Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. "ஒருவர் ஆட்சியில் இருக்கும் போது போரே இல்லையென்றால், அது உத்தம ஆட்சி தான்" என்பதை ஏன் இலங்கையிலும் பிரயோகிக்க முடியாது எனக் கேட்டேன்! இதன் பதில் உங்களுக்குத் தெரியுமென்பதால் பேசாமல் இருக்கிறீர்கள்! இது ஒன்றும் தேவையில்லாத புகுத்தல் அல்ல: ட்ரம்ப் ஆட்சியின் உலக அமைதி, அமெரிக்கா முழுவதும் தன் கவனத்தை உள்நோக்கித் திருப்பிக் கொண்டதால் உலகைக் கைகழுவி விட்ட அமைதி! இது ஏற்கனவே முன்னர் ஒரு தடவை நடந்திருக்கிறது 30 களில் - அதன் விளைவு என்னவென்பதை ஏற்கனவே ஒரு தொடரில் எழுதியாகி விட்டது. அப்படித் தான் இன்றும் விளைவு விபரீதமாக (குறிப்பாக ஐரோப்பாவிற்கு) இருந்திருக்கும்!
  2. அப்ப இலங்கைக்கு கோத்தா, மகிந்தா, மைத்திரி ரீம் ஓகேயா உங்களைப் பொறுத்த வரை? அவர்களும் "அமைதி" யான சிறிலங்காவைத் தந்தார்கள் என்பீர்களா😂? அமைதி என்பது "யுத்தமில்லா நிலைமை" என்பது மிகவும் எளிமையான, நுனிப்புல் மேயும் பார்வை. ட்ரம்ப் இருந்திருந்தால், இப்ப புரின் கியேவில் நின்று ஜேர்மனிக்கு எரிவாயுவை வெட்டுவதா இல்லையா என்று திட்டம் போட்டிருப்பார்! இது யுத்தமில்லாமல் நடந்திருக்கும் என்பது உண்மை!
  3. இதில் விதி எங்கே இருக்கிறதெனத் தெரியவில்லை. இரண்டு பிரதேச அழிவுகளும் முதிர்ச்சியற்ற மனிதர்கள் தலைமையேற்றமையால் வந்த அவலங்கள். உக்ரைனில் அவலத்திற்கு 100% காரணம் ரஷ்யாவின் தலைமை, பலஸ்தீனத்தின் அழிவுக்கு இரு தரப்பும் சமபங்காளிகள்!
  4. சீனா ட்ராகன் எழும்பி விட்டது (ஆனால், உள்ளூரில் ~20% இளையோர் வேலை வாய்ப்பின்மையாம் சீனாவில்!😎) பிறிக்ஸ் நாணயம் டாலரை விழுங்கி விட்டது இந்தா கியேவ் விழுந்து விடப் போகிறது.. இப்படி பல "அமிக்டலா" வழியாக யோசிக்கும் அபிப்பிராயங்களைப் பார்த்தாயிற்று, ஒன்றும் நடந்த மாதிரித் தான் தெரியவில்லை! பி.கு: இங்கே உள்ளூரில் இதே போல அமிக்டலா வழியாக யோசித்து "உக்ரைனுக்கு நிதியை நிறுத்து" என்ற கூப்பாட்டின் வழியாக கீழ் சபையின் சிவப்புக் கட்சியின் ஒரு சிறு அணி மக்கார்தியை சபாநாயகர் பதவியில் இருந்து அகற்றியது. இப்போது, இஸ்ரேலுக்கு அதை விட அதிக உதவி குறுகிய நாட்களில் போகிற நிலையில், "இஸ்ரேலுக்கு உதவியை நிறுத்து" என்று கத்த முடியாமல் தொண்டையில் முள் சிக்கித் தவிக்கிறார்கள்😂! இப்படி எதிர்த்து, அடுத்த தேர்தலில் யூத அமெரிக்கர்களின் வாக்கை சிவப்புக் கட்சி இழக்க வேண்டுமென நான் யாசிக்கிறேன்! அமிக்டலா - Amygdala: மூளையின் அடிப்பாகத்தில் இருக்கும் உணர்ச்சிக்குப் பொறுப்பான பகுதி! இதனை முன் மூளைப் படையின் (prefrontal cortex) தரவு கிரகிக்கும் பகுதி கட்டுப்படுத்தா விட்டால், உணர்ச்சி மயமான கோசங்கள் மட்டுமே தரவுகள் போலத் தெரியும்!
  5. வழமையாக "தர்மத்தின் தலைவன்😎" புரினின் ஆதரவாளர்கள் பரப்பும் போலிச் செய்திகளில் ஒன்று. இதைப் போன வாரமே "தகவல் சோதிக்கும்" அமைப்புகள் பொய்யென்று அறிவித்து விட்டன. https://apnews.com/article/fact-check-misinformation-weapons-israel-hamas-draft-5a12af9e78e5cbd42d74b026cb4e566c https://www.verifythis.com/article/news/verify/israel-hamas-war/bbc-ukraine-hamas-video-fake-fact-check/536-ab186ea2-4907-4ad0-8db8-7969dded6d85
  6. கதியில்லாமல் அலையும் றொகிங்கியா முஸ்லிம்களை விட்டு விட்டீர்கள்! அவர்களையும் நல்ல விதமாகப் பார்க்காத "பலஸ்தீன விடுதலை ஆதரவாளர்கள்"!😎
  7. இவையெல்லாம் பற்றி முன்னரும் உரையாடியிருக்கிறோம் வேறு திரிகளில். அமெரிக்காவின் பொருளாதாரம், இராணுவ மேலாண்மை, தேசிய பாதுகாப்பு, சட்ட ஆட்சி என்பன ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இராணுவ மேலாண்மை இல்லயெனில் பொருளாதாரம் நிலைக்காது, ஐரோப்பாவில் பாதுகாப்பு இல்லையெனில் அமெரிக்காவிற்கும் பாதுகாப்பில்லை, பாதுகாப்பில் குறைபாடு வந்தால் அமெரிக்க டொலர், பங்குச் சந்தை எல்லாம் பாதிக்கப் படும். எனவே, தான் எவ்வளவு நிதி உக்ரைனுக்கோ, இஸ்ரேலுக்கோ அமெரிக்கா கொடுக்கிறது என்பதை விட, அதனால் அமெரிக்கா எதைப் பெறுகிறது என்பதையும் பார்த்தே எல்லாம் தீர்மானிக்கப் படுகிறது. இதற்கு ஒரு டொலர் எண்ணிக்கையை மட்டும் வைத்துப் பார்த்து "போரை முடித்து விடலாம், உக்ரைனை வெட்டி விடலாம்" என்ற tunnel vision முடிவை அமெரிக்கா இலகுவாக எடுக்காது. அப்படி வெட்டி விட வேண்டும் என்று கூறும் சிவப்புக் கட்சியினர் 2024 இல் காங்கிரஸ் தேர்தலில் ஆசனங்கள் இழப்பார்களா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேணும்!
  8. "ஒரு வாரத்தில் கியேவ் விழுந்து விடும்!" என்று சொன்னது பலித்தது போலவே, "ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகி விடும்" என்பதும் பலிக்க இன்னும் ஒரு நாள் தான் மிச்சமிருக்குது😎! இப்படி ஊர் உலக நிலவரம் தெரியாத புரினெல்லாம் ஒரு அணுவாயுத நாட்டின் தலைமையில் இருக்கிறார் என்றால் எங்கையோ உதைக்கிறது!
  9. இது அரைவாசிக் காரணம். மிகுதிக் காரணம், இது வரை நடந்த இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் பெற்றோரின் (முதல் 4 நாட்களிலேயே 260 குழந்தைகள் காசாவில் கொல்லப் பட்டன), பெற்றோரை இழந்த பிள்ளைகளின் உணர்வு ரீதியான எதிர் வினையாக இருக்கும். காலா காலமாக இத்தகைய இழப்புகளால் பாதிக்கப் பட்டோர் இதயத்தால் தான் யோசிப்பர், தலையால் அல்ல - அப்படி தலையால் யோசிக்கும் படி நாம் ஆலோசனை சொல்வதும் futile exercise என நினைக்கிறேன். அந்த காம்ப் டேவிட் (2000 ஆம் ஆண்டு) சமாதான முயற்சியின் பின்னர் பிறந்த ஒருவர் இப்போது 22 வயது இளைஞராக இருப்பார். வளர்ந்தவர்களே பொய்ச்செய்திகளால் ஆகர்சிக்கப் பட்டு எடுபட்டுப் போகும் இந்தக் காலத்தில், இத்தகைய இளைஞர்களை தம் வசம் இழுப்பது ஹமாஸ் போன்ற குழுக்களுக்கு மிக இலகு.
