Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. சித்தாந்த வினா விடை – அருணைவடிவேல் முதலியார் (சித்தாந்த ஞானம் பெற்ற நல்லாசிரியர் ஒருவரிடம், தேடல் உள்ள நல்மாணவன் ஒருவன் சென்று, வணங்கி அவரிடம் சைவம் பற்றிய உண்மைப் பொருளை கேட்டு தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செல்கிறான். அவன் பலவாறாக கேள்விகள் கேட்க அதற்கு அந்த ஆசிரியர் விடை அளிப்பது போல் அமைந்தது தான் இந்த நூல். இந்த மொத்த நூலின் அமைப்பே கேள்வி பதில் என்ற முறையில் அமைந்தது. 450 பக்கங்கள் உள்ள இந்த நூலை சைவ சிந்தாந்த பேரறிஞர் அருணைவடிவேல் முதலியார் 1975 ல் எழுதியுள்ளார்.  இந்த நூலை நவீன மொழி நடைக்கு ஏற்றவாறு, அதே நேரம் மூலக்கருத்து மாறாமல் மறு ஆக்கம் செய்து தொடராக வெளியிடப்படுகிறது. இந்த நூலை முழுவதும் படித்து முடிக்கும் போது, சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான அனைத்துக் கருத்துக்களும் தெளிவு பெறும்) அருணைவடிவேல் முதலியார் மாணவன் : ஆசிரியரே, ‘ஞானநூல்கள்' என்று உலகில் எத்தனையோ நூல்கள் அளவில்லாமல்  கிடைக்கின்றன. அவைகள் அனைத்தையும் படித்து தெளிவது எனக்கு கடினம். எனவே அதன் முடிந்த முடிவை தெரிவிக்க வேண்டுகிறேன். ஆசிரியர் : ஞான நூல்களின் முடிந்த பொருள்களை உணரவிரும்பும் நல் மாணவனே கேள்; 'வேதம், ஆகமம், பொதுமறை (திருக்குறள்) திருமுறை' என்னும் முதல் நூல்களும்,   ‘ஸ்மிருதிகள், புராணங்கள், அறுபத்து நான்கு கலைகள், உபாகமங்கள், பண்டைத் தமிழ் இலக்கியங்கள், அறநூல்கள், தல புராணங்கள், என்னும் வழி நூல்களும்,  'சிட்சை, கற்பம், சோதிடம், வியாகரணம், முத்தமிழ்களின் இலக்கண நூல்கள், உந்தி களிறு முதலிய மெய்நூல்கள்' என்னும் சார்பு நூல்களும்,  'பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருள்களின் இயல்புகளை விளக்குவதையே நோக்கமாக உடையன. இதனை., “பலகலை ஆகம வேதம் யாவையினும் கருத்துப் பதிபசுபா சந்தெரித்தல்” என்று, சந்தான குரவர் நால்வருள் நான்காவதாக விளங்கும் கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியார் தமது சிவப்பிரகாச நூலில் தெரிவிக்கிறார். எனவே "பதி, பசு, பாசம்" என்னும் முப் பொருள்களை முறைப்படி உள்ளவாறு உணர்தலே ஞான நூல்களின் முடிந்த முடிபை உணர்வதாகும். மாணவன் : எல்லா நூல்களும் 'பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருள்களின் இயல்பையே கூறுகிறது என்றால் உலகில் மத வேறுபாடுகள் தோன்றக் காரணம் என்ன? ஆசிரியர் : எல்லா நூல்களின் கருத்து முப்பொருள் இயல்பைக் கூறுவதாக இருந்தாலும், அந்நூல்களைச் செய்த அனைவரும் ஒரு தரத்தினர் அல்லர்; பல்வேறு தரத்தினராவர். "முதல்வழி சார்பென நூல்மூன்றாகும்”  என்ற நன்னூல் இலக்கணப்படி மூன்று வகையாகக் காணப்படும் நூல்களுள்,  முதல் நூலே, வினைகள் எல்லாம் நீங்கி விளங்கும் அறிவனாகிய இறைவனால் செய்யப்பட்டது.  அடுத்து தம் வயம் இழந்து இறைவனது அருள் வயப்பட்டு நின்ற அருளாளர் செயலெல்லாம் இறைவன் செயலே என்பதால், அவர்கள் செய்த நூல்களும் முதல் நூல்களேயாகும்.  இவ்வாறாக நாம் காணும்பொழுது,  முதல் நூல்கள் வடமொழியில் 'வேதம், சிவாகமம்' என்னும் இரண்டும், தமிழ் மொழியில் திருக்குறள், தேவாரம் முதல் திருத்தொண்டர் புராணம் வரை உள்ள பன்னிரு திருமுறைகளாகும். இவைகளை, 'முதல் நூல்கள் அல்ல' என மறுத்து வேறு சிலர் வேறு சில நூல்களையே முதல் நூல்கள் எனக் கொள்வர். மாணவன் : ஒவ்வொரு சாரார் ஒவ்வொரு நூலை, 'முதல் நூல்' என்று கொண்டு, மற்றவைகளை 'முதல் நூல் அல்ல' என்று மறுப்பார்களானால், 'உண்மை முதல் நூல் இது' என்பதனை எப்படி அறிவது? ஆசிரியர் : அதை அறிவது பொது மக்களுக்கு  அரிதுதான்; இருப்பினும் எந்த வித சார்பு நிலைகளுக்குச் செல்லாமல் நடுவு நிலைமையோடு இருந்து காண முயலும் அறிஞர்களுக்கு அது நன்றாக விளங்குவதாகும். மேலும் உண்மை நூல் என்பது, ஒரு நூலின் கருத்து எந்தவொரு இடத்திலும் மறுக்க முடியாமல் இருக்கிறதோ, வேறு எந்த நூலிலும் சொல்லாத உண்மையை விளக்குகின்றதோ, அதுவே உண்மை நூலாக இருக்க முடியும்.  அப்படி நடுநிலைமையாக காணும் அறிஞர் பலரும் வேதம் மற்றும் சிவ ஆகமங்களையே, 'உண்மை முதல் நூல்' என்கின்றனர். "வேதத்தை விட்ட அறம் இல்லை; வேதத்தில் ஓதத் தகும் அறம் எல்லாம் உள" "வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன் நூல்" எனத் திருமந்திரமும், “அருமறை ஆகமம் முதல் நூல், அனைத்தும் உரைக்கையினால்" என்று சிவஞான சித்தியாரும் கூறுகின்றன. மாணவன் : ‘உண்மை முதல் நூல் இது' என உணரும் முறையை அறிந்தேன். இனி அத்தகைய முதல் நூல் இருந்தாலும் மத வேறுபாடுகள் தோன்றியதன் காரணம் என்ன?  ஆசிரியர் : அதுதான் நான் முன்பே சொன்னபடி, முதல் நூலின் பொருளை உணர்கின்றவர் பலவாறாக இருக்கின்றனர். அதில் சிலர் முதல் நூலின் பொருளை தமக்கு ஒவ்வாது என்று கருதி அதற்கு மாறாக எதிர் நூல்கள் சிலவற்றை செய்தனர்.  அந்நூல்களை பின்பற்றித் தோன்றி வளர்ந்த மதங்கள், 'புறச் சமயங்கள்' எனப்படுகின்றன. அவை பௌத்தம், சமணம், மற்றும் 'உலகாயதம்' எனப்படும், 'நாத்திகமும்' வேதம் மற்றும்  சிவாகமங்களை இகழ்ந்து  நூல் செய்ததால் அதுவும் 'புறச்சமயம்' எனப்படும்.  மேலும் பலர், முதல்நூற் பொருளை 'நன்று' என்று உடன் பட்டாலும் , அப்பொருளை உணரும் முறையில் வேறுபட்டு, அதற்கு மாற்றாக, வழிநூல்களும், சார்பு நூல்களும் செய்து அந்நூல்களுக்கு வேறு வேறு வகையான உரைகளும் செய்தனர். அதனாலும் மத வேறுபாடுகள் மிகுவாயின. உண்மை முதல் நூலை உடன்பட்டு, அதற்குப் பொருள் காண்பதில் வேறுபட்ட மதங்களான இவைகளை 'அகச் சமயங்கள்' எனப்படுகின்றன. பொதுவாகச் சமயங்கள் இப்படி, 'புறம், அகம்' என இரண்டு வகையாகவே கூறப்பட்டாலும்  "புறப்புறம், புறம், அகப்புறம், அகம்"  என நான்காக வகுத்துக் கூறுவதே நுட்பமான முறை. சமயங்களை,'அறுவகைச் சமயம்' என்று தொன்றுதொட்டு கூறிவரும் மரபாக இருப்பதனால், இந்த நான்கு சமயங்களுக்கும் உள்ளே ஆறு வகையான சமயங்கள் உள்ளன.  அவற்றுள்  புறப்புறச் சமயங்கள் :- உலகாயதம், நால்வகைப் பௌத்தம், (மாத்தியமிகம், யோகாசாரம், வைபாடிகம், சௌத்திராந்திகம்) சமணம் என்பன. புறச் சமயங்கள்  :- தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், யோகம், சாங்கியம், பாஞ்சராத்திரம் அல்லது வைணவம்' என்பன. அகப்புறச் சமயங்கள்  :- பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என்பன. அகச்சமயங்கள் :- பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவர அவிகாரவாத சைவம், நிமித்த காரண பரிணாம வாத சைவம் அல்லது சிவாத்துவித சைவம்' என்பன.  'சுத்த சைவம்' என்பதும் இதில் ஒரு பிரிவாக உண்டு. இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டது சித்தாந்த சைவம்; இதன் கொள்கையே ‘சைவ சித்தாந்தம்' எனப்படுகின்றது. இவைகளுள் புறப் புறச் சமயங்களையும், புறச்சமயங்களையும் அருணந்தி சிவாசாரியர் தமது சிவஞான சித்தியார் நூலில் "பரபக்கத்தில்" மறுத்தார். அகச்சமயங்களை உமாபதி சிவாசாரியர் தமது "சங்கற்ப நிராகரணத்துள்" மறுத்தார். அகப் புறச் சமயங்களில் தத்துவக் கொள்கை மிகுதியாக இல்லை. அதனால், அவைகளை ஒரு தனிப் பகுதியில் எடுத்து எந்த நூலிலும் மறுக்கவில்லை. மாணவன் : எந்த முறையை பின்பற்றிச் சமயங்கள், புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என்று நான்காக வகுக்கப்படுகின்றன? ஆசிரியர்:  'வேதம், சிவாகமம்' என்னும் இரண்டு முதல் நூல்களளையும் உடன்படாதவாறு  புறமாக இருப்பதால் அவைகள், 'புறப்புறச்சமயம்' எனப்பட்டன.  வேதத்தை உடன்பட்டுச் சிவாகமத்தை உடன்படாதவை 'புறச்சமயம்' எனப்பட்டன.  வேதம் மற்றும் சிவாகமங்களை உடன்படினும் அவைகளைப் பொதுவாகக் கொண்டு, பிற நூல்களைச் சிறப்பாகப் போற்றுவன 'அகப்புறச் சமயம்' எனப்பட்டன.  வேத சிவாகமங்களையே சிறப்பாகப் போற்றினாலும் குருவருள் இல்லாததால் அவற்றிற்கு உண்மைப் பொருள் காண முடியாமல் தத்தமக்குத் தோன்றியவாறு பொருள் உரைப்பன ‘அகச்சமயங்கள் எனப்பட்டன .  சீகண்ட பரமசிவன் திருக்கயிலையில்- தென்முகக் கடவுளாய் - ஆசிரியக் கோலமாய்க் கல்லால மர நிழலில் எழுந்தருளியிருந்து நந்தி பெருமானுக்கு உண்மை ஞானத்தை உபதேசித்து, வேத சிவாகமங்களின் உண்மைப் பொருளையும் தெளிவிக்க, அவ்வுபதேசத்தின் வழி வந்த சித்தாந்த சைவமே, வேத சிவாகமங்களின் உண்மைப் பொருளை உணர்ந்து அதனை,  ‘சுருதி, யுக்தி,அனுபவம்' என்னும் மூன்றாக பிரித்து பொருள் பொருந்தி விளக்குகிறது.  மாணவன் : புறப்புறம் முதலாகச் சொல்லப்படும் மதங்களுக்கு நூல்கள் உள்ளனவா? ஆசிரியர் : உள்ளது. உலகாயதத்திற்குத் தேவகுருவாகிய வியாழன் ஒரு காலத்தில் இந்திரனை மயக்கும் பொருட்டுச் செய்த நூல், முதல் நூல் என்று கந்த புராணத்திற் சொல்லப் பட்டது. அப்படி ஒரு நூல் வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், பலர் அக்கொள்கையை தமது நூலில் கூறினார்கள். பௌத்தத்திற்கு ஆதி புத்தர் செய்த பிடகாகமம் என்பது முதல் நூல். இவரை 'கௌதம புத்தர்' என்று இக்காலத்தினர் கூறினாலும், பௌத்த மதத்தினர் அவ்வாறு கூறுதல் இல்லை. மேலும் ‘ஆதிபுத்தர், திரிபுரத்தவரை மயக்கத்தோன்றிய திருமாலின் அவதாரமே, என்பது வேத மதங்களின் கூற்று. சமண மதத்திற்கு அருகக் கடவுள் அல்லது ஜினக்கடவுள் செய்த பரமாகமம் முதல் நூல். அஃது இப்பொழுது கிடைப்பதாகத் தெரியவில்லை. தமிழில் மணிமேகலைக் காப்பியத்தை, 'பௌத்த சமயத் தத்துவ நூல்' என்றும், நீலகேசிச் சிறுகாப்பியத்தை, 'சமண சமயத் தத்துவ நூல்' என்றும் கூறலாம். பிற நூல்களிலும் இவற்றின் தத்துவங்கள் காணப் படுகின்றன. தருக்க மதம், ‘வைசேஷிகம், நையாயிகம்' என இருவகைப் படும். அவற்றிற்கு முதல் நூல்கள் காணப்படாவிட்டாலும், வேறு பல நூல்கள் வடமொழியில் உண்டு. பூர்வ மீமாஸ்சைக்கு ஜைமினி முனிவர் செய்த முதல் நூல் உண்டு. அதற்கு உரை தோன்றிய பின், அம்மதம் 'பாட்டம், பிரபாகரம்” என இரண்டாகப் பிரிந்து விட்டது. மேலும் வேதம் ‘கிரியா காண்டம், ஞான காண்டம்' என்னும் இரு பெரும் பிரிவுகளை உடையது, இடையில் உள்ள உபாசனாகாண்டம் கிரியா காண்டத்துக்குள் அடங்கும். 'இருகாண்டத்துள் முற்பகுதியாகிய கிரியா காண்டமே சிறந்தது' என்னும் கொள்கையில் தோன்றியதே மீமாஸ்சை மதம். இது கிரியைகளின் மீது உடன் பட்டாலும், கடவுளை உடன் படுதல் இல்லை. கிரியையே பயன் கொடுக்கும்; ஆகையால் கர்மமே கருத்தா' என்று கூறுவது. இதை மறுத்து ஞான காண்டத்தையே வற்புறுத்தி வேத வியாசர் செய்த ‘உத்தரமீமாஸ்சை' எனப்படும் பிரம்ம சூத்திரநூலின் வழியே, 'ஏகான்மவாதம்' (அல்லது அத்வைதமதம் அல்லது வேதாந்த மதம்) என்பது தோன்றியது, எனினும், அந்த நூலையே அடிப்படையாகக் கொண்டு, 'சிவாத்துவிதசைவம், விசிட்டாத்வைதம், த்வைதமதம்'  (மத்துவ மதம்) என்பவை தோன்றின. முறையே இவை நான்கிற்கும் சங்கரர், நீலகண்டர், இராமானுஜர், ஆனந்த தீர்த்தர் என்போர் ஆசிரியராவர். இராமானுஜர், மதமே பாஞ்சராத்திரம். இது, ‘பாஞ்சராத்திரம்' என்னும் வைணவ ஆகமத்தின் வழியாததால்  இப்பெயர் பெற்றது.  இதுபோல, சைவ சித்தாந்தத்தை இன்று இனிது விளக்கும் நூல்கள் தமிழில் உள்ளன. அவை "உந்தி, களிறு முதலிய பதினான்கு நூல்களாகும். அவை 'சித்தாந்த சாத்திரம்' எனப்படுகின்றன. கட்டுரையாளர்கள்: ஆசிரியர் குழு https://www.siddhantham.in/2024/12/blog-post_17.html
  2. இலங்கையின் மத சுதந்திர நிலைப்பாட்டை ஆராய்தல் February 11, 2015 Photo, AP Photo/Eranga Jayawardena வரலாற்றை நோக்கினால் சட்ட ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இன, மதக் குழுக்களுக்கு இணக்கமாகவே இலங்கை செயற்பட்டு வருகின்றது. அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 9 இன் கீழ் பௌத்த மதத்திற்கு “முதன்மையான இடம்” அளிக்கப்பட்டாலும், உறுப்புரைகள் 10 மற்றும் 14(1)(உ) ஊடாக மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான உரிமை பாதுகாக்கப்படுகின்றது. இலங்கை உச்ச நீதிமன்றம் மத சுதந்திரத்தை முழுமையான உரிமையாக அடையாளம் கண்டுள்ளது (உறுப்புரை 10). மேலும், பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் கூட அனைவருக்கும் சமத்துவத்தையும் மத சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. மத சுதந்திரத்திற்கு அரசியலமைப்பு உத்தரவாதம் காணப்படுகின்றபோதும், தேசியப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொது சுகாதாரம், ஒழுக்கம் அல்லது மற்றவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் போன்றவை காரணமாக ஒருவர் தனது மதத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமானது (உறுப்புரை 14(1)(உ) பல சட்டக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுகின்றது. இருப்பினும், நீண்டகாலமாக நிலவிவரும் பல்வேறு போக்குகள் தொடர்ந்தும் மத சுதந்திரத்தைக் குறைத்து மதிப்பிட்டு, சட்டக் கொள்கை, அரச நடவடிக்கை என இரண்டையும் கையாள்கின்றன. சமூகத்தின் பிரச்சினைகளைத் தமது நன்மைக்காகப் பயன்படுத்தும் அரசியல் மற்றும் மத ரீதியான கடும்போக்குவாதக் குழுக்கள் மற்றும் அதிகரித்து வரும் மத உணர்வுகள் போன்றவை அதேயளவு தாக்கம் செலுத்தும் ஏனைய காரணிகளாக உள்ளன. தீவிர தேசியவாத பௌத்த இயக்கங்கள், சுவிசேஷ அமைப்புடன் அடையாளம் காணப்படும் குறிப்பிட்ட கிறிஸ்தவக் குழுக்களின் நடைமுறைகள், தீவிர இஸ்லாமிய மற்றும் இந்து குழுக்கள் மத சுதந்திரத்தையும் பன்மைத்துவத்தையும் குறைத்து மதிப்பிடும் சூழலுக்குக் காரணமாகின்றன. அரச மற்றும் அரசு சாரா பங்காளர்களிடையே வேரூன்றிக் காணப்படும் இத்தகைய போக்குகளின் வடிவங்கள் குறித்த “இலங்கையில் மத சுதந்திரத்தின் நிலைப்பாடு: ஆண்டறிக்கை 2024” என்ற தலைப்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டணியின் அண்மைய அறிக்கையின் முடிவுகளை இக்கட்டுரை சுருக்கமாக முன்வைக்கின்றது. மேலும், இலங்கையில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான சூழலை ஆதரிக்கும் அல்லது குறைத்து மதிப்பிடும் சம்பவங்களையும் முன்னேற்றங்களையும் இக்கட்டுரை ஆராய்கின்றது. 