Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. இந்தியாவுக்கு எதிராக 172 ரன்கள்: பாகிஸ்தானின் இளம் கிரிக்கெட் வீரர் சமீர் மின்ஹாஸின் பின்னணி என்ன? பட மூலாதாரம்,PCB 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை துபையில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் இந்த வெற்றிக்கு நாயகனாக திகழ்ந்தவர் சமீர் மின்ஹாஸ். இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய பிறகு, பாகிஸ்தான் அண்டர்-19 கிரிக்கெட் அணி இஸ்லாமாபாத் சென்றடைந்தபோது, அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட்டர் சமீர் மின்ஹாஸ் வெறும் 113 பந்துகளில் 172 ரன்கள் குவித்தார். ஆடுகளத்தில் நிலைத்து நின்று ஆடிய இந்த அதிரடி ஆட்டம், பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் நகரத்தைச் சேர்ந்த சமீர் மின்ஹாஸை பேசு பொருளாக மாற்றியுள்ளது. பாகிஸ்தானின் தற்போதைய மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலருடன், அந்நாட்டுப் பிரதமர் மற்றும் அதிபரும் பாரம்பரிய போட்டியாளரான இந்தியாவை வீழ்த்துவதில் முக்கியப் பங்கு வகித்ததற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் வசமானது சமீபத்திய ஆண்டுகளில் பலமுறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதியபோது, இறுதியில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் இந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் வசமானது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நேரடி மோதல்களின் கடந்த கால சாதனைகள் பாகிஸ்தான் ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்வது வழக்கம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை, துபையில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அண்டர்-19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தது, ஆனால் இந்த முடிவு பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், இந்தியா வெற்றி பெற 348 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்தது. சமீர் மின்ஹாஸின் அதிரடி ஆட்டம் பட மூலாதாரம்,PCB படக்குறிப்பு,இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் பாகிஸ்தான் அண்டர்-19 அணிக்கு வரவேற்பு. பாகிஸ்தான் தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் சமீர் மின்ஹாஸ் அபாரமாக பேட்டிங் செய்து 17 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களுடன் 113 பந்துகளில் 172 ரன்கள் எடுத்தார். சமீர் மின்ஹாஸ் தனது சதத்தை வெறும் 71 பந்துகளில் பூர்த்தி செய்தார். இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனான சமீர் மின்ஹாஸ், இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் திகழ்ந்தார். பாகிஸ்தான் தரப்பில் சமீரைத் தவிர, அகமது ஹுசைன் 72 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். உஸ்மான் கான் 35 ரன்களும், கேப்டன் ஃபர்ஹான் யூசுப் 19 ரன்களும், ஹம்சா ஜுஹூர் 18 ரன்களும் எடுத்தனர். முகமது சியாம் 13 ரன்களுடனும், நகாப் ஷஃபிக் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தானின் முதல் விக்கெட் 31 ரன்கள் எடுத்திருந்தபோது நான்காவது ஓவரில் விழுந்தது, தொடக்க ஆட்டக்காரர் ஹம்சா ஜுஹூர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு சமீர் மின்ஹாஸுடன் இணைந்த உஸ்மான் கான் 17-வது ஓவர் வரை ஒரு முனையைத் தக்கவைத்துக் கொண்டார், மற்றொரு முனையில் சமீர் மின்ஹாஸ் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். 17-வது ஓவரில் உஸ்மான் கானை கிலன் படேல் ஆட்டமிழக்கச் செய்தார். இந்தியா தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் மூன்று விக்கெட்டுகளையும், கிலன் படேல் மற்றும் ஹெனில் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சமீர் மின்ஹாஸ் யார்? பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை வென்றது. ஆனால் இந்த போட்டியில் பாகிஸ்தானின் மலை போன்ற ஸ்கோருக்கு காரணமாக இருந்த அந்த இளம் வீரருக்கு நீண்ட இன்னிங்ஸ் விளையாடுவதில் தனி ஆர்வம் உண்டு. தெற்கு பஞ்சாபின் முல்தான் நகரைச் சேர்ந்த சமீர் மின்ஹாஸ் பெரிய இன்னிங்ஸ் விளையாடி அணிக்கு வலுவான தொடக்கத்தை அளிப்பது இது முதல் முறையல்ல. இதே தொடரின் இரண்டாவது போட்டியில் (பாகிஸ்தானின் முதல் ஆட்டம்), மலேசியாவிற்கு எதிராக அவர் ஆட்டமிழக்காமல் 177 ரன்கள் எடுத்திருந்தார். மலேசியாவிற்கு எதிரான அந்த இன்னிங்ஸில் அவர் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களை விளாசினார். வெறும் 19 வயது மற்றும் 19 நாட்களில் இரண்டு பெரிய இன்னிங்ஸ்களை விளையாடிய சமீர் மின்ஹாஸ், டிசம்பர் 2, 2006 அன்று முல்தானில் பிறந்தார். வலது கை தொடக்க ஆட்டக்காரரான சமீர் மின்ஹாஸ், ஏற்கனவே ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பாகிஸ்தானுக்காக நான்கு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அராஃபத் மின்ஹாஸின் தம்பி ஆவார். அராஃபத் 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் ஹாங்காங், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடியிருந்தார். பாத்வே அமைப்பிலிருந்து உருவான வீரர் பட மூலாதாரம்,ACC பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாத்வே அமைப்பிலிருந்து வெளிவந்த இளம் வீரர்களில் சமீர் மின்ஹாஸும் ஒருவர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெறுவதற்கு முன்பு, அவர் முல்தான் மண்டல அண்டர்-13, தெற்கு பஞ்சாப் அண்டர்-16, முல்தான் அண்டர்-19 மற்றும் முல்தான் மண்டல அண்டர்-19 அணிகளில் இடம்பெற்றிருந்தார். கடந்த மாதம் வரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இளைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் தலைவராக இருந்த முன்னாள் கேப்டன் அசார் அலி, சமீர் மின்ஹாஸை எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த வீரர் என்று குறிப்பிட்டுள்ளார். பத்திரிகையாளர் உமைர் அல்வியிடம் பேசிய அசார் அலி, இந்த ஆண்டு முதன்முறையாக கராச்சியில் நடந்த பயிற்சி முகாமில் சமீர் மின்ஹாஸைப் பார்த்தபோதே தான் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார். அசார் அலியின் கூற்றுப்படி, "அவரது பேட்டிங் நுட்பம் மற்றும் ஷாட் தேர்வு மிகவும் சிறப்பாக இருந்தது. இதில் இன்னும் உழைத்தால், அவர் எதிர்காலத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு நல்ல வீரராகத் திகழ்வார்." அசார் அலியின் கருத்துப்படி, சமீர் மின்ஹாஸின் வெற்றிக்கு பின்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாத்வே அமைப்பு உள்ளது, அதன் மூலமே அவர் முன்னுக்கு வந்தார். அவர் ஒவ்வொரு வயதுப் பிரிவு மட்டத்திலும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டார், அதன் காரணமாகவே உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பைக்கு முன்னதாக நடத்தப்பட்ட பயிற்சி முகாம்களில் அவர் சேர்க்கப்பட்டார். "நான்கு மாதங்களுக்கு முன்பு பயிற்சி முகாமில் சமீர் மின்ஹாஸ் கடுமையாக உழைத்தார், அதன் பலன் இன்று அனைவர் முன்னிலையிலும் உள்ளது. அவர் ஒரு சிறந்த டாப்-ஆர்டர் பேட்டர் மட்டுமல்ல, எதிர்காலத்தில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒரு சிறந்த ஃபீல்டரும் கூட." என அசார் அலி தெரிவித்தார். ஆசியக் கோப்பையில் இரண்டு சதங்கள் அடித்த சமீர் மின்ஹாஸ், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உள்நாட்டு தொடரிலும் அதிக ரன்கள் குவித்தவர் என்றும், அங்கு இரண்டு சதங்கள் அடித்துத் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார் என்றும் அசார் அலி கூறினார். அவரது கருத்துப்படி, மலேசியா அண்டர்-19 அணிக்கு எதிரான சமீரின் சதத்தை மறக்க முடியாது, மேலும் இந்தியாவிற்கு எதிரான