Everything posted by ரஞ்சித்
-
1/12/2003 இலிருந்து 8/09/2004 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்த குறிப்புக்கள் - த.சபாரட்ணம்
மார்கழி 1, 2003 இலங்கையில் நிகழ்கால நிகழ்வுகள் - பாகம் 1 1956 ஆம் ஆண்டிலிருந்து சிங்களத் தலைவர்கள் நடத்திவருகின்ற இனவாத அரசியலை நேரடியாகத் தரிசித்தவர்களில் இன்று உயிரோடு இருப்பவன் நான் மட்டுமே என்று நினைக்கிறேன். ஆனால், சிங்களத் தலைவர்களால் தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட முதலாவது அக்கிரம நாடகத்தினை, அது சிங்களவர்களுக்கு மகிழ்ச்சியினைக் கொடுப்பதாக அமைந்திருந்தபோதும் அதனைப் பார்ப்பதற்கு எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நாடகம் 1 காட்சி 1 நான் பார்க்கும் சந்தர்ப்பத்தினை இழந்ததும், சிங்களவர்களுக்கு மகிழ்ச்சியையும், தமிழர்களுக்கு வருத்தத்தினையும் ஒருங்கே கொடுத்திருந்த நிகழ்வு காலி முகத் திடலில் சமஷ்ட்டிக் கட்சியின் அரசியல்த் தலைவர்கள் மீது சிங்கள அரசியல்த் தலைமைகளினால் ஏவிவிடப்பட்ட சிங்களக் காடையர்கள் நடத்திய மிருகத்தனமான தாக்குதலாகும். காலிமுகத்திடலின் முன்னால் அமைந்திருக்கும் பழைய பாராளுமன்றத்தின் முன்னால் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல்த் தலைவர்கள் மீது பண்டாரநாயக்கவினால் ஏவிவிடப்பட்ட காடையர்கள் நடத்திய தாக்குதலில் தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்தோட, அதனைத் துணியால் மறைத்துக் கட்டிக்கொண்டே பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார் அமிர்தலிங்கம். அவ்வாறு இரத்தம் தோய்ந்த தலையுடன் அவர் பாராளுமன்றம் நுழையும்போது, "யுத்தத்தின்போது அடைந்த மாண்புமிகு காயங்கள்" என்று கேலியுடன் அமிரை வரவேற்றார் பிரதமர் பண்டாரநாயக்க. ஆனி 5 ஆம் திகதியான அன்று பாராளுமன்றம் கூட்டப்பட்டதன் ஒரே நோக்கம் தனிச் சிங்களச் சட்டத்தினை அமுல்ப்படுத்துவதுதான். பண்டாரநாயக்க நினைத்தவாறே அன்றே அச்சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. காட்சி 2 இரண்டாம் காட்சியாக 1957 ஆம் ஆண்டு, இதே பண்டாரநாயக்கா எனும் சிங்கள இனவாதியும் தமிழர்களின் அன்றைய தலைவரான செல்வநாயகமும் மந்திரிசபை அலுவலகத்திலிருந்து ஒன்றாக இறங்கிவந்து தமக்காகக் காத்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டிருக்கிறோம் என்று கூறியவேளை நானும் அங்கு பிரசன்னமாகியிருந்தேன். காட்சி 3 மூன்றாவது காட்சியாக பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய உப தலைவராக இருந்த ஜெயார் கண்டிக்குப் பாத யாத்திரை சென்றமை. காட்சி 4 நான்காவது காட்சியாக பண்டா செல்வா ஒப்பந்தத்தினை எதிர்த்து பெளத்த பிக்குகள் சத்தியாக்கிரகம் இருந்தபோது பண்டா அவர்களின் முன்னே தோன்றி தான் செல்வாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தினைத் தானே கிழித்தெறிந்ததையும் என்னால் தரிசிக்க முடிந்தது. நாடகம் 2 காட்சி 1 சிங்களத் தலைவர்களின் இரண்டாவது நாடகம் 1960 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அதில் முதலாவது காட்சி பண்டாரநாயக்கவின் மருமகனான பீலிக்ஸ் டயஸ், செல்வநாயகத்தின் அறைக்குள் நுழைந்து, "வருகிற தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்குவீர்களாக இருந்தால், பண்டா செல்வா ஒப்பந்தத்தினை மீளவும் நடைமுறைப்படுத்துவோம்" என்று கோரியது. ஆனால் இதனை செல்வா நிராகரித்தபோது, டட்லி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினை தேர்தலில் தோற்கடிப்பதற்காக "செல்வநாயகம் தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சி டட்லிக்கு ஆதரவளிப்பதால், தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கப்போகிறார்கள்" என்று பிரச்சாரம் செய்தது அதே சுதந்திரக் கட்சி. காட்சி 2 இந்நாடகத்தில் இரண்டாம் காட்சியில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல்ப் பிரச்சாரத்தின்போது, "செல்வநாயகத்துடன் ஒப்பந்தம் செய்து நாட்டைப் பிரித்துத் தமிழர்களுக்குக் கொடுக்கப்போகிறது சுதந்திரக் கட்சி" என்று ஐக்கியதேசியக் கட்சியினர் பேசிவந்தார்கள். காட்சி 3 இந்நாடகத்தின் மூன்றாவது காட்சியில், தேர்தலில் சிறிமா தலைமையிலான சுதந்திரக் கட்சி வெற்றிபெற்ற நிலையில், செல்வநாயகத்துடன் பேசிய பீலிக்ஸ், "உங்களுடன் பேசியவாறு பண்டா செல்வா ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதென்பது சாத்தியமில்லை, ஏனென்றால் நீங்கள் ஆதரவளித்த ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு எதிராக நிற்கிறது" என்று கையை விரித்ததுதான். நாடகம் 3 காட்சி 1 டட்லி சேனநாயக்கவும், செல்வநாயகமும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுகிறார்கள். இவ்வொப்பந்தத்தின்படி பிராந்திய சபைகளை அமைப்பதற்கு டட்லியின் அரசு இணங்குகிறது. இதனடிப்படையில் தேசிய அரசாங்கத்தில் செல்வநாயகத்தின் சமஷ்ட்டிக் கட்சியும் இடம்பிடிக்கிறது. காட்சி 2 அவ்வருட மே தினப் பேரணியில் கலந்துகொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், அதன் மாக்ஸிஸ்ட் கூட்டாளிகளும் இணைந்து, "டட்லியின் வயிறு முழுவதும் தமிழர்களின் வடையினால் நிரம்பியிருக்கிறது, அதனாலேயே தமிழர்களுக்கு நாட்டை தாரைவார்க்கிறார் அவர்" என்று கூச்சலிட்டுக்கொண்டு சென்றனர். காட்சி 3 1968 ஆம் ஆண்டு செல்வநாயகத்திடம் பேசிய டட்லி, "நான் இணங்கிக்கொண்டவாறு பிராந்திய அதிகார சபைகளை என்னால் தரமுடியாது, சுதந்திரக் கட்சியினரின் எதிர்ப்புப் பலமாக இருக்கிறது" என்று கையை விரிக்கிறார். நாடகம் 4 காட்சி 1 1977 ஆம் ஆண்டு தொண்டைமானின் பிரத்தியேக வாசஸ்த்தலத்தில் அமிர்தலிங்கத்தைச் சந்திக்கும் ஜெயார், தமிழர்களின் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுக்கப்போவதாக உறுதியளிக்கிறார். காட்சி 2 சமஷ்ட்டி அடிப்படையில் தீர்வொன்றினைத் தாருங்கள் என்று தமிழர்கள் ஜெயவர்த்தனவிடம் இரைஞ்சியபோது அதற்கு பதிலளிக்கும் விதமாக 1977, 1981 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் தானே உருவாக்கிய திட்டமிட்ட இனக்கொலைகளை கட்டவிழ்த்து விடுகிறார். காட்சி 3 மத்தியிலிருக்கும் அதிகாரங்களில் சிலதை மாவட்ட அபிவிருத்திச் சபைகள் எனும் கண்துடைப்பின் மூலம் பகிர்ந்தளிக்கப்போவதாக ஜெயார் பாசாங்கு செய்தபோது, "ஜெயார் தமிழர்களுக்கு நாட்டை விற்கிறார், மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்றாலே தனிநாடு என்றுதான் பொருள்" என்று அந்த முயற்சியிற்கெதிராகவும் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி. காட்சி 4 மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்குத் தான் தருவதாக உறுதியளித்த நிதியினையோ, அதிகாரங்களையோ ஜெயார் தரமறுக்கிறார் என்று வெளிப்படையாகவே கூறிக்கொண்டு தனது பதவியை இராஜினாமாச் செய்த யாழ்ப்பாண மாவட்ட அபிசிருத்திச் சபையின் தலைவர் நடராஜா. காட்சி 5 இந்திரா காந்தியிடமும், பின்னர் ரஜீவ் காந்தியிடமும்,"தமிழர்கள் கேட்கும் உரிமைகளை என்னால் ஒருபோதும் வழங்கமுடியாது, ஏனென்றால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் அதற்கெதிராக பிரச்சாரம் செய்து சிங்கள மக்களை ஒருங்கிணைத்து வருகிறார்கள்" என்று வெளிப்படையாகவே கூறிய ஜெயார். நாடகம் 5 காட்சி 1 தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் என்று இரு பொதிகளை 1997 இலும் பின்னர் 2001 இலும் பாராளுமன்றத்தில் முன்வைக்கிறார் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க. ஆனால் , "தமிழர்களுக்கு நாட்டைத் தாரை வார்க்கிறார் சந்திரிக்கா" என்று பிரச்சாரம் செய்து இரு பொதிகளையும் தோற்கடித்த ஐக்கிய தேசியக் கட்சியினர். காட்சி 2 இன்றைய சூழ்நிலை (மார்கழி 2003). புலிகளுடன் பேச்சுக்களை நடத்தி தீர்வொன்றிற்கு வர முயலும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் முயற்சிகளை மக்கள் விடுதலை முன்னணி எனும் அதிதீவிர இனவாத மார்க்ஸிஸ்ட்டுக்களுடன் இணைந்து தோற்கடிக்கப் பிரச்சாரம் செய்யும் அதே சந்திரிக்கா.
-
1/12/2003 இலிருந்து 8/09/2004 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்த குறிப்புக்கள் - த.சபாரட்ணம்
திரு த. சபாரட்ணம் அவர்கள் 2003 மார்கழி 1 ஆம் திகதியிலிருந்து 2004 ஆம் ஆண்டு புரட்டாதி 8 வரையான காலப்பகுதியில் கொழும்பில் இடம்பெற்று வந்த அரசியல் நிகழ்வுகள், பேச்சுவார்த்தையின் போக்கு மற்றும் எதிர்க்கட்சிகளில் சதிகள் குறித்து வாராந்தம் எழுதிவந்த செய்திகளின் தொகுப்பு இத்தொடரில் இடம்பெறவிருக்கிறது. இத்தொடரின் ஆங்கில மூலத்தை வாசிக்க கீழுள்ள இணைப்பை அழுத்திக்கொள்ளலாம். https://sangam.org/topics/sabaratnam/page/9/
-
முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைந்தார்
இந்தப் பொம்மையை முன்னால் வைத்துக்கொண்டே ஈழத்தில் சோனியா தனது நரவேட்டையினை ஆடி முடித்தார். தான் செய்வது என்னவென்று தெரிந்தும் சோனியாவின் தாளத்திற்கு ஆடி ஆடியே தமிழினக்கொலையிற்கான அனுமதியை, கட்டளையினை இந்தியாவின் பிரதமர் எனும் சோனியாவினால் வழங்கப்பட்ட பிச்சையைப் பாவித்து இவர் நிறைவேற்றி வந்தார். 80 களில் தனது சொந்த இனமான சீக்கியர்களைப் படுகொலை செய்த அதே இந்திரா காந்தி குடும்பத்திற்கு, குறிப்பாக 1984 ஆம் ஆண்டு தில்லியில் நடந்த சீக்கியப் படுகொலையின் சூத்திரதாரியான ரஜீவின் மனைவிக்கு சேவகம் ஆற்றியதன் மூலம் இரு தேசிய இனங்களின் இனக்கொலையில் நேரடியான பங்களிப்பை இந்த நிதித்துறை வித்துவான் வழங்கிச் சென்றிருக்கிறார். இந்தக் காணொளியில் சோனியா கைகாட்டும் இடத்தில் நிற்கவும், அமரவும் துடிக்கும் நன்றியுள்ள நாயான மன்மோகனைப் பாருங்கள். மன்மோகனை அட்டைப் பிரதமராக வைத்துக்கொண்டு அமைச்சரவையினைத் தானே முடிவெடுத்த சோனியா
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தொடரின் இறுதி அத்தியாயம் : திருகோணமலை மாவட்டத்தின் ஒரு பகுதியை தமிழினச் சுத்திகரிப்புச் செய்த இலங்கையரசு தமிழ்ப் போராளிகளால் சிங்களவர்கள் (ஆயுதம் தரித்தவர்கள் உட்பட) மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலான மிகிந்தபுர - தெகிவத்தை ஆகிய குடியேற்றக்கிராமங்கள் மீதான தாக்குதல்களை இலங்கை அரசு புத்தக வடிவில் பட்டியலிட்டு வெளியிட்டிருந்தது. வைகாசி 30 ஆம் திகதி ஊ.கா.