Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அஞ்சலி: தி.தவபாலன்- இன்னொரு முறையும் கொல்லப்பட்டவர் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தி.தவபாலன்- இன்னொரு முறையும் கொல்லப்பட்டவர்

யோ.கர்ணன்

5சுவிற்சர்லாந்திலுள்ள நண்பரொருவர் அண்மையில் தொலைபேசியில் கதைத்திருந்தார். இருவரும் பேசிக் கொண்ட முதல்ச் சந்தர்ப்பம் அதுதான். அதற்கு முன்னர் சாதாரணமான மின்னஞ்ல்த் தொடர்பு மட்டுமேயிருந்தது. சம்பிரதாயமான பேச்சுக்கள் முடிய, அவர் அதிகமும் கதைத்துக் கொண்டது யுத்தத்தின் இறுதிக்காலம் பற்றியே. அதிலும் குறிப்பாக இறுதிநாட்களில் கொல்லப்பட்ட அல்லது தற்கொலை செய்துகொண்ட முக்கியஸ்தர்கள் பற்றிய கதைகளை அறிந்து கொள்வதில் ஆர்வமாகயிருந்தார். இவற்றையெல்லாம் கதைத்துக் கொண்ட போது மிகுந்த ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது ஆவலும், ஆதங்கமும் என்னால் புரிந்து கொள்ளக்கூடியதே. ஏனெனில் அவர் ஒரு அதிதீவிரமான தேசியவாதியாகயிருந்தார். தமிழ்த் தேசியமென்பது புலிகளைக் குறிக்கும் கற்றவர்களின் வார்த்தையென்பது மாதிரியாக வேறு உரையாடினார். தவிரவும், சமாதானம் பூத்த காலத்தில் வன்னிக்கு வந்து ஒற்றைக்காலில் நின்று இயக்கப் பெண்களுடன் புகைப்படமும் எடுத்துச் சென்றவர் என்ற விபரத்தையும் நான் அறிந்தே வைத்திருந்தேன்.

நண்பர் அறிய விரும்பிய முக்கியஸ்தர்கள் எல்லோருமே ஊர், உலகம் அறிந்தவர்கள்தான். அவர்களது அறிக்கைகளினாலும், பேட்டிகளினாலும் முன்னர் தமிழ்ஊடகங்கள் நிறைந்துமிருந்தன. அவர்கள்தான் விடுதலைப்புலிகளின் குறியீடு என்றுமிருந்தது. அவர் ஒவ்வொரு பெயராக உச்சரிக்க உச்சரிக்க, எனக்குத் தெரிந்த கதையை சொல்லிக் கொண்டிருந்தேன். இந்த வரிசையில் உரையாடல் போய்க் கொண்டிருக்கையில் இடையில் அவர் ஒரு பெயரை உச்சரித்தார். எனக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது. அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் கிடையாது. ஆனால் நண்பரின் முக்கியஸ்தர்கள் பட்டியலில் இருந்தார். நான் இதனைச் சொன்னபோது, ‘அவர் தகடு குப்பி போட்டிருக்காட்டிலும் இன்னும் நாலைஞ்சு வருசம் இருந்திருந்தால் கட்டாயம் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக வந்திருப்பார்’ என சீரியசாகவே சொன்னார். அவர் உச்சரித்த பெயர் தி.தவபாலன்.

புலிகள் அமைப்பிலிருந்து வெளித் தெரியாமல் இறந்து போன எண்ணற்ற முக்கியஸ்தர்கள் பற்றிய கதைகள் உள்ளன. ஆனால் அமைப்பில் இருக்காமல் ஒரு முக்கியஸ்தர் அளவு புகழுடன் இருந்தவர் தவபாலன். அவரளவிற்கு தீவிரமான தகடு குப்பி அணியாத பிறிதொருவரை நான் கண்டேயிருக்கவில்லை. தன்னுடலில் உயிர் தங்கியிருப்பது விடுதலைப்புலிகளை விசுவாசிக்கவே என்பது மாதிரியாக செயற்பட்டுக் கொண்டிருந்தார். அமைப்பிலிருந்தவர்கள் ஆயுதங்களினாலும், உயிரினாலும் யுத்தம் செய்து கொண்டிருக்க அவர் எதிரிகளுடன் வார்த்தைகளினால் யுத்தம் செய்து கொண்டிருந்தார். புலிகளின் வானொலியில் சாதாரண அறிப்பாளனாக நுழைந்து, இறுதியில் அவரது குரலின் மீதே அந்த வானொலி கட்டமைக்கப்பட்டிருந்தது. அவர்தான் புலிகளின் குரல் வானொலியை தாங்கிக் கொண்டிருந்தார். ரவைகளினதும், செல்களினதும் வெடிமருந்து வாசைனயும், மரணத்தின் வாசனையும் மிதந்து கொண்டிருந்த நிலத்திலிருந்து மே மாதம் பதினேழாம் திகதி வரை அவரது குரலும் மிதந்து வந்து கொண்டேயிருந்தது. வானெலியினூடாக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் தனது மூர்க்கமான குரலின் வழியாக, தான் சார்ந்திருந்த அமைப்பிற்கு வெற்றிகள் எதனையாவது ஈட்டிக் கொடுத்துவிட வேண்டுமென்ற தீராத தாகம் அவருள் இருந்திருக்கக்கூடும்.

