Jump to content

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1604
  • Joined

  • Last visited

  • Days Won

    24

Everything posted by ரசோதரன்

  1. 🤣.... ஏமாற்றப் போகின்றார்கள், நான் ஏமாறப் போகின்றேன் என்று நினைத்து 'தெளிவாக' இருக்க, கடைசியில் நான் தான் ஏமாற்றுக்காரன் ஆகி நின்றேன் அங்கே..........😌.
  2. ஏமாற்றம் --------------- எங்கே போனாலும் அங்கே நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள், அதனால் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே எல்லோரும் வளர்க்கப்பட்டிருக்கின்றோம். கடைக்காரர்கள் ஏமாற்றுவார்கள், ஆட்டோக்காரர்கள் ஏமாற்றுவார்கள், வேலைக்கு வருபவர்கள் ஏமாற்றுவார்கள், இவ்வளவும் ஏன், நண்பர்களே ஒரு நாள் ஏமாற்றுவார்கள் என்று அவரவர்களின் பல சொந்த அனுபவங்களும், கதைகளும் எங்கள் எல்லோருக்கும் சொல்லப்பட்டிருக்கும். கடவுளே எங்களை ஏமாற்றி விடுவார் என்று சொல்லுகின்றவர்களும் இருக்கின்றார்கள். நாங்கள் கடவுளை ஏமாற்ற முயன்ற கதைகளை இதுவரை எவரும் வெளியில் சொல்லவில்லை. மொழி தெரியாமல் ஏமாற்றப்படுவது மிகச் சாதாரணமாக உலகெங்கும் நடக்கும் ஒரு நிகழ்வு. சிங்கள மொழி தெரியாததால் கொழும்பில் ஏமாற்றப்பட்டவர்கள் எங்களில் பலர். பல வருடங்களின் முன் ஒரு தடவை நண்பன் ஒருவன் இடுப்பு பட்டி ஒன்றை அங்கு சந்தையில் வாங்கினான். பட்டியில் ஓட்டைகள் போட்டிருக்கப்பட்டிருக்கவில்லை. ஐந்து ஓட்டைகள் வேண்டும் என்றான். ஐந்து ஓட்டைகளை போட்டு விட்டு மேலதிகமாக ஐந்நூறு ரூபாய்கள் கொடு என்று அவர்கள் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டனர். முன்னமே சொன்னோமே, சிங்களத்தில், என்றார்களாம். பல வருடங்களின் முன் சென்னை விமான நிலையத்தில் இறங்கி சென்னையில் இருக்கும் வேறோர் இடத்திற்கு, அண்ணா நகருக்கு, போக வேண்டி இருந்தது. என்னை ஏற்றிக் கொண்டு போக இருந்தவர் கடைசி நேரத்தில் வர முடியாத நிலை. ஒரு பிரச்சனையும் இல்லை, நானே சமாளித்துக் கொள்கின்றேன் என்று அங்கு இருக்கும் உறவினர்களுக்கு சொன்னேன். அவர்கள் நான் போக வேண்டிய இடத்திற்கு கார் வாடகை எவ்வளவு, எங்கே கார் எடுக்க வேண்டும், எங்கே கார் எடுக்கக் கூடாது என்று ஒரு நாலு பக்கங்கள் வரும் அளவிற்கு தகவல்கள் கொடுத்திருந்தனர். மிக முக்கியமாக, நான் வெளிநாட்டிலிருந்து அங்கு வந்திருப்பதாக சொல்லக் கூடாது என்றனர். இந்தியப் பணம் இங்கிருந்து கிளம்பும் போதே என்னிடம் கொடுக்கப்பட்டும் விட்டது. அப்பொழுது சென்னை விமான நிலையத்திலிருந்து அண்ணா நகருக்கு வாடகைக் கார் கட்டணம் அறுநூறு ரூபாய்கள். விமான நிலையத்தில் இறங்கி ஏற்கனவே எனக்கு சொல்லப்பட்டிருந்த இடத்திற்கு போனேன். சொல்லப்பட்டது போலவே பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத கார்கள் அங்கு நின்றன. பதிவு செய்யும் இடத்திற்கு போய், அண்ணா நகருக்கு போக வேண்டும் என்றேன். ஒரு காரைக் காட்டி அதில் போங்கள் என்றனர். பற்றுச்சீட்டு கொடுங்கள் என்றேன். பற்றுச்சீட்டு கட்டாயமாக கேட்டு வாங்க வேண்டும் என்று எனக்கு