Everything posted by ரசோதரன்
-
சுய அறிமுகம் பற்றி
வணக்கம் நண்பர் arjaywu. உங்கள் வரவு நல்வரவாகுக. உங்களின் களப்பெயரை தமிழில் எவ்வாறு எழுதுவது? நீங்கள் தமிழகத்தில் இருந்து இணைகின்றீர்களா?
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
ஒரு பதினைந்து அல்லது இருபது வருடங்களின் முன் சுமதி என்னும் பெயரில் அல்லது கறுப்பி என்னும் பெயரில் (என்று தான் ஞாபகம்) அவர் பழைய திண்ணை இணைய இதழ்கள் உட்பட பல இடங்களில் சிறுகதைகளை எழுதிக் கொண்டிருந்தார். நான் முன்னரோ, பின்னரோ தமிழில் அப்படியான கதைகளை எங்கும் காணவில்லை. அவருடைய பல கதைகளில் வரும் பெண்ணின் பார்வைகள் என்னை நிலைகுலைய வைத்தன. இந்த சம்பவம் போன்றே ஒரு கதையும் அவர் எழுதியிருந்தார். கதைக்களமாக கனடா இருந்தது. அந்தக் கதையில் இறுதியில் அந்தப் பெண் இறந்து போகின்றார். தற்கொலை என்று சொல்லுகின்றார்கள். இரு ஆண்களும் இறுதி ஊர்வலத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். அந்தக் கதையில் வரும் அந்தப் பெண்ணுக்காக இதை எழுதும் போதும் கண்கள் கலங்குகின்றன. அரவிந்தனின் 'சிதம்பரம்' படத்தை இளைய வயதில் ஒரு தடவையும், பின்னர் சில வருடங்கள் முன் ஒரு தடவையும் பார்த்தேன். இதே போன்ற நிகழ்வுகள். ஒரு ஆண் அவ்ராகவே இறந்து போகின்றார். அடுத்தவர் சித்தம் இழந்து அலைகின்றார். உயிர் தப்பிய பெண் வழியற்று கோவில் ஒன்றின் வாசலில் வாழுகின்றார். எங்களின் சமூகத்திலும், இன்னும் பல சமூகங்களிலும் நான் உட்பட ஆண்களின் புரிதல்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவை என்றே எனக்குத் தோன்றுகின்றது. விலகிப் போய்க் கொண்டே இருக்கலாம். இதில் என்ன தன்மானம், தற்பெருமை, வீரம் குறைந்து போகின்றது.
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
அண்ணா, அறுதியாக பொய்கள் என்றோ அல்லது உண்மைகள் என்றோ எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விதிகளாக நிறுவ முடியாத நம்பிக்கைகள் பல இங்கே காலம் காலமாக இருக்கின்றன. உதாரணமாக, ஒரு நடுப்புள்ளித் தேற்றம் போன்றோ அல்லது நியூட்டனின் வகை பௌதீக விதிகள் போன்றோ இந்த நம்பிக்கைகளை நிறுவமுடியாது. இப்படியான நம்பிக்கைகளில் ஒன்று சோதிடம். கடவுள் நம்பிக்கையும் அவ்வாறானதே. இன்னும் ஏராளமான அமானுஷ்ய விடயங்களும் இப்படியே இங்கு நிலைத்து நின்று கொண்டிருக்கின்றன. இப்படியான ஒரு விடயத்தை ஒரு ஆசிரியர் எப்படி நிறுவினார் என்று ஒரு வேடிக்கையான சம்பவம் இருக்கின்றது. நான் சிறு வயதில் இருக்கும் போது ஊரில் நடந்தது. அடுத்த பதிவில் அதை எழுதுகின்றேன். பொதுவாகவே இயற்கையில் நடக்கும் ஏராளமான நிகழ்வுகளின் தொகுப்பு ஒரு normal distribution ஆகவே இருக்கின்றது. முற்றிலும் எழுந்தமானமாக நூறு நூறு ஆட்களாக எடுத்து அவர்களின் பாடல் பாடும் திறமையையோ அல்லது பந்தடிக்கும் திறமையையோ கணித்தோம் என்றால், ஆச்சரியமேயில்லாமல் அவை கிட்டத்தட்ட ஒரு முடிவையே மீண்டும் மீண்டும் தரும். ஐந்து பேர்கள் நன்றாக பந்தை அடிப்பார்கள். ஐந்து பேர்களுக்கு அது சரியே வராது. ஓரளவு விளையாடக் கூடியவர்கள் என்று நடுவில் ஒரு ஐம்பது பேர்கள் இருப்பார்கள். இப்படியே தான் ஒவ்வொரு நிகழ்வின் ஒவ்வொரு தொகுதியும் இருக்கும். இதற்கும் நாள் - நட்சத்திரம் - கைரேகை போன்ற பிறப்பால் வரும் அடையாளங்கள் எவற்றுக்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. இதையே தான் நர்லிகர் அவர்களும் இன்னொரு விதமாகச் சொல்லி, அதை தரவுகளின் அடிப்படையில் நிரூபித்தும் இருக்கின்றார். என்னுடைய அனுபவங்களும், எண்ணமும் கூட இதுவேயாகவே எப்போதும் இருந்து வருகின்றது. இதில் மிகவும் ஆபத்தான ஒரு நிலையும் இருக்கின்றது. நாங்கள் பிறக்கும் கணமும், பிறப்பில் கிடைக்கும் அடையாளங்களுமே பலவற்றை ஏற்கனவே தீர்மானித்து விடுகின்றது என்றால், ஸ்மிருதிகளும், வர்ணாசிரமக் கோட்பாடுகளும், சாதிய பாகுபாடுகளும் கூட சரியென்று ஆகிவிடும் அல்லவா. இந்தப் பாகுபாடுகளை, தீண்டாமைகளை கைக்கொள்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்களின் ஆதராமே ஒவ்வொருவரின் பிறப்பே அவரவர் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது என்பதே. தாழ்த்தப்பட்ட ஒரு வீட்டில் பிறந்தால், அதுவே தலைவிதி அல்லது கர்மவினைப் பயன் என்றும், அதை இந்தப் பிறவியில் அப்படியே வாழ்ந்து கடந்து விட வேண்டும் என்றல்லவா அவர்கள் சொல்கின்றார்கள். இதை ஏற்றுக் கொள்ளாமல், தீண்டாமைகளை எதிர்க்கும் நாங்கள், பிறப்பால் மட்டுமே கிடைக்கும் இன்னொரு தலைவிதியை மட்டும் சரியென்று எப்படி ஏற்றுக் கொள்ளலாம்.... அண்ணா, உலகத்தை நோக்கிய என்னுடைய ஒரு கருத்தே இது. உங்களையோ அல்லது வேறு எவரையுமோ தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கும் பார்வையில் இதை நான் எழுதவில்லை.
