Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. போர்க்களமாகும் விண்வெளி? satellite war-ஆல் உலகம் எவ்வளவு ஆபத்தை எதிர்கொள்கிறது? | Ulagin Kathai செயற்கைக்கோள் போர் முறையால் உலகம் எவ்வளவு ஆபத்தை எதிர்கொள்கிறது என்பதை விளக்குகிறது இந்த காணொளி.
  2. சி.பி.ஐ. விசாரணையில் கரூர் சம்பவம்: திமுகவுக்கு பின்னடைவா? படக்குறிப்பு, கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 27 நிமிடங்களுக்கு முன்னர் கரூர் நெரிசல் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரணைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஆளும் தி.மு.க. அரசுக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்? கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், இந்த விவகாரத்தை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்டோகி தலைமையிலான மூன்று பேர் குழு கண்காணிக்குமென்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. இது தவிர, இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்துவந்தது. இந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் வெளியாகியிருக்கும் தீர்ப்பு தமிழக அரசியல் களத்தில் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து விஜய் வீடியோ வெளியிட்டிருந்தார். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நடந்தபோது, மிகப் பெரிய நெரிசல் ஏற்பட்டு 11 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயர நிகழ்வு விரைவிலேயே ஒரு அரசியல் புயலாக உருவெடுத்தது. இந்த மக்கள் சந்திப்பில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த தகவல் வெளியாகிவந்த நிலையிலும் த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் இருந்து திருச்சிக்குச் சென்று அங்கிருந்து தனி விமானத்தின் மூலம் சென்னைக்குச் சென்றதும் பத்திரிகையாளர்களிடம் பேச மறுத்ததும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனால், இதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டவுடன் தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷும் உடனடியாக அங்கே வந்தது எப்படி என த.வெ.கவைச் சேர்ந்தவர்கள் கேள்வியெழுப்பினர். அடுத்தடுத்த நாட்களில் இந்த விவகாரம் வெவ்வேறு பரிமாணங்களை எடுத்தது. இந்த நெரிசல் சம்பவமே ஒரு சதி என்று த.வெ.கவினர் குற்றம்சாட்டினர். இதற்கிடையில் இது தொடர்பாக தமிழக காவல்துறை வழக்குப் பதிவுசெய்தது. இந்த வழக்கில் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் கைதுசெய்யப்பட்டார். வருவாய்த் துறை செயலர் பி. அமுதா தலைமையில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த விவகாரம் நடந்த விதம் குறித்து விரிவான செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இதற்கிடையில் அரசியல் கட்சிகள் சாலைகளில் ரோட் ஷோக்களை நடத்துவதால்தான் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்பதால், இதுபோன்ற கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டுமென தொடரப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவேண்டுமென உத்தரவிட்டது. இதையடுத்து காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், அவர்கள் தலைமறைவாக இருந்தனர். அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனாவும் டெல்லி சென்றுவிட்டார். இதன் காரணமாக, இந்த சம்பவத்தை ஒட்டி விஜய் வெளியிட்ட வீடியோ ஒன்றைத் தவிர, த.வெ.க. தரப்பின் சார்பில் இந்த விவகாரம் தொடர்பான கருத்துகளை வலுவாக முன்வைக்க ஆட்களே இல்லாத நிலை உருவானது. இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க. தரப்பின் கோரிக்கையையும் உள்ளடக்கி வெளியாகியிருக்கும் தீர்ப்பு, அக்கட்சியினருக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம், CONSTANDINE RAVINDRAN படக்குறிப்பு,"அரசியல் ரீதியாக அணுக வேண்டுமென தி.மு.க. நினைத்திருந்தால் விஜய்யை மட்டும் விட்டுவிட்டு, முக்கியப் பொறுப்பிலிருக்கும் நான்கு பேரை அன்றைக்கே கைதுசெய்திருப்போம்" - கான்ஸ்டைன்டீன் ரவீந்திரன் ஆனால், இந்த தீர்ப்பினால் எந்தவிதத்திலும் தமிழ்நாடு அரசுக்கோ, தி.மு.கவிற்கோ பின்னடைவு இல்லை என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன் ரவீந்திரன். "இந்தத் தீர்ப்பை ஒரு அரசியல் பின்னடைவாக பார்க்க வேண்டியதில்லை. ஏனென்றால் துவக்கத்திலிருந்தே இந்த விவகாரத்தை நாங்கள் அரசியல்ரீதியாக அணுகவேயில்லை. அப்படி அரசியல் ரீதியாக அணுக வேண்டுமென தி.மு.க. நினைத்திருந்தால் விஜய்யை மட்டும் விட்டுவிட்டு, முக்கியப் பொறுப்பிலிருக்கும் நான்கு பேரை அன்றைக்கே கைதுசெய்திருப்போம். கட்சியே முடங்கிப்போயிருக்கும். மாறாக நாங்கள் இந்த விவகாரத்தை பாதிக்கப்பட்ட மக்கள் சார்ந்தே அணுகினோம். 41 பேர் இறந்து போயிருக்கிறார்கள். இதற்கு அந்த அரசியல் கட்சியின் பொறுப்பின்மை காரணமாக இருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டும் என்று முடிவுசெய்தோம். ஒரு விசாரணை அமைப்பிடமிருந்து இன்னொரு விசாரணை அமைப்பிற்கு வழக்கை மாற்ற வேண்டுமென்றால் அதற்குக் காரணங்கள் இருக்க வேண்டும். காலதாமதம், வழக்கு தடம்புரள்வது, அரசியல் ஆதாயத்திற்காக துணை போவதாக வழக்கு கொண்டுசெல்லப்படுவது போன்ற காரணங்கள் இருந்தால்தான் வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்படும். ஆனால், இந்த வழக்கில் அப்படிக் காரணங்கள் எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. மேலும், கண்காணிப்புக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் யாரும் இருக்கக்கூடாது எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால், எல்லா தமிழ் அதிகாரிகளும் அறம் இல்லாதவர்களா? இதில் எந்த வகையிலும் தி.மு.கவுக்கு பின்னடைவு இல்லை" என்கிறார் கான்ஸ்டைன்டீன். ஆனால், அரசியல் கருத்துருவாக்கத்தில் இந்தத் தீர்ப்பு தி.மு.கவுக்கு ஒரு பின்னடைவாக அமையாதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "நிச்சயமாக இல்லை. இந்த விவகாரத்தின் எந்தத் தருணத்திலும் முதலமைச்சர் துவங்கி, யாருமே இந்த வழக்கை அரசியல்ரீதியாக அணுகவேயில்லை. ஒரு தருணத்திலும் தனிப்பட்ட முறையில் விஜய்யையோ, அந்தக் கட்சியையோ விமர்சித்துப் பேசியதில்லை. எங்களைப் பொறுத்தவரை நீதிமன்றங்கள் நீதி வழங்கும் மன்றங்களாக இருக்க வேண்டும். நீதிபதிகளின் மன்றங்களாக இருக்கக்கூடாது என்பதைத்தான் எதிர்பார்க்கிறோம்" என்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணையே துவங்காத நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது ஒரு அவசரமான செயல்பாடு என்கிறார் விஜயன். மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அவசரப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பு என்கிறார். "இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு சிறப்பாகச் செயல்பட்டது என்றோ, விஜய் தரப்பு தவறு செய்துவிட்டது என்றோ சொல்லவரவில்லை. ஆனால், ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணையே துவங்காத நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது ஒரு அவசரமான செயல்பாடு. விசாரணையில் பாரபட்சமிருந்தால், வேறு ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம். காரணம், சட்டம் - ஒழுங்கு என்பது மாநிலங்களின் வசம் உள்ள ஒரு விவகாரம். ஆகவே, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது மிக அரிதாகத்தான் நடக்கும். தவிர, சி.பி.ஐயைப் பொறுத்தவரை நிதி மோசடி போன்ற விவகாரங்களில்தான் சிறப்பாகச் செயல்படுவார்கள். இதுபோன்ற விவகாரங்களில் அவர்களுக்கு போதிய ஆள் பலமும் கிடையாது, பெரிய வெற்றிகளையும் பெற்றது கிடையாது. நான் தாக்கப்பட்ட வழக்கிலேயே சி.பி.ஐயால் வழக்கை நிரூபிக்க முடியவில்லை. ஒரு விசாரணை அமைப்பு விசாரணையைத் துவங்குவதற்கு முன்பே இப்படி வழக்கை மாற்றுவது அவசரமான செயல்பாடு" என்கிறார் கே.எம். விஜயன். பட மூலாதாரம், Vijayan படக்குறிப்பு, மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஆனால், இந்த விவகாரம் தி.மு.கவுக்கு பின்னடைவாக இல்லாவிட்டாலும் சங்கடங்களை ஏற்படுத்தலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன். "இந்த வழக்கில் பல கேள்விகள் இருக்கின்றன. யாரும் கேட்காமலேயே அருணா ஜெகதீசன் ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது நீதிமன்றம். ஸ்டெர்லைட் விவகாரத்தில் சி.பி.ஐ. ஒரு பக்கம் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோதே, அருணா ஜெகதீசன் ஆணையம் மற்றொரு பக்கம் விசாரணைகளை நடத்தியது. காரணம், சி.பி.ஐயின் நோக்கமும் ஆணையத்தின் நோக்கமும் வெவ்வேறு. அப்படியிருக்கையில் ஏதற்காக இந்த உத்தரவு எனத் தெரியவில்லை. இருந்தாலும் இந்த விவகாரத்தில் தி.மு.கவுக்கு சிக்கல் ஏற்படலாம். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென செந்தில் பாலாஜியை அழைக்கலாம். தவிர, சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் சதியால்தான் நெரிசல் நடந்தது என ஒரு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் அது எதிர்க்கட்சிகளுக்கு உதவும்" என்கிறார் ப்ரியன். பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, எந்த அரசியல் ஆதாயமும் தேட விரும்பவில்லை என்கிறார் தவெக கொள்கைபரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை இதில் அரசியல் ரீதியாக இதில் எதையும் சொல்லவிரும்பவில்லை. வழக்கின் தீர்ப்பு குறித்து பிபிசியிடம் பேசிய அக்கட்சியின் கொள்கைபரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இதில் எந்த அரசியல் ஆதாயமும் தேட விரும்பவில்லை என்கிறார். "கரூர் சம்பவத்தில் நிறைய மனித உயிர்கள் பறிபோயிருக்கின்றன. ஆகவே, அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒரு நீதி விசாரணை வேண்டுமெனக் கேட்டோம். வேறு சிலர் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டுமெனக் கேட்டார்கள். உச்ச நீதிமன்றம் இரு கோரிக்கைகளையும் இணைத்து ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறது. இந்த விவகாரத்தால் எங்களுக்கு அரசியல் ரீதியாக சாதகம் ஏற்பட்டிருக்கிறதா என்பதெல்லாம் நாங்கள் பேச விரும்பவில்லை. இதை வைத்து எந்த அரசியல் ஆதாயமும் நாங்கள் தேட விரும்பவில்லை" என்கிறார் அவர். ஆனால், தமிழ்நாடு அரசும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவைத்தானே அமைத்தது, அதனை எதிர்த்தது என்? என்ற கேள்விக்கு பதிலளித்த அருண் ராஜ், "அரசியல் கூட்டங்களை நடத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென ஒரு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. ஆனால், இந்த நெரிசல் விவகாரம் தொடர்பாக வருவாய்த் துறைச் செயலர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளித்த பிறகு, பணியில் உள்ள ஒரு அதிகாரி அதனைத் தாண்டிச் செல்ல முடியுமா என்ற கேள்வியும் இருந்தது. அதனால்தான் அந்த விசாரணைக் குழுவை ஏற்க முடியவில்லை" என்கிறார் அருண்ராஜ். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக வரவேற்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பா.ஜ.கவும் பாட்டாளி மக்கள் கட்சியும் வரவேற்றுள்ளன. ஆனால், நாம் தமிழர் கட்சி இந்தத் தீர்ப்பை விமர்சித்துள்ளது. "சிபிஐ விசாரணை என்பது ஏற்புடையதல்ல. அது மாநில உரிமைகளுக்கு எதிரானது. தமிழ்நாடு காவல் துறை விசாரணையில் என்ன குறை இருக்கிறது?" என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2emdj8gx9vo
