Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்பழகன்: ஜன்னல்களிற்கு வெளியிலிருக்கும் தெருக்களில் நடமாடுபவன்-யோ.கர்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்பழகன்: ஜன்னல்களிற்கு வெளியிலிருக்கும் தெருக்களில் நடமாடுபவன்-யோ.கர்ணன்
 

 


 

கடந்த சில நாட்களின் முன் அன்பழகனது நினைவுநாள் கடந்து சென்றது. ஓரளவு இணைய பரிச்சயமும், ஈழப்பரிச்சயமும் உள்ளவர்களிற்கு அன்பழகன் யார் என்பது தெரிந்திருக்கும். எல்லோருக்கும் தெரிந்துவிடுமளவிற்கு பிரபலமானவனாக அவன் வாழ்ந்திருக்கவில்லை. யுத்தத்திற்கும் கனவுகளிற்குமிடையில் ஊசலாடியபடி பல்லாயிரம் இளையவர்களில் ஒருவனாக வாழ்ந்தான். அவ்வளவுதான். மரணத்தின் பின்னால்தான் அவன் பெயர் பரவலானது. துயர்மிகு காலமொன்றின் குறியீடாகவே அந்த பெயர் பரவலடைந்திருந்தது.


 

படைப்பாளியாகவும், இணைய பரிச்சயமிக்கவராகவும் அவனது சகோதரன் த.அகிலன் இருந்ததினால் அன்பழகனின் கதை உலகத்திற்கு தெரியவந்தது. கொல்லப்பட்ட தனது சகோதரனது கதையுடனும், நினைவுகளுடனும் நீண்ட நாட்களாக அவர் ஓயாது குரலெழுப்பி வருகிறார். கனத்த மௌனத்திலிருக்கும் அடர்ந்த காட்டிற்குள்ளிருந்து ஒலிக்கும் ஒற்றை மனிதக்குரலாக அது ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த கதை தனியே அன்பழகனின் கதையல்ல. ஓராயிரம் பேரின் கதை. பல்லாயிரம் பேரின் கதை. விடுதலை வேண்டி ஒரு இயக்கத்தின் பின்னால் சென்ற ஒரு தொகுதி சனங்களின் கதை.


‘ஆறாவடு’வாக இந்தகதை ஒருதொகுதி சனங்களின் நினைவுகளில் வலித்துக் கொண்டிருக்கின்ற போதும், அந்த துயரத்தின் இரத்த சாட்சியாக அன்பழகனின் கதை மட்டுமே நம்முன் உள்ளது. பிறிதெல்லாக் கதைகளும் யார் யாரோ வீட்டுச்சுவர்களிற்குள் முடங்கிக் கிடக்கின்றன. குரலற்றவர்களின் துயரத்தை யார் பாடுவார்கள்?


உண்மையில் இது மிகவும் சிக்கலான விடயம்தான். அப்பொழுது ‘களத்திலிருக்கும்’ இணையபோராளிகள் எல்லோருக்கும் கட்டாயமாக துரோகிகள் தேவையாக இருக்கின்றனர். அவர்களிற்கு எதிரிகள் என்று யாருமில்லையென்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உண்டதற்கும் உறங்குவதற்குமிடையிலான பொழுதில் அவர்கள் ஓயாது சமராடியபடியே இருக்கிறார்கள். என்றேனுமொருநாள் துரோகிகளை அழித்து, தமிழீழத்தை அடைந்து விடலாமென்ற உறுதியான நம்பிக்கை அவர்களிடமிருக்க வேண்டும். இப்படியான சூழலில் இவை பற்றி பேசி, ‘துரோகி’யாவதற்கான துணிச்சலை எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியாதுதானே. தவிரவும், இந்த போராளிகளே பெரும்பாலான ஊடகங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் காரணம். லேக்ஹவுஸ் பத்திரிகைகளிலும், பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திலும் கண்டறிய முடியாத உண்மைகளிருப்பதை போலவே, உதயன் பத்திரிகையிலும், குளோபல் தமிழ் இணையத்திலும் கண்டறியப்பட முடியாத உண்மைகள் இருக்கத்தானே செய்கின்றன.


அரசியல் நோக்கங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு, எதிர்க்குரல்களை மூர்க்கமாக தாக்கும் இந்த இரண்டு அலைகளிற்கும் ஈடுகொடுத்து எதிர்நீச்சலிடுவது அசாதாரணமானதாக மாறிவரும் சூழலில், அந்த சனங்களின் குரல்கள் இரகசியமாக புதைக்கப்படுவதில் அதிர்ச்சியடைய ஒன்றுமேயில்லை.


பல்லாயிரம் மனிதர்களை கொன்று எத்தனை இரகசியமாக புதைத்தபோதும், முள்ளிவாய்க்காலின் சில துளி உண்மைகள் கசிந்து உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கவில்லையா? அப்படித்தான் இந்த கதையும். எல்லா உண்மைகளையும் பேசவிடாத ஊடக ஆதிக்கம் மற்றும் அச்சுறுத்தல், அவதூறுகள் என வேறொருவிதமான அச்சுறுத்தலான சூழலில்தான் இப்படியான கதைகள் வரவேண்டியுள்ளன.

 


இந்த நிலை  உச்சமடைந்திருந்த சூழலில்தான் த..அகிலன் தனது சகோதரனது கதையை உரத்து சொல்லியிருந்தார். தனித்துப் போய்விடுவேன் என்ற தேசியஅபிலாசைகள் எதுவுமில்லாமல் அதனை சொன்னார். அதனால் இன்று அன்பழகன் வெறும் அன்பழகனல்ல. கட்டயாமாக படைக்கிணைக்கப்பட்டு கொல்லப்பட்ட பல்லாயிரம் இளைஞர் யுவதிகளின் குறியீடு. ஒரு இசைப்பிரியா, ஒரு பாலச்சந்திரன் வரிசையில் அன்பழகனிற்கும் இடமுண்டு.


