Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா - படம் பார் பாடம் படி - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜெனிவா - படம் பார் பாடம் படி - நிலாந்தன்

18 பெப்ரவரி 2013


யுத்தம் முடிந்த பின் வந்த மூன்றாவது சுதந்திர தினம் திருகோணமலையில் கொண்டாடப்பட்டது. இதில் அரசுத் தலைவர் ஆற்றிய உரையை தீவிர தமிழ்த் தேசிய சக்திகள் ஒன்றில் நிராகரித்தன அல்லது பொருட்படுத்தாது விட்டன. ஆனால், இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் அந்த உரைக்கு வழங்கப்பட்டிருந்த முக்கியத்துவம் கவனிப்பிற்குரியது. குறிப்பாக, இந்திய மற்றும் மேற்கத்தேய நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆபிப்பிராயத்தை உருவாக்கவல்ல தரப்பினரை பிரதிபலிக்கும் ஊடகங்கள் மேற்படி உரைக்கு வழங்கிய முக்கியத்துவத்தைப் பார்த்தால் அந்த உரை யாரை சென்றடையவேண்டுமோ அவர்களைச் சென்றடைந்தது என்றே பொருள்படும்.

தீவிர தமிழ்த் தேசிய சக்திகள் அந்த உரையில் புதினம் ஏதும் இல்லை என்று விமர்சிக்கின்றன. ஆனால், அப்படி அல்ல.  அந்த உரை மிகத் தெளிவான, திட்டவட்டமான ஒரு செய்தியை மூன்று தரப்பினருக்கு, அதாவது, தமிழ், இந்திய, மேற்கத்தையே தரப்பினருக்கு முன்வைக்கின்றது. அந்த உரையின் உள்ளடக்கம் அது நிழ்த்தப்பட்ட இடம், அது நிகழ்த்தப்பட்ட காலம் என்பவற்றை கருதி கூறுமிடத்து அது இராஜதந்திர பரிபாசைகள் செறிந்த ஒரு உரை எனலாம். 


 முதலில் அந்த உரையின் உள்ளடக்கதைச் சுருக்கமாகப் பார்க்கலாம். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் இறைமையைப் பாதுகாப்பதிலும், சுயாதீனத்தைப் பேணுவதிலும், நாடு எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி அதில் கூறப்பட்டுள்ளது. இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் வெளியார் தலையிடுவதிலுள்ள உலகளாவிய ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறைகள் பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளது.  மேலும், இனங்களின் அடிப்படையில் வௌ;வேறு நிர்வாகங்களை உருவாக்குவது நடைமுறைச் சாத்தியமற்றது என்றும், எல்லாச் சமூகங்களும் சம உரிமையுடன் ஒன்றாக வாழ முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது, தமிழர்களுக்கு சுயாட்சி கிடையாது. 


இரண்டாவதாக, அந்த உரை நிகழ்த்தப்பட்ட ஸ்தலம் எதுவெனப் பார்க்கலாம். திருகோணமலைக்கு பின்வரும் கேந்திர முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவது அது மூவினங்களும் சேர்ந்து வாழும் ஆனால், தற்பொழுது தமிழர்கள் தாங்கள் சிறுத்துக் கொண்டு வருவதாகக் கருதும் ஒரு தலைப்பட்டினமாக அது காணப்படுகின்றது என்பது. இரண்டாவது தமிழர்களுடைய தனிநாட்டுக் கனவைப் பொறுத்தவரை அது ஸ்தலப் பெருமை மிக்க தலைநகரமாக கருதப்படுகின்றது என்பது.மூன்றாவது அது ஒரு துறைமுக நகரமாக இருப்பதால் முன்னைய தசாப்தங்களில் அதாவது கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு ஒப்பிட்டளவில் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்ட காலப்பகுதியில் அது ஒரு நரம்பு மையத்தில் அமைந்திருந்தது என்பது. இலங்கை - இந்திய உடன்படிக்கையில் மேற்படி கேந்திர முக்கியத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டதை இங்கு சுட்டிக்காட்டலாம். இத்தகைய பொருள்படக் கூறின் முன்னைய தசாப்தங்களில் அதன் கேந்திர முக்கியத்துவம் காரணமாக திருகோணமலையானது ஒரு கவர்ச்சிக் கன்னியாகத் திகழ்ந்திருக்கிறது. நாலாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் தாய் நகரம் அது என்பது. 