  10. இதில் முரண் கருத்து எதுவும் எனக்கு இல்லை. இஸ்ரேல் ஹமாஸ் போல நடந்து கொள்ளக் கூடாதென முதல் வரியிலேயே சொல்லி விட்டேன். இஸ்ரேலுக்கு, பழி வாங்குவதை விட அதிக சுமையான, பொறுப்பான விடயங்கள் உண்டு. அந்த 38% பற்றி மேலதிக விளக்கம்: "1948 இல் Al Nakba என்ற பலஸ்தீனப் பேரழிவின் பின் (இது இஸ்ரேலிடம் பலஸ்தீன நிலம் முதலில் பறி போன நிகழ்வு) நிகழ்ந்த ஒரு நல்ல விடயம் என்ன?" என்ற கேள்விக்குத் தான் ஹமாஸ் உருவானமை என 38% காசா மாதிரிகள் துலங்கள் காட்டியிருக்கிறார்கள். நேரடியாக ஹமாசை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா என்ற கேள்வியைக் கேட்கவில்லை. இதை, கருத்துக் கணிப்பில் இருக்கும் இன்னும் சில கணிப்புகளோடு சேர்த்துத் தான், பலஸ்தீன மக்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறதென்ற கருத்தைச் சொல்கிறேன். இதன் அர்த்தம், காசாவில் இருக்கும் பலஸ்தீன மக்கள் ஹமாசின் குற்றப் பங்காளிகள் என்று சுட்டிக் காட்டுவதல்ல. ஆனால், நேரம் கிடைக்கும் போது முழு ஆவணத்தையும் வாசித்தீர்களானால், பலஸ்தீனர்கள் தங்கள் சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படுத்தாமல் இந்தச் சிக்கலில் இருந்து மீளவே முடியாதென்று நான் நம்புவதன் அடிப்படையை விளங்கலாம்: ஒரு சாம்பிள் - இரு- நாடுகள் தீர்வுக்கான ஆதரவு - மொத்த பலஸ்தீனர்களிடம் 28%, ஆயுதமே வழி என்று சொல்வோர் ~50%. 2008 இன் பின்னர் ஒரு தேர்தலும் நடக்காத நிலையில், இது போன்ற கருத்துக் கணிப்புகள் தான் பலஸ்தீன மக்களின் எண்ண ஓட்டத்தைக் காட்டுவதாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!
  11. ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம், அவர்களிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், இஸ்ரேல் ஒரு தேசம், எனவே பழிவாங்கும் உணர்வு இருந்தாலும் இஸ்ரேல் படைகள் சிவிலியன்களைப் பாதுகாக்கும் படி நடந்து கொள்வது குறைந்த பட்ச தகுதியாக இருக்க வேண்டும். நிற்க: ஹமாஸ் காசாவில் 2007 இல் தேர்தல் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. மேற்குக் கரையில் ஹமாஸிற்கு ஆதரவில்லை. ஈரான், துருக்கி, கட்டார் ஆகிய நாடுகள் ஹமாசுக்கு பல் வேறு வழிகளில் நிதியுதவி செய்கின்றன. இவற்றுள், கட்டார் மட்டும் தான் மனிதாபிமான உதவிகளாகச் செய்கின்றது - இது இஸ்ரேலினால் அனுமதிக்கப் பட்டிருக்கும் உதவி என்கிறார்கள். இதை விட எகிப்தில் இருந்து காசாவினுள் வரும் பொது மக்களுக்கான உணவு, பாவனைப் பொருட்கள் மீது வரி விதித்து, ஹமாஸ் வருடாந்தம் பல மில்லியன் வருமானம் பார்க்கிறது. இந்த வரியையும் ஆயுதம் வாங்கத் தான் பாவிக்கிறார்கள் - ஏனெனில் காசா வாழ் மக்கள் கண்டது மருந்து, உணவு எல்லாமே தட்டுப்பாடான வாழ்க்கை தான் கடந்த 16 ஆண்டுகளாக. முக்கியமான கேள்விக்கு வருகிறேன்: காசா மக்கள் ஹமாசை இப்போது ஆதரிக்கிறார்களா? இந்த ஆண்டு ஜூனில் ~1200 பேர்களிடம் எடுக்கப் பட்ட மாதிரிக் கருத்துக் கணிப்பின் படி காசாவில் இருக்கும் 38% பேர் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் ஆகிய வன்முறை அமைப்புகளின் வருகை நல்ல விடயம் எனத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த வீதம் மேற்குக் கரையில் வெறும் 16%! இதற்கு இஸ்ரேல் மீதான வரலாற்றுக் கோபம் உட்பட பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் இஸ்ரேலின் இருப்பை ஒழிக்க வேண்டுமென எழுத்தில் வைத்திருக்கும் இரு அமைப்புகளை கணிசமானளவு காசா வாழ் மக்கள் விரும்புகிறார்கள் என்றே தெரிகிறது. 5 மில்லியன் மக்கள் தொகையில், வெறும் 1200 பேரின் மாதிரியாக (sampling) இருந்தாலும், பல சுவாரசியமான தரவுகளை உள்ளடக்கிய கருத்துக் கணிப்பு ஆவண இணைப்பு இது, நேரம் இருப்போர் வாசியுங்கள்: https://www.pcpsr.org/sites/default/files/Poll 88 English full text June 2023.pdf ஒரு முட்டுச்சந்தில் பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினை முட்டி நிற்கிறது. இந்த முட்டுச் சந்தை விட்டு நகர, இஸ்ரேல் செய்ய வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன, ஆனால் பலஸ்தீன மக்கள் செய்ய வேண்டிய பல விடயங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன்.
  12. பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக: 1. இஸ்ரேலியர்கள் காட்டும் வரலாற்றுக் காரணம்: இஸ்ரேல், யூதேயா ஆகிய தேசங்கள் அரசர்களின் கீழ் 2000 ஆண்டுகள் முன்பே இருந்திருக்கின்றன. இந்தத் தேசங்களில் வாழ்ந்தோரே யூதர்கள். எனவே தேசமொன்றாக இருந்த மக்கள் யூதர்கள் என்பது உண்மை. மறுவளமாக, பலஸ்தீனம் பல்வேறு பெயர்களில் பலஸ்ரைன் (Palestain), பெரும் சிரியா (Greater Syria), சிரியா பலஸ்தீன், "Mandatory Palestine" எனும் பெயர்களில் பலஸ்தீன் என்ற பிரதேசத்தில் அரபு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் ஒரு தனித் தேசமாக இருக்கவில்லை என்பது யூதர்களின் வாதம். 2. நடைமுறைக் காரணம்: பலஸ்தீனம் ஒரு தேசமாக இருந்திருக்கா விட்டாலும் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த மண்ணை தாய் நிலமாகக் கொள்ள வேண்டும், எனவே இரு நாடுகள் அந்தப் பிரதேசத்தில் உருவாக வேண்டும் என்பது ( கோசான் சொல்லியிருப்பது போல) 90 களில் இருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. எனவே, இரு பகுதிக்கும் உரிமை சமனானது என்பது ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. 3. முட்டுச்சந்து: இரு நாடுகள் உருவாக வேண்டுமானால் இரு பகுதிக்கும் அடிப்படையாக "நிலம்" வேண்டும். இங்கே தான் முட்டிக் கொண்டு நிற்க வேண்டியிருக்கிறது. பலஸ்தீனர்களின் கீழ் இருந்த நிலத்தில் 50% இற்கும்சிறிது அதிகமான பகுதி 1948 இல் ஐ.நா தீர்மானம் மூலம் இஸ்ரேலுக்குப் போனது. இதை ஏற்றுக் கொள்ளவோ, சமாதானமாகப் போகவோ விரும்பாத பலஸ்தீனர்களும், அரபு நாடுகளும் இஸ்ரேலைத் தாக்க முனைந்த போது போர் உருவாகி 1949 இல் மிக அதிக அளவிலான பலஸ்தீனப் பகுதி (78%?) இஸ்ரேல் வசமாகியது. 1967, 6 நாள் யுத்தத்தில் இது இன்னும் அதிகரித்தது. இதில் பாடம் என்னவெனில், ஒவ்வொரு முறையும் பலஸ்தீன கிளர்ச்சியும், அரபு நாடுகளின் தாக்குதலும் நடந்த போதெல்லாம், இஸ்ரேலுக்கு மேலும் அதிக நிலம் கிடைத்திருக்கிறது. அல்லது, மேலும் பாதுகாப்பு என்ற போர்வையில் பலஸ்தீனத்தைக் கட்டுப் படுத்தும் சாட்டுக் கிடைத்திருக்கிறது. இந்த முறையும் இதுவே நடக்கும். அனேகமாக, காசவினுள் இஸ்ரேல் படைகள் நுழையாது. அப்படி நுழைய வேண்டுமென்ற ஹமாசின் ஆசைக்கு இஸ்ரேல் பலியாகாது என நினைக்கிறேன். ஆனால், காசா, மேற்குக் கரை மீதான இஸ்ரேலின் பிடி இன்னும் இறுகும். மிகக் கடினமான ஒரு வாழ் நிலைக்குள் காசா வாழ் பலஸ்தீனர்கள் தள்ளப் படுவர். அவர்களாகவே ஹமாசை எதிர்த்தாலொழிய வழியில்லை என்ற நிலையை ஏற்படுத்த இஸ்ரேல் முயலும்.