0000

 


இயக்கங்களில் இருந்து விலகியவுடன் தவறாமல் எல்லோரும் செய்யும் சில காரியங்கள் சிலவுண்டு. இயக்கங்கள் பலவாக இருந்து, என்னதான் கொள்கை, கோட்பாட்டில் வேறுவேறானவையாக இருக்கின்ற போதும் இந்த விடயத்தில் எல்லோரும் ஒரே மாதிரித்தான் நடந்து கொள்கிறார்கள். தண்ணியடித்து பார்ப்பது, புகைபிடித்துப் பார்ப்பது, அகப்பட்டவளை காதலிப்பது கல்யாணம் செய்துவது என்பன அந்த பட்டியலில் கட்டாயம் இருக்கும். நானும் அப்படித்தான். மூன்றாவதை மட்டும் செய்யவில்லை. முதலிரண்டிற்கு மேலதிகமாக இன்னொன்று செய்தேன். சற்று ஆங்கிலம் படிப்போம் என நினைத்தேன். அப்பொழுது கிளிநொச்சி குளத்தின் ஐந்தடி வானிற்கு அருகில் ஆங்கில வெள்ளம் கரைபுரண்டு ஒடிக் கொண்டிருந்தது. அது நிலாந்தனது ரியூட்டரி. அதற்கு அப்படித்தான் விளம்பரம் செய்தார்கள்.


நானும் இன்னொரு நண்பனுமாக போனோம். கடலிற்கு குளிக்கப்போகும் போது, எப்படி தனியாக போகாமல் இன்னொரு துணையுடன் போவோமோ அப்படித்தான் ஆங்கில வெள்ளத்திலும் நீந்தப் போனோம். உயர்தரம் பரீட்சை எடுத்தவர்கள், பல்கலைகழகத்திற்கு காத்திருந்தவர்கள், ஒன்றோ இரண்டோ அரசியல்துறை போராளிகள், சில உத்தியோகத்தர்கள், என்னை மாதிரி சிலர் என கலந்து கட்டி அந்த வகுப்பில் நீச்சலடித்தோம்.


சில நாட்களிலேயே அங்கிருந்த ஒருவன் எங்கள் இருவருடனும் சினேகிதமாகி விட்டான். அவன் எப்படி அறிமுகமானான் என்பதை இப்பொழுது நினைவு கொள்ள முடியவில்லை. எப்படியோ அது நிகழ்ந்து விட்டது. இது சற்று ஆச்சரியமான விசயம்தான். ஏனெனில், அவன் அப்பொழுது உயர்தரம் முடித்து, பல்கலைகழக பொறியியல்பீடத்திற்கு தகுதி பெற்றிருந்தான். நாங்கள் சற்று பெரியவர்கள். சட்டென யாரது கையையும் பிடித்து சிரித்து சிரித்து கதைத்து விடும் இயல்பிருந்ததனால் எல்லோரையும் அவனால் நண்பர்களாக்கி கொள்ள முடிந்திருக்கலாம்.


உண்மைதான். உதறிச் சென்றுவிட முடியாத வசீகரம் அவனில் நிறைந்திருந்தது. இப்பொழுது அவனை நினைவு கொள்ளும் சமயங்களிலெ ல்லாம் வெடித்துச் சிரிக்கும் சிரிப்புத்தான் நினைவில் வரும். சிரிப்பால் வரையப்பட்ட ஞாபகமாகவே இப்பொழுது மனதில் தங்கியுள்ளான்.


நான் நினைக்கிறேன், யாரும் அடித்தாலும், திட்டினாலும். பாராட்டினாலும் அப்படி சிரித்தபடிதான் இருப்பான் என. சிரிப்பே அவனது கவசமாக இருந்தது. அவனது இருப்பிடத்தை அந்தச்சிரிப்பை வைத்தே கண்டறிந்து விடலாம். அப்படியொரு சிரிப்புக்காரன். சிரிப்பதற்கென்றே பிறந்தவன் போல சிரித்துக் கொண்டிருந்தான். உடல் முதிர்ந்து மரணிக்கும் காலம்வரையான சிரிப்பை, பாதியிலேயே முடிந்துவிடும் தன் ஆயுட்காலத்திற்குள் சிரித்து முடித்துவிட வேண்டுமென்பதைப் போலொரு சிரிப்பு.


பழகத் தொடங்கிய பின்னர்தான் தெரியும்- அவனது சகோதரன் கவிதைகள் எழுதுபவர் என்பது . த.அகிலன் என்ற பெயரை அச்சில் கண்டிருக்கிறேன். ஆளைக் கண்டதில்லை. பின்னொரு நாளில், திருநகரில் கருணாகரனது வீட்டில் கண்டேன். ஒரு கவிஞருக்கேயுண்டான தோரணையில் நாடியை வருடி மெதுவாக தலையசைத்தபடி, உதடுகளை விரிக்காமல் சிரித்து அறிமுகமாகி கொண்டார். அன்பழகனை தெரியுமென்றேன்.


பருவமும், எண்ணங்களும் வேறுவேறானதால் பின்னாட்களில் அவனை தொடர்ந்து சந்திக்க முடிந்ததில்லை. எப்பொழுதாவது வீதியில் கண்டு, சிரித்துக் கொள்வதுடன் சரி. மாறாக அகிலனை சந்தித்துக் கொண்டிருந்தேன். புத்தகங்கள் வாங்கிப்படிப்பதற்கு.


திடீரென ஒருநாள் அதிர்ச்சியான தகவலொன்று வந்தது. அகிலன் வன்னியிலிருந்து வெளியேறிவிட்டார் என. ஓரிரவிலேயே அவர் துரோகியானார். அறிந்தவர் தெரிந்தவர்களிற்குள்தானே சண்டையும் சச்சரவும். பிரபாகரனிற்கும் பொட்டம்மானிற்கும் அகிலனை தெரிந்திருக்கவில்லை. அதனால் இயக்கத்திற்கு அகிலனுடன் பெரிய பிரச்சனைகளிருக்கவில்லை. ஆனால், தவபாலனிற்கு அகிலனை நன்கு தெரியும். காரணம், அவரும் படைப்பாளிதான். அந்த காலத்தில் விடுதலைப்புலிகளையும் விட, நமது கவிஞர்களும், ஆய்வாளர்களும்தான் அதிக துரோகிகளை அடையாளம் கண்டு கொண்டிருந்தார்கள். புலிகளின்குரல் றேடியோவில் அகிலனையும் நிலவனையும் கோபம் தீரும்வரை திட்டி துரோகிகள் என தவபாலன் தீர்ப்பிட்டார்.


பின்னாளில் வன்னியின் நிலவரங்கள் மாறத்தொடங்கிவிட்டன. எல்லைகளை அரித்தபடி உள்நோக்கி வந்து கொண்டிருக்கும் யுத்தமும், ஆட்சேர்ப்பும்தான் தலையாய பிரச்சனைகளாகின. அவை மற்றெல்லாவற்றையும் நினைவிலிருந்து அப்புறப்படுத்திக் கொண்டிருந்தன. அகிலனும், அன்பழகனும் விதிவிலக்கா என்ன?


