Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி அவன்

Featured Replies

14(180).jpg

'நான் புலம்பெயர் தமிழர் மத்தியில் வாழ்ந்தவன். 5 வருடங்கள் நோர்வே, லண்டனில் வாழ்ந்து இருக்கிறேன். போராட்டத்தில் வந்த அழிவுகளுக்கும் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் இன்று இருக்கும் நிலைமைகளுக்கும் புலம்பெயர் தமிழர்தான் நூற்றுக்கு தொன்னூற்றி ஐந்து வீதம் பதில் சொல்ல வேண்டிய உண்மை உள்ளது. அதை அசோக ஹந்தகம பயமில்லாமல் கேட்க விளைகிறார். அதை நான் ஆமோதிக்கிறேன்' என்கிறார் கிங் தேவசாந்தன்.

 

இலங்கையில் பல வெற்றிப்படங்களை தந்த புகழ்பெற்ற சகோதர மொழி இயக்குநரான அசோக ஹந்தகமவின் இயக்கத்தில் வெளியாகி பல்வேறு பாராட்டுதல்களை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கிறது  'இனி அவன்'.

கடந்த 30 வருடகால இருண்ட சூழல் எமக்கே உரித்தான திரைப்படத்துறையை வளர்ப்பதற்கு வழிசமைத்துகொடுக்கவில்லை என்றாலும் கூட, அவ்வப்போது எமது இருப்பை வெளிபடுத்த ஒரு சில தமிழ் திரைப்படங்கள் வெளிவரத்தான் செய்தன. ஆனாலும் பெயர்சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவை பெரிதாக பேசப்படவில்லை.

4(1384).jpg

செத்துபோன எமது இலங்கை தமிழ் திரைத்துறைக்கு 'இனி அவன்' உயிரோட்டத்தை கொடுத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

புனர்வாழ்வு பெற்ற போராளி ஒருவன் - சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களை இனி அவனில் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் அசோக ஹந்தகம.

ஜெகதா வெலவற்ற மற்றும் அனுரா பெர்னாண்டோவால் தயாரிக்கப்பட்ட 'இனி அவன்' திரைப்படத்திற்கான இசையை கபிலா பூகோலராச்சி வழங்கியுள்ளார்.

 

அசோக ஹண்டகமவின் இயக்கத்திலும் வதீஸ் வருணனின் உதவி இயக்கத்திலும் இன்று உலக அரங்கில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் கதாநாயகனாக தர்சன் தர்மராஜ், கதாநாயகிகளாக சுபாசினி பாலசுப்பிரமணியம், நிறஞ்சனி சண்முகராஜா மற்றும் ராஜா கணேசன், கிங் ரட்ணம், மல்கம் மக்கடோ, திரு, திருமதி தைரியநாதன், ஜி.பி.பெர்மினஸ், மகேஸ்வரி ரட்ணம் ஆகியோர் கதாபாத்திரங்களாக பங்கேற்றுள்ளனர்.

இதன் ஒளிப்பதிவு இயக்குநராக சன்ன தேசப்பிரிய மற்றும் கலை இயக்குநராக சுனில் விஜேரட்ண ஆகியோரும் பணியாற்றியுள்ளனர்.

டுபாய், டொரன்டோ, எடின்பெறோ போன்ற இடங்களில் இடம்பெற்ற மூன்று அனைத்துலக திரைப்பட விழாவில் வரவேற்பையும் விருதையும் இத்திரைப்படம் பெற்றுக் கொண்டது.

http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/kalaigarkal/56045-2013-01-02-11-17-06.html

  • தொடங்கியவர்

இத்திரைப்படம் குறித்த கலந்துரையாடல் டொரன்டோ மற்றும் டுபாய் போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இத்திரைப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர் வதீஸ் வருணன் மற்றும் கதாநாயகனான தர்சன் தர்மராஜ், உதவி வில்லன் பாத்திரத்தில் நடித்த கிங் தேவசாந்தன் ஆகியோரை தமிழ்மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதியில் நேர்கண்டபோது அவர்கள் பகிர்ந்துகொண்டவை...

 

0(551).jpg

 

கேள்வி:- இந்த திரைப்படத்தில் பணியாற்றியபோது நீங்கள் பெற்றுகொண்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்?

 

பதில்: வதீஸ்:- அமல் அல்விஸ் என்பவரே என்னை அசோக ஹந்தகமவிடம் அறிமுகம் செய்துவைத்தார். ஹந்தகம – 'இனி அவன்' இத்திரைப்படம் குறித்து என்னுடன் உரையாடினார். காட்சியமைப்புகள் குறித்து கூறினார். இதன்போது எனக்கு இத்திரைப்படம் மிகவும் பிடித்துபோனது. செத்துபோயுள்ள இலங்கை தமிழ் சினிமாவுக்கு விதையொன்று போடப்பட்டுள்ளது. அவ்வாறான முதல் திரைப்படத்தில் எனக்கு பணியாற்ற கிடைத்தது நல்லதொரு அனுபவமாகவே கருதுகிறேன்.


நான் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவன். இதில் பணியாற்றிய கலைஞர்கள் இலங்கையின் பலபாகங்களையும் சேர்ந்தவர்கள். இவர்களை யாழிற்கு அழைத்துச் சென்று அந்த சூழலை காண்பித்து அதற்கேற்றால்போல் மாற்ற வேண்டிய தேவை இருந்தது. அதேபோல் எல்லோருக்கும் விளங்கக்கூடிய தமிழை கொண்டுவரவேண்டும். தனி யாழ்ப்பாண தமிழை கொண்டு வரமுடியாது. அவ்வாறு கொண்டு வந்தால் குறிப்பிட்ட குழுவினரே அதனை பார்ப்பார்கள். அதனால், இவ்வாறான விடயங்களை கவனத்தில் எடுத்துச்செய்வது ஒரு சவலாகவே இருந்தது.

 

 

அதனால், நாங்கள் முதலில் இந்த விடயங்களை எழுத்துருவில் கொண்டு வந்தோம். எழுத்துரு எழுதப்படுவதற்கு முன்பாக நாங்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்று அந்த சூழலை உள்வாங்கிகொண்டோம். பின்பு இயக்குநர் எழுத்துருவை எழுதினார். சகோதர மொழியில் எழுதப்பட்ட எழுத்துருவை நாங்கள் தமிழ்மொழிக்கு மொழிமாற்றம் செய்தோம். அந்த மொழிமாற்றத்தை பின்பு உரையாடலாக மாற்றினோம். இந்த எழுத்துரு மொழிமாற்றத்துக்கு வங்கி ஒன்றில் தொழில்புரியும் மற்றுமொரு நண்பியும் உதவி புரிந்தார்.


எழுத்துருவை தமிழுக்கு மொழிமாற்றம் செய்யும்போதே இலங்கையில் காணப்பட்ட மொழி வழக்கை நாம்  உடைத்துவிட்டோம். 10 நாட்களில் முடிக்க வேண்டிய படம் என்பதால் எங்களால் முடிந்ததை மட்டும் முயற்சி செய்தோம். இதில் நல்லதொரு அனுபவம் கிடைத்தது.

 

 

 

 

தர்ஷன்

 

6(1660).jpg

 

 

நான் ஏற்னவே சகோதர மொழி சின்னத்திரை நாடகங்களில் அதிகமாக நடித்துள்ளேன். அதேபோல் பல சிங்கள திரைப்படங்களிலும் நடித்துள்ளேன். இருந்தபோதிலும் வித்தியாசமான கதைக் கருவைக் கொண்ட திரைப்படமொன்றில் நடிப்பதற்கு வாய்;ப்பு வந்தபோது அது மிகவும் ஆனந்தமான அனுபவமாக இருந்தது.


அசோக ஹந்தகம, கலைஞர்களின் திறமையை நன்கு புரிந்துகொண்டு அதற்கு ஏற்றால்போல் சந்தர்ப்பம் வழங்கக்கூடிய இயக்குநர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எந்த கலைஞரிடம் எவ்வாறு வேலை வாங்க வேண்டும் என்ற நுட்பம் இயக்குநருக்கு நன்றாகவே தெரியும். ஏற்கனவே அவருடன் நான் பணியாற்றியுள்ளதால் இப்படத்தில் என்னிடம் எதனை அவர் எதிர்பார்க்கிறார் என்பதை இலகுவாக எனக்குப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.

 

இத்திரைப்படத்தில் இரண்டு புதிய நடிகைகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஏற்கனவே சின்னத்திரை அறிவிப்பாளர்களான அறிமுகமானபோதிலும் வெள்ளித்திரை அனுபவம் என்பது புதிதானது. இருந்தபோதிலும் அவர்கள் இருவரும் மிகவும் அழகாக நடித்திருந்தார்கள்.

 

 

கிங்

7(1719).jpg

 

அசோக ஹந்தகமவுக்கு உதவி இயக்குநராக நான் இதற்குமுன் கடமையாற்றியுள்ளேன். அந்த நட்பின் காரணமாக 'ஒரு புலம்பெயர் பாத்திரமொன்றை நான் எழுதியுள்ளேன். கட்டாயமாக அதனை நீதான் செய்ய வேண்டும்' என இயக்குநர் என்னிடம் கேட்டுகொண்டார்.

 

'புலம்பெயர் தமிழர்' எனும்போது வெளிநாட்டில் 5 வருடங்கள் வாழ்ந்த அனுபவமும் இருந்ததால் இப்பாத்திரத்தினை நடிப்பதற்கு

ஒப்புக்கொண்டேன். 

 

 

1972ஆம் ஆண்டு எனது தாத்தா குத்துவிளக்கு என்ற படத்தில் நடித்திருந்தார். அவருக்கு பின்னர் 3 தசாப்தங்களுக்கு பிறகும் எங்களுடைய அப்பாவின் காலத்திற்கு பின்பும் எனக்கு இத் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது பெரியதொரு மகிழ்ச்சி என்றே கூறவேண்டும்.


