலும், ரகசிய முறையைப் பயன்படுத்தி, ஹமாஸ் தொடர்ந்து பணம் வழங்கி வந்துள்ளது. இதன் மூலம், 30,000 அரசு ஊழியர்களுக்கு, மொத்தமாக 7 மில்லியன் டாலர் (சுமார் 5.3 மில்லியன் யூரோ ) சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. காஸாவில் பிபிசி பேசிய 3 அரசு ஊழியர்கள் கடந்த வாரம் தலா 300 டாலர் பெற்றதை உறுதிப்படுத்தினர். இவ்வாறு சம்பளம் பெற்ற பல்லாயிரக்கணக்கான ஊழியர்களில் இவர்களும் அடங்குவர். இவர்கள் போர் தொடங்குவதற்கு முன் பெற்ற முழு சம்பளத்தில் 20% மட்டுமே ஒவ்வொரு 10 வாரங்களுக்கு ஒருமுறை பெறுகின்றனர். பணவீக்கம் அதிகரித்து வருவதால், இந்த குறைவான சம்பளம் ஹமாஸின் விசுவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இஸ்ரேலிய கட்டுப்பாடுகளால் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உதவி அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. சமீபத்திய வாரங்களில் ஒரு கிலோ மாவின் விலை 80 டாலர் வரையிலும் உயர்ந்துள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES காஸாவில் வங்கி அமைப்பு செயல்படவில்லை என்பதால், சம்பளம் பெறுவது மிகவும் சிக்கலானதும், சில நேரங்களில் ஆபத்தானதுமாக இருக்கிறது. இஸ்ரேல், ஹமாஸின் சம்பள விநியோகஸ்தர்களை அடையாளம் கண்டு தாக்குகிறது, இதனால் ஹமாஸின் ஆட்சித் திறனை சீர்குலைக்க முயல்கிறது. காவல்துறை அதிகாரிகள் முதல் வருமான வரித்துறை ஊழியர்கள் வரை, பலரும் தங்கள் தொலைபேசியிலோ அல்லது தங்கள் துணைவரின் தொலைபேசியிலோ ரகசிய செய்தி பெறுகின்றனர். அந்த செய்தியில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு "நண்பரைச் சந்தித்து தேநீர் அருந்த" செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அந்த குறிப்பிடப்பட்ட இடத்தில், ஒரு ஆணோ, சில சமயங்களில் ஒரு பெண்ணோ அந்த ஊழியரிடம் வந்து, சீல் வைக்கப்பட்ட ஒரு உறையை அமைதியாக ஒப்படைத்துவிட்டு, எதுவும் பேசாமல் மறைந்து விடுகிறார். அந்த உறைக்குள் தான் சம்பளப் பணம் வைக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் மத விவகார அமைச்சகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர், பாதுகாப்பு காரணங்களுக்காக தனது பெயரை வெளியிட மறுத்தார். அவர், சம்பளம் வாங்கும் போது ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி விவரித்தார். "ஒவ்வொரு முறை சம்பளம் வாங்கச் செல்லும் போதும், என் மனைவி மற்றும் குழந்தைகளிடம் விடைபெற்றுச் செல்கிறேன். நான் திரும்பி வருவேனா என்பது தெரியாது," என்று கூறிய அந்த அதிகாரி, "பல முறை, இஸ்ரேல் சம்பள விநியோக இடங்களைத் தாக்கியுள்ளது. காஸா நகரில் ஒரு பரபரப்பான சந்தையை குறிவைத்த தாக்குதலில் நான் உயிர் பிழைத்தேன்."என பகிர்ந்துகொண்டார். அலா (பாதுகாப்புக்காக அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஹமாஸ் நடத்தும் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் இவர் தான் பொருள் ஈட்டும் ஒரே நபர். "எனக்கு 1,000 ஷெக்கல்கள் (சுமார் 300 டாலர்) கிடைத்தன, ஆனால் எல்லாம் பழைய, கிழிந்த நோட்டுகள். வியாபாரிகள் இவற்றை ஏற்கவில்லை. 200 ஷெக்கல்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையில் இருந்தன. மீதி பணத்தை என்ன செய்வது என தெரியவில்லை," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இரண்டரை மாத கால காத்திருப்புக்குப் பிறகு, இப்படி கிழிந்த பணத்தில் சம்பளம் தருகிறார்கள்", "என் குழந்தைகளுக்கு உணவளிக்க கொஞ்சம் மாவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், உதவி விநியோக மையங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் கொஞ்சம் மாவு கொண்டு வர முடிகிறது, ஆனால் பெரும்பாலும் வெறுங்கையுடன் திரும்புகிறேன்" என்றும் குறிப்பிட்டார். மார்ச் மாதம், இஸ்ரேல் ராணுவம், கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் நிதித் தலைவர் இஸ்மாயில் பர்ஹூமை கொன்றதாக தெரிவித்தது. அவர் ஹமாஸின் ராணுவப் பிரிவுக்கு நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார். ஹமாஸின் நிர்வாக மற்றும் நிதி அமைப்புகள் பெருமளவு அழிக்கப்பட்டிருந்தாலும், அவர்களால் இன்னும் ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் வழங்க முடிகிறது என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஹமாஸின் பொருளாதார நடவடிக்கைகளை நன்கு அறிந்த, முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் இதுகுறித்து பேசினார். ஹமாஸின் நிதி நடவடிக்கைகளை நன்கு அறிந்த ஒரு மூத்த அதிகாரி, பிபிசியிடம் பேசுகையில், 2023 அக்டோபர் 7-ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு முன், அவர்கள் நிலத்தடி சுரங்கங்களில் சுமார் 700 மில்லியன் டாலர் ரொக்கமாகவும், நூற்றுக்கணக்கான மில்லியன் ஷெக்கல்களையும் சேமித்து வைத்திருந்ததாக தெரிவித்தார். இந்த நிதியை ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் மற்றும் அவரது சகோதரர் முகமது ஆகியோர் நேரடியாக கண்காணித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், இருவரும் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டனர். பட மூலாதாரம், GETTY IMAGES ஹமாஸின் செயலால் மக்கள் அதிருப்தி ஹமாஸ் வரலாற்று ரீதியாகவே, காஸா மக்களுக்கு விதிக்கப்பட்ட அதிக இறக்குமதி வரிகள் மற்றும் பிற வரிகளின் மூலம் நிதி திரட்டியுள்ளது. கத்தாரிடமிருந்து மில்லியன்கணக்கான டாலர் நிதியைப் பெற்றுள்ளது. ஹமாஸின் ராணுவப் பிரிவான கஸ்ஸாம் படை, தனி நிதி அமைப்பின் மூலம் செயல்படுகிறது, இதற்கு முக்கியமாக இரான் நிதியளிக்கிறது. உலகில் மிகுந்த செல்வாக்கு கொண்ட இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்றான, எகிப்தை தளமாகக் கொண்ட (தடை செய்யப்பட்ட) இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் ஒரு மூத்த அதிகாரி, தங்கள் பட்ஜெட்டில் சுமார் 10% ஹமாஸுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். போர்க்காலத்தில் வருவாய் ஈட்ட, ஹமாஸ் வணிகர்களிடம் வரி வசூலித்து, சிகரெட்டுகளை 100 மடங்கு அதிக விலையில் விற்று வருகிறது. போருக்கு முன் 20 சிகரெட்டுகள் கொண்ட பெட்டி 5 டாலராக இருந்தது, இப்போது 170 டாலருக்கும் மேல் விற்கப்படுகிறது. ரொக்கமாக சம்பளம் கொடுப்பதுடன், ஹமாஸ் தனது உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உள்ளூர் அவசரக் குழுக்கள் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்குகிறது. இஸ்ரேலின் தாக்குதல்களால் இந்தக் குழுக்களின் தலைவர்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றனர். இது காஸாவில் பொதுமக்களிடையே கோபத்தைத் தூண்டியுள்ளது. ஹமாஸ் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே உதவி வழங்கி, மற்ற மக்களை புறக்கணிப்பதாக பலர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தின் போது, காஸாவிற்கு வந்த உதவிகளை ஹமாஸ் திருடியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. ஹமாஸ் இதை மறுத்தாலும், பிபிசிக்கு தகவல் அளித்த காஸா வட்டாரங்கள், அந்தக் காலகட்டத்தில் ஹமாஸ் கணிசமான அளவு உதவிகளை எடுத்ததாக உறுதிப்படுத்தியுள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன், புற்றுநோயால் கணவரை இழந்த பிறகு, தற்போது மூன்று குழந்தைகளைப் பராமரிக்கும் நிஸ்ரீன் கலீத் எனும் பெண்ணிடம் பிபிசி பேசியது. "பசியால் வாடிய போது, என் குழந்தைகள் வலியால் மட்டுமல்ல, ஹமாஸ் ஆதரவு பெற்ற எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் உணவுப் பொட்டலங்களையும் மாவுப் பைகளையும் பெறுவதைப் பார்த்தும் அழுதனர். நாங்கள் இப்போது அனுபவிக்கும் துன்பங்களுக்கு அவர்கள் காரணமல்லவா? அக்டோபர் 7 தாக்குதலுக்கு முன், ஏன் உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றை பாதுகாக்கவில்லை?" என்று அப்பெண் கேள்வி எழுப்புகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp37q1e417yo
  18. Published By: RAJEEBAN 09 AUG, 2025 | 12:38 PM மன்னார் மாவட்டம் அண்மைய நாட்களில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. மன்னாரில் மேற்கொள்ள இருக்கின்ற பல்வேறு செயற்பாடுகள் மன்னார் மக்கள் மத்தியில் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே சில பகுதிகளில் அமைக்கப்பட்டு மீளவும் சில இடங்களில் அமைக்கப்பட இருக்கின்ற காற்றாலை மின்சார திட்டமும் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருக்கின்ற கனியமணல் அகழ்வுச் செயற்பாடும் மன்னார் மாவட்ட மக்களிடையே மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையினுடைய ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது மன்னார் தீவு தனித்துவமான புவியியல் அமைப்பை கொண்டிருக்கின்ற பிரதேசமாகும். இதிகாச அடிப்படையில் இராமாயணத்தில் கூறப்படுகின்ற ராமர் பாலத்தினுடைய தொடர்ச்சியாக மன்னார் தீவு காணப்படுகின்ற அதே வேளை இராமர் பாலத்தில் ஊடாக இலங்கைக்கு வந்த இராம சேனை மன்னார் தீவினூடாகவே முதன் முதலில் இலங்கைக்கு வந்தது இந்துக்களிடையே உள்ள மிகப்பெரிய நம்பிக்கையாகும். புவியியல் அடிப்படையில் மிகவும் தனித்துவமான அமைவிடத்தினை மன்னார் தீவு கொண்டிருக்கின்றது. இந்தியாவிற்கு மிக அண்மித்து இலங்கையில் உள்ள பகுதியாக மன்னார் காணப்படுகின்றது. மன்னார் தீவு அமைந்திருக்கின்ற புவியியல் மற்றும் புவிச்சரிதவியல் நிலைமைகள் என்பது மிகவும் சிறப்பு தன்மை வாய்ந்தது. மன்னார் தீவினுடைய தாய்ப்பாறை கடல் மட்டத்திலிருந்து மிக ஆழத்தில் காணப்படுகின்றது. இந்த தாய்ப்பாறை அமைந்துள்ள புவிச்சரிதவியலை காவேரி வடிநிலம் (C1) என அழைக்கப்படும். ஆனால் இதன் தடிப்பு இதனைச் சூழ உள்ள பல பகுதிகளுடன் ஒப்பிடும்போது குறைவாகும். இது 12- 35 கி.மீ. தடிப்பிலேயே காணப்படுகின்றது. இதற்கு மேலாக மயோசின் காலச்சுண்ணக்கற் படிவகள் காணப்படுகின்றன. இதற்கு மேல் அண்மைக்கால மணற் படிவுகள் உள்ளன. இவை அலைகளால் கொண்டு வந்து படிய விடப்பட்டுள்ளன. இவ்வாறு கொண்டு வரப்பட்டு படிய விடப்பட்ட மணல் படிவுகளே இன்று மன்னார் மாவட்டத்தின் இருப்பிற்கே சவால் விடுகின்ற அளவுக்கு மாறியுள்ளது. மன்னாரில் இயல்பாகவே கடலலைகளினால் கொண்டுவரப்பட்டு படிய விடப்பட்டிருக்கின்ற இல்மனைற் மணற்படிவுகள் பற்றிய ஆய்வுகள் 2004ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கூட 2009 ஆம் ஆண்டிலிருந்து அதாவது குறிப்பாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அதாவது 2009 இல் இருந்து 2014 வரையிலான காலப்பகுதியிலேயே மிக ஆழமான ஆராய்ச்சிகள் ஊடாக மன்னார் மாவட்டத்தில் பொருளாதார பெறுமதி மிக்க இல்மனைற் படிவுகள் இருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. இந்த இல்மனைற் படிவுகள் இலங்கையின் பல பகுதிகளில் காணப்பட்டாலும் மொத்த பார உலோகங்களின் சதவீதம் கூடிய, சுத்திகரிப்பு செலவு குறைந்த குறிப்பாக இல்மனைற் செறிவு கூடிய கனிய மணற்படிவுகள், மிகப் பெரிய அளவில் மன்னாரில் அமைவு பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. தென்னாசியாவில் மிகப்பெரிய அளவிலான செறிவு மிக்க இல்மனைற் படிவுகளுடன் கூடிய மணற்படிவுகள் மன்னரில் அமைவு பெற்றுள்ளது. பொருளாதார அடிப்படையில் மிக பெறுமதியான மணற்படிவுகள் மன்னாரில் உள்ளமை பெருமையும் மகிழ்ச்சியும் தரக்கூடியது. ஆனால் மறு வகையில் மன்னாரின் அழிவுக்கும் அதுவே காரணமாக அமையக்கூடும் என்பது துன்பமானது. மன்னாரில் காணப்படும் கனிய மணலில் Ilmenite (இல்மனைற், Leucoxene: (லியூகோக்சீன்), Zirconium: (சிர்க்கோனியம்), Rutile (ரூடைல்),Titanium oxide(டைட்டானியம் ஒக்சைடு),Granite (கருங்கல்),Sillimanite (சிலிமனைட்) மற்றும் Orthoclase(ஓர்த்தோகிளாஸ்) போன்ற கனிமங்கள் உள்ளன. அதனால் தான் மன்னாரில் உள்ள கனிய மணல் பொருளாதார பெறுமதிமிக்கதாக உள்ளது. மன்னார் தீவு 26 கிலோ மீற்றர் நீளமும் 6 