Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. இல்லை. IMDb இல் பல ஆண்டுகளாக ரசிகர்களின் விருப்பமான படங்களில் முதலாவது இடத்தில் உள்ளது https://www.imdb.com/search/title/?groups=top_100&sort=user_rating,desc&ref_=ext_shr_lnk நான் பல தடவைகள் பார்த்தும் இன்னும் அலுக்கவில்லை! ஆனாலும் எனது விருப்பமான படம் Pulp Fiction. இங்கிலாந்துக்கு வந்த பின்னர் திரையில் பார்த்த இரண்டாவது படம்! எப்படியும் 20 தடவைக்கு மேல் VHS, DVD, BlueRay, Streaming இல் பார்த்திருப்பேன். எனக்கு பிடித்த லைன்! "I'm Winston Wolf, I solve problems”
  2. விமர்சனம் : காந்தி கண்ணாடி 6 Sep 2025, 12:51 PM ஹீரோவாக ஜெயித்தாரா கேபிஒய் பாலா? டைட்டிலை பார்த்தவுடனேயே ‘இதென்ன இப்படியிருக்கு’ என்றே பெரும்பாலும் எண்ணத் தோன்றும். கூடவே, இந்த டைட்டிலை வைத்துக்கொண்டு கதையில் என்ன சொல்லிவிட முடியும் என்ற எண்ணமும் எழும். ஆனால், அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதையே தங்களது பலமாக எண்ணிக் களமிறங்கியிருக்கிறது ‘காந்தி கண்ணாடி’ படக்குழு. ரணம் பட இயக்குனர் ஷெரீஃப் இயக்கியுள்ள இப்படத்தில் ‘கலக்கப் போவது யாரு’ பாலா நாயகனாக நடித்திருக்கிறார். ‘ஃபால்’, ‘நவம்பர் ஸ்டோரி’ ‘ட்ரிபிள்ஸ்’ வெப்சீரிஸ்களில் நடித்த நமீதா கிருஷ்ணமூர்த்தி இதில் நாயகி. இவர்களோடு பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா இருவரும் ஜோடியாக இதில் தோன்றியிருக்கின்றனர். விவேக் – மெர்வின் இணை இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறது. சரி, ‘காந்தி கண்ணாடி’ தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு உள்ளதா? ‘நெகிழ்ச்சி’ தருணங்கள்! ஒரு ‘ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்’ நிறுவனமொன்றை நடத்தி வருகிறார் கதிர் (கேபிஒய் பாலா). அவரது காதலி கீதா (நமீதா கிருஷ்ணமூர்த்தி) அதனை நிர்வகித்து வருகிறார். நண்பர்கள் சிலர் (மதன், ஜீவா சுப்பிரமணியன்) அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். பணம் மட்டுமே பிரதானம் என்றிருக்கும் கதிர், தங்களது பணியாளர் வராவிட்டால் அந்த வேலையைத் தானே செய்யக் கூடியவர். அதற்கான சம்பளத்தை எடுத்துக்கொள்ளக் கூடியவர். அப்படிப்பட்டவர் ‘அறுபதாம் கல்யாணம் செய்ய வேண்டும்’ என்று தன்னைத் தேடி வரும் காந்தியைக் (பாலாஜி சக்திவேல்) காண்கிறார். மனைவி கண்ணம்மாவின் (அர்ச்சனா) ஏக்கம் அது என்பதை உணர்ந்து, அதனைச் செயல்படுத்தத் துணிகிறார். தனது சம்பளம், சேமிப்பு ஆகியவற்றைத் தாண்டி ஒரு பெரிய தொகையில் அந்த நிகழ்வை நடத்த ஆசைப்படுகிறார். காந்தி ஒரு பெரிய ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் வட்டாரத்தில் வாழ்ந்து வரும் அவர் சிறு வயதில் நடனமாடும் கண்ணம்மாவை விரும்புகிறார். இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டு இனிமையாக வாழ முடியாது என்பதை உணர்ந்து, இருவரும் சென்னைக்கு வந்துவிடுகின்றனர். அப்போது முதல் கண்ணம்மாவின் வார்த்தைகள் எதையும் காந்தி மீறியதில்லை. முதல்முறையாக, அவரது வார்த்தையை மீறித் தனது ஜமீன் குடும்பத்து சொத்துக்களை விற்றாவது இந்த அறுபதாம் கல்யாணத்தை நடத்திவிட வேண்டுமென்று நினைக்கிறார். அதற்கேற்ப, அவர் கைவசம் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் வரை கிடைக்கிறது. அதனைக் கொண்டு எளிதாகத் தனது கண்ணம்மாவின் ஆசையைத் தீர்க்கலாம் என்று நினைக்கிறார் காந்தி. அந்த நேரத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிக்கிறது மத்திய அரசு. அதன்பிறகு தனது கையில் இருக்கும் லட்சக்கணக்கான பணத்தை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் தவிக்கிறார் காந்தி. அவரிடம் வாங்கிய பணத்தைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று கதிரும் கைவிரிக்கிறார். அதன்பிறகு என்ன ஆனது? காந்திக்கு கதிர் உதவிகள் செய்தாரா என்று பதிலளிக்கிறது இப்படத்தின் மீதி. ஆசிரமம் ஒன்றை நடத்தி வரும் கதிர், அங்கிருந்த காந்தி காணாமல் போனதை அறிந்ததும் துணுக்குறுவதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. அதுவே ‘பிளாஷ்பேக்’குகள் நிறைந்த இப்படத்தைச் சலிப்பில்லாமல் பார்க்க வைக்கிறது. அது மட்டுமல்லாமல், இந்தக் கதையில் சாதாரண ரசிகர்கள் நெகிழ்ச்சியுறும்விதமாகச் சில தருணங்கள் உள்ளன. பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் வங்கி வாசலில் மக்கள் காத்துக் கிடப்பது போன்றவை அப்படிப்பட்டவை. கூடவே, ‘அதான் நீ இருக்கியே’, ‘தயிர்சாதம் சூப்பர்’ என்று பாலாஜி சக்திவேல் பேசுகிற வசனங்கள் தொடக்கத்தில் செயற்கைத்தனமாகவும், பிறகு நம்மை நெகிழவைக்கும் விதமாகவும் உள்ளன. ‘பொண்டாட்டி செஞ்சதை சாப்பிட்டு, அது நல்லாயிருக்குன்னு சொல்ல முடியலைன்னா, நீங்கள்லாம் என்ன …க்கு கல்யாணம் பண்றீங்க’ என்று அவர் வசனம் பேசுகிற இடத்தில் தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது. அந்த வகையில் முதல் பாதி இளைய தலைமுறைக்கானதாகவும் இரண்டாம் பாதி வயதானவர்களுக்காகவும் அமைந்திருப்பதே இப்படத்தின் சிறப்பு. திருப்தி கிடைத்ததா? இடைவேளை வரை ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டியவாறு நகர்கிறது திரைக்கதை. அதன்பிறகு அதில் நிறையவே தொய்வு ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் ‘இவ்ளோ கஷ்டப்பட்டு குறிப்பிட்ட தேதிக்குள்ள இந்த அறுபதாம் கல்யாணத்தை நடத்தனுமா’ என்று எண்ணும் அளவுக்குக் காட்சிகள் ‘சோக கீதம்’ வாசிக்கின்றன. ’முனுக்கென்றால் கோபம் வந்துவிடும்’ என்பது போலச் சட்டென்று கண்ணீரை உதிர்க்கக்கூடியவர்கள் தேம்பி அழும் அளவுக்கு இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் இருக்கின்றன. அக்காட்சிகளில் தெரிகிறது இயக்குனர் ஷெரீஃபின் வித்தை. இப்படத்தில் திருவிழா காட்சிகள் ஆங்காங்கே வருகின்றன. அவற்றில் மட்டும் கொஞ்சம் பிரமாண்டம் தெரிகிறது. மற்றபடி இது சுமார் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. முடிந்தவரை அந்த எண்ணம் வராத அளவுக்குக் காட்சியாக்கத்தைச் சிறப்பாக மேற்கொண்டிருக்கிறது ஒளிப்பதிவாளர் பாலாஜி கே ராஜா, படத்தொகுப்பாளர் சிவாநந்தீஸ்வரன், தயாரிப்பு வடிவமைப்பாளர் மணிமொழியான் ராமதுரை கூட்டணி. ஒப்பனை, ஒலி வடிவமைப்பு, டிஐ போன்ற அம்சங்கள் காட்சிகளைச் செறிவாக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன. திரையில் கமர்ஷியல் சினிமாவுக்கான ‘ஜிகினாத்தனம்’ தென்பட்டுவிடக் கூடாது என்று மெனக்கெட்டிருப்பது அருமை. அந்த வகையில் காட்சியாக்கத்தில் யதார்த்தம் நிறைந்திருக்கிறது. அதனைத் தாண்டி, திரையில் தெரியும் பிம்பங்களின் வழியே வெளிப்படும் உணர்வுகளை நமக்குள் கடத்த தூண்டுகோலாய் இருக்கிறது விவேக் – மெர்வினின் பின்னணி இசை. ‘திமிருக்காரி’ பாடல் ‘காந்தி கண்ணாடி’யின் அடையாளமாக உள்ளது. இது போக ‘புல்லட் வண்டி’, ‘ஹிந்தி நஹி மாலும்’ பாடல்களும் கேட்டவுடன் பிடிக்கும்விதமாக உள்ளன. அனைத்தையும் தாண்டி கிளைமேக்ஸ் பகுதியில் யுவன் சங்கர் ராஜா குரலில் ஒலிக்கிற ‘மெலடி மெட்டு’ நம் மனதைப் பிசையும்விதமாக உள்ளது. அதுவரை இப்படத்துடன் ஒன்றாதவர்கள் கூட, அந்த இடத்தில் இக்கதையோடு தம்மைப் பிணைத்துக் கொள்வார்கள் என்பதே நிஜம். ‘காந்தி கண்ணாடி’ கதையில் முதன்மையாக வரும் நான்கு பாத்திரங்களின் பின்னணி ‘விலாவாரியாக’ விளக்கப்படவில்லை. போலவே, இதர பாத்திரங்களும் காட்சிகளில் வருகின்றன, போகின்றன. அவற்றின் பின்னணியைக் கொஞ்சம் விளக்கியிருந்தால் இன்னும் முழுமையானதாகத் திரையனுபவம் மாறியிருக்கும். ஆனால், அந்த குறையை மறக்கடிக்கும்விதமாக இதில் நடிகர்களின் ‘பெர்பார்மன்ஸ்’ உள்ளது. அந்த வகையில் நாயகன் நாயகியை விட நம்மை வசீகரிப்பது பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா ஜோடி தான். அவர்களைப் புகழ்வது கடல் நீரில் பெருமழை பெய்வதைப் போலானது என்பதால் அடுத்திருப்பவர்களை