Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8743
  • Joined

  • Last visited

  • Days Won

    103

Everything posted by ரஞ்சித்

  1. கொழும்பில் வெடித்த குண்டுகள் 1984 ஆம் ஆண்டு ஐப்பசி 22 ஆம் திகதி கொழும்பில் முதலாவது குண்டு வெடித்தது. இந்நாட்களில் இந்திரா காந்தி உயிருடன் இருந்தார் என்பதுடன் ஜெயாரின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளினால் கடும் அதிருப்தியிலும் இருந்தார். வடக்குக் கிழக்கில் ஆயுதப்போராட்டம் புலிகளால் உக்கிரப்படுத்தப்படுகையில் ஈரோஸ் கொழும்பிற்கு குண்டுவெடிப்பு செயற்பாடுகளை நகர்த்தியிருந்தது. பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வினை விட்டு இராணுவத் தீர்வில் நாட்டம் கொண்டு செயற்பட்டு வந்த ஜெயாரை அச்சுருத்தி மீளவும் பேச்சுவார்த்தைக்கு வரவழைக்கும் உத்தியாகவே இந்தக் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இலங்கையில் இந்தியாவின் நலன்களை முற்றாக முடக்கிவிட ஜெயவர்த்தனவுக்கு இராணுவ உதவிகள் என்கிற பெயரில் இந்தியாவுக்கெதிரான சீனா, பாக்கிஸ்த்தான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் முயன்றுவருவதாக இந்திரா அஞ்சினார். இதனைத் தடுப்பதற்கான ஒரே வழி தமிழரின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண்பதுதான் என்று இந்தியா கருதியது. (குறிப்பு : சமாதானப் பேச்சுக்கள் மூலம் மட்டுமே தமிழருக்குத் தீர்வொன்றினை வழங்க இந்தியா விரும்பியதே ஒழிய, பிரபாகரன் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் ஊடாக தமிழர்களுக்கு தனி நாடு ஒன்று உருவாக்கப்படுவதை இன்றுவரை இந்தியா முற்றாக எதிர்த்தே வருகிறது. அதேவேளை புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகள் என்கிற பெயரில் தமிழர்களை முற்றாக ஒடுக்கிவிட ஜெயார் முயல்வதையும் இந்தியா வரவேற்கவில்லை . இதன் ஒரு பகுதியாகவே இலங்கையுடன் இந்தியா 2005 இல் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தமும் பார்க்கப்படல் வேண்டும்). புறக்கோட்டை புகையிரத‌ நிலையம் அன்று கொழும்பு முழுவதும் மிகவும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. முதலாவது குண்டுவெடிப்பு காலை 5:30 மணிக்கு கொட்டாஞ்சேனை பொலீஸ் நிலையத்திற்கு அருகில் நிகழ்த்தப்பட்டது. பொலீஸ் நிலையத்திற்கு மிக அண்மையாகக் குண்டை வெடிக்கவைக்கும் நோக்கில் ஊர்காவற்றுரையைச் சேர்ந்த இளம் பொறியியலாளரான பரிபூரணம் அதனைக் காவிவந்த வேளை எதிர்பாராத விதமாக அது வெடிக்க அவரும் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து கொழும்பின் 9 வேறு இடங்களில் முதல் நான்கு மணிநேரத்திற்குள் குண்டுகள் வெடித்ததனால் மக்களிடையே பீதி பரவ ஆரம்பித்தது. புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு அண்மையாக வெடித்த குண்டினால் பல பொதுமக்கள் காயப்பட்டனர். ஏனைய குண்டுகள் அரச வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள், மத்திய பேரூந்து நிலையம், உள்ளூர் அலுவல்கள் அமைச்சுக் கட்டிடம் மற்றும் இதர பகுதிகளில் வெடித்தன. குப்பைகூழங்களைக் கொட்டிவைக்கும் கொள்கலன்களிலேயே இக்குண்டுகள் மறைத்துவைக்கப்பட்டிருந்தன. பெலியகொடை பகுதியில் வீடொன்றில் இன்னொரு குண்டு எதிர்பாராத விதமாக வெடித்தபோது இரு தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அரசுக்கு இக்குண்டுவெடிப்புகள் கடுமையான அழுத்தத்தினை ஏற்படுத்தின. லலித் அதுலத் முதலி கொதித்துப்போனார். விசேட பத்திரிக்கையாளர் மாநாடொன்றினைக் கூட்டிய அவர் 10 மணியளவில் ஆற்றிய உரையில் நாட்டு மக்கள் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். தமிழ் மக்கள் மீது இன்னொரு படுகொலையினை சிங்களவர்கள் நடத்தவேண்டும் என்பதற்காகவே இக்குண்டுவெடிப்புக்களை பயங்கரவாதிகள் நடத்திவருவதாக‌ அவர் கூறினார். ஆகவே, பயங்கரவாதிகளின் சதிக்குள் சிக்கிவிட வேண்டாம் என்று சிங்களவர்களை அவர் கேட்டுக்கொண்டார். இக்குண்டுவெடிப்புக்கள் இரண்டு முக்கிய செய்திகளை அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் கூறியிருந்தன. முதலாவது செய்தி, நாட்டின் தலைநகரான கொழும்பிற்கும், சிங்கள மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளுக்கும் குண்டுகளைக் கொண்டுவந்து வெடிக்கவைக்கும் வல்லமையினைப் போராளிகள் பெற்றுள்ளார்கள் என்பது. இரண்டாவது, கொழும்பு அரசாங்கம் இராணுவத் தீர்வில் அதீத கவனம் செலுத்தினால், போரினை மேலும் விரிவாக்குவதற்கு இந்தியா ஒருபோது பின்னிற்காது என்பது.
  2. இப்பதிவில் கருத்துப் பகிர்ந்து, உணர்வுகளை இங்கு வெளிக்காட்டிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது இனத்தில் லட்சக்கணக்கானோரை இழந்திருக்கிறோம். ஆனால், அவர்களது இறப்பில் வராத துயர‌ம் ஒரு வேற்றினத்தவன் இறக்கும்போது வருவது எப்படிச் சாத்தியம் என்று பலர் இதனைக் கருதலாம் என்கிற தயக்கம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தது. உண்மையென்னவென்றால், எனது இனம் அழிக்கப்பட்ட வலி எனக்கு எப்போதும் அப்படியே இருக்கும். அது மறையாது. அதற்கான வடிகால்கள் தேடித்தான் இன்றுவரை இனம் சார்ந்தும், போராட்டம் சார்ந்தும் எதையாவது எழுதவேண்டும் என்று மனம் விரும்புகிறது. நாம் நடந்து வந்த பாதைகளில் எம்மைப் பாதித்த ஒரு சில வேற்றினத்தவர்களையும் நாம் சந்தித்திருப்போம். அவர்களில் ஒருவன் தான் இவனும். அவன் குறித்து நான் ஆரம்பத்தில் கொண்டிருந்த தப்பபிப்பிராயமும் இதனை எழுத என்னைத் தூண்டியிருக்கலாம். மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள் !
