Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலக கும்பல் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை! 03 Sep, 2025 | 11:32 AM இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலக கும்பல் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தார பத்மே', 'கொமாண்டோ சலிந்த' மற்றும் 'பாணந்துறை நிலங்க' உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலில் இருந்த பக்கோ சமனின் மனைவி ஆகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். இந்நிலையில், “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பலை தொடர்ந்தும் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/224077
  2. Published By: Digital Desk 1 03 Sep, 2025 | 11:02 AM தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை )03) காலை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். ஊழல் தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆகஸ்ட் 29 ஆம் திகதி காலை ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க்து. https://www.virakesari.lk/article/224074
  3. அதிநவீன ஆயுதங்கள் அணிவகுப்பு: புதின், கிம் முன்னிலையில் ராணுவ வலிமையை காட்டிய சீனா பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அணுஆயுத ஏவுகணை 9 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80-ஆண்டு நிறைவையொட்டி பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. பெய்ஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை சீன அதிபர் ஜின்பிங்குடன், ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்பட பலநாட்டு தலைவர்கள் பார்வையிட்டனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு, புதின், ஜின்பிங் மற்றும் கிம் முதல் முறையாக பொதுவெளியில் ஒன்றாக தோன்றியுள்ளனர். இந்த அணிவகுப்பில் அதிநவீன போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகள், புதிய நீர்மூழ்கி டிரோன்கள் உள்பட சீனாவின் ராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் ஆயுதங்களும் ராணுவ தளவாடங்களும் இடம்பெற்றிருந்தன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ராணுவ அணிவகுப்பில் ஈடுபட்டுள்ள வீராங்கனைகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ராணுவ அணிவகுப்பின் முடிவில் பறக்கவிடப்பட்ட பலூன்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீன ராணுவ அணிவகுப்பில் நவீன ஆயுதங்கள் இடம் பெற்றிருந்தன பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் நவீன ராணுவ ஆயுதங்கள் இந்த அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் ராணுவ உலங்கு வானூர்திகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் நவீன போர் விமானங்களும் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீன கடற்படையின் கப்பல் மாதிரி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீன அதிபர் ஷி ஜின்பிங் வாகனத்தில் சென்று ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீன கடற்படையின் நீருக்கடியில் சென்று தாக்கும் ஆயுதம் (டொர்பீடோ) பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹச்எஸ்யு என்கிற சீன கடற்படையின் நீர்மூழ்கி ஏவுகணை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வானில் சாகசம் செய்த போர் விமானங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீன ராணுவ அணிவகுப்பு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அணிவகுப்பில் பங்கேற்ற சீன பீரங்கிகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீன ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்ட தலைவர்களின் குழு புகைப்படம் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj9w9x28z72o
  4. புதின், கிம் உடன் தோன்றிய சீன அதிபர்: அமெரிக்கா கவலை அடைந்துள்ளதா? - டிரம்ப் பதில் பட மூலாதாரம், Bloomberg via Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ரஷ்யா மற்றும் வட கொரிய தலைவர்களுடன் இணைந்து சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்வதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். சீனாவின் ராணுவ வலிமையை வெளிப்படுத்தும் வகையில், இன்று (புதன்கிழமை) பீஜிங்கில் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், சீனா நடத்திய மிகப்பெரிய வெற்றி தின அணிவகுப்பு விழா குறித்து டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "அமெரிக்காவுக்கு எதிராக நீங்கள் சதி செய்யும்போது விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு எனது வணக்கங்களைத் தெரிவிக்கவும்." என்று அவர் பதிவிட்டுள்ளார். சீனா, ரஷ்யா மற்றும் பிற நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஏற்படும் மாற்றம் உலக அரங்கில் அமெரிக்காவுக்கு ஒரு சவாலாக உள்ளது என்பது போன்ற கருத்துகளை டிரம்ப் முன்னதாக நிராகரித்தார். இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா சீனாவுக்கு அளித்த "பெரும் ஆதரவு மற்றும் 'உயிர்த் தியாகம்'" பற்றியும் டிரம்ப் குறிப்பிட்டார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், ஆக்கிரமிப்புக்கு எதிரான சீனாவின் வெற்றியையும் சீனாவின் இந்த ராணுவ அணிவகுப்பு குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. "சீனாவின் வெற்றிக்காக பல அமெரிக்கர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களது துணிச்சல் மற்றும் தியாகம் சரியான முறையில் கௌரவிக்கப்படும் மற்றும் நினைவுகூரப்படும் என்று நம்புகிறேன்!" என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். கிம் மற்றும் புதின் உட்பட 26 நாட்டுத் தலைவர்கள் ஜின்பிங்குடன் இந்த ராணுவ அணிவகுப்பில் இணைந்தனர். டிரம்பின் வரிகள் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கை உலுக்கிய பிறகு, அமெரிக்காவுக்கு சாத்தியமான மாற்றாக சீனா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றுள்ளது. பட மூலாதாரம், Sputnik/Pool via Reuters படக்குறிப்பு, விளாடிமிர் புதின் மற்றும் ஷி ஜின்பிங் அமெரிக்க நலன்களையும் தொழில்துறையையும் பாதுகாப்பதற்கு இந்த வரிகள் அவசியம் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதற்காக, எந்தவொரு இராஜதந்திர ரீதியான இழப்பையும் சந்திக்க அவர் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. சீனாவும் அதன் நட்பு நாடுகளும் அமெரிக்காவை எதிர்க்க ஒரு சர்வதேச கூட்டணியை உருவாக்க முயற்சிப்பதாக நம்புகிறீர்களா என்று பிபிசி கேட்டதற்கு, "இல்லை. இல்லவே இல்லை. சீனாவுக்கு நாங்கள் தேவை." என்று டிரம்ப் கூறினார். "ஜின்பிங்குடன் எனக்கு மிகவும் நல்ல உறவு இருப்பது உங்களுக்குத் தெரியும். எங்களுக்கு சீனா எவ்வளவு தேவையோ அதைவிட அதிகமாக அவர்களுக்கு நாங்கள் தேவை. ஆகவே, எனக்கு அப்படி நடப்பதாக தெரியவில்லை." செவ்வாயன்று ஒரு வானொலி நேர்காணலில், ரஷ்யா - சீனா கூட்டணி உருவாவது குறித்து தனக்கு கவலை இல்லை என்று டிரம்ப் கூறினார். ஸ்காட் ஜென்னிங்ஸ் வானொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்கா உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவப் படைகளைக் கொண்டுள்ளது என்றும் அவர்கள் தங்கள் ராணுவத்தை எங்களுக்கு எதிராக ஒருபோதும் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் கூறினார். "அது அவர்கள் செய்யக்கூடிய மிக மோசமான காரியமாக இருக்கும்" என்று அவர் கூறினார். கடந்த மாதம் அலாஸ்காவில் நடந்த சந்திப்பின் போது யுக்ரேனுக்கான சமாதான ஒப்பந்தத்தை எட்டத் தவறிய பின்னர், புதினிடம் "மிகவும் ஏமாற்றமடைந்ததாக" டிரம்ப் அந்த நேர்காணலில் கூறினார். "புதினிடம் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், அதை உறுதியாக சொல்ல முடியும்," என்று டிரம்ப் கூறினார். யுக்ரேன் மக்களுக்கு உதவ அமெரிக்கா ஏதாவது செய்யும் என்று தெரிவித்த அவர், குறிப்பிட்டு எதையும் கூறவில்லை. புதினின் முழு அளவிலான படையெடுப்பை சீனா விமர்சிக்கவில்லை. சீனா இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களை வழங்குவதன் மூலமும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதன் மூலமும் ரஷ்யாவின் போர் முயற்சிக்கு உதவியதாக மேற்கு நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை சீனா மறுக்கிறது. இதற்கிடையில், யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா போர்முனையின் சில பகுதிகளில் புதிய துருப்புகளை குவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். "[புதின்] சமாதானத்துக்கு உடன்பட மறுக்கிறார்," என்று ஜெலென்ஸ்கி தனது இரவு காணொளி உரையில் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgv44r882mo
  5. “கெஹெல்பத்தார பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்! 03 Sep, 2025 | 05:29 PM இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான “கெஹெல்பத்தார பத்மே” என்பவரின் தலைமையில் நுவரெலியா பிரதேசத்தில் இயங்கி வரும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான “கெஹெல்பத்தார பத்மே” என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தார பத்மே', 'கொமாண்டோ சலிந்த' மற்றும் 'பாணந்துறை நிலங்க' உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224132
  6. இலங்கை ஜனாதிபதி முதன் முறையாக 'கச்சத்தீவு' செல்ல விஜய் பேச்சு காரணமா? முழு பின்னணி பட மூலாதாரம், PMD SRI LANKA 3 செப்டெம்பர் 2025, 07:41 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ''எமது கடற்றொழிலாளர்களுக்கு மிக முக்கியமான இடமாக கச்சத்தீவு காணப்படுகின்றது. இந்த கச்சத்தீவை கேந்திரப்படுத்தி இன்று பாரிய கலந்துரையாடலொன்று எழுந்துள்ளது. இந்த கடல் எமது மக்களுக்கானது. எமது தீவுகள் எமது மக்களுக்கானது. எமது நிலப்பரப்பு எமது மக்களுக்கானது. எமது வானம் எமது மக்களுக்கானது. எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிப்பணிய மாட்டோம் என சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.'' என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, மயிலிட்டி மீனவத்துறை முகத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கடந்த முதலாம் தேதி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி கச்சத்தீவு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். கச்சத்தீவு பற்றி தவெக மாநாட்டில் அதன் தலைவர் விஜயின் பேச்சு இலங்கையில் சலசலப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் சிங்களம் மற்றும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் மட்டுமின்றி இலங்கை அரசியல் மட்டத்திலும் அது விவாதிக்கப்பட, வரலாற்றில் முதன் முறையாக இலங்கை ஜனாதிபதி ஒருவர் கச்சத்தீவுக்கு விஜயம் செய்த நிகழ்வும் அரங்கேறியது. கச்சத்தீவு குறித்து விஜய் என்ன பேசினார்? அதன் எதிரொலியாக இலங்கையில் என்ன நடந்தது? பட மூலாதாரம், TVK கச்சத்தீவு பற்றி விஜய் பேசியது என்ன? தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் இரண்டாவது மாநாட்டில் கச்சத்தீவு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். ''எம்ம தமிழ்நாட்டு மீனவர்கள் கிட்டத்தட்ட 800 பேருக்கு மேல இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். அதை கண்டிக்க எதையும் செய்ய சொல்லவில்லை. சின்னதா ஒன்னே ஒன்று மட்டும் செய்து கொடுங்க. இனிமேலாவது எங்களுடைய மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக இந்த கச்சத்தீவை இலங்கைகிட்ட இருந்து மீட்டு கொடுத்துருங்க. அது போதும்.'' என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்திருந்தார். விஜய் பேச்சுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பதில் கச்சத்தீவு தொடர்பில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட கருத்து இலங்கை மக்கள் மத்தியில் பல்வேறு கருத்தாடல்களை ஏற்படுத்தியிருந்தது. தமிழர்கள் மாத்திரமன்றி, சிங்களவர்கள் மத்தியிலும் பிரபலமான விஜய், இவ்வாறு கருத்து வெளியிட்டமை இலங்கையில் பலத்த விவாதத்தை தோற்றுவித்திருந்தது. இந்த நிலையில், விஜயின் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள், வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்திடம், கேள்வி எழுப்பியிருந்தனர். இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் வழங்க முடியாது என வெளிவிகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த மாதம் 27-ஆம் தேதி தெரிவித்திருந்தார். 'கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான ஒரு தீவு. அது எந்த விதத்திலும் மாறாது. தென் இந்தியாவில் தேர்தல் காலம் என்பதனால் வாக்குகளை பெறுவதற்காக ஒவ்வொரு கருத்துகளை கூறுவார்கள். இது முதலாவது சந்தர்ப்பம் இல்லை. இதுக்கு முன்னரும் தேர்தல் மேடைகளில் இவ்வாறு கூறி இருந்தார்கள். இந்த தேர்தல் மேடைகளில் கூறுவது நிறைவேறாது. தேர்தல் மேடையில் விஜய் கூறியதை நானும் பார்த்தேன். அதை பெரிதுபடுத்த தேவை இல்லை. மத்திய அரசாங்கம் அல்லது இராஜதந்திர ரீதியில் இவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை. அன்றும் இன்றும் என்றும் கச்சத்தீவு இலங்கை வசமே காணப்படும்.' என இலங்கை வெளிவிகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார். பட மூலாதாரம், PMD SRI LANKA கச்சத்தீவு சென்ற இலங்கை ஜனாதிபதி இதன் பின்னணியில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் அது தொடர்பில் இந்த கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்தை வெளியிட்டிருந்தார். கச்சத்தீவு குறித்து கருத்து வெளியிட்டது மாத்திரமன்றி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கச்சத்தீவுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார். கச்சத்தீவுக்கு அரசத் தலைவர் ஒருவர் விஜயம் மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, அங்கிருந்து கடற்படைக்கு சொந்தமான படகில் கச்சத்தீவுக்கு சென்று கச்சத்தீவு தொடர்பில் ஆராய்ந்திருந்தார். கச்சத்தீவு விஜயத்தில் ஜனாதிபதி சொல்ல வருவது என்ன? கச்சத்தீவு விஜயத்தின் ஊடாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க என்ன சொல்ல வருகின்றார் என்பது தொடர்பில் மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜாவிடம், பிபிசி தமிழ் வினவியது. ''கச்சத்தீவு தொடர்பில் இந்திய அரசியல்வாதிகள் அல்லது தமிழக அரசியல்வாதிகள் என்ன தான் சொன்னாலும், அவர்களின் கோரிக்கை எந்த வகையிலும் நிறைவேற்றப்பட மாட்டாது என்பதை தான் அவர் நேரடியாகவே சொல்ல வருகின்றார். தானே அந்த இடத்திற்கு சென்று தானே விஜயம் செய்து, அது இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதை அவர் நிரூபிக்க முயல்கின்றார். அங்கு சென்றமையின் ஊடாக பாதுகாப்பு உறுதிப்படுத்தலையும், கச்சத்தீவு எங்களுக்கு தான் சொந்தம் என்பதையும், அது எங்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது என்பதையும் நாங்கள் நினைத்த நேரம் செல்லலாம் என்ற கருத்தையும் கூறும் வகையிலேயே அவர் அங்கு சென்றார். '' என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார். "மீனவப் பிரச்னைக்கு கச்சத்தீவை மீள பெற்று விட்டால் தீர்வு வரும் என்று தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் நினைக்கின்றார்கள். ஆனால், அதை இவர் விட்டுக் கொடுக்கமாட்டார். தானே அதை கையாளுகின்றேன் என்ற செய்தியை சொல்கின்றார். அரசாங்கம் அமைதியாக இருக்கின்றது என்று நினைக்கின்றார்கள். அரசாங்கம் அமைதியாக இல்லை. அரசாங்கம் நேரடியாகவே இதை கண்காணித்து கொண்டிருக்கின்றது என்ற செய்தியை தான் இவர் சொல்கின்றார்.'' எனவும் அவர் கூறுகின்றார். பட மூலாதாரம், SIVARAJA படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா விஜயின் பேச்சு எவ்வாறு தாக்கம் செலுத்தியுள்ளது? தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கச்சத்தீவு தொடர்பில் வெளியிட்ட கருத்து இலங்கை அரசியலில் எவ்வாறான தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, பிபிசி தமிழுக்கு தெளிவூட்டினார். ''ஸ்டாலினை பொறுத்தவரையில் அவர் அடிக்கடி கச்சத்தீவு தொடர்பில் கருத்து வெளியிட்டு வருகின்றார். அதேபோன்று தான எடப்பாடி பழனிசாமியும் கருத்து வெளியிடுகின்றார். ஆனால் விஜயை பொறுத்தவரையில் அவர் கூறிய கருத்து இளைஞர்கள் மத்தியில் சிந்தனையை தூண்டியுள்ளதாக இலங்கை அரசாங்கம் கருதுகின்றது. விஜய்க்கு இந்தியாவில் எவ்வளவு ஆதரவு இருக்கின்றதோ? அதேபோன்று இலங்கையின் தமிழ், சிங்கள இளைஞர்கள் மத்தியிலும் பெருமளவான ஆதரவு இருக்கின்றது. ஆகவே, விஜயின் அந்த கருத்து வலுவாக எடுபடும் என அரசாங்கம் நம்புகின்றது. இந்த பிரச்னைக்கு விரைவாக முற்றுப் புள்ளி வைக்கலாம் என இலங்கை அரசாங்கம் எண்ணியுள்ளது.'' எனவும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம், PMD SRI LANKA ஜனாதிபதியின் கச்சத்தீவு விஜயம் - அரசாங்கம் என்ன சொல்கின்றது? கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் இந்த விஜயம் அமைந்திருந்ததாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளதாக அவரது ஊடக செயலாளர் க.கிருஷாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் மற்றும் அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து சுற்றுலா திட்டமொன்றை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது ஆராய்ந்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g0gnvxlgxo
  7. Published By: Vishnu 02 Sep, 2025 | 09:08 PM (நெவில் அன்தனி) விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 49ஆவது தேசிய விளையாட்டு விழா காலி தடெல்ல மைதானத்தில் கடந்த வார இறுதியில் நிறைவடைந்தது. விளையாட்டு விழாவில் மிகவும் முக்கியமானதும் கடைசியுமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு, மலையக, கிழக்கு வீர, வீராங்கனைகள் பதக்கங்கள் வென்று அசத்தியிருந்தனர். கோலூன்றிப் பாய்தலில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவுகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரனும் நேசராசா டக்சிதாவும் தத்தமது சொந்த சாதனைகளை முறியடித்து புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டி தங்கப் பதங்கங்களை சுவீகரித்து பலத்த பாராட்டுதல்களைப் பெற்றனர். மெய்வல்லுநர் போட்டிகளில் இந்த இருவர் மாத்திரமே புதிய சாதனைகளை நிலைநாட்டினர். ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் புவிதரன் 5.12 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டி சாதனையைப் படைத்தார். கடந்த வருடம் தன்னால் நிலைநாட்டப்பட்ட 5.11 மீற்றர் என்ற சாதனையை முறியடித்தே புவிதரன் இம் முறை புதிய சாதனையைப் படைத்தார். பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் டக்சிதா 3.52 மீற்றர் உயரம் தாவி, 2024இல் நிலைநாட்டப்பட்ட 3.51 மீற்றர் என்ற தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்தார். மிதுன்ராஜுக்கு 2 தங்கப் பதக்கங்கள் ஆண்களுக்கான தட்டு எறிதல் (48.08 மீற்றர்), குண்டு எறிதல் (15.40 மீற்றர்) ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் வெற்றியீட்டிய எஸ். மிதுன்ராஜ் 2 தங்கப் பதக்கங்களை வட மாகாணத்திற்கு பெற்றுக்கொடுத்தார். வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரான இளங்கோ விகிர்தன் ஒரு தங்கப் பதக்கத்தையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தார். ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியை 31 நிமிடங்கள், 36.02 செக்கன்களில் நிறைவுசெய்த விகிர்தன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அதற்கு முன்னர் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் (15:02.45) வெள்ளிப் பதக்கத்தை விகிர்தன் வென்றிருந்தார். பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண வீராங்கனை பரந்தாமன் அபிஷாலினி (3.10 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். வக்சனுக்கு தங்கம் உட்பட 2 பதக்கங்கள் மத்திய மாகாணம் சார்பாக போட்டியிட்ட மலையக விளையாட்டுத்துறை நட்சத்திர மைந்தர்களில் ஒருவரான விக்னராஜ் வக்சனுக்கு ஒரு தங்கப் பதக்கத்துடன் ஒரு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது. ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியை 15 நிமிடங்கள், 00.72 செக்கன்களில் நிறைவு செய்த தலவாக்கொல்லையைச் சேர்ந்த வக்சன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் (3:55.48) வக்சனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் சுவீகரித்த கே. ஷண்முகேஸ்வரனுக்கு 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய நேரிட்டது. அப் போட்டியை 32 நிமிடங்கள், 10.40 செக்கன்களில் நிறைவுசெய்த ஷண்முகேஸ்வரன் 2ஆம் இடத்தைப் பெற்றார். ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய மத்திய மாகாண வீரர் சாத் பலீல், அப் போட்டியை 10.68 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். அதிவேக வீராங்கனை ஷபியா யாமிக் தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளில் அதிவேக ஓட்ட வீராங்கனை என்ற கௌரவத்தை மத்திய மாகாண வீராங்கனை பாத்திமா ஷபியா யாமிக் பெற்றுக்கொண்டார். பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 24.33 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்த ஷபியா யாமிக், 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11.87 செக்கன்களில் நிறைவுசெய்து இரண்டாவது தங்கப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார். கிழக்கு மாகாணம் சார்பாக பிரகாசித்த ரதுசன், நிப்ராஸ் கிழக்கு மாகாணம் சார்பாக போட்டியிட்ட தமிழ் பேசும் வீரர்களான ரதுசன் வெள்ளிப் பதக்கத்தையும் ஆர். எம். நிப்ராஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர். ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 70.47 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த ஆர். ரதுசன் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள், 55.48 செக்கன்களில் நிறைவுசெய்த ஆர்.எம். நிப்ராஸுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. https://www.virakesari.lk/article/224058
  8. 02 Sep, 2025 | 06:16 PM (இராஜதுரை ஹஷான்) வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையாக அனுமதியளித்து விட்டு இராணுவத்தினரை வேட்டையாடும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் நிலைமை இராணுவ அதிகாரிகளுக்கும், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிர்காலத்தில் ஏற்படலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இராணுவத்தினரை பாதுகாப்பதற்கு நிபந்தனையற்ற வகையில் நாங்கள் முன்னிலையாவோம். இந்த அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை பழிவாங்கும் வகையில் செயற்படுகிறது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருத்திப்படுத்துவதற்காக இராணுவத்தினர் வேட்டையாடப்படுகிறார்கள். இராணுவத்தினரை பாதுகாக்கும் எமது செயற்பாட்டுக்கு மகாநாயக்க தேரர்களின் ஒத்துழைப்பை முழுமையாக எதிர்பார்க்கிறோம். ஏனெனில் அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பு மகாநாயக்க தேரர்களுக்கு உண்டு. முன்னாள் கடற்படைத்தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார். இவருக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிர்காலத்தில் ஏற்படலாம். இராணுவத்தினரை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றார். https://www.virakesari.lk/article/224056
