Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணம் விளையாடிய முற்றம்

Featured Replies

[size=1]மரணம், [/size]இதோ இந்தக்கணத்திலும் என் மூக்கருகில் வந்து சீண்டி விளையாடிக்கொண்டிருக்கிறது. இப்போது இரவு ஒன்பது மணி. ‘மிக் 27’ விமானங்கள் பேரிரைச்சலோடு குண்டு வீச அலைகின்றன. காதைப்பிளக்கும் இரைச்சல். உயிரைக்கரைக்கும் இரைச்சல். எந்த வீட்டிலும் வெளிச்சம் இல்லை. எல்லா விளக்குகளும் அணைந்து விட்டன. எந்த வீட்டிலும் யாருமில்லை. எல்லோரும் பங்கருக்குள்.

குழந்தைகள் பயத்தில் அலறுகின்றன. எல்லோருக்கும் அழுகை வருகிறது. ஆனால் அழமுடியுமா. அழுதால் இந்தப் பயம் நீங்கி விடுமா? இந்த அபாயம் தொலையுமா?

பயம் என்பது குழந்தைகளுக்கு மட்டுமா? எல்லோருடைய கால்களும்தான் நடுங்குகின்றன. இதயத்தின் நரம்புகளில் மரண நடனம். பிரமாண்டமான பாம்பாக அலைகிறது மரணம். அது எங்கே கொத்தப்போகிறது? யாரைக்கொத்தப்போகிறது? யாருடைய தலையில்? யாருடைய கண்களில்… ? கடவுளே, கடவுளே …!

எல்லா வீடுகளிலும் விளக்குகளை அணைத்துவிட்டார்கள். வீட்டிலும் இருள். பங்கருக்குள்ளும் இருள். வெளியிலும் இருள். சனங்களின் வாழ்விலும் இருள். மனங்களிலும் இருள்….

இருளென்பது சூனியத்தின் வெளி.

இருளைக்கிழித்து இதோ பல்லாயிரம் ‘வோல்ட்டேஜ்’ ஒளிவீசும் படியாக வானத்தில் முப்பது வெளிச்சக்குண்டுகள். எங்கேயும் மறைய முடியாது. யாரும் ஒழிக்க முடியாது. அந்தளவுக்குப் பிரகாசமான வெளிச்சம். பகலைப்போல வெளிச்சம். குண்டுவீச்சு விமானங்கள் இலக்கைத்தேடுகின்றன.

எது இலக்கு? எதற்கு இலக்கு? கொல்வதற்கன்றி வேறெதற்கு? உண்மையில் அது இலக்கா, அப்படியென்றால் என்ன? தலைகள்தானே. சனங்களின் தலைகள். அல்லது போராளிகளின் தலைகள். அப்படியென்றால் அது கொலை. எப்படியோ அது அப்பட்டமான கொலை. அதில் எவெரென்றில்லை. யாராயினும் கொலை. ஒரு சிங்களக் கிராமத்தில் இப்படிக் குண்டை வீசுவார்களா? இதைப்போல, ஒரு தமிழ்க்கிராமத்தில் மாறியும் ஒரு தாக்குதலை இப்படி நடத்துவார்களா போராளிகள்?

சாவுதான் நிச்சயமானது என்று எல்லோருக்கும் புரிகிறது. ஒரு கணத்தில், ஒரே கணத்தில் அது எல்லோருக்கும் புரிகிறது.

விமானங்கள் இன்னும் குண்டுகளை வீசவில்லை. இதுதான் கொடுமையானது. குண்டுகள் வீசப்பட்டால் அதில் சிக்கிச் செத்துவிடலாம். சிக்கவில்லையென்றால் உயிர்தப்பலாம். அல்லது குண்டுகள் வீசப்படும் இடத்தை அறிந்தால் சற்றுப்பயம் குறைந்து விடும். இனி அந்த இடத்திலேயே மிகுதிக் குண்டுகளையும் வீசுவார்கள் என்று நம்பலாம். ஒரு இலக்கை முழுதாக அழிப்பதே இதன் நோக்கம். விதிவிலக்காக ஒரே சுற்றில் இரண்டு இடங்களில் குண்டு வீச்சு நிகழ்வதும் உண்டு. ஆனால், அதற்குச் சாத்தியங்கள் அரிது.

