Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

shanthy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by shanthy

  1. நீங்கள் கவிதையை கேட்கேல்ல போல. கவிதையில் கவிஞர் ஒருவரை சனியன் எண்டு சொல்றார். அவரைத் தான் சொன்னேன்.😀
  2. கோரோனா கவிதை பேச்சு வழக்கில் எழுதியிருக்கிறீரகள். சொற்களை செருகாமல் அழகான வாசிப்பு நன்று. வந்த சனியன் இப்போதைக்கு போகாது கவிஞரே.
  3. எழுதப் பஞ்சியில தொடருவியள் போல. பேசாமல் எழுதி முடியுங்கோ விசுகு.
  4. பெயர் பிரச்சினை பெரிய தொடர். ஏன் எங்களுக்கு குடும்ப பெயர் இல்லாமல் போனது என்பது பலமுறை யோசித்திருக்கிறேன். எங்கள் பெயர்களை வெளிநாட்டவர்கள் உச்சரிக்க பெரும் சிரமப்படுவார்கள். அவர்கள் சிரமம் என்றால் அதற்கு நான் அவர்களுக்கு சொல்வேன் உங்கள் மொழியும் எனக்கு சிரமமாகத் தான் இருந்தது. அதை சிரமப்பட்டுத் தான் நானும் கற்றுக் கொண்டேன். எனது அப்பாவின் பெயர் ஆனந்தசடாட்சரம். அதை யேர்மனியில் இழுத்து நீட்டி அலுவலகங்களில் கூப்பிடுவார்கள். அதற்கு ஒவ்வொரு இடத்திலும் மன்னிப்பு கேட்பார்கள். சிலர் தலையைப்பிடித்து ஒருதரம் சொல்வாயா உன் பெயரை என்று கேட்டால் நமது தன்மானத்தை சீண்டுவது போலிருக்கும். அப்படி கோட்போரிடம் அவர்கள் பெயரைக் கேட்பேன். அவர்கள் பெயரை சரியாக உச்சரிக்க முடியும் ஆனால் நான் இழுத்து நீட்டி முறிப்பேன். தங்கள் பெயரை அப்படி தவறாக உச்சரிக்க விடாமல் திருந்துவார்கள். அவர்களுக்கு நான் சொல்வது "இதுபோல் என் பெயரையும் உச்சரியுங்கள்" தொடர்ந்து பழக்கப்பட்ட இடங்களில் ஆனந்தா என்று அடிவாங்காமல் சுருக்கி கூப்பிடுவார்கள்.
  5. அண்ணோய் திருமூலர் அருளிய திருமந்திர மூச்சுப்பயிற்சி நன்றாக செய்கிறீர்கள். அதுதான் செவ்வாயில் அமிலம் சுரந்திருக்கிறது. சத்துணவு களில் கிடைக்காத 24வகையான விற்றமின்கள் கிடைக்கும் என ஆய்வுகள் சொல்கிறது. பி.கு :- திருமூலர் அருளிய திருமந்திரம் படித்துப் பயனடைக. 😷
  6. கண்மணி உங்கள் சிறுகதை போல யேர்மனியில் ஒரு நகரில் துருக்கியர்கள் வீட்டிலும் டிசம்பர் மாதம் நடந்தது. கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த மனைவி மீது கணவர் சுடுநீரால் ஊற்றி விட்டார். கொரோனா என்பது உலக அரசியல் சும்மா சனத்தை அடக்கும் தந்திரம் என்றெல்லாம் எம்மவர் பலரும் கருதுகின்றனர். இதுவே பேராபத்தான சிந்தனை. அரசு விதித்துள்ள தடைகள் விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எங்களை மட்டும் அல்ல மற்றவர்களையும் பாதுகாப்பதற்கான உதவியாக எல்லோரும் உணர வேண்டும்.
  7. வெள்ளிக்கிழமை வரை நிற்க வைச்சிட்டு போறது நல்லமில்லை சிறி Bro. 😷
  8. புத்தா முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும்.எங்க ஆளைத் காணேல்லயெண்டு நினைச்சேன். முருகனை மறக்காமல் திரும்ப வந்திட்டீங்கள். யேர்மனியில் நிறம் பொருந்த மாஸ்க் போடேலாது. 😷
  9. தம்பி தனியொருவனாக நிக்கிறியள் கவனம். மிச்சத்தை யும் வாசிக்க காத்திருக்கிறேன்.
  10. நீங்கள் இணைத்ததை நான் கவனிக்கவில்லை பிரபா சிதம்பரம்பரநாதன். மன்னிச்சு கொள்ளுங்கோ ராசா.
  11. பகலவனுக்கு இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  12. அண்ணே உங்கள் குழப்படி கூடிப்போச்சு. தமிழ்சூரியன் எங்கை அந்த கம்பு.
  13. வருடம் தோறும் வந்து போகும் நாள்போலவே அல்லாமல் இந்த வருடத்து பிறந்தநாள் புதிய நாள் போல விடிந்தது. முதல் வாழ்த்து என் நீண்டகால தேடலின் பரிசாய் கிடைத்த தோழன் முதல் வாழ்த்தோடு பொழுது விடிந்தது.சரியாக 12.01இற்கு வந்த வாழ்த்து. அந்த நண்பன் சிறந்த கலைஞன். 2009இன் பின்னர் களத்தில் வீழ்ந்தானா காணாமல் போனானா என தேடித்திரிந்து கண்டடைந்த போது கிடைத்த மகிழ்வு மீள அவனை சந்தித்தில் உயிரே திரும்பி வந்தது போலிருந்தது. இனியெப்போதும் காணும் நிலையில்லையென்றிருந்த போது இனியும் வருவேன் என்பது போல் வந்த அவன் வாழ்த்தும் பிறந்தநாள் பரிசும் இம்முறை பிறந்தநாளை சிறப்பாக்கியது. அடுத்து 2வது தம்பி பகலவனின் வாழ்த்து வந்து சேர்ந்தது. யாழ் கள உறவுகளின் வாழ்த்துக்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.
  14. அஞ்சரனுக்கு இனிமையான பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் .
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் சிறி.
  16. நிழலி தனது இன்றைய பிறந்தநாளை விழாவாக கொண்டாடாமல் மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வாழும் 120 பிள்ளைகளுக்கு சத்துணவு வழங்கியுள்ளார். நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இன்றையநாளை குழந்தைகளுடன் செலவழித்த எங்களது குழுவினர் இரவாகிவிட்டது. அதனால் படங்கள் செய்தி நாளை பதிவிடுவேன். இவ்வுதவியை செய்த நிழலிக்கு நன்றிகள். ஏற்கனவே கடந்த 3வருடங்களுக்கு மேலாக நிழலியும் அவரது மனைவியம் மாவீரர்களின் பிள்ளைகள் இருவரை மாதாந்து உதவி கொடுத்து பராமரித்து வருகிறார்கள். அத்தோடு மாவீரர்களின் அம்மா ஒருவருக்கு மாதம் உதவி வருகிறார்கள். நண்பனே ! இனிமையான 40 வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  17. மேஜர் சிட்டு 43வது பிறந்தநாள் நினைவுகளோடு. http://www.youtube.com/watch?v=efQhqFpXnY8&feature=youtu.be
  18. எங்கள் கள உறுப்பினரும் சமூகசேவகருமான திரு.விசுகு அவர்களுக்கு இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மேலும் மேலும் தங்கள் பணிகள் சிறக்க பாராட்டுக்கள்.
  19. கனவுகள் மெய்ப்பட வேண்டும் நினைத்த காரியம் யாவுமே வென்றிட அமைதியும் மகிழ்ச்சியும் என்றுமுன் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் சுபேஸ்.
  20. கரும்புலி ரெட்ணாதரனுக்கு வணக்கம் செய்த அனைவருக்கும் நன்றிகள். வாழும் போது கற்பூரமாக வாழ்ந்து கடைசியில் காற்றாகிப் போன ரெட்ணாதரன் போன்ற பலரின் நினைவுகளை வரலாறுகளை இயன்றவரை சேமிப்போம்.
  21. வாகரையில் கரைந்த வரலாறு மேஜர் ரெட்ணாதரன். கரும்புலி மேஜர் ரெட்ணாதரன் குமாரசாமி ஆனந்தன் வீரப்பிறப்பு – 04.05.1975 வீரச்சாவு - 09.08.1999 கோடைமேடு எருவில் களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு. அழகின் இரகசியங்களையெல்லாம் தனக்குள்ளே பூட்டி வைத்திருக்கும் கிழக்கின் கிராமங்களில் களவாஞ்சிக்குடி கோடைமேடு கிராமத்தின் அழகையும் வளத்தையும் வற்றா ஊற்றாய் வடித்தால் அது பொய்யாகாது. நீரை நிறைத்த அழகான குளமும் அதன் மீது தன் இதழ்களால் வர்ணங்களை அப்பிடி வைத்திருக்கும் பூக்களும் , பறவைகளும் , மீன்களும் பசுமையின் ரம்மியத்தில் கரைந்து போய்விடும் மனசு. இத்தனை ரம்மியங்கள் நிறைந்த கோடைமேடு கிராமத்தில் குமாரசாமி , பூரணிப்பிள்ளை இணையருக்கு ஆனந்தன் என்ற குழந்தை வந்துதித்தான். ஆனந்தன் அர்ச்சுனனின் வீரத்தையும் அபிமன்யுவின் விவேகத்தையும் கொண்டவனாகவே வந்து பிறந்தான். கிழக்கின் விடிவெள்ளிகளில் ஒருவனாகி அவன் ஒருநாள் விடி நட்சத்திரமாவான் என்ற உண்மையை காலம் எழுதி வைத்தது. அவன் கடவுளின் குழந்தையாகவே பிறந்தான் வளர்ந்தான் வாழ்ந்தான் வரலாறாகினான் என்பதையும் காலம் தன் பொன்னேட்டில் பொறித்தும் கொண்டது. கல்வியில் சிறந்த மாணவனான ஆனந்தன் விவசாயத்தை நம்பிய உழைப்பாழியான அவனது தந்தைக்கு கல்வி நேரம் தவிர்ந்த நேரங்களிலெல்லாம் கைகொடுத்துக் கொண்டிருந்த தர்மன் அவன். புயலின் வீச்சையும் வேகத்தையும் அவன் பங்கு கொள்ளும் விளையாட்டுகளில் வெளிப்படுத்தும் சிறந்த விளையாட்டு வீரன். அமைதியான நீரோடையின் அசைவில் கேட்கும் மெல்லிய சங்கீதம் போல எப்போதுமே அவனது பார்வையும் பேச்சும் தன்னடக்கமும் எல்லோரையும் மதிக்கும் பண்பையும் கொண்ட மகத்தானவன். அடக்குமுறையாளர்களின் அக்கிரமங்களை , ஆதிக்க வெறியர்களின் அநியாயங்களையெல்லாம் அவனது கிராமமும் காலத்துக்குக் காலம் சந்தித்துக் கொண்ட சோகவரலாறுகள் பலதைத் தன்னோடு சுமந்து கொண்டிருந்த துயரங்கள் ஆனந்தனையும் தாக்காமல் கடந்து போகவில்லை. பயமும் , பதற்றமும் , பலியெடுப்புகளின் இரத்த வாடையும் ஆனந்தனின் ஞாபகப்பதிவில் பதியப்பட்ட ஆறாத வடுக்கள் அவனது குழந்தை நெஞ்சில் நீங்காத துயரத்தை நிரந்தரமாக்கியது. 2ம் கட்ட ஈழப்போர் தொடங்கிய 90களின் நடுப்பகுதியில் அவனது பிறந்த ஊரையும் அவனது மாவட்டத்தையும் பிணக்காடாக்கிக் கொண்டிருந்தது இனவாத சிங்களம். 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள இராணுவ வெறியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வெட்டியும் குத்தியும் சுட்டும் தமிழ் உயிர்கள் பலியெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த கொடுமை நிறைந்த நாட்கள். 12.06.1990அன்று கழுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினரைச் சுற்றிவளைத்துப் புலிகள் தாக்குதலைத் தொடுத்திருந்தார்கள். எதிரி கிராமங்களை நோக்கி உட்புகுந்து கொண்டிருந்தான். வீடுகளில் சமைக்கப்பட்ட உணவுகள் , சொத்துகள், உடமைகள் யாவையும் விட்டுவிட்டு தங்கள் சொந்த ஊர்களை விட்டு வெளியேறி அயல்கிராமங்களில் அடைக்கலம் புகுந்தார்கள். ஊர்கள் அமைதியாகியது. கொலைஞர்கள் தங்கள் முகாம்களுக்குப் போயிருப்பார்கள் என நம்பினர் மக்கள். முதல்நாள் பசியோடு ஊரைத்துறந்தவர்கள் மறுநாள் பசிக்களைப்போடு தங்கள் வீடுகளை அடைந்தார்கள். ஆனந்தனும் அவனது குடும்பமும் தங்கள் சொந்த வீட்டிற்கு வந்தார்கள். முதல்நாள் சமைத்து வைத்த உணவை ஆனந்தனும் அவனது குடும்பத்தினரும் சாப்பிடத் தொடங்க அங்கே பேரதிர்ச்சி அவர்களைத் தாக்கியது. ஊரைவிட்டுப் போய்விட்டார்களென நம்பி ஊர் வந்தவர்களின் வளவுகளில் ஒளித்திருந்த சிங்களப்படைகள் துப்பாக்கி முனையில் அவர்களைச் சூழ்ந்தார்கள். ஆனந்தனின் குடும்பத்தோடு அயலவர்களையும் சேர்த்து 17பேரை களவாஞ்சிக்குடி முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். தங்கள் பாதுகாப்புக்காக அவர்களைத் தங்கள் முகாமுக்கு அழைத்துச் சென்ற சிங்களப்படைகள் அந்தப் 17பேரையும் வீடுகளுக்குச் செல்லுமாறு பணித்தார்கள். உயிர் தப்பிய நிம்மதியில் அவர்கள் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். வெடிச்சத்தங்கள் அவர்களின் நடையின் வேகத்தைத் தளர்த்திப் போட்டது. செல்லும் வழியெங்கும் வெட்டியும் , குத்தியும் , சுட்டும் படுகொலை செய்யப்பட்ட பிணங்களை எண்ணிக் கொண்டே அவர்கள் வீடுகளை அடைந்தார்கள். அன்று 43அப்பாவித் தமிழ் உயிர்கள் சிங்கள கொலைகாரப்படைகளால் கொன்றொழிக்கப்பட்டிருந்தார்கள். ஆனந்தனின் அமைதியான முகத்தில் ஆயிரக்கணக்கான கேள்விகள்.....! அவன் கண்முன்னே பிணங்களாகக் கிடந்த மனிதர்களின் நினைவுகள் அவனது அமைதியைக் கொன்றது. எருவில் கண்ணகி வித்தியாலயத்தின் கல்வி பயின்று கொண்டிருந்தவனின் பாதையை மாற்றிய ஆதிக்க சிங்கள வெறியர்களின் பலியெடுப்புகள் அவனது கல்வியைத் தொடர முடியாமல் தடுத்தது. க.பொ.தா.சாதாரணதரத்தோடு கல்வியை நிறுத்திவிட்டு விடுதலை வேண்டிய புனிதப்பாதையில் ஆனந்தன் புலியாகினான். மென்மையான இயல்பும் மிருதுவான சிந்தனைகளையும் கொண்ட ஆனந்தன் பயிற்சிக்குச் சென்று பயிற்சி முடித்து ஆயுதம் ஏந்திய போது இரும்பின் இறுக்கத்தையும் இமயம் வெல்லும் ஒழுக்கத்தையும் இலட்சிய உறுதியையும் பெற்றுக் கொண்டு வெளி வந்தான். ஒரு போராளியாக களமாடும் புலிவீரனாக பரிணமித்த ஆனந்தன் என்ற சொந்தப் பெயரைக் கொண்ட ரெட்ணாதரனென்ற ஆற்றளானனை புலிகள் இயக்கம் பெற்றுக் கொண்டது. களமாடும் தருணத்தில் நெருப்பின் மையமாக போரிடும் ரெட்ணாதரனின் திறமையை மருத்துப்பிரிவு உள்வாங்கிக் கொண்டது. மருத்துவப் போராளியாக துப்பாக்கி ஏந்திய கையில் மருத்துவக் கருவியைத் தாங்கிக் கொண்டு களங்களில் நின்றான். அவனது முதல் மருத்துவப்பணி பூனகரி கூட்டுப்படைத்தளம் மீதான புலிகளின் தாக்குதலின் போதே ஆரம்பமானது. முதல் களமருத்துவ அனுபவத்திலிருந்தும் அவன் கற்றுக் கொண்ட விடயங்களிலிருந்தும் தன்னை மேலும் வளர்த்துக் கொள்ளும் தனது தேடலையும் முயற்சியையும் கைவிடாமல் கடமையை மறவாத செயல்வீரனாகினான். 