Everything posted by ஏராளன்
-
உலக யானைகள் தினம்: மனிதர்களை போலேவே யானையும் பெயர் வைத்து அழைக்குமா?
உலக யானைகள் தினம் இன்று! 12 AUG, 2024 | 01:44 PM காட்டு யானைகளை பாதுகாக்கும் நோக்கில் இன்று திங்கட்கிழமை (12) உலக யானைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. கடந்த 2011 ஆம் ஆண்டு யானைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை 6000 என பதிவாகியுள்ளது. இதில் 55.09 சதவீதம் வயது கூடிய யானைகள் என பதிவாகியுள்ளது. மேலும் 25. 3 சதவீத யானைகள் இள வயது யானைகள் எனவும் 12. 4 சதவீத யானைகள் குட்டி யானைகள் எனவும் பதிவாகியுள்ளது. அத்துடன், யானைகள் தினத்தை முன்னிட்டு சீகிரியாவில் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/190886
-
ரஷ்யா - யுக்ரேன் போர் உக்கிரம்: மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் திடீர் தீ - தாக்குதல் நடத்தியது யார்?
பட மூலாதாரம்,UKRAINIAN PRESIDENCY/HANDOUT படக்குறிப்பு, ஜபோரிஷியா அணு மின் நிலையத்தில் குளிரூட்டும் கோபுரம் ஒன்றில் இருந்து கரும்புகை வெளிவரும் காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், சோபியா ஃபெரீரா சாண்டோஸ் பதவி, பிபிசி செய்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேனில் உள்ள ஜபோரிஷியா அணு மின் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து ரஷ்யா மற்றும் யுக்ரைன் ஆகிய இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்த அணுமின் நிலையத்தில் அந்தப் படைகளே தீ வைத்து கொளுத்தியதாக யுக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கூறினார். ஆனால், யுக்ரைன் தாக்குதலால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக ஜபோரிஷியாவில் ரஷ்ய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் கூறியுள்ளார். ஐ.நா.வின் அணு ஆயுத கண்காணிப்பு அமைப்பு, அந்த அணுமின் நிலையத்தில் இருந்து கடுமையான புகை வந்ததாகவும், அணுசக்தி பாதுகாப்பில் இதனால் எந்தவொரு தாக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய பிறகு முதன் முறையாக ரஷ்ய எல்லைக்குள் 30 கி.மீ. வரை யுக்ரேனிய படைகள் முன்னேறியுள்ள பின்னணியில் ஜப்போரிஷியா அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று, ஜபோரிஷியாவில் ரஷ்ய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரான எவ்ஜெனி பலிட்ஸ்கி, அணு மின் நிலையத்தின் குளிரூட்டும் கோபுரங்களில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறினார் அதற்கு யுக்ரைன் தாக்குதலே காரணம் என்று குற்றம் சாட்டிய அவர், அணுமின் நிலையத்தை சுற்றிலும் கதிர்வீச்சு அதிகரிப்பு ஏதும் இல்லை என்றும் கூறினார். ரஷ்யாவுக்குள் எல்லை தாண்டி முன்னேறும் யுக்ரேனை அச்சுறுத்தும் நோக்கில் ரஷ்யப் படைகள் வேண்டுமென்றே ஜபோரிஷியா அணுமின் நிலையத்தில் தீ வைத்திருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஜபோரிஷியாவில் ரஷ்ய அரசால் நியமிக்கப்பட்ட மற்றொரு அதிகாரியான விளாடிமிர் ரோகோவ், "தீ முழுவதும் அணைக்கப்பட்டுவிட்டது" என்று திங்கட்கிழமை அதிகாலையில் தனது டெலிகிராம் பதிவில் குறிப்பிட்டார். 2022 ஆம் ஆண்டு முதல் ஜபோரிஷியா அணு மின் நிலையம், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு எந்த ஒரு மின் உற்பத்தியும் நடைபெறவில்லை. இங்குள்ள ஆறு அணு உலைகளும் ஏப்ரல் முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச அணுசக்தி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பல வெடிப்புகளை தொடர்ந்து, ஜபோரிஷியா அணு மின் நிலையத்தில் இருந்து கடுமையான புகை வெளி வந்ததாக, அதன் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குளிரூட்டும் கோபுரங்களில் ஒன்றின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அணுமின் நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. எனினும், அணுசக்தி பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் சர்வதேச அணுசக்தி அமைப்பு கூறியுள்ளது. "குளிரூட்டும் கோபுரத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை உடனடியாக மதிப்பீடு செய்ய வேண்டும்" என்றும் சர்வதேச அணுசக்தி அமைப்பு கூறியுள்ளது. ரஷ்ய எல்லைக்குள் புகுந்து யுக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது என்பதை அந்நாட்டு அதிபர் ஸெலன்ஸ்கி முதன் முறையாக ஒப்புக் கொண்ட மறுநாள் ஜபோரிஷியா அணு மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் பேசிய மூத்த யுக்ரைன் அதிகாரி ஒருவர், நிறுவனத்திடம் கூறுகையில், ரஷ்ய படை தொடக்கத்தில் குறிப்பிட்டதைக் காட்டிலும் கூடுதலான படைகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். செவ்வாய்கிழமையன்று யுக்ரேனிய படைகள் ரஷ்யாவுக்குள் 30 கிலோமீட்டர் (19 மைல்) தொலைவுக்கு முன்னேறிச் சென்று தாக்குதல் நடத்தியது. பிப்ரவரி 2022 ஆம் ஆண்டில் ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதில் இருந்து யுக்ரேன் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். யுக்ரேன் தாக்குதலை தடுத்த நிறுத்த ரஷ்யா தொடர்ந்து போராடி வருகிறது. போர் நடக்கும் குர்ஸ்க் பகுதியில் 76,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கு உள்ளூர் அதிகாரிகள் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். குர்ஸ்க் பகுதியில் இருந்து பாதுகாப்பு தேடி மாஸ்கோ செல்ல விரும்பும் மக்களுக்காக அவசர இரயில் சேவைகள் அளிக்கப்படுகின்றன. யுக்ரேன் நடத்திய தாக்குதலில் சிலர் காயமடைந்ததாக குர்ஸ்க் ஆளுநர் தெரிவித்துள்ளார். அங்கே இருநாட்டுப் படைகளுக்கும் இடையே இந்த வார இறுதி வரை சண்டை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுக்ரைனின் இந்த தாக்குதல் ஆத்திரமூட்டும் ஒன்று என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த வார தொடக்கத்தில் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cjrd82j1lx3o
-
சுமந்திரன், சாணக்கியன் - இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்திப்பு
Published By: DIGITAL DESK 3 12 AUG, 2024 | 02:22 PM இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும், இரா.சாணக்கியனும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்கொங்கை சந்தித்து கலந்துரையாடினர். சீனத் தூதுவரின் அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள சீனத் தூதராலயத்தில் இன்று திங்கட்கிழமை (12) குறித்த சந்திப்பு நடைபெற்றது. தற்போதைய முக்கிய நிகழ்வுகள் சம்பந்தமாகவும் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் சம்பந்தமாகவும் சினேகபூர்வமாக கலந்துரையாடினோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/190893
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
கோலாகலமாக நிறைவடைந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்: பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,நிறைவு விழாவில் மனு பாகர், இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி சென்றனர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கிய 33-வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், ஞாயிற்றுக்கிழமை அன்று (11-08-2024) நிறைவடைந்தது. ஒலிம்பிக் 2024இன் நிறைவு விழா பாரிஸ் நகர மைதானத்தில் நள்ளிரவு 12.30 (இந்திய நேரப்படி) மணிக்கு நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் அமெரிக்க இசைக்கலைஞர்களான பில்லி ஐலிஷ் (Billie Eilish), ஸ்னூப் டாக் (Snoop Dogg) மற்றும் பிரபல அமெரிக்க இசைக்குழுவான ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ் (Red Hot Chili Peppers) கலந்து கொண்டனர். நிறைவு விழாவில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கலந்து கொண்டு, தனது பாணியில் ஒரு ஸ்டண்ட் செய்து பார்வையாளர்களைக் கவர்ந்தார். வெற்றி பெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களும் நிறைவு விழாவில் கௌரவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2028இல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ள அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் குழுவிடம் ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்பட்டது. இந்த அணிவகுப்பு விழாவில் இந்திய அணி சார்பில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகர், வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி சென்றனர். எல்லை தாண்டி இதயங்களை வென்ற தாயுள்ளம் - இது நீரஜ் சோப்ரா, அர்ஷத்தின் நெகிழ்ச்சி கதை10 ஆகஸ்ட் 2024 பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிறைவு விழாவில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கலந்து கொண்டு தனது பாணியில் ஒரு ஸ்டண்ட் செய்து பார்வையாளர்களைக் கவர்ந்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 126 பதக்கங்களுடன் (40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம்) முதலிடம் பிடித்துள்ளது. சீனா 91 பதக்கங்களுடன் (40 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலம்) இரண்டாவது இடத்தில் உள்ளது. 20 தங்கம் உட்பட மொத்தம் 45 பதக்கங்களைப் பெற்ற ஜப்பான் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாத சுமார் 114 நாடுகள் உள்ளன. கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிலும், அமெரிக்கா 39 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 38 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன. இந்த ஒலிம்பிக்கில், இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களைக் கைப்பற்றி 71-வது இடத்தைப் பிடித்தது. பெண்கள் மற்றும் கலப்பு அணிகள் துப்பாக்கிச் சுடுதலில் மனு பாகர் பெற்ற 2 வெண்கலங்கள் ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதலில் ஸ்வப்னில் குசாலே பெற்ற 1 வெண்கலம் ஆண்கள் ஹாக்கியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி பெற்ற வெண்கலம் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா பெற்ற வெள்ளிப் பதக்கம் ஆண்களுக்கான மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் பெற்ற வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் 2020இல், இந்தியா ஏழு பதக்கங்களுடன் (அதில் ஒன்று தங்கம்) பதக்கப் பட்டியலில் 48வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை மனு பாகர் பெற்றார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்டுக்கு, இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு 100 கிராம் எடை அதிகரித்ததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எந்தப் பதக்கமும் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அவரது மேல்முறையீட்டு மனு மீது இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஒருவேளை முடிவு வினேஷுக்கு சாதகமாக வந்தால் இந்தியாவுக்கு ஏழு பதக்கங்கள் கிடைக்கும். வினேஷ் போகாட் தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார், ஆகஸ்ட் 13 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் இதுகுறித்த முடிவு அறிவிக்கப்படும். இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தான் ஒரு தங்கப் பதக்கத்துடன் அணி 62வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் இந்த பதக்கத்தை வென்றிருந்தார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா (இடது) தங்கம் வென்ற நதீம் (வலது) பாரிஸ் ஒலிம்பிக் நிறைவுவிழா புகைப்படங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மைதானத்தின் மேற்கூரையில் இருந்து விழா மேடைக்கு குதித்து சாகசம் செய்த நடிகர் டாம் குரூஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES ஒலிம்பிக் 2024இல் எழுந்த சர்ச்சைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்டின் தகுதி நீக்கம், குத்துச்சண்டை வீராங்கனைகள் இமானே கெலிஃப் மற்றும் லின் யூ டிங் தொடர்பான பாலினச் சர்ச்சை மற்றும் ஆர்மேனியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஜோர்டான் சிலிஸிடம் இருந்து வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டது போன்ற சில சர்ச்சைகள் தலைப்புச் செய்திகளாக மாறின. இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் போட்டியிட்டார். ஆனால் இறுதிபோட்டி தொடங்குவதற்கு முன் அவரது எடையை அளவிடும்போது, அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட 100 கிராம் அதிகமாக எடை இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வினேஷ் போகாட் இறுதிப் போட்டிக்கு வந்ததன் மூலம் வெள்ளிப் பதக்கம் உறுதி செய்யப்பட்டது, ஆனால் அவரது 50 கிலோவுக்கு மேல் இருந்ததால் வெள்ளி பதக்கம் கூட கிடைக்கவில்லை. பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப்பை எதிர்த்து களம் இறங்கிய இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கரினி 46 வினாடிகளில் ஆட்டத்தை விட்டு வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாலின தகுதிச் சோதனையில் தோல்வியுற்றதால், கடந்த ஆண்டு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இருந்து நீக்கப்பட்ட இரு வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதில் இமானே கெலிஃப்பும் ஒருவர். பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் அதிகம் பேசப்பட்ட இந்த சர்ச்சையைக் கடந்து இமானே கெலிஃப், சீனாவின் உலக சாம்பியனான யாங் லியூ-வை வெல்டர்வெயிட் பிரிவில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். படக்குறிப்பு,தைவானின் லின் யூ டிங் (இடது); அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் (வலது) மற்றொருவரான, தைவான் குத்துச்சண்டை வீராங்கனை லின் யூ-டிங்கும்,போலந்து நாட்டின் குத்துச்சண்டை வீராங்கனை ஜூலியா ஸ்ஸெரெமெட்டாவை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.. இந்த பாலின சர்ச்சை அடுத்த நடக்கவிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்கையும் பாதிக்கலாம், ஏனெனில் இரண்டு வீராங்கனைகளும் அதிலும் கலந்துகொள்வார்கள். மூன்றாவது பெரிய சர்ச்சை, அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான ஜோர்டான் சிலிஸ், அவர் ஆரம்பத்தில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருந்தார். பின்னர் அமெரிக்க ஜிம்னாஸ்ட் அணியின் அறிவுறுத்தலின்படி, சிலிஸின் ஸ்கோர் 13.666 லிருந்து 13.766 ஆக மாற்றப்பட்டது, இதனால் அவர் ஐந்தாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். ஆனால் அதற்கு முன்னரே, ருமேனியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான பார்போசுவின் ஸ்கோர் 13.7 ஆக இருந்தது. இதனால் ருமேனியாவின் ஒலிம்பிக் கமிட்டி சிலிஸின் ஸ்கோரில் செய்யப்பட்ட மாற்றத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இது பின்னர் நடுவர் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் ஜோர்டான் சிலிஸிடம் இருந்து வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டது. கடைசி நாளில் ஏற்பட்ட பரபரப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒலிம்பிக் நிறைவு விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை ஈபிள் கோபுரத்தில் ஏறியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஈபிள் கோபுரத்தின் மீது ஒருவர் ஏறியது பாதுகாப்பு முகமைகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. "ஒலிம்பிக் நிறைவு விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஞாயிற்றுக்கிழமை ஈபிள் கோபுரத்தில் ஏறியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்" என்று பாரிஸ் காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர். நேற்று பிற்பகலில் (12-08-2024) சட்டை அணியாமல் ஒருவர் ஈபிள் கோபுரத்தில் ஏறியதைக் காண முடிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால், அந்த நபர் குறித்து காவல்துறையினர் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. சமூக ஊடகங்களில் வெளியான ஒரு காணொளியில், சட்டை அணியாத நபர் ஒருவர் ஒலிம்பிக் வளையங்களுக்கு சற்று மேலே உள்ள கோபுரத்தில் ஏறுவதைக் காணலாம். மற்றொரு காணொளியில், கைகளை பின்னால் கட்டிய நிலையில் அந்த நபரை போலீசார் அழைத்துச் செல்வதையும் காணலாம். நிறைவு விழாவில் பாரிஸ் மேயர் ஆன் ஹிடால்கோ ஒலிம்பிக் கொடியை லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸிடம் ஒப்படைத்தார். விழாவின் கடைசி நிகழ்வாக, எரிந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/cn8lxyxr92no
-
இஸ்ரேல் vs இரான்: மத்திய கிழக்கில் மிகப்பெரிய போர் மூளுமா? அமெரிக்கா என்ன சொல்கிறது?
