Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஐபிஎல் மினி ஏலத்தில் 'டிமாண்ட்' அதிகம் உள்ள 5 வீரர்கள் இவர்களா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கேமரூன் கிரீன் கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடருக்கான (2026) மினி ஏலம் நாளை (டிசம்பர் 16) நடக்கிறது. அபு தாபியில் நடக்கும் இந்த ஏலத்துக்கான பட்டியலில் 359 வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இதில் 244 இந்திய வீரர்கள் மற்றும் 115 வெளிநாட்டு வீரர்கள். அணிகளைப் பொறுத்தவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அதிகபட்சமாக 13 காலியிடங்கள் இருக்கின்றன. அதேபோல் அந்த அணிதான் அதிகபட்ச தொகையோடு (ரூ 64.3 கோடி) ஏலத்துக்குள் நுழையப்போகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் 9 இடங்கள் மீதமிருக்கின்றன. அவர்களுக்கு 43.4 கோடி ரூபாய் மீதமிருக்கிறது. மும்பை இந்தியன்ஸுக்கோ 2.75 கோடி ரூபாய் மட்டுமே மீதமிருக்கிறது. இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிக அணிகளின் கவனத்தை ஈர்க்கப்போகும், அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தப்போகும் ஐந்து வீரர்கள் யார்? முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன், வர்ணனையாளர் நானி, பத்திரிகையாளரும் வர்ணனையாளருமான பகவதி பிரசாத் மூவரும் பிபிசி தமிழுக்கு அவர்களின் கருத்துகளைத் தெரிவித்தார்கள். அவர்கள் பட்டியலில் பொதுவாக இருந்த 5 வீரர்களின் பட்டியல் இது. அதற்காக அவர்கள் கொடுத்த காரணங்கள் என்ன? 1. கேமரூன் கிரீன் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கேமரூன் கிரீன் இந்த ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது கேமரூன் கிரீன். எந்த இடத்திலும் களமிறங்கக்கூடிய அதிரடி பேட்டர், வேகப்பந்துவீச்சாளர் மற்றும் நல்ல ஃபீல்டர் என்பதால் அவரை வாங்க எந்த அணியுமே ஆசைப்படும். தனது மேலாளர் செய்த தவறால் ஏலத்தில் தான் பேட்டராக பதிவு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறிய கிரீன், தான் பந்துவீசத் தயாராக இருப்பதாகக் கூறினார். அதேசமயம், "கிரீன் பேட்டராகப் பதிவு செய்யப்பட்டிருப்பது அவர் பெரிய தொகைக்குப் போவதற்கு உதவும். ஏனெனில், அவர் பெயர் முதல் செட்டிலேயே இடம்பெற்றிருக்கிறது. அதனால், கொல்கத்தா, சென்னை போன்ற அணிகள் தங்களின் தொகையை செலவு செய்வதற்கு முன்பே இவர் பெயர் வந்துவிடும் என்பதால், நிச்சயம் இரு அணிகளுக்கும் இடையே ஏலத்தின்போது இவரை வாங்க கடும் போட்டி இருக்கும்" என்கிறார் பகவதி பிரசாத். இந்த அணிகள் போக சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய அணிகள் ஓரளவு கிரீனுக்காக முயற்சி செய்யலாம். ஆனால், சென்னை, கொல்கத்தா போல் இவர்களால் அந்த ஒற்றை வீரர் மீது பெரும் முதலீடு செய்யமுடியாது என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு வேறு சில தேவைகள் இருப்பதாகவும் சொல்லும் நானி, கொல்கத்தாவை நிறைய செலவளிக்க வைப்பதற்காக சென்னை இவரை வாங்க ஏலம் கூறலாம் என்கிறார். ஆண்ட்ரே ரஸல் போன்ற ஒரு வீரரின் இடத்தை நிரப்பவேண்டும் என்ற கட்டாயம் கொல்கத்தாவுக்கு இருப்பதால், அவர்கள் கிரீனை வாங்கவேண்டும் என்று காத்திருப்பார்கள் என்கிறார் அவர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,லியாம் லிவிங்ஸ்டன் 2. லியாம் லிவிங்ஸ்டன் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மற்றொரு வெளிநாட்டு வீரர் லியாம் லிவிங்ஸ்டன். கடந்த மெகா ஏலத்தில் அவரை பெங்களூரு வாங்கியிருந்தது. ஆனால், பின்னர் அவரை ரிலீஸ் செய்துவிட்டார்கள். அதனால் பல அணிகளும் தற்போது இவரை வாங்க நினைப்பார்கள். "ஒரு நல்ல மிடில் ஆர்டர் அதிரடி பேட்டர், லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் இரண்டுமே வீசக்கூடியவர் என்பதால் இவருக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் வித்யுத். சென்னை, கொல்கத்தா,ஹைதராபாத், டெல்லி போன்ற அணிகள் இவரைக் குறிவைக்கலாம். தங்கள் நம்பர் 4 இடத்தை பலப்படுத்தவேண்டும் என்று நினைத்தால் குஜராத் டைட்டன்ஸும் இவரை வாங்க நினைக்கலாம். ஃபினிஷராகப் பயன்படுத்த முடியும் என்பதால் எல்லா அணிகளுமே லிவிங்ஸ்டனை வாங்க நினைப்பார்கள் என்பது வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. "அவர் இதுவரை ஐபிஎல் அரங்கில் பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஆனால், மிகச் சிறந்த திறமைசாலி. ஆட்டத்தை மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர்'' என்கிறார் நானி. 3. வெங்கடேஷ் ஐயர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வெங்கடேஷ் ஐயர் மெகா ஏலத்தில் 23.75 கோடி ரூபாய்க்கு வாங்கிய வெங்கடேஷ் ஐயரை, இப்போது ரிலீஸ் செய்திருக்கிறது கொல்கத்தா. "அவரால் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் என எங்குமே விளையாட முடியும். எந்த இடத்திலும் விளையாடக்கூடிய ஒரு இந்திய வீரரை எல்லா அணிகளுக்குமே பிடிக்கும். என்ன, அவர்கள் அவரை எப்படிப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ஏலத்தில் அவருக்காக போட்டியிடுவார்கள்" என்று கூறினார் பகவதி பிரசாத். "கடந்த முறைபோல் அல்லாமல் அவர் 8-10 கோடி ரூபாய்க்குள் ஏலம் போனால் நல்லது" என்கிறார் நானி. "போன முறை அந்தப் பெரிய தொகையே அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. இம்முறை குறைவான தொகைக்கு ஏலம் போவது, அவரது செயல்பாட்டுக்கு நல்லது" என்று அவர் கூறினார். இவருக்கும் சென்னை vs கொல்கத்தா இடையே போட்டி நிலவலாம். அதேசமயம், லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு போன்ற அணிகளுமே இவரை வாங்க முயற்சி செய்யலாம் என்கிறார்கள் நிபுணர்கள். 4. மதீஷா பதிரனா பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மதீஷா பதிரனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீண்ட காலம் பயணிப்பார் என கருதப்பட்டவரை அந்த அணி வெளியே விட்டது ஆச்சர்யமாகக் கருதப்பட்டது. கடந்த மெகா ஏலத்துக்கு முன்னதாக அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்திருந்தது. "பதிரனா தற்போது அவரது பௌலிங் ஆக்‌ஷனை மாற்றியதால் அவரது செயல்பாட்டில் சரிவு ஏற்பட்டுவிட்டது. அதனால் முன்பு ஏற்படுத்திய தாக்கத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை" என்று கூறினார் பகவதி பிரசாத். இருந்தாலும் 'எக்ஸ் ஃபேக்டர்' என்று கருதப்படும் ஒரு வீரரை வாங்க நிச்சயம் அணிகள் ஆர்வம் காட்டுவார்கள் என்றும் அவர் கூறினார். கிட்டத்தட்ட எல்லா அணிகளுக்குமே வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரின் தேவை இருக்கிறது என்பதால் பதிரானாவுக்கு கொஞ்சம் போட்டி இருக்கலாம் என்றும் அவர் கூறினார். 5. ஜேசன் ஹோல்டர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜேசன் ஹோல்டர் "இம்முறை ஹோல்டர் சிறந்த ஃபார்மில் இருப்பதால், முன்பை விட அவருக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கலாம்" என்கிறார் பகவதி பிரசாத். எப்போதுமே வெளிநாட்டு ஆல்ரவுண்டர்களுக்கான தேவை ஐபிஎல் ஏலத்தில் அதிகமாக இருக்கும். ஹோல்டர் இதுவரை பல அணிகளுக்கு விளையாடியிருந்தாலும், பெரிய தாக்கம் ஏற்படுத்தியதில்லை. ஆனால், இம்முறை அவரது ஃபார்ம், அவர் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும் என்கிறார் அவர். "முன்பெல்லாம் இல்லாததுபோல் ஹோல்டர் தற்போது பேட்டிங், பௌலிங் இரண்டிலும் முன்னேற்றம் கண்டுள்ளார். நன்கு பௌன்சர்களையும், யார்க்கர்களையும் பயன்படுத்துகிறார். நன்கு சிக்ஸர்களும் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்" என்று நானியும் சொல்கிறார். கிட்டத்தட்ட எல்லா அணிகளுமே அவருக்கு போட்டியிடக்கூடும் என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clydx2q9q0do
  2. 19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஐக்கிய அரபு இராச்சியத்தை நையப்புடைத்தார் சூரியவன்ஷி; இந்தியா 234 ஓட்டங்களால் வெற்றி Published By: Vishnu 12 Dec, 2025 | 07:13 PM (நெவில் அன்தனி) துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற ஏ குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆசிய கிண்ண ஆரம்பப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய பந்துவீச்சாளர்களை வைபவ் சூரியவன்ஷி நையப்புடைக்க, இந்தியா 234 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. 15ஆவது பிறந்த தினத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வைபவ் சூரியவன்ஷி 95 பந்துகளில் 9 பவுண்டறிகள், 14 சிக்ஸ்கள் உட்பட 171 ஓட்டங்களை விளாசி 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கான அதிகூடிய தனிநபர் எண்ணிக்கைக்குரிய சாதனையை நிலைநாட்டினார். எவ்வாறாயினும்,, இங்கிலாந்துக்கு எதிராக டோன்டன் விளையாட்டரங்கில் 2002இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் அம்பாட்டி ராயுடு ஆட்டம் இழக்காமல் குவித்த 177 ஓட்டங்களே இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கான அதிகூடிய தனிநபர் எண்ணிக்கைக்குரிய சாதனையாக தொடர்ந்தும் இருக்கின்றது. வைபவ் சூரியவன்ஷி குவித்த அபார சதம், ஆரோன் ஜோர்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் ஆகியவற்றின் உதவியுடன் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 433 ஓட்டங்களைக் குவித்தது. 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். கோலாலம்பூரில் கத்தாருக்கு எதிராக பங்களாதேஷ் 7 விக்கெட்களை இழந்து பெற்ற 363 ஓட்டங்களே 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்தில் இதற்கு முன்னர் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது. இன்றைய போட்டியில் சூரியவன்ஷியை விட ஆரோன் ஜோர்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகிய இருவரும் தலா 69 ஓட்டங்களையும் வேதாந்த் த்ரிவேதி 38 ஓட்டங்களையும் அபிக்யான் குண்டு 32 ஓட்டங்களையும் பெற்றனர். இதனிடையே வைபவப் சூரியவன்ஷி, ஆரோன் ஜோர்ஜ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 212 ஓட்டங்ளைப் பகிர்ந்தனர். அத்துடன் விஹான் மல்ஹோத்ரா, வேதாந்த் த்ரிவேதி ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் யுக் ஷர்மா 75 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் உதிஷ் சூரி 77 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ஐக்கிய அரபு இராச்சியம் 14ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 53 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வியை எதிர்நோக்கியது. ஆனால், ப்ரித்வி மது, உதிஷ் சூரி ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தை கௌரவமான நிலையில் இட்டனர். அவர்களது இணைப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்திய இளையோர் அணி கடுமையாக முயற்சித்தது. இறுதியில் 9ஆவது பந்துவீச்சாளராகப் பயன்படுத்தப்பட்ட விஹான் மல்ஹோத்ரா ப்ரித்வி மதுவை ஆட்டம் இழக்கச் செய்து இணைப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். தொடர்ந்து உதிஷ் சூரி, சாலே ஆமின் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து 50ஆவது ஓவர் வரை இந்தியாவை வெற்றிக்காக காக்க வைத்தனர். உதிஷ் சூரி 78 ஓட்டங்களுடனும் சாலே ஆமிக் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் தீப்பேஷ் தேவெந்த்ரன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: வைபவ் சூரியவன்ஷி https://www.virakesari.lk/article/233215
  3. இன்று பிறந்தநாள் காணும் @நிழலி அண்ணைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வளத்துடன் வாழ்க.
  4. காஸா முனையில் இஸ்ரேல் தாக்குதல் : ஹமாஸ் முக்கிய தளபதி உயிரிழப்பு Published By: Digital Desk 3 14 Dec, 2025 | 11:30 AM இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமை காஸா நகரில் கார் ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதியான ரயிட் சயத் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஸா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காஸா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டது. 2 ஆண்டுகள் நடந்த போரில் காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், காஸா முனையில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. காஸா சிட்டியில் சென்ற காரை குறிவைத்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி ரயிட் சயத் கொல்லப்பட்டார். மேலும், ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்ட ஹமாஸ் தளபதி ரயிட் சயத் 2023 அக்டோபர் 7ம் திகதி நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/233309
  5. மத்திய மலை நாட்டின் தமிழ் மொழி மூல தொழிற்பயிற்சி நிலையமான ஹட்டன் T.V.T.C தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்களை அனுமதித்தல் 15 Dec, 2025 | 04:42 PM பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் (TVTC) 2026ம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. 16 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட பாடசாலை கல்வியினை நிறைவு செய்து இளைஞர், யுவதிகள் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்பு விண்ணப்பிக்குமாறு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கேட்டுக் கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/233427
  6. பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் கையளிப்பு! 15 Dec, 2025 | 03:52 PM பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் இலங்கை அரசாங்கத்திடம் இன்று திங்கட்கிழமை (15) கையளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானி காரியாலயம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் விசேட பணிப்புரைகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு தொடர்ச்சியாக அனர்த்த நிவாரண பொருட்கள் மற்றும் சேவைகள் கையளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவும் வலுவான இருதரப்பு உறவுகளும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்த நிவாரண சேவைக்காக பாகிஸ்தான் தமது விமானப்படையின் C-130 விமானங்களை அனுப்பியிருந்தது. மேலும், 'தித்வா' புயலின் போது, பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ஒன்று, அதன் ஹெலிகொப்டருடன், இலங்கை ஆயுதப் படைகளுடன் நெருங்கி ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றது. அத்துடன், பாகிஸ்தான் பிரதமர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடி, உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆதரவுக்கான உறுதிப்பாட்டை மீளவும் வலியுறுத்தினார். பாகிஸ்தான் பிரதமரின் விசேட பணிப்புரையின் பேரில், பாகிஸ்தானின் மத்திய கடல்சார் விவகார அமைச்சர் முஹம்மது ஜுனைத் அன்வர் சௌத்ரி (Muhammad Junaid Anwar Chaudhry) இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த கடந்த வாரம் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/233420