1994இல் மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்தான். களமாடும் போராளிகளுக்கு மருத்துவனாக மட்டுமன்றி தாயாக , தந்தையாக அவர்களின் எண்ணங்களின் செயலாக மாறியிருந்தான். மட்டக்களப்பு கட்டுமுறிப்பு முகாம் மீதான தாக்குதலில் ஜெயந்தன் படையணியின் முதன்மை மருத்துவப் போராளியாகக் கடமையை ஏற்று அவன் செய்த மருத்துவப்பணியானது காலத்தால் மறக்காத சாதனை. மருத்துவத்துறை சார்ந்து தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் முகமாக மருத்துவத்துறையில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி கற்றுக் கொண்டான். கற்ற மருத்துவத்தை களத்தில் செயற்படுத்துகிற போது புதிய புதிய அனுபவங்களையும் தந்திரங்களையும் கற்றுக் கொண்டான். ஒவ்வொரு போராளிக்கும் அவன் தாயாக தந்தையாக மருத்துவனாக மட்டுமன்றி அண்ணனான தம்பியாக நல்லாசானாக அவன் எடுத்த அவதாரங்கள் பல. எத்தனை கடுமையான ஆபத்து நிறைந்த காயங்களோடு போராளிகள் வந்தாலும் அவர்களை அவனது வார்த்தைகளே உயிர் கொடுத்து அவர்களை இயங்க வைத்துவிடும். அப்படித்தான் அவன் எல்லோர் மனங்களையும் வென்ற மருத்துவப் போராளி. ரெட்ணாதரனின் ஆற்றல் அவதானிக்கப்பட்டு 1994 சந்திரிகா அரசுடனான பேச்சுவார்த்தை காலத்தில் மாவடி முன்மாரி கோட்ட மருத்துவப் பொறுப்பாளராக நியமனம் பெற்று தனது பணியைத் தொடர்ந்திருந்தான். மருத்துவப் போராளியாக போராளிகளுக்கெல்லாம் சிறந்த மருத்துவனாகச் செயற்பட்ட ரெட்ணாதரன் அல்சரால் பாதிக்கப்பட்டிருந்தும் ஒரு போதும் அந்த வலிகளை வெளிக்காட்டாமல் சாதனையொன்றுக்கான கனவோடு வாழ்ந்த சரித்திரம். அவனது மருத்துவப் பொறுப்பாளர் லெப்.கேணல்.சாண்டோவுடன் தனது கனவுகளையெல்லாம் சொல்லிச் சொல்லி இலட்சிய நெருப்பை இதயத்தில் மூட்டித் திரிந்த கரும்புலி. கரும்புலியாய் கனவு வளர்த்த புலிவீரன் 1998ஆடிமாதம் அம்பாறையைச் சென்றடைந்தான். மிகுந்த சவால்கள் நிறைந்த அந்நாட்களில் சிங்களவர்களாலும் முஸ்லீம்களாலும் பாதிப்பையும் பயத்தையும் சந்தித்த காலமது. அத்தனை சிரமங்களையும் அம்பாறையின் ஆறுகளோடும் கடலோடும் போராடி நீரோடும் நிலத்தில் உலவும் எதிரிகளின் அச்சுறுத்தல்களோடும் சோர்ந்து போகாமல் உணவு எடுத்துக் கொண்டு போய் சக போராளிகளுக்கு உணவளித்து உயிரளித்து களமாடும் போராளிகளோடு தனது மருத்துவப் பணியைச் செய்யச் சென்றிருந்தான் ரெட்ணாதரன். அம்பாறைக்காட்டில் வாழ்ந்த போராளிகளோடு தானும் வாழ்ந்து களமாடித் திரும்பும் வீரர்களின் மருத்துவனாகினான். அம்பாறை மண் சந்தித்த அனைத்து அவலங்களையும் தானும் அனுபவித்து அவலம் தந்தவர்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கும் நாளின் விடிவுக்காக விழித்திருந்து களமாடிய மருத்துவப்புலி ரெட்ணாதரன் 1999மாசிமாதம் சிவமூர்த்தி மேட்டுப்பிரதேசத்தின் மருத்துவனாகி பணிபுரிந்த கடவுள். திறமைகள் சார்ந்து போராளிகளை வளர்த்து ஆற்றல் மிக்கவர்களாக ஆக்கிவிடும் ஆசானாக பலரை உருவாக்கினான். என்றும் கருணையே நிறைந்த அவனது கவனிப்பில் விழுகிற அனைவரையும் ஆற்றல் மிக்கவர்களாக்கிய பெருமைகளையெல்லாம் கொண்ட பெருவிருட்சம் அவன். எல்லோரையும் எளிதில் கவர்ந்துவிடும் அவனது அன்பும் பேச்சும் ஒவ்வொரு போராளியின் மனசிலும் அவனை நிரந்தரமாகினான். 000 000 000 அழகான வாகரை மண்ணில் புலிகளின் வரலாறு முக்கியம் வாய்ந்த பெருமைகளையெல்லாம் கொண்டிருக்கிறது. விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியினால் வாகரையில் 1990இல் நடாத்தப்பட்ட வாகரை மகாநாடு ஒரு வரலாற்றின் சாட்சியம். இந்த வாகரை மண்ணில் 22.06.1998 வாகரைச் சந்தியை தளமாகக் கொண்டு முகாமை அமைத்துக் கொண்டது. வாகரை முகாமின் பொறுப்பதிகாரிகளில் ஒருவனான இரண்டாவது கட்டளையதிகாரி கருணநாயக்கா என்ற சங்கிலி என்பவன் அங்கு அதிகாரியாக வந்திருந்தான். தனது சண்டைத் திறனாலோ அல்லது திறமையாலோ அவனுக்கு அதிகாரிப் பொறுப்பு கிடைக்கவில்லை. கிழக்கில் அவன் தமிழர்கள் மீது நடாத்திய படுகொலைகளுக்கான கௌரவமாகவே பொறுப்பதிகாரியாக தகைமை உயர்ந்தான் கருணநாயக்கா. மட்டக்களப்பு மக்களின் உழைப்பில் விளைந்த பணம் , பொருள் , பொன் எல்லாவற்றையும் தனது அதிகாரத்தால் பறித்துக் கொண்டவன் கருணநாயக்க. தமிழரின் உழைப்பில் பெறப்பட்ட பொன்னையெல்லாம் கொள்ளையடித்த கருணநாயக்கவுக்கு தமிழர்கள் வைத்த பெயரே சங்கிலி. சங்கிலி வருகிறான் என அறிந்தால் குழந்தைகள் முதல் பெரியவர் சிறியவர் பேதமின்றி காலனைக்காணும் பீதியை உணர்வார்கள். அத்தனை கொடுமைக்காரன் அவன். அவன் ஆசைப்படுகிற பெண்கள் யாரையும் விட்டுவைத்ததில்லை. தனது ஆயுதத்தின் துணையோடு அவனால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்களின் தொகை கணக்கில் எழுதப்படாதவை. 22.05.1987 அன்று மட்டக்களப்பு தோணித்தாண்டமடு பிரதேசத்தில் வயல்வேலை செய்யும் தொழிலாளிகள் தமது வாடிகளில் வேலையின் களைப்பில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். உழைப்பின் களைப்பில் உறங்கிய அந்த அப்பாவி உயிர்களுக்கு சங்கிலியும் அவனோடு 60இற்கும் மேற்பட்ட சிங்களப்படைகளும் இரவோடிரவாகச் சுற்றி வளைத்திருந்தது தெரியாது. அந்த வாடிகளில் உறங்கிய பெண்கள், குழந்தைகள், ஆண்கள் யாவரையும் வெட்டையொன்றுக்கு அழைத்துச் சென்று துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றவன். அதுபோலவே 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த 1990இல் வந்தாறுமூலை பல்கலைக்கழக்கத்திலிருந்த 158தமிழ் மாணவர்களைக் கொன்றழித்த கொலைகாரன். மாவடி ஓடையில் 36பொதுமக்களை ஈவிரக்கமின்றிக் கொன்று தின்ற கொடியவன் கல்முனை , ஒந்தாச்சிமடம், காயங்கேணி பகுதிகளில் செய்த கொலைகளுக்கும் கொடுமைகளுக்கும் எண்ணிக்கையோ பதிவுகளோ இல்லாத சாட்சியமற்ற படுகொலைகளின் பிரதானி அவன். வாகரைமுகாமின் அதிகாரியாக வந்த சங்கிலி அங்குள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திலிருந்து பொதுமக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்கும் பொறுப்பையும் தானே முன்னின்று செய்தான். மக்களோடு பழகி போராளிகள் பற்றிய தகவல்களைத் திரட்டி அவன் செய்த கொலைகளின் இரத்த சாட்சியங்கள் வாகரை மண்ணால் என்றுமே மறக்க முடியாதது. எதிரியின் கையோங்கியும் , காட்டிக் கொடுப்புகளும் எதிரிக்கு சாதகமாக இருந்தமையால் புலிகளால் அதிகம் அங்கு எதையும் செய்ய முடியாது போனது. ஆனால் சங்கிலியின் கொடுமையை தினமும் வாகரைமண் அனுபவித்துக் கொண்டேயிருந்தது. பெரும் தொல்லையாகவும் கொலைகளைச் செய்து கொண்டிருந்த சங்கிலியை வாகரையிலிருந்து அழித்தால் மட்டுமே நிம்மதியென்பதனை அந்த மண்ணும் மக்களும் உணர்ந்த நேரமது. மட்டு அம்பாறை தளபதிகளில் ஒருவரான தளபதி ஜீவன் அவர்களுக்கு கரும்புலித் தாக்குதல் ஒன்றை நடாத்த கட்டளை கிடைத்தது. சங்கிலியையும் அவனது அநியாயத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் தாக்குதலாகவே திட்டமிடப்பட்டது. இத்தாக்குதலுக்கான ஆலோசனையை தளபதி நாகேஷ் அவர்களிடம் பெற்று இத்தாக்குதலுக்கு பொறுப்பாக செயற்பட்ட தளபதி ரமணன் அவர்களின் ஆலோசனையோடு திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வேவுப்புலிவீரர்கள் சங்கிலியைத் தொடர்ந்து வேவுத்தரவுகள் சேகரிக்கப்பட்டது. வேவுத்தரவுகளின் அடிப்படையில் கரும்புலித் தாக்குதல் நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது. நான் நீயென கரும்புலிகள் காத்திருந்தார்கள். அவர்கள் போல ஆறுவருடங்கள் கரும்புலியாகும் கனவோடு ரெட்ணாதரனும் காத்திருந்தான். அவனுக்கான இலக்கையடையும் நாளுக்காக அவன் காத்திருந்த நாட்களெல்லாம் அவனது இலட்சியத்தின் உறுதியை உரமாக்கி அவனையொரு கரும்புலி நெருப்பாகவே வளர்த்தெடுத்திருந்தது. எண்ணுக்கணக்கின்றி கிழக்கு மண்ணின் உயிர்களைக் கொன்று குவித்த சங்கிலிக்கு சாவையனுப்பும் நாளை நிர்ணயித்துக் காத்திருந்தான் கரும்புலி ரெட்ணாதரன். 02.08.1999அன்று தனது இலக்கையடையும் கனவோடு கதிரவெளி மண்ணில் மக்களோடு கலந்தான். அவன் தங்கியிருந்த வீட்டாருக்கு அவன் ஒரு மருத்துவப் போராளியாகவே அறிமுகமானான். மேற்படிப்பை மேற்கொள்ளும் போராளியாகவே அவனை அவர்கள் நினைத்திருந்தார்கள். கதிரவெளி மண்ணில் அவன் உறவாகாதவர்களே இல்லாத அளவு அவன் சிறுவர்கள் பெரியோர்கள் வரை அன்பைப் பெற்றிருந்தான். அந்த ஊரின் விளையாட்டு வீரர்களோடு விளையாடி ஒவ்வொரு நுண்ணிய விடயங்களிலும் அவதானமாக தனது இலட்சியத்தை வீச்சாக்கிய நெருப்பு. 09.08.1999 அன்று தனது தாக்குதல் இலக்கு நோக்கிப் பயணிக்கவிருந்தான். கரும்புலிகளின் இறுதிநாள் இறுதிப் பிரியாவிடை அவர்களது இறுதியாசைகள் என அவர்கள் சொல்லிவிட்டும் எழுதிவிட்டும் போகும் கதைகள் ஓராயிரம். ரெட்ணாதரனும் எழுதவும் சொல்லவும் நிறையவே வைத்திருந்தான். ஆனால் தனக்கான இலக்கையடையும் கவனத்தில் அவன் ஒவ்வொரு கரும்புலிக்குமான திடமும் திறமும் கொண்ட வீரனாயே விரைந்தான். பொறுப்பாளர்கள் , போராளிகள் சூழ அவர்களோடு அவன் இறுதி விடைபெறும் நாள். அவனுக்காக கோழிக்கறியும் இடியப்பமும் தயாராகியிருந்தது. அவன் 2இடியப்பங்களைத் தனது தட்டில் வைத்துச் சாப்பிடத் தொடங்கினான். அருகில் இருந்த போராளி மேலும் 2இடியப்பங்களை அவனது கோப்பையில் வைத்தான். இதையும் சாப்பிடு...! இல்ல இது போதும் கனக்கச் சாப்பிட்டா யக்கற் கட்ட சிரமாகீடும்....! என மறுத்து 2இடியப்பங்களை மட்டுமே சாப்பிட்டு முடித்துக் கையைக் கழுவினான். இந்தப் பிரியாவிடை நடந்து 2மாதங்களின் பின்னர் ரெட்ணாதரன் தனது இலட்சியத்தில் வெற்றி பெற்று உறங்கினான். அந்த இரண்டு மாதங்களும் அவன் உணவை உறக்கத்தை மறந்து செயலாற்றிக் கொண்டேயிருந்தான். ஒரு விடுதலைப் போராளி ஒரு விடுதலைவீரன் எப்படி வாழ வேண்டுமே அவற்றுக்கெல்லாம் அடையாளமாக வாழ்ந்தவன் ரெட்ணாதரன். தனது உணவில் கூட கவனமாக இருந்து உணவைக்கூட ஒறுத்து தனது இலக்கிலும் இலட்சியத்திலும் உறுதியோடிருந்த அந்தக் கணத்தை மறக்கவா முடியும் ? அவனுக்கு மேலும் 2 இடியப்பங்களை கோப்பையில் வைத்த போராளியின் கண்களில் ஈரத்தையும் துயரத்தையும் தந்து போன அவனது நினைவுகளை இன்றும் நினைத்து அவனது இலட்சியத்தின் முன்னால் தோற்றுப்போனதை நினைத்துக் கொள்கிறான் அந்தப் போராளி. 