 

  • தொடங்கியவர்

கேள்வி:- உதவி இயக்குநர் என்ற முறையில் நீங்கள் இத்திரைப்படத்தில் பணிபுரியும் போது எதிர்கொண்ட சவால்கள் குறித்து கூறுங்கள் வதீஸ்?

 

 

பதில்:- முதலில் இயக்குநருடன் எழுத்துரு வாசிப்பை செய்தோம். இயக்குநர் பல விடயங்களை எனக்கு கூறினார். உரையாடல் என்றால் இவ்வாறுதான் வரவேண்டும். வேறு கருத்து வரக்கூடாது போன்ற பல விடயங்களை இயக்குநர் எம்முடன் உரையாடினார்.

 

அதனால், சகோதர மொழியில் எழுதியிருக்கும் உரையாடலின் கருத்து சரியாக தமிழ் மொழியில் வரவேண்டும் என்பதற்காக மிகவும் அவதானத்துடன் செயற்பட்டேன்.

 

b(198).jpg

 

கேள்வி:- நீங்கள் பார்த்த அளவில் இயக்குநர் இத்திரைப்படத்தின் கதையை அனுபவித்து எழுதினாரா அல்லது பிறர் சொல்வதை உள்வாங்கிக்கொண்டு எழுதினாரா?

 

பதில்:- யுத்தத்தின் பின் யாழ். சமூகத்தை பார்க்க வேண்டிய தேவையொன்று அவரிடம் இருந்தது. அதன் பின் அவர் யாழ்ப்பாணத்திற்கு சென்றார். அந்த சூழலை நன்கு அவதானித்தார். முன்னாள் விடுதலை புலிகள் இயக்க போராளிகள் மற்றும் பலரை சந்தித்து கலந்துரையாடினார்;. இவ்வாறு யாழ். சமூகத்தை உள்வாங்கிக்கொண்டுதான் இந்த கதையை அவர் எழுதினார்.


இவ்விடத்தில் ஓர் உதாரணத்தை கூறவேண்டும். இத் திரைப்படத்தின் 20 ஆயிரம் ரூபா சாரதி அனுமதிப்பத்திரம் குறித்த ஒரு காட்சி வரும். இயக்குநர் யாழிற்கு சென்றபோது முன்னாள் போராளிகள் சுமார் 15 பேரிடம் உரையாடினார். இதன்போது அப்போராளிகளிடம் 'இதற்குபின் நீங்கள் என்ன செய்யபோகின்றீர்கள்' என்று கேட்டார். அதற்கு அவர்களில் ஒருவர், 'எனக்கு டிரைவிங் மட்டும்தான் தெரியும். டிரைவிங்க லைசன் எடுக்க 20,000 ரூபாய் தேவைப்படுகிறது' என்றார். அவர் கூறிய அந்த வசனம்தான் 20,000 ரூபாய் காட்சியாக மாறியுள்ளது.

 

 

இவ்வாறு யாழில் பார்த்து உள்வாங்கிய சின்னச் சின்ன விடயங்கள்தான் சற்று மெருகேற்றம் செய்யப்பட்டு திரைப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

 

4(1385).jpg

 

கேள்வி: இந்த திரைப்படத்தின் கருவானது தனிப்பட்ட ரீதியில் தமிழர்களுக்கு தமிழர்களாலேதான் பிரச்சினை என்ற மாயையை வேறு உலகுக்கு காட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளதா? ஒரு தமிழ் உதவி இயக்குநர் என்ற முறையில் அவருடைய இந்த எழுத்துரு மற்றும் திரைக்கதை எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

 

பதில்:- இந்த எழுத்துரு மொழிபெயர்ப்பு செய்து முதலில் வாசித்த போது எனக்கு அதனது கதை பிடித்துபோனது.

 

இத்திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. நான் யாழைச் சேர்ந்தவன். கடந்த 2007ஆம் ஆண்டு வரை நான் யாழில் இருந்தேன். 1996 முதல் 2002ஆம் ஆண்டு வரை புதுக்குடியிருப்பில் இடம்பெயர்ந்து இருந்தேன். அதனால் யாழ். சமூகம் குறித்து ஆழமாகவே தெரியும். எமது தமிழ் சமூகத்தை அவர் வெளியில் இருந்து பார்த்து உள்வாங்கிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


அவரது அரசியல் பார்வை வேறாக இருக்கலாம். ஆனால், இப்படிதான் யாழ்ப்பாணம் என்று எல்லோராலும் பொதுவாக பார்க்கப்பட்ட ஒரு விடயத்தை அவர் ஆழமாக ஊடுறுவிச் சென்று பார்;த்த முதல் நபர் என்ற முறையில் எனக்கு இந்த திரைப்படம் பிடித்திருந்தது.

 

 

இக்கதைக்கருவில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், யதார்த்தம் பல இருக்கிறது என்பதே உண்மை. இதனை சமூக நீரோட்டத்தில் இருப்பவர்கள் யாரும் எதிர்க்க மாட்டார்கள்.

 

11(575).jpg

 

கேள்வி: யாதார்த்த வாதி வெகுஜன விரோதி. நீங்கள் இன்னும் யாழ். சமூகத்தில் இருந்துகொண்டு இருக்கின்றீர்கள். இந்த திரைப்படத்தில் பணியாற்றியதற்காக உங்களுக்கு கிடைத்த விமர்சனங்கள் எவ்வாறு இருந்தன?

 

பதில்:-  வலைத்தளம், முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்களில் மாற்றுக் கருத்துடையோர் இருப்பதால் அவற்றில் பல மாறுப்பட்ட கருத்துகள் வந்தன. ஆடு, மாடுகள்போல் தலையாட்டும் தமிழர்களுக்கு நீ உதாரணமாக இருக்கலாம். எங்களால் அவ்வாறு இருக்க முடியாது, துரோகி என்ற கருத்துக்கள் வந்துசேர்ந்தன. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எமக்கு இந்திய சினிமா தேவை இல்லை. செத்துபோயிருக்கும் இலங்கை தமிழ் திரைப்பட துறைக்கு இப்படி ஒரு யதார்த்தமான படம்தான் தேவைப்படுகின்றது.


 

 

கேள்வி:- இத்திரைப்படத்தில் திணிக்கபட்ட தமிழ் என்ற ஒரு கருத்து நிலவுகிறது? இதற்கு காரணம் என்ன?

 

பதில்:- இதற்கு காரணம் இருக்கிறது. என்னைபொறுத்தமட்டில் தனி யாழ்ப்பாணம் எனக் கூறி இனி ஒன்றையும் செய்ய முடியாது. இனி யாழ்பாணத்தை மட்டும் குறிப்பிட்டு எதனையும் செய்ய முடியாது. தமிழர்கள் அனைவரும் இலங்கை முழுதும் பரந்து வாழ்கின்றார்கள். இந்நிலையில், இத்திரைப்படத்தில் யாழ்ப்பாண மொழியை புகுத்தினால் அது யாழ். மக்களுக்கு மட்டுமே விளங்கும்.

 

 


கேள்வி:- நீங்கள் கூறுவது உண்மை. அப்படியென்றால் நீங்கள் யாழ்ப்பாண தமிழை முற்றாக தவிர்த்திருக்க வேண்டும். இதில் யாழ்ப்பாண தமிழும் உள்ளது. அதேநேரத்தில் திணிக்கப்பட்ட தமிழும் உள்ளது. இது எதற்காக?

 

பதில்:- 10 நாட்களில் திரைப்படத்தை முடிக்க வேண்டும். அதேநேரத்தில் டப்பிங்கும் இதில் உள்வாங்கப்படவில்லை. இந்நிலையில், இது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது இயல்பாக ஏற்பட்ட ஒன்று. நாங்கள் ஒரு தமிழை இதில் திணிக்கவில்லை. ஏனெனில் சில பாத்திரங்கள் யாழ்;. பாத்திரங்கள், சில பாத்திரங்கள் வெளிமாவட்டங்களை சேர்ந்த பாத்திரங்கள். எனவே மொழிப் பிரயோகத்திலும் சவாலொன்று இருக்கவே செய்தது. ஆனால், இது பெரிய விடயமாக கவனத்தில்கொள்ளப்படவில்லை என்று நான் கருதுகிறேன்.

 

2(1967).jpg

 

கேள்வி:- தயாரிப்பு, குறுந்திரைப்படம் இயக்குதல் என நீங்கள் ஒரு துறைசார்ந்தவராக காணப்படுகின்றீர்கள் கிங். ஆனால், இந்த திரைப்படத்தில் நடித்தபோது நீங்கள் கற்றுகொண்ட விடயம் அல்லது நீங்கள் உணர்ந்துகொண்ட விடயம் என்ன?

 

பதில்:- இலங்கை தமிழ் சினிமா உலக சினிமாவை ஒத்த பாணியையே கையாள்கிறது. தென்னிந்திய திரைப்படங்களாக இருந்தாலும்கூட அது எம்மை ஈர்க்கவில்லை. விசேடமாக ஹந்தகம போன்ற இயக்குநர்கள் அவ்வாறான உலக தரம்வாய்ந்த திரைப்படங்களை செய்யும்போது அது தமிழ் திரைப்படத்துறைக்கு நல்ல ஆரம்பமாக இருக்கும்.


எங்களுக்கே உரிய விடயத்தை கூறும் அழகு ஒன்று உள்ளது. உதாரணத்திற்கு யாழ்ப்பாணம் என்றால் யாழ்பாணத்தை கூறும் விதம் உள்ளது. அதனை இந்தப்படம் காட்டியுள்ளதாக நான் நினைக்கிறேன். எம்மை போல இனிவரப்போகும் திரைப்பட இயக்குநர்களுக்கு இது ஒரு சாவால்தான்.

 

'சமுதாயம்' திரைப்படத்தை இயற்றியதும் ஹென்றி சந்திரவன்ஸ சிங்கள இயக்குநர்;, 50 வருடங்களுக்கு பின்பு 'இனி அவனை' இயற்றியதும் அசோக ஹந்தகம சிங்கள இயக்குநர் என்றால் அது எமது பிழை. நாட்டில் இருந்த சூழ்நிலை காரணமாக நாம் நம்மை இந்த துறையில் வளரத்துகொள்ள தவறிவிட்டோம்.

