Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டால் தான் விடிவுகாலம் வரும் - நீதியரசர் விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டால் தான் விடிவுகாலம் வரும் - நீதியரசர் விக்னேஸ்வரன்
[ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 01:18 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ]
 

 

தமிழர் தேசியக் கூட்டமைப்பு என்ற நிறுவனத்தினால் பல கட்சிகள் மத்தியிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டால் தான் தமிழ்ப் பேசும் மக்களுக்கு விடிவு காலம் வரும் என்று ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

கொழும்பு கதிரேசன் மண்டபத்தில், நேற்றுமாலை நடைபெற்ற தந்தை செல்வா நினைவு நிகழ்வில், ‘இலங்கைத் தமிழர்கள் செல்வது எங்கே?‘ என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் நிகழ்த்திய நினைவுப் பேருரையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

“தலைவரவர்களே! சிறப்பு விருந்தினர்களே, எனதருமைச் சகோதர சகோதரிகளே!

தமிழில் சில நிமிடங்கள் பேசுமாறு பணிக்கப்பட்டுள்ளேன்.

ஆங்கிலத்தில் பேசியதைத் தமிழாக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நான் கருதுகின்றேன்.

எனினும் கருப்பொருள் அதேதான் – இலங்கைத் தமிழர்கள் செல்வது எங்கே? தமிழர்கள் எங்கு செல்வதாக இருந்தாலும் வேற்றுமைகள் களைந்து ஒருமித்து முன்னேற வேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு இருக்க முடியாது.

அதை வலியுறுத்துவதே என்னுடைய இந்தச்சிற்றுரையின் குறிக்கோள்.

இலங்கைத் தமிழ் மக்களின் மிகப் பெரிய குறைபாடு ஒற்றுமையின்மை என்று கூறினால் அது மிகையாகாது.

எனினும் இதுவரை காலம் எங்கள்வேற்றுமைகளின் நடுவிலும் நாங்கள் ஓரளவு ஒற்றுமையை அரசியலில் புகுத்தி வந்துள்ளோம் என்பது எமக்கு மன மகிழ்வைத் தரவேண்டிய விடயம்.

எந்த ஒரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தமிழ் மகனும் பணம், பதவி போன்ற பகட்டுகளுக்குப் பணிந்து எம்மைக் காட்டிக் கொடுக்கவில்லை என்பதும் மகிழ்ச்சிக்குரிய விடயம்.

ஆனால் அண்மைக் காலங்களில் அப்பேர்ப்பட்ட வலிந்தெய்திய ஒற்றுமையும் நேர்மையுஞ் சிதைந்து போகக் கூடுமோ என்ற கருத்து வெகுவாகத் தமிழ்ப் பேசும் மக்கள் மனதில் மேலோங்கியுள்ளது.

தந்தை செல்வாவை நினைவுறுத்தும் இந் நன்நாளில் அவரின் அரசியல்த் தம்பிமார்களின், அரசியல் மகன்மார்களின், அரசியல் பேரன்மார்களின் அடிப்படைவேற்றுமைகள் பற்றியோ அவற்றை எவ்வாறு களைந்தெறியலாம் என்பது பற்றியோ எதற்காக இப்பேர்ப்பட்ட வேற்றுமைகள் உட்புகுந்தன என்பது பற்றியோ ஆராய்வது எனது நோக்கம் அல்ல. அது பொருத்தமும் அல்ல.

ஆனால் தமிழர் வாழ்வில் வேற்றுமைகள் ஏன் இத்துணை ஆழமாக வேரோடி இருக்கின்றது என்பது பற்றிச் சற்றுச் சிந்தித்து விட்டு எமது இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள வேற்றுமைகள் எதற்காக ஏற்பட்டுள்ளன என்று ஆராய்ந்துஅதற்கு என்ன செய்யலாம் என்று ஆராயந்தால் அது நன்மை பயக்கும் என்று தோன்றுகின்றது.

தமிழர் வாழ்வில் வேற்றுமை புரையோடிப் போயுள்ளன என்றால் அது எதனைக் குறிக்கின்றது?