09.08.1999 அன்று விடியற்காலை ரெட்ணாதரன் தயாராகினான். சங்கிலியும் அவனது படைகளும் அவனது தியாகத்தில் அழியும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது மணித்துளிகள். கதிரவெளியிலிருந்து நடந்து சென்று வாகரையை அடைந்தான் கரும்புலி ரெட்ணாதரன். வாகரையில் அவன் நடாத்தவிருந்த தாக்குதலின் இலக்கான முகாமிலிருந்து 50மீற்றர் தூரத்தில் வீடொன்றில் வெடியங்கியை அணிந்து காத்திருந்தான். காற்றோட்டம் குறைந்த அந்த அறையில் அவன் காத்திருந்தான். மக்கள் நிவாரணம் பெறுவதற்காக வரத் தொடங்கியிருந்தார்கள். வயிற்றுப்பசியோடு அவன் அந்தக் குகையில் இலட்சியப்பசியை வெல்லும் கனவோடு காத்திருந்தான். நாவரண்டது தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அவனோ நாவரண்டு பசி உடலை வருத்திய போதும் உயிர்குடிக்கும் சங்கிலியின் கதை முடிக்க காத்திருந்தான். காலை 5.15இலிந்து 12.04 வரையும் எதிரியின் பிரதேசத்தினுள் ஒளிந்து கிடந்தான். முகாம் அதிகம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கம்பிவேலிகள், தடுப்புகள் , மண்ணரண்கள் என எதிரி தனது எல்லையை கடுமையான பாதுகாப்பு வியூகத்தினால் காத்து வைத்திருந்தான். முகாமிற்குள் செல்லும் பிரதான பாதையில் வட்டக்கொட்டில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கேதான் பிரதான அதிகாரிகள் சந்தித்து கூடும் இடமாகவும் அது அமைந்திருந்தது. நிவாரணப் பொருட்கள் காவிவரும் லொறியைத் தொடர்ந்து 4பேரூந்துகளிலும், 3இராணுவ றக் வண்டிகளிலும் சிங்களப் படைகளின் பாதுகாப்பு கவச வாகனங்களுடனும் வந்து கொண்டிருந்தது சிங்களப்படைகள். சயிக்கிளில் வந்த சங்கிலி வட்டக்கொட்டிலில் போய் அமர்ந்தான். சங்கிலியின் நடமாட்டத்தை ரெட்ணாதரன் அவதானித்தபடியே இருந்தான். இலக்கை நெருங்கும் கடைசி மணித்துளிகள் நெருங்கிக் கொண்டிருந்தது. சிங்களப்படைகளின் நடமாட்டம் வளமைபோலவே அதிகரித்திருந்தது. மக்கள் நிவாரணப் பொருட்களை பெற்றுச் செல்வோரும் வரிசையில் நிற்போருமாக பொழுது தனது இயல்பான நாள் போல இயங்கிக் கொண்டிருந்தது. உடலில் வெடியங்கி பொருத்திய கரும்புலி ரெட்ணாதரன் எழுந்தான். ஒரு கையில் உரப்பையில் அரிசியும் , கையில் கூப்பன் அட்டையும் கொண்டு நடக்கத் தொடங்கினான். எதுவுமறியாதவன் போல தானும் ஒரு பொதுமகன் போலவே சென்றான். அவனை வழியனுப்பிய இதயம் துடிதுடித்துக் கொண்டிருந்தது. அவன் பசியை வெல்ல அரிசி சுமக்கும் மனிதன் போல மாறியிருந்தான். அழகான அந்த முகம் ஆளமான விடுதலையின் பாசம் விடியப்போகும் தேசத்தின் கிழக்கு விடிவெள்ளியாக அவன் நடந்தான். தடைகள் எதுவுமின்றி சங்கிலியையும் அவனது கூட்டத்தையும் அழிக்கும் இலக்கின் தூரம் சில அடிகளில் கைகூடிவிடும் தூரத்தில் இருந்தது. கும்மாளமடித்துக் கொண்டிருந்த சிங்களப்படைகளின் முன்னால் கரும்புலி ரெட்ணாதரன் இலக்கை நெருங்கிக் கொண்டிருந்த போது திடீரென ஒருவன் அவன் மீது சந்தேகம் கொண்டு இடை மறித்தான். எங்கே போகிறாயென விசாரித்தான். அரிசி அளவு குறைவாக இருக்கிறது கருணாநாயக்க ஐயாவிடம் காட்டிச் சொல்லப் போகிறேன்...! என அவனைத் தாண்டி நடக்க முனைந்தான். அவனில் சந்தேகம் கொண்ட அந்தச் சிங்களப்படைவீரன் அவனைக் கட்டிப்பிடித்தான். ரெட்ணாதரனோ புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என உரக்கச் சொல்லியபடி வெடித்தான். அத்தனை காலம் கிழக்கில் கொலைகள் ,கொள்ளைகள், பாலியல்வதைகள் செய்த கருணாநாயக்கவும் அவனது சகாக்களும் அங்கே அடையாளங்களின்றி அழிந்து போனார்கள். அழிவுகளையும் இழப்புகளையும் சிறுவயது முதலே பார்த்து வளர்ந்து அதன் தாக்கங்களோடு விடுதலைப் போராளியாகி களமாடிய வேங்கை, மருத்துவப்புலியாகி மருத்துவனாகி இறுதியில் கரும்புலியாகும் கனவோடலைந்து தன் கனவை நிறைவேற்றி வாகரை மண்ணுக்குப் பெரும் தொல்லையாயிருந்த பகைவனையும் அவனது கூட்டத்தையும் அழித்து ரெட்ணாதரன் கரும்புலி மேஜர் ரெட்ணாதரனாக வாகரைக்காற்றோடு கரைந்தான். அன்பின் வடிவாய் ஆற்றலின் உருவாய் இலட்சியப் போராளியாய் இறுதி வரை சுமந்த கனவை நனவாக்கும் தோழர்களையும் தேசமக்களையும் நம்பித் தனது கடமையை முடித்துக் காற்றான மேஜர் ரெட்ணாதரனின் கனவுகள் இன்றும் வாகரை மண்ணிலும் அந்த மண்ணின் உயிரிலும் கலந்தேயிருக்கிறது. என்றோ ஒருநாள் அவனது கனவுகள் நிறைவாகும் நம்பிக்கையை ஆயிரக்கணக்கானவர்கள் இதயங்களில் விதைத்துவிட்டு உறங்குகிறான் ஆனந்தன் என்ற மட்டுமண்ணின் மைந்தன் கரும்புலி மேஜர் ரெட்ணாதரன். - சாந்தி ரமேஷ் வவுனியன் - http://mullaimann.blogspot.de/2014/08/blog-post.html
  22. கருத்திட்ட விருப்பிட்ட அஞ்சலித்த அனைவருக்கும் நன்றிகள். மாதவன் மாஸ்ரர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் முதுகெலும்பென்றால் அது மிகையாகாது. இன்னும் பலநூறு விடயங்கள் எழுதப்படவில்லை. காலம் கைகூடும் போது மீதி விவரங்களும் எழுதப்படும். இவ்விடயம் பற்றி எனக்கு தெரியாது அஞ்சரன். ஒரு முதுநிலைத் தளபதியை இப்படி ஒரு பகுதியில் சென்று வரக்கூடிய அனுமதியை சக தளபதிகள் சரி போராளிகள் சரி அனுமதித்திருக்கமாட்டார்கள். ஏனெனில் புலனாய்வுத்துறையின் அதிவேக வளர்ச்சியானது 89களில் வேகப்படுத்தப்பட்டு 90களில் அதி வளர்ச்சி கண்டது. அதில் பொட்டம்மான் அவர்களை நம்பியே தலைவர் அப்பொறுப்பையும் ஒப்படைத்திருந்தார். இப்படியிருக்க நீங்கள் குறித்தது போல ஒரு விசப்பரீட்சையை செய்திருக்க வாய்ப்பிருக்காது என்றே நினைக்கிறேன். கருணாவுடனான முறுகல் தொடங்கிய காலமும் 90 என்பதால் நடைமுறையில் இத்தகைய பலப்பரீட்சையை பரீட்சித்துப் பார்க்கக்கூடிய வழிகள் இருக்க முடியாது.
  23. காற்றுள்ள வரை வாழும் காவியம் மேஜர் சிட்டு July 31st, 2014chiddu இயற்பெயர் – சிற்றம்பலம் அன்னலிங்கம் பிறந்த இடம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை வீரனாய் – 04.11.1971 – வித்தாய் – 01.08.1997. கடலும் கடல்சார்ந்த அழகையும் கொண்ட உடுத்துறைக் கிராமத்தில் 04.11.1971 அன்று சிற்றம்பலம் தம்பதிகளின் கடைசி மகனாக வந்துதித்தான் அன்னலிங்கம். 9வது குழந்தையாக 5அண்ணன்களுக்கும் 3அக்காக்களுக்கும் கடைக்குட்டியாக வீட்டின் செல்லப் பிள்ளையாகப் பிறந்தவன். பெருமையோடு அவனை எல்லோரும் கொண்டாடிக் கொள்ளும் அளவுக்கு அவனது குழந்தைக்காலம் வித்தியாசமானது. 12வயதில் புலிவீரனாக தடியால் துப்பாக்கியை வடிவமைத்து விளையாட்டுக் காட்டிய பிள்ளையவன். ஆரம்பக்கல்வியை உடுத்துறை மகாவித்தியாலயத்தில் கற்றவன் க.போ.த.சாதாரண தரத்திற்கு வந்த போது தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரியின் மாணவனாகினான். அவன் சாதிக்கப் பிறந்த பிள்ளையாகவே அம்மாவின் கனவை நிறைத்த கடைக்குட்டி. எதிர்காலத்தில் ஒரு அறிஞனாகவே அம்மாவின் மனசில் எழுந்த கோட்டையின் இராசகுமாரன் அவன்.அது இந்திய இராணுவ காலம். 1987களில் அளவெட்டியில் வாழ்ந்த அவனது அண்ணனுடன் அன்னலிங்கமும் போயிருந்து படிக்கத் தொடங்கினான். தமிழ் ஆசிரியரான அண்ணன் கற்பித்த தனியார் கல்வி நிறுவனமான தெல்லிப்பழை கல்வி நிலையமொன்றில் மாணவனாகினான். இயல்பிலேயே அமைந்த இனிமையான அவனது குரல் கல்வி நிலையத்தில் நண்பர்கள் சூழ்ந்திருக்க அவர்களுக்காய் அவன் பாடிய அன்றைய சினிமாப்பாடல்கள் ஒவ்வொன்றிலும் அவன் இசைக்கலைஞனாய் அடையாளமாகினான். மேசையில் தாளம் போட்டு அவன் பாடும் காதல் பாடல்கள் தொடக்கம் தத்துவப்பாடல்கள் வரை அவனது குரலின் தனித்துவம் என்றுமே அவனுக்கான சிறப்பு. அன்னலிங்கத்தின் மூத்த சகோதரர் திரு.பாலச்சந்திரன் அவர்கள் சிறந்த பொப்பிசைப்பாடகர். இலங்கை வானொலியில் ஒருகாலம் கொடிகட்டிப்பறந்த அந்தப்பெயரை இன்றும் இசை ரசிகர்கள் மறந்துவிடவில்லை. அந்த மாபெரும் கலைஞனின் கடைசித் தம்பியான அன்னலிங்கத்தின் இசைத்திறனை அந்தக் கல்வி நிலையம் மட்டுமல்ல அவனது குரலுக்கு வசமான அனைவருமே ரசித்த காலமது. கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடுமாம் என்பார்கள். ஆனால் அன்னலிங்கம் உலவும் இடமெங்கும் வீசும் காற்றும் இசையாலேயே நிரம்பியிருக்கும். ஏனெனில் அவனது வாய் எப்போதும் ஏதோவொரு பாடலை இசைத்துக் கொண்டேயிருக்கும். அவன் மாணவனாய் இருந்த காலத்தில் அவனது இசையின் மீதான ஆழுமையின் வெளிப்பாடானது அவனது நண்பர்கள் நினைவுகளில் நீங்காத பசுமையான நினைவு. எப்போதுமே முகம் நிறைந்த சிரிப்பும் எல்லோரையும் சிரிக்க வைக்கும் அவனது பண்பு என அவனது புன்னகைக்கும் அன்புக்கும் ஆட்பட்டவர்களே அதிகம். எதிரிகள் என்று எவருமே அவனுக்கு இருந்ததில்லை. எல்லோரையும் நேசித்தான். எல்லோர் மீதும் அன்பைச் சொரிந்தான். அன்னலிங்கம் அன்புக்கு அர்த்தம் சொல்லும் தோழன். 000 000 000 இந்திய இராணுவம் ஊர்களை உழுது வீதியில் வீடுகளில் காணுமிடங்களில் மறிப்பதும் புலிவீரர்களைத் தேடி அலைவதுமான காலம் அது. புடிப்பும் , பாட்டும் , இசையுமென இருந்தவனை இந்திய இராணுவத்தின் கொலைகள் , வன்புணர்வுகள் என அனைத்து அக்கிரமங்களையும் அனுபவித்த ஊர்களை அவனும் பார்த்தான். தமிழினத்தைத் தேடித்தேடி அழித்துக் கொண்டிருந்த இந்தியப்படைகளுடன் யுத்தம் செய்து கொண்டிருந்த புலிகளுடன் அவனுக்கு உறவு மலரக்காரணமானது கூட இந்தியப்படைகளே. புலிப்போராளிகளுக்கான மறைமுக ஆதரவுகளை காலத்தின் கடனை அவன் மாணவனாக இருந்தபடியே செய்து கொண்டிருந்தான். அப்போது தேசிய இராணுவம் என்ற பெயரில் EPRLF பிள்ளைபிடியில் இறங்கிய நேரம். இளைஞர்களைக் கட்டாயமாகப் பிடித்து பயிற்சிகள் வழங்கி கைகளில் ஆயுதங்களைத் திணித்த பொழுதுகள். அப்போதுதான் EPRLF குழுவினால் அன்னலிங்கமும் கைது செய்யப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டான். விடுதலை செய்யப்பட்ட பின்னரும் நிம்மதியாய் உறங்க முடியாது இந்தியப்படைகள் கண்ணிலும் EPRLFகைகளில் சிக்காமலும் தப்பிக்க அவன் அலைந்த அந்த நாட்கள் மிகவும் கொடியவை. ஊரில் நிம்மதியாய் வாழ விடாமல் கொடியவர்கள் துரத்திக் கொண்டிருந்தார்கள். அந்த வதையின் பின்னரேயே அவன் விடுதலைப் போராட்டம் பற்றி விடுதலைப்புலிகள் பற்றியும் சிந்திக்கத் தொடங்கினான். ஆனால் அவனை உயிரோடு காத்து வாழ வைக்கும் கனவில் அவனது அக்காக்களும் , அம்மாவும் வெளிநாடு அனுப்பி வைக்க ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். இந்திய இராணுவ காலத்தில் கொழும்பில் வாழ்வது பாதுகாப்பானதாக இருந்த காலம் அது. அன்னலிங்கம் சில மாதங்கள் கொழும்பில் தங்கியிருந்த போது வெளிநாடு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. தாய்நிலத்தைப் பிரியும் நினைவே இல்லாதிருந்தவனால் புலம்பெயர்ந்து அன்னியத் தெருவில் அலைவதில் உடன்பாடிருக்கவில்லை. பயண முகவருக்கு பணம் கட்டி அவன் வெளிநாட்டுக்குச் செல்லும் நாளை பயண முகவர் தீர்மானித்து முடிவு வர முதலே திடீரென கொழும்பிலிருந்து ஊர் திரும்பியவன் நீண்ட கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு 1989களின் இறுதியில் காணாமற்போனான். காடுகளில் கடுமையான தூரங்கள் நடந்து கடந்து சென்றான். மணலாற்றுக் காடுகள் அவனுக்கு புதிய வாழ்வை புலிகளின் வாழ்வை அடையாளம் காட்டியது. காட்டில் உருவாகிய போராளிகள் பலரோடு ஆயுதப்பயிற்சியைப் பெற்றுக் கொண்டான். அன்னலிங்கமாய் பிறந்தவன் அன்னலிங்கமாய் வாழ்ந்தவன் சிட்டு என்ற பெயரைத் தாங்கிப் புலிவீரனானான். இசை பலருக்கு வரம் அதேபோல அருமையான குரல் சிலருக்குத்தான் வரம். அந்த வரத்தைப் பெற்றிருந்தான் சிட்டு. காட்டில் போராளிகளின் களைப்பைப் போக்கவும் உற்சாகத்தை வலுப்படுத்தவும் ஒரே மருந்து அவனது இனிமையான குரலென்பதனை அவனோடு கூடவிருந்த போராளிகள் நினைவு கூரும் அளவுக்கு இசையை நேசித்தான். இசையில் அவன் தனது களப்பணிகளையும் மேற்கொண்டான் என்பதனை வரலாறு மறந்து போகாது. 1990களில் இந்தியப்படைகள் ஈழமண்ணை விட்டு வெளியேறிப் போக யாழ்மண்ணில் வந்திறங்கிய புலிகளுடன் சிட்டுவும் வந்தான். பழைய குறும்பு , குழந்தைத்தனம் எல்லாம் மாறி பொறுப்பு மிக்க போராளியாய் வந்திருந்தான். அந்தக் காலம் பெரும் எழுச்சியின் மாற்றத்தை மிக மிக வேகமாக உருவாக்கிய காலம். போராளிகள் தனித்துவமான சீருடைகளணிந்து யாழ் மண்ணில் பணிகளில் இறங்கிய காலம் அது. பள்ளிக்கால உறவுகளை அவன் மறந்து போகவில்லை வீதிகளில் சந்திக்கிற போது பழைய நட்பையெல்லாம் புதுப்பித்துக் கொண்டான். ஒவ்வொருவரும் போராட வேண்டுமென்ற வீரத்தை ஒவ்வொருவருக்கும் ஊட்ட முனைந்தான். 000 000 000 1990 யூன் மாதம் 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. மணலாற்றிலிருந்து வந்திருந்த 600 வரையான போராளிகளை உள்ளடக்கி 1990 இறுதியில் முதல் முதலாக புலிகளின் அரசியல் பாசறை மட்டுவில் பகுதியில் நடைபெற்றது. 