Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கைப்பாவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கைப்பாவை

 

 

bear.jpg
வெள்ளிக்கிழமை என்றாலே குதூகலம்தான்.  எப்படியும் காலை நேரம் முழுக்க அடுத்த வாரத்திற்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் கூட்டங்கள் இருக்கும். அவை நடந்து முடிந்து தத்தம் இருக்கைகளுக்குச் செல்லும் போது நண்பகல் உணவு வேளை வந்து விடும். வார ஈறில் நீ என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்பதும், நான் என்ன செய்யப் போகிறேன் எனச் சொல்வதிலுமாக ஓரிரு மணி நேரங்கள் கழியும். பிறகென்ன? வார ஈறும், அதையொட்டிய  விடுமுறை நாட்களும்தான். மகிழ்ச்சி!

அந்நினைப்பினால் மேலிட்ட மனத் துள்ளாட்டத்தினூடாக வந்து கொண்டிருந்த என்னை, அலேக்காகத் தூக்கியது கமகம வாசனை. தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்துதான் கமழ்ந்தடிக்கிறது அந்த நறுமணம்.

நான் குடியிருக்கும் மிச்சிகன் மாகாணத்தில் இருக்கும் மார்ஷல் எனும் சிற்றூரிலிருந்து பதினேழாவது மைல் தொலைவில், டெட்ராய்ட் நகரிலிருந்து சிகாகோ செல்லும் விரைவுச்சாலையில் அமைந்திருக்கிறது கெலாக்( Kellogg Cereal Company )  தானியத்திண்டித் தொழிற்சாலை. இத்தொழிற்சாலை அமைந்திருக்கும் சிறுநகரான பேட்டில்கிரீக் நகர், சீரியல் சிட்டி என்றும் அழைக்கப்படுகிறது. எங்கள் நிறுவனத்தின் போட்டி நிறுவனமாகிய போஸ்ட் சீரியலும் இதே ஊரில்தான் அமைந்திருக்கிறது.

கெலாக்  நிறுவனத்தை, வில் கீத் கெலாக் என்பவர் 1906ஆம் ஆண்டு நிறுவினார். அவரது தம்பியாகிய ஜான் ஹார்வே கெலாக் என்பவரே தானியத்திண்டி( cereal )யைக் கண்டு பிடித்தவர் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்கும் பெருமை. ஆங்கிலத்தில் சீரியல் எனப்படுகிற தானியத்திண்டி இல்லாத வீடு அமெரிக்காவில் கிடையாது. காலையிலேயே சமைக்கப்பட்ட உணவும் இறைச்சியும் உண்டு கொண்டிருந்த மேலைநாட்டைத் திருப்பிப் போட்டது தானியத்திண்டி எனச் சொல்லலாம். அதிலும் கெலாக் தானியத்திண்டிக்கென்றே ஒரு தனியிடம் சந்தையில் எப்போதும் உண்டு.

வாகனத் தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு நேராக என் அறைக்குச் சென்ற நான், மின்னஞ்சல்களைப் பார்த்து மறுமொழி கூற வேண்டியவற்றுக்கெல்லாம் பதில் மடல் அனுப்பினேன். அதன் பிறகு, அடுத்தடுத்து நடந்த கூட்டங்களில் முனைப்புடன் பங்கேற்றுக் கொண்டிருந்தேன். பொதுவாக கூட்ட அறைக்குள் என் அலைபேசியை எப்போதும் எடுத்துச் செல்வதில்லை. எப்படியாகிலும் அது என் கவனத்தைச் சிதற வைப்பதோடு மற்றவரது கவனிப்புக்கும் ஊறு விளைவிக்கும் என்பதாலேயே.

தானியத்திண்டிக்கான சில்லறை வணிகத்தை இணையத்தினூடாக மேம்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. இடையிடையே அதற்கான மென்பொருள் கட்டமைப்பு குறித்த வினாக்களை நான் விடுத்துக் கொண்டிருந்தேன். அதே நேரத்தில் எங்கள் துறையின் நேர்முக உதவியாளர் மேரி அறைக்கு வெளியே நின்றபடி என்னைப் பார்த்துச் சைகை செய்து கொண்டிருந்தாள். இவள் எதற்கு என்னை அழைக்கிறாள் எனக் கோபமாகவும் இருந்தது; காரணத்தை அறியும் பொருட்டு ஆவலும் மேலிட்டது எனக்கு. அமைதியாக கூட்ட அறையினின்று வெளியேறினேன்.