படையினர் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலை "5 சிங்கள அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று அது செய்தி வெளியிட்டிருந்தது. இத்தாக்குதலினை டெலோ அமைப்பு நடத்தியிருந்தது. தமிழ் மக்களைப் படுகொலை செய்தும் அவர்களின் வீடுகளை எரித்தும் அட்டூழியம் புரியும் ஊர்காவற்படையினருக்குத் தண்டனையாகவே இத்தாக்குதலை நடத்தியதாக டெலோ போராளிகள் சிங்களவரிடம் தெரிவித்திருந்தனர். ஐந்து சிங்கள ஊர்காவற்படையினர் மீதான டெலொ அமைப்பின் தாக்குதலினை அப்பாவிச் சிங்கள மக்கள் மீதும், குடியேற்றக் கிராமங்கள் மீதுமான தாக்குதலாகக் காண்பிப்பதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் மீதமாயிருக்கும் புராதன தமிழ்க் கீராமங்களில் இருந்து தமிழர்களை படுகொலை செய்தோ, அடித்து விரட்டியோ ஆக்கிரமிப்பதுதான் இலங்கையரசின் நோக்கமாக இருந்தது. தமிழ்த்தேசிய முன்னணியின் தலைவரான சம்பந்தன் 2002 இல் பாராளுமன்றத்தில் பேசும்போது பாரம்பரிய தமிழ் விவசாயக் கிராமமான கிளிவெட்டியில் ஜெயவர்த்தன காலத்து அரச பயங்கரவாதத்தின் கோரச் சுவடுகள் இன்றும் காணப்படுவதாகவும், மிகுந்த விளைச்சல் தரும் கிராமமான கிளிவெட்டியினை ஜெயவர்த்தனவின் அரசும் இராணுவமும் இணைந்து சுடுகாடாக வெறும் 48 மணித்தியாலத்தில் மாற்றிவிட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். திருகோணமலை மாவட்டத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழர்களை மீளவும் அவர்களின் வாழிடங்களுக்கு அழைத்துச் சென்று குடியமர்த்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சம்பந்தன், அப்பகுதிகளுக்கான தனது அண்மைய பயணத்தின்பின்னரே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். "எரிந்து சாம்பலாகக் கிடக்கும் வீடுகள், நெற்களஞ்சியசாலைகளின் துருப்பிடித்த இரும்புச் சட்டங்கள், பால் சேகரிக்கும் நிலையத்தின் வெற்றுக் கூட்டுக் கட்டிடம் ஆகியன எமக்குக் கூறும் செய்தி என்னவெனில் ஒருகாலத்தில் இக்கிராமம் செல்வச் செழிப்புடன் வசதியாக இருந்திருக்கிறது என்பதையும், இன்றோ அது மனித நடமாட்டமில்லாத சுடுகாடாக ஜெயவர்த்தன அரச பயங்கரவாதத்தினால் உருமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பதும்தான்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார். மட்டக்களப்பு - திருகோணமலை கடற்கரையோர நெடுஞ்சாலையில் , மட்டக்களப்பிலிருந்து வடக்காக 85 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் புராதனத் தமிழ்க் கிராமம்தான் கிளிவெட்டி. கிளிவெட்டிக்குத் தெற்காக நூறுவீதம் சிங்களக் குடியேற்றவாசிகளைக் கொண்ட அல்லைச் சிங்கள குடியேற்றம் அமைக்கப்பட்டிருக்கிறது. கிளிவெட்டியில் வட மேற்குப் புறத்தில் இன்னும் இரு சிங்களக் குடியேற்றக் கிராமங்களான டெஹிவத்தையும், நீலபொலவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கிளிவெட்டிக் கிராமம் மீதான தாக்குதல் 1985 ஆம் ஆண்டு வைகாசி 31 ஆம் திகதி ஆரம்பமானது. அருகிலிருக்கும் சிங்களக் கிராமமான சேருநுவர பகுதியில் இருந்து புறப்பட்ட பொலீஸாரும் ஊர்காவற்படையினரும் கிளிவெட்டியின் தெற்குக் கரையிலிருக்கும் தங்கநகர் ஊடாக கிராமத்தினுள் நுழைந்தார்கள். அங்கிருந்த தமிழர்களுக்குச் சொந்தமான 50 வீடுகளைத் தீக்கிரையாக்கிய பொலீஸ் - ஊர்காவற்படை அணியினர் பெண்கள் உடபட 37 தமிழர்களைக் கைதுசெய்து இழுத்துச் சென்றனர். முதலில் பொலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட அவர்கள் பின்னர் கந்தளாயிற்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள். பின்னர் அல்லை - கந்தளாய் வீதியில், மகாவலி ஆற்றின் மதவு கடந்து சாம்பல்ப்பிட்டியில் வாகனங்களை நிறுத்தி, 36 தமிழர்களை அவ்விடத்திலேயே சுட்டுக் கொன்று உடல்களை வீதியில் வைத்து எரியூட்டினார்கள். சின்னவன் எனப்படும் இராசைய்யா சூட்டுக் காயங்களுடன் ஓடித் தப்பிக்கொண்டார். அருகிலிருந்த பற்றைக் காடுகளுக்குள் ஓடி ஒளித்துக்கொண்ட அவர் பின்னர் திருகோணமலையினை வந்தடைந்தார். அந்தநாள் இரவு கிளிவெட்டிக் கிராமத்தின் பெரும்பாலான தமிழர்கள் அச்சத்தினால் திருகோணமல நகருக்கு அருகில் அமைந்திருக்கும் தமிழ்க் கிராமங்களான பச்சனூர் மற்றும் தோப்பூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று அடைக்கலம் தேடிக்கொண்டார்கள். சில வயது முதிர்ந்தவர்கள் மட்டும் தம்மை சிங்களவர்கள் எதுவும் செய்யப்போவதில்லை என்கிற எண்ணத்தில் கிளிவெட்டியிலேயே இருக்க முடிவுசெய்தார்கள். ஆனால், அவர்களின் நம்பிக்கைகளுக்கு மாறாக ஆனி 1 ஆம் திகதி மீண்டும் கிளிவெட்டிக்குள் நுழைந்த பொலீஸாரும் ஊர்காவற்படையினரும் மீதாமகவிருந்த முதியோர் அனைவரையும் சுட்டும் வெட்டியும் கொன்றார்கள்.அன்று தாக்குதலில் ஈடுபட்ட சிங்களவர்கள் டெலோ அமைப்பினரால் ஐந்து ஊர்காவற்படையினர் கொல்லப்பட்ட சிங்களக் குடியேற்றமான தெகிவத்தையைச் சேர்ந்தவர்கள். பிற்பகல் 2 மணிக்கு இராணுவமும், பொலீஸாரும், ஊர்காவற்படையினரும் இணைந்த கும்பல் கிளிவெட்டிக்குள் நுழைந்தது. தங்கத்துரையின் மாமனாரான மயில்வாகனம் கனகசபை கிளிவெட்டியை விட்டு வெளியேறிச் செல்லாது அங்கேயே தங்கிவிட்ட முதியவர்களில் ஒருவர். அன்று மர நிழலின் கீழிருந்து இன்னொரு முதியவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, தொலைவில் ஆயுதம் தரித்த இராணுவத்தினரும், பொலீஸாரும், ஊர்காவற்படையினரும் பெருத்த ஆரவாரத்துடன் வருவதைக் கண்டிருக்கிறார். இக்கும்பலைக் கண்டதும் உடனடியாக ஓடிச்சென்று வைக்கல்க் குவியல் ஒன்றின்பின்னால் அவர் ஒளிந்துகொண்டார். ஆனால் அவரைக் கண்டுவிட்ட அக்கும்பல், அவரை வெளியே இழுத்துச் சுட்டுக் கொன்றது. மேலும் நான்கு வயது முதிர்ந்த பெண்கள் உட்பட ஒன்பது முதியவர்களை அக்கும்பல் கொன்றது. கொல்லப்பட்ட பெண்களின் பெயர்கள் வருமாறு : கமலா ராசைய்யா (முதல்நாள் இரவு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிர் தப்பிய ராசைய்யாவின் துணைவியார்) மற்றும் அவரது மகள், ராஜ ராஜேஸ்வரி அம்மாள்(கிளிவெட்டி சைவக் குருக்கள் சுப்பிரமணிய சர்மாவின் மனைவி) அவரது மகள் பிரசாந்தி. அன்றும் 125 வீடுகளை இராணுவத்தினரும், பொலீஸாரும், ஊ.கா.படையினரும் எரியூட்டினர். கிளிவெட்டியில் மீதமாயிருந்த 3 முதிய தம்பதிகள் உட்பட 13 தமிழர்களை அவர்கள் இழுத்துச் சென்றனர். அவர்களுள் 5 இளவயது ஆண்களும், 3 இளம் பெண்களும் இருந்தனர். அவர்கள் அனைவரையும் தெகிவத்தைக்கு அவர்கள் இழுத்துச் சென்றனர். ஆண்கள் அனைவரினதும் உடைகளைக் களைந்த அக்கும்பல் அவர்களைச் சுட்டுக் கொன்றது. ஒரு உடல் மரத்தில் நிர்வாணமாகக் கட்டித் தொங்கவிடப்பட்டது. மீதமாயிருந்த இளம்பெண்கள் மூவரையும் அக்கும்பல் கூட்டுப் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திக் கொன்றது. அன்றைய நாட்களில் திருகோணமலையில் தங்கியிருந்த தங்கத்துரை லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தியாளர் சைமன் விஞ்செஸ்ட்டருடன் கிளிவெட்டிப் படுகொலைகள் குறித்துப் பேசினார். லண்டன் டைம்ஸ் பத்திரிக்கை அறிக்கையினூடாக கிளிவெட்டிப் படுகொலைகள் சர்வதேசத்திற்குத் தெரியவேண்டி வந்தது. அதுலத் முதலி கிளிவெட்டிப் படுகொலைகள் குறித்த சர்வதேசச் செய்திகளை மறுத்தபோதிலும் அவரது மறுப்பை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்கத்துரை பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார் என்று குற்றஞ்சுமத்தி அவரைக் கைதுசெய்துவிட லலித் ஆயத்தமாகி வருகிறார் என்கிற செய்திகள் கசியத் தொடங்கியதும் தங்கத்துரை தமிழ்நாட்டிற்குச் சென்று அடைக்கலம் தேடிக்கொண்டார். மறுநாளான ஆனி 2 ஆம் திகதி திருகோணமலையிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்வண்டியை 10 ஆவது மைல்க் கல்லிற்கு அருகாமையில் காத்திருந்த ஊ.கா.படையினர் மறித்தனர். மறிக்கப்பட்ட பஸ்ஸை அருகிலிருந்த காட்டிற்குள் அவர்கள் ஓட்டிச் சென்றனர். பெண்கள் உட்பட 13 தமிழ்ப் பயணிகளை அவர்கள் சுட்டுக் கொன்றனர். அடுத்துவந்த இருநாட்களான ஆனி 3 ஆம் 4 ஆம் திகதிகளில் கிளிவெட்டி மற்றும் மூதூர் ஆகிய கிராமங்களுக்கிடையில் வாழ்ந்துவந்த தமிழர்களை முற்றாக வெளியேற்றும் நோக்குடன் பாரிய இராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று அரசால் முடுக்கிவிடப்பட்டது. இப்பகுதிகளில் வாழ்ந்துவந்த தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு குறைந்தது 35 தமிழர்களை இராணுவத்தினரும், ஊ.கா.படையினரும் கொன்று குவித்தனர். இத்தாக்குதலின்போது 200 தமிழர்கள் காணாமற் போயிருந்தனர் என்பதுடன் இன்றுவரை அவர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இவ்விரு தினங்களிலும் அரச படைகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய அழித்தொழிப்பு நடவடிக்கை குறித்து தகவல்களைச் சேகரித்த சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களில் ஒன்று குறைந்தது 1,000 வீடுகளாவது இராணுவத்தாலும் ஊ.கா.படையினராலும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியிருந்தது. மேலும் இங்கு வாழ்ந்துவந்த தமிழர்களில் 2500 பேர் மூதூரில் அடைக்கலம் தேடி ஒளிந்திருந்த நிலையில் இன்னும் 1,000 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் ஓடி ஒளித்துக்கொண்டுள்ளதாக அது மேலும் தெரிவித்திருந்தது. இந்த அழித்தொழிப்பு இராணுவ நடவடிக்கையினூடாக திருகோணமலை மாவட்டத்தில் வேறொடு பிடுங்கி எறியப்பட்ட தமிழ்க் கிராமங்களாவன, மேன்காமம், கங்குவெளி, பாலத்தடிச்சேனை, அரிப்பு, பூநகர், மல்லிகைத்தீவு, பெருவெளி, முன்னம்போடிவத்தை, மணற்சேனை, பாரதிபுரம், லிங்கபுரம், ஈற்சிலம்பற்றை, கருக்கல்முனை, மாவடிச்சேனை, முத்துச்சேனை, மற்றும் வாழைத்தோட்டாம் ஆகியனவாகும். திருகோணமலை மாவட்டத்தில் வைகாசி 23 ஆம் திகதியிலிருந்து ஆனி 4 ஆம் திகதி வரை இலங்கை அரசால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அழித்தொழிப்பு நடவடிக்கைகளை ஆவணப்படுத்திவந்த ராஜன் ஜூல், குறைந்தது 145 தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கான சான்றுகள இருப்பதாகக் கூறியிருந்தார். மேலும் 5 சிங்கள ஊ.கா. படையினரும் இக்காலப்பகுதியில் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால் அரசு வெளியிட்ட பொதுமக்கள் படுகொலைகள் பட்டியலில் டெலோ அமைப்பினரால் கொல்லப்பட்ட ஐந்து ஊ.கா.படையினரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. கொல்லப்பட்ட தமிழர்கள அனைவரியும் அரசாங்கம் "பயங்கரவாதிகளின் பட்டியலில்" சேர்த்துவிட்டிருந்தது. மேலும், ஒவ்வொரு தமிழ் மகனையும், மகளையும் பயங்கரவாதி என்று சந்தேகிப்பதனூடாக, அவர்களை, அவர்களது பூர்வீகத் தாயகத்திலிருந்து பலவந்தமாக விரட்டியடிப்பதன் மூலம் "தமிழ்ப் பயங்கரவாதத்தினை" முற்றாக ஒழித்துவிடலாம் என்று அனைத்துச் சிங்கள அரசாங்கங்களும் எண்ணிச் செயலாற்றி வந்தன. முற்றும் ! *********************************************************************************************************** குறிப்பு : இத்துடன் இத்தொடர் முற்றுப்பெருகிறது. திரு சபாரட்ணம் எழுதிவந்த இத்தொடர் 2005 ஆம் ஆண்டு தவிர்க்கமுடியாத காரணங்களினால் இடைநடுவே நின்றுவிட்டது. சில மாதங்களுக்குப் பின்னர் திரு சபாரட்ணம் அவர்களும் இயற்கை எய்திவிட்டதனால் இத்தொடரை முழுமையாம தமிழ்ச் சங்கத்தினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் தமிழ்ச் சங்கம் சில பகுதிகளை தொழிநுட்பக் காரணங்களால் இழந்துவிட்டது என்றும் கூறப்பட்டது. ****************************************************************************************************************** நன்றிகள்: ஈழப்பிரியன் அண்ணா, நொச்சி, விசுகு அண்ணா மற்றும் தொடர்ச்சியாக எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீது பழிவாங்கற்தாக்குதல்களை நடத்திய அரச படைகள் சிங்களப் பொதுமக்கள் மீது புலிகள் நடத்திய இரண்டாவது தாக்குதலான அநுராதபுரத் தாக்குதலுக்குப் பழிவாங்கலாக அரசாங்கம் மேலும் பல படுகொலைகளை நடத்தியிருந்தது. அநுராதபுரம் மீதான புலிகளின் தாக்குதல் நடைபெற்று அடுத்து வந்த மூன்று தினங்களில் தமிழர் தாயகத்தில் பல படுகொலைகளை அரசு நடத்தியது. அவற்றுள் முதலாவது 48 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட குமுதினிப் படகுப் படுகொலை. வைகாசி 15 ஆம் திகதி நெடுந்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த குமுதினிப் படகில் பயணம் செய்த பெரும்பாலான தமிழ் மக்களை கடலில் இடைமறித்த கடற்படை, வாட்களாலும், கோடரிகளாலும் வெட்டிக் கொன்றது. குமுதினிப் படுகொலை நடத்தப்பட்டு இருநாட்களின் பின்னர் கிழக்கின் நற்பிட்டிமுனையில் 42 தமிழ்ப் பொதுமக்களை விசேட அதிரடிப்படை படுகொலை செய்தது. நற்பிட்டிமுனைப் படுகொலைகள் குறித்த தமது அதிருப்தியினை இந்திய அதிகாரிகள் 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கியநாடுகள் மனிதவுரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் எழுப்பியிருந்தனர். இக்கூட்டத்தொடரின் முடிவில் இப்படுகொலை குறித்து ஆராய விசேட பிரதிநிதியாக பாக்ரே வாலி நிடியே எனும் அதிகாரியை ஆணையம் நியமித்தது. இலங்கைக்கான தனது பயணத்தின் நிறைவில் இதுபற்றிய அறிக்கை ஒன்றினை அவர் தந்திருந்தார். 