Everything posted by கிருபன்
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
தந்தையாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
-
கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா
கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி ஊழல் நிறைந்தது என கட்சியிலிருந்து வெளியேறிய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அரசியல் பயணத்தில் முக்கியமான ஒரு முடிவை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் பதவியில் இருந்தும் அக்கட்சியின் அடிப்படை உரிமை பதவியில் இருந்தும் கடந்த 17.08.2024 அன்று விடுவித்து கொண்டுள்ளேன். அக்கட்சியில் நீண்ட தூரம் என்னால் பயணிக்க முடியாது என்பதனை புரிந்து கொண்டேன். போரினால் பாதிக்கப்பட்டு தமது அன்றாட வாழ்க்கைக்கு மற்றையவர்களிடம் கையேந்தும் நிலமைக்கு தள்ளப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் பொருளாதாரம், மேம்பாடு அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது என்பவற்றை கருத்தில் கொண்டு ஆரம்பித்த பயணம் இன்று பல கோடிக்கணக்கான பணத்தை இழந்து நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அங்கே நிதி மோசடிகளும், ஊழல்களும் வீண்விரயங்களும் செய்யப்பட்டு நிதிகள் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது. ஊழல் நிறைந்த அக்கட்சியில் இருந்து என்னால்பயணத்தை தொடர முடியாது இருப்பதாலேயே இம் முடிவு எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம். நிதிமோசடிக்கு அந்த கட்சியின் தலைவர் கருணா அம்மான் அவர்களும் அவரினை சுற்றியிருக்கும் சமூகவிரோத கும்பல்களும் முழுப்பொறுப்பு கூறவேண்டும் . ஒரு கட்சியினை எப்படி வழிநடத்த வேண்டும் என தெரியாமல் மிலேச்சத்தனமான போக்கில் செயற்பட்டு கொண்டிருக்கும்போது ஜனநாயக பாதையில் மக்களின் தேவையை, மக்களின் அன்றாட வாழ்கைக்கு எப்படி உதவுவது என்பதனை புரிந்து கொள்ள தெரியாத நிலையில் ஒருவட்டத்திற்குள் என்னால் செயற்படமுடியாது. எனக்கு பலபக்கங்களிலும் இருந்து நிறைய அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இருப்பினும் எனது மக்கள் சேவை அன்பின் இல்லம் அறக்கட்டளை சேவை மூலமும், என்னால் ஆரம்பிக்கப்பட்ட அம்மான் படையணி மூலமும் தொடரும். இதுரை நான் எவரிடமும் எனது அன்பின் இல்லத்திற்கோ, அம்மான் படையணிக்கோ ஒரு சதம் கூட கேட்கவும் இல்லை, பெறவும் இல்லை. முழுநிதியும் என்னுடைய சொந்த உழைப்பில் எனது கையால் செலவிடப்பட்டது. இருப்பினும் எனது பயணத்தினை இடைநிறுத்தி கொள்வேன் என யாரும் கனவு காணவேண்டாம். இழப்புகள் என்பது எனக்கு புதிதல்ல, பல துரோகங்களை நான் சந்தித்திருக்கின்றேன். இன்றும் பாரிய துரோகம் முதுகில் குத்தும் செயலை சந்தித்திருக்கின்றேன். செய்தவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. என்து அன்பின் இல்லம் அறக்கட்டளை, அம்மான் படையணியுடன் இணைந்து இன்றில் இருந்து எனது சேவையை ஆரம்பிக்கும் . குறிப்பாக வடக்கு கிழக்கில் அது தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்பதை உறுதிபட கூறுகின்றேன். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எனது இரு அமைப்புக்களும் அதனை சார்ந்த மக்களும் எமது தமிழர் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக சமூதாயத்துடன் இணைந்து ஓட வேண்டும். மற்றையபடி விருப்பு வாக்கின்படி ஒரு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்தால் நன்றாக இருக்கும். அதேநேரம் எமது தமிழ் இருப்பை ஒற்றுமையாக காட்டவேண்டும் என்பதற்காக தமிழ் மக்களுடன் சமுதாயத்துடன் இணைந்து பயணிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=291785
-
‘தமிழர்களின் மூளை மட்டும்தான் தங்கக்கட்டி’
‘தமிழர்களின் மூளை மட்டும்தான் தங்கக்கட்டி’ September 16, 2024 — கருணாகரன் — தமிழ்த்தேசியம் என்பதை தமிழ் இனவாதமாகச் சுருக்கி, அதைக் கறுப்பு – வெள்ளையாக்கி, துருவ நிலைப்படுத்துவதற்கே தமிழ்த்தேசியத் தரப்பினால் தொடர்ந்தும் முயற்சிக்கப்படுகிறது. அதாவது கதாநாயகன் – வில்லன் என்ற மிகப் பழைய Formula வில். இதற்குச் சற்றுச் சூடேற்றுவதற்கு இடையில் துரோகி என்ற பாத்திரத்தையும் உருவாக்கி விடுகின்றனர். இந்தப் பழைய – உக்கிப்போன Formula வினுடைய புதிய வெளிப்பாடே (New version) தமிழ்ப்பொது வேட்பாளராகும். இதனை உறுதிப்படுத்தி மகிழ்ந்து கொண்டாடும் விதமாக தமிழ்ப்பொது வேட்பாளரை நியமித்த பொதுச்சபையைச் சேர்ந்தவர்களே தமது பத்தியில் எழுதியிருக்கிறார்கள். ஆக இவர்களுடைய நோக்கமெல்லாம் இலங்கை அரசியல் அரங்கை துருவமயப்படுத்தி வைத்திருப்பதே நோக்கமாகும். இப்படித் துருவமயப்படுத்தித் தமிழரசியலை வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு இனவாதம் தேவை. இனவாதமின்றி அதைச் செய்ய முடியாது. அந்த இனவாதத்தை வெளிப்படையாக – வெறித்தனமாக கையாள வேண்டுமென்றில்லை. பிரித்தாளும் தந்திரோபாயத்தோடு தமிழ்சமூகத்தைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கு முயற்சிப்பதே இனவாதம்தான். ஆனால் இலங்கையின் யதார்த்தம் இனி இனவாதத்துக்குரியதல்ல. இனவாதத்தை யாரெல்லாம் ஆதரிக்கிறார்களோ, யாரெல்லாம் அதைத் தூக்குகிறார்களோ அவர்களை காலமும் சூழலும் நிராகரித்துவிடும். முழு இனவாதத்தை தூக்கிய கோட்டபாய ராஜபக்ஸ விரட்டப்பட்டமை ஒரு உதாரணம். பலருக்கும் இதை நம்பக்கடினமாக இருக்கும். ஆனால் இதுதான் யதார்த்தம். இதுதான் உண்மை. அண்மைய இன்னொரு உதாரணம், இந்தத் தடவை யாரும் இனவாதத்தை வெளிப்படையாக பேசவில்லை. இது 1994 லேயே வந்துவிட்டது. சந்திரிகா குமாரதுங்க இனவாதம் தவறு எனப் பகிரங்கமாகச் சொல்லி, தமிழ்மக்களுக்குத் தீர்வு வழங்க வேண்டும் எனக் கூறியே தேர்தலில் நின்று வெற்றியீட்டினார். அறகலய இதை மேலும் வலுவூட்டியது. மாற்றம் இப்படித்தான் படிப்படியாக நடக்கும். சினிமாவில் காட்டப்படுவதைப்போல ஒரே நாளில் மாற்றத்தை நிகழ்த்துவதல்ல. ஏன் சினிமாவில் அதிரடிகளை நிகழ்த்திய எம்.ஜி.ஆர் கூட தன்னுடைய அரசியலில் அதிரடி மாற்றங்களை நிகழ்த்த முடியவில்லை. ஆனால் தமிழ்த் தரப்போ உடனடியாக மாற்றம் நிகழவேண்டுமென எண்ணுகிறது. இவ்வளவு காலமும் நம்பினோம், விட்டுக்கொடுத்தோம் என்கிறது. அரசியலென்பது தொடர்ச்சியான, இடையறாத முயற்சியின் விளைவு. இடையறாத போராட்டத்தின் மூலம் எட்டும் வெற்றி. அது மிக கடினமான பாதையும் பயணமும். அதில் ஏற்ற இறக்கம் நிகழும். இதைப் புரிந்து கொண்டு நிதானமாக செயற்பட வேண்டும். ஆகவே இன அடைப்படையில் தனித்தமிழ் எனத் தன்னைத் தனிமைப்படுத்தி நிற்கும் தமிழ்ப்பொது வேட்பாளரையும் அதனுடைய இனவாதத்தையும் வரலாறும் சூழலும் ஏற்கப்போவதில்லை. ஏனெனில் இதற்கு எந்தப் பெறுமானமும் உள்நாட்டு அரசியலிலும் பிராந்திய அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் கிடையாது. (வேண்டுமானால் ஆரோக்கியமான முறையில் இதை விவாதிப்பதற்கு யாரும் எங்கும் வரலாம்). இன்று இதொரு எழுச்சியைப்போலச் சிலருக்கோ பலருக்கோ தோன்றக் கூடும். ஆனால், வரலாறு இதை நகையாடும். நிராகரிக்கும். மட்டுமல்ல, மோசமான தண்டனையைத் தமிழ்ச்சமூகத்துக்குக் கொடுக்கும். ஏனெனில் அரசியற் தவறுகள் எளிதாகக் கடந்து போகக் கூடியனவல்ல. இலகுவாக முடிந்து விடுவனவுமல்ல. அவை மிகப் பெரிய தண்டனையையே அளிக்கும். ஆகவே இன்றைய தவறுக்கு நாளை நிச்சயமாகப் பெரிய தண்டனை கிடைக்கும். முள்ளிவாய்க்காலையும் விட. அது மேலும் தமிழ்ச்சமூகத்தைப் பலவீனப்படுத்தும். 1960 களில் சிங்களவரல்லாத தமிழ்பேசும் சமூகங்களில் ஓரளவுக்குப் பலமாகவும் பெரியதாகவும் இருந்த தமிழ்ச்சமூகம் இன்று மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதனுடைய வளர்ச்சி மிகக் கீழிறக்க நிலையிலேயே இருக்கிறது. இது எப்படி நிகழ்ந்தது? தமிழ்த்தலைமைகள், தமிழ் ஊடகங்கள், தமிழ்ப்புத்திஜீவிகள், தமிழ்ச் செயற்பாட்டு அமைப்புகள், தமிழ்ப்பல்கலைக்கழகங்களின் கூட்டுத்தவறினாற்தானே! இவை சரியாகச் செயற்பட்டிருந்தால் தமிழ்ச்சமூகம் இந்தளவுக்குப் பலவீனப் பட்டிருக்காது. அன்று தமிழரையும் விடப் பொருளாதாரத்திலும் அரசியலிலும் கல்வியிலும் பின்னிலையில் இருந்த சமூகங்கள் தங்களுடைய இடர்களையும் நெருக்கடிகளையும் எப்படிக் கடந்து செல்கின்றன? அதற்குள் எப்படிப் பலமாகி, வளர்ச்சியடைகின்றன? என்பதை ஆழமாகச் சிந்திக்க வேண்டும். என்பதால்தான் அவை தமிழ்ப்பொது வேட்பாளரை ஒத்த தெரிவுக்குச் செல்லவில்லை. அதற்காக அந்தச் சமூகங்களுக்கு நெருக்கடி இல்லை என்றோ, அரச ஒடுக்குமுறையிலிருந்து அவை விடுபட்டு விட்டன என்றோ இல்லை. அல்லது அந்தச் சமூகங்கள் சிந்திக்கத் தெரியாதனவாகவும் இல்லை. அல்லது அவற்றுக்கு அரசியல் ஞானமோ சமூக உணர்வோ இனமானமோ இல்லை என்றும் சொல்ல முடியாது. இலங்கைத்தீவின் யதார்த்தம், சர்வதேசத்தின் வரையறை, தங்களுடைய மக்களின் நிலை என்பவற்றை அவை அரசியல் ரீதியாகச் சரியாக உணர்ந்துள்ளன. மதிப்பிட்டுள்ளன. அதற்கமையவே தங்களுடைய தீர்மானங்களை எடுக்கின்றன – செயற்படுகின்றன. இதுவே அவற்றின் வெற்றியாகும். இதைப்பற்றித் தமிழ்ச் சூழலில் பேசினால், அதைப்பற்றிச் சிந்திப்பதற்குப் பதிலாக, அதொரு மாற்றுக் கருத்து, ஜனநாயக விழுமியம் என ஏற்றுக் கொள்வதில்லை. பதிலாகத் துரோகி, எட்டப்பன், காக்கை வன்னியின் என்றெல்லாம் அடையாளப்படுத்துவதே நிகழ்கிறது. இதைக்குறித்து பொதுவெளியிலோ பொது அரங்கிலோ யாரும் உரையாடவும் விவாதிக்கவும் முன்வருவதில்லை. பதிலாக தங்கள் ஏஜென்டுகளை ஏவி விட்டு வசைபாடவும் குற்றம் சாட்டிப் பழித்துரைக்கவுமே முற்படுகின்றனர். தமிழர்களின் மூளை மட்டும்தான் தங்கக்கட்டி என்ற அதீதமான சிந்தனை, கற்பனை இந்த உலகத்திலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்தப் போகிறது. கடந்த காலத்தில் சிங்களத் தலைமைகள் தம்மை ஏமாற்றி விட்டன, நம்பி ஏமாந்து விட்டோம் என்று இப்போது சொல்கிறார்கள. அப்போதும் இப்போதும் இவர்களுடைய அரசியற் தெரிவு தவறானது. இதை தொடர்ந்து செய்து தமிழ்மக்களை, தியாகம் பல செய்த மக்களை, இழப்புகள் பலதைச் சந்தித்த மக்களை மேலும் தோற்கடிக்கின்றனர் எனவே இவர்கள்தான் சிங்கள இனவாதத்தின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் ஏஜெண்டுகளாக உள்ளனர். இதை மேலும் தொடர அனுமதிப்பதா என்பதைத் தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும். அதாவது தம்மைத் தாமே தோற்கடிப்பதையும் தம்மை ஏமாற்றும் தலைமைகளை அனுமதிப்பதையும் நிறுத்த வேண்டும். இல்லையெனில் அழிவே. https://arangamnews.com/?p=11258
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
தடுமாறுகின்றதா தமிழரசு கட்சி? இலங்கைத் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. எனினும், இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, மாவை சேனாதிராஜா கிளிநொச்சியில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவை தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார். தேர்தல் விஞ்ஞாபனங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழரசு கட்சியின் ஆறு பேர் கொண்ட குழு நேற்று வவுனியாவில் கூடியது. மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம், சிரேஷ்ட பிரதித் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மட்டக்களப்பு முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, மாவை சேனாதிராஜா பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் கட்சியின் மத்திய குழு தீர்மானத்தை வலியுறுத்தி, 21ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் அவருக்கு ஆதரவளிக்குமாறு வாக்காளர்களை வலியுறுத்தினார். சமூகம் எதிர்நோக்கும் அழுத்தமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வாக்காளர்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இருந்த போதிலும், மாவை சேனாதிராஜா கிளிநொச்சி கூட்டத்தில் கலந்துகொண்டார். இதன்போது தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். “நாங்கள் இலங்கையில் பல ஆண்டுகளாக இந்த விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். எங்களது எண்ணங்களும் தீர்மானங்களும் அர்ப்பணிப்புகளும் விடுதலைக்காகவே அமைந்திருக்கின்றன. அரசியல் சூழலில் இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும் எமது இனத்தின் விடுதலையை நாங்கள் மறந்து விட மாட்டோம். எங்களது உயிரை அர்ப்பணிப்பதற்கு எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கின்றோம்.” என்றார். எவ்வாறாயினும் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு எதிராக நாங்கள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். மேலும், அவரிடத்தில் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது. எங்கள் கூட்டங்களுக்கு அவர் வருவதற்கு நாங்கள் தடை விதித்திருக்கின்றோம். அவருடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடும் எங்கள் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம்.” எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். https://oruvan.com/politics/2024/09/17/mavai-who-took-the-stage-in-support-of-the-tamil-general-candidate
-
பௌத்த வினாவல் - ஹென்றி ஸ்டீல் ஆல்காட்
பௌத்த வினாவல் - 4, ஹென்றி ஸ்டீல் ஆல்காட் சங்கம் 254. பௌத்த பிக்குகள் பிற மதங்களின் மதகுருக்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றனர்? பிற மதங்களின் குருக்கள் தங்களை மனிதருக்கும் கடவுளுக்கும் இடையேயான தூதர்கள் என்றும், நம்முடைய பாவங்களை மன்னிப்பவர்கள் என்றும் அறிவித்துகொள்கின்றனர். பெளத்த பிக்குகள் தங்களை தெய்வீக ஆற்றலுடையவர்கள் என அறிவித்துக்கொள்பவர்கள் இல்லை, அவ்வாறு எதையும் எதிர்பார்ப்பதுமில்லை. 255. இவ்வாறு பிற மத அமைப்புகள் செய்வதை பௌத்த பிக்குகள் செய்வதில்லை என்றால் ஏன் மக்கள் சமூகத்தில் இருந்து தனித்து இருக்கும் ‘சங்கம்’ உருவாக்கப்பட்டது? சங்கத்தின் நோக்கம் உயர்ந்த அறமனப்பான்மை, தன்னலமின்மை, அறிவாற்றல், மற்றும் ஆன்மீக மனம் உடையவர்கள், புலனின்பம் மற்றும் வேறு தன்னல விருப்பங்களை வலுப்பெறச்செய்யும் அன்றாட சமூக சூழலிலிருந்து விலகி இருப்பதற்காகவும், உயர் ஞானத்தை அடைய அவர்கள் தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பதற்காகவும் நிறுவப்பட்டது. மேலும் இவர்கள் துயரத்தை தேடித்தரும் இன்பநாட்ட பாதையிலிருந்து மனிதர்களை விலகச்செய்து, பௌத்தத்தின் கடினமான பாதையை பின்பற்றி அவர்கள் மகிழவும், இறுதி முக்தியை அடைவதற்கு அவர்களுக்கு உதவவும் ஆசிரியர்களாக தங்களை தகுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் அமைக்கப்பட்டது. 256. எட்டு நெறிகளுடன் (அஷ்டாங்க சிலம்) சேர்த்து பிக்குகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு நெறிகள் என்னென்ன? நடனம், பாடல், நாடகம் மற்றும் பிற கேளிக்கைகளில் இருந்து விலகியிருத்தல். பொன் மற்றும் வெள்ளியை பெறாதிருத்தல். தச. சீலம் அல்லது பிக்கு சீலம் அல்லது பத்து கட்டளைகள் என சொல்லப்படும் இவை முழுவதும் பிக்குகள் மற்றும் துறவிகளுக்கு கட்டாயமானவை. பொதுமக்களுக்கு இவை நிபந்தனைகள் அல்ல. 257. சங்கத்திற்கு வழிகாட்டவும் ஒழுங்குடன் நடத்தவும் அதற்கென்று தனியாக விதிகளும் நெறிகளும் உள்ளனவா? ஆம், 250 விதிகள் உள்ளன. அவையனைத்தும் பின்வரும் நான்கு தலைப்புகளில் அடங்கும் முதன்மை ஒழுக்க விதிகள் புலன்ஒருக்க விதிகள் உணவு, உடை போன்றவற்றை சரியான வகையில் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான விதிகள் களங்கமற்ற வாழ்வை நடத்துவதற்கான வழிகாட்டல்கள் 258. பிக்குகளுக்கு தடைசெய்யப்பட்டுள்ள குற்றம் மற்றும் பிற செயல்களை பட்டியலிடுங்கள்? உண்மையான பிக்குகள் இவற்றை தவிர்ப்பர்: உயிர்க் கொலை. திருட்டு. மயக்கும் மந்திர வித்தைகள். பாலின உடற்சேர்க்கை. பொய்மை. மது அருந்துதல், காலம் தவறி உண்ணுதல் நடனம், பாடல் பூமாலை, நறுமணம், வாசனை திரவியங்கள். பறந்து விரிந்த படுக்கைகள், இருக்கைகள். தங்கம், வெள்ளி, தானியங்கள், இறைச்சி, பெண்கள், உதவியாளர்கள், அடிமைகள், கால்நடைகள், யானைகள் ஆகியவற்றை பரிசாக பெறுதல் பழித்து கூறல். கடும் சொற்கள், ஒவ்வாத சொற்கள் கூறுதல் வெற்றுப் பேச்சுக்கள். கட்டுக்கதைகள், கற்பனைக் கதைகள் வாசித்தல் அல்லது கேட்டல். பொதுமக்களுக்கு செய்தி கொண்டுசெல்லுதல், கொண்டுவருதல். விற்றல், வாங்குதல். ஏமாற்றுதல், தந்திரம், வஞ்சம். ஒருவரை அடைத்துவைத்தல், நாசப்படுத்துதல், அச்சத்தை தூண்டுதல். குறி சொல்லல், ஜோதிடம் கணித்தல், கைரேகை பார்த்தல் மற்றும் இதர வித்தைகள். மேலே குறிப்பிட்டவைகள் நிர்வாணம் அடையும் முனைப்பை முடக்கும் காரணிகள். 