Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. "கென்ட் ‍ டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எம்மைத் துன்புறுத்தி வந்த சிங்களக் காடையர்களே, மாறாக அப்பாவிச் சிங்கள மக்கள் அல்ல" - ‍ தமிழ் மக்கள் ஜெயவர்த்தனவினதும் அவரது இனவாத அமைச்சரவையினதும் திட்டங்களுக்கான பதிலை 1984 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 30 ஆம் திகதி பிரபாகரன் வழங்கினார். நன்கு ஆயுதம் தரித்த, பயிற்றப்பட்ட 50 புலிகள் கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் நோக்கி இரு பேரூந்துகளில் பயணமாகினர். ஒரு அணியினர் கென்ட் பண்ணை மீது தாக்குத‌ல் நடத்த, மற்றைய அணி டொலர் பண்ணை மீது தாக்குதலை நடத்தியது. கென்ட் பண்ணை மீதான தாக்குதலில் 29 சிங்களக் கைதிகள் கொல்லப்பட டொலர் பண்ணையில் மேலும் 33 கைதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 62 பேரில் மூவர் சிறைக்காவலர்கள். மறுநாளான மார்கழி 1 ஆம் திகதி லோரன்ஸ் தலைமையிலான புலிகளின் அணியொன்று கொக்கிளாயிலிருந்து வெளியே நாள் ஒன்றிற்கு இருமுறை பயணம் செய்யும் எல்ப் ரக வாகனம் ஒன்றைக் கடத்திக்கொண்டு கொக்கிளாயில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றம் நோக்கிப் பயணித்தனர். அப்போது மாலை 6:30 மணி. சில சிங்கள மீனவர்கள் ஆங்காங்கே வீதிகளில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தனர். சிலவிடங்களில் பெண்களும், சிறுவர்களும் வீதிகளில் காணப்பட்டனர். எல்பில் வந்த புலிகள், அங்கு நின்ற சிங்களக் குடியேற்றக்காரர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தனர். மனுவேல் அந்தோணி, அவரது மனைவி மற்றும் அவரது மகன் ஆகியோரும் வீதியில் நின்ற கூட்டத்தில் அடங்குவர். சூடுபட்டு கீழே வீழ்ந்த அந்தோணி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். அவரது ஒன்பது வயது மகனுக்கும் சூட்டுக் காயம் ஏற்பட்டது. அவரைக் காவிக்கொண்டு அந்தோணியின் மனைவி படகுகள் நோக்கி ஓடினார். ஆனால் மகனைக் காப்பாற்ற முடியவில்லை. இத்தாக்குதலில் 14 சிங்களக் குடியேற்றக்காரர்கள் கொல்லப்பட்டதுடன் இன்னும் நால்வர் காயமடைந்தனர். பின்னர் அங்கிருந்து அகன்ற புலிகள் 15 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த நாயாறு சிங்கள மீனவக் குடியேற்றம் நோக்கிச் சென்றனர். இரவு 8:30 மணியளவில் நாயாறு குடியேற்றத்தை புலிகளின் அணி சென்ற‌டைந்தது. அங்கு காணப்பட்ட மக்கலின் கொஸ்ட்டா வின் பலசரக்குக் கடைக்குச் சென்ற புலிகள் துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தனர். அருகிலிருக்கும் தமிழ்க் கிராமங்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டு வந்த சிங்களக் காடையர்களின் தலைவியாக‌ மக்கலின் விளங்கினார். எல்ப் வாகனத்தில் இருந்து பாய்ந்திறங்கிய புலிகள் கடைக்குள் கிர்ணேட்டுக்களை வீசி எறிந்தனர். மகலினை புலிகள் தேடினர், ஆனால் அவர் இருக்கவில்லை, தலைமறைவாகிப் போயிருந்தார். ஆகவே மக்கலினின் இரு புதல்விகளான மேரி திரேசா மற்றும் மேரி மார்கரெட் ஆகியோரைப் புலிகள் சுட்டனர். அங்கு நடைபெற்ற தாக்குதலில் நால்வர் கொல்லப்பட மேலும் இருவர் காயமடைந்தனர். கொக்கிளாயில் புலிகள் தாக்குதல் நடத்தியபோது பல சிங்களக் குடியேற்றக்காரர்கள் கடலை நோக்கி ஓடியதுடன், படகுகளுக்குள்ளும், அவற்றின் பின்னாலும் ஒளிந்துகொண்டனர். பின்னர் நடந்த விசாரணைகளின்போது நள்ளிரவு வரை சிங்களவர்கள் படகுகளுக்குப் பின்னால் ஒளிந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சிலர் ஆறு கிலோமீட்டர்கள் கால்நடையாக புல்மோட்டையூடாக திருகோணமலை மாவட்டத்திற்குள் பிரவேசித்து இராணுவத்தினருக்கு தாக்குதல் குறித்துத் தெரிவித்தனர். கொக்கிளாய் நோக்கி விரைந்துசென்ற இராணுவ அணிமீது புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. வீதியின் அருகிலும், மதகுகளின் கீழும் மறைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் வெடிக்கவைக்கப்பட்டன. நாயாறு குடியேற்றக் கிராமத்தின்மீது தாக்குதல் நடந்தபோது அங்கிருந்த சிங்களக் குடியேற்றக்காரர்கள் அருகிலிருந்த காடுகளுக்குள் ஓடி ஒளிந்துகொண்டிருந்தனர்.மறுநாள் காலை இராணுவத்தினர் அவர்களைக் கண்டு மீட்கும்வரை அவர்கள் காடுகளுக்குள்ளேயே மறைந்திருந்தனர். இத்தாக்குதலில் காயப்பட்ட சிங்களவர்களை அநுராதபுர வைத்தியசாலைக்கும், குருநாகல் வைத்தியசாலைக்கும் இராணுவம் அழைத்துச் சென்றது. திருகோணமலைக்கும், முல்லைத்தீவிற்கும் இடையிலான கரையோரப் பகுதிகள் அரசால் முன்னெடுக்கப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களில் மிகவும் வடக்காக அமைந்திருப்பது கொக்கிளாய் சிங்கள மீனவக் குடியேற்றமாகும். இங்கு குடியேற்றப்பட்டிருக்கும் சிங்களவர்கள் நீர்கொழும்பு, சிலாபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். புலிகளின் தாக்குதலில் முதன்முதலாக சிங்களவர்கள் கொல்லப்பட்ட இச்சம்பவம் குறித்து நான் விலாவாரியாக முன்னர் எழுதியிருந்தேன். அரசால் சேகரிக்கப்பட்ட இத்தாக்குதல் குறித்த ஆவணங்கள், மற்றும் இத்தாக்குதல் குறித்து அமைச்சரவையில் அங்கத்துவம் கொண்டிருந்த அமைச்சர் தொண்டைமானின் கருத்துக் குறித்தும் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். இரு காரணங்களுக்காக இச்சம்பவங்கள் நான் இங்கே மீளவும் பதிவிடுகிறேன். முதலாவது, இச்சம்பவங்கள் நடைபெற்ற காலக் கிரகத்தின் அடிப்படையில் பதிவது. இரண்டாவது இத்தாக்குதல் குறித்த தமிழ் மக்களின் மனவோட்டத்தினைப் பதிவது. தொண்டைமான் இத்தாக்குதல்களை வரவேற்றிருந்தார். அவ்வாறே எனக்குத் தெரிந்த ஒவ்வொரு தமிழரும் இதனை வரவேற்றிருந்தனர். கொல்லப்பட்டவர்களை அப்பாவிச் சிங்கள மக்கள் என்று அவர்கள் கருதவில்லை. தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்தி, தினம் தோறும் சித்திரவதை செய்துவந்த காடையர்களே கொல்லப்பட்டிருப்பதாக அவர்கள் கருதினர். அது மட்டுமல்லாமல் ஜெயவர்த்தன, லலித் அதுலத் முதலி, காமிணி திசாநாயக்க, ரவி ஜெயவர்த்தன ஆகிய இனவாதிகளின் கொடூரங்களுக்கான பதிலடியாகவும் இதனை அவர்கள் பார்த்தனர். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல்களினூடாக, தம்மை தனியான தேச மக்களாக தமிழர்கள் உறுதியாக நம்பத் தலைப்பட்டனர். ஒரு இனமாக தாம் உயிர்தப்பி வாழ்வதென்றால், சிங்கள ஆக்கிரமிப்பிற்கெதிராகத் தாம் திரண்டெழுந்து போராட‌ வேண்டுமென்று அவர்கள் நம்பத் தொடங்கினர். இதனை செய்வதற்குப் பிரபாகரனைத் தவிர அவர்களுக்கு வேறு எவரும் இருக்கவில்லை.
  2. தமிழரின் தாயகத்தைக் கூறுபோட்டு, அவர்களின் வளங்களைச் சூறையாடவே அமைக்கப்பட்ட சிங்கள‌க் குடியேற்றங்கள் கொக்கிளாய் சிங்கள‌க் குடியேற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பெள‌த்த விகாரை வவுனியா மாவட்டத்தின் பதவிய பகுதியில் ஜெயவர்த்தனவின் அரசாங்கம் நடத்திவரும் அவசர அவசரமான சிங்கள் குடியேற்றங்கள் குறித்த தமது அதிருப்தியினைத் தெரிவிக்க அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஜெயவர்த்தனவையும், லலித் அதுலத் முதலியையும் கார்த்திகை மாதம் 13 ஆம் திகதி சந்தித்தனர். நடைபெற்றுவரும் சிங்களக் குடியேற்றத்தினை உடனடியாக நிறுத்துமாறு அவர்கள் கோரினர். இக்குடியேற்றம் முன்னெடுக்கப்படுவதால் தமிழர்கள் அடைந்துவரும் மனதளவிலான பாதிப்புக்களை அவர்கள் எடுத்துரைத்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் செல்வாக்கு தமிழ் மக்கள் மத்தியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருவதையும் ஜெயாரிடம் அவர்கள் எடுத்துரைத்தனர். "இந்த அரசாங்கத்துடன் எதற்காகப் பேசி வருகிறீர்கள்? என்று தமிழ் மக்கள் எங்களிடம் கேட்கிறார்கள்" என்று அமிர்தலிங்கம் ஜெயாரிடம் தெரிவித்தார். ஜெயாருடனான சந்திப்பிற்குப் பின்னர் கடுந்தொனியில் ஒரு கடிதத்தையும் முன்னணியினர் ஜெயவர்த்தனவிற்கு அனுப்பினர். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் குடியேற்றப்பட்டிருக்கும் சிங்களச் சிறைக்கைதிகளும், சிறைக் காவலர்களும் அருகிலிருக்கும் தமிழ்க் கிராமங்களுக்குள் நுழைந்து தமிழர்களை துன்புறுத்தி வருவதாக அவர்கள் அதில் தெரிவித்திருந்தனர். தமிழ்க் கிராமங்களுக்குள் நுழையும் சிங்களைச் சிறைக்கைதிகள் அக்கிராமங்களைக் கொள்ளையிட்டு வருவதாகவும், வீடுகளும் உடமைகளும் அவர்களால் அழிக்கப்பட்டு வருவதாகவும், பல தமிழ்ப் பெண்களை இவர்கள் பாலியல் வன்புணர்வு செய்துவருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். பாலியல் வன்புப்ணர்வுகள் தொடர்பான குறிப்பில் ஒவ்வொரு சம்பவமும் விலாவாரியாக முன்னணியினரால் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் முன்னணியினரின் எந்த வேண்டுகோளையும் ஜெயார் கண்டுகொள்ளவில்லை. மேலும் அவரது அமைச்சர்களால் முல்லைத்தீவுக் கரையோரப்பகுதிகளில் சிங்கள மீனவக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்காக 1,000 வீடுகளைக் கட்டப்போவதாக வெளிப்படையாக அறிவிக்கப்பட்டபோது தமிழ் மக்கள் மேலும் கொதித்துப் போயினர். மீன்பிடி அமைச்சரான பெஸ்ற்றஸ் பெரேரா, இந்த ஆயிரம் வீடுகளும் கொக்கிளாய் நாயாறு ஆகிய தமிழ்க் கிராமங்களிலேயே அமைக்கப்படவிருப்பதாக அறிவித்தார். தமிழர் தாயகத்தில் சிங்கள அரசாங்கம் செய்யவிருக்கும் கைங்கரியம் பெஸ்ற்றஸ் பெரேராவின் முல்லைத்தீவுச் சிங்களக் குடியேற்றத் திட்ட அறிவிப்பினூடாக வெட்ட‌ வெளிச்சமாகியது. வலி ஓய சிங்களக் குடியேற்றத்தினூடாக தமிழ் மக்களின் வளமான பயிர்ச்செய்கை நிலங்களை சிங்களவர்கள் ஆக்கிரமிக்க முல்லைத்தீவு கரையோரத்தில் திட்டமிடப்பட்டிருக்கும் சிங்கள மீனவக் குடியேற்றங்களால் தமிழரின் மீன்பிடி வளமும் சிங்களவர்களால் சூறையாடப்படும் நிலை உருவாக்கப்பட்டிருந்தது.
