Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தள்ளாடும் கொடிமரங்கள் !!!!

Featured Replies

வன்னிச்சி அம்மன் கோவிலடியில் பஸ்சுக்காக காத்திருந்த குமார்,நேரத்தை பார்க்க முழுக்கை சேட்டின் முன்பக்கத்தை இழுத்த போது கையில்கட்டியிருந்த கறுத்த மணிக்கூட்டை பார்த்தான். மிகவும் பழுதாகி விட்டாலும் எதோ ஒரு ஈர்ப்பின் காரணத்தால் இன்னும் எறியாமல் வைத்திருப்பதை எண்ணி தனக்குள் மலர்ந்து உற்சாகமானவன், எப்படியும் இன்னும் ஒருபத்து நிமிடமாவது செல்லும் பஸ் வர, என முனுமுனுத்த படி சேட் பொக்கற்றை தட்டிப் பார்த்து ஒரு சீக்கரட்டை எடுத்து வாயில் வைத்தவன், திருப்ப எடுத்து பார்த்தான். இதையெலாம் பத்தி பழகவேண்டி வந்ததே என சலித்துக்கொண்டவன், கசக்கிபோடவும் முடியாமல் திருப்ப வாயில் வைத்து பத்தவும் முடியாமல் தடுமாறிய கணத்தில் இரைச்சல் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க முடக்கில் பஸ் வருவதைக்கண்டான்.சிவப்பு நிறத்தில் பெரிய மிருகமொன்று கத்திக்கொண்டுவருவதைபோல இருந்தது ஓடிய வேகத்தைவிட அது ஆடியவேகம் தான் அதிகமாக தெரிந்தது.அருகில் வர கையைகாட்டிவிட்டு சுற்றி அடித்த புழுதிக்குசற்றே ஒதுங்கிக்கொண்டவன் பஸ் நின்றதும் பின் பக்கத்தால் ஏறி சுற்றிப்பார்த்து கிடைத்ததொரு இருக்கையில் தன்னையறியாமலேயே இருந்துகொண்டான்.காத்திருந்தது போல அருகில் வந்த நடத்துனரிடம் காசை கொடுத்து பயணச்சீட்டை பெற்றவன் மிகுதிக்காக நடத்துனரைப்பார்த்தல் ஒருவாக்கு இப்படி பார்க்கிறாயே என்பதுபோல, அந்த மிகுதி ஒரு ரூபாயை எதோ அரியண்டத்தை தள்ளி விடுவதுபோல கொடுத்தார் பெற்றுக்கொண்டவன் அந்த ஒரு ரூபாயை பத்திரமாக பொக்கற்றில் வைத்துக்கொண்டான் அது அவனின் உழைப்பின் பெறுமதி என்பதாலும், மிக நீண்ட காலத்தின் பின் யாழ்ப்பாணம் செல்கின்றமையால் ஏற்பட்ட பதட்டத்தாலும், குமார் எதைப்பற்றியும் கவலைகொள்ளவில்லை.

