Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவதால் ஏற்படப்போகும் ஆபத்துகள் – இரா.துரைரத்தினம்

Featured Replies

 

Published on May 26, 2013-8:05 am   ·   No Comments

ananthasankari-150x150.jpgதமிழ் அரசியல் வட்டாரங்களில் இன்று இரு முக்கிய விடயங்கள் பேசப்பட்டு வருகிறது. ஒன்று வடமாகாணசபை தேர்தல், இரண்டாவது தமிழ் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாட்டை உருவாக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சியை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்வது.

வடமாகாணசபை தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டால் விரும்பியவர்கள் வாக்களிப்பார்கள். பெரும்பாலான தமிழ் மக்கள் வாக்களிக்கும் விருப்பு அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். வடக்கு கிழக்கில் தேர்தல் என்று வரும் போது முஸ்லீம்களைப்போல தமது வாக்குரிமையை செலுத்தும் ஆர்வம் தமிழ் மக்களிடம் மிகக்குறைவாகவே காணப்படுகிறது.

இதில் இரண்டாவது விடயம் பற்றி தமிழ் மக்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளப்போவதில்லை, இந்த விடயத்தில் கூட ஒரு முடிவுக்கு வரமுடியாதவர்களாக தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போகிறார்கள் என்ற நம்பிக்கையீனத்தை தான் தமிழ் கட்சிகள் மீது தமிழ் மக்கள் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக கடந்த சில நாட்களுக்கு முதல் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அவர்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார். தமிழ் கட்சிகளான தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, சித்தார்த்தன் தலைமையிலான புளொட் ஆகிய கட்சிகளையும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சியை அமைத்திருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் ஆகிய கட்சியையும் அழைத்து பேசியிருந்தார்.

அகில இலங்கை தமிழ் கொங்கிரஷ் தவிர்ந்த ஏனைய ஐந்து கட்சிகளிடமும் முக்கியமாக தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்வது தொடர்பாகவே பேசப்பட்டிருக்கிறது.   அதன் பின்னர் ரெலோ கடந்த புதன்கிழமை புளொட் அமைப்புடனும், வியாழக்கிழமை தமிழரசுக்கட்சியுடனும் பேசியிருக்கிறது. மிக நகைப்புக்குரிய ஒரு விடயம் தலைமைக்கு கட்டுப்பாடாது தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்;ட குழப்பவாதி என கருதப்படும் சிவாஜிலிங்கமும் ரெலோ சார்பில் இந்த சமாதான பேச்சு அல்லது ஒற்றுமையை ஏற்படுத்தும் பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார்.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்வது தொடர்பாக தமிழ் மக்கள் பெரிய அளவில் அக்கறை கொண்டவர்களாக காணப்படவில்லை என்பது தான் உண்மை.

எனினும் தமிழ் அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்ல சிங்கள கட்சிகள் அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற தமிழர் தலைமைக்கு எதிரான ஈ.பி.டி.பி போன்ற அரசுசார்பு தமிழ் கட்சிகளும் இந்த விடயத்தை ஆர்வத்தோடுதான் நோக்குகிறார்கள்.

மகிந்த ராசபக்ச தலைமையிலான ஆளும் கட்சி தென்னிலங்கையில் சிங்கள கட்சிகளையும் ஏன் முஸ்லீம் கட்சிகளையும் பிளவு படுத்தி அக்கட்சிகளிலிருந்து தமது கட்சியின் பக்கம் சிலரை இழுத்தே இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருக்கிறது.

மகிந்த ராசபக்ச அரசினால் அம்பாறை மாவட்டத்தில் பியசேனா என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரை தவிர வேறு எவரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரித்தெடுக்க முடியாமல் போய்விட்டது. ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி, மற்றும் முஸ்லீம் கட்சிகளை பிளவு படுத்தி துண்டு துண்டாக உடைத்து பிளவு படுத்திய மகிந்த தலைமையிலான ஆளும் கட்சியினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்த முடியாமல் போய்விட்டது.