  9. 02 Sep, 2025 | 05:29 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை பேரவையின் போது நாட்டை பாதுகாத்த படைவீரர்களை காட்டிக்கொடுக்கும் சதித்திட்டம் ஒன்று இடம்பெறவுள்தாக தெரியவருகிறது. அரசாங்கம் அதற்கு இடமளிக்கக்கூடாது என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்தார். இந்த மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (2) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தா்ர. இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் இந்த மாதம் இடம்பெற இருக்கிறது. மனித உரிமைகள் தொடர்பில் எமக்கு கற்றுக்கொடுப்பதற்கு வெள்ளையர்களு்கு முடியுமா என்ற கேள்வி எமக்கு இருக்கிறது. நாங்கள் கால்நடைகளின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த ஒரு இனமாகும். அவ்வாறு இருக்கையில் மனித உரிமை தொடர்பில் எங்களுக்கு ஆலாேசனை வழங்க வெள்ளைக்கார்களுக்கு முடியுமா? அத்துடன் எமது நாட்டை பயங்கரவாத யுத்தத்தில் இருந்த மீட்ட படை வீரர்களை காட்டிக்கொடுக்கும் சதித்திட்டம் ஒன்றை வெள்ளையர்கள் மேற்கொண்டுவருகிறார்கள் என்பதை எங்களுக்கு தெரிந்துகொள்ள கிடைக்கிறது. அதனால் மக்களின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி, சமூகத்துக்கு நல்ல பணிகளை செய்ய இருந்த மனிதர்களையும் அதற்குள் இழுத்துக்கொண்டு, செயற்படுவதாகவே தெரியக்கூடியதாக இருக்கிறது. இந்த அரசாங்கத்தின் கீீழ் இருக்கும் பெரும்பான்மையானவர்கள், எம்முடன் இணைந்து, நாட்டுக்காக நாட்டுப்பற்றுடன் செயற்பட்டவர்கள். அதனால் நாட்டை மீட்ட இராணுவத்தினருக்கு நாங்கள் தெரிவித்த விடயங்கள் என்ன என்பதை இந்த அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். அதனால் ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடரில் எமது இராணுவ வீரர்களை காட்டிக்கொடுக்கும் எந்த விடயங்களுக்கும் அரசாங்கம் துணைபோகக்கூடாது என்றார். https://www.virakesari.lk/article/224045
  10. படக்குறிப்பு, வலுவான உடலமைப்பைக் கொண்டிருந்த கோபிநாத், உடல் தகுதியைப் பராமரிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தார் என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். கட்டுரை தகவல் சம்பத் திஸாநாயக்க & ஷெர்லி உபுல் குமார, கிளிநொச்சியில் இருந்து பிபிசி சிங்கள சேவை 3 செப்டெம்பர் 2025, 01:43 GMT புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர் ''பிள்ளைகளுக்கு மாத்திரம் என்ன நடந்தது என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்கள் உயிருடன் அல்லவா கையளித்தோம். சடலத்தைக் கொடுக்கவில்லையே'' என கிளிநொச்சியைச் சேர்ந்த செல்வதுரை பத்மா பிரியதர்ஷனி பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார். செல்வதுரை கோபிநாத் என்ற அவரது மகன், பள்ளி ஆசிரியராக இருந்ததோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆங்கில செய்தி வாசிப்பாளராகக் கடமையாற்றினார். சுமார் 16 வருடங்களுக்கு முன்னர் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தருணத்தில் தனது மகனை ராணுவத்திடம் ஒப்படைத்த போதிலும், அவருக்கு என்ன நடந்தேறியது என்பது தொடர்பில் எந்தவிதத் தகவலும் இல்லை என கோபிநாத்தின் தாய் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். சில சந்தர்ப்பங்களில் இந்தச் சம்பவமானது, நாட்டில் தீர்க்கப்படாதுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் பட்டியலில் மற்றுமொரு சம்பவமாகவும் இருக்கக்கூடும். சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைகளின் பிரகாரம், உலகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அதிகளவானோர் காணாமல் போன நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. இராக் முதல் இடத்தில் உள்ளது. கிளிநொச்சி நகருக்கு அருகிலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் வசித்து வந்த செல்வதுரை கோபிநாத், தனது 27வது வயதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். படக்குறிப்பு, அவரது தந்தையின் கூற்றுப்படி, கோபிநாத் விருப்பமின்றித்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்திகளை வழங்கச் சென்றார். மா, வாழை, தென்னை போன்ற மரங்கள் நிரம்பிய தோட்டத்திற்கு மத்தியில் மிகவும் அமைதியான சூழலில் அவரது வீடு அமைந்துள்ளது. நாங்கள் அவரது வீட்டை நெருங்கிய சந்தர்ப்பத்தில், அவரது தாயார் செல்வதுரை பத்மா பிரியதர்ஷனி வரவேற்றார். அதன் பின்னர், அவரது கணவர் சுப்ரமணியம் செல்வதுரை எங்களிடம் பேசத் தொடங்கினார். 73 வயதான அவருக்கு, கடந்த ஒரு வார காலமாக காது கேட்கும் திறன் குறைந்துள்ளது. முச்சக்கரவண்டி (ஆட்டோ) ரிப்பேர் வேலைகளைச் செய்தல், வாகனங்களின் ஆசனங்களுக்கு மேலுறை தயாரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்த அவர், உடல்நலக் குறைவு காரணமாகத் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ''எமது மகன் செல்வதுரை கோபிநாத் ஒரு ஆசிரியர். அக்கராயன் மகா வித்தியாலயத்தில் அவர் ஆசிரியராக வேலை செய்தார். அவர் ஆங்கில ஆசிரியர். அவருக்கு ஆங்கலம் நன்றாகத் தெரியும்.'' ''நிதர்சனம் என்ற விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி சேனல் ஒன்று இருந்தது. எனது மகன் 1:15 மணிக்கு விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தியை வாசிக்கச் சொன்னார்கள். செய்தியை வாசிக்க வேண்டும். 10,000 ரூபா சம்பளம் கொடுத்தார்கள்'' என சுப்ரமணியம் செல்வதுரை தெரிவித்தார். மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்ரமணியம் செல்வதுரை சொல்லும் விதத்தில், தனது இரண்டாவது மகனான கோபிநாத், விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தி வாசிப்பாளராகச் சென்றமையானது, தனது சுய விருப்பத்திற்கன்றி, வேறு மாற்று வழி இல்லாமையே அவர் அங்கு சென்றார் எனப் புரிகிறது. ஆங்கில செய்தி வாசிப்பாளராகப் பணியாற்ற வேண்டுமென்ற தனது விருப்பத்தைத் தெரிவிக்காத பட்சத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொள்வதற்காகத் தன்னை அழைத்துச் செல்வார்கள் என்ற அச்சத்திலேயே அவர் அதற்கு விருப்பம் தெரிவித்து இருந்ததாக கோபிநாத்தின் பெற்றோர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தனர். படக்குறிப்பு, தாயார் இன்னும் கோபிநாத்தின் டூத்பிரஷை பத்திரமாக வைத்துள்ளார். ''என்னை இவ்வாறு அழைக்கின்றார்கள் என்ன சொல்வது என்று எனது மகன் கேட்டார். எங்களுக்கு இந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்குச் செல்வதற்கான வழி இல்லை. அதனால், செய்தி வாசிக்குமாறு நான் கூறினேன். அப்படி இல்லையெனில், விடுதலைப் புலிகள் அழைத்து செல்வார்கள்தானே!'' "கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்தே அவர் ஆரம்பித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனால் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் மாவீரர் தினத்திற்கான நேரடி ஒளிபரப்பிற்காக முதலில் அவரை அழைத்துச் சென்றார்கள். அவர் செய்தியை மொழிபெயர்ப்பு செய்வார். வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு இந்த இடத்திலிருந்தே அவரை அழைத்து சென்றார்கள்" என்று விவரித்தார் அவரது தந்தை. "வாகனத்தில் இருவர் வருகை தந்தார்கள். அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெரியவர்கள் என நினைக்கின்றேன். பிரபாகரன் ஐயாவின் நேரடி ஒளிபரப்பை மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும் எனச் சொன்னார்கள். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. போகுமாறு கூறினோம்.'' ''பின்னர் 9 மணியளவில் வீட்டிற்கு அழைத்து வந்து இறக்கி விட்டார்கள். அவர் பள்ளிக்குச் சென்று வருவார். அன்றுதான் இது ஆரம்பமானது. நீங்கள் நன்றாகச் செய்தி வாசிக்கின்றீர்கள் என மக்கள் சொன்னார்கள். ஆளுமை நன்றாக இருக்கின்றது என்றார்கள். அதனால் நீங்களே செய்தி வாசிக்க வேண்டும் என்றார்கள். அவருக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால், எதுவும் செய்ய முடியாது. செல்ல வேண்டும். அழைப்பது பெரியவர்கள், அவர்களுடன் எம்மால் மோத முடியாது, எதுவும் செய்ய முடியாது என்பதால் போகச் சென்னோம். அதன் பின்னர் 9:15 மணி செய்தியை வாசித்தார். ஒன்பது முப்பது அல்லது 10 மணி போல வீட்டிற்கு வருவார். அவர் வரும் வரை நாங்கள் வீதியைப் பார்த்துக் கொண்டிருப்போம்.'' கடந்த 2009-ஆம் ஆண்டு தொடர்ச்சியாக ''குண்டுகள் விழ ஆரம்பித்தன. நாங்கள் முள்ளிவாய்க்கால் - வள்ளிபுரம் கிராமத்திற்குச் சென்றோம்.'' கோபிநாத்திற்கு மூத்த மற்றும் இளைய சகோரர்கள் இருக்கின்றார்கள். யுத்தம் கடுமையானதை அடுத்து, சுப்ரமணியம் செல்வதுரை தனது குடும்பத்தினருடன் கிளிநொச்சியை விட்டு வெளியேறி, முள்ளிவாய்க்கால் நோக்கி இடம்பெயர்ந்திருந்தார். இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுபட்டு, இந்த குடும்பத்தினர் வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் வந்துள்ளனர். ''விடுதலைப் புலிகளிடம் இருந்து தப்பித்து ராணுவத்திடம் சென்றோம். அவர்கள் எங்களை ஓர் இடத்தில் தங்கச் சொன்னார்கள். அதன் பின்னர் பிரிந்து இருக்குமாறு சொன்னார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று நாங்கள் அழுதோம். நாங்கள் அழுது கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ராணுவத்தினர் வந்து மகன்கள் இருந்தால் வருமாறு கூறினார்கள். ஏன் வரச் சொல்கிறீர்கள் எனக் கேட்டேன். என்னால் அதை விவரிக்க முடியவில்லை, கவலையாக இருக்கின்றது'' என செல்வதுரை பத்மா பிரியதர்ஷனி கூறினார். படக்குறிப்பு, "எங்கள் மகனுக்கு என்ன ஆனது எனச் சொல்லுங்கள். நாங்கள் அவனை உயிருடன்தானே கொடுத்தோம், சடலமாக அல்லவே!" என்று அவர் சற்று சீற்றத்துடன் கேள்வியெழுப்பினார். விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தி வாசிப்பாளராக வேலை செய்தமையால், எனது மகனை பலரும் அடையாளம் கண்டு கொண்டிருந்தனர் என்பதாலேயே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டு இருக்கலாம் என கோபிநாத்தின் தந்தை தெரிவிக்கின்றார். ''நான் தப்பு செய்யவில்லை. அம்மா எந்தவித பொய்யையும் சொல்ல வேண்டாம். உண்மையைச் சொல்லுங்கள்' என்று அவர் எந்நேரமும் சொன்னார்'' என அவரின் தாய் கூறுகின்றார். ''மகன் பள்ளியில் தங்கியிருப்பார். வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்கு வருவார். வெள்ளிக்கிழமை வருகை தந்து மாலை 6 மணியளவில் செய்தி வாசிப்பதற்காகச் செல்வார். இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வருவார். வாரத்தில் இரண்டு தினங்கள் மாத்திரமே செய்தி வாசிப்பதற்காக அவர் செல்வார்.'' ''அம்மா என்னால் இந்த வேலையைச் செய்ய முடியாது என அவர் சொன்னார். அப்பாவுக்கு கண் தெரியவில்லை என அவர்கள் வந்தால் கூறுங்கள். அதையும் செய்து, இதையும் செய்ய முடியாது எனச் சொல்லுங்கள். நாங்கள் வாங்கும் சம்பளத்தில் ஒரு தொகையை அவர்களுக்கு வழங்குவதாகச் சொல்லுங்கள். எமது சம்பளத்தில் ஒரு தொகையைத் தருகின்றேன். வேறு ஒருவரை எடுக்குமாறு கூறுங்கள்'' என்று அவர் கூறியதாகவும் தாயார் கூறினார். அதோடு, ''முள்ளிவாய்க்கால் செல்லும் வரை அவர் எம்முடனேயே இருந்தார். எமது மகன் தவறு செய்யவில்லை என பேருந்தில் ஏறும்போது சொன்னேன். மகனும் தகவல்களைச் சொன்னார்.'' "எனது மகன் தவறு செய்யவில்லை என ராணுவத்திடம் நான் சொன்னேன்.'' ''இல்லை, இல்லை. அவரிடம் தகவல்களைப் பெற்றதன் பின்னர் அனுப்புவோம் என அவர்கள் கூறினார்கள்.'' 