Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு – கிளிநொச்சிக் கிளை ஏகமனதாக தீர்மானம்! adminSeptember 10, 2024 தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று (09.09.24) பிற்பகல் 3 மணியளவில் மாவட்டக் கிளை அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய நியமிக்கப்பட்ட குழு கூடாமலே கட்சியின் ஆதரவு அறிவிக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கட்சி அலுவலகமான அறிவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச வட்டார கிளைகளின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த 18-08-2024 அன்று மத்திய குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து யாருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு கூடி முடிவெடுக்காது முடிவு அறிவிக்கப்பட்டது தவறு. இன்றைய தினம் (10.09.24) குறித்த குழு கூடவுள்ளது. கூடி சில முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிவித்தார். நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கூடியிருந்த அனைவரும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம் எடுத்திருக்கிறார். https://globaltamilnews.net/2024/206589/
  2. மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன் வேண்டுகோள் September 9, 2024 தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களது தியாகத்தையும், போரின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் இழப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி செப்டம்பர் 21 ஆம் திகதி தமிழ்ப் பொது வேட்பாளரின் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்போம் என முன்னாள் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு அதரவாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பரப்புரை நடவடிக்கை அச்சுவேலி விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பரப்புரைக்கூட்டத்தில் உரையாற்றும் போது அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்தர். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எனது கணவர் எழிலனை இராணுவத்திடம் நேரடியாக கையளித்து இன்று 15 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை. சர்வதேச அளவில் நீதிகேட்டு போராடிக்கொண்டிருக்கிறேன். கடந்த தேர்களில் மாறி மாறி சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்தோம். ஆனால் எவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை காணவில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இரண்டு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தார். இம்முறை தமிழ் மக்கள் சார்பில் கூட்டாக பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் கொண்டுவரப்பட்டுள்ளார். தமிழர்களுடைய வாக்கு தமிழருக்கே என்ற அடிப்படையில் நாங்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். தமக்காக வாழாது எமது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உயிர்நீத்த பல்லாயிரம் மாவீரகளது தியாகத்தையும், போரின்போது கொல்லப்பட்ட மக்களது இழப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி தமிழர்களின் உரிமைச் சின்னமான சங்கு சின்னத்திற்கு நேராக ஒரே ஒரு புள்ளடியை போட்டு தமிழர்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்ட வேண்டும் என தெரிவித்தார். இப்பரப்புரை கூட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று ஜனாதிபதித்தேர்தலில் சங்கு சின்னத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்திருந்தனர். இதன் போது அப்பகுதியை சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். https://www.ilakku.org/lets-vote-for-sangh-with-the-memory-of-heroes/
  3. சிறந்த பொருளாதாரக் கொள்கை யாருடையது? ச.சேகர் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இன்னமும் இரண்டு வாரங்களுக்கு குறைவான நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் முக்கிய போட்டியாளர்கள் கடந்த வாரம் தமது பொருளாதாரக் கொள்கைகளை வெளியிட்டிருந்தனர். இதுவரை காலமும் நடைபெற்ற தேர்தல்களில் பொருளாதாரக் கொள்கை என்பது காகிதங்கள் சிலவற்றுக்குள் அடங்கியிருக்கும் பொருளாக மாத்திரமே அமைந்திருந்ததுடன், வாக்காளர்கள் மத்தியில் அவை தொடர்பில் பெரிதும் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனாலும், இம்முறை, நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, எதிர்வரும் காலங்களில் இன்னும் சவால்களுக்கு முகங்கொடுக்கவுள்ள நிலையில், முக்கியமான காலகட்டத்தில் நடைபெறும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவோர் வெளியிடும் பொருளாதாரக் கொள்கை என்பது தொடர்பில் பலரும் முக்கிய கவனம் செலுத்தியிருந்தனர். குறிப்பாக, பொருளாதார மீட்சியை நோக்கிய பயணத்தில், சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசு உடன்படிக்கையை ஏற்படுத்தி, அந்த வழிகாட்டல்களின் பிரகாரம் செயற்படும் நிலையில், அந்த உடன்படிக்கைகளின் நிபந்தனைகளின் அடிப்படையில் நாட்டு மக்களுக்கு பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் முக்கிய அபேட்சகர்கள், தாம் பதவிக்கு வந்தவுடன் இந்த உடன்படிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவது உள்ளடங்கலாக பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய கருப்பொருளாக இந்த பொருளாதாரக் கொள்கையை முன்வைத்துள்ளனர். இவ்வாறு தற்போதைய ஜனாதிபதியும், சுயேட்சை வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனம் அல்லது பொருளாதாரக் கொள்கையை ஆராய்வதற்கு வாய்ப்புக் கிட்டியிருந்தது. இந்த பத்தி உண்மையில் பொது மக்களுக்கு, நாட்டின் வாக்காளர்களுக்கு பொருளாதாரக் கொள்கை பற்றிய தெளிவுபடுத்தலையும், எந்தக் கொள்கையில் எவ்வாறான அம்சங்கள் அடங்கியுள்ளன என்பதைப் பற்றிய தகவல்களை தெளிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. மாறாக, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பக்கசார்பானதாக அமைந்திருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு தொடர விரும்புகின்றேன். பொது மக்களுக்கும் தேர்தலில் போட்டியிடுவோருக்கும் இடையில் கைச்சாத்திடப்படாத ஒரு உடன்படிக்கையாக இந்தக் கொள்கை அமைந்துள்ள போதிலும், இதுவரை காலமும் அந்தக் கொள்கை அவ்வாறு பார்க்கப்படவில்லை. பெருமளவு செலவு செய்யப்பட்டு, இந்த கொள்கை அச்சிடப்பட்டு, அதனை வெளியிடுவதற்கு பல தரப்பினரும் அழைக்கப்பட்டு வைபவம் ஏற்பாடு செய்யபட்டு பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டு வந்த போதிலும், அதிலுள்ள விடயங்கள் தொடர்பில் அந்ததந்த கட்சிகளின் தலைவர்கள் எந்தளவுக்கு விடயங்களை அறிந்து வைத்துள்ளனர் என்பது கேள்விக்குறியே. ஏனெனில் இந்தக் கொள்கைகளை தயாரிப்பது, அந்ததந்த துறைசார் நிபுணர்கள் குழுவினாலாகும். இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு எழுத்து மூலம் வெளியிடப்படும் இந்த கொள்கைப் பிரகடனத்தை ஆதாரமாகக் கொண்டு, அரசியல் தலைவர்களை பொறுப்புக்கூரச் செய்யும் நிலைக்கு தள்ளும் நிலைக்கு நாடு உயர வேண்டும். மேலேத்தேய நாடுகளில் இவ்வாறான ஒரு கலாசாரமே நடைமுறையிலுள்ளது. தேர்தல் மேடைகளில் ஒரு கட்சியினர் மற்றைய கட்சியினரை தாக்கி, ஏளனப்படுத்தி மக்களை கவரும் வகையில் கருத்துகளை வெளியிடுவதும், அதற்கு பதிலளிப்பது போன்று இதர தரப்பினர் தமது மேடைகளில் கருத்துகளை வெளியிட்டு மக்களின் கரகோஷங்களைப் பெறுவதும், நாட்டின் எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக அமையாது. மாறாக, தாம் என்ன செய்யப் போகின்றோம், எவ்வாறு செய்யப்போகின்றோம் என்பதை தெளிவுபடுத்துவதே பிரதானமானதாகும். நாட்டுக்கும், மக்களுக்கும் அவையே பயனுள்ளதாக அமைந்திருக்கும். அதனை உறுதி செய்யும் ஆதாரமாக இந்தக் கொள்கை அமைந்துள்ளது. போட்டியாளர்களின் ஏனைய கொள்கைகள் அரசியல் ரீதியில் மாறுபட்ட அம்சங்களைக் கொண்டதாக அமைந்திருந்தாலும், பொருளாதாரக் கொள்கை என்பது பெருமளவில் இலக்கங்கள் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டமைவதால், அவை தெளிவானதாக அமைந்திருக்க வேண்டும். பொதுவான கருத்தின் பிரகாரம் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வசம் பொருளாதாரம் தொடர்பில் அறிவார்ந்த அங்கத்தவர்கள் காணப்படுகின்றனர் எனும் கருத்து நிலவி வந்த நிலையில், அந்தக் கட்சியின் பொருளாதாரக் கொள்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த கொள்கை தொடர்பில் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்ப்பும் காணப்பட்டது. இந்தக் கொள்கையில் விஞ்ஞாபனம் சாத்தியப்படுமா என்பதை உறுதி செய்யும் செயற்திட்டம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கு அவசியமான கருப்பொருட்களை இந்த அணியின் கொள்கை கொண்டுள்ளது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளமையினால், அது தொடர்பில் பெருமளவில் அவரின் கொள்கையில் விளக்கமளிக்கப்படாமல் இருந்திருக்கலாம் எனும் அனுமானத்துடன், புதிதாக ஆட்சியேறவுள்ள இதர இரு தேர்தல் அபேட்சகர்களின் பொருளாதாரக் கொள்கைகளை ஒப்பீட்டளவில் எடுத்துக் கொண்டால், தேசிய மக்கள் சக்தியின் கொள்கையில் புதிய கடன் நிலைபேறாண்மை மதிப்பாய்வு (DSA) அவசியம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையான அம்சம் இந்த கடன் நிலைபேறாண்மை மதிப்பாய்வு (DSA) ஆகும். அவ்வாறு அதில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது, தற்போது ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தை இரத்துச் செய்து, புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்வதாகும். கடந்த ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வதற்கு சுமார் ஒரு வருட காலம் வரை தேவைப்பட்டதை நாம் அறிவோம். எவ்வாறாயினும், புதிய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அது போன்ற காலப்பகுதி தேவைப்படும்பட்சத்தில், நாட்டுக்கு அவசியமான அந்நியச் செலாவணி வரத்தை இந்த ஒரு வருட காலப்பகுதியினுள் எவ்வாறு உறுதி செய்வது என்பது தொடர்பான விளக்கங்கள் தேசிய மக்கள் சக்தியின் கொள்கையில் இல்லை. இது மிகவும் சிக்கலான செயலாகவே பார்க்கப்படுகின்றது. வெளிநாடுகளில் வதியும் தமது ஆதரவாளர்களின் உதவியைக் கொண்டு, சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஒரு வருட காலப்பகுதியில் திரட்டிக் கொள்வது என்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகும். பிணையம் ஒன்றை உருவாக்கி அவற்றில் முதலிடச் செய்வது எனும் கொள்கையை பின்பற்றினாலும், அது தொடர்பான தெளிவுபடுத்தல்கள் எதுவும் அவர்களின் கொள்கையில் இல்லை. எனவே, இந்தக் கொள்கை அரசியல் ரீதியில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் அநுரகுமார திசாநாயக்கவின் பின்னாலுள்ள மக்களுக்கு ஒருவித ஏமாற்றத்தை வழங்குவதாகவே அமைந்துள்ளது. உயர்ந்த மட்ட, தெளிவற்ற பொருளாதாரக் கொள்கை ஒன்றே அவர்கள் வசம் உள்ளது. மாறாக, ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கையில், இந்த கடன் நிலைபேறாண்மை மதிப்பாய்வு (DSA) என்பதில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், நீடித்த நிதி வசதி உடன்படிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதனூடாக, உயர் தொழில்நுட்ப, உயர் திறனை அடிப்படையாகக் கொண்டு, ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக தற்போது காணப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடித்த நிதி வசதி உடன்படிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதனை மேற்கொள்வது பற்றியே ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொருளாதாரக் கொள்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நாட்டில் மூலதனம் இன்மை, போதியளவு புத்திஜீவிகள் இன்மை போன்ற சூழலில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது புறக் காரணிகளில் தங்கியிருக்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கை அமைந்துள்ளது. மேலும், சிங்கப்பூரில் காணப்படுவதைப் போன்று, அரசாங்கத்தின் பொறுப்பிலுள்ள நிறுவனங்களை நிர்வகிப்பதற்கு தாய் நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்து, அரச நிறுவனங்களை அதன் கீழ் கொண்டு வந்து, அரசின் தலையீடின்றி அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை பேணுவது போன்ற ஒரு முறைமையைப் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளது. தற்போதைய ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையை எடுத்துக் கொண்டால் அதில் தெளிவான இலக்குகள் என எதுவும் உள்ளடக்கப்படவில்லை. கடந்த பதினைந்து, இருபது வருட காலப்பகுதியில் வெளியிடப்பட்டிருந்த தேர்தல் விஞ்ஞாபனங்களில் அடங்கியிருந்த அம்சங்களை திரட்டி அதனை உள்ளடக்கியதாகவே ஜனாதிபதியின் கொள்கை அமைந்திருந்தது. நாட்டை கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் மீட்டு இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளமையால் தம்மை தெரிவு செய்யுமாறு வாக்காளர்களிடம் வேண்டி ஜனாதிபதியினால் எழுதிய கடிதம் மாத்திரமே இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இவ்வாறு ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொருளாதாரக் கொள்கை பல நடைமுறைச் சாத்தியமான, செயற்திட்டங்கள் பலதைக் கொண்டுள்ளமை உண்மையில், இதுவரையில் கண்டுற்ற பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தூர நோக்குடைய ஒரே திட்டமாக அமைந்துள்ளது. குறிப்பாக முக்கிய மூன்று போட்டியாளர்களை சார்ந்த கொள்கைகளில் இது முதன்மை பெற்றுள்ளது என்பது எமது கருத்து. உண்மையில் இதுபோன்ற கொள்கை தேர்தல் நடைபெறுவதற்கு ஆகக்குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தால், அது தொடர்பில் ஆராய்ந்து, பல தரப்பினரின் கருத்துகளைப் பெற்று, அந்த கொள்கையை மேம்படுத்திக் கொள்வதற்குக்கூட கட்சிகளுக்கு சந்தர்ப்பம் காணப்பட்டிருக்கும். ஆனாலும் இந்த விஞ்ஞாபனங்கள் தேர்தலுக்கான திகதி அருகில் தெரியும் சுமார் இரண்டு வாரங்கள் வரையுள்ள நிலையில் வெளியிடப்பட்டுள்ளமையானது, அனைத்து தரப்பினராலும் இவற்றை முழுமையாக வாசித்து, அதிலுள்ள அம்சங்களை தெளிவுபடுத்திக் கொள்ள முடியுமா எனும் கேள்வியும் இல்லாமல் இல்லை. இருந்தாலும், எமது வாசகர்களுக்கு எம்மாலான தெளிவுபடுத்தலைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த பத்தி அமைந்திருக்கும் என நாம் கருதுகின்றோம். இன்னும் ஐந்து வருட காலப்பகுதிக்கு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலாக இந்த ஜனாதிபதித் தேர்தல் அமைந்திருக்கும். மீண்டும் எமக்கு நெருக்கடிகளுக்குள் சென்றுவிட முடியாது. தமக்கு விருப்பமான போட்டியாளருக்கு வாக்களிக்கும் உரிமை சகலருக்கும் உண்டு, வழமை போலல்லாது, இம்முறை யாருக்கு வாக்களிப்பது என்பதை இன்னமும் தீர்மானிக்க முடியாமல் மதில் மேல் பூனை போன்ற நிலையிலிருக்கும் வாக்காளர்கள் எவரேனும் இந்த பத்தியை வாசித்துவிட்டு சாமர்த்தியமான தீர்மானத்தை மேற்கொள்வார்களாயின், நாட்டுக்கு அது வெற்றியாக அமையும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இவ்வாறான கொள்கைகள் வெளிப்படுத்துவதுடன் நின்றுவிடாமல், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை அரசியல் ரீதியான தலையீடுகள் இன்றி செயற்படுத்துவது என்பது மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக இந்த மூன்று கொள்கைகளிலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கொள்கையை கொண்டுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கை, அந்த கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆட்சிபீடம் ஏறினால், அவர்கள் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும். https://www.tamilmirror.lk/வணிகம்/சிறந்த-பொருளாதாரக்-கொள்கை-யாருடையது/47-343484
  4. முந்தி பெரிய வீடாக 🏡 இருந்தது. இப்ப பலருக்கு “சின்ன வீடாக” ஆகிவிட்டது😂🤣
  5. ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வடக்கை அபிவிருத்தி செய்வார் : இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை நம்பிக்கை ! By kugen எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (07) நடைபெற்ற இரண்டு "இயலும் ஸ்ரீலங்கா" வெற்றிப் பேரணிகளில் கலந்து கொண்ட பின்னர் காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். தனது இல்லத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை மாவை சேனாதிராஜா அன்புடன் வரவேற்றார். இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா, ஜனாதிபதியுடனான சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரங்கள்,தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நீண்ட காலமாக தீர்க்கப்படாத வடக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் பாரிய பொறுப்பு உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார். https://www.battinews.com/2024/09/blog-post_819.html