6மாதங்கள் நடைபெற்ற அரசியல் பாசறையிலிருந்து மக்களோடு இறங்கி பணிசெய்யக்கூடிய திறமையாளர்களை உருவாக்கியது மட்டுவில் அரசியல் பாசறை. ஒற்றைக் கைத்துப்பாக்கியோடு தலைவர் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்ட கரந்தடி போராளி அமைப்பாக உருவாகிய புலிகள் அமைப்பானது மரபுவழி இராணுவமாக மாற்றம் காணத் தொடங்கிய காலம் அது. இராணுவ ரீதியிலான முன்னேற்றம் மரபுவழி இராணுவமாக பரிணமித்த சம காலத்தில் அரசியலிலும் புலிகளின் மாற்றம் அரசியலில் வளர்ச்சியையும் மாற்றத்தையும் காணத்தொடங்கி முக்கியமான காலகட்டத்தில் தான் மட்டுவில் அரசியல்பாசறை உருவாக்கம் பெற்றது. அதுவரையில் அரசியல் பணிகளையும் சரி , படையணியைத் திரட்ட போராளிகளை இணைப்பதிலும் சரி , சமூகப்பிரச்சனைகள் தொடக்கம் மொத்தப் பணிகளையும் ஒவ்வொரு ஊர்களுக்கும் நியமிக்கப்பட்ட ஊர்களுக்கான பொறுப்பாளர்களே செய்து கொண்டிருந்தார்கள். குறிப்பாக ஒரு கிராமசேவகர் போல ஒவ்வொரு ஊரின் பொறுப்பாளரின் தலையிலும் கிராமங்களின் சுமைகள் யாவும் தேங்கியிருந்தது. துறைசார் திறமையாளர்களை உருவாக்குவதன் மூலம் அவரவர் திறமைகளுக்கு ஏற்ப பணிகளை பகிர்ந்தளிக்கவும் , பணிகளை இலகுபடுத்தவும் விடுதலைப்புலிகளால் திட்டமிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதே மட்டுவில் அரசியல் பாசறை. அரசியல்துறையின் ஆரம்ப வித்தும் அடையாளமும் தியாகி திலீபன் அவர்கள். அவரே அரசியல் பணிகளுக்காக ஆரம்பத்தில் போராளிகளை உருவாக்க முனைந்து அதற்கான தோற்றத்தின் மூலமாக இருந்தார். மட்டுவில் அரசியல் பாசறையில் கட்டம் கட்டமாக உள்வாங்கப்பட்டு பயிற்றப்பட்ட போராளிகளில் இருந்தே பின்னர் அந்தந்த பிரிவுகளுக்கான பொறுப்பாளர்கள் போராளிகள் தெரிவு செய்யப்பட்டார்கள். இங்கு உருவாக்கப்பட்ட போராளிகள் அரசியல் நிர்வாகப் பொறுப்பாளரிடம் கொடுக்கப்பட்டார்கள். அரசியல் நிர்வாகப் பொறுப்பாளரே அந்தந்த பிரிவு சார்ந்த இடங்களுக்கு போராளிகளை பொறுப்பாளர்களை நியமித்து அனுப்பும் பொறுப்பை ஏற்றிருந்தார். இங்கிருந்தே கலைபண்பாட்டுக்கழகம், மாணவர் அமைப்பு , பிரச்சாரப்பிரிவு என துறைகள் பிரிக்கப்பட்டு தனித்தனியான அலகுகளின் கீழ் அரசியல் போராளிகள் பணிகளில் நியமிக்கப்பட்டார்கள். அரசியல் நிர்வாகத்துறையிலிருந்தே கோட்டங்களுக்குத் தேவையான துறைசார் அரசியல் போராளிகள் அனுப்பப்பட்டனர். அரசியல் நிர்வாகப்பொறுப்பாளருக்கு அடுத்தே அரசியல் பொறுப்பாளர்கள் பணிகளில் இறக்கப்பட்டார்கள். பின்னாட்களில் அரசியல்துறையின் வளர்ச்சிக்கும் சிறந்த பணிகளுக்கும் அரசியல் வளர்ச்சியின் வெற்றிக்கும் வேராக அமைந்ததே மட்டுவில் அரசியல்பாசறை. மட்டுவிலில் ஆரம்பித்த அரசியல் பயிற்சிப்பாசறையில் சிட்டுவும் அரசியல் போராளியாக வந்திருந்தான். அங்கேயும் சிட்டுவின் இனிமையான குரலே போராளிகளின் களைப்பை அலுப்பை சலிப்பை ஆற்றும் மருந்தாகியது. பாசறை சோர்வடைந்தால் சரி சிட்டுவை பாடச்சொல்லி எழுப்பி விடுவார்கள். தெய்வப்பாடல்களுக்கு புரட்சி வடிவம் கொடுத்து தெய்வப்பாடல் மெட்டுக்களுக்கு புரட்சி வரிகளை அமைத்துப் பாடல்களைப் பாடத் தொடங்கினான். காலத்துக்கு ஏற்ற வரிகளும் அவனது குரலும் அன்றைய அரசியல் பாசறைப் போராளிகளின் நினைவுகளில் சிட்டுவை என்றும் மறந்ததில்லை. ஏனெனில் அவனது குரலுக்கு அத்தனை வசீகரம் இருந்தது. போராட்டத்திற்காக ஆள்பலத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டிய காலமாக இருந்தது அந்தக்காலம். மக்களை இலகுவாய் சென்றடையக்கூடிய ஊடகமாக இசையே முதன்மையாக இருந்தது. அப்போதுதான் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட இசை வெளியீடுகளும் மெல்ல மெல்ல மிகுந்த சிரமத்தின் மத்தியில் வெளியாகிக் கொண்டிருந்தது. தென்னிந்தியப்பாடகர்களால் இசைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்பாடல்கள் முதல் முதலாய் 90களில் தனித்த ஆழுமையுடன் விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக்கழகத்தால் மிகவும் சிறப்பான முறையில் எங்களது கலைஞர்களின் இசையமைப்பில் எங்களது கலைஞர்களின் குரல்களில் ஈழதேசமெங்கும் ஒலிக்க வகை செய்யப்பட்டது. அப்போது தான் எங்கள் சிட்டுவும் முதல் முதலாக மேஜர் செங்கதிர் அவர்களால் எழுதப்பட்ட‚’கண்ணீரில் காவியங்கள்’ என்ற பாடலைப்பாடி இசையுலகில் தனக்கான அத்தியாயத்தை எழுத அடியெடுத்து வைத்திருந்தான். அப்போதைய பாடகர்களில் சிட்டு தனித்துவமானவனாகப் பரிணாமம் பெற்றான். இசையில் கலந்தவனை அவனது ஆற்றலை அவதானித்த அரசியல் நிர்வாகம் சிட்டுவை யாழ்மாவட்ட கலைபண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளனாக்கி அவனைப் பொறுப்புகளைச் சுமக்கும் திறனையுடையவன் என்பதனை இனங்காட்டியது. கலைபண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளனாய் வந்த போது மக்களுடன் மாணவர்களுடன் இணைந்தான். கருத்தரங்குகள் விழிப்பூட்டல் செயற்பாடுகளை முன்னெடுத்த அரசியல் போராளிகளோடு சிட்டுவின் பங்கும் காத்திரமானதாகியது. அடுத்து புலிகளின் குரல் பொறுப்பாளனாகி வானொலி ஊடகத்தின் மூலம் மக்களிடம் சென்று சேரும் போராட்ட விழிப்பை ஏற்படுத்துவதில் கணிசமான பங்கைச் செய்த பெருமை சிட்டுவிற்கும் உண்டு. பிறேமதாசா அரசால் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டு வடக்கில் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த மிகவும் சிரமம் நிறைந்த காலமது. எரிபொருட்கள் தொடக்கம் எல்லாமே தடைப்பட்டிருந்தது. வானொலிக்காகவும் சரி தனது பணிகளுக்காகவும் சரி மிகுந்த பொறுமையோடு மக்களை அணுகி தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் அவனுக்கு நிகர் அவன்தான். களத்தில் நிற்கிற போராளிகளுக்கு நிகராக அவன் நிலத்தில் மக்களோடு மக்களாகி கலையூடகம் மூலம் மக்களை விழிக்கச் செய்தான். தனது இனிய குரலால் இளையோர்களைக் கவர்ந்தான். அவனது குரலில் அவனது கருத்தில் ஈர்க்கப்பட்டு விடுதலையின் தேவையை உணர்ந்து போராளியாகியவர்களால் கூட சிட்டு நினைவு கொள்ளப்படும் மக்கள் கலைஞன் ஆகினான். சாதனையாளன் தன்னை அடையாளம் காட்ட ஒரு சிறுபொறி போதும். சிட்டுவின் ஆற்றலை இனங்காண அவனுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளே அந்தப் பொறியை பற்றவைத்த ஆதாரமாகியது. மிக விரைவாக சிட்டு மக்கள் கலைஞன் ஆகினான். மறக்க முடியாத குரலுக்குரிய சிறந்த பாடகனாக மக்களோடு கலந்தான். காலம் அவனை ஒரு போராளியாய் மட்டுமன்றி உலகறிந்த பாடகனாய் ஈழத்தமிழ் இதயங்களில் இசையாய் என்றென்றும் நிலைப்பானென்று கூட எவரும் அறிந்திருக்காத ஒரு குழந்தையை காலம் மாற்றியது மட்டுமன்றி அவனைச் சிறந்த போராளியாக்கியது வரலாறு. சிட்டு இல்லாத இசைநிகழ்ச்சிகள் இல்லையெனும் அளவு சிட்டுவின் இசைக்குக் கூடிய மக்கள் வெள்ளம் அவனது இசையுலகின் வெற்றியின் சாட்சிகள். ஒரு பாடகனுக்கு உரிய சகல தகுதிகளையும் கொண்டிருந்தவன் இலகுவில் மக்கள் மனங்களில் இசைக்கலைஞனாகவே நினைவில் நின்றான். அவன் பாடிய ஒவ்வொரு பாடலிலும் அவன் அந்தத் தருணங்களாகவே வாழ்ந்திக்கிறான். உயிரில் உணர்வைக் கலந்து உணர்வில் தன் உயிரைக் கலந்து மக்களிடம் போய்ச் சேர்ந்தது அவனது பாடல்கள். 1995 யாழ்மண் பகைவனிடம் இழக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து வெளியேறிக் கொண்டிருந்த போது கூட அவனது குரலிலும் ஏனைய தமிழீழப்பாடகர்களின் குரலிலும் பாடல்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தது கலைபண்பாட்டுக்கழகம். சோர்ந்து வெளியேறிக் கொண்டிருந்தவர்களின் ஆற்றுப்படுத்தலாக சிட்டுவின் குரலும் இருந்ததை அந்த நாட்கள் மறக்காது. யாழிலிருந்து பின்வாங்கி வன்னியில் புலிகள் தளமிட்டு மக்கள் அரங்கச் செயற்பாடுகளை மேற்கொண்ட காலங்களில் வன்னியின் மூலையெங்கும் சிட்டுவும் இசையாய் கலைவடிவங்களாய் வாழ்ந்திருந்தான். கலைபண்பாட்டுக்கழகம் முன்னெடுத்த கலையரங்கம் அல்லது தெருநாடகங்கள் மூலம் மக்களை விழிப்படையச் செய்யும் பணிகள் யாவிலும் சிட்டுவும் கலந்தேயிருந்தான். நோயாளியாகிப் போன அம்மாவிற்காக வீடு திரும்பிவிடக் கேட்ட சகோதர சகோதரிகளின் வேண்டுதலையெல்லாம் புறம்தள்ளி தமிழீழக்கனவோடு அலைந்த பாடகன் அவன். இறுதி மூச்சை நிறுத்துவதானால் தான் நேசித்த மண்ணிலேதானென எல்லோருக்கும் சொல்லியதோடு மட்டுமன்றி அவன் நேசித்த அவனை நேசித்த உறவுக்கும் மடல் எழுதினான். தனது மாற்றங்களை கடிதங்கள் மூலம் தெரியப்படுத்திக் கொண்டு விடுதலை வானில் சிறகடித்துக் கொண்டிருந்ததான் சிட்டு. வன்னியைக் கைப்பற்றி கண்டிவீதியூடே சென்று யாழ் மண்ணில் கொடியேற்றும் கனவில் அப்போதைய பாதுகாப்பமைச்சர் ரத்தவத்தையின் கனவை நனவாக்க பெருமெடுப்பிலான இராணுவ முன்னேற்றமும் ஓயாத சண்டையும் நடந்து கொண்டிருந்த ஜெயசிக்குறு சமர். 18மாதகாலம் நீடித்த அச்சமரே விடுதலைப்புலிகளின் சண்டை வரலாற்றிலேயே பெரும் வரலாற்றுச் சமராக காலம் பதிவு செய்து கொண்டது. அத்தகைய வரலாற்றுச்சமரில் பங்கேற்க சிட்டுவும் ஆசைப்பட்டான். தானாகவே விரும்பி சண்டைக்குப் புறப்பட்டான். கலையோடு கலைஞனாய் மக்களின் மனங்களில் நிலைத்தவனைக் காலம் களத்திற்கு வாவென்றழைத்தது. ஒலிவாங்கியோடு மேடைகளில் பாடல் இசைத்தவன் கையில் வோக்கிரோக்கியுடன் களத்தில் நின்றான். களமே பலமென்ற காலத்தில் களத்தில் நிற்கும் போராளிகளுக்கு முன்னால் அவர்களது களைப்பைப் போக்க அவன் ஒலிவாங்கியோ இசைக்கருவிகளோ இல்லாமல் பாடினான். அவன் நின்றிருந்த களமுனைப் போராளிகளின் வேண்டுகோளையெல்லாம் சலிக்காமல் ஏற்றுக் கொண்டு மக்களின் முன் பாடிய குயில் சக போராளிகள் முன்னால் பாடிக் கொண்டிருந்தான். எதிரியின் ஓயாத எறிகணை வீச்சு மழைபோல் பொழியும் துப்பாக்கிச்சூடு ஒவ்வொரு போராளியும் சாவிற்குள் நின்று போராடிக்கொண்டிருந்த களம். ஏ9நெடுஞ்சாலையின் ஊடாக ஆனையிறவைத் தொடுவதற்கு எதிரி முன்;னேறுவதும் புலிகளின் எதிர்த்தாக்குதலும் களநிலமை இதோ அதோ என்ற வேகத்தில் அங்கே போராளிகளின் ஆயுதங்களே எதிரியுடன் பேசிக் கொண்டிருந்தது. கிடைக்கிற சின்ன இடைவெளியில் சிரித்து சண்டை பிடித்து மகிழ்ச்சியோடு போராளிகள் ஒவ்வொருவரின் களவாழ்வும் கழிந்து கொண்டிருந்தது. அன்றைக்கு ஒருநாள். சிதைவுகளையும் அழிவுகளையும் கொண்ட ஏ9வீதியின் இருமருங்கும் எறிகணைகளின் தாக்குதலிலும் துப்பாக்கி சன்னங்களினாலும் உருக்குலைந்து ஒரு சூனியவெளியில் நிற்பதான உணர்வைக் கொடுத்த நேரமது. பெரியமடுப் பகுதியில் ஒரு வலிந்த தாக்குதலைச் செய்யும் நோக்கில் தயரானது படையணி. எதிரியுடனான சமருக்குத் தயாராக ஆண் பெண் போராளிகள் வரிச்சீருடைகளில் வீதிக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் அடையவிருந்த முன்னணிக்களத்தின் தூரத்தையடையும் வேகத்தில் படையணி நகர்ந்து கொண்டிருந்தது. அரும்புமீசைக்கனவறுத்து எதிரியைத் தேடிப்போய்க் கொண்டிருந்த ஆண்போராளிகளுக்கு நிகராக சமூகத்தின் விலங்குடைத்து இரட்டைப்பின்னல் அழகை வெறுத்து இதயம் முட்டிய கனவுகளைத் தூக்கியெறிந்து ஒரு சமூகத்தின் முன்னோடிகளாகிய பெண்போராளிகளும் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். மருத்துவ அணிகள் முதல் வழங்கல் அணிகள் வரை அவரவர் தங்களது கடமைகளை முடிக்கும் கனவோடு நகர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். களங்களில் பணிசெய்யும் மருத்துவ அணியின் பங்கானது மிகவும் சாவல்கள் நிறைந்தது. சமர் இடம்பெறும் இடங்களினை அண்டி நின்று போராளிகளைக் காப்பாற்றும் கடவுளர்கள் மருத்துவப் போராளிகளே. அத்தகைய பணியை முடிக்க மருத்துவ அணியும் போராளிகளுடன் இணைந்தார்கள். பொதுவான மருத்துவ அணியின் சேவைகள் போலில்லாமல் அச்சமருக்கான ஏற்பாடு வித்தியாசமாக இருந்தது. இதுவரைகாலச் சண்டைகளில் மருத்துவத்துக்குத் தேவையானவற்றை வாகனங்களில் கொண்டு சென்று மருத்துவ அணி தயாராகும். ஆனால் இம்முறை மருத்துவப் போராளிகள் தங்கள் தோழ்களில் சுமந்தே செல்ல வேண்டியிருந்தது. அக்களத்தின் நெஞ்சுக்கூட்டினுள் இறங்கி நடக்கவிருந்த சமராகையால் மருத்துவப் போராளிகளின் பயணமும் அதற்கேற்றாற்போல அமைந்திருந்தது. சற்று பிசகினால் கூட நிலமை தலைகீழாகிவிடும் அபாயம் நிறைந்த அந்தக் களத்தில் அதிக இழப்புகளையும் அதேநேரம் எதிரியின் குகையில் மாட்டுப்படக்கூடிய எதிரியே சுற்றிவரச் சூழ்ந்த களம் அது. தாக்குதலை ஆரம்பிக்கும் அணியானது குறித்த நேரத்தில் வென்று எதிரியின் பிரதான முகாம்களையும் மினிமுகாம்களையும் கைப்பற்ற வேண்டும். மருத்துவ அணியானது கிழக்கிலிருந்து மேற்காக வீதியை ஊடறுத்து குறைந்தது 2கிலோமீற்றர் தொலைவில் மருத்துவத்தை ஆரம்பிக்க வேண்டும். திட்டமிடப்பட்ட ஆயத்தங்களோடு போராளிகளுடன் மருத்துவ அணியும் பயணிக்கத் தொடங்கியது. சிட்டு அந்தக்களத்தின் போராளிகளுக்கான காவும் குழுவிற்கான பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டு நகர்ந்த அணிகளோடு சென்று கொண்டிருந்தான். காயமடையும் போராளிகளை மருத்துவ அணியிடம் கொடுத்தல் , தொடக்கம் எதிரியிடமிருந்து கைப்பற்றப்படும் ஆயுதங்களை உரிய இடத்திற்கு அனுப்புதல் , களமுனைக்குத் தேவையான விநியோகத்தையும் செய்யும் பொறுப்பு காவும் அணிக்கானதாக அமைந்தது. தேவையேற்படும் போது காவும்குழுவினர் சண்டையில் பங்கெடுக்கவும் தயாராகவே செல்வார்கள். எல்லாவற்றிற்கும் தயாராகச் சென்ற காவும் அணியோடு ஏற்கனவே காயமுற்று கட்டையாகிய காலோடு சென்று கொண்டிருந்த வீரர்களுக்குச் சமனான வேகத்தில் போனான் சிட்டு. இரும்பாய் கனத்த இதயங்களும் பனித்துளியாய் மாறும் என்பதற்கு அடையாளமாக பல்வகைப்பட்ட முகங்கள் அந்த நகர்வில் நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோர் முகங்களும் ஜெயசிக்குறுவை வெல்வோம் என்ற உறுதியோடே பயணித்துக் கொண்டிருந்தார்கள். 