Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறுத்தணும்! எல்லாத்தையும் நிறுத்தணும் - 1!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
http://elavasam.blogspot.co.uk/2013/01/1.html நிறுத்தணும்! எல்லாத்தையும் நிறுத்தணும் - 1! வழக்கம் போல இந்தப் பதிவுக்கும் காரணம் அண்ணன் @nchokkanதான். எங்கேயோ வெளியாகியிருந்த ஒரு ஆங்கிலக் கட்டுரையை அனுப்பி இது மாதிரி தமிழிலும் செஞ்சா என்னன்னு கேட்டு இருந்தாரு. இது மாதிரி அவர் நிறைய கேப்பார். ஆனாலும் நமக்கு வசதி எதுவோ அதைத்தான் எடுத்துக்கறது. அடிக்கடி கண்ணில் படும் இலக்கண / எழுத்துப்பிழைகள் என்பதே அந்தக் கட்டுரையின் சாராம்சம். தமிழில் நம்ம கண்ணில் படறது ஒண்ணா ரெண்டாய்யா இப்படி எல்லாம் தொகுத்துப் பட்டியல் போட என்று தட்டிக் கழித்தாலும் இது மாதிரி செஞ்சா என்ன அப்படின்னு உறுத்திக்கிட்டே இருந்தது. இது போல மேட்டரை அடிக்கடி ட்விட்டர்லே செய்யறதாலேயே நிறையபேர் என்னை அன்ஃபாலோ பண்ணிட்டாங்க. அன்பாலே சொன்னதற்கு அன்பாலோ நியாயமா? இருந்தாலும் என் பணி கடன் செய்து கிடப்பதே! நினைத்த மாத்திரத்தில் அடிக்கடி பார்த்ததாய் தோன்றும் பத்து தவறுகளின் பட்டியல் இது. பொதுவாக, நம்ம மக்கள் ஃபேஸ்புக் ட்விட்டர்லே எழுதற வார்த்தைகளை மட்டும்தான் எடுத்துகிட்டிருக்கேன். ஆசையோடதான் எல்லாரும் தமிழ் எழுதறாங்க, சரி, அதுக்காக படிக்கறவங்க கண்ணை ஏன் குத்தணும்? அதைக் கொஞ்சம் சரியா எழுதப் பார்க்கலாமே. கண்ணில் படுவது: அதற்க்கு / முயற்ச்சி எழுத வேண்டியது: அதற்கு / முயற்சி ரொம்ப சிம்பிளான மேட்டர்ப்பா. ற் வந்தா அதுக்குப் பின்னாடி வேற புள்ளி வெச்ச எழுத்து வரக்கூடாது. அதற்கு, இதற்கு, முயற்சின்னு எழுதணும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முயற்சி முயற்ச்சி ஆகாது. இது க்,ச்,ட்,த்,ப் - எல்லா வல்லின மெய்களுக்குமே பொருந்தும். கண்ணில் படுவது: பின்ணணி / பிண்ணணி எழுத வேண்டியது: பின்னணி இணையத்தில் நம்ம ஆட்கள் அதிகம் பேசுவது சினிமாவும் சினிமா இசையும்தான். அதிலும் புதுசா படம் வந்தாலோ, தம் ஆதர்ச இசையமைப்பாளர் பத்தியோ பேச ஆரம்பிச்சா முதலில் வருவது இந்தப் பின்னணி இசைதான். ஆனா அதை பிண்ணணி, பின்ணணின்னு எழுதி நாராசமாக்கிடறாங்க. அணின்னா அலங்காரம். முன்னாடி நடிகர்கள் காட்சிகள் இருந்தாலும் பின்னாடியே இருந்து அழகு செய்யும் இசை என்பதால் அது பின்+அணி = பின்னணி இசை. அதை சின்ணாப்பிண்ணமா, ச்சே சின்னாப்பின்னமா ஆக்கிடாதீங்கப்பா. கண்ணில் படுவது: விமர்சணம் எழுத வேண்டியது: விமர்சனம் நம்ம ஊரில் ஒரு கலாச்சாரம் உண்டு. சுவரில் ஒட்டி