“என்ன மேரி? நான் முக்கியமான ஒரு கூட்டத்தில இருக்கேன். கொஞ்சம் பொறுத்திருக்கக் கூடாதா?”

“மன்னிக்கணும் மணி. உன்னோட மனைவி சுமதி அழைப்புக்கு மேல அழைப்பு விடுத்து, உடனே உன்கிட்ட பேசியே ஆகணும்னு சொல்றாங்க!!”

ஒரே குழப்பமாக இருந்தது. பக்கத்து ஊரான ஆல்பியனில் இருக்கும் மருத்துவமனையில் உடலியக்க மருத்துவராக வேலை பார்க்கும் என் மனைவி இந்நேரம் வேலைக்குப் போயிருப்பாள். மகள் அமிழ்தா குழந்தைகள் காப்பகத்தில் இருப்பாள். ஒரு வேளை ஊரிலிருக்கும் அம்மா, அப்பாவுக்கு உடல்நலக் குறைவு ஏதாவதா? எப்போதும் இல்லாதபடிக்கு என்னை எதற்கு இவள் அழைக்க வேண்டும்??

அலைபேசி அறையில் இருக்கிறது. கையில் கடிகாரம் கட்டும் பழக்கமும் கிடையாது. மேரியிடமே நேரம் என்னவெனக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். காலை மணி பதினொன்று ஆகிறது. ஆக, இந்தியாவில் இரவு ஒன்பதரை மணி. சரி, முதலில் அம்மாவையே அழைத்துப் பேசி விடுவோமென நினைத்து நேராக எனதறைக்குச் சென்றேன். அலைபேசியினூடாக ஊரிலிருக்கும் எங்கள் வீட்டுக்கு அழைக்க, தொடர்பில் வந்த அப்பாதான் பேசினார்.

“அப்பா, நான் மணி பேசுறேன். எதும் பிரச்சினையா?”

“ஏம்ப்பா? நானும் அம்மாவும் இப்பதான் படுக்கலாம்னு விளக்கை அணைச்சோம். என்ன இந்த நேரத்துல?”

“ஒன்னும் இல்லப்பா. எனக்கு எதோ போன் வந்திச்சின்னு இங்க சொன்னாங்க. சரி, அம்மாகிட்ட குடுங்க!”

அம்மாவிடம் சுருக்கமாகப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டேன். இனி சுமதியை அழைக்க வேண்டும். மருத்துவமனையில் அலைபேசிகளுக்கு செயலிழப்புச் செய்து விடுவார்கள். எனவே சுமதியின் அலைபேசிக்கு நேரிடையாக அழைப்பு விடுத்துப் பயனில்லை. சுமதியின் அலுவலக உதவியாளரை அழைத்து, சுமதியை என் அலைபேசிக்கு அழைப்பு விடுக்கச் சொன்னேன். ஓரிரு மணித்துளிகளில் மருத்துவ மனையிலிருந்து அழைப்பு வருவதைக் காட்டிக் கொடுத்தது அலைபேசியின் எண் காட்டி.

“அலோ!”

“சார், சுமதி இஸ் நாட் இன் டுடே!!”

அதிர்ச்சியாக இருந்தது. சுமதி, வேலைக்குப் போகலையா? ஏன்?? போகும் வழியில் எதுவும் விபத்து நேர்ந்திருக்குமோ? இவளுக்கு மட்டுந்தான் பிரச்சினையா? குழந்தை அமிழ்தா??  ஒரு மாதிரி நெஞ்சு படபடத்தது. இது போன்ற நேரத்தில் நெஞ்சுத் துடிப்பு அதிகரிப்பது இயல்புதானே? சுமதியின் அலைபேசி எண்ணுக்கே அழைப்பு விடுத்தேன்.

”அலோ!”

“ஏங்க, எத்தினிவாட்டி கூப்பிடுறது? போனை எடுக்க மாட்டீங்களா??”

“சொல்றா! சாரி, நான் மீட்டிங்ல இருந்தேன்.  எதும் பிரச்சினையா? என்ன ஆச்சி??”

