Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் உதிக்காத சூரியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பத்தாம் வகுப்பு படித்த காலத்திலேயே எங்களது கணக்கு வாத்தியார் செற்றாக திரிந்த எங்கள் நால்வரை வகுப்பில் நிற்க வைத்து மன்மதக் குஞ்சுகள் எனத் திட்டியிருந்தார். அவரது கோபம் நியாயமானதுதான். காரணம், எங்கள் கூட்டத்திலிருந்த ஒருவன் கூடப் படித்தவளொருத்தியைக் காதலித்திருந்தான். எங்கள் மூவரையும் துணைக்கழைத்துச் சென்று, அவளது சைக்கிள்க் கூடைக்குள் காதல்க் கடிதத்தை போட்டுவிட்டான். அவள் வாத்தியாரது மருமகள் முறையானவள்.

வாத்தியார் இப்படித் தான். சாதாரணமாக திட்டமாட்டார். நல்ல உவமான உவமேயங்களுடன்தான் திட்டுவார். தமிழ் படிப்பித்த நடராசா வாத்தியார்கூட பிச்சை வாங்க வேண்டும். வகுப்பில் தூங்கி விழுபவனை நிற்க வைத்து ‘இஞ்ச பாரும் ஐசே கும்பகர்ணன்’ என செம்மொழியிலான திட்டலை ஆரம்பிப்பார். சற்று உடம்பானவன் பீமனாவான். தலைபின்னாமல் வருபவள் திரௌபதியாவாள். அவர் கொஞ்சம் வயசாளிதானே.[/size]

[size=4]அவராலும், தமிழ் படிப்பித்த நடராசா வாத்தியாராலும், சமயப் பாட மனோன்மணி ரீச்சாராலும் எங்கள் வகுப்பறை முழுதும் இதிகாச நாயகர்களும், நாயகிகளும், துஸ்டர்களும் வாசம் புரிந்து கொண்ருந்தார்கள். சமயங்களில் பொறுத்துக் கொள்ளமுடியாதளவு அத்துமீறல்களையும் அவர்கள் நம்முள் செய்துவிடுவார்கள். ஒரு முரடனின் கனவெல்லாம் கதாயுதத்தை தூக்கியபடி பீமன் திரிந்திருக்கலாம். என் கனவெல்லாம் மலரம்பு ஏந்திய மன்மதன் வலம் வந்து கொண்டிருந்தான்.[/size]

[size=4]ஒருநாள் இந்தக் கதை மாறியது.[/size]

[size=4]கணக்கியல் வாத்தியார் வகுப்பில் நடப்பதெதுவும் தெரியாமல், கரும்பலகையைப் பார்த்து எழுதிக் கொண்டிருந்தார். பின் வரிசையிலிருந்த ஒருவன், தனக்கு நீண்ட நாட்களாகவே போக்குக்காட்டிக் கொண்டிருந்த ஒருத்திக்கு, சற்று அழுகலான சிறிய மாங்காய் ஒன்றினால் எறிந்துவிட்டான். பெண்கள் பக்கத்தில் கைகளை மேசையில் தூக்கி வைத்தபடி அவனுக்குப் பக்கவாட்டாக உட்கார்ந்திருந்தாள். எதேச்சையாகத்தான் பட்டிருக்குமென நினைக்கிறேன்- தூக்கிய கைகளினூடாக மார்பை தாக்கியிருந்தது. வெள்ளையுடை வேறு உடுத்தியிருந்தாள். பிறகெல்லாம் வழமைப் பிரகாரமே நடந்தன.[/size]

[size=4]அவனை சம்பல் ஆக்குவதன் முன்னர், வாத்தியார் பல்லைக்கடித்தபடி கேட்ட ஒரே கேள்வி- ‘டேய் நீயென்ன பெரிய எய்மர் கடாபியென்ற நினைப்பா.’

முன்னைய வாத்தியார்களைப் போல கணக்கியல் வாத்தியார் வயசாளியல்ல. இளமையானவர். இப்படித் தானிருந்தன ஈழத்தின் இளைய தலைமுறையினரின் கதைகளும், உதாரணங்களும். இதிகாசங்களிலும், ஐதீகங்களிலும் மட்டும் உலாவிய சாகசக்காரர்களும், அவர்கள் ஓயாமல் ஆடிக் கொண்டிருந்த களங்களும் புத்தகத் தாள்களிலிருந்து நிலத்திற்கு இறங்கிவரத் தொடங்கியபின்னர், இதிகாச நாயகர்கள் மூடப்பட்ட புத்தகங்களிற்குள்ளேயே உறைந்திருக்க தொடங்கினார்கள். தேரோட்டிகளும், தேர்களும், சுங்கொலிகளுமின்றி சாகசக்காரர்கள் தெருக்களில் திரிந்தனர். பல பொழுதுகளில் கந்தையான சாரமும் சேர்ட்டும்தான் அணிந்திருந்தனர்.

பலபொழுதுகளில் சிரித்தபடி வீடுகளிற்கு வந்தனர். சாப்பாடு கேட்டனர். மறைந்து கொண்டனர். பிரியும்பொழுது, தீராத அன்பையும், நினைவுகளையும் தந்து பிரிந்தனர். சிலர் கால்களினால் நடந்து வீடுகளிற்கு வந்தனர். சிலர் கால்களினாலன்றி காற்றுவாக்கில் பெயர்களாகவும், சம்பவங்களாகவும் வந்தனர்.[/size]

[size=4]என் மிகச்சிறிய வயதில் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பற்றி அறிந்து கொண்டிருந்த மிக முக்கியமான சங்கதிகள் இரண்டு. முதலாவது, பிரபாகரன் மகாவிஸ்ணுவின் அவதாரம் (அம்மா சொல்லியிருந்தா). சொல்லப்பட்ட எய்மரான கடாபி என்பவர் அந்த இயக்கத்தில் இருக்கிறார்.