  7. தென் ஆப்ரிக்காவை இந்தியா எளிதில் வெற்றி கொள்ள உதவிய 'அர்ஷ்தீப் சிங் எழுச்சி' பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 15 டிசம்பர் 2025, 03:17 GMT "ஒருசில நாட்கள் உங்களின் திட்டத்தை உங்களால் சரியாக செயல்படுத்த முடியாமல் போகலாம். கடந்த போட்டியில் அதுதான் நடந்தது. இன்று அடிப்படையான விஷயங்களைப் பின்பற்றியதால், அனைத்தும் நன்றாக அமைந்தது" நேற்று (டிசம்பர் 14) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கூறிய வார்த்தைகள் இவை. டிசம்பர் 11-ஆம் தேதி நடந்த இரண்டாவது டி20 போட்டி அர்ஷ்தீப் சிங்கிற்கு ஏமாற்றம் அளித்தது. அவரால் தன் திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. வைட் யார்க்கர்கள் வீசவேண்டும் என்ற திட்டம் சற்று தவற, அவர் வீசிய யார்க்கர்கள் நடுவர்களால் 'வைட்' என்று அறிவிக்கப்பட்டன. 4 ஓவர்களில் மொத்தம் 9 வைட்கள் வீசினார் அவர். அதுவும் ஒரே ஓவரில் 7 வைட்கள் வீசியிருந்தார். அந்த ஓவரின்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன. அன்று, நியூ சண்டிகரில் வீசிய 4 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார் அர்ஷ்தீப். அதுவே தென்னாப்பிரிக்கா 200 ரன்களைக் கடக்க முக்கியக் காரணமாக அமைந்திருந்தது. இது, ஒரு சர்வதேச டி20 போட்டியில் அவர் ஐம்பது ரன்களுக்கு மேல் கொடுத்தது மூன்றாவது முறை. மற்ற இரண்டு தருணங்களில் விக்கெட்டாவது எடுத்திருந்தார். ஆனால் இந்தப் போட்டியில் அதுவும் கிடைக்கவில்லை. அர்ஷ்தீப் சிங்கிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் அது மோசமான ஒரு செயல்பாடாக அமைந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நியூ சண்டிகரில் அர்ஷ்தீப் வீசியது அவரது டி20ஐ கரியரின் இரண்டாவது மோசமான செயல்பாடு 3 நாட்கள் & சுமார் 230 கிலோமீட்டர் பயணத்துக்குப் பிறகு... மூன்றாவது டி20 போட்டிக்காக தரம்சாலாவில் களம் கண்டது இந்திய அணி. சொந்த காரணங்களுக்காக இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா ஆடவில்லை. அதனால் வேகப்பந்துவீச்சு யூனிட்டின் தலைவர் என்ற பொறுப்போடு அர்ஷ்தீப் களமிறங்க வேண்டியிருந்தது. ஆனால், அந்தப் பொறுப்புகளை நன்றாக சுமந்து, முந்தைய போட்டியின் செயல்பாட்டை முற்றிலும் மறந்து, சிறப்பாகப் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங், இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் ஆனார். 4 ஓவர்களில் அவர் விட்டுக்கொடுத்தது வெறும் 13 ரன்களே. 14 பந்துகளை 'டாட் பால்'களாக வீசினார். முக்கிய கட்டங்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற முக்கியக் காரணமாக விளங்கினார். முதல் ஓவரிலேயே தாக்கம் ஏற்படுத்தினார் வழக்கமாக தரம்சாலா ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவு ஒத்துழைப்புக் கொடுக்கும். அந்த மைதானத்தில் பொதுவாகவே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பந்து ஸ்விங் ஆகும். அதனால் அவர்கள் இங்கு பந்துவீச விரும்புவார்கள். ஆனால், போட்டிக்கு முன்பு 'பிட்ச் ரிப்போர்ட் செய்திருந்த ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமானா போமி எம்பாங்வா, இந்தப் போட்டியில் பௌலர்களுக்கு பெரும் சவால் இருக்கும் என்று சொல்லியிருந்தார். "போட்டி தொடங்குவதற்கு முன்பே பனி பொழியத் தொடங்கிவிட்டது. சிறு புற்கள் ஆடுகளத்தில் பரவியிருக்கின்றன. இது நீங்கள் பந்துவீச்சாளராக இருக்கவேண்டாம் என்று நினைக்கக்கூடிய ஒரு ஆடுகளமாகத் தெரிகிறது. இந்த மைதானத்தில் ஒரு போட்டிக்கு சராசரியாக 15 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. பௌலர்கள் தங்களின் அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்த வேண்டும். பேட்டர்கள் ஆரம்பத்தில் ஆடுகளத்தை சற்று கணித்துவிட்டு அதன்பின்னர் அடித்து ஆடலாம்" என்று போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர் கூறியிருந்தார். டாஸின்போது தனது அணி முதலில் பேட்டிங் செய்வது பற்றிப் பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம், "முதலில் பேட்டிங் செய்வதால், ஒருசில ஓவர்களுக்கு ஆடுகளத்தைக் கணிக்க வேண்டும். இன்று நல்ல தொடக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறியிருந்தார். ஆனால், அவர்கள் சொன்னதுபோல் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் ஆடுகளத்தைக் கணிப்பதற்கான அவகாசத்தை அர்ஷ்தீப் சிங் கொடுக்கவேயில்லை. அவர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்தில் குயின்டன் டி காக் சிங்கிள் எடுக்க, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ஸ்டிரைக்குக்கு வந்தார். அவர் சந்தித்த முதல் பந்து (ஓவரின் இரண்டாவது பந்து), நன்கு அவுட்ஸ்விங் ஆனது. அடுத்த பந்து, 'ஓவர் தி ஸ்டம்ப்' வந்து அர்ஷ்தீப் வீசிய கோணத்திலேயே (with the angle) பேட்டருக்கு வெளியே சென்றது. இரண்டு பந்துகள் அடுத்தடுத்து வெளியே சென்றிருக்க, ஓவரின் நான்காவது பந்தை உள்ளே திருப்பி ஹெண்ட்ரிக்ஸுக்கு அதிர்ச்சியளித்தார் அர்ஷ்தீப். நல்ல லென்த்தில், முதலிரு பந்துகளைப் போல் இந்த பந்தும் மிடில்-லெக் ஸ்டம்ப் லைனில் தான் பந்து பிட்ச் ஆனது. அதனால், அதேபோல் வெளியே செல்லும் என்று நினைத்து ஹெண்ட்ரிக்ஸ் ஆடியிருக்கலாம். ஆனால், இம்முறை பந்தை அர்ஷ்தீப் இன்ஸ்விங் செய்ததால், எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார் அந்த தென்னாப்பிரிக்க ஓப்பனர். நான்காவது பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது தென்னாப்பிரிக்க அணி. எம்பாங்வா சொன்னதுபோல் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இல்லாவிட்டாலும், ஆடுகளத்தைக் கணிப்பதற்கான அவகாசத்தைக் கொடுக்காமல் முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் விக்கெட்டை வீழ்த்தியது தென்னாப்பிரிக்காவை பின்தங்கச் செய்தது. மார்க்ரம் எதிர்பார்த்த அந்த நல்ல தொடக்கம் அந்த அணிக்குக் கிடைக்க அவர் விடவில்லை. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தென்னாப்பிரிக்க ஓப்பனர்கள் ஆடுகளத்தைக் கணிப்பதற்கான அவகாசத்தை அர்ஷ்தீப் வழங்கவில்லை சிக்கனமான பவர்பிளே ஸ்பெல் & சிறப்பான டெத் ஓவர் தன் முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய அர்ஷ்தீப், பவர்பிளேவில் வீசிய 3 ஓவர்களிலும் சேர்த்தே 9 ரன்கள் தான் கொடுத்தார். மறுபக்கம் ஹர்ஷித் ராணாவும் சிறப்பாகச் செயல்பட்டதால் (பவர்பிளேவில் 2 விக்கெட்டுகள்) தென்னாப்பிரிக்க அணி பவர்பிளேவில் 25/3 என தடுமாறவேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பிறகு தென்னாப்பிரிக்க அணியால் இந்தப் போட்டியில் மீண்டு வர முடியவில்லை. ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, ஷிவம் துபே, குல்தீப் யாதவ் என பந்துவீசிய அனைவருமே விக்கெட் வீழ்த்தினார்கள். குறிப்பாக வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் வெறும் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இருந்தாலும், ஒருபக்கம் நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம், கடைசி கட்டத்தில் அதிரடியை கையில் எடுத்தார். ஹர்திக் பாண்டியா வீசிய 17வது ஓவரில் மார்க்ரம் ஒரு சிக்ஸர் அடிக்க, அந்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. ஹர்ஷித் ராணா வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்ஸரும், 1 பவுண்டரியும் விளாசினார் மார்க்ரம். அதனால், அந்த ஓவரில் மட்டும் தென்னாப்பிரிக்காவுக்கு 19 ரன்கள் வந்தன. அவர் அரைசதம் கடக்க, அந்த அணியும் 100 ரன்களைக் கடந்தது. கடைசி 2 ஓவர்களிலும் அதே அதிரடியைத் தொடர்ந்தால் தென்னாப்பிரிக்கா 140 என்ற ஸ்கோரை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மார்க்ரம் நன்கு விளையாடிக் கொண்டிருக்கும்போது ஆட்டத்தின் 19வது ஓவரை வீசவந்தார் அர்ஷ்தீப். இப்போதும் நியூ சண்டிகரில் முயற்சி செய்ததைத்தான் முயற்சித்தார் - வைட் யார்க்கர்கள். ஆனால், கடந்த ஆட்டத்துக்கு மாறாக, இம்முறை பந்துகள் யார்க்கர்களாக தவறிவிட்டாலும் அவற்றின் லைன் தவறவில்லை. பந்து பேட்டருக்கு வெளியே சென்றாலும், வைடாகவில்லை. அந்த ஓவரின் முதல் பந்தில் சிங்கிள் எடுத்த மார்க்ரம், மீண்டும் மூன்றாவது பந்தில் ஸ்டிரைக்குக்கு வந்தார். அர்ஷ்தீப் அவருடைய கோணத்தோடு வெளியே வீசிய பந்தை மார்க்ரம் பலமாக அடிக்க முற்பட, பந்து எட்ஜ் ஆகி கீப்பர் ஜித்தேஷ் சர்மாவின் கைகளுக்குள் தஞ்சமடைந்தது. அதனால், மார்க்ரமின் இன்னிங்ஸும், சற்றே சவாலான ஸ்கோர் அடிக்கலாம் என்ற தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கையும் முடிவுக்கு வந்தன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மூன்றாவது டி20 போட்டியின் பவர்பிளேவில் 18 பந்துகள் வீசிய அர்ஷ்தீப் அதில் 12 பந்துகளை டாட் பால்களாக வீசினார் மார்க்ரம் அவுட் ஆனதால், அடுத்த 9 பந்துகளில் தென்னாப்பிரிக்காவால் 4 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால், அந்த அணியின் இன்னிங்ஸ் 117 ரன்களில் முடிந்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா வழக்கமான அதிரடி தொடக்கம் (18 பந்துகளில் 35 ரன்கள்) கொடுக்க, சேஸ் செய்வது ஓரளவு எளிதானது. 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்தியா இந்தப் போட்டியை வென்றது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-1 என முன்னிலையும் பெற்றிருக்கிறது. மூன்று இந்திய பௌலர்கள் (அர்ஷ்தீப், ஹர்ஷித் ராணா, வருண்) தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தாலும், ஆட்டத்தில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்திய அர்ஷ்தீப் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். ஒரு ஏமாற்றமான செயலபாட்டுக்குப் பிறகு சிறப்பான முறையில் எழுச்சி கண்டு இந்தியாவையும் வெற்றி பெறவைத்துவிட்டார் அர்ஷ்தீப் சிங். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq5qyv5wdq1o
  8. 15 Dec, 2025 | 02:45 PM (எம்.மனோசித்ரா) போக்குவரத்து அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அமைச்சின் டிஜிட்டல் பணிக்குழுவுடன் இணைந்து, இலங்கையிலுள்ள வீதிகள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் அறிவிப்பதற்காக ஒரு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வீதி மூடல்கள், சேதங்கள், விபத்துகள் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் போன்ற வீதி நிலைவரங்கள் குறித்த நிகழ்நேரத் தகவல்கள் இல்லாததை நிவர்த்தி செய்வதற்காகவே இந்தத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இந்தத் தளத்தை https://road-lk.org என்ற இணைய முகவரியில் அணுகலாம். இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் வழிசெலுத்தல் (Navigation) செயலிகள் இவ்வாறான பிரச்சினைகள் குறித்து முறையான புதுப்பிப்புகளை வழங்குவதில்லை என்றும், பல நாடுகளில் இந்தக் குறைபாடு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட பரவலான வீதி சேதங்கள் மற்றும் மூடல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த முயற்சி உருவாக்கப்பட்டது என்றும், சாதாரண நிலைமைகளிலும் இது தொடர்ந்து பயனுள்ளதாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார். இந்த அமைப்பு பொதுமக்களின் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டது. சேதமடைந்த வீதிகள், மூடல்கள் அல்லது விபத்துகளைக் காணும் வீதிப் பயனர்கள் https://road-lk.org/report என்ற இணையதளம் மூலம் புகார்களைச் சமர்ப்பிக்கலாம். புகார்களை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பதிவு செய்யலாம். மேலும் முடிந்தால் புகைப்படங்களைப் பதிவேற்றுமாறு பயனர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். புகார் சமர்ப்பிக்கப்பட்டவுடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தகவல்களைச் சரிபார்த்து, அதன் பின்னரே பாதிக்கப்பட்ட இடத்தைத் தேசிய வீதி வரைபடத்தில் குறிப்பார்கள். இந்த அமைப்பை இற்றைப்படுத்தும் அதிகாரம் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் வீதிப் பிரச்சினைகளை நேரடியாகக் குறிக்க அனுமதி வழங்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தேசிய மற்றும் மாகாண வீதி வலையமைப்பிற்காக இந்த அமைப்பு முழுமையாக நிறுவப்பட்ட பின்னர், கிராமப்புற வீதிகளையும் இதில் இணைப்பதற்கான திட்டங்கள் உள்ளன. இந்தத் தளம் தற்போது ஒரு முன்னோடித் திட்டமாக (Pilot Project) பல வாரங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, அதன் பின்னர் இது நிரந்தரமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய மற்றும் மாகாண வீதிகளில் உள்ள பிரச்சினைகளை இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க மக்கள் சுறுசுறுப்பாக அறிவிக்குமாறு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/233405
  9. சிட்னி: துப்பாக்கியால் சுட்டவர் மீது பாய்ந்து மடக்கிய 'ஹீரோ' - உடலில் 2 குண்டுகள் பாய்ந்த அவர் என்ன ஆனார்? படக்குறிப்பு,அகமது அல் அகமது தாக்குதல் நடத்திய நபரிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்கிறார். கட்டுரை தகவல் எமிலி அட்கின்சன் 15 டிசம்பர் 2025, 06:41 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த "ஹீரோ" கேமராவில் சிக்கியுள்ளார். அந்த நபர் 43 வயதான அகமது அல் அகமது என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். பிபிசி உறுதிப்படுத்திய வீடியோவில், துப்பாக்கியால் சுடும் நபரை நோக்கி ஓடிய அகமது, அவரது ஆயுதத்தைப் பறித்து, பின்னர் அதை அவர் பக்கம் திருப்பி, தாக்குதல் நடத்தியவரை பின்வாங்கச் செய்வது போன்ற காட்சி உள்ளது. இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அகமது, ஒரு பழக் கடை நடத்தி வருகிறார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதுவின் கையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் 7நியூஸ் ஆஸ்திரேலியாவிடம் தெரிவித்தனர். போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். ஹானக்கா பண்டிகையைக் கொண்டாட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த நிகழ்வின் போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. காவல்துறையினர் இதை யூத சமூகத்தை இலக்காகக் கொண்ட 'பயங்கரவாத தாக்குதல்' என்று அறிவித்துள்ளனர். ஹானக்கா என்பது யூதர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது. "அவர் ஒரு ஹீரோ, அவர் இரண்டு முறை சுடப்பட்டார்" படக்குறிப்பு,ஒரு காரின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த அகமது, தாக்குதல் நடத்திய நபரைப் பிடித்தார். அகமதுவின் உறவினர் முஸ்தபா, ஞாயிற்றுக்கிழமை இரவு 7நியூஸ் ஆஸ்திரேலியாவிடம் பேசிய போது, "அவர் ஒரு ஹீரோ, 100 சதவிகிதம் அவர் ஒரு ஹீரோ. அவர் இரண்டு முறை சுடப்பட்டுள்ளார். ஒன்று கையில், மற்றொன்று முழங்கையில்"என்று கூறினார். திங்கட்கிழமை அதிகாலை வெளியான புதிய தகவலில், "அவர் குணமடைவார் என்று நம்புகிறேன். நான் அவரை நேற்றிரவு பார்த்தேன். அவர் நலமாக இருந்தார். ஆனால் நாங்கள் மருத்துவர் வழங்கும் தகவலுக்காகக் காத்திருக்கிறோம்"என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்தில் தாக்குதல் நடத்தியது இரண்டு பேர் என்றும், அவர்கள் தந்தை - மகன் என்றும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய 50 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், 24 வயதுடைய மற்றொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஷார்ட் வீடியோ காணொளிக் குறிப்பு,ஆஸ்திரேலியா: துப்பாக்கிச் சூடு நடத்தியவரை துணிச்சலாக எதிர்கொண்ட நபர் வைரலான காணொளியில் என்ன காணப்பட்டது? தாக்குதல் நடத்தியவரிடம் இருந்து அகமது துப்பாக்கியைப் பறிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஒரு சிறிய நடைமேம்பாலத்துக்கு அருகில் ஒரு மரத்தின் பின்னால் நின்றுகொண்டு ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. அவர் குறிவைக்கும் இடம் கேமராவின் சட்டகத்திற்குள் வரவில்லை. அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காருக்குப் பின்னால் மறைந்திருந்த அகமது, தாக்குதல் நடத்தியவரை நோக்கிப் பாய்ந்து அவரை மடக்கிப் பிடிப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது. தாக்குதல் நடத்தியவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து, அவரைக் கீழே தள்ளி பின்னர் அவரை நோக்கி அகமது துப்பாக்கியை நீட்டுகிறார். அதன்பின், அந்தத் தாக்குதல் நடத்திய நபர் பாலத்தை நோக்கிப் பின்வாங்கத் தொடங்குகிறார். அதன்பிறகு, அகமது தனது ஆயுதத்தைக் கீழே இறக்கிவிட்டு, தான் தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் அல்ல என்று காவல்துறைக்கு காட்டுவதற்காக ஒரு கையை மேலே உயர்த்துகிறார். இந்த நேரத்தில், தாக்குதல் நடத்திய நபர் இன்னொரு ஆயுதத்தை எடுத்து மீண்டும் சுடுவதைக் காண முடிகிறது . துப்பாக்கி ஏந்திய இரண்டாவது நபரும் பாலத்தில் இருந்து தொடர்ந்து சுடுகிறார். தாக்குதல் நடத்திய அவர்கள், யாரை அல்லது எதை நோக்கிச் சுடுகிறார்கள் என்பதை வீடியோ தெளிவாகக் காட்டவில்லை. படக்குறிப்பு,அகமது துப்பாக்கியைப் பிடுங்கி, பின்னர் அதைத் தாக்கியவரை நோக்கி திருப்பினார். அகமதுவுக்கு தலைவர்கள் பாராட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண பிரீமியரான கிறிஸ் மின்ஸ், அகமதுவின் துணிச்சலைப் பாராட்டினார். அப்போது அவரது பெயர் வெளிப்படுத்தப்படவில்லை. "அவர் ஒரு உண்மையான ஹீரோ, அவருடைய துணிச்சலால், இன்று இரவு பலர் உயிரோடு இருக்கிறார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை," என்று கிறிஸ் மின்ஸ் கூறினார். ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இதுகுறித்துப் பேசுகையில், "இன்று, மற்றவர்களுக்கு உதவ தங்கள் உயிரைப் பணயம் வைத்த ஆஸ்திரேலியர்களை நாங்கள் கண்டோம். இந்த ஆஸ்திரேலியர்கள் ஹீரோக்கள். அவர்களின் வீரம் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது," என்றார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அகமது மீது தனக்கு "பெரிய மரியாதை" இருப்பதாகக் கூறினார். மேலும் "அவர் உண்மையிலேயே மிகவும் துணிச்சலான மனிதர். அவர் முன்னால் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தாக்கி பல உயிர்களைக் காப்பாற்றினார்," என்று டிரம்ப் தெரிவித்தார். சிட்னி கடற்கரை தாக்குதல் - என்ன நடந்தது ? 10 வயது சிறுமி உட்பட 15 பேர் உயிரிழந்ததையும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் உயிரிழந்ததையும் நியூ சவுத் வேல்ஸ் மாகாண பிரீமியர் கிறிஸ் மின்ஸ் உறுதிப்படுத்தினார். 50 வயது தந்தை மற்றும் அவரது 24 வயது மகன் ஆகிய இருவர் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் என்று காவல்துறை ஆணையர் மெயில் லேன்யன் தெரிவித்தார். தாக்குதல் நடத்திய 50 வயது நபர், காவல்துறையால் சுடப்பட்டதில் உயிரிழந்தார். 24 வயதான அவரது மகனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவ இடத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 42 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 50 வயது நபர் துப்பாக்கி உரிமம் வைத்திருந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது பெயரில் ஆறு ஆயுதங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. போண்டி கடற்கரையில் ஆறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. சம்பவ இடத்தில் 'இரண்டு வெடிகுண்டுகள்' காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. மேற்கு சிட்னியில் உள்ள கெம்ப்ஸி மற்றும் போன்னிரிக் பகுதிகளில் உள்ள இரண்டு இடங்களில் காவல்துறையினர் இரவு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். சிட்னியில் யூத சமூகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவதற்காக 328 காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆஸ்திரேலிய சமூகத்தில் இருந்து யூத-விரோதப் போக்கினை "வேரறுக்க" அந்நாட்டு பிரதமர் உறுதியளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd9zgdzplw2o