அவருக்கு நகைச்சுவையாக பேசவே தெரியாது. எப்பொழுதும் எதிலும் சீரியசானவர். மரபான வானொலி அறிவிப்பாளர்களிடம் எதிர்பார்க்கப்படும் எந்தத் தகுதியையும் அவர் கொண்டிருக்கவில்லை. நேயர்களைக் கவர்வதற்கு எந்தப் பிரயத்தனத்தையும்பட்டிருக்கவில்லை. களத்தில் நிற்கும் ஒரு போராளியைப் போலவே அவர் கலையகத்தில் மைக்கின் முன்பாக உட்கார்ந்திருந்தார். அவ்வளவு மூர்க்கமாகவும், ஆவேசமாகவும் மூச்சு விடாமல் கத்திக் கதைத்துக் கொண்டிருப்பார். நேரில் இதற்கு முற்றிலும் முரணான மனிதனாகயிருந்தார். இரகசியம் கதைப்பவரைப் போல கதைப்பார். கலைந்த தலையும், ஒழங்கற்ற உடையும்தான் எப்பொழுதும் அவரது அடையாளங்கள். பார்ப்பவர்களிற்கு, அவர் ஏதோ யுத்த முன்னரங்கிலிருந்து வருபவர் போல தோற்றம்காட்டும்.

இப்படித்தான் அவர் எல்லோராலும் அறியப்படும் ஒரு மனிதரானார். அதிலும் இறுதி யுத்த காலத்தில் காலை ஒளிபரப்பு நான்கு மணித்தியாலங்கள் என்றால், அதில் செய்தியறிக்கை, வீரச்சாவு அறிவித்தல், ஓரிரண்டு பாடல் என்பவற்றிற்காக ஒரு அரைமணித்தியாலம் கழித்தால் மிகுதி மூன்றரை மணித்தியாலங்களும் அவரே கதைத்துக் கொண்டிருந்தார். சமயங்களில் செய்தியறிக்கையையும் அவரே வாசித்துவிடுவதுண்டு. நல்ல வேளையாக அவர் எந்த இயக்கப்பாடலையும் பாடியிருக்கவில்லை.

****

பெரும்பாலானவர்களைப் போலவே எனக்கும் அவர் வானொலிப் பெட்டி மூலமாகவே அறிமுகமானார். பின்னாட்களில் நண்பர்களின் மூலம் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட பொழுதெல்லாம் இருவரும் அதிகமும் கதைத்துக் கொண்டதும் கிடையாது. சந்திக்கும் பொழுதிலெல்லாம், அந்த மனிதரிடம் கதைப்பதற்கு எதுவுமேயில்லை என்பது மாதிரியான ஒரு உணர்வு ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. தவிரவும், இயல்பான உரையாடலுக்கு உரியவருமல்ல அவர். ஆவரைத் தெரிந்து கொண்ட குறுகிய காலத்திலேயே, அவரொரு முரண்பட்ட ஆளுமையென்பதை தெரிந்து கொண்டேன். அவரது இளமைப்பருவ வாழ்க்கை முறைமை அல்லது வேறு ஏதோ காரணங்களின் நிமித்தத்தினால் இத்தகைய ஒரு மனிதராக உருவாகியிருந்தார். வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டங்களில் ஏற்பட்ட புறக்கணிப்பும், புரிந்து கொள்ளப்படாமையும் காரணங்களாக இருந்திருக்கக்கூடும். இந்தக்காரணங்களினாலேயே, எல்லோரையும் வெற்றிகொண்டவிட வேண்டுமென்ற வெறி அவருள் இருந்து கொண்டேயிருந்திருக்கலாம். அதுதான் அவரை ஓயாத உழைபாபாளனாகவும் மாற்றியிருக்க வேண்டும்.

அறிமுகமானதற்கு பின்னர், வீதியில் எதிர்ப்படும் சமயங்களில் இரண்டு விதமான தவபாலனை காண நேர்ந்தது. சில சமயங்களில் நன்றாகச் சிரித்து தலையாட்டிவிட்டுப் போவார். சமயங்களில் தூரத்திலேயே கண்டு, காணாதது மாதிரி தலையைத் திருப்பிக் கொண்டு போவார். அவரது அன்றைய மனநிலையே உறவுகளை தீர்மானிப்பதாகயிருந்தது.

அவருடன் பேசுவதற்கு பொருளற்றுப் போனதற்கு, இன்னொரு முக்கிய காரணமுமிருந்தது. அவரை சந்திப்பதற்கு பல வருடங்களின் முன்பாகவே அவரைப்பற்றிய முழுமையான விபரத்தையும் தெரிந்துவிட்டேன்.

ஈழநாதம் ஆசிரியராக இருந்த ராதேயன் அண்ணை இந்தக்கதையை சொல்லியிருந்தார்.

ஒருநாள், வைமன் வீதியிலருரந்த ஈழநாதம் அலுவலக மேல் மாடியில் ராதேயன் அண்ணை இருந்த சமயம் கீழே வாசலில் பெரிய சத்தம் கேட்டிருக்கிறது. அறையிலிருந்து எட்டிப் பார்த்திருக்கிறார். மிகப்பழைய சைக்கிள் ஒன்றை வீதியில் போட்டுவிட்டு, இளைஞனொருவன் காவலாளியுடன் தர்க்கப்பட்டுக் கொண்டிருந்தான். கலைந்த தலையும், அழுக்கான உடையும் பத்திரிகை அலுவலகத்திற்கு வருமொருவனாக அவனை காவலாளியினால் கற்பனை செய்ய முடியவில்லை. இறுதியில் இவர்தான் தலையிட்டு பிரச்சனையை கேட்டிருக்கிறார். ‘பத்திரிகை ஆசிரியருடன் கதைக்க வேண்டும்’ என்றிருக்கிறான்.

அவனை மாடிக்கழைத்து உட்கார வைத்து தேனீர் கொடுக்க, அவசரமாக மறுத்து விட்டான். இப்பொழுது இதையெல்லாம் குடித்துக் கொண்டிருக்க அவகாசமில்லை. வெளியில்ப் போன வீட்டுக்காரர்கள் திரும்புவதற்குள் சென்று விட வேண்டுமென அவசரப்பட்டுள்ளான்.