  3. தமிழர் தாயகத்தின் இதயப்பகுதியில் சிங்களச் சிறைக்கைதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட குடியேற்றம் தமிழர்களின் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்களை சிங்கள பெளத்த தாயகம் என்றும் நிறுவும் நோக்கத்திற்காக தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சு மட்டுமன்றி, அதனுடன் தொடர்புபட்ட் ஏனைய அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்றும் வளங்களைப் பாவித்து வந்தார். ஆனால் ஜெயவர்த்தனவின் திட்டமான தமிழர் தாயகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைப் பூரணமாக இராணுவமயப்படுத்துவதற்கு அவருக்கு பெருமளவு நிதியும், வளங்களும் தேவைப்பட்டது. 1983 ஆம் ஆண்டின் தமிழினத்தின் மீதான இனவழிப்பு அரசின் நிதியிருப்பை வெகுவாகப் பாதித்திருந்தது. திறைசேரி முற்றாகக் காலியாகியிருந்தது. ஆகவே "தெற்கில் ஏற்பட்டுவரும் கலவர நிலையினை கட்டுப்படுத்துவதற்கு அப்பகுதியில் வாழும் நிலமற்ற சிங்கள மக்களை வட கிழக்குப் பகுதியான வெலி ஓயவில் குடியேற்ற நிதியுதவி" என்கிற போர்வையில் குடியேற்றங்களை இராணுவமயப்படுத்தும் தனது திட்டத்திற்கு உலக வங்கியிடம் கோரிக்கை ஒன்றும் ஜெயாரின் அரசால் முன்வைக்கப்பட்டது. ஜெயாரின் நோக்கத்தினை நடைமுறைப்படுத்தும் திட்டம் ஒன்று குறித்து நான் அறிந்திருந்தேன். மகவலி அபிவிருத்தித் திட்டத்தில் "L" பிரிவில் பணப்பயிர்களான மரமுந்திரிகை மற்றும் சோயா ஆகிய‌வற்றைப் பயிரிடுவதற்கான ஆலோசனைகளை வழங்கவென்று இரு இஸ்ரேலிய விவசாய நிபுணர்களை அரசு அமர்த்தியது. அவர்களுள் ஒருவர் ஜெருசலேம் பல்கலைக்கழகத்தில் விவசாயத்துறைப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். மற்றையவர் சோயா பயிற்ச்செய்கையில் இஸ்ரேலின் நெகேவ் பாலைவன பயிர்ச்செய்கைத் திட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர். ஆனால் 1984 ஆம் ஆண்டு கென்ட் மற்றும் டொலர் குடியேற்றப் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதலினால் இம்முயற்சி கைவிடப்பட்டது. 1984 ஆம் ஆண்டு பங்குனி 24 ஆம் திகதி லலித் அதுலத் முதலி தேசியப் பந்தோபஸ்த்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். இணைந்த படைகளின் கட்டளை மையத்திற்கு வழங்கப்பட்ட கடமையினை அவர் பொறுப்பெடுத்தார். வைகாசி முதலாம் வாரத்தில் அவர் மாங்குளத்திற்குச் சென்றிருந்தார். வவுனியாவில் மலையகத் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டிருந்த பகுதிகளுக்கு வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் ஆர்தர் ஹேரத்தையும் லலித் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றார். அவரது பயணத்தை பதியும் அரச ஊடகவியலாளராக நானும் அவருடன் சென்றிருந்தேன். தமிழ் தொழிலதிபர்களால் அமைக்கப்பட்ட பல பண்ணைகளில் இரு பண்ணைகளான கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளுக்கும் நாம் சென்றோம். லலித்தின் விஜயத்தின் பின்னர் ஓரிரு மாதங்களிலேயே அங்கு குடியேறி வாழ்ந்துவந்த மலையகத் தமிழர்களை அரசு அடித்து விரட்டியிருந்தது. ஜெயாரின் மகனான ரவி ஜெயவர்த்தனவும் அவரது அணியினரும் எல்லைகளைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருந்தனர். ரவி ஜெயவர்த்தன ஆனி 21 இலிருந்து ஆடி 1 ஆம் திகதிவரை இஸ்ரேலிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இஸ்ரேலினால் பலஸ்த்தீனர்களின் தாயகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எல்லையோரக் கிராமங்கள் அனைத்திற்கும் அவர் சென்று பார்வையிட்டார். மேற்க்குக்கரையில் ஆயுதமயப்படுத்தப்பட்டிருக்கும் யூதக் குடியேற்றவாசிகளையும் அவர் சந்தித்தார். யூதக் குடியேற்றங்களை உருவாக்குவதில் இஸ்ரேலிய அரசுகள் கைக்கொண்ட நடைமுறையினை நன்கு அறிந்துகொண்டதுடன், பலஸ்த்தீன ஆயுத அமைப்புக்களின் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள யூதக் குடியேற்றவாசிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் இராணுவப் பயிற்சிகள் மற்றும் ஆயுதங்கள் குறித்தும் அவர் அறிந்துகொண்டார். சட்டர்டே ரிவியூவில் வந்த அறிக்கையின்படி, இஸ்ரேலுக்கு ரவி ஜயவர்த்தனவும் அவரது குழுவினரும் மேற்கொண்ட விஜயத்திற்குப் பின்னர் பதவியா பகுதியில் மிக மும்முரமான சிங்களக் குடியேற்றங்கள ஏற்படுத்தப்படலாயின. பலஸ்த்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்து இஸ்ரேல் செய்துவரும் அவசர அவசரமான யூதக் குடியேற்றங்களுக்கு ஒப்பான பாணியில் இச்சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட ஆரம்பித்தன. 1984 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கொழும்பில் இடம்பெற்ற அரச மற்றும் பாதுகாப்பு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டமொன்றில் வவுனியா மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்துவந்த பதவியாவை அநுராதபுர மாவட்டத்துடன் இணைத்துக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பிரதேசத்தின் நிர்வாகம் இணைந்த பாதுகாப்புப் படைகள் கட்டளைத் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், தமிழர்கள் இப்பகுதிக்குள் நுழைவதும் முற்றாகத் தடைசெய்யப்பட்டது. இப்பிரதேசமும் வலி ஓய என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது ஒரு புதிய பெயர் அல்ல. மணல் ஆறு எனும் தமிழ்ப் பெயரின் நேரடிச் சிங்கள மொழிபெயர்ப்பே இந்தப் பெயர் ஆகும். மணல் என்பது சிங்களத்தில் வலி என்றும், ஆறு என்பது ஓய என்றும் அழைக்கப்படுவது தெரிந்ததே. மலையகத் தமிழர்கள் குடியேறி வாழ்ந்துவந்த பகுதிகளுக்குள் ஐப்பசி 1984 இல் நுழைந்த சிங்கள அதிகாரிகளும், இராணுவத்தினரும் அங்கிருந்து அவர்களை உடனடியாக வெளியேறவேண்டும் என்று அச்சுருத்தினார்கள். பல தமிழ்க் குடியேற்றவாசிகள் இராணுவத்தினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர். அவர்களின் குடிசைகள் எரியூட்டப்பட்டதுடன், பயிரிடப்பட்ட நிலங்களும் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டன. இவ்வாறே கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் குடியேறி வாழ்ந்துவந்த மலையகத் தமிழர்களும் அடித்து விரட்டப்பட்டனர். 1984 ஆம் ஆண்டு,ஐப்பசி மாதம் 6 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமாணி அறிவிப்பின்படி கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டதுடன் அவை திறந்தவெளிச் சிறைச்சாலைகளாக மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்துப் பத்திரிக்கையாளர்களுடன் சில நாட்களின் பின்னர் பேசிய லலித் அதுலத் முதலி, திறந்தவெளிச் சிறைச்சாலை ஒன்றிற்கான நிலம் ஒன்று நெடுங்காலமாகத் தேடப்பட்டு வந்ததாகவும், தற்போது அதற்கான நிலம் இவ்விரு பண்ணைகளிலும் கிடைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெல்கொடவினால் அறிமுகப்படுத்தப்பட்ட கைதிகளுக்கான முன்மாதிரியான திறந்தவெளிச் சிறைச்சாலைத் திட்டம் குறித்து லலித் கிலாகித்துப் பேசினார். சிறைச்சாலைகளில் நன்நடத்தையினை வெளிக்காட்டும் கைதிகளுக்கு அரச காணிகளில் குடியேறி தமது வாழ்க்கையினை தமது குடும்பங்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கும் திட்டமே அதுவாகும். ஆனால் இத்திட்டத்திற்கான காணிகளைத் தொடர்ச்சியாக‌ சிறைச்சாலைகள் அமைச்சு கண்டுபிடிப்பதில் இருந்த சிக்கலினால் இத்திட்டம் சில காலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஆகவே கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் ஆதுமீறி ஆக்கிரமித்து நின்ற மலையகத் தமிழர்களை தம்மால் விரட்டியடிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பண்ணைகளில் 150 சிங்களக் கைதிகளையும் அவர்களின் குடும்பங்களையும் குடியேற்றப்போவதாக லலித் அதுலத் முதலி அறிவித்தார். பதவியா சிங்களக் குடியேற்றத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் சிங்கள இராணுவ கொமாண்டோ அணி ஆனால் திறந்த சிறைச்சாலை எனும் திட்டத்தினூடாக சிங்கள அரசு செய்ய நினைப்பது தமிழர் தாயகத்தின் இதயப்பகுதியினை அரச ஆதரவில் சிங்களமயப்படுத்துவதுதான் என்பதை தமிழர்கள் மிகவும் தெளிவாக உணர்ந்துகொண்டார்கள். இக்காலப்பகுதியில் சர்வகட்சி மாநாட்டிற்காக கொழும்பில் தங்கியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரான அமிர்தலிங்கம் அரசின் இந்தத் திட்டத்தினை கடுமையாகக் கண்டித்தார். பி பி சி இன் தமிழ்ச்சேவைக்கு அவர் வழங்கிய செவ்வியில், "இந்த திறந்த சிறைச்சாலைத் திட்டம் தெற்கின் எங்கோ ஒரு பகுதியில் உருவாக்கப்பட்டிருந்தால் நாம் மகிழ்ச்சியடைந்திருப்போம். ஆனால் தமிழர் தாயகத்தின் இதயப்பகுதிக்குள் அப்பட்டமான சிங்களக் குடியேற்றத்தினை திறந்தவெளிச் சிறைச்சாலை எனும் போர்வைக்குள் அரசு நடத்துகிறது" என்று கூறினார். மலையகத் தமிழர்களை அடக்குமுறையினைப் பாவித்து பலவந்தமாக கென்ட் - ‍ டொலர் பண்ணைகளில் இருந்து அரசும் இராணுவமும் அடித்துவிரட்டியதை தொண்டைமானும் கடுமையாகக் கண்டித்திருந்தார். தனது கண்டனத்தை அமைச்சரவையில் அவர் பதிவுசெய்தார். தமிழர் தாயகத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் அப்பட்டமான சிங்களக் குடியேற்றம் தமிழர்களைப் பெரிதும் கோபப்பட வைத்திருந்தது. சென்னையில் இதுகுறித்து அறிக்கையொன்றினை வெளியிட்ட ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலக்குமார், "இது ஒரு முற்றான ஆக்கிரமிப்பு" என்று கூறியிருந்தார். ஏனைய போராளி அமைப்புக்களும் இதுகுறித்த தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தன. ஆனால் பிரபாகரன் மெளனமாக இருந்தார். அவர் தனது போராளிகளை இதற்கான பதிலை வழங்குவதற்குத் தயார்ப்படுத்தியிருந்தார்.