நாக்-அவுட் போட்டியில் அவரது அதிரடியான அதேசமயம் பொறுப்பான பேட்டிங் அவரது திறமைக்கான வெளிப்படையான சான்றாகும். சமூக ஊடகங்களில் சமீர் மின்ஹாஸ் பற்றிய விவாதம் சமூக ஊடகங்களிலும் சமீர் மின்ஹாஸ் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், இந்தியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் சமீர் பேட்டிங் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, "சமீர் மின்ஹாஸ், என்ன ஒரு அற்புதமான வீரர்" என்று பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீஃப் கூறுகையில், "சமீர் மின்ஹாஸ் அண்டர்-19 ஆசியக் கோப்பை தொடரில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டார். அவர் இந்தத் தொடரில் 471 ரன்கள் குவித்துள்ளார். என்ன ஒரு சிறப்பான ஆட்டம்," என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு எக்ஸ் பயனர், "இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் சமீரின் அபாரமான ஆட்டம். என்ன ஒரு அற்புதமான இளம் வீரர்" என்று எழுதியுள்ளார். ஷாகிர் அப்பாசி என்ற பயனர், "கவனமாகப் பாருங்கள்... சமீர் மின்ஹாஸின் கிளாஸ். என்ன ஒரு வீரர். என்ன ஒரு அற்புதமான இன்னிங்ஸ். இறுதிப் போட்டியில் 172 ரன்கள், அதுவும் இந்தியாவிற்கு எதிராக - இதை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்" என்று பதிவிட்டுள்ளார். ஹாரூன் என்ற பயனர், "சமீர் மின்ஹாஸ் ஒரு உண்மையான பேட்டர். அவர் சூழ்நிலையை நன்றாகப் புரிந்துகொண்டு அதைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர். அவரிடம் வலுவான தடுப்பு ஆட்டம் உள்ளது மற்றும் பெரிய ஷாட்களையும் விளையாட முடியும். அவர் தனது செயல்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துவார் என்று நம்புகிறேன்" என எழுதியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpwk9xnwv9do
  2. அத தெரண கருத்துப்படம்.
  3. உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் ஆரம்பிக்க தயாராகிறது ஜப்பான் Published By: Digital Desk 3 22 Dec, 2025 | 12:02 PM உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் இயங்க ஜப்பானின் நீகாட்டா மாநிலம் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு ஜப்பானில் நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டதால் மூடப்பட்ட அணு மின் நிலையங்களில் டோக்கியோவிலிருந்து சுமார் 220 கிலோமீட்டர் வடமேற்கே அமைந்துள்ள கஷிவஸாகி-கரிவா (Kashiwazaki-Kariwa) அணு மின் நிலையமும் ஒன்றாகும். தற்போது செயல்படக்கூடிய 33 அணு மின் நிலையங்களில் 14 மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. புகுஷிமா மின் நிலையத்தை இயக்கிய டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம் (TEPCO) மீண்டும் காஷிவசாகி–கரிவா அணு மின் நிலையத்தை இயக்க உள்ளது. நீகாட்டா மக்களுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தை போலவே இம்முறை ஏற்படாது என்பதில் கவனம் செலுத்தப்படும் என டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் மசகத்சு தகதா தெரிவித்துள்ளார். அனுமதி கிடைத்தால், இந்த நிலையத்தில் உள்ள ஏழு அணு உலைகளில் முதலாவதைக் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அன்று மீண்டும் இயக்க டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம் பரிசீலணை செய்து வருவதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு சேவை தெரிவித்துள்ளது. ஆனால் செயல்படுத்தும் திகதி தொடர்பில் எந்த தகவலையும் தகதா தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/234079
  4. அஸ்வெசும பயனாளிகளுக்கான விசேட அறிவிப்பு! Dec 22, 2025 - 07:20 PM அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் திட்டத்தின் முதற் கட்டத்தின் கீழ் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகளுக்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. இதற்கமைய, தற்போது இத்திட்டத்தின் கீழ் நன்மைகளை பெறுபவர்கள் மற்றும் விண்ணப்பித்து இன்னும் நன்மைகளை பெறாதவர்கள் என அனைத்து தரப்பினரதும் தகவல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. தகவல்களை இதுவரை புதுப்பிக்காத அனைவரும் பின்வரும் முறைகளில் அதனைச் செய்துகொள்ள முடியும்: https://www.eservices.wbb.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று ஒன்லைன் (Online) மூலம் தகவல்களைப் புதுப்பிக்கலாம். அந்தந்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் கிராம உத்தியோகத்தர் அல்லது அஸ்வெசும திட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தரைச் சந்தித்து, தொழில்நுட்ப உதவியுடன் ஒன்லைனில் தகவல்களைப் புதுப்பிக்கலாம். உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தாம் வசிக்கும் பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் ஒப்படைப்பதன் மூலம் தகவல்களைப் புதுப்பிக்கலாம். அருகில் உள்ள தகவல் தொடர்பு மையங்களுக்கு சென்று, அங்குள்ள தொழில்நுட்ப உதவியுடன் ஒன்லைனில் தகவல்களைப் புதுப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjh7rdwo030do29nldmf1510
  5. வரலாற்றில் அதிகூடிய வருமானத்தை பெற்ற இறைவரித் திணைக்களம் Dec 22, 2025 - 06:44 PM 2025 ஆம் ஆண்டிற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 2,203 பில்லியன் ரூபாய் வருடாந்த வருமான இலக்கை அடைவதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெற்றியடைந்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் பதிவான அதிகூடிய வரி வருமானம் இதுவாகும். அத்துடன் எதிர்வரும் சில நாட்களில் இதனை மேலும் அதிகரித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்காக நேரடி மற்றும் மறைமுக வரி செலுத்துவோர் வழங்கிய பங்களிப்பிற்கு, அரசாங்கம் மற்றும் திணைக்களத்தின் சார்பில் குறித்த அறிவிப்பின் ஊடாக நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjh6h979030bo29ndqhq9c91
  6. நாட்டை வந்தடைந்தார் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் Dec 22, 2025 - 06:19 PM இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாகவே ஜெய்சங்கர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தமது விஜயத்தின் போது ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை மேலும் உறுதிப்படுத்துவதே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயத்தின் பிரதான நோக்காகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmjh5kbcm030ao29ne1271jm9
  7. அனர்த்த நிவாரணம் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வௌியீடு Dec 22, 2025 - 05:18 PM அனர்த்த நிவாரணங்களுக்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பான சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது. 'டித்வா' புயலினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்மொழியப்பட்ட நிவாரணங்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய புதிய சுற்றுநிருபம் ஒன்றை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது. 2025-12-05 ஆம் திகதியிட்ட வரவு செலவுத்திட்ட சுற்றுநிருப இலக்கம் 08/2025 இனால் முன்மொழியப்பட்ட நிவாரணத் திட்டத்தை, மேலும் வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்துவதற்காக புதிய உட்சேர்ப்புகள், தெளிவுபடுத்தல்கள் மற்றும் திருத்தங்களை உள்ளடக்கி இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, வரவு செலவுத்திட்ட சுற்றுநிருப இலக்கம் 08/2025 இல் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையின் 3, 5, 6, 7, 9, 11, 12 மற்றும் 14 ஆகிய விடயங்கள் திருத்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட சுற்றுநிருபம் கீழே தரப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjh3dvrg0308o29n94wqktfg