ஓருநாள் கிளிநொச்சியின் மையத்திலிருந்த தொலைத்தொடர்பு நிலையமொன்றுக்கு சென்றேன். அன்பழகன் உட்கார்ந்திருந்தான். அந்த நாட்களில் இயக்கமாக இருக்கும் இளையவர்கள் மட்டுமே பகிரங்கமாக நடமாட முடியுமென்பதால், அறிந்தவர்கள் தெரிந்தவர்களை சந்திக்க நேர்ந்தால், ‘எப்பொழுது பிடித்தார்கள்’, ‘எங்கு பிடித்தார்கள்’ என்று கேட்கும் பழக்கம் உருவாகியிருந்தது. விதிவிலக்குகள் கூட இருக்க முடியாதென்ற நம்பிக்கை.

 

anpazakan.jpg


 


என்னைக் கண்டதும் எழுந்து வந்து கையைப்பிடித்து சிரித்தான். இயல்பாகவே இயக்க பொடியன் ஒருவனுடன் கதைப்பதைப் போலவே கதைத்தேன் என்பதை நினைக்க இப்பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. ராதா படையணியிலிருப்பதாக சொன்னான். நமது படையணி. பாடசாலை நாட்கள் நினைவில் தங்கி ஞாபகங்களை கிளர்த்திக் கொண்டிருப்பதைப் போலவே, இயக்க நாட்களுமிருந்தன. வெளியேறி வந்து விட்டாலும், சில விடயங்களை விட்டுவிட முடிவதில்லை. படையணியின் நிலவரங்களை கேட்டேன். தங்கியிருக்கும் முகாம் பற்றி விசாரித்தேன். 7.8 ஏன்றான். இப்பொழுது காட்சிக்கு விடப்பட்டுள்ள பிரபாகரனது பழைய வசிப்பிடத்திற்கு அடுத்ததாக உள்ள முகாம்.


1996இல் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு சென்ற சமயத்தில் நாங்கள்தான் அந்த முகாமை உருவாக்கியிருந்தோம். அதற்காக நிறைய வியர்வையும் கொஞ்ச இரத்தமும் சிந்த வேண்டியிருந்தது. நீண்ட நாட்களாகவே அங்கேயே இருந்ததினால், எப்பொழுது நினைத்தாலும் வீடு மாதிரியான ஒரு வித நெகிழ்ச்சியான உணர்வே ஏற்படும். அப்பொழுதும் ஒரு பயிற்சி முகாமாகத்தான் இருந்தது. ஆனால் புதியபோராளிகளிற்கானதல்ல. நாளடைவில் அந்த பகுதி தனது புதிர்தன்மைகளை இழந்துவிட்டது. அதனால் புதிய போராளிகளிற்கான பயிற்சி முகாமாக்கிவிட்டார்கள்.


முன்னர் இருந்ததைவிட, இப்பொழுது அவனது முகத்தில் சிறிது கடுமை கூடியிருந்ததாகப் பட்டது. பயிற்சியினால் உண்டான உடல் மாற்றமாக இருக்கலாம். தோற்ற மயக்கமாகவுமிருந்திருக்கலாம்.


சிறிது நேரம் கதைத்துவிட்டு, தொலைதொடர்பு நிலையத்தை விட்டு வெளியில் வந்தேன். அப்பொழுதுதான் ஒரு விடயம் நினைவுக்கு வந்தது. திரும்பிச் சென்று அவனை வெளியே அழைத்தேன். முகாமிலிருந்து தப்பியோடுவதென்றால் பயப்படத் தேவையில்லை. சுலபமான வழியொன்றிருக்கிறது. முகாமின் பின்பாக ஓடும் அருவிக்     கரையோரமாக நடந்தால், காட்டிற்குள்ளால் வந்து பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் கைவேலிக்கப்பால் ஏறலாம் என்றேன். கண்களை விரித்து, வெடிச்சிரிப்பு சிரித்து, ‘ஐயோ.. வேண்டாம். மாஸ்ரர் விட்டு வைக்கமாட்டார்’ என்றான்.


உண்மைதான். மாஸ்ரர் விட்டு வைக்கமாட்டார். இயக்கத்தில் கோடு போட்டு வாழ்ந்த சிலரில், மாஸ்ரரும் ஒருவர். இயக்கத்திலிருக்கும் எல்லோருமே அப்படித்தானிருக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. நீண்டகாலமாகவே படையணி புலனாய்வு பொறுப்பாளராக இருந்து தளபதியானவர். படையணி புலனாய்வில் அப்படியொன்றும், சிக்கலான வேலைகளிருக்கவில்லை. ஓடியவர்களை பிடிப்பது, முகாமிலிருந்து வெளியில் செல்லும் சமயங்களில் வீடுகளிற்கு சென்று வருபவர்களை வீடுகளில் வைத்தே கையும்மெய்யுமாக பிடிப்பது, துண்டு கொடுப்பவர்களை அடைப்பது, மேற்படி காரணங்களிற்காக உடையார்கட்டில் ஒரு ஜெயிலை நடத்தியது போன்றனவே அவரது புலனாய்வு நடவடிக்கையில் முக்கியமானவையாக இருந்தன. இத்தகைய அனுபவசாலி ,தளபதியானால் படையணியிலிருந்து தப்பியோடுபவர்கள் ஒன்றுக்கு நூறுமுறையாக சிந்திக்க வேண்டித்தானே இருக்கும்.


அதுதான் அவனை இறுதியாக சந்தித்தது. பின்னர், ஒரு செய்தியைத்தானும் அறிந்திருக்கவில்லை. பின்னர் சில வருடங்கள் கழித்துத்தான் அவன் பற்றிய செய்தி ஒன்று கிடைத்தது. அது அவனது மரணச் செய்தி. அந்த செய்தி கிடைத்தபோது, அவன் மரணமடைந்தும், யுத்தம் நிறைவடைந்தும் ஒரு வருடத்திற்கும் மேலாகியிருந்தது.


