Everything posted by ஏராளன்
-
பாகிஸ்தான் - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர் செய்திகள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை முதல் தடவையாக வீழ்த்தி வரலாறு படைத்தது பங்களாதேஷ் 25 AUG, 2024 | 03:44 PM (நெவில் அன்தனி) பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் 10 விக்கெட்களால் அபார வெற்றியீட்டி வரலாறு படைத்தது. பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை விளையாடிய 14 டெஸ்ட் போட்டிகளில் பங்களாதேஷ் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். முதலாவது இன்னிங்ஸில் இரண்டு அணிகளும் கணிசமான மொத்த எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 146 ஓட்டங்களுக்கு சுருண்டு தோல்வியைத் தழுவியது. 30 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 30 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்த வெற்றியில் முஷ்பிக்குர் ரஹிம் குவித்த 191 ஓட்டங்கள், ஷத்மான் இஸ்லாம், மொமினுள் ஹக், லிட்டன் தாஸ் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள், மெஹிதி ஹசன் மிராஸின் சகலதுறை ஆட்டம் என்பன பிரதான பங்காற்றின. எண்ணிக்கை சுருக்கம் பாகிஸ்தான் 1ஆவது இன்: 448 - 6 விக். டிக்ளயார்ட் (மொஹம்மத் ரிஸ்வான் 171, சவூத் ஷக்கீல் 141, சய்ம் அயூப் 56, ஹசன் மஹ்முத் 70 - 2 விக்., ஷொரிபுல் இஸ்லாம் 77 - 2 விக்.) பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 565 (முஷ்பிக்குர் ரஹிம் 191, ஷத்மான் இஸ்லாம் 93, மெஹிதி ஹசன் மிராஸ் 77, லிட்டன் தாஸ் 55, மொமினுள் ஹக் 50, நசீம் ஷா 93 - 3 விக்., ஷஹீன் ஷா அப்றிடி 88 - 2 விக்., மொஹம்மத் அலி 88 - 2 விக்., குரம் ஷாஹ்ஸாத் 90 - 2 விக்.) பாகிஸ்தான் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 146 (மொஹம்மத் ரிஸ்வான் 51, அப்துல்லா ஷபிக் 37, மெஹிதி ஹசன் மிராஸ் 21 - 4 விக்., ஷக்கிப் அல் ஹசன் 44 - 3 விக்.) பங்களாதேஷ் (வெற்றி இலக்கு 30 ஓட்டங்கள்) 2ஆவது இன்: விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்கள் (ஸக்கிர் ஹசன் 15 ஆ.இ., ஷத்மான் இஸ்லாம் 9 ஆ.இ.) https://www.virakesari.lk/article/191938
-
குரங்கம்மை பரவல்: சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம் - எப்படிப் பரவுகிறது?
மீண்டும் உலகளாவிய சுகாதார அவசர நிலை - கொரோனா போல குரங்கம்மையும் உலகையே முடக்கிப் போடுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டோர்காஸ் வாங்கிரா மற்றும் கரோலின் கியாம்போ பதவி, சுகாதார செய்தியாளர், பிபிசி ஆப்பிரிக்கா இருந்துநைரோபி 24 நிமிடங்களுக்கு முன்னர் உலக சுகாதார நிறுவனம் (WHO) இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக குரங்கம்மையை (mpox) உலகளாவிய சுகாதார அவசர நிலையாக அறிவித்த போது, பலரின் மனதில் எழுந்த கேள்வி, இது புதிய கோவிட்-19 தொற்றா? என்பதுதான். விஞ்ஞானிகளும் சுகாதார நிபுணர்களும் கோவிட் சூழலோடு குரங்கம்மையை ஒப்பிட்டு கவலைப்படுவது சரிதான் என்கிறார்கள். அதே சமயம் கோவிட்-19 மற்றும் குரங்கம்மை ஆகியஇரண்டும் ஒன்று கிடையாது என்கின்றனர். “எம்பாக்ஸ் தொற்றை `புதிய கோவிட்’ என்று சொல்வது சரி அல்ல. கோவிட்டை ஒப்பிடும் போது இதில் பொது மக்களுக்கான ஆபத்து குறைவு” என்று ஐரோப்பாவுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் க்ளூக் கூறுகிறார். "எம்பாக்ஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது எங்களுக்குத் தெரியும். ஐரோப்பாவில், அதன் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் அறிவோம்.” இரண்டு நோய்களும் வைரஸ் தொற்றால் ஏற்படுகின்றன. இரு தொற்றுகளும் வெவ்வேறு அறிகுறிகளை கொண்டுள்ளன. அவை வெவ்வேறு வழிகளில் பரவுகின்றன. கென்யாவின் ஆகா கான் பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர் ஆலோசகரான பேராசிரியர் ரோட்னி ஆடம் கூறுகையில், "இரண்டு நோய் தொற்றுகளுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகளை விட வேறுபாடுகள் குறிப்பிடத்தக்கவை. என்றார். கோவிட் , குரங்கம்மை இடையிலான ஐந்து வேறுபாடுகளை விரிவாகப் பார்க்கலாம். 1. எம்பாக்ஸ் ஒரு புதிய வைரஸ் அல்ல டென்மார்க்கில் பிடிக்கப்பட்ட குரங்குகளில் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. 1958 ஆம் ஆண்டு இது கண்டறியப்பட்ட போது இதனை குரங்கம்மை என்று அழைத்தனர். தற்போது எம்பாக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் 1970 ஆம் ஆண்டு முதன்முதலில் ஒருவருக்கு எம்பாக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் தொற்று பரவியது. 2022 ஆம் ஆண்டில் இது உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டது, அதன்பிறகு இந்த நோய் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. இதற்கு நேர்மாறாக, சீனாவின் வுஹானில் 2019 ஆம் ஆண்டு பரவிய கோவிட் -19, மிக விரைவில் உலகளாவிய தொற்றுநோயாக மாறியது, இது ஒரு புதிய வகை வைரஸால் ஏற்பட்டது. ``SARS-CoV2’’ - இதற்கு முன்னர் இந்த நோய்தொற்று மனிதர்களுக்கு மத்தியில் கண்டறியப்படவில்லை. சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்ட போது கோவிட்-19 பற்றி நாம் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. ஆனால் எம்பாக்ஸ் பற்றி தற்போது எங்களுக்கு அதிகம் தெரியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2. கோவிட்-19 போன்று எம்பாக்ஸ் அதிகம் பரவக்கூடியது அல்ல இரண்டு நோய்களும் நெருங்கிய தொடர்பு மூலம் பரவினாலும், கோவிட்-19 காற்றின் வாயிலாக பரவுவதால் வேகமாக பரவுடத. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து இருமல், தும்மல், பேசுவது, பாடுவது அல்லது சுவாசிப்பது போன்றவற்றின் மூலம் கோவிட்-19 அடுத்தவருக்கு பரவலாம். எம்பாக்ஸ் பாதிக்கப்பட்ட நபருடன் மிக நெருக்கமான அல்லது நீடித்த தொடர்பினால் பரவுகிறது, அதாவது உடலுறவு, அசுத்தமான படுக்கை மற்றும் ஆடைகளுடன் தொடர்பு, மற்றும் நீண்ட நேரமாக நேருக்கு நேர் தொடர்பு ஆகியவற்றின் மூலம் பரவுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, டிசம்பர் 2019 மற்றும் ஆகஸ்ட் 2023 க்கு இடையில் உலகளவில் 76 கோடிக்கும் அதிகமான கோவிட்-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் உலகளவில் எம்பாக்ஸ் நோய்த்தொற்றுகள் 1,00,000 ஐ எட்டுவதற்கு மே 2022 முதல் இரண்டு ஆண்டுகள் ஆனது. 2024 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் (ஆப்பிரிக்கா CDC) 18,910 நோயாளிகள் மற்றும் கிட்டத்தட்ட 600 இறப்புகள் பதிவாகியுள்ளன. சிறுத்தை நேருக்கு நேராக வந்தால் தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,தோல் புண்கள் எம்பாக்ஸின் முக்கியமான அறிகுறிகளில் ஒன்றாகும் 3. எம்பாக்ஸ் தடுப்பூசிகள் ஏற்கனவே உள்ளன கோவிட்-19 தொற்றுநோயின் தொடக்கத்தில் தடுப்பூசிகளை உருவாக்க பெரும் போட்டி நிலவியது. ஆனால் எம்பாக்ஸுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் தடுப்பூசிகள் இப்போது கிடைக்கின்றன. எம்பாக்ஸ் பெரியம்மை நோயுடன் தொடர்புடையது. பெரியம்மை என்பது 1980இல் தடுப்பூசி மூலம் உலகம் முழுவதும் ஒழிக்கப்பட்ட நோயாகும். பெரியம்மைக்கு எதிராக செயல்பட்ட தடுப்பூசிகள் குரங்கம்மைக்கு எதிரான பாதுகாப்பையும் அளித்தன. குறிப்பாக 2022இல் நோய் தொற்று பரவிய போது, பெரியம்மை தடுப்பூசி போடப்பட்டது. "இது 100% பாதுகாப்பானது அல்ல, ஆனால் 2022 முதல் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் ஏற்பட்ட பெரிய பரவலின் அடிப்படையில், வயதானவர்களுக்கு தற்காப்பு தருகிறது. பெரியம்மை தடுப்பூசியால் அவர்கள் குரங்கம்மை பரவாமல் தடுப்பதற்கு, ஓரளவு பாதுகாப்பை பெறுகின்றனர்." என்று பேராசிரியர் ஆடம் கூறுகிறார். பவேரியன் நோர்டிக் என்னும் நிறுவனம் ``MVA-BN’’ என்னும் தடுப்பூசியின் 15 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்களை வழங்கியது. பெரியம்மை தடுப்பூசியை அடிப்படையாகக் கொண்ட ஒரு எம்பாக்ஸ் தடுப்பூசி - 2022 பரவலின் போது உலகம் முழுவதும் 76 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டது. 4. எம்பாக்ஸ் வைரஸ் கொரோனா வைரஸை விட மெதுவாக வீரியம் அடைகிறது வைரஸ்கள் காலப்போக்கில் வீரியம் அடைந்து உருமாறுகின்றன, ஆனால் சில வைரஸ்கள் அதி வேகமாக மாறுகின்றன. எம்பாக்ஸ் டிஎன்ஏ வைரஸால் ஏற்படுகிறது மற்றும் கோவிட்-19 ஆர்என்ஏ வைரஸால் ஏற்படுகிறது. அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோபயாலஜி கூற்றுப்படி டிஎன்ஏ வைரஸ்கள், ஆர்என்ஏ வைரஸ்கள் போல சுதந்திரமாக உருமாறுவதில்லை. எம்பாக்ஸ் வைரஸின் அறியப்பட்ட இரண்டு குடும்பங்கள் அல்லது கிளேடுகள் (clade) உள்ளன - கிளேட் 1 மற்றும் கிளேட் 2. SARS-CoV2 வைரஸ் 20 க்கும் மேற்பட்ட அறியப்பட்ட கிளேட்களைக் கொண்டுள்ளது. தற்போதைய பரவல் பெரும்பாலும் `கிளேட் 1 பி’ எனப்படும் கிளேட் 1 வைரஸால் இயக்கப்படுகிறது. "கிளாட் 1பி ரக வைரஸ் பெரும்பாலும் பாலியல் ரீதியான பரவுதலில் இருந்து வெளிவருகிறது. அதே சமயம் ஒரே வீட்டுக்குள் இருக்கும் நபர்களுக்கு மத்தியில் பரவுவதையும் நாங்கள் காண்கிறோம் : தாயிடமிருந்து குழந்தைக்கு, குழந்தைகளிடம் இருந்து பிற குழந்தைக்கு பரவும்" என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி பேராசிரியர் ட்ரூடி லாங். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, சென்னை விமான நிலையத்தில் எம்பாக்ஸ் பற்றி பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் 1பி ரக வைரஸ்கள் மற்ற ரகங்களை விட எளிதில் பரவுகிறதா என்பது தெரியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்கள் அறிந்தது என்னவென்றால், சமீபத்திய பரவலில் பாதிக்கப்பட்டவர்கள் நோய் இருப்பதாக அறிவிக்கும் நேரத்தில் ஏற்கனவே கடுமையான அறிகுறிகளை கொண்டுள்ளனர். 5. பொது முடக்கம் போன்ற சூழல் வர வாய்ப்பில்லை கோவிட் தொற்றுநோயின் போது நாம் பார்த்தது போல, எம்பாக்ஸ் பரவல் பொது ஊரடங்கு சூழலை உருவாக்கும், உலகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் என்று பலர் கவலைப்படுகிறார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நோய் ஆப்பிரிக்காவின் 16 நாடுகளில் பரவியிருந்தாலும் எந்த எல்லைகளையும் மூட பரிந்துரைக்கப்படவில்லை. "ஆப்ரிக்காவின் நோய் பரவலை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு மைய சிடிசி ஆய்வுகளின்படி எம்பாக்ஸ் மக்கள் மற்றும் பொருட்களின் இயக்கத்திற்கு இடையூறு விளைவிக்காது" என்று ஏஜென்சியின் தலைமை இயக்குeர் டாக்டர் ஜீன் கசேயா கூறினார். "கடந்த காலத்தில் இருந்ததைப் போலவே மக்களின் இயல்பு வாழ்க்கை தொடரும். அதே நேரத்தில் இந்த தொற்று பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான கருவிகளை நாங்கள் வழங்குகிறோம்." என்றார் அவர். உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மைக் ரியான் இதனை ஒப்புக்கொள்கிறார். "எம்பாக்ஸ் என்பது ஒரு வைரஸ் ஆகும், இது நாம் சரியான நேரத்தில் சரியான விஷயங்களைச் செய்து நம் அனைவரையும் ஒன்றிணைத்தால் கட்டுப்படுத்தலாம். கோவிட்க்காக நாம் செய்ததைப் போல போராட வேண்டும்” என்று மைக் ரியான் கூறுகிறார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் 2பி எம்பாக்ஸ் கிளேடின் தொற்று கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. எம்பாக்ஸ் பொதுவாக குறைவான அபாயம் கொண்ட நோய்தொற்று. பெரும்பாலான மக்கள் இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் குணமடைகிறார்கள். சிலர் கடுமையான நோய்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட நபர்கள், பொருட்கள் அல்லது விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பதன் மூலம் தொற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். புண்கள் மற்றும் காயங்களைத் தொட்ட பிறகு, கைகளைக் கழுவுதல் அல்லது சானிட்டைசர்களை பயன்படுத்துவது குறித்தும் அறிவுறுத்தப்படுகிறது. "தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்பதை நாங்கள் அறிவோம், எனவே தற்போது எங்களிடம் சிறந்த நோய் தடுப்பு கருவிகள் உள்ளன" என்கிறார். "எனவே, கோவிட் போன்ற ஒரு தொற்றுநோய் சூழல் ஏற்பட இம்முறை சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன்." என்கிறார் பேராசிரியர் ரோட்னி. https://www.bbc.com/tamil/articles/cn0lgp65z52o
-
ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - மூவர் பலி
ஜேர்மனி கத்திக்குத்து தாக்குதல் - சிரியாவை சேர்ந்த 26 வயது இளைஞன் கைது 25 AUG, 2024 | 01:25 PM ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டு மூவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் சிரியாவை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தானாக முன்வந்து சரணடைந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கத்திக்குத்து தாக்குதலிற்கும்இந்த நபருக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் இடம்பெற்று 24 மணிநேரத்திற்கும் மேல் சந்தேகநபரை தேடிவருவதாக ஜேர்மனியின் பொலிஸார் தெரிவித்துள்ள நிலையிலேயே கைது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது. சந்தேகநபர் சொலிங்ஜெனில் உள்ள அகதிகளிற்கான வீட்டை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் ஆடைகளில் இரத்தக்கறை காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/191924
-
லெபனானில் உள்ள ஹெஸ்புலா இலக்குகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்
இஸ்ரேல் மீதான பாரிய தாக்குதல் ஆரம்பம் - ஹெஸ்புல்லா Published By: RAJEEBAN 25 AUG, 2024 | 10:51 AM இஸ்ரேல் மீது பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ள தாக தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு 350 ரொக்கட்களை இஸ்ரேலை நோக்கி செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் 11 இலக்குகளை இலக்குவைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளோம் ஆளில்லா விமானங்களையும் கட்டுசா ரொக்கட்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதலின் முதற்கட்டம் பூர்த்தியாகியுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இது இஸ்ரேலின் தளங்கள் முகாம்களை இலக்குவைக்கும் தாக்குதல் என ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/191909
-
ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவது ஏன்?