1985 ஆம் ஆண்டு வைகாசி 17 ஆம் திகதி கல்லடி விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து நற்பிட்டிமுனை நோக்கி ரோந்துசென்ற விசேட அதிரடிப்படையினர், அப்பகுதியில் இருந்து 23 தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து முகாமிற்கு இழுத்துச் சென்றபின்னர், அவர்களுக்கான புதைகுழிகளை வெட்டுமாறு பணித்தனர். குழிகள் வெட்டி முடிக்கப்பட்டதும் அவற்றினருகில் வரிசையாக நிற்கவைக்கப்பட்டு அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்படுகொலை குறித்து வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு தகவல் தந்தார் என்கிற காரணத்திற்காக கல்முனை பிரஜைகள் குழுவின் தலைவர் போல் நல்லநாயகம் கைதுசெய்யப்பட்டு, அரசிற்கும், இராணுவத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தும் முகமாக பொய்வதந்திகளை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்குகிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டார். 1986 ஆம் ஆண்டு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் போல் நல்லநாயகம் மீதான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது படுகொலை செய்யப்பட்ட 23 இளைஞர்களினதும் விபரங்கள் வெளிப்படையாகவே பலராலும் சாட்சியமாக வழங்கப்பட்ட போதிலும் நீதித்துறையோ, அரசோ அதனைச் சட்டை செய்யவுமில்லை, குற்றவாளிகளைத் தண்டிக்கவுமில்லை. ஆனால் 1986 ஆம் ஆண்டு ஆடி 17 ஆம் திகதி அனைத்துக் குற்றச்சட்டுக்களிலிருந்தும் போல் நல்லநாயகத்தை அரசு விடுதலை செய்திருந்தது. இதன்படி படுகொலைசெய்யப்பட்டவர்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென்பதும், காணமலாக்கப்பட்டவர்களை விசேட அதிரடிப்படையினர் ஒருபோதும் கைதுசெய்திருக்கவில்லை என்பதே அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிரடிப்படையினரால இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டமைக்கான சாட்சியங்கள் போதுமானளவு இருந்தபோதும், கல்லடி இராணுவ முகாமிற்குள் அவர்கள் கொண்டுசெல்லப்பட்டதைக் கண்ணால்க் கண்ட சாட்சியங்கள் இருந்தபோதும் இன்றுவரை அவர்களது காணாமற்போதலினை விசாரிக்கவோ அல்லது பொறுப்பானவர்களைத் தண்டிக்கவோ காவற்றுரை மறுத்தே வருகின்றது என்பது குறிப்ப்டத் தக்கது. குமுதினிப் படகுப் படுகொலையினையும் அரசு விசாரிக்க முன்வரவில்லை. அநுராதபுரத் தாக்குதலையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் இராணுவம், விமானப்படை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த ஊர்காவற்படை ஆகியன தமிழ் மக்கள் மீது அடுத்தடுத்து பல படுகொலைகளை அரங்கேற்றியிருந்த போதிலும் இவற்றுள் எவையும் இன்றுவரை விசாரிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத் தக்கது. அதிகார பலத்தின் அகங்காரம் எனும் நூலினை எழுதிய ராஜன் ஹூல், இக்காலப்பகுதியில் அரச படைகளால் அரங்கேற்றப்பட்ட படுகொலைகளை திகதிவாரியாகப் பட்டியலிட்டிருக்கிறார். திருகோணமலை மாவட்டத்தில் அரசால் நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து தனக்கு அறிக்கையொன்றினைத் தருமாறு இந்தியப் பிரதமர் ரஜீவ், அம்மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரையிடம் கோரியிருந்தார். அவ்வாறு அவரால் சேகரிக்கப்பட்ட விடயங்களை அவரது சகோதரர் பாக்கியத்துரை ஊடாக ராஜன் ஹூல் பெற்றுக்கொண்டே தனது புத்தகத்தில் இவற்றினைப் பட்டியலிட்டிருந்தார். திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் மீதான பழிவாங்கும் தாக்குதல்களை வைகாசி 23 ஆம் திகதி இராணுவம் ஆரம்பித்தது. அன்று இராணுவத்தினரால் திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவரின் புதல்வன் கங்காதரன் உட்பட எண்மர் படுகொலை செய்யப்பட்டனர். கங்காதரன் கொல்லப்பட்ட நிகழ்வை அவரது துணைவியார் சரஸ்வதி, ஏ.எப்.பி செய்தியாளரிடம் பின்வருமாறு தெரிவித்திருந்தார். "எமது கேட்டிற்கு இருவர் வந்திருந்தனர். ஒருவர் சீருடை அணிந்திருந்தார். அவர் ஒரு இராணுவ வீரனாக இருக்கலாம் என்று அனுமானித்தேன். அவர்கள் தமக்குள் பேசிக்கொண்டிருக்கும்போது, சீருடை தரித்த இராணுவத்தினன் எனது கணவரின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்து அழுத்திச் சுட்டார். எனது கணவர் அவ்விடத்திலேயே மல்லாந்து பின்புறமாக விழுந்தார். பின்னர் அந்த இராணுவத்தினன் என்னை நோக்கி துப்பாக்கியை திருப்பவும், நான் எனது இரு குழந்தைகளையும் இழுத்துக்கொண்டு ஓடத் தொடங்கினேன்" என்று கூறினார். கங்காதரன் செய்த ஒரே தவறு அவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு ஆதரவு அளித்ததுதான். ஏனைய ஏழு தமிழர்களும் அவர்களது வீடுகளுக்குள் நுழைந்த இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள். இப்படுகொலைகளின் ஒரே நோக்கம் உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமான நிலாவெளியில் இருந்து தமிழர்களை அடியோடு அடித்து விரட்டுவதுதான். மறுநாள், வைகாசி 24 ஆம் திகதி திருகோணமலை நகரின் மேற்கில் அமைந்திருக்கும் தமிழ்க் கிராமமான பன்குளத்தில் ஒன்பது தமிழர்களை விமானப்படையினர் சுட்டுக் கொன்றனர். முதியவரான தாமோதரம்பிள்ளை, அவரது துணைவியார் பரமேஸ்வரி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், 65 வயதுடைய அபிராமி பாண்டியையா, வள்ளி மாரிமுத்து மற்றும் 2 வயது நிரம்பிய பாலகன் ஜெயபாலன் ஆகியோரும் அன்று கொல்லப்பட்டவர்களுள் அடங்கும். அரசாங்கத்தின் புதிய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டிருந்த சிங்கள ஊர்காவற்படையினரும் அன்றைய நாளில் படுகொலைகளில் ஈடுபட்டனர். மூதூர்ப் பகுதியின் கொட்டியார் குடா பகுதியில் நுழைந்த சிங்கள ஊர்காவற்படையினர் தமிழர்கள் மீது தாக்குதலில் இறங்கினர். மேலும் கங்குவெளியில் இருந்து மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய தெகிவத்தைச் சந்திக்குச் சென்ற இரு தமிழர்களைக் கொன்ற அவர்கள் அவர்களின் உடல்களை அடையாளம் தெரியாது எரியூட்டினர். மறுநாளான வைகாசி 25 ஆம் திகதி, அல்லையில் அமைந்திருக்கும் லிங்கபுரத்திலிருந்து கங்குவெளிக்கு தமது உறவினர்களைக் கொண்டாட்டம் ஒன்றிற்காக அழைக்கச் சென்ற தகப்பன் ஒருவரும் அவரது 12 வயது மகனும் சிங்கள ஊர்காவற்படையினரால் கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டு கங்குவெளிக்குளத்திற்கருகில் புதைக்கப்பட்டனர். மறுநாளான வைகாசி 26 ஆம் திகதி மிகிந்தபுர இராணுவ முகாமில் இருந்து வெளியே வந்த சிங்கள ஊர்காவற்படையினர் தமிழர்களின் கிராமங்களான பூநகர் மற்றும் ஈச்சிலாம்பற்றை ஆகிய பகுதிகளுக்குள் நுழைந்து 40 வீடுகளைத் தீக்கிரையாக்கினர். ஆனால் கொழும்பில் செய்தி வெளியிட்ட அரசாங்கம், மிகிந்தபுரவில் சிங்களவர்களின் 40 வீடுகளைத் தமிழர்கள் எரித்துவிட்டதாகச் செய்தி பரப்பியிருந்தமை அரசாங்கத்தால் செய்திகள் எந்தளவு தூரத்திற்கு புனையப்பட்டு, திரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்திருந்தது. அதேநாள் அல்லையின் லிங்கபுரத்திலிருந்து காட்டிற்கு வேட்டைக்குச் சென்ற நான்கு தமிழர்களைக் கொன்ற ஊர்காவற்படையினர் அவர்களின் உடல்களை உருத்தெரியாது அழித்துவிட்டனர். அல்லை கந்தளாய் வீதியில் உலாவரும் ஊர்காவற்படையினரே இப்படுகொலைகளிச் செய்வதாக தமிழர்கள் குற்றஞ்சாட்டியபோதிலும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அதே நாள் மாலை மூதூரின் கூனித்தீவு ஏரியில் மூன்று தமிழ் இளைஞர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். வைகாசி 27 ஆம் திகதி மட்டக்களப்பு மூதூர் வீதியூடாகப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்வண்டியை மிகிந்தபுர பகுதியில் வழிமறித்த சிங்கள ஊர்காவற்படையினர், சாரதியான புஸ்ப்பராஜாவையும் இன்னும் ஏழு தமிழ்ப் பயணிகளையும் பஸ்ஸை விட்டுக் கீழிறங்குமாறு பணித்தனர். பஸ்ஸின் அருகில் வரிசையாக நிற்கவைக்கப்பட்ட அவர்களில் எழுவர் ஊர்காவற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட எட்டாமவரான கிருஷ்ணபிள்ளை காயத்துடன் உயிர்தப்பினார். கொல்லப்பட்ட அனைவரினதும் உடல்களும் வீதியில் குவிக்கப்பட்டு அவர்களால் எரியூட்டப்பட்டன. ராஜன் ஹூலினால் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி மிகிந்தபுர மற்றும் தெகியத்தை ஆகிய திருகோணமலை மாவட்டத்தின் "அல்லை சிங்கள ஆக்கிரமிப்புப் பகுதி"யின் இரு குடியேற்றக் கிராமங்கள் மீதான போராளிகளின் தாக்குதல் நடைபெறும் நாள்வரைக்குமான எட்டு நாட்களில் மட்டும் 42 தமிழர்களை இராணுவத்தினரும், விமானப்படையினரும், ஊர்காவற்படையினரும் சேர்ந்து சுட்டும் வெட்டியும் கொன்றிருந்தனர். இவ்வாறு கொல்லப்பட்ட தமிழர்களில் பாதிப்பேர் சிங்கள ஊர்காவற்படையினரால் கொல்லப்பட்டிருந்தனர் என்பதுடன், தமிழர்களுக்குச் சொந்தமான பல வீடுகளும் இவர்களால் எரியூட்டப்பட்டிருந்தன.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பொங்கல் கொண்டாடச் சென்ற 132 தமிழ் விவசாயிகளைப் படுகொலை செய்துவிட்டு பயங்கரவாதிகளை வேட்டையாடினோம் என்று பெருமை பேசிய லலித் அதுலத் முதலி பரந்துபட்ட கைதுகள், சித்திரவதைகள் போன்றவை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய கோபத்தினை விடவும் கிழக்கு மாகாணத்தில் சரித்திரகாலம் தொட்டு தமிழ் மக்கள் வாழ்ந்துவந்த பகுதிகளில் இருந்து அவர்களை பலவந்தமாக வெளியேற்ற அரச படைகள் மேற்கொண்ட திட்டமிட்ட படுகொலைகளும், தாயக அழிப்பும் கடுமையான கோபத்தினை ஏற்படுத்தியிருந்தன. 1985 ஆம் ஆண்டு தை மாதம் 15 ஆம் திகதி தமிழ் மக்கள் மீது அரச படைகள் கட்டவிழ்த்த படுகொலையினை "பயங்கரவாதிகளை அழித்தோம்" என்று அரசு மார்தட்டிக்கொண்டபோது தமிழ் மக்கள் கடுமையாக வேதனையடைந்தார்கள். தை மாதம் 15 ஆம் திகதி தேசிய பந்தோபஸ்த்து அமைச்சரான லலித் அதுலத் முதலி வெளியிட்ட அறிக்கையில் சிங்களக் குடியேற்றக்கிராமங்களைத் தாக்குவதற்காக அணிவகுத்துச் சென்ற 52 பயங்கரவாதிகளை தமது இராணுவத்தினர் பதுங்கியிருந்து தாக்கிக் கொன்றுவிட்டதாகப் பெருமையுடன் பேசியிருந்தார். இத்தாக்குதலில் விமானப்படை ஆற்றிய பங்கையும் அவர் வெகுவாகப் பாராட்டியிருந்தார். தேசிய ஊடகங்கள் லலித் அதுலத் முதலியின் அறிக்கையினை மிகுந்த எழுச்சியுடன் பிரச்சாரப்படுத்தி இலங்கை விமானப்படையினரின் மிகப்பெரிய வெற்றி என்றும் புகழ்ந்திருந்தன. இத்தாக்குதலினால் சிங்களவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார்கள் என்றால் அது மிகையில்லை. ஆனால் நடந்ததோ அரசாங்கம் அறிவித்தமைக்கு நேர் எதிரானது. தை மாதத்தின் 14 ஆம் திகதியினை தமிழ் விவசாயப் பெருமக்கள் தமக்கு சக்தியைத் தரும் சூரியனுக்கு நன்றிகூறும் நாளாகப் பாவித்துக் கொண்டாடுவது வழமை. புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரசியினைக் கொண்டு அவர்கள் பொங்கல் பொங்குவார்கள். அதற்கு மறுநாளான தை 15 ஆம் திகதியை விவசாயத்தில் தமக்கு உறுதுணையாகவிருந்து எருவையும், வயல்களை உழவும், சூடடிக்கவும் உதவிபுரியும் காளைகளுக்கு நன்றிசெலுத்தும் நாளாகக் கொண்டு மாட்டுப்பொங்கலைக் கொண்டாடுவார்கள். 