 

இனிவரும் காலங்களில் நாமே திரைப்படம் இயக்க வேண்டும். எமது பிரச்சினைகளை நாமே வெளிகொணர வேண்டும். அவ்வாறு கொண்டு வரும்போது நீங்கள் பார்க்கும் அரசியல் பார்வைகூட வேறாக இருக்கும். இன்னும் எமது சமூகத்தை நாம் நெருக்கமாக தெரிந்திருப்போம். எல்லாம் மீறி 'கடந்த யுத்தம்' என்ற பெயரில் இன்று பல கருத்துக்கள்

முன்வைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அசோக ஹந்தகம இந்த முயற்சியை எடுத்துகொண்டது பெரிய விடயம்தான்.


 

 

கேள்வி: இத்திரைப்படத்தின் தொழில்நுட்ப பிழைகள் அதிகமாகவே காணப்படுகின்றன. நீங்களும் ஒரு இயக்குநர் என்ற முறையில் இதில் கண்ட நல்ல, பிழையான விடயங்கள்..?

 

 

பதில்:- எல்லா திரைப்படங்களும் இயக்குநர் பார்வையில்தான் காணப்படுகின்றது. நான் இயக்கும் விதமும் அவர் இயக்கும் விதத்திலும் வித்தியாசம் காணப்படுகின்றது. அவரது எடிட்டிங் பக்கத்தில் நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன. அவர் காட்சிகளை உருவாக்கிய விதம் போன்றவற்றில் விமர்சனங்கள் உள்ளன. அது அவருக்குரிய பாணி. தொழில்நுட்பத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி பார்க்க வேண்டிய தேவை ஒன்று உள்ளது.

 

c(47).jpg

 

 

கேள்வி:  நீங்களும் வெளிநாட்டில் வாழ்ந்தவர் என்ற முறையில் நீங்கள் இந்த கதையை கேட்கும்போது எவ்வாறு இருந்தது?

 

 

பதில்:- இந்த திரைப்படத்தை நான் முழுமனதுடன்தான் செய்தேன். இதிலிருந்து என்னுடைய கருத்தை உங்களால் ஊகித்துகொள்ள முடியும். அவர் கூறிய எல்லாவிடயத்தையும் நான் ஆமோதிப்பதாக அர்த்தம் இல்லை. அந்த முயற்சிக்கு நாங்கள் கைகொடுக்க வேண்டும். அவர் கூறிய விடயங்களில் உண்மை சார்ந்த விடயங்களும் உள்ளன, கற்பனை விடயங்களும் உள்ளன. கற்பனை சார்ந்த விடயங்களை அவர் திரைப்படத்தில் உள்வாங்கியது அவரது சுதந்திரம். அதில் சரி, பிழை பார்க்க வேண்டியது விமர்சகர்கள்.


அவர் கற்பனை சார்ந்து பல விடயங்களை கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடத்தல் இருக்கின்றதா இல்லையா என்பது ஒரு கேள்விக்குறி, விபசாரம், வேலை இன்மை பிரச்சினை இருக்கின்றதா இல்லையா என்பது ஒரு கேள்விக்குறி. இவை அவருடைய கற்பனை சார்ந்த எண்ணங்கள். இதற்கு இடம்கொடுக்கப்பட்டுள்ளது. நானும்; ஓர் இயக்குநர் என்ற முறையில் இவ்விடயங்களை பார்க்க பழகிக்கொள்ள வேண்டும்.

 

 

புலம்பெயர்ந்தோரை பாரத்து சில தமிழ் மக்கள் கேள்விகேட்க அச்சப்படுகிறார்கள்;. ஆனால் அவர் அச்சமில்லாமல்; கேள்விகேட்கிறார்.

 

2(1968).jpg

 

கேள்வி:- புலம்பெயர்ந்தோர்  பார்வையில் 'இனி அவன்' பார்வை சரி என நீங்கள் ஒத்துகொள்கின்றீர்களா?

 

 

பதில்:- நான் புலம்பெயர் தமிழர் மத்தியில் வாழ்ந்தவன். 5 வருடங்கள் நோர்வே, லண்டனில் வாழ்ந்து இருக்கிறேன். போராட்டத்தில் வந்த அழிவுகளுக்கும் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் இன்று இருக்கும் நிலைமைகளுக்கும் புலம்பெயர் தமிழர்தான் நூற்றுக்கு தொன்னூற்றி ஐந்து வீதம் பதில் சொல்ல வேண்டிய உண்மை உள்ளது.


அதை அசோக ஹந்தகம பயமில்லாமல் கேட்க விளைகிறார். அதை நான் ஆமோதிக்கிறேன். கனடா ரொரன்டோ திரைப்பட விழாவில் அதிகமாக கனேடியர்கள் இத்திரைப்படத்திற்கு விமர்சனம் தெரிவித்துள்ளனர். அதேபோல் நல்லா ஆமோதித்தும் உள்ளனர்.

 

c(48).jpg

 

கேள்வி: 90 வீதமான புலம்பெயர் தமிழர்கள் இதனை வேறுகோணத்தில் பார்ப்பதற்கான காரணம் என்ன?

 

பதில்:- சினிமாவை பார்வையிடுவது என்பது ஒரு புத்தகத்தை வாசிப்பதை போன்று. புத்தகத்தில் நான் இன்று சாப்பிடவில்லை என்று ஒரு வரி இருந்தால் அந்த வரியை மட்டுமே வாசிப்போம். ஏன், சாப்பிடவில்லை, வறுமை காரணமாக இருக்கலாமா? என்ற பின் வாசிப்பு எம்மிடம் இல்லை.


உதாரணத்திற்கு இந்த திரைப்படத்தில் வரும் ஒரு சில காட்சிகளை கூறலாம். 


இந்த படத்தில் காண்பிக்கப்படும் சிறிய சிறிய நுணுக்கமான விடயங்கள் அதாவது, நிரஞ்சனியை அழைத்துகொண்டு வரும்போது செருப்பு இரண்டை அங்கே வைத்திருப்பார். அந்த செருப்பு குலோசபாக காண்பிக்கப்பட்டிருக்கும். அதை திருப்பி வைத்து தர்ஷன் அணிந்துகொள்வார். இதில் உள்ளர்த்தம் இருக்கு.

 

அதேபோல் பைக் முதலில் ஸ்டாட் ஆகாது. பின்பு ஸ்டாட் ஆகி செலுத்துவார்கள். இவை திரைப்படத்தின் வாசிப்பு என்று கூறவேண்டும். இந்தளவு எமது மக்கள் ஒரு திரைப்படத்தை வாசிப்பு செய்கின்றார்களா என்பது கேள்விக்குறி. நான் அவர்களை குறைத்து கூறவில்லை. ஆனால் அதுதான் உண்மை. அசோக ஹந்தகம என்ற இயக்குநரின் லேயர்ஸை எம்மால் விளங்கிகொள்ள முடியவில்லை. ஆனால், சர்வதேச ரீதியாக அவரை விளங்கிக்கொள்கின்றனர்.

 

3e.jpg

 

கேள்வி:- தர்ஷனை பொறுத்தவரை உங்களுக்கு இந்த திரைப்படம் சோர்வை ஏற்படுத்தவில்லையா?

 

பதில்:- இல்லை. ஏனெனில் முன்னாள் போராளியின் கதை எனும்போது நான் ஏற்கனவே முத்திரை குத்தப்பட்ட நடிகனாகதான் இருந்தேன். அதிலிருந்து வெளியில் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் பாத்திரத்தில் இருந்து விடுபட்டு நல்லதொரு பாத்திரத்தில் நடிக்க வேண்டும். மக்கள் மத்தியில் நிலைக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்டகாலமாகவே இருந்தது. ஆனால், அது தொடர்பில் நான் இயக்குநரிடம் கேட்கவில்லை.


இதுதான் கதை என்று கூறினார். சரி எனக்கு அமைந்த பாத்திரம் இதுதான் என தீர்மானித்தேன். ஏனெனில் இங்கு தமிழ் சினிமா இல்லை என்பதால், சகோதர மொழியில் நான் ஒரு தமிழ் கலைஞனாக காணப்படுவதால் எனது வெற்றியை தக்கவைத்துகொள்ள நான் படம் நடித்துகொண்டே இருக்க வேண்டும். அதுதான் என்னுடைய தொழில். நான் பணம் பெற்றால்தான் எனது வயிற்றை நிரப்பமுடியும். இவ்வாறான ஒரு வட்டத்துக்குள் நான் நடித்தே ஆகவேண்டும்.

 

அதேவேளை, எல்.ரீ.ரீ.ஈ பாத்திரத்திலிருந்து நான் விடுப்பட வேண்டும். நல்ல உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். அத்தகையொரு ஸ்கிரிப்டுக்காக நான் காத்துகொண்டிருந்தேன். அவ்வாறானதொரு சூழலில்தான் எனக்கு இந்த பாத்திரம் கிடைத்தது.


இங்கு ஒரு விடயத்தை கூறி ஆகவேண்டும். என்னை கெட்ட எல்.ரீ.ரீ.ஈ ஆக அனைத்து திரைப்படங்களிலும் காண்பித்துவிட்டார்கள். இயக்கம் என்றால் கெட்டவன், கெட்டவன் என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் வந்துவிட்டது. அதனால், இனி அவன் திரைப்படத்திற்கு பிறகு சகோதர மொழி மக்கள் மத்தியில் காணப்படும் இந்த நிலைப்பாடு மாறும். அதனால்தான் இந்த படத்திற்கு இனி அவன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிங்களத்தில் இனிமையானவன் என்று அர்த்தம்.

 

 

 

கேள்வி: இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நீங்கள் எடுத்துகொண்ட முயற்சிகள் குறித்து கூறுங்கள்?