இருக்கும் போஸ்டர் பிடிக்கலைன்னா அது மேல சாணி அடிப்பாங்க. பெரும்பாலான விமர்சனங்கள் குறைகளையே சொல்லி வருதா, ஒரு வேளை அதனாலதான் அதை விமர்சாணம், ச்சே, விமர்சணம்ன்னு எழுதிடறாங்களோன்னு ஒரு சந்தேகம். விமர்சனத்தின் கனம் எவ்வளவு கூடினால்கூட விமர்சணம் ஆகாது! நோ விமர்சணம். கண்ணில் படுவது: சுவற்றில் / கிணறில் எழுத வேண்டியது: சுவரில் / கிணற்றில் போஸ்டர்ன்னு சொன்ன உடனேதான் ஞாபகத்திற்கு வருது. சுவரில்ன்னு எழுத வேண்டிய இடங்களில் சுவற்றில்ன்னு எழுதினா இலக்கியத்தரமா இருக்குன்னு சில பேர் செய்யறாங்க. அதுல ஒரு தரமும் இல்லை தப்புதான் இருக்கு. கிணறு உ-ன்னு முடியுது. அதனால கிணறு+இல் என்பது கிணற்றில்ன்னு ஆகுது. ஆனா சுவரு இல்லை. அது சுவர்தான். சுவர்+இல் என்பது சுவரில்ன்னுதான் வரணுமே தவிர சுவற்றில்ன்னு வரக்கூடாது. கண்ணில் படுவது: பொருப்பு எழுத வேண்டியது: பொறுப்பு ரகர றகர கன்ப்யூஷந்தான். பொறுப்போட எழுதணும், பொறுப்பில்லாம இருக்காதேன்னு சொல்லணும். புரியற மாதிரி சொல்லணும்ன்னா சின்ன பொறுப்பு, பெரிய பொறுப்புன்னு வித்தியாசம் எல்லாம் கிடையாது. பொறுப்புன்னு வந்துட்டாலே அது பெரிய விஷயம்தான். அதனால றகரம்தான் போடணும். பொருப்புன்னா மலை. ”செருப்புக்குத் தோல் வாங்கி வந்தாயே, என் பொருப்புக்கு என்ன வாங்கிவந்தாய்” - இது யாரோ தமிழ்லே விளையாடின காதலி, வீரன் கிட்ட கேட்ட கேள்வியாம். மீனிங்: செரு - போர். போருக்குப்போய் தோல் (யானையைக்) கொன்றாயே, என் கழுத்துக்கு (இடக்கரடக்கல்பா) என்ன வாங்கி வந்தாய்ன்னு அர்த்தம். எந்நேரமும் பொருப்பைப் பத்திப் பேசறது பொறுப்பில்லை :-) கண்ணில் படுவது: சில்லரை எழுத வேண்டியது: சில்லறை வாங்கறதைப் பத்திப் பேசினா உடனே அடுத்து நம்ம ஞாபகத்துக்கு சில்லறைதான் வருது. ஒரு முழு நோட்டை மாத்தினா வருவது சில்லறை. அறைன்னா துண்டுன்னு ஒரு அர்த்தம் உண்டு. சில அறைகள் என்பதையே சில்லறைன்னு சொல்லறோம். அரைன்னா பாதி. நோட்டைக் கிழிச்சா ரெண்டு பாதிதான் கிடைக்கும். சில என்பது ரெண்டுக்கும் மேல இல்லையா, அதனால சில்லரைன்னு சொன்னா சில அரைகள், அதாவது, எதோ ஆயிரம் குடு பத்தாயிரம் தரேன் ரேஞ்சு மோசடியா ஆயிரும். அது நமக்கு வேண்டாம். சில்லறைன்னே சொல்லுவோம். சில பிரபல எழுத்தாளர்கள் கூட சில்லரைன்னு எழுதறாங்க. அதான் சோகம். கண்ணில் படுவது: அருகாமையில் எழுத வேண்டியது: அருகில் பிரபல எழுத்தாளர்கள்ன்னு சொன்ன உடனே அடுத்த கடுப்பு இந்த அருகாமையில்தான். அருகில்ன்னு எழுதினா சாதாரணமா இருக்குன்னு நினைச்சு அருகாமைன்னு எழுதிடறாங்க. ஆனா அர்த்தம் அநர்த்தம் ஆயிடுது. அறியாமைன்னா தெரியாம