  8. உக்ரைன் மீது 1300 ட்ரோன் தாக்குதல்களை நடத்திய ரஷ்யா; போர், தொடங்கிய இடத்துக்கே திரும்பும்! - உக்ரைன் ஜனாதிபதி 22 Dec, 2025 | 11:39 AM கடந்த வாரம் உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 1300 ட்ரோன் தாக்குதல்கள், 1200 வான்வழிக் குண்டுத் தாக்குதல்கள், 9 ஏவுகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களில் உக்ரைனின் ஒடேசா பகுதியும் நாட்டின் தெற்குப் பிராந்தியங்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். தாக்குதல்களால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர பல்வேறு துறைகளில் சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “ரஷ்யாவின் பயங்கரவாதத் தாக்குதல்களை பல்வேறு மட்டங்களில் உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் நிதிப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பல நாடுகளும் நிதி உதவி அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. 2026 - 2027 ஆண்டு காலப்பகுதிக்கு ஐரோப்பிய கவுன்சில் (European Council) 90 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நோர்வே, ஜப்பான் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது. போர்ச்சுக்கல் நாட்டுடனான கடல்சார் ட்ரோன் ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போரை அமைதியான முறையில் முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக நாமும் தேவைக்கேற்ப செயற்பட்டு வருகிறோம். போர் எந்த லாபத்தையும் தந்துவிடாது. எங்கிருந்து போர் தொடங்கியதோ, அங்கேயே அது திரும்பப் போய் நிற்கும் என்பதை போரைத் தொடங்கியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/234076
  9. யாழ்தேவியின் பயணம் மீண்டும் ஆரம்பம் Dec 22, 2025 - 04:42 PM வடக்கு ரயில் மார்க்கம், ரயில் போக்குவரத்திற்கு முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை மறுதினம் (24) முதல் வடக்கு ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி ரயிலை பின்வருமாறு சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்தேவி ரயிலில் முதலாம் வகுப்பு (குளிரூட்டப்பட்ட) மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசனங்களை முற்பதிவு செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmjh24gth0306o29n37enym1p
  10. ‘டித்வா’ சூறாவளியால் இலங்கையில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் உடமைகள் சேதம் – உலக வங்கி அறிக்கை Published By: Vishnu 22 Dec, 2025 | 08:13 PM கடந்த நவம்பர் மாத இறுதியில் இலங்கையை தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் கட்டிடங்கள், சொத்துக்கள், விவசாயம், உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட சேதத்தின் மதிப்பு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் (USD) என உலக வங்கி குழுமத்தின் Global Rapid Post-Disaster Damage Estimation (GRADE) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேதம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) சுமார் 4 சதவீதத்திற்கு சமமானதாகும். இலங்கையின் சமீப வரலாற்றில் மிகவும் தீவிரமான மற்றும் அழிவுகரமான சூறாவளிகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘டித்வா’ சூறாவளியால், நாட்டின் 25 மாவட்டங்களிலும் 5 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வாழ்வாதாரங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் தேசிய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் பொருட்கள் இந்த GRADE அறிக்கை, அவசர நிவாரண நடவடிக்கைகள், மீட்பு திட்டமிடல் மற்றும் நீண்டகால பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் முக்கிய தகவல்களை வழங்குகிறது. இது உலக வங்கியின் விரைவான, தொலைநிலை மற்றும் மாதிரி அடிப்படையிலான மதிப்பீட்டு முறையை பயன்படுத்தி, கட்டடங்கள், விவசாயம் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட நேரடி பொருளாதார சேதங்களை கணக்கிட்டுள்ளது. எனினும், வருமான இழப்புகள், உற்பத்தி இழப்புகள் அல்லது முழுமையான மீள் கட்டுமான செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை. மத்திய மாகாணம் கடுமையாக பாதிப்பு மத்திய மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கண்டி மாவட்டத்தில் மட்டும் சுமார் 689 மில்லியன் அமெரிக்க டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வெள்ளப்பெருக்குகளும், ஓரளவு மண்சரிவுகளுமாகும். உட்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் பாதைகள், பாலங்கள், ரயில் பாதைகள் மற்றும் நீர்வழங்கல் வலையமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுக்கே அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 1.735 பில்லியன் அமெரிக்க டொலர், இது மொத்த சேதத்தின் 42 சதவீதம் ஆகும். இதனால் போக்குவரத்து, சந்தை அணுகல் மற்றும் அடிப்படை சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், விவசாயம், கல்வி – கடுமையான தாக்கம் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புக்கள் : சுமார் 985 மில்லியன் அமெரிக்க டொலர் சேதம் விவசாயம்: நெல், காய்கறி பயிர்கள், கால்நடை, உள்நாட்டு மீன்பிடி உள்ளிட்ட துறைகளில் சுமார் 814 மில்லியன் டொலர் சேதம் பாடசாலைகள், வைத்தியசாலைகள், தொழிற்சாலைகள் போன்ற குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு சுமார் 562 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது. இவை கல்வி, சுகாதாரம் மற்றும் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளை பெரிதும் பாதித்துள்ளன. பாதுகாப்பற்ற சமூகங்களுக்கு அதிக அபாயம் வறுமை, அடிப்படை சேவைகளின் குறைவு மற்றும் காலநிலை அபாயங்களுக்கு உட்பட்ட நிலை போன்ற முன்கூட்டிய சமூக-பொருளாதார பலவீனங்கள், இந்த சூறாவளியினால் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கான நிர்வாகி கேவோர்க் சர்க்ஸ்யான் இதுகுறித்து கூறுகையில், “பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீண்டகால சமூகப் பலவீனங்கள் மக்கள் அதிக ஆபத்தில் தள்ளப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பல குடும்பங்கள் பெண்கள் அல்லது முதியவர்கள் தலைமையிலானவையாக உள்ளன. இதனால் சமூக மையமான மீட்பு நடவடிக்கைகள் அவசியமாகின்றன” என தெரிவித்துள்ளார். உலக வங்கியின் அவசர உதவி சூறாவளிக்குப் பின்னர் உடனடியாக உலக வங்கி குழுமம், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் கீழ் 120 மில்லியன் அமெரிக்க டொலர் வரை நிதியை திரட்டி, சுகாதாரம், குடிநீர், கல்வி, விவசாயம் மற்றும் போக்குவரத்து சேவைகளை மீட்டெடுக்க உதவி வழங்கியுள்ளது. மீட்பு செலவுகள் மேலும் அதிகமாகும் இந்த 4.1 பில்லியன் டொலர் மதிப்பீட்டை விட, முழுமையான மீட்பு மற்றும் மீள் கட்டுமான தேவைகள் இன்னும் அதிகமாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. மனிதாபிமான தேவைகள், வாழ்வாதார மீட்பு, காலநிலைத் தாங்கும் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முழுமையான மீட்பு திட்டங்கள் அவசியம் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது. இந்த மதிப்பீட்டினை மேற்கொள்ள உலக வங்கி, இலங்கை அரசின் வெளிநாட்டு வளத் துறை, நிதியமைச்சகம், தேசிய திட்டமிடல் துறை மற்றும் பேரிடர் முகாமைத்துவ மையம் ஆகியவற்றுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234142