  4. குரந்தன் ஐய்யனார் ஆலயத்தை சிங்கள பெளத்த விகாரையாக்க ஒன்றுசேர்ந்த சிறில் மத்தியூ, முல்லைத்தீவு இராணுவம் மற்றும் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை நிர்வாகம் - சட்டர்டே ரிவியூ கட்டுரை சிங்கள பெளத்த இனவாதிகளின் திட்டத்தினை தமிழர்கள் நன்கு அறிந்தே இருந்தனர். சிங்கள அரசுகளால் நிதியளிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த சிங்கள பெளத்த மயமாக்கலினை அவர்களால் எதிர்க்க முடியவில்லை. இயலாமையும், ஆத்திரமும் அவர்களை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. 1982 ஆம் ஆண்டு, ஆவணி மாதம், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிக்கையான சட்டர்டே ரிவியூ வில் வெளிவந்த கட்டுரை ஒன்றினை இங்கு பதிகிறேன். சைவத் தமிழர்களின் கவலைகள் இக்கட்டுரையில் பரவிக் கிடந்தது. பிரபாகரன் சிங்கள பெளத்த மயமாக்கலினை எதிர்க்கத் துணிந்தபோது தமிழர்கள் அவரின் பின்னால் நின்று ஆதரவளிக்கத் தொடங்கினர். "தமிழர்கள் செறிந்து வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தின் குரந்தன் மலைப் பகுதி மிகவும் அமைதியான ஒரு பிரதேசம். இங்கே சைவ மற்றும் பெளத்த மதத்தின் புராதனச் சின்னங்கள் காணப்படுகின்றன‌. ஆனால் வெகுவிரைவில் கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சினால் இப்பகுதி தனியே சிங்க‌ள பெளத்தர்களுக்கான ஏக வணக்கஸ்த்தலமாகவும், ஒரு சிங்களக் குடியேற்றமாகவும் மாற்றப்படப் போகின்றது". "இவ்வமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் முன்னாள் பொதுக் கூட்டுத்தாபன நிர்வாக அதிகாரியும், ஐக்கிய தேசியக் கட்சியின் பலம்பொருந்திய தொழிற்சங்கத்தின் தலைவருமான முக்கியஸ்த்தர் ஒருவர், இச்சிங்கள மயமாக்கல்த் திட்டத்தினை முன்னெடுத்து வருகிறார். அவருக்குத் துணையாக பெருமளவு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு வருகின்றனர்". "இப்பகுதியில் இருந்து 20 மைல்கள் தொலைவில் இருக்கும் ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருக்கும் ஓட்டுத் தொழிற்சாலையில் பணிபுரியும் பல பணியாளர்கள் இப்புதிய விகாரை நிர்மானப் பணிகளில் அரசால் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வமைச்சின் கீழ் வழங்கப்படுள்ள பல வாகனங்களும், ஏனைய வளங்களும் விகாரை நிர்மாணத்திற்கு அமைச்சால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன". "கடந்த கார்த்திகை மாதத்திலிருந்து இப்பகுதியில் காணப்பட்டு வந்த பல சைவ ஆலயங்களின் எச்சங்களை இராணுவத்தினர் அங்கிருந்து அகற்றி தமது வாகனங்களில் ஏற்றிச் செல்வதை இப்பகுதி மக்கள் பார்த்திருக்கின்றனர். வன்னிப்பகுதித் தமிழர்களால் தமது குலதெய்வம் என்று வணங்கப்பட்டு வரும் குரந்தூர் ஐய்யனார் ஆலயம் அமைந்திருக்கும் குரந்தன் மலைப்பகுதி, நாகஞ்சோலை எனும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் விகாரைக் கட்டுமான‌ப் பணிகள் பல மாதங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அருகிலிருக்கும் ஓட்டுத்தொழிற்சாலையில் பணிபுரியும் பல ஊழியர்கள் இக்கட்டுமானப் பணிகளில் அரசால் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். விகாரை அமைக்கும் பணிகளை மிகவும் இரகசியமாகப் பேணிவரும் அரசு, இதுகுறித்து தகவல்கள் வெளியே கசிவதையும் தடுத்து வருகிறது". "இதனையடுத்து இப்பகுதியில் வாழும் தமிழர்கள் சிலர் விகாரை கட்டுமானம் நடக்கும் பகுதியில் சைவர்களின் சூலம் ஒன்றினை நாட்டி, அதனைச் சூழ குடில் ஒன்றினையும் அமைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் முல்லைத்தீவு இராணுவ முகாமில் கடமையாற்றிக்கொண்டு, விகாரை கட்டுமானத்திலும் பங்கெடுக்கும் இராணுவத்தினர், அச்சூல‌த்தை பிடுங்கி எறிந்துள்ளதுடன், குடிலையும் அழித்திருக்கிறார்கள். மேலும் இப்பகுதியில் வாழ்ந்துவந்த தமிழர்களை இராணுவம் அடித்து விரட்டியுள்ளதுடன், பல தமிழ் இளைஞர்களையும் கைதுசெய்து இழுத்துச் சென்றிருக்கின்றது. அத்துடன், வனப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இவ்விகாரைக்கான கட்டுமானப் பொருட்களை இலகுவாக எடுத்துச் செல்லும் நோக்கில் ஒட்டுசுட்டானிலிருந்து விகாரை அமைக்கப்பட்டு வரும் நாகஞ்சோலை வனப்பகுதி வரைக்கும் புதிய தார் வீதியொன்றும் அரசால் இடப்பட்டு வருகிறது". “தமிழரின் தாயகமான இப்பகுதியில் சிங்கள பெளத்தர்களுக்கென்று ஏகமாகக் கட்டப்பட்டு வரும் விகாரையின் மூலம் மூன்று முக்கிய‌ விடயங்களை கைத்தொழில், விஞ்ஞான அலுவல்கள் அமைச்சு செய்துவருகிறது. 1. இப்பகுதியில் காணப்பட்டு வந்த வரலாற்றுச் சான்றுகளை முழுமையாக அழித்தன் ஊடாக வரலாற்றினைக் கண்டறிய எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய அனைத்து முகாந்திரங்களையும் அடியோடு இல்லாதொழித்திருக்கிறது. 2. இப்பகுதியில் சரித்திர காலம் தொட்டு வாழ்ந்து வரும் தமிழர்கள் இங்கிருந்து விரட்டப்பட்டு அவர்களின் நிலங்கள் புதிய சிங்களக் குடியேற்றக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. 3. இங்கு காணப்பட்ட சைவ ஆலயங்களின் எச்சங்கள் முற்றிலுமாக பிடுங்கி எடுக்கப்பட்டு, பத்திரமாக அகற்றப்பட்டு, இப்பகுதியில் சைவர்கள் வாழ்ந்ததற்கான சாட்சியங்கள் அடியோடு இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இவை எல்லாவற்றினைக் காட்டிலும் மிகுந்த அச்சந்தரும் செயற்பாடொன்று நடப்பில் இருக்கும் அரசின் கீழ் மிக மூர்க்கமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதுதான் முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழரின் இருப்பிற்கான தொடர்ச்சி பாரிய திட்டமொன்றின் ஊடாக சிதைக்கப்பட்டு வருகின்றமை". "வவுனியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் பதவியா சிங்கள் குடியேற்றம் கிழக்கு நோக்கி விஸ்த்தரிக்கப்பட்டு கொக்கிளாய்க் குளம் நோக்கி விரிவடைந்து வருகிறது. இப்பகுதியில் இருந்து வட கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு இராணுவ முகாம் மற்றும் வட மேற்கில் அமைக்கப்பட்டிருக்கும் ஒட்டுசுட்டான் தொழிற்சாலை ஆகிய இரு பிரதான அரச அமைப்புக்களின் அழுத்த‌ங்களினால், அண்மைய காலங்களில் தமிழர் தாயகத்தின் ஏனைய இடங்களில் நடைபெற்றதைப் போன்று, பதவியாவில் பொங்கிவழியும் சிங்களவர்களின் எண்ணிக்கை இப்பகுதிவரை நீட்டிப் பரவப்படப்போகின்றது என்பது நிதர்சனமாகிறது". "இது நடக்கும் பட்சத்தில் இம்மூன்று மாவட்டங்களிலும் வாழும் தமிழர்களுக்கிடையிலான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்படப் போகின்றது. இது தனியே தமிழர் தாயகத்தைக் கூறுபோட்டுவிடும் என்பதற்கு அப்பால், இப்பகுதிகளில் இனிவரும் காலங்களில் நடக்கப்போகும் சிங்களக் குடியேற்றங்களை எதிர்க்கும் திராணியும் இப்பகுதிவாழ் தமிழர்களிடத்தில் இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றது". என்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.