  13. 😂 அண்மையில் ஒரு கள உறவிடம் "ஆறுமுக நாவலர் யாழ் மத்திய கல்லூரியில் படித்தார்" என்றேன். அவர் மறுத்து "யாழ் மத்திய கல்லூரியில் படித்த பின்னர் தான் அவர் நாவலர் என்ற பெயர் கொண்டார்!" என்று என்னைக் கடிந்து கொண்டார்! இப்படி இருக்கிறது உங்கள் ஆபிரகாம் பற்றிய வரலாற்றுப் புரிதல்! ஆபிரகாம் யூதர் இல்லையென்றால், இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர் அல்ல என்பது போல ஆகும் - ஏனெனில் இயேசுவைக் கொன்ற பின்னர் தான் கிறிஸ்தவம் என்ற மதம் உருவானது. ஆபிரகாம் என்ற பாத்திரம் பல தெய்வங்களை வழி பட்ட ஒரு காலத்தில் பிறந்து வந்தவர் என்றாலும் ஏக கடவுள் (monotheism) என்ற நிலை நோக்கி அவர் காலத்தில் நகர்ந்த போது தான் யூத மதத்தின் ஆரம்ப வடிவம் உருவானது. இந்த ஆரம்ப மதத்திலேயே பல பிரிவுகள் (sects) இருந்திருக்கின்றன என்பது உண்மை. அலெக்சாண்டர் யூதரைப் பற்றி எழுதவில்லையா தெரியாது, ஆனால் சாக்கடல் ஓலைகள் (Dead Sea scrolls) கி.மு 300 இல் எழுதப் பட்டவை, 1947 இல் கண்டறியப் பட்டன. இன்றைய யூதர்களினதும், கிறிஸ்தவர்களினதும் பொதுக் கதையான பழைய ஏற்பாட்டை இவற்றில் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த சாக்கடல் படிமங்கள் எழுதப் பட்ட இடம் தற்போதைய மேற்குக் கரையில் இருக்கும் Qumran ஆக இருக்க வாய்ப்புகள் உண்டென்கிறார்கள். தங்களை இவர்கள் " people of the book" என்று அழைத்துக் கொண்டார்களென சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், அக்காலத்தில் இருந்த பல யூதப் பிரிவுகளில் ஒன்று தான் இது என சாக்கடல் ஓலைகளின் உள்ளடக்கத்திலிருந்து தெரிகின்றது.
  14. குருசேவ், சோவியத் ஒன்றியமும் (அதன் பின் வந்த ரஷ்ய சமஷ்டியும்) கண்ட தலைவர்களுள் வித்தியாசமானவர்: 1. ஸ்ராலின் இறக்கும் வரை மௌனமாக இருந்து, அவர் இறந்து கொண்டிருந்த தறுவாயில் ஸ்ராலின் வால்களை வெட்டி விட்டு பதவிக்கு வந்தவர். 2. ஸ்ராலின் செய்த தவறுகளை அவர் இறந்த பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளகக் கூட்டத்தில் சுட்டிக் காட்டிய ஒருவர். 3. சைபீரிய சிறைகளில் இருந்த ஸ்ராலின் சிறைப்படுத்திய ஏராளமான கைதிகளை விடுவித்தவர். 4. இதற்கெல்லாம் பதிலாக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி இவரை பதவியிலிருந்து அகற்றி, மீண்டும் ஸ்ராலின் வால்களை பதவிக்குக் கொண்டு வந்தது. சோவியத் ஒன்றியத்தின் தலைமையில் இருக்கும் போதே இறக்காமல், பதவி போன பின்னும் உயிரோடிருந்த தலைவர்கள் இருவர் மட்டுமே: ஒருவர் குருசேவ், இரண்டாமவர் அண்மையில் இறந்த கொர்பச்சேவ். மிச்ச எல்லா சோவியத் தலைவர்களும் ஆட்சிக் கதிரையில் இருக்கும் போதே உயிரை விட்டவர்கள் தான்!
  15. ஓயாத நிழல் யுத்தங்கள்-4 ஒக்ரோபர் மாதம் ஆரம்பித்திருக்கிறது. பனிப்போர் காலத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களுள் ஒன்றான கியூப ஏவுகணைப் பிணக்கு நிகழ்ந்து இந்த மாதம் 61 ஆண்டுகள் நிறைவாகிறது. இந்த முக்கிய நிகழ்வின் பின்னணியைப் பார்க்கலாம். வெளியே தெரியாத பேராபத்து பனிப்போரின் சுவாரசியமான கதைகள் சம்பவங்களுக்குப் பின்னணியில், ஒரு இருண்ட ஆபத்து எப்போதும் மறைந்திருந்தது. அணுவாயுதப் போர் தான் அந்த ஆபத்து. பனிப்போர் காலத்தில், அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் அணுவாயுதங்களை உற்பத்தி செய்து, பரிசோதித்து வந்தன. இதனோடு இணைந்து, இந்த அணுவாயுதங்களைக் காவிச் செல்லும் தொழில் நுட்பங்களையும் இரு நாடுகளும் தொடர்ந்து நவீன மயப்படுத்தி வந்தன. உலகின் முதல் அணுவாயுதம், அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலம் பசுபிக்கிற்கு எடுத்துச் செல்லப் பட்டு, அங்கே மீள ஒன்றிணைக்கப் பட்டு, பி 29 என்ற விசேட விமானத்தில் எடுத்துச் செல்லப் பட்டு வீசப்பட்டது. இது நடந்து 10 ஆண்டுகளில், ஏவுகணைகள் மூலம் அணுவாயுதங்களை இலக்குகள் நோக்கி அனுப்பி வைக்கும் தொழில் நுட்பத்தை இரு நாடுகளும் உருவாக்கி விட்டன. கையிருப்பில் இருக்கும் அணுவாயுதங்களின் எண்ணிக்கையை விட, இந்த ஏவுகணைத் தொழில் நுட்பம் அணுவாயுதப் போரின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாக உருவாகி விட்டது. சோவியத் ஒன்றியம் கியூபாவில் நிறுத்தி வைத்த SS-4 வகை ஏவுகணை, மொஸ்கோ இராணுவ அணிவகுப்பின் போது. Medium-Range Ballistic Missile (MRBM) ஆன இதன் வீச்சு குறைந்தது 600 மைல்கள். அமெரிக்காவின் பல நகரங்கள் இந்த வீச்சினுள் அடங்கியிருந்தன. பட உதவி நன்றியுடன் ஜோன் கெனடி நினைவு நூலகம். சோவியத் ஒன்றியம் அணுவாயுதங்களை அமெரிக்கா நோக்கி ஏவுவதற்கு R-16 ரக ஏவுகணைகளை வைத்திருந்தது. திரவ எரிபொருள் மூலம் இயங்கிய இந்த ஏவுகணைகளை உடனே ஏவி விட முடியாதபடி பல மணி நேரத் தயாரிப்பு தேவையாக இருந்தது. இதற்கு எதிராக, அமெரிக்கா வைத்திருந்த அணுவாயுத தாங்கி ஏவுகணைகளில் Minuteman என்ற வகை திட எரிபொருள் மூலம் இயங்கிய உயர் தொழில் நுட்பத்தைக் கொண்டிருந்தது. இதன் பெயர் சுட்டிக் காட்டுவது போலவே, சில நிமிடங்களில் இந்த ஏவுகணையை தயாராக்கி ஏவி விடக் கூடியதாக இருந்தது. இது ஒரு பாரிய பலச்சம நிலைப் பிரச்சினையாக சோவியத் ஒன்றியத்திற்குத் தெரிந்தது. ஏனெனில், அணுவாயுதப் போரில் யார் முதலில் தாக்கி, எதிர் தரப்பின் துலங்கலைப் பூச்சியமாக்குகிறார் என்பதிலேயே வெற்றி தங்கியிருக்கிறது. 