Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 3 29 AUG, 2024 | 03:46 PM இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவல் இன்று வியாழக்கிழமை (29) இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார். அஜித் குமார் டோவல் இந்தியாவிற்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவை சந்தித்துள்ளார். இதன்போது இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் உத்தேச திட்டங்கள் அடங்கிய அறிக்கையை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வழங்கியுள்ளார். வீதி, ரயில் மார்க்கம், மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகிய பிரிவுகளின் கீழ் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நேரடி தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார தொடர்புகள் வலுப்பெற்று இலங்கையின் வருடாந்த பொருளாதார வளர்ச்சி வேகத்தை 3 வீதத்தில் இருந்து 6 வீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவல், இன்று மாலை தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192303
  2. லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் முதல் வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை 29 AUG, 2024 | 11:58 AM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (29) ஆரம்பமாகவுள்ளது. மென்ச்செஸ்டர், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் இங்கிலாந்திடம் 5 விக்கெட்களால் அடைந்த தோல்வியை நிவர்த்தி செய்யும் குறிக்கோளுடனும் லோர்ட்ஸ் அரங்கில் முதலாவது வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடனும் இலங்கை அணி களம் இறங்கவுள்ளது. இப்போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிவரும் குசல் மெண்டிஸ}க்குப் பதிலாக மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்துவரும் பெத்தும் நிஸ்ஸன்க அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2021இல் நடைபெற்ற போட்டியின்மூலம் டெஸ்ட் அரங்கில் அறிமுகமான பெத்தும் நிஸ்ஸன்க கடைசியாக 2022இல் விளையாடியிருந்தார். அதன் பின்னர் உபாதை காரணமாக டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் உட்பட 5 அரைச் சதங்களைப் பெற்றுள்ளார். இதேவேளை, முதலாவது டெஸ்ட் போட்டியில் காயத்திற்குள்ளாகி தற்காலிக ஓய்வு பெற்று மீண்டும் துடுப்பெடுத்தாடிய தினேஷ் சந்திமால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்ட வீரராக மட்டும் விளையாடவுள்ளார். அவருக்குப் பதிலாக விக்கெட் காப்பாளராக நிஷான் மதுஷ்க செயற்படவுள்ளார். ஒட்டுமொத்தத்தில் துடுப்பாட்டத்தைப் பலப்படுத்திக்கொண்டே இந்த டெஸ்ட் போட்டியை இலங்கை எதர்கொள்ளவுள்ளது. இது இவ்வாறிருக்க, பந்துவீச்சிலும் இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோவுக்குப் பதிலாக லஹிரு குமார அணியில் பெயிரிடப்பட்டுள்ளார். தற்போதைய இலங்கை அணியில் இடம்பெறும் ஏஞ்சலோ மெத்யூஸ், திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ் ஆகிய நால்வரே இதற்கு முன்னர் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் விளையாடியுள்ளனர். மற்றைய அனைவரும் இந்த மைதானத்தில் முதல் தடவையாக விளையாடவுள்ளதுடன் லோர்ட்ஸ் அரங்கில் விளையாடும் அவர்களது கனவு நனவாகவுள்ளது. அவர்களில் குசல் மெண்டிஸுக்கு இரண்டாவது தடவையாக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்காமல் போயுள்ளது. இந்த விளையாட்டரங்கில் இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட 8 சந்தர்ப்பங்களில் இங்கிலாந்து 2 தடவைகள் வெற்றிபெற்றுள்ளது. மற்றைய ஆறு போட்டிகளும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளது. இந்த மைதானத்தில் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தாராளமாக ஓட்டங்கள் குவித்துவந்துள்ளதை கடந்த கால போட்டிகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. எனவே இன்று ஆரம்பமாகவுள்ள போட்டியிலும் இலங்கை வீரர்கள் கணிசமான ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்துக்கு சவால் விடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்கத் தவறியதாலும் பந்துவீச்சில் சரியான வியூகங்களை கடைப்பிடிக்காததாலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது. ஜோ ரூட் எந்தளவு பொறுமையாகத் துடுப்பெடுத்தாடி இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தாரோ அதேபோன்று பொறுமையை இலங்கை வீரர்கள் கடைப்பிடிப்பது அவசியமாகும். இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக வெகுவாக முன்னேறிவரும் கமிந்து மெண்டிஸ் இந்தப் போட்டியிலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அசத்துவார் என நம்பப்படுகிறது. தனது முதல் 4 டெஸ்ட்களில் 3 சதங்களைக் குவித்துள்ள கமிந்து மெண்டிஸ், லோர்ட்ஸ் அரங்கில் சதம் குவிக்க வேண்டும் என்ற தாகத்துடன் இந்தப் போட்டியை எதிர்கொள்ளவுள்ளார். அனுபவசாலிகளான ஏஞ்சலோ மெத்யூஸ், திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால் ஆகியோரும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, நிஷான் மதுஷ்க ஆகியோரும் நெடு நேரம் துடுப்பெடுத்தாடி கணிசமான ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணியைப் பலப்படுத்துவார்கள் என கருதப்படுகிறது. இதேவேளை வேகப்பந்துவீச்சாளர்களும் சுழல்பந்துவீச்சாளர்களும் மாறுபட்ட வியூகங்களைப் பிரயோகித்து எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும். அல்லது லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து ஓட்ட மழை குவிப்பதை தடுக்க முடியாமல் போகும். மறுபக்கத்தில் முதலாவது டெஸ்டில் கடுமையாக போராடி வெற்றியீட்டிய இங்கிலாந்து, தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணிகள் இலங்கை: திமுத் கருணாரட்ன, நிஷான் மதுஷ்க, பெத்தும் நிஸ்ஸன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (தலைவர்), கமிந்து மெண்டிஸ், மிலன் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய, அசித்த பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ. இங்கிலாந்து: பென் டக்கட், டான் லோரன்ஸ், ஒல்லி போப் (தலைவர்), ஜோ ரூட், ஹெரி புறூக், ஜெமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மெத்யூ பொட்ஸ், ஒல்லி ஸ்டோன், ஷொயெப் பஷிர். https://www.virakesari.lk/article/192282
  3. Published By: DIGITAL DESK 3 29 AUG, 2024 | 02:30 PM யாழ்ப்பாணத்திலுள்ள 03 மூன்று தீவுகளில் கலப்பு மின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முதலாம் கட்ட நிதியை இந்தியா வழங்கியுள்ளது. இந்த நிதியை நேற்று புதன்கிழமை (28) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சுலக்ஷனா ஜயவர்தன மற்றும் இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபையின் (SLSEA) தலைவர் ரஞ்சித் சேபால ஆகியோரிடம் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜவா வழங்கி வைத்தார். https://www.virakesari.lk/article/192294
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 29 ஆகஸ்ட் 2024, 03:09 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் எறும்புகளின் வாழ்வியல், அவற்றின் சமூகக் கட்டமைப்பு மனிதர்களுக்கு நிகரானவை என்பதை ஆய்வாளர்கள் பல தருணங்களில் உறுதி செய்துள்ளனர். அவைதம் சகோதரிகளுடன் கொண்டிருக்கும் உறவு, பாசப் பிணைப்பு ஆகியவை பல தருணங்களில் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு சமீபத்தில் கிடைத்துள்ளது. ஈரப்பதம் மிக்க கட்டைகளில் கூடமைத்து வாழும் கட்டெறும்பு வகையைச் சேர்ந்த எறும்பு வகை ஒன்றில், ஃப்ளோரிடாவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஓர் அதிசயமான பழக்கத்தைக் கண்டறிந்தனர். அவை சக எறும்பின் உயிரைக் காப்பாற்ற அதன் கால் பகுதியை வெட்டியெடுப்பதை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த ஆய்வை மேற்கொண்ட வுர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் பூச்சி நடத்தையியல் ஆய்வாளரான எரிக் பிராங்க், “விலங்குகள் மத்தியில், ஓர் உயிரைக் காப்பாற்ற பிற சகாக்கள் ஓர் உறுப்பை உடலில் இருந்து பிரித்தெடுப்பது பதிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை,” என்று தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சக உயிரினத்திற்கு அறுவை சிகிச்சைக்கு நிகரான சிகிச்சையை அளிக்கும் அணுகுமுறை விலங்கு உலகில் பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை. இருப்பினும், எறும்புகள் மத்தியில் தமது சகாக்களின் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பது, போரின்போது தம் உயிரைத் தியாகம் செய்து மற்றவர்களைக் காப்பது போன்ற நடத்தைகள் ஆய்வாளர்களால் பலமுறை பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்தகைய நடத்தைகளை நானும் பல தருணங்களில் அவதானித்துள்ளேன். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு சில நாட்களுக்கு முன்பும் கிடைத்தது. பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, இருவேறு புற்றுகளைச் சேர்ந்த எறும்புக் கூட்டங்களுக்கு இடையே நடந்த போரில், பின்னங்கால்கள் உடைந்து தனியாக சிக்கிக்கொண்ட ஓர் எறும்பை இரண்டு 'எதிரிகள்' மூர்க்கமாகத் தாக்கின வீட்டு வாசலில் நடந்த உக்கிரமான போர் அன்றைய தினம் மாலை வேளையில் வானம் மோடம் போட்டிருந்தது. பருவநிலை இதமாக இருந்ததால் தேநீர் அருந்தலாம் என்று கடைக்குச் செல்ல வீட்டைவிட்டு வெளியேறினேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி, தேநீரை மறந்து அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு என்னை வாசலிலேயே இருக்கச் செய்துவிட்டது. வீட்டு வாசலில் ஒரு கட்டெறும்பின் தலை மீதிருந்த உணர்கொம்புகளில் ஒன்றில் வேறொரு எறும்பின் தலை செருகப்பட்டிருந்தது. அதே எறும்பு தனது காலில் மற்றுமோர் எறும்பின் உயிரற்ற சடலத்தை இழுத்துக்கொண்டே நடந்து சென்றது. போருக்கு நடுவே அந்த எறும்பு வெற்றிக் களிப்பில் தனது எதிரிகளை மகுடமாகச் சூடிச் செல்வதைப் போல் அந்தக் காட்சி இருந்தது. ஆவலைத் தூண்டிய அந்தக் காட்சியின் விளைவாக, அங்கு என்ன நடக்கிறது என்பதை உற்றுக் கவனிக்கலானேன். அங்கு ஒரு போர் நடந்துகொண்டிருந்தது புரிந்தது. இருவேறு எறும்புப் புற்றுகளுக்கு இடையில் ஒரு மூர்க்கமான போர். பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, போருக்கு நடுவே தான் வீழ்த்திய ஓர் எறும்பின் தலையை உணர்கொம்பில் சுமந்தவாறு, மற்றோர் எறும்பின் சடலத்தை இழுத்துக்கொண்டு செல்லும் காவல்கார கட்டெறும்பு இந்தப் போர் குறித்து அசோகா சுற்றுச்சூழல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன் தர்மராஜனிடம் பேசியபோது, எறும்புகளுக்கு இடையிலான போர் பெரும்பாலும் இரு தருணங்களில் நிகழும் என்று விளக்கினார். அவரது கூற்றுப்படி, ஒரே வகையைச் சேர்ந்த எறும்பாக இருந்தாலும் இருவேறு புற்றுகளைச் சேர்ந்தவையாக இருப்பின் அவற்றுக்குள் உணவு மற்றும் வாழ்விடத்துக்கான மோதல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. மேலே நான் குறிப்பிட்ட போருக்கு இதுகூடக் காரணமாக இருக்கலாம். அதேபோல் மற்றுமொரு தருணத்தில் கூன்முதுகு எறும்புகளுக்கு (Hunchback ants) இடையிலான போரைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அவை அருகருகே இருக்கும் இருவேறு புற்றுகளைச் சேர்ந்தவை. அவற்றுக்கு இடையே நிகழ்ந்துகொண்டிருந்த அந்தப் போர் உணவுக்கான போராக இருக்கக்கூடும். இதுவன்றி, எறும்புகளுக்கு இடையே போர் மூள மற்றொரு காரணமும் உண்டு. எறும்புகளைப் பொறுத்தவரை, அவற்றில் பல குழுக்கள் இருக்கின்றன. அதாவது, ஒரு சில எறும்பு வகைகளுக்கு மத்தியில் இருக்கும் ஒரே மாதிரியான நடத்தைகளை அடிப்படையாக வைத்து அவையனைத்தும் உயிரியல்ரீதியாக ஒரு குழுவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, போருக்கு நடுவே காயமடைந்து, உயிரிழக்கும் நிலையில் இருந்த காவல்கார எறும்பை இழுத்துச் செல்லும் வேலைக்கார எறும்பு அடிமைப்படுத்தும் எறும்புகள் எடுத்துக்காட்டாக, “சில எறும்பு வகைகள் இலை, குச்சி ஆகியவற்றைச் சேகரித்துச் சென்று புற்றுக்கு உள்ளேயே பூஞ்சைகளை வளர்த்து உணவாக்கிக் கொள்கின்றன. சிலவகை எறும்புகள், அஃபிட்ஸ் எனப்படும் பூச்சிகளுக்கு புற்றுக்கு உள்ளேயே அடைக்கலம் கொடுத்து, வளர்த்து, அவற்றில் இருந்து மில்க் டியூ (milk dew) எனப்படும் சர்க்கரைப்பாகு போன்ற ஒரு திரவத்தைக் கறந்து ஊட்டச்சத்து மிக்க உணவாக உட்கொள்கின்றன," என்கிறார் பிரியதர்ஷன். இந்தப் பூஞ்சை விவசாயமும் அஃபிட்ஸ் வளர்ப்பும், மனிதர்களின் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை ஒத்த பழக்கங்களாக இருப்பதாக பூச்சியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றைப் போலவே, எறும்பு இனங்களில் அடிமைப்படுத்தும் எறும்பு (Slave-making ants) என்ற ஒரு வகை உண்டு. இவை மற்ற எறும்பு இனங்களின் புற்றுகளைச் சூறையாடி அவற்றின் இளம் லார்வாக்களை (புழுப் பருவத்தில் இருக்கும் முதிர்ச்சியடையாத எறும்புகள்) திருடி வந்து, வளர்த்து அடிமைகளாகப் பயன்படுத்துகின்றன. பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, சண்டையிட்டுக் கொள்ளும் இரு கட்டெறும்புகள் “இவை திருடி வரும் எறும்புகளுக்கும் அவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. அது முற்றிலும் தமது புற்றின் பணிகளைச் செய்துகொள்வதற்காக அவை மேற்கொள்ளும் ஓர் அடிமைப்படுத்தல் செயல்முறையே,” என்று விளக்குகிறார் எறும்புகளை நீண்டகாலமாக ஆய்வு செய்து வரும் முனைவர்.