  5. தமிழ் பெளத்தர்களின் எச்சங்களைத் தமதென்று உரிமைகோரி, தமிழர் தாயகத்தில் சிங்கள பெளத்த குடியேற்றங்களை முடுக்கிவிட்ட இனவாதிகள் தமிழர் தாயகத்தின் தலைநகரான திருகோணமலையில் அமைக்கப்பட்டுவரும் சிங்கள பெளத்த விகாரை ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும் தமிழரின் தாயகக் கோட்பாட்டினை, அதன் அடிப்படையினைச் சிதைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்க, அவரது அரசின் கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சராகவிருந்தவரும் ஜெயாரினால் இனவாதம் கக்குவதற்காக களமிறக்கப்பட்டவருமான சிறில் மத்தியு, வடக்குக் கிழக்கை சிங்கள - பெளத்த தாயகமாக மாற்றும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கியிருந்தார். சிங்கள பெளத்த வெறி தலைக்கேறிய, நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த, சிங்கள சாதிய அமைப்பில் இடைநிலை மற்றும் சிறில் மத்தியூவின் சாதியான கரவா வகுப்பிலிருந்து வரும் பல கல்விமான்கள் வடக்குக் கிழக்கில் பெளத்த எச்சங்கள் என்று தாம் கருதுபவற்றை மீள உருவாக்கி அவற்றைச் சுற்றி சிங்கள மக்களைக் குடியேற்றும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வரலாயினர். இவ்வாறு அவர்களால் அடையாளம் காணப்பட்ட பலவிடங்களில் புதிதாக விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு அவற்றைச் சூழவும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வந்தனர். ஆனால் இவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட புராதன பெளத்த எச்சங்கள் தமிழ் பெளத்தர்களுக்குச் சொந்தமானவை என்றும், ஒருகாலத்தில் தமிழர்களில் ஒரு பகுதியினர் பெளத்தர்களாக இருந்தனர் என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட சரித்திரத் தகவல்கள் இருந்தபோதிலும், இந்தச் சிங்களக் கல்விமான்களால் இந்த உண்மை வேண்டுமென்றே மறைக்கப்பட்டு வந்தது. வவுனியா வடக்கில் தமிழ் பெளத்தர்களின் புராதனச் சின்னமொன்றும் சிங்கள மயமாக்கப்பட்டு வரும் காட்சி தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகள் அசோகச் சக்கரவர்த்தியின் காலத்தில் இருந்து 13 ஆம் நூற்றாண்டின் சோழர் காலம் வரைக்கும் தமிழ் பெளத்தர்கள் வாழும் பகுதியாக இருந்திருக்கிறது. இதனால் இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் பெளத்த தமிழர்கள் உருவாக இது காரணமாக அமைந்திருந்தது. தமிழ் பெளத்தர்களின் பிரசன்னமும், ஆதிக்கமும் அநுராதபுர காலத்து மன்னராட்சியின் அவைகளிலும் கணிசனமான அளவு காணப்பட்டு வந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தில் சோழ பெளத்தர்கள் என்று அழைக்கப்பட்ட தமிழ் பெளத்தர்களுக்கும் சிங்கள பெளத்தர்களுக்கும் இடையே பல மோதல்கள் இடம்பெற்று வந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில் இருக்கும் இராஜராஜ நூதணசாலையில் வைக்கப்பட்டிருக்கும் 14 ‍ 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை பெளத்த நூல்களும், ஓலைகளும் பாளி மொழியிலேயே எழுதப்பட்டு வந்தமையினால், தமிழ் பெளத்தர்களால் உருவாக்கப்பட்ட நூல்களை சிங்கள‌ பெளத்தர்களின் நூல்கள் என்று உரிமை கோருவது பெளத்த இனவாதிகளுக்கு வசதியாகிப் போயிற்று. தமிழ் பெளத்தர்களால் சிங்கள மொழிக்கும் அதன் இலக்கணத் திருத்தத்திற்கும் ஆற்றப்பட்ட பணி மகத்தானது என்பதைப் பறைசாற்றச் சான்றுகளும் இருக்கின்றன.தமிழ் பெளத்தர்களால் எழுதப்பட்ட வீரசோலியம் எனும் நூலில் காணப்படும் பல இலக்கணத் திருத்தங்கள் சிங்கள இலக்கணப் பயன்படுத்தலில் எங்கும் பரவிக் கிடக்கின்றன. சோழர் காலத்திலும் அதற்குப் பின்னரும் தமிழர் தாயகத்தில் வளர்ந்துவந்த சைவ மதத்தின் தாக்கத்தால் அக்காலத்தில் காணப்பட்ட தமிழ் பெளத்தர்களின் விகாரைகள் அழிக்கப்பட்டு சைவர்களின் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வரலாயின. இதனையே மத்தியூவும் அவரது இனவாத நண்பர்களும் சிங்கள பெளத்தர்களின் விகாரைகள் அழிக்கப்பட்டு, சைவ ஆலயங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக சாதாரணச் சிங்கள மக்களிடையே பெரியளவில் பிரச்சாரம் செய்து வந்தனர். பெளத்த மதத்தினை விரும்பாத தமிழர்கள் புராதண பெளத்த விகாரைகளை அழித்து சைவக் கோயில்களை நிர்மாணித்து வருவதால், அக்கோயில்களை இடித்து, அங்கே மீளவும் பெளத்த விகாரைகளை அரச செலவில் நிர்மாணிப்பது என்பது அவசியமாகிறது என்று தமது செயற்பாட்டிற்கு நியாயம் கற்பித்து வந்தனர் மத்தியுவும் அவரது சகபாடிகளும். இவ்வாறு மீள் நிர்மாணம் செய்யப்பட்ட புதிய விகாரைகளைச் சுற்றித் தவறாது சிங்கள மக்களை அவர்கள் குடியேற்றி வந்தனர். ரணிலின் நல்லிணக்க அரசாங்கத்தால் 500 மில்லியன் செலவில் தமிழர் தாயகத்தில் உருவாக்கப்பட்ட‌ 1000 விகாரைகள் திட்டம் ‍ இன்றும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. சிறில் மத்தியூவின் பெளத்த சிங்களக் குடியேற்றங்களுக்கு சிங்கள ஊடகங்கள் பெருமளவு முக்கியத்துவம் கொடுத்து வந்ததுடன் சிங்கள தமிழ் இனங்களுக்கிடையிலான பிணக்கிற்கு மத ரீதியிலான இன்னொரு களம் ஒன்றினையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். இதனூடாக பெளத்த சைவ மோதல் ஒன்றிற்கான களமுனை திறக்கப்பட்டலாயிற்று. அரச மரத்தின் கிளை ஒன்றினை தமிழர் ஒருவர் தறிப்பதாகப் பிரச்சாரப்படுத்தப்பட்ட நிகழ்வொன்று, பெளத்த மதச் சின்னங்களை தமிழ்ப் பயங்கரவாதிகள் அவமதித்து வருகிறார்கள் என்கிற தொனியில் சிங்கள ஊடகங்களால் தொடர்ச்சியாகப் பாவிக்கப்பட்டு வந்தது. தமிழர் தாயகத்தில் பெளத்த எச்சங்களைத் தேடும் சிங்கள இனவாதிகளின் நடவடிக்கைகள் அரசியல் புதையல்களைத் தேடும் முயற்சியாக அன்று காணப்பட்டது. இதன் அடிப்படையிலேயே சிங்கள இனவாதிகள், தமிழர்களின் தாயகத்தின் ஒரு அங்கமான கிழக்கு மாகாணத்தில் புராதண சிங்கள பெளத்த நாகரீகம் காணப்பட்டதகாக் கூறி, அதனைத் தமது தாயகம் என்று உரிமை கோரி, அங்கு மீண்டும் பெளத்த விகாரைகளையும் சிங்களக் குடியேற்றங்களையும் உருவாக்குவதில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறு செய்வதனால் சைவத் தமிழர்கள் மீது அது செலுத்தப்போகும் தாக்கத்தினை சிங்கள அரசியல்வாதிகளோ, கல்விமான்களோ சற்றேனும் உணரமறுத்துவந்தமை பெரு வருத்தத்தினை எனக்கு ஏற்படுத்தியிருந்தது.
  6. https://www.foxnews.com/world/israel-begins-retaliatory-strikes-against-iran-following-missile-barrage-targeting-israelis
  7. சரித்திரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் மிகப்பெரிய தாக்குதல் என்று வர்ணிக்கப்படும் தாக்குதலில் 140 யுத்த விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல்களில் இதுவரை இராணுவ மையங்கள், ஏவுகணை நிலைகள், ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் தயாரிக்கும் நிலையங்கள் மற்றும் விமான எதிர்ப்பு நிலைகள் என்பனவும் இலக்குவைக்கப்பட்டிருக்கின்றன. உள்ளூர் தகவல்களின்படி ஈரானின் முக்கிய படையணியான இஸ்லாமிய புரட்சிகர ராணுவத்தின் பிரதான தலைமையகமும் தாக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. முதலாவது தாக்குதல்கள் தலைநகர் டெஹ்ரான் மற்றும் கராஜ் ஆகிய பகுதிகளிலேயே ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. தன்மீது ஈரானும், அதன் முகவர்களும் கடந்த சில வருடங்களாக நடத்திவரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இதனை தான் நடத்துவதாக இஸ்ரேல் கூறுகிறது. இத்தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் பைடனுக்கும், உப‌ அதிபர் கமலா ஹரிஸிற்கும் முறைப்படி அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
  8. ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து 30 மைல்கள் தொலைவில் இருக்கும் கராஜ் நகரில் அமைக்கப்பட்டிருக்கும் அணுமின் நிலையத்திற்கு அருகிலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஈரான் மீதான தாக்குதலை டெல் அவிவில் அமைந்திருக்கும் இராணுவத் தளம் ஒன்றிலிருந்து தளபதிகளுடன் மேற்பார்வையிடும் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு
  9. நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது , சேதங்கள் இல்லை என்று ஈரானின் அரசச் செய்திச்சேவை தொடர்ச்சியாகக் கூறிக்கொண்டு வந்தபோதிலும், டெஹ்ரானில் நடக்கும் பாரிய குண்டுவெடிப்புக்களால் மக்கள் பீதியுடன் காணப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. ஜெருசலேம் போஸ்ட் எனும் இஸ்ரேலிய இணையப் பத்திரிக்கை டெஹ்ரான் மீதான தாக்குதலின்போது எடுக்கப்பட்ட குண்டுவெடிப்பொன்றினை வெளியிட்டிருக்கிறது. https://www.jpost.com/breaking-news/article-826117 ஈரானின் விமான எதிர்ப்பு பொறிமுறையினைக் கடந்து சில குண்டுகள் இலக்குகள் மீது பாய்ந்திருக்கின்றன. எண்ணெய்க் கிணருகல் மீதான தாக்குதலைத் தவிர்த்து வெறுமனே இராணுவ இலக்குகள் மீது மட்டும்தான் இத்தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படையின் தளங்களும் இலக்குவைக்கப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. ஈரான் மீது இரண்டாவது வலிந்த தாக்குதலில் இஸ்ரேல் தற்போது ஈடுபட்டு வருகிறது. https://edition.cnn.com/world/live-news/israel-iran-lebanon-gaza-war-10-25-24-intl-hnk/index.html
  10. உண்மைதான், பி பி சி செய்திகளின்படி தாக்குதலுக்குப் பாவிக்கப்படக் கூடிய ஆயுதங்கள் பற்றிய விடயங்களே கசியவிடப்பட்டுள்ளன. இடங்கள் அல்ல. எனது தவறான புரிதல் என்றுதான் நினைக்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. உண்மை, இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் உளவுத்தகவல்களே கசிய விட‌ப்பட்டுள்ளன.