எனவே, மேற்படி முக்கியத்துவங்கள் மிக்க திருகோணமலையில் சுதந்திர தினத்தை கொண்டாடுவது என்ற முடிவே ஒரு செய்திதான். 


அடுத்தது மேற்படி உரை நிகழ்த்தப்பட்ட காலம் எது என்பது. ஜெனீவா மாநாட்டில் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு காலச் சூழலில்தான் மேற்படி உரை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.


எனவே, எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அரசாங்கம் யார் யாருக்கு என்ன சொல்ல முற்படுகிறது என்பது மிகத் தெளிவாகவும், கூராகவும் வெளித் தெரிகிறது. அதன்படி மூன்று தரப்பினருக்கு அதில் செய்திகள் உண்டு.


முதலாவது தமிழர்களுக்கு- வெளிச் சக்திகளின் துணையோடு அரசாங்கத்தை பணிய வைக்க முடியாது என்பதே அது. அப்படி முயற்சித்தால் இப்போது கிடைப்பதும் கிடைக்காமல் போகலாம் என்பது. இரண்டாவது இந்தியாவிற்கு - இந்திய இலங்கை உடன்டிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவிற்குக் கூட தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கப்பட மாட்டாது என்பதே அது. அதாவது, 13ஆவது திருத்தச் சட்டத்தை பொருட்படுத்தாமலும் விடலாம் என்பது. 


மூன்றாவது மேற்கு நாடுகளுக்கு – வெளிநாடுகள் இந்த அரசாங்கத்தை மிரட்டி பணிய வைக்க முடியாது என்பதே அது. அதாவது தமிழர்களை முன்னிறுத்தியே மேற்குநாடுகள் ஜெனிவாவில் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முற்படும் ஓர் சூழலில் தமிழர்களுக்கு இவ்வளவுதான் கொடுக்க முடியும் என்பதை குறிப்பால் உணர்த்துவதன் மூலம் மேற்கு நாடுகள் தமிழர்களை கையாள்வதால் வரும் இறுதி விளைவு தமிழர்களுக்குப் பாதகமானதாக அமையக்கூடும் என்பதே அது. 


எனவே, 65ஆவது சுதந்திர தின உரையின் படி அரசாங்கம் மிகத் தெளிவாகவும், கூராகவும் தனது நிலைப்பாட்டை வெளிக்காட்டியிருக்கின்றது. தமிழர்களும் உட்பட எந்தவொரு சக்தியும் வெளியாரோடு சேர்ந்து நாட்டை ''காட்டிக் கொடுக்க' எத்தனித்தால் அது அவர்களுக்கு தீங்காகவே முடியும் என்பதே அது.


இதனால் வரக்கூடிய பின் விளைவுகளைக் குறித்தும் அரசாங்கம் தெளிவாகவும், தீர்மானகரமாகவும் காணப்படுகின்றது. ஜெனிவாவில் மேற்குநாடுகளுக்கு இருக்கக் கூடிய வரையறைகளை அரசாங்கம் நன்கு உணர்ந்திருக்கின்றது. மேற்கு நாடுகளும் இந்தியாவும் அரசாங்கத்தை தனிமைப்படுவத்துவது அல்லது தண்டிப்பது போன்ற முடிவுகளை எடுக்கத் தயங்குவது தெரிகிறது. இது விசயத்தில் இந்தியாவுடன் சில டீல்களுக்குப் போவதன் மூலம் நிலைமையின் கடுமையை தணிக்க முடியும் என்று கொழும்பில் நம்பப்படுகின்றது. இத்தகைய டீல்களுக்கான முன் முயற்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன. எனவே, இந்தியாவை ஒரு ஆகக் குறைந்த பட்ச முற்தடுப்பாகக் கொண்டு ஜெனிவாவை எதிர்கொள்ள முடியும் என்றுகொழும்பு நம்புகின்றது. நிலைமைகள் கையை மீறிப் போனாலும் அரசாங்கத்தை தண்டிப்பது என்ற தெரிவுக்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகக் காணப்படும் ஒரு சூழலில் சர்வதேச அளவில் ஏற்படக்கூடிய கௌரவக் குறைச்சல் எனப்படுவது ஒரு பிரச்சினையே அல்ல. அது கொழும்பு ஏழில் உள்ள படித்த உயர் குழாத்தினருக்கு வேண்டுமானால், தலைகுனிவாக இருக்கலாம். ஆனால், அது அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில், அரசாங்கம் யுத்த வெற்றிகளின் உச்சத்தில் அமர்ந்திருக்கின்றது.


இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் வேறெந்த சிங்களத்தலைவர்களும் பெற்றுக் கொடுத்திராத கிடைத்தற்கரிய வெற்றி அது. எனவே,வெளியாருக்கு அந்த வெற்றியைக் காட்டிக் கொடுக்க முற்படும் எவரையும் சாதாரண சிங்கள மக்கள் கேள்விக்கிடமின்றி நிராகரித்துவிடுவார்கள். அதேசமயம் வெளியாரின் அழுத்தங்கள் அதிகரிக்கும்போது அதற்கு நேர் எதிர் விகிதமாக அவர்கள் அரசாங்கத்தை ஆதரிப்பார்கள். எந்தளவிற்கு எந்தளவு வெளிச்சக்திகளின் அழுத்தம் அதிகரிக்கிறதோ அந்தளவிற்கு அந்தளவு இந்த அரசாங்கம் உள்நாட்டில் பலமடைந்துக் கொண்டே செல்லும். 


இதனால்தான், யுத்த வெற்றியின் மற்றொரு பங்காளியான சரத் பொன்சேகாவை அரசாங்கம் வெற்றிகரமாக பொலிவிழக்கச் செய்ய முடிந்தது. யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டபோது சரத் பொன்சேகா நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்து காணப்பட்டார். தனக்குக் கிடைத்த கீர்த்தியை அரசியலில் முதலிடு செய்ய முற்பட்டார். ஆனால், அவருக்குப் பின்னால் வெளிச் சக்திகள் இருப்பது தெரிய வந்ததை அடுத்தும் அவர் தேர்தலில் தமிழர்களோடு கூட்டுச் சேர முற்பட்டதை அடுத்தும் அவருடைய வீரப் படிமம் சுருங்கிப்போய் விட்டது. கிடைத்தற்கரிய வெற்றியை அவர் வெளிநாடுகளுக்குக் காட்டிக் கொடுக்க முற்படுகின்றார் என்றவொரு படிமம் அவரை சுற்றிக் கட்டியெழுப்பப்பட்டதன் விளைவாக அவர் அரசியல் அரங்கில் பொலிவிழந்துபோனார்.


எனவே, ஜெனிவா மாநாடு நெருங்க நெருங்க சாதாரண சிங்கள மக்கள் அரசாங்கத்தை மேலும் மேலும் நெருங்கிச் செல்வார்கள். அதைத் தான் மெய்யான பலம் என்று அரசாங்கம் நம்புகின்றது. இதன் பிரதிபலிப்பே 65ஆவது சுதந்திர தின உரையாகும்.


இவ்விதம் வெளிநாட்டு அழுத்தங்களை தனது உள்நாட்டு அரசியலுக்கு வெற்றிகரமான முதலீடாக மாற்றிக்கொண்டிருக்கும் ஓர் அரசாங்கத்துடன் தமிழர் தரப்பு அதாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எத்தகையதொரு பேரத்தை வைத்துக்கொள்ள முடியும்? அல்லது அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் வெளிச் சக்திகளுடன் எத்தகையதொரு பேரத்தை வைத்துக்கொள்ள முடியும்? 


இந்த இடத்தில் மிகவும் குருரமான, கசப்பான ஓர் உண்மையை தமிழர்கள் தரிசிக்க வேண்டியிருக்கிறது. அதாவது ஜெனிவாவில் அரங்கேற இருப்பது தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ஒரு ஹொலிவூட் திரைப்படம் தான். ரி. ராஜேந்தரின் பாணியில் கூறின், திரைக் கதை வசனம், இசை, நடிப்பு நெறியாள்கை அனைத்தும் ஹொலிவூட்டில்தான். இதில் தமிழர்கள் ஏறக்குறைய பார்வையாளர்கள்தான். தமிழர்களாக நினைத்து இதில் எதையும் மாற்ற முடியாது. ஏனெனில், இதில் தமிழர்கள் உத்தியோகபூர்வ பங்காளிகளாக இல்லை. 


அமெரிக்காவில் இருந்து வரும் பிரதானிகள் ரி.என்.ஏ.யை சந்திக்கிறார்கள். ரி.என்.ஏ. பிரமுகர்கள் வெளிநாடுகளுக்கு விஜயம்செய்கிறார்கள். இவற்றை வைத்துக்கொண்டு ஜெனிவாவில் தமிழர்கள் இராஜதந்திர காய்களை நகர்த்துகிறார்கள் என்று நம்பத் தேவையில்லை.  இது முழுக்க முழுக்க மேற்கு நாடுகளுக்கும்கொழும்பிற்கும் இடையிலான சூதாட்டக் களம்தான். இதில் தமிழர்கள் பகடைக் காய்களாக உருட்டப்படுகிறார்கள். கடந்த ஆண்டும் இவ்விதம் உருட்டப்பட்டார்கள். 