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
இப்படிச் சொல்வதால் இது கிரகோரியன் நாட்காட்டியின் படியே செயல்படுகின்றது என்று ஒரு அர்த்தமும் வருகின்றதல்லவா, அண்ணா.............. இதை நாங்கள் ஆங்கில கலண்டர் என்றும் சொல்லுகின்றோம். அப்படியாயின் தமிழ் நாட்காட்டி, இஸ்லாமிய நாட்காட்டி, ஐரோப்பாவில் கிரகோரியனுக்கு முன்னிருந்த ஜீலியன் நாட்காட்டி, இன்னும் உலகெங்கும் இருக்கும் ஆயிரம் நாட்காட்டிகள் போன்றவற்றுடன் ஒரு தொடர்பும் மனிதர்களுக்கு இல்லையா............. அரசியலில் சிறப்பாக செயல்படமாட்டார்கள் என்ற குணாம்சம் ஏதாவது ஒரு எண்ணுக்கு, சில எண்களுக்கு இருக்கின்றதா................ தமிழ்நாடு மற்றும் இலங்கையில் அரசியலில் உருப்படவே போவதில்லை என்னும் நிலையிலும் சிலர் அரசியலில் இருக்கின்றார்கள்............. அவர்களின் எண்கள் என்னவாக இருக்கும் என்ற ஒரு ஆவல்தான்...................🤣. ராமதுரை அவர்கள் சொன்னது போலவே சோதிடத்தை நம்புவதும், நம்பாததும் அவரவர் தனிப்பட்ட தெரிவு/விருப்பம் என்று போவது தான் சிறப்பு போல...........👍.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சாதாரணமாக நன்றி என்று சொல்லிவிட்டு கடந்து போக முடியாதுள்ளது, @கிருபன் . எவ்வளவு ஒரு பெரிய காரியத்தை தனி ஆளாக செய்துள்ளீர்கள்................🙏🙏. சக போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். @நந்தன் எப்பவோ எங்களை எல்லாம் முந்திக் கொண்டு போய்விட்டார். அவர் திரும்பிப் பார்க்கவேயில்லை. அதிகமான நாட்கள் இரண்டாம் இடத்தில் இருந்தவர் @புலவர் என்றே நினைக்கின்றேன்...............👍. அடுத்த போட்டி எப்ப....................❤️.
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
🤣............ பல வருடங்களின் முன் இங்கு அமெரிக்காவில் ஒரு நண்பனின் வீட்டில் அறுவைச் சிகிச்சை மூலம் அவர்களது குழந்தையின் பிரசவம் நடைபெற வேண்டி வந்தால், அது அடுத்த 17ம் திகதி என்று மருத்துவரால் ஒரு நாள் குறிப்பிடப்பட்டது. அவர்கள் 17 வேண்டவே வேண்டாம் என்றும், 18ம் திகதி என்று மாற்ற முடியுமா என்றும் கேட்டார்கள். அந்தப் பிள்ளை வளர்ந்து இன்று அமோகமாக இருக்கின்றது. எனக்கும் ஒரு மகள் போலவே. ஆனால் பிறந்த திகதி 17, 18, 19,........ இதில் எது என்று எனக்கு ஞாபகமில்லை. பெற்றோர்களினதும், எங்கள் எல்லோரினதும் அன்புடனும், ஆசீர்வாதத்துடனும் மகள் என்றும் நல்லாவே இருப்பார். எம்ஜிஆர் 17ம் திகதி பிறக்காமல், 18ம் திகதி பிறந்திருந்தால் இன்னும் அமோகமாக வாழ்ந்து முடித்திருப்பாரோ.................😜. தமிழில் மிக இலகுவான, தரமான அறிவியல் கட்டுரைகளை எழுதியவர் என்றால் அது திரு. என். ராமதுரை அவர்கள். 2018ம் ஆண்டில் மறைந்தார். 'தினமணிசுடர்' ஆசிரியராக இருந்தார். அவருடைய இணைய தளம் இன்றும் இயங்குகின்றது: https://www.ariviyal.in/ வானவியல் சம்பந்தமாகவும் பல எளிமையான கட்டுரைகள் அவருடைய தளத்தில் இருக்கின்றது. உதாரணமாக சனிப்பெயர்ச்சி பற்றிய ஒரு கட்டுரை. ராமதுரை அவர்கள் மிகவும் தன்மையான ஒரு மனிதர் போல. அவர் தடாலடியாக எதையும் நிராகரிக்கவில்லை, ஆனால் சோதிடம் ஒரு அறிவியல் அல்ல. அதை நம்புவதும், நம்பாததும் உங்களின் தனிப்பட்ட இஷ்டம் என்று கேள்வி - பதில் பகுதிகளில் பல தடவைகள் சொல்லியிருக்கின்றார். அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் முன்னரே எனக்கு இவற்றில் நம்பிக்கை இருக்கவில்லை. பின்னர் சுத்தமாகவே இவை மனித மனங்களின் அடியில் என்றும் தங்கியிருக்கும் அச்சங்களின் ஒரு வகையான வெளிப்பாடுகள் என்று தான் தோன்றுகின்றது. திருக்கோணேஸ்வரர் கோவிலின் கீழே நின்று முகம் பார்த்து பலன் சொல்பவர்களைப் பற்றிய என் அனுபவத்தை கடந்த வருடம் இலங்கை போய் வந்து இங்கு களத்தில் எழுதியிருந்தேன். மனிதர்களுக்கு என்றே சில பொதுவான குணங்கள் இருக்கின்றன போல. அவற்றை இந்த சோதிடர்கள், ஒரு அனுபவமுள்ள விற்பனைப் பிரதிநிதி போல, நம்பத்தகுந்த வகைகளில் சொல்லுகின்றார்கள், எழுதுகின்றார்கள் போல.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