சொல்லப்பட்டிருந்தது. பற்றுச் சீட்டு வேணும் என்றால், உள்ளே போய் அங்கிருக்கும் ஒரு இடத்தில் காத்திருக்கச் சொன்னார்கள். காத்துக்கொண்டே இருந்தேன். எவரும் வரவில்லை. பின்னர் இது வேலைக்கு ஆகாது என்று வெளியில் வந்ததும் பதியாத கார்கள் ஓடுபவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர். பல வித பேரங்கள். கடைசியாக ஒருவர் அறுநூறு ரூபாய்க்கு வருவதாக சொன்னார். ஃபோனில் படம் எடுத்தேன், கூப்பிட்டு உறவினர்களுக்கு சொன்னேன். அவர்களும் அந்த சாரதியுடன் கதைத்தனர். இலங்கையிலிருந்து அங்கு வருவதாக சாரதிக்கு சொன்னேன். அவர் கோயம்புத்தூர் சொந்த ஊர் என்றார். காதலித்து, இரு வீட்டார்களையும் எதிர்த்து மணம் முடித்ததாகவும், அப்படியே ஓடி வந்து சென்னையில் தங்கி விட்டதாகவும் சொன்னார். இந்தக் கார் அவருடைய சொந்தக் கார், வங்கிக் கடனில் வாங்கியது என்றார். சென்னைக்கு வந்து விடுங்கள் என்றார். கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்து ஒரு கார் வாங்கி விடலாம் என்றார். இலங்கையில் படும் கஷ்டம் எதுவும் இங்கு படத் தேவையில்லை என்றார். கலங்கின கண்களை மூடி, கைகளால் பொத்தினேன். ஏன் அவர்கள் வீட்டில் காதலுக்கு எதிர்த்தார்கள் என்று கேட்டேன். அவருடைய ஒரு கால் செயற்கை என்றார். அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை. மிக நன்றாக படிக்கிறாராம் அவர். எப்படியும் ஒரு கலெக்டர் ஆக்கி விடுவோம் என்றார். முத்திரைகள் சேர்க்கின்றார் என்றார். நானும் சிறுவயதில் முத்திரைகள் சேர்த்திருக்கின்றேன். அப்படியே வெளிநாட்டு நாணயங்களும் சேர்க்கின்றாராம். இலங்கை முத்திரைகள், நாணயங்கள் எல்லாம் தங்கள் வீட்டில் இருக்கின்றது என்றார். இறங்கிய பின் அவரின் காலைக் கவனித்தேன். பேசியது போலவே அறுநூறு ரூபாய்கள் கொடுத்தேன். அப்படியே ஒரு இருபது டாலர்களும், அப்பொழுது ஒரு டாலரின் பெறுமதி அறுபது ரூபாய்கள், கொடுத்தேன். இது என்ன சார் என்று நின்றார். இது உங்களின் மகளுக்கு என்று சொல்லி விட்டு, அவரைப் பார்க்காமலேயே திரும்பி நடந்தேன். உண்மையில் பார்க்கும் துணிவு இருக்கவில்லை.
  3. 👍....... ட்ரம்ப் அவர்களின் கையில் எதுவும் இல்லை. எல்லாம் பைடனின் கையில் தான் உள்ளது. இன்றைய நிலையில் பைடன் நினைத்தால் மட்டுமே ட்ரம்ப் அடுத்த அதிபராக வருவது தவிர்க்கப்படலாம். இந்த வாரம் சூட்டின் சூட்டை ஆற விட்டு, அடுத்த வாரம் பைடன் தான் போட்டியிலிருந்து விலகுவதாக சொன்னால், இறங்கின ரேட்டிங் மீண்டும் ஏறும். என்ன ஆனாலும் கலிஃபோர்னியாவில் எந்த மாற்றமும் ஏற்படாது. இந்த மாநிலத்திற்கு எவரும் பிரச்சாரத்திற்கு கூட வருவதில்லை.........🤣.
  4. அப்படி இருக்காது என்று நினைக்கின்றேன். ஆனால், இந்த சவுக்குகள், சாட்டைகள், தீப்பொறிகள், கழகப் பேச்சாளர்கள் என்று எல்லோரும் மிகவும் தரம் தாழ்ந்தே மேடைகளிலும், சமூக ஊடகங்களிலும் பேசி வருகின்றனர். எந்த தலைவரும் இதைக் கட்டுப்படுத்துவது போல தெரியவில்லை. தலைவர்களும் தரம் தாழ்ந்தே பேசுகின்றனர், போகின்றனர். எல்லோருமே. ஒரு மலிவான சமுதாயம் மலிவானதாகவே இருக்கின்றது.