இருக்கறது. போதாமைன்னா போறாம இருக்கிறது. அப்போ அருகாமைன்னா அருகாம இருக்கிறதுதானே. அருகுன்னா சமீபம். அப்போ அருகாமைன்னா அருகில் இல்லாமல் தள்ளி இருக்கிறது, அதை அருகில் என்ற பொருளில் சொல்லலாமோ? சொல்லறாங்க. நாம சொல்லாம இருப்போம். கண்ணில் படுவது: கோர்த்து எழுத வேண்டியது: கோத்து அதே இலக்கிய வாசம் மேட்டர்தான் இதுவும். கோ - இந்த ஒத்த எழுத்துக்கு தமிழில் ஏகப்பட்ட அர்த்தம் இருக்கு,.பசு, அரசன், ஆண்டவன், இந்திரன், சுவர்க்கம், ஆகாயம், பூமி, தரி, தவிர்ன்னு சொல்லிக்கிட்டே போகலாம். ஏன் இப்படி ஒரு முக்கியம் இந்த எழுத்துக்குன்னு தெரியலை. ஆனா தொடுக்கிறது என்ற பொருளும் உண்டு. கோவை என்றால் தொடுத்தல் என்று பொருள். அதனால கோக்கவோன்னுதான் கேட்கணும். கோர்க்கவோன்னு சொல்லறது சரி இல்லை. துரியோதனனே சொன்னாலும் தப்பு தப்புத்தான் -
கண்ணில் படுவது: முயற்சிக்கிறேன் எழுத வேண்டியது: முயல்கிறேன் ஆகக் கடுப்பேத்தும் விஷயம் இது. முயல், முயலல், முயற்சி. இதைச் செய்யும் போது முயன்றேன், முயல்கிறேன், முயல்வேன்னு சொல்லணும். இல்லை முயற்சி செய்தேன் / செய்கிறேன் / செய்வேன். முயற்சிக்கிறேன்னு எல்லாம் சொல்லக் கூடாது. முயல் ஒண்ணு வந்து நானே சிக்கிக்கிறேன்னு சொன்னா வேணா முயற்சிக்கிறேன்னு சொல்லிட்டுப் போகட்டும். மனுசங்க நாம சரியாச் சொல்லுவோம். கண்ணில் படுவது: ஒரு அழகி எழுத வேண்டியது: ஓர் அழகி ஆங்கிலத்தில் யாராவது A, An தப்புப் பண்ணினா சிரிக்கும் மக்கள் தமிழில் ஓர் ஒரு தப்பு பண்ணும் போது கண்டுக்கறதே இல்லை. ஆங்கிலம் தமிழ் ரெண்டுலேயும் அதே லாஜிக்தான். உயிரெழுத்து வந்தா அதுக்கு முன்னாடி ஓர் வரணும். உயிர்மெய் எழுத்து வந்தா ஒரு போடணும். ஓர் அழகி, ஒரு முத்தம், ஒரு வாழ்க்கை, ஓர் ஆப்பு! இங்கிலீஷ்லே கேஜி முடிக்கும்போதே கரெக்டா சொல்ற மேட்டர். இங்க டன் கணக்குல படிச்சவங்களும் தப்பு பண்றோம்! அப்பாடா அவ்வளவுதானான்னு ரொம்பவே ரிலாக்ஸ் ஆகாதீங்க. அப்பப்போ இந்த மாதிரி ஒரு லிஸ்ட் போடுவேன். இந்த எச்சரிக்கையோட இப்போ நிறுத்திக்கறேன். thanks-http://elavasam.blogspot.co.uk/2013/01/1.html

நல்ல பதிவு புலவர் நன்றி. ஆக்கங்களை பதிவிடுவதற்கு முன் முன்னோட்டம் (preview post) பாத்துவிட்டு பதிவிடுவதே நன்று.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிறுத்தணும்! எல்லாத்தையும் நிறுத்தணும் - 2! போன முறை இந்த நிறுத்தணும் பதிவு போடும் பொழுது இவ்வளவு பேர் படிப்பாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை.இவ்வளவு பேர் ஆர்வமாப் படிக்கறாங்க என்பதே என்னை அடுத்த பதிவை எழுத தூண்டி விடுது. (அதுக்காக இந்தப் பதிவை படிக்காம விட்டா நிறுத்திடுவேன்னு நினைக்காதீங்க!) இந்த முறை குறிப்பிடும் தவறுகள் முன்பே பல முறை சொல்லி இருப்பதுதான். ஆனாலும் தொடர்ந்து கண்ணில் தவறான வடிவம் பட்டுக் கொண்டே இருப்பதால் திரும்பவும் சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. சொல்லும் முறை மாறினாலாவது மனத்தினுள் செல்கிறதா என்று பார்க்கலாம். கண்ணில் படுவது : அமுல் எழுத வேண்டியது : அமல் அமல் என்றால் கட்டாயமாக செயல்படுத்துதல் என்று பொருள்.இன்றிரவு முதல் புதிய ரயில் கட்டணங்கள் அமுலுக்கு வருகின்றன். அந்த விதியை அப்படியே அமுல் செய்வது ஆபத்தானது என்று அச்சு ஊடகத்தில் கூட அதிகம் பார்க்கிறோம்.அமுல் என்பது தவறான பயன்பாடு. அமல் என்பதே சரியான சொல். Enforcement Directorate என்பதை அமலாக்கத்துறைன்னு தமிழில் எழுதுவது. இதை அமுலாக்கத்துறைன்னு சொன்னாத் தப்பு. அமல் செய்வது என்றால் செயல்படுத்துவது அமுல் செய்வது என்றால் எதோ பால் சம்பந்தப்பட்ட மேட்டர். அமுல்பால், அமலா பால்? இல்லையா? அமலா பாலில்லை என்றுஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியதுதான் கண்ணில் படுவது : பொரி எழுத வேண்டியது : பொறி பொரி, பொறி ரெண்டுமே தமிழ் வார்த்தைகள்தான். ஆனா வேற வேற அர்த்தம். பொரி என்றால் எண்ணெய் கொண்டோ, அது இல்லாமலோ வறுப்பது. அப்படி வறுத்த அரிசியையும் பொரி என்கிறோம். பொரித்த மீன், பொரியுருண்டை என்றெல்லாம் சொல்லும் பொழுது இந்தப் பொரி என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ஒருவர் கடுமையாகத் திட்டிப் பேசுவதையும் பொரிந்து தள்ளுகிறான் என்கிறோம். பொறி என்னும் சொல்லுக்குப் பல விதமான அர்த்தங்கள் உண்டு.தீப்பொறி, எலிப்பொறி, பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டியது என்றெல்லாம் சொல்லும் பொழுதே - Spark, Trap, Carveஎன அர்த்தம் தெளிவாகவே தெரிகிறது அல்லவா? பொறி வைத்துப் பிடித்தேன் என்று எழுத வேண்டிய இடத்தில் பொரி வைத்துப் பிடித்தேன் என்றால் எலியும் அணிலும்தான் கிடைக்கும் இல்லையா. பொரி - Fry, பொறி - Machine கண்ணில் படுவது : உரி எழுத வேண்டியது : உறி பொரி பொறி போன்று உரி, உறி இரண்டுமே தமிழ்ச் சொற்களே.ஆனால் பொருள் வேறு. உரி என்றால் தோல். அதனால்தான் மரவுரி எனச் சொல்கிறோம். இந்த தோலை அகற்றுவதையும் உரி என்கிறோம். வாழைப்பழத் தோலை உரித்த பின் உண்ண வேண்டும். உறி என்பதற்கு முக்கியமாய் இரண்டு அர்த்தங்கள்.