  6. அரியநேத்திரனை எம்.ஜி.ஆர் ஆக்கியது யார்? - நிலாந்தன் ஒரு நண்பர் பகிடியாகச் சொன்னார், “சுமந்திரன் நம்பியாராக மாறி அரியனேந்திரனை எம்ஜிஆர் ஆக்கிவிட்டார், இனி நடக்கப் போவது எம்ஜிஆருக்கும் நம்பியாருக்கும் இடையிலான சண்டை. தமிழ் கூட்டு உளவியல் என்பது கதாநாயகன்-வில்லன் என்ற துருவ நிலைப்பட்ட மோதலை ரசிப்பது. நமது புராணங்களில் இருந்து திரைப்படங்கள் வரையிலும் அப்படித்தான் காணப்படுகின்றன. இந்நிலையில் தமிழரசுக் கட்சியை தமிழ்க் கூட்டு உணர்வுக்கு மாறாக சஜித்தை நோக்கி திருப்பியதனால் சுமந்திரன் இப்பொழுது வில்லனாக காட்டப்படுவார். அவர் வில்லனாகவும் அரியநேத்திரன் கதாநாயகனாகவும் காட்சிப்படுத்தப்படும் பொழுது அங்கே ஒரு திரைப்படம் ஓடும். அது தமிழ் பொது உளவியலைக் கவரும். இனி தமிழ்ப் பொது வேட்பாளருக்கான பிரச்சாரம் தன்பாட்டில் நடக்கும். கதாநாயகனுக்கு வில்லனுக்கு இடையிலான மோதல். அது அரியனேத்திரனை நோக்கி அதிகம் வாக்குகளை ஈர்க்கும்” என்று. ஆனால் அரியநேத்திரனை ஒரு பொது வேட்பாளராக முன்னிறுத்திய பொதுகட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மக்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள்… ”தமிழ் மக்களைத் திரட்டுவது; அல்லது ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் மக்களை ஒன்றிணைப்பது; அல்லது தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது ஒரு நபருக்கு எதிராகவோ ஒரு கட்சிக்கு எதிராகவோ செய்யப்படும் விடயம் அல்ல என்று. ஒரு நபருக்கு எதிராகவோ ஒரு கட்சிக்கு எதிராகவோ தேசத்தைக் கட்டி எழுப்ப முடியாது. தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது ஆக்கபூர்வமானது. அது எதிர்மறையானது அல்ல. இந்த இடத்தில் வில்லர்களை முன்வைத்து அவர்களுக்கு எதிராக ஒரு மக்கள் கூட்டத்தை கட்டமைப்பது நிரந்தரமானது அல்ல. சரியானதுமல்ல” என்பது தமிழ் மக்கள் பொதுச்சபைக்குள் அங்கம் வகிக்கும் கருத்துருவாக்கிகளின் நிலைப்பாடாகும். ஆனால் தேர்தல் களம் அந்த நிலைபாட்டிற்கு மாறாக கதாநாயகன்-வில்லன் என்று துருவ நிலைப்படத் தொடங்கி விட்டது. அதாவது தமிழ்ப் பொது உளவியலின் பொதுவான வாய்ப்பாட்டுக்குள் அது விழத் தொடங்கிவிட்டது. இதனால் அரியநேத்திரனை நோக்கி குவியும் வாக்குகளின் தொகை அதிகரிக்கலாம். தமிழரசுக் கட்சியில் உள்ள சுமந்திரன் அணியின் இந்த முடிவு ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்டது. அதில் புதிதாக ஒன்றும் இல்லை. ஏற்கனவே கட்சியின் இரண்டு மாவட்டக் கிளைகள் பொது வேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டை உறுதியாக எடுத்திருந்த ஒரு பின்னணியில், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு சஜித்தை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கின்றது. கட்சியின் மூத்த உறுப்பினராகிய சிவஞானம் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை சஜித்தை ஆதரிப்பது மக்களுடைய கூட்டுணர்வுக்கு எதிரானது என்பது அவருக்கு தெரிகிறது. இது கட்சித் தொண்டர்களுக்கும் தெரிகிறது. கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போல, அரசியலை கணிதமாக, விஞ்ஞானமாக அணுகும் யாருக்கும் அது தெளிவாகத் தெரியும். சஜித்திடம் 13ஐத் தவிர வேறு எதுவும் இல்லை. சமஸ்டி கட்சி ஆதரவாளர்கள் 13-வது திருத்தத்தை ஒரு வாக்குறுதியாக ஏற்றுக் கொள்ள தயாரா? 13 ஒரு புதிய தீர்வு அல்ல. ஏற்கனவே யாப்பில் இருப்பது. அப்படிப் பார்த்தால் யாப்பை நிறைவேற்றுவேன் என்று கூறும் ஒரு வேட்பாளருக்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி கேட்கின்றதா? இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால், ஒரு நாட்டின் அதி உயர் சட்ட ஆவணமாகிய யாப்பை நிறைவேற்றுவது தான் அந்நாட்டின் தலைவர்களுடையதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். இலங்கைத் தீவு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையைக் கொண்டது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எட்டு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிகள் பதவியில் இருந்திருக்கிறார்கள். இவர்களில் யாருமே யாப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தவில்லை என்பது எதனைக் காட்டுகிறது? நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிகள் இலங்கைத் தீவின் யாப்பை மீறி ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பதை காட்டுகின்றது. கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக யாப்பை மீறும் ஒரு பாரம்பரியத்தை கொண்ட ஒரு நாட்டில் இப்பொழுது ஒரு தலைவர் யாப்பை அமல்படுத்துவேன் என்று கூறுகிறாராம் அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமாம். சுமந்திரன் அணியின் இந்த முடிவு தமிழரசு கட்சிக்குள் மேலும் பிளவுகளை அதிகப்படுத்துமா? பொது வேட்பாளர் விடயம் தமிழரசு கட்சிக்குள் ஏற்கனவே காணப்படும் தலைமைத்துவப் போட்டியை மேலும் ஆழப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான அலையொன்று எழத் தொடங்கியிருக்கும் ஒரு பின்னணியில், சுமந்திரன் அணியின் முடிவு வந்திருக்கிறது. இலங்கை போன்ற நாடுகளில் தேர்தலுக்கு முதல் வாரம் அல்லது சில நாட்களுக்கு முன்னர்தான் வாக்களிப்பு அலை தோன்றும். தமிழ்த் தேசிய அரசியலுக்கும் இது பொருந்தும். தமிழ் நடுத்தர வர்க்கத்தில் ஆங்கிலம் தெரிந்த ஒரு பகுதியினர் ரணில் மீதும் ஆர்வமாக காணப்படுகிறார்கள். மாற்றத்தை விரும்பும் மற்றொரு பிரிவினர் அனுரமீதும் ஆர்வமாக காணப்படுகிறார்கள். இப்பொழுது தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணியானது சஜித்தை ஆதரிக்குமாறு கேட்டு இருக்கிறது. அதனால் தமிழ் வாக்காளர்கள் நான்கு முனைகளில் சிதறடிக்கப்படுவார்களா? அவ்வாறு தமிழ் வாக்காளர்கள் சிதறடிக்கப்படக்கூடாது என்று முடிவெடுத்துத்தான் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கிறார். தமிழ் மக்களைக் கோர்த்துக்கட்டுவது, கூட்டிக்கட்டுவதுதான் என்று பொது வேட்பாளரை ஆதரிக்கும் தரப்பு தொடர்ச்சியாக கூறி வருகின்றது. ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முதன்மைக் காரணம் தமிழ் மக்களை ஒன்றிணைப்பது. தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பது. தமிழ்க் கூட்டு உளவியலை பலப்படுத்துவது என்று அவர்கள் கூறி வருகிறார்கள். அதாவது அவர்கள் தமிழ் வாக்காளர்களைத் திரட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால் சுமந்திரனும் அவருடைய அணியும் தமிழ் வாக்காளர்களைச் சிதறடிக்கலாம் என்று நம்புகிறார்கள். உள்ளதில் பெரிய கட்சி என்ற அடிப்படையில் தாங்கள் எடுத்த முடிவை தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்று அவர்கள் நம்பக் கூடும். ஆனால் தமிழ் மக்கள் கூட்டுணர்வோடு முடிவெடுத்த தருணங்களில் கட்சியையோ சின்னத்தையோ தலைவர்களையோ பொருட்படுத்தவில்லை என்பதற்கு கடந்த நூற்றாண்டு முழுவதிலும் உதாரணங்கள் உண்டு. கடந்த நூற்றாண்டில்,ஜி ஜி பொன்னம்பலம் மகாதேவாவை தோற்கடித்தார். “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று கூறித் தோற்கடித்தார். ராமநாதன் குடும்பத்தில் வந்த உயர் குழாத்தைச் சேர்ந்த மகாதேவாவை ஜி.ஜி தோற்கடித்தார். செல்வநாயகம் ஜிஜியை இலட்சியத்தின் பெயரால் தோற்கடித்தார். அதன் பின் தமிழ் ஐக்கியத்தின் பெயரால்; கொள்கைக்காக, தமிழர் விடுதலைக் கூடடணியின் உதய சூரியன் சின்னத்துக்கு தமிழ் மக்கள் வாக்குகளை அள்ளிக் கொடுத்தார்கள். அதன் பின் இந்திய அமைதி காக்கும் படை நாட்டில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில், நடந்த பொதுத் தேர்தலில், முன்பின் அறிமுகம் இல்லாத சுயேட்சை சின்னத்துக்கு தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். உதய சூரியனைப் பின்னுக்குத் தள்ளினார்கள் .வேட்பாளர்களின் முகமே தெரியாத ஒரு போர் சூழலில், தமிழ் மக்கள் ஒன்று திரண்டு வெளிச்ச வீட்டு சின்னத்துக்கு வாக்களித்து, 13 ஆசனங்களை ஈரோஸ் இயக்கத்துக்குக கொடுத்தார்கள். தேர்தலில் ஈரோஸ் இயக்கத்தின் பிரமுகராகிய பராவை இந்திய அமைதி காக்கும் படை கைது செய்து முகாமில் அடைத்து வைத்திருந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பொழுது கைதியாக இருந்த பராவை “நீங்கள் இப்பொழுது எம்பி ஆகிவிட்டீர்கள் வெளியே போகலாம்” என்று கூறி அனுப்பி விட்டார்கள். அத்தேர்தலுக்குப் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதயமாகிய பொழுது உதயசூரியன் சின்னத்தை தமிழ் மக்கள் தோற்கடித்தார்கள். உதய சூரியன் சின்னமானது ஒரு காலம் வெற்றியின் சின்னமாக இருந்தது. ஐக்கியத்தின் சின்னமாக இருந்தது. அப்படிபட்ட உதயசூரியன் சின்னத்தை தோற்கடித்த ஒரு மக்கள் கூட்டம், முகம் தெரியாத வேட்பாளர்களுக்கு வாக்களித்து சுயேட்சையை வெல்ல வைத்த ஒரு மக்கள் கூட்டம், கூட்டுணர்வோடு முடிவெடுக்கும் பொழுது, சின்னமும் கட்சியும் ஒரு பொருட்டே அல்ல. https://www.nillanthan.com/6886/
  7. தெற்கின் தேர்தல் வெற்றி – தமிழர்களுக்கு கரி நாள் என்பதை வெளிப்படுத்துவோம் : அருட்தந்தை மா.சத்திவேல் September 7, 2024 தெற்கின் தேர்தல் வெற்றி தினம் என்பது தமிழர்களுக்கு இன்னும் ஒரு கரி நாள் என்பதை வெளிப்படுத்துவோம். அதுவே எமக்கான தேர்தல் வெற்றியாக அமையட்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று சனிக்கிழமை (07) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்திற்கான சக்தியாக தம்மை அடையாளப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசநாயக்க அண்மையில் யாழில் நடத்திய ஜனாதிபதி தேர்தல் வாக்கு வேட்டை பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் மக்களின் அபிலாசைகள் என தான் நினைத்ததை மட்டும் காட்டி பேசியதோடு மாற்றத்திற்கான தெற்கின் மக்களோடு இணைந்து வடகிழக்கு தமிழர்களும் தமக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக அச்சுறுத்தும் தொனியில் பேசியது அரசியல் அநாகரீகமாகும். தமிழர்களின் ஜனநாயக உரிமைக்கு எதிரானதும் இன அழிப்பின் முகம் கொண்டதுமான வார்த்தைகளாகும். இதனை வன்மையாக கண்டிப்பதோடு வடகிழக்கு தாயக மக்கள் பேரினவாத கருத்தியல் கொண்ட இன அழிப்பு ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதோடு இவர்களின் வெற்றி தினத்தினை தமிழ் தேசமெங்கும் இன்னுமொரு ஒரு கரி நாளாக வெளிப்படுத்த வேண்டும். அநுரகுமார தமது உரையில் எந்த பாதையை தேர்ந்தெடுக்க, வேண்டும் யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதை மறைமுக அச்சுறுத்தும் பாணியில் கூறியதோடு மாற்றத்தை விரும்பும் தெற்கு மக்களோடு இணைய வேண்டும் என்று அழுத்தமாகவும் குறிப்பிட்டார். அவ்வாறு வாக்களிக்காவிட்டால் தமிழ் மக்கள் அனுபவிக்க நேரிடும் என்பதையும் நாசுக்காக வெளியிட்டார். இது அவர்களின் 1988/89 கால நாகரிகத்தை காட்டி நிற்கின்றது. வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை துண்டாடி பேரினவாதத்தின் வரலாற்று பெருமையை தமதாக்கிக் கொண்டவர்கள் இவர்கள். அவர் அந்த பிரிப்பு நிலையில் நின்று நாட்டின் பிரச்சினையை வடக்கு,கிழக்கு, தெற்கு என ஒன்றாகக்கூடி பேசித்தீர்ப்போம் என தனது உரையில் குறிப்பிட்டார். வடகிழக்கை இனி இணைய விடமாட்டோம் என் நிலைப்பாட்டின் தொனியாகும். இதுவே அவர்கள் அரசியல் கலாச்சாரம். இத்தகைய கலாச்சாரத்தோடா தமிழர்களை ஒன்று சேர அழைப்பு கொடுக்கின்றார்கள்? யாழின் கூட்டத்தில் மகிந்த, ரணில் மைத்திரி போன்றோரும் அவர்களின் சகாக்களும் புரிந்த பொருளாதார குற்றங்களுக்கும், நாட்டின் பொது சொத்தினை கொள்ளையடித்தமைக்கும் தண்டனை கொடுப்போம் என்று கூறியவர் தமிழர்களுக்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாத அரசு படையினர் புரிந்த யுத்தக் குற்றங்களை மறைத்து யுத்தத்திற்கு முகம் கொடுக்காத மக்கள் முன் நிற்பதைக் போல் நின்றார். இதே அநுர குமார அண்மையில் இன்னுமொரு தேர்தல் பிரச்சாரத்தின் போது “நாம் ஆட்சிக்கு வந்தால் யுத்த குற்றவாளிகள் என அடையாளப்படுத்துவோரை தண்டிக்க மாட்டோம்” எனக் கூறியது மகிந்த, கோத்தா, மைத்திரி, ரணில் வரிசையில் நின்று இனப்படுகொலை யுத்த குற்றங்களுக்கும் தமிழர்கள் எதிர்பார்க்கும் நீதி தன்னுடைய ஆட்சியில் இல்லை என்பதை வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார். உயிர்ப்பு தின (2019) குண்டுத்தாக்குதல்களுக்கு காரணமானோரை கண்டுபிடித்து தண்டிப்போம் என்று தெற்கில் வாக்கு கேட்பவர்கள் வடக்கிலே 30 வருட காலமாக அப்பாவிகளை கொலை செய்தவர்களை, விஷக் குண்டுகளை மக்கள் மீது பொழிந்தவர்களை, பல்லாயிரக்கணக்கானோர் காணாமலாக்கபட்டமைக்கு காரணமானவர்களை வெளிப்படுத்தமாட்டோம் என தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் உண்மையை மறைத்து தன்னுடைய அரசியலுக்காக தெற்கில் ஒரு பகுதியினருக்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதலின் உண்மை தன்மையை வெளிப்படுத்துவோம் என கூறுவது அரசியல் வெட்கச் செயலாகும். அண்மையில் அநுரகுமார யாழில் நடத்திய கூட்டத்தில் மட்டுமல்ல வெறும் பிரதான வேட்பாளர்கள் வடகிழக்கில் நடாத்திய எந்த ஒரு வாக்கு வேட்டை கூட்டத்திலும் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழர்களின் நிலங்கள் மற்றும் சிங்கள பௌத்த தொல்லியல் திணைக்களத்தின் சிங்கள பௌத்த மயமாக்கல், சிங்கள பௌத்த குடியேற்றங்கள், தனியார் காணிகளில் புத்தர் சிலைகளை வைத்தல், அடாத்தாக விகாரைகளை கட்டுதல் போன்றவற்றிற்கு வருத்தமோ தடுத்து நிறுத்துவதாகவோ கருத்து கூற மறுத்துள்ளமை அவையெல்லாம் தமது காலத்திலும் தொடரும் என்பதையே உணர்த்துகிறது. இதுவும் ஒருவகையில் யுத்த பிரகடனமே. பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிக் கதிரையை தமதாக்க தமிழர்களை வெறும் கறிவேப்பிலையாகவும் ரம்பையாகவும் பாவித்து விட்டு தூக்கி எறியவே முற்படுகின்றனர்.சுயநல அரசியலுக்கு தம்மை இரையாக்கிக்கொண்ட தமிழ் தேசிய அரியதரம் பூசிக்கொண்ட தமிழ் அரசியல் தரப்பினரும் தேர்தல் அரசியல் களத்தில் நின்று தமிழர்களை பலி கொடுக்கும் அரசியலை முன்னகர்த்துகின்றனர். சமாதானப்படையாக தமிழர் தாயகத்தில் காலடி வைத்த இந்திய இராணுவத்தையும், இந்தியாவின் முகத்தையும் இதற்கு அவர்கள் யார் என்பதையும் உலகிற்கு வெளிக்காட்டிய தியாகி திலீபனின் உயிர்தியாக மாதம் இதுவாகும். அவரின் உண்ணாவிரத போராட்டம் எமது அரசியலுக்கும் தேசியம் காக்கும் செயற்பாட்டுக்கும் உந்து சக்தியாக இருப்பதோடு எதிராளிகளில் முகத்திரையை கிழிக்க தேசமாக ஒன்று சேர்வோம். தெற்கின் தேர்தல் வெற்றி தினம் என்பது தமிழர்களுக்கு இன்னும் ஒரு கரி நாள் என்பதை வெளிப்படுத்துவோம். அதுவே எமக்கான தேர்தல் வெற்றியாக அமையட்டும். https://www.ilakku.org/தெற்கின்-தேர்தல்-வெற்றி/
  8. தமிழரசின் தீர்மானம் இறுதியானது adminSeptember 6, 2024 சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது என எடுத்த தீர்மனம் முறைப்படி எடுக்கப்பட்டதே என தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக மீண்டும் கூட்டத்தை மீண்டும் கூட்ட வேண்டிய தேவை இல்லை. கூட்டம் நடைபெற்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கட்சியில் அவர் இவர் என பார்த்துக்கொண்டு இருந்தால் கூட்டத்தை நடத்த முடியாது. வந்த உறுப்பினர்கள் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் அவர்கள் எடுத்த தீர்மானம் சரி. எடுத்த தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என்றால் அதனை சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதனை அவர்கள் சொல்லலாம். ஆனால் கட்சி தீர்மானம் , உரிய கோரத்துடன் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் எனவே அந்த தீர்மானம் வலுவான தீர்மானம் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/206506/
