Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22985
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா விடுதலை By PONMALAR 17 NOV, 2022 | 06:43 PM (பொன்மலர் சுமன்) முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் புதிய மெகசின் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்துவந்த பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி தலையீட்டில் எதுவித நிபந்தனைகளுமின்றி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி 300 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அன்றைய தினம் அவரது மனைவி சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டார். அத்துடன் 2015ஆம் ஆண்டு மேன்முறையீடு செய்ததன் மூலம் 13 வருடங்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றது. சட்டத்தரணிகளான அனிருத் சில்வா, கணேசராஜா, நீலகண்டன் சரவணன் ஆகியோரினால் இவ்வழக்கு நெறிபடுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா தனது விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு விண்ணப்பித்துள்ளார். இவரின் விண்ணப்பத்தை பரிசீலித்த ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரின் கவனத்துக்கு கொண்டுவந்ததுடன் அம்மையாரின் அனுமதியுடனும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவின் சிபாரிசின் பேரில் எதுவித நிபந்தனைகளுமின்றி உடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். சிறையிலிருந்து விடுதலையாகிய பின்னர் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், எனது 22 வருட கால சிறைவாசத்திலிருந்து ஜனாதிபதி எதுவித நிபந்தனைகளுமின்றி என்னை விடுதலை செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு இணங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரும் அனுமதி வழங்கியதுடன் நீதி அமைச்சரும் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளார். நான் சிறையில் இருந்தபோதும் எனது ஆன்மீக கடமைகளை செய்வதற்கு அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர், செயலாளர் மற்றும் பிரதித் தலைவர் தனபால் ஆகியோரும் எனக்கு பேருதவியாக இருந்துள்ளதுடன் எனது விடுதலைக்காக அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு இன்றைய இந்த விடுதலையை உறுதிப்படுத்தினார்கள். முக்கியமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகங்கள், உணர்வாளர்கள் அனைவரும் எனது விடுதலைக்கு தங்களால் இயன்ற ஆதரவை வழங்கியுள்ளனர். குறிப்பாக கனடா டொரொன்டோவில் உள்ள நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பின் ஏற்பாட்டாளர் ரோய் சமாதானம், லண்டனைச் சேர்ந்த மனிதநேய செயற்பாட்டாளர் ராஜன் ஆசீர்வாதம் போன்றவர்களுடன் ஏனையவர்களும் எனது விடுதலை தொடர்பாக ஜனாதிபதியுடன் அவ்வப்போது பேசி வந்தார்கள். எனது இந்த விடுதலைக்கு முழுமையான காரணம் சிறைத்துறை அதிகாரிகளும் சிறை தலைமை செயலகமுமாகும். ஜனாதிபதிக்கு எனது ஆவணங்கள் முழுமையாக பரிசீலித்து எனது விடுதலைக்கான ஒழுங்குகளை செய்து தந்தார். எனது அவ்வப்போது பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் மனிதநேய அமைப்புகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். படங்கள்: எஸ். எம். சுரேந்திரன் https://www.virakesari.lk/article/140397
  2. 300 கோடி ரூபா நிதிமோசடி தொடர்பில் இருவர் சி.ஐ.டி.யினரால் கைது! By DIGITAL DESK 2 17 NOV, 2022 | 08:55 PM நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர்களாக தம்மை இனங்காட்டிக் கொண்டு நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இவர்கள் சுமார் 300 கோடி ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/140395
  3. நீண்ட நேரம் வேலை செய்யுங்கள் அல்லது வெளியேறுங்கள்: டுவிட்டர் ஊழியர்களுக்கு இலோன் மஸ்க் காலக்கெடு By DIGITAL DESK 3 17 NOV, 2022 | 05:14 PM டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் நீண்ட நேரம், தீவிரமாக வேலை செய்ய வேண்டும் அல்லது நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டும் என அந்நிறுவனத்தின் புதிய உரிமையாளரான இலோன் மஸ்க் கூறியுள்ளார். உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான இலோன் மஸ்க், கடந்த மாத இறுதியில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதன்பின் உயர் அதிகாரிகள் பலரையும் பதவியிலிருந்து நீக்கிய அவர், அந்நிறுவனத்தின் 7500 ஊழியர்களில் அரைவாசிப் போரை வேலையிலிருந்து நீக்கினார். வீட்டிலிருந்து பணியாற்றும் திட்டத்தையும் அவர் முடிவுக்கு கொண்டுவந்தார். இந்நிலையில், டுவிட்டர் ஊழியர்களுக்கு இலோன் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சலில், ஊழியர்கள் நீண்ட நேரம், கடினமாக வேலை செய்ய வேண்டும். அல்லது வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த நிபந்தனைக்கு இணக்கம் தெரிவிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு நியூ யோர்க் நேரப்படி இன்று வியாழக்கிழமை மாலை 5 மணி (இலங்கை, இந்திய நேரப்படி வெள்ளி காலை 3.30 மணி) வரைஇலோன் மஸ்க் அவகாசம் வழங்கியுள்ளார். இதில் கையெழுத்திடாத ஊழியர்கள் 3 மாத சம்பளத்துடன் சேவையிலிருந்து நீக்கப்படுவார்கள் என இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/140387
  4. முல்லைத்தீவில் சில முக்கிய நபர்களை விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு By VISHNU 17 NOV, 2022 | 09:04 PM மாவீரர் நாள் நெருங்கி வரும் நிலையில் முல்லைத்தீவு பொலிசாரால் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி உள்ளிட்ட பலர் காரணம் தெரிவிக்காது விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு வெள்ளை தாளில் எந்த பொலிஸ் அடையாளப்படுத்தலும் இல்லாதவகையில் அழைத்துள்ளனர். பொலிஸ் கட்டளையோ அல்லது பதவி முத்திரையோ இன்றி சிறிய வெள்ளை தாளில் அழைப்பு கட்டளையை எழுதி பொலிசார் இன்று பகல் நேரில் உரிய நபர்களது வீடுகளுக்கு சென்று வழங்கியுள்ளனர். உரிய காரணம் இன்றி உரிய வகையில் அன்றி இவ்வாறு தம்மை அழைத்தமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/140392
  5. கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட வேண்டுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,விதான்ஷு குமார் பதவி,பிபிசி இந்திக்காக 17 நவம்பர் 2022, 12:33 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுவாக இதுபோன்ற படங்கள் அரிதாகவே காணப்படுகின்றன - கேமரா உங்கள் மீது ஃபோக்கஸ் செய்கிறது, நீங்கள் அழுது கொண்டிருக்கிறீர்கள். டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியபோது ரோஹித் சர்மாவின் நிலை இதுதான். ரோஷித் சர்மா, ஒயிட் பால் கிரிக்கெட்டில் அழியாத முத்திரையை பதித்தவர். ஒருநாள் போட்டிகளில் அதிக இரட்டை சதங்கள் அடித்தவர். ஹிட்மேன் என்று உலகம் போற்றும் அவர், ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டனும் ஆவார். அவரது உணர்ச்சிப் பெருக்கு, சக வீரர்களை மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டின் கோடிக்கணக்கான ரசிகர்களையும் வருத்தமடையச் செய்தது. ஆனால், டி20யில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமையேற்று ஒரு வருடம்தான் ஆகிறது. இந்திய டி20யின் எதிர்காலம் 35 வயதான ரோஹித் சர்மாவின் கேப்டன்சியைத்தான் நம்பியிருக்கிறதா என்ற குரல்கள் உலகக் கோப்பையின் இந்தத் தோல்விக்குப் பிறகு எழுந்துள்ளன. 'தலைவன்' தோனி வந்தால் இந்திய அணி கோப்பைகளைக் கைப்பற்றிவிடுமா?17 நவம்பர் 2022 டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் தோல்விக்குக் காரணமான ‘பழைய உத்தி’; இதை மாற்ற முடியுமா?11 நவம்பர் 2022 கோப்பையை பறிகொடுத்த பாகிஸ்தானை 'கர்மா' என சீண்டிய இந்திய வீரர் முகமது ஷமி: என்ன தகராறு?13 நவம்பர் 2022 ரோஹித்தின் கேப்டன்சியில் அணியின் செயல்பாடு 2021 டி 20 உலகக் கோப்பையில் முதல் சுற்றிலே இந்தியா வெளியேறியது.அதன் பிறகு கேப்டன்சியிலும் மாற்றம் ஏற்பட்டது.விராட் கோலிக்கு பதிலாக ரோஹித் ஷர்மா அணியின் புதிய கேப்டனானார். புதிய கேப்டன் ரோஹித் தலைமையில் இந்திய அணி இருதரப்பு தொடர்களில் சிறப்பாக விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றது. இதில் சில தொடர்களில் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும் முடிவு இந்தியாவுக்கு சாதகமாகவே இருந்தது. இதன் போது நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளை 3-0 என்ற கணக்கில் இந்தியா தோற்கடித்தது. அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் இந்தியா வெற்றிவாகை சூடியது. டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி தனது சொந்த மண்ணில், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது. இந்த முடிவுகளைப் பார்க்கும்போது இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது, எல்லாம் நல்லபடியாகவே நடக்கிறது என்பது போலவே தோன்றும். ஆனால் எல்லாம் நல்லபடியாக நடக்கிறது என்று சொல்லமுடியாது. ஏனென்றால் மிகப்பெரிய ஐசிசி போட்டியில் இந்தியா வெற்றி பெறத் தவறிவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES எங்கே தவறு நடந்தது? ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணிக்கு முதல் பெரிய சவால் ஏற்பட்டது. குழு நிலையிலான முதல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, பின்னர் பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரு அணிகளிடமும் தோல்வியடைந்து இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது. ரோஹித் ஷர்மாவின் அணிக்கு இரண்டாவது பெரிய சவாலாக இருந்தது T20 உலகக் கோப்பை 2022. இதிலும் இந்திய அணி ரசிகர்களை ஏமாற்றியது. கடைசி சில பந்துகளில் பாகிஸ்தான் மற்றும் வங்க தேச அணிகளுக்கு எதிரான கடினமான போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. பின்னர் இரண்டு பெரிய அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் மோதிய போது பந்தயத்தின் முடிவு இந்தியாவுக்கு எதிராக அமைந்தது. பேட்டிங் பவர்பிளேயை தனக்கு சாதகமாக பயன்படுத்த முடியாமல் போனதுதான், இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலியை டாப் ஆர்டராகக்கொண்ட இந்திய அணியின் பவர்ப்ளே சராசரி ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட மட்டுமே அதிகமாக இருந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்திய அணியின் தோல்விக்கு, பயத்தால் வெலவெலத்த அதன் பேட்டிங் தான் காரணம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நசீர் உசேன் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணி மிகவும் பழைய பாணியில் டி20 கிரிக்கெட்டை விளையாடி வருவதாகவும், அதன் காலம் கடந்துவிட்டது என்றும் அவர் கூறினார். தொடக்கத்தில் விக்கெட்டுகளை காப்பாற்றி பின்னர் அடித்து நொறுக்குவது இந்திய அணியின் உத்தியாக இருந்தது. ஆனால் இந்த உத்தி தோல்வியடைந்தது, இதற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் பொறுப்பேற்க வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES இதற்கு முன்பும் மாற்றங்கள் நடந்தன எந்த ஒரு அணிக்கும் உலகக் கோப்பை ஒரு பெரிய இலக்காக உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாட அணிகள் விரும்புகின்றன. அதற்கென நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தயாரிப்பை தொடங்குகின்றன. உலகக் கோப்பையில் ஒரு அணி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால், அணியில் பெரிய மாற்றங்களும் நிகழ்கின்றன. பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடமே கேளுங்கள்! 1979 உலகக் கோப்பைக்குப் பிறகு 2007 ஒருநாள் உலகக் கோப்பை இந்திய அணிக்கு மிகவும் மோசமாக அமைந்தது. 