  3. மண்டபத்தினுள் நுழைந்தேன். அவனைக் காணவில்லை. சிலவேளை குடும்பத்தினர் மட்டுமே பார்க்க அவனை அடக்கம் செய்யலாம் என்று எண்ணிக்கொண்டேன். மண்டபம் நிறைந்த சனம். எல்லாம் அவனை நேசித்தவர்களும், அவனுடன் கூடப் பழகியவர்களும். ஒரு 25 அல்லது 30 கதிரைகள் தான் போடப்பட்டிருக்கும். சிலர் இருந்துகொண்டார்கள். பின்னால் ஒரு சிலர் நிற்பது தெரியவே, அவர்களுடன் நானும் நின்றுகொண்டேன். கூடவே எனது நண்பர்கள், வேலைக்கள சக பணியாளர்கள். அங்கு நின்றபடியே மண்டபத்தின் முற்பகுதியில் நடப்பவற்றைப் பார்க்க ஆரம்பித்தேன். மண்டபத்தின் முற்பகுதியில் ஒரு மேசை வைக்கப்பட்டு அதில் அவனுடைய சில படங்கள் அடுக்கப்பட்டிருந்தன‌. கூடவே மரத்தினால் செய்த ஆமை பொம்மை. அவனுக்கு விருப்பமான பொம்மையாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். அருகில் சிறிய கணிணித் திரையில் அவன் வாழ்வு படங்களாக ஓடிக்கொண்டிருந்தது. அவன் தனது குடும்பத்துடன், காதலியுடன், பெற்றோருடன், நண்பர்களுடன் வாழ்வை முழுமையாக அனுபவித்த பொழுதுகள் திரையில் செக்கன்களுக்கு ஒருமுறை வலம் வந்துகொண்டிருந்தன. அவன் வாழ்ந்து முடித்ததைப் பார்க்கும்போது, இதுவல்லவோ வாழ்வு என்று எண்ணத் தோன்றியது. அன்றைய நிகழ்வை நடத்தியவள் அவனது நண்பிகளில் ஒருத்தி. வந்தவர்களை வரவேற்றுக்கொண்டே அவன் பற்றிச் சொல்லிக்கொண்டு போனாள். திகைத்துப்போனேன். 16 வயதில் மார்ஷல் ஆர்ட்ஸ் என்று சொல்லும் தற்காப்புக் கலைக்காக அமெரிக்காவின் போட்டியொன்றில் அவுஸ்த்திரேலியா சார்பாகக் கலந்துகொண்டிருக்கிறான். மலையேறுதல், தரையிலும், கடலிலும் மட்டைகளில் ஓடுதல் என்று தொடங்கி இரசாயணவியலில் இளங்கலை, இரட்டைப் பொறியியல் இளங்கலை என்று நிறையவே படித்திருக்கிறான் என்பது புரிந்தது. இவனுடனா ஆரம்பத்தில் அநியாயமாகப் போட்டி போட்டுக்கொண்டோம் என்ற குற்றவுணர்வு வந்துபோனது. அவள் பேசப்பேச அவன்குறித்த எனது பார்வை மாறிக்கொண்டே போனது. என்னவொரு மனிதன்!!! தான் விரும்பிய விடயங்களுக்காக உலகெல்லாம் சுற்றித்திரிந்து, நண்பர்களுக்காக வாழ்ந்து, வாழ்வின் ஒவ்வொரு பொழுதையும் முற்றாக அனுபவித்து, அழியா நினைவுகளை அனைவருக்கும் கொடுத்துவிட்டு, வெறும் 44 வயதில் எம் எல்லாரையும் விட்டுப் பிரிந்து சென்று விட்டான். அவளைத்தொடர்ந்து அவனது உற்ற நண்பர்கள் இருவரும் அவனது சகோதரனும் பேசினார்கள். பேசும்போது அடங்க மறுத்துப் பீறிட்டுக் கிளம்பிய அழுகைகளை வெளியே வரவிட்டு, தாமும் அழுது எம்மையும் அழப்பண்ணினார்கள். முன்னால் இருக்கையில் இருந்த பெண்கள் தேம்புவது தெரிந்தது. ஒரு கட்டத்தில் மேசையில் வைக்கப்பட்டிருந்த படங்கள் குறித்து நண்பி பேசினாள். அவை எடுக்கப்பட்ட பொழுதுகள், அப்போது நடந்த சுவாரசியமான சம்பாஷணை என்று பல விடயங்களை அவர் பகிர்ந்துகொண்டாள். மீதமாயிருந்தது மரத்தால் செய்யப்பட்ட கழுத்து நீண்ட ஆமை. அதைப் பற்றியும் அவள் கூறினாள். அவன் தனது இன்றைய மனைவியும் முன்னாள்க் காதலியுமானவளுடன் காரில்ப் பயணிக்கும்போது வீதியோரத்தில் உயிருள்ள ஆமையொன்றைப் பார்த்திருக்கிறான். உடனேயே காரை நிறுத்தி, ஆமையைத் தூக்கிக் காரில் வைத்துக்கொண்டே அப்பகுதியெங்கும் சுற்றித் திரிந்து நீர்நிலையொன்றில் அதனைப் பத்திரமாக இறக்கிவிட்டிருக்கிறான். அதே பயணத்தில் வேடிக்கையாகப் பேசும்போது தனது காதலியுடன், "நான் இறந்தால் இதே போன்றதொரு ஆமை செய்து, எனது அஸ்த்தியை அதனுள் இட்டு நீரில் இறக்கிவிடு. இந்தச் சமுத்திரத்தையும் நான் பார்க்க வேண்டும்" என்று கேட்டிருக்கிறான். அவன் கேட்டுக்கொண்டது போலவே அவனது அஸ்த்தியை அந்த ஆமையினுள் வைத்து மண்டபத்திற்குள் கொண்டு வந்திருந்தார்கள். மரத்தால் செய்யப்பட்ட ஆமையொன்று எதற்காக அங்கே இருக்கிறது எனும் பலரது கேள்விக்கு அவள் பதிலளித்தாள். கூடவே அவனது இறுதிக் கிரியைகள் முடிவுற்று விட்டதையும் அவள் எங்களுடன் பகிர்ந்து கொண்டாள். அவனது சகோதரன் பேசும்போது, "உங்கள் எவரையும் கண்களுக்கு நேரே நான் பார்த்துப் பேசப்போவதில்லை. ஏனென்றால் நான் அழுவேன் என்பது எனக்குத் தெரியும்" என்று சொல்லிவிட்டே அழுதான். அவனது நிலைகண்டு கண்களில் வழிந்தோடிய எனது கண்ணீரை துடைக்க விருப்பமின்றி நின்றிருந்தேன். அவன் தனது பேச்சினை முடிக்கும் தறுவாயில் அவனது இளைய மகள் ஓடிச்சென்று தந்தையின் கழுத்தில் தொங்கி, இடையில் ஏறிக்கொண்டாள். நானும் பெரியப்பாவிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் அன்று அவனது காதில் இரகசியமாகக் கூறினாள். சரி, சொல்லலாமே என்று அவன் கூறவும், நீங்களே அதைச் சொல்லிவிடுங்கள் என்று அவள் கூறிவிட்டுச் சிணுங்கினாள். தழுதழுத்த குரலில் அவன் தனது மகள் கூறியதை அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினான், "பெரியப்பா, நான் உங்களை நேசிக்கிறேன்". பலர் அழுதார்கள், பலர் கண்கலங்கினார்கள், நானும்தான். அருகில் நின்ற நண்பன் , "உனது மரணத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்று நீ நினைக்கிறாய்?" என்று என்னைப்பார்த்துக் கேட்டான். ஒருகணம் சிந்தித்துப் பார்த்தேன். எனக்கென்று நெருங்கிய நண்பர்கள் ஒருவர் அல்லது இருவர்தான். நெருங்கிய உறவுகள் என்று ஒரு இரண்டு அல்லது மூன்று பேர். "மிஞ்சி மிஞ்சிப் போனல் பத்துப்பேர் கூட வரப்போவதில்லை" என்று கூறினேன். அவன் சிரித்தான். அவன் பற்றிய நினைவுப் பகிர்வு முடிவடைந்தபின்னர் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. சிறிய குழுக்களாக வட்ட வடிவில் நின்றுகொண்டு அவன்பற்றிப் பேசினோம். இடையிடையே சிற்றுண்டிகளையும் சுவைத்தோம். இறுதியாக அவனது சகோதரனுடன் நின்று உரையாடினேன். கடுமையான சோகத்தினை மறைத்துக்கொண்டு வந்தவர்களுடன் முகம் கோணாது அவன் பேசினான். இடையிடையே நாம் பேசிய நகைச்சுவைகளுக்காகச் சிரித்தான். ஆனால் அவன் இன்னமும் தனது சகோதரனுக்காக மனதினுள் அழுவது தெரிந்தது. மாலை 5 மணியாகிக்கொண்டிருந்தது. இரவு வேலை 6 மணிக்கு. இப்போதே ஓடத் தொடங்கினால்த்தான் சிட்னியின் பின்னேர வாகன நெரிசலுக்குள் நுழைந்து வெளியேற முடியும். ஆகவே அவனிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன். வேலை வந்து அடையும்வரை அவனது நினைவுகள் மனதில் சுழன்றுகொண்டிருந்தன. இவனைப் போல என்னால் வாழ முடியாது. எமது அகம்பாவமும், தற்பெருமையும், எம்மைச் சுற்றி நாமே வரைந்துகொள்ளும் குறுகிய வட்டங்களும் எமது வாழ்நாள் எவ்வளவுதான் நீண்டு சென்றாலும் அதனைப் பூரணப்படுத்தப்போவதில்லை என்பது புரிந்தது. அவன் வாழ்ந்தது வெறும் 44 வருடங்கள் மட்டும்தான். ஆனால், வாழ்ந்தால் இப்படி வாழுங்கள் என்று எமக்கெல்லாம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான். மனிதன் தான் ! சென்றுவா!!! என்று மனதினுள் சொல்லிக்கொண்டு அலுவலகக் கதவு திறந்து உள்ளே நுழைந்தேன். முற்றும்.
  4. அவனது இறுதிச் சடங்குகள் குறித்த தகவல்கள் வெளிவந்தபோது, இதனைத் தவற விடக்கூடாதென்று உறுதியெடுத்துக்கொண்டேன். அது மாசி மாதம் 15 ஆம் திகதி, நேற்று பிற்பகல் 3 மணிக்கு. புதன் இரவும், வியாழன் இரவும் வேலை. நித்திரை அசதி, களைப்பு..இப்படி என்னதான் இருந்தாலும் அவனை வழியனுப்பி வைக்கவாவது செல்லவேண்டும் என்று மனம் சொல்லியது. ஆகவே, வியாழன் காலை பணிமுடித்து வீடுவந்து, அவசர அவசரமாகத் தூங்கி (எல்லாம் ஒரு ரெண்டுமணிநேர தூக்கத்திற்காகத்தான் ), விழித்தபடியே துயில் எழுந்து (ஏனென்றால், இப்போதெல்லாம் எப்போதாவதுதான் நித்திரை வருகிறது), கறுப்பு நிறத்தில் புதன்கிழமை வாங்கிவைத்த சற்று இறுக்கமான சேர்ட்டுக்குள் புகுந்து அவனது நினைவுநாள் நடக்குமிடத்திற்குச் சென்றேன். மழை இன்னும் மெதுவாகத் தூறிக்கொண்டிருக்க, கோடைகால சிட்னியின் வெய்யில் முகில்களுக்குள் முற்றாக மறைந்து நிற்க, அமைதியான ஆற்றுப்படுக்கையின் ஓரத்தில் சவுக்கு மரங்களின் பின்னணியில் உயர்ந்து நின்ற கட்டடம் ஒன்றிற்கு முன்னால், அங்கு ஏலவே வந்திருந்த வேலைத்தள நண்பர்களுடன் ஒட்டிக்கொண்டு நின்றேன். அங்கு நின்றவர்களில் பலரை எனக்குத் தெரிந்திருந்தது. எல்லோரும் என்னுடன் ஏதொவொரு காலத்தில் பணியாற்றியவர்கள். இப்போது வேறு வேலைத்தளத்தில் இருக்கிறார்கள். சிலர் வந்து, "எப்படி இருக்கிறாய்?" என்று கேட்டார்கள். பதிலுக்குக் குசலம் விசாரித்துவிட்டு அமைதியாக கூட்டத்துடன் கரைந்துபோனேன்.
