Everything posted by ரசோதரன்
-
குறுங்கதை 21 -- கோட்பாட்டின் சதி
🤣.......... அப்படி இருந்தால் அந்தக் குடும்பம், பெரும்பாலும், தப்பிவிடும், அண்ணா.
-
குறுங்கதை 21 -- கோட்பாட்டின் சதி
இல்லை அல்வாயன், இது பைடன் - ட்ரம்ப் அவர்களின் கதை இல்லை. கொள்கைகள், கோட்பாடுகள் என்று இருப்பவர்கள் சிலரின் மனைவிகள் மனங்களில் என்ன இருக்கும் என்ற எண்ணமே இந்தக் கதை. இது புதிய ஒரு எண்ணம் இல்லை. இதைப் போல பல ஏற்கனவே வந்துள்ளன. யசோதரா, புத்தரின் மனைவி, தன் நிலையைச் சொல்வதாக சில கவிதைகளும், கதைகளும் வந்துள்ளன. ராகுலனின், புத்தரின் மகன், நிலையும் எழுத்தில் வந்துள்ளது. கற்பனைகள் தான். பாரதியார் செல்லம்மாள் அவர்களுக்கு எழுதிய கடிதங்களும், செல்லம்மாள் அவர்கள் பாரதியாரின் மறைவின் பல வருடங்களின் பின் சொன்ன விசயங்களும் நிஜத்தில் நடந்தவை. சதி என்பது மனைவி என்னும் சொல்லின் ஒத்த சொல் தானே. இங்கு 'கோட்பாட்டின் சதி' என்பது 'கோட்பாட்டின் மனைவி' என்பதையே. ஈழப்பிரியன் அண்ணா சொல்லியிருப்பது போல, பிள்ளைகள் பிறந்தவுடன் வாழ்க்கையில் ஒரு நெகிழ்வு வரவேண்டும். முக்கியமாக பெண் பிள்ளை ஒன்று பிறந்தவுடன். வாழ்க்கையில் இந்தக் கட்டத்தையும் இறுக்கமாகவே தாண்டினால், அதன் பின் ஒரு பெரிய தனிப்பட்ட இழப்பே, உதாரணம்: மிக அன்புக்குரியவர் ஒருவரின் மறைவு, ஒருவரின் பாதையை மாற்றும்.
-
குறுங்கதை 21 -- கோட்பாட்டின் சதி
🤣............... வசீக்கு எழுத்து நன்றாகவே வரும் என்று முன்னரே தெரியும். கற்பனையும் அபாரம்.......👍 அடுத்த காட்சியாக அந்த பஸ்ஸிலேயே ஒரு ஆக்ஷன் சீன் வைக்கலாம் அல்லது ஒரு எமோஷனல் சீன் வைக்கலாம்........😃.
-
குறுங்கதை 21 -- கோட்பாட்டின் சதி
🤣.... வசீயின் படமும் கொஞ்சம் கலங்கி ஒரு ஏலியன் மாதிரியும் தெரியுது.....😀.
-
குறுங்கதை 21 -- கோட்பாட்டின் சதி
👍...... அது தான் கடைசியாக வழங்கப்படும் இழப்பற்ற ஒரு சந்தர்ப்பம், அண்ணை. அதையும் விட்டால், ஒரு பெரும் தனிப்பட்ட இழப்பு வந்து வாழ்க்கையை புரட்டிப் போட்டால் தான் உண்டு............