  11. ஈரானின் முக்கிய இலக்குகள் என்று அடையாளம் காணப்பட்டவற்றின் பட்டியலொன்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளிடம் இஸ்ரேலினால் சில தினங்களுக்கு முன்னர் கையளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தப்பட்டியலை அமெரிக்க அதிகாரிகள் வேண்டுமென்றே வெளியே கசியவிட்டதால் இலக்குகள் குறித்த தகவல்களை ஈரானும் அதன் முகவர்களும் அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. அதனால் இப்பாட்டியலிற்குள் அடங்காத வேறு இலக்குகள் சிலவற்றை இஸ்ரேல் இனங்கண்டு தாக்குதலை நடத்தியிருக்கிறது. தாக்குதல் நடத்தப்படுவதற்குச் சற்று முன்னர்தான் அமெரிக்காவிற்கு இதுபற்றிய தகவல்களை இஸ்ரேல் வழங்கியிருக்கிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரானின் முக்கிய இடங்களில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக மக்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் அச்சத்தங்கள் இஸ்ரேலிய ஏவுகணைகளை தமது ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறை வானில் வைத்து தாக்கியழிக்கும்போது ஏற்பட்ட வெடிப்புச் சத்தங்கள் என்று ஈரான் கூறியிருக்கிறது. மேலும் இஸ்ரேலின் தாக்குதலினால் தமக்கு அவ்வளவாகப் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்றும் ஈரான் கூறுகிறது. https://edition.cnn.com/world/live-news/israel-iran-lebanon-gaza-war-10-25-24-intl-hnk/index.html https://www.foxnews.com/world/israel-begins-retaliatory-strikes-against-iran-following-missile-barrage-targeting-israelis https://www.bbc.com/news/live/cn4v67j88e0t https://www.reuters.com/world/middle-east/explosions-heard-iran-syria-middle-east-braces-israeli-retaliation-2024-10-25/
  12. ஈரான் மீதான தனது பதில்த் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் இம்மாத ஆரம்பத்தில் தன்மீது நடத்தப்பட்ட 180 இற்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கும், ஈரானின் கூலிகளான ஹமாஸ், ஹிஸ்புள்ளா, ஹூத்தீக்கள், ஈராக்கிலும் சிரியாவிலும் இயங்கும் இஸ்லாமியக் குழுக்கள் ஆகியவற்றின் ஊடாக தன்மீது ஈரான் நடத்திவரும் தாக்குதல்களுக்கும் பதிலடியாக இஸ்ரேல் சனி அதிகாலையிலிருந்து ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகிறது
  13. தமிழர்களுக்கெதிரான யுத்தத்தின் புலநாய்வு வலையமைப்பை உருவாக்கிக் கொடுத்த இஸ்ரேலின் மொசாட் அதிகாரிகள் அன்றிரவு கொழும்பில் தன்னிடம் இந்தியப் பத்திரிக்கையாளர்கள் துருவித் துருவிக் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் இருந்து வேர்னன் வோல்ட்டர்ஸ் தப்பிக்க எத்தனித்தார். ஜெயாருடனான தனது பேச்சுக்கள் குறித்த இந்தியப் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளைச் சற்றும் கணக்கில் எடுக்காத வோல்ட்டர்ஸ், தமிழரின் பிரச்சினையில் இந்தியாவின் பார்த்தசராதியின் முயற்சிகளைக் கடுமையாக விமர்சித்ததுடன், இலங்கை ஜனாதிபதி இனப்பிரச்சினையினை தீர்த்துக்கொள்ளும் அனைத்து திட்டங்களையும் கைவசம் கொண்டிருந்தார் என்றும் காட்டமாகக் கூறினார். திருகோணமலை துறைமுக எண்ணெய்க் குதங்களை குத்தகைக்கு எடுக்கப்போகிறீர்களா? என்கிற கேள்விக்கும், நான் திருகோணமலைப் பக்கமே போகப்போவதில்லை, ஆனால் இலங்கை மக்களின் சரித்திரம் பற்றி அறிந்துகொள்ள கண்டிக்குச் சென்றிருந்தேன் என்று கூறினார். ஆனால் திருகோணமலை துறைமுக குத்தகை விவகாரம் குறித்து வோல்ட்டர்ஸ் ஜெயாருடன் பேசியிருந்தார். அத்துடன் அமெரிக்காவின் வானொலி நிலையத்திற்கான ஜெயாரின் சம்மதத்தையும் கையொப்பத்துடன் அவர் பெற்றுக்கொண்டார். இதற்கான பத்திரங்களை அவர் அமெரிக்காவிலிருந்து தயாரித்த்துக் கொண்டு வந்திருந்தார். மூன்றாவதாக வோல்ட்டர்ஸ் ஒரு விடயத்தையும் நிறைவேற்றிக்கொண்டார். அதுதான் இலங்கையில் இஸ்ரேலுக்கான இராஜதந்திர அந்தஸ்த்தினை வழங்குவது. அதற்கும் ஜெயார் சம்மதம் தெரிவித்தார். தமிழ் மக்கள் மீதான தனது யுத்தத்திற்கு அமெரிக்காவின் சாதகமான நிலைப்பாட்டு மாற்றத்தினால் மிகுந்த உற்சாகமடைந்த ஜெயார் தனது இராணுவ ரீதியிலான தீர்வினை முன்னெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடலானார். தனது இராணுவத்தினருக்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக இஸ்ரேலிய மொசாட் அதிகாரிகளை ஐரோப்பாவில் சந்திக்க தனது மந்திரிசபைச் செயலாளர் ஜி.வி.பி. சமரசிங்கவை ஜெயார் அனுப்பி வைத்தார். அம்மாத இறுதியில் இஸ்ரேலிற்கும், இலங்கைக்குமான இராணுவ உதவிகளுக்கான ஒப்பந்தம் ஐ நா சபை அமர்வுகளுக்காக ஜெயாரின் பயணத்தின்போது கைச்சாத்திடப்பட்டது. இஸ்ரேலுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. தைமாதத்தில் இஸ்ரேலுடன் தமது அரசாங்கம் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திவருவதாக ஜெயார் சபையில் அறிவித்தபோது அவரது அமைச்சரவையில் இருந்த இரு முஸ்லீம்களான மொகம்மட்டும், ஹமீதும் அதற்கு தமது ஆட்சேபணையினை வெளியிட்டனர். இஸ்ரேலுக்கான இராஜதந்திர அந்தஸ்த்தை இலங்கை வழங்குவது குறித்து முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கு தாம் வழங்கிவந்த நிதியுதவியினை சவுதி அரேபியாவும் குவைத்தும் நிறுத்திக்கொண்டன. உள்நாட்டில் முஸ்லீம்களால் ஏற்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை மிக இலகுவாக ஜெயாரினால் நசுக்க முடிந்தபோதும், இந்தியாவையும், ஏனைய முஸ்லீம் நாடுகளையும் அவரால் உதாசீனப்படுத்த முடியவில்லை. ஆகவே வேறு வழியின்றி இஸ்ரேலுக்கான முழுத் தூதரக அந்தஸ்த்தினை வழங்குவதென்ற தனது உடன்பாட்டில் இருந்து பின்வாங்கிய ஜெயார், கொழும்பில் இயங்கிவரும் அமெரிக்க தூதரகத்திற்குள் இஸ்ரேலிய நலன்களுக்கான பிரிவு எனும் அலுவலகத்தை திறப்பதற்கு அனுமதியளித்தார். இஸ்ரேலிய நலன் காக்கும் அலுவலகம் வைகாசி 1984 இல் உருவாக்கப்பட்டது. அதனது முதலவாது அதிகாரியாக டேவிட் மட்நாய் நியமிக்கப்பட்டார். ஆவணி 1984 இல் இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட்டின் ஆறு அதிகாரிகள் இலங்கைக்கு வந்தனர். இவர்களின் வழிநடத்துதலில் தமிழர்களுக்கெதிரான உளவு வலையமைப்பை இலங்கை இராணுவம் உருவாக்கிக் கொண்டது.
  14. அண்ணை, இந்தப்பட்டியலில இருக்கிற இரண்டுபேர் பற்றி மட்டும் ஒரு விடயம் சொல்லவேணும். கதிர்காமர் ‍ துரோகியல்ல, எதிரி. சமாதானம் யுத்தம் என்கிற பெயரில சந்திரிக்கா செய்த இனக்கொலை யுத்தத்தில சந்திரிக்காவுக்குக் கொள்ளி எடுத்துக் கொடுத்தவர். அவர் தன்னைத் தமிழன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்துபோட்டு சந்திரிக்காவின்ர பக்கம் தாவினவர் எண்டால் பரவாயில்லை, அந்தாள் பிறவியில இருந்தே கொழும்பு மேற்தட்டு வர்க்க சிங்களவர்களின் நண்பர். கருணாநிதி உலகத் தமிழினத்தின்ர தலைவர் எண்டு சொல்லிக்கொண்டு முள்ளிவாய்க்கால் இனக்கொலையில தன்ர குடும்ப வாரிசுகளுக்கு என்ன கிடைக்கலாம் எண்டு இலாப நட்டம் பார்த்தவர். சனம் ஆயிரக்கணக்கில சோனியாவின்ர ஏவலில கொல்லப்பட்டுக்கொண்டிருக்கேக்கை தில்லியில கூடாரம் அடிச்சு பதவி கேட்டவர். அவர் துரோகியேதான். அப்ப மற்ற ஆக்கள்? அவையள ஆர் துரோகியெண்டு சொன்னது? புலிக்காய்ச்சல் பிடிச்சால் உப்பிடி ஆளாளுக்கு ஆயிரம் பட்டியல் போட்டுக்கொண்டு வாரதுதான். இப்ப கொஞ்சக்காலமாய்ப் புலிக்காய்ச்சல் பிடிச்சு மூடிக்கொண்டு கிடந்ததெல்லாம் எழும்பி வந்து வாந்தி வாந்தியாய் எடுக்குதுகள். பாக்கவே சகிக்கேல்லை. தமிழ்ச்சனத்துக்கு நண்மையாக் கதைக்கிறம் எண்ட பெயரில தங்கட வக்கிரத்தைக் கொட்டுதுகள்.