  10. ஆஸ்திரேலியாவில் யூதர்களை 'குறிவைத்து' துப்பாக்கிச் சூடு - இஸ்ரேல் கூறியது என்ன? பட மூலாதாரம்,Saeed KHAN / AFP via Getty Images படக்குறிப்பு,ஓர் குழந்தை உட்பட 29 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சிட்னி காவல்துறை தகவல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் சிட்னியில் உள்ள போன்டி கடற்கரையில் நடைபெற்றத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில், பத்து பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பலர் காயமடைந்துள்ள நிலையில், ஓர் குழந்தை உட்பட 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தகவலை நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை தலைவர் கிறிஸ் மின்ஸ் கூறியதாக சிட்னிக்கான பிபிசி செய்தியாளர் டிஃபனி டர்ன்புல் தெரிவித்துள்ளார். "பொது இடத்தில் இரண்டு ஆண்கள் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக" நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் எம். லான்யோனின் கூற்றுப்படி, இந்த சம்பவம் ஆஸ்திரேலிய கிழக்கு பகல் நேரப்படி மாலை 6:47 மணியளவில் போன்டி கடற்கரையில் உள்ள ஆர்ச்சர் பூங்கா அருகே நிகழ்ந்தது. பிபிசி செய்தியாளர் டெஸ்ஸா வோங்கின் கூற்றுப்படி, இந்த சம்பவம் போன்டி கடற்கரையின் வடக்குப் பகுதியில் உள்ள நெரிசலான பகுதியில் நடந்தது. "கடற்கரைக்குப் பின்னால் உள்ள புல்வெளிப் பகுதிக்கு அருகில் ஒரு ஹனுக்கா கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது," என்று அவர் கூறுகிறார். "கடற்கரைக்குச் செல்ல மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு நடைபாதை இருந்தது. துப்பாக்கிதாரிகள் அதை இலக்காகப் பயன்படுத்தியிருக்கலாம்." "துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நான் பாலத்தைக் கடந்தபோது அங்கு குறைந்தது 200 பேர் இருப்பதையும், இசை உரத்து ஒலித்துக் கொண்டிருந்ததையும், பல்வேறு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருப்பதையும் பார்த்தேன். தாக்குதல் நடத்தியவர்கள் இந்த உயரமான பகுதியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது" என்று டெஸ்ஸா வோங் கூறினார். "நிகழ்ச்சி நடைபெற்ற இடம் முழுவதும் உலோகத் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. மக்கள் உள்ளேயும் வெளியேயும் செல்வதற்கான வாயில் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே இருந்தன" என்று அவர் கூறுகிறார். படக்குறிப்பு,துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போன்டி கடற்கரையிலிருந்து செய்திகளை வழங்கும் பிபிசி செய்தியாளர் டெஸ்ஸா வோங் "தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவர் உயிரிழந்துவிட்டார், மற்றொருவர் காவல்துறையினரின் காவலில் உள்ளார்" என்று பிபிசி செய்தியாளர் டெஸ்ஸா வோங் கூறினார். இந்த தாக்குதல் "சிட்னியின் யூத சமூகத்தை குறிவைத்து திட்டமிடப்பட்டது" என்று நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை தலைவர் கிறிஸ் மின்ஸ் கூறியதாக கூறும் அவர், "அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இரவாக இருந்திருக்க வேண்டிய இரவு, பயங்கரமான, தீய தாக்குதலால் சிதைக்கப்பட்டது" என்று அவர் மேலும் கூறினார். "இந்தத் தாக்குதல் சிட்னியின் யூத சமூகத்தைக் குறிவைத்து திட்டமிடப்பட்டது. அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஓர் இரவு, ஒரு பயங்கரமான கொடூரத் தாக்குதலால் சிதைக்கப்பட்டுவிட்டது," என்று சிட்னி காவல்துறைத் தலைவர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்தார். யூதர்களின் ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாட அங்கு வந்திருந்த சுமார் ஆயிரம் பேர் அந்த இடத்தில் இருந்ததாக நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் எம் லேன்யன் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் குறைந்தது 11 பேர் இறந்ததாகவும், 29 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். இவர்களில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பட மூலாதாரம்,Darrian Traynor/Getty Images ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸி இந்த சம்பவம் "அதிர்ச்சியூட்டுவதாகவும், ஆழ்ந்த கவலையளிப்பது" என்று விவரித்தார். இந்த சம்பவத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், அவர்களின் காயங்களின் அளவு மற்றும் அவர்களின் தற்போதைய நிலை வெளியிடப்படவில்லை. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தற்போது அந்தப் பகுதியில் வெடிபொருட்களைக் கண்டுபிடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்தப் பகுதிக்குச் செல்வததைத் தவிர்க்கவும், சரிபார்க்கப்படாத செய்திகளைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என காவல்துறை மக்களை வலியுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் யூத விடுமுறை நாளான கடற்கரையில் நடைபெறும் ஹனுக்கா பண்டிகையுடன் தொடர்புடையதா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். படக்குறிப்பு,ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸி, போன்டி கடற்கரை தாக்குதல் யூத எதிர்ப்பு வெறுப்பு நடவடிக்கை என்று கூறியுள்ளார் நேரில் கண்ட சாட்சிகள் சொன்னது என்ன? துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது தனது குழந்தைகளுடன் கடற்கரையில் நடந்த ஹனுக்கா நிகழ்வில் இருந்ததாக, சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, தான், தனது குழந்தைகளுடன் அங்கிருந்து ஓடிவிட்டதாக அவர் கூறினார். "நான் வழக்கமாக வேலைக்குப் பிறகு செய்வது போல இன்று மதியம் கடற்கரையில் இருந்தேன், அப்போது தொடர்ச்சியான பலத்த வெடிச்சத்தங்களைக் கேட்டேன். சுமார் 20 பேர் இருந்ததாக நினைக்கிறேன்." "ஆரம்பத்தில் வெடிச்சத்தங்களை யாரும் வித்தியாசமாக நினைக்கவில்லை. பட்டாசுகள் வெடிப்பது போல் தோன்றியது. ஆனால் நாங்கள் இருந்த இடத்திற்கு வடக்கே உள்ள தமராமா மற்றும் போன்டி ஆகிய இரண்டு கடற்கரைகள் மீது ஹெலிகாப்டர்கள் வட்டமிடுவதைக் கண்டபோது, ஏதோ தவறு இருப்பதாக எங்களுக்குத் தெரிந்தது. பிறகு, துப்பாக்கிச் சூடு பற்றிய செய்திகள் தொடர்ந்து வரத் தொடங்கின," என்று அவர் கூறினார். சம்பவத்தை நேரில் கண்ட மற்றொரு சாட்சியான மார்கோஸ் கார்வால்ஹோ, "துப்பாக்கிச் சத்தம் பட்டாசு சத்தம் போல இருந்தது. போன்டியில் இப்படி ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை" என்றார். "கடற்கரையில் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பது புரிந்தவுடன், ஓடத் தொடங்கினர். நான் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வடக்கு போன்டியில் உள்ள புல்வெளியை நோக்கி ஓடினேன்." பின்னர் தானும் வேறு சிலரும் ஒரு ஐஸ்கிரீம் வேனின் பின்னால் ஒளிந்து கொண்டதாக கார்வால்ஹோ கூறினார். அவசர சேவைகள் வந்து துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்ட பிறகு, கார்வால்ஹோ வீட்டிற்குச் செல்லும் வழியில் , "தரையில் சடலங்கள் கிடப்பதை" அவர் கண்டார். 'யூதர்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்' ஆஸ்திரேலியாவின் போன்டி கடற்கரையில் நடந்த சம்பவத்திற்கு எதிர்வினையாற்றிய இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக், இது "யூதர்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்" என்று கூறியுள்ளார். இஸ்ரேலிய அதிபர் ஹெர்சாக் தனது எக்ஸ் தள பக்கத்தில், "சிட்னியில் உள்ள எங்கள் யூத சகோதர சகோதரிகளுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், அவர்கள் முதல் ஹனுக்கா மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கச் சென்றபோது பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டனர்." "இந்த பயங்கரமான நேரத்தில் சிட்னியின் யூத சமூகம் மற்றும் முழு ஆஸ்திரேலிய யூத சமூகத்தினருக்காக பிரார்த்திக்கிறோம்." 'யூத எதிர்ப்பு வெறுப்புச் செயல்' ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸி ஒரு செய்தியாளர் கூட்டத்தில், போன்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டை ஆஸ்திரேலியர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று விவரித்தார். அது ஒரு 'மகிழ்ச்சியான நாளாக' இருந்திருக்க வேண்டிய நாள் என்று அவர் கூறினார். "இது யூத-விரோத வெறுப்புச் செயல்" என்று கூறிய அல்பனீஸி ,"இது நமது நாட்டின் இதயத்தைத் தாக்கும் ஓர் பயங்கரவாதத் தாக்குதல்" என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,Darrian Traynor/Getty Images படக்குறிப்பு,சம்பவ இடத்தில் போலீசார் 'யூத உயிர்களைக் காப்பாற்ற வலுவான நடவடிக்கை எடுங்கள்' இந்த தாக்குதலை ஆஸ்திரேலியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் கடுமையாக கண்டித்துள்ளது. "போன்டி கடற்கரையில் ஹனுக்கா கொண்டாட்டத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளோம். ஆஸ்திரேலியாவில் உள்ள யூத சமூகத்தினருடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன. தீபத் திருவிழாவான ஹனுக்கா, இன்று நம்பமுடியாத அளவிற்கு இருட்டாக இருக்கிறது" என்று இஸ்ரேலிய தூதரகம் சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளது. "வெறுமனே ஒற்றுமையை வெளிப்படுத்துவது போதாது. ஆஸ்திரேலிய அரசாங்கம் யூத எதிர்ப்பு வன்முறையிலிருந்து யூத உயிர்களைப் பாதுகாக்க உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அந்த எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டுள்ளது. "தற்போது இஸ்ரேலில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கான இஸ்ரேலிய தூதர் மைமோன், இந்த பேரழிவு தரும் செய்தியைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா திரும்புகிறார்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr4dk16qerdo
  11. சுதந்திர இந்தோ-பசிபிக் திட்டத்தின் மையமாக இருக்கும் இலங்கை ; அமெரிக்க தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர் 14 Dec, 2025 | 10:46 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர், செனட் வெளியுறவு உறவுகள் குழுவிடம் சாட்சியமளித்த போது, இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்குக்கு எதிர்வினையாற்றுவது என்பவற்றுக்கே வாஷிங்டன் முக்கியத்துவம் அளிக்கும் என்று தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் இந்த ஆண்டு ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியின் பாதிப்பிலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், எரிக் மேயரின் இந்தக் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவர் மேலும் கூறுகையில், உலகளாவிய கப்பல் வழித்தடங்களில் இலங்கை அமைந்திருப்பதால், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மேம்படுத்துவதற்கான அமெரிக்க முயற்சிகளுக்கும், சீனாவின் வளர்ந்து வரும் பிரசன்னம் உட்பட பகைமைச் செல்வாக்குகளை எதிர்கொள்வதற்கும் இலங்கை மையமாக உள்ளது. அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களும், உலகின் கடல்வழியாகக் கொண்டுசெல்லப்படும் கச்சா எண்ணெயில் மூன்றில் இரண்டு பங்கும் இலங்கையின் கடல்வழியே செல்கின்றன. எனவே அதன் மூலோபாய இருப்பிடம், அமெரிக்க முயற்சிகளின் மையமாக அமைகிறது. தான் உறுதிப்படுத்தப்பட்டால், அமெரிக்கக் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதே தனது முதல் முன்னுரிமையாக இருக்கும். அதேவேளை, சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் இடப்பெயர்வுகளுக்குப் பிந்தைய இலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகள் முக்கியமானதாகும். உடனடி உதவிக்காக 2 மில்லியன் டொலரை அமெரிக்கா ஒதுக்கியுள்ளதுடன், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்க இராணுவத்தின் மூலோபாய வான்வழிப் போக்குவரத்துத் திறன்களையும் பயன்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது இலங்கையுடனான அமெரிக்காவின் வலுவான மற்றும் நீடித்த பங்களிப்புக்கு ஆதாரம் உள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சியைக் குறித்துப் பேசிய எரிக் மேயர், கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டங்களைக் குறிப்பிட்டு, இலங்கை பிராந்தியப் பொருளாதாரத்தின் தலைமைத்துவமாக மாறத் தயாராக இருக்கும் ஒரு மீள்திறன் கொண்ட நாடு' என்றார். அடுத்த ஆண்டில், கொழும்புத் துறைமுகம் சரக்குக் கையாளும் திறனை இரட்டிப்பாக்க உள்ளது. இது இலங்கையின் துறைமுகங்கள், தளவாடங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைகளில் உள்ள குறிப்பிடத்தக்க மற்றும் மூலோபாய வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச நாணய நிதிய திட்டத்துடன் இணைக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர கொழும்பை வலியுறுத்துவோம். நாட்டின் பொருளாதாரச் சுதந்திரம் தேசிய சுதந்திரத்துடன் பிணைந்துள்ளது. எனவே புதிய சீர்திருத்தங்கள், அமெரிக்க முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றார். சீனாவின் செல்வாக்கு பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், செனட் வெளியுறவு உறவுகள் குழுவின் தலைவர் ஜிம் ரிஷ், இலங்கையின் துறைமுக உள்கட்டமைப்பில் சீனாவின் பங்களிப்பு குறித்து உலகளாவிய அளவில் ஒரு எச்சரிக்கையாகும் என குறிப்பிட்டார். சீனர்கள், இலங்கைத் துறைமுகத்திற்குச் செய்ததெல்லாம், மக்கள் ஏன் சீனாவுடன் வணிகம் செய்யக் கூடாது என்பதற்கான உலகளாவிய உதாரணச் சின்னமாக மாறியுள்ளது என்றார். இதற்குப் பதிலளித்த எரிக் மேயர், அமெரிக்கா 'திறந்த மற்றும் வெளிப்படையான' இருதரப்பு உறவுகளை விரும்புவதாகவும், இலங்கை அதன் இறையாண்மையை உறுதிப்படுத்துவதை உறுதி செய்யவும், அதில் துறைமுகங்கள் மீதான இறையாண்மையும் அடங்கும் எனவும் தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்கக் கூட்டுறவு, கடல்சார் ஆதிக்கம் குறித்த விழிப்புணர்வு, மற்றும் துறைமுகப் பாதுகாப்பைப் பேணுதல் ஆகியவை இந்தோ-பசிபிக் அணுகுமுறையின் ஒரு பகுதியாக இலங்கையுடனான அமெரிக்காவின் ஈடுபாட்டில் மையமாக இருக்கும் என்றும் மேயர் உறுதியளித்தார். https://www.virakesari.lk/article/233311