நாட்டு மக்களுக்காகவே நாட்டை பொறுப்பேற்றேன்; இன்று சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன் - ஜனாதிபதி 25 AUG, 2024 | 02:22 PM 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம், மக்களுக்காக இந்த நாட்டின் பொறுப்பை ஏற்று, நாட்டில் நிலவும் சிக்கலான சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வந்து பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த பாடுபட்ட நான் இன்று, நாட்டு மக்களுக்காகவே சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யாரும் ஏற்றுக்கொள்ள விரும்பாத நாட்டை பொறுப்பேற்ற தான் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் வேளையில், தேர்தலைக் கோரி நீதிமன்றத்திற்குச் சென்று ரஞ்சித் மத்தும பண்டாரவும் ஹரிணி அமரசூரியவும் நான் அடிப்படை உரிமைகளை மீறியதாக நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுள்ளனர். சிக்கலில் இருந்து மக்களை விடுவிப்பதன்றி, அதிகாரத்தைப் பெறுவதே அவர்களின் நோக்கம் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தம்புள்ளை பொது சந்தை கட்டடத்தொகுதி வளாகத்தில் நேற்று சனிக்கிழமை (24) பிற்பகல் நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' மாத்தளை மாவட்ட வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் மாத்தளை மாவட்டத்தில் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதோடு ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தொலைநோக்குப் பார்வையும் செயற்றிட்டமும் இல்லாமல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தை மாத்திரம் கொண்ட குழுவினரிடம் இந்நாட்டை ஒப்படைத்தால் நாடு அழிவதைத் தடுக்க முடியாது என்று தெரிவித்தார். எனவே இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் கடந்த இரண்டு வருடங்களாக கஷ்டப்பட்டு பெற்ற வெற்றிகளைப் பாதுகாத்து முன்னோக்கிச் செல்ல தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ''நான் எதற்காக சுயாதீன வேட்பாளராக களமிறங்குகிறேன். எதற்காக அப்படி செய்கிறேன். உங்களுக்காக போராடவும், உங்களுக்கு சலுகை வழங்கவும், அடுத்த தலைமுறைக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கும், சரியான பாதையில் நாட்டை கொண்டு செல்லவுமே நான் சுயாதீனமாக களமிறங்கினேன். அன்று நாட்டில் வன்முறை தலையெடுத்திருந்தது. அதனை கட்டுப்படுத்த வேண்டி அவசியம் காணப்பட்டது. அதற்காக நான் முன் வந்திருக்காவிட்டால் பங்களாதேஷின் நிலைமையே இலங்கைக்கும் வந்திருக்கும். அந்த நேரத்தில் கட்சி பற்றி சிந்திக்காமல் நாட்டைப் பற்றி சிந்தித்து தீர்மானம் எடுக்க முன்வந்தேன். நாட்டில் தற்போது மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறேன். இந்த பணிகள் தொடர வேண்டும். எதிர்கட்சித் தலைவருக்கும் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அவர் மாற்று பிரதமருக்கு நிகரானவர். நெருக்கடி வந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் அந்த பொறுப்புக்களை மறந்து ஓடிவிட்டார். நெருக்கடியான காலத்தை நாடு எதிர்கொண்டது. அதிலிருந்து மீண்டு வர கஷ்டமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. அதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்கிய தரப்பினருடன் பேசி இணக்கப்பாடுகளை எட்டினோம். சில தீர்மானங்கள் மக்களுக்கு சுமையாக அமைந்தன. அதனை பொறுத்துக்கொண்ட மக்களுக்கு நன்றி கூறுகிறேன். நாம் அதனை செய்திருக்காவிட்டால் நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும். நாம் மேற்கொண்ட முயற்சிகள் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்துள்ளது. ரூபாவின் பெறுமதியும் வலுவடைந்திருக்கிறது. சிறுநீரக நோயாளர்களுக்கு நிவாரணம் வழங்கினோம். 24 இலட்சம் பேருக்கு அஸ்வெசும வழங்கினோம். இலசவசமாக அரிசி வழங்கினோம். அடுத்த வருடத்திலிருந்து அரச ஊழியர்களின் வாழ்வாதார கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும். அதனால் அடிப்படை சம்பளம் 55 ஆயிரமாக உயர்வடையும். முதியோரின் நிலையான வைப்புக்களுக்கு 10 சதவீத வட்டி வழங்குகிறோம். பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கினோம். வங்குரோத்து அடைந்திருந்த நாட்டிலேயே இவற்றைச் செய்தோம். மூடிக்கிடந்த பாடசாலைகளை மீள ஆரம்பித்தோம். 'உறுமய' திட்டத்தின் கீழ் 20 இலட்சம் பேருக்கு காணி உறுதி வழங்குவோம். தேர்தல் காரணமாக அந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மீள ஆரம்பிக்கப்படும். தேவையான பயிற்றுவிக்கப்பட்ட தொழில் படையை உருவாக்க வேண்டும். திருகோணமலை அபிவிருத்தி செய்யப்பட்டு முதலீட்டு வலயங்களை அமைப்போம். நெல் உற்பத்தி அதிகப்படுத்தப்படும். விவசாயத்தை நவீனமயப்படுத்துவோம். பொருட்களின் விலையை பெருமளவில் குறைத்திருக்கிறோம். குறிப்பாக கேஸ் விலை குறைந்துள்ளது. அதனாலேயே சிலிண்டர் சின்னத்தை தெரிவு செய்தேன். இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய 18 நாடுகள் கால அவகாசம் வழங்கியுள்ளன. இதனை முன்னோக்கி கொண்டு செல்வோம். ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியும் வரிகளை நீக்க போவதாக கூறுகிறார்கள். அவ்வாறு செய்தால் 2022 இன் நிலைமைக்கு நாம் மீண்டும் செல்ல வேண்டியிருக்கும். தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் கோரின. மக்கள் வாழ்க்கையைக் குழப்புவதே எதிர்கட்சியினருக்கு தேவையாகவுள்ளது. எனக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பை பெற்றுள்ளனர். மக்களுக்காக எதையும் செய்வேன். செப்டெம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் கேஸ் இல்லை என்று கவலைப்பட நேரிடும்.“ என்றார். பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க "நாட்டின் அனதை்து இன மக்களும் ஜனாதிபதியை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர். கடந்த இரு வருடங்களில் மின்சாரம், கேஸ், சம்பளம் இல்லாமல் தவித்த மக்களுக்கு ஜனாதிபதி எவ்வாறு தீர்வு வழங்கினார் என்பதை மக்கள் அறிவர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றிருக்காவிட்டால், பங்களாதேஷ் போன்ற நிலைமை இலங்கையில் ஏற்பட்டிருக்கும். அன்று ஜே.வி.பி. பாராளுமன்றத்தையும் சுற்றி வளைக்க முட்பட்டது.. 2 வருடங்களுக்கு முன்பே இலங்கையை பங்களாதேஷ் போன்று நெருக்கடிக்குள் தள்ளுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. மக்கள் பிரச்சினைகளுக்கு பேச்சளவில் இல்லாமல் நடைமுறையில் தீர்வு வழங்கியுள்ளார். கடந்த இரு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த வேலைத்திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்." என்றார். இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க "நாங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான மேடைகளிலேயே அதிகமாக அமர்ந்திருக்கிறோம். ஆனால் கடந்த இரு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளைப் பார்த்த பின்னர் அவரை மேலும் பலப்படுத்த தீர்மானித்தோம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 70 இலட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவார்." என்றார். முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ''2 வருடங்களுக்கு முன்னர் தம்புள்ள பொருளாதார நிலையம் இருந்த நிலையை சற்று நினைத்துப் பாருங்கள். ரணில் விக்ரமசிங்க 5 கூட்டங்கள் மாத்திரம் தான் நடத்தியுள்ளார். தற்போது முதலிடத்தில் அவர் தான் இருக்கிறார். 90 கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. அவை நடந்து முடியும்போது 70 இலட்சம் வாக்குகளை ரணில் விக்ரமசிங்க பெறுவார். அவர் சொல்வதை சற்று மெருகூட்டி சஜித் சொல்கிறார். இன்னும் அவருக்கு ரணில் தான் தலைவர். முதுகெலும்புள்ளவர் தான் தலைவர். சவால்களை ஏற்கும் நபர்தான் தலைவர். இது பரீட்சார்த்தமாக செய்து பார்க்கும் சந்தர்ப்பமல்ல. அஸ்வெசும, உறுமய திட்டத்தை தொடர்வீர்களா என்பதை சஜித்தும் அநுரவும் இதுவரை சொல்லவில்லை. அந்தத் திட்டங்களைத் தொடர ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவாக வேண்டும். கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்தி தேநீர் அருந்தி விட்டுத்தான் அனைவருக்கும் தேர்தல் தினத்தில் வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும்'' என்றார். இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ”தம்புள்ள என்பது முடியாது என்றவற்றை முடியும் என்று மாற்றிய பூமியாகும். கொரோனாவின் போது முழு நாடும் மூடப்பட்டிருந்த வேளை பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து உண்பதற்குக் கொடுத்த பிரதேசம் இது. ஒருநாளும் இணைய முடியாது என்று கூறப்பட்ட 75 வருடங்கள் ஐ.தே.கவும் எமது கட்சியும் பிளவுபட்டன. தொடர்ச்சியான பிரச்சினைகள் எம்மை இணைத்தது. அதனால் தான் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க முடிந்தது. தமது அரசியல் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் நாட்டின் பிரச்சினைகளை இரட்டிப்பாக்குவதற்கு ஏனைய தலைவர்கள் முயன்றார்கள். எம்மை இணைத்துக் கொண்டு ரணில் விக்ரமசிங்க நாட்டை மீட்டெடுத்தார். நாம் கடுமையாக முடிவை எடுத்து உங்களை ஆதரித்தோம். எமது மக்களும் அவ்வாறே உங்களை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். தப்பி ஓடுபவனுக்கு இராணுவத்தில் மரியாதையில்லை. எமது அரசியல் தலைவர்களிடையே தப்பி ஓடாத பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கிய தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே. பயந்தாங்கொள்ளிகளுக்குப் பின்னால் செல்ல முடியாது'' என்றார். https://www.virakesari.lk/article/191926
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் - ஷிகர் தவான்
ரோஹித்துக்கு இணையாக சிறந்த தொடக்க வீரராக ஜொலித்த ஷிகர் தவண் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷிகர் தவண் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 24 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது 25 ஆகஸ்ட் 2024 “2005 சேலஞ்சர்ஸ் கோப்பையில் இருவருமே ரன்கள் குவித்துள்ளோம். இந்திய அணியில் என்னை வெளிப்படுத்திக் கொள்ள எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், ஷிகர் வாழ்க்கையில் ஏராளமான ஏற்ற, இறக்கங்கள் வந்தன. இருப்பினும் பேட்டிங்கில் அவரின் நிலைத்தன்மை மாறவில்லை. வீரேந்திர சேவாக், கம்பீர், சச்சின் போன்று தொடக்க வீரராக ஜொலிப்பது சற்று கடினம்தான். இறுதியாக தவணுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. அவர் நிச்சயம் பெரிய தொடக்க ஆட்டக்காரராக வருவார் என நம்புகிறேன்” ஷிகர் தவண் குறித்து இவ்வாறு நம்பிக்கை மிகுந்த வார்த்தைகளை பேசியது கூல்கேப்டன் மகேந்திர சிங் தோனிதான். தோனியின் வார்த்தைகளுக்கு ஏற்ப ஷிகர் தவண், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடி ரசிகர்களால் “மிஸ்டர் ஐசிசி”, “கப்பார் சிங்” என பாராட்டப்பட்டார். இந்திய அணியில் ஒரு தசாப்தமாக கோலோச்சிய பேட்டர் ஷிகர் தவணுக்கு, கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. கடைசியாக 2022, டிசம்பரில் சிட்டகாங்கில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில்தான் தவண் இந்திய அணியில் விளையாடினார். இதன்பின் இந்திய அணியில் சேர்க்கப்படாத நிலையில், அவர் திடீரென ஓய்வை அறிவித்துள்ளார். சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் தவண் தெரிவித்தார். ஒரு தசாப்தமாக கோலோச்சியவர் இந்திய அணிக்குள் 2010ம் ஆண்டு முதல் ஒரு தசாப்த ஆண்டுகளுக்கு ஷிகர் தவண் தொடக்க பேட்டராக சிறப்பாக ஆடினார். ஷிகர் தவண் தனியாளாக களத்தில் நின்று பல போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றித் தேடித் தந்துள்ளார். குறிப்பாக 2013ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு ஷிகர் தவணின் பேட்டிங் முக்கியக் காரணமாக இருந்தது. அந்தத் தொடரில் தவண் தொடர் நாயகன் விருதையும் வென்றார். பட மூலாதாரம்,TWITTER படக்குறிப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் தவண் தெரிவித்தார். 2 தங்க பேட் வென்றவர் 2015ம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன் சேர்த்த பேட்டராக ஷிகர் தவண் ஜொலித்தார். 