Everything posted by ஏராளன்
-
வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவில் சிவராத்திரியில் பொலிஸாரின் அட்டூழியங்கள்: நல்லூரில் போராட்டத்திற்கு அழைப்பு
Published By: VISHNU 10 MAR, 2024 | 11:58 PM வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் மகா சிவராத்திரி பூசையின் போது பொலிஸாரின் அட்டூழியங்களைக் கண்டித்தும், கைது செய்தோரை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி திங்கட்கிழமை (11) மாலை 04 மணியளவில் நல்லை ஆதீன முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும், இந்தப் போராட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறும் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்புச் சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு. அகத்தியர் அடிகளார் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெடுக்குநாறி மலை லிங்கேஸ்வரர் கோவில் மகா சிவராத்திரி பூசையின் போது பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கி இருக்கின்றது. சைவர்களின் வழிபாட்டு உரிமை மிகப் புனிதமான விரத நாளில் அப்பட்டமாக மறுக்கப்பட்டு மிக மோசமாக சைவ சமய விழுமியங்களை புனித சடங்குகளை அவமதிக்கும் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. அதன் உச்ச கட்டமாக தவறேதும் செய்யாத சிவனடியார்கள் எண்வர் விரதமிருந்து பூசையில் ஈடுபட்ட தருணம் மோசமாக கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பூசை மற்றும் படையல் பொருட்கள் சப்பாத்து கால்களினால் சீருடை தரித்த நபர்களால் தட்டி அகற்றப்பட்டுள்ளது. பூசகர் சிவத்திரு மதிமுகராசா மீளக் கைது செய்யப்படுள்ளார். இந்த ஈனச் செயல்கள் மிகப் பாரதூரமான சைவத்தமிழர்களின் மனதை காயப்படுத்தியுள்ளதுடன் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறும் செயல் என்பதை உலகிற்கும், அரச உயர் பீடத்திற்கும் சொல்ல வேண்டியது ஒவ்வொரு தமிழர்களதும் கடமையாகும் உலகம் பூராகவும் உள்ள சைவர்களின் மிக உன்னதமான முதன்மையான விரதம் சிவராத்திரி ஆகும். அந்த வகையில் இந்த சிவராத்திரி தினத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள தொன்றுதொட்டு தமிழ்ச் சைவர்கள் வழிபட்டு வரும் ஆதி சிவன் கோவிலில் தடைபெற்ற மோசமான சம்பங்களைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட பக்தர்களை உடனடியாக விடுவிக்ககோரியும் நாம் அணிதிரண்டு எதிர்ப்பை பதிவு செய்வோம் எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178384
-
96 ஆவது ஒஸ்கர் விருது விழா - 2024
ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு ஏழு ஆஸ்கர் விருதுகள் - கிறிஸ்டோபர் நோலன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 20 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2024ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகள் (ஆஸ்கார் விருதுகள்) விழாவில் ஓப்பன்ஹைமர் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் ஏழு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குநர் (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த நடிகர் (சிலியன் மர்பி), சிறந்த துணை நடிகர் (ராபர்ட் டவுனி ஜூனியர்), சிறந்த ஒளிப்பதிவாளர் (ஹாய்ட் வான் ஹோய்டெமா), சிறந்த திரைப்பட எடிட்டிங் (ஜெனிஃபர் லெம்ம்), சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகியவற்றுக்கு ஓபன்ஹெய்மர் பரிந்துரைக்கப்பட்டு விருதும் வென்றுள்ளது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இந்தப் படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் மொத்தம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. ஓபன்ஹைமர் படம் ஏழு பிரிவுகளிலும், மற்ற படங்கள் ஆறு பிரிவுகளிலும் விருதுகளை வென்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES சிறந்த இயக்குநருக்கான விருதை கிறிஸ்டோபர் நோலன் பெற வந்தபோது, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவருக்கு கோப்பையை வழங்கினார். அந்தச் சந்தர்ப்பத்தில், நோலன் தனது மனைவியும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளருமான எம்மா தாமஸுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய எம்மா தாமஸ், அந்த தருணத்தைப் பற்றி தான் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்ததாகவும், அந்தத் தருணத்திலேயே தான் நின்றிருப்பதாகவும் கூறினார் அவர் தனது கணவரை 'தனித்துவமானவர் என்று வர்ணித்தார். இருப்பினும், ஒட்டுமொத்த அணியின் சிறப்பான செயல்பாட்டிற்காக அவர் பெருமையடைவதாகக் கூறினார். மேலும் தனது மூன்று குழந்தைகளுக்கும் நன்றி தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற எம்மா ஸ்டோன் பட மூலாதாரம்,GETTY IMAGES எம்மா ஸ்டோன் சிறந்த நடிகையாக அவரது பெயர் அறிவிக்கப்பட்டபோது அதிர்ச்சியடைந்தார். "நான் அந்த நேரத்தில் அப்படியே சுயநினைவு இழந்துவிட்டேன். நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்,” என்று அவர் மேடைக்குப் பின்னால் கூறினார். "நான் கொஞ்சம் கொஞ்சமாகச் சுழல்வது போல் உணர்கிறேன். இது ஒரு பெரிய மரியாதை. எனக்கு இது ஆச்சரியமாக உள்ளது," என்றார். யோர்கோஸ் லாந்திமோஸ் படத்தில் பெல்லா பாக்ஸ்டராக நடித்ததில் இருந்து தான் நிறைய கற்றுக்கொண்டதாக அவர் கூறினார். "புதிதாக ஆனால் உருவகமாக நடிப்பதற்கான ஒரு வாய்ப்பு... மொழி மற்றும் திறமைகளை வேகமாகப் பெறும் ஒரு நபராக நடிக்கும் வாய்ப்பு... அவள் மகிழ்ச்சியும் ஆர்வமும் உண்மையான அன்பும் நிறைந்தவளாக இருந்தாள்," என அந்தக் கதாப்பத்திரத்தைப் பற்றி அவர் பேசினார். ஓபன்ஹைமர் சிலியன் மர்பிக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பட மூலாதாரம்,GETTY IMAGES சில்லியன் மர்பி செய்தியாளர் அறைக்குள் வரும்போது அவர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பதைப் போலத் தெரிந்தது. (அவர் வெற்றி பெற்றதில் ஆச்சரியமில்லை என்றாலும்). "நான் கொஞ்சம் திகைப்புடன் இருக்கிறேன், இன்று இங்கு நிற்கும் ஐரிஷ் நாட்டவராக இருப்பதில் நான் மிகவும் வியப்படைகிறேன், பணிவாகவும் நன்றியுடனும் இருக்கிறேன், மிகவும் பெருமைப்படுகிறேன்," என்று அவர் கூறுகிறார். “இந்தத் திரைப்படம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனக்கும் கிறிஸுக்கும் (நோலன்) அத்தகைய சிறப்பு உறவு இருக்கிறது. நாங்கள் 20 வருடங்களாக இணைந்து பணியாற்றி வருகிறோம், அவர் சரியான இயக்குநர் என்று நினைக்கிறேன்...என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை. நான் சிறுவயதில் அவருடன் ஒரு ஸ்கிரீன் டெஸ்ட் செய்தேன், அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்!" ஐரிஷ் நாட்டில் பிறந்த, ஆஸ்கார் வாங்கும் முதல் நடிகராக இங்கு நிற்பதில் அவர் பெருமை கொள்வதாகத் தெரிவித்தார். "நான் என்ன சொன்னேன் என்பது எனக்கு நினைவில் இல்லை (ஏற்புரையில்), ஆனால் அயர்லாந்தில் கலைஞர்களை ஆதரிப்பதில் நாங்கள் மிகவும் சிறந்தவர்கள். அது தொடர வேண்டும்," என்றார். https://www.bbc.com/tamil/articles/c51w4gqq9pqo
-
யாழில் நிமோனியாவால் இளைஞன் உயிரிழப்பு
Published By: DIGITAL DESK 3 11 MAR, 2024 | 11:28 AM யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நியூமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். துன்னாலை வடக்கு, கரவெட்டியைச் சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் (வயது 29) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) திடீரென மயங்கி விழுந்த இளைஞனை வீட்டார் மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார். விசாரணைகளில் நிமோனியாவே உயிரிழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178401
-
இந்தியர்களின் 'கத்தி விழுங்கும் கலை' மருத்துவத்துறையை மாற்றி அமைத்தது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், வக்கார் முஸ்தபா பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் 10 மார்ச் 2024, 11:27 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 19-ஆம் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவம். ஒரு நபர் தன் தொண்டைக்குள் லாவகமாகச் செலுத்திகொண்ட கத்தி சில நிமிடங்களில் மீண்டும் வெளியே வந்தது. டாக்டர் அடோல்ஃப் குஸ்மால் ஒரு மாலை வேளையில் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் தெருக்களில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த காட்சியைக் கண்டார். ஒரு நபர் கத்தியை விழுங்குவதைக் கண்டு டாக்டர் குஸ்மால் அதிர்ச்சியடைந்தார். "இந்த அணுகுமுறையை மனித உடலுக்குள் செய்யப்படும் பரிசோதனைகளுக்காக பயன்படுத்த முடியுமா?" என்ற கேள்வி அப்போது அவரது மனதில் எழுந்ததாக ராபர்ட் யங்சன் தனது 'தி மெடிக்கல் மேவரிக்ஸ்' (The Medical Mavericks) புத்தகத்தில் கூறுகிறார். வாள் அல்லது கத்தியை விழுங்குவது ஒரு பழங்காலத் திறமை என்றும் இந்தக் கலை சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தொடங்கியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் லாங் மற்றும் பைன் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு வந்த கலை 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளியான ஒரு பத்திரிகை கட்டுரையில் "வாளை விழுங்கும் கலை இந்தியாவிலிருந்து பிரிட்டனை அடைந்தபோது இந்தச் செயல் நம்பமுடியாத ஒன்றாகக் பார்க்கப்பட்டது" யில் கூறப்பட்டுள்ளது. 1813-ஆம் ஆண்டில் லண்டனில் வசித்த இந்திய கழைக்கூத்தாட்டக் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட 'வாளை விழுங்கும்' சாகசங்கள், யாரும் செய்ய முடியாத ஒரு புதிய மற்றும் வியக்கத்தக்க சாதனை என விளம்பரப்படுத்தப்பட்டன. இதேபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் சுற்றுப்பயணம் செய்துள்ளனர். வாளை விழுங்கும் புதுமையான செயல் மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது என 'தி டைம்ஸ்' பத்திரிகை கூறுகிறது. இந்திய மேஜிக் நிபுணர்கள் வாள் விழுங்கும் நிகழ்ச்சியால் லண்டன் நகரத்தை திகைக்க வைத்தனர். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், இந்தக் கலை ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் பரவியது. நோய் கண்டறிய பயன்பட்ட வாள் விழுங்கும் கலை பட மூலாதாரம்,GETTY IMAGES "டாக்டர் குஸ்மால், வாள் விழுங்கும் கலையை அறிந்த 'அயர்ன் ஹென்றி' (இரும்பு ஹென்றி) என்பவரது உதவியுடன், நோய் ஆய்வுகளுக்காக உணவுக்குழாய் வழியாக உடலில் ஆழமாகச் செல்லக்கூடிய வகையில் ஒரு சாதனத்தை உருவாக்கினார்," என ஆராய்ச்சியாளர்கள் லாங் மற்றும் பைன் கூறினார்கள். 1868-இல் 'அயர்ன் ஹென்றி'க்கு எண்டோஸ்கோபி செய்யப்பட்டது என்று எழுதுகிறார் எலிசா பெர்மன். “டாக்டர் குஸ்மாலால் ஒரு நோயாளியின் உணவுக்குழாயில் இருந்த புற்றுநோய் கட்டியை சரியாக பார்க்க முடியவில்லை. எனவே அயன் ஹென்றி உதவியுடன் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 47 செ.மீ. நீளமுள்ள ஒரு குழாயை விழுங்கினார் அயன் ஹென்றி. கண்ணாடி மற்றும் எண்ணெய் விளக்கின் உதவியுடன், வயிற்றில் உள்ள உணவுக்குழாயை குஸ்மாலால் தெளிவாக பார்க்க முடிந்தது," என எலிசா கூறுகிறார். அதேசமயம், வாளை விழுங்குவது ஒரு ஆபத்தான வித்தையாகும். அது மரணத்திற்கு கூட வழிவகுக்கும். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கத்திகளை விழுங்குபவர்களுக்கு குடலில் இரத்தப்போக்கு மற்றும் உணவுக்குழாயில் கடுமையான காயங்கள் ஏற்படுகின்றன என தெரியவந்தது. மருத்துவ பரிசோதனைகளில் வாள் விழுங்குபவர்கள் மிக முக்கிய பங்கு வகித்தனர். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. யாரேனும் இதை சுயமாக முயற்சி செய்தால் உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடும். 1897-இல் ஸ்டீவன்ஸ் என்ற ஸ்காட்டிஷ் மருத்துவர், வாளை விழுங்கும் வித்தை அறிந்த ஒரு நபரின் உதவியோடு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொண்டார் என ஆல்பர்ட் ஹாப்கின்ஸ் கூறுகிறார். 'எலக்ட்ரோ கார்டியோகிராம்' என்ற சொல் பெரும்பாலும் மருத்துவர்களுக்குத் தெரியும். அந்த நேரத்தில் அவர்களில் பெரும்பாலோர் அதை 'ஈசிஜி' என்று புரிந்து கொண்டனர். 1906ஆம் ஆண்டில், எம்.கிராமர் என்ற ஜெர்மன் மருத்துவர் இதய செயல்பாட்டைப் பதிவுசெய்ய வாள் விழுங்குபவரின் உணவுக்குழாயில் மின்முனையைச் செலுத்தி பரிசோதனை செய்தார். 'வாள் விழுங்குவதால் எண்டோஸ்கோபி எளிதாக உள்ளது' ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் டாக்டர். ஷரோன் கேப்லான். 2007ஆம் ஆண்டில் கடுமையான தொண்டைக் காயங்கள் உள்ள நோயாளிகளுக்கு உதவ வாள் விழுங்குதலை சிகிச்சை முறையில் பயன்படுத்தலாமா என்பதை முடிவுசெய்ய வாள் விழுங்கும் கலைஞரான ஆண்ட்ரூஸுடன் இணைந்து பணியாற்றினார். வாள் விழுங்கும் கலைஞரான டோட் ராபின்ஸ், "எண்டோஸ்கோபி தனக்கு மிகவும் எளிதானது" என்கிறார். அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் வாள் விழுங்கும் கலையின் வரலாறு குறித்து விரிவுரை நடத்தினார் ராபின்ஸ். அவரை பத்திரிகையாளர் ஒலிவியா பி.வாக்ஸ்மேன் பேட்டி கண்டார். "எனக்கு எண்டோஸ்கோபி செய்ய வேண்டியிருந்தது. குழாயைச் செருகுவதற்கு முன்பு நோயாளிகள் பொதுவாக மயக்கமடைந்துவிடுவார்கள். ஆனால் என்னால் ஒரு கத்தியை விழுங்க முடியும் என்பதால், மருத்துவர் கொடுத்த எண்டோஸ்கோபி எளிதாக இருந்தது" என்று ராபின்ஸ் கூறினார். ஆனால் இப்போது இந்தக் கலை அழிவின் விளிம்பில் உள்ளது. வாள் விழுங்குபவர்களின் சர்வதேச சங்கத்தின் கூற்றுப்படி, இப்போது சில டஜன் வாள் விழுங்குபவர்கள் மட்டுமே உள்ளனர். சர்வதேச வாள் விழுங்குவோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. "அறிவியல் மற்றும் மருத்துவத்திற்கு வாள் விழுங்குவோரின் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த பழமையான கலை தினத்தை கொண்டாடுவதன் நோக்கம்," என்று வாள் விழுங்குவோர் சங்கம் கூறுகிறது. https://www.bbc.com/tamil/articles/cnl7d54ed0jo
- மகளிர் தினம் : மாற்றுத்திறனாளி ரூபா வாழ்க்கையில் உயரத்தை எட்டி சாதனை படைத்த கதை
-
இன்னொருவர் கடந்து வந்த பாதை
http://1.bp.blogspot.com/_XsbRJpGRhp0/TFR50OkOdtI/AAAAAAAAAXc/Irhmr0Fwxio/s320/life.jpg ஊருக்குப் போயிருந்த போது ஏதேட்சையாக சந்தித்த மனிதரெருவரைப்பற்றிய கதையிது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், ஆனால் அவர் தமிழில் மட்டக்களப்பு வாசம் பலமாய் வீசியது. ஆண்டுகள் பலவாகிவிட்டதாம் புலத்தினுள்ளேயே புலம் பெயர்ந்து. அமைதியன முகமும், அதுக்கேற்ற புன்னகையையும் கொண்டிருந்தார். முகத்தில் வயதுக்கு மீறிய முதிர்ச்சுி தெரிந்தது. வயது 20 களின் முடிவில் அல்லது 30 களின் ஆரம்பத்தில் இருக்கும். நான் தங்கியிருந்த ஒரு விடுதியில் முகாமையாளராக தொழில் புரிவதாய்ச் சொன்னார். ஓரு நாள் மாலை 10 மணியளவில் ஏதேட்சையாக சந்திக்கக் கிடைத்தது இவரை. பழகி சில நிமிடங்களுக்குள்ளாகவே மிகவும் அன்னியோன்யமாய் பேசினார். பலாலி கிழக்கில் காணி, நிலங்களுடன் பெருமையாய் வாழ்ந்திருந்ததாயும், பாதுகாப்புவலையத்துக்குள் அவை உட்பட்டுப் போனதால் தங்களின் குடும்பச் சொத்துக்கள் என்று அவற்றை தம்மால் உரிமைகொண்டாடவோ, விற்பனை செய்யவோ முடியாதிருக்கிறது என்றார். விடுதலைப்போராளியாய் வாழ்ந்திருந்திருக்கிறார் மட்டக்களப்பில். உட்கட்சிப் பிரச்சனையின் பின் விடுதலை வெறுத்து ஓதுங்கிக் கொண்டாராம். வெளிநாட்டில் வேலை செய்து தங்கைகளுக்கு கலியாணம் முடித்துக் கொடுத்திருக்கிறார். தாயார் தன்னுடன் வசிக்கிறாராம். அவருக்கு இன்னும் கல்யாணகமாகவில்லை என்றும் அறியக்கிடைத்தது. பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இரண்டு வருடம் விசா இன்றி அலைந்திருக்கிறார். அது பற்றி அவர் சொன்ன விடயங்களே என்னை அதிகமாக சிந்திக்கவைத்தது. வாழ்வின் உச்சம் தொட்டாரோ என்னவோ, ஆனால் நிட்சயமாக வேதனையின் உச்சம் தொட்டிருந்தார் இந்த மனிதர். பிரான்சில் விசா இல்லாமல் பல தமிழர்களிடம் கள்ளமாய் வேலை செய்த பணம் இன்னும் நிலுவையில் இருப்பதாய் புன்னகையுடன் சொன்னார். மேசன் வேலை, கழுவல் வேலை, கடையில் எடுபிடி வேலை, என்று எத்தனையோ வேலைகள் செய்திருக்கிறார். வேதனை என்னவென்றால் அடிமாட்டு சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கும் பல நாட்கள் கைகட்டி, வாய்பொத்தி அலையவேண்டியிருந்ததாம். ”மனிசனுக்கு மதிப்பில்ல அங்க” என்று அவர் சொன்னபோது ஏனோ பலமாய் வலித்தது. பிரான்ஸ்சில் இன்னொரு குடும்பத்துடன் ஒரு வீட்டில் வாடகைக்கிருந்தாராம்,. அந்த வீட்டில் இரண்டு அறைகள் இருந்ததாயும் அவற்றில் ஒன்றில் அக்குடும்பமும் மற்றயதில் இவருடன் சேர்த்து 5 ஆண்களும் வாழ்ந்திருந்திருக்கிறார்கள். வீட்டு உரிமையாளர் இவரை தினமும் குளிக்காதீர்கள் தண்ணீர் ”பில்” அதிகமாய் வருகிறது என்று சொன்னதாயும், தான் அவரிடம், மேசன்வேலை 15 மணிநேரம் செய்து வந்தபின் எப்படி குளிக்காமல் இருப்பது என்று கேட்ட போது அது உங்கட பிரச்சனை என்று அவர் சொன்னதாயும், பின்பு தான் அதிக வாடகை குடுத்த பின்பே தினமும் குளிக்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார். எனக்கு இதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்பது ஆச்சர்யமாகவும், வேதனையாகவும் இருந்தது. வெளிநாட்டில் பணத்துக்காய் மனிதர்கள் பிணமாவாதயும், வாழ்கையை மனிதத்துடன் வாழ மறுக்கிறார்கள் என்றும் சொன்னார். நெதர்லாந்தில் ஒரு தோட்டத்தில் வேலை செய்ததாயும், வின்டர் குளிரில் வாழ்ந்திருந்த நேரத்தை விட விறைத்திருந்த நேரங்களே அதிகமென்றார். ஒரு கட்டத்தில் வெளிநாட்டு வாழ்க்கை வெறுத்து IMO மூலமாக ஊர் திரும்பியிருக்கிறார். வெளிநாடு போவதற்கு பட்ட கடனையும், தங்கைகளுக்கு கலியாணத்தையும் செய்ய வெளிநாடு தனக்கு உதவியிருந்தாலும், அது கற்பித்த பாடங்களே தனக்கு பிச்சையெடுத்தென்றாலும் ஊரிலே வாழ் என்று உபதேசம் பண்ணியதாம். ஊர் வந்து, ஹோட்டேல் மனேஜ்மன்ட் படித்து, தற்போது விடுதி முகாமையாளராக வாழ்வதாயும், வருமானம் சிறிது என்றாலும், வலியில்லாத வாழ்க்கை வாழ்வதாய் சொன்ன போது அவரின் முகத்தைப் பார்த்தேன், உண்மையின் உண்மை தெரிந்தது அவர் முகத்தில். http://visaran.blogspot.com/2010/07/blog-post_31.html
-
ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை சோழர் தலைநகராக மாற்றியது ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி, பிபிசி தமிழுக்காக 10 மார்ச் 2024, 06:09 GMT சோழர்களின் ஆட்சியில் தலைநகராக விளங்கிய தஞ்சாவூர் வளமான நிலப்பரப்பை உடையது. பெருவுடையார் கோவில் எனும் பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ள பகுதி. தந்தை ராஜராஜசோழன் பதவியில் இருக்கும் போதே கி.பி. 1012ஆம் ஆண்டு இணை அரசனாகப் பதவியேற்றார் ராஜேந்திர சோழன். அடுத்த இரு ஆண்டுகளில் சோழப் பேரரசின் அரியணை முழுவதுமாக அவர் வசம் வந்து சேர்ந்தது. கி.பி. 1014ஆம் ஆண்டு முதல் தஞ்சையில் மணிமுடி சூடினார் ராஜேந்திர சோழன். அரசனாகப் பதவியேற்றதும் அவர் அரண்மனைக்குள் இருந்த நாட்களைவிட, போர்க்களத்தில் இருந்த நாட்கள்தான் அதிகம். போரில் அரசர்களை வீழ்த்தி அவர்கள் ஆட்சிப்பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அரசர்கள் பலரைப் பார்த்திருப்போம். ஆனால் வீழ்த்தியவர்களிடமே மீண்டும் அரியாசனத்தை ராஜேந்திர சோழன் ஒப்படைத்த நிகழ்வு, ஒருமுறை அல்ல, பல முறை மிகச் சாதாரணமாக நிகழ்ந்திருக்கிறது. கங்கை முதல் கடாரம் வரை நடைபெற்ற பல போர்களில் அவர் வென்ற போதிலும், அப்பகுதிகள் அந்தந்த அரசர்களிடமே மீண்டும் வழங்கப்பட்டது. கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் தலைமைக்கு கட்டுப்பட்டு வரி செலுத்தும் அரசாக அவற்றை ராஜேந்திர சோழன் மாற்றியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். சாளுக்கியர், பாண்டியர், சேரர், சிங்கள அரசர், வங்கதேச அரசர், கடார அரசர் என இத்தனை பேரை ராஜேந்திரன் வீழ்த்த எடுத்துக்கொண்ட மொத்த காலம் வெறும் 10 ஆண்டுகள்தான். அரசனாகப் பதவியேற்ற கி.பி. 