ப்ரொனோய் பைத்யா. இந்த இரண்டு வகையான போர்களிலுமே எதிரி எறும்புகளின் காலனியை, அதாவது புற்றைச் சூறையாடுவது, அதிலிருக்கும் உணவுகளையோ சந்ததிகளையோ அபகரிப்பதே நோக்கமாக இருக்கும். “இந்தப் போர்களின்போது, படையெடுப்புக்கு உள்ளாகும் எறும்புப் புற்றைச் சேர்ந்த காவல்கார எறும்புகள் புற்றைத் தற்காத்து மூர்க்கமாகப் போரிடும். ஆனால், அந்தப் போரில் ஒருவேளை எதிர்த்தரப்பு முன்னேறிச் சென்று ராணியைக் கைப்பற்றிவிட்டால், படையெடுப்புக்கு உள்ளாகும் புற்றைச் சேர்ந்த காவல்கார எறும்புகள், வேலைக்கார எறும்புகள் அனைத்துமே போரிடுவதை நிறுத்திவிடும்,” என்கிறார் அசோகா அறக்கட்டளையின் ஆய்வு மாணவியான பெங்களூருவை சேர்ந்த சஹானாஸ்ரீ. படக்குறிப்பு, எறும்புப் புற்றில் பல்வேறு படிநிலைகள் இருக்கின்றன. அதற்குள் ராணி முட்டையிடுவதற்கு, உணவு, கழிவுகளுக்கு என்று பல்வேறு தனி அறைகள் பிரிக்கப்பட்டிருக்கும் எறும்புகளின் சமூகக் கட்டமைப்பு எப்படிப்பட்டது? ராணி கைப்பற்றப்பட்டால் போர் முடிவுறுவது ஏன்? ஒரு புற்றின் ராணிக்கும் மற்ற எறும்புகளுக்கும் இடையிலான தொடர்பு என்ன? இதுவரையிலான அறிவியல் ஆதாரங்களின்படி, ராணி எறும்புதான் ஒரு புற்று, அதாவது ஓர் எறும்பு சமூகத்தை உருவாக்குகிறது. அந்த ராணியை இழந்துவிட்டால், அந்தப் புற்றே அழிந்துவிடும். அதன் காரணமாகவே, ஒரு புற்றுமீது படையெடுப்பு நிகழும்போது அதிலுள்ள பிற எறும்புகள் தம் உயிரைப் பணயம் வைத்தேனும் ராணியைக் காப்பாற்றப் போராடுவதாக விளக்குகிறார் முனைவர் ப்ரொனோய் பைத்யா. பொதுவாக, ஒரு புற்றிலுள்ள அனைத்துமே பெண் எறும்புகள்தான். ஆனால், அவற்றில் மிகச் சில மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை. அவையே ராணி எறும்புகள் என்றழைக்கப்படுகின்றன. அதுபோக, அவற்றோடு இனப்பெருக்கம் செய்யும் திறனுடைய ஆண் எறும்புகளும் மிகச் சொற்ப எண்ணிக்கையில் பிறக்கின்றன. இந்த ராணி எறும்புகளும் அவற்றோடு இனப்பெருக்கம் செய்யவல்ல ஆண் எறும்புகளும், பருவகாலத்திற்கு முன்னதாகத் தங்களது புற்றைவிட்டு வெளியேறி அவற்றைப் போன்ற பிற எறும்புகளோடு ஓர் இடத்தில் கூடும். அப்போது நடக்கும் இனப்பெருக்க செயல்முறையில், ராணி எறும்பு வேறு புற்றைச் சேர்ந்த ஓர் ஆண் எறும்பைத் தேர்ந்தெடுத்து, அதனுடன் காற்றில் பறந்தபடி இணைசேரும். பிறகு அந்த ராணி தனக்கேற்ற ஓரிடத்தைத் தேடி, அங்கு நிலத்தடியில் சிறிய அளவில் புற்று அமைத்து, அங்கு தனது இறகுகளை உதிர்த்துவிட்டு, முட்டையிடத் தொடங்கும். அடுத்த சில வாரங்களில் அந்த முட்டைகளில் இருந்து பிறக்கும் எறும்புகளின் மூலம் தனது புற்றை, அதாவது தனது சமூகத்தை விரிவுபடுத்தும். பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, இருவேறு புற்றுகளைச் சேர்ந்த இரண்டு எறும்புகள் மூர்க்கமாகப் போரிட்டுக் கொள்ளும் காட்சி. எறும்புகளின் படிநிலை இப்படியாகப் பிறக்கும் எறும்புகளில் இனப்பெருக்கம் செய்யவல்ல ஆண் எறும்பைத் தவிர மற்ற அனைத்துமே பெண் எறும்புகள்தான். ஒரு புற்றிலுள்ள எறும்புகளில் பல படிநிலைகள் இருக்கின்றன. அவை, ராணி எறும்புகள்: இனப்பெருக்கம் செய்ய வல்லவை, முட்டையிடுவதும் அவற்றைப் பராமரிப்பதும் மட்டுமே இவற்றின் பணி. அதிலும் முதல் தலைமுறை வேலைக்கார எறும்புகள் பிறந்தவுடன், சந்ததிகளைப் பராமரிக்கும் பணி அவற்றுக்குச் சென்றுவிடும். ராணியின் பணி தொடர்ந்து முட்டைகளை இட்டுக்கொண்டே இருப்பது மட்டுமே. ஆண் எறும்பு: இதன் பணி, ராணியின் இனப்பெருக்கத்திற்கு உதவுவது மட்டுமே. வேலைக்கார எறும்புகள்: புற்று அமைப்பது, பராமரிப்பது, உணவு தேடுவது, முட்டைகள் மற்றும் லார்வாக்களை பராமரிப்பது ஆகியவை இவற்றின் தலையாய பணியாக இருக்கும். காவல்கார எறும்புகள்: இவற்றின் பணி, புற்றைப் பாதுகாப்பது, தாக்குதலின்போது தற்காப்பது, வேறு புற்றுகள்மீது படையெடுத்து அபகரிப்பது. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்படியாக, ஒரு ராணியில் தொடங்கும் ஒரு சமூகம் (புற்று), சில நூறு முதல் பல லட்சம் எறும்புகள் வரைகூடப் பெருகும் என்று விளக்குகிறார் பூச்சியியலாளர் பிரியதர்ஷன். இதில், ராணி எறும்பைத் தவிர மற்ற பெண் எறும்புகள் அனைத்துமே இனப்பெருக்கம் செய்யும் திறனற்றவை. ஆகவே அவை தமது சமூகம் பெருகுவதற்கு ராணியையே முற்றிலுமாகச் சார்ந்திருக்கின்றன. இந்நிலையில், அந்த ராணியை இழந்துவிட்டால் எதிர்காலத்தையே அவை இழந்துவிடுகின்றன. ஆகையால்தான், ஒரு போரின்போது அந்த ராணியையும் அடுத்த சந்ததிகளையும் பாதுகாக்க, ஓர் எறும்புப் புற்றில் இருக்கும் வேலைக்கார, காவல்கார எறும்புகள் என அனைத்தும் தம் உயிரையே தியாகம் செய்து மிக மூர்க்கமாகப் போரிடுகின்றன. எறும்புகளின் உயிர்த் தியாகம் பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, கூண்முதுகு எறும்புகளுக்கு இடையே நடந்த போரின்போது தனியாகச் சிக்கிய எறும்பைச் சுற்றி வளைத்துத் தாக்கும் 'எதிரி' எறும்புகள் அத்தகைய மற்றுமொரு போரை ஹரியாணாவில் சூரியன் அஸ்தமித்த நேரத்தில் கவனிக்க நேர்ந்தது. அதிலும் அப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருந்தது. அநேகமாக அப்போதுதான் போர் தொடங்கியிருக்க வேண்டும். அது தோட்டங்களில், புல்தரைகளில் அதிகம் காணப்படும் ஒரு வகைக் கட்டெறும்பு. புற்றின் வாசலில் நிகழ்ந்த தாக்குதல்களில் காவல்கார எறும்புகள், எதிரிகளை உள்ளே நுழையவிடாமல் தற்காத்துக் கொண்டிருந்தன. அதில் பல மடிந்தும் கொண்டிருந்தன. அதேவேளையில், உணவு தேடி வெளியே சென்றிருந்த வேலைக்கார எறும்புகள் மீண்டும் வேகவேகமாகத் தமது புற்றுக்குள் சாரிசாரியாக வரிசை மாறாமல் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால், எங்கோ உணவு தேடிச் சென்றிருந்த எறும்புகளுக்குத் தமது புற்றில் நிகழும் படையெடுப்பு எப்படித் தெரிய வந்தது என்ற கேள்வி எழுந்தது. அதற்குக் காரணமாக எறும்புகளின் அபாரமான தொடர்பு உத்திகளைச் சொல்கிறார் முனைவர் ப்ரொனோய் பைத்யா. “எறும்புகளின் தொடர்பு உத்திகள் பல வழிகளில் செயலாற்றுகின்றன. இந்தத் தொடர்பு உத்திகள் மட்டுமின்றி அவை தம் உயிரைத் துச்சமெனக் கருதி புற்றைக் காக்கப் போராடுவதற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது அவற்றின் சமூகநலப் பண்புதான்,” என்கிறார். படக்குறிப்பு, இந்த விளக்கப்படத்தில் இருப்பது போல, எறும்புகள் உடலில் இருந்து வெளிப்படும் வேதிமத்தைப் பயன்படுத்தி தாம் பார்க்கும் உணவுப் பொருளின் மீது வேதிமக் குறியிட்டு அடையாளப்படுத்துகின்றன அதாவது, தன்னைவிடத் தமது சமூகத்திற்கே முன்னுரிமை அளித்து உழைக்கும் குணம் கொண்டவை எறும்புகள். பொதுவாக, ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கி, தமது மரபணுவை அழியவிடாமல் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதே அனைத்து உயிரினங்களின் தலையாய பணி. இனப்பெருக்கச் செயல்முறை அத்தகையதே. இதையே டார்வின் 'வலியன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் மூலம் உணர்த்தினார். அதாவது, வலிய மரபணு பிழைக்கும். இங்கு எறும்புகளைப் பொறுத்தவரை, “ஒரு புற்றிலுள்ள அனைத்து எறும்புகளுமே சகோதரிகள். அவையனைத்தும் 75% மரபணுரீதியாக ஒத்துப் போகின்றன. அவையனைத்தின் இனப்பெருக்க மூலமாகச் செயல்படுவது ராணி மட்டும்தான். ஆக, ராணியும் அது இடும் முட்டைகளுமே அந்தப் புற்றிலுள்ள எறும்புகளின் அடுத்த சந்ததிக்கு அடிப்படை,” என்கிறார் ப்ரொனோய். “இதன் காரணமாகவே ராணிக்கும் லார்வாக்கள் மற்றும் வளர்ந்து வரும் எறும்புகளுக்கும் முன்னுரிமை கொடுத்து உணவூட்டுவது, பாதுகாப்பது ஆகியவை வேலைக்கார, காவல்கார எறும்புகளின் தலையாய பணியாகிவிடுகிறது,” என்கிறார் ப்ரொனோய். இதுவே படையெடுப்பு நிகழும்போது எறும்புகள், புற்றைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வது, உயிர்த் தியாகம் செய்வது அவற்றின் அடிப்படைப் பண்பாகிவிடுகிறது. படக்குறிப்பு, உணவுப் பொருளை அவை வேதிமக் குறியிட்டு அடையாளப்படுத்திய பிறகு, அவைதம் புற்றுக்குத் திரும்பிச் செல்லும்போது வழிநெடுக பாதையில் வேதிமக் குறியிட்டுக்கொண்டே செல்லும் எறும்புகள் பேசும் மொழி என்ன தெரியுமா? சரி, எறும்புகளின் தொடர்பு மொழிக்கு வருவோம். எறும்புகளுக்கு எதற்கு ஆன்டனா? எறும்புகளின் உடலமைப்பில் ஆன்டனா எனப்படும் உணர்கொம்புகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றின் தலைப் பகுதியில் கண்களுக்கு மேலே, இரண்டு மெல்லிய குச்சி போன்ற அமைப்பு நீண்டிருக்கும். அவையே உணர்கொம்புகள் எனப்படுகின்றன. இந்த உணர்கொம்புகள் இல்லையெனில், எறும்புகள் பிழைத்திருப்பதே சவாலான காரியம் என்கிறார் முனைவர் ப்ரொனோய். படக்குறிப்பு, அப்படி வழிநெடுக இருக்கும் வேதிமக் குறியீடுகளை மற்ற எறும்புகள் தங்கள் உணர்கொம்புகளின் மூலம் உணர்ந்து பாதையைக் கண்டறிந்து உணவு இருக்கும் இடத்தை அடைகின்றன. “எறும்புகளின் தொடர்பு மொழி என்பது வேதிம அடிப்படையிலானது. அவைதம் உடலில் இருந்து ஃபெரோமோன்ஸ் (Feromones) எனப்படும் ஒரு வகை வேதிமத்தை வெளியிடுகின்றன. அந்த வேதிமத்தை உணர்வதன் மூலமே எறும்புகள் ஒன்றுக்கொன்று தகவல் பரிமாறிக் கொள்கின்றன, தமது புற்றைச் சேர்ந்த சகாக்களை அடையாளம் காண்கின்றன,” என்கிறார் அவர். உதாரணமாக, உணவு தேடிச் செல்லும்போது ஓர் எறும்பு அதனால் தன்னந்தனியாக முற்றிலும் எடுத்துவர முடியாத அளவுக்கு ஓர் உணவுக் குவியலைக் காண்கிறது. அப்போது, அந்த இடத்தைத் தனது வேதிமத்தால் குறியிட்டுக் கொண்டே, அதாவது, அங்கிருந்து தனது புற்றுவரை ஃபெரொமோன்களை கசியவிட்டுக்கொண்டே வருகிறது. பிறகு, புற்றில் இருக்கும் மற்ற எறும்புகளுக்குத் தகவல் கொடுத்து, தனது வேதிமப் பாதையை ஒரு ஜி.பி.எஸ் போலப் பயன்படுத்தி அவற்றை அந்த உணவுக் குவியலை நோக்கி அழைத்துச் செல்கிறது. படக்குறிப்பு, ஒரு ஜி.பி.எஸ் போல எறும்புகள் இந்த வேதிமக் குறியீடுகளை உணர்கொம்புகளைப் பயன்படுத்தி உணர்ந்து மற்ற எறும்புகள் சென்ற பாதையைக் கண்டறிகின்றன இத்தகைய தொடர்பு உத்தியை எறும்புகள் பயன்படுத்தியே ஹரியாணாவில் நான் கண்ட போரின்போது, வேலைக்கார எறும்புகளிடம் போர் குறித்து எச்சரித்து, புற்றுக்குத் திரும்ப வைத்திருக்கலாம் என்று விளக்கினார் முனைவர் பிரியதர்ஷன். எறும்புகள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்வதற்கும், தங்களது சுற்றத்தை, அதிலுள்ள ஆபத்துகளை உணரவும் அவற்றுக்கு உணர்கொம்புகள் மிகவும் அவசியம். அந்த உணர்கொம்புகளை வைத்தே எறும்புகள் வேதிமங்களையும் அவற்றின் மூலம் பகிரப்படும் செய்திகளையும் உணர்கின்றன. முனைவர் ப்ரொனோயின் கூற்றுப்படி, உணர்கொம்புகளை இழந்துவிட்டால், எறும்புகள் திசை மற்றும் பாதைகளை அறிவது, தங்களது சகாக்களுடன் தொடர்புகொள்வது, ஆபத்துகளை உணர்வது என அனைத்துத் திறன்களையுமே இழந்துவிடும். எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், ஓர் எறும்பு உயிர் பிழைத்திருப்பதற்கே இந்த உணர்கொம்புகள் மிக அடிப்படையான தேவை. இதுபோக, புற்றைப் பராமரிக்க, காவல் காக்க அதிக எண்ணிக்கையிலான வேலைக்கார எறும்புகள் தேவை என்பதால், இனப்பெருக்கத் திறனற்ற எறும்புகளை அதிகளவில் இனப்பெருக்கம் செய்யுமாறு மற்றவை கட்டாயப்படுத்துவது, புதிதாகப் பிறந்த எறும்புகளுக்குத் தமது பணிகள், நடத்தைகளைக் கற்றுத் தருவது என இன்னும் பற்பல வியப்பூட்டும் வாழ்வியல் முறைகளை எறும்புகள் கொண்டுள்ளன. https://www.bbc.com/tamil/articles/c19kpp43yn1o