  3. 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்திற்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் Published By: Vishnu 13 Oct, 2025 | 07:45 PM (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் மெய்வல்லநர் போட்டிக்களில் 4ஆம் நாளான திங்கட்கிழமை (13) நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண பாடசாலைகள் முழுமையான ஆதிக்கம் செலுத்தி தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சவீகரித்தன. அப் போட்டியில் அருணோதயா கல்லூரி வீராங்கனை எஸ். நிருஷிகா 3.80 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவி பி. அபிஷாலினி (3.60 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் பாசையூர் புனித அந்தோனியார் மகளிர் வித்தியாலய மாணவி என். ஆன் மேரி, விக்டோரியா கல்லூரி மாணவி வை. நிதுஷா ஆகிய இருவர் (2.80 மீ.) சம உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர். 14 வயதுக்குட்ட சிறுவர்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் வள்ளிபுனம் மகா வித்தியாலய மாணவன் ஆர். சந்தோஸ் (14.70 மீ.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் மன்னார், முருங்கன் மகா வித்தியாலய மாணவி ஜே. யஸ்வினி (16.23 செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். கிழக்கு மாகாண வீரர்களுக்கு வெள்ளிப் பதக்கங்கள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாணவர்கள் இருவர் இன்றைய தினம் வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்தனர். 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நீளம் பாய்தலில் நேற்றைய தினம் தங்கப் பதக்கம் வென்ற ஒலுவில் அல் ஹம்ரா மகா வித்தியாலய மாணவன் யூ. அப்துல்லா, நான்காம் நாளான இன்றைய தினம் வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றெடுத்தார். 80 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய அப்துல்லா அப் போட்டியை 11.98 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தட்டெறிதல் போட்டியில் திருகோணமலை மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலய மாணவன் வினோதன் விஹாஸ் 46.64 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். https://www.virakesari.lk/article/227647
  4. 13 Oct, 2025 | 02:40 PM செம்மணி மனிதப் புதைகுழிகளை அகழ்வதற்குத் தேவையான நிதி மூலத்தைக் கண்டறிவதோ, போதிய நிதியை ஒதுக்குவதோ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இயலாத ஒன்றல்ல நிதியை ஒரேயடியாக விடுவிப்பதும் இயலாத ஒன்றல்ல. ஆனால், அரசாங்கம் நிதியை கால இழுத்தடிப்புகளுக்குப் பிறகு, கட்டம் கட்டமாகவே விடுவித்து வருகிறது. செம்மணிப் புதைகுழிகளில் இருந்து மிகப்பெரும் எண்ணிக்கையில் எலும்புக்கூடுகள் ஒரேயடியாக வெளிப்படுவதை இந்த அரசாங்கம் விரும்பவில்லை, அவ்வாறு வெளிப்படுவது, படைத்தரப்பை ஒருபோதும் தண்டிக்க விரும்பாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளூரிலும் சர்வதேச அரங்கிலும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும். இதனாலேயே, நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு ஞாயிற்றுக்கிழமை (12) நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றும்போதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். அங்கு, அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், செம்மணியில் கிரிசாந்தி கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்ட சம்பவம் அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதால் தவிர்க்க முடியாமல் விசாரணைகளை முன்னெடுத்தது. இவ்வழக்கில் இராணுவச் சிப்பாய் சோமரட்ண ராஜபக்ச சாட்சியமளித்தபோது தங்களால் 400பேர் வரையில் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் புதைகுழிகளைத் தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியபோதும் புதைகுழிகளைத் தொடர்ந்து அகழ்வதற்கு அரசாங்கம் முன்வரவில்லை. அதற்குவேண்டிய போதுமான அழுத்தங்களை எமது தலைமைகளும் அரசாங்கத்துக்குக் கொடுக்கவில்லை. இப்போது, சிந்துபாத்தி மயானத்தில் கட்டுமானப் பணிகளுக்காக அகழப்பட்ட இடத்தில் தற்செயலாக வெளிப்பட்ட எலும்புக்கூடே இதுவரையில் இருநூறுகளுக்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக ரீதியில் முன்னெடுப்பதற்கான கதவுகளை முள்ளிவாய்க்கால் பேரவலம் திறந்து விட்டிருந்தது. ஆனால், அவற்றைத் தமிழ்த் தலைமைகள் கண்டுகொள்ளாமல் இலங்கை அரசாங்கத்துக்குச் சர்வதேச அரங்கில் பிணையெடுத்துக் கொடுக்கும் வேலைகளிலேயே ஈடுபட்டன. இப்போது, இனவழிப்பின் சாட்சியங்களாக செம்மணிப் புதைகுழிகளில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் எழுந்து நிற்கின்றன. தமிழின அழிப்பு நிகழ்ந்தது என்பதற்கான சாட்சிகள் பலர் இன்னமும் உள்ளனர். அவர்களால் பயத்தின் காரணமாகத் தங்களை வெளிப்படுத்த இயலவில்லை. ஆனால், உயிருள்ள அந்த சாட்சியங்களைவிட உயிர் இல்லாத எலும்புக்கூடுகள் வலுவான சாட்சியங்களாக இன்று எழுந்து நிற்கின்றன. காலம் எங்களுக்குத் தந்திருக்கும் இந்த வாய்ப்பையாவது எமது தமிழ்த் தலைமைகள் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/227614
  5. வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: வெற்றியை நெருங்கினாலும் விமர்சிக்கப்படும் கேப்டன் சுப்மன் கில் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய அணி நான்காவது நாள் ஆட்டம் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருக்கிறது. கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 52 நிமிடங்களுக்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருக்கிறது இந்திய அணி. 121 ரன்களை இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி நான்காவது நாள் ஆட்டம் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருக்கிறது. 9 விக்கெட்டுகள் கையில் இருக்கும் நிலையில் இன்னும் 58 ரன்கள் எடுத்தால், சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி முதல் தொடர் வெற்றியைப் பதிவு செய்யும். டெல்லியில் நடந்துவரும் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக பேட்டிங் செய்து 175 ரன்கள் விளாசினார். மறுபக்கம் தன்னுடைய சிறந்த ஃபார்மைத் தொடர்ந்த கேப்டன் சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 129 ரன்கள் எடுத்தார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆன பிறகு 12 இன்னிங்ஸ்களில் அவர் அடிக்கும் ஐந்தாவது சதம் இது! சிறப்பாக விளையாடிய தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்ஷனும் தன் பங்குக்கு 87 ரன்கள் எடுத்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜடேஜாவும் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகள் எடுத்தார். 134 ஓவர்கள் ஃபீல்டிங் செய்த களைப்புடன் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் மீண்டும் ஏமாற்றமே கொடுத்தது. குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா இருவரின் ஜாலத்திலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 248 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ். அந்த அணியின் ஒரு பேட்டரால் கூட அரைசதம் கடக்க முடியவில்லை. அதிகபட்சமாக அலீக் அதனேஸ் 41 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். சிறப்பாகப் பந்துவீசிய ஜடேஜாவும் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸின் சிறப்பம்சம் என்றால் அது ஜான் கேம்பெல் கேட்சை சாய் சுதர்ஷன் பிடித்ததுதான். ஜடேஜா பந்தை கேம்பெல் வேகமாக ஸ்வீப் செய்ய, ஷார்ட் லெக் திசையில் நின்றிருந்த சாய் சுதர்ஷன் கழுத்தை நோக்கிப் பாய்ந்தது பந்து. மிகவும் ஆபத்தான அந்தப் பந்து அவரது ஹெல்மெட் கிரில்லில் பட்டு இறங்க, அதை அப்படியே லாவகமாக மார்போடு அனைத்துப் பிடித்தார் சாய். அவரது வலது கை விரலில் பலமாகப் பட்டிருந்தாலும், அவர் அதை கெட்டியாகப் பிடித்திருந்தார். மிகவும் ஆபத்தான இடத்தில் நின்று அவர் பிடித்த அந்த அசாத்திய கேட்ச் அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்த சாய் சுதர்சன் காயமடைந்து வெளியேறுகிறார் இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வெஸ்ட் இண்டீஸுக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், அதிரடியாக முடிவெடுத்து வெஸ்ட் இண்டீஸை ஃபாலோ ஆன் செய்யச்சொல்லி நிர்பந்தித்தது இந்தியா. வெஸ்ட் இண்டீஸ் மறுபடியும் பேட்டிங் செய்ததால் முந்தைய போட்டியைப் போல் இந்தப் போட்டியும் சீக்கிரம் முடிந்துவிடும், இந்தியா இன்னொரு இன்னிங்ஸ் வெற்றி பெற்றுவிடும் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது வெஸ்ட் இண்டீஸ். குறிப்பாக மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த ஜான் கேம்பல், ஷாய் ஹோப் இருவரும் தங்களின் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். அதனால் மூன்றாவது நாள் முடிவில் 173/2 என நல்ல நிலையில் இருந்தது வெஸ்ட் இண்டீஸ். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பும்ராவை தொடக்கத்திலேயே கில்லால் பயன்படுத்த முடியவில்லை. அதே தீர்க்கமான ஆட்டத்தை அவர்கள் ஆட்டத்தின் நான்காவது நாளும் கொண்டுவந்தார்கள். கவனத்துடனும் நிதானத்துடனும் விளையாடியிருந்தாலும், இந்திய பௌலர்களின் கைகள் முழுமையாக ஓங்காமலும் பார்த்துக்கொண்டார்கள். நிறைய மெய்டன் ஓவர்கள் ஆடியிருந்தாலும், அடிப்பதற்கு ஏற்ற பந்துகள் கிடைத்தபோது ஒன்று, இரண்டு என எடுத்தார்கள். பௌலர்கள் தவறான பந்துகளை வீசும்போது அதை பௌண்டரிகளாக்கினார்கள். எந்தவொரு ரிஸ்க்கும் இல்லாமல் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை அவர்களால் உருவாக்க முடிந்தது. ஜடேஜா தன்னுடைய விரைவான பந்துவீச்சால் நெருக்கடி கொடுப்பார் என்பதால், அவரைப் பெரும்பாலும் சீண்டாமலேயே ஆடினார்கள். இப்படி உறுதியான திட்டம் வகுத்து, அதை சிறப்பாகவும் அரங்கேற்றியதால் அவர்களால் பெரிய இன்னிங்ஸ் ஆட முடிந்தது. சிறப்பாக ஆடிய ஜான் கேம்பெல் 174 பந்துகளில் தன் முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இவர்தான். இவர்கள் இருவருமே சதமடித்து நங்கூரம் போல் நிலைத்து நிற்க, இந்திய பௌலர்கள் மீது நெருக்கடி திரும்பியது. குறிப்பாக கில்லின் முடிவுகள் விமர்சனம் செய்யப்பட்டன. ஆல்ரவுண்டர் நித்திஷ் குமார் ரெட்டியை அணியில் வைத்திருந்தும், கில் அவரைப் பந்துவீசவே அழைக்கவில்லை. யஷஷ்வி ஜெய்ஸ்வாலுக்குக் கூட ஒரு ஓவர் கொடுத்தார். ஆனால், நித்திஷை அவர் பயன்படுத்தவில்லை. அதை அனைத்து வல்லுநர்களுமே கேள்விக்குள்ளாக்கினார்கள். போக, இந்திய பௌலர்கள் தொடர்ச்சியாகப் பந்துவீசிக்கொண்டே இருந்ததால், ஃபாலோ ஆன் கொடுத்த முடிவுமே தவறோ என்ற விவாதம் தொடங்கியது. ஏனெனில் தொடர்ந்து பந்துவீசிய காரணத்தால் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவை தொடக்கத்திலேயே கில்லால் பயன்படுத்த முடியவில்லை. பும்ராவின் வேலைப்பளுவை சரியாகப் பராமரிக்கவேண்டும் என்பதால் அவருக்கு ஆரம்பத்தில் ஓவர் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா முதல் முறையாகப் பந்துவீசியதே 33வது ஓவரில் தான். அதற்குள்ளாகவே கேம்பெல் - ஹோப் இணை கிட்டத்தட்ட 17 ஓவர்கள் நிலைத்து ஆடியிருந்தது. இந்த சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதால் ஃபாலோ ஆன் முடிவும், இப்படியொரு சூழ்நிலை இருந்தும், நித்திஷ் ரெட்டியை இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராகப் பயன்படுத்தாத முடிவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்தப் போட்டியில் இந்திய அணி 200.4 ஓவர்கள் பந்துவீசிய நிலையில், நித்திஷ் ஒரு பந்துகூட வீசவில்லை! பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஷாய் ஹோப்பை போல்டாக்கினார் சிராஜ். ஆனால் அதற்கெல்லாம் பதிலாக வந்தார் முதல் போட்டியின் ஆட்ட நாயகன் ரவீந்திர ஜடேஜா. ரிவர்ஸ் ஸ்வீப் ஆட ஆசைப்பட்டு, ஜடேஜாவின் சுழலில் சிக்கினார் கேம்பெல். 199 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார் அவர். இதன்மூலம் 49 ஓவர்கள் நிலைத்த அந்த பார்ட்னர்ஷிப் 177 ரன்களில் முடிவுக்கு வந்தது. கேம்பெல் சென்ற பின் கேப்டன் ராஸ்டன் சேஸ் ஹோப்புடன் இணைந்து இன்னொரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்கு ஓரளவு நல்ல பலனும் கிடைத்தது. தொடர்ந்து சீரான ஆட்டத்தை ஆடிய ஹோப், தன்னுடைய சதத்தை நிறைவு செய்தார். 8 ஆண்டுகள் கழித்து அவர் அடிக்கும் முதல் டெஸ்ட் சதம் இது. 59 இன்னிங்ஸ்களாக சதமடிக்காமல் இருந்த அவரது சுமையை இந்த இன்னிங்ஸ் குறைத்துவைத்தது. ஆனால், அவரால் அந்த சதத்தை இன்னும் பெரிதாக்க முடியவில்லை. தன் டிரேட் மார்க் 'வாபில் சீம்' பந்தை வீசி ஷாய் ஹோப்பை போல்டாக்கினார் மொஹம்மது சிராஜ். 214 பந்துகள் தாக்குப்பிடித்த ஹோப், 103 ரன்களுக்கு வெளியேறினார். அந்த விக்கெட்டோடு வெஸ்ட் இண்டீஸின் 'ஹோப்' முடிவுக்கு வந்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 311 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது வெஸ்ட் இண்டீஸ். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை குல்தீப், பும்ரா இருவரும் கட்டம் கட்டி வெளியேற்றினார்கள். ஜஸ்டின் கிரீவ்ஸ் ஒருபக்கம் போராடினாலும், மற்ற பேட்டர்களால் அவருக்கு உதவமுடியவில்லை. 311 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது வெஸ்ட் இண்டீஸ். அவர்கள் இன்னிங்ஸ் முடிந்துவிடும் என்று நினைத்திருக்க, கடைசி விக்கெட்டுக்குக் களமிறங்கிய ஜேடன் சீல்ஸ், கிரீவ்ஸுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்தக் கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப் இந்திய பௌலர்களை 22 ஓவர்கள் திக்குமுக்காடச் செய்து 79 ரன்களும் சேர்த்தது. ஒருவழியாக சீல்ஸை பும்ரா வெளியேற்ற 390 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ். கடைசி வரை போராடிய ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அந்த அணி 120 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப், பும்ரா இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 121 என்ற இலக்கை சேஸ் செய்த இந்திய அணி, இரண்டாவது ஓவரிலேயே ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்தது. நான்காவது நாளிலேயே போட்டியை முடிக்கவேண்டும் என்ற நோக்கில் அதீத அதிரடியை வெளிப்படுத்த நினைத்த ஜெய்ஸ்வால், வாரிகன் பந்துவீச்சில் லாங் ஆன் திசையில் கேட்ச்சாகி 8 ரன்களுடன் வெளியேறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாளை வெல்லும்பட்சத்தில், ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியை வென்றிருக்கும் இந்திய அணி 2-0 என இத்தொடரைக் கைப்பற்றும். அடுத்து ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன் இருவரும் எவ்வித அவசரமும் காட்டாமல் பந்துக்கு ஏற்ப மட்டுமே விளையாடினார்கள். அதனால் நான்காவது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்னும் 58 ரன்களே தேவை என்பதால் இந்திய அணி எப்படியும் இந்த இலக்கை ஐந்தாவது நாளின் முதல் ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே எட்டிவிடும். நாளை வெல்லும்பட்சத்தில், ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியை வென்றிருக்கும் இந்திய அணி 2-0 என இத்தொடரைக் கைப்பற்றும். புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி பெறும் முதல் தொடர் வெற்றியாக இது அமையும். அக்டோபர் 14 பிறந்த நாள் கொண்டாடும் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கான பரிசாகவும் இந்த வெற்றி அமையும்! - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1j8ln36dg8o
  6. 22 பிஞ்சு குழந்தைகளை பலி கொண்ட ColdRif இருமல் மருந்து.. சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை 22 பிஞ்சு குழந்தைகளை பலி கொண்ட ColdRif இருமல் மருந்து விவகாரத்தில் சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனம், ColdRif இருமல் மருந்து தயாரித்து வந்தது. இந்த இருமல் மருந்தை குடித்த, 22 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்ரீசன் பார்மாவின் Coldrif, Relife, Respifresh TR ஆகிய இருமல் மருந்துகளில் டை எத்திலீன் கிளைக்கால் என்ற வேதிப்பொருள் அதிகளவில் கலந்து இருந்தது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநில போலீசாரால் ஶ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அத்துடன் ஶ்ரீசன் பார்மாவின் Coldrif இருமல் மருந்துக்கும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ரங்கநாதன் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது. https://minnambalam.com/coldrif-cough-syrup-linked-to-deaths-of-22-infants-enforcement-directorate-raids-7-locations-in-chennai/
  7. அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்! - இஸ்ரேல் இராணுவம் தகவல் 13 Oct, 2025 | 04:35 PM காசா போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்டிருந்த அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் இன்று (13) கைச்சாத்திடப்படவுள்ளது. இந்நிலையில், போர் நிறுத்தத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, ஹமாஸினால் இரண்டு ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்ட 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் இன்று விடுவிக்கப்பட்டுவிட்ட செய்தி, அவர்களது குடும்பத்தினரையும் இஸ்ரேல் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியர்களுக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசா போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து, இன்று முன்னதாக 7 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு சென்றார். அடுத்து, எகிப்து நாட்டுக்குச் சென்று அங்கு, போர்நிறுத்த இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நிகழ்வில் கலந்துகொள்வார். அத்துடன் எகிப்தில் நடைபெறவுள்ள காசா அமைதிக்கான உச்சி மாநாட்டிலும் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளார். இதற்கிடையில் இஸ்ரேலிய பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்ட அறிவிப்பு இஸ்ரேலிய மக்களை பெரும் ஆரவாரப்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/227627
