Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. 1979 இல் ஈரானில் இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சியின் பின்னரே ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா கொண்டுவந்தது. ஒருவருடமாக தடுத்துவைக்கப்பட்ட அமெரிக்க பணயக் கைதிகளை ஈரான் விடுதலை செய்தபின்னர் இத்தடைகள் மீளப்பெறப்பட்டபோதிலும், 1980 களின் போது அமெரிக்க மற்றும் பன்னாட்டு கப்பற்போக்குவரத்து மீது ஈரான், வளைகுடா கடற்பரப்பில் நடத்திய அடுத்தடுத்த தாக்குதல்கள், இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கான ஈரானின் உதவிகள் என்பவற்றால் மீளவும் கொண்டுவரப்பட்டன. இத்தடைகள் ஈரான் யுரேனியத்தைச் செறிவூட்டும் தனது நடவடிக்கைகளைக் கைவிட மறுத்தமையினால் மேலும் இறுக்கப்பட்டன. இடையிடையே அமெரிக்க அரசுகள் இத்தடைகளைத் தளர்த்திப் பேச்சுக்களில் ஈடுபட்டபோதிலும், ஈரானின் அணுவாயுதக் கனவுத் திட்டத்தை அது முழுமையாக நிறுத்த விரும்பாததனால் தடைகள் தற்போது அமுலில் உள்ளன. அணுவாயுதத் திட்டத்தைக் கைவிடாமை, மத்திய கிழக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளுக்குத் தொடர்ந்தும் நிதியுதவியும், ஆயுதங்களும் வழங்கி வருகின்றமை என்பனவே ஈரான் மீதான் பொருளாதாரத் தடைகளுக்கு முக்கியமான காரணங்கள் என்று நினைக்கிறேன். கியூபா மீதான‌ தடைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 1950 களின் இறுதிப்பகுதியில் கியூபாவில் ஆட்சியில் இருந்த பட்டிஸ்ட்டா அரசின் சோவியத் மீதான நட்பு, நாட்டினைச் சோசலிசப் பாதையில் வழிநடத்தியமை, கியூபாவில் இயங்கிய அமெரிக்க நிறுவனங்களைக் கைப்பற்றியமை, அமெரிக்க இறக்குமதிகள் மீதான பாரிய வரி, மனிதவுரிமை மீறள்களில் ஈடுபட்டமை, ரஸ்ஸியாவின் அணுவாயுத ஏவுகணைகளை இரகசியமாகக் கொண்டுவந்து அமெரிக்காவை அச்சுருத்தியமை போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.
  2. நீங்கள் குறுக்கிடவில்லை அண்ணை. கேட்டதற்காகச் சுருக்கமாக சில பதில்கள். 1950 இல் இடம்பெற்ற கொரிய யுத்தத்துடன் அமெரிக்கா வடகொரியா மீது முதலாவது முறையாக பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்திருந்தது. இத்தடைகள் 1980 களின் இறுதிக்காலப் பகுதியில் மேலும் இறுகின. இதற்கு தென்கொரிய தூதரகங்கள், அதிகாரிகள், தென்கொரிய விமானங்கள் மீது வடகொரிய அரசாங்கத்தின் முகவர்கள் நடத்திய குண்டுத் தாக்குதல்களின் பின்னர் இறுக்கமடைந்தன. ஆனாலும் 1990 களுக்குப் பின்னர் தென்கொரிய அரசுகள் வடகொரியாமீதான தடைகளைத் தளர்த்தி சுமூகமான உறவைப் பேண முனைந்தன. 1994 இல் அமெரிக்க அரசாங்கம் முதல்த் தடவையாக வடகொரியா மீதான தடைகளைத் தளர்த்தி அணுவாயுதத் திட்டத்தை வடகொரியா கைவிடவேண்டும் என்ற நிபந்தனையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. ஆனால் பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்கும்போதே வடகொரியா அடுத்தடுத்து நான்கு அணுவாயுதப் பரீட்சிப்புக்களை நடத்தியதுடன் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும் பரீட்சிக்கத் தொடங்கியது. இதனாலேயே அமெரிக்கா மட்டுமே விதித்திருந்த தடைகள், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையினால் மேலும் விரிவாக்கப்பட்டு பன்னாட்டுத் தடைகளாக மாறின. வடகொரியாவுக்கு தனது அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட்டு, தென்கொரியா போன்று மக்களாட்சியை நடத்தும் சந்தர்ப்பங்கள் பலமுறை வழங்கப்பட்டும், கிம்மின் சர்வாதிகார குடும்ப ஆட்சியைப் பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த மக்களையும் பகடைகளாகப் பாவித்தும், வடகொரியாவை அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கவே அணுவாயுதம் தயாரிக்கிறோம் என்றும் கிம்மின் குடும்பம் கூறி வருகிறது.
  3. அணுவாயுதம் என்பது தன்மீது எவராவது தாக்குதல் நடத்தினால் அணுவாயுதத்தைப் பாவிப்போம் என்று அச்சுருத்துவதனூடாக அத்தாக்குதல்களைத் தடுப்பதற்காகப் பாவிக்கும் ஒரு கருவியாகத்தான் இதுவரையில் அணுவாயுதத்தை வைத்திருக்கும் நாடுகள் பார்க்கின்றன. ஆனால் வடகொரியாவோ ஈரானோ அவ்வாறல்ல. அவை அணுவாயுதத்தை உருவாக்குவதற்கும், வைத்திருப்பதற்கும் இருக்கும் காரணங்கள் வேறு. கிம்மைப் பொறுத்தவரை தனது சர்வாதிகாரத்தனமான ஆட்சியை, சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையினை ஒரு நாடோ அல்லது கூட்டாக சில நாடுகளோ தன்மீது எடுக்கலாம், ஆகவே தனது தவறுகளுக்காகத் தண்டிக்கப்படுவதில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அணுவாயுதத்தை வைத்திருப்பது போலத் தெரிகிறது. ஆனால் ஈரான் அப்படியல்ல. ஈரானின் அணுவாயுதத்தின் முதன்மை நோக்கம் இஸ்ரேலை அழிப்பது, பின்னர் தனது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகத் தன்மீது நடக்கலாம் என்று அஞ்சும் இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்பது.
  4. வடகொரியாவிற்குள் சுற்றுலாச் செல்லும் வெளிநாட்டவர்கள் தாம் போகும் இடங்களையோ, அங்குன் நடப்பவற்றையோ ஒளிப்படமாகவும், புகைப்படமாகவும் எடுப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை வழிநடத்துவோர் எனும் பெயரில் அவர்களை ஒவ்வொரு இடமாக அழைத்துச் செல்லும் வடகொரியாவின் உளவுத்துறையினர், மிகவும் திட்டமிட்ட முறையில் இப்பிரயாணங்களை ஒழுங்கமைத்திருப்பர். அவர்கள் அழைத்துச்செல்லும் இடங்களில் ஆடம்பரமான முறையில் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருக்கும், ஆனால் பெயரிற்குத் தன்னும் ஒரு உல்லாசப் பயணியையும் அங்கு காணமுடியாது. வெறிச்சோடிக் கிடக்கும் உல்லாச விடுதிகள், வாகனமேதுமற்ற‌ நீண்ட நெடுஞ்சாலைகள், இரவில் மின்சாரமின்றி இருளில் மூழ்கிக் கிடக்கும் மொத்த நாடென்று கிம் உலகிற்குக் காட்ட விரும்பும் தனது சர்வாதிகார அரசாட்சிக்கும் உண்மையில் அங்கு நடப்பதற்கும் சம்பந்தம் இருக்காது. கிம்மின் உளவுத்துறையின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு அவ்வப்போது சிலர் இரகசியமாக கமெராக்களை ஒளித்துக் கொண்டு உள்ளே சென்று சில படங்களை எடுத்திருக்கிறார்கள். இவையே அங்கு நடப்பவற்றை உலகிற்குக் கொண்டுவந்தன. பட்டினியினால் வாடும் பெரும்பாலான மக்களுக்கு கிம் தொடர்ச்சியாக தனது ஏவுகணைகளைப் பரிசோதித்துப் பார்க்கும் இலக்குகளான தென்கொரியாவும் ஜப்பானுமே உதவுகின்றன. இதைத்தவிரவும் சர்வதேச உதவி அமைப்புக்களும் வடகொரியாவின் பெரும்பாலான மக்களை பட்டினிச்சாவிலிருந்து காப்பற்றி வருகின்றன. ஆனால் கிம்மோ ஒரு பேரரசருக்கான அனைத்துச் செல்வச் செழிப்பையும் அனுபவித்து வருகிறார். அவரது தகப்பனார் தனது வாழ்நாள் முழுதும் விலைகூடிய மதுவை அருந்துவதிலும், சர்வதேச நட்சத்திரங்களைக் கூட்டிவந்து படம் எடுப்பதிலும் செல்வழித்தார். மகனோ தனது ஆட்சிக்கு ஆபத்தானவர்கள் என்று தான் நினைப்பவர்களையெல்லாம் ஒன்றில் விஷம் ஏற்றியோ, 50 கலிபர் துப்பாகியினாலோ சுட்டுக் கொன்று வருகிறார். இவர்களுள் இவரது அண்ணா இருவரும், மாமன் ஒருவரும் அடக்கம். அண்மையில் கிம்மின் புதிய நாசகாரக் கப்பலொன்றினை வெள்ளோட்டம் விடும் நிகழ்வில் கிம் பார்த்திருக்கவே கப்பல் கடலினுள் இறங்கும்போது இரண்டாகப் பிளந்து போனது. இக்கப்பலினைக் கட்டியவர்களும், வெள்ளோட்டத்தினை மேற்பார்வை செய்தவர்களும் கிம்மின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு 50 கலிபர் தண்டனை நிச்சயமாக வழங்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நிச்சயமாக கிம்மை ஆதரிக்கும் சிலர் யாழில் இருக்கிறார்கள். தாம் வண‌ங்கும் வாழும் தெய்வமான புட்டினின் நெருங்கிய சகா என்பதால் கிம்மை இவர்கள் ஆதரிக்கிறார்கள். ஆகவேதான் கிம்மிடம் அணுவாயுதம் இருப்பதும், அதனை கிம் ஈரானிற்கு வழங்குவதும் அவசியம் என்று கருதுகிறார்கள். சிலவேளை மேற்குலகை அழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நோக்கமாக இருக்கலாம். ஆனால், மேற்குலகு அழிந்தபின்னர் எங்குதான் இவர்கள் போய் அடைக்கலம் தேடுவார்கள்? ரஸ்ஸியாவிலும், வடகொரியாவிலுமா?