1979 இல் இந்தியா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 2007 இல் இந்தியா வங்கதேசம் மற்றும் இலங்கையிடம் தோற்றது. பெர்முடாஸுக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அணி வெற்றி பெற்றது. போட்டியின் முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது. அந்த ஒருநாள் அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் மற்றும் பயிற்சியாளராக கிரெக் சேப்பல் இருந்தனர்.இந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டனர். சில மாதங்களுக்குப் பிறகு ராகுல் டிராவிட்டும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய கேப்டனாக மகேந்திர சிங் தோனி ஆக்கப்பட்டார். அவர் இந்திய அணிக்கு ஒரு புதிய திசையை கொடுத்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2011 இல் உலகக் கோப்பை நம் கைக்கு வந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும், அணியில் மாற்றம் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டதாக குரல் கொடுத்துள்ளனர். தோல்வி அடைந்த அணியின் கேப்டன்கள் இதற்கு முன்பும் நீக்கப்பட்டுள்ளனர், இப்போது அதைச்செய்ய என்ன தயக்கம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அடுத்த டி20 உலகக் கோப்பைக்குள் ரோஹித் ஷர்மாவுக்கு 37 வயதாகிவிடும். அப்போதும் அவர் கேப்டனாக இருப்பாரா, அணியில் இடம் பெறுவாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. எனவே மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால், அதை எவ்வளவு சீக்கிரம் செய்யமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்வது நல்லது என்று அவர்கள் கருதுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES 2021 இல் தோல்வியடைந்த அதே அணி தான் 2022 உலகக் கோப்பையில் விளையாடியது கவனமாகப் பார்த்தால் இந்திய டி20 அணியில் பெரிய மாற்றங்களுக்கான நேரம் சென்ற ஆண்டே வந்துவிட்டது. 2021 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இந்திய அணியைப் பார்த்தால், அப்போது அணியில் இடம்பெற்ற எல்லா வீரர்களும் 2022 இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடியதை பார்க்கமுடிகிறது. ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விளையாடாததால், அவருக்கு பதிலாக அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட்டார். 2021ல் மிக மோசமாக விளையாடிய அதே அணி அடுத்த ஆண்டு உலக சாம்பியன் ஆக முடியுமா? அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு வயதாகிவிட்டது. அணிக்கு ' டேடீஸ் ஆர்மி’ என்ற பட்டப்பெயரும் அளிக்கப்பட்டு வருகிறது. அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், ரவிசந்திரன் அஷ்வின், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் - அனைவரும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள். இவர்களில் பலரும் 34-35 வயதை நெருங்கியவர்கள். அணியின் சராசரி வயது அதிகரித்து வருவதும் உடனடி மாற்றத்திற்கான அறைகூவலாக உள்ளது. எதிர்பார்த்ததை விட குறைவான வெற்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்த பிறகு, அணியின் செயல்பாடு எல்லா இடங்களிலும் கண்டிக்கப்பட்டது, இதில் மைக்கேல் வார்ன் முன்னிலையில் உள்ளார். உலக கிரிக்கெட்டில் எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த வெற்றி பெற்ற அணிகளில் இந்திய அணியும் ஒன்று என்று வார்ன் கூறினார். இவ்வளவு திறமைகள் நிறைந்த அணி டி20 கிரிக்கெட்டில் விளையாடும் விதம் வியப்பளிப்பதாக அவர் கூறினார். இந்திய அணியிடம் வீரர்கள் இருக்கின்றனர்,ஆனால் விளையாடும் முறை சரியில்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வார்ன், கூறினார். முதல் 5 ஓவர்களில் எதிரணி பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதற்கு எப்படி வாய்ப்பு தருகிறீர்கள் என்று அவர் வினவியுள்ளார். வார்ன் இந்திய அணியின் உத்தியை கண்டித்தார். பவர்பிளேயில் அதிக ரன்களை எடுக்காதது பலவீனம். இது திறமையுடன் தொடர்புடையது அல்ல, மனநலம் சம்பந்தப்பட்டது என்றும் அவர் கூறினார். கேப்டன் ரோஹித் ஷர்மா அணியின் உத்திகளை திட்டமிடுவதில் தவறு செய்து வருகிறார். அதன் காரணமாகவே அணி இதுபோன்ற தோல்விகளை சந்தித்து வருகிறது. பவர்பிளேயில் பலவீனமான பேட்டிங்கைத் தவிர, லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்படாத காரணமாகவும் அணி பெரிய விலையை கொடுக்கவேண்டி வந்தது. இந்த உலகக் கோப்பையில் அதில் ரஷீத் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் லெக் ஸ்பின் பந்துவீச்சில் அசத்தினர். அரையிறுதி போட்டியிலும்கூட லெக் ஸ்பின்னர் இல்லாத குறையை இந்திய அணி உணர்ந்தது. இந்தியாவிடம் சிறந்த லெக் ஸ்பின்னர் இருக்கிறார், அவர் களத்தில் இல்ல, டக்-அவுட்டில் இருக்கிறார் என்று போட்டியின் நேர் வர்ணனையின் போது ரவி சாஸ்திரி ஏமாற்றத்துடன் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES கேப்டன் மாற்றப்படவேண்டுமா அல்லது விளையாடும் விதமா? கேப்டன் பதவி மற்றும் மாற்றம் குறித்த இந்த விவாதத்தில், இர்ஃபான் பதானும் ட்வீட் மூலம் தனது கருத்தை தெரிவித்துள்ளார். கேப்டனை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மூன்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்கள் வேகமாக விளையாட வேண்டும், அணியில் ஒரு லெக் ஸ்பின்னர் இருக்க வேண்டும், அதிவேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இர்ஃபானின் பரிந்துரைகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் 2024 வரை இந்த அணி இதே கேப்டன்சியின் கீழ் தொடருமா என்பது சந்தேகமே. இந்தியாவின் வெவ்வேறு அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்கள் இருக்க வேண்டும் என்றும் சில வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெவ்வேறு கேப்டன்கள் இருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. ஹார்திக் பாண்டியா தலைமையில் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியுடன் மாற்றம் தொடங்கியுள்ளதாக அவர்கள் நம்புகின்றனர். புதிய கேப்டன் நியமனம் ஓரளவு உறுதியான ஒன்றுதான்.அது நடக்குமா நடக்காதா என்பது கேள்வி அல்ல.ஆனால் அது எப்போது நடக்கும் என்பதைத்தான் பார்க்கவேண்டும். https://www.bbc.com/tamil/articles/c7214rrxereo
  6. எங்களது ஆயுதமே விடுதலைப்புலிகளை இலங்கை தோற்கடிக்க உதவியது - பாக்கிஸ்தானின் ஆயுத உற்பத்தியாளர் By RAJEEBAN 17 NOV, 2022 | 05:25 PM பாக்கிஸ்தானின் ஆயுதஉற்பத்தியாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் ஆயுதம் விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வெற்றி பெறுவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கியது என தெரிவித்துள்ளார் டோவ்ன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது டோவ்ன் மேலும் தெரிவித்துள்ளதாவது பாக்கிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மிகவும் சிறப்பானவை பயனுள்ளவை அவை யுத்தத்தின்போக்கை தீர்மானிக்கின்றன. பாக்கிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்துகொண்ட தனியார் ஆயுத உற்பத்தியாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் கிரனைட் லோஞ்சர்கள் இலங்கை விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொள்வதற்கு உதவின என தெரிவித்துள்ளார். எங்கள் இராணுவ தளபதி எங்கள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியை அழைத்து இதற்காக நன்றி தெரிவித்தார் டோவ்ட்சன் ஆர்மரி நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் இர்பான் அகமட் தெரிவித்துள்ளார். தனது நிறுவனத்தின் 30 வீதமான வருமானம் ஏற்றுமதி மூலம் பெறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/140391
  7. சீன பொருளாதார உளவாளிக்கு அமெரிக்காவில் 20 வருட சிறைத் தண்டனை By DIGITAL DESK 3 17 NOV, 2022 | 02:38 PM உளவு பார்த்த குற்றச்சாட்டில் சீன புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. ஹு யான்ஜுன் என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மற்றும் பிரெஞ்சு வான்-விண்வெளி நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பங்களை திருடியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சை சேர்ந்த மேற்படி புலனாய்வு அதிகாரி 2018 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருதார். ஹு யான்ஜுன் உட்பட 11 சீனப் பிரஜைகள் மீது 2018 ஒக்டோபரில், அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்திலுள்ள நீதிமன்றமொன்றில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பின்னர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட ஹு யான்ஜுன் , குற்றவாளி என கடந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்க நீதிமன்றமொன்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. அமெரிக்க வர்த்தக இரகசியங்களைத் திருட முயற்சிக்கும் எனவரையும் நாம் பொறுப்புக்கூற வைப்போம் எனும் சமிக்ஞையை இவ்வழக்கு அளிக்கிறது என ஒஹையோ சமஷ்டி வழக்குத் தொடுநர் கென்னத் பார்க்கர் கூறியுள்ளார். இதேவேளை, ஹு யான்ஜுன் மீதான குற்றச்சாட்டுகள் புனையப்பட்டவை என சீன வெளிவிவகார அமைச்சு இன்று கூறியுள்ளது. https://www.virakesari.lk/article/140340
  8. ராஜீவ் கொலை வழக்கு: 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு பட மூலாதாரம்,GETTY IMAGES 29 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த 11-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. இதன்படி, நளினி, ஜெயக்குமார், ஆர்.பி.ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சுதேந்திரராஜா, ஸ்ரீஹரன் ஆகியோர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கடந்த மே 18ஆம் தேதி மற்றொரு கைதி பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு அளித்த தீர்ப்பின்படி, மேலும் ஆறு பேரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. தங்கள் தரப்பை கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cmm67jd2722o
  9. மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதைகள் இனந்தெரியாதோரால் மீண்டும் அகற்றல் By VISHNU 17 NOV, 2022 | 04:01 PM மட்டக்களப்பு கிரான் சுற்றுவளைவு மையத்தின் அருகாமையில் இரு மருங்கிலும் பொது மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதைகள் இனம் தெரியாத நபர்களினால் இன்று காலை (17) அகற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர். இன்று காலை குறித்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அவை கிழித்து அகற்றப்பட்டுள்ளதுடன் அவை கட்டிய கயிறுகள் மாத்திரம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதேவேளை கடந்த 15.11.2022 ஆம் திகதியன்று கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்ட நினைவேந்தல் பதாதை இதேபோன்று அகற்றப்பட்டிருந்ததை அடுத்து நேற்று (16) காலை மீண்டும் கிரான் சுற்றுவளைவு மையப் பகுதியில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவை இன்று காலை மீண்டும் அகற்றப்பட்டுள்ளன. மாவீரர் தொடர்பான நினைவேந்தல் பதாதைகள் இனம் தெரியாத நபர்களினால் இரவு வேளைகளில் அகற்றப்படும் வேளை அதற்கு பதிலாக ஏற்பாட்டுக் குழுவினரால் புதிதாக பதாதைகள் மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக மாவீரர் நினைவேந்தல் குழுவினர் தங்களது அதிருப்தியினையும் கவலையினையும் வெளியிட்டுள்ளனர். இதேவேளை எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாலை 6.05 மணிக்கு மாவீரர் நினைவேந்தல் சுடர் மாவீரர்களின் உறவுகளினால் (இறந்த உறவுகளுக்கு) ஏற்றப்படவுள்ளது.இதற்கான பல்வேறு ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. https://www.virakesari.lk/article/140343
