Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துசி, நிலானி ஆகிய இரு பெண்களின் கதை ('சமூக சிற்பிகள்' அமைப்பு பதிவேற்றிய கதைகள் - 04){must read}

Featured Replies

முள்ளிவாய்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை 'சமூக சிற்பிகள்' அமைப்பினர் [The Social Architects -TSA]* சாட்சியமான மக்களிடம் கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது. 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

[தனது முப்பதாவது வயதில் உள்ள துசியின் கணவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்களுள் ஒருவராக இருந்தார். ஆனால் இப்போது இவர் காணாமற் போய்விட்டார். அத்துடன் துசியின் கணவரின் தங்கை [மைத்துனி] நிலானி தற்போது இருபதாவது வயதில் உள்ளார். ]

நாங்கள் இராணுவத்தினர் நின்ற இடத்திலிருந்து 200 மீற்றர் தூரத்தில் நின்றோம். புலிகள் எமக்கு பின்னால் நின்றிருந்தார்கள். எனது கணவர் என்னுடன் இருந்தார். ஆனால் அவர்கள் எனது கணவரை மறித்துவிட்டு என்னை மட்டும் செல்லுமாறு கூறினார்கள்.

முதலில் துசியின் கதை:

நான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட காலத்தில், அவர்கள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருக்கவில்லை. இதற்குப் பதிலாக பாடசாலைகளில் தமிழர் போராட்டம் பற்றிய கருத்துரைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நேரத்தில் தமிழர் போராட்டம் பற்றிய விளக்கவுரையை வழங்கிய இளம்பரிதியின் பேச்சுக்கள் என்னை புலிகள் அமைப்பின் பால் ஈர்த்துக் கொண்டது. எனது பதினாறாவது வயதில் நான் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டேன். தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அநீதிகள் தொடர்பாகவும் இதனால் நாம் தனி நாடென்றைப் போராடிப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இளம்பரிதி விளக்கம் கொடுத்திருந்தார். இதுவே என்னை புலிகள் அமைப்புக்குள் உள்ளீர்த்துக் கொண்டது.

நான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட பின்னர் என்னைப் போன்றவர்களை ஒரு குழுவாக்கி மணலாறுக்கு கூட்டிச் சென்றனர். என்னைக் கண்டு பிடிக்கும் வரை அம்மா என்னைத் தேடினார். ஆனால் நான் அம்மாவுடன் வீட்டுக்கு திரும்பிச் செல்லவில்லை.

வடமராட்சியிலுள்ள பொலிகண்டி என்னும் இடத்தில் அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக் கொண்ட எங்கள் குழுவினரை ஆங்கிலம், கணிதம், தொலைத் தொடர்பாடல் போன்ற பல்வேறு துறைகளைக் கற்பதற்காக சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் ஆகிய இடங்களுக்கு அனுப்பினர். இரு ஆண்டுகளாக நூறு பேர் வரையில் நாம் ஒன்றாகப் படித்தோம்.

இதன் பிறகு, நான் தொலைத் தொடர்பாடல் பிரிவில் பணியாற்றத் தொடங்கினேன். உயர் அலைவரிசை கொண்ட தொடர்பாடல் சாதனங்களின் ஊடாக தகவல்களைப் பரிமாறுவதே எனது பணியாக இருந்தது. நான் 1994 தொடக்கம் 1996 வரை தொலைத் தொடர்பாடல் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தேன்.

இதனைத் தொடர்ந்து கானொலிகளை எடுப்பது தொடர்பாகவும் அவற்றை தொகுத்து ஆவணக்காட்சிகளாக ஒன்று சேர்ப்பது எவ்வாறு என்பது தொடர்பாகவும் எனக்கு கற்பிக்கப்பட்டது. 1997 தொடக்கம் 2003 வரை நான் ஒளிப்படப் பிரிவில் பணியாற்றினேன்.

இது புலிகள் அமைப்பின் நிதர்சனம் பிரிவுக்கு உட்பட்டிருக்கவில்லை. இது தனித்த பிரிவாக இருந்தது. இதன் பின்னர் நான் கணிணி சார் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து கொண்டதுடன், 2005 வரை புலிகளின் நிர்வாகப் பிரிவொன்றில் பணியாற்றினேன். புலிகள் அமைப்பானது பல கணிணி நிறுவனங்களை சொந்தமாகக் கொண்டிருந்தது.

நான் எனது கணவரை 1992 ல் முதன் முதலாக சந்தித்தேன். அவர் அப்போது எமக்கான வகுப்புக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் பார்ப்பதற்கு மிக அழகாக காணப்பட்டார். ஆரம்பத்தில் நான் அவருடன் எமது கல்வி தொடர்பாகவே கலந்துரையாடினேன். இதன் பின்னர் நாம் இருவரும் ஒரு துறையில் பணியாற்ற ஆரம்பித்தோம். இதனால் நாம் வேலை விடயம் தொடர்பாக அடிக்கடி சந்தித்துக் கொள்வோம்.

2003 ல் அவர் தனது விருப்பத்தை என்னிடம் தெரிவித்துக் கொண்டார். எனது மூத்த சகோதரனும் மூத்த சகோதரியும் திருமணம் செய்யும் வரை நான் காத்திருக்க வேண்டியிருப்பதாக அவரிடம் நான் எடுத்துக் கூறினேன். அதற்கு அவர் தனது சம்மதத்தை தெரிவித்துக் கொண்ட பின்னர் நாங்கள் எமது பிரிவுகளின் பொறுப்பாளர்களிடம் 2005ல் எமது காதல் விடயம் தொடர்பாக தெரிவித்துக் கொண்டோம்.

அதாவது நாங்கள் பெண்கள் பிரிவுப் பொறுப்பாளருக்கும் ஆண்கள் பிரிவுப் பொறுப்பாளருக்கும் அறிவிக்க வேண்டிய தேவையிருந்தது. எமது அமைப்பில் திருமணம் முடித்து வைப்பதற்கான திருமணக் குழு ஒன்று இருந்தது. நாங்கள் அவர்களிடமும் எமது திருமண விடயம் தொடர்பாக தெரியப்படுத்தினோம்.

எமது அமைப்பின் திருமணச் சட்டத்தின் படி பெண் போராளி ஒருவர் திருமணம் செய்து கொள்ள வேண்டுமாயின் அவர் 24 வயதையும், ஆண் ஒருவர் திருமணம் செய்து கொள்ள வேண்டுமாயின் அவர் 30 வயதையும் அடைந்திருத்தல் வேண்டும். இதன் பிரகாரம் நாம் இருவரும் இத்திருமண வயதெல்லையை கடந்திருந்தோம்.

அத்துடன் 1992ம் ஆண்டிலிருந்து எங்கள் இருவரையும் எமது பொறுப்பாளர்கள் நன்கு புரிந்திருந்தமையால் அவர்கள் எமது திருமண விடயம் தொடர்பில் எமக்கு மேலதிக அறிவுரைகள் வழங்க வேண்டிய தேவையைக் கொண்டிருக்கவில்லை. எனது கணவரின் தகப்பனார் ஊடாக நான் எனது குடும்பத்தவர்களுக்கு இதனைத் தெரியப்படுத்திக் கொண்டேன்.

நாங்கள் வன்னியில் நிலமொன்றை வாங்கி அதில் வீடொன்றைக் கட்டினோம். அந்த வீடு கட்டி முடிக்கப்பட்ட பின்னர் மார்ச் 27,2006 அன்று நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். எமது திருமணம் புலிகளின் திருமண மண்டபம் ஒன்றில் நடந்தது.

எமது திருமணத்தில் கலந்து கொள்வதற்காக புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட 250 வரையான மக்கள் கலந்துகொண்டனர். எனது அம்மா, சகோதரி, மற்றும் ஏனைய மூன்று உறவினர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்தனர். இதேபோல் எனது கணவரின் உறவினர்களில் இருபது பேர் வரையில் கலந்து கொண்டிருந்தனர்.

பொதுவாக புலிகள் அமைப்பின் திருமணத்தை இந்து மதகுருவோ அல்லது பாதிரியாரோ நடாத்தி வைப்பதில்லை. ஆனால் புலிகளின் பதிவாளர் ஒருவர் இத்திருமணத்தை நடாத்தி வைப்பார்.

நாங்கள் வீட்டிலிருந்தே திருமணத்திற்கு ஆயத்தமானோம். நான் வெங்காய நிறத்தில் சாறி உடுத்தியிருந்தேன். எமது அமைப்பின் திருமணங்களில் உறுதிமொழி ஒன்று வாசிக்கப்படும். திருமணத்தை நடாத்தும் குறிப்பிட்ட பதிவாளர் இவ் உறுதி மொழியை வரிக்கிரமமாக வாசிக்க நாம் அதனை மீளவும் சொல்வோம். அதன் பின்னர் குறித்த பத்திரத்தில் இருவரும் சாட்சிகளுடன் கையெழுத்திடுவோம். இதில் எமது பெற்றோர்கள் அல்லது உரித்துடையோரும் கையெழுத்திடுவர். அதற்கமையவே எமது திருமணமும் நடந்தேறியது.