“ஒன்னும் இல்ல. கொஞ்சம் எனக்கு ஒடம்புக்கு செரியில்ல. ஆஃப் எடுத்திட்டேன்!”

“ஆமா!  நீ டுயூட்டில இருப்பன்ட்டு அங்க கூப்ட்டிருந்தேன்; சொன்னாங்க!”

“ஆமா, நீங்க அங்க கூப்பிட்டிருப்பீங்கல்ல? நான் வீட்டிலதான இருக்கன்னு நினைச்சி, அமிழ்தாவை லஞ்ச்சுக்கு நான் பிக் அப் செய்யறேன்னு சொல்லிட்டு வந்தங்க. இப்ப எனக்கு ரொம்பவும் முடியலை. நீங்க போக முடியுமா?”

“இவ்வளவுதானா? நான் ரொம்ப டென்சன் ஆயிட்டேன். ஆனா, அமிழ்தாவுக்கு கார் சீட்டு??”

“அதான் கழட்டிப் போட்ட இன்ஃபேன்ட் சீட்டை, உங்க கார்ல பின்னாடி வெச்சிருக்கீங்கல்ல?”

“கரெக்ட்! அப்ப,  நூன் டைம், பனிரெண்டுக்கு போயி அழைச்சிட்டு நேரா வீட்டுக்கு வந்துடுறேன்!”

“வேண்டாம். வெளியிலயே சாப்பிட்டுட்டு, விட்டு கூப்பிட்டுட்டு வந்திடுங்க.  வெள்ளிக் கிழமைங்றதால, சாயுங்காலம் அஞ்சு மணிக்கு முன்னமே பிக் அப் செய்திடணுங்க!”

மகள் அமிழ்தாவுடன் வீட்டிற்குச் சென்று சுமதியுடன் இருந்து விட்டு வரலாம் என நினைத்தேன். அது நடக்கவில்லை எனும் ஏமாற்றத்துடன் கேட்டேன், “ஏன்டா, உனக்கு ஒடம்புக்கு என்ன பிரச்சினை?”

“ஏங்க, இதென்ன கேள்வி? கல்யாணம் ஆயி ஆறு வருசம் ஆச்சி. இன்னுமா? வீட்டுக்கு தூரம், ரொம்பப் படுத்துது; அதான்! அவ வீட்டுக்கு வந்தா, என்ன மம்மி, ஏது மம்மீன்னு கேட்டுக் கொடைஞ்செடுப்பா!! வெளியில எதனாவது வாங்கிக் குடுத்து சமாளிங்க!!”

“சாரிடா; நாம் பாத்துக்குறேன்!”

மகள் அமிழ்தாவுக்கு மூன்று வயதுக்கும் மேலாகிறது. மிகவும் சுட்டி. எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளுமட்டும் கேள்விக் கணைகளால் துளைத்தெடுப்பாள். நண்பகற் பொழுது அவளுடன் கழியப் போவதை எண்ணி மகிழ்ச்சியெனக்கு. ஆனால் என்னை எதிர்பார்த்திருக்க மாட்டாள். அவள் என்னைக் கண்டு இன்ப அதிர்ச்சி கொள்ளப் போவது உறுதி. நாளைக்கு அருகில் இருக்கும் காலாமசு ஆற்றில் படகு சவாரிக்கு அழைத்துப் போகிறேன் எனச் சொல்லி இருக்கிறேன். அதை நினைத்தாலே எனக்கும் குதூகலம் பிறக்கிறது. அழைத்துப் போக வேண்டும். ஆற்றங்கரைப் பூங்காவில் படங்கள் நிறைய எடுத்து, அம்மா அப்பாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  இந்த மாதத்தில் செய்தால்தான் உண்டு. அடுத்த மாதமான ஆகஸ்டில் இருந்து மிச்சிகன் மாகாணத்தில் குளிரோ குளிர்தான்.

பதினொன்றரை மணிக்கெல்லாம்  அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, மார்ஷல் குழந்தைகள் காப்பகத்துக்கு  சென்று சேர்ந்துவிட்டேன். கண்ணாடித் தடுப்புச் சுவரில் பார்க்கிறேன். இடது கையில் கைப்பாவையான க்யூட்டெடியுடன் இருக்கையில் அமர்ந்திருந்தவள் என்னைப் பார்த்து விட்டாள். இன்னும் பத்து மணித்துளிகள் இருக்கிறது உணவு இடை வேளைக்கு.  என்னைக் கண்டதில் அவளால் அங்கு இருக்க முடியவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது.