அந்த மனிதரும் வடமராட்சி என்பதினால், கிராமங்களையும் வயல்வெளிகளையும் கடந்து அவர் பற்றிய ஐதீகக்கதைகள் எல்லா இடங்களிற்கும் பரவியிருக்கலாம். பாடசாலை, ரியூசன், விளையாட்டு மைதானம் என்ற பேதமின்றி எல்லா இடங்களிலும் ஏதாவதொரு சந்தர்ப்பந்தில் அவர் பற்றிக் கதைப்பதற்கு ஏதாவதிருந்து கொண்டேயிருந்தது.[/size]

[size=4]**[/size]

[size=4]ஒரு அதிசயம் போலவே அது நடந்திருந்தது. புலிகள் அமைப்பில் இணைந்து, ஏதோ ஒரு பிரிவில் பயிற்சியை தொடங்கியிருந்த எங்கள் அணி திடீரென பிரிவு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. எங்களைப் பொறுப்பேற்றவர் கடாபி.

இந்தத் தகவல் வந்த நாள் எனக்கு நன்றாக நினைவிலுண்டு. எல்லோரும் பிடிபடாத பெருமை பொங்கத் திரிந்தோம். ஆளாளுக்கு அவர் பற்றிய கதைகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதிகாச நாயகர்களிற்கு ஒப்பான கதைகள். சத்துருக்களை துவம்சம் செய்தபடி பன்னிரு வெண்புரவி பொருத்திய ரதத்தில் வலம் வரும் ஒரு தேவகுமாரனை நினைவூட்டும் கதைகள். விடுதலைப்புலிகள் இயக்கம் கொண்டிருந்த எந்த அதிகபட்ச சாகசக் கதைகளிற்கும் குறைவற்றதாக அவர் எண்ணற்ற கதைகளினால் கட்டமைக்கப்பட்டிருந்தார். அதற்கு அவர் கொண்டிருந்த பெயரும் பேருதவியாகயிருந்தது. தமிழ்ப் பெயர்களிற்கும், ஆங்கிலப் பெயர்களிற்கும் இலகுவில் வாய்க்காத இராணுவத்தனத்துடனான சற்றே கறாரான ஒரு பிம்பத்தை கடாபியென்ற பெயரும் உருவாக்கிக் கொண்டிருந்தது. தன் மன்னன் இட்ட கட்டளைகளையேற்று களம் புகுந்தால் எதிரிகளை சிதறடிப்பவராகவும், எதிரியின் எந்த யுக்திகளையும் தகர்த்து மன்னன் உயிர்காப்பவராகவும் எல்லோர் மனங்களிலும் பதிந்து போனார்.

அன்று முழுவதும் ஆளாளுக்கு தெரிந்த கதைகளை சொல்லிக் கொண்டேயிருந்தனர். சொல்லப்படுவதற்குக் கணக்கற்ற ஐதீகங்கள் இருந்த பொழுதும் உச்சரிப்பதற்கு வாய்களும், கேட்பதற்கு செவிகளும்தான் அன்று வரையறுக்கப்பட்டிருந்தன (ஏனெனில் ஒரு பயிற்சிமுகாம் 150 பேரையே கொண்டது). அன்று நான் தெரிந்து கொண்ட முக்கிய கதைகள் இவை:[/size]

[size=4]1) ஒரு மனிதனை ஐம்பது மீற்றரில் நிற்க வைத்து, அவனது தலையில் அப்பிள் பழத்தை வைத்து பழத்திற்குச் சுடுவார். இதுவரை தோட்டம் தோட்டமாக விளைந்த எண்ணற்ற பழங்களைச் சிதறடித்த பொழுதும் தலையில் சுமந்து கொண்டிருந்தர்களிற்கு வாரப்பட்ட தலைகூட கலைந்தது கிடையாதாம்

2) நீரில் விழும் நிழலைப் பார்த்தபடியே –அண்ணாந்து பாராமல்- வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவையொன்றைச் சுட்டு விழுத்துவாராம்.

3) துப்பாக்கிச் சூடுகளினாலேயே சுவரில் பிரபாகரன் என்ற பெயரை அலுங்காமல் குலுங்காமல் அழகாக எழுதுவாராம்.[/size]

[size=4]4) மிகப் பல வருடங்களாகவே கண்ணை இமை காப்பதைப் போல தன் தலைவரை அவர் காத்து வருகிறாராம். தலைவரின் பின்னால் நின்றபடி அவர் சுழல விடும் லேசர்ப் பார்வைகளிலேயே துரோகிகளையும், உளவாளிகளையும் கண்டுபிடித்துவிடுவாராம்.

