Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. யாழ்பாணத்தை சேர்ந்த இருவர் கைத்துப்பாக்கியுடன் கொழும்பில் கைது.! Vhg நவம்பர் 09, 2025 வத்தளை பொலிஸ் பிரிவில் கைத்துப்பாக்கியுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (08.11.2025) காலை இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற கார் ஒன்றை வத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் துரத்திச் சென்று நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதன்போது அந்த காரின் சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் இந்த துப்பாக்கியை மற்றொரு நபரிடம் வழங்குவதற்காக எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குறித்த நபரையும் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாபொல பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.battinatham.com/2025/11/blog-post_09.html
  2. உயரிய இராணுவ விருதை இலங்கைத் தமிழர் வாகீசன் மதியாபரணம் கனடாவின் பெற்றார்.! Vhg நவம்பர் 09, 2025 இலங்கையில் பிறந்த தமிழரான வாகீசன் மதியாபரணம், கனடாவின் மிக உயரிய இராணுவ விருதுகளில் ஒன்றான Order of Military Merit (M.M.M.) விருதைப் பெற்ற முதல் தமிழராக வரலாறு படைத்துள்ளார். கனடாவின் ஆளுநர் ஜெனரல் வசிக்கும் Rideau Hall மாளிகையில் நடைபெற்ற விழாவில், வாகீசன் மதியாபரணத்திற்கு இந்த பெருமை வழங்கப்பட்டது. அகதியாக கனடாவுக்கு வந்த அவர், சுமார் முப்பது ஆண்டுகள் கனடா இராணுவத்தில் பணியாற்றி, அண்மையில் ஓய்வுபெற்றார். “இந்த விருது ஒரு பதக்கம் மட்டுமல்ல, என் கனவின் நிறைவேற்றம்,” என அவர் கூறினார். “அகதியாக வந்த ஒரு தமிழ் இளைஞன், கனடா என்ற தேசத்துக்கு பணியாற்றி, இன்று அதன் உயரிய மரியாதையைப் பெறுவது பெருமையாக உள்ளது.” அவரது சாதனை, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், அகதியாக புதிய வாழ்க்கையைத் தொடங்கிய அனைவருக்கும், ஊக்கம் அளிக்கும் பெருமைமிகு வரலாறு ஆகும். https://www.battinatham.com/2025/11/blog-post_894.html
  3. கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் – யாழில் கைதானவர்கள் கொழும்புக்கு ; கைதானவர்களிடம் மீட்கப்பட்ட இலட்ச ரூபாய் பெறுமதியான நாய் adminNovember 9, 2025 கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் இருந்து வந்த விசேட காவல்துறைக் குழு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேவேளை காருடன் மூவரும் கைது செய்யப்படும் போது, காரினுள் அவர்களின் ஆடைகள் எதுவும் இல்லாத நிலையில், சந்தேகநபர்களுக்கு சொந்தமான இலட்ச ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு இன வளர்ப்பு நாய் ஒன்றும் காரினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அத்தனையும் கொழும்புக்கு அழைத்து செல்ல காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு வீதியில் நடந்து சென்றவர் மீது , பின்னால் நடந்து வந்த நபர் ஒருவர் மிக அருகில் சென்று துப்பாக்கி சூட்டினை நடாத்தி விட்டு , பின்னர் கார் ஒன்றில் ஏறி , துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி விழுந்தவர் மீது காரினை ஏற்றி தப்பி சென்று இருந்தார். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகி இருந்தன. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய தொடர்புடைய காரினை கொழும்பு ஆமர் வீதியில் கைவிட்டு விட்டு , பிறிதொரு காரில் சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துள்ளனர். சந்தேகநபர்கள் காரினை வாடகைக்கு பெற்றே வடக்கு நோக்கி தப்பி சென்றதை அறிந்தகாவல்துறையினர் , காரினை வாடகைக்கு கொடுத்த நிறுவனத்தினை கண்டறிந்து , அவர்களிடம் இருந்து கார் தொடர்பிலான தகவல்களை பெற்று இருந்தனர் அதன் அடிப்படையில் காரில் பொருத்தப்பட்டிருந்த தடங்காட்டியின் (GPS) உதவியுடன் காரினை கண்காணித்த வேளை கார் , மானிப்பாய் பகுதியில் நிற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கொழும்பினை சேர்ந்த காவல்துறைக்குழு அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடுப்பு பிரிவினர் , காரினை மானிப்பாய் பகுதியில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் கண்டுபிடித்தனர். அதனை அடுத்து காரினை மீட்டகாவல்துறையினர் காரில் பயணித்த மூவரையும், வாகன திருத்தக உரிமையாளரையும் கைது செய்ததுடன் அவர்களால் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட அவர்களின் வளர்ப்பு நாயினையும் மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்று இருந்தனர். வாகன திருத்தக உரிமையாளரிடம் முன்னெடுத்த விசாரணையில் காரில் குளிரூட்டி (AC) வேலை செய்யவில்லை என அதனை திருத்தம் செய்யவே காரினை கொண்டு வந்தார்கள் என தெரிவித்துள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் , காரினை திருத்தவே திருத்தகம் போனார்கள் என்பதனை காவல்துறையினர் உறுதிப்படுத்தியதை அடுத்து திருத்தக உரிமையாளரை விடுவித்தனர். அதேவேளை காரில் பயணித்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட மூவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தாம் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்ததாகவே கூறியுள்ளனர். காரில் மீட்கப்பட்ட நாய் வளர்ப்பு நாய் எனவும் , கைது செய்யப்பட்ட பெண் , கைது செய்யப்பட்ட ஆணொருவரின் காதலி எனவும் கூறியுள்ளனர். இந்நிலையில் கொழும்பில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணத்தை வந்தடைந்த காவல்துறை விசேட குழு , கைது செய்யப்பட்ட மூவரையும் பொறுப்பெடுத்துக் கொண்டனர். கைது செய்யப்பட்ட மூவரையும் , அவர்கள் பயணித்த கார் மற்றும் அவர்களின் வளர்ப்பு நாய் என்பவற்றையும் கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேவேளை கொழும்பில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் , யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவிற்கு தப்பி செல்வது அதிகரித்துள்ள நிலையில் , யாழ்ப்பாண கரையோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்களை பாதுகாப்பு தரப்பினர் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2025/222472/
  4. தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –18 | “மோபி டிக் (Moby-Dick)” நாவல் தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –18 | ஹெர்மன் மெல்வில் (Herman Melville) எழுதிய “மோபி டிக் (Moby-Dick)” நாவல் திமிங்கல வேட்டைக்குப் புறப்பட்டு தத்துவங்களுக்கு வலை வீசிய நாவல் அ. குமரேசன் மதம் கூறும் தத்துவங்களை விசாரணைக்கு உட்படுத்துகிற, இயற்கையில் மனிதரின் இடம் என்று விவாதிக்கிற ஆழ்ந்த உள்ளடக்கத்திலும், மாறுபட்ட சித்தரிப்பு வகையிலும் முத்திரை பதித்த படைப்பு என இலக்கிய உலகில் கொண்டாடப்படுகிற ஒரு நாவல், அது வெளியானபோது (1851) கரடு முரடான எழுத்து நடை என்று புறந்தள்ளப்பட்டது. மிக நீளமாக இருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. புத்தகக் கடைகளில் விற்பனையாகாததால் பதிப்பகங்களால் புறக்கணிக்கப்பட்டவராக ஒரு துறைமுகப் பணியாளராக வேலை செய்தார் அதன் படைப்பாளி. இவரை எழுத்தாளர் என்று சொல்கிறார்களே என மற்றவர்களால் பேசப்படுகிற அளவுக்கே இருந்தவர் தனது மற்ற படைப்புகளும் ஏற்கப்படாத நிலையிலேயே காலமானார். ஹெர்மன் மெல்வில் (Herman Melville) அந்த அமெரிக்க எழுத்தாளர் பெயர் ஹெர்மன் மெல்வில் (Herman Melville) (1819–91). அவருடைய அந்த முக்கியமான நாவல் ‘மோபி டிக்’ (Moby-Dick). கடல் சார்ந்த வாழ்க்கையே மையமாக இருக்கும் மாலுமிகளும் தொடர்ச்சியாகப் பயணிக்கிறவர்களும் கப்பல்களை அடிக்கடி தாக்கக்கூடிய குறிப்பிட்ட திமிங்கலங்களுக்கும் இதர பெரிய உயிரிகளுக்கும் அடையாளப் பெயர்கள் சூட்டுவதுண்டு. அப்படி, கடலில் அட்டகாசம் செய்யும் ஒரு வெள்ளைத் திமிங்கலத்திற்குச் சூட்டப்பட்ட பெயர்தான் மோபி டிக் (Moby-Dick). அக்காலத்தில் மெழுகு, சில வாசனைத் திரவங்கள், எந்திர உயவுப்பசை உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கான கொழுப்பு எண்ணைக்காகவும், உணவுக்கான இறைச்சிக்காகவும், மருத்துவ ஆற்றல் உள்ளது என்ற நம்பிக்கையால் வெட்டியெடுக்கப்பட்ட உறுப்புகளுக்காகவும் திமிங்கல வேட்டைகள் கட்டுப்பாடின்றி நடத்தப்பட்டன. அதன் செரிமான மண்டலத்திலிருந்து வெளியேற்றப்படும் ஒரு பசை, கடல் நீரில் மிதந்து, சூரிய ஒளியால் மாற்றங்களுக்கு உள்ளாகி ஒரு நறுமணத்தைப் பெறும். அம்பரிஸ் எனப்படும் அந்தப் பொருள், மனிதர்களின் இனப்பெருக்க ஆற்றலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது! குறிப்பாக ‘விந்துத் திமிங்கலம்’ (ஸ்பெர்ம் வேல்) எனப்படும் திமிங்கலங்கள் வேட்டையாடப்பட்டன. அவற்றின் தலை வழியாகக் கிடைக்கும் கொழுப்பு எண்ணெய் விந்து போன்ற நிறத்துடனும் பசைத்தன்மையுடனும் இருப்பதால், அது திமிங்கலத்தின் விந்து என்று தவறாகக் கருதப்பட்டு அவ்வாறு குறிப்பிடப்பட்டது. (கடலில் திமிங்கலங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததைத் தொடர்ந்து நாடுகளிடை திமிங்கல ஆணையம் (IWC) அமைக்கப்பட்டு, 1986ஆம் ஆண்டில்தான் வணிக நோக்கத் திமிங்கல வேட்டைக்குத் தடை விதிக்கப்பட்டது. சில நாடுகளின் அரசுகளும் நிறுவனங்களும் அந்தத் தடையைக் கண்டுகொள்வதில்லை). கடலில் இறங்கும் கப்பலின் கேப்டன் அந்த மோபி டிக்கையும் தேடுகிற பயணத்தின் மூலமாக மனிதர்களுக்கும் இதர உயிரிகளுக்குமான உறவு பற்றியும் பேசுகிறது இந்த நாவல். வேட்டையின் கதை சாகச வேட்கையும், ஒரே மாதிரியான வாழ்க்கையிலிருந்து விடுபடும் விருப்பமும் கொண்டவனான இஸ்மேல் ‘பிக்வோட்’ என்ற திமிங்கல வேட்டைக் கப்பலில்,ஒரு மாலுமியாக வேலைக்குச் சேர்கிறான்.. அவனுடைய பார்வையில்தான் கதை சொல்லப்படுகிறது. கப்பலின் கேப்டன் அஹாப் ஒரு காலை இழந்து செயற்கைக் கால் பொருத்திக் கொண்டவர். மிகுந்த பிடிவாதக்காரரான அவர் தன்னுடைய ஒரு காலை இழந்தது மோபி டிக் (Moby-Dick) திமிங்கலத்தைப் பிடிக்க முயன்றபோதுதான். அதை எப்படியாவது கண்டுபிடித்துக் கொல்ல வேண்டும் என்ற பழியுணர்வோடு இருக்கிறார். அதற்காகவே உலகின் எல்லாக் கடல்களிலும் கப்பலைச் செலுத்தக் கட்டாயப்படுத்துகிறார். அவருடைய பணியாளர்களுடன் திமிங்கல வேட்டைக்காரர்களான மூன்று பேர் சேர்ந்துகொள்கிறார்கள். பின்னர், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஈட்டி எறிபவர்களான மூன்று பேர் அஹாப்பின் பழிவாங்கல் பயணத்தில் இணைகிறார்கள். அந்தப் பயணத்தை இஸ்மேல் சித்தரிப்பதன் மூலம் கடலின் பல்வேறு தன்மைகள், திமிங்கலம் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இயல்புகள், திமிங்கல வேட்டை நுட்பங்கள், அது சார்ந்த சந்தை நிலவரங்கள், சாகசமும் சோதனைகளும் நிறைந்த மாலுமிகளின் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை நாம் அறிகிறோம். அஹாப்பின் பழி வெறி படிப்படியாக அதிகரித்து, அவரை ஒரு விசித்திரமான, கொடூரமான தலைவராக மாற்றுகிறது. அவர் திமிங்கலங்களால் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களது கப்பல்களின் கேப்டன்களைச் சந்திக்கிறபோது அவர்கள் மோபி டிக் (Moby-Dick) பற்றி எச்சரிக்கிறார்கள். அவர் தன் நோக்கத்தில் பின்வாங்குவதாக இல்லை. உச்சக்கட்டத்தில் பிக்வோட் கப்பல் மோபி டிக்கைக் கண்டுபிடிக்கிறது. அஹாப்பும் மற்ற மாலுமிகளும், உடன் வந்த வேட்டையர்களும் மூன்று நாட்கள் தொடர்ச்சியான, அழிவுகரமான தாக்குதல்களில் இறங்குகின்றனர். மோபி டிக்கும் மோதுகிறது. அதுவொரு கடற்போராகவே நடக்கிறது. அஹாப் தனது ஈட்டியால் தாக்க முற்படும்போது மோபி டிக் (Moby-Dick) கப்பலைத் தாக்குகிறது. கப்பல் முழுமையாக அழிகிறது. உயிரிழக்கும் நிலையில் இருக்கும் மோபி டிக், ஒரு படகை மீட்க முயலும் அஹாப்பைக் கையில் ஈட்டியோடு கடலுக்குள்ளே இழுத்துச் சென்றுவிடுகிறது இஸ்மேல் தவிர்த்து மாலுமிகள், திமிங்கல வேட்டைக்கு வந்தவர்கள் எல்லோரும் மோபி டிக் (Moby-Dick) தாக்குதலில் சிக்கியும் கடலில் மூழ்கியும் உயிரிழக்கிறார்கள். பயணிக்கிறபோது இறந்துபோகக் கூடியவர்களை கடலிலேயே நல்லடக்கம் செய்வதற்காகக் கப்பலின் தச்சர் செய்து வைத்திருந்த ஒரு சவப்பெட்டி நீரில் மிதக்கிறது. அதில் தொற்றிக்கொள்ளும் இஸ்மேல் மட்டும் தப்பிக்கிறான். அந்தப் பகுதிக்கு வரும் மற்றொரு கப்பலின் மாலுமிகள் அவனை மீட்கிறார்கள். தத்துவ விசாரணைகள் கூரிய ஆயுதம் இருந்தும் மோபியிடமிருந்து அஹாப் தப்பிக்க முடியாமல் போவது இயற்கைக்கு எதிராக மனிதர்கள் எந்த அளவுக்கு அழிவில் இறங்க முடியும் என்று நுணுக்கமாக யோசிக்க வைக்கிறது. இயற்கையின் வழங்கல்களைப் பயன்படுத்திக்கொண்டு இயற்கையோடு இணைந்து வாழலாமேயன்றி, இயற்கையோடு முரண்பட்டுப் பகைத்து வாழ முடியாது என்று நாவல் விவாதிக்கிறது. இயற்கையின் கட்டுக்கடங்காத வல்லமையின் பிரதிநிதிதான் மோபி டிக் (Moby-Dick) திமிங்கலம் என்று திறனாய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். நாவல் நெடுகிலும் பைபிள் குறிப்புகள், தத்துவ விளக்கங்கள், மனிதரின் இருப்பு, நன்மை–தீமை பற்றிய கருத்தியல்கள், நீதிக் கோட்பாடுகள் கேள்விகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. நாவல் அப்போது எதிர்க்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம். அஹாப் தன் விதியால் அலைக்கழிக்கப்பட்டாரா அல்லது தனது பழியுணர்வால் இழுத்துச் செல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டள்ளன. தலைமைப் பொறுப்பில் இருந்தவனின் மூர்க்கத்தாலும் முட்டாள்தனத்தாலும் மற்றவர்களும் அழிவைச் சந்திக்க நேரிடும் அரசியலும் நுட்பமாகப் பேசப்பட்டிருக்கிறது. எதிர்ப்புகளையும் புறக்கணிப்புகளையுமே சந்தித்த மெல்வில் தனது நாவல் குறித்த இத்தகைய நல்ல மதிப்பீடுகளைப் பார்க்க முடியாமல் போனது ஒரு துயரம்தான். படைப்பு வெற்றி பெற்று படைப்பாளி தோற்றுவிட்ட கதையா? இல்லை, படைப்பு வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அது படைப்பாளியின் வெற்றிதானே? எழுத்தாளரின் சாகசங்கள் ஹெர்மன் மெல்வில் (Herman Melville) வாழ்க்கையே கூட சாகசங்கள் நிரம்பியதுதான். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தந்தையின் மரணத்தால் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு, குடும்பத்திற்காகச் சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல வேலைகளைச் செய்த அவர் பின்னர் ஒரு வங்கி ஊழியரானார். அதன் பின் பள்ளி ஆசிரியரானார். தனது 19ஆவது வயதில் ஒரு கப்பல் ஊழியராகச் சேர்ந்து கடல் பயணத்தைத் தொடங்கினார். அந்த அனுபவங்கள் பிற்காலத்தில் கப்பல் வாழ்க்கை சார்ந்த சில வெற்றிகரமான நாவல்களை எழுத உதவின. வேறொரு கப்பலில் வேலை செய்தபோது ஒரு தீவில் நிறுத்தப்பட்டிருந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தப்பித்து ஓடினார், சில காலம் பழங்குடி மக்களுடன் பழகி வாழ்ந்தார். இடையில் பிரிட்டிஷ் சிறையில் சில மாதங்கள் அடைக்கப்பட்டார். விடுதலையாகி நாடு திரும்பிய பிறகு, அமெரிக்கக் கடற்படைக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தார். இந்தக் கடல் அனுபவங்களின்போது ‘மோக்கா டாக்’ என்று பெயரிடப்பட்ட திமிங்கலம் பற்றி நிறைய விவரங்களை அறிந்தார். அது மோபி டிக்காகப் பரிணமித்தது என்று விக்கிபீடியா, ‘ஜெமினி’ ஏஐ தளங்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக் கழகங்களின் இலக்கிய ஆய்வுகளுக்குரிய ஒரு புத்தகமாக அங்கீகரிக்கப்பட்ட நாவல், மௌன சினிமாக் காலத்திலேயே ‘தி ஸீ பீஸ்ட்’ என்ற பெயரில் திரைக்கு வந்தது. பின்னர் அதே திரைக்கதையின் பேசும் பதிப்பாக நாவலின் பெயரிலேயே இரண்டு முறை திரைப்படங்களாக வந்தது. இந்தக் கதையைத் தழுவிய, வேறு கதாபாத்திரங்களையும் அனுபவங்களையும் காட்டிய சில தொலைக்காட்சித் தொடர்களும் வந்திருக்கின்றன. அறிவியலாளர்களும் பல்லுயிர்ப் பாதுகாப்பு அக்கறையாளர்களும் விடுக்கும் எச்சரிக்கைகளைச் சிறிதும் பொருட்படுத்தாமல், வேட்டைச் சுரண்டல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிரான பொதுச் சீற்றத்தை வளர்ப்பதில் தனது பங்கையும் அளிக்கிறது மோபி டிக் (Moby-Dick). https://bookday.in/books-beyond-obstacles-series-18-is-herman-melvilles-moby-dick-whale-hunting-novel-based-article-written-by-a-kumaresan/
  5. பொதுரசனைச் செவ்வியல் உருவாகும் தருணம் jeyamohanNovember 7, 2025 அண்மையில் ஒரு துயரமான மனநிலையில் புதுச்சேரியில் இருந்து கோவைக்கு காரில் வந்து கொண்டிருந்தபோது எண்ணங்களை மாற்றும் பொருட்டு இசையை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். வெவ்வேறு கவிஞர்கள் முருகனைப் பற்றி எழுதிய பாடல்களைப் பற்றி பேச்சு சென்றது. பூவை செங்குட்டுவன் எப்படி ஒரு பக்தி கவிஞர் ஆனார் என்பதை அவர் ஒரு உரையாடலில் சொன்னதை நான் நினைவு கூர்ந்தேன். 2006ல் அவர் இளையராஜாவை சந்திக்க வரும்போது ஒருமுறை சந்தித்திருக்கிறேன். இளையராஜா அவரை ஒரு முனிவரை எதிர் வருவது போல வணங்கி எதிர்கொள்வதை பார்த்தேன். அதன் பிறகு தான் அவர் எவர் என்று விசாரித்து தெரிந்து கொண்டேன். தமிழ் விக்கியில் அவரைப் பற்றிய ஒரு பதிவு போடும்போது மீண்டும் அவருடைய வாழ்க்கை வரலாற்றை தொகுத்துக் கொண்டேன். (பூவை செங்குட்டுவன் தமிழ்விக்கி). அவர் நாத்திகராக இளமையில் தன் சிந்தனையை தொடங்கியவர். திராவிட இயக்க நாடக ஆசிரியராக தான் அவருடைய இலக்கியப் பணி உருவாகியது. தொடர்ந்து தமிழகம் முழுக்க பயணம் செய்து திராவிட இயக்கத்தின் கருத்துக்களை பிரச்சாரம் செய்து வரும் போது பொருளியல் தேவைக்காக அவ்வப்போது வானொலிக்கும் எழுதி வந்தார். வசதியான அம்பலக்காரர் குடும்பத்தைச் சேர்ந்தவர். திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக ஆசிரியராகவும் ஆகவேண்டும் என்னும் கனவுடன் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து குடும்பத்துடன் போராடிக்கொண்டிருந்தார். அன்று குன்றக்குடி வைத்தியநாதன் திருச்சி வானொலிக்காக பணியாற்றிக் கொண்டிருந்தார். தனியாக இசைத்தட்டுகளையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு திரைப்படக்கனவு இருந்தது, அதற்கான முயற்சிகள் கைகூடாமலிருந்தது. குன்னக்குடி வைத்தியநாதனுடன் பூவை செங்குட்டுவன் நட்புகொண்டார். திருச்சி வானொலிக்காக குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் பல நாடகங்களையும் ஓரிரு பாடல்களையும் பூவை செங்குட்டுவன் எழுதினார். ஒருமுறை மிகுந்த பணக்கஷ்டத்துடன் இருந்தபோது நாடகம் எழுத வாய்ப்பு தேடி குன்னக்குடி வைத்தியநாதனை அணுகினார். குன்னக்குடி வைத்தியநாதன் அப்போது நாடகத்திற்கான வாய்ப்பில்லை, ஒரு பாடல் எழுத வாய்ப்புள்ளது, அதை எழுத முடியுமா என்று கேட்டார். அது ஒரு முருக பக்தி பாடல். பூவை செங்குட்டுவன் அதற்கு தன்னால் முடியாது என்றும், எந்த வகையிலும் பக்தியுடனும் தனக்கு தொடர்பில்லை என்றும் சொன்னார். அதற்கு குன்னக்குடி ‘உங்களுக்கு தமிழ்தெரியும்தானே? தமிழ் தெரிந்த எவராலும் பக்திப்பாடல் எழுதமுடியும். தமிழையும் பக்தியையும் பிரிக்கமுடியாது’ என்று சொன்னார். ஆனால் தன்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கை குன்னக்குடி வைத்தியநாதன் எத்தனை சொல்லியும் பூவை செங்குட்டுவனுக்கு வரவில்லை. ‘அப்படி என்றால் பணம் இல்லை, கிளம்புங்கள்’ என்று குன்னக்குடி சொன்னபோது பணத்தின் பொருட்டு அப்பாடலை எழுதலாம் என்று முடிவு எடுத்து ஓர் அறையில் அமர்ந்து எழுத முயன்றார். தொடக்கம் அமையாமல் வெவ்வேறு வகையில் சொற்களுடன் முட்டி மோதிக்கொண்டிருந்தார். அன்றெல்லாம் இசைக்காக பாடல் எழுதும் பழக்கம் கிடையாது. பாடல் எழுதிய பிறகு பாடலில் உள்ளுறைந்துள்ள இசையை அறிந்து, அதற்கான ராகத்தை கண்டுபிடித்து, அதற்கு இசையமைத்து அதன் பிறகு பதிவு செய்வதுதான் பழக்கம். ஆகவே இசையும் அவரிடத்தில் தோன்ற வேண்டி இருந்தது. பாடல் இசையுடன் நிகழ வேண்டியிருந்தது. அது எளிமையாக அனைவருக்கும் சென்றடையும் பாடலாக இருக்க வேண்டும். அதே சமயம் முருகனின் பெருமையை சொல்லும் பாடலாகவும் அமைய வேண்டும். திடீரென்று தோன்றி ஒரு பாடலை முழுமையாக எழுதி முடித்தார்.ஒரு வார்த்தைக்கு பின் இன்னொரு வார்த்தையை பற்றி யோசிக்கவில்லை. ஒரு வரி இன்னொரு வரியை இயல்பாகவே கொண்டு வந்தது. அது அவருக்கும் முருகனுக்குமான ஒரு மிகக் குறுகிய உரையாடல்தான். ஒரு பத்தியை சரசரவென்று கிறுக்குவது போலத்தான் அதை எழுதினார். இளமையில் அவருடைய கிராமத்தில் முருகன் கோயிலின் பாறையை நோக்கி அவர்கள் கூச்சல் போட்டு அதிலிருந்து ஒரு எதிரொலி எழும் நினைவுதான் அப்பாடலுக்கான தூண்டுதல். அது சூலமங்கலம் சகோதரிகள் பாட ஒலிப்பதிவானது. அந்தப் பாடல் ஒலிபரப்பான நாள் முதல் தமிழகத்தின் மிக புகழ்பெற்ற முருகன் பாடல் அதுவே. முருகன் பாடல்களிலேயே இன்று வரைக்கும் தமிழகத்தில் மிக அதிகமாக ஒலிப்பதும் அதுதான். எழுபது ஆண்டுகளாக நான்கு தலைமுறையினரால் பாடப்படுவது. அனேகமாக அதை எவருமே கேட்டிருக்காமலிருக்க வாய்ப்பில்லை. ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும். திருச்செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே மயிலாடும்’. அந்தப் பாடலை ஒரு விழாவில் சூரமங்கலம் சகோதரிகள் பாடக் கேட்டபோது அந்த விழாவிற்கு வந்திருந்த கவிஞர் கண்ணதாசன் இயக்குனர் கே.சங்கரிடம் “உங்கள் கந்தன் கருணை என்ற பாடலில் படத்திற்கு முருகனைப் பற்றி வள்ளியும் தெய்வானையும் பாடும் ஒரு பாடலைக் கேட்டு இருந்தீர்கள். அதற்கு இதைவிடச் சிறந்த ஒரு பாடலை என்னால் எழுத முடியாது. இதெல்லாம் தெய்வ அனுக்கிரகத்தில் இயல்பாக வரும் பாடல். இந்த இத்தனை எளிமையும் இத்தனை ஒழுக்கும் இத்தனை ஆழமும் ஒரே சமயம் அமைவது என்பது தன்னிச்சையாக நிகழ்வது. இது முருகனே எழுதச் சொன்ன பாடல். இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று சொன்னார். சங்கர் சூலமங்கல சகோதரிகளை அணுகி அந்த பாடலுக்கான உரிமை எங்குள்ளது என்று கேட்டார். சூலமங்கலம் சகோதரிகள் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த பூவை செங்குட்டுவனை அறிமுகம் செய்து “இவர் தான் அதை எழுதினார்” என்றனர். செங்குட்டுவன் அப்போது ஒல்லியாக இளைஞனாக இருந்தார். பாடலின் உரிமையை கோரியபோது அவர் கண்ணதாசனை சென்று வணங்கி ஆசி பெற்றார். கண்ணதாசன் “வாழ்க்கையில் முருகன் அருளால் எல்லாமே வெற்றியாகும்” என்று வாழ்த்தினார். குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த அதே வடிவில் அந்த பாடல் மறுநாளே ஒலிப்பதிவாகியது. கே.வி மகாதேவன் அப்படத்திற்கு இசையமைத்தார். கே.வி.மகாதேவன் அதை மறு அமைப்பு செய்தபோது பின்னணிஇசை மட்டுமே சற்று மாறுபட்டது சூலமங்கலம் ராஜலட்சுமியும் பி.சுசிலாவும் இணைந்து அந்த பாடலை பாடினார்கள். கந்தன் கருணை படத்தில் அந்த பாடலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்படத்துக்காக மகாதேவன் தேசிய விருது பெற்றார். விருதுக்கான பாராட்டுவிழாவில் அவ்விருது குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் உரியது என மகாதேவன் அறிவித்தார். குன்னக்குடி வைத்தியநாதனும் பின்னர் இசையமைப்பாளராக அறிமுகமாக அந்தப்பாடலே வழியாகியது. இரவு முழுக்க அந்த பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அதன் பிறகு தொடர்ந்து இரண்டு இரவுகளில் அந்த பாடலை கேட்டேன்.அந்த பாடல் இளமையில் என்னை மிக கவர்ந்த பாடலாக இருந்தது. அதை நான் பாடி அலைந்ததை நினைவு கூர்ந்தேன். அந்த பாடலின் வெற்றிக்கு என்ன காரணம் என்று இன்றைய என்னுடைய பார்வையைக்கொண்டு யோசித்தேன். அதில் உள்ள கச்சிதமான தாளம் முதன்மைக்காரணம். பக்திப் பாடல்களில் நெகிழ்வு அமையும் போது நிறைய தருணங்களில் தாளம் அமைவதில்லை. நல்ல பாடல் நினைவில் நிற்பதற்கு கச்சிதமான தாளம் ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது. இந்தப் பாடல் ஒரு ஒரு நடனப் பாடல் அளவுக்கு தாளத்துடன் இருக்கிறது. தாளம் சரியாக வந்த பாடலில் அந்த வேகம் அமையும்போது நெகிழ்வு இல்லாமலாகிவிடும். இந்த பாடலில் எல்லா தருணங்களிலும் பக்தியின் நெகிழ்வும் நிகழ்கிகறது. சூலமங்கலம் சகோதரிகளின் பாடலிலேயே ‘உனக்கான மனக்கோயில் கொஞ்சம் இல்லை’ போன்ற வரிகளில் ஆழ்ந்த நெகிழ்வு கண்ணீர்மல்க வைக்கும் அளவுக்கு வெளிப்படுகிறது. அதை அப்படியே திரைப்படப் பாடலிலும் கொண்டுவர முடிந்திருக்கிறது. பக்திப் பாடல்களில் வழக்கமாக நிகழும் செயற்கையான நெகிழ்வாக இல்லாமல் மிக இயல்பான உருக்கம் இதில் அமைந்துள்ளது. இதன் வரிகள் எந்த சிறு குழந்தைகள்கூட நினைவில் வைக்கக் கூடிய அளவு எளிமையானவை. குழந்தைக்கு புரியுமளவுக்கு நேரடியானவை. ஆனால் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்’ என்ற வரி மொத்த தமிழகத்தின் ஒரு நிலக்காட்சியை அளிக்கிறது. முதல் வரியிலேயே தமிழகநிலம் முழுக்க ஆட்சி செய்யும் முருகனின் சித்திரம் வந்துவிடுகிறது. ‘சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு ‘என்ற வரி வழியாக நவீன காலகட்டத்திற்கு வருகிறது. அதன் பிறகு ‘உனக்கான மனக்கோயில் கொஞ்சம் இல்லை’ என்ற வரி வழியாக இத்தனை ஆயிரம் ஆலயங்களுக்கு மேல் கோடான கோடி இதய ஆலயங்களிலும் நீ குடியிருக்கிறாய் என்று முடிகிறது. அத்துடன் ஒன்றை இசையறிந்தவர்கள் சொல்வார்கள். தமிழ்ச்செவிகளுக்கு மிகப்பழக்கமான ‘நாதஸ்வரப் பிடிகள்’ இப்பாடலில் உள்ளன. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் – முருகா என்ற வரியிலுள்ள முருகா என்னும் சொல்லில் உள்ள விசையை உதாரணமாகக் காட்டலாம். திருப்பரங்குன்றத்தில் என்ற சொல் நான்கு அலகுகளாக சரியான தாளச்சொல் போலவே அமைந்துள்ளதும் காரணம். பல்லாயிரம் முறை நாதஸ்வர நிகழ்வுகள் வழியாக இப்பாடல் தமிழுள்ளத்தில் நிலைகொண்டது. இன்றும் இந்தப்பாடலை பெரும்பாலான நிகழ்வுகளில் வாசிக்கிறார்கள். ‘அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை’யிலுள்ள அந்த லை சுழலும் விதம் நாதஸ்வரத்துக்கே உரியது. இந்த பாடல் எளிமையில் அமைந்த இயல்பான ஆழத்தால் தமிழ்மொழியில் எழுதப்பட்ட தலைசிறந்த பாடல்களில் ஒன்று என்று சொல்லலாம். இந்த பாடல் பூவை செங்குட்டுவனை ஒரு பக்திக் கவிஞராக நிலை நிறுத்தியது. அவர் விரும்பாமலே அவர் முருகனைப் பற்றிய பாடல் எழுத வேண்டிய நிலைமைக்கு ஆளானார். மிகச் சில ஆண்டுகளில் மிகத் தீவிரமான முருக பக்தராக மாறினார். நான் அவரை சந்தித்தபோது என்னிடம் அவர் சொன்னார் . ‘நான் முருகனை நோக்கி செல்லவில்லை. அவன் வந்து என்னை தூக்கிக்கொண்டு சென்றான். நான் வீட்டிலிருந்து கிளம்பி அருகிருக்கும் டீக்கடை வரைக்கும் நடந்து சென்று விட்டு திரும்பி வந்தால் என்னுடைய முருக பக்திப் பாடல் ஏதேனும் ஒன்று என் காதில் விழும்’ ‘பாப்புலர் கிளாசிக்’ என ஒருவகை எப்போதும் இலக்கியத்திலும் கலையிலும் உண்டு. அவை ஒரு தனிக்கலைஞரின் அகவெளிப்பாட்டால், கலைத்திறமையால் அந்த நிலையை அடைவன அல்ல. மக்களின் கூட்டான உள்ளமும் ஒரு குறிப்பிட்ட கலைவெளிப்பாடும் ஒரு வரலாற்றுத்தருணத்தில் இயல்பாக ஒருங்கிணைவதன் வழியாக நிகழ்பவை. அவை ஒருவகையான தற்செயல்கள்தான். அவற்றை திட்டமிட்டு திரும்ப நிகழ்த்தவே முடியாது. சிலசமயம் மிகமிக எளிய வரிகள், மிக எளிய மெட்டு, மிக எளிய கதை அந்த பெரும் அலையை உருவாக்கிவிடும். அது நிகழ்ந்தபின் அது ஏன் நிகழ்ந்தது என ஆய்வதே நாம் செய்யக்கூடுவது. நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை செங்குட்டுவன் எழுதியிருக்கிறார். பெரும்பாலான பாடல்கள் புகழ்பெற்றவை. இன்றும் அவருடைய பாடல்கள் தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. நான் வீட்டில் அமர்ந்து ஒருமுறை அந்தப் பாடலை கேட்ட பின்னர் யோசித்தேன். கிளம்பி அருகில் இருக்கும் டீக்கடைக்குள் சென்று ஒரு டீ குடித்துவிட்டு வருவதற்குள் அவரது பாடல்களில் ஏதேனும் ஒன்று கேட்கிறதா என்று பார்க்கலாம் என்று. டீ குடித்துவிட்டு வரும்போது தொலைவில் ஓர் ஆலயத்தில் செங்குட்டுவனின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. ‘திருப்புகழை பாடப்பாட வாய் மணக்கும். எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்’ பூவை செங்குட்டுவன் தமிழ் விக்கி https://www.jeyamohan.in/223391/