2013, 2017ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அதிக ரன் சேர்த்த பேட்டருக்கு வழங்கப்படும் தங்க பேட் விருதையும் ஷிகர் தவண் பெற்றார். இருமுறை தொடர்ச்சியாக தங்க பேட் பெற்ற ஒரே வீரரும் ஷிகர் தவண் மட்டும்தான். உள்நாட்டு தொடர்களில் திறமையை நிரூபித்து இந்திய அணிக்குள் ஷிகர் தவண் இடம் பிடித்தார். அணியில் தனக்குரிய இடத்தைப் பிடித்த தொடக்கத்தில் சற்று தடுமாறிய தவண், பின்னர் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராகக் களமிறங்கி உலக அணிகளுக்கு மிரட்டலாக இருந்தார். சச்சின், கங்குலிக்கு அடுத்தபடியாக... சச்சின் - கங்குலிக்கு ஜோடிக்கு அடுத்தார்போல் இந்திய அணியில் வெற்றிகரமான தொடக்க ஜோடியாக ரோஹித் சர்மா - ஷிகர் தவண் ஜொலித்தனர். இருவரும் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கி 115 இன்னிங்ஸ்களில் 5148 ரன்களைக் குவித்துள்ளனர். 18 சத பார்ட்னர்ஷிப்களையும் இருவரும் விளாசியுள்ளனர், உலக கிரிக்கெட்டில் அதிகமான பார்ட்னர்ஷிப் வைத்த 4வது ஜோடி என்ற பெருமையையும் இருவரும் பெற்றனர். இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் சேவாக் - கம்பீர் சகாப்தம் முடிந்தவுடன் ரோஹித் - தவண் சகாப்தம் தொடங்கியது. சேவாக், சச்சின், கம்பீருக்கு அடுத்தார்போல் அடுத்த சிறந்த தொடக்க ஜோடியை இந்திய அணி தேடிய நிலையில் ரோஹித் - தவண் ஜோடி அதனை பூர்த்தி செய்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியில் வெற்றிகரமான தொடக்க ஜோடியாக ரோஹித் சர்மா - ஷிகர் தவண் ஜொலித்தனர். சவாலான அறிமுகம் ஷிகர் தவணின் சர்வதேச அறிமுகமே சவாலாக இருந்தது. டெஸ்ட்(2013) மற்றும் ஒருநாள் போட்டியில்(2010) வலிமை மிகுந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தவண் அறிமுகமானார். இதில் 2013ம் ஆண்டு மொஹாலியில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 85 பந்துகளில் சதம் அடித்து, 44 ஆண்டுகளாக குண்டப்பா விஸ்வநாத் வைத்திருந்த சாதனையை தவண் முறியடித்தார். அந்த போட்டியில் தவண் 187 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்த அறிமுக டெஸ்ட்தான் தவணின் கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. தவிர்க்க முடியாத வீரர் அதன்பின் இந்திய அணியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தவிர்க்க முடியாத வீரராக தவண் இருந்தார். குறிப்பாக 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2014 ஆசியக் கோப்பை, 2015 ஐசிசி உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2018 ஆசியக் கோப்பை ஆகியவற்றில் தவணின் பேட்டிங் மிரட்டலாக இருந்தது. இதுவரை 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தவண் 7 சதங்கள் உள்பட 2,315 ரன்களும், 167 ஒருநாள் போட்டிகளில் 17 சதங்கள்,39 அரைசதங்கள் உள்பட 6,793 ரன்களும் குவித்துள்ளார். 68 டி20 போட்டிகளில் பங்கேற்ற தவண், 11 அரைசதங்கள் உள்பட 1759 ரன்களையும் சேர்த்துள்ளார். 2010ம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமான தவண், 5 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து, 40 ரன்கள் சராசரி, 90க்கும் அதிகமாக ஸ்ட்ரைக் ரேட் வைத்த உலகின் 8 பேட்டர்களில் தவணும் ஒருவர். ஷிகர் தவணின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2013ம் ஆண்டுதான் உச்சமாக இருந்தது. 2013ம் ஆண்டில் 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தவண் 5 சதங்கள் உள்பட 1,162 ரன்கள் குவித்து, 50 ரன்கள் சராசரியும் 97 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். அதிலும் 5 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் உள்பட 363 ரன்களை தவண் குவித்தார். அது மட்டுமல்ல, டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்பாக சதம் அடித்த முதல் இந்திய பேட்டர் என்ற பெருமையும் தவணையே சேரும். 2021ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்பாகவே தவண் சதம் அடித்து சாதனை படைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷிகர் தவண் (கோப்புப் படம்) இளமை வாழ்க்கை டெல்லியில் 1985ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி பஞ்சாபி குடும்பத்தில் ஷிகர் தவண் பிறந்தார். இவரின் பெற்றோர் சுனைனா மற்றும் பால் தவண். டெல்லியில் உள்ள புனித மார்க் சீனியர் மேல்நிலைப் பள்ளியில் தவண் பள்ளிப்படிப்பை முடித்தார். தனது 12 வயதில் தவண் கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கினார். மூத்த பயிற்சியாளர் தாரக் சின்ஹா தலைமையில் தவணுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டது. தாரக் சின்ஹா 12 சர்வதேச கிரிக்கெட் வீரர்களை தனது பயிற்சியில் உருவாக்கியவர் என்பதால் அவரிடம் தவண் சேர்க்கப்பட்டார். தொடக்கத்தில் தவணின் உடல்வாகு, திறமையைப் பார்த்து விக்கெட் கீப்பராக பயிற்சி அளிக்கப்பட்டது. அவரும் விக்கெட் கீப்பராகவே பயிற்சி எடுத்து, பின்னர் முழுநேர பேட்டராக மாறினார். பேட்டிங் ஸ்டைல் டெல்லியிலிருந்து இந்திய அணிக்குள் வந்த முக்கியமான பேட்டர்களில் ஷிகர் தவண் முக்கியமானவர். இடது கை பேட்டரான தவண், பேட் செய்யும் விதமே அலாதியானது. பேட்டை தூக்கி, முதுகை நிமிர்த்தி நின்றுதான் தவண் எந்த பந்தையும் எதிர்கொள்வார். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் லேன்ஸ் க்ளூஸ்னர் ஸ்டைலில் பேட்டை ஸ்டெம்புக்கு உயரே தூக்கிவைத்து தவண் பேட்டிங் செய்யும் பாணியை கடைசிவரை கடைபிடித்தார். இதனால் பவுன்ஸர் பந்துகளையும், கவர் ட்ரைவ் ஷாட்களையும் எளிதாக தவணால் ஆட முடிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷிகர் தவண் (கோப்புப் படம்) கிரிக்கெட் வாழ்க்கை 16 வயதுக்குட்பட்டோருக்கான அணி, 19வயதுக்குட்பட்டோருக்கான அணிகளில் இடம் பெற்று கிரிக்கெட் விளையாடி படிப்படியாக ஷிகர் தவண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். டெல்லி அணிக்காக கூச் பிகார் கோப்பை, விஜய் மெர்சன்ட் கோப்பை ஆகியவற்றில் தவணின் சதங்கள் அவரை திரும்பிப் பார்க்கச் செய்தன. 2004ம் ஆண்டு 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் ஷிகர் தவண் இந்திய அணியில் அதிக ரன் சேர்த்த பேட்டராக திகழ்ந்தார். இந்தத் தொடரில் தவண் 505 ரன்களைக் குவித்தார். 2004ம் ஆண்டு முதல் டெல்லி அணிக்காக முதல் தரப் போட்டிகளிலும், ரஞ்சி சீசனிலும் ஷிகர் தவண் ஆடத் தொடங்கினார். ரஞ்சி சீசனில் அறிமுகப் போட்டியில் 49 ரன்கள் அடித்த தவண் அந்த சீசனில் 6 போட்டிகளில் 461 ரன்கள் குவித்தார். 122 முதல் தரப் போட்டிகளில் ஆடிய தவண் 25 சதங்கள், 29 அரைசதங்கள் உள்பட 8499 ரன்களையும், 302 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 30 சதங்கள், 67 அரைசதங்கள் உள்பட 12074ரன்களையும் சேர்த்துள்ளார். 2007-08ம் ஆண்டு ரஞ்சி சீசனில் டெல்லி அணி சாம்பியன் பட்டம் வென்றதில் ஷிகர் தவணின் பேட்டிங் முக்கியப் பங்காற்றியது. அந்த சீசனில் மட்டும் தவண் 8 போட்டிகளில் 570 ரன்கள் குவித்திருந்தார். உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி தனது பேட்டிங் ஃபார்மை நிரூபித்து இந்திய அணிக்குள் தவண் இடம் பெற்றார். இந்திய அணியில் இடம் பெற்ற நிலையிலும், எப்போதெல்லாம் தனது பேட்டிங் ஃபார்மில் தொய்வு ஏற்படுகிறதோ அப்போது தன்னை அணியிலிருந்து விடுவித்து, உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி தனது ஃபார்மை மெருகேற்றுவதை தவண் வழக்கமாக வைத்திருந்தார். இந்திய அணிக்குள் அறிமுகம் உள்நாட்டுப் போட்டிகளில் ஷிகர் தவணின் ஆட்டத்தைப் பார்த்து 2010ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் விளையாட தவணுக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விசாகப்பட்டிணத்தில் களமிறங்கிய தவண், பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. அதைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணித்த இந்திய அணியிலும் தவண் இடம் பெற்றாலும், அதிலும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. 2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான் ஷிகர் தவணின் கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது. சேவாக், முரளி விஜய், தவண் மூவரும் இந்திய அணியில் டெஸ்ட் தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் சேவாக் மோசமாக ஆடவே, மொஹாலியில் நடந்த 3வது டெஸ்டில் விளையாட தவணுக்கு வாய்ப்புக் கிடைத்து அறிமுகமானார். முதல் போட்டியிலேயே தவண் 85 பந்துகளில் சதம் அடித்தார். அந்த ஆட்டத்தில் அவர் 187 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டிக்குப் பின் இந்திய அணியில் தவிர்க்க முடியாத பேட்டராக தவண் உருவெடுத்தார். அவ்வப்போது சில போட்டிகளில் ஃபார்மின்றி தவண் தவித்தாலும் தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இந்திய அணியில் தனக்குரிய இடத்தை தவண் தக்கவைத்தார். 2017ம் ஆண்டு சாம்பியன்ஷ் டிராபி, 2017ம் ஆண்டு இலங்கை பயணம், 2018 தென் ஆப்பிரிக்கத் தொடர் ஆகியவற்றில் தவணின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது. 2018, பிப்ரவரி10ம் தேதி தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக தனது 100-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய தவண் சதம் அடித்தார். 100-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய பேட்டராகவும் தவண் திகழ்ந்தார். 2018 ஆஸ்திரேலியத் தொடர், 2019 ஐசிசி உலகக் கோப்பை ஆகியவற்றிலும் தவணின் பேட்டிங் சிறப்பாக அமைந்தது. பட மூலாதாரம்,TWITTER ஐபிஎல் வாழ்க்கை ஐபிஎல் டி20 தொடரில் 2008 முதல் டெல்லி டேர்டெவில்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 5 அணிகளில் இடம் பெற்று தவண் விளையாடினார். இதில் 2013 முதல் 2018ம் ஆண்டுவரை சன்ரைசர்ஸ் அணிக்காக தவண் ஆடினார். 2019 முதல் 2021வரை டெல்லி கேபிடல்ஸ் அணிக்காகவும், 2022 முதல் 2024 வரை பஞ்சாப் அணிக்காகவும் தவண் விளையாடினார். 2018ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்காக கேப்டனாக இருந்த தவண், இறுதிப்போட்டிவரை அணியை அழைத்துச் சென்றார். பைனலில் சன்ரைசர்ஸ் அணி சிஎஸ்கே அணியிடம் தோல்வி அடைந்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே தொடர்ந்து 2 போட்டிகளில் சதம் அடித்த முதல் பேட்டர் ஷிகர் தவண் மட்டும்தான். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் அதிகமான ரன் குவித்த பேட்டர்கள் வரிசையில் விராட் கோலிக்கு அடுத்தார்போல், தவண் 222 போட்டிகளில் 6,769 ரன்கள் குவி்த்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷிகர் தவண் (கோப்புப் படம்) சறுக்கிய தனிப்பட்ட வாழ்க்கை ஷிகர் தவணின் கிரிக்கெட் வாழ்க்கை ஏற்ற, இறக்கங்கள் நிறைந்ததாக சில நேரங்களில் போராட்டம் நிறைந்ததாக இருந்தது. ஆனால், அனைத்தையும் முறியடித்து, இந்திய அணிக்குள் வெற்றிகரமான பேட்டராக வலம் வந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி அடைந்தார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆயிஷா முகர்ஜியுடன் ஷிகர் தவணுக்கு அறிமுகம் கிடைத்தது. முகர்ஜியை தவணுடன் அறிமுகம் செய்து வைத்தவர் ஹர்பஜன் சிங். தன்னைவிட 12வயது மூத்தவரான முகர்ஜியுடன் தவண் காதல் வயப்பட்டு அவரையே 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். முகர்ஜிக்கு ஏற்கெனவே இரு குழந்தைகள் இருந்தபோதிலும் அவர்களை தன் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கை நடத்தினார். முகர்ஜி, தவண் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் 2021ம் ஆண்டு முறைப்படி இருவரும் பிரிந்து 2023ம் ஆண்டு விவாகரத்துப் பெற்றனர். ஆனால், தனது மகனை பார்க்கவோ, பேசவோ ஆயிஷா அனுமதிக்க மறுக்கிறார் என்று தவண் சமூக வலைத்தளங்களில் வருத்தம் வேதனை தெரிவித்தார். இந்த காரணத்தால் தவண் விவாகரத்தும் பெற்றார். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சறுக்கல்தான் தவணின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரிவை ஏற்படுத்தியது. https://www.bbc.com/tamil/articles/c15gp930vp2o
-
புவிசார் அரசியல் தாக்கத்தில் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்; நேரடி மதிப்பீடுகளில் அமெரிக்கா, இந்தியா, சீனா!