அவள் வருவதற்கு முன்பாக அவளது கைப்பாவையான ’க்யூட்டெடி’யைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். நாங்கள் சார்லட் பெருநகரத்தில் குடியிருந்த போது அவளது முதல் பிறந்த நாளைக் கொண்டாடினோம். அப்போது ஆந்திர நண்பர் வெங்கட்டா பரிசாகக் கொடுத்த துணியாலான சிறு கரடி பொம்மைதான் அது.  அமிழ்தாவின் கைக்கு அடக்கமாக மூன்று இஞ்ச் உயரத்தில் இருக்கும். குளிக்கும் போது தவிர, எப்போதும் அதைத் தனது இடது கையில் கவ்விப் பிடித்தபடி இருப்பாள்.

இந்த இரண்டரை ஆண்டுகளாக அமிழ்தாவிடம் சிக்குண்ட அந்தப் பொம்மை, படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. அழுக்குப் படிந்து, கிழிந்து, நைந்து, சிதையும் தருவாயில் இருக்கிறது க்யூட்டெடி. உறக்கத்தில் கூட கை நழுவிவிடக் கூடாது; அவ்வளவுதான், அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவாள். அந்த அளவுக்கு க்யூட்டெடியோடு அமிழ்தா ஒருமித்துப் போயிருக்கிறாள்.

இதோ நண்பகல் மணி பனிரெண்டு ஆகிவிட்டது. எழுச்சியோடு ஓடி வந்து கொண்டிருக்கிறாள் என் செல்லம் அமிழ்தா.

“அப்பா, அப்பா, அம்மா எங்கப்பா?”

“அம்மா, டூட்டிக்குப் போயிட்டாங்கப்பா!”,  வேறு வழியில்லை; பொய் சொல்லித்தான் ஆக வேண்டும். அல்லாவிடில் வீட்டுக்குப் போக வெண்டுமென அடம் பிடிப்பாள்.

“இம்… இம்…  என்னை வந்து பிக் பண்ணுறேன்னு சொன்னாங்க?”, மழழையோடு குழைந்தாள்.

“இல்ல தங்கம்; எதோ அசஸ்மெண்ட் இருக்குன்னு வரச் சொல்லிட்டாங்களாம். அதான் அப்பா வந்திருக்கன்ல?”, ஒரு பொய் பல பொய்களைப் பெற்றெடுக்கும் என்பது இதுதான் போலிருக்கு.

ஒரு மணி நேரம் கரைந்ததே தெரியவில்லை. அருகிலிருந்த ஜேசன் டெலி உணவகத்தில் இருவருமாக உண்டு மகிழ்ந்தோம். அவளுக்கு உருளைக்கிழங்கு நொறுக்கு என்றால் மிகவும் விருப்பம். அவள் விருப்பமே எனது விருப்பமும். நன்றாக அடித்து நொறுக்கினோம். போதாக்குறைக்கு அவளது அம்மாவும் அருகில் இல்லை. அல்லாவிடில், கொலஸ்டிரால், அது இது என்று படுத்துவாள்.

”அப்பா, வீட்டுக்கு போலாம்ப்பா!”, சொல்லி வாயைக் கூட மூடவில்லை. வெடுக்கென தனது இடது கையை இழுத்து, அக்கையிலிருக்கும் க்யூட்டெடிக்கு அரும்பிஞ்சு இதழ்களால் முத்தம் கொடுத்தாள்.

“இல்லடா கண்ணு. அப்பாவுக்கு இன்னும் ரெண்டு மீட்டிங் இருக்கு; ஆபிசுக்குப் போகணும். ஃபோர் தெர்ட்டி, நான் வந்திடுவேன், சரியா? ”

“போங்கப்பா!”, சலித்துக் கொண்டாள்.

“நாளைக்குதான் நாம காலாமசு(Kalamazoo) போறம்ல? போட் ரைடு, பிஷ்ஷிங் எல்லாம் இருக்கல்ல??”

