Everything posted by ரஞ்சித்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
மத்தியகிழக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஊக்குவித்து, ஆயுதமும் பயிற்சியும் வழங்கிவரும் ஈரானின் இஸ்லாமிய அடிப்படைவாத முல்லாக்களின் பிடியிலிருந்து ஈரான் மீட்கப்பட வேண்டும். அணுவாயுதம் இல்லாத நிலைமையிலேயே அப்பிராந்தியத்தின் ஸ்த்திரத் தன்மையினை ஈரான் குலைத்து வைத்திருக்கிறதென்றால், அணுவாயுதமும் கிடைத்துவிட்டால் இன்னொரு வடகொரியாவாக ஈரான் மாறிவிடும். தனது கையிருப்பில் இருக்கும் ஏவுகணைகளை வைத்துக்கொண்டு சுற்றியிருக்கும் நாடுகளுக்கு மேலால் ஏவுகணைப் பரிசோதனை செய்கிறேன் என்று கூறிக்கொண்டு சண்டித்தனம் செய்யும். தேவைப்பட்டால் அணுவாயுதத்தை இஸ்ரேலின் மீது பிரயோகிக்கும். ஆகவே முல்லாக்களின் அதிகாரம் முற்றாகப் பிடுங்கப்பட்டு, நாடு மீளவும் மக்களாட்சிக்குள் செல்லவேண்டும். அது நடப்பதற்கு முல்லாக்களும், அவர்களின் இராணுவ, தொழிநுட்ப வல்லுனர்களும் அழிக்கப்பட வேண்டும். இஸ்ரேல் தனது சொந்த இருப்பிற்காகச் செய்யும் இந்த நடவடிக்கையினை அமெரிக்கா ஆதரிப்பதும், உதவுவதும் தேவையானதுதான். முல்லாக்களின் கைகளில் அணுவாயுதம் இருப்பது மனித குலத்திற்கே ஆபத்தானது. தன்னிடமிருக்கும் ஏவுகணைகள் பலவற்றை தனது முகவர்களுக்கு வழங்கி, இஸ்ரேல் மீதும் சர்வதேசக் கப்பற்போக்குவரத்து மீதும் தாக்குதல் நடத்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தம்மிடம் அணுவாயுதம் கிடைத்துவிடும் பட்சத்தில் அதனையும் தனது முகவர்களுக்குக் கொடுத்து, தாக்குதலை நடத்திவிட்டு, கையை விரித்து விடலாம். ஈரானின் முல்லாக்கள் மீது நடத்தப்படும் இன்றைய தாக்குதல்கள் இனிமேல் அவர்கள் அணுவாயுதம் ஒன்றினைத் தயாரிப்பதை நினைத்துப் பார்ப்பதையே நிறுத்துவதாக அமைய வேண்டும். அமெரிக்காவின் பி 2 குண்டுவீச்சு விமானங்களின் தாக்குதலில் சின்னாபின்னமாகிப்போன போர்டோ அணுஆராய்ச்சி மையம் மீது இஸ்ரேல் இன்றும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திவருகிறது. ஈரானில் இன்னமும் தாம் அழிப்பதற்கு இலக்குகள் இருக்கின்றன என்று அது கூறுகிறது. மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் முல்லாக்களை முற்றாகவே அடித்து விரட்ட இஸ்ரேலும் அமெரிக்காவும் முயல்வதாகவே படுகிறது. இது விரைவில் நடைபெறுமானால் ஈரானிய மக்கள் நிம்மதியாக தமது வாழ்வை மீளவும் ஆரம்பிக்க முடியும். பார்க்கலாம்.
-
சிஸ்ட்டர் அன்ரா
கடந்த 10 ஆம் திகதி காலை. ஆறு மணியிருக்கலாம், கொழும்பிலிருந்து அக்கா தொலைபேசியில் எனக்குக் குறுந்தகவல் அனுப்பியிருந்தாள். சிஸ்ட்டர் அன்ரா இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதே அச்செய்தி. மனதில் "அடக் கடவுளே" என்று ஒரு கவலை, சோகம். எப்பொழுதும் எங்களுடன் இருப்பார்கள் என்று நாம் சிலரை நம்பியிருப்போம். அவ்வாறானவர்களில் இழப்பு என்பது உடனடியாக எமக்கு எந்த உணர்வையும் தந்துவிடாதவை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர்களின் இழப்பின் பாரிய தாக்கம் எம்மை வருத்தத் தொடங்கும், அவர்கள் இல்லாத வெளியினை உணரத் தொடங்குவோம். அப்படித்தான் சிஸ்ட்டர் அன்ராவும் எனக்கு. அவரது மரணச் செய்தி கேட்டவுடன் யாழ்ப்பாணம் செல்வதா, இல்லையா என்று மனம் சிந்திக்கத் தொடங்க, மாமா தொலைபேசியில் வந்தார்."ரஞ்சித், நானும் மாமியும் போறம், உன்னால வர ஏலாது எண்டு நெய்க்கிறன், நீ இருந்துகொள், நாங்கள் போட்டு வாறம்" என்று கூறினார். அப்போதாவது நான் போயிருக்கலாம், ஆனால் முயலவில்லை, அதற்கும் காரணங்கள் இருந்தன. 2023 இல் அன்ரா உயிருடன் இருந்தபோது அவருடன் பேசிவிட்டு வந்துவிட்டேன், அவரை மகிழ்வுடன் சந்தித்துவிட்டேன், இனிமேல் அவர் இறந்தபின்னர் சென்று என்னத்தைச் செய்ய? என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டு இருந்துவிட்டேன். அவரது இறுதிச் சடங்குகளில் பங்குகொண்டவர்களின் பேச்சினை ஒளிப்படம் மூலம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. எத்தனையோ பேருக்கு அவர் உதவியிருக்கிறார். வன்னியில் அவருடன் மனநல சேவையில் பணியாற்றிய பெண்மணி தனது பேச்சின்போது கண்கள் கலங்கப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது மனம் கரைந்துபோனது. எத்தனையோ பேரின் வாழ்வை நல்வழிப்படுத்தி, ஒளியேற்றி, உருவகம் கொடுத்து வழிநடத்தி, தனது கல்வியறிவையும், திறமைகளையும் தனது சமூகத்திற்குக் கொடுத்து, இறுதிவரை தொண்டாற்றிய ஒரு ஆளுமை அமைதியாகிப் போனது. எனது வாழ்நாளில் பல ஆளுமைகளைக் கண்டிருக்கிறேன். இவர்களால் எனது வாழ்வு மாற்றப்பட்டு, வழிநடத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த ஆளுமைகளில் முதன்மையானவர் எனது சிஸ்ட்டர் அன்ரா. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!
-
சிஸ்ட்டர் அன்ரா
2002 இல் சிட்னிக்கு குடிபெயர்ந்த காலத்தில் இருந்து 2018 ஆம் ஆண்டுவரை நான் அவரைச் சென்று பார்க்கவில்லை. அவரிடமிருந்து வரும் கடிதங்களுக்கோ அல்லது மின்னஞ்சல்களுக்கோ எப்போதாவது பதில் எழுதுவதுடன் அவருக்கான எனது நன்றிக்கடன் முடிந்துவிடும். எத்தனையோ முறை என்னுடன் தொலைபேசியில் பேச அவர் முயன்றிருக்கிறார்.எக்காரணமும் இன்றி அவருடன் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை தவறவிட்டிருக்கிறேன். சிலவேளை அவர் எனக்காகச் செய்த தியாகங்கள், பலரிடம் அவர் பட்ட அவமானங்கள் குறித்து நாம் பார்க்கத் தவறியிருக்கலாம். ஒரு கன்னியாஸ்த்திரியாக இருந்தபோதும், பெற்றோரைக் காட்டிலும் அதிகமாக என்னை நேசித்து, எனது வாழ்வை நெறிப்படுத்தி இன்றுவரை வாழும் பாக்கியத்தை அவர் ஏற்படுத்தித் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார், இது எனக்கு இன்றுவரை புரியவில்லை. நீண்ட 16 வருடங்களுக்குப் பின்னர் அவரை 2018 ஆம் ஆண்டு சித்திரையில் யாழ்ப்பாணத்தில் சென்று சந்தித்தேன். நான் மனதில் பதிந்து வைத்திருந்த சிஸ்ட்டர் அன்ராவின் உருவத்திற்கும் அன்று நான் பார்த்த அன்ராவிற்கும் இடையே எத்தனை வேறுபாடு? பம்பரம் போலச் சுழன்று, ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்து, தன்னிடம் உதவிவேண்டி வருவோருக்கு இல்லையென்று சொல்லாது, முயன்றவரை உதவிடும் சிஸ்ட்டர் அன்ரா பல நினைவுகளைத் தொலைத்து, மனதளவிலும், உடலளவிலும் நலிந்து போயிருந்தார். ஆனாலும், முகத்தில் மாறாத அதே புன்னகையும், அன்பும், விகடமும் சேர்த்த பேச்சும் அவரை விட்டு அகலவில்லை. மீண்டும் அவரை 2023 கார்த்திகையில் சென்று சந்தித்தேன். எப்படி இருக்கிறீர்கள் அன்ரா என்று கேட்டபோது, "83 வயதில் ஒருவர் எப்படி இருக்கமுடியுமோ, அப்படி இருக்கிறேன்" என்று கூறினார். வெகுவாக இளைத்திருந்தார். சக்கர நாற்காலியில் வைத்து அவரைப் பராமரித்துக்கொண்டிருந்தார்கள். சுமார் 30 - 40 நிமிடங்களுக்கு மேல் அவரால் தொடர்ந்து அமர்ந்திருந்து பேசமுடியாது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். ஆனாலும் அவரைக் கண்டதில் சந்தோசம்.
-
சிஸ்ட்டர் அன்ரா
சூரியக்கதிர் ராணுவ நடவடிக்கையின் பின்னர் சிஸ்ட்டர் அன்ரா வன்னிக்குச் சென்றுவிட்டார். அங்கிருந்தபோதிலும் தவறாமல் எனக்குக் கடிதம் எழுதுவதோடு, பிறந்தநாள், கிறிஸ்மஸ் காலங்கள் என்று வர்ணக் காட்டுடன் வாழ்த்துக்கள் அவரிடமிருந்து வரும். ஆரம்பத்தில் தொடர்ச்சியாக அவருக்குப் பதில் எழுதிவந்த நான் சிறிது சிறிதாக பதில் எழுதுவதைக் குறைத்துக்கொண்டேன், காரணம் ஏதும் இன்றி. ஆனாலும் அவர் மாறவில்லை, "உனக்கு நேரம் கிடைக்காதென்று தெரியும், கிடைக்கும்போது நீ எழுது, ஒன்றும் அவசரமில்லை " என்று பதில் வரும். தனது அக்காவின் பிள்ளைகளைத் தனது சொந்தப்பிள்ளைகளாகவே நடத்திவந்ததினால் உருவாகிய பாசம் அவரை அலைக்கழித்திருக்கும். வன்னியில் பல தொண்டு நிறுவனங்களுடன் அவர் சேர்ந்து இயங்கிவந்தார். யுத்தத்தினால் உளநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பது, அவ்வாறு பராமரிப்பவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவது, யுத்தத்தினால் உறவுகளை இழந்த பெண்கள், பிள்ளைகளை அழைத்துவந்து கற்பிப்பது, தொழிற்பயிற்சி வழங்குவது என்று சமூகத்துடன் தன்னை நெருக்கமாகப் பிணைத்துக்கொண்டார். தாயக விடுதலையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அவர் புலிகளையும், தலைவரையும் வெகுவாக நம்பினார். பொடியள் இருக்குமட்டும் எனக்குப் பயமில்லை என்று அடிக்கடி என்னிடம் கூறியிருக்கிறார். திருக்குடும்ப கன்னியர் மடத்தினால் அவருக்கென்று மோட்டார் உந்துருளி ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அதில் வன்னிமுழுதும் அவர் பயணித்து தேவைப்பட்டவர்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்துவந்தார். 2002 ஆம் ஆண்டு வன்னிக்கான ஏ - 9 பாதை திறக்கும் நிகழ்வில் புலிகளின் தளபதிகளின் பின்னால் அன்ராவும் நிற்கும் காணொளியொன்று இன்னமும் இணையத் தளத்தில் இருக்கிறது. பிற்காலத்தில் புலிகளின் மருத்துவப் பிரிவில் இயங்கிய போராளிகளில் சிலருக்கு மனநல பயிற்சிகளை அவர் வழங்கியிருந்தார்.