1984 ஆம் ஆண்டு நத்தார் தினத்திற்கு முதல்நாள் புராதன தமிழ்க் கிராமங்களான கொக்கிளாய், நாயாறு, கொக்குத்தொடுவாய், கருநாற்றுக்கேணி, செம்மலை, குமுழமுனை, அலம்பில் ஆகிய முல்லைத்தீவு மாவட்டத்தின் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இராணுவத்தால் அடித்து விரட்டப்பட்டு முல்லைத்தீவு புனித பேதுருவானவர் ஆலயத்திலும், வற்றாப்பளை அம்மண் ஆலயத்திலும், வித்தியானந்தாக் கல்லூரியிலும், வற்றாப்பளை ரோமன் கத்தோலிக்க பாடசாலையிலும் அகதிகளாகத் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். இவ்வாறு தங்கவைக்கப்பட்டிருந்த தமிழ் அகதிகளில் ஒரு பகுதியினர் தாம் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதற்கு முன்னர் தாம் விதைத்திருந்த வயல்களில் அறுவடை செய்து பொங்கல் விழாவை தமது வீடுகளில் கொண்டாடுவதென்று 1985 ஆம் ஆண்டு தை மாதம் 14 ஆம் திகதி முடிவெடுத்தார்கள். அதன்படி இக்குடும்பங்கள் சிறிய சிறிய குழுக்களாகப் பிரிந்து தமது கிராமங்கள் நோக்கிப் பயணித்தார்கள். அகதிமுகாம்களைப் பராமரித்த அதிகாரிகளும், தொண்டர் அமைப்புக்களும், மனிதவுரிமை அமைப்புக்களும் இவர்களைத் தடுத்தபோதும், அதனைச் சட்டை செய்யாது அவர்கள் தம்வழியே தமது கிராமங்கள் நோக்கிப் பயணித்தார்கள். தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட கிராமங்களுக்கு அவர்கள் மீளவும் வருவதைத் தடுக்கும் முகமாக கிராம எல்லைகளில் அமைக்கப்பட்டிருந்த இராணுவக் காப்பரண்களில் இருந்த இராணுவத்தினர் தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதை அவதானித்திருக்கிறார்கள். இதனை புதிதாக அமைக்கப்பட்டிருந்த வெலி ஓயாக் கட்டளைப் பணியகத்திற்கு தெரிவித்து மேலதிகமாக இராணுவத்தினரை அப்பகுதிக்கு அனுப்புமாறு கூறியதுடன், விமானப்படைக்கும் அறியத் தந்தார்கள். இதனையடுத்து மிகவும் தாள்வாகப் பறந்த உலகுவானூர்திகளில் இருந்து விமானப்படையினர் அப்பாவி விவசாயிகள் மீது குண்டு மாரி பொழிய, தரையூடாக மூன்னேறி வந்த இராணுவத்தினர் மீதமிருந்தோரைச் சுட்டுக் கொன்றார்கள். பொதுமக்கள் மீதான அப்பட்டமான இப்படுகொலையினை "52 பயங்கராவதிகளைக் கொன்றுவிட்டோம்" என்று லலித் அதுலத் முதலி வர்ணித்திருந்தார். ஆனால் இத்தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி விவசாயிகளின் எண்ணிக்கை 52 ஐக் காட்டிலும் மிகவும் அதிகமானது. இத்தாக்குதலின் பின்னர் அகதிகள் முகாமில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது 132 தமிழ் மக்கள் காணாமற்போயிருப்பது தெரியவந்திருந்தது. இவர்களுள் 37 பேர் பெண்கள். இக்கணக்கெடுப்பினூடாக காணாமலாக்கப்பட்ட தமிழ் மக்களின் பெயர்களும் வயதுகளும் பட்டியலிடப்பட்டன. அப்படிக் காணாமற்போனவர்களில் ஒருவர் பெயர் முத்துலிங்கம். 12 வயதே நிரம்பிய அவர் தனது பெற்றோருக்கு அறுவடையில் உதவுவதற்காக அவர்களுடன் சென்றிருந்தார். லலித் அதுலத் முதலியினால் பெருமையுடன் உரிமை கோரப்பட்ட பயங்கரவாதிகளின் மரணங்கள் என்பது உண்மையிலேயே அப்பாவி விவசாயிகளின் படுகொலைதான் என்று அவரிடம் பல செய்தியாளர்கள் எடுத்துக்கூறினர். அதன்பின்னர் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்ட "பயங்கரவாதிகள்" எனும் சொல்லினை நீக்கிவிட்டு "பிரிவினைவாதிகள்" என்று மாற்றுவதற்கு அவர் இணங்கினார். "அப்பகுதி தமிழ் மக்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாகும், அப்பகுதிக்குள் பிரவேசிக்கும் எவரையும் பயங்கரவாதிகள் என்று கருதி நாம் சுட்டுக் கொல்வோம், அவர்கள் தேவையற்ற இடத்தில் தேவையற்ற நேரத்தில் சென்றதற்காகவே கொல்லப்பட்டார்கள்" என்று அப்பாவிகளின் படுகொலையினை நியாயப்படுத்தினார் லலித். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சட்டர்டே ரிவியூ மற்றும் தமிழ்ப் பத்திரிக்கைகள் அரசால் நடத்தப்பட்ட இப்படுகொலையினை முழுவதுமாக செய்தியாக்கி வெளிக்கொண்டுவந்திருந்தார்கள்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சர்வதேச மன்னிப்புச் சபையினால் அறிக்கையிடப்பட்ட இலங்கை இராணுவத்தினதும் பொலீஸாரினதும் சித்திரவதை முறைகள் இவரைப் போன்று கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இன்னும் பலநூறு தமிழ் இளைஞர்களின் வாக்குமூலங்கள் சர்வதேச மன்னிபுச்சபை உட்பட பல மனிதவுரிமை அமைப்புக்களுக்குக் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. 1985 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்வதேச மன்னிப்புச்சபையின் அறிக்கையில் இலங்கையில் அரச படைகளால் நடத்தப்படும் சித்திரவதைகள் குறித்துக் குறிப்பிடப்பட்டிருந்தது. விசாரணைக்கு அழைத்துவரப்படும் தமிழர்கள் பலமணிநேரமாகக் கட்டித் தொக்கவிடப்பட்டு உடல் முழுவதும் பொல்லுகளாலும், இரும்புக் கம்பிகளாலும் தாக்கப்படுகின்றனர். சிலவேளைகள் இரவு முழுவதும் இவ்வாறான தாக்குதல்கள் அவர்கள் மீது மேற்கொள்ளப்படும். பின்னர் மிளகாயை எரித்த புகை அடைக்கப்பட்ட சாக்குப் பைகளில் அவர்களின் தலைகள் கட்டப்பட்டு மூச்சுத்திணறும்வரை வதைக்கப்படுவார்கள். குறுக்காகக் கட்டிய தடிகளில் முழங்கால்கள் மடித்து, தலைகீழாகக் கட்டப்பட்டு கடுமையாகத் தாக்கப்படுவார்கள். நீண்ட மேசைகளில் குப்புறப் படுக்கவைக்கப்பட்டு பாதங்களில் இரும்புக் கம்பிகளால் இடைவிடாது தாக்கப்படுவார்கள். இனப்பெருக்க உறுப்பு உட்பட உடலின் அனைத்துப் பாகங்களின் மீதும் மணல் நிரப்பப்பட்ட பிளாத்திக்குக் குழாய்கள், இரும்புக் கம்பிகள், பொல்லுகள் கொண்டு கடுமையான தாக்குதல் நடைபெறும். மிளகாய்த்தூளினை கண்கள், மூக்கு, இனப்பெருக்க உறுப்பு, வாய் என்று உடலின் துவாரங்களினூடு அழுத்தித் திணிப்பார்கள். குப்புறப் படுக்கவைக்கப்படும் இளைஞர்களின் மலவாயிலூடாக இரும்புக் கம்பிகள் செலுத்தப்பட்டு உடலின் உட்புறம் நோக்கி அடித்துச் செலுத்துவார்கள். இவற்றினை விடவும் சிகரெட்டினல் உடலில் சுடுவது, தூக்கில் தொங்கவைப்பது போன்று பாசாங்கு செய்து சில நிமிடங்கள் அவர்களைத் தொங்கவிடுவது என்று பல்வகையான சித்திரவதை முறைகளை பொலீஸாரும் இராணுவத்தினரும் கைக்கொண்டு வருகிறார்கள். இவற்றிற்கு மேலதிகமாக சில இராணுவ முகாம்களில் தனித்துவமான சித்திரவதை நடைமுறைகள் காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டிருந்தது. 1984 ஆம் ஆண்டு தன்னுடன் புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்ட புத்தகம் ஒன்றினை வைத்திருந்தார் என்கிற குற்றச்சாட்டில் பனாகொடை இராணுவ முகாமிற்கு ஒரு தமிழ் இளைஞர் இழுத்துவரப்பட்டிருந்தார். "என்னை இருட்டான அறை ஒன்றிற்குள் தள்ளி உடைகளைக் களைந்துவிட்டு அம்மணமாக நிலத்தில் படுக்குமாறு கட்டளையிட்டார்கள். எனது கைகளையும் கால்களையும் சங்கிலிகளால் கட்டிவிட்டு பெரிய முட்களை என்னுடலினுள் செலுத்தினார்கள். கைகளில் வைத்திருந்த இயந்திரத் துப்பாக்கிகள், இரும்புக் கம்பிகள் என்பவற்றைப் பாவித்து எனது கழுத்துப்பகுதி, முழங்காற்பகுதி, கண்கள், பாதங்கள் என்று உடலின் அனைத்துப் பகுதிகளிலும் கடுமையாகத் தாக்கினார்கள். பின்னர் மிகவும் ஆளமான கிணறு ஒன்றிற்குள் என்னைச் சங்கிலிகளால் கட்டி இறக்கி பலமணிநேரம் என்னை துன்புறுத்தியபின் வெளியே இழுத்து எடுத்தார்கள்" என்று கூறியிருந்தார். இன்னொரு வாக்குமூலத்தில் கைதுசெய்யப்பட்டு மாங்குளம் இராணுவ முகாமில் அடைத்துவைக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தன்மீது மின்சாரத்தைப் பாய்ச்சியதாக தெரிவித்திருக்கின்றார். 1985 ஆம் ஆண்டு ஆனி மாதம் இச்சித்திரவதை நடத்தப்பட்டதாகக் கூறும் சர்வதேச மன்னிப்புச்சபை இதுகுறித்த தகவல்களையும் வெளியிட்டிருந்தது. "என்னை விசாரித்துக்கொண்டிருக்கும்போதே எனது கால்களில் மின்சாரத்தைப் பாய்ச்சுக் கொழுக்கிகளை இணைத்து குறைந்தது ஐந்து முறைகளாவது மின்சாரத்தை என் உடலினுள் செலுத்தினார்கள். ஒவ்வொரு முறையும் மின்சாரம் பாய்ச்சப்பட்ட போது என்னுடல் கடுமையாக உதறியதோடு நான் கடுமையான அதிர்ச்சியினால் உறைந்துபோனேன். சுமார் இரண்டரை அடிகள் நீளமானதும் கறுப்பு நிறத்தில் காணப்பட்டதுமான மின்சாரச் செலுத்தியை அவர்கள் பாவித்தார்கள். அதன் ஒரு அந்தத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சும் சுருட்கம்பிகள் இணைக்கப்பட்டிருந்தன. சுருட்கம்பிகளையே எனது உடலோடு இணைத்து மின்சாரத்தைச் செலுத்தினார்கள். அக்கருவியின் மறு அந்தத்தில் மின்சாரத்தை முடுக்கிவிடும் சுவிட்ச் ஒன்று இருந்தது. அதனை இயக்கியே எனது உடலின் மின்சாரத்தைச் செலுத்தினார்கள்" என்று கூறியிருந்தார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
விசாரணைகளின் ஒரு அங்கமாகச் சித்திரவதைகளைப் பயன்படுத்திய இலங்கை அரச படைகள்........... "நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அறைக்குள் இன்ஸ்பெக்ட்டர் கருணாரத்ன நுழைந்தார். நான் வேட்டியுடன் இருப்பதைப் பார்த்துவிட்டு, "உனக்கு இந்த வேட்டியைத் தந்தது யார் ?" என்று அதட்டலாகக் கேட்டார். நான் ஈழவேந்தனைக் காட்டினேன். அவர் மீதும் வசைமாரி பொழியப்பட்டது. எனக்கு வேட்டியைத் தந்து உதவியமைக்குத் தண்டனையாக ஈழவேந்தனை இரு மணித்தியாலங்கள் எழுந்து அசையாது நிற்குமாறு அவர் கட்டளையிட்டார். ஈழவேந்தனுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்த உணவினை எடுத்து வீசினார் கருணாரத்ன. ஈழவேந்தனைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருந்தது. உடலை அசைக்காது இரு மணித்தியாலங்கள் அவரால் நிற்கமுடியவில்லை, மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவர் நின்றுகொண்டிருந்தார்". "அதன் பின்னர் என்னை மீண்டும் இறைச்சி அரைக்கும் அறைக்குள் இழுத்துச் சென்றார்கள். சிறிதுநேரம் கருணாரத்ன என்னைச் சீண்டிக் கொடுமைப்படுத்தினார். கன்னங்களைக் கிள்ளியதுடன், வயிற்றுப்பகுதியை இறுக்கமாகப் பிசைந்தார். பின்னர் என்னைப் பார்த்து, "வவுனியாவின் எப்பகுதியில் புலிகள் பதுங்கியிருக்கிறார்கள்?" என்று கேட்டார். நான், "எனக்குத் தெரியவில்லை" என்று பதிலளித்தேன்". "உடனேயே கூரையிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த ஒரு கயிற்றினை என்னை நோக்கி இறக்கினார்கள். எனது கைகளை அதனுடன் இறுகக் கட்டிவிட்டு கயிற்றின் மறு முனையினைப் பலமாக இழுக்க நான் மேலே தூக்கப்பட்டேன். நான் கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும்போது, "வவுனியா பேரூந்துத் தரிப்பிடத்தில் பிரபாகரனுடன் பேசிக்கொண்டிருந்த மனிதனை நான் இங்கே கொண்டுவருமுன் நீ உண்மையைச் சொல்லிவிடு" என்று கருணாரத்ன கத்தினார். நானோ, "எனக்கு அவரைத் தெரிந்தால்த்தானே உங்களிடம் சொல்வதற்கு? எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தேன்". "நான் இவ்வாறு பதிலளித்ததும் என்னை இரும்புக் கம்பிகளாலும், பொல்லுகளாலும் கடுமையாகத் தாக்கத் தொடங்கினார். ஏனையவர்கள் என்னை மேலே இழுத்துக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தின்பின்னர் என்னை தொங்கவிட்டு விட்டு அவர்கள் அகன்றார்கள். எனது உடலின் பாரத்தினால் எனது தோள்மூட்டுக்கள் கழன்று வந்துவிடுமாற்போன்ற வலியும் உணர்வும் ஒருங்கே ஏற்பட்டது. என்னால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் வேதனையில் துடிதுடித்தேன், அலறினேன். இரவு 11 மணிக்கு என்னைக் கயிற்றில் இருந்து கீழே இறக்கி, இன்னொரு அறைக்குள் இழுத்துச் சென்று தூங்குமாறு கட்டளையிட்டார்கள்". "அந்த அறையினுள் பல இளைஞர்களை அடைத்து வைத்திருந்தார்கள். அவர்களில் ஒருவருடைய கைகள் சுவரில் பூட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பியொன்றுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. எனது கைகள் கட்டப்படாமையினால் அறையின் ஒரு மூலைக்குச் சென்றுத் தூங்கிவிட்டேன்". "காலையில் நான் கண் விழித்தபோது அறையினுள் இருந்த பெரும்பாலான இளைஞர்கள் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதனைப் புரிந்துகொண்டேன்". "இரண்டாம் நாள் பகல்வேளையில் என்னை உடற்பயிற்சி செய்யுமாறு கூறினார்கள். இரவு நடக்கப்போகும் சித்திரவதைகளைத் தாங்குவதற்காகவே பகல் வேளைகளில் உடற்பயிற்சி செய்யச் சொல்லி வற்புறுத்துவார்கள் என்று அங்கிருந்த ஏனையவர்கள் என்னிடம் கூறினர்". "இரண்டாம் நாள் இரவு சித்திரவதைகள் முன்னைய இரவைக் காட்டிலும் வித்தியாசமாக இருந்தது. முதலில் என்னை விசாரித்தார்கள். பிரபாகரன் பற்றியும் வவுனியாவில் அமைந்திருப்பதாக அவர்கள் கருதும் முகாம் பற்றியும் கேட்டார்கள். பின்னர் பத்மநாபா பற்றியும் கண்ணாடி முகாம் பற்றியும் கேட்டார்கள். நான் எனக்கு இவைபற்றி எதுவுமே தெரியாது என்று கூறவும் வெளியே இழுத்துச் சென்று குளிர்நீரரை என்மீது வாரி இறைத்தார்கள். பின்னர் இருவர் என்னை அழுத்திப் பிடிக்க , மூன்றாமவர் எனது இமைகளை விரித்து மிளகாய்த்தூளை அள்ளிக் கண்ணிற்குள் கொட்டினார்". "சுமார் 10 நாட்கள் இவ்வாறு என்னைச் சித்திரவதை செய்தபின்னர் யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு மாற்றினார்கள்".
