Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. எந்தப் பெறுமானமும் இல்லாத தமிழரசு! January 8, 2025 — கருணாகரன் — ‘தமிழ்த்தேசியக் கட்சிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே மக்களிடத்தில் பேராதரவு உண்டு. அதனால்தான் அது ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி விட்டு வெற்றியைப் பெற்றிருக்கிறது. தமிழரசுக் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கிருப்பதால்தான், அதனோடு இணைந்து கொள்வதற்கு ஏனைய கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன‘ என்ற கருத்து அல்லது அவ்வாறான அபிப்பிராயம் சிலரிடத்திலே காணப்படுகிறது. அல்லது அவ்வாறான ஒரு கருத்துருவாக்கத்தைச் செய்வதற்குச் சிலர் முயற்சிக்கிறார்கள். இந்தப் பெருமிதம் தமிழரசுக் கட்சிக்கும் உண்டு. அந்தப் பெருமிதத்திலேயே அது குளிர்காய்கிறது. இதை வளர்த்துத் தன்னை அது நிலைப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. இப்படிச் சொல்லப்படுவதைப் போல அல்லது இவ்வாறு கருதுவதைப் போல தமிழரசுக் கட்சிக்கு மக்களிடத்திலே உண்மையாகவே செல்வாக்குண்டா? இல்லை. நிச்சயமாக இல்லை. அப்படிச் செல்வாக்கைப் பெறுவதற்கு அது தன்னுடைய அரசியல் வரலாற்றில் எந்தப் பெறுமானங்களையும் உருவாக்கவில்லை. அதிலும் 1970 க்குப் பிறகு, தமிழரசுக் கட்சிக்கு அரசியலே இருக்கவில்லை. அது தன்னுடைய நிறைவேறாத கனவுடன் 1970 களில் மரித்தது. ஆனால், அது போட்ட விதையை – தமிழரசுக் கனவை – தனிநாட்டுக்கான அபிலாஷையை – மக்களும் இளைய தலைமுறையினரும் தொடர்ந்தனர். அதற்காக அவர்கள் மிகப் பெரிய விலைகளைக் கொடுத்தனர். தமிழரசுக் கட்சி அதில் சிறிய அளவுக்குக் கூடப் பங்களிப்புச் செய்யவில்லை. 2004 இல் விடுதலைப்புலிகள் இயக்கம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்காக தமிழரசுக் கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகே, அது மீளுயிர்ப்படைந்தது. அது கூட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் உணர்ச்சி வசப்பட்ட – அவசர அரசியல் முடிவுகளால்தான் வாய்த்தது. புலிகளுக்கும் ஆனந்தசங்கரிக்கும் இடையில் உருவான முரண்பாடுகளால் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இல்லையென்றால், இப்போது தமிழரசுக் கட்சி வரலாற்றில் மறைந்தே போயிருக்கும். ஏனென்றால், தன்னை மீளுயிர்ப்புச் செய்யக் கூடிய அரசியற் திறனோ, சிந்தனைப் பலமோ, அர்ப்பணிப்பு அணியோ, கட்டமைப்பு விருத்தியோ 1970 க்குப் பின், தமிழரசுக் கட்சிக்க்கு இருக்கவில்லை. அது தமிழர் விடுதலைக் கூட்டணியில் கரைந்து போயிருந்தது. ஆனால் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸின் நிலை அப்படியல்ல. அது தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஐக்கியமாகியிருந்தாலும் கூடிய விரைவில் அதிலிருந்து விலகித் தன்னை நிலைநிறுத்த முயற்சித்தது. குமார் பொன்னம்பலம் அதனுடைய அடையாளமாக இருந்தார். அப்படித் தமிழரசுக் கட்சி எந்தச் சுவட்டையும் தனித்துக் காட்டவுமில்லை, கொண்டிருக்கவுமில்லை. ‘அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழும். எதிர்பாராத மாற்றங்களும் நிகழ்ச்சிகளும் நடக்கும். அப்படி உருவாகும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதே அரசியல் வெற்றியாகும்‘ என்று இதற்கு யாரும் வியாக்கியானம் செய்யக் கூடும். இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால், அப்படிக் கிடைத்த வாய்ப்பைக் கொண்டு 2004 இல் தன்னை மீளுயிர்ப்புச் செய்த தமிழரசுக் கட்சியின் இரண்டாம் கட்டப் பங்களிப்பு என்னவாக இருந்தது – இருக்கிறது என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். அதிலும் இறுதிப்போர்க்காலத்தில் தமிழரசுக் கட்சியின் அடையாளத்தோடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் தலைமை தாங்கிய திரு. இராஜவரோதயம் சம்பந்தன், திரு. சேனாதிராஜா உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் இதற்குப் பதிலளிக்கும் வரலாற்றுப் பொறுப்புடையோர். குறைந்த பட்சம் அந்தப் போரை, போரில் நடந்த பேரழிவை வன்மையாக எதிர்ப்பதற்கான குறியீட்டளவிலான முயற்சிகளைக் கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுக்கவில்லை. இந்த வரலாற்றுப் பழி அதற்கு நிரந்தரமாகவே உண்டு. இறுதிப்போரின்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வழிநடத்திக் கொண்டிருந்தது தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சம்பந்தன் – மாவை அணிதான். அந்த வழிநடத்தலும் தலைமைத்துவமும் தவறானது, உறுதியற்றது, அரச சார்பானது என்ற எதிர்ப்பை வெளிப்படுத்தியே கஜேந்திரகுமார், பத்மினி சிதம்பரநாதன், ஜெயானந்தமூர்த்தி, கஜேந்திரன் உள்ளிட்ட அணி வெளியேறியது. 2009 க்குப் பின்னர் முற்று முழுதாக தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கத்தின் கீழேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இயங்கியது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் பங்கேற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ மற்றும் புளொட் போன்றவை தமக்கான சமநிலையைக் கோரியபோதும் அதைத் தமிழரசுக் கட்சி வழங்கவில்லை. கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஏனைய கட்சிகளின் கோரிக்கையையும் சம்பந்தனும் தமிழரசுக் கட்சியும் நிராகரித்தனர். அதையெல்லாம் பிடிவாதமாகவே மறுத்தார் சம்பந்தன். சம்பந்தன் மட்டும்தான் மறுத்தார் என்றில்லை. ஒட்டுமொத்தத் தமிழரசுக் கட்சியினரும் சம்பந்தனுடைய நிலைப்பாட்டை ஆதரித்தே நின்றனர். மட்டுமல்ல, ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் மூலம் அரசியல் அரங்கில் நுழைந்த சிவஞானம் சிறிதரன், சி. சிவமோகன், துரைராசா ரவிகரன், ஐங்கரநேசன் போன்றோரை உறிஞ்சித் தன்வசப்படுத்தியது தமிழரசுக் கட்சி. இது கூட்டமைப்பைச் சிதைக்கும் நடவடிக்கை மட்டுமல்ல, அரசியல் நாகரீகமற்ற செயலும் கூட. அப்படியிருந்தும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காகப் பொறுத்திருந்தது. அந்த விட்டுக் கொடுப்பையும் பெருந்தன்மையையும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் பலவீமாக தமிழரசுக் கட்சி எடுத்துக் கொண்டது. இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் வெளியேறிய பின், ரெலோவையும் புளொட்டையும் தன்னுடைய இரண்டு கால்களுக்கிடையிலும் தமிழரசுக்கட்சி வைத்துக் கொண்டது. இதற்குச் சம்மதமில்லை என்றால் கூட்டமைப்பை விட்டு வெளியேறலாம் என்று சம்பந்தன் வெளிப்படையாகவே – மிரட்டலாகவே – சொன்னார். இப்படித்தான் தமிழரசுக் கட்சி தன்னுடைய இரண்டாம் கட்ட வளர்ச்சியை – 2004 க்குப் பிறகான இன்றைய நிலையை – சூதான முறையில் எட்டியது. இதில் எங்கே கண்ணியமும் அறமும் உண்டு? ‘அரசியலில் அறமும் கண்ணியமும் கிடையாது. வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதும் தந்திரங்களைக் கைக்கொள்வதும் வென்று முன்செல்வதும் நிலைநிறுத்துவதுமே அடிப்படை‘ என்று இதற்கும் யாரும் வியாக்கியானம் சொல்லலாம். கட்சியை வளர்த்துக் கொள்வதற்காக தன்னோடு இணைந்து நின்ற தரப்புகளையே உறிஞ்சித் தோற்கடிக்கத் தெரிந்த தமிழரசுக் கட்சிக்கு – கட்சியினருக்கு – எதிர்த்தரப்பாக அரசாங்கத்திடமிருந்து மக்களுக்கான தேவைகளையோ உரிமைகளையோ பெற முடியவில்லை. குறைந்த பட்சம் அரசாங்கத்துக்கு சிறிய அளவிலேனும் நெருக்கடியை உருவாக்க முடியவில்லை. பிராந்திய சக்தியாகிய இந்தியாவைத் தமிழருக்குச் சாதகமாக்கவில்லை. சர்வதேச சமூகத்தை வென்றெடுக்க முடியவில்லை. ஆனால், அதற்கான வாய்ப்புகளிருந்தன. 2009 க்குப் பிறகான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இடத்தை – அதற்கு மக்களும் சர்வதேச சமூகமும் வழங்கிய மதிப்பை – ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். உலகின் அத்தனை தலைவர்களோடும் சம்பந்தன் கைகுலுக்கியிருக்கிறார். படமெடுத்திருக்கிறார். ஒரு தடவை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். ஒரு காலகட்டம் (2015 – 2020 வரை) அரசாங்கத்தோடு இணக்கமான உறவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இருந்திருக்கிறது. இப்படியெல்லாம் அருமையான வாய்ப்புகளிருந்தும் தமிழரசுக் கட்சியோ, சம்பந்தன் அணியோ தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த நன்மைகள் என்ன? தமிழரின் அரசியலில் உருவாக்கிய பெறுமதிகள் என்ன? இவ்வளவுக்கும் 2009 க்குப் பிறகான ஈழத் தமிழரின் அரசியலில் தமிழரசுக் கட்சியே தலைமை தாங்கியிருக்கிறது. ஆகவேதான் தமிழரசுக் கட்சியிடம் நாம் கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. 2009 க்குப் பின்னரான கடந்த 15 ஆண்டுகால அரசியலில் எந்த நல் விளைவையும் உருவாக்காமல் விட்டதற்கும் நன்மை எதையும் தமிழர்கள் பெற முடியாமற் போனதற்கும், தமிழரசுக் கட்சியே பொறுப்பு. அதை அது நேர்மையாக ஏற்க வேண்டும். இப்பொழுது இந்தக் கட்டுரையின் தொடக்கப்பகுதிக்கே வரலாம். தமிழரசுக் கட்சியின் முதற்கட்டத்திலும் அது தோல்வியையை சந்தித்தது. இரண்டாம் கட்டத்திலும் அது தோல்வியே கண்டிருக்கிறது. ஆம், அது தன்னுடைய அரசியல் வரலாற்றில் எந்தப் பெறுமானங்களையும் உருவாக்கவில்லை. அப்படி அது ஏதாவது வரலாற்றுப் பெறுமதிகளை உருவாக்கியிருந்தால், தமிழரசுக் கட்சியோ, அதனுடைய வலுவான ஆதரவாளர்களோ, அரசியலைப் பற்றிய சுயாதீன மதிப்பீட்டாளர்களோ ஆதாரங்களை முன்வைத்து வாதிடலாம், மறுத்துரைக்கலாம். இப்படியிருந்தும் மக்கள் அதற்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள். அதையே ஆதரித்திருக்கிறார்கள். அதுவே வெற்றியடைந்திருக்கிறது என்றால், தமிழரசுக் கட்சியையும் விட ஏனைய தரப்புகள் மோசமாகியுள்ளன என்றே அர்த்தமாகும். என்றபடியால்தான் அருச்சுனா இராமநாதன் போன்ற தன்னிலைகள் எழுச்சியடைந்ததும் வெற்றிபெற்றதும். மறுபக்கத்தில் தேசிய மக்கள் சக்தி வெற்றியடைந்ததுமாகும். இறுதியாக ஒன்றைச் சொல்லி இந்தக் கட்டுரையை முடிக்கலாம். தமிழரசுக் கட்சியின் அரசியல் வெற்றி தற்காலிகமானதே. பதிலாக இன்னொரு சக்தி எழுந்தே தீரும். வரலாறு ஒருபோதும் நேர்கோட்டில் செல்வதில்லை. https://arangamnews.com/?p=11654