1014 முதல் 1024 வரை போர்க்களம் மட்டும்தான் ராஜேந்திரன் தன் வாழ்வில் பார்த்தது. ராஜராஜன் காலத்திலேயே சோழர்களின் படைபலம் பெருகிய போதிலும், அவை உச்சம் பெற்றது ராஜேந்திரன் காலத்தில்தான். போருக்கு ஆயத்தமாகி படைகள் வெளியேறுவதும், வென்ற பின் ஆரவாரத்துடன் அரண்மனைக்கு திரும்புவதும் தஞ்சையில் வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகள். ஆனால் ராஜேந்திரன் காலத்தில் ஒரே நேரத்தில் அவர் கங்கை நோக்கிப் படையெடுக்க, அவரது தளபதிகள் ஈழம் நோக்கிப் படையெடுப்பர். இதனால் மிக அதிக படைகள் வருவதும் போவதுமாக இருக்கும். இவையனைத்தும் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு வேறு மாதிரியான இடைஞ்சலைக் கொடுத்தது. இருந்தபோதிலும் அரசாங்கம் பலமாக நடைபெறுவதற்கு பொருளாதாரம் மிக முக்கியம். அந்தப் பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு வணிகம் பெருகிட வேண்டும். அதன் அடிப்படையில் வணிகர்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ஏற்றுமதி வணிகம் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் ராஜேந்திர சோழன் சிந்தித்துச் செயல்படுத்திய திட்டத்தின் இறுதி வடிவம்தான் தலைநகரமான கங்கை கண்ட சோழபுரம். தஞ்சாவூரில் இருந்து எப்படி கங்கைகொண்ட சோழபுரம் தலைநகராக உருவாக்கப்பட்டது என்பது பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம். கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழும தலைவரும், பொறியாளருமான கோமகன் கங்கைகொண்ட சோழபுரம் உருவாக்கம் குறித்து பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார். ராஜேந்திர சோழ பேராறு உருவாக்கிய தலைநகரம் கங்கை கொண்ட சோழபுரம் தலைநகராக உருவாக்கப்பட்டதற்கு பல பின்னணிகள் இருந்தபோதிலும், அவற்றில் முதன்மை பெறுவது நடுநாட்டின் அரசியலும் சோழ வணிகமும்தான் என்கிறார் கோமகன். "இந்தப் பகுதி வணிக நகரமாக உருவாக்கப்பட்டதில் கொள்ளிடம் என அழைக்கப்படும் ராஜேந்திர சோழ பேராறு உறுதுணையாகவும் முதன்மைக் காரணியாகவும் இருந்தது. சோழப் பேரரசு வணிகத்திற்கு முன்னுரிமை வழங்கிய காலகட்டத்தில் சிறந்து விளங்கிய பல்வேறு வணிக குழுக்கள் பற்றிய செய்திகள் மூலம் இதை உணரலாம். இந்திய பெருங்கடல் பரப்பும், இந்தியா, இலங்கை, தென்கிழக்கு ஆசிய கடற்கரைகள் அனைத்துமே சோழ ஆதிக்கத்தின் கீழே இருந்தன. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து சிறப்பாக இருந்ததையும் அது துறைமுகத்தோடு நிலவழி மூலமும் இணைக்கப்பட்டிருந்தது என்பதையும் தற்போதைய நீர் வழித்தடங்களை ஆய்வு செய்வதன் மூலம் அறிய முடியும்," என்று பொறியாளர் கோமகன் கூறினார். நீர் வழித்தடங்கள் உருவாக்கிய சோழ வணிகம் கோமகனின் கூற்றுப்படி, சோழர்களின் நீர் வழித்தடங்கள் சோழ வணிகத்திற்குப் பெரும் உதவியாக இருந்தன. இதன்மூலம் சோழ நாட்டின் பொருளாதாரம் மேன்மை பெற்றது. சோழர்களின் நீர் ஆதார அமைப்புகள் அரச குடும்பத்தினர் பெயரில் வழங்கப்பட்டிருப்பது அந்த அமைப்புகளின் மீது அவர்கள் கொண்டிருந்த ஆதிக்கத்தை, பங்களிப்பை, ஈர்ப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. "ராஜேந்திர சோழ பேராறு என்னும் கொள்ளிடம் ஆறு, கடல் முகத்துவாரம் காவிரி பூம்பட்டினத்திற்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது. இந்தக் கழிமுக கடற்கரை சங்க காலத்தில் இருந்தே துறைமுகத் தகுதியைப் பெற்று கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியது. இதை அகப்புறச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. பட்டினப்பாலை என்ற நூலில் உள்நாட்டில் கடற்கரை உப்பை விற்று பதிலீடாக விளைபொருளை ஏற்றி வந்த படகுகள் வரிசையாக குதிரைகள் நிறுத்தப்படுவது போல் நிற்கின்றன எனக் கூறுவதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்," என்கிறார். எப்படி உருவானது கங்கைகொண்ட சோழபுரம்? "தஞ்சையில் இருந்து 50 கி.மீ தொலைவில் காவிரி வடிநிலப் பகுதியான கொள்ளிடத்தின் வடகரையில் ஒரு பெரிய நிலப்பகுதி தேர்வு செய்யப்பட்டது. தலைநகருக்கு நீர்வளம் மிக முக்கியம் என்பதால் 20 மைல் நீளத்திற்கு ஒரு பெரிய ஏரியை ராஜேந்திரன் வெட்டினான். தஞ்சையைப் போல மிகப் பெரிய அரண்மனையைக் கட்டி எழுப்பினான். அகழி, கோட்டைச் சுவருடன் 1,900 மீட்டர் நீளமும் 1,350 மீட்டர் அகலம் கொண்டதாக புதிய தலைநகரம் கட்டி எழுப்பப்பட்டது," என்கிறார் கோமகன். கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக உருவாக்கப்பட்டதில் கொள்ளிடம் என அழைக்கப்படும் ராஜேந்திர பேராறு உறுதுணையாகவும் முதன்மைக் காரணியாகவும் இருந்தது. இந்த ஆற்றின் தென்கரை கரிகாலக்கரை எனவும் வழங்கப்படுகிறது. நீர்வழி போக்குவரத்து தடத்தை பயன்படுத்திய வணிகக் குழுக்கள் ராஜேந்திர சோழன் காலத்திய கொள்ளிடம் நீர்வழிப் போக்குவரத்து தடமாக இருந்ததற்கான சான்றுகளை உறுதிப்படுத்த அக்காலத்தில் இருந்த வணிகக் குழுக்கள் மற்றும் அவற்றின் சேவைப் பிரிவுகள் நகரங்கள் பற்றி தெரிந்துகொள்வது அடிப்படை. சோழர்கள் காலத்திய சமூகம் பெரு வளர்ச்சியடைவதற்கு கடல் வணிகம் பெரிதும் உதவியது. அது பதினோராம் நூற்றாண்டில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டது. சோழர்கள் காலத்து வணிக குழுக்கள் தங்களுக்கான பாதுகாப்புப் படையை வைத்துக்கொள்ளும் வலிமையையும் உரிமையையும் பெற்றிருந்தனர். "வீரர், அங்ககாரன், கைக்கோளர், கொங்காள்வர், செட்டி, வலங்கை வீரர், வீர கோடியார், சீட்புலி உள்ளிட்ட 21 பிரிவுகள் இருந்தன. இவர்கள் வணிக நகரங்களிலும் நீர்வழி தடத்திலும், நில வழித்தடத்திலும் முக்கிய இடங்களில் வாழ்ந்திருக்கின்றனர். இவர்கள் இருந்த இடம் இவர்கள் பெயராலேயே அழைக்கப்பட்டு இன்றும் சற்று மறுவி அவர்கள் பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது," என்று விளக்குகிறார் கோமகன். "கொள்ளிட தென் கரையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் உள்ள சிட்புலியூர் தற்போது சீப்புலியூர் என்று அழைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் கொள்ளிட வடகரை காட்டுமன்னார்குடி வட்டத்தில் செட்டித்தாங்கல் ஊராட்சி, அரியலூர் மாவட்டம் கொள்ளிட வடகரை தா.பழூர் வட்டத்திற்கு உட்பட்ட அங்ககாரன் பேட்டை தற்போது அன்னக்காரன் பேட்டை என்று அழைக்கப்படுகிறது," என்றும் கூறினார். அதேபோல், "தா.பழூர் வட்டம் அங்ககார நல்லூர் தற்போது அங்கராயநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. இருகையூர், இடங்கண்ணி ஆகிய ஊர்கள் தற்போதும் அதே பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகின்றது. மேற்கண்ட ஊர்கள் வணிகக் குழுக்களுக்கு உதவும் நோக்கில் அவர்கள் வழித்தடத்தில் இருப்பிடம் கொண்டு அவர்கள் வணிக பயணத்திற்கு ஏதுவாக கொள்ளிடக்கரை ஓரமாகவே வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு இது மிகப்பெரிய சான்று," என்று ஊரின் பெயர்களைப் பழங்கால பெயர்களுடன் படித்து தற்போது வழங்கப்படும் பெயர்களையும் விவரித்தார் கோமகன். கங்கைகொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகரமாக மட்டுமல்லாது வணிக நகரமாகவும் வடிவமைக்கப்பட்டது என்பதற்கான சான்றுகள் நிறைய உள்ளன. அவ்வகை வணிக நகரத்திற்கு நிலவழிகள், நீர் வழிகள் அடிப்படை. அவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவும் அமைந்திருந்தன. பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் நீர் தேவையும் அதற்குக் காரணம். இதன்படி கங்கைகொண்ட சோழபுரத்தை இணைக்கும் பெருவழிகள் நீர் தடத்தை ஒட்டியே இருந்துள்ளன. இவை பெரும்பாலும் வணிகத் தலங்களையும் அதிகார மையங்களாக விளங்கிய ஊர்களையும் இணைத்து இருக்கின்றன. கொள்ளிடக்கரை இருபுறமும் உள்ள சாலை அக்கால பெரு வழியாக இருந்தன. பெருவழிச்சாலை இணைத்த ஊர்கள் அதைத்தொடர்ந்து பொறியாளர் கோமகன் பெருவழிச்சாலை இணைத்த ஊர்களைப் பற்றி விளக்கி கூறினார். "மீன்சுருட்டி, காட்டுமன்னார்குடி, வீராணம் ஏரி, நெடுஞ்சேரி ஆகிய ஊர்களை சிதம்பரத்துடன் இணைக்கும் இராசராசன் பெருவழி, ஆயுதக்களம், உதயநத்தம், சோழமாதேவி, குணமங்கலம், விக்கிரமங்கலம், விளாங்குடி, கீழப்பழுவூர் பகுதிகளை திருச்சியுடன் இணைக்கும் விளாங்குடையான் பெருவழி உட்கோட்டை, வானாதிராயன் குப்பம், வீரசோழபுரம், குழவுடையார் பகுதிகளை அணைக் கரையுடன் இணைக்கும் கூழையானை போனபெருவழி. (கூழை என்றால் படை அணி என்று பொருள்) பள்ளி விடை, வெத்யார்வெட்டு, கல்லாத்தூர், ஆண்டிமடம், விளந்தை, தஞ்சாவூர் பகுதிகளை திருமுட்டத்துடன் இணைக்கும் திருமுட்டம் ஏறப்போன பெருவழி என முக்கிய வழிகள் பெருநகரங்களை இணைக்கும் சாலைகளுடன் இணைந்து இருந்தன என்பதற்கு கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன," என்று கூறினார். கங்கைகொண்ட சோழபுரத்தின் தெற்கு வாசல் வேம்புக்குடியில் இருந்துள்ளது. வேம்புக்குடி வாசலுக்கு போன வழியை பற்றி கல்வெட்டு தெளிவாகக் குறிப்பிடுகின்றது. கொள்ளிடத்தின் வடகரையில் அணைக்கரை வழியாகத்தான் கங்கைகொண்ட சோழபுரத்திற்குள் நுழைய முடியும். வேம்புக்குடி வாசல் ராஜேந்திர சோழ பேராற்றின் வடகரை ஊராக மட்டுமல்லாது உள்நாட்டு படகு துறையாகவும் இருந்துள்ளது. வீரநாராயண பேரேரி எனப்படும் வீராணம் ஏரிக்கு நீரேற்றும் மதுராந்தகப் பெரிய வாய்க்கால் என்று அழைக்கப்படும் வடவாறு இங்கிருந்துதான் பிரிந்து கிளை ஆறாகச் செல்கிறது. ஆங்கிலேயர்கள் மறுசீரமைத்த அணைக்கரை "உள்நாட்டு நீர் வழித்தட மரக்கலங்கள் துறையாகப் பயன்படுத்தும் வகையில் வேம்புக்குடிவாசலின் கரை வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் கொள்ளிடம் தெற்கு தடம், வடக்கு தடம் என இரண்டாகப் பிரிந்து நடுவில் ஒரு திட்டை உருவாக்கி மீண்டும் சிறிது தூரத்தில் ஒன்றாக இணைந்து ஓடுகிறது. அத்திட்டு அணைக்கரை என இன்றும் வழங்கப்படுகிறது," என்று கூறினார் கோமகன். கொள்ளிடத்தில் இந்தத் திட்டின் குறுக்கே ஆங்கிலேயரால் கி.