எங்களின் போராட்டத்திற்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு மட்டுமே போதுமானது, அண்ணா. வேறு எந்த நாடுகளின் ஆதரவும் கிடைக்காமல் இருந்திருந்தால் கூட நாங்கள் சமாளித்திருப்போம். இன்று கூட அது தான் நிலை. ஆனால் இந்திய மத்திய அரசு என்றும் அப்படியான ஒரு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் என்று நான் நம்பவில்லை. எங்களின் நிலை மட்டும் இல்லை, காசாவில் பாலஸ்தீன மக்களின் நிலையைப் பாருங்கள், அண்ணா. நேற்று நிவாரணம் பெற வரிசையில் நின்ற அந்த மக்கள் வரிசையை மீறி விட்டார்கள் என்று சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதற்கு முதல் நாளும் அந்த மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அங்கு மருத்துவமனை வாசலிலேயே அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றார்கள். உலகமும், அராபியர்களும் பாலஸ்தீனியர்களுக்கு உதவி செய்து இதைத் தடுக்க முடியாதா? மணிப்பூரிலும் இதே நிலை தான். ஒரு மொழி, ஒரு மதம், ஒரு கலாச்சாரம் என்று இருக்கும் பெரும் தேசங்களில் எல்லாம் இந்தக் கொடுமைகள் தினமும் நடந்து கொண்டேயிருக்கின்றன. வெகு சில செய்திகளும், நிகழ்வுகளுமே வெளியே தெரியவருகின்றன. ஆதிக்கங்களின் அடக்குமுறைகளுக்குள் எத்தனையோ மக்கள் திரள்கள் தங்களின் அடையாளங்களை இழந்து வாழ்ந்து மடிகின்றார்கள். ஆனாலும் இவற்றில் சில மக்கள் திரள்கள் பெரும் இழப்புகள் தங்களுக்கு வரும் என்று தெரிந்தும் முடிந்தவரை ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடுகின்றார்கள். உலகம் ஒரு முள்ளிவாய்க்காலையோ அல்லது ஒரு காசாவையோ மட்டும் கண்டுவிடவில்லை. இவை திரும்பத் திரும்ப நடந்து கொண்டேயிருக்கின்றன. உக்ரேனுக்கு தற்காலிகமாகவேனும் உதவிகள் கிடைப்பது அந்த உக்ரேனிய மக்களுக்கு கிடைத்த ஒரு கொடை. என்ன தான் உதவிகள் கிடைத்தாலும் களத்தில் போராடுவதும், இழப்பதும் அந்த மக்கள் மட்டும் தானே, உதவும் உலகம் எதையும் இழக்கவில்லை. கொடுத்த உதவிக்கு கணக்கு எழுதி, அவர்களின் வளங்களையல்லவா ஈடாகக் கேட்கின்றது இந்த உலகம். இந்த உலகில் எந்த ஒடுக்கப்படும் மக்கள் திரளுக்கும் ஒரு தார்மீக ஆதரவு கூட காட்ட முடியாவிட்டால், நான் கடந்து வந்த பாதைதான் என்ன................. இந்த தாக்குதல் நடப்பதற்கு முதல் நாளும் ரஷ்யா உக்ரேன் குடியிருப்புகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அப்பாவி உக்ரேனிய மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் உக்ரேன் தெரிந்தெடுத்த ரஷ்ய இராணுவ விமான இலக்குகள் மீதே தனது தாக்குதலை நடத்தியது. இப்போது 'உக்ரேன் செய்தது ஒரு பயங்கரவாதச் செயல்................' என்று சொல்லிக் கொண்டிருக்கின்றது ரஷ்யா. இப்படித்தானே நாங்களும் இலங்கை அரசால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டோம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தட்டித் தூக்கிட்டமில்ல...............
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
ஒவ்வொரு ட்ரோனும் சில நூறு ஈரோ செலவில் செய்யப்பட்டவை. மொத்தமாக 117 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று உக்ரேன் அதிகாரிகள் சொல்லியிருக்கின்றனர். இந்தச் சிறிய ட்ரோன்கள் ஒரு வீட்டின் அடுப்படி வரை போகுமே............ இதில் ரஷ்யர்கள் அவர்களின் விமானங்களை எங்கே நிற்பாட்டி இருந்தார்கள், ஏன் அப்படி நிற்பாட்டி இருந்தார்கள் என்பது தான் பிரச்சனையா........... ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு எதிராக உக்ரேனிய மக்களும், அரசும் தொடர்ந்து காட்டிக் கொண்டிருக்கும் எதிர்ப்பு மிகவும் ஆச்சரியமாக, பிரமிப்பாக இருக்கின்றது. அதுவும் அமெரிக்காவின் சமீபத்திய மிகத் தளம்பலான ஒரு நிலைப்பாட்டின் பின்னும் கூட. ஒரு எல்லை நாடாக இருந்து கொண்டே ஒரு பெரிய வல்லரசுடன் இப்படி மோதுவது என்பது ரஷ்யாவிற்கு மட்டும் இல்லை, அமெரிக்காவிற்கும் ஒரு பாடமே. உக்ரேன் ஒரு வருடத்தில் இப்படியான ஐந்து மில்லியன் ட்ரோன்களை தயாரிக்கும் வல்லமை தங்களுக்கு இருக்கின்றது என்று சொல்லியிருக்கின்றது. உலகமே பெரிய ஒரு சிக்கலில் மாட்டுப்பட்டிருக்கின்றது. எந்த நாட்டிலும், எந்த தளமும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது போல.