-
சிஸ்ட்டர் அன்ரா
வெள்ளவத்தையில் வாழ்ந்த காலம் முதல், நான் பல்கலைக்கழகம் செல்லும் காலம்வரை சிஸ்ட்டர் அன்ராவின் முயற்சியினால் எனக்கும் அக்காவிற்குமான செலவுகளுக்கு அவுஸ்த்திரேலியாவில் இருந்து எனது மாமாவே பணம் அனுப்பி வந்தார். சிலவேளைகளில் எமக்கு உதவுவது குறித்து கடுமையான விமர்சனங்கள் அன்ரா மீது சில உறவினர்களால் முன்வைக்கப்பட்டன. "உவன் படிக்கப்போறதில்லை, ஏன் சும்மா மினக்கெடுகிறாய்?" என்றெல்லாம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் சிஸ்ட்டர் அன்ராவோ எதையுமே சட்டை செய்யவில்லை. எங்கள் இருவரையும் எப்படியாவது படிப்பித்து, கரையேற்றிவிட வேண்டும் என்பதே அவருக்கு இருந்த நோக்கமெல்லாம். 1994 ஆம் ஆண்டு தம்பி ஒரு முறை எங்களைப் பார்க்க கொழும்பிற்கு வந்திருந்தான். அப்போது நாங்கள் கிருலப்பனையில் தங்கியிருந்தோம். எங்களைக் கண்டவுடன் எங்களுடனேயே தங்கிவிடலாமா என்று அவன் அன்ராவைக் கேட்டான். அவனையும் தகப்பனார் அடித்துத் துரத்திவிட்டிருக்க, பாதிரிமார்களாகப் படிக்கும் கல்லூரியொன்றில் அவனையும் அன்ரா சேர்த்துவிட்டிருந்தார். அதன் விடுமுறை ஒன்றின்போதே எங்களைப் பார்க்க வந்திருந்தான். சிஸ்ட்டர் அன்ராவே அவனை எம்மிடம் கூட்டி வந்திருந்தார். அவனையும் எங்களுடன் தங்கவைக்க முடியுமா என்று அன்ரா கேட்டபோது அக்காலப்பகுதியில் எம்முடன் தங்கியிருந்த இன்னுமொரு சித்தியும், அம்மம்மாவும், 'இப்பவே உவை ரெண்டுபேரையும் வைச்சுப் பாக்கேலாமக் கிடக்கு, அதுக்குள்ள உவனையும் கொண்டு வந்துட்டியோ?" என்று கூறி முற்றாக மறுத்துவிட்டார்கள். மனமுடைந்து யாழ்ப்பாணம் திரும்பிய தம்பி, சூரியக்கதிர் ராணுவ நடவடிக்கையின்போது கரவெட்டிக்கு இடம்பெயர்ந்து, அங்கிருந்து இயக்கத்தில் சென்று இணைந்துகொண்டான். ஐந்து வருட சேவையின்பின்னர் 2000 இல் மாவீரராகியும் போனான்.
-
சிஸ்ட்டர் அன்ரா
பாடசாலைகளில் இணைத்துவிடும் பணி முடிவடையவே, என்னையும் அக்காவையும் எங்காவது பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க வேண்டும் என்று அன்ரா தேடத் தொடங்கினார். இவ்வாறு சில நாட்கள் தேடியதன் பின்னர் "வெள்ளவத்தை புகையிரத நிலைய வீதியில் இருக்கும் விசாலமான காணியொன்றில் சிறிது சிறிதாகக் கட்டப்பட்ட வீடுகள் ஒன்றில் வயோதிப மாது ஒருவரின் வீட்டில் இடமிருக்கிறது, அங்குசென்று கேட்டுப்பாருங்கள்" என்று இன்னொரு கன்னியாஸ்த்திரி தனக்குத் தெரிந்தவர்கள் ஊடாக ஒரு விலாசத்தை எடுத்துத் தந்தார். ஆனால் அவ்வயோதிப மாதினால் இயங்குவது கடிணம் ஆதலால், அவருக்குத் தேவையான பணிகளைச் செய்துகொண்டு, ஆயிரம் ரூபாய்கள் வாடகையாகத் தந்தால் தங்கலாம் என்று கூறப்பட்டது. ஒரு நாள் மாலை வேளையில் அவரைச் சந்திக்கச் சென்றோம். மிகவும் குறுகிய, ஒற்றை அறையைக் கொண்ட குடில் போன்றதொரு வீடு. வீட்டின் முன்கதவினால் உள்ளே நுழையும்போது தலையைக் குனிந்தே செல்லவேண்டும். ஐந்து மீட்டருக்கு இரண்டு மீட்டர் என்ற அளவில் விருந்தினர் மண்டபம். அதன்பின்னால் ஒரு கட்டில் மட்டுமே போடக்கூடிய அறை. அதற்கடுத்தாற்போல் ஒருவர் மட்டுமே நின்று சமைக்கக் கூடிய சமயலறை, அதன் பின்னால் கழிவறையும், குளியல் அறையும். மிகவும் இடவசதி குறைந்த வீடு. ஆனால் வேறு இடங்களும் எமது வசதிக்கு ஏற்றாற்போல்க் கிடைக்கவில்லை. வெகு விரைவில் கனடா போவதற்காகக் காத்திருந்த அந்த வயோதிப மாது கேட்ட ஆயிரம் ரூபாய்கள் மற்றைய இடங்களைக் காட்டிலும் மிகவும் குறைவானது. ஆகவே சிஸ்ட்டர் அன்ரா அதனையே தெரிவு செய்ய, நாமும் ஏற்றுக்கொண்டோம். அந்த வீட்டிற்குச் சென்று வாழத் தொடங்கினோம். அக்கா அந்த வயோதிப மாது தங்கிய அறையில் நிலத்தில் பாய் ஒன்றினைப் போட்டுப் படுத்துக்கொள்ள, நானோ வெளியில், விருந்தினர் அறையில் பாயில்ப் படுத்துக்கொள்வேன். காலை எழுந்தவுடன், அம்மாது தனது காலைக்கடன்களைக் கழித்து வெளியே வரும்வரை காத்திருந்து, அவசர அவசரமாக எனது கடன்களை முடித்து, விருந்தினர் அறையிலேயே உடைமாற்றி பாடசாலைக்குச் சென்று வருவேன். எனக்கும் , அந்த வயோதிப மாதிற்கும் அக்காவே சமைக்கத் தொடங்கினாள். காலையில் பெரும்பாலும் பாணுடன் அஸ்ட்ரா மாஜரீன். மத்தியானத்தில் முருகன் கடையில் எடுக்கும் மரக்கறிச் சாப்பாட்டை நானும் அக்கவும் பகிர்ந்துகொள்வோம். சாப்பாட்டுப் பாசலில் பெரும்பகுதியை எனக்குத் தந்துவிட்டு அக்கா அரைவயிறு, கால்வயிறு என்று இருந்துவிடுவாள், பாவம். இரவில் ஏதாவது செய்வாள், முட்டையை அவித்து, உப்பும் மிளகும் சேர்த்துக் குழைத்து, பாணிற்குள் வைத்து வெட்டித் தருவாள், எனக்கு அதுவே அமிர்தமாக இருக்கும். அதேபோல அப்பெண்மணி கேட்கும் உணவுகளை அக்கா செய்துகொடுப்பாள். எங்களைக் கொழும்பிற்குப் பாதுகாப்பாகக் கூட்டிவந்து, பாடசாலைகள் தேடி, கெஞ்சி மன்றாடி, அனுமதியெடுத்து, எமது செலவுகளுக்கு ஒழுங்குகள் செய்து, நாம் தங்குவதற்கும் இடம்தேடிக்கொடுத்து, நாம் இனிமேல் பாதுகாப்பாக இருப்போம் என்கிற நம்பிக்கையுடன் மீளவும் யாழ்ப்பாணம் திரும்பினார் அன்ரா.
-
சிஸ்ட்டர் அன்ரா
கத்தோலிக்கப் பாடசாலைகள் கையை விரித்துவிட, மீதமாயிருந்த ஒரே ஆண்கள் தமிழ்ப் பாடசாலை பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மட்டும்தான். ஆனால் அங்கோ வடக்குக் கிழக்கில் இருந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த பல தமிழ் மாணவர்கள் அண்மையில் இணைந்திருந்தமையினால், அங்கும் அனுமதி கிடைப்பது கடிணம் என்றே எமக்குத் தோன்றியது. ஆனாலும் மனம் தளராத அன்ரா, இன்னொரு காலைப்பொழுதில் என்னை அழைத்துக்கொண்டு அங்கு சென்றார். அங்கு அதிபராக இருந்தவர் மட்டக்களப்பைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்று நினைவு. அக்காலை வேளையில் மிகவும் சுருசுருப்பாக பாடசாலைப் பணிகள் நடந்துகொண்டிருக்க, அதிபர் தனது அறைக்கு வரும்வரை அமைதியாகக் காத்திருந்தோம். சிறிது நேரத்தின் பின்னர் அறைக்கு வந்த அதிபரை நாம் சந்தித்தோம். முதலில் என்னைப்பற்றி வினவிய அதிபர், கல்லூரியில் இணைவதற்கு எனக்குத் தகமை இருக்கின்றதா என்று பரிசோதித்தார். சாதாரணதரப் பெறுபேறுகள் முதற்கொண்டு பல விடயங்கள் குறித்துக் கேட்டார். இறுதியில், "சிஸ்ட்டர், எனது வகுப்புக்களில் மாணவர்கள் நிரம்பி வழிகிறார்கள். அவர்களைப் பராமரிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கிறோம், அப்படியிருக்க உங்கள் பெறாமகனை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது?" என்று உண்மையான வருத்தத்துடன் வினவினார். "அவனுக்கொரு மூலையில் இருக்கவிட்டாலும், இருப்பான், வாங்கு மேசை கூட வேண்டாம், அவன் சமாளிப்பான்" என்று கூறவும், "சரி, உங்கள் விருப்பம்" என்று ஒரு வகுப்பில் இணைத்துவிட்டார். ஆனாலும் நாமும் பணம் கட்டவேண்டி இருந்தது. ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்கள் என்று நினைவு. பீட்டர்ஸ் கல்லூரியில் கேட்ட 15,000 ரூபாய்களுடன் ஒப்பிடும்பொழுது மிகக்குறைவான பணம். சிஸ்ட்டர் அன்ரா கட்டினார், எங்கிருந்து பணம் வந்திருக்குமோ? எனக்குத் தெரியாது. சரி, பாடசாலை கிடைத்துவிட்டது. இனிமேல் என்னைத் தங்கவைக்க இடம் தேடவேண்டும். அதற்கும் பணம் வேண்டும். யார் தருவார்? இப்படி பல சிந்தனைகள் அன்ராவின் மனதில். அவுஸ்த்திரேலியாவில் வாழ்ந்துவந்த எனது மாமாக்கள் (அன்ராவின் இளைய சகோதரர்கள்) இருவரிடமும் உதவி கேட்டார். ஒருவர் உதவ முன்வந்தார். மற்றையவர் உதவும் நிலையில் இல்லை என்று கூறப்பட்டது.