எமது சக மக்கள் மீது உண்மையான அன்பு எங்கள் உள்ளங்களில் எழவில்லை என்பது தான் அதற்குக் காரணம்.

எங்களை முதன்மைப்படுத்துகின்றோம், எங்கள் கொள்கைகளை முதன்மைப்படுத்துகின்றோம், எங்கள் கட்சியை முதன்மைப்படுத்துகின்றோம், எமது இனசனங்களை முதன்மைப்படுத்துகின்றோம், எங்கள் சாதியை முதன்மைப்படுத்துகின்றோம், எங்கள் கிராமத்தைக்கூட முதன்மைப்படுத்துகின்றோம்.

ஆனால் நாம் யாவருந் தமிழ்ப்பேசும் மக்களே என்ற மனிதாபிமான எண்ணம் மட்டும் எங்களை விட்டுப்போய் விட்டுள்ளது.

நாங்கள் எங்களை முதன்மைப்படுத்துவதால் மற்றவர்களைப் பார்க்கும் பார்வை வேற்றுமை நிறைந்ததாக, வெறுப்பு நிறைந்ததாக, விரோதம் பாராட்டுவதாக அமைந்துள்ளது. இதை நாங்கள் உணர்ந்து கொள்ள முதலில் முன் வர வேண்டும்.

அத்துடன் எங்கள் பண்டையப் பாரம்பரியம் வித்தியாசமானது என்பதையும் நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

புறநானூற்றில் காணப்படும் கணியன் பூங்குன்றனாரின் கவிதையே எங்கள் கருமமாற்றலுக்குக் கருத்தளிப்பதாய்அமைகின்றது.

முழுப் பாடலையும் இங்கு உங்கள் முன்வைக்க ஆசைப்படுகின்றேன். பாடல் பின்வருமாறு -

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன

சாதலும் புதுவது அன்றே வாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னாதென்றலும் இலமே மின்னொடு

வானம் தண்டுளி தலைஇ ஆனாது

கல்பொருது இரங்கு மல்லல் பேர் யாற்று

நீர்வழிப் படூஉம் புணை போல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே.


இந்தப் பாடலின் அர்த்தமானது எங்கள் தமிழ் மக்கள் எல்லோராலுங் கருத்திற்கு எடுத்துக் கொள்ளற்பாலது.

எமது நடப்புமுறையும் மனோநிலையும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு நியமநிலையாக, ஒரு மாதிரிப்படிவமாக இப்பாடலின் கருத்தானது அமைகின்றது. அர்த்தத்தைப் பார்ப்போம் –

1. எந்த ஊராயினும் எங்கள் ஊரே!

2. யாராயினும் அவர்கள் எங்கள் உறவினரே!

3. நல்லதும் கெட்டதும் வருத்தங்கள் வருவதுந் தணிந்து போதலும் பிறரால் எமக்கு ஏற்படுவதன்று. எம்மாலேயே அவை ஏற்படுகின்றன.

4. சாதல் என்பது இந்த உலகத்தில் புதியதொரு செய்தியன்று. எல்லோரும் சாகத் தான் பிறந்தார்கள்.

5. ஆகவே எப்படியாவது வாழ்தல் தான் முக்கியம் என்று வாழ்க்கையில் ஊறி இனிமை காண்பதோ அல்லது அதே வாழ்க்கையை வெறுத்து ஒதுக்குவதோ எங்கள் நோக்கமல்ல.

6. பேரியாற்று நீரிலே செல்லும் படகு போல் காலம் வரும் போது எங்கள் உயிரானது முறையாகச் சென்று கரை சேரும் என்பதை நாங்கள் ஞானியர் யாத்துத் தந்த நூல்களில் இருந்து தெரிந்து வைத்துள்ளோம்.

7. ஆகவே தான் பணம் படைத்தவர் என்று ஒருவரை அந்த ஒரே காரணத்திற்காக நாங்கள் மதித்தலும் செய்யோம்!