  5. வாக்குறுதி வழங்குவார் ஆனால் எதனையும் செய்ய மாட்டார்; ரணிலை சாடிய விக்கி ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டும் வாக்குறுதியை வழங்குவார். ஆனால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய மாட்டார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நான் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் பொது வேட்பாளரின் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக பேசப்பட்டது. நான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னர் ஆதரவு வழங்கி பேசியது உண்மை. அவர் எனது பள்ளி நண்பரும் கூட. 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கலாநிதி விக்னேஸ்வரன் தலைமையில் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவுடன் பல பேச்சுக்களை நடத்தினோம். 13 வது திருத்தம் தமிழ் மக்களின் நிரந்தர தீர்வாக நாம் ஏற்றுக் கொள்ளாத நிலையில் குறைந்தபட்சம் அதிலுள்ள அதிகாரங்களையாவது நடைமுறைப்படுத்த ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் பேச்சுவார்த்தையில் 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கான நிபுணர் குழு பரிந்துரைகளை வழங்குவதற்காக நிர்மலா சந்திரகாசன் தலைமையில் நிபுணர் குழுவுக்கான பெயர்களை வழங்கினோம். ஆனால் ரணில் விக்ரமசிங்க குறித்த குழுவை அங்கீகரிக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் சாதகமான நிலப்பாட்டை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையில் அவர் மீது நம்பிக்கை வைத்தோம். ஆனால் ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டும் செயல்படுத்தும் நபராக காணப்பட்டாரே தவிர நடைமுறையில் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. அதன் காரணமாக தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியத்தை முதலில் முன்வைத்து முன்மொழிந்தவர்களில் நானும் ஒருவன். நான் கொழும்பில் இரண்டு தடவைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பொது வேட்பாளரின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு செல்ல முடியவில்லை. இருந்தாலும் எனது கட்சி சார்பில் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர். நான் கலந்து கொள்ளாததை அறிந்தவர்கள் நான் ரணில் விக்கிரமசிங்காவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக புரளிகளை கிளப்பி விட்டார்கள். ஆகவே, தமிழ் பொது வேட்பாளர் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிடும் நிலையில் தமிழ் மக்கள் அவருக்கான அமோக ஆதரவை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/308584
  6. 29 AUG, 2024 | 11:33 AM இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் தனது வாகனம் சேதமடைந்ததை தொடர்ந்து காசாவிற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. இவ்வாறான தாக்குதலில் தனது வாகனம் சிக்கியது இதுவே முதல்தடவை என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் சோதனை சாவடிக்கு அருகில் தனது வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள உலக உணவு திட்டத்தின் தலைவர் சின்டி மக்கெய்ன் காசாவில் தனது அமைப்பின் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ள தொடர்ச்சியான சம்பவங்களில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டுள்ளார். தற்போதைய மோதல் தவிர்ப்பு முறை தோல்வியடைந்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/192279
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "தமிழ்நாட்டில் குக்கிராமத்தில் வசிக்கும் ஒரு மாணவர் பிளஸ் 2 முடித்த பின்னர், எந்தக் கல்லூரியில் சேர்ந்தார் என்பதை எவ்வாறு கண்டறிவது?" என்று கல்வி அதிகாரிகளிடம் கேட்டால், "யுமிஸ்" (UMIS) எனப் பதில் வரும். அதென்ன யுமிஸ்? பள்ளிக்கல்வியில் சேரும்போது ஒவ்வொரு மாணவருக்கும் எமிஸ் (EMIS - Educational Management Information System) என்ற எண் கொடுக்கப்படுகிறது. அந்த மாணவர் உயர்கல்வியில் சேரும்போது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம், அரசின் யுமிஸ் (University Managment Information System) செயலியில் அதைப் பதிவிட வேண்டும். அவ்வாறு பதிவான தரவுகளின்படி, தற்போது வரை சென்னையில் 40% மாணவர்கள் உயர்கல்வியில் சேரவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போதுவரை, சென்னையில் ஐந்து மாணவர்களில் இரண்டு பேர் உயர்கல்வியில் சேராமல் இருப்பதாக, கல்வித்துறையின் தகவல் மைய அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இதில், பிளஸ் 2 முடித்த 16,061 பேரில் 6,584 பேர் எந்தவிதமான உயர்கல்வி படிப்பிலும் சேரவில்லை. இந்த 6,584 பேரில் 958 பேர் மட்டும் தற்போது உயர் கல்விக்காக விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. "இது தற்போது வரையிலான தரவுகள்தான். மருத்துவம், பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்த பின்னர் மேலதிகத் தகவல்கள் கிடைக்கும்," எனக் குறிப்பிடுகிறார் கல்வித்துறையின் தகவல் மைய அதிகாரி ஒருவர். இதோடு, கடந்த ஆண்டு உயர்கல்வியில் இணைந்த மாணவர்களின் விவரங்களை துறையின் உயர் அதிகாரி பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார். படக்குறிப்பு, பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கல்லூரியில் சேராத 1.50 லட்சம் பேர்? அதன்படி, 2022-2023-ஆம் கல்வியாண்டின் தரவுகளைப் பார்த்தாலும், தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட 40% மாணவர்கள், பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கல்லூரியில் சேரவில்லை எனத் தெரிகிறது. தமிழ்நாட்டில் 2022-23 கல்வி ஆண்டில் 3,97,809 மாணவர்கள் பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 2,39,270 பேர் மட்டும் உயர் கல்வியில் இணைந்துள்ளனர். அரசின் எமிஸ் மற்றும் யுமிஸ் செயலி வாயிலாக இது தெரிய வந்துள்ளது. இதில், “1,13,099 மாணவர்கள் உயர் கல்விக்காக விண்ணப்பிக்காமல் இருக்க வேண்டும் அல்லது அதுகுறித்த போதிய தரவுகளோ தங்களிடம் இல்லை,” என தகவல் மைய அதிகாரி குறிப்பிட்டார். "முன்பெல்லாம் பிளஸ் 2 முடித்தால் எதாவது ஒரு வகையில் பட்டம் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், 2017-க்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது," என்கிறார், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. "கடந்த 2017-ஆம் ஆண்டில் நீட் தேர்வும் பல்கலைக்கழக பொதுநுழைவுத் தேர்வும் வந்தன. தற்போது மத்திய பல்கலைக் கழகத்தில் சேர நுழைவுத் தேர்வு உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்கும்போது இவை பரவலாக்கப்படும். இதுபோன்ற தேர்வுகள் கல்வியின் மீதுள்ள நம்பிக்கையை இழக்க வைக்கின்றன,” என்கிறார் அவர். பள்ளியில் மாணவர் பெறும் மதிப்பெண்ணை, உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ளாமல் வேறொரு தேர்வு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவது நெருக்கடியைக் கொடுப்பதாகக் கூறுகிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு. மேலும், “நுழைவுத் தேர்வுகளை மையப்படுத்தியே அனைத்தும் இருப்பதால் பிளஸ் 2 வகுப்பில் பாடப்பிரிவை தேர்வு செய்வதில் மாணவர்கள் குழப்பம் அடைகின்றனர். அதுதான், இதுபோன்ற பிரச்னைகளுக்கும் அடிப்படையாக அமைகிறது," என்கிறார் அவர். சென்னையின் சூழல் குறித்து விவரித்தவர், "காசிமேடு, நொச்சிக்குப்பம், என அனைத்தும் சேர்ந்ததுதான் சென்னை. அங்குள்ள சூழல்களைக் கவனித்தால் மாணவர்களின் நிலையை உணர முடியும். சமூகத்தில் ஒடுக்குமுறை, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை, நுழைவுத் தேர்வுகள், அரசுக் கல்லூரி, அரசுப் பல்கலைக்கழகங்களில் சுயநிதிப் பாடப் பிரிவுகள் என அனைத்தும் வணிகமயமாகிவிட்டன. இதனால் உயர்கல்வியை நோக்கி ஏழை மாணவர்கள் நகர முடியாத சூழல் ஏற்படுகிறது. குடும்பச் சூழல்களைச் சமாளிக்க வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்," என்கிறார் அவர். 400 பேருக்கு ஓர் ஆசிரியரா? ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தில் பற்றாக்குறை நிலவுவதை முக்கியக் காரணமாகக் கூறும் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "பிளஸ் 2 வகுப்பில் 400 மாணவர்களுக்கு ஒரு தமிழ் ஆசிரியர் என்ற நிலை உள்ளது. 240 பேருக்கு ஒரு இயற்பியல் ஆசிரியர் இருக்கிறார். ஆய்வகங்களையும் அவரே கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. "இதனால், 80 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சியைக் கொடுக்க முடிவதில்லை. மாணவர்களும் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகின்றனர். இந்த மதிப்பெண்ணுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் சீட் கிடைப்பதில்லை," என்று விவரித்தார். அதேநேரம், கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சிக்குப் பிறகு உயர்கல்வியைத் தொடர இயலாத மாணவர்களின் பின்னணியைக் கண்டறியும் முயற்சியில் பள்ளிக்கல்வித்துறை ஆர்வம் செலுத்தியது. இதில், குடும்பச் சூழல், உயர்கல்வியில் ஆர்வமின்மை, பெற்றோர் படிக்க அனுமதிக்காதது, வேலைக்குச் செல்வது, விரும்பிய பாடப்பிரிவில் சேர்க்கை கிடைக்காதது உள்படப் பல காரணங்களை மாணவர்கள் தரப்பில் முன்வைத்துள்ளனர். இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்கல்வியில் இணையாத மாணவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்குப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான குழுவில், மாவட்ட ஆட்சியர், திறன் மேம்பாட்டுக் கழக அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், உயர்கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர். இக்குழுவினர் வாயிலாகப் பல மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். படக்குறிப்பு, கல்வியாளர் நெடுஞ்செழியன் ‘அதிகரித்த உயர்கல்விச் செலவு’ உதாரணமாக, விருதுநகர் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2023-24-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பில் 17,448 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 17,198 பேர் (98.6%) உயர்கல்விக்குச் செல்ல உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.பி.ஜெயசீலன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இதில், மீதம் உள்ள 308 மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், உயர்கல்விக்கான செலவு அதிகரித்துவிட்டதே மாணவர்கள் சேர்க்கை குறையக் காரணம் என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன். "பிளஸ் 2 முடித்த பிறகு உயர்கல்வி சேரும்போது விண்ணப்பப் படிவத்தின் விலையே ஏழை மாணவர்களுக்கு எட்டாத ஒன்றாக உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கச் சொல்கின்றனர். கிராமங்களில் பலரின் வீடுகளில் இணையதள வசதிகள் இல்லை. உயர்கல்வி பயில வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்தையும் அரசு இலவசமாகக் கொடுக்க வேண்டும்," என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன். "நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணத்தை ஓ.பி.சி பிரிவினர் 1,400 ரூபாய் செலுத்தி வாங்க வேண்டும். பொறியியல் கலந்தாய்வுக்கு 500 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக வாங்குகின்றனர். மத்திய பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கலாம் என்பதே தமிழக மாணவர்களுக்குத் தெரிவதில்லை. கல்வியை அதிக செலவீனம் உள்ளதாக மாற்றியதுதான், உயர்கல்வியில் சேர்க்கை குறையக் காரணம்," என்கிறார் அவர். "மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கூறினால், அதை எங்களின் சொந்தப் பிரச்னையாகப் பார்க்கின்றனர். அடிப்படைப் பிரச்னைகளை ஆராயாமல் முழுமையான தீர்வைத் தருவது கடினம்," என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு. பட மூலாதாரம்,GETTY IMAGES பள்ளிக்கல்வித்துறை செயலர் சொல்வது என்ன? இதுகுறித்துப் பேசிய பள்ளிக்கல்வித் துறைச்செயலர் மதுமதி, "தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களைக் கண்காணிக்கிறோம். அவர்களுக்குப் படிப்பதில் ஆர்வம் இருக்கிறதா அல்லது திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் ஆர்வம் உள்ளதா என்பதை அறிந்து வேலைக்கு ஏற்பாடு செய்து தருகிறோம்," என்கிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மாணவர்கள் உயர்கல்வி படிக்க விரும்பினால், அவர்களது மதிப்பெண் குறைவாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் மறுதேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படுகிறது. அவர்கள் கல்லூரிகள் அல்லது தொழிற்கல்வியில் படிப்பதற்கு ஏற்பாடு செய்கிறோம். "பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை செப்டம்பர், அக்டோபரில் இருந்தே தலைமை ஆசிரியர்கள் கவனிக்கத் தொடங்குகின்றனர். மாணவர் எத்தனை நாள் பள்ளிக்கு வருகிறார், எந்தப் பாடத்தில் ஆர்வம் குறைவு என்பதை முன்கூட்டியே கணிக்கின்றனர்," என்கிறார். சென்னையில் உயர்கல்வி சேர்க்கை குறைவு குறித்துப் பேசிய மதுமதி ஐ.ஏ.எஸ், "யுமிஸ் செயலி கடந்த ஆண்டு முதல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவம், பொறியியல் படிப்பு சேர்க்கை முடியும்போது, முழு விவரங்களும் தெரிய வரும்," எனக் குறிப்பிட்டடார். மேலும், "சூழல் என்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால், அதை மட்டுமே காரணமாகக் கூற முடியாது. முதல் தலைமுறை பட்டதாரிகளாக எத்தனையோ பேர் வருகின்றனர். உயர்கல்வியில் இணைய முடியாமல் போவதற்கான காரணங்களைச் சரிசெய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றார். "இந்தியாவில் உயர்கல்வி விகிதாரச்சாரம் என்பது 28.3 சதவீதமாக உள்ளது. தமிழ்நாடு 47 சதவீதம் என்பதில் இருந்து குறைந்து வருகிறது. மாணவர்களுக்குப் பல்வேறு நிலைகளில் அரசின் தொடர்ச்சியான ஆதரவு தேவைப்படுகிறது. அது கிடைக்கும் போதுதான் உயர்கல்வியை நோக்கி அவர்களை ஈர்க்க முடியும்," என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன். https://www.bbc.com/tamil/articles/clyn1v5e7xro