  5. தமிழ்நாட்டில் பாஜகவால் மிகக் குறுகிய காலத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கட்சியாக பாமக வந்துள்ளது. ஒரு மத்திய அமைச்சர் பதவியை மனதில் வைத்து இந்தக் கணக்கை மருத்துவர் ஐயா போட்டிருப்பார் போல........ ஒரு கவர்னர் பதவி கொடுப்பார்கள். அந்த வகையில் பாஜகவினர் நண்பர்களைக் கைவிடுவதில்லை. ஆனால் சாதி சனங்களிற்கு என்று ஒரு கட்சியை தொடங்கி விட்டு, கடைசிக் காலத்தில் வேறு ஏதோ ஒரு மாநிலத்தில் போய் உட்கார்ந்திருக்க முடியுமா........ இந்தக் கூட்டணி பஸ்ஸில் இருந்து இறங்கி அடுத்த கூட்டணி பஸ்ஸில் ஏற வேண்டியது தான்.......
  6. இறந்த அந்த இன்னுமொருவருக்கும், அவரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ட்ரம்ப் பாதுகாப்பாகவும், சேமமாகவும் உள்ளார் என்கின்றனர். அவர் தான் அடுத்த அமெரிக்க தலைவர் என்பது விதி போல...... 333 மில்லியன் அமெரிக்கர்களின் வீடுகளில் இருக்கும் 500 மில்லியன் துப்பாக்கிகளை என்ன செய்யலாம் என்று இரண்டு நாட்களுக்கு இங்கு அமெரிக்காவில் விவாதிப்பார்கள்..........
  7. 🤣....... படலை காவிகள்........ இதையே தலைப்பாக வைத்திருக்க வேண்டும்....🤣
  8. 🤣....... இதுவும் அதே தான்............ நான் வளர்த்து வந்ததில் ஒன்றையே இன்னுமொரு குரூப் அமுக்கிக் கொண்டு போய் ஆக்கிச் சாப்பிட்டு விட்டார்கள் ஒரு ராத்திரியில்............. சாக்கு ஒன்றால் மூடி அமுக்கினதாக பல வருடங்களின் பின் சொன்னார்கள் சம்பந்தப்பட்டவர்கள்........😃
  9. பாமகவினருக்கு இது பெரும் தோல்வியே. திமுக வெல்லும், ஆனால் ஓரளவு தான் வாக்கு வித்தியாசம் இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பு இருந்தது. இவ்வளவு அகலமான வித்தியாசம் ஒரு அதிர்ச்சி. இது இரண்டாயிரம் ரூபாய்க்கும் (திமுகவின் கொடுப்பனவு), ஐந்நூறு ரூபாய்க்கும் (பாமகவின் கொடுப்பனவு) இருக்கும் இடைவெளி அல்ல. நாதகவிற்கு கிடைத்த பத்தாயிரத்திற்கும் கொஞ்சம் அதிகமான வாக்குகளும் குறைவே, ஆனாலும் இவர்களுக்கு அந்த தொகுதியில் வாக்கு போடுவதற்கு யார் இருக்கின்றார்கள் என்ற கேள்வி ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. 40 வீத வன்னிய மக்களும், 30 வீத பட்டியலின மக்களும் வாழும் தொகுதியில், இந்த 70 வீத மக்களில் எத்தனை பேர் நாதகவிற்கு வாக்களிப்பார்கள்? மிகுதி இருக்கும் 30 வீதத்தில் ஒரு பகுதி மட்டுமே நாதகவிற்கு வாக்களித்திருப்பார்கள். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம், ஆம்ஸ்ட்ராங் கொலை என்று தொடர்ந்து வந்து கொண்டிருந்த அதிருப்தி அலைகளை பணத்தால் மட்டுமே திமுக ஈடு கட்டினார்கள் என்றில்லை. வலுவான ஒரு எதிர்த்தரப்பு தமிழ்நாட்டில் இல்லை என்பதே நிலவரம்.