25 AUG, 2024 | 01:00 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முக்கிய நாடுகளின் தலையீடுகளும் கண்காணிப்புகளும் தீவிரமடைந்துள்ளன. புவிசார் அரசியல் போட்டியில் இலங்கையின் மூலோபாய முக்கியத்தவத்தின் அடிப்படையில் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஜனாதிபதி தேர்தல் குறித்து நேரடி மதிப்பீடுகளை முன்னெடுத்து வருவதாக கொழும்பை தளமாக கொண்ட தேசிய இராஜதந்திர மையம் குறிப்பிட்டது. உத்தேச ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த காலங்களில் நடந்த முக்கிய தேர்தல்களைப் போலவே, நாட்டின் கீழ் மட்ட அரசியல் செல்வாக்கு மற்றும் நகர்வுகளை மதிப்பிடும் வகையில் பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய நாடுகள் பல ஆர்வத்துடன் கொழும்பில் செயல்பட்டு வருகின்றன. அனைத்து பிரதான கட்சிகளுமே கடந்த மே தினத்தை எதிர்கால தேர்தலின் அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் கூட்டங்களை நடத்தியிருந்தன. இந்த கூட்டங்களின் பிரதிபலிப்புகள் முக்கிய நாடுகளின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இலங்கையுடன் இருதரப்பு உறவுகளை வைத்திருக்கும் சர்வதேச நாடுகள் உத்தேச ஜனாதிபதி தேர்தலின் அரசியல் முன்னேற்றங்களை அவதானிப்பது பொதுவான விடயமாகும். குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பிரித்தானியா உட்பட பிற மேற்கத்திய நாடுகள் ஜனாதிபதி தேர்தலின் சாத்தியமான மக்கள் ஆதரவு குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றன. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத் துறையின் துணை அமைச்சர் சன் ஹையானின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது நேரடியாக மக்கள் மத்தியில் சென்று கருத்து கணிப்புகளை மேற்கொண்டிருந்தார். அது மாத்திரமன்றி மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உட்பட அனைத்து பிரதான அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்திருந்தார். ஜனாதிபதி தேர்தலில் உண்மையான நிலைப்பாட்டை அறியும் சீனாவின் ஆர்வமே இதன் மூலம் வெளிப்படுகின்றது. இதே போன்று ஜனாதிபதித் தேர்தலின் சாத்தியமான விளைவுகளை முன்கூட்டியே மதிப்பிடுவதில் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளும் ஆர்வமாக உள்ளன. குறிப்பாக சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் மீதான ஈடுபாடு பொருளாதார முதலீடுகள் முதல் புவிசார் அரசியல் செல்வாக்கு வரை அந்தந்த நலன்களைப் பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகளின் வெளிப்பாடாகவே உள்ளது. இலங்கை தேர்தல்களில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகள் எப்போதும் இருந்துள்ளன. ஆனால் அவற்றுக்கு எதிரான நேரடியான குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக மறைமுகமான சாடல்களும் இராஜதந்திர ரீதியிலான அதிருப்திகளுமே வெளிப்படுத்தப்படுகின்றன. இலங்கையை பொறுத்த வரையில் இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தேசிய அளவில் மாத்திரமன்றி பிராந்திய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்து ஈராண்டுகளை கடந்து இடம்பெறும் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலானது, முக்கிய நாடுகளின் புவிசார் அரசியல் கரிசனைகளும் ஈடுபாடுகளையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. பூகோள ரீதியில் இலங்கையின் மூலோபாய இருப்பிடத்தின் முக்கியத்துவமே உலக நாடுகளின் தலையீடுகளுக்கு காரணமாகின்றன. குறிப்பாக அண்மைய காலமாக கொழும்பு வரும் பெரும்பாலான உலக நாடுகளின் போர் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு செல்லாது திரும்புவதில்லை. இதற்கு அந்த தறைமுகத்தில் உள்ள இயற்கையான சிறப்புகளே காரணமாகின்றது. இவ்வாறு பல்வேறு விடயங்கள் இலங்கை குறித்து பிராந்திய போட்டியாளர்களுக்கு காரணங்களாகியுள்ளன. எனவே இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் கடனை மீள்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இலங்கையின் வளங்கள் ஊடாக பயனடைதல் போன்ற விடயங்களில் கூடுதல் அவதானம் செலுத்துகின்றன. இலங்கையின் பிரதான கடன் வழங்குனரான சீனா தனது கடன் தொகையை மீளப்பெற கூடிய சாதகமான சூழல் நாட்டில் உருவாவதை விரும்பும் அதே வேளை, இந்தியாவும் இலங்கையில் தனது நலன்களின் ஆர்வம் செலுத்தி இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவின் ஆசிய நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் நில இணைப்புகளில் இலங்கையுடன் முனைப்புடன் செயல்படுகின்றது. இது சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் முன்முயற்சி திட்டத்திற்கு நிகரான இந்திய திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/191921
-
இந்தியாவில் எத்தனை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன? தமிழ்நாட்டில் எத்தனை பேர்?
பட மூலாதாரம், ASHISH VAISHNAV/SOPA IMAGES/LIGHTROCKET VIA GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பாக்யஸ்ரீ ராவத் பதவி, பிபிசி மராத்தி 24 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மகாராஷ்டிராவின் பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாயினர். இந்த சம்பவங்களை தொடர்ந்து அப்பகுதிகளில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த சூழலில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (ஏடிஆர் : Association for Democratic Reforms) புதன்கிழமை (ஆகஸ்ட் 21 ) வெளியிட்ட அறிக்கையின்படி, 151 எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 300 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்புணர்வு செய்ததாக எத்தனை எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்பது பற்றிய தகவல்கள் உள்ளன. இது தவிர, எந்தெந்த கட்சியை சேர்ந்த எத்தனை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.,க்கள் இந்த பட்டியலில் உள்ளனர் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்காக, நாட்டில் உள்ள 4,809 எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களில் 4,693 பேர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரங்களை ஏடிஆர் மற்றும் நேஷனல் எலக்ஷன் வாட்ச் அமைப்புகள் இணைந்து ஆய்வு செய்துள்ளன. இந்த பிரமாணப் பத்திரங்கள் மூலம், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த தகவல்களை அளித்துள்ளனர். இதில் 776 எம்.பி.க்களில் 755 பேரின் பிரமாணப் பத்திரங்களும், 4,033 எம்.எல்.ஏக்களில் 3,938 பேரின் பிரமாணப் பத்திரங்களும் அடங்கும். 2019 முதல் 2024 வரை நடைபெற்ற இடைத்தேர்தல்கள் உட்பட அனைத்து தேர்தல்களின் போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களில் இருந்து ஏடிஆர் மற்றும் நேஷனல் எலக்ஷன் வாட்ச் அமைப்புகள் இந்தத் தகவல்களைச் சேகரித்துள்ளன. எந்தெந்த வழக்குகள் குறித்து தகவல் வெளியானது? பெண்களை துன்புறுத்தல் செய்ததாக எந்தெந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விரிவான தகவல்கள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. பெண் மீது ஆசிட் வீச்சு, பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், வன்புணர்வு, பெண்ணின் ஆடையைக் களைவதற்காக ஒரு பெண்ணைத் தாக்குதல், ஒரு பெண்ணைப் பின்தொடர்தல், மைனர் பெண்களை பாலியல் தொழிலுக்காக வாங்குவது மற்றும் விற்பது, கணவன் அல்லது உறவினர்களால் பெண்கள் துன்புறுத்தப்படுவது ஆகிய குற்றங்கள் இதில் அடங்கும். திருமணமான பெண்ணை வேண்டுமென்றே பின்தொடர்வது அல்லது கடத்திச் செல்வது, அந்தப் பெண்ணின் அனுமதியின்றி வலுக்கட்டாயமாக சேர்ந்து வாழ்வது, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது மற்றும் வரதட்சணைக் கொலை ஆகியவையும் இதில் அடங்கும். பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/AFP VIA GETTY IMAGES எத்தனை எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? ஏடிஆர் அறிக்கையின்படி, 755 எம்.பி.க்கள் மற்றும் 3,938 எம்.எல்.ஏ.க்களில் 151 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் பெண்களை துன்புறுத்துவது தொடர்பான குற்றங்களில் தங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது குறித்து பிரமாணப் பத்திரங்களில் தெரிவித்துள்ளனர். இதில் 16 எம்பிக்களும், 135 எம்எல்ஏக்களும் அடங்குவர். பாலியல் வன்புணர்வு, பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளுதல், பாலியல் வன்கொடுமை, மைனர் சிறுமிகளை பாலியல் தொழிலுக்காக கடத்தல், குடும்ப வன்முறை போன்ற குற்றங்கள் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. எந்தெந்த கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் மீது வழக்குகள் உள்ளன? பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள 151 மக்கள் பிரதிநிதிகளில், எந்தக் கட்சியில் எத்தனை பேர் உள்ளனர் என்ற தகவலும் ஏடிஆர் மற்றும் `நேஷனல் எலெக்ஷன் வாட்ச்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 135 எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிகபட்சமாக பாஜகவைச் சேர்ந்த 54 மக்கள் பிரதிநிதிகள் மீது இத்தகைய வழக்குகள் கொண்டுள்ளது. காங்கிரஸில் 23, தெலுங்கு தேசம் கட்சியில் 17, ஆம் ஆத்மி கட்சியில் 13, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸில் 10, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 5 பேர் மீது இத்தகைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாஜக எம்எல்ஏ தேவயானி ஃபராண்டே பிபிசியிடம் கூறுகையில், "அரசியல் ரீதியான வெறுப்பு காரணமாக பல நேரங்களில் தலைவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் பெண்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள் மிகவும் வருந்தத்தக்கது. பெண்கள் மீதான வன்கொடுமைகளை அரசியலாக்கக் கூடாது." என்றார். "பெண்களை துன்புறுத்துவது தொடர்பான குற்றப் பின்னணி கொண்ட தலைவர்களை நியமனம் செய்யும் போது, அவர்களின் ஆளுமைத் தன்மையை ஆய்வு செய்து அதன் பின்னரே வேட்புமனுவை அனுமதிக்க வேண்டும்” என்கிறார் அவர். எந்த மாநில எம்.பி.க்கள் மீது அதிக வழக்குகள் பதிவு? ஏடிஆர் மற்றும் நேஷனல் எலெக்ஷன் வாட்ச் ஆகியவை மாநில வாரியாக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறித்து தங்கள் அறிக்கைகளில் தெரிவித்துள்ளன. இதன்படி, மேற்கு வங்கத்தில் அதிகபடியான மக்கள் பிரதிநிதிகள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. அடுத்தபடியாக ஆந்திராவில் அதிகளவிலான மக்கள் பிரதிநிதிகள் மீது வழக்குகள் உள்ளன. இந்த எண்ணிக்கை மேற்கு வங்கத்தில் 25 (21 எம்எல்ஏக்கள், 4 எம்பிகள்), ஆந்திராவில் 21 (21 எம்எல்ஏக்கள்), ஒடிசாவில் 17 (16 எம்எல்ஏக்கள், 1 எம்பி), டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் 13 (டெல்லியில் 13 எம்எல்ஏக்கள், மகாராஷ்டிராவில் 12 எம்எல்ஏக்கள் மற்றும் 1 எம்.பி) ஆக உள்ளது. இது தவிர, பிகாரில் 9, கர்நாடகாவில் 7, ராஜஸ்தானில் 6, மத்தியப் பிரதேசம், கேரளா மற்றும் தெலங்கானாவில் 5-5, குஜராத், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 4, ஜார்கண்டில் 3, பஞ்சாபில் 2, அசாம் மற்றும் கோவாவில் தலா 2, இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூவில் தலா ஒருவருக்கு எதிராக பெண்களை துன்புறுத்தல் செய்ததாக வழக்குகள் உள்ளன. பாலியல் வன்புணர்வு வழக்கு எத்தனை பேர் மீது உள்ளது? தேர்தல் ஆணையத்திடம் உள்ள வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஏடிஆர் மற்றும் நேஷனல் எலெக்ஷன் வாட்ச், அமைப்புகள் பகுப்பாய்வு செய்ததில், 151 எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக பெண்களை துன்புறுத்தியதாக வழக்குகள் உள்ளன. இவர்களில் 16 பேர் மீது வன்புணர்வு வழக்குகள் உள்ளன. இவர்களில் 2 பேர் எம்.பி.க்கள், 14 பேர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். மாநில வாரியாகப் பார்த்தால், மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கே 2 பேர் மீது வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்.பி. மீதும் இதே போன்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, அசாம், டெல்லி, கோவா, குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவர் மீது பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தெலங்கானா எம்.