'இவரிடம் தகவல்களை பெற வேண்டும் என மற்றுமொருவர் கூறினார்.'' ''இல்லை, இல்லை அவரைப் பாதுகாப்பாக அழைத்து வந்து கையளிப்போம். எதுவும் செய்ய மாட்டோம். பயப்பட வேண்டாம். உங்கள் மகனை நாங்கள் அனுப்புவோம் என்று சொன்னார்கள்'' ''அதன் பின்னர், "அம்மா அழுக வேண்டாம். அடையாள அட்டையைத் தாருங்கள். சென்று வருகின்றேன் அம்மா. அழுக வேண்டாம் அம்மா' என்று எனது மகன் சொன்னார். பேருந்தில் ஏறும்போதும் சென்று வருகின்றேன் என்றார்.'' படக்குறிப்பு, கோபிநாத்தின் தாயார் செல்வதுரை பத்மா பிரியதர்ஷினி, எங்களை வீட்டிலுள்ள ஓர் அறைக்கு அழைத்துச் சென்று, கோபிநாத் பயன்படுத்திய பொருட்களைக் காட்டினார். தனது மனதில் ஏதோ ஒருவித சந்தேகத்தில் வாழ்கின்ற போதிலும், தனது மகன் இன்னும் வாழ்கின்றார் என்ற பெரும் நம்பிக்கையுடன் வாழ்வதாகவே பத்மா பிரியதர்ஷனி. ''மகன் இருக்கின்றார் என்று நம்புகின்றேன். ஆண்டவனுக்குத்தான் தெரியும்.'' ராணுவம், போலீஸ் மற்றும் சிறைச்சாலைகளுக்குச் சென்று எந்தவித தகவல்களும் கிடைக்காத நிலையில் சோர்வடைந்த இந்தப் பெற்றோர், ஜோதிடம் பார்க்கும் இடங்களுக்கும் சென்றுள்ளனர். இந்தியாவில் உள்ள ஜோதிடம் சொல்லும் கோவிலுக்குக் கூட சென்றுள்ளனர். அவர்கள் மாத்திரமன்றி, அவர்கள் தேடிச் சென்ற ஜோதிடர்கள்கூட, தனது மகன் உயிருடன் இருப்பதாகக் கூறியுள்ள போதிலும், அவர் தொடர்பில் இன்று வரை எந்தவிதத் தகவலும் இல்லை என சுப்ரமணியம் செல்வதுரை கண்ணீர் மல்கத் தெரிவித்தார். கோபிநாத்தின் தாயான பத்மா பிரியதர்ஷனி எம்மை வீட்டின் அறை ஒன்றுக்குள் அழைத்துச் சென்று, தனது மகனின் பொருட்களைக் காண்பித்தார். ''எனது தங்க நகைகளை விட்டுவிட்டு, எனது மகனின் பொருட்களை மீண்டும் எடுத்து வந்தேன். இது அவர் பயன்படுத்திய பொருட்கள்'' கூறியவாறு பெட்டியொன்றைத் திறந்து எமக்குக் காண்பித்தார். வலுவான உடல் கட்டமைப்பைக் கொண்டிருந்த கோபிநாத், உடற்பயிற்சிகளைச் செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளதாக அவர்களது பெற்றோர் தெரிவிக்கின்றனர். அவர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்ட தருணத்தில் எடுக்கப்பட்ட பழைய படமொன்றையும் அவர்கள் எம்மிடம் காண்பித்தனர். இந்தப் புகைப்படங்களைப் பார்த்து மீண்டும் உணர்ச்சிவசப்பட்ட அவரது தாய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஏனைய இளைஞர், யுவதிகள் தொடர்பிலும் கவலை தெரிவித்தார். ''படலந்த தொடர்பில் சொல்லும்போது மிகவும் கவலையாக இருக்கின்றது. எமது பிள்ளைகளுக்கும் ஏதேனும் நடந்தேறியிருக்கும் என நினைத்துக் கவலையாக இருக்கின்றது.'' ''யுத்தம் முடிவடைந்த பின்னர் நாங்கள் எமது பிள்ளைகளை உயிருடன் கையளித்திருந்தோம். யுத்தம் முடிவடைந்ததன் பின்னரே நாங்கள் அவர்களைக் கையளித்திருந்தோம். அவர்கள் என்ன கூறி அழைத்துச் சென்றார்கள்? தகவல்களைப் பெற்று மீண்டும் அனுப்புவதாகச் சொன்னார்கள் அல்லவா? அதைத்தான் நாங்கள் கேட்கின்றோம். எமது பணமோ காணியோ ஒன்றுமே வேண்டாம். பிள்ளைகளுக்கு மாத்திரம் என்ன நடந்தது என்பதை எங்களிடம் கூறுங்கள். உயிருடன் கையளித்தோம். சடலத்தைக் கையளிக்கவில்லை அல்லவா!'' என உணர்ச்சிவசப்பட்டு அவர் பேசினார். 'கவலையில் இருக்கும் தந்தை' வேறொரு முகாமில் இருந்த தனது நெருங்கியவர்கள், தனது மகனைக் கண்டுள்ளதாகக் கூறுகிறார் கவலையில் இருக்கும் தந்தை. ''ராமநாதன் என்ற பெயரில் முகாமொன்று இருந்தது. பெரும்பாலானோருக்கு எம்மை நன்றாகவே தெரியும் அல்லவா? உங்களின் மகனைக் கண்டோம் என்று அவர்கள் சொன்னார்கள். நன்றாக இருக்கின்றார். தண்ணீர் எடுக்கும் குழாய் அருகில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தார். சிவப்பு நிற டிசர்ட் அணிந்து, கறுப்பு நிற கால் சட்டை அணிந்திருந்தார். நான்கு பேர் இருந்தார்கள். கையில் காயம் இருந்தது எனக் கூறினார்கள். சிறு குழந்தை ஒன்றும் அதேபோலக் கூறியது. நான் மாமாவை கண்டேன் என்று சொன்னது'' என்கிறார் அவர். அதன் பின்னர், இந்தக் குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டு இருந்த முகாமில், வெளியில் நடமாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த சட்டங்கள் தளர்த்தப்பட்டதை அடுத்து, உறவினர்களைப் பார்வையிடுவதற்காக அனுமதிப் பத்திரத்தை பெற்று கோபிநாத்தின் தந்தை முகாமை விட்டு வெளியில் சென்றிருந்ததாக அவரது தந்தை கூறினார். அந்தச் சந்தர்ப்பத்தில், தான் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த தருணத்தில், வவுனியா - மணிகூட்டு கோபுரத்திற்கு அருகில் வெள்ளை நிற வேன் ஒன்றில் நான்கு பேருடன் தனது மகன் நின்று கொண்டிருந்ததை அவதானித்ததாக சுப்ரமணியம் செல்வதுரை தெரிவிக்கின்றார். அவர்கள் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் என சுப்ரமணியம் செல்வதுரை கூறிய போதிலும், அதைச் சுயாதீனமாக எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. பேருந்தில் இருந்து இறங்கி அந்த இடத்திற்குச் சென்ற போதிலும், அந்த இடத்தில் இருந்து குறித்த வேன் வெளியேறியிருந்ததாக அவர் எம்மிடம் குறிப்பிட்டார். ''அநுராதபுரம் சிறைச்சாலையில் கோபிநாத் என்ற நபர் ஒருவர் இருக்கின்றார் என்று பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. நான் அங்கு சென்றேன். அவர் இல்லை. அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த ஒருவர்'' என கோபிநாத்தின் தந்தை கூறினார். 'ஜனாதிபதி ஐயாவை பார்க்க வேண்டும்' ''மகன் இருக்கின்றார் என்று அனைவரும் கூறுகின்றார்கள்'' ''மகன் வருவார் என்று உயிர் இருக்கும் வரை நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம். மகனின் எந்தவொரு பொருளையும் அழிக்கவில்லை. நான் அனைத்து இடங்களுக்கும் அதை எடுத்துச் சென்று, இங்கு கொண்டு வந்துள்ளேன். எனது தங்க நகைகளையும் கைவிட்டுவிட்டேன். மகனின் பொருட்கள், புத்தகங்கள், ஆடைகளைக் கொண்டு வந்தேன். அவரது டுத் பிரஷையும் கொண்டு வந்தேன். பாதணியையும் கொண்டு வந்து வைத்துள்ளேன்.'' ''நாங்கள் ஜனாதிபதி ஐயாவை பார்க்க வேண்டும். அவரிடம் இவ்வாறு இருப்பதைக் கதைக்க வேண்டும். எத்தனை ஜனாதிபதிகள் பதவிக்கு வந்த சென்றுள்ளார்கள்? ஆனால் எங்களுக்கு விடுதலை இல்லை. இந்தப் பிரச்னைக்கு ஏதேனும் ஒரு முடிவு தேவைப்படுகிறது. எதுவும் நடக்கவில்லை.'' ''நான் மாத்திரம் இதைக் கதைக்கவில்லை. அனைவரும் கையளிப்பதாகச் சொல்லிச் செல்கின்றார்கள். நாங்கள் வந்தவுடன் இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று இந்த ஜனாதிபதி கூறினார், கதைப்பதாகவும் கூறினார். ஆனால், இன்னும் கதைக்கவில்லை. அவர் பதவிக்கு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் கதைக்கவில்லை.'' ''எங்களுக்குப் பணம் தேவையில்லை. எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? உயிருடன் நாங்கள் கையளித்தோம்'. அம்மா என்று சொல்லி, அடையாள அட்டையைப் பெற்றுச் சென்றார்.'' ''அவர் சாப்பிடும் உணவுகளை நாங்கள் வீட்டில் சமைக்க மாட்டோம். அவர் நினைவு வரும் என்பதற்காகவே சமைப்பது இல்லை.'' 'பெற்றோர் என்பதை வைத்துக்கொண்டு மாத்திரம் பதில் சொல்ல முடியாது' யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள இந்தத் தருணத்தில், வடக்கில் மாத்திரமன்றி, தெற்கிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் இன்னும் தங்கள் அன்பானவர்களின் அரவணைப்பின்றி கவலையுடன் வாழந்து வருகின்றனர். முழு அளவில் மாற்றுத்திறனாளி ஆனவர்கள் நிர்க்கதி ஆகியுள்ளதுடன், பகுதியளவில் மாற்றுத்திறனாளி ஆனவர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது வாழ்வை முன்னோக்கிக் கொண்டு செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், சில தரப்பினர் எந்தவித வழக்கு விசாரணைகளும் இன்றி, தொடர்ந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஊடக பிரதானி தயா மாஸ்டர் மற்றும் சர்வதேச நிதி தொடர்பான பிரதானியாகக் கடமையாற்றி கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஆகிய விடுதலைப் புலிகளின் முன்னிலை செயற்பாட்டாளர்கள், சட்டக் கட்டுப்பாடுகள் இன்றி இன்றும் வாழ்ந்து வருகின்றனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, "நாங்கள் புனர்வாழ்வு அளித்து, அவர்களில் ஒரு தொகுதியினரை ராணுவத்தில் இணைத்துக்கொண்டோம்" என்கிறார் ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே. (கோப்புப் படம்) இவ்வாறான பின்னணியில் ராணுவத்தின் பொறுப்பிற்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தி வாசிப்பாளரான கோபிநாத்திற்கு என்ன நடந்தது? அவர் ராணுவம், குற்றப் புலனாய்வு திணைக்களம், பயங்கரவாதத் தடுப்பு பிரிவு ஆகிய நிறுவனங்களின் பொறுப்பிற்கு எடுக்கப்பட்டாரா என்பது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்தோம். இதன்படி, முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வருகை தந்து ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் செல்வதுரை கோபிநாத் தொடர்பில் ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகேவிடம் பிபிசி சிங்கள சேவை முதலில் வினவியது. அதற்கு அவர், ''பெற்றோர் கூறுகின்ற விதத்தில் மாத்திரம் தன்னால் பதில் கூற முடியாது. எம்மிடம் ஒப்படைக்கப்பட்டாரா? நாங்கள் பொறுப்பேற்றோமா? என்பது தொடர்பில் தகவல் இல்லை'' என பதிலளித்தார். ''ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நாங்கள் புனர்வாழ்வு அளித்தோம். ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்ட எந்தவொரு நபரும் காணாமல் போகவில்லை'' என்றும் அவர் தெரிவித்தார். 'ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்ட அனைவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர்' அவ்வாறான 15,000 திற்கும் அதிகமானோர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார். ''ராணுவத்திடம் சரணடைந்த அனைவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர்'' என்று கூறுகிறார் அவர். ''அவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் தேவை எமக்கு இருக்கவில்லை. அவர்களுக்கு நாங்கள் புனர்வாழ்வு அளித்து, அவர்களில் ஒரு தொகுதியினரை ராணுவத்தில் இணைத்துக்கொண்டோம்.'' ''முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் ராணுவத்தில் இணைந்து கொண்டு கடமையாற்றினார்கள். குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பகுதிகளில் ராணுவத்தில் இணைந்து சேவையாற்றியிருந்தனர்.'' ''அவர்கள் சுயவிருப்பத்துடன் ராணுவத்தில் இணைந்து கொண்டார்கள். புனர்வாழ்வின் பின்னர் எம் மீது எழுந்த நம்பிக்கை காரணமாக அவர்கள் எம்முடன் இணைந்தார்கள்.'' ''எம்மிடம் சரணடைந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட எந்தவொரு நபரும் காணாமல் ஆக்கப்பட்டதாக எந்த வகையிலும் குற்றச்சாட்டு இல்லை.'' ''அந்தப் பெற்றோர் சொல்கின்றமை தொடர்பில் இதையே கூற வேண்டும். நாங்கள் பொறுப்பேற்ற அனைவருக்கும் உரிய வகையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். எம்மிடம் தற்போது யாரும் இல்லை'' என ராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார். காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பதில் செல்வதுரை கோபிநாத் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஆணையாளர் நாயகம் மிரான் ரஹீமிடம் பிபிசி சிங்கள சேவை வினவியது. பிபிசி சிங்கள சேவை வழங்கிய தகவலுக்கு அமைய, கிளிநொச்சி அலுவலக அதிகாரிகளை கோபிநாத்தின் தந்தையுடன் தொடர்புபடுத்துவதாக அவர் கூறியுள்ளார். இதன்படி, அடுத்தகட்ட விசாரணைகளில் இந்தச் சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 'உலகில் அதிகமானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இலங்கை 2வது இடம்' இந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 29வது அமர்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை குறித்து ஆராயப்படவுள்ளது. இதற்கு முன்னர் சர்வதேச மன்னிப்பு சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் ஆயிரக்கணக்கானோர் உண்மை மற்றும் நீதியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. உலகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அதிகளவில் உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவிக்கின்றது. முதலாவது இடத்தில் இராக் உள்ளது. வலிந்து அல்லது தன்னிச்சையாக காணாமல் போதல்கள் தொடர்பான ஐ.நா செயற்குழுவில், இன்னும் நிலுவையில் உள்ள வழக்குகளின் பிரகாரம், 2024ம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் 6,264 வலிந்து காணாமல் போன சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 1980ம் ஆண்டு காலப் பகுதி முதல் 2017ம் ஆண்டு வரையான காலப் பகுதி வரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களாகக் குறைந்தது 60,000 முதல் 100,000 வரை பதிவாகியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை கணிப்பிட்டுள்ளது. கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையான சுமார் 30 ஆண்டுக் காலத்தில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில், இலங்கை அரசாங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் ஆகியவற்றில் தண்டனைகளின்றி மீறியுள்ளதுடன், சட்டத்திற்குப் புறம்பாக இடம்பெற்ற கொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் பொதுமக்களை இலக்கு வைத்து கண்மூடித்தனமான தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதாகவும் அரசியல்வாதிகள் மற்றும் விமர்சகர்கள் கொலை செய்யப்பட்டதாகவும், சிறுவர்கள் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்டமை போன்ற மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgngr9d8zro