  2. fact-checking -கைவிடுகின்றது மெட்டா 08 Jan, 2025 | 03:36 PM இன்ஸ்டகிராம் மற்றும் முகநூல் தொடர்பில் முக்கிய கொள்கை மாற்றத்தை மெட்டா அறிவித்துள்ளது. மெட்டாவின் பிரதம நிறைவேற்றதிகாரி மார்க் ஜூக்கர்பேர்க் நிறுவனத்தின் கொள்கைகள் நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார். மாறிவரும் சமூக அரசியல் பரப்பினை கருத்தில் கொண்டும் சுதந்திரமான கருத்துப்பகிர்விற்கான விருப்பம் காணப்படுவதை கருத்தில் கொண்டும் இந்த மாற்றங்களை செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மெட்டா அதன் நம்பகரமான சகாக்களுடன் இணைந்து முன்னெடுத்த உண்மை சரிபார்ப்பும் திட்டத்தை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ள மார்க் ஜூக்கர்பேர்க் எக்ஸ் தளத்தில் காணப்படுவது போன்ற சமூகத்தினால் இயக்கப்படும் அமைப்பொன்றை உருவாக்கப்போவதாக தெரிவித்துள்ளார். மேலும் மெட்டா நிறுவனம் அரசியல் தொடர்பிலான விடயங்கள் தொடர்பில் அதன் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் கொள்கைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. https://www.virakesari.lk/article/203316
  3. தைப்பொங்கலை முன்னிட்டு தேங்காய், பச்சை அரிசியின் விலையை குறையுங்கள் - இராதாகிருஸ்ணன் அரசாங்கத்திடம் வலியுறுத்தல் Published By: Digital Desk 7 08 Jan, 2025 | 07:31 PM ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவுக்கு சென்று அங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தைப்பொங்கல் தமிழர்களுக்கு முக்கியமானதாகும். ஆகவே பச்சையரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சந்திரசேகர் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்கு விதி மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் சமாதானம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் தைரியமாக முதலீடு செய்வார்கள். துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆகவே சமூக விரோத செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம். அரிசி, தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் வாரம் பொங்கல் பண்டிகையை கொண்டாடவுள்ளோம். ஆனால் பச்சையரிசி மற்றும் தேங்காய்க்கான தட்டுப்பாடு காணப்படுகிறது. ஒருகிலோகிராம் பச்சையரிசியை 280 அல்லது 290 ரூபா என்ற அடிப்படையில் வாங்க வேண்டியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவுக்கு சென்று அங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தைப்பொங்கல் தமிழர்களுக்கு முக்கியமானதாகும். ஆகவே பச்சையரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சந்திரசேகர் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பதனை பாரதியாரே பாடல் ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடும். இலங்கை - இந்தியாவிடையில் 18 கிலோமீற்றர்தான் இடைவெளி. இதில் பாலம் அமைத்தால் நாம் காரிலேயே இந்தியாவுக்கு போய் வரலாம். அதேபோன்று அங்குள்ளவர்களும் இங்கு வந்து போவார்கள். இந்திய சுற்றுலாப் பயணிகளே அதிகளவில் இலங்கை வருகின்றனர் . இவ்வாறான நிலையில் பாலம் இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைத்தால் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யலாம். எனவே இலங்கை இந்தியாவுக்கிடையில் பாலம் அமைப்பது தொடர்பில் இந்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து முன்னுதாரணமாக செயற்பட வேண்டும். அதேவேளை கிளங்கன் வைத்தியசாலையை அரசாங்கம் அபிவிருத்தி செய்ய வேண்டும். ஏற்கனவே இந்தியா இந்த வைத்தியசாலைக்கு உதவியுள்ளது. அரசாங்கத்தினால் இயலாவிட்டால் இந்தியாவிடம் உதவி கோரினால் அவர்கள் தாராளமாக அபிவிருத்தி செய்து தருவார்கள். ஏனெனில் இந்த வைத்தியசாலையை நம்பியே பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். அத்துடன் அரசு தற்போது கிளீன் ஸ்ரீலங்கா என்ற பெயரில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன்மூலம் நடைபாதை வியாபாரிகள் ,பஸ் ,ஆட்டோக்காரர்கள்,இவர்களை நம்பியுள்ள வர்த்தகர்கள் பாதிக்கப்படுகினறனர் . எனவே இது தொடர்பில் அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும். https://www.virakesari.lk/article/203335
  4. மாற்குவியம் – சி.ஜெயசங்கர். adminJanuary 8, 2025 நவீன காலத்து ஈழத்து ஓவிய உலகின் ஆச்சரியந்தரும் ஓவியப் படைப்பாளி அ.மாற்கு அவர்கள். ஓவிய உலகின் உருவாக்கமான ஓவியர் அ.மாற்கு அவர்கள் நவீன ஓவிய உலகின் தராதரங்களாலும்;; வரன்முறைகளாலும் கட்டுப்படுத்தமுடியாத ஓவிய ஆளுமையாகத் திகழ்ந்திருப்பதை அவரது வாழ்க்கைக் காலப் படைப்புகள், செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அ.மாற்கு அவர்கள் தான் வாழ்ந்த சூழலையும், சூழ்நிலைமைகளையும் தனது கைக்கெட்டும் சாதனங்களை வைத்து சாதித்திருப்பதை அவரது படைப்புகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அவர் தனது படைப்பாக்கங்களுக்கான சாதனங்களுக்காகக் காத்திருந்ததில்லை, அங்கலாய்ந்திருந்ததில்லை. இந்தத் திறந்த, பரந்த, துணிந்த தன்மை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான வடபுல ஈழத்தமிழர்களது வாழ்வின் சவால்களைப் பார்வைக்கும், பகிர்விற்கும் அதன்வழியான பொது உரையாடலுக்குமான கலை ஊடகங்களாகவும், அடையாளங்களாகவும் பதிவாக்கியிருக்கின்றன. காலங்கடந்த வாழ்விற்குரியதான உணர்வுபூர்வமானதும், அறிவுபூர்வமானதுமான விடயப்பரப்பாக ஆக்கப்பட்டிருக்கின்றன. அசாதராரணமான ஓவியங்களை எவரும் எதிர்பாராத வகையிலான வெகு சாதரணமான சாதனங்களில் படைத்துக் கொண்டே இருந்தமை ஓவியர் மார்க்குவின் வாழ்க்கையாக இருந்தது. காலம் அவரது கைக்கு கிடைக்கச் செய்த எதனிலும் படைப்பை நிகழ்த்திச் சென்றிருக்கிறார். உயிரை வாங்க விழுந்து வெடித்த செல் சிதைவுகளில் இருந்து சிற்பங்களை உருவாக்குவதும் அவரது இயல்பாக இருந்தது. தராதரமான நீண்ட ஆயட்காலம் கொண்ட ஊடகங்களுக்காக அவர் அங்கலாய்த்துக் கிடக்கவில்லை. அனர்த்த காலத்தை எதிர்த்து கணந்தோறும் எதிர்வினையாற்றிய ஓவியக் கலைஞர் அவர். ஓவியர் அ.மாற்கு அவர்களின் இந்தத் திறந்த பரந்த துணிந்த தன்மை பெரிதும் கவனத்திற்படாததும், நுண்ணிதானதுமான விடயங்களைப் பரந்து விரிந்த தளங்களில் உரத்துப் பேச வைத்திருக்கின்றன. அன்றாட வாழ்வின் இடையறாத தொழிற்பாடாகவும்; புதிய புதிய ஆக்கமுறைகள் உத்திமுறைகளின் எதிர்பாராத சாதனப் பயன்பாடு என்பவற்றின் ஆற்றல் வெளிப்பாட்டுக் களங்களாக ஓவியர் அ.மாற்கு அவர்களது ஓவிய இயக்கம் அமைந்திருப்பதைக் காணமுடியும். ஓவியர் அ.மாற்கு அவர்களது ஓவியப் பயணம் தனிமனிதன் சார்ந்ததாக இருந்ததில்லை. அது ஓவியர் குழாமின் இணைந்த இயக்கமாக அவரது மாணவர்களுடன் இணைந்து ஏனைய ஓவியக் கலைஞர்களை இணைத்து மற்றும் பல்துறை அறிஞர், கலைஞர், இளைஞருடன் சேர்ந்து இயங்கியதாக இருக்கிறது. ஓவியர் அ.மாற்கு அவர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம், விபத்தின் பின் சக்கர நாற்காலியில் நகர்ந்த நிலையிலும் அவரது ஓவிய உருவாக்கமும், மாணவர் உருவாக்;கமும் ஓயாது நிகழ்ந்து வந்திருப்பதைக் காணமுடியும். ஓவியர் அ.மாற்கு அவர்களின் வரன்முறை கடந்த ஓவிய ஆக்கமுறைகளும், அணுகுமுறைகளும் நிகழ்காலத்தின் யதார்த்தத்தை உணர்ந்து இயங்கிய, வாழ்ந்த மனிதரின் பெரும் சிறப்பியல்பாகும். இத்தகைய சிறப்பியல்பு கொண்ட மனிதரின் இயக்கமானது போர், இடப்பெயர்வு, முற்றுகை வாழ்வு, பொருளாதாரத்தடை என்பவற்றைப் பொருட்படுத்தாத ஒன்றாக அமைந்தது. அத்தகைய நிலைமையின் நெருக்குவாரத்துள் வாழ்ந்துகொண்டு ஈழத்தமிழ் கூறும் நல்லுலகெல்லாம் அவர்களது மாணவர் பரம்பரையின் ஓவியச் செயற்பாடுகள் மூலம் ஈழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும், ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளது சமூக அரசியல் பண்பாட்டு இயக்கங்களின் ஓவிய அதிர்வுகள் வலுவாக ஏற்பட்டுக் கொண்டிருப்பதற்கான மூலச்சக்தி ஓவியர் அ.மாற்கு அவர்கள் திகழ்ந்தார். யாழ்ப்பாணத்திலுள்ள குருநகரில் அமைந்துள்ள வீட்டின் சிறியதொரு வீட்டு முன்றலில் இருந்தும் பின்நாட்களில் வன்னியிலும், நிறைவாக மன்னாரிலும் பலரையும் இணைத்த தனிமனித ஓவியப் பயணத்தின் உலகந்தழுவிப் பரந்து விரிந்து செல்லும் எதனையும் எதிர்கொள்ளும் எதிலும் தங்கியிராத இயக்கந்தான் ஓவியர் அ.மாற்கு அவர்களுடையது. மாற்குவின் ஓவியப் பயணம் அவராலும் அவருடன் இணைந்த மாணவர்களாலும் ஆர்வலர்களாலும் திட்டமிடப்பட்டு தீர்மானிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டவை. முற்றுமுழுதாக கலைஞர் மைய பயணமாக அமைந்ததன் காரணமாக அதன் கலை வெளிப்பாடுகளான ஓவியங்களும் அந்தக் கலைஞர்கள் நோக்கிலானதாக அமைந்திருப்பது முக்கிய படிப்பினைக்குரியது. இதையொத்த சமாந்தரக் கலைப்பயணத்தை குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களது மூப்பிலான ஈழத்து நாடக அரங்க இயக்கத்திலும் காணமுடியும். எங்கள் வளத்தில் எங்கள் பலத்தில் எங்கள் தளத்தில் எங்கள் நோக்கில் நாங்கள் நின்றோம், முன்சென்றோம் என்ற வகையிலான படிப்பினைக்குரிய பயணம் இது. அ.மாற்கு அவர்களது வியக்க வைக்கும் பயணம் குவியப்படுத்தப்பட வேண்டியது. அவரது படைப்பின் பொருள் மட்டுமல்ல படைப்பின் ஊடகங்களும்;; படைப்பாக்க முறைமைகளும் வியம்பப்படுத்தப்பட வேண்டியது. அ.மாற்கு அவர்களே வியம்பத்தக்க செய்தியாகி நிலைநிற்கின்றார். மாற்குவியம் என்பது இதுதான். சி.ஜெயசங்கர் https://globaltamilnews.net/2025/210054/
  5. வேலைநிறுத்தம் இல்லை - பஸ் சங்கங்கள் தீர்மானம் January 8, 2025 02:27 pm Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து சோதனை நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (08) தனியார் பஸ் சங்கங்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதில்லை என பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பொலிஸாரின் வரம்பு மீறல் மற்றும் தேவையற்ற அழுத்தங்களை பஸ்கள் மீது பிரயோகிப்பதை கண்டித்து நாடு தழுவிய ரீதியில் இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க பஸ் சங்கங்கள் நேற்று இணக்கம் தெரிவித்திருந்தன. இவ்வாறானதொரு பின்னணியில் இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுடன் பஸ் சங்கப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதில்லை என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=198486
  6. OpenAI CEO Sam Altman இன் தங்கை தன்னை சாம் சிறுவயதில் இருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கும், வன்கொடுமைக்கும் உட்படுத்தினார் என்று நட்ட ஈடு கேட்கின்றார். Elon Musk, Mark Zuckerberg, Sam Altman போன்ற அறமில்லாத சுயநலமிகள் உலகை ஆளும் நிலை வரும்போது அது தானாகவே அழியும்!