அவன் அன்று வந்த நோக்கம், ஈழநாதத்தில் பிரதி செவ்வாய்க்கிழமைகளில் விண்வெளி வினோதம் என்று வானியல் தொடர்பான ஒரு தொடர்கட்டுரை வெளியாகிக் கொண்டிருந்தது. அதனை விவியன் நமசிவாயம் எழுதி வந்தார். அவர் இலங்கை விஞ்ஞானிகள் சங்கத்திலுமிருந்தவர்.

அதற்கு முதல் வாரம் வந்த கட்டுரையில் ஒரு விபரம் பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவறு. உண்மையில் இப்படி வர வேண்டுமென எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றானாம். பிறிதொரு தினத்தில் பத்திரிகை அலுவலகத்திற்கு விவியன் நமசிவாயம் வந்த சமயம் ராதேயன் கடிதத்தை கொடுத்திருக்கிறார். விவியன் நமசிவாயம் அசந்து போனார். அந்த விபரத்தை அவரே அப்பொழுதுதான் அறிந்திருக்கிறார். அந்தப்பையனை உடனடியாக காண வேண்டுமென விரும்பியிருக்கிறார். ஆனால் உடனடியாக அது சாத்தியமாகியிருக்கவில்லை.

அந்தப் பையன் கொடுத்துவிட்டு சென்ற முகவரிக்கு ஒருநாள் ராதேயன் அண்ணை சென்றிருக்கிறார். வீட்டில் விசாரித்த பொழுது, எல்லோரும் பயத்துடனும், சந்தேகத்துடனும் பார்த்திருக்கிறார்கள். பத்திரிகைகாரர்கள் என்று நம்ப வைத்த பின்னர்தான் அவனை சந்திக்க அனுமதித்திருக்கிறார்கள். இப்படியாக வீட்டிலேயே பலத்த கண்காணிப்பில் அவன் வைக்கப்பட்டிருந்தமைக்கு காரணமுமிருந்தது. கிடைத்த உபகரணங்களைக் கொண்டு தானே உருவாக்கிய தொலைநோக்கியொன்றை முகட்டு ஓடுகளை கழற்றிவிட்டு, அறையிலிருந்து பார்க்கத்தக்கதாக பொருத்தி வைத்திருந்தான். நேரகாலமில்லாமல் அந்த தொலைநோக்கியிலிருந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான். தவிரவும், தன் வயதுக்கு மீறிய அறிவுடனும் செயல்களுடனுமிருந்த அவனை பெற்றோரால் புரிந்து கொள்ளவே முடியாமலிருந்திருக்கிறது. அவற்றின் விளைவுகளினால் ஒரு முரண்பட்ட ஆளுமையாகவே அவர் உருவாகிக் கொண்டிருந்தார்.

இவ்வளவு பின்னணிகளையுமுடைய பையனை பத்திரிகை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாக சொன்ன போது முதலில் வீட்டுக்காரர் மறுத்துவிட்டார்கள். ஒரு மணித்தியாலத்தில் அவரை பத்திரமாக ஒப்படைப்பதென்ற வாக்குறுதி கொடுத்த பின்னர்தான் அனுப்புவதற்கு சம்மதித்திருந்தார்கள். அதுவும் சகோதரர்களின் துணையுடன்.

அப்படி வந்த சமயத்தில் இன்னொரு அஸ்திரத்தையும் வீசி ஈழநாதகாரரை கலங்கடித்தான் அந்தப் பையன். இந்த முறை அஸ்திரம் ஒரு கடிதமாகயிருந்தது. ஆதர் சி. கிளார்க் அவனிற்கு எழுதிய கடிதம். ஒருமுறை ஆதர் சி கிளார்க்கினது கட்டுரையொன்றிலும் இப்படியேதோ பிழை கண்டுபிடித்திருந்தான். அவருக்கும் அது பெரிய ஆச்சரியமாகயிருந்திருக்கிறது. அவனது ஆற்றலைப் பாராட்டியதோடு, கொழும்பிற்கு வர நேர்ந்தால் தன்னை கட்டாயம் சந்திக்க வேண்டுமென அந்தக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பலத்த பிரயத்தனப்பட்டு அவனை ஈழநாதம் பத்திரிகைக்கு ராதேயன் அண்ணை கொண்டு வந்திருந்தார். தி.தவபாலன் என்ற அந்த பையன் ஈழநாதத்தின் சிறுவர் பகுதி ஆசிரியராக கடமையை பொறுப்பேற்றருந்தான். இதன் பின்னர், அந்தப் பையன் சினிமா நட்சத்திரத்தைப் போல ஈழத்தமிழர்களிடம் வேகமாக அறிமுகமாகிக் கொண்டிருந்தான். தமிழ்ச்சினிமா நாயகர்களை ஒத்ததாகவே அவனது பாத்திரமுமிருந்தது. நண்பர்களெனப்படுபவர்கள் அவனின் பின்பாக அணிதிரண்டனர். தவிர்த்தவர்களையெலலாம் எதிர்வரிசையில் விட்டு ஈவிரக்கமின்றித் தாக்கினான்.

****

தி.தவபாலன் என்றும் இறைவன் என்றும் மூச்சு விடாத மூர்க்கமான குரலொன்று புலிகளின்குரல் வானொலியில் ஒலிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் செய்திஆய்வு, அரசியல் நிகழ்ச்சிகள் என வரையறுக்கப்பட்ட நேரத்தில் ஒலித்த குரல் படிப்படியாக பிற நிகழ்ச்சிகளையெல்லாம் தின்று தீர்க்கத் தொடங்கியது.

