Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேக்ஸ்மிலியன் ரொபேஷ்பியர் : வாசுதேவனின் பிரெஞ்சுப் புரட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேக்ஸ்மிலியன் ரொபேஷ்பியர் : வாசுதேவனின் பிரெஞ்சுப் புரட்சி
Friday, 05 July 2013 20:42 - யமுனா ராஜேந்திரன் - நூல் அறிமுகம்

 
book_french_revolution57.jpg

 
வரலாறு எழுதுதல் எனும் செயல்பாடு கடந்த காலம் பற்றியதாயினும் அது எப்போதுமே எழுதுபவன் வாழும் நிகழ்காலம் குறித்ததாகவே இருக்கிறது. வாசுதேவன் தனது சமகால மனநெருக்கடியிலிருந்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். பிரெஞ்சுப் புரட்சி குறித்த அவரது வரலாற்று நூலை முன்வைத்து ரொபேஷ்பியர் முதல் பிரபாகரன் வரையிலான ஆயுதப் பேராட்டத்திற்குத் தலைமையேற்ற ஆளுமைகளின் நம்பிக்கைகள், நடைமுறைகள், அதீதங்கள் என ஒருவர் உரசிப் பார்த்துக் கொள்ளமுடியும். வாசுதேவனின் நூலுக்கு அறிமுகம் எழுதுகிற இந்த இரண்டாயிரத்துப் பதின்மூன்றாம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சிக்கு 225 ஆண்டுகள் நிறைகிறது. 1989 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் இருநூறு ஆண்டு நிறைவு விழா பிரான்சில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தபோது இவ்வாறானதொரு நூல் எழுதும் ஆதர்ஷம் தனக்கு ஏற்பட்டது என்கிறார் வாசுதேவன். வாசுதேவனுக்கு நிச்சயமாக இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சி எதிர்கொண்ட கருத்தியல் மற்றும் நடைமுறைக் கேள்விகள் அனைத்தையும் எதிர்கொண்ட ஒரு விடுதலைப் போராட்டமாக அவரது பூர்வீக நிலம் சார்ந்த ஈழவிடுதலைப் போராட்டம் இருந்தது என்பதுதான் அந்தக் காரணம். பிரெஞ்சுப் புரட்சி குறித்துப் பேசும், நிறைந்த தமிழ்ப் புதுச்சொல்லாக்கங்களும் கவித்துவ மொழியும் கொண்ட இந்த நூலில் 'போராளிகளின் தற்கொடை, மாவீரர்' போன்ற சொற்கள் வாசுதேவனிடமிருந்து இயல்பாக வந்து விழுகின்றன.

பிரெஞ்சுப் புரட்சி குறித்து உலக மொழிகளில் இப்போதும் நூல்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. மனிதனது விமோசன அரசியலுக்கான அவசியமும் விடுலைக்கான தேடலும் இருக்கும் வரையிலும் பிரெஞ்சுப் புரட்சி குறித்த நூல்கள் மறுபடி மறுபடி எழுதப்பட்டுக்கொண்டுதான் இருக்கும். பிரெஞ்சுப் புரட்சியும் அதனைத் தொடர்ந்த பாரிஸ் கம்யூன் எழுச்சியும் குறித்து மார்க்சிய மரபிலிருந்து மார்க்சும் லெனினும் மாவோவும் எழுதியிருக்கிறார்கள். முடியாட்சி மற்றும் தாராளவாத சார்பு நிலையிலிருந்து எட்மன்ட் பர்க் மற்றும் சைமன் சூமா போன்றவர்களும், பின்நவீனத்துவ அல்லது பின் மார்க்சிய நிலைபாடு என்பதிலிருந்து பிராங்காயிஸ் பியூரட் போன்றவர்களும் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்கள்.