  8. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 04:14 PM 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகளை அடையாளம் கண்டதற்காக ஜோயல் மோகிருக்கும், படைப்பு அழிவின் மூலம் நீடித்த வளர்ச்சியின் கோட்பாட்டிற்காக (The theory of sustained growth through creative destruction) அகியோன் மற்றும் ஹோவிட்டுக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/227624
  9. பெண்களின் உரிமைகள், சமத்துவத்திற்கான எமது கூட்டு உறுதிப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம் - பிரதமர் Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 12:28 PM பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளைச் செயல்பாட்டு ரீதியாகக் கடைப்பிடிப்பதற்குமான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்துவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அமைந்துள்ள சீன தேசிய மாநாட்டு மையத்தில் (CNCC) இன்று திங்கட்கிழமை (13) நடைபெற்ற உலகத் தலைவர்களின் பெண்கள் பற்றிய மாநாடு 2025 இன் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டபோதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். தேசிய மாநாட்டு மையத்திற்கு வருகை தந்த பிரதமரை, சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (Xi Jinping) மற்றும் ஜனாதிபதியின் பாரியார் திருமதி. பெங் லியுவான் (Peng Liyuan) ஆகியோர் வரவேற்றனர். ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்களின் வரவேற்புரையை அடுத்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் உரை உட்பட, அரச மற்றும் அரசாங்கத் தலைவர்கள் தமது உரைகளை முன்வைத்தனர். மன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், 1995 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற பெண்கள் பற்றிய உலக மாநாட்டினதும், பாலின சமத்துவத்திற்கான ஒரு விரிவான கட்டமைப்பாகிய பீஜிங் செயல்பாட்டுத் தளத்தினதும் மரபை நினைவுகூர்ந்ததோடு, கடந்த மூன்று தசாப்தங்களில் அடையப்பட்ட முன்னேற்றங்கள் பற்றியும் குறிப்பிட்டார். குறிப்பாக, பெண் எழுத்தறிவு அதிகரிப்பு, தாய்மாரின் இறப்பு வீதம் கிட்டத்தட்டப் பாதியாகக் குறைந்திருப்பது, மற்றும் ஆயுட்கால அதிகரிப்பு (1995 இல் 69 வயதாக இருந்த ஆயுட்காலம் 2023 இல் 76 வயது வரை அதிகரித்திருக்கின்றது) ஆகியவற்றை சுட்டிக்காட்டினார்.அதே நேரத்தில், தொடர்ந்தும் காணப்படுகின்ற இடைவெளிகள் குறித்தும் அவர் கவனத்தைச் செலுத்தினார். ஆண்களுடன் ஒப்பிடுகையில் குறைவான தொழிலாளர் பங்கேற்பு (48.7% - 73%). அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் குறைந்த பிரதிநிதித்துவம் (பட்டதாரிகளில் சுமார் 35%). பெண்களை விகிதாசார ரீதியில் அதிகமாகப் பாதிக்கும் தொடர்ச்சியான உணவுப் பாதுகாப்பின்மை (ஆண்களை விட 47.8 மில்லியன் அதிகமான பெண்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்). மற்றும் அரசியல் சமத்துவத்தை நோக்கிய மெதுவான முன்னேற்றம் ஆகிய குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டினார். அத்தோடு, பெண்களின் ஒட்டுமொத்த அபிவிருத்தி என்பது கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான செயல்முறையாகும், ஆகையினால் இதற்கு நமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது எனப் பிரதமர் தெரிவித்தார். தலைமைத்துவம் மற்றும் தீர்மானங்களை இயற்றுதலில் பெண்களின் பங்கேற்பை அதிகரித்தல், ஒவ்வொரு மட்டத்திலும் அர்த்தமுள்ள பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல், CEDAW (பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மாநாடு) மற்றும் UNSCR 1325 (ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானம் 1325) இணங்க பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் குறித்த தேசியக் கொள்கை மற்றும் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த தேசியச் செயல் திட்டத்தை (2023–2027) செயல்படுத்துதல் உள்ளிட்ட இலங்கையின் தேசிய உறுதிப்பாடுகளைப் பிரதமர் வலியுறுத்தினார். மேலும், உழைக்கும் வர்க்கம் மற்றும் விளிம்புநிலைச் சமூகங்கள் உட்பட, பல்வேறு சமூகப் பின்னணிகளைக் கொண்ட பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதில் இலங்கையின் உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார். ஆரம்ப விழாவை அடுத்து, ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi Jinping) மற்றும் முதல் பெண்மணி பெங் லியுவான் (Peng Liyuan) ஆகியோர் தேசிய மாநாட்டு மையத்தில் (CNCC) ஏற்பாடு செய்திருந்த உத்தியோகபூர்வ விருந்துபசரிப்பில் பிரதமர் கலந்துகொண்டார். https://www.virakesari.lk/article/227598
  10. 13 Oct, 2025 | 11:57 AM இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. நிதி மோசடிகள் குறித்து கிடைக்கபெறும் பெரும்பாலான முறைப்பாடுகள் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் அதிக இலாபம் கிடைக்கும் எனக் கூறி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் என கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்தார். இந்த நிதி மோசடிகள் மூலம் 10 இலட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரையில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த முறைப்பாடுகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வகையான இணைய நிதி மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேசிய அடையாள அட்டை விபரங்கள், வங்கி விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227594
  11. 'நாங்கள் ஓடவில்லை': ஆதவ் அர்ஜூனா பேச்சும் உச்ச நீதிமன்ற உத்தரவு பற்றிய திமுக எம்.பி. விளக்கமும் பட மூலாதாரம், X/aadhavarjuna & P.Wilson படக்குறிப்பு, ஆதவ் அர்ஜூனா மற்றும் வில்சன் (வலது) 13 அக்டோபர் 2025, 08:24 GMT புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர் கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான மூவர் குழு சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தவெகவின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "வலி மிகுந்த நாட்களை கடந்து வருகிறோம், எங்களுக்கு நெருக்கடியான காலகட்டம் இது. எங்கள் உறவுகள், எங்கள் குடும்பம் துக்கத்தில் உள்ளது. தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்த போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் எழுச்சி இருந்தது. கரூரில் நடைபெற்றது முதல் கூட்டம் கிடையாது. திருச்சி, நாகப்பட்டினம், அரியலூர் என பல மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். எனவே கரூரில் அன்று என்ன நடந்தது என்ற உண்மையை பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் பிரசாரங்களுக்கு செல்லும் போது காவல்துறை பெரிதாக உதவி செய்வதில்லை. அரியலூரில் உதவி செய்தனர், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சில தகவல்களை கொடுத்து உதவினார். அதனால் அந்தக் கூட்டத்தை ரத்து செய்தோம். ஆனால் அன்றைய தினம் நாமக்கல்லில் கூட்டத்தை முடித்து விட்டு, கரூரில் உள்ளே நுழையும் போது கரூர் காவல்துறை எங்களை வரவேற்றார்கள், திட்டமிட்ட இடத்தில் கொண்டு போய் நின்று பேசுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் நிறுத்திய இடத்தில் தான் பேசினோம்." என்றார். "விஜய் தாமதமாக வரவில்லை" மேலும் பேசிய ஆதவ் அர்ஜூனா, "எங்கள் தலைவர் (விஜய்) தாமதமாக வந்தார் என்று வதந்திகள் பரப்பப்பட்டன. கரூரில் காவல்துறை வழங்கிய நேரம் மதியம் 3 மணி முதல் இரவு -10மணி வரை. அந்த நேரத்துக்குள் அங்கு வந்துவிட்டோம். தவறுகள் இருந்தால் கரூர் காவல்துறை ஏன் மாவட்ட எல்லையில் வரவேற்றது? கூட்டத்தில் தண்ணீர் கேட்ட போது விஜய் தண்ணீர் கொடுத்தார். ஆம்புலன்ஸ் வழி விட வேண்டும் என்ற போது அதற்கும் வழிவிட்டார். இந்த இடத்தை எந்த அளவுக்கு கட்டாயப்படுத்தி கொடுத்தார்கள் என்ற ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்." என்று கூறினார். " நாங்கள் ஓடவில்லை" தமிழக அரசின் விசாரணை மீதும் நம்பிக்கை இல்லை என்று கூறிய ஆதவ் அர்ஜூனா, " சம்பவம் நடந்த உடன் நாங்கள் ஓடி விட்டோம் என்று கூறுவது உண்மையல்ல. கரூர் எல்லையில், நான், நிர்மல் குமார், அருண் ராஜ், ஆனந்த் ஆகியோர் காத்திருந்தோம். எங்கள் மொபைல் நெட்வொர்க் – தரவுகளை சரி பார்த்து அதை தெரிந்துக் கொள்ளலாம். காவல்துறையினர் எங்களை வரவேண்டாம், வந்தால் கலவரம் ஏற்படும், பிரச்னை உருவாகும் என்று கூறினார்கள். அதையும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம். திட்டமிட்டு, தவெக வரக்கூடாது என்று ஒட்டுமொத்த மாவட்டச் செயலாளர்கள் மீது தீவிரவாதிகள் போல தடியடி நடத்தினார்கள். இறப்பு ஏற்பட்ட மூன்று -நான்கு நாட்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்கள் முதலில் மனிதர்கள். பிறகு தான் அரசியல்வாதிகள். எங்கள் வீட்டில் யாராவது இறந்து போனால் உடனே ஊடகங்களுக்கு வந்து பேட்டி அளிக்க முடியுமா? கடந்த மாதம் 27-ம் தேதி முதல் அடுத்த ஞாயிறு வரை விடுமுறை, எனவே நீதிமன்றம் செல்ல முடியவில்லை. சமூக ஊடகங்களில் உண்மை பேசிய நபர்களை கைது செய்தார்கள். நீதிமன்றம் செல்ல முடியாத ஒரு வாரத்தில் திமுக தவெக மீது எப்படி குற்றம் சுமத்தி, பொய் பரப்பினார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்" என்றார். பட மூலாதாரம், Getty Images "அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை நடைபெறும் போதே அரசு விளக்கம் ஏன்? " ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, அரசு உயர் அதிகாரிகள், அரசு செயலர்கள் அரசு தவறு செய்யவில்லை என்று எப்படி சொல்வார்கள் என கேள்வி எழுப்பினார் ஆதவ் அர்ஜுனா. "ஒரு விசாரணை நடைபெறும் போது எப்படி அரசு இதை செய்ய முடியும்." என்றார். மேலும், "சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூட்ட நெறிமுறைகள் குறித்து வழக்கு நடக்கும் போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிறப்பு விசாரணை குழுவை அமைக்கிறார். அந்த விசாரணை வெளிப்படையாக நடைபெறுமா என்று தெரியாது. ஏனென்றால் உயர்நீதிமன்ற