ஆனால் அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்தி பலவீனப்படுத்தும் முயற்சியிலிருந்து அரசாங்கம் பின்வாங்கி விட்டது என்றோ அல்லது கைவிட்டுவிட்டது என்றோ கருதிவிட முடியாது. அந்த முயற்சிகள் திரைமறைவில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்த பின்னணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதிவு பற்றி எடுக்கப்படும் முயற்சிகள் பற்றி பார்ப்போம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் தமிழரசுக்கட்சிதான் முட்டுக்கட்டையாக இருக்கிறது என ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சியை சேர்ந்தவர்களின் குற்றச்சாட்டு.

தமிழரசுகட்சியை ஒதுக்கி வைத்து விட்டு ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் பெயரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று தேர்தல் திணைக்களத்தில் பெயரை மாற்றுவது என்றும் அதற்காக உதய சூரியன் சின்னத்தை தான் தருவதாக ஆனந்தசங்கரி கூறியிருக்கிறார் என்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் வட்டாரங்களில் பேசப்படும் ஒரு விடயம்.

தேர்தல் திணைக்களத்தில் ஒரு கட்சி தனது பெயரையும் சின்னத்தையும் மாற்றிக்கொள்வதற்கு தேர்தல் சட்டத்தில் இடமுண்டு. எதிர்காலத்தில் தமிழரசுக்கட்சி என்ற பெயரில் தேர்தலில் போட்டியிடாது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் போட்டியிட வேண்டும், அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியின் கடிவாளம் தம்மிடம் இருக்க வேண்டும் என்பது ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற முன்னாள் ஆயுதக்குழுக்களின் விருப்பம்.

தமிழரசுக்கட்சி என்ற பெயரில் தேர்தலில் போட்டியிடுவதால் புதிதாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுபவர்களை தமது கட்சியில் சேர்த்து தமிழரசுகட்சியை பலப்படுத்திக்கொள்கிறது என ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற கட்சிகளின் குற்றச்சாட்டு

அண்மையில் என்னுடன் பேசிக்கொண்டிருந்த ரெலோவின் முக்கியஸ்தர் ஒருவர் இந்த விடயத்தை வலுவாக சுட்டிக்காட்டியிருந்தார். அரியநேத்திரன், சிறிதரன், யோகேஸ்வரன், சரவணபவன் போன்றவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றபின் தமிழரசுக்கட்சி தமது பக்கம் சேர்த்துக்கொண்டிருக்கிறது. தமிழரசுகட்சியில் போட்டியிடுவதால்தான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது என சொன்னார்.

தமிழரசுக்கட்சி பலமான ஒரு கட்சியாக இருப்பதை சிங்கள பேரினவாத அரசு மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளும் விரும்பவில்லை என்பதுதான் உண்மை. தமிழரசுகட்சி மகாநாட்டை நடத்துவதும், கிளைகளை அமைப்பதும் இளைஞர் அணிகளை உருவாக்குவதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளுக்கு கசப்பானதாகவே இருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பெரும் பிரச்சினைக்குரிய விடயம் தமிழரசுகட்சிதான் என்பது சிலரது வாதமாகும்.

இந்த பிரச்சினைக்கு ஒட்டுமொத்த காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தற்போது வந்து ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் ஆனந்தசங்கரி தான் என்றால் சிலர் முகத்தை சுழிக்கலாம். ஆனால் கடந்த கால சம்பவங்களையும் அனுபவங்களையும் கொண்டவர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்கள்.