அடிப்படையில் அவர் வானியல்த்துறை சார்ந்த ஆர்வமும் அறிவுமுடையவர். ஆனால் இதற்கு முற்றிலும் மாறான அரசியல் சார்ந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். இயல்பிலேயே காரியங்களில் தீவிரவும், வெற்றிபெற்றுவிட வேண்டுமென்ற வெறியும் நிறைந்திருந்தவர் அங்கும் மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கினார். அது சாதாரணமாக கிடைத்த இடமல்ல. அவரது அறிவினாலும், உழைப்பினாலும், நம்பிய இலட்சியம் மீதான அர்ப்பணிப்பினாலும் அந்த இடத்தை நோக்கி உயரத் தொடங்கினார்.

இப்படி அவரது குரல் வரையறையில்லாமல் ஒலிக்கத் தொடங்க, அவரது பெயர் ஊரெல்லாம் அடிபடத் தொடங்கியது. அந்த வானொலியிலிருந்து அவரளவிற்குப் பிரபலமான இன்னொருவரைக்காணமுடியாது. அவரது நிகழ்ச்சிகளில் அதிகம் சிக்கலான கோட்பாடுகளெதும் விவாதிக்கப்படவில்லை. ஆழமான அர்த்தத்தில் பிரச்சனைகள் அணுகப்படவில்லை. எல்லாமே வெளிப்படையான ஒன்றுதான். அதாவது, மக்களை அணிதிரட்டுவது. நிலவுகின்ற சூழலில் விடுதலைப்புலிகள் மேற்கொள்ளும் தீர்மானங்களிற்கான நியாயங்களை கற்பிப்பதும், அதனை மக்களிடம் கொண்டு செல்வதுமே அவரது பணிகளாகயிருந்தன. அதற்காக அவர் எதனையும் சொல்லத் தயாராகயிருந்தார்.

.

வன்னி வானொலித்துறையில் அவருக்கென தவிர்க்கமுடியாத அடையாளமிருக்கிறது. ஏனெனில் அந்த வானொலியை அவர்தான் வளர்த்தெடுத்திருந்தார். புதிய புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கினார். இதில் முக்கியமானது ‘ஆனா மூனா’ என்றொரு நிகழ்ச்சி. புலிகளின்குரல் அலைவரிசையின் வீச்செல்லைக்குட்பட்டிருந்தவர்கள் வயது, பால் வேறுபாடின்றி இந்த நிகழ்ச்சிக்கு இரசிகர்களாகயிருந்தனர். ஒரு அறிவாளியையும் ஒரு முட்டாளையும் கொண்டு ஒவ்வொரு வாரமும் ஏதாவதொரு புதிய தொழில்நுட்ப தகவலை சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு சுவாரஸ்யமான கதையின் முடிவைப்போல ஒவ்வொரு வாரமும் முட்டாள்ப்பையன் நகைச்சுவையான விபத்துக்களில் மாட்டுப்படுவதாக நிகழ்ச்சி முடிவடைந்தது. இரவு எட்டு இருபதிற்கு இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் சமயங்களில் வானொலிப்பெட்டிகளின் முன்பாக சனங்கள் கூட்டம்கூட்டமாக நிற்பதை பலமுறை கண்டிருக்கிறேன்.

தமிழ்வானொலி வரலாற்றிலேயே இல்லாதவாறான சில புதுமைகளையும் அவர் செய்திருக்கிறார். யுத்தகளங்களிற்கு போராளிகளை அனுப்பிவிட்டு வெற்றிச் செய்திகளிற்காக காத்திருந்த காலகட்டத்தில் அவர் அந்த நிலையையும் மாற்றினார். இதற்கு முன்னர் கிரிக்கெட், களியாட்டங்கள், இன்னும் எதையெதையோ எல்லாம் நேரடி ஒலிபரப்பாக கேட்டிருந்தோம். அவர்தான் தமிழ்வரலாற்றிலேயே யுத்தகளங்களை நேரடி ஒலிபரப்புச் செய்தார். ஓயாதஅலைகள் மூன்று நடவடிக்கையில் அவர் களத்தில் போராளிகளுடனிருந்தார். சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களுடன் போய், அங்கிருந்தபடியே யுத்தகள நிலவரங்களை வானொலியில் சொல்லிக் கொண்டிருந்தார். ஜெயசிக்குறு நடவடிக்கையில் கைப்பற்றிய இடங்களையெல்லாம் விட்டுவிட்டு படையினர் ஓடிக்கொண்டிருந்த பொழுது அவரும் படைகளை மைக்குடன் துரத்திக் கொண்டிருந்தார். இதனால் என்ன நேர்ந்ததெனில், புதிதாக ஒரு இடம் கைப்பற்றப்பட்ட பொழுது, அந்த விடயம் கட்டளைத்தளபதிகளிற்குத் தெரிய முன்னார் வானொலியூடாக சனங்களிற்குத் தெரிந்தது.

ஒரு கட்டத்தில் அந்த வானொலி நிலையத்தின் தீர்மானமெடுக்கும் சக்திமிக்கவராக அவர் உருவெடுத்திருந்தார். அவரது தலைமையின் கீழ் பல விடுதலைப்புலியுறுப்பினர்கள் கூட பணியாற்றினார்கள். வானொலியின் செல்நெறியை தீர்மானிக்கும் ஒருவராகவுமிருந்தார். இந்த நாட்களில் அவர் ஒரு முழுமையான போராளியாகினார்.