எதிர்ப்புரட்சியாளர்களிடம் இருந்து புரட்சியைக் காப்பாற்றுவதற்கான புரட்சிகர வன்முறையின் அவசியம் எனும் தேர்வை லெனினும் மாவோவும் பிரெஞ்சுப் புரட்சியில் இருந்தும் பாரிஸ் கம்யூன் அனுபவங்களில் இருந்தும்தான் ஸ்வீகரித்துக் கொண்டார்கள். புரட்சிகளின் ஆதாரமான தத்துவார்த்தப் பிரச்சினைகளின் ஊற்று என நாம் பிரெஞ்சுப் புரட்சியை வரையறுக்கலாம். புரட்சியில் தொழிலாளி வர்க்கத்தின் மேலாண்மை எனும் கருத்து உருவாக்;கத்தை நாம் பாரிஸ் கம்யூன் எழுச்சியில் கண்டுணரலாம். இக்காரணத்தினால்தான் பிரெஞ்சுப் புரட்சிக்கும் ஈழவிடுதலைக்குமான ஒப்பீட்டையும் எம் மனம் நிகழ்த்துகிறது.

பிரெஞ்சுப் புரட்சி முதல் உலகவயமாதல் வரையிலுமான சமூகப் புரட்சிகள் மற்றும் எழுச்சிகள், இவற்றில் மக்கள் திரள் மற்றும் வன்முறை என்பது குறித்த வரலாறெழுதியல் என்பது பிரதானமாக மூன்று வகையிலானதாக இருக்கின்றன. மார்க்சிய வரலாற்றும் பார்வை முதலானது; முடியாட்சிக்கும் முதலாளியத்திற்கும் முடிவு கட்டுவதில், இவற்றிடமிருந்து புரட்சியைப் பாதுகாப்பதில் வெகுமக்களின் தன்னெழுச்சியான புரட்சிகர வன்முறையை இது ஆதரிக்கிறது.

இரண்டாவது பார்வை முடியாட்சிக்கு முற்றிலும் ஆதரவான பார்வை; முடியாட்சியில் இருந்த வன்முறைகள் பற்றிப் பேசாமல் குடியாட்சிக்கான மாறுதல் என்பது முடியாட்சியின் எச்சங்களைத் தக்கவைத்ததாக, அதே ஆட்சியில் மதபீடங்களின் ஆதிக்கத்தையும் ஆதரிக்கும் பார்வை இது.

மூன்றாவது பார்வை இன்றைய முதலாளித்துவத்தின் தத்துவப் பார்வையாக இருக்கிற முதலாளித்துவ தாராளவாதப் பொருளியல் பார்வை; முடியாட்சி முடிவுற்று, ஜனநாயகம் என்பதன் பெயரில் அதிகாரத்தை சொத்துடமை வர்க்கத்தின் கையில் மாற்றித்தருவதுடன் முடியாட்சிக்கு எதிரான புரட்சி முடிவுபெற்றுவிட்டது என்பது இப்பார்வை. இவர்கள் முடியாட்சியின் தொடர் வாரிசுகளாக இவ்வகையில் இருக்க முடியும்.

மார்க்சியர்கள் தவிரவும் பிற இரண்டு பார்வைகளைக் கொண்டவர்களும் அடிமைகள், தொழிலாளர், விவசாயிகள், பெண்கள், சிறுபான்மையினர் உரிமைகள் என்பது குறித்துப் சேசுபவர்கள் இல்லை. இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வன்முறை அமைப்பினாலும், அதனைக் காவிய மத அமைப்பினாலும் அதிகாரம் செலுத்தப்பட்ட வெகுமக்கள் வன்முறையை இவர்கள் பயங்கரம் என வகைப்படுத்துகிறார்கள். பிரெஞ்சுப் புரட்சிக்குப் முன்பான முடியாட்சிக் காலம், பின்னான நெப்போலியனின் காலம், காலனியாதிக்கம், இன்று வரையிலும் தொடரும் ஈராக், ஆப்கான் வரையிலுமான ஆதிக்கம் கொண்டவர்களின் வன்முறை குறித்து இவர்கள் பேசுவதில்லை.