  5. ஒரு ஏழெட்டு நாட்கள் இருக்கலாம். அவந்து சகோதரன் தொலைபேசியில் அழைத்தான்."நான் இன்றைக்கு வேலைக்கு வரவில்லை, அண்ணாவை பலியேடிவ் கெயருக்கு வருகிற வாரம் கொண்டு செல்லவிருக்கிறோம், அம்மாவாலும், அப்பாவாலும் அதனைத் தனியே செய்ய முடியாது. ஆகவேதான் நான் லீவெடுத்து அதனைப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன், நாளைக்கு நிச்சயம் வருவேன், அனுமதி தருவாயா?" என்று கேட்டான். "ஒரு பிரச்சினையுமில்லை, தாராளமாக எடு. நாளைக்கும் நீ வரவேண்டும் என்றில்லை, பார்த்துச் செய்" என்று கூறினேன். நன்றியென்று குறுந்தகவல் வந்தது. மறுநாள் அவன் வரவில்லை, நானும் அவனை அழைத்துத் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. பணி ஆரம்பித்து ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கைத்தொலைபேசிக்குக் குருந்தகவல் ஒன்று வந்திருந்தது. அது இப்படிச் சொல்லிற்று, "வணக்கம் அன்பர்களே, துரதிஸ்ட்டவசமாக இன்று பிற்பகல் 3 மணிக்கு நாங்கள் எங்கள் சகோதரன் ஜோஷை இழந்துவிட்டோம். அவனின் மனைவியும், எங்கள் குடும்பமும் அவனைச் சூழ்ந்திருக்க, அவன் அமைதியாக எங்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றான். தயவு கூர்ந்து உங்களின் வேலைத்தள அணிகளில் இருக்கும், எனது சகோதரன் குறித்து அக்கறைப்படும் எல்லோருக்கும் இதனைத் தெரியப்படுத்துவீர்களா? உங்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு எனது நன்றி. உங்களுடன் விரைவில் மீண்டும் தொடர்பு கொள்கிறேன்" என்று அது சொல்லியது. மனதில் இடி இறங்கியது போன்ற உணர்வு. கண்கள் கலங்கிவிட்டேன். முதன்முறையாக ஒரு வெள்ளைக்காரனுக்காக மனம் அழுதது. அவன் எனக்குச் சொந்தமில்லை, எனது இனமில்லை, எனது நெருங்கிய நண்பர் வட்டத்திலும் அவன் இல்லை. ஆனாலும் மனம் அழுதது. இது எப்படிச் சாத்தியம்? ஏன் அவனுக்கு? இதுதான் எனது மனதில் எழுந்த கேள்விகள். அவனைச் சென்று பார்க்கமுடியாத வருத்தமும் சேர்ந்து அழுத்த முழுவதுமாக மனமுடைந்து போனேன்.
  6. அண்ணை, அது 2006 இல. என்ன சொல்கிறார்கள் என்று மூளை மொழிபெயர்த்து, கிரகிக்க டயிம் எடுத்த காலம். இப்ப பரவாயில்லையாக்கும் !!!😁
  7. இந்தப் பலியேடிவ் கெயர் பற்றியும் சொல்ல வேண்டும். வாழ்வு முடியும் தறுவாயில், இனிமேல் அவர்களை மீள அவர்களின் பழைய வாழ்விற்குக் கொண்டுவர முடியாது என்கிற நிலை வரும்போது, சிகிச்சைகள் இன்றி, அவர்களை அவர்கள் பாட்டில், வாழ்வு முடியும்வரைக்கும் மகிழ்வாக வைத்துப் பராமரிக்கும் ஒரு நிலை. வெகுசில வைத்தியசாலைகளும், அநேகமான வயோதிபர் பராமரிக்கும் நிலையங்களும் இதற்கான வசதியைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலையங்களுக்குச் செல்வோர் ஓரிரு வாரங்களில் இயற்கை எய்துவதுதான் வழமை. நீங்கள் உங்களின் இறுதிநாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கும் உறவுகளுக்கும் சொல்லி, இறுதி யாத்திரிகைக்கு ஆயத்தப்படுத்த கால அவகாசம் கொடுக்கும், வாழ்வின் இறுதி நிலையின் கடைசிப்படி என்று வைத்துக்கொள்ளலாம். அப்படியில்த்தான் அவனும் இருந்தான்.இதனைக் கேட்டவுடன், அவன் உயிருடன் இருக்கும்போது எப்படியாவது அவனைப் பார்த்துவிட வேண்டும் என்கிற எண்ணம் எழவே, "உனது அண்ணாவை நான் வந்து பார்க்க விரும்புகிறேன், எப்படிச் செய்யலாம்?" என்று கேட்டேன். "அவன் வீட்டில்த்தான் இருக்கிறான், நண்பர்கள் வந்து அங்கு, இங்கென்று அழைத்துச் செல்வார்கள். அவனது மனைவியும் அவன் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்கிறாள்" என்று கூறிவிட்டு, "நீ அவனுடன் பேசு, நிச்சயம் பேசுவான். உனக்கு விருப்பமான நேரத்தைக் கேட்டு, போய் பார்த்துவா" என்று சொன்னான். "என்னை அவனுக்கு அடையாளம் தெரியும் என்று நீ நினைக்கிறாயா?" என்று கேட்டேன். "உனது பெயரை அவன் மறந்திருக்கலாம், ஆனால் உன்னைக் காணும்போது உன்னைப்பற்றி அவன் பேசுவான், போனால் உனக்குத் தெரியும்" என்று அவன் கூறவே, எப்படியாவது பார்த்துவிட மனம் துடித்தது. வேலைத்தளத்தில் என்னுடன் பணிபுரியும் இன்னொரு நண்பனுடன் இதுபற்றிக் கேட்டேன். "நீ போவதென்றால் நானும் வருகிறேன்' நேரத்தைச் சொல்லு" என்று கூறினான். வீடு வந்ததும், "சனிக்கிழமை ஜோஷைப் பார்க்க செல்லவிருக்கிறேன், பாவம், இன்னும் கொஞ்ச நாள்த்தான் வாழப்போகிறான், நானும் அண்டியும் போகிறோம்" என்று கூறவும், "சனிக்கிழமை பிரியாவின்ர மகளின்ர‌ சாமத்திய வீடு இருக்கெண்டெல்லோ சொல்லிக்கொண்டுவாறன்? அண்டைக்குப் போகப்போறன் எண்டுறியள்?" என்று முதலாவது தடை வீழ்ந்தது."எத்தனை மணிக்குச் சாமத்திய வீடு? மத்தியானத்துக்கிடையில வந்துருவன்" என்று கூறவும், "காலமை 8 மணிக்கு அங்க நிக்க வேணும்" என்று தடை இறுகியது. போச்சுடா, அவனைப் பார்க்க முடியாது என்று எண்ணிக்கொண்டு அண்டிக்கு (வேலைத்தள நண்பன்) தொலைபேசி எடுத்து, "மச்சான், சனிக்கிழமை சரிவராது போல கிடக்கு, வாற கிழமை போகலாமோ?" என்று கேட்கவும், "சரி, போகலாம்" என்று கூறினான். கடந்தவாரம் அவனது சகோதரனுடன் பேசும்போது அவன்பற்றி மீளவும் கேட்டேன். "இப்போது படுக்கையாகி இருக்கிறான். யாருடனும் பேசுவதில்லை. எனது பிள்ளைகள் அவனது கட்டிலின் அருகில் சென்று பெரியப்பா என்று காதில் பேசும்போது சிறிய புன்னகை மட்டும் பதிலாக வருகிறது. அவனை இந்த நிலையில் பார்க்கவே கஸ்ட்டமாக இருக்கிறது" என்று கூறினான். "அவனை இனியும் பார்க்க வரலாமா?" என்று கேட்டபோது, "நான் நினைக்கவில்லை, அவனால் எவருடனும் பேசவோ அல்லது எவரையும் பார்க்கும் உடல் நிலையோ இப்போது இல்லை. அம்மாவையும் அப்பாவையும் தவிர வேறு எவரும் அவனருகில் தற்போது இல்லை". என்று மிகவும் அமைதியாகக் கூறினான். அவனைப் பார்க்க முடியவில்லையே என்கிற குற்றவுணர்வும், கூடவே வந்துசென்ற சாமத்திய வீட்டுத் தடையும் ஆத்திரத்தையும் ஆற்றாமையினையும் எனக்குத் தந்தது.
  8. அவன் சுகயீனமுற்று இருப்பதாகத் தெரிந்து சில மாதங்களாக அவன் பற்றி விசாரித்து வருகிறேன். அவனது சகோதரனுடனான எனது நாளாந்த பேச்சுக்களில் அவனும் நிச்சயம் இடம்பெறுவான். சிலவேளைகளில் நம்பிக்கையுடன் அவன் பேசும் போது, "கடவுளே அவன் தப்பிவிடவேண்டும்" என்று மனதிற்குள் நினைப்பதுண்டு. வேலைத்தளத்தில் பலருக்கு அவன் முன்மாதிரியாகத் தோன்றியவன். வாழ்வினை மகிழ்ச்சியாக வாழும் வெகுசிலரில் அவனும் ஒருவனாக இருந்திருக்கிறான். எவ்வளவுதான் நம்பிக்கைகள் இருந்தாலும், யதார்த்தம் என்று இருக்கிறதல்லவா? அதுதான் அவனது பேச்சுக்களில் அடிநாதமாக இருக்கும். ஒவ்வொருநாளும் எமது பேச்சுக்களின் முடிவில், "நாம் மனதளவில் தயாராகி வருகிறோம், அம்மாவையும் அப்பாவையும் நினைக்கும்போதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது" என்று கூறி முடிப்பான். அவனுக்கும் இரண்டு பெண்பிள்ளைகள். அவனது சகோதரனுடன் மிகவும் நெருக்கமானவர்கள் என்று அவன் அடிக்கடி சொல்லியிருக்கிறான். அவனது இழப்பு பலருக்கு பாரிய அதிர்ச்சியினையும் சோகத்தனையும் வழங்கவிருக்கிறது. இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னராக இருக்கலாம். என்னிடம் வந்து, "அண்ணாவை பலியேடிவ் கெயருக்கு மாற்றவேண்டும் என்று வைத்தியர்கள் பேசுகிறார்கள். அவனுக்குக் கொடுக்கவேண்டிய மருந்தின் அளவை நான்கு மடங்காக்கியும் பார்த்தாயிற்று, ஆனால் புற்றுநோய் கேட்பதாக இல்லை. அது தன்பாட்டில் வளர்ந்துகொண்டிருக்கிறது. அவனால் இப்போது கொடுக்கும் மருந்தின் அளவைத் தாங்க முடியாது, ஆகவே சிறிது சிறிதாக அதனைக் குறைத்து அவனது இறுதி நாட்களில் அவன் விரும்பியபடி வாழ நாம் விடப்போகிறோம்" என்று கூறிவிட்டு, "இனிவரும் நாட்களில் நான் அடிக்கடி லீவு எடுக்கவேண்டி இருக்கும், அனுமதி தருவாயா?" என்று கேட்டான். மனமுடைந்து போய்விட்டேன். "என்ன கேட்கிறாய், நீ போகும்போது சொல்லிவிட்டுப் போ, முன் அனுமதி எதுவும் வேண்டாம், அண்ணாவையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள், தவறாமல் என்னையும் உனது வட்டத்திற்குள் வைத்துக்கொள்" என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றேன்.