images+%2885%29.jpgஎனவே எங்காவது குண்டுகள் வீழத் தொடங்கி விட்டால், சற்று ஆறலாம். அதற்காக அந்த இடத்தில் உள்ளவர்கள் மாட்டுப்படட்டும். நாம் தப்பிவிடலாம் என்று அர்த்தமில்லை. உயிரச்சம் அந்தக்கணத்தில் எந்தத்தீர்மானங்களையும் அலசிக்கொண்டிருப்பதில்லை. எத்தகைய விவாதங்களுக்கும் அப்போது இடமில்லை.

விமானங்கள் சுற்றச்சுற்றப் பயம் கூடுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் விமானங்கள் சுற்றும்போது ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள் தங்களின் தலைக்குமேலேயே அந்த விமானங்கள் குண்டுகளைப் வீசப்போகின்றன என்று. அதனால் ஒவ்வொருவரும் பீதியுடனேயே அந்தக்கணத்தில் பங்கருக்குள்ளிருக்கிறார்கள்.

பங்கர் வாழ்க்கை என்பது நரக வாழ்க்கையே. அதிலும் குழந்தைகளுடன் பங்கருக்குள்ளிருப்பது என்றால், அதை விடக் கடினமாதும் கொடுமையானதும் வேறில்லை. புழுக்கத்திலும் இறுக்கத்திலும் குழந்தைகள் இருப்புக் கொள்ள முடியாமல் கத்துவார்கள். இதை எப்படியும் கட்டுப்படுத்த முடியாது. அவற்றுக்கு தலைக்கு மேலே உள்ள அபாயத்தைப் பற்றிப் புரியாது. அதற்காக வெளியே வரவும் முடியாது. பதுங்கு குழிக்குள்ளிருக்கும்போது வெளியே என்ன நிலவரம் என்று யாருக்கும் தெரிவதில்லை. எனவே எப்படி வெளியே வர முடியும்? உள்ளே கொந்தளிக்கும் குழந்தை எதையும் நிதானிக்க இடமளிக்காது.

கடவுளே, இந்த விதியை என்னவென்பது? நரகத்திலே உயிர்த்தஞ்சம் அடைந்திருக்கிற கொடுமை இது. இதைவிட வேறுவழியில்லை. உயிர் வேண்டுமா நரகத்துக்குப்போ. நரகமே இப்போது பாதுகாப்பிடம். அதுவே உன்னைப் பாதுகாக்க வல்லது. அதைவிட வேறு வழியில்லை.

வீட்டில் சாமி அறை இல்லாவிட்டாலும் கட்டாயம் பங்கர் இருக்கவேணும். சாமியறையை கூட்டித்துப்புரவாக்கலாம், விடலாம். அதனால் எந்தப்பாதிப்பும் யாருக்கும் ஏற்படாது. ஒரு மனத்திருப்திக்கு மேல் அதிகம் ஆகப்போவதில்லை எதுவும். ஆனால் கட்டாயம் பங்கரைத் தினமும் கூட்டிச் சுத்தகமாக வைத்திருக்கவேண்டும். அதற்கு விளக்கேற்ற வேணும். அதைக் கண்காணிக்க வேணும். இல்லையென்றால் அதற்குள் மரணம் வந்து புகுந்து விடும். சாவுக்கஞ்சிச் சரணடையுமிடத்திலேயே சாவு வந்து அழைத்துச் சென்று விடும்.

கவனக்குறைவான பங்கர்களில் பாம்போ, பூச்சியோ குடியேறிவிடுவதுண்டு. மரணத்துக்குத்தான் எத்தனை முகங்கள்? எத்தனை வேஷங்கள்? எத்தனை குணங்கள்? அது எத்தனை வடிவங்களில் சூழ்ந்திருக்கிறது? அதிலும் எம்மை ஏன் இப்படிச் சூழ்ந்திருக்கின்றது?

எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது மரணந்தானா? மற்றதெல்லாம் அந்த நிரந்தரத்திற்கிடைப்பட்ட தற்காலிக நிகழ்ச்சிகளா?