  10. விடுதலைப் புலிகள் கொன்றதாக கூறப்படும் 170 முஸ்லிம்கள் உடல்களை தோண்டி மத முறைப்படி அடக்கம் செய்யக் கோரிக்கை கட்டுரை தகவல் எழுதியவர்,யூ.எல்.மப்றூக் பதவி,பிபிசி தமிழுக்காக 58 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சம்மாந்துறையில் தையற்கடை நடத்தி வந்த ஹபீபுர் றஹ்மான் எனும் தமது குடும்பத்தின் மூத்த சகோதரர், குருக்கள் மடத்தில் புலிகளால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுகின்றார் நஸீலா. மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் பிரதேசத்தில் வைத்து கடத்தி, படுகொலை செய்து, அங்கேயே புதைக்கப்பட்ட சுமார் 170 முஸ்லிம்களின் உடல்களையும் தோண்டியெடுத்து, இஸ்லாமிய முறைப்படி மீளவும் அடக்கம் செய்வதற்கு சிபாரிசு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 'காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்' இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. மேற்படி ஆணைக்குழு முன்பாக - காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.எம். ரஊப் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார். 1990ஆம் ஆண்டு ஜுலை 12ஆம் தேதி - கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக வாகனங்களில் பயணித்துக் கொண்டிருந்த முஸ்லிம் பொதுமக்களை - தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர், ஆயுதமுனையில் கடத்திப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இவ்வாறு கொலை செய்யப்பட்ட அனைவரும் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களாவர். ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டுத் திரும்பியோர், தொழிலுக்காக வெளியூர் சென்று வந்தோர் உட்பட பலர் - இதன்போது கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களையே, தோண்டியெடுத்து, இஸ்லாமிய முறைப்படி மீளவும் அடக்கம் செய்வதற்கு சிபாரிசு செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. "இலங்கை போரில் காணாமல் போன பலர் பாலியல் தொழிலாளர்கள் ஆக்கப்பட்டுள்ளனர்" - உறவினர்கள் புகார்12 ஆகஸ்ட் 2022 'இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே? விரைந்து நீதி வழங்குங்கள்': ஐ.நா. மனித உரிமை ஆணையர்5 மார்ச் 2022 'போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டார்கள் என இலங்கை அரசு ஏற்றுக்கொள்கிறதா?'22 செப்டெம்பர் 2021 என்ன நடந்தது? 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான ஆயுத மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாக, காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.எம். ரஊப் - பிசிசி தமிழிடம் கூறுகிறார். தமிழர்கள் வாழும் பிரதேசமான குருக்கள் மடத்தில், சம்பவ நாள் காலை தொடக்கம் மாலை வரையில், புலிகள் இயக்கத்தவர்களால் கடத்தப்பட்ட முஸ்லிம்கள் ஓரிடத்தில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், வேறோர் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு - படுகொலை செய்யப்பட்டார்கள் என, அவர் தெரிவிக்கின்றார். இந்த படுகொலை நடைபெற்று 20 நாட்களுக்குப் பின்னர்தான் (03 ஆகஸ்ட் 1990), காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இரவு நேரம் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது, விடுதலைப் புலிகள் அமைப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும், அதில் 103 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் என்றும் ரஊப் குறிப்பிட்டார். "சம்பவ தினம் - குருக்கள் மடம் பகுதி வீதி ஓரங்களில் அதிக அளவிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நிற்பதாக கேள்வியுற்றோம். அன்று காலையில் இருந்து, கல்முனை - மட்டக்களப்பு வீதியால் பயணித்த காத்தான்குடி முஸ்லிம்களை புலிகள் கடத்தியிருந்தனர். பிற்பகல் இரண்டரை மணியளவில்தான் எமக்கு அதனை உறுதிப்படுத்த முடிந்தது. மாலை 5.00 மணியளவில் ஊர் அல்லோலகல்லோலப்பட்டது” என, அன்றைய சம்பவம் குறித்து ரஊப் விவரித்தார். காத்தான்குடியிலிருந்து குருக்கள் மடம் சுமார் 13 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. படக்குறிப்பு, இந்த சம்பவத்தில் தன்னுடைய தாய் மாமன் (தாயின் மூத்த சகோதரர்), மச்சான் (மாமியின் மகன்) ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டதாக ரஊப் தெரிவித்தார். ”கடத்தப்பட்டோரில் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் இருந்தமையினால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என ஊர் நம்பியது. இருந்தபோதும் மட்டக்களப்பிலுள்ள தேவாலயமொன்றின் அருட்தந்தை ஒருவர் ஊடாக, எமது மக்களை விடுவிக்குமாறு புலிகளுக்கு செய்தியனுப்பினோம். கடந்த காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும்போது நல்லுறவை ஏற்படுத்துவதற்காக அருட்தந்தையர்கள் உதவியிருந்தனர். ஆனால், இந்த சம்பவம் தொடர்பில் புலிகளுடன் பேசுவதற்குச் சென்ற அருட்தந்தை பின்னர் எம்மை சந்திக்கவில்லை. கடத்தப்பட்டவர்களுக்கான இறுதிக் கடமைகளை எமது சமயப் பிரகாரம் மேற்கொள்ளுமாறு அருட்தந்தையிடமிருந்து மாலை 7.00 மணியளவில் சேதிதான் வந்தது” என்றார் ரஊப். இந்த சம்பவத்தில் தன்னுடைய தாய் மாமன் (தாயின் மூத்த சகோதரர்), மச்சான் (மாமியின் மகன்) ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டதாகவும் ரஊப் தெரிவித்தார். படக்குறிப்பு, முஸ்லிம்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக ரஊப் அடையாளம காட்டிய இடம் மூன்று கோரிக்கைகள் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் குருக்கள் மடம் படுகொலை தொடர்பில் மூன்று கோரிக்கைகளை தாம் முன்வைத்துள்ளதாக ரஊப் குறிப்பிட்டார். குருக்கள் மடத்தில் 170 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு, அந்த உடல்கள் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும். அந்தப் படுகொலை ஏன் மேற்கொள்ளப்பட்டது என்பதை சுயாதீன ஆணைக்குழு ஒன்றின் மூலம் ஆராய்ந்து கண்டறிய வேண்டும். நாட்டில் நடந்த யுத்தத்தின் போது முஸ்லிம்களுக்கும் இவ்வாறான பெரும் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளமையை சர்வதேச சமூகத்துக்குத் தெரியப்படுத்துதல் வேண்டும் என்பனவே தாம் முன்வைத்த - மூன்று கோரிக்கைகள் என', காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ரஊப் கூறினார். 2 மாதங்களில் உடன் பிறந்தோர் இருவரை இழந்தவரின் கதை குருக்கள் மடம் படுகொலைச் சம்பவத்தில் தனது தம்பியைப் பறிகொடுத்தவர் காத்தான்குடியைச் சேர்ந்த பௌசுல் ஹினாயா. அப்போது தனது தம்பிக்கு 22 வயது என்கிறார். அந்த இழப்புக் குறித்து பிபிசியிடம் பேசிய அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ”வீட்டில் நாங்கள் 06 பிள்ளைகள். ஆண்கள் நான்கு பேர், பெண்கள் இருவர். எனக்கு இளைய சகோதரரரான பௌசுல் அமீர் என்பவரைத்தான் குருக்கள் மடத்தில் புலிகள் கடத்திக் கொன்றார்கள்” என்கிறார். புடவை வியாபாரத்துக்காக அக்கரைப்பற்றுக்குச் சென்றிருந்த தனது தம்பி, ஊர் திரும்பியபோதுதான் அவர் கடத்தப்பட்டதாக ஹினாயா கூறுகின்றார். அந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்களின் பின்னர், தனது இன்னொரு சகோதரரும் மட்டக்களப்பு - நாவக்குடா பகுதியில் கடத்திக் கொலை செய்யப்பட்டதாகவும் பௌசுல் ஹினாயா தெரிவித்தார். படக்குறிப்பு, இரண்டு மாதங்களுக்குள் சகோதரர்கள் இருவரை இழந்த பௌசுல் ஹினாயா. ”மற்றைய தம்பியின் பெயர் ரஊப். அவர் வீட்டில் நாலாவது பிள்ளை. அப்போது அவருக்கு 19 வயது. தொழிலுக்காக மட்டக்களப்பு சென்றிருந்தபோது கடத்திக் கொலை செய்யப்பட்டார்” என பௌசுல் ஹினாயா குறிப்பிட்டார். குருக்கள் மடம் படுகொலை நடந்த காலப்பகுதியில், அநேகமான தமிழர் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருந்தது. ராணுவத்தினர் தலைகாட்டும் போது மறைந்துகொள்ளும் புலிகள் இயக்கத்தவர்கள், ராணுவம் சென்ற பின்னர் ஊர்களுக்குள் மீண்டும் நடமாடத் தொடங்குவர். சிலவேளைகளில், புலிகள் அமைப்பினரைக் கட்டுப்படுத்துவதற்காக படையினர் களமிறங்கும்போது, இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பரம் மோதல்கள் இடம்பெறுவதுமுண்டு. இந்தக் காலப்பகுதியில் தமிழர் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லுறவு காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்கள் என்பதற்காகவே தனது சகோதரர்கள் இருவரும் கடத்திக் கொலை செய்யப்பட்டனர் என்கிறார் பௌசுல் ஹினாயா. குருக்கள் மடத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் தோண்டப்பட்டு இஸ்லாமிய முறைப்படை நல்லடக்கம் செய்யப்படுவது - தமக்கு திருப்தியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகின்றார். படக்குறிப்பு, பௌசுல் அமீர் (குருக்கள் மடத்தில் படுகொலை செய்யப்பட்டவர்) புலிகள் கடத்தியதை கண்டவர் தகவல் கூறினார் சம்மாந்துறையில் தையற்கடை நடத்தி வந்த ஹபீபுர் றஹ்மான் எனும் தமது குடும்பத்தின் மூத்த சகோதரர், குருக்கள் மடத்தில் புலிகளால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுகின்றார் நஸீலா. இவர் அரச தொழில் புரிகின்றார். ”எங்கள் தந்தை குடும்பத்தை பராமரிக்கத் தவறியபோது, எங்களுக்காக எமது மூத்த சகோதரர்தான் உழைத்தார். அவரின் இழப்பை எதனாலும் ஈடுசெய்ய முடியாது” என்று கூறியபோது நஸீலா கண்ணீர் விட்டார். தனது சகோதரர் பயணித்த லாரியை புலிகள் கடத்திச் சென்றதை, அந்த வழியினால் பயணித்த ஒருவர் கண்டு வந்து - தங்களிடம் கூறியதாகவும் நஸீலா இதன்போது குறிப்பிட்டார். அனைவரும் கடத்தப்படவில்லை குருக்கள் மடத்தின் வழியாகப் பயணித்த அனைத்து முஸ்லிம்களும் அன்றைய தினம் கடத்தப்படவில்லை என, பிபிசி தமிழுடன் பேசியவர்கள் கூறுகின்றனர். "அவர்கள் (புலிகள்) அன்று எல்லோரையும் கடத்தவில்லை. சிலரை செல்லுமாறு அனுமதித்திருந்தனர், சிலரைக் கடத்தினார்கள். முஸ்லிம்களை புலிகள் கடத்துவதாக அன்றைய தினம் செய்தி கசியத் தொடங்கியபோது, அதனை சிலர் நம்பவில்லை. 'நாங்கள் அந்த வழியால்தான் வந்தோம், எங்களுக்கு அப்படியொன்றும் நடக்கவில்லை' என்று - பிரச்சினைகள் எவையுமின்றி அந்த வழியால் வந்தவர்கள் கூறினார்கள். படக்குறிப்பு, முஸ்லிம்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக ரஊப் அடையாளம காட்டிய இடம் இதன் காரணமாக முஸ்லிம்கள் தொடர்ச்சியாக அன்றைய தினம் முழுவதும் அந்த வழியாகப் பயணித்தனர் என்கிறார் - காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ரஊப். முஸ்லிம்களுக்கு சந்தேகம் ஏற்படாமலிருக்க புலிகள் அவ்வாறு நடந்திருக்கலாம் எனவும் அவர் கூறுகின்றார். 1980களில் இருந்தே முஸ்லிம்கள் காணாமலாக்கப்படுதல், கடத்தப்படுதல், முஸ்லிம்களிடம் கப்பம் கோருதல் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளதாகவும், இவற்றினை விடுதலைப் புலிகளும், தமிழ் ஆயுதக் குழுக்களுமே செய்து வந்ததாகவும் ரஊப் குறிப்பிடுகின்றார். குருக்கள் மடத்தில் ஒரு இடத்தை இந்த செய்தியாளரிடம் காட்டிய ரஊப், படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் அங்குதான் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். கடற்கரையை அண்டிய அந்த இடத்துக்கு அருகில், தற்போது ராணுவ முகாமொன்று அமைந்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cy0n77krmzpo