1970ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் மறைந்து போன ஒன்றாகவே இருந்தது. 1972ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் கொங்கிரஷ் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஷ் ஆகியன இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலைக்கூட்டணியை உருவாக்கி தேர்தல் திணைக்களத்தில் பதவி செய்த பின்னர் தமிழரசுக்கட்சியும் அதன் வீட்டு சின்னமும் மறைந்து போயிற்று.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்து சிறிது காலத்தின் பின் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் கொங்கிரஷ் பிரிந்து சென்று விட்ட பின் 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி பெருவெற்றியை பெற்றது. 1977 பொதுத்தேர்தலில் மட்டக்களப்பில் மட்டும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட இராசதுரையை தோற்கடிப்பதற்காக காசி ஆனந்தனை நிறுத்துவதற்காக மட்டக்களப்பு தொகுதியில் மட்டும் தமிழரசுக்கட்சியும் அதன் வீட்டு சின்னமும் பயன்படுத்தப்பட்டது. மட்டக்களப்பு தொகுதியின் வரலாற்றில் தமிழரசுக்கட்சி தோற்றது அதுதான் முதல்தடவை. அது அமிர்தலிங்கம் போன்றவர்களின் சதி என அப்போது பேசப்பட்டது.

அதன் பின்னர் தமிழரசுகட்சி என்று ஒரு கட்சி இருக்கிறது என்றே யாரும் கவனத்தில் எடுத்தது கிடையாது.

1989ஆம் ஆண்டு இந்திய இராணுவம் இருந்த காலத்தில் நடந்த தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, ஈ.என்.டி.எல்.எவ் போன்ற ஆயுதக்குழுக்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீழ் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டன.

அத்தேர்தலில் யாழ்ப்பாணம் திருகோணமலை மாவட்டங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகளை நிராகரித்து ஈரோஸ் நிறுத்திய சுயேச்சை குழுவே வெற்றி பெற்றது என்பது வேறு கதை.

அதன் பின்னர் 2000ஆம் ஆண்டளவில் தமிழர் விடுதலைக் கூட்டணி, இலங்கை தமிழ் கொங்கிரஷ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளை இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.  அப்போது இந்த நான்கு கட்சிகளும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைமையில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டன.

2001மற்றும் 2002ஆண்டுகளில் நடந்த பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீழேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டது. அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்த போதிலும் அப்போது அதிகாரத்தில் இருந்த விடுதலைப்புலிகள் உட்பட பலரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தையே வலியுறுத்தியிருந்தனர்.

ஓவ்வொரு கட்சியும் தங்கள் தனித்துவத்தை பேணும் வகையில் தங்கள் கட்சிகளை வளர்த்து கொள்ள முடியும், தேர்தல் என்று வரும் போது தமிழ் மக்களால் 1977ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னத்திலேயே போட்டியிடலாம் என்ற கருத்தே முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் 2004ஆம் ஆண்டு சந்திரிக்கா அரசின் கைப்பொம்மையாக செயற்பட்ட ஆனந்தசங்கரி பிரிந்து சென்று முட்டுக்கட்டை போட்டபோதுதான் பிரச்சினையே உருவானது.   தமிழ் மக்கள் மத்தியில் பலம்பொருந்தி இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்காக சிங்கள பேரினவாத சந்திரிக்கா அரசின் சதி திட்டம் காரணமாக ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியையும் அதன் சின்னமான உதய சூரியன் சின்னத்தையும் தன்னுடன் எடுத்து சென்ற வேளையில் தான் இந்த பிரச்சினையே உருவானது.

2004ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் போட்டியிட முடியாத படி ஆனந்தசங்கரி முட்டுக்கட்டையை போட்டார். தேர்தல் சட்டத்தின் படி கட்சியின் செயலாளருக்கே தீர்மானம் எடுக்கும் அதிகாரம் இருக்கிறது. ஆனால் சந்திரிக்கா அரசின் ஆதரவை ஆனந்தசங்கரி பெற்றிருந்ததால் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனந்தசங்கரிக்கே சொந்தமாகியது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏனைய அங்கத்தவர்கள் அனைவரும் ஒருபக்கம் நின்ற போதும் பிரிந்த சென்ற ஆனந்தசங்கரியே தமிழர் விடுதலைக் கூட்டணியை தன் வசப்படுத்திக்கொண்டார். அதற்கான தண்டனையை தமிழ் மக்கள் அதன் பின் அவருக்கு வழங்கிய போதிலும் 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட முடியாத பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

