Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர் திரும்புதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் திரும்புதல்

OORTHIRUMBUTHAL-1024x244.jpg

கிராமம் அசாத்திய அமைதியில் இருந்தது. பறவைகளின் சத்தம் மாத்திரம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தன. சூரியக்கற்றைகள் ஏற்கனவே படரத் தொடங்கிவிட்டன.

“தம்பி குகன்… வீடியோக்கமராவிலை நேரத்தையும் திகதியையும் செற் பண்ணும். கணேஷ் அவுஸ்திரேலியாவிற்கு போகேக்கை வீடியோக்கொப்பி கொண்டு போக வேணும்” மோட்டார் சைக்கிளை உருட்டியவாறே பாலன்மாமா தன்னுடன் வந்த குகனுக்குச் சொன்னார். பாலன்மாமா – திருவள்ளுவர் தாடி ; இழுத்து இழுத்து நடக்கும் விசிறினால்போன்ற நடை. பார்ப்பதற்கு வினோதமாக இருப்பார். குகனை எனக்கு முன்னாளில் அறிமுகமில்லை. உமாசுதன், நான் புலம்பெயர்ந்து 16 வருடங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களில் மிகவும் வேண்டப்பட்டவன்.

நேரம் : காலை 9.20, திகதி : 25.05.2011

நாங்கள் நாலுபேரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தோம். டச்சு றோட்டில் இருந்த உருப்படியான ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் மோட்டார் சைக்கிளை வைத்துப் பூட்டிவிட்டு நடக்கத் தொடங்கினோம். இரண்டு பெரிய தண்ணீர்ப் போத்தல்கள், இரண்டு லீட்டர் கோக் போத்தல்கள் இரண்டு மற்றும் நான்கு பேருக்குமான மதியச்சாப்பாடு, கத்திகள் பொல்லுகள் சகிதம் எங்கள் பிரயாணம் ஆரம்பமானது. ஏதோ அமேசன் நதிக்கரைக் காட்டுக்குள் நுழைகின்ற பிரயாணம் போல, 21 வருடங்களுக்குப் பிறகு நாங்கள் பிறந்து வளர்ந்த கிராமத்திற்குப் போகும் பயணம். கிராமம் இத்தனை வருடங்கள் உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து, தற்போது மீளக்குடியேற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

“ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்… இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்…” வீடியோக்கமராவை ஆட்டிக் கொண்டே குகன் பாடத் தொடங்கினான்.

எந்தப்பக்கமிருந்து பார்த்தாலும் கிராமம் காடாகத்தான் தெரிந்தது. இன்று வீடுகள் இல்லாமல் மூளியாக இருக்கும் இந்தக் கிராமத்துக்குப் போகும் பாதைக்கு, முன்னொரு காலத்தில் ‘பொன்னு – சீமா’ ஒழுங்கை என்று பேர் இருந்தது. கார் ஓடிய வீதிகள் எல்லாம் மரம் முளைத்துவிட்டன.

“பாக்கியக்காவின் கிணறு இது” பெரிதாகச் சத்தமிட்டு, ஒரு பாழும் கிணற்றை சுட்டிக்காட்டி, வீடியோவிற்கு தன்னுடைய முகத்தைக் காட்டினார் பாலன்மாமா.

“கிணத்துக்குள்ளை மரம் முளைச்சிருக்கு” அவருடன் ஒட்டிக் கொண்டு நின்ற குகன் பிற்பாட்டுப் பாடினான்.

“மயிலப்பை அன்ரியின்ரை வீடு இது. இதுக்கு அங்காலை போகேலாமல் கிடக்கு. பாதை புளொக்.”

“வீடு… வீடெண்டு சொல்லுறியள் அண்ணை…. என்னத்தை வைச்சுக் கொண்டு சொல்லுறியள்?”

“குகன்… ஒரு குத்துமதிப்பிலைதான் இஞ்சை சொல்ல வேண்டி இருக்கு.”

சில இடங்களில் பற்றைகளை வெட்டிக்கொண்டு முன்னேறவேண்டியிருந்தது. தண்டவாளமும் சிலுப்பைக்கட்டையும் இல்லாமல், ஒருகாலத்தில் புகையிரதம் சடசடத்து ஓடிய பாதை பெயரளவில் தொங்கிக் கொண்டிருந்தது.