  5. வடகொரியாவின் கிறுக்கனுக்கும் ஆயொதொல்லா கமேனிக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்ன? கிம்மை விட கமேனி எந்த விதத்தில் சிறந்தவர் என்று கருதுகிறீர்கள்? ஒரு கிறுக்கனிடம் அணுவாயுதம் இருப்பதே மொத்த உலகிற்கும் ஆபத்தாகிப் போயிருக்கின்ற இந்த நிலையில், இன்னொரு மத அடிப்படைவாதியிடமும் அணுவாயுதம் இருப்பது நல்லது என்று கூறுகிறீர்கள். அடிப்படைவாதிகளின் நாட்டிற்குச் சென்றால் அங்கிருக்கும் சட்டத்தைத்தான் நாம் பின்பற்ற வேண்டும் என்கிறீர்கள். அதையே ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்கிறீர்கள். சரி, உங்களின் விருப்பம்.
  6. ஈரானுக்குச் செய்த துரோகங்கள். ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைக் கூறுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். இதைவிடவும் வேறு "துரோகங்கள்" இருந்தால், நீங்கள் தான் கூறவேண்டும். சரி, ஏன் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது? 1979 ஆம் ஆண்டு அடிப்படைவாதிகள் மேற்கொண்ட புரட்சியின்போது அமெரிக்க தூதரகப் பணியாளர்களில் 52 பேரை ஒருவருடம் பணயக் கைதிகளாக வைத்திருந்தமை தொடங்கி, அணுவாயுத உற்பத்தியைக் கைவிட மறுத்தமை, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை உற்பத்தியை நிறுத்த மறுத்தமை, உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குத் தொடர்ச்சியாக உதவி வருகின்றமை உட்பட பல நாசகாரச் செயல்களில் ஈடுபட்டு வந்தமையினாலேயே இப்பொருளாதாரத் தடைகள் அமெரிக்காவால் விதிக்கப்பட்டன. ஏன் ஈரான் அணுவாயுதத்தை தயாரிக்கக் கூடாது என்று கூறுகிறேன்? இஸ்ரேலினை முற்றாக அழித்துவிடவேண்டும் எனும் தாரக மந்திரம் ஈரானின் அனைத்து மட்டங்களிலும் ஆளமாக வேரூன்றி அரச, இராணுவ, பொதுத் தளங்களில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஈரானின் கைகளுக்குக் கிடைக்கும் அணுவாயுதம் எந்தநாட்டின் மீது ஏவப்படலாம் என்பதை அனுமானிப்பது உங்களுக்கு கடிணமாக இருக்கப்போவதில்லை என்று நான் நம்புகிறேன். ஈரான் அப்படிச் செய்யாது என்று நீங்கள் சத்தியம் செய்யுமளவிற்கு ஈரான் ஒன்றும் புத்திஜீவிகளால் ஆளப்படும் நாடல்ல. மாறாக மத வன்மம் தலைக்கேறி இன்னொரு மதத்தை, ஒரு இனத்தை அழிக்கக் கங்கணம் கட்டிநிற்கும் அடிப்படைவாதிகளால் ஆளப்படும் நாடு. ஆகவேதான் இவர்களுக்கு அணுவாயுதம் கிடைக்கக் கூடாது என்று கூறுகிறேன். இஸ்ரேலோ, அமெரிக்காவோ ஈரானை உலக வரைபடத்திலிருந்து அழித்தே தீருவோம் என்று சூளுரைக்கவில்லை. ஆகவே அவர்கள் வைத்திருக்கும் அணுகுண்டுகள் ஈரானை அழிக்கப் பயனபடுத்தப்படப்போவதில்லை. ஆனால் ஈரான் அப்படியல்ல. அது தயாரிக்க விரும்பும் அணுவாயுதம் தனது பாதுகாப்பிற்காக அல்ல, மாறாக இஸ்ரேலை அழிப்பதற்கு.ஆகவேதான் அது எப்பாடு பட்டாவாது தடுக்கப்பட வேண்டியதாகிறது. ஈரான் அணுவாயுதத்தினை வேறு எவருக்கும் கொடுக்காது, அப்படிக் கொடுத்தால் அதனைத் தனிமைப்படுத்திவிடலாம் ‍ ஆகா, என்னே ஒரு அருமையான வாதம். ஈரான் அணுவாயுதத்தை இன்னொரு நாட்டிற்கோ அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கோ கொடுத்து, அதனை யாரோ ஒருவர் பாவித்தபின்னர் ஈரானைத் தனிமைப்படுத்தினால் என்ன, இல்லாவிட்டால் என்ன? ஈரான் எந்தெந்த ஆயுதங்களை, ஏவுகணைகளை ஹிஸ்புள்ளாவிற்கும், ஹமாஸிற்கும் கொடுத்தது என்பதை அருகில் இருந்து பார்த்த நீங்கள் கூறுவதை நம்புவதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை.
  7. மத்திய கிழக்கின் விடயங்கள் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் அறிவைப் பரிசோதிப்பதற்காக ஒரு கேள்வியினைக் கேட்டுக்கொண்டே உங்களுக்கான பதிலை வழங்கலாம். இஸ்ரேலுக்கும் ஈரானிற்கும் இடையிலான அண்மைக்காலப் பிணக்கு எப்போது ஆரம்பித்திருக்கலாம் என்று கருதுகிறீர்கள்? ஈரானின் இஸ்லாமியப் புரட்சி பற்றித் தேடிப்பார்த்தால் இதுபற்றிய‌ புரிதல் உங்களுக்கு ஓரளவிற்கேனும் கிடைக்கலாம். சரி, விடயத்திற்கு வருகிறேன். 1979 ஆம் ஆண்டுவரை ஈரானும் இஸ்ரேலும் மிகவும் சுமூகமான நட்புறவினைக் கொண்டிருந்தன என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை. 1979 ஆம் ஆண்டு ஆயொதொல்லா கொமேனியின் தலைமையிலான இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் புரட்சியின் பின்னரே இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பகையுணர்வு ஆரம்பிக்கப்பட்டது. இன்னொரு வகையில் சொல்லப்போனால் அதுவரையில் ஈரானிய இராணுவத்திற்கு இஸ்ரேல், அமெரிக்கா உட்பட பல மேற்குநாடுகளே ஆயுதங்கள் கொடுத்து உதவின. ஆனால் கொமேனியின் ஆட்சியில் இஸ்ரேல் முற்றாக அழிக்கப்படவேண்டும் எனும் கொள்கை அரச மட்டத்திலும், ராணுவ மட்டத்திலும், சாதாரண மக்கள் மட்டத்திலும் திணித்துப் பரவப்பட்டது. இதில் கடும்போக்குவாதிகள், மென்போக்குவாதிகள் என்கிற வித்தியாசம் இல்லாமல் அனைவருமே இஸ்ரேலின் இருப்பை இல்லாதொழிக்கவேண்டும் என்று எண்ணிச் செயற்பட்டு வருகிறார்கள். அடுத்ததாக 1979 ஆம் ஆண்டு ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் அமைந்திருந்த அமெரிக்காவின் தூதரகத்தில் பணியாற்றிய 52 ஊழியர்களை பணயக் கைதிகளாக சுமார் ஒருவருட காலத்திற்கு அடிப்படைவாதிகள் வைத்திருந்தமை. ஈரானின் அன்றைய மன்னரும், மக்கள் விருப்பிற்கு எதிராக நடந்துகொண்டவர் என்றும் அறியப்பட்டவரை அமெரிக்கா ஆதரித்தமைக்காகவே ஊழியர்களை பணயக் கைதிகளாக்கினோம் என்று கொமேனியின் புரட்சிக் குழு நியாயப்படுத்தியிருந்தது. இங்கிருந்தே அமெரிக்க ஈரானிய பகை ஆரம்பமாகியது. இஸ்ரேலை சின்னச் சாத்தான் என்றும் அமெரிக்காவை பெரிய சாத்தான் என்று அழைத்த கொமேனி, இஸ்ரேலினை உலக வரைபடத்தில் இருந்து நீக்குவேன் என்று சாகும்வரை கூறிவந்ததோடு, அவருக்குப் பின்னால் வந்தவர்கள் அதனையே தாரக மந்திரமாகப் பின்பற்றி வருகிறார்கள். இதில் ஆன்மீகத்தலைவர்கள், ஜனாதிபதிகள், அமைச்சர்கள், இராணுவத் தளபதிகள் என்று வேறுபாடின்றி உறுதியாக‌ நிற்கிறார்கள்.
  8. மிகவும் எழுந்தமானமாக, சாட்சியங்களின் அடிப்படையில் இல்லாது, உணர்வின்பால் உந்தப்பட்டு எழுதிய கருத்து. இஸ்ரேலினால் பணம் கொடுக்கப்பட்டு ஈரான் மீது ஏவி விடப்பட்ட குழுக்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தீர்களென்றால் இதுகுறித்து மற்றவர்களும் அறிந்துகொள்ள பேருதவியாக இருக்கும். அடுத்தது இப்போர் ஏன் இவ்வளவு பெரிதானது எனும் விளக்கம். தன்னை அழுத்திப் பணியவைத்து, முற்றுகைக்குள் கொண்டுவந்து, முடக்க ஈரான் பாவித்த ஏவலாளிகளே ஹமாஸ், ஹிஸ்புள்ளா, ஹூத்தீக்கள் மற்றும் ஈராக்கிலும் சிரியாவிலும் இயங்கும் ஜிஹாதிகள். ஆகவேதான் ஒவ்வொன்றாக ஈரானின் அம்புகளை அழித்த இஸ்ரேல் இறுதியாக ஏவியவனான ஈரானின் மீது தனது கவனத்தைத் திருப்பியது. அடுத்தது பலஸ்த்தினார்களின் தனிநாடு எனும் கோரிக்கை. சரியான கோரிக்கைதான், மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஈரான் பலஸ்த்தீன விடயத்தில் தலையிடுவது உண்மையாகவே அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிடவேண்டும் என்பதற்காகவா? நிச்சயமாக இல்லை. பலஸ்த்தீன ஆயுதக் குழுக்களை வைத்து இஸ்ரேலினை தொடர்ச்சியான முற்றுகைக்குள் வைத்திருக்க வேண்டுமென்பதற்காகத்தான். சியாக்களான ஈரானிய முல்லாக்களுக்கு தாம் பின்பற்றும் இஸ்லாத்தின் பரம வைரியான சுன்னி பலஸ்த்தீனர்களுக்கு நண்மை செய்யவேண்டிய தேவையென்ன என்பதைச் சிந்தித்தால் ஈரான் இவ்விடயத்தில் ஏன் தலையிடுகிறது என்பது புரியும். உங்களின் புரிதலிற்காக ஒன்றைக் கூறுகிறேன், ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா தலையிட்டது எமக்குத் தனிநாடு பெற்றுத்தரத்தான் என்று நீங்கள் நம்பினால், ஈரானும் பலஸ்த்தீனர்களுக்கு தனிநாடு கொடுக்கவே தலையிடுகிறது என்பதை தாராளமாக நீங்கள் நம்பலாம். ஏனென்றால் ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா செய்ததையே பலஸ்த்தீனர்கள் விடயத்தில் இன்று ஈரான் செய்கிறது.
