Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தரின் தலைமைத்துவம் - நிலாந்தன்

Featured Replies

 
03 நவம்பர் 2013
lg-share-en.gif
 

 

Sambathan_CI.jpg

கடந்த வாரம் எனது கட்டுரையை வாசித்துவிட்டு லண்டனில் இருந்து ஒரு நண்பர் கதைத்தார். டயஸ்பொறாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே நண்பர்கள் அதிகம் என்ற கருத்து சரியா என்று அவர் கேட்டார். எனது கட்டுரையை வாசித்துவிட்டு தனக்குத் தெரிந்த ஐந்தாறு நபர் களுடன் தான் கதைத்ததாகவும் அவர்கள் எல்லாருமே கூட்டமைப்புக்கு ஆதரவாகத்தான் காணப்பட்டதாகவும் அவர் சொன்னார். கனடாவில் வசிக்கும் மூத்த படைப்பாளியும் சஞ்சிகை ஆசிரியருமான மற்றொரு நண்பர் கேட்டார் ''கூட்டமைப்பை விட்டால் வேறு யாரை ஆதரிப்பது' என்று.

குறிப்பாக, மாகாண சபைத் தேர்தலையொட்டித் தாயகத்தில் எழுந்த கூட்டமைப்புக்கு ஆதரவான அலையெனப்படுவது டயஸ்பொறாவுக்கும் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

''உங்களுடைய கட்டுரைகளில் நீங்கள் குறிப்பிடும் ''ஈழப் போரிற்கு வரியிறுப்போராக இருந்த டயஸ்பொறாப் பொதுசனங்கள்' தாயகத்தில் உருவாகியிருக்கும் கூட்டமைப்புக்கு ஆதரவான அலையினால் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள்' என்று மற்றொரு நண்பர்  கூறினார்.

மாகாண சபை உருவாக்கப்பட்டபோது அமைச்சர்கள் நியமனத்தில் ஏற்பட்ட இழுபறிகளால் கூட்டமைப்புக்கு வாக்களித்த படித்த வாக்காளர்கள் மத்தியில் ஒருவித சலிப்பும் எரிச்சலும் ஏற்பட்டதை அவதானிக்கக் முடிந்தது. எனினும் எல்லாவிதமான இழுபறிகளையும் சறுக்கல்களையும் தாண்டி கூட்டமைப்பு ஒரு பலமான கட்சியாக மேலெழுந்திருக்கிறது என்பதே கள யதார்த்தமாகும்.

கடந்த வாரம் எனது கட்டுரையில் கூறப்பட்டதுபோல ஈழத்தமிழ் அரசியல் எனப்படுவது கூட்டமைப்பு மைய அரசியலாக உருவாகிவிட்டது. எப்படி தென்னிலங்கையில் சிங்கள அரசியலானது ராஜபக்ச மைய அரசியலாக மாறியிருக்கிறதோ அப்படி.

சிங்கள அரசியலை ராஜபக்ச மைய அரசியல் என்று ஒரு அரசுத்தலைவரின்  அல்லது ஒரு வம்சத்தின் பெயரால் அழைப்பது போல இப்போதுள்ள தமிழ் அரசியலையும் சம்பந்தர் மைய அரசியல் என்று அழைக்கலாமா?

நிச்சயமாக அப்படி அழைக்கலாம் என்றே தோன்றுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான கடந்த நான்காண்டுகளிற்கும் மேலான தமிழ் அரசியலைப் பொறுத்தவரை சம்பந்தரே தவிர்க்கப்படவியலாத ஒரு மையமாக எழுச்சிபெற்று வருகிறார். கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் அவரது தலைமைத்துவத்துக்குச் சவாலாக எவரும் இல்லை என்பதே இப்போதுள்ள கள யதார்த்தம் ஆகும்.