'நீதிக்கான யுத்தம்' அல்லது ஜஸ்ட் வார் என்கிற கருத்தாக்கத்தின் பின்னும், கொலேட்டரல் டேமேஜ் அல்லது 'உடன்விளைவான அழிவு' என்பதன் பின்னுமிருக்கும் வன்முறையைப் புனிதப்படுத்தும் இவர்களது செயல்பாட்டின் பின்னிருக்கும் பயங்கரம் குறித்தும் இவர்கள் பேசுவதில்லை.

வன்முறை குறித்த இந்தக் கருத்தியல் மற்றும் நடைமுறை நிலைபாட்டில் இருந்துதான் இன்று பிரெஞசுப் புரட்சி குறித்ததும், ஈழ விடுதலைப் போராட்டம் குறித்ததுமான மறுவாசிப்பை நாம் நிகழ்த்த வேண்டும். வாசுதேவன் அப்படித்தான் பிரெஞ்சுப் புரட்சி குறித்த இந்த வரலாறு எழுதுதலைத் துவங்கியிருக்கிறார். முதல் அத்தியாயம் பிரெஞ்சுப் புரட்சியில் துவங்கி நூலின் இறுதி அத்தியாயம் பாரிஸ் கம்யூன் வீழ்ச்சியில் முடிகிறது. பிரெஞ்சுப் புரட்சி குறித்த விரிவான, அசலான வாசிப்புடன் வெளியான முதல் தமிழ் நூல் என வாசுதேவனின் இந்த நூலைச் சொல்ல முடியும்.

இந்த நூல் பிரெஞ்சுப் புரட்சியின் பொருளியல் அடிப்படையையும் நடைமுறை நிகழ்வுகளையும் அற்புதமாக நிரல்படுத்தியிருக்கிறது. புரட்சி எவ்வாறு துவங்கி நடந்து முடிந்தது எனக் கற்கவிரும்பும் மாணவனுக்கு இது முக்கியமான நூல். பிரெஞ்சுப் புரட்சியின் கருத்து மூலாதாரங்கள் மற்றும் தத்துவார்த்தச் சர்ச்சைகள் போன்றவற்றைத் தேடிச்செல்பவர்;கள் இந்த நூலுக்கு வெளியில் பெரும் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

சே குவேராவின் பொலிவியன் டைரி எனக்கு வாசிப்பில் எவ்வளவு மனக்கிளர்ச்சியையும் தேடலையும் ஆத்மவலியையும் உருவாக்கியதோ அதே அளவில் எனக்கு உத்வேகத்தை, தேடலை, வலியை உருவாக்கிய நூலாக வாசுவேனின் நூல் இருந்தது. அதற்கான காரணம் பிரெஞ்சுப் புரட்சியை எழுதுவதற்கு வாசுதேவன் தேர்ந்து கொண்ட உணர்ச்சிகரமான கவித்துவமான மொழி. மிகுந்த இலக்கியத் தன்மையையும் காவியத்தன்மையையும் இந்நூல் கொண்டிருப்பதற்கான காரணம் பிரெஞ்சுப் புரட்சியின் தலைவனான ரொபேஷ்பியர் குறித்த சம்பங்கள் பற்றிய உணரச்சிகரமான விவரணைப் பகுதிகள்தான்.

உலகப் புரட்சிகளின் வரலாற்றில் சே குவேராவைப் போல கலைஞர்களையும் தத்துவவாதிகளையும் நாவலாசிரியர்களையும் திரைப்பட இயக்குனர்களையும் பாதித்த பிறிதொரு புரட்சியாளராக ரொபேஷ்பியர் இருக்கிறார். ரோமேய்ன் ரோலந்து முதல், ஆந்த்ரே வாட்ஜே ஈராக, ஹிலாரி மான்டெல் வரை ரொபெஷ்பியர் குறித்து நாவல்களும் நாடகங்களும் திரைப்படங்களும் வரலாறு நெடுகிலும் குவிந்து கிடக்கின்றன.