  11. கடலுக்கு அடியில் தங்கப் புதையல் - ஆசியாவையே அதிர வைத்த சீனா Published By: Digital Desk 2 22 Dec, 2025 | 10:31 AM உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ள போதிலும், தங்க கையிருப்பில், ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. 2021 இல் இருந்து தங்கப் படிமங்களைக் கண்டுபிடிப்பதில் சீனா தீவிரம் காட்டி வரும் நிலையில் வடகிழக்கு மாகாணமான லியானிங்கில், 14.44 இலட்சம் கிலோ தங்க இருப்பு கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஷான்டாங் மாகாணத்தின் யாண்டாய் நகரில் உள்ள லைஜோ கடற்கரைக்கு அப்பால், கடலுக்கு அடியில் ஒரு பிரமாண்ட தங்கப் படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது. இது ஆசியாவின் கடலுக்கடியில் உள்ள மிகப்பெரிய தங்க இருப்பு எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் கண்டறியப்பட்ட இந்த தங்க இருப்பின் வாயிலாக லைஜோவின் ஒட்டுமொத்த தங்க இருப்பு 39 இலட்சம் கிலோவுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது சீனாவின் தேசிய தங்க இருப்பில் தோராயமாக 26 சதவீதமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் வாயிலாக லைஜோ பகுதி, சீனாவின் தங்க இருப்பு மற்றும் தங்க உற்பத்தி ஆகிய இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது என, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234058
  12. இணைய வழி பண மோசடிகள் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு கணினி அவசர தயார் நிலை குழு எச்சரிக்கை Published By: Digital Desk 2 22 Dec, 2025 | 09:42 AM இணையத்தளங்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி மேற்கொள்ளப்படும் பண மோசடி சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக கணினி அவசர தயார் நிலை குழு தெரிவித்துள்ளது. இணைய வழியாக பொருட்களை கொள்வனவு செய்யும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் குறித்து சரியான மற்றும் நம்பகமான தகவல்களை முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அதன் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த அறிவுறுத்தியுள்ளார். மேலும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாக கூறி தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நடைபெறும் பண மோசடிகள் தொடர்பாக கடந்த சில நாட்களாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், அறிமுகமில்லாத நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு வங்கி கணக்கு விவரங்கள், OTP குறியீடுகள் அல்லது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் தொடர்பில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/234057
  13. இலங்கை வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு Published By: Digital Desk 2 22 Dec, 2025 | 09:50 AM (இணையத்தள செய்திப் பிரிவு) சீன– இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர புரிதலை ஆழப்படுத்தவும், நடைமுறை ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) உயர்மட்ட குழு ஒன்று இலங்கைக்கு வருகை தர உள்ளது. அதன்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் சீன கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான வாங் ஜுன்ஷெங் தலைமையிலான இந்த குழு, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 23 முதல் 25 வரை இலங்கையில் தங்கியிருந்து அதிகாரபூர்வ சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளது. இந்த வருகையின் போது, இரு நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதார, வர்த்தகம், முதலீடு, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உடனான சந்திப்புகளின் போது, சீன–இலங்கை நட்புறவின் எதிர்கால நிலைவரம், பிராந்திய மற்றும் சர்வதேச முக்கிய விடயங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சீன–இலங்கை உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கியமான மைல்கல்லாக இந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழுவின் வருகை அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/234059
  14. யாழில் வன்முறைக் குழு அட்டகாசம் - பல உடைமைகள் சேதம்! Dec 22, 2025 - 10:14 AM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக் குழுவொன்று நேற்று (21) இரவு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. கைக்குழந்தைகளுடன் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள்கள், கத்திகள் மற்றும் கற்களுடன் வருகை தந்த குழுவொன்றே கட்டைக்காடு கிழக்கு பகுதியில் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இத்தாக்குதலின் போது வீட்டிலிருந்த உழவு இயந்திரம், வாகனம், வீட்டுப் பொருட்கள் மற்றும் கதவுகள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த வன்முறைக் குழுவினர் கட்டைக்காடு கிழக்கு பகுதியில் மதுபோதையில் நீண்ட நாட்களாக அப்பகுதி குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது குறித்து மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் உள்ள போதிலும், சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் தயக்கம் காட்டுவதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் குற்றம் சுமத்தியுள்ளார். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmjgo8o0o02zno29n5j348tat
  15. இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு Dec 22, 2025 - 08:01 AM இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி செய்வது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தளம் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்வதாயின், சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பில் சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என அதன் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்தார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறி இடம்பெறும் மோசடிகள் தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நிரோஷ் ஆனந்த மேலும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmjgjihvc02zho29nd2entzzf
  16. காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை Dec 22, 2025 - 12:00 PM நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரக் குறியீடு தற்போது 150 முதல் 200 வரை உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்தார். கடந்த சில நாட்களாக காற்றின் தரம் வீழ்ச்சியடைந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணித்தியாலங்களிலும் இந்த நிலைமை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு காற்றின் தரம் குறைவடைவது உணர்திறன் கொண்ட நபர்களுக்கு (sensitive groups) பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும், சுவாசிப்பதில் சிரமம் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார். சர்வதேச எல்லைகளுக்கு இடையிலான காற்று சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவபெயர்ச்சி காலநிலை தீவிரமடைந்துள்ளமை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கலாநிதி அஜித் குணவர்தன சுட்டிக்காட்டினார். அத்துடன், மனித செயற்பாடுகளும் காற்றின் தரம் குறைவடைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். விசேடமாக தீ வைப்புக்கள், வாகன புகை வெளியேற்றம் போன்றவை இதற்கு காரணமாக அமைவதுடன், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற பொருட்களை எரிப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபை நாட்டின் வளிமண்டலத் தரச் சுட்டி அல்லது வளிமண்டலத்தின் தரம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmjgs18rk02zqo29n9cxb3trk
  17. இது கடைசியாக இந்த வருடத்தில் A/L சிறப்பு சித்தியடைந்தவர்களுக்கு(3A) மட்டும் என்று தான் நினைக்கிறேன் அக்கா.