கிலோமீற்றர் அகலமும் கொண்ட 140 சதுர கிலோமீற்றர் பரப்பைக் கொண்ட ஒரு தீவாகும். இந்த தீவினுடைய சராசரி உயரமாக 7.8 மீற்றர் காணப்படுகின்றது. இருந்தாலும் இந்த சராசரி உயரம் என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியானதாக இல்லை. சில பிரதேசங்களில் மிகக் குறைவான உயரமும் கொண்டதாக அதாவது கடல் மட்டத்தை விட உயரம் குறைந்ததாகவே காணப்படுகின்றது. தாழ்வுப்பாடு எழுத்தூர், சவுத் பார், தோட்ட வெளி, எருக்கலம்பிட்டி, கொன்னையன் குடியிருப்பு, தாராபுரம், செல்வா நகர் போன்ற பிரதேசங்களின் சராசரி உயரம் கடல் மட்டத்தை விட குறைவாக அல்லது அதற்கு அண்மித்ததாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை சில பிரதேசங்களில் கடல் மட்டத்தை விட 12 மீட்டர் உயரம் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மிக சிறப்பான பொருளாதார பெறுமதிமிக்க இந்த இல்மனைற் மணல் அகழ்வினை மேற்கொள்வதற்காக இலங்கையில் ஐந்து நிறுவனங்கள்( உள்ளூர் நிறுவனங்களின் பெயரில் வெளிநாட்டு நிறுவனங்கள்) விண்ணப்பித்து ஐந்து நிறுவனங்களுக்குமே மன்னார் தீவின் கனியமணல் அகழ்வுக்கான அனுமதியினை கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தில் தேசிய கனிய வளங்கள் ஆய்வு மற்றும் மற்றும் சுரங்கமறுத்தல் பிரிவு (NGSMB) அனுமதியை வழங்கி இருக்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அனுமதி தொடர்பாக மன்னாரில் அமைந்துள்ள தேசிய கனிய வளங்கள் மற்றும் சுரங்கமறுத்தல் பிராந்திய காரியலத்திலிருந்து ஒப்புக்காகவேனும் தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை. இந்த அனுமதி பெற்ற நிறுவனங்களில் நிறுவனங்களில் கில்சித் எக்ஸ்ப்ளோரேஷன் (Kilsythe Exploration) (செப்டம்பர் 2015 இல் 1 அனுமதிப்பத்திரம்), ஹேமர்ஸ்மித் சிலோன் (Hammersmith Ceylon)(செப்டம்பர் 2015 இல் 2 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன), சுப்ரீம் சொல்யூஷன் (Supreme Solution) (நவம்பர் 2015 இல் 2 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன), சனூர் மினரல்ஸ் (Sanur Minerals) (செப்டம்பர் 2015 இல் 2 உரிமங்கள் வழங்கப்பட்டன) மற்றும் ஓரியன் மினரல்ஸ் (Orion Minerals) (ஜூலை 2015 இல் 2 உரிமங்கள் வழங்கப்பட்டன) ஆகியவை அடங்கும். அனுமதி வழங்கப்பட்ட இந்த ஐந்து நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் மணல் அகழ்வுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றன. அவர்கள் இந்த கனிய மணலை அகழ்ந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, யப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளன. மன்னாரின் கனிய மணல் அகழ்விற்காக விண்ணப்பித்திருக்கின்ற அனைத்து நிறுவனங்களுமே கடல் மட்டத்திலிருந்து 12 மீற்றர் ஆழம் வரைக்கும் மணல் அகழ்வை மேற்கொள்ளவுள்ளதாகவும் அகழப்பட்ட மணலில் கனிமங்கள் மட்டும் தனித்து பிரித்தெடுக்கப்பட்டு பின்னர் மிஞ்சிய மணல்கள் மீண்டும் அகழப்பட்ட இடத்திலே கொட்டப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால் மன்னார் தீவினுடைய சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 7.8 மீற்றர். ஆனால் 12 மீற்றர் அகழப்பட்டால் அது அகழப்படும் இடம் முழுவதும் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 10 அடி ஆழத்தில் தோண்டியதற்கு சமமாகவே அமையும். அகழ்வுக்காக முன்மொழியப்பட்ட மூன்று பிரதானமான இடங்களிலும் பல சதுர கிலோமீற்றர் பரப்பிற்கு 10 அடி ஆழத்திற்கு தோண்டியதற்கு சமனாகும். இந்த 10 அடி ஆழத்திற்கும் கடல்நீர் உள்வந்து நிறைந்து விடும். இதனை சாதாரண மக்களும் விளங்கும் வகையில் சொல்வதானால் மணல் அகழப்படும் இடங்கள் முழுவதும் 10 அடி ஆழ கடலாக மாறிவிடும். பொதுவாக ஒரு இடத்தில் இயற்கையாக படிந்த மணலை அல்லது மண்ணை அகழ்ந்து அதே மண்/ மணல் முழுவதையும் மீண்டும் அதே இடத்தில் கொட்டினால் கூட அந்த பிரதேசம் ஒரு குறிப்பிட்ட நாட்களின் பின்னர் பள்ளமாகவே மாறிவிடும். ஆகவே அனுமதி பெற்ற நிறுவனங்கள் குறிப்பிடுவது போல அந்த பிரதேசத்தில் அகழப்பட்ட மண்ணைக் கொண்டே அந்த அகழ்வுக் குழி மூடப்படும் என்பது மக்களை ஏமாற்றும் தந்திரம். சில நாட்களில் அந்த இடம் மீண்டும் பள்ளமாகும். இந்த கனிய மணல் அகழ்விற்காக அனுமதி பெற்ற நிறுவனங்கள் அகழ்வுச் செயற்பாட்டுக்காக பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. பல வழிகளிலும் முயன்று வருகின்றனர். இந்த நிறுவனங்களில் சில உள்ளூர் மக்களிடம் காணிகளைக் கொள்வனவும் செய்துள்ளார்கள். உள்ளூரின் சந்தைப்பெறுமதியை விட பல மடங்கு விலை கொடுத்து காணிகளை வாங்கியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக 10000/- பெறுமதியான காணி ஒன்றை அந்த நிறுவனங்கள் 100000/- கொடுத்து வாங்குகிறார்கள் எனில் அகழ்விற்கு பின்னாலுள்ள பொருளாதாரப் பெறுமதி எத்தகையது என்பது நோக்கற்பாலது. மன்னார் தீவின் கனிய மணல் அகழ்வினை மேற்கொள்வதற்கு பல மட்டங்களில், பல தரப்புக்களினாலும், பல வகைகளான தந்திரங்களும் பாவிக்கப்படும் என அறியக் கிடைக்கின்றது. ஆனால் மன்னார் தீவில் கனிய மணலகழ்வு என்பது; 1. மன்னார் தீவு முழுவதும் 10 அடி பள்ளமாக மாறி கடல் நீரால் நிரப்பப்படும். 2. அகழ்வுக்காக மன்னார் தீவிலுள்ள பனை வளங்களில் குறைந்து 10000 பனைகளாவது அழிக்கப்படும். 3. தரைக்கீழ் நீர்வளம் முழுமையாக பாதிக்கப்படும். 4. மன்னார் தீவின் உருவவியல் மாறிவிடும். எனவே என் அன்புக்குரிய மன்னார் உறவுகளே............ நீங்கள் இப்பொழுது விழித்துக் கொள்ளாவிட்டால் இனி எப்போதும் மன்னார் தீவைக் காப்பற்ற முடியாது. அகழ்வை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு மன்னார் ஒரு கனிய மணல் அகழ்வு மையம். ஆனால் எங்களுக்கு மன்னார் எங்கள் தாய் நிலம். அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களே, இது மன்னார் தீவுக்கு மட்டுமேயுரித்தான பிரச்சினையல்ல. எங்கள் எல்லோருக்கும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினை. https://www.virakesari.lk/article/222153