-
சிஸ்ட்டர் அன்ரா
கொழும்பை வந்தடைந்ததும் பம்பலப்பிட்டி, லொறிஸ் வீதியில் அமைந்திருக்கும் கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் சில நாட்கள் சிஸ்ட்டர் அன்ராவுடன் தங்கியிருந்தோம்.எங்களை எப்படியாவது நல்ல பாடசாலைகளில் சேர்த்துவிடவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். நான் 11 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும்போதே மட்டக்களப்பில் போர் ஆரம்பித்திருந்தது. அக்கா உயர்தரப் பரீட்சைக்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்தாள். கன்னியாஸ்த்திரிகள் மடம் அமைந்திருந்த பகுதியில் உள்ள தமிழ் மொழிப் பாடசாலையான புனித மரியாள் மகாவித்தியாலயத்தில் அக்காவைச் சேர்த்துவிட்டார். எனக்குப் பாடசாலை கிடைப்பது கடிணமாகவிருந்தது. 1979 ஆம் ஆண்டில் இருந்து 1982 ஆம் ஆண்டுவரை நான் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரியில் எனது சிறுபராயத்தைக் கழித்திருந்தேன். ஆகவே அங்கு சென்று, பழைய மாணவனான எனக்கு அனுமதி தருகிறார்களா என்று பார்க்கலாம் என்று ஒரு காலைப்பொழுதில் என்னையும் அழைத்துக்கொண்டு அக்கல்லூரிக்குச் சென்றார் சிஸ்ட்டர் அன்ரா. நான் படித்த காலத்தில் இருந்ததைக் காட்டிலும் கல்லூரி மிகவும் மாறிப்போயிருந்தது. விசாலமானதாகவும், நவீனமானதாகவும் காணப்பட்டதாக ஒரு பிரமை. கல்லூரி அதிபராகவிருந்த பாதிரியார் ஒருவருடன் என்னை கல்லூரியில் இணைக்க முடியுமா என்று இரைஞ்சுவது போலக் கேட்டுக்கொண்டு நின்றார் அன்ரா. ஆனால் அதிபருக்கோ அதில் சிறிது விருப்பமும் இருக்கவில்லை. கத்தோலிக்கப் பாடசாலையான அக்கல்லூரிக்கு இணையும் மாணவர்கள் பெரும்பாலும் வசதி படைத்தவர்கள். ஆகவே இணையும்போது பாடசாலை வளர்ச்சி நிதிக்கென்று பாடசாலை நிர்வாகம் கேட்கும் பணத்திற்கு அதிகமாகக் கொடுத்து இணைந்துகொள்பவர்கள். அப்படியிருக்கும்போது கன்னியாஸ்த்திரி ஒருவர் கூட்டிவந்திருக்கும் ஏழ்மையான மாணவனை கல்லூரியில் ஏற்றுக்கொள்ள அவருக்கு மனம் வரவில்லை. "மன்னிக்க வேண்டும் சிஸ்ட்டர், தமிழ் மொழி வகுப்புக்களில் இடமில்லை, எல்லா வகுப்புக்களும் நிரம்பி வழிகின்றன, நீங்கள் வேறு பாடசாலை பாருங்கள்" என்று கூறினார். "பாதர், அவனுக்குத் தேவையான மேசையையும், கதிரையினையும் நானே வாங்கித் தருகிறேன், ஏதோ ஒரு மூலையில் அவனையும் இருக்க விடுங்கள்" என்று வேண்டத் தொடங்கினார். எனக்கு முன்னாலேயே எனது அன்ரா அப்பாதிரியாரிடம் இரைஞ்சிக் கேட்பதைப் பார்த்தபோது மிகுந்த கவலையாக இருந்தது. ஆனால் அந்தப் பாதிரியாரோ விடாப்பிடியாகவே மறுத்துவிட்டார். "உங்களுக்கென்று தனியான தமிழ்ப் பாடசாலைகள் இருக்கின்றனவே, அங்கு சென்று கேட்டுப்பாருங்கள்" என்று கையை விரிக்க மிகுந்த ஏமாற்றத்துடன் அன்ராவின் மடம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். சரி, இனி என்ன செய்யலாம்? கல்கிஸ்ஸையில் இருக்கும் தோமஸ் கல்லூரியில் கேட்டுப்பார்க்கலாம் அல்லது ஜோசப் கல்லூரியில் கேட்டுப்பார்க்கலாம் என்று தனக்குத் தெரிந்த கன்னியாஸ்த்திரிகள், பாதிரிகள் ஊடாக அவர் முயன்று பார்த்தார். இவை எல்லாமே பெருந்தொகைப் பணத்தை பெற்றுக்கொண்டே அனுமதியளிப்பார்கள், பணமின்றி எவருமே உள்ளே வர முடியாது, உங்களின் பெறாமகன் எவ்வளவுதான் கெட்டிக்காரனாக இருந்தாலும் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதே அனைவரினதும் பதிலாக இருந்தது.
-
சிஸ்ட்டர் அன்ரா
1990, பேச்சுக்கள் முறிவடைந்து புலிகளுடன் பிரேமதாசா யுத்தத்தினை ஆரம்பித்திருந்த காலம். மட்டக்களப்பின் பலவிடங்களிலும் படுகொலைகள். என்னுடன் கூடப்படித்த பல மாணவர்கள் கொல்லப்பட்டார்கள், அல்லது காணாமலாக்கப்பட்டார்கள். அடிக்கடி நடந்த சுற்றிவளைப்புக்கள், தலையாட்டிகளுக்கு முன்னால் நடந்த அணிவகுப்புக்கள் என்று நகரே அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்த கொடிய ஊழிக்காலம் அது. இரவுகளில் கேட்கும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள், மரண ஓலங்கள் என்று தூக்கமின்றி விடுதியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, பொழுதுகள் கழித்த இரவுகள். எமது விடுதியை இராணுவம் சுற்றிவளைத்தபோது, பாதிரியர்களாக இருந்த விடுதி பராமரிப்பாளர்களுடன் பேசிக்கொண்டே மாணவர்களை நோட்டம் விட்ட சிங்கள இராணுவக் கப்டன். உயர்தரம் படித்துக்கொண்டிருந்த விடுதி மாணவர்களை அழைத்துச் செல்லப்போகிறேன் என்று அவன் அடம்பிடிக்க, பாதிரியார்களோ அவனிடம் கெஞ்சி மன்றாடி அம்மாணவர்களை விடுவித்துக்கொண்ட பொழுதுகள் என்று உயிர் வாழ்தலுக்கான நிச்சயம் இன்றி கடந்துபோன நாட்கள். சில மாதங்களாக மட்டக்களப்பு நகரிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்லும் வீதிகள் முற்றாக மூடப்பட்டு, அகோரமான படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வந்தன. மரணங்களை நாள்தோறும் கண்முன்னே கொண்டுவந்து காட்டிய மூன்று, நீண்ட, கொடிய மாதங்கள். ஒருவாறு மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான புகையிரதச் சேவை வாழைச்சேனையிலிருந்து நடைபெறத் தொடங்கியது. ஆனால், வாழைச்சேனைவரை பஸ்ஸில்த்தான் பயணிக்கவேண்டும். மட்டக்களப்பிற்கும் வாழைச்சேனைக்கும் இடையிலான வீதியின் பகுதியில் அமைந்திருக்கும் முஸ்லீம் பிரதேசங்களில் பஸ்ஸை மறித்து, ஆண்களை இறக்கி வெட்டத் தொடங்கியிருந்தார்கள் முஸ்லீம் ஊர்காவற்படையினர். என்னையும் அக்காவையும் எப்படியாவது பாதுகாப்பாக மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்குக் கூட்டிவந்துவிட வேண்டும் என்று சிஸ்ட்டர் அன்ரா உறுதி பூண்டார். இதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று, அங்கிருந்து மட்டக்களப்பிற்கு அவர் வந்தார். அக்காவிற்கும் சிஸ்ட்டர் அன்ராவிற்கும் இருக்கக் கிடைத்த ஆசனத்தில், அவர்களின் கால்களுக்குக் கீழே நாள் ஒளிந்துகொள்ள , எங்களைப்போலவே இன்னும் பலரை ஏற்றிக்கொண்டு அந்தப் பஸ் தனது பயணத்தை ஆரம்பித்தது. முஸ்லீம்களால் நடத்தப்படும் படுகொலைகளில் இருந்து பயணிகளைக் காக்கவென செஞ்சிலுவைச் சங்கமோ அல்லது அதுபோன்றதொரு அமைப்போ பஸ்ஸின் முன்னால்ச் செல்ல, மெதுமெதுவாக பஸ் பின்னால் தொடர்ந்து சென்றது. சிலவிடங்கள் பஸ்ஸை மறித்து உள்ளே வர முயன்ற காடையர்களை முன்னால்ச் சென்ற வாகனத்தில் இருந்த அதிகாரிகள் தடுத்துவிட்டனர். வாழைச்சேனையில் புகையிரதத்தில் ஏறும்வரை பஸ்ஸில் இருந்த அனைவரும் உயிர் பிழைப்போம் என்கிற நம்பிக்கையில் இருக்கவில்லை என்றே கூறலாம்.
-
சிஸ்ட்டர் அன்ரா
பாடசாலையில் கணிதபாடம் எனக்குப் புரியவில்லை. சின்னையா டீச்சர் சொல்லித் தந்த கணிதம் எனது மூளைக்குள் இறங்கவில்லை. மிகவும் கடிணப்பட்டேன். ஒரு வார விடுமுறை நாளில் என்னைப் பார்க்க விடுதிக்கு வந்த சிஸ்ட்டர் அன்ராவிடம் இதுகுறித்துக் கூறினேன். சிசிலியா பெண்கள் பாடசாலையில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்த அவர், எனக்கு உதவ முன்வந்தார். தாண்டவன்வெளியில் இருந்த அவரது மடத்திற்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் என்னை வரச்சொன்னார். தனது வேலைப்பழுவிற்கு நடுவிலும் எனக்குக் கணிதம் சொல்லித் தந்தார். காலையில் 8 மணிக்கு அங்கு சென்றுவிடும் எனக்கு காலையுணவு, மதிய உணவு என்றெல்லாம் தந்து கணிதம் படிப்பித்தார். எனக்கும் கணிதம் சிறிது சிறிதாகப் பிடிக்கத் தொடங்கியது. அவரிடம் கணிதம் கற்ற சில மாதங்களிலேயே பாடசால்யில் என்னால் ஓரளவிற்கு கணிதம் செய்ய முடிந்தது. கூடவே பேரின்பராஜா சேரும் வந்து சேர்ந்துவிட, கணித பாடம் பிடித்துப் போயிற்று. நான் மட்டக்களப்பில் வசிக்கத் தொடங்கிய முதலாவது வருடத்தில் சிஸ்ட்டர் அன்ரா யாழ்ப்பாணத்திற்கு மாற்றாலாகிச் சென்றார். கவலை என்னை முழுமையாக ஆட்கொள்ள, அவரை வழியனுப்பி வைத்தேன். அக்கா அப்போதும் மட்டக்களப்பிலேயே படித்துவந்தாள். ஆனாலும் சிஸ்ட்டர் அன்ரா போனது மனதை வெகுவாக வாட்டியிருந்தது. சில நாட்கள் அழுதேன், ஆனாலும் வேறு வழியில்லை. வந்தாயிற்று, படித்தே ஆகவேண்டும்.