பிரெஞ்சுப் புரட்சியை மார்க்ஸ் 'பூர்ஷ்சுவாப் புரட்சி' என்றார். அதனை முழுமையாக அவர் வரவேற்கவில்லை. 'கடந்த காலத்தின் கவிதைகளில் இருந்து எதிர்காலத்தை உருவாக்க முடியாது' எனப் பிரெஞ்சுப் புரட்சி குறித்து அவர் சொன்னார். மார்க்சின் புதல்வர்களாக புரட்சியை நடைமுறையில் நிகழ்த்த வேண்டியிருந்த லெனினும் மாவோவும் பிரெஞ்சுப் புரட்சியின் படிப்பினைகளை, புரட்சியைப் பாதுகாக்க புரட்சிகர வன்முறையை புரட்சிகர அரசு பாவிக்க வேண்யிருக்கிறது என்பதனை அவர்கள் சுவீகரித்துக் கொண்டார்கள்.

புரட்சியின் எதிரிகள் அல்லாது அதனை வெகுமக்கள் மீது ஒரு போதும் பாவிக்கக் கூடாது என இதனை பிடலும் சே குவேராவும் இன்னொரு படிநிலைக்கு எடுத்துச் சென்றார்கள்.

பிரெஞ்சு அரசும் முடியாட்சிச் சார்பாளர்களும், தாராளவாத ஜனநாயகவாதிகளும் இவற்றினது வரலாற்றாசிரியர்களும் அறிவாளிகளும் ரொபேஷ்பியரை பயங்கரவாதி என்கிறார்கள். அவர் தலைமைதாங்கிய காலம் 'பயங்கரத்தின் காலம்' என்கிறார்கள். ரொபேஷ்பியருக்கு முன்பாகவே கண்டுபிடிக்கப்பட்டு முடிமன்னர்கள் பாவித்த ‘நோகாமல்’ தலைவெட்டும் கில்லட்டின் எனும் கொலைக் கருவியை ரொபேஷ்பியர்தான் கண்டுபிடித்தார் என்கிற மாதிரியான சித்திரத்தை இவர்கள் தருகிறார்கள்.

'பிரெஞ்சுப் புரட்சியைத் தோற்கடித்த பின்னால் ஆட்சிக்குவந்த நெப்போலியனின் காலத்தில் இடம்பெற்ற படுகொலைகளை ஒப்பிடும்போது, ரோபேஷ்பியர் காலத்தில் நிகழ்ந்தது ஒன்றுமேயில்லை' என எழுதுகிறார் விலங்குப்பண்ணை நாவலை எழுதிய ஜோர்ஜ் ஆர்வல். பிரெஞ்சுப் புரட்சி என்றாலே ஏதோ கபாலங்களால் ஆன பிரமிடு எனும் இந்தக் கட்டுக்கதையை தனது டேல்ஸ் ஆப் டூ சிட்டீஸ் மூலம் உருவாக்கியவர் ஆங்கில நாவலாசிரியர் சார்ள்ஸ் டிக்கின்ஸ் எனவும் ஜோர்ஜ் ஆர்வல் பதிவு செய்கிறார்.

முடியாட்சிக்கு முடிவுகட்டிய, அதன்பின் தோன்றிய மக்களாட்சிக்கான அடிப்படைக் கட்டுமானத்தை காப்பாற்ற விரும்பிய, உள்நாட்டு நிலப்பிரபுக்கள் அதனோடு மதஅதிகாரிகள் போன்ற உள்நாட்டு எதிரிகளிடமிருந்தும், வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களிடமிருந்தும் பிரெஞ்சுப் புரட்சியைக் காக்க வேண்டிய நிலையில் இருந்தார் ரொபெஷ்பியர்.