பி.1826இல் கதவணைகள் அமைக்கப்பட்டது. இதற்குத் தேவையான கற்கள் கங்கைகொண்ட சோழீச்சுரத்தை தகர்த்து எடுத்துச் செல்லப்பட்டது. சென்னை- கும்பகோணம்- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை NH45C தடம் இதன் மீதுதான் செல்கிறது. இயற்கையை மாற்றிய ராஜேந்திர சோழன் இயற்கையை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல, ஆனால் அறிவியல் நுட்பத்துடன் இணைந்து இயற்கையை மனித வளத்திற்கு தகுந்தவாறு மாற்றிய பெருமை ராஜேந்திர சோழனையே சேரும் என்று கூறிய பொறியாளர் கோமகன் எவ்வாறு மாற்றப்பட்டது என்பதையும் விவரித்தார். "இயற்கை அமைப்பில் இந்த இடத்தில் கொள்ளிடம் இரண்டாகப் பிரிவதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயமாக இல்லை. மேற்கிலிருந்து ஓடிவரும் நீர்த்தடம் வடவாறு எனப்படும், மதுராந்தக பெரிய வாய்க்காலுக்கு நீரை வழங்கி தன் வேகத்தை குறைத்துக் கொள்வதோடு தன் இயல்பான வேகத்தோடு அதைக் கடக்கின்றது. இது தென்புறமாக தடம் மாறுவதற்கான நிலவியல் நீரியல் தேவையும் இல்லை இயற்கையாக ஆறு தன் போக்கிலிருந்து வடபுறமாக தான் தடம் மாறுகின்றன. இதற்கு வடபுல காந்தவிசை காரணம்," என்று கோமகன் கூறினார். அதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், "கொள்ளிடம் இவ்விடத்தில் இயற்கையாக நிலவியல் நீரியல் அடிப்படையில் வடக்கு திசையில்தான் ஓடியிருக்க வேண்டும். ஆனால் இது சோழனின் மனித ஆற்றலால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் நீர் வழித்தடமாகப் பயன்படுத்தப்பட்டபோது அதற்கான முதன்மை உள்நாட்டு ஆற்றுத் துறையாக அணைக்கரை எனும் வேம்புக்குடி வாசல் வடிவமைக்கப்பட்டது. அதன்படி கொள்ளிடத்தில் தென்புறப்பகுதி மரக்கலங்களை ஆற்றுத் துறையில் கையாளுவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது," எனத் தெரிவித்தார். நீரியல் பண்பு நீர்நிலை இயல்பாக மாற்றப்படுதல் சோழர்கள் நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதன் நீர்பரப்பை அதிகப்படியாகக் கூட்டியுள்ளனர். மேற்கிலிருந்து வரும் நீரின் அளவு இரண்டாகப் பிரிகிறது. இதனால் நீரின் வேகம் மட்டுப்படுத்தப்படும். அகன்ற நிலப்பரப்பால் நீரியியல் பண்பு நீர் நிலையியல் பண்பாக மாற்றப்படுகிறது. இந்த அறிவியல் தத்துவத்தை ராஜேந்திர சோழன் வெகு லாகவமாகக் கையாண்டுள்ளார். கொள்ளிடம் வழியே வரும் மரக்கலங்களுக்கு இந்த இடம் ஆற்றுத் துறையாகப் பயன்பட்டு வணிக நகரத்திற்கான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி தளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம். இந்தத் துறையில் இருந்து படை அணிகள் (கூழை) மரக்கலங்கள் மூலம் நீர் வழித்தடம் வழியாக கிழக்கு கடலை விரைவாக அடையும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. வணிகப்படையினர் இந்த ஆற்றங்கரையை வாழ்விடமாகக் கொண்டதை இதன் மூலம் உறுதிப்படுத்தலாம். கடல் வழி வந்த கப்பல்களில் இருந்து உள்நாட்டிற்கு தோணி, படகுகள் மூலம் நீர்த்தடத்தின் வழியே வணிகப் பொருட்கள் வந்தன என்பதற்கு பட்டினப்பாலை பாடல்களே சான்று. தஞ்சையில் இருந்து காவிரி வழியே மன்னியாற்றை அடைந்து அதிலிருந்து பிரியும் நீர்த்தடங்கள் கொள்ளிடத்தில் இணையும் ஓடம் போக்கிகளின் தடம் இன்றும் உண்டு. அந்த இடம் படகுத்துறை, தோணித்துறை என வழங்கப்படுகின்றன. மண்ணியார் தலைப்பில் கதவணைக்கு அருகே ஓடம்போக்கி அணையும் தற்போது பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் இருக்கின்றது. மண்ணி ஆற்றில் இருந்து திருப்புரம்பியம் அருகே உள்ள கொந்தகை எனும் இடத்திலிருந்து பிரியும் ஓடம்போக்கி ஆறு கொள்ளிடத்தில் இணைகிறது. திருப்பனந்தாள் அருகே மண்ணியாற்றில் இருந்து பிரியும் ஓடம்போக்கி நீர் தடம் கொள்ளிடம் தென்கரையில் இணைகிறது. அதேபோல் கொள்ளிடம் வடகரையில் உள்ள மருதையாறு வணிக நகரங்களை இணைத்து கொள்ளிடத்தில் கலக்கிறது. ராஜேந்திர சோழன் வடபுலத்தில் கங்கை வெற்றிக்குப் பிறகு வந்தடைந்த இடம் கொள்ளிடத்தின் தென்கரையில் உள்ள திரு லோக்கியம். இங்குள்ள "ராஜேந்திர சோழதேவர் கங்கை கொண்டு எழுந்தருளுகின்ற இடத்து தொழுது" எனத் தொடங்கும் கல்வெட்டும் இதை உறுதி செய்கிறது. ராஜேந்திர சோழன் கடல் பகுதியில் இருந்து கொள்ளிட நீர் வழித்தடத்தில் வந்து சேர்ந்த இடம் இதுவே ஆகும். ராஜேந்திர சோழன் கட்டமைத்த நீர்வழி, நிலவழி தடங்கள் கொள்ளிடத்தில் வடக்கு தெற்கு தடங்களின் நிலவியல் மண்ணடுக்குகளை ஆய்வு செய்யும்போது வடக்குத்தடம் கிடை மட்டத்தில் இருந்து 9 மீட்டர் ஆழத்திலேயே ஆற்றின் உறுதியான படிமமான கங்கர் எனப்படும் சுண்ணாம்புப் பாறை உள்ளது. ஆனால் இந்த வகை பாறை தெற்கு தடத்தில் சுமார் 20 மீட்டர் ஆழத்தில்தான் கிடைக்கிறது. வடக்குத் தடத்தில் ஆறு நீண்டகாலம் பாய்வதால் சுண்ணாம்புப் பாறை படிமம் வரை இயற்கை மண் அடுக்குகள் அரிக்கப்பட்டு 9 மீட்டர் அளவிலான மணல் படிமத்தால் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் தெற்கு தடம் வடக்குத்தடத்தைவிட 11 மீட்டர் சுண்ணாம்புப் பாறையின் படிமம் மேற்பரப்பில் கூடுதலாக உள்ளது. இந்த அடுக்கின் மீதான மணல் சேர்க்கையும் குறைவாகவே உள்ளது. வடக்கு தடத்தோடு தெற்கு தடத்தை ஒப்பிடும்போது சுண்ணாம்புப் பாறையின் மேல் அடுக்குகள் வெவ்வேறான தன்மையுடையதாகவும் உள்ளது. வடக்குத்தடத்தின் வடகரையிலிருந்து வடவாறு எனும் மதுராந்தக பெரிய வாய்க்கால் பிரிந்து செல்வதால் அதற்கான நீர் ஏற்றம் வடபுறத்தின் கிடைமட்ட நீரேற்றத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும். இதனால் வடபுறத்தின் மண் அடுக்கு அரிப்பும், மேலடுக்கு மணல் சேர்க்கையும் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் தெற்கு புறத்தடத்தில் அவ்வகையான பெரிய வாய்க்கால் அமைப்புகள் இல்லை. வடக்கு புற வாய்க்கால்கள் பிற்காலத்தியவை. கொள்ளிட ஆற்றில் வடபுற தடத்தில் உள்ள அணைக்கரை, வேம்புக்குடி வாசல் பகுதியில் நீரியல் பண்புகளான நீரோட்டம், நீரோட்ட வேகம், மற்றும் ஆற்றின் போக்கு அடிப்படையிலும் இயற்கையானது. தென்புறத் தடம் அதன் அமைப்பின் அடிப்படையில் செயற்கையாகவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை மண் அடுக்குகள் ஆய்வின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. கொள்ளிடத்தின் மீது மனித ஆற்றல் ஆதிக்கம் செலுத்தியுள்ளது இதன்மூலம் தெளிவாக அறிய முடியும். நீரியல் தன்மையை தளர்த்தி நீர் நிலையியல் தன்மை புகுத்தப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்படுகிறது. அந்த ஆதிக்கத்தைச் செலுத்தியது ராஜேந்திர சோழன் என்பதால்தான் கொள்ளிடம் ராஜேந்திர சோழ பேராறு என அழைக்கப்படுகிறது. அந்த இடத்தில் மரக்கலங்களுக்கு ஆற்றுத் துறையை உருவாக்கி நீர் வழித்தடத்தில் கூடுதல் வசதியை மேம்படுத்தியதே இதற்குக் காரணம். வணிக நகரமாக அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இடத்தில் கடற்பயணத்திற்கு ஏதுவான உள்நாட்டு நீர் வழித்தடமும் அமைக்கப்பட்டு அது நிலவழி பெருவழிகளோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக மாற்றியதுடன் மக்களின் பொருளாதாரம் மேன்மை பெறுவதற்கும் படைகள் போர்களுக்குச் சென்று வர நிலவழி மற்றும் நீர் வழித்தடங்களை நேர்த்தியாக உருவாக்கியதை மண் ஆய்வுகளுடன் தெளிவாக பொறியாளர் கோமகன் விவரித்தார். கங்கை வரை ராஜேந்திரன் படையெடுத்து வென்ற பிறகு, அங்கிருந்த அரசர்களை வைத்து கங்கை நீரைத் தனது தலைநகருக்கு எடுத்து வந்ததன் நினைவாக, நகருக்கு "கங்கை கொண்ட சோழபுரம்" என்ற பெயர் நிலைபெற்றதாகக் கூறுகிறார் விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ் பிபிசி தமிழிடம் இந்த நகரின் பெயருக்கான பின்னணியை விவரித்தார். கி.பி.1025ஆம் ஆண்டு சோழப் பேரரசின் புதிய தலைநகரம் உதயமானது. இதை திருவாலங்காட்டு செப்பேடுகள் உறுதி செய்கின்றன. தலைநகர் மாற்றம் பெற்றபின் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆட்சி செய்தார் ராஜேந்திரன். இக்காலத்தில் சிற்சில போர்கள், கலகங்கள் நடைபெற்ற போதிலும், அவை மக்களின் அமைதிக்கும் வாழ்விற்கும் இடையூறுகளை ஏற்படுத்தவில்லை. ஆதலால் கி.பி 1025 முதல் 1044 வரையிலான அமைதிக் காலத்தை “பிற்கால சோழர்களின் பொற்காலம்” என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ராஜேந்திர சோழர் மன்னராட்சியிலும் கூட்டாட்சி முறையை நெறிப்படுத்தியவர் கூறுகிறார் பேராசிரியர் ரமேஷ். "சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் அந்த மன்னர்களே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர். ராஜேந்திரன் கங்கை முதல் கடாரம் வரை வென்றபோதும் இந்த நிலை நீடித்தது. வென்ற பகுதிகளை முழுவதுமாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆட்சி நடத்தியிருந்தால் ராஜேந்திரன் தனியாளாக 4 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவை ஆண்டிருப்பார். தற்போதைய இந்திய நாட்டின் பரப்பளவே அதைவிடக் குறைவுதான். (இந்தியாவின் பரப்பளவு 3.287 லட்சம் சதுர கி.மீ.)" என்றும் பேராசிரியர் ரமேஷ் கூறினார். நீர்வழித் தடத்தின் மூலமாகத் தனது நாட்டை வளமான நாடாகவும் வணிகத்தின் மூலமாகp பொருளாதார மேன்மை மிகுந்த நாடாகவும் ராஜேந்திர சோழன் மாற்றினான். கங்கை வெற்றிக்காக ராஜேந்திரன் கங்கைகொண்ட சோழன் என்னும் புகழ்பெற்ற பெயரைப் பெற்றதுடன் அவர் அமைத்த புதிய நகரம் கங்கைகொண்ட சோழபுரம் என அழைக்கப்பட்டது. கல்வெட்டுச் சான்றுகள் தொடர்ந்து பேராசிரியர் ரமேஷ் கூறுகையில்,"திருக்கழிப்பாலை பால்வண்ணாநாதர் கோவிலில் நான்கு சோழர்கால கல்வெட்டுகள் உள்ளன. அதில் முதலாம் ராஜராஜ சோழனின் 26வது ஆட்சியாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் மஹாதேவன் என்பவன் நுந்தா விளக்கு எரிப்பதற்காகப் பத்து காசுகளை தானமாக வழங்கியுள்ளதைக் குறிப்பிடுகிறது. ராஜேந்திர சோழன் காலத்தில் வெளியிடப்பட்டுள்ள சிதைந்த கல்வெட்டு ஒன்றில் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்த திரிபுவனமாதேவி பேரங்காடியை சார்ந்த கூத்தன் அடிகள் என்ற வணிகன் பொன் வழங்கியுள்ளதையும், இவன் பெருநல்லூர் என்ற ஊரைப் பூர்விகமாகக் கொண்டவன் என்றத் தகவலையும் கூறுவதாக பேராசிரியர் ரமேஷ் விளக்கினார். இம்மன்னரது மற்றொரு சிதைந்த கல்வெட்டில் பூர்வதேசம், கங்கை, கடாரம் கொண்ட போன்ற சொற்களும், கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை குளியல் அறையின் பணிப் பெண்ணாகப் பணியாற்றிய ஒருவர் இக்கோவிலுக்கு தானங்களை வழங்கியுள்ள தகவலையும் சுட்டுகிறது. "விக்கிரம சோழப் பிரம்மமாராயன் என்பவன் திருக்கழிப்பாலை பால்வண்ண நாதருக்கு நாள்தோறும் ஒரு நாழி தும்பைப்பூ வழங்குவதற்காகத் தானம் வழங்கியுள்ளதை மற்றொரு துண்டுக் கல்வெட்டின் வாயிலாக அறியலாகிறது. எனவே ராஜேந்திர சோழன் காலத்தில் கொள்ளிடம் ஆற்றின் வழியாகத் தலைநகர் கங்கைகொண்ட சோழபுரத்திற்குச் செல்லும் நீர்வழிப் பாதையின் அருகில் இக்கோவில் கட்டப்பட்டிருந்ததாலேயே கங்கைகொண்ட சோழபுரம் பேரங்காடியைச் சார்ந்த வணிகரும், மன்னரின் மேலாண்மையைப் பெற்றிருந்த பணிப்பெண்ணும் இக்கோவிலுக்கு தானங்களை வழங்கி சிறப்பித்துள்ளதை நோக்கும்போது தேவிக்கோட்டைக்கும், கங்கைகொண்ட சோழபுரத்திற்கும் இடையே நிச்சயமாக கொள்ளிடம் ஆற்றின் வழியாக நீர்வழிப்பாதை ஒன்று செயல்பட்டிருக்க வேண்டும்." மேற்கண்ட வணிகனின் ஊரான பெருநல்லூர் என்ற ஊர் இன்று நல்லூர் என்ற பெயருடன் மகேந்திரப்பள்ளியின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் கங்கை பகுதியின் வெற்றியின் சின்னமாகத்தான் சோழ கங்கம் என்னும் பேரேரி வெட்டப்பட்டது. திருவாலங்காட்டு செப்பேடுகள் இதை "ஜலமயமான சயத்தம்பம்" நீர்மயமான வெற்றித் தூண் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என கூடுதல் தகவலையும் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cjmx2197yeyo