-
சிஸ்ட்டர் அன்ரா
மட்டக்களப்பில் ஒரு சில நாட்கள் சிஸ்ட்டர் அன்ராவின் மடத்தில் தங்கவைக்கப்பட்டேன். அதன்பிறகு புளியந்தீவில் இயங்கிவந்த சிறுவர்களுக்கான விடுதியில் சேர்க்கப்பட்டேன். நோர்வேயில் இருந்து யாரோ ஒருவர் அநாதைகளுக்கென்று அனுப்பிய பணம் எனக்குபடிக்கவும், உயிர்வாழவும் உதவியது. மாதத்திற்கு 450 ரூபாய்கள். சிஸ்ட்டர் அன்ராவே வந்து விடுதியில் கட்டிச் சென்றார். அப்படி ஒவ்வொருமுறையும் வரும்போதும் தன்னைப் பார்க்க வருவோர் கொண்டுவரும் பழங்கள், இனிப்புக்கள் என்று கொண்டுவந்து தருவார். அவரைக் காண்பதற்காகவே நாட்கணக்கில் காத்திருக்கத் தொடங்கினேன். எனக்கான பணத்தினை விடுதிப் பராமரிப்பாளரிடம் கட்டிவிட்டு, வெளியே விருந்தினர்க்காகப் போடப்பட்டிருக்கும் வாங்கில் என்னுடன் இருந்து சிறிது நேரம் பேசிவிட்டு, தான் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அவர் தாண்டவன்வெளி நோக்கிச் செல்வார். அவர் சென்றபின்னரும் அவர் போன வழியே கண்ணிமைக்காது பார்த்துக்கொண்டிருப்பேன். அங்கு எனக்கிருந்த உறவு அவர் மட்டும்தான். எனது அன்னையே என்னைப் பிரிந்துபோவது போன்று துக்கம் கழுத்தினுள் இறுககிக் கிழிக்க, வேறு வழியின்றி விடுதிக்குள் நுழைந்து, தொலைந்துபோவேன். இப்படியே மாதம் ஒருமுறை வருவார், சில நிமிடங்களாவது பேசுவார், அம்மாவின் குரல் அவரிடமும் அவ்வப்போது எட்டிப் பார்க்கும், அம்மாவுடன் பேசுவதுபோன்ற பிரமை ஏற்படும். அன்றிலிருந்து எனக்கு அம்மா அவர்தான் என்று நினைக்கத் தொடங்கினேன். கொடுமையான தகப்பனாரிடமிருந்து என்னை விடுவித்து, தனது சொந்த முயற்சியில், கன்னியாஸ்த்திரியாக இருந்தபோதிலும் என்னை மட்டக்களப்பிற்குக் கூட்டிவந்து, விடுதியில் இடம் எடுத்து, எனக்கான செலவுகளைச் செய்து, பாடசாலையிலும் தனக்குத் தெரிந்தவர்கள் ஊடாக படிக்க உதவிய அவர் அன்னையன்றி வேறு யாராக இருக்க முடியும்?
-
சிஸ்ட்டர் அன்ரா
மட்டக்களப்பில் இருந்து விடுமுறைக்காக அக்கா வந்து தங்கியது வெறும் 2 வாரங்கள்தான். அவ்விரு வாரங்களிலும் அக்காவும், எனது சித்தியும் (கன்னியாஸ்த்திரி) எனது தகப்பனாரிடம் மன்றாடாத நாளில்லை. "அவனை என்னுடன் விடுங்கள், நான் படிப்பிக்கிறேன், பாவம், அவனது படிப்பைக் குலைக்கவேண்டாம்" என்றெல்லாம் அவர் மன்றாடிப்பார்த்தார். தகப்பனாரோ சிறிதும் இளகவில்லை. "அவன் போனால் ஆர் வீட்டில வேலையெல்லாம் பாக்கிறது? தென்னை மரங்களுக்கும், பூக்கண்டுகளுக்கும் ஆர் கிணற்றிலை இருந்து தண்ணி அள்ளி இறைக்கிறது? ஆர் புல்லுப் பிடுங்கிறது? ஆர் கடைக்குப் போறது? அவன் இங்கேயே இருக்கட்டும், ஒரு இடமும் விடமாட்டன்" என்று பிடிவாதம் பிடிக்கத் தொடங்கினார். ஆனால் அக்காவும், சித்தியும் தொடர்ச்சியாகக் கெஞ்சவே, "ஒரு சதமும் தரமாட்டன், கூட்டிக்கொண்டு போறதெண்டால், கூட்டிக்கொண்டு போங்கோ" என்று இறுதியாகச் சம்மதித்தார். சிஸ்ட்டர் அன்ரா எனக்காகச் செய்த முதலாவது நண்மை, தகப்பனாரின் கொடுங்கரங்களில் இருந்து , தழைகளில் இருந்து என்னை விடுவித்தது. தினமும் கொடுமைகளையே சந்தித்து, பழக்கப்பட்ட இருண்ட வாழ்வினுள் இருந்து எனக்குக் கிடைத்த முதலாவது விடுதலை. எதற்காக அடிவாங்குகிறேன், எதற்காகத் திட்டப்படுகிறேன் என்கிற தெளிவே இல்லாது தினமும் வாழ்வில் சித்திரவதைகளை அனுபவித்த எனக்குக் கிடைத்த விடுதலை. ஆகவே மகிழ்ந்துபோனேன். அக்காவுடனும், சிஸ்ட்டர் அன்ராவுடனும் மட்டக்களப்பிற்குச் சென்று வாழப்போகிறேன் என்கிற உணர்வே என்னை மகிழ்விக்க, புறப்படும் நாளிற்காகத் தவமிருக்கத் தொடங்கினேன். ஆனால் மனதினுள் இனம்புரியாத அச்சம் ஒன்று தொடர்ச்சியாக இருந்துவந்தது. அதாவது, தகப்பனார் என்னை விடுதலை செய்யச் சம்மதித்திருந்தத்போதும் , கடைசி நாளில்க் கூட அவர் அதனைத் தடுத்து நிறுத்திவிடலாம். தனக்கும் தனது புதிய மனைவிக்கும் சேவை செய்ய என்னை வீட்டிலேயே மறித்துவிடலாம். தெய்வாதீனமாக அது நடக்கவில்லை, இடையிடையே "நீ அங்கை போனால் வீட்டில ஆர் வேலை பார்க்கிறது? ரஞ்சன வேலை செய்யச் சொல்லி ஏவ ஏலாது, அவனுக்கு இன்னும் 10 வயசுதான்..." என்று இடையிடையே சுருதி மாற்றிப் பேசியபோதும் என்னை அவர் மறிக்கவில்லை. போக அனுமதித்துவிட்டார். முதலாவது வெற்றி. எனக்கு, சிஸ்ட்டர் அன்ராவிற்கு, அக்காவுக்கு!
-
சிஸ்ட்டர் அன்ரா
நேற்று நடந்தது போல இன்னமும் அப்படியே மனதில் பதிந்திருக்கின்றது. 1988 சித்திரையாக இருக்கலாம். தனது அனுமதியின்றி எனது மைத்துனனை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் அருகே இருந்து பார்த்துக்கொண்டமைக்காக எனது தகப்பனார் எனக்குத் தந்த தண்டனை. இரவு முழுதும் தூக்கம் துறந்து, உணவின்றி, களைப்புடன் வீடு வந்து உறங்கலாம் என்று எண்ணி வாசல்வந்து சேர்ந்தபோது, பூட்டிக்கிடந்தது கண்டு களைத்துப்போய் ஆங்கே இருந்துவிட்ட அந்தக் காலைப்பொழுது. அரைத்தூக்கத்தில் வாசலுக்கு வெளியே, படலையில் சாய்ந்து உறங்கத் தொடங்க, உள்ளிருந்து கேட்ட அகோரமான குரல், "பயங்கரவாதியே, இங்க ஏன் வந்தனீ? உள்ளுக்கை கால் வைச்சியெண்டால் வெட்டிக் கொல்லுவன்". கனவில் கேட்பதாக நினைத்து விழித்தபோது வீட்டின் முன் கதவில் தகப்பனார் கையில் கத்தியுடன். ஏன் , எதற்கென்றுகூடத் தெரியாது நான் தண்டிக்கப்பட்ட அப்பொழுது. அவரது கோபம் அடங்கும், ஒருவாறு வீட்டினுள் சென்றுவிடலாம் என்கிற நம்பிக்கையெல்லாம் சிறிது சிறிதாக அற்றுப்போய், கண்களில் கோபம் கொப்பளிக்க அவர் கையில்க் கிடந்த கத்தியைத் தவறாமல் எனக்கு நேரே பிடித்திருக்க, வேறு வழியின்றி தெல்லிப்பழை நோக்கி நடந்த அக்காலைப்பொழுது. கையில் பணமின்றி, நடப்பதற்கும் உடலில் பலமின்றி, மருதனார் மடத்தின் வீதியில் இருந்துகொண்டே வீதியில் செல்வோரிடம் பிச்சையாகப் பணம் கேட்டு, யாரோ ஒருவரின் புண்ணியத்தால் தெல்லிப்பழைவரை செல்ல முடிந்த அதே காலைப்பொழுது. அப்பம்மாவீட்டிற்குச் சென்று, "இனிமேல் அவருடன் வாழமுடியாது, நான் இங்கேயே உங்களுடன் இருக்கப்போகிறேன்" என்று அழுதழுது அவர்களிடம் மன்றாடிய காலைப்பொழுது. இற்றுடன் 37 வருடங்கள் கரைந்தோடிவிட்டன. நான் வீட்டிலிருந்து துரத்தப்பட்ட நாளில் இருந்து சுமார் இரு வாரங்களுக்கு தகப்பனார் என்னைத் தேடவில்லை. உயிருடன் இருக்கின்றேனா இல்லையா என்பது கூட அவருக்குப் பொருட்டாக இருந்திருக்காது என்பது திண்ணம். இதே காலப்பகுதியில் மட்டக்களப்பில் கன்னியாஸ்த்திரிகளினால் பராமரிக்கப்பட்டு வந்த மடம் ஒன்றில் எனது அக்கா படித்துக்கொண்டிருந்தாள். அது விடுமுறை காலமாதலால் யாழ்ப்பாணம் வந்திருந்தாள். வழமைபோல கோண்டாவிலில் நாம் வாழ்ந்த வீட்டிற்கு வந்து என்னைத் தேடியிருக்கிறாள். ரஞ்சித் எங்கே என்று தகப்பனாரிடம் கேட்டபோது அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அவனை அடித்து விரட்டிவிட்டேன் என்று மட்டுமே அவரால் கூற முடிந்தது. அவன் எங்கு போனான், உயிருடன் இருக்கிறானா என்பது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.அக்கா என்னைத் தேடத் தொடங்கினாள். முதலில் உறவினர்கள், அம்மம்மாவின் பக்கத்திலிருந்து அவள் தேடினாள். பின்னர் அப்பாவின் உறவினர்களிடம் தேடினாள், தெல்லிப்பழையில் நான் இருப்பதைத் தெரிந்துகொண்டாள். அப்போது எனது தாயாரின் தங்கை, ஒரு கன்னியாஸ்த்திரி, மட்டக்களப்பில் படிப்பித்துவந்தார். இவரின் உதவியினாலேயே அக்கா மட்டக்களப்பின் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தாள். தகப்பனார் என்னை வீட்டை விட்டுத் துரத்தியதுபற்றி அக்கா எனது சித்தியிடம் தெரிவித்திருக்க வேண்டும். உடனடியாக செயலில் இறங்கிய அவர் எப்படியாவது என்னை எனது தகப்பனாரின் கொடுங்கரங்களில் இருந்து மீட்டுவிடவேண்டும் என்று அங்கலாய்க்கத் தொடங்கினார். மட்டக்களப்பில் இருந்து வந்துசேர்ந்த அக்கா எனது நிலைபற்றி உறவினர்களிடம் பேசத் தொடங்கவே தகப்பனாரின் நிலை தர்மசங்கடமாகிப்போனது. மூத்த இரு பிள்ளைகளையும் மனைவி இறந்தவுடன் வீட்டை விட்டுத் துரத்திவிட்டான் என்பதை உறவினர்கள் பேசத் தொடங்கவே வேறு வழியின்றி என்னை வீட்டிற்குள் அனுமதித்தார். ஆனால் படிக்கவைக்க அவர் விரும்பவில்லை. "வீட்டில் நிண்டுகொண்டு வேலைகளைப் பார், உன்னைப் படிக்க வைக்க என்னிடம் பணமில்லை" என்று கையை விரித்துவிட்டார். எனக்கும் வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எங்காவது கூலிவேலைக்குச் சென்றுவிடலாம் என்பதே அப்போது எனக்கிருந்த ஒரே தெரிவு. ஆனால் எனக்கோ வயது 15.