  9. தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை! தமிழ் சிவில் சமூக அமையம் (Tamil Civil Society Forum) adminSeptember 7, 2024 06.09.2024 எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் தேசிய அரசியல் அபிலாசைகளைக் கூட்டாகப் பிரகடனம் செய்யஇ தமிழ்ப் பொது வேட்பாளர் திரு. பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு (சங்குச் சின்னத்திற்கு) வாக்களிக்க தமிழ் சிவில் சமூக அமையம் கோருகின்றது. 21 செப்டம்பர் 2024 அன்று இலங்கையில் நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலில் முதற் தடவையாக தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு என்ற அமைப்பொன்றை உருவாக்கித் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்காக சங்குச் சின்னத்தில் திரு பாக்கியசெல்வம் அரியநேத்திரனை தமிழ்ப் பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். காலங்காலமாகச் சிங்களப் பேரினவாதத்தின் இனவழிப்பை எதிர்கொண்டு போராடி வருகின்ற தமிழ்த் தேசம் தனது உயிரினும் மேலாகக் கருதி வரும் தேசிய அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கான ஒருவாய்ப்பாக வரவிருக்கின்ற தேர்தலைப் பயன்படுத்துவதற்காக தேர்தலில் எம்மால் முன்மொழியப்பட்டுள்ள திரு பா. அரியநேத்திரன் அவர்களுக்கு எமது வாக்குகளை வழங்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் பணிவன்புரிமையுடன் தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம். 1982 முதல் இன்றுவரை இலங்கையில் நடைபெற்ற சனாதிபதித் தேர்தல்கள் எல்லாம் சிங்கள-பௌத்த பேரினவாதத் தலைவரைத் தேரந்தெடுப்பதாகவே அமைந்தன. இத் தேர்தல்களில் தமிழ் மக்கள் ஆதரவளித்த தென்னிலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த சிங்கள வேட்பாளர்கள் கூட தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டதுமில்லை, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற சனாதிபதிகளும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பு நடவடிக்கைகளைக் கைவிட்டதுமில்லை. அதனால் இனிவரும் சனாதிபதித் தேர்தல்களிலும் வழமைபோல் தென்னிலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதில் எமக்கு எந்த ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே வரலாறு எமக்குத் தரும் வழிகாட்டலாகும். எனவேதான் இம்முறை நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலைத் தமிழ் தேசத்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பான தமிழ் மக்களின் தெளிவான ஆணை ஒன்றைச் சர்வதேசத்திற்கும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்தும் வகையிலான தேர்தலாக மாற்றிப் பயன்படுத்தும் நோக்கில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் கூட்டு முயற்சியில் தமிழ் சிவில் சமூக அமையமும் இணைந்து கொண்டது. சங்குச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்ப்பொது வேட்பாளரான திரு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும் வாக்குகள் ஒரு தனி நபருக்கான வாக்குகள் எனக் கருதாமல், அவ்வாக்குகள் தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான வாக்குகளே என்ற புரிதலின் அடிப்படையிலேயே பொது வேட்பாளர் எனும் இச்செயற்திட்டத்தில் நாம் இணைந்து கொண்டோம். எமது பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்படும் வேளையில், ஒற்றையாட்சியைத் தமிழ் மக்களால் தீர்வாக ஆராயவும் முடியாது எனக்கூறியது போலஇ 13ம் திருத்தத்தையும் தீர்வொன்றின் அடிப்படையாகக்கூட ஏற்க முடியாது என வெளிப்படையாக நிராகரிக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் எப்போதும் போல உறுதியாகக் கோரியிருந்தோம். எனினும் பல்வேறு பங்கீடுபாட்டாளர்கள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் என்ற அடிப்படையில் எமது கருத்துக்கள் அனைத்தும் முழுமையாகவும், நாம் விரும்பிய மொழிப் பிரயோகத்திலும் உள்ளடக்கப் பட முடியாத யதார்த்த சூழ்நிலையையும் நாம் கருத்திற் கொள்கிறோம். இத்தகைய பின்னணியில், தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான எமது விரிவான வாசிப்பையும் நிலைப்பாட்டையும், பின்வரும் விடயங்கள் தொடர்பிற் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். 1. அரசியற் தீர்வின் பகுதியாக உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பானது ஒரு புதிய கூட்டு அரசை இத்தீவில் உருவாக்குவதாக அமைய வேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, இறைமை ஆகியவற்றினை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் தேசங்களின் ஒன்றிணைவாக அமையும் அரசாக அது அமைய வேண்டும். அதாவது புதிய அரசானது ஒரு பன்மைத்தேசிய அரசு (Plurinational) என்ற அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும். 2. ஒற்றையாட்சி அரசு முறைமையையும் அதனது ஒரு அங்கமான 13ம் திருத்தத்தையும் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிப்பதோடு, இவை அரசியற் தீர்வுப் பேச்சுவார்த்தைக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட அமைய மாட்டாது என்பதே தமிழர்களின் நிலைப்பாடாகும். ஒற்றையாட்சி அரசுக்குட்பட்ட எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தமிழர் தரப்புப் பங்குபற்றக் கூடாது. 3. தமிழர்களின் சுயநிர்ணய அலகானது, அவர்களின் தாயகமானது, ஒன்றிணைந்த (தற்போதைய) வடக்கு கிழக்கு மாகாணங்களை கொண்டதாக அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு தமிழ்த் தரப்பு பேச்சுவார்த்தை நடாத்தத் தயாராக இருக்க வேண்டும். . 4. பாதுகாப்பு நாணயக் கொள்கை உட்பட ஒரு சில விடயங்கள் மாத்திரமே மத்திய அரசின் அதிகார எல்லைக்குள் இருப்பதோடு எஞ்சிய அதிகாரங்கள் (Residual Powers) மாநிலங்களிற்கு உரியவையாக அமைய வேண்டும். குறிப்பாக கல்வி, அரச காணி, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, வரி இறுக்கும் அதிகாரம் ஆகியன நிச்சயமாக மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை விடயங்களை உள்ளடக்கி தமிழ் மக்கள் பேரவையால் தமிழ் மக்களின் கருத்துகளை உள்வாங்கி உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு முன்மொழிவைத் தமிழ் மக்கள் தமது அரசியல் நிலைப்பாடாக முன்வைக்க வேண்டும். 5. தொடரும் இனவழிப்பின் ஒரு பகுதியாக போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு பன்னாட்டு குற்றவியல் விசாரணையை தமிழ் மக்கள் வேண்டுவதோடு, உண்மையைக் கண்டறிதல் உள்ளிட்ட உள்ளக செயன்முறைகள் மூலமாக பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகள் சாத்தியமற்றவை எனத் தமிழ் மக்கள் கருதுகின்றனர். 6. 2009ல் ஆயுதப்போர் முடிவடைந்த பின்பும் வழமைபோன்றும்இ பல்வேறு புதிய வழிகளிலும் முன்னரிலும் விட மூர்க்கமாகவும் வேகமாகவும் தமிழ் மக்களின் மேலாகக் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைச் சிறீ லங்கா அரசுகள் தொடர்வதைத் தடுத்து நிறுத்த சர்வதேச தலையீடும், சர்வதேச அனுசரணையுடன் கூடிய பொறிமுறையும் கட்டாயமானதும் அவசரமானதுமான தேவைகளாகும். 7. தமிழ் தேசம் தமக்குரித்தான சுயநிர்ணய உரிமையின்பாற்பட்டு சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறையான பொது வாக்கெடுப்பு (ஒப்பங் கோடல்) ஒன்றின் மூலம் தமது அரசியல் தெரிவை மேற்கொள்ளும் வகையில் ஐ.நா.வினால் மேற்பார்வை செய்யப்படும் ஒரு பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றனர். ஆனால்இ 13ஆம் திருத்தத்தை நிராகரித்து தேர்தல் விஞ்ஞாபனமானது தெளிவாக நிலைப்பாடு எடுக்கவில்லை என நாம் கருதுகிறோம். ஆயுத மோதல்களுக்குப் பின்னர் இனப்பிரச்சனைக்கான தீர்வைப் 13ம் திருத்தத்திற்குள் முடக்குவதை நோக்கமாகக் கொண்டு உரையாடல்கள் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அனுபவ ரீதியாக மாகாண சபை முறையானது எவ்விதத்திலும் எமது நாளாந்த பிரச்சனைகளைக்கூடக் கையாள்வதற்குப் போதுமானதன்று என்பது எமது பட்டறிவு. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிற் பெரும்பாலானவை ஒற்றையாட்சியை மறுப்பதாகத் தமிழ் மக்களுக்குச் சொன்னாலும், பிராந்திய மற்றும் பூகோள அரசியற் சக்திகளின் அழுத்தத்தின் காரணமாக நடைமுறையில் ’13 அல்லது 13 பிளஸ்’ என்ற வரையறைக்குள்ளேயே, அதாவது ஒற்றையாட்சி முறைமைக்கு உட்பட்டே, தமது நடைமுறை அரசியலைச் செய்து வருகின்றனர். இது தவறானது எனத் தமிழ் சிவில் சமூக அமையம் கடந்த 15 வருடங்களில் பல முறை சுட்டிக் காட்டியுள்ளது. ஆனாலும் இன்று எமது தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், 13ம் திருத்தம் தொடர்பில் வெளிப்படையான நிராகரித்தல் அற்ற ஒரு மௌனத்தொனியே வெளிப்பட்டுள்ளது. தமிழ்ப் பொது வேட்பாளரின் விஞ்ஞாபனம் ஒற்றையாட்சியை நிராகரிக்கின்றமையானது 13ஆவது திருத்தத்தை அரசியல் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட தமிழ் மக்கள் கருத முடியாது என்று கூறுவதாகவே அர்த்தம் கொள்ளப்பட வேண்டும் என நாம் கருதுகிறோம். தமிழ் சிவில் சமூக அமையம் தனது நிலைப்பாடுகளாகவும், விஞ்ஞாபனம் தொடர்பான விரிவான வாசிப்பாகவும், பகிர்ந்து கொண்டவற்றில் இத் தேர்தல் விஞ்ஞாபனம், சில விடயங்களை வெளிப்படையாகவும் சில விடயங்களைப் பூடகமாகவும் வெளிப்படுத்துகிறது. இதனால் மக்கள் மத்தியிலும் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் அவதானிக்கிறோம். தமிழ் சிவில் சமூக அமையம் இந்நிலை தொடர்பில் ஆழ்ந்த கவலையும் கரிசனையும் கொள்கின்ற அதே வேளை தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு என்ற தமிழ்த் தேசிய அரசியல் முயற்சி வெற்றி பெற வேண்டும் என நாம் வலுவாக நம்புகின்றோம், விரும்புகின்றோம். இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே நாம் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோருகின்றோம். இத்தகைய அணுகுமுறையில் இருந்து – வாசிப்பிலிருந்து எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை நாம் வேண்டுகிறோம். தமிழ் அரசியல் நேர்மைப் பாதையில் தடம் பதிக்க நாம் உளச்சுத்தியுடன் தொடர்ந்து பயணிப்போம். தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு அத்தகைய பாதையில் செல்வதை உறுதி செய்ய எம்மாலான அனைத்தையும் நாம் தொடர்ந்து செய்வோம். 2009இன் பின்னர் நடைபெற்ற மூன்று சனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ் மக்கள், தென்னிலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த சிங்கள வேட்பாளருக்கே வாக்களித்தனர். எமது வாக்கைப் பெற்றவர்கள் தேர்தலில் வென்று பதவிக்கதிரை ஏறினாலும் அல்லது தோற்றாலும் ஒரு போதும் சிங்கள் பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலிலிருந்து அவர்கள் வெளியேறவில்லை என்பதே எமது அனுபவமாகும். இந்நிலையில் இம்முறை இனவாதிகளான சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை விட தமிழ் மக்களின் அபிலாசைகளை தனது தேர்தல் கோரிக்கைகளாக முன்வைத்துள்ள, தமிழ்ப் பொதுக்கட்டமைப்பால் முன்மொழியப்பட்டுள்ள திரு பா. அரியநேத்திரன் அவர்களுக்கு எமது வாக்குகளை வழங்கி எமது இலட்சிய உறுதியை வெளிப்படுத்துவோம் என தமிழ் மக்களைக் கோருகின்றோம். நன்றி. (ஒப்பம்) அருட்பணி வீ. யோகேஸ்வரன் இணைப் பேச்சாளர் தமிழ் சிவில் சமூக அமையம் (ஒப்பம்) பொ. ந. சிங்கம் இணைப் பேச்சாளர் தமிழ் சிவில் சமூக அமையம் https://globaltamilnews.net/2024/206509/
  10. ஐந்து அம்ச கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் ரணிலுக்கு ஆதரவு adminSeptember 7, 2024 புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்வைக்கப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவற்றை செயற்படுத்தி தருவதாக வழங்கிய வாக்குறுதி அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க விற்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தை நேற்றைய தினம்(6) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில்,,, யுத்தத்திற்கு பின்னர் சுமார் 12,000 முன்னாள் போராளிகள் வடக்கு கிழக்கில் வாழ்வதாகவும் தமிழ் அரசியல் தலைவர்களோ புலம்பெயர் அமைப்புக்கள் இதுவரை அவர்களுக்கு முழுமையான வாழ்வாதார உதவிகளை வழங்க வில்லை எனவும் அதன் அடிப்படையில் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், அதே நேரம் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கைது செய்யப்படக் கூடாது, அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், இந்த நாட்டில் தமிழ் மக்கள் கெளரவமாக வாழ்வதற்கான சுகந்திரத்தை உறுதிப்படுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அவற்றை நிறைவேற்றி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். இதன் அடிப்படையிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரம சிங்க விற்கு ஆதரவளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/206519/
  11. கோட் : விமர்சனம்! Sep 05, 2024 18:15PM தமிழ் சினிமாவில் மசாலா படங்கள் எனும் ரகம் பரிணாமம் அடைந்து கொண்டே வருகிறது. கத்திச் சண்டை, அம்மா சென்டிமென்ட், தங்கச்சி சென்டிமென்ட், பாட்டாளி வர்க்கத்தின் காவலன் போன்ற விஷயங்களை கொண்டது தான் எம்ஜிஆர் ஃபார்முலா. இதுதான் தமிழ் சினிமாவின் முதல் மசாலா ஃபார்முலா. அதற்கு பிறகு, நாட்டுப்பற்று, அதே சென்டிமென்ட், காதல், பாசம் , இரண்டாம் பாதியில் ஒரு குத்துப் பாட்டு என அந்த ஃபார்முலாவில் அந்தந்த காலத்திற்கு ஏற்ப சிறிதளவு மாற்றங்களுடன் மசாலா படங்கள் வெளியாகின. அதன்படி, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள ‘ மாடர்ன் மசாலா ‘ திரைப்படம் தான் ‘ கோட் ‘ படத்தின் ஒன்லைன் ‘ சாட்ஸ் ‘ எனும் ரா ஏஜென்சியைச் சேர்ந்த விஜய், பிரசாந்த், பிரபு தேவா, மற்றும் அஜ்மல் பல்வேறு ஸ்பை ஆபரேஷன்களை பிசிறின்றி செய்து முடிப்பதில் வல்லவர்கள். இந்த நிலையில், ஒரு ரகசிய ஆபரேஷனுக்காக விஜய் பாங்காக் செல்ல நேர்கிறது. தன் குடும்பத்துடன் பேங்காக் செல்லும் விஜய் சந்திக்கும் பிரச்சனை, அதனால் ஏற்படும் இழப்பு, அந்த இழப்பிற்கு பிறகு அவர் வாழ்க்கையில் நடக்கும் திருப்பம் இதுவே ‘ கோட் ‘ படத்தின் கதை. அனுபவ பகிர்தல் நடிகர் விஜய்க்காகவே எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் தான் ‘கோட் ‘. ஆனால், டான்ஸ், காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என்று அவரின் டிரேட் மார்க் காட்சிகள் நிறைந்திருந்தது. அது மட்டுமில்லாமல், ஒரு புத்தம் புதிய விஜய்யை பார்த்த அனுபவம் நமக்கு கிடைத்தது. அதற்கு காரணம் மகன் விஜய் கதாபாத்திரத்தில் இருந்த விஜய்யின் நடிப்பு. ஏறத்தாழ எஸ். ஜே.சூர்யா மோடில் இருந்தது. படத்தில் பயன்படுத்தப்பட்ட ‘டிஏஜிங்’ தொழில்நுட்பம் பல்வேறு விமர்சனங்களை ஆரம்பத்தில் சந்தித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் படக்குழுவினர் அதை மிகச் சிறப்பாக படத்தில் சரி செய்துள்ளனர் . அப்பா – மகன் என இரண்டு கதாபாத்திரங்களையும் வேறு படுத்தி பார்க்க முடிந்தது. 90′ ஸ் ஸ்டார்களான பிரசாந்த், பிரபு தேவா போன்றவர்களை விஜய்யின் நண்பர்களாக பார்ப்பது மிகப் பொருத்தமாக இருந்தது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை சில இடங்களில் இரைச்சலாக தெரிந்தாலும், பல இடங்களில் கொஞ்சம் பழைய யுவனை பார்க்கமுடிந்தது. அடுத்தடுத்து வரும் படத்தின் திருப்பங்கள், சர்ப்ரைஸ்கள் அழுத்தமாக இல்லாவிடினும் நம்மை ஆச்சரியப்படுத்த தவற வில்லை. திரையில் ஆங்காங்கே உதிர்ந்த சில அரசியல் வசனங்கள், விஜய்யின் சொந்த வாழ்க்கை குறித்த வசனங்கள் போன்றவை வெங்கட் பிரபு படங்களின் டிரேட் மார்க். குறிப்பாக விஜய் தன்னுடைய அடுத்த சினிமா வாரிசாக ஒருவரை பூடகமாக நியமிக்கிறார். அந்த காட்சி இன்னும் சில நாட்களுக்கு பேசு பொருள். மொத்தத்தில் ஒரு மாடர்ன் மசாலா திரைப்படம் பார்த்த அனுபவம் வெகு நாட்களுக்கு பிறகு பலருக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. விரிவான விமர்சனம் தமிழ் சினிமாவில் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட கதையை கமர்ஷியல் பேக்கேஜிங்கோடு, ஜனரஞ்சக தன்மை மாறாது படைப்பதே வெற்றிகரமான கமர்ஷியல் திரைப்படம் என்று கருதப் படுகிறது. மக்களுக்கு தெரிந்த ஒரு கதையை ஒவ்வொரு முறையும் புதுமையாக அவர்களுக்கு படைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் கமர்ஷியல் படங்களின் சொல்லப்படாத விதி. அந்த வகையில், அதை சரியாகவே செய்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. அப்பா – மகன் கதாபாத்திரங்களில் விஜய் , அவரை பழிவாங்க துடிக்கும் வில்லன், வில்லனை விஜய் எப்படி வென்றார் என்பதே சாராம்சம். ஆனால், அதற்குள் பல்வேறு மாடர்ன் யுக்திகள் கையாளப்பட்டுள்ளதே ‘ கோட்’ டின் சிறப்பு. ஏனென்றால் , தற்போது சினிமா பார்க்கும் வெகுஜனத்தின் அதிகபட்ச எதிர்பார்ப்பு, ஒரு படம் அவர்களை ஆச்சரியப்படுத்த வேண்டும். தியேட்டரில் ‘வைப் ‘ஆக வேண்டும். அதை ஓரளவு சரியாக செய்தாலே அந்த படத்திற்கு வெற்றி நிச்சயம். ஆனால், அந்த யுக்தியை மட்டுமே முழுதாய் நம்பாமல் , புதிய கதாபாத்திர வடிவமைப்பில் விஜய், டீ ஏஜிங் போன்ற தொழில்நுட்ப முன்னெடுப்பு எனப் பல்வேறு வித்தியாச முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் வெங்கட் பிரபு. தொழில்நுட்ப ரீதியாக விஜய் காந்தின் ஏ.ஐ தோற்றம் கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்தாலும், அது பயன்படுத்தப்பட்ட விதம் நல்ல ஐடியா. டிஏஜிங்கில் மொத்த செலவை போட்டதாலோ என்னவோ, மற்ற சாதாரண காட்சிகளில் கிராபிக்ஸ் கொஞ்சம் சுமாராக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாடர்ன் மசாலா படத்திற்கான பிரம்மாண்ட கலர்ஃபுல் ஒளிப்பதிவை செய்துள்ளார் சித்தார்த் நுனி. முதல் பாதியில் இடைவேளை காட்சி வருவது வரை திரைக்கதையில் சிறிய தொய்வு தெரிகிறது . முதல் பாதியின் நீளத்தை நிச்சயம் குறைத்திருக்கலாம். அல்லது, அந்தப் பாதியில் வரும் சென்டிமென்ட் காட்சிகளை இன்னும் அழுத்தமாக அமைத்திருந்தால் நம்மால் அந்த கதாபாத்திரங்களோடு ஒட்டியிருக்க முடியும். படத்தின் முக்கியமான ட்விஸ்டாக இவர்கள் நம்பியிருந்த இடைவேளை காட்சி ட்விஸ்ட் நாம் கணிக்கும் வகையிலே இருந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் சில சர்ப்ரைஸ், ட்விஸ்ட் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. கே. வி. ஆனந்த் ஸ்டைலில் முக்கிய கதாபாத்திரங்களின் மறைவிற்கு பின் வரும் ஒரு டூயட் பாடல் பெரிதாக படத்தோடு ஓட்டவில்லை. ஆனால், விசில் போடு , மட்ட போன்ற பாடல் தியேட்டரில் வருகிற இடம் மற்றும் அவைகள் காட்சியமைக்கப்பட்ட விதம் தியேட்டரை அலற வைத்தது. படத்தில் ட்விஸ்ட்கள் எக்கச்சக்கமாக உள்ளது. தியேட்டரில் ரசிகர்கள் ஆர்ப்பரிக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு வசனங்கள், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவைகளுக்கான காரணம் கதையில் உள்ளதா? அவை அழுத்தமாக சொல்லப்பட்டதா? நம் ரசனையை மேம்படுத்துகிறதா? போன்ற கேள்விகளை நீங்கள் கேட்பீர்கள் என்றால், இது உங்களுக்கான படம் அல்ல. ஆனால் நிச்சயம் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த ஒரு தரமான மசாலா படம் பார்த்த அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய ட்ரீட். அதிலும் மகன் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த நடிப்பு அவரின் இத்தனை கால அனுபவத்தை காட்டியது. நிச்சயம் குடும்பத்தோடு தியேட்டரில் காணலாம். வித்தியாசமான பரிணாமத்தில் ஒரு வழக்கமான மசாலா படத்தை பார்த்த அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். https://minnambalam.com/cinema/goat-review-vijay-venkat-prabhu-treat/