  9. ஒரு ஆறு அல்லது ஏழு மாதங்கள் இருக்கலாம். வழமை போல எனது பணித்தளத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பணியாளர்களுடன் பேசுவது போல அன்று பேசிக்கொண்டு வந்தேன். அவனது இளைய சகோதரனைப் பார்த்துப் பேசலாம் என்று போனபோது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இயல்பாகவே குறும்புத்தனம் மிக்க அவனது சகோதரனின் முகம் வாடியிருந்தது. பணி ஆரம்பிக்கும் முன்னர் நடக்கும் கூட்டத்தில் அவனது முகத்தைக் கவனித்தேன், வழமையான புன்னகை இருக்கவில்லை. ஆகவேதான், "ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?" என்று கேட்டேன். சிறிது நேரம் மெளனத்திற்குப் பின்னர், மூச்சினை ஆளமாக இழுத்துக்கொண்டு பேசினான். "அண்ணாவுக்குச் சற்றுச் சுகமில்லை" என்று அவன் கூறவும், "அப்படியென்ன சுகமில்லை, மருந்தெடுத்தால்ப் போயிற்று" என்று நான் சர்வ சாதாரணமாகக் கூறினேன். "இல்லை, அவன் சில நாட்களாகவே அடிக்கடி கோபப்படுகிறான். எவருடனும் பேச விரும்புகிறான் இல்லை. நாங்கள் அவனை அப்படிப் பார்த்ததில்லை". என்று கூறினான். "சரி, வைத்தியரிடம் அழைத்துச் சென்றீர்களா?" என்று கேட்க, "ஆம், அழைத்துச் சென்றோம். அவனுக்கு மூளையில் கட்டியொன்று இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். பெரும்பாலும் அது புற்றுநோயாக இருக்க வாய்ப்பிருக்கிறது" என்று கூறிவிட்டு அமைதியானான். அவனது கண்கள் கலங்கியிருந்தன. எனக்கோ எதுவுமே சொல்லத் தெரியவில்லை. "இல்லை, அப்படியிருக்காது. உனது அண்ணனன் சிறந்த உடற்பயிற்சியாளன், திடகாத்திரமானவன், அவனுக்கு புற்றுநோய வரச் சந்தர்ப்பமில்லை" என்று அவனை ஆசுவாசப்படுத்தினேன். ஆனால், அவனுக்குத் தெரியும் நான் சொல்வது வெற்றுச் சமாதானம் தான் என்பது. நாட்கள் செல்லச் செல்ல அவனது உடல்நிலை மோசமாயிருக்க வேண்டும். அவனது சகோதரன் அடிக்கடி லீவு எடுக்கத் தொடங்கினான். "அண்ணாவை ஒவ்வொரு வைத்தியராகக் கூட்டிச் செல்கிறோம். அவனது உடல்நிலை மோசமாகிக்கொண்டு போகிறது. புற்றுநோயென்று உறுதிப்படுத்தி விட்டார்கள். சத்திர சிகிச்சை மூலம் அகற்றும் கட்டத்தை அவன் தாண்டி விட்டான். கீமோ (கதிர்வீச்சு ரீதியிலான‌ சிகிச்சை) ஆரம்பித்திருக்கிறோம். உயிர் பிழைப்பதற்கான சாத்தியப்படு மிகவும் குறைவென்றாலும், எம்மாலான அனைத்தையும் அவனுக்காகச் செய்துகொண்டிருக்கிறோம்...."இப்படி ஏதாவது ஒரு மனம் நொருங்கிப்போகும் செய்தியும், சாத்தியமே அற்ற நம்பிக்கை தொக்கு நிற்கும் வசனங்களும் அவனிடமிருந்து அவ்வபோது வந்து போகும்.
  10. நான் பணிபுரியும் தொழிற்சாலையிலிருந்து அவன் ஏறக்குறைய 100 கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் இன்னொரு கிளையில் பணிபுரிய ஆரம்பித்திருந்தான். இயல்பாகவே நட்பாகவும், மிகுந்த தோழமையோடும் பழகும் அவனுக்கு போகுமிடமெல்லாம் நண்பர்களை உருவாக்கிக்கொள்வதென்பது கடிணமானதாக ஒருபோதும் இருந்ததில்லை. ஏதாவது பயிற்சிநெறிக்காக அவனது தொழிற்சாலைக்குச் செல்லும்போது வணக்கம் சொல்லிக்கொள்வோம். அவனது சகோதரன் என்னுடைய அணியில் பணிபுரிவதால் இடைக்கிடையே அவன் குறித்து விசாரித்துக்கொள்வேன். எமக்குள்ளான பிரச்சினைகள் குறித்து அவன் தனது இளைய சகோதரனுக்குச் சொல்லியிருக்கலாம். ஆகவே, நான் அவனுடன் பேசும்போது சில விடயங்கள் குறித்து என்னிடம் கேட்பான் அவனது இளைய சகோதரன். இப்படியே கழிந்துசென்ற சில வருடங்களில் அவன் ஒரு வியட்நாமியப் பெண்ணை மணமுடித்துவிட்டான் என்றும், தொழிற்சாலைக்கு அருகிலேயே, கடற்கரையினை அண்டிய வீடொன்றில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான் என்றும் அறிந்தபோது சந்தோசமாக இருந்தது. தனக்குப் பிடித்த இடத்தில், பிடித்த பெண்ணுடன் மகிழ்வாக வாழ்வதென்பது எல்லோருக்கும் கிடைக்கக் கூடியது அல்லவே, அதுதான் அந்த மகிழ்ச்சி என்று வைத்துக்கொள்ளுங்கள்.
  11. மன்னிக்க வேண்டும், வேலையில் நிற்கிறேன், பின்னேரம் தொடரலாமா?
  12. 2012 இலிருந்து 2015 வரையான காலப்பகுதியில் அவன் எமக்குப் பொறுப்பாகவிருந்தான். எமக்குத்தான் அவனுடன் பேசப் பிடிக்கவில்லையாயினும், அவன் என்றும்போல சகஜமாகவே பழகினான். சிறிது காலம் செல்லச் செல்ல அவன் மீதிருந்த வெறுப்பும், கோபமும் மறையத் தொடங்கியது. அவனுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்கிற நிலை வந்தபின்னர் வேறு வழி தெரியவில்லை எனக்கு. மற்றைய இரு இந்தியர்களும் அவனை சிறிதும் சட்டை செய்யவில்லை, அவனுக்கும் அது நன்றாகவே புரிந்தது. அனுபவத்தாலும், அறிவிலும் நாம் அவனைக் காட்டிலும் சிறந்தவர்கள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும், ஆகவே அவனும் அவர்களது நடத்தைபற்றிக் கண்டும் காணாதவன் போலச் சென்றுவிடுவான். அவனுடன் ஓரளவிற்கேனும் பேசுபவன் என்கிற ரீதியில் என்னுடன் வந்து அவ்வப்போது பேசுவான். அவ்வாறான வேளைகளில் அவனது இன்னொரு பக்கம் குறித்த விடயங்கள் சிலவற்றை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. மலையேறுதல், ஸ்கேட் போர்டிங் எனப்படும் மட்டைகளில் ஓடுதல் போன்ற விளையாட்டுக்கள் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன. ஆசியாவின் உணவை விரும்பிச் சாப்பிடும் அவனுக்கு ஆசியப் பெண்களையும் பிடிக்கும் என்பதும் எனக்குத் தெரியவந்தது. தொழிற்சாலையின் வினைத்திறன் அதிகரிக்கும் செயற்பாடுகளில் அவன் எடுத்த முயற்சிகளுக்கு என்னாலான உதவிகளை வழங்கினேன். அவனோடு தொடர்ந்தும் முரண்பட்டுக்கொண்டு பயணிப்பதில் பயனில்லை என்பதும் புரிந்தது. தொழிற்சாலையின் வருடாந்த கிறிஸ்துமஸ் நிகழ்வுகள், ஏனைய கொண்டாட்டங்களில் அவன் கலந்துகொள்வான். நானும் அடிக்கடி அங்கு சமூகமளிப்பதால் அவனது வேலைக்குப் புறம்பான வாழ்வுபற்றியும் அறிய முடிந்தது. சில காலம் எமது தொழிற்சாலையில் இருந்துவிட்டு இதே நிறுவனத்தின் இன்னொரு தொழிற்சாலைக்கு மாற்றலாகிப்போனான் அவன். அவனது வளர்ச்சிபற்றி எனக்குள் இருந்த பொறாமையோ, அல்லது வெறுப்போ அப்போது முற்றாக மறைந்திருக்க, அவன் பற்றி அவ்வப்போது பேசிக்கொள்வதுடன் அவன்பற்றிய எனது சிந்தனைகள் நின்றுபோகும். மாதத்தில் ஒருமுறையாவது எமது தொழிற்சாலைக்கு வருவான். வந்தால், அனைவருடனும் சிரித்துப் பேசுவான். தவறாமல் என்னிடம் வந்து "எப்படியிருக்கிறாய் நண்பா?" என்றுவிட்டுச் சிரிப்பான். "இருக்கிறேன், நீ எப்படி?" என்று கேட்பேன். "உனக்குத் தெரியும்தானே என்னைப்பற்றி? எதனையும் சீரியசாக எடுக்கமாட்டேன். வாறது வரட்டும் , பார்க்கலாம் என்று இருக்கிறேன்" என்று சொல்வான். அவனது இளைய சகோதரன் அப்போது எமது தொழிற்சாலையில் பணிபுரியத் தொடங்கியிருந்தான். எனது அணியில் அவன் இடம்பெற்றிருந்ததால், அவனது சகோதரன் பற்றி அடிக்கடி கேட்டுக்கொள்வேன்.