மழைகால இரவுகளில் கேட்கும் பலவகை சத்தங்களை எழுப்பிக்கொண்டு பஸ் நகர ஆரம்பித்தது.வெளியாலை எட்டிப்பார்த்த குமார் இயல்பற்று தலையை திருப்பிக்குனிந்துகொண்டவன்,அப்படியே கையால் தலையை ஏந்திக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான்.திடிரென குளிர் காற்று தலைகோத நிமிர்ந்து பார்த்தவன் வல்லைவெளியின் ஆரம்பத்தில் பஸ் வந்திருப்பதனையும் அதன் விளைவே இந்த இதமான காற்று என உணர்ந்து கொண்டு முகத்தை யன்னல் ஓரமாக சாய்த்துக்கொண்டு வல்லைவெளியை அவதானிக்க தொடங்கினான். ஈச்சம் பற்றைகளும்,ஒரே வரிசையாக இருந்த தென்னை மரத்தின் அடிப்பாகங்களும்,வீதியோரநாயுருவிகளும், சற்றுத்தொலைவில் கண்டல் மரங்களும் அதன்கிளைகளில் இருக்கவென வந்து அச்சத்தால் வட்டமிடும் பெயர் தெரியாத பறவைகளும்,காற்று சுமந்து வந்த உவர்ப்பினால் கரிய பனைகள்ஆங்காங்கே இன்னும் கருமையடைந்தும்,ஒரு பெரிய ஆற்றிலிருந்து ஆங்காங்கே பிரியும் சிறு வாய்க்கால் போல ரோட்டிலிருந்து பல ஒற்றையடிப்பாதைகள் நீளுவதையும்,முடிவில் ஏதொரு சிதைவுக்கான அடையாளம் இருப்பதையும் பார்த்த குமார் தன்னையறியாமல் பெருமூச்சு விட்டான்.பழைய நேசவு ஆலையும் ஆஸ்பத்திரியும் என்று முன்பெல்லாம் யாழ்ப்பாணம் போகும் போது அவனின் தாயார் சுட்டிக்காட்டிய இடத்தை அவனையறியாமல் பார்த்தவன் தன் தற்போதைய நிலையையையும்,யாராவது தன்னையும் இப்படிதானே சுட்டிக்காட்டுவார்கள் என நினைந்து குமைந்து போனான்.