  9. ஒருகணம் உங்களின் இக்கருத்தைப் பார்த்ததும் நெகிழ்ந்துவிட்டேன். என்னைப்பற்றி என்னைவிட அதிக ஆளமாக நீங்கள் புரிந்து வைத்திருக்கிறீர்கள், இல்லாவிட்டால் "நிச்சயமாக" என்று சொல்வீர்களா, என்ன? சரி, அதை விடலாம். உங்களின் கூற்றிற்கே வரலாம். "முஸ்லீம்களில் உள்ள இனவாதிகளானவர்கள்" ‍ இவ்வாறு உங்களால் அடையாளப்படுத்தப்படுவோர் யார்? இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் குறிப்பிடுகிறீர்கள் என்று எடுத்துக்கொண்டு இக்கூற்றிற்கான பதிலை எனக்குத் தெரிந்த வகையில் தர முயல்கிறேன். ஏனென்றால் முஸ்லீம்கள் என்று ஒரு இனம் இல்லை. இஸ்லாம் என்பது அவர்களின் மதம். இஸ்லாமிய அடிப்படைவாதிகளில் மற்றைய மதத்தோரை ஏற்றுக்கொண்டு, சகித்துக்கொண்டு, சமாதானமாக வாழ முயல்வோர் என்று ஒரு பகுதியினர் இருக்கிறார்களா? அப்படியிருந்தால் அவர்கள் மத அடிப்படைவாதிகளாக இருக்கமுடியாது. சரி, மத அடிப்படைவாதிகளாக இருப்போர் மீது இன்னொரு பகுதியினர் (உங்களின் "நிச்சயமான" கருத்தின்படி, என்னால் முண்டுகொடுக்கப்படும் "வெள்ளையினத்தவர்") தாக்குதல் நடத்தினால் அது எவ்வாறு தவறாக இருக்கமுடியும்? அடிப்படைவாதிகளால் உலகிற்குக் கிடைக்கும் நண்மைகள் என்னவென்பதை இங்கே பட்டியலிட்டீர்கள் என்றால் நான் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தவறென்று ஏற்றுக்கொள்கிறேன். தலிபான்களோ, அல்கயிடாவோ, ஐஸிஸோ அல்லது வேறு எந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்போ எவரால்த் தாக்கப்பட்டபோதும் நான் ஆதரவளித்தேன், இனியும் செய்வேன். ஏனென்றால் அவர்களால் இந்த உலகிற்கு கிடைக்கப்போகும் நண்மையென்று எதுவும் இல்லை. மூளைச்சலவை செய்யப்பட்ட மத அடிப்படைவாதிகள் ஏனையவர்களைக் கொல்லுமுன்னர் அவர்களின் முயற்சி தோற்கடிக்கப்படவேண்டும் என்பது எனது அசைக்கமுடியாத் நம்பிக்கை. இறுதியாக, உங்களின் சிந்தனைக்கு ஒன்றை விட்டுச் செல்கிறேன். சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் குடியரசாக இருந்த செச்சென்னியாவை, அம்மாநிலத்தின் பெரும்பான்மையினத்தவர்களான முஸ்லீம்கள் சுதந்திர பிரதேசமாக அறிவித்தபோது உங்களின் நாயகனான புட்டின் அவர்கள் இருமுறை மிகக்கொடூரமான போர்களை அங்கே கட்டவிழ்த்து விட்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், தலைநகர் குரொஸ்னி எரித்துச் சாம்பலாக்கப்பட்டும், அம்மக்களின் விடுதலைப்போராட்டத்தை"இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போர்" என்று கூறியே புட்டின் அழித்தார். உங்களிடம் நான் முன்வைக்கும் கேள்வி என்னவென்றால், செச்சென்னியர்களான முஸ்லீம்கள் மீது புட்டின் நடத்திய போரை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லையா என்பதுதான். முடிந்தால் பதிலளியுங்கள். பின்னர் தொடர்ந்து பேசலாம்.
  10. இங்கு கேள்வி கேட்கிறீர்களா அல்லது எழுந்தமானமாக நீங்களே சிலவற்றைக் கற்பனை செய்துகொண்டு பின்னர் அவற்றினை நான் நினைப்பதாக எழுதுகிறீர்களா என்று தெரியவில்லை. இருந்தபோதிலும் இவற்றினைக் கேள்வியாக எடுத்துக்கொண்டு பதிலளிக்க முயல்கிறேன். வெள்ளையினம் கும்பலாக இன்னொரு இனத்தை அடித்தல் எனும் கூற்று. இங்கு வெள்ளையென்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? இஸ்ரேலியர்களையும் அமெரிக்கர்களையுமா? அமெரிக்கர்கள் வெள்ளையர்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் யூதர்கள் வெள்ளையர்களா? அவர்களின் தோலின் நிறத்தை வைத்துச் சொல்கிறீர்கள் போலும். உண்மையென்னவென்றால் யூதர்களில் கறுப்பினத்தவர்களும், எம்மைப்போன்ற நிறமுடையவர்களும் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால் வெள்ளையினத்தவர்கள் கும்பலாக அடிக்கிறார்களே என்று கேட்கமாட்டீர்கள். அது சரி, ஈரானியர்களும் வெள்ளையினத்தவர்கள் தானே, தோலின் நிறத்தின் அடிப்படையில் பார்த்தால். சரி, அதை விடலாம், ரஸ்ஸியர்களும், உக்ரேனியர்களும் தோலின் நிறத்தால் ஒருவரையொருவர் ஒத்தவர்கள். ஆனால் நீங்களோ ரஸ்ஸியர்களை ஆதரிக்கிறீர்கள். பலஸ்த்தீனர்கள் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்படுவதைப் பொறுத்துக்கொள்ளாது மிகுந்த சினம் கொண்டு வெகுண்டெழும் நீங்கள், உக்ரேனியர்கள் மீதான ரஸ்ஸியர்களின் ஆக்கிரமிப்பை இன்றுவரை சரியென்று வாதாடுவதுதான் புதிராக இருக்கிறது. சரி, இந்தப் புரிதலில் உங்களுக்கு இருக்கும் கோளாற்றினை நீங்களே சரிசெய்துகொள்வீர்கள் என்கிற நம்பிக்கையில் அதனை இப்போதைக்கு விட்டு விடுகிறேன். உக்ரேன் எனும் சிறிய நாட்டினை ஆக்கிரமித்து அழித்துவரும் ரஸ்ஸியாவை நீங்கள் எந்தவிதமான மனச்சாட்சியும் இல்லாமல் ஆதரிக்கும்போது, இஸ்ரேலினை அழிப்பதே எமது ஒரே இலட்சியம் என்று கூவிக்கொண்டு இஸ்ரேலைச் சுற்றியிருக்கும் தனது அடிப்படைவாத முகவர்களான ஹமாஸ், ஜிஹாத், ஹூத்தீக்கள், ஹிஸ்புள்ளா , சிரியா, ஈராக் ஆகிய நாடுகளின் அடிப்படைவாதிகளைப் பயிற்றுவித்து, ஆயுதம் கொடுத்து, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை கொடுத்து போசித்துவரும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்கும்போது மட்டும் நான் மனச்சாட்சியுடன் நடக்கவேண்டும் என்று கேட்கிறீர்கள். உங்களுக்கே இது அபத்தமாகத் தெரியவில்லையா? முல்லாக்களின் அதிகாரம் நிச்சயமாகப் பிடுங்கப்பட்டு, அவர்களின் காட்டாட்சி அழிக்கப்பட வேண்டும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 1979 இல் இஸ்லாமியப் புரட்சி என்கிற பெயரில் முல்லாக்கள் ஆரம்பித்து இன்றுவரை செய்துவருவது இஸ்லாமிய அடிப்படைவாதக் காட்டாட்சிதான். இங்கே மக்களின் கருத்துக்களோ, உரிமைகளோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இன்றுவரை முல்லாக்களுக்கு எதிராகப் பேசுவோர், எழுதுவோர், பிரச்சாரம் செய்வோர் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டே வருகிறார்கள். நீங்கள் வேண்டுமென்றே மறைக்க முனைந்தாலும் ஈரானில் பெண்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் உலகம் அறியாதது அல்ல. தலைகளை மூடி ஹிஜாப் அணியமாட்டோம் என்று போராடிய பல பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் நீங்கள் அறியாமல் இருக்கலாம். முல்லாக்கள் தமது அதிகாரத்தைக் கைவிட்டு, வெளிப்படையான தேர்தல் ஒன்றிற்குச் செல்லட்டும், அப்போது பார்க்கலாம் மக்கள் எம்மாதிரியான‌ ஆட்சியினை விரும்புகிறார்கள் என்று. சர்வாதிகரத்தனமான அடிப்படைவாதிகளின் கீழ் மக்கள் வேறு வழியின்றி வாழ்வதை, மக்கள் விரும்பித்தான் வாழ்கிறார்கள் என்று நினைப்பதும், ஆட்சிமாற்றம் ஒன்று அவசியம் என்று கூறுவோரை, உனது வேலையைப் பார் என்று கூறுவதும் முல்லாக்களுக்கு ஆதரவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது. ஈரானிய முல்லாக்களும், தலிபான்களும், அல்கயிடாவும், ஐஸிஸ்களும் ஒரே மாதிரியானவர்கள். மத அடிப்படைவாதத்தால் உந்தப்பட்டு ஏனைய மதத்தவர்களை, சிறுபான்மையினங்களை அழிப்பவர்கள். அல்கயிடாக்களின் கையிலோ அல்லது ஐஸிஸ்களின் கையிலோ அணுவாயுதம் ஒன்று கிட்டுமாயின் அவர்கள் என்ன செய்ய விரும்புவார்களோ அதையே ஈரானின் முல்லாக்களும் செய்வார்கள். ஆகவேதான் அவர்களின் கைகளில் அணுவாயுதம் இருக்கக் கூடாதென்று நான் நினைக்கிறேன்.