000 000 000 மதியம் வெளிச்சத்தில் புறப்பட்ட சமரணியானது மாலையில் முகாமின் முன் காவலரணைத் தாண்டி நிறுத்திக் கொண்ட பயணம் நன்றாக இருள் படர்ந்ததும் மீண்டும் தங்களது சண்டை நிலைகளை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொரு போராளியும் எதிரியை விழிக்கவிடாமல் மிகவும் அவதானமாகத் தங்களது பாதங்களை அடியெடுத்து வைத்து அந்த இருளோடு பயணத்தைத் தொடர்ந்தார்கள். எதிரியின் முகாமைச் சுற்றி எதிரியால் அமைக்கப்பட்ட மண்ணணைகளையும் தாண்டி முட்கம்பி வேலிகள் தடையரண்கள் யாவையும் தாண்டி அணிகள் குறித்த இடங்களைச் சென்றடைந்திருந்தது. இருள் முழுவதுமாகச் சூழ்ந்திருந்தது. சண்டை மூண்டது. எதிரி உசாரடைந்துவிட்டான். தனது அனைத்துப் பலத்தையும் ஒன்று திரட்டி போராளிகளுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கினான். வெற்றி அல்லது வீரமரணம் என்ற முடிவோடு போராளிகளின் அணிகள் எதிரிக்கு சவாலாகச் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்கள். எதிரியால் செலுத்தப்பட்ட எறிகணைகள் மழைக்காலம் போல இடி மின்னல் வேகமாய் ஏவப்பட்டுக் கொண்டிருந்தது. இரு பகுதியினராலும் ஒளிபரவச்செய்த பராவெளிச்சத்தில் போராளிகள் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். டோபிடோக்களைக் கொண்டு சென்று கம்பிவேலிகளில் பொருத்திவிட்டு கண்ணிமைக்குள் நொடிக்குள் நிலையெடுத்துக் கொள்ளும் கண நேரத்தில் எதிரியின் கம்பிச்சுருள்களும் கம்பிவேலியும் காணாமற்போய்க் கொண்டிருக்க அப்பாதைகளினூடு துப்பாக்கிகளோடு பாய்ந்து சென்று கொண்டிருந்தார்கள் வீரர்கள். கைக்குண்டுகள் , ரைபிள் கிரனைட்கள் வீசப்பட்டு எதிரியின் காவலரண்கள் பற்றியெரிந்து கொண்டிருந்தது. யுத்த களமானது தீப்பொறிகளால் நிறைந்து கந்தகப்புகையால் காற்றை நிறைத்தது. இரவு பகற்பொழுது போல பராவெளிச்சத்தால் நிலவின் வரவாய் வானம் வெழுத்தும் நெருப்புத் துண்டங்களால் நிறைந்தது அந்தப்பகுதி. நிலமையை உணர்ந்து கொண்ட எதிரி பிரதான தளம் நோக்கி பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்தான். புலிகள் வசம் அப்பகுதி வீழ்ந்திருந்தது. தப்பியோடிய எதிரி பிரதான தளத்திலிருந்து புலிகளின் பகுதி நோக்கி நெருப்பை விதைத்தாற் போல கனரகங்களால் தாக்கிக் கொண்டிருந்தான். காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் காவும் குழுவும் மருத்துவப் போராளிகளும் வேகவேகமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். காயமடைந்தவர்களைத் தேடித்தேடிச் சிகிச்சைகளைச் செய்யத் தொடங்கியது மருத்துவ அணி. புலிகளின் கட்டுப்பாட்டினுள் வந்திருந்த அப்பகுதியை நோக்கிய எதிரியின் எறிகணைத் தாக்குதல் பலமாகியது. நிலமை ஆபத்தானதாகிறது. போராளிகள் காயமடைந்து கொண்டிருந்தார்கள். அதிக குருதிப்பெருக்கால் வீரமரணங்களும் நடந்து கொண்டிருந்தது. மருத்துவப்போராளிகள் ஓடியோடி உயிர்காப்பைச் செய்து கொண்டிருந்தார்கள். அந்த இருளில் மருத்துவப்போராளியொருவன் அங்கே காயமடைந்து முனகிக் கொண்டிருந்த ஒரு போராளியைப் புரட்டுகிறான். வானை அறுத்து வெளிச்சத்தைப் பரப்பிய பராவெளிச்சத்தில் பார்க்கிறான் அந்த மருத்துவப் போராளி. அங்கே வயிற்றில் பெரும் காயமடைந்து சிட்டு முனகிக்கொண்டிருந்தான். அடுத்து தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் சிட்டுவை இழந்துவிடக்கூடிய அபாயத்தை உணர்த்திக் கொண்டிருந்தது. அவ்விடத்திலிருந்து மீட்கப்பட்டு உடனடியாகச் சிகிச்சை வழங்கினால் மட்டுமே சிட்டுவைக் காப்பாற்ற முடியும். அந்தப் போராளி வேகமாக அவனை அப்புறப்படுத்த முனைகிறான். காற்றையும் அந்த இரவையும் அறுத்தெடுத்துக் கொண்டு எறிகணைகள் வீழ்ந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு அருகாய் எறிகணைகள் நெருங்கி விழுந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்து வீசப்பட்ட எறிகணைகள் அவர்கள் அருகில் விழப்போவதை உணர்ந்த மருத்துவப்போராளி நிலத்தில் குப்புறப்படுக்கிறான். மிக அருகில் விழுந்து வெடித்த எறிகணையில் அவனும் காயமடைகிறான். அடுத்த வினாடி மருத்துவப் போராளிகளில் யாவரும் காயமடைந்திருந்ததை அவதானிக்கிறான். உடனடியாக பீல்ட் கொம்பிறசறை எடுத்து தனது காயத்துக்கும் கட்டிவிட்டு ஓடியோடி ஏனைய போராளிகளுக்கும் கட்டுகிறான். அதேநேரம் பின்னுக்கு அனுப்ப வேண்டியவர்களை அனுப்பிக் கொண்டு சிட்டுவிடம் வந்தான். காற்றே ஒருகணம் மௌனித்து சுவாசமே நின்றுவிடும் போலிருந்தது. அடுத்து விழுந்த எறிகணையில் சிட்டு மேலும் காயமடைந்திருந்தான். அவனிடமிருந்து எவ்வித சத்தமும் வரவில்லை. அமைதியாய்க் கிடந்தான். ஆம் பாடித்திரிந்த குயில் பேச்சின்றி மூச்சின்றி தன் இறுதி மூச்சை அந்த மண்ணில் நிறுத்திக் கொண்டு மீளாத்துயில் கொண்டான். 01.08.1997 அன்று எங்கள் இதயங்களில் இதய ராகமாக எங்கள் நினைவுகளில் என்றுமே நீங்காதவனாக தமிழீழ விடியலைத்தேடிய பாதையில் தங்கள் சுவடுகளைப் பதித்து அன்றைய சமரில் வீரகாவியமான வீரர்களோடு அவனும் விழிகளை மூடிக்கொண்டான். அவனுக்குள்ளும் போராட்ட வாழ்வோடு பூத்த காதலும் அவனோடு புதைந்து போனது….! காதலைவிட தாயகத்தை அதிகமாய் காதலித்தவன் காலம் முழுவதும் வாழும் காவியமாக அவன் வீரமும் பாடலும் அவன் வாழ்வும் என்றென்றும் அழியாத நினைவுகளாக…..! 75இற்கும் மேற்பட்ட விடுதலைப் பாடல்களைப் பாடி எங்கெல்லாமோ வாழும் தமிழ் ரசிகமனங்களில் நிரந்தரமாகினான் சிட்டு. அவன் அடிக்கடி சொல்வது போல அவனில்லாது போனாலும் அவனது குரலில் நிறைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் அவனை உயிர்ப்பித்துக் கொண்டேயிருக்கிறது. மௌனமாய் கரையும் காற்றின் நுண்ணிய இளைகளில் சிட்டு இசையாய்….! ஈழவிடுதலைக் கனவோடு காவியமானவன் முள்ளியவளை துயிலுமில்லத்தில் துயில்கொண்டான். மூசியெறியும் அலைகளின் முகமாய் , வீசிச்செல்லும் தென்றலில் தளிராய் , மூண்டெரிந்த விடுதலை மூச்சில் அவன் பாடலாய் மனங்களில் நிறைகிறான் மரணத்தை வென்றவனாக….! மேஜர் சிட்டு என்றென்றும் மறக்க முடியாதவானாக எங்கள் மனங்களில் நிறைந்து காற்றுள்ள வரை வாழும் காவியமாக…..! - சாந்தி ரமேஷ் வவுனியன் - http://chiddu.com/chiddu.222.html
  24. புலனாய்வின் தந்தை மாதவன் மாஸ்ரர் 56வது பிறந்தநாள் நினைவுகளோடு…..! ஜூலை 23, 2014 | வீரத்தளபதிகள். Edit Post இயற்பெயர் – ரகுநாதன் தந்தை – பத்மநாதன் பிறந்த ஊர் – அளவெட்டி பி.திகதி – 24.07.1958 அளவெட்டிக் கிராமம் தந்த சொத்து ரகுநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட மாதவன் மாஸ்ரர். காலம் பல கல்விச்சாதனையாளர்களை களம் அனுப்பியது வரலாறு. அத்தகைய பலரைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு தன்னோடு அழைத்துச் சென்று நடந்திருக்கிறது. அந்தத் தடங்களில் மாதவன் மாஸ்ரரும் நடந்து உயர்ந்து விடுதலைப்புலிகள் புலனாய்வுத்துறையின் வேர்களில் ஒருவராகியிருந்தார். காலங்கள் கடந்தும் அழியாத வரலாற்றுப் பொக்கிசமாக முள்ளிவாய்க்கால் முடிவோடு இன்னும் முடியாத வரலாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில் மாதவன் மாஸ்ரரையும் காலம் கௌரவப்படுத்திக் கொள்கிறது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் மாணவனாக படித்துக் கொண்டிருந்த ரகுநாதன் என்ற இளைஞன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்ததும் அந்த இளைஞன் ஒரு காலத்தின் கதையானதும் நாங்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த அதிசயம் அல்ல அற்புதம். சிங்களத்தின் கொடிய இனவாதம் தமிழர்களின் உயிரையும் உடமைகளையும் தின்ற காலத்தில் தான் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த ரகுநாதனின் வாழ்வும் மாற்றத்தைக் கண்டது. தலைவர் பிரபாகரன் அவர்களின் துணைவியார் மதிவதனி மற்றும் வினோஜா, லலிதா, ஜெயா ஆகிய பெண்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற அந்த நாளில் இத்தகைய போராட்டங்களில் தன்னையும் இணைத்து விடுதலைப்பாதையில் நடக்கத் தொடங்கிய ரகுநாதன் 83 தமிழர் மீதான இனக்கொலையின் பின்னர் இந்தியாவிற்கு படிப்பை தொடர்வதற்காக பெற்றோரால் அனுப்பப்பட்டார். நாட்டைப்பிரிந்த துயர் சொந்த நாட்டில் தொடர்ந்து வாழ முடியாத அவலம் அயல்நாட்டில் கல்வியைத் தொடர முடியாத மனவுளைச்சலைக் கொடுத்தது. அப்போது இந்தியாவில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பினைத் தானே தேடி அவர்களுடன் தனது பணிகளை ஆரம்பித்தார். இந்தியாவில் 4வது பயிற்சிப் பாசறையில் பயிற்சியை முடித்து ரகுநாதன் மாதவனாகினார். அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் , புலிகளின் புலனாய்வுத்துறையின் இரண்டாவது பொறுப்பாளராக இருந்த கபிலம்மான் ஆகியோர் உட்பட பலரை உருவாக்கியது 4வது பயிற்சிப்பாசறையாகும். இங்கிருந்து உருவாகிய பலர் பின்னாட்களில் அரசியல் இராணுவ புலனாய்வுத் துறைகள் என பல்பரிமாண ஆற்றலோடு பல்லாயிரம் பேரை உருவாக்கும் பேராற்றலைப் பெற்றார்கள். அக்காலத்தில் ‘போர்க்களம்’ என்ற பெயரில் நூலொன்று உள்ளகச் சுற்றாக வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நூலானது தமிழ் மொழியில் உலக இராணுவ நுணுக்கங்கள், பயிற்சிகளின் நெ(பொ)றிமுறைகள் யாவையும் கற்பித்தலுக்கும் போராளிகள் கற்றுக் கொள்ளவும் பயன்பட்டது. தலைவர் பிரபாகரன் அவர்களால் தமிழில் இராணுவப் பயிற்சியை போராளிகளுக்கு வழங்க வேண்டுமென்ற விருப்பத்தை இந்த நூல் நிறைவு செய்திருந்தது. போர்க்களம் நூலின் உருவாக்கத்தில் மாதவன் மாஸ்ரரின் பங்கானது வரலாற்றில் அழிக்க முடியாதது. வெளிநாட்டு இராணுவப் பயிற்சிகள், இராணுவ வெளியீடுகள் , ஆயுதங்கள் பற்றிய நூல்களையெல்லாம் பெற்று அவற்றை தமிழாக்கம் செய்து போராளிகளுக்கு இலகுவாய் கற்பிக்கும் வகையில் வடிவமைத்து முதல் முதலில் தமிழில் இராணுவ பயிற்சியை போராளிகளுக்கு வழங்கிய பெருமையில் மாதவன் மாஸ்ரருக்கு கணிசமான பங்கு உண்டு. ஆயுதப்பயிற்சியை முடித்துக் கொண்ட மாதவன் மாஸ்ரர் தலைவரோடு பணிகளில் இணைந்து 1987களில் தாயகம் வந்து சேர்ந்தார். தாயகம் திரும்பிய பின்னரும் தலைவருக்கு அருகாமையிலேயே பணிகள் நிறைந்தது. எல்லோருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பை பெற்றவர்களுள் மாதவன் மாஸ்ரரும் ஒருவர். பின்பு இந்திய இராணுவ காலத்தில் தலைவருடன் இணைந்திருந்தவரை யாழ்மாவட்டத்திற்கான பணிகளுக்காக தலைவரால் அனுப்பப்பட்டார். 26.10.1987 இந்திய இராணுவம் மாதவன் மாஸ்ரர் பிறந்த ஊரான அளவெட்டியில் நிகழ்த்திய படுகொலைச் சம்பவமானது வரலாற்றில் அளவெட்டி கிராமத்தினால் மறக்க முடியாதது. இந்திய இராணுவத்தினரின் முதலை என்னும் எம்.