2024 முதல் 2025 வரை இடம்பெற்ற முன்னேற்றங்களில் கவனம் செலுத்தும் அதேநேரம் எதிர்காலத்திற்கான கண்ணோட்டத்தையும் தருகின்றது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மத சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளித்து, அதன் பாதுகாப்பை நிர்வாகம் மற்றும் கொள்கை முடிவுகளில் ஒருங்கிணைப்பதற்கு முந்தைய நிர்வாகங்களுடன் ஒப்பிடும்போது அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிகின்றது. தீவிரமான குழுக்களால் முன்வைக்கப்படும் தவறான மத விளக்கங்களுக்கு எதிரான ஆலோசனைக் குழுக்களை புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் ஊடாக 2025 அக்டோபரில் அரசாங்கம் நியமித்தது. “நான்கு முக்கிய மதங்கள் பற்றிய திரிவுபடுத்தப்பட்ட மற்றும் தவறாக வழிநடத்தப்படும் கருத்துகளைப் பரப்புவது குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு” பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறான சமீபத்திய முன்னேற்றங்களின் பின்னணியில், தற்போதைய இந்த அரசியல் சூழல் இவ்வாறான விவாதங்களை முன்னெடுப்பதற்குப் பொருத்தமானதாகவும் நேரத்திற்கேற்றதாகவும் உள்ளது என்ற புரிதலுடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அரசியல் சூழலை மேம்படுத்துதல் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின்போது பௌத்த மதத்தின் பங்கு குறித்த அரசியல் செய்திகளில் NPP கொண்டிருந்த மாற்று நிலைப்பாடுதான் அதன் மீதான நம்பிக்கை அதிகரிக்கக் காரணமான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்காக பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களின் நலன்களில் கவனம் செலுத்தாமல், மத அடையாளங்களில் பெரிதும் நம்பியிருந்த முந்தைய தேர்தல் பிரச்சாரங்களைப் போலல்லாமல், NPP இன் 2024 பிரச்சாரம் அத்தகைய விமர்சனப் போக்கிலிருந்து விலகிக் காணப்பட்டது. இது அனைவரையும் உள்ளடக்கிய, வரவேற்கத்தக்க அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய சாதகமான மாற்றத்தைக் குறிக்கின்றது. ஒரு காலத்தில் தேர்தலின்போது வாக்காளர்களைக் கவர்ந்த பிளவை ஏற்படுத்தும் சொற்பிரயோகங்கள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2024 இல் பெருமளவில் குறைந்து போயிருந்தன. இந்த மாற்றம் மத சுதந்திரத்திற்கு மிகவும் உகந்த சூழலுக்கான தொனியை அமைக்க உதவியுள்ளதுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) போன்ற முக்கிய அரச நிறுவனங்கள் சுயாதீனமாகச் செயல்படவும் பயனுள்ள தலையீடுகளை மேற்கொள்ளவும் உதவுகின்றது. HRCSL மத சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்திவருவதுடன் மத சுதந்திரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரச தலையீடுகளையும் கண்காணித்து வருகின்றது. உதாரணமாக, 2024 ஜூன் மாதம் திருகோணமலை சாஹிரா கல்லூரியில் காதுகளை மூடும் வகையில் ஆடை அணிந்திருந்தமை காரணமாக 70 மாணவர்களின் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டதை ஆணைக்குழு விசாரித்தது. கண்காணிப்பாளர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டமை விசாரணையில் தெரியவர முடிவுகளை நிறுத்தி வைக்கும் முடிவு நியாயமற்றது எனத் தெரிவித்தது. மார்ச் 2018 இல் இடம்பெற்ற திகன கலவரம் தொடர்பான விசாரணை குறித்த அறிக்கையையும் 2025 செப்டம்பரில் HRCSL வெளியிட்டது. அந்த நேரத்தில் சமூக ஊடகங்கள் குறிப்பாக/ பேஸ்புக் மூலம் பரப்பப்பட்ட தவறான தகவலும் வெறுப்புப் பேச்சும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறையைத் தீவிரப்படுத்தியதில் கொண்டிருந்த பங்கினை இந்த அறிக்கை விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. சட்டங்கள், கொள்கைகள் மற்றும் மத சுதந்திரம் நாட்டின் நிர்வாகத்துடன் தொடர்புடைய பல முக்கிய சட்டங்கள் மத சுதந்திரத்தைப் பாதிக்கின்றன அல்லது அதனால் பாதிக்கப்படுகின்றன. அத்துடன், ஏனைய அடிப்படை உரிமைகளிலும் இவை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இத்தாக்கத்தை சட்டம் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது அல்லது அந்தச் சட்டத்தின் விதிகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதில் காணலாம். தண்டனைச் சட்டக்கோவை, 2007ஆம் ஆண்டின் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டம் (ICCPR சட்டம்), 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA), மற்றும் சமீபத்திய 2024 ஆம் ஆண்டின் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் (OSA) ஆகியவை அத்தகைய சட்டங்களின் ஒரு தொகுப்பாகும். இச்சட்டங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகத் தோன்றினாலும், அவற்றில் உபயோகிக்கப்பட்டுள்ள பரவலான மற்றும் தெளிவற்ற சொற்கள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வழிவகுத்துள்ளன. பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களை அநியாயமாகக் குறிவைக்கும் முறையில் அமைகின்றன. சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை இலங்கை அங்கீகரித்துடன், தேசியச் சட்டத்தில் இன்னும் அங்கீகரிக்கப்படாத சில ICCPR பிரிவுகளுக்கு உள்நாட்டு சட்டரீதியான அமல்படுத்தலை வழங்கும் நோக்கில் ICCPR சட்டத்தையும் இயற்றியது. தண்டனைச் சட்டக்கோவை மற்றும் ICCPR சட்டத்தில் உள்ள விதிகள் மதத்தை அவமதிப்பதாகக் கருதக்கூடிய வெளிப்பாடுகளைக் குற்றமாக்குவதன் மூலம் மத உணர்வுக்கு சிறப்பு பாதுகாப்பை வழங்குகின்றன என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவை “நிந்தனைக்கு எதிரான நடைமுறைத் தடையை” உருவாக்குவதாக விபரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய கட்டுப்பாடுகளின் பரந்த நோக்கம், தேவை மற்றும் விகிதாசாரத்தின் சர்வதேச அளவுகோல்களைப் பூர்த்திசெய்யாமல் அளவுக்கு மீறிய தணிக்கையை ஏற்படுத்தும் ஆபத்தை விளைவிக்கின்றது. 2024 மே மாதத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ICCPR சட்டத்தின் பிரிவு 3 இன் தவறான பயன்பாட்டைச் சுட்டிக்காட்டியது. திருகோணமலையில் நினைவேந்தல் நிகழ்வொன்றில் ஈடுபட்டதற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக அதன் பயன்பாட்டைச் சுட்டிக்காட்டியது. ICCPR சட்டத்தின் தவறான பயன்பாடு குறித்த நிலைப்பாட்டை ஆணைக்குழு மீண்டும் 2025 மே மாதம் வலியுறுத்தியது. மே மாதத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் அமைதியான நினைவேந்தல் நிகழ்வுகளை குற்றமாக்குவதையோ தடுப்பதையோ பொலிஸார் நிறுத்த வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக அவற்றை அரசியலமைப்பு மற்றும் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் தமிழ் சமூகத்திற்குக் கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ உரிமைகளாக முறையாக அங்கீகரித்து பாதுகாக்க வேண்டும் என்றும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் OSA ஆகியவை குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பிற்போக்குத்தனமான விதிகளைக் கொண்டிருப்பதாகவும் இன – மதக் குழுக்களைத் தேர்ந்தெடுத்துக் குறிவைப்பதாகவும் நீண்ட காலமாக விமர்சிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான அரசாங்க உறுதிமொழிகள் இருந்தபோதிலும், அது கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாக 2025 ஆகஸ்ட் மாதம் ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது குறிப்பிட்டார். அதைத் தற்காலிகமாக தடைசெய்யுமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். அதற்கு முன்னர், 2025 ஏப்ரல் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் OSA ஆகிய இரு சட்டங்கள் குறித்து கவலைகளை எழுப்பியிருந்தது. இச்சட்டங்கள் வர்த்தகத்துடன் தொடர்புடைய முடிவுகளில் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என்பதையும், குறிப்பாக GSP+ வரிச்சலுகை திட்டத்தில் தொடர்ந்து தகுதி பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்திருந்தது. அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, NPP அரசாங்கம் செப்டம்பர் 2025 இல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்திலும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்விலும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தாலும் இதேபோன்ற கேள்விகள் எழுந்துள்ளன. OSA இன் பிரிவு 16 இல் மத உணர்வுகளைச் சீற்றப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு குழுவின் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் அல்லது அவமதிக்க முயற்சிக்கும் எந்தவொரு தவறான அறிக்கையையும் ஒன்லைனில் வெளியிடுவது குற்றமாக வரையறுக்கப்படுகின்றது. ஆயினும், அந்த நோக்கம் எவ்வாறு நிரூபிக்கப்படும் என்பதற்கான தெளிவான அளவுகோல்களைச் சட்டம் வழங்கவில்லை. அதேபோன்று, பிரிவு 15, தவறான அறிக்கைகள் மூலம் சட்டபூர்வமான மதக் கூட்டங்களுக்கு இடையூறு விளைவிப்பதைக் குற்றமாகக் கருதுகின்றது. இவ்வாறு தெளிவில்லாமல், மிகவும் விரிவாக எழுதப்பட்ட விதிகள், சட்டபூர்வமான கருத்து வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. பிரிவு 16 ஐ ரத்து செய்வது உட்பட சட்டத்தில் திருத்தங்களை NPP அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 2025 இல் பொதுமக்களின் ஆலோசனைக்காக OSA ஐ முன்வைத்துள்ளமை அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் குறிக்கின்றது. பாலின சமத்துவச் சட்டமூலத்தின் சிறப்புத் தீர்மானம் கடந்த ஆண்டு நிகழ்ந்த மற்றொரு முக்கியமான முன்னேற்றம் ஆகும். மத சுதந்திரம் அல்லது நம்பிக்கையை மேம்படுத்துவதாகக் கூறப்படும் சில விதிகள் மற்றும் கொள்கைகள் சில நேரங்களில் கருத்துச் சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவம் போன்ற பிற உரிமைகளை மீறுவதற்கு எவ்வாறு பங்களித்துள்ளன என்பதை இது நிரூபித்தது. இந்தச் சட்டமூலம் ஏப்ரல் 17, 2024 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சட்டமூலத்தில் மதம் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இது வேகமாக மத சுதந்திரம் குறித்த விவாதங்களின் மையப் புள்ளியாக மாறியது. இது இயற்றப்பட்டால், மதப் பணிகளில் இணைய விரும்புவோரின் சேர்க்கையில் மத நிறுவனங்கள் (சாசனம், மடங்கள், பிக்கு பல்கலைக்கழகங்கள், பிரிவேனாக்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் உட்பட) பாலின அடிப்படையிலான அளவுகோல்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பாலினத்திற்கு அப்பாற்பட்டு, ஓரினச்சேர்க்கையைக் குற்றமற்றதாக்குதல் மற்றும் ஒரே பாலினத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்குதல் போன்ற தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலம் ஏற்கனவேயுள்ள மத போதனைகள் மற்றும் நடைமுறைகளுடன் முரண்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இறுதியில், இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் உறுப்புரை 10 (சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரம்) மற்றும் உறுப்புரை 14(1)(உ) (மதம் அல்லது நம்பிக்கையின் வெளிப்பாடு) ஆகியவற்றை மீறுவதாகக் கூறியது. பௌத்தத்தைப் பொறுத்தவரை, “முதன்மையான இடம்” என்று கூறும் உறுப்புரை 9 ஐ மீறுவதாக நீதிமன்றம் மேலும் கண்டறிந்தது. தொல்பொருள் பாதுகாப்பிடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகள் அண்மைக் காலங்களில் வவுனியாவில் உள்ள வெடுக்குநாரி மற்றும் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலை போன்ற மதத் தலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் உள்ளூர் இந்து சமூகங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. 2018ஆம் ஆண்டில் இந்த இரண்டு இடங்களும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகக் குறிப்பிடப்பட்டதுடன், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொல்பொருள் திணைக்களம், இராணுவம் மற்றும் பௌத்தத் துறவிகள் ஆகியோரின் செயல்பாடுகள் இங்கு அதிகரித்தன. தொல்பொருள் கட்டளைச் சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டங்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டன. அவை சிறுபான்மை சமூகங்களைக் குறிவைத்து மத சுதந்திரப் பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிடுகின்றன. வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள காணிகள் அல்லது கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் தொடர்பான பல விதிகள், குறிப்பாக 1940 ஆம் ஆண்டின் 9 ஆம் இல. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) பிரிவுகள் 6, 8, 18 மற்றும் 31 ஆகியவை இன – தேசியவாத நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுக்க இலக்கு வைக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் 2024 இல் வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளில் ஈடுபட முயன்ற பல இந்து பக்தர்கள் மற்றும் பூசாரிகள் கைது செய்யப்பட்டனர். இது அந்த இடத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி, போராட்டங்களுக்கு வழிவகுத்தது. ஜூன் 2025 இல் ஒரு முக்கியமான நீதிமன்றத் தீர்ப்பில், குருந்தூர்மலையைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை முல்லைத்தீவு நீதிமன்றம் விடுவித்தது. வழக்கு விசாரணையின் போது, சர்ச்சைக்குரிய காணி தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானது என்று அறிவித்து எந்த வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதை அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன் விளைவாக, விவசாயிகள் மீதான வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் ஆதரவுடன் அந்தப் பகுதியில் தொல்பொருள் தளமாகக் கருதி செயல்பாடுகள் இடம்பெற்று வந்தபோதிலும், சட்டப்பூர்வ அறிவிப்பு இல்லாததால் சர்ச்சைக்குரிய நிலத்தின் குறைந்தபட்சம் ஒரு பகுதிக்கேனும் திணைக்களத்திடம் முறையான உரிமை இல்லை. இதேபோன்று, அம்பாறையில் உள்ள முள்ளிக்குளம் மலையில் தொல்பொருள் திணைக்களம் 1940ஆம் ஆண்டின் 9ஆம் இல. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 15 மற்றும் 16ஆம் பிரிவுகளைப் பயன்படுத்தி நிலத்தை தொல்பொருள் தளமாகக் கோரியது. இதன் மூலம் உள்ளூர் முஸ்லிம் சமூகம் மீண்டும் அப்பகுதியில் விவசாயத்தைத் தொடங்குவதைத் தடுத்தது. தொல்பொருள் கட்டளைச் சட்டத்திற்கு கூடுதலாக நகர்ப்புற மேம்பாட்டுப் பகுதிகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கும் 1946ஆம் ஆண்டின் 13ஆம் இல. நகர மற்றும் கிராமிய நிர்மாணக் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) பிரிவு 6(2) வடக்கு மற்றும் கிழக்கில் புத்த விகாரைகளைக் நிர்மாணிப்பதற்கு உதவும் வகையில் “புனிதப் பகுதிகள்” என்று அறிவிக்கத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில், இந்த மாகாணங்களில் உள்ள உள்ளூர் நீதிமன்றங்கள், சில சமயங்களில் இத்தகைய இன – தேசியவாத உந்துதல்களைத் தடுக்க முயற்சித்துள்ளன. இருப்பினும், நீதித்துறை அதன் பங்கை நிறைவேற்றினாலும் கூட அமுலாக்கம் நிச்சயமற்றதாகவே உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவது அரச இயந்திரத்தைப் பொறுத்தது ஆகும். இது பெரும்பாலும் பௌத்த மதகுருமார்கள் மற்றும் இராணுவத்துடன் நெருங்கிய இணக்கத்துடன் செயல்படுகின்றது. இக்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு அப்பால், 1950ஆம் ஆண்டின் 9ஆம் இல. காணி கையகப்படுத்தல் சட்டம், உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவிக்க அனுமதிக்கும் அவசரகால விதிமுறைகள், 1979ஆம் ஆண்டின் 23ஆம் இல. மகாவலி அதிகாரசபை சட்டம் மற்றும் 2005ஆம் ஆண்டின் 38ஆம் இல. சுற்றுலாச் சட்டம் போன்ற காணி தொடர்பான சட்டங்களும் இம்முயற்சிகளுக்கு துணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து நிலம் கையகப்படுத்தலுக்கான பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதுடன், அரசாங்கம் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வகையில் அதிக அதிகாரத்தை வழங்குவதுடன் மக்களுக்கு குறைவான அதிகாரத்தை வழங்கி சமமற்ற நிலையைத் தோற்றுவிக்கின்றது. இந்த நடவடிக்கை சமூக மட்டத்தில் சாதகமான குழுக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. அங்கு சிறுபான்மை மதக் குழுக்களுக்கு எதிரான விரோதம் பெரும்பாலும் உள்ளூர்வாசிகளால் தூண்டப்பட்டு, மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அரச அதிகாரிகளால் ஆதரிக்கப்படுகின்றது. சுவிசேஷ மற்றும் சுயாதீன தேவாலயங்கள், அதேபோன்று இந்து சமூகங்கள் அடிக்கடி இலக்கு வைக்கப்படுகின்றன. மத வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்வதைச் சுற்றியுள்ள தெளிவின்மை அதிருப்திக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இலங்கைச் சட்டம் அத்தகைய பதிவைக் கட்டாயப்படுத்தவில்லை என்றாலும், ஒன்றுகூடுவதைத் தடுக்க உள்ளூர் அதிகாரிகள் தெளிவற்ற வரையறுக்கப்பட்ட விதிகளைப் பயன்படுத்தியுள்ளனர். புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள், 2008, 2011 (2012 இல் ரத்து செய்யப்பட்டது) மற்றும் 2022 இல் புதிய மதத் தலங்களை நிர்மாணிப்பதற்கு அமைச்சின் ஒப்புதல் தேவை என்பதை அறிமுகப்படுத்தின. இந்தச் சுற்றறிக்கைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமுலாக்கம் பெரும்பாலும் கிறிஸ்தவர்களையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்கும் உரிமையையும் கட்டுப்படுத்தியுள்ளது. இலங்கையில் நிறுவப்பட்ட சபாத் இல்லம் எனப்படும் யூத மத நிலையங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. அவை சர்ச்சையில் சிக்கியிருந்தாலும், அரசாங்கத்தின் பாதுகாப்பால் அவை பயனடைந்துள்ளன. அண்மையில் சுதந்திர பாலஸ்தீன இயக்கத்தின் உறுப்பினர்கள் துன்புறுத்தப்பட்டதுடன் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சூழலில் இது நிகழ்ந்துள்ளது. மேலும் ‘இஸ்ரேலுக்கு எதிரானது’ எனக் கருதப்படும் செயற்பாடுகளில் ஈடுபட்ட பிரஜைகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் இந்து தேசியவாதக் குழுக்களின் செயல்பாடுகள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தேசிய அளவில் சிங்கள – பௌத்த தேசியவாத விமர்சனங்கள் குறைந்துள்ள நிலையில், அடிமட்ட அளவில் இந்து கடும்போக்கு குழுக்களின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதிலும் போராட்டங்களை ஏற்பாடு செய்வதிலும் சிவசேனை மற்றும் ருத்ர சேனா போன்ற அமைப்புகள் தீவிர பங்காற்றியுள்ளன. இக்குழுக்கள் பெரும்பாலும் கட்டாய மதமாற்றம் மற்றும் பசுவதை தொடர்பான பிரச்சினைகளில் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் குறிவைக்கின்றன. இக்குழுக்கள் இந்து வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பில் பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலமும், இந்து இளைஞர்களுடன் கூட்டங்களை நடத்துவதன் மூலமும் உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றன. ஊடகங்களில் பிரிவினைவாத விமர்சனங்கள் கடந்த ஆண்டில் ஊடகங்களில் பிரிவினைவாத விமர்சனம் வீழ்ச்சியின் அறிகுறிகளைக் காட்டியுள்ளது. குறிப்பாகத் தேர்தல்களின்போது இந்நிலைமை காணப்பட்டது. இது இன – மதக் குழுக்களைக் குறிவைக்கும் தீங்கு விளைவிக்கும் விமர்சனம் குறிப்பிடத்தக்களவில் குறைந்திருப்பதைப் பிரதிபலித்தது. இருப்பினும், இந்த ஒட்டுமொத்த சரிவுக்கு மத்தியில், குறிப்பாக முஸ்லிம்களைத் தொடர்ந்து குறிவைக்கும் நிலைப்பாடு தொடர்கின்றது. மதமாற்றம் மூலம் மக்கள் தொகை மாற்றம் குறித்த ஆழமான அச்சங்களைப் ஏற்படுத்தும் கதைகள், இஸ்லாமிய பழக்கவழக்கங்களை அரக்கத்தனமாகச் சித்தரித்தல் மற்றும் இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்துதல் போன்றவை மூலம் முஸ்லிம் சமூகத்தவர்கள் ஒன்லைனில் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர். இந்த விமர்சனம், காசா மீதான இஸ்ரேலின் போர் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய சம்பவங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை உள்ளூரில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வைத் தூண்டின. 2024ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒன்லைன் விமர்சனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தன. வடக்கு மற்றும் கிழக்கில் வாக்களிக்கும் முறைகள் குறித்த விவாதங்கள் இன – மத அடிப்படையில் வேகமாக வடிவமைக்கப்பட்டன. மத மாற்றங்கள் குறித்து தொடரும் விவாதம் இலங்கையில் மதமாற்றம் குறித்து பேச்சிலும் விவாதத்திலும் இரண்டு முக்கியமான கண்ணோட்டங்கள் நீண்டகாலமாக உள்ளன. சமூக மட்டத்தில், மத மாற்றத்திற்கு எதிராக ஆழமாக வேரூன்றிய கலாச்சாரம் மற்றும் சமூகச் சார்பு உள்ளது. குறிப்பாக சில சுயாதீன அல்லது சுவிஷேச கிறிஸ்தவக் குழுக்கள் மதம் மாற்ற முயலும்போது இந்த எதிர்ப்பு மேலும் வலுப்பெறுகின்றது. பிப்ரவரி 2025 இல் NCEASL வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் கிறிஸ்தவக் குழுக்களுக்கு எதிராக பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மத மாற்றம் அடிப்படையிலான அச்சங்கள் காரணமாக ஏற்பட்டவை. மதமாற்றம் பெரும்பாலும் கட்டாயப்படுத்தப்பட்டதாகவோ சூழ்ச்சியாகவோ சித்தரிக்கப்படுகின்றது. இது பயத்தை ஏற்படுத்துகின்றது. மத மாற்றம் தொடர்பான இலங்கையின் சட்டப் பாதுகாப்புகளும் தெளிவற்றவை. அரசியலமைப்பின் உறுப்புரை 14(1)(உ)இ தனிப்பட்ட முறையில் அல்லது பொதுவில், தனியாக அல்லது மற்றவர்களுடன் இணைந்து, வழிபாடு, அனுசரிப்பு மற்றும் கற்பித்தலில் ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கையை “வெளிப்படுத்தும் உரிமையை” உத்தரவாதம் செய்தாலும், இலங்கைச் சட்டம் ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கையை “பிரச்சாரம் செய்யும் உரிமையை” அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், கருவலகஸ்வெவ விதானலேகே ஸ்வர்ண மஞ்சுளா மற்றும் பலர் எதிர் புஷ்பகுமார, கெகிராவா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பலர் (2018) மற்றும் எம். ஏ. எஸ். கல்யாணி டி சில்வா மற்றும் பலர் எதிர் எஸ்.ஜே.பி. சுவாரிஸ் மற்றும் பலர் (2025) ஆகிய சமீபத்திய இரண்டு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிரச்சாரம் செய்வது குற்றமாகக் கருதப்படமாட்டாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. மறுபுறம், சில சுவிசேஷ மற்றும் சுயாதீன கிறிஸ்தவ சமூகங்களிடம் காணப்படும் வற்புறுத்தலான மற்றும் கலாச்சார ரீதியாக உணர்ச்சியற்றதாகக் கருதப்படும் மதமாற்ற நடைமுறைகள் தொடர்ந்து பதற்றங்களைத் தூண்டுகின்றன. சில சந்தர்ப்பங்களில் ஏனைய மதக் குழுக்களுடன் சமூகங்களுக்கு இடையேயான மோதல்களையும் கிறிஸ்தவ சமூகத்திற்குள் சமூகங்களுக்கு உள்ளேயான மோதல்களையும் தூண்டுகின்றன. தேசிய சமாதானப் பேரவையின் 2024 கணக்கெடுப்பின்படி, அதில் பதிலளித்த பௌத்த, இந்து மற்றும் ரோமன் கத்தோலிக்கச் சமூகங்களைச் சேர்ந்தவர்களில் 50% அதிகமானோர் மதமாற்ற நடைமுறைக்கு முதன்மையாக சில கிறிஸ்தவக் குழுக்களே பொறுப்பு என்றும், இந்த நடைமுறை பெரும்பாலும் அவர்களின் மதத்தை எதிர்மறையாகப் பாதிக்கும் விதத்தில் நடைபெறுகின்றது என்றும் அடையாளம் காண்கின்றனர். அவர்களது பிரச்சார முறைகள் சமூகங்களுக்கு இடையேயான மற்றும் சமூகங்களுக்கு உள்ளேயான மோதலுக்கு வழிவகுக்கின்றது என்பதை இது குறிக்கின்றது. சமீபத்திய ஆய்வுகளும் அதைத் தொடர்ந்துவரும் முன்னேற்றங்களும் நேர்மறையான முன்னேற்றத்தைக் குறிப்பதுடன், தொடர்ந்து வரும் ஆண்டுகளில் மேலும் பல முன்னேற்றங்களுக்கான வாய்ப்பைச் சுட்டிக் காட்டினாலும் பல முக்கியப் பிரச்சினைகளுக்கும் போக்குகளுக்கும் மதச் சமூகங்கள் அரசாங்கம் மற்றும் சிவில் சமூகம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பங்குதாரர்களின் நெருக்கமான கவனம் தேவைப்படுகின்றது. மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தை மதிக்கும் பன்முகச் சூழலை ஊக்குவிப்பதற்கு சமூக உறுப்பினர்களிடையே நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதில் மதத் தலைவர்கள், மத நிறுவனங்கள் மற்றும் மத அடிப்படையிலான அமைப்புகள் சமூக மட்டத்தில் தனித்துவமான நிலையில் உள்ளன. உதாரணமாக, கலாச்சார ரீதியாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிபாட்டு நடைமுறைகளை ஊக்குவிப்பது சில மதக் குழுக்களின் சர்ச்சைக்குரிய பிரச்சார முறைகள் தொடர்பான கவலைகளைத் தீர்க்க உதவும். கூடுதலாக, ஏனைய மதக் குழுக்களைக் குறிவைக்கும் சித்தாந்தங்களுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை ஏற்றுக்கொள்வது சமூகத்தில் கடும்போக்கு மத அமைப்புகளின் எழுச்சியை ஊக்கப்படுத்தாது. இனங்களுக்கு இடையேயான பதற்றங்களைத் தூண்டிவிட்ட நீண்டகால கவலைகளைத் தீர்க்க NPP விருப்பம் காட்டுவது ஊக்கமளிக்கின்றது. ஆனால், தொடர்ச்சியான சவால்களைத் தீர்க்க இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும். அனைத்து சமூகங்களுக்கும் மத சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கு, குறிப்பாக சிறுபான்மையினரைக் குறிவைக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படும் சட்டத்தைச் சீர்திருத்துவதில் முன்முயற்சியுடன் கூடிய நடவடிக்கை தேவைப்படும். இத்தகைய சீர்திருத்தங்கள் மாற்றத்திற்கான உத்வேகத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், பன்மைத்துவத்திற்கு உகந்த நீண்டகால அரசியல் சூழலை உருவாக்கவும் உதவும். சட்டங்களின் பிற்போக்கான பயன்பாடு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடவடிக்கைகளால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவை ஒரு முக்கியமான முன்னுதாரணத்தைத் தரும். கடந்த கால அரசாங்கங்களின் நடவடிக்கைகளால் பிளவு மற்றும் பாகுபாடு பெரும்பாலும் ஆழமாக வேரூன்றி சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள சமூக மட்டத்தில் இந்த நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியின் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தப் போக்குகளை மாற்றியமைப்பது அவசியமாகும். 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் மத சுதந்திரத்தின் நிலைப்பாடு மற்றும் 2025 ஆம் ஆண்டில் சமூக – அரசியல் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டணி வெளியிட்ட அறிக்கையை இக்கட்டுரை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஜோவிட்டா அருளானந்தம் யனித்ரா குமரகுரு அம்மாரா நிலாப்தீன் https://maatram.org/articles/12431
  3. யாழில் சீரற்ற காலநிலையால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு சனி, 29 நவம்பர் 2025 04:33 AM யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். கடந்த 24ம் திகதி முதல் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணி வரையிலான நிலவரப்படி யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனை அறிக்கையிட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 311 குடும்பங்களைச் சேர்ந்த 1014 பேரும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 240 குடும்பங்களைச் சேர்ந்த 795 பேரும், சங்கானை பிரதேச செயலக பிரிவில் 224 குடும்பங்களைச் சேர்ந்த 725 பேரும், நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் 139 குடும்பங்களைச் சேர்ந்த 403 பேரும் வேலணை பிரதேச செயலக பிரிவில் 64 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேரும் பாதிக்கப்பட்டனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 194 பேரும், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 63 குடும்பங்களைச் சேர்ந்த 176 பேரும், மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 151 பேரும் காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேரும் உடுவில் பிரதேச செயலக பிரிவில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 109 பேரும் யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேரும் பாதிக்கப்பட்டனர். கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேரும், நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும், கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் பாதிக்கப்பட்டனர் அறிக்கையிடப்பட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 85 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததுடன் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்தது. ஐந்து தற்காலிக தங்குமிடங்களில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். https://jaffnazone.com/news/52724
  4. இராணுவப்படையினர் அனர்த்த நிவாரண சேவைகளில் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர் - இலங்கை இராணுவத் தளபதி 29 Nov, 2025 | 11:08 AM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனர்த்த நிவாரண சேவைகளை வழங்குவதற்கு இராணுவப்படையினர் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர் என இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை (29) காலை வரையிலான நிலைமை கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, அம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டத்தில் சுமார் 12,800 இராணுவத்தினர் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலன்னறுவை, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சுமார் 3580 இராணுவத்தினர் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சுமார் 2960 இராணுவத்தினர் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வவுனியா, முல்லைத்தீவு, அநுராதபுரம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் சுமார் 3100 இராணுவத்தினர் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளுக்கு படகுகளும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார் https://www.virakesari.lk/article/231896