259. பொதுமக்களுக்கு பிக்குக்கள் செய்யவேண்டிய கடமைகள் என்னென்ன? உயர் நெறியின் உதாரணமாக தங்களை நிறுவுதல் கற்பித்தல், வழிநடத்துதல் போதித்தல், நெறிகளை விளக்குதல் உடல்நலிவுற்றவருக்கு பரிட்டா நூலை ஓதுதல் சமூகத்தில் பெரும் இடர்கள் ஏற்படும் போது வேண்டுகோளுக்கு இணங்க பொதுவில் பரிட்டா நூலை ஓதுதல் இடைவிடாது மக்களை நற்செயல்களை செய்ய ஊக்குவித்தல் குற்றச்செயல்களை தடுத்து அவர்களை எல்லா உயிர்களின் நன்மையை விரும்பவும் கருணையுடனும் இளகிய மனதுடனும் இருக்க பழக்குதல். 260. சங்கத்தில் ஒருவரை சேர்ப்பதற்கான விதிகள் என்னென்ன? பத்து வயதிற்கு குறைந்தவரை அனுமதிப்பதில்லை பெற்றோரிடமிருந்து சம்மதம் பெற்றிருக்கவேண்டும் தொழுநோய், உடல்புண்கள், வலிப்பு, மது அருந்தும் பழக்கம் இருத்தல்கூடாது சுதந்திர மனிதனாக இருக்கவேண்டும் கடன்கள் ஏதும் இருக்கக்கூடாது குற்றவாளி, உடல் ஊனம் கொண்டவர்கள் அல்லது அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு அனுமதி கிடையாது 261. புதியவர்கள் எப்படி அழைக்கப்படுவர்? சாமனேரா. இது பாலி மொழிச் சொல். இதற்கு மாணவர் என்று பொருள். 262. சாமனேரா எந்த வயதில் ஸ்ரமனாவாக, அதாவது பிக்குவாக ஆவார்? இருபது வயது கடந்த பின்னர். 263. பிக்கு நிலைக்கு தயாரான பின்னர் என்ன நடக்கும்? தயாராக இருக்கும் நபரை பிக்குகளின் சந்திப்பு கூட்டத்தில் ஒரு பிக்கு முன்வைத்து அவரின் தகுதியையும் குறிப்பிடுவார். பிறகு தயாராக இருக்கும் அந்த நபர் “நான் சங்கத்திடமும், மதிப்பிற்குரிய ஆசிரியர்களிடமும் உபசம்வதா சடங்கை வேண்டுகிறேன்” என கூறுவார். உபசம்வதா என்பதற்கு துறவறம் என்று பொருள். தயாராக இருக்கும் நபரை சங்கத்திற்கு அறிமுகப்படுத்திய பிக்கு, அவரை அனுமதிக்க பரிந்துரை செய்வார். பின்னர் அந்த நபர் பிக்குவாக ஏற்கப்படுவார். 264. அடுத்தது? அவர் காவி உடையை அணிந்து திரிசரணத்தையும் பத்து கட்டளைகளையும் ஓதுவார். 265. பிக்குகள் கடைபிடிக்க வேண்டிய இரண்டு அடிப்படைகள் என்னென்ன? ஏழ்மை மற்றும் மனத்தூய்மை. சங்கத்தில் சேர்வதற்கு முன் ஒரு பிக்கு வெறும் எட்டு அடிப்படை பொருட்களை மட்டுமே கொண்டிருக்கவேண்டும். அவை, அவருடைய அங்கிகள் இடைக்கச்சை பிச்சை பாத்திரம் நீர் வடிகட்டி சவரக்கத்தி தையல் ஊசி விசிறி செருப்பு வினயா நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது போல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு பிக்கு மேலும் சில பொருட்கள் வைத்துக்கொள்ளலாம். 266. சங்கத்தின் முன்பாக பிக்குகள் தாங்கள் செய்த குற்றத்தை ஏற்றுக்கொள்ள சடங்கு உள்ளதா? ஆம். இருவாரங்களுக்கு ஒருமுறை பிரதிமோக்ஷா சடங்கு நடத்தப்படும். அதில் எல்லா பிக்குகளும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, குழுவிடம் அறிவித்து, அதற்கான பரிந்துரைக்கப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொள்வர். 267. பிக்குகள் பின்பற்ற வேண்டிய அன்றாட நடைமுறை என்ன? விடியலுக்கு முன்னே எழுந்து விஹாரத்தை (பௌத்த மடம்) சுத்தப்படுத்துதல், விஹாரங்களுக்கு அருகில் வளர்ந்திருக்கும் போதி மரத்தை சுற்றிலும் தூய்மைசெய்தல், அன்றைய தினம் அருந்துவதற்கான நீரை எடுத்துவந்து வடிகட்டி வைத்தல். தியானத்திற்கு திரும்புதல், பௌத்த சின்னங்கள் அல்லது போதி மரத்திற்கு மலர்கள் சாற்றுதல். பிறகு பிச்சை பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வீடுவீடாக சென்று நிர்பந்திக்காமல் வீட்டுடைமையாளர்கள் கொடுப்பதை பெறுதல். திரும்பிய பிறகு கால்களைக் கழுவி, உணவுண்டு, மீண்டும் தியானத்தைத் தொடர்தல். 268. மலர்களை காணிக்கையாக்கி வழிபடுவதற்கு எதாவது மதிப்பு இருக்கிறதா? வெறும் சம்பிரதாயமாக செய்யப்படின் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஆனால் ஒருவர் மலர்களை இனிமையாகவும், தூய்மையாகவும், மனப்பூர்வமான பக்தியுடனும் ஒரு புனிதமான மனிதருக்கு அர்ப்பணிக்கும்போது நிச்சயமாக அது சிறந்த வழிபாடாகவே இருக்கும். 269. பிக்கு அடுத்து என்ன செய்வார்? அவர் தன் கல்வியை பின்தொடர்வார். மாலை நேரத்தில் மீண்டும் புனிதத்தளத்தை சுத்தம்செய்து, விளக்கேற்றி., குருவின் அறிவுரையை கேட்பதுடன், தான் செய்த தவறுகளை குருவிடம் கூறி ஒப்புக்கொள்வார். 270. எதன் அடிப்படையில் அவரின் நான்கு தியானங்கள் (சதிபத்தானா) உள்ளன? உடல் (காய) உணர்வுகள் (வேதனா) மனம் (சித்தா) தம்மம் 271. நான்கு உயர்ந்த முயற்சிகளின் (சம்ம பதானா) இலக்கென்ன? ஒருவருள் இருக்கும் விலங்கின் வேட்கை தன்மையை கட்டுக்குள் வைத்து, நன்மையை வளர்த்தல். 272. உயர் உண்மையை அறிவதற்கான பாதையில் பகுத்தறிவா அல்லது உள்ளுணர்வா எது சிறந்தது என பிக்குவிற்கு சொல்லப்படுகிறது? உள்ளணர்வு - இந்த மனநிலையில் ’உண்மை’ உடனடியாக உள்வாங்கப்படுகிறது. 273. எப்போது அந்நிலை கைகூடும்? ஞானத்தின் பாதையில் செல்லும் போது அதன் நான்காம் நிலையில் இது உணரப்படும் 274. ஞானத்தின் நான்காம் நிலையை நாம் நம்ப வேண்டுமா? அது சமாதி நிலை என அழைக்கப்படுகிறது. அந்த நிலையில் மனம் இல்லாமல் ஆகி, எண்ணங்கள் முற்றிலும் நின்றுபோகும் அல்லவா? அது நீங்கள் சொல்வதற்கு நேர்மாறாக இருக்கும். இந்நிலையில் ஒருவரின் பிரக்ஞை மிகத் தீவிரமாக விழிப்படைந்திருக்கும், மேலும் இந்நிலையில் அறிவை உள்வாங்கும் திறனும் மிக விரிவானதாக இருக்கும். 275. இதை ஒரு உவமை வழியாக விளக்கமுடியுமா? சாதாரண விழிப்பு நிலையில் அறிவானது உயர்ந்த மலைகளுக்கு நடுவேயுள்ள பாதையில் நடக்கும் மனிதனின் காட்சித்தூரம் போல குறுகியது. சமாதி மற்றும் ஞானத்தின் உயர் விழிப்பு நிலையில் அறிவானது விண்ணில் இருந்துகொண்டு மொத்த நாட்டையும் பார்க்கும் பருந்தின் காட்சி போல விரிந்தது. 276. புத்தர் இந்த திறனை பயன்படுத்தியதைப் பற்றி நமது புத்தகங்கள் என்ன குறிப்பிடுகின்றன? அவை இவ்வாறு சொல்கின்றன: “தினமும் காலை அவர் தனது ஞான திருஷ்டியின் மூலம் உலகில் எங்கெல்லாம் மனிதர்கள் உண்மையை உள்வாங்க தயாராக உள்ளனர் என அறிந்துகொள்வார். அவர்கள் அவ்வுண்மையைச் சென்றடைவதற்கான பாதையை கண்டறிவார். மனிதர்கள் அவரைக் காண செல்லும்போது அவர் அவர்களின் மனதிற்குள் உற்றுநோக்கி அவர்களின் நோக்கங்களை அறிந்துகொண்டு அவர்களின் தேவைக்கேற்ப போதனை செய்வார்”. ஹென்றி ஸ்டீல் ஆல்காட் தமிழில் - விஷ்ணுகுமார், தாமரைக்கண்ணன் அவிநாசி https://www.kurugu.in/2024/09/buddhist-catechism-sangam.html
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
இதில் கவலைப்பட என்ன இருக்கின்றது! ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது அமெரிக்கா சிறப்பாக இருந்ததுதானே! உலகில் அவர் யுத்தம் எதனையும் ஆரம்பிக்கவில்லையே! இந்தமுறையும் அவருக்கு ஒரு வாக்கைச் செலுத்துங்கள்! நீங்கள் இருக்குமிடம் நீலம் என்றாலும் சிவப்பு வெல்லும்போது ஒரு மிதப்பு வரும்😃
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, டிரம்ப் கோல்ப் விளையாடி கொண்டு இருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். வாஷிங்டன் டி.சி. அமெரிக்கா அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். https://www.dailythanthi.com/News/World/usa-suspects-shoot-at-trumps-golf-course-1122421
-
தெற்கின் அரசியற்களமும் வடக்கின் அரசியல் முகமும்
தெற்கின் அரசியற்களமும் வடக்கின் அரசியல் முகமும் September 15, 2024 — கருணாகரன் — சிங்களத் தரப்பிலிருந்து இந்தத் தடவை இனவாதத்தை முன்னிறுத்தி ஜனாதிபதித் தேர்தற்பரப்புரைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதற்காக தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களெல்லாம் இனவாதத்தைத் துறந்து விட்டார்கள், கடந்து விட்டார்கள் என்றில்லை. அதற்கான சூழல் இல்லை என்பதே முக்கியமான காரணமாகும். அரசியல் வரலாறு என்பதே அப்படித்தான். எப்போதும் ஒரே மாதிரி இருப்பதுமில்லை. எல்லாம் கனிந்துதான் நிகழ்வது என்றுமில்லை. சூழ்நிலைகளே பல சந்தர்ப்பங்களிலும் மாற்றங்களை நிகழ்த்துவன. அப்படியானதொரு நிர்ப்பந்தச் சூழல் சிங்களத்தரப்புக்கு இப்பொழுது உருவாகியுள்ளது. ஏனென்றால் வழமையை விட இந்தத் தேர்தற் களமானது வித்தியாசமான – பலமுனைப் போட்டிக்குரியதாகி விட்டது. அதனால் தனியே சிங்கள வாக்குகளை மட்டும் நம்பி வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்ற யதார்த்தத்தை பிரதான போட்டியாளர்கள் உட்பட எல்லோருக்கும் உணர்த்தியுள்ளது. இதனால் வெற்றியைப் பெறுவதாக இருந்தால் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப் பெற்றே தீர வேண்டும். அப்படித் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப் பெறுவதாக இருந்தால் இனவாதத்தை – சிங்கள பௌத்தத் தீவிரவாதத்தை முன்னிறுத்த முடியாது. மட்டுமல்ல, முடிந்த அளவுக்குத் தமிழ் பேசும் மக்களிடம் இறங்கிச் செல்ல வேண்டும். தமிழ்பேசும் சமூகத்தினருடன் எப்படியாவது சில சமரசங்களைச் செய்ய வேண்டும் என்ற தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தனியே ஜனாதிபதித் தேர்தலுக்கு மட்டுமல்ல, பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதையொட்டியதாக நிகழப்போகும் ஆட்சிக்கும் பொருந்தும். இதனால்தான் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படும் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திசநாயக்க ஆகிய மூவரும் இனவாதத்தை அடக்கி வாசிக்கிறார்கள். வடக்குக் கிழக்கில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். சஜித் இன்னும் நான்கு படிகள் கீழிறங்கி வந்து தமிழ்பேசும் தரப்புகளோடு அரசியற் கூட்டையே உருவாக்கியிருக்கிறார். இது ஒரு மாற்றம் என்பதைப் புரிந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். கூடவே இது தமிழ்பேசும் தரப்பினருக்குச் சாத்தியமான ஒரு நிலை என்பதை விளங்குவதும் நல்லது. இனவாதத்தைப் பேசாமல் தென்பகுதி வாக்காளரிடம் (சிங்கள மக்களிடம்) வாக்கைச் சேகரிக்க வேண்டிய நிலை பிரதான போட்டியாளர்களுக்கு ஏற்படுவதென்பது சாதாரணமானதல்ல. சிங்கள மக்களுக்கும் இது புதிதாகவே இருக்கும். மட்டுமல்ல, பிரதான போட்டியாளர்கள் அனைவரும் தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என ஒரு முகமாகச் சொல்வதும் – ஏற்றுக் கொண்டிருப்பதும் நிகழ்ந்திருக்கிறது. இதுவும் சிங்கள மக்களிடம் ஒரு அடிப்படைப் புரிதலை, புதிய போக்கின் தேவையை உணர்த்தும். இதனால் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு அமையவுள்ள புதிய அரசாங்கமும் ஆட்சியும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை மேற்கொள்வதற்கு ஒரு அடித்தளம் ஏற்பட்டுள்ளது எனலாம். என்பதால் தமிழ்த்தரப்பு இதை, இந்தச் சூழலைப் பொறுப்புடனும் விவேகத்தோடும் கையாள வேண்டும். எந்த நிலையிலும் எதிர்நிலை எடுத்து இதைப் பாழாக்கக் கூடாது. ஆனால், கெடுகுடி சொற்கேளாது என்ற மாதிரி, தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்தி, நிலைமையைப் பாதமாக்குவதற்கே தீவிரத் தமிழ்த்தேசியத் தரப்புகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன. சிங்களத் தரப்பு இனவாதத்தைக் கைவிட்டாலும் அதை நாம் கைவிட மாட்டோம் என்ற கணக்கில் துயரத்தை – வில்லங்கத்தை விலை கொடுத்துத் தோளில் தூக்கிச் சுமப்பதற்குப் பாடாய்படுகிறது. இந்தத் தரப்பின் தவறான முடிவுக்கு முழுத் தமிழ்ச்சமூகமும் (சிலவேளை தமிழ்பேசும் மக்கள் அனைவரும்) விலை கொடுக்க வேண்டியிருக்கும். என்பதால்தான் தமிழ்ப்பொது வேட்பாளரை நாம் தீவிரமாக மறுக்க வேண்டியுள்ளது. அதாவது ஒட்டு மொத்தத் தமிழ்ச்சமூகத்தையும் பாதுகாப்பதற்காக தமிழ்ப்பொது வேட்பாளரை நிராகரிக்க வேண்டும். இதொரு வரலாற்றுக் கடமையாகும். ஆனால், இதை அவர்கள் (தீவிரத் தேசியவாதிகள்) மறுத்து, நியாயத்தை உரைப்போரையும் சரிகளை வலியுறுத்துவோரையும் துரோகிகளாகச் சித்திரிக்கவே முற்படுவர். அல்லது பிற சக்திகளின் கைக்கூலிகள், இனத்தின் சகுனிகள் என்றெல்லாம் வியாக்கியானப்படுத்துவர். அப்படி இவர்கள் சொல்லும்போது நாம் சரியாகவும் நியாயமாகவும் சிந்திக்கிறோம் என்று விளங்கிக் கொள்ளலாம். ஏனென்றால், உண்மையும் நியாயமும் சரியும் இவர்களுக்கு எதிரானதாகவும் துரோகத்தனமானதாகவுமே தோன்றும். பிழையாகச் சிந்திப்பவர்களால் சரிகளை ஒருபோதுமே விளங்கிக் கொள்ள முடியாது. மட்டுமல்ல, சரிகளை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அவர்களைப் பொறுத்தவரையில் “கடவுள் என்பது துரோகியாக இருத்தல்” தான். பழம் நழுவிப் பாலில் விழுந்தாலும் அந்தப் பழம் சரியில்லாதது, சந்தேகத்திடமானது என்றே சொல்வார்கள். ஆனால், இப்பொழுது தமிழ்ச்சமூகத்துக்கு வாய்ப்பான சூழல் (பழம்) கனிந்துள்ளது. இதை மேலும் விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் தற்போதைய சூழல் எப்படியுள்ளது? எவ்வாறு தமிழ் பேசும் சமூகங்களுக்கிசைவாகக் கனிந்து வந்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். வழமையாக இரண்டு பிரதான வேட்பாளருக்கிடையில்தான் போட்டி நடப்பதுண்டு. இதற்காக ஒவ்வொருவரும் உச்சமாக இனவாதத்தை முன்னிறுத்துவர். அல்லது ஒருவர் தீவிர நிலையில் இனவாதத்தைப் பேசிச் சிங்கள வாக்குகளை இலக்கு வைக்க, மற்றவர் சற்றுக் கீழிறங்கித் தமிழ்பேசும் மக்களின் வாக்குகளையும் சேர்த்துக் கொள்ள முயற்சிப்பார். கடந்த கால் நூற்றாண்டுகால அரசியல் ஏறக்குறைய இப்படித்தான் இருந்தது. இந்த அடிப்படையில்தான் வெற்றி – தோல்விகளும் அமைந்தன. 2010 இல் பெரும்பான்மைச் சிங்கள வாக்குகளால் மகிந்த ராஜபக்ஸ வெற்றியைப் பெற்றார். 2015 இல் தமிழ்பேசும் மக்களின் ஆதரவோடு மைத்திரிபால சிறிசேன வெற்றியடைந்தார். 2020 இல் தனிச் சிங்கள மக்களின் ஆதரவோடு கோட்டபாய ராஜபக்ஸ வெற்றியீட்டினார். இப்போதைய தேர்தற்களம் இதிலிருந்து மாற்றமடைந்து, இந்த நிலையை – இந்த யதார்த்ததை – மறுதலித்துள்ளது. இது நான்குமுனைப் பிரதான வேட்பாளர்களைக் கொண்டதாக உருவாகியுள்ளது. சிங்கள அரசியற் தரப்பில் ஏற்பட்டிருக்கும் முரண்களும் பிளவுமே இதற்குக் காரணமாகும். இது சிங்களத் தரப்பில் தவிர்க்க முடியாதவொரு பலவீனத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தப் பலவீனமான தருணத்தைப் பலமாக்குவதற்கு தமிழ் பேசும் சமூகங்கள் முன்வர வேண்டும். சிங்களத் தரப்பில் இந்த மாதிரிப் பலமுனைப் போட்டியாளர்கள் (அது எந்தத் தேர்தலாக இருந்தாலும்) களமிறங்கும்போதெல்லாம் தமிழ்பேசும் தரப்பினருடைய பலத்தைப் பெருக்கலாம். அதைப் பேரபலமாக்கலாம். சமநேரத்தில் இனவாதத்தை முன்னிறுத்தும் சிங்கள அரசியற் போக்கிலும் மாற்றம் நிகழும் என்பதை இது காட்டுகிறது. ஆகவே தமிழ்பேசும் சமூகத்தினருக்கு இதொரு வாய்ப்பான சூழலாகும். இதுபோன்ற வாய்ப்பான சூழல் எப்போதும் அமையாது. அப்படி அமையும்போது அதைக் கெட்டித்தனமாகப் பற்றிப் பிடித்துச் செய்யக் கூடிய காரியங்களைச் செய்து விட வேண்டும். அதுவே புத்திசாலித்தனமான அரசியற் செயற்பாடாகும். ஒடுக்கப்படும் மக்கள் எப்போதும் உச்ச விழிப்பிலிருக்க வேண்டியது அவசியமாகும். அவர்களுக்கு அபூர்வமாகவே இந்த மாதிரி வாய்ப்பான சந்தர்ப்பங்கள் அமையும். அதிலும் சிறுபான்மையினராகவும் ஒடுக்குப்படும் மக்களாகவும் இருக்கும் சமூகத்தினருக்கு வாய்ப்புகள் மிகமிகக் குறைவாகும். அல்லது மிகக் கடினமான – உறுதியான போராட்டங்களின் மூலம் தமக்கான வாய்ப்புச் சூழலை உருவாக்க வேண்டியிருக்கும். அப்படி உருவாக்கக் கூடிய நிலையும் தலைமைகளும் தமிழ் மக்களிடம் இன்றில்லை. ஓரளவுக்கு இதைப் புரிந்து கொள்ளும் தலைமைகளை மக்களும் புத்திஜீவிகளும் ஊடகங்களும் இனங்கண்டு வளர்த்துக் கொள்வதுமில்லை. எனவே அபூர்வமாகக் கிடைக்கின்ற வாய்ப்புகளை அலட்சியமாகவும் பொறுப்பற்றும் விடாமல் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அலட்சியாகக் கைவிடக் கூடாது. அல்லது தவறான விளக்கத்தின் அடிப்படையில் பிழையான முடிவுகளை எடுத்துப் பாழாக்கக் கூடாது. அப்படிப் பாழாக்கினால் அது மேலும் பெரும் பின்னடைவுகளையும் பேரிழப்பையுமே தரும். அதாவது மீண்டுமொரு முள்ளிவாய்க்காலை ஒத்த “கஞ்சிப் பாட்டு” ப்பாடும் வாழ்க்கையையே பரிசளிக்கும். தமிழ்க் கூட்டு மனநிலையானது எப்போதும் தாழ்வுணர்ச்சிக்குட்பட்டே உள்ளது. தன்னிலும் தன்னுடைய திறன்களிலும் நம்பிக்கையற்ற தன்மையோடிருக்கிறது. தன்னைத் தவிர்ந்த ஏனைய