காலை ஒளிபரப்பு ஆறுமணிக்கு ஆரம்பமாகினால், ஆறுமணி பத்து நிமிடத்திற்கெல்லாம் ஒலிவாங்கியைப் பொறுப்பெடுக்கத் தொடங்கினார். வேவ்வேறு தலைப்புக்களிலான நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து நடத்திக் கொண்டிருந்தார். அவரது இயல்பான மூர்க்கம் எல்லா நிகழ்ச்சிகளிலுமிருந்தது. அப்பொழுது இராணுவம் மன்னாரிலிருந்து முன்னேற ஆரம்பித்து விட்டது. அந்த நாட்களில் ஒரு பொறி பற்றிய நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த முயன்று கொண்டிருந்தார். அதற்குத் தானே ஸ்ராலின்கிராட்டிலிருந்து ஜெயசிக்குறு வரை உதாரணங்களிருந்தன. வரலாறெனப்படுவது ஒரே மாதிரியாகவே திரும்பத்திரும்ப எழுதப்படும் ஒன்றென மூர்க்கமாக நிறுவ முயன்று கொண்டிருந்தார். சனங்களும் அவர் சொல்வதெல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ‘அகலக்கால் பதிக்கும் சிங்களம்’ என்ற வார்த்தையை ஒரே நாளில் பலதடவைகள் உச்சரிக்கக் கேட்டிருக்கிறேன். உங்களிற்கான சவக்குழிகளை நோக்கி வந்து கொண்டிருக்கும் இராணுவமே திரும்பிப் போய்விடு என இராணுவத்திற்கும் ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார்.

இதில் குறிப்பிடத்தக்கதான இன்னொரு விடயமுமுண்டு. களத்திலிருக்கும் போராளிகளில் பெரும்பாலனவர்கள் அவரது இரசிகர்களாகயிருந்திருக்கிறார்கள். அவர்களையும் உற்சாகப்படுத்துவது அவரது பிரதான பணிகளில் ஒன்றாகயிருந்தது.

விடுதலைப்புலிகள் பற்றிய பொதுவான பிம்பத்தின் மொத்த உருவமாகயிருந்தார் என்று சொன்னால்க்கூட தவறில்லை. ஏனெனில், அவரிடம் சமரசங்களோ, தேர்வுகளிற்கான வாய்ப்புகளோ இருந்திருக்கவில்லை. ஈழத்தமிழர்களெனப்படுபவர்கள் ஒன்றில் தியாகிகளாகயிருக்க வேண்டும். அல்லது துரோகிகளாகயிருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இரண்டும் கெட்டானாக ஒருவன் இருக்க முடியாது. ‘சொரணை கெட்டவர்கள்’ என வெளிப்படையாகவே திட்டினார். அவர் ஈவிரக்கமற்ற வானலை யுத்தக்காரனாகயிருந்தார். தியாகிகளைத் தவிர்த்து மிகுதியனைவருக்கும்- ஒருவரைக்கூட தப்பவிடாமல்- தன் சொற்களினால் மரணதண்டனை நிறைவேற்றிக் கொண்ருந்தார். அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. டக்ளஸ் தேவானந்தாவில் தொடங்கி இயக்கத்தை விட்டு ஓடிப்போன பொடியன் வரை எவரையும் விட்டு வைக்கவில்லை.

ஓவ்வொரு தமிழனும் பிறந்தது, போராடி தனிநாட்டையடையவே என்பது மாதிரியானதொரு எண்ணம் அவரிடம் இருந்து கொண்டிருந்திருக்க வேண்டும். ஏனெனில் அது மாதிரியானதொரு சித்திரத்தையே தன் வாழ்நாள் முழுவதும் வரைந்து கொண்டிருந்தார்.

குறிப்பாக யுத்தம் துரத்தத் தொடங்க, அவரது மூர்க்கமும் அதிகரித்துக் கொண்டே சென்றது. வானொலியை கேட்கும் யாருக்குமே அது தெளிவாகப் புரிந்திருக்கும். சனங்கள் ஊர் ஊராக இடம்பெயர அவரும் வானொலி நிலையத்துடன் இடம்பெயர்ந்து வந்து கொண்டிருந்தார். இதற்கு வசதியாக ஒரு கொன்டெயினர்ப் பெட்டியில் வானொலி நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. சமயங்களில் இடம்பெயர்ந்து ஓடிக் கொண்டிருந்த பொழுதும் அவர் சனங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். தனது ஒலிபரப்பு வாகனமும் அகதியாகச் சென்று கொண்டிருப்பதாக ஒருமுறை குறிப்பிட்டுச் சிரித்தார். இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுமே அவர் வானொலியில் சிரித்து நான் கேட்டிருக்கிறேன்.

மன்னாரில் நடவடிக்கையை தொடங்கிய 58வது டிவிசன் படையினர், தொட்டதெல்லாம் துலங்கிக் கொண்டிருப்பதாக ஒரு பிம்பம் பரவலாக உருவாகிக் கொண்டிருந்தது. விடுதலைப்புலிகளினால் அந்த டிவிசனை சமாளிக்கவே முடியாதென்ற எண்ணம் சாதாரண சனங்கள் மத்தியில்க்கூட எற்பட்டுக் கொண்டிருந்தது. அதற்குக் காரணமுமிருந்தது. புலிகளின் எல்லா நட்சத்திரத் தளபதிகளும் முயன்று பார்த்தும் அந்த டிவிசனது வியூகங்களை உடைக்க முடியாமலிருந்தது. யுத்த வரலாற்றிலேயே அந்த டிவிசன்தான் அதிக எண்ணிக்கையான புலிகளைக் கொன்றதாக, கொழும்பு ஆங்கிலப்பத்திரிகைகள் படைத்துறைக் கட்டுரைகளில் புள்ளிவிபரங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தன. இராணுவ தந்திரங்களில் கைதேர்ந்த இயக்கமெனச் சொல்லப்பட்ட புலிகளினாலேயே சமாளிக்க முடியாமலிருந்த 58வது டிவிசனை எதிர்க்க இதற்குப் பின்னர்தான் அவர் களமிறங்கினார். அவர்கள் கனரக ஆயுதங்களுடன் களத்தில் முன்னேறிக் கொண்டிருக்க, இவர் அவர்களுடன் சொற்களினால் மோத ஆரம்பித்தார். அந்த டிவிசன் சந்தித்த இழப்புக்கள், அவர்களினால் தாக்குப்பிடிக்கக் கூடிய காலஎல்லை, அதனை நிறைவேற்ற தேவையான இளைஞர் யுவதிகள் என இவரும் ஒரு புள்ளி விபரத்துடன் களமிறங்கினார். ஒரு கட்டத்தில் தனது நிகழ்ச்சி முழுவதையும் 58வது டிவிசனை தாக்குவதற்காகவே ஒதுக்கினார்.