5) அவர் ஒரு இரகசியப் படையை வழிநடத்துகிறாராம். சாதாரண புலிகள் சண்டைபிடித்து முடியாதென்றால் அவரது மகாசேனை புகுமாம். அதனைச் சனங்கள் ‘தாடி குறூப்’ என பிரமிப்புடன் அழைத்து வந்தனர்.[/size]

[size=4]இப்பொழுது நினைத்துப் பார்க்க, எண்ணற்ற தமிழ்மனங்களில் அவர் ஐதீகக் கதைகளினால் மட்டுமே உருவாகியிருந்தார். ஏனெனில் அவர் இரகசியமாக ஒளிர்ந்து கொண்டிருந்த ஒரு சூரியனிற்கு ஒப்பானவர். அவரை கண்டவர்கள் குறைவாகவேயிருந்தனர். ஆனால் சாகசங்களினாலும், புதிர்களினாலுமான கதைகளை அறிந்திராதவர்கள் அரிதானவர்களே. விடுதலைப்புலிகள் அமைப்பு அதிகமும் பிரசித்தம் பெற்றது அது கொண்டிருந்த இரகசியத் தன்மைக்கே. அந்த அமைப்பின் வெற்றிகள் எல்லாமும் அந்த இயல்பினால் வாய்த்தவையே. யுத்த களங்களை வழிநடத்திய ஊரறிந்த பிரபலங்கள் எதற்கும் குறைவற்ற, சில சமயங்களில் அவர்களைவிட அதிக முக்கியத்தவம் கொண்ட பல இரகசியச் சூரியர்களை அந்த அமைப்பு கொண்டிருந்தது. பெரும்பான்மையான போராளிகளும் சனங்களும் ஒளியைக் கண்டனரே தவிர, சூரியர்களைக் கண்டதேயில்லை. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் கடாபியும், ராஜூவும். ராஜூவின் பாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த பொழுதும், முன்னவருக்கு பிரபஞ்சம் எல்லையற்றதாகவேயிருந்தது. அதற்குக் காரணமிருந்தது.[/size]

[size=4]**[/size]

[size=4]அவர் சிறுவனாகப் புலிகள் அமைப்பில் அடம்பிடித்து இணையும் பொழுது பிரபாகரனினால் வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அவர் தூக்கிய காவடியை இறக்குபவரல்ல. கூட்டத் துடைக்க பயன்படுவான் என்ற மாதிரியான காரணங்களிற்காகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் ஆள் இலேசுப்பட்ட ஆள் அல்ல. அவரது விரல்களில் அர்ச்சுனனதும், கர்ணனதும் விழிகளிருந்தன. குறிபார்த்துப் பாணமெய்த விழிகள் அவர் சுட்ட தோட்டாக்களையும் இலக்குப் பிசகாமல் கொண்டு சேர்த்தன. அசாத்தியமான குறிபார்த்துச் சுடும் திறமையினால் அனைவரையும் அசரடித்தார். அவர் சுடும் தோட்டாக்கள் மையத்தை தவிர வேறெங்கும் தைப்பதற்குமான தேர்களையே கொண்டிருக்கவில்லை.[/size]

[size=4]விரைவிலேயே தனது தலைவரின் மெய்ப்பாதுகாவலரானார். எல்லோரும் எதிரிகளுடன் நேரடியாக மோதிக் கொண்டிருக்க, அவர் எச்சரிக்கையுணர்வினாலும் விழிப்புணர்வினாலும் மோதிக் கொண்டிருந்தார். தனது தலைமையை அழிக்க எதிரி ஒரு நடவடிக்கையைத் தன்னும் நேரடியாக செய்யவிடாமல் தன் வியூகங்களை அமைத்துக் கொண்டிருந்தார்.

அவர் ஒரு விசுவாசமான மெய்ப்பாதுகாவலனாக மட்டுமிருக்கவில்லை. தனது தலைவரின் நிழலாகவே வாழத் தொடங்கினார். இரவுபகலாக ஓயாது திட்டமிட்டுத் திட்டமிட்டுப் பாதுகாப்பு வியூங்களை மாற்றியமைத்துக் கொண்டிருந்தார். இதனால் எதிரி திட்டமிட்ட தாக்குதல் திட்டங்களையும், இன்னும் திட்டமிட்டிராத தாக்குதல் திட்டங்களையும் முறியடித்துக் கொண்டிருந்தார்.

இதனால் என்ன நடந்ததெனில், இரவுபகலாக ஓயாமல் நிழலாக தொடர்ந்த ஒரு மனிதன் மீது ஏற்படும் நெருக்கமும், தர்க்க நியதிகளிற்கு அப்பாலான அபூர்வமான பிணைப்பும் அவர்கள் இருவருக்குமிடையிலுமேற்பட்டது. அதன் பின்னான காலத்திலும் அவர் தலைமையின் நிழலாகத்தான் தொடர்ந்தார். ஆனால் அதற்கு இன்னொரு அர்த்தமுமேற்பட்டது. அந்த நிழல் சமயங்களில் தலைமையின் பிம்பமாகவும் ஆனது.[/size]

[size=4]மிகப் பொறுமையான மெய்ப்பாதுகாவலர் பணியென்பது அவருள் பலவிதமான புதிய இயல்புகளை உருவாக்கிவிட்டிருந்தது. அதில் முக்கியமானது நவீன இராணுவத்திற்கு தேவையான விடயங்கள். இராணுவத் தொழில்நுட்ப அறிவு, இராணுவ அரசறிவியல், இராணுவ நிர்வாகம் என அவர் தேர்ச்சி பெற்றார். ஒரு கெரில்லா அமைப்பின் ஆரம்ப கட்டங்களிலிருந்து அமைப்பிலிருப்பவர்கள் எதிர்கொள்ளும் பிரதான சவாலே, அந்த அமைப்பு உருமாறத் தொடங்கும் சமயங்களிலெல்லாம் இசைவாகத் தகவமைப்பதே. அந்த இயல்புள்ளவர்கள் எல்லா காலகட்டத்திலும் ஒளிர்ந்தனர். மற்றவர்கள் ஒளிமங்கி விண்கற்களாக எரிந்தடங்கினர். புறக்கணிப்பு பற்றிய மனக்குறைகளும் மனஸ்தாபங்களுமாக எண்ணற்ற வெளியேற்றங்களும் ஒதுங்கல்களும் இந்தக் காலகட்டத்தின் இயல்புகள்.[/size]