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து முற்றாகத் துடைத்தழித்து விடுவோம் என்பதே ஈரானின் தாரக மந்திரம். இவ் இலக்கினை நோக்கியே ஈரான் தனது இராணுவ, ஆயுத பலத்தினை உருவாக்கி வந்திருக்கிறது. இஸ்ரேலினைத் தொடர்ச்சியாக முற்றுகைக்குள் வைத்திருக்கும் நோக்கத்திலேயே இஸ்ரேலினைச் சூழ்வுள்ள இஸ்லாமிய நாடுகள், மற்றும் தனது முகவர் அமைப்புக்களை உருவாக்கி, வளர்த்து, இராணுவ மயப்படுத்தி வந்திருக்கிறது. பலஸ்த்தீன அமைப்புக்களான ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத், லெபனானின் ஹிஸ்புள்ளா, ஆசாத்தின் சிரிய அரசு, ஈராக்கின் இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள், யெமெனின் ஹூத்தீக்கள் என்று பல முகவர் அமைப்புக்களை இஸ்ரேலின் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துமாறு ஊக்குவித்து வந்திருக்கிறது. ஆக 1967 ஆம் ஆண்டின் ஆறு நாள் யுத்தம் மற்றும் 1973 ஆம் ஆண்டின் யொம் கிப்புர் யுத்தம் ஆகியவற்றை நடத்தி இஸ்ரேலினை முற்றாக அழித்துவிட சூழவுள்ள இஸ்லாமிய நாடுகள் முயன்று, தோற்றதன் பின்னர், நவீன காலத்தில் ஈரான் தனது முகவர்களைக் கொண்டு இவ்வாக்கிரமிப்பினை நடத்த முயல்கிறது. யூத இனம் இரண்டாம் உலக யுத்தத்தின்போது சுமார் ஆறு மில்லியன் மக்கக்ளை இழந்திருந்தது. கடந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் இனக்கொலையாக இது பார்க்கப்படுகிறது. இன்று வெறும் 9 மில்லியன் மக்களை மட்டுமே கொண்டு, 20,000 சதுரக் கிலோமீட்டர்கள் பரப்பளவைக் கொண்டிருக்கும் இஸ்ரேல் மீது நடத்தப்படும் எந்தவொரு அணுவாயுதத் தாக்குதலும் நிச்சயமாக இன்னொரு பாரிய இனக்கொலையாகவே முடிய வாய்ப்பிருக்கிறது. ஆகவேதான், தமது இனம் இரண்டாவது முறையாகவும் இன்னொரு இனக்கொலையினைச் சந்தித்துவிடக் கூடாதென்பதில் யூதர்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள். (கிறீஸ்த்துவிற்குப் பின்னரான காலத்தில் அன்றைய இஸ்ரேலில் இருந்து அகதிகளாக உலகெங்கும் அடித்துவிரட்டப்பட்ட யூதர்களைத் தேடித்தேடி மீளவும் தமது சரித்திர நிலத்திற்குக் கொண்டுவந்துசேர்க்க இஸ்ரேலிய அரசாங்கங்கள் கடந்த 70 வருடங்களாக முயன்று வருகின்றன. இதன் ஒரே நோக்கம் யூதவினம் அழியாது, ஓரினமாக ஓரிடத்தில் வாழவேண்டும் என்பதுதான்). தனது இனத்தை முற்றாக அழித்தும், தனது சின்னஞ்சிறிய நாட்டை முற்றாக ஆக்கிரமிக்கவும் மட்டுமே ஒரு நாடு அணுவாயுதத்தினைத் தயாரிக்கின்றது என்றால், அவ்வணுவாயுதத்தை எப்பாடுபட்டாவது அழித்துவிட பாதிக்கப்பட்ட அவ்வினம் முயல்வதில் தவறு இருக்கின்றதா? ஈரானினால் உருவாக்கப்பட்டு வரும் அணுச்சக்தி எதற்காகப் பயன்படுத்தப்படப் போகின்றது? தனது சக்தித் தேவைக்காக வெறும் 1 வீதத்தினை மட்டுமே அணுச்சக்தியில் இருந்து பெற்றுக்கொண்டுவரும் ஈரானிற்கு மிகப்பெரும் அணுச்சக்தியைக் கொடுக்கப்போகும் பல அணுவாலைகள் எதற்கு? தனது நிலப்பரப்பில் பெருமளவு எண்ணெய்வளத்தையியும், இயற்கை வாயுவையும் கொண்டிருக்கும் ஈரான், அணுச்சக்தியில் மிகுந்த கவனம் செலுத்த விரும்புவது எதற்காக? அணுவாயுதம் ஒன்றினை உருவாக்குவதற்கான மிகத்தூய . செறிவான யுரேனியத்தை உருவாக்கியும் சேமித்து வைப்பது எதற்காக? மருத்துவத் தேவைக்காகவும், சக்தித் தேவைக்காகவும் என்று கூறிக்கொண்டே இத்தேவைகளை நிவர்த்திசெய்யும் அளவினை விட பலமடங்கு சக்திவாய்ந்த யுரேணியம் பாதுகாப்பாக தயாரிக்கப்பட்டு வருவது எதற்காக? தான் உருவாக்கும் அணுச்சக்தி வெறுமனே மருத்துவத் தேவைக்காகவும், மின்சாரத்திற்காகவும் மட்டும்தான் என்றால், இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து முற்றாகத் துடைத்தழிப்போம் எனும் கொள்கையினை ஈரானின் முல்லாக்கள் இதுவரை கைவிடாது இருப்பதும், அக்கொள்கையினை நோக்கி தமது கவனத்தை தொடர்ச்சியாக வைத்திருப்பதும் எதற்காக? அணுவாயுதத்தை தயாரிக்கும் நோக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தன்னைச் சுற்றியிருக்கும் நாடுகளுடன் சுமூகமான முறையில் பயணிப்பதற்கு ஈரானிற்கு பல சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. ஒபாமாவின் ஆட்சியில் அணுவாயுத நோக்கத்தினைக் கைவிட்டு ஏனைய துறைகளில் கவனம் செலுத்தவென அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன ஈரானுடன் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால் இவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டபோதும், 2006 இல் எதிரிகள் எவரிடமிருந்து வரும் தாக்குதல்களில் இருந்து தனது அணுவாயுதத் திட்டத்தைப் பாதுக்காகவென போர்ட்டொவில், மலைகளுக்கு நடுவில், 300 அடிகள் ஆளத்தில், மிகப்பாதுகாப்பான அணு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி, அணுவாயுத உற்பத்திக்கான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் பாதுகாத்து வருகிறது. இந்த அணு ஆராய்ச்சி நிலையம் உட்பட மூன்று அணுவாராய்ச்சி நிலையங்களே இன்று தகர்க்கப்பட்டிருக்கின்றன. என்னைப்பொறுத்தவரையில் சர்வாதிகாரிகளிடமும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமும் இருக்கும் மிகப்பெரும் அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்கள் மனித குலத்தின் இருப்பிற்கே ஆபத்தானவை. வட கொரியா, ஈரான், பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை இதற்காகக் குறிப்பிடலாம். ஏனெறால், தமது சொந்த நலனிற்காகவும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், மதவெறியினால் உந்தப்பட்டும் இவர்கள் தம்மிடமிருக்கும் நாசகார ஆயுதத்தினை எப்போது வேண்டுமானாலும் பாவித்துவிடுவார்கள். ஆகவேதான் இவர்களிடம் அணுவாயுதங்கள் உட்பட நாசகார ஆயுதங்கள் சேர்வதை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பது அவசியமாகிறது. ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் நடத்திய தாக்குதல்களை நியாயப்படுத்த முடியும். தவறேயில்லை.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
https://edition.cnn.com/world/live-news/israel-iran-conflict-06-22-25-intl-hnk https://www.youtube.com/watch?v=1ewMRyeK1x0
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானின் மூன்று அணுவாயுத நிலைகள் மீதும் அமெரிக்கா பாரிய குண்டுத்தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. அமெரிக்காவின் ஆறு ராட்சத பி 2 ரக விமானங்களைப் பயன்படுத்தி ஒவ்வொன்றும் 30,000 இறாத்தல்கள் நிறைகொண்ட 12 பங்கர் பஸ்ட்டர் குண்டுகளைப் பயன்படுத்தி இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. https://edition.cnn.com/world/live-news/israel-iran-conflict-06-22-25-intl-hnk BBC NewsUS bombs Iranian nuclear sites as Trump says Tehran must...Trump says three locations, including Fordo, were struck as Washington joins Israel's attack on Tehran's nuclear programme.https://www.reuters.com/world/israel-iran-live-trump-address-nation-after-us-bombs-nuclear-sites-iran-2025-06-22/ https://www.cbc.ca/news/world/israel-iran-1.7567750
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
நீங்கள் இணைத்த எக்ஸ் தள வீடியோவைப் பார்த்தவுடன் ஒருகணம் உண்மையென்று எண்ணிவிட்டேன். ஆனால் அது வீடியோ கேம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி என்று பின்னர்த்தான் படித்து அறிந்தேன். என்றாலும் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் வீடியோ கேமின் இப்பகுதிக்கும் அதிக வேறுபாடில்லை. ஒருவேளை இதனை வைத்துத்தான் இத்தாக்குதலை அவர்கள் திட்டமிட்டிருக்கலாம். ரஸ்ஸியாவின் நீண்டதூர குண்டுவீச்சு விமானங்களின் பலத்தில் 34% வீதம் அழிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான விமானங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றரை வருடங்களாகத் திட்டமிட்டு, சிறிய ட்ரோன்களை ரஸ்ஸியாவினுள் கடத்திவந்து, அங்கிருந்தே அவற்றினை இயக்கி அழித்திருக்கிறார்கள். கில்லாடிகள்தான். புலிகளின் தாக்குதல் உத்திகளும் உக்ரேனியர்கள், பலம்பொறுந்திய ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடத்தும் தாக்குதல்களும் ஒரேமாதிரியானவை. குண்டு நிரப்பிய படகுகளால் மோதுவது, குண்டுநிரப்பிய ட்ரோன்கள் (இது புலிகளுக்குக் கிடைக்கவில்லை) கொண்டு அழிப்பது என்று தமக்குக் கிடைக்கும் வளங்களைப் பாவித்து எதிரியை திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள். ரஸ்ஸியாவுக்கு விழுந்த அடியைப் பார்த்து ரஸ்ஸியர்கள் என்ன சொல்கிறார்களோ எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்தியாவில் பலர், "ஏன் ரஸ்ஸியா தனது விஸ்வரூபத்தைக் காட்டவில்லை, ஏன் புட்டின் ஐயா பொறுமை காக்கிறார்? ஏன் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையை முழுப்போராக மாற்றவில்லை? ஏன் அணுவாயுதத்தைப் பாவிக்கவில்லை?" என்று கோபம்கொண்டு கேள்விக்கு மேல் கேள்வியெழுப்பி வருகிறார்கள். விட்டால் புட்டின் ஒரு கையை பின்னால் மடித்துக்கொண்டு, மற்றைய கையினால் மட்டுமே போராடி வருகிறார் என்று சொன்னாலும் சொல்வார்கள். ஏனென்றால், இந்திய அமைதிப்படை அப்படித்தான் இலங்கையில் போராடியதாம்! நெல்லியடி மத்திய கல்லூரித் தாக்குதலில் பாரவூர்தியை கல்லூரிக் கட்டடத்தின் உட்பகுதிக்குள் செலுத்திவிட்டு சாரதி வெளியேறியேறி வந்துவிடவேண்டும் என்பதே ஆரம்பத்தில் இருந்த திட்டமாம். ஆனால் பாரவூர்தி உள்ளே வருவதைப் பார்த்துவிட்ட இராணுவத்தினர் அதன்மீது தாக்குதல் நடத்தவே அதனை எப்படியாவது உள்ளே செலுத்திச் செல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு, சாவு வருமென்று தெரிந்துகொண்டே மில்லர் அவர்கள் தொடர்ந்து உள்ளிருந்தார் என்று அறிந்தேன். இதுபற்றித் தெரிந்தவர்கள் கூறலாம்.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