நீதிபதி, கடுமையாக கருத்துகளை, தவெக தான் தவறு செய்தது மாதிரி கருத்துகளை பதிவு செய்தார். தவெகவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகள், தலைவரின் தலைமை பண்பு, அரசியல் வருகை குறித்து எல்லாம் பேசப்பட்டது. என்ன கோபம் உங்களுக்கு?" என்று அவர் தெரிவித்தார். "சிபிஐ விசாரணைக்கு ஏன் கொண்டாடுகிறார்கள்? " - திமுக படக்குறிப்பு, திமுக வழக்கறிஞர் வில்சன். இந்த வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞரும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். "தவெக சிபிஐ விசாரணை கேட்கவேயில்லை, பிறகு ஏன் நீதிமன்ற உத்தரவு தங்களுக்கு கிடைத்த வெற்றியை போல் பேசுகிறார்கள்" என்று அவர் கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், " இது இடைக்காலத் தீர்ப்பு. இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தவெக என்ன செய்தது என்றால் ஒன்றும் இல்லை. வாய்க்கு வந்த படி பேசுகிறார் ஆதவ் அர்ஜுனா. அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை தொடரும். சிறப்பு புலனாய்வு குழு இதுவரை நடத்திய விசாரணை அறிக்கையை ஒப்படைக்க சொல்லியிருக்கிறார்கள். அப்படி என்றால் இதுவரை நடந்தது சரியே. " என்றார். சிபிஐ விசாரணை கோரிய இரண்டு மனுதாரர்கள் தங்களுக்கு தெரியாமல் வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்தது குறித்து கேட்ட போது, " தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட இரண்டு பேர் வீடியோ கால் மூலம் நீதிமன்றத்தில் பேசினார்கள். அவர்களை மனு அளிக்க சொல்லியிருக்கிறது நீதிமன்றம். மோசடியாக ஒரு தீர்ப்பைப் பெற்றால், நீதிமன்றம் அந்த தீர்ப்பை ரத்து செய்யும். இன்று கொண்டாடுகிறார்கள், அவர்களுக்கு தெரியட்டும், புரியட்டும் இதுபோன்ற பிரச்னை உள்ளது என்று. இது இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது. " என்றார். வீடியோ கால் மூலம் வழக்கில் ஷர்மிளா, செல்வராஜ் ஆஜர் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தங்கள் பெயரில் தங்களுக்கு தெரியாமல் மனு கொடுக்கப்பட்டதாக ஷர்மிளா மற்றும் செல்வராஜ் ஆகியோர் இன்று கூறியிருந்தனர். அவர்கள் இந்த விவகாரம் குறித்து கரூர் சட்ட உதவி மையத்தை நாடியதாகவும், எனவே சட்ட உதவி மையத்தின் மூலம் வழக்கறிஞரின் அலுவலகத்தில் இருந்து இன்று இந்த வழக்கில் வீடியோ கால் மூலம் உச்சநீதிமன்றத்தில் தங்கள் கருத்துகளை அவர்கள் தெரிவித்தனர் என்று சட்ட உதவி மையத்தைச் சேர்ந்த தமிழ்முரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgyw59nxzro
  12. காசா போர் நிறுத்தம் : 7 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ் - இஸ்ரேல் மக்கள் மகிழ்ச்சி! Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 12:29 PM காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் மேற்கொண்டுவந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், மக்கள் பஞ்சம் மற்றும் பட்டினியிலும் சிக்கித் தவிக்கின்றனர். இந்தச் சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியின் பலனாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, அமைதிக்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக ஜனாதிபதி டிரம்ப் இஸ்ரேலுக்குப் புறப்பட்டுள்ளார். ஹமாஸ் அமைப்பிடம் சுமார் 20 பிணைக் கைதிகள் உயிருடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில், 7 பிணைக் கைதிகளை போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பு திங்கட்கிழமை (13) விடுவித்துள்ளது. இந்தப் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட தகவல் இஸ்ரேல் தொலைக்காட்சிகளில் வெளியானதும், அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர். இந்தக் பிணைக்கைதிகள் பரிமாற்ற நிகழ்வு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஒரு பெரிய நிகழ்ச்சியாக நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வை பொதுவெளியில் அமைக்கப்பட்ட திரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/227597
  13. 'கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை' - உச்ச நீதிமன்ற உத்தரவு முழு விவரம் பட மூலாதாரம், Getty Images 13 அக்டோபர் 2025, 05:29 GMT புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர் கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) உத்தரவிட்டுள்ளது. "இந்தப் பிரச்னைகள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கின்றன. தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய இந்த சம்பவம் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியானது. எனவே, இடைக்கால நடவடிக்கையாக விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டியது அவசியம்." என்று நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி மற்றும் நீதிபதி என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்தது. 3 பேர் அடங்கிய குழு கண்காணிக்கும் சிபிஐ விசாரணையை கண்காணிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஸ்தோகி, மற்றும் காவல்துறையில் ஐ.ஜி. பதவிக்குக் குறையாத, தமிழகப் பிரிவைச் சேர்ந்த, ஆனால் தமிழ்நாட்டைச் பூர்வீகமாகக் கொண்டிராத இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். சிபிஐ விசாரணையை இந்தக் குழு கண்காணிக்கும். சிபிஐக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்கவும், சிபிஐ சேகரித்த ஆதாரங்களை மறுபரிசீலனை செய்யவும் அதற்கு சுதந்திரம் உள்ளது. விசாரணையின் முன்னேற்றம் குறித்து சிபிஐ அதிகாரிகள் மாதாந்திர அறிக்கைகளை இந்த மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிப்பார்கள். பட மூலாதாரம், Getty Images சென்னை உயர் நீதிமன்ற செயல்பாட்டில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி அரசியல் பேரணிகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை மட்டுமே கோரும் மனுவில், தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளின் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்ததற்காக சென்னை உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது. பேரணிகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்க கோரும் ரிட் மனு, குற்றவியல் ரிட் மனுவாக எவ்வாறு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் உச்ச நீதிமன்றம் அறிக்கை கோரியுள்ளது. வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்க கோரும் மேற்படி மனுவை வேறு அமர்வுக்கு மாற்றுமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வின் அதிகார வரம்பிற்குள் வரும் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதியின் எந்த குறிப்பிட்ட அங்கீகாரமும் இல்லாமல், சென்னை உயர் நீதிமன்றம் (சென்னை அமர்வு) ஏற்றுக்கொண்டிருக்க முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. சென்னை அமர்வு அந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்திருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. தமிழக அரசுக்கு 8 வாரம் அவகாசம் தவெக மற்றும் பிற தரப்பினர் தாக்கல் செய்த மனுவில் நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி மற்றும் நீதிபதி என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, சிபிஐ விசாரணை கோரும் இரண்டு மனுக்களிலும் மனுதாரர்கள் தங்களுக்குத் தெரியாமல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக அரசு சார்பில் வாதாடிய ஏ.எம். சிங்வி மற்றும் பி. வில்சன் ஆகியோர் அமர்விடம் தெரிவித்தனர். இந்த விஷயத்தை பரிசீலிப்பதாக நீதிபதிகள் கூறினர். தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய எட்டு வார கால அவகாசத்தையும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. மனுக்கள் விவரம் கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் அக்டோபர் 3 ஆம் தேதி உத்தரவை எதிர்த்து தவெக சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளை மட்டுமே கொண்டு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை இந்த மனு எதிர்த்தது. தவெக மற்றும் விஜய் மீது உயர் நீதிமன்றம் தெரிவித்த பாதகமான கருத்துகளுக்கும் அந்த மனுவில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அக்கட்சி கோரியது. விசாரணையை சிபிஐக்கு மாற்ற மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அக்டோபர் 3 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு மற்ற மனுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. பட மூலாதாரம், TVK IT Wing Official/X உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் விசாரணையின் போது, உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்த விதம் குறித்து வாய்மொழியாக உச்சநீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது. அரசியல் பேரணிகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்க கோரிய மனுவில் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. கரூர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் அதிகார வரம்பிற்குள் வரும்போது சென்னையில் உள்ள முதன்மை அமர்வு எவ்வாறு உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டது. அதே இடத்தில் பாதை மிகவும் குறுகலானது என்று கூறி மற்றொரு கட்சியான அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெகவுக்கு பேரணி நடத்த அனுமதி வழங்கியது ஏன் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 30-40 உடல்களின் பிரேத பரிசோதனை நள்ளிரவில் எப்படி செய்யப்பட்டது? அதிகாலை 4 மணிக்கு உடல்கள் தகனம் செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கரூரில் நடந்தது என்ன? தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் மாவட்ட வாரியாக பரப்புரை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில், கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் இரவு சுமார் 7 மணியளவில் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 11 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்து வந்தது. ('லைவ் லா' இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளன) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg43yk4ve0xo