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
விசாரணைகளின் ஒரு அங்கமாகச் சித்திரவதைகளைப் பயன்படுத்திய இலங்கை அரச படைகள் பிஷ்லுக் எழுதிய செய்தியின்படி 17 முதல் 25 வயது வரையான தமிழ் இளைஞர்களே 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தினூடாக இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்து வந்தனர். மேலும் பல இளம் பெண்களும் இராணுவத்தினரின் சித்திரவதைகளுக்கு ஆளாகியிருந்தனர் என்றும் கூறப்பட்டிருந்தது. விசாரணைகளின்பொழுதான சித்திரவதைகள் என்பது இலங்கை இராணுவத்தினரையும் பொலீஸாரையும் பொறுத்தவரையின் ஒன்றும் புதியவை அல்ல. அவர்களைப் பொறுத்தவரையில் வழமையான விசாரணை நடைமுறைகளின் ஒரு அங்கமாகவே சித்திரவதைகள் காணப்பட்டன. 1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியினரின் முதலாவது கிளர்ச்சியெதிர்ப்பு நடவடிக்கைகளின்பொழுது விசாரணைகளின்போதான சித்திரவதைகள் என்பது மிகவும் பரந்தளவில் அரச படைகளால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இக்கிளர்ச்சி நடவடிக்கையின்பொழுது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செய்தி சேகரிக்கச் சென்றவேளை பொலீஸ் நிலையங்களில் வைத்து சிங்கள இளைஞர்கள் பொலீஸாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். சித்திரவதைகளின் பின் உயிர்வாழ்ந்த சில இளைஞர்கள் தமக்கு நடந்த இரத்தத்தினை உறையவைக்கும் கொடூரங்கள் குறித்து என்னிடம் விபரித்திருக்கிறார்கள். 1973 ஆம் ஆண்டு பங்குனி 9 ஆம் திகதி இடம்பெற்ற தமிழ் மாணவர் பேரவை உறுப்பினர்கள் 42 பேரின் கைதுகளோடு தமிழ் மக்கள் மீதான பரந்தளவிலான சித்திரவதைகளை அரச படைகள் ஆரம்பித்திருந்தன. இதற்கு முன்னர் தனிநபர்களான பொன் சிவகுமாரன், சத்தியசீலன் ஆகியோர் இராணுவத்தினரால் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும் கூட தமிழ் மாணவர் பேரவை உறுப்பினர்களின் வாக்குமூலத்தின் ஊடாகவே இராணுவத்தினரின் கொடூரமான சித்திரவதை நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்தன. கைதுசெய்யப்பட்ட 42 தமிழ் இளைஞர்களும் ஆரம்பத்தில் யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் நீர்கொழும்பிற்கும் அங்கிருந்து வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கிருந்து குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நான்காம் மாடிக்கு விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக் குழுவினருக்கு பொலீஸ் பரிசோதகர் பஸ்டியாம்பிள்ளையே பொறுப்பாகவிருந்தார். அவருக்கு உதவியாக பொலீஸ் அதிகாரிகளான பேரம்பலம், செல்வநாயகம் மற்றும் பண்டா ஆகியோர் விசாரணைகளின்பொழுது கடமையாற்றினர். விசாரணைகளின் நோக்கம் தமிழ் மாணவர் பேரவை அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் தகவல்களை அறிந்துகொள்வதுதான். சித்திரவதை நடைமுறைகள் குறித்த விபரங்கள் சமஷ்ட்டிக் கட்சி தலைவர்களாலும், பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பேற்றோரினாலும் வெளியே கசியவிடப்பட்டன. தமிழ்ப் பத்திரிக்கைகளில் வெளிவந்த இந்த விடயங்களைப் பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கம் வெளிக்கொண்டு வந்தார். விசாரணை அறைக்கு கொண்டுவரப்பட்டதும் இளைஞர்களை அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அனைத்தையும் களையுமாறு பொலீஸார் கட்டளையிட்டனர். சிலருக்கு இனப்பெருக்க உறுப்பில் முளைத்திருந்த ரோமங்கள் எரிக்கப்பட்டன. மாவை சேனாதிராஜா தனக்கு நடந்த சித்திரவதை பற்றி என்னிடம் பேசும்போது, ஆடைகள் களையப்பட்ட நிலையில் நீண்ட மேசை ஒன்றின்மீது மல்லாக்காகப் படுக்கவைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறினார். சராசரி உடலமைப்பைக் காட்டிலும் உயர்ந்தவராகக் காணப்பட்ட மாவை மீது அவர் மயங்கிச் சரியும்வரை தடிகளாலும் கொட்டன்களாலும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இன்று (2005) ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் மாவை தனக்கு அன்று நடந்த சித்திரவதைகள் குறித்து என்னுடன் பேசும்போது அவர் உணர்ச்சிவசப்பட்டு நடுங்குவதை நான் அவதானித்தேன். 1975 ஆம் ஆண்டு அல்பிரெட் துரையப்பாவின் மரணத்திற்குப் பின்னர் பல தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுக் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். பஸ்டியாம்பிள்ளையே அன்றும் விசாரணைகளுக்குப் பொறுப்பாகவிருந்தார். இந்த முறை அவரது கவனம் எல்லாம் அல்பிரெட் துரையப்பாவின் மரணத்திற்குக் காரணமானவரான புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையும் அவரது சகாக்களையும் கைதுசெய்வதுதான். இலங்கை அரச புலநாய்வுத்துறையின் பார்வையில் பிரபாகரன் மீண்டும் 1979 ஆம் ஆண்டு இலக்கானார். 1979 ஆம் ஆண்டு இறுதிக்குள் வடக்கிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பேன் என்று ஜெயாரிடம் ஆசீர் வாங்கிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்தவர்தான் பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்க. தமிழ் இளைஞர்களிடமிருந்து போராளிகள் பற்றிய விடயங்களைக் கறந்து அதனூடாக அவர்களை முற்றாக அழித்துவிட சித்திரவதைகளையும், படுகொலைகளையும் திஸ்ஸ வீரதுங்க கட்டவிழ்த்துவிட்டார். தமிழ் மாணவர் பேரவையின் ஸ்த்தாபகர்களில் ஒருவரான புஸ்ப்பராஜா திஸ்ஸ வீரதுங்கவின் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட பலரில் ஒருவர். ஈழப்போராட்டத்தின் எனது சாட்சி எனும் தலைப்பில் அவர் எழுதிய புத்தகத்தில் தன் மீது நடத்தப்பட்ட சித்திரவதைகள் குறித்து அவர் எழுதுகிறார். "1979 ஆம் ஆண்டு ஐப்பசி 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு என்னைக் கைதுசெய்தார்கள். யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த இராணுவம் - பொலீஸ் இணைந்த கூட்டு முகாமிற்கு என்னை இழுத்துச் சென்றார்கள். நான் அலுவலகத்தில் நுழையும்போதே இன்ஸ்பெக்ட்டர் கருணாரத்ன என்மீது தாக்ககுதல் நடத்த ஆரம்பித்தார். அவரைத்தோடர்ந்து அங்கிருந்த ஏனைய பொலீஸாரும் என்மீது சாரமாரியாக தாக்குதல் நடத்தத் தொடங்கினர். எனது தலைமுடியை இறுகப்பிடித்துக்கொண்ட இன்ஸ்பெக்ட்டர் கருணாரத்ன இறைச்சி அரைக்கும் அறை என்று அனைவராலும் அறியப்பட்ட விசேட சித்திரவதைக் கூடத்திற்கு என்னை இழுத்துச் சென்றார்". "அவ்வறையினுள் வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்த்தபோது நான் அச்சத்தில் உறைந்துபோனேன். கூரையிலிருந்து கயிறுகள் தொங்கிக்கொண்டிருந்தன. விசாரணைகளுக்குக் கொண்டுவரப்படும் தமிழர்களைக் கட்டித் தொங்கவிடவே அவை பாவிக்கப்பட்டு வருகின்றன என்பதை நான் உணர்ந்துகொண்டேன். கட்டித் தொங்கவிடப்படும் இளைஞர்களைத் தாக்குவதற்கென்று இரும்புக் கம்பிகள், தடிகள், பலகைகள் என்று பல பொருட்கள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதைவிடவும் சாக்குகள், நீண்ட குத்தூசிகள், இரும்புச் சட்டங்கள் என்று மனிதர்களைச் சித்திரவ்தை செய்வதற்கான பல ஆயுதங்களும் அங்கு காணப்பட்டன. அவ்வறையின் சுவர்களிலும், நிலத்திலும் இரத்தக்கறை பீய்ச்சியடித்துக் காணப்பட்டது". "என்னைச் சுவரை நோக்கிச் சாய்ந்து நிற்கும்படி கட்டளையிட்டார்கள். எனது கைகள் இரண்டையும் அவர்கள் இறுகக் கட்டினார்கள். பின்னர் சாரமாரியாக எனது நெஞ்சுப்பகுதி, வயிறு, இனப்பெருக்க உறுப்பு மற்றும் கால்கள் மீது தடிகளாலும் பொல்லுகளாலும் தாக்கத் தொடங்கினார்கள். இன்ஸ்பெக்ட்டர் கருணாரத்ன கயிற்றில் தொங்கியவாறே எனது வயிற்றில் பூட்ஸ் கால்களால் பலமாக உதைந்தார். அவர் என்னை இரண்டாம் முறை உதைந்தபோது எனக்கு மலம் வெளியேறி அறிவிழந்து கீழே சரிந்து வீழ்ந்தேன்". "எனக்கு மீண்டும் அறிவு திரும்பியபோது, எனக்கு முன்னால் நின்ற மனிதரைப் பார்த்து கழிவறைக்குச் செல்லும் வழியெது என்று வினவினேன். எனக்குத் துணையாக இன்னொரு மனிதரை அவர் அழைத்தார். மலம் கழிந்திருந்த எனது காற்சட்டைகளை அங்கேயே கழுவி, ஈரத்துடன் மீண்டும் அணிந்துகொண்டேன். என்னால் எனது உடல் உறுப்புக்களை அசைக்க முடியவில்லை. எனது உடல் முழுதும் வலியினால் துடித்துக்கொண்டிருந்தது". "பின்னர் என்னை இன்னொரு அறைக்கு இழுத்து வந்தார்கள். அங்கே ஈழவேந்தனை கதிரை ஒன்றில் இருத்திவைத்திருப்பதைக் கண்டேன். எம்மை நாம் அடையாளம் கண்டுகொண்டோம். அருகில் அமர்ந்து இரகசியமாகப் பேசிக்கொண்டோம். ஈரக் காற்சட்டையுடன் நான் இருப்பதை அவதானித்த ஈழவேந்தன் தனது வேட்டிகளில் ஒன்றை எனக்குத் தந்து உதவினார். நான் அதனை அணிந்துகொண்டு பொலீஸார் தந்த பாணை (ரொட்டி) உட்கொண்டேன். உடல்நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஈழவேந்தனுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தனக்குக் கொண்டுவரப்பட்ட கறிகளில் ஒரு பகுதியை ஈழவேந்தன் என்னுடன் பகிர்ந்துகொண்டார். எனக்குக் கொடுக்கப்பட்ட பாணுடன் கறியையும் சேர்த்துச் சாப்பிட்டேன்".
-
கடல்வள கொள்ளையர்
இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை. இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான்.
-
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
சீமான் செய்யும் அரசியல் அவருக்கானது. ஈழத்தமிழர்களுக்கு அதனால் பலன் ஏதும் இல்லையென்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. சர்வ வல்லமை பொருந்திய எம் ஜி ஆரே முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்ய முடியாததை இதுவரை தேர்தலில் ஒரு ஆசனத்தைத்தன்னும் வெல்லக் கஸ்ட்டப்படும் சீமான் செய்வார் என்று எதனை வைத்து எதிர்பார்க்க முடியும், ஆகவே அவரைக் கடந்து சென்று விடலாம். ஆனால், சீமானை எதிர்க்கிறோம் என்கிற கொள்கையில் இருந்துகொண்டு கருனாநிதியை ஆதரிக்கின்ற சிலர் அவர் ஈழத்தமிழர் தொடர்பாக நடந்துகொண்ட முறையினைச் சரியென்று ஏற்றுக்கொள்கிறார்களா?எம் ஜி ஆரிற்குப் போட்டியாகவே அரசியல் செய்துவந்த கருனாநிதி புலிகள் உட்பட ஏனைய போராளிகளை ஆதரித்ததோ அல்லது அவ்வாறு நடந்துகொண்டதோ தனது அரசியல் ஆதாயத்திற்காகவே என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா? சகோதர யுத்தம் சகோதர யுத்தம் என்று தொடர்ச்சியாக பேசிவந்த கருனாநிதி இறுதிப் போர்க்காலத்தில் நடந்துகொண்ட முறையினைச் சரியென்று ஏற்றுக்கொள்கிறார்களா? தமிழ்நாட்டில் மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களை நசுக்கியமை, பாடசாலைகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை கொடுத்து மாணவர் விடுதிகளை மூடியமை, பாசாங்கு உண்ணாவிரதம் இருந்து தமிழர்களை ஏமாற்றியமை, இறுதி நாட்களில் தில்லியில் கூடாரமடித்து தனது குடும்ப உறவுகளுக்கு பாராளுமன்ற பதவிகளை உறுதிப்படுத்திக்கொண்டமை, இனக்கொலை அகோரமாக நடந்துகொண்டிருக்கும்போது யுத்தநிறுத்தம் வந்துவிட்டதாக பொய்கூறி பின்னர் மழை விட்டாலும் தூவானம் விடாது பெய்வதில்லையா அதுபோலத்தான் என்று சப்பைக் கட்டுக் கட்டியமை.................என்று பல விடயங்களைச் செய்திருந்தாரே? அவற்றைச் சரியென்று இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? 2015 ஆம் ஆண்டில் அன்றைய வெளிவிவகார அமைச்சர் சிவ்சங்கர் மேனன் தெரிவுகள் எனும் புத்தகத்தை எழுதினார். அதில் இறுதிப்போரை நடத்த முன்னர் தமிழ்நாட்டு அரசியல்த் தலைவர்களைச் சந்தித்து போரிற்கெதிரான அவர்களின் நிலைப்பாட்டை நாடிபிடித்தறிந்து, அதனைத் தணிக்கும் காரியங்களில் ஈடுபடுமாறு தன்னையும், பிரணாப் முகர்ஜியையும் சோனியா தமிழ்நாட்டிற்கு அடிக்கடி அனுப்பி வந்ததாகக் கூறியிருந்தார். அந்தப் பயணங்களின்போது தானே அதிசயித்துப் போகும் வண்ணம் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்த் தலைவர்கள் புலிகளை அழிக்கும் போரிற்கெதிராக தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பெதனையும் கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறுகிறார். வெளியில் மேடைகளில் போரை எதிர்ப்பதாகக் கூறும் அதே தலைவர்கள் தனிப்பட்ட ரீதியில் புலிகள் அழிக்கப்படுவதை விரும்பினார்கள் என்று கூறுகிறார். கருனாநிதி ஒரு படி மேலே சென்று தனது தனிப்பட்ட பாதுகாப்பிற்குப் புலிகளால் ஆபத்து வரும் என்று தன்னிடம் கூறியதாகவும் அவர் கூறுகிறார். இந்த அரசியல்வாதிகளில் ஜெயலலிதா கூட விதிவிலக்கல்ல. சீமானை எதிருங்கள், அதில் தவறில்லை. அதற்காக கருனாநிதியை தியாகியாகக் காட்டுவதை நிறுத்துங்கள்.