8. பணம் இல்லையே, அவருக்குப் பதவி இல்லையே, படாடோபம் இல்லையே என்று ஒருவரை அந்த ஒரே காரணத்திற்காக நாங்கள் இகழ்தலும் செய்யோம்.

9. ஆகவே நாங்கள் அவரவரின் நல்லுள்ளப்பாங்கினை மட்டுமே கருத்திற்கு எடுத்துப் பழகுவோம்.

இதுதான் தமிழனின் பாரம்பரிய வாழ்முறை. பணத்திற்காக இனத்தைக் காட்டிக் கொடுத்தல் எமது வாழ்முறையல்ல.

இதனை எங்கள் தமிழ்ப் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் உணர்ந்து இதுவரை செயல்ப்பட்டு வந்துள்ளார்கள்.

ஆனால் இத்துணை நற்பாங்கினைக் கொண்ட, கலாசார விழுமியங்களைக் கொண்டஎமது நாடாளுமன்றத்தினர் தமக்குள் இடிபட்டு அடிபட்டுக் கொண்டு அண்மைக்காலத்தில் வாழ விழைவது மனவேதனையை அளிக்கின்றது.

எம்முள் கருத்து வேறுபாடுகள் இருக்கக் கூடும். ஆனால் எங்கள் ஒற்றுமையை அந்த வேறுபாடுகள் பாதிக்கக் கூடாது.

றோயல் கல்லூரியில் அந்தக் காலத்தில் இரு சகோதரர்களின் மகன்மார்கள் ஒரே வகுப்பில் படிப்பார்கள்.

ஆனால் அந்த இரு சகோதரர்களும் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் அங்கத்தவர்களாக இருப்பார்கள். அப்பொழுது அந்த மகன்மார்களை நாங்கள் கேலி செய்வதுண்டு.

அதற்கு அவர்கள் “எங்கள் தந்தையர்மார் கொள்கை ரீதியில் வேறுபட்டவர்கள் தான். ஆனால் எங்களுக்குள் அடிப்படை ரீதியில் எந்த வித வேற்றுமையும் இல்லை. ஒற்றுமையாகத் தான் இருக்கின்றோம்” என்று கூறுவார்கள்.

அதே போல் நாங்கள் எங்கள் ஒற்றுமையைப் பேணிக் காக்க முன்வர வேண்டும்.

இதற்குப் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழுந் தமிழ் மக்களும் ஒத்தாசை வழங்க வேண்டும்.

போர் சிந்தனையை அவர்களும் இனி அகற்றிக்கொள்ள வேண்டும்.

அன்று வன்முறையைக் கடைப்பிடித்த பல கட்சிகளே இன்று தமிழர் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியும் வேறு சிலகட்சிகளும் அதற்கு விதிவிலக்கு.

தமது பலகால அகிம்சைத் தோற்றத்திற்குப் பங்கம் விளைவிப்பதாக முடியுமே என்ற காரணத்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்து நிற்க விருப்பந் தெரிவித்திருப்பது போல் தெரிகிறது.

ஆனால் தமிழர் தேசியக் கூட்டமைப்பு என்ற நிறுவனத்தினால் பல கட்சிகள் மத்தியிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டால் தான் தமிழ்ப் பேசும் மக்களுக்கு விடிவு காலம் வரும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

புதியதொரு கட்சியாகத் தமிழர் தேசியக் கூட்டமைப்பு பரிணமித்தால் தனிக் கட்சிகளின் தனித்துவம் மறைய நேரிடும்.

அவர்கள் யாவரும் அகிம்சை வழியையே ஏற்பதாகப் பறைசாற்ற வேண்டி வரும். இதுவரை காலமும் ஒவ்வொரு கட்சியுங் கட்டிக்காத்த தனித்துவம் கைவிடப்பட நேரிடலாம்.

இதுபற்றி ஒவ்வொரு கட்சியும் ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும்.