ஏவுகணை தாக்குதலில் ஈடுபடக்கூடிய நீர்மூழ்கிகளை மத்திய கிழக்கிற்கு செல்லுமாறு அமெரிக்கா உத்தரவு - போர்க்கப்பலை விரைவாக செல்லுமாறு வேண்டுகோள் 12 AUG, 2024 | 03:00 PM ஈரான் அடுத்த சில நாட்களில் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து மத்திய கிழக்கிற்குஏவுகணைகளை செலுத்தக்கூடிய நீர்மூழ்கிகளை அனுப்புமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் உத்தரவிட்டுள்ளார். பென்டகன் இதனை தெரிவித்துள்ளது. எவ்35 போர்விமானங்களுடன் கூடிய யுஎஸ்எஸ் ஏபிரஹாம் லிங்கனை மத்திய கிழக்கிற்கு வேகமாக செல்லுமாறும் அன்டனி பிளிங்கென் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ்கலன்ட் ஈரானின் இராணுவதயாரிப்புகள் அந்த நாடு இஸ்ரேலிற்கு எதிராக பாரிய தாக்குதலை திட்டமிடுவதை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்பது குறித்த தனது அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ள அன்டனி பிளிங்கென் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில் மத்திய கிழக்கில் அமெரிக்கா படையினரை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை பிராந்திய ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்காக இஸ்ரேலிற்கு எதிராக பொருத்தமான தடுக்கும் நடவடிக்கையை எடுப்பதற்கான உரிமை ஈரானிற்குள்ளது என ஈரானின் பதில் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/190899
-
பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
திருக்கோணேஸ்வரத்தில் திருட்டு போன தாலி : ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள் திருக்கோணேஸ்வரம் ஆலயம் சம்பந்தமாக ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) ஏற்பாடு செய்த உத்தியோக பூர்வமற்ற கூட்டத்தில் ஆளுநருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் (11) செந்தில் தொண்டமானால் யாப்புக்கு முரணான திருக்கோணேஸ்வரம் ஆலய அபிவிருத்தி சம்பந்தமான பொது சபை உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று அவசர அவசரமாக நடத்தப்பட்டது. அங்கு கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் ராஜ கோபுரம் கட்டுவதற்கான ஏற்பாடு தன்னால் செய்யப்படுள்ளதாக தெரிவித்துள்ளார். பெறுமதியான தாலி இதையடுத்து, சோழர் காலத்து பல நூறு கோடி ரூபாய் பெறுமதியான தாலி ஒன்று களவு போய் உள்ளது என தெருவித்ததோடு தொடர்ந்து கூட்டத்தை முடித்து பொது மக்களுக்கு கேள்வி கேக்க வாய்ப்பு வழங்காமல் செல்ல முயன்றுள்ளார். இந்தநிலையில், கூட்டத்துக்கு வருகை தந்த திருகோணமலை (Trincomalee) சேர்ந்த ஆயுள் கால உறுபினர்கள் தமது கேள்விக்கு நீங்கள் பதில் கூறியே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த காரணத்தால் பின்வரும் கேள்விகள் மற்றும் விளக்கங்கள் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சோழர் காலத்து நகை தொடர்ந்து மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, “2009 ஆம் ஆண்டு நீதிமன்றதால் நிர்வாக சபையிடம் கோவிலை ஒப்படைக்கும் போது இப்படியான சோழர் காலத்து நகை என்ற ஒன்று இருக்கவில்லை, கடந்த சிவராத்திரி நிகழ்வில் ஆலயத்துக்கு சொந்தமான அனைத்து அசையும் அசையா சொத்து விபரங்களும் பெரிய திரையில் மக்கள் பார்வைக்கு காண்பிக்கபட்டது அதில் எங்குமே சோழர் காலத்து நகை என்ற ஒன்று எங்குமே இருக்கவில்லை அவ்வாறு இருக்க இப்படி சோழர் காலத்து நகை திருட்டு என்று செய்தி வெளியிட பின்னணி என்ன ? திருகோணமலையில் தீர்க்கபட வேண்டிய கன்னியா மற்றும் கோணேசர் ஆலய சட்டவிரோத கடைகள் என்று எவ்வளவோ பிரச்சனை இருக்கும் போது அதை பார்க்காமல் இந்த மூன்று பவுண் தாலி விடயத்தை தூக்கி பிடித்த யாப்புக்கு முரணான கூட்டத்தின் நோக்கம் என்ன ? குடியியல் நீதிமன்றில் ஆலயம் தொடர்பான ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது எழுத்து மூலம் எந்த அறிவித்தலும் இல்லாமல் இப்படி ஒரு சட்டத்துக்கு முரணான அவசர கூட்டம் கூட்ட வேண்டிய தேவை என்ன ?” என மக்கள் கேள்வியெழுப்ப பதில் கூற முடியாத செந்தில் தொண்டமான் வெளியே சென்றமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/thirukoneswara-temple-theft-of-gold-thali-1723451360
-
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள “சிவகங்கை” கப்பல்
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை; பயணக் கட்டணம் எவ்வளவு தெரியுமா? நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பயணக்கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக சேவையில் இந்த கப்பல் சேவை ஈடுபடவுள்ளது. சிவகங்கை கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணி ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. வணிக வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பயணிக்க ஒருவருக்கு 7,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், இந்த கப்பலில் பயணிகளுக்கு துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் தம்முடன் 60 கிலோ வரையான பொதியை எடுத்துச் செல்லவும், 5 கிலோ வரை கைப்பையில் எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், சோதனை ஓட்டம் முடிந்த பின்னர் பயணிகள் அனுமதி சீட்டுக்களை முன்பதிவுகளை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/307689
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உச்சமடையும் போர்க்களம்: இலங்கை இராணுவ வீரர்கள் உக்ரைனால் அதிகாரிகளால் கைது ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கை முன்னாள் இராணுவ வீரர்கள் உக்ரைன் (Ukraine) அதிகாரிகளால் போர்க் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போரில் எல்லை தாண்டிய குற்றத்தின் பேரில் ஐந்து இலங்கையர்கள் போர்க் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் உக்ரேனியப் படைகளுடன் போரிட்ட மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் இலங்கை தூதரகத்திற்குத் தெரிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர் முன்னதாக, ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களை விடுவிப்பதற்காக இலங்கையில் இருந்து அமைச்சர்கள் குழு மொஸ்கோவிற்கு விஜயம் செய்தது. பெரும்பாலும் ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர், ரஷ்ய குடியுரிமை, அதிக சம்பளம் மற்றும் சலுகைகளை வழங்குவதாக வாக்குறுதியளித்து ரஷ்யாவிற்கு பயணமாக ஏமாற்றப்பட்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர்கள் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும், இதனால் அவர்களை விடுவிக்க கடினமாக உள்ளதுடன் சிலர் ரஷ்ய குடியுரிமை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/sri-lankan-ex-army-arrested-in-ukraine-russia-war-1723441093
-
கட்டுநாயக்கவில் சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி நிலை
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏனையவர்களுக்கும் நிகழ்நிலை விசா வழங்கப்படாமை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வருகைக்கான விசாவைப் பெறுவதற்கு நீண்ட வரிசைகள் உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இலங்கைக்குள் நுழைவதற்கான விசா வழங்குவதில் இருந்து VFS Global நிறுவனத்தை நீக்கி, பழைய முறைப்படி விமான நிலையத்தில் விசா வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒன் அரைவல் விசா எனினும், அரசாங்கமும் குடிவரவு திணைக்களமும் பழைய முறைப்படி நிகழ்நிலை விசா வழங்குவதை ஆரம்பிக்காததால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெற நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன. இந்த நிலையில், இலங்கைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒன் அரைவல் விசாவைப் பெறுவதே ஒரே தீர்வாக மாறியுள்ளது. அதிகளவான விமானங்கள் இலங்கையில் ஒகஸ்ட் மாதம் முதல் சுற்றுலாப் பருவம் ஆரம்பமாகியுள்ள நிலையில், கண்டி எசல பெரஹெரா திருவிழாவைக் காண ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகின்றனர். இதன் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகளவான விமானங்கள் ஒரே நேரத்தில் வந்து சேரும் போது, விசா பெறுவதற்கு (On Arrival Visa) எப்போதும் நீண்ட வரிசையில் நிற்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. https://ibctamil.com/article/problem-for-tourists-due-to-non-online-visa-sl-1723446143
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதித் தேர்தல்; வேட்புமனுவில் கையொப்பமிட்டார் அநுர Published By: DIGITAL DESK 3 12 AUG, 2024 | 11:22 AM எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று திங்கட்கிழமை (12) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்டார். இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/190871
-
டிஜிட்டல் முறைமையிலான சுயநிர்ணயத்தை தமிழர்களுக்கு வழங்கலாம் - பாட்டலி சம்பிக்க ரணவக்க