  7. அரிசி தட்டுப்பாட்டுக்கு 3 வாரங்களில் முற்றுப்புள்ளி - விவசாய பிரதி அமைச்சர் ஆலைகளிலிருந்து அரிசியை கட்டுப்பாட்டு விலையில் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த அரிசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாட்டிற்கு சில தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும், ஆலை உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேநேரம் நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் சிவப்பு அரிசி உள்ளிட்ட பல அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர். இந்தநிலையில், கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசியை விற்பனை செய்ய முடியாதமையினால் அரிசி வர்த்தகத்தில் இருந்து விலக நேர்ந்துள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் அரிசியை 150 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கான இயலுமை உள்ள போதிலும் அரசாங்கம் வரி விதிப்பதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டுவதாக விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.பி. குணரத்ன குற்றம் சுமத்தியுள்ளார். இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் அரிசிக்கு 65 ரூபாயினை அரசாங்கம் வரியாக அறவிடுகிறது. நேற்று வரையில் 88 ,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதனூடாக 5.7 பில்லியன் ரூபாயினை அரசாங்கம் வருமானமாக ஈட்டியுள்ளதாக விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.பி. குணரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, அரிசி தட்டுப்பாடு எதிர்வரும் 3 வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் நெல்லில் மூன்றில் ஒரு பகுதியை அரசாங்கம் கொள்வனவு செய்யும் அதேவேளை, நெல்லுக்கான நியாயமான விலையொன்றும் நிர்ணயிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். அதற்கமைய, அரிசி தட்டுப்பாடு என்ற பேச்சுக்களுக்கு 3 வாரங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். https://www.hirunews.lk/tamil/393012/அரிசி-தட்டுப்பாட்டுக்கு-3-வாரங்களில்-முற்றுப்புள்ளி-விவசாய-பிரதி-அமைச்சர்
  8. தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையே சந்திப்பொன்றை நடத்துவது தொடர்பில் அவதானம்! புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் முக்கிய கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்றை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்புக்கான ஏற்பாடு தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். எவ்வாறாயினும், இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழுவின் அனுமதியின் பின்னரே குறித்த சந்திப்புக்கான நிலைப்பாடு எட்டப்படும் என தாம் இதன்போது குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அதேநேரம், இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறுவது பொருத்தமாக அமையும் என தாம் யோசனை முன்வைத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குறிப்பிட்டார். https://www.hirunews.lk/tamil/392991/தமிழ்த்-தேசிய-கட்சிகளுக்கிடையே-சந்திப்பொன்றை-நடத்துவது-தொடர்பில்-அவதானம்
  9. யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு தை 25 ஆரம்பம்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை தை மாதம் 25ம், 26ம் திகதிகளில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடானது மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை வரை இடம்பெறவுள்ளது. செயற்படல், நிலைமாற்றம் , நிலைத்திருப்பு என்னும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருட மாநாட்டில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் பலர் கலந்து கொண்டு மாநாட்டின் தொனிப்பொருளை சார்ந்ததான பல்வேறு விடயப்பரப்புக்கள் பற்றி உரையாடவுள்ளனர். மேலும் மாநாட்டின் ஓரங்கமாக மாற்றுப் பிணக்குத் தீர்வு முறைகள் பற்றிய குறிப்பாக மத்தியஸ்தம் தொடர்பான சிறப்பு அமர்வு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது தை மாதம் 24ம் திகதி பிற்பகல் 4.30 மணி முதல் 6.30 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளடன் இந்நிகழ்வில் இந்தியாவினைச் சேரந்த நிபுணர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் பங்குபற்றி பயன் பெற்றுக்கொள்ளுமாறும் மாநாட்டு ஒழுங்கமைப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.[ஒ] https://newuthayan.com/article/யாழ்ப்பாண_சர்வதேச_சட்ட_மாநாடு_தை_25_ஆரம்பம்!
  10. கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில், செவ்வாய்க்கிழமை (7) இரவு கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்சின் மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது. ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்துவந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து,மக்கள் தங்களது கார்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், தீ பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் - கவுண்டியில், 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் கூறுகையில், “காட்டுத்தீயில் பல கட்டமைப்புகள் அழிந்துள்ளன. ஆனால் சரியான எண்ணிக்கை கொடுக்கப்படவில்லை. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 13 ஆயிரம் கட்டிடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்றார். புதன்கிழமை (8) இரவு, காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் காட்டுத்தீ இன்னும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.AN https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/கலிபோர்னியாவில்-காட்டுத்தீ-30-ஆயிரம்-பேர்-பாதிப்பு/50-349977
  11. கற்பனைக் குதிரை – 75 Sivarasa Karunakaran on January 3, 2025 Photo, TAMIL GUARDIAN இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இது 75ஆவது ஆண்டு. ஆனால் 75 ஆண்டு (பவள விழா) கொண்டாட்டங்களை நடத்த முடியாத அளவுக்குக் கட்சி பலவீனப்பட்டுள்ளது. கட்சிக்குள் உள்மோதல்கள் வலுப்பெற்றுள்ளன. இதனால் அது நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. பல வழக்குகள். மேலும் வழக்குகள் தொடரப்படக்கூடும் என்றே தெரிகிறது. குறிப்பாக மத்திய செயற்குழுவை முடக்குமளவுக்கு நிலைமை வளர்ச்சியடைந்துள்ளது. கட்சியின் முக்கியஸ்தர்களான அரியநேத்திரன், கே.வி.தவராஜா, சசிகலா ரவிராஜ், சரவணபவன் உள்ளிட்ட பலர் தகுதிநிலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சிவமோகன் இடைநிறுத்தப்பட்டுள்ளார். அடுத்த கட்டமாக தமிழ்ப்பொது வேட்பாளரை ஆதரித்தவர்கள் மீதும் மல்ரிபெரல் தாக்குதல் நிகழ்த்தப்படக்கூடும். இந்தக் காய் வெட்டும் களையெடுப்பும் நிற்கப்போவதில்லை. மேலும் உற்சாகமாகத் தொடரக்கூடிய வாய்ப்புகளே அதிகமுண்டு. அணி இரண்டாகினால், பிளவும் பிரிவும் காய் வெட்டும் களையெடுப்பும் சாதாரணமாகி விடும். அதற்கான நியாயங்களும் நியாயப்படுத்தல்களும் தானாகவே உருவாகிக் கொள்ளும். கடந்த வாரம் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் வவுனியாவில் நடந்தபோது கட்சியின் ஒரு தரப்பினர், மத்திய செயற்குழுவை நோக்கிக் கேள்விகளை எழுப்பிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பதாதைகளை கூட்டம் நடந்த மண்டபத்தின் வாசலில் கட்டி, மத்திய குழுவை வரவேற்றிருந்தனர். இது கட்சியின் உள் நிலைமையை, அதனுடைய உள் விரிசல்களை மேலும் தெளிவாக விளக்குகிறது. அடுத்து வரப்போகிற உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபைகளுக்கான தேர்தலில் இந்த விரிசல் மேலும் வலுப்பெறவே வாய்ப்புண்டு. இந்த நிலைமையை மேலும் வளரவிடாமல், சீராக்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் மாவை சேனாதிராஜாவைத் தூக்கி விட்டு, பதில் தலைவராக சீ.வி.கே. சிவஞானத்தை நிறுத்தியுள்ளது கட்சி. மாவையின் தலைமைக் காலத்தில்தான் கட்சி, மிக மோசமான அளவுக்கு உள்வெடிப்புகளை – சீரழிவுகளைக் கண்டது. அவரை நீக்கி விட்டுச் சிவஞானத்தை நியமித்திருப்பதன் மூலம் அந்த வெடிப்புகளை ஒட்டிச் சீராக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், அது சிரமான காரியம். அதைப் பற்றிக் கீழே பார்க்கலாம். இப்பொழுது தலைமைப் பதவியிலிருந்து கழற்றி விடப்பட்ட சேனாதிராஜாவுக்குப் பெருந்தலைவர், அரசியல் குழுத் தலைவர் என்றெல்லாம் ஒரு அலங்காரத் தலைப்பாகையைக் கட்டி விட்டிருக்கிறார்கள். சம்பந்தன் இருந்தபோது அவருக்கு இத்தகையதொரு மதிப்பு வாய்ந்த இடமளிக்கப்பட்டிருந்தது உண்மையே. சேனாதிராஜாவுக்கும் அத்தகைய இடமளிக்கப்பட்டுள்ளது என்று இதற்கான நியாயம் சொல்லப்படுகிறது. சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட இடமும் மதிப்பும் சேனாதிராஜாவுக்குக் கிடைக்கப்போவதில்லை. அதை யாரும் வழங்கப்போவதுமில்லை. மட்டுமல்ல, தமிழ் மக்களுடைய அரசியல் வெற்றிகளைச் சாதிக்க முடியாதுவிட்டாலும், கட்சியைப் பொறுத்தவரையில் சிறுதுரும்பையும் இரும்பாக்கக் கூடிய வல்லமை (கெட்டித்தனம்) சம்பந்தனுக்கிருந்தது. இரும்பையும் சிறுதுரும்பாக்கும் ஆளே சேனாதிராஜா. ஆகவே, சேனாதிராஜா இனிச் செல்லாக் காசாக்கப்பட்ட ராஜாவாகவே இருக்கப்போகிறார். ஆகவே இப்படிச் சமாளிப்புகள், குழிவெட்டுதல்கள், சீரழிவுகளோடுதான் கட்சி பயணிக்க வேண்டியுள்ளது. அறுவைச் சிகிச்சை செய்து தன்னைச் சீராக்கிக் கொள்வதற்கு அது இன்னும் தயாராகவில்லை. அதைச் செய்வதற்கு அதனால் முடியாது. தமிழரசுக் கட்சியின் குணாம்சமே – இயல்பே – வரலாறே – இதுதான். பழைய குப்பை, கூழங்களையெல்லாம் சேர்த்து வைத்துக் கொள்வது. தேவையற்ற எதையும் வெளியே தூக்கிப்போடுவதில்லை. அதைக் கூட்டித் துப்புரவு செய்வதற்கு அது ஒருபோதுமே முன்வருவதில்லை. கட்சியின் தளர்வை மட்டுமல்ல, அதனுடைய அரசியற் கொள்கை, அதற்கான நடைமுறைகள் போன்றவற்றைக் கூட அது புத்தாக்கம் செய்வதில்லை. சமகால நிலவரங்கள் என்ன என்றே கட்சிக்குத் தெரியாது. கட்சிக்குத் தெரியாது என்றால், அதிலே உள்ளவர்களுக்கு இதைப்பற்றிப் புரியாது. அதற்கு அவர்கள் முயற்சிப்பதுமல்ல. அப்படி யாராவது சற்று விலகலாக, புதிய சூழலுக்கமையச் சிந்திக்க முற்பட்டால், அவர்களைத் துரோகிகளாகச் சித்தரித்து, தங்களுடைய நிலைமைக்குக் கீழிறக்கி விடுவார்கள். என்பதால்தான் அவர்கள் 1960, 70களின் அரசியலைத் தூக்கிகொண்டு நிற்கிறது தமிழரசுக் கட்சி. காலங்கடந்த அரசியலை, தோற்றுப்போன அரசியலை, சாத்தியப்படுத்தவே முடியாத அரசியலைக் காவிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பலவீனத்தினால்தான் தமிழரசுக் கட்சியால், அது முன்மொழிந்த சமஸ்டியை 75 ஆண்டுகளாகப் பெற முடியாமலுள்ளது. இதைக்குறித்து அது ஒருபோமே தனக்குள் கேள்வியைக் கேட்டுக் கொண்டதில்லை. அரசாங்கம் தம்மை ஏமாற்றிவிட்டது என்று சொல்லிச் சமாளித்துக் கொள்கிறது. அப்படியென்றால், 75 ஆண்டுகளாக தான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை தமிழரசுக் கட்சி பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறது அல்லவா! மட்டுமல்ல, தமிழரசுக் கட்சி தொடங்கப்பட்டபோது ஈழத்தமிழர்களிருந்த சமூக – அரசியற் பலம் இப்போதில்லை. இப்பொழுது மிகப் பாதகமான நிலையிலேயே ஈழத்தமிழ்ச்சமூகம் உள்ளது. பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஆள் எண்ணிக்கை ரீதியிலும் பலவீனமான நிலையில்தான் ஈழத்தமிழர்கள் உள்ளனர். பல லட்சம் பேர் மண்ணை விட்டுப்போய் விட்டனர். இன்னும் போய்க்கொண்டிருக்கின்றனர். ஆகவே, இதற்கான பொறுப்பை தமிழரசுக் கட்சி ஏற்க வேண்டும். அந்தப் பொறுப்பேற்றல் என்பது, தமிழரசுக் கட்சியினுடைய பொறுப்புக் கூறலில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். அந்தப் பொறுப்புக் கூறுதல் என்பது, அது ‘தமிழர்களுக்குத் தமிழரசு – தனியரசு‘ என்று உருவாக்கப்பட்ட எண்ணக் கருவிலிருந்து தொடர்ந்து வந்த விளைவுகளுக்கானது என்ற அடிப்படையில் அமையும். இதற்கு அதுவும் (தமிழரசுக் கட்சி) அதனுடைய ஆதரவாளர்களும் தம்மைச் சுயவிமர்சனம் செய்து கொள்வது அவசியம். அத்துடன், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலத்தைப் பற்றிய தயக்கமின்றிய அரசியல் ஆய்வுக்குத் தயாராக வேண்டும். சரியாகச் சொன்னால், இது அரசியற் குற்றமாகும். இந்தக் குற்றத்துக்கு என்ன பதில்? என்ன தண்டனை? ஆகவே, பொறுப்புக் கூறுதல் அவசியமாகும். அதைச் செய்யாத வரையில் தமிழரசுக் கட்சியினால் நீதிமன்ற வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வந்தாலும், அரசியல் பயணத்தால் மீள முடியாது. சேனாதிராஜாவுக்குப் பதிலாகச் சிவஞானத்தை மாற்றினாலென்ன, சிறிதரனை நியமித்தாலென்ன, எதுவும் புதிதாக நிகழாது. மோதகத்துக்கும் கொழுக்கட்டைக்கும் ஏதாவது வித்தியாமிருக்கா? அப்படித்தான் இதுவும். அதே பழைய புண்ணும் சீழுமாகத்தான் நிலைமையிருக்கும். இந்த நிலையில்தான் புதிய – பதில் – தலைவரான சி.வி.கே. சிவஞானத்தை வைத்துக் கொண்டு கட்சியை முன்னகர்த்தலாம் என்று கட்சி யோசிக்கப்படுகிறது. இதையிட்டுச் சிரிப்பதை விட வேறு என்னதான் செய்ய முடியும்? இது தமிழ்ச் சமூகம் துயரப்பட வேண்டிய இடமாகும். சிவஞானமோ சுமந்திரனை ஆதரிப்பவர். சுமந்திரன் வழிமுறையில் சிந்திப்பவர். ஆகவே, கட்சிக்குள் சுமந்திரனின் செல்வாக்கு நீடிக்கவும் பலமடையவுமே வாய்ப்புண்டு. இதை உறுதிப்படுத்துவதைப்போலவே, ‘தமிழரசுக் கட்சியின் பேச்சாளராக சுமந்திரனே இருப்பார்’ என்று சிவஞானம் சொல்லியிருப்பதைப் புரிந்து கொள்ளலாம். மட்டுமல்ல, சுமந்திரன் கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதால், ‘அவர் இனிக் குரல்தர வல்லவரல்ல. அவருடைய சிறகுகள் அறுக்கப்பட்டு விட்டன. அவருடைய பற்கள் பிடுங்கப்பட்டாயிற்று’ என்றொரு தோற்றப்பாட்டை உருவாக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீநேசன் ஒரு ஊடகச் சந்திப்பை நடத்தியிருந்தார். அதற்குப் பதிலடியாக, சிவஞானத்தின் இந்த அறிவிப்புள்ளது. ஸ்ரீநேசன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் சிறிதரனின் ஆதரவாளர்கள் – அணியினர். என்றாலும் இந்த அணியினர் இப்பொழுது பின்தள்ளப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்திலும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும் சிறிதரன், ஸ்ரீநேசன் போன்றவர்கள் தாம் பலமானவர்களாகக் கருதலாம். அது எந்தளவுக்கு ‘நிரூபிக்கப்படும் பலமாக இருக்கும்’ என்பதை எதிர்வரும் காலம்தான் தீர்மானிக்க முடியும். இப்போதைய சூழலில் சிவஞானம், சாணக்கியன், சுமந்திரன் ஆகியோரே முன்னிலையைக் கொண்டுள்ளனர். அரசியலாற்றல், தொடர்பாடல், அறிமுகம், குறைந்தபட்சம் யதார்த்தமாகச் சிந்தித்தல், ஜனநாயக நடைமுறைகளில் நம்பிக்கை போன்றவற்றைப் புரிந்து கொண்டு நடக்கும் அணி இதுதான். எதிரணிக்கு இதெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது. நாடாளுமன்றக் குழுத்தலைவர் சிறிதரன், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற அணியின் பேச்சாளர் ஸ்ரீநேசன் என்றெல்லாம் வெளியே சொல்லிக் கொண்டிருந்தாலும் சாணக்கியனோடும் சிவஞானத்தோடும் இணைநிலைப் பயணியாக சுமந்திரனே களமாடக் கூடிய வாய்ப்புகள் அதிகமுண்டு. தேர்தலுக்குப் பின்னர் நான்கு ஐந்து அரசியற் சந்திப்புகளை சுமந்திரன் + சாணக்கியன் அணி சாத்தியப்படுத்தியுள்ளது. இது மேலும் தொடரும். இந்தப் பலத்தினால்தான் கடந்த மாதம் நடந்த இன்னொரு மத்திய செயற்குழுக் கூட்டத்தில் மாவையைத் தலைவராக ஏற்கத் தேவையில்லை என்று துணிகரமாக சாணக்கியன் அணி சொன்னது. இல்லை, அவரை வைத்தே கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற சிவமோகன் அணி இப்பொழுது வெளித்தள்ளப்பட்டுள்ளது. உள்ளே இப்படி ஏராளம் கசப்புகளும் இடைவெளிகளும் உள்ளபோதும் வெளியே பேசும்போது தமிழரசுக் கட்சிதான் தமிழர்களுடைய பேராதரவைப் பெற்ற ஒரே கட்சி என்ற பெருமிதங்களை அதனுடைய உறுப்பினர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். இதற்கு வாய்ப்பாக கடந்த (2024 நவம்பரில்) நாடாளுமன்றத் தேர்தலில் ஏனைய தமிழ்க் கட்சிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டுத் தமிழரசுக் கட்சியே வெற்றியைப் பெற்றுள்ளது. அதற்கு எட்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் அது மூன்றாவது செல்வாக்குள்ள – அதிக உறுப்பினர்களைக் கொண்ட – கட்சியாக உள்ளது. அப்படியானால் எத்தகைய முடிவுக்கு மக்கள் வர முடியும்? கட்சியின் அரசியற் கொள்கை – அரசியல் நிலைப்பாடு பழையது. சாத்தியக் குறைவானது. தோற்றுப்போனது. கட்சிக்குள் அணிமோதல், அதன் விளைவான குழிபறிப்புகள், வழக்குகள் என்றெல்லாம் இருந்தாலும் அதையெல்லாம் கடந்து தமிழரசுக் கட்சியைத்தானே மக்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். அதற்குத்தானே ஆதரவு கிடைத்துள்ளது? என்ற கேள்வி இந்த இடத்தில் எழும். இதற்கான வரலாற்றுக் காரணங்களையும் சமகால நிலவரங்களையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும். தமிழரசுக் கட்சி வெற்றியடைந்திருப்பதையும் அதுவே நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்தில் இருப்பதையும் அதை மக்கள் அங்கீகரித்திருப்பதையும் ஒரு அரசியல் வெற்றியாக நாம் கொள்ள முடியாது. இதையும் விடப் பெரிய வெற்றிகளை 1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியும், 2005, 2015 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பெற்றிருந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகக் கூட இருந்திருக்கிறது. அதனால் என்ன பயன் தமிழ் மக்களுக்குக் கிடைத்தது? தமிழ் மக்களுடைய எந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டது? ஆனால், கட்சி, தன்னை வெற்றியடைந்த தரப்பாகத்தான் காட்டிக் கொள்ள முற்படும். அது கட்சியினுடைய தேவையாகும். கட்சிக்கு வெளியே, அரசியலைப் பகுத்துப் பார்க்க விரும்புவோருக்கும் உண்மையை அறிய வேண்டியவர்களுக்கும் கட்சியின் கருதுகோளைத் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி இருக்கவும் கூடாது. வரலாறு இதுதான். உண்மை இதுதான். 1972 இல் தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாகச் செயலிழப்புக்குப் போனது. அதற்கு முன்பே, அதனுடைய இயலாமைக் குறித்துத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரான எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பகிரங்கமாகச் சொல்லி விட்டார் – ‘‘தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்‘‘ என்று. அதற்குப் பிறகு, அடுத்த நிலையிலிருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அதை தமிழர் விடுதலைக் கூட்டணியாக உருவமாற்றம் செய்தார். அதற்காக அவர் எதிரணியாக இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸோடு – ஜீ.ஜீ. பொன்னம்பலத்தோடு கூட்டுச் சேர்ந்தார். காங்கிரசும் அப்பெழுது படுக்கையிலேயே கிடந்தது. ஆகவே, இரண்டும் இணைந்து 1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியாகப் புதிய லேபிளில் வெற்றியைப் பெற்றது. ஆனாலும் கூட்டணியினால் தொடர்ந்து அரசியல் அரங்கில் நின்று பிடிக்க முடியவில்லை. அதனுடைய கொழும்பு மைய அரசியலும் நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனைக் கோட்பாடுகளும் அதனை வெளிறச் செய்தன. 1977 க்குப் பிறகு எழுச்சியடைந்த ஈழ விடுதலை இயக்கங்கள் தமிழர் விடுதலைக்கூட்டணியை முற்றாகவே நிராகரித்தன. அதனோடு இலங்கை தமிழரசுக் கட்சியும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸூம் தமிழ்ப் பிராந்தியத்தை விட்டே வெளியேற வேண்டியேற்பட்டது. அதாவது, 1977 இல் அமிர்தலிங்கத்தினால் தமிழரசுக் கட்சியை மீளுயிர்ப்பு செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியும் தோற்றது. இறுதியில் 1989 இல் அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் விடுதலைப் புலிகளால் கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்னொரு தலைவரான சிவசிதம்பரம் காயங்களோடு மயிரிழையில் தப்பினார். தமிழ் அரசியற் தலைவர்கள் கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டதன் அரசியற் சேதியை தமிழ் மக்கள் கவனத்திலெடுத்துப்பார்க்க வேண்டும். இந்தக் கட்டுரை அந்தக் கொலைகளின் அரசியற் சரி – தவறுகளைப் பற்றி இங்கே பேசவில்லை. அது தனியாகப் பேசப்பட வேண்டியது. ஆனால், அன்று தமிழ்ப் பிரதேசத்தை விட்டுக் கொழும்பிலும் இந்தியாவிலுமே தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவை தளமிட்டிருந்தன என்பதைக் கவனிக்க வேண்டும். 2000 இல் புலிகள் – இலங்கை அரசுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தையோடு விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட மறைமுகமான சர்வதேச நெருக்குவாரம், தவிர்க்க முடியாமல் ஏனைய அரசியற் தரப்புகளோடு உடன்பாட்டுக்குச் செல்ல வேண்டிய நிலையை உருவாக்கியது. அதற்காக எதிர்த்தரப்பிலிருந்த – ஒரு காலத்தில் புறமொதுக்கியிருந்த – அரசியற் கட்சிகளைத் தூசி தட்டி எடுக்க வைத்தது. இந்த அரசியற் சூழல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாய்ப்பைக் கொடுத்தது. ஜனநாயக வழிமுறையிலான தேர்தலொன்றில் புலிகள் தமக்குள்ள ஆதரவை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு புலிகள் முன்வந்தனர். முதற்தடவை அது சாத்தியமாகினாலும் தொடர்ந்து ஆனந்தசங்கரி அதற்கு ஒத்துழைக்கவில்லை. அப்பொழுது கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் ஆனந்தசங்கரியே இருந்தார். ஆனந்தசங்கரியின் உணர்ச்சிவசப்பட்ட போக்கு, அந்த வாய்ப்பை தமிழரசுக் கட்சியின் அடையாளத்தோடிருந்த சம்பந்தனுக்குக் கிடைத்தது. சம்மந்தன் அதைப் பயன்படுத்திக் கொண்டார். சம்மந்தனுக்கு விடுதலைப்பு லிகளுடன் முழுமையான உடன்பாடு இல்லாது விட்டாலும் முரண்பட்டுக் கொள்ளாமல் சமரச அரசியலை மேற்கொண்டு தன்னைத் தக்கவைத்துக் கொண்டார். அதன் விளைவாகவே இப்பொழுது தமிழரசுக் கட்சி இன்றைய வளர்ச்சி நிலையை – மீளுயிர்ப்பு நிலையை எட்டியது. ஆகவே, இன்றைய தமிழரசுக் கட்சி, சம்பந்தனுக்கே நன்றி சொல்ல வேண்டும். சம்பந்தனுக்கே கடமைப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் செல்வநாயகத்துக்கு அடுத்த நிலைப் பாத்திரம் சம்பந்தனுக்கே