1960 களில், இந்த விடயத்தில் அமெரிக்காவின் கைகள் ஓங்கியிருந்தமையை சோவியத் ஒன்றியம் அறிந்தே இருந்தது - ஆனால், வெளிப்படையாக தங்களிடம் அதிக ஏவுகணைகள் இருப்பதாக ஒரு பிரச்சாரத்தை செய்து “Missile gap” என்றொன்று இருப்பதை அமெரிக்க நேட்டோ தரப்பை ரஷ்யர்கள் நம்ப வைத்திருந்தனர். இத்தகைய அனுகூலங்களோடு, நேட்டோ தரப்பிற்கு தங்கள் உறுப்பு நாடுகளில் அணுவாயுதம் தரித்த ஏவுகணைகளை நிறுத்தி வைத்திருக்கக் கூடியதாகவும் இருந்தது. மிக முக்கியமாக, சோவியத் அச்சுறுத்தலில் இருந்து தப்ப நேட்டோவில் இணைந்த துருக்கி, நேட்டோவின் ஏவுகணைகளை தன் நாட்டில் நிறுத்தி வைக்கவும் அனுமதித்திருந்தது. டசின் கணக்கான ஜுபிரர் (Jupiter) ஏவுகணைகள் அமெரிக்க விமானப் படையின் கட்டுப் பாட்டில் துருக்கியினுள் வைக்கப் பட்டிருந்தன. இதற்கு நிகராக, அமெரிக்காவிற்கு அருகில் மிக நெருங்கி தனது படைகளை நிறுத்தவோ, ஏவுகணைகளை வைத்திருக்கவோ சோவியத் ஒன்றியத்திற்கு வசதிகள் இருக்கவில்லை - ஆனால் 1959 இல் இந்த நிலை மாறியது! அமெரிக்கா உருவாக்கிய கியூபா கியூபா, அமெரிக்காவின் தென்கிழக்குக் கரையிலிருந்து 90 மைல்கள் தொலைவிலிருக்கும் ஒரு தீவுக் கூட்டம். இன்று 11 மில்லியனுக்கும் அதிக மக்கள் கொண்ட, கரீபியன் தீவுகளில் இரண்டாவது பெரிய சனத்தொகை கொண்ட நாடு கியூபா. 1902 இல் கியூபா உருவான போது, அங்கே சோசலிசம், கம்யூனிசம் இருக்கவில்லை. உண்மையில், ஸ்பெயினின் காலனி ஆட்சியிலிருந்து கியூபா விடுதலை பெற, காலனி எதிர்ப்பாளராக அன்று திகழ்ந்த அமெரிக்கா உதவி புரிந்தது. இதனால், அமெரிக்காவின் இராணுவத் தளங்களை அமைக்கவும், அமெரிக்க தொழிலதிபர்கள் தொழில் முயற்சிகளை மேற்கொள்ளவும் கியூபாவில் முன்னுரிமை கிடைத்தது. கரும்புச் செய்கையும், அதிலிருந்து கிடைக்கும் சீனியும் தான் கியூபாவின் பிரதான உற்பத்திப் பொருட்கள். 1950 களில் fபுல்ஜென்சியோ பரிஸ்ராவின் தலைமையில், கியூபா ஊழலும், அடக்கு முறைகளும் மலிந்த தேசமாக அமெரிக்காவின் ஆதரவுடன் திகழ்ந்த காலத்தில் தான் fபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா ஆகியோரின் தலைமையில் ஆட்சி மாற்ற முயற்சி புரட்சியாக துளிர் விட்டது. ஒரு கட்டத்தில், பரிஸ்ராவின் ஊழலை அமெரிக்காவினால் கூட பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில், அமெரிக்க ஆதரவு நீங்கி விட, பரிஸ்ராவின் ஆட்சி வீழ்ந்து காஸ்ட்ரோவின் புரட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்தனர் - இது நிகழ்ந்தது 1959 இல். கம்யூனிச கியூபா ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ உடனடியாக கம்யூனிச நாடாக கியூபாவை மாற்றவில்லை. அமெரிக்கா வழமை போல தன் நலன்களைப் பேண இடம் இருந்தது. ஒரு கட்டத்தில், நியூ யோர்க் நகருக்கு காஸ்ட்றோ விஜயம் செய்து பலமான மக்கள் வரவேற்பைப் பெற்ற நிலை கூட இருந்தது. ஆனால், அமெரிக்காவின் சி.ஐ.ஏ மத்திய அமெரிக்காவில் செயல்படுத்தியது போல, கியூபாவின் ஆட்சியை முற்றிலும் தம் சார்பாக மாற்றும் முயற்சிகளை எடுத்து, 1961 இல் ஒரு இரகசிய இராணுவ நடவடிக்கையைக் கூட எடுத்திருந்தது. இதனை அவதானித்த சோவியத் ஒன்றியம், காஸ்ட்ரோவை தன் பக்கம் அணைத்துக் கொண்டது. 1962 இல், காஸ்ட்ரோ தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக (அதுவும் சோவியத் சார்பு கம்யூனிஸ்ட்டாக) பகிரங்கமாக அறிவித்தார். ஒரு படி மேலே சென்று, கியூபாவில் இருந்த அமெரிக்க கம்பனிகளை அரசுடமையாக்கிய அறிவிப்பும் வெளிவந்தது. அமெரிக்கா பதிலுக்கு, கியூபாவின் சீனி உட்பட்ட ஏற்றுமதிகளைத் தடை செய்து, கியூப பொருளாதாரம் வீழ்ச்சியடைய வைத்தது. ஜோன் கெனடியும் நிகிரா குருசேவும் இந்த வேளையில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இளையவர் கெனடி இருந்தார். சோவியத் தலைவராக இருந்த நிகிரா குருசேவ் அனுபவசாலி, படிப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னேறி மேலே வந்த பழுத்த அரசியல் வாதி. இந்த அனுபவ அசம நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தான் குருசேவ் கியூபாவில் சோவியத் ஏவுகணைகளை நிறுத்தி வைக்கும் திட்டத்தை முடுக்கி விட்டார். வெளிப்படையாக கெனடியுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திய குருசேவ், ஜேர்மனியின் பெர்லின் நகர் முழுவதையும் சோவியத் தரப்பிடம் விட்டு விடும் படி அழுத்தம் கொடுத்தார். அமெரிக்காவின் இராணுவ தலைமையோ, பெர்லினில் இருந்து ஒரு அங்குலம் கூட நேட்டோ அணி பின்வாங்கக் கூடாது என்று கெனடிக்கு ஆலோசனை கொடுத்திருந்தது. கெனடியும் இதை விட்டுக் கொடுக்காமல் இருந்த நிலையில், ஒரு அழுத்தமாகத் தான், கியூபாவிற்கு சோவியத் ஏவுகணைகள் நகர்த்தப் பட்டன. கடத்தி வரப்பட்ட சோவியத் ஏவுகணைகள் கியூபாவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்குமிடையே இருந்த கப்பல் போக்குவரத்தைப் பயன்படுத்தியே சோவியத் ஏவுகணைகள் பாகங்களாக கியூபாவினுள் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த இரகசிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் 1962 செப்ரெம்பர் வரை அமெரிக்க உளவுத் துறைக்குத் தெரியவரவில்லை. ஆனால், சோவியத் சாதாரண ஆயுதங்களை கியூபாவிற்கு வழங்கி வருகிறது என்பதை அமெரிக்கா அறிந்தே இருந்தது. கியூபாவின் மீது கண்காணிப்புப் பறப்புகளை மேற்கொண்ட U-2 உளவு விமானத்தின் படங்கள் தான், ஏவுகணைகளுக்கான ஏவு தளங்கள் கியூபாவில் கட்டப் படுவதை முதலில் வெளிக்கொண்டு வந்தன. கியூபாவில் சோவியத் ஏவுகணைகளை ஏவக்கூடிய ஏவு தளமும், வாகனங்களும். விமானத்திலிருந்து எடுக்கப் பட்ட உளவுப் படம். பட உதவி நன்றியுடன் ஜோன் கெனடி நினைவு நூலகம். இதே வேளை, அமெரிக்கா இரகசியமாக அல்லாது, நேரடியாகவே கியூபா மீது ஒரு ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஆரம்பக் கட்டத்தில் இருந்த