கடந்த ஆண்டு ஜெனிவா மாநாட்டிற்கு முன்பு இலங்கைக்கு வந்த அமெரிக்க பிரதானிகள் தமிழ் தரப்பைச்சந்தித்தபோது, தாங்களும் ஜெனீவாவிற்கு வர வேண்டுமா என்று தமிழ் தரப்பில் கேட்கப்பட்டதாம். அதற்கு அவர்கள் சொன்னார்களாம். இல்லை. நீங்கள் வரத் தேவையில்லை. நாங்களே பார்த்துக்கொள்கின்றோம் என்ற தொனிப்பட.அதாவது இதுமுழுக்க முழுக்க அவர்களுடைய ஆடுகளம். தமிழர்கள் வெறும் பார்வையாளர்கள்தான். ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கு முன்பு இலங்கை - இந்திய உடன்படிக்கையின்போது எப்படிப் பார்வையாளர்களாக இருந்தார்களேர அப்படித்தான். இதில் என்ன வித்தியாசமெனில், 1987இல் வெளியிடப்பட்டது ஒரு பொலிவூட் படம்.இப்பொழுது வெளியாக இருப்பது ஓரு ஹொலிவூட் படம். 1987இல் பொலிவூட் படம் வெளியானபோது  பிரபாகரன் இருந்தார். ரோகண விஜயவீர இருந்தார். இருவரும் படம் பார்க்க தயாராகஇருக்கவில்லை. எனவே, பொலிவூட் படம் சண்டைக் காட்சியில் முடிவடைந்தது. தமிழர்களும், சிங்களவர்களும், இந்தியர்களும் அதற்காக இரத்தம் சிந்தவேண்டியிருந்தது. இப்பொழுது ஹொலிவூட் படம். ஆனால், பிரபாகரனும், விஜயவீரவும் இல்லை. ஆயின், அடுத்தது என்ன? 


போன ஆண்டும் இப்படியொரு படம் காட்டப்பட்டது. அந்தப் படம் நீண்ட காலம் ஓடவில்லை. இவ்வாண்டு மறுபடியும் ஒருபடம் வெளியாக இருக்கிறது. சிலசமயம் அதுவும் பிசகக்கூடும். பிசகினால் அடுத்த ஆண்டும் ஒரு ஹொலிவூட் படம் வரக்கூடும். இந்நிலையில், தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? தொடர்ந்து படம் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறார்களா? அல்லது படத்தில் நடிக்கப்போகிறார்களா? 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/88754/language/ta-IN/article.aspx

 

 மூன்றாவது மேற்கு நாடுகளுக்கு – வெளிநாடுகள் இந்த அரசாங்கத்தை மிரட்டி பணிய வைக்க முடியாது என்பதே அது. அதாவது தமிழர்களை முன்னிறுத்தியே மேற்குநாடுகள் ஜெனிவாவில் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முற்படும் ஓர் சூழலில் தமிழர்களுக்கு இவ்வளவுதான் கொடுக்க முடியும் என்பதை குறிப்பால் உணர்த்துவதன் மூலம் மேற்கு நாடுகள் தமிழர்களை கையாள்வதால் வரும் இறுதி விளைவு தமிழர்களுக்குப் பாதகமானதாக அமையக்கூடும் என்பதே அது.

 

 

நான்குவருடங்களில் மிதமான அழுத்தங்களே பிரயோகிக்கப்பட்டன. இருந்தும் பாதகமான விளைவுகளே நடந்துவருகின்றன. அப்படியே கடுமையான நடவடிக்கைகளை, அனேகாமாக பொருளாதார நடவடிக்கைகளே எடுக்கப்படும், என்னவிதமாக இதைவிட மோசமாக தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என நிலாந்தனால்  கூற முடியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.



 போன ஆண்டும் இப்படியொரு படம் காட்டப்பட்டது. அந்தப் படம் நீண்ட காலம் ஓடவில்லை. இவ்வாண்டு மறுபடியும் ஒருபடம் வெளியாக இருக்கிறது. சிலசமயம் அதுவும் பிசகக்கூடும். பிசகினால் அடுத்த ஆண்டும் ஒரு ஹொலிவூட் படம் வரக்கூடும். இந்நிலையில், தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? தொடர்ந்து படம் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறார்களா? அல்லது படத்தில் நடிக்கப்போகிறார்களா?