[size=4]புலிகளின் மத்திய காலகட்டத்தில், குறிப்பாக 1990-இல் வேறெவரும் கொண்டிராத பெயரும், புகழும், அதிகாரமாக புகழின் உச்சத்தில் கொடிகட்டிப் பறந்த சொர்ணம், இந்த வகைக்கு மிகச் சிறந்த உதாரணமாவார். அதற்கடுத்த ஐந்து வருடங்களில் மாறத் தொடங்கிய இலங்கை யுத்தமுறைகளிற்குத் தன்னை தகவமைத்துக் கொள்ளமுடியாமல், 1990களின் இறுதிக் காலப் பகுதியில் காணாமல்ப் போகத் தொடங்கினார். (யுத்தத்தின் இறுதி மாதங்களில் அவர் மீளவும் பொறுப்பேற்றமைக்கு, பிற முக்கியஸ்தர்கள் இறந்தமை என்ற காரணத்தைவிட இன்னொரு காரணமாக, ஆத்மார்த்த பிணைப்புக்களும் காரணமாக இருக்கலாமென நினைக்கிறேன். நெருக்கடியான காலகட்டத்தில் பழைய நண்பர்களிடம் செல்வதற்கு ஒப்பானது)

இதற்கு மாறாக, எல்லாக் காலகட்டங்களிலும் தங்களை தகவமைத்துக் கொண்டு மேலும்மேலும் புகழ்கொண்டவர்களிற்கு மிகச்சிறந்த உதாரணமாக கடாபியையும், தீபனையுமே சொல்லலாம். ஆனாலும் இருவரும் எதிரெதிரான இயல்புடைய இடங்களிலிருந்தனர். தனது பயணத்தில் தீபன் வைத்த ஒவ்வொரு காலடியும் தமிழர்களின் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், இணையங்களிலும் படங்களுடன் பிரசுரமானது. ஆனால் கடாபி தனது காலடிகளை இரகசியமாகவே வைத்துக் கொண்டிருந்தார்.[/size]

[size=4]**

எங்களது பயிற்சி முகாம் நிறைவில் அவர் கலந்து கொள்வார் என அறிவிக்கப் பட்டிருந்தது. தேவகுமாரர்களையொத்த ஒரு சாகசநாயகனை காணும் ஆர்வமும், பயிற்சிமுகாம் நிறைவடைந்து முழுமையான இயக்கமான (சாகசநாயகர்களாகும் கனவு ஒவ்வொருவருக்குள்ளும் இருந்திருக்குமென நினைக்கிறேன்) பரவசமமாக எல்லோரும் அன்று கண்களிரண்டிலும் ஒளிகொண்டலைந்தோம்.

மிக உயரமாக, உருவத்தை மிஞ்சாத உடம்புடன் கறுத்த மனிதர் வந்திறங்கினார். மிகவும் சினேகமான சிரிப்புடன் புதிய உலகத்திற்கு எங்களை வரவேற்றார். அவர் ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைக்கும் பொழுதும், கையைசைக்கையிலும். உடலசைக்கையிலும் கடளின் அசைவுகளை இரசிப்பவர்கள் போல ஆர்வம் மிகுந்தவர்களாக இரசித்துக் கொண்டிருந்தோம். கற்றுக் கொள்வதற்கும், பின்பற்றுவதற்கும் அவற்றில் ஏராளம் விடயங்களிருப்பதாகப் பட்டது. (‘கடாபியண்ணை பிஸ்ரல் கட்டியபடி நடக்கிறார்’ என பாவனைபண்ணி கைகளை சற்றே அகலவீசியபடி நடந்த எண்ணற்றவர்களை அதற்குப்பின்னான காலங்களில் கண்டிருக்கிறேன்)[/size]

[size=4]ஐதீகங்களின்மூலம் மட்டுமே அவரை மனதிற்குள் வரைந்து வைத்தவர்கள், அவரை முதன்முதலாக காணும் சந்தர்ப்பத்தில் முதலில் மேலே சொன்னபடிதான் நடந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அது சரியெனில், அவர்கள், அடுத்ததாக கீழே சொல்லப்பட்டுள்ளதைப் போலவே நடந்திருப்பார்கள்.

அவரது உருவம் மற்றும் அசைவு மீதான பிரமிப்பு அடங்கியதும். இயல்பாகவே பார்வை அவரது இடுப்புக்கு சென்றது. காரணம் அவர் கட்டியிருந்த பிஸ்ரல். அதுபற்றியும் எழுதித் தீராத கதைகள் உலாவிக்கொண்டிருந்தன. அந்தக் கதைகள், அதனை மகாவீரனொருவனின் கைளிலுள்ள தோற்கடிக்கப்படமுடியாத வில்லொன்றை உருவாக்கிக்கொண்டிருந்தன. உலகம் கண்டிருந்த ஒப்பற்றதும், பிறிதொன்றால் எதிர்கொள்ளவே முடியாததுமான போராயுதம் அதுவென்பது மாதிரியான பிரமிப்புக்கள்கூட உலாவின. அவரது தோற்றத்திற்கு அந்த துப்பாக்கி சரிதான். ஆனால் சாதாரண கைத்துப்பாக்கிகளைவிடவும் பெரிதான துப்பாக்கியொன்றை இடுப்பில் கட்டியிருந்தார்.