உறுதிமொழியை எடுத்துக் கொண்ட பின்னர். புலிப்பல் வடிவில் தங்கத்தால் செய்யப்பட்ட தாலியை எனது கணவர் எனக்கு கட்டினார். புலிகள் அமைப்பு எமக்கு இரு கைக்கடிகாரங்களை தந்திருந்தார்கள். அதனை நாம் இருவரும் ஒருவருக்கொருவர் கட்டி விட்டோம். அத்துடன் மலர்மாலைகளையும் மாற்றிக் கொண்டோம். எமது திருமணத்துக்காக புலிகள் 150,000 ரூபா பணம் தந்திருந்தார்கள். இது எமது திருமணச் செலவுக்காகவும், புதிய வாழ்வைத் தொடங்குவதற்காகவும் வழங்கப்பட்டிருந்தது.

புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வதாயின் 150,000 ரூபா வழங்கப்பட்டது. ஆனால் திருமணம் செய்து கொள்பவர்களில் ஒருவர் மட்டுமே புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களாயின் அவர்களுக்கு திருமணச் செலவாக 75,000 ரூபா வழங்கப்பட்டது.

புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் போராளிகள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆண்களைத் திருமணம் செய்து கொண்ட சம்பவங்களும் உண்டு. இவ்வாறு பத்து பெண் போராளிகள் வரை திருமணம் செய்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன். திருமணம் முடிந்த அடுத்த நாள் நாங்கள் அரசாங்க திருமணப் பதிவையும் மேற்கொண்டிருந்தோம். இதன் பின்னர் நாங்கள் இரு வார விடுமுறையை எடுத்துக் கொண்டு எமது உறவினர்களின் வீடுகளுக்கு சென்றுவந்தோம்.

எமது திருமணத்தை தொடர்ந்து, புலிகளின் மாதாந்த கொடுப்பனவு எமக்கு வழங்கப்பட்டது. திருமணம் செய்து கொண்ட இருவரும் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு மாதம் தோறும் 9250 ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டது. இவர்களில் ஒருவர் மட்டுமே புலி உறுப்பினராக இருந்தால் 7250 ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் 10 ம் திகதியில் எமது குடும்பத்துக்கான கொடுப்பனவு தமிழீழ வைப்பகத்தில் வைப்பிலிடப்படும். நாங்கள் இந்தப் பணத்தை வைப்பகத்திலிருந்து எடுத்து எமது குடும்பச் செலவை கவனிக்கலாம்.

எமது திருமண விடுமுறை முடிந்த பின்னர் வழமையான பணியை இருவரும் தொடர்ந்தோம். நான் புதுக்குடியிருப்பில் இருந்த கணிணிப் பிரிவில் கடமையாற்றினேன். எனது கணவர் தூர வேலைக்குச் செல்லாத சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு இரவும் வீட்டுக்கு வருவார். இல்லையெனில் சனி மற்றும் ஞாயிறுகளில் வீட்டுக்கு வருவார். 2008 வரை நாம் இயல்பான வாழ்வை வாழமுடிந்தது.

ஜனவரி 20,2009 அன்று இராணுவ நடவடிக்கையானது புதுக்குடியிருப்பை நோக்கி நெருங்கிய போது நாம் இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. இதன் பின்னர் நாங்கள் வள்ளிபுனம் என்ற இடத்தை அடைந்தோம். அங்கே எமது நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தோம். விசுவமடுவிலிருந்து வள்ளிபுனம் நோக்கி எறிகணைகள் வீசப்பட்டன. இதனால் நாங்கள் இரணைப்பாலை நோக்கி நகர்ந்தோம். இதனைத் தொடர்ந்து பொக்கணை என பல இடங்கள் இடம்பெயர்ந்தோம்.