கட்டுநாயக்க மற்றும் அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை ஆகியவையும் நினைவிற்கு வந்துபோகின்றன. ஒரே வித்தியாசம் இது ட்ரோன்களைக் கொண்டு நடத்தப்பட்டிருக்கிறது. எமது தாக்குதல்கள் போராளிகள் மூலம் நடத்தப்பட்டவை. Video appears to show Ukraine drone attack in Russia
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
வரிசையாக ரஎரிந்துகொண்டிருக்கும் ரஸ்ஸியாவின் நெடுந்தூர குண்டுவீச்சு விமானங்களின் ஒளிநாடா இணைக்கப்பட்டிருக்கிறது. Ukraine-Russia war live: Drones 'emerged from trucks' before strikes on bombers during major attack in Russia - BBC News ரஸ்ஸியாவின் நான்கு விமானத் தளங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை 41 குண்டுவீச்சு விமானங்கள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. தனது விமானத்தளங்கள் தாக்கப்பட்டதை ரஸ்ஸியா ஒத்துக்கொண்டிருக்கிறது. Watch moment Ukrainian drone strikes 'enemy bombers' after audacious attack inside Russia
-
பிரிகேடியர் பால்ராஜ் - போராளிகளால் பூஜிக்கப்பட்ட, எதிரிகளால் வியந்து போற்றப்பட்ட தமிழர்களின் ஒப்பற்ற தளபதி
மாரடைப்பு ஆனாலும் பால்ராஜ் எதிர்வுகூறியதன்படி நிகழ்வுகள் நடந்தேறவில்லை. அவர் எதிர்வுகூறி சரியாக மூன்று வருடங்களின் பின்னர், வைகாசி 2009 இல் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தார்கள். இப்போரின் இறுதிக் கட்டங்கள் தளபதி பால்ராஜின் மாவட்டமான முல்லைத்தீவிலேயே இடம்பெற்றிருந்தன. ஆனால் அன்று அவர் உயிருடன் இருக்கவில்லை. போர் முடிவடைவதற்கு ஒருவருடத்திற்கு முன்னர் அவர் இயற்கை எய்தியிருந்தார். புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஒன்றில் இருதய நோய்க்காகச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவேளை 2008 ஆம் ஆண்டு வைகாசி 20 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மாரடைப்பினால் அவர் இயற்கை எய்தினார். புலிகளின் இராணுவ ரீதியிலான தோல்வியினைத் தன் கண்களால் எதிர்கொள்ளும் அவலம் அவருக்கு இருக்கவில்லை. அவரது மறைவின் பின்னர் தலைவரினால் அவருக்கு பிரிகேடியர் எனும் நிலை வழங்கிக் கெளரவிக்கப்பட்டிருந்தது. முற்றும் நன்றி டி.பி.எஸ்.ஜெயராஜ், டெயிலி மிரர் ஆங்கில இணையம்
-
பிரிகேடியர் பால்ராஜ் - போராளிகளால் பூஜிக்கப்பட்ட, எதிரிகளால் வியந்து போற்றப்பட்ட தமிழர்களின் ஒப்பற்ற தளபதி
தீச்சுவாலை நடவடிக்கை உலக இராணுவ வல்லுனர்களால் அதிசயித்துப் பார்க்கப்படும் ஆனையிறவு படைத்தளம் வெற்றிகொள்ளப்பட்டு சரியாக ஒருவடத்தின்பின்னர் தளபதி பால்ராஜ் அவர்களின் தடுப்புச் சமர் வல்லமையின் உச்சத்தினை எம்மால்க் காணமுடிந்தது. 2001 ஆம் ஆண்டு சித்திரை 24 ஆம் திகதி ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கில் இராணுவத்தால் பாரிய முன்னெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட தீச்சுவாலை இராணுவ நடவடிக்கைக்கெதிராக பால்ராஜ் அவர்கள் நடத்திய தீர்க்கமான எதிர்ச்சமரே இச்சண்டையாகும். ஆனையிறவைக் கைப்பற்றும் கனவுடன் இராணுவ முன்னரங்கப் பகுதிகளான கிளாலி - எழுதுமட்டுவாள் - நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் ஆனையிறவு நோக்கி முன்னேறத் தொடங்கினர். ஆனால் முன்னேறிய இராணுவத்தினர் மீது கடுமையான எதிர்த்தாக்குதல்களை நடத்திய புலிகள் இராணுவத்தினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தினர். அதிசயிக்கும் ஆனையிறவு வெற்றி மற்றும் தீச்சுவாலை நடவடிக்கையினைத் தோற்கடித்ததன் மூலம் ஆனையிறவைத் தக்கவைத்துக்கொள்வதில் அவர் ஈட்டிய தீர்க்கமான வெற்றி ஆகியவற்றின் மூலம் புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவரான பால்ராஜ் அவர்களின் புகழ் மேலும் பரவத் தொடங்கியது. இதன்மூலம் தளபதி பால்ராஜ் அவர்கள் தமிழ் மக்களிடையே அசாதாரண வீரனாகப் போற்றப்படத் தொடங்கினார். மோசமாகிச் சென்ற அவரது உடல்நிலை எப்படியிருந்தபோதும் பால்ராஜின் உடல்நிலை சிறிது சிறிதாக மோசமடையத் தொடங்கியிருந்தது. பலவருடங்களாக இருதய நோயினால் அவஸ்த்தைப்பட்டுவந்திருந்த பால்ராஜ் அவர்கள் இறுதிப்பகுதியில் அந்நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு மேலதிகமாக சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோயினாலும் அவர் அவஸ்த்தைப்பட்டு வந்தார். புலிகளுக்கும் ரணில் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த 2003 பகுதியில் அவர் தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் மருத்துவ சிகிச்சைக்கான சிங்கப்பூரிற்குச் சென்றார். அங்கு அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அங்கிருந்து அவர் நாடு திரும்பும்போதே சில இலங்கை இராணுவ அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் சூழ்ந்துகொண்டது நடந்திருந்தது. நட்புரீதியில் அமைந்திருந்த இந்த நிகழ்வு குறித்த சில விடயங்களை நான் இக்கட்டுரையின் முற்பகுதியில் பகிர்ந்திருந்தேன். மோசமாகி சென்றுகொண்டிருந்த உடல்நிலையினையடுத்து பால்ராஜ் அவர்கள் மந்தகதியிலான வாழ்க்கை முறைக்கு தன்னை மாற்றிக்கொண்டார். புலிகளின் இராணுவக் கல்லூரியில் கற்றுவந்த அதிகாரிகளுக்கு விரிவுரைகளை வழங்குவதிலும், அவர்களைப் பயிற்றுவிப்பதிலும் அவர் தனது நேரத்தைச் செலவிட்டு வந்தார். இளம் அதிகாரிகளுக்கு இராணுவ உத்திகள், திட்டமிடல்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல்கள் போன்றவற்றைக் கற்பிப்பதிலேயே அவரது கவனம் இருந்தது. இதைவிடவும் புலிகளின் கொமாண்டோ வீரர்களுக்கும், விசேட படையினருக்கும் அவர் பயிற்சிகளை வழங்கி வந்தார். புலிகளின் பல பயிற்சிமுகாம்களுக்குப் பயணித்த பால்ராஜ் அவர்கள் அவ்வீரர்களுக்கான பயிற்றுவிப்பாளராகவும், நடைமுறைச் செயற்பாட்டு வித்தகராகவும் பணியாற்றி வந்தார். தளபதி பால்ராஜ் அவர்களிடம் கற்றுக்கொள்வதைப் போராளிகள் பெரும் பாக்கியமாகவே கருதிவந்தனர். பின்னாட்களில் உடல்நிலை மிகவும் மோசமாகிச் சென்றபோது பால்ராஜ் அவர்கள் சிறிது சிறிதாக தனது நாட்களின் பெரும்பகுதியை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலேயே கழிக்கத் தொடங்கினார். ஆனால் முன்னரங்கக் களத்தில் அவரது சேவைக்கு எப்போதுமே தேவை இருந்துகொண்டுதான் இருந்தது. மணலாறுப் பகுதியில் புதிதாகக் களமிறக்கப்பட்ட இராணுவத்தினரின் 59 ஆவது படையணி புலிகளுக்குப் பெரும் பிரச்சினையாக அப்போது மாறியிருந்தது. தமிழர் தாயகத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படும் மணலாற்றில் இராணுவத்தினரைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது புலிகளுக்கு மிகவும் அவசியமாகக் கருதப்பட்டது. ஆகவே மீண்டும் ஒருமுறை பால்ராஜிடமே இதற்கான பொறுப்பினைத் தலைவர் கொடுத்தார். தனது மோசமான உடல்நிலைக்கு மத்தியிலும் மணலாற்றின் முன்னரங்கில் பல மணி நேரங்களை பால்ராஜ் செலவிட்டார். இது அவரது உடல்நிலையில் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தது. ஆனாலும் முன்னரங்க நிலைகளை ஆராய்தல், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தல் ஆகிய நடவடிக்கைகளுக்காக அடிக்கடி வைத்தியசாலையில் இருந்து முன்னரங்கப் பகுதிகளுக்குச் சென்றுவரலானார். பின்னாட்களில் பால்ராஜின் வேலைப்பழுவினைக் குறைப்பதற்கு உதவியாக புலிகளின் மூத்த தளபதிகளான சொர்ணம் மற்றும் பாணு போன்றவர்கள் மணலாற்றிற்கு அனுப்பப்பட்டார்கள். வைகாசி 2006 ஆம் ஆண்டு ஊடகங்களுக்கு வெளிப்படையாகப் பேசிய தளபதி பால்ராஜ் அவர்கள் புலிகள் இயக்கம் இறுதிப்போரினை வென்றே தீரும் என்று கூறியிருந்தார். "நான்காவது ஈழப்போரே இறுதிப்போராகும். மிகக்கடுமையாக இருக்கப்போகும் இப்போரே எம்மக்களின் நீண்டகாலக் கனவான தாயக விடுதலையினையும், சுதந்திரத்தையும் வென்று தரும். நாம் வெற்றிபெறப்போகும் நிலையிலேயே இருக்கிறோம் என்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும். எமது மக்கள் எம்முடன் இருக்கிறார்கள். எமது தலைவர் வெற்றி நோக்கி எம்மை வழிநடத்திச் செல்வார்" என்று அவர் உறுதிபடக் கூறியிருந்தார். தொடரும்............