ஐ.24 ரக உலங்குவானூர்தியால் நிகழ்த்தப்பட்ட வான் தாக்குதலில் அளவெட்டி இந்து ஆச்சிரமத்திலிருந்த வயோதிபர்கள் சிறுவர்கள் உட்பட 15பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள். மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியிருந்த அந்தக்காலத்தில் காட்டிலிருந்து 1988இல் யாழ்மண்ணை வந்தடைந்தார் மாதவன் மாஸ்ரர். ஊரெங்கும் இந்தியப்படைகள் சுற்றி நிற்க மக்களுடன் வாழ்ந்த போராளிகளில் மாதவன் மாஸ்ரரும் அந்தக் காலத்து சவால் நிறைந்த நாட்களையெல்லாம் கடந்து சென்றார். உறக்கமில்லை உணவில்லை அலைவும் மரணப் பொழுதுகளுமாக விடிந்த பொழுதுகள். எனினும் மாறாத தேசக்காதலோடு மக்களோடு ஊரெங்கும் நடந்து திரிந்த கால்கள் ஓயாது உழைத்துக் கொண்டேயிருந்தது. அப்போதைய யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல்.மதி அவர்கள் திருநெல்வேலியில் இந்திய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டார். 10.12.1988 இந்தியப்படைகளிடம் பிடிபடாமல் தன்னைத் தானே சுட்டு வீரகாவியமான மதி அவர்களின் இழப்போடு தொடர்புகள் யாவும் அறுபட்டு தனித்துப் போனார் மாதவன் மாஸ்ரர். மீண்டும் காட்டுக்குச் செல்வதற்குமான வழிகளும் தொடர்புகள் அற்றுப்போய்விட்டது. கடல்வழியாக தனது முயற்சியில் தமிழகத்திற்குச் சென்றடைந்து கிட்டண்ணா, பாலாண்ணா ஆகியோரின் தொடர்புகளை எடுத்து அவர்களோடு பணிகளைத் தொடர்ந்தார். எங்கிருந்தாலும் விடுதலைப் போராளிக்கு ஓய்வில்லையென்பதனை தனது உழைப்பால் உணர்த்திய போராளி. பின்னர் 1989களில் பிறேமதாச அரசோடு பேசும் காலம் வந்த போது தாயகம் வந்து பாலமோட்டைக் காட்டுப்பகுதியைச் சென்றடைந்தார். ஒவ்வொரு போராளியின் நினைவிலும் மாதவன் மாஸ்ரரின் கலகலப்பும் நகைச்சுவையுமே நினைவில் நிற்கும் மறக்க முடியாத மனிதன். மென்மையான அந்த இதயத்தினுள் ஒரு மாபெரும் புலனாய்வாளன் புலனாய்வு ஆசான் புதைந்து கிடந்ததை காலமே கைபற்றி வெளியில் காட்டியிருந்தது. புலிகளின் புலனாய்வுத்துறை பெரு வளர்ச்சி கண்டு உலகை அதிசயிக்க வைத்த எல்லா வெற்றிகளின் பின்னாலும் மாதவன் மாஸ்ரரும் வெளியில் தெரியாத வேராக இருந்தார். 000 000 000 அந்தக்காலம் தலைவருக்கும் தளபதிகளுக்கும் சோதனைகளும் தடைகளுமே சூழ்ந்திருந்தது. எனினும் புலிகளின் அமைப்பின் துறைசார் வளர்ச்சிகள், மாற்றங்கள் மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் ஒரு பிரிவாக புலனாய்வுப்பிரிவின் தேவையும் அதன் எதிர்கால பணிகளும் உணரப்பட்டு தனித்த சிறப்பான புலனாய்வுத்துறையை உருவாக்க தலைவரின் சிந்தனையின் செயல்வடிவமாக போராளிகள் செயற்படத் தொடங்கியிருந்தனர். அப்போதைய பிரதித்தலைவரான மாத்தையாவின் நிர்வாகத்தில் சலீம் அவர்களின் பொறுப்பின் கீழ் மாதவன் மாஸ்ரரினால் பயிற்சிகள் வழங்கப்பட ஆயத்தங்கள் தயராகியது. புலனாய்வுப்பிரிவின் பயிற்சிகள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளின் முடிவில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் போராளிகள் தெரிவு செய்யப்பட்டு பாலமோட்டைக்கு உள்வாங்கப்பட்டார்கள். புலனாய்வுத்துறையின் வளர்ச்சியின் ஆரம்பம் இங்கேதான் உருவாகியது. இதுவே பின்னாளில் புலனாய்வுத்துறையின் பல்பரிமாண மாற்றத்தின் ஊற்றாகியது. பாலமோட்டைக் காடுகளே இந்திய இராணுவ காலத்தில் புலிகளின் வரலாற்றில் முக்கிய பங்கை வகித்த வரலாற்றைத் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருந்தது. பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலம் அது. பாலமோட்டையிலிருந்தே அரசியல் போராளிகளை இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தி கொழும்புக்கு ஏற்றிச் செல்லும். அரசியல் பேச்சுக்குச் சென்று திரும்பும் போராளிகளை மாதவன் மாஸ்ரரால் வளர்க்கப்பட்ட புலனாய்வுப்போராளிகள் பத்திரமாக பாதுகாப்பாக கொண்டு போய்ச் சேர்க்கும் பொறுப்பினையும் ஏற்றிருந்தார்கள். யாழ்மாவட்டத்திலிருந்து அதிகளவிலான போராளிகளும் இதர மாவட்டங்களிலிருந்து ஐந்து ஐந்து போராளிகளுமாக பாலமோட்டைக்கு வந்து சேர்ந்தார்கள். புலனாய்வுப் பயிற்சிக்கு வந்திருந்த போராளிகள் தனித்தனியே நேர்முகம் செய்யப்பட்டார்கள். பயிற்சியின் கடுமை கட்டுப்பாடுகள் யாவும் விளங்கப்படுத்தப்பட்டு அனைத்து விதிகளையும் ஏற்றுக் கொள்ளும் துணிச்சல் மிக்கவர்களை மட்டுமே பயிற்சியில் பங்கெடுக்க அனுமதியும் வழங்கப்பட்டது. பயிற்சியின் கடினம் கட்டளைகளை ஏற்றுக் கொண்டு போராளிகள் புலனாய்வுப்பயிற்சிக்குத் தயாரானார்கள். 37என்ற சுட்டுப்பெயரைக் கொண்டு இயங்கிய முகாம் புலனாய்வுப்பயிற்சி முகாமாக அமைக்கப்பட்டது. லெப்.கேணல் கிறேசி அனைத்து முகாம்களுக்கு பொறுப்பாகவும் புலனாய்வுப் பகுதிக்கு சலீம் அவர்களும் பொறுப்பாக புலனாய்வுப் பயிற்சியில் ஆண் பெண் போராளிகள் தயாராகினர். பயிற்சிக்கான முதல் நாள் கலந்துரையாடலில் பயிற்சி பெறும் போராளிகளுக்கான பயிற்சி விதிகள் விளக்கப்பட்டது. பயிற்சியின் போது தினமும் 10கிலோ மண்மூடையைச் சுமந்தபடியே பயிற்சிகளைச் செய்ய வேண்டும். நித்திரைக்குச் செல்லும் நேரம் தவிர்த்த இதர நேரமெல்லாம் 10கிலோ மண்மூடையை யாரும் கழற்றவே கூடாதென்று அறிவுறுத்தப்பட்டது. இப்பயிற்சியின் நெறிப்படுத்துனர்களாக மாதவன் மாஸ்ரர் மற்றும் சலீம் ஆகியோர் கவனிப்பர் எனவும் விளக்கப்பட்டது. புலனாய்வுத்துறை பயிற்சிகளில் மாதவன் மாஸ்ரரின் சிரத்தையும் கவனமும் அனைத்துப் போராளிகளையும் அப்பயிற்சியில் அக்கறையோடு பயிற்சியைத் தொடர வைத்தது. அதுமட்டுமன்றி குறும்புகள் ,குழப்படிகள் நிறைந்த இளவயதுக்காரர்களால் நிறைந்த அந்தப் பயிற்சி முகாமில் பயிற்சியாசிரியராக மட்டுமின்றி ஒரு தந்தையின் கண்டிப்பும் கவனமும் ஒவ்வொரு போராளிக்கும் பொதுவாகவே இருந்தது. குறும்புகள் செய்வோருக்கு தண்டனைகள் வழங்குவதில் தந்தையாகவும் அவர்களின் வளர்ச்சியில் தாயின் அக்கறையோடும் புலனாய்வுப்பயிற்சிகளை நடாத்தி புலனாய்வுத்துறையின் வளர்ச்சியில் தனது பங்களிப்பை காத்திரமாக வழங்கியிருந்தார். மாதவன் மாஸ்ரரினலேயே உருவாக்கப்பட்ட போராளிகள் புலனாய்வுத்துறையின் பல்துறைசார் ஆற்றல்களோடும் வளர்ந்தார்கள். அனைத்து புலனாய்வுப் போராளிகளின் உருவாக்கத்திலும் மாதவன் மாஸ்ரரே ஆதாரமாக ஆசானாக இருந்தார். 000 000 000 யாழ்மாவட்டத்தின் பொறுப்பாளராக தலைவரால் நியமிக்கப்பட்டிருந்த பொட்டு அம்மான் 1989 இறுதியில் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தளபதி பானு அவர்கள் யாழ்மாவட்டத்தின் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். காரணம் சொல்லப்படாமல் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு பொட்டு அம்மான் அவர்கள் தலைவரால் பாலமோட்டைக்கு அழைக்கப்பட்டார். தனது ஒவ்வொரு அசைவிலும் பணியிலும் புலனாய்வுக்கான திறனையும் ஆழமையையும் வெளிப்படுத்தியது மட்டுமன்றி அதுவே சிந்தனையாயிருந்த பொட்டு அம்மான் அவர்கள் புலிகளின் புலனாய்வுத்துறையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பொட்டு அம்மானிடம் திறமை வாய்ந்த தளபதிகளான லெப்.கேணல் சூட், லெப்.கேணல். மாதகல் ராஜன், மாதவன் மாஸ்ரர் ,கபிலம்மான் போன்றவர்களைக் கொடுத்த தலைவர் புலனாய்வுத்துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான தளத்தையும் வழியையும் உருவாக்கும் பொறுப்பை பொட்டு அம்மான் அவர்களிடம் கையளித்திருந்தார். பொட்டு அம்மான் தலைமையில் புலனாய்வுத்துறையின் உருவாக்கம் புதிய வடிவத்தில் காலடி வைத்த காலம் 1990. இக்காலம் இந்தியப்படைகள் ஈழத்தை விட்டு வெளியேறியிருந்தது. புலிகள் நாட்டுக்குள் வந்திறங்கி மக்களோடும் மக்களின் பணிகளோடும் தங்கள் பணிகளை ஆரம்பித்திருந்தார்கள். புலனாய்வுத்துறையின் முக்கிய மாற்றமும் வளர்ச்சியும் புதிய பாய்ச்சலை நோக்கிய பயணம் ஆரம்பித்திருந்த இந்நேரத்தில் பொட்டு அம்மான் அவர்களால் மாவட்டங்களுக்கான புலனாய்வுப்பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். யாழ்மாவட்டம் மாதகல் ராஜன் , வன்னிமாவட்டம் மல்லி , மட்டக்களப்பு மாவட்டம் நியூட்டன் , திருகோணமலை மாவட்டம் கபிலம்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டு மாவட்டங்களுக்கான புலனாய்வுத்துறை கட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இக்காலமானது மிகுந்த சிக்கல் நிறைந்த காலமாக இருந்தது. அதுமட்டுமன்றி சகோதர இயக்கங்கள் , இந்திய இராணுவத்தோடு இணைந்து இயங்கியவர்கள் , இந்திய இராணுவ காலத்தில் நடந்த பல படுகொலைகளில் நேரடிப் பங்காளிகள், எதிரியின் உளவாளிகள் முகவர்கள் யாவரும் கலந்திருந்த சிக்கல்கள் நிறைந்த நேரமது. ஒவ்வொரு விடயத்தையும் சரியாக இனங்கண்டு ஆராய்ந்து விடுதலைப்பயணம் பயணிக்க வேண்டிய இக்கட்டான காலமும் இதுவே. இந்தக் காலத்தில் தான் புலனாய்வுத்துறையினரின் முக்கிய பணிகளில் ஒன்றாக தகவல் சேகரிப்பு விசாரணைப்பிரிவு உருவாக்கப்பட்டது. சேகரிக்கப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை , உறுதிப்படுத்தல் , சரியான வகையில் இனங்காணப்பட்ட விடயங்கள் அனைத்தும் சரியானவே என்பதனை ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு விசாரணைப் பிரிவின் கையிலேயே இருந்தது. இவ்விசாரணைப் பிரிவிற்கும் பொட்டு அம்மானுக்குமான இணைப்பாளராக மாதவன் மாஸ்ரர் நியமிக்கப்பட்டார். விடயங்களைச் சரியாக ஆராய்ந்து அவற்றை எழுத்து வடிவாக்கி அறிக்கைகள் தயாரித்து பொட்டு அம்மானுக்கு வழங்கும் பொறுப்பில் மாதவன் மாஸ்ரரின் பங்கு காத்திரமானது மட்டுமன்றி காலத்தின் தேவையாகவும் அமைந்தது. அறிக்கைகள் என்பது கடதாசிகளில் எழுதப்பட்டாலும் அக்கடதாசிகளிலேயே அனைத்து விடயங்களும் த(தே)ங்கியிருந்தது. ஒவ்வொரு சிறு சிறு விடயங்களிலும் சரிகளையும் ,தவறுகளையும் , நியாயங்களையும் , தீர்வுகளையும் இவ் அறிக்கைகளே தாங்கிக் கொண்டிருந்தது. ஒரு சிறு தவறுக்கும் ஒரு அறிக்கையே காரணமாகிவிடக்கூடிய ஆபத்தான பணி. ஆபத்தான பணியையும் அழகாக செய்து முடிக்கும் திறமை மாதவன் மாஸ்ரரிடமும் மாதவன் மாஸ்ரரால் உருவாக்கப்பட்ட புலனாய்வுத்துறைப் போராளிகளிடமுமே இருந்தது. போராளிகள் சேகரித்து வரும் அறிக்கைகள் யாவையும் தானே வாசித்து அவ்வறிக்கைகளை தொகுப்பாக்கி கோடிகளுக்கு நிகரான பெறுமதி மிக்க புலனாய்வுப்பணியின் தந்தையாகவே மாதவன் மாஸ்ரரின் தியாகம் அமைந்தது. 