அவனை சந்தித்த அன்றுதான் தெரியும், அகிலன் வன்னியை விட்டு வெளியேறுவதற்கு முன்பாகவே அவனை கட்டாயமாக படைக்கிணைத்து விட்டார்கள் என்பது. அவன் நிலாந்தனது ரியூட்டரியில் படித்து கொண்டிருந்த காலப்பகுதியில் அது நடந்திருந்தது. தனது வீட்டுத்தேவைக்கான இறைச்சி வாங்குவிப்பதற்காக அவனை நிலாந்தன் நகரிற்கு அனுப்பியிருந்தார். இறைச்சிகடை வாசலில் வைத்து பிடிக்கப்பட்டிருந்தான்.


கிளிநொச்சி நகர மையத்தில் முதலாவதாக படைக்கிணைக்கப்பட்டவனும் அவன்தான்.


0000


 


தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து மரணித்தவர்களின் எண்ணிக்கை குறித்த மிகத்துல்லியமான கணக்கீடுகளெதுவும் இல்லை. இனியும் அதனை கணக்கிட முடியாது. அதனை செய்யவல்ல தரப்புக்களும், வாய்ப்புகளும் இனி இருக்கப் போவதில்லை. அண்ணளவான கணிப்பீடுகளே சாத்தியம். கணக்கீடுகளில் தொடர்புபட்டவர்களிடமும் யுத்தம் நிறைவடைவதற்கு ஓரிரு வாரங்களிற்கு முதலான கணக்கெடுப்புகளே இருந்தன. மிக துல்லியமான தரவுகள் யாரிடமும் இல்லாத போதும், ஒரு தோராயமான கணக்கில் நாற்பத்து ஆறாயிரத்திற்கும் குறைவில்லாதவர்கள் என கொள்ள முடியும். ஏனெனில், கணக்கெடுப்புகள் செயலற்றுப் போகும் தறுவாயில், நாற்பத்து மூவாயிரத்தை அண்மித்திருந்திருக்கிறது. மிகுதியானவை இறுதி ஓரிரு வாரங்களில் நிகழ்ந்திருக்க சாத்தியமே.


கட்டாய ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு வந்தது, 2006இன் பிற்பகுதியில். இந்த ‘இளைய போராளிகள்’  களமாடிய முதலாவது வருடமான 2007 இல் மாவீரர்கள் எண்ணிக்கை இருபதினாயிரத்தை அண்மித்திருந்தது. அந்த வருடத்தில் ஆயிரத்திற்கும் சற்று அதிகமானவர்கள் மரணமடைந்திருந்தனர். 2008 இல் இருபத்துமூன்றாயிரத்தை அண்மித்திருந்தது. அந்த வருடத்தில் இரண்டாயிரத்து ஐநூறிற்கும் அதிகமானவர்கள் மரணமடைந்தனர். 2008 நவம்பரின் பின்னர் மரணமடைந்தவர்களது முழுமையான விபரங்களை அறிவிக்கும் வாய்ப்பு புலிகளிற்கு கிட்டியிருக்கவில்லை. யுத்தம் நிறைவடைவதற்கு சில வாரங்கள் முன்னராக கணக்கெடுப்புகள் செயலிழக்கும் காலப்பகுதி வரையான உயிரிழப்புக்கள் பெரும்பாலும் ‘இளைய போராளி’களதே. இந்த காலப்பகுதியில் ‘மூத்த போராளிகள்’ ஒப்பீட்டளவில் அதிகமாக மரணமடைந்திருந்தது ஒரு இடத்தில் மாத்திரமே. அது ஆனந்தபுரத்தில் நிகழ்ந்தது. பின்னர் யுத்தத்தின் இறுதி வாரங்களில் நிகழ்ந்தது.


இதன்மூலம் கட்டாயமாக படைக்கிணைக்கப்பட்டவர்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் குறையாதவர்கள் இறந்திருக்கலாம் என்ற உறுதியான முடிவிற்கு வந்து சேரலாம். அன்பழகனிற்காக இப்பொழுது எழுப்பப்படும் குரல் பத்தாயிரத்தில் ஒரு குரல். இப்படி கொல்லப்பட்டவர்களின் அடையாளமாக இன்று உலகின் முன்பாக அன்பழகனே இருக்கிறான். கொல்லப்பட்ட பெண்களின் அடையாளமாக எப்படி இசைப்பிரியா இருக்கிறாரோ அப்படி……..


000


இந்த யுத்தம் நமக்குத்தான் எத்தனை அடையாளங்களை விட்டுச் சென்றிருக்கிறது. அன்பழகனை பிடித்த காட்சியை நான் நேரில் காணவில்லை. பிடிக்கப்பட்ட சமயத்தில் என்ன நடந்திருக்குமென்பதை ஊகிக்கவும் விரும்பவில்லை. அவன் சிரித்தபடி சென்றானா ,அழுதபடி சென்றானா ,உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் சென்றானா என்று தெரியவில்லை. அதனை அறிந்து கொள்ளாமல் இருந்துவிடுவதும் நல்லதுதான். துன்பக் காட்சிகளை எத்தனை காலம்தான் நினைவில் வைத்து துயரப்பட்டுக் கொண்டிருக்க முடியும்? துரதிஸ்டவசமாக, இந்தனை விதமான காட்சிகளையும் காண அல்லது அறிய நேர்ந்திருக்கிறதென்பது எவ்வளவு துயரமானது.


யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருத்தி தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தாள். அங்கு பணியாற்றிய பெண்கள் தங்குவதற்கு திருநகரில் விடுதியொன்று ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. நிதர்சனம் பொறுப்பாளராக இருந்த சேரலாதன் அவளை படைக்கிணைக்க முடிவு செய்திருந்தான். தொலைக்காட்சி அலுவலகமும் சேரலாதனின் அலுவலகமும் சுமார் இருநூறு மீற்றர்கள் இடைவெளியில் இருந்தன. திட்டமிட்ட நாளொன்றில், கிளிநகரை அண்டிய பகுதிகளின் ஆட்சேர்ப்பு பொறுப்பாளராக இருந்த செழியன் வெள்ளைவானுடன் வந்து காத்திருந்தான். அவளை பிடிப்பதற்கு முயற்சி நடக்கின்றதென்ற தகவலை அங்கு பணியாற்றிய ஒரு போராளிப்பெண் இரகசியமாக அவளுக்கு சொல்லிவிட்டாள். அப்பொழுது தமிழீழ தேசிய தொலைகாட்சியில் பணியாற்றிய ஒரு தொகுதி பணியாளர்களிற்கு –அவள் உட்பட- பொறுப்பாக இருந்த கவிஞரிடம், அவளை தனது அலுவலகத்திற்கு அழைத்து வருமாறு சேரலாதன் உத்தரவு பிறப்பித்திருந்தான்.