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
நர்லிகர் அவர்கள் அவருடைய ஆராய்ச்சிகளின் நடுவே சாஸ்திரங்கள், சோதிடங்களை பொய்யென நிறுவும் ஒரு பணியையும் செய்திருப்பது நல்ல ஒரு விடயம். இந்த விடயங்களில் சமூகங்களில் பெரிதாக ஒரு மாற்றத்தையும் உடனடியாக எதிர்பார்க்க முடியாது, ஆனாலும் அந்த நாட்களில் கேம்பிரிட்ஜ் பி.எச்டி என்பதற்கு மதிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதனால் இவர் என்ன சொல்லுகின்றார் என்று சிலராவது காது கொடுத்து கேட்டிருப்பார்கள். சில பில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில், சில பில்லியன் ஆண்டுகளின் முன் நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறியிருக்க, அங்கிருந்து வந்த ஒளித் துணிக்கைகளை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் இன்று பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த தூரம் ,காலம், இடையில் இருக்கும்பொருட்கள், வெளி, நிகழ்வுகள் இவை எல்லாமே மனதால் அளந்து கூட பார்க்க முடியாத ஒரு பிரமாண்டமாக இருக்கின்றது. இந்த மனிதர்கள், பூமி, நாங்கள் உருவாக்கி வைத்திருப்பவை இப்படி எல்லாமே அற்பத்திலும் அற்பமாக தோன்றும் சில கணங்கள் இவை. இந்தக் கணங்களில் எங்களுக்கு ஒரு விதியின் பாதை இருக்கின்றது என்ற நம்பிக்கை ஒரு நகைச்சுவையாகவும் இருக்கின்றது. ஆனாலும், இந்த எண்ணம் வராத மற்றைய நேரங்களில், வாழ்க்கைகள் ஒரு மயக்கத்திலேயே போய்க் கொண்டிருக்கின்றன. இளைய தலைமுறை முந்டைய தலைமுறையை விட அதிகளவில் இந்த சாத்திர சோதிட விடயங்களில் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள் என்ற கூற்று/முடிவு சரியென்று தோன்றவில்லை. ஒவ்வொரு புதிய தலைமுறையும் முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடும் போது இந்த விடயங்களில் குறைவாகவே நம்பிக்கை கொள்ளுவார்கள் என்று தான் தோன்றுகின்றது. ஆனால் இன்று விதம் விதமான ஊடகங்கள் உக்கிரமாக இருக்குக்கும் ஒரு காலம். எல்லா வகையான செய்திகளுமே காட்டுத்தீ போல பரவுகின்றன. ஆகவே இது ஒரு மாயத் தோற்றமாகக்கூட இருக்கலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣............... இதுவரை கொஞ்சமாக அதர்மத்தின் பாதையில் போய் நண்டுக் குழாமாக இருந்தவர்கள் எல்லோருக்கும் திருந்துவதற்கு கிடைத்திருக்கும் கடைசி சந்தர்ப்பம் இது. எங்களில் மூன்று பேருக்காவது புள்ளிகள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்............. கிளி நண்டைத் தூக்கிக் கொண்டு போய் கறிச்சட்டிக்குள் போட்டும் விடும்..................🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஏதாவது ஒரு Antivirus software கூட காரணமாக இருக்கலாம், எப்போதும் தமிழன். அதுவே தானாக புதிதாக உங்களின் கவனத்தையும் மீறி உள்ளே இறங்கியிருக்கலாம். Please check all the running process in the task manager. முன்னர் ஒரு தடவை சுவைப்பிரியனும் இப்படிச் சொல்லியிருந்ததாக ஞாபகம். Avast தான் அதன் காரணம் என்றும் ஒரு ஞாபகம்.
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
இன்னொரு தேரர் தமிழர்கள் 'கள்ளத் தோணிகள்' என்றும் சொல்லியிருக்கின்றார். இதையே தான் பெரும்பாலான சிங்கள் மக்களும் நம்ப விரும்புகின்றார்கள். இதை வரலாறாக எழுதியும் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். வரலாறுகள் அவரவர் வசதிகளுக்கு ஏற்ப எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சித்தார்த்தரும் சைவரா................. இன்று தான் கேள்விப்படுகின்றேன். 'ஈழம் ஒரு சிவபூமி..............' என்று இப்பொழுது இடைக்கிடை சொல்லப்படுவதையே சீரணிக்க சிரமமாக இருக்கின்றது. இப்பொழுது சித்தார்த்தர் சைவர், பாகிஸ்தான் இந்துக்கள் சைவர்கள் என்று பலதும் வர ஆரம்பித்திருக்கின்றன.................