  12. கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த வேளை,காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 34வது நினைவு தினம் Vhg செப்டம்பர் 05, 2024 1990ம் ஆண்டு செப்டம்பர் 5ம் திகதி, கிழக்குப் பல்கலைக கழகத்தில், அகதிகளாகத் தஞ்சமடைந்திருந்த 158 பேர், இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், அவர்களது 34வது நினைவு தினம் இன்று(05-09-2024) அனுஸ்டிக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டாலும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இழந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டதில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இன்று, வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில், கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் என்பன இணைந்து நினைவேந்தல் நிகழ்வினை ஏற்பாடு செய்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி,கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றிய தலைவர் வி.கஜரூபன்,சிவில் சமூக செயற்பாட்டாளர் திருமதி ரஜனி ஜெயபிரகாஸ், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் திட்டமுகாமையாளர் செல்வி நா.மிருஜா உட்பட பெருமளவானோர் நினைவேந்தலில் கலந்துகொண்டனர். பல்கலைக்கழக வளாகத்தின் முன் பாதாதைகளை ஏந்தியவாறு தமது உறவுகளுக்கு நீதி கோரி கவன ஈர்ப்புபேராட்டத்த்திலும் இவர்கள் ஈடுபட்டனர். https://www.battinatham.com/2024/09/158-34.html
  13. தமிழரசு கட்சியின் முடிவு – தேர்தல் களத்தில் மாற்றம்: அரியநேத்திரன் வெற்றிபெற முடியாது என்கிறார் சுமந்திரன் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் தமிழ் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்காது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு தமிழரசு கட்சி எடுத்த முடிவை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கில் அரசியல் இயக்கம் கணிசமான அளவில் மாறியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு நாங்கள் முடிவு செய்தமையால், வடக்கி – கிழக்கின் பெரும்பான்மையான வாக்குகள் சஜித்துக்குத்தான் கிடைக்கும்.. தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய இருவரே முக்கிய வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். “நாங்கள் சஜித்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்,” என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எனினும், பொது தமிழ் வேட்பாளரை நிறுத்தும் யோசனையை சுமந்திரன் நிராகரித்தார், அத்தகைய வேட்பாளர் ஜனாதிபதியாக வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதால் இது தவறான உத்தி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பா.அரியநேத்திரன் தேர்தலில் போட்டியிடுவதால் தமிழ் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்காது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 2019 தேர்தலில் நாங்கள் சஜித்தை ஆதரித்தோம், 2024ஆம் ஆண்டிலும் அவருக்கு ஆதரவளிப்போம் என சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார். முன்னதாக சஜித், அனுர மற்றும் ரணில் விக்கிரமசிங்க மத்தியில் வாக்குகள் பிளவுபட்டிருந்த நிலையில், சஜித்துக்கு அதரவளிக்க தமிழரசு கட்சி எடுத்த முடிவினார் இப்போது தேர்தல் களம் மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். சஜித்துடன் முறையான உடன்பாடு இல்லை என தெரிவித்த அவர், “எங்களுக்கு அனுரவை நன்றாகத் தெரியாது எனவும் ரணிலையும் நாங்கள் நன்கு அறிந்துள்ளதால் அவரை நிராகரித்தோம் எனவும் கூறியுள்ளார். கடந்த காலங்களில் தமிழர்கள் ராஜபக்சக்களுக்கு எதிராக வாக்களித்ததால் ரணில் வடக்கு மக்களின் வாக்குகளை வென்றார். ஆனால் தற்போது அவர் ராஜபக்ச அணியுடன் இணைந்திருப்பதால், ரணில்-ராஜபக்ஷ கூட்டணிக்கு எங்கள் மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் என மேலும் கூறியுள்ளார். https://akkinikkunchu.com/?p=290547
  14. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமாகுமரனுடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு! செப்டம்பர் 04, 2024 பிரித்தானியாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவருமான உமா குமரனுக்கும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு, பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த செவ்வாய் நடைபெற்றுள்ளது. தமிழ்மக்களின் மீது இலங்கை அரசால் கட்டமைக்கப்பட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலை, அதற்கான நீதிப் பொறிமுறை, ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் சமகால இன ஒடுக்குமுறைகள், மக்களின் அடுத்தகட்ட எதிர்பார்ப்புகள் நோக்கிய அரசியல் முன்னகர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. குறித்த சந்திப்பில், பிரித்தானிய தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் பிரதிநிதி சென் கந்தையா மற்றும் பிரித்தானியாவின் சிரேஷ்ட சட்டத்தரணிகளுள் ஒருவரான கணா கணநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2024/09/blog-post_71.html
  15. யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை adminSeptember 5, 2024 யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் மற்றும் முதியோர் இல்லங்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு , வடமாகாண ஆளூநர் மற்றும் யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளையதம்பி ஜெயக்குமார் எனும் முதியவரே அவ்வாறு கோரியுள்ளார். குறித்த முதியவர் ஒரு காலை இழந்து, நோய்வாய்ப்பட்டு ஆதரவற்ற நிலையில் மானிப்பாய் உதயதாரகை சன சமூக நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தஞ்சமடைந்துள்ளார். அவரை அப்பகுதி மக்கள் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்க்க முயற்சிகளை எடுத்தனர். முதியோர் இல்லங்கள் அவரை ஏற்க மறுத்த நிலையில் , கிராம சேவையாளரின் சிபாரிசு கடிதத்துடனும் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் எந்த முதியோர் இல்லமும் அவரை சேர்க்கவில்லை அந்நிலையில் பிரதேச செயலரின் சிபாரிசு கடிதத்துடன் பளையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ப்பதற்காக தமது செலவில் வாகனம் ஒன்றில் அவரை ஊரவர்கள் அழைத்து சென்ற போதிலும் , அங்கும் அவரை சேர்த்துக்கொள்ள நிர்வாகம் மறுத்துள்ளது. அதனால் மீண்டும் தமது சனசமூக நிலையத்திற்கே அவரை அழைத்து வந்திருந்தனர். எந்தவொரு முதியோர் இல்லங்களோ , அமைப்புக்களோ , நிறுவனங்களோ தன்னை பொறுப்பேற்கததால் , தன்னை கருணை கொலை செய்து விடுமாறு , வடமாகாண ஆளூநர் மற்றும் யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். https://globaltamilnews.net/2024/206463/
  16. இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரான சஜீத்தை ஆதரிப்பதான தமிழரசுக் கட்சியின் முடிவின் சாதக, பாதகம் என்ன?’ கேள்வி, பதில் வடிவில்(பகுதி 3) September 4, 2024 — வி. சிவலிங்கம் — கேள்வி: நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார, சமூக நிலமைகளை அவதானிக்கும்போது இத் தேர்தல் என்பது பல சிக்கலான நிலமைகளைத் தோற்றுவிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. உங்கள் அவதானிப்பு என்ன? பதில்: மிகவும் அச்சமான சூழல் உண்டு என்பதை அவதானிக்க முடிகிறது. உதாரணமாக இலங்கை கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு கட்சி ஆட்சிமுறைக்குள் வளர்ந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் மிகவும் பலம்வாய்ந்த சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் தன்னை இராணுவத்துடன் இணைத்துள்ளது. அதாவது பலமான பரஸ்பர நலன்களைப் பாதுகாக்கும் ஒரு தரப்பு வளர்ந்துள்ளது. இத் தரப்பினர் நாட்டின் பொருளாதாரத்தின் கணிசமான பிரிவை தமது ஆதிக்கத்திற்குள் வைத்துள்ளனர். இவர்களே நாட்டின் அரசியல் அமைப்பினை அதிகாரக் குவிப்பை நோக்கி எடுத்துச் சென்றுள்ளதோடு, ஊழல், விரயம், குடும்ப ஆதிக்கம் என்ற ஜனநாயக விரோத நிலமைகளையும் ஏற்படுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே அவர்களால் குடும்ப ஆதிக்கத்தையும், தனிநபர் ஆதிக்கத்தையும் பலப்படுத்தும் விதத்தில் அரசியல் யாப்பு விதிகளை ஏற்ற விதத்தில் மாற்ற முடிந்துள்ளது. அத்துடன் ஒரே தரப்பினரே அதிகாரத்தைக் குவிக்கவும், சாத்தியப்படாத போது அதிகாரத்தைத் தளர்த்தவும் முடிந்துள்ளது. தற்போதுள்ள நிலமைகள் இந்த அதிகார சக்திகளின் நீண்டகால நலன்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. தேர்தலை ஒத்திவைக்க இறுதி வரை முயற்சிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின்னரும் அம் முடிவுகள் வாய்ப்பான நிலமைகளைத் தோற்றுவிக்காவிடில் தேர்தல் முடிவுகள் ஒத்திவைக்கப்படுவதற்கான பல அடையாளங்கள், சமிக்ஞைகள் தென்படுகின்றன. இதற்கு உதாரணமாக பாகிஸ்தானில் தேர்தலின் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் உதாரணமாக அமைகின்றன. குறிப்பாக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தேர்தலுக்கு முன்னரே சிறையிலடைக்கப்படுவதும், தேர்தல் முடிவடைந்ததும் முடிவுகளில் ராணுவம் தலையிட்டு மாற்றங்களை ஏற்படுத்தியதும் எம் முன்னுள்ள வரலாறுகள். கேள்வி: இப் பதில் மிகவும் பாரதூரமான எச்சரிக்கைகளைத் தருவதாக உள்ளது. மேலும் விளக்க முடியுமா? பதில்: தற்போதைய தேர்தல் என்பது இரண்டு பிரதான அம்சங்களைச் சுற்றியதாக உள்ளது. அதாவது நாட்டின் பொருளாதாரம் என்பது சந்தை சார்ந்ததாகவும், சந்தை நடவடிக்கைகளில் அரசின் தலையீடு இருக்க முடியாது எனவும் கூறுகிறது. அதாவது அரசு என்பது வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. அதன் தலையீடு சுமுகமான சந்தைச் செயற்பாடுகளைப் பாதிக்கும் என்ற வாதமாகும். மறு சாரார் சந்தைச் செயற்பாடுகள் இலாபம் நோக்கியதாக இருக்கையில் அது மக்களின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, குடும்ப மற்றும் உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு என்பவற்றில் அக்கறை கொள்வதில்லை. ஆனால் ஆரோக்கியமான, கல்வித் தரமிக்க சமூகம் இல்லாவிடில் தனியார்துறை தமக்கான வேலையாட்களை எங்கிருந்து பெறுவது? தனது உற்பத்திகளை எங்கு சந்தைப்படுத்துவது? இச் சமூகம் பொருட்களை கொள்வனவு செய்யும் ஆற்றல் இல்லாதிருப்பின் சந்தைச் செயற்பாடு எவ்வாறு இலாபத்தில் இயங்கும்? இவ்வாறான பல கேள்விகள் எழுகின்றன. கடந்த 75 ஆண்டுகளில் குறிப்பாக 1977ம் ஆண்டின் பின்னர் நாட்டின் அரசியல் சிங்கள பௌத்த ஆதிக்கத்தை நோக்கியும், பொருளாதாரம் என்பது பல விதங்களில் மிகவும் பாரதூரமான சமூக ஏற்றத்தாழ்வுகளையும் தந்துள்ளது. குறிப்பாக நாட்டின் செல்வத் திரட்சி சில குறிப்பிட்ட பிரிவினரின் ஆதிக்கத்திற்குள் சென்றுள்ளது. இதனால் நாட்டில் ஸ்திரமற்ற அரசுத் தோற்றம், சமூக முரண்பாடுகள் என பல பிரச்சனைகளுக்குக் களமாக அமைகின்றன. கடந்த 40 வருடங்களுக்கு மேற்பட்ட திறந்த பொருளாதாரம் என்பது பொருளாதார ஆதிக்க நலன்களையுடைய பிரிவினரை அதிகாரத்திலும், முதலீட்டிலும் பலமாக வைத்துள்ளதால் தற்போது அவர்களுக்கு எதிரான சமூக இயக்கம் மறு பக்கத்தில் தோற்றம் பெற்றிருக்கிறது. ‘அறகலய’ என்ற பெயரில் மக்கள் இயக்கம் ஜனாதிபதியையே பதவியிலிருந்து துரத்தியிருக்கிறது. எனவே தற்போதைய தேர்தல் என்பது அதிகார வர்க்கத்திற்கும், சாமான்ய மக்களின் நலன்களுக்குமிடையேயான போட்டியாகவே உள்ளது. இப் போட்டியில் அதிகார வர்க்கம் தோற்கடிக்கப்படுமானால் அவர்கள் இலகுவாக பதவிகளை கையளித்துச் செல்வார்கள் என்பதை நம்ப முடியவில்லை. எப்போதுமே எதிர்ப்புரட்சிக்கான நிலமைகள் தொடர்ந்து காணப்படுகின்றன. இந்த ஆபத்தை சில முக்கிய கட்சிகள் உணர்ந்த காரணத்தினால்தான் தமக்கு ஆதரவாக சில முன்னாள் ராணுவப் பிரிவுகளின் முக்கியஸ்தர்களையும் இணைத்தே செல்கின்றனர். எனவே தேர்தல் முடிவுகள் மிகவும் அச்சம் தரும் நிலமைகளைத் தோற்றுவிக்கும் ஆபத்துகளைக் கொண்டிருக்கின்றன. கேள்வி: எமது நாட்டின் பொதுவான அரசியல் நிலமைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் எதிர்வரும் தேர்தலில் ஒரு வேட்பாளர் 50 சதவீதத்தை எட்டவில்லையெனில் அவருக்கான இரண்டாம், மூன்றாம் தெரிவுகளையும் கணக்கிட வேண்டி ஏற்படும் என தேர்தல் விதி கூறுகிறது. இது எவ் விதத்தில் ஜனநாயகமானது? பதில்: அவ்வாறான ஒரு நிலை ஏற்படின் இரண்டாம், மூன்றாம் தெரிவுகளையும் கணக்கிலெடுப்பது தெரிவு செய்யும் ஜனாதிபதியின் நியாயாதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது. உதாரணமாக அவருக்கு எதிராக 50 சதவீதத்திற்கு அதிகமானோர் வாக்களித்திருப்பதாகவே கொள்ள வேண்டும். எனவே அவர் நாட்டின் பெரும்பான்மை மக்களின் முதன்மைத் தெரிவாக இருக்க முடியாது. எனவே அவர் தனது செயற்திட்டங்களை மேற்கொள்ளும்போது எதிர்க் கட்சிகளின் சம்மதத்தைக் கோரிச் செல்வதே ஜனநாயக அணுகுமுறையாக அமையும். கேள்வி: தற்போது தமிழரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜீத் பிரேமதாஸவை ஆதரிக்க முடிவு செய்திருக்கிறது. இதன் சாதக, பாதக அம்சங்கள் எவ்வாறு அமையலாம்? பதில்: இம் முடிவை நோக்கிச் சென்றிருப்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. ஆனால் இம் முடிவை மிக விரைவாகவே வெளிப்படுத்தியதற்குப் பல காரணங்கள் தெரிகிறது. முதலில் உட்கட்சிக்குள்ளிருந்த முரண்பாடுகளின் காரணமாகவே இம் முடிவு தவிர்க்க முடியாமல் விரைவாக எடுக்கப்பட்டிருக்கிறது. வவுனியாவில் இடம்பெற்ற கூட்டம் தொடர்பான அறிவித்தல்கள், நிகழ்ச்சி நிரல் எற்கெனவே மத்திய குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. இந் நிலையில்தான் மாவை தமக்கு சுகமில்லை. ஒன்றுமே தெரியாது எனக் கூறுவதும், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிறீதரன் ஆகியோர் லண்டன் சென்றிருப்பதும் தற்செயல் நிகழ்வுகளல்ல. கட்சிக்குள் மிகவும் காத்திரமான ஆதரவு சஜீத் இற்கு இருப்பது இவர்களுக்கு நன்கு தெரியும். ஒரு புறத்தில் தமிழ் பொது வேட்பாளர் என்ற கோரிக்கையை ஆதரித்து புலிகள் ஆதரவு சக்திகளைத் திருப்திப்படுத்துவதும், மறு பக்கத்தில் கட்சிக்குள் காணப்படும் முடிவுகளை ஆதரிப்பதும் பெரும் வில்லங்கமாகவே இவர்களுக்கு இருந்திருக்கும். சஜீத் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவு என்பது பல அம்சங்களில் தீர்க்கதரிசனமானது. உதாரணமாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பெருமளவில் சஜீத்திற்கு வாக்களித்திருந்தார்கள். இம் முறையும் அதற்கான ஆதரவு தற்போதும் உள்ளுர இருப்பது கண்கூடு. நாடு தழுவிய அடிப்படையிலும் அவருக்கு ஆதரவு இருப்பதாகவே கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலின் முடிவுகளைக் கணித்தே இம் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. பொதுத் தேர்தல் நடத்தப்படுமாயின் எக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலை ஏற்படும். இந் நிலையில் கூட்டு அரசாங்கம் ஒன்றினை அமைப்பதே மக்களின் தெரிவாக இருந்திருக்கிறது. அவ்வாறாயின் தற்போது ஊழல், விரயம், குடும்ப ஆதிக்கம் என்பவற்றிற்கு எதிரான சக்திகளாக ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பனவே உள்ளன. இவர்கள் மத்தியில் கூட்டு ஒன்று உருவாவதற்கான சாத்தியங்களே அதிகம் உண்டு. கேள்வி: தற்போது எதிரும், புதிருமாக விமர்ச்சிப்பவர்கள் எந்த அடிப்படையில் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டு? பதில்: இந்த இரு தரப்பினரும் தத்தமது கட்சியின் ஆதரவுத் தளத்தை விஸ்தரிப்பதற்கான ஒரு போட்டியாகவே ஜனாதிபதித் தேர்தலை அவதானிக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுபவரின் அரசியல் கட்சி பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. ஆனால் அறுதிப் பெரும்பான்மையை எட்டுவது மிகவும் கடினமானது. அது மட்டுமல்ல, யார் ஜனாதிபதியாக தெரிவானாலும், பொருளாதார நிலமைகள் இருப்பதை விட மிக மோசமான நிலமைகளை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. உதாரணமாக, 2027ம் ஆண்டு வரை கடன்களை மீளச் செலுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே ரணில் நாட்டில் பிரச்சனைகள் குறைந்திருப்பதாக கூறுகிறார். அடுத்த மூன்று வருட காலத்திற்குள் நாட்டின் பொருளாதார செயற்பாடுகளில் காத்திரமான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். ரணிலின் கொள்கைப்படி முக்கியமான பொருளாதாரத் துறைகளைத் தனியாரின் கட்டுப்பாட்டிற்குள் விடவும், அதனடிப்படையில் வெளிநாட்டு மூலதனத்திற்கு மீண்டும் வாய்ப்பு ஏற்படுத்த அவர் முனைகிறார். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன கட்டுப்பாடற்ற அந்நிய மூலதன ஊடுருவலே நாடு வங்குறோத்து நிலைக்குச் சென்றமைக்கான பிரதான காரணம் என்பதால் தேசிய மூலவளங்களைப் பாதுகாத்து திட்டமிட்ட அடிப்படையில் அரசு, தனியார் இணைந்து பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல் அவசியம் எனவும், இதில் அரசு மக்களின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் பொதுச் சேவைகளைக் கண்காணித்தல் அவசியம் எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அடிப்படையில் அவதானிக்கும்போது ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான சாத்தியங்களே அதிகம் உண்டு. இவ்வாறான ஓர் அரசியல் பார்வையின் பின்னணியிலேயே தமிழரசுக் கட்சி இம் முடிவை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது. கேள்வி: அவ்வாறாயின் தென்னிலங்கையில் தேசிய மக்கள் சக்திக்கு அதிக ஆதரவு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கும் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் முடிவு விவேகமானதா? பதில்: இம் முடிவு தமிழ் மக்களின் கடந்த கால அரசியல் முடிவுகள் அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை விட சஜீத் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மேல் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதால் அந்த நம்பிக்கையை வலுப்படுத்துவது மேலும் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்ற தீர்மானமே அம் முடிவை நோக்கித் தள்ளியிருக்கலாம். இம் முடிவு என்பது கடந்த காலங்களில் வெறுமனே அரசாங்கத்தை ஆதரிப்பது, மந்திரிப் பொறுப்புகளைத் தவிர்த்தல், எதிர்க் கட்சியிலிருந்து ஆதரித்தல் என்ற நிலமைகள் எதிர்காலத்தில் இல்லை. ஓர் குறிப்பிட்ட அரசியல் கட்சியை அல்லது கூட்டணியை ஆதரிப்பது, மந்திரிப் பதவிகளைப் பெற்று நாட்டின் அபிவிருத்திகளில் பங்களிப்பது முக்கிய மாற்றங்களாக அமையலாம். கேள்வி: தமிழரசுக் கட்சியின் இம் முடிவுகளுடன் தமிழ் பொதுவேட்பாளர் என்ற பெயரில் போட்டியிடும் அரியநேந்திரன் தொடர்பாகவும் மிகவும் கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறதே! இம் முடிவு எவ்வாறான செய்தியைத் தருகிறது? பதில்: சமீப காலமாக கட்சி தாவுதல். கட்சியின் முடிவுகளுக்கு மாறாக கருத்துக்களைப் பரிமாறுதல் எனப் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவை ஜனநாயகம் என்று வேறு விளக்கங்களும் தரப்பட்டன. இவை கட்சித் தலைமையின் பலவீனத்தை அம்பலப்படுத்தியுள்ளதோடு, கட்சிகள் மேல் பலமான அவநம்பிக்கையை பொதுமக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. குறிப்பாக, முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் கட்சி முடிவுகளுக்கு மாறாக செயற்பட்டனர். அதனால் அக் கட்சி பாரிய அளவில் பாதிக்கப்பட்டது. உதாரணமாக, முஸ்லீம்களின் ஜனாசாக்களை எரிக்கும்படி கோதபய அரசு உத்தரவிட்ட வேளையில் அக் கட்சியின் பலர் மௌனமாக இருந்து அம் முடிவுகளை ஆதரித்தனர். இது முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இவ்வாறான ஒர் பின்னணியில் கட்சியின் முடிவுகளுக்கு மாறாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் செயற்பட்ட வேளையில் அவரைக் கட்சியிலிருந்து நீக்கினர். இம் முடிவை உயர் நீதிமன்றம் உறுதி செய்ததோடு அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். ஜனநாயக அரசியல் விழுமியங்களுக்குச் சவாலாக உள்ள இம் மாதிரிக் கட்சிக்குக் கட்டுப்படாத நிலை ஜனநாயக அரசியலுக்குப் பெரும் ஆபத்தாகவே அமைந்தது. உயர் நீதிமன்றத்தின் இத் தீர்ப்பு ஏனைய அரசியல் கட்சிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஹரின் பெர்னான்டோ, மனுஷ நாணயக்கார என்போர் கட்சி முடிவுகளை மறுதலித்து ரணிலை ஆதரித்து மந்திரிப் பதவிகளைப் பெற்றனர். இந்த முடிவுகளுக்கு எதிராக கட்சி நீதிமன்றம் சென்று இன்று அவர்கள் பதவிகளை இழந்து போக்கிடமில்லாமல் உள்ளனர். இதே நிலமைகளே தமிழரசுக் கட்சிக்குள்ளும் மிக அதிகளவில் காணப்பட்டது. கட்சிக் கட்டுப்பாடுகள் மீறப்பட்டதால் ok உட் கட்சித் தேர்தல் முறைகள் செயலிழந்தன. இப் பின்னணியில்தான் கட்சியின் முடிவுகளுக்கு எதிராக கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாகவே தமிழரசுக் கட்சி பொது வேட்பாளர் என்ற பெயரில் நிறுத்தப்பட்டுள்ள அரியநேந்திரனை ஆதரிப்பதில்லை எனவும், அவர் இத் தேர்தலிலிருந்து உடனடியாக விலக வேண்டும் எனவும் தீர்மானித்துள்ளது. இத் தீர்மானம் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயற்படுவோர் கட்சியிலிருந்து அகற்றப்படும் சூழல் மிக அதிகமாகவே உள்ளது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறினார்கள் என்ற அடிப்படையில் கட்சியிலிருந்த பல வேண்டப்படாத அல்லது கட்டுப்படாத பலர் அகற்றப்படலாம். இன்றைய அரசியற் சூழலில் கட்சி மட்டத்தில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டால் அக் கட்சிகளால் நாட்டில் ஜனநாயகத்தைப் பேண முடியாது என்ற முடிவுக்கே நாம் செல்ல முடியும். கேள்வி: தேசிய அரசாங்கம் என்ற இந்த அணுகுமுறை ரணில் மேற்கொண்ட அல்லது அடிக்கடி உச்சரிக்கின்ற தேசிய அரசாங்கத்தை விட எவ் வகையில் வேறுபட்டது? பதில்: இத் தேசிய அரசாங்கம் என்ற கோட்பாடு நாடு எதிர் நோக்கியுள்ள புதிய நிலமைகளிலிருந்தே எழுகிறது. நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையிலுள்ளது. தேசிய நல்லிணக்கம் சீர்குலைந்துள்ளது. 2027ம் ஆண்டின் பின்னர் கடன் கொடுப்பனவுகளும் அதிகரிக்கும்போது தேசிய அபிவிருத்திக்கான பணம் மிகவும் குறைவாகவே அமையும். அதன் காரணமாக மக்கள் மிக மோசமான நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள். உதாரணமாக. வறுமையில் சிக்கியுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகள், நாட்டின் கல்வி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, ராணுவச் செலவினங்கள் எனப் பல செலவினங்கள் பாதிக்கப்படலாம். இவ்வாறான இக்கட்டான சூழலில் சந்தர்ப்பவாத நோக்கம் அல்லது குறுகிய நலன்களுடன் செயற்படும் கட்சிகள் குறுக்கு வழிகளில் இன, மத பேதங்களை முன்னிறுத்தி அல்லது இந்திய, சீன விரோதங்களை முன் வைத்து மக்களை ஏமாற்றி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கலாம். எனவே தேசிய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதாயின் தேசிய அளவிலான நல்லிணக்கம் அவசியமாகிறது. இவ்வாறான ஒரு சூழலில் மக்களால் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட சகல அல்லது பெரும்பான்மை கட்சிகள் ஒன்றிணைந்த தேசத்தின் நலன் கருதி ஒரு பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் புதிய தற்காலிக அரசியல் யாப்பினை ஒரு குறிப்பிட்ட காலத் தேவைக்கென வரைந்து அதனடிப்படையில் உருவாக்கும் அரசையே தேசிய அரசு என வர்ணிக்கிறோம். இவ்வாறான ஒரு அரசின் தோற்றத்திற்கான வாய்ப்புகள் பற்றிய கலந்துரையாடல்கள் ஏற்கெனவே ஐக்கிய மக்கள் சக்தி. தேசிய மக்கள் சக்தி என்பவற்றின் மத்தியில் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது. இவ் உரையாடல்களில் சுமந்திரன் போன்றோரின் பங்களிப்பும் இருப்பதால்தான் மிக விரைவாகவே தமிழரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் முடிவை நோக்கிச் சென்றிருக்கலாம். கேள்வி: ஒரு புறத்தில் தேசிய அரசாங்கம் என்கிறீர்கள். மறு பறத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவருவதில் சந்தேகங்களை எழுப்புகிறீர்கள். இவை முரண்பாடாக உள்ளனவே? பதில்: உள்ளுராட்சித் தேர்தல்களை அரசியல் யாப்பிற்கு விரோதமாக ஒத்தி வைத்தார்கள். பின்னர் அத் தேர்தல்களை நடத்தப் பணம் இல்லை என்றார்கள். மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதாகக் கூறினார்கள். பின்னர் எல்லை நிர்ணயம் என்றார்கள். உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களை அதிகரித்தார்கள். அது அதிகாரம் மக்களைச் சென்றடைவதற்கான ஜனநாயக வழிமுறை என்றார்கள். பின்னர் எண்ணிக்கை அதிகரிப்பு பெரும் பண விரயம் எனக் கூறி எண்ணிக்கையைக் குறைப்பது என்றார்கள். பெண்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு என்றார்கள். இளைஞர், யுவதிகளுக்கு தேர்தலில் 40 சதவீத ஒதுக்கீடு என்றார்கள். பின்னர் பேச்சையே காணோம். இவற்றை ஒட்டு மொத்தமாக நோக்கும்போது நாட்டின் ஜனநாயக வாழ்வைத் தீர்மானிக்கும் தேர்தல் என்பது அதிகார வர்க்கத்தினரின் கைகளில் சிக்கிச் சீரழியும் நிலையில் ரணில் அரசு பல்வேறு சட்டங்களை நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் நிறைவேற்றுகிறது. பல சட்டமூலங்கள் அரசியல் யாப்பிற்கு முரணானது என அரசியல் யாப்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் கமிட்டி நிலையில் சில மாற்றங்களை மேற்கொண்டு சட்டமாக்கியுள்ளனர். நீதிமன்றம் தற்போது ஜனாதிபதியின் பயமுறுத்தல்களுக்குள் சென்றுள்ளது. அரசியல் அமைப்பு சபையின் முடிவுகளுக்கு மாறாக பொலீஸ் மா அதிபரை ஜனாதிபதி நியமனம் செய்கிறார். அதனை உயர் நீதிமன்றம் சட்ட விரோதம் என நிராகரித்தபோது பதில் மா அதிபரை நியமிக்க ஜனாதிபதி மறுக்கிறார். இவை யாவும் நாட்டின் எதிர்காலம் எவ்வாறு அமையும்? என்பதற்கான சமிக்ஞைகளைத் தருவதால்தான் எனது பதில்களும் ஒரு நிச்சயமற்றதாகவே உள்ளன. மேலும் தொடரும் ……. https://arangamnews.com/?p=11195
  17. தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழரை ஒன்று திரட்டவா அல்லது தமிழ் கட்சிகளை பிரிக்கவா? September 3, 2024 — கருணாகரன் — பல அணிகளாகச் சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் தத்ததளிக்கும் மக்களையும் பலவீனப்பட்டிருக்கும் தமிழ்த்தேசியத்தையும் பலப்படுத்துவதற்கே தமிழ்ப்பொது வேட்பாளர் என்று சொல்லப்பட்டது. இதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்புமாகும். இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் தமிழ்ப்பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அதற்கான பரப்புரைகளும் அங்கங்கே நடக்கின்றன. பொதுவேட்பாளருக்காக இன்னும் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள் நடக்கவில்லை. என்றாலும் பரப்புரைகள் தொடர்கின்றன. பொதுவேட்பாளரை ஆதரிக்கும் கட்சிகளின் தலைவர்கள், பத்தி எழுத்தாளர்கள் எல்லாம் கலந்து கொண்டாலும் பரப்புரைகளில் ஆழமான, புதிய சேதிகள் எதையும் பொதுக்கட்டமைப்போ, பொதுவேட்பாளரோ சொல்லவில்லை. நடைமுறைச் சாத்தியமான விடயங்கள் கூடப் பேசப்படவில்லை. ஆனால், சொல்லப்பட்டதற்கு மாறாகத் தமிழ்ப்பொது வேட்பாளர், தமிழ்ச்சமூகத்தை ஆழமாகவே பிளவு படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. தமிழ்ச்சமூகத்தை மட்டுமல்ல, தமிழ்க்கட்சிகளையும்தான். (பொதுவேட்பாளரை நிறுத்தினால் இதெல்லாம் நடக்கும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது). பல இழுபறிகள், தடுமாற்றங்களுக்குப் பிறகு, பொது வேட்பாளரைக் கட்சி ரீதியாக ரெலோ ஆதரிக்கிறது. ஆனால், கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும் அந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் பகிரங்கமாகவே அதை எதிர்க்கிறார். வினோநோகராதலிங்கத்தோடு ஒரு அணியும் இதை எதிர்க்கிறது. ஆக, ரெலோவுக்குள் இரண்டு நிலைப்பாடுகள். இதைப்பற்றிக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்ட போது சொன்னார், “ரெலோ ஒரு ஜனநாயகக் கட்சி என்ற அடிப்படையில், எவரும் எந்த முடிவையும் எடுக்கலாம். ஆகவே தன்னுடைய நிலைப்பாட்டைச் சொல்வதற்கு வினோவுக்கு உரித்துண்டு” என. இது அவருடைய தலைமைத்துவத் தோல்வியின் வெளிப்பாடாகும். மட்டுமல்ல, ஒப்பீட்டளவில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த கட்சிகளில் ஓரளவுக்கு மக்கள் செல்வாக்கைக் கொண்டிருக்கும் ரெலோவின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நிலை உருவாகியுள்ளது என்று அனைவருக்கும் தெரியும். அதாவது, தன்னுடைய கட்சியையே பொதுவேட்பாளருக்கான முழுமையான ஆதரவு நிலைப்பாட்டுடன் நிறுத்த முடியவில்லை – செல்வம் அடைக்கலநாதனால். இந்தச் சீரில் எப்படிப்பொது வேட்பாளருக்கான ஆதரவை வெளியே மக்களிடத்திலும் பிற அரசியற் சக்திகளிடத்திலும் ஒன்று திரட்டுவது? அதற்கான தகுதியையை இழந்து நிற்கிறது ரெலோ. ஆனால், இதை ஒத்த நிலைமைகள் வேறு கட்சிகளுக்குள் நடந்தால், அதைப் பெரும் பிளவாகக் காட்டுவதற்குப் பலர் உள்ளனர். குறிப்பாக இந்த மாதிரிப் பிரச்சினை தமிழரசுக் கட்சிக்குள் நடக்கிறது என்றால், அதை மேடை போட்டுச் சொல்வதற்கும் அதற்கு எண்ணெய் ஊற்றி தீயைப் பற்ற வைப்பதற்கும் ஆர்வமாக இருக்கிறார்கள். என்பதால்தான், தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை மீறி அந்தக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளை எடுத்த பொதுவேட்பாளருக்கான ஆதரவைப் பாராட்டிக் கொண்டாடுவதற்காக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அங்கே ஓடோடிச் சென்றார். தன்னுடைய கட்சியின் உறுப்பினர். அதுவும் பாராளுமன்றப் பிரதிநிதி ஒருவர் கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளாமல், மறுதலித்து வெளியே நிற்கிறார். அதைப் பேசித்தீர்த்து ஒரு ஒழுங்குக்கொண்டு வராமல், அடுத்த வீட்டுப் பிரச்சினையைப் பார்க்கப்போயிருக்கிறார் செல்வம். இதைத்தான் சந்தி சிரிக்கும் சங்கதி என்பது. கடைசியில் செல்வத்தினால் (தலைவரினால்) வினோநோகராதலிங்கத்தைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் முடிவை முழுமையாகக் கொண்டாடவும் முடியவில்லை. காரணம், தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மற்றும் கிளிநொச்சி மாவட்டக்கிளைகள் தன்னிச்சையாக எடுத்த – கட்சியின் தீர்மானத்துக்கு மாறான முடிவுகள் செல்லுபடியற்றனவாகி விட்டன. இப்பொழுது தமிழரசுக் கட்சி பகிரங்கமாகவே சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன், அதே பகிரங்கத் தன்மையோடு பொதுவேட்பாளரை மறுதலித்துள்ளது. போதாக்குறைக்கு பொதுவேட்பாளராக நிற்கும் அரியநேத்திரன் அதிலிருந்து விலக வேண்டும். அல்லது கட்சிக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று காலக் கெடுவையும் விதித்துள்ளது. இதை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சஜித் பிரேமதாசாவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்று