அவரும் உத்தரவிற்கு விசுவாசமாக நடந்து அவளை அங்கு அழைத்து சென்று ஒப்படைப்பதற்கு பிரயத்தனப்பட்டார். அவள் அச்சப்படுவதைப் போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காதென வாக்குறுதியளித்து அவளை அங்கு கூட்டிச் சென்று ஒப்படைத்தார்.


சேரலாதனது அலுவலகத்திற்கு சென்ற போது, பொறியொன்றில் அகப்பட்டுவிட்டதை உணர்ந்து கொண்டாள். இப்பொழுது தப்பியோட வழியில்லை. வாகனத்தில் ஏறுமாறு சொன்னார்கள். இப்பொழுது ஏற மறுத்து அடம்பிடிப்பதால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை. இழுத்து ஏற்றுவார்கள். அவள் நிதானமாக வாகனத்தில் ஏறினாள்- முகத்தில் துளியும் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல். மற்றையவர்களின் முன்பாக தன்னையொரு பலவீனமானவளாக வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாதென்றோ,  பகிரங்கமாக அழுவதை கௌரவ குறைச்சலாகவோ நினைத்திருக்கக்கூடும். பல மாதங்களின் பின்பு, அவளை சந்தித்த சமயத்தில், அந்த கணங்கள் பற்றி கேட்டேன். அது பற்றி எதுவும் பேசாமல் தலையை குனிந்தபடி உட்கார்ந்திருந்தாள்.


00000


 

இது இன்னொரு கதை. சிறுவயதில் என்னுடன் படித்த ஒருவன் முள்ளியவளையில் இருந்தான். அவனை ‘இளைய போராளி’ ஆக்குவதற்காக வீடு தேடி வந்துவிட்டார்கள். அவனிற்கோ இளைய போராளியாவதில் விருப்பமில்லை. அப்படி இணைவதை கௌரவ குறைச்சலாக நினைத்திருக்கலாம். அறிமுகமான பொறுப்பாளர் ஒருவரின் உதவியுடன் வேறொரு வேலை செய்தான். அவர்களை அனுப்பிவிட்டு, மறுநாள் அவனாக சென்று இணைந்தான்.


00000


2009 மார்ச் மாதமளவில் இன்னொரு காட்சியை கண்டேன். பொக்கணை பகுதியில் நடந்தது. சிறிய கல்வீடொன்றிற்குள்ளிருந்து இளம்பெண்ணொருத்தியை இழுத்து வர முயன்று கொண்டிருந்தார்கள். இரண்டு கையையும் இருவர் பிடித்திழுக்கிறார்கள். அவள் நிலத்தில் புரண்டு உரத்த குரலில் கதறுகிறாள். சில ஆண்களும் நிறைய பெண்களுமாக ஒப்பாரி வைத்து, அவர்களை தடுக்க முயன்று கொண்டிருந்தார்கள். ஒருவன் துப்பாக்கியினால் மேல்வெடி வைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தி அவளை வாகனத்தில் தூக்கி போட்டார்கள்.


00000


சில வருடங்கள் கழிந்த பின்பும்…….. கட்டாய ஆட்சேர்ப்பென்றதும் இவையெல்லாம் கலந்த கலவையான காட்சிகளே இப்பொழுது நினைவில் தோன்றுகின்றன. துயரங்களின் கலவையினால் ஆன சித்திரமது.


எந்த சந்தர்ப்பத்திலும், எந்த பதிலீட்டினாலும், எந்த இலட்சியத்தின் பேரிலும் நியாயம் செய்துவிட முடியாத ஒரு மாபெரும் அநீதி பற்றி, ‘தமிழ் சமூகம்’ எனப்படும் நூற்றுச் சொச்சம் பேர் புழங்கும் ஏரியாவில் நடமாடும் எவரும் பகிரங்கமாக கதைப்பதில்லை. தங்கள் பிள்ளைகளின் காதல் , மற்றும் பிற பாலியல் தொடர்புகளை அடுத்த வீடும் அறியாத இரகசியமாக தங்களிற்குள் போட்டுமூடிக் கொள்ளும் தமிழ் மனநிலை புரிந்து கொள்ளக்கூடியதே என்ற போதும், சொந்த விருப்பு வெறுப்புக்களிற்காக சொந்த இனத்தின் உயிர்களையும் ஈடுவைக்க துணிவது அசிங்கமானது.


 

யாழ்ப்பாணத்திலுள்ள மூத்த எழுத்தாளரொருவர் கடந்த மாதம் சொன்னார், ‘உண்மையில் இப்படியான சம்பவங்கள் நடந்ததா? நான் நம்பப்போவதில்லை. அப்படி ஓரிரண்டு சம்பவங்கள் நடந்திருந்தால் கூட, அது இயக்கத்துக்க ஊடுருவிய துரோகியளாலதான் நடந்திருக்கும்’ என.


இது தொடர்பாக முன்னர் எழுதிய சமயமொன்றில் ஐரோப்பாவில் வாழும் பெண்ணொருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ‘இதையெல்லாம் ஏன் தூக்கிப்பிடிக்கிறீர்கள். அவர்கள் நமக்காகத்தானே செய்தார்கள். ஆட்கள் தேவையென்றால் சைனாவிலிருந்தா கொண்டுவருவது?’ என்று மிக முக்கியமான கேள்வியொன்றை எழுப்பியிருந்தார்.


 

வன்னியிலிருந்து வந்த ஆய்வாளரொருவர் தனிப்பட்ட உரையாடலில், ‘நல்லது நடக்குமென நம்பியிருந்தோம். பிசகிவிட்டுது. நல்லது நடந்திருந்தால் இந்த கதையள் வந்திருக்காதுதானே. அதால இதுகளை கதைக்காமல் விடுறதுதான் நல்லது. மற்றது சரியோ பிழையோ மெயின்ஸ்ரீமோட ஒத்துப் போறதுதான் நல்லது’ என்றார்.