பதில்:- நான் நன்கு மெலிய வேண்டும் என்று இயக்குநர் கூறினார். சுத்தமான யாழ்ப்பாண தமிழ் பேச வேண்டும் என்று கூறினார். எனக்கு யாழ்ப்பாண தமிழ் பேச வரும். ஆனால் அவ்வளவு என்று இல்லை. மற்றும்படி வளமையான பயிற்சிகள்தான். வழமையாக ஆயுத பயிற்சி இருக்கும். சிறிய பயிற்சிகள் இருக்கும். இதில் அவ்வாறு இல்லை. எழுத்துரு கிடைத்து ஒரு மாதம்கூட செல்லவில்லை. திடீரென படபிடிப்பை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

 

 

மற்றும்படி நடிகைகள் இருவரும் புதிது என்பதால் சிறிய பயிற்கள் இருந்தது. அவ்வளவுதான். பெரிதாக பயிற்சிகள் என்று இல்லை.

 

v(86).jpg

 

கேள்வி:- ஆத்ம ரீதியான ஆதரவு என்ற ஒரு விடயம் உள்ளது. இந்த திரைப்படத்தை பொறுத்தவரை உங்களது உணர்வு என்ன?

 

பதில்:- ஒரு சிறிய குறை உள்ளது. நான் இந்த திரைப்படத்தில் முறையாகவே தமிழ் பேசியிருக்கலாம். என்குரலுக்கு வேறொருவர் டப்பிங் செய்திருக்கலாம் என்ற கருத்தும் இருந்தது. அதில் எனக்கு உடன்பாடில்லை. எவ்வளவு உணர்ந்து நடித்தாலும் நாங்கள்தான் டப் பண்ணியாக வேண்டும். இந்தக்குறை இனி இருக்க கூடாது. இது நல்லதொரு வாய்ப்பு. இவ்வாறான வாய்;ப்புகள் வரும்போது சிறு சிறு குறைகளை விடக்கூடாது என நினைக்கிறேன்.

 

 

கேள்வி:- இத்திரைப்படத்திற்கு இலங்கையில் கிடைத்த வரவேற்பு?

 

பதில்:- தமிழ் சினிமா என்றால் நல்ல கலர்புல்லா, பைட் இருக்கனும், டான்ஸ் இருக்கனும் என்ற நிலை காணப்படுகின்றது. இந்திய சினிமாவில் மூழ்கியிருப்பதால் எமது படைப்புக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும். இன்று நாம் எவ்வாறு இராசயன கலவை மிக்க உணவை உண்டு பழகிவிட்டோமோ அதேபோல்தான் இராசாயனம் கலந்த தென்னிந்திய திரைப்படத்தில் ஊறிவிட்டோம். இது காலபோக்கில் மாறவேண்டும். இனி அவனை போல 15 இனி அவன்கள் வரவேண்டும்.

எமது மக்கள் இவ்வாறான திரைப்படங்களை போய் பார்த்து பரிட்சயப்படவில்லை. அது காலபோக்கில் மாறும்.

 

3(1665).jpg

 

கேள்வி:- இத்திரைப்படத்திற்கு ஊடகங்கள் கொடுத்த வரவேற்பை பற்றிக்கூறுங்கள்?

 

 

பதில்:- மிகவும் வருத்தத்துக்குரிய விடயம். இந்தத் திரைப்படத்திலும் ஒருவருக்கு ஒருவர் வெட்டிகொண்டுதான் காணப்படுகின்றனர். ஓர் ஊடகம் அனுசரணை தருகிறது. மற்றுமொரு ஊடகம் தராமல் விடுகறது. இதிலும் பெருந்தன்மை என்பது காட்டப்படவில்லை. 50 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் தமிழ் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகதரம் வாய்ந்த ஒரு திரைப்படம், உலக திரைப்படவிழாவில் பல பாராட்டுதல்களை பெற்றுகொண்ட படம் என்ற விடயம் உணரப்படவில்லை. ஊடகங்கள் ஆதரவு தரவில்லை என்றே கூறவேண்டும். தென்னிந்திய திரைப்படங்களுக்கு கொடுக்கின்ற ஆதரவில் ஐந்து வீதத்தை இதற்கு வழங்கியிருந்தால் இன்னும் இத்திரைப்படம் எங்கோ சென்றிருக்கும்.


நான் நடிப்புத்துறைக்கு வந்து 14 வருடங்கள் ஆகின்றன. சகோதர மொழி ஊடகங்கள் தமிழ்சார் கலைஞனாக எனக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தமிழ் ஊடகங்கள் கொடுக்கவில்லை.

 

நான் தேடி தேடிச் சென்று தகவல்களை வழங்க வேண்டி உள்ளது. எமது கலைகளை எமது ஊடகங்களே ஊக்குவிக்காவிட்டால் எமது கலை எவ்வாறு வளரும். இந்த விடயத்தை நாம் கூறியே ஆகவேண்டும்.

 

3(1664).jpg

 

கேள்வி:- உங்களது அடுத்த செயற்திட்டம் என்ன?

 

 

பதில்:- கிங்: ஒரு நகைச்சுவை நடிகனாக வெளி வரவுள்ளேன்;. இதைத்தவிர பச்சை தங்கம் என்ற பெயரில் மலையக மக்களில் வாழ்வியலை ஒரு ஆவண படமாக தயாரித்துகொண்டுள்ளேன்.


வதீஷ்: இனி அவன் படத்திற்கு பிறகு ஒரு படத்தில் நான் பணிபுரிந்துவிட்டேன்;. இதேவேளை    மற்றுமொரு கதைiயை எழுதி முடித்துவிட்டேன். இலங்கையில் நல்லதொரு தமிழ் படம் எடுக்கவேண்டுமென்பதற்காக காத்துகொண்டிருக்கிறேன். 

 

தர்ஷன்:- புதிய சிங்கள தொடரொன்றுக்கான படப்பிடிப்பு இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தென்னிந்திய திரைப்படங்கள் மூன்றிற்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

10(1036).jpg

 

கேள்வி:- இப்படத்தில் புதிதாக இரண்டு நடிகைகளை அறிமுகமாகியுள்ளனர். இவர்களது பங்களிப்பு எவ்வாறு இருந்தது?

 

 

பதில்:- படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பே நாங்கள் சில காட்சிகளை நடித்துபார்த்துகொள்வோம். எனக்கு ஆதரவு தரும் பாத்திரங்கள் 50:50 என்ற வகையில் அமையவேண்டும். எனது பங்கு அதிகரித்துவிட்டால் எனது நடிப்பு மிகைப்படுத்தப்பட்ட நடிப்பாகிவிடும். அதேபோல் அவர்களது பங்கு அதிகரித்துவிட்டால் அவர்களது நடிப்பு மிகைப்படுத்தப்பட்ட நடிப்பாகிவிடும். எனவே இவற்றை தவிர்த்துக்கொள்வதற்காக இயல்பாகவே நாங்கள் நடித்து பார்த்துகொண்டோம்.

 

இணைப்புகளுக்கு நன்றி.

 

அசோக ஹந்தகம வின் Sanda Dadayama இனையும் Aksharaya வினையும் பார்த்துள்ளேன். ஆரோக்கியமான சிங்கள சினிமா எடுக்கும் கலைஞர்களில் அசோகவும் ஒருவர். இப்படத்தினை பார்க்கும் வசதி ரொரன்டோவில் கிடைக்குமா தெரியவில்லை.

இனி அவன் டொராண்டோவில் மூன்று தரம் திரையிடப்பட்டுவிட்டது ,அதை பற்றிய பதிவொன்று யாழில் கூட வந்திருந்தது .அசோக கந்தகம வை எம்மவர் பலர் சந்தித்து பாட்டியும் வைத்தார்கள் .

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
இனி அவன் – நடுநடுவே நிறையக் காட்சிகளைக் காணோம்!- யோ.கர்ணன்
 

yo.karnan-head-1024x250.jpg

 

அசோக ஹந்தகமவின் ‘இனி அவன்’ திரைப்படமளவிற்கு ஆரவாரமாக வெளியிடப்பட்ட இலங்கைத் தமிழ் திரைப்படமெதுவும் இருந்திருக்காதென்றுதான் நினைக்கிறேன். இப்படி சொல்வது கூட அவர்களது உழைப்பை குறைத்து கூறுவதாகவே இருக்கும். அண்மைய வருடங்களில் இலங்கையில் திரையிடப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு திரைப்படங்களெதற்குமே இந்தளவு விளம்பரம் செய்யப்பட்டிருக்கவில்லை என்பதே உண்மை.

 

ini-asoka.jpg

 

ஒரு கட்டத்தில் எனக்கு பிரமிப்பாகவே போய்விட்டது, இந்தப்படத்திற்கான விளம்பரச் சுவரொட்டிகளை விட வேறொன்றையும் சூழலில் காணவே முடியாமல் போய்விடுமோ என்று. யாழ்ப்பாணத்திலும் அப்படியொரு விளம்பரம். ‘இனி அவன்’, ‘இனியவன்’ என அச்சிலும், கையெழுத்திலும் உருவாக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒரு பேராச்சரியம்தான். நான் நினைக்கிறேன், யாழ்ப்பாணத்தில் காணப்படும் மகிந்த ராஜபக்சவின் கட் அவுட்கள், சுவரொட்டிகளிற்கு அடுத்ததாக இந்தப் படத்திற்கான விளம்பர சுவரொட்டிகள்தான் அதிகம் காணப்பட்டன. விஜய் என்னதான் ஆயிரங்கையுள்ள அவதாரமாக உருவெடுத்து, ஒவ்வொரு கையிலும் துப்பாக்கி தொடக்கம் அணுகுண்டு வரையான போர் ஆயுதங்களை ஏந்தி படமெடுத்தாலும்,  முழுசிக் கொண்டிருக்கும் ஹந்தகமவின் கரிய வெற்றுடம்புக்கார நாயகனின் அடையாளஅட்டை அளவிலும் சற்று பெரிய புகைப்படத்துடனான விளம்பரச் சுவரொட்டிகளை தோற்கடித்திருக்கவே முடியாது.