  13. ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் சென்றிருக்கலாம், 2012 என்று ஞாபகம். எமக்கு அடுத்த நிலைக்கான பதவி ஒன்று வெற்றிடமாகவ வரவே நானும் இன்னும் இரு இந்தியர்களும் அந்த நிலைக்கு விண்ணப்பித்தோம். 6 வருடங்களாக அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதால் அனுபவமும், தேர்ச்சியும், ஆங்கிலத்தில் ஓரளவிற்குச் சரளமாகப் பேசும் வல்லமையும் வந்து சேர்ந்துவிட்டதால், நேர்முகப்பரீட்சையில் இலகுவாக சித்தியடைந்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன். நேர்முகப் பரீட்சை நாள். வீட்டில் நான் செய்த தயார்ப்படுத்தல்களும், என்னைவிட வேறு எவரும் இந்தப் பதவிக்குத் தகுதியற்றவர்கள் இல்லை என்கிற அகம்பாவமும் ஒன்றுசேர நேர்முகப் பரீட்சையினை எதிர்கொண்டேன். ஆனால், அங்கும் ஒரு சிக்கல் இருந்தது. எனது அணியில் எனக்கு சற்று மேலான பதவியில் இருந்து பின்னர் மேற்பதவியொன்றில் பணிபுரிந்த ஒருவனும் நேர்முகப் பரீட்சைக்கான மூன்று தேர்வாளர்களில் ஒருவனாக இருந்தான். அவனுடன் அடிக்கடி நான் முரண்பட்டுக்கொண்டது நினைவில் வந்து போகவே அன்று காலையில் இருந்த அகம்பாவம் முற்றாகக் களைந்துபோக, எச்சரிக்கையுணர்வு மனதில் குடிபுகுந்து கொண்டது. நேர்முகத் தேர்வு கடிணமானதாக இருக்கவில்லை எனக்கு. எல்லாமே தெரிந்த விடயங்கள் தான். முடிந்தவரையில் மிகவும் நீண்ட பதில்களை அளித்தேன். "போதும் அடுத்த கேள்விக்குப் போகலாம்" என்று தேர்வாளர்களே இடைமறித்த சமயங்களும் இருந்தது. சுமார் 45 நிமிடங்கள் பேசியிருப்பேன், மிகுந்த நம்பிக்கையுடன், தேர்வு அறையினை விட்டு வெளியே வந்தேன். மறுநாள் என்னுடன் அதே பதவிக்கு விண்ணப்பித்த இரு இந்தியர்களையும் சந்தித்தபோது, என்னைப்போலவே தாமும் சிறப்பாகச் செய்ததாகக் கூறியபோதும் எனக்குள் இருந்த நம்பிக்கை சிறிதும் அசையவில்லை. ஆனால், அன்று மாலையே திடீரென்று மனதில் இடி வீழ்ந்தது போலாகிவிட்டது. நாம் விண்ணப்பித்த அதே பதவிக்கு அவனும் விண்ணப்பித்திருந்தான் என்பதும், அவனும் மிகவும் திறமையாக நேர்முகத் தேர்வைச் செய்தான் என்பதும் எனக்குத் தெரிய வந்தது. நம்பமுடியவில்லை. "இது எப்படிச் சாத்தியம்? நாம் விண்ணப்பிக்கும் பதவி எம்மைப்போன்ற அனுபவம் உள்ளோருக்கானது. இவனோ சின்னப் பையன், எமது அனுபவத்துடன் ஒப்பிடும்போது, மிகக் குறைந்த அனுபவத்தைப் பெற்றிருந்தவன். இவனை நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருக்கவே கூடாது" என்று மனம் சொல்லியது. அடுத்தவாரம் நேர்முகத் தேர்வின் முடிவுகள் வெளிவரவே நாம் மனமுடைந்து போனோம். எவரும் எதிர்பார்க்காதிருக்க, அவனுக்கு அந்தப் பதவியினை நிர்வாகம் கொடுத்தது மட்டுமல்லாமல் அவனையே எமக்குப் பொறுப்பான மேலாளனாகவும் ஆக்கியது. பெருத்த கோபமும், அதிர்ச்சியும், எரிச்சலும் வந்து மனதில் குடிகொண்டது. இந்தியர்களையும், இலங்கையனான என்னையும் வேண்டுமென்றே தவிர்த்து தமது இனத்தவனை பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள் என்று எமக்குள் பேசத் தொடங்கினோம். இது ஓரளவிற்கு உண்மை என்பதை பின்வந்த நாட்களில் எம்மால் உணரக் கூடியதாக இருந்தது. அவனுக்குப் பதவியுயர்வு கொடுத்து சில மாதங்களின் பின்னர் நேர்முகத் தேர்வில் தேர்வாளனாகக் கலந்துகொண்டவனுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. தென்கொரியாவைச் சேர்ந்தவன். அங்கு பிறந்திருப்பினும் மிகச் சிறிய வயதிலேயே அவுஸ்த்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்துவிட்டவன். இயல்பான இனவாதி. குறிப்பாக இந்தியர்களையும், இலங்கையர்களையும் வெளிப்படையாகவே வெறுப்பவன். என்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போது எதேச்சையாக, "அவனை நாம் தான் அப்பதவியில் அமர்த்தினோம். அப்பதிவியே அவனுக்காக உருவாக்கப்பட்டதுதான். அவனை இன்னும் மேல்நோக்கி எடுத்துச் செல்வதே எமது நோக்கம்" என்று மிகச் சாதாரணமாகக் கூறினான். "அப்படியானால் எமது நிலை என்ன?" என்று சற்றுக் கோபத்துடன் கேட்டேன். "உனது நிலையா? நீயும் அவனும் ஒன்றா?" என்று அவன் என்னிடம் கேட்டான். அதன் பின்னர் என்னிடம் கூறுவதற்கு எதுவுமே இருக்கவில்லை.
  14. 2007, நான் அத்தொழிற்சாலையில் இணைந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகியிருந்தது. என்னைப்போலவே இங்குவந்து, தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பல இந்தியர்களும், இலங்கையர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம். வெள்ளை நிறத்தவரின் தொழிற்சாலை, வேலைத்தளத்தில் அணியின் மேலாளர்களில் இருந்து அதியுயர் நிர்வாகத் தலைவர்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர்கள். அவர்களுடன், அவர்கள் பேசும் மொழியினையும், பேசும் சங்கேத வார்த்தைகளும் விளக்கமேயின்றிக் கேட்டுக்கொண்டு, அருகில் இருப்பவன் சிரித்தால், நாமும் சிரித்துக்கொண்டு, வேலைத்தளத்தில் சமூகப் படிகளில் நாம் ஏறலாம் என்று நினைத்திருந்த காலம். எனது வேலைத்தள அணியில் 20 பேர் இருந்தோம். எமது மேலாளர் ஒரு வெள்ளையினத்தவர். சுவிட்ஸர்லாந்தில் பிறந்து, இங்கு வளர்ந்தவர். சிலவேளைகளில் அவர் பேசுவதைக் கிரகிப்பதற்குள் அவர் அடுத்த வசனத்தைத் தொடங்கிருப்பார். புரிந்துகொள்வதற்குச் சிரமப்பட்டுக்கொண்டே பணிபுரிந்த காலம். சிலவேளைகளில் நாம் அவர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆறுதலாய்ப் பேசுவர்கள். அதுகூட சிலவேளை சிரமாகத் தெரிந்தது. என்ன உலகமடா இது என்று சலித்துக்கொண்ட பொழுதுகள். ஆனால், அணியிலிருந்த வெள்ளையர்களை விட நம்மவர் வேலைகளில் சுறுசுறுப்பானவர்கள். ஊரில் கஸ்ட்டப்பட்டு வேலை தேடி, அதனைத் தக்கவைத்துக்கொள்ள அதைவிடக் கஸ்ட்டப்பட்டு வேலை செய்யும் எமக்கு இங்குள்ள வேலை கடிணமானதாகத் தெரியவில்லை. ஆகவே, வேலையென்றால் கூப்பிடுங்கள் இலங்கையர்களையும் இந்தியர்களையும் என்று வெள்ளையர்களே அவ்வப்போது பேசுவது கேட்கும். கடிண உழைப்பாளிகள் என்கிற பெயரும் எமக்கு இருந்தது. அதனால், வழமை போலவே மேலாளரின் செல்லப்பிள்ளைகள் யாரென்பதில் எமக்குள்ப் போட்டி ஏற்படுவதுண்டு. எம்மிடம் வேலை வாங்கலாம் என்று அவர் எண்ணி வந்தபோதிலும், நாம் அதனை ஒரு கெளரவமாக பார்க்க ஆரம்பித்தோம். ஆகவே, எம்மைத்தவிர வேறு எவரும் மேலாளரின் மதிப்பிற்கு பாத்திரமாயிருப்பது எமக்கு எரிச்சலைத் தரும். அந்தக் காலமொன்றில்த்தான் அவன் வந்தான். என்னை விட வயதில் சிறியவன். 