கறுப்பின அடிமை முறையை ஒழித்தவர்; பெண்ணுரிமையை மனித உரிமையாக அறிவித்தவர் அவர். விவசாயிகளின் புரட்சிகர ஆற்றலை அங்கீகரித்தவர்; தனது வழக்குரைஞர் வாழ்வின் ஆரம்ப நாட்களில் எந்தச் சம்பளமும் பெற்றுக் கொள்ளாது வறியவருக்கு வாதாடியவர் அவர். மட்டற்ற பத்திரிக்கைச் சுதந்திரத்தைக் கோரியவர்; மரணதண்டனையை முற்றிலும் ஒழிக்கப் போராடியவர் அவர். கிறித்தவ மதபீடங்களுக்கு எதிராக பேரறத்தைப் பேசியவர்; வாக்காளர் தகுதி நிர்ணயத்தில் சொத்துடமை என்பது அகற்றப்பட வேண்டும் என்றவர் அவர்.

'அறம் என்பதே ஆட்சியின் அடிப்படை மறம்' என்றவர் ரொபேஷ்பியர்.

இவர்தான் புரட்சியைக் காப்பாற்ற வேண்டியிருந்த பின்னாட்களில் அறமும் வன்முறையும் பிரிக்கப்பட முடியாது என்றவர். அறமற்ற வன்முறையை நிராகரி;த்தவர். நண்பர்களையும் தோழர்களையும் புரட்சிக்கு எதிராக இருந்தார்கள் எனும் காரணத்திற்காக கில்லட்டினுக்கு அனுப்பியவர். பத்திரிக்கைகளைத் தடை செய்தவர். ரூசோவினால் உருவாக்கப்பட்ட கறைபடியாத நேர்மையாளர்; பதவி சுகத்தை மறுத்தவர்; பாரிஸ் நகரத்தை நடந்தே அளந்தவர்; தன் காலமும் அதன் கருவியாகத் தானே உருவாக்கிய அமைப்பின் கைதியாகவும் ஆனவர். விளைவாகத் தனது தோழர்களையும் நண்பர்களையும அவர் அனுப்பிய அதே கில்லட்டினுக்குத் தனது சகநண்பர்களாலும் தோழர்களாலும் அனுப்பப்பட்டுத் தலைவெட்டுப்பட்டு மரணித்தவர்.

1758 ஆம் ஆண்டு பிறந்த ரொபேஷ்பியர் 28 சூலை 1794 ஆம் ஆண்டு கில்லட்டினில் கொல்லப்பட்டார். 36 ஆண்டுகள் மட்டுமே அவர் உயிர் வாழ்ந்தார்.

பிரெஞ்சுப் புரட்சியின் தலைவர்களான மாரட், தந்தோன், ஹெர்பர்ட, டெஸ்மோலின்ஸ், ரொபேஷ்பியர் என எவரும் தொழிலாளி வர்க்கத்திலிருந்தோ விவசாய வர்க்கத்திலிருந்தோ வந்தவர்கள் இல்லை. மத்தியதர வர்க்கத்திலிருந்து வந்தவர்கள் இவர்கள். மாரட்டும், ரொபேஷ்பியரும் ஏழை நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவர்கள். இன்னும் ரொபேஷ்பியர் தனது இளம் வயதிலேயே தாயைப் பறிகொடுத்தவர். தந்தையினால் நிராகரிக்கப்பட்டவர். உறவினர்களால் வளர்க்கப்பட்டவர். நாம் இவர்களது சரி பிழைகளைப் பற்றி இன்று பேசி தீர்ப்பெழுத முடியாது.

ரோபேஷ்பியர் ஒரு வரலாற்று நாயகன். அவன் எதிர்கொண்ட கேள்விகளும் நடைமுறைகளும் அவன் கண்டடைந்த வழிமுறைகளும் ‘இன்று’ ஒவ்வாதது என எவரேனும் சொல்ல முடியும். ஆயுதப்போராட்டம் கடந்த காலத்துக்கு உரியது என பிடலும் சேவாசும் அறிவித்துவிட்ட சூழலில், அனைத்து விடுதலைப் போராட்டங்களும் பயங்கரவாதம் தான் என பழைய கம்யூனிச நாடுகளான ரஸ்யாவும் சீனாவும் அறிவித்துவிட்ட நிலையில், எவரும் ரொபேஷ்பியரை பயங்கரவாதி எனவும் சொல்லிவிட முடியும்.