ஆனால் எடுக்கும் முடிவு எப்பேர்ப்பட்டதாக இருந்தாலும் அது தமிழ்ப் பேசும் மக்களின் வருங்காலம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதாக அமைய வேண்டும்.

அதேநேரந் தமிழ் பேசும் முஸ்லீம் சகோதரர்களையும் நாங்கள் ஒன்று சேர்த்தே கைகோர்த்து முன்னோக்கி நகர வேண்டும்.

அன்று யாரோ சிலர் செய்த குற்றங்களுக்காக ஒட்டுமொத்த முஸ்லீம் தமிழ் மக்களையும் வடக்கில் இருந்து விரட்டியது மனிதாபிமானச் செயல் என்று எவ்விதத்திலுஞ் சொல்லமுடியாது.

அதற்கு நாங்கள் வெட்கித் தலை குனிய வேண்டும். இனியும் அப்பேர்ப்பட்ட காரியங்களில் நாங்கள் ஈடுபடாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

இனியாவது தமிழ்ப் பேசும் மக்கள் என்ற முறையில் முஸ்லீம் மக்களும் கிறீஸ்தவ மக்களும் இந்து மக்களும், ஏன் பௌத்த மதத் தமிழ்ப் பேசும் மக்களும் ஒன்று சேர்ந்து கரங்கோர்த்து முன்னோக்கிப் பயணிக்கும் ஒரு வழியை நாங்கள் காண வேண்டும்.

இன்று முஸ்லீம் மக்களுக்கு நடப்பது அன்று தமிழ் மக்களுக்கு நடந்தேறிய அநியாச் செயல்களே.

இன்று நாங்கள் முஸ்லிம் மக்களுடன் சேர்ந்திருந்து அவர்களுக்காகக் குரல் கொடுப்பது எங்கள் கடமை.

நாங்கள் முன்னர் முஸ்லீம் மக்களுக்கு இழைத்த கொடுமைக்குப் பிராயச்சித்தமாகவேனும் எமது தோழமையையுஞ் சகோதரத்துவத்தையும் இக்காலகட்டத்தில் வெளிக்காட்ட வேண்டும்.

அன்று முஸ்லீம் மக்களைத் தம்முடன் இணைத்து அணைத்து அரசியல் நடத்தியவர் தந்தை செல்வா.

என் நண்பர் மசூர் மௌலானா அவர்கள் அக்காலத்தில் தந்தை செல்வாவுடன் ஊரூராகச் சென்று தனது கணீர் குரலில் முஸ்லீம் மக்களின் தமிழ்க் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தவர்.
அதே காலம் மீண்டும் வர வேண்டும்.

பகைமைக்கும் பாகுபாட்டுக்கும் இனி இடங்கொடுக்கக் கூடாது.

எமது பகைமை பாகுபாடு, பக்கச்சார்பான நடத்தைகள் யாவும் இன்று எம்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.

போர் முடிந்து நான்கு வருடங்களின் பின்னரும் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக வடமாகாணத்தில் இருந்து வருகின்றார் என்றால் போர் முடிந்து நான்கு வருடங்களின் பின்னரும் 16 படைப் பிரிவுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முகாமிட்டுத் தங்கி இருந்து வருகின்றார்கள் என்றால் அதற்குக் காரணம்என்ன?

என் அறிவுக்கெட்டிய வரையில் அதற்குக் காரணம் எங்கள் ஒற்றுமையின்மை.

“ஜனநாயக முறைப்படி நாங்கள் இனி எங்களைக் கவனித்துக் கொள்கின்றோம். படைகளை வட கிழக்கு மாகாணங்களில் இருந்து வாபஸ் பெறுங்கள்" என்று தமிழ் மக்கள் மத்திய அரசிடம் கேட்கத் துணிந்திருந்தார்களேயானால், அது ஒருமித்த குரலில் ஒலித்திருக்க வேண்டும்.

எம்மால் அந்த ஒற்றுமையை இதுகாறும் பிரதிபலிக்க முடியாது போயுள்ளது.

எமக்கு எதிராகப் பல காரியங்கள் நடக்கலாம்.

