Everything posted by ஏராளன்
-
ஈரானின் துணை ஜனாதிபதி பதவி விலகினார்
சமீபத்தில் ஈரானின் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜாவித் ஜாஃப்ரி திடீரென ராஜினாமா செய்துள்ளதால் ஈரான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜானிலிருந்து கடந்த ஜூன் 19 ஆம் தேதி மலைப்பகுதியில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார். அதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூன் 28 இல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின்படி மசூத் பிசிஷ்கியானுக்கு 1.04 கோடி வாக்குகள் கிடைத்த நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஈரானின் துணை ஜனாதிபதியாக ஜாவித் ஜாஃப்ரி பதவியேற்றார். ஈரானின் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக, 86 நாடுகளைச் சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள், ராணுவ தளபதிகள் மற்றும் தலைவர்கள் டெஹ்ரானுக்கு வந்திருந்தனர். நகர் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியேவும் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பின் அவர் டெஹ்ரானில் வழக்கமாக தங்கும் விடுதிக்கு திரும்பினார். ஜூலை 31ம் தேதி, அவர் தங்கியிருந்த அறையில் இருந்து பலத்த வெடி சத்தம் கேட்டது. ஈரான் படையினர் சென்று பார்த்த போது இஸ்மாயில் ஹனியேவும், அவரது பாதுகாவலரும் இறந்து கிடந்தனர். இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட விவகாரம் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்களது நாட்டில் வைத்து இஸ்ரேல் இஸ்மாயில் ஹனியேவை கொலை செய்துள்ளதால் தக்க பதிலடி தரப்படும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து லெபனான், ஈராக் மற்றும் ஈரான் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் ஈரானின் துணை அதிபரான ஜாவித் ஜாஃப்ரி திடீரென ராஜினாமா செய்வதாக தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் தான் முன்மொழிந்த 19 உறுப்பினர்களை கொண்ட புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பாக அதிருப்தி அடைந்து, ராஜினாமா செய்ததாக அரசியல் வட்டாரஙக்ள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/307790
-
யாழ். சேந்தாங்குளத்தில் மோதல்; வாடிகள், படகுகளுக்கு தீ வைப்பு
Published By: DIGITAL DESK 3 14 AUG, 2024 | 02:02 PM யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் 03 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) இரவு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதை அடுத்து, கடற்கரையில் இருந்த மீன் வாடி மற்றும் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அதில் வாடிகள் சில எரிந்த நிலையில், மூன்று படகுகள் தீக்கிரையாகியுள்ளன. படகுகள் மற்றும் வாடிகளுக்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து, ஊரவர்கள் ஒன்று கூடி, தீயினை அனைத்ததுடன், சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவித்தனர். மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் தப்பி சென்றுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/191082
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ரஷ்யாவில் ஆக்கிரமிப்பு-யுக்ரேனிய படை செய்தது என்ன? எச்சரிக்கும் புதின் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ரஷ்ய எல்லைப் பகுதியில் இருந்து ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை தற்போது ஆக்கிரமித்துள்ளது யுக்ரேனிய படை கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ் பதவி, பிபிசி செய்திகள், சுமி பிராந்தியம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆங்கில எழுத்து Z யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை குறிப்பிடும் முத்திரையாக பார்க்கப்படலாம். அதே வேளையில், முக்கோண வடிவம் யுக்ரேனின் மிக துணிச்சலான பதிலடியை பிரதிபலிக்கிறது. சுமி பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய எல்லைப் பகுதியை நோக்கி செல்லும் ஒவ்வொரு சரக்கு வாகனம், ராணுவ சண்டை வாகனம்(டேங்க்) அல்லது தனிநபர் வாகனங்களின் இரு பக்கங்களிலும் முக்கோணங்களை வரைந்தோ அல்லது ஒட்டியோ வைத்துள்ளனர் யுக்ரேனியர்கள். குர்ஸ்க் எல்லைப் பிராந்தியத்தின் ரஷ்ய பொறுப்பு அதிகாரி, அந்த பிராந்தியத்தில் உள்ள 28 பகுதிகள் யுக்ரேனியர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், 2 லட்சம் ரஷ்யர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். யுக்ரேனின் இந்த எல்லை தாண்டிய படையெடுப்பு பணியில் இருந்து திரும்பி வந்த தோமாஷ், இந்த படையெடுப்பு பரபரப்பற்றதாக இருந்தது என கூறுகிறார். அவர்களின் டிரோன் பிரிவு, இரண்டு நாட்கள் செலவழித்து, இந்த எல்லை தாண்டிய ஊடுருவலுக்கு வழி வகுத்து. "நாங்கள் இங்கே வரவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் எதற்காக என்று எங்களுக்கு அப்போது தெரியவில்லை," என்று கூறுகிறார் தோமாஷ். காபி குடிப்பதற்காக ஒரு பெட்ரோல் பங்கில் நின்ற தோமாஷுக்கு இந்த உத்தரவு வந்துள்ளது. நாங்கள் எதிரிகளின் (ரஷ்யர்களின்) அனைத்துவிதமான தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை முறியடித்து இந்த படையெடுப்புக்கு அனைத்தையும் சரி செய்து கொடுத்தோம் என்கிறார் தோமாஷ். யுக்ரேனிய படை எவ்வளவு தூரம் ரஷ்ய பகுதியை ஆக்கிரமித்துள்ளது என்று தெரியவில்லை. இருப்பினும் ராணுவ தளபதி ஒலக்ஸாண்டர் சிர்ஸ்கி, கிட்டத்தட்ட ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு தற்போது யுக்ரேனியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று குறிப்பிட்டார். மேற்கொண்டு யுக்ரேனிய படைகள் ரஷ்யாவுக்குள் ஊடுருவ மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுவிட்டதாக செவ்வாய்கிழமையன்று ரஷ்ய பாதுகாப்பு துறை தெரிவித்தது. ஆனால் அவர்கள் கூறுவது தவறு என்று முன்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. உண்மை என்னவோ, யுக்ரேன் இந்த ராணுவ முயற்சியில் உறுதியாக உள்ளது. 2022ம் ஆண்டு ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, சுமி பிராந்தியத்தின் அண்டை பகுதியில் நான் பார்த்திராத பல நடவடிக்கைகள் இப்போது நடைபெற்று வருகிறது. கடந்த 18 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் இது வரவேற்கதக்க ஒன்று. ஆனால் இது வெற்றியா அல்லது தோல்வியா என்பதை முன்கூட்டியே கூறிவிட இயலாது. இந்த ராணுவ தாக்குதலின் இலக்கு என்னவென்று இன்னும் தெளிவாக இல்லை. இருப்பினும் யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா எங்கிருந்தெல்லாம் தாக்குதல் நடத்துமோ அந்த பகுதியை இலக்காக கொண்டு முன்னேறுவது, ''அமைதிக்கு'' அருகில் இட்டுச்செல்லும் என கூறினார். யுக்ரேன் தன்னுடைய தலைசிறந்த ராணுவ துருப்புகளை இந்த பணிக்காக களம் இறக்கியுள்ளது வெளிப்படையாக தெரிகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,பீரங்கி வண்டி மீது அமர்ந்திருக்கும் யுக்ரேனிய வீரர்கள் முன்னேறும் யுக்ரேனிய படையினர் உடற்பயிற்சி செய்து நன்றாக தோற்றமளிக்கும் வீரர்கள் அவர்களுக்கு ஏற்ற வகையிலான வாகனங்களில் வலம் வருகின்றனர். சிலர் ஊடகங்களிடம் பேச மறுக்கின்றனர். சிலர் மிகவும் சோர்வுற்று இருக்கின்றனர். டெலிகிராம் செயலி மூலம், ரஷ்யாவில் இருக்கும் யுக்ரேன் வீரர் பேசிய போது, யுக்ரேனின் எல்லைப்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் ரஷ்ய துருப்புகளை வெளியேற்ற அந்நாட்டை கட்டாயப்படுத்த மாதக் கணக்கில் திட்டமிடப்பட்டதைப் பற்றி தெரிவிக்கிறார். "ஆச்சரியமாக இது நிறைவேறிவிட்டது. குறைவான எதிர்ப்புகளுடன் நாங்கள் ரஷ்யாவுக்குள் நுழைந்தோம். ஆகஸ்ட் 6ம் தேதி இரவு, முதல் குழுக்கள் பல்வேறு இடங்களில் ரஷ்யாவின் எல்லைக்குள் நுழைந்தன," என்று கூறினார் அவர். "அவர்கள் உள்ளே நுழைந்ததும், சுத்ஸா நகரின் மேற்கு புற நகர் பகுதியை அடைந்தனர்," என்றும் அவர் தெரிவித்தார். படக்குறிப்பு,ரஷ்ய எல்லையில் ஊடுருவிய யுக்ரேனிய படை ரஷ்யா கூறுவது என்ன? இது போன்ற நடவடிக்கைகளில் ராணுவத்தினர் ரகசியத்தை பாதுகாக்கின்றனர். ஆனால் பொதுமக்களும் அப்படி இருப்பார்கள் என்று கூறிவிட இயலாது. வான்வழி தாக்குதல் மற்றும் போர் மூண்ட பிறகு, எல்லையின் இரண்டு பகுதிகளிலும் ஆயிரக் கணக்கான மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். "நாங்கள் பார்க்கும் ரஷ்ய மக்கள் எங்களை எதிர்ப்பதில்லை," என்று தெரிவிக்கும் யுக்ரேனிய வீரர், "நாங்கள் அவர்களை தாக்குவதில்லை. ஆனால் அவர்கள் எங்களை எதிர்மறையாக அணுகுகின்றனர் அல்லது கோபத்துடன் நடத்துகின்றனர். அல்லது எதுவும் சொல்லாமல் கடந்துவிடுகின்றனர்," என்று குறிப்பிட்டார். ரஷ்ய துருப்புகள் தொடர்பாக அவர்கள் எங்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார். கார்கிவ், போக்ரோவ்ஸ்க் மற்றும் தொரேத்ஸ்க் போன்ற கிழக்கு எல்லைப் பகுதிகளில் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதை உறுதி செய்வதற்காக நாங்கள் சில யுக்ரேனிய வீரர்களிடம் பேசினோம். ஆனால் ரஷ்ய படை மெதுவாக முன்னேறி வருவது குறித்து அவர்கள் எதுவும் நம்மிடம் தெரிவிக்கவில்லை. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ரஷ்யாவில் நடைபெற்றிருக்கும் முதல் ஆக்கிரமிப்புக்கு 'சரியான பதிலடி' தரப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். 'நான்கு அண்டை நாடுகளில் இந்திய எதிர்ப்பு அரசுகள்': இந்தியாவிடமிருந்து அண்டை நாடுகள் விலகிச் செல்கின்றனவா-காரணம் என்ன?7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,எல்லைப் பகுதியில் இருந்து வெளியேறும் ரஷ்ய மக்கள் எல்லையோர பகுதிகளில் வசிக்கும் யுக்ரேனியர்கள் கருதுவது என்ன? அச்சுறுத்தலை ஏற்படுத்த கூறப்பட்ட அவரின் வார்த்தைகள், தொடர்ச்சியாக ரஷ்ய ராணுவப்படைகளின் தாக்குதலுக்கு ஆளான, எல்லையோர பகுதிகளை இன்னும் சென்று சேரவில்லை. ஸ்தெத்ஸ்கிவ்கா என்ற கிராமத்தில், மிஷாவும் அவருடைய நண்பர் வலேராவும் எங்களை தாண்டி அவர்களின் ஆரஞ்ச் நிற காரில் சென்றனர் "அவர்கள் இதனை (குர்ஸ்க் பிராந்தியத்தை) எடுத்துக் கொண்டு இப்படி செய்யட்டும்," என்று கைகளை முறுக்கிறார் மிஷா. "அவர்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளட்டும். மாஸ்கோவையும் கூட எடுத்துக் கொள்ளட்டும்," என்கிறார் அவர். 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், ரஷ்யாவின் முழு அளவு படையெடுப்பால் தொடர்ச்சியாக இன்னலுக்கு ஆளாகி வருவதால் ஏற்பட்ட கோபம் மக்களிடம் நங்கூரமிட்டுள்ளது. இந்திய சார்பு நிலையை வங்கதேசம் கைவிடுமா? அதானி உள்ளிட்ட நிறுவனங்களின் முதலீடு என்ன ஆகும்?13 ஆகஸ்ட் 2024 பிரிட்டனில் ஆசியர், கருப்பின மக்கள் மீது வெள்ளையினத்தவர் கோபம் ஏன்?13 ஆகஸ்ட் 2024 படக்குறிப்பு,மிஷாவைப் போன்ற பல யுக்ரேனியர்களும், தங்களின் படை குர்ஸ்க் பிராந்தியத்தை தாண்டியும் ரஷ்யாவுக்குள் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் "ரஷ்யா தான் முதலில் தாக்கியது. நாங்கள் இல்லை," என்கிறார் வலேரா. "தற்போது எங்களின் ராணுவத்தினர் அதற்கு பதலடி கொடுத்து அவர்களால் என்ன முடியும் என்பதை காட்டியுள்ளனர். எங்களுக்கு மட்டும் அனுமதி கிடைத்திருந்தால் நாங்கள் இப்பகுதியை முன்கூட்டியே ஆக்கிரமித்திருப்போம்," என்று தெரிவித்தார் அவர். எல்லை தாண்டிய தாக்குதலுக்காக காத்துக் கொண்டிருந்த யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் பச்சைக் கொடி காட்டியிருப்பது போல் தெரிகிறது. சுமியின் புறநகர் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரை பார்த்தால் அச்சுறுத்தல்கள் இன்னும் அதிகமாகவே இருக்கின்றன. கடந்த வாரம் வரை, ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளாவதற்கான அச்சம் யுக்ரேனின் வடக்கு பகுதியில் நிலவி வந்தது. தற்போது யுக்ரேனின் இந்த படையெடுப்பு தோல்வி அடைந்தால், அந்த அச்சம் உடனே உறுதியாகிவிடும். யுக்ரேன் படை வீரர்களின் எண்ணிக்கை முன்பும் இப்போதும் ரஷ்ய படைவீரர்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. இந்த பதில் தாக்குதலின் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தையில் தன்னுடைய இடத்தை யுக்ரேன் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று யுக்ரேனியர்கள் பலர் நம்புகின்றனர். ஆனால் இந்த நடவடிக்கை பேச்சுவார்த்தையை மேலும் தாமதமாக்கவும் செய்யலாம். கூடுதல் செய்திகளுக்கா ஹன்னா க்ரோனஸ், சோஃபி வில்லியம்ஸ் மற்றும் அனஸ்தாசியா லெவ்சென்கோ https://www.bbc.com/tamil/articles/cd6y50d4y4zo
-
இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு
Published By: DIGITAL DESK 3 14 AUG, 2024 | 03:00 PM இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள் நிறைவடைவது தொடர்பாக கல்வி அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆகஸ்ட் 16ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. இதேவேளை, மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/191090
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று