இந்த நேரத்தில் எனது கணவர் ஒவ்வொரு இரவும் என்னுடன் வந்து தங்கி நிற்பார். நாங்கள் இருவரும் இரணைப்பாலைக்கு வேலைக்கு செல்ல வேண்டியிருந்தது. இவ்வாறு வேலைக்கு செல்லும் சந்தர்ப்பத்தில், பெப்ரவரி 26, 2009 அன்று நான் கிபிர் விமானத் தாக்குதலில் காயமடைந்தேன். எனது கணவர் உடனே என்னை வாகனம் ஒன்றில் ஏற்றி மாத்தளன் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார்.

மாத்தளன் வைத்தியசாலை பாடசாலைக் கட்டடம் ஒன்றில் இயங்கி வந்தது. அங்கே அறுவைச் சிகிச்சைக் கூடமும் விரைவில் அமைக்கப்பட்டது. மயக்க மருந்துகள் இருக்கவில்லை. இதனால் மயக்க மருந்து வழங்கப்படாமலே அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. காயமடைந்தவர்களின் கால்களை நீக்கும் போது கூட அவர்களுக்கு மயக்க மருந்து வழங்கப்படவில்லை. கப்பலில் சிறிதளவு மருந்துப் பொருட்களே கொண்டு வரப்பட்டன.

காயமடைந்த பொதுமக்களும் விடுதலைப் புலி உறுப்பினர்களும் இவ்வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டனர். ஆகவே வைத்தியசாலையைச் சூழ பெருமளவான மக்கள் குவிந்து நின்றனர். எடுத்துக்காட்டாக, இந்த வைத்தியசாலைக்குள் ஒரு நோயாளியைக் கொண்டு செல்ல வேண்டுமாயின் அதற்கு ஒரு நாள் கூட பிடித்தது. காயமடைந்த 70 வரையான மக்கள் வைத்தியசாலையின் வெளி வளாகத்தில் எந்தவொரு நிழலுமின்றி தரையில் கிடந்தனர்.

நான் காலை எட்டு மணியளவிலே காயமடைந்திருந்தேன். கிபிர் விமானம் ஒன்று புலிகளின் ஆயுதக் கிடங்கு ஒன்றைக் குறிவைத்து நடாத்திய தாக்குதலிலே நான் காயமடைந்திருந்தேன். முதலில் எனது கணவர் என்னைத் தூக்கிக் கொண்டு பதுங்குகுழிக்குள் ஓடினார். பின்னர் அவர் என்னை வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டார்.

ஒரு மணி நேரத்தில் நாம் வைத்தியசாலையை அடைந்தோம். துவாய், பற்தூரிகை, சறம், சில காயம் கட்டும் துணி போன்றவை எனது பையில் இருந்தன. எனது காயத்தை கணவர் இறுகக்கட்டினார். இரவு ஏழு மணிவரை நான் வைத்தியசாலை வளாகத்தில் ஏனைய காயமடைந்தவர்களுடன் காத்திருந்தேன்.

வைத்தியர் ஒருவர் என்னை அடையாளங் கண்டு கொண்ட பின்னர் என்னை உடனடியாக வைத்தியசாலைக்குள் கூட்டிச் சென்றனர். இதன் பின்னர் எனக்கான அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து மண்டபம் ஒன்றில் நிலத்திலே என்னைக் கிடத்தினார்கள். அந்த மண்டபம் நிறைந்திருந்ததால் இடது பக்கமோ அல்லது வலது பக்கமோ திரும்ப முடியாமல் இருந்தது.

நான் அந்த வைத்தியசாலையில் மூன்று நாட்கள் வரை இருந்தேன். இந்த மூன்று நாட்களில் எனது காயத்துக்கு கட்டுப்போட்ட துணிகளைக் கூட மாற்றிக் கட்டுவதற்கான நேரம் வைத்தியசாலைப் பணியாளர்களுக்கு இருக்கவில்லை. அவ்வளவு தூரம் அவர்கள் மிகவும் கடுமையாக, சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

மார்ச் 03, முள்ளிவாய்க்காலிலிருந்து என்னைப் பார்ப்பதற்காக வந்த உறவினர் ஒருவர் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்கு என்னைச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். இதன் பின்னர் என்னை வாகனம் ஒன்றில் முள்ளிவாய்க்காலுக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் நான் அங்கே தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சையைத் தொடர்ந்தேன்.