-
குறுங்கதை 21 -- கோட்பாட்டின் சதி
கோட்பாட்டின் சதி ----------------------------- வார இறுதி நாட்களில் ஏதாவது ஒன்றின் பெயரால் ஒன்றாகக் கூடுவதும், அன்றைய அரசியலை, சினிமாவை, விளையாட்டுகளை அலசி ஆராய்வதும் புலம்பெயர் சமூகத்தின் ஒரு அடையாளம் ஆகிவிட்டது. சமூக ஊடகங்களை விட நேரில் ஒன்றாகக் கூடி விடயங்களைப் பகிர்வது மிக இலகுவான, சுமூகமான ஒரு செயல். இன்டெர்நெட்டில் அவர்களுக்குள் ஆவிகள் புகுந்தது போல சுற்றிச் சுழன்று அடிக்கும் பலர் நேரில் ஒரு வார்த்தை கூட கதைக்கமாட்டார்கள். ஒரு கருத்துமே அவர்களிடம் இருக்காது. அவர்களா இவர்கள் என்றும் தோன்றும். நிதானமான நிலையில், நேரிலும், இன்டெர்நெட்டிலும் தீ மிதிப்பின் போது வருவது போல கடும் உருக் கொண்டு உலாவுகின்றவர்கள் மிகச் சிலரே. எங்களின் வகுப்பு படித்த பாடசாலைக்கு எதற்கோ நிதி கொடுத்து, பின்னர் அது பெரும் பிரச்சனையாகியது. எல்லாமே வாட்ஸ்அப்பில் தான். அடுத்த வந்த ஒன்றுகூடல் ஒன்றில் கதைப்போம் என்று எல்லோரும் சுற்றி இருந்தால், இரண்டோ மூவரோ தவிர்த்து, வேறு எவரும் எதுவுமே சொல்லவில்லை. பந்தி பந்தியாக எழுதியவர்களால் கோர்வையாக எதையும் சொல்ல முடியவில்லை. இது மனதிற்கு பெரும் ஆறுதலைக் கொடுத்தது. விஸ்கியின் பின்னோ அல்லது காக்டெயிலின் பின்னோ கதைத்தால் அது வேற கணக்கு. ஒரு தடவை ஒரு இடத்தில் பெரும்பாலும் அமைதியாகவே இருக்கிற நண்பன் ஒருவன், அவன் நல்ல விவேகமானவனும் கூட, திடீரென்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டான். உள்ளுக்குள் இருந்த நண்பனின் மனைவி அவர்களின் சின்ன மகளிடம் 'அப்பாவின் சத்தம் கொஞ்சம் கூடக் கேட்குது, போய் என்னவென்று பார்த்து வா.....' என்று அனுப்பிவிட்டார். போய் பார்த்து விட்டு வந்த சின்ன மகள் 'அப்பா still standing.........' என்று சுருக்கமாக நிலவரத்தை சரியாகச் சொன்னார். அத்துடன் மனைவி சத்தத்தை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார். ஒரு இடத்தில் புதியவர் ஒருவரை அறிமுகப்படுத்தினர். சமீபத்தில் நாட்டின் வேறொரு பகுதியிலிருந்து இங்கு இடம் பெயர்ந்து வந்திருக்கின்றார். 'ஆள் கனக்க கதைப்பார்......' என்பது ஒரு இரகசியத் தகவலாகவும் சொல்லப்பட்டிருந்தது. அது சிறிது நேரத்திலேயே தெரிந்தும் விட்டது. எல்லா சதிக் கோட்பாடுகளையும் விரல் நுனியில் வைத்திருந்தார். 9/11 ஐ அமெரிக்கா எப்படி திட்டம் போட்டு முடித்தது என்று விளக்கினார். ஈராக்கை அடிக்க, மத்திய கிழக்கை வெருட்ட, அங்கிருக்கும் எண்ணை வளத்தை சுரண்ட என்று புள்ளிகளைப் போட்டு இணைத்தார். சந்திரனில் அமெரிக்கா இறங்கவே இல்லை என்றார். அமெரிக்கா அரிசோனா மாநிலப் பகுதியில் இருக்கும் பாலைவனத்தில் ஒரு போட்டோ ஷூட்டிங் செய்து தான் அந்தப் படங்களை எடுத்தார்கள் என்றார். இளவரசி டயானாவின் விபத்து. எகிப்தின் பிரமிட்டுகள். இப்படியே வரிசை போய்க் கொண்டிருந்தது. ஏலியன்ஸ் வந்து பிரமிட்டுகளை கட்டினது மட்டும் இல்லை, இன்றும் அவர்கள் எங்களுடன் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றார். எங்கள் இருவரில் ஒருவர் ஏலியனாகக் கூட இருக்கலாம் என்றார். அவர் கதைகளைத் தொடர தொடர, இவர்களுக்கு இவ்வளவு கொள்கைகளுடன் இரவில் நித்திரை எப்படி வரும், கண்களை ஆவது மூடுவார்களா என்ற சந்தேகம் எனக்கு வந்து கொண்டிருந்தது. 