 

 

படத்தில் சிங்களவர்களும் நடிக்கும் காலம் இப்பொழுது. ஜெனீவாவில் முன்னொருகாலத்தில் மகிந்தா ஜே.வி.பி. காரணாமான மனித உரிமைகளுக்காக குரல்கொடுத்தார். அதேபோல பல சிங்களவர்கள் இன்று குரல் கொடுக்கும் நிலைமை உள்ளது. இதை நவநீதம் பிள்ளை அவர்களே, ஊடகவியலாளர்  கொலை முயற்சி சம்பந்தமாக, இரண்டு நாட்கள் முன்னர் கூறி உள்ளார்.

ஒட்டுமொத்தமாக தமிழர்களை வெருட்டும் சிங்களத்திற்கு ஆதரவு தரும் கட்டுரையை வரைந்துள்ளார் நிலாந்தன். ஜெனீவாவில் நடக்க இருக்கும் நிகழ்வுகள் பல தமிழர்களின் பலத்தை மீறித்தான் நடக்க உள்ளன.

காரணம் : சிங்கள - சீன உறவு, பிரதம நீதியரசர் விலக்கப்பட்டமை, ஒட்டுமொத்த காட்டாட்சி.

இங்கே தமிழர்களை சிங்களம் வெருட்டி மகிந்த கூட்டம் தனக்கான ஆதரவை பெருக்கலாம் என நிலாந்தன் கூறுகின்றார். ஆனால் சரிந்து வரும் பொருளாதாரம் அதனால் சமாளிக்க முடியாமல் உள்ள விலைவாசி பற்றி நிலாந்தன் எழுதவில்லை.

 

 

சர்வதேச நாணய நிதியம் கடனை மறுத்த பின்னர் என்ன நடக்கின்றது:
- நூரைச்சொலையை சீனாவிடம் கையளித்ததமை
- உலக வங்கி இடம்  கையேந்தியமை
- அரச கடன் பத்திரங்களை விற்க ஆரம்பித்தமை


வருமானத்தின் எண்பது வீதத்தை கடனாக கொண்ட நாட்டில் மக்கள் பசிக்குத்தான் முதலிடம் தரவேண்டும். இல்லாமல் மக்கள் ஆதரவை எதிர்பார்ப்பது ஆபத்து.

 

அமெரிக்கா எழுதி நடிக்கும் இந்தப் படத்தில், தமிழர்கள் பார்வையாளர்கள் தான் அது மிக நல்ல விடயம், ஏனெனில் படத்தில், வில்லனை கதானாயகன் அடிப்பார், இரணுடு பேருக்கும் காயம் வரும், கடைசியில் கதாநாயன் வெல்வார், வில்லன் இறப்பார் அல்லது சிறை செல்வார். இதில் தமிழர்கள் பார்வையாளராக இருப்பதால் அவர்கள் வில்லனைப் போல இறக்கப் போவதும் இல்லை கதாநாயகனைப் போல் காயப்படப் போவதும் இல்லை.

 

நிலாந்தன் வழக்கம் போல் காற்றடிக்கும் திசைக்கேற்ப கட்டுரை எழுதி உள்ளார்.என்ன நடக்கிறது.எது நடக்க முடியும் என்னும் ஆள்ந்த பார்வைகள் அற்ற , ஒரு ஜனரச்ஞகமான கட்டுரை எழுதி உள்ளார்.  

விழித்துக் கொண்டது ‘தூங்கும் பூதம்’ – ராஜபக்ச அரசுக்கு இந்தியா விடுக்கும் எச்சரிக்கை சமிக்ஞைகள் [ திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013, 04:51 GMT ] [ கார்வண்ணன் ]

india%20thret%20srilanka.jpgஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், அவரது அரசாங்கமும் தற்போது, ‘தூக்கும் பூதமான‘ இந்தியாவின் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றின் அரசியல் விவகாரப் பத்தியில் கூறப்பட்டுள்ளது. 

சிறிலங்கா விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த இந்தியா, தற்போது அதன் நடவடிக்கைகளும் அறிக்கைகளும் நெருக்கமாக கண்காணிக்கப்படுவதாக கொழும்புக்கு சில எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கியுள்ளது. 