  11. சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு 02 Sep, 2025 | 06:12 PM சம்பூர் மனித எச்சங்கள் தொடர்பான வழக்கில் அகழ்வு மேற்கொள்வதற்காக மாகாண மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட உத்தேச பட்ஜட்டின் அனுமதியானது செவ்வாய்க்கிழமை (2) கிடைக்கப் பெறாமையால் இவ்வழக்கானது இம்மாதம் 16ஆம் திகதி மீள அழைக்கப்படவுள்ளது. குறித்த வழக்கானது மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஸான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பூர் பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக சட்ட வைத்திய அதிகாரி, தொல் பொருள் திணைக்களம்,காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஆகியோரின் கையொப்பத்துடன் சம்பூர் பொலிஸாரினால் கடந்த மாதம் 26ஆம் திகதி உத்தேச பட்ஜட் மூதூர் நீதிமன்ற நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் மூதூர் நீதிமன்றத்தால் மாகாண மேல் நீதிமன்ற அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த வழக்கின் உத்தேச பட்ஜட்டுக்கான அனுமதி மாகாண மேல் நீதிமன்றத்திலிருந்து கிடைக்கப் பெறவில்லை எனவும் இவ்வழக்கு மீண்டும் இம்மாதம் 16ஆம் திகதி மீள அழைக்கப்படவுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகத்தின் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் தெரிவித்தார். சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் மெக் என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. இதன் பின்னர் மிதிவெடி அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/224053
  12. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 2 செப்டெம்பர் 2025 'ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்' என செப்டம்பர் 1 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 'அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் இல்லையென்றால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம்' எனவும் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 'நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள்' என, ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன. "ஆசிரியர்களை அரசு கைவிடாது" என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படுவதால் என்ன பிரச்னை? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் என்ன உள்ளது? 'இந்தியாவில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித் தேர்வு அவசியமா?' என்பது குறித்து மூன்று உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுகள் செய்யப்பட்டன. அஞ்சுமன் இசாத்-இ-தலீம் அறக்கட்டளை (ANJUMAN ISHAAT-E-TALEEM TRUST) எதிர் மகாராஷ்டிரா அரசு மற்றும் இதர மாநில அரசுகளை இணைத்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கின் விசாரணையில், 'கட்டாய கல்வி உரிமைச் சட்டப் பிரிவு 23, துணைப் பிரிவு 1ன்கீழ் 2011, ஜூலை 29 அன்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பாக புதிதாக சேர்க்கப்பட்ட விதிமுறையின்படி ஆசிரியர் பதவி உயர்வுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா?' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபான்கர் தத்தா மற்றும் மன்மோகன் அமர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) நடத்துவதற்கான காரணம் குறித்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) 2011, பிப்ரவரி 11 அன்று வெளியிட்ட அறிவிப்பை மேற்கோள் காட்டியுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிப்பதற்கு டெட் தேர்ச்சி பெறுவது கட்டாய நிபந்தனை எனக் கூறப்பட்டுள்ளது. டெட் தேர்வு குறைந்தபட்ச தகுதி அளவுகோல்களின் முக்கிய பகுதியாக உள்ளது. டெட் தேர்வின் மூலம் தேசிய தரநிலைகள் மற்றும் ஆசிரியர் தரத்துக்கான அளவுகோல் கொண்டு வரப்படுகிறது. மாணவர்களின் செயல் திறனின் தரத்தை மேலும் மேம்படுத்துவதை ஊக்குவிக்கும். ஆசிரியருக்கான தரத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்தும்போது அது அனைத்து தரப்பிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனைக் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், 'தொடக்கக் கல்வியை வழங்கும் நிறுவனங்களுக்கு, சீரான கற்பித்தல் தரத்தை உறுதி செய்வது நோக்கமாக உள்ளது. தகுதித் தேர்வு என்பது கட்டாய கல்வித் தகுதி மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21ஏ படி தரமான கல்வி உரிமைக்கான தேவையும் ஆகும்' எனத் தெரிவித்துள்ளது. 'ஆசிரியர்களின் சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142ன்கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம் உள்ள ஆசிரியர்கள் டெட் தகுதி பெறாமல் ஓய்வு பெறும் வயதை அடையும் வரை பணியில் தொடரலாம்' எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பதவி உயர்வுக்கு விரும்பினால் டெட் தேர்ச்சி பெறாமல் தகுதி உடையவராக கருதப்பட மாட்டார் எனத் தெளிவுபடுத்துவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தவகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின்படி, 1 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பணியில் தொடர்வதற்கு டெட் தேர்வு கட்டாயம். டெட் தேர்வு எழுத விருப்பம் இல்லாத ஆசிரியர்கள், பணியில் இருந்து விலகிக் கொள்ளலாம் அல்லது ஓய்வுகால சலுகைகளைப் பெற்றுக்கொண்டு விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம். அதேநேரம், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு டெட் தேர்வு பொருந்துமா என்பது குறித்து அரசியல் சாசன அமர்வு விசாரிப்பதற்கு பரிந்துரை செய்யப்படுவதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆசிரியர் சங்கங்கள் கூறுவது என்ன? உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட உள்ளதாகக் கூறுகிறார், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளதால் ஓய்வுபெறும் வயதில் உள்ளவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர் போன்ற பதவி உயர்வுகள் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது" எனக் கூறுகிறார். 'பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி அவசியம்' என்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதாகக் கூறும் தாஸ், "தற்போது ஆசிரியர்கள் அனைவரும் இரண்டு ஆண்டுகளில் டெட் தேர்ச்சி பெறுமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. இவர்களில் 90 சதவிகிதம் பேர் ஆசிரியைகளாக உள்ளனர். அவர்களுக்கு இருக்கும் பணிச் சூழலால் தேர்வை எழுதுவது சிரமம்" எனக் கூறுகிறார். தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் அரசின் கணக்குப்படி 62,979 ஆசிரியர்களும் நடுநிலைப்பள்ளிகளில் 49,547 ஆசிரியர்களும் உயர்நிலைப் பள்ளிகளில் 31,531 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் 82 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் ஐந்தாண்டுகளில் ஓய்வு பெறும் ஆசிரியர்களைத் தவிர்த்துப் பார்த்தால் சுமார் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு மேல் டெட் தேர்வு எழுத வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தாஸ். இந்தியாவில் 2009 ஆம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்தது. இதனைக் குறிப்பிட்டுப் பேசும் தாஸ், "2011 ஆம் ஆண்டு முதல் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2022 வரை மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. முன்னரே அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தால் அனைவரும் தேர்வை எழுதியிருப்பார்கள்" என்கிறார். படக்குறிப்பு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட உள்ளதாகக் கூறுகிறார், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ் யாருக்கெல்லாம் பொருந்தும்? என்ன பாதிப்பு? மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கற்பிக்கும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் தகுதியை தீர்மானிப்பதற்கு தகுதித் தேர்வு நடத்தப்படும் என, 2010, ஆகஸ்ட் 23 அன்று அறிவிக்கப்பட்டது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் என்பது 1 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக கொண்டு வரப்பட்டது. அதன்படி, தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியில் சேரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) என்பது கட்டாயமாக உள்ளது. "உயர்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றால் தான் தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வுக்கு செல்ல முடியும்" எனக் கூறுகிறார், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தாஸ். நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் எனவும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டார். "கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வர மாட்டார்கள் என்பதால், இந்தச் சட்டம் அவர்களுக்குப் பொருந்தாது" எனக் கூறுகிறார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன். "கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்துவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் கூறுகிறது. இதனை ஏற்க முடியாது" எனவும் அவர் குறிப்பிட்டார். உச்ச நீதிமன்றம் தனக்குரிய 142வது சிறப்புப் பிரிவை பயன்படுத்தி தீர்ப்பளித்துள்ளதாகக் கூறியுள்ள அவர், "தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்" என்கிறார். "பல ஆண்டுகளாக தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அதே பாடத்தை சொல்லித் தருகின்றனர். அவர்களுக்கு பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தைப் படித்து தேர்வு எழுதுமாறு கூறுவது சாத்தியமில்லாதது" என்கிறார், அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் யாரும் எட்டாம் வகுப்பு வரை பாடம் சொல்லித் தரப் போவதில்லை. தலைமை ஆசிரியராக பதவி உயர்வு கிடைத்தாலும் ஐந்தாம் வகுப்புக்கு மட்டுமே பாடம் எடுப்பார்கள்" என்கிறார். "எந்த வகுப்பு வரை பாடம் எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதற்கேற்ப தேர்வு வைக்கலாம். தவிர, பணி நெருக்கடியில் இருந்தவாறு தேர்வு எழுதுவது என்பது சிரமமானது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தீர்ப்பு பொருந்தும் என்பது தான் சரியானதாக இருக்கும்" எனவும் அவர் குறிப்பிட்டார். ஆதரவும் எதிர்ப்பும் படக்குறிப்பு, தரமான கல்வி என்பது முக்கியமானது என்கிறார், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி "டெட் தேர்வை கட்டாயமாக்குவதில் எந்த தவறும் இல்லை. தரமான கல்வி என்பது முக்கியமானது. தொழில்நுட்பத்துடன் இணைந்த கல்வியை ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் எவ்வாறு