  11. இரான் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை - வெடிக்கும் மக்கள் எழுச்சி கட்டுரை தகவல் எழுதியவர்,டேவிட் கிரிட்டென் பதவி,பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/@VAHID இரானில் சமீபத்தில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. “கடவுளுக்கு எதிரான பகைமை” காட்டியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. பெயர் கூறப்படாத “கலவரக்காரர்களில்” ஒருவர் தனது காரைக் கொண்டு ஒரு போலீஸ்காரரை தாக்கிக் கொன்றதாக தெஹ்ரானில் உள்ள புரட்சிகர நீதிமன்றம் கூறியுள்ளதாக நீதித்துறையின் மிசான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இரண்டாவதாக ஒருவர் கத்தி மற்றும் துப்பாக்கி வைத்திருந்தார். மூன்றாவது நபர் போக்குவரத்தைத் தடுப்பதற்கு “அச்சுறுத்தலை” ஏற்படுத்தினார். நான்காவது நபர் கத்தியால் தாக்கியதாக செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் மிசான் அறிவித்தது. ஞாயிற்றுக்கிழமை முதல் ஐந்து மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மனித உரிமை ஆர்வலர்கள் மரண தண்டனைகளைக் கண்டித்துள்ளனர். அவை நியாயமற்ற விசாரனைகளின் முடிவுகள் என்று கூறியுள்ளனர். “போராட்டக்காரர்கள் விசாரணையின்போது வழக்கறிஞர்களை அணுக முடியாது. அவர்கள் தவறான வாக்குமூலங்களை வழங்குவதற்காக உடல் மற்றும் மன சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பிறகு அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது” என்று நார்வேவை தளமாகக் கொண்டு இயங்கும் இரான் மனித உரிமைகள் இயக்குநரான மஹ்மூத்த் அமிரி-மொகத்தம் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்தார். சோமாலியா வறட்சி: இரண்டு சகோதரிகளின் உயிரைக் காப்பாற்ற போராடும் சிறுவன்6 மணி நேரங்களுக்கு முன்னர் துருக்கி இஸ்தான்புல் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பலி14 நவம்பர் 2022 பல நாடுகளில் குடியேற்ற பிரச்னையில் சிக்கி 18 ஆண்டுகள் விமானநிலையத்தில் வாழ்ந்தவர் மரணம்13 நவம்பர் 2022 மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து நபர்களின் அடையாளத்தை நீதித்துறை வெளியிடவில்லை என்றாலும், அவர்களுடைய குற்றச்சாட்டுகள் பற்றிய தகவல்கள், அவர்கள் முகமது கோபட்லூ, மனுச்சேர் மெஹ்மான் நவாஸ், மஹான் செதரத் மதனி, முகமது பொரோஹானி, சஹந்த் நூர்முகமது-சாதே ஆகியோராக இருக்கலாம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் நம்புவதற்கு வழிவகுத்ததாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்தது. இரானின் ஷரியா அடிப்படையிலான சட்ட அமைப்பின் கீழ், மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய “கடவுளுக்கு எதிரான பகை” மற்றும் “பூமியில் செய்யும் ஊழல்” போன்றவற்றோடு சேர்த்து பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 பேரில் அவர்களும் இருந்தனர். இரானின் தலைவர்கள் வெளிநாட்டு ஆதரவு “கலவரங்கள்” என்று சித்தரித்த பாதுகாப்புப் படைகளின் ஒடுக்குமுறையில் குறைந்தது 348 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர், 15,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இரானுக்கு வெளியே செயல்பட்டு வரும் மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனமான HRANA தெரிவித்துள்ளது. ஹிஜாப் அணிவது தொடர்பான கடுமையான விதிகளை மீறியதாகக் கூறி அறநெறி போலீசாரால் காவலில் வைக்கப்பட்டிருந்த மாசா அமினி என்ற 22 வயது பெண் மூன்று மாதங்களுக்கு முன்பு காவலில் மரணமடைந்த பிறகு, மதகுரு ஆட்சிக்கு எதிராகப் பெண்கள் தலைமையிலான போராட்டங்கள் வெடித்தன. செவ்வாய்க்கிழமையன்று தொடங்கிய புதிய பதற்றத்துக்கு மத்தியில், 12 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து நீதித்துறையின் மரண தண்டனை அறிவிப்புகள் வந்துள்ளன. Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 2019ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று, திடீர் எரிபொருள் விலையேற்றத்தால் கோபம் கொண்ட இரான் மக்கள் பெரிய நாடு தழுவிய போராட்டங்களை மேற்கொண்டனர். அதன் நினைவாக மூன்று நாட்கள் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்களை மேற்கொள்வதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் அழைப்பு விடுத்தனர். செவ்வாய்க்கிழமையன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள், தெஹ்ரான் மற்றும் பிற முக்கிய நகரங்களில் “சர்வாதிகாரிக்கு மரணம்” உட்பட, உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக முழக்கங்களை எழுப்புவதைக் காட்டியது. தலைநகரில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில், அயதுல்லா கமேனி “வீழ்த்தப்படுவார்” என்று ஒரு கூட்டம் கூச்சலிட்டது, போராட்டக்காரர்கள் ஒரு மேடையில் தலையை மறைக்கும் ஆடையைத் தீ வைத்து எரித்தனர். ஒரு மெட்ரோ நிலையத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு காணொளியில் ரயில் பெட்டிக்குள் அதிகாரிகள் மக்களை அடிப்பதைக் காட்டுகிறது. மூன்றாவதாக இன்னொரு காணொளியில், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும்போது, மக்கள் ஓடுவதையும் கீழே விழுவதையும் காண முடிந்தது. புதன்கிழமை இரவு, தென்மேற்கு நகரமான ஐசேவில் உள்ள சந்தையில் எதிர்ப்பாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மீது ஆயுதம் ஏந்திய “பயங்கரவாத நபர்கள்” துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தபட்சம் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு பெண் குழந்தை அடங்குவதாக குசெஸ்தான் மாகாணத்தின் துணை ஆளுநர் தெரிவித்தார். செயல்பாட்டாளர் அமைப்பான '1500தஸ்விர்', ஐசேவில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பற்றிய அறிக்கைகளைப் பெற்றுள்ளதாகவும் பாதுகாப்புப் படையினர் 10 வயது சிறுவனைக் கொன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. சில போராட்டக்காரர்கள் நகரிலுள்ள செமினரிக்கு தீ வைப்பதைக் காட்டுவதாகக் கூறிய காணொளியையும் வெளியிட்டது. Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 முன்னதாக, குர்திஷ் மனித உரிமைகள் குழுவான ஹெங்காவ், மாசா அமினியின் சொந்த மாகாணமான குர்திஸ்தானில் அமைந்துள்ள வடமேற்கு நகரமான கம்யரனில், பாதுகாப்புப் படையினரால் ஓர் ஆண் எதிர்ப்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தது. செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினரின் நேரடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மற்றொரு நபருடைய வீட்டின் அருகே அவர் நின்று கொண்டிருந்தார் என்று கூறியது. அதோடு மேலும் இருவர், அருகிலுள்ள சனந்தாஜ் நகரிலும் கொல்லப்பட்டனர் எனவும் ஹெங்காவ் தெரிவித்தது. நார்வேவை தளமாகக் கொண்ட ஹெங்காவ், செவ்வாய்க்கிழமை இரவு அண்டை நாடான மேற்கு அசர்பைஜானில் உள்ள புகான் நகரத்தின் கட்டுப்பாட்டை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியதாகவும் கூறினார். செவ்வாய்க்கிழமையன்று புகான், கம்யரனில் “கலவரக்காரர்கள்” இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் ஒரு கர்னல் உட்பட இரு உறுப்பினர்களைச் சுட்டுக் கொன்றதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் கட்டுப்படுத்தப்படும் துணை ராணுவ பாசிஜ் எதிர்ப்புப் படையில் உறுப்பினராக இருந்த ஒரு மதகுரு, தெற்கு நகரமான ஷிராஸில் பாட்டில் குண்டுகளால் தாக்கியதில் உயிரிழந்தார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். போராட்டங்கள் தொடக்கியதிலிருந்து இதுவரை 38 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனமான HRANA, 43 பேர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறுகிறது. https://www.bbc.com/tamil/articles/c881qlgyl23o
  12. குவைத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம் By DIGITAL DESK 2 17 NOV, 2022 | 04:33 PM குவைத்தில் 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக 2 பெண்கள் உட்பட 7 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகளும் இந்த தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவந்த நிலையிலும், அரசு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இது குறித்து குவைத் அரசுக்குச் சொந்தமான 'குனா' செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, பல்வேறு குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் குவைத் மத்திய சிறைச்சாலையில் நேற்று (16) தூக்கிலிடப்பட்டனா். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டவா்களில் 3 குவைத் நாட்டு ஆண்கள், ஒரு குவைத் நாட்டுப் பெண், ஒரு சிரியா நாட்டவா், ஒரு பாகிஸ்தானியா், ஒரு எத்தியோப்பிய பெண் அடங்குவா் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மனிதா்களின் மிகவும் புனிதமான உரிமையாகிய உயிா்வாழும் உரிமையை அவா்கள் பிறரிடமிருந்து பறித்ததால் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அரசுத் தரப்பு நீதித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கடைசியாக 2017 ஜனவரி 25-ஆம் திகதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் தூக்கிலிடப்பட்டனர். நேற்று குவைத் 7 பேர் தூக்கிலப்பட்டுள்ளனர். இந்த தண்டனைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆம்னெஸ்டி பொது மன்னிப்பு சபை, 'இதுபோன்ற தண்டனைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இவை கொடூரமானவை, மனிதத்தன்மையற்றவை மற்றும் கீழ்த்தரமானவை' என்று விமர்சித்துள்ளது. இந்த மரண தண்டனை நிறைவேற்றத்து ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது. குவைத்தில் 1960 ஆரம்பித்து தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/140373
  13. ஒரு மாதத்தில் 4வது முறை; 14 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கைக்கு அன்புமணி கண்டனம் By RAJEEBAN 17 NOV, 2022 | 03:04 PM சென்னை: ஒரு மாதத்தில் நான்காவது முறையாக 14 தமிழக மீனவர்கள் கைது செய்துள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை அவர்களின் படகுடன் சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். சிங்களப் படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. கடந்த ஒரு மாதத்தில் நான்காவது கைது நடவடிக்கை இதுவாகும். அக்டோபர் 20-ஆம் தேதி 3 பேர், 27-ஆம் தேதி 7 பேர், கடந்த 6-ஆம் தேதி 15 பேர், இப்போது 14 பேர் என மொத்தம் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படியாக சிங்களக் கடற்படையின் அத்துமீறல் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலை பாமக தொடர்ந்து கண்டித்து வருகிறது; மத்திய அரசுக்கு முதலமைச்சர் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்; இராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் பிறகும் தொடரும் சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா. மீனவர்கள் கைது விஷயத்தில் மத்திய அரசு இனியும் அமைதி காக்கக் கூடாது. இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இப்போது கைது செய்யப்பட்டவர்களையும், ஏற்கனவே கைதானவர்களையும் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/140347
  14. “தாயை இழந்தேன், வாய்ப்பை இழந்தேன், எங்கள் கண்ணீருக்கு யார் பதில் தருவது?” - ராஜீவ் காந்தியோடு பலியான காங்கிரஸ் பிரமுகர் மகன் கேள்வி கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சம்பவத்தில் பலியான காங்கிரஸ் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட மகளிர் அணியைச் சேர்ந்த சந்தானி பேகத்தின் மகன் அப்பாஸ் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளளை அடுத்து, 30ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்த நளினி, முருகன் உள்ளிட்ட ஆறு பேரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளதை அவர்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். மறுபக்கம், அந்த சம்பவத்தில் தங்கள் குடும்பத்தை இழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் கடுமையான விமர்சனத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்த சமயத்தில், ஸ்ரீபெரும்புதூரில் தனு என்ற பெண் நடத்திய தற்கொலைப் படை மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், மனித வெடிகுண்டு தனு, ராஜீவ் காந்தி அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என 16 பேர் இறந்தனர். 