  8. யாழ். மாவட்டத்துக்கு 2024ஆம் ஆண்டு அபிவிருத்திக்காக 1233.94 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது. இதன்போது வரவேற்பு உரை ஆற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்துக்கு இரண்டாயிரத்து நானூற்று அறுபத்தேழு வேலைத்திட்டங்களுக்கு இந்த நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச பிரிவுகளிலும் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியாக கிடைக்கப்பெற்ற 322 மில்லியன் ரூபா நிதி உள்ளடங்குகிறது. ஒட்டுமொத்த நிதிக்கான வேலைத் திட்டங்களும் அந்தந்த பிரதேச செயலர் பிரிவுகளில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/308570
  9. டெலிகிராமின் பிரதமநிறைவேற்று அதிகாரி பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடை 29 AUG, 2024 | 10:47 AM பாரிஸ்: கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட டெலிகிராமின் பிரதமநிறைவேற்று அதிகாரி பவெல் துரோவ் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டு காரணமாக அவர் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெலிகிராம் மூலம் நடைபெறும் சட்டவிரோத குற்றச் செயல்களுக்கு அந்நிறுவனம் துணை போகிறது, குற்றவியல் நடவடிக்கையை கண்காணிக்க தவறியது, மற்றும் பயனாளர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்து பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை (ஆக. 24) பவெல் துரோவை பிரான்ஸ் அரசு கைது செய்தது. இந்நிலையில் இது குறித்து பாரிஸ் நீதிமன்ற அமர்வு விசாரித்தது. அப்போது தீவிரவாத மற்றும் சட்ட விரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போவது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் வாரம் இரண்டு முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த ஐரோப்பிய யூனியனின் விதிகளுக்கு டெலிகிராம் அனைத்து வகையிலும் இணங்க செயல்படுகிறது. இந்த சூழலில் டெலிகிராம் செயலியில் அரங்கேறும் குற்றத்தில் அவர் சிக்கக்கூடும் என்ற அபாயம் உள்ளதாக பவெல் துரோவின் வழக்கறிஞர் டேவிட் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் விசாரணை அதிகாரிகளின் கேட்டிருந்த விவரங்களுக்கு டெலிகிராம் தரப்பில் இருந்து பதில் எதுவும் வராத காரணத்தால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அது தொடர்பாக விசாரணை நடந்து வந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விளக்கம் தந்துள்ளார். இந்த வழக்கு மட்டுமல்லாது தனது மகனை துன்புறுத்திய குற்றச்சாட்டும் பவெல் துரோவ் மீது உள்ளது. அது தொடர்பாகவும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து சுவிட்சர்லாந்து நாட்டிலும் அவரது முன்னாள் வாழ்க்கை துணை புகார் அளித்துள்ளார். https://www.virakesari.lk/article/192273
  10. படகு விபத்துக்குள்ளாகி மாயமான இந்திய மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு! Published By: DIGITAL DESK 3 29 AUG, 2024 | 09:02 AM கடந்த செவ்வாய்க்கிழமை (26) மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய போது சூறைக்காற்றினால் நடுக்கடலில் இந்திய படகு மூழ்கி விபத்துக்குள்ளானது. அப்போது மூழ்கிய படகில் இருந்து இரண்டு மீனவர்கள் நீந்தி இலங்கை கடற்படையினரின் உதவியால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு விமானம் மூலம் தாயகம் திரும்பி உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இரு மீனவர்கள் காணாமல் போனார்கள். அவர்களை ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதியோடு சக மீனவர்கள் இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில் நேற்று புதன்கிழமை (28) மாலை நடுக்கடலில் மாயமான மீனவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடலை கைப்பற்றிய மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு உடலை எடுத்து வந்து சேர்த்தனர். இதையடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக ராமேஸ்வரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து மரைன் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நடுக்கடலில் மாயமான மீனவரை அரசு தேடித் தரும்படி கோரிக்கை விடுத்துள்ள உறவினர்கள் இறந்த மீனவர் எமரிட் குடும்பத்திற்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/192263
  11. “இலங்கைக்கான எனது ஐந்தாண்டு பணி” தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது; முழு விபரம் உள்ளே ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் “இலங்கைக்கான எனது ஐந்தாண்டு பணி” – தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் வெளியிட்டு வைக்கப்பட்டது. 2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வு சற்று முன்னர் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஆரம்பமான நிலையில், அவரது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது. ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழில் வாசிக்க… http://www.ranil2024.lk/ta/manifesto https://thinakkural.lk/article/308586
  12. Published By: DIGITAL DESK 7 29 AUG, 2024 | 08:50 AM யாழில், 20 நாட்கள் தொடர் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர் நேற்று புதன்கிழமை (28) உயிரிழந்துள்ளார். இதன்போது நாரந்தனை மத்தி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஏழு பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கிளிநொச்சியில் மகள் வீட்டில் இருந்தவேளை கடந்த 7ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதால் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பின்னர் 17ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பின்னரும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 19 ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் 27ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதோடு, உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/192261
  13. கனடாவில் தற்காலிக வெளிநாட்டு பணியாளர்களை குறைக்க திட்டம் – இந்தியர்களை எப்படி பாதிக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 13 நிமிடங்களுக்கு முன்னர் கனடாவிற்குள் அனுமதிக்கப்படும் குறைவான ஊதியம் பெறும், தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள், மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடா, வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகையைச் சமாளிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதால், வீட்டு வசதி, சுகாதார போன்ற பொதுச் சேவைகளில் அந்நாடு சவால்களைச் சந்திப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு கனடாவின் மக்கள்தொகை வளர்ச்சியில் சுமார் 97% குடியேற்றம் பங்கு வகித்ததாக கனேடிய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கனடாவில் பயின்று அங்கு ஐ.டி., துறையில் வேலை பார்த்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்குமார் பிபிசி தமிழிடம் பேசியபோது, “இங்கு இப்போது தொழிலாளர் சந்தை மிக மோசமான நிலையில் இருக்கிறது. சராசரியான சம்பளத்தில் ஒரு சாதாரண வேலை வேண்டுமென்றாலே அதற்கு அதிகமான சிபாரிசுகள் தேவைப்படுகின்றன,” என்கிறார். மேலும் ,"வெளிநாட்டினர் மட்டுமின்றி கனேடியர்களும் வேலை கிடைப்பதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். வேலையின்மை விகிதம் இங்கு அதிகமாக உள்ளது. இதற்கு இங்குள்ள கனேடியர்கள் குடியேற்றங்களைக் காரணமாகக் கூறுகின்றனர். "என்னதான் குடியேற்றப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கனேடிய மக்களின் ஆதரவு அரசுக்கு முக்கியம். ஆகையால் இந்த நிலைமையைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயம் ட்ரூடோ அரசுக்கு ஏற்பட்டுள்ளது,” என்று கூறினார். பொது இடத்தில் பெண்களின் குரலுக்கு தடை, ஆண்களுக்கு ஆடை கட்டுப்பாடு- தாலிபனின் புதிய சட்டங்கள் கூறுவது என்ன?28 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,X கனடாவில் அதிகரிக்கும் வேலையின்மை ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது அரசாங்கமும் சேவைகள் அல்லது வீட்டு வசதியை மேம்படுத்தாமல் குடியேற்றத்தை அதிகரிப்பதாக விமர்சிக்கப்பட்டனர். அதேநேரத்தில், கனடாவின் வேலையின்மை விகிதம் கடந்த இரண்டு மாதங்களில் 6.4% அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 14 லட்சம் மக்கள் வேலையில்லாமல் உள்ளனர். ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கனடா பிரதமர் ட்ரூடோ, தொழிலாளர் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகத் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் திட்டத்தை மாற்றியமைப்பதாகக் கூறினார். “ஒரு நல்ல வேலையைக் கண்டுபிடிக்கப் போராடும் கனேடியர்களுக்கு இது நியாயம் செய்யவில்லை. தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் இது நியாயம் செய்யவில்லை. அவர்களில் சிலர் தவறாக நடத்தப்பட்டு, சுரண்டப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார். செய்யாத குற்றத்திற்கு 38 ஆண்டு சிறைவாசம் - நிரபராதி என்று நீதிபதி அறிவித்தும் விடுதலை ஆகாதது ஏன்?27 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோவிட் காலகட்டத்தில் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டத்தின்கீழ் அதிகளவிலான பணியாளர்களை கனடா அனுமதித்தது தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டம் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டம் என்பது கனடாவில் இருக்கும் முதலாளிகள் தங்களுக்குத் தேவையான ஊழியர்களை வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு அமர்த்துவதற்கான ஒரு திட்டம். இதுகுறித்து விளக்கிய கனடிய குடியேற்றம் தொடர்பான CANext நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் குடியேற்றங்கள் தொடர்பான வழக்கறிஞருமான நடராஜன் ஸ்ரீராம், “ஓர் உணவகத்தின் முதலாளிக்கு சமையல் வல்லுநர்கள் ஐந்து பேர் தேவையெனில், அதற்கான ஒப்புதல்களைப் பெற்று அவர் வெளிநாடுகளில் இருந்து அவர்களைப் பணிக்கு அமர்த்த முடியும். அதற்கு இந்தத் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டம் உதவுகிறது,” என்கிறார். இந்தத் திட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் வெளிநாட்டு மாணவர்களை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று கூறும் நடராஜன், “கனடாவில் தற்போது நிகழும் வேலையின்மை பிரச்னை, சுகாதாரம் மற்றும் வீட்டு வசதியில் நிலவும் போதாமை காரணமாக இந்த முடிவு அவசியமாகிறது,” என்று கூறுகிறார். கோவிட் காலகட்டத்தில் இந்தத் திட்டத்தின்கீழ் அதிகளவிலான பணியாளர்களை கனடா அனுமதித்தது. ஆனால், அதன் விளைவாக ஏற்பட்ட சமூகச் சமநிலையின்மையின் விளைவுகளை அந்நாடு தற்போது எதிர்கொண்டு வருவதால் இந்த மாற்றம் அவசியமாவதாகவும் அவர் விவரித்தார். இரவில் வீடு புகுந்து குழந்தைகளை கொல்லும் ஓநாய்கள் - அஞ்சி நடுங்கும் 30 கிராமங்கள்27 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுகாதாரம், கட்டுமானம், உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கனடா செல்லும் இந்தியர்களை இது எப்படி பாதிக்கும்? இந்தியாவில் இருந்து கனடாவுக்கு செல்பவர்கள் பல்வேறு திட்டங்களின்கீழ் செல்கிறார்கள். கல்வி பயில்வதற்காக, நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக, ஒரு குறிப்பிட்ட வேலைக்காக என்று பல்வேறு திட்டங்கள் அதற்காக அங்கு உள்ளதாகக் கூறுகிறார் நடராஜன் ஸ்ரீராம். அவற்றில், இந்தத் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டத்தின் கீழ் வருபவர்கள், “எந்த வேலைக்காக வருகிறார்களோ அந்த வேலை இல்லை என்ற நிலை ஏற்பட்டால், அடுத்த ஓரிரு மாதங்களில் தங்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள்,” என்கிறார். ஆகையால், அதைச் சாதகமாக எடுத்துக்கொள்ளும் முதலாளிகளால், இந்தத் திட்டத்தின் கீழ் வருவோர் பெரியளவிலான சுரண்டலை எதிர்கொள்வதாகவும் பல்வேறு கொடுமைகளை அனுபவிப்பதாகவும் அவர் கூறுகிறார். தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த மாற்றம் அத்தகைய கொடுமைகளையும் சுரண்டல்களையும் தடுக்க வழி செய்யும் என்றும் நடராஜன் கருதுகிறார். இந்தத் திட்டத்தின்கீழ் கனடாவுக்கு வர முயலும் இந்தியர்களில் பெரும்பாலானோர் அதற்காகப் பணம் கொடுத்து ஏமாறுவது அதிகம் நடப்பதாகக் கூறும் அவர், அத்தகைய நடவடிக்கைகள் இனி குறையும் என்றும் நம்புகிறார். இதைத் தாண்டி, கல்விக்காகக் கனடா செல்லும் இந்தியர்களை இது எவ்விதத்திலும் பாதிக்காது என்கிறார் அவர். அதேவேளையில், நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்காக