ஏற்கனவே அது பற்றிய கதைகளை எல்லோரும் தெரிந்து வைத்திருந்தார்கள். Eagle வகையைச் சேர்ந்த அந்த பிஸ்டல் அவரது தலைவரிடமிருந்து அவரது இடுப்பிற்கு மாறியது. இராணுவஉலகம் விசித்திரமானது. தீர்க்கமுடியாத அன்பின் பெருங்கடலை மனதில் தேக்கி வைத்திருந்த பொழுதும் கூட, இராணுவத்திலிருக்கும் காதலிக்குப் பரிசளிக்க இராணுவ வீரனொருவன் தேர்வு செய்வது, ஒரு தோட்டாவையோ அல்லது அழகியதும் அபூர்வமானதுமான இராணுவ சாயலுள்ள உபகரணமொன்றைத்தான். [/size]

[size=4]விடுதலைப் புலிகளின் தலைவரிற்கும் அவரிற்கும் எற்பட்டிருந்த பிணைப்பு அபூர்வமானது. (இதுபோல சற்றே வித்தியாசமான ஒரு பிணைப்பு பாலசிங்கத்துடனிருந்தது). அந்த இயக்கத்தின் வரலாற்றில் முன்னெப் பொழுதும் இருந்திராதது (பின்னாட்களில் வேறு கதைகள் இருந்தன). சற்றே கனம் கூடியதும், அதிக சத்தத்தையுடையதுமான அந்த கைத்துப்பாக்கியை சிறிதுகாலம் பாவித்துவிட்டு கடாபியிடம் கொடுத்துவிட்டார். தனது இறுதிக் காலம்வரை அவர் அதனை ஒரு பொக்கிசத்தைப் போல பாதுகாத்து வந்திருந்தார். அதன் பின்பாக எத்தனையோ நவீனமான கைத்துப்பாக்கிகளேளெல்லாம் அந்த அமைப்பு இறக்குமதி செய்து கொண்டிருந்த பொழுதும் கூட அவர் அதனை பாதுகாப்பான காட்சியறைக்கு அனுப்பவில்லை. தான் நிழலாகத் தொடர்ந்துவரும் தன் அபிமானத்திற்குரியவரிடமிருந்து கிடைத்த துப்பாக்கியைத் தாங்கியிருப்பது தன் பாக்கியமென அவர் எண்ணியிருக்கக் கூடும்.[/size]

[size=4]அன்று எங்கள் மத்தியில் மிகச் சாதாரணமான ஒரு உரையாற்றினார். ஒரு கெரில்லா அமைப்பில் இணையும் ஆர்வத்துடன் வந்தவர்களிற்கும் கெரில்லா வாழ்க்கையை மோகித்தவர்களிற்கும் அவரது இடம் உகந்தல்ல என்பது தெளிவான செய்தியாக இருந்தது. இராணுவமென்பது பல்வேறு அலகுகளினாலானது என்ற புரிதலை ஏற்படுத்தினார். எண்பதுகளின் இறுதியில் கெரில்லா என்ற இயல்பை விட்டுவந்ததாகக் கூறினாலும், அந்த இயக்கம் மிக நீண்டகாலம் அடிப்படையான கெரில்லாத்தனங்களின் மீது வர்ணம் பூசி அலங்கரித்திருந்தது. மேலோட்டமான மரபுக் கட்டமைப்புக்கள் பற்றிய ஆர்வமும், பிரக்ஞையும் இருந்து கொண்டிருந்தது. நீண்டகாலமாக இந்த இரண்டு இயல்புகளிற்குமிடையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. ஆனால் ஆச்சரியகரமான விடயமென்னவெனில், குறையியல்புகளுடனிருந்த அமைப்பொன்றின் அலகொன்று நிறைவாக நவழுன இராணுவத் தன்மைகளுடன் வளர்ந்து கொண்டிருந்தது.[/size]

[size=4]அவர் பொறுப்பாக இருந்த இம்ரான்-பாண்டியன் படையணி அப்படித்தானிருந்தது. மரபு இராணுவமொன்றிலுள்ள அலகுகளும், அம்சங்களும் அதில் நிறைந்திருந்தன. அவரிடமிருந்த தேர்ந்த நிர்வாகத் திறனினால் அதனை சாத்தியமாக்கினார். அவரது பெரும்பாலான செயற்பாடுகள் அந்த இயக்கத்திற்கே முன்னுதாரணமாகயிருந்தது. அவரது சிந்தனைகள் அந்தப் படையணியிலிருந்து முழு இயக்கத்திற்கும் கிளைவிட்டுப் பரந்து கொண்டிருந்தன.

நவீன இராணுவ இயல்புகளுடனும் அறிவுடனுமிருந்தமை, தனது தலைமையின் அதீத பேரன்பிற்குப் பாத்திரமாகயிருந்தமை போன்ற காரணங்கள் அவருக்கு துணையாக இருந்தன. ஒரு காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அத்தியாவசியமான செயற்பாடுகள் அனைத்திற்கும் அவரே பொறுப்பாக இருந்தார். அத்தியாவசியமான பணிகள் அனைத்தையும் அவரது படையணியே செய்தது. அவர் ‘அண்ணையின் ஆள்’ எனவும், அவரது படையணி ‘அண்ணையின் படையணி’ என்றுமானது.