“சுதன் அண்ணை, உங்களுக்கு ஆரேனும் ஒஸ்ரேலியாவிலை இருக்கினமோ? இந்த போர்ட்டுக்குப் பக்கத்திலை றெயினின்ரை வரவுக்காகாக் காத்து நிக்கிறமாதிரி நிண்டு ஒரு போஸ் குடுங்கோ… என்னண்ணை சிரியுங்கோ! சிரி… சிரி… சிரி… சிரி…” குகன் சுதனை வீடியோப் படம் பிடித்தான். முதலில் சிரிப்பது போல நின்ற சுதன் பின்னர் அழத் தொடங்கினான். அவனால் சிரிப்பது போலப் பாவனை செய்ய முடியவில்லை. அவன் கன்னங்களில் கண்ணீர் வடிந்தது.

“உந்த விளையாட்டுகளை விட்டிட்டு கெதியிலை நடவுங்கோ” பாலன்மாமா சூழ்நிலையைத் திசை திருப்பினார்.

மரங்கள்கூட ஒரு நேர்த்தியாக இல்லை. சில்லம்பல்லமாக சொத்தியும் வளைவும் நெளிவுமாக தமிழன்ரை வாழ்க்கைபோல இருந்தன. அவற்றை வெட்டிதள்ளிவிட்டுத்தான் நகர வேண்டியிருந்தது.

‘வீமன்காமம் இளைஞர் சங்கம் – 1944′ முகப்பு மாத்திரம் நிமிர்ந்து நிற்கின்றது.

“அண்ணை! பாலன் அண்ணை!! இதை ஒருக்கால் பாருங்கோ… இந்த வீடென்ன கட்டி முடிக்கப்படாமல் குறையாகக் கிடந்ததோ? கதவுகள் நிலையள் ஒண்டையும் காணேல்லை!” குகன் கேட்க,

“எனக்கு வாற கோபத்துக்கு…. என்ன பாத்துக்கொண்டு இவ்வளவு நேரமும் வாறாய்? எந்த வீட்டுக்கு கதவும் நிலையும் கிடக்கு? எல்லாத்தையும் கொத்திக் கொண்டு போட்டாங்கள்” என்றார் பாலன்மாமா.

“கிச்சன், அற்றாச் பாத்றூம், கொமேட்…. அந்தக்காலத்திலைகூட அற்றாச் பாத்றூமும் கொமேட்டும் இருந்திருக்கு….” – குகன்.

“அந்தக்காலமாம்…. ஏதோ நூற்றாண்டு காலம் போனது போல” – பாலன்மாமா.

“லிங்கமாமாவின்ரை வீடு. லிங்கம்… கனடா” உரத்துச் சொன்னார் பாலன்மாமா. சுதன் இன்னமும் மௌனமாக கவலையுடன் வந்தான். பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடுகள் எல்லாம் பாளமாக வெடித்துக் கிடக்க, வீட்டுக்குள்ளிருந்து முளைத்த மரங்கள் வெளிச்சத்தைத் தேடி ஜன்னல்களுக்குள்ளால் புகுந்து வெளியே வானத்தை நோக்கின. கூரையில்லாத வீட்டுக்குள் முளைத்திருந்த மரங்கள் வளைவதற்கு அவசியமில்லாமல் நேரே கம்பீரமாக நின்றன.

“இது நடராசா வீட்டை போற பாதை, இது நேசராசா வீட்டை போற பாதை. எல்லாம் புளொக். போக முடியாது” – இப்படிப்பட்ட உரையாடலைத்தான் வீடியோக்கமரா கூடுதலாக உள்வாங்கியது. குயில் விட்டு விட்டுக் கூவுகின்றது.

“டொக்ரரின்ரை வீடு. வீட்டுக்குள்ளை பங்கர் வெட்டியிருக்கு.” பங்கருக்குள் மூன்று நான்கு பன்றியள் படுத்திருந்தன.

“இப்ப குட்டிப்பனைக்கை நிக்கிறோம். ஒண்டுமே தெரியாமல் கிடக்கு! காம் அடிச்சு இருக்கிறம்.”