  19. எனக்குப் பதினைந்து வயது இருக்கும்போது, நான் கல்லூரியில் கணிதம் / கணினியியல் / அறிவியல் படிக்க வேண்டும் என என் அம்மா ஆசைப்பட்டார். எனக்கு இலக்கியத்தைத் தவிர எதிலும் நாட்டமில்லை. கல்வி மகிழ்ச்சியானதாக, என் இலக்குடன் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அம்மா என்னென்னமோ காரணம் சொல்லி என்னை ஏற்க வைக்க முயன்றார். படிக்கவே வைக்க மாட்டேன் என்று மிரட்டினார். வயதுக்கே உரிய பிடிவாதத்தால் நான் ஏற்கவில்லை. கல்லூரியில் இலக்கியம் கற்றேன். ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு கணத்தையும் ரசித்து பங்குபெற்றேன். இளங்கலையிலும், முதுகலையிலும் முதலாவது மதிப்பெண் பெற்றேன். தங்கப்பதக்கம் வென்றேன். அப்போது எனக்கு நான் எடுத்தது மிகச்சிறந்த முடிவு எனத் தோன்றியது. அதன்பிறகு நான் ஆய்வுக் கட்டுரைகளைத் திருத்துவது, தொழில்நுட்பக் கட்டுரைகளை எழுதுவது போன்ற பணிகளைச் செய்தபோதும், கல்லூரி ஆசிரியர் ஆனபோதும் என் முடிவு மிகவும் சரியானது என்றே நினைத்தேன் - ஏனென்றால் மொழிசார்ந்த பணிகள் எவையும் சிரமமாக இருக்கவில்லை. நான் ஏற்கனவே கற்றிருந்தவையே போதுமானதாக இருந்தது - புதிதாக மெனெக்கெட்டுக் கற்று என்னை வேலையிடத்தில் நிரூபிக்கத் தேவையிருக்கவில்லை. சுலபமாக வேலையில் ஜொலிக்கவும் நற்பெயர் வாங்கவும் முடிந்தது. முனைவர் பட்ட ஆய்வு கூட ஒரு புத்தகம் எழுதுவதைப் போலத்தான் இருந்தது. இப்படி என் பட்டப்படிப்புக்குப் பின் முதல் 10-15 ஆண்டுகள் ‘துளிகூட வியர்க்காமல்’ கழிந்தது. நான் மென்பொருளோ மருத்துவமோ கற்றிருந்தால் பிடிக்காத வேலையைச் செய்து மனம் ஒப்பாமல் நாளைக் கழித்து நிம்மதியற்று இருந்திருப்பேன் என ஒவ்வொரு நாளும் எனக்குச் சொல்லிக்கொண்டேன். ஆனால் கடந்த அரைப்பத்தாண்டுகளில் கல்விப்புலத்தில் தனியார்மயமாக்கல் உச்சம் பெற்றது; ஆசிரியப் பணியென்றால் ஆவணமாக்கல், தேர்வுத்தாள் திருத்துதல், மீண்டும் மீண்டும் தோல்வியுறும் மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் மதிப்பெண்களை அளித்தல், சிவாலய ஓட்டம் போலத் தொடரும் எண்ணற்ற கூட்டங்களில் கலந்துகொள்ளுதல் மட்டுமே, கல்வி கற்பித்தம் கட்டக்கடைசியாகச் செய்ய வேண்டியது எனும் நம்பிக்கை வேரூன்றிவிட்டது. குமாஸ்தா பணி! பெரும்பாலான தனியார் உயர்கல்வி ஆசிரியர்கள் கற்பித்தலுக்கும் ஆய்வுக்கும் தொடர்பற்ற பணிகளிலே 90% நேரத்தைச் செலவிட வேண்டிய அழுத்தம் உள்ளது (பள்ளி ஆசிரியர்களின் நிலையும் இதுதான்). இன்னொரு பிரச்சினை ஊதியமும் வேலையுயர்வும் - ஒரு கட்டத்திற்கு மேல் இரண்டுமே சாத்தியமில்லை என்றாகிறது. தொழில்நுட்பக் கல்வியில் இளங்கலைக் கற்றவருக்கு உள்ள வாய்ப்புகளில் 1% கூட முனைவர் பட்டம் முடித்தவருக்கு இருக்காது. ஒரு பள்ளிக்கும் இன்னொரு பள்ளிக்கும், ஒரு கல்லூரிக்கும் இன்னொரு கல்லூரிக்கும் வித்தியாசம் இல்லாதபடி கல்வி நிறுவன நிர்வாகமும் அதன் மொழியும் நகலெடுக்கப்படுகிறது. எங்கு போனாலும் ஒரே இடத்தில் இருப்பதாகவே தோன்றும். இப்போதுதான் எனக்கு வேலையென்பது விரும்பிச் செய்வது அல்ல, சம்பாதிக்கவும் வளரவும் செய்வது எனும் தெளிவு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் நாம் என்னதான் விரும்பிச் செய்தாலும் சூழல் மாறிவிட்டால் டைட்டானிக் கப்பல் மூழ்கும்போது இரண்டு இசைக்கலைஞர்கள் வாசித்துக்கொண்டிருப்பார்களே அப்படித்தான் இருக்க வேண்டும். மரியாதை, அங்கீகாரம், கண்ணியம் எதுவும் கிடைக்காது. மேலும் கணிதமோ மென்பொருளோ கொஞ்சம் பிரயத்தனம் பண்ணியிருந்தால் என்னால் கற்றிருக்க முடியும், நான் பெரிய போராட்டமின்றி படிப்பை முடித்து நல்லவேலையில் அமர்ந்திருக்க முடியும் என இப்போது தோன்றுகிறது. அப்போதிருந்த பிடிவாதம் என் மனதை மூடிவிட்டிருந்ததால் நிறைய விசயங்கள் புரியவில்லை. என் தொழில்வாழ்வு ரெண்டாயிரத்தில் ஆரம்பித்திருந்தால் பல்வேறு வாய்ப்புகளைப் பெற்றிருப்பேன், பொருள் வாழ்வில் சிரமங்கள் இன்றி இருந்திருப்பேன். என்னுடன் முதுகலையில் ஒரு நண்பர் படித்தார். அவர் இளங்கலை ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு பி.பி.ஓவில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு முதுகலை படிக்க எங்களுடன் இணைந்தார். அவர் படிப்பில் சுத்தமாக ஆர்வம் காட்ட மாட்டார். நான் ஒருநாளில் 18 மணிநேரமும் படித்துக்கொண்டிருப்பேன். அவர் ஜெயிக்கும் அளவுக்கு மட்டுமே படித்து பட்டம் பெற்றபின்னர் ஒரு பிரசித்தமான வங்கியில் சேர்ந்தார். நான் அவரைப் படிப்பில் ஆர்வமற்ற தெளிவற்றவர் என நினைத்தேன். ஆனால் அவர் இப்போது அந்த வங்கியில் வி.பியாக இருக்கிறார். இன்னொரு சகமாணவர் பிரமாதமான கிரிக்கெட் வீரர். அவரும் படிப்பில் சரியாக கவனம் செலுத்த மாட்டார். முழுநேரமும் மைதானத்திலே இருப்பார். நான் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்தபோது அவர் எந்த கிரிக்கெட் கிளப்பிலும் நிலைக்க முடியாமல் ஊருக்குப் போய்விட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். வருத்தமாக இருந்தது. அதன்பிறகு அவர் என்ன செய்தார் என்பதை நான் சில ஆண்டுகளுக்குப் பின்பே தெரிந்துகொண்டேன் - அவர் கடற்பொறியியல் படிக்க அமெரிக்கா சென்றார். அப்படியே அங்கு கப்பற்படையில் வேலை பெற்று, பின்னர் தனியார் கப்பல்களில் சேர்ந்து பணிபுரிந்து பல நாடுகளில் சுற்றித்திரிந்து அமெரிக்கப் பெண்ணொருத்தியை மணமுடித்து செட்டில் ஆகிவிட்டார். இரண்டு பேரும் என் புரிதலில் ஆரம்பத்தில் தோல்வியுற்றவர்கள், ஆனால் நிஜத்தில் அவர்களே வென்றவர்கள். நாம் தீவிரமான நேசிக்கும் ஒன்றையோ திறமையுள்ள ஒன்றையோ அல்ல, சம்பாதிக்க வாய்ப்பைத் தரும் ஒன்றையே கற்றுக்கொள்ள வேண்டும், வேலையாக செய்ய வேண்டும் என்று இளமையிலேயே புரிந்துகொண்டவர்கள். இலக்கியம் கற்றாலும் அதன் பொறியில் சிக்கி அழியாதவர்கள். மேலும் இரு நண்பர்களையும் குறிப்பிட