'பூமி தட்டை என்றும் சொல்கின்றார்களே............' என்று அவர் இடைவெளி விட்ட ஒரு கணத்தில் நான் ஒரு தலைப்பை எடுத்துக் கொடுத்தேன். பூமி தட்டையானது என்பதும் ஒரு பிரபலமான சதிக் கோட்பாடு. ஒருவர் பார்க்கும் போது எல்லாமே தட்டையாக, கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிவதே அதற்கு சாட்சி என்று சதிக் கோட்பாளர்கள் கூறுவார்கள். ஆனால் அவர் அந்த சதிக் கோட்பாட்டை ஒப்புக் கொள்ளவில்லை. பூமி உருண்டை தான் என்றார். இவர்களுக்கும் உட்பிரிவுகள் இருக்கின்றன என்று அன்று தெரிந்துகொண்டேன். ஒரு பெண்ணும், இரண்டு சிறுவர்களும் எங்களிடம் வந்தனர். அவரின் மனைவி, பிள்ளைகள் என்று அறிமுகப்படுத்தினார். பெரிய சிறுவன் பாடசாலை ஆரம்பித்திருந்தார். சின்னவர் இன்னும் போக ஆரம்பிக்கவில்லை. ஒரு சின்ன உரையாடலின் பின், பஸ்ஸுக்கு நேரம் ஆகி விட்டது என்று ஆயத்தமானார்கள். ஏன் பஸ், காரை திருத்த வேலைகளுக்கு விட்டிருக்கின்றீர்களா என்றேன். தன்னிடம் கார் இல்லை என்றார். இங்கு கார் ஒன்று இல்லாமல் வாழ்வது, அதுவும் குடும்பமாக, நினைத்தே பார்க்க முடியாத, நம்பவே முடியாத ஒரு விஷயம். கால்கள் இல்லாதது போல. ஏன் என்று கேட்க வாயெடுத்து விட்டு அப்படியே அதை விழுங்கிவிட்டேன். இவர்களிடம் அதற்கும் ஒரு கோட்பாடு இருக்கும். அவர் மனைவியை ஒரு தடவை பார்த்தேன். அவர் எப்போதோ வீதியைப் பார்க்க ஆரம்பித்திருந்தார்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
ஒரு எட்டு வருடங்களின் முன், இங்கு வேலையிலும்,வெளியிலும் சிலர் நேராகவே, வெளியாகவே பெண் ஒருவர் அதிபராக வருவதற்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று சொன்ன போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இன்னும் சிலரோ இதையே வெளியில் சொல்லாமல் இருந்திருக்கவும் கூடும். எட்டு வருடங்கள் ஆகி விட்டாலும், வெறும் கருத்துகளால் மனங்களில் மாற்றங்கள் உண்டாகும் வயதை அதற்கு முன்னேயே நாங்கள் தாண்டி விட்டோம், ஆகவே அவர்கள் இன்றும் அப்படியே இருப்பார்கள் என்றே நம்புகின்றேன். இப்பொழுது அவர்கள் சொல்லும் வார்த்தைகளில் ஏதும் வித்தியாசம் இருக்கலாம், உட்பொருளிலும் தெரிவுகளிலும் அநேகமாக எந்த மாற்றமும் இருக்காது. கமலா ஹாரீஸ் ஒரு எழுத்தாளராக முயற்சிக்கலாம். அவரிடம் அப்படியான ஒரு திறமை இருப்பது போலவே தெரிகின்றது. ஒரு வித 'தத்துவ அலட்டல்கள்' போன்றே அவரின் பேச்சுகள் இருக்கின்றன. இதுவே நடுநிலையில் நிற்கும் மக்களை அந்நியப்படுத்த போதுமானது. என்னுடைய இங்கு வாழும் இலங்கை மற்றும் இந்திய நண்பர்களில் மிகப் பெரும்பாலானோர் ஜனநாயக் கட்சியின் ஆதரவாளர்களே. அவர்கள் நேற்றிலிருந்து ஒரு புது உற்சாகத்துடன் இருக்கின்றார்கள். ஆனாலும் கலிஃபோர்னியா தேர்தல் கணக்கில் இல்லவே இல்லை என்பதும் அவர்களுக்கும் தெரியும். அமெரிக்காவின் ஆதிக்கம் என்பது அமெரிக்க அதிபர்களால் உண்டாக்கப்படுவதில்லை. அமெரிக்கா முதலாளிகளால், முதலாளிகளுக்காக மாற்றப்பட்ட ஒரு நாடு. ஆதிக்கம் அங்கிருந்தே உருவாக்கப்பட்டு பரப்பப்படுகின்றது. இன்று உலகில் கண்ணுக்கெட்டியவரை ஒரு மாற்று இல்லை என்பதே நிஜம். ஒரு பங்குச் சந்தை சரிவு, கோவிட் தொற்று, டாலரின் வீழ்ச்சி, கடைசியாக வந்த Antivirus என்று ஒவ்வொரு தடவையும், 'கதை முடிந்து விட்டது.........' என்று வெளியிலிருந்து பலரும் சொல்வார்கள். ஆனால் மாற்று கிடையாது. அமெரிக்காவின் ஆதிக்கம், அது பல வேளைகளில் மனிதாபிமானம் அற்றது தான், குறைக்கப்பட வேண்டும் என்றால், அது மற்றைய ஒவ்வொரு நாட்டிலிருந்துமே ஆரம்பிக்கப்படவேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் இருக்கும் உறவும், ஊடலும், தேவைகளும் போலவே உலகில் பல நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு தொடர்பு இருந்து கொண்டிருக்கின்றது. இங்கு எவர் அதிபரானாலும் அதில் மாற்றம் இல்லை.