-
பிரிகேடியர் பால்ராஜ் - போராளிகளால் பூஜிக்கப்பட்ட, எதிரிகளால் வியந்து போற்றப்பட்ட தமிழர்களின் ஒப்பற்ற தளபதி
ஆனையிறவு படைத்தளம் ஓயாத அலைகள் எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட இப்படைநடவடிக்கைகள் யாழ்க்குடாநாட்டின் உட்பகுதிவரை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.நீண்ட நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இப்படை நடவடிக்கைகளின் உச்சவெற்றியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு படைத்தளம் புலிகளால் வெற்றிகொள்ளப்பட்டதைக் கூறமுடியும். எழுதுமட்டுவாள் - இயக்கச்சி பகுதிகளுக்கும் ஆனையிறவு பெரும்படைத்தளத்திற்கும் இடையிலான வழங்கற்பாதையினை தடுத்து, ஆனையிறவினை முற்றுகைக்குள் கொண்டுவந்து, உள்ளிருந்த ஆயிரக்கணக்கான படைவீரர்களைப் பலவீனப்படுத்தி, ஈற்றில் அவர்களை தோற்கடிப்பதே இப்படைநடவடிக்கையின் மிக முக்கிய நோக்கமாகும். தம்மால் முற்றுகைக்குள்ளாக்கப்பட்ட ஆனையிறவை வெளித்தொடர்புகள் அனைத்திலுமிருந்து முற்றாக அறுத்தெடுத்து, அதனைத் தனிமைப்படுத்தி அகற்றுவதென்று அவர்கள் தீர்மானித்தார்கள். அனால் புலிகளால் முன்னெடுக்கப்படும் எந்தவிதமான முற்றுகையினையும் எதிர்கொள்ளும் நோக்குடன் படையினர், ஆனையிறவு படைத்தளத்தினை செவ்வக வடிவில் நீட்டித்து, வடமாராட்சி கிழக்குக் கரையோரம் வழியே தாளையடி - மருதங்கேணி பகுதிகள் வரை விஸ்த்தரித்து, பின்னர் கிழக்குக் கரையோரத்தினூடாக யாழ்க்குடாநாடு நோக்கி, கண்டிவீதி வழியே புதுக்காட்டுச் சந்திவரை விஸ்த்தரித்து, பலப்படுத்தப்பட்ட நீண்ட பாதுகாப்புப் பிரதேசம் ஒன்றினை உருவாக்கியிருந்தார்கள். இப்பகுதியே வத்திராயன் பெட்டி (Vaththirayan Box) என்று அழைக்கப்பட்டு வந்ததுடன் இப்பாரிய செவ்வகப் பகுதிக்குள் வத்திராயன், புல்லா வெளி, சோரன்பற்று, மாசார் உள்ளிட்ட பல பகுதிகள் அடக்கப்பட்டிருந்தன. மேலும் யாழ்க்குடாநாட்டின் உட்பகுதியினுள் ஆரம்பமாகும் எழுதுமட்டுவாளில் இருந்தும், வடமாராட்சிக் கிழக்கின் தாளையடியில் இருந்தும் ஆனையிறவு படைத்தளத்திற்கான தடையற்ற வழங்கல்களை இதன்மூலம் படையினர் உறுதிப்படுத்தி வந்திருந்தனர். பால்ராஜ் அவர்களுக்கு மகுடம் சூட்டிய நடவடிக்கை எவராலும் ஊடறுத்து, உட்புகமுடியாத கோட்டையென்று கருதப்பட்ட ஆனையிறவுப் பெரும்படைத்தளத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊடறுத்து எவ்வாறு பால்ராஜ் அவர்கள் இந்த வெற்றியை ஈட்டினார் என்பது நவீன இராணுவ வரலாற்றில் ஒரு பெரும் அதிசயமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இதுவே அவரின் அனைத்து நடவடிக்கைகளினதும் மகுடமாகவும் கருதப்படுகிறது. 2000 ஆம் ஆண்டு பங்குனி 26 ஆம் திகதி, வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து யாழ்க்குடாநாட்டின் கரையோரப் பகுதிக்குள் சுமார் 1200 தரைப்படைப் போராளிகளைக் கனகச்சிதமான நடவடிக்கை ஒன்றின் மூலம் கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை பாதுகாப்பாக தரையிறக்கினார். தளபதி பால்ராஜின் தலைமையில் இப்போராளிகள் குடாரப்பு மற்றும் மாமுனை ஆகிய கரையோரப் பகுதிகளில் தரையிறங்கி, கண்டல்த் தாவரங்களும், சதுப்பு நிலங்களும் கொண்ட ஏரிப்பகுதிக்கூடாக மிகவும் இரகசியமான முறையில் உட்பகுதி நோக்கி முன்னேறத் தொடங்கினர். இம்முன்னேற்ற நடவடிக்கையின்போது சோரன்பற்று, மாசார் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ நிலைகளைத் தாக்கியழித்த புலிகள், ஏ 9 பாதையின் புதுக்காட்டுச் சந்திவரை முன்னேறி அதனைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். அதன்பின்னர் தளபதி பால்ராஜ் தலைமையில் செயற்பட்ட புலிகள்,பளைப்பகுதிக்கு அண்மையில் அமைந்திருந்த இத்தாவில் பகுதியில் தமது நிலைகளை அமைத்துப் பலப்படுத்திக்கொண்டனர். இங்கிருந்தே ஆனையிறவு, இயக்கச்சிக்கான வழங்கல்களை அவர்கள் தடுத்து நிறுத்தினர். இதன்பின்னர் இப்பகுதியில் பலநாட்களாக பாலராஜின் தலைமையில் விவேகமும் துணிவும் கொண்ட போராளிகளுக்கும் பெரும் படைப்பலம் கொண்டு இப்பகுதியைக் கைப்பற்ற முனைந்த இராணுவத்தினருக்கும் இடையே மிகக்கடுமையான சண்டைகள் இடம்பெற்றன. ஆனால், இச்சண்டையில் புலிகளால் தாக்குப்பிடிக்க முடியாது என்கிற அனைத்து எதிர்வுகூறல்களையும் உடைத்தெறிந்த புலிகள், இராணுவம் தம்மீது வீசிய அனைத்து வலிந்த தாக்குதல்களையும் சளைக்காது முகெம்கொடுத்து வெற்றியீட்டினர். இச்சண்டைகளில் களங்கள் அடுத்தடுத்து கைமாறப்பட்டிருப்பினும், தன்னை அப்பகுதியில் இருந்து எப்படியாவது அகற்றிவிடும் நோக்கில் தன் மீது இராணுவத்தின் அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட அத்தனை தாக்குதல்களையும் அவர் தீரத்துடன் எதிர்கொண்டு, சமராடித் தோற்கடித்தார். 24 நாட்களாகக் கடுமையாக நடைபெற்ற சண்டைகளின் விளைவாக இராணுவம் ஆனையிறவைத் தக்கவைக்கும் தனது முயற்சியைக் கைவிட்டது. அதன்படி சித்திரை 19 ஆம் திகதி ஆனையிறவு படைத்தளத்தினைக் கைவிட்ட இராணுவம், யாழ்க்குடா நாடு நோக்கிப் பின்வாங்கியது. சித்திரை 22 ஆம் திகதி புலிகள் ஆனையிறவுப் படைத்தளத்தில் தமது கொடியினை உத்தியோகபூர்வாமாக ஏற்றிவைத்தனர். இராணுவ வல்லுனர்களால் போற்றப்படும் பால்ராஜ் அவர்களின் இந்த அதிசயிக்கவைக்கும் வெற்றி, இராணுவக் கையேடுகளில் ஏற்றப்பட்டு, பகுதி பகுதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, கற்பிக்கப்பட்டும் வருகிறது. பால்ராஜ் அவர்களின் இந்த வெற்றியானது புலிகளின் படையணிகள், விமானப்படையொன்றின் உதவியின்றி, எதிரியின் கோட்டைக்குள் ஆளமாக ஊடுருவி நிலைகொண்டு, அங்கிருந்து வலிந்த தாக்குதல்களிலும், தடுப்புத் தாக்குதல்களிலும் சரளமாக ஈடுபட்டு, தம்மைக் காட்டிலும் ஆட்பலத்திலும், ஆயுதப் பலத்திலும் பன்மடங்கு பலமான எதிரியை வெற்றிகொள்ளும் வல்லமையினைப் பெற்றிருக்கிறார்கள் என்பதைக் காட்டியது. மட்டுப்படுத்தப்பட்ட போர்களை (Limited Wars) எவ்வாறு மேற்கொள்வது எனும் கோட்பாட்டில் பால்ராஜின் இந்த வெற்றியானது முன்னுதாரணமான மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. 23 நீண்ட வருடங்களுக்குப் பின்னர் எனது தாய்நாட்டினைத் தரிசிக்கும் முயற்சியினை 2013 ஆம் ஆண்டு நான் மேற்கொண்டபோது இத்தாவில் பகுதிக்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று விரும்பினேன். ஏ9 நெடுஞ்சாலையின் இத்தாவில்ப் பகுதியில் எமது வாகனத்தை நிறுத்தி இறங்கிக்கொண்டேன். ஆனால் வீதியிலிருந்து உட்பகுதி நோக்கிச் செல்லமுடியாதபடி கண்ணிவெடி அபாய எச்சரிக்கைகள் காணப்பட்டன. அப்பகுதியெங்கும் பரவிக்கிடக்கும் கண்ணிவெடிகள் இதுவரையில் அகற்றப்படாமையினால் இப்பகுதிக்குள் மக்கள் உட்பிரவேசிப்பது தடுக்கப்பட்டிருந்தது. தொடரும்............
-
விபுலானந்த அடிகளாரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை
இதற்குப் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. புளித்துப்போன பிரதேசவாத அரசியல்.தமிழினக் கொலை நடத்தப்பட்ட வைகாசி மாதத்தில், இனக்கொலை முடித்துவைக்கப்பட்ட நாளிற்கு முன் நாளில், இலட்சக்கணக்கான உறவுகளைப் பலிகொடுத்த நினைவுகளைச் சுமந்து, அவர்களுக்கான அஞ்சலியைச் செலுத்த, கனத்த மனதுடன் தமிழ மக்கள் தயாராகி வருகையில், அவர்களுடைய துன்பத்தில், இழப்புக்களில்ல் தமக்கு எதுவித தொடர்பும் இல்லையெனும் மனப்பாங்கில், அதே இனத்தைச் சேர்ந்த ஒரு பகுதியினர் மேள தாளங்களுடன் ஒரு நிகழ்வைச் செய்யத் துணிந்ததுதான் அந்த அரசியல். விபுலானந்தருக்கு விழா எடுக்கலாம், தவறேயில்லை. ஆனால், வைகாசி 17 ஏன் தெரிவுசெய்யப்பட்டது? வருடத்தில் தமிழர்கள் தமது உறவுகளின் இழப்பினை நினைவுகூரும் ஒரு சில நாட்களைத்தவிர மீதி வருடம் இருக்கின்றது, அதில் ஒரு நாளைத் தெரிவு செய்ய இவர்கள் ஏன் முயலவில்லை? துன்பங்களைச் சுமந்து கதறியழும் மக்களின் முகத்தில் அறைந்தாற்போல் ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. அதுதான் நாங்களும் நீங்களும் வேறானவர்கள் என்பது. தமிழர்களின் ஒருபகுதியினருக்குத் தம்மைத் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் இனத்தின் துரோகிகள், ஒட்டுக்குழுக்கள், அரச புலநாய்வுத்துறையின் கொலைக்கருவிகளின் ஆசீர்வாதத்தோடு பதவியில் ஏற்றப்பட்ட தற்போதைய விபுலானந்தர் வித்தியாலய நிர்வாகமே இந்த முடிவினை எடுத்திருக்கிறது. ஆனால் இதே பிரதேசத்தின் வாகரையிலும், வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திலும் முள்ளிவாய்க்கால் இனக்கொலை அனுஷ்ட்டிக்கப்பட, கல்லடியில் மேள தாள முழக்கங்களோடு விழாக்கோலம் பூணப்பட்டு விபுலானந்தர் சிலை திறக்கப்படுகிறது. இதனைப் பார்க்கும்போது தமிழனத்தின் துரோகிகளில் ஒருவரான கருநாநிதி கூறியவார்த்தைகள்தான் நினைவிற்கு வந்துபோகிறது. முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரின் இறுதிநாட்களில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுக்கொண்டிருக்க, தில்லியில் கூடாரம் அடித்து கருநாநிதி தனது குடும்பத்தினருக்கு பாராளுமன்ற ஆசனங்களையும், பதவிகளையும் கேட்டு சோனியாவுடன் பேரம் பேசிக்கொண்டிருந்தார். இச்செயலைக் கண்ணுற்ற ஒரு செய்தியாளர், "முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டுக்கொண்டிருக்க, நீங்களோ பதவிகளுக்காகப் பேரம் பேசலில் ஈடுபடுகிறீர்களே?" என்று கேட்டபோது, "சங்க கால இலக்கியங்களில் ஒரு வீட்டில் மரண ஓலத்துடன் பறையொலி கேட்கும்போது, அதே பகுதியில், இன்னொரு வீதியில் மங்கள வாத்தியமும் கேட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறதே?" என்று ஏளனத்துடன் கூறியிருக்கிறார். அவராவது வேறுநாட்டில் முதல்வராக தமிழ் பேசிய தெலுங்கன், ஆனால் இவர்களோ?????