Published By: VISHNU 12 AUG, 2024 | 03:44 AM (இராஜதுரை ஹஷான்) பொருளாதார ரீதியில் நாடு தற்போது அடைந்துள்ள ஒப்பீட்டளவிலான முன்னேற்றத்தை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலின் போது செயற்படமாட்டோம். அரச கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டால் தமிழர்களுக்கு டிஜிட்டல் முறைமை ஊடாக சுயநிர்ணயத்தை வழங்கலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பு பிலியந்தல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது. பொருளாதார படுகொலையாளிகளான ராஜபக்ஷர்கள் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிடுகிறார்கள். பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டிய ராஜபக்ஷர்களால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியுமா என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும். ஊழல் மோசடியை இல்லாதொழிப்பதாக குறிப்பிடப்படுகிறது. ஊழல்வாதிகள் தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாக குறிப்பிடும் தரப்பினர் அந்த ஆதாரங்களை கொண்டு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.ஊழல் மோசடிகளை தமது அரசியல் பிரச்சாரத்துக்கு மாத்திரம் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஊழல் மோசடி தொடர்பில் மக்கள் மத்தியில் குறிப்பிட்டுக் கொண்டு மக்களை நாங்கள் தூண்டிவிடவில்லை.நீதிமன்றத்தை நாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கு வி.எப்.எஸ்.நிறுவனத்தின் ஊடாக விசா விநியோகிக்கும் முறைமையில் பாரிய மோசடி இடம்பெறுவதையும் இந்த முறைமையால் இலங்கையில் ஆட்புல எல்லைக்கு பாதிப்பு ஏற்படுவதையும் உயர்நீதிமன்றத்தில் ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டினோம். தரவு மற்றும் ஆதாரங்களை பரிசீலனை செய்து வி.எப்.எஸ்.முறைமையிலான புதிய விசா விநியோகித்தல் முறைமைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு முறையற்ற வகையில் செயற்படுகிறார். வெளிநாட்டு கையிறுப்பை அதிகளவில் ஈட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஜனாதிபதியின் இலக்குக்கு இவரால் பாதிப்பு ஏற்படும். ஆகவே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தாவிடின் அதன் பெறுபேறு அவருக்கு எதிர்வரும் மாதம்; 21 ஆம் திகதி கிடைக்கப் பெறும். தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை கோருகிறார்கள். இதனால் தான் பல்லாயிர கணக்கானோர் உயிரிழந்தார்கள். அரச கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தினால் தமிழர்களுக்கு டிஜிட்டல் முறைமையிலான சுயநிர்ணயத்தை வழங்க முடியும். மொழிசார்ந்த பிரச்சினைகளும் தோற்றம் பெறாது. பொருளாதார காரணிகளை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுப்போம். நாடு வங்குரோத்து நிலைக்கு செல்லும் தீர்மானத்தை எடுப்பதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்பதை மக்களிடம் தெளிவாக எடுத்துரைப்போம். பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போதைய முன்னேற்றத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஒருபோதும் செயற்படமாட்டோம். பொருளாதார கொள்கையினை முன்னிலைப்படுத்தி செயற்படுவோம். ஜனநாயகம் பற்றி தற்போது பேசும் தரப்பினர் 2022 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு பங்களாதேஸ் நாட்டின் தற்போதைய நிலைமையை ஏற்படுத்த முயற்சித்தார்கள். இலங்கையை பங்களாதேஸ், சூடான் ஆகிய நாடாக மாற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்றார். https://www.virakesari.lk/article/190851
-
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
ராஜபக்ஷர்களே நாட்டு மக்களை யாசகர்களாக்கினர் : நாமல் ராஜபக்ஷவை படுதோல்வியடைய செய்து மக்கள் தமது வெறுப்பை வெளிப்படுத்த வேண்டும் - பாட்டலி சம்பிக்க ரணவக்க Published By: VISHNU 12 AUG, 2024 | 03:34 AM (இராஜதுரை ஹஷான்) நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி ஒட்டுமொத்த மக்களையும் கையேந்த வைத்த ராஜபக்ஷ குடும்பத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும். நாமல் ராஜபக்ஷவை படுதோல்வியடைய செய்து மக்கள் தமது வெறுப்பை வெளிப்படுத்த வேண்டும். நாட்டை வங்குரோத்துக்கு தள்ளியவர்களால் எவ்வாறு பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். நாட்டு மக்கள் தெளிவாக சிந்திக்க வேண்டும். செப்டெம்பர் 21 ராஜபக்ஷர்களுக்கு சிறந்த படிப்பினையை கற்றுக்கொடுக்கும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பு பிலியந்தல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் சிறந்த அபிவிருத்தித் திட்டங்களை நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுத்தோம்.நட்டமடைந்த அரச நிறுவனங்களையும் இலாபமடைய செய்து அதன் பயனை நாட்டு மக்களுக்கு பல்வேறு வழிகளில் பெற்றுக்கொடுத்தோம். 2019 ஆம் ஆண்டு இனவாதம் மற்றும் மதவாதத்தை முன்னிலைப்படுத்தி கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார்.இவர் ஜனாதிபதியாகியது நாட்டின் துரதிஸ்டம் என்கே குறிப்பிட வேண்டும்.கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் எவ்விதமான தூரநோக்கு சிந்தனைகளுமில்லாமல் பல அபிவிருத்தி கருத்திட்டங்களை இரத்து செய்தார்.இலகு ரணில் திட்டத்தை விசேடமாக குறிப்பிட வேண்டும். 2020 ஆம் ஆண்டு இலகு ரயில் அபிவிருத்தி திட்டத்தை இரத்து செய்யாமலிருந்திருந்தால் இந்த ஆண்டு அந்த அபிவிருத்தி திட்டத்தை நிறைவு செய்திருக்க முடியும்.இலகு ரயில் அபிவிருத்தி திட்டம் குறித்து ஜப்பான் நாட்டுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. ஒட்டுமொத்த மக்களையும் யாசகர்களாக்கி இந்திய யாசகர் இலங்கைக்கு நிவாரணம் வழங்கும் நிலைக்கு நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்ஷர்கள் 'பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டம் எம்மிடம் உள்ளது'என்று குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் மத்தியில் செல்வது வேடிக்கையாகவுள்ளது. நாட்டை வங்குரோத்துக்கு தள்ளியவர்களால் எவ்வாறு பொருளாதார்தை மேம்படுத்த முடியும்.நாட்டு மக்கள் தெளிவாக சிந்திக்க வேண்டும். பொருளாதார பாதிப்புக்கு முன்னாள் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.இவர்களுக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இன்றும் சுதந்திரமாக உள்ளார்கள். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை களமிறக்கியதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஏனெனில் ஒட்டுமொத்த மக்களையும் யாசகர்களாக்கிய ராஜபக்ஷவின் குடும்பத்துக்கு தக்க பாடத்தை ஜனநாயக முறையில் புகட்ட வேண்டும்.ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவை படுதோல்வியடைய செய்து மக்கள் தமது வெறுப்பை வெளிப்படுத்த வேண்டும்.ராஜபக்ஷர்கள் 2022 ஆம் ஆண்டு மே 09 மற்றும் ஜூலை 09 காலப்பகுதியில் கற்றுக் கொள்ளாத படிப்பினையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி கற்றுக்கொடுக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பிரதான தனியார் ஊடகம் ஒன்று சிங்கள பௌத்தம்,இனவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியது. பாம்பை காண்பித்து பல விடயங்களை செய்தார்கள்.இவர்கள் மீண்டும் தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட முன்வந்துள்ளார்கள்.ஆகவே இவர்களுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/190849
-
உலக யானைகள் தினம்: மனிதர்களை போலேவே யானையும் பெயர் வைத்து அழைக்குமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனிதர்களைப் போல யானைகளும் குறிப்பிட்ட யானையைப் பெயர் சொல்லி அழைத்து செய்தியைக் கூறுகின்றன என பகுப்பாய்வு முடிவுகள் உணர்த்தின கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் (இன்று உலக யானைகள் தினம். 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.) சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும், ஆப்பிரிக்க, ஆசிய யானைகளின் அவலநிலை குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் யானைகளின் பாதுகாப்புக்கான தீர்வுகளை சர்வதேச அளவில் முன்னெடுக்க ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. உலகில் பல்லாயிரக்கணக்கான யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவைதான். ஒன்று ஆசிய யானைகள், மற்றொன்று ஆப்பிரிக்க யானைகள். சமீபத்தில் ஆப்பிரிக்க யானைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மனிதர்களைப் போலேவே யானைகளும் ஒன்றுக்கொன்று பெயர் வைத்து அழைத்துக் கொள்கின்றன என கண்டறியப்பட்டது. அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் மைக்கேல் பார்டோ தலைமையிலான குழு, கென்யாவில் வாழும் ஆப்பிரிக்க காட்டு யானைகளை ஆய்வு செய்து இதனை கண்டுபிடித்தனர். இந்த ஆய்வு முடிவுகள் ஆசிய யானைகளுக்கும் பொருந்துமா? யானைகள் தங்களுக்குள் எப்படி தொடர்புகொள்கின்றன மற்றும் அவற்றின் சமூக கட்டமைப்பு எவ்வாறு உள்ளது? ‘பிறருக்கு தீங்கு நினைக்காத உயிரினம்’ பட மூலாதாரம்,SANGITA IYER படக்குறிப்பு, அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில், சங்கீதாவின் குழுவை வழிமறித்த ஆண் யானை ‘யானைகள், இயற்கையின் தலைச்சிறந்த படைப்பு. பிறருக்கு தீங்கு நினைக்காத ஒரே உயிரினம்’- என 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலக் கவிஞர் எழுதியுள்ளார். “மேலே இருக்கும் வரிகளைப் படித்தால், சிலர் யோசிக்கலாம், யானைகள் மனிதர்களைத் தாக்குவதை, விரட்டுவதை, பார்த்திருக்கிறோமே என்று. ஆனால் என் பல வருட அனுபவத்தில் சொல்கிறேன், மனிதர்கள் மீதான முந்தைய அனுபவமே யானைகளின் நடவடிக்கையைத் தீர்மானிப்பவை” என்கிறார் எழுத்தாளர், வனவிலங்கு ஆவணப்பட இயக்குநர் மற்றும் உயிரியலாளர் சங்கீதா ஐயர். ஆசிய யானைகளைப் பாதுகாக்கும் நோக்கில் 2016இல் உருவாக்கப்பட்ட ‘வாய்சஸ் ஃபார் ஏசியன் எலிபன்ட்ஸ்’ (Voices for Asian Elephants) என்ற அமைப்பின் நிறுவனரான சங்கீதா, பல வருடங்களாக யானைகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். “ஆண் யானைகளுக்கு இனப்பெருக்க காலத்தில் மஸ்த் எனும் மதனநீர் வெளியேறும். அப்போது யானைகள் மிகவும் மூர்க்கமாக இருக்கும். தங்களது பாதையில் எது வந்தாலும், யோசிக்காமல் அழித்துவிட்டு முன்னேறும். மிகவும் எளிதாக மதம் பிடிக்கும். அப்படி மதனநீர் வெளியேறும் பருவத்தில் இருந்த ஒரு ஆண் காட்டு யானையை, ஆய்வின் போது நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டது” என்கிறார் சங்கீதா. பட மூலாதாரம்,@SANGITA4ELES/X படக்குறிப்பு,சங்கீதா பல வருடங்களாக யானைகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார் அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவிற்கு, வனவிலங்குகள் குறித்த தனது ஆவணப்படத்திற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்றிருந்தார் சங்கீதா. “எங்கள் குழு சென்ற வாகனத்திற்கு சில நூறு மீட்டர்கள் தொலைவில் அது நின்றிருந்தது. அதன் காதுகளுக்கு பக்கத்தில் மதனநீர் வழிந்துக் கொண்டிருந்தது. மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்ட யானை எங்களை நோக்கி முன்னேறியது. நாங்கள் வாகனத்தின் இன்ஜினை அணைத்துவிட்டு காத்திருந்தோம்” “பாதையில் இருந்த மூங்கில் மரங்களை உடைத்து சாப்பிட்டவாறே, அது எங்களை நோக்கி வந்தது. நாங்கள் பதற்றப்படவில்லை, கத்தவில்லை, அதை பயமுறுத்தவில்லை.” என்று அன்று நடந்ததை விவரித்தார் சங்கீதா. அவ்வப்போது யானை தங்களைத் தாக்க வருவது போல பாவனைகள் செய்ததையும், சுமார் 18 நிமிடங்கள் வரை பாதையை மறித்தவாறு நின்றதையும் அவர் நினைவு கூர்ந்தார். “பின்னர் அந்த யானை அமைதியாக திரும்பிச் சென்றது. எப்படி மதனநீர் வழியும் ஒரு யானை தாக்காமல், திரும்பிச் சென்றது என அந்தக் காணொளியை பார்த்த விலங்கு ஆய்வாளர்கள் பலர் ஆச்சரியப்பட்டனர். அதனால்தான் சொல்கிறேன், மனிதர்களுடனான அனுபவங்கள்தான் அவற்றின் நடவடிக்கையைத் தீர்மானிக்கின்றன.” என்கிறார் சங்கீதா. இந்திய காகங்களை கொடிய பறவையாக கருதும் கென்யா - 10 லட்சம் காகங்களை கொல்லும் முடிவு ஏன்?7 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகில் பல்லாயிரக்கணக்கான யானைகள் இருந்தாலும் அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவைதான் யானைகள் தொடர்பு கொள்ளும் முறை மைக்கேல் பார்டோ தலைமையிலான குழுவினர், கென்யாவின் தேசிய பூங்காக்கள், வன காப்பகங்கள் மற்றும் சவானாக் காடுகளில், 1986 முதல் 2022 காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட யானைகளின் 625 பிளிறல் ஒலிகளை ஆய்வு செய்தனர். செயற்கை நுண்ணறிவின் உதவியோடு இந்த பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. மனிதர்களைப் போல யானைகளும் குறிப்பிட்ட யானையைப் பெயர் சொல்லி அழைத்து, அதற்கு செய்தியைக் கூறுகின்றன என பகுப்பாய்வு முடிவுகள் உணர்த்தின. இதற்கு முன்பாக இக்குழு செய்த ஆய்வில், ‘டால்பின்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள ஒரு குறிப்பிட்ட டால்பினின் விசில் ஒலியைப் பாசங்கு செய்கின்றன, கிளிகள் ஒரு குறிப்பிட்ட கிளியின் குரலைக் மிமிக்ரி செய்து அழைக்கின்றன’ போன்ற ஆச்சரியமான முடிவுகள் கிடைத்தன. ஆனால், இந்த யானைகள் தொடர்பான ஆய்வில் அவை பாசாங்கோ, மிமிக்ரியோ செய்யாமல், தனித்துவமான ஒரு பிளிறலை வெளிப்படுத்தி அழைக்கின்றன எனக் கண்டறியப்பட்டது. யானைகள் ஒவ்வொரு யானைக்கும் குறிப்பிட்ட ஒலிகளைப் பயன்படுத்துவதோடு மட்டுமின்றி, தமக்காக எழுப்பப்படும் ஒலிகளை அடையாளம் கண்டு எதிர்வினையாற்றுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. இதை உறுதிப்படுத்த, பார்டோவும் அவரது குழுவினரும், பதிவு செய்யப்பட்ட பிளிறல்களை, 17 யானைகள் முன்பு ஒலிக்கச் செய்தனர். அப்போது யானைகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தையும் கண்காணித்தனர். தமது 'பெயர்' ஒலிக்கும்போது அந்த யானை சத்தம்வரும் திசையை நோக்கித் உற்சாகமாக ஓடிச் சென்றுள்ளது. அந்தக் குறிப்பிட்ட யானை மட்டும் அந்தப் பிளிறல் ஒலியை உன்னிப்பாகக் கவனித்தது, ஆனால் பிற யானைகள் அது தனக்கானது அல்ல என உணர்ந்து புறக்கணித்து விட்டன என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. ஆசிய யானைகளுக்கும் இந்த ஆய்வு பொருந்துமா? பட மூலாதாரம்,GETTY IMAGES “பிளிறல்கள், எக்காளம் போன்ற மனிதர்கள் கேட்கக்கூடிய ஒலிகள் தவிர்த்து நம்மால் கேட்கமுடியாத இன்ஃப்ராசோனிக் ஒலிகள் மூலமாகவும் யானைகள் தொடர்புகொள்ளும். எனவே இந்த ஆய்வு முடிவுகள் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை” என்கிறார் வனவிலங்கு ஆய்வாளர், டாக்டர் லக்ஷ்மிநாராயணன். மத்திய அரசின் வனஉயிர் நிறுவனத்தில் (Wildlife Institute of India) பணிபுரிந்து வரும் லக்ஷ்மிநாராயணன், “யானைகள் பொதுவாக தன் குழுவில் இருக்கும் பிற யானைகளைப் பார்த்துதான் அனைத்தையும் கற்றுக்கொள்ளும். ஒலி மூலம் மட்டுமல்லாது, சிறுநீர், மதநீர், சாணம் மூலமாகவும் அவை தகவல்கள் பரிமாறிக் கொள்ளும்” என்று கூறினார். ஆப்பிரிக்க யானைகள் குறித்தான மைக்கேல் பார்டோ தலைமையிலான ஆய்வு, பெரும்பாலான ஆசிய யானைகளுக்கும் பொருந்தும் என்று கூறியவர், இந்தியாவில் ஆசிய யானைகளின் தொடர்பாடல் குறித்து ஆய்வுகள் நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்றும் தெரிவித்தார். “ஒரு இடத்தில் மனிதர்கள் இருந்தால், முன்னால் செல்லும் யானை அதைக் குறித்து தகவல் தெரிவித்துவிடும். யானைகள் முடிந்தவரை மனிதர்களைத் தவிர்க்கவே முயற்சி செய்யும்” என்று கூறுகிறார் லக்ஷ்மிநாராயணன். உயரத்தை அதிகரிக்க கால் நீட்டிப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணின் கதை11 ஆகஸ்ட் 2024 தாய் மட்டுமல்ல, தந்தை மது குடித்தாலும் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் - எச்சரிக்கும் புதிய ஆய்வு11 ஆகஸ்ட் 2024 யானைகளின் சமூக கட்டமைப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2010ஆம் ஆண்டில் மத்திய அரசு, யானையை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவித்தது “யானை ஒரு நாளைக்கு 250 கிலோ வரை உணவு எடுத்துக்கொள்ளும். 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். அப்படியிருக்க ஒரு நாளில் இவ்வளவு உணவையும், நீரையும் ஒரே இடத்தில் பெற முடியாது, அவை 40 முதல் 50 கி.மீ வரை பயணிக்கும். ஒரு யானைக் கூட்டத்தை பெண் யானைதான் வழிநடத்தும்” என்கிறார் பி.ராமகிருஷ்ணன். ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் 12 ஆண்டுகளாக, காட்டுயிர் உயிரியல் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் பி.ராமகிருஷ்ணன், 23 ஆண்டுகளாக யானைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். யானைகளின் வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். “அப்படி வழிநடத்தும் ஒரு பெண் யானைக்கு அந்தப் பகுதியில், தனது கூட்டம் தவிர்த்து வேறு எத்தனை யானைகள் உள்ளன என்பது துல்லியமாகத் தெரியும். புதிதாக ஒரு யானை அந்தப் பகுதிக்குள் நுழைந்தாலும் அது கண்டறிந்துவிடும். எனவே ‘பெயர் வைத்து அழைப்பது’ என்பதைக் கடந்து, அதை விட பல வித்தியாசமான தகவல் தொடர்பு முறைகளை அவை பயன்படுத்துகின்றன” என்று கூறுகிறார் ராமகிருஷ்ணன். தமிழ்நாடு வனத்துறை அறிக்கையின் படி, 2023இல் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின் மூலம் தமிழ்நாட்டின் 20 வனக் கோட்டங்களில் மொத்தம் 2,961 யானைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதுமலை புலிகள் காப்பகத்தின் உதகை மற்றும் மசினகுடி வனக் கோட்டங்களில் 790 யானைகள் (26.7%), சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் ஹாசனூர் மற்றும் சத்தியமங்கலம் வனக் கோட்டங்களில் 668 யானைகள் (22.6%), ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் வனக் கோட்டங்களில் 337 யானைகள் (11.4%), தமிழ்நாட்டின் மீதமுள்ள வனக் கோட்டங்களில் 1,166 (39.3%) யானைகள் உள்ளன. படக்குறிப்பு, பி.ராமகிருஷ்ணன் 23 ஆண்டுகளாக யானைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். தொடர்ந்து பேசிய பி.ராமகிருஷ்ணன், “ஒரு சிறு குழுவில், தாய் யானை, அதன் மூத்த குட்டிகள், சிறு குட்டிகள் என பயணிக்கும். ஆண் யானைகள் சற்று தனிமையை விரும்புவை. ஆனால் பயணிக்கும்போது மீண்டும் குழுவுடன் சேர்ந்துவிடும். 3, 4 சிறு குழுக்கள் சேர்ந்தும் பயணிக்கும்” “ஒரு யானை கர்ப்பமாக அதை பிற யானைகள் சூழ்ந்து, பாதுகாப்பு அரண் அமைத்துச் செல்லும். ஒருவேளை ஏதேனும் ஒரு யானை பிரிந்துவிட்டால், தலைவி பிரத்யேக ஒலி எழுப்புவதை நாங்கள் பலமுறை கவனித்தது உண்டு” என்று கூறினார். யானைகள் தொடர்பான மேலும் பல்வேறு ஆய்வுகள் இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், “2010ஆம் ஆண்டில் மத்திய அரசு, யானையை 'தேசிய பாரம்பரிய விலங்காக' அறிவித்த பிறகுதான் யானைகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. எனவேதான் கடந்த சில வருடங்களாக யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. யானைகளைப் பாதுகாப்பதும் இயற்கையைப் பாதுகாப்பதும் வேறில்லை என்பதை நாம் மறக்கக்கூடாது” என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/c33nd2gjlgzo
-
இலங்கை: விடுதலைப் புலிகளின் 2005-ம் ஆண்டு அறிவிப்பு இந்த தேர்தலிலும் தாக்கம் செலுத்துமா?
பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தல் களத்தில் முதல் தடவையாக 1999ம் ஆண்டு போட்டியிட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கையிலிருந்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். பொருளாதார ரீதியில் இலங்கை வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில், நாட்டை இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை ஓரளவு மீட்டு இயல்பு நிலைக்கு திருப்பியுள்ளார். இவ்வாறான பின்னணியில், வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம் என்ற கருப் பொருளை முன்னிலைப்படுத்திய ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்திருக்கின்றார். போரை முடிவுக்கு கொண்டு வந்தோம் என்பதை முன்னிலைப்படுத்தி 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றதை போன்று, பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை மீட்டோம் என்ற கருப் பொருளை முன்னிலைப்படுத்தி ரணில் விக்ரமசிங்க தற்போது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார். ரணில் தொடர்ந்து தோல்வி இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க, இரண்டு முறையும் தோல்வியடைந்திருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க 1994ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, 1999ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், முதல் தடவையாக போட்டியிட்டார். சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவை எதிர்த்து போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க அந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க 4,312,157 வாக்குகளை பெற்றார். ரணில் விக்ரமசிங்க 3,602,748 வாக்குகளை பெற்றிருந்தார். 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து போட்டியிட்டார். ஜனாதிபதித் தேர்தலில் முதல் தடவையாக களமிறங்கிய மஹிந்த ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்தார். ரணில் தோல்விக்கு விடுதலைப் புலிகள் காரணமா? சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் 2001ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 109 ஆசனங்களை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன்மூலம், ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றார். இலங்கையில் அப்போது பிரதமருக்கு அதிகாரம் காணப்பட்டது. அந்த காலப் பகுதியில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை ரணில் கைப்பற்றியிருந்தார். இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நார்வே தலையீட்டில் சமாதான பேச்சுவார்த்தை 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு, பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இலங்கை அதிபர் தேர்தலில் ஒரே வாக்குச்சீட்டில் 3 பேருக்கு வாக்களிக்கலாம் - எப்படி தெரியுமா?27 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1999 தேர்தலில் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவை எதிர்த்து போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க அந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை, 2006ம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில், நான்காவது ஈழப் போர் ஆரம்பமானது. இந்த போர் நிறுத்தம் காணப்பட்ட காலப் பகுதியிலேயே 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டிய நிலையில், 2006ம் ஆண்டு மீள போர் ஆரம்பமானது. 2005ம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என வட, கிழக்கு மாகாண மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கோரிக்கை முன்வைத்தது. இதனால், அந்த மாகாணங்களைச் சேர்ந்த மக்களை வாக்களிப்பதை பெருமளவு புறக்கணித்திருந்தனர். அந்த தேர்தலில் வட, கிழக்கு மக்கள் வாக்களிக்காமையே, ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கு காரணம் என கூறப்படுகின்றது. இலங்கை தேர்தல் தேதி அறிவிப்பு - தமிழர் ஒருவர் ஜனாதிபதி ஆவது எவ்வளவு சாத்தியம்?26 ஜூலை 2024 பட மூலாதாரம்,SLPP MEDIA UNIT படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டோர். இந்த விடயம் தொடர்பில் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான பாரதி ராஜநாயகம், பிபிசி தமிழிடம் பேசுகையில், ''2005ம் ஆண்டு தேர்தலை பகிஷ்கரிக்குமாறு விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்திருந்தார்கள். வடக்கு மாகாண மக்கள் பெரும்பாலும் வாக்களிக்க செல்லவில்லை என நினைக்கின்றேன். சில சம்பவங்களும் இடம்பெற்றன. கிழக்கு மாகாணத்தில் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. எனினும், குறைந்தளவிலேயே பதிவாகியிருந்தன" என்றார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தான் வடக்கின் பல பகுதிகள் இருந்ததாக அவர் கூறுகிறார். "கொத்தணி வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த இடங்களுக்கு சென்றே மக்கள் வாக்களித்திருந்தனர். வடக்கு மக்கள் வாக்களித்திருந்தால், ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றிருக்கலாம் என்ற கருத்து பொதுவாகவே இருக்கின்றது." என அவர் கூறினார். தேர்தலை புறக்கணிக்குமாறு 2005ம் ஆண்டு ஏன் விடுதலைப் புலிகள் அறிவிப்பை வெளியிட்டார்கள் என்ற கேள்விக்கு மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான பாரதி ராஜநாயகம் பதிலளித்தார். ''இலங்கையின் தேர்தலை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. சிங்கள மக்களே தங்களின் தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்ற கருத்து விடுதலைப் புலிகளிடம் இருந்தது. அந்த அடிப்படையில் தான் அவர்கள் அந்த கோரிக்கையை விடுத்திருந்தார்கள்." என அவர் கூறினார். ரத்த தானம் செய்ய உரிமை கோரும் திருநங்கைகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் - இந்தியாவில் தடை இருப்பது ஏன்?11 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,BHARATI RAJANAYAGAM FB படக்குறிப்பு,விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தான் வடக்கின் பல பகுதிகள் இருந்ததாக பாரதி ஜனநாயகம் கூறுகிறார். ''சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட காலத்தில் ரணில் விக்ரமசிங்க சூழ்ச்சிகளை செய்தார் என்ற கருத்து மக்கள் மத்தியில் இருக்கின்றது. 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தையை பயன்படுத்தி கருணா போன்றோரை பிரித்து, விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த ரணில் விக்ரமசிங்க முயற்சித்தார் என கூறப்பட்டது" என்கிறார் பாரதி ஜனநாயகம். ரணில் விக்ரமசிங்க மீண்டும் வந்தால், சர்வதேச சமூகத்தை தனது கைக்குள் வைத்துக்கொள்வார் என்ற பேச்சும் அப்போது காணப்பட்டதாக கூறும் அவர், அதனூடாக தங்களை ரணில் பலவீனப்படுத்தலாம் என்ற எண்ணம் விடுதலைப் புலிகளுக்கு இருந்திருக்கலாம் என தெரிவித்தார். "மாறாக மஹிந்த ராஜபக்ஸவிற்கு சர்வதேச உறவு அவ்வளவாக இருக்கவில்லை. அவர் போருக்கு மீண்டும் வருவார். தம்மால் அவரை வெற்றிக் கொள்ள முடியும் என்ற எண்ணம் விடுதலைப் புலிகளுக்கு இருந்திருக்கலாம். அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கும்" என பாரதி ராஜநாயகம் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இன்றும் இருக்கின்ற நிலையில், 2005ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் வெளியிட்ட அறிவிப்பு 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு தாக்கம் செலுத்துமா என்ற கேள்விக்கு, அவர் பதிலளித்தார். ''இந்த காலக் கட்டத்திலும் அவ்வாறான கருத்து சிலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட முன்வைக்கின்றது. எனினும், ஜனாதிபதி தெரிவில் தமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என தமிழர்கள் எண்ணுகின்றார்கள். இந்த நிலையில், தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், அது எந்தளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதை நிச்சயமாக சொல்லமுடியாது" என தெரிவித்தார். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிவிப்பு, அந்த தேர்தலில் தாக்கத்தை செலுத்தியது. இந்த நிலையில், 2005ம் ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் முதல் முறையாக தற்போதுதான் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுகின்றார். இடைக்கால ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 2009ம் ஆண்டு மௌனிக்கப்பட்டதை அடுத்து, மஹிந்த ராஜபக்ஸ போர் வெற்றியை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதித் தேர்தலை நடாத்தியிருந்தார். இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து, பொது வேட்பாளராக சரத் பொன்சேகா களமிறக்கப்பட்டார். இலங்கை ராணுவ தளபதியாக ராணுவத்தை வழிநடத்தி போரை முடிவுக்கு கொண்டு வந்தார் என்ற பெருமையை சரத் பொன்சேகா பெரும்பான்மை மக்கள் மத்தியில் கொண்டிருந்தார். இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பொது கூட்டணியொன்று ஆரம்பிக்கப்பட்டு, பொது வேட்பாளராக சரத் பொன்சேகா களமிறங்கிய நிலையில், அந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடவில்லை. அதனைத்தொடர்ந்து, 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். இந்த பின்னணியில், மஹிந்த ராஜபக்ஸவை கட்டாயம் தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்த எதிர்க்கட்சிகள், மஹிந்த ராஜபக்ஸ அப்போது தலைமைத்துவம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை பிரித்தெடுத்து, மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து போட்டியிட வியூகம் வகுத்தனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல தலைவர்கள் ஒன்றாக கைக்கோர்த்து, 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்கியமை காரணமாக அந்த தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க போட்டியிடவில்லை. பல நாய்களை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற புகழ்பெற்ற முதலை நிபுணர் - ஆஸ்திரேலியாவை உலுக்கிய வழக்கு4 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கதேசம்: இடைக்கால தலைவர் முகமது யூனுஸின் இந்தியாவுடனான உறவு எப்படி இருக்கும்?11 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சஜித் பிரேமதாஸ (கோப்புப்படம்) அதனைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க போட்டியிடவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் காணப்பட்ட தலைமைத்துவ சர்ச்சை காரணமாக, அந்த கட்சியின் பிரதித் தலைவராக செயற்பட்ட சஜித் பிரேமதாஸ பெரும் எண்ணிக்கையிலான ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியை ஸ்தாபித்தார். இதன்மூலம் தனிமைப்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்க 2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடவில்லை. இந்த நிலையில், சஜித் பிரேமதாஸவை எதிர்த்து போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஸ, அந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றார். எனினும், கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, இலங்கையில் வரிசை யுகத்தை ஏற்படுத்தியது. 'Y' குரோமோசோமுடன் பிறந்த பெண் ஆணைப் போல கூடுதல் வலிமையுடன் இருப்பாரா? ஒலிம்பிக்கில் ஓயாத சர்ச்சை10 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு,கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச எரிபொருள், எரிவாயு, பொருட்களை கொள்வனவு செய்வதற்கு என வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத கோட்டாபய ராஜபக்ஸ, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார். அதனைத் தொடர்ந்து, போராட்டம் வலுப் பெற்றதை அடுத்து, நாட்டை விட்டு கோட்டாபய ராஜபக்ஸ வெளியேறிய நிலையில், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றதுடன், நாடாளுமன்றத்தில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் ஊடாக ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். கோட்டாபய ராஜபக்ஸவின் பதவி காலத்தில் எஞ்சிய பகுதியை ரணில் விக்ரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக நிறைவுசெய்துள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை 19 வருடங்களுக்கு பின்னர் இம்முறை ரணில் விக்ரமசிங்க எதிர்கொள்கின்றார். https://www.bbc.com/tamil/articles/c4ge3k1zw2yo
-
அரியம்: பாக்கியமா, பலியாடா?!
