லொக்டவுண்
வதனிக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த நந்தனை திரும்பிப் பார்த்தாள் நல்ல தூக்கம். இன்று சனிக்கிழமை வேலையில்லாததால் அசந்து தூங்கிக்கொண்டிருந்தான்.
இப்பொழுதெல்லாம் இந்த லொக்டவுணால் வீட்டில் இருந்தேதான் வேலை செய்கிறார்கள். வீட்டில் வேலை செய்வதென்பது இலேசான காரியமில்லை. வேலையிடத்துக்கு போனோமா வேலை செய்தோமா நாலு நண்பர்களுடன் அரட்டை அடித்து வெளி உலகம் பார்த்து கடைக்கு போய் மாலையில் பிள்ளைகளுடன் விளையாடி என்று இருந்த காலம் மாறி இப்பொழுதெல்லாம் வீடே கதி என்று வீட்டின் சுவர்களுக்குள்ளேயே முட்டி மோதி பேசிக்கொண்டு சீ இதென்ன வாழ்க்கை? அடிக்கடி மனதுக்குள் அங்கலாய்ப்;பு ஏற்பட்டாலும் இதுவும் கடந்து போகும் என்று மனதைத் தேற்றிக்கொண்டனர்.
வதனியும் வீட்டில் வேலை செய்தாலும் இப்பவெல்லாம் விதவிதமாகச் சமையல் செய்வதும் பழைய நண்பிகளையெல்லாம் தேடிப்பிடித்து கதைப்பதுமாக ஒன்லைன் வட்ஸ்அப் என்று ஒருமாதிரி பொழுதைப் போக்கிக் கொண்டாள்.
இந்த வருடம் நந்தனின் 50வது பிறந்த நாளை பெரிய மண்டபம் எடுத்து விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்ற அவளது கற்பனைகளெல்லாம் கனவாகிப் போகுமென்று யார் நினைத்தார்கள்.
இத்தனை வருடமாக அவர்களது வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள் வந்தபோதும் இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் படித்து முடிக்கும்வரை தம் பொறுப்புக்களை உணர்ந்து தம் பிள்ளைகளை வளர்ப்பதிலேயே அவர்களது இத்தனை ஆண்டுகளும் கழிந்து விட்டன.
நேற்று நந்தனுக்கு 50வது பிறந்தநாள். நாள் முழுவதும் தொலைபேசியிலும் வட்ஸ்சப்புக்களிலுமாக வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருந்தன. வதனியும் தன் பங்கிற்கு கேக் இனிப்புவகைகள் பிரியாணி என்று செய்து அசத்தியிருந்தாள்.
இருந்தாலும் வதனி நந்தனுக்குத் தெரியாமல் பிள்ளைகளுடன் சேர்ந்து நந்தனின் பிறந்தநாளை வீட்டிலாவது பெரிதாகக் கொண்டாட வேண்டுமென்று திட்டமிட்டாள்;.
அந்த திட்டத்திற்கு ஆப்பு வைப்பதுபோல் “வீட்டிற்குள் இருங்கள் வெளியே திரியாதீர்கள்” என்று மேஜர் முதல் பிரதமமந்திரி வரை தொலைக் காட்சிகளில் அறிவித்து மக்களின் நலனைப் பாதுகாக்கும்படி அறிவுறுத்தியது மட்டுமன்றி வீட்டிலும் 5 பேருக்கு மேல் ஒன்றுகூடுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் வதனிக்கோ எப்படியாவது சேப்பிரைஸ் பாட்டி வைத்து நந்தனை பிரமிக்க வைக்க வேண்டுமென மனம் குறுகுறுத்துக் கொண்டிருந்தது.
புது வீடு வாங்கியபின் வீட்டில் எந்த கொண்டாட்டமும் வைக்க அவளுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
உறவுகளைச் சந்தித்தும் பல மாதங்களாகி விட்டன. எனவே நெருங்கிய உறவுகளை நந்தனுக்குத் தெரியாமல் ரகசியமாக சனிக்கிழமை வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தாள்.
அத்துடன் நந்தனை மகிழ்விப்பதற்காக அவனது நண்பர்கள் தனது நெருங்கிய நண்பிகள் என்று ஒவ்வொன்றாக சொல்லி 20-25 பேர் ஆகி விட்டது.
சனிக்கிழமை மதியம் வரை வீட்டில் எந்த மாறுதலும் தெரியாதபடி ரகசியமாகவே அனைத்து ஆயத்தங்களும் நடந்தன.
வீடும் என்றும் போல் அமைதியாக இருந்தது.