தலைமையைப் பாதுகாத்தல், இறக்குமதி செய்யப்படும் ஆயுதங்களைப் பொறுப்பேற்றுச் சேமித்து வைத்திருந்தல், தரைக்கரும்புலிகள் அணி, தகவல்தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு, புதிய ஆயுதங்களை அறிமுகம் செய்தல் என இன்னும் இதில் குறிப்பிடாத எண்ணற்ற விடயங்களை அவர் சுமந்து கொண்டிருந்தார். புதிதாக ஒரு ஆயுதம் அறிமுகம் செய்யப்பட வேண்டுமெனில் தனது படையணியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட குறிப்பிட்ட தொகையினரை வைத்தே செயற்படுத்தினார். அதீத இரகசியமான செயற்பாடென்றைச் செய்ய வேண்டுமெனிலும் அந்த அமைப்பு அவரது படையணியையே தேர்வு செய்தது.[/size]

[size=4]அவரது படையணி மரபான இராணுவம் கொண்டிருந்த அங்கங்களை அதிகமாகக் கொண்டிருந்தது. அவர் பொறுப்பாக இருந்த காலகட்டத்தில் அந்தப் படையணி இருந்ததைப் போல அந்த இயக்கத்தில் அதற்கு முன்னரோ பின்னரோ ஒரு படையணி இருக்கவேயில்லை. இராணுவத்துடன் துப்பாக்கி தூக்கி சண்டைபிடிப்பதில் தொடங்கி, சமையல்க் கூடத்தில் கறிக்கு உப்புப் புளி பார்ப்பது வரையான எந்த வேலைக்கும் எல்லோரும் தயாராக இருக்க வேண்டும். கையில் அதிநவீன ஆயுதம் வைத்திருப்பதும் அகப்பை வைத்திருப்பதும் விடுதலைக்கான செயற்பாட்டில் ஒரே விதமான அர்த்தங்களையேயுடையது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதனால் ஒதுக்கப்படும் பணிகள் பற்றிய அதிருப்தியை யாரும் கொண்டிருக்க முடியாது.[/size]

[size=4]இராணுவங்களில் இருக்கும் மேலதிகாரிகளிற்கு சல்யூட் செய்யும் நடைமுறை, அதிகாரிகள் பயிற்சிநெறி, அந்த பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்பவர்களிற்கு இறப்பதற்கு முன்னரே இராணுவப் படிநிலைகள் வழங்குதல், ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாக அலகுகள், அதற்குத் தகுதியானவர்கள் குறிப்பிட்ட கற்கைநெறிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டிய கட்டாயம் எனப் பலதையும் அவர்தான் ஆரம்பித்து வைத்தார். அனைத்தையும் தனது படையணியிலேயே செயற்படுத்தினார்.

தனது ஆரம்பகால கட்டங்களில்த் தண்டனைகளிற்குப் பெயர்பெற்ற அந்த இயக்கத்தின் நவீன மாற்றங்களிற்கான முனைப்புகளின் குறியீடாகவும் அவரிருந்தார். குறிப்பாக அதிகாரிகள் உட்பட யாருமே இன்னொரு போராளியைக் கைநீட்டி அடிக்கக் கூடாதென்ற மிகக் கடுமையான சட்டத்தை தனது படையணியில் அமுல்படுத்தியிருந்தார். மீறுபவர்கள் -அவர் எவ்வளவு பெரிய பொறுப்புடையராக இருந்த போதும்- தண்டனை பெற்றார்கள். எல்லோருக்கும் தண்டனை பொதுவானது. பதினைந்து நாட்கள் சமையல்.[/size]

[size=4]மூர்க்கமும் வெறியும் மிகு[/size][size=4]ந்த யுத்தகளங்களில் அசாதாரண வார்த்தைகள் சாதாரணமானவை. ஒவ்வொரு சிறிய அணித் தலைவரிலும் தொடங்கி, கட்டளைத் தளபதி வரையில் விதிவிலக்குகள் குறைவு. கெரில்லாக்களாக அதிக ஆளணியுள்ள எதிரியை எதிர்கொண்ட காலத்தில் அவர்களின் பிரதான ஆயுதமே ஓர்மம்தான். அந்த நாட்களில் களத்தில் நிற்கும் போராளிகளின் துப்பாக்கிகளிலிருந்து ஆவேசத்துடன் ரவைகள் வந்து கொண்டிருந்ததற்குச் சற்றும் குறையாத ஆவேசத்துடன் பொறுப்பானவர்களின் வாய்களிலிருந்து சொற்கள் வந்து கொண்டிருந்தன. யுத்தமுனையிலிருந்து கண்ணுக்கெட்டாத தொலைவிலிருந்த கட்டளையதிகாரிகள்கூட, கண்ணெதிரே எதிரிகளை கற்பனை செய்துகொண்டு ஆவேசமாக தொலைத்தொடர்பு கருவியில் கட்டளையிட்டுக் கொண்டிருந்தனர். தோட்டாக்களிற்குச் சமமான எண்ணிக்கையிற் தூசண வார்த்தைகளும் கக்கப் பட்டன.

அவரது படையணியில் யாரும் அப்படி யுத்தம் புரிய முடியாது. சண்டைகளின் முடிவில் அந்த வீடியோப் பதிவுகளை உன்னிப்பாக கவனிப்பார். கெட்ட வார்த்தை யுத்தம் புரிந்த அதிகாரிக்கு ஆரம்பத்திலிருந்து வகுப்புத் தொடங்கும். மாறிக் கொண்டிருந்த யுத்தமுறைகளிற்கு ஏற்ப அவர் தன்னை தகவமைத்துக் கொண்டிருந்தார். அவரையொத்தவர்களின் மேலெழுச்சி அந் நாட்களில் நடந்தது. மூர்க்கமான வார்த்தைகளைத் தவிர்த்து, நிதானமாக திட்டமிட்டு யுத்தம்புரியும் புதியதலைமுறை எழுச்சிபெற்றது.[/size]

[size=4]**[/size]

[size=4]கற்பனையும் பண்ண முடியாத அதிர்ச்சியாகவே அது நடந்தது. ஒவ்வொருகாலத்தின் பிரதிநிதிகளிலும் எண்ணற்றவர்கள் அமைப்பினது நவீனமாற்றங்களிற்கு ஈடுகொடுக்க முடியாமல் புறந் தள்ளப்பட்டுக் கொண்டிருந்ததற்கு முற்றிலும் எதிரான இயல்புகளுடனிருந்தது அவரது வீழ்ச்சி. வெண்புரவிகள் பொருத்திய ரதத்தில் விண்ணில் வலம் வந்த சூரியகுமாரனுமொருநாள் தெருவுக்கு வந்தார். அந்த வீழ்ச்சி கணிப்பிட முடியாதது. தர்க்க நியதிகளிற்குமப்பாற்பட்டது.