இதில் சுவாரஸ்யமான விசயமொன்றுண்டு. புலிகளின் தோல்வி குறித்து கொழும்பு சிங்கள, ஆங்கிலப் பத்திரிகை செய்திகளையும் வானொலியில் வாசித்தபடியிருந்தார். யுத்தத்தின் இறுதி நாட்கள் வரை திவயின போன்ற சிங்களப்பத்திரிகைகளில் வந்த செய்திகளையெல்லாம் வாசித்துக் கொண்டிருந்தார்.

யுத்தத்தின் இறுதி நாட்களில், இது முடிவல்ல. ஒரு யுகப்புரட்சியின் ஆரம்பம். ஸ்ராலின் கிராட் மக்கள் போல் எழுவோம் என விடாமல் மூர்க்கமாக முழங்கிக் கொண்டேயிருந்தார். மே 16இல் கூட யுத்தத்தின் எந்த முனையிலும் பின்னடைவு ஏற்படவில்லை என நிறுவ முயன்று கொண்டிருந்தார். இது ஒரு சாராரை நிம்மதி கொள்ள வைத்துக் கொண்டிருந்தது. இன்னொரு சாரரை கொதிப்படைய வைத்துக் கொண்டிருந்தது. விளைவு என்னவெனில், அந்தச் சிறுதொகை மக்கள் கூட்டமே அவரை இரண்டு விதமாகப் பார்த்தார்கள். ஒரு தொகுதியினர் அவரை போற்றிப் புகழ்ந்து, கதாநாயகன் ஆக்கினார்கள். இன்னொரு தொகுதியினர் இகழ்ந்து பைத்தியக்காரன் என்றார்கள். அவர் இரண்டையும் பொருட்படுத்தியிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். வாழ்ந்த காலம் முழுவதும் இப்படியாக ஒரு சிக்கலான ஆளுமையாகவே அவர் வாழ்ந்தார்.

தான் சரியென நம்பிய ஒரு குறிக்கோளை நோக்கி மற்றவர்களையும் அணிதிரட்டுவது தனது கடமையென அவர் எண்ணியிருக்கக் கூடும். இதனால் அவர் கதாநாயகனாகவும், பைத்தியக்காரனாகவும் வாழ வேண்டியிருந்தது.

இறுதியில் அவர் நம்பிய குறிக்கோள் தோல்வியடைந்தது. மே 18இல் எல்லாமும் முடிந்த பொழுது அங்கிருந்தவர்களிற்கு இரண்டு தெரிவுகளிருந்தன. ஒன்றில் சரணடைவது. அல்லது சாவது. பலர் முன்னதை தேர்வு செய்தனர். சிலரைப்போல, அவர் பின்னதைத் தேர்வு செய்தார்.

****

உலக ஊடக சுதந்திரத்தை முன்னிட்டு, சுதந்திர ஊடகக்குரல் என்ற அமைப்பினர் கடந்த மே மாதம் மூன்றாம்; திகதி ஒரு நிகழ்வை ஒழுங்கமைத்திருந்தனர். அதில் தி.தவபாலனிற்கும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. அவர் இறந்ததின் பின்பாக அவரது படம் வைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றே நினைக்கிறேன்.

சுதந்திர ஊடகக்குரல் நிறுவனம் பெரும்பாலும் உதயன் பத்திரிகையாளர்களைக் கொண்டது. சரவணபவனது நிறுவனமது. ஊடகவியல் அமைப்புக்களிற்கு அரசு கொடுக்கும் நிதியைப் பெற்றுக் கொள்ள இப்படியொரு அமைப்பை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்றே நினைக்கிறென். ஏனெனில் அந்த அமைப்பை ஸ்தாபிக்கும் பொழுது அவர்கள் வேறொரு பெயரிலேயே இயங்க இருந்தார்கள். ‘பிஸ்னஸ் ரூட்’ தெரிந்த பெரும்பாலான தேசியவாதிகளைப் போல அவர்கள் தேசிய, சுயநிர்ணய, தன்னாட்சி போன்ற ‘கிக்’ ஏத்தும் வசனங்களில் ஒன்றை அந்தப்பெயரில் சேர்த்திருந்தார்கள். ஆனால் ஊடக அமைச்சர், இப்படி பெயர் வைத்தால் காசு தரமாட்டேன் என பிடிவாதம் பிடித்ததினால், யாருக்கும் நோகாமல் ‘சுதந்திர’ என்ற சொல்லை மட்டும் வைத்துக் கொண்டுவிட்டார்கள்.

தமிழர்களின் தேசியத் தலைவர்களில் அனேகமானவர்கள் இந்த நிகழ்விற்கு நிதியளித்திருக்கிறார்கள். அந்தப்பட்டியல் மிக நீண்டது. அதுபற்றிய செய்திகளும், புகைப்படங்களும் ஏற்கனவே வேண்டிய அளவிற்கு ஊடகங்களில் வெளிவந்துவிட்டன.