ராஜபக்ச அரசுக்கு எதிராக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வில் இன்னொரு தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதும், சிறிலங்கா அதிபரின் 65வது சுதந்திரதின உரையும் இந்தியர்களை செயல்நிலைக்குத் தள்ளியுள்ளது. 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வில் மீளாய்வு செய்யப்படும் போது, அமெரிக்கா நடைமுறைத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் என்று கடந்தமாத இறுதியில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூன்று பிரதி உதவிச்செயலர்கள், ராஜபக்ச அரசாங்கத்துக்கு அறிவித்திருந்தனர். 

சிலநாட்கள் கழித்து, சிறிலங்கா அதிபர் தனது சுதந்திரதின உரையில், “இன ரீதியாக இந்த நாட்டைப் பிரிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது, எல்லா சமூகங்களும் சமமான உரிமைகளுடன் வாழ்வதே தீர்வாக இருக்கும்” என்று கூறியிருந்தார். 

அந்த அறிக்கை, அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை ராஜபக்ச அரசாங்கம் முழுமையாக ஆதரிக்கவில்லை என்ற கருத்தை உள்ளடக்கியிருந்தது. 

நாட்டில் இன, மத வேறுபாடுகளுக்கு இடமில்லை என்றும், இனரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தும் எத்தகைய முயற்சிக்கும் இடமளிக்கமாட்டோம் என்றும் ராஜபக்ச கூறியிருந்தார். 

ராஜபக்சவின் இந்த உரையின் விளைவாகவே, அண்மையில் திருப்பதிக்கு சிறிலங்கா அதிபர் சென்றிருந்த போது, அவரை இந்தியாவின் ஆய்வு பகுப்பாய்வுப் பிரிவின் (றோ) பணிப்பாளர் அலோக் ஜோசி சந்தித்திருந்தார். 

கடந்த ஆண்டு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சாஞ்சிக்கு சென்றிருந்தபோது, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்திருந்த போதிலும், அண்மைய பயணத்தில் அவரைச் சந்திக்க முடியவில்லை என்று அறியப்படுகிறது. 

எவ்வாறாயினும், சிறிலங்கா அதிபரை ஜோசி சந்தித்தது, 1988இல் முன்னாள் பிரதமர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை, முன்னாள் இந்தியப் புலனாய்வுத் தலைவர் ஏ.வர்மா சந்தித்ததை நினைவுபடுத்துகிறது. 

றோவின் தலைவர் சந்தித்த, சிறிலங்காவின் இரண்டாவது அரச தலைவர் ராஜபக்ச ஆவார். 

திருப்பதியில் சிறிலங்கா அதிபர் தங்கியிருந்த போதே, அவரை ஜோசி சந்தித்திருந்தார். 

இதன்போது, இந்தியர்களின் சார்பில் சிறிலங்கா அதிபரிடம் ஜோசி ஒரு கடுமையான செய்தியை, ஒளிவுமறைவின்றி, வெளிப்படையாக பரிமாறியுள்ளதாக அறியப்படுகிறது. 

ராஜபக்சவின் அதிகாரப்பகிர்வுக்கு எதிரான அறிக்கை, 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தத் தவறியமை, குறித்த இந்தியாவின் அதிருப்தியை அவர் சிறிலங்கா அதிபரிடம் வெளிப்படுத்தியுள்ளார். 

அரை மணி நேரம் நடந்த இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் பற்றிய விபரங்கள் தெரியவராத போதிலும், நாடு திரும்பிய இரண்டு நாட்களில் சிறிலங்கா அதிபர் வடபகுதிக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார். 

‘றோ‘ தலைவரின் செய்தியை விட, சிறிலங்கா மீதான அழுத்தங்களை இந்தியா அதிகரித்து வருகிறது. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் விவகாரங்களில் பரிந்துரைகளை மதிக்கத் தவறினால், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் எத்தகைய தீர்மானத்துக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும் என்று இந்தியாவின் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கடந்தவாரம் கூறியுள்ளார். 

அதேவேளை, சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவு கோரி, வெளிநாட்டுத் தூதரகங்களை கருணாநிதி தலைமையிலான திமுக சந்திக்கவுள்ளதாக, இந்திய ஊடகங்கள் கடந்தவாரம் செய்திகளை வெளியிட்டிருந்தன. 

இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கோரி, கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் தலைமையிலான டெசோ குழு உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு சென்றதாக ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்‘ செய்தி வெளியிட்டிருந்தது. 

அவர்கள் இத்தாலி, மலேசியா, மொன்ரெனிக்றோ, இராஜதந்திரிகளுடன் பேசியுள்ளனர். 

