Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. அரச ஊழியர்களின் சம்பளத்தை 2025 ஆம் ஆண்டு முதல் 25,000 ரூபாவால் அதிகரிக்கும் அமைச்சரவையின் அண்மைய தீர்மானத்திற்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் குறித்த முடிவானது ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களின் சுதந்திரமான வாக்களிப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களை சுயாதீன கண்காணிப்பாளர்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் (Election Commission) முன்வைத்துள்ளனர். வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய அமைச்சரவை, அரசாங்க ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குவதுடன், 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து அவர்களின் சம்பளத்தில் 24 வீத அதிகரிப்பையும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் கடந்த சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டியுள்ளது. சம்பளத்தை உயர்த்தும் நடவடிக்கை தேர்தலுக்கு முன்னதாக, குறிப்பாக தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் நடவடிக்கை, அவர்களின் சுதந்திரமான வாக்களிப்பை தெளிவாக பாதிக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தொழிற்சங்கங்கள் 10,000 ரூபாய் சம்பள உயர்வைக் கோரியபோது, அதற்குப் போதிய நிதி இல்லை எனக் கூறி அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தது. எனினும் தற்போதைய தேர்தல் சூழ்நிலையில் திடீரென 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை உயர்த்தி முடிவெடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பெப்ரல் குறிப்பிட்டுள்ளது. https://ibctamil.com/article/gov-employees-salary-allowance-effect-sl-election-1723865363
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னை மாநகரம் தொடர்ச்சியாக நகர்ப்புற வெப்பத் தீவுகள், வெப்ப அலை, கடல் அரிப்பு, புயல், வெள்ளம் எனப் பல அபாயங்களை எதிர்கொண்டு வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 16 ஆகஸ்ட் 2024 “இப்போ கடல் ரொம்ப வயலா இருக்கு (ஒரு சில அலைகள் மட்டுமே இருக்கும், பெரிய அலைகள் இல்லாத நிலை). இந்த மாதிரி இருக்கும்போது ராத்திரில கடலுக்குப் போனாதான் வரிப்பாறை, கருவாழை போன்ற மீன்கள் கிடைக்கும். கடல் இப்படி இருக்கும்போது தண்ணி ரொம்ப தெளிவா இருக்கும். காலையில போனா மீன் கண்ணுக்கு வலை நல்லா தெரிஞ்சு, சிக்காம தப்பிச்சுக்கும்.” “இதையெல்லாம், அனுதினமும் கடலைப் பார்த்துதான் தெரிஞ்சுக்க முடியும். கடல்-ல இருந்து ரொம்ப தொலைவுல கொண்டுபோய் என்னைக் குடித்தனம் வெச்சா, நினைச்ச நேரத்துக்கு வந்து கடலைப் பார்க்க முடியுமா? எப்போ போனா மீன் கிடைக்கும், கிடைக்காதுனு தெரிஞ்சுக்க முடியுமா?” நகரத்தைத் திட்டமிடும்போது அரசாங்கம் இப்படிப்பட்ட நடைமுறை சவால்களைக் கவனத்தில் கொள்வதில்லை என்று வருந்துகிறார் சென்னை அடையாறு அருகே இருக்கும் ஊரூர் குப்பத்தைச் சேர்ந்த மூத்த மீனவரான பாளையம். சென்னை நகரின் சுமார் 7% நிலப்பகுதி 2040ஆம் ஆண்டுக்குள் கடலுக்குள் மூழ்கும் என்று சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. இந்த ஆண்டில் பதிவான வெப்ப அலை இதுவரை இருந்ததைவிட அதிக பாதிப்புகளை சென்னையில் ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் வெள்ளப் பேரிடர்களை நகரின் ஒரு சில பகுதிகளாவது எதிர்கொள்வது வழக்கமாகி வருகிறது. இந்தப் பேரிடர்களின்போது சென்னை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறக் காரணமே அதன் கட்டமைப்புதான் என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ.சுந்தர்ராஜன். “சென்னை ஒரு முறையாகத் திட்டமிடப்பட்ட பெருநகரமே இல்லை. அதுதான் இங்கு நகரக் கட்டமைப்பின் ஓர் அடிப்படைப் பிரச்னையாக இருக்கிறது.” என்கிறார் அவர் இந்நிலையில், பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் சென்னையின் நகரத் திட்டமிடல் அந்தப் பேரிடர்களைக் கையாளும், மக்களின் வாழ்வியலைக் காக்கும் திறனைக் கொண்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. கடலின் தன்மை மாறி வருகிறதா? பட மூலாதாரம்,SUBAGUNAM/BBC படக்குறிப்பு,ஆகஸ்ட் மாதம் நிலவவேண்டிய கடலின் தன்மை ஜூலை மாதத்திலேயே முடிந்துவிட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். “ஆடியில பெரிய பெரிய இறால் கிடைக்கும். இந்த மாசத்துல கடல் ஆக்ரோஷமா சொறப்பா இருக்குறதால, கடல் ஆழம் வரைக்கும் தண்ணிய நல்லா கலக்கிவிடும். அதனால, ஆழத்துல இருக்குற இறால், நண்டு, உடுப்பா, பன்னா, கருங்கத்தல மாதிரியான உயிரினமெல்லாம் கடலுக்கு மேல வந்து மேயும். இப்போ பாருங்க, ஆடி மாதம் முடிய 3 நாள்தான் இருக்கு. அலையே பெருசா இல்ல. கடல் சாதுவா இருக்குது.” “ஆனால், ஜூலை மாசத்துல, அதாவது ஆணி மாசம் முழுக்க, கடல் ரொம்ப சொறப்பா இருந்துச்சு (ஆக்ரோஷமான அலைகளுடன், பனிக்கட்டி போன்ற குளிர் நீருடன்). அதிகாலையில கால்ல தண்ணி பட்டாலே ஐஸ் மாதிரி ஜில்லுனு இருக்கும். அதைத்தான் வண்டத் தண்ணினு சொல்லுவோம். இப்படி ஆடி மாசம் இருக்க வேண்டிய கடல், ஆணி மாசமே வந்துட்டு போயிருச்சு.” கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி என்னுடன் அடையாறு முகத்துவாரத்தை நோக்கிக் கடலோரமாக நடந்தபடியே வந்த பாளையம் தனது மீன மொழியில் காலநிலை மாற்றத்தை விளக்கினார். இந்த மாதத்தில் வீசவேண்டிய காற்றும் நிலவ வேண்டிய கடலின் தன்மையும், ஜூலை மாதத்திலேயே முடிந்துவிட்டதைத் தனது அவதானிப்புகளின் மூலமாக அவர் பதிவு செய்துள்ளார். இப்படியாக காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தனது மொழியில் விவரித்துக்கொண்டே அதிகாலை வேளையில் ஊரூர் குப்பம் கடற்கரையில் தொடங்கி அடையாறு முகத்துவாரத்தை நோக்கி என்னுடன் நீண்டநேரம் நடந்து வந்தார். பாளையம் சொல்வதுபோல், கடலின் தன்மை மட்டுமல்ல, சென்னை கடலோரத்தில் நிகழும் கடலரிப்பும் கடல்மட்ட உயர்வும் அஞ்சத்தக்க வகையில் திவிரமடைவதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அடையாறு, பள்ளிக்கரணை கடலில் ஆபத்து பட மூலாதாரம்,SUBAGUNAM/BBC படக்குறிப்பு,அடையாறு முகத்துவாரத்தில் உள்ள நீரின் கழிவு மற்றும் மாசுபாடுகளால், மீன்கள் செத்துக் கரை ஒதுங்கியிருந்ததைக் காண முடிந்தது. சென்னையில் 2040ஆம் ஆண்டுக்குள் சுமார் ஏழு சதவீத நிலம் நீரில் மூழ்கும் என்று கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியான ஓர் ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. பெங்களூருவை தளமாகக் கொண்டு இயங்கிவரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP) மேற்கொண்ட இந்த ஆய்வில், இந்திய கடலோர நகரங்களுக்கான வெள்ள வரைபடங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின்படி, அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, பள்ளிக்கரணை சதுப்புநிலம், மெட்ராஸ் துறைமுகம் ஆகியவை கடல்மட்ட உயர்வால் மூழ்கும் ஆபத்து இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், “2040ஆம் ஆண்டுக்குள் சென்னைப் பெருநகரில் சுமார் 7.29% பகுதிகளில் கடல்நீர் உட்புகுந்துவிடும் என்றும் 2060ஆம் ஆண்டில், 9.65% பகுதிகள் கடலில் மூழ்கும் எனவும், அதுவே 2100இல் 16.9%, அதாவது சென்னையின் பரப்பளவில் 207.04 சதுர.கி.மீ மூழ்கிவிடும் என்றும்” இந்த ஆய்வு எச்சரிக்கிறது. இதேபோல், கடந்த மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைப்படி, 2050ஆம் ஆண்டுக்குள் தமிழக கடலோர பகுதியில் 19.2செ.மீ. அளவுக்கு கடல்மட்ட உயர்வு இருக்கலாம். இதனால் “சென்னை பெருநகரில் மட்டுமே சுமார் 6,120 ஹெக்டேர் நிலப்பகுதி கடலுக்குள் செல்லக்கூடும்” என எச்சரிக்கப்படுகிறது. இவற்றின் விளைவாக ஏற்கெனவே பெருகிவரும் காலநிலை பேரிடர்கள், அதிதீவிர பருவநிலை நிகழ்வுகளின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிக்கிறது சி.சி.சி.டி.எம்-இன் இந்த ஆய்வு. நகரத் திட்டமிடலில் நிலவும் போதாமை பட மூலாதாரம்,GETTY IMAGES “விஞ்ஞானிகள் 2050ஆம் ஆண்டுக்குள் கடலுக்குள் மூழ்கலாம் என்றுதான் எச்சரித்துள்ளார்கள். கண்டிப்பாக மூழ்கும் எனச் சொல்லவில்லை. ஆனால், அரசு இதைக் காரணம் காட்டி கடலோரத்தில் இருக்கும் மீனவர்களை நகரத்திற்குள் இடம் மாற்றுமே தவிர, இதன் விளைவாக இப்போது அதிகரிக்கும் பேரிடர் அபாயத்தில் இருந்து எங்களைப் போன்ற எளிய மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்குமா?” என்று அச்சம் தெரிவிக்கிறார் பாளையம். பாளையம் போன்ற எளிய சமூகத்தினர் முன்வைக்கும் ஒரே கேள்வி, “இந்தப் பேரிடர்களைத் தாங்கி நின்று, எங்களை அச்சமின்றி வாழ வைக்கும் திறன் சென்னை பெருநகருக்கு இருக்கிறதா?” “உண்மையில் இல்லை” என்பதே அதற்கான பதில் என்கிறார் கேர் எர்த் அமைப்பின் நிர்வாக அறங்காவலரும் மூத்த சூழலியல்வாதியுமான ஜெயஸ்ரீ வெங்கடேசன். “சென்னைக்கான இரண்டாவது மாஸ்டர் ப்ளான் வரையிலும், பெருநகர் எதிர்கொள்ளும் பேரிடர்களோ, சமூக சமத்துவமின்மையோ, சூழலியல் பாதுகாப்போ எதுவுமே கவனத்தில் கொள்ளப்படவில்லை. உரிய வகையில் கருத்துகள், ஆலோசனைகள் கேட்கப்படவில்லை. ஆனால், தற்போது உருவாக்கப்பட்டு வரும் மூன்றாவது மாஸ்டர் ப்ளானில் அத்தகைய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் அது போதவில்லை,” என்பதே அவரது கூற்று. நகரத் திட்டமிடுதலைப் பொறுத்தவரை ஒரு போதாமை எப்போதுமே நிலவுவதாக ஜெயஸ்ரீ கூறுகிறார். அதாவது, காலநிலை நெருக்கடியின் ஆபத்துகளைப் பற்றி அதிகாரிகள், வல்லுநர்கள் மட்டத்தில் பரவலாக ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அந்தப் புரிதலை “நகரத் திட்டமிடுதலில் எப்படிக் கொண்டு வந்து பொருத்துவது? காலநிலை ஆபத்துகள் இருக்கின்றன சரி. அந்த அபாயங்களைக் கையாளத் தகுந்த நகரத்தைத் திட்டமிடுவது எப்படி?” இதில் அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை என்கிறார் அவர். ‘வீங்கிப் பெருத்துக்கொண்டிருக்கும் சென்னை மாநகரம்’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சென்னையில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 24,000ஐ தாண்டுவதாக