“கணேஷ் – ஞானா ஹவுஸ். அவுஸ்திரேலியா”

“பாலன்மாமா… திரும்பி இதாலை வருவோம்தானே! அப்ப என்ரை வீட்டை வடிவா வீடியோ எடுக்கவேணும். கொஞ்ச நேரம் வீட்டிலை இருந்துவிட்டும் போகவேணும்.”

“ஞானாவும் உன்ரை பிள்ளையும் இந்த வீட்டைப் பாத்தா இக்கணம் கவலைப்படப் போயினம்” பாலன்மாமா சொன்னார்.

அடுத்த வளவுக்குள் ஆளளவு உயரத்திற்கு பாம்புப்புற்றுகள் அடுக்கடுக்காக இருந்தன. நன்றாக நினைவிருக்கிறது. முப்பது வருஷங்களுக்கு முந்தி அந்தக்காணி வெறிச்சோடிப்போய் மாமரங்களும் பற்றைகளுமாகவிருந்தது. அப்பவும் இதே இடத்திலைதான் பாம்புப்புற்றுகள் இருந்தன. ஒருவருக்கும் அதற்குள் போவதற்குப் பயம். பிறகு பாலசுந்தரம்மாமாதான் அந்தக்காணியை சிற்பி செதுக்குவது போலச் செதுக்கி அழகாக்கினார். பாம்புகள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டன. அப்ப எங்கள் வீடுகூட கட்டப்பட்டிருக்கவில்லை. நாங்கள் அக்கா வீட்டிலை இருந்தனாங்கள். 83இலைதான் எங்கள் வீடு கட்டப்பட்டது. அதே இடத்தில்… 21 வருஷங்கள் கழித்து மீண்டும் பாம்புப்புற்றுகள். இது எப்படி? அன்று பாலசுந்தரம்மாமா பாம்புகளின் வாழ்விடங்களை அழித்து அவற்றைக் கலைத்துவிட்டாரோ? புற்றுகளுக்குப் பக்கத்தில் ‘ஷெல்’ ஒன்று விழுந்து வெடித்து பெரியதொரு பள்ளம் இருந்தது.

“ரவியின்ரை வீடு தரைமட்டம்…. தரைமட்டம்….”

“தயானி வேர்க் ஷொப்”

கிழடு தட்டிய மாடு ஒன்று மரநிழலில் படுத்திருந்து அசை போட்டுக் கொண்டிருந்தது.. “இது எங்களின்ரை மாடாத்தான் இருக்க வேணும். ஓடிப்போகேக்கை விட்டிட்டுப் போனனாங்கள்” என்றார் பாலன்மாமா.

“21 வருஷமா உங்களையே பாத்துக் கொண்டு சாகப்போற நேரத்திலை படுத்திருக்கு” என்றான் விஷமத்தனமாக குகன்.

“அண்ணை… எங்களுக்கு முதல் ஆரோ வந்து போயிருக்கினம் போல கிடக்கு!

எட எங்கை உந்தாள் போட்டுது… ஆளைக் காணேல்லை?” கணேஷ் சொன்னான்.

“பாலன் அண்ணை தன்ரை முந்தின காதலி ஞாபகம் வர அந்தப்பக்கம் காலை வைச்சிட்டார். உங்கைபார் செருப்புக்கூட நழுவி விழுந்தது தெரியாமல் நடக்கிறார்” குகன் சொன்னான். நிலத்திலே குந்தியிருந்து எதையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் பாலன்மாமா. நிலம் ஈரமாகி இருந்தது.

‘மாடு மூத்திரம் பெய்திருக்கு” நிமிர்ந்து எங்களைப் பார்த்துச் சொன்னார். அவர் முகத்திலிருந்து வியர்வை வடிகிறது.

“எட கணேஷ்…. உன்ரை பால்ய சினேகிதி இருந்த இடம்” சுதன் எனது காதிற்குள் கிசுகிசுத்தான்.

“இப்ப ஏன் பழசுகள் எல்லாத்தையும் கிளறுகிறாய்!”