40க்கும் மேற்பட்டவர்கள் மோசமான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்திற்கு காரணம் விடுதலைப் புலிகள் என குற்றம்சாட்டப்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர், 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை அனுபவித்தனர். கடந்த மே மாதம், பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் விடுதலை அளித்தது. தற்போது மீதமுள்ள ஆறு பேரும் விடுதலை பெற்றுள்ளனர். ராஜீவ் காந்தி கொலையுண்ட சமயத்தில் அந்தக் கூட்டத்தில் பங்குபெற்ற காங்கிரஸ் கட்சியின் செங்கல்பட்டு மகளிர் அணியைச் சேர்ந்த சந்தானி பேகமும் உயிரிழந்தார். அவரது மகன் அப்பாஸ் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் அந்தச் சம்பவத்தால் அனாதையாக வளர்ந்ததாகக் கூறுகின்றனர். பிபிசி தமிழிடம் பேசிய அப்பாஸ், ''நாங்கள் மூவரும் சிறுவர்கள். என் அண்ணன்களுக்கு 12, 14 வயது, எனக்கு 10 வயது. எங்களின் தந்தை 1988இல் ஏற்கனவே இறந்துவிட்டார். அதனால், எங்கள் தாயார் மட்டும்தான் எங்களை வளர்த்தார். அன்று அந்த கூட்டத்தில் அவர் இறந்துபோவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. எங்கள் உறவினர்கள், தெரிந்தவர்கள் என எல்லோரும் எங்களை புறம்தள்ளினர். எங்களுக்கு உதவ யாரும் இல்லை. அரசாங்கம் அப்போது, ரூ.40,000 இழப்பீடு கொடுத்ததாகச் சொல்கிறார்கள். யார் அதைப் பெற்றார்கள் என்றுகூட எங்களுக்கு தெரியாது. இதுவரை எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. நாங்கள் அனாதையாக வளர்ந்தோம்,'' என்கிறார் அப்பாஸ். படக்குறிப்பு, ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேர் ராஜீவ் படுகொலை வழக்கு: சிறையில் இருந்து நளினி, முருகன் உள்ளிட்டோர் விடுதலை13 நவம்பர் 2022 ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட கதையும், வழக்கு கடந்து வந்த பாதையும்11 நவம்பர் 2022 ராஜீவ் காந்தியுடன் இறந்தோர் குடும்பத்தினர் குமுறல்: "நாங்கள் தமிழர்கள் இல்லையா?"19 மே 2022 தற்போது சென்னை பாடி பகுதியில் கடிகார கடை ஒன்றை நடத்திவரும் அப்பாஸ், சிறுவயதில் பெற்றோரை இழந்து, படிப்பை இழந்து, முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் இழந்துவிட்டதாகக் கூறுகிறார். ''ஏழு பேரையும் விடுவித்தார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். எங்கள் கண்ணீருக்கு யார் பதில் தருவார்கள். எங்களுக்காக யார் பேசுவார்கள்? அவர்கள் வீட்டுக்குச் செல்வார்கள், அவர்கள் குடும்பத்துடன் இருப்பார்கள், எங்களுக்கு நாங்கள் இழந்தவர்கள் மீண்டு வரப்போவதில்லை,''என்கிறார் அப்பாஸ். குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தபோது காவல் ஆய்வாளராக இருந்தவர் அனுசுயா எர்னஸ்ட். சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற அவர், ராஜீவ் காந்தி கொலையான நேரத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர். அவர் குற்றவாளிகள் விடுதலையாகியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ''இப்போதும் என் முகத்தில் குண்டு வெடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் உள்ளன. என் இரண்டு விரல்களை அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் இழந்தேன். இன்னும் என் உடலில் பல இடங்களில் காயம் இருக்கிறது. எனக்கு என்ன நீதி கிடைத்துள்ளது? என்னைப் போல காயம் அடைந்தவர்கள், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு யார் நீதி வாங்கி தருவார்கள்?,''என கேள்வி எழுப்புகிறார். படக்குறிப்பு, சம்பவத்தின் போது காவல் ஆய்வாளராக இருந்த அனுசுயா ராஜீவ் காந்தியின் மனைவி மற்றும் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, அவரின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள், குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக பேசியதை பற்றி கேட்டபோது, ''அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. அவர்கள் நேரடியாக குடும்ப உறுப்பினரை இழந்துவிட்டனர். ஆனால் அவர்கள் மன்னித்துவிட்டனர். நாங்கள் தினமும் அந்த இழப்பின் சுவடுகளுடன் வாழ்கிறோம். எங்களுக்கு ஆதரவு தருபவர்கள் யாரும் இல்லை,''என்கிறார். மேலும், ''ஒரு (முன்னாள்) பிரதமரை கொலை செய்தவர்களுக்கு நீதிமன்றம் விடுதலை தந்தால், யாருக்குதான் தூக்குதண்டனை கொடுப்பார்கள்? இந்த தீர்ப்பை வைத்து, இனி பலரும் தூக்குத்தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்வார்கள்,''என்கிறார் அனுசுயா. குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிராக குரல் கொடுக்கும் குடும்பங்கள் நீதி கேட்பது குறித்து, ராஜீவ் காந்தி கொலையான சமயத்தில் சம்பவத்தை நேரில் பார்த்த பத்திரிகையாளர் பகவான் சிங்கிடம் கேட்டபோது, ''இந்த கொலையை திட்டமிட்ட விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் தற்போது உயிருடன் இல்லை. கொலையில் பலியான ராஜீவ் காந்தி குடும்பத்தினர் கூட, குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல், கொலை வழக்கில் கைதானவர்கள் யாருக்கும் அந்த சம்பவம் நடக்கப்போகிறது என்று தெரியாது என்பது புலன்விசாரணையில் வெளியானது. அதனால், அவர்களை விடுவித்துள்ளது என்பது, நம் நீதிமன்றத்தின் தன்மையை உணர்த்துகிறது. இழப்பை சந்தித்த குடும்பங்களுக்கு பெரிய வலி ஏற்பட்டுள்ளது உண்மை. ஆனால், அதற்காக எத்தனை ஆண்டுகள் தண்டனை தந்தாலும், அது ஈடாகாது, மன்னிப்பது சரியான முடிவுக்காக இருக்கும்''என்கிறார். மேலும், ''குற்றவாளிகளை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜன், தனது குறிப்பில், பேரறிவாளன் தன்னிடம் தெரிவித்த தகவல்களை முழுமையாக பதிவு செய்யவில்லை என்றார். அதனால், இந்த வழக்கும், அதன் விசாரணையிலும் பல ஓட்டைகள் உள்ளன. மேலும், அதனைப் பற்றி விசாரிக்க தொடங்கபட்ட விசாரணை ஆணையமும் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. ஏழு பேர் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்கவும் குரல் கொடுப்பதுதான் சரியாக இருக்கும்,''என்றார். https://www.bbc.com/tamil/articles/c3g9v0kq36lo
  15. 25 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவில் பொறியியல் பட்டம்பெற்ற நபர் கைது! By DIGITAL DESK 2 17 NOV, 2022 | 02:39 PM அமெரிக்காவில் கணினி மென்பொருள் பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், பல திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் நாரஹேன்பிட்டி கித்துல்வத்தை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். 25 கொள்ளைகள் மற்றும் 6 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான உடைமைகளை கொள்ளையடித்துள்ளமையும் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான பல ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள் மற்றும் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. வீதிகளில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை திருடி கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து கைப்பைகளை கொள்ளையடித்து வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. https://www.virakesari.lk/article/140336
  16. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை முகத்துக்கு நேராக குற்றம் சாட்டிய ஷி ஜின்பிங் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஜஸ்டின் ட்ரூடோ - ஷி ஜின்பிங் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் முகத்துக்கு நேராகக் குற்றம் சாட்டிப் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த அரிய சம்பவம் இந்தோனீசியாவின் பாலி நகரில் தற்போது நடந்து முடிந்துள்ள ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டின்போது நிகழ்ந்தது. மாநாட்டின்போது இரண்டு தலைவர்களும் மூடிய அறைக்குள் பேசிக்கொண்ட விஷயங்கள் ஊடகங்களில் கசிந்தது குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் மொழிபெயர்ப்பாளர் உதவியோடு குற்றம் சாட்டிப் பேசினார். கனடா தேர்தலில் சீனா உளவு பார்த்ததாகவும் தலையீடு செய்ததாகவும் கூறப்படுவது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின்போது ட்ரூடோ பேசியதாக செய்திகள் வெளியாயின. இந்த செய்திகள் பற்றிக் குறிப்பிட்டு தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளார் ஷி ஜின்பிங். கைதான கனடா நாட்டவரை உளவாளிகள் என குற்றஞ்சாட்டும் சீனா4 மார்ச் 2019 ஹூவாவெய் நிதி அதிகாரி கைது: மனித உரிமை மீறல் என்கிறது சீனா6 டிசம்பர் 2018 பேச்சுவார்த்தை விவரம் கசிந்தது குறித்துப் பேசிய ஜின்பிங் ஜஸ்டின் ட்ரூடோ நேர்மையாக இல்லை என்றும் இத்தகைய நடத்தை பொருத்தமற்றது என்றும் நேருக்கு நேராகக் குற்றம் சாட்டியுள்ளார். இயல்பான சந்திப்பின்போது இப்படி நேருக்கு நேராகக் குற்றம் சாட்டுவது தலைவர்களுக்கு இடையில் அரிய நிகழ்வு. வீடியோவில் இருப்பது என்ன? பத்திரிகையாளர்கள் வீடியோவில் பதிவான இந்த நிகழ்வில் ஷி ஜின்பிங்கும் ட்ரூடோவும் அருகருகே நின்று பேசுகிறார்கள். "நாம் விவாதித்த எல்லாமும் செய்தித்தாள்களுக்கு கசியவிடப்பட்டிருக்கிறது. இது முறையற்றது" என்று ஷி ஜின்பிங், ட்ரூடோவிடம் சீன மொழியான மான்ட்ரினில் கூறுகிறார். இதற்கு சிரித்துக்கொண்டே தலையாட்டிய ட்ரூடோ, "கனடாவில் நாங்கள், சுதந்திரமான, வெளிப்படையான, மனம் திறந்த உரையாடலில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதை நாங்கள் தொடர்ந்தும் செய்வோம்," என்று பதில் அளிக்கிறார். "ஆக்கபூர்வமாக சேர்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வோம். ஆனால், நாம் உடன்பாடு காணமுடியாத விஷயங்களும் இருக்கும்," என ட்ரூடோ கூறினார். அவர் பேசி முடிக்கும் முன்பாகவே குறுக்கிட்ட ஷி ஜின்பிங், "அதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குங்கள்" என்று கூறிவிட்டு ட்ரூடோ கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு நகர்ந்து சென்றார். சீனாவுக்கான கனடா தூதரை நீக்கிய ஜஸ்டின் ட்ரூடோ - காரணம் என்ன?27 ஜனவரி 2019 கனடாவை சேர்ந்தவருக்கு சீனா தூக்குத்தண்டனை விதிப்பு: இரு நாட்டு உறவில் பதற்றம்15 ஜனவரி 2019 சீனா - கனடா இறுக்கம்: காரணம் என்ன? இரு தலைவர்கள் இடையிலான சுருக்கமான இந்த உரையாடல் சீனா - கனடா இடையே நிலவும் இறுக்கமான நிலையை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. சீனாவின் ஹுவாவேய் நிறுவன அதிகாரி மெங் வாங்சூ என்பவரை 2018இல் கனடா கைது செய்தது. அதைத் தொடர்ந்து சீனாவில் இரண்டு கனடா நாட்டவர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து இரு நாட்டு உறவில் இறுக்க நிலை உருவானது. பிறகு இந்த மூவருமே விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், சமீபத்தில் கனடாவில் ஹைட்ரோ-கியூபெக் நிறுவன ஊழியர் யூஷெங் வாங், வேவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் இந்த உரசல் தீவிரமாகியுள்ளது. கனடாவின் பொருளாதார நலன்களுக்குப் பாதகமாக, சீனாவுக்கு பலன் தரும் வகையில் வணிக ரகசியங்களைப் பெற்றதாக அவர் மீது கனடா போலீஸ் குற்றம் சாட்டியது. இது நடந்துகொண்டிருந்தபோது, ஷி ஜின்பிங், ட்ரூடோ ஆகிய இரு தலைவர்களும் ஜி20 மாநாட்டில் இருந்தனர். https://www.bbc.com/tamil/articles/ckvqd52lkjwo
  17. மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு! By DIGITAL DESK 2 17 NOV, 2022 | 02:35 PM படபொல கொபெய்குடுவ பிரதேசத்தில் மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொபெய்குடுவ பென்வல வீதி, இட்டிகெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.ஏ.செனத் இதுருவ என்ற மாணவனே கணனியை மடியில் வைத்துக்கொண்டு கணினியில் பணிபுரியும் போது அது வெடித்ததால் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பலத்த காயமடைந்தவர் பலப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த மாணவன் அம்பலாங்கொட பகுதி பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/140338