வேண்டும். அவர்களும் என்னைப் போலத்தான் - வகுப்பில் ஜொலித்தவர்கள், ஆனால் பின்னர் சாதாரண வேலைகளில் சிக்கி அலைகழிபவர்கள். அன்று என்னிடம் கேட்டிருந்தால் அவர்கள் மிக உயர்ந்த நிலையை எட்டுவார்கள் என்று சொல்லியிருப்பேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதுவே எதார்த்தம். அதனாலே passionஐப் பின் தொடர்ந்துப் போகப் போகிறேன் என்று சொல்லும் இளைஞர்களை நான் இப்போதெல்லாம் ஊக்கப்படுத்துவதில்லை. நமது கனவைப் பின் தொடர்வது அல்ல அக்கனவு நம்மை எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்பதே முக்கியம். போகாத வழியைக் கனவு காண்பதால் பயனில்லை. என் அம்மா அதிகமாகப் படித்தவர் அல்லர். நான் என் பதின்வயதை எட்டியபோது நான் அவரைவிட பலமடங்கு அதிகமாகக் கற்றிருந்தேன். அதனாலே அவரால் என்னிடம் வாதிட்டு என்னை ஏற்றுக்கொள்ள வைக்க இயலவில்லை. என்னளவுக்கு ஆயிரக்கணக்கான நூல்களை வாசிக்காத ஒருவருடைய சொல்லை நான் ஏன் கேட்க வேண்டும் என்னுடைய ஈகோவும் அவரைப் பொருட்படுத்த என்னை அனுமதிக்கவில்லை. என்ன வேண்டுமானாலும் பண்ணிக் கொள் எனும் மனநிலை கொண்டவர் என் அப்பா. இப்போதுள்ள முதிர்ச்சி அப்போதிருந்தால் அதிகம் படிக்காத என் அம்மா சொல்வதையே கேட்டிருப்பேன். கொஞ்சம் மனம் வைத்துப் படித்தால் சுலபத்தில் எந்த பட்டப்படிப்பையும் என்னால் முடித்திருக்கவும் எந்த வேலையிலும் சிறந்திருக்க முடியும். முனைவர் பட்டம் முடித்து ஆசிரியராகி - ஆசிரியப் பணிக்குச் சம்மந்தமில்லாமல் - குமாஸ்தா வேலையைப் பன்ணிக்கொண்டிருக்க மாட்டேன். எந்த சக-ஆசிரியரிடம் பேசினாலும் அவர்களும் என்னைப் போன்றே புலம்புவதைக் கேட்டுக்கொண்டிருக்க மாட்டேன். படிப்பு, வேலை விசயத்தில் மட்டுமல்ல உறவுகள் விசயத்திலும்கூட என் அம்மா தந்த அறிவுரைகள் எவ்வளவு சிறப்பானவை என்பதையும் நான் தாமதமாகவே ஒவ்வொரு முறையும் புரிந்துகொள்கிறேன். தாய் சொல்லைத் தட்டாதே! Posted 14 hours ago by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/08/blog-post_8.html
  20. 09 AUG, 2025 | 11:33 AM ஜேர்மனி இஸ்ரேலிற்கான அனைத்து ஆயத ஏற்றுமதியையும் நிறுத்தியுள்ளது. காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியதை தொடர்ந்தே ஜேர்மனி இது குறித்து அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலைகளின் கீழ் காசா பள்ளத்தாக்கில் எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய எந்த இராணுவ ஏற்றுமதிக்கும் ஜேர்மனி அனுமதியளிக்காது என ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிச் மேர்ஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கு தன்னைபாதுகாப்பதற்கான உரிமையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள அவர் ஹமாஸ் தனது பிடியில் உள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரிப்பதை இதற்கு மேலும் ஜேர்மனியால் சகித்துக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள ஜேர்மனியின் சான்சிலர் காசா பள்ளத்தாக்கில் மேலும் கடுமையான நடவடிக்கைகளிற்காக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி காரணமாக இந்த இலக்குகள் எப்படி நிறைவேறப்போகின்றன என்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/222147
  21. காசா நகரத்தினை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் - இஸ்ரேல் நிராகரிப்பு Published By: RAJEEBAN 09 AUG, 2025 | 11:22 AM காசா நகரத்தினை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் உலகம் நாடுகள் வெளியிட்டுள்ள கண்டனத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. இஸ்ரேலை கண்டித்து தடைகளை விதிக்கப்போவதாக எச்சரிக்கும் நாடுகளால் எங்கள் உறுதிப்பாட்டை குலைக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் ஹட்ஸ் தெரிவித்துள்ளார். காசாவை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்திற்கு ஐநாவும் உலக நாடுகள் பலவும் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. ஜேர்மனி இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தை நிறுத்தியுள்ளது. மோதல் மேலும் விரிவடைவது மேலும் பாரிய இடம்பெயர்வை உருவாக்கும்,மேலும் கொலைகளை மேலும் துயரத்தை அர்த்தமற்ற அழிவை இரத்தக்களறியை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் இது தவறான நடவடிக்கை மேலும் இரத்தக்களறியை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/222146
  22. Published By: VISHNU 08 AUG, 2025 | 10:31 PM (நா.தனுஜா) இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். வட, கிழக்கு மாகாணங்களில் இயங்கிவரும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அறிக்கை குறித்த தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி கடந்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் மற்றும் பேரவையில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் தீவிர கரிசனை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இவ்விடயத்தில் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையின் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தன்மை, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் தொடரும் பேரவையின் தாமதம், சுயாதீனமானதும், நியாயமானதும், செயற்திறன்மிக்கதுமான செயன்முறையொன்றை ஸ்தாபிப்பதற்குப் பதிலாக இலங்கை அரசாங்கத்தில் தங்கியிருத்தல் என்பன தொடர்பில் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவேண்டும், ஐக்கிய நாடுகள் கட்டமைப்புக்குள் நடைமுறைச்சாத்தியமான வேறு வழிமுறைகளைப் பரிந்துரைத்தல், உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை முற்றுமுழுதாக சர்வதேசமயப்படுத்தி விரிவுபடுத்தல், சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான பொறிமுறையொன்றைப் பரிந்துரைத்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/222137