வடமாகாண சபையின் உருவாக்கத்தோடு கூட்டமைப்பு அரசியலை  மூவர் அரசியல் என்று சில விமர்சகர்கள் வர்ணிக்கத் தலைப்பட்டுள்ளார்கள். ஆனாலது சற்றுக் காலத்தால் முந்திய ஒரு கூற்று என்றே தோன்றுகிறது. சம்பந்தர், சுமந்திரன், ஓய்வுபெற்ற நிதியரசர் ஆகிய மூவரும் ஒரே அலைவரிசையில் சிந்திப்பவர்களாக தோன்றுகின்றார்கள். கட்சிக்குள் வேறெந்தக்  கூட்டையும் விட இவர்கள் மூவருக்கும் இடையிலான கூட்டு ஒப்பீட்டளவில் அதிகம் இறுக்கமானதாகவும் தோன்றுகிறது. ஆனாலும் ஒன்றை இங்கு  உற்றுக் கவனிக்க வேண்டும். கட்சிக்குள்  மூப்பின் அடிப்படையிலும் அரசியல் அனுபவத்தி;ன் அடிப்படையிலும் கட்சிப் பாரம்பரியத்தின் அடிப்படையிலும் பார்த்தால் சம்பந்தர் தான் உச்சத்தில்  நிற்கிறார். மற்ற இருவரும் அவருக்குக் கீழ்ப்பட்டவர்கள்தான். சம்பந்மேலும் அவர்களைத் தெரிவு செய்ததே சம்பந்தர்தான். கட்சியை எத்திசை நோக்கிச் செலுத்த வேண்டும் என்று அவர் தீர்மானித்திருக்கின்றாரோ  அதற்குத்தோதாகத் தன்னைப் பலப்படுத்தும் நோக்கத்தோடு அவரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களே ஏனைய இருவரும். எனவே, தலைமைத்துவத்தைப் பொறுத்த வரை அவர்கள் இருவரும் சம்பந்தருக்குக் கீழ்ப்பட்டவர்களே. அதாவது முடிவுகள் முதன்மையாகச் தரிடமிருந்தே வருவது போலத் தோன்றுகின்றன. ஏனைய இருவரும் அந்த முடிவுகளை செம்மைப்படுத்தவோ, பலப்படுத்தவோ உதவக்கூடும். எனவே, சம்பந்தர் தீர்மானித்த திசையில்தான் கட்சி செலுத்தப்படுகின்றது என்பதே சரி.

இத்தகைய பொருள்படக்கூறின், இப்பொழுது அரங்கிலிருப்பது ஒரு புதிய கூட்டமைப்பாகும். சம்பந்தரை மையமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட ஒரு புதிய கூட்டமைப்பு அது. புலிகள் இயக்கம் பலமாகக் காணப்பட்டபோது உருவாக்கப்பட்ட பழைய கூட்டமைப்பு அநேகமாகக் காலாவதியாகிவிட்டது. இப்பொழுது இருப்பது சம்பந்தருடைய நிகழ்ச்சி நிரலின்படி மீள ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு புதிய கூட்டமைப்பு ஆகும். சம்பந்தருடைய எதிரிகள் அவர் சக்திமிக்க வெளித்தரப்புக்களின் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுப்பதாகக் குற்றஞ்சாட்டுகின்றார்கள். அப்படித்தான் எடுத்துக்கொண்டாலும் கட்சியைத் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தனது நிகழ்ச்சி நிரலை விட்டுக்கொடுப்பின்றி நிறைவேற்றிவரும் அவருடைய தலைமைத்துவப் பண்பைக் கருதிக் கூறின் தற்போதுள்ள தமிழ் அரசியலை சம்பந்தர் மைய அரசியல் என்றே  அழைக்க வேண்டியிருக்கிறது.

முதலில் அவர் கட்சியைப் புலி நீக்கம் செய்தார். இதன்போது புலிகளுக்கு விசுவாசமாயிருந்த அணி கட்சியிலிருந்து வெளித்தள்ளப்பட்டது. இந்த அணி புலிகள் இயக்கம் பலமாக இருந்தபோது கட்சிக்குள் செல்வாக்கு அதிகமுடைய அணியாகக் காணப்பட்டது. பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்புகளைப் போல.எனவே, புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பலவீனமுற்றிருந்த அந்த அணியை தருணம் பார்த்து சம்பந்தர் வெளித்தள்ளிவிட்டார்.