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
கமல் சொன்னதையே மோடியும் சொல்லியிருந்தால் மோடியின் கொடும்பாவியும் கர்நாடகாவில் எரிந்திருக்கும். கர்நாடக பாஜகவே மோடிக்கு எதிராக தெருவில் இறங்கியிருப்பார்கள். ஆனால் மோடியும், கமலும் சொன்னவை ஒன்றல்ல. நான் முன்னரேயே எழுதியும் இருந்தேன். தமிழின் தொன்மையையும், தொடர்ச்சியையும் எந்த ஒரு மொழியுடனும், மக்கள் திரளுடனும் ஒப்பீடுகள் இல்லாமலேயே இலகுவாக செய்யமுடியும் என்று. அதுவே சரியான ஒரு வழியும் ஆகும். மோடி இந்திய ஜனாதிபதி அல்ல, அவர் பிரதமர். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு. இவரை மோடியும், பாஜகவும் ஜனாதிபதியாக தெரிந்தது எடுத்ததே அவர்களின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசியலை ஒரு வர்ணம் தீட்டி மறைப்பதற்கே. மோடி திருக்குறள் சொல்வதும், பாரதியின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டுவது, தமிழ் தொன்மை என்று சொல்வதும் இன்னொரு அத்தகைய வர்ணமே. தீவிரமாக இந்தியை திணித்துக் கொண்டே, ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த நிதியை தமிழ் ஆராய்சிகளுக்கு வழங்கிக் கொண்டே அவர் சொல்லும் புகழாரங்கள் வெறும் வாக்கு அரசியல் என்ற புரிதல் தமிழ்நாட்டில் மிக நன்றாகவே இருக்கின்றது. குஜராத்தி மொழியுடன் ஒப்பிடும் போது இந்தி என்பது உண்மையில் ஒரு மொழியே அல்ல என்று மோடி சொல்வாரா................ இந்தி குஜராத்தியில் இருந்து வந்தது என்று சொல்வாரா....... இந்திக்கு சொந்தத்தில் எழுத்துருவே கிடையாது என்று சொல்வாரா........... ஒரு தடவை கருணாநிதி அவர்கள் தமிழ் பதினேழு இலட்சம் வருடங்களாக இருக்கின்றது என்று சொல்லியிருந்தார். வேறு எவரும் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. பதினேழு கோடி வருடங்கள் என்று சொன்னால் என்ன, முதல் மொழி என்று சொன்னால் என்ன, இன்னொரு கிரகத்திலும் பேசப்படுகின்றது என்று சொன்னால் என்ன, கன்னட மக்களோ அல்லது வேறு எந்த மக்களோ எதிர்ப்பு எதுவும் காட்டப் போவதில்லை. சிலர் வாய்விட்டு சிரிக்கக்கூடும். கருணாநிதி அவர்கள் சொன்னதைக் கேட்டு நான் சிரித்தேன். இவர்கள் எல்லாம் எங்கள் இனத்தின் பேரறிஞர்கள் என்று நினைத்த போது சிரிப்பு வெடித்துச் சிதறியது.
-
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
ஆழ்ந்த இரங்கல்கள். மிகவும் திறைமையான ஒரு நடிகர். ஆரம்ப ரஜனி - கமல் வெள்ளத்தில் மூழ்கிப் போனவர்களில் ஒருவர்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒற்றுமையே பலம்............. நாளைக்கு குஜராத் வெல்லுது............. நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக முட்டைகளை வாங்குகின்றோம்......................😜.
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
உண்மைகளை, வரலாறுகளை புதைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை, விசுகு ஐயா. ஆனால் கமல் போன்றோரின் பேச்சுகளை நம்பி நடவடிக்கைகளில் இறங்குவது மண் குதிர் ஒன்றை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமானம் மற்றும் குறிப்பாக கமல் சரியான புரிதலோ அல்லது தொடர்ச்சியோ இல்லாமல் தான்தோன்றித்தனமாக விடயங்களை சொல்லுகின்றார். இவரது பேச்சுக்களால் இதுவரை ஒரு விடயம் கூட சமூகத்தில் மாற்றம் அடையவில்லை என்பது கண்கூடு. ஒரு புள்ளியை மட்டுமே பார்க்காமல், பின்நோக்கி சென்று ஒரு கோடாக பார்த்தால் இவரின் அவசரத்தனங்களை அறிந்து கொள்ளலாம். எனது சொந்த அனுபவத்தை, திருச்சியில் என் பெற்றோரின் மரணச் சான்றிதழ்கள் பெற்ற நிகழ்வை, இங்கு களத்திலேயே ஒரு கதையாக எழுதியிருக்கின்றேன். அந்தக் கதையில் கமலின் ஊழல் எதிர்ப்பு கோசமும், நடவடிக்கைகளும் வருகின்றது. அந்தக் கதையின் சாராம்சமே கமலும், இவரைப் போன்றவர்களும் நிஜ உலகிலிருந்து எவ்வளவு தள்ளி இருக்கின்றார்கள் என்பதும், இவர்கள் சொல்வது நடைமுறையில் சாத்தியமே அற்றது என்பதும்தான். வெறும் பரபரப்பு மற்றும் விளம்பரங்களுக்காக தங்களுக்கு தேவையான நேரங்களில், சினிமா வெளியீடு அல்லது தேர்தல் காலங்களில், எதையாவது உணர்வுபூர்வமாக சொல்லிவிட்டு போய்க் கொண்டிருக்கின்றார்கள். தமிழின் தொன்மை இப்பொழுது இந்திய மத்திய அரசின் தொல்துறைப் பிரிவால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. இது உண்மையான பிரச்சனை. இதை கேள்வி கேட்க ஆரம்பித்தது சு. வெங்கடேசன். சில வருடங்களின் முன் மொழிகள் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக நிதி ஒதுக்கும் போது தமிழுக்கு மிகக்குறைவான நிதியே ஒதுக்கப்பட்டது. அப்போதும் இதை தட்டிக் கேட்டவர் வெங்கடேசன் தான். மேடையில் இரண்டு வரிகளை சொல்லி விட்டு, பின்னர் அதையே அன்பு, நட்பு என்று சமாளித்துக் கொண்டு போகும் கமல் போன்றோர் இந்த விடயங்களின் பக்கம் வருவதேயில்லை. இந்தப் பக்கம் வர வேண்டும் என்றால், ஒன்று அதில் தீவிரமாக இருக்க வேண்டும், இரண்டாவது நல்ல புரிதல் இருக்கவேண்டும். தமிழ் மொழி மூவாயிரம் வருடங்களோ அல்லது ஐயாயிரம் வருடங்களோ எவ்வளவு பழமையானது என்பதை ஆதாரங்களுடன் நாங்கள் முன்வைக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களை நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் திரட்டவேண்டும். அதை உலகில் இந்த துறையில் இருப்பவர்களுடன் பகிரவேண்டும். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரிசா பாலு போன்றவர்களின் ஆதாரங்கள் எங்கள் ஊடகங்களை தாண்டி வேறு எங்கேயும் போகாது. இதை விடுத்து, மலையாளம் தமிழில் இருந்து தான் வந்தது என்று மேடைகளில் சொல்வதால் கிடைக்கும் பயன் தமிழ் - மலையாளிகள் வெறுப்பு மட்டுமே. தமிழ் மூவாயிரம் வருடங்களாக அப்படியே இருக்கின்றது (எழுத்துரு மாறியிருக்கின்றது போல.......), ஆனால் மலையாளம் 800 வருடங்களாக மட்டுமே இங்கிருக்கின்றது என்பதை ஆதாரங்களுடன் எங்களால் வெளியிட முடியும் என்றால், மேடைகளில் இப்படியான பேச்சுக்களை பேசும் தேவையே இல்லை. பல வருடங்களின் முன் தமிழ்மொழி ஒரு ஆபிரிக்க மொழியிலிருந்து தான் வந்தது என்ற ஒரு கட்டுரையை வாசித்திருக்கின்றேன். ஆபிரிக்காவிலிருந்து ஒருவர் எழுதியிருந்தார். அது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை போல எழுதப்பட்டிருந்தது. சிரித்து விட்டு அதை விட்டுவிட்டேன். இதையே பல ஆபிரிக்கர்களும் மீண்டும் மீண்டும் வந்து சொன்னால், சிரிப்பு வருவதற்கு பதிலாக எரிச்சல் வர ஆரம்பித்து, இறுதியில் வெறுப்பு தான் வரும். கிட்டத்தட்ட இதுவே தான் தென்னிந்தியாவில் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. தமிழின் தொன்மை மற்றும் தொடர்ச்சி பற்றி வேறு எந்த மொழிகளைப் பேசும் மக்களுடன் எந்த வித ஒப்பீடும் செய்யாமலேயே பேசலாம்.
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
அங்கு கர்நாடகாவில் எதிரும் புதிருமாக இருக்கும் சித்தராமையாவிலிருந்து எடியூரப்பா வரை கமலின் கருத்தை மறுத்துவிட்டார்கள். கமலுக்கு வரலாறே தெரியாது என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். கந்தரோடையில் அன்றே விகாரைகள் இருந்தன, ஆகவே அன்றே முழு இலங்கையுமே ஒரு பௌத்த தேசமே என்றால், நாங்கள் ஏற்றுக்கொள்வோமா, இல்லைத் தானே. ஒரு தரப்பினர் உண்மை, மறுக்க முடியாத வரலாறு என்று ஒன்றை வாதாடுவதும், இன்னொரு பக்கம் அதே விடயத்தை அது அப்படியில்லை என்று வாதாடுவதும் ஒன்றும் புதிது அல்லவே. மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன கமலே, 'நான் சொல்வது எனக்கு சரி. நீங்கள் சொல்வது உங்களுக்கு சரி...........' என்று தானே சொல்லியிருக்கின்றார். நான் சொல்வது எனக்கு சரி என்பதன் பொருள் இது அவருடைய தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே என்ற பொருளில் தானே வருகின்றது. தொடர்ந்து பேசிய கமல் இந்த மொழி ஆராய்ச்சியை பேசுவதற்கு எந்த அரசியல்வாதிக்கும், அவர் உட்பட, தகுதிகள் கிடையாது என்றும் சொல்லியிருக்கின்றார். மன்னிப்பு என்ற வார்த்தை இல்லாத ஒரு மன்னிப்பை கேட்டிருக்கின்றார் கமல். 'அன்பு.............' என்று வேறு ஒரு அர்த்தமும் சொல்லியிருக்கின்றார். சிவராஜண்ணா மீதான அன்பை வெளிப்படுத்துவதன் கமலின் நோக்கம் என்றால், அப்படித்தான் கமல் இப்போது சொல்லுகின்றார், தமிழும் கன்னடமும் ஒரே குடும்பம் என்று சொல்லியிருக்கலாம். தான் சிவராஜண்ணாவிற்கு ஒரு சித்தப்பா போல என்றவர், இரு மொழிகளையும் ஒரே குடும்பம் என்று சொல்லியிருந்தால் அது எவ்வளவு பொருத்தமாக இருந்திருக்கும். வரலாறு எது, உண்மை எது, இட்டுக்கட்டிய கதைகள் எவை என்பன ஒரு புறம் இருக்கட்டும். இப்படியான பேச்சுகளால் இன்றும், நாளையும், எதிர்காலத்திலும் எந்த நல்லவையும் நடக்கப் போவதில்லை. மாறாக பிரிவும் வெறுப்புமே தூண்டி விடப்படுகின்றது. தமிழ்த்தேசியம் என்று தீவிரமாக நிற்கும் போது, நாங்களே திராவிடம் என்ற பகுப்பை ஆங்கிலேயர்களின் அறிமுகம் என்று சொல்லி ஒதுக்குகின்றோம், திராவிடத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம். திராவிடம் இல்லாமல் தமிழ் எப்படி மூலமொழியாகி இருக்கும் என்று நாங்களே சிந்திப்பதில்லை. ஆகவே ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, கேரள மக்கள் இந்தக் கோட்பாட்டை நிராகரிப்பதில் ஆச்சரியம் எதுவும் கிடையாது. அரசியல் நலன்கள் நோக்கி சிலர் நிராகரிக்கின்றார்கள். சுயமரியாதை வேண்டி சிலர் நிராகரிக்கின்றார்ர்கள். இந்த மொழிகள் ஒரே குடும்பம் என்று சொன்னால் எவரும் நிராகரித்து எதிர்க்கப் போவதில்லை.