  23. வீராங்கனைகளின் மார்பகங்களும் மாதவிடாயும் விளையாட்டு திறனை எப்படி பாதிக்கின்றன? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, UEFA மகளிர் யூரோ 2022 இறுதிப் போட்டியில் தனது கோலை கொண்டாடுகிறார் பிரிட்டன் வீராங்கனை க்ளோய் கெல்லி 5 மணி நேரங்களுக்கு முன்னர் பெண்கள் விளையாட்டில் ஒரு முக்கிய கோடையில் யூரோ கோப்பை போட்டிகள் முடிவை எட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால், ஆடுகளத்தின் உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் உற்சாகத்திலிருந்து விலகி, ஒரு அறிவியல் புரட்சியும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. உயர் அளவில் விளையாடப்படும் விளையாட்டுகள் பெண் உடலில் தனித்துவமான வகையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. மார்பகங்கள் ஒருவர் ஓடும் விதத்தை எப்படி மாற்றுகின்றன, ஆனால் சரியான ஸ்போர்ட்ஸ் பிரா உங்களுக்கு சற்று சாதகத்தை தரலாம்; செயல்திறன் மீது மாதவிடாய் சுழற்சியின் தாக்கம், மாதவிடாய் கண்காணிப்பு கருவிகள் என்ன பங்காற்றமுடியும்; சில காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் கூடுதலாக இருப்பதற்கு காரணம் என்ன, அவற்றை தவிர்க்க என்ன செய்யலாம்? தொழில்முறை விளையாட்டு வீராங்கனைகள் தாங்கள் "மினி ஆண்களாக" கருதப்பட்டதாக என்னிடம் கூறிய காலத்திலிருந்து இது மிகவும் வேறுபட்டது. மார்பக இயங்கியல் (Breast biomechanics) பட மூலாதாரம், GETTY IMAGES 2022ஆம் ஆண்டு நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியின் பிரபலமான காட்சியை நினைவுகூருங்கள். வெம்ப்லி மைதானத்தில் போட்டியின் கூடுதல் நேரத்தில் பிரிட்டன் வீராங்கனை க்ளோய் கெல்லி ஜெர்மனிக்கு எதிரான வெற்றி கோலை அடித்தார். இதைத் தொடர்ந்த வெற்றிக்கொண்டாட்டத்தில், அவர் தனது பிரிட்டன் சட்டையை கழற்றி தனது ஸ்போர்ட்ஸ் பிராவை உலகுக்கு காட்டினார். இதை வடிவமைத்தவர் "பிரா ப்ரொஃபசர்" என்ற புனைப்பயரால் அழைக்கப்படும் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜோனா வேக்ஃபீல்ட்-ஸ்கர். இதோ மார்பகங்கள் பற்றிய அவரது தகவல்கள் ஒரு கால்பந்தாட்ட போட்டியின் போது மார்பகங்கள் சராசரியாக 11,000 முறை மேலும்கீழுமாக அசையக்கூடும் (bounce) உரிய ஆதரவு இல்லாவிட்டால் ஒரு பவுன்ஸின் சராசரி அளவு 8 சென்டிமீட்டர் (3 அங்குலம்) அவை 5ஜி விசையுடன் (புவியீர்ப்பு விசையைவிட ஐந்து மடங்கு அதிகம்) நகர்கின்றன. இது ஃபார்முலா 1 கார் ஓட்டுநரின் அனுபவத்துக்கு ஒப்பானது. மார்பின் மீது நகர்வுகளை அளவிடும் மோஷன் சென்சார்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகள், நகரும் மார்பக திசுக்களின் எடை உடலின் மற்ற பாகங்களின் செயல்பாட்டை எப்படி மாற்றுகின்றன என்பதையும், அவ்வாறு மாற்றப்படும் செயல்பாடு விளையாட்டு திறனை எப்படி பாதிக்கிறது என்பதையும் காட்டியுள்ளன. "சில பெண்களுக்கு அவர்களது மார்பகம் அதிக எடையுள்ளதாக இருக்கலாம், அவை நகர்ந்தால், அது அவர்களது உடல் நகர்வை மாற்றக்கூடும், களத்தில் அவர்கள் வெளிப்படுத்தும் விசையின் அளவைக் கூட அது மாற்றக்கூடும்," என வேக்ஃபீல்ட்-ஸ்கர் என்னிடம் தெரிவித்தார். பட மூலாதாரம், UNIVERSITY OF PORTSMOUTH படக்குறிப்பு, போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகம், உடற்பயிற்சியின் போது மார்பக திசு இயக்கத்தைக் கண்காணிக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. உடலின் மேற்பகுதி நகர்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் மார்பகங்கள் மேலும்கீழுமாக அசைவைதை ஈடுகட்டுவது, இடுப்பு இருக்கும் நிலையை மாற்றி, எடுத்துவைக்கும் ஒவ்வொரு எட்டின் நீளத்தை குறைக்கிறது. அதனால்தான் ஸ்போர்ட்ஸ் பிராக்கள் வசதிக்கும், ஃபேஷனுக்கும் மட்டுமல்லாது செயல்திறனை அதிகரிக்கும் ஒரு கருவியாகவும் இருக்கின்றன. "மார்பகங்களுக்கு குறைவான ஆதரவு இருந்தால், அது எடுத்துவைக்கும் அடியின் நீளத்தை நான்கு சென்டிமீட்டர் குறைத்ததை நாங்கள் பார்த்தோம்," என விளக்குகிறார் வேக்ஃபீல்ட்-ஸ்கர். "ஒரு மாரத்தானில் நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நான்கு சென்டிமீட்டரை இழந்தால் அது மொத்தமாக ஒரு மைலாக கணக்காகிறது." ஸ்போர்ட்ஸ் பிராக்கள் மார்பின் உள்ளே இருக்கும் மென்மையான அமைப்புகளையும் பாதுகாக்கின்றன, "நாம் அவற்றை நீட்டினால் அவை நிரந்தரமாகிவிடும்," என்கிறார் அந்த பேராசிரியர், எனவே "இது குணப்படுத்துவதைவிட, நிகழாமல் தடுப்பதில் இருக்கிறது." மாதவிடாய் சுழற்சியும், செயல்திறனில் அதன் தாக்கமும் பட மூலாதாரம், CALLI HAUGER-THACKERY படக்குறிப்பு, காலி ஹாகர்-தாக்கரி, பிரிட்டன் தொலைதூர ஓட்ட வீராங்கனை மாதவிடாய் சுழற்சி உடலின் மீது தெளிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது உணர்வுகளையும், மனநிலையையும், தூக்கத்தையும் பாதிக்கக்கூடும் என்பதுடன் களைப்பு, தலைவலி மற்றும் பிடிப்புகளை (cramps) உண்டாக்கலாம். ஆனால், விளையாட்டின் மீது மாதவிடாயின் தாக்கத்தை பற்றி பேசுவது "இன்னமும் விலக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இன்னமும் அதனுடன் போராடிக்கொண்டிருப்பதால் அதை பற்றி பேசுவது விலக்கிவைக்கப்பட்டதாக இருக்கக்கூடாது," எனவும் ஒலிம்பிக்கில் கிரேட் பிரிட்டன் சார்பாக பங்கேற்ற தொலைதூர ஓட்ட வீராங்கனை காலி ஹாகர்-தாக்கரி சொல்கிறார். மாதவிடாய் நெருங்கும்போது தனது உடலில் ஏற்படும் மாற்றங்களை எப்போதும் உணர்வதாக சொல்கிறார் காலி. "நான் சோர்வாக உணர்கிறேன், கால்கள் கனமாக இருக்கின்றன, சில நேரங்களில் கிட்டத்தட்ட சேற்றில் ஓடுவதைப் போல் உணர்கிறேன், எல்லாமே வழக்கத்தை விட கூடுதல் முயற்சி தேவைப்படுவதாக இருக்கின்றன," எனகிறார் அவர். தனது மாதவிடாய் கண்காணிப்பு கருவியின் அடிப்படையில் தனது வாழ்க்கையை வாழ்வதாகவும், மாதவிடாய் நேரம் "குறிப்பாக பெரிய பந்தயங்கள் வரும்போது" தனக்கு கவலையளிப்பதாகவும் உணர்கிறார். அப்படி