யாழ்ப்பாணத்தில் நடந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் நினைவு நிகழ்வில் உரையாற்றும்போது மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதனால் ஓடோடிச் சென்று வாழ்த்துச் சொன்ன செல்வம், மூக்குடைபட்டுப் போயிருக்கிறார். இதுதான் பொது வேட்பாளரை ஆதரித்து நிற்கும் தலைமைத்துவங்களின் நிலையாக உள்ளது. ஆனால் தமிழரசுக் கட்சியையும் பொது வேட்பாளர் விடயம் இரண்டாகப் பிளந்துள்ளது. ஏற்கனவே அந்தக் கட்சி உள்முரண்பாடுகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதன் விளைவாக நீதிமன்றப்படியேறி வழக்காடிக் கொண்டிருக்கிறது. அதை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலேயே தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் இப்போதுள்ளது. பொதுவேட்பாளரை அந்தக் கட்சியைச் சேர்ந்த சிறிதரனின் அணியினர் ஆதரிக்கின்றனர். அவருக்கு வெளியே உள்ளவர்கள் அதை எதிர்க்கின்றனர். இது கட்சியை மேலும் ஆழமாகப் பிளவு படுத்துகிறது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்தப் பிளவுகள் மேலும் வலுப்பெறும் என்றே தெரிகிறது. ரெலோ, தமிழரசுக் கட்சிக்குள் மட்டுமல்ல, புளொட்டுக்குள்ளும் மோதல்கள் உருவாகக் கூடிய சூழலே உள்ளது. பொதுவேட்பாளர் தொடர்பாக புளொட்டுக்குள் ஏற்கனவே இருவேறு நிலைப்பாடுகளுண்டு. புளொட்டின் தலைவர் சித்தார்த்தனுக்கு இதில் உடன்பாடில்லை. இதை அவர் பல தடவை நேர்ப்பேச்சுகளில் சொல்லியிருக்கிறார். கட்சியின் அடுத்த நிலையில் உள்ள சிலரின் விருப்பத்துக்கு இடமளிக்கும் வகையிலும், தாம் இணைந்து நிற்கும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காகவுமே பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டியுள்ளது என. எனவே ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு இந்தக் கட்சிகளுக்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் உருவெடுக்கக் கூடிய சூழலே காணப்படுகிறது. இதற்கொரு சிறிய எடுத்துக் காட்டு, பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகும். ஆனால், பொது வேட்பாளருக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே தமிழரசுக் கட்சி உள்ளது. வேட்பாளராகப் போட்டியிடும் அரியநேத்திரனிடம் அது விளக்கம் கோரியிருப்பதுடன், போட்டியிலிருந்து விலகுமாறும் அது பணித்துள்ளது. ஆக பொதுவேட்பாளரை நிராகரிக்கின்ற கட்சியிலிருந்து கொண்டே, அதனுடைய மத்திய குழு உறுப்பினராக இருந்து கொண்டே, கட்சியின் நிலைப்பாட்டுக்கும் விதிமுறைகளுக்கும் மாறான முறையில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார் அரியநேத்திரன் என்றால், அவருடைய கண்ணியம், ஒழுங்கு, மதிப்புப் பற்றியெல்லாம் என்னவென்று சொல்வது? குறைந்த பட்சம் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவர் விலகிக் கொண்டு தமிழ்ப்பொது வேட்பாளராக நின்றிருக்க வேண்டும். அல்லது இப்பொழுது விலக வேண்டும். மட்டுமல்ல, “மட்டக்களப்பு ரகசியங்கள்” என்ற அநாமதேய முகப்புத்தகத்தை இயக்கியோரில் ஒருவராகவும் அரியநேத்திரன் இருந்துள்ளார். அதற்குள்ளிருந்து கொண்டே தமக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்களை அந்த அநாமதேய முகப்புத்தகத்தில் அவர் வசைகளைப் பாடிப் பழிதீர்த்திருக்கிறார். பொதுவேட்பாளராக அரியநேத்திரன் களமிறங்கியபோதுதான் இந்த விடயங்கள் எல்லாம் வெளியே தெரியவந்தன. பொதுவேட்பாளராக அரியநேத்திரன் களமிறங்கியதை விரும்பாத “மட்டக்களப்பு ரகசியங்களின்” ஏனைய பங்காளர்கள் இந்த உண்மையைப் போட்டுடைத்துள்ளனர். இதை மறுத்துரைக்க முடியாத நிலையில் உள்ளார் திரு. அரியநேத்திரன். அரியநேத்திரனின் வயது, தகுதி, பொறுப்பு என எதற்கும் தகுதியில்லாத வேலை அதுவாகும். அப்படியான ஒருவரை தமிழரசுக் கட்சி மத்திய குழுவில் வைத்திருந்ததற்காக வெட்கப்பட வேண்டும். அதையும் விட அவரைப் பொது வேட்பாளராகக் களமிறக்கிய பொதுக்கட்டமைப்பினரும் அதற்குள்ளிருக்கும் மூத்த கட்சிகளும் கூடத் தலைகுனிய வேண்டும். மொத்தத்தில் சிறுபிள்ளை விளையாட்டாகத் தொடங்கிய தமிழ்ப்பொது வேட்பாளர், பெருந்தீமைகளை உருவாக்கப்போகிறது. 1980 களில் விடுதலை இயக்கங்கள், மக்களுடைய நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக பொறுப்பற்ற தனமாகச் செயற்பட்டன. இதைக்குறித்து அப்போது எழுத்தாளர் செங்கை ஆழியான், “இந்த நாடு உருப்படாது” என்றொரு நாவலையும் “சிறுபிள்ளை வேணாண்மை”, “குளவிக்கூட்டைக் கலைக்காதீர்கள்” என இரண்டு சிறுகதைகளையும் எழுதினார். அந்தக் கதைகள் மிகச்சரியான கணிப்பீட்டையும் மிகக் கூடிய உண்மையையும் எடுத்துரைத்திருந்தன. ஆனால், அதை அன்று பலரும் ஏற்கவில்லை. எள்ளி நகைத்தனர். இறுதியில் செங்கை ஆழியான் சொன்னதே நடந்தது. அதையொத்த காட்சிகளே இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் வரலாறு நகரவில்லை. தேங்கிக் கிடக்கிறது. https://arangamnews.com/?p=11189
  18. வேட்பாளர்களுக்கான நேரடி விவாதம்; மார்ச் 12 இயக்கம் தயார் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நேரடி விவாதம் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது. மார்ச் 12 இயக்கம் இந்த தொடர் விவாதங்களை நடத்தவுள்ளது. முதல் நாள் விவாதத்தில் நான்கு வேட்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ச, சர்வஜன பலய கட்சியின் வேட்பாளர் திலித் ஜயவீர , சுயாதீன வேட்பாளர் பா. அரியநேத்திரன் ஆகியோர் கலந்துக் கொள்ளவுள்ளனர். இந்த விவாதத்தில் கலந்து கொள்ள முடியாது என சுயாதீனமாக களமிறங்கியுள்ள வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த அமைப்புக்கு அறிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் பங்கேற்பு உறுதிப்படுத்தப்பட உள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட விவாதத்தில் 12 வேட்பாளர்கள் பங்கேற்பார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விவாதங்கள் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. மார்ச் 12 பிரச்சாரம் மேலும் விவாதத்தின் போது வேட்பாளர்களுக்கு கேள்விகளை சமர்ப்பிக்க வாக்காளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் கேட்கப்படும் கேள்விகளை ஒரு குழு தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. https://akkinikkunchu.com/?p=290435
  19. விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் தமிழ் பொது வேட்பாளர் பின்னணியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்களே இன்று தமிழ் பொது வேட்பாளருக்கு பின்னால் இருக்கின்றனர். பொது வேட்பாளரை எதிர்ப்பதனால் எமக்கு அச்சறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. இந்த அச்சுறுத்தல்களுக்கு பயந்து விட மாட்டோம், அடிபணிய மாட்டோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள், கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, 1948ஆம் ஆண்டில் இருந்து தமிழ் தலைவர்களையும் , தமிழ் மக்களையும் சிங்கள அரசியல் தலைவர்கள் ஏமாற்றியதன் காரணமாகவே ஆயுத போராட்டம் தோற்றம் பெற்றது. தமிழ் மக்களின் போராட்டத்திற்கான காரணம் சிங்களவர்களில் பெருமளவானோருக்கு தெரியாது. நாங்கள் பூர்விகமாக வாழ்ந்த மக்களே. எங்களுக்கான உரிமைகளை மறுத்த காரணத்தினாலேயே நாங்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழ முடியாது என்ற கோசங்கள் எழுந்தன. ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சிங்களத் தலைவர் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதியாவார். ஆனால் ஒரு சில தமிழ் மக்கள் தமிழ் பொது வேட்பாளர் என்ற ஒருவரை களமிறக்கியுள்ளனர். இந்த மனநிலை அவர்களிடையே ஏற்பட சிங்களத் தலைவர்களே காரணம். யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களின் பின்னரும் பொது வேட்பாளர் என்ற கோஷம் தமிழ் மக்களிடையே வந்துள்ளது என்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் பெரும்பான்மை சமூகத்தின் தலைவர்கள் ஏற்க வேண்டும். பொறுப்புள்ள அரசியல் கட்சியாக 75 வருடங்களாக தமிழ் மக்களை வழிநடத்திய கட்சியாக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானமொன்றை எடுத்துள்ளது. பொது வேட்பாளர் என்ற விடயத்தை தமிழரசுக் கட்சி ஏற்கவில்லை. நாங்கள் மீண்டும் ஒருமுறை நாட்டின் எதிர்காலத்திற்காக தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக பெரும்பான்மை சமூகத்திற்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம். இந்த சந்தர்ப்பத்திலும் இந்த தலைவர்கள் தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சிப்பார்களாக இருந்தால் அதன்பின்னர் தமிழ் மக்கள் எந்தப் பாதையில் செல்வார்கள் என்பதனை எங்களால் கூற முடியாது. ஆனால் பொறுப்புள்ள கட்சியாக வெற்றிப்பெறக்கூடிய பிரதான வேட்பாளருக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம்.பொதுவேட்பாளருக்கு பின்னால் இருக்கும் ஒருசில அரசியல்வாதிகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளேன். ஆனால் இந்த பொதுவேட்பாளர் விடயத்தை ஆதரிக்கும் புலம்பெயர் தேசத்தில் உள்ள ஒரு சிலரையும், சிவில் மக்கள் பிரதிநிகளையும் விமர்சிப்பதில்லை. ஒருசில அரசியல்வாதிகள் இன்னுமொரு வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய எடுத்த விடயத்தை தாங்கள் எடுத்த மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை மறைப்பதற்காகவும் சலுகைகளை பெற்றதை மறைப்பதற்கும் ஒருசிலர் தமிழ் மக்களை குழப்பும் வகையில் செயற்படுகின்றனர். தனிப்பட்ட நன்மைக்காக எங்களை ஆதரிக்க வேண்டும் என்று ஒருசில வேட்பாளர்கள் அறிவிக்கும் போது அதனை மறுக்க முடியாமலே பொதுவேட்பாளரின் பின்னல் இருக்கின்றனர். திரைமறையில் அவர்கள் பிரதான வேட்பாளருடன் வேலை செய்துகொண்டிருக்கின்றனர். ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதான வேட்பாளரை சந்தித்து எவ்வாறு மறைமுகமாக உங்களுடன் வேலைசெய்வது என்று கலந்துரையாடியுள்ளனர். ஆனால் நாங்கள் தமிழரசுக் கட்சி என்ற வகையில் அவ்வாறு மக்களுக்கு துரோகம் செய்யப் போவதில்லை. கடந்த விடுதலைப் போராட்டம் நடந்த போது இராணுவத்துடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்கள் மீண்டுமொருமுறை பொதுவேட்பாளருக்கு பின்னால் இருந்துகொண்டு எமது தமிழ் மக்களையும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர். இதுவே உண்மை. பொதுவேட்பாளரை எதிர்ப்பதனால் பல அச்சுறுத்தல்கள் எமக்கு விடுக்கப்படுகின்றன. தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்காவிட்டால் உங்கள் அரசியலை அழித்துவிடுவோம் என்றும் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகாமல் பார்த்துக்கொள்வோம் என்றும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. இந்த அச்சுறுத்தல்களுக்கு பயந்து தமிழ் மக்களுக்கு தேவையான விடயத்தை கூறாமல் இருக்கப் போவதில்லை.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர் ஒருவர் வெற்றி பெறுவார். பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற வகையில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய கடமை எமக்குள்ளது என்றார். https://akkinikkunchu.com/?p=290485
  20. சஜித்திற்கு ஆதரவு – தமிழரசுக் கட்சியின் முடிவு செல்லுபடியற்றதா? ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அறிவித்துள்ள போதும், அந்தக் கட்சியின் பலரும் அந்தத் தீர்மானத்தை எதிர்க்கின்றனர். கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டபோது மத்திய குழுவில் 18 பேர் மாத்திரமே சமூகளமளித்திருந்ததாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையும் செல்லுபடியற்றது எனவும் மாவை சேனாதிராஜா கூறியிருக்கிறார். தேர்தலில் போட்டியிட தமிழ் பொது வேட்பாளரை நியமிக்க சில தமிழ் அரசியல் கட்சிகளும், குழுக்களும் எடுத்த தீர்மானத்திற்கு தமிழரசுக் கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவருக்கு ஆதரவான சில உறுப்பினர் எதிர்ப்பு வெளியிட்டிருக்கின்றனர். சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க முடிவெடுப்பதற்கு முன்னர் இலங்கை தமிழரசு கட்சி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேறு சில முக்கிய வேட்பாளர்களை சந்தித்திருந்தது. நேற்றைய கூட்டத்தில் தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், சார்லஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. இதனிடையே, நேற்று இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனக்கு அழைப்பு விடுக்கப்படாமை குறித்து கட்சியின் செயலாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, கட்சியின் தலைமை இன்றி எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம் கண்டிக்கத்தக்கது என அந்த கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், கொழும்பு கிளை தலைவருமான சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தமிழரசு கட்சியில் சுமந்திரனை மையப்படுத்திய சில உறுப்பினர்கள் எடுத்த தீர்மானத்திற்கு சஜித் பிரேமதாச நன்றி கூறியதுடன், “நாம் அனைவரும் ஒன்றாக, வெற்றிபெறும் எதிர்காலத்தை உருவாக்குவோம்” எனவும் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். http://www.samakalam.com/சஜித்திற்கு-ஆதரவு-தமிழர/ சஜித் மேடையில் ஏறமாட்டேன் என்கிறார் சி.வி.கே. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்திருந்தாலும், சஜித்தை ஆதரித்து எந்த பிரச்சாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளப் போவதில்லையென அந்த கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இதனை அவர் அறிவித்திருந்தார். நேற்றைய மத்தியகுழு கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் அந்த தீர்மானத்தை ஆதரித்தனர். இதேபோல, பொதுவேட்பாளர் ஆதரவு நிலைப்பாட்டை கிளிநொச்சி கிளை சார்பில் த.குருகுலராஜா சமர்ப்பித்தார். என்றாலும், கூட்டத்தில் கலந்து கொண்ட 26 பேரில் பலர் சஜித்தை ஆதரித்தனர். ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடு தொடர்பில் கட்சிக்குள் நடந்த கலந்துரையாடல்களில், யாரையும் ஆதரிக்காமல் மக்கள் விருப்பமானவர்களுக்கு வாக்களிக்கலாமென அறிவிக்கலாமென சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்திருந்தார். அதுவே அவரது நிலைப்பாடாகவும் இருந்தது. எனினும், நேற்றைய கூட்டத்தில் சஜித் ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்திற்கு சீ.வீ.கே.சிவஞானமே தலைமைதாங்கினார். உடல்நல குறைவினால் மாவை கலந்துகொள்ளாத நிலையில், சீ.வீ.கே தலைமைதாங்கினார். கூட்டத்தின் போது தனது நிலைப்பாட்டை அவர் அறிவித்தார். சஜித்தை ஆதரிப்பதாக கட்சி அறிவித்தாலும், நான் சஜித் ஆதரவு பிரச்சாரங்களில் ஈடுபடமாட்டேன். சஜித்தை ஆதரித்து மேடைகளில் பேசமாட்டேன் என்றார். https://thinakkural.lk/article/308748
  21. ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு புதிய இணைப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) அறிவித்துள்ளது. வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று (01) இடம்பெற்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) இதனைத் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் இன்றைய கூட்டத்தில் அரியநேத்திரனுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும், தமது கட்சியைச் சேர்ந்த அரியநேத்திரன் தமிழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக அதிலிருந்து விலக வேண்டும் என்றும், சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் மூன்று தீர்மானங்களை தமிழரசுக் கட்சி நிறைவேற்றியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். முதலாம் இணைப்பு தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுப்பதற்காக தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் கூடியுள்ளது. குறித்த கூட்டமானது, வவுனியா (Vavuniya) இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (01) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் இந்தநிலையில், குறித்த கூட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) வருகைத் தரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் (R. Shanakyan), த.கலையரசன், எஸ்.குகதாசன் (Kuagadhasan), எம்.எ.சுமந்திரன் (M.A Sumanthiran), சட்டத்தரணி கே.வி. தவராசா, கே.சிவஞானம், செயலாளர் ப.சத்தியலிங்கம் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/itak-central-committee-meeting-today-1725172608