  15. முதல்நாள் சமாதானம் பற்றியும், இரண்டாம் நாள் போரின் மூலம் தமிழர்களை அடிமைப்படுத்துவது பற்றியும் ஆலோசனைகளில் ஈடுபட்ட ஜெயவர்த்தன‌ மலையக மக்களை சட்டத்திற்குப் புறம்பாக எல்லையோரங்களில் தமிழர்கள் குடியேற்றிபவருகிறார்கள் என்கிற விசமத்தனமான அறிக்கையினை அரசாங்க‌த்தில் அங்கம் வகித்த தமிழ் அமைச்சர்கள் எதிர்த்தார்கள். இதற்கெதிராக தொண்டைமான் காட்டமான அறிக்கையொன்றினை வெளியிட்டதுடன், அமைச்சர் தேவநாயகம் மறுநாளான 18, ஐப்பசி 1983 இல் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினையும் கூட்டியிருந்தார். தொண்டைமானின் அறிக்கை தொடர்பாகவும், தேவநாயகத்தின் பத்திரிக்கையாளர் மாநாடு தொடர்பாகவும் டெயிலி நியூஸிற்காக நான் செய்திகளை தயாரித்திருந்தேன். இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும், பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய அரசு சாரா அமைப்புக்களும் பலநூற்றுக்கணக்கான நாடற்ற மலையகத் தமிழர்களை எல்லையோரக் கிராமங்களில் குடியேற்றிவருவதாக அறிக்கைகள் வெளிவந்ததை தொண்டைமான் கடுமையாகச் சாடியிருந்தார். சிங்களப்பகுதிகளில் பெருந்தோட்டங்களில் வாழ்ந்துவந்த மலையகத் தமிழர்கள் மீது 1977 ஆம் ஆண்டு சிங்களவர்கள் நடத்திய தாக்குதல்களாலேயே அப்பகுதிகளில் வாழ்ந்துவந்த பல தமிழர்கள் தமது பாதுகாப்புக் கருதி வடக்குக் கிழக்கிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்துவருவதாக அவர் கூறினார். மேலும், அக்காலப்பகுதியில் தான் அரசாங்கத்துடன் இணைந்திருக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்த தொண்டைமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எக்கட்டத்திலும் மலையகத் தமிழர்களை வடக்குக் கிழக்கில் குடியேற்றுவதில் பங்கெடுத்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், அரசாங்கத்தால் கைவிடப்பட்ட தமிழ் அகதிகளை அரசு சாரா அமைப்புக்களே பராமரித்து வருவதனால் அவர்களுக்கு தனது நன்றியையும் தொண்டைமான் தெரிவித்தார். அண்மையில் காந்தியம் பண்ணைகளில் இருந்து மலையகத் தமிழர்களை அடாத்தாக அரசாங்கம் விரட்டியடித்தமை மனித நேயத்திற்குப் புறம்பான செயல் என்றும் கண்டித்தார். அரசாங்கத்தின் கொள்கைக்குப் புறம்பாகச் சென்று மக்களைக் குடியேற்றுவதில் அதிகாரிகள் கடைப்பிடித்துவரும் போக்கு தவறானது என்றும் அவர் கண்டித்தார். மலையகத் தமிழர்களை மீளக் குடியேற்றுவதற்குப் பதிலாக அவர்களை வேண்டப்படதாகவர்களைப் போன்று மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அதிகாரிகள் நடத்திவருவதாக அவர் விமர்சித்தார். மேலும் காந்தியம் பண்ணைகளில் இருந்த மலையகத் தமிழர்களை இராணுவத்தினரும், பொலீஸாரும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டே விரட்டியடித்தார்கள் என்றும் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திருந்தார். தேவநாயகம் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாட்டில் தமிழரின் தாயகத்தில் எந்தப் பகுதியிலும் மலையக மக்களை மனிதக் காப்புச் சுவர்களாக தமிழர்களோ அரசியட் கட்சிகளோ குடியேற்றவில்லை என்று, இதுகுறித்து வந்தபத்திரிக்கை அறிக்கைகளைத் திட்டவட்டமாக மறுத்தார். சண் பத்திரிக்கையில் விசமத்தனமாக வெளியிடப்பட்ட அறிக்கையினை பொறுப்பற்ற ஊடக தர்மம் என்று கடிந்துகொண்ட அவர், சர்வதேசத்தில் மதிப்பிற்குரிய அமைப்பாக இயங்கும் அரசு சாரா அமைப்பொன்றின்மீது வேண்டுமென்றே களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியே இதுவென்றும் குறிப்பிட்டார். தமிழர் தாயகத்தில் மலையகத் தமிழர்கள் குடியேறுவதை சட்டத்திற்கு முரணான குடியேற்றம் என்று கூப்பாடு போடும் தெற்கின் பத்திரிக்கைகள், கிழக்கின் மாதுரு ஓயாப் பகுதியில் தமிழரின் நிலங்களில் சிங்களவர்கள் அத்துமீறிக் குடியேற்றப்படுவதை, அங்கு நடைபெற்றுவரும் நில அபகரிப்பை ஒருபோதும் கண்டிப்பதில்லை என்றும் அவர் கூறினார். தனது தொகுதியான கல்க்குடாவில் நிகழ்த்தப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்களில் இருந்து அதனைக் காப்பற்ற தனது ச‌க அமைச்சர்களோடு முரண்படும் போக்கினை தேவநாயகம் கொண்டிருந்தார். மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றம் தேவநாயகத்தின் கல்க்குடா தொகுதியிலேயே அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிடத் தக்கது. காமிணி திசாநாயக்க தமிழ் அமைச்சர்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதுகுறித்து மோதுவதென்று முடிவெடுத்தார். தனது தொகுதியான நுவரெலியாவில் இருந்தே தொண்டைமானும் தெரிவுசெய்யப்பட்டு வருவதால், அவரை தனது அரசியல் எதிரியாகக் கணித்தே காமிணி தனது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆகவே, தொண்டைமான் தனது மலையக மக்களின் நலன்கள் குறித்து மட்டுமே கவலைப்படுவதாகவும், நாட்டின் பாதுகாப்புக் குறித்து தொண்டைமானுக்கு அக்கறையில்லை என்றும் வெளிப்படையாகக் கூறினார். மேலும் வவுனியாவிலும், மட்டக்களப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதக் குடியேற்றங்கள் பயங்கரவாதிகளின் பயிற்சிமுகாம்களாக மாற்றப்பட்டு வருவதாக அவர் கூறினார். மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் பயங்கரவாதிகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அமைச்சர் தேவநாயகத்தின் குற்றச்சாட்டுக்களை முறியடிக்க தனது ஊடக நண்பர்களான சண் பத்திரிக்கையை காமிணி நாடினார். மறுநாள் (19/10/1983) வெளிவந்த சண் பத்திரிக்கைச் செய்தியில் மாதுரு ஓயா குடியேற்றத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை பிரஜைகளான மக்கள் அரசாங்கத்திற்கு முறைப்படி வரிகட்டும் மக்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வவுனியாவில் குடியேற்றப்பட்டு வரும் மலையகத் தமிழர்கள் நாடற்றவர்கள் என்றும் அச்செய்தி குறிப்பிட்டிருந்தது. மாதுரு ஓயாவில் குடியேறும் சிங்களவர்களை இலங்கையின் பிரஜைகள் என்று குறிப்பிட்டதன் ஊடாக சிங்களவர்கள் இந்த நாட்டில் எப்பகுதியிலும் குடியேறும் உரிமையினைக் கொண்டிருப்பதாக காமிணி திசாநாயக்கவினால் சண் பத்திரிகைக்குக் கொடுக்கப்பட்ட செய்தி கூறியிருந்தது. தனது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்களின் கவலைகளை ஜெயவர்த்தன உதாசீனம் செய்தார். மலையகத் தமிழர்களை காந்தியம் பண்ணைகளில் இருந்து அடித்துவிரட்டுவது எனும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த அவர் உறுதிபூண்டார். அமெரிக்க அதிபர் ரீகனின் தொடர்பாடலதிகாரியான வேர்னன் வோல்ட்டார்ஸ் ஊடாக இஸ்ரேலியர்களுடனான தொடர்பினை தனது மகன் ரவியின் மூலம் ஜெயவர்த்தன ஏற்படுத்திக்கொண்டார். கார்த்திகை 7 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்த வேர்னன் வோல்ட்டர்ஸ் மறுநாள் 8 ஆம் திகதி ஜெயவர்த்தனவுடன் நீண்டநேரம் பேச்சுக்களில் ஈடுபட்டார். பேச்சு முழுதும் இஸ்ரேலினூடாக இராணுவ உதவிகளை இலங்கைக்கு எப்படிப் பெற்றுக்கொடுப்பது என்பதாகவே இருந்தது. இப்பேச்சுக்களில் லலித் அதுலத் முதலியும், ரவி ஜெயவர்த்தனவும் பிரசன்னமாகியிருந்தனர். அதேவேளை ஜெயாரின் அழைப்பின்பேரில் கார்த்திகை 7 ஆம் திகதி கொழும்பு வந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் பார்த்தசாரதி ஜெயாருடன் சமாதான முயற்சிகள் குறித்து நீண்ட பேச்சுக்களில் ஈடுபட்டார். அதேவேளை இஸ்ரேலியர்களின் இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொண்டு தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை எப்படி முற்றாக அழித்துவிடுவது என்பதுபற்றிய பேச்சுக்களிலும் ஜெயவர்த்தன ஈடுபட்டிருந்தார். தமிழர்களின் பிரச்சினைக்கான அடிப்படைத் தீர்வாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்று தான் முன்வைத்த தீர்வினை எப்படி மெருகூட்டுவது என்று பார்த்தசாரதியிடம் விளக்கிய ஜெயார், இரண்டிற்கு மேற்பட்ட மாவட்டங்களை இணைக்கலாம் என்றும் பேசினார். முதல்நாளில் சமாதானம் குறித்தும், அடுத்த நாளில் போரில் தமிழர்களை எவ்வாறு தோற்கடிக்கலாம் என்பது குறித்தும் பேசுமொரு ஜனாதிபதியை நம்பி தமிழர்கள் எப்படிப் பேச்சுக்களில் ஈடுபடுவது என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களில் ஒருவரான பாலக்குமார் சென்னையில் கார்த்திகை 9 ஆம் திகதி பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது கேள்வியெழுப்பியிருந்தார்.