உற்றுநோக்கலாம். பாலாவுக்கு இது நாயகனாக முதல் படம். அதனை உணர்ந்து சிரத்தை காண்பித்திருக்கிறார். தனது உடல் திரையில் கம்பீரமாகத் தெரிய மெனக்கெட்டிருப்பவர், முக பாவனைகளுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் தந்திருக்கலாம். அது மட்டுமல்லாமல், முதல் பாதியில் அவர் கருமியாகவும் சுயநலமானவராகவும் இருப்பது தெளிவாகச் சித்தரிக்கப்படாதது ஒரு குறையே. மற்றபடி, தன்னைக் கொண்டாடுகிற ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் அளவுக்கு இப்படத்தைத் தந்திருக்கிறார். அதிகமாக ‘காமெடி கவுண்டர்கள்’ அடிக்காமல் அடக்கி வாசித்திருக்கிறார். நாயகி நமீதா கிருஷ்ணமூர்த்தி அழகாக இருக்கிறார். தனக்கு ‘ஸ்கோப்’ இருக்கிற இடங்களில் அழகாக நடித்திருக்கிறார். ஆனாலும், அது போதுமானதாக இல்லை. ஒருவேளை நாயகன் நாயகி இருவருக்குமே அதிகளவில் ‘குளோஸ் அப்’ ஷாட்கள் வைக்காதது இயக்குனரின் குறையா என்றும் தெரியவில்லை. இவர்கள் தவிர்த்து ஜீவா சுப்பிரமணியன், மதன் மற்றும் பண மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களாக நடித்தவர்கள் என்று சிலர் வந்து போயிருக்கின்றனர். அமுதவாணன், நிகிலா சங்கர் ஜோடிக்குத் திரைக்கதையில் உரிய இடம் தரப்படவில்லை. பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் மனோஜ் பிரபு – ஆராத்யா ஜோடி சட்டென்று மனதில் பதிகிறது. அதே நேரத்தில், அவர்கள் ஊரை விட்டு வெளியேறுவதற்கான காரண காரியங்கள் இன்னும் தெளிவாகத் திரையில் சொல்லப்பட்டிருக்கலாம் என்றெண்ணுவதையும் தவிர்க்க முடியவில்லை. இந்த படத்தின் முடிவு சில ரசிகர்களுக்குத் திருப்தியைத் தராமல் போகலாம்; இவ்வளவு சோக முடிவு தேவையா என்ற கேள்வியை எழுப்பலாம். ‘இயக்குனர் என்ன சொல்ல வருகிறார்’ என்றும் தோன்றலாம். அனைத்தையும் தாண்டி சில மனிதர்கள், அவர்களது வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்கள் என்ற வகையில் நமக்கு இன்னொரு உலகத்தைக் காட்டுகிறது ‘காந்தி கண்ணாடி’. பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாமல் தியேட்டருக்குள் நுழைந்தால் இப்படம் ஓரளவுக்கு ஆச்சர்யத்தையும் நெகிழ்ச்சியையும் தரக்கூடும். https://minnambalam.com/gandhi-kannadi-movie-review-2025/
  3. கிருஷாந்தி நினைவேந்தல் சனி, 06 செப்டம்பர் 2025 01:43 AM 1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்லுறவுக்கும் பின்னர் படுகொலைக்கும் உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசுவாமி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு செம்மணி வளைவில் நடைபெற உள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாட்டுக்குழு ஒருங்கிணைத்து வருகிறது. நிகழ்ச்சி நிரல்: காலை 9.00 – நினைவுச் சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம் காலை 9.30 – நினைவுப் பகிர்வு காலை 10.00 – “வாசலிலே கிருசாந்தி” கவிதைத் தொகுப்பு வெளியீடு காலை 10.30 – ஆவண காட்சிப்படுத்தல் மாணவி கிருசாந்தி குமாரசுவாமி நினைவேந்தல் நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைக்கின்றார்கள். https://jaffnazone.com/news/50435
  4. செம்மணியில் 1500 சதுர அடிக்குள் 230க்கும் அதிகமான என்புக்கூடுகள் மீட்பு சனி, 06 செப்டம்பர் 2025 11:13 AM செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, சுமார் 1500 சதுர அடி நிலப்பரப்பில் இருந்து 231 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது , அகழ்வாய்த்தளம் - 1 மற்றும் அகழ்வாய்வு தளம் - 02 என அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது அகழ்வாய்த்தளம் - 01 புதைகுழியில் கட்டம் கட்டமாக 54 நாட்களாக , அண்ணளவாக 30 அடி அகலமும் 50 அடி நீளமும் , 05 அடி ஆழத்திலும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது குறித்த புதைகுழியில் இருந்து 231 என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. குறித்த புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாகவும் குவியல் ஆகவும், அமர்ந்த நிலையிலும் என சிறுவர் , சிசுக்கள் உள்ளிட்டவர்களின் என்புக்கூடுகளும் அடையாளம் கண்டு மீட்கப்பட்டிருந்தன. அதேவேளை அகழ்வாய்வுத் தளம் - 02 இல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் 09 என்புக்கூடுகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/50440
  5. அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி உத்தரவு September 6, 2025 12:42 pm தமிழ்நாட்டில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்க செங்கோட்டையன் காலவகாசம் விதித்துள்ள நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடனும், மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனும் திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் காலவகாசம் வழங்கியிருந்தார். இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள செங்கோட்டையன், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற பெரும்பான்மை தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக அதிமுக ஒன்றுபட வேண்டுமென கோரிக்கையை முன் வைத்ததாகத் தெரிவித்துள்ளார். இதனிடையே, பரப்புரை பயணத்திற்காக திண்டுக்கல்லில் தங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, காமராஜ், விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. https://oruvan.com/sengottaiyan-removed-from-all-responsibilities-of-aiadmk/
  6. 2025 ஆம் ஆண்டில் இதுவரை 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் - 50 பேர் உயிரிழப்பு கடந்த 12 மணி நேரத்தில் இலங்கையின் பல பகுதிகளில் நடந்த நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் காயமடைந்துள்ளார். இதன்மூலம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 50 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 53 பேர் காயமடைந்துள்ளனர். கிரேண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு: கடந்த 12 மணி நேரத்தில் நடந்த முதல் துப்பாக்கிச் சூடு, நேற்று (05) இரவு 11:45 மணியளவில் கிரேண்ட்பாஸ், மகாவத்தை கடிகார கோபுரம் அருகே நடைபெற்றது. இதில் 27 வயதான ஹேஷான் சலிந்த புஷ்பகுமார உயிரிழந்தார். பஞ்சிகாவத்தை துப்பாக்கிச் சூடு: இதற்கு சற்று பின்னர், அதிகாலை 1:40 மணியளவில் மருதானையில் உள்ள பஞ்சிகாவத்தை பகுதியில் மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் காயமடைந்த செந்தில் மோகன் (வயது 44), பஞ்சிகாவத்தையைச் சேர்ந்தவர், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் மோகன், “நெவில்” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நெருங்கிய கூட்டாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூடு, “கெசல்வத்தே கவி” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் குழுவால் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். நீர்கொழும்பு குட்டிதுவ துப்பாக்கிச் சூடு: இதேவேளை, நீர்கொழும்பு குட்டிதுவ பகுதியில் மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று (06) அதிகாலை 1:30 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒரு வீட்டின் மீது 9 மிமீ துப்பாக்கியால் ஒரு முறை மட்டும் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அலுபோமுல்ல சந்தகலவத்தை துப்பாக்கிச் சூடு: இன்று காலை 9:45 மணியளவில், பாணந்துறை, அலுபோமுல்ல, சந்தகலவத்தை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், N99 துப்பாக்கியால் விற்பனை நிலையத்தில் இருந்த பெண்ணை குறிவைத்து சுட்டுள்ளனர். எனினும், இந்தச் சம்பவத்தில் குறித்த பெண்ணுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை, மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. https://adaderanatamil.lk/news/cmf7yzacs008qqplpfnjgoxuw