உண்டு. சம்பந்தனுடைய காலத்தில் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாக இயங்க வேண்டியிருந்தது. முதற்காலட்டத்தில் விடுதலைப் புலிகளோடு நிபந்தனையற்ற அனுசரித்தலை அது செய்தது. அதைச் சம்பந்தன் செய்தார். அதாவது புலிகளிடம் பணிந்திருந்தார். இரண்டாவது காலட்டத்தில், கூட்டமைப்பில் இணைந்திருந்த முன்னாள் இயக்கங்களான ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, காங்கிரஸைத் தனக்குக் கீழே வைத்திருந்தார் சம்பந்தன். அவற்றின் மீது மேலாதிக்கம் செலுத்தி வந்தார். அதற்கு வாய்ப்பாக அவருக்குத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பயன்படுத்தி வந்தமை இருந்தது. இதுதான் சம்பந்தனின் திறன். பணிய வேண்டிய இடத்தில் பணிவதும், நிமிர வேண்டிய இடத்தில் நிமிர்வதும். இதை உடைத்து தமிழரசுக் கட்சியைப் பலவீனப்படுத்தவதற்கு அல்லது சமனிலைப்படுத்துவதற்கு ,“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும்” என்று பங்காளிக்கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியவை அழுத்தம் கொடுத்தன. அதற்கு முன்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் நெருக்கடியைக் கொடுத்தது. ஆனால், சம்பந்தன் அதையெல்லாம் பொருட்படுத்தவேயில்லை. இதனால் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. “சம்பந்தனுடைய பிடிவாதத்தினால் கூட்டமைப்பு உடைகிறது – தமிழரின் பலம் சிதைகிறது” என்ற குற்றச்சாட்டும் விமர்சனமும் பலமாக முன்வைக்கப்பட்டது. சம்பந்தன் கிறங்கவேயில்லை. மட்டுமல்ல, கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் கையை அவர் மேலுயர்த்தியே வைத்திருந்தார். இதனால் ஏனைய பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியவை கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று பிடிவாதமாகவே நின்றன. இறுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளியேறியது. அப்போதும் சம்பந்தன் எந்த விட்டுக் கொடுப்புக்கும் செல்லவில்லை. பதிலாக தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டார். இது சம்பந்தன் மீதான விமர்சனங்களை மேலும் கடுமையாக்கியது. கூடவே சம்பந்தனுக்கு ஆதரவாகச் செயற்பட்ட சுமந்திரனையும் எதிர்நிலையில் நோக்க வைத்தது. அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சம்பந்தனும் சுமந்திரனும் உடைத்து விட்டனர். தமிழர்களுடைய பலத்தைச் சிதைத்து விட்டனர். தமிழ் மக்களுக்குத் துரோகமிழைத்து விட்டனர் என்ற விதமாக. இப்போதும் அந்த விமர்சனம் உண்டு. ஆனால், தமிழரசுக் கட்சியின் பலத்திலும் செல்வாக்கிலும்தான் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்றவை உயிர்வாழ்கின்றன எனச் சம்பந்தனும் சுமந்திரனும் மதிப்பிட்டனர். அதையே இன்று வரலாறு நிரூபித்துள்ளது. சம்மந்தன் காலமாகி விட்டார். சுமந்திரன் வெற்றியடைவில்லை. ஆனாலும், தமிழரசுக் கட்சியின் முகமாக சுமந்திரனே உள்ளார். சிங்கள மக்களுக்கும் தென்னிலங்கைக்கும் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்துக்கும் தமிழரசுக் கட்சியென்றால் அது சுமந்திரனின் கட்சியென்றே தெரியும். இதைப் புரிந்துகொண்டபடியால்தான் கட்சியின் பேச்சாளராக சுமந்திரன் இருப்பார் என்று சிவஞானம் சொன்னது. இப்பொழுது தமிழரசுக் கட்சிக்கு எட்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன. காங்கிரசுக்கு ஒரு ஆசனம். ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் புளொட்டும் அவுட். ரெலோவுக்கு அரும்பொட்டில் ஒரு சிறு வாய்ப்பு. இன்றைய தமிழ்த் தேசியவாத அரசியலை தமிழரசுக் கட்சியோடும் ஏனைய தமிழ்த் தேசியவாதக் கட்சிகளோடும் மதிப்பிட்டால், தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் வெற்றியடைந்துள்ளன. அப்படியென்றால், இந்த மூத்த கட்சிகளைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்றனரா? அவற்றின் தவறுகள், போதாமைகளுக்கு மத்தியிலும் அந்தக் கட்சிகளின் அரசியல்தான் தமிழ் மக்களுடைய அரசியலா? என்ற கேள்வி எழும். இது விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். சுருக்கமாகப் பார்த்தால், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் அரசியற் போதாமைகளிலிருந்து (1950 இல்) உருவாகியதே இலங்கைத் தமிழரசுக் கட்சியாகும். தமிழரசுக் கட்சியின் போதாமையிலிருந்து உருவாகியதே (1972) தமிழர் விடுதலைக் கூட்டணி. அதனுடைய போதாமையிலிருந்தே உருவாகியவையே (1970 களின் பிற்பகுதி) ஈழ விடுதலை இயக்கங்கள். அவற்றின் போதாமைகளிலிருந்து உருவாகியதே (2001) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இப்படியெல்லாம் நிகழ்ந்து வந்த வரலாற்று வளர்ச்சி, இப்பொழுது திரும்பி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸிடமும் இலங்கைத் தமிழரசுக் கட்சியிடமும் சென்றிருக்கிறது என்றால், தமிழர்களின் அரசியலும் பின்னோக்கிச் சென்றுள்ளது என்றே அர்த்தமாகும். நிச்சயமாக. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுப்போன அரசியற் சித்தாந்தத்துக்கு இன்னும் தமிழ் சனங்களிடம் மதிப்பிருக்கிறது – செல்வாக்கிருக்கிறது என்றால், இதை வேறு எப்படிச் சொல்வது? தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரசும் 1970 கள் வரையில் பிராந்திய அரசியலையே மேற்கொண்டன. பிராந்திய அரசியல் அதிகாரத்தையே கோரின. இப்பொழுதும் அவற்றின் நிலைப்பாடு அதுதான். ஆனால், அவற்றின் பெயரோ ‘அகில இலங்கை’ என்ற அடையாளத்தையும் எண்ணக் கருவையும் சுட்டுவதாகும். அதாவது முழு இலங்கைக்குள் தீர்வு என்ற அடையாளத்தை. “ஒரு நாடு இரு தேசம்” என்று கூறும் தமிழ்க் காங்கிரஸ் (கஜேந்திரகுமார் பொன்னம்பலம்) ‘அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி’யின் உத்தியோக பூர்வமான தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். அப்படித்தான் ‘இலங்கைத் தமிழரசுக் கட்சி’க் காரர்களும். இவர்கள் கொழும்பில் (மையத்தில்) உறவும் வடக்குக் கிழக்குப் பிராந்தியத்தில் எதிர்ப்புமாக தோற்றம் காட்டுவர். இந்த அடையாள முரணே அவற்றின் அரசியல் முரணுமாகும். இதனால்தான் அவற்றின் அரசியல் கடந்த காலத்தில் தோற்றுப் போனது. அதாவது, வடக்குக் கிழக்கில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக பிராந்திய அரசியலை – தமிழ்த் தேசிய அரசியலை – பிரிவினைவாத அரசியலைத் தீவிரமாகக் கொதி நிலையில் பேசுவது. நடைமுறையில் கொழும்பு மையத்தோடு உறவைப் பேணுவது. இந்த இரட்டை நிலைப்பாடே அவற்றின் அரசியற் தோல்வியாகும். ஆனால், இந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வெற்றியடைந்து கொண்டேயிருப்பர். மக்கள் தோற்றுக் கொண்டிருப்பர். புலிகள் இருந்தபோது இவற்றைத் தமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்தனர். விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி, தம்மை மீண்டும் மீள்நிலைப்படுத்திக் கொண்டன இவை இரண்டும். அதனால்தான் இரண்டு கட்சிகளும் இப்போதும் உயிர்வாழ்கின்றன. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு எழுச்சியடைந்திருக்க வேண்டிய ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ, ஈரோஸ், என்.எல்.எவ்.ரி போன்றவற்றின் அரசியல் பலவீனமும் இதற்கு அப்பாலான புதிய அரசியற் தரப்புகளுடைய இயலாமைகளும் தமிழரசுக் கட்சியையும் தமிழ்க் காங்கிரஸையும் உயிரூட்டி, வளர்த்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு காலம் இந்தக் கட்சிகளால் பயனே இல்லை. இந்தக் கட்சிகள் மக்களுக்குத் துரோகமிழைத்து விட்டன. இவற்றின் தலைவர்களை விட்டு வைக்கவே கூடாது என்று கடும்போக்கைப் பின்பற்றிய விடுதலைப் புலிகளும் ஏனைய இயக்கங்களும் பின்னர் இந்தக் கட்சிகளுடன் சமரசத்துக்குச் சென்றது வரலாற்றின் விசித்திரமும் சோகமுமாகும். இதில் இன்னும் சில படிகள் முன்னே சென்று தமிழரசுக் கட்சியே கதி என்ற நிலைக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்றவை தள்ளப்பட்டுள்ளமை இன்னொரு துயரமாகும். இந்த வரலாற்றுப் பின்னணியில், விழுந்தும் சிதைந்தும் எழுந்து நிற்பது தமிழரசுக் கட்சியே. உண்மையில் இது தமிழ் மக்களின் இயலாமையும் தோல்வியும் பின்னடைவுமேயாகும். இந்தத் தோல்வியே அவர்களை போருக்கு முந்திய 1970 களில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது. அப்படியென்றால், சமகாலச் சூழலுக்கு வருவதற்கு தமிழ் மக்கள் 55 ஆண்டுகாலம் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். அதற்கிடையில் தாண்டவேண்டிய தடைகள் ஏராளம். அந்தத் தடைகளைத் தாண்டுவதற்கு இந்த ஓட்டைப் படகுகளும் உக்கிப்போன ஏணியும் பயன்தராது. ஆட்களை மாற்றுவதாலோ, அடையாளத்தை மாற்றுவதாலோ பயனில்லை. பொருத்தமான அரசியல் நிலைப்பாட்டை எடுத்துச் சாத்தியப்படுத்துவதே பயனுடையதாகும். அது ஒரு போராட்டத்துக்குரிய வித்து. கருணாகரன் https://maatram.org/articles/11895
  12. போலியான வாக்குறுதிகள் வழங்கியதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் ; எஸ்.எம். மரிக்கார் 08 Jan, 2025 | 12:31 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசியல் இலாபத்துக்காக நாட்டு மக்களுக்கு போலியான வாக்குறுதிகள் வழங்கியதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆட்சிக்கு வந்து 24 மணித்தியாலத்துக்குள் எரிபொருள் மீதான 50 ரூபா வரியை இரத்துச் செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். எரிபொருள் இறக்குமதி தரகுப்பணம் இன்றும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கா செல்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஆளும் தரப்பிடம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை 2024' தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் ஆளும் தரப்பினர் பேசுகிறார்கள். ஆனால் நாட்டு மக்கள் இன்றும் பொருளாதார நெருக்கடியில் தான் உள்ளார்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வருவதற்கு பல வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் இன்று அனைத்து வாக்குறுதிகளையும் மறந்து விட்டார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2024.08.19 ஆம் திகதி கல்கமுவ பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில், எரிபொருள் மீது முறையற்ற வகையில் வரி விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிக்கு மேலதிகமாக 50 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆட்சிக்கு வந்தவுடன் இந்த 50 ரூபா வரியை நீக்குவதாக குறிப்பிட்டார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் வழங்கிய வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. எரிபொருள் இறக்குமதியின் தரகுப்பணம் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு செல்வாக குற்றஞ்சாட்டப்பட்டது. இன்றும் அந்த தரகுப்பணம் இன்றும் காஞ்சன விஜேசேகரவுக்கா ? செல்கிறது என்று கேட்கிறோம். வரிகளை குறைப்பதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பிலும் வரி அறவிடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரிக் கொள்கையையே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கிறார். அரசியல் இலாபத்துக்காக நாட்டு மக்களுக்கு போலியான வாக்குறுதிகள் வழங்கியதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். மக்களுக்கு நிவாரமணிக்கும் சிறந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார். https://www.virakesari.lk/article/203257