வெளியே போடா - சிறு நரிகளின் செயல்பாடுகளால் மானமிழக்கும் தமிழரசு வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் போது தகாத வார்த்தை பிரயோகங்களால் கௌரவமிக்க உறுப்பினர்கள் அவமதிக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழரசு கட்சியின் இளைஞரணியின் யாழ் மாவட்ட செயலாளர் குணாளன் கருணாகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கும் கிழக்கும் இணைந்தது தான் தமிழர் தேசம். எமது அரசியல் பயணத்தில் உயர்ந்ததும் தாழ்ந்ததுமாய் எந்த ஒரு சிக்கல்களையும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில்தான் எமது வெற்றியின் அடிநாதமே தங்கியிருக்கின்றது. வடக்கு கிழக்கு என்ற இந்தப் பிரிவினையின் சூட்சுமத்தை பயன்படுத்திக் கொண்டுதான் தமிழ் தேசத்தின் விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை மறந்து செயல்படுவோமானால் ஒரு காலத்திலும் ஒட்ட முடியாத இடைவெளியை இணைக்க முடியாத அந்தங்களை ஏற்படுத்தி விடும் அபாயம் நமது கண்முன்னே தெரிகின்றது . நேற்று முன்தினம் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இதைத்தான் பறைசாற்றுகின்றது. சங்கையில்லாத சிறு நரிகளின் ஒழுக்கம் இல்லாத நடத்தைகளால் நமக்கு அபாய மணி அடிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தமிழரசு கட்சியின் கௌரவ உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும் . இன்றளவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருவாரியான மக்களின் பெருமதிப்பை பெற்றிருக்கின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் , கல்வியலாளர் ஞா. ஸ்ரீநேசன் மீது பிரயோகிக்கப்பட்ட வெளியே போடா என்ற வார்த்தை பிரயோகம் அவ்வளவு இலகுவாக எடுத்துக்கொள்ளக் கூடிய ஒன்று அல்ல என்பதை தமிழரசு கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் புரிந்து கொள்ள வேண்டும் நாம் வெளிப்படையாக பேசுவோம் . இவ்வாறான கீழ்த்தரமான குழப்பத்தை விளைவித்தவர்கள் இரண்டு பேர் ஒன்று முல்லைத்தீவைச் சேர்ந்த அன்ரனி ஜெகநாதன் பீற்றர் மற்றவர் சாவகச்சேரியைச் சேர்ந்த கேசவன் சயந்தன். இவர்கள் இருவர் மீதும் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கட்சியின் தலைவரிடம் நான் கோரிக்கை விடுத்திருந்தேன் அதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதி அளித்திருந்தார். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் கட்சி வேறு ஒரு அபாயகரமான தளத்தை நோக்கி நகரும் என்பதை கண்முன்னாலே காண நேரிடும் இவர்கள் இருவர் மீதும் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுக்கக்கூடிய ஒரே ஒரு நபர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆப்ரஹாம் மதியாபரணம் சுமந்திரன் மட்டுமே. ஏனெனில் இவர்கள் இருவரும் சுமந்திரன் குரல்கள் ! சுமந்திரன் கதைக்க முடியாதவற்றை இவர்கள் இருவரையும் கொண்டுதான் கதைப்பார் . சுமந்திரன் சாதிக்க முடியாதவற்றை இவர்கள் இருவரைக் கொண்டுதான் சாதித்துக் கொள்வார் என்பது பொதுவாக தெரிந்த விடயம். ஏற்கனவே கட்சிக்குள்ளும், பொதுவெளியிலும் பல குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள கேசவன் சயந்தன் என்பவர் உடனடியாக கட்சியின் இருந்து நீக்கப்பட வேண்டும். அதேபோன்று தமிழரசு கட்சிக்கெதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து துரோகமிழைத்த அன்ரனி ஜெகநாதன் பீற்றர் மத்திய குழுவிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். ஏனெனில் பீற்றரின் மத்திய குழு நியமனம் என்பது யாப்புக்கு முரணானது, பீற்றரின் நெருங்கிய உறவினர் ஒருவர் கட்சியின் நிர்வாகப் பணிகளில் ஆதிக்கம் செலுத்திய காரணத்தினால் அவர் கட்சியில் 2018 ல் உறுப்பினராகி ஒரு வருடத்திற்குள் அதாவது 2019 ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பொதுச்சபை கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினராக்கப்பட்டிருக்கிறார். ஆனால் மத்திய குழுவுக்குள் ஒரு உறுப்பினர் உள்வாங்கப்பட வேண்டுமாக இருந்தால் தொடர்ச்சியாக அவர் இரண்டு வருடங்கள் அங்கத்துவத்தை வகித்திருக்க வேண்டும். ஆனால் அன்ரனி ஜெகநாதன் பீற்றர் என்பவர் ஒரு வருடத்திற்குள் உள்வாங்கப்பட்டது கட்சியின் யாப்பு விதிகளை மீறியதாகும். எனவே உடனடியாக இந்த விடயத்தில் கட்சி கவனம் செலுத்தி அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். நாகரீகம் அற்ற இத்தகைய நபர்களால் கட்சி தன்மானம் இழக்கிறது என்பதை கட்சித் தலைமை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மத்திய குழு உறுப்பினர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட நாகரீகம் அற்ற வார்த்தைகளுக்காக வன்மையான கண்டனங்களை பதிவு செய்வதோடு அவர்களிடம் மன்னிப்பும் கோருகின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/307847
-
பொது வேட்பாளரை நிறுத்திவிட்டு தென்னிலங்கை தலைவர்களை சந்திப்பது மக்களுக்கு செய்யும் துரோகம்
பொது வேட்பாளரை ஒருவரை முன்னிறுத்தியிருக்கும் நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் 13வது திருத்தச் சட்டம் பற்றி பேச்சு நடத்தியிருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், பொதுவேட்பாளர் என்பது என்னைப் பொறுத்தவரை திட்டமிட்ட நாடகம். பொதுவேட்பாளர்களை முன்னிறுத்திய சிவில் அமைப்புக்களும், கட்சி சார்ந்தவர்களும் கடந்த 15 வருடங்களாக ஓற்றையாட்சிக்குள் 13ம் திருத்தச் சட்டத்தை திணிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு முழுமையாக உறுதுணையாக செயற்பட்டவர்கள். குறிப்பாக விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் இந்தியாவின் கைக்கூலிகள். இவர்கள் கடந்த காலங்களில் 13 வது திருத்தச் சட்டத்தை தீர்வாக வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதங்களை அனுப்பியவர்கள். 13 ஆவது திருத்தச் சட்டத்தினை வலியுறுத்திய தரப்புக்கு விளைவுகள் ஏற்படாமல் இருப்பதற்கும், மக்கள் மத்தியிலிருந்து வேறுபடாமலிருப்பதற்காகவும் அவர்களை பேணி பாதுகாத்து தொடர்ந்தும் மக்களை அவர்களுடன் வைத்திருப்பதற்கான செய்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. பொது வேட்பாளர் என்ற ஒருவரை நிறுத்திவிட்டு நேற்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருக்கின்றனர். குறிப்பாக செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தனிற்கு விசேட நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனிற்கு யாழ் மாவட்டத்திற்குரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இவருடைய அடிமையாக இருக்கக்கூடியவரும் இந்தியாவின் கைக்கூலியாக இருக்கின்ற சுரேன் குருசாமி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியினை சார்ந்தவர்களும் குறித்த சந்திப்பிற்கு சென்றிருக்கிறார்கள். மேலும் இச்சந்திப்பின் போது 13-வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வாக்குறுதியினை பெற்றுக் கொண்டு வந்திருக்கின்றனர். இவர்கள் செய்தது பச்சை துரோகமான செயலாகும். இவர்கள் இந்தியாவின் நலனை பேணக்கூடிய நபர்களுக்கு வாக்குகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையிலும் தமிழர்கள் இந்த ஆட்சியாளர்களின் மீது அதிருப்தி அடைந்து, ஏமாற்று வேலையை புரிந்து கொண்டு தேர்தலைப் புறக்கணித்து தேர்தலில் ஒதுங்கி இருக்கின்ற நிலைமைக்கு சென்று விடக்கூடாது என்பதற்கான நாடகம் தான் பொது வேட்பாளர். தற்போது பொதுவேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அரியநேந்திரன் 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவிருந்து சம்மந்தர், சுமந்திரனோடு இணைந்து, குறிப்பாக சுமந்திரனின் அனைத்து துரோகமான செயற்பாடுகளுக்கும் முழுமையாகத் துணை நின்றவர். 2012 ஆம் ஆண்டு ஜெனிவா உள்ளக விசாரணையின் போது சுமந்திரனுடைய முழு துரோகமான செயற்பாடுகளுக்கும் துணை நின்றவர். மஹிந்த ராஜபக்ச, கோட்டபய ராஜபக்ச மற்றும் இராணுவ தளபதிகளிற்கு எதிராக சர்வதேச விசாரணை இடம்பெறாமல் தடுத்து உள்ளக விசாரணை என்ற போர்வையில் இலங்கையை மீட்டெடுக்கின்ற விடயங்களுக்கு அவர்களிற்கு முழுமையாக துணை நின்றார்கள்” என்றார். https://thinakkural.lk/article/307838
-
இஸ்ரேல் vs இரான்: மத்திய கிழக்கில் மிகப்பெரிய போர் மூளுமா? அமெரிக்கா என்ன சொல்கிறது?
"ஆக்கிரமிப்பாளனுக்கு தண்டனை வழங்குவது ஒருதேசத்தின் உரிமை" - இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்வதை நியாயப்படுத்தினார் ஈரான் ஜனாதிபதி Published By: RAJEEBAN 13 AUG, 2024 | 04:14 PM ஹமாஸ் தலைவரை கொலை செய்தமைக்காக இஸ்ரேலிற்கு எதிராக பதில் தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என ஈரான் சிந்திப்பது சரியான விடயம் என அந்த நாட்டின் ஜனாதிபதி மசூட் பெசெஸ்கியான் தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் பிரதமர் கெய்ர் ஸ்டாமெருடனான தொலைபேசி உரையாடலின் போது ஈரான் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்பாளனுக்கு தண்டனை வழங்குவது ஒருதேசத்தின் உரிமை என தெரிவித்துள்ள ஈரான் ஜனாதிபதி இவ்வாறான நடவடிக்கை குற்றங்களை ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கு தீர்வு எனவும் தெரிவித்துள்ளார். காசாவிலும் வேறு பகுதிகளிலும் இஸ்ரேலின் முன்னொருபோதும் இல்லாத மனிதாபிமான குற்றங்கள் குறித்த மேற்குலகின் மௌனம் பொறுப்புணர்வற்றது என தெரிவித்துள்ள ஈரான் ஜனாதிபதி இஸ்ரேலின் இந்த நடவடிக்கை பிராந்திய சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபடுவதற்கு தூண்டுகின்றது எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/191007
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
பெல்கொரொட் எல்லையில் அவசரநிலையை பிரகடனம் செய்தது ரஸ்யா - உள்ளே ஊருடுவிய உக்ரைன் படையினர் தொடர்ந்தும் தாக்குதல் Published By: RAJEEBAN 14 AUG, 2024 | 11:28 AM உக்ரைனிய படையினரின் புதிய தாக்குதல்களை தொடர்ந்து ரஸ்யா தனது பெல்கொரொட் எல்லை பிராந்தியத்தில் அவசரகால நிலைமையை அறிவித்துள்ளது. ரஸ்யாவிற்குள் ஊருடுவியுள்ள உக்ரைனிய படையினர் பல சதுர கிலோமீற்றரினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ள நிலையிலேயே பெல்கொரொட் எல்லையில் ரஸ்யா அவசரநிலைமையை பிரகடனம் செய்துள்ளது. பெல்கொரொட் பிராந்தியத்தில் நிலைமை தொடர்ந்தும் கடினமானதாக பதற்றமானதாக காணப்படுகின்றது என பெல்கொரொட் ஆளுநர் தெரிவித்துள்ளார். உக்ரைனிய படையினர் முன்னேறத் தொடங்கியதை தொடர்ந்து பெல்கிரொட்டின் எல்லைப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எதிர்பாரத விதத்தில் தனது தந்திரோபாயங்களில் மாற்றங்களை மேற்கொண்டுள்ள உக்ரைன் ரஸ்யாவிற்குள் ஊருடுவியுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ரஸ்யாவிற்குள் வேறுநாட்டு படையொன்றை நுழைந்துள்ளமை இதுவே முதல் தடவை. https://www.virakesari.lk/article/191061
-
2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் அரச சேவை சம்பளத்தில் திருத்தம்
13 AUG, 2024 | 09:13 PM (எம்.மனோசித்ரா) அரச சேவையில் சம்பளம் மற்றும் ஏனைய பணிக்கொடைகளை மீளாய்வு செய்து, அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தைத் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான விதந்துரைகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்துகையில், அதற்கிணங்க, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் உதய செனவிரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச துறையின் பிரதான தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளது. அத்தகவல்களைப் பகுப்பாய்வு செய்த பின்னர் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் விதந்துரைக்கப்பட்டுள்ள பின்வரும் முன்மொழிவுகளுக்குக் கொள்கை ரீதியாக அங்கீகாரம் வழங்குவதற்கும், குறித்த முன்மொழிவுகளை 2025ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கி அமுல்படுத்துவதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒட்டுமொத்த அரச சேவையிலுள்ள அனைத்துப் பதவிகளையும் நான்கு பிரதான மட்டங்களின் கீழ் வகைப்படுத்தி ஒவ்வொரு வகுதிக்கும் இலங்கைத் தராதர வழிகாட்டல் மற்றும் தேசிய தொழில் நிபுணத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உரிய தொழிலின் பணிப்பொறுப்புக்கள் மற்றும் விசேட தொழில்களுக்கான நிபுணத்துவத்துமுடைய ஊழியர்களைக் கவர்ந்திழுப்பதற்கும், தொழில்களைத் தக்கவைத்தலைக் கருத்தில் கொண்டு ஆட்சேர்ப்புத் தகைமைகளை வகைப்படுத்தல். ஆரம்பநிலை சேவை வகுதிகளுக்கும் ஆட்சேர்ப்புக்கான அடிப்படைத் தகைமைகளாக இலங்கை தராதர வழிகாட்டல், தேசிய தொழில் நிபுணத்துவத்தின் அடிப்படையில் சேவைத் தேவைகளுக்கேற்ப பொருத்தமான முறைமையைப் பின்பற்றுதல். ஏனைய அனைத்துச் சேவை வகுதிகளுக்கும் முறைமைப்படுத்தப்பட்;ட போட்டிப்பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சை முறை மூலமாக மட்டும் ஆட்சேர்ப்புச் செய்தல். அதற்கமைய, தகைமைக்கு ஏற்புடைய வகையில் தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு ஒழுங்கு விதிகளைத் துரிதமாகத் திருத்தம் செய்தல். 2025ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு சீராக்கல்கள் மற்றும் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள அனைத்துக் கொடுப்பனவுகளையும் ஒருங்கிணைத்து அனைத்து அரச ஊழியர்களுக்கும் (ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தம் செய்யும் அடிப்படையில்) வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக மாதாந்தம் 25,000 ரூபாவை வழங்கல். அரச சேவையின் ஆகக் குறைந்த ஆரம்ப மாதாந்தச் சம்பளத்தை ஆகக் குறைந்தது 24 வீதத்தால் அதிகரித்து வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுடன் மொத்தச் சம்பளமாக 55,000 ரூபா வரை அதிகரித்து ஏனைய அனைத்துப் பதவிகளுக்குமான அடிப்படைச் சம்பளத்தை அதற்கேற்புடைய வகையில் சீராக்கல். அரச வர்த்தகக் கம்பனிகள் வங்கிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இப்புதிய சம்பளம் மற்றும் கொடுப்பனவு முறையை நடைமுறைப்படுத்தல். 2030ஆம் ஆண்டாகும் போது அரச சேவையில் ஒட்டுமொத்த பணியாளர்களை பத்து இலட்சமாகவோ அல்லது அதற்குக் குறைவான மட்டத்திற்கு மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல். அதற்கமைய, 2025ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்த அரச சேவையை இயன்றவளவுக்கு டிஜிட்டல்மயப்படுத்தல் மற்றும் தன்னியக்க முறை மூலமான இலத்திரனியல் கட்டமைப்பு ரீதியான அரச நிர்வாக முறைமையை அறிமுகப்படுத்தல் மற்றும் அதற்கான அரச முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்குதல். அரச துறையிலுள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களும் உள்ளடங்கலாக ஆகக் குறைந்தது 1000 ரூபா மாதாந்தப் பங்களிப்புடன் மிகவும் கவர்ச்சிகரமான நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையிலான மருத்துவக் காப்புறுதி முறைமையை 2025 ஜனவரி மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தல். இயன்றவரை வெளியகச் சேவைகள் போன்ற முறைமைகள் மூலம் அரச செலவுகளின் சுமையைக் குறைக்கும் வகையில் உயர்வான வினைத்திறனான வகையில் நியம முறைமைகளைப் பின்பற்றி சேவைகளைப் பெறுதல். அடையாளம் காணப்பட்ட திணைக்களங்கள் அல்லது கூட்டுத்தாபனங்கள் அல்லது நியதிச்சபை நிறுவனங்களை பங்குச் சந்தையில் அட்டவணைப்படுத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனிகளாக மாற்றுவதற்கான மீள்கட்டமைப்பு செயற்திட்டத்தை அமுல்படுத்துதல். தகுந்த வேலை ஆய்வை மேற்கொண்டு, ஒட்டுமொத்த அரச துறை ஆளணியினர் மற்றும் சேவைகள் தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வை மேற்கொள்வதற்காக 2025 ஆண்டில் நடவடிக்கை எடுத்தல். அதற்கமைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் செயலாற்றுகை சுட்டிகளை தயாரித்து, அவற்றின் முன்னேற்றத்தின் அடிப்படையில் சம்பள உயர்வை வழங்கல். 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்றுள்ள அரச ஊழியர்களுக்கு உரித்தான சம்பள உயர்வை வழங்கி, அவர்களுடைய ஓய்வூதிய சம்பளத்தை திருத்தம் செய்து ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல். ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுகள், தற்போது சேவையிலுள்ள அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 50 வீதத்துக்கு சமமான வகையில் 2025 ஜனவரி மாதம் தொடக்கம் வழங்கல். தற்போது காணப்படுகின்ற வரிக் கொள்கையில் இச்செலவுகளை முகாமைத்துவத்தி, இச்சம்பள முறைமையை நடைமுறைப்படுத்தல் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள சம்பள முறைமையை 2025.01.01 தொடக்கம் அரச நிதி நிலைமைகளையும் கருத்தில் கொண்டு கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தல் என்பனவாகும். https://www.virakesari.lk/article/191009