  10. ❤️.... அன்ன ஊஞ்சல் என்னும் பெயர் மிக அழகாகவும், பொருத்தமாகவும் இருக்கின்றது..... இப்பொழுது தான் முதன்முதலாக கேள்விப்படுகின்றேன்.
  11. 👍..... நியூயோர்க்கும் தூங்குவதில்லை என்று தான் சொல்வார்கள்....
  12. ஒரு ராத்திரி ------------------- பகலுக்கும் இரவிற்கும் இடையில் இருக்கும் இடைவெளி நடுச்சாமத்தில் வெளியே போகும் போது தெரியும். இரவின் இருட்டில் உயிர்களுக்கு சுதந்திரம் அதிகமாகக் கிடைக்கும். இருட்டு கட்டுப்பாடுகளை அவிழ்த்து தளர்த்தி விடுகின்றது. ஆறு போல வாகனங்கள் நில்லாமல் ஓடிக் கொண்டிருந்த பெரும் தெருக்கள் நிலத்தில் கீறப்பட்ட கறுப்புக் கோடுகள் போல அரவமற்ற இரவில் நீண்டு தெரியும். சிறு தெருக்கள் அசைவில்லாமல் நெளிந்து படுத்திருக்கும் பாம்புகள் போல அப்படியே கிடக்கும். வீடுகள், வீடுகளுக்குள் மனிதர்கள், நகரங்கள் என்று எல்லாமே எல்லாம் மறந்த ஒரு தூக்கத்தில் கிடக்கும். 'மோனத் திருக்குதடீ இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே........' என்ற வரிகளை இப்படியான ஒரு சாமத்தில் வெளியே வந்து பார்த்து விட்டுத் தான் அவர் எழுதினாரோ. தூங்கா நகரங்கள் என்றும் சில இருக்கின்றன தான். மதுரையைச் சொல்வார்கள். இரவு இரண்டாம் காட்சி படம் பார்த்து விட்டு, நடுச்சாமத்தில், அங்கே ரோட்டுக் கடையில் ஆவி பறக்கும் மல்லிகைப் பூ இட்லியும், மட்டன் குழம்பும் சாப்பிடலாம், சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அப்பவும் அந்த நேரத்திலும் கூட்டம் தெருக்கடைகளில் அள்ளும். லாஸ் ஏஞ்சலீஸ் நகரும் அப்படியான ஒன்று தான். 24 மணி நேரங்களும் திறந்திருக்கும் கடைகள், எப்போதும் நடமாடித் திரியும் மனிதர்கள், ஓயாத தெருக்கள் அத்துடன் அங்கங்கே சில சூட்டுச் சம்பவங்கள் என்று இதுவும் ஒரு தூங்கா நகரம் தான். சமீபத்தில் ஊர் போயிருந்த போது, ஒரு நாள் வவுனியாவில் இருந்து யாழ் போகும் புகையிரதம் அன்று கொஞ்சம் பிந்திப் போய்ச் சேர்ந்தது. இரவு ஏழு மணி ஆகிவிட்டது. யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து பஸ் தரிப்பிடம் போனால், கடைசி 751 பஸ் ஆறே முக்காலுக்கே போய் விட்டது என்றார்கள். இனி அன்றைக்கு பஸ் இல்லை. அங்கே நின்ற கடைசி 750 பஸ்ஸில் ஏறி புறாப்பொறுக்கியில் இறங்கினால், அங்கே ஒரே ஒரு ஆட்டோ நின்றது. அதில் ஏறி வீடு போனோம். எட்டு மணிக்கெல்லாம் அடங்கி விடுகின்ற ஒரு பிரதேசம் ஆகி விட்டது பிறந்து வளர்ந்த இடம். முன்னர் இப்படி இல்லை. ஊரில் இரண்டு தியேட்டர்கள் இருந்தன. அங்கும் இரண்டு இரவுக் காட்சிகள் இருந்தன. யாழ் - பருத்தித்துறை பஸ் இரவிலும் ஓடிக் கொண்டிருந்தது. சிவராத்திரிக்கு பல நாட்கள் முன்னரேயே வீச்சு ஊஞ்சல்கள் கட்டி ஆட