  11. இந்த வினாவினுள் இரு கேள்விகளை அடக்கியிருக்கிறீர்கள். ஆகவே ஒவ்வொன்றாகப் பதிலளிக்கிறேன். முதலாவது இஸ்ரேலின் சண்டித்தனம் பற்றிய கேள்வி. ஆம், நிச்சயமாக. ஹிட்லரின் காலத்தின் ஆறு மில்லியன் சொந்தங்களை இழந்து, 1967 முதல் இன்றுவரை தன்னைச் சுற்றியிருக்கும் இஸ்லாமிய நாடுகளின் தொடர்ச்சியான அழுத்தத்திற்கும் மத்தியில் தனது இருப்பினைத் தக்கவைத்துக்கொண்டு இன்னொரு இனவழிப்பினை எப்படியாவது தடுத்தே தீருவதென்று தீர்க்கமாக அல்லது உங்களின் புரிதலில் சண்டித்தனமாக நிற்கும் இஸ்ரேலினை என்னால் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியும். இரண்டாவது கேள்வி, பலஸ்த்தீன மக்கள் முஸ்லீம்கள் என்பதால் அவர்கள் அழிக்கப்படவேண்டுமா என்பது. நிச்சயமாக இல்லை. அவர்கள் முஸ்லீம்களாக இருந்தால் என்ன, கிறீஸ்த்தவர்களாக இருந்தாலென்ன அல்லது யூதர்களாக இருந்தாலென்ன, அவர்கள் அழிக்கப்படக் கூடாது. பலஸ்த்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திவருவது இனக்கொலைதான் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவர்களுடன் இரு தேசங்களுக்கான இணக்கப்பாட்டினை இஸ்ரேல் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கென்று இன்றிருக்கும் பிரதேசங்களில் இருந்து இஸ்ரேல் தனது குடியேற்றங்களை அகற்றிக்கொள்ள வேண்டும், தொடர்ச்சியாக நடத்திவரும் ஆக்கிரமிப்பினை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதனைச் செய்வதற்கு அமெரிக்கா விரும்புகிறதோ இல்லையோ, ஏனைய நாடுகள் இது தொடர்பான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பது அவசியமானது. யுத்தக் குற்றங்களிலும், இனக்கொலையிலும் ஈடுபட்ட அரசியல்வாதிகள், தளபதிகள் என்போரது பெயர்கள் வெளிக்கொணரப்பட்டு, பயணத்தடைகள் விதிக்கப்படுதல் அவசியமானது. இதுவே அவர்களின் ஆக்கிரமிப்பு மனோபாவத்தை ஓரளவிற்காவது தடுத்து நிறுத்தும். பலஸ்த்தீன முஸ்லீமும் காத்தான்குடி முஸ்லீமும் ஒன்றென்று நான் கருதுவதாக எதை வைத்துக் கேட்கிறீர்கள் என்று புரியவில்லையே? இக்கேள்வியின் அர்த்தம் என்ன? விளக்கமாக கேட்டீர்கள் என்றால் எனது நிலைப்பாட்டை விளக்குவது இலகுவாக இருக்கும்.
  12. கட்டாரில் அமைந்திருக்கும் அமெரிக்க விமானப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகவும் ஆனால் அதனை தாம் குறுக்கிட்டு முறியடித்துவிட்டதாகவும் கட்டார் அரசு கூறியிருக்கிறது. மேலும் இத்தளத்தில் பாதுகாப்பின்றி நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமெரிக்க விமானங்கள் அனைத்தையும் ஆனி 19 ஆம் திகதியே அமெரிக்கா அப்புறப்படுத்திவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலினால் எவருக்கும் உயிர்ச்சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை என்று கட்டாரிய அரசு கூறுகிறது. ஈரானின் தாக்குதல் நடப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட செய்மதிப்படத்தில் விமானங்கள் ஏதுமற்ற வெற்று படைத்தளமும், ஓடுபாதையும் காணப்படுகின்றன. ஈரான் தாக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் அமெரிக்கத் துருப்புக்கள் தற்காப்பு நிலையெடுத்திருந்தன என்று அமெரிக்க இராணுவம் கூறியிருக்கிறது. தனது அணுவாயுத நிலைகள் மீது கொட்டப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கைக்குச் சமனான ஏவுகணைகளை தான் ஏவியதாக ஈரான் கூறியிருக்கிறது. ஆக, முல்லாக்கள் அடிவாங்கியே தீருவோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.
  13. மத்தியகிழக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஊக்குவித்து, ஆயுதமும் பயிற்சியும் வழங்கிவரும் ஈரானின் இஸ்லாமிய அடிப்படைவாத முல்லாக்களின் பிடியிலிருந்து ஈரான் மீட்கப்பட வேண்டும். அணுவாயுதம் இல்லாத நிலைமையிலேயே அப்பிராந்தியத்தின் ஸ்த்திரத் தன்மையினை ஈரான் குலைத்து வைத்திருக்கிறதென்றால், அணுவாயுதமும் கிடைத்துவிட்டால் இன்னொரு வடகொரியாவாக ஈரான் மாறிவிடும். தனது கையிருப்பில் இருக்கும் ஏவுகணைகளை வைத்துக்கொண்டு சுற்றியிருக்கும் நாடுகளுக்கு மேலால் ஏவுகணைப் பரிசோதனை செய்கிறேன் என்று கூறிக்கொண்டு சண்டித்தனம் செய்யும். தேவைப்பட்டால் அணுவாயுதத்தை இஸ்ரேலின் மீது பிரயோகிக்கும். ஆகவே முல்லாக்களின் அதிகாரம் முற்றாகப் பிடுங்கப்பட்டு, நாடு மீளவும் மக்களாட்சிக்குள் செல்லவேண்டும். அது நடப்பதற்கு முல்லாக்களும், அவர்களின் இராணுவ, தொழிநுட்ப வல்லுனர்களும் அழிக்கப்பட வேண்டும். இஸ்ரேல் தனது சொந்த இருப்பிற்காகச் செய்யும் இந்த நடவடிக்கையினை அமெரிக்கா ஆதரிப்பதும், உதவுவதும் தேவையானதுதான். முல்லாக்களின் கைகளில் அணுவாயுதம் இருப்பது மனித குலத்திற்கே ஆபத்தானது. தன்னிடமிருக்கும் ஏவுகணைகள் பலவற்றை தனது முகவர்களுக்கு வழங்கி, இஸ்ரேல் மீதும் சர்வதேசக் கப்பற்போக்குவரத்து மீதும் தாக்குதல் நடத்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தம்மிடம் அணுவாயுதம் கிடைத்துவிடும் பட்சத்தில் அதனையும் தனது முகவர்களுக்குக் கொடுத்து, தாக்குதலை நடத்திவிட்டு, கையை விரித்து விடலாம். ஈரானின் முல்லாக்கள் மீது நடத்தப்படும் இன்றைய தாக்குதல்கள் இனிமேல் அவர்கள் அணுவாயுதம் ஒன்றினைத் தயாரிப்பதை நினைத்துப் பார்ப்பதையே நிறுத்துவதாக அமைய வேண்டும். அமெரிக்காவின் பி 2 குண்டுவீச்சு விமானங்களின் தாக்குதலில் சின்னாபின்னமாகிப்போன போர்டோ அணுஆராய்ச்சி மையம் மீது இஸ்ரேல் இன்றும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திவருகிறது. ஈரானில் இன்னமும் தாம் அழிப்பதற்கு இலக்குகள் இருக்கின்றன என்று அது கூறுகிறது. மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் முல்லாக்களை முற்றாகவே அடித்து விரட்ட இஸ்ரேலும் அமெரிக்காவும் முயல்வதாகவே படுகிறது. இது விரைவில் நடைபெறுமானால் ஈரானிய மக்கள் நிம்மதியாக தமது வாழ்வை மீளவும் ஆரம்பிக்க முடியும். பார்க்கலாம்.
  14. கடந்த 10 ஆம் திகதி காலை. ஆறு மணியிருக்கலாம், கொழும்பிலிருந்து அக்கா தொலைபேசியில் எனக்குக் குறுந்தகவல் அனுப்பியிருந்தாள். சிஸ்ட்டர் அன்ரா இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதே அச்செய்தி. மனதில் "அடக் கடவுளே" என்று ஒரு கவலை, சோகம். எப்பொழுதும் எங்களுடன் இருப்பார்கள் என்று நாம் சிலரை நம்பியிருப்போம். அவ்வாறானவர்களில் இழப்பு என்பது உடனடியாக எமக்கு எந்த உணர்வையும் தந்துவிடாதவை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர்களின் இழப்பின் பாரிய தாக்கம் எம்மை வருத்தத் தொடங்கும், அவர்கள் இல்லாத வெளியினை உணரத் தொடங்குவோம். அப்படித்தான் சிஸ்ட்டர் அன்ராவும் எனக்கு. அவரது மரண‌ச் செய்தி கேட்டவுடன் யாழ்ப்பாணம் செல்வதா, இல்லையா என்று மனம் சிந்திக்கத் தொடங்க, மாமா தொலைபேசியில் வந்தார்."ரஞ்சித், நானும் மாமியும் போறம், உன்னால வர ஏலாது எண்டு நெய்க்கிறன், நீ இருந்துகொள், நாங்கள் போட்டு வாறம்" என்று கூறினார். அப்போதாவது நான் போயிருக்கலாம், ஆனால் முயலவில்லை, அதற்கும் காரணங்கள் இருந்தன. 2023 இல் அன்ரா உயிருடன் இருந்தபோது அவருடன் பேசிவிட்டு வந்துவிட்டேன், அவரை மகிழ்வுடன் சந்தித்துவிட்டேன், இனிமேல் அவர் இறந்தபின்னர் சென்று என்னத்தைச் செய்ய? என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டு இருந்துவிட்டேன். அவரது இறுதிச் சடங்குகளில் பங்குகொண்டவர்களின் பேச்சினை ஒளிப்படம் மூலம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. எத்தனையோ பேருக்கு அவர் உதவியிருக்கிறார். வன்னியில் அவருடன் மனநல சேவையில் பணியாற்றிய பெண்மணி தனது பேச்சின்போது கண்கள் கலங்கப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது மனம் கரைந்துபோனது. எத்தனையோ பேரின் வாழ்வை நல்வழிப்படுத்தி, ஒளியேற்றி, உருவகம் கொடுத்து வழிநடத்தி, தனது கல்வியறிவையும், திற‌மைகளையும் தனது சமூகத்திற்குக் கொடுத்து, இறுதிவரை தொண்டாற்றிய ஒரு ஆளுமை அமைதியாகிப் போனது. எனது வாழ்நாளில் பல ஆளுமைகளைக் கண்டிருக்கிறேன். இவர்களால் எனது வாழ்வு மாற்றப்பட்டு, வழிநடத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த ஆளுமைகளில் முதன்மையானவர் எனது சிஸ்ட்டர் அன்ரா. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!