மக்கள் தொகை தரவுகள் தெரிவிக்கின்றன. “பல்வேறு மீன்பிடிக் கிராமங்கள், பாக்கங்கள், பேட்டைகள், எனச் சுற்றியிருந்த பல பகுதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கித்தான் சென்னை இப்போதைய நிலைக்குப் பெருத்துள்ளதாக” சுந்தர்ராஜன் கூறுகிறார். அவரது கூற்றுப்படி, பல நீர்நிலைகள், சதுப்புநிலங்களை அழித்துதான் இப்போதைய சென்னை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணங்களால் நகர்புற வெப்பத் தீவுகள் (Urban heart Island), வெப்ப அலை, கடல் அரிப்பு, வெள்ளம் எனப் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. சென்னை, மும்பை போன்ற பெருநகரங்கள் மிகக் கடுமையான காலநிலை சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவற்றைக் கையாள்வதற்கு ஏற்ற நகரக் கட்டமைப்பு இந்த நகரங்களுக்கு இல்லை எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். சென்னையில் நகர்ப்புற வெப்பத் தீவுகள், அதாவது 40 டிகிரி செல்ஷியஸ் இருந்தாலும்கூட, 50 டிகிரி அளவுக்கு மக்கள் வெப்பத்தை உணரும் நிலை வெகுவாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் இருக்க, கிழக்குக் கடற்கரையில் கடும் கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதாகவும் சென்னையின் ஆறுகளைத் தூர்வாருவதில் முறையான அறிவியல்பூர்வ அணுகுமுறை பின்பற்றப்படுவதில்லை எனவும் சுந்தர்ராஜன் எச்சரிக்கிறார். இதற்குச் சான்றாக, அடையாறு முகத்துவாரப் பகுதியைச் சுட்டிக் காட்டுகிறார் மீனவர் பாளையம். அவருடன் அடையாறு முகத்துவாரப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டபோது, முகத்துவாரம் மிகச் சிறிதாக, ஆழமற்று இருந்ததைக் காண முடிந்தது. பட மூலாதாரம்,SUBAGUNAM/BBC படக்குறிப்பு,நகரத்தைத் திட்டமிடும்போது அரசு நடைமுறை சவால்களைக் கவனத்தில் கொள்வதில்லை என்று வருந்துகிறார் மூத்த மீனவரான பாளையம். “முகத்துவாரத்தை நல்லா ஆழப்படுத்தி, கடல்நீர் உள்ள போய், வர ஏதுவா தூர்வாரணும். ஆனால், இங்கு மண்ணை எங்கே எடுக்க வேண்டும் என்ற திட்டமிடலே இல்லாமல் அகற்றி, முகத்துவாரப் பகுதியின் ஓரத்திலேயே மீண்டும் குவித்துவிடுகிறார்கள். இதனால், ஒரு மழை பெய்து ஆற்று நீர் வரும்போதோ, கடல் நீரோட்டத்தின்போதோ, அங்கு தேங்கியிருக்கும் மண்ணை அது மீண்டும் சேர்த்துவிட்டுச் செல்கிறது.” இப்படிச் செய்தால், முகத்துவாரத்தில் எப்படி கடல்நீர் உள்ளே வந்து செல்லும், மீன்கள் எப்படி ஆற்றுக்குள் வரும், போகும் என்று ஆதங்கப்படுகிறார் அவர். மேலும், இத்தகைய அணுகுமுறையால் ஆற்றிலுள்ள கழிவுகள் வெளியேறாமல் கழிமுகத்திலேயே தேங்கியிருந்து, மாசுபடுத்துவதால் மீன்கள் செத்து மடிவதாகக் கூறுகிறார் மற்றொரு மீனவரான ரவிக்குமார். ஆனால், அடையாற்றின் தூர்வாரும் பணியில் முன்னேற்றம் இருப்பதாகவும் அடுத்தடுத்த பணிகளில் இந்தப் பிரச்னைகளுக்கும் திர்வு எட்டப்படும் எனத் தான் நம்புவதாகவும் கூறுகிறார் சென்னை ஐஐடியை சேர்ந்தவரும் வளம்குன்றா நகரங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து ஆய்வு செய்தவருமான முனைவர்.கிருத்திகா முருகேசன். அவரது கூற்றுப்படி, அடையாற்றின் முகத்துவாரப் பகுதியிலுள்ள அடையாறு சூழலியல் பூங்கா பகுதியில் மீட்டுருவாக்கப்பட்டுள்ள அலையாத்திக் காடுகளின் செழிப்பே அதற்கான சான்று. பட மூலாதாரம்,SUBAGUNAM/BBC படக்குறிப்பு,"முன்பு ஆற்றையும் முகத்துவாரத்தையும் சார்ந்திருந்தவர்கள், இப்போது மீன்பிடிக்க கடலுக்குள் செல்லத் தொடங்கிவிட்டோம்" என்கிறார் மீனவர் குப்பன். ஆனால் அடையாறு முகத்துவாரம் அருகே இருக்கும் உடைந்த பாலத்தின் கீழே வலைகளைப் பிரித்துக் கொண்டிருந்த மீனவரான குப்பன், “ஏற்கெனவே ஓரளவுக்கு நன்றாக இருந்த முகத்துவாரத்தை இப்போது மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டார்கள்," என்கிறார். "சரியான அணுகுமுறை இல்லாமல், இப்போது ஆற்றையும் முகத்துவாரத்தையும் சார்ந்திருந்த நாங்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லத் தொடங்கிவிட்டோம். ஏதேனும் செய்வதாக இருந்தால், அதை முழுமையாகப் புரிந்துகொண்டு செய்ய வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் மேலும் மோசமடையும்,” என்றும் அவர் வருந்துகிறார். மூழ்கும் அபாயத்தில் தாழ்வான கடலோர நகரங்கள் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் ஆய்வுப்படி, கடந்த 1987 முதல் 2021 வரையிலான காலகட்டத்தின்போது சென்னையில் 0.679 செ.மீ. கடல்மட்டம் உயர்ந்துள்ளது. அதாவது 'ஆண்டுக்கு, 0.066செ.மீ. அளவுக்கு உயர்ந்துள்ளது.' இந்திய கடலோரங்களைப் பொறுத்தவரை, கடந்த 30 ஆண்டுகளில் அதிகபட்ச கடல்மட்ட உயர்வு மும்பையில் பதிவாகியிருப்பதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது. அதன்படி, 'மும்பையின் கடலோரங்களில் ஆண்டுக்கு ஆண்டுக்கு 0.31 செ.மீ. என்ற விகிதத்தில் கடல்மட்ட உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.' சென்னையில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 24,000ஐ தாண்டுவதாக மக்கள் தொகை தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தொடர்ந்து விரிவடைந்துகொண்டே இருக்கும் தலைநகரில் அதிதீவிர நகரமயமாக்கல், கடற்கரை பகுதிகளில் அதிகபட்ச பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. பட மூலாதாரம்,SUBAGUNAM/BBC படக்குறிப்பு,மீனவர் பாளையத்துடன் அடையாறு முகத்துவாரத்தை நேரில் சென்று பார்வையிட்டபோது, அது மிகச் சிறிதாக, ஆழமற்று இருந்ததைக் காண முடிந்தது. காலநிலை நெருக்கடியை விரைவுபடுத்தும் காரணிகளால் ஏற்படும் பாதிப்புகளுடன் “சென்னை பெருத்துக் கொண்டிருப்பதற்கு” தொடர்பு இருப்பதாகக் கூறுகிறார் கோ.சுந்தர்ராஜன். சென்னையின் பல பகுதிகள் கடல் மட்டத்தில் இருந்து பத்து மீட்டருக்கும் குறைவான உயரத்திலேயே இருக்கின்றன. சோலிங்கநல்லூர் (3மீ), பள்ளிக்கரணை (2மீட்டர்), ஒக்கியம் மடுவு (2மீட்டர்) உட்படப் பல பகுதிகள் மூன்று மீட்டருக்கும் குறைவான உயரத்தில்கூட இருக்கின்றன. இப்படிப்பட்ட தாழ்வான கடலோர நகரங்கள், கடல்மட்ட உயர்வால் தீவிரமாகப் பாதிக்கப்படும் என்று பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் ஆய்வில், பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட 15 நகரங்களில், இத்தகைய நெருக்கடிகளால் எளிதில் பாதிக்கப்படும் அபாயத்தில் சென்னை, மும்பை நகரங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. சென்னையைக் காக்க என்ன வழி? இவ்வளவு பேரிடர்கள் தமிழகத் தலைநகரைச் சூழ்ந்திருக்கும்போதிலும், சென்னையை மேன்மேலும் விரிவுபடுத்திக் கொண்டே செல்வது ஏற்புடையதல்ல எனக் கூறும் சுந்தர்ராஜன், இந்த அதிதீவிர நகரமயமாக்கலை நிறுத்த வேண்டும் என்கிறார். இல்லையெனில், பெருகிவரும் மக்கள் தொகை அடர்த்தி, தீவிரமடையும் பேரிடர் நிகழ்வுகளால், சென்னை பெருநகரம் “சர்வதேச அளவில் வாழத் தகுதியற்ற, பேரிடர் சூழ் நகரமாகப் பார்க்கப்படும் அபாயம் இருப்பதாக” எச்சரிக்கிறார். இதன் விளைவாக, இங்கு வரும் முதலீடுகள் முதல் மக்களின் வளர்ச்சி வரை அனைத்துமே பெரிய அடியை எதிர்கொள்ளும் என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES உண்மையில் “இப்போதைய சூழலில் காலநிலை நெருக்கடியால் சென்னைக்கு ஏற்படும் அபாயங்களைக் கையாள நம்மிடம் எந்த நடவடிக்கையும் இல்லை” என்கிறார் ஜெயஸ்ரீ வெங்கடேசன். உடனடி நடவடிக்கைகளில் முதன்மையானதாக அவர் குறிப்பிடுவது, “அந்தந்த பகுதிகளில் இருக்கும் நீர்நிலையில் இருந்தே அங்குள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் அளவுக்கு நீர்நிலைகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அதன் மூலம், நீர்நிலைகளை மட்டுமே மீட்க முடியும். நகரிலுள்ள நீர்நிலைகளைச் சுற்றி பூங்காக்களை அமைப்பதால் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிடாது.” சென்னை மட்டுமின்றி, இந்தியாவிலுள்ள அனைத்து பெருநகரங்களுமே காலநிலை பிரச்னையை துண்டு துண்டாக அணுகுவதாக விமர்சிக்கிறார் ஜெயஸ்ரீ. அவர், “நீரியல், சூழலியல், நிலவியல் என அனைத்துத் துறைகளும் தனித்தனியாக இயங்குகின்றன. இதனால், அரசு நிர்வாகம் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட புரிதலைப் பெறுவதிலும், அதன் அடிப்படையில் திட்டங்களை வகுப்பதிலும் ஒரு போதாமை நிலவுவதாக” கூறுகிறார். பட மூலாதாரம்,SUBAGUNAM/BBC அதாவது, வெள்ளம் பற்றிப் பேசும்போது வறட்சி குறித்தும் பேச வேண்டும், வெப்பத் திட்டுகள் குறித்துப் பேசும்போது உயரும் வெப்பநிலையைப் பேச வேண்டும், கடல் அரிப்பைப் பற்றிப் பேசும்போது, அலைகளின் தன்மை மற்றும் முகத்துவாரம் பற்றியும் பேச வேண்டியது அவசியம். சென்னையின் நகரத் திட்டமிடுதலில் இந்த சவால்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், தற்போது அதற்கான சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறுகிறார் முனைவர்.கிருத்திகா முருகேசன். “சென்னை மாநகராட்சி காலநிலை நிதியின்மீது கவனம் செலுத்தவுள்ளார்கள். இதன்மூலம், சமூக-பொருளாதார, காலநிலை அபாயங்களை எதிர்கொள்ளும் மக்களின் நலனில் இந்தத் திட்டத்தின் மூலம் கவனம் செலுத்த முடியும்,” என்கிறார் முனைவர்.கிருத்திகா. மேலும், இதன்மூலம் காலநிலை அபாயங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டில் எவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பனவற்றின் அடிப்படையில் கவனம் செலுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இதற்கான ஆய்வுகளை உலக வள நிறுவனத்தின்கீழ் செய்துகொண்டிருப்பதாகவும் முனைவர்.கிருத்திகா தெரிவித்தார். ஜப்பான்: இரு அணுகுண்டுகளின் பேரழிவில் இருந்து மீண்டுவர அனிமேக்கள் உதவியது எப்படி?12 மே 2024 நாய்களை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற உலக புகழ் பெற்ற முதலை நிபுணர் - பிடிபட்டது எப்படி?11 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES அதோடு, இத்தனை ஆண்டுகளாக நிகழ்ந்திருக்கும் பிரச்னைகள் அனைத்தையும் மொத்தமாகச் சரி செய்வது சாத்தியமே இல்லை எனக் கூறும் அவர், ஆனால் அதற்கான முதல் படியை சென்னை மாநகராட்சி இப்போது எடுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்தார். அடையாற்றின் முகத்துவாரத்தில் இருந்து ஊரூர் குப்பத்தை நோக்கித் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, “நகரத்தைச் சரியா திட்டமிட எல்லாரும் ஆயிரம் வழி சொல்றாங்க. என் அறிவுக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒரே வழிதான்,” என்றார் மீனவர் பாளையம். “முதல்ல ஆறு சுத்தமா இருக்கணும். அப்பதான், கடல் தண்ணி அதுவழியாக உள்ள போய்கிட்டு, வந்துகிட்டு இருக்கும். அது சரியா நடந்தாலே ஊருக்குள்ள ஒரு கொசு இருக்காத்து, ஊரும் நல்லா இருக்கும். அப்புறம் தன்னால, எவ்வளவு பெருமழையா கொட்டுனாலும், அடிச்சுட்டு வந்து கடலோட சேர்த்து, சென்னை மூழ்காம ஆறும், கடலும் சேர்ந்து பாத்துக்கும். அதுக்கு முதல்ல அதை அழிக்காம இருக்கணும். நகரத்துக்குள்ள ஓடுற ஆற்றைப் பராமரிப்பதுதான் நகரத் திட்டமிடலின் மையப் புள்ளியா இருக்கணும்.”என்கிறார் https://www.bbc.com/tamil/articles/c623zg1w80xo