  5. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! குடிவரவு குடியகல்வு திணைக்களம் வௌியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு இதோ, இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமையால் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்குவது குறித்துக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, விசா வசதிகளை வழங்குவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பின்வருமாறு: விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டமை மற்றும் போக்குவரத்துச் சிரமங்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேற முடியாமல் விசா காலாவதியான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு, 2025.11.28ஆம் திகதியிலிருந்து அடுத்த 7 நாட்களுக்கு அபராதம் அல்லது விசா கட்டணங்கள் இன்றி விமான நிலையங்கள் ஊடாக வெளியேற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் தங்கியிருக்கும், குறுகிய கால அல்லது நீண்ட கால விசா காலாவதியான நிலையில், மேலும் விசா காலத்தை நீடித்துக்கொள்ள விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு, 2025.11.28ஆம் திகதியிலிருந்து அடுத்த 7 நாட்களுக்கு அபராதம் அறவிடாமல் வீசாவை நீடித்துக்கொள்ளச் சலுகைக்காலமும் வழங்கப்பட்டுள்ளது. குறுகிய காலச் சுற்றுலா வீசா அனுமதியை நீடிப்பதற்கு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு பிரவேசித்து செயற்படுத்த முடியும்: https://eservices.immigration.gov.lk/vs/login.php https://adaderanatamil.lk/news/cmijugg1w0259o29n2610g1ou
  6. யாழ்ப்பாணப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது – மீட்பு பணிக்காக விரைந்த பெல் 212 உலங்குவானூர்தி வெள்ளி, 28 நவம்பர் 2025 06:39 AM புத்தளம் மாவட்டத்தின் ராஜாங்கனை பகுதியில், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பேருந்து ஒன்று திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியதில், பயணிகள் உயிர் ஆபத்துக்குள்ளாகியதையடுத்து உடனடி மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பயணிகளை பாதுகாப்பாக மீட்க இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக உலங்குவானூர்தி அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டது இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து செயல்பட்டு, பேருந்தில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினார்கள். நாட்டின் பல பகுதியில் வெள்ளநிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://jaffnazone.com/news/52698
  7. விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு Mano ShangarNovember 28, 2025 10:06 am 0 மோசமான வானிலை காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் விமானம் தொடர்பில் அண்மை புதுப்பித்த தகவல்களை சரிபார்க்குமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், 1979 அல்லது +94 117 77 1979 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து தகவல்களைப் பெறுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவுறுத்துகிறது. இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த ஆறு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஆறு விமானங்களை இந்தியாவின் திருவனந்தபுரம் மற்றும் கொச்சின் விமான நிலையங்களுக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். https://oruvan.com/special-notice-for-passengers-traveling-through-the-airport/
  8. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளின் உத்தியோகபூர்வ அறிக்கை - 2025 தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2025 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழ மண்ணின் விடுதலைக்காகத் தம்மை கந்தகத்தீயில் உருக்கி ஆகுதியாக்கிய வீரமறவர்களை, தியாகத்தின் உன்னதங்களை, தமிழீழ விடுதலையின் அத்திவாரக்கற்களை நெஞ்சுருகி வணங்கிடும் நவம்பர் 27 ஆம் நாள், தமிழீழத் தேசிய எழுச்சிமிகு புனித நாளாகும். இன்றைய நாள், தமிழீழத்தின் ஆன்மா எழுச்சி பெற்று, தமிழீழ விடுதலைக்காகச் சாவைத் தழுவிய மாவீரர்களுக்கு, தாயகம் தலைவணங்கி, தமிழீழ வீரசுதந்திர வரலாற்றை மீண்டுமொருமுறை உரத்துச்சொல்லும் எழுச்சி நாளாகும். தமிழீழ விடுதலையின் முதல் விதையான மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் ஈகத்துடன் தொடங்கி, இன்றுவரை வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களும் எமது நெஞ்சில் அணையாத தீச்சுடராக, அசைக்க முடியாத நம்பிக்கையாக இன்றும் வாழ்கின்றார்கள். விடுதலையின் விதைகளாகவே தமிழீழத்தாயின் மடியில் இவர்களை விதைத்தோம். அவர்களை வரலாற்றுத்தாய் அரவணைத்துக்கொண்டாள். இந்த மானமறவர்கள் துயில்கொள்ளும் இப்புனித நிலங்களைத் துயிலுமில்லங்களாக உருவாக்கிப் போற்றி, வணங்கிவருகின்றோம். இத்துயிலுமில்லங்கள், உலக இராணுவ விதிகளைமீறிச் சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகத் தமிழீழ மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களையும் கொதிநிலையினையும் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இருந்தும், இத்துயிலுமில்லங்களிலும் அதனை அண்மித்தும், சிங்கள இனவெறி அரசின் எண்ணத்திற்கு மாறாக, மாவீரர் நாளில் தாயகத்திலுள்ள தமிழீழ மக்கள் பேரெழுச்சியோடு மாவீரர்களுக்கு விளக்கேற்றி நினைவுகூர்ந்து வருகின்றார்கள். இந்த மண்ணை ஆழமாக நேசித்த மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர் மற்றும் உரித்துடையோர்களை இவ்வேளை அன்புரிமையுடன் இறுகப்பற்றிக்கொள்கின்றோம். இவர்களிற்கான மதிப்பளிப்புகளைத் தாயகத்திலும் புலம்பெயர்தேசங்களிலும் உணர்வோடு முன்னெடுத்துவருகின்றோம் என்பதில் அகநிறைவடைகின்றோம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! தமிழீழ விடுதலைப்போராட்டப் பயணத்தில், இன்று நாம் ஒரு மிக நெருக்கடியான காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம். கடந்த 2009 இற்கு பின்னரான சமகால நிலமை, எமது விடுதலை நோக்கிய பயணத்தைப் பலவழிகளில் தடைகளை ஏற்படுத்தி, அவற்றை இல்லாதொழிக்க முயலும் சவால்கள் நிறைந்த காலமாக மாற்றமடைந்துவருகின்றது. எமது மாவீரர்கள் எந்த மண்ணிற்காகப் போராடினார்களோ, அந்த மண் தற்போதும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுவருவதோடு, தமிழர் பகுதிகளில் சிறிலங்காப் படைகளின் எண்ணிக்கை மாறாது பேணப்படுவதும், சிறிலங்காப் படைமுகாம்களை மக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியிலும் விவசாய நிலங்களிலும் அமைத்திருப்பதும் மகாவலி அபிவிருத்தி, வனவளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்ற சிறிலங்கா அரச கட்டமைப்புகளாவன, தொன்றுதொட்டுத் தமிழர்கள் வாழ்ந்த பூர்வீக நிலங்கள், மத வழிபாட்டுத்தலங்கள், தமிழ் மக்களின் உடமைகள் என்பன சிங்களக் குடியேற்றத் திட்டங்கள், புதிது புதிதாக புத்தர் சிலைகளை நிறுவி பௌத்தமயமாக்கல் மூலம் திட்டமிட்ட முறையில் சூறையாடப்படுவதால் தமிழீழத்தின் குடிப்பரம்பல் அமைப்பு மாற்றப்பட்டு, தமிழர்களின் இருப்பையே இல்லாமல் ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அத்தோடு, தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வு என்பது இன்றும் சாத்தியமற்றதொன்றாகவே உள்ளது. ஏனெனில், புனையப்பட்ட கதையான மகாவம்ச மனநிலையில் ஆழ வேரூன்றியிருக்கும் சிங்கள இனவாதத்தின் கட்டமைப்புகளான சனாதிபதி ஆட்சிமுறை, நாடாளுமன்றம், பாதுகாப்புத்துறை, நீதித்துறை, பௌத்ததேரர்கள் மற்றும் முதலாளித்துவவாதிகளும் இணைந்து எமது தேசியப்பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதற்குத் தடையாகவுள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் வலதுசாரிகள், இடதுசாரிகள், புரட்சியாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் என அடையாளப்படுத்தப்படும் அனைவரும் இனவெறியாளர்களே. தமிழீழத்தில் வாழும் மக்களின் இன அடையாளத்தையோ ஈழத்தீவின் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பதையோ சுயநிர்ணய உரிமையையோ அங்கீகரிக்கக்கூடாது என்பதில் தெளிவான திடமான பார்வையுள்ளவர்களாகவே இவர்கள் திகழ்கின்றார்கள். இதன் காரணமாகவே சர்வதேசக் குமுகாயகத்தினை நோக்கி, தமிழீழ மக்கள் தமது விடுதலைக்கான கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களை நடாத்திவருகின்றார்கள். சர்வதேசச் குமுகாயத்தின் ஈடுபாட்டுடனான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் ஒரு நிரந்தர நீதியான தீர்வே சிங்கள தேசத்தின் வளர்ச்சிக்கும் தமிழர் தேசத்தில் வாழும் மக்களின் நிம்மதியான வாழ்விற்கும் வழிவகுக்கும். கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில், சிறிலங்காவின் வழக்கமான வலதுசாரித்துவ மேட்டுக்குடிச் சிங்கள ஆட்சித்தலைமைகளுக்குப் பதிலாக, புரட்சிகர இடதுசாரித்துவச் சிந்தனைகள் நிறைந்துள்ளதாகக் காண்பித்த ஜே.வி.பி. தலைமையிலான அரசானது, ஆட்சிப்பீடம் ஏறியுள்ளது. இவ்வரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பதாக, தமிழ் மக்களிற்கான உரிமைகளை வழங்கப்போவதாக அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்குவந்து ஆண்டொன்று கடந்துவிட்ட நிலையிலும்கூட சம உரிமை வழங்குவதன் பெயரால், ஒற்றையாட்சிச் சிந்தனைக்குட்பட்டு, இலங்கையர் என்ற சிங்களத்தேசியத்திற்குள் தமிழ்த்தேசியத்தை நீர்த்துப்போகச்செய்யும் வகையில், இரண்டறக் கலக்கும் சூட்சுமமான சிந்தனையினை முன்னிறுத்தி, தமிழரின் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான உரையாடலைக்கூட மறுதலிக்கும் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. ஜே.வி.பி அரசின் இந்த நடவடிக்கைபற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், இன்றைய ஆட்சிக்குத் தலைமை தாங்கும் இதே ஜே.வி.பியினர் தான், தமிழர் தாயகத்தினைச் சிறிலங்காவின் உச்ச நீதிமன்றத்தின் ஊடாக கூறுபோட்டவர்கள். அத்தோடு, தமிழின அழிப்புப் போரிற்குச் சிங்கள இளைஞர்களை இணைத்து, போரைத்தொடர சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களிற்கு முட்டுக்கொடுத்தவர்கள். தற்போதும், சிங்களத் தேசிய பௌத்தமயவாத சிந்தனையை வலுவேற்றி, ஆட்சி அதிகாரத்தை நீடித்துத் தம்வசம் வைத்திருக்கவே திட்டமிட்டுவருகின்றார்கள். இத்தகைய சிந்தனை உள்ளவர்கள், தமிழ் மக்களிற்கு நியாயமான அதிகாரப்பகிர்வுடனான சுயநிர்ணய உரிமையை வழங்குவதற்கு, இதயசுத்தியுடன் செயற்படுவார்களென்று எதிர்பார்க்க முடியாது. அத்தோடு, தாயகத்தில் நிலவும் சூழல் முற்றிலும் வித்தியாசமானது. சிங்களத் தேசியவாத பௌத்தமயவாதத்திற்குத் தற்போது தலைமை தாங்கும் ஜே.வி.பியானது, கிராம மட்டங்களிலிருந்து எதிர்கால சந்ததியினரையும் இளையோரையும் மூளைச்சலவை செய்யும் செயற்பாடுகளில் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. சுருங்கக்கூறின், சிறிலங்கா அரசானது தமிழீழத்தேசத்தை சிங்களத்தேசமாக மாற்றி, எமது விடுதலை வேட்கையை மடைமாற்றம் செய்து, விடுதலைச் சிந்தனைகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கையையே இலக்காகக் கொண்டு நகர்த்திவருகின்றது. அன்பார்ந்த தமிழீழ மக்களே! நாம், கல்வி மற்றும் பண்பாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தவேண்டும். எமது மொழி, வரலாறு, பண்பாடு என்பவற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தி, எமது தமிழ்த்தேசிய உணர்வை ஆழமாக விதைக்கவேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகின்றது. அத்துடன், தமிழீழ விடுதலைக்கான அரசியல் போராட்டத்தினைப் பல வடிவங்களில் முன்னெடுக்கும் அதேவேளை, தாயகத்திலுள்ள மாணவர், இளையோர், பொதுமக்கள் என்று அனைவரும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக, அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான நீதி, மனிதப் புதைகுழிகளிற்கான நீதி போன்ற விடயங்களை முன்னிறுத்தி, நீதிக்கான மக்கள் போராட்டங்களைச் சிறிலங்கா அரசிற்குத் தாக்கம் செலுத்தக்கூடிய வகையில் பல்வேறு வழிமுறைகளில் தீவிரமாக முன்னெடுக்கவேண்டும். அறவழியிலான இப்போராட்டங்கள், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவை. புலம்பெயர் உறவுகள், எமது மாவீரர்களின் இலட்சியங்களைச் சுமந்து, நீதிக்கான குரலைத் தொடர்ந்தும் ஓங்கி ஒலிக்கச்செய்ய வேண்டும். நாம் வாழும் தேசங்களிலுள்ள அதிகார மையங்களை நோக்கி, நீதிக்கான கோரிக்கைகளை மேலும் வலுவாக எடுத்துச்செல்ல வேண்டும் என்பதனைப் புரிந்து அனைவரும் செயற்படவேண்டும். எமது அன்பிற்குரிய இளையோர்களே! தமிழீழத்திற்கான விடுதலைப்பயணத்தின் நாளைய சிற்பிகளே, தமிழீழத்தேசத்திற்கான அங்கீகாரத்திற்காக ஒவ்வொரு இளையோரும் தாம் வாழும் நாடுகளில் உணர்வுடன் முன்னெடுத்துவருகின்ற உரிமைக்கான, உறுதியான பணிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. புதிய பரிணாமத்தை அடைந்துள்ள இன்றைய தொழில்நுட்பங்களின் ஊடாக, எமது போராட்ட வரலாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாய தேவையாகும். சிறிலங்கா அரசானது தனது திட்டமிட்ட சூழ்ச்சிகளால், நாம் கடந்துவந்த வரலாற்றுப் பாதைகளைத் திசைமாற்றி, நாம் பேணிப்பாதுகாத்து வந்த எமது வரலாற்று ஆவணங்களை அழித்து, உண்மைக்குப் புறம்பான கருத்துருவாக்கங்களைத் திரைப்படங்கள் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தவறாக வெளியிட்டு, எமது போராட்டப்பாதையை மடைமாற்றத் தொடர்ந்தும் முயற்சிசெய்துவருகின்றது. இந்த ஆபத்தினைத் தடுத்து நிறுத்தி, எமது இன அடையாளங்களையும் உண்மையான போராட்ட வரலாற்றையும் அதன் ஆவணங்களையும் பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறையினரிற்குக் கடத்தும் பாரிய பொறுப்பானது