இந்த திட்டத்திற்கு நாள் குறிக்கப் பட்டிருக்கவில்லை. கியூபாவில் சோவியத் ஏவுகணைகள் இருப்பதை அறிந்து கொண்ட ஒக்ரோபர் 14 முதல், அடுத்த இரு வாரங்கள் வாஷிங்ரனும், கிரெம்ளினும் இந்தப் பிணக்கைச் சமாளித்த விதம் பல பாடங்களுக்கு வழி வகுத்தது எனலாம்! அமெரிக்காவின் பதில் என்ன? கடுமையான ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டுமென்று ஒரு தரப்பும், உடனடியாக கியூபா மீது இராணுவத் தாக்குதல் தொடுக்க வேண்டுமென்று ஒரு தீவிரமான தரப்பும் கெனடிக்கு ஆலோசனை வழங்கின. கெனடியோ, மூன்றாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார்: கியூபாவைச் சுற்றி கடல்வழிப் போக்குவரத்திற்கு ஒரு தடையை (quarantine) உருவாக்கி, மேலதிக ஏவுகணைப் பாகங்கள் வராமல் தடுப்பதே அந்த மூன்றாவது வழி. இந்தத் தடை மூலம், கியூபாவை நோக்கி வரும் சகல சோவியத் கப்பல்களையும் அமெரிக்க கடற்படை பரிசோதிக்க வேண்டும். சோவியத் ஒன்றியம், தான் அனுப்பிய சில கப்பல்களை பரிசோதிக்க அனுமதிக்காமலே பயணத்தை இடை நடுவில் கைவிட்டு திரும்புப் படி செய்தது. ஆனால், ஏற்கனவே கியூபா வந்து விட்ட ஏவுகணைகளை அகற்ற ரஷ்யர்கள் மறுத்தனர். ஒரு கட்டத்தில், அமெரிக்காவின் U-2 உளவு விமானம் கியூபாவின் வான்பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தப் பட்டது. இறுதியில், கியூபா மீதான அமெரிக்கத் தாக்குதல் தான் ஒரே தெரிவு என்ற நிலைக்கு அமெரிக்க தரப்பு வந்து விட்ட போது, குருசேவ் நிபந்தனையோடு கியூபாவிலிருந்து சோவியத் ஏவுகணைகளை அகற்ற ஒப்புக் கொண்டார். கியூபா மீது தாக்குதல் தொடுக்கக் கூடாது, துருக்கியில் இருந்து நேட்டோவின் ஜுபிரர் ஏவுகணைகளை அகற்ற வேண்டும், ஆகியவையே குருசேவின் நிபந்தனைகளாக இருந்தன. முதல் நிபந்தனை உடனடியாக ஏற்றுக் கொள்ளப் பட்டு தாக்குதல் நடத்தப் படாதென்ற உறுதி மொழி வழங்கப் பட்டது. இரண்டாவது நிபந்தனையை அமெரிக்கா இலகுவாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதைச் செய்வதானால், கியூபாவிற்கு சோவியத் வழங்கிய குண்டு வீச்சு விமானங்களையும் திரும்பப் பெற வேண்டுமென்ற அமெரிக்காவின் பதில் நிபந்தனையை சோவியத் ஒன்றியம் ஏற்றுக் கொண்டது. ஒக்ரோபர் 27, 1962 இல் கியூப ஏவுகணைப் பிணக்கு முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் கடல் போக்கு வரத்துத் தடை நவம்பரில் விலக்கப் பட்டது. சோவியத் ஏவுகணைகளையும், குண்டு வீச்சு விமானங்களையும் கியூபாவிலிருந்து அகற்றிய பின்னர், 1963 மத்தியில் நேட்டோ துருக்கியில் இருந்து தனது ஏவுகணைகளை விலக்கிக் கொண்டது. உலகம், தனது வழமையான பதற்றமற்ற பார்வையாளர் பணியைச் செய்ய ஆரம்பித்தது. பாடங்களும் விளைவுகளும் அணுவாயுதப் போர் விளிம்பு நிலைக்குக் கொண்டு சென்ற கியூப பிரச்சினையில், இரு தலைவர்களும் நடந்து கொண்ட முறை, வெளிக்காட்டிய பொறுப்புணர்வு என்பன அவதானிகளால் பாராட்டப் படுகின்றன. சில ஆண்டுகளின் பின்னர் தனது பின்வாங்கும் முடிவைப் பற்றிக் கருத்துரைத்த குருசேவ் இப்படிச் சொல்கிறார்: "உலக அழிவு பற்றிய அச்சம் எங்கள் பின்வாங்கும் முடிவிற்கு முக்கியமான காரணம். இன்றைய உலகின் ஒரு குறைபாடு, யாரும் அழிவைப் பற்றி அச்சம் கொள்வதில்லை!". கியூபப் பிணக்கின் விளைவாக பல நல்ல மாற்றங்கள், அமெரிக்க சோவியத் தலைமைகளின் தொடர்பாடலில் ஏற்பட்டன. புதிதாக வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்குமிடையேயான நேரடி தொலைபேசி இணைப்பொன்றும் (hot line) இதன் பின்னர் உருவாக்கப் பட்டது. மட்டுப் படுத்தப் பட்ட அளவில், ஒருவரது அணுவாயுதப் பரிசோதனையை எதிரணி கண்காணிக்கும் ஏற்பாடுகளும் உருவாக்கப் பட்டன. கியூபாவிற்கு என்ன நிகழ்ந்தது? கியூபா தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் பொருளாதாரம் சிதைந்த, கறுப்புச் சந்தை மூலம் மக்கள் வாழ்க்கையை நகர்த்தும் ஒரு கம்யூனிச தேசமாகத் தொடர்கிறது. அமெரிக்க பொருளாதாரத் தடையினால் கியூபா இழந்த வருமானத்தை, சோவியத் ஒன்றியத்தின் உதவிகளால் முழுமையாக ஈடு கட்ட இயலவில்லை. 1990 வரை, கியூபாவிற்கு சோவியத் ஒன்றியம் பொருளாதார உதவிகளை வழங்கி வந்தது. 1991 இல், கொர்பச்சேவின் ஆட்சியில் சோவியத் ஒன்றியம் பாரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. மேற்கிடம் கடனும், உதவிகளும் பெற்று ரஷ்யர்களுக்கு உணவளிக்க வேண்டிய நிலைக்கு சோவியத் ஒன்றியம் இறங்கியது. இந்த உதவிகளுக்கு மேற்கு அணி விதித்த பல நிபந்தனைகளுக்கு சோவியத் குழு கட்டுப் பட வேண்டியிருந்தது. அவற்றுள் ஒரு நிபந்தனை, சோவியத்தின் ஆதரவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் நஜிபுல்லா அரசு, கியூபாவின் காஸ்ட்ரோ அரசு ஆகியவற்றிற்கான நிதியுதவிகளை நிறுத்த வேண்டும் என்பதாகும். மேற்கு எதிர்பார்த்ததை விட இலகுவாக இந்த நிபந்தனைகளை கொர்பச்சேவ் குழு ஏற்றுக் கொண்டது. இரு நாடுகளுக்குமான சில பில்லியன் ரூபிள்கள் உதவியை சோவியத் ஒன்றியம் நிறுத்திக் கொண்டது. அடுத்த 6 மாதங்களில் காபூலின் நஜிபுல்லா அரசு வீழ்ந்தது. கியூபா, இன்னும் தப்பியிருக்கிறது. - தொடரும்
  16. இந்த விலையுயர்ந்த போன்களோடு கோபமில்லை! ஆனால், நாம் கூடக் கொண்டு திரியும் பொருள் "நம்மை" விட "பொருளாதாரப் பெறுமதி" கூடவாக இருந்தால் நமக்கு ஆபத்தல்லவா😂? அதனாலேயே பெறுமதியான அப்பிள் பொருட்கள் வாங்குவதில்லை! அண்மையில், விலை சுமாரான மோரொறோலா போன் ஒன்றை குடும்பத்தில் ஒருவருக்கு வாங்கினேன்! நல்லாத் தான் இருக்கிறது. ஐ போனின் 25% விலையில், தேவையான தரம் கிடைத்து விட்டது!