  3. தடுப்பூசி உற்பத்திகளை விரைவுபடுத்துங்கள்; உலக சுகாதார நிறுவனம் அவசர கோரிக்கை எம்பொக்ஸ் நோய்த் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம், விடயத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது. எம்பொக்ஸ் நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் அதனை உலக பொது சுகாதார அவசரகால நிலையாக பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் இவ் அறிவுறுத்தலையும் விடுத்துள்ளது. எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சலானது ஆபிரிக்க கண்டத்தின் 13 நாடுகளில் பரவியுள்ளதாக அந்த ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/307993
  4. ‘நான் தொடர்ந்து போராடுவேன்’ - வினேஷ் போகாட் தனது அறிக்கையில் என்ன சொன்னார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 14 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது 16 ஆகஸ்ட் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியி இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீட்டை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 14) தள்ளுபடி செய்திருந்தது. இதைத் தொடர்ந்து அவர், இன்று (வெள்ளி, ஆகஸ்ட் 16) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். மூன்று-பக்கங்கள் உள்ள உணர்வுப்பூர்வமான அந்த அறிக்கையில், தனது குடும்பத்தார், மருத்துவர்கள், பயிற்சியாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். மேலும் அதில், “எனக்கு பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால், அதற்கு வார்த்தைகள் போதுமானதாக இல்லை. சரியான நேரத்தில் நான் மீண்டும் பேசுவேன் என நினைக்கிறேன்,” என்றிருக்கிறார். “ஆகஸ்ட் 6-ஆம் தேதி இரவு மற்றும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலை நானும் எனது அணியினரும் எங்களது முயற்சிகளைக் கைவிடவில்லை. நாங்கள் சாதிக்க நினைத்ததை எங்களால் சாதிக்க முடியவில்லை. அது எப்போதும் ஒரு குறையாகவே இருக்கும். வேறு வகையான சூழ்நிலைகளில், நான் 2032 வரை விளையாடியிருக்கலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் எனக்குள் போராட்ட குணமும் மல்யுத்தமும் எப்போதும் இருக்கும்,” என்று அவ்வறிக்கையில் தெரிவித்திருக்கிறார். “எதிர்காலம் எனக்காக என்ன வைத்துள்ளது எனத் தெரியவில்லை. ஆனால், நான் எதை நம்புகிறேனோ அதற்காகவும் சரியான காரியத்துக்காகவும் நான் தொடர்ந்து போராடுவேன்,” என்றும் தெரிவித்திருக்கிறார். விளையாட்டுக்கான நடுவர் மன்றம் கூறியது என்ன? ஒலிம்பிக்கில் 50 கிலோ மல்யுத்தப் பிரிவில் ஒரே நாளில் 3 முன்னணி வீராங்கனைகளை அடுத்தடுத்து வீழ்த்திய வினேஷ் போகாட் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். மறுநாள் இறுதிப்போட்டி என்ற நிலையில், அன்றைய தினம் காலையில் எடை பரிசோதனை செய்யப்பட்ட போது, வினேஷ் போகாட் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 100 கிராம் அதிகமாக இருந்தார். இதனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவரால் இறுதிப்போட்டிக்கு பங்கேற்க முடியாமல் போயிற்று. இதனை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்திருந்தார். அதில், வெள்ளிப் பதக்கத்தை தனக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். இதன் மீதான தீர்ப்பை இருமுறை ஒத்திவைத்த நடுவர் மன்றம், கடைசியாக நேற்றைய தினம் வெளியிட்ட அறிவிப்பில் வரும் 16-ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில், திடீரென இன்றைய தினம் விளையாட்டுக்கான நடுவர் மன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது. வினேஷ் போகாட்டின் மேல் முறையீட்டை நிராகரிப்பதாக நடுவர் மன்றம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், "ஆகஸ்ட் 7-ஆம் தேதி வினேஷ் போகாட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது," என்று கூறப்பட்டிருப்பதாக ஸ்போர்ட்ஸ்டார் இணையம் கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES வினேஷ் மேல் முறையீட்டில் நடந்தது என்ன? தனது தகுதி நீக்கத்தைத் தொடர்ந்து, கடந்த வாரம் வினேஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டது. அதில், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் வினேஷ் கூறியிருந்தார். டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின்படி, வினேஷின் சட்டக் குழுவில் பிரெஞ்சு வழக்கறிஞர்கள் ஜோயல் மோன்லூயிஸ், எஸ்டெல் இவனோவா, ஹபைன் எஸ்டெல் கிம் மற்றும் சார்லஸ் ஆம்சன் ஆகியோர் இருந்தனர். இது பாரிஸ் ஒலிம்பிக் குழுவால் வழங்கப்பட்ட சட்ட உதவிக் குழுவாகும். இந்த வழக்கில் அவருக்கு உதவ மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே மற்றும் விதுஷ்பத் சிங்கானியா ஆகியோரும் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பாக நியமிக்கப்பட்டனர் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. வினேஷின் 100 கிராம் கூடுதல் எடை என்பது அவர் தொடர்ந்து விளையாடியதால் ஏற்பட்ட தளர்வில் இருந்து உடல் பழைய நிலைக்கு திரும்பும் போது, இயற்கையாக ஏற்படும் மாற்றத்தால் கூடிய எடை தானே தவிர, அவர் மோசடி செய்யவில்லை என்று வழக்கறிஞர்கள் வாதிட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES பாரிஸ் ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகாட் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற போது, அவர் நிச்சயம் தங்கம் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. காரணம், முதல் நாளில் அவர் பெற்ற அடுத்தடுத்த மூன்று வெற்றிகள். குறிப்பாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பான் மல்யுத்த வீராங்கனை யுய் சுசாகியை வினேஷ் தோற்கடித்திருந்தார். சுசாகி நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர், டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர் மற்றும் மல்யுத்த வீராங்கனைகளுக்கான தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையாகவும் இருப்பவர். சர்வதேச மல்யுத்தப் போட்டிகளில் அதுவரை தோல்வியையே சந்திக்காதவராக அவர் வலம் வந்தார். அவரது சாதனைகளை பார்க்கும் போது, பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் யுய் சுசாகிக்கு எதிராக வினேஷ் பெற்ற வெற்றி எவ்வளவு பெரியது என்பதை உணர முடியும். அதைத் தொடர்ந்து காலிறுதியில் யுக்ரேனிய மல்யுத்த வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சையும், அரையிறுதியில் கியூபாவைச் சேர்ந்த யூஸ்னெனிலிஸ் குஸ்மோனையும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார் வினேஷ். இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிக எடையுடன் இருந்தார் என்ற காரணத்திற்காக வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகாட் செய்த மேல் முறையீட்டை விளையாட்டிற்கான நடுவர் மன்றம் நிராகரித்திருப்பதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cn879xg8yn2o
  5. திருமலையில் விவசாய காணிகள் அபகரிப்பு - குகதாசன் எம்.பி எடுத்த நடவடிக்கை என்ன? திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 43ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள் எல்லையிடப்பட்டு அபகரிப்பு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாடிபோது உரிய அமைச்சர்களுடன் கதைத்து தீர்வை பெற்றுத்தருவதாக தம்மிடம் உறுதியளித்ததாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருகோணமலை புல்மோட்டை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் 10435 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான விவசாய நிலங்களுக்கான குளங்கள் வாய்க்கால்கள் காணப்படுகிறது. இது தொடர்பில் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக முயற்சிப்பதோடு, ஆசிரியர் வெற்றிடங்கள் 500ம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் 100 சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகிறது. இதனால் சத்திர சிகிச்சைகள் தள்ளிப்போடப்படுகின்றன. வெளிநாடுகளில் வைத்தியர்கள் இல்லாமல் அறுவை சிகிச்சை இடம் பெறுகின்ற போதும் இங்கு சிற்றூழியர்கள் உதவிக்காக இன்மையால் பிற்போடப்படுகிறது. கல்வி சுகாதாரம் சமூக மேம்பாடு உள்ளிட்ட விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு கட்சி வேறுபாடுகளின்றி ஒன்றினைந்து செயற்படுவோம். 1976 ன் பின்கட்டுகுளப் பகுதிக்கு முதல் பாராளுமன்ற பிரதிநிதி நானே புல்மோடுடை திரியாய் குச்சவெளி என்ற பிரதேச பாகுபாடின்றி அனைத்து சேவைகளையும் சரிவர சரியாக செய்வேன் இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். பிரான்ஸ் நாட்டின் அதிபதியான நெப்போலியன் கூறியது போன்று “பல காலம் பேச்சாளராக இருப்பதை விட சில மணி நேரம் செயலாளராக இருப்பது சிறந்தது” எனக் கூறினார். குறித்த சந்திப்பில் முன்னால் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் முபாரக் உட்பட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://thinakkural.lk/article/307983