பிரெஞ்சுப் புரட்சி குறித்த விவாதங்களில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும்; மேற்கோள் ஒன்று உண்டு; அது சீன மார்க்சியரான சூயென் லாய் சொன்னது. பிரெஞ்சுப் புரட்சியின் இருறூறாவது ஆண்டு நிறைவுத்தருணத்தில் அவரிடம், ‘பிரெஞ்சுப் புரட்சியைப் பற்றி எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்?’ எனக் கேட்கப்பட்டது. அற்கு அவர் சொன்ன பதில் இது : ’இப்போதே அதைப்பற்றி மதிப்பிடுவது என்பது ரொம்பவும் முன்கூட்டியே சொல்வதாக ஆகிவிடும்’.

வாசுதேவனின் பிரெஞ்சுப் புரட்சி நூல் குறித்த எனது மதிப்பீடு இவ்வாறானது இல்லை. நிச்சயமாகவே வாசுதேவனின் நூல் மிகச் சரியான தருணத்தில் வந்திருக்கிற மிகவும் அசலான, முக்கியமான நூல். இதன் பின்னுள்ள வாசுதேவனின் உழைப்புக்கு நான் தலைவணங்குகிறேன்


http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1601:2013-07-06-01-44-10&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரட்சிக்கெல்லாம் தாய்ப் புரட்சியெனக் கருதப்படும் பிரஞ்சுப் புரட்சி பற்றிய ஒரு முக்கிய நூல் தமிழில் வெளியாகியுள்ளது. புலம் பெயர்ந்த தமிழர்களில் முதலாவது தலைமுறையைச் சேர்ந்த, கால் நூற்றாண்டிற்கும் அதிகமான காலம் பிரான்சில் வசித்துவரும் திரு.க.வாசுதேவனால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  பிரஞ்சு மொழியில் தகமைபெற்ற, மொழிபெயர்ப்பாளர் வாசுதேவனால் நேரடியாக பிரஞ்சு மொழியிலேயே ஆவணங்கள் ஆராயப்பட்டு இந்நூல் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமொன்றாகும்.

நூலின் இறுதியில் பட்டியலிடப்பட்டிருக்கும் உசாத்துணை நூல்களின் தன்மையும் எண்ணிக்கையும் இந்நூலின் அடர்த்தியையும், அதன் ஆய்நிலைக் கண்ணோட்டத்தையும் வெளிப்படுத்துகின்றது. அதுமட்டுமன்றி, பிரஞ்சுப் புரட்சியின் வரலாற்றை எழுதுதல் பற்றிய குறிப்பும் இந்நூலின் தொடக்கத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.  புரட்சியை அண்மித்த காலத்திலிருந்து, பின்னர் நூற்றாண்டுகளின் போக்கில் பிரஞ்சுப் புரட்சியின் வரலாறு யார்  யாரால் எழுதப்பட்டது, அவர்களின் சமுக, அரசியல் பின்ணணிகள் எவை, பிரஞ்சுப் புரட்சி வரலாற்றின் தற்போதைய அசைவுகள் எவ்வாறுள்ளன என்பன போன்ற விடயங்கள் இந்நூலில்  இடம்பெற்றிருப்பது  நூலின் பரந்த நோக்கைப் புலப்படுத்துகிறது.