  17. ஓயாத நிழல் யுத்தங்கள் - 3 பனிப்போரின் முக்கிய திருப்பு முனைச் சம்பவங்களைப் பற்றிப் பேசும் இந்தத் தொடரில், கொரியப் போர், பெர்லின் சுவர் என்பன பற்றிப் பார்த்தோம். இத்தகைய முக்கிய நிகழ்வுகளுக்கு மேலதிகமாக, பனிப்போரின் முக்கிய அம்சமாக விளங்கிய ஒரு அம்சம், வல்லரசுகளுக்கிடையேயான உளவுப் போர். இத்தகைய உளவுப் போரின் சாட்சிகளாக விளங்கிய பலர் பின்னாட்களில் சிறந்த நாவலாசிரியர்களாக உருவாகி, அந்த உளவுப் போரின் உள்ளடக்கங்களை வாசகர்களுக்கு வழங்கினர். உளவுப் போர் 1991 இல் முடிவுக்கு வந்த கம்யூனிச, மேற்கு தேசங்களிடையேயான பனிப்போர் ஒரு குறிப்பிட்ட நாளில் ஆரம்பித்ததாகச் சுட்டிக் காட்ட முடியாது. அந்தளவுக்கு பல்வேறு நிகழ்வுகளில், பரிணாமங்களில் பனிப்போர் நிகழ்வுகள் அடங்கியிருந்தன. ஆனால், உளவு நடவடிக்கைகள் தான், சோவியத்திற்கும், மேற்கின் தலைமை நாடான அமெரிக்காவிற்கும் இடையே முதலில் பனிப்போரின் அடையாளமாக ஆரம்பித்தன. அமெரிக்க அணுவாயுத நுட்பத்தை உளவு மூலம் கவர்ந்த சோவியத் ஒன்றியம் அமெரிக்காவின் தலைமை அணுவாயுத விஞ்ஞானி ஒப்பன்ஹிமரின் வரலாறு திரைப்படமாக வெளிவந்திருக்கும் இக்காலப் பகுதியில் இதைப் பற்றிப் பேசுவது பொருத்தமாக இருக்கும். அமெரிக்காவின் அணுவாயுத தயாரிப்பு முயற்சி என்பது மிக இரகசியமாகப் பேணப்பட்ட ஒரு முயற்சி. ஜனாதிபதியாக றூஸவெல்ட் இருந்த போது ஆரம்பிக்கப் பட்ட இந்த முயற்சி பற்றி, றூஸவெல்ட் இறந்து தான் பதவிக்கு வரும் வரை துணை ஜனாதிபதியாக இருந்த ட்ரூமனுக்கே தெரியாமல் தான் இருந்திருக்கிறது. ஆனால், மன்ஹற்றன் திட்டம் நடந்து கொண்டிருந்த போதே, சோவியத் ஒன்றியம் ஒன்றுக்கு மேற்பட்ட தங்கள் உளவாளிகளை விஞ்ஞானிகளாக இந்த திட்டத்தினுள் விதைத்து விடும் அளவுக்கு, சோவியத் ஒன்றியத்தின் உளவு வலைப் பின்னல் மேற்கில் பலமாக இருந்திருக்கிறது. 2019 வரையான ஆய்வுகளின் படி, குறைந்தது 5 பேர், அணுவாயுத ஆய்வுத் திட்டத்தில் வேலை செய்தோர், சோவியத் உளவாளிகளாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். கிளாஸ் fபுக்ஸ்: லாஸ் அலாமோசில் பணியாற்றிய சோவியத் உளவாளிகளுள், வெற்றிகரமாக மொஸ்கோவிற்கு அமெரிக்க அணுவாயுத இரகசியங்களைக் கடத்திய ஒருவர். சோவியத் விஞ்ஞானிகளின் திறமையுடன், fபுக்ஸ் வழங்கிய அணுவாயுத இரகசியங்களும் 1949 இல் முதல் அணுவாயுதத்தை சோவியத் ஒன்றியம் பரீட்சிக்க உதவியது. பட உதவி நன்றியுடன்: லொஸ் அலாமொஸ் தேசிய ஆய்வுகூட ஆவணம். இவர்களுள், அணுவாயுத வடிவமைப்பு தொடர்பான இரகசியங்களை வெற்றிகரமாக மொஸ்கோவிற்குக் கடத்தியவராக கிளாஸ் fபுக்ஸ் (Claus Fuchs) இருந்தார். லாஸ் அலமோசில் இருந்த அணுவாயுத ஆய்வுகூடத்தில் இருந்த 5 சோவியத் உளவாளிகளில், fபுக்ஸ் மட்டும் தான், அணுவாயுதத்தின் சகல தகவல்களும் தெரிந்த பௌதீகவியலாளராக இருந்தார். இதனால், 1950 இல் சோவியத் ஒன்றியம் முதலில் பரீட்சித்த தனது அணுவாயுதம் பல விடயங்களில் அமெரிக்கா 1945 இல் நாகசாகி மீது வீசிய புளூட்டோனியம் குண்டு போலவே இருந்தது. இந்த சோவியத் உளவாளிகள் எல்லோருமே தண்டனை அனுபவிக்கவில்லை. 1950 இல் அமெரிக்க உளவு அமைப்பின் நடவடிக்கையினால் இந்த 5 பேரில் 4 பேர்கள் அடையாளம் காணப்பட்டனர். கிளாஸ் fபுக்ஸ், பிரிட்டனில் குற்றத்தை ஒப்புக் கொண்டு 10 ஆண்டுகள் சிறை சென்றார், சிறையிலிருந்து மீண்டதும் கிழக்கு ஜேர்மனி சென்று அங்கே ஒரு நல்ல பதவியில் நீடித்தார். இந்த சோவியத் உளவாளிகளுள் மிக இளையவரான தியோடர் ஹால், தண்டிக்கப்படாமலே தன் வாழ்வைத் தொடர்ந்தார். இருவர் மரண தண்டனை பெற்றனர். இன்றும் கூட ரஷ்ய, சீன அரசுகளுக்கு உளவாளிகளாக செயல்படும் அமெரிக்க பிரஜைகள், இராணுவத்தில் பணியாற்றுவோர் சிலர் ஒவ்வொரு வருடமும் கண்டறியப் பட்டுக் கைது செய்யப் படுகின்றனர். அனேகமாக பணத்திற்காக இவர்கள் உளவு வேலையில் ஈடுபடுகின்றனர். ஆனால், கிளாஸ் fபுக்ஸ், தியோடர் ஹால் போன்ற அக்கால உளவாளிகள், மனப்பூர்வமாக சோவியத் நாட்டின் கம்யூனிச கோட்பாடுகளை ஆதரித்து உளவாளிகளாக மாறினர் என்றே விசாரணைகளில் தெரிய வந்தது. பிரிட்டனின் உளவு அமைப்பை ஆழ ஊடுருவிய சோவியத் உளவாளிகள் பனிப்போர் கால உளவுப் போரில், அமெரிக்காவின் அணுவாயுத இரகசியங்கள் திருடப் பட்டது கூட ஒரு அதிர்ச்சி தரும் நிகழ்வல்ல. இதை விட ஆச்சரியமான உளவுப் போர்முனை பிரிட்டனிலும், ஐரோப்பிய நிலப்பரப்பிலும் 1980 கள் வரை நிலைத்திருந்தது. இதில், பிரிட்டனின் எம்.ஐ 6 (MI6) என்ற இராணுவப் புனலாய்வுப் பிரிவினுள், ஹரோல்ட் கிம் fபில்பி (Harold “Kim” Philby) என்ற சோவியத் உளவாளி நீண்டகாலமாகப் பணியாற்றிய சம்பவம் இன்றும் திரைப்படங்களாகவும், நூல்களாகவும் வலம் வருகிறது. “சோவியத்தின் கம்யூனிச சித்தாந்தம், மேற்கின் இலாப நோக்க சித்தாந்தங்களை விட உலகிற்கு நல்லது” என்ற எண்ணத்தில் இருந்த fபில்பி உட்பட்ட கேம்பிரிட்ஜ் பட்டதாரிகள் ஐவர் (இவர்களை The Cambridge 5 என்பர்)- பிரிட்டனின் பல்வேறு இரகசிய திட்டங்களிலும் அரச ஊழியர்களாக இணைந்து சோவியத்தின் கே.ஜி.பி அமைப்பிற்கு தகவல்களை வழங்கும் உளவாளிகளாக நீண்ட காலம் வேலை செய்தனர். இந்த ஐவரில், மூவர் அமெரிக்காவிலும் பிரிட்டன் சார்பில் பணியாற்றியதால், ஏராளமான சோவியத் எதிர் (counterintelligence) நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் சோவியத் ஒன்றியத்திற்கு முன்கூட்டியே தெரியவந்தன. இவ்வாறு 20 வருடங்கள் தொடர்ந்த கேம்பிரிட்ஜ் ஐவரின் உளவு வேலை 1951 இல் அமெரிக்க புலநாய்வு அமைப்புகள், கே.