-
இலான் மஸ்க் அடுத்த மாதம் இலங்கை வருகிறார்?
மக்டோனால்ட், பிட்சா ஹட்,....., ஐஃபோன், .........ஸ்டார்லிங்க்,........... அமெரிக்காவில் யார் அதிபராக வந்தாலும் இவை உலகில் எல்லா நாடுகளிலும் விற்கப்படும். உலகமே இவற்றை டாலர் கணக்கில் வாங்கிக் கொண்டு, யார் அடுத்த அமெரிக்க அதிபராக வர வேண்டும், வந்தால் தங்களுக்கு நல்லது என்பது தான் நவீன உலகின் வேடிக்கை..........😜.
-
'கைலாசா' பற்றி நித்தியானந்தா வெளியிட்டிருக்கும் புதிய தகவல்கள்
🤣...... நித்தி அப்பவே சேலத்தில் விநோத உடைப்போட்டியொன்றில் பங்கு பற்றியிருக்கின்றார். அவசரத்தில் பெரிய ஒரு தடியாக கையில் கொடுத்து விட்டார்கள்.......... 'கம்பி கட்டுகிற கதை....' என்று சொல்வது இன்று, அன்றைய நித்தியின் கதை 'கரண்ட் அடிக்க வைத்த கதை.......'. கைலாசாவில் மனிசனிடம் இருந்த தங்கத்தை கூட இருந்த இரண்டு அமெரிக்கர்கள் சுருட்டி விட்டதாகச் சொல்கின்றார்கள். வரவு = செலவு ..................
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
🤣..... ரஜனியும், விஜய்காந்தும் சிங்கப்பூரில் ஒரே மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்தார்கள்..... எங்களின் விதி ஒருவரைக் காப்பாற்றி வைத்திருக்கின்றது....😀
-
குறுங்கதை 19 -- கள்ளப்பந்து
❤️..... பந்தடியிலேயே காலம் போயிருக்கின்றது.....👍 அதே கதை தான் இங்கேயும், அண்ணை... இன்னும் சில வருசங்கள் தானே என்று போய்க் கொண்டிருக்கின்றது....😀
-
ஔவையாரின் மூதுரை
🙏.......... பாட்டிக்கு தமிழ் ஒரு கொடை. நினைப்பதை எல்லாம் இலகுவாக அப்படியே எழுதும் வல்லமை, பாரதியார் போன்றே, பாட்டிக்கும் வாய்த்திருந்தது. 'நாழி முகவாது நானாழி...........' என்ற தலைப்புடன் சமீபத்தில் ஒரு கட்டுரை வந்திருந்தது. கவிஞர் இசை எழுதியிருந்தார் என்று நினைக்கின்றேன்.
-
"பெண்ணை மதித்திடு"
தில்லை ஐயா, இது உண்மையிலேயே நடந்த சம்பவமா?
-
குறுங்கதை 20 -- தங்க மீன்கள்
நாங்கள் இரண்டு பேரும் சுவாமி விவேகானந்தர் சொன்ன தத்துவத்தை தவிர்த்து விட்டு, கடலில் தவளை இருக்குதா, அப்படியே இருந்தாலும் அது ஒரு கிணற்றில் எத்தனை நாள் வாழும் என்று வேறு ஆராய்ச்சிகள் தான் செய்து கொண்டிருக்கின்றோம்............😜. கன்யாகுமாரி போய் சுவாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டு, அப்படியே மோடிஜீ இப்ப தவமிருந்த குகையையும் பார்த்துக் கொண்டு வரவேண்டும்......🤣. உயிரும், உணர்வும் கலந்து போன இடத்திலிருந்து பிரித்து எடுத்து விட்டாலோ அல்லது பிரிந்து வந்து விட்டாலோ, அதன் பின் புது இடத்தில் ஒட்டுவது கஷ்டம் போல............. செடிகளை அடிக்கடி பிடுங்கி நடக்கூடாது என்பார்கள். எல்லா மண்ணுடனும் அப்படியே ஒட்டி விடாதாம்......