ஒரு பெரிய பந்தயம், பாஸ்டன் மாரத்தான், ஏப்ரலில் நடைபெற்ற போது அவரது மாதவிடாய் காலம். அப்போட்டியில் அவர் ஆறாவது இடத்தை பிடித்தார். "அதிர்ஷ்டவசமாக அதை கடந்ததாக" நினைவுகூரும் அவர், அதே நேரம் தன்னால் இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியுமா என்பதை சிந்திக்காமல் இருக்க முடியவில்லை என கூறுகிறார். மாதவிடாய் சுழற்சி. இரண்டு ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஆகியவற்றின் ஏற்ற இறக்கங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது விளையாட்டு செயல்திறன் மீது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? "அது தனிநபர் சார்ந்தது என்பதுடன் இதில் பல நுணுக்கங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி செயல்திறனை பாதிக்கிறது என வெறுமனே சொல்லிவிடும் அளவு எளிதானது அல்ல," என்கிறார் மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தில் பெண் உட்சுரப்பியல் மற்றும் உடற்பயிற்சி உடலியல் நிபுணரான பேராசிரியர் கிர்ஸ்டி எலியட்-சேல். "போட்டிகள், தனிப்பட்ட சிறந்த செயல்பாடு, உலக சாதனை, எல்லாம் படைக்கப்பட்டுள்ளன, மாதவிடாய் காலத்தின் ஒவ்வொரு நாளிலும் வெல்லப்பட்டு, இழக்கப்பட்டுள்ளன," என்கிறார் அவர். இதில், 2022 சிகாகோவில் நடைபெற்ற மாரத்தானில் மாதவிடாயால் ஏற்பட்ட பிடிப்புகளுடன் ஓடி உலக சாதனையை முறியடித்த பவுலா ராட்கிளிஃப்பும் அடங்கும். படக்குறிப்பு, மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிர்ஸ்டி எலியட்-சேல் மாதவிடாய் சுழற்சி விளையாட்டு திறனை பாதிக்கிறதா என்பதை அறிய, ஹார்மோன்களால் உடல் முழுவதும் ஏற்படும் உடலியல் மாற்றங்கள், மாதவிடாய் அறிகுறிகளுடன் செயல்படுவதிலுள்ள சவால், மாதவிடாய் நேரத்தில் போட்டியிடும் மன உளைச்சல் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் இவை அனைத்தைப் பற்றிய பார்வைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். "ஒருவர் வலுவாகவோ அல்லது பலவீனமாகவோ இருக்கும் ஒரு கட்டமோ, அவர் வெல்வார் அல்லது தோல்வியடைவார் என்ற கட்டமோ கிடையாது என பேராசிரியர் எலியட்-சேல் சொல்கிறார். ஆனால் கோட்பாட்டு அடிப்படையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் எலும்பு, தசை அல்லது இதயம் போன்ற உடல் பகுதிகளை மாற்றலாம். "நாம் இன்னமும் புரிந்துகொள்ளாதது இதுதான்: இது உண்மையில் செயல்திறனை பாதிக்கும் அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதா?," என்கிறார் அவர். "தூக்கமின்மை, களைப்பு மற்றும் பிடிப்புகள் செயல்பாட்டை பாதிக்கும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவு, தங்கள் மாதவிடாயின்போது ஒரு பெரிய கூட்டத்தின் முன் விளையாடவுள்ள வீராங்கனைகளுக்கு ஏற்படும் பயமும் கவலையும் "முற்றிலும் உணரக்கூடிய நிலையில் உள்ள ஒன்று என அந்த பேராசிரியர் மேலும் தெரிவித்தார். கசிவு அபாயம் மற்றும் அதனால் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்க மும்மடங்கு மாதவிடாய் உள்ளாடைகளை அணிந்துகொள்ளும் வீராங்கனைகளுடன் பேசியிருக்கும் அவர், "அது ஒரு பெரிய மன பாரம்." என கூறுகிறார். படக்குறிப்பு, கேட்டி டேலி-மெக்லீன், பிரிட்டனின் மிக அதிக புள்ளிகளைப் பெற்ற ரக்பி வீராங்கனை சேல் ஷார்க்ஸ் வுமென் ரக்பி அணி, மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது. நான் முன்னாள் பிரிட்டன் ரக்பி கேப்டனும், இங்கிலாந்து அணியின் மிக அதிக புள்ளிகளை குவித்தவருமான கேட்டி டேலி-மெக்லீனை சந்தித்தேன். மாதவிடாய் ஏற்படுத்த வாய்ப்புள்ள தாக்கத்தைப் பற்றியும் அதற்கு எப்படி திட்டமிடுவது என்பது பற்றியும் அவர்கள் புரிந்துகொள்ள அணி வெளிப்படையான ஆலோசனைகளை நடத்திவருகின்றன. "இதைப்பற்றி நான் செய்வதற்கு ஒன்றுமில்லை." என நினைப்பதற்கு பதிலாக மூன்று நாட்களுக்கு முன்பே இப்யூபுரூஃபன் மாத்திரிகளை எடுத்துக்கொள்வது இதில் அடங்கும்." என்கிறார் டேலி-மெக்லீன். "இந்த புரிதல் மற்றும் தகவல் மூலம்தான் நாம் இதைப் பற்றி பேசமுடியும், திட்டங்களை வகுத்து, ஒருவரை மேலும் சிறந்த ரக்பி வீரராக மாற்ற அவரது நடத்தையை மாற்றலாம்," என அவர் சொல்கிறார். காயங்களை தவிர்ப்பது எப்படி? பெண்கள் விளையாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுவதால் தெரியவந்திருக்கும் ஒரு விஷயம் சில காயங்கள் ஏற்படுவதற்கான் வாய்ப்பில் ஏற்பட்ட மாற்றம். காலின் மேல் மற்றும் கீழ் பகுதியை இணைக்கும் பகுதியான முன்புற சிலுவை தசைநார் (ACL) மீதுதான் பெரும்பகுதி கவனம் செலுத்தப்படுகிறது. இதில் ஏற்படும் காயங்கள் மிகவும் மோசமானதாக இருப்பதுடன், இவற்றிலிருந்து மீண்டுவருவதற்கு ஓராண்டு ஆகலாம். பங்கேற்கும் விளையாட்டைப் பொறுத்து இந்த காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் ஆண்களை விட பெண்களுக்கு எட்டு மடங்கு அதிகம் என்பது மட்டுமல்லாமல், அவை மிகவும் சாதரணமாகி வருகின்றன என்கிறார், மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு இயங்கியல் ஆய்வாளர் தாமஸ் டாஸ்'சான்டோஸ். ஆனால், பெண்களுக்கு அதிக அபாயம் ஏற்படுவதை விளக்க "எளிதான விளக்கம்," ஏதும் இல்லை, என்கிறார் அவர். உடற்கூற்றில் இருக்கும் வேறுபாடுகள் இதற்கு காரணமாக இருக்கலாம். பெண்களுக்கு பெரிய இடுப்புகள் இருப்பதால், தொடை எலும்பின் மேற்பகுதி மேலும் அகலமான ஒரு நிலையிலிருந்து தொடங்குவதால் முழங்காலில் காலின் கீழ்பகுதியுடன் இணையும் கோணத்தை மாற்றுகிறது, இது காயங்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும். பெண்களில் ACL சற்றே சிறியதாக இருக்கிறது, எனவே அது சற்றே பலவீனமாக இருக்கலாம்," என முனைவர் டாஸ்'சான்டோஸ் விளக்குகிறார். படக்குறிப்பு, முனைவர் தாமஸ் டாஸ்'சான்டோஸ், மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் ACL காயங்கள் மாதவிடாய் சுழற்சியின் அனைத்து கட்டத்திலும் ஏற்படலாம், ஆனால், உலக அளவில் கால்பந்தாட்டத்தை நிர்வகிக்கும் ஃபிஃபா