  22. மூன்று முனைப் போட்டியில் முன்னணியில் இருப்பது யார்?: பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் September 1, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான நிய மனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளது. அதிரடியான கட்சித் தாவல்களும், வாக்குறுதிகளும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் தென்னிலங்கை கள நிலைமைகள் எவ்வாறிருக்கின்றது என்பது குறித்து ஆராய்வதற்காக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்த லிங்கம் அவர்கள் அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலை இலக்கின் வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம். ஜனாதிபதித் தோ்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. தோ்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளன. தற்போதைய கள நிலைமைகள், தோ்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புக்கள் எவ்வாறுள்ளன? ஜனாதிபதி ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்த பின்னா் பெரும்பாலும் இருமுனைப் போட்டி யாகத்தான் இந்த ஜனாதிபதித் தோ்தல்கள் இருந்து வந்திருக்கின்றது. சிலவேளைகளில் வெற்றியாளா் யாா் என்பதை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய நிலையும் இருந்தது. சிலவேளைகளில் ஒரு அலை வீசுவதையும் காணலாம். அந்தக் காலங்களில் சிங்கள – பௌத்த மக்கள்தான் ஜனாதிபதியைத் தீா்மானிப்பவா்களாக இருந்தாா்கள். ஆனால், இப்போது, வரலாற்றில் முதல் தடவையாக, ஒரு மும்முனைப்போட்டி உருவாகியிருக்கின்றது. வெற்றியாளா் யாா் என்பதை சொல்ல முடியாத நிலைதான் இன்றுவரை தொடா்கின்றது. ஆனால், தோ்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்து தோ்தல் நெருங்கும் போது, பிரதான வேட்பாளா்கள் மக்களை எவ்வாறு எதிா்கொள்கின்றாா்கள் என்பதைப் பொறுத்து இது இரு முனைப்போட்டியாக இருக்குமா அல்லது மும்முனைப்போட்டியாக இருக்குமா என்பதைச் சொல்லக்கூடியதாக இருக்கும். ஆனால் இப்போது தென்பகுதியில் சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் இருப்பவா்களுடனும் பேசும்போது ஒவ்வொருவரும் ஒவ் வொருவிதமான கருத்தைச் சொல்கின்றாா்கள். வெற்றியாளா் யாா் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேவேளையில் தென்பகுதியில் இப்போது ஒரு அலை வீசாத நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம்கள், மலையக மக்களுடைய வாக்குகள் முக்கியமான பங்கை வகிக்கப்போகின்றன. இந்த ஜனாதிபதித் தோ்தல் உண்மையில் ஒரு மூன்று முனைப் போட்டியா? அல்லது நாமல் களமிறங்கியிருப்பதால் நான்கு முனைப் போட்டியாகியுள்ளது என்று சொல்லாமா? நாமல் ராஜபக்ஷ இந்த கள நிலையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றாா்? அவா் பத்து இலட்சத்துக்கும் குறை வான வாக்குகளையே பெறுவாா் என்று பலரும் கூறுகின்றாா்கள். தென்பகுதியில் அவா்களுக் கென்று ஒரு வாக்கு வங்கி இருக்கக்கூடும். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவா்கள் அவா்கள்தான் என்று மக்கள் இன்றும் நம்புகின்றார்கள். அதனால், நாடுதழுவிய ரீதியான வாக்குகள் அவருக்குக் கிடைக்குமா என்ற கேள்வி உள்ளது. அதனால், முதல் மூன்று வேட்பாளா்களைப் போல அதிகளவு வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவராக அவா் வருவாரா என்பதில் பலத்த சந்தேகம் உள்ளது. நாமல் ராஜபகடஷ இறுதி நேரத்தில் களமிறங்கியமைக்கு காரணம் என்ன? பல்வேறுபட்ட கோணங்களில் இதனைப் பாா்க்க முடியும். ஒன்று – தற்போதைய ஜனாதிபதி வெற்றிபெற்றால் பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் அனைவரும் அவருடன் சென்று விடுவாா்கள். அடுத்த தேர்தலிலும் அவருக்கு ஆதரவான கூட்டணியில் போட்டியிடுவதற்கும் விரும்புவாா்கள். அதனால் தமது கட்சியான பொது ஜன பெரமுன அழிந்துவிடும். அதனால், கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலையில் ராஜபக்சே குடும்பம் அந்த முடிவுக்கு வந்திருக்கலாம். இரண்டாவது கருத்து தற்போதைய ஜனாதிபதிக்கும் இவா்களுக்கும் இடையில் இரகசிய உடன்பாடு ஒன்றுள்ளது. இறுதி நேரத்தில் தமது முடிவை மாற்றலாம். அல்லது, இரண்டாவது தெரிவை அவருக்குக் கொடுக்குமாறு கேட்கலாம் என்ற சில கருத்துக்களும் உள்ளன. அவா்கள் முதலில் வேறொரு வேட்பாளரைத்தான் களத்தில் இறக்கப்போவதாக கூறிவந்தாா்கள். அவா் ஒரு வா்த்தகா். வெற்றிபெற முடியாத தோ்தலில் போட்டியிட அவா் மறுத்தமையால் நாமல் ராஜபக்சே களமிறக்கப்பட்டிருக்கலாம். தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் ஜே.வி.பி. இந்த தோ்தல் களத்தில் போட்டி யிடுகின்றது. ஆரம்பத்தில் அவா்களுக்கு இருந்த ஆதரவு அலை இப்போது குறைந்துவிட்டது என்ற ஒரு கருத்துள்ளது. இது எந்தளவுக்கு உண்மை? ஆம். மக்கள் இது குறித்து விரிவாகச் சிந்திப்பாா்கள். இந்த ஜனாதிபதித் தோ்தல் முடிவடைந்தவுடன் பொதுத் தோ்தல் வரப்போகின்றது. கடந்த ஜனாதிபதித் தோ்தலில் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதித் தோ்தலில் பெற்ற வாக்குகள் 4 இலட்டத்து 50 ஆயிரத்தைவிட சற்று அதிகமானது. அவா்களுக்கு நாடாளுமன்றத்திலும் பெருமளவு பலம் கிடையாது. இந்த நிலையில் பொதுத் தோ்தலில் அவா்கள் 113 ஆசனங்களைப் பெற வேண்டும். இல்லையெனில் மற்றைய கட்சிகளில் அவா்கள் தங்கியிருக்க வேண்டியிருக்கும். அநுரகுமாரவைப் பொறுத்தவரையில் இரண்டு வெற்றிகள் அவருக்குத் தேவையாக இருக்கின்றது. ஒன்று – ஜனாதிபதித் தோ்தலில் வெற்றிபெற வேண்டும். இரண்டு நாடாளுமன்றத் தோ்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். இப்போது நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றையும் சோ்த்து மூன்று ஆசனங்கள் மட்டும்தான் அவா்களுக்குள்ளது. ஆக, அவா்கள் 110 ஆசனங்களை மேலதிகமாகப் பெற வேண்டியிருக்கும். இது ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் சாதாரண விசயமல்ல. இதனை மக்கள் சிந்தித்து செயற்படும் போது தோ்தல் காலம் நெருங்க இரண்டு போட்டியாளா்கள்தான் இருக்கப்போகின்றாா்கள். இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதாகத்தான் நான் நினைக்கிறேன். நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய அரகலய போராட்டமக் குழுவினா் அமைத்துள்ள போராட்ட முன்னணி என்ற அமைப்பும் இம்முறை களத்தில் இறங்கியிருக்கின்றாா்கள். அவா்களுக்கான ஆதரவு எவ்வாறுள்ளது? உண்மையில் இவா்கள் அரசியல் முறைமையில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முயன்றாா்கள். இப்போதும் முயற்சிக்கின்றாா்கள். ஆனால், அவா்களுடைய கட்டமைப்புக்கள் கிராம மட்டத்திலிருந்து கட்டியமைக்கப்பட்டதாக இல்லை. அதனால்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னா் இந்த அரகலய போராட்டம் செயலிழந்தது. ஏனெனில் இதனை அடுத்த கட்டத்துக்கு அவா்களால் கொண்டு செல்ல முடியவில்லை. அதனால், அவா்கள் பிழையானவா்கள், அவா்களுடைய சிந்தனை தவறானது என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், அவா்களுடைய கட்டமைப்புக்கள் கிராமம் தோறும் கட்டியமைக்கப்படவில்லை. அவா்களுக்குக் கூட, அடுத்த கட்டம் என்ன என்பதில் தெளிவிருக்கவில்லை. ஏனெனில் கோட்டாபாய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை மட்டும் முன்வைத்துத்தான் அந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதனால், ஜனாதிபதி மாற்றமடைந்தவுடன் அடுத்த கட்டத்தை நோக்கி அவா்களால் செல்ல முடியவில்லை. கிராம மட்டத்திலிருந்து இதனை முன்னெடுக்காத நிலையில் அரசியலில் பெரிய தாக்கம் எதனையும் அவா்களால் ஏற்படுத்த முடியாது. ரணில், சஜித் இருவருமே சிறுபான்மையினரின் வாக்குகள் தமக்கு கிடைக்கும் என்ற எதிா் பாா்ப்புடன் செயற்படுகின்றாா்கள். இதில் வெற்றி பெறக்கூடியவா் யாாா்? இதில் மிகப்பெரிய பிளவு நிலை காணப் படுகின்றது. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் சில தலைவா்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருக்கின்றாா்கள். வேறு சிலா் சஜித்துக்கு ஆதரவாக உள்ளாா்கள். இளைஞா்களைப் பொறுத்தவரையில் அநுரகுமாரவுக்கு ஆதரவுள்ளது. மலையகத்தைப் பொறுத்தவரையில் ஜீவன் தொண்டமான் ரணிலுக்கு ஆதரவு. மனோ கணேசன், திகாம்பரம் போன்றவா்கள் சஜித்துக்கு ஆதரவாக உள்ளனா். ஆகவே மலையக வாக்குகளும் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. வடக்கு – கிழக்கு மக்களுடைய வாக்குகள் எவ்வாறு செல்லும் என்பது வெளிப்படையாகத் தெரியாமல் உள்ளது. தமிழ்ப் பொது வேட்பாளருடைய விஞ்ஞாபனம் வெளிவந்து அவருடைய பரப்புரைகள் தீவிரமடையும் போது அவருக்குப் பின்னால் கணிசமான வாக்குகள் செல்வதற்கும் வாய்ப்புள்ளது. அரியநேத்திரன் வெறுமனே ஒரு சுயேச்சையாக களமிறங்கவில்லை. அவருக்குப் பின்னால் பல சிவில் அமைப்புக்ககள், கட்சிகள் உள்ளன. இது வரலாற்றில் முதல்தடவை. முன்னா் குமாா் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம் போன்றவா்கள் களமிறங்கியிருந்தாலும், பரந்து பட்ட ஆதரவுத் தளத்துடன் ஒரு தமிழ் வேட்பாளா் களமிறங்கியிருப்பது இதுதான் முதல் தடவை. அதனால், அரியநேத்திரன் பெறும் வாக்குகள் எவ்வளவு என்பது இங்கு முக்கியமாகக் கண்காணிக்கப்படும். https://www.ilakku.org/மூன்று-முனைப்-போட்டியில-2/
  23. பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் இனப்பிரச்சினையும் August 31, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் கடந்த வாரம் வெளியாகின. முதலில் ஆகஸ்ட் 26 தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க ‘வளமான தேசம், அழகான வாழ்க்கை’ என்ற தலைப்பில் தனது விஞ்ஞாபனத்தை வெளியிட்டார். அடுத்து ஆகஸ்ட் 29 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தலைப்பிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ‘சகலருக்கும் வெற்றி’ என்ற தலைப்பிலும் தங்களது விஞ்ஞாபனங்களை வெளியிட்டனர். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கான தங்களது திட்டங்களுக்கு விஞ்ஞாபனங்களில் முன்னுரிமை கொடுத்திருக்கும் மூவரும் நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற பெரும்பாலும் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்பதற்கான யோசனைகளையும் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த நீண்ட விஞ்ஞாபனங்களை சாதாரண மக்கள் அமைதியாக இருந்து முழுமையாக வாசிப்பதில் அக்கறை காட்டுவார்கள் என்பது சந்தேகமே. தனது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் கடந்த இரு வருடங்களாக முன்னெடுத்துவரும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடருவதை தவிர பொருளாதார மீட்சிக்கு வேறு வழியே கிடையாது என்பதே ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் உறுதியான நிலைப்பாடு. அந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மற்றைய இரு பிரதான வேட்பாளர்களினாலும் ஒழுங்கான முறையில் முன்னெடுக்கமுடியாது என்ற அர்த்தத்தில் பேசிவரும் அவர் தனக்கு ஐந்து வருடகாலத்துக்கு ஆணை தருமாறு நாட்டு மக்களைக் கேட்கிறார். பிரேமதாசவும் அநுரா குமாரவும் கூட சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை சில திருத்தங்களுடன் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக கூறுகின்ற அதேவேளை, மக்களைப் பெரிதும் வதைக்கின்ற வரிகளைக் குறைப்பது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். அதனால் எவர் புதிய ஜனாதிபதியாக வந்தாலும், பொருளாதார நெருக்கடியைப் பொறுத்தவரை அவரின் செயற்பாடுகள் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை பின்பற்றியதாகவே அமையப்போகிறது என்பது தெளிவானது. புதிய அரசியலமைப்பு மற்றும் தேசிய இனநெருக்கடியுடன் தொடர்புடைய பிரச்சினைககள் குறித்து மூன்று தலைவர்களும் விஞ்ஞாபனங்களில் கூறியிருப்பதை சுருக்கமாக நோக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு வெகு முன்னதாகவே மூன்று வேட்பாளர்களும் இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தங்கள் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். விஞ்ஞாபனங்களிலும் அவர்கள் அதே நிலைப்பாடுகளையே குறிப்பிட்டிருக்கிறார்கள். புதிய அரசியலமைப்பு ஒன்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டு வரும் என்று அநுரா குமார நீண்ட நாட்களாக கூறிவந்திருக்கின்ற போதிலும், அது தொடர்பில் அவர் விஞ்ஞாபனத்தில் கூறியிருப்பது எவரும் எதிர்பார்க்காததாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்க காலத்தில் (2015 –2019) முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை துரிதமாக நிறைவு செய்து புதிய அரசியலமைப்பின் மூலமாக அனைத்து மக்களும் ஆட்சியில் பங்கேற்கக்கூடியவாறு ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனம், மாவட்டம் மற்றும் மாகாணத்துக்கு அரசியல் ரீதியானதும் நிருவாக ரீதியானதுமான அதிகாரங்களை பகிர்ந்தளிக்கப்போவதாக தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் கூறுகிறது. அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் குறித்து நேரடியாக அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதேவேளை ஜனாதிபதி விக்கிரமசிங்க 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தங்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்படும் என்று கூறியிருக்கிறார். மாகாண சபைகளிடம் இருந்து மத்திய அரசாங்கம் திரும்பப் பெற்றுக்கொண்ட அதிகாரங்கள் மீண்டும் மாகாணசபைகளுக்கு கொடுக்கப்படும் என்றும் மாகாணசபைகளுக்கான பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பு புதிய பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார். தேசிய நல்லிணக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கும் ஜனாதிபதி உண்மை கண்டறிதல் மற்றும் நல்லிணக்கச் சட்டம் நிறைவேற்றப்படுவதுடன் காணாமல் போனோர் தொடர்பான நவாஸ் ஆணைக்குழுவின் அறிக்கையும் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் பிரேமதாச மதத்தலைவர்கள், பாராளுமன்ற அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டுவரப்படும் என்றும் தற்போதைய அரசியல் முறைமையை பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதுடன் ஒரே நாட்டின் கீழ் 13 வது திருத்தத்தின் அடிப்படையில் கூடுதல்பட்ச அதிகாரப்பரவலாக்கம் உறுதிசெய்யப்படும் என்றும் கூறுகிறார். புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் வரை 13 வது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் ; மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்படமாட்டாது. அதற்கு பதிலாக மாகாண மட்டத்தில் அபிவிருத்திப் பணிகள் பலப்படுத்தப்படும் என்றும் பிரேமதாச வாக்குறுதியளித்திருக்கிறார். மூன்று தலைவர்களும் புதிய அரசியலமைப்பை கொண்டுவரப்போவதாக கூறியிருக்கும் அதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார்கள். தங்களது அரசாங்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துக்கட்டி பாராளுமன்ற ஆட்சிமுறையை நிலைநாட்டுவதுடன் நிறைவேற்று அதிகாரமற்ற ஜனாதிபதி பதவியை உருவாக்கும் என்று அநுரா குமார கூறியிருக்கும் அதேவேளை, ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் தெரிவாகும் புதிய பாராளுமன்றத்திடம் ஒரு வருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பை வரையும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்று விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டுமா இல்லையா என்பதை புதிய பாராளுமன்றமே தீர்மானிக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியிருக்கிறார். இது ஒன்றும் அவர் புதிதாக கூறுகின்ற விடயம் அல்ல. பிரேமதாசவும் அநுரா குமாரவும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பு குறித்து தீர்மானிக்கும் பொறுப்பு மக்களின் புதிய ஆணையுடன் தெரிவாகும் அடுத்த பாராளுமன்றத்திடமே ஒப்படைக்கப்படவேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்னரேயே கூறிவந்திருக்கிறார்கள். முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசெத் டெப் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்மொழிவுகளின் அடிப்படையில் புதிய தேர்தல் நடைமுறையை புதிய பாராளுமன்றம் அறிமுகப்படுத்தும்; மாகாணசபை பிரதிநிதிகளையும் சிவில் சமூக உறுப்பினர்களையும் கொண்டதாக அமைக்கப்படும் இரண்டாவது அரசாங்க சபை ( Second State Council ) மாகாணசபைகள் அவற்றின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துகின்றன என்பதை கண்காணிக்கும் என்று விக்கிரமசிங்கவின் விஞ்ஞாபனம் கூறுகிறது. ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு மற்றும் புதிய அரசியலமைப்பு குறித்து சுமார் மூன்று தசாப்த காலமாக பேசப்பட்டு வருகின்ற போதிலும், இதுவரையில் அது தொடர்பிலான எந்த முயற்சியும் ஒப்பேறவில்லை. மூன்று பிரதான வேட்பாளர்களும் என்னதான் விஞ்ஞாபனங்களில் வாக்குறுதியளித்தாலும், அது விடயத்தில் அவர்களின் அரசியல் நேர்மை குறித்து மக்களுக்கு நிச்சயமாக வலுவான சந்தேகம் இருக்கிறது. அத்துடன் தற்போதைய அரசியல் நிலைவரங்களையும் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவின் மட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது புதிய அரசியலமைப்பை வரைவது போன்ற பொறுப்புமிகுந்த பணிகளை நிறைவேற்றக்கூடிய அளவுக்கு பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகளிடையே கருத்தொருமிப்பைக் காண்பது சாத்தியமாக இருக்குமா என்பது முக்கியமான ஒரு கேள்வி. தேசிய இனநெருக்கடியுடன் தொடர்புடைய பிரச்சினைகளைப் பொறுத்தவரை, மூன்று தலைவர்களும் பெரும்பாலும் ஒரேவிதமான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தப்படுத்தியிருப்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகுவதற்கு முன்னரேயே அவர்கள் தங்களது இந்த நிலைப்பாட்டை பகிரங்கமாகக் கூறினார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த தடவை பிரதான அரசியல் கட்சிகளின் அல்லது கூட்டணிகளின் பிரசாரங்களில் பெரும்பாலும் இனவாதமற்ற ஒரு போக்கை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. 2019 ஜனாதிபதி தேர்தலின்போது காணப்பட்ட சூழ்நிலையில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. தமிழ் அரசியல் கட்சிகள் ஒப்பீட்டளவில் பிரயோசனமான முறையில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு ஒன்று இன்றைய சூழ்நிலையில் இருக்கிறது. ஆனால், அதைப் பயன்படுத்துவதில் அக்கறை காட்டாமல் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டிமுறையின் அடிப்படையிலான நிரந்தரத் தீர்வைக் கோரிநிற்கும் பெரும்பாலான வடக்கு,கிழக்கு தமிழ்க் கட்சிகள் அதற்கு முதற்படியாக 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தைக் கேட்பது மாத்திரமல்ல அவ்வாறு செய்வதற்கு கொழும்புக்கு நெருக்குதலைக் கொடுக்குமாறு புதுடில்லியையும் கேட்கின்றன. அவ்வாறு கேட்பதுடன் மாத்திரம் தங்களது பொறுப்பு முடிந்துவிடுகிறது என்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நினைக்க முடியாது.13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களை பயன்படுத்துவதற்கு அவர்கள் ஒன்றிணைந்து செயற்படவும் வேண்டும். அதற்கு இசைவான சூழ்நிலையை உறுதி செய்வதற்கு அரசியல் தந்திரோபாயத்தை கையாள வேண்டும். தற்போது மூன்று பிரதான வேட்பாளர்களும் 13 வது திருத்தத்துக்கு அனுகூலமான நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் அவர்களுடன் தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி அவர்களில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் மற்றைய இருவரும் அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய எதிர்கால முயற்சிகளை எதிர்க்காமல் இருப்பதற்கான உத்தரவாதத்தைப் பெறவேண்டும். இன்றைய சூழ்நிலையில் அது ஒரு விவேகமான தந்திரோபாயமாக இருக்கமுடியும். இந்த கட்டுரையாளர் ஒன்றும் 13 வது திருத்தத்தின் ரசிகர் இல்லை. ஆனால், நிலையான தீர்வாக அமையக்கூடிய சமஷ்டி ஏற்பாட்டை நோக்கிய பயணத்தில் முதற்படியாக அந்த திருத்தத்தை கருதும் தமிழ்க்கட்சிகள் அத்தகையதொரு தந்திரோபாயத்தை கடைப்பிடிப்பதில் என்ன தவறு இருக்கப் போகிறது? இலங்கை அரசியலமைப்பில் இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடான 13 வது திருத்தத்தை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று கூறுகின்ற பிரிவினரும் தமிழ் அரசியல் சமுதாயத்திற்குள் கணிசமாக இருக்கிறார்கள். எதிர்காலத்தில் கொழும்பு அரசாங்கம் ஒன்று அந்த திருத்தத்தை ஒழித்துவிட்டால் அதைப் போன்ற அல்லது அதையும் விட குறைவான ஏற்பாடுகளுடன் கூடிய ஒன்றை மீண்டும் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கக்கூடிய அரசியல் வல்லமை இன்று தமிழ் மக்களிடம் இருக்கிறதா? இந்த கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. கனவுலக அரசியல் செய்வது சுலபம். ஆனால் நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறைகளைப் பற்றி சிந்திப்பதே இன்று தமிழ் மக்களுக்கு முக்கியமானது. நல்லாட்சி அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை நிறைவுசெய்து புதிய அரசியலமைப்பை கொண்டுவருவது குறித்து அநுரா குமார தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த செயன்முறையின் போது 13 வது திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகளையும் விட மிகவும் விரிவான அதிகாரப்பரவலாக்கல் யோசனைகள் குறித்து ஆராயப்பட்டதாக அன்றைய எதிர்க்கட்சி தலைவர் காலஞ்சென்ற இரா. சம்பந்தனும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் அடிக்கடி கூறினார்கள். அதனால் 13 வது திருத்தத்தைப் பற்றி இனிமேலும் பேசிக்கொண்டிருக்கவேண்டியதில்லை என்பதும் அவர்களது எண்ணமாக இருந்தது. ஆட்சிமாற்றம் காரணமாக துரதிர்ஷ்டவசமாக அந்த அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் பிரதமர் விக்கிரமசிங்க இடைக்கால அறிக்கை அறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இடையில் நின்றுபோன அந்த செயன்முறையை நிறைவு செய்யப் போவதாக தேசிய மக்கள் சக்தி கூறியிருப்பதால் அவர்களின் விஞ்ஞாபனத்தில் 13 வது திருத்தம் குறித்து பிரத்தியேகமாக குறிப்பிடப்படாதது ஒரு குறைபாடு அல்ல என்ற அபிப்பிராயத்தைக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். ஆனால், மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக 13 வது திருத்தம் கூட ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்துவந்த சூழ்நிலையில் அந்த திருத்தத்துக்கு அப்பால் செல்வது குறித்த எதிர்பார்ப்புக்களை தமிழ் அரசியல் கட்சிகள் வளர்த்து வந்திருக்கின்றன. அதற்கு இந்தியாவின் தலையீட்டை கடுமையாக எதிர்த்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இந்தியாவை அவமதிப்பதற்காக 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு கையாண்ட ஒரு தந்திரோபாயமே முதல் காரணம். பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் இந்தியப் படைகளின் வெளியேற்றத்துக்கு பிறகு மீண்டும் உள்நாட்டுப்போர் மூண்ட சூழ்நிலைகளில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கு அன்றைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்க தலைமையில் ஒரு பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. அதில் இருந்தே 13 வது திருத்தத்துக்கு அப்பால் செல்லமுடியும் என்ற நம்பிக்கை தமிழ்க்கட்சிகளுக்கு ஏற்படத் தொடங்கியது. உண்மையில் அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு பிரேமதாச கையாண்ட ஒரு தந்திரோபாயமே அதுவாகும். அதற்கு பின்னரும் சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரும் 13 வது திருத்தம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்துகொண்ட அதேவேளை வேறு முயற்சிகளை முன்னெடுத்தனர். ஆனால் எதுவுமே நிறைவுபெறவில்லை. பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிதிதித்துவக் குழுவின் அறிக்கையை மகிந்த ராஜபக்ச ஒருபோதும் வெளியிடவில்லை. இந்த அனுபவங்களை எல்லாம் படிப்பினையாக எடுத்துக் கொண்டு 13 வது திருத்தமாவது தற்போதைக்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யக்கூடிய தந்திரோபாயத்தை தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கடைப்பிடிப்பதே விவேகமானது. ஆனால், இந்தக்கருத்து வடக்கில் கனவுலக அரசியல் செய்யும் ஒரு பிரிவினரின் பரிகாசத்துக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகமில்லை. ( ஈழநாடு ) https://arangamnews.com/?p=11182
  24. ஜனாதிபதித் தேர்தல்:தமிழ்மக்கள் அறிவுபூர்வமாக முடிவெடுப்பார்களா? - நிலாந்தன் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் குறிப்பாக கணித விஞ்ஞானப் பிரிவுகளைச் சேர்ந்த கல்வி நிலையங்களுக்கு என்னென்ன பெயர்கள் என்று பார்த்தால், விஞ்ஞான மண்டபம்; விஞ்ஞான உலகம்; விஞ்ஞான சமுத்திரம்; விஞ்ஞான நீரோட்டம். விஞ்ஞான மூலை, இணைந்த கணிதத்தில் வெற்றி, மிஸ்டர் பிஸிக்ஸ்,……இப்படியே நீண்டு கொண்டு போகும். இப்பெயர்கள் யாவும் கணிதம் விஞ்ஞானம் போன்ற பாடங்கள் தொடர்பான ஒரு சமூகத்தின் அபிப்பிராயங்களைக் காட்டுபவை. இந்நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் படிக்கிறார்கள். யாழ்ப்பாணத்தின் முன்னணி தனியார் பாடசாலைகள் சிலவற்றில் கணித அல்லது விஞ்ஞானப் பட்டதாரி ஒருவர்தான் அதிபராகவும் இருக்கலாம் என்று எழுதப்படாத விதி உண்டு. கணிதம் விஞ்ஞானம் ஆகிய பாடங்களைக் குறித்து தமிழ் சமூகத்தில் உயர்வான மதிப்பீடுகள் உண்டு. இவ்வாறு கணித விஞ்ஞானத் துறைகளில் அதிகம் நாட்டமுள்ள ஒரு சமூகமானது தன் நடைமுறை வாழ்வில் எல்லாவற்றிலும் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறைகளை கொண்டிருக்க வேண்டும். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கணிதமாக அணுக வேண்டும். ஆனால் தனது பாடத் தெரிவுகளில் விஞ்ஞானத்துக்கும் கணிதத்துக்கும் முக்கிய இடத்தைக் கொடுக்கும் ஒரு சமூகம், தனது அரசியல் தெரிவுகளில் எப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து வருகின்றது? உடுப்பு வாங்கப் போனால் புடவைக் கடையில் எத்தனை மணித்தியாலத்தை எமது பெண்கள் செலவழிக்கிறார்கள்? சந்தையில் நாளாந்தம் காய்கறி வாங்கும் பொழுதும் எவ்வளவு கவனமாகத் தெரிந்தெடுக்கிறோம் ? தக்காளிப் பழத்தை நிறம் பார்த்து; அழுத்திப் பார்த்து ஒவ்வொன்றாக தெரிகிறோம். கத்தரிக்காயை நிறம் பார்த்து; அழுத்திப் பார்த்து ஒவ்வொன்றாகத் தெரிகிறோம். இவ்வாறு அன்றாட வாழ்வில் தெரிவு என்று வரும் பொழுது கவனமாகவும் நேரமெடுத்தும் பொருட்களை வாங்கும் ஒரு மக்கள் கூட்டம், தனது அரசியலில் அவ்வாறு நிதானமாகவும் கணிதமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் சிந்திக்கின்றதா? அவ்வாறு விஞ்ஞானபூர்வமாக சிந்தித்திருந்தால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும்? எப்பொழுது எடுத்திருந்திருக்க வேண்டும் ? தபால் மூல வாக்களிப்புக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்கள்தான் உண்டு. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சி எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தன் முடிவை அறிவிக்கவில்லை. இன்னொரு கட்சி பகிஸ்கரிக்கின்றது. ஏனைய கட்சிகள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துகின்றன. இதில் எது விஞ்ஞானபூர்வமான முடிவு ? அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியக்கூறுகளைக் கையாள்வது என்பது ஒரு கணித ஒழுக்கம். அப்படிப் பார்த்தால் தமிழ் மக்கள் தம் முன்னால் இருக்கும் எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆழமாகப் பரிசீலித்து முடிவுகளை எடுக்கின்றார்களா? தமது கட்சிகளும் தலைவர்களும் எடுக்கும் முடிவுகளை குறித்து தமிழ் மக்கள் கேள்வி கேட்கின்றார்களா? நீங்கள் எந்த அடிப்படையில் முடிவுகளை எடுத்தீர்கள் என்று தமது தலைவர்களிடம் அவர்கள் கேள்வி கேட்பதுண்டா ? சந்தையில் காய்கறிகளைத் தெரியும்பொழுது தெரிவு பிழைத்தால் உணவு வயிற்றில் நஞ்சாகிவிடும். பள்ளிக்கூடத்தில் பாடத் தெரிவு பிழைத்தால் கல்வி நரகமாகிவிடும். உடுப்புக் கடையில் தெரிவு பிழைத்தால் குறிப்பிட்ட நபரின் தோற்றக் கவர்ச்சி குறைந்து விடும். ஆனால் அரசியலில் தெரிவு பிழைத்தால் என்ன நடக்கும் ? 2009 க்கு பின் வந்த முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த மூத்த தலைவராகிய சம்பந்தர் தீர்க்கதரிசனம் மிக்க ஒரு முடிவை எடுத்திருக்கலாம். அதில் அவர் தமிழ்ப் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்திருந்தால் தமிழ் அரசியலின் போக்கே வேறு திசையில் போயிருந்திருக்கும். சம்பந்தரின் பூதவுடல் தந்தை செல்வா கலையரங்கில் கூரை பதிந்த அந்த சிறிய மண்டபத்தில் விசிறிகளின் கீழே தனித்து விடப்பட்ட அவலம் ஏற்பட்டிருக்காது. ஓர் அரசனைப் போல அவருக்கு ராஜ மரியாதை கிடைத்திருந்திருக்கும். ஆனால் சம்பந்தர் ஒரு முதிய தலைவராகவும் அனுபவத்தில் பழுத்த தலைவராகவும் அன்று முடிவெடுக்கவில்லை. போருக்குத் தலைமை தாங்கிய ஒரு தளபதிக்கு வாக்களிப்பது என்று முடிவெடுத்தார்.. அந்தத் தளபதி,போருக்கான அரசியல் தீர்மானத்தை எடுத்து போரை வழிநடத்திய ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராகத் திரும்பியிருந்தார். அது போர் வெற்றிக்கு உரிமை கோருவதில் வந்த போட்டி. அவ்வாறு ராஜபக்ஸக்களுக்கு எதிராகத் திரும்பிய தளபதியை வைத்து ராஜபசக்களை-அவர்கள் தமிழ் மக்களைக் கொன்று குவித்தனர் என்பதற்காக அல்ல, மாறாக-அவர்கள் சீனாவை நோக்கிச் சாய்கிறார்கள் என்பதற்காக, அரங்கில் இருந்து அகற்ற முயற்சித்த நாடுகளின் கொள்கைத் தீர்மானங்களைப் பின்பற்றி தமிழ்த் தரப்பு முடிவெடுத்தது. அதன் விளைவாக சரத் பொன்சேகாவோடு ஒரு உடன்படிக்கையும் செய்து கொள்ளப்பட்டது. விளைவாக அந்தத் தேர்தலில் சரத் பொன்சேகா மட்டும் தோற்கவில்லை, சம்பந்தரும் தோற்கத் தொடங்கினார். சம்பந்தரின் வழியும் தோற்கத் தொடங்கியது. தமிழ் மக்களை அழிக்கும் போருக்கான அரசியல் தீர்மானத்தை எடுத்து, அதற்காக அனைத்துலக சமூகத்தை தமிழ் மக்களுக்கு எதிராக ஒன்று திரட்டிய ஒரு குடும்பத்துக்கு எதிராக வாக்களிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, தமிழ் மக்கள் அந்த குடும்பத்தின் ஆணையை ஏற்றுப் போரை முன்னெடுத்த ஒரு தளபதிக்கு வாக்களித்தார்கள். போருக்குத் தலைமை தாங்கிய ஒரு தளபதிக்கு வாக்களித்துவிட்டு, அந்தப் போரை ஒரு இன அழிப்பு போராகவும் அங்கே போர் குற்றங்கள் நடந்தன என்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் நடந்தன என்றும் அனைத்துலக சமூகத்தின் முன் போய் நின்று முறையிடுவது ஒரு புத்திசாலியான சமூகம் செய்யக்கூடிய அரசியலா? சரத் பொன்சேகா இப்பொழுதும் தனது தேர்தல் பிரச்சாரங்களில் தான் மனித குண்டினால் தாக்கப்பட்ட பொழுது பயணித்த காரை ஒரு காட்சிப் பொருளாகக் காவித்திருக்கிறார். ஆனால் அவருடைய பிரச்சாரக் கூட்டங்களுக்கு சிங்கள மக்கள் வருவது குறைந்து விட்டது. அந்தக் காருக்கு இருந்த கவர்ச்சி குறைந்துவிட்டது. ஆனால் அந்தப் போரை இன அழிப்பு போர் என்று குற்றம் சாட்டும் ஒரு மக்கள் கூட்டம், அப்போரை முன்நின்று நடாத்திய ஒரு தளபதிக்கு, அந்தப் போரில் வெற்றி கொண்டதற்காகவே ஃபீல்ட் மார்ஷல் விருது பெற்ற ஒரு தளபதிக்கு, அந்தப் போர் நடந்து கிட்டத்தட்ட ஓராண்டு கழிந்திருந்த ஒரு காலகட்டத்தில், அந்தப் போரினால் அகதியானவர்கள் அப்பொழுதும் நலன் புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில், அந்த போரினால் காணாமல் போனவர்களை உறவினர்கள் தேடிப் போராட முடியாதிருந்த ஒரு காலச் சூழலில், அந்தப் போரில் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில், கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்தது. கணிதத்தை விஞ்ஞானத்தை விரும்பிக் கற்கும் ஒரு மக்கள் எடுக்கக்கூடிய புத்திசாலித்தனமான முடிவா அது? அல்லது தீர்க்கதரிசனமும் துணிச்சலும் மிக்க முடிவா அது? நிச்சயமாக இல்லை. அந்த ஜனாதிபதித் தேர்தலை சம்பந்தர் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டுக் காயங்களுக்கு ஊடாகவும் கூட்டு மன வடுக்களுக்கு ஊடாகவும் சிந்தித்து இருந்திருந்தால் முடிவு வேறு விதமாக அமைந்திருந்திருக்கும். அவருடைய இறுதி ஊர்வலத்தில், தந்தை செல்வாவின் ஊர்வலத்தில் திரண்டதுபோல ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்திருப்பார்கள். ஆனால் நாடாளுமன்றத்தில் ஒப்பீட்டளவில் அதிக தமிழ் ஆசனங்களுக்குத் தலைமை தாங்கிய ஒரு தலைவர் அரசியலைக் கணிதமாக மதிப்பீடு செய்யத் தவறினார். முடிவுகளை விஞ்ஞானபூர்வமாக எடுக்கத் தவறினார். குறைந்தபட்சம் முடிவுகளை இதயபூர்வமாக எடுத்திருந்தால்கூட நிலைமை வேறுவிதமாக அமைந்திருக்கும். அன்று எடுக்கப்பட்ட விஞ்ஞானபூர்வமற்ற முடிவுகளின் விளைவுதான் இன்றுள்ள தமிழ் அரசியலாகும். இவ்வாறாக கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் தமிழ் அரசியலில் எடுக்கப்பட்ட புத்திபூர்வமற்ற விஞ்ஞானபூர்வமற்ற முடிவுகள் அனைத்தையும் தமிழ் மக்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். காய்தல் உவத்தல் இன்றிப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். தமது வாழ்வின் அன்றாட தேவைகளுக்காக சுண்டிப் பார்த்து பொருட்களை வாங்கும் ஒரு மக்கள் கூட்டம், அரசியலிலும் அவ்வாறு சுண்டிப் பார்த்து முடிவெடுக்குமா? தமிழ்ப் பொது வேட்ப்பாளருக்கு திரண்டு சென்று வாக்களிக்குமா? நன்றி- உதயன் https://www.nillanthan.com/6877/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.