அவ்வளவுதான், கதிரவன் கண்ட மலர் போல முகம் மலர்ந்தது. அதே மலர்ச்சியுடன் காப்பகத்தில் விட்டுவிட்டு வந்து அலுவலகத்தை அடைந்ததும், சுமதிக்கு அழைத்து விபரத்தை தெரியப்படுத்தி ஆயிற்று.  அதன் பிறகு அலுவலக நண்பர்களிடம் வார ஈறுக் களிப்புகள் குறித்தான பேச்சு நீடித்தது. பேச்சின் போது காலாமசு ஆற்றைப் பற்றியும் தகவல்கள் பரிமாறப்பட்டது.

காலாமசு ஆறு மற்றும் ஆற்றுப்படுகையானது கிட்டத்தட்ட 11000 ஆண்டுகளாக மனிதர்களால் பல்வேறு பணிகளுக்குப் பாவிக்கப்பட்டு வருகிறதாம். அதிலிருந்தே தெரிகிறது இதுவொரு செவ்விந்தியர்களின் களம் என்பது. மிச்சிகன் ஏரியில் கலக்கும் இந்த ஆறானது மிகச்சிறிய ஆறாக இருந்தாலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக, ஜீவநாடியாக இன்றும் விளங்குகிறது.

மாலை நான்கரை மணிக்கெல்லாம் மார்ஷல் காப்பகத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டேன். நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் அமிழ்தா. என்னைக் கண்டதும், வகுப்பு ஓம்புநரான ஜில் கோஃபர் புன்னகைத்தாள். எழுப்பி விடட்டுமா என சமிக்கையிலேயே வினவ, நானும் சரியெனும் பாங்கில் தலையசைத்தேன்.

வாரக் கடைசி நாளான வெள்ளிக்கிழமை தோறும், குழந்தைகள் படுத்துறங்கும் படுக்கை விரிப்பு, மாற்று உடுப்பு உள்ளிட்ட குழந்தைகளின் உடைமைகளைப் பையில் போட்டுக் கொடுத்தனுப்பி விடுவார்கள். அவற்றைச் சலவை செய்து மீண்டும் திங்கட்கிழமை கொடுத்தனுப்ப வேண்டும். அமிழ்தாவை எழுப்பி,  அவர்களே அவளது உடைமைகளை எல்லாம் பையில் போட்டுக் கொடுத்தபடியால் நான் எதையும் கவனித்திருக்கவில்லை. அப்பாவைக் கண்ட குதூகலத்தில் அமிழ்தாவும் எழுந்து துள்ளலாய் ஓடி வந்து என்னுடன் சேர்ந்து கொண்டாள்.

காப்பகத்திற்கும் எங்கள் வீட்டிற்கும் ஆறு மைல் தூரம்.  வீட்டிற்குச் செல்லும் வழியில், காலாமசு ஆறு, அதன் படகுத்துறை, மீன்பிடித்துறை, நாளை யாரெல்லாம் அங்கு வருவார்கள் முதலானவற்றைப் பற்றி நாங்கள் இருவரும் பேசிக் கொண்டே சென்றோம். அமிழ்தாவுக்கு மிக்க மகிழ்ச்சி. எனது அலுவலக நண்பர் ஸ்டீவ் என்பாரின் மகள் ஜேனட்டும் வருவாள் எனச் சொன்னதில் அவளுக்குக் கூடுதல் மகிழ்ச்சி.

வீட்டிற்குள் நுழைந்து, இருக்கையில் அமர்ந்த நான் எனது கவ்வுகழலிகளைக் கழற்ற எத்தனிக்கிறேன். ‘ஓ’வென்று பெரும் ஓலம். பேரொலி கேட்டெழுந்த அவளது அம்மா சுமதியும்  என்னவென்று கேட்டுக் கொண்டே முன்னறைக்கு வந்தாள். சற்று நேரத்திற்கு அமிழ்தா என்ன சொல்கிறாளென்றே  எனக்குப் புரியவில்லை.

“மம்மீ… ஐ வான்ட் இட்!  ஐ வான்ட் மை க்யூட்டி, ஐ வான்ட் மை க்யூட்டி!!”