உங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்தோடு மொழி, கலை, பண்பாடு உள்ளிட்ட எமது இன அடையாளங்களைப் பாதுகாத்து, புரட்சிகரப்பயணத்தைத் தொடர்வீர்கள் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எமக்குள்ளது. எமது அன்பிற்குரிய தேசியச் செயற்பாட்டாளர்களே! தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்து, நீண்ட நெடிய எமது விடுதலைப்போராட்டப் பயணத்தில் நீங்கள் செலுத்திவரும் பங்கு மிகவும் முக்கியமானது. ஆயுதப்போராட்டம் வீச்சோடு இருந்த காலத்தில், நம்பிக்கையும் அதி உச்ச உறுதியோடும் நீங்கள் செய்த தேசம் நோக்கிய செயற்பாடுகள் அளப்பரியவை. ஆயுதப்போராட்டத்தின் மௌனிப்பிற்குப் பின்னர், புலனாய்வாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள், அவமானப்படுத்தல்கள் அனைத்திற்கும் முகம்கொடுத்து, தொடர்ந்து மனத்துணிவோடு உறுதிதளராத உங்களது செயற்பாடுகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. உங்களுடைய இந்த உறுதிதளராத செயற்பாடுகள்தான், இன்றுவரை எமது மாவீரர்களின் இலட்சியமாகிய தமிழீழத்திற்கான பாதையில் பயணிக்கக்கூடியதாக உள்ளது. எவ் இடர்வரினும், எமது இலட்சியத்தை நாம் அடையும்வரை உங்களது உறுதிதளராத பயணத்தை மேலும் வீச்சோடும் வேகத்தோடும் தொடர்வது அவசியமானது. இதுவே, மாவீரர்களின் ஈகங்களிற்கு நாம் செய்யும் வரலாற்றுக் கடமையாகும். எமது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்களே! தமிழ்த்தேசியம், தமிழ்மொழிக்காப்பு, குமுகாயநீதிக்கான போராட்டம், அடக்குமுறை எதிர்ப்பு என்பவற்றில் ஆழமான பற்றைக்கொண்டிருப்பவர்கள் நீங்கள். எமது தாயகத்தில், கட்டமைப்புசார் தமிழின அழிப்பு இன்றும் மிகவேகமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கும் அதற்கு எதிராகவும் சுயாதீன சர்வதேச விசாரணைக்கு, இந்திய நடுவண் அரசின் ஆதரவைப் பெறும் வகையில் அழுத்தம் கொடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்வதுடன், தார்மீக அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்ட எமது தேசத்தை மீட்டெடுக்கும் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறும், எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்காகத் தொடர்ந்தும் குரல் எழுப்புமாறும் வேண்டிநிற்கின்றோம். அத்துடன், மாவீரர்களின் ஈகங்களாலும் மக்களின் அர்ப்பணிப்புகளாலும் உருவான எமது விடுதலைப்போராட்ட வரலாற்றைச் சிதைத்துத் திரிபுபடுத்தி வெளிவரும் படைப்புகளிற்கு வெளிப்படையாக நீங்கள் தெரிவிற்கும் எதிர்ப்புகளிற்கு எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் இவ் எதிர்ப்புக்களைத் தெரிவிப்பதோடு, இதனை நிறுத்தும் வகையில் நீங்கள் தமிழ்நாட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்வதோடு, எமது தேசத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்தும் குரல்கொடுத்துவரும் தமிழ்நாட்டு மக்களிற்கு எமது அன்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அன்பார்ந்த மக்களே! தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் வகுக்கப்பட்ட, தமிழீழ விடுதலை என்னும் மாபெரும் சித்தாந்த இலட்சியத்தைத் தாங்கி, அவருடைய சிந்தனையின் வழிகாட்டலில் தொடர்ந்தும் கொள்கை வழுவாது உறுதியுடன் தமிழீழ விடுதலைப்போராட்டச் சக்கரம் நகர்ந்துவருகிறது. இன்றைய காலப்பரப்பில், விடுதலைப்போராட்டத்தின் அடித்தளத்தையும், தேசியத்தலைவரின் சிந்தனையான இயங்குவிசையையும் சிதைத்து, அழித்துப் போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்ய தமிழின விரோதக்குழுக்கள் சிறிலங்கா அரசினாலும் பிராந்திய உருவாக்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் இயங்குநிலை மரபைத் தடம்மாற்றி, அழிக்கமுனையும் சக்திகளும் தலைதூக்குகின்றன. விடுதலை அவாவுடன் போராடும் மக்களிடையே நம்பிக்கையீனத்தை விதைத்து, குழப்பத்தை ஏற்படுத்தி, தமிழீழத் தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட விடுதலைச் சிந்தனைத் தளத்திலிருந்து தமிழினத்தை விலகச்செய்து தமிழீழம் என்னும் கோட்பாட்டை அடியோடு அழித்து விடுவதே இவர்களின் சதித் திட்டமாகும். இந்த நாசகாரப் புலனாய்வு நடவடிக்கையை உணர்ந்து, இன்னும் வீரியமாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலமிதுவாகும். தமிழின விரோதிகளை தெளிவாக இனம்கண்டு, நிராகரித்துக் களையெடுக்கவேண்டும் என்னும் விடுதலை விழிப்புணர்வை ஒவ்வொரு தமிழரும் கொண்டிருக்க வேண்டியது தாயக விடுதலைக் கடமையாகும். சிங்களப் பௌத்த பேரினவாதத்தின் அரசியலும் புலனாய்வு வலையமைப்பும் அதன் துணைச்சக்திகளும் பல தீர்வுகள், மாற்றங்கள், பொருண்மிய அபிவிருத்தி, நல்லிணக்கம் போன்ற சொற்களின் போர்வையில் ஒற்றையாட்சிக்குள் எமது தேசிய விடுதலையைப் புதைத்துவிட முயற்சிக்கின்றன. பொருளாதார வீழ்ச்சியின் கோரப்பிடிக்குள் சிக்குண்டுபோயுள்ள சிறிலங்கா அரசானது, புலம்பெயர் தமிழர்களிடம் முதலீடு என்ற பெயரில் அணுகி, அவர்களைப் பயன்படுத்தித் தமிழினத்தின் விடுதலைச் சித்தாந்தத்தை நிரந்தரமாக அழிப்பதற்கு தேவையான புதிய படிமங்களைக் கட்டமைக்க முழனகிறது. இந்த அரசியல்-பொருளாதார, புலனாய்வுச் சதித்திட்டங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டு மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுவது தமிழினத்தின் இருப்பிற்கு அத்தியாவசியமானாதாகும். அதேவேளை, தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டிய மக்கள் போராட்டங்களை இன்னும் வீச்சோடு தொடர்வதும் சர்வதேச அரசியல் தளங்களில் இராசதந்திர உறவுகளை வலுப்படுத்துவதும் எமது விடுதலைப் பயணத்தின் முக்கிய சாராம்சங்கள் ஆகும். மாவீரர்கள் தங்கள் உயிர்விதையால் கட்டியெழுப்பிய ஒளிரும் பாதையில், தமிழீழ விடுதலையை நோக்கிய எமது பயணம் தளராது தொடரும் எத்தடைகள் வந்தாலும் அதனைத் தகர்த்தெறியக்கூடிய மனோபலத்தைத் தேசியத்தலைவரின் சிந்தனையும் வழிகாட்டலும் எமக்குத் தரும். மாவீரர்களின் ஆன்மபலம் எம்மோடு என்றும் துணை நிற்கும். “நாம் விதைத்த இலட்சிய விதை, எமது வீரர்களின் இரத்தத்தால் வளர்கிறது. அது விருட்சமாகி எமது கனவை நனவாக்கும்” என்ற தேசியத் தலைவரின் சிந்தனை, எப்போதும் தமிழினத்தை வழிநடத்தும் விடுதலை ஒளியாக நிலைத்திருக்கும். எமது சத்திய இலட்சியமான தமிழீழ விடுதலையினை எந்தச் சக்தியாலும் அசைக்கமுடியாது. தமிழீழ விடுதலைப் பயணத்தில் உறுதிதளராது போராடும் தமிழினம், தனது இலட்சிய விடுதலையை அடைந்தே தீரும். தேசியத்தலைவரின் சிந்தனை சுட்டி நிற்கும் விடுதலைப்பாதையில், தமிழீழம் என்னும் இலட்சியத்தை அடையும்வரை தொடர்ந்தும் போராடுவோம் என உறுதியெடுத்துக்கொள்வோமாக! "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.” தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். https://www.thaarakam.com/news/5e3c1ac3-5de9-4fd2-807e-c8bb0dc9a3cb
  9. யாழ் பல்கலை உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு! ஒரே பார்வையில்! adminNovember 27, 2025 யாழ். பல்கலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கொடிகாமம் துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , கொடிகாமம் துயிலுமில்லத்தின் முன்பாக இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் மேரியனின் தாயான கந்தையா நாகராணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். கோப்பாய் துயிலுமில்லம்! யாழ்ப்பாணம் , கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். நல்லூர் நினைவாலயத்தில் யாழ்ப்பாணம் ,நல்லூர் மாவீரர் நினைவலையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் கப்டன் பண்டிதரின் தாயார் பொது சுடரினை ஏற்றி வைத்தார். எள்ளங்குளம் துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான இரத்தினம் செல்லத்தம்பி பொது சுடரினை ஏற்றி வைத்தார். சாட்டி துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , தீவகம் சாட்டி துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான செல்லர் அருளம்பலம் பொது சுடரினை ஏற்றி வைத்தார். மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு’ இன்று (27) வியாழன் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழையிலும் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. -தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வருகிறது. அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27) மாலை மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது . மாலை 6.5 மணியளவில் மாவீரர் ஒருவரின் தாயினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். https://globaltamilnews.net/2025/223152/
  10. தமிழ் மக்களின் தாயகக் கனவுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்🪔🪔🪔
  11. போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தம் – பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு Mano ShangarNovember 26, 2025 12:31 pm 0 ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியை மொஸ்கோவில் சந்திக்க தனது சிறப்பு தூதுவருக்கு உத்தரவிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். முன்னதாக புதிய வரைவு ஒப்பந்தம் குறித்து ரஷ்யாவிடம் இன்னும் ஆலோசனை நடத்தப்படவில்லை ரஷ்ய தரப்பு தெரிவித்திருந்தது. மேலும், திட்டத்தில் முன்வைக்கப்படும் திருத்தங்களை ஏற்காமல் போகலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் ஆரம்ப கட்டமைப்பிற்கு ஆதரவாக இருந்தபோதிலும், அமைதி ஒப்பந்தம் தொடர்பான ஒப்பந்தம் கணிசமான மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தால் நிலைமை அடிப்படையில் வேறுபட்டிருக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி புதிய திட்டத்தின் நகல் கிடைக்கவில்லை என்று லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். மேலும், ஐரோப்பா, அமெரிக்கவின் அமைதி முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். எவ்வாறாயினும், ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்க அதிகாரிகள் பகிரங்க கருத்துகளை வெளியிடவில்லை. எனினும், அமெரிக்க இராணுவச் செயலாளர் டான் டிரிஸ்கோலும் ரஷ்ய பிரதிநிதிகளும் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அபுதாபியில் சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆழமாக முரண்படும் சில பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாமல் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://oruvan.com/us-peace-deal-to-end-war-ukraine-announces-general-agreement-reached/
  12. சொந்த மண்ணில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது இந்தியா – தென்னாப்பிரிக்கா வரலாற்று சாதனை Mano ShangarNovember 26, 2025 1:11 pm 0 இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 408 ஓட்டங்களால் வெற்றிபெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகளை கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ள தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை வெள்ளையடிப்பு செய்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று, இந்திய அணியை அதன் சொந்த மண்ணில், தோல்வியடையச் செய்துள்ளனர். இதன்மூலம், தென்னாப்பிரிக்கா இந்தியாவை இரண்டு முறை சொந்த மண்ணில் முழுமையாக வென்ற முதல் அணியாக மாறியது. முன்னதாக, 1999-2000 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்கா இந்தியாவை டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸில், 489 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா அணிக்காக செனுரான் முத்துசாமி 206 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள, மற்றும் இரண்டு ஆறு ஓட்டங்கள் அடங்களாக 109 ஓட்டங்களை குவித்தார். இந்தியா அணிக்காக, குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும், ஜடேஜா, பும்ரா மற்றும் சிராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பதிலுக்கு, துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 201 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே 50 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருந்தார். தென்னாப்பிரிக்கா சார்பில் மார்கோ ஜான்சன் ஆறு விக்கெட்டுகளையும், சைமன் ஹார்மர் மூன்று வெற்றிகளையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸின்படி, தென்னாப்பிரிக்கா 288 ஓட்டங்கள் முன்னிலை பெற்றனர். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா 260 ஓட்டங்களை பெற்ற நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதனால் இந்திய அணிக்கு 549 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய அணி 140 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 408 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக, சொந்த மண்ணிலும் இந்தியாவின் மிகப்பெரிய டெஸ்ட் தோல்வியாகும். இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டு நாக்பூரில் அவுஸ்திரேலியா அணி 342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. மேலும், 13 மாதங்களில் ஒரு அணி சொந்த மண்ணில் இந்தியாவை டெஸ்ட் தொடரில் முழுமையாக வென்றது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, 2024 ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து இந்தியாவை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/india-suffered-its-biggest-defeat-on-home-soil-south-africa-makes-history/