  7. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இந்தியாவில் இருந்து வந்த விடுதலை நீர்! சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கு பகுதிகளில் கடந்த நாட்களில் விடுதலை நீர் சேகரிக்கப்பட்டது. அந்தவகையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் முகமாக புலம்பெயர் தேசங்களில் இருந்தும் இந்த விடுதலை நீர் சேகரிப்பு இடம்பெற்று வருகிறது. அதனடிப்படையில் நேற்றையதினம் (04) காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. இந்த நீர் சேகரிப்பு நிகழ்வானது சிவகுரு ஆதீனத்தில் நடைபெற்றது. இந்த விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வில் தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கத்தினர், அரசியல் கைதிகளின் உறவுகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்த உறவுகள், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://newuthayan.com/article/அரசியல்_கைதிகளின்_விடுதலையை_வலியுறுத்தி_இந்தியாவில்_இருந்து_வந்த_விடுதலை_நீர்!
  8. யாழ். பல்கலை வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம் யாழ். பல்கலைக்கழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான எழுத்து மூலமான கடிதம், ஓகஸ்ட் 27ஆம் திகதியிடப்பட்டு ஜனாதிபதியின் செயலாளர் குமநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேலு வகிப்பார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1966-1970 ஆம் ஆண்டு பயின்ற குமாரவடிவேல் பௌதீகத் துறையில் முதல் தர சிறப்புப் பட்டம் பெற்றவர். பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் 1975 இல் கலாநிதிப் பட்டம் பெற்ற அவர் 1976 முதல் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். 2006 - 2007 ஆம் ஆண்டுகளில், மிக நெருக்கடியான காலகட்டத்தில், யாழ். பல்கலைக்கழக பதில் துணைவேந்தராகப் பொறுப்போடு சிறப்புப் பணியாற்றியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2015 முதல் 2020 வரை அவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராகவும் அவர் பணி புரிந்தவர். பல்கலைக்கழக முன்னாள் சட்ட விரிவுரையாளர் சட்டத்தரணி கு.குருபரனின் தந்தை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. R https://www.tamilmirror.lk/செய்திகள்/யாழ்-பல்கலை-வேந்தராகப்-பேராசிரியர்-ராஜரட்ணம்-குமாரவடிவேல்-நியமனம்/175-364092
  9. காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! 06 Sep, 2025 | 01:23 PM காசா நகரத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் போது நேற்று வெள்ளிக்கிழமை (05) ஏழு குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு நகர்ப்புற மையத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சனிக்கிழமை(இன்று) அதிகாலை வரை தொடர்ந்தது. பாலஸ்தீனிய வீடுகள் மீது பாரிய தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. கசா நகரத்தில் அதிகளவான மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு உயரமான கோபுரத்தை இராணுவம் அழித்ததால், காசாவில் "நரகத்தின் வாயில்கள்" திறக்கப்படுவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/224365
  10. மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை! adminSeptember 6, 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அறிக்கைக்கு, ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளது. இந்தப் பதிலில், குறித்த அறிக்கையின் அடிப்படையாக அமைந்த மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கையின் பிரதிநிதித்துவ அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இத்தீர்மானத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை இலங்கை தொடர்ந்து எதிர்ப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது இதுபோன்ற வெளிப்புறத் திட்டங்கள், குறிப்பாக உள்நாட்டு நல்லிணக்க முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்துடனும், அதன் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடனும் இலங்கை நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் இறுதி அறிக்கை துல்லியமாகவும், சமநிலையுடனும், நிலைமையைப் பிரதிபலிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இலங்கையின் பிரதிநிதித்துவ அலுவலகம் கோரியுள்ளது. நாட்டின் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து, ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் விவரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை https://globaltamilnews.net/2025/220156/
  11. பென்டகனை போர்த் திணைக்களமாக மாற்றுவதற்கு தீர்மானம் - ட்ரம்ப் 05 Sep, 2025 | 09:25 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாதுகாப்புத் திணைக்களமான பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்ற தீர்மானித்துள்ளார். மேலும், அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை போர் செயலாளராக மாற்றும் நிறைவேற்று ஆணையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன அமெரிக்க ஆயுதப்படைகளை மேற்பார்வையிடும் பென்டகன், போர்த் திணைக்களத்தின் வாரிசு ஆகும், இது முதன்முதலில் 1789 இல் அமைச்சரவை அளவிலான நிறுவனமாக நிறுவப்பட்டு 1947 வரை நீடித்தது. நிர்வாகத் திணைக்களத்தை உருவாக்கும் பொறுப்பு அமெரிக்க காங்கிரஸிடம் உள்ளது. அதாவது திணைக்களத்தின் பெயரை உத்தியோகபூர்வமாக மாற்ற ஒரு திருத்தம் தேவைப்படும் https://www.virakesari.lk/article/224251
  12. ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் : உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! 05 Sep, 2025 | 09:47 AM ஆப்கானிஸ்தானின் தொலைதூர தென்கிழக்கு பகுதியில் வியாழக்கிழமை(நேற்று) இரவு 5.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆறு நாட்களில் மூன்றாவது நிலநடுக்கமாக இது ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. குறித்த நிலநடுக்கம் அந்த நாட்டு நேரப்படி 20.56 அளவில் பதிவாகியுள்ளது. இதனால் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மக்கள் அச்சத்தில் இருப்பதுடன், அந்த பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர். வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், காயமடைந்த சுமார் 17 பேர் குனார் மாகாண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,368 பேர் உயிரிழந்ததுடன், 2,180 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/224250
  13. கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை 04 September 2025 குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட, கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16 மாணவர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஏறாவூர் நீதிவான் முன்னிலையில் மாணவர்கள் 16 பேரும் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல குறித்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், தினமும் மாலை 05 மணிக்கும் 06 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஏறாவூர் காவல்நிலையத்துக்கு சென்று கையொப்பமிட வேண்டும் எனவும் நீதிவான் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்தில் தொழில்நுட்ப பீட மாணவர்கள் மீது பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பில் குறித்த 16 மாணவர்களும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 07 மாணவிகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. Hiru Newsகிழக்கு பல்கலை மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணைகிழக்கு பல்கலை மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை . Most visited website in Sri Lanka.