அதிலும் குறிப்பிடத்தக்கதான நிகழ்ச்சி தவபாலனது படத்திற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வவனியா, கிளிநொச்சி அமைப்பாளர் கீதாஞ்சலி மாலையணிவித்து அஞ்சலி செலுத்தியமை. வன்னியில் கொல்லப்பட்ட இன்னொரு பத்திரிகையாளரான சத்தியமூர்த்திக்கும் அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. அதற்கு யார் மாலையணிவித்தார்கள் என்பது தெரியவில்லை. வன்னி யுத்தத்தில் தீவிரமாக பங்காற்றிய யாராவது இராணுவ அதிகாரியாகவுமிருக்கலாம்.

தவபாலன் எப்பொழுதும் மூர்க்கமாக வானொலிப் பெட்டியில் சொல்லிக் கொண்டிருந்தார்- இந்தச் சிறு தீவு இரண்டு நாடுகளாலாக வேண்டியது என. ஏன்றேனுமொருநாள் அது சாத்தியமாகுமென அவர் அதனை நம்பிக் கொண்டுமிருந்தார். அதற்காக வாழ்ந்து கொண்டுமிருந்தார். அந்த நம்பிக்கை பொய்த்து, அவர் எதிரியாகக் கருதியவர்கள் வெற்றி பெற்ற பொழுது, அவர்களிடம் அவர் சரணடையவில்லை. எல்லோரையும் போல அவரின் முன்பாகவும் குறைந்தது இரண்டு தெரிவுகளாவது இருந்தன. வானலைகளில் அவர் வரைந்த சித்திரங்களில் மட்டும்தான் தேர்வுகளற்ற கறாரான பார்வைகள் இருந்தன எனச் சொல்ல முடியாது. தனது வாழ்க்கையிலும், மரணத்திலும் அதனை அவர் செயற்படுத்திக்காட்டினார்.

ஆனாலும் அவர் இறந்துவிட்டார் என்பதை அவரது குடும்பத்தினர் இன்றுவரை ஏற்றுக் கொள்ளவுவில்லை. அவரது மரணச்சான்றிதழிற்குக்கூட விண்ணப்pக்கவில்லை. அவர் என்றேனுமொரு நாள் திரும்பி வரக்கூடுமென காத்திருக்கும் ஆயிரமாயிரம் தமிழ்ப்பெண்களில் ஒருவராகவே அவரது மனைவியிருக்கிறார்.

ஆனாலும், இப்பொழுது யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்கப் போவதில்லை. இனி அவரது மரணச்சான்றிதழிற்கு குடும்பத்தினரும் விண்ணப்பிக்கக்கூடும். அவர் நிச்சயம் இறந்துவிட்டார். மே18 இல் அவர் தப்பித்திருந்தாலும், மூன்று வருடங்கள் கழித்து யாழ்நகரின் மத்தியில் அவர் கொல்லப்பட்டுவிட்டார். அவருக்கு நாமும் அஞ்சலி செலுத்துவோம்.

12. May 2012 by யோ.கர்ணன்

http://yokarnan.com/?p=242

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தேசிய, சுயநிர்ணய, தன்னாட்சி போன்ற ‘கிக்’ ஏத்தும் வசனங்களில் ஒன்றை அந்தப்பெயரில் சேர்த்திருந்தார்கள்.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....கிக் ஏத்தும் சொற்கள் என்னையா உலகம்

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைச்சன் ஆதர் சி கிளாக் கலைஞனுக்கு மட்டும் தான் கடிதம் போட்டவர் என்று பார்த்தால் தவபாலனுக்கும் போட்டு இருக்கார் :)

கந்தையற்றை பொடியன் கதையெழுதப் புறப்பட்ட காதை

--------------------------------------------------------------------

பின்நவீனத்துவப்புலம்பெயந்த நிலம் கலந்த போர்க்கதை இப்பிடித்தான் ஆரம்பிக்குமாம்...

தமயந்தி துவக்கை எடுத்தாள். துவக்கெண்டால், தமிழ்நாட்டு ரசிகக்குஞ்சுகளும் வாசிக்கோணுமெண்டதாலை சும்மா விசயசாந்தி பொக்கட்டுக்கும் மார்க்கட்டுக்குமிடையிலை கௌவினபடி நிலத்தைச் சுடுறன் பார், நிக்கிறவன் *டுக்கைச் ...சுடுகிறன் பார் எண்டது மாதிரியாம்.

வல்லிபுரத்தார் இயக்கத்துக்குக் காசு குடுத்தவர். இப்பவும் குடுக்கிறார்; வன்னியிலை இலக்கியசம்பாஷணைக்கு. முன்னையநாட்டாமைகள் புதுச்சேட்டுப் போட்டுக்கொண்டு வருவினம். உப்பிடி புளியங்குளத்துக்குள்ளால கனகராயன்குளம் குறுக்குவழியிலை போகாமல், கொழும்போடை கதைச்சு ஓமந்தை நொச்சிமோட்டை வவுனியா எண்டு ஏநைன் நேர்ரோட்டிலை போனால், ஒத்து வாழலாம். இத்தினை நாள் *த்து வாழ பழையவிதானையார் காட்டின வழியாலதான் இத்தினை பிரச்சனையும் மாரித்தவக்கைமாதிரிக் கொட்டிப்போச்செண்டு....