  13. சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து! ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர்களை ஈர்த்த சிங்கள, முஸ்லீம் போராளிகளின் பெற்றோர்கள் கெளரவிக்கப்படவேண்டுமென மாவீரர் அறிவிழியின் தந்தையும், மூத்த போராளியுமான முத்துக்குமார் மனோகர் வலியுறுத்தியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். அங்கு மேலும் கருத்துரைக்கையில், இலங்கையிலுள்ள நான்கு இனங்களைச் சேர்ந்த பேராளிகளும் மாவீரர்கள் ஆகியுள்ளனர். எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்ந்தே இறுதி யுத்தம் வரை உறுதியுடன் போராடியுள்ளனர். இந்த மாவீரர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே! வருடாவருடம் இந்த விடயம் தொடர்பாக நான் வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக 2022ஆம் ஆண்டு மாவீரர் நாளில் கனகபுரம் துயிலுமில்லத்தில் எழுத்து மூலமாக நான் விடுத்த வேண்டுகோள் புறந்தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மூன்று மாவீரர்களின் அன்னையான சிங்களப் பெண்மணி துயிலும் இல்ல வாசலில் அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டமையை ஒரு மாவீரரின் தந்தை என்ற வகையில் தாங்கொணாத் துயரத்தை ஏற்படுத்தியது. ‘நான்கு இனத்தவர்களின் ஈகத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட போராட்டம்’ என்ற தலைப்பில் கடந்த 23ஆம் திகதி உதயன் சஞ்சீவியில் வெளிவந்த நான் எழுதிய கட்டுரையின் பிரதிகளை கிளிநொச்சி ஜெயந்தி நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மாவீரர்களின் பெற்றோர், உறவினர்களிடம் வழங்கினேன். எனது எதிர்பார்ப்பின் நியாயத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். எனவே கடந்த ஆறு வருடங்களாக நான் விடுத்த அதே வேண்டுகோளை நேற்று (24) கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதனிடம் அவரது பணிமனைக்குச் சென்று நினைவுபடுத்தினேன். அத்துடன் சிங்கள-முஸ்லிம் மாவீரர்கள் நினைவாக உங்களது நிலைப்பாடு என்ன என்று கேட்டேன். ஏனெனில் இவர் 2022ஆம் ஆண்டு மாவீரர் நாள் காலப்பகுதியில் அடுத்த ஆண்டு கட்டாயம் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வீரவேங்கை ரமீஸின் பெற்றோர் கௌரவிக்கப்படுவார்கள் என உறுதிமொழி வழங்கியவர். தற்போது அவரது பதில் எனக்கு ஆச்சரியமளித்தது. ‘புலம்பெயர் உறவுகள் சிங்கள-முஸ்லிம் மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிப்பது குறித்து கடும் சினத்துடன் ஆட்சேபிக்கிறார்கள்’ என்பதே அந்தப் பதிலாக அமைந்தது. தவறான புரிதல் இது. மக்கள் பிரதிநிதி அதுவும் உள்ளூராட்சிச் சபையின் தவிசாளர் எமது மாவீரர்களின் பெற்றோரின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியவர், இப்படிப் பதில் சொல்வதை நீங்களும் ஏற்கமாட்டீர்கள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். இவரது பதிலைத் தொடர்ந்து உடனடியாக யாழ்ப்பாணம் விரைந்த நான் கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தைச் சந்தித்து விடயத்தைச் சொன்னேன். ‘எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்ந்துகொண்டு விடுதலைப்போரில் ஆகுதியானோரின் பெற்றோர் நிச்சயம் மதிப்பளிக்கப்பட வேண்டியவர்களே’ என அவர் பதிலளித்தமை ஆறுதலாக இருந்தது. நடந்த விடயங்களைக் கேட்டு மனம் வருந்திய அவர் இந்தக் கௌரவிப்புகள் ஏற்கனவே நடத்திருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார். இந்தப் போராட்டத்தில் ஏதோ முடிந்தளவு என்னால் பங்காற்றியுள்ளேன். இன்று நான் உயிரோடு இருப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஆற்றிய பங்களிப்பை நான் எப்போதும் நன்றியுடன் நினைவு கூருவேன். மாவீரர் பெற்றோரை புறந்தள்ளுவதைத் தேசியத் தலைவரின் ஆன்மாவும் மன்னிக்காது. எனவே புலம்பெயர்ந்து வாழும் தாங்கள் அனைவரும் தேசியத் தலைவரின் தலைமையை ஏற்றுப் போராடிய சிங்கள-முஸ்லிம்-பறங்கி என மாவீரர்களின் பெற்றோர் புறந்தள்ளப்படுவது குறித்த ஆட்சேபனைகளையும், எதிர்காலத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரையையும் கரைச்சி பிரதேசசபைத் தலைவருக்கும் அவரை வழிநடத்தும் மாவட்டத் தலைமைக்கும் உடனடியாக சாத்தியமான சகல வழிகளிலும் தெரிவியுங்கள். நன்றி மறந்த இனத்தவராக நாம் மாறக்கூடாது. கைதிகள் பரிமாற்றம் மூலம் இரு போராளிகளை விடுவிக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தபோது அவர்களில் ஒருவராக காமினி என்ற சிங்களப் போராளியைக் கிட்டு குறிப்பிட்டார். விடுதலையாகி வந்த அந்தப் போராளி மட்டக்களப்பில் போராடி 04.05.1987 வந்தாறுமூலையில் வீரச்சாவடைந்தார். இறுதி யுத்தம் வரை முஸ்லிம் போராளிகள் போராடினர். இவையெல்லாம் சாமானியமான விடயங்களா? உங்களுக்கு மாவீரர் நாளுக்கு நிதி வேண்டுமாயின் நான் உண்டியல் குலுக்கி வழங்கத் தயார் என வேழமாலிகிதனுக்குத் தெரிவித்ததையும் சுட்டிக்காட்டுகிறேன். இன்னொரு விடயம் மாவீரர் நினைவேந்தல் மற்றும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்புகளை தமது அரசியல் எதிரிகளைச் சாடும் களங்களாக மாற்றவேண்டாமென தயவுசெய்து சம்பந்தப்பட்டவர்களுக்குச் சுட்டிக்காட்டுங்கள். இன உறவுகளை மேம்படுத்துவதில் ஆர்வமுள்ள ஒரு முஸ்லிம் குழுவினர் ஏதாவதொரு மாவீரர் துயிலுமில்லத்தில் ஒரு முஸ்லிம் மாவீரரின் பெற்றோரை கௌரவிக்கவேண்டும். இதற்கான முழுச் செலவையும் தாங்கள் பொறுப்பேற்கிறோம் என எனக்குத் தெரிந்த ஒரு தரப்பு மூலம் வேண்டுகோள் விடுத்தனர். இந்தவேண்டுகோள் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் தலைமைக்கு அதன் மத்திய குழு உறுப்பினர் மூலம் தெரியப்படுத்தியும் அந்தப் பேச்சைத் தொடர அவர்கள் விரும்பவில்லை என்தைக் குறிப்பால் உணர்த்தினர். எனவே, தேசியத்தலைமையை நேசிக்கும் புலம்பெயர் நாடுகளிலுள்ள எமது உறவுகள், முன்னாள் போராளிகள் இந்த விடயத்தில் தங்களது முடிவை உடனடியாகக் கிளிநொச்சிக்கும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் தெரிவிக்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றேன்.” என்றார். https://akkinikkunchu.com/?p=350178
  14. இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த IMF பரிசீலனை! November 26, 2025 இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு அடுத்தகட்ட ஒப்புதலுக்காக எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபையினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் கட்ட மீளாய்வை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த இலங்கைக்கான செயற்திட்டப்பிரதானி எவான் பபஜோர்ஜியோ தலைமையிலான நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர், இக்காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடாத்தியதுடன் பெரும்பாகப் பொருளாதார அபிவிருத்திகள், பொருளாதார மற்றும் நிதியியல் கொள்கைகளை அமுல்படுத்துவதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர். அதனையடுத்து மேற்படி விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதுடன், நாணய நிதிய செயற்திட்டத்துக்கு அமைவாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதைக் கருத்திற்கொண்டே அதற்கு இயக்குநர் சபையின் அனுமதி வழங்கப்படும் என எவான் பபஜோர்ஜியோ அறிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நாணய நிதியத்தின் இயக்குநர் சபையினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இப்பரிசீலனையைத் தொடர்ந்து உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு இயக்குநர் சபை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அடுத்த கட்டமாக 347 மில்லியன் டொலர் நிதியைப் பெறுவதற்கான தகுதியை இலங்கை பெறுவதுடன், அதன்மூலம் இதுவரையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியின் பெறுமதி 2.04 பில்லியன் டொலராக உயர்வடையும். அதன்படி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்புக்கு உட்பட்ட முக்கிய விடயங்களில் பெரும்பாலானவற்றை 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் உள்வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/imf-review-of-extended-financial-facility-for-sri-lanka/
  15. மாவீரர்களின் தியாகத்தை உணர்த்தும் நாள் கார்த்திகை 27 : பா. அரியநேத்திரன் November 25, 2025 மாவீரம் என்பது பெரிய வீரம், அல்லது பெருமை தரும் வீரம் என்பதாகும். வீரம் துணிவான ஒரு உணர்வு தாம் சந்திக்கும் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு வலி, ஆபத்து, எதிர்பாராத நிகழ்வுகள், எதிர்ப்பு, என பலவற்றைக் கடந்து வெற்றி காண முயல்வதே மாவீரம். சரி என்று பட்டதை யார் தடுத்தாலும் சிரம் தாழ்த்தாது செய்து முடிப்பதே வீரம். புறப்பொருள் இலக்கியங்களில் வீரம் என்ற உணர்வு முதன்மை பெறுகின்றது. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்று எல்லா புறப்படலங்களிலும் வீர மறவரின் துணிவும், அவர்கள் எதிரிகளை எதிர்த்து போராட தயங்காமையும் கூறப்பட்டுள்ளது. அகத்தில் பெரும்பாலும் வீரம் முன் மொழியாவிடினும், பல செயல்களில் தலைவ னும், தலைவியும், பாங்கியும், நற்றாயும், செவிலித் தாயும், பல்வேறு சமூக உறுப்பினர்களும் தான் விரும்பியதை அடைய வீரத்தை உபயோகிக்க வேண்டியுள்ளது. வீரத்தின் தன்மை. 1.தன் நாட்டைக்காத்தல் 2.நேர்மையாக இருத்தல் 3. தன் கடமையினை எவ்வித தடை வரினும் சிரமேற்று வெற்றி பெறுதல் 4.நினைத்ததை சாதித்தல் 5..விடாமுயற்சி 6 தன்னைச் சார்ந்தோரைக் காத்தல் இந்த ஆறு உன்னத வீரம்தான் “மாவீரம்” அதை களத்தில் இனத்துக்காய் போராடி செய்கையில் காட்டிய ஈழத்தில் ஒரேயொரு விடுதலை இயக்கம் விடுதலைப்புலிகள் மட்டுமே அவர்களின் உன்னத தியாகத்தால் தன்னை ஆகுதியாக்கிய புனிதர்கள் தான் விடுதலைப்புலிகளின் “மாவீரர்கள்” அந்த ஒப்பற்ற உயிர் தியாகம் செய்தவர்களை ஒரே நாளில் தேசமாக திரண்டு அஞ்சலி நினைவு கூரும் நாளாக 1989, கார்த்திகை27ம் நாளை தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் பிரகடனப்படுத்தியிருந்தார். அந்த தினம் விடுதலைப்புலிகளின் போராளி சங்கர் வீரச்சாவை தழுவிய நாள் 1982 கார்த்திகை, 27 அந்த நினைவு நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. எதிர்வரும் வியாழக்கிழமை 2025 நவம் பர் 27ல் வழமை போன்று ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஆகுதியான மாவீர்களை நினைவு கூர்ந்து துயிலும் இல்லங்களிலும், புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களும், மத்தியகிழக்கு நாடுகளில் தொழிலுக்காக சென்ற தமிழ் இளைஞர்களும், தமிழ் நாட்டிலும் மக்கள் திரண்டு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்வு எழுச்சியாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. 2025 ல் இடம்பெறும் மாவீர் தினம் 36 வது மாவீரர் தினமாகும். 2008 கார்திகை,27 வரை ஈழத்தில் விடுதலைப்புலிகளால் 20 மாவீரர் தினங்கள் இடம்பெற்றன இந்த 20 தினங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 20 மாவீரர் உரைகளை நிகழ்த்தியுள்ளார். அவருடைய உரை ஒரு தீர்க்க தரிசன உரையாகவே பார்க்கப் பட்டது. அவர் இறுதியாக 2008,கார்த்திகை,27 ல் மாவீர் நாள் உரையில் கூறியது “இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமை யோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்ப் பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோ மாக” . என கூறியிருந்தார் இதனை அவதானித்தால் சர்வதேசத்தை நோக்கி விடுதலைப்பயணம் செல்லவேண்டிய தேவையையும் புலம்பெயர்ந்து வாழும் இளையோருக்கும் அந்தபணி உண்டு என்பதையே மேலோட்டமாக தமது உரையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்தை நோக்க முடிகி றது. ஒரு விடுதலைக்கான போராட்டம் அந்த நாட்டில் ஆரம்பித்தாலும் விடுதலைக்கான வெற்றி யையும், அந்த நோக்கத்தையும் தீர்மானிக்கும் சக்தி சர்வதேசமாகும் தலைவர் பிரபாபரனின் இறுதி உரையில் தேசவிடுதலையை தீவிரமாக முன்எடுத்து வருபவர்கள் புலம்பெயர்ந்துவாழும் இளையோர் என்பதை தெளிவாக கூறி அவர்களிடம் போராட்டத்தை ஒப்படைத்ததாகவே அந்த உரையின் தார்ப்பரியம் தெரிந்தது. சர்வதேசம் மூலமாக எமது இலக்கை அடைவதற்கான வேண்டுகோளாகவே இந்த உரை அமைந்துள்ளது. விடுதலைப்புலிகள் மௌனிப்பதற்கு முன்னம் 2008 கார்த்திகை 27 வரை துயிலும் இல்லங்களில் நடைமுறையானது மாவீரர்களின் பெற்றோர் சுடர் ஏற்றவேண்டிய கல்லறைகள், நினைவு கற்களுக்கு முன்னால் கார்த்திகை 27 ம் நாளில் பி.ப 5.15 மணிக்கு நிற்கக்கூடிய வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ள பட்டிருக்கும் தேசியத் தலைவரின் மாவீரர் நினைவுரை இடம்பெறும் பின்னர் நினைவொலி மணி ஒலி எழுப்பபட்டு ஒருமணித்துளி நேரம் எழுப்பப் படும், அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் பொதுச் சுடர் தளபதிகளில் ஒருவர் ஏற்றுவார் அதனை தொடர்ந்து ஈகை சுடர்களை பி.ப 6.07 மணிக்கு சகலரும் ஏற்றுவார்கள். விடுதலைப்புலிகள் மௌனத்திற்கு பின் னர் 2009 கார்த்திகை 27 தொடக்கம் எதிர்வரும் 2025, கார்த்திகை 27 வரை 16 வருடங்களாக மாவீரர் தினங்கள் முன்னாள் போராளிகள், பொது அமைப்புகள், சில தமிழ்த்தேசிய கட்சிகள் இராணுவ முகாம் இல்லாத துயிலும் இல்லங்களில் தலைவரின் உரை, தேசிய கொடி மட்டும் இன்றி ஏனைய நடைமுறைகளை அப்படியே சகல துயிலும் இல்லங்களிலும் எழுச்சியுடன் செய்யப் பட்டு வருவதை காணலாம். புலம்பெயர் நாடுகளில் தலைவரின் உரை மட்டுமே இடம்பெறாது ஏனைய புலிக்கொடி ஏற்றப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் அப்படியே நடைபெற்று வருவதை காணலாம். வீரச்சாவை தழுவிய மாவீரர்கள் 2009 மே 18 வரை ஐம்பதாயிரம் வரையில் உயிர் நீத்துள்ளனர். விடுதலைப்புலிகளால் 2008 ல் உத்தியோகபூர்வமாக வெளியிட்ட தரவில் 1982 தொடக்கம் 2008 வரையும் 22390 மாவீர்கள் ஆகுதியானதாக மாவட்ட ரீதியான விபரத்தை அப்போது வெளியிட்டிருந்தனர். இந்த தொகையில் வடமாகாணத்தை சேர்ந்த மாவீரர்கள்:14957 (ஆண்கள்:10834 பெண்கள்:4123 கிழக்கு மாகாண மாவீரர்கள்: 7083, (ஆண்கள்: 6580 பெண்கள்:503) வடகிழக்கு சாராதவர்கள்:350 (ஆண்கள்:282 பெண்கள்:68) 2009 ஜனவரி தொடக்கம் மே 18 வரை ஐந்து மாதங்களில் உக்கிரமான போர் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்கள் முழுவதும் இடம்பெற்று இறுதியில் முள்ளி வாய்க்கால், நந்திக்கடல், வரை 2009 மே 18 ல் போர் மெளனிக்கும் வரை 05 மாதங்கள் மட்டும் ஏறக்குறைய 27000, மாவீர்ர்கள் வீரச்சாவை தழு வினார்கள் என நம்பப்படுகிறது அவர்களை டைய கணிப்பு இதுவரை உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவில்லை 2008 ல் விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வ மாக அறிவித்த 22360 மாவீர்ர்களுடன் சேர்த்து மொத்தமாக 50000, மாவீரர்கள் ஆகுதியானார்கள் என்பதை முள்ளிவாய்க்கால் மௌனத்திற்கு பின்னர் பலராலும் உச்சரிக்கப்படுகிறது. அந்த ஐம்பதாயிரம் மாவீர்களை நினைவு கூர்ந்து தொடர்ச்சியாக 2009 கார்த்திகை,27 தொடக்கம் தற்போது 16 வருடங்களாக நினைவுச் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்படுகிறது. விடுதலைப்புலிகளின் மௌனத்திற்கு பின்னர் 16 வருடங்களாக மாவீர்களுக்காக வணக்கம் செலுத்தும் நாம் அவர்களுடைய கனவு நினைவேற வேண்டுமானால் குறைந்த பட்சம் சிதறிக்கிடக்கும் தமிழ்த்தேசிய கட்சிகள் ஈழத்தில் ஒற்றுமையாக ஒரு அணியாக ஒரே குரலில் சர்வதேசம் நோக்கி அரசியல் தீர்வுக்காக கோரிக்கையை முன்வைக்க கூடியதாக செயல்படக்கூடிய தமிழ்தேசிய கட்சிகள் ஒற்றுமை படவில்லை . 2025 கார்த்திகை 27 மாவீரர் நாளிலாவது தமிழ்தேசிய கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயல்பட்டு மாவீரர்களுடைய கனவு நனவாக உழைக்க உறுதி பூணுவோம். https://www.ilakku.org/மாவீரர்களின்-தியாகத்தை-உ/