சமூகத்தினர் எப்போதும் தன்னை வீழ்த்த முற்படுகின்றனர், எதிர்க்கின்றனர் என்றே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால் பிற சமூகங்களை எப்போதும் எதிர்நிலையில் தள்ளி வைத்தே பார்க்க விளைகிறது. இதைப்பற்றி எழும் அச்ச உணர்வினால் உச்ச எதிர்ப்பு நிலையை எடுக்கிறது. அப்படி எடுக்கப்படும் உச்ச எதிர்ப்பு நிலை மேலும் இடைவெளிகளையும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று அனுபவ ரீதியாகத் தெரிந்து கொண்டாலும் அதிலிருந்து விடுபட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இதற்காக அது தன்னையும் சூழலையும் மாற்றங்களையும் திறந்த மனதோடு புரிந்து கொள்ள முற்பட்டாலே இந்தத் தாழ்வுணர்ச்சியிலிருந்து விட முடியும். அதற்கான பணிகளை – ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது, தமிழ்ச் சமூகத்திற்குள்ளிருக்கும் புத்திஜீவிகளும் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் சிந்திக்கக் கூடியோருமாகும். துரதிருஸ்டமான நிலை என்னவென்றால் தமிழ்ப் புத்திஜீவிகள் புதிய வழிகளையும் மாற்றத்துக்கான திசைகளையும் காட்டுவதற்குப் பதிலாக சூழலில் என்ன நிலைமை உள்ளதோ அதற்குப் பின்னால் போய் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். அல்லது அந்தச் சூழலோடு சேர்ந்து இழுபடுகிறார்கள். கட்சிகளின் தலைவர்கள் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் மாற்றத்துக்கான வழிகளைக் காண்பதற்கும் காட்டுவதற்கும் பதிலாக அவர்களும் சேர்ந்து கும்மியடிக்கிறார்கள். இதற்கொரு எளிய உதாரணம், தமிழ்ப்பொது வேட்பாளர் தொடர்பாக மாற்றுக் கருத்துள்ள ஒரு தலைவர் சித்தார்த்தனாகும். தமிழ்ப் பொதுவேட்பாளரைப் பற்றிய கதை தொடங்கியபோதிருந்து தனக்கு நெருக்கமான அனைவரிடத்திலும் “இதொரு வெங்காய வேலை” என்ற கணக்கில் பேசிக் கொண்டிருந்தவர் சித்தார்த்தன். ஆனால், இப்பொழுது தமிழ்ப்பொது வேட்பாளருக்காகத் தெருவிலிறங்கி நோட்டீஸ் கொடுக்கிறார். இது எவ்வளவு முரணும் பலவீனமான நிலையுமாகும்? சித்தார்த்தனைப்போலவே, பல்கலைக்கழக சமூகத்தினர், பேராசிரியர்கள், ஊடகங்களில் ஒரு தொகுதியானவை, மதபீடங்கள் எல்லாத் தரப்பும் கூடிக் கும்மியடிக்கின்றன. இந்தத் தவறுக்கு வடக்கே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். வடக்கிலுள்ள ஊடகங்கள், அரசியல் தலைமைகள், தமிழ்ச்சிவில் சமூகத்தினர் என்ற லேபிள்களை தம்மீது ஒட்டிக் கொண்டோர், தமிழ்த்தேசியப் பத்தியாளர்கள் என அனைவரும் இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும். வடக்கிலிருந்து எடுக்கப்பட்ட தவறான முடிவுக்கு கிழக்கையும் விலை கொடுக்க வைப்பதற்கு இவர்கள் முயற்சிக்கின்றனர். கிழக்கின் அரசியற் சூழல், அங்கே தமிழ்ச்சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், அது எதிர்கொள்கின்ற பல்வேறு சவால்கள், அங்குள்ள யதார்த்த நிலை என எதைப்பற்றிய புரிதலும் இல்லாமல் அங்கே மேலும் நெருக்கடியை உருவாக்கும் விதமாகவே வடக்குச் செயற்படுகிறது. கடந்த காலத்திலும் வடக்கு அப்படித்தான் செயற்பட்டிருக்கிறது. கிழக்கின் துயரங்களை வடக்குப் பகிர்ந்த வரலாற்றுத் தருணம் இரண்டு தடவை மட்டுமே நிகழ்ந்திருக்கிறது. ஒன்று 1978 இல் வீசிய சூறாவளி அர்த்தத்தின்போது. அடுத்தது. 2002 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்ததின்போது. மற்றக் காலம் முழுவதும் அது கிழக்கைப் பயன்படுத்தவே விளைந்திருக்கிறது. குறிப்பாக அரசியல் ரீதியாக. இப்படிச் சொல்வதை மறுதலித்து, இதொரு பிரதேசவாதம் என்ற அடிப்படையில் சிலர் குற்றச்சாட்டை முன்வைக்கலாம். அவர்கள் கிழக்கிற்கு வந்து நிலைமைகளைப் பார்க்க வேண்டும். கிழக்கில் சமூக வேலை செய்ய வேண்டும். அவர்களை வாகரையிலும் படுவான்கரையிலும் சந்திக்கத் தயார். முடிவாக, காலம் கனியாகிக் கைகளில் விளைந்திருக்கும் இந்த ஜனாதிபதித் தேர்தலையும் அடுத்து வருகின்ற பாராளுமன்றத் தேர்தலையும் புத்திபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்வோம். வெற்றியை எமக்காக்கிக் கொள்வோம். ஆம், வெற்றி என்பது தேர்தலில் போட்டியிடுவோருக்கு அல்ல. தேர்தலைக் கையாள்வோருக்கும் வாக்களிக்கும் மக்களுக்குமாக மாற்றப்பட வேண்டும். https://arangamnews.com/?p=11243
-
தமிழ் மக்கள் தங்களைத் திரட்டாமல் உலக சமூகத்தைத் திரட்ட முடியாது -நிலாந்தன்
தமிழ் மக்கள் தங்களைத் திரட்டாமல் உலக சமூகத்தைத் திரட்ட முடியாது -நிலாந்தன் பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை முதலில் முன்வைத்த மு.திருநாவுக்கரசு தமிழகத்தில் தங்கியிருப்பதனால், அவர் இந்தியாவின் ஆள் என்ற சந்தேகம். அதனால், பொது வேட்பாளரை இந்தியாவின் ப்ரொஜக்ட் என்று சந்தேகித்தார்கள். அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை தொடர்ந்து வளர்த்துச் சென்றபடியால் அதுவும் இந்தியாவின் வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம். இம்முறை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே சுரேஷ் பிரேமச்சந்திரன் அந்த விடயத்தை கையில் எடுத்தார். அதனால் அது இந்தியாவினுடைய வேலையாகத்தான் இருக்கலாம் என்ற சந்தேகத்தை முன்வைத்தவர்கள் மேலும் உஷாரானார்கள். அதன்பின் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஒரு காணொளி ஊடகத்தின் அனுசரணையோடு இயங்கிய ஒரு குடிமக்கள் சமூகம் பொது வேட்பாளர் தொடர்பாக கருத்தரங்குகளை நடத்தியது. அக்குடிமக்கள் சமூகத்தின் பிரதானியாக இருப்பவர் 13ஆவது திருத்தத்தை தொடர்ச்சியாக ஆதரித்து வருபவர். அவர் அதை வெளிப்படையாகத்தான் செய்கிறார். எனவே அந்தச்சிவில் சமூகம் இந்த விடயத்தைக் கையில் எடுத்த காரணத்தால் அது இந்தியாவினுடைய வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் மேலும் அதிகரித்தது. முடிவில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவதற்கு ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கிய பொழுது, அதில் உள்வாங்கப்பட்ட பெரும்பாலான கட்சிகள் இந்தியாவுக்குக் கடிதம் எழுதியவை. அதனால் சந்தேகம் மேலும் கூடியது. மேற்சொன்ன சந்தேகங்கள் அவ்வளவும் போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு. எதுக்கெடுத்தாலும் இந்தியாவின் சதி என்று குற்றஞ்சாட்டும் அக்கட்சியானது, பொது வேட்பாளர் என்ற விடயம் இந்தியாவின் அனுசரணையோடு மேடையேற்றப்படும் நாடகம் என்று கூறிவருகிறது. அதேசமயம் பொது வேட்பாளரைக் கண்டு பயப்படும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணியானது அதனை வேறுவிதமாக அணுகியது. சுமந்திரன் இந்தியத் தூதுவரை சந்தித்து பொது வேட்பாளர் தொடர்பாகவும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் அவர் தெரிவித்த கருத்துக்களை தனக்கு விசுவாசமான பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளியே கொண்டு வந்தார். அந்தச் செய்திகள் யாவும் இந்தியா பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை; தென்னிலங்கையில் உள்ள யாரோ ஒரு வேட்பாளரோடு பேச்சுவார்த்தைக்கு போகுமாறு கேட்கிறது என்பதைச் சாராம்சமாகக் கொண்டிருந்தன. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இலங்கைக்கு வந்த எந்த ஒரு இந்திய பிரதானியும் இதுவரை பொது வேட்பாளருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை என்பதே தொகுக்கப்பட்ட அவதானிப்பு ஆகும். தமிழரசு கட்சிக்குள் சிறீதரன் அணி பொது வேட்பாளரை வலிமையாக ஆதரிக்கிறது. சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான மோதலுக்குள் பொது வேட்பாளர் எப்பொழுதோ சிக்கிவிட்டார். இந்நிலையில் சிறீதரனை பலவீனப்படுத்துவதற்காகவும் பொது வேட்பாளரைப் பலவீனப்படுத்துவதற்காகவும் இந்தியா பொதுவேட்பாளர் என்ற தெரிவைக் குறித்து மகிழ்ச்சியாக இல்லை என்ற செய்தியை சுமந்திரனுக்கு நெருக்கமான பத்திரிகைகள் அடிக்கடி பிரசுரித்தன. அதன்மூலம் சிறீதரன் இந்தியாவுக்கு விருப்பமில்லாத ஒரு விடயத்தை செய்கிறார் என்பதை அவருக்கு குறிப்பாலுணர்த்த முற்பட்டன. ஆனால் இந்த இடத்தில் அப்பாவித்தனமான ஒரு கேள்வி எழும். பொது வேட்பாளர் இந்தியாவின் ப்ரொஜக்ட் என்றால் பிறகு ஏன் இந்திய ராஜதந்திரிகளும் பிரதானிகளும் அவ்வாறு கருத்து தெரிவிக்கின்றார்கள்? கடந்த வாரத்துக்கு முதல் வாரம் இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித்குமார் டோவால் கொழும்புக்கு வந்திருந்தார். அவர் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார். அச்சந்திப்பின்போது அவர் பொது வேட்பாளருக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன. சந்திப்பில் தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பு அதாவது பொது வேட்பாளரை முன்னிறுத்தும் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கும் வகிக்கும் கட்சிகளும் கலந்து கொண்டன. எனவே அக்கட்சிகளுக்கும் அவர் சொன்ன செய்தி அதுதான். இந்தியா பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்பதனை அவர்கள் மறைமுகமாக உணர்த்த முற்படுகின்றார்கள். இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் அவ்வாறு கூறிய பின்னரும் அது இந்தியாவின் ப்ரொஜக்ட்தான் என்று நம்புகிறவர்கள் இப்பொழுதும் நாட்டில் உண்டு. இந்த விடயத்தோடு தொடர்புடைய மற்றொரு சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் கிளிநொச்சிக்குச் சென்றார்கள். அங்கு அவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய சமத்துவ கட்சியின் தலைவர் சந்திரகுமாரை சந்தித்திருக்கிறார்கள். அதன்பின் ஒரு தொகுதி ஊடகவியலாளர்களையும் சந்தித்திருக்கிறார்கள். மேற்படி சந்திப்பானது சிறீதரனுக்கு சில செய்திகளை உணர்த்தும் நோக்கிலானது என்று அரசியல் வட்டாரங்களில் ஊகிக்கப்படுகின்றது. சிறீதரனுடைய பலமான கோட்டையான கிளிநொச்சியில் அவருடைய அரசியல் எதிரியான சந்திரக்குமாரை அவருடைய அலுவலகத்திலேயே இந்தியத் துணைத் தூதுவர் தேடிச்சென்று சந்தித்து அவருக்கு ஒரு அந்தஸ்தை கொடுத்தமை என்பதும், சந்திப்பின்போது சஜித் பிரேமதாசாவை ஆதரிக்குமாறு சூசகமாக வலியுறுத்தியமை என்பதும் சிறீதரனுக்கு சில விடயங்களை உணர்த்தும் நோக்கிலானவை. அதாவது பொது வேட்பாளரின் விடயத்தில் இந்தியா ஆதரவாக இல்லை. எனவே பொது வேட்பாளருக்கு எதிராக சஜித்தை ஆதரிக்கும் சந்திரகுமாரை தேடிச் சென்று சந்தித்ததன் மூலம் இந்தியா சிறீதரனுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்க முற்படுகின்றதா? எனினும் அச்செய்தி வெளிவந்த பின்னர்தான் சிறீதரன் கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அவருடைய கட்சி செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் மாவட்டத்தில் எவ்வாறு பொது வேட்பாளருக்கு ஆதரவான பணிகளை திட்டமிட்டுப் பரவலாக்கலாம் என்பது தொடர்பாக ஆராயப்பட்டது. அதாவது சிறீதரன் பொது வேட்பாளரின் விடயத்தில் தொடர்ந்து உறுதியாக நிற்கிறார் என்ற செய்தி அந்த கூட்டத்தில் உண்டு. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறீதரனுக்கு அடுத்தடுத்த நிலையில் உள்ள முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிகிதன் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அதுவும் பொது வேட்பாளர் தொடர்பில் சிறீதரன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்பதனை வெளிப்படுத்தியது. இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு இப்பொழுது ஓரளவுக்கு வெளிப்படையாகத் தெரியத்தொடங்கிவிட்டது. இந்திய வெளியுறவு அமைச்சர், இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் , கொழும்பில் உள்ள இந்தியத் தூதர், யாழ்ப்பாணத்தில் உள்ள உபதூதுவர் போன்றவர்கள் தென்னிலங்கையில் உள்ள யாராவது ஒரு வேட்பாளரை ஆதரிக்குமாறு கூறிவரும் ஒரு பின்னணியில், பொது வேட்பாளர் இந்தியாவின் ப்ரொஜக்ட் என்று கூறுவது எந்த வகை அறிவியல்? அவ்வாறு சந்தேகிப்பவர்கள் மேலும் ஒரு தர்க்கத்தை முன்வைக்கின்றார்கள். பொது வேட்பாளர் சஜித்தின் வாக்குகளைக் கவர்ந்தால் ரணில் வெல்வார். எனவே ரணிலை வெல்லவைக்க வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை பொது வேட்பாளர் நிறைவேற்றுகிறார் என்று ஒரு வியாக்கியானம். முதலாவதாக ரணில் ஆட்சிக்கு வருவதை இந்தியா விரும்புகின்றது என்பது சரியா? ரணில் விக்கிரமசிங்க புத்திசாலி; தந்திரசாலி; முதிர்ச்சியானவர். அவர் எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்துச் சமாளிக்கக் கூடியவர் என்பது ஒரு பொதுவான அவதானிப்பு ஆகும். அவ்வாறு எல்லா நாடுகளையும் சம தூரத்தில் வைத்துக் கையாளக்கூடிய ஒரு தலைவர் தெரிவு செய்யப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்பது ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கான தேர்தல் நடந்த பொழுது தெரிய வந்தது. அதில் இந்தியா ரணிலுக்கு எதிராக நின்ற டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்குமாறு தமிழ் கட்சித் தலைவர்களை கேட்டிருந்தது. கடந்த சில வார கால நகர்வுகளைத் தொகுத்துப் பார்த்தால் இந்தியா வெளிப்படையாகவே சஜித்தை ஆதரிக்குமாறு கேட்கிறது என்று தெரிகிறது. அப்படியென்றால் இந்தியா பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்று பொருள். இந்தியா பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்று தெரிந்த பின்னரும் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் அணியை இந்தியா இயக்குகிறது என்று கூறுவது எந்த வகை அறிவியல் ? ரணிலை வெல்ல வைப்பதற்கான இந்தியாவின் நிகழ்ச்சி நிரலைத்தான் பொது வேட்பாளர் முன்னெடுக்கிறார் என்ற சூழ்ச்சிக்கு கோட்பபாடு சரியென்றால் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீவிரமான நிலைப்பாடுகள் தென்னிலங்கையில் யுத்த வெற்றிவாதத்தை தக்க வைக்க உதவும். அதன்படி மஹிந்த ராஜபக்சவை பலமாக வைத்திருப்பதுதான் முன்னணியின் மறைமுக நிகழ்ச்சிநிரல் என்ற சூழ்ச்சிக் கோட்பாடும் சரியா?அல்லது பகிஷ்கரிப்பானது தென்னிலங்கை வேட்பாளர்கள் யாரோ ஒருவருக்கு சாதகமானது என்று வியாக்கியானப்படுத்தலாமா? ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலில் விழும் மொத்த வாக்குகளில் ஐம்பது விகிதத்துக்கு மேல் எடுப்பவர்தான் ஜனாதிபதியாக வரலாம். ஆனால் தமிழ் மக்கள் வாக்களிக்காவிட்டால் விழும் வாக்குகளின் எண்ணிக்கை குறையும். அதனால் விழுந்த வாக்குகளில் 50 விகிதம் என்பது ஒப்பீட்டளவில் குறையும். அது தென்னிலங்கை வேட்பாளர்களுக்குச் சாதகமானது. எனவே பாகிஸ்தரிப்பானது தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு சாதகமானது என்று ஒரு வியாக்கியானத்தைச் செய்தால் அதற்கு என்ன பதில்? அதைவிட மேலும் ஒரு ஆழமான கேள்வியை இங்கு கேட்கலாம். உலகில் உள்ள எந்த ஒரு பேரரசும் அயலில் உள்ள சிறிய இனத்தை அல்லது நாட்டை ஒற்றுமைப்படுத்த விரும்புமா? அல்லது “டிவைட் அண்ட் ரூல்” என்று ஆங்கிலத்தில் கூறப்படுவதுபோல பிரித்துக் கையாள முயற்சிக்குமா? இந்தப் பூமிப் பந்தில் சிதறிப் போய் இருக்கும் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தை ஒன்றாகத் திரட்ட வேண்டுமா இல்லையா? தமிழ் மக்கள் மத்தியில் கூட்டுணர்வை,தேசிய உணர்வை பலப்படுத்த வேண்டுமா இல்லையா?அவ்வாறு தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதுதானே தேசியவாத அரசியல்? ஒரு மக்கள் கூட்டத்தை அவ்வாறு ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளை ஒரு பக்கத்துப் பேரரசின் சதிவேலை என்று சந்தேகிக்கும் அறிவாளிகள் தங்களுடைய இனத்தை அவமதிக்கிறார்கள்; தாங்கள் படித்த பல்கலைக்கழகங்களை அவமதிக்கிறார்கள். முற்கற்பிதங்களும் சந்தேகங்களும் ஊகங்களும் அவர்களுடைய அறிவை மழுங்கடித்துவிட்டன. அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தமது சொந்த மக்களைச் சிதறடிக்கும் சக்திகளுக்குச் சேவகஞ் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லாத் தேசிய இனப்பிரச்சினைகளும் சாராம்சத்தில் அனைத்துலகப் பிரச்சினைகளே. எனவே அவற்றுக்கு உள்நாட்டுத் தீர்வு கிடையாது. அனைத்துலகத் தீர்வுதான் உண்டு. அப்படிப் பார்த்தால் அனைத்துலகத்தில் ஆதரவு அணியைத் திரட்டாமல் தீர்வு கிடைக்காது. அனைத்துலகத்தைத் திரட்டுவதென்றால் முதலில் ஈழத் தமிழர்கள் தங்களைத் தாங்களே திரட்டிக் கொள்ள வேண்டும். தமிழர்கள் தங்களைத் திரட்டாமல் அனைத்துலக சமூகத்தை எப்படித் திரட்டலாம் என்று யாராவது கூறுவீர்களா? https://www.nillanthan.com/6904/
-
தேர்தலின் பின்னர் அவசரநிலை பிரகடனமாகுமா?