  12. ஆன்டிபயாடிக் மருந்துக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்களால் இந்திய மருத்துவத் துறைக்கு புதிய சவால் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் 'ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட்' (antibiotic resistant) என்பது சுகாதாரத் துறையில் மிக முக்கியமான பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) சமீபத்தில் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட் தொடர்பாக வெளியிட்ட ஆய்வறிக்கை இதுதொடர்பான எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்பியுள்ளது. முதலில் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட் என்பது என்ன? ஒரு நோய்த்தொற்று உங்களுக்கு ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம். அந்த தொற்றுகளில் இருந்து நீங்கள் குணமடைவதற்காக மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். ஆனால், நாளடைவில் அந்த மருந்தின் திறன் தன்னை பாதிக்காத வகையில் சில தொற்றுகள் தங்களை தகவமைத்துக் கொள்ளும். அதாவது, அந்த மருந்து குறிப்பிட்ட தொற்றுக்கு எதிராக செயல்புரியாது. அதாவது, அந்த மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை தொற்றுகள் பெற்றுவிடும். "இப்படி மாறும் தொற்றுகள் பெரும்பாலும் பாக்டீரியா தொற்றுகளாகவே உள்ளன" என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இப்படி ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை பெறும் பாக்டீரியாக்கள் 'சூப்பர்பக்' (superbug) என அழைக்கப்படுகின்றன. 'ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட்' தொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்ட "கவலைக்குரிய" ஆய்வு என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,Getty Images ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்தது என்ன? இந்தியாவில் ஜனவரி 1, 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரையில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலான ஆய்வு முடிவுகளை ஐசிஎம்ஆர் சமீபத்தில் வெளியிட்டது. உயர்நிலை சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 99,027 மாதிரிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது என்றும், அதனால் இந்த தரவுகள் சமூக மட்டத்தில் (community patterns) அதன் நிலையை பிரதிபலிக்காது எனவும் ஐசிஎம்ஆர் தெளிவுபடுத்தியுள்ளது. ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான தகவல்கள்: ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள தொற்றுகளில், கிராம் நெகட்டிவ் வகை பாக்டீரியா தொற்று (72.1%) அதிகமாக பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் கிராம் பாசிட்டிவ் வகை பாக்டீரியா தொற்றும் (17.7%) அடுத்ததாக பூஞ்சை தொற்றும் (10.2%) உள்ளன. யுடிஐ (சிறுநீர் பாதை தொற்று) மற்றும் மூச்சு சம்பந்தமான பிரச்னைகளுக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் ஃப்ளூரோக்வினோலோன் (Fluoroquinolones) எனும் ஆன்டிபயாடிக், நிமோனியா, யுடிஐ போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் செஃபாலோஸ்போரின் (cephalosporin) எனும் ஆன்டிபயாடிக், நிமோனியா, செப்சிஸ் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் கார்பாபெனெம் (carbapenems) எனும் ஆன்டிபயாடிக், பல்வேறு வித தொற்றுகளுக்கு பயன்படுத்தப்படும் பிபெராசிலின் - டாஸோபாக்டம் (piperacillin-tazobactam) எனும் ஆன்டிபயாடிக் உள்ளிட்ட பல ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக நோய்த்தொற்றுகள் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளன என இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. சிறுநீர்ப் பாதை தொற்று (யுடிஐ) போன்றவற்றுக்கு முக்கிய காரணமாக உள்ள இ.கோலை (Escherichia coli) பாக்டீரியா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் அமிகசின் (Amikacin) போன்ற சில ஆன்டிபயாடிக் மருந்துகள் தொற்றை எதிர்த்து செயலாற்றுவதில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நிமோனியா போன்றவற்றுக்குக் காரணமான கிளெப்சியெல்லா நிமோனியே (Klebsiella pneumoniae) பாக்டீரியா, பிபெராசிலின் - டாஸோபாக்டம் (Piperacillin–tazobactam) எனும் ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்தி கொண்டதாக மாறியுள்ளது. சூடோமோனாஸ் ஏருகினோசா (Pseudomonas aeruginosa) எனும் பாக்டீரியா, கார்பாபெனெம் (Carbapenem) எனும் ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்தி கொண்டதாக மாறியுள்ளது. அசினெடோபாக்டர் பௌமானி (acinetobacter baumannii) எனும் பாக்டீரியா மெரோபெனெம் (meropenem) ஆன்டிபயாடிக் மருந்துக்கு மிக அதிகளவில் (91%) எதிர்ப்பு சக்தி கொண்டவையாக மாறியுள்ளது. சால்மோனெல்லா டைஃபி (Salmonella Typhi) எனும் டைஃபாய்டை ஏற்படுத்தவல்ல பாக்டீரியா செஃட்ரியாக்சோன் (Ceftriaxone- 98%), அஸித்ரோமைசின் (Azithromycin - 99.5%), டிஎம்பி-எஸ்எம்எக்ஸ் (TMP-SMX - 97.7%) எனும் ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்திகொண்டவையாக உள்ளன. பட மூலாதாரம்,Getty Images இதுமட்டுமின்றி, முந்தைய சில ஆய்வுகளும் இதுகுறித்த கவலைகளை எழுப்பியுள்ளன. "மருத்துவ ஆய்விதழான தி லான்செட், உலகளவில் 2019ம் ஆண்டில் 10 லட்சத்து 27 ஆயிரம் உயிரிழப்புகள் இதனால் நேரடியாக ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கிறது. இத்தகைய கடும் தொற்றுகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு கேடயங்களுள் முதல் வரிசையில் உள்ள ஆன்டிபயாட்டிக் மருந்துகள் இத்தகைய தொற்று பாதிப்புகளில் பெரும்பாலும் செயல்படுவதில்லை." என குறிப்பிட்டுள்ளது. இதனால் மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என அந்த ஆய்வு கூறுகிறது. இவ்வாறு மக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் தொற்றுகளுக்கு அன்றாடம் மருத்துவமனைகளில் உபயோகிக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு அத்தொற்றுகள் எதிர்ப்பு சக்தி கொண்டவையாக மாறியுள்ளன. இதனால் என்ன பாதிப்பு ஏற்படும்? இதை எப்படி புரிந்துகொள்வது? மருத்துவர்களிடம் பேசினோம். பட மூலாதாரம்,Getty Images ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கான எதிர்ப்பு சக்தியை பாக்டீரியா எப்படி பெறுகிறது? ஆன்டிபயாடிக் என்பது பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள். "பாக்டீரியாக்களை கிராம் நெகட்டிவ் மற்றும் கிராம் பாசிட்டிவ் என வகைப்படுத்துகிறோம். பாக்டீரியா தொற்றுக்களுக்குதான் பெரும்பாலும் நாம் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவோம். நோயாளிகளுக்கு சரியான நேரத்தில், சரியான அளவில் ஆன்டிபயாடிக் பயன்படுத்தப்படவில்லையெனில் பாக்டீரியாக்கள் அதற்கான எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும். அதாவது, குறிப்பிட்ட காலகட்டத்தில், உயிர் பிழைப்பதற்காக பாக்டீரியாக்கள் தங்களை தகவமைத்துக் கொண்டு மருந்துகளுக்கு எதிரான சக்தியை பெறும்" என்று சென்னையில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருந்தியல் துறை தலைவராக உள்ள எஸ். சந்திரசேகர் விளக்கினார். பாக்டீரியாக்கள் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்கான காரணங்கள் என்ன? "பாக்டீரியாக்கள் உருமாற்றம் அடைந்து பல்வேறு திரிபுகள் உருவாகும் போது அவை ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டவையாக மாறுகின்றன. ஆன்டிபயாடிக் மருந்துகளை தேவையில்லாமல் உபயோகிக்கும் போதோ அல்லது சரியான அளவில் பயன்படுத்தாத போதோ அவ்வாறு அவை மாறுகின்றன. சரியான ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்காமல் வேறு ஒன்றை மாற்றிக் கொடுத்தாலும் இது நிகழும்." என கூறுகிறார், சென்னையை சேர்ந்த தொற்றுநோயியல் மருத்துவர் விஜயலஷ்மி. பட மூலாதாரம்,Getty Images பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு சக்தியை பெற்றால் என்ன நடக்கும்? "ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கான எதிர்ப்பு சக்தி பாக்டீரியாக்களிடம் உருவாகிவிட்டால், அந்த மருந்து நோயாளிகளிடத்தில் வேலை செய்யாது." என்கிறார், மருத்துவர் சந்திரசேகர். "இதே நிலை தொடர்ந்தால் பெரும்பாலான தொற்றுகளுக்கு நாம் பயன்படுத்தும் பல ஆன்டிபயாடிக் மருந்துகள் பலனளிக்காது. இதனால், நோயாளிகள் உயிரிழப்பதும் நிகழ்கின்றன. குறிப்பாக, புற்றுநோய், இதயநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு கடினமான அறுவை சிகிச்சைகளை செய்து காப்பாற்றுகிறோம். ஆனால், பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு சக்தியை பெறுவதால், சாதாரண தொற்றுகளுக்கு ஆளாகியும் கூட அவர்கள் உயிரிழப்பதை பார்த்துள்ளோம்." என்கிறார் மருத்துவர் விஜயலட்சுமி. பாக்டீரியாக்கள் பலவும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பதால், மருத்துவர்கள் வழக்கமாக பரிந்துரைக்கும் திறன் வாய்ந்த மருந்துகள் நோயாளிகளிடையே செயலாற்றுவதில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதில் எப்படி கவனமாக இருப்பது? மருத்துவர்கள் சந்திரசேகர் மற்றும் விஜயலட்சுமியின் பரிந்துரைகள் பரிந்துரைக்கப்பட்டதை விடவும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இடையில் அவற்றை எடுத்துக் கொள்வதை நிறுத்தாமல் பரிந்துரைக்கப்பட்ட நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் கவனத்துடன் பரிந்துரைக்க வேண்டும். சாதாரண சளி, காய்ச்சல் என்றாலே ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்காமல் நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை கல்ச்சர் பரிசோதனையில் உறுதி செய்த பின்னரே பரிந்துரைக்க வேண்டும். இந்தியாவில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் மருந்தகங்களில் ஆன்டிபயாடிக் மருந்துகளை வாங்கி போட்டுக்கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. இதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0q51pn1ln0o
  13. சிஎஸ்கே-வில் ஜடேஜாவின் இடத்தை நிரப்பப் போவது யார்? - வீரர்கள் ஏலம் மீதான எதிர்பார்ப்புகள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியன் பிரீமியர் லீக் 2026 தொடருக்கான ஏலம் வரும் செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 16) அபுதாபியில் நடக்க உள்ளது. இந்த ஏலத்துக்கான பட்டியலில் 359 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்களில் 244 பேர் இந்திய வீரர்கள், 115 பேர் வெளிநாட்டு வீரர்கள். அதிகபட்சம் மொத்தம் 77 இடங்கள் நிரப்பப்படலாம். இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த இடங்களை நிரப்ப வேண்டும், எந்த வீரர்களை வாங்கக்கூடும் என்று பார்ப்போம். சூப்பர் கிங்ஸிடம் என்ன இருக்கிறது? ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், கடந்த சீசனில் கடைசி இடத்தையே பிடித்தது. அதனால், பல வீரர்களை அந்த அணி இம்முறை விடுவித்தது. தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வு பெற்றுவிட, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் டிரேட் செய்து சஞ்சு சாம்சனை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே. இப்போது சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ்.தோனி, சஞ்சு சாம்சன், டெவால் பிரீவிஸ், ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல், ராம்கிருஷ்ணா கோஷ், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ், நூர் அஹமது, கலீல் அஹமது, நாதன் எல்லிஸ், குர்ஜப்னீத் சிங், முகேஷ் சௌத்ரி, ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். மொத்தம் 16 வீரர்கள் தக்கவைக்கப்பட்டு இருப்பதால், அந்த அணி இன்னும் அதிகபட்சமாக 9 பேரை வாங்கலாம். அதில் 4 வெளிநாட்டு வீரர்களை வாங்கலாம். இந்த ஏலத்தில் சூப்பர் கிங்ஸ் அணிக்கு 43.40 கோடி ரூபாய் மீதமிருக்கிறது. கேமரூன் கிரீனை வாங்க வேண்டுமா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியிருக்கிறார் கேமரூன் கிரீன் இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் மீதுதான் கிரிக்கெட் வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. காயம் காரணமாக கடந்த மெகா ஏலத்தில் பங்கேற்காத அவர், இந்த ஏலத்தின் முதல் செட்டில் (பேட்டர்கள்) இடம்பெற்றுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (64.30 கோடி ரூபாய்), சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளிடமுமே அதிக தொகை இருப்பதால், இவ்விரு அணிகளும் கிரீனுக்காக கடுமையாகப் போட்டியிட வாய்ப்பு உள்ளது. முந்தைய ஐபிஎல் ஏல சாதனைகள் முறியடிக்கப்படலாம் என்றும், 30 கோடி ரூபாயைக்கூட தாண்டலாம் என்றும் பேசப்படுகிறது. அதேநேரம், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு கேமரூன் கிரீன் அவசியம் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. "கேமரூன் கிரீனை வாங்கினால் சூப்பர் கிங்ஸின் மிடில் ஆர்டர் நன்கு பலமடையும். கிரீன், பிரீவிஸ், துபே ஆகியோர் அடங்கிய மிடில் ஆர்டர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்கிறார் முன்னாள் சிஎஸ்கே வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன். அவர் நான்காவது வீரராக விளையாட நன்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறும் அவர், தேவைப்பட்டால் ஓப்பனராகவும் கிரீனால் விளையாட முடியும் என்கிறார். மறுபுறம் கிரீனை முதன்மையான இலக்காக வைக்க வேண்டாம் என்கிறார் கிரிக்கெட் வல்லுநரும் வர்ணனையாளருமான நானீ. "நைட் ரைடர்ஸுக்கு நிச்சயம் கிரீன் தேவை. அவர்களின் கையில் பெரிய தொகை இருப்பதால், அதைக் குறைப்பதற்காக சிஎஸ்கே கிரீனுக்கு ஏலம் கேட்க வேண்டும். ஆனால், ஓர் அளவு வரை ஏலம் கேட்டுவிட்டு விட்டுவிட வேண்டும். ஏனெனில், சிஎஸ்கே வேறு சில இடங்களை நிரப்ப வேண்டிய தேவை இருக்கிறது" என்கிறார் அவர். கிரீனுக்கு பதில் வேறொரு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் வேண்டாம் என்று சொல்லும் நானீ, இன்னொரு ஆஸ்திரேலிய வீரரை சூப்பர் கிங்ஸ் குறிவைக்க வேண்டும் என்கிறார். அதற்குக் காரணமாக அவர் சொல்வது, ரவீந்திர ஜடேஜாவால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம். "ரவீந்திர ஜடேஜா இல்லாதது மிகப்பெரிய வெற்றிடம். அதை நிரப்ப இரண்டு வீரர்களே தேவைப்படும். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய ஒரு வீரர் வேண்டும். கிரீன் அப்படிப்பட்ட வீரர்தான் என்றாலும், சுழற்பந்துவீச்சு சிஎஸ்கே-வுக்கு மிகவும் அவசியம்" என்கிறார் நானீ. தற்போது சூப்பர் கிங்ஸ் அணியில் நூர் அஹமது, ஷ்ரேயாஸ் கோபால் என இரண்டு ஸ்பின்னர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அஷ்வின், ஜடேஜா என பிளேயிங் லெவனில் ஆடக்கூடிய இரண்டு பெரிய வீரர்களை சிஎஸ்கே இழந்திருப்பதால், அதுதான் அந்த அணியின் பிரதான இலக்காக இருக்க வேண்டும் என்கிறார் நானீ. அதனால்தான் கிரீனுக்கு பதிலாக மற்றொரு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான கூப்பர் கானலியை சிஎஸ்கே வாங்க வேண்டும் என்கிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜடேஜாவின் இடத்தை கூப்பர் கானலியை வைத்து நிரப்ப வேண்டும் என்கிறார் வர்ணனையாளர் நானீ "கூப்பர் கானலி பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. ஆனால், அவர் சூப்பர் கிங்ஸுக்கு பொருத்தமான வீரராக இருப்பார். இடது கை மிடில் ஆர்டர் பேட்டிங், இடது கை ஸ்பின் என ஜடேஜாவின் இடத்தை அவரால் அப்படியே நிரப்ப முடியும். அவர் எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு மைக்கேல் பெவன் போலச் செயல்படுவார். சிறப்பாக ஆட்டத்தை முடித்துக் கொடுக்கக் கூடியவராக வருவார். மிகவும் நிதானமான மனோபாவம் கொண்டவராக இருக்கிறார். நல்ல இடது கை ஸ்பின்னர். அற்புதமான ஃபீல்டரும்கூட. இதே வயதில் ஜடேஜா எப்படி இருந்தாரோ, அதைவிடத் திறமைசாலியாக இப்போது கானலி இருக்கிறார்" என்று கூறினார் நானீ. ஆஸ்திரேலியாவுக்காக அனைத்து ஃபார்மட்களிலும் விளையாடிவிட்டார் 22 வயதான கானலி. 2022 அண்டர் 19 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும் அவர் செயல்பட்டிருந்தார். கிரீனை வாங்காமல் கானலியை வாங்குவதன் மூலம் பெரும் தொகையைச் சேமிக்க முடியும் என்றும், அதன்மூலம் இந்திய ஸ்பின்னர், வெளிநாட்டு ஃபினிஷர், வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் ஆகிய இடங்களில் முதலீடு செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். அதோடு, "வெங்கடேஷ் ஐயர் கடந்த ஆண்டைப் போல மிகப்பெரிய தொகைக்குப் போக மாட்டார் என்று நினைக்கிறேன். அதனால், சிஎஸ்கே அவரை வாங்கலாம். அவர் சுமார் 6 கோடி ரூபாய்க்கு ஏலம் போகலாம்" என்று கணிக்கிறார் நானீ. வெளிநாட்டு ஃபினிஷர் யார்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டேவிட் மில்லரை லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ரிலீஸ் செய்திருக்கிறது ஒருவேளை பிளேயிங் லெவனில் இன்னும் அனுபவமிக்க வெளிநாட்டு ஃபினிஷர் வேண்டுமென்று சூப்பர் கிங்ஸ் நினைத்தால், லியாம் லிவிங்ஸ்டனை வாங்கலாம் என்று சொல்கிறார் நானீ. அவராலும் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடத்தை நிரப்ப முடியும் என்கிறார் அவர். கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியோடு ஐபிஎல் சாம்பியன் ஆகியிருந்த லியாம் லிவிங்ஸ்டன் அந்த அணியால் ரிலீஸ் செய்யப்பட்டார். அவருக்கும் இந்த ஏலத்தில் பல அணிகள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "ஒரேயொரு பிரச்னை என்னவெனில், அந்த நாளில் எப்படிப்பட்ட லிவிங்ஸ்டன் களம் காண்பார் என்பதைத்தான் சொல்ல முடியாது. கணிக்க முடியாத வீரர் அவர்" என்கிறார் நானீ. அதேநேரம் டேவிட் மில்லர் சிஎஸ்கே அணிக்குப் பொருத்தமான வீரராக இருப்பார் என்கிறார் வித்யுத் சிவராமகிருஷ்ணன். "ஃபினிஷிங் ரோல் செய்வதற்கு டேவிட் மில்லர் பொருத்தமான வீரராக இருப்பார். நல்ல அனுபவம் கொண்டவர். துபே பந்துவீச்சில் தற்போது நல்ல முன்னேற்றம் கொண்டிருப்பதால், ஆல்ரவுண்டரைத்தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த ஓரிரு ஓவர்களை துபேவால் நிரப்ப முடியும்" என்கிறார் அவர். லக்னௌ அணியால் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கும் டேவிட் மில்லர் ஐபிஎல் அரங்கில் மூவாயிரம் ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். 2022 ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய அங்கமாக விளங்கினார் அவர். சாம்சன், மாத்ரே, கெய்க்வாட், பிரீவிஸ் என வலது கை பேட்டர்கள் நிறைந்த சிஎஸ்கே பேட்டிங் ஆர்டரில் இடது கை பேட்டர் ஒருவர் இணைவது அணிக்குக் கூடுதல் பலமாக அமையும். எந்த இந்திய சுழற்பந்துவீச்சாளர்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2025 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார் விக்னேஷ் புத்தூர் ராகுல் சஹர், ரவி பிஷ்னாய் என இந்தியாவின் இரண்டு முன்னணி ஸ்பின்னர்கள் இந்த ஏலத்தில் இடம் பெற்றிருப்பதால், அவர்களுள் ஒருவரை சிஎஸ்கே வாங்க முயலக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "பிஷ்னாய், சஹர் இருவரில் ஒருவரை வாங்குவதென்றால், சஹரை வாங்குவது நல்லது. ஏனெனில், பிஷ்னாய் கிட்டத்தட்ட ஒரு மிதவேகப்பந்துவீச்சாளர் போலத்தான். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரே மாதிரி கூக்ளியாக வீசுவார். அது சேப்பாக்காத்திற்கு ஒத்து வராது" என்று சொல்லும் நானீ, 'ஃபிங்கர் ஸ்பின்னர்' தான் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்று கூறினார். அப்படியான அனுபவ இந்திய பௌலர்கள் ஏலத்தில் இல்லாததும் கானலியின் அவசியத்தை உணர்த்துவதாகக் கூறுகிறார் அவர். "ஒருவேளை விக்னேஷ் புத்தூர் கிடைத்தால் அவரைக்கூட வாங்கலாம். சென்னைக்கு ஏற்ற வீரராக இருப்பார்" என்றார் நானீ. ஏற்கெனவே இன்னொரு இடது கை ரிஸ்ட் ஸ்பின்னரான நூர் அஹமது இருக்கிறாரே என்று கேட்டதற்கு, "அக்‌ஷர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா இருவருமே இந்திய அணிக்கு ஆடுகிறார்கள் அல்லவா, அதுபோலத்தான். நல்ல தாக்கம் ஏற்படுத்தக் கூடிய ஒரே மாதிரியான திறமையுள்ள வீரர்கள் ஆடுவதில் தவறேதும் இல்லை" என்கிறார். கூடுதலாக, வெஸ்ட் இண்டீஸின் அகீல் ஹொசைன்கூட சூப்பர் கிங்ஸுக்கு ஏற்ற வீரராக இருப்பார் என்கிறார் வித்யுத். பதிரணாவா வேறு வேகப்பந்துவீச்சாளரா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2025 மெகா ஏலத்துக்கு முன்பாக ரீடெய்ன் செய்த பதிரணாவை தற்போது ரிலீஸ் செய்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர் பதிரணாவை சூப்பர் கிங்ஸ் ரிலீஸ் செய்திருந்த நிலையில், அவரை சூப்பர் கிங்ஸ் மீண்டும் இந்த ஏலத்தில் வாங்குவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் செலவு செய்து அவரை வாங்க வேண்டியதில்லை என்பதே அவர்கள் இருவரின் கருத்தாகவும் இருக்கிறது. முஸ்தஃபிசுர் ரஹ்மான், ஃபசல்ஹக் ஃபரூக்கி, லுங்கி எங்கிடி போன்ற 'பேஸ் ஆஃப் தி விக்கெட்' போடும் பௌலர்களை வாங்கலாம் என்று கூறும் நானீ, ஜேசன் ஹோல்டர்கூட நல்ல தேர்வாக இருப்பார் என்கிறார். "முன்பெல்லாம் இல்லாததுபோல் ஹோல்டர் தற்போது பேட்டிங், பௌலிங் இரண்டிலும் முன்னேற்றம் கண்டுள்ளார். நன்கு பௌன்சர்களையும், யார்க்கர்களையும் பயன்படுத்துகிறார். நன்கு சிக்ஸர்களும் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்" என்கிறார் அவர். வித்யுத்தோ, ஜம்மு காஷ்மிரை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஆகிப் நபியை வாங்கலாம் என்கிறார். "ஆகிப் நவி நல்ல ஃபார்மில் இருக்கிறார். பவர்பிளேவில் பந்தை நன்கு நகர்த்தக் கூடியவர். அதேபோல டெத் ஓவர்களில் யார்க்கர்களையும் சிறப்பாக வீசுவார். அவர் சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை பலமாக்குவார்" என்றார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czxg3ng9q7yo