இந்த இடத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். கஜேந்திரகுமார் அணியை சம்பந்தர் வெளித்தள்ளியபோது அந்த அணியானது கட்சியைவிட்டு வெளியேறாது தொடர்ந்தும் கட்சிக்குள் நின்றுபிடித்து சம்பந்தரை வெளியேற்றும் ஓர் அரசியலை செய்ய முடியவில்லை. அதோடு கட்சியைவிட்டு வெளியேறிய பின்னர் இன்றுவரையிலும் ஓர் அழுத்தக் குழுவாகத்தான் அவர்களால் செயற்பட முடிந்திருக்கிறது. சம்பந்தருக்குச் சவாலான ஒரு மாற்றுத் தலைமையை அவர்களால் இன்று வரையிலும் கட்டியெழுப்ப முடியவில்லை.

கட்சியைப் புலி நீக்கம் செய்த பின், சம்பந்தர் சுமந்திரனை உள்ளே கொண்டுவந்தார். சுமந்திரனை புதிய பரமசிவனின் கழுத்திலிருக்கும் புதிய பாம்பாக மாற்றினார். அதைத் தொடர்ந்து சம்பந்தர் ஒப்பீட்டளவில் மிதவாதப் பாரம்பரியம் அதிகமுடைய தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்தத் தொடங்கினார். தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்துவது என்பது மறுவளமாக தமிழரசுக் கட்சியல்லாத ஏனைய தோழமைக் கட்சிகளைப் பலவீனப்படுத்துவதுதான்.

தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்துவதென்றால் கூட்டமைப்பைப் பதிவதை ஒத்திவைக்க வேண்டும் அல்லது பதியாமலே விடவேண்டும். ஏனெனில் கூட்டமைப்பைப் பதிந்தால் அதன் மூலம் சுரேஷ் பிரேமச்சந்திரனும், ஏனைய முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புகளும் பலமடையக்கூடும். எனவே, பதிவை ஒத்திப்போடுவதன் மூலம் தமிழரசுக் கட்சியை மேலும் பலப்படுத்த முடியும்.

விடுதலைப்புலிகள் இயக்கமும் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுவதை விரும்பவில்லைத்தான். கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் ஒருமுறை வன்னியில் நிகழ்ந்த ஒரு சந்திப்பின்போது அமரர் ரவிராஜ் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமையிடம் இது தொடர்பாக கேட்டிருக்கிறார். ''இப்போது இருப்பதுபோலவே இருக்கட்டும்' என்பதே புலிகளுடைய பதிலாக இருந்ததாம். ஆனால், புலிகள் தமக்கு விசுவாசமான நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இது பற்றிக் கூறியபோது ''முன்பு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஒரு பலமான கூட்டாக உருவாகிய பின் ஒரு கட்டத்தில் அதுவே போராட்டத்திற்குத் தடையாக மாறியது. அதுபோலவே கூட்டமைப்பும் மாறக்கூடாது.  அதாவது, கூட்டமைப்பு ஒரு பலமான கட்சியாக உருவாக்கக் கூடாது...' என்ற தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள்.

கூட்டமைப்பு பதிவு செய்யப்படுவதை புலிகள் இயக்கம் விரும்பவில்லை. அதற்குப் பின்னாலிருந்த அரசியல் வேறு. இப்பொழுது சம்பந்தரும் விரும்பவில்லை. அல்லது அதை ஒத்திவைத்து வருகிறார். இதற்குப் பின்னாலிருக்கும் அரசியல் வேறு. ஆனால் அரசியல் அதிகாரம் அல்லது தலைமைத்துவம் தம்மிடமே இருக்க வேண்டும் என்ற வேட்கையைப் பெறுத்தவரை இரண்டுக்குமிடையில் ஒற்றுமைகள் உண்டு.

சம்பந்தர் கூட்டமைப்பைப் பதிய மறுத்த ஒரு பின்னணியில் ஏனைய கட்சிகள் என்ன செய்திருக்க வேண்டும்? பிரிந்து சென்று ஒரு புதிய கூட்டை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. அவர்களை விமர்சிப்பவர்கள் கூறுவதுபோல அவர்களும் சக்தி மிக்க வெளித்தரப்புகளின் ஆலோசனைப் பிரகாரம் கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு வெளியேற விரும்பாதிருக்கக் கூடும்.