விமானங்கள் குண்டுகளுடன் அலையும்போது அவற்றுக்கு அஞ்சிப் பங்கருக்குள் பாதுகாப்பு தேடி நுழைந்தவர்களை பாம்புகள் தீண்டியிருக்கின்றன. தீண்டிக் கொன்றிருக்கின்றன. பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை என்பார்களே! அதேமாதிரித்தான் இது.

mic22.jpgவெளிச்சக்குண்டுகள் இன்னும் எரிகின்றன. இரவைப்பகலாக்கும் என்பார்களே. அப்படி எரிகின்றன. திருவிழாவில் இப்படி ஒரு வெளிச்சப்பந்து என்றால் எத்தனை ஆனந்தமாக இருக்கும்! இங்கே இப்போது முப்பது குண்டுகள் வானத்தில் எரிகின்றன. இதோ வானம் எரிகிறது. இனிக் கீழே பூமியும் எரியப்போகிறது. இதைத்தான் "முகில்களின்மீது நெருப்பு தன் சேதியை எழுதியாயிற்று "என்று எழுதினாரா சேரன்?

முப்பது எரிகுண்டுகள் இந்த இரவில் - இருளில் - வானத்தில் எரியும்போது எப்படி இருக்கும்? அதை வேடிக்கை பார்கக்கக்கூடியமாதிரியா இப்போது நிலைமை இருக்கிறது?

வீடுகளில் வெளிச்சமில்லை. ஊர்களில் வெளிச்சமில்லை. ஆட்கள் பதுங்கியிருக்கிற பங்கருக்குள் வெளிச்சமில்லை. அடுத்து வரும் கணம் எப்படி இருக்குமென்பதற்கு வெளிச்சமில்லை. ஆனால் வானம் பற்றி எரிகிறது. வானம் மட்டுமா பற்றி எரியுது. எங்கள் வயிறும் தான் பற்றி எரியுது. கடவுளே, கடவுளே …

இது உயிரைத்தின்கிற வெளிச்சம். உயிரைத்தேடியலைகிற வெளிச்சம். வெளிச்சப் பாம்புகள். மரணத்திற்கு இப்படியுமொரு நிறமா? இப்படியொரு வடிவமா? 'தலையை உள்ளுக்குள்ளே அமத்துங்கள்’ என்று ஒரு தாய் தன்னுடைய பிள்ளைகளை அதட்டுகிறாள். அது உண்மையில் அதட்டல் அல்ல. மன்றாட்டம். எச்சரிக்கை. கட்டளை. வேண்டுதல். அறிவுறுத்தல்.

அப்படி ஒருதாய் மட்டும்தானா பிள்ளைகளை அதட்டினாள்? அறிவுறுத்தினாள்? மன்றாடினாள்? எச்சரித்தாள்? கட்டளையிட்டாள்?

பங்கருக்குள்ளிருந்த அத்தனை தாய்மாரும் தங்களின் பிள்ளைகளின் உயிருக்காக அப்படித்தான் வருந்தினார்கள், மன்றாடினார்கள், வேண்டினார்கள்.

வெளிச்சத்தைக்கண்டே பயப்படுகிற வாழ்க்கை இது. வெளிச்சமில்லாமலே பங்;கருக்குள் அடைபட்டிருக்கிற வாழ்க்கையும் இதுதான். முன்பும் இப்படி வெளிச்சத்தைப்போட்டு யாரையோவெல்லாம் தேடினார்கள். எதையோவெல்லாம் தேடித்திரிந்தார்கள்.

வயிற்றில் ‘லைற்‘றைப் பொருத்திய ‘ஹெலிகொப்ரர்‘கள் அப்போது இரவிரவாக இப்படித்தான் தேடின. போதாக்குறைக்கு அவை தாக்குதலையும் நடத்தின. அது யுத்தம் தொடங்கிய காலத்தில்.

அது பங்கர் பெரிதும் அறிமுகமாகியிராத காலம். மரங்களுக்குக் கீழேயும் பாலங்களுக்கு அடியிலும் மலசல கூடத்திலும் அவரவர் பாதுகாப்புத் தேடினர்.