புருஜோத்தமன் தங்கமயில் நீண்ட நெடிய தேடுதல்களுக்குப் பின்னராக தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் (அரியம்) அறிவிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இரு தடவைகள் பதவி வகித்த அவர், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராவார். யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் கடந்த வியாழக்கிழமை பொதுக் கட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளராக அரியநேத்திரன் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த அறிவிப்பு வெளியானதும், சமூக ஊடகங்களில் யாழ். மையவாதிகளினால் கிழக்கில் இருந்து இன்னொரு பலியாடு களமிறக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இன்னும் சிலர், ‘சுந்தரா ட்ராவல்ஸ்’ திரைப்படத்தில் முரளி – வடிவேலு கூட்டு போண்டா மணியை மணமகனாக அலங்கரித்து முன்னிறுத்தும் படத்தை வெளியிட்டு, அரியநேத்திரனின் அறிமுகத்தோடு ஒப்பிட்டு நையாண்டி செய்திருந்தார்கள். தமிழ்த் தேசியப் பற்றாளராகவும், ஊடகவியலாளராகவும் இருந்த அரியம், தேர்தல் அரசியலுக்கு விடுதலைப் புலிகளின் அனுசரணையோடு வந்தவர். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் நேரடியாக வெற்றிபெறாத போதிலும், கிங்ஸ்லி இராசநாயகம், தன்னுடைய பதவியை இராஜினாமாச் செய்ததும், அந்த இடத்துக்கு கூட்டமைப்பினால் நிரப்பப்பட்டவர். அதிலிருந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அதுவும், மட்டக்களப்பில் கருணா – பிள்ளையான் குழுவின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அவர், தமிழ்த் தேசிய அரசியல்வாதியாக நின்றவர். இறுதிப் போர் வெற்றிக்குப் பின்னரான காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து இணைந்து கொண்டிருந்த போது, “போனா வருவீரோ, வந்தா இருப்பீரோ...” என்று தன்னுடைய பாராளுமன்ற உரையொன்றில் அரியம் பாடிய தமிழ்த் திரைப்படப் பாடலொன்று மிகப் பிரபலமானது. ஆனால், அவர், 2015க்குப் பின்னரான காலத்தில் அரசியல் அதிகார பதவிகளை இழந்தார். தற்போது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் என்ற அளவில் மாத்திரமே இருக்கிறார். தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் இன்று கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அரியத்தின் மத்திய குழு உறுப்பினர் பதவி பறிக்கப்படும் வாய்ப்பு உண்டு. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்பட்டு, தமிழ் வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், அதன்மூலம் சர்வதேசத்துக்கு செய்தி சொல்லப்பட வேண்டும் என்பது, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினரின் எதிர்பார்ப்பு. அதற்காக அவர்கள் வேட்பாளர் ஒருவரை கண்டடைவதற்காக பாரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். பொதுக் கட்டமைப்பினரை ஆதரித்த பலரும், வேட்பாளராக மாறுவதற்கு தயாராக இல்லை. ஏன், பொதுக் கட்டமைப்பிலுள்ள கட்சிகளே தயாராக இல்லை. அதிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களோ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களோ தங்களின் அரசியல் எதிர்காலம் கருதி, ஜனாதிபதி வேட்பாளராவதில் இருந்து ஒழித்து ஓடினார்கள். இன்னொரு பக்கம், தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சிகளை வழங்கவும் தயாராக இல்லை. இதனால், பொதுக் கட்டமைப்பினர் மீதான நெருக்கடி அதிகரித்தது. அவர்களுக்கு முன்னால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேடுவதுதான் இறுதி வழியென்ற நிலை உருவானது. அத்தோடு, தங்களின் சொல் பேச்சை மாத்திரம் கேட்பவராகவும் அவர் இருக்க வேண்டும் என்ற வரையறையும் இருந்தது. அதனால்தான், வேட்பாளராக அரியம் தெரிவாகும் நிலை வந்தது. வேட்பாளர் தெரிவில் இறுதியாக அரியத்தோடு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த இன்னொரு மத்திய குழு உறுப்பினரின் பெயரும் சம்பந்தப்பட்டவரின் அனுமதியோடு ஆலோசிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினராக ஒருபோதும் பதவி வகித்தவர் இல்லை என்பதால், அவர் போட்டியிடுவதானால் கட்சியொன்று அவசியம். ஆனால், பொதுக் கட்டமைப்பின் கட்சிகள் எவையும், தங்களது கட்சியை வழங்க முன்வராத நிலையில், சம்பந்தப்பட்டவர் தெரிவாகும் வாய்ப்பும் அற்றுப்போனது. அதனால்தான், அரியம் ஜனாதிபதி வேட்பாளரானார். அவரும் இல்லையென்றால், பொதுக் கட்டமைப்பினர், எம்.கே.சிவாஜிலிங்கத்தை தேடிச் சென்றிருக்க வேண்டி வந்திருக்கும். அவர் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்ட அனுபவம் உள்ளவர். ஆனால், அந்த நெருக்கடி நிலையை, அரியம் பொதுக் கட்டமைப்பினருக்கு, குறிப்பாக அந்தக் கட்டமைப்பிலுள்ள அரசியல் பத்தியாளர்களுக்கு வழங்கவில்லை. அந்த வகையில் பத்தியாளர்களுக்கு அரியம் பாக்கியம் செய்திருக்கிறார். தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி மீது தமிழ் மக்கள் பெருமளவில் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். அந்த அதிருப்தியைக் கழைந்து, நம்பிக்கையின் பக்கம் நகர்த்தி, தமிழ்த் தேசிய அரசியலைப் பலப்படுத்த வேண்டும். அதற்கு தமிழ் மக்களை ஒன்று திரட்டுதல் என்பது அவசியமானது. அதில் மாற்றுக் கருத்துக்கள் ஏதும் இல்லை. ஆனால், அந்தக் காரணத்தைச் சொல்லிக் கொண்டு பொது வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் தரப்பினர், அதற்கான அர்ப்பணிப்பை முழுவதுமாக வழங்க வேண்டும். அதற்கு மாறாக, ‘வேண்டா வெறுப்பாக பிள்ளையைப் பெற்று, அதற்கு காண்டாமிருகம் என்று பெயர் வைத்தது’ போல, நடந்து கொள்ள முடியாது. பொதுக் கட்டமைப்பிலுள்ள கட்சிகளின் நிலைப்பாடுகளைப் பார்க்கும் போது, அப்படித்தான் தோன்றுகின்றது. ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ என்ற அடையாளத்தோடு ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் பொதுக் கட்டமைப்பினர் வேட்பாளராக முன்னிறுத்தும் போது, அதற்கான முக்கியத்துவத்தை வழங்கியாக வேண்டும். அவரின் அறிமுகம், பொதுக் கட்டமைப்பின் அனைத்துத் தரப்பினதும் பங்களிப்போடு, பெரும் சமூக – ஊடக கவனம் பெறும் அளவுக்கு பிரச்சார உத்திகளோடு முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரியத்தின் அறிமுகத்தின் போது, பொதுக் கட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிற கட்சிகளான ரெலோ, புளொட், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்கள் யாரும் கலந்து கொண்டிருக்கவில்லை. அவர்கள், பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டது. வெளிநாட்டு தூதுவராலயங்கள், உள்ளக -அயலக பாதுகாப்புப் பிரதானிகள், இராஜதந்திரிகள் என்று எந்த தரப்பு அழைத்தாலும் எந்தவித கேள்வியும் இன்றி, ஓடோடிப்போய் சந்தித்து விட்டு வரும், இந்தக் கட்சிகளின் தலைவர்கள், தாங்கள் முன்னிறுத்தும் வேட்பாளர் அறிமுகத்தை பாராளுமன்ற அமர்வுகளைக் காட்டி புறக்கணித்தமை அபத்ததத்தின் உச்சம். அது, போக்கிடமின்றி அமைந்த கூட்டின் பங்காளிகள் தாங்கள் என்ற அவர்களின் எண்ண ஓட்டத்தை மக்களிடம் வெளிப்படுத்தியது. அரியம் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் உடல்மொழி, அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளை தீர்க்கமாக வெளிப்படுத்தும் அளவுக்கு இருக்கவில்லை. அவர்கள், மனதளவில் சோர்ந்து போய் இருப்பதை, முகங்கள் அப்பட்டமாக காட்டின. அதிலும், உடல்மொழி, பேச்சாளர்களின் மனோ நிலை தொடர்பில் எல்லாம் கடந்த காலங்களில் பகுத்தாய்ந்து எழுதிய பத்தியாளர்களின் முகங்களே பெரும் சோர்வாக காணப்பட்டன. அந்த முகங்களில், ஒரு மாதிரியாக ஒருவரை வேட்பாளராக அறிமுகப்படுத்தியாகிவிட்டது என்ற ரேகைகள் படர்ந்திருந்தன. அதனைத் தாண்டி எந்த நம்பிக்கையையும் விதைக்கும் உணர்வுகள் யாரிடத்திலும் இருக்கவில்லை. தமிழரின் தாகத்தை தீர்க்க, அரசாங்கத்திடம் மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை சலுகைகளாக – இலஞ்சமாக பெற்றுக் கொண்டிருக்கிறவர்கள் எல்லாம், தமிழ்த் தேசிய அரசியலை தற்போது ஆக்கிரமித்திருக்கிறார்கள். தமிழரின் தாகம் என்பதை, தண்ணீர் தாகம் என்று உணர்ந்து கொண்டாலாவது பரவாயில்லை. அரசியல் புரிதல் இல்லை என்று அவர்களை மன்னித்து புறந்தள்ளி விடலாம். ஆனால், தமிழரின் தாகத்தை, சாராய – கசிப்பு தாகம் என்று உணர்ந்து செயற்படுபவர்களை, தமிழ்ச் சமூகம் எச்சரிக்கையோடு அணுக வேண்டும். இப்படியான அறமற்றவர்களும், சமூக விரோத சிந்தனைக்காரர்களும் தமிழ்த் தேசிய அரசியலை ஆக்கிரமித்திருக்கும் போது, தமிழ் மக்கள் அரசியலில் நம்பிக்கை இழப்பது இயல்பானது. அதனை, மாற்றியமைத்து, தமிழ்த் தேசிய அரசியலை நம்பிக்கையின் பக்கத்திற்கு நகர்த்துதல் என்பது, மிகப்பெரிய செயற்திட்டங்கள், அர்ப்பணிப்புக்கள் சார்ந்தது. அது பதவி, பகட்டு, பணம், இலஞ்சம், ஊழல், சலுகை சார் நிலைகளுக்கு அப்பாலானது. ஆனால், தற்போதுள்ள அரசியலில் இவைகளைக் கடந்தவர்கள் என்று பெரிதாக யாரையும் அடையாளம் காண முடியாது. முள்ளிவாய்க்காலிலும், மாவீரர் நாட்களிலும் தீபமேற்றிவிட்டால் போதும், தமிழ் மக்களின் மண்டையில் மிளகாய் அரைக்கலாம் என்பது, பல அரசியல்வாதிகளின் நிலைப்பாடு. ஆனால், அவர்களின் தென் இலங்கை அரசாங்கங்கள், கட்சிகளுடனான நெருக்கம் என்பது, மிகமோசமான அளவில் இருக்கின்றது. அது, தனிப்பட்ட ரீதியானது என்றால் பிரச்சினையில்லை. ஆனால், அது, தமிழ் மக்களை பலிகடாவாக்கும் போக்கிலானது. அப்படியானவர்களின் கரங்கள், தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் முன்னிறுத்தம் மற்றும் தெரிவிலும் முக்கிய தாக்கம் செலுத்துகின்றதா என்ற சந்தேகம் உண்டு. இறுதி மோதல் காலத்தில் ராஜபக்ஷக்களோடு நெருக்கமாக இருந்த தமிழ் வர்த்தகர் ஒருவர், இப்போது யாழ்ப்பாணத்தில் ஊடகங்களை நடத்துவதன் மூலம், தமிழ்த் தேசியக் கட்சிகளையும் தலைவர்களையும் தன்னுடைய கைப்பாவையாக கையாள நினைக்கிறார். அதற்கு இணங்காதவர்களை நாளும் பொழுதும் விமர்சிப்பதுதான் அவரது வேலையாக இருக்கின்றது. அவரின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் இருந்தது. அவர் மீதான விமர்சனம் பொது வெளியில் எழுந்ததும், பொதுக் கட்டமைப்பில் இருந்து அவர் ஒதுங்கிக் கொண்டது போல, காட்டிக் கொண்டார். ஆனாலும் அவரது பிரதிநிதியாக பத்தியாளர் ஒருவர் பொதுக் கட்டமைப்புக்குள் செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு உண்டு. அவர்களின் தெரிவும் அரியமாக இருந்திருக்கின்றது. அதற்கான காரணமாக, கேள்விகளைக் கேட்காத ஒருவராக அரியம் இருப்பார் என்பதுதான் ஒற்றை வாதம். அரியம், தற்போது செல்வாக்குள்ள அரசியல்வாதியல்ல. தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு குழப்பத்தில், அவர் சிவஞானம் சிறீதரனுக்காக இயங்கியவர். அதன்மூலம் அண்மைய நாட்களில் சற்று ஊடகக் கவனம் பெற்றவர். மற்றப்படி, அவரினால் தேர்தல் – வாக்கு அரசியலில் தற்போது தாக்கம் செலுத்த முடிவதில்லை. மட்டக்களப்பிலேயே அவரினால் சில ஆயிரம் வாக்குகளைக்கூட பெற முடியாது என்பதுதான் யதார்த்தம். அப்படிப்பட்ட ஒருவரை, வடக்கு கிழக்கு பூராவும் பொது வேட்பாளராக முன்னிறுத்துவது என்பது எவ்வளவு தூரம் அனுகூலமானது என்பது, பொதுக் கட்டமைப்பின் பத்தியாளர்களுக்குத்தான் வெளிச்சம். ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பொது வாக்கெடுப்பாக கருதி செயற்பட வேண்டும் என்ற அறிவித்தலை விடுத்துக் கொண்டு களத்துக்கு வந்த அரசியல் பத்தியாளர்கள், தற்போது பிரிந்துள்ள தமிழ் வாக்குகளை ஒன்றாக திரட்டுவதுதான் இலக்கு என்று தங்களின் கோரிக்கைகளை மட்டுப்படுத்திக் கொண்டு விட்டார்கள். ஆனாலும், அவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் வல்லமை அரியத்திடம் இல்லாத போது, அவரை, ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவது என்பது எதனை நோக்கிய அரசியல்? வேட்பாளர் அறிமுக நிகழ்விலேயே கலந்து கொள்ளாத பொதுக் கட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், அரியத்துக்காக வாக்குச் சேகரிப்பை மனப்பூர்வமாக முன்னெடுப்பார்களா என்பது பிரதான கேள்வி. அரசியல் கட்சிகள், தொண்டர்களின் பங்களிப்பு இல்லாமல், பத்தியாளர்கள் சிலர் மாத்திரம் தமிழ் வாக்குகளை திரட்டும் வல்லமையோடு இருக்கிறார்களா என்றால், அதற்கு வாய்ப்புக்களே இல்லை. ஏனெனில், அந்தப் பத்தியாளர்களில் பலர், செம்மணி வளைவைத் தாண்டியே வெளியில் வராதவர்கள். அப்படியான நிலையில், கடந்த காலங்களில் சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டமைக்கு மாற்றீடான தெரிவாக மாத்திரமே அரியம் இருக்கப் போகின்றார். மற்றப்படி, அவரை பொதுக்கட்டமைப்பினரின் ஜனாதிபதி தேர்தலுக்கான பலியாடாகவே தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் காண்கிறார்கள். அதனை தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும். -காலைமுரசு பத்திரிகையில் ஆகஸ்ட் 11, 2024 வெளியான பத்தி. http://maruthamuraan.blogspot.com/2024/08/blog-post_11.html
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
‘கடுமையான பதிலடி தரப்படும்’ ரஷ்யா மீதும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள யுக்ரேனின் பகுதிகள் மீதும் யுக்ரேன் நடத்தியிருக்கும் தாக்குதலுக்கு ‘கடினமான பதிலடி’ கொடுக்கப்படும் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். ரஷ்ய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷ்யாவின் அமைதியான மக்களை அச்சுறுத்தும் நோக்கத்தில் கியேவ் ஆட்சி தொடர்ந்து பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது," என்று கூறியுள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ரஷ்ய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா சமீபத்திய தாக்குதல்களுக்கு "ராணுவக் கண்ணோட்டத்தில் எந்த அர்த்தமும் இல்லை" என்பதை யுக்ரேன் "நன்றாகப் புரிந்து கொண்டுள்ளது" என்று அவர் மேலும் கூறியுள்ளார். ஜாகரோவா கடந்த 24 மணி நேரத்தில் யுக்ரேன் நடத்திய பல தாக்குதல்களைக் குறிப்பிட்டார். பிராந்திய தலைநகரான குர்ஸ்க் மீது ஒரே இரவில் பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அவர் கூறினார். முன்னதாக, யுக்ரேனின் ஏவுகணைச் சிதைவுகள் குர்ஸ்க் நகரில் ஒரு பல மாடிக் கட்டிடத்தின் மீது விழுந்ததில் 13 பேர் காயமடைந்ததாக அந்நகரின் உள்ளூர் கவர்னர் கூறினார். ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் என்ன சொன்னது? ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேனியப் படைகளின் ‘ஆக்கிரமிப்பு முயற்சியை ரஷ்யத் துருப்புக்கள் தொடர்ந்து முறியடிக்கின்றன’ என்று ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறது. "ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவிச் செல்ல எதிரி குழுக்களின் கவச வாகனங்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன," என்று அவ்வறிக்கை கூறுகிறது. யுக்ரேனின் எல்லையில் இருந்து 25கி.மீ., மற்றும் 30கி.மீ., தொலைவில் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் மூன்று இடங்கள் தாக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிடுகிறது. யுக்ரேன் கடந்த 24 மணி நேரத்தில் 230 ராணுவ வீரர்களையும் 38 கவச வாகனங்களையும் இழந்தது, என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ரஷ்யாவின் இந்தக் கூற்றுகள் சுயாதீனமாகச் சரிபார்க்கப்படவில்லை. இந்த அறிக்கை முந்தைய நாட்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகளுடன் ஒத்திருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cm23e1lvz4do
-
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு 11 AUG, 2024 | 05:01 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும் நாளைய தினம் திங்கட்கிழமை (12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு ஜனாதிபதி செயலக பிரதிநிதிகளால் தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு என்ற அடிப்படையில் 14 உறுப்பினர்களும் சந்திப்பில் கலந்துகொள்ள மாட்டார்கள். தேர்தல் வேலைகளில் மூழ்கியிருப்பதால் குறுகிய கால அழைப்பின் அடிப்படையில் நாளைய சந்திப்பில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பாக கலந்துகொள்வது சிரமமாக இருக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற அழைப்புகளை ஏற்று சந்திப்புகளில் கலந்துகொள்வது தொடர்பான முடிவை பொதுக் கட்டமைப்பு கூடி முடிவெடுக்கும் -என தமிழ் தேசிய பொது கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் மூலம் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/190828
-
சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை என்ன தெரியுமா?