ஆனால் எவரையும் பகைக்காது கோபம் கொள்ளாது சட்டத்திற்கு எதிரான முறையில் நடந்து கொள்ளாது எமது எதிர்ப்பை எடுத்துக் காட்டுவது தான் இனி வருங்காலத்தில் நாங்கள் செய்ய வேண்டிய காரியம்.

மீண்டும் நாங்கள் தந்தை செல்வா சென்ற வழியைக் கடைப்பிடிப்பதே சாலும் சிறந்த வழி.

போருக்கும் வன்முறைக்குங் குரல் கொடுத்த எமது சகோதரர்கள் போர் செய்வதிலும் பார்க்கக் கடினமான ஒரு வழிமுறையை இனிப் பற்றி முன்னேற வேண்டும்.

போரில் இறங்குவது இலகு. பொறுமையுடன் அகிம்சை வழிநின்று உரிமைகளைப் பெற்றெடுப்பது மிகவும் கடினமானது.

போரும் வன்முறையும் ஒரு அரசாங்கம் எம்மை வன்முறையாளர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த இடமளிக்கின்றது.

இதனால் அரசாங்கங்கள் கூடிய வன்முறையிலுங் கொடிய அடக்குமுறைகளிலுங் களம் இறங்க நாங்கள் இடமளிக்கின்றோம்.

அதை விடுத்து எமக்கெதிராக இயங்குபவர்கள் எமது பகையாளிகள் அல்ல, அறியாமையால் அவர்கள் தவறிழைக்கின்றார்கள், அவர்களை மன்னித்து விடுவாய் இறைவா என்று இறைவனிடம் இறைஞ்சிக் கேட்டுக் கொண்டு அதே நேரம் எமது பிரச்சினைகளை அகிம்சை வழியில் எடுத்துரைப்பதே சத்தியாக்கிரகம்.

சத்திய வழியில் இனியாவது நாங்கள் செல்ல எங்களைத் தயார்படுத்திக் கொள்வோமாக!

மனித குலத்தின் சகோதரத்துவத்தை நாங்கள் வலியுறுத்தி அதே சமயம் எமக்கிழைக்கப்பட்டு வரும் அநியாயங்களை உலகிற்கு எடுத்துரைத்து வருவோமாக!

நாங்கள் விதைத்ததைத் தான் அறுவடை செய்வோம்!

எங்கள் சமூகத்தில் பலரை நாங்கள் அடக்கி ஒடுக்கி வைத்ததன் பலன்தானோ இன்றைய எமது நிலை என்று எங்கள் பழைய வாழ்க்கை முறை பற்றிச் சிந்திக்குங் காலம் எழுந்துள்ளது.

நாங்கள் அன்று செய்த பிழைகள் இன்று இந்த நிலைக்கு எங்களை ஆளாக்கியுள்ளது என்றால், இன்று எங்களுக்கு எதிராக இழைக்கப்படும் தவறுகளுக்காக யார் யாரோ தண்டனை அனுபவிக்கப் போகின்றார்கள்.

அவர்களின் தவறுக்காக அவர்கள் தண்டனை அனுபவிக்கட்டும்.

எங்களைப் பொறுத்த மட்டில் நாங்கள் எந்த விதத்திலும் வன்முறையைக் கடைப்பிடிப்பதில்லை, அகிம்சை வழியையே கடைப்பிடிப்போம், நேர்வழியில் நேர்மையுடன் பயணிப்போம், யாவரையும் எம்முடன் சேர்த்துக்கைகோர்த்து ஒற்றுமையுடன் முன்னேறுவோம், வன்சிந்தனைக்கு இடமளிக்காதுமுன்னேறுவோம் என்று உலகிற்குப் பறைசாற்றி உத்தமர்கள் வழி நின்று புதியஉலகம் காணத் திடசங்கற்பம் பூணுவோமாக!

தமிழ்ப்பேசும் மக்கள் வருங்காலத்திலேனுந் தமது வாழ்க்கையை வளமுடன்வாழ இறைவன் அருள் புரிவானாக!