  6. யாழில் பெண் தலைவர்களை வலுப்படுத்துவது தொடர்பில் விசேட வேலைத்திட்டம் 08 Nov, 2025 | 10:22 AM இலங்கை முழுவதிலுமுள்ள பெண் தலைமைத்துவங்களுக்கிடையிலான தொடர்புகளை உருவாக்குவதன் முதற்படியாக ‘இணைக்கும் குரல்கள்’ பெண் தலைவர்களுக்கான பிராந்திய பரிமாற்ற நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. பாராளுமன்றம், உள்ளூராட்சி மன்றங்கள், கல்வி மற்றும் வணிகத் துறைகளிலிருந்தான தேசிய மற்றும் மாவட்ட ரீதியிலுள்ள பெண் தலைவர்களை ஒன்றாக இணைக்கும் நிகழ்வாக இது அமைந்தது . இங்கு அனுபவங்கள், தடைகள் மற்றும் பெண் தலைமைத்துவத்தைப் பலப்படுத்துவதற்கு அடையாளம் காணப்பட்ட நடைமுறைத் தீர்வுகள் குறித்துப் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்களான ஹேமாலி வீரசேகர, ஹசாரா லியனகே, துஷாரி ஜயசிங்க, அனுஷ்கா திலகரத்ன, எம்.ஏ.சி.எஸ்.சதுரி கங்கானி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான பாராளுமன்றம் மற்றும் ஊடகத்துறை நிபுணர் சதுரங்க ஹப்புஆரச்சி ஆகியோர் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவுப்படுத்தும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். நிலையான வழிகாட்டுதல் வலையமைப்பை உருவாக்குவதற்கும், வடக்கில் உள்ள பெண் தலைமைத்துவங்களிடமிருந்து முக்கிய விடயங்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்று அவற்றை உள்ளடக்கிய அறிக்கையை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை இந்தத் தளம் உருவாக்கியது. தலைமைத்துவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கும், இலங்கை முழுவதும் உள்ளடக்கிய நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் ஆதார அடிப்படையிலான கொள்கை முடிவுகளை முன்னெடுப்பதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்திற்கு இந்த அறிக்கை உறுதுணையாக இருக்கும். https://www.virakesari.lk/article/229825
  7. கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தால் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 08 Nov, 2025 | 12:51 PM வடமராட்சி கிழக்கு - கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகமானது தமது பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக அழித்தொழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை (08) சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கட்டைக்காடு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தால் முற்றுகையிடப்பட்டது. இந்த முற்றுகையின் போது அங்கு கூடியிருந்தவர்கள் கசிப்பு பீப்பாய்களை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், கைப்பற்றிய கசிப்புகளை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தினர் எரித்து அழித்துள்ளனர். இந்த நடவடிக்கை சென்மேரிஸ் விளையாட்டுக் கழக தலைவரும் பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினருமான பி.அலஸ்ரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. கழகத்தின் முன்மாதிரியான குறித்த செயற்பாட்டை பலரும் பாராட்டினர். https://www.virakesari.lk/article/229836
  8. கனகராயன்குளத்தில் விபத்து: இளைஞர் உயிரிழப்பு வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் நேற்று (07) மணியளவில் இடம்பெற்ற விபத்தில், யாழ். வடமராட்சி, கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 26 வயதுடைய உதயகுமார் சாருஜன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். மேற்படி இளைஞரும், அவரது நண்பரும் கொழும்பில் இருந்து ஓட்டோவில் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளை, யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில், பெரியகுளம் பகுதியில் வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த லொறியுடன் விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில் ஓட்டோவில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/கனகராயன்குளத்தில்-விபத்து-இளைஞர்-உயிரிழப்பு/175-367605
  9. பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்! தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தையாரும், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி. மூ. இராசமாணிக்கம் அவர்களின் புதல்வருமான 67வயதுடைய மருத்துவர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் நேற்று 07ஆம் திகதி பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் திருவுடல் இன்று சனிக்கிழமை 08ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை (Jayaratne Respect Home) இல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அன்னாரின் திருவுடல் நாளை 09ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/பாராளுமன்ற_உறுப்பினர்_சாணக்கியனின்_தந்தை_காலமானார்!
  10. போதைப்பொருள் விற்ற காசை வட்டிக்கு வழங்கும் மாபியாக்கள் adminNovember 8, 2025 யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் மாபியாக்கள் , போதைப்பொருட்களை விற்று வரும் பணத்தினை வட்டிக்கு வழங்கி , வட்டி பணத்தை வசூலிக்க பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை ஜனாதிபதி முன்னெடுத்திருப்பது தொடர்பில் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் , நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்நிலையில் கடந்த வாரம் , திருநெல்வேலி மற்றும் கொக்குவில் சந்தைப் பகுதிகளில் போதைப்பொருள் மாபியாக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சந்தைக்கு வருவோரை துன்புறுத்தியுள்ளனர் போதைப்பொருள் மாபியாக்கள் போதைப்பொருட்களை விற்று வரும் பணத்தை வட்டிக்கு வழங்கி , வட்டி பணத்தை வசூலிப்பதற்கான பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை யாழ்ப்பாணத்தில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/222463/
  11. காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது October 21, 2025 வி. வி.கணேஷானந்தனின் / V. V. Ganeshananthan‘s “The Missing Are Considered Dead”, Copper Nickel, Fall 2019, Issue 29. (எழுத்தாளரின் அனுமதியுடனான தமிழாக்கம் /Translated with permission of the author). தமிழாக்கத்தின் மூல வடிவம் / Original full version of the translation: எனது கணவன் காணாமற்போன அன்று மட்டக்களப்பு ஒழுங்கையில் இருந்த பக்கத்துவீட்டுக்காரி சரோஜினி என் வீட்டுக்கு விடுவிடென்று ஒடி வந்தாள். அவரைப் பிடித்துக் கொண்டு போனதைத் தன் கண்களாலேயே பார்த்தாளாம். அடிவரைக்கும் அழிந்து போன எனது கிராமத்தில் பெண்கள் இப்படித்தான் காணாமற்போனவர்களைப் பற்றிப் பேசிக்கொள்வார்கள்: “காணாமற் போனவர்கள்” என்பதன் அர்த்தம், “கடத்தப்பட்டவர்கள்”, “கொண்டு போகப்பட்டவர்கள்” என்றால் “கொலை செய்யப்படப் போகிறவர்கள்”. சரோஜினிக்குத் தான் எதிலும் முக்கியமானவள் என்ற நினைப்பு. வழக்கம் போல எனக்குப் பக்கத்தில் நின்றபடி ஒரு சிறு புன்சிரிப்பால் ‘இவளுடைய ஊர்க்கதைகளைக் காதில் போட்டுக் கொள்ளாதே’ என்று சைகை செய்யும் ரஞ்சன் அன்று எனக்குப் பக்கத்தில் இல்லை. ஆனாலும் அவள் தன் கதையை எடுத்துச் சொல்வதை நான் தடுத்து நிறுத்தவில்லை. அவள் சொன்னதை நான் காதில் போட்டுக் கொள்ளாமல் ரஞ்சனைப் பற்றியே யோசித்தேன். அவன் எங்கே? காலப் போக்கில் எனக்குச் சுவாசம் போலப் பழக்கப் பட்டுவிட்ட ஒரு கேள்விச் சிந்தனையின் ஆரம்பம் அதுதான். அந்தச் சுவாசிப்பு தேவையானது மட்டுமல்ல தாங்கவும் முடியாதது. சரோஜினி என்னைத் தேடிக் கத்திக் கொண்டு வந்த போது நான் ரஞ்சன் விட்டுவிட்டுப் போன சில பொருட்களை எரித்துக் கொண்டிருந்தேன். சமையலறைக்குப் பின்னாலிருந்த முற்றத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைப் பற்றி சரோஜினி எதுவுமே கேட்கவில்லை. துர்நாற்றம் வீச அங்கே என்ன உருகிக் கொண்டிருந்தது என்பதில் அவள் அக்கறைப் படவில்லையாக்கும். “நான் அவங்களைக் கண்டன்!” அவள் அடித்துச் சொன்னாள், “அதிரடிப்படைப் பெடியங்கள் அவரைக் கொண்டு போனாங்கள்.” இராணுவத்தினர் அவனைக் கொண்டு போக முன்னர் மூன்று முறை இங்கே வந்ததைச் சொல்லி நான் அவளைத் திருத்தவில்லை. இராணுவமும் விசேட அதிரடிப்படையும் வெவ்வேறு. எனது இழப்பில் பங்கெடுக்க அவளுக்குள்ள ஆவலைக் கண்டதால் “உனக்கு என்ன தெரிந்தது?” என்று கேட்டேன். “அடிக்கடி குடிக்க வாறவன் தான் ரஞ்சனைக் கொண்டு போனவன்,” என்றாள். அது உண்மை. ரஞ்சனைக் கொண்டு போக வந்த ஆமிக்காரன் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போனவன் தான். புலிகள் பக்கம் முந்தி இருந்த கருணாவோடு ஒரு காலத்தில் சேர்ந்திருந்த எனது கணவன் பிறகு குடிக்கவெல்லாம் ஆரம்பித்துவிட்டான். சுற்றத்தினருக்கு அவன் மேல் நல்ல விருப்பமும் நம்பிக்கையும் இருந்தன, ஆகவே அவன் புலிகளை விட்டுத் திரும்பி வந்த பிறகு அவர்கள் அவனுக்குத் தேவையானது எல்லாவற்ரையும் தாராளமாகவே கொடுத்து வந்தார்கள். இது இராணுவத்தினருக்குத் தெரியும். ஆகவே அவர்கள் அடிக்கடி ரஞ்சனுடன் பேசுவதற்காக அழையா விருந்தாளிகளாகவும் வரத் தொடங்கி விட்டார்கள். ரஞ்சனுக்கு சிஙகளம் அத்துப்படி. சரோஜினி வளவளப்பதைக் காதில் போடாமலே கேட்டுக்கொண்டு நான் ‘கப்பேடு’க்குப் போய் ஒரு பானத்தை வார்த்துக்கொண்டேன். எனது கணவனைக் கொண்டு போனவன் திரும்ப வரக்கூடும். வந்தால் அவனுக்கு இனியும் விஸ்கியெல்லாம் கொடுத்து உபசரிக்க மாட்டேன். ரஞ்சன் மதுபானங்களையெல்லாம் எங்கே வைத்திருக்கின்றான் என்று எனக்கு எப்போதுமே தெரிந்திருந்தது. இப்போ அவன் போய்விட்டதால் எஞ்சி இருப்பதெல்லாம் என்னுடைய சொத்துத் தானே. // உண்மையாக அவன் காணாமற் போன நாளுக்கும், உத்தியோகபூர்வமாக ‘காணாமற்போய்விட்டான்’ என்று பதியப்பட்ட நாளுக்கும் இடையில் முப்பது நாள் இடைவெளி. அது ஏன் என்று கேட்டால் நான் உங்களுக்குச் சொல்லக் கூடியது இதுதான்: அவனைக் கொண்டு போனதை நான் என் கண்களாலேயே கண்டிருந்தாலும்கூட, சரோஜினி வீடுதேடி வந்து சாட்சியம் சொல்லியிருந்தாலும்கூட, அதை முழுதாக நம்புவதற்கு எனக்கு ஒரு வாரம் பிடித்தது. அதற்குப் பிறகும் என்னால் வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் இருந்ததால், காணாமற் போனதை உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்ய இன்னும் மூன்று வாரங்கள் சென்றன. எனது கணவன் வீட்டை விட்டுப் போய்விட்டான். திரும்பி வரவேயில்லை. சாமியறைக்குள்ளே போய்க் கடவுளுக்கு முன்னாலே நகராமல் நிற்க வேண்டும் போல இருந்தது. ஒழுங்கையில் இருந்தவர்கள் என்னைக் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்: எப்படி ரஞ்சனை அவர்களால் கொண்டு போக முடிந்தது? ஏன் அதை எல்லோருக்கும் சொல்ல எனக்கு அவ்வளவு காலம் பிடித்தது? வம்படிப்பவர்கள் எனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டுத் தங்களுக்குள்ளே கிசுகிசுத்துக் கொண்டார்கள். அது எனக்கும் கேட்டது. நானும் எனக்கு என்ன பிரச்சனை என்று சிந்தித்தேன். அதைத்தான் வம்பர்களும் எதிர்பார்த்தார்கள். கடைசியாக, தளர்ந்து விழுந்து விடாமல் வீட்டு வாசலுக்கு வெளியே செல்லும் அளவுக்குத் தைரியம் வந்ததும், காணாமற் போனதைப் பதிவு செய்யச் சென்றபோது நான் முதல் முதலாகச் சொன்னது துஷாரவுக்குத் தான். நானும் ரஞ்சனும் திருமணம் செய்த காலத்தில் இருந்தே பக்கத்து மூலையிலுள்ள இராணுவக் காவல் முனையில் சென்ட்ரி வேலை பார்த்து வருபவன் அவன். நான் விஷயத்தைச் சொன்னபோது அவன் முகத்தைச் சுருக்கிக் கொண்டு கடுமையாக யோசித்தான், யார் செய்திருக்கலாம் என்று ஊகிப்பதற்காக ஒரு தொலைபேசிப் புத்தகத்தை மானசீகமாகத் தட்டிப் பார்ப்பது போல. ஆனால் அவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை. நான் கொஞ்சம் அழுதபோதுகூட அவன் கண்டுகொள்ளாதவன் போல நடித்தபடி சீருடைச் சட்டைப் பைக்குள் வைத்திருந்த கைக்குட்டையை மட்டும் கருணையுடன் எடுத்து நீட்டினான். அதற்குப் பிறகு எனது வீட்டைக் கடக்கும் போதெல்லாம் மரியாதை காட்டுவது போலத் தலையைக் குனித்துக் கொள்வான். சில நாட்களுக்குப் பிறகு காணாமற் போன பதிவை விசாரணை செய்வதற்காக ஒரு இராணுவக் கேணலை அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்தான். லேசாக ஊசிப் போனமாதிரி நாறும் எனது வீட்டுக் கூடத்துக்கு அழைத்துப் போய், தேனீர் கொடுத்து, என் கதை முழுவதையும் சொன்னேன். கேணல் மும்முரமாக விவரங்களை எழுதிக்கொள்ள துஷார அவருக்குப் பின்னால் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான். கிரிஷான் அப்போ ஒரு குழந்தை. எனக்குப் பின்னால் அழுதபடி நின்று கொண்டிருந்தான். அவனது விசும்பல்களைக் கேட்ட கேணல் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டார். பக்கத்திலே ரஞ்சன் நிற்பது போல, வெவ்வேறு மனிதர்கள் தன்னைத் தூக்கி வைத்திருப்பதில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாதவன் போல, கிரிஷான் உடனேயே மௌனமாகிவிட்டான். நான் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லி, தான் கேட்க வேண்டியவை எல்லாம் கேட்டு முடித்த பிறகு கேணல் எனக்கு விதிமுறைகளை விளக்கத் தொடங்கினார். எனது கணவனைக் கைது செய்ததாக எந்த விதத் தகவலும் அவர்களிடம் இல்லையாம். ஆகவே, அவன் காணாமல் மட்டும்தான் போயிருக்கிறானாம். எந்த நேரமும் திரும்பி வரலாமாம். அவனை இழந்ததற்கு எனக்கு ஏதாவது நட்ட ஈடு தருவதானால் மூன்று வருடங்கள் கழிந்த பிறகு தான் சாத்தியமாம். நான் பேயறைந்த மாதிரி நின்றிருந்தேன். கிரிஷான் இன்னும் சின்னவன். நான் பிரசவத்துக்குப் பிறகு வீட்டுக்கு வெளியே வேலைக்குப் போனது கிடையாது. கையிலே காசு எதுவுமே கிடையாது. “என்ன செய்யப் போகிறாய்?” என்று கொஞ்சம் அளவுக்கு அதிகமான அக்கறையுடன் கேணல் கேட்டார். அப்போதுதான் “சேர், பள்ளிக்கூடத்தில் ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்டுப் பார்க்கலாம்,” என்று துஷார சொன்னான். இப்படித்தான் நான் முந்திப் படித்த பள்ளிக்கூடத்திலேயே துப்புரவு வேலை செய்ய ஆரம்பித்தேன். எங்கள் ஊரில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருக்கிற கொஞ்ச நஞ்ச வேலைகளுக்கும் தேவையான தகைமைகள் என்னிடம் இருக்கவில்லை. பள்ளிக்கூடத்துக்கு நடந்து செல்லும் பாதை எனக்கு நன்றாகவே பிடித்தது. நடந்து போகிற வழியில், எங்களிடமிருந்து பறித்த காணிநிலங்களில் இப்போ இராணுவத்தினர் கட்டியெழுப்பும் அழகான உல்லாசப்போக்கிடம் தெரிந்தது. அப்பாவின் பழைய வீடும் பாட்டி குளித்த கிணற்றடியும் தெரிந்தன. கிணறு முற்றுமுழுதாக அழிக்கப்படவில்லை. எல்லையில் போட்டிருந்த முள்ளுக் கம்பி வேலி வரைக்கும் போனால் உடைந்து போன கிணற்றின் சீமெந்து வட்ட விளிம்பு தெரியும். நான் கிரிஷானைத் தூக்கிக் கொண்டு போகிற போதெல்லாம் துஷார எனக்குக் கை காட்டுவான். பிறகு கிரிஷான் வளர்ந்து என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வரத் தொடங்கியபோது, ஆமிக்காரர்கள் தகப்பனில்லாத அவனைப் பார்த்துச் சிரித்தபடி “ஹலோ சின்னவன்” என்று அழைப்பார்கள். அவர்களின் கண்களில் இலகுவாக வரும் கனிவு என் கணவனின் ஞாபகமூட்ட, எனக்குக் குமட்டிக் கொண்டு வரும். அவர்களின் தாய்களைப் பற்றி நினைவு எனக்கு வந்ததும், கிரிஷானை இறுக்கிக் கட்டிப் பிடிப்பேன். என்னைப் போல ஒரு கணவனில்லாத பெண்ணுக்கு, கையில் பணமில்லாத ஒரு தாய்க்கு, மூன்று வருடங்கள் என்பது மிக நீண்ட காலம். சீமெந்துத் தரைகளை வட்டவட்டமாக ஈரத்துணியால் துடைத்தேன். கரும்பலகைகளைக் கழுவினேன். மாணவர்கள் சிந்தி விட்டுப்போன புத்தகங்களை மீண்டும் புத்தகத்தட்டுகளில் அடுக்கினேன். அவர்கள் பகலுணவு சாப்பிட்ட மேசைகளைத் துடைத்தேன். நான் அங்கே படித்த கால ஞாபகங்கள் வந்து போயின. மாணவர்கள் என்னைக் கருணையோடு நடத்தினார்கள். ஆசிரியர்கள் என்னைக் கண்டு கொண்டதாகக் காட்டிக் கொள்ளவேயில்லை. அதுவும் ஒரு கருணைதான். அங்கு துப்புரவு வேலை செய்வது எனக்குப் பெரிய அவமானம் என்று அவர்களுக்குப் புரிந்திருக்கலாம். நான் படித்த காலங்களில் கணிதத்தில் வகுப்பிலேயே நான்தான்கெட்டிக்காரி. ஆங்கிலத்தில் அதைவிடக் கெட்டிக்காரி. எனது ஆங்கிலத் திறமையைப் பார்த்து விட்டு நான் வெளிநாடு போவேன் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள், மத்தியகிழக்கு நாடொன்றுக்கு, அல்லது ஐரோப்பிய நாடொன்றுக்குக் கூடப் போகும் வாய்ப்பு இருந்திருக்கலாம். இப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் ஏதாவது கலை நிகழ்ச்சிகள் நடக்கும்போது நான் தும்புக்கட்டையோடு மண்டபத்தில் பின்னால் நின்று கொண்டு பார்ப்பேன். எல்லோரும் என்னைக் கண்டுகொள்ளாத மாதிரியே நடந்து கொள்வார்கள். ஆகவே எனக்கும் தங்கு தடையின்றி எல்லோரையும் போல நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பது போன்ற உணர்வு வரும். நான் ஒரு முழுமையான மனைவியாகவும் இல்லை, முழுமையான விதவையாகவும் இல்லை, ஒரு புலியாகக் கூட ஒருபோதும் இருந்ததில்லை. ரஞ்சன் எனக்குப் பக்கத்தில் நிற்கின்றான் என்று கற்பனை செய்து கொள்வேன். அவனது அகலமும் ஆழமும், அவன் உடம்பு எடுத்திருக்கக் கூடிய இடமும் என் கற்பனையில் துளிர்ப்பன. தாறுமாறாக வளர்ந்த அவனது மீசை, அவனது புன்னகை, எல்லாம் நினைவில் வந்து போயின. “உன்னுடைய மகனும் இங்கே ஒரு நாள் படிப்பான்,” என்று யாரோ பெருந்தன்மையாகச் சொன்னார்கள். அப்படிச் சொன்னதற்கு நான் நன்றியுணர்வு காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் வெறுப்பைப் பொங்க வைத்தது. // அந்த முதல் வருடம் வாரத்துக்கு ஒரு முறை துஷாரவையும் கேணலையும் பார்க்கப்போய் ரஞ்சனைப் பற்றி ஏதாவது செய்தி இருக்கிறதா என்று விசாரிப்பேன். கண்ணியமாகவே ஆரம்பிப்பேன்: உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியுந்தானே, என்று கெஞ்சினேன்; என்னை ஒவ்வொரு நாளும் பார்க்கிறீர்கள், என்னைப் பற்றி நன்றாகவே தெரிந்தவர்கள். எனக்கு அவன் திரும்பிக் கிடைப்பது மட்டும் தான் தேவை. ஆமிக்காரர் தான் அவனைக் கடத்திக் கொண்டு போனார்கள் என்றால் நான் யாருக்குமே சொல்ல மாட்டேன், சொல்லத் தேவையுமில்லை. அவன் இப்போது புலிகளோடு இல்லை. வெறுமனே கிரிஷானின் அப்பா மட்டும்தான். தயவு செய்து அவன் எங்கே என்று சொல்ல மாட்டீர்களா? கேணல் ஒரு கூடாத மனிதரல்ல. துஷாரவை விடத் தொலைவிலிருக்கும் கிராமத்திலிருந்து வந்தவர். என்னை மௌனமாக வெறித்துப் பார்ப்பார். இரண்டாவது வருடம், எனக்கு குறைச் சம்பளத்தில் நிறைய வேலை இருந்தபோது மாதமொருமுறை மட்டும் தான் போனேன். ஆனால் ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும் போது ரஞ்சன் பக்கத்திலேயே படுத்திருப்பதாக ஒரு பிராந்தி. எப்போவாவது ஒரு நாள் சரோஜினி தெருவைக் கடந்து வந்து அவன் எங்கே சிறை வைக்கப் பட்டிருக்கிறான் என்று தான் கேட்ட வதந்தியைப் பகிர்ந்து கொள்வாள். உன்ரை மனிசன்.அந்த வார்த்தைகளைக் கேட்பதற்காகவே நேரத்தைப் பார்க்காமல் அவள் சொல்லும் கதை கேட்கத் தயாராக இருந்தேன். ஆனால் அவளும் வருவதை நிறுத்திக் கொண்டாள். எனது தனிமை அவளைச் சங்கடப் படுத்தியிருக்கலாம். எனது கணவன் இருந்தபோது அடிக்கடி வந்து போன அயலவர்களும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. தெருவில் காணும் போது கண்களைத் தவிர்த்துக் கொண்டார்கள். கடைசியில் மூன்றாம் வருடத்தில் கேணலுடனான உரையாடல்கள் சம்பிரதாயபூர்வமாயின. ஏதாவது செய்தி இருக்கிறதா என்று கேட்பேன். பல அதிகாரிகளுக்கும் அனுப்பிய கடிதங்களின் பிரதிகளைக் காட்டுவேன். அவர் மறதியோடு தலையாட்டும் போது ஒரு நாளுமே நற்செய்தி வரப்போவதில்லை என்ற உண்மை எனக்கு உறைக்கும். என்னைப் பார்த்துச் சிரித்த, சிரிக்கக் கூடிய, மனிதர்கள் துஷாரவும் அவனது நண்பர்களும் தான். முள்ளுக்கம்பியின் பின்னால் எங்கள் வீடுகள் இருந்த காணியில் ஒரு வளரும் குழந்தை போல அந்த ஆமி ஹோட்டல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு சீமெந்து வார்க்கும் ஆமிக்காரர்களின் முகங்கள் வியர்வையால் மின்னுவன. // ஒவ்வொரு மாதமும் ஏழாந்திகதி கலண்டரைப் பார்த்தபடி என் காலம் போனது. நான் ஒரு ஏழை என்று முதலே சொல்லியிருக்கிறேன் தானே. முதல் வருடம் முடியும் போது கிரிஷானிடம் காலணி இல்லாமல் போனது; இரண்டாம் வருடம் முடியும்போது.அவனது உடைகள் அளவில்லாமற் போயின. மூன்றாம் வருடத்தின் இறுதி நாட்களில் அவனை அசப்பில் பார்த்தால் ரஞ்சன் தன் வாழ்க்கையின் அதல பாதாள கட்டத்தில் இருந்தத்தைப் போலவே இருந்தான். புலிகளுடன் இருந்த காலம் ரஞனைப் பொறுமை போன, உடல்தேய்ந்த நிலைக்குத் தள்ளிவிட்டது. கிரிஷான் இன்னும் என் செல்லக் குட்டிதான், ரஞ்சனைப் போலவே முகம் கொண்ட அமைதியான குட்டி. ஆனால் அவனுக்கு நான்கு வயது என்றாலும், நாள் போகப்போக அவன் வளராமல் தேய்கிற மாதிரி இருந்தது. அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்துக்கு ஒரு புதுத் தலைமையாசிரியர் வந்தார். என்னைப் பள்ளிக்கூடம் முடிந்த பிறகும் பின்னுக்கு நின்று வேலை செய்யச் சொன்னார். அவர் இராணுவத்தினரின் நண்பர். நான் எப்படிப் பள்ளிக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தேன் என்ற கதை அவருக்குத் தெரியும். நான் சொல்வது புரிகிறது தானே—அவரது சொந்தப் பொருள்களைத் துப்பரவாக்கவும் பராமரிக்கவும் அவருக்குத் தேவையிருந்தது. தையல் வேலை, திருத்த வேலை, கோப்புகளைக் கோவைப் படுத்தும் வேலை—வேறு யாரும் அந்த வேலைகளைச் செய்ய உடன்பட மாட்டார்கள். அவருக்குத் தேவையாயிருந்தது ஒரு சுறுசுறுப்பான, கெட்டித்தனமான, காசில்லாத, ஆகவே யாரிடமும் ஏதும் சொல்லி முறையிடமாட்டாத பெணதான். பகல் வேலைகளில் கிரிஷான் கன்னியர் மடப் பாலர் பள்ளிக்குச் செல்வான். மாலை நேரங்களில் அவர்களுக்கு வேறு வேலைகள் இருந்ததால் பிள்ளைகளைப் பராமரிக்க மாட்டார்கள். மாலை நேரங்களில் என் பிள்ளையைப் பார்த்துக் கொள்ள எனக்கு யாருமே உதவிக்கு இருக்கவில்லை. அதற்கு, என்வீட்டுக்கு அடிக்கடி வந்து போவது, சுகம் விசாரிக்க வரும் இராணுவத்தினர் கூட ஒரு காரணமாக இருக்கலாம். நான் கிரிஷானை என்னுடன் கூட அழைத்துக் கொண்டு மாலை வேலைக்குப் போகலாமா? அவன் அமைதியான பிள்ளை. தலைமையாசிரியர் சம்மதிப்பார் தானே. கிரிஷான் தொடர்ந்து வரமுடியாத ஏதாவது இடத்துக்கு நான் போகவேண்டுமென்றால் என் பிள்ளை பொறுமையாகக் காத்திருப்பான். அதற்கு அவன் இப்போ நன்றாகப் பழகிவிட்டான். கிரிஷானைக் கூட்டிக் கொண்டே வேலைக்குப் போவது என்று நான் தீர்மானித்துவிட்டபோது துஷார வழமை போல ஒரு கோப்பை தேனீர் கேட்டு வந்தான். அப்படி அவன் வரும்போது எனக்கு மறுப்புச் சொல்ல முடிவதில்லை. அவனுக்கும் வயசு வந்துவிட்டது. அவனது கழுத்து ஒரு வளர்ந்த மனிதனின் கழுத்தாகப் பரந்திருந்தது. படையினர் செய்யும் கடினமான கட்டட வேலைகளால் அவனது கைகளும் தோள்களும் செழிப்பாகத் திடர்ந்து முறுகியிருந்தன. என்னிடம் கடைசியாக மிஞ்சியிருந்த பிஸ்கட்களை அவனுக்குக் கொடுத்து, நான் வேலைக்குப் போக வேண்டுமென்று சொன்னேன். அவன் கிரிஷானைப் பார்த்தபடி, “உன் மகனை ஒருமுறை பாத்துட்டுப் போகலாம் எண்டுதான் வந்தன்,” என்றான். “நீ திரும்ப வேலைக்குப் போறியா?” என்று குழம்பிய முகத்தோடு கேட்டான். “இப்போ பின்னேரமல்லவா? நான் அவனைப் பாத்துக் கொள்றன்,” என்றான். இராணுவத்தில் இருந்தாலும் இன்னமும் ஒரு சிறு பையனாகவே இருந்த துஷாரவை ஏறிட்டுப் பார்த்தேன். பிறகு என் பையனைப் பார்த்தேன்—அவன் ரஞ்சனைப் போல ஒரு புலியாக ஒருநாளும் வரப்போவதில்லை. இந்த உண்மைகள் வேறு மாதிரியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. நான் சந்தித்திருந்த மற்ற சில இராணுவத்தினரைப் போல அல்லாமல் துஷார தான் எனது நண்பன் என்றே தன்னை வரித்துக் கொண்டான். துஷாரவோடு கிரிஷானை விட்டுவிட்டு தனது அலுவலகத்தில் எனக்காகக் காத்துக் கொண்டிருந்த தலைமையாசிரியரிடம் வேலைக்கு நடந்து போனேன். // எனது நேரம்—ரஞ்சனின் நேரம்—முடிவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னால் அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவர் பள்ளிக்கூடத்துக்கு வருகை தந்தார். அந்த விசேட நிகழ்வுக்காகப் பள்ளிக்கூடத்தைத் துப்புரவாக்க இன்னும் சிலரைத் தற்காலிக வேலைக்கு அமர்த்தியிருந்தார்கள். பள்ளிப் பிள்ளைகள் தேசிய கீதம் பாடுவதற்குப் பயிற்சி செய்தார்கள். எனக்குப் புதுச்சீருடை வழங்கப்பட்டது. வழக்கம் போல மண்டபத்தின் பின்பக்கத்தில் என்னை நிற்க விட்டார்கள். நான் இந்த வருகையைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் துஷாரவுக்கும், மட்டக்களப்பில் இருந்த மற்ற இராணுவத்தினருக்கும், இந்த மனிதரைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது பற்றி மிகுந்த உற்சாகம் இருந்தது என்று எனக்குத் தெரியும். அவரது முகம் ஒரு புதிய முகம், ஆனால் அதே நேரத்தில் பழைய முகமும் தான்—பல முந்தைய அரசுகளில் பங்கெடுத்திருக்கிறார். இப்படியான பெருந்தகைகள் விஜயம் செய்யும் போது வழக்கமாக நடப்பது போலவே இராணுவத்தினர் வந்து முன்வரிசையில் நின்று அணிவகுப்பு மரியாதை செய்தார்கள். அவர் உரையாற்றிய போது நான் ரஞ்சனைப் பற்றி நினைத்தேன். அரசியல் என்றால் அவனுக்கு உயிர். பின்சுவரோடு சாய்ந்தபடி நான் எனது தும்புக்கட்டையை இறுகப் பிடித்திருந்தேன். அவ்வளவு தூரத்திலிருந்தும் அந்த மனிதரின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அது ஒரு உறுதியில்லாத முகம். எனது ஊரில் எஞ்சியிருந்த கணவர்களெல்லாரும் வெளியேறியோ எடுத்துச் செல்லப்பட்டோ காணாமற் போன பல வருட யுத்த காலத்தில் அவர் அனுபவித்த நிம்மதியான வாழ்க்கையால் அவரது தாடை மறைந்து முகம் செழிப்பாக இருந்தது. அதே காலத்தில் துஷாரவுகளும் அவர்களது கேணல்களும் தத்தம் கிராமங்களை விட்டு வெளியேறி எங்கள் கிராமத்தை ஆக்கிரமிக்க வந்தார்கள். அரசாங்கப் பிரதிநிதி சிங்களத்தில் பேசினார். இதற்கெல்லாம் கோபம் கொந்தளிக்கத் தேவையான சக்தி எனக்குள்ளே வரண்டு போய்ப் பலகாலம். சோகம் மட்டும்தான் மிச்சம். அவர் சொன்னதைக் கவனமாகக் கேட்க முயற்சித்தேன். எனக்கு சிங்களம் நன்றாகத் தெரியாது. அவர் ஒரு வசனத்தைச் சொன்ன போது அரங்கிலிருந்த மக்களிடையே ஒரு சலசலப்பு. சொன்னது எனக்குச் சரியாகக் கேட்கவில்லை என்று நினைத்தேன். சரியாகப் புரியவில்லை. வாயைத்திறந்து “என்ன?” என்று கேட்டேன். முதலில் எனக்குள்ளே மட்டும். பிறகு பக்கத்திலிருந்த தற்காலிக வேலையாளரைப் பார்த்து. ஆனால் அவளுக்கும் சரியாகக் கேட்கவில்லை, சிங்களமும் நன்றாகத் தெரியாது. பல முக்கியஸ்தர்கள் தங்கள் முக்கியத்துவத்தைக் கேட்பவர்கள் மறந்துவிடாமல் இருப்பதற்காகத் தாங்கள் சொன்னவற்றை திருப்பிச் திருப்பிச் சொல்லுவார்கள் அல்லவா? இவரும் அப்படிச் சொல்லிவிடுவார் என்ற எதிர்பார்ப்பில் நாங்கள் இரண்டு பேரும் கழுத்தை வளைத்து அரசாங்கப் பெருந்தகையைப் பார்த்துக் கொண்டேயிருந்தோம். ஆனால் அவர் எதையும் திருப்பிச் சொல்லவில்லை. நான் பிறகு துஷாரவைக் கேட்கலாம். மூன்று வருடங்களுக்கு முன்னென்றால் ரஞ்சனைக் கேட்டிருப்பேன். இராணுவத்தினர் எனது கணவனை அடிக்கடி சந்திக்க விரும்பியதற்கு ஒரு காரணம் மொழிபெயர்ப்பு இல்லாமலே அவர்கள் அவனைச் சங்கடப்பட வைக்க முடிந்தது. // அரசாங்கப் பிரதிநிதி சொன்னது என்னவென்றால், இப்போது காணாமற் போனவர்கள் எல்லாரும் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது என்பதே. துஷார மெல்லிய குரலில் சொன்னான். எங்களுக்கு இது தெரிந்த விஷயம் தானே என்றான். அவன் அழுகையின் விளிம்பில் நின்றதும் எனக்கு அழுகையே வராததும் அவன் எத்தகைய கருணையுள்ளம் கொண்டவன் என்பதை உங்களுக்கு விளக்கும். அவன் எனக்கு இதைச் சொன்னபோது கிரிஷானைத் தன் மடியில் முகம் பார்த்தபடி வைத்திருந்தான். இந்தமுறை தேனீருக்குப் பதிலாக விஸ்கியைக் கொடுத்திருந்தேன். தனது மன உளைச்சலை எனது மகனுக்குக் காட்டி விடக்கூடாது என்று அவனைத் திருப்பி முழங்காலில் குதிரைச் சவாரி விளையாட்டுக்குப் போல இருத்தினான். “அம்மா, குதிரை!” கிரிஷான் தமிழில் சொன்னன். “Horse,” என்று நான் ஆங்கிலத்தில் சொன்னேன். பிறகு துஷாரவைப் பார்த்து, “திருப்பிச் சொல்லு,” என்றேன். “அந்தச் சொல்லைச் சிங்களத்தில் திருப்பிச் சொல்லு.” துஷாரவின் மடியில் கிரிஷான் ஒரு குட்டி துஷாரவைப் போலத் தெரிந்தான். ஓரு குட்டி ரஞ்சனைப் போல. நான் வேலை செய்யும் தலைமை ஆசிரியரின் ஒரு குட்டி வடிவம் போல. எது உண்மை என்று சொல்லும் திறமை என்னை விட்டுப் போய்விட்டது. நேரம் முன்னோக்கி எதிர்காலத்துக்குப் போக வேண்டுமா, பின்னோக்கிக் கடந்த காலத்துகுப் போக வேண்டுமா, அல்லது அப்படியே தற்காலத்தில் உறைந்து நிற்க வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. // உங்கள் கணவரைக் கொண்டு போய் மூன்று வருடங்கள் முடிந்ததும் அவர்கள் உங்களுக்கு நட்ட ஈடு செலுத்துவார்கள். உங்களுக்கு இந்தத் தொகை உரித்து என்று ஒரு சான்றிதழ் தருவார்கள். நான் ரஞ்சனுக்காகக் காத்திருந்தேன். அவன் மறைந்து போய் மூன்று வருடம் முடிவதற்கு ஒரு வாரம் இருக்கும் போது இன்னுமொரு மனிதனை என்னிடம் கொண்டு வந்தார்கள். கைவிலங்குகள் அவன் கைகளைப் பிணைத்திருந்தன. அவன் முகம் வீங்கியிருந்த விதத்தைப் பார்க்க எனக்கு என்ன செய்வது என்றோ அவனோடு எப்படிப் பேசுவது என்றோ தெரியவில்லை. நான் முந்தி ரஞ்சனோடு இருந்த காலத்தில் அவன் முகத்தை என் உள்ளங்கையால் அரவணைத்த மாதிரி இந்த மனிதனின் முகத்தையும் என் உள்ளங்கையில் ஏந்தியிருந்தாலும் அவன் முகத்தில் பரவியிருந்த காயங்களுக்கூடாக அவனது எலும்புகள் எங்கே இருக்கின்றன என்று கூடச் சொல்ல முடியாது. அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த துஷார தன் கண்களை என்பக்கம் எதிர்பார்ப்புடன் திருப்பினான். கட்டப்பட்டிருந்த மனிதன் என்னைப் பார்த்து என்னவோ முணுமுணுத்தான். நான் தான் என்று அவர்களுக்குச் சொல்லு கண்ணம்மா, அவர்களுக்குச் சொல்லு குஞ்சு. ஆனால் அது எனக்குத் தெரிந்த வாயல்ல. வரண்டு வீங்கிப் போயிருந்த அவன் நாக்கால் தெளிவாக உச்சரிக்க முடியவில்லை. அவன் கன்னங்கள் அழுகிய பழங்கள் போல வீங்கியிருந்தன. அவனுக்குத் தண்ணீரோ தேனீரோ விஸ்கியோ கொடுக்கலாமா என நினைத்தேன். அவனோடு தமிழில் பேச எனக்கு அனுமதி தருவார்களா என்றும் எனக்குத் தெரியவில்லை. அல்லது அந்த அரசாங்கப் பிரதிநிதியிடமிருந்து நான் படித்துக் கொண்ட ஒரேயொரு சிங்கள வசனத்தை அவனுக்குச் சொல்லலாமா: காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது. “இவன் உங்கட புருஷன் எண்டு சொல்றார்,” கேணல் எனக்கு விளக்கினார். “நீங்க ஒவொரு மாசமும் எங்ககிட்ட விசாரிக்க வருவீங்க. ஆனபடியாத்தான் இவன உங்ககிட்ட கொண்டு வந்தோம். நாங்க எல்லாம் சரியாத்தான் செய்வம் எண்டு இப்ப உங்களுக்கு தெரியுங் தானே. இவந்தான் உங்க புருஷன் எண்டா அவனைக் கூட்டிக் கொண்டு நீங்க எங்கயாவது துர இடத்துக்குக் போக வேணுங்.. பக்கத்து ஊரில கொஞ்சம் காணித்துண்டு இரிக்கு. உங்களுக்கு வேணுமெண்டா உங்க காணியக் குடுத்துட்டுப் பதிலா அதை எடுக்கலாம்.” போகவேணும். போகலாம். இந்தச் சொற்களின் அர்த்தங்கள் மொழிக்கு மொழி மாறலாம். காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்பட வேணும். அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நீங்கள் கட்டாயமாகக் கருத வேணும். இறந்து விட்டார்கள் என்று நீங்கள் கருதலாம். இதைத்தான் அரசாங்கப் பிரதிநிதி சொல்ல விளைந்தார். எங்களுக்கு விமோசனம் தருகிறார் என நினைத்தாரா? –வேணும், -லாம், இந்த சொல் விகுதிகள் எல்லாவிடமும் வியாபித்து இருக்கின்றன. அவற்றின் அர்த்தங்கள் என்னவாக இருந்தாலும் இந்த முன்பின் தெரியாத மனிதனோடு என் வீட்டை விட்டுப் போக எனக்கு விருப்பமில்லை. அவனுடைய புலி அடையாள அட்டையை எரித்து உருக்கி விட்டேன் என்று ரஞ்சனிடம் சொல்ல வேண்டும் போல இருந்தது. அந்தப் பிளாஸ்டிக் அட்டை இப்போ வேறேதோவாக உருமாறியிருந்தது. அந்த மனிதனை எத்தனையோ கேள்விகள் கேட்க வேண்டும்போல இருந்தது. எங்கே போயிருந்தாய்? உனக்கு என்ன செய்தார்கள்? நான் இல்லை என்று சொன்னால் உனக்கு என்ன நடக்கும்? உன்னைக் காப்பாற்ற என்றாவது நான் ஆம் என்று சொல்லி உன்னுடன் இந்த வீட்டை விட்டு வெளியேறினால் என்ன நடக்கும்? எனது கணவன் ஒரு நாளும் திரும்பி வர முடியாமற் போகும். எனக்குப் பின்னால் அந்தக் கதவு நிரந்தரமாக மூடப்பட்டுவிடும். ஆனால் இந்த முன்பின் தெரியாத மனிதனும் ஒரு மனிதன்தான். யாருக்கோ சொந்தமானவன்தான். இப்போ நான் இவனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சில வேளை யாருமே அவனை ஏற்றுக் கொள்ளாமற் போகலாம். நான் அவனை இருட்டிலும் இருண்ட இடத்துக்குத்தான் அனுப்பி வைத்ததாக இருக்கும். எவ்வளவு நேரம் அப்படி நின்றேன் என்று எனக்குத் தெரியாது. நான் யார், என்னிடம் என்ன உள்ளது என்றெல்லாம் நான் நினைத்துக் கொண்டிருந்தபோது கிரிஷானின் குரல் என் பின்னே கேட்டது. அவன் சின்னஞ்சிறு கை என் கையுடன் பின்னிக் கொண்டது. “அம்மா, இது அப்பாவா?” அவன் கேட்டான். காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது என்று அந்த அரசாங்கப் பிரதிநிதி சொன்னார். ஆனால் அவர் ஒன்றைச் சொல்ல மறந்து விட்டார்: அவர்கள் மேல் அன்புவைத்தவர்களால் தவிர. “அப்பாவா?” கிரிஷான்மீண்டும் கேட்டான். “இல்லை கண்ணா,” “இல்லை, இல்லை,” நான் கேணலைப் பார்த்துச் சொன்னேன். கேணல் தலையாட்டினார், முதலில் மெதுவாக, பிறகு உறுதியாக. நான் திரும்பவும் சொன்னேன், “இது அவரல்ல.” “நிச்சயமாகவா?” என்று கேட்டார் “நிச்சயமா,” என்று நான் சொன்னேன். அந்த நேரத்தில் என் மனத்தை எதுவும் மாற்றியிருக்காது என்றாலும், நான் செய்தது சரியா என்று எப்பொழுதுமே எனக்குத் தெரிய வராது என்பதும் எனக்குப் புரிந்திருந்தது. அந்த மனிதனின் முகத்தை அதன் பின் காண்பதற்கே எனக்குப் பயமாக இருந்திருக்கும். ஆனால் அந்தத் தருணத்தில் அவன் முகமில்லாத மனிதனாகவே நின்றான். அவர்கள் அவனை இழுத்துச் சென்றார்கள். அவர்கள் போன பிறகு நான் திரும்ப ஒரு முறை அந்தக் கலண்டர் இருந்த இடத்துக்குச் சென்றேன். இந்தமுறை நான் ரூபாய்களைப் பற்றி நினைக்கவில்லை. எனது நெஞ்சைக் கட்டி இறுக்கியிருந்த உணர்வு எப்போதாவது ஒருநாள் விலகுமா என்பதைப் பற்றி நினைத்தேன். எத்தனை நாட்களுக்குப் பிறகு அரசாங்கம் எனக்கு விதவைப் பட்டம் அளிக்கும் என்று அந்தக் கலண்டர் கூறியது. ஆனால் என்முன்னே நீண்டு இருக்கும் என் எஞ்சிய வருடங்களை யாராலும் அளக்க முடியாது. என் நீண்ட வாழ்நாள் முழுவதும் காத்திருப்பேன https://ezi.asokan.org/2025/10/21/காணாமற்போனவர்கள்/?fbclid=IwdGRleAN76QhjbGNrA3vVS2V4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkEDIyMjAzOTE3ODgyMDA4OTIAAR75GU23D98e6cXAcZ0arxZfrZl1L6KfpKvnqC1YCnoqvn7ZsUQkaMCeSZIHzg_aem_Se7s0UWJ08rE2ycxU-0u_A
  12. தவறாக விதிக்கப்பட்ட சாபம் மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் தான் யார், தனது பிறப்பு எப்படிப்பட்டது என்பது தெரியாத காரணத்தால் ஒருவன் தன் பிறப்பில் இறந்து அவமானங்களை சந்திக்கவேண்டிய நிலையை யோசித்துப் பாருங்கள்! சூரியபுத்திரனான கர்ணன், சிறு வயதில் இருந்தே இந்த ஒரு காரணத்திற்காக பல அவமானங்களை சந்தித்தான். குந்தி, தனக்கு ரிஷி துர்வாசர் கொடுத்த வரத்தை விளையாட்டுத்தனமாக பரிசோதித்து பார்க்க அதன் விளைவாக பிறந்தவன்தான் கர்ணன். பிறப்பிலேயே குந்தி அவனை பிரிந்துவிட தேரோட்டியின் மகனாக வளர்ந்தான் கர்ணன். தேரோட்டியின் மனைவியான ராதை அவனை பாசமுடன் வளர்த்ததனால் ராதேயன் என அழைக்கப்பட்டான். சத்ரியனாக பிறந்தாலும் தேரோட்டியின் வீட்டில் வளர்ந்த காரணத்தினால் சூத புத்திரன் எனவும் அழைக்கப்பட்டான். அனைத்து வகையான ஆயுத பிரயோகமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் குரு துரோணாச்சார்யரை அணுகி தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். ஆனால் , அவரோ தான் குரு வம்சத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கற்றுத் தருவேன் எனவும், கர்ணன் சூத புத்திரன் என்பதால் தன்னால் அவனை சீடனாக ஏற்றுக் கொள்ள இயலாது எனவும் மறுத்துவிட்டார் அவர். அதனால். கர்ணன் துரோணரின் குருவும், சத்ரியர்களை வெறுத்தவருமான ஸ்ரீ பரசுராமரை அணுகினான். அவரிடம் தான் ஒரு பிராமணன் என சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு தனக்கு அஸ்திர பிரயோகம் கற்றுத் தரும்படி வேண்டினான். அவனது பணிவான வேண்டுகோளைக் கண்டு அவரும் அவனை தனது சீடனாக ஏற்றுக் கொண்டு, அவனுக்கு பயிற்சி தரத் துவங்கினார். அவனது நடவடிக்கைகளால் கவரப்பட்டு மிகுந்த சக்தி வாய்ந்த ஆயுதங்கள் எனக் கருதப்பட்ட பிரம்மாஸ்திரம் மற்றும் பார்கவாஸ்திரங்களையும் அவனுக்குப் பயிற்றுவித்தார். ஒருநாள், காட்டில் சென்று கொண்டிருக்கையில் களைப்பாய் உணர்ந்த பரசுராமரை உறங்க விரும்பினார். உடனிருந்த கர்ணன், தனது தொடையில் தலை வைத்து உறங்குமாறு கூறினான். அதை ஏற்று, அவனது தொடையில் தலை சாய்த்து உறங்கினார். அவர் உறங்கத் துவங்கி சிறிது நேரத்தில் ஒரு வண்டு அவனது தொடையைக் கடிக்க, தான் அசைந்தால் குருவின் தூக்கம் களைந்து விடுமோ என வலியை பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனது தொடையை கடித்து ஊடுருவி மறுபக்கம் வழியே வெளிவந்தது வண்டு. அந்த காயத்தில் இருந்து வெளிவந்த அவனது ரத்தம் தரையில் ஓடத் துவங்கியது. அப்பொழுதும் அவன் அமைதியாய் அமர்ந்திருந்தான். தரையில் ஓடிய அவனது இரத்தம் பரசுராமரை நனைக்க அதனால் உறக்கம் களைந்து எழுந்தார். அங்கே கர்ணனின் தொடையில் இருந்து ரத்தம் பெருகி ஓடுவதை கண்டவர் என்ன நடந்தது என்பதை உணர்ந்துக் கொண்டார். கோபத்துடன் எழுந்த அவர் “ராதேயா! சத்ரியர்கள் மட்டுமே இத்தகைய பெரும் வலியை பொறுத்துக் கொள்ள இயலும். பிராமணர்களால் இத்தகைய வலியை எப்பொழுதும் பொறுத்துக்கொள்ள இயலாது. உண்மையை கூறு யார் நீ?” என வினவினார். ஆயுத பிரயோகம் கற்றுக் கொள்ள வேண்டியே தான் பிராமணன் என பொய் சொன்னதாகக் கூறி அவரிடம் மன்னிப்பு வேண்டி நின்றான் கர்ணன். “என்னிடம் பொய் கூறி நீ கற்றுக் கொண்ட வித்தைகள் அனைத்தும் உனக்கு மிக தேவையான சமயத்தில் மறந்து போகும்!” என சாபமிட்டார். அவன் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்ட வித்தைகள் அனைத்தும் அவனுக்கு தேவையான நேரத்தில் மறந்து போனது. துரியோதனனின் நம்பிக்கை துரியோதனன் என்னும் பெயரை கேக்கும் பொழுதும் நம் முன் பல எதிர்மறை எண்ணங்கள்தான் தோன்றும். துரியோதனன் என்னும் பெயரின் அர்த்தமே மோசமான வீரன் என்பதாகும். ஆனாலும், அவனிடம் சில நல்ல குணங்கள் இருக்கத்தான் செய்தன. தன் மரணம் வரை போரிட்ட உண்மையான சத்ரியன். மிக சிறந்த “கதை” வீரன் மற்றும் பலராமனுக்கு பிடித்த சீடனும் கூட. அதே போல், நட்பை மிகவும் மதித்து கர்ணனுக்கு வேண்டியதை செய்தவன். குரு வம்ச இளவரசர்களான கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் குருகுல காலம் முடியும் தருணத்தில் அவர்கள் கற்றுக் கொண்ட வித்தைகளை மக்கள் முன் வெளிப்படுத்தும் வண்ணம் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். வில்வித்தையில் சிறந்த அர்ஜுனன் தன் அஸ்திர திறமையால் மக்களை கட்டிப் போட்டிருந்தான். அந்த நேரத்தில், அவனைப் போன்றே இளமையாகவும், சிறந்த வலிமையுடனும் தோன்றிய ஒருவன் அங்கே வந்தான். அதுவரை அர்ஜுனன் செய்த அனைத்து வித்தைகளையும் இவனும் எளிதாக செய்தான். அர்ஜுனனை தன்னுடன் நேருக்கு நேர் மோதுமாறு அழைத்தான். அதே நேரத்தில் கிருபாச்சாரியார், அர்ஜுனனுடன் மோதும் முன் அவனது பிறப்பை பற்றி கூறுமாறு கேட்டார். இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த துரியோதனன் எழுந்து ” அவன் செய்த வித்தைகளை பார்த்து அவன் சத்திரியன் எனத் தெரியவில்லையா? அவன் யார் எங்கிருந்து வருகிறான் என்பது இங்கே முக்கியமில்லை. அவனது திறமை மட்டுமே முக்கியம். இருந்தும் அவன் இளவரசனாகவோ அல்லது அரசனாகவோ இருப்பது முக்கியம் என்றால் , இங்ஙனமே அவனை அங்க தேச அரசனாக நியமிக்கிறேன்” என்றான். பின், அவனது தந்தை மற்றும் பீஷ்மரின் அனுமதி பெற்று, அங்கேயே கர்ணனை அங்க தேச அரசனாக நியமிக்கும் சடங்குகளை துவங்கினான். அந்த சடங்குகள் முடிந்த தருணத்தில் அங்கே ஒரு வயதான தேரோட்டி பயந்து கொண்டே வந்தார். அவரைக் கண்டதும் கர்ணன் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று அவரது காலில் விழுந்து வணங்கினான். அதைக் கண்டா பீமன் இடி சிரிப்புடன் ” நீ தேரோட்டியின் மகனா? உன் தந்தையின் சாட்டைகளை எடுத்துக் கொள். அங்க தேசத்தை ஆள மட்டுமல்ல , அர்ஜுனனின் அம்புகளால் கொல்லப்படுவதற்குக் கூட உனக்கு தகுதியில்லை” என்றான். இதைக் கேட்ட துரியோதனன் “விருகோதரா! இத்தகைய வார்த்தைகளை நீ பேசுவது அழகல்ல. அவனது கவசத்தையும், குண்டலங்களையும் பார். இந்த உலகையே ஆளத் தகுதி வாய்ந்தவன் அவன். நதி மூலமும் ரிஷி மூலமும் பார்ப்பது தவறு” எனக் கூறினான். அதே சமயத்தில் விழா முடிய , துரியோதனன் தன் நண்பனை அழைத்துக் கொண்டு சென்றான். https://solvanam.com/2025/06/22/தவறாக-விதிக்கப்பட்ட-சாபம/