செல்வயோகன் குரளி எண்ட செ.கண்ணன் விண்ணன்; கெட்டப்போல் அடிக்கிறதிலையும் கெட்டப்பா கதை எழுதிறதில்லையும். கதையெல்லாம் சுடுகிறதுமாதிரித்தான் எழுதுவான். சும்மா எழுதிற சூரில ஆயுதக்கசசெல்லாம் குழந்தைப்பிள்ளை வயித்தாலை போனதுமாதிரி சுர்ரெண்டு சீதத்தோட சீறிப்போகும். ஆனால், இயக்கத்திலை இருக்கேக்கை சுட்டதுமாதிரி எய்மாத்தான் எழுதுவான். *ட்டை சிதறக் கெட்டப்போலால கல்லடிச்சதுமாதிரி. தமிழ்ச்செல்வியின்ரை அப்பரை *ட்டை சிதற அடிக்கிற மாதிரி இந்தோனேசியா தமிழ்மலருக்கு எழுதித்தரோணும் எண்டு மல்லுக்கட்டி லா சப்பல் ரொஸ்கி சுந்தரலிங்கமும் சரே பதியுதீனும் ரெட்டைக்காலிலை (லா சப்பலின்ரை ஒண்டு சரேயின்ரை மற்றது) நிண்டு வாங்கி எழுதிப்போடுவிச்சாங்கள். அவுஸ்ரேலியா நியூட்டன் சுரேசனும் ஸ்காபரோ சிவப்பியும் அச்சாவெண்டு விமர்சனம் பேஸ்புக்கிலை லைக் குத்தியிருந்தினம். முன்னைய நெடுந்தீவுபொறுப்புவன்னிமை உந்தக்கொட்டை பிளக்கிற கதைக்குள்ளால எப்பிடி சிங்களச்சோதரரையும் சேர்த்துக்கொண்டு தமிழீழம் எடுக்கலாமெண்டு ஏ நைனிலையிருந்து எட்டுமைல் உள்ளுக்குப்போய் ஒரு மடத்திலை கூட்டம் வச்சுச்சொன்னார். யாழ்ப்பாணக்கம்பஸ் இன்ரெலெக்சுவலெல்லாம் ஏநைனிலையிருந்து மூண்டுமீற்றருக்கு அங்காலை போனால், வரமாட்டமெண்டுபோட்டாங்கள்; தங்கடை ஆக்களுக்குமட்டும் டொக்டரேட் குடுக்கிற யாழ்ப்பாணவேளாளசாதிவெறியன்கள். இப்பியா செ. கண்ணன் எண்ட வில்லெடுத்த வித்துவான் கதை விரிஞ்சுகொண்டிருக்கேக்கை ....

எனக்கு அலுப்பெடுத்துது. கதையை நிப்பாட்டுறன். உப்பிடி இயக்கம், துவக்கு, நக்கல், பெட்டை, வன்னி எண்டு அச்சிலை வாத்தெடுக்கிடுற மாதிரி குட்டிக்கதை எழுத நான் எதுக்கு? இன்னும் ரெண்டு மூண்டு வருசம் பொறுங்கோ. அசலாயே நாகர்கோவிலிலையிருந்து உதைமாதிரியே தோச்செடுத்து குப்புசாமி சர்மா எழுதுவார்

முக நூலில் Ramanitharan Kandiah எழுதியது.

அண்மையில் இவரின் குடும்பத்தினர், தாயாரை சந்தித்தேன். தாயார் மகனை நினைத்து அழுதவண்ணமே உள்ளார். மனம் தளராத மனைவியின் உறுதி, மற்றும் எம்மவரின் தொடர்ச்சியான ஆதரவுடன் குடும்பத்தினர் சிறப்பாக முன்னேறிவருகின்றனர்.

இந்த நேரத்தில் ஒருசிலவற்றை இங்கு பதியவேண்டிய தேவை இருப்பதாக உணரப்பட்டது. அதனால் பின்வரும் விடயங்களை சுருக்கமாக பதிகிறேன்.

சில சம்பவங்களை வைத்து சில நோகடிக்கும், சேறடிக்கும் செய்திகள் வெளியிடப்பட்டன. இதற்கு அறியாமை காரணமாக இருக்கலாம். அல்லது விரோத மனப்பான்மையும் காரணமாக இருக்கலாம். ஒரு சில சம்பவங்கள் நடந்துள்ளதுன. சில பின்னடைவுகள் ஏற்பட்டன. நிழலி குறிப்பிட்டதுபோல் சிலர் மனச்சாட்சி இல்லாமல் நடந்துவிட்டனர் என்பது உண்மையே. KP போன்ற ஒருசிலர் பொறுப்பே அற்ற முறையில் சந்தர்ப்பவாதியாக மாறி தமிழினத்தை ஏமாற்ற முனைந்ததும் உண்மை. அந்தாளுடன் ஒரு சந்தர்ப்பவாத வியாபாரக் கும்பல் இயங்க முனைந்ததும் உண்மை. ஆனால் விசுகு கூறியதுபோல் பலர் மனச்சாட்சியினுடனே நடந்துள்ளனர். ஏமாற்ற முனைந்தவர்கள், முனைபவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது. அது எமது செயற்பாட்டு ஒழுங்கு. அண்மையில் ஒருசிலருக்கு இது விளங்க ஆரம்பித்திருக்கும்.

மனம் தளராதவர்களுக்கும், முயற்சி உடையவர்களுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் முடிந்தளவு நாம் கடந்த இருவருடங்களாக உதவியே வருகிறோம். இது ஒருதடவை உதவி கிடையாது. தொடர்ச்சியான - மாதாந்தர உதவி. இது பகிரங்காமாக செய்யப்படுவதில்லை. விளம்பரம்களும் கிடையாது. ஆனால் மிக நேர்த்தியாக, குறிப்பிட்ட ஒழுங்குமுறையில், குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் செய்யப்பட்டு வருகிறது. ஒருசிலருக்கு இவ்வாறு உதவ முடிவதில்லை - முக்கிய காரணம் அவர்கள் ஒத்துழைப்பது இல்லை, வேறு சில காரணங்களும் உண்டு. ஆனால் இன்னமும் செய்யவேண்டியது நிறைய உள்ளது.

நேர்த்தியான ஒழுங்கமைப்புடைய ஓர் அமைப்பு யாருக்கு தேவையுள்ளதோ, யார் தகுதியானவர்களோ - அவர்களை எப்போதும் கைவிடுவதில்லை.

நல்லது அமுதன். உதவிகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டியதில்லை. தொடர்ந்து செயற்படுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.