-
பிரிகேடியர் பால்ராஜ் - போராளிகளால் பூஜிக்கப்பட்ட, எதிரிகளால் வியந்து போற்றப்பட்ட தமிழர்களின் ஒப்பற்ற தளபதி
தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவி இராணுவத் தளபதியான பால்ராஜ் தளபதி பால்ராஜிற்கு உன்னதமான இராணுவ மரியாதையினை தலைவர் 1996 ஆம் ஆண்டில் வழங்கி கெளரவித்தார். பால்ராஜை இயக்கத்தின் உதவி இராணுவத் தளபதி எனும் நிலைக்கு தலைவர் உயர்த்தினார். தலைவர் பிரபாகரனே இயக்கத்தின் பிரதான இராணுவத் தளபதி என்பது குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் புலிகள் இராணுவ அதிகாரக் கட்டமைப்பில் தளபதி பால்ராஜ் அவர்கள் இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டார். புலிகளின் இரண்டாவது இராணுவத் தளபதி தனது போரியல் ஆற்றலினை தொடர்ந்துவந்த சமர்க்களங்களில் நிரூபித்துக் காட்டத் தொடங்கினார். 1996 ஆம் ஆண்டு ஆடி மாதம் 18 ஆம் திகதி ஒயாத அலைகள் - ஒன்று எனும் பாரிய அழித்தொழிப்புச் சமரை தளபதி பால்ராஜே ஒருங்கிணைத்து நடத்தினார். பல கட்டுமாணங்களைக் கொண்டதும் மிகுந்த பாதுகாப்பானதுமான முகாம் என்று கருதப்பட்ட பாரிய முல்லைத்தீவு இராணுவ முகாம் மீது பால்ராஜும் போராளிகளும் நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள இராணுவத்தினர் பலியானார்கள். ஆனால், இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆக்கிரமிப்பு நடவடிக்கையான ஒப்பரேஷன் ஜயசிக்குரு (வெற்றி நிச்சயம்) நடவடிக்கைக்கு எதிராக தளபதி பால்ராஜினால் அதிகளவு பங்களிப்பைச் செய்ய முடியவில்லை. 1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையின்போது இராணுவத்தினர் ஓமந்தை மற்றும் நெடுங்கேணி ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். புளியங்குளம் பகுதி இராணுவத்தினரின் வசம் வீழும்வரை தளபதி பால்ராஜே ஜயசிக்குரு நடவடிக்கைக்கெதிரான எதிர்த்தாக்குதல்களை ஒருங்கிணைத்து வந்தார். இதன்பின்னர் புலிகளின் முன்னாள் கிழக்குப் பிராந்தியத் தளபதியாகவிருந்த கருணாவுடன் இணைந்து எதிர்த்தாகுதல்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை தளபதி கேணல் தீபன் பொறுப்பெடுத்தார். 1998 ஆம் ஆண்டு மாசி மாதத்தில் கிளிநொச்சி படைமுகாம் மீது புலிகள் ஓயாத அலைகள் - 2 எனும் பெயரில் தாக்கியழிக்கும் சமரினை ஆரம்பித்தார்கள். இத்தாக்குதல்களில் ஏற்பட்ட கடுமையான இழப்புகளுக்குப் பின்னர் முகாமினைக் கைவிட்ட இராணுவம் பின்வாங்கி ஆனையிறவு நோக்கிச் சென்றது. இத்தாக்குதலுக்கு தளபதி பால்ராஜே பொறுப்பாக இருந்ததுடன், இராணுவத்தினருக்கெதிராக உளவியல்த் தந்திரங்களையும் கைக்கொண்டார். இலங்கையின் 50 ஆவது சுதந்திர நாளன்றே இத்தாக்குதலை புலிகள் ஆரம்பித்திருந்தனர். இதன் பின்னர் ஓயாத அலைகள் - மூன்று எனும் வலிந்த தாக்குதல் நடவடிக்கையினை புலிகள் முன்னெடுத்தனர். 1999 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் நன்கு திட்டமிடப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களில் ஒட்டுசுட்டான், கரிப்பட்டமுறிப்பு, மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம் உட்பட்ட பல இராணுவ முகாம்களை சில நாட்களில் புலிகள் கைப்பற்றினர். 18 மாத காலமாக ஜயசிக்குரு நடவடிக்கையூடாக சிறுகச் சிறுக இராணுவத்தினர் கைப்பற்றியிருந்த பெரும்பாலான பிரதேசங்களை வெறும் 9 நாட்களிலேயே புலிகளிடம் இழந்தனர். தொடரும்............
-
பிரிகேடியர் பால்ராஜ் - போராளிகளால் பூஜிக்கப்பட்ட, எதிரிகளால் வியந்து போற்றப்பட்ட தமிழர்களின் ஒப்பற்ற தளபதி
புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியின் தளபதி 1991 ஆம் ஆண்டிலேயே புலிகள் தமது முதலாவது மரபுவழிப் படையணியினை நிறுவினார்கள். தலைவர் பிரபாகரனின் நெருங்கிய தோழனும், தலைவர் அதிகளவு நம்பிக்கை கொண்டிருந்தவருமான சீலன் எனப்படும் சாள்ஸ் அன்டனியின் பெயரிலேயே இப்படையணி உருவாக்கப்பட்டது. சீலன் அவர்கள் 1983 ஆம் ஆண்டு ஆடி 15 ஆம் திகதி மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற இராணுவச் சுற்றிவளைப்பொன்றில் வீரமரணம் அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. சாள்ஸ் அன்டையின் பெயரில் உருவாக்கப்பட்ட தனது முதலாவது மரபுவழிப் படையணிக்குத் தலைமை தாங்க தளபதி பால்ராஜையே தலைவர் தெரிவுசெய்தார். இப்படையணியின் தளபதியாக 1993 ஆம் ஆண்டுவரை தளபதி பால்ராஜ் பணியாற்றி வந்தார். இராணுவ நடவடிக்கைகள், வலிந்த தாக்குதல்கள் என்பவற்றுக்கு அப்பால் பாதுகாப்பு வியூகங்களை அமைப்பதிலும் பால்ராஜ் அவர்கள் சிறந்து விளங்கினார். இராணுவத்தினர் காலத்திற்குக் காலம் முன்னெடுத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தோற்கடித்தல், தாக்குதல்கள் நடப்பதைத் தடுத்தல், தாக்குதல்களின் நோக்கத்தை அழித்தல் ஆகிய விடயங்களுக்கு பால்ராஜே பொறுப்பாகவிருந்தார். இவ்வாறான இராணுவத்தினரின் வலிந்த நடவடிக்கைகளுக்கெதிராக தளபதி பால்ராஜ் முன்னெடுத்த தடுப்புத் தாக்குதல்களுக்கு உதாரணமாக வவுனியாவில் இருந்து இராணுவத்தினரால் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்ட வன்னி விக்கிரம நடவடிக்கை, மணலாற்றில் முன்னெடுக்கப்பட்ட மின்னல் நடவடிக்கை, யாழ்க்குடாநாட்டில் முன்னெடுக்கப்பட்ட முன்னேறிப் பாய்தல் நடவடிக்கை,கிளாலி - புலோப்பழை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட யாழ் தேவி நடவடிக்கை மற்றும் ஆனையிறவை மீளக் கைப்பற்ற முன்னெடுக்கப்பட்ட அக்கினி கீற்று (கீல) நடவடிக்கை போன்றவற்றிற்கெதிராக அவர் நடத்திய எதிர்ச்சமர்களைக் குறிப்பிட முடியும். 1993 ஆம் ஆண்டு யாழ்க்குடாநாட்டின் தென்பகுதியில் இராணுவத்தினர் முன்னெடுத்த ஒப்பரேஷன் யாழ்தேவி நடவடிக்கைக்கு எதிராக தளபதி பால்ராஜும், அவரது உதவித்தளபதி தீபனும் களமிறங்கினார்கள். புலோப்பழையில் இடம்பெற்ற கடுமையான சண்டையில் பால்ராஜ் காயங்களுக்கு உள்ளானார். புலிகளின் நிலைகளை நோக்கி நகர்ந்த T- 55 ரக தாங்கியொன்றின்மீது ஆர் பி ஜி உந்துகணையினால் அவர் தாக்குதல் நடத்தியபோது அவரது காலில் காயம் ஏற்பட்டது. இந்தக் காயமே அவர் நடக்கும்போது ஒருபக்கத்திற்குச் சரிந்து நடப்பதற்கான காரணம் ஆகியது. அத்துடன் நீண்டதூரம் நடக்கும்போது காலில் ஏற்பட்டிருந்த காயம் அவருக்கு கடுமையான வலியினையும் ஏற்படுத்தியது. 1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பொழுது புலிகளுடன் யுத்த நிறுத்தம் ஒன்றினைச் செய்து பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்தார். ஆனால் யுத்த நிறுத்தம் 1995 ஆம் ஆண்டு சித்திரையில் முறிவடைய மீளவும் போர் ஆரம்பித்தது. யாழ்க்குடா நாட்டின் வலிகாமம் பகுதியில் முன்னேறிப் பாய்தல் எனும் பெயரில் வலிந்த தாக்குதல் ஒன்றினை சந்திரிக்காவின் அரசாங்கம் ஆரம்பித்தது. இத்தாக்குதலுக்கு எதிராக புலிகள் புலிப்பாய்ச்சல் எனும் பெயரில் கடுமையான எதிர்த்தாக்குதல் ஒன்றினை முன்னெடுத்தனர். புலிகளின் எதிர்த்தாக்குதலையடுத்து இராணுவத்தின் தமது வலிந்த தாக்குதலைக் கைவிட்டனர். இராணுவத்தினரின் வலிந்த தாக்குதலை முறியடிப்பதில் தளபதி பால்ராஜ் மிக முக்கியமான பங்கினை ஆற்றியிருந்தார். ஆனாலும் சில காலத்தின்பின்னர் இராணுவத்தினர் ஒப்பரேசன் சூரியக் கதிர் நடவடிக்கையினை முன்னெடுத்து யாழ்க்குடாநாட்டினைக் கைப்பற்றியபோது, 1996 ஆம் ஆண்டளவில் புலிகள் வன்னிக்கு தமது தளங்களை மாற்றிக்கொண்டனர். தொடரும்............