உறிஞ்சிக் குடிப்பது மற்றும் கயிறு கொண்டு கட்டி மேலெழுப்புவது. மோர் தயிர் பாத்திரங்களை அப்படி மேலே கட்டி இருப்பதனால்தான் உறி எனப் பெயர். உறியில் இருப்பதை உறிஞ்சு. உரி- Peel உறி - Sip கண்ணில் படுவது : பண்ணிரெண்டு எழுத வேண்டியது : பன்னிரண்டு பண் என்றால் பாடல். பண் என்றால் இசை. பண் என்றால் தகுதி.எண் என்பதற்கு எதுகை என்பதைத் தவிர பண்ணுக்கும் எண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பதினொன்று எனச் சொல்கிறோம். பத்து+ இன் + ஒன்று = பதினொன்று என வருகிறது. அது போல பத்து+ இரண்டு என்பது பன்+இரண்டு =பன்னிரண்டு என மாறுகிறது. இதை பண்ணிரெண்டு,பண்ணிரண்டு என்றெல்லாம் எழுதினால் தவறு. பண்ணிரண்டுன்னா ரெண்டு பாட்டு. பன்னிரண்டுதான் 12. கண்ணில் படுவது: அணைத்து எழுத வேண்டியது : அனைத்து மீண்டும் ணகரக் குழப்பம். அனைத்து உயிர்கள்பால் அன்பு செலுத்த வேண்டும் என்பதை அணைத்து உயிர்கள்பால் அன்பு செலுத்த வேண்டும் என்றால் அநர்த்தம் ஆயிடும். இந்த மாதிரி ணகரப்பிழைகளுக்குக் காரணம் தவறான உச்சரிப்புதான்.உச்சரிக்கும் பொழுது சரியாக அனைத்து எனச் சொல்லத் தொடங்கினால் எழுதும் பொழுது பிழை வராது. அனைத்துமக்களையும் அணைத்து வாழவேண்டும். அணைத்துபெண்களை மதிக்க வேண்டும் என்றால் எவனாச்சும் அதைப்பண்ணப் போய் - எதுக்கு வம்பு? கண்ணில் படுவது : நாகரீகம் எழுத வேண்டியது : நாகரிகம் விளக்கம் எனத் தொடங்கினால் பெரிதாகப் போகும் அபாயம்.சுருங்கச் சொல்லப் பார்க்கிறேன். நகரத்தன்மை என்பதே நாகரிகம் என வழங்கப்படுகிறது. இகம் என்றால் இருப்பது, இந்த உலகம் என்று பொருள். அதாவத் நகரத்தன்மை இருப்பது நாகரிகம். அது என்ன நகரத்தன்மை என்று தொடங்கினோமானால், நாகரிகம் என்றால் என்ன என்று பல பக்கங்களுக்குச் சொல்ல வேண்டியது வரும். அது இப்பொழுது வேண்டாம். நகர் + இகம் என்பது புணர்ந்து வரும் பொழுது நாகரிகம் என்றாகிறது. அதே மாதிரிதான் தேசியம், காந்தியம், மார்கசியம் என்றுதான் சொல்ல வேண்டும். தேசீயம், காந்தீயம் என்று ஈயத்தைக் காய்ச்சி ஊற்றாமல் இருப்போம். இந்த இகம் இயம் எல்லாம்அளவா வச்சுக்கணும். இழுத்தா அறுந்துடும் கண்ணில் படுவது : கறுப்பு எழுத வேண்டியது : கருப்பு ரொம்பவே சண்டை வரக்கூடிய விஷயம். மீண்டும் விளக்கம் சொல்லத் தொடங்கினால் பக்கம் பக்கமாகப் போய்விடக்கூடிய அபாயம். எனவே எது சரி என்பதோடு நிறுத்தி விடுகிறேன். நிறத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது கருப்பு என்று சொல்ல வேண்டும். கருமை, கருங்குரங்கு என்று எல்லா இடங்களிலும் இடையின ரகரம் வருவதை நினைவில் கொண்டால் கருப்பு என்றே எழுதுவோம். அப்போ கறுப்பு என்றால்? எனக் கேள்வி கேட்பவர்களுக்கு. கறுப்பு என்றால் சினம். இப்போதைக்கு இது போதும். கருப்பு கலர் கறுப்பு சினம். கண்ணில் படுவது : அய்யா எழுத வேண்டியது : ஐயா ஐ என்றால் கடவுள், தலைவன் எனப் பல பொருட்கள் உண்டு.