  13. தீடிரென முளைத்த தொல்லியல் பதாகையால் வெருகல் பகுதியில் பரபரப்பு..! Published By: Vishnu 08 Jan, 2025 | 02:58 AM வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் திங்கட்கிழமை (06) மாலை தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு குறித்த பதாகை நடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் இது பெரும் பரபரப்பையும், விசனத்தையும் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் எவ்வளவு பகுதி தொல்லியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது? அதற்காக வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதா? ஏதிர்காலத்தில் அப்பகுதியில் புத்த விகாரை வருமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தொல்லியல் திணைக்களத்தின் குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவருகின்றது. கடந்த 28.12.2024 அன்று இரவோடு இரவாக குச்சவெளி பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் பதாகை நடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 01ஆம் திகதியன்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/203269
  14. பூட்சிற்றிகளுக்கு 90 ஆயிரம் தண்டம் adminJanuary 7, 2025 கோண்டாவில் பகுதியில் காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரு பூட்சிற்றிகளுக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கோண்டாவில் பகுதிகளில் உள்ள பூட்சிற்றிகளில் வண்டுமொய்த்த, திகதி காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் குறித்த பூட்சிற்றிகள் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரு பூட்சிற்றிகள் இனங்காணப்பட்டன. குறித்த பொருட்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர் நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கினை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், இரு பூட்சிற்றி முகாமையாளர்களையும் கடுமையாக எச்சரித்து, 60 ஆயிரம் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தார். https://globaltamilnews.net/2025/210034/
  15. இலங்கை அரசியலும் ஆட்சிமுறையும் புதுவருடத்தில் எவ்வாறு இருக்கும்? January 5, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — 2024 ஆண்டுக்கு நாம் பிரியாவிடை கொடுத்தபோது ஜனாதிபதி பதவியில் அநுரா குமார திசாநாயக்க நூறு நாட்களை நிறைவு செய்தார். புதிய பாராளுமன்றம் கூடிய பிறகு நாற்பது நாட்கள் கடந்திருந்தன. கடந்த வருடத்தில் இலங்கை அதன் அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பு முனைகளைக் கண்டது. தெற்காசியாவில் நேபாளத்துக்கு அடுத்ததாக ஆயுதக் கிளர்ச்சியை நடத்திய அரசியல் இயக்கம் ஒன்று ஜனநாயக தேர்தல்கள் மூலமாக ஆட்சியதிகாரத்துக்கு வந்த இரண்டாவது நாடாக இலங்கை விளங்குகிறது. இதுகாலவரை இலங்கையை ஆட்சி செய்த பாரம்பரியமான அதிகார வர்க்கத்துக்கு வெளியில் உள்ள மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியைக் கொண்ட ஒருவர் நாட்டின் அதியுயர் பதவிக்கு மக்களால் தெரிவானார். முதற்தடவையாக இடதுசாரிக்கட்சி ஒன்று எமது நாட்டில் ஆட்சியதிகாரத்துக்கு வந்திருக்கிறது. 1980 களின் பிற்பகுதியில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அரசாங்கம் ஜனதா விமுக்தி.பெரமுன (ஜே.வி.பி.) கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக தலைமறைவாகச் செல்லவேண்டியிருந்த ஒருவர் 35 வருடங்களுக்கு பிறகு அதே பிரேமதாசவின் மகனை தோற்கடித்து நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, அரச தலைவராக, அரசாங்கத் தலைவராக, முப்படைகளினதும் பிரதம தளபதியாக வந்திருக்கிறார் என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் கடந்த வாரம் தெரிவித்திருந்த கருத்து கவனத்தை ஈர்த்தது. ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத சாதனைகளைப் படைத்தது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரான நான்கரை தசாப்தங்களுக்கு அதிகமான காலப்பகுதியில் முதற்தடவையாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றிய கட்சியாக தேசிய மக்கள் சக்தி விளங்குகிறது. ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் திசாநாயக்க கட்டாயமான ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் ஐம்பது சதவீத வாக்குகளைப் பெறாமல் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் அரசியல்வாதி என்ற புதிரான பெருமையையும் திசாநாயக்க தனதாக்கிக் கொண்டார். ஜனாதிபதியாக கடந்த செப்டெம்பர் பிற்பகுதியில் பதவியேற்ற பிறகு திசாநாயக்க தனது அரசாங்கத்திடம் நாட்டு மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்களை கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்ந்தவராக அதிசயங்களை நிகழ்த்துவதற்கு தான் ஒன்றும் மந்திரவாதி இல்லை என்று கூறினார். பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது ஜனாதிபதி மாத்திரமல்ல, தேசிய மக்கள் சக்தியின் வேறு முக்கிய தலைவர்களும் கூட மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தருமாறு மக்களிடம் தாங்கள் கேட்கவில்லை என்று கூறினார்கள். ஆனால், தேசிய மக்கள் சக்தியிடம் அதிசயங்களை எதிர்பார்த்தவர்களாக நாட்டு மக்கள் அமோக ஆதரவை வழங்கி அதன் தலைவர்களே பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள். வடக்கு,தெற்கு, கிழக்கு, மேற்கு என்று எந்த வேறுபாடும் இன்றி சகல மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களில் ஒன்றைத் தவிர ஏனையவற்றில் தேசிய மக்கள் சக்தி கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றியது. பாரம்பரியமாக தமிழ்த் தேசியவாத அரசியலின் கோட்டையாக விளங்கிய யாழ்ப்பாணத்தில் கூட தேசிய மக்கள் சக்தியே கூடுதல் ஆசனங்களைப் பெற்றது. தேசிய மக்கள் சக்தியின் மகத்தான வெற்றி குறித்து பல்வேறு வகையான அவதானிப்புகள் இருந்தாலும், தென்னிலங்கையில் என்றாலென்ன, வடக்கு, கிழக்கில் என்றாலென்ன பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்திவந்த அரசியல் கட்சிகள் மீதான மக்களின் கடுமையான வெறுப்பே அதன் வெற்றிக்கு பிரதான காரணமாகும் என்பதில் சந்தேகமில்லை. தென்னிலங்கையில் இன்று பழைய பாரம்பரிய அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் எதிர்காலத்தில் நம்பிக்கை இழந்து போயிருக்கின்றன. பழைய கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின் போது ஆட்சியமைப்பதற்கு அல்ல, வலுவான எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கே மக்களிடம் வாக்கு கேட்ட ஒரு பரிதாப நிலையைக் காணக்கூடியதாக இருந்தது. எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை, அவை மீண்டும் அரசியலில் தங்களுக்கு ஒரு பொருத்தப்பாட்டை தேடவேண்டிய நிர்ப்பந்த நிலையில் இருக்கின்றனவே தவிர, அரசாங்கத்தின் மீது உருப்படியான விமர்சனங்களை முன்வைக்க அவற்றினால் முடியவில்லை. அரசாங்க உறுப்பினர்களின் கல்வித்தகைமைகள் தொடர்பிலான சர்ச்சைகள் போன்ற மக்களுக்கு பெருமளவில் அக்கறையில்லாத விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. ஆனால், அரசியல் ரீதியில் எந்த சவாலைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லாத அளவுக்கு மிகவும் பலம்பொருந்தியதாக விளங்கும் அரசாங்கம் ஆரம்பக்கட்டத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அதுவும் குறிப்பாக நூறுக்கும் அதிகமான நாட்கள் செயற்பாடுகளின் அடிப்படையில் அதன் எதிர்காலச் செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்று மதிப்பிடுவது பொருத்தமானதல்ல. ஆனால், பெரும் எதிர்பார்ப்புக்களுடன் தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டுவந்த மக்கள் உடனடியாக அதனிடமிருந்து பயன்களை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் அலசரப்படுவதில் நியாயம் இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முன்னென்றும் இல்லாத வகையிலான பொருளாதார நெருக்கடியின் விளைவாக இன்று நாட்டின் சனத்தொகையில் சுமார் கால்வாசிப்பேர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. கடந்த சில வாரங்களாக அத்தியாவசிய உணவுப் பொருடகளின் விலைகள் கடுமையாக அதிகரித்திருக்கின்றன. ஆனால், அதை மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று வியாக்கியானம் செய்யமுடியாது. ஆனால், பெரும்பாலும் உடனடியாக நடைமுறைப்படுத்த முடியாத பெருவாரியான வாக்குறுதிகளை ஜனாதிபதி தேர்தல் காலங்களில் வழங்கியதனால், அவற்றை நிறைவேற்றுவதில் ஏற்படுகின்ற தாமதத்தின் விளைவான நெருக்கடிகளுக்கு அவர் முகங்கொடுக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகும். ஆனால், அரசாங்கத்துக்கு குறைந்தபட்சம் ஒரு வருடகால அவகாசத்தையாவது கொடுக்கவேண்டும். முன்னைய அரசாங்கங்களின் தவறான ஆட்சிமுறையின் விளைவாக ஏற்பட்ட பாதகங்களை புதிய அரசாங்கத்தினால் குறுகிய காலத்திற்குள் சீர்செய்துவிட முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. அதேவேளை, பழைய அரச இயந்திரத்தை வைத்துக்கொண்டு ஆட்சிசெய்வதில் உள்ள சிக்கல்களை அரசாங்க தலைவர்கள் வெளிப்படையாகவே ஒத்துக்கொள்வதை காணக்கூடியதாக இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் கொள்கைத் தீர்மானங்களுக்கு இசைவான முறையில் அரச உயர்மட்ட அதிகாரிகள் செயற்படத் தயங்குகிறார்கள் என்றும் கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரகாரமே அவர்கள் இன்னமும் செயற்படுகிறார்கள் என்றும் அமைச்சர்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறார்கள். முன்னர் மக்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதூகாப்பதற்காக வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்திய தாங்கள் இப்போது அரச உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக வீதியில் இறங்க வேண்டிய நிலைமை தோன்றியிருக்கிறது என்று அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி கடந்த வாரம் கூறியது கவனிக்கத்தக்கது. ராஜபக்சாக்களின் தவறான ஆட்சிமுறைக்கு எதிராக தொடங்கிய ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி ‘ படிப்படியாக அரசியல் அதிகார வர்க்கம் முழுமைக்கும் எதிரான ஒரு அமைதிவழி அரசியல் புரட்சியின் வடிவத்தை எடுத்தது. முறைமை மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் வேண்டிநின்ற அந்த கிளர்ச்சியின் சுலோகங்களை முன்னிலைப்படுத்தி தனது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய தேசிய மக்கள் சக்தி இறுதியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. ஆனால், பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கத்துக்கு பல தசாப்தங்களாக சேவை