  6. Published By: DIGITAL DESK 3 17 AUG, 2024 | 09:48 AM சூடானில் போரால் பாதிக்கப்பட்ட தென்கிழக்கில் உள்ள ஒரு கிராமத்தில் துணை இராணுவப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னார் மாநிலத்தில் உள்ள ஜல்கினி கிராமத்தின் மீதே வியாழக்கிழமை காலை தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த கிராமம் போரினால் பாதிக்கப்பட்டு 16 மாதங்கள் கடந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் போர் நிறுத்தப் பேச்சுக்கள் இடம்பெற்று வருகிறது. சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இராணுவத்துடன் போரிட்டு வரும் துணை இராணுவ படை சென்னார் மாநிலத் தலைநகரான சின்ஜாவை ஜூன் மாதம் கைப்பற்றியது. சின்னார் மாநிலத்தில் இடம்பெறும் தாக்குதல்கள் காரணமாக 725,000க்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் சமீபத்திய ஐ.நா தரவுகளின்படி, சூடானிலிருந்து சுமார் 2.2 மில்லியன் மக்கள் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/191272
  7. ஆபிரிக்க நாடுகளில் பரவிய Mpox சர்வதேச அளவில் பரவக்கூடிய ஒரு பொது சுகாதாரப் பிரச்சினை என விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கவனம் செலுத்த வேண்டிய சுகாதார தொற்று என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் கிட்டத்தட்ட 15ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட அறுநூறு பேர் இறந்துள்ளனர் என்று அவர் குறிப்பிடுகிறார். மேலும், கொவிட் தொற்று காரணமாக சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாக மருத்துவர் கூறினார். அங்கு பேசிய கலாநிதி சமல் சஞ்சீவ, “மேலும் Mpox எனப்படும் நோய் மனிதர்களுக்கு வைரஸ் குழுவால் ஏற்படும் நோயாகும். முதலில் குரங்குகள் மற்றும் அதைச் சார்ந்த விலங்குகளால் இந்நோய் உண்டாகி, அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்நோய் பரவிய பின், இந்நோய் உள்ளவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு நேரடியாக நெருங்கிப் பழகுவதால் நோய் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸின் இரண்டு முக்கிய விகாரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்போது உலக சுகாதார நிறுவனம் இந்த நோயை உலகளாவிய அவசரநிலையாக அறிவித்துள்ளதால், இந்த அவசரநிலைக்கு முன்கூட்டியே தயாராக வேண்டியது நமது நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் பொறுப்பாகும். கோவிட் -19 இன் நிலை குறித்த எச்சரிக்கைகளின் தொடக்கத்தில், நம் நாட்டின் சுகாதார அதிகாரிகள் இந்த சூழ்நிலையை புறக்கணித்ததால் ஏற்படும் சேதங்களை நாங்கள் பார்த்தோம். கடந்த காலங்களில் நமது நாட்டின் சுகாதார அமைப்பில் கடுமையான சரிவுகள் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம். கடந்த காலத்தில், நமது நாட்டின் சுகாதார அமைப்பில் ஏற்பட்டிருக்க வேண்டிய சாதகமான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீவிர சிகிச்சை பிரிவு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. மருத்துவமனையில் படுக்கை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. இந்த குரங்குப்பொக்ஸ் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கு PCR பரிசோதனை மிகவும் முக்கியமானது என்பதால், தற்போது தவறாகப் பயன்படுத்தப்படும் உபகரணங்களை பெரும் தொகை செலுத்தி இலங்கைக்கு கொண்டு வர வேண்டும், மேலும் இயந்திரங்களை முறையாக இயக்கி சூப்பர் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்புகளுக்கு பயன்படுத்த வேண்டும். நோய் நாட்டிற்குள் நுழையக்கூடிய மையங்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டிய பொறுப்பு சுகாதார அமைச்சகத்திற்கு உள்ளது. அதேபோல், நம்பகமான சுகாதார செய்திகளை வெகுஜன ஊடகங்கள் மூலம் மக்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு உள்ளது’’ என்றார். https://thinakkural.lk/article/307974
  8. Published By: VISHNU 16 AUG, 2024 | 09:08 PM கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன்படி, மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மக்கள் அக்கறையுடன் இருக்க வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அந்தப் பகுதிகள். 100 மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும். கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமையினால், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையை அண்மித்துள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக தீவின் தென்மேற்கு பகுதிகளில் இந்த நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/191263
  9. யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவருக்கு நெடுநேர சத்திர சிகிச்சையின் பின்னர் மீண்டும் கை பொருத்தப்பட்டு சிகிச்சைகள் பெற்று வீடு திரும்பியுள்ளார். குறிப்பிட்ட சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட வைத்திய நிபுணர்கள் ,வைத்தியர்கள், தாதியர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் வைத்தியசாலை சமூகம் சார்ந்த நன்றிகளை தெரிவித்து முகநூலில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/307980
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டாம் ஊக் பதவி, பிபிசி செய்திகள் 16 ஆகஸ்ட் 2024 முதல் கைபேசி அழைப்பு நடந்து ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில், நமது சட்டைப் பையில் இருக்கும் இந்தக் கையடக்கக் கருவி இப்போது பூகம்பத்தைக் கண்டறியும் உலகின் மிகப்பெரிய அமைப்பை உருவாக்க உதவி வருகிறது. 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி, அமெரிக்காவின் கலிபோர்னியா விரிகுடா பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இது ஒரு அசைவு போலத்தான் இருந்தது. ஆனால் அப்பகுதி முழுவதும் வசிப்பவர்களின் அந்த நிலனடுக்கத்தை உணர்ந்து அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்துக்குத் தகவல் அனுப்பினர். சேதம் எதுவும் பதிவாகவில்லை. ஆனால், நிலநடுக்கம் மற்றொரு வகையில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. நிலநடுக்கம் தொடங்குவதற்கு முன்பே அப்பகுதியில் உள்ள பலர் தங்கள் தொலைபேசிகளில் எச்சரிக்கைச் செய்திகளைப் பெற்றனர். 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாலை கலிஃபோர்னியாவின் பேக்கர்ஸ்ஃபீல்ட் நகருக்கு தெற்கே மையம் கொண்ட 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பும் இதே போன்ற எச்சரிக்கைகள் தெற்கு கலிபோர்னியாவில் வசிப்பவர்களுக்கு கைபேசிகளில் வந்தன. இன்னும் முக்கியமாக, இந்தக் கைபேசிகள் பல பூகம்பங்களை முதலில் கண்டறிய உதவின. நிலநடுக்கம் வருவதற்குச் சில வினாடிகளுக்கு முன்பு பயனர்களை எச்சரிக்கும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை உருவாக்க, கலிஃபோர்னியாவில் உள்ள பல பல்கலைக்கழகங்கள், மற்றும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்துடன் கூகுள் நிறுவனம் பணி செய்து வருகிறது. இது சில வினாடிகள் முன்கூட்டிய எச்சரிக்கை தான், ஆனால் ஒரு நிலநடுக்கத்தின் போது சில வினாடிகளில் ஒரு மேஜையின் கீழ் சென்று நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு இது போதுமான நேரத்தை அளிக்கும். ரயில்களின் வேகத்தைக் குறைக்கவும், விமானங்கள் புறப்படுவதை அல்லது தரையிறங்குவதை நிறுத்தவும், பாலங்கள் அல்லது சுரங்கங்களில் கார்கள் நுழைவதைத் தடுக்கவும் இது போதுமான நேரமாகும். எனவே, வலுவான நிலநடுக்கங்கள் ஏற்படும் போது இந்த அமைப்பு உயிர்களைக் காப்பாற்றும். உங்கள் ஆரோக்கியத்தைக் காட்டும் இடுப்புச் சுற்றளவு - எப்படி அறியலாம்?6 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கூகுள் நிறுவனம், பொதுமக்களுக்குச் சொந்தமான கைப்பேசிகள் மூலம் உலகின் மிகப்பெரிய நிலநடுக்கத்தைக் கண்டறியும் நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறது இது எப்படிச் செயல்படுகிறது? இது இரண்டு தரவுகளைப் பயன்படுத்துகிறது. ஆரம்பத்தில், அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம், கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகம், மற்றும் மாநில அரசு ஆகியவற்றின் நில அதிர்வு நிபுணர்களால் மாநிலம் முழுவதும் நிறுவப்பட்ட 700 நில அதிர்வு அளக்கும் கருவிகளின் வலைப்பின்னலை நம்பியிருந்தது. இவை பூமி அதிர்வுகளைக் கண்டறியும் சாதனங்கள் மூலம் பெறப்படும் தரவுகள். ஆனால் கூகுள் நிறுவனம், பொதுமக்களுக்குச் சொந்தமான கைபேசிகள் மூலம் உலகின் மிகப்பெரிய நிலநடுக்கத்தைக் கண்டறியும் நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறது. கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் பெரும்பாலான ஸ்மார்ட்ஃபோன்களில் முடுக்க மானிகள் (ஆக்சலெரோமீட்டர்கள் - accelerometers) உள்ளன. இது ஒரு கைபேசி நகர்த்தப்படும் போது அதைக் கண்டறியும் அமைப்பு. கைபேசி சாய்ந்திருக்கும் போது, போர்ட்ரெய்ட் மோடில் இருந்து லேண்ட்ஸ்கேப் மோடுக்கு மாற இது பயன்படுத்தப்படுகிறது. கூகுளின் ‘ஃபிட்னஸ் டிராக்க’ருக்கான தகவலை வழங்கவும் இது உதவுகிறது. மேலும், ரேடியோ சிக்னல்கள் நில அதிர்வு அலைகளை விட வேகமாகப் பயணிப்பதால், நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து விலகி இருக்கும் பகுதிகளில், நிலநடுக்கம் தொடங்கும் முன்பே எச்சரிக்கைகள் வந்து சேரும். ஆண்ட்ராய்டில் உள்ள மென்பொருள் பொறியாளர் மார்க் ஸ்டோகைடிஸ் இதைப் பற்றி கூறுகையில், "நாங்கள் அடிப்படையில் ஒளியின் வேகத்தை (தொலைபேசியில் இருந்து வரும் சமிக்ஞைகளின் வேகம்) பூகம்பத்தின் வேகத்திற்கு எதிராக ஓட்டுகிறோம். மேலும் எங்களக்து அதிர்ஷ்டம், ஒளியின் வேகம் மிக வேகமாக உள்ளது!" என்கிறார். பெரும்பாலான தரவுகள் மக்களிடமிருந்து பெறப்படுவதால், விலையுயர்ந்த நில அதிர்வு அளவீடுகளின் விரிவான நெட்வொர்க்குகள் இல்லாத பகுதிகளில் பூகம்பங்களைக் கண்காணிப்பதற்கான சாத்தியத்தை இந்தத் தொழில்நுட்பம் ஏற்படுத்துகிறது. இது உலகின் தொலைதூர மற்றும் ஏழ்மையான பகுதிகளில் கூட பூகம்ப எச்சரிக்கைகளை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குறைவாகவே கைபேசி பயன்படுத்துபவர்கள் உள்ள தொலைதூரப் கடலோரப் பகுதிகளில் சுனாமிகளைத் தூண்டக்கூடிய நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்ன சிக்கல்? 