பி., மீது வன்புணர்வு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சி வாரியாக, வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பொதுப் பிரதிநிதிகளில், அதிகபட்சமாக பாஜகவைச் சேர்ந்த 5 பேர் (3 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள்) மற்றும் காங்கிரஸில் 5 பேர் உள்ளனர். இது தவிர, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF), பாரத் ஆதிவாசி கட்சி மற்றும் பிஜு ஜனதா தளம் (BJD) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு எம்எல்ஏ மீது வன்புணர்வு வழக்கு உள்ளது. பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட தலைவர்களின் பெயர்களும் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பின்னர் இந்த தலைவர்கள் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சில வழக்குகளின் விசாரணை இன்னும் நீடிக்கிறது. இந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் அப்போது தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். ஆனால், தேர்தல் ஆணையத்திடம் அளித்த பிரமாணப் பத்திரத்தில் வழக்குகள் குறித்து அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 'நீதியை யாரிடம் எதிர்பார்ப்பது?' ஒருபுறம், நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்கின்றன. பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. மற்றொரு புறம் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் குறித்த இதுபோன்ற அறிக்கைகள் வெளியாகின்றன. இதனை பெண் அரசியல் ஆய்வாளர்கள் எப்படி பார்க்கிறார்கள்? மூத்த பத்திரிகையாளர் பிரதிமா ஜோஷி பிபிசியிடம், "இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர்கள் எவரும் சமீப காலத்தில் அரசியலுக்கு வந்தவர்கள் இல்லை. காலம்காலமாக அரசியலில் இருப்பவர்கள். இந்த குற்றச் சம்பவங்கள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. அதிகாரத்தில் இருப்பவர்கள் மீதே குற்றச்சாட்டுகள் இருக்கும் போது நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்?" "பில்கிஸ் பானோ வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கால அவகாசம் முடிவதற்குள் விடுவிக்கப்பட்டனர். இது வெட்கக் கேட்டின் உச்சம். இது போன்ற நபர்களுக்கு ஆளும் வர்க்கம் அடைக்கலம் கொடுப்பதாகத் தெரிகிறது. சாதாரண பெண்கள் யாரிடம் நீதியை எதிர்பார்க்க வேண்டும்? இந்த போக்கு அரசியலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது." என்று அவர் கூறினார். இதுபோன்ற தலைவர்களுக்கு தேர்தலில் களம் காண தொகுதி ஒதுக்கீடு செய்வது அனைத்து அரசியல் கட்சிகளின் பாசாங்குத்தனம் என்று மூத்த பத்திரிகையாளர் நீரஜா சவுத்ரி நம்புகிறார். அவர் பிபிசியிடம், "பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கை மிகப் பெரியது. அரசியல் கட்சிகள் பெரிய தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கின்றன. அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட குற்றங்களை புறக்கணிக்கப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பது கவலைக்குரிய விஷயம்?" என்கிறார் அவர். "ஒருபுறம், அரசியல் கட்சிகளே நீதியைப் பற்றிப் பேசுகின்றன, உரிமைகளுக்காக குரல் எழுப்புகின்றன, மறுபுறம், குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை தேர்தலில் களமிறக்குகின்றன. இது அனைத்து அரசியல் கட்சிகளின் பாசாங்குத்தனம். 2024 இன் இந்தியாவை நினைத்து அவர்கள் வெட்கப்பட வேண்டும்" என்று நீரஜா கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/c984n5ldl0po
-
ரூமி-1: வெற்றிகரமாக ஏவப்பட்ட இந்தியாவின் முதல் 'மறுபயன்பாட்டு' ராக்கெட்டின் சிறப்பம்சங்கள்
படக்குறிப்பு, இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ‘ரூமி 1’ நேற்று காலை 7.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 25 ஆகஸ்ட் 2024, 02:25 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ‘ரூமி 1’ (RHUMI-1), சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் இருந்து, நேற்று (சனிக்கிழமை, ஆகஸ்ட் 24) காலை 7.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை மேற்பார்வையில், சென்னையைச் சேர்ந்த தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து இந்த ‘ரூமி - 1’ ராக்கெட்டை தயாரித்துள்ளன. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை கொண்டு செயற்கைக் கோள்களை ஏவுவதால் செலவு மிச்சமாகும் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்றும் 'ஸ்பேஸ் ஸோன்' நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்று கியூப் செயற்கைக் கோள்களைச் சுமந்துகொண்டு, ஒரு மொபைல் ஏவுதளத்தின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்ட இந்த ராக்கெட், செயற்கைக் கோள்களை புவியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்திவிட்டு, 7 நிமிடங்களில் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பிவிட்டதாக ஸ்பேஸ் ஸோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் வடிவமைப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருவதுடன் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களை வடிவமைத்து அவற்றை விண்ணில் செலுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களாக 'மிஷன் ரூமி 2024' திட்டத்தின் கீழ் ஒரு மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டை உருவாக்கி வந்தது. ஹைப்ரிட் எனும்போது திரவ, திட எரிபொருட்கள் என இரண்டுமே ராக்கெட்டில் பயன்படுத்தப்படும். இதனால் ராக்கெட்டின் செயல்முறை அதிகரிப்பதோடு, அதை விண்ணில் ஏவுவதற்கான செலவும் குறைகிறது. இதன் எடை சுமார் 80 கிலோ எனவும் இந்த ராக்கெட்டுக்கான உதிரிபாகங்களை இணைக்கும் பணியில் ஏறத்தாழ 6,000 பள்ளி மாணவர்களும் ஈடுபட்டதாகவும் ஸ்பேஸ் ஸோன் நிறுவனம் தெரிவித்திருந்தது. காலநிலை மாற்றம், காஸ்மிக் கதிர்வீச்சு, புறஊதா கதிர்வீச்சு, காற்றின் தன்மை ஆகிய தரவுகளைச் சேகரிக்க உதவும் 3 கியூப் செயற்கைக் கோள்கள் மற்றும் 50 சிறிய செயற்ககைக் கோள்கள் இதில் பொருத்தப்பட்டு, ஆகஸ்ட் 24 அன்று ஒரு மொபைல் ஏவுதளம் மூலம் விண்ணில் ஏவப்படும் என அந்நிறுவனம் கூறியிருந்தது. படக்குறிப்பு, ‘ரூமி - 1’ ராக்கெட் இந்த ராக்கெட் ஏவுதல் தொடர்பாக கடந்த புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 21) செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, “வழக்கமாக செயற்கைக்கோள்களை குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் செலுத்தியவுடன் ராக்கெட்டின் ஆயுட்காலம் முடிந்துவிடும். ஆனால், செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்குத் திரும்பும் வகையில் ராக்கெட் உருவாக்கப்பட்டிருப்பது ராக்கெட் தயாரிப்பில் அடுத்த கட்டம்,” என்று கூறியிருந்தார். அப்போது பேசிய ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆனந்த் மேகலிங்கம், “3 செயற்கைக் கோள்களையும் குறிப்பிட்ட தூரத்தில் விண்ணில் செலுத்திய பிறகு அதில் உள்ள பாராசூட் மூலம் இந்த ராக்கெட் மீண்டும் பூமிக்குத் திரும்பிவிடும். அந்த ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தலாம். இது சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது. நாங்கள் இதுபோல் ஆண்டுக்கு 12 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம்,” என்று கூறியிருந்தார். பூமிக்குத் திரும்பிய ராக்கெட் படக்குறிப்பு, மொபைல் ஏவுதளத்தின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் நேற்று (சனிக்கிழமை, ஆகஸ்ட் 24) அதிகாலை ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதைக் காண மக்கள் பலர் தங்கள் குடும்பத்தோடு கிழக்குக் கடற்கரை சாலையில் ஆர்வத்துடன் திரண்டிருந்தனர். “எனது மகனுக்காக இங்கு வந்துள்ளேன். அவனுக்கு ராக்கெட் குறித்த ஆர்வம் அதிகம். அதிகாலையிலேயே இங்கு வந்துவிட்டோம். முதல்முறையாக ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்க்கப் போகிறோம்,” என்று கூறினார் சென்னையைச் சேர்ந்த லலிதா. இந்த நிகழ்வைக் காண, கோயம்புத்தூரில் இருந்து வந்திருந்த வினோத் பேசுகையில், “இணையதளத்தில் இதுகுறித்த அறிவிப்பைப் பார்த்தவுடன் பதிவு செய்துவிட்டேன். இஸ்ரோ, நாசா போன்ற இடங்களுக்குச் சென்று ராக்கெட் ஏவப்படுவதைக் காண நமக்கு வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியாது. எனவே இதைத் தவறவிடக்கூடாது என வந்துவிட்டேன்” என்று கூறினார். முதலில் 7:05 மணிக்கு ஏவப்படும் என முடிவு செய்யப்பட்டு, பின்னர் சில தொழில்நுட்பக் காரணங்களால் தாமதமாகி, 7:30 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்பேஸ் ஸோன் மற்றும் மார்ட்டின் குழும உறுப்பினர்கள் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். “இது ஏறத்தாழ 18 மாத உழைப்பு. அதுவும் கடந்த ஒரு வாரமாக தூக்கமில்லாமல் சோதனைகள் செய்து வந்தோம். ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டதும் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை,” என்று கூறினார் ஸ்பேஸ் ஸோன் குழுவின் இணை பொறியாளர் லக்ஷ்மி பிரபா. புவியின் சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திவிட்டு, ராக்கெட் பூமிக்குத் திரும்பிவிட்டதாகவும், அதை மீட்டெடுத்து தரவுகள் சேகரிக்கப்படும் என்றும் ஸ்பேஸ் ஸோன் குழுவின் இணை பொறியாளர் நவீன் தெரிவித்தார். ஏவுதளத்திற்கு சில கிலோமீட்டர்கள் தூரத்தில் ஒரு விழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த 6,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு, தமிழக கிராமப்புற தொழில்கள், குடிசைத் தொழில்கள் மற்றும் சிறுதொழில்கள் துறை அமைச்சர் டி.எம்.அன்பரசன், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் மெய்யநாதன் மற்றும் ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆனந்த் மேகலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ‘இந்திய விண்வெளித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்’ இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு, "ரூமி – 1 ராக்கெட் இந்தியாவின் விண்வெளித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும், நமது நாட்டின் விண்வெளிக் கண்டுபிடிப்புகளில் வளர்ந்து வரும் திறன்களையும் காட்டுவதாக,” கூறினார். செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, சில நிமிடங்களில் திருப்பி அனுப்பும் திறன்கொண்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஹைப்ரிட் ராக்கெட்டின் முன்னேற்றம், நம்மிடம் உள்ள தொழில்நுட்ப வலிமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "இதற்காகக் கடுமையாக உழைத்த ஸ்பேஸ் ஸோன் இந்தியா விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கும் இந்த ஆராய்ச்சிக்கு ஆதரவு அளித்த மார்ட்டின் குழுமத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறிய அவர், இந்தியாவிற்கு இதுவொரு பெருமையான தருணம் என்றார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக கிராமப்புற தொழில்கள், குடிசைத் தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் துறை அமைச்சர் டி.எம். அன்பரசன் பேசுகையில், “தமிழ்நாடு தொடர்ந்து பொறியியல் துறையில் சிறந்து விளங்கி வருகிறது. புதுமை மற்றும் அற்புதமான சாதனைகளை வளர்க்கும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ‘ரூமி - 1’ ராக்கெட்,” என்றார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இத்தகைய முன்னேற்றங்களை ஆதரிப்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். பட மூலாதாரம்,@MARTINGROUP_ படக்குறிப்பு, ‘ஸ்பேஸ் சோன் இந்தியா’ தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த் மேகலிங்கம், இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, மார்ட்டின் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜோஸ் மார்ட்டின் தமிழகச் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் சிவா வி. மெய்யநாதன் பேசுகையில், “இன்று, நாம் மொபைல் ஏவுதளத்தில் இருந்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஹைப்ரிட் ராக்கெட்டை ஏவும்போது, ஒரு தொழில்நுட்ப சாதனையை மட்டும் படைக்கவில்லை, நிலையான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தையும் இது குறிக்கிறது” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “இந்தக் கண்டுபிடிப்பு விண்வெளி ஆய்வில் புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதோடு, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது” என்றார். ‘ரூமி – 1’ குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, “‘ரூமி – 1’ இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளில் புதிய அளவுகோல்களை அமைத்திருப்பதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்.” “இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு மீண்டும் பூமிக்கு வந்திருப்பது என்பது நமது அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் ஒத்துழைப்பு, புதுமை மற்றும் எல்லையில்லா ஆற்றலை நிரூபிக்கிறது” என்று கூறினார். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவும், அவர்களைப் பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதற்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளை பயன்படுத்தி வருகின்றன. சர்வதேச விண்வெளித் துறையில் இந்த மூன்று நாடுகளுக்கு அடுத்தபடியாக மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை இந்தியா எடுத்து வருகிறது. “மிகக் குறைந்த செலவில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளோம். எதிர்காலத்தில் இதுபோன்ற புதிய முயற்சிகள் இந்தியாவின் விண்வெளித் திட்டங்களில் முக்கியப் பங்கு வகிக்கும்” என்று மயில்சாமி அண்ணாதுரை கூறினார். ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ‘ரூமி - 1’ திட்டத்தின் தலைவர், டாக்டர் ஆனந்த் மேகலிங்கம் பேசுகையில், “ரூமி-1 வெற்றிப் பயணம் எங்கள் குழுவின் கடின உழைப்பு மற்றும் சிந்தனைக்குக் கிடைத்த வெற்றி. எங்களுடன் இணைந்து பணியாற்றிய மாணவர்களின் அசாத்திய திறமையையும் இது வெளிப்படுத்துகிறது. இது ஸ்பேஸ் ஸோன் நிறுவனத்திற்கான துவக்கம் மட்டுமே. மேலும் இதுபோன்ற பல திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும்,” என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/cn47jmjg79mo
-
யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி!