ஆரம்பித்து விடுவோம். சில ஊஞ்சல்கள் பெரியவை. பல பேர்கள் ஒன்றாக இருந்து ஆடலாம். பாட்டு சுத்தமாக வராதவர்களும் ஒரு கூச்சநாச்சம் இல்லாமல் பாடுவதற்கு இந்த வீச்சு ஊஞ்சல்கள் ஒரு நல்ல இடமும் கூட. ஊஞ்சல் கயிறு அறுந்து, பலகையுடன் சேர்ந்து பாடிக் கொண்டிருந்த மனிதர்களும் பறந்து போய் விழுந்த நிகழ்வுகளும் உண்டு. ஊரில் முறிவு நோவு பார்ப்பதற்கென்றே இரண்டு பரியாரிகள் அந்த நாட்களில் இருந்தார்கள். 'மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு.......' என்ற பாடல் வழமையான ஊஞ்சல் பாடல்களை எல்லாம் தூக்கி வீசி விட்டு முன்னுக்கு வந்தது ஒரு வருடம். இந்தப் பயிற்சி, அடுக்குத் தடுக்கு எல்லாம் சிவராத்திரி அன்று முழு இரவும் முழித்திருப்பதற்காகவே. ஆனாலும் ஆறு காலப் பூசைகளுக்கும் சிவன் கோவில் போகும் சிலர் தவிர பெரும்பாலானோர் முழு இரவும் முழித்து இருப்பதில்லை. ஆனால் நாங்கள் சிலர் காத்துக் கொண்டு இருப்போம். அதிகாலையில் கோவிலில் இருந்து வந்து கொண்டிருக்கும் அல்லது கோவிலுக்கு போய்க் கொண்டிருக்கும் சிலர், அங்கங்கே நிற்கும் எங்களைப் பார்த்து 'என்னடா, நீங்கள் இரவிராக முழித்து இருந்தனீங்களோ.......... உங்களுக்கு சிவபெருமானின் அருள் கிடைக்குமடா.........' என்று சொல்லிக் கொண்டே போவார்கள். பொழுது விடிந்தவுடன், சில வீடுகள் அல்லோலகல்லோலப்படும். சில வீடுகளின் படலைகளைக் காணவில்லை என்று தேடுவார்கள். ஒருவரின் வீட்டின் முன் நின்ற அவரது கார் அடுத்த தெருவில் போய் நின்றது. 'இங்கு சாஸ்திரம் பார்க்கப்படும்' என்று எழுதப்பட்டு ஒரு வீட்டின் முன் இருந்த விளம்பரம் நடு வயலில் நின்று கொண்டிருந்தது. இப்படி பல இடமாற்றங்கள். வருடா வருடம் ஒரு ராத்திரியில் மட்டும் இப்படி நடந்து கொண்டேயிருந்தது.
  13. பாகிஸ்தானில் ஒரு அரச தலைவராவது குற்றம் சாட்டப்படாமல், கைது செய்யப்படாமல் விடப்பட்டிருக்கின்றார்களா? பூட்டோவை தூக்கிலிட்ட ஷியா உல் ஹக் விமான விபத்தில் கொல்லப்பட்டார். அந்த விமான விபத்திற்கு மாஸ்கோவை குற்றம் சாட்டியவர்களும் இருந்தனர். அப்பொழுது சோவியத் - ஆப்கான் சண்டை நடந்து கொண்டிருந்த நாட்கள். பின்னர் வந்த பெனாசிர் பூட்டோ கைது செய்யப்பட்டார், நாட்டை விட்டு வெளியேறினார். நவாஸ் ஷெரீப், இம்ரான் என்று இந்தப் பட்டியல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. தேசத் துரோகம் என்ற குற்றச்சாட்டு எல்லா தலைவர்கள் மீதும் அங்கு இருக்கும், அத்துடன் ஊழல் என்றும் சொல்வார்கள். PAK என்பதன் பொருள் P - Punjab, A- Afghanistan, K - Kashmir என்று சொல்வார்கள். இந்தப் பகுதியில் ஒரு அகண்ட இஸ்லாமிய அரசுக் கனவு. கனவில் வாழ்ந்து, நிஜத்தில் அழிந்து கொண்டிருக்கும் ஒரு நாடு.