  15. 2002 இல் சிட்னிக்கு குடிபெயர்ந்த காலத்தில் இருந்து 2018 ஆம் ஆண்டுவரை நான் அவரைச் சென்று பார்க்கவில்லை. அவரிடமிருந்து வரும் கடிதங்களுக்கோ அல்லது மின்னஞ்சல்களுக்கோ எப்போதாவது பதில் எழுதுவதுடன் அவருக்கான எனது நன்றிக்கடன் முடிந்துவிடும். எத்தனையோ முறை என்னுடன் தொலைபேசியில் பேச அவர் முயன்றிருக்கிறார்.எக்காரணமும் இன்றி அவருடன் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை தவறவிட்டிருக்கிறேன். சிலவேளை அவர் எனக்காகச் செய்த தியாகங்கள், பலரிடம் அவர் பட்ட அவமானங்கள் குறித்து நாம் பார்க்கத் தவறியிருக்கலாம். ஒரு கன்னியாஸ்த்திரியாக இருந்தபோதும், பெற்றோரைக் காட்டிலும் அதிகமாக என்னை நேசித்து, எனது வாழ்வை நெறிப்படுத்தி இன்றுவரை வாழும் பாக்கியத்தை அவர் ஏற்படுத்தித் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார், இது எனக்கு இன்றுவரை புரியவில்லை. நீண்ட 16 வருடங்களுக்குப் பின்னர் அவரை 2018 ஆம் ஆண்டு சித்திரையில் யாழ்ப்பாணத்தில் சென்று சந்தித்தேன். நான் மனதில் பதிந்து வைத்திருந்த சிஸ்ட்டர் அன்ராவின் உருவத்திற்கும் அன்று நான் பார்த்த அன்ராவிற்கும் இடையே எத்தனை வேறுபாடு? பம்பரம் போலச் சுழன்று, ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்து, தன்னிடம் உதவிவேண்டி வருவோருக்கு இல்லையென்று சொல்லாது, முயன்றவரை உதவிடும் சிஸ்ட்டர் அன்ரா பல நினைவுகளைத் தொலைத்து, மனதளவிலும், உடலளவிலும் நலிந்து போயிருந்தார். ஆனாலும், முகத்தில் மாறாத அதே புன்னகையும், அன்பும், விகடமும் சேர்த்த பேச்சும் அவரை விட்டு அகலவில்லை. மீண்டும் அவரை 2023 கார்த்திகையில் சென்று சந்தித்தேன். எப்படி இருக்கிறீர்கள் அன்ரா என்று கேட்டபோது, "83 வயதில் ஒருவர் எப்படி இருக்கமுடியுமோ, அப்படி இருக்கிறேன்" என்று கூறினார். வெகுவாக இளைத்திருந்தார். சக்கர நாற்காலியில் வைத்து அவரைப் பராமரித்துக்கொண்டிருந்தார்கள். சுமார் 30 - 40 நிமிடங்களுக்கு மேல் அவரால் தொடர்ந்து அமர்ந்திருந்து பேசமுடியாது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். ஆனாலும் அவரைக் கண்டதில் சந்தோசம்.
  16. சூரியக்கதிர் ராணுவ நடவடிக்கையின் பின்னர் சிஸ்ட்டர் அன்ரா வன்னிக்குச் சென்றுவிட்டார். அங்கிருந்தபோதிலும் தவறாமல் எனக்குக் கடிதம் எழுதுவதோடு, பிறந்தநாள், கிறிஸ்மஸ் காலங்கள் என்று வர்ணக் காட்டுடன் வாழ்த்துக்கள் அவரிடமிருந்து வரும். ஆரம்பத்தில் தொடர்ச்சியாக அவருக்குப் பதில் எழுதிவந்த நான் சிறிது சிறிதாக பதில் எழுதுவதைக் குறைத்துக்கொண்டேன், காரணம் ஏதும் இன்றி. ஆனாலும் அவர் மாறவில்லை, "உனக்கு நேரம் கிடைக்காதென்று தெரியும், கிடைக்கும்போது நீ எழுது, ஒன்றும் அவசரமில்லை " என்று பதில் வரும். தனது அக்காவின் பிள்ளைகளைத் தனது சொந்தப்பிள்ளைகளாகவே நடத்திவந்ததினால் உருவாகிய பாசம் அவரை அலைக்கழித்திருக்கும். வன்னியில் பல தொண்டு நிறுவனங்களுடன் அவர் சேர்ந்து இயங்கிவந்தார். யுத்தத்தினால் உளநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பது, அவ்வாறு பராமரிப்பவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவது, யுத்தத்தினால் உறவுகளை இழந்த பெண்கள், பிள்ளைகளை அழைத்துவந்து கற்பிப்பது, தொழிற்பயிற்சி வழங்குவது என்று சமூகத்துடன் தன்னை நெருக்கமாகப் பிணைத்துக்கொண்டார். தாயக விடுதலையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அவர் புலிகளையும், தலைவரையும் வெகுவாக நம்பினார். பொடியள் இருக்குமட்டும் எனக்குப் பயமில்லை என்று அடிக்கடி என்னிடம் கூறியிருக்கிறார். திருக்குடும்ப கன்னியர் மடத்தினால் அவருக்கென்று மோட்டார் உந்துருளி ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அதில் வன்னிமுழுதும் அவர் பயணித்து தேவைப்பட்டவர்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்துவந்தார். 2002 ஆம் ஆண்டு வன்னிக்கான ஏ - 9 பாதை திறக்கும் நிகழ்வில் புலிகளின் தளபதிகளின் பின்னால் அன்ராவும் நிற்கும் காணொளியொன்று இன்னமும் இணையத் தளத்தில் இருக்கிறது. பிற்காலத்தில் புலிகளின் மருத்துவப் பிரிவில் இயங்கிய போராளிகளில் சிலருக்கு மனநல பயிற்சிகளை அவர் வழங்கியிருந்தார்.
  17. வெள்ளவத்தையில் வாழ்ந்த காலம் முதல், நான் பல்கலைக்கழகம் செல்லும் காலம்வரை சிஸ்ட்டர் அன்ராவின் முயற்சியினால் எனக்கும் அக்காவிற்குமான செலவுகளுக்கு அவுஸ்த்திரேலியாவில் இருந்து எனது மாமாவே பணம் அனுப்பி வந்தார். சிலவேளைகளில் எமக்கு உதவுவது குறித்து கடுமையான விமர்சனங்கள் அன்ரா மீது சில உறவினர்களால் முன்வைக்கப்பட்டன. "உவன் படிக்கப்போறதில்லை, ஏன் சும்மா மினக்கெடுகிறாய்?" என்றெல்லாம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் சிஸ்ட்டர் அன்ராவோ எதையுமே சட்டை செய்யவில்லை. எங்கள் இருவரையும் எப்படியாவது படிப்பித்து, கரையேற்றிவிட வேண்டும் என்பதே அவருக்கு இருந்த நோக்கமெல்லாம். 1994 ஆம் ஆண்டு தம்பி ஒரு முறை எங்களைப் பார்க்க கொழும்பிற்கு வந்திருந்தான். அப்போது நாங்கள் கிருலப்பனையில் தங்கியிருந்தோம். எங்களைக் கண்டவுடன் எங்களுடனேயே தங்கிவிடலாமா என்று அவன் அன்ராவைக் கேட்டான். அவனையும் தகப்பனார் அடித்துத் துரத்திவிட்டிருக்க, பாதிரிமார்களாகப் படிக்கும் கல்லூரியொன்றில் அவனையும் அன்ரா சேர்த்துவிட்டிருந்தார். அதன் விடுமுறை ஒன்றின்போதே எங்களைப் பார்க்க வந்திருந்தான். சிஸ்ட்டர் அன்ராவே அவனை எம்மிடம் கூட்டி வந்திருந்தார். அவனையும் எங்களுடன் தங்கவைக்க முடியுமா என்று அன்ரா கேட்டபோது அக்காலப்பகுதியில் எம்முடன் தங்கியிருந்த இன்னுமொரு சித்தியும், அம்மம்மாவும், 'இப்பவே உவை ரெண்டுபேரையும் வைச்சுப் பாக்கேலாமக் கிடக்கு, அதுக்குள்ள உவனையும் கொண்டு வந்துட்டியோ?" என்று கூறி முற்றாக மறுத்துவிட்டார்கள். மனமுடைந்து யாழ்ப்பாணம் திரும்பிய தம்பி, சூரியக்கதிர் ராணுவ நடவடிக்கையின்போது கரவெட்டிக்கு இடம்பெயர்ந்து, அங்கிருந்து இயக்கத்தில் சென்று இணைந்துகொண்டான். ஐந்து வருட சேவையின்பின்னர் 2000 இல் மாவீரராகியும் போனான்.