ஏன் இவர்கள் எல்லாம் இப்படி மாறிப்போனார்கள்.பாசமாய் இருப்பது போல,தங்களின் சொந்த பிள்ளையை விட உயர்வாய் கவனிப்பது போல,எத்தனைவேசமிட்டார்கள் பெரியவங்க தான் அப்படி சுயநலமாய் இருக்கிறாங்க என்றால் இந்த பொடியள் எப்படி மாறிப்போனார்கள்,கடவுளே இப்படியும் இருப்பார்களா?கேவலம் ஒரு மூன்று நான்கு வருசத்தில இப்படி எல்லாம் மாறி,எப்படி இவங்களால் இப்படி ஒரு மிருகத்தனமான உணர்வுடன் வாழமுடிகிறது.ஒருமுறை உள்ளுக்கை பெற்றோல் தட்டுப்பாடு. ஊர் பொடியனுக்கு போன் எடுத்து,தம்பி எனக்கு அவரசரமாய் பெற்றோல் தேவை, இடத்தை சொல்லி கொஞ்சம் கொண்டுவர முடியுமா, என்று கேட்டதுக்கே பத்து மோட்டர்சைக்கிளில் றாங் நிறைய கொண்டுவந்து கொடுத்தது மட்டுமில்லாமல் காசு கூட வேண்டாமல் போனவங்க, ஏதாவது அலுவலாய் வெளியாலை வந்து அப்படியே ஊருக்கும் போனா,என்ன மாதிரி கொண்டாடினார்கள்,அங்கை இங்கை என்று கூட்டம்,அமைப்பு,நூலகம் கோயில்,முன்பள்ளி பின்பள்ளி என்று எல்லாத்துக்கும் மாட்டன் மாட்டன் என்று சொல்ல சொல்ல விடாமல் கொண்டுபோய் இருத்தி செய்த உபசரிப்புகள் எல்லாம் மறந்து,இப்ப எப்படி கண்டும் காணாமல் ஒதுங்கி விலத்தி போகிறாங்க என்ன மனிசங்களோ இவங்க.எத்தனை அலுவல்களை முடிக்க நாடி வந்திருப்பார்கள் ,இப்ப தேடிப்போனாலும் காண முடிவதில்லையே அவர்களை.இப்படித்தான் ஒருமுறை எதோ பிரச்சனையில கொஞ்ச பொடியளை உள்ளுக்கை கூப்பிட்டு வேலி அடிக்க அனுப்பிட்டாங்க,ஊரில இருந்து வந்து என்ன மாதிரி கதைத்து சொந்தம் கொண்டாடி எடுத்துவிடச்சொல்லி கேட்டாங்க.எங்கையாவது எங்கட அலுவலுக்கு பயன்டுத்துவம் என்று சொல்லி கதைத்து பொடியளை எடுத்து அனுப்பிய சம்பவம் நினைவுக்கு வந்ததும் நல்லாத்தான் பயன்படுகிறாங்க என சிரித்துக்கொண்டவன்,தன் அன்றைய நிலையையும்,இன்று இப்படியெல்லாம் மாறிப்போன பின்னும் எதற்காக தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இந்த அவல வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பதையும் நினைத்த குமார் ஒரு பெரு மூச்சால் அவற்றையெல்லாம் வெளிக்கொட்டி தன்னை தேற்றிக்கொண்டான்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்ததால் கால விறைப்பது போல இருந்தமையால் சற்றே சரிந்து நிமிர்ந்தபோது தெரிந்த கோவிலின் முகப்பைக்கண்டதும் பஸ் நல்லூரடிக்கு வந்திருப்பதை குமாரால் உணரமுடிந்தது. நிறுத்தத்தில் பஸ் நின்றதும் தள்ளுப்பட்டு நிறையப்பேர் ஏறினார்கள். என்னடா இதுவென்று திரும்பிப்பார்த்த குமார்,அவர்களில் பலர் முஸ்லீம்கள் என்பதனை புரிந்துகொண்டான்.வெள்ளை சாரத்தை உயர்த்திக்கட்டியும்,தாடிவளர்த்து மீசையை ஓட்ட வெட்டியும்,உடனடியாக புரியாத சிங்களம் கலந்து தமிழை பேசிக்கொண்டிருந்த இருந்த அவர்களை பார்த்தபோது ஒரு கேள்வி எழுந்து விழுந்தது ஆற்றாமையுடன் வெளியே பார்த்தபோது சிதைக்கப்பட்ட நினைவுத்தூபியை சுற்றிலும் நடைபாதைக்கடைகள் பல திறக்கப்பட்டு அவற்றில் எதுவித உணர்ச்சிகளுமில்லாமல் சாமான்கள் வேண்டிச்செல்லும் மக்களை கண்டான்.சுயநினைவிழந்து இயலாமையுடன் கைகால் எல்லாம் சோர்ந்து போகும் ஒரு சிறுவனைப்போல தன்னை உணர்ந்துகொண்டவன் இதுக்காகவா,இப்படியான நிலைகளைகாண்பதற்காகவா,எல்லா உறவுகளையும் இழந்தும்,அவங்களிட்ட போய் அடிபட்டு,உள்ள கேவலங்களை அனுபவித்து வெளியாலை வந்தது.உள்ள இருக்கும் பொது கூட இன்னும் எங்களுக்காக எங்கமக்கள் இருகிறாங்க என்ற நினைப்பே தெம்பாயிருந்தது.ஆனால் இங்குள்ள நிலையை பார்க்கும் போது பேசாமல் அன்றே அடித்திருக்கலாம்.இந்த வேதனை வலி ஒன்றும்இருந்திருக்காது. புறக்கணிப்பு ஒருபக்கம் அவமதிப்பு ஒருபக்கம் எந்த தொழிலை தொடங்கினாலும் அதுக்கு ஆயிரம் விளக்கம் வியாக்கியானம் சொல்லணும்,இதைவிட இந்த ஆமியின் விசாரணைகள்,கண்காணிப்புக்கள். இருந்தாலும், ஆமிக்காரங்க பரவாயில்லை எங்கட சனத்தைவிட,ஏதாவது ஒரு சின்ன பிரச்சனை என்றவுடன் தங்களின் செல்வாக்குகளை பயன்படுத்தி எத்தனை ஆட்டம் ஆடுறாங்க?காட்டிக்கொடுப்புக்கள் கூட்டிக்கொடுப்புக்கள் என எல்லாம் செய்து தாங்கள் நின்மதியாய் இருந்தாக்காணும் என்றெல்லோ திரியுறாங்க? என்ன செய்வது எங்காவது ஓடி ஒளிந்திடால் நின்மதியாக இருக்கும்.