அந்த வேளையில்தான் தூர்ந்து போயிருந்த தமிழரசுக்கட்சியை தூசு தட்டி கிளப்பி எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது கூட லண்டனில் இருந்த ஆவரங்கால் ஆறுமுகம் தனக்கு தான் தமிழரசுக்கட்சி சொந்தம், தான்தான் அதன் தலைவர் என உரிமை கோரி ஆனந்தசங்கரியை போல குழப்பங்களை ஏற்படுத்திய போதிலும் அந்த முட்டுக்கட்டைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றிருந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆனந்தசங்கரி தன்வசம் கொண்டு சென்ற போதிலும் 2004ஆம் ஆண்டிலிருந்து அதனை தொடர்ந்து வந்த பொதுத்தேர்தல் மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களில் தமிழ் விடுதலைக் கூட்டணியை தமிழ் மக்கள் நிராகரித்திருந்தார்கள்.

முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் வரை சந்திரிக்கா அரசுக்காகவும் அதன் பின்னர் மகிந்த அரசுக்காகவும் உலகம் எல்லாம் சென்று பிரசாரம் செய்து வந்தவர் ஆனந்தசங்கரி, அண்மைக்காலத்தில் கூட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தீர்மானம் கொண்டு வந்த போது இந்தியா அதற்கு ஆதரவளிக்க கூடாது என்றும் இந்தியா சிறிலங்காவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கோரியவர்தான் ஆனந்தசங்கரி.

சிங்கள அரசின் கைப்பொம்மையாக மகிந்த அரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் ஆனந்தசங்கரியும் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருக்கிறார். அவரே இப்போது ஐந்து கட்சிகளுக்கும் சம அதிகாரம் உள்ளவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் என கோரி வருகிறார்.

தமிழ் கட்சிகளுக்கிடையில் ஒன்றுமை ஏற்படுவதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்து ஒரே குடையின் கீழ் செயற்படுவதும் நல்ல விடயம் தான்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்தபின் முக்கியமான ஒரு கட்டத்தில் அதனை பிளவு படுத்திக் கொண்டு ஆனந்தசங்கரி பிரிந்து செல்ல மாட்டார் என்ன உத்தரவாதம்?  ஏன் முன்னரைப்போல சிவாஜிலிங்கம் கட்சியின் தலைமையின் கட்டுப்பாட்டை மீறிக்கொண்டு செல்லமாட்டார் என்பதற்கு ரெலோ உத்தரவாதம் அளிக்குமா?

2004ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை தன்னுடன் எடுத்து சென்று சந்திரிக்கா அரசின் காலடியில் கொண்டுபோய் வைத்தது போல தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பிரித்து கொண்டு போய் மகிந்த அரசின் காலடியில் வைக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

2000ஆம் ஆண்டுக்கு பின்னர் ரெலோவும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து செயற்படவில்லை, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தமது நல்லெண்ணத்தை தமிழ் மக்களுக்கு காட்டியிருந்தார்கள்.

ஆனால் புளொட் முள்ளிவாய்க்கால் இறுதி வரை சிங்கள இராணுவத்துடன் இணைந்து நின்று செயற்பட்டவர்கள். இதனால் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை மக்கள் மறக்கவில்லை. இன்றும் சிறிலங்கா அரசாங்கத்துடனும் இராணுவத்துடனும் இருக்கும் உறவை அவர்கள் முற்றாக துண்டித்து விட்டார்களா என்பது தெரியவில்லை.

இந்நிலையில் பின்கதவால் சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணிவரும் ஆனந்தசங்கரியும் புளொட் சித்தார்த்தனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து அதன் பங்காளிகளாக பதிவு செய்த பின் சிங்கள பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அவர்களின் சதி திட்டத்திற்கு அமைய தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்த மாட்டார்கள் என்பதற்கு யார் உத்தரவாதம் வழங்குவது?