நீங்கள் நம்பமாட்டீர்கள். ஆனால் இது உண்மை. பலர் மேசைக்குக் கீழே கூட பாதுகாப்புத் தேடினார்கள். விமானத்தாக்குதலையோ ‘ஹெலிகொப்ர‘ரின் தாக்குதலையோ தாக்குப்பிடிக்கக்கூடிய அளவுக்கு எந்த மேசைக்கும் திராணியில்லை. ஆனால் அவர்கள் வேறு வழியில்லாமல் பயத்தில் ஒரு மன ஆத்திக்காக மேசைகளின் கீழே பதுங்கினார்கள். ‘ஹெலிகொப்ரர்‘ அடித்துக் கொண்டு வரம்போது ஒரு மூதாட்டி கையில் வைத்திருந்த கடகத்தைத் தூக்கித் தலைக்குக் கவசமாகப் பிடித்ததை நான் கண்டேன். ‘பங்கரே‘ சில வேளைகளில் பாதுகாப்பில்லாமிலிருக்கும்போது இந்தக் கடகம் மட்டும் பாதுகாப்பைக் கொடுக்குமா?

அதைப்பார்த்த எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. ஆனால் அந்தச்சிரிப்பை விடவும் அந்த மனுசி அப்போது அந்தரப்பட்டதும் உயிர்ப்பயத்தில் அவ அப்படி கடகத்தைத் தலையில் கவிழ்த்ததும் பெரிய பரிதாபம்.

எப்படியெல்லாம் இந்தச்சனங்களைப்போட்டு அலைக்கிறார்கள்? எத்தனை வருசமாக இந்தச் சனங்கள் இப்படித் துன்பப்பட்டுக் கொண்டேயிருப்பது?

இதெல்லாம் பாதுகாப்பில்லை என்று அவர்களுக்கு அப்போது தெரியாது. ஆனாலும் அவர்கள் தங்களுக்குத் தெரிந்த அளவில் அப்படிச் செய்தார்கள. தாங்கள் உணர்ந்த விதத்தில் அதுதான் அவர்களுடைய பாதுகாப்பு ஏற்பாடு.

அப்போது ஆட்சியில் ஜே.ஆர் இருந்தார். பகலில் தேடிக்காணமுடியாததையெல்லாம் அவர் தன்னுடைய படை ஆட்களைக்கொண்டு இரவிரவாகத்தேடினார். வெளிச்சம் போட்டுத் தேடினார். கவசவானங்களிலும் ‘ஆமட் ட்றக்’ குகளிலும் ‘லைற்’றைப் பொருத்திக் கொண்டு ஒழுங்கை தெருவெல்லாம் ஆமிக்காரர் தேடினார்கள். யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் வன்னியிலும் தமிழ்ப்பெடியளை இப்படித் தேடினார்கள். ஹெலிகளும் தேடின. இரவிரவாகத் தேடியும் எதனையும் அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

அவர் பகலிலேயே கடைசி வரையில் பார்வை தெரியாதவராகவே இருந்தவர். பிறகெப்படி இரவில் எதையும் அவரால் காணமுடியும்? அதனால்தான் கடைசிவரையும் இனப்பிரச்சனையை அவரால் காணமுடியவில்லை. அதனால் அதை அவரால் தீர்க்கவும் முடியவில்லை.

‘தமிழருக்கு இந்த நாட்டில் என்ன பிரச்சினை இருக்கு?’ என்று கேட்டவரல்லவா அவர்.

அவரைப்போலவே இப்போது ஆட்சியிலிருக்கிறவர்களும் வெளிச்;சம் போட்டுத்தேடுகிறார்கள். பலியெடுக்கக்கூடிய தலைகள் தெரிகிறதா என்று பார்க்கிறார்கள்.

இது யுத்தம் உக்கிரமடைந்த காலத்துச் சங்கதி.

சிறிலங்காவில் யார்தான் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்ப்பெருங்குடிகள் இப்படித்தான் வதங்க வேண்டியிருக்கிறது. பண்டாரநாயக்கா காலம் தொட்டு இப்ப மகிந்த ராஜபக்ஸ வரையில் இதுதான் நிலைமை. வரவர இன்னும் இந்தத் துன்பக்கதை கூடுதே தவிர கொஞ்சமும் குறைவதாகவில்லை.