  14. அவுஸ்திரேலிய தாக்குதல் தீவிரவாத சம்பவமாக அறிவிப்பு ; 12 பேர் பலி, 29 பேர் காயம் Published By: Vishnu 14 Dec, 2025 | 08:12 PM சிட்னியின் பாண்டி கடற்கரையில் ஒரு யூத ஹனுக்கா கொண்டாட்டம் நடந்தபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, மொத்தம் இரண்டு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் சம்பவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது, மேலும் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். அவுஸ்திரேலிய அதிகாரிகள் பாண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரான நவீத் அக்ரம் (Naveed Akram) என்பவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அதேநேரம் சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் காயம் அடைந்தவர்களில் இரண்டு காவல் துறையினரும் அடங்குகின்றனர். இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனை ஒரு தீவிரவாத தாக்குதல் சம்பவம் என சிட்னி பொலிஸார் தெரிவித்துள்ளனர். யூதர்களின் ஹனுக்கா பண்டிகையை கொண்டாடுவதற்காக கூடி இருந்தவர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வெடிக்கும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு அவற்றை அப்புறப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது . ஹணுகாவின் முதல் நாளில் யூத அவுஸ்திரேலியர்கள் மீது குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நமது தேசத்திற்கு இருண்ட தருணம் என்று அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். யூத அவுஸ்திரேலியர்கள் மீதான தாக்குதல் ஒவ்வொரு அவுஸ்திரேலியர் மீதான தாக்குதலாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த தாக்குதல் ஒரு தீவிரவாத சம்பவம் என தெரிவித்த சிட்னி பொலிஸ் ஆணையர் மால் லெனின் பொலிஸார் புலனாய்வாளர்களுடன் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளர். இதேவேளை போண்ட பாயில் நடந்த கொடூரமான துப்பாக்கி சூட்டை அவுஸ்திரேலிய முஸ்லிம் சமூகம் கண்டிக்கிறது. அவுஸ்திரேலிய தேசிய இமாம்கள் கவுன்சில் மற்றும் நியூ சவுத் வெல்ஸ் இமாம்கள் கவுன்சில்களும் கண்டனம் தெரிவித்துள்ளன . இந்த வன்முறை மற்றும் குற்ற செயல்களுக்கு நமது சமூகத்தில் இடமில்லை பொறுப்பாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர் . அதே நேரம் தாக்குதல் தொடர்பில் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக இஸ்ரேல் தூதரகம் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. யூத எதிர்ப்பு வன்முறையிலிருந்து மக்களை பாதுகாக்க அவுஸ்திரேலிய அரசு தீர்க்கமாக செயல்பட வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233353
  15. "பத்து சூரியன் அளவுக்கு திறன்" - விண்வெளியில் இருந்து பூமிக்கு சூரிய ஆற்றலை அனுப்பும் கனவுத்திட்டம் பட மூலாதாரம்,Star Catcher கட்டுரை தகவல் ஜோனாதன் ஓ'கல்லகன் 13 டிசம்பர் 2025 சூரிய ஆற்றலை விண்வெளியில் சேகரித்து பூமிக்கு கதிர்வீச்சாக அனுப்பும் திட்டம் பல ஆண்டுகாலமாக இருக்கும் ஒரு யோசனை. இப்போது உலகெங்கும் உள்ள பல நிறுவனங்கள் இதை உண்மையாக்க முடியும் என்று உறுதியாகக் கூறுகின்றன. கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு அமெரிக்க கால்பந்து மைதானத்தில் ஒரு வித்தியாசமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மைதானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஒளிக்கதிர்கள் அனுப்பப்பட்டன. சில நிமிடங்கள் நீடித்த அந்த ஒளிக்கற்றைகள், ஜாக்சன்வில்லே ஜாகுவார்ஸ் மைதானத்தின் ஒரு பக்கத்தில் உள்ள எமிட்டரில் இருந்து பாய்ந்து, மறுபக்கத்தில் உள்ள திரையில் சேகரிக்கப்பட்டன. சூரிய ஒளியைச் சேகரித்து, மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய லென்ஸ்கள் (அவை ஒவ்வொன்றும் சுமார் 1.2 மீட்டர் (4 அடி) உயரம் கொண்டது) மூலம் அவை அனுப்பப்பட்டது. "லென்ஸ்களைத் திறக்க ஏணி மீது ஏறி இறங்க வேண்டியிருந்தது" என்று கூறுகிறார் புளோரிடாவைச் சேர்ந்த ஸ்டார் கேச்சர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ ரஷ். இந்தச் சோதனையின் நோக்கம் என்னவென்றால், விண்வெளியில் சூரிய ஒளியை ஒரு செயற்கைக்கோளிலிருந்து மற்றொன்றுக்கு அனுப்பி ஆற்றல் தர முடியுமா என்பதைச் சோதிப்பது தான். "ஜாகுவார்ஸ் அணியில் சிலரை எங்களுக்குத் தெரியும். இது ஒரு சுவாரஸ்யமான முயற்சி என்று நினைத்தோம்," என்று கூறும் ரஷ், "நாங்கள் சுமார் 105 மீட்டர் [345 அடி] தூரத்திற்கு 100 வாட் கதிர்வீச்சை அனுப்பினோம்" என்கிறார். ஸ்டார் கேச்சர் (Star Catcher) நிறுவனம் உலகம் முழுவதும் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் தொழில்நுட்பங்களை உருவாக்கும் பல நிறுவனங்களில் ஒன்றாகும். பல ஆண்டு காலமாக அறிவியலுக்கும் புனைவுக்கும் இடையே சிக்கித் தவித்த இந்த யோசனை, பூமிக்கு மிகுந்த சுத்தமான ஆற்றலை வழங்கும் நோக்கத்துடன், விண்வெளியில் சூரிய ஒளியை சேகரித்து அதை பூமிக்கோ அல்லது பிற செயற்கைக்கோள்களுக்கோ அனுப்புவதை குறிக்கிறது. பூமியில் உள்ள சோலார் பேனல்கள் வளிமண்டலம், வானிலை, பகல்-இரவு சுழற்சி ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் சூரிய ஒளி, பேனல்களை எட்டுவதற்கு முன்பே குறிப்பிடத்தக்க அளவு கதிர்வீச்சை வடிகட்டிவிடுகின்றன. ஆனால் விண்வெளியில் இரவு-பகல் சுழற்சி இல்லாமல் கிட்டத்தட்ட 24 மணி நேரமும், அதிக திறனுடன் சூரிய ஒளியைச் சேகரிக்க முடியும். "நான் இதைப் பற்றி அப்பாவிடம் சொன்னபோது, அவர் என்னை ஒரு முட்டாளைப் போல பார்த்தார்," என்கிறார் பிரிட்டன் நிறுவனமான 'ஸ்பேஸ் சோலார்' நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான டேவிட் ஹோம்‌ஃப்ரே. ஆனால் இப்போது பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல நாடுகள் இந்த தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து வருகின்றன. பட மூலாதாரம்,Star Catcher படக்குறிப்பு,நீண்ட தூரங்களுக்கு வயர்லெஸ் முறையில் ஆற்றலைக் கதிர்வீச்சு செய்வதற்குத் தேவையான தொழில்நுட்ப மேம்பாடுகள் இப்போது விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியை மிகவும் யதார்த்தமான வாய்ப்பாக மாற்றத் தொடங்கியுள்ளன "விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றலே எரிசக்தி மாற்றத்தை செயல்படுத்தும்," என்று ஹோம்‌ஃப்ரே கூறுகிறார். ஐரோப்பாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தேவைகளில் 80% வரை இந்த முறையால் பூர்த்தி செய்ய முடியும் என சில மதிப்பீடுகள் கூறுகின்றன என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். விண்வெளியில் கிடைக்கும் சூரிய சக்தியின் அடர்த்தி (power density) பூமியில் உள்ள சோலார் பேனல்களை விட 10 மடங்குக்கும் அதிகமாக இருப்பது தான் இதற்கான முக்கிய காரணம். அதாவது, அங்கு சூரியனின் ஆற்றலை மின்சாரமாக மாற்றும் திறன் மிக அதிகம். ஆனால் இதை நிஜத்தில் செயல்படுத்துவது எளிதான காரியம் அல்ல. இதற்கு பிரம்மாண்டமான செயற்கைக்கோள் கூட்டமைப்புகளை (enormous satellite constellations) விண்ணில் அமைக்க வேண்டும். இது சர்ச்சைக்குரியதாகவும், பாதுகாப்பாக இயக்குவதற்கு கடினமாகவும் இருக்கும். அதோடு, இவற்றை உருவாக்க ஏராளமான ராக்கெட் ஏவுதல்கள் தேவைப்படும். மேலும், இதை விட மலிவாகவும் விரைவாகவும் பூமியில் செயல்படுத்தக்கூடிய பல புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழிகள் உள்ளன. புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த வேண்டுமெனில், புதைபடிம எரிபொருள்களை உடனடியாக மாற்றியாக வேண்டும் என்பதால் வேகமாக செயல்பட வேண்டியது மிக முக்கியம். இருந்தாலும், விண்வெளி சூரிய மின்நிலையங்களை உருவாக்குவதால் கிடைக்கும் பலன்கள் எல்லா குறைபாடுகளையும் மிஞ்சிவிடும் என்று சிலர் நம்புகிறார்கள். உதாரணமாக, அமெரிக்க ராணுவம் இந்தத் தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. உலகில் எந்த இடத்துக்கும் தேவைப்படும்போது உடனடியாக ஆற்றலை அனுப்ப முடியும் என்பது நவீன போர்க்களங்களில் இருக்கும் மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்றைத் தீர்க்கும். அதேபோல், இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளுக்கோ, மின்சாரம் இல்லாத கிராமப்புறங்களுக்கோ இது அதிக பயனுள்ளதாக அமையும். விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல், பூமியில் உள்ள சூரிய ஆற்றல் அமைப்புகளைப் போலவே செயல்படுகிறது. சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் பேனல்கள் மூலம் அது இயங்குகிறது. ஆனால் ஒரு பெரிய நன்மையையும் அது கொண்டுள்ளது. ஏனென்றால் அது வளிமண்டலத்திற்கு மேலே இருக்கும். நமது கிரகத்தை சூழ்ந்துள்ள வாயு மற்றும் மேகங்கள் மூலம் வடிகட்டப்படாத சூரிய ஒளியை நேரடியாக சேகரிக்க முடியும் என்பது தான் இதன் பொருள். வளிமண்டலம் நமது கிரகத்தை அடையும் ஆற்றலில் சுமார் 30% பிரதிபலிக்கிறது, அதே நேரத்தில் அது பூமியின் மேற்பரப்பை அடைவதற்கு முன்பே கால் பகுதியை உறிஞ்சுகிறது. விண்வெளி அடிப்படையிலான சூரிய பேனல்கள் இந்த இழப்புகளைத் தவிர்க்கலாம், மேலும் அவற்றை சரியான சுற்றுப்பாதையில் வைத்தால் கிட்டத்தட்ட தொடர்ச்சியான சூரிய ஒளியை பெற முடியும். சேகரிக்கப்பட்ட மின்சாரம் மைக்ரோவேவ் அல்லது லேசர் கதிர்களாக பூமிக்கு அனுப்பப்பட்டு, பூமியில் உள்ள பெரிய ஆன்டெனாக்களால் (rectennas) பிடிக்கப்பட்டு மீண்டும் மின்சாரமாக மாற்றப்படும். ஆனால் பொருளாதார ரீதியாக இது பயனுள்ளதாக இருக்க, ஒவ்வொரு செயற்கைக்கோளும் ஜிகாவாட் அளவிலான மிகப் பெரிய அளவில் ஆற்றலை உற்பத்தி செய்து அனுப்ப வேண்டும். அதற்காக விண்வெளியில் மிகப்பெரிய சூரிய பலகை வரிசைகள் ஒன்றுசேர்க்கப்பட வேண்டிய தேவை எழலாம். அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோவ், 1941 ஆம் ஆண்டு 'ரீசன்' (Reason) என்ற சிறுகதையில், விண்வெளியில் இருந்து சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் யோசனையைப் பற்றி முதன்முதலில் எழுதினார் . பின்னர் 1970-களில், நாசா நடத்திய ஆய்வுகள் இந்த யோசனை சுவாரஸ்யமானது என்றாலும், அதை செயல்படுத்த பெரிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார தடைகள் உள்ளன என்று கூறியது. நாசாவின் முன்னாள் இயற்பியலாளரும் விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியை ஆதரிப்பவருமான ஜான் மான்கின்ஸ், 1990களில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வை வழிநடத்தினார். சூரிய மின்கலங்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களால், இந்த யோசனை நடைமுறைக்கு இன்னும் சாத்தியமானதாக மாறி வருவதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. "செலவு மதிப்பீடு ஒரு டிரில்லியன் டாலரில் (1 trillion USD) இருந்து 100 பில்லியன் டாலராக (100 billion USD) மாறியது என்று மான்கின்ஸ் கூறுகிறார். "ஆனால் அந்தக் காலகட்டத்தில் இதில் ஆர்வம் கொண்டவர்கள் யாருமே இல்லை." "முப்பது வருடங்களுக்கு முன் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் என்பது மிகவும் குழப்பமான விஷயமாக இருந்தது," என்று கூறும் மான்கின்ஸ், "மக்கள் இரு துருவங்களாகப் பிரிந்திருந்தனர்.ஒரு பகுதியினர் இதை உச்சகட்ட ஆர்வத்துடன் ஆதரித்தனர், மற்றொரு பகுதியினர் இதை முழுமையாக வெறுத்தனர்" என்கிறார். கடந்த பத்தாண்டுகளில் நிலைமை மாறிவிட்டதாக, பிரிட்டனில் உள்ள சேட்டிலைட் அப்ளிகேஷன்ஸ் கேடபுல்ட் என்ற ஆராய்ச்சி அமைப்பின் மைக் கர்டிஸ்-ரௌஸ் கூறுகிறார். "இந்த துறையில் ஆர்வம் பெரிதும் உயர்ந்துள்ளது," என்கிறார் அவர். விண்வெளியில் பொருட்களை ஏவுவதற்கான செலவு குறைந்து வருவதாலும், டெக்சாஸில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் போன்ற புதிய பெரிய ராக்கெட்டுகளின் வருகையாலும் இதில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. செயற்கைக்கோள் உற்பத்தி, ரோபாட்டிக்ஸ் மற்றும் பவர்-பீமிங் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியைப் பெறுவது தொடர்பான வாய்ப்பை நம்முன் கொண்டு வந்துள்ளன. "நாம் ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டிவிட்டோம் என்று சொல்லலாம்," என்கிறார் கர்டிஸ்-ரௌஸ். "அடுத்த இருபது ஆண்டுகளுக்குள், சுற்றுப்பாதையில் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் திறன் உருவாகும் என நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்றும் அவர் பகிர்ந்து கொள்கிறார். 2023 ஆம் ஆண்டில், பிரிட்டன் அரசு விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தில் பணிபுரியும் பல நிறுவனங்களுக்கு 4.3 மில்லியன் யூரோ (சுமார் 5.7 மில்லியன் டாலர்) நிதி வழங்கியது. சீனாவில், விஞ்ஞானிகள் ஓமேகா 2.0 எனும் ஒரு முன்மாதிரி விண்வெளி சூரிய மின் செயற்கைக்கோளை உருவாக்கி வருகின்றனர். இது மைக்ரோவேவ்களைப் பயன்படுத்தி பல்வேறு சூரிய பேனல்களிலிருந்து மின்சாரத்தை கடத்தும் திட்டத்தை நோக்கி செயல்படுகிறது. இதற்காக, விண்வெளியில் 1 கிமீ அகலமான ஆன்டெனாவையும், தலா 100 மீட்டர் அகலமுடைய 600 சூரிய துணை-வரிசைகளையும் ஒன்றுசேர்க்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது பூமியில் நடத்தப்பட்ட சோதனைகளில், மைக்ரோவேவ் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2,081 வாட், அதாவது ஒரு சமையலறை கெட்டில் (kettle) இயங்க போதுமான அளவு சக்தியை 55 மீட்டர் தூரத்துக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளனர். பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு,ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் சோலாரிஸ் முயற்சி, விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் சோலாரிஸ் (Solaris) திட்டம் , விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றலை மேலும் ஆழமாக ஆராய வேண்டுமா என்பது குறித்து இந்த ஆண்டின் இறுதியில் ஒரு முடிவை எடுக்க உள்ளது. அமெரிக்காவில், அமெரிக்க ராணுவத்தின் நிதியுதவியுடன் பல தொடக்க நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன. "இது பலரும் நினைப்பதை விட யதார்த்தத்திற்கு மிகவும் நெருக்கமாகிவிட்டது" என்று மிசிசிப்பி பல்கலைக்கழகத்தின் விண்வெளி சட்ட நிபுணரான மிச்செல் ஹன்லான் கூறுகிறார். "ஒருமுறை அந்த தொடக்க முதலீட்டை செய்துவிட்டால், அந்த ஆற்றல் கிட்டத்தட்ட இலவசமாக கிடைக்கும். ஆகவே, அந்த முதலீட்டை செய்யும் தைரியம் மற்றும் தொலைநோக்குப் பார்வை உள்ளதா என்பதுதான் முக்கியம்" என்கிறார் அவர். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஏதர்ஃப்ளக்ஸ் (Aetherflux) எனும் தொடக்க நிலை நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தில் பணிபுரியும் நிறுவனங்களில் ஒன்று. "விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தி என்பது இந்த அற்புதமான யோசனை," என்கிறார் நிறுவனர் பைஜு பட். "ஆனால் நாங்கள் கேட்டுக்கொண்ட கேள்வி இதுதான், 2050-க்கு இலக்கு வைக்காமல், அடுத்த 2-3 ஆண்டுகளுக்குள் இதைச் செய்ய வேண்டுமானால் எப்படிச் செய்வது?" என்றும் அவர் தெரிவித்தார். ஏதர்ஃப்ளக்ஸ் நிறுவனம், அதிக சக்தி வாய்ந்த அகச்சிவப்பு லேசர்கள் மற்றும் ஃபோட்டோவோல்டாயிக் செல்கள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களின் தொகுப்பை பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் சூரிய சக்தியைச் சேகரித்து, பின்னர் அதை பூமியில் உள்ள 5–10 மீட்டர் (16–33 அடி) அகலமுடைய சிறிய சேகரிப்பு மையங்களுக்கு அனுப்பும். இதனால் அவை நிலத்தில் மிகக் குறைந்த இடத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும். பாதுகாப்பு காரணங்களுக்காக, ஒவ்வொரு லேசரும் அதன் பாதையில் ஒரு விமானமோ, மற்றொரு செயற்கைக்கோளோ அல்லது வேறு பொருளோ பறந்து வந்தால், உடனடியாக அணைந்துவிடும் வகையில் வடிவமைக்கப்படும். இது அவற்றின் சென்சார்களுக்கோ அல்லது மனிதர்களுக்கோ சேதம் விளைவிக்காது. இந்த லேசர்கள் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வலிமையானவை அல்ல. உதாரணமாக, இவற்றால் ஒரு விமானத்தை இரண்டு துண்டுகளாக உடைக்க முடியாது. ஆனால், அவை போதுமான சக்தி கொண்டவை என்பதால், அவற்றால் மனித உடல்நலத்திற்கு ஏற்படக்கூடிய விளைவுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று கர்டிஸ்-ரௌஸ் கூறுகிறார். "ஒரு 'டெத் ஸ்டாரை' உருவாக்குவது நோக்கம் இல்லை," என்கிறார் கர்டிஸ்-ரௌஸ். தொடர்ந்து பேசிய அவர், "உண்மையில் இந்த லேசரில் ஒரு முட்டையை வேகவைக்கக் கூட நிறைய நேரம் ஆகும். அதனால் பறவைகள், விமானங்கள், சூப்பர்மேன் என எதுவாக இருந்தாலும் அதன் வழியாக செல்ல முடியும்" என்கிறார். ஆற்றல் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு இந்த தொழில்நுட்பம் பெரிதும் பயனளிக்கக்கூடும் என்று பட் கூறுகிறார். இதில் ராணுவம் ஆரம்பகட்டப் பயனாளர்களில் ஒருவராக இருக்கலாம். "அமெரிக்க அரசாங்கத்துக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய எரிசக்தி தேவைகள் உள்ளன," என்கிறார் கர்டிஸ்-ரௌஸ். பட மூலாதாரம்,Alamy படக்குறிப்பு,இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியால் எல்லா நகரங்களுக்கும் மின்சாரம் வழங்க போதுமான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்க முடியும் என்று சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன ஏப்ரல் மாதத்தில், ஏதர்ஃப்ளக்ஸ் நிறுவனம் 50 மில்லியன் டாலர் நிதியை திரட்டியதாக அறிவித்தது. 2026ஆம் ஆண்டில், பூமியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்கலங்களுக்கு 1 கிலோவாட் அல்லது 1.3 கிலோவாட் சக்தி கொண்ட லேசர் கற்றையை அனுப்பக்கூடிய ஒரு செயல் விளக்க செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. "சிறந்த சூழ்நிலையில், இரண்டு நூறு வாட் அளவிலான மின்சாரம் கிடைப்பதை காண வாய்ப்பு உண்டு," என்கிறார் பட். பூமியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அதன் அகச்சிவப்பு லேசர் பரிமாற்ற அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த எந்த விவரங்களையும் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. பிரிட்டனின் ஸ்பேஸ் சோலார் (Space Solar) நிறுவனம் முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையை பின்பற்றுகிறது. விண்வெளியில் பெரிய நகரங்களின் அளவில், பிரம்மாண்டமான சூரிய மின் நிலையங்களை அமைத்து, எல்லா நாடுகளுக்கும் போதுமான மின்சாரத்தை வழங்க வேண்டும் என கனவு காண்கிறார்கள். இது மிகப்பெரிய பணியென்றாலும், அது சாத்தியமான ஒன்று என ஹோம்‌ஃப்ரே நம்புகிறார். "2050க்குள், உலகின் மொத்த மின்சார தேவையின் 20% வரை விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் வழங்கும் என எதிர்பார்க்கலாம். அது முற்றிலும் சாத்தியம் தான் " என்கிறார் அவர். சுமார் 1.2 மில்லியன் யூரோ (1.6 மில்லியன் டாலர்) பிரிட்டன் அரச நிதி பெற்ற ஸ்பேஸ் சோலார், அடுத்த மூன்று ஆண்டுகளில் இரண்டு செயல் விளக்கப் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. ஒன்று ரேடியோ அலைகள் மூலம் நிலத்துக்கு சக்தியை கடத்துவதைப் பயிற்சி செய்வது. இன்னொன்று, ரோபோக்களால் விண்வெளியில் பெரிய கட்டமைப்புகளை உருவாகும் திறனை நிரூபிப்பது. இறுதியில், 1.8 கிமீ அகலமுடைய ஒரு பிரம்மாண்ட விண்வெளி கட்டமைப்பை உருவாக்கி, அதை கேசியோபியா (Cassiopeia) என அழைக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அது பூமியில் இருந்து சுமார் 36,000 கிமீ உயரத்தில் உள்ள ஜியோஸ்டேஷனரி சுற்றுவட்டத்தில் (geostationary orbit) நிலைநிறுத்தப்படும். அதாவது, பூமியின் ஒரே இடத்திற்கு மேலேயே எப்போதும் நிலைத்து, கிட்டத்தட்ட தொடர்ச்சியாக சூரிய ஒளியைப் பெறும். இந்த மின்நிலையம், மில்லியன் கணக்கான மேசை அளவிலான சிறு செயற்கைக்கோள்களால் (modular satellites) ஆனது, அவை ஒவ்வொன்றும் சோலார் பேனல்களால் மூடப்பட்டிருக்கும். அதன்பின், சுமார் 100 கோடி சிறிய ஆன்டெனாக்கள் மூலம் சேகரித்த ஆற்றலை ரேடியோ அலைகளாக பூமிக்கு அனுப்பும். பூமியில் ஒரு ஹீத்ரோ (Heathrow) விமான நிலைய அளவிலான ரிசீவிங் ஸ்டேஷன் போதும். சுமார் ஒரு பில்லியன் ஆன்டெனாக்கள் சேர்ந்து, சேமித்த சக்தியை ஹீத்ரோ விமான நிலையத்தின் பரப்பளவுக்கு இணையான தரை நிலையத்துக்கு அனுப்பும். அங்கு ரேடியோ அலைகள் மின்சாரமாக மாற்றப்படும். "இவற்றில் ஒரு டஜன் அளவு நிலையங்கள் பிரிட்டனில் இருந்தால், நாட்டின் முழு மின்சாரத் தேவைகளையும் பூர்த்தி செய்யும்," என்கிறார் கர்டிஸ்-ரௌஸ். பட மூலாதாரம்,Space Solar படக்குறிப்பு,சுமார் ஒரு பில்லியன் ஆன்டெனாக்கள் சேர்ந்து, சேமித்த சக்தியை ஹீத்ரோ விமான நிலையத்தின் பரப்பளவுக்கு இணையான தரை நிலையத்துக்கு அனுப்பும். அங்கு ரேடியோ அலைகள் மின்சாரமாக மாற்றப்படும். ஒரு கேசியோபியா மின்நிலையம் சுமார் 700 மெகாவாட் மின்சார திறன் கொண்டதாக இருக்கும் என ஹோம்‌ஃப்ரே கூறுகிறார். இது பிரிட்டனில் அரை மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப் போதுமானது. மேலும், சோமர்செட்டில் தற்போது கட்டப்பட்டு வரும் ஹின்க்லி பாய்ன்ட் C அணு மின் நிலையத்தின் மின்சார உற்பத்தியின் நான்கில் ஒரு பங்கை இது வழங்கும் அளவுக்கு சக்திவாய்ந்தது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஸ்பேஸ் சோலார், விண்வெளியில் கட்டமைப்புகளை அமைக்கத் தேவையான ரோபோடிக் அமைப்பின் செயல் விளக்க வடிவமைப்பை உருவாக்கியுள்ளதாக அறிவித்தது. கடந்த ஆண்டு, வட அயர்லாந்தின் குயின்ஸ் பல்கலைக்கழகம், பெல்ஃபாஸ்டில் உள்ள ஒரு ஆய்வகத்தில், 360-டிகிரி வயர்லெஸ் ஆற்றல் பரிமாற்றம் செய்யும் திறனை நிறுவனம் வெற்றிகரமாகக் நிரூபித்தது. அமெரிக்க நிறுவனமான விர்டுஸ் சோலிஸ், விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தில் பணியாற்றுகிறது. இந்நிறுவனத்தின் திட்டம், 2,00,000 தேன்கூடு வடிவ செயற்கைக்கோள்களை பல கிலோமீட்டர் நீளமான மிகப்பெரிய விண்மீன் கூட்டங்களாக ஒருங்கிணைப்பது தான். இவற்றால், மால்னியா சுற்றுப்பாதை எனப்படும் விசித்திரமான சுற்றுப்பாதையில் பயணித்து, வட அரைக்கோளத்திற்குச் சக்தியை அனுப்ப நீண்ட நேரம் உயர்ந்த அட்சரேகைகளில் தங்க இயலும். விர்டுஸ் சோலிஸ் தனது செயல் விளக்கப் பயணத்தை 2027ல் தொடங்க திட்டமிட்டுள்ளது. இது வெற்றி பெற்றால், பூமியில் மின்சாரச் செலவு மிகுந்த வீழ்ச்சியடையும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, நிறுவனர் ஜான் பக்னல் கூறுகிறார். "உலகளாவிய சராசரி மின்சார விலை, ஒரு மெகாவாட்-மணிக்கு 75 டாலராக (£55) உள்ளது," என்கிறார் அவர். ஆனால் நிறுவனத்தின் மாதிரி அடிப்படையில், விண்வெளி அடிப்படையிலான மின்சாரம் ஒரு மெகாவாட்-மணிக்கு 0.50 டாலர் (£0.40) ஆக அமையலாம். "அதனால், நம் அனைவருக்கும் ஆண்டுதோறும் எரிசக்திக்காக சுமார் 10 டாலர் (£7) செலவு மட்டுமே ஆகும்," என்கிறார் பக்னல். "அதுவே எங்கள் நோக்கம்." இருப்பினும், சிலர் விண்வெளி சூரிய மின்சாரத்தை குறைந்த செலவில் வழங்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. பெரிய அளவிலான விண்வெளி- சூரிய மின்சக்தி வடிவமைப்புகளின் ஒரு மதிப்பீடு, இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பூமி அடிப்படையிலான மாற்றுகளை விட 12-80 மடங்கு அதிகமாக செலவாகும் என்று கூறுகிறது. விண்கலங்கள் பூமி மட்டும் அல்லாமல் பிற இடங்களுக்கும் சக்தியை அனுப்ப முடியும். ஃப்ளோரிடாவில் என்எஃப்எல் மைதானத்தில் இந்த சோதனையை நடத்திய ஸ்டார் கேச்சர் நிறுவனம், ஒரு நாள் சூரிய ஒளியை செயற்கைக்கோள்களுக்கு திருப்பி, விண்வெளியில் அவற்றின் சக்தியை அனுப்ப முடியுமா என்று ஆராய்ந்து வருகிறது. அவர்களின் கதிர்வீச்சு (beam) அமைப்பு, ஃப்ரெஸ்னல் லென்ஸ் (Fresnel lenses) எனப்படும் ஒரு தொடர் கண்ணாடிகளைப் பயன்படுத்தும். இவை நீண்ட காலமாக லைட் ஹவுஸ்களில் (lighthouses) ஒளியை பிரதிபலிக்கவும், விலக்கவும் (reflect & refract) பயன்படுத்தப்பட்டவை. இந்தக் கண்ணாடிகள் சூரிய ஒளியை செயற்கைக்கோள்களின் சூரிய பலகைகளில் திருப்பி செலுத்தும். இந்தத் தொழில்நுட்பம் செயற்கைக்கோள்களுக்கு இயற்கையான சூரிய ஒளியால் மட்டுமே கிடைக்கும் ஆற்றலைவிட அதிக சக்தியை வழங்கக்கூடும் என்று ரஷ் கூறுகிறார். "சூரிய ஒளி நேராகப் பட்டால் அவற்றுக்கு மின்சாரம் கிடைக்கிறது. சூரியன் மறைந்தால் எந்த ஆற்றலும் கிடைக்காது," என்கிறார் ரஷ். "நாங்கள் அந்தச் செயற்கைக்கோள்கள் இருக்கும் இடத்துக்கே ஒளியை அனுப்புகிறோம். அந்த ஒளியின் தீவிரத்தைக் ஒரு சூரியனிலிருந்து பத்து சூரியன்கள் அளவுக்கு எங்களால் மாற்றிக் காட்ட முடியும்" என்றும் விளக்குகிறார். பட மூலாதாரம்,Star Catcher படக்குறிப்பு,விண்கலங்கள் பூமி மட்டும் அல்லாமல் பிற இடங்களுக்கும் சக்தியை அனுப்ப முடியும். ஃப்ளோரிடாவில் என்எஃப்எல் மைதானத்தில் இந்த சோதனையை நடத்திய ஸ்டார் கேச்சர் நிறுவனம், ஒரு நாள் சூரிய ஒளியை செயற்கைக்கோள்களுக்கு திருப்பி, விண்வெளியில் அவற்றின் சக்தியை அனுப்ப முடியுமா என்று ஆராய்ந்து வருகிறது. அத்தகைய அமைப்பு சந்திரனில் உள்ள ரோவர்களுக்கு ஆற்றலை வழங்கவும் உதவும், அவை இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும் சந்திர இரவுகளில் உயிர்வாழ வேண்டும் என்று ரஷ் கூறுகிறார். ஆனால், விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் குறித்து அனைவரும் நம்பிக்கையுடன் இல்லை. முக்கிய கவலை என்னவென்றால், மிக அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களை ஏவுவதும், விண்வெளியில் பாதுகாப்பாக இயக்குவதும் தான். இது இதுவரை யாராலும், இத்தகைய அளவுக்கு, முயற்சிக்கப்படாத ஒன்று. நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைத்து இயக்குவது, மேலும் அவை மற்ற செயற்கைக்கோள்களுடன் மோதாமல் பாதுகாப்பது, மிகப்பெரிய சவால் என்று நெதர்லாந்தில் உள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்வெளிக் குப்பை நிபுணர் பிரான்செஸ்கா லெடிசியா கூறுகிறார். ஏதேனும் விபத்துகள் நடந்தால், அது இந்த புதிய தொழில்துறையின் வளர்ச்சியை உடனடியாகத் பாதிக்கக்கூடும். "சில சம்பவங்கள் மட்டுமே நடந்தால் கூட அது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்," என்று அவர் கூறுகிறார். மேலும், இத்தகைய மிகப்பெரிய செயற்கைக்கோள் குழுக்கள் சட்டபூர்வமானதாக கூட இல்லாமல் இருக்கலாம் என ஹான்லன் கூறுகிறார். 1967 ஆம் ஆண்டின் விண்வெளி ஒப்பந்தத்தின் படி, பூமியின் சுற்றுப்பாதையின் எந்தப் பகுதியையும் எந்த நாடும் உரிமை கோர முடியாது. "ஆனால் ஒரு சதுர மைல் அளவிலான செயற்கைக்கோள் வரிசையைப் பற்றிப் பேசும்போது அது எப்படி அமையும்?" என ஹான்லன் கேள்வி எழுப்புகிறார். "சீனா 4 சதுர மைல் [10 சதுர கி.மீ] செயற்கைக்கோள்களை அமைக்கப் போவதாக அறிவித்தால், அமெரிக்கா கண்டிப்பாக எதிர்ப்புத் தெரிவிக்கும் என்று நான் நினைக்கிறேன்." விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தி உண்மையில் நம்மால் அடையக்கூடியதா என்பது மற்றொரு கேள்வியாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு நாசா அறிக்கை, இந்த தொழில்நுட்பம் தற்போது நிலத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை விட மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது என்றும், ஏவுதல், உற்பத்தி மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் பெரிய முன்னேற்றங்கள் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் கூறியது. "நாம் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நிச்சயமாக சிறந்த இடத்தில் இருக்கிறோம்," என்று தொழில்நுட்பம், கொள்கை மற்றும் உத்தி சார்ந்த செயல்பாடுகளுக்கான முன்னாள் நாசா இணை நிர்வாகியும், விண்வெளி கொள்கை நிபுணருமான சாரிட்டி வீடன் கூறுகிறார். "ஆனால், இதைச் செய்ய நாம் தயாரா ?" எனக் கேள்வி எழுப்புகிறார். அமெரிக்க லாப நோக்கற்ற நிறுவனமான தி ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷனின் விண்வெளி பொருளாதார வல்லுநரும் தொழில்நுட்ப மூலோபாய வல்லுநருமான கரேன் ஜோன்ஸ், விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியை உருவாக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும் என்றும், "இது கார்பன் இல்லாத ஆற்றல்," என்றும் கூறுகிறார். "இது நிஜமாகட்டும் என்று நம்புவோம். ஏனெனில், தற்போதைய சூழலில் விண்வெளியில் பரஸ்பர நம்பிக்கை குறைவாக உள்ளது." அத்தகைய முயற்சி , ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) கட்டுமானத்தை சாத்தியமாக்கிய ஒத்துழைப்பை பிரதிபலிக்கக்கூடும். "பூமத்திய ரேகைக்கு மேல் விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியில் நீங்கள் ஒரே ஒரு முதலீட்டைச் செய்யலாம்," என்கிறார் மான்கின்ஸ். "தேவையைப் பொறுத்து, இது போலந்து, லண்டன், ரியாத், கேப் டவுனுக்கு மின்சாரத்தை வழங்க முடியும். மேலும் ஒரு நாளில் பல முறை இலக்கை மாற்றவும் முடியும்." பெரிய புயல் அல்லது பேரழிவுக்குப் பிறகு மின்சாரம் இழந்த நாடுகள், மின்கட்டமைப்பு சரி செய்யப்படும் வரை தற்காலிக உயிர்நாடி போல இதன் பயன்களை பெறலாம். "மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு குறைந்த அளவு மின்சாரத்தையும் நீங்கள் வழங்க முடியும்," என்கிறார் ஜோன்ஸ். ஸ்டார் கேச்சர் தனது அடுத்த பெரிய சோதனையை விரைவில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த முறை அமெரிக்க கால்பந்து மைதானத்தில் அல்ல. புளோரிடாவின் கேப் கனாவெரலில் நாசாவின் விண்வெளி ஷட்டிலின் பழைய ஓடுபாதையில் திட்டமிட்டிருக்கிறது. இதனால் வயர்லெஸ் ஆற்றல் பரிமாற்றத்தில் ஒரு புதிய சாதனை உருவாகும். "அந்த ஓடுபாதையில் பல கிலோமீட்டர் தூரம் மின்சாரத்தை வழங்க போகிறோம்," என்கிறார் ரஷ். ஆனால் இவ்வளவு வியப்பை உண்டாக்கும் இந்த தொழில்நுட்பம் ஒருநாள் உண்மையில் வெற்றி பெறும் அளவுக்கு வளருமா என்பது இன்னும் பெரிய கேள்வியாகத் தான் எஞ்சியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly32x5ee4eo
  16. இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்ட நிதியத்தின் பெறுமதி ரூ. 3.4 பில்லியனைத் கடந்துள்ளது - நிதி அமைச்சின் செயலாளர் Published By: Digital Desk 3 14 Dec, 2025 | 10:59 AM டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தால் நிறுவப்பட்ட இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்ட நிதியம், இன்றுவரை ரூ. 3,421 மில்லியனுக்கும் அதிகமான நிதியைப் பெற்றுள்ளது என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளதாவது, உள்ளூர் வர்த்தகத் தலைவர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்களிப்பு செய்துள்ளனர். அதன்படி, இதுவரை பெறப்பட்ட மொத்தத் தொகை 3.4 பில்லியன் ரூபாவாகும். இது 11 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும். வெளிநாட்டு நாணய பங்களிப்புகளின் பெறுமதி 4.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 40 நாடுகளிலிருந்து நிதி உதவி பெறப்பட்டுள்ளதாகவும், அதில் அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/233316