திமுக தூதுக்குழு, அமெரிக்கத் தூதரக அதிகாரிகளையும், ரஸ்ய இராஜதந்திரிகளையும் சந்தித்துள்ளது. 

ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதா அல்லது ராஜபக்சவை ஆதரிப்பதா என்ற குழப்பம் மீண்டும் ஒருமுறை புதுடெல்லியில் உள்ள மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 

இது ஒரு தேர்தல் ஆண்டாக இருப்பதால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் கொழும்புக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுக்க, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு, தென்னிந்திய அரசியல்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக என்பனவற்றால், அழுத்தம் கொடுக்க முடியும். 

அரசியல்தீர்வுக்கும், தமிழர்களுக்கு சமமான உரிமைகளை வழங்குவதற்கும் இணங்கும் வரை, சிறிலங்காவுக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதிக்கக் கோரும் தீர்மானத்தை இந்தியாவே ஐ.நாவில் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் கவனஈர்ப்புத் தீர்மானங்களைக் கொண்டுவர திமுக அழுத்தம் கொடுக்கும் என்றும், அதேவேளை, இந்த விவகாரம் குறித்து அரை மணிநேர விவாதம் நடத்த அதிமுக கோரிக்கை விடுக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்‘ தெரிவித்துள்ளது. 

ராஜபக்ச அரசாங்கத்தின் மீது அண்டை நாடான இந்தியா தொடர்ந்தும் அழுத்தங்களைக் கொடுத்து வரும் நிலையில், கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் ஆதரவு திரட்டுவதற்கான நடவடிக்கைகளில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இறங்கியுள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130218107800

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சே குவேராவும் யாசர் அரபாத்தும் காட்டிய ஹாலிவுட் சினிமா

 - யமுனா ராஜேந்திரன் 

yamuna_rajendran_aabc.jpg

 

 

 

 

 

 

பிப்ரவரி 18 ஆம் திகதி இரண்டு கட்டுரைகள் வாசிக்க முடிந்தது. கட்டுரைகளின் காலப்பொருத்தம் உண்மையில் ஆச்சர்யமாக இருந்தது. இலண்டன் த இன்டிபென்டன்ட் பத்திரிக்கையில் நெஞ்சை அறுக்கும் வலி கொண்டதாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வன் சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட முறை குறித்த கோரமான படம் வெளியாகி இருந்தது. புகைப்படம் தொடர்பாக ஆவணப்பட இயக்குனர் ஹாலும் மக்ரே ஒரு கட்டுரையும் எழுதி இருந்தார். ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைத் திரைப்பட விழா நிகழ்வில் திரையிடப்படும் ஹாலும் மக்ரேவின் நோ பயர் சோன் ஆவணப்படத்தில் இடம்பெறும் புகைப்படங்களே த இன்டிபென்டட்டில் வெளியாகியிருந்தது. மகிந்த அரசின் ‘கருணை அரசியலுக்கு’ சிறுவன் பாலச்சந்திரனின் படுகொலை நடத்தப்பட்ட முறை ஒரு சான்று. இதே 18 ஆம் திகதி குளோபல் தமிழ் நியூஸ் தளத்தில் நிலாந்தனின் படம் பார் பாடம் படி கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. நிலாந்தனுக்;கு ஹாலும் மக்ரேவின் ஆவணப்படமும் கூட ஹாலிவுட் சினிமாவின் அங்கமாகத்தான் தோன்றியிருக்கும் என நினைக்கிறேன்.

இலங்கை தொடர்பான ஜெனிவா மனித உரிமை நடவடிக்கைகளை ஹாலிவுட் சினிமா என்கிறார் நிலாந்தன். நிலாந்தனின் மேதைமை கொண்ட புரிதல் அது; இருக்கட்டும். முன்போலவே வரவிருக்கும் ஜெனிவா நடவடிக்கையை ஹாலிவுட் படம் போல் பார் என்கிறார் நிலாந்தன். ஜெனிவா நடவடிக்கைகளில்  அவர் படித்த பாடம் என்ன என்பது குறித்தோ அல்லது பிறர் படிக்க வேண்டிய பாடம் என்ன என்பது குறித்தோ ‘நடைமுறையில்’ எதுவும் நிலாந்தன் கட்டுரையில் இல்லை.

மகிந்த சிங்கள மொழிச்சினிமா காட்டுவதைப் போல இருக்கிறது நிலாந்தனின் கட்டுரை.