 

சிங்கள முற்போக்கு இயக்குனரென கருதப்படும் ஒருவரது படம். இந்த வகையான முற்போக்கானவர்கள் யுத்த காலத்திலேயே சர்ச்சைக்குரிய, ஆட்சியாளர்களிற்கு உவப்பில்லாத சில திரைப்படங்களை உருவாக்கியவர்கள். யுத்தத்திற்காக கற்பிக்கப்பட்ட தார்மீகங்கள் மீது கேள்விகளை எழுப்பியவர்கள். யுத்தகாலத்திலேயே சவால்களிற்கு அஞ்சாதவர்கள், இப்பொழுதா சமரசம் செய்து கொள்ளப் போகிறார்கள். தவிரவும், யுத்தத்தில் ஈடுபட்ட தரப்புக்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படியான தகவல்களுடனும் உருவாக்கப்படும் சமன்பாடொன்றின் விடை என்னவாக இருக்குமென்பது இலகுவாக ஊகிக்கக் கூடியது. இதனாலேயே சமூகத்தின் சில மட்டங்களில் படம் குறித்த சிறியளவிலான எதிர்பார்ப்பு இருந்தது. என்னிடமும் இருந்தது.

 

இலங்கையில் படம் திரையிடப்படுவதற்கு முன்னரே கனடாவில் திரையிடப்பட்டிருந்தது. படத்தைப் பார்த்த கனடிய நண்பரொருவர் படம் குறித்த தனது கருத்தை ஒரு வரியில் எழுதியிருந்தார். அவர் வழமையாகவே அவசரக்காரர். கணனியின் முன் சற்றுநேரம் குந்தியிருந்து தட்டச்சு செய்ய பஞ்சிப்பட்டிருக்கலாமென நினைத்தேன்.

 

யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கிற்கு நண்பரொருவருடன் படம் பார்க்கச் சென்றிருந்தேன். தனது நண்பர்களென இன்னுமிருவரையும் அவர் அழைத்து வந்திருந்தார். அந்த தியேட்டரில் இரண்டு திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. முதலாவது அரங்கில் ‘நீதானே என் பொன் வசந்தம்’. மற்றையதில் ‘இனி அவன்’.

 

‘இனி அவன்’ என எழுதப்பட்டிருந்த கவுண்டரில் இருந்தவர் ரிக்கற் எடுப்பதற்காக சென்ற நண்பரை, ‘நீதானே என் பொன் வசந்தம்’ கவுண்டரைக் காட்டி, அங்கு செல்லமாறு சொன்னார். நண்பர் குழம்பிவிட்டார். மீண்டும் பெயர்ப்பலகைகளை பார்த்து உறுதிசெய்து கொண்டு, ‘இனி அவன்’ ரிக்கற்தான் வேண்டுமென்றோம். ‘இலங்கைப்படமா’ என முகத்தைச் சுளித்தபடி கவண்டரிற்கு கூப்பிட்டு ரிக்கற் தந்தார். படம் தொடங்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. அதனால் வெளியில் நின்றோம். சற்று நேரத்தில் ஒருவர், படம் தொடங்கப் போகிறது உள்ளே வாருங்கள் என நாகரிகமாக அழைத்தார். எவ்வளவு அன்பான உபசரிப்பு. அவரே திரையரங்கிற்கு எங்களை வழிகாட்டி அழைத்துச் சென்றார்.

 

கதவைத் திறந்து, உள்ளே செல்லுமாறு சைகை செய்தார். மர்ம மாளிகையொன்றிற்குள் நுழைந்த அதிர்ச்சி. காரணம் நாங்கள் நால்வரும்தான் பார்வையாளர்கள். கவுண்டரில் இருந்தவர் முகம் சுளித்ததன் காரணம் அதுதான். நாங்கள் வந்திருக்காவிட்டால் படம் ஓடியிருக்காதென்றார். கடந்த இரண்டு நாட்களாக இந்த அரங்கின் மின்குமிழைக் கூட ஒளிரவிடுவதற்கான அவசியம் இருந்திருக்கவில்லையாம்.

 

ini-title.jpg

 

அண்மை நாட்களில் ஈழத்தமிழ் இணையப்பரப்பில் அதிகம் விவாதிக்கப்பட்ட திரைப்படம் இதுதான் என்பதால், அதன் கதை, அதன் அரசியல் பற்றியெல்லாம் விபரிக்கத் தேவையில்லை. அவை பற்றிய மேலோட்டமான தகவல்களாகவது பரவலாக ஏற்பட்டிருக்கும். புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட போராளியொருவர் விடுதலையின் பின்னர் சமூகத்தில் இணைவதில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், அல்லது இந்த வகையானவர்களை இணைத்துக் கொள்வதில் சமூகம் காட்டும் தயக்கம், இதனாலும் வேறு காரணங்களினாலும் உண்டாகும் பொருளாதார தாக்கம் வாழ்வதற்கான பிரயத்தனமாக எதனையும் செய்யும் மனநிலையை உண்டாக்குகிறது என்பதுதான் பிரதான செய்தி. (இவை பற்றிய உறுதியான முடிவிற்கு படத்தைப் பார்த்து வரமுடியாதிருந்த போதும், படம் குறித்த விமர்சனங்களே அதற்கு உதவின!) மற்றும், இனநல்லிணக்கம், யுத்தம் என்ற பெயரில் தொலைவில் கேட்கும் வெடியோசைகளின் அதிர்வில் சிலர் சாவது, பம்பாய் திரைப்படத்தில் மனீஷா கொய்ராலா துப்பட்டா இல்லாமல் கடற்கரையில் ஓடுவதைப் போல இங்கேயும் ஒருத்தி மார்புச்சேலை விலகியிருக்க சற்று நேரம் ஓடுவது, இனி வன்முறை அரசியல் தமிழர்களிற்கு வேண்டாம் போன்ற முக்கியமான காரங்களை தூவியிருக்கிறார். இதனால் நகைச்சுவை மற்றும் குத்துப்பாட்டுக்களை படத்தில் சேர்க்காமல் விட்டிருக்கிறார் என நினைக்கிறேன். இவற்றைத் தவிர்த்தால் படம் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை.

 

படத்தை பார்த்தபோது உண்டான முதலாவது அதிர்ச்சி, புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டவர் பற்றிய படமொன்றில் எப்படி இராணுவம் வராமல் போகுமென்பதே. இந்தப்படம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட காலகட்டத்தில் புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வந்தவர்கள் அதீத கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்ட, விசாரணைகளிற்கு அழைக்கப்பட்ட, கைது செய்யப்பட்ட அச்சமான சூழ்நிலை நிலவியது. இந்த நாட்களில் வெளியே நடமாடமுடியாமல் வீடுகளிற்குள் முடங்கிக் கிடந்த ஒன்றல்ல இரண்டல்ல எண்ணற்றவர்களை நான் அறிந்திருந்தேன். விடுவிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரதான சவாலே பாதுகாப்புக் கெடுபிடிகள்தான். அவை பற்றி எதுவும் பேசப்படவில்லை. மாறாக, சொந்த சமூகத்தினால் அவர்கள் புறக்கணிக்கப்படுவதையே பேசுகிறது.

 

புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டபவர்கள் தமிழ் சமூகத்தினால் இருகரம் நீட்டி வரவேற்கப்படவில்லையென்பதில் ஓரளவு உண்மைகள் இருக்கிறதுதான். ஆனால் அது முழுமையான உண்மையல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சமூகம் இருகரம் நீட்டி வரவேற்கவில்லையென்பதன் அர்த்தம், அவர்கள் ஒவ்வொருவரினதும் முகங்களின் நேராக காறி உமிழ்கிறதென்பதல்ல. வீடுகளிலும், உறவினர்களாலும் வரவேற்கப்படவில்லையென்பதல்ல. அவர்களை கண்டு, ‘உம்மாண்டி வருகுது’ என குழந்தைப்பிள்ளைகள் மாதிரி ஒளிகிறதென்பதல்ல.சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஒடிப்போனவர்கள் என்றெனுமொருநாள் திரும்பி வரும்பொழுது, கிராமங்கள் பல்வேறு முகங்களை வெளிப்படுத்துகின்றன. சில பூரிப்புக்கள், சில காதல்கள், சில கோபங்கள், சில புறக்கணிப்புக்கள், சில மகிழ்ச்சிகள், சில ஆச்சரியங்கள் என பலவிதமான முகங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

 

புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வந்தவர்களில் சிலர் சனங்களினால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் கொண்டாட்டமாக வரவேற்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் தெருநாயொன்றைப்போல யாரென்றே தெரியாமல் கிராமத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். ஆனால் மூன்று தரப்பினரும் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒரே விதமான அனுபவத்தை கொண்டிருக்கமாட்டார்கள். தாக்கப்பட்டவன் இன்னும் சில அடிகள் கடந்து வந்தால், வரவேற்பதற்கும் யாராவதிருக்கலாம். வரவேற்கப்பட்டவன் கண்டு கொள்ளாமல் விடப்படுவதற்கான சந்தர்ப்பமுண்டு. ஒருவன் கிராமத்தினாலேயே புறக்கணிக்கப்படுகிறான் என்பது யதார்த்தம் கிடையாது.

 

இயக்குனருக்கு இவை பற்றிய புரிதலெதுவுமே இருக்கவில்லை. ரோந்து செல்லும் இந்திய இராணுவ அணியில் கடைசியில் செல்பவனைப் போல, புனர்வாழ்வு முகாமிலிருந்து திரும்புவதாகச் சொல்லப்படும் பிரதான பாத்திரம் எதற்காக எல்லோரையும் அப்படி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு போகிறான் என்று ஊகிக்கவே முடியவில்லை. உண்மையில் அந்த சனங்கள்தான் பாவம். இப்படியான அச்சுறுத்தும் பார்வைகளையெல்லாம் சமாளித்தபடி வாழவேண்டியிருக்கிறதே! அவனைக் கண்டு சனங்கள் ஒழுங்குமுறையாக விலகிச் செல்வதை பார்த்த போது, தென்னிந்திய சினிமாக்களின் பாடல் காட்சிகளில் குழு நடனக்காரர்கள் வரிசைக்கிரமாக விலகிச் செல்லும் காட்சிகள்தான் நினைவிற்கு வந்தன. புனர்வாழ்வு முகாமிலிருந்து வந்தவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நினைவில் வரவில்லை.