-
குறுங்கதை 20 -- தங்க மீன்கள்
தங்க மீன்கள் -------------------- சுவாமி விவேகானந்தர் அவரது புகழ்பெற்ற சிகாகோ சொற்பொழிவில் ஒரு தவளைக் கதை சொல்லியிருப்பார். கடலில் இருந்து கிணற்றுக்குள் விழுந்து விடும் ஒரு தவளை, அங்கேயே இருக்கும் தவளைகள், அவைகளின் உரையாடல்கள் என்று அந்தக் கதை போகும். இது எங்கேயும் எடுத்து விடுவதற்கு நல்ல வசதியான ஒரு கதை. 'என்னையே தவளை என்று சொல்கிறியா..........' என்று எந்த விவாதத்தையும் வாக்குவாதமாக மாற்றக் கூடிய தன்மையுள்ளது சுவாமியின் இந்தக் கதை. கதையின் சாராம்சத்தை, அதிலுள்ள தத்துவத்தை விட, எனக்குப் பிரச்சனையாகவே இருந்தது கடல் தவளை ஒன்று கிணற்று நீருக்குள், அந்தச் சின்ன வட்டத்திற்குள் உயிர் வாழுமா என்னும் உயிரியல் சந்தேகமே. கலர் கலரான கடல் மீன்கள் வட்டி என்று சொல்லப்படும் முருகைக்கல் பகுதியில் கூட்டம் கூட்டமாக ஓடித் திரியும். அவைகளை பிடித்து வந்து வீட்டுக் கிணற்றுக்குள் விட்டிருக்கின்றேன். அடுத்த அடுத்த நாட்களில் அவை கிணற்று மேல் நீரில் உயிரற்று மிதந்து கொண்டிருக்கும். ஒரு தடவை நண்பன் ஒருவன் இரண்டு வளர்ப்பு மீன் குஞ்சுகள் கொடுத்தான். கோல்ட் ஃபிஷ், தங்க மீன் குஞ்சுகள். ஒரு பொலித்தீன் பைக்குள் தண்ணீர் நிரப்பி மீன் குஞ்சுகளை உள்ளே விட்டு எடுத்து வந்தேன். வீட்டில் மீன் தொட்டி கிடையாது. என்ன செய்வது என்று தெரியாமல், குஞ்சுகளை கிணற்றுக்குள் விட்டு விட்டேன். கிணறு இருபது அடிகள் ஆழமிருக்கும், அதில் எப்போதும் ஆறு அடிகளுக்கு தண்ணீர் இருக்கும். சுற்றுவட்டாரக் கிணறுகளில் நீர் உப்பாக இருந்தாலும், எங்கள் வீட்டுக் கிணறு உப்பு இல்லை. அப்பப்ப கிணற்றுக்குள் குதித்து ஏற்கனவே சில தடவைகள் அடி வாங்கியிருக்கின்றேன். குடிக்கிற தண்ணி கிணற்றுக்குள் குதித்தால் அடிக்காமல் என்ன செய்வார்கள்? இன்னும் சில அடிகளையும் தாங்கிக் கொண்டு, தேவையென்றால், கிணற்றுக்குள் குதித்து இரண்டு குஞ்சுகளையும் பார்த்துக் கொள்வோம் என்ற ஒரு இரகசிய திட்டமும் என்னிடம் இருந்தது. இரண்டு குஞ்சும் அப்படி ஒரு வேகத்தில் வளர்ந்தன. இடைக்கிடை மேல் நீருக்கு வந்து போய்க் கொண்டும் இருந்தன. நீருக்குள் இருக்கும் பொருட்கள் கொஞ்சம் பெரிதாகத் தான் தெரியும். அதனால் இந்த இரண்டு தங்க மீன்களும் உண்மையில் எவ்வளவு தான் பெரிது என்று ஒரு தடவை கிணற்றுக்குள் குதித்தே பார்த்தேன். அந்த அளவில் தங்க மீன்கள் அங்கு எங்கேயும் இருக்கவேயில்லை. அம்மாவிற்கு அந்த மீன்களை மிகவும் பிடித்து விட்டது. நேரம் கிடைக்கும் போது போய் கிணற்றை எட்டிப் பார்ப்பார். தான் பார்க்கும் போதெல்லாம் அந்த மீன்கள் மேலே வருகின்றன என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். நாட்கள் போகப் போக, கிணற்றுக் கட்டிலும் இருக்கத் தொடங்கினார். தண்ணி அள்ளும் போது வாளியை பார்த்து போடும் படியும் எங்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தார். தங்க மீன்களில் கிணற்று வாளி தப்பித்தவறியும் பட்டு விடக் கூடாதாம். அப்பாவின் நண்பர் ஒருவரின் வீட்டில் மீன் தொட்டி ஒன்று செய்தார்கள். பெரிய மீன் தொட்டி, ஐந்து அடி நீளம் இருக்கும். ஊரில் அப்பொழுது பலரும் மீன் தொட்டிகள் செய்தனர். நானும் போய் அந்த மீன் தொட்டியைப் பார்த்தேன். நன்றாகவே