புரிந்து விட்டது. சத்தியமாக நான் இப்போதுதான் கவனிக்கிறேன். அவளது கையில் எப்போதுமிருக்கும் அவளது அருமைப் பாவையான க்யூட்டெடி இருக்கவில்லை. என் சொகுசுந்து வாகனத்துக்கு நாலுகால்ப் பாய்ச்சலில் உடனே விரைந்தேன். அரக்கப்பரக்கத் துழாவுகிறேன். பின்னிருக்கையில் இருக்கும் குழந்தைகளுக்கான சிற்றிருக்கையைக் கழற்றுகிறேன். கார் முழுவதையும் பார்க்கிறேன். பார்த்த இடங்களை மீண்டும் பார்க்கிறேன். எனக்கு அது அகப்படவே இல்லை.

“அம்மாக்காரியும்  சேர்ந்து என்னை வறுத்தெடுப்பாளே? கடவுளே, நான் இனி என்ன செய்வேன்??”, நினைத்துக் கொண்டே மீண்டும் வீட்டுக்குள் ஓடினேன். அவர்கள் கொடுத்தனுப்பிய பையினைக் கமுத்தித் தேடிக் கொண்டிருந்தாள் சுமதி. அவளுக்குப் பக்கத்தில் பெருங்குரலெடுத்து அழுதபடியே அமிழ்தா.

”ஏங்க, குழந்தையப் பார்த்துக் கூட்டிட்டு வர முடியாதா? இதுல இல்ல. சரி நடங்க, கார்லதான் இருக்கும். நான் பார்க்குறேன்!”, சினம் தலைக்கேறிய சுமதி, அழுது கொண்டே அமிழ்தா, கடுப்புடன் நான் என எல்லாருமாகப் போனோம் வாகனத் தரிப்பிடத்திற்கு. எல்லாவற்றையும் பிரித்துப் போட்டுத் தேடினாள் சுமதி.

“என்னங்க, இங்கயும் காணோம்?”

“சென்ட்டர்லயே எடுக்காம வந்துட்டம் போலிருக்கு?”

“ஏங்க, வெள்ளிக்கிழமை நாளுங்க இது? எல்லாம் போயிருப்பாங்க?”

அவ்வளவுதான். சங்குசங்கென்று குதிக்க ஆரம்பித்தாள் அமிழ்தா. ஒரு கட்டத்தில், டமால் எனத் தரையில் விழுந்து படுத்துக் கொண்டாள்.

“புதுசு வேணா வாங்கித்….”, நான் முடிக்கவே இல்லை.  இருவரும் ஒருசேர அவரவர்பாட்டுக்கு இரைந்தார்கள்.

“இல்ல, அது வேலைக்காவாது. ஏற்கனவே நாம அது ட்ரை பண்ணுனதுதானே? மண்டே வரைக்கெல்லாம் வெயிட் பண்ணினா அவ்ளோதான். கொழந்தை அழுது அழுது காய்ச்சலாகி ஃபிட்ஸ் வந்தாலும் வந்திடும்! போயிப் பார்க்கலாம் வாங்க!!”

வீடு திறந்தது திறந்தபடி இருந்தது; வீட்டினுள் கிடந்தது கிடந்தபடி இருந்தது. எப்படிக் காரை எடுத்தேன்; எப்படிப் போய்ச் சேர்ந்தேன் என்றே எனக்குத் தெரியாது. கேவிக் கேவி அழுது கொண்டிருந்த அமிழ்தா விசும்பலுக்கு மாறியிருந்தாள். அவ்வப்போது மூச்சிரைப்பு வந்து போனது. பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. காலையில் சுமதியிடமிருந்து அழைப்பு வந்த போதே எனக்கு மனதில் சஞ்சலம். யாரையோ இழந்து பிரிந்த மனத்துயரம் மேலிட்டது. அப்படி ஏதும் நிகழவில்லை என்ற ஆறுதல் வெகுநேரம் நீடித்திருக்கவில்லை.

முன்பொருநாள் வீட்டிலிருக்கும் சோபாவுக்குள் அகப்பட்டுக் கொண்ட க்யூட்டெடியைக் கண்டு பிடித்தெடுப்பதற்கு ஓரிரு மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. அதற்குள் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததில் காய்ச்சல் கண்டு படுத்துவிட்டாள் அமிழ்தா. அந்த நினைவெல்லாம் வந்து ஆட்டுவிக்கிறது இப்போது. அரும்பாவை க்யூட்டெடியை விட்டுவிட்டு எப்படி இருக்கப் போகிறாள்? மனம் முழுதும் கப்பிய சோகம் நிரம்பிப் பொங்கி இப்போது என் முகத்தில் படர்ந்து கொண்டிருந்தது.