  14. தமிழ்நாட்டில் உள்ள பொன்னாக்குடி என்னும் ஊரில் தகவல் கொடுப்பவர்களால் 50க்கும் மேற்பட்ட இளைஞர்களின் திருமணம் தடைப்பட்டிருக்குதாம்.........🫣. அந்த இளைஞர்கள் தகவல் கொடுப்பவர்களுக்கு எதிராக அந்த ஊரில் ஒட்டியிருக்கும் போஸ்டர் தான் மேலேயுள்ளது. ஆயிரம் பொய்கள் சொல்லி என்றாலும் ஒரு திருமணத்தை நடத்தி வை என்று சொல்வார்கள்....... இவர்கள் புறம் சொல்லி திருமணத்தை நிற்பாட்டுகின்றார்கள். https://minnambalam.com/archives-trending-news-in-tamil/local-informers-to-prevent-marriages-90s-kids-are-shocked/
  15. எங்களைப் போன்றவர்களுக்கு தான் இது தெரியும், இது தெரியாது என்ற வேறுபாடுகள் இருக்கின்றன. ஜீ தான் மனிதப் பிறவியே இல்லையே............ நடந்து முடிந்த தேர்தல் இந்தியாவைக் கொஞ்சம் காப்பாற்றிவிட்டது.......😀.
  16. என்ன மிஸ்டர் ஜீ ராமரிலிருந்து புத்தரிற்கு மாறிவிட்டார்? முடிந்த தேர்தலில் அயோத்தி இருக்கும் தொகுதியில் விழுந்த அடிக்குப் பின் ஜீக்கு ராமரில் கடும் கோபம் போல........ நான் ஒரு அனுமன் என்றாரே......... ஜீ ஆஸ்ரியாவில் பேசும் போது, ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா என்று திருப்பி திருப்பிச் சொன்னார். சனம் ஆஸ்ரியா, ஆஸ்ரியா என்று சத்தம் போட்டது......... ஜோ பைடனுக்கு நினைவு தப்புது, ஜீக்கு நினைவே இல்லை......🫣.
  17. நீங்கள் சொல்வதும் சரி தான்.......... தலைகணையின் மூலைத் தையலுக்குள்ளும் இது ஒளித்திருக்கும், எவரால் என்ன செய்ய முடியும்....... இங்கு சில வருடங்களின் முன் நுளம்புத் தொல்லை அதிகமாகி, அத்துடன் அது சைனாவில் இருந்து வந்த நுளம்பு என்றும் சொல்லப்பட்டு, ஒரு 'எதிர் நுளம்பு' வகை ஒன்றை உருவாக்கி மில்லியன் கணக்கில் வெளியில் விட்டார்கள். இந்த எதிர் நுளம்பு மனிதர்களை ஒன்றும் செய்யாது, இனப் பெருக்கம் செய்யாது, ஆனால் அந்நிய நுளம்பு, பொல்லாத நுளம்பு என்று எல்லாவறையும் பிடித்து தின்றுவிடும்.......😗.
  18. நீங்கள் சொன்னவுடன், நினைவே மணக்குது........ இந்த உணவுச் சங்கிலியில் இந்த மூட்டைப் பூச்சிகளை பிடித்து தின்னும் ஒரு சில உயிர்கள் இருக்க வேண்டுமே.......... பல்லி?
  19. 👍............ கலைத்துறையில் வெளிச்சமும், அங்கீகாரமும் கிடைப்பது அரிதும், அதிர்ஷடமும் என்ற நிலை தான் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் இருக்கின்றது. 'இளங்காத்து வீசுதே............' பாடலைப் பாடிய ஶ்ரீராம் அந்த வாய்ப்பைப் பெறுவதற்கு முன் எவ்வளவோ கஷ்டப்பட்டார் என்று இங்கு ஒருவர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆயிரக் கணக்கானோருக்கு கடைசி வரை எந்த வாய்ப்பும் கிடைக்காமலேயே போய் விடுகின்றது......😔.
  20. கனடாவில் ஒரு குடும்ப நிகழ்விற்காக போயிருந்த ஒரு தருணம். பல நாடுகளிலிருந்தும் ஆட்கள் வந்திருந்தனர், இலங்கை உட்பட. ஒன்றிரண்டு நாட்களின் பின், ஒரு கட்டிலில் இரவில் மூட்டைப் பூச்சி ஊர்கின்றது என்று ஆரம்பித்தனர். அந்த வீடே தலைகீழாகியது. எல்லாவற்றையும் பிரித்து, வெயிலில் போட்டு, சுடு தண்ணீர் ஊற்றி........... இது மூட்டைப் பூச்சியின் முட்டை, அது அதன் எச்சம், நசுக்கினா வரும் இரத்தம்.... என்று டி ராஜேந்தர் தோற்றார் அங்கே..........🤣
  21. இதில் இன்னொரு வகையினரும் இருக்கின்றனர். கடற்கரை போன்ற இடங்களில் நின்று பாட்டுப் பாடுவார்கள். சிலர் சித்திரம் வரைவார்கள். இங்கிருக்கும் Santa Monica Beach பிரபலமானது. ரொனால்ட் ரீகனின் இடம் என்றும் சொல்வார்கள். அந்தக் கடற்கரையில் எப்போதும் உள்ளூர் மற்றும் வெளியாட்களின் கூட்டம் இருக்கும். அங்கு நின்று சிலர் பாடுவார்கள். ஒரு சிலரின் பாடல்கள் அவ்வளவு தரமாக, மிக நன்றாக இருக்கும். ஹாலிவுட் என்று இங்கே சினிமாவில் வாய்ப்பு தேடி வந்து, சந்தர்ப்பம் அமையாமல் போனவர்கள் போல........