நன்றி

வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்.

http://www.puthinappalakai.com/view.php?20130427108166

பேச்சை பார்த்தால் உந்தாளுக்கும் புலிகளை பிடிக்காது போலிருக்கு :icon_mrgreen:

படிச்சாக்களுக்கெல்லாம் புலிகளை பிடிக்கேல்லைப் போல கிடக்கு என்ன அர்ஜீன் அண்ணா..

:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு மூலகாரணமான புலிகள் தன்னிச்சையான போர்நிறுத்தங்கள் பலவற்றை அறிவித்து சமாதானமே தங்கள் நோக்கம் என்பதனை வெளிப்படுத்தியவர்கள்.. அவர்களால் உருவாக்கம் கண்ட கூட்டமைப்பின் ஒற்றுமையை விக்னேஸ்வரன் அவர்களும் விரும்புவது புலிகளின் இலட்சியப் பாதையை கடைப்பிடிக்க விரும்புவதன் அடையாளமாக உள்ளது. :D

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சை பார்த்தால் உந்தாளுக்கும் புலிகளை பிடிக்காது போலிருக்கு :icon_mrgreen:

 

 

அவர் இது வரை அதாவது கூட்டமைப்பை ஏற்படுத்தியதுவரை

புலிகளின் செயலை வரவேற்கிறார்

அது தொடரணும் என்றும் சொல்கிறார்

அதே நேரம் நடந்த சில தவறுகளைச்சுட்டிக்காட்டி அவற்றை களைந்து  ஒற்றுமையாக கைகோர்த்து பயணிப்போம் என்கிறார்

இது தான் நல்ல மாற்றுக்கருத்து. :icon_idea: 

 

 

அவற்றையெல்லாம் விட்டுவிட்டு

அவர் சொன்ன குறைகளை  மட்டும் வைத்துக்கொண்டு

அவருக்கு புலிகளைப்பிடிக்கவில்லை என்பது வெறும் புலி   வாந்தி

இந்த இடத்தில்தான் மச்சி  நீங்கள் நிற்கிறீர்கள் :( 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இது வரை அதாவது கூட்டமைப்பை ஏற்படுத்தியதுவரை

புலிகளின் செயலை வரவேற்கிறார்

அது தொடரணும் என்றும் சொல்கிறார்

அதே நேரம் நடந்த சில தவறுகளைச்சுட்டிக்காட்டி அவற்றை களைந்து  ஒற்றுமையாக கைகோர்த்து பயணிப்போம் என்கிறார்

இது தான் நல்ல மாற்றுக்கருத்து. :icon_idea: 

 

 

அவற்றையெல்லாம் விட்டுவிட்டு

அவர் சொன்ன குறைகளை  மட்டும் வைத்துக்கொண்டு

அவருக்கு புலிகளைப்பிடிக்கவில்லை என்பது வெறும் புலி   வாந்தி

இந்த இடத்தில்தான் மச்சி  நீங்கள் நிற்கிறீர்கள் :( 

 

நாய்வாலை நிமிர்த்த முடியாது

கூட்டமைப்பை ஏற்படுத்திவிட்டு வெறும் தலையாட்டி பொம்மைகள் ஆக வைத்திருந்தார்கள் .

புலிகள் அழியவேண்டும் என்பதில் சம்பந்தருக்கு மாற்றுக்கருத்து இருந்ததில்லை .

நாய் வாலை நிமிர்த்த முடியாது ஆனால் புலி வாலை நிமிர்த்தலாம் ,நிமிர்தியாச்சு :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் எமது நாடே ...

எல்லாம் நமது மொழியே ...

எல்லாரும் நமது உறவே ...

ஆயுதமே ... முடிந்த முடிவு ....

முழங்காலில் வாழ்வதைவிட ..நின்று கொண்டு இறப்பதே மேல்...

எண்டு தான் வந்திருக்க வேணும் .... உந்தாள் பிழையா உளறுது .....  :lol: :lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.