 

படத்தின் பிரதான ஆண்பாத்திரம் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களின் வழமையான வகைமாதிரி கிடையாது. ‘முன்னாள் போராளிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்’ என்ற ஒற்றைத் தகவலை ஆதாரமாக வைத்து ஹந்தகம படத்தை இயக்கியிருக்கிறார் என நினைக்கிறேன். இப்படியொரு படத்தை ஹந்தகமவிடமிருந்து யாரும் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்கள். இந்த வகையான படங்களை இயக்குவதற்கு ஹந்தகம அவசியமேயில்லை. இராம.நாராயணனே போதும்.

 

இந்த இடத்தில் மிக முக்கியமான விடயமொன்றைக் குறிப்பிட வேண்டும். சனங்களின் புறக்கணிப்பென்பது இரு விதமானது. ஓன்று, அந்த நபர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் நடந்து கொண்ட முறை காரணமானது. மற்றையது, பாதுகாப்பு காரணங்களிலானது. முதலாவது சிறு எண்ணிக்கையிலானது. இந்த வகையான புறக்கணிப்பை, திரளான மக்கள் கூட்டமொன்றிடமிருந்து ஒருவர் எதிர்கொள்ள வாய்ப்புகளில்லை. இந்த கிராமத்தில் நால்வர், அயல் கிராமத்தில் இருவர், இன்னும் எங்கோ ஒருவர் என்ற மாதிரித்தானிருக்கும். இரண்டாவது வகை, பாதுகாப்பு காரணங்களிலானது. இதனை புறக்கணிப்பென்று வகைப்படுத்தவும் முடியாது. தொடர்புகளை தவிர்த்தல் என்றும் சொல்லலாம். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பது பாதுகாப்புப்படைகளிடம் சந்தேகங்களை ஏற்படுத்தலாமென்ற அச்சம். எதிலும் பட்டுக் கொள்ளாத மத்தியதர வர்க்கத்தின் சிந்தனப்போக்கது. இதில் பிரச்சனை அவர்கள் மத்தியதர வர்க்கமாக இருக்கிறார்கள் என்பதல்ல. பாதுகாப்புபடைகளின் கெடுபிடிதான் பிரச்சனையானது. இவை பற்றிய சிறிய தகவலாவது படத்திலில்லை. ஆக, புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வந்தவர்களின் பிரச்சனையை கையிலெடுப்பதாக நினைத்த ஹந்தகமவினால் கடைசிவரை அதனை கையிலோ திரையிலோ எடுக்க முடியவில்லை என்பதே உண்மை.

 

புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், யுத்தகாலம், அந்த அவலம், இதற்குள் வாழ்ந்த மக்கள் பற்றிய நுண்ணிய அவதானங்களின்றி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களை வைத்து எடுக்கப்பட்ட முதலும் கடைசியுமான படம் இதுவல்லத்தான். அபத்தங்களிற்கான எத்தனையோ உதாரணங்களை காட்ட முடியும். பெரும்பாலும் தென்னிந்திய திரைப்படங்களை இந்த வகையான அபத்தங்களிற்கான உதாரணங்களாக காட்ட முடியும். நிலமை அப்படியிருக்க, இந்தப்படத்திற்கு மட்டுமேன் குத்தி முறிந்து விமர்சிக்க வேண்டுமென யாராவது கேட்கலாம்.

 

உண்மைதான். ஆனால் இதில் கவனங் கொள்ள வேண்டிய முக்கியமான விடயமொன்றுண்டு. இந்த நூற்றாண்டில் மாபெரும் அனர்த்தம் ஒன்றை சந்தித்த சிறிய மக்களினத்தின் துயரத்தையும், வாழ்வையும், துயரநிலத்தையும் யாராலுமே புரிந்து கொள்ளப்பட முடியாமல் போய்விடுமோ என்ற நியாயமான ஆதங்கம் இயல்பாகவே எழுகிறது. இதுவரையும் இந்தியர்களிடம் வெளிப்பட்ட காட்சி மற்றும் அச்சு இலக்கியங்களின் மேலோட்டமான பார்வை பற்றிய கடுமையான விமர்சனங்கள் பரவலாக இருந்து கொண்டிருந்ததுதான். இந்த வகையான சிங்கள சினிமாக்களை பார்க்கும் பொழுது, தென்னிந்திய திரைப்படங்களை மன்னித்து விடலாமென தோன்றுகிறது. எவ்வளவுதான் வரலாற்று ரீதியிலான பிணைப்புகளிருந்த போதும், இந்தியர்களிற்கு இன்னொரு நாட்டின் பிரச்சனையிது. எல்லாமே தகவல்கள்தான். ஆனால் அசோக ஹந்தகம அப்படியல்ல. யுத்தத்துடன் நேரடியாக சம்மந்தப்பட்ட இனமொன்றின் முற்போக்கான கலைஞர் எனப்படுபவர். அவரது இனத்தின் தலைமைத்துவங்கள் குறித்த தீராத முறைப்பாடுகள் தமிழர்களிடம் அழியாமல் இருந்து கொண்டிருக்கிறன. யுத்தத்தின் மைய நிலத்தில் வெடித்த பெரும்பாலான குண்டுகளின் எதிரொலி அவரது வீட்டு ஜன்னல்களையும் கடந்து சென்றிருக்கும். நமது வாழ்வையும், துயரையும் முற்போக்கான சிங்களவர்களினாலுமே புரிந்து, தெரிந்து கொள்ளப்பட முடியாதிருக்கிறது என்பது எவ்வளவு துயரமானது. தமிழர்களின் வாழ்வை முற்போக்கான கலைஞர்களே இன்னும் தெரிந்து கொள்ளவில்லையென்றால், சாதாரண சனங்கள் தெரிந்து கொள்ளப்போவது எப்போது?

 

இது யுத்தத்தின் பின்னான காலம். தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். ஆட்சியாளர்களின் ஒவ்வொரு அசைவிலும், சொல்லிலும் அந்த மமதை மிதந்து கொண்டிருக்கிறது. இனநல்லிணக்கம் என்ற சொல்லை போட்டி போட்டபடி தமிழர்கள்தான் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். தோற்றவர்களிடமிருந்து பிறக்கும் நல்லிணக்கம் பயனற்றது, கேலிக்குரியதென்ற போதும். இந்த நிலையில், சிங்கள தரப்பிலுள்ள முற்போக்கு கலைஞரொருவரது பொறுப்பு என்ன? மேம்போக்காக பிரச்சனைகளை அணுகுவதா? பிரச்சனையின் காரணங்கள், அதன் விளைவுகள், யுத்தத்தின் பின்னரும் பிரச்சனையின் காரணங்கள் தொடர்வது, யுத்தத்தின் குற்றவாளிகள் என எதிலும் தொடாமல், அதிகாரங்களுடன் சமரசம் செய்து கொள்வதை நேர்மையான, சனங்களின் படைப்பென எவ்வாறு கொள்வது? அதிகாரங்களுடன் சமரசம் செய்து கொண்டு ஒருதொகுதி உண்மைகளை பேசாது, நடுநிலையென்ற பெயரில் இயங்குவதும் மோசமான பக்கச்சார்பன்றி வேறென்ன?

 

நிலமை இப்படியிருக்க, அபத்தமான படமொன்றை எடுத்துவிட்டு உங்கள் பிரச்சனையை பேசியிருக்கிறேன் என எங்கள் கிராமங்களிலேயே காட்சிப்படுத்தும் கொடுமையை என்னவென்பது?

 

ini-02.jpg

 

இவ்வாறு இந்த திரைப்பட உருவாக்கத்தின் பின்னான அரசியல் பற்றி நிறைய பேசுவதற்கு இடமிருக்கிறது. அதே போலவே, திரைப்படம் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பேசும் அபத்த அரசியல் பற்றியும் நிறைய பேசலாம். படத்தில் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டியது, பிரதான பெண் பாத்திரம். சில சந்தர்ப்பங்களில் நாடகத்தன்மை வெளிப்பட்டாலும், அவர் மிக இயல்பாகவும், நன்றாகவும் நடித்திருக்கிறார். அந்த பாத்திரம் குறித்து இதனை மட்டுமே சொல்ல முடிகிறது. வேறதனைச் சொல்ல? ஹந்தகமவின் கமரா வழியே வெளிப்பட்ட நல்ல நடிகையொருவரை திரைக்கதை உருக்குலைய வைத்திருக்கிறது. அவ்வளவு உயிர்ப்புடன் நடித்த பெண் பாத்திரத்தை ஒற்றை வரியில் கடந்த செல்வதில் எனக்கும் உடன்பாடு கிடையாதுதான். அதனால் இன்னொரு குறிப்பு. அவர் சற்று சிரத்தையெடுத்து தனது தொப்பையை குறைத்துக் கொண்டால் அவரது திரையுலக வாழ்விற்கு மேலும் பயனுடையதாக அமையலாம்.

 

யுத்த நாட்களில் தனது தகப்பனாருடன் இலங்கை வானொலியில் ஒலிப்பரப்பத்தக்கதான நாடகபாணி உரையாடலொன்றை நிகழ்த்துகிறார். கட்டாயமாக படைக்கிணைக்கப்படுதிலிருந்து தப்பிக்கும் எண்ணமுடையவரைப் போல ஆரம்பத்தில் தெரிந்தாலும், போருக்கு செல்வதற்கு பெற்றவர்களிடமிருந்து வீரத்திலகத்தை எதிர்நோக்கும் அரியாத்தை போலவும் தெரிகிறார். ஆனால், அடுத்த காட்சியில் வயோதிபரொருவரின் அருகில் படுத்திருக்கிறார். தெரிவுகளற்ற திருமணமது. அசோக ஹந்தகம நிறைய மலையாள சினிமா பார்த்திருப்பார் என நினைக்கிறேன். பணத்திற்காகவும், வேறு நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பதற்கும் வயோதிபர்களை திருமணம் செய்யும் இளையபெண்கள் அந்த திரைகளில் மின்னியிருப்பார்கள். ஆனால் நமது சூழலில் எவ்வளவு நெருக்கடிகளிருந்த போதும், இவற்றிற்கான வாய்ப்புகள் இல்லை. ஓரளவிற்கேனும் கல்வியறிவுடைய, மரபார்ந்த பார்வைகளினால் இறுக்கமாகியுள்ள வாழ்க்கை நெறிகளையுடைய சமூகம் ஒன்றைக் குறித்த படமெடுக்கும் பொறுப்பணர்வு இயக்குனரிடம் இல்லாமலிருந்தது ஆச்சரியம்தான்.