அந்த ஆண்டவனையோ, தலைவனையோ மரியாதையாக அழைக்கும் பொழுது ஐயா என்று அழைக்கிறோம். அய் என்றால் ஒரு பொருளும் கிடையாது எனவே அய்யா என்று அழைத்தால் மரியாதை என்றாகப் போவதில்லை. ஐ என்பதற்கு அய் போலி என்று சிலர் சொல்லக்கூடும். ஐயோ என்பதை அய்யோன்னு சொல்லலாமோ? சரியாகச் சொல்ல முடிகிற பொழுது போலி எதற்கு? ஐயோப் பாவம் ஐயா என்றே சொல்லுவோம் அய்யோப் பாவம் அய்யா வேண்டாம். கண்ணில் படுவது: ஞாயம் எழுத வேண்டியது : நியாயம் அய்யா இந்த ஞாயத்தைக் கேட்க மாட்டீங்களா? இப்படி ஒரு வரியை பார்த்தா என் அடிவயிற்றில் அமிலம்தான் சுரக்கிறது.அய்யாவைப் பார்த்தாச்சு. அடுத்தது இந்த ஞாயம். பேசும் பொழுது ஞாயம் என்றே உச்சரிப்பதினால் வரும் தவறு. நியாயம் என்பதே சரி. ஞாயம் என்று தமிழில் ஒரு வார்த்தையே கிடையாது. ஞாபகத்தில் இருக்கட்டும் நியாயம்தான் சரி. கண்ணில் படுவது: தோழி மார் எழுத வேண்டியது : தோழிமார் சரியான எழுத்துகளைக் கொண்டு எழுதினால் எழுத்துப்பிழை இல்லாமல் இருக்குமா? இருக்காது. தேவை இல்லாத இடங்களில் கொஞ்சம் இடம் விடாமல் இருக்க வேண்டும்.உதாரணத்திற்கு வைரமுத்து தோழிமார் கதை எழுதி இருக்கார்.ஆனா அதை விமர்சனம் பண்ணறேன் பேர்வழின்னு நாம வைரமுத்துவின் தோழி மார் கதை பிரமாதம்ன்னு நாம எழுதினா அர்த்தம் எப்படி மாறிப் போயிடுது பார்த்தீங்களா? ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் போதிய இடைவெளி தரவேண்டும். ஆனால் தேவையில்லாத எழுத்துகளுக்கு நடுவே இல்லை. அடுத்த முறை இன்னும் பல பிழைகளோட வரேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் அன்பு…... முதல் பகுதி நிறுத்தணும்! எல்லாத்தையும் நிறுத்தணும் - 1! THANKS-http://elavasam.posterous.com/-2

Edited by புலவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமீழீழன். முன்னோட்டம் பார்க்கும் பொழுது சரியாக இருக்கிறது. அனுப்பியபின் எல்லாம் சேர்ந்து வருகிறது.கள நண்பர்களுக்கு இணைப்பைத் தந்திருக்கிறேன். அந்த இணைப்பில் சென்று பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.நல்ல பதிவு புலவர் .தங்கள் தமிழ் சார்ந்த திறமைக்கு என்பாராட்டுக்கள். தேவை உங்களை போன்றவ்ர்கள் சேவை. மென் மேலும் தொடருங்கள் . தமிழ் அருகி வரும் காலம். . தமிழன் வாழ தமிழ் மொழி வாழவேண்டும்.....

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி, புலவர்.

 

http://youtu.be/n4MyXUWNxv0

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.