நிதியுதவியுடன் நடத்தப்படும் ஆய்வு உட்பட பல ஆய்வுகளால் ஹார்மோன் மாற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மாதவிடாய்க்கு முன் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருப்பது தசைநார்களின் பண்புகளை மாற்றலாம். இது அவற்றின் நீட்டிக்கப்படக்கூடும் தன்மையை அதிகரிக்கிறது, அதனால் காயமடையும் அபாயம் கோட்பாட்டளவில் அதிகமாக இருக்கலாம்," என்று அவர் கூறுகிறார். ஆனால், ஆண்களுக்கு இணையான தரத்தில் ஆதரவும், வலுப்படுத்தும் பயிற்சிகளையும் பெண்கள் இன்னும் பெறுவதில்லை என்பதால் தூய உடற்கூறியலைத் தாண்டி சிந்திப்பது முக்கியம் என்று டாஸ்'சான்டோஸ் வாதிடுகிறார். அவர் அதை நடன கலைஞர்கள் தரமான பயிற்சியை பெறும் பாலே நடனத்துடன் ஒப்பிடுகிறார், "ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான காய விகிதத்தில் இருக்கும் வேறுபாடு அடிப்படையில் பொருட்படுத்தத்தக்கதல்ல," என்று டாஸ்'சான்டோஸ் கூறுகிறார். சற்றே வித்தியாசமான முறைகளில் நகர விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் ACL காயங்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியுமா என்பது பற்றிய ஆய்வுகள் இருக்கின்றன. ஆனால், இதன்மூலம் செயல்திறன் குறையும் அபாயம் உள்ளது. தடுப்பாட்டக்காரரை ஏமாற்ற தோளை தாழ்த்திவிட்டு பிறகு வேறொரு திசையில் பாய்வது கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் அவசியமானது. இதைப் போன்ற நுட்பங்கள் ACL மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. "நாம் அவற்றை மறைத்துவிட்டு விளையாட்டு விளையாடுபவரை தவிர்க்க வேண்டும் என சொல்ல முடியாது," என்கிறார் டாஸ்'சாண்டோஸ். "அந்தச் சுமைகளை தாங்குமளவு அவர்கள் வலிமையாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்வதுதான் நாம் செய்யவேண்டியது, நாம் 100% ACL காயங்களை நீக்கிவிடலாம் என சிலர் சொல்வதைப்போல் அது அவ்வளவு எளிதானதல்ல, நம்மால் முடியாது." இனியும் 'மினி ஆண்கள் அல்ல' இன்னமும் பதில் இல்லாத பல கேள்விகள் இருந்தாலும், சேல் ஷார்க்ஸ் வுமென் அணியை சேர்ந்த கேட்டி டேலி-மெக்லீனுக்கு இதுவே ஒரு மிகப்பெரிய மாற்றமாகும். 2007-ல் அவர் அணிக்காக முதல்முறையாக விளையாட தொடங்கியபோது, அவரது உடல் எப்படி செயல்படும் என்பது பற்றிய அனைத்து அனுமானங்களும் ஆண் ரக்பி வீரர்களின் தரவுகளின் அடிப்படையில் அமைந்திருந்தன என்பதை நினைவுகூருகிறார். "நாங்கள் மினி-ஆண்களாகவே நடத்தப்பட்டோம்." என்கிறார் டேலி மெக்லீன். இப்போது சிறுமியரும், பெண்களும் விளையாட்டில் வெளிநபர்கள் போன்று உணருவதில்லை என்கிறார் அவர். விளையாட்டு உயர்மட்ட அளவில் திறனை அதிகரிப்பதுடன் மேலும் அதிக பெண்களை விளையாட்டில் வைத்திருக்க உதவுகிறது. "இது அற்புதமானது, இதை கொண்டாட வேண்டிய ஒன்று, புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இளம்பெண்கள் விளையாட்டை விட்டு வெளியேறுவதற்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று உடல் தோற்றம், இது மாதவிடாயை சார்ந்தது மற்றும் சரியான ஸ்போர்ட்ஸ் பிரா இல்லாதது, இவை மிக எளிதாக தீர்க்கப்படக்கூடியவை." ஜெரி ஹோல்ட் தயாரித்த பிபிசியின் 'இன்சைட் ஹெல்த்' நிகழ்ச்சியிலிருந்து - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3v3xql41weo
  24. யாழ். நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு Published By: DIGITAL DESK 2 08 AUG, 2025 | 07:43 PM யாழ். நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஆலய சூழலில் திருடர்களின் நடமாட்டம் காணப்படுவதால், ஆலயத்திற்கு தங்க நகைகளை அணிந்து வருவதை தவிர்க்குமாறும், அணிந்துள்ள தங்க நகைகளில் கவனம் செலுத்துமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். அத்துடன், பொலிஸ் சீருடை மற்றும் சிவில் உடைகளில் பொலிஸார் ஆலய சூழல்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும், அருகில் உள்ளவர்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்தால், பொலிஸாருக்கு உடன் அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேவேளை ஆலய சூழல்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு, அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/222119
  25. Published By: DIGITAL DESK 2 08 AUG, 2025 | 04:34 PM மனித - யானை மோதலைக் குறைப்பதையும், இதனால் ஏற்படும் உயிர் மற்றும் உடைமை இழப்புகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, காட்டு யானைகளின் நடமாட்டத்தை நிகழ் நேரத்தில் அறிவிக்கும் புதிய மொபைல் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செயலியின் உருவாக்குநர்களில் ஒருவரான வினுர அபேரத்ன தெரிவிக்கையில், யானைகள் அருகில் வரும்போது மக்களுக்கு எச்சரிக்கை செய்வதன் மூலம் சேதங்கள் மற்றும் மனித உயிரிழப்புகளைக் குறைப்பதே இந்தச் செயலியின் நோக்கம். இலங்கையில் சுமார் 3,000 பேர் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலியின்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் யானை நடமாட்டம் தென்பட்டால், பயனர்கள் அதனைச் செயலி மூலம் அறிவிக்க முடியும். உடனடியாக, அந்த இடத்திலிருந்து ஐந்து கிலோமீற்றர் சுற்றளவில் உள்ள ஏனைய பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டு, அவர்கள் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள். யானை நடமாட்டம் குறித்த தகவல்களைப் பகிர்வதுடன், யானை மரணங்கள், யானை மோதல்களால் ஏற்படும் மனித உயிரிழப்புகள், சொத்து சேதங்கள் மற்றும் வனவிலங்கு குற்றங்கள் போன்ற சம்பவங்களையும் இந்தச் செயலி மூலம் பயனர்கள் முறைபாடளிக்க முடியும். இதன் மூலம், மனித - யானை மோதல் தொடர்பான விரிவான தகவல்களைப் பெற்று, அதற்கான தீர்வுகளைக் கண்டறியவும் இந்தச் செயலி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/222100

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.