திடிரென அருகில் கேட்ட இருமல் ஒலியால் கவனம் கலைந்து நிமிர்ந்து பார்த்தவன்,வயதான ஐயா ஒருவர் நிற்கமாட்டாமல் தள்ளாடிக்கொண்டிருப்பதை கண்டான்.மிகுந்த குற்றவுணர்வுடன் எழுத்து ஐயா இருங்கோ என்றவன்அந்த முதியவரின் கையை பிடித்து இருக்க உதவி செய்தான். அந்த முதியவரின் கண்களில் இருந்து வந்த ஒருமிதமான அரவனைப்பு மிகுந்த பார்வையை தாங்க முடியாமல் சற்றே குனிந்தவன் நிமிர்ந்து முதியவரின் களங்கமற்ற முகத்தை உற்றுநோக்கினான். அவனையறியாமல் விழிகளில் ஒரு நீர் படலம் எழுந்து பார்வையை மங்கலாக்கியது.அந்த முதியவரின் தோளில் கைவைத்து ஒரு ஆறுதலை பெற்றுக்கொள்ள வேண்டும் போல மனம் துடித்தது இருந்தும் எதோ ஒரு உணர்வு தடுக்க தன்னை அடக்கிக்கொண்டவன் கையை இறுக்கி பிடித்துக்கொண்டான் பஸ்சின் மேல் கைபிடிக்கம்பியை.பஸ்ஸில் இருந்தவர்களின் பரபரப்பை பார்த்ததும் இன்னும் சில நிமிடத்தில் பஸ் யாழின் மத்திய தரிப்பிடத்தை அடைந்துவிடும் என உணர்ந்து கொண்டான்.தானும் இறங்குவதற்கு தயாராகவே உடம்பில் ஒரு புத்துணர்ச்சி பரவுவது போல உணர்ந்து கொண்டவன்,ஒருமுறை தன் கைகளை விரித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

பேருந்து நிலையத்தை ஒரு சுற்று சுற்றிவந்து ஐம்பத்தொன்று பஸ் தனக்கான தரிப்பிடத்தில் நின்றது.அந்தரப்பட்டு இறங்கிவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றவன் தனது சட்டை பொக்கற்றை தட்டிப்பார்த்தான்.ஒரு வித திருப்தியுடன் இறங்கினான்.நல்ல வெளிச்சமும்,மென்மையான காற்றும் குமாரை வரவேற்க,ஆழ்ந்து சுவாசித்தவன் சூழலை அவதானமாக எடை போட்டான்.பழைய கோலமும் இல்லாமல் சொல்லத்தக்க புதிய மாற்றங்களும் இல்லாமல் இருந்த பஸ் நிலையபகுதியையும் அருகிலிருந்த கடைகளையும் பார்த்துவிட்டு,யாழ் நகரின் மத்திய பகுதி பற்றி கற்பிக்க பட்டவைகளை நினைத்தான்.அழகான திட்டமிடலுடன் நாலு பிரதான வீதிகளை நாலு இடங்களில் குறிக்கிடும் மற்றைய நாலு பிரதான வீதிகளை அவற்றின் கிளைவீதிகளை,கடைகளை,அலுவலகங்களை என ஒவ்வொன்றையும் அக்குவேறாக கற்பித்து,பின் இதுபோன்ற ஒரு வசதியான நகரை இனி நிர்மானிப்பதென்பது சாத்தியமா என வினவியதும் நினைவில் வர,ஒருவித பெருமிதத்துடன் நடக்கதொடங்கினான் பெரியாஸ்பத்திரி நோக்கி