தேர்தலின் பின்னர் அவசரநிலை பிரகடனமாகுமா? ஜனாதிபதி தேர்தல் திகதி மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் போது நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்வதற்காக பொலிஸாரையும் ஆயுதப்படையினரையும் இணைத்து ‘அவசரகால திட்டம்’ ஒன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானிகளுக்கு அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. . அவசர நிலை ஏற்படக்கூடும் என பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, எந்தவொரு அவசர நிலையிலும் பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தை நிலைநிறுத்துவது குறித்தும், அவசரநிலையில் இராணுவம் தனது அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர்கள் தலைமையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் அவசரகால பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, படைத் தளபதிகளின் தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் தலைமையில் தேர்தலுக்கு முன்னர் அவசர பாதுகாப்புச் சபைக் கூட்டமும் நடத்தப்பட உள்ளது. http://www.samakalam.com/தேர்தலின்-பின்னர்-அவசரநி/
-
தியாக தீபத்தின் நினைவேந்தல்
தியாக தீபத்தின் நினைவேந்தல் adminSeptember 15, 2024 ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணிக்கு நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், மாவீரர் றொஷானின் தாயார் இரத்தினசிங்கம் பொற்கொடியால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து,திலீபனின் உருவப்படத்திற்கு முன்னாள் போராளி ஒருவர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி சாவைத் தழுவிக் கொண்டார். https://globaltamilnews.net/2024/206764/
-
முதல் தெரிவு அரியம்; 2 வது தெரிவு அனுர; தமிழர் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்
X என்று புள்ளடி போட்டால் அவர்தான் முதலாவது தெரிவு! குறிப்பாக வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்புவாராயின் தான் விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியில் மட்டும் 1 என்ற இலக்கத்தை அல்லது X எனும் புள்ளடியை இடுவது பொருத்தமாகும். அல்லது முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் இருக்குமாயின் முதலாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியினுள் 1 எனவும் இரண்டாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 2 எனவும் மூன்றாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 3 எனவும் அடையாளமிடுவது பொருத்தமாகும். இதேவேளை எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கொன்று அடையாளமிடப்படாத அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு X என்ற அடையாளமிடப்பட்டுள்ள அல்லது ஒரு வேட்பாளருக்கு 1 எனவும் மற்றுமொரு வேட்பாளருக்கு X என்ற அடையாளமும் இடப்பட்டுள்ள அல்லது இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் மாத்திரம் அடையாளமிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டுக்கள் செல்லுபடியற்றதானதாகும் என்பதுடன் வாக்கு எண்ணும் போது அவை நிராகரிக்கப்படும்.
-
முதல் தெரிவு அரியம்; 2 வது தெரிவு அனுர; தமிழர் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்
முதல் தெரிவு அரியம்; 2 வது தெரிவு அனுர; தமிழர் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில், யார் அடுத்த ஜனாதிபதி என்ற கேள்வி தொடர்ந்தும் நிலவிவரும் அதேவேளை,மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் அவாவும் இலங்கை மக்களிடம் ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக கடந்த 75 வருடங்களாக ஒரே பாசறையில் உருவான தலைவர்களே இந்த நாட்டில் ஆட்சியதிகாரத்தை அலங்கரித்து வந்த அதேவேளை,நாடு ஒரு வங்குரோத்து அடைந்த நாடாக உருவெடுப்பதற்கும் இன-மத முறுகல் மற்றும் ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது அச்சம் கொண்டு பகைமையை வளர்த்ததற்கும் இந்த 75 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசுகளும் தலைவர்களுமே காரணம் என்பதை இன்றைய தலைமுறை சிந்திக்க ஆரம்பித்திருக்கும் ஒரு சூழலில் நாட்டில் ஒரு மாற்று சக்தியை உருவாக்குவதற்கு அணி திரள்வதையும் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. அந்த அடிப்படையில் தமிழர் தேசமும் போருக்கு பின்னரான கடந்த 15 வருடங்களுக்கு பின்னர் ஒரு தெளிவான எண்ணவோட்டத்தில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.அந்த அடிப்படையில் தமிழர் தேசமான வடக்கு-கிழக்கில் இம்முறை பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருக்கும் அதேவேளை,அவருடைய வெற்றிக்காக ஒரு சில காட்சிகளை தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் அதேபோல்,சிவில் சமூகத்தினர்,பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மாற்றத்துக்காக ஏங்கும் மக்கள் உழைக்க ஆரம்பித்திருக்கும் அதேவேளை,ஒட்டுமொத்த நாட்டிலும் ஒரு மாற்றம் ஏற்படவேண்டுமென்ற நோக்கத்தில் பயணிப்பதை அவதானிக்க முடிகிறது. அந்த அடிப்படையில் தமிழ் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கைகளின் போது குறிப்பாக தமிழர்கள் அதுவும் இளம் சமூகம் முன்னெடுக்கும் பிரசாரங்களின்போது முதல் தெரிவு பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கும் இரண்டாவது புள்ளடி அனுர குமாரவுக்கும் வழங்குவது தொடர்பில் சிலாகிக்கப்பட்டு வருவதாக அறியக்கிடைக்கிறது. இம்முறை தேர்தலில் தமிழர் தாயகத்திலும் ஒரு மாற்றம் ஏற்படவேண்டுமென்றும் ஒட்டுமொத்த நாட்டிலும் ஒரு மாற்றம் வரவேண்டுமென இந்த இளம் சமூகம் எதிர்பார்க்கிறது.அந்த அடிப்படையில் முதல் புள்ளடி அரியத்துக்கும் இரண்டாவது விருப்பு புள்ளடி அனுரவுக்கும் வழங்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை இந்த இளம் சமூகம் முன்வைத்துவருவதுடன்,பலரது விருப்பும் இதுவாகத்தான் இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஆகவே பழமைவாத அரசியல் பாசறையில் வளர்ந்தவர்களை விலக்கிவைத்துவிட்டு புதிய ஒரு தெரிவுக்கு இளம் சமூகம் முன் வந்திருப்பது நாட்டுக்கு எவ்வாறான எதிர்காலத்தை உருவாக்கப்போகிறது என்பதையும் அந்த தெரிவு வெற்றியளிக்குமா? என்பதையும் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் பார்க்கமுடியும். https://akkinikkunchu.com/?p=291372
-
வடக்கு புகையிரத பாதையை திறக்க வேண்டாம் என முறைப்பாடு
வடக்கு புகையிரத பாதையை திறக்க வேண்டாம் என முறைப்பாடு வடக்கு புகையிரத மார்க்கத்தின் அனுராதபுரம் முதல் மஹவ வரையிலான புகையிரத பாதையைத் திருத்தும் பணிகளை உரிய முறையில் பூர்த்தி செய்யாமல், அதை திறப்பதை இடைநிறுத்துமாறு கோரி லொகோமோட்டிவ் இயக்குநர்கள் பொறியியலாளர்கள் சங்கம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. குறித்த சேவை மார்க்கத்தின் சமிக்ஞை அமைப்பு சீரமைக்கப்படவில்லை எனவும், அதனால் புகையிரத மார்க்கம் பாதுகாப்பற்ற நிலையில், உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வாறான பின்னணியில் வடக்கு புகையிரத மார்க்கத்தின் அனுராதபுரம் முதல் மஹவ வரையிலான மார்க்கத்தின் திருத்தப் பணிகள் முழுமையுடையாத நிலையில், ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அதனைத் திறக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக லொகோமோட்டிவ் இயக்குநர்கள் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. R https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடகக-பகயரத-பதய-தறகக-வணடம-என-மறபபட/71-343713
-
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் 18ஆம் திகதியுடன் நிறைவு
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் 18ஆம் திகதியுடன் நிறைவு September 13, 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த தினத்தில் மாலை 4 மணிவரை வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் 13,417 வாக்களிப்பு நிலையங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://eelanadu.lk/ஜனாதிபதித்-தேர்தல்-தொடர-9/
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கக்கூடாது? - — வி.சிவலிங்கம் —
இலங்கை ஜனாதிபதி தேர்தல் நிலவரம்: கேள்வி- பதில் வடிவில்(பகுதி 4) September 11, 2024 (பகுதி 4 கேள்வி, பதில் வடிவில்) — வி. சிவலிங்கம் — கேள்வி: நாட்டில் மிக முக்கியமான தேர்தல் நடைபெறவுள்ள இச் சமயத்தில் தமிழ் அரசியல் உள்நோக்கி நகர்ந்து உள் முரண்பாடுகளை அதிகரிக்கிறதே! இதனை எவ்வாறு புரிந்து கொள்வது? பதில்: தமிழ் அரசியலில் உள்ள சில நாசகார சக்திகள் வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகளின் சூழ்ச்சிகளுக்கள் சிக்கியிருப்பதே இதற்குக் காரணம். இலங்கையின் உளவுத்துறை சிறுபான்மைத் தேசிய இனங்களுக்குள் ஊடுருவியுள்ளது. உதாரணமாக, கிழக்கு மாகாண அரசியல் இன்று படிப்படியாக தனிமைப்பட்டுச் செல்வதற்குப் பிரதான காரணம் உளவுத்துறையின் திட்டமிட்ட செயற்பாடுகளே. அதாவது கருணா அம்மானின் பிளவு எப்படி ஏற்பட்டது? பின்னர் பிள்ளையான்- கருணா பிளவு எப்படி தோற்றம் பெற்றது? கருணா அம்மான் எவ்வாறு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்? பிள்ளையான் எவ்வாறு வடமாகாண அரசியலுக்கு எதிரியாக நியமிக்கப்பட்டார்? கிழக்கு மாகாணத்தில் யாழ். விரோத அரசியலை முன்னெடுப்பவர்கள் யார்? இவர்களின் தேர்தல் செலவுகளை யார் வழங்குகிறார்கள்? தற்போது வடமாகாண அரசியலில் சில சந்தர்ப்பவாத அரசியல் சக்திகள் தமிழ்த் தேசியம் என்ற என்ற பெயரில் ஊடுருவி தமிழரசுக் கட்சிக்குள்ளும் பிளவுகளைத் தோற்றுவித்துள்ளனர். இதனால் தமிழரசுக் கட்சியும் கூறுகளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று ஜனநாயக தமிழர் கூட்டமைப்பு என தமிழர் கூட்டமைப்பிற்கு எதிராக ஓர் அமைப்புத் தோற்றம் பெறுவதும், அது தற்போது தாமே பலமான கூட்டணி எனக் கூறி தமிழரசுக் கட்சியை தம்மோடு இணையும்படி கோருவதும், பொது வேட்பாளர் என்ற பெயரில் சில முடிவுகளை எடுத்து தமிழரசுக் கட்சிக்குள் திணித்து அதனைப் பிளவுபடுத்தி வருவதும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. தமிழரசுக் கட்சி பலவீனப்படுமானால் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைப் போராட்டம் மற்றும் ஐ நா மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் வலுவிழந்து போகும். இது யாருக்கு உபயோகமானது? தமிழ் அரசியலில் தமிழரசுக் கட்சியைச் சிதைத்தால் வடக்கு அரசியலும் பணப்பெட்டி பின்னால் சென்றுவிடும். இதுவே சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் நிகழ்ச்சி நிரல். உதாரணமாக, தமிழர் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவதாக தமிழரசுக் கட்சிக்கு வெளியில் தீர்மானித்த வேளையில் அதனை ஆதரித்த தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்களான மாவை, சிறீதரன் என்போர் கட்சி முடிவுகளுக்கு எதிராக இன்னமும் செயற்படுகின்றனர். பொது வேட்பாளரை ஆதரிக்கும் மாவை எந்த அடிப்படையில் ரணிலைச் சந்தித்தார்? எவ்வாறான செய்தியை தமிழ் மக்களுக்கு வழங்குகிறார்? பொது வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய வேண்டிய சிறீதரன் இலண்டனில் தேர்த் திருவிழாவுக்கு சென்றுள்ளார். இத் தேர்தலுக்கு அவர் வழங்கும் முக்கியத்துவம் என்ன? ஒரு புறத்தில் 13வது திருத்தத்தினை அமுலாக்கும்படி கோரும் இக் கட்சிகள் மறு புறத்தில் 13வது திருத்த அமுலாக்கத்தை எதிர்க்கும் அரியநேந்திரனை ஆதரிப்பதன் பின்னணி என்ன? சிங்கள பௌத்த பெருந்தேசியத்தின் நிகழ்ச்சி நிரலில் இவர்கள் இல்லையா? இச் சம்பவங்கள் யாவற்றையும் சற்று ஆழமாக ஆராய்ந்தால் இவர்கள் யாரின் நலன்களுக்காக தொழிற்படுகிறார்கள் என்பது புரியும். கேள்வி: தமிழ் அரசியல் எவ்வாறான மாற்று வழியில் தனது அரசியல், பொருளாதார பாதையை திருப்ப வேண்டும்? பதில்: தமிழ் அரசியல் இன்றைய தமிழ் அரசியலின் எதிர்காலப் போக்குத் தொடர்பான தெளிவான விவாதத்திற்குள் செல்லுதல் அவசியம். ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்கள் தற்போது தேர்ந்தெடுத்துள்ள பாதையின் நிலமைகளை ஆராய்தல் அவசியம். ஏனெனில் தமிழ் மக்களின் குடிப் பரம்பல், பொருளாதார பலவீனங்கள், சமூக உள் கட்டுமானங்களின் பலவீனங்கள், சிங்கள, பௌத்த பெருந்தேசியத்தின் உள் நோக்கங்கங்கள், தமிழ் அரசியலில் இணக்க அரசியல் என்ற போர்வையில் நடைபெறும் பணப்பெட்டி அரசியல், அதற்கு ஆதரவாகவும் மக்கள் வாக்களிக்கும் நிலை போன்ற பல அம்சங்கள் குறித்து ஆழமான பார்வை தேவைப்படுகிறது. கேள்வி: இவற்றை யார் செய்வது? பதில்: எமது சமூகத்திலுள்ள கல்விச் சமூகமும், சமூகத்தின் எதிர்காலம் குறித்து கவலையுறும் செயற்பாட்டாளர்களும், வெளிநாடுகளிலிருந்து உதவிகளை வழங்கும் தேசப் பற்றாளர்களும் இதனை மேற்கொள்ள வேண்டும். முதலில் தமிழ் அரசியலை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு நகர்த்துவது? அடுத்த கட்டம் என்பது என்ன? என்பது குறித்து பலமான விவாதங்கள் இடம்பெற வேண்டும். இதற்கான அடித்தளங்கள் தொடர்பான வாதங்கள் தமிழரசுக் கட்சிக்குள் தற்போது எழுந்துள்ளன. மிகவும் பலவீன நிலையிலுள்ள சமூதாயம் தனது தற்போதைய நிலையிலிருந்து மேலும் வழுக்கிச் செல்வதைத் தடுக்கவும், அவ்வாறான நிலை எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதைத் தடுக்கவுமான வேலைத் திட்டங்களை விவாதித்தல் அவசியம். இவை சாத்தியமான கட்சிகளுடன் பொது இணக்கத்திற்குச் செல்வது முதல் அரசில் இணைந்து சில தடுப்புகளை ஏற்படுத்தும் வகையான உறவுகளை ஏற்படுத்தல் என்பன சிலவாகும். எமது சமூகத்தின் சில பிரிவினர் கடந்தகால கசப்பான நிலமைகளை அடிக்கடி கூறி நிலமைகளைச் சிக்கலாக்குவதை விடுத்து பாதுகாப்பிற்கான மாற்று ஏற்பாடுகளை நோக்கி பார்வையைச் செலுத்த வேண்டும். முதலில் பிரச்சனைகள் மேலும் கூர்மையடையாமல் தடுப்பதற்கான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்தல் அவசியம். இம் முடிவுகள் சில சமயம் தோல்வி அடையலாம். ஒரு முயற்சிகளையும் எடுக்காமல் வெறும் எதிர்ப்புகள் மட்டும் மாற்றத்தைத் தராது. அரசியல் எதிரிகள் மத்தியில் ஏற்பட்டு வரும் பிளவுகளில் அல்லது அரசியல் அணுகுமுறை மாற்றங்களில் நாமும் பங்கெடுத்து நம்பிக்கையை வளர்க்க வேண்டும். தற்போதைய சூழலில் மிகவும் தெளிவான கோட்பாட்டு அடிப்படையிலான அணுகுமுறை மிக அவசியம். உதாரணமாக, இலங்கையில் வாழும் தேசிய சிறுபான்மை இனங்களின் எதிர்காலம் குறித்த பரந்த உரையாடல் அவசியம். குறிப்பாக இனவாத அரசியலின் தாக்கங்களால் நாட்டின் பொருளாதாரமும், இன நல்லிணக்கமும் சீர்குலைந்து சாமான்ய மக்களின் வாழ்வு மேலும் பாதிப்படைந்து செல்வதை எந்த தேசபக்தனும் அனுமதிக்க மாட்டான். அதுவே இன்றைய அரசியலில் பிரதிபலிக்கிறது. கேள்வி: இலங்கை அரசியலில் பாசிசத்தின் கூறுகள் தென்படுகிறதா? பதில்: நிச்சயமாக உண்டு. உதாரணமாக, இலங்கை சிங்களவர்களின் நாடு எனக் கூறுவதும், அதனடிப்படையில் ஜனநாயக