  14. உயரம் பாய்தலில் மன்னார் மாணவி வில்ஷியா, களுதாவளை மாணவன் பகிர்ஜன் புதிய போட்டி சாதனைகள் Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 03:22 PM (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவி ஒருவரும் மாணவன் ஒருவரும் உயரம் பாய்தலில் சாதனைகள் படைத்து தங்கப் பதக்கங்களை சுவீகரித்து அசத்தியுள்ளனர். 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 1.56 மீற்றர் உயரத்தைத் தாவிய மன்னார் பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவி டபிள்யூ. வில்ஷியா புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உயரம் பாய்தலில் 1.98 மீற்றர் உயரத்தைத் தாவிய மட்டக்களப்பு பண்டத்தரிப்பு களுதாவளை மகா வித்தியாலாய மாணவன் கே. பகிர்ஜன் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். பகிர்ஜனின் ஆற்றல் வெளிப்பாடு பிரமிக்கத்தக்கதாக அமைந்துள்ளது என மெயல்வல்லுநர்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் கே. கிருஷான் 50.39 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண பாடசாலைகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து ஏனைய பாடசாலைகளை பிரமிக்கவைத்தன. இப்போட்டியில் அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவி பி. சண்முகப்பிரியா, விக்டோரியா கல்லூரி மாணவி கே. வைஷ்ணவி, ஸ்கந்தவரோதயா கல்லூரி மாணவி எஸ். சகானா ஆகியோர் 2.60 மீற்றர் உயரத்தை தாவி முயற்சிகளின் அடிப்படையில் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர். 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் முருங்கன் மகா வித்தியாலய மாணவன் ஏ.கெமில்டன் (6.91 மீற்றர்) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஆயிலிலாய் (10.04 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா காமினி மகா வித்தியாலய மாணவன் ஈ. விகிர்தன் (3:59.20) வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தலில் 4.50 மீற்றர் உயரத்தைத் தாவிய தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் சந்திரகுமார் துஷாந்தன் முதலாம் இடத்தையும் சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவன் கஜானன் அதே உயரத்தைத் தாவி இரண்டாம் இடத்தையும் பெற்றனர். எனினும் இப் போட்டியில் முன்றாம் இடத்தைப் பெற்ற மேல் மாகாண பாடசாலை மாணவனின் அவயவத்தில் பச்சைக் குத்தப்பட்டிருந்ததாகவும் இது பாடசாலை மாணவர்களுக்கான ஒழுக்க விதிகளை மீறுவதாகவும் தெரிவித்து அவரை தகுதிநீக்கம் செய்யுமாறு தெல்லிப்பழை மகாஜனா, சாவகச்சேரி இந்து, ஸ்கந்தவரோதயா ஆகிய கல்லூரிகளின் அதிகாரிகள் எழுத்துமூல ஆட்சேபனை செய்ததால் அப் போட்டிக்கான முடிவு தீர்ப்பாளர்களால் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆட்சேபனை மனுவை பரீசீலித்த கல்வி அமைச்சு அதிகாரிகள், குறிப்பிட்ட மாணவனை சோதனையிட்ட போது அவரது கையில் பச்சைக் குத்தப்பட்டிருப்பது ஊர்ஜிதமானதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பணிப்பாளர் லூத்தினன் கேனல் அனுர அபேவிக்ரமவிடம் வினவியபோது, இந்த ஆட்சேபனையை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாணவனின் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேன்முறையீட்டு குழுவினர் வழங்கும் தீர்ப்பின் பின்னரே போட்டி முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் பதிலளித்தார். கிழக்கு மாகாண வெற்றியாளர்கள் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நீளம் பாய்தலில் ஒலுவில் அல் ஹம்ரா மகா வித்தியாலய மாணவன் யூ. அப்துல்லா (5.99 மீ.) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் மூதூர் அல் ஹம்ரா மாணவன் ஆர்.எம். அஹ்சான் (40.88 மீ.) 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கந்தளாய் அல் தாரிஹ் மகா வித்தியலாய மாணவன் எம்.பி.எம். அஸாம் (10.85 செக்.) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்தனர். https://www.virakesari.lk/article/227619
  15. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹமாஸ் விடுவித்த 7 பணயக்கைதிகளுடன் இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்ற காட்சி 13 அக்டோபர் 2025, 09:28 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹமாஸ் இரண்டு தொகுதிகளாக 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், பின்னர் இஸ்ரேல் படைகளால் தாயகம் அழைத்துச் செல்லப்பட்டார்கள். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் தங்களது குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருதரப்பிலும் நீண்ட நாட்களாக பிரிந்திருந்த உறவுகளை மீண்டும் சந்திக்கும் ஆவலில் குடும்பத்தினர் உணர்ச்சிமயமாக காட்சியளித்தனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இஸ்ரேலிய பணயக்கைதி எய்ட்டன் ஹார்னை வரவேற்கும் ஆவலில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, முதல் 7 பேரில் ஒருவராக இஸ்ரேலிய பணயக்கைதி ஆலன் ஒஹெல்லை ஹமாஸ் விடுவித்த செய்தி அறிந்ததும் மகிழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பாலத்தீன சிறைக்கைதிகள் விடுதலை ஒப்பந்தப்படி, ஹமாஸ் 48 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும். அவர்களில் உயிருடன் இருப்பதாக நம்பப்படும் 20 பேர் 2 தொகுதிகளாக விடுவிக்கப்பட்டனர். அதற்கு ஈடாக, இஸ்ரேல் 250 பாலத்தீன கைதிகளையும், தடுப்புக்காவலில் உள்ள 1,700 பாலத்தீனியர்களையும் விடுவிக்கும். இஸ்ரேல் சிறையில் இருந்து வெளியே வந்த பல வேன்கள் பாலத்தீன கைதிகளை ஏற்றிச் சென்றதாக நம்பப்படுகிறது. அவர்களை வரவேற்க ரமல்லா நகரில் குடும்பத்தினரும், உறவினர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, இஸ்ரேல் சிறையில் இருந்து வந்த வேன்கள். விடுவிக்கப்பட்ட பாலத்தீன கைதிகள் அந்த வேன்களில் ஏற்றிச் செல்லப்படுவதாக நம்பப்படுகிறது. படக்குறிப்பு, இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்படும் பாலத்தீன கைதிகளை வரவேற்க காத்திருக்கும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள். ஹோஸ்டேஜ் சதுக்கத்தில் கூடிய மக்கள் முன்னதாக, இஸ்ரேலிய பணயக்கைதிகளின் வருகைக்காக அவர்களது உறவினர்கள் டெல் அவிவ் நகரில் உள்ள ஹோஸ்டேஜ் சதுக்கத்தில் அதிகாலை 5 மணியளவிலேயே திரளாக கூடிவிட்டனர். அங்குள்ள பெரிய திரைகளில் பணயக்கைதிகள் விடுதலை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அந்த சதுக்கத்தில் காத்திருந்த மக்களின் புகைப்படத்தை ஒரு சமூக வலைதளப் பயனர் பகிர்ந்துள்ளார். 'சதுக்கம் பணயக்கைதிகளின் வருகைக்காக காத்திருக்கிறது' என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, பணயக்கைதிகளின் விடுதலைக்காக காத்திருக்கும் இஸ்ரேலியர்கள் போர் நிறுத்தம் தொடரும் - டிரம்ப் இஸ்ரேலுக்கு புறப்படும் முன்பாக, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போர் நிறுத்தம் தொடரும் என்றும், காஸாவிற்கான அமைதி வாரியம் விரைவில் அமைக்கப்படும் என்றும் கூறினார். பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, டிரம்பை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்கிறார் "யூதர்கள், இஸ்லாமியர்கள் அல்லது அரேபியர்கள் என அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதே எங்கள் குறிக்கோள். இஸ்ரேலுக்குப் பிறகு, நான் எகிப்துக்குச் செல்வேன். அங்குள்ள மிகவும் சக்திவாய்ந்த, பெரிய, பணக்கார நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்," என்று டிரம்ப் கூறினார். இஸ்ரேலுக்கு வந்த பிறகு, டிரம்ப் திங்கட்கிழமை எகிப்துக்குச் செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் காஸா பிரச்னை குறித்து ஆலோசிக்க உள்ளார். பிரிட்டன் பிரதமர் ஸ்டாமரும் எகிப்துக்கு வந்துள்ளார். இந்த கூட்டத்தில் அவரும் பங்கேற்க உள்ளார். எகிப்தில் முக்கிய பேச்சுவார்த்தைகள் பாலத்தீன விடுதலை அமைப்பின் (PLO) தலைவர் ஹுசைன் அல்-ஷேக் ஞாயிற்றுக்கிழமை காலை முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரை சந்தித்து, காஸாவின் எதிர்காலம் குறித்து விவாதித்தார். பாலத்தீன விடுதலை அமைப்பு (PLO), காஸா பிரச்னையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் டோனி பிளேருடன் சேர்ந்து, மற்ற நாடுகளுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், காஸா விவகாரங்களை மேற்பார்வையிடும் குழுவில் டோனி பிளேர் இருப்பாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று டிரம்ப் கூறினார். இஸ்ரேல் பயணத்துக்கு புறப்படும் முன் ஊடகங்களிடம் பேசிய டிரம்ப், 'போர்களுக்கு தீர்வு காணவும், அமைதியை நிலைநாட்டவும் தான் நான் பணியாற்றுகிறேன்' என்று கூறினார். 'இது நான் தீர்த்து வைத்த எட்டாவது போர். நான் இதை நோபல் அமைதி பரிசுக்காக அல்ல, மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக செய்கிறேன்' என்றும் அவர் கூறினார். டிரம்புக்கும் பிற தலைவர்களுக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகள் எகிப்தில் நடைபெற உள்ளன. இந்த மாநாடு 'காஸா அமைதி உச்சிமாநாடு' என்று அழைக்கப்படுகிறது. காஸா போருக்கு முடிவு காண்வதை நோக்கமாகக் கொண்ட இந்த உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மன் அதிபர் பிரிட்ரிக் மெர்ஸ், இத்தாலிய பிரதமர் மெலோனி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் பங்கேற்கிறார்கள். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, காஸாவில் உணவு விநியோக லாரிகளுக்கு அருகில் மக்கள் கூடி, அவற்றை எடுத்துச் செல்லும் காட்சி. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டெரெஸ், தானும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதாகத் தெரிவித்தார். பாலத்தீன அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவிற்கு பிரிட்டன் ரூ.216 கோடி நிதி உதவி அறிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgvdn91lzdo