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
நீங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் தற்கால சந்ததியைச் சேர்ந்தவர் என்றால் சில விடயங்களைச் சொல்ல விரும்புகிறேன். இலங்கையில் தமிழினம் மீதான சிங்கள இனத்தின் அடக்குமுறையென்பது பன்முகப்படுத்தப்பட்டது. மொழி என்பது அதில் ஒரு முகம் மட்டுமே. 1948 ஆம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தவுடனேயே முதலாவது சிங்களக் குடியேற்றம் தமிழர் தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டாயிற்று. மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை ஆற்றினை அண்டி உருவாக்கப்பட்ட குடியேற்றமே கல் ஓயாக் குடியேற்றம். 1952 இல் பூர்த்தியாக்கப்பட்ட இக்குடியேற்றத்தில் கேகாலை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இருந்த சிங்களவர்களைக் கொண்டுவந்து குடியேற்றினார்கள். அப்போது மொழி ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனாலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, அவர்களின் தாயகத்தில் சிங்களவர்கள் குடியேறினார்கள். இப்பகுதிகளில் இருந்த வெளியேற மறுத்த தமிழர்களுக்கும் குடியேற்றச் சிங்களவர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் அரச ஆதரவுடன் தமிழர்கள் கொல்லப்பட்டும் அடித்தும் விரட்டப்பட்டார்கள். கல்லோயாக் குடியேற்றத்தைத் தொப்டர்ந்து பதவியா (பதவிக்குளம்), மொறவெவ (முதலிக் குளம்), கந்தளாய் ஆகியவையும் 80 களில் முல்லைத்தீவின் வலி ஓய (மணலாறு), கொக்குத்தொடுவார், கொக்கிளாய், தென்னைமரவாடி, கென்ட், டொலர் பண்ணைகள் என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிங்களக் குடியேற்றங்களும் அரசுகளால் முன்னெடுக்கப்பட்டுத் தொடர்ந்தன. ஆனால் இவற்றினை தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்பதாலோ அல்லது சிங்களவர் தமிழ் மொழியைக் கற்பதாலோ தடுத்திருக்க முடியுமா? அவர்கள் செய்வதே தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து இருப்பை அழிப்பதற்காகவே எனும்போது மொழிகளைப் பரஸ்பரம் கற்பது எவ்வாறு இதனைத் தடுத்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? நவீன காலத்துச் சிங்கள இனவாதத்தின் பிதாமகன் என்று அறியப்பட்ட பண்டாரநாயக்க 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் என்று ஒன்றைக் கொண்டுவந்தார். இலங்கையில் ஒரே உத்தியோகபூர்வ அரச மொழியாக சிங்கள மொழியே இருக்கவேண்டும் என்றும் தமிழர்கள் உட்பட அனைவரும் சிங்கள மொழியைக் கற்பது அவசியம் என்று கூறப்பட்டது. குறிப்பாக அரச சேவைகளில் சிங்களம் கற்றால் ஒழிய தமிழர்கள் பணிக்கு அமர்த்தப்படுவது தடுக்கப்பட்டது, தனியார் துறை பற்றிக் கேட்கவே தேவையில்லை. தாய்மொழியாகிய தமிழ் மொழியிருக்க தம்மை ஆக்கிரமித்து நிற்கும் அந்நிய மொழியான சிங்களத்தைக் கற்குமாறு தமிழர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். இச்சட்டமே தமிழர்களை இன்னொரு வழியில் அடக்கியாளத்தான் என்றாகிறபோது நாம் அதனைக் கற்றிருந்தால் இவை எதுவுமே நடந்திருக்காது என்று எப்படி நினைக்கிறீர்கள்? தமிழ் இனம் தனது தாய்மொழிக்கு அடுத்ததாக இன்னொரு மொழியினைக் கற்கவேண்டும் என்றால் பொது மொழியொன்றைக் கற்கலாம், ஆங்கிலம் இங்கு கைகொடுக்கும். மூன்றாவதாக சிங்களத்தை, விரும்பினால் கற்கலாம். ஆனால் இவை எதுவுமே சிங்களம் எம்மீது நடத்தும் ஆக்கிரமிப்பை தடுக்காது. சிங்களத்தைக் கற்றால் அவர்களுக்கு எமது பக்க நியாயத்தை எடுத்துரைக்கலாம் என்று கூறுவதெல்லாம் எம்மை நாமே ஏமாற்றும் வேலை, ஏனென்றால் தாம் செய்வது என்னவென்று நன்கு தெரிந்தே சிங்களவர்கள் செய்கிறார்கள். சகோதர இனமொன்றிற்கு எதிராக தாம் செய்யும் அக்கிரமங்கள் அநீதியானவை என்பதை நாம் சிங்களம் கற்றுத்தான் அவர்களுக்குக் கூற வேண்டியதில்லை.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
கைதுசெய்யப்படும் தமிழ் இளைஞர்கள் மீது இராணுவம் மேற்கொண்ட சித்திரவதைகள் கேசிவப்பிள்ளை வழங்கிய வாக்குமூலத்தினூடாக அவர் மீது நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. "எனது கைகள் இரண்டையும் பின்னால் இழுத்துக் கட்டினார்கள். பின்னர் என்னைக் கைகளில் கட்டி கூரையில் இருந்து தொங்கவிட்டார்கள். பின்னர் கண்களுக்குள் மிளகாய்த்தூளை அள்ளிக் கொட்டினார்கள். எனது ஆடைகளை முற்றாக களைத்துவிட்டு எனது பிறப்பு உறுப்பு முதற்கொண்டு உடல் முழுவதும் மிள்காய்த்தூளை அள்ளித் தேய்த்தார்கள். பின்னர் பாதங்களில் ஆணிகளை நுழைத்து பிளாத்திக்குக் குழாய்களால் அறைந்தார்கள். ஆணிகள் ஏறிய துளைகளுக்குள் மிளகாய்த்தூளை அடைத்தார்கள். இரவு 8 மணிமுதல் 12 மணிவரை என்னைக் கட்டித் தொங்கவிட்டுச் சித்திரவதை செய்தார்கள். மறுநாளும் என்னை அதேபோன்று கொடுமைப்படுத்தினார்கள். காலை 11 மணிமுதல் மாலை 4 மணிவரை தொங்கவிட்டு கொடுமைப்படுத்தினார்கள். பின்னர் நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை எனது பின்புறத்தில் அழுத்தி பிட்டங்களை எரித்தார்கள். அவர்கள் என்னை விடுதலை செய்தபோது என்னால் நடக்கவோ கைகளை அசைக்கவோ முடியவில்லை" என்று கூறியிருந்தார். ஒரு வாரத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட கேசிவப்பிள்ளை மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நீண்டநேரம் கைகளில் கட்டப்பட்டு கூரையிலிருந்து தொங்கவிடப்பட்டமையினால் அவரின் கைகளில் இருந்த நரம்புகள் நிரந்தரமாகவே பாதிக்கப்பட்டுப் போயிருந்ததை வைத்தியர்கள் அவதானித்தார்கள். சுமார் 3 மாதங்களும் 20 நாட்களும் அவரை வைத்தியசாலையில் வைத்துப் பரமாரிக்க வேண்டி ஏற்பட்டது. வைத்திய உதவிகளுக்குப் பின்னரும் அவரது வலது கரம் இயங்கமுடியாது செயலற்றுப் போனது. இதனால் பெரிதும் அங்கவீனமடைந்த அவர் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இடதுகரத்தால் தனது வேலைகளைப் பார்த்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். கேசிவப்பிள்ளையினை பராமரித்துவந்த மட்டக்களப்பு வைத்தியசாலை வைத்தியர்கள் பிரஜைகள் குழுவிற்கு வழங்கிய வாக்குமூலத்தில் கேசிவப்பிள்ளை அவர்கள் மிகக்கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதை தம்மால் உணர்ந்துகொள்ள முடிந்ததாகக் கூறியிருந்தனர். அவரது பின்புறத்திலும், கைகளிலும் கடுமையான எரிகாயங்கள் காணப்பட்டதாக அவர்கள் கூறினர். கைகளின் இருவிடங்களில் எலும்புகள் முற்றாகச் சேதப்படுத்தப்பட்டுக் காணப்பட்டமையினால் அவரால் கைகளைப் பாவிக்க முடியாது போய்விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சர்வதேச மன்னிப்புச்சபை அக்காலப்பகுதியில் சேகரித்து வந்த பல தமிழர்களின் வாக்குமூலங்களில் ஒன்றுதான் கேசிவப்பிள்ளையின் வாக்குமூலமும். மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவர், பா.உ. பிறின்ஸ் காசிநாதர் 1985 1985 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற மனிதவுரிமைகள் மாநாட்டில் பேசிய மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் பிறின்ஸ் காசிநாதர், மட்டக்களப்பில் அடையாளம் காட்டப்படாத வான்களில் விசேட அதிரடிப்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட பல இளைஞர்கள் காணாமற்போயுள்ளதாகத் தெரிவித்தார். "கடந்த மாதத்தில் மட்டும் எனது பாடசாலையிலிருந்து மூன்று சிறுவர்களை அதிரடிப்படை கைதுசெய்து காணாமலாக்கியிருக்கிறது. அவர்களைத் தேடி பிணவறைக்கும் நான் சென்றுவந்தேன். அங்கு மூன்று சிறுவர்களின் உடல்கள், தலைகள் முற்றாக நசுக்கப்பட்ட நிலையில் கடுமையாகச் சிதைக்கப்பட்டுக் கிடந்ததை நான் கண்டேன். ஆனால் அவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது, பாவம், யார் பெற்ற பிள்ளைகளோ? ஆனால் நான் தேடிச் சென்ற எனது பாடசாலை மாணவர்கள் இல்லை அவர்கள்" என்று கூறினார். விசாரணைகளின்போது இராணுவத்தால் நடத்தப்படும் மிருகத்தனமான சித்திரவதைகள் குறித்து வடக்குக் கிழக்கிற்குப் பயணம் செய்த வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்கள் அவப்போது எழுதிவந்தார்கள். 1985 ஆம் ஆண்டு தை மாதம் 2 ஆம் திகதி வெளிவந்த லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதிய ட்ரெவோர் பிஷ்லொக், "யாழ்ப்பாண வைத்தியசாலையில் பணியாறும் பல வைத்தியர்கள் இராணுவத்தினரின் கடுமையான சித்திரவதைக்கு அகப்பட்டு அங்கு சிகிச்சைக்காக வந்த பல இளைஞர்களைப் பராமரித்திருக்கிறார்கள். மணல் நிரப்பிய பிளாத்திக்குக் குழாய்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் பல இளைஞர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். தலைகீழாகக் கட்டிக் கால்களில் தொங்கவிடப்பட்டுத் தாக்கப்பட்ட பலரின் பாதங்கள் முற்றாக முறிவடைந்து காணப்பட்டன" என்று எழுதுகிறார். மேலும், அங்கு பணியாற்றிய வைத்தியர் ஒருவரின் கூற்றுப்படி, "ஒவ்வொரு வாரமும் இவ்வகையான சித்திரவதைக்குள்ளான ஐந்து அல்லது ஆறு இளைஞர்களுக்கு நான் வைத்தியம் செய்திருக்கிறேன். ஆனால் மேலும் பல இளைஞர்கள் அச்சத்தினாலும், நெடுந்தூரம் பயணித்து இங்கு வரவேண்டியிருப்பதனாலும் சித்திரவதைக் காயங்களுடனேயே வாழ்ந்து வருகின்றனர்" என்று அவர் கூறினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
லலித் அதுலத் முதலி முடுக்கிவிட்ட பாரிய கைதுகளும் சித்திரவதைகளும் 1985 ஆம் ஆண்டு ஜெயார் - லலித் கூட்டு தமிழர்கள் மீது மேற்கொண்டு வந்த வகைதொகையற்ற கைதுகள், சித்திரவதைகள், படுகொலைகள், தாயகத்திலிருந்து தமிழ்மக்களைப் பலவந்தமாக வெளியேற்றியமை போன்றவற்றினால் தமிழ் மக்கள் தாம் இவற்றிற்கெதிராகப் போராட வேண்டும் என்கிற உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்ததுடன் போராளி அமைப்புக்களுக்கான புதிய உறுப்பினர்களைத் தேடும் களத்தையும் விரிவுபடுத்தியிருந்தது. சித்திரையில் இனப்பிரச்சினையின் இன்னொரு வடிவமான முஸ்லீம் தரப்பு ஏற்படுத்தப்பட்டதுடன் இனப்பிரச்சினையினை அது மேலும் சிக்கலாக்கியிருந்தது. வடக்குக் கிழக்கில் வாழ்ந்த தமிழர்களின் அனைத்துக் குடும்பங்களிலும் அரசால் முடுக்கிவிடப்பட்ட கைது நடவடிக்கைகள் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன. இளவயது ஆண்களைக் குடும்பங்களில் வைத்துப் பாதுகாப்பதென்பதே அவர்களுக்குப் பெரும் சுமையாகிப் போனது. கிராமம் கிராமமாகச் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுவந்த இராணுவம், ஒலிபெருக்கிகள் ஊடாக 18 முதல் 35 வயது வரையான இளைஞர்களை தாம் கட்டளையிடும் இடங்களுக்கு வந்து கூடுமாறு கூறியதுடன், அவர்களை கைதுசெய்து விசாரணைகளுக்கென்று இழுத்துச் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட ஆண்களில் சிலர் கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட இன்னும் பலர் காணமலாக்கப்பட்டிருந்தனர். திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு அக்காலப்பகுதியில் என்னால் செல்வதற்கான வாய்ப்புக் கிடைத்திருந்தது. என்னுடன் பேசிய பல தமிழப் பெற்றோர்கள் தமது ஆண் பிள்ளைகளை வீட்டில் வைத்திருப்பதைக் காட்டிலும் அவர்கள் புலிகள் இயக்கத்தில் இணைவதன் மூலமோ அல்லது வெளிநாடு செல்வதன் மூலமோ பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கூறியிருந்தனர். ஜெயவர்த்தனவின் அரசு மீதும் அவரது இராணுவம் மீதும் கடுமையான வெறுப்பினைத் தமிழர்கள் கொண்டிருந்தனர். 