இதோ குண்டுகள் வீழ்ந்து வெடிக்கின்றன. எங்கே, எங்கே … எந்தத்திக்கில் குண்டுகள் போடப்பட்டிருக்கும் என்று தெரியவில்லை. பூமி பிளக்கின்றதைப்போல பேரதிர்வு.

என்ன செய்கிறார்கள்? இப்படியெல்லாம் இந்த இரவில்வந்து வெறித்தனமாக கொலைத்தாண்டவம் புரிய யார் அனுமதித்தது இந்த மடையர்களை?

ஆறு குண்டுகளா? இதோடு முடிந்ததா? இல்லை இன்னும் இருக்கிறதா, உயிரைத்தேடும் வெறிப்படலம்? இரவிரவாக தூக்கமில்லாமல் இப்படியே பங்கருக்குள்தானிருப்பதா? இதென்ன கொடுமை?

குழந்தைகள் அழுகின்றன. வீரிட்டுக்கத்துகின்றன. எங்கே அந்தக்குண்டுகள் வீழ்ந்திருக்கும்? அங்கே என்ன நிலைமையோ? யார் காயப்பட்டார்களோ? யார் செத்தார்களோ? குழந்தைகளா? பெண்களா? அல்லது முதியோரா? … கடவுளே கடவுளே …!

அம்மாவும் பங்கருக்குள் இருக்க முடியாமல் அவதிப்பட்டா. அதற்காக வெளியில் வந்து ஆபத்தில் மாட்ட முடியுமா? அவ முட்;டுக்காரி. தூசியோ வெக்கையோ ஆகாது. அதற்காக இப்பொழுது என்ன செய்ய முடியும்? கண்முன்னே பெத்த தாய் படும் பாட்டைச் சகிக்க முடியவில்லை. ஆனால் எதுவும் செய்வதற்கில்லை.

அழும் குழந்தைகளை எப்படி ஆறுதற் படுத்துவது.

எனக்கெதுவும் தெரியவில்லை. இத்தோடு முடிந்ததா துயர்ப்படலம்?

ஒரு ‘மிக்’ விமானம் இரையும்போது உங்களின் அடிவயிறு தானாகக் கலங்கும். இதயமும் ஈரலும் கரைந்து இடந்தெரியாமலே போய்விடும். அடி வயிற்றில் ஆயிரங் கத்திகள் குத்துவதாக உணர்வீர்கள். அப்படியிருக்கும், அந்த இரைச்சலும் அதின்ர வேகமும். குண்டு வீசாமலே அதின்ர சத்தத்தால் பலரைக் கொன்று விடலாம். நான் செத்துப் பிழைக்கிறேன். பிழைத்துப் பிழைத்துச் சாகிறேன். எத்தனை தடவைதான் இப்படிச் சாவது, ஒவ்வொருவரும்? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிசமும்?

2007 இல் எழுதிய பதிவு

http://pulvelii.blogspot.sg/2012/07/blog-post_20.html

  • கருத்துக்கள உறவுகள்

அமைதிப்பேச்சு ஒருபக்கம் ஆயுத விற்பனை மறுபக்கம் எனச் சர்வதேசம்

தமிழரின் தலையில் எத்தனை குண்டுகளை அள்ளி வீச உதவியிருக்கின்றது.

பகிர்விற்கு நன்றி அபராஜிதன்

நன்றி அபராஜிதன்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், அபராஜிதன்!

  • தொடங்கியவர்

அமைதிப்பேச்சு ஒருபக்கம் ஆயுத விற்பனை மறுபக்கம் எனச் சர்வதேசம்

தமிழரின் தலையில் எத்தனை குண்டுகளை அள்ளி வீச உதவியிருக்கின்றது.

பகிர்விற்கு நன்றி அபராஜிதன்

நன்றி அபராஜிதன்.

இணைப்புக்கு நன்றிகள், அபராஜிதன்!

வருகைக்கும் கருத்துகளிற்கும் நன்றிகள்.....

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.