  14. எல்லயில் பஸ் 1000 அடி பள்ளத்தில் விழுந்த இடம் Editorial / 2025 செப்டெம்பர் 05 , மு.ப. 07:17 எல்லையில் பஸ்ஸூடன் ஜீப்பும் 1000 அடி பள்ளத்தில் புரண்டுள்ளது... http://editorial.tamilmirror.lk/articles/loadEditArticle/error#%23%23%23Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KB https://www.tamilmirror.lk/செய்திகள்/எல்லயில்-பஸ்-1000-அடி-பள்ளத்தில்-விழுந்த-இடம்/175-364056
  15. விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கோரிக்கை! விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாக போலித் தகவல்களை பரப்பி கனடாவில் பல்வேறு தரப்பினர் பணம் வசூலித்து வருவதாக அந்நாட்டில் வசிக்கும் புலம்பெயர் நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். அதன்படி, வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பின்வரும் கேள்விகள் பாதுகாப்பு அமைச்சிடம் கேட்கப்பட்டுள்ளது இறுதிச் சடங்கு எப்போது நடத்தப்பட்டன? இறுதிச் சடங்கு எங்கு நடைபெற்றன? இறுதிச் சடங்கு எவ்வாறு செய்யப்பட்டது? ( உதாரணம் - தகனம்) இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதா? அப்படியானால், அதன் அதன் இலக்கம் மற்றும் பிரதேசம். இந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கண்ட தகவல்களை தான் கோருவதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார். https://newuthayan.com/article/விடுதலைப்புலிகளின்_தலைவர்_தொடர்பில்_பாதுகாப்பு_அமைச்சிடம்_மனித_உரிமைகள்_செயற்பாட்டாளர்_கோரிக்கை!
  16. நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது! எல்ல - வெல்லவாய வீதியில் நேற்றிரவு (04) இடம்பெற்ற பாரிய பேருந்து விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் விபத்து தொடர்பாக குறித்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற இந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த தங்காலை நகரசபை பணியாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து 200 மீற்றர் பள்ளத்தாக்கில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. காவல்துறையினர், இராணுவம், விமானப்படை, தீயணைப்புத் திணைக்களம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து விபத்தில் சிக்கியவர்ளை மீட்டனர். அத்துடன் விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/நாட்டை_உலுக்கிய_எல்ல_விபத்து_-_ஒருவர்_கைது!
  17. ‘யுலிசிஸ்’ (Ulysses) – புறக்கணிக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கிய முன்னோடி! Bookday20/05/2025 அ. குமரேசன் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகப் போற்றப்படுகிற, நவீனத்துவ இலக்கிய முன்னோடியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிற நாவல் 1922ஆம் ஆண்டில் வெளியான ‘யுலிசிஸ்’ (Ulysses)., அந்நாளிலேயே புராணக் கதாபாத்திரத்தை வைத்து மாற்றுச் சிந்தனை உள்ளிட்ட புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியதற்காகப் பாராட்டுகளைப் பெற்ற படைப்பு. அயர்லாந்து நாட்டின் ஜேம்ஸ் ஜாய்ஸ் – James Joyce (1882–1941) எழுதிய இந்தக் கதை, தொடக்கத்தில் கடுமையான முரண் விமர்சனங்களைச் சந்தித்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் தடை செய்யப்பட்டது. இலக்கியவாதிகளின் கருத்துகளைத் தொடர்ந்து மற்ற நாடுகளில் படிப்படியாகத் தடை விலக்கப்பட்டது, அமெரிக்காவில் பதிப்பாளர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் 1934இல் தடையை நீக்கியது. முரண்களாகக் கூறப்பட்டவை – வழக்கமான நாவல்களிலிருந்து மாறுபட்ட நடை, ஆகவே வாசிப்பதற்கு எளிதாக இல்லை. திடீர்த் திடீரென்று தத்துவம், உளவியல், அறிவியல், வரலாறு, மொழி இலக்கணம் என்று எங்கெங்கோ போகிறது, ஆகவே கதை என்னதான் சொல்கிறது எனப் புரியவில்லை. தடைக்கான காரணங்களாகக் கூறப்பட்டவை –பாலியல் உறவுகளைச் சித்தரிக்கிறது, அது அன்றைய சமூகக் கருத்துகளுடன் முரண்படுகிறது. ஒரு பெண்ணின் பாலியல் எண்ணங்களை வெளிப்படையாகப் பேசுகிறது, அது ஒழுக்க நெறிகளை மீறுகிறது. ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joyce) & யுலிசிஸ் (Ulysses) இந்த எதிர்ப்புகள் நியாயமற்றவை என்று எழுத்தாளரும், கதையின் புதுமையை ரசித்துக் கருத்தை ஏற்றுக்கொண்ட இலக்கியவாதிகளும் நிறையவே வாதிட வேண்டியிருந்தது. அதில் வெற்றியும் கிடைத்தது. நாவல் தொடர்பாக இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் சுவையானவை. மூன்று பாகங்களாக வந்த இந்த நாவலில் மொத்தம் 18 அத்தியாயங்கள் உள்ளன. அத்தியாயம் என்று சொல்வது தவறு, ஏனென்றால் புத்தகத்தில் காட்சி (எபிசோட்) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கப் பதிப்புகளில், காட்சிகளுக்குத் தலைப்புகளோ, வரிசை எண்களோ தரப்படவில்லை. ஆனால் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்குவது வெவ்வேறு முறைகளில் உணர்த்தப்பட்டிருக்கும். ஒரு காட்சி உரைநடையாக இருக்கும், இன்னொரு காட்சி நாடக உரையாடலாக இருக்கும், மற்றொரு காட்சி கவிதை வடிவில் இருக்கும், வேறொரு காட்சி சொல் விளையாட்டுகளோடு ஆங்கில மொழியின் வரலாறு பற்றிப் பேசும்! பல இடங்களில் வாக்கிய அமைப்புகள் கரடு முரடாக இருக்கும். இதையெல்லாம் ஜேம்ஸ் ஜாய்ஸ் திட்டமிட்டே செய்திருந்தார். மூவரின் கதை 1904 ஜூன் 16 , அயர்லாந்து தலைநகர் டப்ளின். அந்த ஒரு நாளில் நடைபெறுகிற, குறிப்பாக மூன்று பேரின் அனுபவங்களும் சிந்தனைகளுமே கதை. பத்திரிகை விளம்பர முகவரான லியோபோல்ட் ப்ளூம் அதன் விற்பனையாளர். அவரது மனைவி மோல்லி ஒரு பாடகர். இளம் ஆசிரியரான ஸ்டீபன் டெடலஸ் ஓர் எழுத்தாளர். நகரத்தின் ஒரு கோபுரக் கட்டடத்தில் நண்பர்களோடு குடியிருக்கும் ஸ்டீபன் டெலஸ் தனது தாயின் மரணத்தை எண்ணி