 

இப்படியான சமயங்களிலெல்லாம் எனக்கேனோ, ஒப்பாரி வைத்தபடி தலைவிரி கோலமாக வன்னியின் தெருக்களில் அலைந்த தாய்மாரின் காட்சிகள்தான் நினைவிற்கு வந்துவிடுகிறது. எல்லோருக்கும் எல்லா காட்சிகளும் தெரிவதில்லைதானே. தவிரவும், கவிதை எழுதுவதற்காக பேனா மையாக இரத்தத்தை நிரப்பிக் கொள்ள விரும்புபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கொல்பவர்களிற்கும் கொல்லப்படுபவர்களிற்கும், இரத்தம் சிந்துபவர்களிற்கும் குடிப்பவர்களிற்கும் என எல்லோருக்கும் உகந்ததாகவே இந்த பூமி இருக்கிறது.


 

இப்பொழுது யோசிக்க, இந்த விடயத்தில் பேணப்படும் மௌனத்திற்கு வன்னியிலிருந்தவர்கள், வன்னிக்கு வெளியிலிருந்தவர்கள் என்ற பேதமெல்லாம் கிடையாது என்றே தோன்றுகிறது. கள்ளமௌனத்திற்கு இருப்பிடங்களில்லை. ஏனெனில், இத்தனை அவலங்களையும் பார்த்துக் கொண்டிருந்த வன்னியிலிருந்த எந்த படைப்பாளியும் இதற்கெதிராக குரல் கொடுத்திருக்கவில்லை. இழுத்துச் செல்லப்படுபவர்களின் கதறல் ஒலிகளிற்கு மத்தியிலிருந்து கொண்டு தமிழீழத்திற்கான நாட்களை எண்ணி எழுதிக் கொண்டிருந்தவர்கள், இனியும் அவற்றை பேசுவார்கள் என எதிர்பார்ப்பது அபத்தமானது. வன்னி நிலவரமே இப்படியிருக்கும் பொழுது, பொது அரங்கை பற்றி நினைத்தே பார்க்க வேண்டியதில்லை. மிக சிலவாக இருந்த மாற்றுகுரல்கள்தான் பேசியிருந்தன. ஆச்சரியகரமாக இளையகவி தீபச்செல்வனும் இது விடயமாக பேசியிருக்கிறார். தனது தங்கையை கட்டாயமாக படைக்கிணைத்தமை தொடர்பாக கவிதையொன்று எழுதியுள்ளார். பின்னாளில் சோபாசக்தி நேர்கண்ட சமயத்தில்தான் பொய் சொல்லி அழிச்சாட்டியம் செய்யும் சிறுவனைப்போல நடந்து கொண்டார். எனக்கேனோ அதனை படித்த சமயம், அவரது தங்கைதான் நினைவிற்கு வந்தார். கவிதை இப்படித்தான் ஆரம்பிக்கும்…….


பிழைத்துப் போன களம் உன்னை


கொண்டுபோய் நிறுத்தி


வைத்திருக்கிறது.


நீ கொண்டு செல்ல வேண்டிய பை


கிடக்கிற கடற்கரையில்


காற்று திரள்கிறது.


 


விளையாடுகிற முத்தமற்று


சைக்கிளில் திரிகிற ஒழுங்கையற்று


வாழ்வை யுத்தம் ஒடுக்கியருக்க


உன்னை களம் கொண்டு போயிற்று.


திணிக்கப்பட்டிருக்கின்ற துவக்கு


உன்னைத்தான் தின்று கொண்டிருக்கிறது.


 


பிரபாகரன் இந்த திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு முன்னர், தனது மந்திரிகளையும், பிரதானிகளையும் அழைத்து, அவர்கள் குடும்பங்களிருந்து ஒவ்வொருவரை படைக்கனுப்பி வைக்க சொன்னார். தீவிரமான புலிகள்- அதாவது கேள்விக்கிடமின்றி அவரையும், அந்த அமைப்பையும் நேசித்த பிரதானிகள் எல்லோருமே புத்திரதானம் செய்தார்கள். விடுதலைகடலில் தத்தளித்து, போக்கிடமற்று கரையொதுங்கிய கிளிஞ்சல்கள் சுழித்தபடியே இருந்தன. தங்கள் பிள்ளைகளிற்காக ஒன்றிற்கு நூறாக யாருடையதோ பிள்ளைகளை படைக்கிணைத்து மேலிடத்தை மகிழ்வித்தபடியிருந்தனர். இனி எதுவுமே செய்ய முடியாதென்ற நிலை வந்த போதுதான், இந்த வகைக்குள் அடங்கிய புதுவை இரத்தினதுரை தனது மகனை இணைத்தார். பாலகுமாரன் இறுதிவரை இணைக்கவேயில்லை.


 

புத்திரதானம் செய்து, அதனை பின்பற்றச் சொல்லி கேட்ட பிரதானிகள் எல்லோருமே போரிட்டு மடிந்தார்கள். அல்லது தங்களை தாங்களே அழித்துக் கொண்டார்கள். நீரேரியோரமாக கன்னாப்பற்றைகளின் மையத்தில் பிரபாகரனும் தற்கொலை செய்து கொண்டார். சிந்தச் சொன்ன இரத்தங்களின் குற்றப்பழிகளிலிருந்து என்றேனுமொரு நாள் அந்த செயல்கள் தங்களை விடுவிக்கவும் கூடும் என அவர்கள் நினைத்திருக்கலாம்.


 

நமது படைப்பாளிகளின் நிலைதான் சிக்கலானது. அவர்களில் யாரும் அரசுகளை உருவாக்கும் அல்லது அரசு குறித்த எண்ணக்கருவை உண்டாக்கும் வல்லமைபெற்றவர்கள் கிடையாது. அரசு ஆணைகளிற்கு சனங்கள் நம்பும்விதமான பொழிப்புரை எழுதியே பழக்கப்பட்டவர்கள். அதனால்தான் திம்பு தொடக்கம் ஜெனிவா வரை குற்றஉணர்ச்சிகளோ பொறுப்புகளோ இல்லாமல் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்- எல்லா காலத்திலும் சிந்தப்படும் இரத்ததுளிகளில் பங்கு கொண்டபடி. எல்லா காலங்களிலும் உயிர் வாழ்ந்தபடியும்…..


நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கின்றது. துப்பாக்கிகளை விடவும் அச்சமூட்டுபவையாகவும், ஆபத்தானவையாகவும் நமது கவிதைகளும், கதைகளும், அரசியல் கட்டுரைகளும் மாறிவிடும் ஆகாலமொன்றும் வரலாம்.