  16. காலி - பிலான பகுதியில் கழிவறை குழி வெடித்து ஒருவர் உயிரிழந்தார். வீட்டில் உள்ள கழிவறை குழியில் கார்பைடைப் பயன்படுத்தி எரிவாயு தயாரிக்க முயன்ற போது நேற்று (12) மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். 50 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmgonwccm00yjqplpn4ia8856 https://www.facebook.com/reel/1324971306092243
  17. மலையக தமிழ் மக்களுக்கள் வாக்குகளுக்காக மாத்திரமே பயன்படுத்தினர் அவர்களுக்கான அபிவிருத்திகளை குழப்புவதற்கு இனியும் முயற்சிக்காதீர் - பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் Published By: Vishnu 13 Oct, 2025 | 05:15 AM (எம்.மனோசித்ரா) மலையக தமிழ் மக்கள் காலம் காலமாக வாக்குகளுக்காக அரசியல்வாதிகளால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்களே தவிர அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தேர்தலுக்கு முன்னதாகவே ஹட்டன் பிரடகனத்தின் ஊடாக அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே கடந்த காலங்களைப் போன்று இவற்றைக் குழப்புவதற்கு இனியும் முயற்சிக்க வேண்டாம் என எதிரணியினரிடம் கேட்டுக் கொள்வதாக பெருந்தோட்ட , சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். பண்டாரவளையில் 2056 பயனாளிகளுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தின் வீட்டுறுதிக்கான ஆவணத்தை வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மலையக மக்கள் இருநூறு ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணியாக திகழ்கின்றனர். நாட்டில் பல வைத்தியர்களையும் தொழில் வல்லுனர்களையும் உருவாக்கிய அவர்களுக்கு இலவச கல்வி கூட மறுக்கப்பட்டது. வாக்குகளுக்காக அரசியல்வாதிகளால் அந்த மக்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்களே தவிர அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலைமையில் கடந்த ஆண்டு உலகத்திலேயே அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான சம்பவமாக இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. மக்கள் நாயகனாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தேர்தலுக்கு முன்னதாகவே ஹட்டன் பிரகடனத்தின் ஊடாக பல்வேறு வேலை திட்டங்களை முன்மொழிந்திருந்தது. அந்த வேலைத்திட்டங்களில் மிக முக்கியமாக மலையக மக்களின் காணி உரிமம் மற்றும் வீட்டு உரிமத்தை இந்த அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என உறுதியளித்திருந்தோம். மலையக மக்களின் வரலாற்றில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் சிறந்த தலைமைத்துவம் வழங்கப்படுகிறது. மலையக மக்களின் சேவையை இலங்கை மாத்திரம் இன்றி முழு உலகமும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. எமது வேலைத் திட்டங்களின் ஊடாக மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வினை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறு துன்பங்களை அனுபவித்து வரும் மக்களுக்காக 10 000 வருட திட்டத்தை அறிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மொத்த இந்திய அரசுக்கும் எமது மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த இந்திய வீட்டுத்துடன் அந்த மக்களுக்கான காணி உரிமத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என மீண்டும் உறுதியளிக்கின்றேன். அதேபோன்று பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வையும் நிச்சயம் பெற்றுக் கொடுப்போம். இன்று எம்மை விமர்சிக்கும் மலையக பிரதிநிதிகள் இதுவரையும் அந்த மக்களுக்கு இழைத்த துரோகம் போதும். எனவே அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் அந்த மக்கள் சமூகத்தை குழப்புவதற்கு இனியும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். மலையக மக்கள் மாத்திரமின்றி சகல இன மக்களுக்கும் சிறப்பான ஒரு நாட்டை நாம் உருவாக்குவோம். கடந்த ஆட்சியாளர்கள் மலையக மக்களை மறந்திருந்தாலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவ்வாறு செயல்படாமல் அவர்களை நினைவில் இருத்தி அவர்களுக்கான தேசிய வேலை திட்டத்தை ஆரம்பித்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/227570
  18. 2030 ஆம் ஆண்டுக்குள், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள் காரணமாக உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஆண்டுக்கு சுமார் 560 பேரிடர்களை எதிர்கொள்ளும் என அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. பேரிடர் அபாயக் குறைப்புக்கான உலகளாவிய கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 13 ஆம் திகதி சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தைக் கடைப்பிடிக்கிறது. ஒற்றுமையின் மூலம் மட்டுமே உலகைப் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என்பதே சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தின் கருப்பொருளாகும். https://adaderanatamil.lk/news/cmgolgnpn00yiqplpw28r6sel
  19. காஸாவில் 27 பேர் பலி: இஸ்ரேல் படை வெளியேறிய பிறகு ஹமாசுடன் மோதும் ஆயுதக்குழு - என்ன நடக்கிறது? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, காஸாவில் ஹமாஸ் படைகளுக்கும் ஆயுதமேந்திய துக்முஷ் உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கட்டுரை தகவல் ரஷ்தி அபுஅலௌஃப் காஸா செய்தியாளர் (இஸ்தான்புல்) 2 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா நகரில் ஹமாஸ் பாதுகாப்புப் படைகளுக்கும் துக்முஷ் குடும்பத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய உறுப்பினர்களுக்கும் இடையே நடந்த கடுமையான மோதல்களில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை முடிவுற்ற பிறகு நடந்த மோசமான மோதல்களில் ஒன்றாகும் இது. "முகமூடி அணிந்த ஹமாஸ் படையினர் ஜோர்டானிய மருத்துவமனை அருகே துக்முஷ் போராளிகளுடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர்" என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்புப் படைகள் அவர்களைச் சுற்றி வளைத்து தடுத்து வைக்க கடுமையான சண்டையில் ஈடுபட்டனர் என்றார். "போராளிகளின் ஆயுதமேந்திய தாக்குதலில்" எட்டு ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை சண்டை தொடங்கியதில் இருந்து 19 துக்முஷ் உறுப்பினர்கள் மற்றும் எட்டு ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன? பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, காஸா தெருக்களில் ஹமாஸ் படையினர் தெற்கு காஸா நகரில் உள்ள டெல் அல்-ஹவா சுற்றுப்புறத்தில் 300 க்கும் மேற்பட்டவர்களை கொண்ட ஹமாஸ் படை, துப்பாக்கி ஏந்திய துக்முஷ் உறுப்பினர்கள் கட்டுப்பாட்டில் இருந்த குடியிருப்பு கட்டடத்தை தாக்க முன்னேறியதை அடுத்து மோதல்கள் வெடித்தன என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். "கடுமையான துப்பாக்கிச் சூட்டினால் பல டஜன் குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அப்பகுதியில் மக்கள் பீதி அடைந்தனர்" என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். அவர்களில் பலர் போரின் போது பல முறை இடம்பெயர்ந்தவர்கள். "இந்த முறை மக்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் இருந்து தப்பி ஓடவில்லை, அவர்கள் தங்கள் சொந்த மக்களிடமிருந்து ஓடிக் கொண்டிருந்தனர்" என்று அப்பகுதியில் வசிப்பவர் ஒருவர் கூறினார். காஸாவின் மிக முக்கியமான குடும்பங்களில் ஒன்றான துக்முஷ் குடும்பம் நீண்ட காலமாக ஹமாஸுடன் பதற்றமான உறவைக் கொண்டுள்ளது. அதன் ஆயுதமேந்திய உறுப்பினர்கள் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் ஹமாஸ் குழுவுடன் மோதியுள்ளனர். ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா உள்துறை அமைச்சகம், அதன் படைகள் காஸாவில் சட்டம் - ஒழுங்கை மீட்டெடுக்க முயன்று வருவதாக கூறியுள்ளது. மோதலுக்கு என்ன காரணம்? மோதல்களுக்கு யார் காரணம் என்பது குறித்து இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். துப்பாக்கி ஏந்திய துக்முஷ் உறுப்பினர்கள் தனது இரண்டு போராளிகளைக் கொன்றதாகவும், அதில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ள ஹமாஸ், அதுவே மோதலை தூண்டியதாக கூறியுள்ளது. எனினும் சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதலில் அல்-சப்ரா சுற்றுப்புறத்தில் தங்களது வீடுகள் அழிக்கப்பட்ட பின்னர் துக்முஷ் குடும்பம் ஒரு கட்டடத்தில் தஞ்சம் புகுந்தது. அது ஒரு காலத்தில் ஜோர்டானிய மருத்துவமனையாக செயல்பட்டது. அந்த கட்டடத்துக்குள் ஹமாஸ் நுழைந்ததாக துக்முஷ் குடும்பத்தின் வட்டாரம் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தனது படைகளுக்கு ஒரு புதிய தளத்தை நிறுவுவதற்காக அந்த கட்டடத்திலிருந்து துக்முஷ் குடும்பத்தை வெளியேற்ற முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இஸ்ரேலிய துருப்புகளால் சமீபத்தில் மக்கள் வெளியேற்றப்பட்டிருந்த காஸாவின் பகுதிகளில் தனது கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த ஹமாஸ் தனது பாதுகாப்புப் படைகளின் சுமார் 7,000 உறுப்பினர்களை திரும்ப அழைத்துள்ளது என்று உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆயுதமேந்திய ஹமாஸ் பிரிவுகள் ஏற்கனவே பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் காஸா காவல்துறையின் நீல நிற சீருடைகளில் உள்ளனர், சில சீருடைகள் அல்லாமல் பொதுமக்கள் போன்ற ஆடைகளை அணிந்துள்ளனர். ஹமாஸ் ஊடக அலுவலகம் "தெருக்களில் போராளிகளை" நிறுத்தியிருப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz91weey8l0o