-
நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
நீங்கள் சொல்லியிருப்பவை சரியானவையே. லோக்சபா தேர்தல்களில் சில காரணங்களால் போட்டியிட முடியாமல் போன அல்லது தோல்வியடைந்த சிலர் ராஜ்யசபா சென்று அங்கிருந்து முக்கிய பங்களிப்பு வழங்கியிருக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் தேர்ந்த, முழுநேர அரசியல்வாதிகளாகவும் இருப்பார்கள். நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் போட்டியிட தயங்கி பின்வாங்குவதும் இப்படியான ஒரு வழியும் இருப்பதாலேயே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பங்களூரு முன்னேறி விடும் போல தெரியுதே............ கிளி இறுதிப் போட்டியை நோக்கி பறக்குது............🤣.
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
'என்னுடைய பேச்சால் கன்னட மக்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு நான் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக் கொள்கின்றேன். நான் அங்கே மேடையில் பேசியது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை. அதை நான் அங்கே அப்படி சொல்லியிருக்கக்கூடாது.......................' இப்படி வழவழா கொழகொழா என்று அடிக்கடி மன்னிப்பு கேட்பது அங்கு மிகச் சாதாரணம். மேலும் சீமான் இப்பொழுது கொஞ்சம் தணிந்து இருக்கின்றார். நாலு ஊர்களில் நாலு வழக்குகள் என்று அவரை கொஞ்ச நாளாக பாடாய்ப்படுத்திவிட்டார்கள்.
-
நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
சில வாரங்களின் முன் மக்கள் நீதி மய்யத்தின் ஏழாவது வருட விழா நடந்தது என்று நினைக்கின்றேன். அதில் பேசிய கமல் எங்களில் ஒருவர் நாடாளுமன்றம் போகின்றார், எங்களின் குரல் அங்கே ஒலிக்கும் என்றார். கடந்த லோக்சபா தேர்தலில் திமுக - மநீம உடன்பாடு வைத்துக்கொண்டதன் பிரகாரம் மநீமவிற்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கிடைக்கும் என்று ஏற்கனவே தெரியும். ஆனால் யார் அந்த ஒருவர் என்பது தான் கேள்வியாக இருந்தது............... கடைசியில் கமலே அந்த ஒருவர் ஆகிவிட்டார் என்பது ஆச்சரியம் தான். தமிழ்நாட்டின் முதலமைச்சராக எண்ணி முடிவில் ராஜ்யசபா எம்பி ஆகியிருக்கின்றார். ராஜ்யசபாவிற்கு எவராவது போகின்றார்களா, ஏதாவது கதைக்கின்றார்களா என்ற செய்திகள் பொதுவாக வருவதில்லை. சச்சின் இருந்தார், இளையராஜா இருக்கின்றார் என்று நினைக்கின்றேன், இன்னும் ஏராளமான பிரபலங்கள் அங்கு இருந்திருக்கின்றார்கள். ஒரு meet and greet இடம் போல........
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சிஎஸ்கே, பத்து அணிகளில் ஒரே ஒரு அணி.............. யாழ் களத்தையே கவிழ்த்துப் போட்டுதே...............🤣.
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்கும், கேட்கலாம். அறியாமை அல்லது ஆணவம் தான் ஒருபோதும் மன்னிப்பு கேட்காது. வழமை போலவே இரண்டு வரிகளை அறிவுஜீவித்தனமாக சொல்லி விட்டு, மூன்றாவது வரியிலிருந்து பொருள் இல்லாமல் கதைக்க ஆரம்பிப்பது கமலுக்கு ஒரு பழக்கம் ஆகிவிட்டது. 'எனக்கு நான் சொல்வது சரி. உங்களுக்கு நீங்கள் சொல்வது சரி. வேறொருவருக்கு இரண்டுமே சரி. இன்னொருவருக்கு இரண்டுமே பிழை............................'. இது என்ன பேச்சு................🫣. பொதுவெளியில் பொறுப்புடன் கருத்துகளை சொல்லும் கடமையும், பொறுப்பும் புகழுடன் சேர்ந்து வருவது. சொந்த வீட்டினுள் ஒரு அறைக்குள் இருந்து எதையாவது சொல்லிக் கொள்ளலாம். மேடையில் ஏறினால் விவேகத்துடன் சமயோசிதமும் தேவை. தமிழர்கள் தவிர்ந்த எந்த தென்நாட்டவர்கள் தமிழ் மொழியை திராவிடத்தின் முதல் மொழி என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்கின்றார்கள்................. எவருமேயில்லை. நாங்கள் தான் திராவிடம் என்றும், எங்களின் மொழிக் குடும்பமே சமஸ்கிருதத்திலிருந்து வேறானது என்றும் சொல்லுகின்றோம். மற்றைய தென்நாட்டவர்கள் எப்படி ஆரம்பித்தார்களோ தெரியவில்லை, ஆனால் இன்று சமஸ்கிருதத்தை தங்கள் மொழிகளில் மிக அதிகமாகவே கலந்துவிட்டார்கள். மலையாள மக்களே தாங்கள் சமஸ்கிருத வழியில் வந்தவர்கள் என்று தான் சொல்லுகின்றார்கள். இப்படி தமிழில் இருந்து தான் உங்களின் மொழிகள் வந்தன என்று மற்றவர்களுக்கு சொல்வது புதிதாக எதையும் நிரூபிக்கப் போவதில்லை. ஏற்கனவே மொழிவாரியான இனங்களுக்கிடையே இருக்கும் பிரிவினையை இது இன்னும் கூட்டும். ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா என்று எந்த மாநிலமும் இந்தக் கோட்பாட்டை என்றும் ஏற்பதில்லை. இவ்வகையான பேச்சுகள் அவர்களைத் தூண்டுகின்றன. சாதாரணமாக ஒரு வேலைத்தளத்தில் இப்படியான பேச்சுகள் வந்தாலே அங்கே பிரிவு ஆரம்பித்துவிடுகின்றது. கமல் தமிழின் தொன்மையை ஆதாரத்துடன் நிலைநாட்ட விரும்பினால், கீழடி அறிக்கையை மத்திய அரசு ஏன் மாற்றச் சொன்னது என்று டெல்லியில் போய் போராடவேண்டும். இப்பொழுது ரஜனியிடம் இதைப் பற்றிக் கேட்கப் போகின்றார்கள். அவர் அம்பானி வீட்டுக்கு போய் வந்து விட்டே கைலாசம், வைகுண்டம் என்றவர். தமிழ் கைலாசம், கன்னடம் வைகுண்டம் என்று அவர் அவருடைய விளக்கத்தை இனிச் சொல்லுவார். 'கமல் சார் எவ்வளவு பெரிய அறிவாளி.................... நான் என்னத்தை சொல்லுறது................' என்று நழுவுவதற்கும் சாத்தியம் அதிகம்.