  18. பாடசாலைகளில் இணைத்துவிடும் பணி முடிவடையவே, என்னையும் அக்காவையும் எங்காவது பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க வேண்டும் என்று அன்ரா தேடத் தொடங்கினார். இவ்வாறு சில நாட்கள் தேடியதன் பின்னர் "வெள்ளவத்தை புகையிரத நிலைய வீதியில் இருக்கும் விசாலமான காணியொன்றில் சிறிது சிறிதாகக் கட்டப்பட்ட வீடுகள் ஒன்றில் வயோதிப மாது ஒருவரின் வீட்டில் இடமிருக்கிறது, அங்குசென்று கேட்டுப்பாருங்கள்" என்று இன்னொரு கன்னியாஸ்த்திரி தனக்குத் தெரிந்தவர்கள் ஊடாக ஒரு விலாசத்தை எடுத்துத் தந்தார். ஆனால் அவ்வயோதிப மாதினால் இயங்குவது கடிணம் ஆதலால், அவருக்குத் தேவையான பணிகளைச் செய்துகொண்டு, ஆயிரம் ரூபாய்கள் வாடகையாகத் தந்தால் தங்கலாம் என்று கூறப்பட்டது. ஒரு நாள் மாலை வேளையில் அவரைச் சந்திக்கச் சென்றோம். மிகவும் குறுகிய, ஒற்றை அறையைக் கொண்ட குடில் போன்றதொரு வீடு. வீட்டின் முன்கதவினால் உள்ளே நுழையும்போது தலையைக் குனிந்தே செல்லவேண்டும். ஐந்து மீட்டருக்கு இரண்டு மீட்டர் என்ற அளவில் விருந்தினர் மண்டபம். அதன்பின்னால் ஒரு கட்டில் மட்டுமே போடக்கூடிய அறை. அதற்கடுத்தாற்போல் ஒருவர் மட்டுமே நின்று சமைக்கக் கூடிய சமயலறை, அதன் பின்னால் கழிவறையும், குளியல் அறையும். மிகவும் இடவசதி குறைந்த வீடு. ஆனால் வேறு இடங்களும் எமது வசதிக்கு ஏற்றாற்போல்க் கிடைக்கவில்லை. வெகு விரைவில் கனடா போவதற்காகக் காத்திருந்த அந்த வயோதிப மாது கேட்ட ஆயிரம் ரூபாய்கள் மற்றைய இடங்களைக் காட்டிலும் மிகவும் குறைவானது. ஆகவே சிஸ்ட்டர் அன்ரா அதனையே தெரிவு செய்ய, நாமும் ஏற்றுக்கொண்டோம். அந்த வீட்டிற்குச் சென்று வாழத் தொடங்கினோம். அக்கா அந்த வயோதிப மாது தங்கிய அறையில் நிலத்தில் பாய் ஒன்றினைப் போட்டுப் படுத்துக்கொள்ள, நானோ வெளியில், விருந்தினர் அறையில் பாயில்ப் படுத்துக்கொள்வேன். காலை எழுந்தவுடன், அம்மாது தனது காலைக்கடன்களைக் கழித்து வெளியே வரும்வரை காத்திருந்து, அவசர அவசரமாக எனது கடன்களை முடித்து, விருந்தினர் அறையிலேயே உடைமாற்றி பாடசாலைக்குச் சென்று வருவேன். எனக்கும் , அந்த வயோதிப மாதிற்கும் அக்காவே சமைக்கத் தொடங்கினாள். காலையில் பெரும்பாலும் பாணுடன் அஸ்ட்ரா மாஜரீன். மத்தியானத்தில் முருகன் கடையில் எடுக்கும் மரக்கறிச் சாப்பாட்டை நானும் அக்கவும் பகிர்ந்துகொள்வோம். சாப்பாட்டுப் பாசலில் பெரும்பகுதியை எனக்குத் தந்துவிட்டு அக்கா அரைவயிறு, கால்வயிறு என்று இருந்துவிடுவாள், பாவம். இரவில் ஏதாவது செய்வாள், முட்டையை அவித்து, உப்பும் மிளகும் சேர்த்துக் குழைத்து, பாணிற்குள் வைத்து வெட்டித் தருவாள், எனக்கு அதுவே அமிர்தமாக இருக்கும். அதேபோல அப்பெண்மணி கேட்கும் உணவுகளை அக்கா செய்துகொடுப்பாள். எங்களைக் கொழும்பிற்குப் பாதுகாப்பாகக் கூட்டிவந்து, பாடசாலைகள் தேடி, கெஞ்சி மன்றாடி, அனுமதியெடுத்து, எமது செலவுகளுக்கு ஒழுங்குகள் செய்து, நாம் தங்குவதற்கும் இடம்தேடிக்கொடுத்து, நாம் இனிமேல் பாதுகாப்பாக இருப்போம் என்கிற நம்பிக்கையுடன் மீளவும் யாழ்ப்பாணம் திரும்பினார் அன்ரா.
  19. கத்தோலிக்கப் பாடசாலைகள் கையை விரித்துவிட, மீதமாயிருந்த ஒரே ஆண்கள் தமிழ்ப் பாடசாலை பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மட்டும்தான். ஆனால் அங்கோ வடக்குக் கிழக்கில் இருந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த பல தமிழ் மாணவர்கள் அண்மையில் இணைந்திருந்தமையினால், அங்கும் அனுமதி கிடைப்பது கடிணம் என்றே எமக்குத் தோன்றியது. ஆனாலும் மனம் தளராத அன்ரா, இன்னொரு காலைப்பொழுதில் என்னை அழைத்துக்கொண்டு அங்கு சென்றார். அங்கு அதிபராக இருந்தவர் மட்டக்களப்பைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்று நினைவு. அக்காலை வேளையில் மிகவும் சுருசுருப்பாக பாடசாலைப் பணிகள் நடந்துகொண்டிருக்க, அதிபர் தனது அறைக்கு வரும்வரை அமைதியாகக் காத்திருந்தோம். சிறிது நேரத்தின் பின்னர் அறைக்கு வந்த அதிபரை நாம் சந்தித்தோம். முதலில் என்னைப்பற்றி வினவிய அதிபர், கல்லூரியில் இணைவதற்கு எனக்குத் தகமை இருக்கின்றதா என்று பரிசோதித்தார். சாதாரணதரப் பெறுபேறுகள் முதற்கொண்டு பல விடயங்கள் குறித்துக் கேட்டார். இறுதியில், "சிஸ்ட்டர், எனது வகுப்புக்களில் மாணவர்கள் நிரம்பி வழிகிறார்கள். அவர்களைப் பராமரிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கிறோம், அப்படியிருக்க உங்கள் பெறாமகனை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது?" என்று உண்மையான வருத்தத்துடன் வினவினார். "அவனுக்கொரு மூலையில் இருக்கவிட்டாலும், இருப்பான், வாங்கு மேசை கூட வேண்டாம், அவன் சமாளிப்பான்" என்று கூறவும், "சரி, உங்கள் விருப்பம்" என்று ஒரு வகுப்பில் இணைத்துவிட்டார். ஆனாலும் நாமும் பணம் கட்டவேண்டி இருந்தது. ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்கள் என்று நினைவு. பீட்டர்ஸ் கல்லூரியில் கேட்ட 15,000 ரூபாய்களுடன் ஒப்பிடும்பொழுது மிகக்குறைவான பணம். சிஸ்ட்டர் அன்ரா கட்டினார், எங்கிருந்து பணம் வந்திருக்குமோ? எனக்குத் தெரியாது. சரி, பாடசாலை கிடைத்துவிட்டது. இனிமேல் என்னைத் தங்கவைக்க இடம் தேடவேண்டும். அதற்கும் பணம் வேண்டும். யார் தருவார்? இப்படி பல சிந்தனைகள் அன்ராவின் மனதில். அவுஸ்த்திரேலியாவில் வாழ்ந்துவந்த எனது மாமாக்கள் (அன்ராவின் இளைய சகோதரர்கள்) இருவரிடமும் உதவி கேட்டார். ஒருவர் உதவ முன்வந்தார். மற்றையவர் உதவும் நிலையில் இல்லை என்று கூறப்பட்டது.
  20. கொழும்பை வந்தடைந்ததும் பம்பலப்பிட்டி, லொறிஸ் வீதியில் அமைந்திருக்கும் கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் சில நாட்கள் சிஸ்ட்டர் அன்ராவுடன் தங்கியிருந்தோம்.எங்களை எப்படியாவது நல்ல பாடசாலைகளில் சேர்த்துவிடவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். நான் 11 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும்போதே மட்டக்களப்பில் போர் ஆரம்பித்திருந்தது. அக்கா உயர்தரப் பரீட்சைக்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்தாள். கன்னியாஸ்த்திரிகள் மடம் அமைந்திருந்த பகுதியில் உள்ள தமிழ் மொழிப் பாடசாலையான புனித மரியாள் மகாவித்தியாலயத்தில் அக்காவைச் சேர்த்துவிட்டார். எனக்குப் பாடசாலை கிடைப்பது கடிணமாகவிருந்தது. 1979 ஆம் ஆண்டில் இருந்து 1982 ஆம் ஆண்டுவரை நான் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரியில் எனது சிறுபராயத்தைக் கழித்திருந்தேன். ஆகவே அங்கு சென்று, பழைய மாணவனான எனக்கு அனுமதி தருகிறார்களா என்று பார்க்கலாம் என்று ஒரு காலைப்பொழுதில் என்னையும் அழைத்துக்கொண்டு அக்கல்லூரிக்குச் சென்றார் சிஸ்ட்டர் அன்ரா. நான் படித்த காலத்தில் இருந்ததைக் காட்டிலும் கல்லூரி மிகவும் மாறிப்போயிருந்தது. விசாலமானதாகவும், நவீனமானதாகவும் காணப்பட்டதாக ஒரு பிரமை. கல்லூரி அதிபராகவிருந்த பாதிரியார் ஒருவருடன் என்னை கல்லூரியில் இணைக்க முடியுமா என்று இரைஞ்சுவது போலக் கேட்டுக்கொண்டு நின்றார் அன்ரா. ஆனால் அதிபருக்கோ அதில் சிறிது விருப்பமும் இருக்கவில்லை. கத்தோலிக்கப் பாடசாலையான அக்கல்லூரிக்கு இணையும் மாணவர்கள் பெரும்பாலும் வசதி படைத்தவர்கள். ஆகவே இணையும்போது பாடசாலை வளர்ச்சி நிதிக்கென்று பாடசாலை நிர்வாகம் கேட்கும் பணத்திற்கு அதிகமாகக் கொடுத்து இணைந்துகொள்பவர்கள். அப்படியிருக்கும்போது கன்னியாஸ்த்திரி ஒருவர் கூட்டிவந்திருக்கும் ஏழ்மையான மாணவனை கல்லூரியில் ஏற்றுக்கொள்ள அவருக்கு மனம் வரவில்லை. "மன்னிக்க வேண்டும் சிஸ்ட்டர், தமிழ் மொழி வகுப்புக்களில் இடமில்லை, எல்லா வகுப்புக்களும் நிரம்பி வழிகின்றன, நீங்கள் வேறு பாடசாலை பாருங்கள்" என்று கூறினார். "பாதர், அவனுக்குத் தேவையான மேசையையும், கதிரையினையும் நானே வாங்கித் தருகிறேன், ஏதோ ஒரு மூலையில் அவனையும் இருக்க விடுங்கள்" என்று வேண்டத் தொடங்கினார். எனக்கு முன்னாலேயே எனது அன்ரா அப்பாதிரியாரிடம் இரைஞ்சிக் கேட்பதைப் பார்த்தபோது மிகுந்த கவலையாக இருந்தது. ஆனால் அந்தப் பாதிரியாரோ விடாப்பிடியாகவே மறுத்துவிட்டார். "உங்களுக்கென்று தனியான தமிழ்ப் பாடசாலைகள் இருக்கின்றனவே, அங்கு சென்று கேட்டுப்பாருங்கள்" என்று கையை விரிக்க மிகுந்த ஏமாற்றத்துடன் அன்ராவின் மடம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். சரி, இனி என்ன செய்யலாம்? கல்கிஸ்ஸையில் இருக்கும் தோமஸ் கல்லூரியில் கேட்டுப்பார்க்கலாம் அல்லது ஜோசப் கல்லூரியில் கேட்டுப்பார்க்கலாம் என்று தனக்குத் தெரிந்த கன்னியாஸ்த்திரிகள், பாதிரிகள் ஊடாக அவர் முயன்று பார்த்தார். இவை எல்லாமே பெருந்தொகைப் பணத்தை பெற்றுக்கொண்டே அனுமதியளிப்பார்கள், பணமின்றி எவருமே உள்ளே வர முடியாது, உங்களின் பெறாமகன் எவ்வளவுதான் கெட்டிக்காரனாக இருந்தாலும் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதே அனைவரினதும் பதிலாக இருந்தது.