வருவோரின் எண்ணிக்கையையும் கனடா குறைத்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், அதற்காக கனடா வர முயல்வோரிலும் குறைந்த ஊதியம் பெறும், திறன் குறைந்த பணியாளர்களையே இது பாதிக்கும் என்றும் கூறினார். “இந்த மாற்றம் திறனற்ற, குறைந்த ஊதியம் பெறும் வேலைகளுக்காக வருவோரின் எண்ணிக்கையைத்தான் குறைத்துள்ளது,” என்கிறார். அதேவேளையில், சுகாதாரம், கட்டுமானம், உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்தத் துறைகளில் வேலை செய்ய கனடா வரும் இந்தியர்களை இது பாதிக்காது என்றும் கூறினார் குடியேற்றங்கள் தொடர்பான வழக்கறிஞர் நடராஜன் ஸ்ரீராம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா செல்ல முயல்பவர்கள் என்ன செய்யவேண்டும்? உணவுப் பாதுகாப்பு, விவசாய வேலைகள், கட்டுமானம், சுகாதாரம் ஆகியவை தவிர்த்து, வேலையின்மை விகிதம் 6% அல்லது அதைவிட அதிகமாக இருக்கும் பகுதிகளில் இந்த மாற்றங்கள் பொருந்தும். கனடாவில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது, “அங்கு வேலையின்மை பிரச்னை இருக்கும் மாகாணங்கள் தவிர்த்து இதற்கான தேவை இருக்கும் வேறு மாகாணங்களைக் கண்டறிந்து அங்கு முயற்சி செய்யலாம்” என்று கூறினர். அதை ஆமோதிக்கும் வகையில் பேசிய நடராஜன் ஸ்ரீராம் “கனடாவில் எந்தெந்த பகுதிகளில் 6% அல்லது அதற்கும் அதிகமாக வேலையின்மை பிரச்னை நிலவுகிறதோ, அங்கு மட்டுமே இந்த மாற்றங்கள் பொருந்தும்,” என்று விளக்கினார். ஒட்டுமொத்தமாக, இந்தத் திட்டம் குறைந்த ஊதியம் பெறும் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். ஆனால், ஏற்கெனவே கனடாவில் வேலை செய்து கொண்டிருக்கும் வெளிநாட்டுப் பணியாளர்களை இது பாதிக்காது. அதேவேளையில், அவர்களுக்கான கால அவகாசம் முடியும்போது, அது நீட்டிக்கப்படுவதில் இந்தப் புதிய மாற்றம் கருத்தில் கொள்ளப்படும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த மாற்றங்கள் செப்டம்பர் 26 முதல் அமலுக்கு வரும். மேலும், கனடாவில் இனி வரும் நாட்களில் இத்தகைய மாற்றங்களை அதிகமாக எதிர்பார்க்கலாம் என்று கூறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்குமார், “கனடா வர முயல்பவர்களுக்கு முன்பு போல் எளிதாக இருக்காது,” என்றார். அதேவேளையில், அத்தகைய மாற்றங்கள் கல்விக்காக கனடா வருபவர்களை எந்த வகையிலும் பாதிக்காது என்றும், நிரந்தர குடியுரிமை பெற முயல்வோருக்குத்தான் சவால்கள் இருக்கும் என்றும் தான் கருதுவதாக ராம்குமார் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமீப ஆண்டுகளில் விவசாயம் முதல் கட்டுமானம் வரையிலான தொழில்களில் முதலாளிகளால் இந்தத் திட்டத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது 'நவீன அடிமைத்தனம்' என்று விமர்சித்த ஐ.நா. அறிக்கை தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டம் கனடாவில் உள்ள முதலாளிகள் தகுதியான கனேடியர்கள் கிடைக்காதபோது, தற்காலிகப் பணியிடங்களை நிரப்ப வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கிறது. இந்தத் திட்டம் தொழிலாளர் நல வழக்கறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது. அதோடு சமீபத்தில் ஐ.நா., இந்த மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இது 'தற்கால அடிமைத்தனத்தை ஊக்குவிப்பதாக' கூறியது. பிரிட்டனில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் சட்டப் பேராசிரியரான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா, “துஷ்பிரயோகம், தொழிலாளர்கள் குறைவான ஊதியம் பெறுவது போன்ற புகார்கள்,” தனக்கு வந்ததாகக் கூறினார். சமீப ஆண்டுகளில் விவசாயம் முதல் கட்டுமானம் வரையிலான தொழில்களில் முதலாளிகளால் இந்தத் திட்டத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு தொழிலாளர் பற்றாக்குறை உள்ள தொழில்களுக்கு உதவும் திட்டத்தின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது இந்த நிலை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக்கான கனேடிய அமைப்பின்படி, 2023-இல், 183,820 தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் அனுமதிகள் வழங்கப்பட்டன. இது கடந்த 2019-இல் வழங்கப்பட்டதைவிட 88% அதிகம். கடந்த திங்கள் கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், 'கனடாவில் திறமையான தொழிலாளர்களைப் பணியமர்த்துவதைத் தவிர்த்து, சுரண்டுவதற்காக' இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தியதாக வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக்கான கனேடிய அமைப்பு முதலாளிகளை விமர்சித்தது. https://www.bbc.com/tamil/articles/c4gewj3rw9ko
  14. Published By: DIGITAL DESK 7 29 AUG, 2024 | 09:59 AM சமஷ்டியை அங்கீகரிக்குமாறு தெற்கின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வலியுறுத்தவும் சர்வதேச காணாமலாக்கப்பட்டோருக்கான தினத்தில் ஒன்று திரள்வோம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று வியாழக்கிழமை (29) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் நிலவிய தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு யுத்த காலப்பகுதியில் இலங்கை அரச படைகளால் புரியப்பட்ட மனிதகுலம் ஏற்காத யுத்த குற்றங்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு பேரினவாத கருத்தியல் கொண்ட எந்தவொரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் துணிய மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி. ஆயுத யுத்தும் மௌனிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 15 வருட காலமாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தமது அன்புக்குரியவர்களை தேடி கிடைக்காத நிலையில் 2,500 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி அதாவது நாளை சர்வதேச காணாமலாக்கப்பட்டோருக்கான தினத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்துவதற்கு ஆயத்தங்களை செய்துள்ளனர். இப் போராட்டத்திற்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தமது முழுமையான ஆதரவை தெரிவிப்பதோடு வடகிழக்கு வாழ் அனைவரும் அப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றது. தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நிற்கும் பிரதான வேட்பாளர்களும் அவர்களின் பின்புலத்தில் இயங்கும் கட்சிகளும் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு யுத்தத்திற்கும் இனப்படுகொலைக்கும் ஆதரவு தெரிவித்தவர்களே. அத்தோடு தமது ஆதரவாளர்களை யுத்த வெற்றி கொண்டாட தூண்டியவர்களுமாவர். இவர்கள் இனி மேலும் தமிழர்களுக்கு யுத்தக்குற்றங்களுக்கான நீதியையோ, அரசியல் நீதியையோ பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. இவர்களின் உண்மையை கண்டறிவதற்கான வழிமுறைகள் எல்லாம் மாயமானே. அதில் தமிழர்களுக்கு இனியும் நம்பிக்கை இல்லை. அதுமட்டுமல்ல இவர்கள் எதிர்நோக்கி இருக்கும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் அனைத்து தேர்தல்களிலும் பேரினவாத வாக்குகளையே நம்பி இருக்கின்றனர்.பேரினவாத பௌத்த துறவிகளையே கவசமாகவும் கொண்டுள்ளனர்.இவர்களை எதிர்த்து தமிழர்களுக்கு எத்தகைய நீதியையும் உறுதி செய்யப்போவதுமில்லை. இவர்கள் வடகிழக்கில் மக்கள் சந்திப்புகளை நடத்தும் போதும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் போதும் யுத்தக்குற்றங்கள் காணாமல், ஆக்கப்பட்டோர் விடயமாக எத்தகைய கருத்துகளையும் கூறுவதும் கிடையாது. இவர்களுக்கு சாமரை வீசுகின்ற தமிழ் அரசியல்வாதிகளும் இவ் விடயம் சம்பந்தமாக பிரதான வேட்பாளர்களிடம் கேள்வி கேட்பதற்கோ பொது மேடைகளில் கருத்து கூறுவதற்கோ தயங்குவது தமிழர்களுக்கு இழைக்கும் அநீதியாகும். காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் என்பது வெறுமனே தமது உறவுகளைத் தேடும் போராட்டம் மட்டுமல்ல. அது தமிழர் தேசத்தின் அரசியல் நீதிக்கான போராட்டத்தின் அடையாளமாகவும் உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுவோரில் நூற்றுக்கும் அதிகமானோர் தீர்வு கிட்டாத நிலையில் வேதனையில் மரணத்தை தழுவியுள்ளனர். இதனை சாதாரண மரணம் என நாம் கடந்து செல்ல முடியாது.நீதி நிலை நாட்டப்படாது நடத்தப்பட்ட திட்டமிட்ட மறைமுக கொலை எனவே அடையாளப்படுத்தல் வேண்டும். இவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்தும் போராட்டம் மரணிக்காது உள்ளமைக்கு போராட்ட அமைப்புக்களின் மனத்திடமே காரணம் எனலாம். அப்போராட்தினை உயிரோட்டமுள்ளதாக்க தமிழர் தேசமாக எம் பங்களிப்பை செய்து எம் குரலை சர்வதேசத்திற்கு கேட்கச் செய்வோம். மேலும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தினம் தினம் சிந்தும் அறிந்தும் எமது உறவுகளும் மாவீரர்களுமாக இலட்சங்களை தாண்டியோர் இரத்தம் சிந்திய நிலத்தில் நின்றும் பேரினவாத அரசுக்கும் இனப்படுகொலை சூத்திர தாரிகளுக்கும் கொடி பிடித்துக் கொண்டு திரியும் தமிழர் தேச அரசியல் நரிகளுக்கு எதிராக குரல் எழுப்பவும் ஒன்று திரள்வோம். இந்தியா இன்றும் எமக்கான அரசியல் தீர்வாக 13 மே திணிக்க முயல்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் யுத்தக் குற்றங்களுக்கு காணாமல் சர்வதேச விசாரணையோடு காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது அரசியல் நீதி என்பதை மையப்படுத்தி சுயநிர்ணய உரிமையை உறுதி செய்து சமஷ்டியை அங்கீகரிக்குமாறு தெற்கின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வலியுறுத்தவும் ஒன்று திரள்வோம். https://www.virakesari.lk/article/192264
  15. ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு - இந்திய அணி பாகிஸ்தானுக்கு வருமென முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் நம்புவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐசிசியின் தலைவராக ஜெய் ஷா செவ்வாய்க்கிழமை அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார் (கோப்பு படம்) 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, சமூக வலைதளங்களில் சாம்பியன்ஸ் டிராபி குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. இந்த விவாதத்தின் மையமாக, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லுமா இல்லையா என்பதுதான் முக்கியமான கேள்வியாக உள்ளது. அட்டவணைப்படி 2025 பிப்ரவரியில் சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி நீண்ட காலமாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யவில்லை, பாகிஸ்தான் அணியும் ஐசிசி போட்டிகளைத் தவிர வேறு எந்த தொடரிலும் விளையாட இந்தியாவுக்கு வரவில்லை. கடந்த ஆண்டு ஆசிய கோப்பையை பாகிஸ்தான் நடத்த இருந்த போது, இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று கூறி, ஹைபிரிட் மாடலில் போட்டிகளை நடத்த வேண்டுமென பிசிசிஐ பிடிவாதம் பிடித்ததால் இந்த கேள்வி எழுப்பப்படுகிறது. ஹைபிரிட் மாடலின் கீழ், சில போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்பட்டன. இந்திய அணி கலந்துகொண்ட போட்டிகள் இலங்கையில் நடத்தப்பட்டன. இதன் மூலம், ஆசிய கோப்பையை நடத்தும் நாடாக பாகிஸ்தான் இருந்தது, ஆனால் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்றது. பாராலிம்பிக் வில்வித்தை: இரு கைகளும் இல்லாமலேயே சாதிக்கும் இந்திய வீராங்கனை தங்கம் வெல்வாரா?27 ஆகஸ்ட் 2024 ஜெய் ஷா குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கூறியது என்ன? ஐசிசியின் தலைவராக ஜெய் ஷா செவ்வாய்க்கிழமை அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்த பதவியை வகிக்கும் ஐந்தாவது இந்தியர் ஆவார். இவருக்கு முன், ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என். சீனிவாசன், ஷஷாங்க் மனோகர் ஆகியோர் ஐசிசியின் தலைவர் பதவியை வகித்துள்ளனர். பாகிஸ்தானின் முன்னாள் விக்கெட் கீப்பரும் கேப்டனுமான ரஷீத் லத்தீஃப், ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார். பாகிஸ்தான் பத்திரிகையாளர் டாக்டர். நௌமன் நியாஸின் யூடியூப் சேனலில் பேசிய ரஷீத் லத்தீஃப், "ஜெய் ஷா இப்போதுதான் வந்துள்ளார். அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை எதிர்க்கவில்லை என்றுதான் அர்த்தம்." "இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி விளையாட பாகிஸ்தான் வந்தால் அதில் ஜெய் ஷாவுக்கு பெரிய பங்கு இருக்கும்." என்று கூறினார். "கிரிக்கெட்டின் நன்மைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நான் உணர்கிறேன். என் கருத்து தவறாகவும் இருக்கலாம். பிசிசிஐ என்றாலும் சரி அல்லது உலக கிரிக்கெட் என்றாலும் சரி, கிரிக்கெட் துறைக்கு ஏற்ற நபர்தான் என்பதை ஜெய் ஷா நிரூபித்துள்ளார்." என்கிறார் ரஷீத் லத்தீஃப். ஜெய் ஷா ஐசிசி தலைவரானதன் மூலம், 'சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு வருவதற்கு ஒருவகையில் பாதி ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது' என்று ரஷித் லத்தீஃப் கருதுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி விளையாட பாகிஸ்தான் வந்தால் அதில் ஜெய் ஷாவுக்கு பெரிய பங்கு இருக்கும் என்று ரஷித் லத்தீஃப் கருதுகிறார் ஆனால் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தெளிவாகவே உள்ளது. இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், "சாம்பியன்ஸ் டிராபி விஷயத்தில், இந்திய அரசு என்ன கேட்டாலும் செய்வோம். இந்திய அரசு அனுமதித்தால் மட்டுமே எங்கள் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம்." என்றார். மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாசித் அலி, தனது யூடியூப் சேனலில், “ஜெய் ஷா பிசிசிஐயில் இருந்தபோது, அந்த வாரியத்தை மட்டுமே கவனித்து வந்ததார். இப்போது மற்ற நாட்டு வாரியங்களையும் அவர் அனுசரித்து செல்ல வேண்டியது இருக்கும்” என்று கூறினார். "ஜெய் ஷாவுக்கு எனது வாழ்த்துகள். அவர் பிசிசிஐ அமைப்பை வெற்றிகரமாக நடத்தியது போலவே, ஐசிசியிலும் செய்ய முடியுமா? அவரது முதல் சவாலே சாம்பியன்ஸ் டிராபி தான்." என்று பாசித் அலி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இது (சாம்பியன்ஸ் டிராபி) பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. பிசிசிஐ செயலாளர் என்ற முறையில் ‘பாகிஸ்தானுக்கு செல்ல எங்கள் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை’ என்று முன்னர் அவர் கூறலாம். ஆனால் இப்போது நிலைமை வேறு.” “அவரது தந்தையும் நரேந்திர மோதிக்கு நெருக்கமானவர். மொத்த போர்டுமே ஜெய் ஷாவுக்கு ஆதரவாக இருக்கும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்த நிலையில், இப்போது அவர் இரு தரப்பையும் கருத்தில் கொள்வார்.” என்று கூறினார். பாகிஸ்தானை சேர்ந்த விளையாட்டுத் துறை பத்திரிகையாளர் ஷகீல் கான் கட்டாக், "ஐசிசியின் பொறுப்பையும் ஜெய் ஷா பெற்றுள்ளார். இப்போது நாம் (பாகிஸ்தான் அணி) என்ன செய்ய வேண்டும்? ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்ல வேண்டுமா அல்லது பாகிஸ்தானில் போட்டிகளை நடத்த தயாராக வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் எக்ஸ் தள பக்கத்தில், "வாழ்த்துகள் ஜெய் ஷா பாய்! உங்கள் சிறந்த தலைமையின் கீழ் உலக கிரிக்கெட் வேகமாக முன்னேறும் என்பதை நான் அறிவேன்" என்று பதிவிட்டுள்ளார். இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா எக்ஸ் தள பக்கத்தில், "இளைய ஐசிசி தலைவருக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கு இது பெருமையான தருணம். நீங்கள் கிரிக்கெட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். பேட்ஸ்மேன் ஷுப்மான் கில், "ஐசிசியின் தலைவரானதற்கு வாழ்த்துகள்" என்று எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, "ஜெய் ஷா தனது 35 வயதில் போட்டியின்றி ஐசிசி தலைவராக ஆனதற்கு வாழ்த்துகள். கிரிக்கெட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல ஜெய் ஷா தொடர்ந்து பணியாற்றுவார் என்று கிரிக்கெட் சமூகம் உறுதியாக நம்பலாம்." என்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெய் ஷாவின் பிசிசிஐ பதவிக்காலம் 2025 வரை உள்ளது 35 வயதான ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) இளம் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஜெய் ஷா இந்த தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐசிசி தலைவராக, ஜெய் ஷாவின் பதவிக்காலம் டிசம்பர் 1, 2024 முதல் தொடங்கும். ஐசிசியின் தற்போதைய தலைவரான நியூசிலாந்தின் கிரெக் பார்க்லேயின் பதவிக்காலம் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவர் தொடர்ந்து இரண்டு முறை ஐசிசி தலைவர் பதவியை வகித்துள்ளார். மூன்றாவது முறையாக ஐசிசி தலைவர் தேர்தலில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று அவர் சமீபத்தில் கூறியிருந்தார். ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐசிசி மற்றும் அதன் உறுப்பு நாடுகளுடன் இணைந்து கிரிக்கெட்டை உலகம் முழுவதும் பரப்புவதில் உறுதியாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார். ஜெய் ஷா அக்டோபர் 2019இல் பிசிசிஐயின் செயலாளராக பொறுப்பேற்றார். அவர் மீண்டும் 2022இல் பிசிசிஐ பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெய் ஷாவின் பிசிசிஐ பதவிக்காலம் 2025 வரை உள்ளது. ஆனால் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றவுடன், பிசிசிஐ பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். https://www.bbc.com/tamil/articles/clyg3d3zxjgo
  16. 28 AUG, 2024 | 09:52 PM (இராஜதுரை ஹஷான்) சிங்களவர்கள் தொடர்பில் மகாநாயக்கர்கள் அவதானம் செலுத்தாவிடின் சிங்கள இனப்பரம்பலும், பௌத்த சாசனமும் இல்லாதொழியும். ஷரியா சட்டத்தை செயற்படுத்த ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்துச் செய்து அதிகார பகிர்வு என்பதை முடிவுக்கு கொண்டு வருவேன். சிங்களவர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என ஜனசேனா முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை (28) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கை தொடர்பான தெளிவுப்படுத்தல் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எமது கட்சியில் சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்படும். சிங்களவர்களின் இனபரம்பல் தற்போது சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. சிங்களவர்களின் பொருளாதார நிலைமை குறித்து மகாநாயக்க தேரர்கள் அவதானம் செலுத்தி ஏழ்மையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இல்லையேல் சிங்கள இனமும், பௌத்த சாசனமும் இல்லாதொழியும். 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை தெரிவு செய்த மக்களை பற்றி சிந்திப்பதில்லை. தம்மையும், தமது குடும்பத்தையும் வளப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நிலைமையை நாங்கள் மாற்றியமைப்போம். எமக்கு ஆணை வழங்கினால் நாட்டை தன்னிறைவடைய செய்வோம். இது சிங்கள பௌத்த நாடு! ஆகவே சிங்களவர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் எமக்கு வாக்களிக்க வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாகவும், இயலும் என்று குறிப்பிட்டுக் கொள்கின்றவர்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியுள்ளார்கள். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகார பகிர்வு பற்றி பேசப்படுகிறது. தெற்கு துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தென்மாகாணம் சீன காலனியாக மாறினால் சீனர்களும் இலங்கையில் குடியுரிமை கோருவார்கள். அவர்களுக்கு தென்மாகாணத்தை தனி பிராந்தியமாக வழங்க நேரிடும். நான் இன்று குறிப்பிடுவது இன்று நகைப்புக்குரியதாக இருக்கலாம். ஆனால் என்றோ ஒருநாள் சிங்களவர்கள் எனது கருத்தை சிந்தித்துப் பார்ப்பார்கள். சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் அவரவரின் மொழி உரிமையை கொடுக்க வேண்டும். இலங்கையில் சுதேச முஸ்லிம்கள் வெளிநாட்டு முஸ்லிம்களின் வருகையினால் இன்று பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். சரியா சட்டத்தை ஒருபோதும் நாங்கள் செயற்படுத்த இடமளிக்க முடியாது. இங்கு வாழ விருப்பமில்லாதவர்கள் ஸரியா சட்டம் உள்ள நாடுகளுக்கு தாராளமாக செல்லலாம். கேள்வி –பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உங்களின் திட்டம் அல்லது கொள்கை என்ன, வற் வரியை நீக்குவீர்களா? பதில் - பொருளாதார நிபுணர்களுடன் கலந்துரையாடி பொருளாதார கொள்கைத் திட்டங்களை வகுக்க வேண்டும். வற் வரியை நீக்கினால் நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது. உணவு பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குவேன். கேள்வி – அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன? பதில் - 13 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்வேன். இந்த திருத்தத்தால் எவருக்கும் நல்லது நடக்கவில்லை. மாகாண சபை முறைமை வெள்ளை யானை போன்று பயனற்றது. உள்ளுராட்சிமன்றங்கள் போதும் மாகாணங்களை நிர்வகிப்பதற்கு. அதிகார பகிர்வுக்கு இடமில்லை. என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தால் அரசியலமைப்பின் 13 ஆவது திருதத்தை முழுமையாக இரத்து செய்து அதிகார பகிர்வு என்பதற்கு முடிவு கட்டுவேன் என்றார். https://www.virakesari.lk/article/192253
  17. தற்போது உலகம் முழுவதும் விந்து தானம் செய்பவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இங்கிலாந்தில் விந்தணுவுக்கு அதிக தேவை உள்ளது மற்றும் அது உலகம் முழுவதும் அனுப்பப்படுகிறது. அப்படியானால் பிரிட்டிஷ் ஆண்களின் விந்தணுக்களுக்கான தேவை ஏன் உலகளவில் அதிகரித்து வருகிறது என்ற கேள்வி எழுகிறது. விளக்கமான பதில் இதோ. இங்கிலாந்தில் எந்த மருத்துவமனையிலும் ஒரு விந்தணு தானம் செய்பவரிடமிருந்து 10 குடும்பங்களுக்கு மட்டுமே விந்தணுவை வழங்க முடியும் என்ற விதி உள்ளது. ஆனால் இங்கிலாந்து விந்தணு தானம் செய்பவர்களிடமிருந்து விந்தணுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப எந்த தடையும் இல்லை. இங்கிலாந்தில் விந்தணுவின் தேவை அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம். பிரிட்டனில் இனப்பெருக்க உடல்நலப் பிரச்சனைகள் ஒரு முக்கிய காரணமாகும். பிரிட்டனில் பலர், குறிப்பாக பெண்கள் மற்றும் ஒரே பாலின தம்பதிகள், கருத்தரிப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கருவுறுதல் சிகிச்சைகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், விந்தணு தானம் செய்வதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. இன் விட்ரோ கருத்தரித்தல் (IVF) மற்றும் பிற உதவி இனப்பெருக்க தொழில்நுட்பங்களின் (ART) பயன்பாடு அதிகரித்துள்ளதால் விந்தணு வங்கிகளைச் சார்ந்திருப்பது அதிகரித்துள்ளது. இப்போதெல்லாம், பலர் திருமணம் மற்றும் பாரம்பரிய குடும்ப வாழ்க்கையை விட்டுவிட்டு தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்துகிறார்கள். அதன் பிறகு குடும்பம் நடத்த முடிவு செய்கிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் கருத்தரிக்கும் திறன் குறைந்து வருவதால் விந்தணு வங்கிகளின் உதவியை நாடுகின்றனர். கூடுதலாக, ஒற்றைப் பெண்கள் மற்றும் லெஸ்பியன் தம்பதிகள் பாரம்பரிய இனப்பெருக்க முறைகளுக்கு மாற்றாக விந்தணு தானம் செய்யும் சேவைகளுக்குத் திரும்புகின்றனர். பிரிட்டனில் விந்தணு வங்கியின் அதிகரித்து வரும் வசதி மற்றும் அணுகல் தேவையை தூண்டியுள்ளது. விந்தணு வங்கிகள் விந்தணு தானத்தை எளிதாகவும் திறமையாகவும் செய்ய தங்கள் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளன. இது விந்தணு தானத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் வசதியாகவும் ஆக்கியுள்ளது. விந்தணு தானம் செய்பவர்களுக்கும், விந்தணுவின் கருவுறுதலுக்கு ஏற்ப பணம் வழங்கப்படுகிறது. இதனால், பலர் இதை ஒரு தொழிலாக எடுத்துக் கொண்டனர். பிரிட்டனில் ஒரே பாலின காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்வது, அத்தகைய ஜோடிகளுக்கு விந்தணு தானம் சட்டப்பூர்வ மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விருப்பமாக மாறியுள்ளது. மேலும், சமூகம் பல்வேறு வகையான குடும்பங்களை ஏற்றுக்கொள்வதால், அதிகமான மக்கள் விந்தணு தானத்திற்கு திரும்புகின்றனர். https://thinakkural.lk/article/308505