  17. மலையக மண்ணை வெளியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதா அல்லது பாதுகாப்பதா எமது பொறுப்பு : மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி நாயுடு கேள்வி Published By: Digital Desk 1 14 Dec, 2025 | 09:08 AM அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய மாற்றிடம் இல்லாவிட்டால் அவர்களை வடபகுதியில் குடியேற்ற வேண்டும் என சில அரசியல் பிரமுகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அரசியல் களத்தில் எதையும் பேசலாம் என்ற நிலையே இன்றுள்ளது. புதிதாக அரசியல் செய்ய வந்தவர்களுக்கு மலையக வரலாறும் மலையக மண்ணை பாதுகாக்க எத்தகைய தியாகங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது பற்றியும் தெரியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட பிரமுகரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான கந்தசாமி நாயுடு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தற்போது அரசியல்வாதிகள் முகநூல் அரசியல் செய்வதால் களத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர். மலையக மக்களை மிகவும் பாதித்த ஒரு சம்பவம் ஜுலை கலவரமாகும்.அச்சந்தர்ப்பத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பாதிக்கப்பட்ட இடங்களுக்கெல்லாம் சென்று மக்களை சந்தித்தார். அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சராக அவர் இருந்ததால் அது சாத்தியமாயிற்று. இரத்தினபுரி, மாத்தளை, கண்டி, கம்பளை, நுவரெலியா என பல மலையக நகரங்களுக்குச் சென்ற அவர் மக்களிடம் வினயமாகக் கேட்டுக்கொண்டது ஒரு விடயம் மாத்திரமே. தயவு செய்து நீங்கள் இந்த மண்ணை விட்டு சென்று விடாதீர்கள். எமது மக்கள் மீது காடைத்தனத்தை ஏவி விட்டவர்கள் ஒரு சிறிய எண்ணிக்கையான இனவாதிகளே. அவர்களுக்கு பயந்து கொண்டு நாம் ஏன் எமது மண்ணை விட்டுச் செல்ல வேண்டும்? இங்கிருந்தே போராடுவோம். நானும் அதற்குத் தயார். நாமும் எமது பரம்பரையினரும் கட்டியெழுப்பிய இம்மண்ணை பாதுகாப்பது எமது கடமை. எதிர்காலத்தில் நாம் இந்த மண்ணில் சகல துறைகளிலும் தடம் பதிப்போம். ஆகவே வன்முறைகளுக்கு பயந்து கொண்டு எமது மண்ணை விட்டு செல்லும் எண்ணம் இருந்தால் அதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் என்றார். நான் அப்போது அவரது பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக இருந்ததால் அவர் சென்ற அனைத்து இடங்களுக்கும் அவருடன் நானும் பயணித்தேன். மலையக மண்ணை பாதுகாப்பதிலும் எதிர்கால திட்டமிடலிலும் அவரது தீர்க்கதரிசனத்தை கண்டு வியந்தேன். கல்வி,குடியிருப்பு, இளைஞர் கட்டமைப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் போன்றவற்றில் அவரது செயற்பாடுகள் வெற்றியளித்துள்ளன. வன்முறையை காரணம் காட்டி அன்று பெருந்தொகையானோர் வெளியேறியிருந்தால் எமது பிரதிநிதித்துவங்கள் இல்லாது போயிருக்கும்.இன்று அரசியல் வீரவசனம் பேசும் சிலர் கறுப்பு ஜுலை கலவரம் உட்பட பல சந்தர்ப்பங்களில் அச்சத்தினால் இந்தியாவுக்கு ஓடியவர்கள் என்பது முக்கிய விடயம். ஆனால் இன்று அப்படியான ஒரு சூழ்நிலை இல்லை. நிலவுரிமை தொடர்பில் நாம் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும். அதை முன்னெடுப்பதற்கு பிரதிநிதிகள் மத்தியில் ஒற்றுமை அவசியம். அதை கட்டியெழுப்புவதை விடுத்து இங்கே இல்லாவிட்டால் வேறு எங்காவது செல்வோம் எனக் கூறுவது கோழைத்தனம் மாத்திரமின்றி போரட்ட உணர்வு மங்கி போன அரசியலின் வெளிப்பாடு. எமது மண்ணை விட்டு மக்கள் சென்றால் அது வெளியாரின் ஆக்ரமிப்புக்கு வழிவகுக்கும். மலையகம் என்ற அடையாளம் கேள்விக்குறியாகும். எனவே அரசியல் பிரமுகர்கள் ஏதாவது பேசுவதற்கு முன்பு சிந்தித்து வார்த்தைகளை வெளிப்படுத்தல் நல்லது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/233297
  18. 'மரண ஆபத்து, வேடிக்கை தான்' : ஹாலிவுட் பெண் சண்டை கலைஞர் கிட்டி ஓ'நீல் பட மூலாதாரம்,UPI/Bettmann Archive/Getty Images கட்டுரை தகவல் ஹிஸ்டரி'ஸ் டஃபஸ்ட் ஹீரோஸ் பிபிசி ரேடியோ 4 13 டிசம்பர் 2025 அமெரிக்காவின் வெறிச்சோடிய பாலைவனத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் காது கேளாத ஓ'நீல் எனும் பெண் சண்டை கலைஞரால் உண்மையில் என்ன செய்ய முடியும் என்பதை உலகுக்கு உறுதியாக காட்டியது. அவர் காது கேளாதவர் என்பது அவருக்கு தடையாக இருக்கும் என்ற தவறான கருத்துகளை முறியடித்ததோடு, பெண்களிடையே ரேஸிங் காரை அதிவேகமாக ஓட்டுவதில் மஞ்சள் நிற உடை அணிந்த அந்த சிறிய உருவம் துணிச்சலுடன் சவால் விடுத்து முந்தைய சாதனைகளை முறியடித்தது. ஆனால், இது அசாத்தியமான சாகசங்களை மேற்கொள்ள தூண்டுதலாக அமைந்த ஓ'நீலின் தைரியம் மற்றும் தாங்குதிறனை விவரிக்கும் மற்றுமொரு அத்தியாயம்தான். ஹாலிவுட்டில் 1970களின் வாழ்நாள் சாதனையாளராக திகழ்ந்த ஓ'நீல் பல்வேறு முந்தைய சாதனைகளை முறியடித்த பெண் சண்டைப் பயிற்சி கலைஞராக இருந்தார். மேலும், இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொள்வதன் மூலம் காது கேளாத ஒருவரால் என்ன செய்ய முடியும் என்ற மற்றவர்களின் கற்பிதங்களை தன்னுடைய குழந்தை பருவத்தில் முறியடித்தார். காது கேட்க முடியாதவராக இருந்தபோதிலும், ஓ'நீல் சாகசங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதிலும் வேகம் மீதான தன் ஆர்வத்தை வெற்றிகரமான தொழிலாகவும் மாற்றுவதில் உறுதியானவராக இருந்தார். அக்காலகட்டத்தில், தொலைக்காட்சி திரைகளில் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தக்கூடிய ஆபத்தான சாகசங்களை நிகழ்த்திய மிகச் சில பெண்களில் இவரும் ஒருவர். மேலும் ஸ்டண்ட்ஸ் அன்லிமிடெட் எனும் ஹாலிவுட்டில் மிக சவாலான சண்டை காட்சிகள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்கும் குழுவில் இணைந்த முதல் பெண்ணும் இவரே. ஓ'நீலின் வாழ்க்கை குறித்து படம் ஒன்றும் வெளிவந்திருக்கிறது, மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. தவிர, அவருடைய சண்டைக் கலையை பிரதிபலிக்கும் வகையிலான பொம்மைகளும் உள்ளன. பட மூலாதாரம்,Tom Nebbia / Getty Images படக்குறிப்பு,தரையிலிருந்து 54 மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் ஹெலிகாப்டரிலுருந்து ஏர்பேகில் (airbag - காற்று நிரப்பப்பட்ட ஒரு மெத்தை போன்றது) குதிக்கத் தயாராகும் கிட்டி ஓ'நீல். அந்த ஏர்பேக் அந்த உயரத்திலிருந்து ஒரு தபால் தலை அளவிலேயே இருந்ததாக அவர் கூறினார். காது கேட்காது; ஆனாலும் தோல்வி இல்லை டெக்சாஸில் 1946ம் ஆண்டில் கார்பஸ் க்ரிஸ்டியில் பிறந்தார் ஓ'நீல். ஐந்து மாத குழந்தையாக இருந்தபோது அவரின் உடல்நிலை மோசமானது, ஆபத்தான அளவில் உடலின் வெப்பநிலை உயர்ந்தது. அவருடைய அம்மா அவரின் உடலை சுற்றி ஐஸ் கட்டிகளை வைத்தார், அது அவருடைய உயிரை காப்பாற்றியது, ஆனால், கிட்டி வளரவளர அவர் பேச தொடங்கவே இல்லை, அப்போதுதான், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காது கேட்கும் திறனை இழந்துவிட்டதை அவரின் பெற்றோர் அறிந்தனர். அவருடைய அம்மா பேட்சி ஓ'நீல் தன் மகளுக்கு சைகை மொழியை கற்பிக்க மறுத்துவிட்டார், அக்காலக்கட்டத்தில் அது சந்தேகத்துடனேயே பார்க்கப்பட்டது. ஆனால், தன் மகள் மற்றவர்களுடன் குறைவாக பார்க்கப்படக் கூடாது, அவர் பேச்சு மற்றும் தொடர்பியலை கற்க வேண்டும் என்பதில் பேட்சி ஓ'நீல் பிடிவாதமாக இருந்தார். எனவே, பேட்சி தன் மகளுக்கு வழக்கத்திற்கு மாறான உதட்டசைவுகளை கொண்டு என்ன சொல்கின்றனர் என்பதை புரிந்துகொள்ளும் லிப்-ரீடிங்கை கற்றுக்கொடுத்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வொண்டர் வுமன் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குறிப்பிட்ட நடிகர்களுக்கு பதிலாக சண்டை காட்சிகளை நிகழ்த்துபவராக இருந்தார், ஹோட்டல் ஒன்றிலிருந்து குதிக்கும் அவரின் சண்டைக் காட்சிகளுள் ஒன்று. "அவருடைய அம்மா கிட்டியின் கைகளை பிடித்து அவற்றை அவருடைய குரல் வளையின் மீது வைப்பார்," என்கிறார், ஓ'நீலின் மிக நெருங்கிய நண்பரும் சண்டைப் பயிற்சி கலைஞருமான கய் மைக்கேல்சன். "பின்னர், வார்த்தைகளை மிகவும் சத்தமாக, மெதுவாக திரும்பத் திரும்ப கூறுவார்." பள்ளியில் கிட்டி கேலி செய்யப்பட்டபோது, அவர் கடுமையாக எதிர்த்து சண்டையிடுமாறு அவரின் தாயார் கூறுவார். பேட்சியின் திறன்களை அப்படியே கிட்டி செய்தார். "ஒவ்வொரு வார்த்தைகளின் அதிர்வுகளில் ஏற்படும் நுட்பமான மாற்றங்கள் மூலம் கிட்டி செல்லோ மற்றும் பியானோ வாசிக்கக் கற்றுக்கொள்வதில் ஈடுபட வைத்தார் அவரின் அம்மா," என்கிறார் தற்போது விளையாட்டு இணையதளமான ESPN-யின் துணை ஆசிரியரான எரிக்கா குட்மேன்-ஹூகே. காரில் ரேடியோவில் ஒலிபரப்பாகும் பாடல்களை அதன் அதிர்வுகளை வைத்தே கிட்டி அடையாளம் காண்பார் என மைக்கேல்சன் நினைவுகூர்கிறார். தான் பீட்டிள்ஸ் இசைக்குழுவின் ரசிகர் என்றும், அக்குழுவின் இசை ஒலிபரப்பாகும்போது கிட்டி கூறியிருக்கிறார். பட மூலாதாரம்,CBS via Getty Images படக்குறிப்பு,1970களில் ஒளிபரப்பான பெரும் வெற்றியடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியான வொண்டர் வுமனில் (Wonder Woman) நடித்த லிண்டா கார்ட்டரின் சண்டை காட்சிகளில் கிட்டி பதிலியாக(Dupe) நடித்தார். சண்டைப் பயிற்சியில் ஆரம்ப வாழ்க்கை கிட்டிக்கு 11 வயது இருக்கும்போது விமான விபத்து ஒன்றில் அவருடைய தந்தை இறந்துவிட்டார், ஆனால் அவரின் லான்மோவரில் (lawnmower - தோட்டத்தில் உள்ள புல்லை வெட்டிவிடப் பயன்படுத்தப்படும் ஓர் வாகனம் போன்றது) குழந்தையாக வேகமாக பயணித்த சிலிர்ப்பனுபவத்தை அவர் மறக்கவேயில்லை. வளர்ந்தபின்பு, அவர் டைவிங் போட்டிகளில் சிறந்து விளங்கினார். ஆனால், 1964ம் ஆண்டில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் சோதனைகளுக்கு சிறிது காலத்திற்கு முன்பு, அவரின் மணிக்கட்டு உடைந்துபோனது, மேலும் அவருக்கு முதுகெலும்பு மூளைக்காய்ச்சலும் (spinal meningitis) ஏற்பட்டது. அதிலிருந்து குணமான பின்பு, அந்த விளையாட்டுக்கான ஆர்வத்தை தான் இழந்துவிட்டதாக அவருக்கு தோன்றியது. தன் 16 வயதில் அம்மாவின் காரை ஓட்டத் தொடங்கிய உடனேயே, ஓ'நீல் ஸ்கைடைவிங், அதன்பின் வாட்டர்ஸ்கையிங் உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டினார், பெண்களிடையே அதுவரையிலான சாதனை வேகத்தை அவர் முறியடித்தார், மேலும் நாடுகளுக்கு இடையேயான கடினமான மற்றும் ஆபத்தான மோட்டார்பைக் போட்டிகளில் பங்கேற்றார், எல்லாவற்றிலும் ஒருபோதும் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. அவற்றிலிருந்த மரண ஆபத்து, வேடிக்கையின் ஒருபகுதியாக பார்க்கப்பட்டது. ஒரு மோசமான விபத்தில் ஓ'நீல் மோட்டார் பைக்கின் கட்டுப்பாட்டை இழந்து, மோதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் அவரின் ஒரு கை சக்கரத்தின் ஆரங்களில் சிக்கிக்கொண்டது, இதில் அவர் தன் ஒரு விரலை இழந்தார். இதைத் தாண்டியும் ஓ'நீல் தொடர்ந்து முன்னேறிச் செல்ல விரும்பியதாகவும், அவர் தன் கையுறையை அணிந்துகொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிள் மீது ஏறியதாகவும் அவரின் நண்பர்கள் நினைவுகூர்கின்றனர். இறுதியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு சமாதானம் செய்தனர். பட மூலாதாரம்,UPI/Bettmann Archive/Getty Images படக்குறிப்பு,நெருப்பு தொடர்பான சண்டை காட்சிகள் உட்பட தான் செய்த சண்டைக் காட்சிகளில் 'எந்தவொரு பயத்தையும்' வெளிக்காட்டாதவர் ஓ'நீல் என அவரின் நண்பர்கள் கூறுகின்றனர். மற்றொரு சண்டைப் பயிற்சி கலைஞரான டஃபி ஹேம்பிள்டன் அந்த சமயத்தில் கிட்டியை மருத்துவமனைக்கு மட்டும் அழைத்துச் செல்லவில்லை, மாறாக கிட்டியின் வாழ்க்கையையே வேறு திசைக்குக் கொண்டு சென்றார். கிட்டியிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான சண்டைக் காட்சிகள் தொடர்பாக கூறினார். அது தனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என ஓ'நீல் முடிவெடுத்தார். ஹேம்பிள்டன் ஓ'நீலின் முன்னாள் கணவர் ஆவார். பின்னர் ஓ'நீல் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய விருப்ப புத்தகங்களான நார்மன் வின்சென்ட் பீலே எழுதிய தி பவர் ஆஃப் பாசிட்டிவ் திங்கிங் மற்றும் பைபிளுடன் ஆபத்துகளை எதிர்கொள்ள தயாராகி படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தார். 1970களின் ஆரம்பத்தில் 'விக்' அணிந்த ஆண்கள் சண்டைக் காட்சிகளில் ஈடுபடுவது மிகவும் சாதாரணமானது, ஆனால் அந்த உலகம் மாற ஆரம்பித்தது. காது கேளாமல் இருப்பது தடையாக இருக்கும் எனவும் அவர் "பெயரளவில்" மட்டுமே இத்துறையில் இருக்க முடியும் என்றும் மற்றவர்கள் கூறுவதை ஓ'நீல் கேட்க மறுத்தது அவருக்கு உதவியாக இருந்தது. அதற்கு மாறாக, காது கேளாமல் இருப்பது அசாத்திய சக்தி என்றும் திரைப்பட துறை தன்னை சுற்றி சுழலும் போதும், தன் பணியின் மீது முற்றிலும் கவனமாக இருக்க முடியும் என்றும் ஓ'நீல் கூறினார். பிரபலமான சண்டைக் காட்சிகள் வொண்டர் வுமன் தொலைக்காட்சி தொடர்களில் நடிகை லிண்டா கார்ட்டருடன் ஓ'நீல் தொடர்ந்து பணியாற்றியது மிகவும் பிரபலமாக இருந்தது, மேலும் அந்த நிகழ்ச்சிக்காக அதிகளவிலான சண்டைக் காட்சிகளை அவர் செய்தார். இதில் அவரின் தனித்துவமான உடையை அணிந்துகொண்டு ஹெலிகாப்டரிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியும் அடங்கும். அதன் ஒரு இறுதிக்காட்சியில் கலிஃபோர்னியாவின் ஹோட்டல் ஒன்றிலிருந்து 120 அடியிலிருந்து குதித்தார். துல்லியமான கவனம் மற்றும் தைரியத்தைக் கோரும் இந்த சாகசம், ஓர் சாதனை வெற்றியாகும். அதுவொரு முக்கிய தருணமாக அமைந்தது. "ஆம், அவர் பெண்மையை பிரதிநிதித்துவப்படுத்தினார்... ஆனால், பெண் சக்தி என நாம் கருதுவதையும் அவர் பெண்மையுடன் இணைத்தார்," என குட்மேன்-ஹூகே கூறினார். பீப்பிள் (People) இதழுக்கு அச்சமயத்தில் பேட்டியளித்த ஓ'நீல், "நான் ஆண்களுடன் போட்டியிட முயற்சிக்கவில்லை. என்னால் செய்ய முடிந்ததை நான் செய்ய முயற்சிக்கிறேன்." என்றார். பட மூலாதாரம்,Glen Martin/The Denver Post via Getty Images படக்குறிப்பு,முன்னாள் கணவர் ஹேம்பிள்டனுடன் கிட்டி ஓ'நீல், வங்கி அதிகாரியான ஹேம்பிள்டன் பின் சண்டைப் பயிற்சி கலைஞரானார். அதில் எதையும் ஓ'நீல் குறைவாகச் செய்யவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக உடலில் தீயைப் பற்றவைத்துக்கொண்டு உயரத்திலிருந்து குதித்து மற்றொரு சாதனையை முறியடித்தார். மேலும், ஜெட் மூலம் இயங்கும் படகை மணிக்கு 443 கி.மீ வேகத்தில் இயக்கினார். "நான் அவருடன் நடக்கும்போது கூட அவர் என்னைவிட 10 அடிகள் முன்னே இருப்பார்," என மைக்கேல்சன் கூறுகிறார். அவர் தொடர்ந்து எல்லைகளை தாண்டிச் சென்று, வேகமாக செல்ல விரும்பினார் என தெரிகிறது. பின்னர், அவர் தன்னுடைய அனைத்து லட்சியங்களையும் நிறைவேற்றுவதற்கான ஓரிடத்தைக் கண்டறிந்தார். எஸ்எம்ஐ மோட்டிவேட்டர் எனும் சோதனை முயற்சியிலான காரை இயக்க அவர் 1976ம் ஆண்டு அழைக்கப்பட்டார். ஹைட்ரஜன் பெராக்சைடு எஞ்சினால் இயக்கப்படும் அந்த கார், 48,000 குதிரைத்திறனை உற்பத்தி செய்யக்கூடியது. ஓ'நீல் காரை மணிக்கு 1,207 கிமீ (750 மைல்) வேகத்தில் இயக்கி, ஒலியின் வேகத்தை முறியடிக்க விரும்பினார். ஆனால், அதன் ஒருங்கிணைப்பாளர்களுடனான ஒப்பந்தத்தின்படி, ஓ'நீல் பெண்களின் முந்தைய சாதனை வேகமான மணிக்கு 483 கி.மீ என்ற வேகத்தை முறியடிக்க முயற்சிக்கலாம் என கூறப்பட்டது. தனது சிறிய உடலில் மஞ்சள்நிற உடையை அணிந்துகொண்டார். அலுமினிய சக்கரங்கள் கொண்ட, ஊசி வடிவிலான காரை எடுத்துக்கொண்டு, அமெரிக்காவின் ஒரேகானில் உள்ள ஆல்வோர்ட் பாலைவனத்தில் மணிக்கு 988 கிமீ வேகத்தில் இயக்கி பெண்கள் மத்தியில் முந்தைய சாதனைகளை முறியடித்தார். பட மூலாதாரம்,Glen Martin/The Denver Post via Getty Images படக்குறிப்பு,தன் வாழ்நாள் முழுவதும் எல்லைகளை கடந்து, கற்பிதங்களை பொய்யாக்கி பல சாதனைகளை புரிந்தார். அடுத்ததாக அவர் ஆண்களின் சாதனை வேகத்தை முறியடிக்க விரும்பினார், ஆனால் ஒரு பெண் அப்படி செய்வது ஏற்றதல்ல எனக்கூறி, சில ஸ்பான்சர்கள் அதைத் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது, அதுகுறித்து அவர்கள் கருத்து கூற மறுத்துவிட்டனர், ஆனால் ஓ'நீலின் நெருங்கிய நண்பர்கள் கூறுகையில், வரலாறு முழுவதும் பெண்கள் எவ்வாறு பின்தங்கியிருந்தனர் என்பதைக் காட்டும் தருணமாக ஓ'நீல் அந்த தருணத்தை மனதளவில் குறித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மைக்கேல்சன் உடனேயே ஓ'நீலுக்கு இழுவை பந்தயத்தில் மற்றொரு வாய்ப்பை வழங்கினார். அதைத்தொடர்ந்து, நீரில் வேகப்படகை இயக்குவதிலும் அவர் முந்தைய சாதனைகளை முறியடித்தார். "எந்த பயமும் இல்லாத ஒருவரை என் வாழ்க்கையில் இதற்கு முன்பு சந்தித்ததே இல்லை. ஓ'நீலுக்கு எந்த பயமும் இல்லை, என்றாலும் அது நல்ல விஷயம் அல்ல," என்கிறார் மைக்கேல்சன். எப்போதாவது மெதுவாக இயங்கியுள்ளாரா? சாதனைகளை முறியடிப்பது, பல திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய பின்பு, தெற்கு டகோட்டாவில் உள்ள சிறு நகரத்தில் ஓய்வு வாழ்க்கையை கழித்தார். என்றாலும், வேகம் மீதான தன் காதலை அவர் இழக்கவே இல்லை எனக்கூறும் மைக்கேல்சன், பல ஆண்டுகள் கழித்தும்கூட ஒரு காரை உருவாக்குவதற்கான ஆர்வத்தை தொலைபேசி வாயிலாக அவர் வெளிப்படுத்தியதாக கூறுகிறார். 72 வயதில் ஓ'நீல் உயிரிழந்தார். தரையில் பந்தய காரை வேகமாக இயக்குவதில் பெண்களில் இவரின் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. "உண்மையிலேயே அவர் தான் வொண்டர் வுமன்," என்கிறார் மைக்கேல்சன். பிபிசி ரேடியோ 4-ல் வெளியான கிட்டி ஓ'நீல்: ஹாலிவுட்'ஸ் ரியல் வொண்டர் வுமன் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c364977lzzpo
  19. பேரனர்த்த முகாமைத்துவத்திற்காக ஸ்டார்லிங்க் இணைய சேவை 100 அலகுகளை இலவசமாக வழங்குகிறது Published By: Digital Desk 3 14 Dec, 2025 | 09:43 AM அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்லிங்க் நிறுவனம், நாட்டில் பேரனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாக இணைய சேவைக்கு 100 அலகுகளை நன்கொடையாக வழங்கியுள்ளது என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நன்கொடை தகவல் தொடர்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்த உதவும் எனவும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மிகவும் திறம்பட மேற்கொள்ள உதவும் எனவும் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். சனிக்கிழமை (13) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார். இணையச் சேவைக்கான வன்பொருள் அலகுகள் ஏற்கனவே நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், அனர்த்த மீட்புப் பணிகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்காக அவற்றை அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/233302