  21. 1990, பேச்சுக்கள் முறிவடைந்து புலிகளுடன் பிரேமதாசா யுத்தத்தினை ஆரம்பித்திருந்த காலம். மட்டக்களப்பின் பலவிடங்களிலும் படுகொலைகள். என்னுடன் கூடப்படித்த பல மாணவர்கள் கொல்லப்பட்டார்கள், அல்லது காணாமலாக்கப்பட்டார்கள். அடிக்கடி நடந்த சுற்றிவளைப்புக்கள், தலையாட்டிகளுக்கு முன்னால் நடந்த அணிவகுப்புக்கள் என்று நகரே அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்த கொடிய ஊழிக்காலம் அது. இரவுகளில் கேட்கும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள், மரண ஓலங்கள் என்று தூக்கமின்றி விடுதியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, பொழுதுகள் கழித்த இரவுகள். எமது விடுதியை இராணுவம் சுற்றிவளைத்தபோது, பாதிரியர்களாக இருந்த விடுதி பராமரிப்பாளர்களுடன் பேசிக்கொண்டே மாணவர்களை நோட்டம் விட்ட சிங்கள இராணுவக் கப்டன். உயர்தரம் படித்துக்கொண்டிருந்த விடுதி மாணவர்களை அழைத்துச் செல்லப்போகிறேன் என்று அவன் அடம்பிடிக்க, பாதிரியார்களோ அவனிடம் கெஞ்சி மன்றாடி அம்மாணவர்களை விடுவித்துக்கொண்ட பொழுதுகள் என்று உயிர் வாழ்தலுக்கான நிச்சயம் இன்றி கடந்துபோன நாட்கள். சில மாதங்களாக மட்டக்களப்பு நகரிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்லும் வீதிகள் முற்றாக மூடப்பட்டு, அகோரமான படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வந்தன. மரணங்களை நாள்தோறும் கண்முன்னே கொண்டுவந்து காட்டிய மூன்று, நீண்ட, கொடிய மாதங்கள். ஒருவாறு மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான புகையிரதச் சேவை வாழைச்சேனையிலிருந்து நடைபெறத் தொடங்கியது. ஆனால், வாழைச்சேனைவரை பஸ்ஸில்த்தான் பயணிக்கவேண்டும். மட்டக்களப்பிற்கும் வாழைச்சேனைக்கும் இடையிலான வீதியின் பகுதியில் அமைந்திருக்கும் முஸ்லீம் பிரதேசங்களில் பஸ்ஸை மறித்து, ஆண்களை இறக்கி வெட்டத் தொடங்கியிருந்தார்கள் முஸ்லீம் ஊர்காவற்படையினர். என்னையும் அக்காவையும் எப்படியாவது பாதுகாப்பாக மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்குக் கூட்டிவந்துவிட வேண்டும் என்று சிஸ்ட்டர் அன்ரா உறுதி பூண்டார். இதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று, அங்கிருந்து மட்டக்களப்பிற்கு அவர் வந்தார். அக்காவிற்கும் சிஸ்ட்டர் அன்ராவிற்கும் இருக்கக் கிடைத்த ஆசனத்தில், அவர்களின் கால்களுக்குக் கீழே நாள் ஒளிந்துகொள்ள , எங்களைப்போலவே இன்னும் பலரை ஏற்றிக்கொண்டு அந்தப் பஸ் தனது பயணத்தை ஆரம்பித்தது. முஸ்லீம்களால் நடத்தப்படும் படுகொலைகளில் இருந்து பயணிகளைக் காக்கவென செஞ்சிலுவைச் சங்கமோ அல்லது அதுபோன்றதொரு அமைப்போ பஸ்ஸின் முன்னால்ச் செல்ல, மெதுமெதுவாக பஸ் பின்னால் தொடர்ந்து சென்றது. சிலவிடங்கள் பஸ்ஸை மறித்து உள்ளே வர முயன்ற காடையர்களை முன்னால்ச் சென்ற வாகனத்தில் இருந்த அதிகாரிகள் தடுத்துவிட்டனர். வாழைச்சேனையில் புகையிரதத்தில் ஏறும்வரை பஸ்ஸில் இருந்த அனைவரும் உயிர் பிழைப்போம் என்கிற நம்பிக்கையில் இருக்கவில்லை என்றே கூறலாம்.
  22. பாடசாலையில் கணிதபாடம் எனக்குப் புரியவில்லை. சின்னையா டீச்சர் சொல்லித் தந்த கணிதம் எனது மூளைக்குள் இறங்கவில்லை. மிகவும் கடிணப்பட்டேன். ஒரு வார விடுமுறை நாளில் என்னைப் பார்க்க விடுதிக்கு வந்த சிஸ்ட்டர் அன்ராவிடம் இதுகுறித்துக் கூறினேன். சிசிலியா பெண்கள் பாடசாலையில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்த அவர், எனக்கு உதவ முன்வந்தார். தாண்டவன்வெளியில் இருந்த அவரது மடத்திற்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் என்னை வரச்சொன்னார். தனது வேலைப்பழுவிற்கு நடுவிலும் எனக்குக் கணிதம் சொல்லித் தந்தார். காலையில் 8 மணிக்கு அங்கு சென்றுவிடும் எனக்கு காலையுணவு, மதிய உணவு என்றெல்லாம் தந்து கணிதம் படிப்பித்தார். எனக்கும் கணிதம் சிறிது சிறிதாகப் பிடிக்கத் தொடங்கியது. அவரிடம் கணிதம் கற்ற சில மாதங்களிலேயே பாடசால்யில் என்னால் ஓரளவிற்கு கணிதம் செய்ய முடிந்தது. கூடவே பேரின்பராஜா சேரும் வந்து சேர்ந்துவிட, கணித பாடம் பிடித்துப் போயிற்று. நான் மட்டக்களப்பில் வசிக்கத் தொடங்கிய முதலாவது வருடத்தில் சிஸ்ட்டர் அன்ரா யாழ்ப்பாணத்திற்கு மாற்றாலாகிச் சென்றார். கவலை என்னை முழுமையாக ஆட்கொள்ள, அவரை வழியனுப்பி வைத்தேன். அக்கா அப்போதும் மட்டக்களப்பிலேயே படித்துவந்தாள். ஆனாலும் சிஸ்ட்டர் அன்ரா போனது மனதை வெகுவாக வாட்டியிருந்தது. சில நாட்கள் அழுதேன், ஆனாலும் வேறு வழியில்லை. வந்தாயிற்று, படித்தே ஆகவேண்டும்.
  23. மட்டக்களப்பில் ஒரு சில நாட்கள் சிஸ்ட்டர் அன்ராவின் மடத்தில் தங்கவைக்கப்பட்டேன். அதன்பிறகு புளியந்தீவில் இயங்கிவந்த சிறுவர்களுக்கான விடுதியில் சேர்க்கப்பட்டேன். நோர்வேயில் இருந்து யாரோ ஒருவர் அநாதைகளுக்கென்று அனுப்பிய பணம் எனக்குபடிக்கவும், உயிர்வாழவும் உதவியது. மாதத்திற்கு 450 ரூபாய்கள். சிஸ்ட்டர் அன்ராவே வந்து விடுதியில் கட்டிச் சென்றார். அப்படி ஒவ்வொருமுறையும் வரும்போதும் தன்னைப் பார்க்க வருவோர் கொண்டுவரும் பழங்கள், இனிப்புக்கள் என்று கொண்டுவந்து தருவார். அவரைக் காண்பதற்காகவே நாட்கணக்கில் காத்திருக்கத் தொடங்கினேன். எனக்கான பணத்தினை விடுதிப் பராமரிப்பாளரிடம் கட்டிவிட்டு, வெளியே விருந்தினர்க்காகப் போடப்பட்டிருக்கும் வாங்கில் என்னுடன் இருந்து சிறிது நேரம் பேசிவிட்டு, தான் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அவர் தாண்டவன்வெளி நோக்கிச் செல்வார். அவர் சென்றபின்னரும் அவர் போன வழியே கண்ணிமைக்காது பார்த்துக்கொண்டிருப்பேன். அங்கு எனக்கிருந்த உறவு அவர் மட்டும்தான். எனது அன்னையே என்னைப் பிரிந்துபோவது போன்று துக்கம் கழுத்தினுள் இறுககிக் கிழிக்க, வேறு வழியின்றி விடுதிக்குள் நுழைந்து, தொலைந்துபோவேன். இப்படியே மாதம் ஒருமுறை வருவார், சில நிமிடங்களாவது பேசுவார், அம்மாவின் குரல் அவரிடமும் அவ்வப்போது எட்டிப் பார்க்கும், அம்மாவுடன் பேசுவதுபோன்ற பிரமை ஏற்படும். அன்றிலிருந்து எனக்கு அம்மா அவர்தான் என்று நினைக்கத் தொடங்கினேன். கொடுமையான தகப்பனாரிடமிருந்து என்னை விடுவித்து, தனது சொந்த முயற்சியில், கன்னியாஸ்த்திரியாக இருந்தபோதிலும் என்னை மட்டக்களப்பிற்குக் கூட்டிவந்து, விடுதியில் இடம் எடுத்து, எனக்கான செலவுகளைச் செய்து, பாடசாலையிலும் தனக்குத் தெரிந்தவர்கள் ஊடாக படிக்க உதவிய அவர் அன்னையன்றி வேறு யாராக இருக்க முடியும்?