 

 

http://eathuvarai.net/?p=3377

கடவுளுக்கு மீண்டும் ஒரு நன்றி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
போராளி அன்பழகனை தற்செயலாக சந்திக்கவேண்டி வந்தது.அப்போது 
அவர் பொறியியல் பீடத்திற்கு தெரிவான மாணவர் என்று அறிந்து அவருக்கு மருத்துவ சான்றிதழ் பெற்றுக்கொடுத்து பல்கலைக்கழகத்திற்கு 
அனுப்ப ஒழுங்குசெய்தேன் .  மருத்துவ சான்றிதழ் அனுப்பினால் உரிய வருடத்தை தவறவிட்டாலும் பின் சென்று படிக்கலாம்.எனது பார்வையில் அன்பழகன் தெளிவான போராளியாய்த் தெரிந்தான். 
  • கருத்துக்கள உறவுகள்
யார் இந்த மாஸ்டர்?
 
கட்டாய ஆட்சேர்ப்பு எவ்வளவு பாரதூராமானது என்பதை புலிகள் கடைசி நொடியில் உணர்ந்திருப்பார்கள் :(

1989/90களில் ஈப்பியின் கட்டாய ஆட்சேர்ப்பு ஈப்பி மீது ஆயுட்காலத்திற்கு வெறுப்பு ஏற்படும்வகையில் செய்தது. அது நேரடியான அனுபவம்.

 

த.வி.பு விடயத்தில் நான் அங்கு இருந்த காலம்வரை, நான் அறிந்தவரை கட்டாய ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை. ஆனால், த.வி.பு உள்ளே சுயமாக விரும்பி இணைந்துவிட்டால் வெளியே வருவது மிகக்கடினமான விடயம் என்பது பொதுவாக அனைவருக்குமே தெரிந்த விடயம்.

 

த.வி.புவின் கட்டாய ஆட்சேர்ப்பு 2006ம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்டது என்று இங்கு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அக்காலத்தில் அங்கு வாழ்ந்தவர்கள், இங்கு லியோ போல் நேரடி அனுபவங்களை பெற்றவர்கள் பொது கருத்து தளத்தில் உண்மையை கூறினால் பலருக்கு பல விடயங்களில் தெளிவு ஏற்பட உதவும்.

 

போரின் வலி தனிநபர்களின் வீட்டு கதவூடாக உள்ளே எட்டிப்பார்க்கும்போதே அதன் அகோரத்தன்மை தெரிகின்றது.

 

இங்கு அகிலன் அவர்கள் தனது சகோதரர் கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் பலிக்கடா ஆக்கப்பட்டதன் உள்ளக்குமுறல் பற்றி கூறப்பட்டுள்ளது.

 

கட்டாய ஆட்சேர்ப்பு அல்லாமல் சுயமாகவே விரும்பி த.வி.புவில் இணைந்து இயங்கி தமது உயிரை ஆகுதியாக்கிய போராளிகளின் குடும்பத்தினரிலும் பலர் தமது சகோதரன்/சகோதரி வாழ்வு ஆகுதியாக்கப்பட்டது தொடர்பாய் உள்ளக்குமுறலை கொண்டுள்ளார்கள் என்பதும் உண்மை.

 

அதாவது, சுயமாக இணைந்தாலும் அல்லது கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் இணைந்தாலும் இரத்தம் சிந்தி உயிரை, வாழ்வை ஆகுதியாக்குவதை எதிர்காலத்தில் அனுமதிக்கமுடியுமா/ஏற்றுக்கொள்ளமுடியுமா எனும் கோணத்தில் கட்டுரையாளர் தனது கட்டுரையில் கவனம் செலுத்தியிருப்பின் நல்லது என்று சொல்லத்தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அகிலன் தனது தம்பி அன்பழகன் நினைவாய் 2009 செப்ரெம்பர் எழுதிய கவிதையிது.தனது கனவுகளின் தொலைவு இணையத்தில் தரவேற்றியிருந்தார்.                             

மரணத்துக்கு முன்னும் பின்னுமான குறிப்புகள்.                                  
Posted by த.அகிலன் on Sep 7th, 2009
                                                                                                
2009
                            
                                                

01.

25.02.2009 (முன்)

நமது தொலைபேசி

உரையாடலை

கேட்டுக்கொண்டிருக்கின்றன

நமக்குச் சொந்தமற்ற செவிகள்.

பீறிட்டுக்கிளம்பும்  சொற்கள்

பதுங்கிக் கொண்டபின்

உலர்ந்து போன வார்த்தைகளில்

நிகழ்கிறது.

நீ உயிரோடிருப்பதை அறிவிக்கும்

உன் ஒப்புதல் வாக்குமூலம்.

 

வெறுமனே

எதிர்முனை இரையும்

என் கேள்விகளின் போது

நீ

எச்சிலை விழுங்குகிறாயா?

எதைப்பற்றியும்

சொல்லவியலாச்

சொற்களைச் சபித்தபடி

ஒன்றுக்கும் யோசிக்காதே

என்கிறாய்..

உன்னிடம்

திணிக்கப்பட்ட

துப்பாக்கிகளை நீ

எந்தப்பக்கமாகப் பிடிப்பாய்

வாய் வரை வந்த

கேள்வியை விழுங்கிக்கொண்டு

மௌனிக்கிறேன்.

தணிக்கையாளர்களாலும்

ஒலிப்பதிவாளர்களாலும்

கண்டுகொள்ளமுடியாத

ஒருதுளிக்கண்ணீர் புறங்கையில்

உதிர்கிறது..

தொலைபேசிகளை

நிறைக்கிறது

ஒரு நிம்மதிப்பெருமூச்சு..

நீ நிம்மதியாப் போ..

 

02.

05.03.2009 (பின்)

அவனது பெயரில் அழகிருந்தது..

அன்பும் கூட

அவனோடு எப்போதுமிருக்கும்

அவனது மென்புன்னகையைப் போலவும்

அவனது புன்னகை ஒரு வண்டு.

மற்றவர்களின் இதயத்தை

மொய்த்துவிடுகிற வண்டு.

அவனுக்கு இரண்டு பெயர்கள் இருந்தன..

செல்லமாய் ஒன்றும்

காகிதங்களில் ஒன்றுமாய்

எதைக்கொண்டு அழைத்தாலும்

அவனது புன்னகை

ஒரே மாதிரியானதுதான்..

மாற்றமுடியாதபடி…

அவனுக்கு மூன்றாம் பெயரை

அவர்கள் வழங்கினர்

அந்த மூன்றாம் பெயர்

அவனது புன்னகையைப்

பிடுங்கிவைத்துக்கொண்டு

துவக்குகளைப் பரிசளித்தது.