26 அல்லது 27 வயதிருக்கலாம். மிகவும் திடகாத்திரமானவன். வெள்ளையினத்தவன். சுருள் சுருளான மயிர்க்கற்றைகள் பொன்னிறத்தில் வளர்ந்திருக்க தனது பெயர் சொல்லி ஒருநாள்க் காலையில் அணியின் கூட்டத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டான். அவன் பற்றி மேலாளர் அறிமுகம் கொடுத்தபோது மனதிற்குள் சிறிய எரிச்சல். "எமக்கெல்லாம் இந்த அறிமுகம் கொடுத்தார்களா, இல்லையே? இவனுக்கு மட்டும் எதற்கு இந்த அறிமுகம்?" என்கிற கேள்வி. விடை எமக்குத் தெரியவில்லை. அணியில் பணிபுரிந்தவர்களில் கீழ்மட்ட வேலைகள், இடைநிலை வேலைகள், உயர் நிலை வேலைகள் என்று மூன்று பிரிவுகளாகாப் பிரிக்கப்பட்டிருந்தோம். இடைநிலை வேலைகளை பெரும்பாலும் இந்தியர்களும் இலங்கையர்களும் செய்துகொள்ள கீழ்மட்ட வேலைகளையும் உயர் மட்ட வேலைகளையும் வெள்ளையர்களே பார்த்துக்கொண்டார்கள். அவனும் கீழ்மட்டத்திலிருந்தே ஆரம்பித்தான். எமக்குக்கீழ் இருக்கிறான் என்பதால் அவன் பற்றி அதிக அக்கறை காண்பிப்பதை நாம் மறந்துவிட்டோம். ஆனால், அடிக்கடி அணிக் கூட்டங்களில் அவனின் பெயர் அடிபடும். அவனது பெயரை அணியின் மேலாளர் உச்சரிக்கும்போது வியப்பும், எரிச்சலும் ஒருங்கே வந்து போகும். ஆனாலும் அவன்குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்று இருந்துவிட்டோம். நாட்கள் செல்லச் செல்ல அவன் அணியில் முக்கியமானவர்களில் ஒருவனாகிப் போனான். கூட்டங்களில் அவன் பேசுவதை மேலாளர் உன்னிப்பாகக் கேட்பது புரிந்தது. அவன் ஈடுபட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து அவர் அடிக்கடி பெருமையுடன் பேசும்பொழுதுகளில் அதே எரிச்சல் வந்து போகும். ஆனால், அவன் குறித்த எமது பார்வைகள் தவறானவை என்பதை அவன் தொடர்ச்சியாக நிரூபித்து வந்தான். இலங்கையில் பொறியியல் படித்துப் பட்டம் பெற்றவன் என்கிற பெருமையும், இங்கிருக்கும் வெள்ளைக்காரனை விடவும் நாம் படித்தவர்கள் என்கிற எண்ணமும் அவனை எம்மிலும் கீழானவனாகப் பார்க்கத் தூண்டியது எமக்கு. அதனாலேயே அவனின் திறமைகளை ஏறெடுத்தும் பார்க்க நாம் நினைக்கவில்லை. ஆனால் எமது எண்ணங்களையும், பெருமைகளையும் அவன் மிக இலகுவாக உடைத்துக்கொண்டே எம்மை நோக்கி வந்துகொண்டிருந்தான். ஒருநாள் திடீரென்று கீழ்மட்ட அணியில் இருந்த அவனை எமது, அதாவது நடுத்தர வர்க்க அணியில் கொண்டு வந்து இணைத்தார் மேலாளர். எமக்கோ தூக்கிவாரிப் போட்டது. "இது எப்படித் தகும்? நாம் படித்தவர்கள் இல்லையா? பண்ணைகளில் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு நின்றவனை எம்மோடு, சரிக்குச் சமமாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். வெள்ளைக்காரன் என்பதால்த்தானே இதுவெல்லாம்?" என்கிற எண்ணம் தலையில் ஏறி அமர்ந்துகொள்ள அவன் மீது தேவையில்லாமல் எரிச்சலை வாரியிறைக்கத் தொடங்கினோம். ஆனால், அவனுக்குத்தான் நாம் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறோம் அல்லது எமக்குள் என்ன பேசிக்கொள்கிறோம் என்பதுபற்றி எதுவும் தெரியாதே? அவனோ எம்மிடம் மிகவும் சகஜமாகப் பழகினான். சில வேளைகளில் எம்மிடமே வந்து சில விடயங்களை எப்படிச் செய்யலாம் என்று கூடக் கேட்பான். விரும்பாதுவிடினும் கூட, அவன் கேட்கும்போது நாம் உதவியிருக்கிறோம். அவனும் நன்றியுடன் சென்றுவிடுவான். சில காலத்தின் பின்னர் இந்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் என்று கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியில் வேலையில் இணைந்தவர்களுக்கு அணியில் மேல்த்தட்டுப் பிரிவில் பதவி உயர்வு கிடைத்தது. அவ்வாறு பதவி உயர்வு கிடைத்துச் சென்றவர்களில் நானும் ஒருவன். மூன்று அல்லது நான்கு வருடங்கள் இருக்கலாம். 2010 வாக்கில் அவனையும் பதவியுயர்வு கொடுத்து எமக்குச் சமனானவனாக ஆக்கி அழகுபார்த்தது நிர்வாகம். இத்தனைக்கும் அவன் எம்மை வெறுக்கவில்லை. நிர்வாகத்திற்கு நெருக்கமானவன் என்பதைத்தவிர அவனை நாம் வெறுப்பதற்கு வேறு எந்த காரணங்களும் எமக்கு இருக்கவில்லை. அவன் குறுகிய காலத்தில் காட்டிய அதீத வளர்ச்சி எமக்குள் அச்சத்தை ஏற்படுத்தியிர்ந்தாலும் கூட, அவன் எமக்குப் போட்டியாக வரலாம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.
  15. இஸ்ரேலியப் பயங்கரவாதிகளின் வழிகாட்டலில் தமிழின அழிப்பை முன்னெடுத்த ஜெயாரும் லலித் அதுலத் முதலியும் இறுதியுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் பலியிட இஸ்ரேலினால் வழங்கப்பட்ட கிபிர் கொலைக்கருவி தம்மீது நடத்தப்பட்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளின் பின்னால் இஸ்ரேலின் மறைகரம் இருப்பதை யாழ்ப்பாணத் தமிழர்கள் அறிந்துகொண்டனர். பாலஸ்த்தீனர்களை ஒடுக்குவதில் இஸ்ரேலியர்கள் கடைப்பிடித்த அதே அனுகுமுறையினையே ஜெயவர்த்தன - லலித் குழுவும் பாவித்து வருகின்றது என்பதை அவர்கள் உணரத் தலைப்பட்டனர். தமிழர்களைப் போலவே இந்தியாவும் அதனை நன்கு உணர்ந்து கொண்டது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் இலங்கைக்குள் செயற்படுவது தனக்குச் சவாலான விடயமாகக் கணித்த இந்தியாவின் ரோ, தனது சொல்லிற்குக் கட்டுப்பட்ட சில தமிழ்ப் போராளி அமைப்புக்களிடம் யுத்தத்தை கொழும்பிற்கும், இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்த்தரிக்குமாறு கோரியதாக இவ்வமைப்புக்களின் உறுப்பினர்கள் பின்னாட்களில் என்னிடம் தெரிவித்தனர். புலிகள் இந்தியாவின் திட்டத்தை மறுக்க, ஈரோஸ் அமைப்பு அதனைச் செய்வதற்கு ஒப்புக்கொண்டது (என்னிடம் இந்த விடயத்தை கூறியவர் போராளி அமைப்பொன்றில் முக்கிய உறுப்பினராக இருந்ததுடன் இலங்கை அரசுடனும் இந்தியாவுடனும் நெருங்கிய தொடர்புகளையும் பின்னாட்களில் ஏற்படுத்திக் கொண்டவர். தான் கூறிய விடயம் வெளியே தெரியவருமிடத்து தனக்கு அது ஆபத்தாக முடியலாம் என்று அஞ்சியதால் தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று என்னைக் கேட்டிருந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் அவர் கொல்லப்பட்டு விட்டார் (2005)). இக்காலத்தில் பார்த்தசாரதி இலங்கையில் இருந்தார். புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியிலும், ஐப்பசி மாதத்தின் ஆரம்பத்திலும் பல வெளிநாட்டுச் செய்திச் சேவைகளின் ஊடகவியலாளர்கள் கொழும்பில் முகாம் அமைத்துத் தங்கியிருந்தனர். இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்படும் எண்ணிக்கை பல உலக செய்திச் சேவைகளின் கவனத்தை ஈர்த்திருந்ததனால் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களைச் சேர்ந்த பல செய்தி நிறுவனங்கள் இலங்கையில் நடக்கும் அக்கிரமங்களை உடனுக்குடன் வெளியே கொண்டுவர ஆவலாக இருந்தன. தென்னாசியாவின் கொலைக்களம் என்று அக்காலத்தில் அறியப்பட்ட இலங்கை குறித்து இந்தியாவிலிருந்த பி.பி.சி யின் செய்தியாளர் மார்க் டல்லி எழுதுகையில், "உலகிலேயே மிகவும் காட்டுமிராணடித்தனமான, ஒழுக்கக் கட்டுப்பாடுகள் எதனையும் கொண்டிராத இராணுவம்" என்று இலங்கை இராணுவத்தை வர்ணித்திருந்தார். 1978 ஆம் ஆண்டு முதல் 1997 வரையான 18 வருடங்களில் ஓரிரு நாட்களைத் தவிர பெரும்பான்மையான நாட்களில் டெயிலி நியுஸ் செய்திகளுக்காக மந்திரிசபைச் செய்தியாளர் மாநாட்டில் தவறாமல் கலந்துகொண்டிருக்கிறேன். அப்படியான சந்தர்ப்பங்களில் பல வெளிநாட்டுச் செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. 1984 ஆம் ஆண்டின் புரட்டாதி மற்றும் ஐப்பசி மாதங்கள் பெருமளவு வெளிநாட்டுச் செய்தியாளர்களை நாட்டிற்குள் தருவித்திருந்தது. 