  22. 🤣.......... ஒரு பதினைந்து வருடங்களின் முன் இங்கு கலிஃபோர்னியாவில் ஒரு நகரில் இது பெரிய பிரச்சனையாகவே வந்தது. அந்த நேரத்தில் அங்கு இருந்த ஒரு பெரிய நிறுவனம் ஒன்றின் புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்க இந்தியாவிலிருந்து பலர் வந்து போய்க் கொண்டிருந்தனர். வேலைக்கு அருகில் இருக்கும் இடங்களில் வாடகைக்கு குடியிருந்தனர். ஒரே அறையில் பலர் தங்கினர். வந்து போனவர்களுடன் மூட்டைப் பூச்சிகளும் வந்து, போகாமல் அங்கேயே தங்கி, பெருகி, அந்தப் பகுதியையே சில நாட்கள் மூடி மருந்து அடிக்க வேண்டியதாகியது. அத்துடன் இந்தியர்கள் என்றாலே அவர்களுக்கு வாடகைக்கு இடம் கொடுப்பதில்லை என்ற போக்கும் வந்தது.
  23. இப்படியும் சிலரைப் பார்த்திருக்கின்றேன்........ ஆனால் பல கார்கள் கழுவும் இடங்களில் வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் போட்டிருப்பார்கள்....
  24. 🤣...... ஒரு உழைப்பிற்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தான், அண்ணை.....
  25. இட்டார் கெடுத்தார் ------------------------------- வாகனத்தை சிவப்பு விளக்கில் நிற்பாட்டி விட்டு பக்கக் கண்ணாடி வழியே வெளியே பார்த்தால், 'தயவு செய்து உதவி செய்யுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.' என்று எழுதப்பட்ட மட்டைகளுடன் ஒருவர் அல்லது இருவர் வீதியின் ஓரத்தில் அமர்ந்திருப்பார்கள். இது எல்லா சமிக்ஞை விளக்குகளிலும் நடக்கும் ஒன்றல்ல. மிக அதிக வாகனங்கள் கடந்து போகும் சமிக்ஞை விளக்குகளையும், மிகக் குறைவான வாகனங்கள் கடந்து போய் வருமிடங்களையும் இவர்கள் தவிர்த்து விடுகின்றனர். சிலர் உதிரியான வேறு சில தகவல்களையும் தங்களின் விளம்பர மட்டையில் எழுதி வைத்திருப்பார்கள். உதாரணமாக, 'நான் ஒரு முன்னாள் போர் வீரன்....' என்ற வசனமும் இந்த மட்டைகளில் அடிக்கடி காணப்படும் ஒன்று. காலையிலிருந்து ஒரு எட்டு அல்லது பத்து மணித்தியாலங்கள் அங்கேயே இருப்பார்கள். ஒரு முழுநேர வேலை. மழை என்றால் அங்கு இருக்கமாட்டார்கள். ஆனால் கடும் வெயில், கடும் குளிர் என்றாலும் அங்கே நிற்பார்கள். சில உடமைகளும் அவர்களை சுற்றி இருக்கும். ஒரு சைக்கிள், ஒரு பெட்டி அல்லது வாளி போன்றன. ஒரு சிலருடன் நாய் ஒன்றும் நிற்கும். அவர்களின் வளர்ப்பு நாயாகத்தான் இருக்கவேண்டும். இப்படியான ஒருவரை வாகனங்களை பதிவு செய்யும் அலுவலகம் ஒன்றில் ஒரு தடவை கண்டிருக்கின்றேன். அவரை அங்கு வரிசையில் அடையாளம் கண்டு கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும். அவரின் வளர்ப்பு நாயுடனேயே அங்கு வந்திருந்தார். இவர் ஏன் இங்கு வந்திருக்கின்றார் என்று எனக்கு சம்பந்தம் ஏதும் இல்லாத கேள்வி ஒன்றுக்கு சில கணங்கள் விடை