  20. ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பொலன்னறுவை Lakbima Rice Mills (Pvt) Ltd நிதி நன்கொடை 13 Dec, 2025 | 03:25 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பொலன்னறுவை Lakbima Rice Mills (Pvt) Ltd இனால் 100 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை அரலிய வர்த்தகக் குழுமத்தின் தலைவர் டட்லி சிறிசேன, இன்று சனிக்கிழமை (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வழங்கினார். https://www.virakesari.lk/article/233279 ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 10 மில்லியன் ரூபா நிதி நன்கொடை 13 Dec, 2025 | 05:32 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஜனந்தி சந்தனிகா, தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 10 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கினார். அதற்கான காசோலையை அவர், இன்று சனிக்கிழமை (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். https://www.virakesari.lk/article/233287
  21. உடுமலை சங்கர் கொலை வழக்கை அரசு தாமதப்படுத்துகிறதா? கௌசல்யா குற்றச்சாட்டும் திமுக பதிலும் பட மூலாதாரம்,Facebook கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 13 டிசம்பர் 2025, 10:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் உடுமலை சங்கர் கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் நடக்கும் மேல் முறையீட்டு வழக்கின் மீதான விசாரணை ஓராண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது, தங்களுக்கு ஆதரவாக இருந்த ஸ்டாலின் முதல்வரான பிறகு இந்த வழக்கை நடத்துவதில் அக்கறை காட்டவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் கெளசல்யா. சட்டமன்றத் தேர்தல் வருவதால், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வாக்குகளைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்கை நடத்துவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாகக் கூறுகிறார் எவிடென்ஸ் அமைப்பின் கதிர். சங்கரின் குடும்பத்தினரும் இதே குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். இந்த குற்றச்சாட்டுகளை தி.மு.க தரப்பு மறுத்துள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய திமுக செய்தித் தொடர்புத் துறை தலைவரும் முன்னாள் எம்.பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன், வழக்கை தாமதப்படுத்தும் எந்த உள்நோக்கமும் தமிழக அரசுக்கு இல்லை என்றார். வழக்கின் பின்னணி பழனியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கெளசல்யா, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். உடன் படித்த பட்டியல் பிரிவைச் சேர்ந்த சங்கரை காதலித்த கெளசல்யா தனது வீட்டில் எழுந்த எதிர்ப்பை மீறி சங்கரை கரம் பிடித்தார். திருமணம் முடிந்து சில மாதங்களே ஆகியிருந்த நிலையில், 2016 மார்ச் 16-ஆம் தேதி உடுமலையில் கடை வீதிக்குச் சென்றிருந்த போது, பேருந்து நிலையம் அருகில் இருவரையும் ஒரு கும்பல் தாக்கியது. இதில் காயமடைந்த சங்கர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். கெளசல்யா, சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார். பட மூலாதாரம்,KOUSALWAY/ FACEBOOK உடுமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிசிடிவி காட்சிகள், வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்தன. கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தந்தை சின்னச்சாமி, தாய்மாமா பாண்டித்துரை ஆகியோர் உட்பட 11 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவானது. வழக்கில் முதல் குற்றவாளியாக சின்னச்சாமியை காவல்துறை சேர்த்திருந்தது. திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமா பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய 3 பேர் விடுவிக்கப்பட்டனர். கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல் ஆகிய 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஸ்டீபன் தன்ராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் மற்றொரு மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடும் தண்டனை பெற்றவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். தமிழ்நாடு அரசு தரப்பிலும் 3 பேர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான தீர்ப்பு, 2020 ஜூன் 22 ல் வழங்கப்பட்டது. அதில் முதல் குற்றவாளி சின்னச்சாமி மீதான குற்றங்கள் சரிவரி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, அவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்திருந்த மரண தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலையும் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்டீபன் தன்ராஜ் மற்றும் மணிகண்டனுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனைகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம், கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி உட்பட 3 பேரை கீழமை நீதிமன்றம் விடுவித்தது செல்லும் என்றும் உறுதி செய்தது. அதிமுக ஆட்சியின் போதே இந்த வழக்கின் 2 தீர்ப்புகளும் வெளிவந்தன. அதன்பின் 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதுவும் அதிமுக ஆட்சியிலேயே நடந்தது. அதற்கு அடுத்த ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று திமுக ஆட்சிக்கு வந்தது. பட மூலாதாரம்,HANDOUT தமிழக அரசு மீது கெளசல்யா குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்த வழக்கில் இதுவரை எந்தவொரு உத்தரவும் வழங்கப்படவில்லை. இந்த வழக்கை தமிழக அரசு திட்டமிட்டே தாமதப்படுத்துவதாக கெளசல்யா குற்றம்சாட்டியுள்ளார். வழக்கின் ஆவணங்களை மொழி பெயர்ப்பதற்கு மேலும் 6 மாதங்கள் வேண்டுமென்று தமிழக அரசு கோரியதன் பேரில், வழக்கு விசாரணையை 2026 நவம்பர் வரை உச்சநீதிமன்றம் தள்ளிப் போட்டிருப்பதாக பிபிசி தமிழிடம் கெளசல்யா தெரிவித்தார். வழக்கை விரைவுபடுத்த வேண்டிய தமிழக அரசே, பெரும் தடைக்கல்லாக மாறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ''ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது திமுக ஆட்சிக்கு வந்ததும் சங்கரின் மரணத்துக்கான நீதியைப் பெற்றுத் தருவோம் என்றார். ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டாகியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.'' என்று கெளசல்யா குற்றம்சாட்டினார். குறிப்பிட்ட சமுதாய வாக்குகளுக்காக வழக்கு தாமதப்படுத்தப்படுகிறதா? உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்தபின்பு, தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்ட போதே கெளசல்யா சார்பிலும் தனியாக மேல் முறையீடு செய்யப்பட்டது. சங்கர் குடும்பத்தின் சார்பில் அவருடைய தம்பி விக்னேஷ் பெயரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உதவியுடன் தனியாக ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு நடப்பதால் அரசுதான் மேல் முறையீட்டு வழக்கை விரைவாக நடத்த வேண்டுமென்கிறார் எவிடென்ஸ் அமைப்பின் நிர்வாகி கதிர். பிபிசி தமிழிடம் பேசிய எவிடென்ஸ் கதிர், ''வழக்கமாக குற்றவாளிகள்தான் வழக்கை தள்ளிப்போட கால அவகாசம் கேட்பார்கள். ஆனால் ஆவணங்களை மொழி பெயர்க்க 6 மாத அவகாசம் கேட்டது மிகவும் அநீதியானது. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வாக்குவங்கியைக் குறிவைத்தே, இந்த வழக்கை தள்ளிப் போடுவதற்கு தமிழக அரசு முயற்சி செய்கிறது'' என்று குற்றம்சாட்டினார். படக்குறிப்பு,எவிடென்ஸ் கதிர் தமிழக அரசு மீது சங்கர் தம்பி குற்றச்சாட்டு திமுக கூட்டணிக்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இப்போதும் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவே கெளசல்யா மற்றும் சங்கர் குடும்பத்தினர் தெரிவித்தனர். பிபிசி தமிழிடம் பேசிய சங்கரின் தம்பி விக்னேஷ், ''எங்களைப் பொறுத்தவரை, விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் எப்போதுமே எங்களுக்கு ஆதரவாகவுள்ளனர். ஆனால் அரசு தரப்பிலிருந்து இந்த வழக்கை விரைவாக நடத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை.'' என்றார். கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமியிடம் பிபிசி தமிழ் பேச முயன்ற போது, அவர் தரப்பில் யாரும் பேசுவதற்கு முன்வரவில்லை. பட மூலாதாரம்,NATHAN G கெளசல்யா குற்றச்சாட்டுக்கு திமுக பதில் திமுக தரப்பில் பிபிசி தமிழிடம் பேசிய அதன் செய்தித் தொடர்புத் துறை தலைவரும் முன்னாள் எம்.பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன், இந்த வழக்கை தாமதப்படுத்தும் உள்நோக்கம் எதுவும் திமுக அரசுக்கு இல்லை என்றார். இதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. குற்றவாளிகளுக்கு எதிராகத்தான் தமிழக அரசு தரப்பில் அழுத்தமாக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் வழக்கை விசாரணைக்கு எடுப்பதும், தள்ளி வைப்பதும் நீதிபதிகளின் முடிவு. அதில் அரசால் எதுவும் செய்யமுடியாது. வழக்கின் தன்மையைப் பொறுத்தே, அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.'' என்றார். தமிழக அரசு, இந்த வழக்கை தாமதப்படுத்துவதற்காகவே மொழி பெயர்ப்புக்கு காலஅவகாசம் கேட்டதாக கெளசல்யா முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்டதற்கு, ''சட்டப்பூர்வ நடைமுறைகள் பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது. இதுபோன்ற வழக்குகள் பெரும்பாலும் உச்சநீதிமன்றத்தில் மிகவும் தாமதமாகவே எடுக்கப்படுகின்றன. இதில் வேண்டுமென்றே எந்த தாமதத்தையும் தமிழக அரசு செய்யவில்லை. குற்றவாளிகள் பலரும் சிறையில் இருப்பதாலேயே வழக்கை விசாரணைக்கு எடுக்க தாமதமாகியிருக்கலாம். ஆனால் நீதிமன்ற விவகாரங்களில் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது.'' என்றார். சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வாக்குகளை பெறுவதற்காகவே இந்த வழக்கை தமிழக அரசு தாமதப்படுத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து கேட்ட போது, 'அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை' என்று டிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்தார். இதுகுறித்து கருத்து கேட்பதற்காக தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனை தொடர்பு கொண்டபோது, அவர் உடல்நலக்குறைவுடன் இருப்பதாக அவரது உதவியாளர் தெரிவித்தார். பட மூலாதாரம்,TKS Elangovan / X படக்குறிப்பு,டிகேஎஸ் இளங்கோவன் கீழமை நீதிமன்றத்தில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கூறுவது என்ன? இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரநாராயணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், வழக்கை தாமதப்படுத்துவதில் அரசுக்கு உள்நோக்கம் இருக்க வாய்ப்பில்லை என்றார். ''இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றத்தில் ஓராண்டிற்குள் முக்கிய குற்றவாளிகள் 6 பேருக்கும் மரண தண்டனை பெற்றுத்தந்தோம். ஆனால் உயர் நீதிமன்றத்தில் சிலர் விடுதலையாகிவிட்டனர். உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, அங்கே ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இத்தகைய வழக்குகள் வரிசைப்படிதான் எடுக்கப்படும். வழக்கு ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டாலும், அரசு நினைத்தால் வழக்கை முன் கூட்டியே எடுத்துக்கொள்ளுமாறு விண்ணப்பிக்கலாம் அல்லது குற்றவாளிகள் தரப்பில் இதே கோரிக்கையை வைக்கலாம்.'' என்றார் வழக்கறிஞர் சங்கரநாராயணன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg11dgzdryo
  22. 19இன் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட்: சமீர் மின்ஹாஸ், அஹ்மத் ஹுசெய்ன் அபார சதங்கள், மலேசியாவை பந்தாடியது பாகிஸ்தான் 12 Dec, 2025 | 06:02 PM (நெவில் அன்தனி) துபாய் தி செவன்ஸ் மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற மலேசியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண ஏ குழு போட்டியில் இணைப்பாட்டத்துக்கான ஆசிய இளையோர் சாதனையை நிலைநாட்டிய பாகிஸ்தான், 297 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 343 ஓட்டங்களைக் குவித்தது. முதல் பத்து ஓவர்களுக்குள் 2 விக்கெட்களை இழந்ததால் பாகிஸ்தான் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆனால், 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த சமீர் மின்ஹாஸ், அஹ்மத் ஹுசெய்ன் ஆகிய இருவரும் சதங்கள் குவித்ததுடன் 293 ஓட்டங்களைப் பகிர்ந்து 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போடடியில் சகல விக்கெட்டுக்களுக்குமான அதிகூடிய இணைப்பாட்ட சாதனையை நிலைநாட்டினர். சமிர் மின்ஹாஸ் 148 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் உட்பட 177 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார். அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய அஹ்மத் ஹுசெய்ன் 114 பந்துகளில் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 132 ஓட்டங்களைப் பெற்றார். மிகவும் கடுமையான 344 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசியா 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 43 ஓட்டங்களுக்கு சுருண்டது. மலேசிய இன்னிங்ஸில் ஒருவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெறவில்லை அணித் தலைவர் டியாஸ் பாட்ரோ, முஹம்மத் அக்ரம் ஆகிய இருவர் பெற்ற தலா 9 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது. பந்துவீச்சில் அலி ராஸா 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹம்மத் சையாம் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தானியல் அலி கான் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சமீர் மின்ஹாஸ் https://www.virakesari.lk/article/233205
  23. அனர்த்த நிவாரணங்களுக்காக 13 பில்லியன் ரூபாய் விடுவிப்பு Dec 13, 2025 - 09:44 PM அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்திற்காக இதுவரையில் மொத்தமாக 13 பில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். நிவாரண வேலைத்திட்டத்திற்கு உதவியாகக் கிடைத்த நிதியுதவி மற்றும் திறைசேரியிலிருந்து வழங்கப்பட்ட நிதி உள்ளிட்டதாகவே இந்த மொத்தத் தொகை நிவாரணங்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இதனைத் தெரிவித்தார். மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும், வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வர்த்தக சமூகத்தினருக்கும் தேவையான உதவிகள், உபகரணங்கள் மற்றும் பண நன்கொடைகள் பலரிடம் இருந்தும் கிடைப்பதாகக் குறிப்பிட்ட செயலாளர், இந்த ஒத்துழைப்பை வழங்கும் அனைவருக்கும் தமது நன்றியையும் தெரிவித்தார். இந்த நிவாரண பொறிமுறை சிறப்பாகச் செயற்படுவதாகவும், அதன் காரணமாக பொதுமக்களுக்கும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் நிவாரணங்களை வெற்றிகரமாக வழங்க முடிந்துள்ளதாகவும் அவர் அங்கு வலியுறுத்தினார். அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான தொடர்பாடலைப் பேணுவதற்காக அமெரிக்காவின் ஸ்டார்லிங்க் நிறுவனம் 100 ஸ்டார்லிங்க் அலகுகளை நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மேலும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmj4hxqon02pko29n8tr7bzlp
  24. வெற்றியுடன் தொடங்கிய இலங்கை இளையோர் அணி Dec 13, 2025 - 07:56 PM டுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய 28.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் செத்மிக செனவிரட்ன 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்நிலையில் 83 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை இளையோர் அணி 14.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றிபெற்றது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக செத்மிக செனவிரட்ன தெரிவானார். இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை இளையோர் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmj4e2sqv02pio29nfkybudml
  25. அனர்த்தத்திற்கு உள்ளானவர்களுக்கு யாழ் சிறையின் நிவாரண உதவி Dec 13, 2025 - 03:43 PM டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவி பொருட்கள் அடங்கிய பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று (13) கையளிக்கப்பட்டன. சிறைச்சாலை கைதிகள் தங்களது ஒரு நேர உணவுக்கான பொருட்களையும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களையும் உள்ளடக்கி 180 பொதிகள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அத்தியட்சகர் சீ.இந்திரகுமார், பிரதான ஜெயிலர், ஏனைய ஜெயிலர்கள், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து இந்த உதவிகளை கையளித்தமை குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmj45258202p8o29nr8beo4ne

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.