000 000 000 இக்காலத்தில் மாதவன் மாஸ்ரரிடம் கல்விக்குழுவினை உருவாக்குமாறு பொட்டு அம்மானால் பணிக்கப்பட்டது. ஒவ்வொரு சொல்லுக்கும் செயல்வடிவத்தையே காட்டும் திறமை மிக்கது புலிகளின் வரலாறு. பொட்டு அம்மானின் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட கல்விக்குழுவின் பொறுப்பாளராக மாதவன் மாஸ்ரர் நியமிக்கப்பட்டு கல்விக்குழுவின் செயற்பாட்டுக் குழு உருவாக்கம் காண்கிறது. கல்விக்குழு ஆசிரியர் குழுவில் 3பேர் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் உலக புலனாய்வு அமைப்புகள் கட்டமைப்புகள் பற்றிய தரவுகளை சேகரித்தல் மற்றும் நூல்களை தருவித்துக் கொடுக்க வேண்டும். தருவிக்கப்படும் அனைத்துலக புலனாய்வு பிறமொழி நூல்களை ஓய்வுபெற்ற மொழிப்புலமையாளர்களுக்கு ஊதியம் வழங்கி நூல்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் பொறுப்பையும் கண்காணிக்கும் பொறுப்பும் மாதவன் மாஸ்ரரிடமே இருந்தது. இப்பணிக்காக தனியாக இடமொன்றை ஒழுங்கு செய்து அங்கு வைத்தே இப்பணி மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போதைப் போல அந்தக்காலம் இலகுவில் கணணியில் தட்டச்சு செய்து நூல்களை வடிவமைக்கவோ அல்லது அச்சுப்பதிக்கவோ இலகு வசதிகள் இல்லை. பிறேமதாச அரசின் பொருளாதாரத்தடை நடைமுறையில் இருந்த காலம். அடிப்படை தேவைகள் கூட மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அச்சடிக்கும் கடதாசியிலிருந்து அனைத்தும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. மொழிபெயர்க்கப்படும் புலனாய்வு நூல்களை அச்சுக்கோர்த்து நூல்வடிவாக்கி புலனாய்வுப் போராளிகளுக்கு கற்பித்தலுக்கு ஏற்ற வகையில் உருவாக்கும் பெரும் பொறுப்பை மாதவன் மாஸ்ரரே எற்றிருந்தார். அத்தோடு இலங்கையில் வரும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளில் முக்கியமான செய்திகளை வெட்டி அவற்றை மட்டைகளில் ஒட்டி அச்சுப்பிரதியெடுத்து நூலுருவாக்கும் பொறுப்பானது ஒரு புலனாய்வுத்துறையின் போராளியிடம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு போராளியும் தனக்கு வழங்கப்படும் பொறுப்பையும் பணியையும் கவனமாகவும் கடமையுணர்வோடும் செய்து முடிக்கும் திறனை ஊட்டியது புலிகளின் பயிற்சிகளும் பாசறைகளும். இங்கும் மாதவன் மாஸ்ரரின் பங்கும் பணியும் பெரியது. மாதவன் மாஸ்ரரால் உருவாக்கப்பட்ட கல்விக்குழுவின் அபார வளர்ச்சியும் செயற்பாடும் வேகவேகமாய் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொடுத்தது. இத்தனை வளர்ச்சியின் முதுகெலும்பாக மாதவன் மாஸ்ரரே நிமிர்ந்து நின்றார். இத்தோடு பிறமொழிகளில் வெளியாகும் புலனாய்வு திரைப்படங்கள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு போராளிகளுக்கு காட்டப்பட்டது. அனைத்து துறைசார் போராளிகளுக்கும் கல்விக்குழுவினால் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களே கற்பித்தலில் பயன்படுத்தப்பட்டது. இக்கற்பித்தல் பொறுப்பும் ஒரு புலனாய்வுத்தறைப் போராளியிடம் வழங்கப்பட்டிருந்தது. கல்விக்குழுவே அனைத்து துறைசார் போராளிகளுக்கான விழிப்புணர்வையூட்டியும் புடம்போட்டு வளர்த்து பணிகளுக்கு அனுப்பினார்கள். அதுபோல வெளிப்பணிகளுக்குச் செல்லும் ஆண் பெண் போராளிகளையும் கல்விக்குழுவே பயிற்றுவித்து அனுப்பியது. கல்விக்குழு உருவாக்கிய திறமையானவர்களை வைத்தே இதர துறைகளின் போராளிகளுக்கான பயிற்சிகளும் , இளநிலைப் போராளிகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இத்தனைக்கும் ஆணிவேராக நின்ற மாதவன் மாஸ்ரரினால் உருவாக்கப்பட்டவர்கள் பலர் பின்னாட்களில் பெரும் பொறுப்புகளில் கடமைகளைத் தொடரவும் ஏணியாக நின்ற இமயம் மாதவன் மாஸ்ரர். கல்விக்குழுவின் ஆரம்பமும் அதன் அடித்தளமுமே பின்னாளில் புலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் இதர துறைகளின் திறமையாளர்களை செயற்பாட்டாளர்களை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்ததை வரலாறு தன் பதிவேட்டில் பதிவு செய்து கொண்டது. உலகம் புலிகளின் புலனாய்வுத்துறையை இன்றுவரை புதிர்களாயே பார்க்கும் வகையில் புலிகளின் புலனாய்வுத்துறையின் வளர்ச்சியானது மேம்படவும் அதி உச்சதிறனுடன் வளரவும் காரணமான பலரை உலகம் காணாமல் அவர்கள் மௌனங்களாலே எழுதப்பட்டார்கள். அந்த மௌனம் எழுதிய வரிகளில் மாதவன் மாஸ்ரரும் அடங்குகிறார். 000 000 000 1993காலம் தமிழீழப்போராட்ட வரலாற்றில் சவால் நிறைந்த நெருக்கடியை புலிகள் சந்தித்த காலம். எனினும் புலனாய்வுத்துறையின் நுண்ணிய அவதானிப்பு ஆற்றல் எல்லாத்தடைகளையும் உடைத்துக் கொண்டு நிமிர வைத்தது. இக்காலம் மாதவன் மாஸ்ரர் உருவாக்கிய போராளிகள் வௌ;வேறு துறைகளுக்கும் பணிகளுக்கும் சென்று கொண்டிருந்தார்கள். கல்விக்குழுவின் வளர்ச்சியானது மாதவன் மாஸ்ரருக்கு மேலும் பல பணிகளை வழங்கிய நேரம் கல்விக்குழுவிற்கான பொறுப்பாளராக பொஸ்கோ அவர்கள் நியமிக்கப்பட்டார். மாதவன் மாஸ்ரர் பொட்டு அம்மான் அவர்களின் நேரடி அவதானத்திற்குள் உள்வாங்கப்பட்டார். இக்காலத்தில் வெளியக புலனாய்வுத்துறையின் ஆண்கள் பிரிவுக்கு தளபதி கேணல் சாள்ஸ் அவர்களும் , பெண்கள் பிரிவுக்கு தளபதி லெப்.கேணல் அகிலா அவர்களும் பொறுப்பில் இருந்தார்கள் அகிலா அவர்கள் வீரச்சாவடையும் வரையும் பெண்கள் புலனாய்வின் பொறுப்பாளராக அகிலா அவர்களே இருந்தார். அதிலும் அகிலா அவர்கள் வெளியகப்பொறுப்போடு வெளியகப்பணியகத்தின் பொறுப்பையும் ஏற்றிருந்தார். இவ்விரண்டு நிர்வாகங்களுக்கும் உட்படாத ஒரு பணியை பொட்டு அம்மான் அவர்கள் மாதவன் மாஸ்ரரிடம் வழங்கியிருந்தார். அந்த வேலைத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பையும் மாதவன் மாஸ்ரரிடமே வழங்கியிருந்தார். புலனாய்வுத்துறையின் பணிகள் இரகசியமானதாகவும் ஆழமானதாகவும் இருந்த போதிலும் இவை அனைத்திலும் மாதவன் மாஸ்ரருக்குப் பெரும் பங்கிருந்தது. 000 000 000 அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கா அவர்களுடனான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து 3ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. சமாதானத்தைக் கொண்டு வருவதாகச் சொல்லிக் கொண்ட சந்திரிகா அம்மையார் அவர்கள் தமிழர் தரப்புடன் போர் செய்யத் தக்க தனது முழுபலத்தையும் பயன்படுத்த முனைந்து யுத்தத்தில் ஈடுபடத்தொடங்கியது. குறிப்பாக தமிழர் தாயகப்பகுதிகளான வடகிழக்கில் யுத்தம் ஆரம்பித்திருந்தது. தொடர்ந்த விமானத் தாக்குதல்கள் எறிகணை வீச்சுக்கள் மரணத்தின் காலைகளையே தமிழர் நிலத்தில் பரவிவிட்டிருந்தது. அன்றாட விடியல் சாவுகளைக் கொண்டு வரும் பொழுதுகளாகவே விடியத் தொடங்கியது. எல்லா நம்பிக்கைகளும் போய் இனி யுத்தம்தான் என சந்திரிகா அரசு கடல், தரை, வான் படைகளை களத்தில் இறக்கியது. மாதவன் மாஸ்ரர் மிகவும் அவசியமான பொறுப்பொன்றை பொறுப்பேற்று தனது பணிகளில் நேர்த்தியும் கவனமுமாகியிருந்த வேளையில் சூரியக்கதிர் நடவடிக்கையை எதிரி மேற்கொண்ட நாட்களவை. யாழ்மண்ணைக் கைப்பற்றும் முயற்சியில் யாழ்மாவட்டத்தில் பலாலி ,காங்கேசன்துறை ஆகிய இடங்களில் முகாமிட்டிருந்த சிங்களப்படைகள் முற்றுமுழுதாக யாழ்மண்ணைக் கைப்பற்றும் நோக்கில் அனைத்து முனைகளிலிருந்தும் முன்னேறத் தொடங்கியது. 09.07.1995அன்று பலாலியில் முகாமிட்டிருந்த சிங்களம் முன்னேறிப்பாய்தல் எனும் பெயரில் வலிகாமம் வடக்கு, மேற்கு பகுதிகளை நோக்கி படை நகர்வை மேற்கொண்டனர். தங்கள் வாழிடங்களைவிட்டு இடம்பெயர்ந்த மக்கள் தேவாலங்கள் கோவில்களில் தஞ்சமடைந்தனர். முன்னேறும் படைகளுக்கு ஆதரவாக வான்படைகளின் புக்காரா விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டிருந்தன. இதன் தொடக்கமாக நவாலி தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது சிங்கள வான்படை நடாத்திய தாக்குதலில் படுகாயமடைந்தும் மரணித்துப் போனவர்களின் உறவுகளின் கண்ணீரால் நிறைந்தது. குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என இக்குண்டு வீச்சில் இரத்தமும் சதையுமாக நவாலி தேவாலய வளாகம் மரண ஓலத்தால் நிறைந்தது. 3குண்டு வீச்சு விமானங்கள் ஒன்றாக நடாத்திய தாக்குதலில் இரத்தக்கறைபடிந்த துயரத்தை மக்கள் மனங்களில் பதிவாக்கியது. பேரவலத்தின் ஆரம்பம் அன்று தொடங்கியது. அதேதினத்தில் அளவெட்டி , சண்டிலிப்பாய் போன்ற பகுதிகள் நோக்கியும் பலாலியிலிருந்து எதிரியால் தொடுக்கப்பட்ட பீரங்கி , எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்ட எதிரி வலிகாமம் தென்மேற்கு , மேற்கு , தெற்கு பகுதிகள் நோக்கியும் மக்கள் வாழிடங்கள் நோக்கி தாக்குதலை மேற்கொண்டனர். உடுத்த உடைகளுடன் கைகளில் அகப்பட்டவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். வீதியெங்கும் மக்கள் வெள்ளம். மக்கள் நகரும் இடமெங்கும் எதிரியின் விமானத்தாக்குதலும், எறிகணை வீச்சுகளும் துரத்திக் கொண்டு போனது. மரணங்களும் , காயங்களும் சாவின் வாசனையை துயரத்தின் வேதனையை மக்கள் அனுபவித்தபடியே நடந்தார்கள். காயமடைந்தவர்களை காப்பாற்ற அவகாசமோ மரணித்தவர்களை அடக்கம் செய்ய ஆதரவோ கிடைக்கவில்லை. மருத்துவ வசதியோ காயமடைந்தோரை ஏற்றிச் செல்ல வாகன வசதியோ இல்லாமல் மரணம் மலிந்தது. மனங்கள் மட்டும் வலியோடு நடந்தது. நவாலிமண்மீது வீசப்பட்ட குண்டுகளால் அக்கிராமம் அமைதியை இழந்தது. அழுகையினாலும் மரண வலியினாலும் உயிர்கள் துடிக்க அன்று நவாலி சென்பீற்றர் தேவாலயம் மற்றும் நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் வீழ்ந்த குண்டுகளால் 147இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து போக 360இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்கும் வழியின்றி பலரை இழக்கும் நிலமையை அன்றைய நாளில் அங்கிருந்த மக்களால் மறக்க முடியாத வடுவைத் தந்தது. இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு உணவு, நீர் வசதிகளை வழங்கிய 48தொண்டர்களும் அன்று தங்கள் உயிர்களை அங்கே விதைத்து விழிமூடிக்கொண்டனர். எதிரியின் வரவை எதிர்த்து சமராடிக் கொண்டிருந்தார்கள் புலிகள். நவாலி , நாகர்கோவில் ,நந்தாவில் அம்மன்கோவில் என இடம்பெயர்ந்து தஞ்சமடைந்திருந்த மக்கள் தங்கிடங்களிலெல்லாம் சிங்கள வான்படையின் தாக்குதல் பெரும் உயிரழிவைத் தந்தது. அநியாயமாக அழிக்கப்பட்ட நவாலி தேவாலயத்தை அரச ஊடகம் புலகளின் ஆயுதத் தொழிற்சாலை குண்டுவீச்சில் அழிக்கப்பட்டதென அறிவித்திருந்தது. உலகமும் இந்த அழிப்பை பெரிதுபடுத்தவில்லை. தேவாலயம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பற்றி யாழ் மறை மாவட்ட ஆயர் வத்திக்கானுக்கு அறிவித்திருந்தார். வத்திக்கானும் நாவாலித் தேவாலயத்தின் மீது வீசப்பட்ட குண்டுகளில் அழிந்த தேவாலயம் பற்றியோ உயிர்கள் பற்றியோ எவ்வித கவனத்தையும் காட்டவில்லை. என்றும் தமிழர் மீதான அழிவுகளை உலக நாடுகள் இப்படித்தான் மௌனிகளாக வெறும் பார்வையாளர்களாக நின்று பார்த்தது. புலிகளே மக்களின் அழிவுகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் முதல் முன்னேறி வரும் இராணுவத்துடனான சமரையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் மக்களைக் குண்டுவீசிக் கொன்றழித்த புக்காரா குண்டுவீச்சு விமானம் மீது 14.07.1995 சண்டிலிப்பாயில் வைத்து புலிகளின் ஏவுகணை மூலம் புக்காரா சுட்டுவீழ்த்தப்பட்டது. கடற்புலிகளால் இதே காலம் எடித்தாரா கப்பல் மீது கடற்புலிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டு கடல் மூலமான எதிரியின் வழங்கலிலும் புலிகள் தடைய ஏற்படுத்தியிருந்தனர். தரையால் முன்னெடுக்கப்பட்ட எதிரியின் முன்னேறிப் பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக புலிகளால் புலிப்பாய்ச்சல் நடவடிக்கையும் மேற்கொள்ளலுக்கு திட்டமிடப்பட்டது. புலிப்பாச்சல் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்ட காலம் பௌர்ணமிகாலமாகும். நிலவு காலத்தில் வலிந்த தாக்குதல்களைச் செய்வதில் அதிகளவு பாதகத்தையே சந்திக்க வேண்டிய நிலமை வரும். ஆனால் அந்த நிலவுகாலத்தில் எதிரியிடமிருந்து மண்ணையும் மக்களையும் காப்பாற்ற புலிப்பாய்ச்சல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தைக் காலம் கொடுத்தது. புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் புலிகளின் இராணுவத் திறனும் எதிரியுடனான சண்டையும் எதிரியால் எதிர்கொள்ள முடியாது போக கைப்பற்றிய பகுதிகளை விட்டு எதிரி பின்வாங்கிப் போனான். புலிப்பாய்ச்சல் மூலம் எதிரியின் கனவு சிதைக்கப்பட்டது. 000 000 000 17.10.1995 அன்று ரிவிரெச (சூரியக்கதிர்) என்ற பெயரில் யாழ்மண்ணை முற்றுகையிடும் கனவோடு சிங்களப்படைகள் முன்னேறத் தொடங்கியிருந்தது. வரலாறு காணாத அழிவையும் இழப்பையும் இடப்பெயர்வையும் கண்டது யாழ்மண். காலம் காலமாய் சேர்த்த சொத்துகள் உடமைகள் யாவையும் இழந்து அகதியாக்கப்பட்டார்கள் மக்கள். சிங்களத்தின் கொலைக்கரங்கள் தமிழர்களின் உயிரையும் உடமைகளையும் கொன்று போட்டுக் கொண்டிருக்க கிடைத்ததைக் கைகளில் எடுத்துக் கொண்டு இடம்பெயரத் தொடங்கியவர்களை 30.10.1995அன்று மாபெரும் துயரில் வீழ்த்தியது காலம். 6லட்சம் தமிழர்களை ஒரேநாளில் துடைத்தெடுத்து சொந்த இடங்களிலிருந்து துரத்திய அந்த நாளின் துயரத்தை வார்த்தைகளுக்குள் கட்டி வைக்க தமிழில் வார்த்தைகளாலேயே முடியாது போனது. மழைவெள்ளத்தில் மக்கள் வெள்ளம் நிறைந்தது. ஒருநாளில் யாழ்மண்ணின் குடிகள் தங்கள் சொந்த ஊரைப் பிரிந்து சென்று கொண்டிருந்தது. 