1984 ஆம் ஆண்டின் ஆவணி 27 ஆம் திகதி வெளிவந்த நியூஸ் வீக் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையின் வடக்குக் கிழக்கில் இலங்கை ராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்ட தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் அப்பாவிகள் என்று எழுதியிருந்தது. ஓரிரு பொதுமக்களைத் தவிர கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் தான் என்று இலங்கையரசாங்கம் செய்துவரும் பிரச்சாரத்தைச் சாதாரண சிங்கள மக்களே நம்ப மறுத்தனர் என்று அவ்வறிக்கை கூறியது. தமிழர்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான சிங்களவர்கள் கூட ஜெயவர்த்தன சமாதான வழிமுறைகளில் தமிழரின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காணப்போவதில்லை என்பதை நம்புவதாகவும் அவவறிக்கை மேலும் கூறியது. வோஷிங்க்டன் போஸ்ட் பத்திரிக்கை யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் நடத்தப்பட்டுவரும் படுகொலைகள் குறித்து எழுதுகையில், "இரவு வேளைகளில் யாழ்நகரம் பேய்நகரம் போல் காட்சியளிக்கிறது. தம்மீதான போராளிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்கலாக அப்பாவிகளை இராணுவம் கொன்றுவருகிறது. நாட்டின் அதிபர் ஜெயவர்த்தன, அரசியல் தீர்வில் ஆர்வமுள்ளவர் போல்த் தோன்றவில்லை. தமிழரின் பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வொன்றினை வழங்கவே அவர் முயல்வதுடன், அதனை தமிழர்களை அச்சமூட்டிச் சரணடைய வைப்பதன் மூலம் செய்ய எத்தனிக்கிறார்" என்று எழுதியது. மும்பாயிலிருந்து வெளிவரும் பிரபலப் பத்திரிக்கையான பிலிட்ஸ் அதன் ஆவணி 18 ஆம் நாள் இதழில் யாழ்ப்பாணத்திலும், முல்லைத்தீவிலும் காணப்படும் சூழ்நிலை குறித்து எழுதியிருந்தது. பின்னர் இந்தச் சூழ்நிலைகளை ஆசிரியர் தலையங்கமாக இட்டு செய்தியொன்றினையும் வெளியிட்டது. யாழ்ப்பாணத்தின் கரையோரக் கிராமங்கள் மீது இராணுவமும் கடற்படையும் தொடர்ச்சியான செல்த் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் நோக்குடன் அம்மாவட்டத்தில் உள்ள தமிழ்க் கிராமங்களை இராணுவம் அழித்து வருகிறது. இப்புராதன தமிழ்க் கிராமங்களை அழித்துத் தரைமட்டமாக்க இராணுவத் தாங்கிகளும், நிலங்களை மட்டமாக்கும் கனரக உபகரணங்களும் அரசால் பாவிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலும் தன் சொந்த நாட்டு மக்களையே கொல்வதற்காக விமானக் குண்டுவீச்சுக்கள் நடத்தப்பட்டதில்லை. என்று எழுதியிருந்தது. மேலும், இந்தியா சீக்கியத் தீவிரவாதிகளுக்கெதிராகப் போராடுவது போன்றதே இலங்கை தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கெதிராகப் போராடுவதும் என்ற இலங்கையின் பிரச்சாரத்தைக் கேலி செய்த இப்பத்திரிக்கை, "இலங்கையில் இருப்பது ஒரு பயங்கரவாதம் மட்டும்தான். அடிப்படை மனிதவுரிமைகளுக்காகப் போராடும் அப்பாவிகளைக் கொன்றுகுவிக்கும் அரச பயங்கரவாதமே அது" என்று அப்பத்திரிக்கை எழுதியிருந்தது. ஜெனீவாவுக்கான இந்திய தூதுக்குழுவும் இதேவகையான விமர்சனங்களை இலங்கை அரசாங்கம் மீது வைத்திருந்ததும் குறிப்பிடத் தக்கது. (மேலதிக வாசிப்புக்களுக்கு : 2009 இறுதி யுத்தத்தில் இஸ்ரேல் ஆற்றிய பங்கு குறித்து தி டிப்லொமட், அல்ஜசீரா மற்றும் தி எலெக்ட்ரோனிக் இன்டிபாடா எழுதிய கட்டுரைகளின் இணைப்புக்கள்) https://thediplomat.com/2023/07/israels-role-in-sri-lankas-dirty-war/ https://electronicintifada.net/content/israel-advises-sri-lanka-slow-motion-genocide/12644 https://www.aljazeera.com/opinions/2023/6/27/israeli-complicity-in-sri-lanka-war-crimes-must-be-investigated https://www.greenleft.org.au/content/israel-advises-sri-lanka-slow-motion-genocide
  16. என்ன செய்வது? வரலாறு தெரியாத மூடக்களுக்கு யாராவது வரலாற்றை எழுதித்தான் ஆகவேண்டி இருக்கிறது. இன்றிருக்கும் அடக்குமுறையும், ஆக்கிரமிப்பும் சுதந்திரத்திற்குப் பின்பிருந்தே இருந்து வந்தது என்பதும், அதனாலேயே தமிழர்கள் ஆயுதமேந்தினார்கள் என்பதும் இந்த வீணர்களுக்கும், சந்தர்ப்பவாதிகளுக்கும் தெரியப்போவதில்லை. மேற்குலக மயக்கத்தில், மத அடிப்படைவாதத்தின்பால் உந்தப்பட்டு, அடக்குமுறையாளர்களுக்கு ஒத்தூதி அப்பாவிகளின் விடுதலைக்கான போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று எள்ளி நகையாடும் கோடரிக் காம்புகள் ஒரு இனத்தின் இருப்புக் குறித்துப் பேசும் எந்த அருகதையும் அற்றவர்கள். மற்றையவர்களுக்கு அரசியற்பாடம் எடுப்பதை இந்த அற்பர்கள் முதலில் நிறுத்தட்டும்.
  17. 1980 களில் இராணுவத்தின் அட்டூழியங்களை இனக்கொலை என்று அழைத்த இந்துவின் என்.ராம் 2009 இல் தமிழர்களையும், விடுதலைப் போராட்டத்தையும் அழித்தமைக்காக இனக்கொலையாளி ராஜபச்க்ஷவைப் போறிப் புகழும் அதே என்.ராம் தனது கடுமையான நிலைப்பாட்டிற்காக லலித் அதுலத் முதலி உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களால் பெரிதும் தேடப்பட்டவராக மாறினார். ஈழத்தமிழர் பிரச்சினையில் மிகுந்த ஈடுபாட்டுடன் முன்னர் எழுதிவந்தவரும் ஹிந்துப் பத்திரிக்கையின் ஆசிரியருமான என்.ராம், அதுலத் முதலியைப் பேட்டி கண்டார். அரசாங்கத்தின் அரசியல்ப் பேச்சாளரும், இராணுவப் பேச்சாளருமாக அதுலத்முதலியே அன்று செயற்பட்டு வந்தார். அத்துடன் சர்வகட்சி மாநாட்டின் உத்தியோகபூர்வப் பேச்சாளரும் அவராகவே இருந்தார். ராம் எழுதிய கட்டுரை புரட்டாதி 22 ஆம் திகதி ஹிந்துப் பத்திரிக்கையில் வெளிவந்திருந்தது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் கொழும்பில் இலண்ட் பத்திரிக்கை அதனை மீள்பிரசுரம் செய்திருந்தது. ராம் தனது பேட்டியினை இரு பகுதிகளாக வகுத்திருந்தார். முதலாவதாக சர்வகட்சி மாநாடு குறித்து லலித்திடம் வினவிய அவர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்னவென்றும் கேட்டார். சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒற்றைத்தீர்வு மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மட்டும்தான் என்று லலித் பிடிவாதமாகப் பதிலளித்தார். அதற்குமேல் தமிழர்களுக்கு எதனையும் கொடுக்க அரசாங்கத்தால் முடியாது என்றும் அவர் கூறினார். இதனை விடவும் அதிகமான அதிகாரங்களை தமிழருக்கு அரசு வழங்கினால், அரசு மக்களால் புறக்கணிக்கப்பட்டு செயலற்றுப்போக, அதிதீவிர சிங்களக் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும், அதன்பின்னர் தமிழருக்கான தீர்வு குறித்து எவருமே பேசமுடியாது போய்விடும் என்றும் அவர் எச்சரித்தார். தனது பேட்டியில் இரண்டாம் பகுதியில் எதேச்சாதிகாரத்துடன் செயற்பட்டுவரும் இராணுவத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தாது இருப்பது குறித்து ராம் லலித்திடம் கேட்டார். இராணுவத்தினரின் பழிவாங்கல்த் தாக்குதல்களை லலித் மறுக்கவில்லை, நடப்பது உண்மைதான் என்று ஒத்துக்கொண்டார். ஆனால், அந்தப் பழிவாங்கல்த் தாக்குதல்களை அவர் நியாயப்படுத்தினார். தமது சகாக்கள் கொல்லப்படும்போது அவர்கள் தமது கட்டுப்பாட்டை இழந்து பழிவாங்கல்த் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூறினார். இராணுவத்தினரைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சாதாரண சட்ட நடைமுறைகளையோ அல்லது இராணுவ நீதிமன்றங்களையோ அமைத்து ஏன் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த முடியாது என்று ராம் கேட்டார். இக்கேள்விக்கு சட்டரீதியாகப் பதிலளித்த லலித், போதிய ஆதாரங்கள் இல்லாமல் குற்றஞ்சாட்டுவதென்பது சாதாரண சட்ட வழக்குகளுக்கு பொருந்தாது என்றும், இராணுவத்தினருக்கு சட்ட விலக்கல்களும், சிறப்புரிமைகளும் இருப்பதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய லலித், தாக்குதல் நடத்தப்படும் இடங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயல்வது குறித்து இராணுவத்தினருக்குத் தகவல் வழங்கத் தவறுவது பாரிய குற்றமாகும் என்றும் தெரிவித்தார். லலித்துடனான பேட்டியின் பின்னர் ஹிந்துப் பத்திரிக்கை தமது மூத்த செய்தியாளரான எஸ்.