அமிழ்தாவைப் பார்க்கவே எனக்கு தயக்கமாய் இருக்கிறது.  சுமதி, அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். நான் காருக்கே திரும்பி வந்து தேடத் துவங்கினேன். இது சும்மா ஒரு போங்காட்டம். அவர்களுக்கு அருகில் இருக்கக் குற்ற உணர்வும் அச்சமும் என்பதுதான் உண்மை.

பாதுகாப்புப் பணியாள் உட்பட அவர்கள் மூவரும் என்னருகே வந்து கொண்டிருக்கிறார்கள். அமிழ்தா இன்னும் விசும்பிக் கொண்டுதானிருக்கிறாள்.

“டேனியல்கிட்டப் பேசினேன். அவர் இன்னும் அரை மணி நேரத்துல வர்றாராம். நீங்க லன்ச்சு முடிச்சிட்டு ட்ராப் பண்ணும் போது கையில வெச்சிருந்தாளா?”

“ஆமா. இருந்திச்சி.  ரூமுக்குள்ள போயி உட்கார்ந்தப்புறங்கூட முத்தங் குடுத்திட்டு இருந்ததை நான் பார்த்தேன்!”

“ம்”, அவளுக்கு இன்னமும் என் மேல் கோபம் என்பதை அந்த ஒற்றை எழுத்து பதிலே காட்டிக் கொடுத்தது.

பாவம் அமிழ்தா, அது குழந்தை. முதல் பிறந்த நாளுக்குப் பின்னர் இந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் சற்றுக் கூடுதலாய், 365 கூட்டல் 365, எழுநூற்று முப்பது, இதிலொரு 75 நாட்கள்,  ஆகமொத்தம் எண்ணூற்று ஐந்து நாட்கள் க்யூட்டெடியோடு பின்னிப் பிணைந்தபடி இருந்தவள் எப்படித்தான் தாங்குவாளோ இப்பிரிவை? பிஞ்சு மனம் நொந்து கொண்டிருப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை எனக்கு.

டேனியல் வந்து சேர்ந்து விட்டான்.  அவனிடம் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்தாள் சுமதி.  குழந்தையின் மனநலமும், மகிழ்ச்சியுமே எங்களுக்கு முக்கியம் எனப் பரிவாய்ச் சொல்லிக் கொண்டே எங்கள் எல்லாரையும் உள்ளே அழைத்துச் செல்கிறான். உள்ளே கும்மிருட்டாக இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஆள் நடமாட்டம் கண்ட விளக்குகள் தன்னிச்சையாய் ஒளிரத் துவங்குகிறது. அமெரிக்காவில் எல்லாமே தானியக்கம்தான்.

என்னையறியாமல் ஆனைமலை மாசாணியம்மனை நினைத்து வேண்டிக் கொண்டிருக்கிறேன். “ஆத்தா, உன்னை விட்டா எனக்கு யார் இருக்கா? எப்படியாவது அதை இங்க இருக்கப் பண்ணு!”, திரும்பத் திரும்ப மனம் இதையே சொல்லிக் கொண்டிருக்கிறது.

அமிழ்தாவின் வகுப்பறைக்கு முன்னால் வந்தாயிற்று. இனி அறைக்கதவைத் திறக்க வேண்டும். நடைபாதையில் இருக்கும் மின்விளக்கின் வெளிச்சம் கண்ணாடிச் சுவரையும் ஊடுருவி உள்ளே பாயத்தான் செய்கிறது. எனினும் அந்த பாவையது கண்களுக்கு அகப்படவில்லை. டேனியலைப் பார்க்கிறேன். அவன் கையிலிருக்கும் சாவிக் கொத்தில் ஒரு பத்துப் பதினைந்து சாவிகள் இருக்கும் போலிருக்கிறது. ஒவ்வொன்றாய்ப் போட்டுத் திறக்க முயற்சிக்கிறான்.  நேரம் கூடக் கூட மனத்தின் பாரமும் வலியும் கூடிக் கொண்டே போகிறது. எனக்கே இப்படியென்றால் அந்த பச்சைமண்ணுக்கு? ”மாசாணியாத்தா, அது கிடைக்கலைன்னா நீ ஒரு பொய்! வேசக்காரி!!”, என் வலியெல்லாம் சினமாகி ஆனைமலை ஆத்தாளின் மேல் பாயத் துவங்கியது.