எனினும், சம்பந்தரை நெருக்கடிக்குள்ளாக்கவல்ல தலைமைத்துவ ஆளுமைகள் எதுவும் அந்தக் கட்சிகளின் மத்தியில் இல்லை என்பதும் ஒரு அடிப்படை உண்மைதான். பல மாதங்களிற்கு முன்பு மன்னாரில் ஆயர் இல்லத்தின் நிகழ்ந்த ஒரு சந்திப்பின்போது மேற்படி கட்சி முக்கியஸ்தர் ஒருவர் கூட்டமைப்பைப் பதியுமாறு முறையிட்டவிதம் மேற்படி கருத்தை நிரூபிப்பதாக அமைந்திருந்தது என்று அச்சந்திப்பில் கலந்து கொண்ட ஒருவர் கூறினார்.

மேற்படி கட்சிகளைப் பலவீனப்படுத்தும் தொடர் நடவடிக்கைகளில் ஆகப் பிந்தியதே மாகாண அமைச்சர்கள் தெரிவு ஆகும். இது விசயத்திலும் மேற்படி கட்சிகள் சம்பந்தருக்கு எதிராகப் போர்க்;கொடி தூக்கின. ஆனால், வழமைபோல பின்னாளில் அடங்கிப்போய்விட்டன. சக்திமிக்க வெளியாரின் ஆலோசனைப் பிரகாரம் அவை அவ்வாறு அடங்கிப் போயின என்று எடுத்துக்கொண்டாலும்கூட தமது தலைமைத்துவத்தையும், கௌரவத்தையும் விட்டுக்கொடுத்தே ஐக்கியத்தைப் பேண வேண்டியிருப்பது என்பது ஒரு சிறந்த தலைமைப் பண்பு அல்ல.

கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு வெளியேறினால் உதிர்ந்து திரைந்;துபோக நேரிடும் என்று அஞ்சுவதும் ஒரு சிறந்த தலைமைப் பண்பு அல்ல. சிறந்த தலைமைகள் பொதுசன அபிப்பிராயத்தின் பின் செல்வதில்லை. மாறாக, அவை பொதுசன அப்பிராயங்களை உருவாக்குகின்றன. அதாவது பொதுசனங்களை தமக்குப்பின் வரச் செய்கின்றன.

ஒரு பொதுவான நம்பிக்கை உண்டு. கூட்டமைப்பின் பெயரால் ஒரு தும்புத்தடியை நிறுத்தினாலும் அதற்கு வாக்குக் கிடைக்கும் என்று. எனவே கூட்டமைப்பு என்ற வெற்றிக்குரிய பொது அடையாளத்தை சுவீகரிப்பதே மேற்படி கட்சிகளின் இலக்காயிருக்கக்கூடும். தவிர, கட்சியை உடைத்துக் கொண்டு ஒரு புதிய கூட்டை உருவாக்குமிடத்து தமது இறந்த காலம் தம்மைத் துரத்தக்கூடும் என்ற ஓர் அச்சம் அவர்கள் மத்தியிலிருப்பதாகவும் ஒரு கருத்து உண்டு. குறிப்பாக, கஜேந்திரகுமார் அணி வெற்றிபெறத் தவறியமை எல்லாருக்கும் ஒரு முன் உதாரணமாகக் காணப்படுகின்றது. எனவே, மேற்படி கட்சிகள் கூட்டமைப்பைவிட்டு வெளியேறத் தயாரில்லை என்பது சம்பந்தருடைய பேரம் பேசும் சக்தியை உயர்வாக வைத்திருக்கிறது.

எனவே, சம்பந்தருக்குச் சவாலாக மேலெழக்கூடிய தலைமை எதையும் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் காண முடியவில்லை. இதனால், சம்பந்தர் நினைப்பது எதுவோ அதுதான் தமிழ் அரசியல் என்றாகி வருகிறது. சிலசமயம் அவர் நினைப்பதை தமிழரசுக் கட்சி எதிர்த்தாலும் கூட இறுதியிலுமிறுதியாக அவருடைய நிகழ்ச்சி நிரலே நிறைவேறுகிறது. ஓய்வுபெற்ற நீதியரசரை அரங்கிற்குள் கொண்டு வந்ததையும் அவருக்குத் தேவையான மக்கள் ஆணையைப் பெற்றுக் கொடுத்ததையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.