மாபெரும் அதிகாரங்களுடனும், அமைப்பின் தலைவரது பிரதிநிதி போன்ற அந்தஸ்த்துடனுமிருந்தவர் திடீரென ஒருநாள் ஏதுமற்றவராக நின்றார்.

தலைமையைப் பாதுகாக்க வேண்டுமென்ற அவரது அளவிட முடியாத அர்ப்பணிப்புணர்வுதான் அவருக்கு புதிய திசைகளைக் காட்டிவிட்டது. இறுதியில் அந்த எண்ணங்களின் தீவிரமே அவரது திசைகளை அடைத்தும் விட்டது.

அந்தப் படையணியிலிருந்தவர்கள் விலகுவதற்கு முயன்ற சந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடுமையான தண்டனைகள். அதனால் ஏற்பட்ட உடல் உள பாதிப்புக்களைத் தொடர்ந்து அந்த சிறைச்சாலையை மூடுமாறு பணிக்கப்பட்டிருந்தது. அவர் அதனை நிறைவேற்றவில்லை. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தர்க்க நியதிகளிற்கு அப்பாற்பட்ட அபிப்பிராய பேதங்களை, இரண்டு அபூர்வப் பிணைப்புடைய நெஞ்சங்களின் அபிப்பிராய பேதமென்ற அடிப்படையிலிருந்தே நோக்க வேண்டியிருந்தது.[/size]

[size=4]அதன்பின் அவர் முக்கியத்துவமற்ற துறையில் இருந்தார். புதிய பேராளிகளிற்குப் பயிற்சியளிக்கும் துறையின் பொறுப்பாளரானார். இந்த நாட்களில் அவர் தமிழ்ப் பெயரான ஆதவன் என்ற பெயரையே உபயோகிக்கத் தொடங்கினார்.

இந்த நாட்களில் இன்னொரு முக்கிய விடயமும் நடந்தது. அவர் இதுவரை மறைந்திருந்த திரை விலக்கிப் பகிரங்கமாகத் தொடங்கினார். ஆனாலுமென்ன- ஒரு சூரியனாக அல்ல. ஒளிமங்கிய ஒரு விண்கல்லாகவே.[/size]

[size=4]**[/size]

[size=4]யுத்தத்தின் இறுதி மாதங்களில் புலிகளின் மிகப்பெரிய இராணுவத் தந்திரோபாய தவறான ஆனந்தபுரப் பெட்டியில் அவரும் அகப்பட்டிருந்தார். இது நடப்பதற்கு முன்னர் அவர் புறக்கணிக்கப்படவில்லை அல்லது தனது தலைவருடன் கொண்டிருந்தது ஆத்மார்த்தமான பிணைப்பு என்பதை பிறர் புரியும்விதமான சம்பவங்கள் சில நடந்திருந்தன.

நோர்வே அனுசரணையுடனான சமாதான உடன்படிக்கை காலத்திலிருந்து ஆனந்தபுரம் வரையிலான காலப் பகுதிகளில் அந்த இயக்கம் நெருக்கடிகளை எதிர்கொண்டு, அதன் தலைமை அயர்ச்சியடைந்திருந்த சமயங்களிலெல்லாம் தனிமையை நாடியிருந்தது. அந்த இயக்கத்தின் பிற எந்த நபரும் நெருங்காத தனிமையை அனுபவிக்க விரும்பிய சமயங்களிலெல்லாம், மிகத் தொலைவிலிருந்தாலும் ஆதவனை மட்டும் அழைத்துத் தன்னுடன் வைத்துக் கொண்டிருந்தது. எல்லா ஆதங்கங்களையும் பகிர்வதற்கான ஒரே ஆத்மார்த்த உறவாக இருந்த அவரது ஸ்தானம் யாராலும் இன்னும் உட்காரப்படாமலேயே இருக்கிறது என்பதை புரிய வைத்த சம்பவங்களவை.

ஆனந்தபுரத்தில் புலிகள் அமைத்த பெட்டியை (BOX) ஊடறுத்து, இராணுவம் அவர்களை முற்றுகையிட்டபொழுது உடனடியாக மிகப்பெரிய துயரமொன்று நிகழ்ந்தது. சிலநூறு மீற்றர்கள் நீள அகலத்தில் இருந்த அந்த களத்தின் யதார்த்தம் மிகப் பயங்கரமானதாகயிருந்தது. ஒரு பக்கத்திலிருந்து சுடப்படும் ரவைகளினால் மறு பக்கத்திலிருந்த இராணுவத்தினரே இறக்க நேர்ந்தது. திசையெட்டிலிருந்தும் உள்ளிருந்தவர்களை நோக்கி ரவைகள் இடைவிடாமல் வந்து கொண்டிருந்தன. ஆகாயத் தாக்குதல்களினால் வானம் இடிந்து விழுந்து கொண்டிருந்தது. எறிகணைகள் நிலத்தைப் பிளந்து கொண்டிருந்தன.[/size]

[size=4]அது வாழ்வுக்கான கடைசி எத்தனத்திற்கும் ஆக்கிரமிப்பிற்கான கடைசி முயற்சிக்குமிடையில் தத்தளித்த நாட்கள். வெற்றிச் செய்திகளைத் தவிர வேறெதற்கும் அர்த்தமிருக்கவில்லை. வீரமரணம், மரணம், வாழ்வு, சுதந்திரம் என எதற்கும் பொருளற்ற நாட்கள். மரணம் மட்டுமே நிச்சயமானதாகவும், துலங்கலான அர்த்தமுடையதாகவுமிருந்தது.