  13. முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை; போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்! - சி.சிவமோகன் முஸ்லீம்கள் மீது இடம்பெற்ற சம்பவம் ஒரு இனச்சுத்திகரிப்பு அல்ல. அதற்கு பின்னால் ஒரு வரலாறு உள்ளது. சட்டத்தரணி சுவஸ்திகா போன்றோர் புதுப்புது அர்த்தங்களை கூறி போராட்டத்தை கொச்சைப்படுத்தக்கூடாது என முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தமிழர்களின் ஒரு நீண்டகால அரசியல் ஆயுதபோராட்டம் முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டத்தை அடைந்தது. தமிழ் இளைஞர்களிடம் வலிந்து ஆயுதங்களை திணித்தது அரசுகளே. மக்கள் மீதான பாரிய இனப்படுகொலைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு பின்னாலே ஈழ விடுதலை போராட்டம் முளைகொண்டு எழுந்தது. தற்போது பலரும் புதுப்புது கதைகளை சொல்லி புலிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் அறிக்கைகளை விடுகின்றனர். சட்டத்தரணி சுவஸ்திகா என்பவர் முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு நடத்தப்பட்டதாக ஒரு அறிக்கை விட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் நான் வன்னியில் இருந்தேன். முஸ்லீம்களை வெளியேற்றிய அந்த நிகழ்வு ஏன் நடைபெற்றது என்பதற்கு பாரிய வரலாறு உள்ளது. ஒரு இனத்தில் இருப்பவனை அதே இனத்தை சேர்ந்த ஒருவன் காட்டிக்கொடுத்தால் அவன் துரோகி என்ற அடையாளங்களை சொல்லி இன்றையகாலத்திலும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஈரானில் அந்த நாட்டு இராணுவத்தை காட்டிக்கொடுத்தவர்கள் ஈரானை பொறுத்தவரை துரோகிகளே. எமது மண்ணிலும் தமிழர்கள் ஈழவிடுதலை போராட்டத்தை காட்டிக்கொடுத்தால் துரோகி என்ற ரீதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றது. ஆனால் அந்த நேரத்தில் இன்னுமொரு இனம் எமது போராட்டத்தை காட்டிக்கொடுக்கிறார்கள் என்று சொல்லி அவர்கள் மீது மரண தண்டனைகளைவிதிக்க கூடிய நிலமை தவறு என்ற கோணத்தில் அன்று முஸ்லீம்கள் வெளியே அனுப்பிவைக்கப்பட்டார்கள். அது இனச்சுத்திகரிப்பு அல்ல எமது ஈழவிடுதலை போராட்டத்தில் ஒரு அங்கமாக நடைபெற்றது. முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை உருவாக்கப்பட்டபோது அதற்கு எதிர்ப்புறமாக இருந்த நிலங்கள் அனைத்தும் முஸ்லீம் மக்களுடையது. அந்த நிலத்தை சுவீகரித்து வைத்தியசாலையை கட்டியிருக்கலாம் ஆனால் அப்படி செய்யவில்லை. தமிழர்களின் காணிகளை எடுத்தே அந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டது. தற்போது அங்கு முஸ்லீம்கள் வாழ்க்கின்றார்கள் எனில் விடுதலைப்புலிகளால் அவர்களது மண்ணோ சொத்துக்களோ சுவீகரிக்கப்படவில்லை என்றே அர்த்தம். இதனை ஒரு பிழையான கோணத்தில் வெளிப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர் அது தவறனாது. போராட்டத்தின் பின்னணியினை பார்க்காமல் குறித்த விடயத்தில் கருத்துச்சொல்ல சுவஸ்திகாவிற்கு எந்த அருகதையும் இல்லை. அப்படியானவர்கள் தங்களது கதைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். முஸ்லீம் யூத் போரம் என்ற பெயரில் கறுப்பு ஒக்ரோபர் என்ற விடயத்தை முன்வைத்திருந்தார்கள். அவர்கள் ஒரு கருத்தை கூறியிருந்தார்கள். நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுபவர்களை புறக்கணிப்போம் என்று நல்ல விடயம் அதையே தான் நாங்களும் கூறுகிறோம். தமிழ்மொழி பேசும் முஸ்லீம்கள், தமிழர்கள், மலையகத்தமிழர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் தமிழ் பேசுகின்றோம். அந்த ரீதியில் ஒற்றுமையாக செயற்ப்பட்டு எமது உரித்துக்களை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இன,மதவாதத்தை தூண்டி தமிழ் பேசுவர்களை மூன்றாக கூறுபோட்டு வைத்துள்ளனர். தற்போது இதனை சொல்பவர்கள் மத வாதத்தை தூண்டி அதிலிருந்து தமது அரசியலை வளர்க்க முயற்சிக்கின்றார்கள் என்றே பார்க்கலாம். மூன்றாக நாம் பிரிந்து நிற்கும் போது காலத்திற்கு காலம் சிங்கள தேசம் ஒவ்வொரு இனத்தையும் பிரித்து அடிக்கின்றது. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர் முஸ்லீம்கள் எப்படி தாக்கப்பட்டார்கள் என்று உங்களுக்கு தெரியும். மலையக தமிழர்கள் குடியுரிமை பறித்து கலைக்கப்பட்டார்கள் இறுதிப்போரில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். இவை எல்லாம் ஏன் நடக்கிறது என்று சிந்தித்தால் நாங்கள் அனைவரும் தமிழர்களாக ஒன்றுபடவேண்டிய தேவையை காட்டுகின்றது. எனவே இந்த இடத்தில் ஈழ விடுதலை போராட்டத்தை நடாத்தி 30 ஆயிரம் போராளிகளை பலிகொடுத்து இலட்சக்கணக்கான தமிழ்மக்களை பலிகொடுத்து நிற்கும் எமது இனத்தின் மீது இனச்சுத்திகரிப்பு என்ற வசனத்தை பாவிக்க யாரும் முற்படக்கூடாது அது மிகவும் தவறு என்பதை கூறிக்கொள்கிறேன் என்றார். https://akkinikkunchu.com/?p=347698
  14. சங்குப்பிட்டி பெண் கொலை வழக்கு; சந்தேகநபர தவில் வித்துவான் அல்ல! மறுப்பு அறிக்கை வெளியீடு பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல என இலங்கை இசை வேளாளர் இளைஞர் பேரவை தெரிவித்துள்ளது. குப்பிளான் பகுதியை சேர்ந்த தவில் வித்துவானை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் என ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இது தொடர்பில் இலங்கை இசை வேளாளர் இளைஞர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் அதனை மறுத்துள்ளது. குறித்த நபர் ஏற்கனவே பல திருட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு பல வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்தவர். முதலில் அவர் ஒரு தவில் வித்துவான் அல்ல என்பதை அறியத்தருகின்றோம். எனவே அவர் தொடர்பான செய்திகளை வெளியிடுகையில் தவில் வித்துவான் என்பதை குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என தாழ்மையாக வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றுள்ளது. https://akkinikkunchu.com/?p=347691
  15. இஸ்ரேலில் இரசாயனம் கலந்த நீர் தாக்குதல்: மூன்று இலங்கையர்கள் பாதிப்பு ! November 7, 2025 இஸ்ரேலில் வெளிநாட்டு தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர்ச்சியான இரசாயனம் கலந்த நீர் தாக்குதல்களில், மூன்று இலங்கை தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது சிறிய குழுக்கள் இரசாயன நீர்த்தாரை பிரயோகிக்கும் காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், இலங்கையர்கள் மீது இரசாயன நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டமை தொடர்பில் தூதரகம் அதிகாரப்பூர்வமாக விசாரித்துள்ளது. இந்த சம்பவங்கள் தனியாகப் பயணிக்கும் நபர்களை குறிவைத்ததாகத் காணப்படுகின்றது. தாக்கப்பட்ட மூன்று இலங்கையர்கள் பின்னர் தூதரகத்திற்கு தங்கள் அனுபவங்களைப் பற்றி தெரிவித்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கைகளைத் தொடர்ந்து, இலங்கையர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சகம் மற்றும் சனத்தொகை மற்றும் குடிவரவு திணைக்களத்திற்கு (PIBA) இலங்கைத் தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தாக்குதல் தொடர்பாக முதல் முறையாக முறைப்பாடளிக்கப்பட்டமைக்கு இணங்க 13 முதல் 19 வயதுக்குட்பட்ட ஐந்து இளைஞர்களை இஸ்ரேலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலும் இதேபோன்ற சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண சீசீரிவி கமராவின் காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களைப் பயன்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், குறிப்பாக வீட்டிற்கு பணம் அனுப்பும்போது குழுக்களாகப் பயணிப்பதோடு, பயணத்தின் போது மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் மொபைல் போன்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் அவசர தொலைபேசி இலக்கங்களான பொலிஸ் நிலையத்துக்கு 100 மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு 101 ஆகியவற்றைப் பயன்படுத்துவதோடு, அவசரநிலைகள் ஏற்பட்டால் உதவிக்கு தூதரகத்தின் 24 மணி நேர ஹாட்லைனை (+94718447305) தொடர்பு கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். https://www.ilakku.org/chemical-water-attack-in-israel-three-sri-lankans-affected/
  16. உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகும் முதல் நபராக எலான் மஸ்க்! 07 Nov, 2025 | 12:38 PM டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப் பெரிய பணக்காரருமான எலான் மஸ்க், உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலர் சொத்துடைய முதல் நபர் என்ற பெருமைக்குரியவராகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்திடம் தனக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் ஊதியம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் ஊதியத்தினை வழங்க, டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். மொத்தமாக உள்ள நிறுவனத்தின் பங்குதாரர்களில் 75 வீதமானோர் இந்த சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், எலான் மஸ்க் இந்நிறுவனத்தில் மேலும் 7 ஆண்டுகள் சேவையை தொடர்வது உறுதியாகியுள்ளது. தற்போது 1.5 ட்ரில்லியன் டொலராக உள்ள டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பினை, 8.5 ட்ரில்லியன் டொலராக உயர்த்தவேண்டும் என்ற நிபந்தனையோடு எலான் மஸ்க்கின் சம்பள உயர்வுக்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த சம்பளத்தை பணமாக அல்லாமல் அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எலான் மஸ்க் உலகின் முதல் ட்ரில்லியன் டொலர் பணக்காரராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலமாக எலான் மஸ்க்கின் அரசியல் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களால் டெஸ்லா கார்களின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும், அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகமாகவே காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையிலேயே எலான் மஸ்க் அதிகப்படியான ஊதியமாக, ஒரு ட்ரில்லியன் டொலரை கேட்டு நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கைக்கு நிறுவன பங்குதாரர்கள் இணங்கியுள்ள நிலையில், கேட்டபடி ஊதியத்தை எலான் மஸ்க் பெற்றுவிட்டால், அவர், உலகிலேயே ஒரு ட்ரில்லியன் சொத்துக்கு சொந்தக்காரராகும் முதல் நபராக கருதப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.https://www.virakesari.lk/article/229703
  17. பிள்ளையின் சிகிச்சைக்கு என பொய் கூறி நிதி சேகரித்தவர்களை எச்சரித்து விடுவிப்பு! adminNovember 7, 2025 தமது பிள்ளையின் மருத்துவ தேவைக்கு என பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்களை யாழ்ப்பாண காவற்துறையினர் கைது செய்து , கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்து, அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தமது பிள்ளைக்கு உடலில் பாதிப்பு ,சத்திர சிகிச்சை மேற்கொள்ள நிதி தேவை என கூறி முல்லைத்தீவு , வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவர் நேற்றைய தினம் யாழ்ப்பாண நகர் பகுதியில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பில் தகவல் அறிந்த யாழ்ப்பாண காவற்துறைனர் குறித்த மூவரையும் கைது செய்து, காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது , பிள்ளைக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவை தொடர்பிலையோ, மருத்துவ அறிக்கைகளோ இல்லாத நிலையில், அவர்கள் மோசடியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டமையால், அவர்களை கடுமையாக எச்சரித்த காவற்துறையினர் உடனடியாக அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/222412/
  18. நியூயோர்க் மேயர் தேர்தலில் ஜோரான் மம்தானி வெற்றி நவம்பர் 5, 2025 –பாரதி ஆனந்த் அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் தேர்தலில் அபார வெற்றி பெற்றதோடு, வெற்றி உரையில் ட்ரம்ப்பை தெறிக்கிவிட்டு கவனம் ஈர்த்துள்ளார் ஜோரான் மம்தானி (Zohran Mamdani). இவர் நியூயோர்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும், முதல் இந்திய அமெரிக்க முஸ்லிம் என்பதும், இந்த நூற்றாண்டில் நியூயோர்க்கின் இளம் மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யார் இந்த ஜோரான் மம்தானி? – நீங்கள் ‘சலாம் பாம்பே’, ‘மான்சூன் வெட்டிங்’ போன்ற திரைப்படங்கள், ‘ஸோ ஃபார் ஃப்ரம் இந்தியா’ போன்ற ஆவணப்படம் பற்றி அறிந்திருந்திருந்தால், அதனை இயக்கிய மீரா நாயரையும் தெரிந்திருக்கும். அந்த பிரபல இயக்குநர் மீரா நாயர் மற்றும் உகாண்டாவைச் சேர்ந்த மஹமூத் மம்தானியின் மகன் தான் இந்த ஜோரான் மம்தானி. 34 வயதான ஜோரான் மம்தானி ஒரு சட்ட வல்லுநர். இவர் தனது தேர்தல் உரைகளில், “அமெரிக்க அரசியலில் மாற்றம் தேவை. இது மக்களுக்கான, அவர்களின் தேவைகளுக்கான அரசியலாக இருக்க வேண்டுமே தவிர உயரடுக்கு மக்களுக்கானதாக இருக்கக் கூடாது” என்று கூறியிருந்தார். நியூயோர்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட மம்தானி, அபார வெற்றி பெற்றுள்ளார். 20 இலட்சம் வாக்குகளுக்கும் மேல் பெற்று அபார வெற்றிச் சரித்திரத்தை பதிவு செய்துள்ளார். ஜனவரி மாதம் மம்தானி நியூயோர்க் மேயராக பதவியேற்பார். கவனம் ஈர்த்த வெற்றி உரை: மம்தானி தனது வெற்றி உரையில் அப்படி என்னதான் பேசினார்? – “நான் உங்கள் ஆதரவால் மேயராகியுள்ளேன். இனி என் கடமை, ஊழல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது. இந்த ஊழல்தான் ட்ரம்ப் போன்ற பெரும் பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்ய வழிவகுத்தது. முதலில் உள்ளூர் அரசியலில் உள்ள ஊழலை ஒழிப்பேன். நான் இந்த நகரின் மேயராக உயரடுக்கு செல்வந்தர்களுக்காக மட்டும் செயல்படுபவராக இல்லாமல், இந்த நகரில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் செயல்படுவேன். அதிபர் ட்ரம்ப்புக்கு இன்று நான் சில வார்த்தைகளை சொல்ல விரும்புகிறேன். உங்களை அதிபராக்கிய மக்களுக்கு உங்களை வெளியேற்றவும் தெரியும். இன்றைய இரவு இந்த நியூயோர்க் நகரின் நிண்ட வரலாறாக இருந்த அரசியல் சகாப்தத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். குடியரசுக் கட்சி வேட்பாளர் ஆண்ட்ரூ கூமோ தோல்வியடைந்துள்ளார். இந்த நாள் நியூயோர்க் நகரில் அரசியலில் ஒரு திருப்புமுனை. இன்றைய தினம், சிலருக்கு மட்டுமே ஆதாயமாக இருக்கு ஓர் அரசியலுக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “நான் ஓர் இளைஞர். நான் ஒரு முஸ்லிம். நான் ஒரு ஜனநாயக சோஷலிஸ்ட். ஆனால், நான் இதில் எதற்காகவும் மன்னிப்பு கோரப்போவதில்லை.” என்றார். ரமா துவாஜி என்ற சிரிய நாட்டில் பிறந்த ஓவியர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார் மம்தானி. நேருவை மேற்கோள் காட்டி… – மேலும் தனது உரையில் மம்தானி சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேச்சையும் மேற்கோள் காட்டியிருந்தார். “ஜவஹர்லால் நேருவின் வார்த்தைகளை நான் இப்போது நினைவுகூர்கிறேன். பழையதில் இருந்து புதியததற்குள் புகும்போது ஒரு வரலாற்றுத் தருணம் உருவாகிறது. ஓர் யுகம் முடிந்து, ஒரு தேசத்தின் ஆன்மா ஒலிக்கும்போது ஒரு வரலாறு உருவாகிறது. நாம் இன்று பழையதிலிருந்து புதியதற்குள் அடியெடுத்து வைக்கிறோம்” என்றார். ட்ரம்ப் விடுத்திருந்த எச்சரிக்கை என்ன? – முன்னதாக நியூயோர்க் நகர மேயர் தேர்தலில் ”நான் சாமானியர்களுக்கான மேயராக இருப்பேன், இன வேற்றுமைக்கு எதிரான மாற்றங்களைக் கொண்டு வருவேன், பொருளாதார சமத்துவமின்மையைப் போக்குவேன், அரசு நடத்தும் மளிகைக் கடைகள் நியூயோர்க்கில் உருவாக்கப்படும், மக்களுக்காக இலவச பேருந்து சேவை வழங்கப்படும், காவல் துறை செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வரப்படும்” என்று பல்வேறு வாக்குறுதிகளை மம்தானி கொடுத்திருந்தார். மம்தானி