மேற்கத்திய நாடுகள் மனித உரிமையின் பேரில் தன்னை மின்சார நாற்காலியில் உட்கார வைக்க முயற்சி செய்கின்றன என ஒரு முறை அழுதார் மகிந்த. ஜெனிவா மனித உரிமைத் தீர்மானங்கள் இலங்கைக்குத் தவிர்க்க முடியாதபடி ஆபத்தான பொறிமுறை என்றார் பிரான்சின் இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக. ஐநா மனித உரிமைத் தீர்மானத்துக்கான போராட்டம் என்பதும் ஐநா அங்கீகாரம் பெறுவது என்பதும் அல்ஜீரிய விடுதலை இயக்கத்தவர் முதல் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தவர் வரையிலும் ஒரு போராட்ட முறையாக உள்ளது. பிரான்சஸ் ஹாரிசன் முதல் மே பதினேழு இயக்கத்தவர் வரை ஐநா சபையைக் குற்றம் சாட்டுவது, அதன் அலுவலகங்கள் முன்பாகப் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது ஐநா சபையின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அதனை நேர்பட திரும்பச் செய்வதற்குத்தான்.

ஐநா சபையின் அலகொன்றில் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் நிராகரிப்பை மீறித்தான் பாலஸ்தீனம் இடைக்கால அரசுக்கான அங்கீகாரத்தைப் பெருவாரியான வாக்குகள் மூலம் பெற்றிருக்கிறது. இது மிக மிகச் சமீபத்திய நிகழ்வு.

சே குவேரா ஐநாவில் உரை நிகழ்த்தினார். அரபாத் நிகழ்த்தினார். நேபாளத்தின் பிரசன்டா நிகழ்த்தினார். நிலாந்தனின் பாஷையில் இவர்களெல்லாம் ஹாலிவுட் கதாநாயகர்கள். அல்ஜீரிய-பாலஸ்தீன-நேபாள மக்கள் அனைவரும் ஹாலிவுட் நடிகர்கள்.

மகிந்த எந்தவித விசாரணைக்கும் உட்பட முடியாது என்கிறார். நிலாந்தன் ஜெனிவா மனித உரிமை நடவடிக்கைகளே ஹாலிவுட் சினிமா போல மாயை என்கிறார். சேனல் நான்கின் ஆவணப்பட இயக்குனர் ஹாலும் மக்ரே பாலச்சந்திரன் கொல்லப்பட்ட முறை குறித்துத் தேடி அதனை ஆவணப்படுத்துகிறார். ஜெனிவா நடவடிக்கைகள் இருக்கட்டும்; மகிந்தவின் பேச்சுக்கள் இருக்கட்டும்; ஹாலும் மக்ரேவின் விசாரணைகள் நாசமாகப் போகட்டும்; தமிழராக நீங்கள் படித்த பாடம் என்ன நிலாந்தன்? நீங்கள் படித்த அந்தப் பாடத்திலிருந்து தமிழராக நீங்கள் முன்வைக்கும் அரசியல் அல்லது தேர்ந்து கொண்ட அரசியல் பாதை என்ன நிலாந்தன்?

 

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1345:2013-02-21-05-23-47&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46

 

நிலாந்தனுக்கு தனது அரசியல் பாதை எது என்று தெரிந்தால் இப்படி விடயம் எதுவும் அற்ற கட்டுரை எழுதி இருப்பார்? இவரெல்லாம் ஆய்வாளர் எழுத்தாளர் என தலையில் வைத்து இருப்பவர்கள் தான் மடையர்.

 

இன்று தமிழர்கள் படம் எடுக்க வேண்டுமாயின் அவர்கள் மகிந்தவுடனோ அல்லது டக்கிளசுடனோ சேர்ந்து  நடிக்க வேண்டும் என்றா சொல்கிறார்?

 

எமது பலம் என்ன, எமக்கு எது சாத்தியம் அதனூடாக எம்மால் எதனைச் செய்ய முடியும் எனப் பார்ப்பதை விடுத்து , இவ்வாறு எழுதிக் கொண்டு மகிந்தவைப் பாதுகாப்பத்தன் நோக்கம் தான் என்ன நிலாந்தன்?

 

கிடைக்கின்ற ஒரு புல்லைப் பிடித்தாவாது மேலெழுவோமா இல்லை வெற்றுக் கதை பேசி வீழ்வோமா? 

ஆதரவற்ற பலவீனமான நிலையில், ஹொலிவூட் படம் பார்ப்பதுதான் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே தெரிவு.

 

நிலாந்தன் வைக்கும் தீர்வு என்ன? சிங்கள  படமா பார்க்கச் சொல்கிறார்.

Edited by தப்பிலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.