செய்த அரசு இயந்திரத்தை பயன்படுத்தி முறைமை மாற்றத்தையோ அல்லது புதிய அரசியல் கலாசாரத்தையோ கொண்டுவருவதில் உள்ள சிக்கல்களை இப்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். அரச உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிரான அவர்களின் குற்றச்சாட்டுக்கள் அதன் வெளிப்பாடேயாகும். மக்கள் கிளர்ச்சிக்கு பின்னர் தோன்றிய அரசியல் சூழ்நிலைகளில் ஆட்சிக்கு வருபவர்கள் எவராக இருந்தாலும், மக்களின் கடுமையான கண்காணிப்பின் கீழ்தான் அரசாங்கத்தை நடத்த வேண்டியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மெத்தனமாக நடந்து கொண்டாலும் கூட, மக்கள் ஆட்சியாளர்களின் நடத்தைகள் குறித்து விழிப்புடையவர்களாக இருக்கிறார்கள். அதனால் தேசிய மக்கள் சக்தி மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் நீண்ட தாமதத்தை காட்டினால் அதை மக்கள் அனுமதிக்கப் போவதில்லை. முன்னைய அரசாங்கங்கள் பொறுப்புக்கூறாமல் நடந்துகொண்டதன் விளைவுகளை மக்களுக்கு இடையறாது சுட்டிக்காட்டிய வண்ணம் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி பொறுப்புக்கூறுவதில் அதற்கு இருக்கும் கடப்பாடு தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியிருக்கும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடனும் வழிகாட்டலுடனும் முன்னெடுத்த பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளையே ஜனாதிபதி திசாநாயக்கவின் அரசாங்கமும் தொடர்ந்து பின்பற்றுகிறது. அது குறித்து விக்கிரமசிங்க உள்நாட்டில் மாத்திரமல்ல, இந்தியாவிலும் மகிழ்ச்சி தெரிவித்தார். மக்களுக்கு பாதகமாக அமைந்த நிபந்தனைகள் குறித்து சர்வேதச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தப்போவதாக திசாநாயக்க தேர்தல் காலங்களில் கூறியிருந்தாலும், அது விடயத்தில் அவரால் உருப்படியாக எதையும் செய்யமுடியவில்லை. முன்னைய அரசாங்கம் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பதை தவிர தற்போதைய சூழ்நிலையில் தனக்கு வேறு மார்க்கம் இருக்கவில்லை என்று ஜனாதிபதி கூறுகிறார். அவ்வாறானால், தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைகளை எப்போது அவர் நடைமுறைப்படுத்தப் போகிறார் என்பது முக்கியமான ஒரு கேள்வி. இது இவ்வாறிருக்க, புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவரப் போவதாகவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாகவும் தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வாக்குறுதி அளித்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்க காலத்தில் (2015 — 2019) முன்னெடுக்கப்பட்டு இடைக்கால அறிக்கையுடன் இடையில் கைவிடப்பட்ட அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை தொடர்ந்து முன்னெடுத்து நிறைவு செய்யப்போவதாக ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் திசாநாயக்க குறிப்பிட்டிருந்தார். ஆனால், பதவிக்கு வந்த பிறகு அதைப்பற்றி அவர் பேசியதை பெரும்பாலும் காணவில்லை. ஆனால், முன்று வருடங்களில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரான நாளிந்த ஜயதிஸ்ஸ கூறினார். அரசியலைப் பொறுத்தவரை, மூன்று வருடங்கள் என்பது ஒரு நீண்டகாலமாகும். அந்த காலப்பகுதிக்குள் இடம்பெறக்கூடிய பல்வேறு நிகழ்வுகள் அரசியல் நிலைவரங்களில் மாற்றங்களை ஏற்படுத்திவிடக்கூடும். பெரும்பாலும் அரசாங்கங்கள் அவற்றின் பதவிக்காலத்தின் ஆரம்பக் கட்டங்களிலேயே புதிய அரசியலமைப்பை கொண்டு வந்திருக்கின்றன. இலங்கையில் சுதந்திரத்துக்கு பிறகு இரு தடவைகள் புதிய அரசியலமைப்புகள் கொண்டுவரப்பட்டன. பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972 முற்பகுதியில் முதலாவது குடியரசு அரசியலமைப்பை கொண்டுவந்தது. 1971 ஜே.வி.பி. கிளர்ச்சி இடம்பெறாமல் இருந்திருந்தால் அதற்கு முன்கூட்டியே அந்த அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டிருக்கக்கூடும். ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த ஒரு வருடத்துக்கும் சற்று அதிகமான காலத்திற்குள் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றியது. 47 வருடங்களாக நடைமுறையில் இருந்துவரும் அந்த அரசியலமைப்பை மாற்றுவதற்கு அல்லது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிம்பதற்கு இதுகாலவரையில் முன்னெடுக்கப்பட்ட எந்த முயற்சியும் பயன்தரவில்லை. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக வாக்குறுதி அளித்து பதவிக்கு வந்த எந்த ஜனாதிபதியும் அதை நிறைவேற்றவில்லை. ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க தனது இரண்டாவது பதவிக்காலத்தின் இறுதியில் மேலும் ஒரு வருடகாலம் கூடுதலாக அதிகாரத்தில் இருக்க முடியவில்லையே என்ற கவலையுடன் பதவியில் இருந்து இறங்கினார். தனது முதலாவது பதவிக்காலத்துக்கு பிறகு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டாவது பதவிக்காலத்தில் தனது அதிகாரங்களை மேலும் அதிகரிப்பதற்கு அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்தார். அவரின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக கூறவில்லை. அவரும் தனது ஆட்சிக்காலத்தில் அதிகாரங்களை அதிகரிக்க திருத்தத்தை கொண்டுவந்தார். ஆனால் , இறுதியில் மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் அவர் நாட்டைவிட்டு தப்பியோடினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 19 வது அரசியலமைப்பு திருத்தம் மாத்திரமே ஜனாதிபதியின் அதிகாரங்களில் ஓரளவு குறைப்பைச் செய்தது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதில் ஒருபோதும் மானசீகமான நாட்டத்தைக் காட்டவில்லை. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கக்கூடிய பாராளுமன்ற பலத்தைக் கொண்டிருந்தவர்கள் அதை ஒழிக்க விரும்பவில்லை. அதை ஒழிக்கவேண்டும் என்று விருப்பியவர்களிடம் அதைச் செய்வதற்கான பாராளுமன்ற பலம் இருக்கவில்லை. ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டுவராமல் விடுவதற்கோ அல்லது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்காமல் விடுவதற்கோ எந்த காரணத்தையும் கூறமுடியாது. வேறு எந்த கட்சியையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் கூடுதலான பலம் பாராளுமன்றத்தில் இருக்கிறது. இந்த அரசாங்கமும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவில்லையானால் அதற்கு பிறகு எவராலும் அதைச் செய்யமுடியும் என்று எதிர்பார்க்க முடியாது. மூன்று வருடங்கள் கடந்துபோய்விட்டால் தற்போதைய ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் பதவிக்காலங்களின் இறுதிப்பகுதி வந்துவிடும். அப்போது அடுத்த தேர்தல்கள் பற்றிய அக்கறை ஆளும் கட்சிக்கு வந்துவிடும். அதனால் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் நோக்கத்திலும் தொய்வுகள் ஏற்பட்டு விடலாம். அதனால் அரசாங்கத்தின் பதவிக்காலத்தின் முற்பகுதியில் அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை துரிதமாக முன்னெடுப்பதே நடைமுறைச் சாத்தியமானதும் விவேகமானதுமான செயன்முறையாக இருக்கும். ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக கூறிக்கொண்டு பதவிக்கு வந்த நான்காவது ஜனாதிபதியாக திசாநாயக்க விளங்குகிறார். கடந்த செப்டெம்பரில் அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றபோது ஜே.வி.பி.யின் சில தலைவர்கள் இலங்கை மக்கள் தங்களது இறுதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்கள். ஜனாதிபதி திசாநாயக்கவும் கூட தானே இறுதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருப்பார் என்று நம்புவதாக கூறினார். ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர். ஜெயவர்தனவிடம் அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு ஒரு இந்திய செய்தியாளர் அந்த ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து கேட்டபோது “அவர்கள் அதை ஒழித்த பிறகு என்னை வந்து சந்தியுங்கள்” என்று கூறினார். ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கி பதவிக்கு வந்த பிறகு அதை காப்பாற்றாமல் மட்டுமீறிய அதிகாரங்களை அனுபவித்த ஜனாதிபதிகளின் வரிசையில் அநுரா குமார திசாநாயக்க இணைந்து கொள்ள மாட்டார் என்று நம்புவோமாக. https://arangamnews.com/?p=11638
  16. தாய்வான் சீனாவின் ஒரு மாநிலம் மாத்திரமே – சர்ச்சைக்குரிய தீர்மானத்துக்கு இலங்கை அனுமதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தை முன்னிட்டு, இலங்கை ஒரே சீனா கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் தீர்மானத்தில் சட்ட ரீதியான சீனாவாக சீன மக்கள் குடியரசை மாத்திரமே ஏற்றுக்கொள்வதாகவும் தாய்வான் சீனாவின் ஒரு மாநிலம் என்பதை இலங்கை அதன் வெளிவிவகார கொள்கையில் கடைப்பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கொள்கையின் அடிப்படையில் சீனாவுடனான உறவுகள் பேணப்படும் என்றும் குறித்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தைவான் முழுமையாக சீனாவுக்குச் சொந்தமான பகுதியென சீனா தொடர்ந்து கூறிவருதுடன், அவ்வபோது தாய்வானுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விவகாரங்களிலும் சீனா ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிடுவதுடன், தாய்வான் சுதந்திரமான நாடு என வாதாடி வருகின்றது. சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு தாய்வான் தொடர்ந்து கடுமையான எதிர்ப்புகளை வெளியிடடு வருகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன பயணத்துக்கு முன்னர் இத்தகையதோர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதுடன், இது இலங்கைக்கு இராஜதந்திர நெருக்கடிகள் ஏற்பட அல்லது சீனாவிடமிருந்து கிடைக்கப்பெறும் உதவிகள் குறைவடைய வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். இலங்கை கடந்த அரசாங்கங்களும் இந்த விவகாரம் தொடர்பில் வெளிப்படையான பதில்களை அளிக்காது செயல்பட்டிருந்தன. கடந்த அரசாங்கங்கள் போல் அதேகொள்கையை சமகால அரசாங்கமும் கடைபிடித்தாலும் ஜனாதிபதியின் சீன பயணத்துக்கு முன்னர் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையால் பல்வேறு நெருக்கடிகள் அரசாங்கத்துக்கு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். https://akkinikkunchu.com/?p=306744