சிவரஞ்சனி – ஒருகாலத்தின் உயிர். இந்த 21 வருசத்திலை சிவரஞ்சனி எங்கை இருக்கிறாள் என்றோ அவளுடன் கதைக்கவேண்டுமென்றோ நினைப்பே வரவில்லையே! அந்தக்கலியாணம் குழம்பிப்போனதற்கு சரியான காரணம் எதுவும் சொல்லமுடியாது. வேண்டுமென்றால் இடப்பெயர்வையும் புலப்பெயர்வையும் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். 21 வருஷமென்பது சராசரி மனித ஆயுள்காலத்தின் மூன்றில் ஒரு பகுதியல்லவா? ஞானா எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்துவிட்டாளே!! சிவரஞ்சனியின் கணவன் யோகன் ‘ஷெல்’ அடிபட்டு கோமாவிலை இருக்கின்றான் என்றும், சிவரஞ்சனி முகம் எல்லாம் சுருங்கி ஒரு கிழவி போல வந்திட்டாள் என்றும் இடையிலை ஆரோ சொன்னதாக ஞாபகம்.

“கத்திக் கத்தி இல்லாத வீடுகளின்ரை பேரைச் சொல்லி, இப்ப சத்தமும் வருகுதில்லை” குகன் சொல்ல பாலாமாவின் முகத்திலிருந்து வெளிறிய சிரிப்பு வந்தது.

“சுதன்ரை அக்கா வீடு. அக்கா ஒஸ்ரேலியா! குகன்… வீட்டை வடிவாச் சுழட்டி எடு. சுதனுக்கு சேரப்போகிற சொத்து இது.”

“சுதன்… இந்த வீடு உமக்குத்தானே?” நான் கேட்க,

“முந்தி உயர் பாதுகாப்பு வலயமாக இருக்கேக்கை இது என்ரை வீடு எண்டு நொடிக்கொருதடவை அக்கா சொன்னவா. இப்ப மீள்குடியேற்றம் தொடங்கினபிறகு ‘தன்ரை வீடு எப்பிடி இருக்குத் தம்பி. போய்ப் பாத்தனியோ’ எண்டு கதை விடுறா” என்றான் சுதன்.

“வீரபத்திரர் கோயிலடிக்கு வந்திட்டம். அரோகரா… வீரபத்திரப்பெருமானுக்கு அரோகரா…. என்னுடைய கிறாண்ட் •பாதர் முத்தையற்றை அப்பா வல்லிபுரத்தாரின்ரை கோயில்” பாலன்மாமா சொல்ல அதை உள்வாங்கி வீடியோவிற்கு திரும்பக் கத்திச் சொன்னான் குகன்.

“உதுகளைவிட்டிட்டு சும்மா கோயில் எண்டு சொல்லு!”

நரசிம்மர் படம் சுவரிலே தொங்குகின்றது. மூன்று சூலங்கள் உள்ளே கன்னங்கரிய நிறத்தில் தெரிகின்றன. கர்ப்பக்கிரகத்திலிருந்த விக்கிரகங்களையும் கோவில் மணியையும் காணவில்லை. மணிக்கோபுரத்தின் அடியில் ஷெல் அடிபட்டுக் காயம் இருந்தது. கோயில் கிணறு புத்தம்புதிதாக இருந்தது. ஆமிக்காரர்கள் பாவித்திருக்க வேண்டும்.

“அண்ணை கோயிலடியிலை கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போவம். மனம் கொஞ்சம் சாந்தியா இருக்கும்” சுதன் சொன்னான்.

“எடுத்த வீடியோவை ஒருக்காப் போட்டுப்பார் குகன். படம் எல்லாம் வந்திருக்கோ எண்டு!”

“ஓமண்ணை… நிலம் முழுக்க இருந்த சருகுச் சத்தம்கூட வந்திருக்கு”

கம்பீரமாக இன்னமும் நிற்கும் அரசமரத்து வேரில் அமர்ந்தேன். பக்கத்தில் பாலன்மாமா சப்பணம் போட்டு அமர்ந்தார். திடீரென்று காற்றில் மேளச்சத்தம் கேட்கிறது. மணியோசையும் சங்கின் நாதமும் இரண்டறக் கலக்கின்றன. கடைசியாக நடந்த வைகாசி மடை நினைவுக்கு வருகின்றது.