ஐரோப்பியக் கண்டம் ஒட்டுமொத்தமாக மன்னர்களின் சொத்தாகவும், அங்கு வாழும் மக்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்த குடிமக்களாகவும் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், மதகுருக்களும், பண்ணையார்களுமே முன்னரிமை பெற்று, வரியேதும் இறுக்காது, செல்வம் கொழிக்க வாழ்ந்த காலத்தில், மிகப்பெரும்பான்மையான மக்களோ பண்ணைகளில் கடின உழைப்பை வழங்கியது மட்டுமல்லாது, பெருந்தொகையான வரிச்சுமைகளுக்குள்ளும் நசிந்துகொண்டிருந்தார்கள்.  அரச திறைசேரிகளில் வரட்சியேற்பட்டபோதெல்லாம் மக்களே மேலும் மேலும் வரியிறுக்க வேண்டிய நிலையிலிலுமிருந்தார்கள். இதுவே பல நூற்றாண்டுகளாக நடைமுறையிலிருந்தது. பிரஞ்சுப் புரட்சி  இந்நிலைக்கான முடிவையும், மன்னனின் அறுதியான அதிகாரத்திற்கான முடிவையும் கோரிநின்றது. அதாவது அரசனின் அதகாரத்தை மட்டுப்படுத்தும் ஒரு அரசியலமைப்பைக் கோரி நின்றது.

மக்கள் என்றால் யார் ? அரசு என்றால் என்ன ? தேசம் என்றால் என்ன ? தேசியம் என்றால் என்ன ? என இன்ன பிற கேள்விகளைப் புரட்சியாளர்கள் முன்வைத்து அதற்கான பதில்களையும் சிந்தனா ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும் முன்வைத்தார்கள்.

அறிவொளிக்காலத் தத்துவஞானிகள் முன்வைத்த அரசியற்கோட்பாடுகள் நடைமுறைப் புரட்சியின் வழிகாட்டிகளாகின. மக்களின் இறைமை என்பது பேசுபொருட்களின் மத்திய புள்ளியாயிற்று. புரட்சியின் பேரிலக்காயிற்று.

புரட்சியின் முதல் வருடத்திலேயே மன்னனை முன்னிறுத்திய, அரசியல் அமைப்பொன்றுடனான அரசியற் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டன. பிரபுக்கள், மதகுருமார்கள் அனுபவித்து வந்த முன்னுரிமைகள் அழிக்கப்பட்டன, மனித உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்டன. பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணும் வகையில் தேவாலயச் சொத்துகள் தேசிய மயப்படுத்தப்பட்டன. இவ்வாறாகப் பல்வேறு அரசியல் சீர்திருத்தங்கள் மக்களை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்டன.
முன்னொருபோதும் இல்லாத வகையில் பிரஞ்சு மக்களிடையே  அறிவியல் சார்ந்தும், அரசியல் சார்ந்தும் பாரிய விவாதங்களும் சிந்தனைப் புரட்சியும் தோன்றியது.  முடியாட்சியை வரையறை செய்யும் ஒரு அரசியற் சாசனத்திற்காக உருவாக்கம் பெற்ற புரட்சி, யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்குச் சென்று குடியாட்சியை உருவாக்கும் நோக்கில் தற்காலிகமாகவேனும் வெற்றி கண்டது.

இன்னமும் மன்னனை மதித்த மக்களை மன்னன் மதியாதிருந்தது மட்டுமல்லாது, அந்நிய முடியாட்சிகளுடன் சேர்ந்து தன்மக்களுக்கெதிராகவே சதிவேலைகளிலும் ஈடுபட்டார். பதினாறாவது லூயி எப்போது ஒரு திருடனைப்போன்று நாட்டை விட்டுத் தப்பியோட எண்ணினாரோ அன்றே அவர் பிரஞ்சு மக்களின் மன்னன் என்னும் தகுதியை இழந்தார். பின் மக்களின் கைதியானார். இறுதியில்  சிரச்சேதம் செய்யப்பட்டார்.

முடியாட்சியும், அதன் விசுவாசிகளும் பிரஞ்சுக் குடியரசின் சகிக்க முடியாத எதிரிகளானார்கள்.