-
முல்லைத்தீவு – செஞ்சோலை படுகொலை : 18ஆவது ஆண்டு நினைவேந்தல்
14 AUG, 2024 | 10:50 AM முல்லைத்தீவு - செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான நினைவேந்தல் இன்றைய தினம் (14) அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 2006.08.14 அன்று வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானத் தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் இன்றைய தினம் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் குகன், இளைஞர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/191050
-
கடவுளும் கண்ணனும்
கண்ணனின் தாய் அருந்ததி தனது மகன் கண்ணனைப் பற்றி மிகவும் துக்கப் பட்டுக் கொண்டிருக்கிறாள். இதுவரை அவன் ஒரு நல்ல தமிழ் இளைஞனாக இருந்ததாகவும், தற்போது பல கேள்விகளைக் கேட்டுத் தனது தமிழ் அடையாளத்தை அவன் தேடுவதாக அவளது பேதை மனம் துடிக்கிறது. அவனுடைய பேச்சைக் கேட்டு மகள் கருணாவும் ஏதோ கேட்கத் தொடங்கி விட்டாள். கண்ணனின் குடும்பம் தமிழ் அகதிகளாக லண்டனில் காலடி எடுத்து வைத்தவர்கள். “கடவுள் அருளால் இவ்வளவு நன்றாக இருக்கிறோம். நீங்களும் மற்றவர்கள் மதிக்கத் தக்கதாக வாழ, உயர்ந்த எங்கள் தமிழ் கலாச்சாரம் சார்ந்த பண்பாடுகளை அறிந்து கொள்ளுங்கள். எண்ணங்களை விருத்தி செய்யங்கள். கடவுளை வணங்குங்கள்” என்று தனது இரு குழந்தைகளுக்கும் அடிக்கடி புத்தி சொல்பவள் அவள். ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகள் பிறந்ததும் பெரும்பாலான புலம் பெயர்ந்த தமிழர்கள் மாதிரி அவளும் அவர்களின் மூன்றாவது வயதில் குழந்தைகளைத் தமிழ்ப்பாடசாலைக்கு அனுப்பினாள். அவர்கள் மூன்றாவது வயதிலேயே தேவாரங்கள் பாடவும். திருஞான சம்பந்தர் ஞானப் பால் குடித்த புராணக் கதைகளையும கேட்டு மகிழ்ந்தார்கள். வெள்ளிக்கிழமைகளிலும் விசேட நாட்களிலும் தவறாது கோயில்களுக்கு அழைத்துச் சென்றாள். பல விரதங்களைச் செய்து தனது கணவர், குழந்தைகளின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். தனது பிள்ளைகள் வைத்தியர்களாக வருவதற்காகப் பல ட்யூசன்களை அவர்களுக்கு ஏற்படுத்தி கெட்டிக்காரர்களாக்கிளாள். இப்போது மகன் அவனின் இருபத்தி ஓராவது வயதில் வைத்தியக் கல்லூரியில் மூன்றாவது வருடப் படிப்பைத் தொடர்கிறான். அவர்களின் மகள் கருணாவுக்குப் பத்தொன்பது வயது. மெடிகல் சயன்ஸ்சில் பட்டப் படிப்பைத் தொடங்கிருக்கிறாள். இருவரும் பலகலைக்கழக விடுமுறை நாட்களில் வீட்டில் நிற்கும்போது அருந்ததி அவர்களைக் கட்டாயம் கோயிலுக்கு அழைத்துச் செல்வாள். அவளின் கணவர், பரமானந்தன் இருவேலைகள் செய்து அவர்களின் குடும்பத்தையும் பராமரித்து, இலங்கையிலுள்ள உறவினர்களுக்கும் உதவி செய்கிறான். அத்துடன், ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கொருதரம் என்றாலும் ஊருக்குப் போய் வர அவனுக்கு ஏற்படும் செலவுகளுக்காகக் கடன் பட்டும் வாழ வேண்டியிருக்கிறது. அவனுக்கு நாற்பத்தி எட்டு எட்டு வயதாகிறது. நீரிழிவு நோய், உயர்ந்த இரத்த அழுத்தம் என்ற வருத்தங்களுடன் போராடுகிறான். அடிக்கடி வைத்தியரைப் பார்த்துப் பரிசோதனைகளும் மருந்துகளும் எடுக்கிறான். மனைவி மாதிரி அடிக்கடி கோயில்களுக்குப் போகாவிட்டாலும் முடியுமானவரை செல்வான். வீட்டில் மனைவியால் நடத்தும் பூசைகளிலும் முடிந்த நேரங்களில் கலந்து கொள்வான். அருந்ததி, லண்டனுக்கு வந்த காலத்திருந்து ஒரு இலங்கைத் தமிழரின் கடையில் வேலை செய்கிறாள். இலங்கையிலிருந்து வரும்போது ஆங்கிலம் சரியாகப் பேச வராது. கடையில் வேலை செய்யும்போது அங்கு வரும் அன்னிய வாடிக்கையாளரிடம், அவளின் வேலை நிமித்தமாக ஏதோ தட்டுத் தடுமாறி பேசி தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். அந்த வெளியுலகத் தொடர்பைத் தவிர மற்றவர்களுடனான உறவு அருந்தததிக்குத் தெரியாது. பெரும்பாலான தமிழர்கள் மாதிரித் தங்கள் கலாச்சாரத்தைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாகவிருக்கிறாள். இப்போது என்ன பிரச்சினை என்றால் மகன் தாயிடம் தங்கள் சமயம் பற்றிக் கேள்வி கேட்கிறான். முதலாவது வருட, வைத்தியக் கல்லூரிப் படிப்புக் காலத்திலேயே, அம்மா அடிக்கடி விரதம் இருப்பதன் விளக்கத்தைக் கேட்டான். அதைத் தொடர்ந்து அவன் வரும் போது ஏதோ கேள்விகள் கேட்கத் தொடங்கினான். அவன் பல இன இளம் தலைமுறையினருடன் படிப்பதும் அருந்ததிக்குத் தெரியாத புதிய வாழ்க்கையில் பல அறிவுகளைப் பெறுவதும் அதன் எதிரொலியாக அவன் கேள்விகள் கேட்பதையும் அவள் புரிந்து கொள்ளவேண்டும் என்று அவளது கணவன் அன்புடன் அறிவுரைகள் சொன்னான். “அம்மா நாங்கள் இந்துக்களா’’ என்று ஒருநாள் கேட்டான். ‘’ஓமோம், அதைப்பற்றி என்ன கேள்வி.’’ ‘’இந்துக்கள் என்றால் இந்தியாவில் வாழ்பவர்கள். நாங்கள் இப்போது பிரித்தானியர், இங்கு பிரித்தானியாவில் வாழ்கிறோம, அப்படி என்றால் இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் எப்படி இந்துக்களாக வரமுடியும்” என்றான் கண்ணன். “நாங்கள் இந்து சமயத்தைப் பின் பற்றுவதால் இந்துக்கள் என்று கூறிக் கொள்கிறோம” என்றாள். ‘’இந்து சமயம் என்றால் என்ன?” என்ற அவனது கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. “கத்தோலிக்கருக்கு இயேசு கடவுள், இஸ்லாமியர்களுக்கு அல்லா கடவுள். எங்களுக்கு யார் கடவுள்?” கண்ணன் தனது அறிவை விருத்தி செய்யும் தொனியிற் கேட்டான். “மகன். நாங்கள் பல கடவுளரை வணங்குறோம். படைக்கும் கடவுளாகப் பிரம்மா இருக்கிறார். காக்கும் கடவுளாக விஷ்ணு இருக்கிறார். அழிக்கும் கடவளாகச் சிவன் இருக்கிறார்” என்றாள் அவள். இதெல்லாம், அவன் மூன்று நான்கு வயதுகளில் லண்டனிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் சொல்லிக் கொடுத்தவைதான் ஆனாலும் அவன் இப்போது பல கடவுள்களின் தொழில்கள் பற்றிக் கேட்பது அருந்ததிக்கு மகிழ்ச்சி. “காக்கும் கடவுள்தானா கண்ணனாக அவதாரம் எடுத்தவர்.’’ என்று கேட்டபோது அருந்ததிக்கு மனிதில் கொஞ்சம் சந்தோசம் அரும்பத் தொடங்கிவிட்டது. மகன் தனது பெயரின் மகிமையை உணரத்தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறான் என்று தனது மனதுக்குள் பெருமைப் பட்டாள். “அவர்தானே பெண்களின் ஆடைகளைத்திருடி அந்தப் பெண்களின் அவல நிலையைக் கண்டு ஆனந்தப் படுபவர். உலகத்தைப் பாதுகாப்பவர் ஏன் பெண்ணாசை வெறியன் மாதிரி பெண்கள உடைகளைத் திருடிச் சந்தோசப் படவேண்டும்” அவனின் அழகிய தமிழ் குரலில் இருந்த சந்தேகம் அருந்ததியைத் தர்ம சங்கடப் படுத்தியது. அவனின் பெயர் கண்ணன் என்பதால், அவனின் சினேகிதர்கள் குறம்புத்தனமாக, “கண்ணன் வந்தான், கன்னியராடையைக் களவாடி மகிழ்ந்தான்’’ என்றபாடிக் கேலி செய்து மகிழ்வது அவனுக்குப் பிடிக்காது என்று அவளுக்குத் தெரியும். அப்படிச் சேட்டை விட்டால், இங்கிலாந்தில் சிறையில் தள்ளி விடுவார்கள் என்று அவனுக்குத் தெரியும். இளவயதிலிரிருந்தே மற்றவர்களைத் துன்புறத்தக் கூடாது, எல்லோரையும் சாதி. மத, பெண், ஆண், நிறம், மொழி வித்தியாசமின்றி நடத்த வேண்டும் என்று ஆரம்ப பாடசாலைகளிலேயே சொல்லிக் கொடுப்பார்கள். ‘’அதெல்லாம் சும்மா கதைகள் மகன்’’ என்று சமாளித்து விட்டாள். “அம்மா சமயக்கதைகள் மக்களை நல்வழியில் சிந்திக்கவும் செயற்படவும் தூண்டவேண்டும் என்று சொல்வார்கள், ஏன் எங்கள் கதைகள் பல பெண்களை ஆண்களின் மகிழ்வுக்காக வாழ்பவர்களாகக் காட்டுகிறது?” கண்ணன் மேற் கொண்டு தொடராமல் அவனின் கேள்விகளை, “மகன், உனக்காக் நெய்த்தோசை செய்திருக்கிறேன். தோசை சூடு ஆறமுதல் சாப்பிடு மகனே’’ என்று சொல்லி பேச்சை மாற்றி விட்டாள். ஆனாலும் அவனின் கேள்விகள் இதுவரை அவனின் அவனிடமிருந்து வராத புதிய தொனியில் வருவது அவளுக்குப் பயத்தைத் தந்தது. கணவர் வந்ததும், “இவன் யூனிவர்சிட்டிக்கப் போகத் தொடங்கியதும் ஏன் இந்த விழல்க் கேள்வி எல்லாம் கேட்கிறான’’; என்று கேட்டாள். ‘’அருந்ததி, பல்கலைக் கழகம் என்பதால் பல கலைகளையும் கற்குமிடம். அங்கு பல தரப் பட்ட மாணவர்களும் வருவார்கள், தங்களின் சமயத்தைப் பற்றிப் பேசும்போது ஒருத்தரின் சமயப் பண்பாடுகளையும் கலாச்சாரத்தையும் பேசியிருக்கலாம். அதனால் கண்ணனின் மனதில் சில வித்தியாசமான கேள்விகள் வரும் தானே’’ என்று பதில் சொன்னான். அருந்ததி, ஒருநாள் வுழக்கம்போல் தனது மகளிடம் பேசிக் கொண்டிருக்கும்போது,அவள் தமயன் கேட்ட கேள்விகளைச் சொன்னாள். இப்போதுதான் பல்கலைகப் படிப்பை ஆரம்பித்திருக்கும் மகள் தமயன் மாதிரிக் கேள்விகள் கேட்பதை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும் என்ற நம்பிக்கையில ஒரு தமிழத் தாய்பாசம் தவித்தது. “எங்களுக்க விளங்காத விடயங்களைப் பற்றித் தாய் தகப்பனிடம் கேள்வி கேட்பது நல்ல விடயம்தானே’’ என்றாள். தனது தாய் தங்களுக்காகவும் தகப்பனுக்காகவும், குடும்ப நலங்காகவும் அடிக்கடி விரதம் இருப்பதும் பட்டினி இருப்பதும் தனக்குத் தர்ம சங்கடத்தைத் தருகிறது என்றும் கருணா தனது தாய்க்குச் சொன்னாள். “அப்படியென்றால் நீ உனது கணவர் குழந்தைகளுக்காகக் கடவுளைக் கும்பிடமாட்டாயோ’’ என்று அருந்ததி சீறினாள். ஓரு நல்ல தமிழ்ப் பெண்ணாக இதுவரை வளர்த்த மகள் இப்படிக் கேட்டது அப்பாவி அருந்ததியைத் திகைக்கப் பண்ணியது. “அம்மா, நான் பட்டினி இருந்துதாற்தான் கடவுள் நன்மை புரிவார் என்பதை நம்புவதில்லை. எங்களைப் படைத்தவனுக்குத் தெரியாதா எங்களின் தேவைகள்? அதாவது, என்னையும் உங்களைப் போல், கந்தஸஸ்டி விரதம், கௌரி விரதம் எல்லாம் இருக்கச் சொல்லாதீர்கள். ஓரு குடும்பத்தின் நன்மைக்கு எல்லோரும்தானே பாடுபடுகிறோம். அப்படியென்றால் பெண்கள் மட்டும்தான் விசேட விடயங்கள் செய்ய வேண்டும் என்பதெல்லாம் பம்மாத்து” என்று சொல்லி விட்டாள். இந்த விடயங்கள் நடந்த சில நாட்களில், அருந்ததியின் தமயன் ஊரிலிருந்து வந்திருந்தான். அவனின் மனைவியின் சித்தப்பா ஒருத்தரின் மரணத்திற்குப் போயிருந்ததாகவும், அங்கு நடக்கும் மரணச் சடங்குகளுக்கே பெரிய செலவாகிறது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். “இங்கேயும்தானே தம்பி, எல்லாச் சாமான்களும் கண்டபாட்டுக்கு விலையேறுது’’ என்றாள் அருந்ததி. ‘’ஓமோம், சனங்கள் செய்யுற கொடுமையால, ஐம்பெரும் கடவுளரும் கொதித்தெழுந்து இன்டைக்கு மழை, வெள்ளம், பூகம்பம், எரிமலை வெடிப்பு, கடல் கொந்தளிப்பு, காடுகள் எரிகின்றன. கடவுளரைக் கோபிக்கப் பண்ணினால் அவர்கள் தண்டனை தருவார்கள்தானே’’ கடவுளர்களுக்காக மிகவும் துக்கப் பட்ட பெருமூச்சுடன் சொன்னார் அருந்ததியின் தம்பியார். “மாமா! நீங்க சொன்னதெல்லாம் நடக்கிறது கடவுளுக்கு வந்த கோபத்தால இல்லை. இந்த உலகத்து இயற்கைகளை பேராசை பிடித்தவர்கள் அழிப்பதாற்தான் அதன் எதிரொலியாக இந்த அழிவுகள் நடக்கின்றன.’’ மருமகள் அருணா மாமானாருக்குச் சுற்றாடல் சூழ்நிலை பற்றிய விளக்கத்தைச் சொன்னாள். “என்ன இருந்தாலும் கருணா, அதிவேகமாக மாறிவரும் மனித சிந்தனைகளையும் அதனால் மக்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளையும் முகம் கொடுக்கத்தானே வேணும். உதாரணத்துக்க ஒரு விசயம் சொல்றன், மரணச் சடங்கை நடத்த வந்த ஐயர் தனக்குத்தரவேண்டிய தானங்களுடன் காலணிகளும் கேட்டு வாங்கினார். இதெல்லாம் முன்னோரு காலத்தில நடைமுறையில இருக்கவில்லை, ஆனா இப்ப எல்லாம் புதிய விடயங்களாக, சமய சடங்கு அணுகுமுறையாக வரத்தொடங்கி விட்டது’’ துக்கம் நிறைந்த தொனியுடன் மாமா சொன்னார். “மரணச் சடங்குக்கும் ஐயருக்குக் காலணிக்கும் என்ன சம்பந்தம்” மாமாவிடம் தனது சந்தேகத்தைக் கேட்டான் கண்ணன். “இறந்தவரின் ஆவி சொர்க்கத்திற்குப் போகும்போது காலில் கல் முள் காயப் படுத்தாமல் இருக்க காலணியை அணிந்துகொள்ளச் சொல்லி ஆவியிடம் ஐயர் பிரார்த்தனை செய்வார். அதற்காக அவருக்குக் கொடுக்க வேண்டும” மாமா விளக்கம் சொன்னார். “புதிதாக வந்த மொடலில் வாங்கித் தரச் சொல்லி ஐயரிடம் ஆவி கேட்டிருக்குக்கும் என்று நினைக்கிறேன்’’ கண்ணன் தனது ஆத்திரத்தைக் காட்டாமல் கிண்டலாகச் சொன்னான். அருந்ததிக்குத் தன் குழந்தைகளின் கேள்விகள் பல சந்தேகங்களையுண்டாக்கத் தொடங்கி விட்டன. ஏன் இந்தக் கேள்விகளைக்கேட்கிறார்கள் என்று அவள் கவலை தொடர்ந்தது. வெளிநாடுகளுக்கு வந்த தமிழர்கள் பலர் தங்கள் சமயத்தை விட்டு வேறு சமயங்களை நாடுவது அவளுக்குத் தெரியும். ஆனாலும். தனது குழந்தைகள, தங்களின் சமயத்தை விட்டு வெளியேறி, தங்கள் தாய் தகப்பனை ஒருநாளும் மனவருத்தப் படுத்தமாட்டார்கள் என்று திடமாக நம்பினாள். தாயும் தகப்பனும் அவர்களின் வாழ்க்கையின் உயர்வுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்வது அவர்களுககுத் தெரியும். ஆனாலும் புதுச் சினேகிதங்கள் ஏதும் தேவயைற்ற புத்திமதிகள் சொல்லி அவர்களின் மனத்தைத் திருப்புகிறார்களோ என்ற சந்தேகமும் சாடையாக வந்தது. அன்று பின்னேரம், அருந்ததி வழக்கம் போல் தனது வயது வந்த இரண்டு ‘குழந்தைகளையும்’ அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றாள். அன்று அவர்களின் நலவாழ்வுக்கு அர்ச்சனை செய்ய துண்டு வாங்கிக் கொண்டாள். கோயிலில் ஐயர், அருந்ததி கொடுத்த அர்ச்சனைச் சீட்டை கொண்டு அவர்களுக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். கண்ணன் தாயின் சொற்படி மிகவும் பக்தியுடன் கோயிற்சிலையைப் பார்த்துக் கொண்டு நினறான். ஐயர் கண்ணனின் பெயருடன் ஆரம்பித்து நமஹா,ஸ்வாஹா என்ற சில வார்த்தைகளைப் பாவித்து, தட்டத்தில் வைத்த தீபத்தால் கடவுளை ஆராதித்து, கண்ணனின் தரகராகக் கடவுளிடம் பேசிவிட்டுத் தாயிடம் தட்டத்தை நீட்டியபோது, தாயார் தீபத்தைத் தொட்டு வணங்கி கண்களில் ஒற்றிய பின், அவள் அர்ச்சகருக்காகத் தட்டிற் பணம் போட்டாள். அதைத் தொடர்ந்து, தட்டிற்கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு அர்ச்சனைப் பொருட்களாக ஒரு வெற்றிலையில் ஒரு பழமும் திருநிறும் தாயிடம் கொடுத்தார் ஐயர். அதைத் தொடர்ந்து, அங்கு நடந்தவை கண்ணன் மனதில் சில கேள்விகளை எழுப்பியது. வீட்டுக்கு வரும் வழியில், தாயிடம் தயங்கித் தயங்கி ஒரு கேள்வி கேட்டான் அவள் மகன் கண்ணன். “அம்மா, அந்த ஐயர் எனக்காக் கடவுளிடம் என்ன கேட்டார்.’’ “உனது மேன்மைக்கும், உயர்வுக்கும் ஆசி அளிக்கும்படி கடவுளை வேண்டினார் ஐயர்’’ என்றாள் அருந்ததி. “அவர் சொன்னது உங்களுக்குப் புரிந்ததா’’ மகனின் இந்தக் கேள்வி தாயைத் திடுக்கிடப் பண்ணியது. “அவர் எனக்குத் தெரியாத கடவுள் மொழியில், எங்களுக்காகக் கடவுளிடம் கேட்பதை நாங்கள் கேள்வி கேட்கக் கூடாது மகனே” என்றாள். ‘’அப்படி என்றால் வாழ்க்கை பூராகவும் விரதம் படித்துக் காலையில் “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே’’ என்று கண்ணீர் மல்கத் தமிழிற் பாடி உருகுகிறாயே அதைப் பற்றிக் கவலைப் படாத கடவுள், அன்னிய மொழியில் நீ தரகர் மூலம் பேசினாற்தான் அருள் புரிவார் என்று ஏன் நினைக்கிறாய்’’ என்று கேட்டான். தங்களின் நன்மைக்காகத் தாய் படும் துயர்கள் அவனால் புரிய முடியாதிருந்தது. “மகனே அப்படி எல்லாம் கடவுளைப் பார்க்காதே. கோயிலில் ஐயர் பேசுவது தெய்வ மொழி. அதன் மகிமை வேறு’’ என்று படபடப்புடன் சொன்னாள். “அம்மா நீ எனக்கு அன்பு தரத் தமிழிற்தான் என்னைத் தாலாட்டினாய். எனது அறிவு வளர, எனது ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் படிப்பித்தார்கள். எனக்கு கடவுள் ஆசிர்வாதம் தருவதாயிருந்தால் எனது மொழியில் அவருடன் தொடர்பு கொள்கிறேன். ஏனென்னால கடவுள்தான உலகத்து உயிரினங்கள் அத்தனையையும் படைத்தவர் என்றால் அவருக்குத் தனது குழந்தைகளின் மொழி தெரிந்திருக்க வேண்டும்.’’ அருந்ததிக்கு மகன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. அவன் தொடர்ந்தான், “அம்மா, இன்று பல கோடி கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். கத்தோலிக்க மதத்தின தலைவர் போப் ஆண்டவர் 1968ம் ஆண்டில், உலகக் கத்தோலிக்க மக்கள் அனைவரும் தங்கள் மொழியிற்தான் இயேசுவை வழிபடவேண்டும, பழைய பாரம்பரிய முறைப்படி லத்தின் மொழியில பிரார்த்தனைகளைக் கேட்கத் தேவையில்லை என்று கட்டளையிட்டார். எங்களை மாதிரி ஐயர் சொல்லும் கடவுள் மொழியைத் தெரியாத தமிழர்கள் உலகமெல்லாமிருக்கிறர்கள். இவர்கள் தங்கள் மொழியிற்தான் கடவுளுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்று உங்கள் மதத் தலைவர் யாரும் சொல்லவில்லையா?” “மகன் மற்றவர்கள் சொல்வதெல்லாம் சரியென்று நாங்கள் ஏன் எடுக்கவேண்டும், எங்கள் பாரம்பரியத்தைத் தொடர்வோம், அதில் ஒன்றும் குறை கண்டு பிடிக்காதே” என்றாள். “அம்மா, தயவு செய்து எனக்காக வீணாக உங்கள் நேரத்தையும் பணத்தையம் வீணாக்கவேண்டாம். எனக்கு இப்போது இருபத்தியொரு வயது. இன்னும் சில வருடங்களில் ஒரு உயிரைக் காப்பாற்றும் பொறுப்பை எடுக்கப் போகிறேன். எனக்குத் தேவையானால் கடவுளிடம் எனக்குத் தெரிந்த மொழியில் பேசிக் கொள்கிறேன். தயவு செய்து இனி என்னைக் கோயிலுக்கு வரச் சொல்லிக் கூப்பிடாதீர்கள்’’ என்றான். அருந்ததி என்ற தமிழ்த்தாய் திகைத்துப் போய் நின்றாள். ஆனாலும், அவள் நாளைக்கு இன்னொரு விரதம் இருப்பாள். தனது பிள்ளைகளுக்கு நல்ல புத்தியும் கடவுள் நம்பிக்கையும் தொடரவேண்டும் என்று பிரார்த்திப்பாள். இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் https://www.sirukathaigal.com/குடும்பம்/கடவுளும்-கண்ணனும்/
-
இலங்கையில் கால் பதிக்கும் ‘ஸ்டார் லிங்க்‘
இலங்கையில் இயங்குவதற்கான உரிமத்தைப் பெற்ற ஸ்டார்லிங்க் இலங்கையில் ஸ்டார்லிங்க் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு இயங்குவதற்கான உரிமத்தை இலங்கை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தின் 17B பிரிவின் கீழ் Starlink Lanka (Private) Limited நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளது. அதிவேக இணையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எலோன் மஸ்க் ஆகியோருக்கு இடையில் இந்தோனேசியாவில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது, மேம்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் ஊடாக அதிவேக இணையத்திற்கான தேசத்தின் அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இலங்கையை Musk's Starlink வலையமைப்புடன் இணைப்பதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. தொழில்நுட்ப சேவை இதன் விளைவாக, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கையில் இணைய வசதி சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த உரிமம் ஸ்டார்லிங்கை நாடு முழுவதும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப சேவைகளை வழங்க உதவுகிறது. மேலும், மேம்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் அதிவேக இணையத்திற்கான இலங்கையின் அணுகலை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக இந்த உரிமம் ஆகஸ்ட் 12 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. https://tamilwin.com/article/starlink-licensed-to-operate-in-sri-lanka-1723540969?itm_source=parsely-detail
-
அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை…
இனப்படுகொலையின் குருதியால் நனைந்தது நம் நாட்காட்டி. ஓராண்டின் பெரும்பலான நாட்களில் நமது மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதும் ஒரு நாளில் ஈழத்தின் பல பகுதிகளில் இனப்படுகொலைகள் நடந்துள்ளன என்பதும் நாம் எத்தகைய இனப்படுகொலையை இலங்கைத் தீவில் எதிர்கொண்டுள்ளோம் என்பதையே காட்டி நிற்கின்றது. ஈழத்தின் சில ஊர்களை சொல்லும் போது நமக்கு அங்கு நடந்த இனப்படுகொலைகள் தான் நினைவுக்கு வருமளவில் ஒரு இனத்தின் கூட்டு நினைவுகளை பேரினவாத்தின் இனவழிப்பு பாதித்திருக்கிறது. ஒரு இனப்படுகொலை நிகழ்ந்த காலத்தில் மாத்திரமின்றி அது வரலாறு முழுவதும் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அதனால் எழும் உளவியல் பாதிப்புக்கள் நின்று கொல்லும் விசமாக ஒரு இனத்தை சூறையாடுகிறது என்பதே உண்மை. கிழக்கின் இனப்படுகொலைகள் கிழக்கின் இனப்படுகொலைகள் ஈழத்தின் கிழக்கில் பல இனப்படுகொலைகள் நடந்தேறி உள்ளன. சிறிலங்கா அரசின் இனவழிப்புச் செயற்பாடுகளால் அதிக பாதிப்புக்களை சுமந்த இடமாக கிழக்கு இருக்கிறது. கொக்கட்டிச்சோலை, சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை எனப் பல இடங்கள் இனப்படுகொலையின் குருதியால் நனைந்த இடங்களாகவே வரலாற்றின் பக்கங்களில் நிலைத்துள்ளன. ஆகஸ்ட் மாத்தில் கிழக்கு மாகாணத்தில் நடந்த சில இனப்படுகொலைகள் தமிழ் இனத்தின் நினைவுகளில் இருந்து அகல மறுகின்றன. இதில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை (Ampara) மாவட்டத்தில் உள்ள திராய்க்கேணி என்ற கிராமத்தில் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத்தின் 6ஆம் திகதி நன்கு திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை இன்றும் அந்த மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியே வருகிறது. மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்காக 70 கிலோ மீற்றர் தூரத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு தமிழ் கிராமமே திராய்க்கேணி. தமிழ்ப் பண்பாடு முகிழ்ந்த இக் கிராமம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமாகும். இக் கிராமம் எங்கும் பரவியிருக்கும் சைவ ஆலயங்கள் இந்தக் கிராமத்தின் தொன்மைக்கு ஆதாரமாயிருக்கும் சான்றுகளாகும். பேரினவாத ஆக்கிரமிப்பு இந்தக் கிராமத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்றும் அதனைப் போன்றே அம்பாறையின் பல பகுதிகளையும் ஆக்கிரமித்துவிட வேண்டும் என்றும் கொண்டிருந்த பேரினவாத ஆக்கிரமிப்பின் வெளிப்பாடாக திராய்க்கேணி மீதான இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டது. தீயில் எரிக்கப்பட்ட முதியவர்கள் இந்த நிலையில் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் நாளன்று சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த இனவழிப்பாளர்கள், அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 54 தமிழர்களைப் படுகொலை செய்துள்ளனர். அத்தோடு அந்த இனவழிப்பு அட்டகாசத்தை அவர்கள் நிறுத்தியிருக்கவில்லை. திராய்க்கேணி கிராமத்தின் வீடுகளினுள் நுழைந்த இனப்படுகொலையாளிகள் முதியவர்கள் பலரை உயிருடன் தீவைத்துக் கொளுத்தினர். அந்த முதியவர்கள் தீயில் துடிதுடித்து இறந்து போயினர். அத்தோடு பதின்மூன்று வயதான சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு தகாத முறைக்கு உள்ளாக்கப்பட்டு பெரும் சித்திரவதைகளினால் இனப்படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும் இதன்போது நிகழ்த்தப்பட்டது. கிராமம் எங்கும் இனப்படுகொலையின் வேட்டை பரவியது. நீதி கிராமம் எங்கும் உலவிய இனப்படுகொலையாளிகள் தமிழ் மக்களின் வீடுகள் மீது தீயை பற்ற வைத்து வீடுகளை அழித்தனர். இதனால் 350 வீடுகள் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. அன்றைய நாளில் காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது. நாள் முழுவதும் படுகொலையின் ஓலம் பரவிக் கொண்டிருந்தது. இப்படுகொலைகளைத் தொடர்ந்த அக்கிராமத்தில் இருந்து சனங்கள் வெளியேறினார்கள். மக்கள் வெளியேறினார்கள் என்பதைவிட துரத்தப்பட்டார்கள் என்பதே பொருத்தமானது. அன்றைக்கு ஊரைவிட்டுச் சென்ற மக்கள் காரைதீவில் அகதி முகாங்களில் தஞ்சம் புகுந்தார்கள். அந்தப் படுகொலைக்குப் பின்னர் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர். அந்தளவுக்கு அந்தப் படுகொலை திராய்க்கேணி மக்களை பாதித்திருந்தது. இந்தப் படுகொலைக்கான நீதியை மக்கள் கோரி நின்றார்கள். 90களில் நடந்த இப் படுகொலைக்கான நீதியை மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், திராய்க்கேணி இனப்படுகொலை குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றொரு பேரிடியாக நிகழ்த்தப்பட்டது. இதற்குப் பிறகு 2003ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எச்சங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தனர். திராய்க்கேணி இனப்படுகொலை இவ்வெச்சங்கள் திராய்க்கேணிப் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களினதாய் இருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் தொடர்ந்த வலியுறுத்திய போதும் அரசினால் அது கண்டுகொள்ளப்படவில்லை. அந்த எச்சங்களும் அந்த சாட்சியங்களும்கூட திட்டமிட்டு அழிக்கப்பட்டன. இந்தப் படுகொலையினால் சுமார் 40 பெண்கள் விதவைகளாக்கப்பட்ட கொடூரமும் நிகழ்ந்தது. திராய்க்கேணி இனப்படுகொலைக்கான அஞ்சலி நிகழ்வு ஆண்டு தோறும் அந்தக் கிராமத்தில் நடந்து வருகின்றது. அந்த வகையில் நடந்த ஆண்டு நடந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் முக்கிய விடயம் ஒன்றைக் கூறியிருந்தார். அதாவது, ‘திராய்க்கேணி தமிழ் மக்கள் அன்றைய காலத்தில் உயிராபத்துக்கு முகம்கொடுத்தனர். அவர்கள் இப்போது கூட பல சவால்களுக்கும் நெருங்குவாரங்களுக்கும் மத்தியிலேயே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு 33 வருடங்களுக்கு முன்பு இழைக்கப்பட்ட அநீதிக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. நிவாரணம் கிடைக்கவில்லை. ரணத்தின் நீட்சி அதற்காக நாங்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றோம்…” என்று அவர் கூறியிருப்பது இப்படுகொலையின் ஆறாத ரணத்தின் நீட்சியாகும். இதுவேளை திராய்க்கேணி மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களது இருப்பை இல்லாமல் செய்யும் காரியங்கள் தொடர்வதாகவும் கலையரசன் குற்றம் சுமத்தியிருந்தார். அன்று திராய்க்கேணி மக்கள் கொல்லப்பட்டது அவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவே என்பதும் இன்றும் அதுவே அங்கு தொடர்கின்றது என்பதையும் கலையரசனின் கருத்து எடுத்துரைக்கின்றது. அத்துடன் தமிழ் மக்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா கூறியது போன்று துர்ப்பாக்கிய நிலைக்கு திராய்க்கேணி மக்கள் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கவலையுடன் கூறிய விடயம், வடக்கு கிழக்கின் பெரும்பாலான கிராமங்கள் எதிர்கொள்ளும் அவலத்தையே காட்டுகிறது. பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 09 August, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://ibctamil.com/article/ampara-tamil-massacre-details-1723146316
-
அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான பணத்தின் பெறுமதி மும்மடங்கால் அதிகரிப்பு!
13 AUG, 2024 | 09:12 PM (நா.தனுஜா) தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய தரவுகளின் பிரகாரம் கடந்த ஒரு தசாப்தகாலப்பகுதியில் ஒருவர் தனது அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்குத் தேவையான பணத்தின் பெறுமதி (வறுமை மட்டம்) மூன்று மடங்காக உயர்வடைந்துள்ளது. அதற்கமைய 2012 - 2013 காலப்பகுதியில் ஒருவர் தனது அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு 5,223 ரூபா போதுமானது என மதிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் இவ்வாண்டு ஜனவரி மாதம் அப்பெறுமதியானது 18,350 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. அதேபோன்று 2013 இல் 5,223 ரூபாவாகக் காணப்பட்ட இப்பெறுமதி 2016 இல் 6,117 ரூபாவாக அதிகரித்ததுடன் 2019 ஆம் ஆண்டு 6,966 ரூபாவாக மேலும் உயர்வடைந்தது. அதேவேளை, 2022 ஆம் ஆண்டு நாட்டில் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து பணவீக்கம் சடுதியாக பெருமளவால் அதிகரித்தது. அதன்விளைவாக ஒருவர் அவரது அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்குத் தேவையான பணத்தின் பெறுமதி 15,970 ரூபாவாக மிகையான அளவினால் அதிகரித்தது. மேலும் இப்பெறுமதி இவ்வாண்டு ஜனவரியில் 18,350 ரூபாவாகவும், மே மாதத்தில் 17,608 ரூபாவாகவும் உயர்வடைந்திருப்பதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகள் காண்பிக்கின்றன. https://www.virakesari.lk/article/191014
-
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி..?