இருந்தது. ஆனாலும் எங்களின் தங்க மீன்களுக்கு கிணறே சரியென்று தோன்றியது. ஒரு நாள் காலையில் வெளியே போன நான் பின்னேரமே வீடு திரும்பினேன். முக்கால்வாசி நாட்கள் இப்படியானவையே. அம்மா ஓடி வந்து, மீனைப் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள் என்றார். சொல்லும் போதே கோபமும் சோகமும் அம்மாவில் தெரிந்தது. அப்பாவின் நண்பர்கள் வீட்டில் இருந்து வந்து பிடித்துப் போனதாக அம்மா சொன்னார். அத்தாங்கு போட்டு, அதற்குள் சோற்றுப் பருக்கைகளை போட்டு, எங்களின் தங்க மீன்களை ஏமாற்றிப் பிடித்து இருந்தார்கள். அப்பா அசரவேயில்லை. அப்பாவின் நண்பர் வீட்டுக்காரர்கள் இரண்டு நாட்களில் எங்கள் தங்க மீன்களை திருப்பிக் கொடுத்து விடுவார்கள் என்று மிகச் சாதாரணமாக சொன்னார் அப்பா. இரண்டு நாட்களில் வந்து விடும் தானே என்று அம்மாவும், நானும் கொஞ்சம் ஆறுதல் அடைந்தோம். இரண்டு நாட்களின் பின், எங்களின் தங்க மீன்கள் அங்கே தொட்டியில் இறந்து விட்டதாக சேதி வந்தது. அம்மா நாங்கள் அங்கே அந்த வீட்டில் இருக்கும் வரை கிணற்றை இடைக்கிடை எட்டிப் பார்த்தபடியே இருந்தார்.
-
நாட்டில் இன்னுமொரு சர்வதேச விமான நிலையம்
🤣............ நீங்கள் இருவரும் ஒரே விடயத்தை வேறு வேறு விதமாக சொல்லியிருக்கின்றீர்கள்.......👍 எல்லாம் முடிந்து, இதுவும் ஒரு அரிசிக் குடோன் ஆகிய பின், இதில் ஊழல் இருக்கின்றது என்று யாராவது ஆதாரபூர்வமாக நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகுகின்றேன் என்றும் சொல்லப் போகின்றார்கள்......நேற்றும் அங்கு ஒருவர் சொல்லியிருந்தார்........🫣.
-
நாட்டில் இன்னுமொரு சர்வதேச விமான நிலையம்
🙃........... அம்பாந்தோட்டைப் பகுதியில் ஏற்கனவே கட்டி வைத்திருப்பதையே அரிசிக் குடோனாக மாற்றலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்களே..............
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
🤣........... ரஜனி அம்பானி வீட்டு கல்யாணத்தில நிற்கும் போது தான், 'இந்தியன் -2' கன்ஃபார்மாக தோல்வி என்ற செய்தி அவருக்கு சொல்லப்பட்டதாம். மனுசன் அந்த சந்தோசத்தில தான் தத்து பித்தென்று இப்படி ஒரு ஆட்டம் போடுது...........🤣. நீங்கள் சொன்னது மிகச் சரியே.......... 'ஈயத்தை பார்த்து இளிச்சதாம் பித்தளை....' என்பது போல ஒரு நடிகரின் ரசிகர்கள் மற்றைய நடிகர்களை கழுவி ஊத்துவார்கள்.............
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
👍.... கமல் ரசிகர்கள் கமல் படத்திற்கு போவார்கள்...... ரஜனி ரசிகர்கள் ரஜனி படத்திற்கு போவார்கள்........ விஜய் ரசிகர்கள் விஜய் படத்திற்கு போவார்கள்......... ........ படங்கள் மட்டும் என்று இல்லை...... உலகில் எல்லா விடயங்களும் இந்த மாதிரித் தான் போய்க் கொண்டிருக்கின்றன.
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
'நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்............' என்று இந்தியன் - 3 வெளியாவது பற்றி ஒரு பகிடி இந்த வாரம் சுற்றிக் கொண்டிருந்தது. இங்கு முதல் நாளிலிருந்தே இந்தியன் - 2 க்கு டிக்கட் விலை ஐந்து டாலர்கள் தான். தெலுங்கு பதிப்பை முதல் நாளே தூக்கியும் விட்டார்கள். வழமையாக பெரிய பட்ஜெட் படங்களுக்கு 12 இலிருந்து 25 டாலர்கள் வரை இருக்கும் டிக்கட் விலை.