என்னை வைத்தியசாலையில் இனங்கண்டு அறுவைச்சிகிச்சை மேற்கொண்ட வைத்தியரை எனக்கு நன்றாக தெரியும். இவர் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் தற்போது எங்கிருக்கிறார் என்ற செய்தி தெரியவில்லை. புலிகளின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த வைத்தியர்கள் வட்டுவாகலில் வைத்து சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்திருந்தனர். இவர்களை இராணுவத்தினர் வாகனம் ஒன்றில் கூட்டிச் சென்றிருந்தனர்.

மார்ச் மாத ஆரம்பத்திலிருந்து நான் பதுங்குகுழிக்குள்ளேயே இருந்தேன்.காயம் ஓரளவு குணமாகிய போதிலும் தொடர்ந்தும் வைத்தியசாலைக்கு சென்று மருந்து கட்டிக்கொண்டேன். இதன் பின்னர் எனது கணவர் எனது காயத்துக்கு மருந்து கட்டினார்.

மே 13 அன்று நாங்கள் முள்ளிவாய்க்காலுக்கும் வட்டுவாகலுக்கும் இடையில் இடம்பெயர்ந்து சென்றோம். அங்கே மூன்று நாட்கள் வரை காத்திருந்தோம். மே 16, பி.ப 5 மணிக்குப் பிறகு இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியை சென்றடைந்தோம். பொதுமக்கள் நடந்து சென்ற வீதியிலே நாமும் அவர்களுடன் இணைந்து நடக்கத் தொடங்கினோம்.

நான், எனது கணவர், அவரின் நண்பர்கள் ஆகியோர் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் இராணுவத்தினர் நின்ற இடத்திலிருந்து 200 மீற்றர் தூரத்தில் நின்றோம். புலிகள் எமக்கு பின்னால் நின்றிருந்தார்கள். எனது கணவர் என்னுடன் இருந்தார். ஆனால் அவர்கள் எனது கணவரை மறித்து விட்டு என்னை மட்டும் செல்லுமாறு கூறினார்கள்.

"நீங்கள் முதலில் செல்லுங்கள், அவர்கள் என்னை விடுதலை செய்வார்கள், அதன் பின் நான் உங்களுடன் இணைந்து கொள்வேன்" என என்னிடம் எனது கணவர் கூறினார். என்னுடன் கூட நடந்து கொண்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து வயது பிள்ளை ஒன்றை நான் எனது கையால் பிடித்தவாறு சென்றேன். ஊன்று கோல் இல்லாது என்னால் நடக்க முடியாதிருந்தது.

இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நாங்கள் அடைந்த பின்னர் எனது கால் வீங்கியிருந்தது. வலியும் அதிகரித்தது. எனது கணவர் என்னிடம் திரும்பி வரவில்லை. அவர்கள் மே 20 அன்று எம்மை ஓமந்தை என்ற இடத்துக்கு கொண்டு சென்றனர்.

"ஒரு நாள் புலிகள் அமைப்பில் இருந்திருந்தால் கூட, உங்கள் பெயர்களைப் பதிந்து கொள்ளுங்கள்" என இராணுவத்தினர் அறிவித்தனர். நான் அவர்களிடம் சென்றேன். அங்கே ஆண்களும் பெண்களும் கலந்திருந்தனர். மே 21, அவர்கள் எமது விபரங்களை கேட்டு பதிந்தனர். அதாவது "எப்போது அமைப்பில் இணைந்தீர்கள்? ஏன் இணைந்தீர்கள்?" என்ற பல வினாக்கள் வினவப்பட்டன.

மே 22, இராணுவத்தினர் எம்மை பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்துக்கு கூட்டிச் சென்றனர். அங்கே உடல் உறுப்புக்களை இழந்தவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டிய தேவையிருக்கவில்லை. ஆனால் மீதமுள்ள நேரத்தில் ஏனையவர்கள் எல்லா இடத்தையும் தூய்மைப்படுத்த வேண்டும். அத்துடன் எமக்கான உணவை நாமே தயாரிப்போம்.

இராணுவத்தினர் மருந்துப் பொருட்கள் சிலவற்றை எம்மிடம் காட்டி அவை தொடர்பாக வினவினர். இதன் மூலம் புலிகளின் மருத்துவத்துறையில் இருந்தவர்களை அவர்களால் அடையாளங்கண்டு கொள்ள முடிந்தது. பின்னர் இவர்களைக் கொண்டு மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சிலவேளைகளில், புலிகளின் மருத்துவ பிரிவில் கடமையாற்றிய போராளிகளிடமிருந்து இராணுவத்தினரும் மருந்தைப் பெற்றுக் கொண்டனர். அரிதாக வெளி வைத்தியர்களும் இங்கு வருவார்கள். சிலவேளைகளில், புனர்வாழ்விலிருந்த சிலரை உடனடியாக அரசாங்க வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைப்பார். இதன் மூலம் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

நான் பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்தபோது, புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சில முகாங்கள் தொடர்பான தகவல்களைப் பெற நான் முயற்சித்தேன். ஆனால் இவ்வாறான முகாங்களில் எனது கணவர் இருக்கவில்லை என்பதையும் என்னால் அறிய முடிந்தது.

பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் பொறுப்பதிகாரியாக இருந்த சிங்கள அதிகாரியிடம், எனது கணவர் வவுனியா முகாம்களில் உள்ளாரா என்பதை அறிந்து கூறும்படி கேட்டிருந்தேன். செப்ரெம்பர் 20,2010 அன்று அதாவது நான் புனர்வாழ்வு முகாமில் பயிற்சி பெற்று ஒரு ஆண்டும் நான்கு மாதங்களின் பின்னர் எனக்கு விடுதலை வழங்கப்பட்டது.

அங்கே மூன்று மாதங்கள் மட்டுமே தையல் பயிற்சி எனக்கு வழங்கப்பட்டது. தையல் பயிற்சியை புனர்வாழ்விலிருந்த எல்லோருக்கும் வழங்கவில்லை. அந்த முகாமிலிருந்த ஒவ்வொருவரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காண்பிப்பதற்காகவே இவ்வாறான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

சிலவேளைகளில் நாங்கள் திரைப்படம் பார்ப்போம். புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை வாசிப்போம். பின்னேரம் 4 மணியளவில் நாம் கரப்பந்து மற்றும் துடுப்பாட்டம் போன்றவற்றை விளையாடுவோம். எமக்கு கரம் விளையாடுவதற்கான பலகைகளும் வழங்கப்பட்டிருந்தன.

அங்கிருந்த தொலைக்காட்சியில் எப்போதும் படம் பார்க்கலாம் என்ற சலுகையும் எமக்கு வழங்கப்பட்டிருந்தன. இங்கிருந்த ஐந்து அல்லது ஆறு பெண்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தொலைக்காட்சியை உடைத்தனர்.

ஒருநாள், சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க எமது முகாமில் உரையாற்றியிருந்தார். "உங்களை வெளியில் விடுதலை செய்வதற்கு ஐந்து ஆண்டுகள் வரை செல்லும்" என அவர் தெரிவித்திருந்தார். இதைக் கேட்டு அங்கிருந்த ஒரு பெண் மனக்குழப்பம் அடைந்தார். இதனால் அவர் யாருக்கும் தெரியாமல் தூக்கமாத்திரைகளை அளவுக்கதிமாகச் சாப்பிட்டதால் உடனடியாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் இயல்புநிலைக்கு திரும்பி விட்டார்.

இந்தப் பெண்ணிடம் கடுமையாக பேசினால் உடனே அவர் எங்களை காலால் உதைவார். ஒருதடவை இவர் பெண் இராணுவத்தினரைக் கூட காலால் உதைந்திருந்தார். அடுத்த ஆண்டு இவர் இரண்டு தடவைகள் சுவர் மற்றும் வாயிற்கடவைக்கு மேலால் ஏறிப் பாய்ந்து வெளியேற முயற்சித்தார். இதன் பின்னர் வாயிற் கடவையைச் சுற்றி இராணுவத்தினர் மின்சாரம் வயர்களைப் போட்டிருந்தனர். மனதால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் ஒழுங்காக உணவருந்துவதில்லை.

பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் எனது தொகுதியில் இருந்த பெண்ணொருவர் வன்னியிலேயே மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். வன்னியில் இவ்வாறான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை பராமரிப்பதற்காக 'வெற்றிமனை' என்ற இல்லம் காணப்பட்டது. இந்த வெற்றிமனையில் மேலே குறிப்பட்ட அந்தப் பெண்ணும் சிகிச்சை பெற்றுவந்திருந்தார்.

இவர் உண்மையில் புலிகள் அமைப்பில் இருந்தார் என்பதை நான் அறியவில்லை. அவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் எனக் கேட்டால் பல்வேறு இடங்களின் பெயர்களைக் கூறுவார். பின்னர் முன்னாள் புலி உறுப்பினர்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்த போது இந்தப் பெண், யாருமற்ற பெண்களை பொறுப்பெடுத்த கத்தோலிக்க அருட்சகோதரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பார் என நான் கருதுகிறேன்.