  18. ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு Published By: Vishnu 21 Dec, 2025 | 07:39 PM க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 274 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வழங்கப்பட்டது. அனைத்து மாகாணங்களிலும் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 3,000 மாணவர்களை கௌரவிக்கும், இந்த ஆண்டின் நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் வட மாகாண நிகழ்ச்சித்திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (21) முற்பகல் கிளிநொச்சி நெலும் பியச வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயர் சித்தி பெற்ற 274 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு தலா 100,000 ரூபா ஊக்கவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இதற்காக ஜனாதிபதி நிதியம் 27.4 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. நாட்டில் மாகாண மட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் தொடரின் இறுதி நிகழ்ச்சி இதுவாகும். இதன் மூலம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 3,000 மாணவர்களை ஜனாதிபதி நிதியம் கௌரவித்துள்ளது. நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கு இடையில் வேறுபாடு இன்றி, நாட்டின் ஒவ்வொரு பாடசாலையிலும் உள்ள பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார். மக்களுக்கு உரிய ஜனாதிபதி நிதியம், மேலும் மக்களை நெருங்கச் செய்வதிலும், இந்நாட்டுப் பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிப்பதிலும் ஆற்றிய பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சித் திட்டம் யாழ் மாவட்டத்தில் தொடங்கியது. இன்று, இந்த நிகழ்ச்சித்திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் இறுதி நிகழ்வு, யாழ் மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஜனாதிபதி நிதியம் என்பது மக்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய நிதியமாகும். தற்போதைய அரசாங்கம் இந்த நிதியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ் மாவட்டத்தை கல்வியின் மையமாக மாற்ற வேண்டும். வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், எமது மக்களும் எமது பிள்ளைகளுமே இருக்கின்றனர். ஒவ்வொரு பாடசாலையும் எமது பாடசாலை. தேசிய-மாகாண பிளவை மறந்துவிடுங்கள். அந்த அனைத்து பாடசாலைகளிலும் இருப்பது நமது பிள்ளைகள். அந்த பிள்ளைகள் அனைவரும் தரமான கல்வியைப் பெறும் உரிமையை நாம் உறுதி செய்ய வேண்டும். எனவே, ஆசிரியர்களை நியமிக்கும்போதும், அவர்களை இடமாற்றம் செய்யும்போதும், அதிகாரிகளை நியமிக்கும்போதும், யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காதீர்கள். ஏனைய மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் பற்றி சிந்தித்து, அவ்வாறே இங்கும் செயல்படுங்கள். நீங்கள் உண்மையிலேயே திறமையானவர்கள். இங்குள்ள நீங்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று வடக்கு மாகாணத்திற்கு சேவை செய்ய மீண்டும் வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், வட மாகாணம் குறித்த முடிவுகளை எடுப்பவர்கள் நீங்கள்தான். அப்போதுதான், வட மாகாணத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நீங்கள் தலையிடுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு அரசாங்கமாக, அந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்தத் தலையீட்டைச் செய்கிறோம் என்பதைக் கூற வேண்டும். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் தங்கள் கருத்துக்களை இதன்போது தெரிவித்தனர். கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், மாவட்ட செயலாளர்கள், வட மாகாண அரச அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234041
  19. இரண்டு இன்னிங்ஸ்களிலும் லெதம், கொன்வே சதங்கள் குவித்து தனித்துவ சாதனை, மே. தீவுகளின் வெற்றிக்கு 419 ஓட்டங்கள் தேவை 21 Dec, 2025 | 02:39 PM (நெவில் அன்தனி) மவுன்ட் மௌங்கானுய் பே ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நியூஸிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து அசத்தினர். இதன் மூலம் சகல விதமான முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த முதலாவது ஜோடி என்ற தனித்துவமான சாதனை ஒன்றை நிலைநாட்டினர். மேலும் முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதமும் இரண்டாவது இன்னிங்ஸில் சதமும் குவித்த டெவன் கொன்வே நியூஸிலாந்து சார்பாக இந்த சாதனையை நிகழ்த்திய முதலாவது வீரரானார். இப் போட்டியில் மிகவும் கடினமான 462 ஓட்டங்ககளை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்தியத் தீவுகள் போட்டியின் நான்காம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. துடுப்பாட்டத்திற்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் 400க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தன. நியூஸிலாந்து ஒரு படி மேல் சென்று 500 ஓட்டங்களுக்கு மேல் பெற்றது. நான்காம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 381 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் சகல விக்கெட்களையும் இழந்து 420 ஓட்டங்களைப் பெற்றது. கவெம் ஹொஜ் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 123 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். முதல் இன்னிங்ஸ் நிறைவில் 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த நியூஸிலாந்து, இரண்டாவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. முதல் இன்னிங்ஸில் போன்றே இரண்டாவது இன்னிங்ஸில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டொம் லெதம், டெவன் கொன்வே சதங்கள் குவித்து அசத்தினர். முதல் இன்னிங்ஸில் ஆரம்ப விக்கெட்டில் 323 ஓட்டங்களைப் பகிர்ந்த அவர்கள் இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் 192 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர். அவர்கள் இருவரும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆரம்ப விக்கெட்டில் மொத்தமாக 515 ஓட்டங்களைப் பகிர்ந்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை ஒன்றை நிலைநாட்டினர். இதன் மூலம் ஒரே டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் முச்சத இணைப்பாட்டத்தையும் இரண்டாவது இன்னிங்ஸில் சத இணைப்பாட்டத்தையும் பகிர்ந்த முதலாவது ஜோடி என்ற சாதனையை டொம் லெதமும் டெவன் கொன்வேயும் நிலைநாட்டினர். இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் சதங்கள் குவித்தவுடன் ஆட்டம் இழந்தனர். எண்ணிக்கை சுருக்கம் நியூஸிலாந்து 575 - 8 விக். டிக்ளயார்ட் (டெவன் கொன்வே 227, டொம் லெதம் 137, ரச்சின் ரவிந்த்ரா 72 ஆ.இ., கேன் வில்லியம்சன் 31. அஜாஸ் பட்டேல் 30, ஜஸ்டின் க்றீவ்ஸ் 83 - 2 விக்., ஜேடன் சீல்ஸ் 100 - 2 விக்., அண்டர்சன் பிலிப்ஸ் 154 - 2 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 420 (கவெம் ஹொஜ் 123 ஆ.இ., ப்றெண்டன் கிங் 63, ஜோன் கெம்பெல் 45, அலிக் அத்தானேஸ் 45, ஜஸ்டின் க்றீவ்ஸ் 43, உதிரிகள் 36, ஜேக்கப் டவி 86 - 4 விக்., அஜாஸ் பட்டேல் 113 - 3 விக்., மிச்செல் ரே 89 - 2 விக்.) நியூஸிலாந்து 2ஆவது இன்: 306 - 2 விக். டிக்ளயார்ட் (டொம் லெதம் 101, டெவன் கொன்வே 100, ரச்சின் ரவிந்த்ரா 46 ஆ.இ., கேன் வில்லியம்ஸ் 40 ஆ.இ., கவெம் ஹொஜ் 80 - 2 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: வெற்றி இலக்கு 462 ஓட்டங்கள் - விக்கெட் இழப்பின்றி 43 ஓட்டங்கள் (ப்றெண்டன் கிங் 37 ஆ.இ. https://www.virakesari.lk/article/234014