-
குறுங்கதை 19 -- கள்ளப்பந்து
🤣................ அடிடாஸ் அந்த வருடம் ஒரு ஆர்வக் கோளாறால் தேவையில்லாத ஒன்றைச் செய்தது. பிறகு இன்னுமொரு பந்து விட்டார்கள். அதில் 12 துண்டுகள் என்று நினைக்கின்றேன். இப்ப உலகம் பழையபடியே, பெரும்பாலும், 32 துண்டுகள் தான் சரி என்ற முடிவிற்கு வந்துவிட்டது. அதே போலத் தான், ஆர்வக் கோளறுகளால், நாங்களும் வழி வழியே தேவையில்லாத சில வேலைகளைச் செய்திருக்கிறோம் போல...........😜.
-
பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு - சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன
🤣......... 'புளூ ஸ்கிரீன்' தான் வருகின்றதாம், நீங்கள் போட்டிருப்பது போலவே .......... 15 தடவைகள் நிற்பாட்டி நிற்பாட்டிப் போட்டால், 16 வது தடவையிலிருந்து ஒழுங்காக வேலை செய்யும் என்று ஒரு உத்தியோகப்பற்றற்ற தீர்வும் சொல்லப்பட்டிருக்கின்றது............... 🫣.
-
குறுங்கதை 19 -- கள்ளப்பந்து
கள்ளப்பந்து ------------------ கட்டுப்பந்தில் தான் ஆரம்பத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். ஒரே பந்தை தைத்து தைத்து ஒரு வருடம் கூட வைத்திருப்போம். காற்று உடனேயே போகுது என்று தெரிந்தால், உள்ளுக்குள் இருக்கும் பிளாடரை வெளியே எடுத்து, தண்ணீர் வாளிக்குள் அமுக்கி, எங்கே ஓட்டை என்று கண்டுபிடித்து ஒட்டுவோம். ஒரு பந்தின் மேற்பகுதி முப்பத்தி இரண்டு துண்டுகளால் ஆக்கப்பட்டிருக்கும். அதில் இருபது அறுகோண துண்டுகள், பன்னிரண்டு ஐங்கோண துண்டுகள். ஒவ்வொரு துண்டையும் நாங்கள் 'ஓ' என்ற பெயரில் தான் சொல்லுவோம். 'ஓ' பிய்ந்து விட்டது, 'ஓ' மாற்ற வேண்டும், இப்படித் தான் முப்பத்தி இரண்டில் எந்த துண்டும் குறிப்பிடப்படும். ஏன் ஒரு துண்டை 'ஓ' என்று சொல்கின்றார்கள் என்று இன்று வரை தெரியாது. அத்துடன் ஊரில் பயன்பாட்டில் இருக்கும் சில சொற்களுக்கு நான் வேறெங்கும் விளக்கமும் கேட்பதில்லை. 'இது தமிழா....... நீ தமிழனா........' என்ற மாதிரி பார்த்து விடுவார்களோ என்ற பயம். பின்னர் ஒட்டுப்பந்து வந்தது. கப்பலில் போய் வருவோர் கொண்டு வந்து கொடுத்தனர். அதுவும் பெரிய கழகங்களுக்கு மட்டுமே கொடுத்தனர். எல்லோருக்கும் ஒரு பெரிய கழகமும் இருந்தது. அங்கே போய் அந்த பந்தை விளையாட கொடுங்கள் என்று கேட்டால், இலேசில் கொடுக்கவும் மாட்டார்கள். ஒட்டுப்பந்தில் விளையாட சில மேலதிக விதிகளும் இருந்தன. முதலாவது, கண்டிப்பானது, ஒட்டுப்பந்தை சுவரில் அடிக்கக் கூடாது. ஒட்டுப்பந்தில் தையல் இல்லை. ஒட்டுப் பிரிந்தால் பந்தை தூக்கி எறிய வேண்டும் என்ற நிலை ஆரம்பத்தில் இருந்தது. பின்னர் ஒட்டுப்பந்தை அது பிரிந்தால் எப்படி ஒட்டுவது என்று உள்ளூரிலேயே ஒரு வழி கண்டுபிடித்தனர். 2010ம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் கால்பந்து உலகக் கோப்பை நடந்தது. அடிடாஸ் நிறுவனம் ஒரு பந்தை அந்த உலகக் கோப்பைக்காக தயாரித்திருந்தார்கள். பலருக்கும் அந்தப் பந்து இப்பொழுதும் ஞாபகம் இருக்கும். அந்தப் பந்தை எல்லா உலகக் கோப்பை விளையாட்டு வீரர்களும் திட்டித் தீர்த்தனர். மொத்தமே எட்டுத் துண்டுகளால் தான் அந்தப் பந்து செய்யப்பட்டிருந்தது. அடித்த பந்து வளையாமல் நேரே போனது, வேகத்தை