-
சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
பட மூலாதாரம்,REUTERS 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவிட் பெருந்தொற்றின்போது வடகொரியா, சீனாவுடனான தனது வடக்கு எல்லையை மூடியது. அதன்பின் சில மாதங்களுக்கு வர்த்தக நோக்கங்களுக்காக அது திறக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த எல்லை மீண்டும் மூடப்படுகிறது. ஏன்? என்ன நடக்கிறது வடகொரியாவில்? சீனாவுடனான தனது வடக்கு எல்லையை மூடுவதற்கு கோவிட்-19 நேரத்தை வட கொரியா பயன்படுத்தியது. வடகொரியாவில் மக்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் வடகொரியா இடையே மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனுடன் சீனாவுடனான வடகொரியாவின் வர்த்தகமும் குறைந்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகம், வட கொரியாவை தனிமைப்படுத்துவதையும், அங்கு அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடியையும் முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு ஐ.நா. உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. சமீப காலமாக, வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், எல்லை பாதுகாப்பை கடுமையாக அமல்படுத்தி வருகிறார். எல்லையில் மக்கள் நடமாட்டத்தை நிறுத்த கோவிட்-19 காலகட்டத்தைப் பயன்படுத்தினார். இருப்பினும், சீனாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்க சில மாதங்களுக்கு முன்பு இது மீண்டும் திறக்கப்பட்டது. பட மூலாதாரம்,REUTERS 482கி.மீ நீளமுள்ள புதிய வேலி இது சம்பந்தமாக, 'புல்லட்டை விட வலிமையான பயங்கரவாத உணர்வு: வட கொரியாவின் மூடல் 2018-2023' என்ற அறிக்கையில், கோவிட் -19 தொற்றுநோயின் போது மக்களிடம் அதிகப்படியான மற்றும் தேவையற்ற கண்டிப்பு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான செயற்கைக்கோள் படங்கள், சீனாவுடனான எல்லையில் 482கி.மீ. நீளத்துக்கு வடகொரிய அதிகாரிகள் வேலி அமைப்பதைக் காட்டுகின்றன. இது தவிர, ஏற்கனவே நிறுவப்பட்ட 260கி.மீ. நீளமுள்ள வேலி மேலும் நீட்டிக்கப்படுகிறது. எல்லையில் வேலி அமைக்கும் பணியுடன், மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில், மக்களை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்ல எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டது. எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் 20 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது. காவலர் பணியிடங்களின் எண்ணிக்கை 38-இல் இருந்து 650 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் மீது அடக்குமுறையை ஏவிய வடகொரியா கிம் ஜாங் உன் இத்தகைய கொள்கைகளை நிறுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த கொரியா ஆராய்ச்சியாளர் லினா யுன் கூறுகிறார். மக்களை ஒடுக்கும் அவர்களின் நடவடிக்கைகளால், வடகொரியா மிகப்பெரிய சிறைச்சாலையாக மாறியுள்ளது என்று அவர் கூறுகிறார். வடகொரியாவில் இருந்து தப்பி ஓடிய பெண்ணுக்கு அங்கு வசிக்கும் அவரது உறவினர் தொலைபேசியில் அரிசி மற்றும் கோதுமையை வெளியில் இருந்து நாட்டிற்கு கொண்டு வர முடியாது என தெரிவித்துள்ளார். வடகொரியாவில் வசிக்கும் அவரது உறவினர் பெண், “இப்போது ஒரு எறும்பு கூட எல்லையை கடக்க முடியாது,” என்றார். இதுபோன்ற கண்டிப்பால் வடகொரியாவை விட்டு வெளியேறும் மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் அனுப்ப முடியாமல் தவிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் வடகொரியா மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். வட கொரியாவை விட்டு வெளியேறிய மற்றொரு நபர் 2022-இன் இறுதியில் தனது நாட்டில் வசிக்கும் தனது குடும்ப உறுப்பினர்களைக் குறித்துப் பேசினார். உலகின் பல பகுதிகளில் கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலகட்டம் இது. அந்த நபர், "கோவிட் நோயை விட மக்கள் பசியால் இறப்பதற்கு அதிகம் பயப்படுகிறார்கள் என்று எனது குடும்ப உறுப்பினர்கள் சொன்னார்கள்," என்றார். மக்கள் எப்படி இருக்கிறார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES வடகொரியாவின் மிகக் கண்டிப்பான நடைமுறையால், தென்கொரியாவிடம் இருந்து பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவில் வசிக்கும் தங்கள் உறவினர்களை தென்கொரியா மக்கள் சந்திக்க முடியாமல் தவித்து வருகின்றனர். 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கோவிட்-க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, பத்து தரகர்களில் ஒருவர் மட்டுமே வெளியில் இருந்து பணம் அனுப்ப முடியும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மதிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கையில், 2017-ஆம் ஆண்டு வடகொரியாவின் அணுசக்தித் திட்டத்திற்குப் பிறகு விதிக்கப்பட்ட ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கான மக்களின் உரிமைகளைப் பறித்ததால் இந்த மரணங்கள் நிகழ்ந்தன. மக்கள் உணவு, சுகாதார வசதிகள் கூட இல்லாமல் தவித்தனர். "இது பெண்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக சம்பாதித்தனர், ஆனால் கட்டுப்பாடுகள் காரணமாக, சந்தையில் அவர்களின் செயல்பாடுகள் குறைந்துவிட்டன," என்று அறிக்கை கூறுகிறது. வட கொரியாவில் தொடர்புகளைக் கொண்ட முன்னாள் தொழிலதிபர் ஒருவர், தனது உறவினர்கள் நண்டுகள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களைச் சாப்பிட்டு வாழ வேண்டும் என்றும், சீனாவுடனான முறைசாரா வர்த்தகம் காரணமாக உயிர்வாழ முடிந்தது என்றும் கூறினார். ஆனால் கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வணிகமும் மூடப்பட்டது. இதன் காரணமாக, இந்த தொழிலதிபர் தனது பொருட்களை வடகொரியாவில் மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டியிருந்தது. சீனாவில் வடகொரிய மக்கள் சுரண்டப்படுகிறார்களா? பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவில் பணிபுரியும் வடகொரியர்கள் பணம் கிடைக்காததால் வன்முறையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் செய்தி வெளியானது. ஆயுத உற்பத்திக்காக வடகொரிய அரசுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்பது அவரது குற்றச்சாட்டு. வட கொரிய மக்கள் தங்களது எதிர்ப்புகளை ஒருபோதும் வெளிப்படையாக அறிவிப்பதில்லை, ஏனெனில், அரசாங்கம் அதன் குடிமக்களை இறுக்கமாகக் கட்டுப்படுத்துகிறது மற்றும் பொது மறுப்பு மரண தண்டனைக்குரியது. வன்முறைச் செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், வெளிநாட்டில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான வட கொரியர்களின் நல்வாழ்வு குறித்த கவலையை எழுப்பியுள்ளது. சீனாவில் பணிபுரிந்த வட கொரிய தொழிலாளி ஒருவரிடம் பிபிசி பேசியது, அவர் போராட்டம் நடத்தியவர்களின் சம்பளம் நிறுத்தப்பட்டதாகக் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c517xj7krxxo
-
யாழ். இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!
10 MAR, 2024 | 09:11 PM வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியை சேர்ந்த குறித்த பெண், யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதியில், வெளிநாடு செல்பவர்களுக்கான தொடர்பகம் ஒன்றை ஆரம்பித்து வெளிநாடு செல்ல விரும்புவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கல், விசா தொடர்பிலான தெளிவூட்டல்கள் போன்ற சேவைகளை கட்டணம் பெற்று வழங்கி வந்துள்ளார். அவரை நம்பி யாழ்ப்பாணத்தின் பல பாகங்களை சேர்ந்தவர்களும் பணத்தை வழங்கி வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் சுமார் 60 இலட்ச பணத்தை வழங்கியுள்ளார். பணத்தை வழங்கியவர் தனது வெளிநாட்டு, பயண ஏற்பாடுகள் தாமதமாகி வந்தமையால், அப்பெண் மீது சந்தேகம் கொண்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அப்பெண்ணை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது அவரது வங்கி கணக்கு இலக்கம் ஊடாக சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான பண பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதனை கண்டுபிடித்துள்ளனர். கொழும்பு உள்ளிட்ட இதர பகுதிகளில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் முகவர்களாக செயற்படும் மோசடியாளர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் தமக்கான முகவர்களாக சிலரை நம்பிக்கைக்காக அமர்த்தி அவர்கள் ஊடாக பெரும் பணம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தொடர்பில் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/178373
-
யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தின் வசமிருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு!
யாழ்ப்பாணத்தில் 68.57 ஏக்கர் நிலங்கள் இன்று விடுவிப்பு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள 68.57 ஏக்கர் நிலங்கள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் தற்போது படையினர் வசமுள்ள 3,412 ஏக்கரில் இருந்து 68.57 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளன. இதற்கான நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்படும் காணிகளில் காங்கேசன்துறையில் 20.03 ஏக்கரும், தென்மயிலையில் 24.9 ஏக்கரும், அரியாலையில் 0.45 ஏக்கரும், வறுத்தளைவிளானில் 23.27 ஏக்கரும் அடங்குகின்றன. அந்த நிலங்களுக்கான உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/295135
-
சரசாலையில் கசிப்புடன் கைதான 15 வயதுடைய சிறுவன்!