  18. 4400 மாற்றுத்திறனாளிகளின் திறன்களை வெளிக்கொண்டுவரும் பாரிஸ் 2024 பராலிம்பிக் இன்று ஆரம்பம்; இலங்கையிலிருந்து எண்மர் பங்கேற்பு! 28 AUG, 2024 | 03:24 PM (நெவில் அன்தனி) இலங்கை மற்றும் அகதிகள் அணி உட்பட 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 மாற்றுத்திறனாளிகளின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழா இன்று (28) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இந்த வருட பராலிம்பிக் விளையாட்டு விழாவில் 22 வகையான விளையாட்டுக்களில் 549 தங்கப் பதக்கங்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் பாரிஸிலும் பாரிஸை சூழவுள்ள பகுதிகளிலும் உள்ள அரங்குகளில் நடைபெறவுள்ளன. பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் போன்றே பராலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஆரம்ப விழா பிரதான விளையாட்டரங்குக்கு வெளியே இன்று இரவு நடைபெறவுள்ளது. ஆரம்ப விழா வைபவம் எலிசீஸ் டி லா கொன்கோட் என்ற இடத்தில் நடைபெறும். இதனை முன்னிட்டு பராலிம்பியர்களும் அதிகாரிகளும் அவன்யூ டெஸ் சாம்ப்ஸ் என்ற இடத்திலிருந்து எலிசீஸ் டி லா கொன்கோட் என்ற இடத்திற்கு அணி வகுத்து செல்லவுள்ளனர். இந்த ஆரம்ப விழா வைபவத்தை 65,000 பார்வையாளர்கள் நேரடியாக கண்டுகளிக்கவுள்ளனர். பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழா செப்டெம்பர் 8ஆம் திகதி முடிவிழாவுடன் நிறைவுபெறும். லண்டன் 1948 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலேயே முதன் முதலில் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி நடத்தப்பட்டது. சக்கர இருக்கை போட்டியாளர்களுக்கே முதன்முதலில் போட்டிகள் நடத்தப்பட்டது. டொக்டர் குட்மான் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இப் போட்டி ஸ்டோக் மெண்டெவில் விளையாட்டு என பெயரிடப்பட்டிருந்தது. அன்று பராலிம்பிக்கில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமானது. ஸ்டோக் மெண்டெவில் விளையாட்டு விழா 1956 ஒலிம்பிக்வரை நடத்தப்பட்டு வந்தது. இந்த விளையாட்டு விழாவே ரோம் 1960 பராலிம்பிக் விளையாட்டு விழாவாக பரிணமித்தது. முதலாவது பராலிம்பிக் விளையாட்டு விழாவில் 23 நாடுகளைச் சேர்ந்த 400 மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றினர். அன்றிலிருந்து ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறும் அதே ஆண்டில் பராலிம்பிக் விளையாட்டு விழாவும் அரங்கேற்றப்பட்டு வருவதுடன் மாற்றுத்திறனாளிகள் ஆயிரக்கணக்கில் பங்குபற்றிவருகின்றனர். இலங்கையிலிருந்து எண்மர் பாரிஸ் பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக டோக்கியோ 2020 பராலிம்பிக் F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற சமித்த துலான் கொடிதுவக்கு உட்பட 8 மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றுகின்றனர். ஜப்பானில் இந்த வருடம் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பிலும் F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதலில் உலக சாதனையுடன் சமித்த துலான் கொடிதுவக்கு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான F63 வகைப்படுத்தல் பிரிவுக்கான குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற பாலித்த பண்டார, T44 வகைப்படுத்தல் பிரிவுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திக்க கமகே ஆகியோரும் இலங்கை பராலிம்பிக் அணியில் இடம்பெறுகின்றனர். பெண்களுக்கான T44 வகைப்படுத்தல் பிரிவு நீளம் பாய்தலில் ஜனனி தனஞ்சன பங்குபற்றுகிறார். இவர் உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 5.08 மீற்றர் தூரம் பாய்ந்து தனது தனிப்பட்ட சிறந்த தூரப் பெறுதியைப் பதிவு செய்திருந்தார். இவர்கள் நால்வரைவிட ஆண்களுக்கான T46 வகைப்படுத்தல் பிரிவு 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் ப்ரதீப் சோமசிறி, T42/63 வகைப்படுத்தல் பிரிவு 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அனில் ப்ரசன்ன ஜயலத், பெண்களுக்கான S9 வகைப்படுத்தல் பிரிவு 400 மீற்றர் சுயாதீன நீச்சல் போட்டியில் நவீத் ரஹீம், ஆண்களுக்கான சக்கர இருக்கை ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் சுரேஷ் தர்மசேன ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர். இன்று இரவு நடைபெறவுள்ள ஆரம்ப விழாவில் இலங்கை தேசிய கொடியை சமித்த துலான் ஏந்திச் செல்லவுள்ளார். https://www.virakesari.lk/article/192227
  19. சுற்றுலா நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 6 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் கண்டிப்பாக ஓய்வு நாள் ஒன்று உண்டு. இதனால் டெஸ்ட் போட்டி 6 நாட்கள் நடைபெற்று வந்தது. கடந்த 2008ஆம் ஆண்டு டாக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 நாட்கள் விளையாடியது. அப்போது அந்நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதால் அந்த குறிப்பிட்ட நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் இதுபோன்ற அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. இலங்கை அணி கடந்த 2001-ம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிராக 6 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடியது. எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால், முதல் டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் செப்டம்பர் 18 முதல் 23ஆம் திகதி வரை என 6 நாட்கள் நடக்கிறது. 21ஆம் திகதி ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. https://thinakkural.lk/article/308478
  20. "டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை” - ஐசிசி தலைவராக தேர்வாகியுள்ள ஜெய் ஷா உறுதி 28 AUG, 2024 | 02:25 PM டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஐசிசி தலைவராக தேர்வாகியுள்ள ஜெய் ஷா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது: டி20 கிரிக்கெட் பார்மெட் அனைவருக்கும் உற்சாகம் தருகின்ற வடிவமாக இருக்கலாம். இருந்தாலும் கிரிக்கெட்டின் அடித்தளமான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எனது பதவிக்காலத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். எங்கள் முயற்சிகள் மற்றும் பணிகள் அது சார்ந்து இருக்கும். உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டின் தரத்தை உயர்த்தும் வகையில் என்னால் முடிந்த அனைத்து பணியையும் செய்வேன். இந்த முக்கிய பொறுப்பில் என் மீது உள்ள எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வேன். 2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறவுள்ளது வரலாறாக இருக்கும். ஐசிசி-க்கு தலைமை தாங்குவது சிறப்பானது. மகளிர் கிரிக்கெட் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் மேம்பாடு சார்ந்தும் கவனம் செலுத்தப்படும். இதில் அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த பயணத்தை தொடங்குவோம். இவ்வாறு ஜெய் ஷா தெரிவித்துள்ளார். 35 வயதான ஜெய் ஷா, கடந்த 2019-ம் ஆண்டு முதல் பிசிசிஐ செயலாளராக இருந்து வருகிறார். ஐசிசி-யின் தலைவராக தொடர்ச்சியாக இரு முறை பதவி வகித்து வந்த நியூஸிலாந்தைச் சேர்ந்த 62 வயதான கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் 3-வது முறையாக தலைவர் பதவியில் தொடர தனக்கு விருப்பம் இல்லை எனவும், நவம்பர் மாதத்துடன் பதவியில் இருந்து விலகுவதாகவும் கிரேக் பார்க்லே தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் வேட்புமனுக்களை அளிக்கலாம் என்று ஐசிசி நிர்வாகம் அறிவித்தது. வேட்பு மனுக்கள் வழங்குவதற்கான கடைசி நாளான நேற்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை தவிர வேறு யாரும் மனு வழங்கவில்லை. இதையடுத்து அவர், போட்டியின்றி ஐசிசி-யின் தலைவராக தேர்வானார். வரும் டிசம்பர் 1-ம் தேதி ஜெய் ஷா பொறுப்பேற்று கொள்கிறார். மறைந்த ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் ஆகியோருக்கு பிறகு ஐசிசி தலைவர் பொறுப்பை கவனிக்கும் ஐந்தாவது இந்தியராகி உள்ளார் ஜெய் ஷா. https://www.virakesari.lk/article/192226
  21. முத்தமிழ் முருகன் மாநாட்டு தீர்மானங்களை விமர்சிக்கும் தி.க, கம்யூனிஸ்ட் - இது பாஜகவை எதிர்க்கும் உத்தியா? பின்னணி என்ன? பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இந்த வாரம் நடைபெற்றது கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 31 நிமிடங்களுக்கு முன்னர் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இந்த வாரம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை நடத்திய இரண்டு நாள் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். பகுத்தறிவு மற்றும் மதச்சார்பின்மை போன்றவை திமுகவின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக உள்ளன. அவ்வாறு இருக்க, திமுக அரசு முருகன் மாநாட்டை நடத்துவது குறித்து ஏற்கெனவே விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள் அந்த விமர்சனங்களை கடுமையாக்கியுள்ளன. திமுகவின் தாய்கழகமான திராவிட கழகம் மற்றும் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுகவின் முயற்சியை வரவேற்றுள்ளார். தீர்மானங்கள் என்ன? முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில், ‘முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி’ இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கும் பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்தவும், அந்த கல்வி நிலையங்களில் ‘சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகள்’ அறிமுகப்படுத்தவும் அரசுக்கு பரிந்துரைக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மாணவர்களைக் கொண்டு முருகன் கோயில்களில், ‘கந்தசஷ்டி பாராயணம்’ செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. ‘முருகன் மாநாடு - தமிழர் பண்பாட்டு மாநாடு’ - உதயநிதி ஸ்டாலின் பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு, அறநிலையத்துறையின் பொற்காலமே திமுக ஆட்சியின் போதுதான் என்று கூறினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கும், அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருக்காது. திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது” என்று கூறினார். மாநாட்டை வாழ்த்தி பேசிய, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறநிலையத்துறையின் பொற்காலமே திமுக ஆட்சியின் போதுதான் என்று கூறினார். “நீதிக்கட்சி ஆட்சியின் போது இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. குன்றக்குடி அடிகளார் தந்த விபூதியை நெற்றி நிறைய பூசிக் கொண்டவர் தந்தை பெரியார். ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கலைஞர். இந்த மாநாடு ஆன்மிக மாநாடாக மட்டுமில்லாமல் தமிழர் பண்பாட்டு மாநாடாக நடைபெறுகிறது” என்று காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசினார் உதயநிதி ஸ்டாலின். தோழமை இயக்கங்கள் விமர்சனம் பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு, இந்து சமய அறநிலையத்துறை நடத்திய இரண்டு நாள் மாநாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார் திமுகவின் முருகன் மாநாட்டை அதன் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. அதன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மத அடிப்படையிலான விழாக்களை அரசு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார். “இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் துடிக்கிறது. கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பதும், சாதிய படிநிலையை பாதுகாப்பதுமே அவர்களின் நோக்கம். இதை முறியடிக்கும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை பணிகளை மேற்கொள்வது நல்லது” என்று தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். “இந்து அறநிலையத் துறை என்பதே கோவில் பாதுகாப்பு, நிதி வரவு - செலவுகளை நிர்வகிப்பதற்கானதே தவிர, இந்து மத பிரசாரத்திற்கானதல்ல” என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி திமுக அரசை சாடியுள்ளார். தனது அறிக்கையில் மாணவர்களை கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்யவும், சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தவும் பரிந்துரைக்கும் தீர்மானத்தை விமர்சித்த கி.வீரமணி, “இந்த இரண்டு தீர்மானங்களையும் எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்? இந்து அறநிலையத் துறையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மதச்சார்புடையது அல்ல, தி.மு.க. அரசின் கொள்கை என்பது மதச்சார்பற்ற தன்மை கொண்டதாகும்” என்று குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் சேகர்பாபு மீதான விமர்சனம் பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு (நடுவில் இருப்பவர்) ‘‘கோவில் துறையைப் பாதுகாக்க அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். அவர் இப்போது கோவிலிலேயே குடியிருக்கிறார்” என்று மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவைப் பாராட்டி பேசியிருந்தார். அதை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டிய கி.வீரமணி, “அவர் (அமைச்சர் சேகர் பாபு) தனது துறைப் பணிகளில் தேவையானவற்றைத் தாண்டிச் செய்கிறார். அதீத ஆர்வத்துடன் அவர் இருக்க வேண்டாம், இருக்கவும் கூடாது.” “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் நியமன உச்சநீதிமன்றத் தடை இன்னும் நீங்காது தொடரும் நிலை மாறவேண்டும், அதற்குரிய சட்ட நடவடிக்கைகள், நியமனங்கள், புதிய மாணவர் சேர்க்கைகள் போன்ற பணிகளில் அவர் தீவிரம் காட்டவேண்டும்” என்றும் விமர்சித்திருந்தார். பாஜகவின் வேல் யாத்திரை 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் பாஜகவின் அப்போதைய மாநிலத் தலைவர் எல்.முருகன், முருகன் வழிபாட்டுத் தலங்களில் வேல் யாத்திரை நடத்தினார். இந்துக்களின் நலன்களை பாதுகாக்க அந்த யாத்திரை நடத்தப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். கடந்த காலங்களில் திமுக தலைவர்கள் ஆ.