மாகாண சபைக்கான முதன்மை வேட்பாளர் தெரிவில் சம்பந்தர் தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையினரின் முடிவுக்கு எதிராகவே சிந்தித்தார். ஆனாலும் அவருடைய தலைமைத்துவத்தை மேவியெழ கட்சிக்குள் வேறு எவரும் இல்லாதபடியால் அவர் நினைத்ததே நடந்தது.

எனவே, சரிகளிற்கும், பிழைகளிற்கும் அப்பால் தான் எதை நினைக்கிறாரோ அதை நோக்கி தனது சொந்தக் கட்சியையும், ஏனைய கட்சிகளையும், வாக்காளர்களையும் வளைத்தெடுக்கும் ஆற்றலைப் பெற்றவர் என்ற அடிப்படையில் அரங்கில் தற்போதுள்ள எந்தவொரு ஆளுமையை விடவும் சம்பந்தரே தலைமைத்துவப் பண்பு அதிகமுடையவராக தோன்றுகிறார்.

தென்னிலங்கையில் சிங்கள அரசியல் ராஜபக்ச மைய அரசியலாகக் காணப்படுகிறது. அரசுத் தலைவர் ராஜபக்ச சக்திமிக்க சகோதரர்களால் அரணமைக்கப்பட்டுள்ளார். முப்படைகளின் தளபதியாகவும் மிகப்பலமானதொரு புலனாய்வுக் கட்டமைப்பின் மையத்;திலும் அவர் காணப்படுகிறார். தனக்கு முன்பிருந்த வேறெந்த ஓர் அரசுத் தலைவரும் பெற்றுக் கொடுத்திராத ஒரு வெற்றியை அவர் சிங்கள மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இத்தகைய மிகப் பலமான பின்னணிக்குள் வைத்தே ராஜபக்ச மைய அரசியலை விளங்கிக்கொள்ள வேண்டும். ஆனால், சம்பந்தர் மைய அரசியல் அப்படிப்பட்டது அல்ல. சம்பந்தரிடம் படை பலமும் இல்லை. சக்தி மிக்க தம்பிமாரும் இல்லை. களைத்துப் போனால் இன்னொருவரின் கையைப் பற்றி நடக்க வேண்டிய அளவுக்கு வயதானவராகவும், குளிசைகளோடு வாழ்பவராகவும் காணப்படும் அவருடைய அரசியலை ராஜபக்ச அரசியலுடன் ஒப்பிட முடியாதுதான்.

ஒரு தலைமைத்துவம் எனப்படுவது பெருமளவுக்கு ஆளுமை சம்பந்தப்பட்ட ஒரு விவகாரம் தான். அது அறநெறி சம்பந்தப்பட்ட விவகாரமாகவோ  அல்லது இலட்சியப் பாங்கானதாகவோ இருப்பது மேலதிக தகைமைதான். காந்தியும், நேதாஐpயும் எதிரெதிரான இருவேறு போக்குகள். ஆனால், இருவரிடமும் தலைமைத்துவம் இருந்தது. லெனின், ஸ்டாலின் இருவரிடமும் தலைமைத்துவம் இருந்தது. ஆனால், இரண்டும் இருவேறு ஆளுமைகள். பாபரும், அக்பரும் ஒரே விதமான ஆளுமைகள் அல்ல. ஆனால், இருவரிடமும் தலைமைத்துவம் இருந்தது. இங்கெல்லாம் தலைமைத்துவம் எனப்படுவது பெருமளவுக்கு ஆளுமை சம்பந்தப்பட்ட ஒரு விவகாரம் தான். அது இலட்சியப் பாங்கானதாகவும், அறநெறியின் பாற்பட்டதாகவும் தீர்க்க தரிசனமுடையதாகவும் ஜனவசியம் மிக்கதாகவும் அமையும் போது வரலாற்றின் உன்னதங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.