கட்டுமானங்களைச் சிதைப்பதும், அதனைப் பெரும்பான்மை இனவாதிகளின் கைகளில் ஒப்படைக்க உதவுவதும், தேசிய சிறுபான்மை இனங்களை எதிரியாக கட்டமைப்பதும், அவர்களின் ஜனநாயக உரிமைக் குரலை சிங்கள ராணுவத்தைக் கொண்டு நசிப்பதும் பாசிசத்தின் கூறுகளே. அரசியல் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி எதேச்சாதிகாதரத்தை நோக்கி நாட்டின் அரச கட்டுமானங்களை மாற்றவுது, குடும்ப அல்லது குழு ஆதிக்கத்திற்குள் அதிகாரங்களைக் குவிப்பது, நாட்டின் மூல வளங்களை தத்தமது நண்பர்கள், உறவினர் ஆதிக்கத்தில் எடுத்துச் செல்வது, அரச அதிகாரிகளை ஊழலுக்குள் தள்ளி அரச கட்டுமானத்தைச் சீரழிப்பது, இவை யாவற்றையும் சிங்கள, பௌத்த மேலாதிக்கம் என்ற போர்வையில் இதர தேசிய சிறுபான்மையினரை எதிரிகள் நிலைக்குத் தள்ளி ராணுவத்தின் உதவியுடன் நடத்துவது போன்றனவும் உள்ளடக்கம். முதலில் இலங்கை என்பது பல்லினங்கள், பன் மதங்கள் பின்பற்றப்படும் ஜனநாயக நாடு என்பதை ஏற்காத வரை பாசிசத்திற்கான அடிப்படைகள் தொடர்ந்தும் இருக்கும். முதலில் நாட்டில் பெரும்பான்மை வாதம், பௌத்தமத மேலாதிக்கம், இதர இனங்களை இரண்டாம் தர பிரஜைகளாக நடத்துதல், பெரும்பான்மைப் பலத்தின் சட்டங்களின் மூலம் அதனை உறுதிப்படுத்தல் என்பன அடிப்படை மனித உரிமைகளை மீறுதலாகும். கேள்வி: சஜித் அல்லது அநுர ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்கள் உடனடியாகப் பாராளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலை நடத்த முடியாது எனக் கூறப்படுகிறதே! அவ்வாறான சிக்கல் ஒன்று உள்ளதா? பதில்: அவ்வாறான ஓர் அரசியல் நெருக்கடிக்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. உதாரணமாக, அநுர வெற்றி பெற்றால் அவர் பாராளுமன்றத்தைக் கலைப்பதானால் தேர்தலுக்கான பணம் அவசியம். தற்போது பொதுத் தேர்தலுக்கான பணம் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்காத நிலையில் அவர் அமைச்சரவையை உருவாக்கி, நிதி அமைச்சர் ஒருவரை நியமித்து அவர் மூலமாக இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்கான நிதியையும் ஒதுக்கிய பின்னரே தேர்தலை நடத்த முடியும். இங்கு பாராளுமன்றத்தைக் கலைப்பது அல்ல பிரச்சனை. தேர்தலை நடத்துவதற்கான பணத்தைப் பெறுவதற்கு அரசியல் யாப்பு விதிகளுக்கு ஊடாகவே செல்ல வேண்டும். எனவே தற்போதுள்ள பாராளுமன்றத்திலுள்ள கட்சிகளோடு தேசிய மக்கள் சக்தி ஓர் இணக்கத்திற்குச் செல்வது தவிர்க்க முடியாததாகும். இணக்கத்தைத் தவிர்த்து முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தினால் குழப்பநிலை தொடரும். இது யாருக்கும் உகந்த அணுகுமுறை அல்ல. கேள்வி: ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரங்களை அவர் பயன்படுத்த முடியாதா? பதில்: பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு அவருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் நிதி என்பது அதற்கான சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அப்போது நிதி அமைச்சர் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து பாராளுமன்றத்தின் ஆதரவைப் பெற வேண்டும். அது அங்கு தோற்கடிக்கப்பட்டால் புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும். இந்த இழுபறி நாட்டின் எதிர்காலத்திற்கு ஆபத்தான அணுகுமுறை. பாராளுமன்றத்தின் அனுசரணையைப் பெறாமல் அரசாங்கத்தை நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நடத்துவது என்பது பல விதங்களில் சிக்கலானது. ஏனெனில் அவர் பாராளுமன்றத்தின் உதவி இல்லாமல் சட்டங்களை நிறைவேற்ற முடியாது. எனவே தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் அணுகுமுறை மிக வேறாக அமையலாம். அமைய வேண்டும். தேசத்தின் நலன் கருதி பலர் தேசிய மக்கள் சக்தியின் அரசை ஆதரிக்கலாம். தற்போதைய நிலமைகளை அவதானிக்கையில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எந்த ஒரு கட்சியும் பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை எட்டும் எனக் கருத முடியவில்லை. அவ்வாறாயின் இதர கட்சிகளின் ஆதரவும் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டே புதிய ஜனாதிபதி செயற்பட வேண்டும். ஓர் தேசிய அரச உருவாக்கத்திற்கான வாய்ப்புகளே அதிகம் காணப்படுகிறது. இங்கு இன்னொரு பிரச்சனை உண்டு. தேர்தலை நடத்துவதற்கான பணம் அங்கு உள்ளதா? என்பதும், சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களைப் பயன்படுத்தி தேர்தல் நடத்துவதாயின் அவர்களின் சம்மதமும் பெறப்படுவது அவசியமாக அமையலாம். ஏனெனில் அவர்கள் சில இலக்குகளை அடைவதற்காகவே கடன் வழங்குகிறார்கள். கேள்வி: உங்கள் பதிலை அவதானிக்கும் போது அடுத்து வரும் அரசாங்கம் பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கலாம் போல் தெரிகிறது. அவை எவ்வாறான பிரச்சனைகள்? பதில்: அநுர தலைமையிலான அரசாங்கம் தற்போது கூறுவது போல மிகவும் மென்மையான பயணமாக அவை இருக்கப்போவதில்லை. இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஏற்கெனவே 16 தடவைகள் கடன் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு தடவையும் குறிப்பிட்ட இலக்கை அடையவில்லை. இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியம் தனது கடனை பகுதி, பகுதியாகவே இம் முறை வழங்குகிறது. ஓவ்வொரு தடவையும் அடுத்த பகுதியை வழங்கும்போது ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட இலக்குகளை எட்டியுள்ளார்களா? என்பதை ஆராய்ந்தே வழங்குகின்றனர். இம்முறை சர்வதேச நாணய நிதியம் விதித்த சில இலக்குகளை நாம் பார்க்கலாம். உதாரணமாக, நீதித்துறையில் மக்களுக்குள்ள நம்பிக்கையை அதிகரிக்கும் விதத்தில் சட்டங்களை இயற்றுதல் அவசியம் எனத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும்படி கோரியுள்ளது. ஊழல், விரயத்தைத் தடுப்பதற்கான சட்டங்களை இயற்றும்படி கேட்டுள்ளது. நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை இலாபத்தில் இயங்கும் விதத்தில் அதன் செயற்பாடுகளை மாற்றி அமைக்கக் கோரியுள்ளது. அதாவது நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு மேலும் அரச உதவியை வழங்குவது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகும். இவ்வாறாக சர்வதேச நாயண நிதியம் வழங்கிய ஆலோசனைகளை தற்போதைய ரணில் அரசு நிறைவேற்றுவதற்குப் பதிலாக மக்கள் மேல் வரிச் சுமைகளை அதிகரித்திருக்கிறது. சட்டங்களை இயற்றித் தனது அரசியல் எதிரிகளை ஒடுக்கப் பயன்படுத்துகிறது. நிதி வளங்களைச் சூறையாடிய பலர் அரச பதவிகளில் இன்னமும் உள்ளனர். ஊழல் இன்னமும் தொடர்கிறது. கேள்வி: மேற்குறித்த பதிலைப் பார்க்கும்போது எவர் பதவிக்கு வந்தாலும் நிலமை மிக மோசமாக செல்லலாம் போல் தெரிகிறது. வேறு எவ்வாறான பிரச்சனைகள் ஏற்படலாம்? பதில்: மகிந்த அரசும், ரணில் அரசும் பல்வேறு வங்கிகள், சீனா, யப்பான், இந்தியா போன்ற நாடுகள் வழங்கிய கடன்கள் அத்துடன் சர்வதேச இறைமை முறிகள் எனப் பலவுண்டு. இந்தக் கடன் முறிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டியவை. சமீபத்தில் இலங்கைக்கு இவ்வாறு கடன் முறிகளை வழங்கிய நிதி நிறுவனம் அமெரிக்காவிலுள்ள நியூயோர்க் நகரில் உள்ள நீதிமன்றத்தில் இவ் வருடம் செப்டெம்பர் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் உடனடியாக 250 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்துமாறு கேட்டுள்ளது. தற்போது வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பிற்காக காத்திருக்கிறார்கள். இத் தீர்ப்பை தாமதிக்கும்படி இலங்கையின் நட்பு நாடுகள் சில கேட்டுள்ளன. எனவே அடுத்து அரசாங்கத்தைப் பொறுபேற்பவர்கள் மிகவும் சிக்கலான பயணத்தை அனுபவிப்பார்கள். எனவே முறுகல் நிலமைகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இணக்க அணுகுமுறையை மேற்கொள்ள நேரிடும். கேள்வி: மகிந்த மற்றும் ரணில் அரசுகள் சர்வதேச நாணயத்திடம் சில நிபந்தனைகளுடன் கடன் பெற்றுள்ளார்கள். இந்த ஒப்பந்தத்தினை தம்மால் ஏற்க முடியாது எனவும், அந்த நிபந்தனைகள் தமக்குத் தெரியாது எனவும், தாம் நாணய நிதியத்துடன் மீள் பேச்சுவார்த்தையை நடத்தி சில நிபந்தனைகளை மாற்றி அமைக்கப் போவதாகவும் தேசிய மக்கள் சக்தி. ஐக்கிய மக்கள் சக்தி என்பன கூறுகின்றன. இது சாத்தியமா? பதில்: இப் பிரச்சனை தொடர்பாக இந்த இரு கட்சியினரும் வெவ்வேறு அர்த்தங்களில் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பதிலளித்துள்ளனர். சர்வதேச நாணய நிதியம் சில அடிப்படைகளை விவாதித்து அதன் பெறுபேறாகவே கடன் வழங்க சம்மதித்துள்ளனர். இவை இலங்கைக்கு மட்டும் தனித்துவமானதல்ல. பல்வேறு நாடுகளுக்கும் இதே போன்ற சில அடிப்படைகளிலேயே கடன் வழங்குகின்றனர். எனவே அந்த அடிப்படைகளை மாற்றுவது மிகவும் கடினம் எனவும், காலம் எடுக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அநுர தலைமையிலான கட்சியினர் கடன் மீள்கட்டுமான ஆய்வுகளில் அடிப்படை மாற்றங்களைப் பேசி முடிவு செய்யப் போவதாகத் தெரிவிக்கின்றனர். இவ்வாறான பேச்சுவார்த்தைகள் காலத்தை எடுக்கும் வரை நாணய நிதியத்திடமிருந்து பணம் கிடைக்காது. அவ்வாறாயின் இந்த இடைக்காலத்தில் பணம் எங்கிருந்து கிடைக்கும்? தேசிய மக்கள் சக்தியினர் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் உதவிகளை மிகவும் சந்தேகத்துடன் அணுகுவதால் வேறு யாரிடமிருந்து கடன் பெறுவார்கள்? என்பதும் பெரும் கேள்வியாகவே உள்ளது. சஜீத் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் சர்வதேச நாயண நிதியம் வழங்கிய இலக்குகளை அடைய தாம் திட்டம் வைத்திருப்பதாக கூறுகின்றனர். சர்வதேச நாணய நிதியத்தால் கூறப்பட்டுள்ள இலக்குகளை தாம் வேறு விதங்களில் எட்டப் போவதாகத் தெரிவிக்கின்றனர். இந்த ஏற்பாட்டினை ரணில் தவறான அணுகுமுறை எனவும், சாத்தியப்படாது என்றும் கூறுகிறார். இவற்றை நாணய நிதியம் ஏற்குமா? என்பதும் பெரும் கேள்வியாகவே உள்ளது. இங்கு நாணய நிதியத்தை அணுகுவது குறித்துப் பலத்த வேறுபாடுகள் உள்ளன. நாடு தற்போது வங்குறோத்து நிலையில் இருக்கும்போது, யாரும் கடன் வழங்கத் தயாரில்லாத போது, சர்வதேச நிதி தொடர்பான நாடுகளின் தரங்களை நிர்ணயிக்கும் அமைப்புகள் இலங்கையின் நாணய தர நிரணயத்தை மிகவும் கீழே வைத்திருக்கும் நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு விருத்தி செய்ய எவ்வாறு கடன் பெறப் போகிறார்கள்?; என்பதே பெரும் கேள்வியாக உள்ளது. கேள்வி: சர்வதேச நாணய நிதியத்தின் கட்டுப்பாடுகளை எதிர்க்கும் தேசிய மக்கள் சக்தியினர் எவ்வாறு நாட்டை அபிவிருத்தி செய்யப் பணம் பெறுவார்கள்? பதில்: அவர்கள் நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பவர்களின் பணத்தை மீண்டும் பறிக்கும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப் போவதாகத் தெரிவிக்கின்றனர். இது வெறுமனே இலங்கையின் கையில் இல்லை. பல வெளிநாடுகள் இணங்க வேண்டும். உதாரணமாக, ஹட்டார், குவைத் போன்ற நாடுகளில் இச் சட்ட விரோத பணம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சாத்திமா? என்பது சந்தேகமே. அடுத்து, புலம்பெயர் தேசங்களில் வாழும் இலங்கையர்கள் இலங்கை அரசு வழங்கும் முறியைப் பணம் கொடுத்து வாங்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வைப்பிலிட்டதாகக் கருத வேண்டும். அவ்வாறாக வைப்பிலிடுபவர்களுக்கு அரசு சில சலுகைகளை அறிவிக்கலாம். இவ்வாறாக பணத்தைத் திரட்டலாம் எனத் தெரிவிக்கின்றனர். இதன் சாத்தியங்களையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. மேலும் தொடரும்…… https://arangamnews.com/?p=11226
-
வாழை விமர்சனம்: மாரி செல்வராஜின் உன்னத படைப்பு தரும் தாக்கம் என்ன?
வாழை sudumanal திரைப் பார்வை பொதுவாக பல திரைப்படங்கள் ஒரு முடிவை பரிசளித்து இருக்கையிலிருக்கும் எம்மிடம் தந்து அனுப்பிவைக்கும். சிந்தனையில் இடையீடு இன்றி எழுந்து சென்று விடுவோம். அநாதரவாக எழுத்தோட்டம் திரையில் நகரும் வால்போல அசைந்துகொண்டிருக்கும். வாழை திரைப்படம் முடிந்தும் பார்வையாளர்கள் எழுந்தபாடில்லை. வாழையின் கனதியும் படத் தொகுப்பும் இருக்கையோடு கட்டிப் போட்டுவிட்டிருந்தது. இசை மூளையறையெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. காட்சிப்புலத்துள் யாரோ கலவரப்பட்டபடி ஓடித்திரிந்தார்கள். ஒரு விளிம்புநிலை மாந்தரின் வாழ்வு என்பதை நடுத்தரவர்க்க கீழ்மட்ட மாந்தர்கள் புரிந்துகொள்வதிலும்கூட முழுமையிருக்காது. “பசி” என்பதை இவர்கள் இருவரும் புரிந்துகொள்வதிலும் வேறுபாடு இருக்கிறது. ஒரு நேர சாப்பாட்டின் தாமதம் அல்லது இல்லாமை தரும் பசி என்பதும் ஒரு நேர சாப்பாட்டுக்காக ஏங்கி உடல் அவதியுறும் பசி என்பதும் ஒன்றல்ல. வாழையில் இந்தப் பசி வாழைக்குலையில் ஒரு வாழைப்பழத்தை எட்டிப் பிடிக்க படாதபாடு படுகிறது. எட்டியபின் அதற்கான தண்டனையாக பசிச் சிறுவன் அதே வாழைக்குலையை சுமந்து நிற்கிறான். பசி உடல்நரம்புகளெல்லாம் களேபரப்பட்டு அந்த சிறுவனை வாட்டுகிறது. அவனை துரத்துகிறது. ஒரு பூனைபோல் தனது வீட்டினுள் புகுந்து ஒரு பிடி சோற்றை அவனது உடல் இரக்கத் துரத்துகிறது. தனது சகோதரியின் மரணம் தரும் மனவலியைத் தாண்டியும்கூட அவனை அடுப்படிக்குள் துரத்துகிறது. பின் அங்கிருந்தும் துரத்தப் படுகிறான். உளம் உடல் இரண்டும் அவனை பிய்த்தெறிகிறது. நெடிய வறுமையும் வாழ்தலின் பெரும் பாடும் மகளை இழந்த நிகழ் துயரும் என செரித்துக்கொள்ள முடியாமல் அவதிப்படும் ஒரு தாயின் பாசம் சிதைந்து பின் உயிர்ப்புறம் கடைசிக் காட்சியை புரிந்துகொள்ள முயற்சித்தபோது ஏதோவொன்று இதயத்தில் ஆணியை சொருகிக் கொண்டிருந்தது. படத்தின் ஆரம்பம் வாழ்வின் மகிழ்வான தருணங்களை, பாடசாலை குறும்புகளை நினைவூட்டியது. பின் அந்த மகிழ்வை இரக்கமற்றுக் கொல்லும் யதார்த்தத்துள் வாழை என்னை பாதையெடுத்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தது. இந்தப் படத்தை முன்முடிவுகளோடு, சாதியப் பிரச்சினையோடு குறுக்கி திரையரங்கினுள் செல்பவர்களுக்கு வர்க்கப் பார்வை மங்கிப் போய்விடக் கூடும். வாழ்தலுக்காக இந்த உலகோடு போராடுபவர்களை மட்டுமல்ல, பசியோடு போராடுபவர்களையும் முன்முடிவுகளோடு குந்தியிருப்பவர்களுக்கு காணக் கிடைக்குமோ தெரியாது. அந்தச் சிறுவனின் தந்தை விட்டுச் சென்ற சுத்தியல் அரிவாள் சின்னத்தை அவன் தனது சகோதரியின் காதலனாக உருவானவனிடம் பரிசாக அளிக்கிறான். தொழிலாளர் சார்ந்து முதலாளியை எதிர்கொள்ளும் அவனது துணிச்சலிலும் மனிதநேயத்திலும் தனது தந்தையை அவனிடத்தில் சிறுவன் காண்கிறான். அதை அவனிடத்தில் சொல்லவும் செய்கிறான். பாடசாலையில்லாத நாட்களில் வாழைக்குலை சுமப்பதற்கு அந்த பிஞ்சுடலை ஓயாது துரத்தும் இந்த சுரண்டல் முறைமைக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், ஓரிடத்தில் தாய் சொல்வாள் “அவனை வேணுமெண்டு இப்படி வாட்டுகிறேனா நான். இந்த உலகில் நானில்லாத காலத்தில் அவன் தன் காலில் தான் நிற்கவேண்டும். அதற்கு அவன் உழைக்கப் பழகியிருக்க வேண்டும்” என்கிறாள். உழைப்பானது தன்காலில் தான் நிற்கவேண்டும் என்பதாக மட்டுமல்ல, ஒரு மனிதஜீவி என்ற அர்த்தத்தில் பரிணமிக்க