  20. கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி! Published By: Vishnu 21 Dec, 2025 | 07:17 PM கிளிநொச்சி மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (21) சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கிளிநொச்சியில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர், அதன் ஒரு பகுதியாக வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்துக்கும் வருகை தந்தார். ஆலயத்துக்கு வருகை தந்த பிரதமரை ஆலய நிர்வாகத்தினரும் பொதுமக்களும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளில் பிரதமர் பக்திபூர்வமாகப் பங்கேற்றார். வழிபாடுகளைத் தொடர்ந்து, மிகவும் பழமை வாய்ந்த இவ்வாலயத்தின் வரலாற்றுப் பின்னணி, ஐதீகங்கள் மற்றும் ஆலயத்தின் சிறப்புக்கள் குறித்து பிரதமர் மிகவும் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார். இந்நிகழ்வில் பிரதமருடன் இணைந்து, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோரும் வழிபாடுகளில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/234040
  21. மருந்து தரப் பரிசோதனை ஆய்வகத்தை உடனடியாக உள்நாட்டில் நிறுவுங்கள் அரசாங்கத்திடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து 21 Dec, 2025 | 02:53 PM (எம்.மனோசித்ரா) இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்ச்சைக்குள்ளாகியுள்ள 'ஒன்டன்செட்ரான்" மருந்து தொடர்பில் கண்டி வைத்தியசாலை ஆய்வுகளைச் செய்து அறிவிக்கும் வரை சுகாதார அமைச்சோ அல்லது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இரத்தத்தில் நேரடியாக ஏற்றப்படும் இந்த மருந்துகள் கிருமித் தொற்றுடன் வழங்கப்பட்டது பாரிய குற்றமாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. உள்நாட்டிலேயே மருந்து தரப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வகத்தை உடனடியாக நிறுவ வேண்டும் என்றும், தரமற்ற மருந்துகளை நாட்டுக்குள் கொண்டுவர அனுமதித்த மற்றும் தமது கடமையைச் செய்யத் தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தைவலியுறுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அதன் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த டிசம்பர் 12 மற்றும் 15 ஆகிய திகதிகளில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை (NMRA) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இந்திய நிறுவனமான 'மான் பார்மாசூட்டிகல்ஸ்" (Maan Pharmaceuticals) உற்பத்தி செய்த "ஒன்டன்செட்ரான்" (Ondansetron) என்ற ஊசி மருந்து தரமற்றது என்பதால், அதன் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டது. பின்னர் அதே நிறுவனத்தின் மேலும் 10 மருந்து வகைகளின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாகவே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. ஏழு நோயாளிகளுக்கு ஒரே மாதிரியான கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தது. இது குறித்து ஆய்வு செய்தபோது, அவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட 'ஒன்டன்செட்ரான்' மருந்துக் குப்பிகளுக்குள் "ரைசோபியம்" (Rhizobium) என்ற பக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த மருந்தை பயன்படுத்திய பின்னர் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், டிசம்பர் முதல் வாரத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையிலும் இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கண்டி வைத்தியசாலை ஆய்வுகளைச் செய்து அறிவிக்கும் வரை சுகாதார அமைச்சோ அல்லது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லைஎன்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேள்வியெழுப்புகிறது. இந்த மருந்துகள் புற்றுநோய் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள கவலைக்கிடமான நோயாளிகளுக்கு வழங்கப்படுபவை. இரத்தத்தில் நேரடியாக ஏற்றப்படும் இந்த மருந்துகள் கிருமித் தொற்றுடன் வழங்கப்பட்டது பாரிய குற்றமாகும். இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரத்தைப் பரிசோதிக்க சர்வதேச தரத்திலான ஆய்வகம் (Quality Assurance Lab) ஒன்று இன்னும் அமைக்கப்படவில்லை. இது குறித்து பல வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டும், அரசாங்கம் அதற்குப் நிதி ஒதுக்காமல் வேறு தேவையற்ற விடயங்களுக்கு நிதி ஒதுக்குவதாக வீடியோவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தத் தரமற்ற மருந்துகளால் பாதிக்கப்பட்ட அல்லது உயிரிழந்த நோயாளிகளுக்கு அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் நட்டஈடு வழங்க வேண்டும். உள்நாட்டிலேயே மருந்து தரப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வகத்தை உடனடியாக நிறுவ வேண்டும். தரமற்ற மருந்துகளை நாட்டுக்குள் கொண்டுவர அனுமதித்த மற்றும் தமது கடமையைச் செய்யத் தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த மருந்துகள் கடந்த செப்டம்பர் மாதம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. எத்தனை ஆயிரம் நோயாளிகளுக்கு இந்தத் தரமற்ற மருந்துகள் இதுவரை ஏற்றப்பட்டன என்பது குறித்த முறையான விசாரணை அவசியம் என நாம் வலியுறுத்துகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/234015
  22. தையிட்டியில் அரங்கேறிய பொலிஸாரின் செயலுக்கு கண்டனம்! 21 Dec, 2025 | 03:10 PM இந்து மதத்தலைவர் தாக்கப்பட்டமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத இனவாத - மதவாத வெறிச்செயல். தையிட்டியில் அரங்கேறிய சம்பவத்திற்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இன்றைய தாக்குதல்களும் கைதுகளும் அநுரகுமார தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி - தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இனவாதக் கோர முகத்தையே காட்டுகின்றது. எங்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்களே ஒருகணம் சிந்தியுங்கள்! இன்று இந்து மதத்தலைவருக்கு நடந்தது நாளைக்கு உங்களுக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? நாங்கள் போராடுவது உங்களுக்கும் சேர்த்துத்தான் என்பதை மறவாதீர்கள். போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்! இனத்துக்கான போராட்டம் தொடரும். இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234019
  23. மலையக மக்களை வட, கிழக்கில் குடியேறுமாறு வற்புறுத்தவில்லை சுயவிருப்பின்பேரில் வருவோரை வரவேற்கத்தயார் என்றே கூறினோம்; எம்.ஏ.சுமந்திரன் விளக்கம் 21 Dec, 2025 | 02:40 PM (நா.தனுஜா) மலையக மக்கள் அவர்களது தாயகத்தை விட்டுவிட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வந்து குடியேறவேண்டும் என நாம் வற்புறுத்தவில்லை. மாறாக வட, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கான விருப்பத்துடன் இருக்கும் மக்களை அன்போடு வரவேற்பதற்கும், அவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் தயாராக இருப்பதாகவே நாம் குறிப்பிட்டோம் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட 'தித்வா" சூறாவளியை அடுத்து உருவான வெள்ளப்பெருக்கு, மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், நூற்றுக்கணக்கானோர் காணாமல்போயும், இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும், இன்னமும் முழுமையாக மதிப்பிடப்படாத பெருந்தொகை சொத்துக்கள் சேதமடைந்தும் நாடு பேரழிவுக்கு முகங்கொடுத்துள்ளது. குறிப்பாக மலையக மக்கள் கடும் எதிர்கொண்டிருக்கும் பின்னணியில், மலையகத் தமிழர், மலையக மண்ணில் தான் வாழவேண்டும் என நானும் விரும்புகிறேன். ஆனால் பாதுகாப்பான காணி உரிமையை வழங்குவதற்கு மறுத்தால், எமது மக்கள் மலை மண்சரிவில் சிக்குண்டு