வைத்தியசாலையின் ஆரம்ப சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு அவனுக்கான சிறப்பு வைத்தியருக்காக காத்திருக்க தொடங்கினான். தொற்றுநீக்கிமருந்தும்,ஏனைய நோயாளர்களின் மருந்துகளும் சேர்ந்து ஒருவித வாசத்தை பரப்பிக்கொண்டிருக்க,அதை தாங்கமுடியாது பக்கத்திலிருப்பவர் சங்கடப்படுவதையும் அவதானித்த குமார் சிரித்துக்கொண்டான்.எதேட்சையாக பக்கத்தில் இருந்தவர் திரும்பிய போது குமாரின் காலை தட்டிவிட அம்மா என்று தன் காலைப்பிடித்தான் குமார்.பயந்துபதறி அருகிலிருந்தவர் எழுந்துவிடவும், அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் எல்லோரும் குமாரை கவனிக்கவும் சரியாய் இருந்தது.வலி மிகுதியால் கத்தி எல்லோர் கவனத்தையும் தன்மீது விழ பண்ணியதை நினைத்து வெதும்பிய குமார்.வலியை அடக்கிக்கொண்டு தட்டுப்பட்டதால் விலகி வலி உண்டாக்கிய பொய்காலின் நுனிப்பகுதியை திருப்பி பழைய நிலைக்கு கொண்டுவந்தான்.வலிகள் வேதனைகள் சந்தோசங்கள் என என்ன உணர்ச்சி என்றாலும் உடனடியாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும் குமார், காலைதட்டியதால் சங்கடத்துடன் எழுந்துநின்றவரை பார்த்து இயல்பாக புன்னகைத்தான் வேதனையை மறைத்துக்கொண்டு, இருக்கும்படி கையை காட்டிவிட்டு காலை கொஞ்சம் நகர்த்தி விட்டு திருபியவன் கண்ணில் கையில் ஒரு கிழிந்த துணிப்பையை வைத்திருந்து,ஒரு பெரியவரிடம் கையேந்தும் சிறுவனை கண்டான்.மனதுள் பொறியடித்தது போல அவனையறியாமல் சுடர்வேந்தன் என்று கூவினான்.

முகமாலையில் களப்பலியான ஒரு போராளியின் மகனான சுடர்வேந்தன், குமார் இருந்த வீட்டுக்கு முன்னால்தான் தாயுடன் வசித்துவந்திருந்தான். பிறந்ததுமுதல் அவனின் ஒவ்வொரு அசைவுகளையும் குமார் அறிந்திருந்தான்.இடம் மாற்றப்பட்டால் கூட வாரத்தில் ஒருநாள் இங்கே சுடரை பார்க்காமல் போனதில்லை குமார். குமாரின் மோட்டர் சைக்கிள் சத்தம் கேட்டால் போதும் ரோட்டுக்கு ஓடிவந்து தானும் வரப்போவதாக அழுவான்.அவனை எத்தி கொஞ்ச தூரம் சென்று திருப்பி வந்து இறக்கிவிடுவான் குமார்.என்ன அவசரமான அலுவல் என்றாலும் சுடர் கேட்டால் அவனை கொஞ்ச தூரம் கூட்டிப்போய் வர மறுப்பதில்லை. சிறுவயதில் ஆசைப்பட்டு கிடைக்காது போனால் மனதில் ஒரு வெறுப்பு உண்டாகிவிடும் என்பதாலும் தந்தைஇல்லாத குறை தெரியாதிருக்கவும் குமார் இவற்றை செய்வதை வழமையாக்கி இருந்தான்.