வருந்துகிறான். நண்பர்கள் அவனைக் கேலி செய்கிறார்கள். பள்ளிக்குச் சென்று வகுப்பில் வரலாற்றுப் பாடம் நடத்தும் ஸடீபன் பின்னர் கடற்கரைக்குச் சென்று தனியாக அமர்ந்து சிந்தனையில் மூழ்குகிறான். தனது தந்தையுடன் நல்ல உறவில் இல்லாத ஸ்டீபன் தனக்கொரு ஞானத் தந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறான். லியோபோல்ட் ப்ளூம் தனது மனைவிக்குக் காலை உணவு தயாரித்துக் கொடுக்கிறார். பிறகு வீட்டிலிருந்து வெளியே வந்து நகரத்தில் சுற்றுகிறார். மனைவிக்கு பிளேசஸ் போய்லான் என்ற, இசைக்குழு மேலாளருடன் தொடர்பு இருக்கிறது என்ற சந்தேகம் அவரை அப்படிச் சுற்ற வைக்கிறது. ஆனால், மார்தா கிளிஃபோர்ட் என்ற பெண்ணுக்குப் புனைப் பெயரில் காதல் கடிதங்கள் அனுப்புகிறவரான அவருக்கு, அந்தப் பெண்ணிடமிருந்து கடிதம் வருகிறது. தொழில் சார்ந்தும் நட்பு முறையிலும் பலரோடு உரையாடுகிறார். இன்னொரு பக்கம், தனது மகனை இழந்த துயரத்தில் இருக்கும் அவரும், தனக்கொரு ஞானப் புதல்வன் வேண்டுமென நினைக்கிறார். மோல்லிக்கு உண்மையிலேயே போய்லானுடன் தொடர்பு இருக்கிறது. அவருடைய பாலியல் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதது காரணமா அல்லது மிகுதியான வேட்கை கொண்டவரா என்பது வாசகர்களின் கருத்துக்கு விடப்படுகிறது. சிறுவயதில் தன்பாலின ஈர்ப்பு கொண்டவராக ஒரு தோழியுடன் பழகியவர் என்று நாவலின் பிற்பகுதியில் தெரியவருகிறது. ஊரைச் சுற்றி வருகிற ப்ளூம் தனது செயல்கள் பற்றித் தனக்குத் தானே விமர்சித்துக்கொள்கிறார். தனிமை, மனைவியின் மீது சந்தேகம், தானே சந்தேகத்துக்கு உரியவராக நடந்து கொள்வது, மோல்லியின் விருப்பங்கள் பற்றிய மதிப்பீடு, மனசாட்சியின் விசாரணை ஆகியவற்றால் உந்தப்படும் உணர்ச்சி மேலீட்டுடன் அவர் அலைக்கழிக்கப்படுகிறார். ஒரு மதுபானக் கூடத்தில் ப்ளூம், ஸ்டீபன் இருவரும் அறிமுகமாகிறார்கள். ஒருவர்க்கொருவர் பிடித்துப்போக பல சிந்தனைகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். தான் தேடுகிற ஞான மகன் ஸ்டீபனாக இருக்கலாம் என்று ப்ளூமும், ஞானத் தந்தை ப்ளூமாக இருக்கலாம் என்று ஸ்டீபனும் நினைத்துக்கொள்கிறார்கள். ஸ்டீபனை ப்ளூம் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். தன்னோடு தங்கச் சொல்கிறார். ஆயினும் தனது சுதந்திரமான பாதையில் பயணிக்க விரும்பும் ஸ்டீபன் மறுத்துவிட்டு மறுபடி தனிமையில் நகரத்திற்குள் செல்கிறான். ஒருநாள் பழக்கம்தான் என்ற நிலையில் வீட்டில் தங்குகிற அளவுக்கு நெருங்க வேண்டாம் என்ற எண்ணத்தாலோ, மோல்லியின் வெளிப்படைத் தன்மையால் ஏற்பட்ட தயக்கத்தாலோ ஸ்டீபன் அந்த முடிவை எடுத்திருப்பான் என்று வாசகர்கள் ஊகித்துக்கொள்ளலாம். கடைசிக் காட்சியில், மோல்லியும் ப்ளூமும் சேர்ந்தே படுத்திருக்கிறார்கள். அப்போது மோல்லி தனது கடந்தகால நினைவுகளுக்குள் பயணிக்கிறார். தன்னுரையாடல் வடிவில் அந்த நினைவுகள் வாசகர்களுக்குப் பகிரப்படுகின்றன. தனது பாலியல் வேட்கை, கணவரைப் பற்றிய மதிப்பீடு, அவருடைய பக்குவம், போய்லான் மீதான உடல் சார்ந்த கவர்ச்சி, அதற்கு முன் பல ஆண்களுடன் பழகியது, இளவயதினளாக இருந்தபோது ஒரு நண்பியிடன் தன்பாலின ஈர்ப்பு, திருமணத்திற்கு முன் ப்ளூம் தன்னை அணுகி சேர்ந்து வாழும் விருப்பத்தை வெளிப்படுத்தியது, அப்போது நெருக்கமாக இழுத்தணைத்துத் தனது ஒப்புதலை அளித்த விதம்… இப்படியாக அந்தத் தன்னுரையாடல் வெளிப்படுகிறது. செய்து வைத்தவர்களா? இலக்கியத் திறனாய்வாளர்களின் கருத்துப்படி – மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் படைப்பு இது. கதையின் ஓட்டமே, இயற்கையான பாலியல் விருப்பத்தைச் சார்ந்திருப்பதால் அது பற்றிய சித்தரிப்புகளில் தவறில்லை. மேலும், ஒரு கதாபாத்திரம் என்றால் முழுக்க முழுக்க நல்லவர், அல்லது முழுக்க முழுக்கக் கெட்டவர் என வார்க்கப்படுவதிலிருந்த இந்த நாவல் மாறுபடுகிறது. அத்துமீறும் ஆசைகளும் அதைப் பற்றிய சுயவிமர்சனங்களுமாக இயல்பான மனிதர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள். ப்ளூம் மனைவியின் மீது ஆத்திரப்படும் வழக்கமான கணவராக இல்லாமல், மோல்லியைப் புரிந்துகொள்ள முயல்வதும், தனது நிலையை மறுசிந்தனைக்கு உட்படுத்துவதும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய உளவியல் நுட்பங்கள். மோல்லியின் நினைவோட்டம் ஒரே சீராக இல்லாமல், தொடர்ச்சியாக அமையாமல் ஏறுக்கு மாறாக இருக்கும். பொதுவாக மனிதர்கள் தனியாகச் சிந்திக்கிறபோது எழுதிவைத்தது போலத் தொடர்ச்சியாக இருக்காது, ஒன்றைப் பற்றி யோசிக்கிறபோதே இன்னொன்றைப் பற்றிய யோசனை தொற்றிக்கொள்ளும். அதை அலசுகிறபோது தொடர்பே இல்லாத வேறொரு நிகழ்வு நிழலாடும். இதை ஜேம்ஸ் ஜாய்ஸ் சிறப்பாகக் கொண்டுவந்திருக்கிறார். அந்த நீண்ட தன்னுரையாடலில் எங்கேயும் காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி, கேள்விக்குறி, வியப்புக்குறி என எந்த நிறுத்தற்குறியும் இருக்காது. அது வாசிப்பதற்கு சிரமமாக இருந்தாலும், அதுவே ஒரு புதிய உத்தியாகவும் அமைந்தது. நினைவுப் பகிர்வில் மோல்லி இடையிடையே “ஆமா” (யெஸ்) என்ற சொல்லை அடிக்கடி சொல்வதாக வரும். “ஆமா… அவன் என்னிடம் நெருங்கி ஆமா அப்படிக் கேட்டான் ஆமா நான் அவனை ஆமா அப்படியே அணைச்சிக்கிட்டேன்…” இப்படி. இந்த “ஆமா” மிகவும் புகழ்பெற்ற சொல்லாக மாறியதாம். ஸ்டீபன் என்னாகிறான்? ப்ளூமும் மோல்லியும் இணக்கமானார்களா? இவ்வாறான பல கேள்விகளுக்கு கதையின் போக்கை வைத்து அவரவர் கண்ணோட்டத்தில் பதில் காண வைக்கிறது நாவல். இதன் மூலம் வாசகர்களைப் படைப்பின் பங்காளியாக்குகிறார் நாவலாசிரியர். தனிமனித சிந்தனையோட்டம், உளவியல் ஆய்வு, நகர வாழ்க்கை என இந்த நாவலை மூன்று கோணங்களில் ஆராயலாம். இப்படிப்பட்ட படைப்பு வெளியானபோது தடை செய்யப்பட்டதற்கு அரசியல் காரணம் ஒன்றும் உண்டு. ஸ்டீபன் மதுபானக்கூடத்தில் இருக்கிறபோது, தேசப்பற்று பற்றிய காரசாரமான விவாதம் ஏற்படுகிறது. அப்போது அவன் பிரிட்டிஷ் மன்னரைக் கடுமையாக விமர்சிக்கிறான். அயர்லாந்தில் சுதந்திரத்திற்கான கிளர்ச்சி ஏற்பட்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் இந்த விமர்சனம் அரசு மீதான தாக்குதலாகப் பார்க்கப்பட்டது. அந்தக் காரணத்திற்காகவும் இங்கிலாந்தில் நாவலுக்குத் தடை விதிக்கப்பட்டது. பிற்காலத்தில் அதே இங்கிலாந்தில் பல நாடகக்குழுக்கள் நாவலை மேடையேற்றியிருக்கின்றன. வானொலி நாடகத் தொடராகவும் ஒலிபரப்பானது. 