பாண்டியர் ஆட்சியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகரின் மனைவி, மருமகளுக்கு என்ன தண்டனை தெரியுமா? படக்குறிப்பு, அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் திருக்கோவில் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 11 ஆகஸ்ட் 2024, 03:12 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அரசுகள் உருவான காலத்தில் இருந்தே சிறைச்சாலைகளும் கடும் தண்டனைகளும் இருந்து வருகின்றன. சங்க காலத்திலும் அதற்குப் பின்பும் சிறை தண்டனைகள் எந்தக் காரணங்களுக்காக வழங்கப்பட்டன என்பதை பாடல்களும் கல்வெட்டுகளும் உணர்த்துகின்றன. பல மத இலக்கியங்களிலும், சங்க இலக்கியங்களிலும் சிறைகளைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. சங்க இலக்கியங்களில் சிறைச்சாலை சிறைச்சாலை என்பது இலக்கியங்களில் சிறைக்களம், சிறைக் காவல், சிறைக் கூடம், சிறைப் பள்ளி எனக் குறிப்பிடப்படுகிறது. தவறு செய்யும் குற்றவாளியைக் கைது செய்வதற்கு 'சிறை கொள்ளுதல், சிறை செய்தல், சிறை பிடித்தல்' ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தண்டனைக்கு உள்ளான கைதி, சிறைச்சாலையில் அனுபவிக்கும் துன்பங்களை 'சிறை நோய்' என்ற சொற்களின் மூலம் மணிமேகலை குறிப்பிடுகிறது. படக்குறிப்பு,அக்காலத்தில் ஆண்கள், பெண்கள் பாகுபாடின்றி சிறை தண்டனை வழங்கப்பட்டது என்கிறார் பன்னீர்செல்வம் சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழ மன்னரான செங்கணானோடு போரிட்டுத் தோல்வியடைந்ததால் சிறையில் அடைக்கப்பட்டதை புறநானூற்று பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. கணைக்கால் இரும்பொறை சிறையில் இருந்தபோது, அவர் ஒருமுறை தாகத்துக்குத் தண்ணீர் கேட்கிறார். அப்போது சிறைக் காவலர் அந்தத் தண்ணீரை காலம் தாழ்த்திக் கொடுக்கிறார். அதைக் குடிக்க மறுக்கும் இரும்பொறை "குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்" என்ற பாடலைப் பாடிவிட்டு உயிரிழந்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது. அந்தப் பாடல் புறநானூறில் 74வது பாடலாக இடம் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் மன்னராட்சிக் காலத்தில் சிறைகள் எப்படியிருந்தன என்பது குறித்த தகவல்கள், கல்வெட்டுகள் மூலம் நமக்குக் கிடைக்கின்றன. சோழர் மற்றும் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சுமார் 25 கல்வெட்டுகளில் சிறைச்சாலைகள் பற்றிய செய்திகள் வந்துள்ளதாகக் குறிப்பிடும் இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும் துணை கண்காணிப்பாளருமான க. பன்னீர்செல்வம், அந்தக் கல்வெட்டுகளில் இருந்து அக்காலகட்டத்தில் விதிக்கப்பட்ட தண்டனைகள் பற்றிய விவரங்களும் கிடைப்பதாகத் தெரிவிக்கிறார். இந்தக் கல்வெட்டுகள் பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகின்றன. உதாரணமாக, கோவில் நகைகளைத் திருடியதால் இரண்டு பெண்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சேலம் மாவட்டத்தில் கிடைக்கும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. சோழர் கால மருத்துவமனையில் 950 ஆண்டுக்கு முன்பே 'அறுவை சிகிச்சை' - கல்வெட்டு பகிரும் வரலாறு27 மே 2024 தமிழ்நாட்டில் சோழர் ஆட்சியில் சமண மதத்தின் நிலை என்ன? ஆண் தேவரடியார்கள் என்ன செய்தனர்?21 ஜூலை 2024 கோவில் நகையைத் திருடிய அர்ச்சகரின் மனைவிக்கு தண்டனை சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளூர் கிராமத்தில் இருக்கிறது காமேஸ்வரர் ஆலயம். இதுவொரு சிவன் கோவில். இந்தக் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தின் தெற்குச் சுவரில் இரண்டாம் ஜடவர்மன் சுந்தரபாண்டியனின் 18ஆம் ஆட்சியாண்டு (கி.பி.1289) கல்வெட்டு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில் "தேவாண்டார் சானி உள்ளிட்டார் பக்கலே களவாக நிரப்பி இவளையும் இவள் மருமகளையும் சிறையிலே வைத்து" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இது, இரண்டு பெண்கள் திருக்கோவிலில் வைத்திருந்த ஆபரணங்களைத் திருடியதால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வை விவரிப்பதாகச் சொல்கிறார் பன்னீர்செல்வம். "அதாவது, அந்தக் கோவிலில் பணிபுரிந்த அர்ச்சகர் ஒருவரின் மனைவியான தேவாண்டான் சானி என்பவரும் அவருடைய மருமகளும் கோவில் நகைகளைத் திருடியுள்ளனர். இவர்களை சபையோர் திருமண்டபத்தில் கூடியிருந்து விசாரித்ததில் உண்மையாகவே இவர்கள் திருக்கோவிலின் நகைகளைத் திருடியவர்கள் என்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவர்கள் செய்த குற்றத்திற்காகச் சிறை தண்டனையும் விதித்துள்ளனர். மேலும் அவர்களுடைய பணி செய்யும் உரிமையையும் அவர்களது உறவினர்கள் உள்ளிட்டவர்களின் பணி உரிமைகளையும் விட்டுக்கொடுக்குமாறு வலுயுறுத்தியுள்ளனர். அக்காலத்தில் குற்றம் செய்தவர்கள் ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் செய்த தவறுக்கு ஏற்ப சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதற்கு இந்தக் கல்வெட்டு மிகச்சிறந்த உதாரணம்" என்கிறார் பன்னீர்செல்வம். சோழர், பாண்டியர் ஆட்சியில் 'சாதி கலப்பால்' உருவான மக்கள் எப்படி நடத்தப்பட்டார்கள்?9 ஜூலை 2024 ஜாமீன்தாரர்களின் பொறுப்பு படக்குறிப்பு,இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும் துணை கண்காணிப்பாளருமான க. பன்னீர்செல்வம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதர் திருக்கோவிலில் கி.பி. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் சிறைச்சாலை பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. இந்தக் கல்வெட்டில், திருவரங்க நாராயணன் ஸ்ரீ கிருஷ்ணன் ஆழ்வார் பண்டாரத்தில் (கருவூலம்) 940 காசுகளைப் பெற்றுக்கொண்டு திருப்பித் தராமல் இருந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்காக அவரிடம் ராஜேந்திர சோழ மூவேந்த வேளார் கணக்கு கேட்டுள்ளார். அவர் 600 கலம் நெல் கொடுப்பதற்கும் ஒப்புக்கொண்டிருந்திருக்கிறார். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் தாம் ஒப்புக்கொண்டபடி 940 காசையும் 600 கலம் நெல்லையும் தராததால், சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் ஆழப்பிறந்தான் என்ற ஊரில் அமைந்துள்ள பூமீஸ்வரர் திருக்கோவிலின் கர்ப்பகிரகத்தின் வடக்கு சுவற்றில் கி.பி. 1480ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டிலும் சிறைச்சாலை பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது . அதில், "அறந்தாங்கிப்பற்று, விளை மாணிக்கப்பற்று, அரையகுளப்பற்று நாட்டவர்கள், பிள்ளைபேறும் ஒத்துக்கொண்டு செய்து கொடுத்துள்ள ஒப்பந்தத்தில் தேவராயர் தொண்டைமானார் நாளில் நடந்து வருகிற முறைப்படி நடத்திக் கொள்ளவும், ஒருவர் குற்றம் செய்தால் அவரை ராஜ குற்றம் கேட்கும் அளவில் அவரது உற்பத்தியில் ஒரு பாதியை பண்டாரத்தில் (கருவூலத்தில்) முதலாக இடவும், பிரிதொரு பாதிக்கு அவரைச் சிறையிட்டு வாங்கவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவரது பேரில் நியமித்த முதலைச் செலுத்துவதற்கு முடியாமல் ஓடிப் போனால் அவருக்குப் பிணை நின்றோர் (ஜாமீன்தாரர்) உத்தரவாதம் சொல்லக் கடமைப்பட வேண்டும்" என்ற செய்திகள் இடம்பெற்றுள்ளன. சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில் தவறு செய்தவர்கள் மட்டுமல்லாமல் பிணை அளித்தவர்களுக்கும் சிறை தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது என்கிறார் க. பன்னீர்செல்வம் https://www.bbc.com/tamil/articles/czx6vxp6d1vo
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று
இணைந்த வடகிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்குபவர்களுக்கு ஆதரவு; சிங்கள மக்களுக்கும் அதனை அறிவிக்க வேண்டும் - தமிழரசுக்கட்சி தெரிவிப்பு Published By: VISHNU 11 AUG, 2024 | 08:00 PM வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்க தயாராக உள்ள ஜனாதிபதி வேட்பாளர் அந்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்த தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிப்போம் என தமிழரசுக்கட்சி கலந்துரையாடியுள்ளதாக கட்சயின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்கள் சார்பாக தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழரசுக்கட்சியினுடைய நிலைப்பாடானது இணைந்த வடகிழக்கிலே சமஸ்தி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறை ஏற்படுத்தப்படுவதாகும். இதுவே எங்களுடைய அரசியல் நிலைப்பாடு. இதற்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் யாராவது இணங்கி வந்தால் அவர்களுக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற கருத்தும் கூட்டத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. எனினும் இது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை. எமது கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நாம் கூறி இருப்பதானது, அவர்களுடைய அரசியல் அறிக்கையில் எவ்வாறான செய்தியை சொல்கிறீர்கள் என்று நாம் பார்க்கப் போகின்றோம். இது தொடர்பில் முழு நாட்டிற்கும் அவர்கள் எண்ணத்தை சொல்ல வருகிறார்கள் என்பது தொடர்பிலும் நாங்கள் பார்க்க இருக்கிறோம். எமது கோரிக்கைகளை ஏற்றால் அது தொடர்பில் விசேஷமாக சிங்கள மக்களுக்கு அவர்கள் தமிழர்களுக்கு எதைச் செய்யப் போகிறோம் என்பதையும் அறிவிக்க வேண்டும். இது தவிர நாங்களும் எங்களுடைய நிலைப்பாட்டை எழுத்து வடிவில் தெளிவான ஒரு அறிக்கையாக வெளியிடுவோம். எங்களுடைய மக்களுக்கு மக்களுடைய அரசியல் தலைமைத்துவம் வழங்குகின்ற கட்சி என்ற நிலைபாட்டில் அவ்வாறான ஒரு பொறுப்பை நாமும் உதாசீனம் செய்யாமல் வழிகாட்டல் அறிக்கை ஒன்றை ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளியிடுவோம். அரியநேந்திரன் தொடர்பில் தமிழ் பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்துவது என்று சில அரசியல் கட்சிகளும் சில சிவில் அமைப்புகள் என்று சொல்லுபவர்களும் செயற்படுகின்றனர். அதுவும் இன்றைய கூட்டத்தில் அலசி ஆராயப்பட்டது. இதற்கு முன்னரே இரண்டு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடி இருக்கிறோம். கடந்த கூட்டத்தில் அரியநேந்திரன் சமூகமாகி இருந்தார். அந்த கூட்டங்களிலேயே நாங்கள் இப்போது இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில்லை என சொல்லியிருந்தோம். எங்களுடைய மக்களோடும் எங்களுடைய கட்சி உறுப்பினர்களோடும் தொடர்ந்து கலந்துரையாடுவது அவசியம் என்று கலந்துரையாடப்பட்டிருக்கிறது. எனினும் நாம் இதற்கு ஆதரவா எதிர்ப்பா என்று ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை. ஆனால் இலங்கை தமிழரசு கட்சியினுடைய மத்திய குழு உறுப்பினராகிய அரியநேந்திரன் கட்சியுடன் உரையாடாமல் தன்னை தமிழ் பொது வேட்பாளராக அறிவித்தமை சம்பந்தமாக அவரிடம் விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவருடைய விளக்கத்தை கட்சிக்கு சொல்வதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதுவரைக்கும் கட்சி நிகழ்வுகள் எதிலும் அவருக்கு அழைப்பு அனுப்புவதில்லை என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/190843