முன்வைத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, பெரும் பணக்காரர்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கூடுதல் வரிகளை விதிப்பதாகும். கோடீஸ்வரர்களுக்கு 2% வரியை உயர்த்தி அதன்மூலம் கோர்ப்ரேட் வரியை 11.5%ஆக அதிகரித்து நகரின் வருமானத்தைப் பெருக்குவேன் என்று வாக்குறுத்தி அளித்தார். ஜோரானின் வாக்குறுதிகளுக்கு எல்லாம், பதிலடி கொடுத்த அதிபர் ட்ரம்ப், “இத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற நிதியை ஃபெடரல் அரசு தான் விடுவிக்க வேண்டும். வாக்குறுதிகளை அள்ளி வீசும் மம்தானி ஒரு கம்யூனிஸ்ட்” என்று நிதி ரீதியாக மிரட்டல் விடுத்திருந்தார். ஆனால், அதையும் உடைத்தெறிந்து மம்தானி அபார வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் நியூயோர்க் நகரத்தில் மம்தானி பெற்றுள்ள வெற்றி வரலாற்றில் ஒரு மைல்கல் மட்டுமல்ல, ட்ரம்ப்புக்கு பெரும் பின்னடைவும் கூட. ஏற்கெனவே அரசு முடக்கத்தால் அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்துள்ள சூழலில், இந்தத் தேர்தலில் அந்த எதிர்ப்பலை எதிரொலித்திருக்கிறது. ஜோரான் மம்தானி வெற்றி உரை நிகழ்த்த வந்தபோது பின்னணியில், ‘தூம் மச்சாலே’ என்ற பிரபல பாலிவுட் பாடல் இசைக்கப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பின்னணியில் எலான் மஸ்க்? – ஜோரான் மம்தானியின் வெற்றிக்குப் பின்னால் எலாம் மஸ்க் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் செலவீனங்கள் ரீதியாக மஸ்க் நிதியுதவி அளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மஸ்க் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். ட்ரம்ப் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பிலும் இருந்தவர். ஆனால் ட்ரம்ப் விதித்த வரிகளால், எலான் மஸ்க் அதிருப்தியடைந்து அவரது நிர்வாகத்திலிருந்து வெளியேறினார். ட்ரம்ப்பின் தீவிர விமர்சகராகவும் மாறினார். இந்தச் சூழலில் ட்ரம்ப்புக்கு எதிராக ஒரு சரித்திர வெற்றியை ஸ்க்ரிப்ட் செய்ய மஸ்க் பின்னணியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://chakkaram.com/2025/11/05/நியூயோர்க்-மேயர்-தேர்தலி/
  19. பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி! பெண் ஒருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கசிந்த செல்வம் அடைக்கலநாதனின் உரையாடலை தொடர்ந்து, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை பதவியில் அவர் தொடர்வதற்கு, கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்சியின் முக்கியஸ்தர்களில் பெரும்பாலானவர்கள், செல்வம் அடைக்கலநாதன் தாமாகவே முன் வந்து தலைமை பதவியிலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் , செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி தோன்றியுள்ளது. சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருகையில், ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பெண் ஒருவர் தொடர்பில் மற்றுமொருவரிடம் பேசும் குரல் பதிவுகள் கடந்த சில நாட்களாக பல சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்த குரல் பதிவு வெளியானதையடுத்து, ரெலோ கட்சிக்குள் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து கட்சி தலைமை பதவியிலிருந்து செல்வம் அடைக்கலநாதன் விலக வேண்டுமென பல தரப்பினரும் வலியுறுத்த ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் 9ஆம் திகதி ரெலோ கட்சியின் தலைமைக்குழு கூட்டம் கூடவுள்ளது. இதன்போது, கட்சித்தலைமை பதவியிலிருந்து செல்வம் அடைக்கலநாதன் விலக வேண்டுமென வலியுறுத்தவுள்ளதாக ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினர்கள் கூறியுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறு கின்றன. https://akkinikkunchu.com/?p=347607
  20. தமிழர் பகுதியில் சீரழியும் கலாச்சாரம்..! Vhg நவம்பர் 06, 2025 அண்மைய காலங்களில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறு கலாசார சீரழிவுகள் , குற்ற செயல்கள், ஈழத் தமிழினத்தை அழிவு பாதைக்கு செல்லும் அவலம் தொடர்பில் சமூக வலைத்தங்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர். போதைபொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் இளம் குடும்ப தலைவிகள் ஒருபுறமும் , மறுபுறம் போதையாலும் குற்றசெயல்களாகும் கெட்டு சீரழியும் இளம் சமுதாயம் ஒரு புறமுமாக ஈழத தமிழர் கலாச்சாரம் வழி மாறி போய்கொண்டிருக்கின்றது. போதைபொருள் விற்பனை - கள்ள உறவுகள் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த காலங்கள் மலையேறி கொண்டிருக்கின்றது. குடும்ப வன்முறைகள் கொலைகளில் வந்து முடிகின்றது. சுகபோக வாழ்க்கை மற்றும் பணத்தின் மீதான மோகம் வாழ்க்கையில் அமைதியையும் உண்மையையும் மாற்றி விடுகின்றது. அந்தவகையில் யாழில் தவில் வித்துவானை நம்பி கணவன் பிள்ளைகளை கைவிட்டு சென்ற குடும்ப பெண் , தகாத உறவால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முல்லைத்தீவில் 26 வயதான பெண் ஒருவர் நான்கு திருமணங்கள் செய்த சம்பவங்கள் என பல்வேறு கலாச்சார சீரழிவுகள் தமிழர் பகுதிகளில் அரங்கேறி வருகின்றது. அதுமட்டுமல்லாது வவுனியாவில் நேற்று முன் தினம் மனைவியின் தகாத உறவால் கணவன் மனைவியை கொன்று பிள்ளையுடன் பொலிஸாரிடம் சரணடைந்த சம்பவமும் நடந்துள்ளது. அதேவேளை புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் எம்மவர்கள் சிலரும் இந்த சம்பவங்களுக்கு துணைபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் நம் கலாசாரம் இப்படி போகிறதே என தம்மை சீர்திருத்தி வாழ பழகாவிட்டால் அடுத்த சமுதாயத்தை எங்கே கொண்டு செல்லும் என்கின்ற கேள்வியை சமூக மட்டத்தில் எழவைத்துள்ளது. அதிலும் இளவயது குடும்ப பெண்கள் கலாசார சீரழிவுகளை நோக்கி நகர்வது வேதனைக்குரிய விடயம் ஆகும். உலகில் ஒப்பற்ற தமிழனமாக போற்றப்பட்ட எம்மினம் இன்று தடம்மாறி தடுமாறி போய்கொண்டிருக்கின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம், வன்னி பிரதேசங்களில் திட்டமிட்டு பரப்படும் விச செடிகள் படர்வது போல கலாசார சீரழிவுகள் தலை விரித்து ஆடுவது வேதனையை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். https://www.battinatham.com/2025/11/blog-post_707.html
  21. மீண்டுமொரு சதி, குழி பறிப்பு முருகானந்தம் தவம் இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து அதன் முக்கியஸ்தரும் தமிழ் தேசியப்பற்றாளருமான சிவஞானம் சிறீதரனை வெளியேற்றி விட வேண்டும் என பல்வேறு சதி நடவடிக்கைகளில் இறங்கிய தமிழரசுக்கட்சியின் முக்கிய சில கறுப்பு ஆடுகள் அதில் தோல்வி கண்ட நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று விடக்கூடாதென மீண்டும் குழிபறிப்புக்களில் இறங்கி அதிலும் தோல்வி கண்டும் அடங்காது தற்போது அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாகவுள்ள சிறீதரனை அதிலிருந்தாவது அகற்றி ஆறுதல் வெற்றியையாவது பெற்று விட வேண்டுமென நினைத்து மீண்டுமொரு சதி, குழி பறிப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்த தமிழரசுக் கட்சியின் சில முக்கிய கறுப்பு ஆடுகளின் சதியின் ஒரு நடவடிக்கையாகவே அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினராகவுள்ள சிறீதரனை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற சிறப்புரிமை மீறல் பிரச்சினையை புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட சிங்கள எம்.பியான சாமர சம்பத் தசநாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை இந்த பிரேரணையை அவர் முன்வைத்த போது, “இது சிறப்புரிமை மீறல் பிரச்சினையில்லை. அதற்கான போதிய விபரங்கள் இதில் இல்லை” என கூறி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நிராகரித்த நிலையில் அந்த பிரேரணையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான. இரா.சாணக்கியன் போர்க்கொடி தூக்கியமை அந்தப் பிரேரணையின் பின்னணியை வெளிப்படுத்தியது. இரா.சாணக்கியனதும் சாமர சம்பத் தசநாயக்கவினதும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இதில் எவ்வித ஒழுங்குப் பிரச்சினையும் இல்லை. சாமர சம்பத் தசநாயக்க முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினையில், அவரது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை முறையாகக் குறிப்பிடப்படவில்லை. அவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு சிறப்புரிமை மீறல் பிரச்சினையை மீண்டும் சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்தார். இதனையடுத்து, மிகச் சிறந்ததொரு சட்டத்தரணியால் சட்ட வியாக்கியானங்களோடு இருவிரவாகத் தயாரிக்கப்பட்ட சிறீதரனுக்கு எதிரான சிறப்புரிமை மீறல் பிரச்சினையை மறுநாள் சாமர சம்பத் தசநாயக்க எம்.பி. முன்வைத்தார். அதனை சபாநாயகரும் ஏற்று பாராளுமன்ற சிறப்புரிமைக் ரிமைக்குழுவுக்கு ஆற்றுப் படுத்தினார். புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட எம்.பியான சாமர சம்பத் தசநாயக்க முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினையில், “அரசியலமைப்பு பேரவைக்குச் சிறுபான்மை எதிர்க்கட்சிகளால் சிறீதரன் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அரசாங்க தரப்புகளுடன் அவர் இணைந்து செயல்படுவது அவர் மீது வைக்கப்பட்டுள்ள கூட்டு நம்பிக்கையை குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் அவர் பிரதிநிதித்துவப்படுத்த நியமிக்கப்பட்டவர்களின் விருப்பத்தைக் காட்டிக் கொடுக்கிறது. தமக்கு எதிரான இலஞ்சக் குற்றச்சாட்டுகளை மறைத்து,விசாரணையின் கீழ் இருக்கும்போது அரசாங்கத்துடன் இணைந்து வாக்களிப்பதன் மூலம் சிறீதரன் தனது அரசமைப்புப் பொறுப்பை தனிப்பட்ட பாதுகாப்பாக மாற்றியுள்ளார். பொறுப்புக்கூறல் நிறுவனத்தைத் தனது சொந்த தவறான நடத்தைக்கான கேடயமாக மாற்றியுள்ளார். தன்னை பரிந்துரைத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துக்கு மாறாக வாக்களித்த சிறீதரன் அரசியலமைப்பை வேண்டுமென்றே மீறியுள்ளார், சிறுபான்மை எதிர்க்கட்சி பிரதி நிதித்துவத்தை காட்டிக் கொடுத்துள்ளார். எனவே, அரசியலமைப்பு பேரவையிலிருந்து சிறீதரன் நீக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் அரசியலமைப்பு பேரவைக்கு சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக இரகசிய வாக்கெடுப்பின் மூலம் இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான சிவஞானம் சிறீதரன் நியமிக்கப்பட்டார். ஆனால், அரசியலமைப்பு பேரவைக்கு சிறீதரன் எம்.பி. தெரிவாகிவிடக்கூடாது என்பதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் வாரிசான நாமல் ராஜபக்‌ஷவும் தமிழ்த் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு ‘கறுப்பு ஆடு’களும் சதி செய்த போதும், அது அப்போது வெற்றியளிக்கவில்லை. அரசியலமைப்பு பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர். இதன் தலைவராக சபாநாயகர் செயற்படுவார். பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இதில் நிரந்தர உறுப்புரிமையை பெற்றிருப்பர். ஜனாதிபதியின் பிரதிநிதியாக தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்.பியான ஆதம்பாவா நியமிக்கப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட எம்.பியான அஜித் பி.பெரேரா நியமிக்கப்பட்டார். பிரதமரும் தனது பிரதிநிதியாக ஒருவர் நியமிக்க முடியும். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சாராத கட்சி உறுப்பினர் ஒருவருக்கும் இடமளிக்க வேண்டும். இதற்கு மேலதிகமாக கட்சி சாராத மூன்று சிவில் பிரதிநிதிகளும் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறான நிலையில்தான் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய நிலையில் அரசியலமைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக இலங்கைத்தமிழரசுக்கட்சியை சேர்ந்த யாழ் மாவட்ட எம்.பியான சிவஞானம் சிறிதரனின் பெயரை அதேகட்சியை சேர்ந்த அம்பாறை மாவட்ட எம்.பியான கவீந்திரன் கோடீஸ்வரன் முன்மொழிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழிமொழிந்தார். இதனையடுத்து, சிறீதரன் நியமிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக செயற்பட்ட நாமல் ராஜபக்‌ஷ எம்.பி. சிறீதரனை தோற்கடிக்க வேண்டும். அதேவேளை, மலையகத்தமிழர்களுடன் தமிழர்களை மோதவிட வேண்டும் என்ற இனவாத சிந்தனையில் அரசியலமைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட எம்.பியுமான ஜீவன் தொண்டமானின் பெயரை முன்மொழிய ரணில் விக்ரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட எம்.பியான சாமர சம்பத் வழிமொழிந்தார். இவ்வாறான நிலையில், அரசியலமைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் எம்.பியான சிறீதரனை தெரிவு செய்வதா அல்லது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமானை தெரிவு செய்வதா என்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த இரகசிய வாக்கெடுப்பில் 25 எம்.பிக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, சிறீதரன் எம்.பி. 11 வாக்குகளையும் ஜீவன் தொண்டமான் எம்.பி. 10 வாக்குகளையும் பெற்ற நிலையில் சிறீதரன் எம்.பி. அரசியலமைப்பு பேரவையின் சிறியகட்சிகளின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரோஹித அபேகுணவர்தன், அனுராத ஜயரத்ன மற்றும் இரு எம்.பிக்கள் பங்கேற்கவில்லை. அதேவேளை, இந்த வாக்களிப்பில் தமிழ் தேசியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய இரு ‘கறுப்பு ஆடுகள்’ ஜீவன் தொண்டமானுக்கு வாக்களித்துள்ள தகவல் பின்னர் வெளியே கசிந்தது. அதாவது, சிறீதரன் எம்.பி. தெரிவாகிவிடக் கூடாது என்பதில் இந்த இரு தமிழ்த் தேசிய கறுப்பு ஆடுகளும் உறுதியாகவிருந்த நிலையில், இரு முஸ்லிம் எம்.பிக்களின் ஆதரவுடனேயே சிறீதரன் எம்.பி. வெற்றிபெற்றார் என்ற தகவல்களும் அப்போது வெளிவந்தன . அரசியலமைப்பு பேரவைக்கு ஆளும் தரப்பு மற்றும் பிரதான எதிர்க்கட்சி ஆகியவற்றைச் சாராத 24 எம்.பிக்களின் சார்பாகவே சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். “இந்த 24 எம்.