எனது கணவர் எங்கே இருக்கிறார் என்பதை அறிந்தால் கூறுமாறு நான் பலரிடம் கேட்டு வருகிறேன். பம்பைமடு புனர்வாழ்வு முகாமிலிருந்த எனக்கு முன்னரே அறிமுகமான முன்னாள் பெண் போராளி ஒருவர், இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் தாம் வந்த பின்னர் அங்கிருந்த குழி ஒன்றுக்குள் நீர் எடுப்பதற்காக சென்ற போது எனது கணவரை தான் கண்டதாக என்னிடம் கூறினார்.

அவர் இறுதியாக எனது கணவர் அணிந்திருந்த சேட்டினதும் சறத்தினதும் தன்மையை என்னிடம் விபரித்தார். அது உண்மையாக இருந்தது. எனது கணவரை இந்தப் பெண் மிக அருகில் சந்தித்த போதும் எனது கணவர் அவரிடம் கதைக்கவில்லை என என்னிடம் தெரிவித்தார்.

ஆனால் எனது கணவருடன் நின்ற பிறிதொருவருடன் இந்தப் பெண் உரையாடியதாகவும், அவர்களைத் தான் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளேயே கண்டதாகவும் அந்தப் பெண் என்னிடம் கூறினார். அந்த நேரத்தில் இராணுவத்தினர், முன்னாள் புலி உறுப்பினர்களை சரணடையுமாறு அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் பெரும்பாலானவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக காணப்பட்ட வட்டுவாகலில் முதலில் சரணடையவில்லை. அவர்கள் ஓமந்தையிலும் இடம்பெயர்ந்தோர் முகாம்களிலுமே சரணடைந்தனர். முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் மற்றும் ஓமந்தைக்கு முதலிருந்த இடங்களில் சரணடைந்தவர்கள் காணாமற் போயுள்ளனர். அவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

முல்லைத்தீவில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நான் எனது காயத்துக்கு மருந்து கட்டச் சென்ற போது அங்கு சரணடைந்த 15 பேரைக் கண்டேன். அவர்களில் ஆறு பேரை எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர்களைப் பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

பம்பைமடுவில் என்னுடன் இருந்த பெண்ணொருவரின் கணவர், இராணுவத்தினர் சரணடையுமாறு அறிவித்த போது அவர்களிடம் சரணடைந்ததாகவும் ஆனால் அதன் பின்னர் அவரைப் பற்றிய எந்தவொரு தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் கூறினார்.

முல்லைத்தீவில் சரணடைந்த கத்தோலிக்க மதகுருவான பிரான்சிஸ் அடிகளார் பற்றி இன்னமும் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. நான் எனது கணவர் பற்றிய தகவலை அறிய வேண்டும் என்பதில் கருத்தாயிருப்பதால் தற்போதைக்கு வெளிநாடு செல்கின்ற திட்டம் எதுவும் என்னிடம் இல்லை.

இது நிலானி [துசியின் மைத்துனி] கூறும் கதை:

இராணுவத்திடம் சரணடைந்த புலி உறுப்பினர்கள் சிலரின் கறுப்பு வெள்ளை நிற ஒளிப்படத்தை உள்ளுர் பத்திரிகைகளான 'உதயன்' மற்றும் 'வலம்புரி' ஆகியன மே 2010 ல் வெளியிட்டிருந்தன. அதில் நான் எனது சகோதரனைப் பார்த்தேன். அதன் பின்னர் நாம் அவர் தொடர்பாக இணையத்தில் தேடியபோது அதில் அந்த ஒளிப்படம் வண்ணத்தில் இருந்ததைப் பார்த்தோம். இதன்போது நான் எனது சகோதரனை நன்கு அடையாளங் கண்டு கொண்டேன்.

நாங்கள் அந்த ஒளிப்படத்தை பார்த்த பின்னர் பூசா முகாமுக்கும் ஏனைய சில தடுப்பு முகாங்களுக்கும் சென்றோம். கொழும்பிலுள்ள மத்திய புலனாய்வுப் பிரிவின் நான்காம் மாடிக்கு கூட சென்று கேட்டோம்.