  16. ஏன் அவர் ஒப்பற்ற தலைவர் : ஜெரா November 26, 2025 இலங்கை தீவில் இழந்துவிட்ட தம் இறைமையை மீட்கவே முடியாது என்ற பெருங்கவலையோடு ஈழத்தமிழர்கள் பல சந்ததிகளைக் கடந்தனர். இடையிடையே எல்லாளன், சேனன், குத்திகன், பண்டாரவன்னியன், கயிலைவன்னியன், செகராசசேகரன், பரராசசேகரன், சங்கிலியன் எனப் பலர் அந்தக் கனவை ஏந்தி வரலாற்றில் வந்துபோயினர். ஆனால் எவராலும், விஜயனிடம் இழந்த ஈழத்தமிழர் இறைமையை முழுமையாக அடைய முடியவில்லை. ஒரே ஒருவரால் அது முடிந்தது. வெறுங்கனவாக மாத்திரமிருந்த ஈழத்தமிழர் இறைமையை ஆட்சி சிம்மாசனத்தில் ஏற்றி 30 வருடங்களாக அழகுபார்க்க முடிந்தது. அவரே நம் தலைவர். அவரே இன்றைய நாளுக்குரியவர். அதுவரைக்குமான உலகில் கண்டுபிடிக்கப்படாதிருந்த அனைத்துவித அறவழிப்போராட்டங்களிலும் ஈடுபட்டு, தோற்றுப்போயிருந்த தருணத்தில்தான் தலைவர் வந்தார். பெற்றோரின், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்றி முடிவெடுக்க முடியாத வயதில், இனத்தையே வழிநடத்தத் துணிந்தார். தம்மிடமிருக்கும் ஆயுதங்களை வைத்து ”எவ்விதமான” காரியங்களையும் செய்யத்துணியும் வயதில், அனைத்துவித பாசங்கள் மீதான பற்றுக்களையும் அறுத்தெரிந்தார். இனவிடுதலை ஒன்றே தாம் ஏந்தியிருக்கும் ஆயுதத்தின் ஒரே இலக்கு என்பதைத் தன்னைச் சூழ்ந்திருந்த இளையோருக்குப் போதித்தார். இன்றைய உலக அனுபவங்களை வைத்துக் கற்பனை செய்துபாருங்கள், ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் கனரக ஆயுதங்களும், வெளியுலகத் தொடர்புகளற்ற ஒரு பிராந்தியத்தை நிர்வகிக்கவல்ல அதிகாரமும் கிடைத்தால் என்ன செய்திருப்பர். உலக அனுபவங்களைப்போன்று எதுவும் நடக்கவில்லை. இனவிடுதலை என்கிற இலக்கு ஒன்றிற்காக ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் அவர் தலைமையில் விதையாகி வீழ்ந்தபோதிலும் யாரை நோக்கியும் ஒரு தீயசொல் பாயவில்லை. ”அவரின் எத்தனையோ படங்களை மீட்டோம். ஒரு படத்தில்கூட மது போத்தல்களைக் காணவில்லை” என எதிரிகளே புகழுமளவிற்கு உலகின் மிகஉன்னதமான சுய ஒழுக்கமிக்க இயக்கமொன்றைக் கட்டமைத்தார் அவர். அதனை இம்மியளவும் வழிபிசகாமல் இறுதிவரையில் வழிநடத்தினார். அதனால்தால் அவர் தலைவர். விடுதலை கோரி போராடத்தை ஆரம்பிக்கும் ஆயுத இயக்கங்கள், வெகுவிரைவிலேயே திசைமாறிப் போவது உலக வழக்கம். உலகநாடுகளின் சதிகளில் சிக்கி தான் வந்த வழியையே மறந்து, விடுதலை இயக்கங்களின் மறைந்துபோவதும் பொதுப்போக்கு. தலைவரை நோக்கியும் உலக வல்லரசு நாடுகள் அந்த வலையை தொடர்ச்சியாக முப்பதாண்டுகள் வீசிவந்தன. ”நான் இனவிடுதலை என்கிற இலட்சியத்திலிருந்து விலகினால் என் மெய்பாதுகாவலரே என்னை எவ்வேளையிலும் சுட்டுக்கொல்லலாம்” என்கிற கொள்கையில் தலைவர் துளியளவும் விடாப்பிடியாக இருந்தார். அவருக்கென்று தனிப்பட்ட வாழ்வொன்றிருந்தது. ஒரே மகள், இரண்டு ஆண் மகன்கள் என்கிற அரியதொரு குடும்பமிருந்தது. அன்பிற்கே அடையாளமான தாய், தந்தையர் இருந்தனர். ஒரு மனிதனின் வாழ்க்கை வரம்பின் உச்சமெதுவெனில் இப்படியொரு அன்பான குடும்பம்தானே. ஆனால் இந்த இனவிடுதலைக்காக தன் மொத்தக் குடும்பத்தையும் தியாகித்தார் தலைவர். தானும் தன் பிள்ளைகளும், தன் உறவினர்களும் ஏழேழு தலைமுறையாக செழித்து வாழவேண்டியளவுக்கு நாட்டைச் சூறையாடி சொத்துச் சேர்க்கும் தலைவர்கள் மத்தியில், ஒரு ரூபாயைக்கூடத் தனக்காகவோ, தன் குடும்பத்திற்காகவோ எடுத்துச்செல்லாத – தன் மொத்தக்குடும்பத்தையும் இனத்திற்காக வித்தாக்கிய ஒப்பற்ற தலைவர் உலகில், இந்தப் பூகோள வரலாற்றில் வேறெந்த இனத்திற்கு வாய்த்திருக்கும். சதாகாலமும் போர் நடத்திக்கொண்டு, கடல், தரை, வான் என எல்லைகளைக் காத்துக்கொண்டு, புவிசார் அரசியல் அழுத்தங்களுக்கு எதிராகப் போராடிக்கொண்டு ஒரு நிழல் அரசைக் கட்டமைப்பதும், அதனை நேர்த்தியாக வழிநடத்துவதும் கற்பனைகூட செய்துபார்க்கமுடியாத ஒன்று. உலகம் பாதுகாப்புசார் துறைகளில் இவ்வளவு தூரம் வளர்ந்துவிட்ட பிறகும்கூட நவீன அரசுகள் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்ற பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள், திட்டமிட்டக் குற்றச்செயல்களுக்காக உருவாகும் குழுக்கள் என எல்லாவற்றையும் 30 ஆண்டுகளாக ஒருவர் கட்டுப்படுத்தினார் எனில் அது தலைவரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்..! எல்லாவற்றுக்கும் மேலாக, படையக் கட்டுமானம்..! சோழர்களுக்குப் பிறகு 30 ஆண்டுகள் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய ஒரே படையக் கட்டமைப்பைத் தலைவர் உருவாக்கினார். அவரின் காலத்தில் இலங்கைத் தீவின் மீதான புவிசார் அரசியல் இன்றிருக்கிற அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்தியா, சீனா என எந்நாட்டுக்கும் ஒரு துண்டு நிலம்கூட இத்தீவிலிருந்து விற்கப்படவில்லை. இன்று இந்நாட்டின் தலைநகரில் பெரும்பகுதியைப் பிடித்து சீனா தனக்கான தனிநாடொன்றை உருவாக்கிக்கொள்ளுமளவிற்கு இந்நாடு புவிசார் அரசியல்விடயத்தில் தோல்வியடைந்திருக்கின்றது. இந்தியாவின் தலையீடுகள் சொல்லத்தேவையில்லை. அவர் உருவாக்கிய வலிதான – ஓர்மம் மிக்க படையக் கட்டமைப்புக்களின் வழியே தமிழர்களின் கடல் மற்றும் நிலம் சார் இறைமை மாத்திரமின்றி, முழு இலங்கைத்தீவின் இறைமையும் காப்பாற்றப்பட்டது. ஆனால் அவரற்ற பதினாறு வருடங்கள் கடந்துள்ள இன்றைய நிலை…! இப்படி தன்னினத்திற்கு மாத்திரமல்லாது, இத்தீவில் வாழுகிற எதிர் இனத்திற்குமாகப் போராடியவர் எம் தலைவர். அதனால்தான் குற்றவுணர்வால் உந்தப்படும் எதிரிகள்கூட அவ்வப்போது தலைவர் பற்றிய உண்மையைச் சொல்லிவிடுகின்றனர். உலகில் தோன்றிய ஆச்சரியமிகு – மேன்மைமிகு தலைவர்களின் வரிசையில் நின்றுநிலைத்துவிட்ட தலைவருக்கு இன்று அகவைத் திருநாள். வானும் தன் ஆசி வழங்கி, வாழ்த்தி நிற்கும் இன்நன்நாள் குறித்து நம் தலைமுறைக்கு ஒரு பெருமிதம் உண்டு. அது எதுவெனில், தலைவ…நாம் நின் காலத்தில் வாழ்ந்தோம்..! https://www.ilakku.org/ஏன்-அவர்-ஒப்பற்ற-தலைவர்-ஜ/
  17. தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப்பலகை அகற்றிய விவகாரம்: வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர் உள்ளிட்ட ஐவருக்குப் பிணை Published By: Vishnu 26 Nov, 2025 | 05:28 AM (வாழைச்சேனை நிருபர், பட்டிருப்பு நிருபர்) தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பான வழக்கில் வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 5 பேருக்கும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை (22) வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்குப் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன. வாழைச்சேனை பிரதேசசபைக்கு உட்பட்ட வீதிகளில் தங்களது அனுமதி பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகைகள் இடப்பட்டதாகத் தெரிவித்து வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளரினால் அப்பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன. இதுகுறித்து தொல்பொருள் திணைக்களத்தினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையிலும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உத்தரவுக்கு அமைவாகவும் விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வந்தனர். அதற்கமைய வாழைச்சேனை பிரதேச சபைக்குள் இருந்த தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் பெயர்ப்பலகைகளை நேற்று முன்தினம் கைப்பற்றிய வாழைச்சேனை பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரைக் கைதுசெய்தனர். அதேவேளை இதனுடன் தொடர்புபட்ட வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன், பிரதி தவிசாளர், இரண்டு உறுப்பினர்கள் உட்பட நால்வர் நேற்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். இந்நிலையில் அவர்கள் சார்பில் நேற்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தனது தரப்பினர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் பொருத்தமற்றவை என நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். அத்தோடு 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேசசபை சட்டத்தின்கீழ் வீதிகள் தொடர்பான அதிகாரங்கள் பிரதேசசபைகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்த சட்டத்தின் பிரகாரம் பிரதேசசபை தவிசாளர் அதிகாரமுடையவர் எனவும் சுட்டிக்காட்டினார். எனவே அந்த அதிகாரத்துக்கு அமைவாகச் செய்யப்பட்ட விடயத்தை 'பெயர்ப்பலகைகளை அகற்றினார்' என்று குற்றச்சாட்டாக முன்வைக்கமுடியாது எனவும் சுமந்திரன் வாதத்தை முன்வைத்தார். அத்துடன் உள்ளுராட்சிமன்றங்களின் அனுமதியைப்பெற்றே பெயர்ப்பலகை இடப்படவேண்டும் என்பதை சுமந்திரன் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தபோது, அதனை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதுடன் எதிர்காலத்தில் முறையான அனுமதியைப்பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தனர். அவ்வாறு முறையாக அனுமதி கோரும்போது அதனை சபையில் சமர்ப்பித்து சபையினால் முறையான அனுமதியை வழங்கமுடியும் என்று சுமந்திரன் கூறியதன் அடிப்படையில் வழக்கு சுமுகமாக தீர்க்கடலாம் என்ற காரணத்தினாலும், பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பிணைவழங்ககூடிய காரணங்களைக் கொண்டிருப்பதனாலும் நீதிவானால் ஐந்து பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதற்கமைய வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர், பிரதி தவிசாளர், பிரதேசசபை உறுப்பினர்கள் இருவர் உள்ளடங்கலாக ஐந்து பேரும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231467
  18. யாழில் மாவீரர் வாரத்தில் பொலிஸாரின் கெடுபிடிகள்! மாவீரர் வாரம் நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றும், மாவீரர் நாள் நாளை வியாழக்கிழமையும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு பொலிஸாரின் கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நேற்று சோடினையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலரின் சிவில் உடை படங்களுடன் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட பதாகையை அகற்றுமாறும் வல்வெட்டித்துறை பொலிஸார், குறித்த பதாகையில் உள்ள பாதணி விடுதலைப் புலிகளினை உருவகப்படுத்துவதாக சுட்டிக்காட்டி சிலரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் சின்னங்கள், இலட்சிணைகள் பயன்படுத்தாமல் உயிரிழந்தவர்களை நினைவு கூர முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதும், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதேவேளை நேற்று மாலை மல்லாகம் சந்தி பகுதியில் மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் இலத்திரனியல் உபகரணத்தில் பாடல் ஒலிக்க விடப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு வந்த தெல்லிப்பழை பொலிஸார் குறித்த உபகரணத்தை கைப்பற்றி வழக்கு சான்றுப் பொருளாக இலக்கமிட்டுள்ளனர். மாவீரர் நாள், நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸாரின் கெடுபிடிகள் காணப்படுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். https://newuthayan.com/article/யாழில்__மாவீரர்__வாரத்தில்__பொலிஸாரின்_கெடுபிடிகள்!#google_vignette
  19. அசாதாரண காலநிலை காரணமாக யாழில் 560 பேருக்கு பாதிப்பு! வடமாகாணத்தில் தற்போது நிலவும் அசாதாரண கால நிலை காரணமாக, 171 குடும்பங்களைச் சேர்ந்த 560 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட இடர்முகாமைத்துவ பிரிவின்பிரதிப்பணிப்பாளர் ரி.என். சூரியராஜா தெரிவித்துள்னர். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் நிலவும் அசாதாரண காலநிலைகாரணமாக சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சங்கானை பிரதேசசெயலர் பிரிவில் மின்னல் தாக்கம் மற்றும் வெள்ள இடர் காரணமாக 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. ஊர்காவற்றுறை பிரதேசசெயலர் பிரிவில் கடும் காற்று காரணமாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 7பேர் பாதிக்கப் பட்டுள்ளதுடன் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் காரணமாக 29 குடும்பங்களைச் சேர்ந்த 98பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பிரதேசசெயலர் பிரிவில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 385பேர் வெள்ளம் மற்றும் மின்னல் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கோப்பாய் பிரதேசசெயலர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன். ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. காரைநகர் பிரதேசசெயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். https://newuthayan.com/article/அசாதாரண_காலநிலை_காரணமாக_யாழில்_560_பேருக்கு_பாதிப்பு!
  20. தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று! தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாள் தாயகத்திலும் புலத்திலும் இன்று கொண்டாடப்படவுள்ளது. தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை ஆலடி வீதியில் அவரது இல்லம் அமைந்துள்ள வளாகம் அந்தப் பகுதி இளைஞர்களால் துப்புரவு செய்யப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு, இன்று காலை கேக் வெட்டிக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. தமிழர்தாயகத்தின் இதர பகுதிகளிலும், புலம்பெயர்நாடுகளிலும்கூடதலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கடந்த பல வருடங்களாக இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்களது இறுக்கமான கண்காணிப்புக்குள்ளும், கெடுபிடிக்குள்ளும் கொண்டாடப்பட்ட நிலையில், இம்முறை அச்சமின்றி மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தயாராகின்றமையை அவதானிக்க முடிகிறது. https://newuthayan.com/article/தலைவர்_பிரபாகரன்_பிறந்த_தினம்_இன்று!