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
கடஞ்சா, மாநில அரசியலில் இருப்பவர்களுக்கே மத்திய அரசியல் தெரியாது என்று நீங்கள் சொல்லும் போது, எங்கோ உலகின் ஒரு மூலையில் ஒரு வீட்டுக்குள் இருந்து கொண்டு விசைப்பலகையில் மட்டும் வீரம் காட்டும் எனக்கு இவை எப்படித் தெரியும். மத்திய மாநில அரசியலும், அதிகாரமும் என்றல்ல, ஒரு பஞ்சாயத்து சபை எப்படி இயங்குகின்றது என்பதே நடைமுறையில் எனக்குத் தெரியாது. என்னுடையவை பலவும் ஊகங்கள் தான். ஆனால் அவை என்னுடைய விருப்பங்கள் அல்ல. ஊகங்களுக்கும், விருப்பங்களுக்கும் இடையே பாரிய வேறுபாடு இருக்கின்றன. ஊகங்கள் பொதுவெளியில் கிடைக்கும் தகவல்கள், சக மனிதர்கள் மற்றும் சூழலால் கிடைக்கும் அனுபவங்கள், வரலாறு, உள்ளுணர்வு போன்றவற்றால் ஏறபடுத்தப்படுகின்றது. விருப்பங்களாலும், நம்பிக்கைகளாலும் அல்ல. கருணாநிதியை மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்ததிற்கு அவருடைய குடும்பத்தினரின் அல்லது மிகவும் வேண்டப்பட்டவர்களின் பெரிய தவறுகள் காரணமாக இருக்கலாம். இன்றைய பாஜக அரசு அமலாக்கத்துறை மூலம் மாநில அரசுக்களை பணிய வைக்கும் ஒரு முயற்சி போன்றது அது. ஜெயலலிதா வாஜ்பாய்யின் அரசை ஒன்றுமே இல்லாமல் ஆக்கவில்லையா. மாநிலம் மத்தியை கட்டுப்படுத்திய உதாரணங்களும் ஏராளம் உண்டு. மாநிலங்களில் இருந்து போவோர் பலரும் மத்திய ஆட்சியில் பங்காளர்களாகவும், மத்தியில் கொள்கை வகுப்பாளார்களாகவும், பொறுப்பிலும் இருந்து கொண்டே வருகின்றார்கள். இது ஒன்றும் கோவில் பூசகர் வேலை போன்றது அல்ல. இது ஒரு பிரிவினருக்கு மட்டுமே சொந்தம் மற்றும் புரியும் என்று சொல்வதற்கு. மாநிலங்களில் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் எது எவை என்று தெரியும். இந்தியாவின் தேவையை நிறைவேற்றுபவர்கள் ராஜதந்திரிகள் போன்று தெரிகின்றனர். இலங்கை அரசின் அதிகாரிகள் இந்தியாவின் தேவையை செய்து முடிக்கின்றனர், அதனாலேயே அவர்கள் அப்படித் தோன்றுகின்றார்கள். ஈழத்தமிழ் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்தியாவின் தேவைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு இந்தியாவுடன் இணக்கமாக போகமுடியாது. ஏனெனில் இந்தியாவின் தேவைகள் எங்களின் நலனுக்கு, எங்களின் இருப்பிற்கே பாதகமானவையாக எங்களுக்கு தெரிகின்றது. இதன் அர்த்தம் நாங்கள் ராஜதந்திரிகள் இல்லை என்று அல்ல, மாறாக இருப்பிற்கே போராடும் ஒரு இனம் என்பதே முதற்காரணம். இங்கு உங்களுடன் சில நாட்கள் உரையாடிய பின் உங்களின் முதல் மொழி தமிழ் இல்லை என்ற ஒரு சந்தேகம் வர ஆரம்பித்திருக்கின்றது. ஒரு குறுக்கெழுத்துப் போட்டியை நிரப்புவது போன்றே உங்களின் பதிவுகளை வாசிக்க வேண்டியிருக்கின்றது. ஆனால் இப்படியேயாயினும் தொடருங்கள். மாற்றுக் கருத்துகளும், முரணியக்கங்களுமே முன்கொண்டு செல்லும்.