எமது உரிமைகளை பெற நம்மை நாம் எப்படி தயாரித்துக்கொள்வது என்ற உணர்வில் பக்குவம் பெறவேண்டும் - தமிழகத்தின் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி 25 AUG, 2024 | 12:06 PM நடந்தவற்றை பற்றியே சிந்தித்துக்கொண்டு இருக்காமல், அடுத்து எமது உரிமைகளை பெறுவதற்காக நம்மை நாம் எப்படி தயாரித்துக்கொள்ளவேண்டும் என்ற உணர்வில் பக்குவம் பெறவேண்டும் என இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த தமிழகத்தின் திராவிடர் கழகத் தலைவர் இ.வீரமணி தெரிவித்தார். இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்ந்த முதலாவது தமிழரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 97ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நேற்று சனிக்கிழமை (24) பிற்பகல் 4 மணிக்கு யாழ். நகரில் அமைந்துள்ள றிம்மர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நினைவுப் பேருரை ஆற்றும்போதே வீரமணி இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை தமிழர்கள் நேற்று விழுந்த இடத்தில் இன்று விழுந்துவிடாதீர்கள். புதிய இடத்தில் அல்லது முன்னுக்காவது வீழ்ந்து பாருங்களேன். விழுந்துவிடக்கூடாது என்று கூறுகின்றோம். நாங்கள் உங்களை கீழே விழ விடமாட்டோம். அதற்காகத்தான் எங்களை போன்றவர்கள் இருக்கிறோம். அதற்காக புதிய இடத்துக்கு செல்வதல்ல, வீழ்ந்துவிடக் கூடாது என்பதை கூறுகின்றேன். இந்த நிகழ்வின் நோக்கம் என்ன? அடுத்த செயல் வடிவத்தை புத்தாக்கத்தை பெற்றாகவேண்டும். வேர்களைத் தேடித்தான் விழுதுகள் செல்லவேண்டும். வேர்கள் பாதுகாப்பாக இருப்பதால்தான் விழுதுகள் தேடிவந்திருக்கின்றன. எனவே விழுதுகள் பழுதில்லாமல் இருக்கவேண்டுமானால் பழுதில்லாத விழுதுகளை உருவாக்கவேண்டும். என்றால், அது வேருக்கு பெருமை. அதனை செய்திருக்கிறார்கள். ஆனால் பல நேரங்களில் விழுதுகள் வேர் இருக்கிறது என்பதை பற்றியே நினைப்பதில்லையே. நடந்தவை நடந்ததாக இருக்கட்டும். நாம் பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டும். வரலாற்றை திருப்பி பார்க்கவேண்டும். அதனை பார்த்து திருப்பங்கள் உருவாக வேண்டும். இனம், மொழி, பண்பாடு, கலாசாரத்தை காப்பாற்றிக்கொள்வதற்கு உலகத்தில் பிறந்த அத்தனை தமிழர்களுக்கும் உரிமை உண்டு. நடந்தவற்றை பற்றியே சிந்தித்துக்கொண்டு இருக்காமல், அடுத்து எமது உரிமைகளை பெறுவதற்காக நம்மை நாம் எப்படி தயாரித்துக்கொள்ளவேண்டும் என்ற உணர்வில் பக்குவம் பெறவேண்டும். இளைய தலைமுறைக்கு பென்னான காலத்தை வழிகாட்டவேண்டும். கலங்கரை வெளிச்சங்கள் இல்லாவிட்டால் கப்பல்கள் கடலில் பயணம் செய்ய முடியாது. இன்று நினைவுகூரப்படும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எல்லோரையும் அணைத்துச் சென்றார். வெளிநாட்டு தலைவர்கள், இந்திய தலைவர்களுக்கு அவர் மையப்புள்ளியாக இருந்தார். ஏற்கனவே பல இரத்தங்களை கண்டுவிட்டோம். அதனை அழித்துவிட்டுச் செல்லலாம் என்று நினைத்துவிடக்கூடாது. பல இழப்புகளை சந்தித்தோம். கடந்து செல்ல முடியாது. அதிலிருந்து என்ன பாடத்தை கற்றோம் என்பதை பற்றி ஆழமாக சிந்திக்கவேண்டும். இத்தகைய நேரத்தில் அவர் வேறு நான் வேறு என்று எது பிரிக்கிறதோ, அதனை முன்னிலைப்படுத்திக் கொள்ளக்கூடாது என்பது என்னுடைய கருத்து என்றார். இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமசந்திரன், சிவாஜிலிங்கம் மற்றும் முன்னாள் தவிசாளர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டார்கள். https://www.virakesari.lk/article/191915
-
நாமலின் மலினமான பேச்சுக்களுக்கு விக்னேஸ்வரனும் பொறுப்பேற்க வேண்டும் - கஜேந்திரன் எம்.பி
25 AUG, 2024 | 11:41 AM நாமல் ராஜபக்ஷவின் மலினமான பேச்சுக்களுக்கு விக்னேஸ்வரனும் முழுப்பொறுப்பினை ஏற்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சனிக்கிழமை (24) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு தெளிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டவேளை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், 75 வருடங்களாக தமிழருக்கு உரிமை வழங்க மாட்டோம் என்று பேரினவாதிகள் கூறி வருகின்றார்கள். குறிப்பாக பேரினவாதிகள் சிங்கள மக்களுக்கு இவ்வாறான கருத்துக்களை கூறி வருகிறார்கள். அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது ஒரு பௌத்த நாடு. சிங்கள நாடு. இதை பேணிப் பாதுகாப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அது மட்டுமன்றி வட கிழக்கில் 1000 பௌத்த விகாரை அமைப்பதாகவே கூறி வருகின்றனர். சஜீத் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனமும் அவ்வாறு தான் இருந்திருக்கின்றது. சஜீத் பிரேமதாச அவர்கள் புத்தசாசன அமைச்சராக இருந்தபோது நீராவியடி பிள்ளையார் ஆலய முற்றத்தில் ஒரு பௌத்த பிக்குவின் சவம் எரிக்கப்பட்டது. இவ்விடயம் அமைச்சரின் ஆலோசனை வழிகாட்டலுடன் தான் நடைபெற்றது. இது தவிர அவரது காலத்தில் தான் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் சட்டவிரோத விகாரை கூட கட்டப்பட்டிருந்தது. அனுரகுமார திசாநாயக்கவை பற்றி கூறத் தேவையில்லை.மோசமான இனவெறி கொண்ட ஒருவர். இறுதிப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்து ஒழிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி இராணுவத்துக்கு கொடுத்திருந்த ஒரு கொலைவெறி பிடித்த குழு ஒன்றின் தலைமைச்சக்தியாக அவர் இருக்கின்றார். அது மாத்திரமன்றி வடக்கு கிழக்கினை வழக்கு தாக்கல் செய்து பிரித்த இனவெறியர்கள் இவர்கள். இவர்கள் எல்லோரது நிலைப்பாடுகளும் இவைதான். இதில் நாமல் ராஜபக்ஷ விதிவிலக்கானவர் அல்லர். இதனால்தான் இவர்களிடம் தமிழருக்கு உரிமை கொடுக்கப் போகின்றோம் என கூறினால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எழுதி உங்களின் சிங்கள மக்களுக்கு சொல்லுங்கள். இந்த தோல்வியடைந்த ஒற்றையாட்சியினை ஒழிக்கப் போகின்றோம். சமஸ்டியை கொண்டுவரப் போகின்றோம் என்பதை தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வெளிப்படுத்தி வாருங்கள் என நாங்கள் கூறுவது நம்பிக்கைக்காக தான். இது தவிர இன்று நேற்று முளைத்த காளானாக இருக்கின்ற இந்த நாமல் ராஜபக்ஷவுக்கு சமீப காலமாக பல கருத்துக்களை குறிப்பிடும் துணிச்சலை கொடுத்தது சுமந்திரன், சம்பந்தன், அரியநேத்திரன், சிறிதரன் உட்பட இந்த தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு 2010, 2015, 2020 ஆண்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். விக்னேஸ்வரனும் முழுப்பொறுப்பினையும் ஏற்க வேண்டும். ஏனெனில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு குற்றவியல் விசாரணைகளை நடாத்துவதற்கான அதிகாரங்கள் இல்லை என்பது நன்றாக தெரிந்த பிறகும் தொடர்ச்சியாக உள்ளக விசாரணைக்குள் பொறுப்புக்கூறலை முடக்கி சர்வதேச விசாரணை வேண்டாம். இனப்படுகொலையாளிகளை பாதுகாப்பதற்காக மேற்கூறியவர்கள் ஒவ்வொருவரும் கூட்டாக செயற்பட்டு வந்தவர்கள். குறிப்பாக இந்த இனப்படுகொலையாளி கோட்டபய ராஜபக்ஷ 2019 ஆண்டு பதவியேற்ற பிறகு ஜனாதிபதியாக இருக்கின்றபோது 2021 ஆண்டு மார்ச் மாதம் இலங்கை தொடர்பாக ஒரு தீர்மானம் வந்த நிலையில் அந்த சந்தர்ப்பத்தில் வந்து பொறுப்புக்கூறல் செயற்பாட்டை மனித உரிமை பேரவையில் இருந்து வெளியே எடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என முயற்சியை எங்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட எங்களது கட்சி முக்கியஸ்தர்கள் முன்னெடுக்கின்றபோது இவர்கள் (தமிழ் அரசுக் கட்சியினர்) கடிதம் எழுதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள விடயம் எந்த வடிவத்திலேனும் நிறைவேற்றப்பட வேண்டும். ஏனெனில் இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் தீர்மானம் ஒன்று தேவை என்பதாகும். இவ்வாறாக இவர்கள் கொடுத்த ஆதரவு தான் நாமல் ராஜபக்ஷ போன்றவர்களுக்கு திமிரை கொடுத்திருக்கின்றது. அது மட்டுமன்றி நாமல் ராஜபக்ஷ சீன சார்பானவர் என்பதனால் ஊடகங்கள் அவரது கருத்துக்களை பெரிதுபடுத்துகின்றன. அது மட்டுமன்றி 2010ஆம் ஆண்டு தமிழரசு கட்சியினர் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்க சொன்னதை மறக்க முடியுமா? ஆகவே எமது மக்கள் இவ்வாறானவர்களை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். 1920ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலையில் ஈடுபட்டமைக்காக பிரித்தானியாவில் வழக்கு போடப்பட்டிருந்தது. அந்த வழக்கில் இலங்கையில் இருந்து சென்ற தமிழ் தலைவர்கள் வாதாடி அந்த சிங்கள தலைவர்களை மீட்டு கொண்டுவந்தபோது அந்த நன்றிக்கடனுக்காக கொழும்புக்கு வந்திறங்கிய இந்த தமிழ் தலைவர்களை குதிரை வண்டிலில் ஏற்றி குதிரைகளை கழற்றிவிட்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட சிங்கள தலைவர்கள் குதிரைகள் போன்று தோளில் வைத்து வண்டிகளை இழுத்து சென்றார்கள். அந்தளவிற்கு தமிழர்களுக்கு சிங்கள தலைவர்கள் கடமைப்பட்டு இருந்தார்கள். பயந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களை தமிழ் தலைவர்கள் என்று சொல்கின்ற அடிமைகள் ஜெனிவா வரை சென்று சர்வதேச விசாரணையின்றி மீட்கப்பட்டிருக்கின்ற நிலையில் இன்று எம்மை சிங்கள மக்கள் துரத்தி துரத்தி அடிக்கின்றார்கள். எனவே எமது மக்கள் சிந்திக்க வேண்டும். எமது வாக்குகளை பெற இன்று பொது வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றார்களா? இவ்வாறானவர்கள் தான் அரசுடன் பேரம் பேசுவார்களா? என்பதை எமது மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/191914
-
யாழ். பெண்ணிடம் 22 இலட்சம் ரூபாய் பண மோசடி - ஒருவர் கைது
25 AUG, 2024 | 04:07 PM பெண்ணொருவரிடம் சுமார் 22 இலட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணிடம் சுமார் 22 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று ஏறாவூர் பகுதியை சேர்ந்த நபர் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஏறாவூர் பகுதியை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/191941
-
லெபனானில் உள்ள ஹெஸ்புலா இலக்குகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்
ஹெஸ்புலா பதில் தாக்குதல் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேல் பிராந்தியத்தில் லெபனானில் இருந்து ஹெஸ்புலா சுமார் 150 எறிகணைகளை ஏவியுள்ளதாக” தெரிவித்துள்ளது. “இஸ்ரேல் விமானப்படையின் ஜெட் விமானங்கள் தற்போது தெற்கு லெபனானின் பல்வேறு இடங்களில் இலக்குகளைத் தாக்கி வருகின்றன” என்று டேனியல் ஹகாரி தெரிவித்தார். இதனிடையே, தாங்கள் ஏற்கெனவே 320-க்கும் மேற்பட்ட கத்யுஷா ரக ராக்கெட்டுகளை ஏவியுள்ளதாகவும், அவை 11 இஸ்ரேலிய ராணுவ தளங்கள் மற்றும் ராணுவ குடியிருப்புகளைத் தாக்கி வருவதாகவுவும் ஹெஸ்புலா தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, லெபனானில் இருந்து ஏவப்பட்ட எறிகணையை இடைமறிக்கும் இஸ்ரேலிய விமானம் டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் ராணுவ தளத்தில் இருந்து பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் இருவரும் “நிலைமையைக் கண்காணித்து வருவதாக” பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இஸ்ரேல் மீதான தங்களின் தாக்குதல், “சியோனிச (இஸ்ரேலின் முதன்மைத்துவத்தை ஆதரிப்பது) தாக்குதல் காரணமாக ஃபவுத் ஷுக்கரின் உயிர்த் தியாகத்திற்குப் பதிலடி” என ஹெஸ்புலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஹெஸ்புலாவின் மூத்த தளபதியான ஃபவுத் ஷுக்கர், கடந்த ஜூலை மாதம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். காஸாவில் ஹமாஸ் உடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல், லெபனானை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹெஸ்புலாவுடன் மாறி மாறித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. - இந்தச் செய்தி மேலதிக தகவல்களுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படும். https://www.bbc.com/tamil/articles/c5y8pxx2ze9o
-
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை குறித்த அறிக்கையில் திருப்தி : செப்டெம்பரில் வலுவான புதிய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் - சுமந்திரன்