  24. மட்டக்களப்பில் இருந்து விடுமுறைக்காக அக்கா வந்து தங்கியது வெறும் 2 வாரங்கள்தான். அவ்விரு வாரங்களிலும் அக்காவும், எனது சித்தியும் (கன்னியாஸ்த்திரி) எனது தகப்பனாரிடம் மன்றாடாத நாளில்லை. "அவனை என்னுடன் விடுங்கள், நான் படிப்பிக்கிறேன், பாவம், அவனது படிப்பைக் குலைக்கவேண்டாம்" என்றெல்லாம் அவர் மன்றாடிப்பார்த்தார். தகப்பனாரோ சிறிதும் இளகவில்லை. "அவன் போனால் ஆர் வீட்டில வேலையெல்லாம் பாக்கிறது? தென்னை மரங்களுக்கும், பூக்கண்டுகளுக்கும் ஆர் கிணற்றிலை இருந்து தண்ணி அள்ளி இறைக்கிறது? ஆர் புல்லுப் பிடுங்கிறது? ஆர் கடைக்குப் போறது? அவன் இங்கேயே இருக்கட்டும், ஒரு இடமும் விடமாட்டன்" என்று பிடிவாதம் பிடிக்கத் தொடங்கினார். ஆனால் அக்காவும், சித்தியும் தொடர்ச்சியாகக் கெஞ்சவே, "ஒரு சதமும் தரமாட்டன், கூட்டிக்கொண்டு போறதெண்டால், கூட்டிக்கொண்டு போங்கோ" என்று இறுதியாகச் சம்மதித்தார். சிஸ்ட்டர் அன்ரா எனக்காகச் செய்த முதலாவது நண்மை, தகப்பனாரின் கொடுங்கரங்களில் இருந்து , தழைகளில் இருந்து என்னை விடுவித்தது. தினமும் கொடுமைகளையே சந்தித்து, பழக்கப்பட்ட இருண்ட வாழ்வினுள் இருந்து எனக்குக் கிடைத்த முதலாவது விடுதலை. எதற்காக அடிவாங்குகிறேன், எதற்காகத் திட்டப்படுகிறேன் என்கிற தெளிவே இல்லாது தினமும் வாழ்வில் சித்திரவதைகளை அனுபவித்த எனக்குக் கிடைத்த விடுதலை. ஆகவே மகிழ்ந்துபோனேன். அக்காவுடனும், சிஸ்ட்டர் அன்ராவுடனும் மட்டக்களப்பிற்குச் சென்று வாழப்போகிறேன் என்கிற உணர்வே என்னை மகிழ்விக்க, புறப்படும் நாளிற்காகத் தவமிருக்கத் தொடங்கினேன். ஆனால் மனதினுள் இனம்புரியாத அச்சம் ஒன்று தொடர்ச்சியாக இருந்துவந்தது. அதாவது, தகப்பனார் என்னை விடுதலை செய்யச் சம்மதித்திருந்தத்போதும் , கடைசி நாளில்க் கூட அவர் அதனைத் தடுத்து நிறுத்திவிடலாம். தனக்கும் தனது புதிய மனைவிக்கும் சேவை செய்ய என்னை வீட்டிலேயே மறித்துவிடலாம். தெய்வாதீனமாக அது நடக்கவில்லை, இடையிடையே "நீ அங்கை போனால் வீட்டில ஆர் வேலை பார்க்கிறது? ரஞ்சன வேலை செய்யச் சொல்லி ஏவ ஏலாது, அவனுக்கு இன்னும் 10 வயசுதான்..." என்று இடையிடையே சுருதி மாற்றிப் பேசியபோதும் என்னை அவர் மறிக்கவில்லை. போக அனுமதித்துவிட்டார். முதலாவது வெற்றி. எனக்கு, சிஸ்ட்டர் அன்ராவிற்கு, அக்காவுக்கு!
  25. நேற்று நடந்தது போல இன்னமும் அப்படியே மனதில் பதிந்திருக்கின்றது. 1988 சித்திரையாக இருக்கலாம். தனது அனுமதியின்றி எனது மைத்துனனை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் அருகே இருந்து பார்த்துக்கொண்டமைக்காக எனது தகப்பனார் எனக்குத் தந்த தண்டனை. இரவு முழுதும் தூக்கம் துறந்து, உணவின்றி, களைப்புடன் வீடு வந்து உறங்கலாம் என்று எண்ணி வாசல்வந்து சேர்ந்தபோது, பூட்டிக்கிடந்தது கண்டு களைத்துப்போய் ஆங்கே இருந்துவிட்ட அந்தக் காலைப்பொழுது. அரைத்தூக்கத்தில் வாசலுக்கு வெளியே, படலையில் சாய்ந்து உறங்கத் தொடங்க, உள்ளிருந்து கேட்ட அகோரமான குரல், "பயங்கரவாதியே, இங்க ஏன் வந்தனீ? உள்ளுக்கை கால் வைச்சியெண்டால் வெட்டிக் கொல்லுவன்". கனவில் கேட்பதாக நினைத்து விழித்தபோது வீட்டின் முன் கதவில் தகப்பனார் கையில் கத்தியுடன். ஏன் , எதற்கென்றுகூடத் தெரியாது நான் தண்டிக்கப்பட்ட அப்பொழுது. அவரது கோபம் அடங்கும், ஒருவாறு வீட்டினுள் சென்றுவிடலாம் என்கிற நம்பிக்கையெல்லாம் சிறிது சிறிதாக அற்றுப்போய், கண்களில் கோபம் கொப்பளிக்க அவர் கையில்க் கிடந்த கத்தியைத் தவறாமல் எனக்கு நேரே பிடித்திருக்க, வேறு வழியின்றி தெல்லிப்பழை நோக்கி நடந்த அக்காலைப்பொழுது. கையில் பணமின்றி, நடப்பதற்கும் உடலில் பலமின்றி, மருதனார் மடத்தின் வீதியில் இருந்துகொண்டே வீதியில் செல்வோரிடம் பிச்சையாகப் பணம் கேட்டு, யாரோ ஒருவரின் புண்ணியத்தால் தெல்லிப்பழைவரை செல்ல முடிந்த அதே காலைப்பொழுது. அப்பம்மாவீட்டிற்குச் சென்று, "இனிமேல் அவருடன் வாழமுடியாது, நான் இங்கேயே உங்களுடன் இருக்கப்போகிறேன்" என்று அழுதழுது அவர்களிடம் மன்றாடிய காலைப்பொழுது. இற்றுடன் 37 வருடங்கள் கரைந்தோடிவிட்டன. நான் வீட்டிலிருந்து துரத்தப்பட்ட நாளில் இருந்து சுமார் இரு வாரங்களுக்கு தகப்பனார் என்னைத் தேடவில்லை. உயிருடன் இருக்கின்றேனா இல்லையா என்பது கூட அவருக்குப் பொருட்டாக இருந்திருக்காது என்பது திண்ணம். இதே காலப்பகுதியில் மட்டக்களப்பில் கன்னியாஸ்த்திரிகளினால் பராமரிக்கப்பட்டு வந்த மடம் ஒன்றில் எனது அக்கா படித்துக்கொண்டிருந்தாள். அது விடுமுறை காலமாதலால் யாழ்ப்பாணம் வந்திருந்தாள். வழமைபோல கோண்டாவிலில் நாம் வாழ்ந்த வீட்டிற்கு வந்து என்னைத் தேடியிருக்கிறாள். ரஞ்சித் எங்கே என்று தகப்பனாரிடம் கேட்டபோது அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அவனை அடித்து விரட்டிவிட்டேன் என்று மட்டுமே அவரால் கூற முடிந்தது. அவன் எங்கு போனான், உயிருடன் இருக்கிறானா என்பது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.அக்கா என்னைத் தேடத் தொடங்கினாள். முதலில் உறவினர்கள், அம்மம்மாவின் பக்கத்திலிருந்து அவள் தேடினாள். பின்னர் அப்பாவின் உறவினர்களிடம் தேடினாள், தெல்லிப்பழையில் நான் இருப்பதைத் தெரிந்துகொண்டாள். அப்போது எனது தாயாரின் தங்கை, ஒரு கன்னியாஸ்த்திரி, மட்டக்களப்பில் படிப்பித்துவந்தார். இவரின் உதவியினாலேயே அக்கா மட்டக்களப்பின் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தாள். தகப்பனார் என்னை வீட்டை விட்டுத் துரத்தியதுபற்றி அக்கா எனது சித்தியிடம் தெரிவித்திருக்க வேண்டும். உடனடியாக செயலில் இறங்கிய அவர் எப்படியாவது என்னை எனது தகப்பனாரின் கொடுங்கரங்களில் இருந்து மீட்டுவிடவேண்டும் என்று அங்கலாய்க்கத் தொடங்கினார். மட்டக்களப்பில் இருந்து வந்துசேர்ந்த அக்கா எனது நிலைபற்றி உறவினர்களிடம் பேசத் தொடங்கவே தகப்பனாரின் நிலை தர்மசங்கடமாகிப்போனது. மூத்த இரு பிள்ளைகளையும் மனைவி இறந்தவுடன் வீட்டை விட்டுத் துரத்திவிட்டான் என்பதை உறவினர்கள் பேசத் தொடங்கவே வேறு வழியின்றி என்னை வீட்டிற்குள் அனுமதித்தார். ஆனால் படிக்கவைக்க அவர் விரும்பவில்லை. "வீட்டில் நிண்டுகொண்டு வேலைகளைப் பார், உன்னைப் படிக்க வைக்க என்னிடம் பணமில்லை" என்று கையை விரித்துவிட்டார். எனக்கும் வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எங்காவது கூலிவேலைக்குச் சென்றுவிடலாம் என்பதே அப்போது எனக்கிருந்த ஒரே தெரிவு. ஆனால் எனக்கோ வயது 15.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.