உழைப்பை அத்தியாவசியமாக முன்வைப்பது கம்யூனிசம். ஆனால் வறுமையும் சுரண்டல் அமைப்பு முறைமையும் இணைந்து இங்கு குழந்தைகளின் உழைப்பை கோருவதுதான் கொடுமை. அந்தக் கொடுமையை வாழை சுமந்தலைகிறது. இந்த உக்கிரம் மனதை பாரமாக்கி அழுத்துகிறது. நாம் விரும்பாத அல்லது ஜீரணிக்கமுடியாத ஒன்றை வாழை தருகிறபோது எழும் அதிர்ச்சயானது படத்தைத் தீவிரமடையச் செய்யும் காட்சிகள் மீதும் அதற்குப் பொருந்திப் போகிற ஒலியமைப்புத் தீவிரத்தின் மீதும் ஓர் இரக்கத்தைக் கோருகிறது. அதுவே படம் முடிந்தபின்னும் இருக்கையை விட்டு இலகுவில் எழமுடியாத பாரத்தை தருகிறது. வாழையைச் சுமந்தபடி திரையரங்கிலிருந்து வழிந்து வெளியேறவேண்டியிருக்கிறது. விளிம்புநிலை மனிதர்கள் மீது விதிக்கப்பட்ட இந்த வாழ்வுச் சேற்றில் குழந்தைமையின் எதிர்காலமும் படிப்படியாக சந்ததி சந்ததியாக மெல்லப் புதையுண்டு கொண்டிருப்பதன் குறியீடாக படத்தின் முடிவு அமைவதாக நான் வாசிக்கிறேன். அந்தப் புதைவு முழுமையாக நடந்து முடிவதாக காட்சி கட்புலனினுள் புகுந்து கொள்ளவில்லை. என்றபோதும் அதிலிருந்து மீள்தலுக்கான வழியில் ஒரு தூரப் பறவையின் ஒலியைத் தன்னும் -யதார்த்தத்தில் மட்டுமல்ல- வாழையிலும் கேட்க முடியவில்லை. போராட்டக் குணத்தின் குறியீடான சுத்தியலும் அரிவாளும் வாழைத் தோட்டத்துள்ளும் இறக்கையற்று வீழ்ந்த கிடக்கிறது. அந்தச் சின்னம் ஒப்படைக்கப்பட்டவரும் மரணித்துப் போகிறார். ஒரு படைப்பின் முடிவினுள் தலையிட்டு படைப்பாளிக்கு அபிப்பிராயம் சொல்ல முடியாது என்பது அறிவுத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது என்றபோதும், உணர்வுத்தளத்தில் எழும் மீள்தலுக்கான மனித ஏக்கத்தை அறிவு பூர்த்திசெய்ய முடியாது என்றே நம்புகிறேன். குழந்தைமை அல்லது இளவயது மிகையுணர்ச்சியை உடல்சார்ந்த காதலாகவோ ஈர்ப்பாகவோ புரிந்துகொள்வது எமது இறக்கைகளை உதிர்த்துக் கொட்டிவிடும். பள்ளிக் காலம் வாழைத் தோட்டத்தில் புதைந்தெழும் பாதத்தில் முளைத்திருக்கும் ஆணிகளை விலக்கி சிவனணைந்தானுக்கும் அவனது தோழன் சேகருக்கும் இறக்கைகள் முளைக்கப் பண்ணிவிடுகிறது. அதை அந்த ஆசிரியையும் சரியாகவே புரிந்துகொண்டு இறக்கைகளை வளர்த்துவிடுகிறாள். இடையிடையே திரையரங்கினுள் புன்னகைகள் வெடித்து வாயினூடக வெளியேறியதை காணமுடிந்தது. மனித மனம் அவாவும் மகிழ்ச்சி அது. அதிகாரத்தின் சூழ்ச்சி காவுகொண்ட -பள்ளிச் சிறுவர்கள் உட்பட- 19 பேரின் வாழைத் தோட்டப் பயங்கரத்தையும் தனது சிறுவயது வாழ்கால அனுபவத்தையும் தழுவி இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் ஒரு அற்புதமான கலையாக திரைப்பட வடிவத்தினூடு வெளிப்படுத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு, இசை, காட்சித் தொகுப்பு, கொம்பு முளைக்காத நடிப்பு என எல்லாமும் வாழையினுள் இயக்குநருடன் சகவாசம் செய்கிறது. தமிழ்த் திரைப்படம் கலைத்தளத்தில் தரையிறங்கும் இன்னொரு காட்சியை வாழை திரைப்படம் பிரமிப்போடு பார்க்க வைத்திருக்கிறது. * முன்றாம் உலக நாடுகள் முழுவதும் இந்த சுரண்டல் முறைமை தேயிலைத் தோட்டங்களிலும், கொக்கோ தோட்டங்களிலும், தொழிற்துறைகளிலும் விரவியிருக்கிறது. காலங்காலமாக வறுமை அங்கெல்லாம் விளிம்புநிலை மனிதர்களை குறிப்பாக சிறுவர்களை இந்த கொடுமைக்குள் துரத்திவிடுகிறது. இன்னொருபுறம் சாதிய அமைப்புமுறைமை தன் பங்குக்கு துரத்துகிறது. இந்த மாந்தர்களின் வாழ்வை புரிந்துகொள்ள நடுத்தர வர்க்கத்தின் கீழ்மட்டத்தில் உலவுபவர்கள்கூட துளைபோட்டு கீழிறங்க வேண்டியுள்ளது. ravindran.pa https://sudumanal.com/2024/09/02/வாழை/#more-6271
-
ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி/என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்
அநுர அலை sudumanal 2024 ஜனாதிபதித் தேர்தல் ஊடகங்கள் -முக்கியமாக சமூகவலைத் தளங்கள்- உருவாக்கிக் காட்டுகிற அநுர அலை இலங்கையின் யதார்த்த அரசியல் நிலைமையை பிரதிபலிக்கிறதா என தெரியவில்லை. இருந்தபோதும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் இம்முறை இந்தளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதற்கு “அரகல” 2022 காலிமுகத்திடல் போராட்டத்தின் அரசியல் விளைவுதான் முக்கிய காரணமேயொழிய, கடந்த அரசாங்கங்களின் ஊழல் இலஞ்சம், ஏமாற்றுகள் அல்ல. இந்தச் சேற்றில் உழலும் ஒவ்வொரு அரசாங்கமும் அதன் அரசியல்வாதிகளும் ஜனநாயக முகமூடியை அணிந்து நடனமாடுவது ஒன்றும் புதிதல்ல. இந்த அதிகாரத்துடன் மோதி மாற்றமுடியாதென வாழாவிருந்த மக்களிடம் காலிமுகத்திடல் போராட்டம் சாத்தியப்பாடொன்றின் கீற்றுகளை பரவ விட்டது. அது ஒரு தன்னியல்பான மக்கள் எழுச்சி. அதை ஜேவிபியினர் முன்னின்று நடத்தவில்லை. அதை லாவகமாக கையாண்டார்கள். இப்போ அறுவடை செய்கிறார்கள். அரகலவை விதைத்தவர்கள் -கட்சிகள் கடந்த- இளம் சந்ததியும் மாணவர்களும் ஆவர். அவர்களின் பின்னால் மக்கள் அணிதிரண்டனர். அரகல ராஜபக்ச அன்ட் கோ வினரின் ஆட்சிக்கு எதிரானது என்பது மட்டுமானதல்ல, அதிகாரத்துக்கு எதிரானது என்பதும்தான். அத்தோடு இனவாதத்துக்கு எதிராகவும் இலஞ்ச ஊழலுக்கு எதிராகவும் பண்பாட்டுத் தளத்தில் முனைப்பாகவும் அந்த இளம் குரல் ஒலித்தது. அதாவது “முறைமை மாற்றம்” (sytem change) என்பது அதன் அடிநாதமாக ஒலித்தது. அந்தக் குரலை, அவர்களின் உழைப்பை இன்று ஜேவிபி தனதாக்கியிருக்கிறது. இதற்கு வெளியில் அநுர புதிதாக எதையுமே மேடைகளில் பேசவில்லை. அதற்கு அவர்கள் உண்மையாக இருக்க முடியும் என ஒரு பொதுமனம் ஏங்குவது அரகல ஏற்படுத்திய விழிப்பின்பாற்பட்டது. அதாவது சாத்தியப்பாடுகளை உணர்த்தியதன்பாற்பட்டது. நம்பிக்கையின் பாற்பட்டது. அதனடிப்படையில் அநுரவை ஆதரிக்கும் மக்களது நம்பிக்கையை நாம் புரிந்துகொள்ள முடியும். அடுத்த விடயம். இன்றைய ஜனநாயக முறைமை என்பதற்கு அழகான விளக்கங்களும் விரிவுபடுத்தலும் செழுமைப்படுத்தலும் இருக்கிறபோதும் நடைமுறையில் உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளிலும் ஆட்சி நடைமுறை அதற்கு முரண்நிலையில் இயங்குகிறது. நம்பிக்கை அடிப்படையில் ஆட்சியை தெரிவதும், பின் நடைமுறை கண்டு வெறுப்பதும் மாறிமாறி நடக்கின்றன. அடுத்த தேர்தலில் தமது நம்பிக்கைக்கான தீனியை இன்னொரு ஆட்சியதிகாரத்திடம் எதிர்பார்க்கிறார்கள். வாக்களிக்கிறார்கள். தேர்தல் மூலம் அரசாங்கத்தை மாற்றுவதுதான் அவர்கள் அளவில் மாற்றம் என்றாகியிருக்கிறது. இதற்குப் பெயர் “முறைமை மாற்றம்” என்பதல்ல. தவிர்க்க முடியாத கையறு நிலையில் அதிகாரமற்றவர்களின் தேர்வு அதுவாக தொடர்கிறது. மகிந்தவின் ஆட்சியை காணச் சகிக்காது -நல்லாட்சி என கோசத்தை முன்வைத்த- மைத்திரியை தேர்ந்தார்கள். தரப்பட்ட விடைகளில் ஒன்றுக்கு புள்ளடியிட்டுத்தானே ஆக வேண்டும். பிசாசுகளுக்குள் ஒரு ‘நல்ல’ பிசாசை தேர்ந்தெடுத்தல் என்பது தவிர்க்க முடியாததாகிறது. அதைச் செய்தார்கள். இனியும் செய்வார்கள். அவர்களுக்கு வேறு தேர்வில்லை. முறைமை மாற்றம் என்பதை புரிந்து கொள்வதற்கு அரசு (state) என்பதற்கும் அரசாங்கம் (government) என்பதற்குமான வேறுபாட்டையும் ஊடாட்டத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு அநுர பேசுவது அரசாங்கம் என்ற எல்லைக்குள் நின்றுதான். அரசு தனது கொள்ளை கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த ‘அரசாங்கம்’ என்ற ஒன்றை தனது அங்கமாக வைத்திருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசாங்கங்கள் தெரிவுசெய்யப்படும். அரசு அப்படியல்ல. அது நிரந்தரமானது. காட்சிப்புலத்தில் தெரிவதும் தெரியாததுமான கட்டமைப்புத்தான் அரசு வடிவம். அது வெளித் தெரியக்கூடிய அரச இயந்திரங்களான இராணுவம், பொலிஸ், உளவுப்படை, நீதிமன்றம், சிறைச்சாலை என்பவற்றோடு மக்கள் திரளையும் உள்ளடக்கியது. இவை வெளித் தெரிகிற அம்சங்கள். அதேநேரம் தனது அதிகாரத்தை பேணுகிற கருத்தியலை கொள்கை வகுப்பாளர்கள், வரலாற்றாசிரியர்கள் உட்பட்ட (நிர்வாகப்) புத்திசீவிகளின் துணையோடு உருவாக்குகிறது. அவற்றை இற்றைப்படுத்தியபடி நகர்கிறது. இந்த கருத்தியலை பயிற்றுவிக்கிற, விதைக்கிற களங்களாக பாடசாலை, குடும்பம், மத நிறுவனங்கள் போன்ற சிவில் நிறுவனங்களும் ஊடகங்களும் உள்ளன. அது பொதுப்புத்தியில் தாக்கம் செலுத்தியபடி இருக்கின்றன. விமர்சன பூர்வமான சிந்தனைமுறை இல்லாமல் இதன் நுண்களங்களை புரிந்துகொள்ள முடியாது. இலங்கையைப் பொறுத்தவரை இந்த அரசு வடிவத்தின் கருத்தியல்தளம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தையும், அதற்கான தர்க்கத்தையும், பெரும்பான்மைவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டது. சோசலிச சாயம் பூசினாலென்ன, சிவப்புச் சட்டை அணிந்தாலென்ன, புரட்சி என்பதை ‘மாற்றம்’ என ஒரு பொதுச்சொல்லால் உருமாற்றினாலென்ன ஆட்சியை கொண்டுநடத்த பௌத்த மத பீடங்களின் ஆசீர்வாதம் வேண்டும். எல்லா சனாதிபதிகளையும் போல் பௌத்த பீடத்தின் காலை தொட்டு வணங்கி ஆட்சியைத் தொடங்குவதில் அநுரவும் விதிவிலக்காகிவிட முடியாது. முறைமை மாற்றம் என்பது இந்த அரசு வடிவத்துள் கட்டமைக்கப்பட்ட பௌத்த மேலாதிக்க கருத்தியலை அசைத்துப் பார்ப்பதுதான். அது பெரும்பான்மைவாதத்தை கேள்விக்கு உள்ளாக்கி அரசியல் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் பன்முகத்தன்மையை உருவாக்க முயற்சிப்பதுதான். அதன்மூலம்தான் சிறுபான்மையின மக்களின் உரிமை பேணப்படும். வாழ்வுக்கான உத்தரவாதம் கிடைக்கும். அத்தோடு பன்முகப் பண்பாடு உருவாகும். சகமனிதர்களை மொழி கடந்து நேசிக்க அது கற்றுக் கொடுக்கும். தப்பபிப்பிராயங்களை விலக்கும். ஊழலற்ற ஆட்சியை நடத்துவது, ஊழலை சகல மட்டங்களிலும் ஒழிப்பது என்பதை ஓர் மக்கள்நல அரசாங்கம் சட்ட ரீதியில் கறாராக நடைமுறைப்படுத்த முடியும். அதுதான் அதன் எல்லை. ஊழலும் அதிகாரமும் சமூகமயமாகவிட்ட நிலையில் அதை பண்பாட்டுத்தளத்தில் எதிர்கொள்ள சமூக நிறுவனங்கள் உதவ வேண்டும். அதேநேரம் பாராளுமன்ற வரலாறானது வாக்குறுதிகளை தேர்தலில் வெற்றிபெற உபயோகிப்பதும் பின் தூக்கியெறிவதும் என்பதற்கு அப்பால் நகர்ந்து காட்டியதில்லை. வாக்குறுதிகளை காப்பாற்ற அவர்கள் விரும்பினாலும்கூட அதன் எல்லை எந்தளவுக்கு இருக்கும் என்பது கேள்விக்குறியே. காரணம் அரசு என்ற கட்டுமானத்துள் அவர்கள் எந்தளவுக்கு மாறுதல் ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி இருக்கிறது. ஓர் அரசாங்கமும் சனாதிபதியும் தமக்கு வழங்கப்பட்டிருக்கிற அதிகாரத்தின் எல்லைக்குள் செயற்படுகிறபோது அது அரசு வடிவத்துள் இடைஞ்சலை ஏற்படுத்தாது. அநுர குறிப்பிடுகிற இனவாதப் பிரச்சினையை அணுக அரசு வடிவத்துள் தலையீடு செய்தாக வேண்டும். அது ஒருபோதும் நடக்கப் போவதில்லை. மாறாக பாராளுமன்றத்தினதும் ஜனாதிபதியினதும் அதிகார எல்லைக்குள் அவர்கள் இனவாதத்துக்கு எதிராக அதிகபட்சம் சட்ட ரீதியில் செயற்படலாம். அது இனவாதத்தை செயற்பாடற்றதாக ஆக்கப் போதுமானதல்ல. அரசாங்கத்தில் ஊழல்கள் செய்தவர்கள் குறித்தும் அதற்கான சட்ட நடவடிக்கை குறித்தும் பேச முடிகிற அநுரவால் இனப்படுகொலையின் போது போர்க்குற்றம் இழைத்தவர்களுக்கான சட்ட நடவடிக்கை குறித்து பேச முடிவதில்லை. காரணம் இராணுவம் அரசின் ஒரு வன்முறை இயந்திரம் என்பதால் அதன் எல்லைக்குள் தலையீடு செய்வதிலுள்ள தயக்கமாக இருக்கலாம். அநுர முன்வைக்கிற “புதிய பாதை”, “மாற்றம்” என்ற இரு வார்த்தைகளும் அவரது மொழியில் ஒன்றுதான். பழைய ஆட்சியாளரின் ஆட்சி முறைகேடுகளை பழைய பாதை எனவும் அதிலிருந்து விடுபடும் ஆட்சிமுறையை புதிய பாதை எனவும் வரைவுசெய்கிறார். வழமையான எல்லா கட்சிகளினதும் தேர்தல் பிரசார முறையிலிருந்து இது ஒன்றும் வேறுபட்டதல்ல, புதிய பாதை என்ற அழகான சொல்லைத் தவிர!. இந்த எளிமையான விடயத்தை மாற்றம் என கொள்ள முடியுமா. இந்த அடிப்படையில் அமைந்த அவரது யாழ் பேச்சு நீங்கள் பழைய பாதையை தேரப்போகிறீர்களா புதிய பாதையைத் தேரப் போகிறீர்களா என கேள்வியை அடுக்கடுக்காக முன்வைத்து நகர்கிறது. ஒரு சிந்தனை அதிர்ச்சி தரும் விடயமொன்றையும் அவரது பேச்சில் கேட்க முடிகிறது. தெற்கிலுள்ள பெரும்பான்மை மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். யாழ்ப்பாண மக்கள் அதற்கு எதிராக நிற்கலாமா. அப்படி நின்றால் அது தெற்கில் என்னவிதமான விளைவை ஏற்படுத்தும் என வினவுகிறார். இது (சிங்கள இனப்) பெரும்பான்மைவாத மனநிலையின் வெளிப்பாடாகத் தெரிகிறது. எந்த ஜனநாயக முறைமையிலும் சிறுபான்மையினர்ின் (அது இன மத அடையாளத்துக்கு வெளியிலும்கூட இருக்கலாம்) கருத்துகளை, தேர்வுகளை மதிக்க வேண்டும் என்பது அடிப்படையானது. இந்த அடிப்படைப் புரிதலைத் தாண்டி அவரைப் பேசவைத்தது சிங்கள இனப் பெரும்பான்மைவாதம்தான் என்பதும் அது இனவாத மனநிலை சுவறியது என்பதையும் சொல்லித்தானாக வேண்டும். அவர் இன்னொரு தந்திரத்தையும் கையாள்கிறார். “உங்களிடம் வருபவர்கள் 13 ஐத் தருவம்; 13 பிளஸ் இனைத் தருவம் எண்டெல்லாம் பொய் வாக்குறுதிகளைத் தருவது போல நான் தர மாட்டேன்” என தன்னை நேர்மையாளனாக காட்டுகிற உத்தி அது. அரசியல்வாதிகள் வாக்குறுதி தருவதும் அதை நிறைவேற்றாமல் விடுவதும் என்ற விடயம் பொதுமக்களளுக்கு புதிதல்ல. ஆச்சரியம் தருவதுமல்ல. இந்த நிலையில் 13 குறித்து வாக்குறுதி தருபவரும் தராமல் இருப்பவரும் ஒன்றுதான். 40 வருடங்களுக்கு முன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இந்தியா முன்தள்ளிய தீர்வுத் திட்டம் 13. இந்த 40 வருடத்தில் காலம் இயங்காமலா இருந்தது. எவளவு மாற்றங்களும் அதிர்ச்சிகளும் பிரளயமும் தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த இயங்கியலை மறுத்து இப்போதும்கூட காலாவதியாகாமல் 13 பேசப்படுகிறது என்றால் அது அரசினதும், அரசாங்கங்களினதும் அரசியல்வாதிகளினதும் அறிவினதும் வங்குரோத்துத் தன்மையின் அடையாளம். சோசலிசம் பேசிய ஜேவிபி வழிவந்த அநுரவுக்கு இந்த மார்ச்சிய இயங்கியல் புரியாமலா இருக்கிறது. அவர் 13 இனை தாண்டிய ஒரு முன்மொழிவை ஓர் அபிப்பிராயமாகத் தன்னும் முன்வைத்து, 13 குறித்து பேசுபவர்களை இடம்பெயர்க்க வேண்டும். பொய்சொல்ல மாட்டேன் என்ற அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒழுக்கவாதத்தால் அல்ல. ஒடுக்குமுறையானது அதற்கெதிரான போராட்டத்தையும் விளைபொருளாக்கும் என்ற இயங்கியல்வாத அடிப்படையிலாவது, (நடந்து தொலைச்ச) தமிழ் மக்களின் போராட்டத்துக்கான விளைநிலத்தை காண முன்வர வேண்டும். தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது என புரிய மறுக்கிறாரா அநுர. இலங்கை முழுவதுக்குமான பிரச்சினையை ஓர் வக்கப் பிரச்சினையாக மட்டும் குறுக்கி சிறுபான்மையினரின் பிரச்சினையை உள்ளமுக்குகிறாரா அநுர. மகிந்தவின் one nation, one country யிலிருந்து எங்கே அவர் வேறுபடுகிறார். இவற்றை அவர் தெளிவுபடுத்த வேண்டும். இதை வெளிப்படையாகச் சொன்னால், சிங்கள மக்களின் வாக்குகளை தான் இழக்க நேரும் என பயந்தாலே அங்கு இனவாத சிந்தனை குடிகொண்டுவிடும். உலகில் ஒருசில வல்லரசு நாடுகளைத் தவிர எவையும் முழுதான இறையாண்மையுடன் செயற்பட முடியாத நிலையை ஒற்றை உலக ஒழுங்கும் சுரண்டல் முறைமை கொண்ட உலகமயமாக்கலும் ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையின் ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் மக்களுக்கு மட்டுமல்ல, பூகோள அரசியலுக்கும் இடம் இருக்கிறது. அது தத்தமது நலனுக்கு ஏற்ப நாடுகளை இலகுவில் கையாள்வதற்கு ஊழல் நிறைந்த அரசாங்கம் தேவை. அது வாய்க்காவிடில் அந்த ஆட்சிகளை அவர்கள் கவிழ்த்த வரலாறுகள் பல உண்டு. தமது இறையாண்மைக்கும் பொருளாதார நலனுக்கும் அரகல போராட்டத்தின்போது காலிமுகத்திடல் நோக்கி இலட்சக்கணக்கான மக்களை வழிநடத்திய ஜேவிபியின் ஊர்வலம் (மொரட்டுவ என நினைக்கிறேன்) இடையில் நிறுத்தப்பட்ட போது, அநுரவும் அமெரிக்கத் தூதரும் சேர்ந்து எடுத்திருந்த புகைப்படம் வெளிவந்தது. இதை அநுர அமெரிக்காவின் ஆள் என்று மொழிபெயர்க்காமல், அமெரிக்கா இந்த போராட்டங்களை தம் நலன் சார்ந்து தலையிடுகிறதின் சாட்சியாக கொள்ள வேண்டும். அதேவேளை பூகோள அரசியலைத் தாண்டி ஓர் அரசாங்கம் இலங்கையில் சுயமாக இயங்க முடியாது என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். அதை இராஜதந்திர அடிப்படையில் அணுகுவதுதான் ஒரு தேர்வு. எனவே முறைமை மாற்றம் என்பதை ஓர் அரசாங்கம் தனியாக நிகழ்த்த முடியாது. ஆனால் தனது அதிகார எல்லைக்குள் ஒரு மாற்றத்தை நிகழ்த்த முடியும். அது அரசியல் தளத்திலும் பொருளாதாரத் தளத்திலும் சமூக, பண்பாட்டுத் தளத்திலும் நிர்வாகத் தளத்திலும் நிகழுகிற ஊழல் மற்றும் அதிகாரத்துவச் செயற்பாடுகளை அகற்றி, சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து பன்மைத்துவத்துடன் முன்னோக்கி பயணிக்க முடிகிற ஒரு சமூகநலன் அரசை நிர்மாணித்தாலே பெரிய விசயம். அதற்கு இலாயக்கு இல்லாதவர்கள் என மாறிமாறி ஆட்சி செய்த கட்சிகளும் தலைவர்களும் நிரூபித்துவிட்டதால், “அநுரவுக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்துப் பார்ப்பமே” என்ற தர்க்கம் நியாயமானதுதான்!. அவர் வெல்லும் பட்சத்தில், நல்ல பிசாசா அல்லது கெட்ட பிசாசா என்பதை அவரது ஆட்சிக்காலம் எழுதும்! https://sudumanal.com/2024/09/08/அநுர-அலை/#more-6361