ராசா இந்து மதம் குறித்தும், உதயநிதி ஸ்டாலின் சனதான தர்மம் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையானதை அடுத்து, திமுகவை இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்று தொடர்ந்து விமர்சித்து வந்தது பாஜக. முத்தமிழ் முருகன் மாநாட்டை விமர்சித்து பேசிய பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, “சனாதன தர்மம் வேண்டாம், வெட்டி வீழ்த்த வேண்டும் என்று கூறியவர்கள், பழநியில் பால் காவடி தூக்குவதற்கு பதிலாக, அரசியல் காமெடி செய்கிறார்கள். தமிழ் பண்பாடு என்றால் திருவள்ளுவர், தொல்காப்பியர், கம்பர் ஆகியோர்தான். " "பெரியாரின் மாடல் தான் திராவிட மாடல் என்று கூறும் திமுக இன்று தமிழ் பண்பாடு என்ற வார்த்தையை உச்சரிக்கிறார்கள், ஒரு நாடகத்தை பழநி மண்ணில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்று மற்றொரு நிகழ்ச்சியில் அவர் பேசினார். பட மூலாதாரம்,DIPR பாஜகவை எதிர்க்கும் உத்தியா? தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசும் போது, “தமிழ்நாட்டில், பாஜக தேர்தல்களில் வெற்றி பெறவில்லை என்றாலும், சமீப காலங்களில், மாநிலத்தில் குறிப்பிட்டத்தக்க கவனத்தைப் பெற்று வருகிறது. தமிழ்நாட்டின் இந்து வாக்குகளை பெறுவதற்கு பாஜக பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. எனவே இப்போது நிலவும் அரசியல் சூழலில் இந்த மாநாடு அவசியமானது” என்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுகவின் முயற்சியை வரவேற்றுள்ளார் “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் வடஇந்தியாவில் செய்தது போல, தமிழ்நாட்டிலும் கடவுளையும் மதத்தையும் பயன்படுத்தி மக்களை அரசியல் வாக்கு வங்கியாக மாற்ற முயன்று வருகிறது. அதற்கு இடமளிக்காமல் அவர்களின் அரசியல் சதியை அம்பலப்படுத்தும் நோக்கில் அறநிலையத்துறை செயல்பட்டால் அதை வரவேற்கிறோம்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார். வரலாற்று பேராசிரியர் கருணானந்தன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “முருகனுக்கு மாநாடு நடத்துவது ராமருக்கும் கிருஷ்ணருக்கும் மாற்றான அரசியல் உத்தியாக இருக்கலாம். ஆனால் திமுகவின் வளர்ச்சி என்பது திமுகவுக்கு மதத்துக்குமான உறவைப் பொருத்து அமையவில்லை. மத பிடிப்பு இல்லாததால், மதம் என்ற பெயரில் நடைபெற்ற கொள்ளைகளை, மூடநம்பிக்கைகளை எடுத்துரைத்ததால், நேர்மையானவர்கள் என்று மக்கள் நம்பினர்.” என்கிறார். மேலும், “சமூக எழுச்சி இயக்கங்கள் பெரிதாக நடைபெறாத வட இந்தியாவில் மதத்தைக் கொண்டு அரசியல் செய்யலாம். ஆனால் தமிழ்நாட்டில் அந்த நிலைமை கிடையாது. கல்லூரிகளில் ஆன்மீக பாடம் நடத்தலாம் என்று கூறுவது மதச்சார்பற்ற அரசுக்கு அழகல்ல, மதத்தை மறுக்கவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம்” என்றார். மேலும் முருகனை தமிழ் கடவுள் என்று கூறுவதைக் குறித்தும் அவர் கேள்வி எழுப்புகிறார். “யேசுவை யூத கடவுள் என்று கூற முடியுமா? அல்லாவை அரபிக் கடவுள் என்று கூறலாமா? மதம் அனைவருக்குமானது, மொழியின் பெயரால் பிரிக்கக் கூடாது”, என்கிறார். சட்டம் என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,K. CHANDRU படக்குறிப்பு, இந்திய அரசியல் சாசன சட்டப்படி மதத்தை பரப்புவது தனி நபரின் உரிமை அதை அரசு செய்ய வேண்டாம் என்கிறார் ஓய்வெற்ற நீதிபதி கே. சந்துரு இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் கல்லூரிகளில் இந்து ஆன்மிக நூல்களை பாடமாகச் சேர்க்க வேண்டும் என்று பாஜக ஆதரவாளர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்ததை ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு சுட்டிக்காட்டினார் பிபிசி தமிழிடம் பேசிய சந்துரு “மத நிறுவனம் அல்லது அமைப்பு நடத்தும் கல்வி நிலையத்தில் மதச்சார்பற்ற பாடங்கள் கற்றுக் கொடுத்தால் அதை பாராட்ட வேண்டும் என்று 1963ம் ஆண்டு ‘சித்தாஜ்பாய் எதிர் பாம்பே அரசு’ என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே மதம் சார்ந்த பாடங்கள் இந்தக் கல்லூரிகளில் கட்டாயமில்லை.” என்றார். இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் நடைபெறும் மத நடவடிக்கைகளை தடுக்கக் கூடாது என்று கூறிய அவர், இந்திய அரசியல் சாசன சட்டப்படி மதத்தை பரப்புவது தனி நபரின் உரிமை, அதை அரசு செய்ய வேண்டாம் என்று சுட்டிக்காட்டினார். “2026ம் ஆண்டு தேர்தல்களை மனதில் வைத்துக் கொண்டு எதையும் செய்யக் கூடாது. இப்படி செய்வது மிகவும் பிற்போக்குத்தனமானது” என்று சந்துரு தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c2kj9859zg8o
  22. 28 AUG, 2024 | 05:24 PM நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டில் 9,535 காச நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய காசநோய் மற்றும் இருதய நோய்கள் கட்டுப்பாட்டு நிகழ்ச்சி திட்டத்தின் (NPTCDD) விசேட வைத்திய நிபுணர் பிரமிதா சாந்தி லதா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகளவான காச நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 4,362 ஆகும். இந்நிலையில், மத்திய மாகாணத்திலிருந்து 986 காச நோயாளர்களும், ஊவா மாகாணத்திலிருந்து 407 காச நோயாளர்களும், தென் மாகாணத்திலிருந்து 844 காச நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்திலிருந்து 751 காச நோயாளர்களும், வடமேல் மாகாணத்திலிருந்து 717 காச நோயாளர்களும், கிழக்கு மாகாணத்திலிருந்து 576 காச நோயாளர்களும், வட மாகாணத்திலிருந்து 444 காச நோயாளர்களும், வட மத்திய மாகாணத்திலிருந்து 448 காச நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சளியுடன் கூடிய இருமல், நீண்ட நாள் காய்ச்சல், பசியின்மை, உடல் எடை குறைதல், இரத்தம் கலந்த சளி, மார்புவலி என்பன காசநோய்க்குரிய அறிகுறிகளாகும். எனவே, இத்தகைய நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்திய ஆலோசனைகளைப் பெறுவது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/192245
  23. average human diving depth? என்று கூகிளைக் கேட்க கீழுள்ள பதிலை தந்தது. Most recreational free divers can only dive to a depth of around 12-18 metres without scuba gear. Diving to this depth requires a certain level of physical fitness and training, and divers must be aware of the risks involved. It's essential to listen to your body and avoid pushing yourself too hard. கூகிளில் மொழிமாற்றம் செய்தபோது! பெரும்பாலான பொழுதுபோக்கு இலவச டைவர்ஸ் ஸ்கூபா கியர் இல்லாமல் சுமார் 12-18 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே டைவ் செய்ய முடியும். இந்த ஆழத்திற்கு டைவிங் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான உடல் தகுதி மற்றும் பயிற்சி தேவைப்படுகிறது, மேலும் டைவர்ஸ் இதில் உள்ள அபாயங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும். உங்கள் உடலைக் கேட்பது மற்றும் உங்களை மிகவும் கடினமாகத் தள்ளுவதைத் தவிர்ப்பது அவசியம்.
  24. அபிவிருத்தி பணிகளுக்காக ஜனாதிபதி செயலகத்தால் நிதி நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்படுகின்றதே தவிர எந்த பாராளுமன்ற உறுப்பிருக்கும் நேரடியாக கொடுக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக பெரியளவிலான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிதியானது குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டது போன்ற தோற்றப்பாடு வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்றது. பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிதி மற்றும் பல்வேறு அபிவிருத்தி நிதிகள் ஜனாதிபதி செயலாகத்தால் இவ்வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கு உதவியாக அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்திக்காக முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்தன. இக்கோரிக்கைகளின் அடிப்படையில் வெவ்வேறு தொகைகள் ஜனாதிபதி செயலாகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணங்கள் மேற்சொன்ன அபிவிருத்தி பணிகளுக்காக நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்படுகின்றதே தவிர எந்த பாராளுமன்ற உறுப்பிருக்கும் நேரடியாக கொடுக்கப்படவில்லை. அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற தவறான விஷமப்பிரசாரங்கள் காரணமாக இவ்வறிக்கை வெளியிடப்படுகின்றது என்றுள்ளது. https://thinakkural.lk/article/308544
  25. ரஷ்யா - யுக்ரேன் போர் முனையில் என்ன நடக்கிறது? புகைப்படங்கள் உணர்த்தும் உண்மைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனில் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த பொக்ரோவ்ஸ்க் நகரை ரஷ்யப் படைகள் நெருங்குவதால் அந்நகரை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட தாயும், அவரது 2 வயது மகனும். எதிர்காலத்தை எண்ணி கலங்குகிறார் அந்த தாய். (ஆக.27) 5 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய பிறகு சுமார் இரண்டரை ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே கடும் போர் நீடிக்கிறது. கிழக்கு யுக்ரேனில் ஒரு பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதிலும், போர் முடிவுக்கு வராமல் தொடர்கிறது. ரஷ்யாவின் தாக்குதலை ஆக்கிரமிப்பு என்று கூறி அதன் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், யுக்ரேன் இழந்த பகுதிகளை மீட்க உதவியும் புரிகின்றன. இதில், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களும் அடங்கும். கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி ரஷ்யாவுக்குள் யுக்ரேன் துருப்புகள் நுழைந்த பிறகு இந்த போர் மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது. ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் ஆயிரம் ச.கி.மீ.ககும் அதிகமான நிலப்பரப்பை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக யுக்ரேன் கூறுகிறது. இதன் பிறகு யுக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யப் போர் விமானங்களும், டிரோன்களும் யுக்ரேனின் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த பின்னணியில் ரஷ்யாவிலும், யுக்ரேனிலும் என்ன நடக்கிறது? என்பதை இந்த புகைப்படத் தொகுப்பு விவரிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் எல்லையை ஒட்டியுள்ள கர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேன் படையினரின் ஆயுத தளவாடங்கள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திய காட்சி. (ஆக.8ம் தேதி, ரஷ்ய பாதுகாப்பு படை வெளியிட்ட புகைப்படம்) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனின் டொனட்ஸ்க் பிராந்தியத்தில் கிராமாடோர்ஸ்க் நகரில் சஃபயர் ஹோட்டல் அருகே ரஷ்யாவின் இஸ்கந்தர்-எம் ஏவுகணை தாக்கியதால் இடிந்து விழுந்த கட்டடத்தில் அவசர கால மீட்புக் குழுவினர். (ஆக.25) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனின் ஜபோரிஷியா பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் வீட்டை இழந்த பெண் கண்ணீர் விட்டு அழுகிறார். (ஆக.27) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு தேடி மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள் (ஆக.27) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவுக்குள் யுக்ரேன் படைகள் புகுந்துவிட்ட பிறகு, எல்லையோர சமி பிராந்தியத்தில் சோவியத் தயாரிப்பான டி-72 டாங்குகளுடன் யுக்ரேன் துருப்புகள். (ஆக.12) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போர்க் களத்தில் ரஷ்யாவுக்கு தலைவலி தரும் யுக்ரேனிய டிரோன்களை இயக்கத் தயாராகும் அந்நாட்டின் 22-வது படைப் பிரிவினர். இந்த புகைப்படம் யுக்ரேனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தில் எடுக்கப்பட்டது. (ஆக.09) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் கைப்பற்றிய சுட்ஸா நகரில் சேதடைந்த லெனின் சிலைக்கு முன்னே யுக்ரேன் ராணுவ வீரர். (ஆக.16) பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு, யுக்ரேன் துருப்புகளின் திடீர் எல்லை தாண்டிய தாக்குதலால் ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் வசித்த அந்நாட்டு மக்கள் பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்த காட்சி. பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY HANDOUT/EPA-EFE படக்குறிப்பு, கர்ஸ்க் பிராந்தியத்திற்குள் புகுந்த யுக்ரேன் படையினருக்கு எதிராக போரிட ரஷ்யா அனுப்பிய கூடுதல் துருப்புகள் அணிவகுத்துச் செல்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க தயாரிப்பான எஃப்-16 போர் விமானங்களை அதன் நட்பு நாடுகள் யுக்ரேனுக்கு வழங்கியுள்ளன. அவ்வாறு பெற்றுக் கொண்ட எஃப்-16 விமானங்களின் முன்பாக யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி. இந்த விமானங்கள் ரஷ்யாவுக்கு எதிரான போரில் தனக்கு சாதகமான திருப்புமுனையை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என்று யுக்ரேன் எதிர்பார்க்கிறது. https://www.bbc.com/tamil/articles/ce9zydr0xk3o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.