  21. ஒன்லைன் கேம் மோகம் காதலனின் தாயாரின் நகைகளை திருடிய பெண் கைது! adminNovember 26, 2025 நிகழ்நிலை விளையாட்டில் ஈடுபட (Online game) காதலனின் தாயாரின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகளை திருடிய பெண்ணை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞனும் காதலித்து வந்த நிலையில் , இளைஞனின் வீட்டில் காதலுக்கு சம்மதம் தெரிவித்தமையால் யுவதி சில நாட்கள் இளைஞனின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் , வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த இளைஞனின் தாயாரின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகள் காணாமல் போயுள்ளது. அது தொடர்பில் கடந்த 17ஆம் திகதி தாயார் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25.11.25) குறித்த வீட்டில் தங்கியிருந்த இளைஞனின் காதலியை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , இளைஞனின் தாயாரின் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டதுடன் , திருடிய நகைகளில் தாலிக்கொடி உள்ளிட்ட ஒரு தொகுதியை , சாவகச்சேரி பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்ததாகவும், மற்றுமொரு தொகுதி நகைகளை யாழ் . நகர் பகுதியில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்ததாகவும் , தெரிவித்துள்ளார் ரிக்ரொக்கில் அறிமுகமான நண்பன் ஒருவருடன் தான், ஒன்லைன் கேம் விளையாடுவதாகவும் , அதற்கு இதுவரையில் சுமார் 27 இலட்ச ரூபாய் வரையில் செலவழித்து உள்ளதாகவும் , மேலும் பணம் தேவைப்பட்டதால் தான் நகைகளை திருடியதாகவும் அப்பெண் விசாரணைகளில் தெரிவித்துள்ளார். குறித்த பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு தொகுதி நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர் அத்துடன் அப்பெண்ணை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை , இவ்வாறான ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட , தனது நகைகளை விற்று பணம் செலுத்திய பெண்ணொருவர் , வீட்டில் பெற்றோர் நகைகள் தொடர்பில் கேட்ட போது அவை களவு போனதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை அடுத்து பெற்றோர் குறித்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று முறைப்பாடு பதிவு செய்த நிலையில் , காவற்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளில், அப்பெண்ணே, தனது நகைகளை விற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து பெண்ணை கடுமையாக எச்சரித்து காவற்துறையினர் விடுவித்தனர் யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இணைய விளையாட்டுக்களில் பெரும்பாலான இளையோர் பெருந்தொகை பணத்தினை இழந்து வருவதுடன் , கடந்த மாதம் இரு இளைஞர்கள் இணைய விளையாட்டுக்காகக பணம் செலுத்த பெருந்தொகைகளை கடன் பெற்று , கடன் சுமையினால் தமது உயிரை மாய்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/223074/
  22. திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும் November 24, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — திருகோணமலையில் கடந்த வாரம் புத்தர் சிலை தொடர்பாக மூண்ட சர்ச்சையை கையாளுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடைப்பிடித்த அணுகுமுறையும் அதற்கு எதிரணி அரசியல் கட்சிகள் வெளிக்காட்டிய எதிர்வினையும் இதுகாலவரையில் இனவாத மற்றும் மதவாத அரசியலின் விளைவாக நாடும் மக்களும் அனுபவித்த அவலங்களில் இருந்து தென்னிலங்கை அரசியல் சமுதாயம் எந்தவிதமான படிப்பினையையும் பெறவில்லை என்பதை பிரகாசமாக வெளிக்காட்டியிருக்கிறது.. இலங்கையில் இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு எதிர்நோக்கக்கூடிய சவால்களையும் அரசியலில் மீண்டெழுவதற்கு எதிரணி கட்சிகள் பெரும்பான்மை இனவாத அணிதிரட்லை செய்வதற்கு கிடைக்கக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தத் தவறப்போவதில்லை என்பதையும் திருகோணமலை சம்பவம் எமக்கு உணர்த்தியது. திருகோணமலை கடற்கரையோரமாக அமைந்திருக்கும் ஸ்ரீ சம்புத்த போதி ரஜமகா விகாரை வளாகத்தில் நவம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை இரவோடிரவாக வைக்கப்பட்ட புத்தர்சிலையை பிக்குமாரின் எதிர்ப்புக்கு மத்தியில் பொலிசார் அகற்றினர் என்ற போதிலும், மறுநாள் திங்கட்கிழமை நண்பகல் அந்த சிலை அதே இடத்தில் பொலிசாரின் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு பௌத்த மத நிகழ்வுகள் இடம்பெற்றன. இரவில் புத்தர் சிலைக்கு எவராவது சேதம் விளைவித்துவிடக்கூடும் என்ற காரணத்தினாலேயே பாதுகாப்பு கருதி அதை அகற்றியதாகவும் மீண்டும் அதே இடத்தில் அந்த சிலை வைக்கப்படும் என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் அன்றைய தினம் முன்கூட்டியே அறிவித்திருந்தார். புத்தர் சிலை அகற்றப்பட்ட வேளையில் விகாரை வளாகத்தில் இடம்பெற்ற குழப்பநிலையை பயன்படுத்தி இலங்கையில் பௌத்த மதத்துக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதைப் போன்று எதிரணி கட்சிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஆவேசமாகக் குரலெழுப்பின. இந்து அல்லது கிறிஸ்துவ சிலை ஒன்று அது வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து பொலிசாரினால் அகற்றப்பட்டிருந்தால் இத்தகைய அமர்க்களம் ஏற்பட்டிருக்குமா என்ற கேள்விக்கான பதிலை நாம் சொல்லித்தான் எவரும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. பாராளுமன்றத்தில் நவம்பர் 18 ஆம் திகதி திருகோணமலை சம்பவங்கள் குறித்து பேசிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க மத வழிபாட்டுத் தலத்தை அமைப்பது தொடர்பிலானதாக இந்த சர்ச்சை தோன்றுகின்ற போதிலும், வேறு கதையும் அதற்குள் இருப்பதாக கூறினார். சம்பவங்கள் குறித்து பாதுகாப்பு செயலாளரிடம் அறிக்கை ஒன்றைக் கோரியிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை நியாயப்படுத்துவதற்கு வேறு எந்த விவகாரமும் கிடைக்கவில்லை என்பதால் எதிரணியினர் இனவாதத்தை தூண்டிவிடுவதற்கு புத்தர் சிலை சர்ச்சையை பயன்படுத்துவதில் நாட்டம் காட்டுகிறார்கள் என்றும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். அவரைப் பொறுத்தவரை, நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்திருக்கும் நிலையில், அந்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்று தாங்கள் கருதுகின்ற இடங்களில் மாத்திரமல்ல, பெளத்தர்கள் வசிக்காத இடங்களிலும் கூட பிக்குமாரில் ஒரு பிரிவினர் புத்தர் சிலைகளை இரவோடிரவாக கொண்டுவந்து வைப்பதும் பிறகு படிப்படியாக அரசாங்கங்களின் அனுசரணையுடன் விகாரைகளை கட்டியெழுப்புவதும் புதிய ஒரு விடயம் அல்ல. சம்பந்தப்பட்ட பகுதிகளின் மக்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்புகின்ற வேளைகளில் அரச இயந்திரம் சட்டவிரோதமானது என்று அந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்ற நடவடிக்கைகளுக்கு துணைபோவதே நடைமுறையாக இருந்துவருகிறது. திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட இடத்திலேயே மீண்டும் பொலிசாரின் உதவியுடன் அது கொண்டு வந்து வைக்கப்பட்ட சம்பவத்தையும் அதற்கு அரசாங்கத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தையும் மேற்கூறிய வழமையான நடைமுறையே தொடருகின்றது என்பதற்கான சான்றாக ஏன் கருதமுடியாது என்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்க தலைவர்களும் மாத்திரமே பதில் கூற வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உட்பட எதிரணி அரசியல்வாதிகள் புத்தர் சிலை சர்ச்சை தொடர்பாக கருத்து வெளியிட்டபோது இலங்கையின் அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முதன்மையான முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதை அடிக்கடி சுட்டிக்காட்டியதை காணக்கூடியதாக இருந்தது. ஆனால், அந்த முன்னுரிமையை பிக்குமாரில் ஒரு பிரிவினர் அல்லது மதவாத அடிப்படையில் சமூகங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகள் தங்களின் சட்டவிரோதமான அல்லது பௌத்த தர்மத்துக்கு மாறான நடவடிக்கைகளை நியாயப்படுத்த தவறான முறையில் கேடயமாகப் பயன்படுத்துவதை எவ்வாறு அனுமதிக்க முடியும்? தாங்கள் எதைச் செய்தாலும் அரசாங்கம் தட்டிக்கேட்க முடியாது என்ற எண்ணத்தை மகாசங்கத்தின் ஒரு கணிசமான பிரிவினர் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெளத்த மதத்துடன் தொடர்புடைய சகல பணிகளையும் முன்னெடுப்பதில் பிக்குமாருக்கு இருக்கும் சுதந்திரத்தில் தலையீடு செய்வதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என்று கூறும் பிரேமதாச பௌத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணான அடாத்தான நடவடிக்கைகளில் பிக்குமாரில் சில பிரிவினர் ஈடுபட்ட எத்தனை சம்பவங்களை பகிரங்கமாக கண்டனம் செய்தார் என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை. பௌத்த மதத்துக்கு அரசியலமைப்பு வழங்கியிருக்கும் முன்னுரிமையை சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுக்கக்கூடிய வகையிலான நடவடிக்கைகளுக்கு பிக்குமாரில் ஒரு பிரிவினர் பயன்படுத்துகிறார்கள் என்பது வெளிப்படையானது. கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகளுக்கு தலைமை தாங்கியவர் என்று அறியப்பட்ட பிரச்சினைக்குரிய பிக்கு ஒருவர் புத்தர் சிலை சர்ச்சைக்கு பிறகு கடந்த வாரம் திருகோணமலைக்கு சென்று சமூகங்களுக்கு இடையில் குரோதங்களை தூண்டும் வகையில் பேசியிருப்பதுடன் அரசாங்கத்துக்கு சாவாலும் விடுத்திருக்கிறார். இஸ்லாமிய மதத்தை நிந்தனை செய்யும் விதத்தில் பேசியதாக நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்ட அவர் திருகோணமலை சர்ச்சையில் தன்னை ஈடுபடுத்துவதில் வலிந்து நாட்டம் காட்டுகிறார். பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் இத்தகைய பிக்குமாரின் முறைகேடான செயற்பாடுகளை ஆதரிப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவற்றை அவர்கள் எதிர்ப்பதுமில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. கெடுதி செய்பவர்களினால் அல்ல, அந்த கெடுதியை தடுக்க எதையும் செய்யாமல் இருப்பவர்களினாலேயே உலகம் ஆபத்தானதாக இருக்கிறது என்ற அறிவியல் மேதை அல்பேர்ட் அயன்ஸ்டீனின் கூற்று நினைவுக்கு வருகிறது. கெட்டவர்களின் வெறுப்பு பேச்சுக்களுக்கும் செயல்களுக்காகவும் மாத்திரமல்ல, நல்லவர்களின் மௌனத்துக்காகவும் இந்த தலைமுறையில் நாம் பச்சாதபப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று அமெரிக்க கறுப்பின தலைவர் மார்டின் லூதர் கிங் கூறினார். சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் இலங்கைக்கு ஒன்றும் புதியதல்ல. அது இலங்கையின் பெரும்பான்மை இனவாத அரசியலுடன் சமாந்தரமாக வளர்ச்சி கண்ட அருவருக்கத்தக்க ஒரு போக்காகும். ஆனால், சகல சமூகங்களுக்கும் அழிவை ஏற்படுத்திய மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு பின்னரும் கூட, தென்னிலங்கை அரசியல் சமுதாயம் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொள்ளத் தவறுவதே பெரும் கவலைக்குரியதாக இருக்கிறது. அரசியலில் பெரும் செல்வாக்கைச் செலுத்துவதற்கு பௌத்த மதகுருமார் நாட்டம் காட்டுவதே இலங்கையில் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணமுடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பிக்குமார் நேரடியாக அரசியலில் ஈடுபட்டு தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். அவர்களின் செயல்கள் புத்தபெருமானின் அடிப்படைப் போதனைகளுக்கு முரணானதாக இருந்தாலும் கூட, நேரடி அரசியலில் ஈடுபடுவதில் இருந்து அவர்களை தடுக்க மகாநாயக்கர்களினால் கூட முடியாமல் இருக்கிறது. இலங்கையில் பௌத்தம் நடைமுறையில் ஒரு அரசியல் மதமாக மாற்றப்பட்டுவிட்டது. தென்னிலங்கை அரசியல் வரலாற்றில் பெளத்த மதகுருமாரின் செல்வாக்கு பெருமளவுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கிறது. இன்று தமிழர்களின் அரசியலிலும் முன்னென்றும் இல்லாத வகையில் மதவாதம் ஊடுருவுகின்ற போக்கை காணக்கூடியதாக இருக்கிறது. இந்தியாவின் ‘ இந்துத்வா’ அரசியலின் செல்வாக்கே இதற்கு காரணம் எனலாம். சிங்களவர்களாக இருந்தாலென்ன, தமிழர்களாக இருந்தாலென்ன இலங்கைச் சமூகம் அரசியலில் இருந்து மதத்தைப் பிரிக்காவிட்டால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை. ஜனாதிபதி திசநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் வெறுமனே சகல குடிமக்களையும் சமத்துவமாக நடத்துவதே தங்களின் கொள்கை என்று கூறிக்கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. கடந்த காலத்தில் அரசாங்கங்கள் கடைப்பிடித்த பாகுபாடான கொள்கைகள் மற்றும் அடக்குமுறைகளின் விளைவாக சிறுபான்மைச் சமூகங்கள் அனுபவிக்கின்ற பிரத்தியேகமான பிரச்சினைகளை போக்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காட்டினால் மாத்திரமே சமத்துவமான குடிமக்கள் என்ற உணர்வை அந்த மக்கள் மத்தியில் படிப்படியாக ஏற்படுத்த முடியும். சாந்தமே உருவான புத்தர் சிலையை ஆக்கிரமிப்பின் ஒரு கருவியாக சிறுபான்மைச் சமூகங்கள் நோக்குகின்ற துரதிர்ஷ்டவசமான நிலைவரத்தை மாற்றியமைக்க வேண்டியதும் அரசாங்கம் தீர்வுகாண வேண்டிய அந்த பிரத்தியேகமான பிரச்சினைகளில் ஒன்று. அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களுக்கு இனவாதத்தையும் மதவாதத்தையும் பயன்படுத்துவதில் எதிரணி கட்சிகள் கொண்டிருக்கும் நாட்டத்தை திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை வெளிக்காட்டியிருக்கிறது. தங்களது தவறான ஆட்சிமுறையையும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களையும் மறைப்பதற்காக பெரும்பான்மை இனவாத அணிதிரட்டலை தீவிரமாக முன்னெடுத்த முன்னைய ஆட்சியாளர்கள் பொருளாதார ரீதியில் நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததை நாட்டு மக்கள் மறந்துவிடக்கூடாது. மீண்டும் அத்தகைய அணிதிரட்டலை அனுமதித்தால் தொடர்ந்தும் அதே பிரச்சினைகளுடனேயே இலங்கையர்கள் வாழவேண்டியிருக்கும். https://arangamnews.com/?p=12455
  23. வவுனியாவில் பாரிய தீ விபத்து - கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை செவ்வாய், 25 நவம்பர் 2025 06:18 AM வவுனியாவில் தனியார் நிறுவனம் ஒன்றின் காட்சியறையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வவுனியா - ஹொரவபொத்தானை வீதியில் அமைத்துள்ள சிங்கர் காட்சியறையிலையே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தினை அடுத்து, தீயணைப்பு படையினர் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பெருமளவானோரின் பெரும் போராட்டத்தின் மத்தியில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்தில் காட்சியறையில் காணப்பட்ட பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள், தளபாடங்கள் என கோடிக்கணக்கான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://jaffnazone.com/news/52609
  24. லண்டனின் வீதியில் நின்ற தமிழ் இளைஞருக்கு கொள்ளையர்களால் நேர்ந்த கதி லண்டனில் தமிழ் இளைஞர் ஒருவர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் தாக்குதலுக்கு உள்லான இளைஞன் கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈழத் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகம் வாழும் சவுத்ஹாலில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், லண்டன் சவுத்ஹால் பகுதியில் வீதியில் நின்ற இளைஞரை குறிவைத்து சிலர் தாக்கியுள்ளார்கள். அடித்துக் காயப்படுத்திய நபர்கள் அவர் அணைந்திருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்றது மட்டுமல்லாமல், அவரைச் சரமாரியாகத் தலையில் தாக்கி, கீழே தள்ளிவிட்ட நிலையில், அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். சம்பவத்தை அடுத்து விரைந்து வந்த பாரா மெடிக்ஸ் குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற நிலையில், அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சவுத்ஹால் பிரதேசத்தில் ஆப்பிரிக்கர்கள் மற்றும் ருமேனிய நாட்டவர்களும் அதிகம் வசித்து வருகிறார்கள். குறிப்பாக ருமேனிய சமூக இளைஞர்கள் இது போன்ற பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. அவர்கள் தமிழர்களையும் இந்தியர்களையும் குறிவைத்து செயல்பட்டு வருவதானால் அங்குள்ள இலங்கையர்களும் , இந்தியர்களும் அச்சத்தில் உள்ளலதாக கூறப்படுகின்றது. https://akkinikkunchu.com/?p=350056
  25. பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா? ஜப்பானிய பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி 2026இல் இடம்பெறுமென கணித்துள்ள விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகயில், 2026ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து உலகளாவிய சக்தியாக உயரும் ஒரு புதிய தலைவர் உருவாகுவார் என பாபா வங்கா கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த கணிப்பின் படி, அந்த நபர், உலகையே ஆளும் சக்தி கொண்டவராகவும் “உலகின் இறைவன்” அல்லது உலக விவகாரங்களின் மாஸ்டர் என்று கூறக்கூடிய அளவு சக்தி வாய்ந்தவராக இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், பல நிபுணர்கள், அது ரஷ்யா விளாடிமிர் புடினாக இருக்க கூடும் என தெரிவித்து வருகின்றனர். அவரது கணிப்புகளின் சில விளக்கங்கள், 2026ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து அல்லது ரஷ்யா செல்வாக்கு செலுத்தும் இடத்திலிருந்து ஒரு சக்திவாய்ந்த தலைவர் வெளிப்படுவார் என்று கூறுகின்றன. சர்வதேச பரப்பில் உக்ரைன் – ரஷ்ய போர் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் நிலையில் தற்போது அமெரிக்காவின் தலையீட்டால் விரைவில் அதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தீவிர பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பாபா வங்காவின் இந்த கணிப்பு, முன்னதாக அவரின் கணிப்புக்களில் சில விடயங்கள் நிகழ்ந்துள்ளன என்பதால் நிபுணர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. https://akkinikkunchu.com/?p=350062

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.