ஜி.பியினுள் ஊடுருவிப் பெற்ற உளவுத் தகவல்களோடு முடிவுக்கு வந்தது. ஆனால், இந்த ஐவரினதும் தலைவர் என்று கருதப் பட்ட கிம் fபில்பி, 1963 வரை தப்பியிருந்து உளவுப் பணியைச் செய்த பின்னர், மொஸ்கோவிற்குத் தப்பிச் சென்று அங்கே 1988 வரை வாழ்ந்தார். கிம் fபில்பியின் உளவுப் பணிகளுக்காக, சோவியத் ஒன்றியம், மாதாந்த ஓய்வூதியமும் வழங்கி 90 களில் அவரை ஒரு சோவியத் ஒன்றிய தபால் முத்திரையின் மூலம் கௌரவித்தது. இவையெல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்த போது, அமெரிக்க, மேற்கு அணிகள் என்ன செய்து கொண்டிருந்தன? உளவாளிகளின் பாலம் மேற்கு நாடுகளின் உளவுப்பலம், பெரும்பாலும் சோவியத் கட்டுப் பாட்டிலிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளினுள், அந்த நாட்டு மக்களை வைத்தே உளவு வேலைகள் செய்வதில் இருந்தது. இந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளை வார்சா ஒப்பந்த (Warsaw Pact) நாடுகள் என்ற , நேட்டோவிற்கு எதிரான அமைப்பின் கீழ் சோவியத் ஒன்றியம் ஒருங்கிணைத்திருந்தது. ஒப்பிற்கு ஒரு உள்ளூர் கட்சி கம்யூனிச ஆட்சி நடத்துவதாகக் காட்டப் படும், ஆனால் பின்னரங்கில் சோவியத்தின் கே.ஜி.பி ஏஜென்டுகளும், செம்படையின் தாங்கிகளும் குவிக்கப் பட்டிருக்கும் (இப்படியான ஒரு கே.ஜி.பி ஓற்றராக கிழக்கு ஜேர்மனியின் ட்றெஸ்டன் நகரில் சில ஆண்டுகள் பணியாற்றியவர் தான் தற்போதைய ரஷ்ய ஜனாதிபதி புரின்). இந்த நிலையில், மேற்கின் ஒரே கவலை, எப்போது சோவியத் ஒன்றியம், கிழக்கில் இருந்து தன் தாங்கிகள் சகிதம் மேற்கினை நோக்கிப் பாயும் என்பதாக இருந்தது. இதனைச் சமாளிக்க, ஏராளமான மேற்கின் உளவாளிகள் வார்சா ஒப்பந்த நாடுகளில் தங்கி வேலை செய்தார்கள். மேற்கு கிழக்கு ஜேர்மனிகளிடையே, பெர்லின் நகரில் சுவர் இருந்தாலும், இரு பகுதியின் ஆயுதப் படையினரும் முன்னரே அறிவித்து விட்டு நுழையும் ஏற்பாடு இருந்தது. இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்தி, சோவியத் அணியும், மேற்கின் பக்கமிருந்து அமெரிக்க, பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளும் விசேட வாகனங்களில் உத்தியோக பூர்வமான பயணங்களை மேற்கொண்டு உளவுப் பணிகளிலும் ஈடுபடுவது ஒரு திறந்த இரகசியமாக இருந்தது. மேற்கின் அணிகள், சோவியத் புதிதாக உருவாக்கிய ரி- 80 (T-80) தாங்கியை இப்படியான ஒரு உளவுப் பயணத்தின் போது தான் முதன் முதலில் படம் பிடித்து வாஷிங்ரனை எச்சரிக்க உதவின. சில சந்தர்ப்பங்களில் இந்த அணிகள் பிடிபடுவதும், மிக அரிதாகக் கொல்லப் பட்டதும் கூட நிகழ்ந்திருக்கிறது. அவ்வாறு ஒரு தரப்பினால் கைதாகும் உளவாளிகளை, கைதிகள் பரிமாற்றம் மூலம் பரிமாறிக் கொள்ளும் நடைமுறையும் இருந்திருக்கிறது. பெர்லினில், ஹவெல் நதியின் மேலாக, மேற்கு, கிழக்கு பெர்லின்களை இணைக்கும் கிளைனிக் (Glienicke) பாலத்தில் அனேகமான இந்தக் கைதிகள் பரிமாற்றங்கள் நிகழ்ந்தமையால், அந்தப் பாலத்திற்கு "உளவாளிகள் பாலம்" (Bridge of Spies) என்றும் ஒரு பெயர் உருவானது. இப்படி சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்குமிடையே இப்பாலத்தினூடாகப் பரிமாறப்பட்ட ஒரு முக்கிய நபராக கேரி பவர்ஸ் (Gary Powers) என்ற அமெரிக்கர் விளங்குகிறார். 70,000 அடிகள் உயரத்திலிருந்து உளவு "தும்பி" என்று அழைக்கப் பட்ட யூ- 2 உளவு விமானத்தின் ஒரு தோற்றம். 70,000 அடிகள் உயரத்தில் பறக்கக் கூடிய இந்த உளவு விமானம் இன்று யூ 2 சி எனும் நவீன வடிவத்தில் பாவனையில் இருக்கிறது. பட உதவி, நன்றியுடன்: அமெரிக்க தேசிய வான், விண்வெளி அருங்காட்சியகம், வாசிங்ரன் டி.சி. கப்ரன் கெரி பவர்ஸ் பிரபலமாவதற்கு, அவர் செலுத்திய விமானம் தான் காரணம். பனிப்போரின் உச்சத்தில், 1956 ஜூலை 4 ஆம் திகதி, அமெரிக்க விமானப் படை முதன் முதலாக ஒரு புது வகை விமானத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தது. யூ 2 (U-2) என்று பெயரிடப்பட்ட இந்த விமானம் மிகவும் இரகசியமான திட்டம் மூலமாக , லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் வடிமைக்கப் பட்ட ஒரு உளவு விமானம். சாதாரண பயணிகள், மற்றும் சரக்கு விமானங்கள் 35,000 அடிகள் உயரத்தில் பறப்பவை. பி- 29 (B-29) வகையான, அமெரிக்காவின் அணுகுண்டு காவும் விமானங்கள் (Strategic bombers) 50,000 அடிகள் உயரத்தில் பறக்கக் கூடியவை. இந்த யூ 2 உளவு விமானம், 70,000 அடிகள் உயரத்தில், ரேடார்களின் கண்ணில் படாமல் பறக்கக் கூடியவையாக வடிவமைக்கப் பட்டிருந்தது. 60 அடிகள் நீளமான, 80 அடிகள் இறக்கை விஸ்தாரம் கொண்ட யூ 2 விமானத்தை "தும்பி" (Dragonfly) என்று செல்லமாக அழைப்பர். யூ 2 உளவு விமானத்தின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் சக்தி வாய்ந்த ஒளிப்படக் கமெராக்கள். 1959 இல், இக் கமெராக்கள் பிடித்த படங்கள், தற்போதைய கூகிள் ஏர்த் படங்களை விட துல்லியம் கூடியவையாக இருந்ததாக ஒரு ஆய்வு அண்மையில் உறுதி செய்திருந்தது. பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய வான், விண்வெளி அருங்காட்சியகம், வாசிங்ரன் டி.சி. 