பெறப் போகின்றனர் என்பது முக்கியமானது" எனக் கூறுகிறார், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கல்வித்தரம் தொடர்பாக எடுக்கப்படும் எந்த சீர்திருத்தங்களும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. மாணவர்களின் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும்" என்கிறார். "தற்போதுள்ள ஆசிரியர்களில் எத்தனை பேர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பாடம் எடுப்பதற்கு பயன்படுத்துகிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பும் ஜெயப்பிரகாஷ் காந்தி, "நான்கு பேர் பாதிப்பதால் நல்ல விஷயங்களை வரவேற்காமல் இருக்க முடியாது" எனத் தெரிவித்தார். இதனை மறுத்துப் பேசும் தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ், "இத்தனை ஆண்டுகாலம் மருத்துவம், பொறியியல் உள்பட பல்வேறு படிப்புகளில் தரமான மாணவர்களை உருவாக்கியது அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான். இதே அளவுகோலை பிற துறைகளுக்கும் வைக்க முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினார். "சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் ஆசிரியரிடம் தேர்வு எழுதுமாறு கூறுவது சரியானதல்ல" என்கிறார், கல்வியாளர் நெடுஞ்செழியன். "ஆசிரியர்களின் திறனை அவர்கள் பாடம் நடத்தும் முறை உள்பட பல்வேறு அளவுகோல்களில் மதிப்பிடலாம். தேர்வை மட்டுமே அடிப்படையாக வைத்து ஆசிரியர்களை வெளியேற்றுவதை ஏற்க முடியாது" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். படக்குறிப்பு, ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் வழங்கலாம் என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன் "தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பயிற்சிகளைக் கொடுத்து அவர்களை மேம்படுத்தலாம். அவர்களுக்கு தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசத்தை வழங்கலாம்" என்கிறார், நெடுஞ்செழியன். இதனை தனது தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. வழக்கில் அடிப்படை எதார்த்தம் மற்றும் நடைமுறை சவால்களை கவனத்தில் கொள்வதாகக் கூறியுள்ள நீதிபதிகள், "கட்டாய கல்வி உரிமைச் சட்டம் வருவதற்கு முன்னரே பணியில் இணைந்த மற்றும் 2 அல்லது 3 தசாப்தங்களாக பணியில் உள்ள ஆசிரியர்களும் உள்ளனர்" எனக் கூறியுள்ளனர். அவர்கள் தங்கள் திறனுக்கு ஏற்ப மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வருவதாகக் கூறியுள்ள நீதிபதிகள், "டெட் தகுதி பெறாத ஆசிரியர்களால் மாணவர்கள் தங்கள் வாழ்வில் பிரகாசிக்கவில்லை என்பதல்ல. அவர்களைப் பணியில் இருந்து நீக்குவது என்பது சற்று கடுமையானதாக தோன்றும். ஆனால், சட்டத்தின் செயல்பாட்டை ஒருபோதும் தீமையாக கருத முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறையின் பதில் என்ன? படக்குறிப்பு, ஆசிரியர்கள் யாரையும் கைவிட்டுவிடாமல் அரவணைப்பதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வோம் என்கிறார், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் சுமார் 1 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட உள்ளதால், தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஆசிரியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளதாக பிபிசி தமிழிடம் கூறிய தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தாஸ், "பதவி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த வேளையில் இப்படியொரு தீர்ப்பு வந்துள்ளது" என்கிறார். தீர்ப்பை எதிர்த்து ஆசிரியர் சங்கங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நேற்று (செப்டம்பர் 1) தலைமைச் செயலாளர் மற்றும் துறை செயலாளருடன் கலந்தாலோசித்தோம். முழுமையான தீர்ப்பு வந்த பிறகு சட்ட ஆலோசகர்கள் மூலம் ஆலோசித்து முடிவெடுப்போம்" எனக் கூறினார். ஆசிரியர்களுக்கு அரணாக பள்ளிக்கல்வித்துறை உள்ளதாகக் கூறியுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஆசிரியர்கள் யாரையும் கைவிட்டுவிடாமல் அரவணைப்பதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வோம். அரசாங்கம் யாரையும் கைவிட்டுவிடாது" எனவும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgegye0yjko
  13. 02 Sep, 2025 | 06:00 PM (நா.தனுஜா) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரைவில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், ஆக்கபூர்வமான முறையில் இழப்பீடுகளை வழங்கல், மீள்நிகழாமையை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய 3 பிரதான கூறுகளை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான விடயங்கள் உள்ளடக்கப்படவேண்டும் என சர்வதேச நாடுகளில் இயங்கிவரும் 18 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இணையனுசரணை நாடுகளுக்கு கூட்டாகப் பரிந்துரைத்துள்ளன. இதுகுறித்து பிரித்தானியத் தமிழர் பேரவை, புதுடில்லி தமிழ்ச்சங்கம், ஜேர்மனி தமிழர் கொள்கைப் பேரவை, சுவிட்ஸர்லாந்து தமிழ் நடவடிக்கைக் குழு என்பன உள்ளடங்கலாக பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, ஜேர்மனி, நெதர்லாந்து, கனடா, அயர்லாந்து, தென்னாபிரிக்கா, சுவிட்ஸர்லாந்து, மொரீஸியஸ் ஆகிய நாடுகளைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் 18 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டிணைந்து இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள், பேரவையில் அங்கம்வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பிவைத்திருக்கும் பரிந்துரை ஆவணத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கை கடந்த ஏழு தசாப்த காலமாக தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பிலும், போர்க்குற்றங்களிலும், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களிலும் ஈடுபட்டிருப்பதுடன் அதன் விளைவாக சுமார் பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு அகதிகளாகத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை உள்ளிட்டவற்றைத் தொடர்ந்தும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்கிறது. சாட்சியங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்திய நீதி இன்னமும் நிலைநாட்டப்படவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், ஆக்கபூர்வமான முறையில் இழப்பீடுகளை வழங்கல், மீள்நிகழாமையை உறுதிப்படுத்தக்கூடியவகையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய 3 பிரதான விடயங்களை முன்னிறுத்தி உடனடி நடவடிக்கையைக் கோரும் வகையில் எதிர்வரும் இம்மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய பிரேரணை வரைவு அமையவேண்டும். குறிப்பாக அண்மையில் யாழ். செம்மணியிலும், திருகோணமலையின் சம்பூரிலும், மன்னாரிலும் கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகளும், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்குச் சொந்தமானவை உள்ளடங்கலாக அங்கு அடையாளங்காணப்பட்ட மனித எச்சங்களும் இலங்கை அரசின் இனப்படுகொலை நோக்கத்துக்கான வலுவான ஆதாரங்களாகக் காணப்படுகின்றன. எனவே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை 1948 தொடக்கம் இப்போது வரை நிகழ்த்தப்பட்ட சகல அட்டூழியங்கள் தொடர்பிலும் ஆதாரங்களை திரட்டும் வகையில் விரிவுபடுத்தப்படவேண்டும். அதேபோன்று இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உடனடியாகப் பாரப்படுத்துவதற்கு அவசியமான வலுவான ஆதாரங்களுடன்கூடிய 15 - 20 முக்கிய வழக்குகளை அடையாளம் காணவேண்டும். அடுத்ததாக இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றங்களுக்குப் பரிந்துரைத்தல், உலகளாவிய நீதிப்பொறிமுறையை நடைமுறைப்படுத்தல், இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை ஒன்றை ஸ்தாபிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் ஐ.நா பொதுச்சபைக்குப் பரிந்துரைக்கப்படல் என்பவற்றுக்கான கூறுகள் புதிய பிரேரணையில் உள்ளடக்கப்படவேண்டும். அத்தோடு படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவித்தல், தமிழர் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணித்தல், மீள்குடியேற்றம், நிலையான வாழ்வாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டு முன்னெடுப்பதற்கு சர்வதேச அனுசரணையுடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஐ.நா நிபுணர்கள் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இடைக்கால உள்ளகக் கட்டமைப்பொன்று நிறுவப்படவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224054
  14. குண்டு துளைக்காத ரயிலில் சீனா சென்ற வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் 02 Sep, 2025 | 05:40 PM வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், குண்டு துளைக்காத சிறப்பு ரயில் மூலம் சீனாவுக்குச் சென்றுள்ளார். திங்கட்கிழமை (1) இரவு வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து புறப்பட்ட அவர், இன்று சீனா சென்றடைந்தார். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிராக சீனா வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ளவே கிம் ஜாங் உன் அங்கு சென்றுள்ளார். இந்த இராணுவ அணிவகுப்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிம் ஜாங் உன் கடந்த 2023ஆம் ஆண்டு ரஷ்யாவுக்குச் சென்று புட்டினை சந்தித்தார். அதற்குப் பிறகு, இதுவே அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் ஆகும். இதற்கு முன்னர், அவர் 2019ஆம் ஆண்டு சீனாவுக்குச் சென்றுள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்குவதுடன், வீரர்களையும் அனுப்பி வருவதாக வடகொரியா மீது உக்ரைன் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224052
  15. 02 Sep, 2025 | 04:06 PM வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இன்று செவ்வாய்க்கிழமை (2) நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடகாலம் பூர்த்தியாவதை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை தொடக்கிவைக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்குக்கு விஜயம் செய்துள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு, இன்று காலை புதுக்குடியிருப்பில் தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு, நண்பகல் 1 மணியளவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துவைத்தார். மிக நீண்டகால கோரிக்கையாக இருந்த வட்டுவாகல் பால நிர்வாகப் பணிகளை ஆரம்பித்துவைக்கச் சென்ற ஜனாதிபதியை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் வரவேற்றிருந்தார். தொடர்ந்து பால நிர்மாணப் பணிக்கான பெயர்ப்பலகையை ஜனாதிபதி திறந்துவைத்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான திலகநாதன், ஜெகதீஸ்வரன், ரவிகரன், மதகுருமார், திணைக்களங்களின் அதிகாரிகள், தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/224035
  16. Published By: Digital Desk 3 02 Sep, 2025 | 03:16 PM 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நாடு முழுவதும் 2,787 நிலையங்களில் பரீட்சை நடத்தப்பட்டதாகவும், 307,951 பேர் பரீட்சைக்கு தோற்றியதாகவும் அவர் தெரிவித்தார். அவர்களில் 901 விசேட தேவையுடைய மாணவர்களும் அடங்குவர். அவர்களில் 12 பேர் பிரெய்லி ஸ்கிரிப்ட்களைப் பயன்படுத்தினார்கள். பரீட்சை முடிவுகளை உடனடியாக வெளியிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பரீட்சைகள் திணைக்களம் எடுக்கும் எனவும், தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த அதிகாரிகளுக்கு போதுமான நேரம் வழங்கப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் உறுதியளித்தார். https://www.virakesari.lk/article/224027