அவனது விருப்புகளின்

மீதேறிநின்று பல்லிளித்தது.

அவனது தாயைப் பைத்தியமாயத்

தெருவில் அலைத்தது.

அம்மா மூன்றாம் பெயர்

அவனைக் கொன்றுவிடுமெனப்

புலம்பியபடியிருந்தாள்.

அவனது முதலிரண்டு பெயர்களையும்

திரும்பத் திரும்பச்

சொல்லிக்கொண்டிருந்தாள்..

மந்திரங்களின் உச்சாடனம்போல..

இறுதியில் அந்த மூன்றாம் பெயர்

அவனைக் கொன்றது.

அம்மா பேச்சை நிறுத்தினாள்..

யாருமற்ற வெளியில்

அலைந்துகொண்டிருக்கிறார்கள்

முதலிரண்டு பெயர்களும்

மரணத்தால் எடுத்துச்செல்லமுடியாத

அவனது புன்னகையும்.. அம்மாவும்

 

(தம்பி அன்பழகனுக்கு)
 
  • கருத்துக்கள உறவுகள்

தீபச்செல்வன் தனது தங்கைக்காக எழுதிய கவிதை. தீபச்செல்வனின் வலைப்பூவிலிருந்து.....
நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு


 


nelam.JPG---------------------------------------------------------



தீபச்செல்வன்

---------------------------------------------------------------
பிழைத்துப்போன களம் உன்னை
கொண்டுபோய் நிறுத்தி வைத்திருக்கிறது.
நீ கொண்டு செல்ல வேண்டிய
பை கிடக்கிற கடற்கரையில் காற்று திரளுகிறது.

விளையாடுகிற முத்தமற்று
சைக்கிளில் திரிகிற ஒழுங்கையற்று
வாழ்வை யுத்தம் ஒடுக்கியருக்க
உன்னை களம் கொண்டுபோயிற்று.
திணிக்கப்பட்டிருக்கிற துவக்கு
உன்னைத்தான் தின்றுகொண்டிருக்கிறது.

அண்ணாவின் கல்லறைதான்
ஒரு சொத்தென இருந்தது.
அண்ணாவின் கனவு கலைக்கப்பட்டிருக்க
கல்லறையும் தகர்ந்து போயிற்று.
இப்பொழுது வீடு இல்லை
எங்களில் யாரும் வாழ்வதற்கு.
அண்ணாவைப்போலவும்
அவனின் கனவைப்போலவும்
அலைந்துகொண்டிருக்கிறோம்.

எல்லாவற்றையும் இழந்து
அலைந்து ஒடுங்கியிருக்கிற
அச்ச மூட்டுகிற இராத்திரிகளில்
பொத்தி வைத்திருந்த
உன்னை இழுத்துச் செல்லப்படுகிற
எங்கள் விதியை என்ன செய்வது?

எங்களை அலைத்துக்கொண்டிருக்கிற எதிரியை
நீ எப்படி சுடுவாய்?
எவற்றையும் உணர முடியாத
அறிந்திருக்காத வயதில்
உனக்கு யுத்தம் தரப்பட்டிருக்கிறது.
கையில் தரப்பட்டிருக்கிற துவக்கு
பிஞ்சு மனதை வேகவைத்துக்கொண்டிருக்கிறது.
எதியிடம் சரணடைகிறது எஞ்சிய நிலம்.

இப்படி ஒரு கவிதையும்
இப்படி அச்சம் தருகிற இராத்திரியும்
ஏன் என்னை நெருங்கின.
கடைசியில் பொய்த்துப்போய்
கிடக்கிறது எனது சொற்கள்.
இனி குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி
நான் ஒரு பரணியெழுதுகிறேன்?

ஷெல்களின் மத்தியில் சேர்ந்துகொண்டு
நடுங்கியபடியிருக்க நீ வேண்டும்?
யார் உன்னை இழுத்துச் சென்றனர்?
அண்ணாவைப்போல அவர்கள் இருந்தனர்.
அண்ணா நமது தேசத்தைப்போலவே
உன்னையும் மிகவும் நேசித்திருந்தான்.

குழந்தைகள் துப்பாக்கிகளில் மறைந்திருந்தனர்
என்று அம்மா சொல்லுகிறாள்.

இப்பொழுது நமது நகரமும் இல்லை.
வாழ்வுமில்லை.
எதுவுமற்ற நாமும் இல்லை.
எனினும் நீ வேண்டும்
அவியாத கொஞ்ச சோற்றையும்
தண்ணிரில் அவித்த பருப்பையும் தின்பதற்கு.

விரைவாக வந்துவிடு
நாம் மேலும் நிலம் பெயர்ந்தலைவோம்.
-----------------------------------------------------------
(20.04.2009 தங்கச்சி வேங்கனிக்கு)

http://deebam.blogspot.de/2009/05/blog-post.html

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதாவது, சுயமாக இணைந்தாலும் அல்லது கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் இணைந்தாலும் இரத்தம் சிந்தி உயிரை, வாழ்வை ஆகுதியாக்குவதை எதிர்காலத்தில் அனுமதிக்கமுடியுமா/ஏற்றுக்கொள்ளமுடியுமா எனும் கோணத்தில் கட்டுரையாளர் தனது கட்டுரையில் கவனம் செலுத்தியிருப்பின் நல்லது என்று சொல்லத்தோன்றுகின்றது.

 

சுயமாக போராட்டத்தில் இணைந்து போராடியவர்கள் ஒரு இலட்சியத்திற்காகச் தம்மை அர்ப்பணித்து ஆகுதியாக்கினார்கள்.  அவர்களைப் போன்று 2006 களின் பின்னர் சுயமாகப் பலர் போராட்டத்தில் இணையவில்லை என்பதால் ஏற்பட்ட விளைவுகளை வைத்துக்கொண்டு இலட்சியத்தை அடைய ஆயுதப் போராட்டம் தற்கால சூழலில் சரியான வழி இல்லை என்று சொல்லலாம்தான்.

 

எனினும் ஒரு பலமான நாட்டின் ஆதரவு இருந்தால் ஆயுதப் போராட்டமும் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்று சிரியப் புரட்சிக்காரர்கள் (பயங்கரவாதிகள் அல்லர்!) உணர்த்துகின்றார்கள். எனவே இரத்தம் சிந்தும் போராட்டம் எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்பது பலமான நாடுகளின் நலன்களில்தான் தங்கியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.