  18. 12 இலங்கை பெண்கள் ஓமானில் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை - காவிந்த ஜயவர்தன By T. SARANYA 17 NOV, 2022 | 03:45 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கையைச் சேர்ந்த 12 பெண்கள் வீட்டுப்பணிக்காக அபுதாபிக்கு அழைத்து செல்லப்பட்டு ஓமானில் நடைபெற்ற விழாவொன்றில் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நீதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தது. பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விசேட கூற்றொன்றை முன்வத்து அபுதாபியில் வீட்டுப்பணிப்பெண் தொழிலில் அமர்த்துவதாக தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையை சேர்ந்த 12 பெண்கள் ஓமானுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஓமானுக்கு அனுப்பிவைக்கப்பட்ட குறித்த பெண்கள் அங்கு நடைபெற்ற விழாவொன்றில் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளனர். தமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, தற்போதைய பொருளாதார பாதிப்பை தாங்கிக் கொள்ள முடியாத தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பினை தேடிச்செல்கின்றனர். இந்த நிலையில்,? எமது நாட்டின் பொருளாதார நெருக்கடியினை சீர்செய்ய தன்மானத்தை அடகு வைக்க முடியாது.எனவே இது தொடர்பில் நீதி அமைச்சர் ஏன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள், விதிமுறைகளையும் நியதிகளையும் மீறி செயற்படுகின்றன. அதேபோன்றுதான் சிலரின் நடவடிக்கைகளினால் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருக்க ஏதுநிலை காணப்படுகின்றது. ஆகையினால் குறித்த சம்பவம் தொடர்பில் அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொளப்படும் என்றார். https://www.virakesari.lk/article/140361
  19. வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் திடீர் மரணம் By T. SARANYA 17 NOV, 2022 | 09:47 AM வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். இன்று இரவு (16) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் காய்ச்சல் காரணமாக தனது விடுதியில் இறந்துள்ளார். தனது சக ஆசிரிய மாணவர்களிடம் உணவு வாங்கி வருமாறு கூறிவிட்டு விடுதியில் படுத்திருந்துள்ளார். உணவு வாங்கிக் கொண்டு சக ஆசிரிய மாணவர்கள் அங்கு வந்த போது காய்ச்சல் காரணமாக குறித்த ஆசிரிய மாணவன் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதில், வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி கற்கும் விவசாய பாடப் பிரிவின் முதலாம் வருட ஆசிரிய மாணவனான மட்டக்களப்பு, காரைத்தீவினை சேர்ந்த ஜிந்துஜன் என்பவரே மரணமடைந்தவராவார். இதேவேளை, உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/140291
  20. அபுதாபியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள் -ஆள்கடத்தல் கும்பல் குறித்த புதிய தகவல் By RAJEEBAN 17 NOV, 2022 | 11:56 AM அபுதாபியில் சிக்குண்டுள்ள இலங்கை பெண்கள் இலங்கையை சேர்ந்த பிரபல தம்பதிகளிடம் உதவி கோரியுள்ளதை தொடர்ந்து ஆள்கடத்தல் கும்பல் குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன. இலங்கையின் பிரபலமான தம்பதியினரிடம் பணியாளாக பணியாற்றிய பெண்ணொருவர் ஓமானிற்கு பணிப்பெண்ணாக செல்வதாக தெரிவித்து சென்றுள்ளார். சில நாட்களின் பின்னர் தனது மகளை தொடர்புகொண்டுள்ள அவர் தன்னையும் 16 பெண்களையும் அறையொன்றில் அடைத்துவைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார். தன்னுடைய கடவுச்சீட்டு கையடக்தொலைபேசியையும் அறையில் உள்ள ஏனைய பெண்களினது கடவுச்சீட்டுகளையும் கையடக்க தொலைபேசகளையும் பறித்து வைத்துள்ளனர் எனவும் அவர் தனது மகளிற்கு தெரிவித்துள்ளார். மறைத்து வைத்திருந்த தொலைபேசியை பயன்படுத்தி அவர் தனது மகளை தொடர்புகொண்டுள்ளார். மகள் பிரபல தம்பதியினரை தொடர்புகொண்டு இதனை தெரிவித்துள்ளார் இந்த பெண்களில் அனேகமானவர்கள் ஹட்டனை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட தம்பதியினர் தெரிவித்துள்ளனர். மகளின் தகவலை தொடர்ந்து வட்ஸ்அப்பினை பயன்படுத்தி தேடியவேளை குறிப்பிட்ட பெண் அபுதாபியில் இருப்பது தெரியவந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். .மேலும் அந்த தம்பதியினர் வட்ஸ் அப்பினை பயன்படுத்தி அந்த பெண்ணின் ஆவணங்களை பெற்றுக்கொண்டுள்ளனர் இந்த ஆவணங்களை ஆராய்ந்தவேளை குறிப்பிட்ட பெண் அபுதாபிக்கு விசிட் விசாவில் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. ஹட்டனில் உள்ள தரகர் மூலம் கட்டுகஸ்தோட்டையில் உள்ள முகவர் குறிப்பிட்ட பெண்ணை அனுப்பியுள்ளமையும் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட முகவர் நிலையம் மருதானையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு குறிப்பிட்ட பெண்ணின் விபரங்களை அனுப்பியமையும் அவர்கள் குறிப்பிட்ட பெண்ணை ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரிவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் பணிபுரிந்தமையும் தெரியவந்துள்ளது. பலர் இந்த விடயத்தில் ஈடுபட்டுள்ளதால் முக்கிய நபரை கண்டுபிடிக்கமுடியவில்லைஇ என இந்த விடயம் குறித்து ஆராய்ந்து வரும் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/140309
  21. அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற தனுஷ்கவுக்குத் தடை! இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை வெளியில் நடமாடவும் தடை By DIGITAL DESK 3 17 NOV, 2022 | 11:27 AM பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த, இலங்கைக் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றமொன்று இன்று பிணை வழங்கியது. கடுமையான நிபந்தனைகளுடனேயே தனுஷ்க குணதிலக்கவுக்கு நீதின்றம் பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 150,000 அவஸ்திரேலிய டொலர் பிணையில் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்கப்பட்டது. அவர் மீதான வழக்க விசாரணை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அவர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தனுஷ்கவின் கடவுச்சீட்டையும் நீதிமன்றில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவத்றகும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனது சம்மதமின்றி தன்னுடன் தனுஷ்க குணதிலக்க, பாலியல் உறவு கொண்டதாக அவுஸ்திரேலிய யுவதி ஒருவர் அளித்த முறைப்பாட்டையடுத்து, கடந்த 6 ஆம் திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரால் தனுஷ்க கைது செய்யப்பட்டார். அவருக்கு பிணை வழங்குவதற்கு, சிட்னியிலுள்ள டோனிங் சென்ரர் நீதிமன்ற நீதிவான் ரொபர்ட் வில்லியம்ஸ் கடந்த 7 ஆம் திகதி மறுத்திருந்தார். அதன்பின் தனுஷ்க குணதிலக்கவின் பிணை தொடர்பாக இரண்டாவது முயற்சியை அவரின் சட்டதரணிகள் மேற்கொண்டனர். இந்நிலையில், சிட்னி டோனிங் சென்ரரிலுள்ள உள்ளூர் நீதிமன்மொன்று தனுஷ்க குணதிலக்கவுக்கு இன்று பிணை வழங்கி உத்தரவிட்டது. https://www.virakesari.lk/article/140294
  22. விக்ரம் எஸ்: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் - சிறப்பம்சங்கள் என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,வெங்கட் கிஷண் பிரசாத் பதவி,பிபிசி செய்தி தெலுங்கு 16 நவம்பர் 2022 பட மூலாதாரம்,SKYROOT இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம் எஸ்’ நவம்பர் 18ஆம் தேதி ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட்டை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தனியார் 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான ஸ்கைரூட் தயாரித்துள்ளது. ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் ஏவுதளமான சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விக்ரம் எஸ் ஏவப்படும். இந்தியாவின் விண்வெளித் துறையில் தனியார் ராக்கெட் நிறுவனங்களின் பிரவேசத்தை குறிப்பதாக இந்த நிகழ்வு அமையவிருக்கிறது. ‘விக்ரம்’ எஸ் என்றால் என்ன? விக்ரம் எஸ் என்ற பெயர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நிறுவனர் டாக்டர் விக்ரம் சாராபாயின் நினைவாக வைக்கப்பட்டிருக்கிறது. விக்ரம் ராக்கெட் ஏவும் சீரிஸில் மூன்று வகையான ராக்கெட்டுகள் உள்ளன. அவை சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை வழங்குவதற்காக மேம்படுத்தப்படுகின்றன. முதல் வரிசையில் விக்ரம் I ரக ராக்கெட் உள்ளது. விக்ரம் II, விக்ரம் III ஆகியவற்றால் 'லோ எர்த் ஆர்பிட்டுக்கு' (தாழ்வான புவி வட்டப்பாதைக்கு) அதிக எடையுள்ள 'பேலோடை' (செயற்கைக்கோள்கள்) சுமந்து செல்ல முடியும் என்று கூறப்படுகிறது. விக்ரம் எஸ் மூன்று பேலோடுகளை சுமந்து செல்லும். அதாவது மூன்று சிறிய செயற்கைக்கோள்களை 'லோ எர்த் ஆர்பிட்டில்' கொண்டு செல்லும். இதில் இரண்டு பேலோடுகள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சொந்தமானவை. மூன்றாவது பேலோடு, வெளிநாட்டுக்கு சொந்தமானது. ராக்கெட்டின் முழுமையான பரிசோதனை 2022ஆம் ஆண்டு மே மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக 'ஸ்கைரூட்' ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், துணை வட்டப்பாதை திட்டத்துக்கு 'பிரரம்ப்' (ஆரம்பம்) என்று ஸ்கைரூட் நிறுவனம் பெயரிட்டிருக்கிறது. ஸ்கைரூட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, விக்ரம் எஸ் ராக்கெட் நவம்பர் 12 மற்றும் 16 க்கு இடையில் நடந்திருக்க வேண்டும். இருப்பினும், சாதகமற்ற வானிலை காரணமாக அதன் ஏவுதல் திட்டம் நவம்பர் 18 க்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. சீறிப் பாய்ந்த ராக்கெட்: மனிதனை நிலவுக்கு அனுப்பும் ஆர்ட்டெமிஸ் -1 சோதனை வெற்றி16 நவம்பர் 2022 விண்வெளியில் 'உயிர்' இருக்கிறதா? கார்பன் டை ஆக்சைடை கண்டுபிடித்தது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி29 ஆகஸ்ட் 2022 மனித திசுக்களில் உருவாகும் கணினி சிப்: நியூரான் கணினி ஆக்கப்பூர்வமானதா? ஆபத்தானதா?27 ஆகஸ்ட் 2022 ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ மற்றும் பிற தனியார் இந்திய விண்வெளி நிறுவனங்கள் பட மூலாதாரம்,SKYROOT படக்குறிப்பு, ஸ்கைரூட் குழுவினர் பெரும் கோடீஸ்வரரான ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ், அமெரிக்காவில் சமீபத்திய ராக்கெட் ஏவும் திட்டங்களுக்காக சர்வதேச அளவில் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வந்தது. அந்தப் போக்கு இந்தியாவிலும் வந்திருப்பதாகத் தெரிகிறது. இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகளான பவன் குமார் சந்தனா, நாக பரத் டாக்கா ஆகியோர் இணைந்து 2018ஆம் ஆண்டு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை ஆரம்பித்தனர். இந்த பணிக்காக ஒருங்கிணைப்பு வசதி, ஏவுதளம், தூரத் தொடர்பு, கண்காணிப்பு ஆதரவு ஆகியவை இஸ்ரோவால் தங்களுக்கு வழங்கப்படுவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி பவன் குமார் சந்தன் சமீபத்தில் கூறினார். "இந்த திட்டத்துக்காக இஸ்ரோ பெற்றுக் கொண்ட கட்டணம் பெயரளவுக்கானதுதான்" என்று அவர் மேலும் தெரிவித்தார். இதன் மூலம் தனியார் நிறுவனமான ஸ்கைரூட் அதன் ராக்கெட்டுகளை ஏவுவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆகியிருக்கிறது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் காஸ்மோஸ் மற்றும் ஸ்பேஸ்கிட்ஸ் தவிர, கோயம்புத்தூரைச் சேர்ந்த பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் ஆகியவை சிறிய செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் சில இந்திய நிறுவனங்களாகும். ஸ்கைரூட் உயர்தர தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிக எண்ணிக்கையிலும் மிகவும் மலிவு விலையிலும் ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் என்று நம்புகிறது. அடுத்த தசாப்தத்தில் சுமார் 20,000 சிறிய செயற்கைக்கோள்களை தங்கள் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்துவதை இந்த நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது. "விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை ஏவுவது ஒரு டாக்சியை முன்பதிவு செய்வது போல விரைவில் எளிதாகிவிடும் - அது விரைவான, துல்லியமான மற்றும் மலிவானதாக அமையும்", என்று ஸ்கைரூட் அதன் இணையதளத்தில் கூறியுள்ளது. தமது ராக்கெட்டுகள் எந்த ஏவுதளத்திலிருந்தும் 24 மணி நேரத்திற்குள் ஒருங்கிணைக்கப்பட்டு ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்கைரூட் குறிப்பிட்டுள்ளது. இந்திய விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்கள் பட மூலாதாரம்,SKYROOT இந்திய விண்வெளி் துறையில் பொது-தனியார் பங்கேற்புக்கான அடித்தளம் 2020ஆம் ஆண்டில் தொடங்கியது. ஜூன் 2020 இல், பிரதமர் நரேந்திர மோதியின் அரசாங்கம் இந்தத் துறையில் சீர்திருத்தங்களைத் தொடங்கிய போது அது தனியார் நிறுவனங்களுக்கு வழி வகுத்தது. IN-SPACEe என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அது இஸ்ரோ மற்றும் தனியார் விண்வெளி நிறுவனங்களை இணைக்கிறது. 