 

ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, இந்தப்படம் முழுக்க முழுக்க வழமையற்றவற்றின் தொகுப்பாகவே அமைந்து விடுகிறது. யுத்தம் நடந்தது. போராளிகள் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற மூன்றே மூன்று தகவல்களின் மீதும் கட்டியெழுப்பப்பட்ட யதார்த்தத்திற்கு அப்பாலான சம்பவங்களின் தொகுப்பிது. அதனாலேயே ஈழத்தமிழர்களைப் பற்றிய படம் என்ற உணர்வு கடைசிவரை கிடைக்கவேயில்லை. யாழ்ப்பாணத்திற்கு வெளியே படப்பிடிப்பு நடத்தப்பட்டு, இரண்டு மூன்று இடங்களில் வரும் பிரபாகரன் என்ற வசனங்களையும் நீக்கிவிட்டால், இது ஈழத்தமிழர்களைப் பற்றிய படமென யாராலுமே கண்டு பிடிக்க முடியாது.

 

படம் முழுக்க வெளிப்பட்ட இன்னொரு பிரதான குறைபாடு திரைக்கதையின் பாய்ச்சல். இடையிடையே பல காட்சிகளை வெட்டி அகற்றியதைப் போலப்பட்டது. காட்சிகளின் நகர்வு மட்டும் கதையை புரிந்து கொள்ள உதவவில்லை. சமயங்களில் நமது ஊகங்களும் அவசியமாக இருந்தன. (படம் முடிந்து விட்டதென்பதையும் எழுத்து வரிகள் திரையில் ஓடத் தொடங்கிய பின்னர்தான் ஊகித்தேன்) அருகிலிருந்த நண்பர் சொன்னார், இது பின்நவீனத்துவ மற்றும் மாற்று சினிமா. அப்படித்தான் இருக்கும் என.

 

யுத்தம் என்ற பெயரில் அனாமதேயமாக கேட்கும் நாலைந்து வெடிச்சத்தங்களுடன் அந்த வயோதிபர் இறந்து விடுகிறார். இதன்மூலம் யுத்தத்தில் சனங்கள் கொல்லப்பட்டதற்கு அனாமதேயமான இன்னொரு தரப்பும் காரணமாக இருந்திருக்கிறதென்ற உண்மையை நமக்கு பின்நவீனத்துவப் பாணியில் புலப்படுத்துகிறார். அடுத்த காட்சியில் ‘மர்மமாக’ மரணமடைந்த வயோதிபரை இரண்டு மூன்றுதரம் அந்தப்பெண் உலுப்புகிறார். அடுத்த காட்சியில் தனியாக ஓடத் தொடங்குகிறார். ஆங்காங்கே எரியும் நெருப்பிற்கிடையே இரண்டொரு தரம் விழுந்தெழுந்து நாயகி மார்புச் சேலை விலகியிருக்க ஓடுகிறார். அந்த காட்சி காட்டப்பட்ட விதத்தினால் எனக்கு இயல்பாகவே ஒரு சந்தேகம் வந்தது. சேலையை விலக்கியதற்காக அப்படி ஓடுகிறாரா அல்லது ஓடுவதற்காக சேலையை விலக்கினரா? எப்படியோ. ஓடுகிறார். ஓடுகிறார். யுத்தத்தின் எல்லைவரை ஓடுகிறார். அப்படி ஓடுவது மிகவும் அவலமான காட்சியென்பதால், அந்தக் காட்சியை சற்றுநேரம் குளோசப்பில் காட்டி எங்கள் நெஞ்சங்களையும் பதற வைத்திருக்கிறார்.

 

அடுத்த காட்சியில் களைத்து விழுந்து வந்து சேர்வது தனது வீட்டிற்கு. கலியாணம் நடந்த தடயமழியாமல் இருக்கிறது. வாசலில் வாழைக்குலை தொங்குகிறது. அலங்காரங்கள் சிதைந்து கிடக்கின்றன. இந்தக் கட்டத்தில்தான் இது ஒரு பின்நவீனத்துவ திரைப்படமாக இருக்கலாமென்ற உறுதியான முடிவிற்கு வந்தேன். காரணம், கட்டாயமாக படைக்கு இணைக்கப்படும் சூழலிருந்த பிரதேசத்தில், நிம்மதியாக ஓரிரவு உறங்கக்கூட முடியாத அவலம் நிலவிய யுத்த பிரதேசத்தில் இப்படியாதொரு காட்சியை கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. ஒரு பகுதியில் யுத்தம் நடக்கிறது. இன்னொரு பகுதியில் கொண்டாட்டமான கலியாணம் நடக்கிறது. கலியாணம் முடித்த வயோதிபர் பெண் வீட்டிற்கு வருவதற்குப் பதிலான, இவள் வயோதிபரிடம் செல்கிறாள். அவர் இறந்ததும், யுத்த பகுதியிலிருந்து சாதாரணமாக இரண்டொரு தரம் விழுந்தெழும்பி ஓடி தப்பி விடுகிறாள். யுத்த வலயத்திலிருந்து சனங்கள் தப்பிப்பதென்பது அவ்வளவு இலகுவாகவா இருந்தது?

 

ini-01.jpg

 

பின்னொரு காட்சியில், மிக முக்கியமான செய்தியொன்றை சொல்கிறார். ஏற்கனவே புதைத்து வைத்திருந்த துப்பாக்கியொன்றை கிளறியெடுப்பதென்ற கடினமான முடிவிற்கு அவன் வருகிறான். வாழ்வியல் நெருக்கடிகள்தான் அவனை இந்தக் கட்டத்திற்கு கொண்டு வந்தன. உயிராபத்து. அவன் என்றேனுமொருநாள் அதனை தூக்குவான் என்ற உள்ளுணர்வு இருந்ததனால் அவள் ஏற்கனவே அதனை ஒளித்து வைத்து விடுகிறாள். நெருக்கடியான சமயத்தில் புதைத்த இடத்தில் அவன் மூச்சிறைக்க தோண்டுகிறான். துப்பாக்கி இல்லை. ஆனால், வீட்டின் முன்பக்கத்தில் அவள் துப்பாக்கியுடன் நின்று அத்தனை ரவைகளையும் மேல்வெடி வைத்தே முடிக்கிறாள். அவன் துப்பாக்கியை தூக்கிவிடக் கூடாதென்ற பதகளிப்பு அவளிடமிருந்ததைவிட, ஹந்தகமவிடம் இருக்கிறது. இந்த இடத்தில் கட்டாயமாக குறிப்பிட வேண்டிய விடயங்களுண்டு.

 

ஈழத்தமிழர்களிற்கு- குறிப்பாக புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட போராளிகளிற்கு- இனி வன்முறை சார்ந்த அரசியல் பயனற்றது, ஆபத்தானது என்று பொதுவாக உருவாகி வரும் அபிப்பிராயத்தையே இந்த காட்சியும் வழிமொழிகிறது. யதார்த்தத்தில் இந்த பார்வையில் சரியும், நியாயமும் இருக்கத்தான் செய்கிறது. கடந்த காலத்தின் கசப்பான காயங்கள் ஆறாமலேயே நம் மத்தியில் இருக்கிறது. இந்த அடிப்படையில் இந்த பார்வை சரியானதுதான். ஆனால் இரண்டு தரப்புகளையும் உள்ளடக்கிய பொதுதளத்தில் பிரச்சனைகளை பேச முற்படும் கலைஞர்கள் இவ்விதமான ஒற்றைப் பார்வைகளை கொண்டிருப்பது அபத்தமானது. தமிழர்கள் வன்முறை அரசியலில் ஆர்வம் காட்டக்கூடாதென்பதை நான் பிழையானதாக கருதவில்லை. மென்முறை போராட்டங்களும் அவசியமற்று போக வேண்டும். அதற்காக தான் சார்ந்த சமூகத் தரப்பு செய்ய வேண்டிய எதைப்பற்றியும் படம் ஏன் பேசவில்லை?

 

மிக நீண்ட காலத்தின் முன்னர் ஆயுதப் போராட்டம் தொடங்கிய நாட்களில் விசைவில்லை அழுத்தினால் பூக்கள் பூக்குமென யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். அது இரத்தத்தையும், கண்ணீரையுமே கொண்டு வருமென்ற சிறியளவிலான புரிதலாவது அத்தனை பேரிடமும் இருந்திருக்கும். ஆனால், காலம் ஆயுதங்களை வரவழைத்திருந்தது. அதாவது தமிழர்கள் ஆயுதம் தூக்குவதற்கான காரணங்கள் இருந்தன. அவை ஒன்றுகூட குறையாமல் பல்கிப் பெருகி இன்றுமிருக்கின்றன. வரிக்கு வரி தமிழர்களிற்கான உபதேசங்களை கொண்ட இந்தப்படத்தில், இதெநெதனையும் பற்றி ஏன் குறிப்பிடவில்லை?