ஆக.19-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்பா? திமுகவில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,UDHAYANIDHI STALIN/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற குரல் அக்கட்சிக்குள் எழுந்துள்ளது. திமுக நிர்வாகிகள் பலரும் இதனை வெளிப்படையாக பேசி வருகின்றனர். இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, "நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருக்கிறோம்" என்று மட்டும் பதில் அளித்தார். "தமிழ்நாடு அரசில் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார்" என, தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வந்தாலும், ‘அதற்கான வாய்ப்பு பழுக்கவில்லை’ என முதல்வர் ஸ்டாலின் கூறிவிட்டார். ஆனாலும், துணை முதல்வர் குறித்த விவாதங்கள் இன்னும் முழுமையாக ஓயவில்லை. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவாரா? திமுகவில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துணை முதல்வர் விவாதத்தை தொடங்கி வைத்த அன்பில் மகேஷ் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், உதயநிதியை முன்னிறுத்தி மீண்டும் துணை முதல்வர் விவாதம் கிளம்பியுள்ளது. இதனை உதயநிதி ஸ்டாலினின் நீண்டநாள் நண்பரும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். கடந்த ஜூன் மாதம் பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உதயநிதி செயல்பட்டு வருகிறார். விளையாட்டுத் துறை அமைச்சர், இளைஞர் நலத்துறை அமைச்சர் என பொறுப்பு வகித்தாலும் எங்களைப் போன்றவர்களுக்கு அவர் தான் துணை முதலமைச்சர்," என்றார். அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதன் பின்னர், துணை முதல்வர் பதவி குறித்த பேச்சுகள் சற்று ஓய்ந்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணத்தை ஒட்டி மீண்டும் விவாதம் கிளம்பியுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருப்பதால், அந்தக் காலகட்டத்தில் முதல்வரின் பொறுப்புகளைக் கவனிக்கும் வகையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா எதிர்பார்ப்பு திமுகவில் ஒரு தரப்பினரிடையே மீண்டும் எழுந்துள்ளது. பட மூலாதாரம்,RRAJAKANNAPPAN/X படக்குறிப்பு,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆக.19-ம் தேதி உதயநிதி பதவியேற்பா? இந்நிலையில், ராமநாதபுரத்தில் கடந்த 9ஆம் தேதி நடந்த 'தமிழ்ப் புதல்வன்' திட்ட தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், துணை முதல்வர் பதவி குறித்துப் பேசினார். “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வகிக்கும் துறையின்கீழ் திறன் மேம்பாட்டுத் திட்டம் வருகிறது. அதனை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்" என்று கூறிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்” என்றும் குறிப்பிட்டார். பின்னர் உடனே “வரும் 19ஆம் தேதிக்குப் பிறகு தான் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் என்று கூற வேண்டும். அதற்கு முன்பு அவ்வாறு பேசக் கூடாது” என்று அவர் கூறினார். ’உதயநிதி துணை முதல்வர் ஆவார்’ என்று பேசப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் ஒருவர் தேதியை குறிப்பிட்டுப் பேசியது விவாதப் பொருளாக மாறியது. அதேநாளில், இந்தக் கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். "உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளதே?" என செய்தியாளர் கேட்டபோது, "கோரிக்கை வலுத்துள்ளதே தவிர, பழுக்கவில்லை" என்று அவர் பதிலளித்தார். உதயநிதி ஸ்டாலின் விளக்கம் திமுக இளைஞரணி சார்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி பேசும்போது, "நான் ஏற்கெனவே சொன்னது போல, அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்குத் துணையாக இருக்கிறோம். எங்கு சென்றாலும் இளைஞரணி செயலாளர் என்ற பதவி தான் எனக்கு நெருக்கமானது," என்றார். பட மூலாதாரம்,UDHAYSTALIN/X படக்குறிப்பு,உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர் ’முதல்வரே முடிவு எடுப்பார்’ துணை முதல்வர் பதவி குறித்து எழும் சர்ச்சைகள் குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க., செய்தித் தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன், "முதல்வருக்கு துணையாக ஒருவர் வேண்டும் என்பது கட்சியினர் மத்தியில் கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, முதல்வர் வெளிநாடு பயணம் செல்லும் போது, அமைச்சரவை கூட்டங்களை நடத்துவதற்கு ஒருவர் வேண்டும் என பேசப்பட்டது. அந்த அடிப்படையில், துணை முதல்வர் பதவி தொடர்பான பேச்சுகள் எழுகின்றன. இந்த தேதியில் பதவியேற்பார் என்பதெல்லாம் யூகங்களின் அடிப்படையில் பேசக் கூடியவை தான். ஒருவருக்கு பொறுப்புகளை வழங்குவது என்பது கட்சித் தலைமை எடுக்க வேண்டிய முடிவு. உதயநிதிக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்பது கட்சியில் ஒருமித்த கருத்தாக உள்ளது. அவருக்குப் பொறுப்பைக் கொடுக்கலாமா என்பதை முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும்," என்றார். பிரதமர் மோதி கன்னியாகுமரியில் 45 மணி நேரம் தியானம் செய்த போது விடுப்பில் இருந்தாரா?13 ஆகஸ்ட் 2024 "உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வாய்ப்புகள் குறைவு" துணை முதல்வர் பதவி குறித்து முதலமைச்சர் விளக்கம் கொடுத்த பிறகும் அதுகுறித்த விவாதம் தொடர்வது ஏன் என, மூத்த பத்திரிகையாளர் கே.கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் வினவியது. "அதற்கு சில காரணங்கள் உள்ளன. 2006-2011 தி.மு.க ஆட்சியில் முதல்வராக இருந்த கருணாநிதிக்கு முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது துணை முதல்வர் பொறுப்பில் ஸ்டாலின் அமர்த்தப்பட்டார். இன்று உதயநிதியை முன்மொழிந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், ராஜகண்ணப்பன் ஆகியோர் எப்படி பேசுகிறோர்களோ, அதேபோல் அன்று பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகனே ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தார். அதன்பின்னரே, துணை முதல்வராகவும் கட்சியின் செயல் தலைவராகவும் மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். ” என்று அவர் கூறினார். "தற்போதைய நிலையில் 'இந்த விவகாரத்தில் அவசரப்பட வேண்டாம்' என தி.மு.க., தலைமை விரும்புகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 20 மாத அவகாசம் உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க., ஆகிய கட்சிகள் தேர்தலில் ஒன்றாக கூட்டணி அமைத்தால், அது தி.மு.க.வுக்கு சவாலானதாக மாறலாம். அப்படியிருக்கும் போது, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து அது வாரிசு அரசியல் என்ற பெயரில் பேசுபொருளாக மாறிவிடக் கூடாது என்பதில் தி.மு.க., தலைமை எச்சரிக்கையாக உள்ளது,” என்று அவர் கூறியுள்ளார். “துணை முதல்வர் என்பது ஓர் அலங்கார பதவி. அரசியல் அமைப்பு ரீதியாக எந்த முக்கியத்துவமும் இல்லை. 'அரசியலில் அடுத்த தலைமை இவர் தான்' என அங்கீகரித்து வழிகாட்டுவதற்கான முறையாக இந்தப் பதவி பார்க்கப்படுகிறது" என்கிறார், கார்த்திகேயன். https://www.bbc.com/tamil/articles/ce80yp3d805o
-
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
அண்ணை உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை! அந்தக் கட்சியை அங்க இருப்பவர்கள் ஏற்கனவே நாசமாக்கி விட்டார்களே?! முன்னர் கூட்டமைப்பாக இருந்து பிரிந்தது தமிழரசுக் கட்சியின் பொறுப்பற்ற செயல்களால் தானே?
-
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா; போலீஸுக்கு மம்தா ‘கெடு’
கொல்கத்தா பாலியல் வன்கொடுமை: மருத்துவக் கல்லூரியின் பெண் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?- கள நிலவரம் படக்குறிப்பு,ஸ்ரீதாமா பானர்ஜி கொல்கத்தாவில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார் கட்டுரை தகவல் எழுதியவர், சல்மான் ரவி பதவி, பிபிசி நிருபர், கொல்கத்தாவில் இருந்து 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீதாமா பானர்ஜி, கொல்கத்தாவின் மிகவும் பிரபலமான ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். இதற்கு முன்னர் அவர் கல்லூரிக்குச் சென்றால், அவர் பத்திரமாக கல்லூரியை அடைந்துவிட்டாரா என்று அவரது குடும்பத்தினர் போன் மூலம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வார்கள். "நான் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டாலே, பாதுகாப்பான சூழலில்தான் இருப்பேன் என்று குடும்பத்தினர் இதுவரை நம்பிவந்தார்கள். என் பேராசிரியர்கள், மூத்த மாணவர்கள், நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் என எல்லோரும் இங்கே இருக்கிறார்கள் எனவே மருத்துவமனையை விட பாதுகாப்பான இடம் வேறேது என்ற நிம்மதியில் அவர்கள் இருந்தார்கள்.” என்கிறார் ஸ்ரீதாமா பானர்ஜி. “ஆனால் இப்போது இங்கு இருப்பது எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. என் குடும்பத்தினரும் பயப்படுகிறார்கள்.” என்று கூறுகிறார் அவர். ஆகஸ்ட் 9 அன்று ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் ஸ்ரீதாமா பானர்ஜிக்கு மட்டுமல்ல, அங்கு படிக்கும் அல்லது பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட பிற பெண் மருத்துவ ஊழியர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் படக்குறிப்பு,மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் 71.8 சதவீதமாக உள்ளது மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜியே ஒரு பெண்மணி என்பதும், மருத்துவம் மற்றும் உள்துறை அவர் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் இந்த தருணத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரியில் நடந்த சம்பவம் அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை எழுப்பியது மட்டுமின்றி, மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB- என்சிஆர்பி) அறிக்கையில், மேற்கு வங்கத்தில் 2022ஆம் ஆண்டில் 1111 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 34,738 வழக்குகள் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. என்சிஆர்பி தரவுகளின்படி, மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் 71.8 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியான 65.4 சதவீதத்தை விட அதிகமாகும். வீதியில் இறங்கிய மருத்துவர்கள் படக்குறிப்பு,இச்சம்பவத்துக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் மருத்துவப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட, ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மாணவி, கொல்கத்தா நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பகுதியில் இருந்து வந்துள்ளார். இச்சம்பவம் நடந்த அன்று இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த அவர், களைப்பின் காரணமாக மருத்துவமனையின் கான்பரன்ஸ் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய், கொல்கத்தா காவல்துறையோடு பணிபுரிந்த ஒரு தன்னார்வலர். இவரது பணி, ஏறக்குறைய ஊர்க் காவல்படையினரைப் போல பாதுகாப்பு பணிதான். மருத்துவமனைக்கு வெளியே உள்ள காவல்துறை சோதனைச் சாவடியில்தான் இவர் பணிபுரிந்தார். இந்த சம்பவத்தை அடுத்து, கொல்கத்தா காவல்துறை ஆணையர் வினீத் கோயல், அந்த பகுதியின் உதவி காவல்துறை ஆணையரையும் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார். இச்சம்பவத்துக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் மருத்துவப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கடந்து, மேற்கு வங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் கோபம் இப்போது மற்ற மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. கொல்கத்தாவில் நடந்த சம்பவத்தை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். பல மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன. மறுபுறம், திங்கள்கிழமை அன்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்து பேசியுள்ளார். மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகள் என்ன? படக்குறிப்பு,மருத்துவம் பயிலும் மாணவரான அனுபம் ராய் இந்த விவகாரத்தில் மருத்துவ மாணவர்களின் கோபம் குறைவதாக தெரியவில்லை. இந்த வழக்கில் இதுவரையிலான காவல்துறையின் அணுகுமுறை மற்றும் விசாரணை குறித்து போராட்டம் நடத்தும் மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எல்லாம் 'அவசரமாக' நடக்கிறது என அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆர்.ஜி கர் மருத்துவமனையின் ‘மருத்துவர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர்’ மருத்துவர் ஹசன் முஷ்டாக் கூறுகையில், “பயிற்சி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முதல் மூத்த மருத்துவர்கள் வரை மருத்துவமனையின் அனைத்து ஊழியர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்” என்றார். பிரேத பரிசோதனை அறிக்கையை தருவதில் காவல்துறை மிகுந்த தயக்கம் காட்டுவது, விசாரணையில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மருத்துவமனை மாணவர் அமைப்பு கூறுகிறது. பிபிசியிடம் மருத்துவர் ஹசன் முஷ்டாக் பேசுகையில், "மாணவியின் உடலில் பலத்த தாக்குதல் நடத்தியதற்கான தடயங்கள் இருப்பதும், அவர் கொடூரமாக கொல்லப்பட்ட விதத்திலிருந்து இது ஒரு நபரின் செயல் அல்ல என்றும் தெரிகிறது. ஆனால் காவல்துறையினர் ஒருவரை மட்டுமே கைது செய்துவிட்டு, எங்கள் வேலையை முடித்துவிட்டோம் என்று சொல்வது எங்களின் கோபத்தை அதிகரிக்கிறது." என்கிறார். மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ள காவலர்கள் படக்குறிப்பு,மருத்துவமனை வளாகம் கிட்டத்தட்ட காவல்துறை முகாம் போல மாற்றப்பட்டுள்ளது இங்குள்ள மருத்துவமனை வளாகம், கிட்டத்தட்ட காவல்துறை முகாம் போல மாற்றப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையால் கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கொல்கத்தா (வடக்கு) துணை காவல்துறை ஆணையர் அபிஷேக் குப்தா கூறுகிறார். இந்த குற்றத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு, அது குறித்து கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறுகிறார். இங்கு மருத்துவம் பயிலும் மாணவரான அனுபம் ராய், இந்தச் சம்பவத்தை கண்டித்து, மேடையிலிருந்து மைக் மூலமாக முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தார். மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என அனைவரும் மேடையின் கீழ் அமர்ந்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் ஆகியோர் தங்களிடம் இந்த விவகாரம் குறித்து பேசுவதில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். மறுபுறம், நிர்வாகத்தின் மீது மாணவர்கள் மத்தியில் உள்ள கோபத்தை கருத்தில் கொண்டு, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர், மருத்துவர் சந்தீப் கோஷ் ராஜினாமா செய்துள்ளார். மேலும், மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் சஞ்சய் வசிஷ்தாவையும், அந்தப் பதவியில் இருந்து மாநில அரசு நீக்கியுள்ளது. இருவருமே இந்த விவகாரத்தின் தீவிரத்தை குறைக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என்ன சொல்கிறார்கள்? படக்குறிப்பு,மருத்துவமனையின் நர்சிங் அதிகாரியாக உள்ள சுஷ்மிதா மஜும்தார் இந்த மருத்துவக் கல்லூரியில் நர்சிங், எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் பலர் விடுதியில் தங்கி படிக்கும் நிலையில், விடுதியில் வசிக்காதவர்கள் ஏராளமாக உள்ளனர். பல பெண்கள் செவிலியர்களாகவும் பணிபுரிகின்றனர். இந்த சம்பவம் அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கவலையடைய செய்துள்ளது. ஏனெனில் இந்த சம்பவத்திற்குப் பிறகு, வடக்கு பர்தமான் பகுதியில் பணியில் இருந்த காவல்துறை தன்னார்வலர் ஒருவர், மாவட்ட மருத்துவமனையின் பெண் மருத்துவரிடம் தவறாக நடந்து கொண்டதாக செய்தி வெளியானது. ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நர்சிங் அதிகாரியாக உள்ள சுஷ்மிதா மஜும்தார், “கொல்கத்தாவின் மருத்துவமனைகள் அல்லது வேறு மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் என எங்கும் பார்த்தாலும் இதே நிலைதான். காவல்துறையினர் இருக்கிறார்கள், ஆனால் மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.” என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “எங்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், அதை நாங்களே சமாளிக்க வேண்டும். இப்போது தன்னார்வலர்களும் காவல்துறையின் ஒரு பகுதியாக உள்ளனர். ஒரு தன்னார்வலரே மருத்துவமனைக்குள் நுழைந்து ஒரு கொலைக் குற்றத்தை வெளிப்படையாகச் செய்கிறார் என்றால், இங்கே யாரும் பாதுகாப்பாக இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்" என்கிறார். படக்குறிப்பு,மருத்துவர் பிப்லவ் சந்திரா 1998ஆம் ஆண்டு இந்தக் கல்லூரியில் சேர்ந்தார் வேறு மாநிலத்திலிருந்து வந்த காரணத்தால், கல்லூரி விடுதியில் தங்கி, பணிபுரியும் பெண் சுகாதாரப் பணியாளர் ஒருவர் பிபிசியிடம் பேசினார். "கொல்கத்தா வருவதற்கு முன்பு, மேற்கு வங்கம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்பதால், அங்கு செல்லுங்கள் என்று எல்லோரும் என்னிடம் சொன்னார்கள். ஆனால் இங்கு வந்த பிறகு, அந்த எண்ணமே மாறிவிட்டது." என்று அவர் கூறுகிறார். மருத்துவர் பிப்லவ் சந்திரா 1998ஆம் ஆண்டு இந்தக் கல்லூரியில் சேர்ந்தார். நீண்ட காலமாக மேற்கு வங்க மாநிலத்தின் மருத்துவச் சேவைகளை கவனித்து வருகிறார். ‘இதுவரை எங்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததால், மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் பாதுகாப்பு மோசமாக உள்ளது’ என்பதை ஒரு மூத்த மருத்துவர் என்ற முறையில் தெரிவிக்கிறார் பிப்லவ் சந்திரா. “இந்த மருத்துவமனையில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி எங்கே, குற்றம் தொடர்பான காட்சிகள் எங்கே? இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையின் நிலையே இப்படி என்றால், சிறிய அரசு மருத்துவமனைகளின் நிலையை என்னவென்று சொல்வது.” என்று கேள்வியெழுப்புகிறார் பிப்லவ் சந்திரா. மருத்துவமனை நிர்வாகம் இதிலிருந்து எளிதில் தப்பிக்க முடியாது என்றும், பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் இது அவர்களின் அப்பட்டமான தோல்வி என்றும் கூறினார் அவர். ‘ஆளும் கட்சி நபர்களின் கட்டுப்பாட்டில் மருத்துவமனைகள்’ படக்குறிப்பு,அரசு மருத்துவமனைகளின் கட்டுப்பாடு அரசின் கையை விட்டுப் போய்விட்டதாக குற்றம் சாட்டினார் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷமிக் பட்டாச்சார்யா ஆர்.ஜி கர் மருத்துவமனையில் நடந்த சம்பவத்தால் நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்களும், மருத்துவர்களும் கொதிப்படைந்துள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவின் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது. ராஜ்யசபா எம்பியும், மாநில பாஜக செய்தித் தொடர்பாளருமான ஷமிக் பட்டாச்சார்யா, ‘அரசு மருத்துவமனைகளின் கட்டுப்பாடு அரசின் கையை விட்டுப் போய்விட்டதாகவும், தற்போது அவை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுவதாகவும்’ குற்றம் சாட்டியுள்ளார். பிபிசியிடம் பேசிய பட்டாச்சார்யா, "அனைத்து அரசு மருத்துவமனைகளும் வெளி நபர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு உண்மையில் எந்த அதிகாரமும் இல்லை. மாநில அரசு அமைத்துள்ள ‘ஜன் கல்யாண் சமிதி’ எனும் குழுதான் இந்த மருத்துவமனைகளை நடத்துகின்றன." என்று கூறினார். “இந்தக் குழுவில் உள்ள பெரும்பாலானவர்கள் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள், அவர்கள் தங்கள் விருப்பப்படி அரசு மருத்துவமனைகளை நடத்துகிறார்கள். இதனால், மருத்துவமனைகளின் நிலை மோசமாகி, இங்கு பணிபுரியும் மருத்துவர்களும் ஊழியர்களும் மிகவும் பாதுகாப்பற்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர்.” என்று பட்டாச்சார்யா கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் கூறுவது என்ன? படக்குறிப்பு,திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தௌசிப் அகமது கான் காவல்துறையை பாராட்டியுள்ளார் கொல்கத்தா மருத்துவமனை சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் பரவி வரும் நிலையில், தற்போது ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் தௌசிப் அகமது கான் கூறுகையில், “சம்பவம் குறித்த செய்தி கிடைத்தவுடன், காவல்துறை தீவிர நடவடிக்கைகள் எடுத்தது, அதனால் 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “மம்தா பானர்ஜி மரண தண்டனைக்கு ஆதரவானவர் இல்லை. ஆனால் அவர் இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புக் குழுவின் அதிகாரிகளுக்கு முழு உண்மையைக் கண்டறிய ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்." என்று கூறினார். இது தவிர, கொல்கத்தா காவல்துறை ஆணையர் மற்றும் நகரின் அனைத்து உயர் அதிகாரிகளும் இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கொல்கத்தா காவல்துறை ஆணையர் மருத்துவமனையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார் என்றும் தெரிவித்தார் தௌசிப் அகமது கான். ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் திங்கட்கிழமை காலை வரை கூட, காவல்துறை உயர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் ‘காவல்துறை விசாரணையில் எந்த அலட்சியமும் இருக்காது’ என்று உறுதியளித்ததைக் காண முடிந்தது. ஆனால் கொல்லப்பட்ட மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையைக் கொடுப்பதில் கொல்கத்தா காவல்துறையினர் தயக்கம் காட்டுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். படக்குறிப்பு,பிரேத பரிசோதனை அறிக்கை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கூறினார் காவல்துறை ஆணையர் வினீத் குமார் கோயல் ஆனால், காவல்துறை ஆணையர் வினீத் குமார் கோயல் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார். "பிரேத பரிசோதனை அறிக்கை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் உடல்களில் காணப்படும் காயங்கள் குறித்து தடய அறிவியல் நிபுணர்களின் கருத்தையும் கேட்டுள்ளோம். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பதையும் நாங்கள் விசாரிப்போம்." என்று கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்கள் கொல்கத்தாவில் இருந்து சிறிது தொலைவில் வசிக்கிறார்கள். அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல், பேச முடியாத நிலையில் குடும்பத்தினர் உள்ளனர். கொல்லப்பட்ட பெண்ணுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெற இருந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கொல்கத்தா காவல்துறை இணை ஆணையர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து பிரேத பரிசோதனை அறிக்கையை அளித்துள்ளார். இது தவிர, முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசி மூலமாகவும் குடும்ப உறுப்பினர்களிடம் பேசியுள்ளார். ஆனால், மருத்துவ மாணவர்களின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. https://www.bbc.com/tamil/articles/cj35e7277ljo
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
ஈலோன் மஸ்க் உடனான பேட்டியில் கமலா ஹாரிஸ், கிம் ஜாங் உன், புதின் குறித்து டிரம்ப் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை, எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தள உரிமையாளர் ஈலோன் மஸ்க் நேர்காணல் செய்துள்ளார். நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்புக்கு, ஈலோன் மஸ்க் தனது ஆதரவை முன்னரே தெரிவித்திருந்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னணியில் உள்ள கமலா ஹாரிஸ், தற்போதைய அதிபர் பைடன், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு (Iron dome) என டிரம்ப் பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளனர். கடந்த மாதம் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இடமான பென்சில்வேனியாவின் பட்லருக்கு மீண்டும் அக்டோபரில் செல்லவிருப்பதாகவும், தான் அதிபராக பதவியேற்றால் அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். கமலா ஹாரிஸ் பற்றி டிரம்ப் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இறங்கிய பிறகு ஒரு முழு அளவிலான நேர்காணலை கமலா ஹாரிஸ் இதுவரை கொடுக்கவில்லை “கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்ற பிறகும் கூட, இது போன்ற நேர்காணல்களை அவர் வழங்கவில்லை” எனக் கூறினார் டிரம்ப். அதற்கு பதிலளித்த ஈலோன் மஸ்க், “என்னுடன் ஒரு நேர்காணல் என்றால் கமலா ஹாரிஸ் நிச்சயமாக வர மாட்டார்” என்று கூறினார். தொடர்ந்து அதிபர் பைடனை விமர்சித்த டிரம்ப், “எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஒரு முழுநேர அரசியல்வாதியாக (பைடன்) இருப்பவரால், ஒரு கேள்விக்கு சரியாக பதிலளிக்க முடியவில்லை. நேர்காணல்கள் என்றால் பயப்படுகிறார்” என்று கூறினார். ஆனால், அதிபர் பைடன் சில நாட்களுக்கு முன்பாக தான் அமெரிக்க ஒளிபரப்பு ஊடகமான சிபிஎஸ் (CBS) செய்திகளுக்கு நேர்காணல் அளித்திருந்தார். கமலா ஹாரிஸ் தொடர்ந்து பல பிரசாரக் கூட்டங்களை நடத்தி வந்தாலும், அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இறங்கிய பிறகு ஒரு முழு அளவிலான நேர்காணலை இதுவரை கொடுக்கவில்லை. புதின் மற்றும் கிம் ஜாங் உன் பற்றி டிரம்ப் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு அமெரிக்க அதிபர் பைடன்தான் காரணம் என்று டிரம்ப் கூறினார் புதின் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் குறித்து தனக்கு நன்றாகத் தெரியும் என்று டிரம்ப் கூறினார். "அவர்கள் இருவரும் புத்திசாலிகள், அதே சமயத்தில் ஆபத்தானவர்களும் கூட. கமலா ஹாரிஸ் மற்றும் பைடனின் செயல்பாடுகளை அவர்கள் நம்பவில்லை" என்றார். யுக்ரேனை தாக்க வேண்டாம் என்று புதினிடம் தான் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் புதின் அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் டிரம்ப் கூறினார். “நான் புதினுடன் அடிக்கடி பேசுவேன். அவர் என்னை மதிப்பார். அவரிடம் (புதின்) ‘யுக்ரேன் மீது போர் தொடுக்காதீர்கள், தொடுக்கவும் கூடாது’ என்று சொன்னேன். ஆனால் அவர் கேட்கவில்லை. ‘வேறு வழியில்லை’ என்று என்னிடம் கூறினார், நான் வழி உள்ளது என்றேன்” என்று கூறினார் டிரம்ப். ஆனால், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு அமெரிக்க அதிபர் பைடன்தான் காரணம் என்றும் கூறினார் டிரம்ப். இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு குறித்து டிரம்ப் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குறுகிய இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை முறியடிப்பதில் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு பயனுள்ளதாக இருக்கிறது இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு (Iron Dome), அந்நாட்டை ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. "நாமும் ஏன் அமெரிக்காவிற்கென பிரத்யேகமாக ஒரு வான் வழி பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தக்கூடாது, இஸ்ரேலிடம் கூட அது உள்ளது." என்று கூறினார் டிரம்ப். குறுகிய இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை முறியடிப்பதில் இஸ்ரேலின் இந்த பாதுகாப்பு கவசம் பயனுள்ளதாக உள்ளது. இது 2006இல் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலிய நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டது. டிரம்ப்- ஈலோன் மஸ்க் இடையேயான முரண்பாடுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES ஈலோன் மஸ்க் மற்றும் டிரம்ப் இடையிலான பேட்டி திட்டமிட்ட நேரத்தை விட 40 நிமிடங்கள் தாமதமாகவே தொடங்கியது. இதற்கு எக்ஸ் தளம் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களே காரணம் என்று ஈலோன் மஸ்க் குற்றம் சாட்டினார். இரண்டு மணிநேரங்கள் நடத்தப்பட்ட இந்த நேர்காணலில் டிரம்புக்கான தனது ஆதரவை மீண்டும் அழுத்தமாக வெளிப்படுத்தினார் ஈலோன் மஸ்க். நடுநிலை வாக்காளர்கள் அனைவரும் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பிற்கு 2021இல் எக்ஸ் தளத்தைப் (அப்போது ட்விட்டர்) பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஈலோன் மஸ்க் 2022இல் அதைக் கையகப்படுத்திய பிறகும் எக்ஸ் தளத்தை மீண்டும் பயன்படுத்த மறுத்து வந்தார் டிரம்ப். தன் மீதான எக்ஸ் தள தடைக்குப் பிறகு ட்ரூத் சோஷியல் (Truth social) என சொந்தமாக ஒரு சமூக ஊடக தளத்தை தொடங்கினார் டிரம்ப். இதற்கு முன்பாக பலமுறை மின்சார வாகனங்கள் குறித்த தனது சந்தேகத்தையும் நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்தியுள்ளார் டிரம்ப். ஆனால் இன்றைய நேர்காணலில் ஈலோன் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகனத் திட்டத்தை பாராட்டினார் டிரம்ப். அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, இருவருக்கும் கடந்த காலத்தில் சில முரண்பாடுகள் இருந்திருந்தாலும் கூட, இந்த நேர்காணல் மூலம் அதிபர் தேர்தலில் தனக்கான ஆதரவை வலுப்படுத்த விரும்பினார் டிரம்ப். அதேபோல எக்ஸ் தளத்தை ஒரு முக்கிய செய்தி ஊடகமாக மக்களிடம் கொண்டுசேர்க்க விரும்பும் ஈலோன் மஸ்க்கும் இந்த நேர்காணலின் மூலம் பயனடைந்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/c5yk7319089o
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
1000 சதுர கி.மீ ரஷ்ய பகுதியை கைப்பற்றிய யுக்ரேன் படைகள்- என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,குர்ஸ்க் பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர், ஜியான்லூகா அவாக்னினா மற்றும் ஃபிராங்க் கார்ட்னர், பாதுகாப்பு துறை நிருபர் பதவி, பிபிசி செய்திகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் 1000 சதுர கிலோ மீட்டர் ரஷ்ய பகுதியை யுக்ரேன் படைகள் கைபற்றி உள்ளதாக யுக்ரேனின் மூத்த ராணுவ தளபதி கூறியுள்ளார். ரஷ்யா யுக்ரேன் இடையில் முழு கட்ட போர் தொடங்கிய இரண்டரை வருடத்தில் இதுவே யுக்ரேனின் மிகப்பெரிய எல்லை தாண்டிய ஊடுருவல் ஆகும். இந்த தாக்குதல் தொடங்கிய ஏழு நாட்களுக்கு பிறகு யுக்ரேன் படைகள் ''குர்ஸ்க் பகுதியில் தீவிர தாக்குதல் நடவடிக்கைகளை'' மேற்கொண்டுள்ளதாக ராணுவத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி தெரிவித்துள்ளார். மற்ற நாடுகள் மீது ரஷ்யா போர் புரிந்துள்ளது. இப்போது ரஷ்யா மீதே போர் திரும்பியிருக்கிறது என்று யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். யுக்ரேனின் இந்த தாக்குதலை ஒரு ''ஆத்திரமூட்டும் செயல்'' என கூறிய ரஷ்ய அதிபர் புதின், ''எதிரி படைகளை ரஷ்ய எல்லையை விட்டு வெளியேற்ற'' ரஷ்ய படைகளுக்கு ஆணையிட்டுள்ளார். வெளியேற்றப்படும் மக்கள் பாதுகாப்பிற்காக அதிக எண்ணிக்கையில் மக்கள் மேற்கு ரஷ்யா பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் 59,000 மக்களும் வெளியேறும்படி கூறப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள 28 கிராமங்கள் யுக்ரேன் படைகளால் கைபற்றப்பட்டுள்ளதாகவும், 12 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு ''மிகவும் கடினமான சூழல்'' நிலவுவதாகவும் உள்ளூர் ஆளுநர் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திடீர் தாக்குதலைத் தொடங்கி யுக்ரேன் படைகள், ரஷ்ய எல்லைக்குள் 18 மைல்கள் (30கிமீ) வரை ஊடுருவி உள்ளன. இந்த தாக்குதல் யுக்ரேன் நாட்டுக்கு மனரீதியில் வலிமை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த உத்தி யுக்ரேனுக்கு புதிய ஆபத்துகளை கொண்டுவரும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஊடுருவலால் ரஷ்யா மிகவும் கோபமடைந்து யுக்ரேனின் குடிமக்கள் மற்றும் கட்டமைப்பின் மீதான தாக்குதலை இரட்டிப்பாக்கக்கூடும் என பெயர் கூற விரும்பாத பிரிட்டனின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். "முரண்பாடுகளை விதைப்பது, சச்சரவு ஏற்படுத்துவது, மக்களை அச்சுறுத்துவது, ரஷ்ய சமுதாயத்தின் ஒற்றுமையை குலைப்பது இதுவே எதிரிகளின் வெளிப்படையான குறிக்கோள்களில் ஒன்றாக இருக்கிறது" திங்கட்கிழமை அன்று அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட உரையில் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். "நமது நாட்டில் இருந்து எதிரி படைகளை விரட்டுவதே பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய பணியாகும்", என்று அதிகாரிகளுடனான சந்திப்பில் அவர் கூறியுள்ளார். பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY HANDOUT/EPA-EFE படக்குறிப்பு,இரண்டு நாட்களுக்கு முன்பு ரஷ்யா அனுப்பிய படைகளின் படம் 1 லட்சத்து 21 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அப்பகுதியின் ஆளுநர் கூறினார். யுக்ரேன் படைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் சுமார் 2,000 ரஷ்ய குடிமக்கள் தங்கியிருப்பதாக அவர் புதினிடம் தெரிவித்துள்ளார். "அவர்களின் நிலை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது", என்று அவர் கூறினார். ஏவுகணைகளில் இருந்து தப்பிக்க ஜன்னல்கள் இல்லாத,உறுதியான சுவர்கள் கொண்ட வீடுகளில் தஞ்சம் அடையுமாறு அவர் மக்களை எச்சரித்துள்ளார். குர்ஸ்கிற்கு அருகிலுள்ள பெல்கோரோடில், சுமார் 11,000 மக்கள் வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டனர். கிராஸ்னயா யருகா மாவட்டத்தைச் சேர்ந்த மக்களிடம் "எல்லையில் எதிரிகளின் செயல்பாடு" காரணமாக அவர்கள் வெளியேற்றப்படுவதாக ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் கூறினார். இதே போல அவர் இங்கு ஏவுகணை தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒன்றை விடுத்தார், மேலும் மக்களை அவர்கள் வீடுகளின் அடித்தளங்களில் தங்குமாறு கூறினார். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற யுக்ரேன் அதிபர்"புதின் மிகவும் மோசமாக போரிட விரும்பினால், இது போன்ற நிலைக்கு ரஷ்யா பழகிக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். 'ரஷ்யா மீதே போர் திரும்பியுள்ளது' "மற்ற நாடுகள் மீது ரஷ்யா போர் புரிந்துள்ளது, இப்போது ரஷ்யா மீது போர் திரும்பியுள்ளது. யுக்ரேன் எப்போதும் அமைதியை மட்டுமே விரும்புகிறது, நாங்கள் நிச்சயமாக அமைதியை உறுதி செய்வோம்" என்றும் யுக்ரேன் அதிபர் கூறினார். சிறிய ஊடுருவல் நடைபெறுவதாக தொடக்கத்தில் ரஷ்ய எல்லைக் காவலர்களால் கூறப்பட்டதைவிட , ஆயிரக்கணக்கான யுக்ரேன் படைகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'ரஷ்யாவில் அதிகபட்ச இழப்புகளை ஏற்படுத்துவது மற்றும் அந்நாட்டின் நிலைமையை சீர்குலைப்பதே' யுக்ரேன் படையின் நோக்கமாக இருப்பதாக அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி செய்தி முகைமையிடம் கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் புதினுக்கு உள்நாட்டில் அரசியலில் செல்வாக்கு குறையக்கூடும் என்று நேட்டோவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் பேசியகர்ட் வோல்கர் பிபிசியின் நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் கூறினார். அதிபர் புதின் மற்றும் அவர் இந்த போரை நடத்திய விதத்தின் காரணத்தால் மட்டுமே ரஷ்ய எல்லைக்குள் யுக்ரேன் படைகளின் ஊடுருவல் நடைபெற்றது என்று அவர் கூறினார். "இதனால் ரஷ்யாவில் பொது மக்களுக்கு மட்டுமே பாதிப்பு, பணக்காரர்களுக்கு அல்ல. ரஷ்ய நாட்டின் மீதான தாக்குதலை புதினே தூண்டிவிட்டு,தற்போது மக்கள் வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்'' என அவர் கூறினார். இலங்கையில் தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர்- இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டார்களா?13 ஆகஸ்ட் 2024 ஈலோன் மஸ்க் உடனான பேட்டியில் கமலா ஹாரிஸ், கிம் ஜாங் உன், புதின் குறித்து டிரம்ப் கூறியது என்ன?7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UKRAINIAN PRESIDENCY/HANDOUT படக்குறிப்பு,யுக்ரேனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்ததாக சர்வதேச அணுசக்தி அமைப்பு கூறியுள்ளது திங்கட்கிழமையன்று கீவ் நகரில் அதிபர் ஸெலன்ஸ்கி உடனான சந்திப்பின் போது, யுக்ரேனின் இந்த எல்லை தாண்டிய போர்த் தாக்குதலை "புத்திசாலித்தனமானது" மற்றும் "தைரியமானது" என்று குறிப்பிட்ட அமெரிக்க செனடர் லிண்ட்சே க்ராஹம், யுக்ரேனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்குமாறு அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகத்தை வலியுறுத்தினார். குர்ஸ்க் பகுதிக்குள் யுக்ரேன் எவ்வாறு நுழைய முடிந்தது என்று ரஷ்யாவில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ரஷ்ய சார்புடைய போர் குறித்த வலைதள எழுத்தளரான பொடோல்யாகா இந்த நிலைமையை "ஆபத்தானது" என்று கூறியுள்ளார். ரஷ்யாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா, இந்த நிலைக்கு ரஷ்யாவின் ஆயுதப் படைகள் கடுமையான பதிலடி கொடுக்க "நீண்ட காலம் எடுக்காது" என்றார். ரஷ்ய நட்பு நாடான பெலாரஸ், யுக்ரேன் தனது வான்வெளிக்குள் டிரோன் தாக்குதல் நடத்துவதாகக் கூறி, அந்நாட்டின் எல்லையில் தனது சொந்த படைகளை வலுப்படுத்தவிருப்பதாக கூறியுள்ளது. இதற்கிடையில், திங்கள்கிழமை அன்று யுக்ரேனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் தீ விபத்தால் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்ததாக சர்வதேச அணுசக்தி அமைப்பு கூறியுள்ளது. ஆனால் உடனடியாக தீக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. யுக்ரேனை அச்சுறுத்தவே ரஷ்யா வேண்டுமென்றே இந்த தீ விபத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று அதிபர் ஸெலன்ஸ்கி குற்றம் சாட்டினார். மறுபுறம் யுக்ரேனின் தாக்குதலாலே இது ஏற்பட்டது என்று ரஷ்ய அரசால் நியமிக்கப்பட்ட அப்பகுதி உள்ளூர் ஆளுநர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/crkme17jd38o
-
தமிழ் பொதுக்கட்டமைப்பினருடனான சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் சஜித்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்தனர் தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பின் பிரதிநிதிகள் Published By: DIGITAL DESK 3 13 AUG, 2024 | 03:56 PM தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பு பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கிய சூழலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்திய நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (13) தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் அழைப்பை ஏற்று இன்றையதினம் காலை 7.30 மணியளவில் எதிர்க்கட்சி அலுலகத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் , மற்றும் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். மற்றைய தரப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் வட மாகாண பிரதம அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷும் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு பொது வேட்பாளரைக் களமிறக்கவுள்ள நிலையிலேயே வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக சஜித் பிரேமதாச, பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திப்பதற்கான அழைப்பினை தனித்தனியாக அரசியல் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் விடுத்திருந்தார். இந்த அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமான தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவும் சஜித் பிரேமதாச , தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்காக முன்னெடுக்க உள்ள நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் இச்சந்திப்பில் பங்கேற்பதென முடிவு செய்தனர். இச் சந்திப்பில், பிரதானமாக தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கும் முகமான சமஸ்டி முறையான அரசியல் தீர்வு தொடர்ந்தும் எட்டப்படாமல் இருப்பதனாலேயே பொது வேட்பாளர் என்ற முடிவு வலுப்பெற்றது என்பது தெளிவுபடுத்தப்பட்டது. இதுவரை காலமும் தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவோ பிரதம மந்திரியாகவோ பதவி வகிக்கக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் இம்முறை அச்சந்தர்ப்பம் வழங்கப்படும் பட்சத்தில் நிச்சயமாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தான் முடிவு காண்பதாக தெரிவித்தார். ஆகவே கடந்த கால கசப்பான நிகழ்வுகளை மனதில் வைத்துக் கொண்டு தன்னையும் அந்த வேட்பாளர்களோடு அல்லது பதவிகளை பெற்றுக் கொண்டவர்களோடு ஒப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இந்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு சகல உரிமையும் இருக்கின்றது என்பதையும் அதைத்தான் மதிப்பதாகவும் தெரிவித்த அவர் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற உங்களுடைய நிலைப்பாட்டுக்கு தான் மதிப்பளிப்பதாகவும் தெரிவித்தார். ஆனாலும் தேசிய ரீதியான தேர்தலில் இன, மொழி, மத மற்றும் பிரதேச ரீதியான அடையாளத்தோடு வேட்பாளர்கள் முன்னிலைப் படுத்துவது ஒற்றுமையை சீர்குலைக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார். அவரைப் பொறுத்தவரை முதல் கட்டமாக பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் ஊடாகக் கொண்டுவரப் பட்ட மாகாண சபைக் கட்டமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக தான் தயாராக உள்ளேன் என தெரிவித்தார். அதற்காக தான் வெளிப்படையாகவும் பேசி வருவதாகவும் யாருக்கும் பயந்து சாக்குப்போக்குகளை சொல்வது இல்லை என்றும் தெரிவித்தார். இவ்விடயத்தில் தான் உறுதியாக இருப்பதாகவும் ஜனாதிபதியாக வெற்றி பெறும் பட்சத்தில் உடனடியாக மாகாண சபை அதிகாரப்பகிர்வை முழுமையாக நடைமுறைப் படுத்துவதாகவும் தெரிவித்தார். தமிழ் மக்கள் சார்பில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, எஞ்சியுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு மற்றும் அபகரிப்பை தடுப்பது, தமிழ் இளைஞர்கள் யுவதிகள் நீதியற்ற முறையில் கைது செய்யப்படுவது, விசாரணை என்ற போர்வையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கையை நிறுத்துதல், இந்திய மீனவர்களுடைய அத்துமீறலினால் எமது மீனவர்கள் படுகின்ற துன்பம், உட்பட பல விடயங்கள் தீர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டன. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இப்படியான பிரச்சினைகளுக்கு தான் சிறப்புப் பணிக் குழுக்களை அமைத்து தனது நேரடி மேற்பார்வையின் கீழ் பிரச்சனைகளுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதாகவும் உறுதியளித்தார். தான் இலங்கையில் உள்ள அனைத்து இனங்களையும் அனைத்து மதங்களையும் நேசிப்பவன் என்றும் தான் ஒரு இனவாதி அல்ல என்பதையும் தமிழ் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஆகவே வரும் தேர்தலிலே தனக்கான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவருடைய கருத்துக்களை பரிசீலித்து மற்றவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் எங்கள் நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்துவதாக தமிழர் தரப்பில் தெரிவித்ததுடன் சந்திப்பு முடிவு பெற்றது. https://www.virakesari.lk/article/191004
-
தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி; மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பேஸ்புக் ஆதரவுக் குழுக்களாக தம்மை அடையாளப்படுத்தி, நபர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை மாத்திரம் இது தொடர்பான 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பேஸ்புக் ஆதரவுக் குழுக்களாக தம்மை காட்டிக்கொண்டு வட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்புவதன் மூலம் இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக சாருக தமுனுகல குறிப்பிட்டுள்ளார். “உங்கள் பேஸ்புக் கணக்கு அல்லது பக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக ஃபேஸ்புக் ஆதரவு குழுவிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி வரலாம். அதை திரும்பப் பெற, உங்கள் தகவலை சிறிது பணத்துடன் அனுப்ப வேண்டும்… இவ்வாறு மோசடிகள் நடைபெறுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக, உங்கள் Facebook பக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டாலோ அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டாலோ, Facebook பயனர்கள் WhatsApp மூலம் வரும் எந்த செய்திகளுக்கும் பதிலளிக்கவோ அல்லது உங்கள் தகவலை தற்காலிகமாக வெளியிடவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது உங்கள் மதிப்புமிக்க தனிப்பட்ட தகவல் மற்றும் உங்கள் Facebook கணக்கு தொடர்பான கடவுச்சொல் உட்பட முக்கியமான தகவல்களை வழங்குவதன் மூலம் உங்கள் Facebook கணக்கிற்கான அணுகலை வெளி தரப்பினர் அனுமதிக்கும். இதன் விளைவாக, பயனர்கள் இதுபோன்ற செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” வர்த்தக பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களை இலக்கு வைத்து இந்த மோசடி இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகல மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/307772
-
செவ்வாயில் திரவ வடிவில் நீர் கண்டுபிடிப்பு - மனிதன் குடியேறுவது சாத்தியமாகுமா?
பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,நாசாவின் இன்சைட் லேண்டரின் நில அதிர்வு கருவி மூலம் திரவ நீரின் சாத்தியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, அறிவியல் நிருபர், பிபிசி செய்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தின் வெளிப்புற கிரஸ்ட்டில் இருக்கும் பாறைகளின் ஆழத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசா 2018 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு ``மார்ஸ் இன்சைட் லேண்டர்’’ என்னும் விண்கலத்தை அனுப்பியது. அதன் கண்டுபிடிப்புகள் அடிப்படையிலான தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அந்த புதிய பகுப்பாய்வில் நீரின் இருப்பு பற்றிய தகவல் கிடைத்துள்ளது. இன்சைட் லேண்டர் விண்கலத்தில் ஒரு நில அதிர்வு அளவீட்டு கருவி (seismometer) பொருத்தப்பட்டிருந்தது. அந்த கருவி கடந்த 4 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தின் நில அதிர்வுகளை பதிவு செய்தது. அதாவது நான்கு வருடங்களாக செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பின் ஆழத்தில் இருந்த நில அதிர்வுகளை இந்த கருவி பதிவு செய்துள்ளது. அந்த நில அதிர்வுகளை பகுப்பாய்வு செய்த போது, அந்த கிரகம் எவ்வாறு நகர்கிறது என்பது தெரிந்தது, மேலும், திரவ வடிவிலான நீரின் "நில அதிர்வு சமிக்ஞைகளை" விஞ்ஞானிகள் கவனித்தனர். செவ்வாயின் துருவங்களில் உறைந்த நீர் மற்றும் வளிமண்டலத்தில் நீராவிக்கான சான்றுகள் இருப்பதாக ஏற்கனவே கண்டுப்பிடிக்கப்பட்ட போதிலும், கிரகத்தில் திரவ வடிவிலான நீர் கண்டுப்பிடிக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த கண்டுபிடிப்புகள் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸின் ஆய்வு செயல்முறைகளுக்கான கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ளன. நில அதிர்வுகளை வைத்து நீர் இருப்பை கணித்த விஞ்ஞானிகள் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,பூமி மற்றும் செவ்வாய் உள்ளிட்ட பாறைக் கோள்களின் பரிணாம வளர்ச்சியை இன்சைட் லாண்டர் ஆய்வு செய்கிறது. இன்சைட் லேண்டர் விண்கலம் நான்கு ஆண்டுகளாக "செவ்வாய் கிரகத்தின் அதிர்வுகளை" பதிவு செய்து கொண்டிருந்தது. இதனால் செவ்வாய் கிரகத்தை பற்றி பல்வேறு பிரமிப்பான தகவல்கள் கிடைத்தது. 2022 டிசம்பரில் விண்கலத்தின் பணி முடிவடைந்தது. நான்கு வருடங்களில், விண்கலத்தில் இருந்த கருவியில், சுமார் 1,319 க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் பதிவாகி இருந்தன. நில அதிர்வு அலைகள் எவ்வளவு வேகமாகப் பயணித்துள்ளன என்பதை அளப்பதன் மூலம், அவை எந்தப் பொருளின் ஊடாகச் செல்லும் வாய்ப்பு அதிகம் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். " பூமியில் நம் நிலப்பரப்புகளில் தண்ணீர் அல்லது எண்ணெய் மற்றும் எரிவாயுவின் இருப்பைத் தேடுவதற்கு நாம் பயன்படுத்தும் அதே நுட்பம் இது" என்று ஆராய்ச்சியில் ஈடுபட்ட பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மைக்கேல் மங்கா விளக்கினார். செவ்வாய் கிரகத்தின் கிரஸ்டில் சுமார் 10 முதல் 20 கிமீ ஆழத்தில் நீர்த்தேக்கங்கள் இருப்பதை ஆய்வு வெளிப்படுத்தியது. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பண்டைய காலத்தில் ஆறுகள் மற்றும் ஏரிகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன "செவ்வாய் கிரகத்தின் நீர் சுழற்சியைப் புரிந்துகொள்வது அந்த கிரகத்தின் காலநிலை, மேற்பரப்பு மற்றும் உட்புறத்தின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று யுசி சான் டியாகோவின் ஸ்கிரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓசியனோகிராஃபியைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் வாஷன் ரைட் கூறினார். "ஒரு கிரகத்தின் பரிணாமத்தை பற்றிய தகவல்களை வடிவமைப்பதில் `நீர்’ மிக முக்கியமான மூலக்கூறு" என்று பேராசிரியர் மங்கா மேலும் கூறினார். இந்த கண்டுபிடிப்பு, "செவ்வாய் கிரகத்தின் நீர் இருப்புகள் அனைத்தும் எங்கே போயின?" என்ற பெரிய கேள்விக்கு பதிலளிக்கிறது என்று அவர் விவரித்தார். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பற்றிய இந்த ஆய்வுகள், அதன் நிலப்பரப்பில் இருக்கும் கால்வாய்கள் மற்றும் சிற்றலைகள் - பண்டைய காலங்களில், கிரகத்தில் ஆறுகள் மற்றும் ஏரிகள் இருந்திருக்கும் சுவடுகளை பிரதிபலிக்கின்றன. ஆனால் 300 கோடி ஆண்டுகளாக செவ்வாய் கிரகம் பாலைவனமாகவே உள்ளது. செவ்வாய் கிரகம் அதன் வளிமண்டலத்தை இழந்த போது அதன் நீர் இருப்புகளில் சில விண்வெளிக்கு சென்றது. ஆனால், பேராசிரியர் மங்கா, இங்கே பூமியில், "நம்முடைய தண்ணீரின் பெரும்பகுதி நிலத்தடியில் உள்ளது, செவ்வாய் கிரகத்திலும் அப்படி இருக்கலாம்" என்றார். கொல்கத்தா பாலியல் வன்கொடுமை: மருத்துவக் கல்லூரியின் பெண் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?- கள நிலவரம்3 மணி நேரங்களுக்கு முன்னர் ஈலோன் மஸ்க் உடனான பேட்டியில் கமலா ஹாரிஸ், கிம் ஜாங் உன், புதின் குறித்து டிரம்ப் கூறியது என்ன?7 மணி நேரங்களுக்கு முன்னர் செவ்வாயில் மனிதன் குடியேறுவது சாத்தியமாகுமா? நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் அதற்கு நேரடியாக கீழே உள்ள கிரஸ்ட் நிலப்பரப்பின் அதிர்வுகளை மட்டுமே பதிவு செய்ய முடிந்தது, எனவே கிரகம் முழுவதும் ஆய்வு செய்யும் பட்சத்தில் இதே போன்ற நீர்த்தேக்கங்கள் மேலும் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் அரை மைலுக்கு கூடுதல் ஆழமான ஒரு அடுக்கை உருவாக்கும் அளவுக்கு போதுமான திரவ நீர் இருக்கும் என்று அவர்கள் கணக்கிடுகின்றனர். இருப்பினும், செவ்வாய் கிரகத்தின் நிலத்தடி நீரின் இருப்பிடம் பற்றிய தகவல், அந்த கிரகத்தில் மனித குடியேற்றங்களை அமைக்கும் திட்டங்களைக் கொண்டுள்ள கோடீஸ்வரர்களுக்கு நல்ல செய்தி அல்ல, அவர்கள் அதை பயன்படுத்துவதற்கு கடினமான செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.” "திரவ நீர் கிரஸ்ட் நிலப்பரப்பில் 10-20 கிலோமீட்டர் ஆழத்தில் காணப்படுகிறது" என்று பேராசிரியர் மங்கா விளக்கினார். "செவ்வாய் கிரகத்தில் 10 கிமீ ஆழத்துக்கு துளையிடுவது என்பது ஈலோன் மஸ்க்கிற்கு கூட கடினமாக இருக்கும்" என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார். இந்த கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான பகுதிகளை தேடுவதற்கான மற்றொரு இலக்குக்கு வழிக்காட்டியுள்ளது. "திரவ வடிவிலான நீர் இல்லாவிட்டால் நீங்கள் உயிர் வாழும் வாய்ப்பு இல்லை" என்று பேராசிரியர் மங்கா விளக்கினார். "எனவே செவ்வாய் கிரகத்தில் வாழக்கூடிய சூழல்கள் இருக்கும் என்றால், அது இப்போது நிலப்பரப்பின் ஆழமான பகுதியில் தான் சாத்தியம்” என்பது அவரது கருத்து. https://www.bbc.com/tamil/articles/cvg5pzmmq39o