-
நிலநடுக்கங்களால் அதிர்ந்துபோயுள்ள ஜப்பான் மக்கள்; பொருள்களை வாங்கிக் குவிப்பதில் மும்முரம்
தொடர் நிலநடுக்கங்களால் ஜப்பான் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள். இதனால், பொதுமக்கள் பேரழிவு ஏற்பட்டால் தேவைப்படக்கூடிய பொருள்களையும் அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களையும் வாங்கிக் குவிப்பதில் மும்முரம் காட்டிவருகிறார்கள். தெற்கு ஜப்பானில் ஆகஸ்ட் 8 ஆம் திகதி ரிக்டர் அளவில் 7.1ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 14 பேர் காயமடைந்தனர். இதனால், வரும் நாட்களில் பெரிய அளவிலான நிலநடுக்கம் வரக்கூடும் என அந்நாட்டு பருவநிலை முகவை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், டோக்கியோ பேரங்காடி ஒன்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருள்கள் சில குறைவாக இருப்பதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. அதற்குக் காரணம் நிலநடுக்கம் தொடர்பாக ஊடகங்களில் வரும் தகவல்களே என்றும் அது விளக்கமளித்தது. இனி வரும் நாட்களில் விற்பனையில் கட்டுப்பாடுகள் வரவுள்ளதாக அது தெரிவித்தது. இதில் ஒரு பகுதியாக, கொள்முதல் பிரச்சினை நிலவுவதால், ஒரு வாடிக்கையாளருக்கு ஆறு என்ற விகிதத்தில் மட்டுமே குடிநீர்ப் போத்தல்கள் விற்கப்படுவதாகவும் அது கூறியது. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், குடிநீர்ப் போத்தல்களே அதிகம் கேட்டு வாங்கப்படும் பொருள்கள் என ஜப்பானின் மிகப் பெரிய மின்வர்த்தக இணையத்தளமொன்று தகவல் தெரிவித்தது. https://thinakkural.lk/article/307626
-
இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வர் சிங் காலமானார் : இந்திய - இலங்கை உடன்படிக்கை உருவாக்கத்தில் ராஜீவுடன் இணைந்து செயற்பட்டவர்
11 AUG, 2024 | 01:08 PM இந்திய இலங்கை உடன்படிக்கை உருவாக்கத்தின் போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியுடன் இணைந்து செயற்பட்டவரும் திரைமறைவு நடவடிக்கைகள் குறித்து நன்கறிந்தவருமான இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வர் சிங் காலமானார். முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நட்வர் சிங் நேற்று (ஆக.10) சனிக்கிழமையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 95. முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில் "ஸ்ரீ நட்வர் சிங்கின் மறைவு வேதனை அளிக்கிறது. அவர் தூதரக நல்லுறவு மற்றும் வெளியுறவுக் கொள்கை மூலம் நாட்டிற்கு சிறப்பான பங்களிப்புகளை செய்தார். அவர் தனது அறிவாற்றல் மற்றும் செழிப்பான எழுத்துக்காகவும் அறியப்பட்டார். அவரை இழந்து துயரத்தில் இருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி" என்று பிரதமர் பதிவிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது 2004-2005 காலகட்டத்தில் நட்வர் சிங் வெளியுறவுத் துறை அமைச்சராக பணிபுரிந்தார். பாகிஸ்தானுக்கான தூதராகப் பணியாற்றிய நட்வர் சிங் 1966 முதல் 1971 வரையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியிலும் பணிபுரிந்துள்ளார். நட்வர் சிங் கடந்த கால பயணம்: முன்னாள் காங்கிரஸ் எம்பி நட்வர் சிங் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2004- 2005 காலகட்டத்தில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சராக இருந்தார். அவர் பாகிஸ்தானுக்கான தூதராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் கடந்த 1966 முதல் 1971 வரை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசிலும் பணியாற்றி உள்ளார். 1989ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பிறகும் வெளியுறவுத் துறை அமைச்சராகத் அவர் தொடர்ந்தார். 1991ஆம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் பிரதமரான பிறகு நட்வர் சிங் என்.டி.திவாரி மற்றும் அர்ஜுன் சிங் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அகில இந்திய இந்திரா காங்கிரஸ் என்ற புதிய கட்சியை உருவாக்கினார். கடந்த 1998ஆம் ஆண்டு நட்வர் சிங் மற்ற இரண்டு தலைவர்களுடன் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து 1998ஆம் ஆண்டு பரத்பூரில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் 2002ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 2004 ஆம் ஆண்டு மத்திய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/190808
-
பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
அவர் முன்னர் நுண்ணறிவுப் பிரிவு கா.துறையில் வேலை செய்திருப்பாரோ?!
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
தமிழ் பொது வேட்பாளரை இறக்க இதுதான் காரணம்; விளக்குகிறார் விக்கி மத்திய அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை தெரிவிக்கும் நோக்கில் தான் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை முன்வைக்க தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்களின் கருத்தை வெளிப்படுத்துவதே ஜனாதிபதித் தேர்தலின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முழுவதுமாக தமிழ் மக்களுக்காக ஒரு வேட்பாளரை முன்வைத்து இத்தனை நாட்களாக தமிழ் மக்களுக்கு காணப்படக்கூடிய பிரச்சினைகளை அந்த வேட்பாளர் மூலம் புரிய வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. சர்வதேசமும் அவை தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டும். எங்களுக்கான உரிமைகளை நாங்கள் முன்வைக்க தீர்மானித்துள்ளோம் என சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துக்காட்டியுள்ளார். இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா. அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வடக்குக் கிழக்கின் 07 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவதற்கு மூன்று பேரின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் பா. அரியநேத்திரன் தமிழ்ப் பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், 07 கூட்டணிக் கட்சிகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உள்ளடக்கப்படவில்லை. இக் கட்சிகளுடன் சிவில் சமூக அமைப்புகள் பேச்சு நடத்தியிருந்தன. ஆனாலும் இக் கட்சிகள் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரிக்க மறுத்துவிட்டன. வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் பலமான விருப்பத்தின் பேரில் 07 கட்சிகளின் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுத் தமிழ் வேட்பாளரை முன்வைப்பது அவசியமற்றது என பல தமிழ் அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஆனால் வெற்றி பெற முடியாவிட்டாலும் தமிழ் மக்களின் பலத்தை காட்ட இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/307632 வட்சப்பில வந்தது.
-
பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
திருகோணேஸ்வரர் ஆலய தாலி காணாமல் போன விவகாரம்; ஆலய நிர்வாகம் மறுப்பு திருகோணேஸ்வரர் ஆலயத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத் தாலி ஒன்று கொள்ளையிடப்பட்டிருப்பதாக வெளியான தகவலை, ஆலய நிர்வாகம் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத் தாலி காணாமல் போனதாக கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 2010ஆம் ஆண்டு ஆலயத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 3 1/4 பவுன் எடைகொண்ட தாலியும் கொடியுமே காணாமல் போயிருப்பதாக திருகோணேஸ்வரர் ஆலய பரிபாலண சபையின் செயலாளர் ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் காணாமல் போன குறித்த 3 1/4 பவுன் எடைகொண்ட தாலி மற்றும் கொடியை மீளப் பெற்றுத் தருவதாக குறித்த ஆலயத்தின் குருமார்களால் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/307642
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி தேர்தலின் பின்னரே பொருட்களை விநியோகிக்கலாம்; சகல மாவட்ட செயலகங்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு உத்தரவு! 11 AUG, 2024 | 04:39 PM மாவட்ட செயலகங்களில் இருந்து பரவலாக்கப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்படும் பொருட்கள் பிரதேச செயலகங்களினால் விநியோகிக்கப்படுவதாகவும், அதன் மூலம் குறித்த ஒரு கட்சியானது வாக்காளர்களை ஊக்குவிப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளையடுத்து இவ்வாறான பொருட்களை தற்போது விநியோகிக்க வேண்டாம் என ஆணைக்குழு நுவரெலியா மாவட்ட செயலகம் உட்பட சகல மாவட்ட செயலகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் ஒரு பிரதேச செயலகம் ஊடாக பல தோட்டப்பிரதேசங்களில் செயற்படும் அமைப்புகளுக்கு ஒலிபெருக்கிகள், பாத்திரங்கள், கூடாரங்கள் போன்றவற்றை விநியோகிக்கும் வண்ணம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் அறிவிப்பு செய்யப்பட்டிருந்ததாக நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன. தாம் சொல்லும் வரை குறித்த பொருட்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் தாம் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு தோட்டங்களுக்கு வரும் போது அவற்றை விநியோகிக்க வேண்டும் என்றும் தோட்டத் தலைவர்களுக்கு ஒரு அரசியல் கட்சி உத்தரவிட்டிருந்ததாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து தேர்தல் ஆணைக்குழுவானது பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு 09/08/2024 திகதியிடப்பட்ட கடிதம் மூலம் மேற்படி செயற்பாடுகளை நிறுத்தும்படி கடிதம் அனுப்பியுள்ளது. இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பதாக குறித்த பொருட்களை விநியோகிக்குமாறு தமக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் இவ்வாறான பொருட்களை விநியோகிப்பது பொருத்தமானதல்ல என தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்து. இது சில வேட்பாளர்களை ஊக்குவிக்கலாம், மற்றவர்களுக்கு பாதகமாக இருக்கலாம். எனவே ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இந்தப் பொருட்களை விநியோகிக்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுக்க விரும்புகின்றேன் என அக்கடிதத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/190826