சண்டை ஆரம்பித்த அன்றே ஆதவன் காயமடைய நேரிட்டது. அது சாதாரண காயமல்ல. அவரை முழுமையாக அது செயலிழக்கச் செய்தது. அவரது இரண்டு கால்களின் தொடை எலும்புகளும் உடைந்திருந்தன. யுத்தசேனையின் சிறகாகயிருந்தவர், தரைத் தொடர்புகளற்று மூடப்பட்ட நிலத்தில் சுமையானார்.[/size]

[size=4]பன்னிரு வெண்புரவி பூட்டிய ரதத்தில், மேகத்தில் உலா வந்த அவதார புருசன், மிகப்பெரிய படையணியை வைத்து வழிநடத்திய தளபதி, எண்ணற்ற உதவியாளர்கள், நிழலைப் பார்த்தே வானத்திலிருப்பதை சுடும் வல்லமை வாய்த்தவர்…. தன்னை நோக்கி வரும் எதிரியை நேராகச் சுடவும் முடியாதவராகச் செயலிழக்க வைத்து, காலம் அவரை மிக மோசமாக பழிவாங்கியது எதற்காக?

யுத்த களத்தில் தேர் புதைந்த கர்ணனாக மட்டுமல்ல, கட்டைவிரலை ஈர்ந்த ஏகலைவனாகவும் அவரானார். அதன் பின்னர், அவரை உதவியாளர்கள் பேணிப் பாதுகாக்கத் தொடங்கினார்கள். யுத்தத்தின் உக்கிரம் அதிகரிக்க அதிகரிக்க அவரது உதவியாளர்களும் ஒவ்வொருவராக இறந்து கொண்டிருந்தனர். இறுதியில் ஒரேயொரு உதவியாளர் மட்டுமே எஞ்சியிருந்தார்.[/size]

[size=4]சண்டையின் இரண்டாம் நாள்க் காலையில், அவரைத் தனது மடியில் கிடத்தி உதவியாளர் உணவூட்டிக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு திசையிலிருந்து எதேச்சையாக வந்த ரவையொன்று உதவியாளனது நெஞ்சை துளைத்துச் சென்றது. உணவூட்டியபடியே அவரின் மேல் விழுந்து இறந்தார்.[/size]

[size=4]புகழின் உச்சத்திலிருந்த காலத்தில் புலிகளின் பெரும் பகுதியினருக்குக் கட்டளையிடுபவராக இருந்தவரை, காலம் நியாயமற்ற முறையில் கைவிட்டது. அவர் வஞ்சிக்கப்பட்ட போர்வீரனொருவனைப் போலானார். காலமெழுதிய மோசமான கதையது.

அதன் பின்னர், தனது நண்பரான தீபனிடம் தன்னைக் கொண்டு சேர்ப்பிக்குமாறு அங்கிருந்தவர்களைக் கேட்டிருக்கிறார். அவர்களும் அதனை செய்திருந்தார்கள்.[/size]

[size=4]தொடர்ந்தும் ஆனந்தபுரத்தில் தரித்து நிற்கமுடியாதென்ற நிலை வந்ததும், அங்கிருந்தவர்கள் பின்வாங்க முடிவு செய்தனர். இராணுவம் அமைத்திருந்த மூன்று நிரை அரண்களை பல்வேறு பகுதிகளிலும் உடைத்துக் கொண்டு வெளியேற முயன்றனர். ஆதவனை வைத்திருந்த அணியினர் ஆனந்தபுரத்தின் கிழக்குப்புறமாக உடைத்துக் கொண்டு வருவதாக இருந்தது.

பெரும் படையணியாகச் சென்றவர்கள், அந்த சண்டையின் முடிவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோற்கடிக்கப்பட்டு உதிரிகளாக வந்து சேரத் தொடங்கினார்கள். யாரிடமும் சொல்வதற்குச் செய்திகளிருக்கவில்லை. ஆறுதல் சொல்வதற்கும் யாரிடமும் வார்த்தைகளிருக்கவில்லை. கிழக்குப் புறமான சண்டை வெற்றியளிக்கவேயில்லை. கிழக்குத் திசையுடைத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட யாருமே வந்து சேரவில்லை. அவர்கள் பற்றிய கதைகளும் வந்து சேரவில்லை.

வாழ்ந்த காலத்தில் பெரும்பகுதியில் என்ன செய்கிறார், எங்கிருக்கிறார் என்ற தகவல்கள் பிறரிற்குத் தெரியாமல் வாழ்ந்தவரின் மரணத்தின் தருவாயும் மிக இரகசியமாகவே அமைந்துவிட்டது.[/size]

யோ.கர்ணன்

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி இந்தக் கதை நேற்றே சாந்தி அக்கா கொண்டு வந்து இணைச்சாரே தெரியாதோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவனிக்கவில்லை நிருவாகம் நீக்கிவிடவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.