 

அடுத்தது, அந்தப்பெண் மேல்வெடி வைக்கும் காட்சிகள்தான் அவள் திரையில் தோன்றும் இறுதிக்கட்டங்கள். அதன் பின்னர் தோன்றவில்லை. மிக எளிய யதார்த்தம் ஒன்றைச் சொல்கிறேன். சாதாரண ஒருவர் துப்பாக்கியை தூக்கினால் அவர் தொடர்ந்து உயிர்வாழ சாத்தியமில்லை என்பதே இன்றைய யதார்த்தம். இருந்த சுவடே இல்லாமல் காணாமல் போவார் என்பதுதான் இலங்கை நிலவரம். அண்மைய நிலவரங்களின்படி யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டவர்கள், விசாரணை செய்யப்பட்டவர்களில் குறிப்பிடக்கூடியளவிலான வீதத்தினர் விடுதலைப்புலிகளின் வணிக நிறுவனங்களில் பணியாற்றிய சாதாரண ஊழியர்கள். மாவீரர் தினம் அனுட்டித்த மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் இருக்கிறார்கள். நிலமை இப்படியிருக்க, அந்தப்பெண்ணை இராணுவம் சாதாரணமாக விட்டிருக்குமா? இந்த காட்சியின் பின்னாக அவரை திரையில் காட்டாததன் மூலம், அவருக்கு நேர்ந்ததை ஏதாவது பின்நவீனத்துவப்பாணியை உபயோகித்து இயக்குனர் சொல்ல முயல்கிறாரோ தெரியவில்லை.

 

படம் முழுக்கவே இவ்விதமான மேலோட்டமான, நடுநிலையென்ற பெயரில் வெளிப்படும் அபத்தமான பார்வைதான் விரவியிருக்கிறது. பிரச்சனைக்குரிய இரண்டு தரப்பிலும் கை வைக்காமல்- அதிலும் குறிப்பாக அரசை நோகடிக்காமல்- அதனால் விளைந்த பிரச்சனைகளை மட்டுமே சொல்ல எத்தனித்துள்ளது. அதாவது, துப்பாக்கியின் குழலைவிட்டு தோட்டா புறப்பட்டதற்குப் பின்னரான சம்பவங்கள். எந்தத் துப்பாக்கியென்பதும் அக்கறையில்லை. யாருடைய துப்பாக்கியென்பதிலும் அக்கறையில்லை. இப்படியாக நடுநிலையாக- எந்தத் தரப்பையும் நேரடியாக குற்றம் சொல்லியிருக்கவில்லை. அதனால் இரண்டு தரப்புகளின் ஆதரவாளர்களிற்கும் படம் உகந்திருந்த பேராச்சரியம் நடந்தது. இலங்கை முழுவதும் திரையிடவும்படுகிறது, கண்மூடித்தனமான  ஆதரவாளர் ஜமுனா ராஜேந்திரனும் கொண்டாடுகிறார்.

 

கனடாவில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ளச் சென்ற ஹந்தகம, அந்த விழாவிற்கு மேலதிகமாக அங்குள்ள தமிழ்சமூகத்திற்கும் இந்த படத்தைக்காட்டி, உரையாடலொன்றையும் நிகழ்த்தியிருந்தார். கனடிய அரச, புலி ஆதரவாளர்களினால் மட்டுமல்ல, நடுநிலையானவர்களினாலும் படம் கொண்டாடப்பட்டிருந்தது. இப்படியாக காண்போரையெல்லாம் பூரிப்படைய வைத்திருந்தது.

 

இரண்டு தரப்புக்களையும் சீற்றமடைய வைப்பதில்லை என்ற சமரசம், தேர்ந்து கொண்ட களம்பற்றிய அறிவின்மை போன்றன படத்தை மிகப்பலவீனமாக்கியுள்ளது. கதை, திரைக்கதை, வசனம், இவற்றின் நேரடி மற்றும் மறைமுக அரசியல் இன்னும் பலவற்றிலும் மிகுந்த பலவீனமாக இருக்கிறது. முக்கியமாக திரையில் சொல்ல முயன்றதை சொல்ல முடியாமல் புகைந்தடங்கும் பழுதடைந்த வெடியைப்போல அடங்கிவிடுகிறது. சலிப்பேற்படுத்திய பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்களை மூடிக் கொண்டேன். அப்பொழுதெல்லாம் இலங்கை வானொலியில் நாடகம் கேட்கும் நாட்கள் நினைவிற்கு வந்தபடியிருந்தன. இலங்கையில் உருவாகும் தமிழ் படங்களிற்கு இருக்கும் பிரதான சாபமே இதுதான். இயல்பான உரையாடல்களைக் காணவே முடிவதில்லை. சிங்கள இயக்குனர் தமிழ்மொழியில் படமெடுத்ததனால் உரையாடல் சிக்கல்களை அவதானிக்க முடியாமல் போயிருக்கவும் வாய்ப்புண்டு.

 

ஒருவர் தனது கருத்தைச் சொல்வதற்கு அரசினதோ, இராணுவத்தினதோ ஒத்துழைப்பு கிடைப்பது மட்டுமே போதுமென்றால் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் செய்தியறிக்கைளெல்லாமே ஒவ்வொரு திரைக்கதைகள்தான். ஆனால் இவை மட்டுமே கலைஞர்களிற்கு போதமானவையல்ல. சமூகம் குறித்த நுண்ணிய அவதானங்களும், பொறுப்புணர்வும் மிக அவசியம். கலைப்படைப்பென்ற அளவில் படைப்பின் கலை பெறுமானங்களும் முக்கியமானவை.

 

படத்தில் இவையெதிலும் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை. முக்கியமாக சிங்கள இயக்குனர் ஒருவர் தமிழ் மொழியில் படம் இயக்கும் பொழுது அதிக சிரத்தையெடுக்க வேண்டியிருக்கும். பரிச்சயமான களத்தில் செயற்படுபவரை விடவும், பரிச்சயமற்ற களத்தில் களமிறங்குபவரிற்கு அதிக சிரத்தை அவசியம். அசோக ஹந்தகம இதெதனையும் கணக்கிலெடுத்திருக்கவில்லை. தமிழ் மொழியிலான உரையாடல்கள் இதனை புலப்படுத்துகின்றன. சில சந்தர்ப்பங்களில் காகிதத்தில் எழுதப்பட்டவற்றையே வாசித்திருக்கிறார்கள்.

 

இயக்குனர் முன்னர் இயக்கிய சில படங்கள் அதிகாரத் தரப்பினரை முகம் சுளிக்க வைத்ததற்காகவும், ஒரு திரைப்படம் திரையிடப்படாமலேயே உள்ளதற்காகவும், தமிழர்களின் பிரச்சனையை பேச துணிந்ததற்காகவும் இந்தப் படத்தை வரவேற்ற வேண்டுமென்று புரிந்து கொள்ளவே முடியாத வாதத்தையும் சிலர் முன்வைக்கிறார்கள். முன்னர் அதிகார தரப்பினரின் முகஞ் சுளிப்பிற்கு உள்ளானதோ அல்லது இந்தப்படத்தை அந்த தரப்பின் ஆசீர்வாதங்களுடன் திரையிட்டதோ திரைப்படம் குறித்த அபிப்பிராயங்களில் செல்வாக்குச் செலுத்தவல்லவையல்ல. படைப்பை மட்டுமே அவதானத்திற்குட்படுத்த வேண்டும். படைப்புச் செயற்பாட்டில் நிலுவை வைத்தெல்லாம் சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. தவிரவும், நமது பிரச்சனையை பேச துணிந்ததாலேயே ஹந்தகமவை வரவேற்க வேண்டுமென்றால், சீமானின் ஒவ்வொரு உரையையும், நெடுமாறனின் ஒவ்வொரு புத்தகத்தையுமல்லவா நாம் கொண்டாட வேண்டும். நமது பிரச்சனையை பேச துணிவதல்ல முக்கியம். அதனை சரியாகப் பேசுகிறாரா என்பதே முக்கியம்.

 

தென்னிந்தியாவில் படப்பிடிப்பு நடத்தப்படும் ஈழம்பற்றிய திரைப்படங்களிற்கும், யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இந்த தென்னிலங்கைத் திரைப்படத்திற்குமிடையில் பெரிய பேதங்களென்று எதுவுமில்லை.

 

ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, பிரச்சனைகளின் மையங்களை தவிர்த்து, விளைவுகளை மட்டுமே தொடர்ச்சியற்ற காட்சித் துண்டங்களாக காட்டப்பட்டதனால், இடையிடையே நிறையக் காட்சிகளை யாரோ வெட்டியெடுத்து விட்டார்களோ என்ற சந்தேகம் வந்தது.

 

உள்ளுர் தமிழ்படங்களை இலங்கையர்கள் வரவேற்பதில்லையென்ற அபிப்பிராயம் பொதுவாக உண்டு. இந்த திரைப்படத்தை காண சென்ற சமயத்தில் நேர்ந்த சொந்த அனுபவத்தைக் கொண்டும் அப்படியான உறுதியான முடிவிற்கு வரலாம்தான். ஆனால் இப்பொழுது எனக்குள்ள சந்தேகம், இப்படியான அபத்தமான மேலோட்டமான பார்வைகளையுடைய படங்களை எடுத்துவிட்டு அதனை மக்கள் வரவேற்க வேண்டுமென எப்படி எதிர்பார்க்க முடியும்? சொந்த செலவில் சூனியம் வைப்பதற்கு எத்தனை பேர் துணிவார்கள்.

 

இந்த படம் பார்த்த அன்று இரவு, மிக சாவகாசமாக உட்கார்ந்திருந்த போது நண்பரொருவர் படத்தைப் பற்றிய அபிப்பிராயத்தைக் கேட்டார். சட்டென ஒற்றை வரியில் சொல்லி விட்டேன். அந்த ஒற்றைச் சொல்லையே கனடிய நண்பரும் சொல்லியிருந்தார். இப்பொழுது யோசிக்க, அவர் அவசரமான சூழலில் அந்தப் பதிலைச் சொல்லியிருக்கமாட்டார் என உறுதியாக நம்புகிறேன். ஏனெனில், படத்தைப் பற்றி சொல்வதற்கு என்னிடமும் அந்த ஒற்றை வார்த்தை மட்டுமே இருந்தது. அது,

 

மொக்கை.

 

0000000

 

 

http://eathuvarai.net/?p=2686

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.