1985 ஆம் ஆண்டு தை மற்றும் மாசி மாதங்கள் கடுமையான சுற்றிவளைப்புக்களையும், பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்படுவதையும் வழமையாகக் கொண்டிருந்தது. தை மாதம் 2 ஆம் திகதி வடமராட்சியின் அல்வாய், திக்கம், நாவலடி, இறுப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சுற்றிவளைத்துக்கொண்ட இராணுவத்தினர் 18 முதல் 35 வயது வரையான ஆண்களை பொது இடமொன்றில் கூடுமாறு ஒலிபெருக்கியில் அறிவித்துவிட்டு அப்படிக் கூடியவர்களில் 200 பேரை தம்முடன் இழுத்துச் சென்றனர். மூன்று நாட்களுக்குப் பின்னர் தை 5 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளைச் சுற்றிவளைத்துக்கொண்ட இராணுவத்தினர் மேலும் 500 இளைஞர்களை கைதுசெய்து விசாரணைகளுக்கென்று அழைத்துச் சென்றனர். மட்டக்களப்பில் 1000 இளைஞர்களும், திருகோணமலையில் 2000 இளைஞர்களும், அக்கரைப்பற்றில் 400 இளைஞர்களும் இதே காலப்பகுதியில் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 1985 ஆம் ஆண்டின் முதற்காற்ப்பகுதியில் மட்டும் 52 சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டிருந்த இராணுவத்தினர் குறைந்தது 10,000 தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து தம்முடன் இழுத்துச் சென்றிருந்தனர். லலித் பாராளுமன்றத்தில் இக்கைதுகள் குறித்துப் பேசும்போது, "அவர்களைச் சந்தேகத்தின்பேரிலேயே கைதுசெய்கிறோம், ஆனால் விசாரணைகளின் பின்னர் அவர்களை விடுவித்துவிடுவோம்" என்று மிகச் சாதாரணமாகக் கூறினார். ஆனால் எதற்காக இவ்வாறான பாரிய எண்ணிக்கையில் தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்துவருகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது "எமது பிரச்சினை என்னவென்றால் பயங்கரவாதிகளை அழிப்பதுதான். ஆனால் அவர்களைக் கண்டுபிடிப்பது எங்கணம்? நாட்டினை நேசிக்கும் பிரஜைகளிடமிருந்து பயங்கரவாதிகளைப் பிரித்தறிவது எங்கணம்? மொத்தத் தமிழர்களை கைதுசெய்து விசாரித்தால் ஒழிய பயங்கரவாதிகளை எம்மால் அடையாளம் கண்டுகொள்வது சாத்தியமில்லை" என்று அவர் கூறினார். பாரிய கைதுகளின் சூத்திரதாரியாகவிருந்த லலித் அதுலத் முதலி ஒவ்வொரு தமிழனையும் தான் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதி என்று எண்ணும் நிலையினை ஏற்படுத்தியிருந்தார். அதுமட்டுமல்லாமல் இவ்வாறு கைதுசெய்யப்படும் ஒவ்வொரு தமிழருக்கும் கைதுசெய்யப்பட்ட நாளிலிருந்து விடுவிக்கப்படும் நாள்வரைக்கும் விசாரணை என்கிற பெயரில் நடத்தப்படவிருக்கும் கடுமையான சித்திரவதைகளும் கடுமையான அச்சத்தினை ஏற்படுத்திவந்தது. லலித் அதுலத் முதலியைப் பொறுத்தவரை கைதுசெய்து விசாரிப்பதென்பது மிகச் சாதாரணமான விடயமாகத் தெரிந்தது. "அவர்களை கைதுசெய்து கொண்டுவருகிறோம், விசாரணைகளின் பின்னர் விடுவித்து விடுவோம், அவ்வளவுதான்" என்று அவர் மிகச்சாதாரணமாக இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வந்தார். தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்படும் விதம், அவர்கள் மீது விசாரணை என்கிற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்ட சித்திரவதைகள், அவர்கள் விடுவிக்கப்பட்ட போது அவர்கள் அனுபவித்த இருந்த உடல், உளரீதியான பாதிப்புக்கள் என்பன தமிழர்களைப் பொறுத்தவரையில் மிகவும் கொடூரமானவையாகக் காணப்பட்டதுடன் அவர்களைப் பெரிதும் அச்சத்திலும் ஆழ்த்தியிருந்தன. மகேந்திரா கேசிவப்பிள்ளை எனும் 23 வயது இளைஞன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான பிரிவில் கல்விபயின்று வந்தவர். தை மாதம் 14 ஆம் திகதி தனது பெற்றோருடன் தைப்பொங்கலைக் கொண்டாடுவதற்காக அவர் கிழக்கிற்கு வந்திருந்தார். பொங்கல் முடிவடைந்து மீளவும் யாழ்ப்பாணப் பக்கலைக் கழகத்திற்குத் திரும்புவதற்காக அனுமதிப் பத்திரம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் மட்டக்களப்புப் பொலீஸ் நிலையத்திற்கு அவர் சென்றார். பொலீஸ் நிலையத்தில் அவரை விசாரணைக்கென்று அழைத்துச் சென்ற விசேட அதிரடிப்படையினர் அவரை காலில் சுட்டுக் காயப்படுத்தியதுடன் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை முகாமிற்கு இழுத்துச் சென்று கடுமையாகத் தாக்கிச் சித்திரவதை செய்தனர். பின்னர் அங்கிருந்து அவரை மட்டக்களப்பு விசேட அதிரடிப்படை முகாமிற்கு இழுத்துச் சென்றனர். "என்னை அவர்கள் ஒரு பயங்கரவாதி என்றே அழைத்தனர். நான் என்னைப் பயங்கரவாதி என்று ஏற்றுக்கொண்டு இராணுவப் பயிற்சிக்காகவே யாழ்ப்பாணம் செல்வதாக ஒத்துக்கொள்ளுமிடத்து விடுதலை செய்வதாக அவர்கள் கூறினர். ஆனால் நான் பிடிவாதமாக நான் ஒரு பல்கலைக்கழக மாணவன் என்றும், பயங்கரவாதி அல்ல என்றும் கூறினேன்" என்று சர்வதேச மன்னிப்புச்சபைக்கு வழங்கிய தனது வாக்குமூலத்தில் கேசிவப்பிள்ளை கூறியிருந்தார்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
ஆசாத்திற்கு எதிரான கிளர்ச்சிப்படைகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று விமர்சிக்கும் மேற்கிற்கெதிரான ஆனால் மேற்குலகில் வசிக்கும் ஒரு சிலர், தாம் ஒற்றைக்காலில் நின்று ஆதரிக்கும் அதி மேன்மை தங்கிய, மனிதருள் மாணிக்கம் ஐயா புட்டின் அவர்கள் அப்கானிஸ்த்தானில் ஆட்சிபுரியும் அடிப்படைவாதிகளான தலிபான்கள் மீதான தடையினை நீக்கி பரஸ்பரம் உறவுகளை மேற்கொள்ளப்போகிறாரே, அதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்? தலிபான்கள் நல்லவர்கள் என்று இனி எழுதிக்கொண்டு வருவார்கள். புட்டின் செய்தால் அது சரியாகத்தானே இருக்கும், என்ன நான் சொல்லுறது?
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
தவறு, தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்படாது இருந்திருந்தால் எந்த இரத்தமும் சிந்தப்பட்டிருக்காது. ஒரு சிலர் எப்போது பார்த்தாலும் பாதிக்கப்பட்டவன் மீதே குற்றம் காண விழைவது ஏனென்று கேட்கத் தோன்றுகிறது?
-
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
பெரியார் ராமசாமியைத் தனது பேரன் என்று சீமான் ஒரு காலத்தில் அழைத்துவந்தார். இதனை ஒரு கூட்டத்தில் கிண்டலடித்துப் பேசிய பெரியாரின் உண்மையான பேரனான இளங்கோவன், "நாந்தான் பெரியாரின் உண்மையான பேரன், சீமான் கள்ளப்பேரன், அவன் பெரியாரின் சின்னவீட்டிற்குப் பிறந்தாலும் பிறந்திருப்பான்" என்று கூறியிருந்தார். அதன்பிறகு பெரியாரை தனது பேரன் என்று கூறுவதைச் சீமான் தவிர்த்து விட்டிருக்கலாம். இப்போது இளங்கோவனின் மரணத்திற்குத் துக்கம் விசாரிக்கச் சென்றிருக்கத் தேவையில்லை. அவரது அரசியல் அவருக்குத்தான் புரியும். அதனால் எமக்கேதும் நடக்கப்போவதில்லை.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
கோஷான், இவர் தலைவரையும் புலிகளையும் கொச்சைப்படுத்த இத்திரியைத் தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது ஆசாத்திற்கும், பின்புலத்தில் நிற்கும் புட்டினுக்கும் வெள்ளையடிக்க முயல்வது. இரண்டாவது புலிகள் மீதிருக்கும் தனது வக்கிரத்தைக் இத்திரியூடாக வெளியே கொண்டுவருவது. இவரது பிதற்றல்கள் குறித்து உங்களுக்குத் தெரியாத விடயங்களை நான் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்காகத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை காலமும் தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக்கொண்டிருந்தவரின் உண்மை முகம் இதன் மூலம் வெளியே தெரிந்திருக்கிறது. சிரியாவின் முன்னாள் கொடுங்கோலனிற்கு புட்டினின் ஆதரவு இல்லாதிருந்தாலோ அல்லது அக்கொடுங்கோலன் மேற்குலகின் நண்பனாக இருந்திருந்தாலோ இந்தப் போலித்தேசியவாதி ஒருபோதுமே ஆசாத் எனும் கொடுங்கோலனை ஆதரித்தோ அல்லது அவனைத் தலைவருடன் ஒரே தராசில் வைத்தோ பார்த்திருக்க மாட்டார் என்பது திண்ணம். ஆக, அவர் ஆசாத்தை ஆதரிப்பதன் ஒரே காரணம் அவன் புட்டினின் நண்பன் என்பது மட்டும்தான். தீவிர மேற்குலக எதிர்ப்புடன் அதே மேற்குலகில் வாழ்ந்துகொண்டு சர்வாதிகாரி புட்டினை வழிபடும் இவர் போன்றவர்களிடமிருந்து இதனைத்தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும்? புலிகளால் தண்டிக்கப்பட்ட ஏனைய அமைப்புக்களின் செயற்பாடுகள் இவரைப் பொறுத்தவரையில் நியாயமாகப் படுகின்றதா? அல்லது அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் புலிகளின் தலைமையின் பாதுகாப்பிற்கு அச்சசுருத்தலாக இருந்தது என்று இவரே நம்பும் சதிக்கோட்பாட்டிற்கு அப்பால் அவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் தமிழர்களின் நலனுக்கும் அவர்களின் இருப்பிற்கும் அச்சுருத்தலாக இருந்தன என்பதை இவர் அறிவாரா? இந்தியாவின் பின்புலத்திலிருந்து கொண்டு தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவும், அதனை முன்னெடுத்த புலிகளுக்கெதிராகவும் நாசகார சதிகளில் ஈடுபட்ட மாற்று இயக்கத்தவர்களை புலிகள் கொன்றார்கள். இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த இவ்வமைப்புக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படையோடு இணைந்து செயலாற்றியதே அவர்களின் தண்டனைகளுக்குக் காரணமாக இருந்தன என்பதை இவர் அறியாரா? இந்தியப் படைகளின் வருகைக்கு முன்னரான காலத்திலேயே புலிகளைப் பலவீனப்படுத்த இந்திய உளவுத்துறையுடன் டெலொ இணைந்து இயங்கியதே? டெலோ அமைப்பின் போராளிகளைப் புலிகள் இயக்க மோதல்களில் கொன்றது உண்மை. ஆனால் குடும்பங்களை இழுத்துச் சென்றார்கள், படுகொலை செய்தார்கள் என்பது இந்தப் போலித்தேசியவாதியின் கற்பனை. சரி, ஆசாத்துடன் தலைவரை ஒப்பிடவேண்டிய தேவை என்ன? இந்திய உளவுத்துறையுடனும், இலங்கை அரசுடனும் சேர்ந்தியங்கிய மாற்று இயக்கங்களைப் புலிகள் தண்டித்தார்கள், போராளிகளைக் கொன்றார்கள். இவை எல்லாமே தமிழர்களின் போராட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டவை. தமிழ் மக்களின் நலன்களுக்கெதிராகவும், இருப்பிற்கெதிராகவும் எதிரிகளுடன் சேர்ந்து அவர்கள் செயற்பட்டபோது புலிகளுக்கும் வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடு. இதற்குத் தலைவரின் பாதுகாப்பு அச்சுருத்தலே காரணம் என்று இவர் பிதற்றுவது முழுக்க முழுக்க ஆசாத்தையும், பின்னால் நிற்கும் புட்டினையும் நியாயப்படுத்தத்தான் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஏனென்றால் இன்று புட்டினும் ஆசாத்தும் செய்வது தமது அதிகாரத்திற்கும், பலத்திற்கும், அரசியல் எதிர்காலத்திற்கும், நலன்களுக்கும் எதிராக இருப்பார்கள் என்று தாம் எண்ணுவோரை வகை தொகையின்றி அழிப்பதுதான். இதில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எவருமே விதிவிலக்கில்லை. தமிழ் மக்களை புலிகள் அடிமைகளாக ஒருபோதும் நடத்தியதில்லை. தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய புலிகளுக்குத் தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தவேண்டிய தேவை எங்கிருந்து வந்தது என்பதை இந்தச் சதிக்கோட்பாட்டு கற்பனைவாதிதான் விளக்க வேண்டும். ஆனால் ஆசாத் ஒரு சர்வாதிகாரி, தனது இருப்பிற்காக தனது நாட்டு மக்களையே இரசாயணக் குண்டு உட்பட பல கனர ஆயுதங்களைக் கொண்டு கொன்றவன். இவனது ஆட்சிக்காலத்தில் மட்டுமே கொல்லப்பட்ட அப்பாவிச் சிரியர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சம். இவனது கொலைகளுக்கு தொடர்ச்சியாக உறுதுணை வழங்கி வந்தது இன்னொரு சர்வாதிகாரியான புட்டின். ஆக இச்சர்வாதிகரிகளோடு தலைவரை ஒப்பிட்டு இவர் பேசுவதன் ஒரே நோக்கம், தலைவர் மீதும், புலிகள் மீது கறை பூசுவது அல்லது ஆசாத்தைற்கும், புட்டினுக்கும் வெள்ளை அடிக்க முனைவது. இச்சதிக்கோட்பாட்டு கற்பனைவாதியின் கருத்திற்குப் பச்சை குத்தியவர் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு விடயம், இப்பச்சை குத்தலுக்கான ஒரே காரணம் ஆசாத்திற்கும் புட்டினுக்கும் இடையே இருக்கும் நட்புத்தான். இத்தளத்தில் ரஸ்ஸியா - உக்ரேன் மோதல் குறித்த முன்பொரு