10 MAR, 2024 | 08:57 PM சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உபட்ட சரசாலை பகுதியில் 4 லீற்றர் 500 மில்லிலீட்டர் கசிப்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) 15 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் கசிப்பை எடுத்து சென்றபோது சாவகச்சேரி பொலிஸால் கைது செய்யப்பட்டார் . மேலதிக விசாரணைகளின் பின்னர் சிறுவன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/178375
-
2028ற்குப் பிறகு சாதாரண தரத்தோடு கல்வி முற்றுப்பெறுவதில்லை – கல்வி அமைச்சர்
2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எவருக்கும் தோல்விகள் ஏற்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹட்ச் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து கிராமப்புறங்களுக்கு மின்சார சைக்கிள்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கல்வி அல்லது தொழில் பயிற்சியை பின்பற்றும் அனைத்து மாணவர்களும் க.பொ.த சாதாரண தரத்திற்கு பிறகும் பாடசாலையில் கல்வி கற்க அமைச்சு அனுமதியளிக்கும் என்றார். அதன்படி, குழந்தைகள் தங்கள் பாடசாலைகளை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர்களின் கல்வி அல்லது தொழில் பயிற்சியுடன் மேலும் இரண்டு ஆண்டுகள் தொடரலாம். பின்னர், அவர்கள் தொழில் பயிற்சி திட்டங்களுக்கு அனுப்பப்படுவார்கள். “பெரும்பாலான திட்டங்களை நாங்கள் புதுப்பித்துள்ளோம். மொத்தம் 4.3 மில்லியன் மாணவர்கள் தற்போது 10,126 அரசுப் பாடசாலைகளிலும், 300க்கும் மேற்பட்ட சர்வதேசப் பாடசாலைகளிலும், 110க்கும் மேற்பட்ட தனியார் பாடசாலைகளிலும் படித்து வருகின்றனர். இப்போது நாங்கள் கல்வி திட்டத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 75 ஆண்டுகளாக, நாங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததால், நாங்கள் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய பாடத்திட்டத்தைப் பின்பற்றினோம்,” என்று அமைச்சர் கூறினார். பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வியில் இருந்து நடைமுறைக்கு மாறுவதற்கு அல்லது தொகுதிகளை அறிமுகப்படுத்துவதற்கு நாங்கள் விரும்புகிறோம் என அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/295117
-
புதுக்குடியிருப்பில் பொலிஸாரால் மரக்கடத்தல் முறியடிப்பு
10 MAR, 2024 | 04:15 PM முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாகத் தேக்கு மரகுற்றிகளை கடத்த முற்பட்ட வாகனத்தின் சாரதி பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று சனிக்கிழமை (09) மாலை இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு பகுதியில் பட்டா ரக வாகனத்தில் தேக்கு மரகுற்றிகளை கடத்துவதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைதானார் . இந்தநிலையில் 13 தேக்கு மர குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். https://www.virakesari.lk/article/178362
-
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் கஞ்சாவுடன் இராணுவ புலனாய்வு அதிகாரியும் இளைஞரும் கைது
10 MAR, 2024 | 01:52 PM முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் நேற்று (09) பிற்பகல் கேரளா கஞ்சாவுடன் இராணுவ அதிகாரி மற்றும் இளைஞர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, இவர்களிடமிருந்த 10 கிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தேராவில் தேக்கங்காடு இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்த 40 வயதுடைய சார்ஜன்ட் மேஜரையும், உடையார்கட்டு தெற்கினை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரையும் நேற்று முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் நிறுத்தியபோது இருவரும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வரும் அதேவேளை, சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். https://www.virakesari.lk/article/178355
-
யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தின் வசமிருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு!
10 MAR, 2024 | 03:19 PM யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்திடம் இருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் பாவனைக்காக கைளிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் ஒரு தொகுதி காணிகள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இராணுவ பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்ட பதில் அரசாங்க அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (10) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அலுலகத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரட்நாயக்க கலந்துகொண்டு காணி உரிமையாளர்களுக்கான காணிப் பத்திரங்களை வழங்கிவைத்தார். இதில் கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரம ரட்ன, ஜனாதிபதி செயலக வட மாகாண இணைப்பாளர் எல்.இளங்கோவன், முன்னாள் அரசாங்க அதிபர்கள் பாதுகாப்பு படையினர், கடற்படையினர், பிரதேச செயலாளர்கள், ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/178361
-
யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா
கமராவில் அம்பிட்டால் காப்பாற்றுவினம் தானே அண்ணை?!
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அண்ணை எல்லாம் அந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி்க்காகவா? என எண்ணத் தோன்றுகிறது.
-
பங்களாதேஸ் - இலங்கை கிரிக்கெட் தொடர்
குசல் மெண்டிஸ் அதிரடி, நுவன் துஷார ஹெட் - ட்ரிக்: இலங்கைக்கு தொடர் வெற்றி 09 MAR, 2024 | 09:50 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று (09) நடைபெற்ற 3ஆவது கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் குசல் மெண்டிஸ் குவித்த அரைச் சதம், நுவன் துஷாரவின் ஹட்-ட்ரிக் அடங்கலான 5 விக்கெட் குவியல் என்பன இலங்கைக்கு 28 ஓட்ட வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை கைப்பற்றியது. பங்களாதேஷ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது நான்காவது ஓவரை வீச அழைக்கப்பட்ட நுவன் துஷார தனது முதல் ஓவரிலேயே ஹட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்தி எதிரணியை திக்குமுக்காட வைத்தார். சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை சார்பாக ஹட்ரிக் முறையில் விக்கெட்களைக் கைப்பற்றிய 5ஆவது வீரரானார் நுவன் துஷார. ஆனால், அது இலங்கை சார்பாக பதிவான 6ஆவது ஹட்ரிக் ஆகும். இதற்கு முன்னர் திசர பெரேரா, லசித் மாலிங்க (2 தடவைகள்), தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க ஆகிய இலங்கை வீரர்கள் சர்வதேச ரி20 போட்டிகளில் ஹட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். எவ்வாறாயினும் ரிஷாத் ஹொசெய்ன் பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்து பங்களாதேஷுக்கு ஆறுதலைக் கொடுத்தார். நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, தௌஹித் ரிதோய், மஹ்முதுல்லா ஆகிய முன்வரிசை வீரர்களையே நுவன் துஷார தனது முதலாவது ஓவரின் 2ஆவது, 3ஆவது, 4ஆவது பந்துகளில் ஆட்டம் இழக்கச் செய்திருந்தார். தனது அடுத்த ஓவரில் சௌம்யா சர்க்காரை ஆட்டம் இழக்கச் செய்த துஷார, தனது கடைசி ஓவரில் ஷொரிபுல் இஸ்லாமை வெளியேற்றியிருந்தார். இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 175 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், துஷாரவின் பந்துவீச்சில் ஆட்டம் கண்டதுடன் 14ஆவது ஓவரில் 7 விக்கெட்களை இழந்து 76 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. ஆனால், ரிஷாத் ஹொசெய்ன் 7 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களையும் தஸ்கின் அஹ்மத் 31 ஓட்டங்களையும் பெற்று அணியை மோசமான வீழ்ச்சியிலிருந்து மீட்டபோதிலும் அணியின் தோல்வியைத் அவர்களால் தடுக்க முடியாமல் போனது. பந்துவீச்சில் நுவன் துஷார ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் தடைக்குப் பின்னர் அணிக்கு மீள திரும்பிய அணித் தலைவர் வனிந்து ஹசரங்க 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஏஞ்சலோ மெத்யூஸ் தனது 2ஆவது ஓவரின் முதலாவது பந்தை வீசியதுடன் உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்றார். அவரது ஓவரை தனஞ்சய டி சில்வா வீசி முடித்தார். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரராக களம் இறங்கிய தனஞ்சய டி சில்வா 8 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மொத்த எண்ணிக்கை 52 ஓட்டங்களாக இருந்தபோது கமிந்து மெண்டிஸ் 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஆனால், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குசல் மெண்டிஸ் 3ஆவது விக்கெட்டில் வனிந்து ஹசரங்கவுடன் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். வனிந்து ஹசரங்க 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் சரித் அசலன்க (3) குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினார். மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 56 பந்துகளில் 6 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 86 ஓட்டங்களைக் குவித்தார். மத்திய வரிசையில் ஏஞ்சலோ மெத்யூஸ் 10 ஓட்டங்களையும் தசுன் ஷானக்க 19 ஓட்டங்களையும் பெற்றனர். துடுப்பாட்ட வரிசையில் 8ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடிய சதீர சமரவிக்ரம 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மத 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரிஷாத் ஹொசெய்ன் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: நுவன் துஷார. தொடர்நாயகன்: குசல் மெண்டிஸ். https://www.virakesari.lk/article/178331
-
யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா
கோவை: யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா - பிபிசி தமிழின் நேரடி விசிட் படக்குறிப்பு, கடந்த 15 ஆண்டுகளில் கோவை - பாலக்காடு வழித்தடத்தில் 11 யானைகள் இறந்துள்ளன - வனத்துறை தரவுகள் கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மார்ச் 2024 தமிழ்நாடு முழுவதும் யானைகள் ரயில்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுகிறது. வனத்துறையின் அதிகாரப்பூர்வ தகவலின்படி தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே, ரயில்களில் மோதி 36 யானைகள் மரணித்துள்ளன. இதில், குறிப்பாக கோவை மாவட்டம் மதுக்கரை அருகே, கோவை – பாலக்காடு வழித்தடத்திலுள்ள இரண்டு ரயில் தண்டவாளங்களில், 2008 முதல் இதுவரையில், 11 யானைகள் மரணித்துள்ளதாக வனத்துறை கூறுகிறது. குறிப்பாக மதுக்கரையில் கடந்த, 2021 நவம்பர் மாதம் ஒரு குட்டியானை உள்பட மூன்று யானைகள் ரயிலில் அடிபட்டு மரணித்த சோக சம்பவமும் அரங்கேறியது. இதுபோன்று தமிழ்நாட்டில் வன எல்லையிலும், காப்புக் காட்டிற்கு உள்ளேயும் பயணிக்கும் ரயில் தண்டவாளங்களில் யானைகள் மட்டுமின்றி, இதர வனவிலங்குகள் அடிபட்டு மரணித்து வருகின்றன. இதைத்தொடர்ந்து மதுக்கரை அருகேயும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் யானைகள் ரயிலில் மோதி இறப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம், வனத்துறை மற்றும் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்தியாவில் முதல் முறையாக, ரயில்களில் யானைகள் அடிபட்டு இறப்பதைத் தடுக்க, செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை கோவையில் வனத்துறை அமைத்துள்ளது. யானைகள் உயிரைக் காக்க இந்தக் கட்டுப்பாட்டு அறை எப்படிச் செயல்படுகிறது? இந்தியாவின் முதல் AI கேமரா கண்காணிப்பு தமிழகத்தைப்போன்று நாட்டில் பல மாநிலங்களில் இதேபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதைத் தடுக்க மத்திய ரயில்வே அமைச்சகம், மேற்கு வங்கம், அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களில், ‘கஜ்ராஜ்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில் ரயில்வே தண்டவாளங்கள் அருகே செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சென்சார்களை பொருத்தி, யானைகள் நடமாட்டம் குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்து வருகின்றனர். ஆனால், கென்யா, ஆப்ரிக்கா போன்ற நாடுகள், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கேமராக்கள், சென்சார்கள் பொருத்தி, மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் யானைகளைப் பாதுகாக்கின்றனர். படக்குறிப்பு, 24 மணிநேரம் செயல்படும் வகையில் கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது இதே தொழில்நுட்பத்தை மையமாக வைத்து தற்போது, தமிழ்நாடு வனத்துறை கோவை மதுக்கரையில் செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாடு அறையை அமைத்து, ரயில் தண்டவாளத்தில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். இந்தத் திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். கட்டுப்பாட்டு அறை எப்படிச் செயல்படுகிறது, எப்படி யானைகள் பாதுகாக்கப்படுகிறது என்பதை அறிய, பிபிசி தமிழ் குழு கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்றிருந்தது. கோவை மதுக்கரையில் ரயில் தண்டவாளம் அருகே அமைந்திருந்த கட்டுப்பாட்டு அறையை நாம் அடைந்தபோது, அங்குள்ள பணியாளர்கள் மும்முரமாக ரயில்வே மற்றும் வனத்துறை பணியாளர்களுக்கு, தண்டவாளம் அருகே யானைக்கூட்டம் நிற்கும் தகவலைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். 