கடந்த கால அனுபவங்களை வைத்து பாடம் கற்ற வேண்டும், கடந்த காலங்களில் ஆனந்தசங்கரி சித்தார்த்தன் போன்றவர்களின் நடவடிக்கைகள் இலகுவாக மறக்க கூடியவை அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் போது இவற்றை கவனத்தில் எடுப்பது தவிர்க்க முடியாததாகும்.

இன்று தமிழரசுக்கட்சிதான் பிரச்சினை என கருதும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற கட்சிகள் தமிழரசுக்கட்சி இன்று தலையெடுப்பதற்கு யார் காரணம் என்பதை உணரவேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்த பின் அதனை சின்னாபின்னமாக உடைப்பதற்கு மகிந்த ராசபக்ச ஆனந்தசங்கரியை பயன்படுத்த மாட்டார் என்பதற்கு யார் உத்தரவாதம் அளிப்பது? கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் படிக்கவில்லை என்றால் அதைப்போன்ற முட்டாள் தனம் வேறு எதுவும் இருக்க முடியாது

வானத்தால் போன சனியனை ஏணிவைத்து இறக்கியிருக்கும் ரெலோவும் ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்றன அந்த சனியனுக்கு முடி சூட வேண்டும் என நினைக்கின்றன.

இன்னும் ஒன்றையும் ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற கட்சி தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், தமிழரசுக்கட்சி மீது எந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது, அது மட்டுமல்ல சுரேஷின் தந்தையும் செல்வத்தின் தந்தையும் நேசித்த கட்சி தமிழரசுக்கட்சி தான். அப்படியானால் தமிழரசுக்கட்சியின் மீது அவர்களுக்கு ஏன் வெறுப்புணர்வு வரவேண்டும்?

 

thinakkathir

 

 

கட்சி அரசியல் தான் முக்கியம்! தமிழர் நலனல்ல என்பவர்களின் முயற்சி!!!

கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசுக் கட்சியை மட்டும் பலப்படுத்துவது சரியா?

முன்னாள் போராடக் குழுக்கள் குற்றம் செய்தவை, அதனால் பலவீனமானவை என்ற கோணத்தில் கருத்து வைப்பவர்கள் சகுனிகளே!   

  • தொடங்கியவர்

நாங்கள் எல்லோரும் ஓடிவந்து வசதியாக வாழ்ந்து கொண்டு ,அங்குள்ளவர்கள் 
போராடவேண்டும் என்று சொல்பவர்கள் சகுனியா ?அல்லது 
தன்னுடைய உறவினர் கொலைகார பிள்ளையானுக்காக கிழக்கு மாகாண தேர்தலை 
புறக்கணிக்க சொன்னவர் சகுனியா ?அல்லது 
டக்கிக்காக தற்பொழுது வட மாகாண தேர்தலை புறக்கணிக்க சொல்லுகின்ற குதிரைகள் 
சகுனியா ?அல்லது 
 
மார்க்கம் நகரசபை தேர்தலில் போட்டியிட்ட Dr .இலகுப்பிள்ளை யின் 
வெற்றியை நாசமாக்கியவர்கள் சகுனியா ?அல்லது 
2010தேர்தலில்தங்களுக்கு போட்டியிட இடம்தரவில்லை என்பதற்காக திருமலை 

மக்களின் பிரதிநிதித் துவத்தை இல்லாமல் செய்ய முயற்சித்தவர்கள் சகுனியா ?
 
நாங்களும் எழுதுவமெல்லா ,சொல்லுங்கள் -----

 

   தமிழரசுக்கட்சி கடைசி ஈழத்தமிழன் இருக்குமட்டும் உயிர்வாழும் .

 

Edited by நிழலி
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று எனது ஊர் ஆர்க்ஸ்ரா  அதாவது பாட்டு கேட்கும் நிகழ்ச்சியா..? அதில் தெளிவாக தெரிந்தது..

 

 

அஜித் பாட்டு பாடினால் 500 தருகிறான் ... அடுத்து பாட்டு விசய் பாடல் என்றால் 1000 ரூபாய் தருகிறன் என்கிறான் .. ஆக கூத்தாடிக்கு கொண்டாத்தான்...

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.