பார்த்தசாரதியை யாழ்ப்பாணத்தில் நிலவும் சூழ்நிலையினை அறிந்துவருமாறு அனுப்பியது. கொழும்பு வந்த பார்த்தசாரதி, யாழ்ப்பாணம் செல்லும் யாழ்தேவி புகையிரதத்தில் பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு புறக்கோட்டையில் இருந்து ஏறினார். 1984 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலையினை இரு பாகங்களாக ஐப்பசி 16 மற்றும் 18 ஆம் திகதிகளில் ஹிந்துவில் வெளியிட்டார். அந்த அறிக்கையில் இருந்து சில பகுதிகளை நான் இங்கு இணைக்கிறேன். குறிப்பாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் (2005 ஆம் ஆண்டின்படி) ஹிந்துப்பத்திரிக்கை இப்படுகொலைகளை "இனக்கொலை" எனும் பதத்தினைப் பாவித்து விளித்திருந்தது என்பதை வாசகர்கள் கவனித்தல் வேண்டும். "இராணுவத்தினரின் வன்முறைகளும், கலாசார இனக்கொலையும்" என்கிற தலைப்பில் இந்த அறிக்கை வெளிவந்திருந்தது. "யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் ஒற்றை ரயிலில் ஏறி அமர்ந்துகொண்ட இந்தச் செய்தியாளர், ரயில் தமிழர் பகுதிக்குள் சென்றதும் பயணிகள் அனைவரும் பதற்றத்துடன் காணப்பட்டதை உணர்ந்தார். இறுகிய முகத்துடன் காணப்பட்ட இராணுவ வீரர்கள் தமது துப்பாக்கிகளை சுடுவதற்கு ஆயத்தமாக கைகளில் ஏந்தி வைத்துக்கொண்டு, அப்பெட்டியெங்கும் நிரம்பிக் காணப்பட்டனர். இன்னொரு நாட்டினுள் நுழைவது போன்ற மனப்பான்மையுடன் செயற்பட்ட அந்த இராணுவ வீரர்கள் அப்பெட்டியில் இருந்த தமிழர்களை மிரட்டி அவர்களின் அடையாள அட்டைகளைப் பரிசோதித்துக்கொண்டிருந்தனர். மாலையாகி, ரயில் யாழ்ப்பாணத்தை அடைந்ததும் ரயில் பிளட்போமில் பெரிய சனக்கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், இவர்கள் எவரும் அங்கு நின்றிருந்த இராணுவத்தினரின் கழுகுப் பார்வையில் இருந்து தப்ப முடியவில்லை. யாழ்ப்பாண நகருக்கு முதன்முதலாக வரும் ஒருவருக்கு அந்த நகரம் இயல்பாகவும், அமைதியாகவும் இருப்பது போன்று தோன்றலாம். ஆனால், சில மணிநேரத்திற்குள் அந்த அமைதியும், இயல்புநிலையும் வெறும் மாயை என்பதும், அவற்றிற்குப் பின்னால் தொடர்ச்சியான பதற்றமும், அச்சமும் நிலவுவதும் தெரிந்துவிடும். வீதிகளில் சிறிய இடைவெளிவிட்டு நிரைகளாக இராணுவக் கவச வாகனங்களும், ட்ரக் வண்டிகளும் வேகமாக ரோந்துபுரிவதும், வீதியால் செல்லும் மக்களை உரசிக்கொண்டு போவதும் புரியும். தமது சொந்தத் தாயகத்தில், கைதிகள் போலத் தமிழ் மக்கள் அடையாள அட்டைகளைக் காவித்திரிய வேண்டும் என்று இராணுவம் வலியுறுத்தியிருக்கிறது, இதுவும் கிட்டத்தட்ட தென்னாபிரிக்கா போலத்தான் இருக்கிறது என்று அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் என்னிடம் கூறினார். உங்கள் பார்வைக்குத் தெரிவதை அப்படியே நம்பிவிடாதீர்கள், சாட்சியங்களுடன் அவற்றை கண்டு உணருங்கள் என்று பயம் கலந்த பதற்றத்துடன் இரகசியமாக என்னிடம் பேசினார் அந்த அரசாங்க அதிகாரி". புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியிலும், இந்த மாதத்தின் ஆரம்பத்திலும் பார்த்தசாரதி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்குச் சென்றுவந்தார். அப்பாவி மக்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை இராணுவம் நடத்திவருவதை பார்த்தசாரதி கண்டார். இவ்வாறான பல தாக்குதல் சம்பவங்கள் யாழ்க்குடா நாடெங்கும் பரவலாக நடந்து வந்தது. தாக்கப்பட்டு உயிர்தப்பியவர்களை அவர் பேட்டிகண்டபோது, "உங்களை எதற்காகத் தாக்குகிறார்கள்?" என்று வினவியபோது, "பையன்கள் கொள்ளையிட்டார்களாம், இராணுவ ஆயுதக் கிடங்குகளுக்குள் நுழைந்து ஆயுதங்களை எடுத்துச் சென்றார்களாம், நகைகளைத் திருடினார்களாம் என்று எங்கள் மேல் பழிவாங்கல்த் தாக்குதல்களை நடத்துகிறார்கள். ஆனால், இன்றுவரை அவ்வாறு செய்த பையன்களில் ஒருவரைத்தன்னும் அவர்களால் பிடிக்க முடியவில்லை. அப்பாவி இளைஞர்களை பிடித்துச் சென்று, கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்திக் கொல்கிறார்கள் அல்லது நடைபிணங்களாக வெளியே விடுகிறார்கள்" என்று அவர்கள் கூறினார்கள். பார்த்தசாரதி சென்ற இடமெல்லாம் இதே கதைதான் திரும்பத் திரும்ப மக்களால் அவருக்குச் சொல்லப்பட்டது. தம்மீதான போராளிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் முகமாக 18 வயதிலிருந்து 35 வயது வரையான இளைஞர்களை சுற்றிவளைத்துப் பிடித்துச் சென்று கடுமையான சித்திரவதைகளை அவர்கள் மீது நடத்துகிறார்கள். சுற்றியிருக்கும் வீடுகளையும் கடைகளை தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். சந்தைகளும், ஆலயங்களும் அவர்களுக்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு இடத்திற்குள்ளும் ஆழமாகச் செல்ல செல்ல, அப்பகுதியில் இராணுவம் புரிந்துவரும் அட்டூழியத்தின் அளவும், மக்கள் எதிர்கொண்ட அழிவுகளின் அளவும் தெளிவாக வெளித்தெரிய ஆரம்பிக்கும். ஒருவர் எங்கு சென்றாலும், ஏதோவொரு வீட்டில் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்காக சொந்தங்கள் அழுதுகொண்டிருப்பதும், சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்டுக் காணாமற் போன தமது பிள்ளைகளுக்காக‌ பெற்றோர்கள் அலறுவதும் கேட்டுக்கொண்டிருக்கும். குறைந்தது நூறு முறைகளாவது இராணுவம் தம்மீது மிகக் கொடூரமாகத் தாக்குதலில் ஈடுபட்டதென்பதை யாழ்ப்பாணத்து மக்கள் அவரிடம் சொல்லக்கேட்டர் அவர். யாழ்ப்பாணத்து மக்களால் சொல்லப்பட்ட இராணுவத்தினரின் பழிவாங்கும் தாக்குதல்ச் சம்பவங்களின் பட்டியல் முடிவின்றி நீண்டு சென்றுகொண்டிருந்தது. "ஆயுதம் தரிக்காத அப்பாவி ஆன்களும், பெண்களும், சிறுவர்களும் பல்லாயிரம்பேர் கொண்ட கனரக ஆயுதம் தரித்த சிங்கள இராணுவம் தம்மை யாழ்ப்பாணத்தில் முற்றுகை ஒன்றிற்குள் வைத்திருப்பதாக உணர்கிறார்கள். வங்கியொன்றில் முகாமையாளராகப் பணிபுரியும் ஒரு தமிழர் பார்த்தசாரதியிடம் பேசுகையில், வங்கியில் போராளிகள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று நாம் முறையாக பொலீஸாரிடமோ இராணுவத்தினரிடமோ முறைப்பாடு செய்தாலும், அவர்கள் அன்று வரப்போவதில்லை. போராளிகள் அங்கிருந்து அகன்று சென்றபின்னர், மறுநாள், தமக்கு சேதம் ஏதும் ஏற்படப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டு அங்கு வருவார்கள். வந்ததும் அங்கிருக்கும் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தி அப்பாவிகளைக் கொன்று குவிப்பார்கள்". "உங்களின் சகாக்களின் காயங்களுக்கு நாம் மருந்திட வேண்டுமென்றால், அப்பாவிகளைக் கொல்வதை நிறுத்துங்கள் என்று யாழ்ப்பாண வைத்தியசாலையின் வைத்தியர்கள் சிலர் இராணுவத்தைக் கடிந்துகொண்டபோதுதான் தமிழர்களைக் கொல்வதை அப்போதைக்கு, அவர்கள் நிறுத்தினார்கள்" என்று உயிர்தப்பிய இன்னொருவர் கூறினார். பொலீஸார் பயம் காரணமாக பொலீஸ் நிலையங்களுக்குள் முடங்கிவிட, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த சூழலில் சில சமூக விரோதிகள் தம் கைவரிசயினைக் காட்டவும் தயங்கவில்லை என்றும் மக்கள் கூறினார்கள்.
  18. தமிழரது போராட்டத்தின் நியாயமும், அவர்கள் மேல் நடத்தப்பட்ட அட்டூழியங்களையும் அறிந்திராத அற்பர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் எதையும் எழுதலாம். இப்பதர்களிடமிருந்து நான் எதிர்ப்பார்ப்பதற்கு எதுவும் இல்லை. தாம் எழுதுவதைத் தாமே வாசித்து இன்புறலாம், வாழ்த்துக்கள்!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.