  17. Published By: Digital Desk 3 02 Sep, 2025 | 03:07 PM இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்களை பொதுமக்கள் எளிதாக முறைப்பாடு அளிக்கும் வகையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 077 777 1954 எனும் புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முறைப்பாடு செயல்முறையை விரைவாகவும் வசதியாகவும் மாற்றுவதே இந்தப் புதிய முறையின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/224025
  18. 02 Sep, 2025 | 02:59 PM காற்றாலை மற்றும் கனிம மணல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்றைய தினம் திங்கட்கிழமை (1) மன்னாருக்கு வருகை தந்து பொது அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடியபோதும் எங்களுடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவர்கள் கரிசனை கொண்டதாக இல்லை. அவர்கள் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளை தீர்த்து இங்கே காற்றாலைகளை எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து அவர்களுடைய கருத்துக்களும் வாதங்களும் அமைந்திருந்தது என பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (2) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், காற்றாலை, கனிம மணல் விடயம் தொடர்பாக கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து உரையாடியதன் நிமித்தம் ஒரு மாதகாலம் இடை நிறுத்தப்பட்ட செயற்றிட்டம் தொடர்பாக நிபுணர்கள் குழு மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டு, சிவில் அமைப்புக்கள் மற்றும் பொது மக்களை சந்தித்து, அது சம்பந்தமான உரையாடல் ஊடாக தீர்மானத்திற்கு வரலாம் என ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் மின்சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் துறை சார் திணைக்களங்கள் குழுவாக நியமிக்கப்பட்டு, நேற்று திங்கட்கிழமை (1) மாலை மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் பொது அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கலந்துரையாடலில் ஏற்கனவே அமைக்கப்பட்ட 30 காற்றாலைகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும், இனி அமைக்கப்படவுள்ள காற்றாலைகளால் ஏற்படவுள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பது தொடர்பிலும் அவர்களுடைய வாதங்கள் அமைந்திருந்தது. எங்களுடைய கோரிக்கையாக இருந்த மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிம மணல் திட்டத்தை முற்றாக நிறுத்த வேண்டும் என்கிற விடயம் தொடர்பாக அவர்கள் அவதானம் செலுத்தியதாக இல்லை. எங்களுடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவர்கள் கரிசனை கொண்டதாக இல்லை. அவர்கள் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளை தீர்த்து இங்கே காற்றாலைகளை எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து அவர்களுடைய கருத்துக்களும் வாதங்களும் அமைந்திருந்தது. எனினும், மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு இடமாற்றத்தை ஏற்படுத்தி மக்களின் வாழ்வாதார வாழ்வியல் இருப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குறித்த இரு திட்டங்களையும் மன்னார் தீவில் இருந்து வெளியே எடுப்பது சம்பந்தமாக அவர்களுடைய பார்வை இருக்கவில்லை. எனவே, இவர்களினால் பரிந்துரைக்கப்படுகிற அறிக்கை எவ்வாறு அமையப்போகிறது என்பது குறித்து எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இவர்களின் அறிக்கையில் பிரகாரமே ஜனாதிபதி இறுதி முடிவுக்கு வருவார் என அவர்கள் கூறுகிறார்கள். ஜனாதிபதி காற்றாலை வேலைத்திட்டத்தை ஒரு மாதம் நிறுத்தியது கூட கண்துடைப்பு நாடகம் என நான் ஏற்கனவே ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் வைத்து ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தேன். அதே போல் நிபுணர் குழுவும் எங்களுடைய பிரச்சினைகளை மாத்திரமே பேசுகின்றதே தவிர எங்களுடைய கோரிக்கைகள், அடிப்படை உணர்வுகள் என்ன என்று அவர்கள் புரிந்துகொள்வதாக இல்லை. அதில் உள்ள அதிகாரிகள் அத்தனை பேரும் ஏற்கனவே பல தடவைகள் மன்னாருக்கு வந்தவர்கள். பல கூட்டங்களில் அவர்களுடன் பங்குபற்றியுள்ளோம். அவர்களுக்கு எங்களுடைய பிரச்சினை என்ன என்று தெளிவாக தெரியும். இந்த நிலையில் இந்த நிபுணர் குழுவில் புதியவர்களை இணைக்காது அவர்களை மீண்டும் இக்குழுவில் இணைத்திருப்பது எமக்கு சாதகமான பதில் கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. மன்னார் மக்களின் கூட்டு கோரிக்கையாகிய காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வு ஆகிய இரு திட்டங்களும் மன்னார் தீவுப் பகுதியில் இருந்து வெளியே கொண்டுபோக வேண்டும் என்ற கோரிக்கை எவ்வாறான நிலைப்பாட்டில் போகப்போகிறது என்பது குறித்து எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அரசு தனது நிறைவேற்று அதிகாரத்தையும் பெரும்பான்மை ஆதரவையும் பயன்படுத்தி இத்திட்டங்களை அமுல்படுத்துமோ என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/224022
  19. 'சர்வாதிகாரிகளுடன் மேடையை பகிர்ந்தது வெட்கக்கேடானது' - மோதியை மீண்டும் குறிவைத்த டிரம்ப் ஆலோசகர் பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா 'பூஜ்ஜிய வரி' வழங்க தயாராக இருப்பதாக கூறியதாக தெரிவித்தார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதியை குறிவைத்து தாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ இம்முறை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டை ஒரு காரணமாக்கியிருக்கிறார். "சீனாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டில் உலகின் இரண்டு மிகப்பெரிய சர்வாதிகாரிகளுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மேடையைப் பகிர்ந்துகொண்டது வெட்கக்கேடானது," என நவரோ செய்தியாளர்களிடம் கூறினார். அதன் பின்னர், "ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும், மேலும் ஐரோப்பா மற்றும் யுக்ரேனுடன் நிற்க பிரதமர் மோதி முன் வரவேண்டும்," என அவர் சமீபத்திய நாட்களில் பலமுறை கூறியதை மீண்டும் வலியுறுத்தினார். இதற்கிடையில், இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு 'இறக்குமதி வரியை பூஜ்ஜியமாக்க' ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் அது மிகவும் தாமதமானது எனவும் திங்கட்கிழமை டிரம்ப் கூறியுள்ளார். தற்போது பிரதமர் மோதி சீனாவில் நடைபெறும் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்று வருகிறார். அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நட்புடன் சந்தித்துப் பேசினார். மூன்று தலைவர்களின் புகைப்படங்கள் பரவலாக விவாதிக்கப்படுகின்றன, மேலும் மேற்கத்திய ஊடகங்கள், டிரம்பின் வரி விதிப்புகளால் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு இந்தியா நெருக்கமாகி வருவதாக பகுப்பாய்வு செய்கின்றன. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, திங்கட்கிழமை சீனாவின் தியான்ஜினில் நடந்த எஸ்சிஓ மாநாட்டின்போது புதின், மோதி மற்றும் ஷி ஜின்பிங் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து பீட்டர் நவரோ ஏற்கெனவே பலமுறை கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் இந்தியாவை ரஷ்ய எண்ணெய்க்கு 'தானியங்கி சலவை இயந்திரம்' (பணமோசடி மையம்) என்று அழைத்தார், இந்திய மக்களின் செலவில் 'பிராமணர்கள்' லாபம் ஈட்டுவதாகவும், இதை 'நிறுத்த வேண்டும்' என்று ஒருநாள் முன்னதாக கூறினார். டிரம்ப் மற்றும் நவரோ இந்தியாவை 'வரி மன்னர்' என்று அழைத்தனர், ஆனால் அமெரிக்காவிலேயே டிரம்பின் கொள்கைகள் குறித்து அசௌகரியம் உணரப்படுகிறது. சில நாட்களுக்கு முன், பைடன் நிர்வாகத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜேக் சல்லிவன், இந்தியாவைப் பற்றிய டிரம்பின் கொள்கைகளை அமெரிக்காவுக்கு ஒரு பெரிய 'உத்தி இழப்பு' என்று விவரித்தார், மேலும் 'அமெரிக்கா பாகிஸ்தானுக்காக இந்தியாவை தியாகம் செய்கிறது' என்று கூறினார். செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களிடம் பேசிய பீட்டர் நவரோ, "அமைதியின் பாதை ஓரளவு புது தில்லி வழியாக செல்கிறது. இப்போது மோதி முன்னுக்கு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் மோதியை மிகவும் மதிக்கிறேன். இந்திய மக்களை நேசிக்கிறேன்," என்றார். அவர் மேலும் கூறுகையில், "உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவரான மோதி, உலகின் இரண்டு மிகப்பெரிய சர்வாதிகாரிகளான புதின் மற்றும் ஷி ஜின்பிங்குடன் சந்திப்பது வெட்கக்கேடானது. இதற்கு எந்த அர்த்தமும் இல்லை." என்றார். மோதி குறித்து நவரோ என்ன கூறினார்? பட மூலாதாரம், Anna Moneymaker/Getty Images படக்குறிப்பு, பீட்டர் நவரோ இந்தியா மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். இந்தியா மற்றும் சீனா இடையேயான ராணுவ மோதல்கள் மற்றும் பதற்றங்களையும் நவரோ சுட்டிக்காட்டினார். "அவர் என்ன நினைக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை, குறிப்பாக இந்தியா பல தசாப்தங்களாக சீனாவுடன் பனிப்போரிலும், எல்லையில் மோதல்களிலும் ஈடுபட்டுள்ளது," என்றார். "எனவே, இந்திய தலைவர்கள் எங்களுடனும், ஐரோப்பாவுடனும், யுக்ரேனுடனும் இருக்க வேண்டும், ரஷ்யாவுடன் அல்ல. மேலும் அவர்கள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்," என அவர் மேலும் கூறினார். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து அமெரிக்கா இந்தியா மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது, மேலும் இதையே காரணமாகக் கூறி டிரம்ப் இந்தியாவுக்கு 25 சதவிகித கூடுதல் வரி விதித்தார், இதனால் இறக்குமதி வரி மொத்தம் 50 சதவிகிதமாக உயர்ந்தது. ஆனால், இந்தியா இதை 'நியாயமற்றது மற்றும் நடைமுறைக்கு ஏற்புடையதல்ல' என்று விவரித்துள்ளது. வரிகள் குறித்து டிரம்பின் சமீபத்திய அறிக்கை திங்கட்கிழமை, ஷி ஜின்பிங் மற்றும் புதினை மோதி சந்தித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில், டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் எனப்படும் சமூக ஊடகதளத்தில், "பலருக்கு இது புரிவதில்லை. நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைவாகவே வணிகம் செய்கிறோம், ஆனால் அவர்கள் (இந்தியா) எங்களுடன் பெரிய அளவில் வணிகம் செய்கிறார்கள்," என தெரிவித்தார். "வேறு வார்த்தைகளில், இந்தியா எங்களுக்கு பெரிய அளவில் பொருட்களை விற்கிறது. நாங்கள் அவர்களின் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள், ஆனால் நாங்கள் அவர்களுக்கு மிகக் குறைவாகவே விற்கிறோம். இது இதுவரை முற்றிலும் ஒருதலைபட்ச உறவாக இருந்து வருகிறது, பல தசாப்தங்களாக இப்படியே நடந்து வருகிறது," என டிரம்ப் தெரிவித்தார். "எங்கள் வணிகங்கள் இன்னும் இந்தியாவில் பொருட்களை விற்க முடியவில்லை. இதற்கு காரணம், இந்தியா மற்ற நாடுகளை விட எங்களுக்கு மிக உயர்ந்த வரி விதித்துள்ளது. இது இதுவரை ஒரு ஒருதலைபட்ச பேரழிவாக இருந்து வந்துள்ளது," என அவர் மேலும் தெரிவித்துள்ளார். "இந்தியா தனது பெரும்பாலான எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது, அமெரிக்காவிடமிருந்து மிகக் குறைவாகவே வாங்குகிறது. இப்போது இந்தியா வரியை பூஜ்ஜியமாக்க முன்வந்துள்ளது, ஆனால் அது தாமதமாகிறது. அவர்கள் இதை பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்," என டிரம்ப் மேலும் கூறினார், டிரம்ப் முன்பும் இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையைப் பற்றி பேசியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது, பின்னர் போர் நிறுத்தத்துக்கு தானே காரணம் என டிரம்ப் உரிமை கொண்டாடுவதும் இருந்தது. மோதலை நிறுத்துவதற்காக மக்களுக்கு தலைசுற்றும் அளவுக்கு வரிகளை விதிப்பேன் என இந்தியாவிடம் கூறியதாக அவர் சமீபத்தில் தெரிவித்தார். பாகிஸ்தானுக்காக இந்தியாவை தியாகம் செய்தல் பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பைடன் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜேக் சல்லிவன் இந்தியா குறித்த டிரம்பின் கொள்கைகள் குறித்து எச்சரித்துள்ளார். இந்தியா மீதான டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான அணுகுமுறை குறித்து அமெரிக்காவிலும் அதிருப்தி உள்ளது, மேலும் குடியரசுக் கட்சித் தலைவர் நிக்கி ஹேலி சமீபத்தில் இந்த நிலைமை குறித்து கவலை தெரிவித்தார். அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி, டிரம்ப் தனது கொள்கைகளால் தனது கூட்டாளிகளை விலக்கி வைப்பதாக கவலை தெரிவித்தார். பைடன் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜேக் சல்லிவன், கடந்த மாதம் "இந்தியாவுடனான உறவுகளை தியாகம் செய்வது அமெரிக்காவுக்கு ஒரு பெரிய உத்தி இழப்பு" என்று எச்சரித்தார். ஆகஸ்ட் 20 அன்று ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சல்லிவன், அமெரிக்க அதிபர் இந்தியாவை விட்டுவிட்டு பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருப்பது, டிரம்பின் வெளியுறவுக் கொள்கையில் மிகக் குறைவாக விவாதிக்கப்பட்ட செய்தியாக இருந்தது என்றார். அமெரிக்கா பல தசாப்தங்களாக "உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான" இந்தியாவுடன் உறவுகளை உருவாக்கி வந்துள்ளது. சீனாவின் உத்தி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, அமெரிக்கா இந்தியாவுடன் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் போன்ற விஷயங்களில் கூட்டணி ஏற்படுத்த வேண்டும். அமெரிக்காவின் நண்பர்களும் உலகின் மற்ற நாடுகளும் அமெரிக்காவை எந்த வகையிலும் நம்ப முடியாது என்று நினைக்கத் தொடங்கினால், அது நீண்ட காலத்தில் அமெரிக்க மக்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது," என சல்லிவன் மேலும் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdd3dmev721o