தன்னை அழைப்பதை கேட்டு திரும்பிய சுடர்வேந்தன்,ஒருகணம்தான் யோசித்தான்.எழில்மாமா என,கத்தியபடி ஓடிவந்து குமாரின் கழுத்தை கட்டிப்பிடித்தான்.சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தழுவலில் எல்லாம் கடந்தவைகள் எல்லாம் மறந்தான் எழில் என்று அழைக்கப்பட்ட குமார்.அனைத்து பிடித்தபடி ,சுடரிடம் பல கேளிவிகளை கேட்க தோன்றிய போதிலும்,முதலில் அம்மா எங்கை சுடர் என்று மட்டும் கேட்டான்.பெரும் குரலில் அழத்தொடங்கிய சுடர் ,சுட்டுப்போட்டாங்க மாமா நான் கண்டனான் சுடேக்கை என்று குமாரின் முகத்தை பார்த்து அழுதபடி கூறினான்.என்ன செய்வது என்றுதெரியாமல் சுடர்வேந்தனின் முதுகை தடவிக்கொடுத்தான் குமார்.மாமா என அழைத்த சுடர், குமாரின் முகத்தை தன்னை நோக்கி திருப்பி விட்டு கேட்டான்,மாமா நீங்க சொன்னனிங்க,யாராச்சும் எங்களை சுடவந்தா வச்சிருக்கிற துவக்காலை சுடுவம் என்று,ஏன் மாமா அம்மாவை சுட்டவங்களை நீங்க சுடவில்லை ..... .......இப்போது சுடர்வேந்தனை இறுக்கி அனைத்துக்கொண்டு பெரும் குரலில் அழத்தொடங்கினான் முன்னாள் போராளியான எழில் என்று அழைக்கப்பட்ட குமார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]பதிவுக்கு நன்றி [/size][size=1]

[size=5]உண்மைகள் சுடுகின்றன [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வலிக்க வைத்து விட்டது, உங்கள் கதை!

எமது, கையாலாகத் தன்மையையும் உணர வைக்கின்றது!

தொடர்ந்து எழுதுங்கள்!

தன்னை அழைப்பதை கேட்டு திரும்பிய சுடர்வேந்தன்,ஒருகணம்தான் யோசித்தான்.எழில்மாமா என,கத்தியபடி ஓடிவந்து குமாரின் கழுத்தை கட்டிப்பிடித்தான்.சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தழுவலில் எல்லாம் கடந்தவைகள் எல்லாம் மறந்தான் எழில் என்று அழைக்கப்பட்ட குமார்.அனைத்து பிடித்தபடி ,சுடரிடம் பல கேளிவிகளை கேட்க தோன்றிய போதிலும்,முதலில் அம்மா எங்கை சுடர் என்று மட்டும் கேட்டான்.பெரும் குரலில் அழத்தொடங்கிய சுடர் ,சுட்டுப்போட்டாங்க மாமா நான் கண்டனான் சுடேக்கை என்று குமாரின் முகத்தை பார்த்து அழுதபடி கூறினான்.என்ன செய்வது என்றுதெரியாமல் சுடர்வேந்தனின் முதுகை தடவிக்கொடுத்தான் குமார்.மாமா என அழைத்த சுடர், குமாரின் முகத்தை தன்னை நோக்கி திருப்பி விட்டு கேட்டான்,மாமா நீங்க சொன்னனிங்க,யாராச்சும் எங்களை சுடவந்தா வச்சிருக்கிற துவக்காலை சுடுவம் என்று,ஏன் மாமா அம்மாவை சுட்டவங்களை நீங்க சுடவில்லை ..... .......இப்போது சுடர்வேந்தனை இறுக்கி அனைத்துக்கொண்டு பெரும் குரலில் அழத்தொடங்கினான் முன்னாள் போராளியான எழில் என்று அழைக்கப்பட்ட குமார்.

[size=4]நேற்கொழு காலங்கள் பிந்தினாலும் நேராகத்தான் கொழுவியிருக்கிறியள் கதையை . அடிக்கடி வந்து கொழுவுங்கோ கதையை .[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.