மடை நடந்து சில தினங்களில் கிராமத்தை விட்டு எல்லோரும் ஓட வேண்டி ஏற்பட்டது. ஊரோடு சம்பந்தப்பட்டு கடைசியாக நடந்த பெரிய நிகழ்வு அதுதான். பலாலியைச் சுற்றிய பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக – கிராமங்கள் எல்லாம் சூனியமாகின. ஓட்டம்… இடப்பெயர்வு… புலப்பெயர்வு என்று காலம் விரைந்தது.

“சரி எழும்புவம். நேரம் போகுது. கனேஷின்ரை வீட்டடியிலும் கொஞ்ச நேரம் இருக்க வேணும்” பாலன்மாமா அவசரப்படுத்தினார்.

“இது தச்சபகுதி ஆக்கள் இருந்த இடம். துப்பரவுக்கும் போகேலாமல் இருக்கு.” இலந்தை மரங்களும் விளாமரங்களும் அங்கே நிறைந்திருந்தன.

திடீரென்று அந்தச் சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தாத ஒரு வாகனத்தின் சத்தம் கேட்டது. தொடர்ந்து போகமுடியாதவாறு பாதை பெரியதொரு அணை போட்டுத் தடுக்கப்பட்டிருந்தது.

“அங்காலை ஆமி நிக்குது. மீள்குடியேற்றம் செய்ய இன்னும் அனுமதி கொடுக்கேல்லை. திரும்புவோம்.”

திரும்ப எனது வீட்டை நோக்கி நடந்தோம். வீட்டிற்கு முன்னாலுள்ள மரநிழலில் அமர்ந்து, கொண்டுவந்த உணவை சாப்பிடத் தொடங்கினோம். சாப்பிட்டபின் பாலன்மாமா குட்டித்தூக்கம் போட்டார். நான் குகனிடம் வீடியோக்கமராவை வாங்கி எனது வீட்டைச் சுற்றி படம் எடுக்கத் தொடங்கினேன். வீட்டின் ஒரு அறை மாத்திரம் சேதமடையாமல் இருந்தது. அந்த அறையின் ஜன்னல் திறந்திருந்தது. துருப்பிடித்துப் போன ஜன்னல் கம்பிகளினூடாக உள்ளே எட்டிப் பார்த்தேன். தூசி படிந்த சில பொருட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடந்தன. அவற்றினுள் ஒரு பார்சல் பேப்பரினால் சுற்றப்பட்டு இருந்ததைக் கண்டேன். சமீபத்தில்தான் யாரோ அதை எறிந்திருக்க வேண்டும்.

நீண்ட ஒரு கம்பியைத் தேடிப் பிடித்து அதன் நுனியை வளைத்துக் கொண்டேன். ஜன்னலினுடாக அதனை உள் நுழைத்து, அந்தப் பொதியை மெதுவாகத் தட்டிப் பார்த்தேன். வெடிக்கவில்லை. சுவரோரமாக அந்தப் பொதியை அணைத்து ஜன்னல்வரை கொண்டு வந்தேன். கம்பிகளினூடாக அதைப் பற்றிப் பிடித்து வெளியே இழுத்து எடுத்தேன்.

அவசரமாக உள்ளிருந்து நழுவிய அந்தச்சிலை நிலத்தின்மீது விழுந்து நொருங்கியது. அது என் பால்யகாலத்தில், சிவரஞ்சனிக்குக் கொடுத்த ‘தாஜ்மகால்’ சிலை. சிவரஞ்சனி சமீபத்தில் ஊருக்கு வந்து போயிருக்க வேண்டும்.

00000000

http://eathuvarai.net/?p=1267

இணைப்புக்கு நன்றி கிரு

இன்று எதுவரை இதழ் ஆசிரியர் பெளசருடன் கதைத்துக் கொண்டு இருந்தன். எதுவரை இதழில் இருந்து பதிவுகளை யாழ் இணையத்தில் இடுவது தனக்கு பிரச்சனை இல்லையென்றும் சந்தோசமான விடயம் என்றும் சொன்னார். ஒரு வேளை பெளசரை உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இணைப்புக்கு நன்றி[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இழப்புக்களின் வலியோடு, இன்னுமொரு பகிர்வு!

நன்றிகள் கிருபன்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.