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், நில அதிர்வு அலைகள் மையப்பகுதியிலிருந்து பயணித்தபோது, சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி முழுவதும் உள்ள தொலைபேசிகள் பூகம்ப எச்சரிக்கைத் தரவுகளுடன் ஒளிர்வதை கூகுள்-இன் பொறியாளர்கள் கண்டனர். இந்த அமைப்பு இப்போது இந்த நில அதிர்வுகளைக் கண்டறிகிறது. பின்னர் அவை உச்ச வரம்புகளைக் கடக்கும்போது அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் ‘ஷேக்அலர்ட் செயலி’ மூலம் எச்சரிக்கைச் செய்திகளாக வழங்கப்படுகின்றன. இது பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பயனர்களின் மொபைல் ஃபோன்களில் எச்சரிக்கைச் செய்திகளை வழங்குகிறது. ஆண்ட்ராய்டு போன்களில் இந்த எச்சரிக்கைச் செய்திகளைப் பெறமுடியும். இது பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. இது பயனர்களின் மொபைல் போன்கள் நிலையாக இருக்கும் போது அவற்றை நிலநடுக்கத்தைக் கண்டறியும் கருவிகளாக மாற்றி, அதன் தொலைபேசியின் இருப்பிடத்தின் அடிப்படையில் எச்சரிக்கைச் செய்தியை அனுப்புகிறது. கலிபோர்னியாவில் நிலநடுக்கங்கள் பொதுவான நிகழ்வாகும். அங்கு ஒரு நாளைக்கு 100 சிறிய நிலநடுக்கங்களை ஏற்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை உணர முடியாத அளவுக்குச் சிறியவை. இருப்பினும், கலிபோர்னியாவில் பொதுவாக வருடத்திற்கு பல பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ரிக்டர் அளவு 4.0-க்கு மேல் 15-20 நிலநடுக்கங்கள் ஏற்படலாம். இன்னும் பரவலாக, உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள 1,600 கோடி மொபைல் போன்களில், 300 கோடிக்கும் அதிகமானவை ஆண்ட்ராய்டு மென்பொருளில் இயங்குகின்றன. இவற்றில், நிலநடுக்கங்களால் பாதிக்கப்படக்கூடிய 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கைபேசிகளில் இந்த எச்சரிக்கை அமைப்பு இருக்கிறது. ஆனால் இந்த அமைப்புக்கும் வரம்புகள் உள்ளன. குறிப்பாக, குறைவாகவே கைபேசி பயன்படுத்துபவர்கள் உள்ள தொலைதூரப் கடலோரப் பகுதிகளில் சுனாமிகளைத் தூண்டக்கூடிய நிலநடுக்கங்கள் ஏற்படலாம். அங்கு இந்த எச்சரிக்கை அமைப்பு வேலைசெய்யப் போதுமான தரவுகள் கிடைப்பது கடினம். நிலநடுக்கத்துக்குச் சில வினாடிகளுக்கு முன்னரே எச்சரிக்கைகளை வெளியிட இது உதவும் என்றாலும், அவை நிகழும் முன்னரே கணிக்கும் தொழில்நுட்பம் இன்னும் மேம்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/clynlyjzn68o
  11. விஷ்மியின் சதத்தை வீணடித்தது ப்ரெண்டகாஸ்டின் சதம்; இலங்கையை வீழ்த்தியது அயர்லாந்து Published By: VISHNU 16 AUG, 2024 | 11:11 PM (நெவில் அன்தனி) பெல்ஃபாஸ்ட், ஸ்டோமன்ட் சிவில் சேவைகள் கிரிக்கெட் கழக விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் அயர்லாந்து வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்தது. ஓலா ப்ரெண்டகாஸ்ட் குவித்த ஆட்டம் இழக்காத கன்னிச் சதம் அயர்லாந்தின் வெற்றியில் பிரதான பங்காற்றியது. இதன் காரணமாக விஷ்மி குணரட்னவின் கன்னிச் சதம் வீண் போனது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவி சமரி அத்தபத்து தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஹர்ஷித்தா சமரவிக்ரம 19 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இந் நிலையில் விஷ்மி குணரட்னவும் ஹசினி பெரேராவும் 3ஆவது விக்கெட்டில் 122 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர். துடுப்பாட்டத்தை நிதானத்துடன் ஆரம்பித்து பின்னர் வேகத்தை அதிகரித்த விஷ்மி குணரட்ன, 97 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவி சமரி அத்தபத்தவுக்குப் பின்னர் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் குவித்த இரண்டாவது இலங்கை வீராங்கனை என்ற பெருமையை விஷ்மி குணரட்ன பெற்றுக்கொண்டார். இலங்கை சார்பாக மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தபத்து மாத்திரமே இதற்கு முன்னர் சதம் குவித்திருந்தார். அவர் இதுவரை 9 சதங்களைக் குவித்துள்ளார். விஷ்மி குணரட்னவுக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய ஹசினி பெரேரா 46 ஓட்டங்களைப் பெற்றதுடன் மத்திய வரிசையில் அனைவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்று அணியின் மொத்த எண்ணிக்கையை 260 ஓட்டங்களாக உயர்த்தினர். பந்துவீச்சில் ஓலா ப்ரெண்டகாஸ்ட் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அலனா ­­டல்ஸெல் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆலின் கெலி 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 260 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 49.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஓலா ப்ரெண்டகாஸ்ட் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 122 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அவரை விட அமி ஹன்டர் 42 ஓட்டங்களையும் சாரா ஃபோபஸ் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் காவிஷா டில்ஹாரி 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகி: ஓலா ப்ரெண்டகாஸ்ட். அறிமுக வீராங்கனை அயர்லாந்து சார்பாக இன்றைய போட்டியில் அலிஸ் டெக்டர் அறிமுகமானார். அவரது குடும்ப உறுப்பினர்கள் இப் போட்டியைக் கண்டுகளித்ததுடன் அலிஸ் ஹெக்டர் தனது அறிமுகப் போட்டியில் விக்கெட் ஒன்றையும் கைப்பற்றினார். அவரது மூத்த சகோதரரான ஹெரி டெக்டர் ஆடவர் அணியில் இடம்பெறுவதுடன் மேலும் இரண்டு சகோதரர்கள் அயர்லாந்து கனிஷ்ட அணிகளில் இடம்பெற்றனர். https://www.virakesari.lk/article/191265
  12. Published By: DIGITAL DESK 7 16 AUG, 2024 | 05:26 PM யுத்த காலத்தில் விடுதலை புலிகள் ஆயுதங்கள் மற்றும் தங்கம் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியிலுள்ள தனியார் காணியில் இன்று வெள்ளிக்கிழமை (16) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றிருந்தது. புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, பொலிஸார், இராணுவத்தினர், கிராம சேவையாளர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் இணைந்து அகழ்வு பணிகளை மேற்கொண்டிருந்தனர். பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் நிலத்தில் பல மணிநேரம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போதும் ஆயுதங்களோ அல்லது வேறு எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தோண்டப்பட்ட இடங்களில் எதுவும் கிடைக்காததால், மீண்டும் தோண்டப்பட்ட இடங்களை மூட நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி தர்மலிங்கம் உத்தரவிட்டதனை தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. மேலும், மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/191248
  13. இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி மல்லாவியில் பாரிய ஆர்ப்பாட்டம்! Published By: DIGITAL DESK 3 16 AUG, 2024 | 05:23 PM இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி மல்லாவி பகுதியில் பொதுமக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து பாரிய அளவிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று வெள்ளிக்கிழமை (16) காலை மேற்கொண்டிருந்தன. கனடா செல்ல தயாரான மல்லாவி யோகபுரம் பகுதியினைச் சேர்ந்த ஆனந்தராசன் சஜீவன் என்ற இளைஞன் கடந்த 29.07.2024 அன்று காணாமல் போன நிலையில் மல்லாவி வவுனிக்குளம் பகுதியிலிருந்து மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார். 19 நாட்களாகியும் குறித்த இளைஞனின் மரணத்திற்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், பொலிஸாரின் விசாரணைகள் மந்தகதியில் நடப்பதாக கூறியும், துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கூறியே பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களினால் இன்றையதினம் குறித்த போராட்டம் முன்னேடுக்கப்பட்டிருந்தது. மல்லாவி மத்திய பஸ் நிலையத்தில் ஆரம்பமாகிய பேரணி மல்லாவி போலிஸ் நிலையம் வரை சென்றிருந்தது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒன்று கூடி, "சசீவன் மரணத்திற்கு நீதி வேண்டும்" "கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்து" "விசாரணைகளை துரிதப்படுத்தி நீதியை பெற்று தா" "எமது நண்பனின் மரணத்திற்கு நீதி வேண்டும்" "வஞ்சகரின் சூழ்ச்சிக்கு முடிவில்லையா" "எமது பிள்ளைக்கு நீதி வேண்டும் " போன்ற எதிர்ப்பு சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் கோஷமிட்டனர். இதேவேளை, குறித்த போராட்த்திற்கு ஆதரவாக இன்றைய தினம் மல்லாவி பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்தமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மல்லாவி பொலிஸ் நிலையம் முன்பு ஒன்று கூடி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை, சம்பவ இடத்திற்கு வருகை தந்த மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இளைஞனின் படுகொலைக்கான நீதியினை தான் பெற்று தருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களிடம் தெரிவித்திருந்தார். குறித்த காலப்பகுதிக்குள் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தாவிடின் பாரியளவிலான போராட்டம் ஒன்றினை தாம் மேற்கொள்வோம் என்றும், சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினையும் தாம் முன்னெடுப்போம் என்றும் எச்சரித்து, பொலிஸ் பொறுப்பதிகாரியிடமும், வருகை தந்திருந்த பாராளுமன்ற அரசியல் பிரமுகர்களிடமும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இதேவேளை, குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/191246
  14. 16 AUG, 2024 | 05:44 PM வவுனியா, ஓமந்தை ஆறுமுகத்தான்குளம் பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்தார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (16) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றைய தினம் அதிகாலை தோட்டத்திற்கு சென்ற மகன் நீண்டநேரமாகியும் காணாதமையினால் அவரது தந்தை தேடியுள்ளார். இதன்போது காணியின் பின்புறத்தில் குறித்த இளைஞர் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த சம்பவத்தில் 21 வயதுடைய இளைஞரே மரணமடைந்துள்ளார். அவர் விலங்குகளுக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/191228