பதிவில் புலிகளை இந்தியா அழித்தது சரிதான் என்று தனது ரஸ்ஸிய சார்பு நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்க இங்கு பச்சை குத்தியவர் வெளிப்படையாகவே எழுதினார். அதாவது இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புலிகளை இந்தியா அழித்தது சரியானதுதான் என்று கூறியிருந்தார். இவர்கள் போன்றோரின் உண்மை முகம் அவப்போது வெளியே வருகிறது. இதைத்தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழ் மக்கள் மீதான அரச அடக்குமுறைகளினால் தமிழ் போராளி அமைப்புக்களில் இணைந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தமிழ் மக்கள் மீது அரச இராணுவத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட மிக கொடூரமான படுகொலைகளோ அல்லது தமிழ் மக்கள் தமது தாயகப்பகுதிகளில் இருந்து பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டமையோ தமிழ்ப் போராளிகளைச் சோர்வடையச் செய்யவில்லை. அவர்கள் இராணுவத்திற்கும், பொலீஸாருக்கும் எதிரான கண்ணிவெடித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தத் தொடங்கினார்கள். மார்கழி 18 ஆம் திகதி மட்டக்களப்பில் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 8 பொலிசாரும் வாகனச் சாரதியும் கொல்லப்பட்டனர். மறுநாளான மார்கழி 19 ஆம் திகதி பதவியா குடியேற்றத்திற்கு அண்டிய பகுதியில் இரு இராணுவ வாகனங்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் இரு அதிகாரிகளும் இரு படை வீரர்களும் கொல்லப்பட்டனர். இராணுவத்தினர் மீதான தாக்குதல்களுக்கு பதிலளிக்க யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளில் புதிய நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவம் நடத்திய சுற்றிவளைப்பில் 1000 தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். மட்டக்களப்பில் 400 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் திருகோணமலையில் தமிழர்களை மிகவும் மோசமாக அரசு நடத்தியிருந்தது. ஒலிபெருக்கிகள் ஊடாக அறிவித்தல் ஒன்றினை மேற்கொண்ட இராணுவம் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைந்திருந்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாற்றுக் கேணி, காயடிக்குளம், கோட்டைக் கேணி, நாயாறு மற்றும் அளம்பில் ஆகிய பகுதிகளில் வசித்துவரும் தமிழர்களை 24 மணித்தியாலத்திற்குள் அங்கிருந்து வெளியேறிச் செல்லவேண்டும் என்று கட்டளையிட்டது. இக்கிராமங்களில் இருந்து வெளியேறிய தமிழ் மக்கள் முல்லைத்தீவு நோக்கி இடம்பெயர்ந்து சென்றதுடன் அங்கு அமைக்கப்பட்ட அகதி முகாம்களிலும், கோயில்களிலும் தஞ்சமடைந்தனர். தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்திய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இதனைத் தவிர வேறு தெரிவுகள் அரசாங்கத்திடம் இல்லையென்று கூறியதுடன், பயங்கரவாதிகளுக்கெதிராக ரொக்கெட்டுக்கள், விமானக் குண்டுகள் மற்றும் நடுத்தர ஆட்டிலெறி எறிகணைகள் ஆகியவற்றையும் பாவிப்பது அவசியம் என்று கூறினார். தனது அறிக்கைகள், பேச்சுக்கள் ஆகியவற்றி லலித் அதுலத் முதலி தொடர்ச்சியாக ஒரு விடயத்தைச் சொல்லி வந்தார். அதுதான் போர்க்களத்தில் இராணுவம் திறமையாகச் செயற்பட்டு வருகிறது எனும் விடயம். புதுவருட தினத்தில் அவர் நாட்டு மக்களுக்கு வழங்கிய செய்தியில், "நாம் வென்று கொண்டு வருகிறோம், பயங்கரவாதிகளை அடிபணியவைப்பதில் வெற்றிபெற்று வருகிறோம்" என்று கூறினார். அக்காலப்பகுதியில் இராணுவத்தின் ஆட்பல எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரிக்கப்பட்டது. 12,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் பயங்கரவாதிகளுக்கெதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். இவர்கள் பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் திறமையாகப் பயிற்றப்பட்டவர்கள் என்றும் நவீன ரக ஆயுதங்களை அவர்கள் போரில் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர் கூறினார். அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட விசேட பொலீஸ் கொமாண்டோ படைப்பிரிவான விசேட அதிரடிப்படையினரின் முதலாவது அணிக்கான பயிற்சிகளை ரவி ஜெயவர்த்தன ஒழுங்கு செய்திருந்தார். மேலும் 1985 ஆம் ஆண்டு தை முதலாம் வாரத்தில் அறிவித்தல் ஒன்றினை மேற்கொண்ட ஜெயார், மணலாற்றில் அமைக்கப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றத்தினைப் பாதுகாக்க 50 முதல் 100 வரையான சிங்கள ஊர்காவற்படையினரைத் தான் ஈடுபடுத்தவுள்ளதாகத் தெரிவித்தார். அரசாங்கம் தனது படையினரின் எண்ணிக்கையினையும், பலத்தையும் அதிகரித்து வந்த அதேவேளை போராளிகளும் தம்மைப் பலப்படுத்துவதில் ஈடுபட்டு வந்தனர்.இராணுவ ஆய்வாளரான தாரகி சிவராமின் கூற்றுப்படி அக்காலத்தில் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் கையே ஓங்கியிருந்தது என்று கூறமுடியும். 1983 ஆம் ஆண்டு தமிழர் மேல் நடத்தப்பட்ட இனக்கொலை, அதனைத் தொடர்ந்து வந்த ஏனைய படுகொலைகள், தமிழர்களை அவர்களது தாயகத்தில் விரட்டியடித்தமை போன்ற நடவடிக்கைகளால் போராளி அமைப்புக்களில் இணையும் தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. "ஒரு பூனையும், ஒரு மணியும் சில உத்திகளும்" என்கிற தலைப்பில் 1997 ஆம் ஆண்டு சித்திரை 20 ஆம் திகதி தாரகி அவர்கள் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதன்படி 1983 ஆம் ஆண்டு தமிழினக் கொலைக்கு முன்னர் வரை அடிப்படை ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டிருந்த தமிழ்ப் போராளிகளின் எண்ணிக்கை வெறும் 800 பேர்தான் என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் 1984 முதல் 1985 வரையான காலப்பகுதியில் தமிழ்ப் போராளி அமைப்புக்களில் போர்க்களத்திற்கு அனுப்பப்படக்கூடிய இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை 44,800 ஆகக் காணப்பட்டதாக தாரக்கி குறிப்பிடுகிறார். அவரது கணிப்புப்படி ஒவ்வொரு அமைப்பிலும் இருந்த போராளிகளின் எண்ணிக்கை பின்வருமாறு குறிப்பிடபட்டிருந்தது. அக்காலப்பகுதியில் பெரிய அமைப்பாக விளங்கிய புளொட்டின் தமிழ்நாட்டு பயிற்சி முகாம்களில் பயிற்சிகளின் ஈடுபட்டிருந்தோரின் எண்ணிக்கை 6,000, அதேவேளை வடக்குக் கிழக்கின் பல பயிற்சிமுகாம்களிலும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தோரின் எண்ணிக்கை 12,000. டெலோ அமைப்பின் 4,000 போராளிகள் தென்னிந்திய பயிற்சிமுகாம்களில் பயிற்றப்பட்டு வந்தவேளை வடக்குக் கிழக்கில் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தோரின் எண்ணிக்கை 2,000. சுமார் 7,000 போராளிகளைக் கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அணியில் 1500 பெண்போராளிகளும் காணப்பட்டனர். புலிகள் அமைப்பில் 3,000 இற்கும் குறைவான போராளிகள் காணப்பட்ட அதேவேளை ஈரோஸ் அமைப்பில் 1800 போராளிகள் சேர்ந்திருந்தனர். மீதமானவர்கள் சிறிய ஆயுதக் குழுக்களில் அங்கத்தவர்களாக இருந்தனர். 1983 ஆம் ஆண்டு இனக்கொலை பல தமிழ் இளைஞர்களை சினங்கொண்டு ஆயுத அமைப்புக்களில் இணைய உந்தித் தள்ளியிருந்தது. இவ்வாறு ஆரம்பத்தில் இணைந்துகொண்டவர்கள் வடக்கையும், தெற்கையும் சேர்ந்தவர்கள். தமிழ் மக்கள் மீதான படுகொலைகள், கைதுகள், சித்திரவதைகள், பலவந்தமான வெளியேற்றங்கள் ஆகியவை கிழக்கு மாகாணத்திலிருந்தும் இளைஞர்களை ஆயுத அமைப்புக்களில் இணைந்துகொள்ள உந்தியிருந்தது. தமிழ்ப் பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட அரசு முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினைப் பலப்படுத்தவே உதவின என்பதனை அரசு அன்று உணர்ந்துகொள்ளவில்லை. ஆகவே 1985 முதல் 1986 வரை தனது பாணியில் படுகொலைகள், கைதுகள், சித்திரவதைகள், பலவந்தமான வெளியேற்றங்கள் என்று பல்வேறு கொடூரங்களைத் தமிழ் மக்கள் மீது அது கட்டவிழ்த்து வந்தது.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
தமிழ்த்தேசியத்தை வேரறுக்க, இலங்கையராக வாழ்வோம், அடையாளம் துறப்போம் என்று இங்கு தொடர்ச்சியாக கூப்பாடு போட்டுவரும் ஒருவர் குறித்து நீங்கள் இவ்வளவு தூரத்திற்கு வருந்துவது ஏனோ? அவரின் நோக்கம் இங்கு எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்ததுதானே? விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் சரியென்று நினைப்பதைத் தொடர்ந்து எழுதுங்கள், எவரினதும் அனுமதியும், அனுசரணையும் உங்களுக்குத் தேவையில்லை.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
மறியாடொண்டு வேண்டப்போறன், அது குட்டிபோட்டு (அதுவும் கிடாய்க்குட்டியாய்ப் போடுமெண்டு நினைக்கிறன்), அது வளந்து அறுக்கிற நேரம் வரேக்கை, அவசரப்படாமல் ஆட்டை முழுக்க அறுத்துப் போட்டு ஆறுதலாய் "அதை" அறுக்கலாம் எண்டு நினைக்கிறன், இதில என்ன பிழை? 76 வருசம் காத்திருக்கையில்லையே, இன்னொரு 5 வருஷம் காக்கிறதில குடி மூழ்கிப் போகாது எண்டுறன்.
-
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர
அப்ப தமிழரு கேட்கிற தீர்வைத் தரப்போறதில்லை எண்டு ஒரு தமிழ் பேசும் ஆளை வைத்தே அநுர சொல்லிப்போட்டார் எண்டு நினைக்கிறன். தமிழ்ச்சனம் 1987 இல வேண்டாம் எண்டு தூக்கியெறிஞ்ச அதே 13 ஆம் திருத்தத்தை அடிப்படையா வைச்சாவது ஏதாவது தீர்வு வருமா என்று பார்த்தால், "அந்தக் கதையே வேண்டாம், ஆனால் தமிழ் மக்கள் விரும்புகிற தீர்வை சிங்கள மக்களின்ர ஆதரவோடு" தருவாராம். ஒரே குழப்பமாக் கிடக்கு. 13 ஐத் தர ஏலாது ஏனெண்டால் அது நாட்டைப் பிரிக்கிறதாப் போகும், தமிழருக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கிறதாப் போகும் எண்டதுதான் உவையின்ர ஒரே நிலை. ஆனால் 13 இலேயே ஒண்டுமில்லை எண்டு தமிழ்ச் சனம் கைய்யை விரிச்சிருக்கிற நிலையில, அதையே தரமாட்டம், சிங்களச் சனம் ஓமெண்டு குடுக்கிறதைத்தான் தருவம் எண்டால், அப்படியொரு தீர்வு இருக்கிறதா என்ன? 13 ஐ விடக் குறைஞ்ச, தமிழ்ச்சனம் விரும்புகிற, சிங்களச்சனம் ஓமெண்டு அனுமதியளிக்கிற தீர்வு என்னவெண்டு இங்கை இருக்கிற அநுர பிரிகேட் தளபதிகள் தங்களின்ர தலைவரிட்டைக் கேட்டுச் சொன்னால் எங்களுக்கு விளங்கிக்கொள்ள வசதியாய் இருக்கும் எண்டுறது என்ர தாழ்மையான அபிப்பிராயம். என்ன நான் சொல்லுறது?
-
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர
இப்பிடியே இலவு பழுக்கும் எண்டு பாத்திருந்த கிளிபோலவும், காளை மாட்டில பால்கறக்கக் காத்திருந்த சோணகிரிகள் போலவும் 76 வருடங்களைக் காத்துக் காத்தே கடந்துவிட்டோம். கண்ணைமூடிக்கொண்டு காலில் விழுந்து வணங்கமுன் சிந்தியுங்கள் எண்டு சொன்னால் எங்கே கேட்கிறார்கள்?
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
தமிழர்கள் தமக்கு நடந்த அனைத்தையும் மறந்து, மன்னித்து, சிங்களவர்களுடன் சேர்ந்து வாழவேண்டும், பழைய விடயங்களைத் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருக்காது இலங்கையராக முன்னேறவேண்டும் என்று கோரிவரும் தமிழ்த் தேசியத்தை தொடர்ச்சியாக எதிர்த்துவரும் "தீவைக் காதலிக்கும்" ஒருவரும், தமிழரசுக் கட்சியின் பிரமுகரை ஆதரிக்க வேண்டும் இதுவரை பேசிவந்து திடீரென்று அநுரவின் பக்தனாக மாறியவரும், கூடவே இதுவரை காலமும் தமிழ்த்தேசியத்தை ஆதரித்து இன்று அநுரவிற்காக காவடி தூக்கும் முன்னாள் தேசியவாதிகளும் கட்டாயம் இக்காணொளியைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு இது கசப்பாக இருக்கலாம் என்கிற முன்னெச்சரிக்கையோடு இணைக்கிறேன். தமிழ்த் தேசியத்தை இப்போதும் நேசிக்கும் ஏனையவர்களை இக்காணொளியை விரும்புவார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐய்யமில்லை.