அப்பாட, ஒருவழியாய் டேனியல் அறைக்கதவை திறந்து விட்டான். அமிழ்தா துள்ளிக் குதித்து உள்ளே ஓடினாள். அதற்குள் டேனியல் மின்விளக்குக்கான சொடுக்கியைத் தட்டினான். ஒளி ஒளிரவும், அமிழ்தா குதித்தெழவும் சரியாய் இருந்தது. பிற்பகலில் அவள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திற்கருகே, சுவரோரத்தில் கிடந்தது க்யூட்டெடி.  முத்த மழையில் நனைந்து பரவசமாகிக் கொண்டிருந்தது க்யூட்டெடி.   காலையில் எழும் போது கண்ட என் மனைவியின் கண்களை, அதற்குப் பிறகு இப்போதுதான்  முதன்முதலாய்  எதிர்கொள்கின்றன செம்மாந்து ஒளிரும் என் கண்கள்.

“சாரி மாமாய்!”, என்னைப் பார்த்துக் கனிவாய்ச் சொன்ன சுமதியின் கண்கள் சோர்வாயும் களைப்பாயும் இருந்தன. நான் டேனியல் கைகளைப் பற்றி எதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன் மகிழ்ச்சி பொங்க. வாசலுக்கு வந்ததும், டேனியலுக்கு ஹக் தர வேண்டுமென அமிழ்தா சொன்னாள்.

அவர்களிடம் விடை பெற்ற பின்னர், வீட்டிற்கு வரும் போது இரவு ஏழு மணி ஆகிவிட்டிருந்தது.

அடுக்களைக்குச் சென்று சூடாய்க் காப்பி போட்டு இரண்டு கோப்பைகளில் எடுத்துக் கொண்டு போகிறேன்.  இடது கையானது அவளது அன்புப்பாவை க்யூட்டெடியை இறுகப் பற்றிக் கொண்டிருக்க,  வலதுகைக் கட்டை விரல் சூப்பிய நிலையிலிருந்து விட்டுச் சற்று விலகியிருக்கிறது. தன் ஒரு காலைத் தன் தாயின் மேல் அவள் போட்டிருக்க, தாயின் ஒரு கை தன் மகளை வாஞ்சையாய்ப் பிடித்தபடி தூங்குகிறார்கள் இருவரும்.

இன்னும் அங்கு விடிந்திருக்காது. அதனாலென்ன? அழைத்துப் பேச வேண்டியதுதான். ஆமாம், எனக்கு என் அம்மா வேண்டும் போல இருக்கிறது.

நன்றி: வல்லமை

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல பகிர்வு நுணவிலான். பல குழந்தைகள் வளந்த பின் கூட தமக்குப் பிடித்த பாவியையோ பொருளையோ பாதுகாத்து வைத்திருப்பதையும் எங்கு சென்றாலும் அதை கொண்டுசெல்வதையும் நானும் அவதானித்திருக்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான்  க தைப் பகிர்வுக்கு நன்றி.   இதை போலவே ( கைப்பாவை) ப்ளங்கி ............என்னு ம் கம்பளி போர்வையும் மிக்வும்

 

பிடிக்கும் சில  குழந் தைகளுக்கு . அதையும் விட்டு  விலக மாட்டார்கள் . நல்ல தமிழ் சொற்கள் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

நுனா நீங்கள் இணைக்கும் கதைகள் மிக நீன்டதாக இருக்கிறது.நான் நிநைத்தேன் அவர்கறள் படகுப்பயணம் போகும் போது அந்தப்பாவை தண்ணிக்குள்ள வீழ்ந்து ஏதும் விபரீதம் ஆகுமோ என்று.நல்ல காலம் அப்படி ஒன்டும் நடக்காமல் பாத்துக்கொன்டீர்கள்.நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.