வேறு மாதிரி இழக்கின்றது என்று அந்தப் பந்தில் பல குற்றச்சாட்டுகள். கடைசியில் நாசாவும் அந்தப் பந்தை வைத்து சில பரிசோதனைகள் செய்து ஒரு அறிக்கை வெளியிட்டது. எண்ணற்ற தடவைகள் தைத்தும், ஒட்டியும் விளையாடிக் கொண்டிருந்த எங்களின் பந்து கடைசியில் மோசம் போய்விட்டது. அப்பொழுது பருத்தித்துறையில் இருந்த யுனைடெட் புத்தக சாலையில் பந்து விற்பார்கள். ஒரு பந்திற்கு அவர்கள் சொன்ன மிகக் குறைந்த விலையே எங்களை விற்றாலும் வராது. பக்கத்து ஒழுங்கையில் போய் ஒரு மாட்ச் விளையாடுவோமா என்று கேட்டோம். விளையாடலாம், ஆனால் நாங்கள் பந்து கொண்டு வர வேண்டும் என்றார்கள். ஏன், உங்கள் பந்திற்கு என்ன நடந்தது என்று கேட்டோம். எங்கள் பந்து மோசம் போன கதையை சொல்லாமலேயே. அவர்களுடைய பந்தில் பல இடங்களில் 'ஓ' பிய்ந்து விட்டதால், கடையில் தைக்கக் கொடுத்திருப்பதாகச் சொன்னார்கள். உடுப்பிட்டி வீதியில் உடுப்பிட்டிச் சந்திக்கு அருகில் செருப்புகள், பந்துகள் போன்றன தைக்கும் கடை இருந்தது. அடுத்த நாள் நாங்கள் சிலர் அங்கே போய், பந்து தைக்க கொடுத்தோமே, முடிந்து விட்டதா என்று கேட்டு, அந்தப் பந்தை வாங்கி வந்துவிட்டோம். பின்னர் பக்கத்து ஒழுக்கைக்காரர்கள் போய் அதே பந்தைக் கேட்டிருப்பார்கள் தான். அவர்கள் சில மாதங்கள் ஒரு பந்தில்லாமல் வெறுமனே சுற்றித் திரிந்தார்கள். அந்தப் பந்தில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், அந்தப் பந்தில் 32 துண்டுகள் இருக்கவில்லை. அந்த பந்து தைப்பவர், அடிடாஸ் நிறுவனம் போலவே, தானே ஒரு புது டிசைனில் பந்துத் துண்டுகளை செய்து தைத்திருந்தார். அவை அவரிடம் மிஞ்சி இருந்த துண்டுகளாகவும் இருந்திருக்கும். அந்த உலக கோப்பை பந்தைப் பற்றி ஒரு வீரர் அன்று சொன்னது: இந்தப் பந்தை செய்தவர் வாழ்நாளில் கால்பந்து விளையாடவில்லை என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
-
பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு - சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன
🤣.......... அதுவும் சரி தான், சிறி அண்ணை.......... நாளைக்கு ஆதவன் ஒன்று போடுவார்கள் பாருங்கள்........... CrowdStrike என்பதை 'கூட்டத்தின் தாக்குதல்' என்று மொழிமாற்றம் செய்யும் அளவிற்கு அவர்களிடம் ஆட்கள் இருக்கின்றார்கள்......🤣.
-
பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு - சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன
🤣........... மூன்றாம் உலகப் போரை தொடங்காமல் விட மாட்டோம் போல...... CrowdStrike நிறுவனத்தின் தலைவரே என்ன நடந்தது என்று விளக்கம் அளித்து விட்டு, மன்னிப்பும் கேட்டுள்ளார். இங்கேயும் புடினா........ அமெரிக்காவின் பெரிய 500 நிறுவனங்களில் அரைவாசி நிறுவனங்கள் CrowdStrike இன் Anti-Virus Software உபயோகிக்கின்றார்கள். அதில் மைக்கிரோசாப்ட்டின் ஆபரேட்டிங் சிஸ்டம் உள்ளவர்கள் மட்டுமே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். மற்றவர்கள் நாங்களும் ஏன் CrowdStrike மென்பொருளை எங்கள் நிறுவனத்தில் பாவிக்கவில்லை என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்......... வெள்ளிக்கிழமை வேற.........