12 AI கேமராக்கள் - இரண்டு வகை பார்வை படக்குறிப்பு, "இந்தியாவிலேயே முதல் முறையாக AI தொழில்நுட்ப உதவியுடன் யானைகள் ரயில் தண்டவாளங்களைக் கடப்பது கண்காணிக்கப்படுகிறது," என்கிறார் சுப்ரியா சாஹூ. பிபிசி தமிழிடம் பேசிய, கட்டுப்பாட்டு அறை பணியாளர் மணிகண்டன், ‘‘யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க, கோவை – பாலக்காடு வழித்தடத்திலுள்ள இரண்டு ரயில் தண்டவாளங்கள் ‘ஏ டிராக்’ மற்றும் ‘பி டிராக்’ எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு தண்டவாளங்களில் மொத்தம், 12 டவர்கள் அமைத்து அதில், 12 AI கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு கேமராவில் சாதாரண வீடியோ மற்றும் வெப்ப காட்சி (Thermal View) என இரண்டு வகை வீடியோக்களை நேரலையாகப் பார்க்க முடியும். ரயில் தண்டவாளத்திலும், அதன் இருபக்கமும் 100 அடி வரையில் யானை வந்ததும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் யானை கண்டறியப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் அலாரம் அடித்து எச்சரிக்கை கிடைக்கும். யானை கண்டறிந்தவுடன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம், அருகிலுள்ள ரயில் நிலையம், அந்த நிலையத்தின் அதிகாரி மற்றும் வனத்துறை பணியாளர்களுக்கு யானை எந்த டிராக்கில் எத்தனையாவது மைல் கல் அருகே நிற்கிறது என மெசேஜ் அனுப்பப்படும். உடனடியாக இந்தத் தகவல் லோகோ பைலட்டுக்கு தெரிவிக்கப்பட்டு ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு ஹாரன் அடித்துக்கொண்டே மிக மெதுவாக ரயில் இயக்கப்படும். யானை மட்டுமின்றி காட்டு மாடு, மான் கூட்டம், சிறுத்தை என எந்த விலங்கு வந்தாலும் எச்சரிக்கை அனுப்பப்படும்,’’ என்கிறார். 24 மணிநேர கண்காணிப்பு மணிகண்டன் நம்மிடம் விவரித்துக் கொண்டிருந்தபோதே ‘பி டிராக்’ பகுதியில் ஒரு குட்டியுடன் ஒரு பெண் யானை தண்டவாளத்தைக் கடந்தது. அதைப் பற்றி ரயில்வே துறைக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்து, யானை பாதுகாப்பாக தண்டவாளத்தைக் கடந்த பிறகு பேச்சைத் தொடர்ந்தனர். மேலும் தொடர்ந்த மணிகண்டன், ‘‘இரு துறைகளுக்கும் மெசேஜ் சென்றாலும், கூடுதலாக நாங்கள் யானையின் நகர்வைப் பொறுத்து கேமராக்களை நகர்த்தி யானையின் நடமாட்டத்தை முழுமையாகக் கண்காணிப்போம். இந்தத் தகவல்களை தண்டவாளம் அருகே 24 மணிநேரமும் பணியில் இருக்கும் வனத்துறை பணியாளர்களுக்கு, வாக்கி டாக்கி அல்லது மொபைல் மூலமாக நேரடியாகத் தெரிவிப்போம். அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று யானைகளைப் பாதுகாப்பாக தண்டவாளத்தில் இருந்து காட்டிற்குள் விரட்டிவிடுவார்கள். ரயில் வேகத்தைக் குறைப்பது, யானைகளைப் பாதுகாப்பாக வனத்தினுள் விரட்டி அவற்றை ரயில் விபத்தில் இருந்து பாதுகாப்பது ஆகியவைதான் கட்டுப்பாட்டு அறையின் முதன்மைப் பணி. இந்தக் கட்டுப்பாட்டு அறையில் நாங்கள், 4 பேர் 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,’’ என்றார். யானைகள் குறித்து 388 முறை எச்சரிக்கை படக்குறிப்பு, தெர்மல் கேமரா உதவியுடன் இரவிலும் யானையின் நடமாட்டம் கவனிக்கப்படுகிறது. யானைகள் கண்காணிப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய, தமிழ்நாடு வனத்துறை செயலாளரும் அரசின் முதன்மைச் செயலாளருமான சுப்ரியா சாஹூ, ‘‘கோவை மதுக்கரையில் ‘ஏ டிராக்’ தண்டவாளத்தில் 1.78 கிலோமீட்டர், ‘பி டிராக்’ தண்டவாளத்தில் 2.8 கிலோமீட்டர் தொலைவு, என இரண்டும் 12 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. 7.24 கோடியில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற திட்டம் இதுவரை இல்லை, இது நாட்டின் முதல் முயற்சி," என்றார். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டுமென யோசித்து, தாங்களாகவே இத்திட்டத்தை உருவாக்கி, ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை வைத்து திட்டத்தைச் செயல்படுத்தியதாகவும் சுப்ரியா சாஹூ கூறினார். மேலும், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் யானைகள் கண்காணிப்பு திட்டத்தின் சோதனை ஓட்டம் துவங்கப்பட்டு இதுவரை மட்டுமே, 388க்கும் மேற்பட்ட எச்சரிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார் அவர். அதோடு, ‘‘யானை தண்டவாளத்திலோ, அதற்கு அருகில் வன எல்லையிலோ நின்றால், செயற்கை நுண்ணறிவு தாமாக யானைகளைக் கண்டறிந்து நமக்குத் தகவல் தருகிறது. பணியாளர்கள் மூலம் யானைகள் வனத்தினுள் விரட்டப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்தக் கட்டுப்பாட்டு அறைக்கு அருகே, யானைகள் வனத்தினுள் கடந்து செல்ல இரண்டு இடங்களில் சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களால் யானைகள் தண்டவாளத்தைப் பாதுகாப்பாகக் கடந்து செல்வதுடன், யானை – ரயில் மோதல் விபத்து சம்பவங்கள் தவிர்க்கப்படுகின்றன. அதிக ரயில் விபத்துகள் ஏற்படும் கோவை, தருமபுரி, ஓசூர் மற்றும் மனித – யானை மோதல் அதிகளவில் நிகழும் கூடலூர் என, ஐந்து இடங்களில் இத்திட்டத்தை விரைவில் வனத்துறை செயல்படுத்த உள்ளது,’’ என்றார். பிபிசி தமிழிடம் பேசிய கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் சந்தோஷ், ‘‘தண்டவாளத்தில் நின்ற யானை, தண்டவாளத்தின் இருபுறமும் 100 அடிக்குள் நின்ற யானைகள், வனத்தினுள் இருந்து தண்டவாளத்தை நோக்கி நகரும் யானைகள் என அனைத்தையும் பற்றி எச்சரிக்கைகளை வழங்கியுள்ளோம். அந்த வகையில்தான் 6 மாதத்தில் 388 எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், யானைகள் தண்டவாளத்தில் நின்ற சம்பவம் என்றால் அதிகபட்சமாக, 60 சம்பவங்கள்தான் இருக்கும்,’’ என விளக்கியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘பயணம் மிக எளிதாகிறது – விபத்து தவிர்க்கப்படுகிறது’ இந்த வழித்தடத்திலுள்ள எட்டிமடை ரயில்வே நிலைய அலுவலர் செளவுரவ் குமார், ‘‘இந்த கேமரா திட்டம் வருவதற்கு முன்பு யானைகள் எங்கு நிற்கிறது, எத்தனை யானைகள் நிற்கின்றன என எந்தத் தகவலும் தெரியாது. பகலிலாவது லோகோ பைலட்கள் மெதுவாக வருவார்கள், கண்களால் வனத்தைப் பார்க்க முடியும். ஆனால் இரவு நேரங்களில் எதுவுமே தெரியாது. இந்தத் திட்டம் துவங்கப்பட்டபின், இரவு நேரங்களிலும் யானைகள் குறித்த தகவலை வனத்துறை வழங்குகின்றனர்," என்றார். "யானை எந்த மைல் (கி.மீட்டர் தொலைவில்) கல் அருகே நிற்கிறது, எத்தனை யானைகள் நிற்கின்றன, தண்டவாளத்தில் நிற்கிறதா இல்லை அருகிலா என அனைத்து தகவல்களையும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். யானை நிற்பதாக தகவல் வந்ததும் நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிப்போம், லோகோ பைலடுக்கு கட்டுப்பாட்டு அறை தகவல் உடனடியாகத் தெரிவித்ததும், சாதாரணமாக 70 கிலோமீட்டருக்கு மேல் செல்லும் ரயிலின் வேகத்தை 20 – 30 கி.மீ வேகமாகக் குறைப்பார்கள். மேலும், 2 கி.மீ தொலைவுக்கு முன்பிருந்தே ஹாரன் அடித்துக்கொண்டு பாதுகாப்பாக வருவார்கள். இந்தத் திட்டம் யானைகள் விபத்தில் சிக்குவதைத் தவிர்க்கிறது,’’ என்றார். https://www.bbc.com/tamil/articles/crg9n4vv12zo
-
வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
வெடுக்குநாறிமலை விவகாரம் : பொலிஸாரின் மிலேச்சத்தனமான ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம் - அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், புலம்பெயர் தமிழர்கள் தெரிவிப்பு 10 MAR, 2024 | 10:42 AM (நா.தனுஜா) சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டார்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட பலர் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதுமாத்திரமன்றி இவ்வாறானதொரு சூழ்நிலையில் புதிதாக ஸ்தாபிக்கப்படும் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் என்று எவ்வாறு கூறமுடியும்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (08) சிவராத்திரி தினத்தன்று நீதிமன்ற அனுமதியுடன் பூஜை வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் அங்கு வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதன்படி, பாதுகாப்புத் தரப்பினரின் மிலேச்சத்தனமான இந்நடவடிக்கையைக் கடுமையாக கண்டிப்பதாகத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தொல்லியல் திணைக்களம், பௌத்த பிக்குகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட சகலரும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் வழிபாட்டுரிமைக்குத் தடை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி, தமிழர்களுக்குச் சொந்தமான வழிபாட்டிடங்களை பௌத்த தலமாக மாற்றுவதற்கான இனவாத செயற்பாடாகவே தாம் இதனைப் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோன்று இதுபற்றிக் கருத்து வெளியிட்ட இலங்கை தமிழ் அரசு கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தமிழ் மக்கள் மிக நீண்ட காலமாக வழிபாடுகளில் ஈடுபட்டுவருவதாகவும், அவ்வாறிருக்கையில் தற்போது பாதுகாப்புத் தரப்பினர் இவ்வாறு செயற்படுவது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் தெரிவித்தார். அத்தோடு, தமிழ் மக்களை இலக்குவைத்து நிகழ்த்தப்படும் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று கூறுவோர் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதாகவும், இவற்றைப் பார்க்கும்போது ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவாத வன்முறையைத் தூண்ட முயற்சிப்பது போல் தெரிவதாகவும் அவர் விசனம் வெளியிட்டார். அதேவேளை இவ்விவகாரத்தில் பாதுகாப்புத் தரப்பினர் ஜனாதிபதியின் கட்டளைகளை மாத்திரமன்றி, நீதிமன்ற உத்தரவுகளுக்கும் மதிப்பளிப்பதில்லை எனவும், மாறாக, வெடுக்குநாறிமலை, குருந்தூர்மலை, மயிலத்தமடு மேய்ச்சல் தரை போன்ற விவகாரங்களில் பௌத்த பிக்குகளின் உத்தரவுகளே பாதுகாப்புத் தரப்பினரால் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கவலை வெளியிட்டார். அதுமாத்திரமன்றி, இத்தகைய போக்கு மிகப் பாரதூரமான விளைவையே ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். மேலும், சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பக்தர்கள் கைதுசெய்யப்பட்டமையை வன்மையாக கண்டித்துள்ள அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்பான தமிழ் அமெரிக்கர்கள் கூட்டிணைவு, இது மத உரிமைகளை மீறுவதாகும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு, தமிழ் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு உடன் தலையீடு செய்யுமாறும் அவ்வமைப்பு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் பின்வருமாறு கேள்வி எழுப்பியுள்ளார்: 'இங்கு வழிபாட்டில் ஈடுபடும் மக்கள் எதற்காக பொலிஸாரால் வெளியேற்றப்படுகின்றார்கள்? எதற்காக கைதுசெய்யப்படுகின்றார்கள்? அவர்களது மத உரிமை எதற்காக மீறப்படுகின்றது? இவ்வாறானதொரு சூழ்நிலையில் புதிதாக ஸ்தாபிக்கப்படும் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் என்று எவ்வாறு கூறமுடியும்?' என வினவியுள்ளார். https://www.virakesari.lk/article/178341
-
இலங்கையில் கடந்த வருடம் 1,550 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!