ஒட்டுமொத்த ஐரோப்பிய முடியாட்சிகளுக்கும், உள்ளூர்த் துரோகிகளுக்கும் ஒரே நேரத்தில் முகம் கொடுக்க வேண்டிய  போரைத் தொடுத்த புரட்சிகர அரசாங்கம் ‘பயங்கரவாத அரசியலை’ முன்மொழிய வேண்டிய கட்டாயத்திலிருந்தது. கார்ல் மாக்ஸினால் மகா புரட்சியெனக் கருதப்பட்ட பிரஞ்சுப் புரட்சியில் குருதி ஆறாய் ஓடியது. எதிர்ப்புரட்சியின் தீவிரம் அதிகரிக்கும் வேகத்தில் அதனை அடக்குமுகமாக புரட்சி தன் கொடூரங்களை கட்டவிழ்த்து விட்டது. சகோதரப் படுகொலைகள் அளவுக்கதிகமாக நடந்தேறின. இறுதியில் புரட்சி தன் குழந்தைகளில் உன்னதமானவர்களை விழுங்கிக் கொண்டது. புரட்சியாளர்களில் பலர் தம்முடிவுகளை முன்கூட்டியே அறிந்திருந்தபோதும் அவர்கள் புரட்சிக்காக, புரட்சியின் இலக்குகளுக்காக  தம் உயிர்களைத் தருவதற்கு எப்போதுமே தயங்காதிருந்தார்கள்.
பிரஞ்சுப் புரட்சியின் முன்னெடுப்பாளர்கள் பல்வேறு நலன்களை மையப்படுத்தி, பல்வேறு திசைகளில் புரட்சியின் திசையைத் திருப்ப எண்ணினார்கள். ஆனால் தன் திசையில் மாத்திரம் பயணிக்கத் தெரிந்த புரட்சி அனைவரையும் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளுக்குள் தள்ளிவிட்டது. எதிரிகள், நண்பர்களாகவும், நண்பர்கள் எதிரிகளாகவும் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கவேண்டியவர்களானார்கள்.

பிரஞ்சுப் புரட்சி நடைபெற்று இருநூற்றாண்டுக்களுக்கும் அதிகமான காலங்கள் ஓடிச்சென்று விட்டபோதும் அதன் அரசியல் நிகழ்வுகள் நவீன அரசியல் நிகழ்வுகளுடன் எவ்வாறு ஒருமைப்பாடு கொண்டுள்ளன என்பதை வாசுதேவனின் ‘பிரஞ்சுப் புரட்சி’ நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தேடுதல்களும், நுணுக்கமான விரிவாக்கங்களும் கொண்டவொரு நூலாக இந்நூல் வெளிவந்திருப்பது தமிழ் மொழியிலான வரலாற்றுத் துறைக்குப் புதிய ஊக்குவிப்பைக் கொடுக்கும் என எதிர்பார்கலாம்.

 

http://www.ezhunamedia.com/?p=292

  • கருத்துக்கள உறவுகள்
எதிரிகள், நண்பர்களாகவும், நண்பர்கள் எதிரிகளாகவும் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கவேண்டியவர்களானார்கள்
எங்களுடைய போராட்டமும் இதை சந்தித்து சென்றுள்ளது......இணைப்புக்கு நன்றிகள்

1000833_599704006729276_1101979534_n.jpg

வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சியும் க. வாசுதேவன் எழுதிய பிரஞ்சுப் புரட்சி நூல் வெளியீடும் யூலை சனிக்கிழமை காலை 10.00A.M  தொடக்கம் மாலை வரை 6.00 P.M.

இடம் - SCARBOROUGH CIVIC CENTER.

 

வந்தால் அந்த மாதிரி புத்தகங்கள் வாங்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

என் கல்லூரித் தோழன் வாசுதேவனுக்கு வாழ்த்துக்கள்!!!கல்லூரி நாட்கள் மீண்டும் நினவுக்கு வருகின்றன.புத்தகத்தை வாசிக்க ஆவலாய் உள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.