தொடர்ச்சியாகப் பலியாவதா? எனக் கேள்வி எழுப்பியிருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், எனவே மாற்றுயோசனையாக வட, கிழக்கு மாகாணங்களில் புலம்பெயர்வினால் வெற்றிடங்களாகி காடாகிக்கொண்டிருக்கும் காணிகளை, அவற்றின் உரிமையாளர்கள் மனமுவந்து வழங்குவார்களாயின், அங்குசென்று குடியேறி உழைத்து வாழ விரும்புகிறீர்களா என நான் சந்தித்த மக்களிடம் கேட்டேன் எனத் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அண்மையில் கண்டிக்கும் கம்பளைக்கும் விஜயம் மேற்கொண்டபோது மலையகத்தில் இருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம் எனவும், தற்போது மனோகணேசனும் மலையக மக்களும் அதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், அம்மக்களை மிகுந்த பாசத்துடன் மனதார வரவேற்பதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன், மலையகம் எமது தாயகமாகும். நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்குத் தயாரில்லை. அதனால் மலையக மக்களுக்கு 7 பேர்ச் காணியை வழங்கி, அந்த மக்கள் அங்கு வாழ்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அதற்குப் பதலளிக்கும் வகையில் கருத்துரைத்த இலங்கைத் சுமந்திரன், மலையக மக்கள் அவர்களது தாயகத்தை விட்டுவிட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வந்து குடியேறவேண்டும் என நாம் வற்புறுத்தவில்லை. மாறாக வட, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கான விருப்பத்துடன் இருக்கும் மக்களை அன்போடு வரவேற்பதற்கும், அவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் தயாராக இருப்பதாகவே நாம் குறிப்பிட்டோம் என விளக்கமளித்தார். அதேபோன்று புலம்பெயர் தமிழர்கள் சிலர் அவர்களது காணிகளை வழங்குவதற்கான விருப்பத்தை தம்மிடம் வெளிப்படுத்தியிருப்பதாக சுட்டிக்காட்டிய சுமந்திரன், எனவே சுயவிருப்பின்பேரில் வட, கிழக்கில் குடியேற விரும்பும் மலையக மக்களுக்கு அவசியமான காணிகளை வழங்குவதற்கும், அவர்களது விவசாயம், பயிர்ச்செய்கை உள்ளிட்ட அவர்களது வாழ்வாதாரத்துக்கு அவசியமான அரச காணகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/234000
  24. திட்வா புயல்: '200 ஆண்டு பின்னோக்கி' சென்ற மலையகத் தமிழர்களின் வாழ்க்கை கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் 200 ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாற்றை கொண்ட இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் வாழ்க்கையை, திட்வா புயல் முற்றாக மாற்றியமைத்துள்ளது. எந்தவித வசதிகளும் இல்லாத லைன் அறைகளில் (Line Rooms) வாழ்ந்து வந்த மலையக தமிழர்கள் கடந்த சில வருடங்களாகவே படிப்படியாக தனி வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்திருந்தனர். இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் என்ற அடிப்படையில் இவர்களின் வாழ்க்கை, சுமார் 200 ஆண்டுகளின் பின்னர் படிப்படியாக மாற ஆரம்பித்திருந்தது. பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தனி வீடுகளுக்கு சென்ற மலையக தமிழர்களில் பலர் இன்று மீண்டும் லைன் அறைகளில் வாழ்க்கைக்கு திரும்பியுள்ளமை கவலையளிக்கின்றது. இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் ஆகியவற்றில் ஏற்பட்ட அபாயகர நிலைமையே இதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது. இந்த வீட்டுத் திட்டங்களை அமைப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இரண்டு விதமான ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தது. வீட்டுத் திட்டம் அமையப் பெறும் முழு காணிக்கான ஆய்வு அறிக்கை மற்றும் தனி வீடுகளை அமைக்கும் காணிகளுக்கான ஆய்வு அறிக்கை என இரண்டு விதமான அறிக்கைகளை சமர்ப்பித்ததன் பின்னரே இந்த வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட்டன. எனினும், அபாயகரமற்ற, அதிவுயர் பாதுகாப்பு பகுதிகளையும் திட்வா புயல் அபாயகரமான பகுதிகளாக இப்போது மாற்றியுள்ளது. லைன் அறைகளுக்கு மீண்டும் சென்ற மலையக மக்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய திட்வா மாத்தளை - ஹூன்னஸ்கிரிய பகுதியில் வாழ்ந்து வருபவர்கள் எலிஸ்டன் மற்றும் ஜூலியட் தம்பதியின் குடும்பம். மூன்று பிள்ளைகளின் பெற்றோராகிய இவர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்தமையினால், இந்த குடும்பத்திற்கு வீட்டுத் திட்டம் கிடைத்துள்ளது. தலைமுறையின் 200 வருட லைன் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, தனி வீட்டு வாழ்க்கைக்கு சென்ற அவர்கள், தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு வகையிலும் சிந்தித்ததாக கூறுகின்றனர். தனது கையில் முறிவு ஏற்பட்டதை அடுத்து தோட்ட தொழிலுக்கு செல்வதை தான் தவிர்த்ததாக ஜூலியட் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஜூலியட்டின் கணவர் எலிஸ்டன், கூலித் தொழிலை செய்வதற்காக தோட்டத்திலிருந்து வெளியில் சென்றுள்ளார். எலிஸ்டனின் தொழில் முன்னேற்றம் காரணமாக வாழ்க்கை படிப்படியாக முன்னேறிய வந்த நிலையில், திட்வா புயல் தாக்கியது. பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் லைன் வீட்டிலிருந்து தனி வீட்டுக்கு சென்ற தம்மை, திட்வா புயல் மீண்டும் லைன் வாழ்க்கைக்கே திரும்பியனுப்பியதாக எலிஸ்டன், பிபிசி தமிழிடம் தெரிவித்தார். படக்குறிப்பு,200 வருட வாழ்க்கையை விட்டு போக வேண்டும் என்று சொல்லி தான் கொஞ்சம் முன்னோக்கி போனோம். கடைசியில் மீண்டும் கீழே வீழ்ந்து விட்டோம் என்கிறார் எலிஸ்டன் ''நாங்கள் சாப்பிட போகும் போது பின்நேரம் 4.30 (மாலை) இருக்கும். எங்களுடைய வீட்டின் பின்னால் இருந்த சுவர் இடிந்து வீழ்ந்து விட்டது. சாப்பாடு கூட சாப்பிடாமல் அப்படியே எல்லாவற்றையும் போட்டு விட்டு மாமா விட்டுக்கு வந்து விட்டோம். 200 வருட வாழ்க்கைக்கு திரும்பவும் வந்து விட்டோம். எங்களுடைய பிள்ளைகளுக்கு ஆசையை காட்டி மோசம் பண்ணி விட்டோம். திரும்புவும் அந்த வீட்டில் இருக்க முடியாது. திரும்பவும் ஒரு அனர்த்தம் வந்தால் எங்களுடைய பிள்ளைகளை நாங்களே குழியில் தள்ளுற மாதிரி தான். லைன் வாழ்க்கையை தொடரக்கூடாது என்பதே எமது ஆசை. இதையும் விட்டு வெளியில் போக வேண்டும். 200 வருட வாழ்க்கையை விட்டு போக வேண்டும் என்று சொல்லி தான் கொஞ்சம் முன்னோக்கி போனோம். கடைசியில் மீண்டும் கீழே வீழ்ந்து விட்டோம்.'' என எலிஸ்டன் குறிப்பிடுகின்றார். மீண்டும் லைன் வாழ்க்கைக்கு திரும்பியது தமக்கு கவலை அளிப்பதாக எலிஸ்டனின் மனைவியான ஜூலியட் தெரிவிக்கின்றார். ''கதைக்க இயலாது. சரியான கவலையாக இருக்கு. அப்பாவுடைய வீடு இருந்ததால் அங்கு வந்திருக்கிறோம். நான் தோட்டத்தில் வேலை செய்தேன். விழுந்து கையில் மூட்டு ஒன்று விலகியதனால் தோட்டத்தில் வேலை இல்லை. கணவர் மட்டும் தான் வேலை பார்க்கிறார். 