30.10.1995அன்று புலனாய்வுத்துறையின் பணியகப்பொறுப்பாளரும் வெளியக பெண்கள் பிரிவு புலனாய்வுப் பொறுப்பாளருமான லெப்.கேணல்.அகிலா அவர்கள் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். மண்ணை மீட்கும் சமரில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிர்களை ஈந்து கொண்டிருந்தவர்கள் வரிசையில் லெப்.கேணல்.அகிலா அவர்களும் வீரகாவியமானார். மாதவன் மாஸ்ரரின் வழிநடத்தலில் பாலமோட்டைக் காடுகளில் நடைபெற்ற முதல் புலனாய்வுப் பாசறையில் வளர்ந்த அகிலா அவர்களின் புலனாய்வுத்துறையின் பணிகளானது ஒரு தனி வரலாறு. புலிகள் பெரும் சவாலையும் நெருக்கடியையும் சந்தித்த காலங்களில் இக்காலமும் முக்கியமான காலமாகும். இப்போது லெப்.கேணல்.அகிலா அவர்களின் பொறுப்பிலிருந்த பணியகப் பொறுப்பு மாதவன் மாஸ்ரரிடம் பொட்டு அம்மானால் வழங்கப்பட்டது. இப்போதைய காலம் போல கையுக்குள் ஆவணங்களை சேமிக்கும் இலத்திரனியல் வசதியோ அல்லது சேமிப்பு வசதிகளோ இல்லாத காலம். அனைத்து கோவைகள் ஆவணங்கள் யாவுமே கையெழுத்து வடிவில் லட்சக்கணக்கான கடதாசிகளில் எழுதப்பட்டு கோவைப்படுத்தப்பட்டவை. ஒவ்வொரு ஆவணமும் விலைபேச முடியாத பெறுமதி மிக்கவை. உயிரை விடவும் பெறுமதி வாய்ந்தவை அத்தனை ஆவணங்களும். எதிரி முன்னேறி வரவர அத்தனை ஆவணங்களையும் பின்னகர்த்திக் கொண்டு போக வேண்டிய பொறுப்பு மாதவன் மாஸ்ரரிடம் வந்தது. ஏற்கனவே ஒருவரின் நிர்வாகத்தின் கீழிருந்து அனைத்தையும் மீளச்சீர்படுத்தி வேகவேகமாய் அனைத்தையும் இடம் மாற்றி பாதுகாப்பாக வன்னிக்குக் கொண்டு செல்லும் பொறுப்பில் மாதவன் மாஸ்ரர் தனக்கு வழங்கப்பட்ட பணியைச் சக போராளிகளின் துணையோடு பாதுகாப்பாகவும் கொண்டு சென்று சேர்த்தார். இதுவொரு சவாலான பணியாகவே இருந்தது. எல்லோரையும் உள்வாங்கி பொறுப்பைக் கொடுத்து ஆவணங்களை நகர்த்த முடியாத அவசரம். தனது பொறுப்பில் மாதவன் மாஸ்ரர் காட்டிய அர்ப்பணிப்பு , பொறுப்புணர்வு ஒரு போராளியின் கடமையை உணர்த்தியது. குறித்த போராளிகளை மட்டுமே நியமித்து குறித்த கால இடைவெளிக்குள் அனைத்தையும் பத்திரப்படுத்திய மாதவன் மாஸ்ரரின் பணியை பொட்டு அம்மான் பாராட்டி கௌரவித்திருந்தார். 000 000 000 புலனாய்வுத்துறையின் வளர்ச்சியும் பணிகளின் விரிவாக்கமும் புலனாய்வுத்துறைப் போராளிகளின் பல்பரிமாண ஆற்றலும் எங்கும் சென்று வென்று வரும் வல்லமையை வளர்த்திருந்த காலத்தின் ஒரு பகுதியது. எதிரியைவிடவும் எம்மவர்களின் தொல்லைகள் காட்டிக்கொடுப்புகள் சகோதர இயக்கங்களின் அநியாயங்கள் எல்லைமீறியிருந்த காலம். பணிகளுக்காக எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இயங்கத் தொடங்கிய போராளிகளை எதிரி இனங்காண்கிறானோ இல்லையோ மற்றைய இயக்கங்கள்; இனம் கண்டு பணிகளில் நின்ற போராளிகளை ஆதரித்த குடும்பங்கள் அவர்களின் தங்கிடங்களை தேடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலமையிலிருந்து போராளிகளை பாதுகாப்பதோடு ஆதரவாளர்களின் குடும்பங்களையும் பாதுகாக்கும் சமவேளை சகோதர இயக்கங்களுடனான ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டிய காலத்தின் தேவையை உணர்ந்து கொண்ட பொட்டு அம்மான் அதற்காக ஒரு கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தை மாதவன் மாஸ்ரரிடம் விளக்கி ஒரு நிர்வாக அலகை உருவாக்கும் பணியை ஒப்படைத்தார். இவ்விடத்தில் அரசியல் போராளியாகவும் மாதவன் மாஸ்ரரின் ஆழுமை வெளிப்பட்டிருந்தது. புலனாய்வுத்துறையின் மூலவேரான மனிதர் அரசியல் பணியிலும் பணிகளை நகர்த்தவும் பணியாற்றவும் முடியுமென்ற உண்மையை ஒவ்வொருவரும் உணரும் வகையில் அவரது அரசியல் பணிகள் அமைந்தது. இப்பணியில் முக்கியமான பொறுப்புக்களில் இருந்த புலனாய்வுத்துறைப் போராளிகளையும் பொட்டு அம்மான் கொடுத்திருந்தார். இப்பணியில் மாதவன் மாஸ்ரரிற்குத் துணையாக ஞானவேல் அவர்கள் பணியாற்றத் தொடங்கியிருந்தார். இம்முயற்சியே பின்னாட்களில் சகோதர இயக்கங்கள் அரசியல்வாதிகளை புலிகளோடு ஒற்றுமைப்பட்டு அரசியல்பணிகளைச் செய்வதற்கான மூலவேராக இருந்தது. பின்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஒருங்கிணைவு மற்றைய இயங்கங்களுடனான புரிந்துணர்வு செயற்பாடுகள் யாவுக்கும் பொட்டு அம்மானின் திட்டமிடல்களும் செயற்பாடுகளும் புலனாய்வுப் போராளிகளின் பணிகளும் மாதவன் மாஸ்ரரின் உழைப்புமே காரணம். ஓவ்வொரு இயக்கங்களுடனும் தொடர்புகளைப் பேணவும் ஒவ்வொரு இயக்கங்களுடனும் இணைந்து பணியாற்றவும் கூடிய வகையில் ஒவ்வொரு இயக்கங்களுக்குமான தனித்தனியான புலனாய்வுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அக்கட்டமைப்பு மூலம் அவர்களுடனான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்தகால தவறுகள் , புரிதலின்மைகளினால் ஏற்பட்ட கசப்புணர்வுகள் யாவையும் இந்தக் கட்டமைப்பு கணிசமான அளவு மறந்து பணிகளைச் செய்யவும் காரணமாகியது. எனினும் பழைய தவறுகளை மட்டுமே எண்ணையூற்றி வளர்த்து அதில் குளிர்காயத்துடித்தவர்களுக்கு மத்தியில் சகோதர இயக்கங்களுடனான தொடர்பாடல் பணிசார்ந்த வேலைகள் இறுக்கமடைந்தது. இதில் ரெலோ , ஈ.பீ.ஆர்.எல்.எவ் போன்ற இயக்க நிர்வாகங்களோடு ஆரம்பமே மிகவும் சிறந்த புரிதல் , தாயகம் எனும் ஒரே நோக்கத்திலான பணிகளும் செய்யும் வாய்ப்பை உருவாக்கியதில் கணிசமான பங்களிப்பையும் போராளிகளை உருவாக்கியதிலும் மாதவன் மாஸ்ரரின் பங்கென்பது அளப்பரியது. ஒருகாலம் எதிரும் புதிருமாக இருந்த நிலமையை மாற்றி புலிகளின் புலனாய்வுப் போராளிகளுக்கான தடைகள் இல்லாத ஆதரவை இராணுவ கட்டுப்பாட்டில் இயங்கிய இயக்கங்களும் , இயக்கப் பிரமுகர்களும் வழங்கி தங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதன் வெளிப்பாடே சமாதான காலத்தில் ஒரே மேசையில் அனைவரும் ஒன்றிணையக் காரணமாய் அமைந்தது. மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது. அந்த மாற்றம் புலிகளுக்கும் ,மற்றைய சகோதர இயக்கங்களுக்கும் இடையில் புதிய மாற்றங்களை உருவாக்கியது. இம்மாற்றத்தின் வேராக நின்றவர் பொட்டு அம்மான் அவர்கள். 000 000 000 ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் 2002 பெப்ரவரி 22ம் திகதி சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்டது. இவ்வொப்பந்தமானது கைச்சாத்திடப்பட்ட பின்னர் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் நடைபெற்ற 6கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. அனைத்து பேச்சுவார்த்தைகளும் நோர்வேயின் மத்தியஸ்தத்தில் நடைபெற்றிருந்தது. இப்பேச்சுவார்தைகள் யாவும் இலங்கைக்கு வெளியில் வெளிநாடுகளில் நடைபெற்றிருந்தது. புலிகள் அனைத்துலக சமூகத்திற்கு தமது முழுமையான ஆதரவினை வழங்கி இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர். ஆயுதங்களோடு போர்புரிந்த அமைப்பானது அரசியல் ரீதியான விடுதலையை விரும்பியதன் அடையாளமாக இப்பேச்சுவார்த்தைகளில் புலிகள் பங்கேற்றார்கள். இக்காலத்தில் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தேசியச் செயற்பாட்டாளர்கள் தாயகத்திற்கு சென்று புலிகளின் அனைத்துதுறைசார் போராளிகளுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். வெளிநாடுகளில் இருந்து செல்லும் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணி நிலத்தில் வாழும் போராளிகளுக்கும் மக்களுக்குமான இணைப்புப் பாலமாக மாதவன் மாஸ்ரர் ஆற்றிய பங்கானது புலத்திலிருந்து மாதவன் மாஸ்ரரின் நிர்வாக அலகின்கீழ் பணியாற்றியவர்கள் அனைவருமே மாதவன் என்ற மலையின் சிகரம் தொடவல்ல ஆற்றலை பண்பை அறிந்திருந்தனர். இதேவேளை இலங்கையின் அனைத்து பாகங்களிலும் வாழ்ந்த அனைத்து சமூகங்களுடனும் நல்லுறவை வளர்த்து புலிகளுக்கும் அந்த மக்களுக்கும் இடையிலான நல்லுறவை ஏற்படுத்தியதிலும் மாதவன் மாஸ்ரரின் பங்கு வெளியில் வராத உண்மையாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. நம்பியிருந்த சமாதான காலம் தமிழருக்கான விடுதலையை நிம்மதியான வாழ்வைத் தருமென்று நம்பிய நம்பிக்கைகள் எல்லாம் மெல்ல மெல்ல சிதையத் தொடங்கியது. அனைத்துலகமும் புலிகள் மீதே தங்கள் முழுமையான பலத்தையும் பயன்படுத்தத் தொடங்கியது. இலங்கையரசின் அத்துமீறல்கள் யாவற்றிற்கும் அனைத்துலக சமூகம் ஆதரவாகவே நடந்து கொண்டது. 2009மேமாதம் எங்கள் கனவுகள் , இலட்சியப் பயணத்தின் நிமிர்வுகள் யாவுமே அனைத்துலகத்தின் ஆதரவோடு பலியெடுக்கப்பட்டு குறுகிய நிலப்பரப்பில் புலிகளின் பலம் முடக்கப்பட்டது. வாழ்வோமாயினும் போராடுவோம் இல்லை வீழ்வோமெனினும் இறுதிவரை போராடிச்சாவோம் என்ற நிலமையில் புலிகள் அனைத்துலக பலத்தோடு போராட வேண்டிய நிலமைக்குத் தள்ளியது உலகு. பெரும் பலங்களாக விளங்கிய தளபதிகளும் போராளிகளும் இறுதிச்சமரில் பங்கேற்றார்கள். எல்லாரையும் போல மாதவன் மாஸ்ரரும் தனது முடிவை களத்திலே எழுதும் முடிவையெடுத்தார். தனது துணைவியோடு இணைந்து தனக்கான பணிகளோடு களத்தில் நின்றார். திருமண பந்தத்தில் இணைய மறுத்து தனது இலட்சியத்தில் மட்டுமே கவனமாக இருந்தவர் மாதவன் மாஸ்ரர். ஆனாலும் திருமண பந்தத்தில் இணைய வேண்டுமென பலமுறை தலைமையாலும் தளபதிகளாலும் தொடர்ந்து கேட்கப்பட்டுக் கொண்டேயிருந்தார். தேசம் விடியும் வரை தேசக்காதலை மட்டுமே சுமக்கப் போவதாய் விடாப்பிடியாக நின்றார். எனினும் தலைமையின் தொடர்ந்த வேண்டுதலுக்கு மதிப்பழித்து நீண்டகால இழுத்தடிப்பின் பின்னரேயே திருமணம் செய்ய ஒப்புக் கொண்டார். குடும்ப பந்தத்தையும் விட தேசபந்தத்தையே ஆழமாக நேசித்த மனிதன். அவரது துணைவியாரும் புலனாய்வுத்துறைப் போராளியாகவே அமைந்தது அவரது பணிகளுக்கு மேலும் ஆதரவையும் வழங்கியது. தங்களது இறுதி முடிவு தப்பித்தல் அல்ல இறுதிவரை போராடிச் சாதல் என்ற முடிவைத் தனது அன்புக்கினிய தோழமைகளுக்கு அறிவித்துவிட்டு களத்தில் நின்றார். 18.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் கடற்கரையில் 30வருட விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு புலிகளின் ஆயுதங்களும் மௌனித்துக் கொண்டது. போராடியே தமிழினத்தின் அடையாளத்தை உலகின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்த்த புலிகளின் வரலாறு அந்தக் கடலைகளோடு கரைந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கில் முள்ளிவாய்க்கால் அலைகளோடு உயிர்களின் துயரோசைகள் கலந்தது. இறுதிவரை இலட்சியம் சுமந்து ஒன்றாய் வாழ்ந்த தோழர்கள் தளபதிகள் போராளிகளோடு மாதவன் மாஸ்ரரும் தனது முடிவைத் தானே தேர்ந்து விழிமூடினார். புலிகளின் புலனாய்வுத்துறையின் வளர்ச்சி , இராணுவ , அரசியல் வளர்ச்சி , சமூக பொருளாதார , உலக அரசியலுடனான மாற்றங்களுக்கு ஏற்ப புலிகளின் அனைத்து வளர்ச்சியிலும் மாற்றங்களிலும் மாதவன் மாஸ்ரர் என்ற மாபெரும் ஆற்றல் இருந்ததும் வளர்ந்ததும் வரலாறாக….! புலிகளின் போரியல் வெற்றிகளை வழிநடாத்திய தளபதிகள் பலருடனும் நட்பும் நெருக்கமும் கொண்டிருந்த மாதவன் மாஸ்ரரிடம் தங்கள் திட்டமிடல்களுக்கான ஆலோசனைகள் பெற்று தாக்குதல் வியூகங்கள் அமைத்து சண்டைகளை வழிநடாத்திய பல தளபதிகள் யாவரோடும் மாதவன் மாஸ்ரரும் அழியாத வரலாறாக மனங்களில் நிறைகிறார். உலகம் தனது மூச்சை நிறுத்தும் வரையும் வாழும் விடுதலைப் போராட்ட வரலாறுகள் ஒவ்வொன்றிலும் புலிகளின் வரலாறும் வாழ்ந்து கொண்டேயிருக்கும். அந்த வரலாறுகள் ஒவ்வொன்றினுள்ளும் புலிகளும் மாவீரர்களும் பிறந்து கொண்டேயிருப்பார்கள். மாதவன் மாஸ்ரர்களாகவும் மரணத்தை வென்ற புலிவீரர்களாகவும் என்றென்றும் துளிர்த்துக் கொண்டேயிருப்பார்கள் புலிகள். - நினைவுப்பகிர்வு - சாந்தி ரமேஷ் வவுனியன் -
  25. கனவுகள் மெய்ப்பட காரியம் வென்றிட எங்கள் இசைக்கலைஞனே உனக்கு எம் இதயம் நிறைந்த இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.