10 MAR, 2024 | 10:44 AM சுகாதார அமைச்சின் தேசிய தொழுநோய் அறிக்கையின்படி , 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 1,550 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் படி ,2023 ஆம் ஆண்டில் கொழும்பு மாவட்டத்தில் 259 தொழுநோயாளிகளும், கம்பஹா மாவட்டத்தில் 168 தொழு நோயாளர்களும் , களுத்துறை மாவட்டத்தில் 116 தொழு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் . 2019 ஆம் ஆண்டு 1,660 தொழுநோயாளிகளும், 2020 ஆம் ஆண்டு 1,213 நோயாளிகளும், 2021 ஆம் ஆண்டு 1,026 தொழுநோயாளிகளும், 2022 ஆண்டு 1,401 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/178340
-
என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதி - நூல் வெளியிடுகின்றார் கோட்டாபய
எனது கோரிக்கையை ரணில் மாத்திரமே அச்சமின்றி ஏற்றுக்கொண்டார் : 'சதி' நூலில் கோட்டாபய 10 MAR, 2024 | 10:54 AM (எம்.மனோசித்ரா) பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு தன்னால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே அச்சமின்றி பொறுப்பேற்றதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதிய 'சதி' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் பிரதமர் பதவியை ஏற்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் நிராகரித்ததாகவும் அந்த புத்தகத்தின் 163ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவிடம் பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோது தன்னால் உடனடியாக பதவியை ஏற்க முடியாது என்றும், அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கோட்டாபய குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அந்த நூலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: 'இந்த வன்முறைக்கு மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை என்ற கோரிக்கைக்கு அமைய பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை நியமிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. எனவேதான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை ஏற்குமாறு கேட்டுக்கொண்டேன். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனக் கூறி அவர் எனது கோரிக்கையை நிராகரித்தார். அதன் பின்னர் சரத் பொன்சேகாவுடன் பேசி பிரதமர் பதவியை ஏற்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர் தன்னை பிரதமராக நியமிப்பதை பகிரங்கமாக அறிவிக்குமாறும், அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டார். எனினும் அவருக்கு வழங்கப்பட்ட பதவியை அவர் உடனடியாக ஏற்கவில்லை. https://www.virakesari.lk/article/178342
-
வெடுக்குநாறி மலையில் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு முன்னெடுப்பு - சிறிதரன், கஜேந்திரன் சுட்டிக்காட்டு
Published By: DIGITAL DESK 3 09 MAR, 2024 | 08:26 PM ஆர்.ராம் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை பௌத்த அடையாளமாக மாற்ற வேண்டுமென்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்படுவதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிவராத்திரி பூஜைவழிபாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் எதேச்சதிகாரமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பில் கருத்துவெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இந்நிலையில் சிவஞானம் சிறீதரன் தெரிவிக்கையில், வெடுக்குநாறிமலை ஆலயம் இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் இருந்தபோதும், விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோதும் பூஜைவழிபாடுகள் இடம்பெற்று வந்தவொரு ஆலயமாகும். அதுமட்டுமன்றி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக வரலாறும் இதற்கு காணப்படுகின்றது. அவ்வாறான நிலையில் எமது மக்கள் மரபு ரீதியாக வழிபட்டு வந்த இந்த ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு முன்னெடுத்த விசேட வழிபாடுகளை பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்தச் செயற்பாடு கண்டிக்கதக்கது என்பதோடு, தற்போதும் தென்னிலங்கை சிங்கள, பௌத்த தேசியவாதிகள் அரசாங்கத்தின் கட்டமைப்புக்கின் துணையுடன் ஆக்கிரமிப்பைச் செய்வதற்கு எவ்வளவு தூரம் முனைகின்றார்கள் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும் என்றார். இதேவேளை, செல்வராசா கஜேந்திரன் தெரிவிக்கையில், தமிழர்களுக்கு பூர்வமாகவுள்ள பகுதிகளை தொல்பொருளின் பெயரால் முதலில் அடையாளப்படுத்துவதும் பின்னர் பௌத்த அடையாளங்களை அங்கு நிறுவுவதும் தொடர்ச்சியாக தாயகப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடாகிவிட்டது. சிவராத்திரி பூஜை நிகழ்வுகளுக்காக நாம் வெடுக்குநாறி மலைக்குச் சென்றபோது அங்கு பௌத்த தேரர்கள் வருகை தந்தமைக்கான நோக்கம் என்ன? அவர்கள்,வெடுக்குநாறி மலையில் தமது அடையாளங்களை அமைத்து தமது ஆக்கிரமிப்பை விஸ்தரிப்பதனையே நோக்காகக் கொண்டு அங்கு வருகை தந்திருந்தார்கள். ஆகவே, தென்னிலங்கையின் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன என்பதற்கு வெடுக்குநாறிமலை மீண்டும் சாட்சியாகின்றது. அதுமட்மன்றி, பொலிஸாரும், அரச படைகளும் பெரும்பான்மை இனத்துக்கும், தேரர்களுக்கும் சாதகமாக செயற்படுகின்றார்கள் என்பதும் இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள், வழிபாட்டுக்காகச்சென்ற மக்களை நடத்திய விதமும், மக்களின் பிரதிநிதியான என்னை கையாண்ட முறைமையும் அதற்கு சான்றாகின்றது என்றார். https://www.virakesari.lk/article/178314
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கை கடற்பரப்பில் 22 இந்திய மீனவர்கள் கைது! 10 MAR, 2024 | 07:25 AM நெடுந்தீவு - காங்கேசன்துறை பகுதியில் வைத்து சனிக்கிழமை (9) இரவு 22 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளுடனும், காங்கேசன்துறை கடற்பரப்பில் ஒரு படகுடனும் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேரும் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். மேலதிக நடவடிக்கைகளை நீரியல்வள திணைக்களத்தினர் மேற்கொள்வார்கள் என கடற்படையினர் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/178336
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
முதல் போட்டியில் மிரட்டிய இங்கிலாந்து, கடைசியில் இந்தியாவிடம் சரணடைந்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியால் மூன்று நாட்கள்கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை 9 மார்ச் 2024 தரம்சாலாவில் நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியால் மூன்று நாட்கள்கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதில் இருந்தே இந்தியாவின் ஆதிக்கத்தை அறிந்து கொள்ளலாம். இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. பேஸ்பால் உத்தியுடன் இந்தியாவுக்குச் சவால் விட்ட இங்கிலாந்தின் மிகப்பெரிய, நான்காவது தொடர் தோல்வி இதுவாகும். பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் பயிற்சியின் கீழ் இங்கிலாந்து அணி பெற்ற முதல் தொடர் தோல்வியும் இதுதான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா தனது இடத்தை மேலும் வலுப்படுத்தியது. ரவிச்சந்திரன் அஸ்வின் தனது நூறாவது டெஸ்டில் 128 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே சமயம் இங்கிலாந்துக்காக தனது நூறாவது டெஸ்டில் விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 68 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டெஸ்ட் ஆடுகளத்தில் இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியின் ஸ்கிரிப்டை இப்படித்தான் டீம் இந்தியா எழுதியது. முதல் இன்னிங்சில் பெரிய முன்னிலை இந்தியா முதல் இன்னிங்சில் 259 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் 84 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 39 ரன்களும் எடுத்து நீடித்திருந்தனர். ஆனால் மற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்தனர். முதல் 10 ஓவர்களிலேயே இங்கிலாந்தின் முதல் மூன்று வீரர்கள் அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்தனர். மதிய உணவுக்கு சற்று முன், இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதில் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளையும் குல்தீப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்பிறகு, மீண்டும் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, பென் ஃபோக்ஸை வெளியேற்றி அஸ்வின் தனது ஐந்தாவது விக்கெட்டை பெற்றார். பின்னர் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் நம்பிக்கையை பும்ரா முற்றிலும் முறியடித்தார். சோயப் பஷீர் சிறிது நேரம் ரூட்டுடன் நிலைத்துநின்றார். இந்த இணை 48 ரன்களைச் சேர்த்தது. பஷீர் இறுதியில் 13 ரன்களில் ரவீந்திர ஜடேஜாவிடம் பலியானார். ஜோ ரூட் தனது சதத்திற்கு 16 ரன்கள் தேவைப்படும்போதே ஆட்டமிழக்க, இங்கிலாந்து தொடரில் நான்காவது முறையாக தோல்வியடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரவிச்சந்திரன் அஸ்வின் தனது நூறாவது டெஸ்டில் 128 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டனாக இருந்த பும்ரா மூன்றாவது நாளில், ரோஹித் சர்மா முதுகில் பிடிப்பு காரணமாக பீல்டிங்கிற்கு வரவில்லை. இதனால் ஜஸ்பிரித் பும்ரா அணித்தலைவராக இருந்தார். அவர் 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 40 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது வரலாற்று 100வது டெஸ்டில் 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸ்வின் 36வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையும் முறியடிக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் இன்னிங்ஸில் ஜொலித்த குல்தீப் - அஸ்வின் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸை 218 ரன்களுக்குள் முடித்தனர். இந்திய இன்னிங்ஸில் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோரின் அற்புதமான சதங்கள் அடங்கும். இவர்களைத் தவிர, தனது முதல் டெஸ்டில் விளையாடிய தேவ்தத் படிக்கல் 65 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும், சர்பராஸ் கான் 56 ரன்களும் எடுத்தனர். ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனை 41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 700வது விக்கெட்டை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் அவரது 700வது விக்கெட். இந்த நிலையை எட்டிய உலகின் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். சுழற்பந்து வீச்சாளர்களான முத்தையா முரளிதரனும், ஷேன் வார்னும் மட்டுமே இதுவரை எழுநூறு விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளனர். இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் சோயப் பஷீர் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய இன்னிங்ஸ் 477 ரன்களில் முடிவடைந்தது. இதன் மூலம் இந்தியா முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் முன்னிலை பெற்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்ட நாயகன் ஜெய்ஸ்வால் இப்போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் 9 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். குல்தீப் முதல் இன்னிங்சில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆட்ட நாயகனாக குல்தீப் தேர்வு செய்யப்பட்டார். தொடரில் 712 ரன்கள் குவித்த இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருதை பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தொடரில் 712 ரன்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடம் இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா தனது இடத்தை மேலும் வலுப்படுத்தியது. வெலிங்டனில் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த நியூசிலாந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டு, இரண்டு முறை இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியது. தர்மசாலாவில் நடந்த மாபெரும் வெற்றி, இந்தியா 12 புள்ளிகளைப் பெற உதவியது. புள்ளிகள் சதவிகிம் 64.50 லிருந்து 68.51 ஆக அதிகரித்தது. நியூசிலாந்து அணியின் புள்ளிகள் சதவிகிதம் 60 ஆக இருக்கிறது. ஆஸ்திரேலியா 59.09 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து எட்டாவது இடத்தில் உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவுடனான 5 போட்டி டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்து அணியின் பேஸ்பால் உத்தி பற்றி மிகவும் பரவலாகப் பேசப்பட்டது சரணடைந்த இங்கிலாந்து இந்தியாவுடனான 5 போட்டி டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்து அணியின் பேஸ்பால் உத்தி பற்றி மிகவும் பரவலாகப் பேசப்பட்டது. அனுபவமில்லாத வீரர்களைக் கொண்ட இந்திய அணியை எளிமையாக வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. அதேபோல முதல் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து 28 ரன்கள் வீழ்த்தியது. முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தபோது இந்திய அணியால் வெற்றி பெற இயலவில்லை. அப்போது இந்திய அணியின் பலவீனங்கள் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் மெக்கல்லம் ஆகியோர் பாராட்டுப் பெற்றனர். முதல் போட்டி முடிந்த பிறகு வெற்றி குறித்து சிலாகித்துப் பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “தோல்வி வந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை” என்று கூறினார். ஆனால் அடுத்தடுத்து 4 தோல்விகள் வரும் என்று அவர் நினைத்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் கடைசியில் போட்டியில் சரணடைவது போன்ற தோல்வி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். முதல் டெஸ்ட் போட்டி முடிந்ததும் பாராட்டுகளைப் பெற்ற ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் ஆகியோர் இப்போது நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். “தோல்விகளில் இருந்து பாடம் கற்றிருக்கிறோம். அணியை அடுத்த போட்டிகளுக்கு முன்னெடுத்துச் செல்வோம்” என்கிறார் பென் ஸ்டோக்ஸ். https://www.bbc.com/tamil/articles/c9w9yyvmxewo