பிக்களில் தமிழரசுக் கட்சியின் 8 எம்.பிக்கள் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வம் அடைக்கலநாதன் ஆகிய 2 எம்.பிக்கள் உட்பட 10 தமிழ் எம்.பிக்களைத் தவிர்ந்த மற்றைய 14 பேரும் தங்கள் சார்பில் அரசமைப்பு பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிதரன், அங்கு பெரும்பாலும் ஆளும் தரப்பின் நிலைப்பாட்டையே ஆதரித்துச் செயற்படுகின்றார். என்ற குற்றச்சாட்டை முன்வைப்பதாகச் சிலர் கூறுகின்றனர். அரசியலமைப்பு பேரவையைப் பொறுத்தவரை, 2 முக்கிய முடிவுகளில் சிறீதரனின் பங்களிப்பு, அரசுத் தரப்புக்கு இயைவாகச்செயற்பட்டார் என்ற ரீதியில், சர்ச்சைக்குரியதாகி உள்ளதாம். ஒன்று, இலஞ்ச, ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட விடயம். அரசுத் தரப்புடன் சேர்ந்துசிறிதரன் அளித்த ஒரு மேலதிக வாக்கின் மூலம் அவரது பெயர் அரசியலமைப்பு பேரவையால் பிரேரிக்கப்பட்டுள்ளமை . இந்தப் பதவிக்குப் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மாதவ தென்னக்கோன் ன் போட்டியிட்டிருந்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தமிழ் இளைஞர்களுக்கு எதிரான வழக்குகளில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஓரளவு நேர்மையோடு செயல்பட்டவர் மாதவ தென்னக்கோன். அத்தகைய மாதவ தென்னக்கோனை இப்பதவிக்குப் பரிந்துரைக்க முடியாமல்போன மைக்கு சிறிதரன் மீது அவரது கட்சியினரே குற்றம்சாட்டுகின்றனர். அடுத்தது இழப்பீடுகள் தொடர்பான அலுவலகத்துக்கு உறுப்பினர்களாக படைத்தரப்பு பின்னணி கொண்டவர்கள் நியமிக்கப்பட்டமைக்கு சிறீதரன் ஆதரவு வழங்கியுள்ளார். படைத்தரப்பு நடவடிக்கைகளால்பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் பிரேரிக்கும் ஐவர் குழுவில் மூவர் படைத் தரப்பினராக அமைகின்ற வாய்ப்பை அரசியலமைப்பு பேரவை உறுப்பினராக இருந்து கொண்டு சிறீதரனும் சேர்ந்து ஒத்துழைத்துவழி செய்தார் என்றும் அவரது கட்சியினரே குற்றஞ்சாட்டுகின்றனர். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மீண்டுமொரு-சதி-குழி-பறிப்பு/91-367449
  22. நெடுந்தீவு தவிசாளர் உள்ளிட்டோர் கைது adminNovember 6, 2025 நெடுந்தீவில் தொல்பொருள் சின்னத்துக்கு சேதம் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அமைந்துள்ள பகுதியில் வீதி அமைப்பு பணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் உள்ள தொல்பொருள் சின்னம் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவித்து தொல்லியல் திணைக்களத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குறித்த பணியில் ஈடுபட்ட இரண்டு பேர் நெடுந்தீவு காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டு இன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட நான்கு பேர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இன்று கைது செய்யப்பட்டனர். கைதான குறித்த நான்கு பேரும் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. நெடுந்தீவு வெடியரசன் கோட்டை தமிழ் மன்னனின் வரலாற்றுடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படும் குறித்த பகுதி சில வருடங்களுக்கு முன்பு பௌத்த வரலாற்றுடன் தொடர்புடைய பகுதி என கடற்படையினரால் பதாகை போடப்பட்டு சர்ச்சை எழுந்த நிலையில் அந்த பதாகை நீக்கப்பட்டிருந்தது. https://globaltamilnews.net/2025/222400/
  23. மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணிநீக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பித்துவந்த ஆசிரியர் ஒருவர், சில மாணவர்களுடன் இணைந்து பல பாடசாலை மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக நியமிக்கப்பட்டு ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த குறித்த ஆசிரியர், சில மாணவர்களுடன் இணைந்து பல மாணவிகளின் நிர்வாணப் புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி அவர்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலர் மேற்கொண்ட இச்செயல்களை முல்லைத்தீவு இளைஞர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தொலைபேசிகளைச் சோதனையிட்டபோது, பல மாணவிகளின் நிர்வாண வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் மாணவிகளுடன் தவறான முறையில் நடந்துகொண்ட வீடியோக்கள் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். ஆசிரியர், குறிப்பிட்ட மாணவர்களைப் பயன்படுத்தி மாணவிகளை காதல் வலையில் விழச் செய்து, அவர்கள் மூலம் மாணவிகளின் நிர்வாணப் புகைப்படங்களைப் பெற்றுள்ள சம்பவம் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியரின் தொலைபேசியில் இருந்த ஆவணங்கள் பொலிஸாரிடம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலரை பொலிஸார் விசாரணைக்கு அழைத்தனர். இந்த ஆசிரியர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அந்த விசாரணைகளின் முடிவில், அவர் நேற்று முன்தினம் (04) பணி நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmhn1vahy01f5o29ntyzfn2vd
  24. இலகுகாத்த கிளிகளாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மொஹமட் பாதுஷா விடுதலைப் புலிகளால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு 35 வருடங்களாகியுள்ள நிலையில், இன்னும் அந்த மக்கள் முழுமையாக தங்களது பூர்வீக இடங்களில் மீள் குடியேற்றப்படவில்லை. நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு பற்றி மட்டுமன்றி, 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற இடம்பெயர்வுகள் பற்றியெல்லாம் உலக அரங்கில் பேசப்படுகின்றது. ஆயினும்; கூட, 1990ஆம் ஆண்டு, ஒரு இனக் குழுமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது வாழ் நிலத்தில் இருந்து ஒரு சில மணித்தியாலங்களுக்குள் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படவும் இல்லை. அங்த மக்களுக்குத் தீர்வு கிடைக்கவும் இல்லை. முஸ்லிம் மக்கள் மொழியால் மட்டுமன்றி, வேறு பல விடயங்களாலும் தமிழ்ச் சமூகத்தோடு பின்னிப் பிணைந்ததாக வாழ்ந்தார்கள். இன்றும் இதன் சாயல்கள் உள்ளன. குறிப்பாக, முஸ்லிம்களின் அரசியல் எந்தளவுக்கு பெருந்தேசியக் கட்சிகளைச் சார்ந்திருந்ததோ அந்தளவுக்கு வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகளையும் சார்ந்திருந்தது. எம்.எச்.எம்.அஷ்ரப் வரை பல முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழரசுக் கட்சியோடு இணைந்து அரசியலில் பயணித்தனர். இப்போதுள்ள சிறிதரன் போன்ற ஒரு சில அரசியல்வாதிகளைப் போலல்லாமல், மூத்த தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம்கள் தனியொரு இனம் என்பதையும், இனப் பிரச்சினை தீர்வில் அவர்களுக்கும் ஒரு பங்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொண்டிருந்தனர். முஸ்லிம்களுக்குத் தனிநாடு தேவைப்படவும் இல்லை, அவர்கள் போராடவும் இல்லை. ஆனால், தமிழர்களின் தாகத்திற்காக முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களில் இணைந்து போராடிய வரலாற்றைத் தமிழ்த் தேசியம் என்று மறக்கக் கூடாது. புலிகளும் ஏனைய பல ஆயுதக் குழுக்களும் முஸ்லிம்களை நோக்கி ஆயுதங்களைத் திருப்பத் தொடங்கிய பிறகு, தமிழ்க் கட்சிகளைப் புலிகள் இயக்கம் கட்டுப்படுத்த தொடங்கிய பிறகு, முஸ்லிம்கள் இந்த போக்கில் இருந்து விலகினர். விடுதலைப் போராட்டத்தை முஸ்லிம்களை வெறுப்பதற்கும், முஸ்லிம் தலைவர்கள் தமிழர் அரசியலோடுடனான உறவைத் துண்டிப்பதற்கும் தமிழ் ஆயுதக் குழுக்கள் செய்த அட்டூழியங்களும் தமிழ் அரசியல்வாதிகளின் மௌனமும் முக்கிய காரணமானது. அப்படியான சம்பவங்களில் மிக முக்கியமானதுதான் வடக்கில் வாழையடி வாழையாக வாழ்ந்த ஒரு இலட்சம் முஸ்லிம்கள் உடுத்த துணியோடு அங்கிருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட கறைபடிந்த நிகழ்வாகும். மேற்படி ஆயுதக் குழுக்கள் கிழக்கில் பள்ளிவாசல் படுகொலைகள், குருக்கள்மடம் படுகொலை, வயல்வெளிகளிலான பலியெடுப்புக்களை நடத்தியது போல, வடகிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களைக் கடத்துதல், கப்பம் கோருதல், சொத்துக்களைப் பறித்தல் என, ஒரு விடுதலை இயக்கத்தின் கோட்பாடுகளுக்கு மாற்றமான பல அட்டூழியங்களை அரங்கேற்றியதை மறக்க முடியாது. இந்தப் பின்னணியில்தான், 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி, வடக்கின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் ஆயுத முனையில் வெளியேற்றினர். தங்களது சொத்துக்களையோ, நகைகளையோ அல்லது பணத்தையோ கொண்டு செல்ல விடாமல், சில மணிநேர அவகாசத்தில் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. இத்தனை காலமும் உழைத்த சொத்துக்களை, வீடுவாசல்களை மட்டுமன்றி பூர்வீக நிலத்தையே விட்டு, துரத்தியடிக்கப்படுவது எவ்வளவு கொடுமை? 90 ஆயிரத்திற்கும் ஒரு இலட்சத்திற்கும் இடைப்பட்ட முஸ்லிம்கள் உடுத்த உடுப்போடு தமது வாழிடங்களை விட்டு வெளியேறினர். அவர்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைக் கூட கொண்டு செல்வதற்கு இடமளிக்கப்படவில்லை. முஸ்லிம்கள் வெளியேறும் போது, புலிகள் அவர்களைச் சோதனையிட்டு, பணம், நகை மட்டுமன்றி மேலதிக ஆடைகள் போன்ற உடமைககளையும் பறித்தெடுத்ததாக சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் சொல்லியிருக்கின்றனர். ஒரு இனத்தின் நில உரிமைக்காக, விடுதலைக்காக போhடிய ஆயுத இயக்கம், முஸ்லிம்களும் தமிழ் பேசும் மக்கள் என்று கூறிவந்த சமூகத்தின் விடுதலை வீரர்கள்தான் இந்த இந்த செயலைச் செய்திருந்தனர். உலகில் வேறு எந்த மக்களும் இப்படி வெளியேற்றப்பட்டிருப்பார்களோ தெரியாது. உண்மையில் இது ஒரு இனச் சுத்திகரிப்பாகும். ஏனெனில் வடகிழக்கு இணைந்த அவர்களது தனியீழ கனவில் வடக்கு என்பது மையப் புள்ளியாகும். அங்கு இன்னுமொரு இனத்தை வைத்திருப்பது தமது கோட்பாட்டை வென்றெடுப்பதற்குத் தடையாக அமையும் என்பதைப் புலிகளின் தலைமை அறிந்திருக்கும். மறுபுறத்தில், முஸ்லிம்கள் காட்டிக் கொடுக்கின்றார்கள் என்றும் வடக்கில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் வேறு பல கதைகளும் சொல்லப்பட்டன. காட்டிக் கொடுப்பவர்களை வெளியேற்றுவதாயின் சம்பந்தப்பட்ட ஆட்களைத் தெரிவு செய்து வெளியேற்றியிருக்கலாம். அதுமட்டுமன்றி, காட்டிக் கொடுப்பவர்கள் என்றால் முஸ்லிம்கள் மட்டும்தானா? தமிழர்களில் இருந்த காட்டிக் கொடுப்பவர்கள் ஏன் வெளியேற்றப்படவில்லை? வடக்கில் இராணுவத்தினால் முஸ்லிம்களுக்கு ஆபத்து வருவதற்கு வாய்ப்பில்லை. ஒரு இனக் குழுமத்தைச் சேர்ந்த மக்களை விரட்டியடிக்குமளவுக்கு பலம் பெற்றிருந்த புலிகளுக்கு அச்சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியவில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய கதையா? வடக்கில் முஸ்லிம்களை விட அதிகமான தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியுமாக இருந்தால், அதே பாதுகாப்பை ஏன் முஸ்லிம்களுக்கு வழங்க முடியாமல் போனது? இதுவெல்லாம் வெறும் கற்பிதங்களே ஆகும். உண்மையில், இது விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய கறைபடிந்த சம்பவம் ஆகும். தார்மீகமாகப் பார்த்தால் புலிகள் இயக்கத்தின் தோல்வி ஆரம்பித்த புள்ளி இது என்றும் சொல்ல முடியும். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் தீவிர போக்கற்ற தமிழ் மக்கள் இந்த செயலை மனதால் வெறுக்கவே செய்தனர். அதனையும் மீறி பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய தமிழ் செயற்பாட்டாளர்கள் புலிகளை இது விடயத்தில் பகிரங்கமாக எதிர்த்தார்கள் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. முதலாவது விடயம் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது மிகப் பெரும் தவறும் அநியாயம் இழைப்புமாகும். அவர்கள் நல்ல நோக்கத்தில் வெளியேற்றியிருந்தால், முஸ்லிம்களின் நகைகள், வாகனங்கள், வீடுகள், சொத்துக்களைப் பாதுகாத்து பத்திரமாக மீள ஒப்படைத்திருக்க வேண்டும். அத்துடன், இதற்கான விளக்கத்தைத் தெளிவாகக் கூறி பகிரங்கமான மன்னிப்பொன்றைக் கேட்டிருக்க வேண்டும். மட்டுமன்றி, அந்த மக்களை மிக விரைவாக மீளக் குடியேற்றுவதற்கான நடவடிக்கையை தம்பக்கத்தில் இருந்து புலிகள் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், இது எதுவுமே இன்று வரை நடக்கவில்லை. முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பிறகு, உள்நாட்டில் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீளக் குடியேற்றப்பட்டு விட்டாலும் வடக்கு முஸ்லிம்களின் அகதி வாழ்வுக்கு இன்னும் விடிவு கிடைக்கவில்லை. யுத்தத்தின் காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், வெளிநாடுகளில் தஞ்சம் கோரி வதிவிட உரிமை எடுத்தவர்கள் இப்போது சிறப்பான சூழலில் வாழ்கின்றார்கள் என்பதற்காக அவர்களது பூர்வீக நிலத்தில் வாழ்வதற்கான மறுதலிக்க முடியாது. அதுபோலத்தான் வடக்கு முஸ்லிம்களும் பார்க்கப்பட வேண்டும். புலிகள் துரத்திய போது உழவு இயந்திரங்களிலும், வள்ளங்களிலும், கால்நடையாகவும் வந்த முஸ்லிம்கள் நாட்டின் பல பாகங்களில் குடியேறினர். புத்தளத்திலேயே பெருமளவானோர் தஞ்சம் புகுந்தனர். இன்று அவர்கள் சனத்தொகை பல்கிப் பெருகிவிட்டாலும் மீள் குடியேற்றப்படவில்லையே என்ற ஏக்கம் அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கின்றது. ஆனால், அரசாங்கங்களும் முஸ்லிம் தலைவர்களும் இதுவிடயத்தில் வினைத்திறனாக செயற்படவில்லை. எனவே, அரசாங்கமும் முஸ்லிம் எம்.பிக்களும் இது விடயத்தில் விரைந்து செயற்படுவதுடன், வடக்கு தமிழர்களை மீள் குடியேற்றுவதில் காட்டுகின்ற அக்கறையை வடபுல தமிழ் அரசியல்வாதிகள், அதிகாரிகள் புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் விடயத்திலும் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் புலிகளின் தவறை நியாயப்படுத்துபவர்களாகவே அவர்கள் கருதப்படுவார்கள். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலகுகாத்த-கிளிகளாக-புலிகளால்-வெளியேற்றப்பட்ட-முஸ்லிம்கள்/91-367347

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.