  20. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மிகப் பெரிய உலகக் கிண்ண வெற்றி இலக்கை கடந்து அவுஸ்திரேலியா அபார வெற்றியீட்டியது Published By: Vishnu 13 Oct, 2025 | 04:42 AM (நெவில் அன்தனி) விசாகபட்டினம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற மிகவும் பரபரப்பான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகப் பெரிய வெற்றி இலக்கை அடைந்த அவுஸ்திரேலியா, வரவேற்பு நாடான இந்தியாவை 6 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் வெற்றிகொண்டது. அனாபெல் சதர்லண்ட் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல், அணித் தலைவி அலிசா ஹீலி குவித்த அபார சதம் என்பன அவுஸ்திரேலியாவுக்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 331 ஓட்டங்கள் என்ற மிகப் பெரிய மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 49 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 331 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது. இதன் மூலம் உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை அவுஸ்திரேலியா சற்று அதிகரித்துக்கொண்டதுடன் இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு ஊசலாட்டத் தொடங்கியுள்ளது. ஆரம்ப வீராங்கனை அலிசா ஹீலி மிக அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி 107 பந்துகளில் 21 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 142 ஓட்டங்களைக் குவித்தார். இதனிடையே 40 ஓட்டங்களைப் பெற்ற ஃபோப் லிச்பீல்டுடன் முதலாவது விக்கெட்டில் 85 ஓட்டங்களை அலிசா ஹீலி பகிர்ந்தார். மொத்த எண்ணிக்கை 154 ஓட்டங்களாக இருந்தபோது எலிஸ் பெரி உபாதைக்குள்ளாகி 32 ஓட்டங்களுடன் தற்காலிய ஓய்வு பெற்றார். எனினும் 6ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் மீண்டும் துடுப்பெடுத்தாட களம் புகுந்த எலிஸ் பெரி 47 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். மத்திவரிசையில் ஆஷ்லி கார்ட்னர் 45 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஸ்ரீ சரணி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தீப்தி ஷர்மா 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அமன்ஜோத் கோர் 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 330 ஓட்டங்களைப் பெற்றது. ஸ்மிரித்தி மந்தனா, ப்ராத்திக்கா ராவல் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்ததுடன் 155 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். மந்தனா 66 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களைப் பெற்றார். இதனிடையே மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 5000 ஓட்டங்களை மந்தனா பூர்த்திசெய்தார். ப்ராத்திக்கா ராவல் 75 ஓட்டங்களைப் பெற்றார். அவர்களை விட ஹார்லீன் டியோல் 38 ஓட்டங்களையும் ஜெமிமா ரொட்றிகஸ் 33 ஓட்டங்களையும் ரிச்சா கோஷ் 32 ஓட்டங்களையும் பெற்றனர். 43ஆவது ஓவரில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றிருந்த இந்தியா, அதன் கடைசி 6 விக்கெட்களை வெறும் 36 ஓட்டங்களுக்கு இழந்தது. இதுவும் அதன் தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தது. பந்துவீச்சில் அனாபெல் சதர்லண்ட் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் சொஃபி எக்லஸ்டொன் 75 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: அலிசா ஹீலி. https://www.virakesari.lk/article/227565
  21. அததெரண கருத்துப் படம்
  22. இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (12) பண்டாரவளையில் இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். அதேநேரம் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் இருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார். இதேவேளை, 200 வருடகாலமாக வாழும் ஒரு சமூகத்தினருக்கு குறைந்த பட்சம் சிறிய அளவிலான காணி கூட இல்லாமல் இருக்கின்றனர். எனவே அவர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தமக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர். இந்த வருடத்தில் அந்த தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வறுமை, ஊட்டச் சத்து குறைபாடு, சுகாதார ரீதியான பாரிய பின்னடைவை மலையக மக்களே அதிகளவில் எதிர்நோக்கியுள்ளனர். எனவே அதில் கவனம் செலுத்தி சிறந்த சுகாதார சேவையினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் நாட்டில் சுத்தமான குடிநீரை வழங்க புதிய திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்படும். வறுமைக்கும், கல்விக்கும் பாரிய தொடர்பு உள்ளது. எனவே மக்களை வறுமையில் இருந்து மீட்டு எடுப்பதற்கு சிறந்த கல்வி திட்டத்தை உறுதி செய்வோம். மலையக மக்களின் கௌரவம் அடிமட்டத்தில் உள்ளது என்பதை அறிவோம். எனவே அவர்களது கலாச்சாரத்திற்கு மதிப்பளித்து அவர்களது சமூகத்தை வளர்ச்சியடைவதற்கு அனைத்து பணிகளும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmgnbia9400y3qplpzn52d1sl
  23. வீடுகள் மட்டுமல்ல, எதிர்காலத்தை கட்டி எழுப்புவதும் எமது இலக்காகும் – இந்திய உயர்ஸ்தானிகர் Published By: Digital Desk 3 12 Oct, 2025 | 04:23 PM வீடுகள் மட்டுமல்ல, எதிர்காலத்தை கட்டி எழுப்புவதும் எமது இலக்காகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை (12) பண்டாரவளையில் நடைபெற்ற இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் இரண்டாம் தொகுதி அங்குரார்ப்பண நிகழ்விலேயே இதனை தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், இன்றைய நிகழ்ச்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. இந்தியாவின் உதவியுடன் செயல்படும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று துவங்கப்படுகிறது. இது இந்தியா – இலங்கை உறவின் ஆழத்தையும் நட்பையும் பிரதிபலிக்கிறது. இரு நாடுகளும் இணைந்து மக்களின் வாழ்க்கை நலனையும் முன்னேற்றத்தையும் குறிக்கோளாகக் கொண்டு செயல் படுகின்றன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மேற்கொண்ட இருதரப்பு முயற்சிகளால் இந்த உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது. “சப்கா சாஸ், சப்கா விகாஸ்” (அனைவருடனும் வளர்ச்சி) என்ற மந்திரத்தின் கீழ் இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது; அதேபோல் இலங்கையும் “வேறு ஒரு நாடு, அழகான வாழ்க்கை” என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறது. இது இரு நாடுகளின் வரலாற்று, கலாச்சார, சமூக பிணைப்புகளின் சின்னமாகும். இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள், இரு நாடுகளுக்கிடையிலான உறவின் பாலமாக இருந்து வருகின்றனர். அவர்கள் இலங்கையின் பொருளாதாரம், கல்வி, சமூக மேம்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்றனர். இன்றைய திட்டம் — மொத்தம் 14,000 வீடுகள் — அந்த சமூகத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்றாவது கட்டத்தில் 4,000 வீடுகள் நிறைவு பெற்றுள்ளன. 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தபடி, நான்காம் கட்டத்தின் கீழ் மேலும் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இன்று அதில் இரண்டாம் கட்டம் துவங்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் ஆதரவில் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் மொத்தம் 65,000 வீடுகள், ரூ. 64 பில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பில் கட்டப்படும். இது பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பாதுகாப்பான இருப்பிடத்தையும் மேம்பட்ட வாழ்க்கையையும் அளிக்கும். வீடுகள் கட்டுவது மட்டுமல்ல; எதிர்காலத்தை கட்டுவதே இந்தியாவின் நோக்கம். கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, சமூக உட்புகுத்தல் போன்ற துறைகளிலும் இந்தியா இலங்கையுடன் இணைந்து பணிபுரிகிறது. இதுவரை பல பள்ளிகளுக்கு சயின்ஸ் லேப், ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆசிரியர் பயிற்சிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து, இந்தியா 2.5 பில்லியன் ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் கீழ் பல சமூக மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன — குறிப்பாக STEM ஆசிரியர் பயிற்சி திட்டம் மூலம் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அதேபோல், சுகாதார வசதிகள், கல்வி நிறுவன மேம்பாடு, சமூக இணைப்பு ஆகிய துறைகளில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிரதமர் மோடி அவர்கள் தனது அண்மைய விஜயத்தின் போது சீகதா அம்மன் ஆலய அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கான உதவிகளையும் அறிவித்திருந்தார். இதனால் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம் வேகமாக நடைபெறும். இந்தியாவின் உதவி என்பது ஒரு நண்பனின் உதவியல்ல — ஒரு குடும்ப உறுப்பினரின் பொறுப்புணர்வு கொண்ட உதவியாகும். இன்றைய நிகழ்வில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்திய பூர்விகத் தமிழர் சமூகத்துக்கான ஆதரவு எப்போதும் தொடரும். திருவள்ளுவர் கூறியது போல — “விருப்பறாச் சுற்றம் இகயின் அருப்பறா ஆகும் பலவும் தரும்.” அதாவது, உண்மையான பாசமும் நம்பிக்கையும் கொண்ட உறவு பல நன்மைகளை அளிக்கும். அந்த உறவின் அடிப்படையில் தான் இந்தியா–இலங்கை நட்புறவு வேரூன்றி வளர்ந்து வருகிறது. இறுதியாக, நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வீடமைப்புத் திட்டத்தின் மூலம் பல குடும்பங்கள் தங்கள் புதிய இல்லங்களில் ஒளியையும் நம்பிக்கையையும் காணட்டும் எனக் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/227554
  24. Live 13th Match (D/N), Visakhapatnam, October 12, 2025, ICC Women's World Cup India Women 330 Australia Women (45/50 ov, T:331) 303/6 AUS Women need 28 runs in 30 balls. Current RR: 6.73 • Required RR: 5.60 • Last 5 ov (RR): 29/2 (5.80)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.