2040ஆம் ஆண்டில், உலகளாவிய விண்வெளித் தொழில் சுமார் $1 ட்ரில்லியன் அளவிற்கு உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா இந்த லாபம் கொழிக்கும் சந்தையில் தடம் பதிக்க ஆர்வமாக உள்ளது - தற்போது உலகின் விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 2% ஆக உள்ளது. இந்த இடைவெளியை நிரப்ப விண்வெளி தொழில்நுட்பத்தில் புதுமைகளை உருவாக்க தனியார் நிறுவனங்களை இந்தியா ஊக்குவிக்கிறது. இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் பயணம் பட மூலாதாரம்,SKYROOT விண்வெளித் துறையில் இந்தியாவின் பயணம், 1960களில் டாக்டர் விக்ரம் சாராபாயின் வழிகாட்டுதலின் கீழ் விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழு (INCOSPAR) வடிவில் தொடங்கப்பட்டது. இந்திய விண்வெளித் துறையின் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் முன்னாள் சோவியத் யூனியனின் அஸ்ட்ராகான் ஒப்லாஸ்டில் இருந்து முதல் இந்திய செயற்கைக்கோள் ஆர்யபட்டா ஏவப்பட்டது. இந்திய மண்ணில் முதல் ராக்கெட் ஏவுதல் நவம்பர் 21, 1963 அன்று நடந்தது. அமெரிக்க நைக்கி அப்பாச்சி சவுண்டிங் ராக்கெட் திருவனந்தபுரம் அருகே தும்பாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அந்த ராக்கெட் வெறும் 715 கிலோ எடை கொண்டது. 30 கிலோ எடையுடன் 207 கிலோமீட்டர் உயரத்தை எட்டும் வகையில் அது இருந்தது. இந்தியாவின் சமீபத்திய பணியுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால், 2022,ஆகஸ்டில் ஏவப்பட்ட சிறிய செயற்கைக்கோள் ராக்கெட் (SSLV) 120 டன் எடை கொண்டது. அதன் நீளம் 34 மீட்டர். 500 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் 500 கிலோ செயற்கைக்கோள்களை அதனால் அனுப்ப முடியும். சப்ஆர்பிட்டல் ராக்கெட் என்றால் என்ன? பட மூலாதாரம்,SKYROOT விக்ரம் எஸ் என்பது மூன்று பேலோடுகளை சுமந்து செல்லும் ஒற்றை-நிலை துணை சுற்றுப்பாதை ராக்கெட் ஆகும். விக்ரம் தொடரின் விண்வெளி ஏவுதல் வாகனங்களில் உள்ள பெரும்பாலான தொழில்நுட்பங்களை சோதிக்கவும் சரிபார்க்கவும் இது உதவும் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் தலைமை செயல் அதிகாரி நாக பரத் டாக்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். பெயர் குறிப்பிட விரும்பாத இஸ்ரோவின் முன்னாள் மூத்த விண்வெளி விஞ்ஞானி ஒருவர் துணை ராக்கெட்டுகள் பற்றி விளக்கினார். “சப்ஆர்பிட்டல் ராக்கெட்டுகள் விண்வெளியில் எரிந்து பூமியில் விழுகின்றன. வானத்தில் எறியப்பட்ட கல்லைப் போல, இந்த ராக்கெட் பூமியில் மீண்டும் விழுவதற்கு முன்பு ஒரு பரவளைய பாதையாக வரும். இந்த ராக்கெட்டுகள் 10 முதல் 30 நிமிடங்களில் கீழே விழுந்துவிடும். “இந்த ராக்கெட்டுகள் சவுண்டிங் ராக்கெட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. நாட்டிகல் மொழியில், ஒலி என்றால் அளவிடுவது என்று பொருள். இந்த ராக்கெட்டுகள் வளிமண்டல அளவை ஒத்து பயணிக்கும்,” என்று அவர் மேலும் கூறினார். வட்டப்பாதை மற்றும் துணை சுற்றுப்பாதை ராக்கெட்டுகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடு அவற்றின் வேகம். ஒரு ராக்கெட் வட்டப்பாதையில் சுற்றுப்பாதை வேகத்தை எட்ட வேண்டுமானால் அவை மணிக்கு 28,000 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும். இல்லையெனில் அது பூமியில் விழுந்துவிடும். ஒரு ராக்கெட் இந்த வேகத்தை அடைவது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிக்கலான பணியாகும். எனவே இதை சாத்தியம் ஆக்குவது ஒரு விலையுயர்ந்த விவகாரமும் கூட. ஆனால் சப்ஆர்பிட்டல் ராக்கெட்டுகளில் அப்படி இருக்காது. அவற்றுக்கு இத்தனை வேகம் தேவையில்லை. அவை தங்கள் வேகத்திற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு பறந்து, இயந்திரங்கள் செயலிழந்த பிறகு கீழே விழும். உதாரணமாக, இந்த ராக்கெட்டுகளுக்கு மணிக்கு 6,000 கிமீ வேகமே போதுமானதாக இருக்கும். வரலாற்றில், 1942ஆம் ஆண்டில் நாஜி விண்வெளி பொறியாளர்களால் முதன்முதலில் துணை சுற்றுப்பாதை ராக்கெட் V-2 பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம், தங்கள் கூட்டாளிகளுக்கு ஆயுதங்களை நாஜிக்கள் வழங்கினர். அந்த ராக்கெட்டின் வேகம் காரணமாக எதிரிகளால் அதை தடுக்க முடியவில்லை. https://www.bbc.com/tamil/articles/c51ejlzlqpjo
  23. 'தலைவன்' தோனி வந்தால் இந்திய அணி கோப்பைகளைக் கைப்பற்றிவிடுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,எம். மணிகண்டன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியிலேயே வெளியேறியதும், சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவிய பெயர்களுள் ஒன்று மகேந்திர சிங் தோனி. ஐசிசி கோப்பைகளை இந்தியாவுக்காக அதிகமாகப் பெற்றுத் தந்தவர் என்பது அவரது சிறப்பு. ஆனால் இந்திய அணி இன்னொரு உலகக் கோப்பையை வெல்வதற்கு அவரால் உதவ முடியுமா? இப்போது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அவரை எந்த இடத்தில் பொருத்திக் கொள்ள முடியும்? இந்திய அணிக்கு தோனியின் தேவை இருக்கிறதா? “கிரிக்கெட்டில் முடிவெடுக்கும் திறன் என்பது மிகவும் முக்கியமானது. தோனி மற்ற எல்லா கேப்டன்களையும் விட அதில் சிறந்தவர்” என்கிறார் இந்திய மகளிர் அணியில் ஆடி வரும் ஹேமலதா. மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது டி20 உலகக் கோப்பையையும், 50 ஓவர் உலகக் கோப்பையைும் இந்திய அணி கைப்பற்றியது. கூடவே சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் சாம்பியன் பட்டம் பெற்றது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி ஐசிசி தொடர்கள் எதிலும் கோப்பையைக் கைப்பற்றவில்லை. டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் தோல்விக்குக் காரணமான ‘பழைய உத்தி’; இதை மாற்ற முடியுமா?11 நவம்பர் 2022 சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ப்ராவோ – நிர்வாகம் சொன்ன காரணம் இதுதான்15 நவம்பர் 2022 கோப்பையை பறிகொடுத்த பாகிஸ்தானை 'கர்மா' என சீண்டிய இந்திய வீரர் முகமது ஷமி: என்ன தகராறு?13 நவம்பர் 2022 2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, இப்போது மீண்டும் ஒரு டி20 உலகக் கோப்பை என தொடர்ச்சியான தோல்விகளை இந்திய அணி சந்தித்து வருகிறது. தோனிக்கு பிறகு நீண்ட கால கேப்டன்களாக விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இருந்திருக்கிறார்கள். ஆயினும் கோப்பைகள் கிடைக்கவில்லை. தோனி போன்ற கேப்டன் இல்லாததே இந்திய அணி கோப்பைகளை வெல்ல முடியாமல் போவதற்குக் காரணம் என்ற விவாதங்களை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. இப்படியொரு சூழலில் மகேந்திர சிங் தோனி மீண்டும் இந்திய அணிக்காக புதிய பொறுப்புகளை ஏற்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தோனி ஏற்கெனவே அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். மீண்டும் அவர் அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் ஏற்கெனவே கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் செயல்பட்டது போன்றே ஆலோசகர் என்கிற அளவிலான பொறுப்பு அவருக்கு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது? கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரைப் போல அல்லாமல், இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை வென்று சிறப்பான தொடக்கத்தை தந்தது. ரன்கள் எடுப்பதற்கு தடுமாறிக் கொண்டிருப்பதாகக் கருதப்பட்ட நட்சத்திர வீரரான விராட் கோலி இந்தத் தொடரில் அதிரடியாக மீண்டு வந்தார். குரூப் -2 பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி அந்தப் பிரிவிலேயே முதலாவதாக வந்தது. உலகக் கோப்பை தொடரிலேயே சூப்பர் 12 சுற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றிருந்தது. இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்கள். அர்ஷ்தீப் சிங் நம்பிக்கையளிக்கும் வகையில் பந்துவீசினார். ஆனாலும் கோப்பையை வெல்வதற்கு இது போதுமானதாக இல்லை. இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்? டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் உத்தி மோசமாக விமர்சிக்கப்பட்டது. “இந்தியா பழைய பாணி கிரிக்கெட்டை ஆடிக் கொண்டிருக்கிறது” என்று கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே சாடினார். பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் 6 ஓவர்களில் இந்திய அணி மிகக் குறைவான ரன்களையே எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் பவர் பிளே முடியும் வரை நீடித்து நிற்காததால் விரைவாக அடித்து ரன்களைக் குவிக்க வேண்டிய தருணங்களில் இந்திய அணி தடுமாறியது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்தியா முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 62 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அப்போது இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்திருந்தது. தொடக்க ஓவர்களிலேயே இந்தியா விக்கெட்டை இழந்துவிட்டதால், விராட் கோலி மிக மெதுவாகவே ரன்களைச் சேகரிக்கத் தொடங்கினார். 10 ஓவர்களில் ரன்ரேட் குறைவாக இருந்ததால், சூர்ய குமார் யாதவ் அதிரடியாக ஆட முயன்று அவுட் ஆகி வெளியேறினார். “கிரிக்கெட்டில் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால் இன்னும் இந்திய அணி பழைய வகையில் இருந்து வெளியே வர மறுக்கிறது” என்று குறிப்பிடுகிறார் விளையாட்டு விமர்சகர் தினேஷ் அகிரா. "திறமையான வீரர்களுக்கு இந்தியாவில் பஞ்சமே கிடையாது. அணுகுமுறையில்தான் தவறு இருக்கிறது. டி20 கிரிக்கெட்டை ஒரு நாள் கிரிக்கெட்டின் நீட்சியாகத்தான் இந்திய அணி பார்க்கிறது. இங்கிலாந்து போன்ற அணிகள் வீரர்களை வரிசையை மாற்றி களமிறக்குகின்றன. எதிர் தரப்பில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை வைத்து ரன்களைக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டார்கள் என்றால், அதற்கு ஏற்ற பேட்ஸ்மேனை கொண்டு வரிசையை மாற்றுகின்றன. ஆனால் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களையோ, மிடில் ஆர்டரையோ மாற்றத் தயங்குகிறது. ” என்கிறார் தினேஷ் அகிரா. பட மூலாதாரம்,GETTY IMAGES ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் குறைபாடா? டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததுடன், ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட திறன்களும் விமர்சிக்கப்படுகின்றன. கேப்டனாக இருப்பது தனிப்பட்ட வகையிலும், தனிப்பட்ட முறையில் ரன் குவிக்கத் திணறுவது கேட்டன்சியிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே கருதப்படுகிறது. “நிறைய தருணங்களில் ரோஹித் சர்மா கோபப்படுவதை பார்க்க முடிந்தது. தொடர் முழுக்கவே அவர் அழுத்தத்துடன் இருப்பது போலவே தோன்றியது. ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்த ரோஹித் சர்மாவை சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்க முடியவில்லை” என்கிறார் தினேஷ் அகிரா. ஆயினும் கேப்டன்சியை காட்டிலும் ஒட்டுமொத்த அணுகுமுறையே உடனடியாக மாற்றப்பட வேண்டியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். “ஒருவர் மீது மட்டும் குறையைக் கூறி தப்பிக்க முடியாது” என்கிறார் அவர். அணித் தேர்வில் இருந்து சரி செய்யப்பட வேண்டியது என்கிறார் அவர். தோனியின் தனித்தன்மை என்ன? தோனி இந்திய அணிக்கு கேப்டனாக வந்தது ஒரு நெருக்கடியான காலகட்டம். தனிப்பட்ட முறையும் தோனிக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் சோதனைகள் ஏற்பட்டிருந்தன. 2007-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இலங்கையிடமும், வங்கதேசத்திடமும் எதிர்பாராத வகையில் தோல்விகளைச் சந்தித்து வெளியேறியிருந்தது. இந்த இரு போட்டிகளிலும் பூஜ்ஜியம் ரன்களை எடுத்த தோனி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவரது வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் சுமார் ஆறு மாத இடைவெளியில் இந்திய கிரிக்கெட் மீதும் தன்மீது இருந்த விமர்சனங்களை தோனியால் துடைத்தெறிய முடிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES 2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட தோனி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நீண்ட இடைவெளிக்கப் பிறகு இந்தியாவுக்கு ஓர் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தார். நெருக்கடிகளில் இருந்து மீண்டு வரும் திறன் தோனியிடம் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். “தோனி ஒரு கற்பனை வளம் மிக்க கேப்டன்” என்கிறார் தினேஷ் அகிரா. மிகக் குறைந்த அளவு திறமை கொண்ட வீரர்களை வைத்தே, பெரிய அளவு சாதிப்பதற்கு இந்தக் கற்பனை வளம் உதவுகிறது என்கிறார் அவர். “2015 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி வரைக்கும் இந்திய அணி சென்றதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அந்தத் தொடருக்கு முன்பு இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டே இருந்தது. எதிர்பார்ப்பே இல்லாமல்தான் உலகக் கோப்பைக்குச் சென்றது. அத்தகைய அணியை அரையிறுதி வரைக்கும் அழைத்துச் சென்றார் தோனி. இருக்கும் வீரர்களைக் கொண்டு அணியை தோனியால் வெற்றிபெற வைக்க முடியும். அது ஒரு மேதையின் திறன். அந்தத் திறமை அடுத்த வந்த கேப்டன்களிடம் இல்லை” என்கிறார் தினேஷ். மைதானத்தில் பதற்றமில்லாமல் இருந்தபடியே சூழ்நிலைகளைச் சமாளிக்கக் கூடிய திறனைப் பற்றி ஹேமலதா குறிப்பிடுகிறார். “கிரிக்கெட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் இவரை பந்துவீச அழைக்க வேண்டும். அடுத்த போட்டியில் இந்த வீரரை களமிறக்க வேண்டும் என்பதையெல்லாம் தோனி அற்புதமாகத் தீர்மானிக்கக்கூடியவர்” என்கிறார் ஹேமலதா. இவர் இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் ஆடி வருபவர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணிக்கு மீண்டும் தோனி வந்தால் என்னவாகும்? இந்திய அணியின் தொடர் தோல்விகளால், வெற்றிகரமான கேப்டன் என்ற முறையில் தோனியின் பெயர் இப்போது விவாதத்துக்கு வந்திருக்கிறது. ஆனால் அணியை அப்படியே வைத்துக் கொண்டு தோனியை வரவழைத்து எதுவும் செய்ய முடியாது என்கிறார் தினேஷ் அகிரா. இந்த அணியில் ஏற்கெனவே ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கிறார். பெரிய அளவு அடையாளம் இல்லாதவர்கள் பயிற்சியாளர்களாக இருக்கும் அணிகளுக்கு ஆலோசகர் போன்ற பொறுப்புகளில் புகழ்பெற்ற ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். ஆனால் ஏற்கெனவே புகழ்பெற்ற வீரரான ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் நிலையில் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டால் எந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது. “அணியைக் கலைத்துப் போட்டு, இளைஞர்களைக் கொண்டு வந்துவிட்டு, தோனியை ஆலோசகராக நியமித்தால் சரியாக இருக்கும்” என்கிறார் தினேஷ் அகிரா. தோனி இன்னும் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்தாலும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை மீண்டும் கேப்டனாக தேர்வு செய்து அறிவித்திருக்கிறது. "தலைவன் (எம்.எஸ். தோனி) தான் அணியை வழிநடத்தப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரியும், அவர் சிறப்பானதைச் செய்வார், அணி சிறப்பாகச் செயல்படும்" என்று அறிவித்தார் சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி விஸ்வநாதன். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் தோனி மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறது என்பது அதன் அடுத்தகட்ட அறிவிப்புகளில்தான் அறிய முடியும். https://www.bbc.com/tamil/articles/cp65e40jpjxo
  24. சோமாலியா வறட்சி: இரண்டு சகோதரிகளின் உயிரைக் காப்பாற்ற போராடும் சிறுவன் பட மூலாதாரம்,BBC/ ED HABERSHON படக்குறிப்பு, தாஹிர் 46 நிமிடங்களுக்கு முன்னர் தாஹிரின் சகோதரர் பசியால் இறந்துவிட்டார். தற்போது அவருடைய இரண்டு சகோதரிகள் நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் போராடிக்கொண்டுள்ளனர். கடந்த 40 ஆண்டுகளாக மிக மோசமான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான ஒரு குடும்பத்தை மீண்டும் சந்திக்க பிபிசியின் ஆண்ட்ரூ ஹார்டிங் பைடோவாவுக்கு சென்றார். எச்சரிக்கை - இந்தக் கட்டுரையில் உள்ள சில விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம். பதினோரு வயது தாஹிர் பைடோவாவின் எல்லையில் இருக்கும் தன்னுடைய குடிசை வீட்டில் இருந்து பிரதான சாலைக்கு அருகில் உள்ள தகரத்தால் மேற்கூரை போடப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்கிறார். தன்னிடம் உள்ள ஒரே சட்டை மற்றும் கால் சட்டையை அவர் அணிந்துள்ளார். மேலும் அவர் கையில் ஒரு புதிய புத்தகம் உள்ளது. பள்ளியின் ஒரே ஆசிரியரான அப்துல்லா அகமது, கரும்பலகையில் வாரத்தின் ஆங்கில நாட்களை எழுதுகிறார். தாஹிரும் அவருடைய 50 வகுப்பு தோழர்களும் ‘சனி, ஞாயிறு, திங்கள்...’ என்று சத்தமாக வாசிக்கிறார்கள். சில நிமிடங்களுக்கு குழந்தைகள் உற்சாகமாக இருந்தனர். ஆனால், விரைவில் அவர்கள் கொட்டாவி விடவும் இருமவும் தொடங்கினர். பசி மற்றும் உடல்நலக் குறைபாட்டின் அறிகுறிகளான இவை, பைடோவாவைச் சுற்றியுள்ள பாறை நிலம் முழுவதும் கடுமையான சத்தம் போல எதிரொலித்தது. 40 ஆண்டுகளாக சோமாலியாவைத் தாக்கிய மிக மோசமான வறட்சியால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சமீபத்திய மாதங்களில் பைடோ அடைக்கலம் கொடுத்துள்ளது. "இந்தக் குழந்தைகளில் குறைந்தது 30 குழந்தைகள் காலை உணவை உட்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். சில சமயங்களில் தங்கள் பசியைச் சொல்ல என்னிடம் வருகிறார்கள்" என்கிறார் அகமது. பட மூலாதாரம்,BBC/ ED HABERSHON படக்குறிப்பு, சோமாலியா பள்ளி இந்தக் குழந்தைகள் கவனம் செலுத்துவதற்கு அல்லது வகுப்பிற்கு வருவதற்கு கூட சிரமப்படுவதாகவும் அவர் கூறுகிறார். ஆறு வாரங்களுக்கு முன்பு, தெற்கு சோமாலியாவின் இந்தப் பகுதிக்கு நாங்கள் சென்றபோது, தங்கள் குடிசைக்கு வெளியே தாய் ஃபாத்துமாவின் அருகில் அமர்ந்து, தாஹிர் அழுதுகொண்டிருந்தார். அதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவரது தம்பி சலாத் வறண்டு கிடக்கும் கிராமத்தில் இருந்து பைடோவாவுக்குச் செல்லும் வழியில் பட்டினியால் இறந்தார். இங்கிருந்து சில மீட்டர் தூரத்தில்தான் சலாத் அடக்கம் செய்யப்பட்டார். தற்போது அந்த இடத்தைச் சுற்றி அடைக்கலம் தேடி புதிதாக வந்தவர்கள் கட்டிய குடிசைகள் உள்ளன. பட மூலாதாரம்,BBC/ ED HABERSHON படக்குறிப்பு, மகன் மற்றும் மகள்களுடன் ஃபாத்துமா தன்னுடைய சகோதரிகளைப் பற்றி தான் கவலைப்படுவதாக தாஹிர் கூறுகிறார். கடுமையாக இருமிய ஆறு வயது மரியம், தனக்கு தலைவலிப்பதாக கூறினார். அருகே நான்கு வயது மாலியூன் சோம்பலாக அமர்ந்திருந்தார். "இவள் உடல் சூடாக இருக்கிறது. இவளுக்கு அம்மை இருப்பதாக நான் நினைக்கிறேன். இவர்கள் இருவருக்கும் அம்மை இருக்கலாம்" என்று ஃபாத்துமா மாலியூனின் நெற்றியில் கை வைத்தார். ஊட்டச்சத்து குறைபாட்டால் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்த பல இளம் குழந்தைகள் சமீப மாதங்களில் பைடோவாவில் பரவிய தட்டம்மை மற்றும் நிமோனியாவிற்கு பலியாகினர். பைடோவாவின் மாகாண மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தீவிர சிகிச்சை வார்டில் உள்ள உடல் மெலிந்த குழந்தைகளின் கைகளில் மருந்துகளையும், மூக்கில் ஆக்ஸிஜன் குழாய்களையும் சொருகுகிறார்கள். பல குழந்தைகளின் கை மற்றும் கால்களில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டது போன்று கருமையாகவும் கொப்புளமாகவும் இருந்தன. இது நீண்ட நாள் பட்டினியின் கடுமையான எதிர்வினை. பட மூலாதாரம்,BBC/ ED HABERSHON "எங்களுக்கு கூடுதலாக சில உதவிப்பொருட்கள் கிடைத்துள்ளன. ஆனால் அவை போதுமானதாக இல்லை" என்கிறார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அப்துல்லாஹி யூசுப். "தற்போது உலகம் சோமாலியாவின் வறட்சியைக் கவனிக்கிறது. சர்வதேச நன்கொடையாளர்கள் இங்கு வருகை தருகிறார்கள். இதற்கு எங்களுக்கு போதுமான உதவி கிடைக்கிறது என்று அர்த்தமல்ல. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன். இது நம்பிக்கை இழந்த சூழல்" என்றும் அவர் கூறுகிறார். ஆறு வாரங்களுக்கு முன்பு அவர் நிலைமை அச்சுறுத்துவதாகக் கூறினார். ஆனால், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருப்பதாக அவர் கூறுகிறார். சில நாட்களாக பெய்த மழை குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதைவிட பயிர் செய்வதில் சில குடும்பங்களின் கவனத்தைத் தூண்டியிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். மோசமடையும் சூழல் மீண்டும் முகாமிற்கு திரும்புவோம், பொதுக் குழாயில் இருந்து ஒரு பிளாஸ்டிக் கேனில் பிடித்த தண்ணீரை ஃபாத்துமா வீட்டிற்கு கொண்டுவந்தார். தாஹிர் ஒரு கிண்ணத்தை சுத்தம் செய்வதற்காக குடிசையிலிருந்து வெளியே வருகிறார். "என் பையன் எனக்குப் பெரிய உதவி. அவன் பெண் குழந்தைகளுக்கு நிறைய உதவி செய்கிறான்" என்கிறார் ஃபாத்துமா. அவர் தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது, அவருடைய தொலைபேசி ஒலித்தது. 60 வயதான அவர் கணவர் அதான் நூர், இஸ்லாமிய போராளிக் குழுவான அல்-ஷபாப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவர்களுடைய கிராமத்தில் இருந்து அழைத்தார். அவருடன் பேசி முடித்ததும், “அவர் சோளம் பயிரிட்டிருப்பதாக கூறினார். அவர் நன்றாக இருக்கிறார். அவர் விரைவில் வந்துவிடுவார். ஆனால், எங்கள் கால்நடைகள் அனைத்தையும் இழந்துவிட்டோம். பயிர்களை மட்டும் வைத்து பிழைப்பு நடத்த வழியில்லை, அதனால் நான் இங்கு இருக்கிறேன். அந்த வாழ்க்கை முடிந்துவிட்டது” என்று ஃபாத்துமா கூறினார். "நிலைமை இன்னும் மோசமாகி வருகிறது. உணவு, பாதுகாப்பு மற்றும் தண்ணீரைத் தேடி நிறைய பேர் இங்கு வருகிறார்கள். பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றனர். அரசு மற்றும் சர்வதேச சமூகம் இந்த நிலைமையை பஞ்சமாக கருதுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று சமூக கூட்டத்தில் பேசிய பைடோவாவின் மேயர் அப்துல்லா கூறினார். சோமாலியா வறட்சி - 'இறந்த குழந்தையை புதைக்க முடியாத அளவுக்கு பசிக்கொடுமை'6 அக்டோபர் 2022 சோமாலியாவில் அமெரிக்க ராணுவ முகாம் மீது தாக்குதல் - அல்-ஷபாப் காரணமா?30 செப்டெம்பர் 2019 வான் தாக்குதல்: இஸ்லாமிய போராளி இயக்கத்தின் மூத்த தளபதி பலி9 மார்ச் 2020 அந்தக் கூட்டம் நடைபெற்ற அரங்கத்திற்கு உள்ளே ராணுவ ஜெனரல் ஒருவர் உள்ளூர் மக்களை அல்-ஷபாப்பிடம் இருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல் பற்றி எச்சரித்துக் கொண்டிருந்தார். வெடிக்கும் சாதனங்கள் மற்றும் பதுங்கியிருந்து தாக்குபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். சோமாலிய அரசுப் படைகளும் போராளிப் படைகளும் தாக்குதலை விரிவுபடுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சில கிராமப்புற சமூகங்களை அணுகுவதை மேலும் கடினமாக்குகிறது. ஃபாத்துமா தனது இரண்டு நோய்வாய்ப்பட்ட குழந்தைகளையும் அவர்கள் குடிசையின் அழுக்குத் தரையில் ஒரு போர்வையில் படுக்க வைத்தார். குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நாம் கேட்டபோது பாரம்பரிய மூலிகை மருந்துகளை பின்பற்றுவதாக் கூறி அவர் மறுத்துவிட்டார். பின்னர் சோர்வாக இருந்த பாத்துமாவும் குழந்தைகளின் அருகில் படுத்துக் கொண்டார். தன்னுடைய போர்வையில் இருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த தாஹிர், அவர்கள் நலமடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார். பின்னர், அந்த சொற்றொடரை மேலும் இரண்டு முறை அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/crgk2pg24m2o
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.