  15. பயணிகள் சேவை கப்பலானது சற்றுமுன் நாகையிலிருந்து காங்கேசன் துறையை வந்தடைந்தது! Published By: VISHNU 16 AUG, 2024 | 07:24 PM நாகபட்டினத்திலிருந்து காங்கேசன் துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் இந்தியாவின் - நாகபட்டினத்திலிருந்து நண்பகல் 12 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த பயணிகள் கப்பல் 5 மணியளவில் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையை வந்தடைந்தது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது. கடந்த 10 ஆம் திகதி சிவகங்கை பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் அன்று காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட சிவகங்கை பயணிகள் கப்பல், நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் பயணிகள் கப்பல் சேவையானது உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/191260
  16. படக்குறிப்பு, 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் ஒருவரின் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ராமநாதபுரம் அடுத்த பெரியபட்டினம் மரைக்காயர் நகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் துணி துவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஹீப்ரூ மொழிக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டதையடுத்து தொல்லியல் துறையினர் அதை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். அந்த கல்வெட்டு 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் ஒருவரின் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில், அக்கல்வெட்டு குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என பெரியபட்டினம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரத்தில் இருந்து 20கி.மீ., தொலைவில் உள்ளது பெரியபட்டினம் கடற்கரை கிராமம். பெரியபட்டினம் தமிழகத்தில் பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பகுதியில் சிறப்பு பெற்று விளங்கிய துறைமுகங்களில் ஒன்று. இங்கு தமிழ் மற்றும் அரபு மொழியில் எழுதப்பட்ட பழங்காலக் கல்வெட்டுகள் அடிக்கடி கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டின் வரலாறு மற்றும் பின்னணி என்ன? பவளப் பாறையால் ஆன கல்வெட்டு வரலாற்றில் முக்கிய துறைமுக வர்த்தக நகரமாக இருந்தது பெரியபட்டினம். அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மரைக்காயர் நகர் பகுதியைச் சேர்ந்த பாலு என்பவரின் தென்னந்தோப்பில் 80 செ.மீ நீளமும் 60 செ.மீ அகலமும் கொண்ட துணி துவைக்கும் கல்லில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்ததை அப்பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் ஹத்தீம் அலி என்பவர் கண்டுள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக இது குறித்து ஆராய முற்பட்டபோது அந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் அரபு அல்லது தமிழ் மொழியில் இல்லை என்பதால் அந்த கல்வெட்டு படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். அதனைப் பார்த்து துபாயில் பணியாற்றி வரும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஜக்ரியா என்பவர் இது குறித்த தகவல்களைச் சேகரித்த போது அந்த கல்வெட்டில் இருந்தது ஹீப்ரு மொழி என தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அந்த கல்வெட்டில் ஹீப்ரூ மொழியில் பொறிக்கப்பட்ட வார்த்தைகளை படித்துப் பார்த்ததில் ‘நிகி மிய்யா’ என்ற பெண்ணின் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு எனவும் அதில் செலூசிட் யுகம் (Shvat Seleucid era) 1536-37 என்றும், கிக்ரோபியன் காலண்டர் கிபி 1224-25 என குறிப்பிடப்பட்டுள்ளதாக முதல் தகவல் கிடைத்துள்ளது. மேலும் அந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த சில எழுத்துகள் சிதைந்து போய் உள்ளதால் முழுமையான தகவல்களைப் பெற முடியவில்லை. இருப்பினும் தற்போது கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் பெரியபட்டினம் பகுதியில் வாழ்ந்த ஒரு யூதப் பெண்மணியின் கல்லறையில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு என்பது மட்டும் தெரியவந்துள்ளது. கல்வெட்டைக் கைப்பற்றிய ராமநாதபுரம் தொல்லியல் துறை படக்குறிப்பு, நிலத்தின் உரிமையாளர் பாலு இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் தொல்லியல் துறை அதிகாரிகள் கீழக்கரை வருவாய் துறை அதிகாரிகளுடன் இணைந்து பெரியபட்டினம் அடுத்த மரைக்காயர் நகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பிற்கு சென்று நிலத்தின் உரிமையாளர் அனுமதியுடன் துணி துவைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த அந்தக் கல்வெட்டை பத்திரமாக ராமநாதபுரம் தொல்லியல் துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். அந்தக் கல்வெட்டில் ரசாயனம் தடவி சுத்தம் செய்து கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்தக் கல்வெட்டு, பவளப்பாறைகளால் ஆனது. இந்த வகை கல் ராமேஸ்வரம் அடுத்த பிசாசுமுனை மற்றும் இலங்கை கடல் பகுதிகளில் அதிகளவு இருக்கும் என்பதால், அங்கிருந்து கொண்டு வரப்பட்டதாக இருக்கும் என்கின்றனர் தொல்லியல் ஆர்வலர்கள். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நிலத்தின் உரிமையாளர் பாலு, “பல ஆண்டுகளாக இந்த தென்னந்தோப்பில் வசித்து வருகிறோம். இங்கு பெரிய கிணறு ஒன்று பல ஆண்டுகளாக இருந்தது. அந்த கிணற்றுக்கு அருகே இந்தக் கல் நீண்ட காலமாக இருந்தது. காலப்போக்கில் நீர் வற்றியதால் அதை மூடிவிட்டு இங்கு ஆழ்துளை கிணறு அமைத்து பயன்படுத்தி வருகிறோம். "கிணற்றுக்கு அருகே கிடந்த கல்லை துணி துவைக்கப் பயன்படுத்தி வந்தோம். ஆனால் அந்தக் கல்லில் பழங்கால எழுத்துக்கள் இருப்பதாகக் கூறி வருவாய்த்துறை அதிகாரிகள் கேட்டதால் அவர்களிடம் கல்லை ஒப்படைத்தேன்,” என்று கூறினார். ‘போர்ச்சுகீசியர்கள் வாணிபம் செய்ததற்கான சான்றுகள்’ படக்குறிப்பு, பெரியபட்டினத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் ரியாஸ் கான் பெரியபட்டினத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் ரியாஸ் கான் நம்மிடம் பேசுகையில், “பெரியபட்டினம் கடற்கரை கிராமத்தில் இருந்து போர்ச்சுகீசியர்கள் வாணிபம் செய்ததற்கான சான்றுகள் அதிகம் கிடைத்துள்ளன, பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்து வர்த்தகம் நடைபெற்றதற்கு ஆதாரமாக நாணயங்கள், கல்வெட்டுகள் கிடைத்த வண்ணம் உள்ளன,” என்கிறார். சமீபத்தில் கடற்கரையில் கிடைத்த பழங்காலக் கல் நங்கூரம் தற்போது பெரியபட்டினம் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், பெரியபட்டினம் பகுதியில் அகழாய்வு நடத்தினால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் கடல் வழி வர்த்தகம் செய்ததற்கான சான்று மற்றும் அருகில் உள்ள அழகன்குளம் இரண்டுக்குமான தொடர்பு குறித்து தெரிந்து கொள்ளலாம் என்று அவர் கூறுகிறார். ‘ஏமன் நாட்டு கல்வெட்டுகள் உடனான தொடர்பு’ படக்குறிப்பு,கேரள மாநிலத்தை சேர்ந்த ஜகாரியா பெரியபட்டினத்தில் கிடைத்த கல்வெட்டு ஹீப்ரு மொழியில் இருப்பதைக் கண்டறிந்த ஜகாரியா, அது குறித்து பிபிசி தமிழிடம் விரிவாக பேசினார். “நான் கேரள மாநிலத்தை சேர்ந்தவன். கடந்த பத்து ஆண்டுகள் துபாயில் வேலை செய்து வருகிறேன். சிறுவயதிலிருந்தே யூதர்கள் குறித்தும், ஹீப்ரு மொழி குறித்தும் கற்று கொள்வதில் தனி ஆர்வம் இருந்தது. என்னுடைய 11 வயதில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்த 11 யூதர்களிடம் ஹீப்ரு படிக்க கற்றுக் கொண்டேன்,” என்கிறார். அரபி மொழிக்கும் ஹீப்ரு மொழிக்கும், ஒற்றுமைகள் இருந்ததால் தன்னால் எளிதில் கற்று கொள்ள முடிந்தது என்றும், கல்லூரியில் யூதர்கள் குறித்து ஆய்வும் மேற்கொண்டதாகவும் கூறுகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட ஹீப்ரு மொழி கல்வெட்டு தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ட அவர், அது ஹீப்ரு மொழி தான் என்பதை உறுதிசெய்துள்ளார். “அந்த கல்வெட்டு இறந்தவர்கள் கல்லறையில் வைக்கப்படும் கல்வெட்டு என அதில் எழுதி இருந்த வார்த்தைகள் அடிப்படையில் தெரிந்து கொண்டேன். ஏமன் நாட்டில் இதே போன்ற கல்லறையில் வைக்கப்பட்டு இருந்த கல்வெட்டுகளை பார்த்துள்ளேன,” என்கிறார். பெரியபட்டினத்திற்கு நேரில் வந்து அந்த கல் குறித்து ஆய்வு செய்தபோது அது 1224-25 இடைப்பட்ட காலத்தில் வைக்கப்பட்டது என அதில் பொறிக்கப்பட்ட எழுத்துகளை வைத்து தெரிந்து கொண்டதாகவும் ஜகாரியா கூறுகிறார். “கல்வெட்டில் இருந்த முதல் மற்றும் இரண்டாவது வரியில் இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாக எழுதப்பட்டிருந்தது. மூன்றாவது வரியில் இறந்தவரின் பெயர் எழுதப்பட்டிருந்தது.” “ஆனால் அந்த வரிசையில் சில எழுத்துக்கள் சிதைந்திருந்ததால் கல்வெட்டில் இருந்த பெயர் என்னவென முழுமையாக கண்டறிய முடியவில்லை,” என்கிறார் ஜகாரியா. கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஆண் கல்லறையா அல்லது பெண் கல்லறையா என்பது மூன்றாவது வரியில் உள்ள சிதைந்த வார்த்தைகளை ஆய்வு செய்தால் தெரியவரும் என்றும், இதற்காக மீண்டும் அக்டோபர் மாதம் இந்தியா வரவிருப்பதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசுகையில், “கேரள மாநிலத்தில் ஹீப்ரூ மொழியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் 1269-ஆம் ஆண்டு என குறிப்பிடப்பட்டிருந்தது எனவே அடிப்படையில் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட மிகவும் பழமையான கல்வெட்டு கேரளாவில் உள்ளது என கூறப்படுகிறது. “இந்நிலையில் பெரியபட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு 1224-25 காலகட்டங்களில் எழுதப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டால் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள மிக பழமையான கல்வெட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் உள்ளது என்பது உறுதியாகும்,” என்கிறார் ஜகாரியா. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஹீப்ரு மொழி கல்வெட்டு இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை தலைவர் செல்வக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், “பெரியபட்டினம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ராமநாதபுரம் தொல்லியல் துறை அலுவலகத்தில் வைத்து பார்த்தேன். எனக்கு ஹீப்ரு மொழி தெரியாததால் அதை முழுமையாக என்னால் படிக்க முடியவில்லை. இருப்பினும் ஹீப்ரு மொழி தெரிந்த சில நிபுணர்களுக்கு அனுப்பி வாசிக்க சொல்லி உள்ளேன்,” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “பெரியபட்டினம் அருகே வாலாந்தரவை என்ற பகுதியில் யூதக் கல்வெட்டு ஒன்று சமீபத்தில் கிடைத்தது. தென்னிந்தியா முழுவதும் கொங்கன் கடற்கரையில் மேற்காசியாவில் இருந்து வந்த வணிகர்கள் வணிகம் செய்துள்ளனர்,” என்கிறார். “யூதர்கள் தமிழகத்தில் வணிகம் செய்தது போல் தமிழர்கள் சீனா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வணிகம் செய்துள்ளனர். தாய்லாந்தில் உள்ள ஒரு கல்வெட்டின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார். பிற மொழிகள் பேசிய, பிற சமயங்களைச் சேர்ந்த வணிகர்களை அஞ்சு வண்ணத்தார் என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறிய செல்வக்குமார், “பெரியபட்டினத்தில் இஸ்லாமிய சமயம், யூத சமயம், சைவம், வைணவம் உள்ளிட்டவற்றை பின்பற்றும் வணிகர்கள் வாழ்ந்ததற்கான சான்றும் கிடைத்துள்ளது,” என்று கூறினார். பெரியபட்டினத்தில் அகழாய்வு நடத்திய ஜப்பான் பேராசிரியர்கள் இதற்கு முன்னரும் பெரியபட்டினத்தில் பல அகழ்வாவுகள் நடந்துள்ளன. அவற்றில் பல முக்கியமான சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை சார்பில் 1987-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேராசிரியர் ஏ.சுப்பராயலு தலைமையில் பெரியபட்டினத்தில் அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர்கள் இணைந்து பெரியபட்டினத்தில் நடைபெற்ற அகழாய்வைப் பார்வையிட்டனர். கி.பி., பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று பெரியபட்டினத்தைப் 'பராக்கிரம பட்டினம்' என குறிப்பிடப்படுகிறது. மேலும் கி.பி., 11-ஆம் நூற்றாண்டில், பெரிய பட்டினம் ‘பவித்திர மாணிக்கபட்டினம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது என பெரிய பட்டினத்திற்கு அருகே உள்ள திருப்புல்லாணி கோவிலில் கி.பி 1225-ஆம் ஆண்டு உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. முத்து குளித்தலில் இப்பகுதி அக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்தது. சிறந்த துறைமுகமாகவும் இருந்த இப்பகுதி ‘பவித்திர மாணிக்கப்பட்டினம்’ எனப் பெயர் பெற்று, பின்னர் ‘பராக்கிரம பட்டினமாக’ மாற்றம் பெற்று, தற்போது பெரியபட்டினம் என அழைக்கப்படுகிறது. அகழாய்வில் என்ன கிடைத்தது? பெரியபட்டினத்தில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த சீன மண் கலங்கள், செப்புக் காசுகளில் பாண்டிய மன்னர்களின் பட்டப் பெயர்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள், மற்றும் மேற்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட சில பொன் நாணயங்கள் ராமநாதபுரம் தமிழ்நாடு தொல்லியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 1946-ஆம் ஆண்டு பெரியபட்டினத்தில் தாவீதின் மகள் மரியம் என்பவர் கல்லறையில் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கல்வெட்டில் 'ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனையும், அங்கு யூதக் கோவில் இருந்ததாகவும்' குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இந்தியாவின் முதல் யூதக் கோவில் பெரியபட்டினத்தில் இருந்தது என்பது அந்த கல்வெட்டு மூலம் தெரியவந்தது. அந்தக் கல்வெட்டு ராமநாதபுரம் வருவாய் துறையினர் வசம் உள்ளது. https://www.bbc.com/tamil/articles/c049722pz3do
  17. ரஷ்யாவில் (Russia) உக்ரைனின் (UKraine) ஊடுருவலானது, மூன்றாம் உலகப் போர் நெருங்கியுள்ளதை சுட்டிக்காட்டுவதாக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) கூட்டாளியுமான மிகைல் ஷெரெமெட் (Mikhail Sheremet) தெரிவித்துள்ளார். அண்மையில் ரஷ்யாவிற்குள் உக்ரைன் இராணுவம் ஊடுருவியது. அவசர நிலை உக்ரைனிய படைகளின் இந்த ஊடுருவல் காரணமாக கிட்டத்தட்ட 120000 இற்கும் மேற்பட்ட மக்கள் குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன் குறித்த பகுதியில் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், குர்ஸ்க் (Kursk) பிராந்தியத்தில் உள்ள சுட்ஜா (Sudzha) நகரை உக்ரைன் படைகள் ஆக்கிரமித்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், உக்ரைனின் இந்த நடவடிக்கைகள் மூன்றாம் உலகப் போருக்கு காரணமாக அமையும் என புடினின் கூட்டாளி மிகைல் ஷெரெமெட் எச்சரித்துள்ளார். உலகப் போருக்கான ஒத்திகை உக்ரைனின் இந்த நடவடிக்கைகளின் போது, தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்ய மண்ணில் பிரித்தானிய, அமெரிக்கா ஆயுதங்களை பயன்படுத்துவது, ரஷ்ய பொதுமக்கள் மீதும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது, தாக்குதலில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பு என்பன அதற்கு மறுக்க முடியாத ஆதாரம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவை நிச்சயமாக மூன்றாம் உலகப் போருக்கான ஒத்திகை என்றே மிகைல் ஷெரெமெட் கொந்தளித்துள்ளதுடன் ரஷ்யா மீதான தாக்குதலுக்கு NATO உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்திருக்கு எனவும் அவர் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/ukraine-s-invasion-of-russia-is-world-war-iii-1723806264
  18. Published By: VISHNU 16 AUG, 2024 | 06:45 PM (நெவில் அன்தனி) அயர்லாந்துக்கு எதிராக பெல்ஃபாஸ்டில் நடைபெற்றுவரும் முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 19 வயதை நெருங்கும் பருவமங்கை விஷ்மி குணரட்ன, கன்னிச் சதம் குவித்து வரலாறு படைத்தார். இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்தவுக்குப் பின்னர் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் குவித்த இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை விஷ்மி குணரட்ன பெற்றுக்கொண்டார். எதிர்வரும் வியாழக்கிழமை 22ஆம் திகதி தனது 19ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள விஷ்மி குணரட்ன, இன்றைய போட்டியின் ஆரம்பத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்த போதிலும் நேரஞ்செல்ல செல்ல திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதத்தைப் பெற்றார். வழமையான அணித் தலைவி சமரி அத்தபத்து தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தபோதிலும் மறுபக்கத்தில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரட்ன, 97 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால், சதத்தைப் பூர்த்தி செய்த சூட்டோடு விஷ்மி குணரட்ன ஆட்டம் இழந்தார். ஹாசினி பெரேராவுடன் 3ஆவது விக்கெட்டில் விஷ்மி குணரட்ன 122 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தபத்து மாத்திரமே இதற்கு முன்னர் சதம் குவித்திருந்தார். அவர் இதுவரை 9 சதங்களைக் கவித்துள்ளார். இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை, சற்று நேரத்துக்கு முன்னர் 44 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. https://www.virakesari.lk/article/191259
  19. உக்ரைன் படையினரிடம் சிக்கிய இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்கள் ரஷ்யப் (Russia) போருக்குச் சென்ற ஓய்வுபெற்ற இலங்கை (Sri lanka) இராணுவத்தினர் 05 பேர் உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் உக்ரைன் (Ukraine) அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தலை துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நபர்கள் ரஷ்ய எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்த போது உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. தேவையான நடவடிக்கை இது தொடர்பில், சம்பந்தப்பட்ட இலங்கையர்களின் உறவினர்களுக்கு அறிவிக்கவும் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 5 இலங்கையர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. https://ibctamil.com/article/05-sri-lankan-soldiers-arrested-by-ukrain-1723809234
  20. தாய்லாந்தில் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட 37 வயது இளம் பெண் தாய்லாந்தின் (Thailand) புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். முன்னாள் தாய்லாந்து பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் (Thaksin Shinawatra) மகளான 37 வயது பேடோங்டார்ன் ஃபியூ தாய் கட்சியின் தலைவர் ஆவர். இந்நிலையில், அவர் புதிய அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பார் என்றும் அதனைத் தொடர்ந்து, தற்போதைய அமைச்சர்கள் பதவி விலகுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமராகப் பதவி இதற்கு முன்பு அக்கட்சியைச் சேர்ந்த ஸ்ரெத்தா தவிசின் தாய்லாந்தின் பிரதமராகப் பதவி வகித்தார். சிறைக்கு அனுப்பப்பட்ட முன்னாள் வழக்கறிஞர் ஒருவருக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் காரணமாக அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பிரதமர் பதவி ஏற்று ஓராண்டுகூட ஆகாத நிலையில் ஸ்‌ரெத்தா தமது பதவியை இழந்தார். இதை அடுத்து பேடோங்டார்ன் ஷினவத்ரா தாய்லாந்து அடுத்த பிரதமராகப் பதவி ஏற்க இருக்கிறார். பேடோங்டார்ன் ஷினவத்ராவின் அத்தையான யிங்லக் ஷினவத்ராவும் தாய்லாந்தின் பிரதமராகப் பதவி வகித்தவர். https://ibctamil.com/article/paetongtarn-thailand-youngest-prime-minister-1723789541 ஏனண்ணை பயப்பிடுகிறீங்க?! பக்கத்தில வூட்டுக்காறம்மாவா?