மத்தியானத்துக்கு மேல் ஒரு நண்பன் மூலம் நந்தனை வெளியே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தபடி அனைத்து திட்டங்களும் சரியாக நடைபெற்றுக்கொண்டிருக்கவும் வதனி பூரண திருப்தியுடன் மளமளவென்று காரியங்களை மேற்கொண்டாள்.
அவசர அவசரமாக வீட்டை அலங்கரித்து ஓடர் பண்ணியிருந்த கேக்கை மேசையில் வைத்து அலங்கரித்து மற்றைய ஒழுங்குகளையெல்லாம் சரிவர செய்து முடித்தாள்.
திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றன. மத்தியானத்துக்குமேல் ஒரு நண்பனின் மூலம் நந்தனை வெளியே வெளியே அழைத்துச் செல்லவும் திட்டமிட்டிருந்தாள்; நீண்ட நாட்களின் பின் சந்தித்த நெருங்கிய நண்பனுடன் தத்தமது 50 வயது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே சுற்றியதில் நேரம் போனது தெரியவில்லை.
மாலை மங்கத் தொடங்கியதும் வீட்டிற்கு போகலாம் என நந்தன் கேட்கவும் சரி என்ற நண்பனும் வதனிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு நந்தனுடன் வீட்டிற்கு வந்தான்.
வீடு அமைதியாகத்தான் இருந்தது. தன்னுடன் வந்த நண்பனை வீட்டிற்குள் அழைப்பதா விடுவதா என நந்தன் சிந்தித்த மறுகணம் நந்தன் தன்னை பின் தொடர்வதைக் கவனித்து “ வா வா வந்து ரீ குடிச்சிற்றுப் போகலாம்” என அழைத்தான். வீட்டின் கதவைத் திறக்கவும் “சேப்பிரைஸ்” என்று அனைவரும் கூக்குரலுடன் கைதட்டி நந்தனை வரவேற்கவும் நந்தன் திகைப்பில் திக்குமுக்காடிப் போனான்.
என்ன இது? லொக்டவுண் காலத்தில் இப்படிச் செய்கிறார்களே என மனம் அங்கலாய்த்தாலும் நீண்ட நாட்களாகச் சந்திக்காத நண்பர்களையும் உறவுகளையும் சந்தித்த சந்தோசத்தில் மனம் குதூகலமாகி மகிழ்ச்சியில் மூழ்கிப் போனான்.
வீட்டிற்குள் கலகலப்பும் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது.
எங்கட ஆக்களின்ர பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் சும்மாவா? ஏல்லோரும் வண்ண வண்ண உடைகளுடனும் விதவிதமான அலஙகாரங்களுடனும் வந்து இறங்கி வீட்டிற்குள் செல்வதையும் வீட்டிற்குள் நடந்த
குதூகலத்தையும் அவதானித்த யாரோ காவல் துறைக்கு செய்தி அனுப்பி விட்டார்களோ அல்லது தற்செயலாக அந்த வீதியில் பயணித்த காவல் துறையினருக்கு மூக்கில் வியர்த்து விட்டதோ யாரறிவார்?
மக்களின் நலனுக்காகத்தானே சட்டங்களும் ஒழுங்குகளும் என்று சிந்திக்காமல் மனம் போல திட்டமிட்ட வதனி கதவைத் தட்டிய காவல் துறையினரைக் கண்டதும் திகைத்து விட்டாள்.
வீதியில் நிறைய வாகனங்களைக் கண்ட காவல் துறையினர் சந்தேகத்தில் ஒவ்வொரு வீடாக தட்டி சோதித்ததில் இவர்கள் வீட்டில் அதிகம் பேர் நின்றது கையும் மெய்யுமாக பிடிபட்டு விட்டது.
என்ன செய்வது என்ற தெரியாமல் சிலர் மேல் அறைகளுக்குள்ளும், சிலர் நிலக்கீழ் அறைகளுக்குள்ளும் ஓடி ஒழிந்தனர்.
இருந்தும் யாராலும் காவல் துறையினரை ஏமாற்ற முடியவில்லை.
அனைவருக்கும் குற்றப் பணமாக ஆளுக்கு ஆயிரம் டொலர் ரிக்கற் எழுதி கொடுக்கப்பட்டது.
உறவுகள் நட்புக்கள் அனைவரும் திகைத்து என்ன செய்வது என்று அறியாது வருத்தத்துடனும் ஏமாற்றத்தடனும் நிற்க வதனியோ பலமுறை காவல் துறையினரிடம் மன்னிப்புக் கேட்டும் அவர்கள் எதற்கும் செவிசாய்க்கவில்லை.