-
தேர்தலை தனக்கும் அநுராவுக்கும் இடையிலான போட்டியாக காண்பிக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில்
தேர்தலை தனக்கும் அநுராவுக்கும் இடையிலான போட்டியாக காண்பிக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் September 10, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் இரு வாரங்களே இருக்கின்றன. 38 பேர் போட்டியிடுகின்ற போதிலும், அவர்களில் பலரை பொதுவெளியில் காணவில்லை. பிரதான வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் பிரசாரங்களை நாடுபூராவும் மும்முரமாக முன்னெடுத்திருக்கிறார்கள். பிரதான வேட்பாளர்களாக விளங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுத்து அபிவிருத்திப் பாதையில் வழிநடத்துவதற்கு தங்கள் கொள்கைகளின் அடிப்படையில் திட்டங்களை பெருமளவுக்கு நிதானத்துடன் முன்வைத்தார்கள். தேர்தல் தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் பிரசார மேடைகளில் பெருவாரியான வாக்குறுதிகளை அள்ளிவீசத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வாக்குறுதிகளின் நடைமுறைச் சாத்தியம் குறித்து பலத்த சந்தேகம் கிளம்புகிறது. அவர்களின் தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் நடைபெறும் இடத்துக்கு வேற்றுக்கிரகத்தில் இருந்து எவராவது வந்து இறங்கினால், அவர் பூமியில் மிகவும் வசதிபடைத்த ஒரு நாட்டில் காலடி வைத்திருப்பதாக ஆச்சரியப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. இரு வருடங்களுக்கு முன்னர் வங்குரோத்து நிலையை அடைந்த இலங்கையின் பொருளாதாரத்தின் இன்றைய உண்மையான நிலைவரத்தை உணர்ந்தவர்களாக வேட்பாளர்கள் இந்த தடவை நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்குவதை பெரிதும் தவிர்க்கக்கூடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடைமுறைப்படுத்த முடியுமா இல்லையா என்பதைப் பற்றி சிந்திக்காமல் ஏட்டிக்குப்போட்டியாக பொருளாதார சலுகைகள் குறித்து அவர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்தைப் போன்று மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று நம்புவோமாக. முன்னைய ஜனாதிபதி தேர்தல்களை போலன்றி இந்த தடவை ஜனாதிபதி தேர்தலுக்கு பிரத்தியேக முக்கியத்துவம் இருக்கிறது. மக்களின் அமோக ஆதரவுடன் ஐந்து வருடங்களுக்கு முன்னர் தெரிவான ஜனாதிபதி ஒருவரை இலங்கையின் வரலாறு முன்னென்றும் கண்டிராத வகையிலான பிரமாண்டமான மக்கள் கிளர்ச்சி ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டியதற்கு பிறகு இரு வருடங்கள் கழித்து இந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்தின் மீதான சாதாரண மக்களின் கடுமையான வெறுப்பை தெளிவாக வெளிக்காட்டிய அந்த மக்கள் கிளர்ச்சி ‘முறைமை மாற்றம்’ ஒன்றை வேண்டி நின்றது. அதன் விளவாக மக்களின் அரசியல் சிந்தனைகளில் ஏதாவது குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருந்தால் அது நிச்சயமாக இந்த தேர்தலில் பிரதிபலிக்க வேண்டும். மக்கள் கிளர்ச்சிக்கு பின்னரான அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி நாட்டு மக்கள் மத்தியில் பெருமளவுக்கு ஆதரவை வளர்த்துக்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்துக்கு வெளியிலானது. அவர்களுக்கு அதிகரித்திருக்கும் ஆதரவு புதிய ஆட்சியாளர்களாக மாற்று அரசியல் தலைமைத்துவம் ஒன்று மேலெழுவதற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு கட்டத்தை இலங்கை அரசியல் எட்டியிருக்கிறதா இல்லையா என்பதை ஜனாதிபதி தேர்தல் வெளிக்காட்டும் என்பது அவதானிகளின் பரவலான கருத்து. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் பிரகாரம் கடந்த இரு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தவிர இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கு வேறு எந்த மார்க்கமும் இல்லை என்பதே ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் உறுதியான நிலைப்பாடாக இருக்கிறது. தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்து பொருளாதார மறுசீரமைப்பை தொடர்ந்து முன்னெடுக்க வாய்ப்பைத் தராவிட்டால் மீண்டும் இரு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டதை விடவும் படுமோசமான பொருளாதார நெருக்கடி தோன்றும் என்று ஒரு வகையில் மக்களை ‘பணயக்கைதியாக’ வைத்திருக்கும் பாவனையில் அவரது பிரசாரம் அமைந்திருக்கிறது. அதேவேளை, ஜனாதிபதியின் பிரதான போட்டியாளர்களான சஜித் பிரேமதாசவும் அநுரா குமாரவும் கூட சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதாகவே மக்களுக்கு கூறுகிறார்கள். உடன்படிக்கையில் திருத்தங்களைச் செய்வது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தப்போவதாக அவர்கள் கூறுகின்றார்களே தவிர, பொருளாதார மீட்சிக்கு முறையான மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் பிரகாரம் அரசாங்கம் முன்னெடுத்துவரும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் கடுமையான வரி அறவீடுகளின் விளைவாக சொல்லொணா கஷ்டங்களை அனுபவித்துவரும் அதிகப் பெரும்பான்மையான மக்கள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடனான பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பிலான தங்கள் தீர்ப்பை கூறுவதற்கும் ஜனாதிபதி தேர்தல் வாய்ப்பளிக்கிறது. இரு பிரதான வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டிகளாக அமைந்த முன்னைய ஜனாதிபதி தேர்தல்களைப் போலன்றி இந்த தடவை தேர்தல் மும்முனைப் போட்டியாக அமைந்திருக்கிறது. பிரதான வேட்பாளர்களில் எவருமே வாக்கு எண்ணிக்கையின் முதற்சுற்றில் 50 சதவீதமான வாக்குகளை பெறுவது சாத்தியமில்லை என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்பதால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. சுமார் இருபது வருடங்களுக்கு பிறகு விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இது அவர் போட்டியிடுகின்ற மூன்றாவது ஜனாதிபதி தேர்தலாகும். இறுதியாக அவர் 2005 நவம்பர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டபோது 48.83 சதவீதமான வாக்குகளைப் பெற்றார். கடந்த இருபது வருடங்களில் அவரின் ஐக்கிய தேசிய கட்சி படுமோசமான அளவுக்கு மக்கள் ஆதரவை இழந்துவிட்டது. 2020 பாராளுமன்ற தேர்தலில் அந்த கட்சியினால் நாடுபூராவும் 249, 435 வாக்குகளை மாத்திரமே (2.15 சதவீதம் ) பெறக்கூடியதாக இருந்தது. ஜனாதிபதி தேர்தலில் 50 சதவீதமான வாக்குகளை விக்கிரமசிங்க பெறவேண்டுமானால் வாக்கு அதிகரிப்பு 48 சதவீதமாக இருக்கவேண்டும். அவரது கட்சிக்கு கணக்கில் எடுக்கத்தக்க ஒரு வாக்குவங்கி இல்லாத நிலையில் அத்தகைய ஒரு பாரிய பாய்ச்சலை செய்வது எவ்வாறு சாத்தியமாகும்? ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருவாரியான பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்டபட வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள் ஜனாதிபதிக்கு அமோகமாக வாக்குகளைக் கொண்டு வரக்கூடிய அளவுக்கு இன்னமும் தங்களது வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கைக் கொண்டவர்களாக இருக்கிறார்களா என்பது முக்கியமான ஒரு கேள்வி. சிறுபான்மைக் கட்சிகள் மற்றைய வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கின்ற போதிலும், சிறுபான்மைச் சமூகங்ளைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் தன்னையே ஆதரிக்கிறார்கள் என்று கடந்தவாரம் விக்கிரமசிங்க கூறியிருந்தார். அத்துடன் தன்னால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக தோன்றியிருக்கும் வழமை நிலையின் சாயல் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரித்திருக்கிறது என்றும் அவர் நம்புகிறார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் பிரேமதாச 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டபோது சுமார் 42 சதவீதமான வாக்குகளைப் பெற்றார். அப்போது அவர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறவில்லை. 2020 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியை அமைத்த பிறகு ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குவங்கி அவருடன் வந்துவிட்டது. ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்ற அதே சதவீத வாக்குகள் அவருடனேயே தொடர்ந்தும் இருக்கிறதா? பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறியவர்களில் ஒரு பிரிவினர் பிரேமதாசவுடனும் இணைந்திருக்கிறார்கள். அவர்களின் ஆதரவு அவருக்கு பெருமளவு வாக்குகளை கொண்டுவரும் என்று சொல்வதற்கில்லை. இலங்கை தமிழரசு கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சில மலையக தமிழ்க்கட்சிகள் உட்பட பெரும்பாலான சிறுபான்மைச் சமூக கட்சிகள் பிரேமதாசவை ஆதரிக்கின்ற போதிலும், அவற்றின் ஆதரவாளர்கள் முழுமையாக தலைவர்களின் வேண்டுகோளுக்கு செவிமடுத்து முழுமையாக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. தேசிய மக்கள் சக்திக்கு அதிகரித்திருப்பதாக கூறப்படும் அமோக ஆதரவு தங்களது அரசாங்கம் தேர்தலுக்கு பிறகு உடனடியாக எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்து அதன் தலைவர்கள் தேர்தல் மேடைகளில் பிரகடனம் செய்கின்ற அளவுக்கு அவர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரா குமாரவுக்கு 3.16 சதவீத வாக்குகள் கிடைத்தன. அவரின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு என்னதான் மக்கள் ஆயிரக்கணக்கில் அணிதிரண்டுவந்தாலும், 50 சதவீத வாக்குகளை பெறுவதற்கு 47 சதவீத பாய்ச்சலை செய்வது என்பது சாதாரணமான விடயம் அல்ல. ஆனால் அரசியல் என்பது கணிதம் அல்ல, சமூக விஞ்ஞானம் என்று கூறும் அநுரா குமார தனது வெற்றியில் முழுமையான நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார் என்று தோன்றுகிறது. இலங்கையின் பாரம்பரியமான இரு பிரதான அரசியல் கட்சிகளாக விளங்கிய ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அவற்றின் முன்னயை செல்வாக்கு நிலையில் இன்று இல்லை. தனது கட்சியின் வேட்பாளராக போட்டியிடாமல் ஒரு சுயேச்சை வேட்பாளராக விக்கிரமசிங்க தேர்தலில் களமிறங்கியிருப்பதில் இருந்து அதைப் புரிந்து கொள்ளமுடியும். அது மாத்திரமல்ல, ஜனாதிபதி பாரம்பரியமாக தன்னால் கடைப்பிடிக்கப்பட்டுவந்த கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களின் ஆதரவில் முழுமையாக தங்கியிருப்பது இன்றைய இலங்கை அரசியல் விசித்திரங்களில் ஒன்று. ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கியை பிரேமதாச தன்னுடன் கொண்டு்வந்ததைப் போன்று ராஜபக்சாக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அமைத்து சுதந்திர கட்சியின் வாக்குவங்கியை தங்கள் வசமாக்கினார்கள். ஆனால் மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து அவர்கள் ஆட்சியதிகாரத்தை இழந்த பிறகு கட்சி பெருமளவுக்கு மக்கள் ஆதரவை இழந்துவிட்டது. தங்களுக்கு இருக்கக்கூடிய வாக்கு வங்கி சிதறிவிடக்கூடாது என்பதற்காகவே நாமல் ராஜபக்சவை பொதுஜன பெரமுன தேர்தலில் களமிறக்கியிருக்கிறது. சுதந்திர கட்சியின் ஒரு பிரிவினர் ஜனாதிபதியையும் இன்னொரு பிரிவினர் பிரேமதாசவையும் ஆதரிக்கிறார்கள். அதன் தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவளிக்க முன்வந்தாலும், அவரை ஏற்றுக்கொள்ள எந்த வேட்பாளரும் தயாராக இல்லை. அவரின் ஆதரவை விக்கிரமசிங்க வெளிப்படையாகவே நிராகரித்தார். மூன்று பிரதான வேட்பாளர்களில் எவரும் ஐம்பது சதவீதமான வாக்குகளைப் பெறுவது சாத்தியமில்லை என்று நம்பப்படும் நிலையில் அவர்கள் ஒவ்வொருவரும் பெறக்கூடிய வாக்கு வீதத்தைப் பற்றிய மதிப்பீடுகள் பெருமளவுக்கு நம்பகத்தன்மை கொண்டவையாக இல்லை எனலாம். கடந்த வாரம் ஜனாதிபதி விக்கிரமசிங்க மகியங்கனையில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்த ஒரு கருத்து பிரதான போட்டி தனக்கும் அநுரா குமாரவுக்கும் இடையிலானதாகவே இருக்கப்போகிறது என்ற ஒரு தோற்றப்பாட்டை காண்பிப்பதற்கு அவர் முயற்சிக்கிறார் என்பதை உதர்த்துகிறது. ” கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தல் இருமுனைப் போட்டியாகவே இருந்து வந்தது. ஆளும் கட்சி வேட்பாளரும் எதிரணியைச் சேர்ந்த பிரதான வேட்பாளரும் போட்டியிட்டார்கள். ஆனால், அந்த நிலைவரம் இன்று மாற்றமடைந்து இந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் இரு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பிரேமதாசவை அநுரா குமார வெற்றி கொள்வார். இவ்வருடம் பிற்பகுதியில் பிரதான எதிர்க்கட்சி தலைவராகவும் அவர் வருவார்” என்று ஜனாதிபதி கூறினார். ஜனாதிபதி தேர்தலில் உண்மையான போட்டி தனக்கும் அநுரா குமாரவுக்கும் இடையில்தான் இருக்கப்போகிறது என்று அவர் நம்புகிறார் அல்லது மற்றவர்கள் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்பதே இதன் அர்த்தமாகும். (ஈழநாடு ) https://arangamnews.com/?p=11220
-
தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு!
தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு! September 12, 2024 செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றவர்கள் வாக்களிப்பதற்கு இன்றே கடைசி சந்தர்ப்பம் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 4, 5, 6ஆம் திகதிகளில் நடைபெற்றது. அன்றைய தினங்களில் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு நேற்றும் இன்றும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இன்றைய தினமும் வாக்களிக்கத் தவறுபவர்களுக்கு இனி சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். எனவே, தபால் மூலம் வாக்களிக்கத்தகுதி பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்கை செலுத்தமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://eelanadu.lk/தபால்-மூல-வாக்களிப்பு-இன-2/
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை! adminSeptember 12, 2024 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதானிகள் குழு ஒன்று அண்மையில் கூடி இந்த முடிவு உறுதி செய்ததாக அதன் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சஜித் பிரேமதாசவைத் தவிர ஏனைய எந்த வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப் போவதில்லை எனவும் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் மத்திய செயற்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அமுலாக்குவது குறித்தே தற்போது ஆராயப்படுகிறது என்றும் சுமந்திரன் கூறியுள்ளார். https://globaltamilnews.net/2024/206654/
-
தமிழரசுக் கட்சியின் முடிவா? எம்.ஏ.சுமந்திரனின் முடிவா? – அகிலன்
தமிழரசுக் கட்சியின் முடிவா? எம்.ஏ.சுமந்திரனின் முடிவா? – அகிலன் September 9, 2024 ஜனாதிபதி தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதற்கு தமிழரசுக் கட்சி எடுத்துள்ள முடிவு கட்சியின் முடிவா அல்லது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவா என்ற கேள்வி எழுப்பப் படுகின்றது. இந்த முடிவு அரசியலில் கடுமையான வாதப் பிரதி வாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. வவுனியாவில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழுவின் விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் இருந்து செயற்பட்டவா் சுமந்திரன் என்பதில் சந்தேகம் இல்லை. என்ன அடிப்படையில், எதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு இன்று வரையில் தமிழரசு கட்சியின் சார்பில் யாருமே தெளிவான பதிலை கூறவில்லை. தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருந்த பிளவுகளையும் இது தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ் தேசிய அரசியலில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை ஏற்கனவே அறிவித்திருந்தன. ஆனால் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை அதில் ஏற்பட்டிருந்த பிளவுகளும், அதில் ஒரு தரப்பினர் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கே ஆதரவை வழங்க வேண்டும் என்று தீர்மானித்திருந்ததும் உடனடியான தீர்மானம் ஒன்றை தமிழரசு கட்சியால் எடுக்க முடியாமல் போனமைக்கு காரணமாக இருந்தது. பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பின் னர் அவற்றை ஆராய்ந்து அதில் யாராவது சமஷ்டிக்கு சமமான யோசனைகளையும் முன்வைக்கின்றார்களோ அவர்களை ஆதரிப்பது என்ற முடிவை தமிழரசுக் கட்சி எடுக்கும் என்று சுமந்திரன் ஏற்கனவே கூறியிருந்தார். இதனைத் தீா்மானிப்பதற்கான குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலைமையில் ரணில் விக்கிரம சிங்க, சஜித் பிரேமதாசா, அநுரகுமார திசநாயக்க ஆகியோரின் தேர்தல் விஞாபனங்கள் வெளி வந்துள்ளன. தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் கடந்த திங்கட்கிழமை வெளிவர இருந்த நிலைமையில், ஞாயிற்றுக்கிழமை வவுனி யாவில் கூடிய தமிழரசு கட்சியின் மத்திய குழு அவசரமாக தன்னுடைய முடிவை அறிவித்தது. சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்ற அவா்களது முடிவுக்கு என்ன காரணம் என்பது தெளிவாக கூறப்படவில்லை. பிரதானமான மூன்று வேட்பாளர்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுமந்திரன் கூறியிருக்கின்றார். ஆனால் சஜித் பிரேமதாசாவின் அறிக்கையில் அவ்வாறு என்ன விடயம் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை சுமந்திரன் விளக்க வில்லை.அதனை விட இந்தத் தேர்தல் விஞ்ஞா பனங்களை ஆராய்ந்து தமிழரசுக் கட்சியின் முடிவை எடுப்பதற்கு யார் பொறுப்பாக இருந்தார்கள் என்பது தொடர்பில் அவர் எதுவும் தெரி விக்கவில்லை. இதற்காக ஒரு குழுவைத் தமிழரசுக் கட்சி அமைத்திருந்தது. ஆனால், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூட இது குறித்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்ற கருத்தைத்தான் முதலில் தெரிவித்திருந்தாா். 24 மணி நேரத்துக்குள் அவா் தனது முடிவை மாற்றிக்கொண்டாா் என்பது வேறு விடயம்! இதன் மூலம் ஒரு விடயம் மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது, இது தமிழரசுக் கட்சியின் முடிவு என்பதைவிட, இது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு என்பதுதான் அது!சஜித் பிரேமதாசாவுக்கு தமிழரசு மட்டும் ஆதரவை வெளிப்படுத்தவில்லை. பல முஸ்லிம் கட்சிகள், மலையகக் கட்சிகள், வடக்கு கிழக்கு தளமாகக் கொண்டுள்ள சிறிய தமிழ் கட்சியில் உள்ள பலரும் கூட அவருக்கு ஆதரவை தெரிவித்து இருந்தனர். அவ்வாறு ஆதரவை தெரிவிக்கும் போது, அது தொடர்பாக சஜித் பிரேமதாசாவுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி, அது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகளையும் கையொப்ப மிட்ட பின்னரே ஆதரவை அவா்கள் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார்கள். ஆனால் தமிழரசு கட்சி மட்டும் எந்த ஒரு பேச்சு வார்த்தைகளையும் நடத்தாமல் புரிந்து உணர்வுடன்படிக்கை எதுவும் செய்யப் படாமல் தங்களுடைய ஆதரவை பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது. அதாவது ஒரு வெற்றுக்கா சோலையில் கையொப்பமிடுவதைப் போன்று ஒரு முடிவைத்தான் தமிழரசுக் கட்சி எடுத்துள்ளது. தமிழரசு கட்சியின் இந்த அவசர முடிவுக்கு என்ன காரணம் என்ற கேள்வி பலராலும் முன் வைக்கப்படுகின்றது. கடந்த வாரம் கொழும்பு வந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் பல கட்சிகளையும் சந்தித்திருந்தாா். நான்கு பிரதான ஜனாதிபதி வேட்பாளா்களுடனும் பேச்சுக்களை நடத்தி, அவா்களுடைய அணுகுமுறைகளை நாடி பிடித்துப் பாா்த்தாா். அந்த வரிசையில், தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் அவா் பேசினாா். அனைத்துக் கட்சிகளையும் அவா் ஒன்றாகவே சந்தித்தாா். இந்தப் பேச்சுக்களின் போது, தமிழ் மக்கள் தமது வாக்குகளை வீணடிக்காது பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகா் வலியுறுத்தியிருந்ததாக தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன. பொது வேட்பாளரை அவா் திட்டவட்டமாக நிராகரித்த தாகவும் தெரிகின்றது. இந்தப் பேச்சுக்களைத் தொடா்ந்து, “வெற்றி பெறக் கூடிய, நீங்கள் எதிர்காலத்தில் பேச்சு வார்த்தை நடத்தக்கூடிய ஒவருக்கு உங்களுடைய ஆதரவை வெளிப்படுத்துங்கள்” என்று இந்திய தரப்பு சொன்னதாக ஒரு தகவல் உள்ளது. காலம் தாழ்த்தாது இந்த முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் இந்திய தரப்பு கூறி இருந்ததாக தகவல். காலம் கடத்தப்படும் நிலையில், தமிழரசுக் கட்சிக்குள் இருந்தே பொது வேட்பாளருக்கான ஆதரவு அதிகரிப்பதையும் இந்தியத் தரப்பு அவதானித்திருக்கலாம். கடந்த காலங்களில் தேர்தல் இடம் பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னா்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அதன் தலைவராக இருந்த சம்பந்தன் அறிவித் திருக்கின்றார். அந்த வகையில் தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும் நிலைமையில் தங்களு டைய முடிவை அறிவிக்கலாம் என்று ஒரு நிலைப்பாட்டில் தான் தமிழரசுக் கட்சியும் இருந்ததாக கூறப்படுகின்றது. இருந்தபோதிலும் இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் வருகை, அவா் நடத்திய பேச்சுக்கள் என்பன தமிழரசு தன்னுடைய நிலைப்பாட்டை அவசரமாக அறிவிக்கத் துண்டி யதாக தமிழ் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்தில் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்துக்கு 25 பேர் ஆதரவளித்தனர். பொது வேட்பாளருக்கு ஆறு பேருடைய ஆதரவு இருந்தது. மூன்று பேர் கருத்துக்களை தெரிவிக்கவில்லை. தமிழரசு கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் இந்த தேர்த லில் தமிழரசு கட்சி எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்காமல் மக்கள் தாங்களாகவே தீர்மானிக் கலாம் என்ற முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இருந்தபோதிலும் சுமந்திரன் தரப்பு அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாக தெரிகின்றது. தீர்மானம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட தன் பின்னணியில் இடம் பெற்ற அரசியல் நிகழ்வுகள் இவைதான். தமிழ் மக்களுடைய கருத்துக்களை கவனத்தில் எடுக்காமல், ஜனாதிபதி வேட்பாளர் களால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை களை நுணுக்கமாக ஆராயாமல் தமிழரசு கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது. தமிழரசுக் கட்சி இந்த முடிவை எடுத்த போது சஜித் யாழ்ப்பாணத்தில் பரப்புரைகளை முன்னெடுத்துக்கொண்டிருந்தாா். அவருக்கு ஊடக வியலாளா் ஒருவா் இதனை தொலைபேசியில் சொன்னபோது, அவா் ஆச்சரியப்பட்டாா். செய்தி உண்மையா, என்பதை உறுதிப்படுத்துங்கள் என்று அவா் கேட்டுக்கொண்டதாகவும் தெரிகின்றது. ஏனெனில் அந்த செய்தியை அவா் நம்பவில்லை. காரணம், தமிழரசுக் கட்சியுடன் அவா் இது தொடா்பாக பேசவும் இல்லை, அவா்களுக்கு எந்த வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கவும் இல்லை. இந்த நிலையில், தமிழரசுக் கட்சியின் ஆதரவு சிங்களப் பகுதிகளில் தமக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் சஜித்தை சிந்திக்க வைத்துள்ளது! https://www.ilakku.org/தமிழரசுக்-கட்சியின்-முட/
-
தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் தமிழ்ப் பொது வேட்பாளர்
தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் தமிழ்ப் பொது வேட்பாளர் September 9, 2024 — எழுவான் வேலன் — ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தென்னிலங்கை அரசியல் பெரும் மாற்றங்களையும் திருப்பங்களையும் சந்தித்து வருவதை சாதாரண பத்திரிகை வாசகனால் விளங்கிக் கொள்ள முடியும். பழம் பெரும் அரசியல் கட்சிகள் இரண்டுமே தங்கள் கட்சியின் சார்பாக வலுவான ஒரு தலைவரை முன்னிறுத்த முடியாதளவுக்கு அரசியல் சூழல் மாற்றமுற்றிருக்கின்றது. இந்த மாற்றத்துக்கேற்ப ஒவ்வொருத்தரும் தங்கள் தங்கள் அரசியல் வியூகங்களை வகுத்துச் செயற்படுகின்றனர். அரசியல் வியூகம் எனும் போது கொள்கை சார்ந்த விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. இந்தக் கொள்கை சார்ந்தே வாக்குறுதிகள் நடைமுறைகள் என்பன அமைகின்றன. பசுத்தோல் போர்த்திய சிங்கமாக இருந்த ஜே.வி.பி கூட இன்று தன்னை மாற்றிக் கொண்டு பயணிக்க முன்வந்திருக்கின்றது. சமூக, பொருளாதார, உலகப் போக்குக்கேற்ப மாறித்தான் ஆக வேண்டும் என்பதுதான் அரசியலாகும். இந்த மாற்றம் இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் 1980களில் ஆரம்பித்து விட்டது என்பதை இந்தியா, சீனா, ரசியா போன்ற நாடுகளின் அரசியலை அறிந்தவர்களால் விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் துரதிஸ்ட்டவசமாக தமிழர்களின் பாராளுமன்ற அரசியல் தடம் 47ம் ஆண்டிலிருந்து எவ்வித மாற்றமும் இன்றி அதே பாதையில் செல்வதை வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தக்கான முதலாவது தேர்தல் 1947ம் ஆண்டே இடம்பெற்றது. பாராளுமன்றத்துக்கான 100 ஆசனங்களில் டி.எஸ்.சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 46 ஆசனங்களை வென்றது. 54 ஆசனங்கள் டி.எஸ்.சேனநாயக்காவுக்கு எதிராகவே இருந்தன. டி.எஸ்.சேனநாயக்காவின் சமயோசித நடவடிக்கையினால் சுயேட்சை வேட்பாளர்களை தம்பக்கம் இழுத்து அரசாங்கத்தினை அமைத்துக்கொண்ட போதும் ஒரு நிட்சயமற்ற அரசாங்கமாகவே டி.எஸ்.சேனநாயக்காவின் அரசாங்கம் காணப்பட்டது. டி.எஸ்.சேனநாயக்கா பிரதமரான பின்பு அவருடைய அரசாங்கத்தை தோற்கடித்து இடதுசாரிகளும் சிறுபான்மையினரும் சேர்ந்த அரசாங்கமொன்றை அமைக்கும் பொருட்டு ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் கூடிய இடது சாரிக் கட்சிகளும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் சிலரும் பொதுக் கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தை அமைப்பது என்று முடிவு எடுத்திருந்த போதிலும் பொதுக் கொள்கைக்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதில் எழுந்த முரண்பாடுகளை அடுத்து இம்முயற்சி பலனற்றுப் போய்விட்டது. சிறுபான்மையினரின் நலனுக்காக 50:50 கோரிக்கையில் விடாப்பிடியாக நின்ற ஜி.ஜி.பொன்னம்பலம் இடது சாரிகளால் முன்வைக்கப்பட்ட 60:40 என்ற முன்மொழிவையேனும் விட்டுக் கொடுப்போடு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தை அமைத்திருக்கலாம் ஆனால் அச் சந்தர்ப்பத்தினைத் தவறவிட்டார். திரு.அ.மகாதேவா ஜி.ஜி.யின் 50:50 கொள்கையுடன் முரண்பட்டு டி.எஸ்.சேனநாயக்காவுடன் சேர்ந்து உள்விவகார அமைச்சராக பதவி வகித்திருந்தார். மேற்படி 1947ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் டி.எஸ்சின் சகபாடியாக யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டபோது, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜி.ஜி. பின்வருமாறு உரையாற்றியிருந்தார். ‘மகாதேவா தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்து விட்டார். சோல்பரி அரசியல் திட்டம் தமிழ் மக்களுக்கு தீமையையே விளைவிக்கும். அத்தகைய அரசியல் அமைப்பை ஆதரித்து மகாதேவா வாக்களித்தார். அவரின் முடிவை தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர் என்பதை பிரிட்டிஷ் அரசுக்கும் உலகுக்கும் காட்ட வேண்டும். எனவே நீங்கள் திரண்டு வந்து எனக்கு வாக்களித்து மகாதேவாவின் துரோகத்தை அம்பலப்படுத்த வேண்டும்.’ (மேற்கோள், த.சபாரெத்தினம்) அத்துடன் அவருடைய சகபாடிகள் ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ எனும் இன உணர்ச்சியூட்டும் சுலோக அட்டைகளையும் விநியோகித்ததாக திரு.த.சபாரெத்தினம் குறிப்பிடுகின்றார். ஜி.ஜி.பொன்னம்பலத்துக்குக் கிடைத்த சந்தர்ப்பம் போன்றதொரு சந்தர்ப்பத்தை வரலாறு இம்முறையும் தழிழர்களுக்கு வழங்கியுள்ளது. மும்முனைப் போட்டி மிக வலுவாக இருக்கின்றது. எந்தவொரு வேட்பாளருமே அறுதிப் பெரும்பான்மையினைப் பெற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது அரசியல் ஆய்வாளர்கள் கூற வேண்டிய அவசியமில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்து சிங்கள மக்களின் நம்பிக்கையினைப் பெற்று அவர்களின் ஆதரவோடு தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு நோக்கி நகர வேண்டுமேயொழிய தமிழர்களின் திரட்சி, உலகுக்குக் காட்டுவது என்பதும் அதையொட்டி பேசப்படுகின்ற தமிழ் இன உணர்ச்சியூட்டும் பேச்சுக்களும் ஜி.ஜி.பொன்னம்பலம்த்தின் தொடர்ச்சியாகத்தான் இருக்கிறது. இந்த உலகுக்குக் காட்டுகின்ற சுத்துமாத்து அரசிலையும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற அவர்களின் முன்மொழிவுகளையும் ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் செய்து வந்துள்ளதை அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்கள் எடுத்துக் காட்டும். ஆனால் அத்தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறப்பட்டவற்றை நோக்கிய எந்த நகவர்வையும் அர்த்தமுள்ளவகையிலும் நடைமுறைச் சாத்தியமான வழியிலும் முன்னெடுத்தார்கள் இல்லை. ஆயினும் அனைத்துத் தேர்தல்களிலும் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எல்லாச் சலுகைகளையும் அனுபவித்தவர்கள்தான். மிகச் சிறந்த எடுத்துக் காட்டு 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்கும் போதுதான் முள்ளிவாய்க்கால் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து ஒரு போராட்டத்தை நடாத்த முடியாமல் எப்படியாவது புலிகள் அழியட்டும் என்று வேடிக்கை பார்த்திருந்தார்கள். அன்று அந்த 22 பேரும் சேர்ந்து ஏன் உலகுக்கு ஒரு செய்தியைத் தெரிவித்து முள்ளிவாய்க்காலுக்கு அப்பால் ஒரு மக்கள் போராட்டத்தை (இன்று கதிரைகளுக்காகச் செய்கின்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போன்றவை) செய்திருந்தால் அந்த யுத்தத்தில் அவ்வளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்க வாய்பிருந்திருக்காது. இந்த 22 பேரில் ஒருவர்தான் இன்றைய பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ஆகும். எனவே அந்த முள்ளிவாய்கால் யுத்தத்தில் மௌனமாயிருந்த அரியநேத்திரன்தான் இன்று உலகுக்குச் செய்தி சொல்ல வாக்குக் கேட்கின்றார். தமிழ் மக்களை ஒன்று திரட்ட முற்பட்ட ‘தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு’ தமிழரசுக்கட்சியையே சின்னாபின்னமாக்கியுள்ளது. மாவை ஒரு புறம், சிறிதரன் ஒரு புறம், சுமந்திரன் ஒரு புறம் என சிதறுண்டு கிடக்கின்றார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான பா. அரியநேத்திரன். பா. அரியநேத்திரன் இந்தப் பொதுவேட்பாளராக களம் இறங்குவதற்கான அவரின் தனிப்பட்ட அரசியல் தேவையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியில் சிறிநேசன், சாணக்கியன் போன்றவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு தனக்கு இல்லை என்பதும் கட்சிக்குள்ளும் அவர் ஒரு ஆளுமைமிக்கவராக இல்லாமல் அங்கும் ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும் சிறிநேசன் போன்றவர்களின் கருத்துகளுக்கு கை உயர்த்துபவராகவுமே இருந்து வந்திருக்கிறார். இது அவருக்கு தாழ்வுநிலை உளவியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தன்னை மற்றவர்களை விட உயர்ந்த இடத்தில் வைத்துக் காட்டவும் மற்றவர்களின் பார்வை தன்னை நோக்கித் திரும்பவும் இந்தப் பொது வேட்பாளர் என்ற சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தியுள்ளார். எனவே ‘தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு’ என்ற ஒன்றை உருவாக்கியவர்களுக்கும் அதில் வேட்பாளராக நிற்பவருக்கும் ஒரு வலுவான அரசியல் அடையாளம் தேவைப்படுகிறது. அந்த அடையாளத்தை நோக்கிய பணயத்தின் முதற்படிதான் இந்தப் பொதுவேட்பாளரும் ஆகும். அடுத்த பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குப் போட்டியாக இந்த தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பே போட்டியிடலாம். அதற்கான வலுவான விளம்பரமே தமிழ்ப் பொது வேட்பாளராகும். உலகில் தனது மக்களை இவ்வளவு தூரம் முட்டாளாக்கி அரசியல் செய்யும் தமிழ்க்; கட்சிகளை (தமிழரசுக் கட்சி உட்பட) எவரும் பார்த்திருக்க முடியாது. அது போல் தலைமைத்துவ ஒழுக்கம் இல்லாதவரை ஒரு ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியிருப்பதையும் பார்த்திருக்க முடியாது. இந்தச் சீர்கேடுகள் எல்லாம் தமிழ்த் தேசியத்தின் பெயரால் அரங்கேற்றப்படுகிறது. எனவே இந்த அரங்கேற்றத்தின் முட்டாள் பங்காளர்களாக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் என்றால் தயங்காமல் பொதுவேட்பாளருக்கு உங்கள் வாக்கையளித்து தமிழ் மக்கள் வரலாற்றில் இருந்து எதுவும் கற்றுக் கொள்ளாத முட்டாள்கள் என்பதை நிரூபியுங்கள். https://arangamnews.com/?p=11217
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று! September 10, 2024 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட சிறப்பு குழு இன்று வவுனியாவில் கூடவுள்ளது. மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், பா.சத்தியலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவே இன்று கூடுகின்றது. கட்சியின் பொதுச் செயலாளர் பா.சத்தியலிங்கத்தின் வவுனியா பணிமனையிலேயே இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளை ஆராய்ந்து அறிக்கையிடும் நோக்கில் இந்த சிறப்பு குழு நியமிக்கப்பட்டிருந்தது. இதன்படி, இன்று கூடி ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து முடிவுசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியிலுள்ள குழப்பங்களுக்கு முடிவு காணும் பொருட்டே இன்று கூடும் சிறப்புக் குழு விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்கும். இந்த பரிந்துரைகளின்படி, எதிர்வரும் 14ஆம் திகதி கூடும் கட்சியின் மத்திய குழு இறுதி முடிவை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://eelanadu.lk/இலங்கை-தமிழ்-அரசுக்-கட்ச-2/
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ரணிலுக்கும் அனுரவுக்கும் இடையில் ஒப்பந்தம் என்கிறார் சஜித்! adminSeptember 10, 2024 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 2ம் விருப்பு வாக்கு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். முதல் சுற்றிலேயே தனது கட்சி வெற்றி பெறும் என்பதால், 2வது விருப்புரிமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கவலைப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதிக்கு கடவுச்சீட்டு அல்லது வீசா வழங்க முடியாத நிலை காணப்படுவதாகவும், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த அரசாங்கத்தினால் முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரேமதாச, கடவுச்சீட்டு மற்றும் வீசா வழங்குவதில் ஏற்பட்டுள்ள கடுமையான தாமதங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு நாட்டிற்குள் நுழைவதற்கு தடையாக மாறி, ஆடைத் துறை மற்றும் சுற்றுலாத்துறையை பாதித்துள்ளது. அரசாங்கத்தின் ஊழல் ஒப்பந்தங்களே இந்த தாமதங்களுக்கு காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். அனுரவுடன் இரகசிய உடன்படிக்கைகளை மேற்கொள்வதை நிறுத்துமாறும், கடவுச்சீட்டு மற்றும் வீசா வழங்கும் நடைமுறைகளை சரிசெய்வதில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதியிடம் பிரேமதாச கோரியுள்ளார். இந்த நபர்களுக்கு நாட்டின் பொறுப்பு வழங்கப்படுமானால் மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது என தெரிவித்த அவர், ரணில்-அநுரவின் பெரும் சதியை முறியடிக்குமாறும் கேட்டுக்கொண்டார். https://globaltamilnews.net/2024/206596/ ரணில் தனது நண்பர் இல்லை என கூறுகிறார் அனுர! adminSeptember 10, 2024 பல அரசியல்வாதிகள் கூறுவது போன்று ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பதற்கோ அல்லது அவருடன் இணைந்து செயற்படுவதற்கோ விக்ரமசிங்கவுடன் ஏதேனும் இரகசிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தால், இருவரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிட்டிருக்க தேவையில்லை என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் உண்மையில், விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தன்னை தோற்கடிக்க ஒன்றிணைந்துள்ளதாக தான் கருதுவதாகவும். விக்கிரமசிங்க தன்னை ‘அவரது நண்பர்’ என்று தொடர்ந்து அழைக்கிறார். ஆனால் தாம் நண்பர்கள் அல்ல, அரசியல் போரில் தாம் போட்டியாளர்கள் என அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார். அண்மைக் காலங்களில் விக்ரமசிங்கவைச் சந்திக்கவில்லை என்றும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தனது பிரச்சாரத்தில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் NPP தலைவர் மேலும் தெரிவித்தார். விக்கிரமசிங்க மற்றும் SJB ஆகிய இரு பக்கங்களும் தங்களுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே ஜனாதிபதி தன்னுடன் இரகசிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக வதந்திகளைப் பரப்புவதாக அவர் கூறினார். இப்போது விக்ரமசிங்கவுடன் இருக்கும் SLPP உறுப்பினர்கள் சிலர் ஊழல் குற்றச்சாட்டுக்களால் மக்களால் நிராகரிக்கப்பட்டதால், அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இல்லை என்றும் திஸாநாயக்க மேலும் கூறினார். “அப்படிப்பட்டவர்களுடன் தான் எப்படி வேலை செய்ய முடியும்?” என திஸாநாயக்க கேள்வி எழுப்பி உள்ளார். அண்மைக்காலமாக விக்கிரமசிங்கவுக்கும் திஸாநாயக்கவுக்கும் இடையில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கு விக்கிரமசிங்க திஸாநாயக்கவிடம் கேள்விகளை முன்வைத்துள்ளார். NPP விஞ்ஞாபனத்தில் அறிவிக்கப்பட்ட திறந்த வர்த்தக உடன்படிக்கைகளை நீக்குவதன் மூலம் திஸாநாயக்கவால் எவ்வாறு ஏற்றுமதிகளை அதிகரிக்க முடியும் என்று அவர் கேட்டார். “எனது நண்பர் அனுரகுமார திஸாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் திறந்த வர்த்தக சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்துள்ளார். அதே நேரத்தில், ஏற்றுமதியை அதிகரிக்க உறுதியளித்தார். FTA இல்லாமல் ஏற்றுமதியை எப்படி ஊக்குவிக்க முடியும். என் கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பின்னர் அறிந்தேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று விக்கிரமசிங்க கூறினார். SJB ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், விக்ரமசிங்கவும் திஸாநாயக்கவும் தனக்குத் தடையாக இருக்க இரகசியமாகச் செயற்படுவதாகக் கூறி இந்த நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றியமையும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/206599/