-
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
ஜனாதிபதியை சந்தித்தனர் தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பின் பிரதிநிதிகள் Published By: DIGITAL DESK 3 13 AUG, 2024 | 03:51 PM தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பு பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கிய சூழலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று திங்கட்கிழமை (12) மாலை 4 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் மற்றும் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் வேந்தன் மற்றும் செயலாளர் துளசி ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பு பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கிய சூழலிலே, இந்த சந்திப்புக்கான அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திப்பதற்கான அழைப்பினை தனித்தனியாக அரசியல் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் விடுத்திருந்தார். இந்த அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் இந்த அழைப்புக்கு மதிப்புக் கொடுத்து தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமான தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவும் ரணில் விக்ரமசிங்க, தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்காக முன்னெடுக்க உள்ள நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் இச்சந்திப்பில் பங்கேற்பதென முடிவு செய்தனர். இச் சந்திப்பில், பிரதானமாக தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கும் முகமான சமஸ்டி முறையான அரசியல் தீர்வு தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருப்பதனாலேயே பொது வேட்பாளர் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது என்பது தெளிவு படுத்தப்பட்டது. ஜனாதிபதி தரப்பில் சமஸ்டி முறையான அரசியல் தீர்வு என்பது பலம் மிக்க பாராளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அது சம்பந்தமாக பரிசீலித்து முன்னேற்றகரமான முடிவுகளை எதிர்காலத்தில் எட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. அதுவரைக்கும் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் ஊடாகக் கொண்டுவரப் பட்ட மாகாண சபைக் கட்டமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் அதற்காக தன்னிடம் தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் யோசனைகளடங்கிய ஆவணம் ஒன்றையும் சமர்ப்பித்தார். ஏற்கனவே மாகாண சபையின் பறிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் மீள வழங்குவதாகவும், நிதி உட்பட மேலதிக அதிகாரங்களையும் பொருளாதார அபிவிருத்தி ஆணைக்குழுவையும் மாகாண சபை கொண்டிருக்கும் எனக்கும் தெரிவித்தார். தமிழ் மக்கள் சார்பில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, எஞ்சியுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு மற்றும் அபகரிப்பை தடுப்பது, தமிழ் இளைஞர்கள் யுவதிகள் நீதியற்ற முறையில் கைது செய்யப்படுவது, விசாரணை என்ற போர்வையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கையை நிறுத்துதல், இந்திய மீனவர்களுடைய அத்துமீறலினால் எமது மீனவர்கள் படுகின்ற துன்பம், உட்பட பல விடயங்கள் தீர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டன. இதற்கான தீர்வுகளை தான் நிச்சயமாக வழங்குவதாகவும் ஏற்கனவே சில விடயங்களுக்கான தீர்வுகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் தொல்லியல் விவகாரங்களை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தான் சமர்ப்பித்த ஆவணத்தில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன எனவும், அவற்றைப் பரிசீலித்த பின்னர் தொடர்ந்தும் சந்திப்புகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்க்கு முகமான மேலதிக கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தமது தரப்பிலும் தயாராக இருப்பதாக சொல்லிய தமிழ் தரப்பினர், அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து கருத்து தெரிவிப்பதாக கூறியதுடன் சந்திப்பு நிறைவடைந்தது. https://www.virakesari.lk/article/191002
-
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள “சிவகங்கை” கப்பல்
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை படகு சேவை; ஒன்லைன் பதிவுகள் ஆரம்பம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், கப்பல் சேவைக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தற்போது முடியும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு இயக்கப்படும் இந்த பயணிகள் கப்பல் சேவையில் பயணிக்க ஒன்லைன் மூலம் இருக்கை முன்பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/307778 Passengers can book tickets on the passenger ferry service from midnight today. Visit http://sailindsri.com
-
கல் உப்பு - பொடி உப்பு வேறுபாடு என்ன? உடலுக்கு எது நல்லது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப் பதவி, பிபிசி தமிழ் 13 ஆகஸ்ட் 2024, 10:37 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இன்று உடல்நலத்தைப் பற்றிப் பேசுகையில், பெரும்பாலும் பலரும் கேட்கும், அல்லது எதிர்கொள்ளும் கேள்விகள், ‘எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்கிறீர்கள்?’, ‘ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு உட்கொள்வது ஆரோக்கியமானது?’ ஆகியவைதான். இன்று பொதுவாக, ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு போன்ற வாழ்க்கை முறை நோய்களுடன் உப்பு தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது. அதேபோல், கல் உப்பு, பொடி உப்பு என்று பொதுப் புழக்கத்தில் இருக்கும் இருவகை உப்புகளைப் பற்றியும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இவற்றில் எது ஆரோக்கியமானது என்பது பற்றியும் விவாதங்கள் அடிக்கடி நடக்கின்றன. அதேபோல், இன்று சந்தையில் ராக் சால்ட், லோ சோடியம் சால்ட் அல்லது லைட் சால்ட், ஹிமாலயன் சால்ட் போன்ற பல புதிய வகை உப்புகளும் விற்கப்படுவதைப் பார்க்கிறோம். இவை எப்படி வித்தியாசமனவை? இவற்றை உட்கொள்வது ஆரோக்கியமானதா? இதுபோன்ற கேள்விகளுக்கு விடை காண, பிபிசி தமிழ், மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள் ஆகியோரிடம் பேசியது. அதேபோல், கல் உப்பு, பொடி உப்பு ஆகியவை தயாரிக்கப்படுவதில் உள்ள வித்தியாசம் குறித்து அறிந்துகொள்ள உப்பு உற்பத்தியாளர்களிடமும் பேசியது. அவர்கள் கூறிய கருத்துகள் இங்கே தொகுத்தளிக்கப்படுகின்றன. கல் உப்பு - பொடி உப்பு வேறுபாடு என்ன? நமது அன்றாடப் புழக்கத்தில் இருக்கும் இருவகை உப்புகளான கல் உப்பு மற்றும் பொடி உப்பு ஆகியவை எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள, தூத்துக்குடியைச் சேர்ந்த தன்பாடு உப்பு ஏற்றுமதி மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் தணிக்கையாளர் எஸ்.ராகவனிடம் பேசினோம். முன்னர் கல் உப்பு, கடல் நீரிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும், இன்று தூத்துக்குடி போன்ற இடங்களில் இருக்கும் உப்பளங்களில் பெரும்பாலும் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் நீரைப் பயன்படுத்தியே உப்பு தயாரிக்கப்படுகிறது என்கிறார் அவர். கல் உப்பைப் பொருத்தவரையில், அது உப்பு நீரை உப்பளங்களில் செலுத்தி ஆவியாக்கி, மீந்திருக்கும் உப்புதான் என்கிறார் அவர். “சந்தைக்கு அனுப்பப்பட வேண்டிய கல் உப்பில் அயோடின் சேர்ப்போம்,” என்கிறார். இந்த அயோடின் இரு வழிகளில் சேர்க்கப்படுகிறது. ஒன்று, வயல்களில் பயன்படுத்தப்படுவது போன்ற தெளிப்பான்களில் மனித உதவியுடன் சேர்க்கப்படுகிறது. ஆனால் இதில் அயோடின் சமமாகக் கலக்காது என்கிறார் ராகவன். மற்றொரு முறையில், இயந்திரம் பயன்படுத்தி கல் உப்பில் அயோடின் சேர்க்கப்படுகிறது, இதில் அயோடின் உப்பு முழுவதும் சரிசமமாகச் சென்று சேர்கிறது, என்கிறார் அவர். டேபிள் சால்ட் அல்லது பொடி உப்பு தயாரிக்கப்படும் முறையைப் பற்றிப் பேசிய ராகவன், இதிலும் முதல் படியாக உப்பு நீர் உப்பளங்களில் செலுத்தப்பட்டு, முதலில் கல் உப்பு ஆக்கப்படுகிறது. பின்னர் அது ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதிலிருந்து மீண்டும் உப்பு நீரில் கழுவப்பட்டு, மண் தூசி ஆகியவை நீக்கப்படுகின்றன. பின்னர், அது உலர வைக்கப்பட்டு, அரைப்பான்களில் (crusher) செலுத்தப்பட்டுப் பொடியாக்கப்படுகின்றது. அதன்பின் அதில் இயந்திர முறையில் அயோடின் சேர்க்கப்படுகிறது. “இதில் பொடி உப்பு கட்டிகளாகாமல் மணல்-மணலாக இருக்கச் சிறிது சிலிகேட் என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது,” என்கிறார் அவர். உணவுப் பயன்பாட்டிற்காகத் தயாரிக்கப்படும் உப்பில் கண்டிப்பாக அயோடின் சேர்க்கப்பட வேண்டும் என்பது அரசின் விதி. அதை உறுதி செய்ய உப்பு ஆலைகளில் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்கிறார் ராகவன். தாய் மட்டுமல்ல, தந்தை மது குடித்தாலும் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் - எச்சரிக்கும் புதிய ஆய்வு11 ஆகஸ்ட் 2024 வெள்ளையனே வெளியேறு போராட்டம் - மதுரையில் என்ன நடந்தது? காமராஜர் என்ன செய்தார்?10 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பளங்களில் தயாரிக்கப்படும் கல் உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது? சரி, கல் உப்பு, பொடி உப்பு இந்த இருவகை உப்புகளில், எது உடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்தது என உணவியல் நிபுணர்கள், சிறுநீரக மருத்துவர்கள் ஆகியோரிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், இரண்டிலும் அயோடின் அளவுகளில் வேறுபாடுகள் இருந்தாலும், சோடியம் அளவில் எந்த பெரிய மாற்றமும் இல்லை என்கின்றனர். “உப்பு என்பது பொதுவாக சோடியம் குளோரைட் தான். அது எந்த வடிவில் இருந்தாலும், சோடியம் அளவு ஒன்றுதான்,” என்கிறார் சென்னை மியாட் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறைத்தலைவர் மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன். இதே கருத்தைப் பிரதிபலிக்கும் சென்னை அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த தலைமை உணவியல் நிபுணர் மருத்துவர் டாஃப்னி லவ்ஸ்லி, "அயோடின் அளவு மாறுபடுவதால் உப்பின் சுவையில் சற்று வித்தியாசம் இருக்கலாம், ஆனால் அடிப்படையில் இரு வகை உப்புகளிலும் சோடியம் அளவு ஒன்றுதான்," என்கிறார். அதனால் கல் உப்பு, பொடி உப்பு, இருவகை உப்புகளையும் எவ்வளவு குறைவாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று இருவரும் கூறுகின்றனர். உங்கள் ஆரோக்கியத்தைக் காட்டும் இடுப்புச் சுற்றளவு - எப்படி அறியலாம்?6 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,DR RAJAN RAVICHANDRAN படக்குறிப்பு,மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன், சென்னை மியாட் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறைத் தலைவர் உப்பு உடலுக்கு என்ன செய்கிறது? உப்பு உடலுக்குத் தேவை என்றாலும் கூட, அதிகளவில் உப்பை தொடர்ந்து உட்கொண்டால், அது உடலுக்குக் கேடு என்கிறார் மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன். இதுகுறித்துப் பேசிய அவர், சோடியம் நீரை உறிஞ்சும் தன்மையுடையது, அதனால் அது ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதயம், மூளை, சிறுநீரகம் ஆகியவற்றைப் பாதிக்கிறது என்கிறார். “அதிகளவில் உப்பை தொடர்ந்து உட்கொண்டால், இருதயத்தின் ரத்த நாளங்கள் சேதமடைந்து மாரடைப்பு ஏற்படலாம், மூளையின் நாளங்கள் சேதமடைந்து பக்கவாதம் வரலாம், சிறுநீரகத்தின் நாளங்கள் சேதமடைந்து சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்படுகின்றன,” என்கிறார் அவர். அதிக உப்பால் சிறுநீரகத்துக்கு என்ன பிரச்னை? உப்புக்கும் சிறுநீரகத்துக்கும் உள்ள உறவு குறித்துப் பேசிய மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன், பொதுவாக சிறுநீரகங்கள் நமது உடலில் தினமும் 180 லிட்டர் ரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன, என்கிறார். “அதில் 1.5 லிட்டர் தான் சிறுநீராக வெளிவருகிறது. சாதாரணமாகச் சிறுநீரில் புரதம் வெளியேறாது. ஆனால், சிறுநீரக நாளங்கள் சேதமடைந்தால், சிறுநீரில் புரதமும் வெளியேறும்,” என்கிறார் அவர். பட மூலாதாரம்,DR DAPHNEE LOVESLEY படக்குறிப்பு,மருத்துவர் டாஃப்னி லவ்ஸ்லி, தலைமை உணவியல் நிபுணர், சென்னை அப்போலோ மருத்துவமனை புதிய வகை உப்புகள் இன்று சந்தையில் ‘லைட் சால்ட்’, ‘ராக் சால்ட்’ போன்றவை விற்கப்படுகின்றன. இவை என்ன? இவை உடலுக்கு ஆரோக்கியமானதா என மருத்துவர்களிடம் கேட்டோம். இதற்கு பதிலளித்த மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன், பொதுவாகக் கடல் நீரில் இருந்து எடுக்கப்படும் உப்புக்கு பதிலாகப் பாறைகளைக் குடைந்து எடுக்கப்படும் உப்புகள் தான் ராக் சால்ட், என்கிறார் அவர். “இதில் கால்சியம், மெக்னீசியம் போன்ற தனிமங்களும் இருக்கும்,” என்கிறார் அவர். அதேபோல், இப்போது சோடியத்தால் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்க, ‘லோ சோடியம் சால்ட்’ அல்லது ‘லைட் சால்ட்’ என்ற ஒரு வகை உப்பு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில், சோடியத்தின் அளவு குறைக்கப்பட்டு, அதற்குப் பதில் 15%-20% பொட்டாசியம் சேர்க்கப்படுகிறது. “சூப்பர் லைட் வகை உப்புகளில், 30% கூட பொட்டாசியம் சேர்க்கப்படலாம்,” என்கிறார் மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன். ஆனால்,பொட்டாசியம் சேர்க்கப்படும் உப்புகளை மருத்துவர் அல்லது உணவியல் நிபுணர்களைக் கலந்தாசிக்காமல் உட்கொள்ள வேண்டாம், என்கின்றனர் மருத்துவர்கள். “லைட் சால்ட் வகை உப்பையும் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு உட்கொள்வதே நல்லது,” என்கிறார் உணவியல் நிபுணர் மருத்துவர் டாஃப்னி லவ்ஸ்லி. “ஏனெனில், இந்த லைட் உப்பு இருதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் உட்கொள்ளவது நல்லதல்ல, ஏனெனில், இது உடலில் பொட்டாசியம் அளவைச் சீர்குலைத்துவிடும்,” என்கிறார் அவர். உடலுக்கு எவ்வளவு உப்பு நல்லது? இதற்கு பதிலளித்த மருத்துவர் டாஃப்னி லவ்ஸ்லி, இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் பரிந்துரையின் படி, நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு தான் உட்கொள்ள வேண்டும் என்கிறார். “ஆனால், நமது உணவுப் பழக்கத்தில், ஊறுகாய், அப்பளம் ஆகியவற்றை உண்பதால், நாளொன்றுக்கு 7 கிராம் முதல் 8 கிராம் வரைகூட உப்பை உட்கொள்கிறோம்,” என்கிறார் அவர். மேலும், “உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை உண்டாகப் பல காரணிகள் உள்ளன. அவற்றில் ஒன்று உப்பு. புறக் காரணிகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், நாம் உட்கொள்ளும் உப்பின் அளவை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதனால் உப்பு உட்கொள்ளும் அளவை நாம் கட்டுப்படுத்துவது அவசியம்,” என்கிறார் அவர். “குழந்தைகளுக்கு ஆரம்பம் முதலே உப்பின் அளவைக் குறைவாகக் கொடுத்துப் பழக்க வேண்டும். அப்போது அவர்களது சுவை உணர்வு அதற்கேற்ப பழகிவிடும். பிறகு அவர்கள் சுவைக்காக அதிக உப்பைத் தேடிச்செல்ல மாட்டார்கள்,” என்கிறார் மருத்துவர் டாஃப்னி லவ்ஸ்லி. https://www.bbc.com/tamil/articles/ce38lvnzkggo