  16. இந்தப்படத்தில் வெற்றுடம்பாகக் கொல்லப்படக் காத்திருக்கும் தமிழருக்கு முன்னால், அவரை எட்டி உதைவதற்குத் தயாராக நிற்கும் மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கும் சிங்களவன் இன்றைய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளரான டில்வின் சில்வாவாக இருக்கலாம் என்று தமிழ் யூடியூப்பர் ஒருவரின் ஒளிப்பதிவில் கேட்டேன். டில்வின் சில்வா பிறந்தது 1962 இல். இப்புகைப்படம் எடுக்கப்பட்டது 1983 இல். அதாவது இங்கிருப்பவன் 21 வயதினனாக இருக்கவேண்டும். என்ன நினைக்கிறீர்கள்?
  17. மக்கள் விடுதலை முன்னணி எனும் சிங்கள இனவாத மார்க்ஸிஸ்ட்டுக்கள் தாம் தமிழருக்கு உரிமை எதனையும் கொடுக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள். சில "தெமழுவோ" க்களின் தேசியத் தலைவரான அநுர குமார திசாநாயக்க, அதே தமிழர்களின் வெளிவிவகார அமைச்சரான விஜித்த ஹேரத், அதே தமிழர்களின் பெருவிருப்பிற்குரிய பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகிய முப்பெரும் தலைவர்கள் உட்பட பல மக்கள் விடுதலை முன்னணித் தலைவர்கள் இதனை கடந்த சில தினங்களாகக் கூறி வருகிறார்கள். "தமிழருக்கு இருப்பது இனப்பிரச்சினையல்ல, நாட்டிலுள்ள ஏனைய இன மக்களுக்கிருப்பது போன்ற அதே பொருளாதாரப் பிரச்சினைகள் தான், வடக்குக் கிழக்கு இணைக்கப்படக் கூடாது, மாகாண சபைகளுக்கான அதிகாரப் பரவலாக்கம் தேவையில்லை, போர்க்குற்றவாளிகள் என்று எந்த இராணுவ வீரனையோ தளபதியையோ நாம் காட்டிக்கொடுக்கப் போவதில்லை, சுதந்திரமான யுத்தக் குற்ற விசாரணைகளுக்கோ அல்லது அது தொடர்பான சாட்சித் தேடல்களுக்கோ நாம் அனுமதியளிக்கப்போவதில்லை" என்கிற "தெமுழுவோ" க்களுக்கு பெரிதும் நண்மை பயக்கும் வரங்களை அள்ளி வழங்கிக்கொண்டு வருகிறார்கள். இங்கு யாழ்க்களத்தில் இந்த இனவாதிகளுக்கு அப்பட்டமாக செம்புதூக்கும் ஒருவரும் அவரின் மேலும் இரு ஆதரவாளர்களும் இத்தனை வரங்களுக்குப் பின்னரும் அக்கட்சியை ஆதரிக்கவேண்டும் என்று தொடர்ச்சியாக கேட்டு வருகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒருவர் தமிழர் என்கிற அடையாளம் வேண்டாம் , இலங்கையராக இணைந்து, மக்கள் விடுதலை முன்னணியுடன் பணியாற்றுவோம் என்று அழுகிறார். சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியில் முன்னர் இணைந்து பணியாற்றிய முஸ்லீமான அஞ்சன் உம்மா, தமிழரான சந்திரசேகரன் மற்றும் தற்போது அநுரவின் தமிழ் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்தவர் ஆகியோர் பேசிவந்த அல்லது பேசி வருகின்ற விடயங்களைக் கேட்பவர்களுக்கு இவ்வாறான இனத்துரோகிகளை அக்கட்சி இணைப்பது தமிழருக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவல்ல, மாறாக இவ்விரு சமூகங்களுக்குள்ளும் தமது இனவாத வேர்களை நுழையவிட்டு அவ்வினங்களைப் பலவீனப்படுத்தத்தான் என்பது இந்த செம்புதூக்கிகளுக்கு நன்கு தெரிந்தபின்னரும், அதனையே செய்யவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். போலி மாக்ஸிஸம் பேசிக்கொண்டு, அப்பட்டமான சிங்க‌ளப் பேரினவாதம் கக்கும் ஒரு கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு, மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்களைப்போன்றே "தமிழ் எனும் அடையாளம் துறந்து இலங்கையராக இணைவோம்" என்று ஊளையிடும் செம்புதூக்கிகள் செய்ய விரும்புவது தமிழர்களை மேலும் மேலும் மூளைச்சலவை செய்து, அவர்களின் தாயகத்தில் சிங்கள இனவாதிகளை வேரூன்றச் செய்வதுதான். சிங்கள இனவாதிகளுக்கு தமிழர் தாயகத்தில் செங்கம்பளம் விரித்து வரவேற்கக் காத்திருக்கும் இப்புல்லுருவிகளின் கனா கலைக்கப்பட வேண்டுமானால், தமிழர்கள் செய்யவேண்டியது இந்த இனவாதிகளையும், அவர்களைப் பல்லக்கில் தூக்கிச் சுமக்கத் தவமிருக்கும் புல்லுருவிகளையும் அடையாளம் கண்டு அகற்றுவதுதான். தமிழர்களின் பொருளாதாரத்தைச் சரிசெய்கிறோம் என்று கூவும் இதே இனவாதிகள் 1983 இல் இருந்து இன்றுவரை அதே தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டக் காரணமாக இருந்தவர்கள் என்பதை செம்புதூக்கிகள் மறக்கலாம், மறைக்கலாம், ஆனால் தமிழர்கள் இதுகுறித்து அவதானமாக‌ இருப்பதும், தாயகத்தில் சிங்கள இனவாதிகள் காலூன்றுவதைத் தடுப்பதும் காலத்தின் கட்டாயம்.
  18. மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி தூயவன். இஸ்ரேலியரின் வேதாகமத்தில் இன்று போர்நடக்கும் பலபகுதிகள் அன்று அவர்களின் தாயகம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 1000 வருடங்களுக்கு (அண்ணளவாகத்தான்) முன்னர் அரேபியப் படையெடுப்புக்களால் இஸ்ரேலியர்கள் இங்கிருந்து விரட்டப்பட பலஸ்த்தீனர்கள் அங்கு குடியேறிவிட்டார்கள். 1948 இற்குப் பின்னரே இஸ்ரேலியர்கள் அங்கு மீளவும் குடியேறினார்கள். தமது வேதாகமத்தின்படி பலஸ்த்தீனர்கள் தற்போது வாழும் , தமது முந்தைய தாயகத்தை மீட்டு, மீள உருவாக்க முயல்கிறார்கள். அப்படியானால் அங்குவாழும் பலஸ்த்தீனர்கள் எங்கு செல்வது? கடந்த 1000 வருடங்களாக அவர்களும் அங்குதானே வாழ்கிறார்கள்? யூதரும், பலஸ்த்தீனியர்களும் இருக்கும் தாயகத்தை பகிர்ந்து வாழ்வதே சரியாக இருக்கும் என்பது எனது நிலைப்பாடு.
  19. இல்லை அண்ணை, இதெல்லாமே நடந்தது. இதில் மறுப்பதற்கு எதுவுமில்லை. ஈஸ்ரேல் நடத்துவது ஆக்கிரமிப்பு யுத்தம்தான். ஈழத்தமிழர் மீது அவ்வாறான ஆக்கிரமிப்பொன்றினை நடத்தலாம் என்று ஜெயவர்த்தனா, காமிணிக்குச் சொல்லிக் கொடுத்ததே இஸ்ரேலிய மொஸாட்டுக்கள் தான். காஸாவிலும் மேற்குக் கரையிலும் பலஸ்த்தீனர்களை விரட்டியடித்துவிட்டு இஸ்ரேலியர்களைக் குடியேற்றி ஆயுதமயப்படுத்தியதைத்தான் இலங்கையிலும் தமிழர் தாயகத்தில் மொஸாட்டுக்கள் செய்வித்தார்கள். ஆக, ஈழத்தமிழரின் அவலங்கள் ஆரம்பிக்கப்படு முன்னமே பலஸ்த்தீனர்களின் அவலங்கள் ஆரம்பித்து விட்டன. நான் சொல்ல வந்தது ஹமாஸும் புலிகளும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கப்பட முடியாதவர்கள் என்பதைத்தான். இவ்விரு அமைப்புக்கள் மீதான சர்வதேசத் தடை என்பது தடை விதிக்கும் நாடுகளின் நலன்களைப் பொறுத்தே அமைந்திருக்கின்றன. மாறாக இவ்வமைப்புக்களின் நடவடிக்கைகள் சரியானவையா தவறானவையா எனும் அடிப்படையில் அல்ல.
  20. ஹமாஸ் தலைவர் சின்வாரின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டே கொல்லப்பட்டிருக்கிறார் என்று அவரது சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனை செய்த இஸ்ரேலிய மருத்துவர் கூறியிருக்கிறார். இது சின்வார் தாங்கித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் முதலில் கூறியதற்கு முரணானதாகும். ஆரம்பத்தில் அவர் இருந்த கட்டடப் பகுதியிலிருந்து இஸ்ரேலியத் தாங்கி அணி ஒன்றின்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பதிற்தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேலியர்கள் அக்கட்டடத்தை நோக்கித் தாங்கியால் சுட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் இஸ்ரேலிய ட்ரோன் ஒன்று ஒரு கை துண்டிக்கப்பட்டு, கால்கள் நடக்கமுடியாதளவிற்கு செயலிழந்துபோய், உடலில் பல குண்டுச்சிதறல்கள் பாய்ந்திருக்க அரை மயக்க நிலையில் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்த சின்வாரைக் கண்டது. தனது இடது கையினால் பலகையொன்றினை எடுத்து ட்ரோன் நோக்கி சின்வார் எறிய முற்படுகிறார். ஆனால், அதன் பின்னரான ஒளிப்ப‌டத்தில் சின்வாரின் இறந்த உடல் கீழே கிடக்க, சுற்றியும் இஸ்ரேலிய வீரர்கள் நிற்கிறார்கள். இந்த இடைவேளையில் அவரை உயிருடன் பிடித்து பின்னர் சுட்டுக்கொன்றோ அல்லது அருகிலிருந்து அவரைச் சுட்டுக் கொன்றோ இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சின்வார் கொல்லப்பட்டாலும் போர் தொடரும் என்று அறிவித்திருக்கும் ஹமாஸ், இஸ்ரேல் இராணுவம் காசாவிலிருந்து முற்றாக வெளியேறி, யுத்தத்தை நிறுத்தி, பலஸ்த்தீனக் கைதிகளை விடுவிக்கும் வரை இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. அதேவேளை ஹமாஸினால் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 101 பணயக் கைதிகளான இஸ்ரேலியர்களை விடுவிக்கும்வரை தனது இராணுவ நடவடிக்கையினை நிறுத்தப்போவதில்லை என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. தற்போது சின்வாரின் உடலை வைத்து கைதிகள் பரிமாற்றம் என்று ஒன்று நடைபெறலாம் என்று பேசப்படுகிறது.