  17. அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும் ; கனடாவுக்கு டிரம்ப் அழைப்பு! January 7, 2025 5:49 pm கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும் என அமெரிக்கா ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், கனடா அமெரிக்காவுடன் இணைந்து விட வேண்டும். 51ஆவது மாநிலமாக ஆக வேண்டும் என்று கூறி வருகிறார். அவர் கூறுவதை எவரும் முக்கயத்துவம் வாய்ந்த விடயமாக எடுத்துக் கொள்வதில்லை. எனினும், டிரம்ப் தான் கூறுவதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த சூழலில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். உட்கட்சியில் அவருக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. 9 ஆண்டுக்கு மேலாக பிரதமராக இருக்கும் அவருக்கு மக்கள் செல்வாக்கும் பெருமளவு சரிந்து விட்டது. வரவிருக்கும் தேர்தலில் அவரது லிபரல் கட்சி தோல்வி அடையும் என்று பலரும் கணித்துள்ளனர். ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று அவரது கட்சி எம்.பி.க்களே போர்க்கொடி தூக்கினர். இத்தகைய சூழ்நிலையில் தான் ஜஸ்டின் ட்ரூடோ, கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். பிரதமர் பதவியையும் இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துவிட்டார். இது தொடர்பாக, வருங்கால அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, அமெரிக்காவிடம் இருந்து, இனிமேல் மானியங்கள் உள்ளிட்டவை கனடாவுக்கு கிடைக்காது. இதை அறிந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும். மேலும் ரஷ்யா மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து அவை முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். ஒன்றுபட்டால், அது எவ்வளவு பெரிய தேசமாக இருக்கும்? இவ்வாறு அவர் கூறியுள்ளார். https://oruvan.com/trump-calls-on-canada-to-reduce-taxes-if-it-joins-the-us/
  18. சிவப்பு, வெள்ளை, நாட்டு அரிசிகளுக்கு சந்தையில் கடும் தட்டுப்பாடு! January 7, 2025 11:09 am நாடளாவிய ரீதியில் சந்தைகளில் உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டு சிவப்பு அரிசி, வெள்ளை பச்சையரிசி மற்றும் நாட்டு அரிசி தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது. நுகர்வோர் பச்சையரிசியை தேடி கடைகளுக்கு சென்றாலும் கட்டுப்பாட்டு விலைக்கு பச்சையரிசியை பெற்றுக் கொள்வதில் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அனைத்து பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை கடைகளில் பச்சையரிசி தொட்டிகள் காலியாகக் கிடப்பதை அவதானிக்க முடிந்துள்ளது. ஒரு சில கடைகளில் பச்சையரிசி காணப்பட்ட போதிலும், அந்த அரிசியை கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு சூழல் உருவாகியுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். ஒரு கிலோ உள்ளூர் பச்சையரிசியின் கட்டுப்பாட்டு விலை 220 ரூபாய் என்ற போதிலும் கடைகளில் 240 ரூபாய் தொடக்கம் 300 ரூபாய் வரையில் ஒவ்வொரு விலைகளில் அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது எந்தவொரு நிலையிலும் அரிசியை கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு சூழல் எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் பல்பொருள் அங்காடிகளில் பச்சையரிசி தொட்டிகளில் 220 ரூபாய் என விலை குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது 240 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இதேவேளை, அரிசி விலை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தற்போது அரிசி நெருக்கடியை தீர்க்க முடியாத வெறும் காகிதமாக மாறியுள்ளதாக தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்தார். மொத்த விற்பனையாளர்களுக்கு விதிக்கப்பட்ட நடைமுறைப்படுத்தப்படாத அரிசி வர்த்தமானி அறிவித்தலின் மூலம், சில்லறை விற்பனையாளர்கள் தற்போது உள்ளூர் பச்சையரிசி மற்றும் நாட்டு அரிசி விற்பனையில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பச்சை மற்றும் நாட்டு அரிசிக்கு தேவையான கையிருப்பு ஆலை உரிமையாளர்களிடம் இன்னும் காணப்படுவதாகவும் நுகர்வோர் அதிகார சபைக்கு குறித்த நெல் கையிருப்பை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக அரசாங்கம் மற்றும் நுகர்வோர் அதிகார சபை கூறுவது பொய் எனவும் அவர் கூறினார். பச்சை மற்றும் நாட்டு அரிசிக்கு தேவையான நெல் கையிருப்பு அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இன்னும் இருப்பதாக அரசாங்கமும், நுகர்வோர் அதிகார சபையும் சொல்வது பொய் என்றும், அந்த நெல் கையிருப்பை அரசாங்கமும், நுகர்வோர் அதிகார சபையும் கண்டு கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். நுகர்வோரை தவறாக வழிநடத்தி அரிசி வர்த்தகர்கள் தேவையற்ற இலாபம் ஈட்ட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அரிசி நெருக்கடியை தீர்ப்பதில் அரசாங்கமும் நுகர்வோர் அதிகார சபையும் ஒழுங்காக ஈடுபடவில்லை எனவும் தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார். https://oruvan.com/there-is-a-severe-shortage-of-red-white-and-local-rice-in-the-market/
  19. 12 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – வெளியானது அறிவிப்பு January 7, 2025 2:12 pm 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு இதுவரை வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாரிடம் கோரியுள்ளது. இந்த அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலக்கெடு முடிந்துள்ள போதிலும், பல வேட்பாளர்கள் இன்னும் வருமான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. காலக்கெடுவைக் கடைப்பிடிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேவேளை, வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக அடுத்த வாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களில் ஏழு பேருக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/legal-action-against-12-presidential-candidates-announcement-released/
  20. சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு January 7, 2025 01:32 pm சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கடந்த காலங்களில் இராஜதந்திர சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இலங்கையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும், புதிய நியமனங்களை பெற்ற இராஜதந்திரிகளிடம் இருந்து அவ்வாறானவற்றை எதிர்பார்க்கவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்றது. இங்கு உரையாற்றுகையிலே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்படுகின்ற சேவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி செயற்படுமாறும் அந்த நாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் சேவைகளை வழங்குவதற்கு முன்னின்று பாரபட்சமின்றி நியாயமாக செயற்படுமாறும் ஜனாதிபதி புதிய இராஜதந்திரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். இலங்கைப் பணியாளர்கள் தொழில்புரியும் மத்திய கிழக்கு, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இராஜதந்திர சேவைகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் இலங்கையில் முதலீட்டாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் பணியை இராஜதந்திர சேவையின் ஊடாக மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டு வருவது தூதுவருக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பு எனவும், அதற்கு தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 04 தூதுவர்களையும் உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நியமித்தார். இராஜதந்திர சேவையில் 20 வருடங்களுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் இவ்வாறு இராஜதந்திர சேவைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கத்தார் நாட்டின் தூதுவராக - ஆர்.எஸ்.கான் அசாத் ரஷ்ய தூதுவராக - எஸ்.கே. குணசேகர குவைத் தூதுவராக - எல்.பி.ரத்நாயக்க எகிப்திய தூதுவராக - ஏ.எஸ்.கே.செனவிரத்ன நியூசிலாந்து உயர்ஸ்தானிகராக - டபிள்யு.ஜீ.எஸ். பிரசன்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். https://tamil.adaderana.lk/news.php?nid=198411
  21. ஈஸ்டர் தாக்குதல் - சந்தேகநபர்கள் குறித்து வௌியான தகவல்! January 7, 2025 02:11 pm உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி இதுவரை 747 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், உயர் நீதிமன்றில் 14 வழக்குகளின் கீழ் 100 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், செனல் 4 ஊடாக வெளியான விடயங்கள் மற்றும் அதற்குப் புறம்பான விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட விடயங்களின் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வெளிப்படுத்தப்படும் உண்மைகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், இந்த விசாரணைகள் புதிய கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதன்படி, இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, 12 சிவில் சாட்சிகள், 7 இராணுவத்தினர், 24 பொலிஸ் அதிகாரிகள், 3 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 48 பேரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=198415
  22. உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு January 7, 2025 06:39 am 2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கும் புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் உத்தரவுக்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டமூலத்தின்படி, 2023 மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் ரத்துச் செய்யப்படக்கூடும். அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் தொடர்பில் வைப்பிலிடப்பட்ட கட்டுப்பணத்தையும் மீள செலுத்தவும் இந்த சட்டமூலம் வழிவகை செய்கிறது. அதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் எனவும் குறித்த திகதி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் திகதியில் இருந்து 3 மாத காலத்திற்கு இடைப்பட்ட நாளாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=198386
  23. கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன 07 Jan, 2025 | 01:04 PM கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக மத்தல மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. அதன்படி, துபாயிலிருந்து பயணித்த UL-226 விமானமும் சீனாவிலிருந்து பயணித்த UL-881 விமானமும் இந்தியாவின் பெங்களூரிலிருந்து பயணித்த UL-174 விமானமும் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியதுடன், துருக்கியிலிருந்து பயணித்த TK-730 விமானம் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர், கடும் பனிமூட்டம் படிப்படியாக குறைந்ததை அடுத்து, ஏனைய விமான நிலையங்களில் தரையிறங்கிய நான்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/203203
  24. குழுவின் அறிக்கையின் பின்னர் அர்ச்சுனா குறித்து தீர்மானம் - சபாநாயகர் 07 JAN, 2025 | 12:56 PM யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து குழுவொன்றின் விசாரணையின் பின்னரே தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இனறு நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார். குழுவொன்று அர்ச்சுனாவின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்கின்றது அதன்அறிக்கையை அடிப்படையாக வைத்து நாடாளுமன்றத்தில் அவரின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/203212

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.