  20. செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு 02 Sep, 2025 | 06:38 PM செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (2) மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரை 222 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 206 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 41வது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224057
  21. 02 Sep, 2025 | 12:51 PM சீனாவில் நடைபெறவுள்ள 16 வயதுக்குட்பட்ட டியான்யூ லியூபங் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட அணியும் பங்குபற்றவுள்ளது. இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட திறன்காண் தேர்வின்போது 16 வயதுக்குட்பட்ட பூர்வாங்க இலங்கை பாடசாலைகள் குழாத்தில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த என். கெஸ்ரோன், கே. ஜெனிஸ்ரன் ஆகிய இருவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். திறன்காண் தேர்வின்போது அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் 16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 16 வயதுக்குட்பட்ட டியான்யூ லியூபங் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி இம் மாதம் 20ம் திகதியிலிருந்து 28ம் திகதிவரை நடைபெறவுள்ளது. இப் போட்டிக்கான மேலதிக பயிற்சிகள் கொழும்பில் இம் மாதம் 4ம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளது. இம் மாணவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் இருந்து தமது கல்வி கற்றுவருகின்ற நிலையில் இந்த மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் அதிபர் ஊடாக உதவிகளை வழங்கி அந்த மாணவர்களின் திறமைக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உதவுமாறு பாடசாலை சமூகம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224010
  22. சூடானில் ஒரு கிராமத்தையே சூறையாடிய பாரிய நிலச்சரிவு; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு 02 Sep, 2025 | 08:05 AM சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் வசித்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரே ஒருவர் மாத்திரமே உயிர்தப்பி இருக்கிறார். சூடானில் அல் புர்ஹான் தலைமையிலான இராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எப் துணை இராணுவ படைக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது. 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் இரு தரப்பினர் இடையே கடும் யுத்தம் இடம்பெற்று வருகிறது. இந்த யுத்தத்தில் அப்பாவி மக்கள் உள்பட இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். மோதலை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. உள்நாட்டு போரால் கோடிக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து உள்ளனர். இந் நிலையில், சூடான் விடுதலை இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மர்ரா மலையில் உள்ள டார்பர் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த பகுதியில் திடீரென பாரிய நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி, 1000 பேர் பலியாகி இருக்கின்றனர். ஒரே ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். இந்த தகவலை சூடான் விடுதலை இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடும் சேதத்தை சந்தித்துள்ள இப்பகுதியில் சடலங்களை மீட்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் ஐ.நா. சபை மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று சூடான் விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கிராமமே முற்றிலும் தரைமட்டமாகி விட்டதாக சூடான் விடுதலை இயக்கத்தை முன்னின்று நடத்தி வரும் அப்டேல்வாஹித் முகமது நூர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலச்சரிவில் கிராமமும், அங்குள்ள வீடுகளும் மண்ணில் புதைந்துள்ளன. ஏராளமான பெண்கள், குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கிராமமே முற்றிலும் அழிந்துவிட்டது. இவ்வாறு அப்டேல்வாஹித் முகமது நூர் கூறி உள்ளார். https://www.virakesari.lk/article/223982
  23. கிளிநொச்சியில் விதை தென்னந்தோட்டம் ஜனாதிபதி அநுரவினால் ஆரம்பிப்பு 02 Sep, 2025 | 10:14 AM கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னந் தோட்டத்தை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செவ்வாய்க்கிழமை (02) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனும் கலந்துகொண்டார். வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன இணைந்து இதனை நிறுவியுள்ளன. சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் துறைசார் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, கடற்றொலில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராசா, க.இளங்குமரன் ஆகியோரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/223989
  24. Published By: Vishnu 02 Sep, 2025 | 03:20 AM ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான திறப்புவிழா கற்களில் நல்லாட்சிக்கு அவசியமான வெளிப்படைத்தன்மையும் தகவல் அறிவதற்கான சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது. ஆகவே அக் கற்கலில் காணப்படும் தவறுகள் உரியவாறு மறுசீரமைக்கப்படுவது மக்களின் தகவல் அறிந்து கொள்வதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் என்பதுடன் அரச நிதி செலவிடப்படுவதன் வெளிப்படைத் தன்மையினையும் அதிகாரிக்கும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 1ஆம் திகதி திங்கட்கிழமை யாழிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கடவுச்சீட்டு அலுவலகம் மற்றும் விளையாட்டுத்திடல்இ துறைமுகம் என்பவற்றின் ஆரம்பப் பணிகளை மேற்கொண்டார். அவரினால் கடந்த ஆட்சியாளர்களைப் போல் ஆரம்ப நிகழ்வுகளுக்கு பெரும் பணம் செலவிடப்படாமைஇ எளிமையான முறையில் மேற்படி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டமையை நாம் வரவேற்கின்றோம். எனினும் நல்லாட்சித்தத்துவம் மீறப்பட்டுள்ளது. இவ்விடத்தில் திறப்பு விழாக் கற்களில் மக்களின் பணம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச நிதி என்பது மக்களின் பணம் ஆகும். அதனை தொகைகளைக் குறிப்பிடாது குறிப்பிட்டதனை நாம் அறிவார்ந்த பார்வையில் விசேடமான மாற்றம் என்று கூற முடியாது. அரச நிதியில் எவ்வளவு தொகை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது என்பது கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படாமல் விடப்பட்டமை அரசின் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றது. நிதி செலவிடலில் தொகைகள் வெளியிடப்படும் போதே மக்களின் நிதி காத்திரமாகப் பயன்படுத்தப்ப்ட்டதா என பொதுமக்களால் விளங்கிக் கொள்ள முடியும். ஆகவே மக்கள் தகவல்களை பெறுவதற்கான வழிமுறையை இலகுபடுத்தவதில் அரசாங்கம் தோல்விகண்டுள்ளது கவலையளிக்கின்றது. பொது நிதி தொடர்பில் பொறுப்புச் சொல்வதற்கான அரசியல் பொருளாதார ரீதியானதும் நல்லாட்சியின் அளவு கோலுக்கான கல்விசார் அடிப்படையுமாகும். இலங்கை போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் திட்டங்களை ஆரம்பிப்பதும் பின்னர் கைவிடுவதும் சகஜமாகும். அவ்வாறான நிலைக்கு போதுமான நிதித்திட்டமிடல் இன்றி அபிவிருத்திகளை அரசியல் ரீதியில் ஆரம்பிப்பதும் ஒருகாரணமாகும். அடுத்து மேலதிக நிதியின்றியும் திட்டங்கள் தடைப்படுகின்றன. சில திட்டங்கள் சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமையினால் தோல்வி அடைகின்றன. அவ்வாறான நிலையில் அப்படியாக தோல்வியடையும் கட்டுமாணங்கள் பற்றி கணக்காய்வு மேற்கொள்ளப்படும் அதேவேளை மக்களின் தீர்ப்பிற்கு அரசியல் தலைவர்கள் முகங்கொடுக்க வேண்டும் என்பது சனநாயக சம்புரதாயம். ஆகவே ஜனாதிபதின் பெயர் குறிப்பிடப்பிட்டால் திட்டத்தின் வெற்றி தோல்விகள் பற்றி மக்கள் மதிப்பிடுவது இலகுபடுத்தப்படும். திட்டங்களின் வெற்றி தொல்விகளின் பொறுப்புக்கூறலை வரலாற்று ரீதியில் தலைவர்கள் பெறுவர்கள் என்ற நியதியை உணர்த்தும். ஆகவே தலைவர்கள் சரியான நிபுணத்துவத்துடன் செயற்படுவதற்கு அது வழிநடத்தும். ஆகவே இவைகள் ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்ட கற்களில் மீறப்பட்டுள்ளன. எனவே இதுபற்றி அரசாங்கம் கவனத்தில் எடுத்து அவ் திறப்புவிழக்கற்களின் அருகில் நிதி செலவு அல்லது ஒதுக்கம் பற்றி வெளிப்படுத்தி உதவவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/223980
  25. நிலத்தை தோண்டும் போது எம்மவர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெறும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் சர்ச்சைக்குரியதாக உள்ளது - ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Published By: Digital Desk 3 01 Sep, 2025 | 04:34 PM (இராஜதுரை ஹஷான்) நிலத்தை தோண்டும் போது எம்மவர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெறும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். மறைப்பதற்கு ஏதும் எம்மிடமில்லை. இனிவரும் காலங்களில் இலங்கையில் இவ்வாறான நிலை ஏற்படக்கூடாது. கொடூரமான அனுபவங்கள் மீண்டும் தோற்றம் பெறாத வகையில் அவை நினைவுகூரப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அங்கு உரையாற்றுகையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது, எமது மீனவர்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும். இலங்கையின் பிரதான கேந்திரமையமாக கச்சத்தீவு காணப்படுகிறது. கச்சத்தீவு இன்று பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. நாட்டின் ஆட்புல எல்லைகளை பாதுகாத்து அவற்றை எதிர்கால தலைமுறையினருக்கு வழங்குவது எமது பொறுப்பாகும். அந்த பொறுப்பை நிறைவேற்றும் கடப்பாடு எமக்கு உண்டு. எமது தீவு, நிலம்,ஆகாயம் அனைத்தும் எமது மக்களுக்குரியது. கச்சத்தீவு விவகாரத்தில் எவ்வித அழுத்தங்களுக்கும் நாங்கள் அடிபணிய போவதில்லை. https://www.virakesari.lk/article/223947

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.