24 AUG, 2024 | 11:08 PM (நா.தனுஜா) இலங்கையின் சமகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை பரந்துபட்ட விடயங்களை உள்ளடக்கியிருப்பதாகத் திருப்தி வெளியிட்டிருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள 57 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் வலுவானதொரு புதிய தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பின்னணியில், இலங்கையின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தில் மிகமோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சமகாலப் போக்குகள் உள்ளடங்கலாக நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் விரிவான அறிக்கை கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அவ்வறிக்கையில் 'தேர்தல்களின் பின்னர் புதிதாகத் தெரிவாகும் அரசாங்கம் யுத்தத்துக்கு அடிப்படையாக அமைந்த காரணிகிளைக் களையக்கூடியவாறான, அனைவரையும் உள்ளடக்கிய தேசிய இலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும். அதுமாத்திரமன்றி ஜனநாயகத்தை வலுப்படுத்தக்கூடிய, அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்தக்கூடிய, பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தக்கூடியவாறான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களையும், அரசியலமைப்புத்திருத்தங்களையும் மேற்கொள்ளவேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இப்புதிய அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பில் தனது திருப்தியை வெளிப்படுத்திய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், இவ்வறிக்கை மேலும் வலுவானதாக அமைந்திருக்கமுடியும் எனும்போதிலும்கூட இதிலேயே பரந்துபட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது திருப்தியளிக்கின்றது என்று குறிப்பிட்டார். அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை' உள்ளடக்கிய தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்குவரும் நிலையில், அச்செயற்திட்டத்தின் கீழான பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதற்கு புதிய தீர்மானமொன்றை நிறைறே;றவேண்டியது அவசியம் எனச் சுட்டிக்காட்டினார். எனவே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் வலுவானதொரு புதிய தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் அல்லது தற்போதைய தீர்மானம் வலுவான கூறுகளுடன் காலநீடிப்புச் செய்யப்படவேண்டும் எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/191889
-
தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்கவேண்டாம்; தனக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் - தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் சஜித் வேண்டுகோள்
24 AUG, 2024 | 09:14 PM (நா.தனுஜா) எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தனக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொதுவேட்பாளரைக் களமிறக்கவேண்டாம் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தமிழ் அரசியல் கட்சிப்பிரதிநிதிகளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தமிழ் பொதுக்கட்டமைப்பினால் தமிழ் மக்கள் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கின்றார். தமிழ் மக்களின் கோரிக்கைகள் மற்றும் அபிலாஷைகளுக்கான குறியீடாகவே இப்பொதுவேட்பாளர் களமிறக்கப்படுவதாகவும், இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவிருக்கும் பிரதான வேட்பாளர்கள் தமிழ் மக்குளுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்த உத்தரவாதத்துடன் தம்மைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்த விரும்பினால், அவர்களுடன் பேசுவோர் என தமிழ் பொதுக்கட்டமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதற்கமைய இம்முறை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் பொதுக்கட்டமைப்பினருடனான சந்திப்புக்கு அழைப்புவிடுத்திருந்தார். அவரை மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள், அதற்கு மறுதினம் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவின் அழைப்புக்கு இணங்க அவரை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தனக்குக் கிடைக்கக்கூடிய தமிழ்மக்களின் வாக்குகளை சிதறடித்து, தனக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதனால் பொதுவேட்பாளரைக் களமிறக்கவேண்டாம் என சஜித் பிரேமதாஸ தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும் இம்முறை தாம் பொதுவேட்பாளரைக் களமிறக்குவதற்கான நோக்கத்தைத் தெளிவுபடுத்திய தமிழ் அரசியல் பிரதிநிதிகள், பொதுவேட்பாளரைக் களமிறக்குவதிலிருந்து பின்வாங்கமுடியாது எனத் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/191892
-
இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்
கமிந்து, சந்திமால் துடுப்பாட்டத்தில் அபாரம்; ஆனால் இங்கிலாந்து 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது 25 AUG, 2024 | 04:38 AM (நெவில் அன்தனி) மென்ச்செஸ்டர், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (24) நிறைவடைந்த இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது. இலங்கையின் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் இந்த டெஸ்ட் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கையின் கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் அசத்திய போதிலும் 205 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 5 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இரண்டாவது இன்னிங்ஸை இங்கிலாந்து சிறப்பாக ஆரம்பித்த போதிலும் சீரான இடைவெளியில் 4 விக்கெட்களை இழந்தது. பென் டக்கட் (11), அணித் தலைவர் ஒல்லி போப் (6). டான் லோரன்ஸ் (34), ஹெரி புறூக் (32) ஆகிய நால்வரே சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். எனினும், முன்னாள் அணித் தலைவர் ஜோ ரூட், முதல் இன்னிங்ஸில் சதம் குவித்த ஜெமி ஸ்மித் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு வெற்றியை அண்மிக்க உதவினர். ஜெமி ஸ்மித் 39 ஓட்டங்களைப் பெற்று ஐந்தாவதாக ஆட்டம் இழந்தார். மறுபக்கத்தில் திறமையாகவும் பொறுமையாகவும் துடுப்பெடுத்தாடிய ஜோ ரூட் 128 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டறிகளுடன் ஆட்டம் இழக்காமல் 62 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தார். கிறிஸ் வோக்ஸ் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 98 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நான்காம் நாளான சனிக்கிழமை காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 326 ஓட்டங்களைப் பெற்றது. கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் 117 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றுக்கொடுத்தனர். ஆனால், இறுதியில் அது இங்கிலாந்தின் வெற்றியைத் தடுப்பதற்கு போதுமானதாக அமையவில்லை. தனது 4ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய கமிந்து மெண்டிஸ் 3ஆவது சதத்தைக் குவித்து அசத்தினார். 183 பந்துகளை எதிர்கொண்ட அவர் 15 பவுண்டறிகள் ஒரு சிக்ஸுடன் 113 ஓட்டங்களைக் குவித்தார். அதேவேளை, 3ஆம் நாள் ஆட்டத்தின்போது உபாதைக்குள்ளாகி தற்காலிக ஓய்வு பெற்ற தினேஷ் சந்திமால், அன்றைய தினம் 6ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் மிகவும் இக்கட்டான நிலையில் மீண்டும் களம் புகுந்து கடுமையாக போராடி சனிக்கிழமை கடைசியாக ஆட்டம் இழந்தார். கடைசிக் கட்டத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வேகமாக ஓட்டங்களை எடுக்க முயற்சித்ததால் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். 119 பந்துகளை எதிர்கொண்ட தினேஷ் சந்திமால் 7 பவுண்டறிகளுடன் 79 ஓட்டங்களைப் பெற்றார். இது அவரது 27ஆவது டெஸ்ட் அரைச் சதமாகும். போட்டியின் 3ஆம் நாளன்று ஏஞ்சலோ மெத்யூஸ் 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். பந்துவீச்சில் மெத்யூ பொட்ஸ் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கிறிஸ் வோக்ஸ் 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கஸ் அட்கின்சன் 89 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். புதன்கிழமை (21) ஆரம்பமாகி நான்கு நாட்களில் நிறைவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை 236 ஓட்டங்களையும் இங்கிலாந்து 326 ஓட்டங்களையும் பெற்றன. ஆட்டநாயகன்: ஜெமி ஸ்மித் https://www.virakesari.lk/article/191897
-
பாகிஸ்தான் - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர் செய்திகள்
முஷ்பிக்குர் ரஹிம் பெற்ற அபார சதத்தின் உதவியுடன் பங்களாதேஷ் 565 ஓட்டங்கள் குவிப்பு 24 AUG, 2024 | 08:49 PM (நெவில் அன்தனி) பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் முதலாவது ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டத்தில் முஷ்பிக்குர் ரஹிம் குவித்த அபார சதத்தின் உதவியுடன் பங்களாதேஷ் முன்னிலை அடைந்துள்ளது. இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 316 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ் சகல விக்கெட்களையும் இழந்து 565 ஓட்டங்களைக் குவித்தது. 55 ஓட்டங்களிலிருந்து தனது இன்னிங்ஸைத் தொடர்ந்த முஷ்பிக்குர் ரஹிம் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 341 பந்துகளை எதிர்கொண்டு 22 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 191 ஓட்டங்களைக் குவித்தார். இதனிடையே லிட்டன் தாஸுடன் 6ஆவது விக்கெட்டில் முஷ்பிக்குர் ரஹிம் 114 ஓட்டங்களைப் பகிர்ந்தார். தொடர்ந்து மெஹிதி ஹசன் ராசாவுடன் 8ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 196 ஓட்டங்களை முஷ்பிக்குர் ரஹிம் பகிர்ந்தார். இது டெஸ்ட் போட்டி ஒன்றில் எந்த ஒரு அணிக்கும் எதிராக 8ஆவது விக்கெட்டில் பங்களாதேஷ் சார்பாக பகிரப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாகும். இதே ஜோடியினர் ஸிம்பாப்வேக்கு எதிராக 2018இல் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 144 ஓட்டங்களே இந்த விக்கட்டுக்கான முந்தைய அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது. இன்று காலை தனது துடுப்பாட்டத்தை தொடர்ந்த லிட்டன் தாஸ் தனது எண்ணிக்கைக்கு மேலும் 4 ஓட்டங்களை சேர்த்த நிலையில் 56 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் களம் நுழைந்த மெஹதி ஹசன் ராசா திறமையாகத் துடுப்பெடுத்தாடி 77 ஓட்டங்களைப் பெற்றார். பின்வரிசையில் ஷொரிபுல் இஸ்லாம் 22 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் நசீம் ஷா 93 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி, குரம் ஷாஹ்ஸாத், மொஹமத் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸ் நிறைவில் 117 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 23 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் மீதம் இருக்க 94 ஓட்டங்களால் பாகிஸ்தான் பின்னிலையில் இருக்கிறது. அப்துல்லா ஷபிக் 12 ஓட்டங்களுடனும் சய்ம் அயூப் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 448 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டிருந்தது. https://www.virakesari.lk/article/191896
-
லெபனானில் உள்ள ஹெஸ்புலா இலக்குகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்
பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், ஜரோஸ்லாவ் லூகீவ் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான நகர்வுகளைக் கண்டறிந்த நிலையில், லெபனானில் உள்ள ஹெஸ்புலா இலக்குகள் மீது தங்கள் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. “இந்த அச்சுறுத்தல்களைக் களைவதற்கான தற்காப்பு நடவடிக்கையாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக” இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். இரானால் ஆதரவளிக்கப்படும் ஷியா முஸ்லிம் குழுவான ஹெஸ்புலா இயங்கும் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு லெபனான் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ராக்கெட்டுகள் குறித்து மக்களை எச்சரிக்கும் சைரன்கள் வடக்கு இஸ்ரேல் முழுவதும் கேட்கப்பட்டன. இத்தாக்குதலில் யாரேனும் காயமடைந்தனரா, உயிரிழப்புகள் ஏதும் உள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரிய வரவில்லை. இந்நிலையில், அரசின் பாதுகாப்பு அமைச்சரவையின் அவசரக் கூட்டம் கூட்டப்பட உள்ளதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காஸாவில் ஹமாஸ் உடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல், லெபனானை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹெஸ்புலாவுடன் மாறி மாறித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. - இந்தச் செய்தி மேலதிக தகவல்களுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படும். https://www.bbc.com/tamil/articles/c5y8pxx2ze9o
-
ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - மூவர் பலி
அப்ப சோழிங்கன் நகரத்திற்கு போனால் ஒரு கத்தி வாங்கச் சொல்லவேணும் சொந்தங்களுக்கு!!
-
வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
ஒன்லைன்ல வாக்குப்போட்டது புலம்பெயர்ஸ் என்று சொல்லுவார் அண்ணை! நானும் பொதுவேட்பாளருக்கு தான் போட்டனான் என்று சொல்லிப்போடவேணாம்! எனக்கென்னமோ இப்ப இருப்பவருக்கு பில்டப் குடுக்கினமோ என சந்தேகமாக இருக்கு!