தமது கடமையில் கண்ணாயிருந்த காவல்துறையினர் இறுதியில் நந்தனின் கையிலும் பத்தாயிரம் டொலருக்கான குற்றப்பணத்திற்கான ரிக்கற்றை திணிக்கவும்; நந்தன் வெலவெலத்துப் போனான்.
காவல் துறையினர் தமது கடமையை முடித்து விட்டு வெளியே போய் நின்று அனைவரையும் வெளியேறும்படி பணித்து விட்டு தம் வாகனத்தினுள் காத்திருந்தனர்.
நந்தன் வதனியை திரும்பிப் பார்த்த பார்வையில் வதனி எரிந்து போகாத குறை.
வந்திருந்த அனைவரும் தலையைத் தொங்கப் போட்டபடி வெளியேற வதனியோ கையைப் பிசைந்தபடி கண்கலங்க பார்த்துக்கொண்டு நின்றாள். உறவுகள் சிலர் “அவள் வதனிதான் கூப்பிட்டாள் என்றால் எங்களுக்கு எங்கே அறிவு போனது” என்று தம்மை நோவது போல வதனியை திட்டியபடி வெளியேறினர்.
ஆசைஆசையாக பார்த்துப் பார்த்து செய்த அலங்காரங்கள் கேக் இனிப்பு பலகாரங்கள் உணவுகள் அனைத்தும் தேடுவாரற்று கிடந்தது.
இத்தனை ஆண்டு வாழ்வில் இதுவரை நந்தனின் இந்தமாதிரியான கோபத்தைப் பார்த்தறியாத வதனிகூட ஒருகணம் திண்டாடிப் போனாள்.
மெதுவாக பக்கத்தில் போய்” என்ன நந்தன் நான் உங்கட பிறந்தநாளை வடிவாகக் கொண்டாட வேணுமெண்டுதானே இப்படிச் செய்தனான்” என்ற ஆரம்பிக்கவும் நந்தன் கட்டுக்கடங்காத கோபத்துடன் “உன்னை நான் கேட்டனானா பிறந்தநாள் கொண்டாடச் சொல்லி அறிவு கெட்ட ஜென்மம்”என்று ஆவேசத்துடன் அவளைப் பிடித்து தள்ளி விட்டான்.
இந்த தாக்குதலை எதிர் பார்க்காத வதனி நிலை தடுமாறி பக்கத்தில் இருந்த மேசையைப் பிடிக்க முயற்சித்தும் பிடி நழுவிப் போக அவளுக்கிருந்த மனக் குழப்பமும் சோர்வும் அவளை பெலவீனப்படுத்த தட்டுத் தடுமாறி அருகிலிருந்த சுவரில் மோதி கீழே விழுந்து விட்டாள்.
சத்தம் கேட்டு பிள்ளைகள் ஓடி வந்தனர். நந்தனும் ஒருகணம் திகைத்தாலும் ஆத்திரம் அடங்காமல் விறைப்புடன் நின்றான். வதனியின் தலையிலிருந்து இரத்தம் கொட்டியதை கண்ட பின்தான் நந்தனுக்கு நிலமையின் தீவிரம் மனதை உறுத்தியது.
உடனடியாக அவளைத் தூக்கி செற்றியில் படுக்கவைத்துவிட்டு அம்புலன்சுக்கு அழைத்தனர்.
இந்த கொரோனா காலத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகளும் அதிக வேலைப் பழுவுடன் இருப்பதால் சிறிது தாமதித்தே உதவி கிடைத்தது.
வதனியை அம்புலன்சில் ஏற்ற, நந்தனை கைது செய்து பொலிஸ் விசாரணைக்காக கொண்டு சென்றனர்.
நந்தன் இதை எதிர்பார்க்கவில்லை.
நந்தன் திட்டமிட்டு எதுவும் செய்யா விட்டாலும் குற்றவாளியாகத்தான் பார்க்கப்பட்டான். நந்தன் பயத்திலும் திகைப்பிலும் உறைந்து போனான்.
தன் பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்டு வதனிக்கு இப்படி ஆகிவிட்டதே என்று நினைக்க வேதனையில் துவண்டு போனான்.
நிறைய இரத்தம் இழந்து விட்டதால் வதனியும் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள்.
நந்தனையும் விசாரணை முடியும்வரை பொலிஸ் காவலில் வைத்து விட்டார்கள்.
பிள்ளைகளோ என்ன செய்வதென்று தெரியாத நிலையில் .
இதில் யாரை நோவது?
கணவனது பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்ட வதனியையா?
ஆத்திரப்பட்ட நந்தனையா?
அல்லது அவனது 50வது பிறந்த நாளையா?
லோக்டவுணையா?
எதை?