தேடிக் கொண்டிருந்தேன். இங்கு ஒரு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வில் இவர்களை, இவர்களின் செயல்களை வெளிக் கொணர்ந்தார்கள். இவர்களில் பலர் ஒரு இரட்டை வாழ்க்கை வாழ்வதை அந்த நிகழ்வில் காட்டினார்கள். இதையே சில நண்பர்களும் எப்போதும், இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு பல காலம் முன்னிருந்தே, சொல்லிக் கொண்டிருந்தனர். இவர்கள் பகலில் பணத்தை சேகரித்து, இரவுகளில் கொண்டாட்டமாக இருப்பார்கள் என்று. இவர்களில் சிலரின் இரண்டாவது வாழ்க்கை வசதியானது என்று கூடச் சொல்லியிருக்கின்றனர். நண்பர்கள் ஆதாரம் எதுவும் இல்லாமல் வெறும் அனுமானமாகத் தான் சொன்னார்கள். இப்படி எங்களுக்கு நாங்களே மற்றவர்களில் தான் குறை, குற்றம் என்று சொல்லிக் கொள்வது எங்களின் குற்ற உணர்வைக் குறைக்கும் அல்லது முற்றாக இல்லாமல் செய்யும் ஒரு வழி. குற்ற உணர்வுடன் வாழ்வது ஒரு மருந்தற்ற கொடிய நோயுடன் வாழ்வது போலவே. ஆனாலும் நான் மாறவில்லை. ஏதோ கொடுத்துக் கொண்டேயிருந்தேன். ஒரு தடவை ஒரு பெண்ணும், ஒரு சிறு பிள்ளையும் மட்டையில் எழுதப்பட்ட செய்தியுடன் ஒரு சமிக்ஞையில் வீதியின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர். இது அவர்களின் ஒரு புது வழி, ஒரு புதிய நுட்பம் என்று ஏற்கனவே நாங்கள் எங்கள் வட்டத்தில் கதைத்திருந்தோம். ஒன்றும் கொடுக்கவே கூடாது, நீண்ட கால நோக்கில் இது எவ்வளவு தீன்மையை உண்டாக்கும் என்று ஆழமாக ஆரய்ந்தும் இருந்தோம். ஆனாலும், கண்ட அந்தக் கணத்தில், மனம் கேட்கவில்லை. மனம் புத்தியை வென்றது. பின்னர் ஒரு நாள், பொழுது கருகிக் கொண்டிருந்த ஒரு செக்கல் நேரம், என் வீட்டருகே இருக்கும் சமிக்ஞை விளக்கில் வாகனத்தில் நின்று கொண்டிருந்தேன். அவர்களின் வேலையும் முடியும் நேரம் என்பதால், அங்கு மட்டையுடன் நின்றவர் எழும்பியே நின்றிருந்தார். வாகனத்தை நோக்கி வந்தார். அன்றைய நாளில் அவருடைய கடைசி வருமானம் நானாகத்தான் இருந்திருக்க வேண்டும்...... ஆனால், இந்த மனிதருக்கு சற்றுத் தள்ளி ஒரு பெண் மிகப் பெரிய வயிறும், நிச்சயமாக அதனுள் ஒன்றைச் சுமந்த படியே, ஒவ்வொரு வாகனமாக எட்டி எட்டி அவர் கையில் இருக்கும் பூங்கொத்தைக் காட்டி வேணுமா என்று கேட்டபடியே மிக மெதுவாக வந்து கொண்டிருந்தார். பத்து டாலர்கள் என்று அவர் சொன்னதும் கேட்டது. சிறிது தள்ளி ஒரு வாளி நிறைய பல பூங்கொத்துகள் இருந்தது. அன்று அங்கு நான் வாகனத்தின் கண்ணாடியை இறக்கவே இல்லை. அதன் பிறகு மட்டையுடன் நிற்பவர் எவரையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஆனாலும் அன்று நான் ஒரு பூங்கொத்து வாங்காமல் விட்டது தப்பு என்று இன்றும் மனம் சொல்லிக் கொண்டிருக்கின்றது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.