  21. 16 AUG, 2024 | 01:59 PM புதுடெல்லி: காணாமல் போன உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த செவிலியர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அவரது உடல் புதருக்குள் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மேலும், அவர் வசம் இருந்த பணம் மற்றும் செல்போனை குற்றவாளி எடுத்துச் சென்றுள்ளார். காணாமல் போன செவிலியர் குறித்து அவரது சகோதரி கடந்த மாதம் 31-ம் தேதி உத்தராகண்ட் மாநிலம் ருத்ராபூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில், அவரது உடல் அழுகிய நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்து நெரிக்கப்பட்டு செவிலியர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உடற்கூறு ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. கொலை செய்யப்பட்ட செவிலியர் கடந்த 30-ம் தேதி பணிக்கு சென்று திரும்பியுள்ளார். இதனை போலீஸார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். அவர் ருத்ராபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். செவிலியரின் மொபைல் எண்ணை அடிப்படையாக கொண்டு காவல் துறையினர் தங்களது தேடுதலை தொடங்கியுள்ளனர். சிசிடிவி காட்சிகளையும் கூடுதலாக ஆய்வு செய்தனர். குற்றம் நடந்த நாளன்று செவிலியரை சந்தேகப்படும் வகையிலான நபர் ஒருவர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். அவரை பிடிக்க உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் என போலீஸார் சென்றுள்ளனர். இறுதியாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பதுங்கி இருந்த அவரையும், அவரது மனைவியையும் கைது செய்துள்ளனர். அவர் பெயர் தர்மேந்திரா என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் தர்மேந்திரா குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். தனியாக சென்ற செவிலியரை அவர் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ளார். மேலும், அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் மொபைல் போனை எடுத்து சென்றுள்ளார். குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/191219
  22. பாகிஸ்தானில் குரங்கம்மை பாதிப்பு Published By: DIGITAL DESK 3 16 AUG, 2024 | 02:19 PM பாகிஸ்தானில் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சுகாதாரத் திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு பயணம் மேற்கொண்டு விட்டு பாகிஸ்தானுக்கு திரும்பியவர்களில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் எந்த மாறுபாடு கொண்ட வைரஸ் கண்டறியப்பட்டது என்பது தெரியவில்லை. அவர்களில் இருவருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நோயாளியின் மாதிரிகள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்திற்கு உறுதிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்டுள்ளன. மேலும், மூன்று நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என கைபர் பக்துன்க்வாவிற்கான சுகாதார சேவைகளின் பணிப்பாளர் சலீம் கான் தெரிவித்துள்ளார். ஆனால், பாகிஸ்தானில் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒரு நோயாளி மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனம் குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/191211
  23. ரஷ்யாவுக்கு உள்ளே ராணுவ அலுவலகத்தை அமைத்த யுக்ரேன், குடியிருப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பு - என்ன நடக்கிறது எல்லையில்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவின் எல்லைக்குள் ஊடுருவிய யுக்ரேன் கட்டுரை தகவல் எழுதியவர், இயன் ஐக்மேன், ஜோனத்தன் பீலே பதவி, பிபிசி செய்திகள் & பாதுகாப்புத்துறை செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவில் தன்னுடைய ஊடுருவலை யுக்ரேன் ராணுவத்தினர் தொடரும் சூழலில் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் ராணுவ நிர்வாக மையத்தை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் யுக்ரேனின் மூத்த ராணுவ தளபதி. அந்த பிராந்தியத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டவும் அங்குள்ள மக்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது என்று ராணுவ தளபதி ஒலெக்ஸாண்டர் சிர்ஸ்கி தெரிவித்தார். யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் ராணுவ தளபதி சிர்ஸ்கி, "யுக்ரேன் கட்டுப்பாட்டில் உள்ள ரஷ்ய பிராந்தியத்தில் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது," என்று கூறுவதை சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில் காண முடிந்தது. அந்த பிராந்தியத்தில் உள்ள மக்களை "பாதுகாக்க" ரஷ்யா தன்னுடைய படைகளை அனுப்பும் என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்த்ரேய் பெலவ்சோவ் கூறியுள்ளார். அமைதியை நிலை நாட்டவே இந்த படையெடுப்பு - யுக்ரேன் வியாழக்கிழமை அன்று, யுக்ரேனிய படை ரஷ்ய பிராந்தியத்தில் முன்னேறி வருவதாக யுக்ரேன் ராணுவம் அறிவித்தது. குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேனிய துருப்புகள் 35 கிலோமீட்டர் தூரம் வரை உள்ளே சென்றுள்ளனர் என்றும் 82 குடியிருப்பு பகுதிகள் உட்பட 1,150 சதுர கிலோ மீட்டர் பரப்பை ஆக்கிரமித்துள்ளனர் என்றும் தளபதி சிர்ஸ்கி கூறுகிறார். 2022ம் ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்புக்கு பிறகு, கடந்த 10 நாட்களாக யுக்ரேனிய படைகள் ரஷ்யாவில் முன்னேறி வருகிறது. ஆனால் யுக்ரேன் இது குறித்து பேசும் போது, ரஷ்ய பிராந்தியத்தை ஆக்கிரமிக்க ஆர்வம் ஏதும் காட்டவில்லை என்கிறது. ஆகஸ்ட் 14ம் தேதி அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய யுக்ரேனின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளார் ஹெயோரி துகேய், இந்த பதில் தாக்குதல் அமைதியை நிலைநாட்ட ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான முயற்சியாகும் என்றார். ரஷ்யா கூறுவது என்ன? யுக்ரேன் ஊடுருவிய பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் அங்குள்ள உள்கட்டமைப்பை பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் ரஷ்ய அதிகாரிகள். ரஷ்ய பாதுகாப்பு துறையின் டெலிகிராம் சேனலில் வெளியான வீடியோ ஒன்றின் படி, குர்ஸ்க் பிராந்தியத்திற்கு அருகே உள்ள பெல்கோரோட் பிராந்தியத்தில் உள்ள துருப்புகளை சரியாக நிர்வகிப்பது போன்ற நடவடிக்கைகளும் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக உள்ளது. பெல்கோரோட் மட்டுமின்றி யுக்ரேனின் எல்லையில் அமைந்துள்ள குர்ஸ்க் மற்றும் ப்ரையான்ஸ்க் பிராந்தியத்திலும் இதே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இண்டெர்ஃபாக்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. பெல்கோரோட் பிராந்தியத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது ரஷ்யா. திங்கள் கிழமை அன்று 11 ஆயிரம் நபர்கள் அந்த பிராந்தியத்தில் அமைந்திருக்கும் க்ரஸ்னயா யருகா பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது ரஷ்யாவின் அரசு ஊடகமான டாஸ். இதற்கு மத்தியில், யுக்ரேன் ஆக்கிரமித்த சில பகுதிகளை ரஷ்யா மீட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள க்ருபெட்ஸ் குடியிருப்பை மீட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,யுக்ரேனின் ஊடுருவல் குறித்து ஆலோசிக்கும் ரஷ்ய பாதுகாப்புதுறை உயர்மட்ட குழுவினர் பிரிட்டனின் ஆயுதங்களை பயன்படுத்தும் யுக்ரேன் யுக்ரேனுக்கு பிரிட்டன் வழங்கிய பீரங்கி வாகனங்களை யுக்ரேன் இந்த ஊடுருவலுக்கு பயன்படுத்தியுள்ளதை பிபிசியிடம் பிரிட்டன் உறுதி செய்தது. பிரிட்டனின் பாதுகாப்பு துறை அமைச்சகம், பிரிட்டனின் எந்த போர் ஆயுதம் யுக்ரேன் படையால் பயன்படுத்தப்பட்டது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், "ரஷ்யாவின் சட்டத்திற்கு புறம்பான தாக்குதலுக்கு எதிராக தங்களை தற்காத்து கொள்ள," பிரிட்டன் வழங்கிய ராணுவ ஆயுதங்களை பயன்படுத்திக் கொள்ள யுக்ரேனுக்கு முழுமையான உரிமை உள்ளது என்று கூறியது பாதுகாப்பு அமைச்சகம். யுக்ரேனுக்கு நவீன போர் ஆயுதங்களை வழங்கிய முதன்மையான நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. 14-சேலஞ்சர் வகை பீரங்கி வண்டிகள் இரண்டை கடந்த ஆண்டு பிரிட்டன் யுக்ரேனுக்கு வழங்கியது. ஆனால் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள தங்களின் பகுதிகளை மீட்கவே இவைகள் வழங்கப்பட்டன. இந்த கொள்கையில் மாற்றம் ஏதும் இல்லை என்று பிரிட்டனின் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. வங்கதேசத்தில் இந்துக்களின், சிறுபான்மையினரின் நிலைமை என்ன?- பிபிசியின் கள ஆய்வு8 மணி நேரங்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்ற பெண்களை தங்கள் முன்னாள் கணவரிடம் அனுப்பும் தாலிபன்கள்- காரணம் என்ன?15 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,FACEBOOK / VOLODYMYR ZELENSKY படக்குறிப்பு,யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா மற்றும் ஜெர்மனி வழங்கிய ஆயுதங்களையும் இந்த ஊடுருவலின் போது யுக்ரேன் பயன்படுத்தியுள்ளது. ஆனால் எந்த நாடுகளும், ரஷ்யா மீது படையெடுக்க இந்த ஆயுதங்களை பயன்படுத்தியதற்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை. இந்த படையெடுப்பு ரகசியமாக நடத்தப்பட்டிருக்கின்ற நிலையில், யுக்ரேனின் நடவடிக்கை குறித்து முன்கூட்டியே சில நாடுகளுக்கு தெரிந்திருக்கலாம். அடுத்து என்ன நடக்கும் என்று மேற்கத்திய நாடுகள் கவலையுடன் இருக்கின்றன. யுக்ரைன் கணிசமான இழப்புகளைச் சந்தித்து, இன்னும் ஆயுதங்களை அதிகமாகக் கேட்டு மீண்டும் வருவது மட்டுமின்றி, இதற்கு ரஷ்யா எப்படி பதிலளிக்கும் என்ற வகையிலும் சிலர் இந்த சூழலைக் கண்டு வருத்தம் அடைந்துள்ளனர். தங்களுடைய பிராந்தியத்தில் நடைபெற்ற தாக்குதலின் பின்னணியில் மேற்கத்திய நாடுகள் இருக்கின்றன என்று ஏற்கனவே ரஷ்யா குற்றம் சாட்டுகிறது. உண்மை என்னவென்றால், இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களாக மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களை களத்தில் பார்க்க முடிகிறது. அணு ஆயுதங்களை கொண்ட நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்தல் என்பது எப்போதும் கவலைக்குரியதாக இருக்கும். மேலும் ரஷ்யா எப்போதாவது தனது அணு ஆயுதத்தை காட்டி பயமுறுத்தலில் ஈடுபடுவது குறித்து கவலைப்படப்போவதில்லை. மேற்கத்திய நாடுகள், யுக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது என்று ரஷ்யா எச்சரித்தது. ஆனால் அந்த எச்சரிக்கை முழுவதுமாக கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் தற்போது வரை ஒரு தடை மட்டும் தொடர்கிறது. தொலைதூரத்தை இலக்காக கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்த எந்த ஒரு மேற்கத்திய நாடும் யுக்ரேனுக்கு பச்சைக் கொடியை அசைக்கவில்லை. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த ஆயுதங்களையும் வழங்கியுள்ளது. ஆனால் அது, 2014ம் ஆண்டு சட்டத்திற்கு புறமாக ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட க்ரிமியா உள்ளிட்ட பிராந்தியம் உட்பட யுக்ரேனுக்குள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவை வழங்கப்பட்டன. அந்த நிபந்தனையை நீக்க வேண்டும் என்று யுக்ரேன் அதிபர் வேண்டுகோளை முன்வைத்தார். https://www.bbc.com/tamil/articles/c1l5md737gjo
  24. கண்ணு வைக்காதீங்க! இப்ப தான் பதவியேற்றிருக்கிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.