70,000 அடிகள் உயரத்தில் ஒட்சிசனின் செறிவு குறைவு, எனவே இந்த விமானத்தை இயக்கும் ஒற்றை விமானி, ஒட்சிசனை சிலின்டரில் இருந்து சுவாசித்த படி விமானத்தைச் செலுத்த வேண்டும். விமானத்தின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் சக்தி மிக்க கமெராக்கள் மூலம் கீழே இருக்கும் கட்டமைப்புகள், ஏவுகணைத் தளங்கள் என்பன படம் பிடிக்கப் பட்டு சேகரிக்கப் படும். இத்தகைய இரகசியம் நிறைந்த யூ 2 விமானத்தை சி.ஐ.ஏ யின் கீழ் பணியாற்றிய கப்ரன் கெரி பவர்ஸ் மே மாதம் முதலாம் திகதி, 1960 இல் பாகிஸ்தானின் ஒரு அமெரிக்க தளத்திலிருந்து எடுத்துக் கொண்டு வட மேற்காக சோவியத் நிலப்பரப்பின் மீது பறக்க ஆரம்பித்தார். சோவியத்தின் பிரதான நிலப்பரப்பின் மீது 2900 மைல்கள் பறந்து, உளவுப் படங்கள் எடுத்த பின்னர் ஆர்கேஞ்சல் எனும் வட சோவியத் நகரூடாகக் கடந்து நோர்வேயில் தரையிறங்குவதே நோக்கமாக இருந்தது. ஆனால், யூரல் மலைப்பிரதேசத்தின் மீது வைத்து, விமானத்தின் ஒட்சிசன் வினியோகத்தில் கோளாறு ஏற்படவே, விமானத்தை 70,000 அடிகள் உயரத்திலிருந்து 35,000 அடிகளுக்கு இறக்க வேண்டிய நிலை கெரி பவர்ஸுக்கு ஏற்படுகிறது. இது கூட சோவியத் ஏவுகணைகளுக்கு எட்ட முடியாத உயரம் என்றே அமெரிக்கா நினைத்திருந்தது, ஆனால் ஒரு புதிய வகை ஏவுகணை மூலம் கெரி பவர்ஸின் யூ 2 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டது, கெரி பவர்ஸ் பரசூட் மூலம் பாய்ந்து உயிர் தப்பி, சோவியத் ஒன்றியத்திடம் கைதியானார். முதலில் கப்ரன் பவர்ஸ் உயிரிழந்து விட்டார் என்று அமெரிக்கா செய்திக் குறிப்பை தயாரித்துக் கொண்டிருந்த போதே, அவர் உயிரோடிருப்பதை சோவியத் ஒன்றியம் வெளிப்படுத்தியது. அத்தோடு, அமெரிக்காவின் இரகசிய யூ 2 விமானத்தின் சிதைவுகளையும் சோவியத் பாதுகாப்புப் பிரிவு கைப்பற்றி ஆராய ஆரம்பித்தது. இந்த யூ 2 விமான விபத்தின் பிரதான விளைவாக, பாரிசில் நடக்கவிருந்த மேற்கு சோவியத் அணுவாயுதப் போட்டி தொடர்பான மாநாடு ரத்துச் செய்யப் பட்டது. 2 வருடங்கள் உளவுக் குற்றச் சாட்டில் சோவியத் சிறையில் அடைக்கப் பட்ட கெரி பவர்ஸ், 1962 இல் உளவாளிகள் பாலத்தின் வழியாக ஒரு சோவியத் உளவாளியோடு கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப் பட்டார். இந்த நிகழ்வுகளால் சோவியத் ஒன்றியம், அமெரிக்காவின் உளவுப் பறப்புகள் பற்றி அறிந்து கொண்டாலும், யூ 2 விமானத்தின் பயன்பாட்டை அமெரிக்கா நிறுத்தவில்லை. இரு ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவின் கொல்லைப் புறத்தில் இருக்கும் கியூபாவில் சோவியத் ஒன்றியம் அணுவாயுத ஏவுகணைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த ஏவுகணைக் கட்டுமானங்களை உளவுப் பறப்பினால் படம் பிடித்து வெளிக்கொணர்ந்தது இதே யூ 2 விமானங்கள் தான். இதனால் விளைந்த கியூப ஏவுகணைப் பிணக்கை இன்னொரு பதிவில் பார்ப்போம். இன்றும் அமெரிக்கா டசின் கணக்கான யூ 2 உளவு விமானங்களைப் பாவனையில் வைத்திருக்கிறது. புதிய தொழில் நுட்பங்களைப் பரீட்சிக்க இந்த விமானங்கள் பயன்படுகின்றன. ஆனால், செய்மதித் தொழில்நுட்பங்கள் இப்போது விருத்தியடைந்திருப்பதால், எந்தக் கட்டுப் பாடுமின்றி பறப்பு மூலமான (overflight) உளவு பல நாடுகளுக்குச் சாத்தியமாகியிருக்கிறது. உளவுத் தொழிலைப் பிரபலமாக்கிய பனிப்போர் உளவுப் போரின் பல்வேறு பரிமாணங்களை நூல்களாகவும், திரைக்காவியங்களாகவும் படைத்து, பனிப்போரின் போதான உளவு நடவடிக்கைகள் திரில் நிறைந்தவையாக மக்கள் மத்தியில் பிரபலமாக்கப் பட்டிருக்கின்றன. இவற்றுள் சில படைப்புகள் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலானவை, எனவே வரலாற்றை சுவாரசியமாக வாசிக்க/பார்க்க விரும்புவோருக்கு இந்தப் புனைவுகள் கூட நல்ல வரலாற்றுத் தகவல் மூலங்களாக இருக்கின்றன. John Le Carre எழுதிய “Tinker, Tailor, Soldier, Spy” என்ற நாவல் - இது திரைப்படமாகவும் வந்திருக்கிறது - கிம் fபில்பி சம்பந்தப் பட்ட சம்பவங்களின் அடிப்படையிலானது. ஸ்ரிவன் ஸ்பீல்பேர்க்கின், “Bridge of Spies” என்ற திரைப்படமும் சில உண்மை சம்பவங்களின் ஒரு நாடகபாணி விபரிப்பு. இது போன்ற நூல்கள், திரைப்படங்கள் மூலம், “நாட்டிற்காக உளவு வேலையில் ஈடுபடுவது ஒரு த்ரில்லிங்கான நல்ல செயல்” என்ற முன்மாதிரி மேற்கு நாடுகளில் தொடர்ந்து விதைக்கப் பட்டு வருகிறது. இது, முடிந்து போன பனிப்போரின் ஒரு எச்சம்! -தொடரும்
  18. அவங்களுக்கு அல்வா, எங்கள் வாயில் சர்க்கரை!😂 ஆனால், மேற்கின் உளவு அமைப்புகள் உறுதி செய்யும் வரை செத்தது பிரிகோசினா அல்லது பிரிகோசின் பொடி டபுளா என்று உறுதி செய்வது கடினம்!
  19. பொறுத்திருப்போம், உடல் கிடைக்கும் வரை. ஆனால், பிரிகோசின் பறந்திருந்தால் அது முட்டாள்தனமென்பேன். புட்டினோடு முண்டி விட்டு தரைத்தளம் தவிர மேல் தளங்களில் அபார்ட்மென்ற் எடுத்து வசிப்பதே ஆபத்தாக முடியுமென்பது செய்தி வாசிப்போருக்கே புரியும் போது, இவர் 6000 அடிகளுக்கு மேலே பறந்திருக்கிறாரே? என்ன விசர்த்தனமான வேலை இது?
  20. ஓம், வாசிக்கிறார்கள் அல்லது கிளிக் ஆவது செய்கிறார்கள் என நினைக்கிறேன். முறைப்பாடாகச் சொல்லவில்லை, ஆனால் தொடர்ந்து கருத்துப் பகிர்ந்து ஊக்குவிப்பதற்கு நன்றி என்ற அர்த்தத்தில் சொன்னேன். நன்றி, நீண்ட கட்டுரை, கதையென்றால் நானும் வார இறுதியில் சேர்த்து வைத்துத் தான் வாசிப்பது. நன்றி!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.