1967இல் பிரிட்டன்–அமெரிக்க கூட்டுத் தயாரிப்பாக ‘ யுலிசிஸ் (Ulysses) ’ என்ற தலைப்பிலும், 2003இல் அயர்லாந்து–கனடா கூட்டுத் தயாரிப்பில் ‘ப்ளூம்’ என்ற தலைப்பிலும் திரைப்படங்களாக வந்தது. முதல் படம் வணிக அடிப்படையிலும் நல்ல வெற்றியைப் பெற்றது, இரண்டாவது படம் சுமாராகவே போனது. பெயரிலேயே ஒரு கலகம் 1914இல் டப்ளின் நகர வாழ்க்கையைப் பல வகைகளில் பிரதிபலித்த ‘டப்ளினர்ஸ்’ என்ற சிறுகதைகள் தொகுப்பு, 1916இல் தன் சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘எ போர்ட்ரெய்ட் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் அஸ் எ யங் மேனி’ என்ற நாவல், 1939இல் சிக்கலான மொழி விளையாட்டுக்காகப் பெரிதும் பேசப்படும் ‘ஃபின்னேகன்ஸ் வேக்’ என்ற நாவல் ஆகியவை ஜாய்ஸ்சின் குறிப்பிடத்தக்க இதர சில படைப்புகளாகும். டப்ளின் நகரில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. செவ்வியல் தன்மை, புதுமை முயற்சி, ஒரு காலத்தில் முரணாகப் பார்க்கப்பட்ட கதாபாத்திரங்கள், நுட்பமான அரசியல்–சமூக விமர்சனம், மொழி விளையாட்டுகள், அறிவியலும் வரலாறும் உள்ளிட்ட தேடல்கள், உளவியல் வெளிப்பாடுகள் இவற்றுக்காக இன்றளவும் இலக்கியம் மற்றும் கல்வி வட்டாரங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது ‘ யுலிசிஸ் (Ulysses) ’. யுலிசிஸ் (Ulysses) கிரேக்கப் புராணக் கதைகளில் வருகிற ஒரு வீரர். ஹோமர் எழுதிய ‘ஒடிஸி’ காவியத்தில், பல சாகசங்களைச் செய்கிற முக்கியமான கதாபாத்திரம். அந்த வீரரின் பெயரை, ஜேம்ஸ் ஜாய்ஸ், எந்தப் பரபரப்பும் எதிர்பாராத திருப்பங்களும் அசாத்தியமான சாகசங்களும் இல்லாத ஒரு சராசரி மனிதரான ப்ளூமின் ஒரு நாள் நிகழ்வுகளைக் கூறும் ஒரு நாவலுக்குச் சூட்டியதே கூட பேசுபொருளானது. சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கை ஒன்றும் சாதாரணமாதல்ல என்று உணர்த்தவே இந்தப் பெயராம்! https://bookday.in/books-beyond-obstacles-14-james-joyces-ulysses-a-neglected-novel-based-article-written-by-a-kumaresan/
  18. மணலில் கட்டப்பட்ட பாலம் ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன் தமிழாக்கம் : கார்த்திக் பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் லோமேஸர் என்ற முனிவர் அவர்களுடன் வழிகாட்டி சென்றார் . ஒருமுறை , கங்கைக் கரையில் அமைந்திருந்த ஒரு ஆசிரமத்திற்கு அவர்களை அழைத்து சென்று அந்த இடத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கத் துவங்கினார் . அந்த இடமானது , பரத்வாஜ முனிவரின் மகனான யவக்ரீதா தன் அழிவை தேடிக்கொண்ட இடமாகும் . அந்த இடமானது பரத்வாஜ முனிவரின் நண்பரான ரைபயா என்ற முனிவரின் ஆசிரமம் . அங்கே ரைபயாவும் அவரது மகன்களான பரவஸு மற்றும் அர்வவஸு வேதங்களைக் கற்றுணர்ந்து மிகவும் புகழுடன் வாழ்ந்த வந்தனர் . பரத்வாஜ முனிவரோ இந்த உலக சுகதுக்கங்களை விடுத்து இறைவனுடன் கலப்பது பற்றியே சிந்தனையாக இருந்தார் . ரைபயா மற்றும் அவரது மகன்களுக்கு கிடைத்த புகழை கண்டு பொறாமைக் கொண்டான் யவக்ரீதா. தானும் அது போன்ற புகழைப் பெற வேண்டி இந்திரனை நோக்கி கடுமையான தவத்தை மேற்கொண்டான் . அவனது கடுமையான தவத்தைக் கண்டு மனமிரங்கிய இந்திரனும் அவன் முன் தோன்றி எதற்கு இத்தகைய தவம் இயற்றுகிறாய் என கேட்டான். அதற்கு யவக்ரீதா “இந்திரனே ! இந்த உலகில் உள்ள வேதங்களை எல்லாம் கற்றுணர்ந்தவன் ஆக விரும்புகிறேன் . ஆனால், ஒரு குருவிடம் சென்று இவற்றை கற்க நான் விரும்பவில்லை . எனவே, எனக்கு அந்த வேதங்களின் அறிவை கொடுப்பாயாக” எனக் கேட்டான் . அதைக் கேட்ட இந்திரனோ “வேதங்களை அறிய அவற்றை கற்பதே ஒரே வழி . எனவே , இந்த தவத்தை விடுத்து ஒரு குருவிடம் சென்று அவற்றைக் கற்றுக்கொள்” எனக் கூறி மறைந்தான் . ஆனால் , தன் முயற்சியை கைவிட விரும்பாத யவக்ரீதா, மீண்டும் முன்னை விட கடுமையான தவத்தை மேற்கொள்ள துவங்கினான். இம்முறையும் இந்திரனிடம் மீண்டும் அதே வரத்தை கேட்க , இந்திரனும் முன்பு சொன்ன அதே பதிலைக் கூறினான் . பின் ஒரு நாள் காலையில் யவக்ரீதா குளிக்க ஆற்றங்கரைக்கு சென்றான். அங்கே ஒரு முதியவர் கரையில் இருந்த மணலை எடுத்து ஆற்றில் போட்டுக் கொண்டிருந்தார் . அவர் என்ன செய்கிறார் என புரியாத யவக்ரீதா அவரிடம் வினவினான் . அதற்கு அந்த முதியவர் “ஆற்றில் இந்த மணலைப் போடுவதன் மூலம் , இக்கரையில் இருந்து அக்கரை செல்ல பாலம் எழுப்புகிறேன்” என பதில் உரைத்தார் . அதைக் கேட்ட யவக்ரீதா சிரித்துக் கொண்டே “கையில் மணல் எடுத்து பாலம் கட்டப் போகிறாயா? உனக்கு இது முட்டாள்தனமாக தெரியவில்லையா? ” என கேலியாக கேட்டான். “வேதங்களை கற்காமலேயே அந்த அறிவு வேண்டும் என நினைப்பதை விடவா இது முட்டாள்தனம்?” என திருப்பிக் கேட்டார் முதியவர். அந்த முதியவர் வேறு யாருமில்லை . இந்திரன்தான் முதியவரின் வடிவில் யவக்ரீதாவிற்கு பாடம் புகுத்த வந்திருந்தான். தன் தவறை உணர்ந்த யவக்ரீதா, இந்திரனின் காலில் விழுந்து “நான் நன்கு கற்றறிந்தவன் ஆக ஆசிர்வதிப்பீர்களாக” என கேட்டான். இந்திரனும் அவனது மனமாற்றத்தால் மகிழ்ந்து “நீ வேதங்களை நன்கு கற்றறிந்து புகழுடன் வாழ்வாயாக” என ஆசிர்வதித்தார். அழிவை உண்டாக்கிய தற்பெருமை யவக்ரீதாவின் கதையை லோமேஸர் தொடர்ந்து சொல்லலானார் . இந்திரனிடம் ஆசி பெற்ற