3 பிள்ளைகள் படிக்கின்றார்கள். லைன் வீட்டை விட்டுவிட்டு தான் நாங்கள் அங்கே போனோம். பிள்ளைகள் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்றே நாங்கள் புதிய காணிக்கு போனோம். மறுபடியும் இந்த நிலைமைக்கு வந்தது கவலை தான்.'' என ஜூலியட் தெரிவிக்கின்றார். இந்த திட்வா புயல் எலிஸ்டன், ஜூலியட்டை மாத்திரம் 200 வருடங்களை நோக்கி பின்தள்ளவில்லை. அதே இடத்தில் வாழ்ந்த பலரையும் மீண்டும் லைன் வாழ்க்கைக்கு அனுப்பியுள்ளது. படக்குறிப்பு,மீண்டும் லைன் வாழ்க்கைக்கு திரும்பியது தமக்கு கவலை அளிப்பதாக எலிஸ்டனின் மனைவியான ஜூலியட் தெரிவிக்கின்றார். ஹூன்னஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த நடராஜாவும் இதே பாதிப்பை எதிர்நோக்கியுள்ளார். ''எங்களுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் வீடு கட்டிக் கொடுத்தார்கள். நாங்கள் அந்த வீட்டிற்கு போய் இரண்டு வருடங்கள் இருக்கும். எங்களுடைய பிள்ளைகள் நல்லா வாழ வேண்டும் என்றே அந்த காணியை நாங்கள் வாங்கினோம். இப்போது அந்த காணிகளில் வாழ இயலாமல் இருக்கு. எங்களுடைய வீட்டிற்கு 20 அடி கீழே மண் சரிவு போயிருக்கு. அன்றைக்கே தோட்ட நிர்வாகம் சொல்லி விட்டார்கள். இங்கே இருக்க வேண்டாம். லயின் அறைக்கே போகுமாறு சொல்லிவிட்டார்கள். இந்த வீட்டில் இருக்க எங்களுடைய பிள்ளைகள் விருப்பம் இல்லை.'' என அவர் கூறுகின்றார். இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டங்கள் மாத்திரமன்றி, இந்திய வீட்டுத் திட்டங்களிலும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். படக்குறிப்பு,புதிய வீடுகளைச் சுற்றி சேதங்கள் இருப்பதால், அச்சமடைந்து மக்கள் வெளியேறியுள்ளனர் இந்தியாவிலிருந்து வருகைத் தந்த தமது முன்னோர், இலங்கையில் தமது வாழ்க்கையை ஆரம்பித்த அதே லைன் அறைகளில் மீண்டும் தற்போதைய தலைமுறையும் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். ஹூன்னஸ்கிரிய பகுதியிலுள்ள 16 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டத்தின் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு விதமான பாதிப்புக்களை சந்தித்துள்ளன. ஒரு சில வீடுகளின் மீது மண்மேடுகள் சரிந்துள்ளதுடன், சில வீடுகளுக்குள் வெள்ள நீர் பிரவேசித்துள்ளன. அத்துடன், பெரும்பாலான வீடுகளில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்த வீடுகளுக்கு கீழ் சில இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளமையினால், தமது வீடுகள் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளமை, வீடுகள் தாழிறங்கியுள்ளமை, மண்மேடுகள் சரிந்து வீடுகளின் மீது வீழ்ந்துள்ளமை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக வைத்து, அதிகாரிகள் தம்மை மீண்டும் லைன் அறைகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதாக அந்த பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். படக்குறிப்பு,ஆபத்தற்றது என கருதப்பட்ட பகுதிகளும் திட்வா புயலுக்குப் பின் அபாயகரமானதாக மாறியுள்ளன எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டத்துடன் நெருங்கி செயற்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபத் தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் முன்னாள் தலைவருமான பாரத் அருள்சாமியிடம் பிபிசி தமிழ் இந்த விடயம் தொடர்பில் வினவியது. ''எந்த வீட்டுத் திட்டமாக இருந்தாலும், தனியான காணியை தேர்வு செய்து வீடுகளை கட்டுவதாக இருந்தாலும் அதற்கான சரியாக திட்டம், கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையோடு தான் இதை செய்வார்கள். இந்த நடைமுறை இந்திய வீட்டுத் திட்டத்திலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை இருந்தால் மாத்திரமே அந்த இடத்தில் வீடுகளை கட்ட முடியும். அது இல்லாமல் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை முழுமையாக காணிகளுக்கும் பெற்று, அதே போன்று வீடுகளை நிர்மாணிக்கும் இடத்திற்கும் எடுத்திருந்தோம். ஏனென்றால், கட்டப்படும் பெரும்பாலான வீடுகள் மலைப்பாங்கான இடங்களில் இருப்பதனால், அந்த முறையை கொண்டு வந்தோம். இப்போது ஏற்பட்டிருக்கின்ற இயற்கை அனர்த்தம் யாருமே எதிர்பார்க்காத இடங்களிலும் ஏற்பட்டிருக்கின்றது. பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு ஏனைய மக்களைப் போன்றே உதவிகள் வழங்கப்பட வேண்டும். நாங்கள் இந்த நாட்டு பிரஜைகளே. ஏனைய பிரஜைகளுக்கு வழங்கப்படும் உரிமைகள், எமக்கும் உரித்தாகும். அந்த நிவாரண திட்டங்கள் எங்கள் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.'' என பாரத் அருள்சாமி கோரிக்கை விடுக்கின்றார். ''இவர்கள் இந்த இடத்திலிருந்து மீண்டும் லைன் அறைகளுக்குப் போவது என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். இவர்கள் தனிவீட்டிற்கு போய் விட்டார்கள். அப்படியென்றால் கிராம வாழ்க்கைக்கு போய்விட்டார்கள். அப்படியென்றால், அரசாங்கம் அறிவித்த அந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.'' எனவும் பாரத் அருள்சாமி குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு,திட்வா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் அரசாங்கத்தின் பதில் லைன் அறைகளிலிருந்து தனிவீட்டிற்கு சென்று திட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பின்னணியில், மீண்டும் லைன் வீடுகளுக்கு சென்றவர்கள் குறித்து பெருந்தோட்ட, உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபனிடம் பிபிசி தமிழ் வினவியது. ''தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகளின் பிரகாரம், தனி வீட்டுத் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு மீண்டும் அதே வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என பிபிசி தமிழிடம் அவர் உறுதியளித்தார். பெருந்தோட்ட பகுதிகளில் லைன் அறைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகளை வழங்க தாம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cre3pgez439o
  25. இந்திய வெளிவிவகார அமைச்சர் உத்தியோக பூர்வமான விஜயம் - ஜனாதிபதி, பிரதமருடன் முக்கியமான சந்திப்பு! 21 Dec, 2025 | 11:43 AM (ஆர்.ராம்) இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நாளையதினம் இருநாள் உத்தியோக பூர்வமான விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது முதலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரிய ஆகியோருடன் முக்கியமான சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். அதனைத்தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அரசாங்கத்தின் சில முக்கிய அமைச்சர்களை சந்திக்கவுள்ளதோடு, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணியையும் சந்திக்கவுள்ளார். அதேநேரம், மலையகத் தலைவர்களை தனியாகச் சந்திப்பதற்கு ஏற்பாடாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, நாளை மறுதினம் தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த ஆறு தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைவிடவும், பொதுஜனபெரமுனவின் தலைவர்களையும் ஏனைய பெரும்பான்மைக்கட்சியின் சில தலைவர்களையும் சந்திக்கவுள்ளதோடு முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுடனும் சந்திப்புக்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவனது, இலங்கையில் தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனத்தங்களுக்கு சாகர்பந்து திட்டத்தின் கீழாக உடனடியாக மீட்புக்குழு, நிவாரணங்கள், பாதை மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை உடனடியாக முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் இலங்கையின் மீள் கட்டுமானங்களுக்கான மேலதிக உதவித்திட்டங்கள்உட்பட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விஜயத்தின்போது அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேநேரம், திடீர் ஏற்பாட்டில் இலங்கைக்கு வருகை தரும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தன்னுடைய நெருக்கடியான சந்திப்பு நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக போதுமான நேர ஒதுக்கீடு காணப்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், குறித்த களவிஜயம் தொடர்பில் இதுவரையில் எவ்விதமான உறுதிப்படுத்தல்களும் செய்யப்படவில்லை. இதேவேளை, பிரதமர் ஹரிணி அமரசூரிய டில்லிக்குச் சென்றிருந்த வேளையில் இறுதியாக வெளிவிகார அமைச்சர் ஜெய்சங்கர் உத்தியோக பூர்வ சந்திப்பை மேற்கொண்டிருக்கும் இல்லையில் இந்த ஆண்டில் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/233994

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.