-
மன்னாரில் இதுவரை 228 டெங்கு நோயாளர்கள் பதிவு - மன்னார் வைத்திய அதிகாரி
24 AUG, 2024 | 04:38 PM மன்னாரில் இதுவரை 228 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அங்கு டெங்கு நோய் அபாயம் அதிகரித்திருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும் எனவும் மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வைத்திய அதிகாரி கதிர்காமநாதர் சுதாகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் இதுவரை 228 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இத்தொகை கடந்த 2023ஆம் ஆண்டை விடவும் இந்த ஆண்டு சிறிதளவு அதிகரித்துள்ளது. வழமையாக ஒக்டோபர் மாதத் தொடக்கத்திலேயே மன்னாரில் டெங்கு அபாயம் ஏற்படும். ஆனால், இவ்வருடத்தில் சற்று நேரத்துடனே டெங்கு அபாயம் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆகவே, பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். நீடித்த காய்ச்சல், கண்ணுக்குப் பின்னால் வலி போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரிடம் ஆலோசனைகளைப் பெற்று இரத்தப் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். இது தொடர்பாக அரச வைத்தியசாலையை நாடுவது மிகவும் சிறந்தது. தற்பொழுது டெங்கு நோய் காணப்படும் இடங்களாக நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வங்காலையும், மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சாவக்கட்டும் இனங்காணப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/191869
-
இது உண்மையில் இயேசுவின் உடலில் போர்த்தப்பட்ட துணியா? ஒரு வரலாற்று ஆய்வு
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ட்யூரின் சவக்கோடியில் உள்ள தாடி வைத்த மனிதரின் உருவம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜெர்மி ஹோவெல் பதவி, பிபிசி செய்தியாளர் 24 ஆகஸ்ட் 2024, 13:19 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் இயேசுவின் உடலில் போர்த்தப்பட்ட துணியாக கருதப்படும் ட்யூரின் சவக்கோடி (Turin Shroud) இயேசுவின் காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அவர்களின் ஆய்வு முடிவு, முதலில் 2022 இல் வெளியிடப்பட்டது. ட்யூரின் சவக்கோடி இடைக்காலத்தில் உருவாக்கப்பட்டது என்றும் இயேசு காலத்தை சேர்ந்தது அல்ல என்றும் பரவலாக சொல்லப்படும் கருத்துகளை இந்த ஆராய்ச்சி கேள்வி எழுப்பியுள்ளது. இந்த ஆராய்ச்சி சமீபத்தில் வைரலாகி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரிஷ் ஊடகங்களில் தலைப்பு செய்திகள் ஆகியுள்ளது. இயேசு புதைக்கப்பட்ட போது அவர் மீது போர்த்தப்பட்ட துணி என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படும் ட்யூரின் சவக்கோடி, புனித துணி என்று பொருள் படும் வகையில் `புனித சவக்கோடி’ என்றும் அழைக்கப்படுகிறது. முழு உலகிலும் அதிகம் ஆய்வு செய்யப்பட்ட வரலாற்றுப் பொருட்களில் இதுவும் ஒன்றாகும். ட்யூரின் சவக்கோடி என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? ட்யூரின் சவக்கோடி என்பது 4.42 மீட்டர் (14.5 அடி) நீளம் மற்றும் 1.21 மீட்டர் (4 அடி) அகலம் கொண்ட ஒரு லினென் துணி (linen fabric) ஆகும். இந்த துணியில் ரத்தக் கறை படிந்துள்ளது. குழி விழுந்த கண்களுடன் தாடி வைத்த மனிதர் உடலின் முன் மற்றும் பின் புறத்தின் மங்கலான உருவம் உள்ளது. இந்த துணியில் ஆச்சரியமான முறையில் பதிக்கப்பட்டுள்ள உருவம் இயேசுவின் உருவம் என்று பலர் நம்புகிறார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு ஒத்ததாக சில அடையாளங்களும் இந்த புனித சவக்கோடியில் இருப்பதாக சில தேவாலய அதிகாரிகள் கூறுகின்றனர். உதாரணமாக, ரோமானிய வீரர்கள் அடித்ததில் முதுகில் காயங்கள், சிலுவையைச் சுமந்ததால் தோள்களில் காயங்கள், முள் கிரீடம் அணிந்ததால் தலையில் வெட்டுகள் ஆகிய காயங்களின் அடையாளம் இந்த புனித சவக்கோடியிலும் இருப்பதாக நம்பப்படுகிறது. பட மூலாதாரம்,FOTOGRAFIA HALTADEFINIZIONE.COM - PROPRIETA ARCIDIOCESI DI TORINO படக்குறிப்பு, இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது ஏற்பட்ட காயங்களுக்கு ஒத்ததாக சில அடையாளங்கள் புனித சவக்கோடியில் இருப்பதாக சில தேவாலய அதிகாரிகள் கூறுகின்றனர் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த ஜோசப், இயேசுவின் உடலை கல்லறையில் வைப்பதற்கு முன்பு, அவரது உடலை ஒரு துணியால் சுற்றினார் என்று பைபிள் கூறுகிறது. பிரான்சின் கிழக்கில் உள்ள லிரேயில் உள்ள தேவாலய அதிகாரியிடம் ஜெஃப்ராய் டி சார்னி என்ற வீரர் 1350களில் இந்த புனித சவக்கோடியை வழங்கினார். அந்த சமயத்தில் தான் இந்த கலைப்பொருள் முதன்முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. அது இயேசுவின் அடக்கம் செய்யப்பட்ட போது அவர் மீது போர்த்தப்பட்ட துணி என்று அவர் அறிவித்தார். முதன்முதலில் 1389 ஆம் ஆண்டில், ட்ராய்ஸ் பிஷப் பியர் டி ஆர்சிஸ் இந்த துணி போலியானது என்று கண்டனம் தெரிவித்தார். 1578 ஆம் ஆண்டில், இந்த ட்யூரின் சவக்கோடி இத்தாலியின் ட்யூரின் நகரில் உள்ள சான் ஜியோவானி பாட்டிஸ்டா கதீட்ரலில் உள்ள அரச தேவாலயத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு இது விசேஷ காலங்களில் மட்டுமே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. 1988 ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்து, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த துணியின் ஒரு சிறிய பகுதியில் ரேடியோகார்பன் சோதனைகளை மேற்கொண்டனர் மற்றும் இது 1260 மற்றும் 1390 பொதுக் காலத்துக்கு (Common Era) இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என்று முடிவு செய்தனர். சமீபத்திய கண்டுபிடிப்புகள் என்ன? இத்தாலியின் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரிஸ்டலோகிராஃபி (தேசிய ஆராய்ச்சி கவுன்சிலின் ஒரு பகுதி) விஞ்ஞானிகள் `ட்யூரின் சவக்கோடி’ லினென் துணியில் இருந்து எட்டு சிறிய நூல்களில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். எக்ஸ்ரே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை தேதியிட்டனர் (dated). அவர்கள் இந்த ஆய்வு முடிவுகளை ஏப்ரல் 2022 இல் ஹெரிடேஜ் இதழில் முடிவுகளை வெளியிட்டனர். அவை சமீபத்தில் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரிஷ் ஊடகங்களில் வெளியிடப்பட்டன. விஞ்ஞானிகள் அந்த லினென் ஆடையின் பிளாக்ஸில் (Flax : natural plant fiber) உள்ள செல்லுலோஸ் அதன் வயதுக்கு ஏற்ப எவ்வாறு சிதைந்தது என்பதை அளந்தனர். அதன் மூலம் அந்த துணியின் உற்பத்தியான காலம் கணக்கிடப்பட்டது. புனித சவக்கோடியாக கருதப்படும் இந்த லினென் துணி வைக்கப்பட்டுள்ள வெப்பநிலை போன்ற மற்ற அளவுருக்களையும் இந்த குழு பயன்படுத்தியது. அதன் வரலாறு முழுவதும் அது 20 - 22.5C வெப்பநிலை மற்றும் 55-75% ஈரப்பதம் என்ற அளவில் வைக்கப்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது. இந்த ஆய்வில் கிடைத்த டேட்டிங் முடிவுகளை வைத்து `டூரின் ஷ்ரூட்’ சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது இயேசுவின் காலத்தில் உருவாக்கப்பட்டது என்று அவர்கள் முடிவு செய்தனர். ரேடியோ கார்பன் டேட்டிங் செய்வதை விட அவர்கள் மேற்கொண்ட முறைகள் நம்பகமானவை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் கைத்தறி போன்ற துணிகள் மாசுபடும் அபாயம் இருப்பதால், அவற்றில் ரேடியோ கார்பன் டேட்டிங் செய்வது துல்லியமற்றதாக மாறும் என்கின்றனர். ட்யூரின் சவக்கோடி பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை கைத்தறி நெசவுகளிலிருந்து தயாரிக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். பலர் விமர்சித்தது போல் இந்த லினென் துணி இடைக்காலத்தை சேர்ந்தது அல்ல என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இத்தாலியின் ட்யூரின் நகரில் உள்ள தேவாலயம். இங்குதான் ட்யூரின் சவக்கோடி வைக்கப்பட்டுள்ளது. ட்யூரின் சவக்கோடி பற்றிய விவாதங்கள் `ட்யூரின் சவக்கோடி’ உண்மையில் இயேசுவை அடக்கம் செய்யப்பட்ட போது போர்த்தப்பட்ட துணி என்று இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் கூறவில்லை. அவர் உயிருடன் இருந்த காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டது என்று மட்டும் உறுதியுடன் சொல்கிறார்கள். அவர்களின் தரவு இந்த கலைப்பொருளைப் பற்றி இதற்கு முன்பு செய்யப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஒன்றாக இணைகிறது. 1980களில் இருந்து, 170க்கும் மேற்பட்ட ஆய்வு இதழ்களில் புனித சவக்கோடி பற்றி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. பலர் இது உண்மையானது என்றும் மற்றவர்கள் இது போலி என்றும் வாதிட்டனர். இந்த துணி உண்மையில் இயேசுவை அடக்கம் செய்யப்பட்ட போது போர்த்தப்பட்டது என்று கருத வேண்டுமா என்பது குறித்து வாடிகன் பலமுறை தனது முடிவுகளை மாற்றிக் கொண்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c4gx3z0ljpmo
-
வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
ஐ.பி.சி தமிழின் கருத்துக் கணிப்பு மாதிரி
-
அமெரிக்காவை தொடர்ந்து இலங்கைக்கு விரையும் சீன கப்பல்
சீன(china) கடற்படைக்கு சொந்தமான போலன் என்ற கப்பல் இம்மாதம் இறுதி வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை(sri lanka), வியட்நாம்(vietnam), இந்தோனேசியா(indonesia) ஆகிய நாடுகளுடன் கடற்படை ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த கப்பலின் வருகை அமையவுள்ளது. சீனாவின் வடகிழக்கில் உள்ள டேலியன் மாகாணத்தில் இருந்து தனது பயணத்தை குறித்த கப்பல் ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் வசதி 85 மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் 18நொட்ஸ் வேகத்தில் பயணிக்கக் கூடியது. 50 கடற்படை கேடட்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் வசதியும் உள்ளது. கடற்படை அதிகாரிகளிடையே தொழில்முறை திறன்களை வளர்ப்பது மற்றும் பிற நாடுகளின் கடற்படைகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பொதுவான எதிர்காலத்துடன் கடல் நடவடிக்கைகளை தொடங்குவது இந்த விஜயத்தின் நோக்கமாகும் என்று கப்பலின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்காவின் மூன்று நாசகாரி கப்பல்கள் இந்த கப்பல் தனது பயணத்தின் போது ஹொங்கொங்கில் தொழில்நுட்ப வசதிகளை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அமெரிக்காவின் மூன்று நாசகாரி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சென்றமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/chinese-ship-to-follow-us-to-sri-lanka-1724493557
-
பாகிஸ்தான் - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர் செய்திகள்
சம அளவில் மோதிக்கொள்ளப்படும் பாகிஸ்தான் - பங்களாதேஷ் டெஸ்ட்; பங்களாதேஷ் தரப்பில் நால்வர் அரைச் சதம் குவிப்பு Published By: VISHNU 23 AUG, 2024 | 07:50 PM (நெவில் அன்தனி) பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் 2 போட்டிகள் கொண்ட ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளது. போட்டியின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (22) பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸை 6 விக்கெட்களை இழந்து 448 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது நிறுத்திக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ், நான்கு துடுப்பாட்ட வீரர்கள் பெற்ற அரைச் சதங்களின் உதவியுடன் பாகிஸ்தானுக்கு சிறப்பான பதில் அளித்துள்ளது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 22 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து பங்களாதேஷ், ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 316 ஓட்டங்களைப் பெற்று சிறந்த நிலையில் இருக்கிறது. பங்களாதேஷின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய 7 பேரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதுடன் அவர்களில் நால்வர் அரைச் சதங்களைக் குவித்தனர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இப்படித்தான் துடுப்பெடுத்தாட வேண்டும் என்பதை அரைச் சதங்கள் குவித்த நால்வரும் உணர்த்தினர். ஆரம்ப வீரர் ஸக்கிர் ஹசன் (12), அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (16) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். (53 - 2 விக்.) ஆனால், மற்றைய ஆரம்ப வீரர் ஷத்மான் இஸ்லாம், 3ஆவது விக்கெட்டில் மொமினுள் ஹக்குடன் 394 ஓட்டங்களையும் 4ஆவது விக்கெட்டில் முஷ்பிக்குர் ரஹிமுடன் 52 ஓட்டங்களையும் பகிர்ந்து பங்களாதேஷை நல்ல நிலையில் இட்டார். ஷத்மான் இஸ்லாம் 183 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகளுடன் 93 ஓட்டங்களையும் மொமினுள் ஹக் 76 பந்துகளில் 5 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களையும் பெற்றனர். அடுத்து களம் புகுந்த முன்னாள் அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் 15 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார். (218 - 5 விக்.) இந் நிலையில் ஜோடி சேர்ந்த அனுபவசாலிகளான முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷை நல்ல நிலையில் இட்டனர். முஷ்பிக்குர் ரஹிம் 122 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள் உட்பட 55 ஓட்டங்களுடனும் லிட்டன் தாஸ் 58 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 52 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் குரம் ஷாஹ்ஸாத் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/191833