யவக்ரீதா மெல்ல மெல்ல வேதங்களைக் கற்று தேர்ந்தான். இந்திரனின் ஆசியால்தான் தான் தனக்கு வேதங்களின் அறிவு கிட்டியதாக எண்ணி கர்வமடைந்தான். தனது மகன் செல்லும் பாதையை தன் ஞான திருஷ்டியால் உணர்ந்த பரத்வாஜர் அவனை அழைத்து அவனை எச்சரித்தார். ரிஷி ரைபயாவையும் அவரது மகன்களையும் குறைத்து எடை போடுவது அவனது அழிவுக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறியது அவனது மனதில் பதியவே இல்லை . ஒரு நாள் காலையில் , பரவஸுவின் அழகிய இளம் மனைவி , ரைபயாவின் ஆசிரமத்திற்கு அருகே நடந்துக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டவுடன், தனது உணர்வுகளையும் மனதையும் அடக்க முடியாத யவக்ரீதா, மிருகமாய் மாறினான். தனிமையான இடத்திற்கு அவளை இழுத்து சென்று அவளை மானபங்கப்படுத்தினான். ஆசிரமத்திற்கு திரும்பி வந்த ரிஷி ரைபயா, அங்கே தனது மருமகள் அலங்கோலமாய் அழுது கொண்டிருப்பதைக் கண்டு அவளிடம் விசாரிக்கத் துவங்கினார். அவள் நடந்ததை சொல்ல, அதைக் கேட்ட ரிஷி ரைபயா மிகவும் ஆத்திரம் கொண்டார். தனது ஜடாமுடியில் இருந்து இரு முடிகளை பிடுங்கி மந்திரம் ஜெபித்து அங்கே இருந்த அக்னியில் வீசினார். அந்த அக்னியில் இருந்து அழகிய பெண் ஒருத்தியும் , கோர உருவம் கொண்ட அரக்கியும் உருவானார்கள். யவக்ரீதாவை கொல்ல அவர்களுக்கு உத்தரவிட்டார் ரைபயா. யவக்ரீதா காலை நேர கடன்களை கழித்துக் கொண்டிருக்கையில் , அவனை நோக்கி வந்த அந்த அழகிய பெண் அவனை மயக்கி அவன் தண்ணீர் வைத்திருந்த கமண்டலத்தை அவனிடமிருந்து பறித்து சென்றது. இப்பொழுது அந்த அரக்கி தன் ஈட்டியால் யவக்ரீதாவை கொல்ல வந்தது. யவக்ரீதா மந்திரங்கள் மூலம் அந்த அரக்கியை விரட்ட இயலும் என்றாலும், அதற்கு முன் அவன் தன்னை நீரால் சுத்திகரித்துக் கொள்ளவேண்டும். அவனின் கமண்டலம் பறிபோனதால், அருகில் இருந்த குளத்தை நோக்கி ஓடினான். ஆனால்,அவன் அதனருகே சென்றவுடன் அந்த குளம் வறண்டுவிட்டது. பின், அருகில் இருந்த ஓடையை நோக்கி ஓட அதுவும் அவன் அங்கே சென்றவுடன் காய்ந்து போனது. தன் உயிரை காத்துக் கொள்ள, அவனது தந்தை பரத்வாஜர் தவம் புரிந்துக் கொண்ட குடிலை நோக்கி ஓடினான். ஒவ்வொரு இடமாய் ஓடியவனின் சிகை அவிழ்ந்து முகம் வியர்த்து அடையாளம் தெரியாமல் மாறி இருந்தான். பாரத்வாஜரின் குடிலை காத்து நின்ற வயதான காவலாளிக்கு யவக்ரீதாவின் இந்த கோலம் அடையாளம் தெரியவில்லை. யாரோ பாரத்வாஜரின் தவத்தை கெடுக்க வருவதாக எண்ணி அவனை தடுத்து நிறுத்த அவன் பின்னாலேயே வந்த அந்த அரக்கி , தன் ஈட்டியால் யவக்ரீதாவை கொன்றது. https://solvanam.com/2025/02/23/மணலில்-கட்டப்பட்ட-பாலம்/
  19. தெரு நாய் சர்ச்சை : தீர்வு ரொம்ப சிம்பிள்.. கழுதையை பற்றி கவலைப்பட்டார்களா? – கமல்ஹாசன் விளாசல்! 3 Sep 2025, 2:34 PM தெரு நாய்கள் கடிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தெரு நாய்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். தெரு நாய்கள் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அம்மு, நடிகர் படவா கோபி உள்ளிட்டோர் மீது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (செப்டம்பர்-3) காலை சென்னை விமான நிலையத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தெரு நாய்கள் சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த கமல், ” தீர்வு ரொம்ப சிம்பிள். விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்ன என்று தெரிந்தவர்கள் கழுதையை எங்க காணோம் என்று யாராவது கவலைப்படுகிறார்களா.. கழுதை எல்லாம் காணாமல் போய்விட்டதே.. நமக்காக எவ்வளவு பொதி சுமந்துள்ளது. அதை நாம் இப்போது பார்ப்பதே இல்லையே..கழுதையை காப்பாற்ற வேண்டும் என்று யாராவது பேசுகிறார்களா.. எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு காப்பாற்ற வேண்டும்.. அவ்வளவுதான் எனது கருத்து” என தெரிவித்துள்ளார். https://minnambalam.com/kamal-response-on-the-stray-dog-controversy/
  20. கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியும் – சீமான் கடும் எச்சரிக்கை September 3, 2025 5:22 pm கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்திய அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக தேர்தல் களம் சூடாகியுள்ள நிலையில், கச்சதீவு விவகாரமும் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய சீமான், கச்சதீவு தமிழகத்தின் சொத்து. அது தமிழர்களுக்குச் சொந்தமானது. இந்தியா எப்படி கொடுக்க முடியும். இதனை இலங்கைக்கு கொடுக்கும் போது அதனை இந்திய நாடாளுமன்றில் எதிர்த்த ஒரே நபர் மூக்கையா தேவராகும். தமிழன தலைவர் புகழ்ந்துகொண்ட கலைஞர் என்ன செய்தார். கச்சதீவு கொடுக்கப்பட முன்னர் அதுகுறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக செய்திகள் உள்ளன. இந்தியமும் திராவிடமும் தமிழனத்துக்கும் தமிழத் தேசியத்துக்கும் எப்போதும் எதிரான என்பதை இதன் ஊடாக புரிந்துகொள்ள முடியும். நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைந்தால் உறுதியாக கச்சதீவு மீட்கப்படும். அதற்கான தீர்மானம் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு நெய்தல் படை அமைக்கப்பட்டு மீனவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். கச்சதீவை இந்தியா மீட்காவிடின் தமிழ்நாடு பிரியும். சிங்களவர்கள் நண்பர்கள் என்றாம் நாம் யார் எனக் கேள்வியெழுப்புகிறோம். அவர்கள்தான் முக்கியம் என்றால், எம்மை பிரித்து விடுங்கள் எனக்டி கோருவோம். இந்திய விடுதலைக்காக போராடியது தமிழர்கள். எம்மைவிட அவர்கள்தான் முக்கியம் என்றால், அவர்களுடன் இந்தியா நட்பு பாராட்டிக்கொள்ளட்டும் என்றும் அவர் கூறினார். https://oruvan.com/auto_awesome-translate-from-english-1829-5000-tamil-nadu-will-secede-from-india-if-kachchadive-is-not-recovered-from-sri-lanka-seaman-warns/