நானும் எனது அண்ணாவின் மனைவியும் இந்த முகாங்களுக்கு சென்று எனது அண்ணாவின் பெயரைக் கூறி அவர் தொடர்பாக விசாரித்த போது இரண்டு அல்லது மூன்று நாட்களில் பதில் தருவதாக கூறியும் எதுவும் நடக்கவில்லை.

வவுனியா தடுப்பு முகாங்களிலும் நாங்கள் எனது அண்ணாவைத் தேடினோம். ஆனால் எமது தேடுதல் முயற்சி வெற்றி பெறவில்லை. இது தொடர்பாக வவுனியா மற்றும் பருத்தித்துறை காவல்நிலையங்களில் முறைப்பாடு செய்தோம்.

யாழ்ப்பாணத்திலுள்ள சட்டவாளர் ஒருவருடனும் இது தொடர்பாக கதைத்தோம். கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவினருக்கு இது தொடர்பாக எழுத்து வடிவில் முறைப்பாடு ஒன்றை அனுப்பினோம்.

வட்டுவாகலில் மே 17, 2009 அன்று பி.ப 4 மணிக்கு நான் இறுதியாக அண்ணாவைப் பார்த்தேன். எமது குடும்பத்தில் அவரை நான் தான் இறுதியாகப் பார்த்திருந்தேன். வீதியோரத்திலிருந்த குடிசை ஒன்றில் எனது அண்ணாவின் நண்பர் குடும்பத்தவர்களுடன் இருந்தபோதே அண்ணாவை நான் இறுதியாகப் பார்த்தேன். எனது சகோதரனும் அவரின் நண்பரும் ஒன்றாக வந்தபோது அவர்களை எம்முடன் வருமாறு நாம் கெஞ்சிக் கேட்டோம்.

"நீங்கள் முதலில் போங்கள். அதன் பின்னர் நான் இங்கிருந்து தப்பி வர முயற்சிக்கிறேன். என்னால் நீந்த முடியும். நான் கடலின் ஊடாக தப்பி வருவேன். அல்லது நான் இராணுவத்திடம் சரணடைவேன்" என அண்ணா என்னிடம் தெரிவித்தார். அன்று தான் அவர் முதன் முதலாக தான் தப்ப வேண்டும் என்று எண்ணியிருப்பார்.

நான் அவரது கைகளை இழுத்துக் கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல முயன்ற போதும் அவர் வர மறுத்துவிட்டார். அவர் தனது பதினொராவது வயதில் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.

நீச்சல் அவருக்கு பிடித்த ஒன்று. ஆனால் எமது பெற்றோர் கடலுக்கு செல்ல அனுமதிப்பதில்லை. ஆகவே சுதந்திரத்தை அதிகம் எதிர்பார்த்த அண்ணா சிறுவயதிலேயே புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். 20 ஆண்டுகளாக அவர் புலிகள் அமைப்பில் பணியாற்றியிருந்தார். இதனால் அவர் என்னுடன் வரமறுத்தார்.

பதுங்குழிக்கு மேல் தென்னங் குற்றிகள் உள்ள படத்தை நாம் இணையத்தில் பார்த்தோம். உடையில்லாமல் இறந்த கிடந்த உடலங்களை காட்டும் ஒளிப்படத்தை பார்த்தோம். இறந்த உடலங்களைக் குவித்தவாறு 'ட்ரக் வண்டி' ஒன்று செல்வதை பார்த்தோம். இந்த உடல்கள் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு பின் எரிக்கப்படுவதையும் பார்த்தோம்.

இந்தப் படத்தில் பார்த்த ஒருவர் இராணுவத்தின் பின் செல்வதை நாம் வேறொரு காட்சியில் பார்த்தோம். இவ்வாறான படங்களையும் காணொலிகளையும் தொடர்பாடல் நிலையம் ஒன்றில் நாம் மிகவும் அச்சத்துடனேயே பார்த்தோம். ஏனெனில் அங்கு இராணுவ வீரர்கள் உட்பட பலர் வந்து போய்க்கொண்டிருந்தனர்.

வாக்கு கூறும் ஒருவரை நாம் மட்டக்களப்பில் சந்தித்தோம். அதேபோல் ஆனைக்கோட்டையிலும் வாக்கு கூறும் பெண்ணொருவரிடம் எமது அண்ணா பற்றி கேட்ட போது அவர்கள் இருவரும் அண்ணா உயிருடன் இருக்கிறார் எனக் கூறினார்கள்.

http://www.puthinappalakai.com/view.php?20120411105970

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி அபராஜிதன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.