  21. எங்களின் தேசியத்துக்கெதிரான கருத்துக்களை ஒரு பக்கம் எடுத்து வைத்துவிட்டு இதனைப் பார்க்கலாமே. சுமந்திரன் கூறுவதுபோல 15 ஆசனங்களை அவரது கட்சி கைப்பற்றுமாக இருந்தால் நல்லது என்பதே எனது எண்ணம். தெற்கைச் சாராத, தமிழர் தாயகத்தை தளமாகக் கொண்ட எந்தக் கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மை ஆசனங்களை வெல்வது தமிழரைப் பொறுத்தவர் நல்ல விடயமே. அதனால் எவர் தாயகத்தை அடிப்படையாக வைத்து தேர்தலில் போட்டியிட்டு வென்றாலும் எனது ஆதரவு அவர்களுக்கே. ஆனால், அவர்கள் தமிழ் மக்கள் தொடர்பான தமது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். எமது தாயகப்பகுதிகள் தொடர்பான அபிவிருத்தியில் அவர்கள் ஈடுபட வேண்டும். தமிழர்களின் அரசியல் நலன் தொடர்பாக உண்மையான அக்கறையும், அதுகுறித்து செயற்படும் துணிவும் இருந்தால் சுமந்திரனுக்கு வாக்களிக்கலாம். அதைச் சுமந்திரன் உறுதிப்படுத்த வேண்டும். செய்வாரா? என்னைப்பொறுத்தவரை சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணி நமது தாயகத்தில் காலூன்றுவதைக் காட்டிலும் சுமந்திரனோ அல்லது தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான வேறு எவருமோ தேர்தலில் வெல்வது மேலானது. பொதுவேட்பாளர் விடயத்தில் நான் இதே நோக்கத்திற்காகத்தான் அவர்களை ஆதரித்தேன், எமது தாயகத்தில் அவருக்கு பெரும்பாலான வாக்குகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக. ஆனால் அந்த முயற்சியை எல்லோருமாகச் சேர்ந்து இன்று கேலிக்கூத்தாக்கி விட்டார்கள் என்பது வேறு கதை. வாழ்த்துக்கள் சுமந்திரன், முயன்று பாருங்கள்.
  22. அண்ணை, நான் வாலிக்குச் சார்பாகக் கதைக்கிறேன் என்று எண்ணவேண்டாம். ஆனால் நீங்கள் மேற்கோள் காட்டிய அவரது கருத்து இஸ்லாமியப் பயங்கரவாதிகளை மட்டுமே குறிக்கிறது என்பது எனது தாழ்மையான எண்ணம். இஸ்ரேலுக்கெதிரான பயங்கரவாதத் தாக்குதல்களை ஹமாஸ் நிறுத்தவேண்டும். ஏனென்றால், அது இன்னும் இன்னும் பல்லாயிரக்கணக்கான பலஸ்த்தீனர்களின் படுகொலைகளில்த்தான் சென்று முடியப்போகிறது. அடுத்தது, ஹமாஸிற்கோ அல்லது ஹிஸ்புல்லாவிற்கோ தலைமையேற்க எவர் வந்தாலும் அவர்களை இஸ்ரேல் கொல்லும், இதுதான் நடக்கிறது, அதைத்தான் வாலியும் குறிப்பிடுகிறார். முன்னொருமுறை இதே பலஸ்த்தீனர்களின் அவலங்கள் தொடர்பான கருத்தில் ஹமாஸ் குறித்த அவரது கருத்தொன்றிற்கு நானும் புலிகளை இணைத்து எழுதினேன். அதற்கு அவர் தந்த விளக்கம் எனக்குச் சரியாகப் பட்டது. இன்று நடந்திருப்பதும் அதுதான். இனத்தின் விடுதலைக்காகவும், இருப்பைத் தக்கவைக்கவும் போராடும் புலிகளையும், இஸ்ரேலை அழிப்பதற்காகவே செயற்படும் ஹமாஸையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது தவறென்பதே அவரது வாதம். அது எனக்குச் சரியாகவே தெரிகிறது. பலஸ்த்தீன மக்களினதும் ஈழத்தமிழினத்தினதும் அவலங்கள் ஏறக்குறைய ஒரேமாதிரியானவை. ஆனால் ஹமாஸும் புலிகளும் ஒன்றல்ல. உங்களை ஆத்திரப்பட வைக்க எழுதவில்லை. மனதில் பட்டதை எழுதினேன், அவ்வளவுதான்.
  23. கடந்த வருடம் இஸ்ரேலின் மேல் நடத்தப்பட்ட அருவருக்கத்தக்க தாக்குதலின் சூத்திரதாரி இவர்தான். இத்தாக்குதலின் ஊடாக பலஸ்த்தீன மக்களின் அறப்போராட்டத்தின் மீதான சர்வதேச அனுதாபத்தினை இவர் இழக்கவைத்தார். பலமுறை ஹமாஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையே நடந்துவந்த பணயக் கைதிகள் விடுவிப்புத் தொடர்பான பேச்சுக்களில் மிகக்கடுமையாக இவர் நடந்துகொண்டார் என்றும் கூறுகிறார்கள். இவரது இழப்பால் ஹமாஸின் போராட்டம் முற்றுப்பெற்றதாக நான் நினைக்கவில்லை, ஏனென்றால் பலஸ்த்தீன மக்களின் அவலங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. பலஸ்த்தீன மக்களுக்கான சுமூக வாழ்வினை, அவர்கள் தங்கள் வாழிடத்தில் நிம்மதியாக அனுபவிக்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். இஸ்ரேலை அழிப்பதே தமது ஒரே குறிக்கோள் என்று கருதுவதை ஈரானின் முல்லாக்களும் அதன் கூலிகளும் இப்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும். இவரின் கடைசி நேர வீடியோவைப் பார்த்தேன் இடிபாடுகளுக்குள் அகப்பட்டு, காயப்பட்ட நிலையில் ஒரு கதிரையில் அமர்ந்திருக்கிறார். அவரை நோக்கி இஸ்ரேலின் ட்ரோன் ஒன்று செல்கிறது. அதனை நோக்கி அருகில் இருந்த பலகை ஒன்றினை எடுத்து எறிகிறார், ட்ரோன் விலக்கிக்கொள்கிறது. அடுத்த சில நிமிடங்களில் பூரண இராணுவ உடையில் அவரது சடலம் கீழே கிடக்க அருகில் இஸ்ரேலிய விசேட படைகள் நிற்கின்றனர். இறுதிவரை தன் மக்களுக்காகப் போரிட்டு மடிந்த தலைவர் என்று பலஸ்த்தீனர்கள் இவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். இவரது உடலை இஸ்ரேல் எடுத்துச் சென்று பல் ஆய்வுகளின் மூலம் இவர் சின்வார்தான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. சுமார் 20வருடங்களாக இஸ்ரேலின் சிறையில் இருந்த சின்வார் 2011 ஆம் ஆண்டில் ஹமாஸினால் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய இராணுவ வீரன் ஒருவனின் விடுதலைக்காக இஸ்ரேலினால் விடுவிக்கப்பட்ட 1000 ஹமாஸ் உறுப்பினர்களில் ஒருவராக வெளியில் வந்தவர் . படிப்படியாக ஹமாஸின் தலைமைப்பொறுப்புக்களைப் பெற்ற இவர் முன்னாள் தலைவரின் இறப்பிற்குப் பின்னர் பிரதான தலைமைப்பொறுப்பை எடுத்தவர். சிறையில் இருந்த காலத்தில் மூளையில் வளர்ந்துவந்த கட்டியொன்றினை இஸ்ரேலிய இராணுவ மருத்துவர்கள் அகற்றி இவரைக் காப்பாற்றியும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. https://edition.cnn.com/2024/10/17/world/video/sinwar-hamas-leader-killed-final-moments-idf-drone-lead-digvid
  24. இங்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் பலர் அநுரகுமாரவை வானளவாகப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இதுவரை வந்த சிங்களத் தலைவர்களை விடவும் இவர் தமிழர்களைப் பொறுத்தவரை சிறப்பானவர் என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால் அநுர பேசும் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சி என்பது தனியே தமிழருக்கு மட்டுமே பொருந்துவதில்லை. ஒட்டு மொத்த நாட்டிற்கும் பொருந்துவது, குறிப்பாக 80 வீதமாக சனத்தொகையில் இருக்கும் சிங்களவர்களுக்கானது. டில்வின் சில்வாவின் கூற்றில் இருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களின் "புலம்பெயர் உறவுகள்" என்பதனூடாக அவர் யாழ்ப்பாணத்தவர்களுக்கு அதிகம் பிரச்சினை இருப்பதாக ஒத்துக்கொள்ளவில்லை என்றே எடுத்துக்கொள்ளலாம். வன்னியிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் டில்வின் சில்வா கூறுவது போல கஸ்ட்டத்திலேயே வாழ்கிறார்கள். அது உண்மைதான். அதுசரி, அநுரவுக்குச் செம்புதூக்கும் அடிவருடிகளும், பக்தகோடிகளும் தமிழரின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு அவர் என்ன தீர்வு வைத்திருக்கிறார் என்பதையாவது இதுவரை கேட்டார்களா? அல்லது தமிழர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகளைக் காட்டிலும் வேறு பிரச்சினைகளும் இருக்கின்றனவா? இன்று அநுரவைத் தூக்கிக் கொண்டாடும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்பிரச்சினைகள் குறித்து என்ன முடிவில் இருக்கிறார்கள்? ஒன்றில் அவர்கள் தமிழர்களுக்கு வேறு பிரச்சினைகள் இல்லை என்கிற முடிவிற்கு வந்திருக்க வேண்டும் அல்லது அப்பிரச்சினைகளைக் கடந்து சென்றுவிடலாம், இனி அதுகுறித்துப் பேசத் தேவையில்லை என்கிற முடிவிற்கு வந்திருக்க வேண்டும். இவற்றுள் எதனை அவர்கள் தெரிவுசெய்தாலும் தமிழர்களின் நிலை ஒரு இனமாகப் பலவீனப்படப் போகின்றதே ஒழிய பலமடையப்போவதில்லை. சிங்களவருக்கு இருப்பதைப் போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்காகத்தான் தமிழர்கள் சுதந்திர காலத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் உறவுகளைக் காவுகொடுத்து போரிட்டார்களா என்று இன்று அநுரவுக்கு விசுவாசம் காட்டும் புலம்பெயர் தமிழர்களைக் கேட்கத் தோன்றுகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.