  21. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற அறுவை சிகிச்சைகள் மூலம் அதிக நாட்கள் வாழ முடியுமா? இதுகுறித்து சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கும் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் பேசிக்கொண்டது வைரலாகி வருகிறது. சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் இராணுவ அணிவகுப்புக்கு நடந்து செல்லும்போது இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட உரையாடல் மைக் திடீரென ஆன் ஆனதால் கசிந்தது. அவர்கள் பேசியதாவது, ஷி ஜின் பிங்: கடந்த காலத்தில், மக்கள் 70 வயதைத் தாண்டி வாழ்வது அரிது என்று கூறினோம். ஆனால் இன்று உங்கள் 70 களில் கூட, (நீங்கள்) இன்னும் ஒரு குழந்தையாகவே இருக்கிறீர்கள். புதின்: ஆம். மிகச் சில ஆண்டுகளில், உயிரி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், மனித உறுப்புகள் தொடர்ந்து மாற்றப்படும். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு இளமையாக இருப்பீர்கள். அந்த வகையில், இறவாமை சாத்தியமாகும். ஷி ஜின்பிங்: இந்த நூற்றாண்டில் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழ முடியும் என்று சிலர் கணிக்கின்றனர். இருவருடன் நடந்து சென்ற வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இதைக் கவனித்து சிரித்தார். உரையாடலின் மொழிபெயர்ப்பை அவர் கேட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் இது குறித்து கேட்டபோது, புதின் உரையாடலை உறுதிப்படுத்தினார். “நாங்கள் அணிவகுப்புக்கு நடந்து சென்றபோது ஷி ஜின்பிங் இதைப் பற்றிப் பேசினார் என்று நான் நினைக்கிறேன். தொழில்நுட்பம், சுகாதார அமைப்புகள் மற்றும் அறுவை சிகிச்சையின் திறனைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் மனிதகுலம் மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ முடியும்” என்று புதின் கூறினார். https://akkinikkunchu.com/?p=339524
  22. நாவற்குழியில் நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திற்து வைப்பு PrashahiniSeptember 4, 2025 நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான அன்னை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நேற்று (03) நடைபெற்றது. நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்து, நிறுவனத்தையும் திறந்து வைத்தனர். அத்துடன் நிறுவனத்தின் செயற்பாடுகளையும் பார்வையிட்டனர். நிகழ்வில் நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே.கஹவத்த, யாழ்ப்பாண மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண பிரதேச செயலர் சா.சுதர்சன், யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அகிலன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.thinakaran.lk/2025/09/04/breaking-news/150884/நாவற்குழியில்-நவீன-கடலுண/
  23. போர்த்துக்கல் - லிஸ்பனில் ரயில் கேபிள் கார் விபத்து ; 15 பேர் பலி! 04 Sep, 2025 | 09:30 AM போர்த்துக்கல்லின் தலைநகரான லிஸ்பனில் உள்ள 140 ஆண்டுகள் பழமையான குளோரியா ஃபுனிகுலர் எனும் ரயில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லிஸ்பனின் நகரமுதல்வர் கார்லோஸ் மொய்டாஸ் புதன்கிழமை இரவு வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார். இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் நகர முதல்வரை வரவேற்கும் போர்த்துக்கல் அரசாங்கம், தேசிய துக்க தினமொன்றை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/224158
  24. மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள வாசஸ்தலம் சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்படுமா? 04 Sep, 2025 | 10:54 AM முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. அரச உயர் அதிகாரிகளால் இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை அமுல்படுத்த அரசாங்கம் எதிர்ப்பாத்துள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் காலங்களில் சபாநாயகரிடம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224168
  25. புலமைப்பரிசில் பரீட்சை - அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த லக்சயன்! 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 194 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளான். 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (04) அதிகாலை வௌியிடப்பட்டன. இந்தப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. மொத்தம் 307,951 பரீட்சார்த்திகள் இதற்குத் தோற்றியிருந்தனர். மாணவன் ஆனந்தசோதி லக்சயனின் இந்தச் சாதனையின் மூலம், தனது பாடசாலைக்கும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் லதாநந்தினி சிவபாதம் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmf4xo9k0007xo29nktu6dqqe புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்று ஷனுதி அமாயா சாதனை 2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, காலி அம்பலாங்கொடை ஸ்ரீ தேவாநந்த பாடசாலை மாணவி ஷனுதி அமாயா அஸ்வினி, சிங்கள மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 198 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதேவேளை, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 194 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (04) அதிகாலை வௌியிடப்பட்டன. இந்தப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. மொத்தம் 307,951 பரீட்சார்த்திகள் இதில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmf4xy9xm007dqplp73s06m6e

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.