அரசியலில் எந்தவொரு செயலும் அதன் விளைவின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகின்றது என்று ஜவகர்லால் நேரு கூறியுள்ளார். ஆனால், விளைவுகள் வழிவகைகளை நியாயப்படுத்திவிட முடியாது என்று யூத எழுத்தாளரான ஆர்தர் கோஸ்லர் கூறியுள்ளார். நீதியான ஒரு கனவை அநீதியான  வழிமுறைகளிற்கூடாக வென்றெடுக்க முடியாது என்பதே இதன் பொருளாகும். ''நானே சத்தியமும் அதற்கான வழியுமாக இருக்கிறேன்' என்று கிறிஸ்து கூறியதும் இதைத்தான். ''விடுதலைக்கான வழிவகைகள் யாவும் விடுதலை பயப்பனவாக அமையவேண்டும்' என்று ஈழத்துச் சிந்தனையாளர் மு.தளையசிங்கம் கூறியதும் இதைத்தான்.

எனவே, சம்பந்தரின் அரசியலை அதன் விளைவுகளிற்கூடாக மட்டுமல்ல, அவர் கைக்கொள்ளும் வழிமுறைகளிற்கூடாகவும் பார்க்கவேண்டும். கட்சியின் மீதான தனது இரும்புப் பிடியை படிப்படியாக இறுக்கி வருவதன் மூலம் அவர் ஒரு கட்சித் தலைவராக வெற்றிபெற்றுவிட்டார். ஆனால், வெற்றிபெற்ற எல்லாக் கட்சித் தலைவர்களும் ஜனவசியம் மிக்க பெருந்தலைவர்களாக வெற்றி பெறுவதில்லை. பெருந்தலைவர்கள் பெருச்செயல்களின் மூலம் உருவாகிறார்கள். பெருஞ்செயல்களைச் செய்வதென்றால் குறுகிய வட்டங்களைக் கடந்து வெளியில் வரவேண்டும். சாதி, சமயம், வம்சம், பிரதேசம், மட்டுமல்ல, கட்சியும்கூட ஒரு குறுக்கம் தான்.

எங்கே இலட்சியம் அல்லது கனவு கடசியைவிட உன்னதமானதாகிறதோ எங்கே கனவை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்குரிய திடசித்தமும், தியாக சிந்தையும், தீர்க்க தரிசனமும் காணப்படுகின்றனவோ அங்கே தான் பெருந்தலைவர்கள் உருவாகிறார்கள்.

கனவையும், ஜனங்களையும் பாதுகாக்கும் பெருந்தலைவர்களை ஜனங்கள் ஒரு கட்சியின் பிரதிநிதியாகக் காண்பதில்லை. மாறாக, அவரைத் தமது கனவின் பிரதிநிதியாகவே காண்கிறார்கள். தமிழ் மக்களுக்கும் இப்பொழுது தேவைப்படுவது கட்சித் தலைவர்கள் அல்ல. பெருந்தலைவர்களே.

01-11-2013

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் நிலாந்தன், மிகவும் முக்கியமான கட்டுரை.

 

தோல்வியின் பின்னான சூனிய நிலையில் சம்பந்தரின் எழுச்சியும் செயல்பாடுகளும் இன்றி நிபந்தனைகளற்ற சரணாகதி சூழலை தடுத்திருக்க முடிந்திருக்காது. சரவதேசத்துக்கு ஈழத் தமிழர் தோற்றாலும் ராசாபக்ச அரசிடம் சரணாகதி அடையந்துவிடவில்லை  என்கிற சேதியை சம்பந்தர் மிகச் சரியாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். இது சரியான ஆரம்பமல்லவா?

 

விரிவாக எழுதணும் இப்ப நேரமில்லை

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

Some people are born great, some attain greatness and some have greatness thrust upon them.

இதில் சம்பந்தர் 3 ம் ரகம். மிகவும் கஸ்டமான சூழ்நிலையில், எமது இனத்தின் மிக இருண்ட நாட்களில் இவர் வழங்கி வரும் தலைமைத்துவம் மிகவும் இன்றிஅமையாதது.

"சம்பந்தரிடம் படை பலமும் இல்லை. சக்தி மிக்க தம்பிமாரும் இல்லை. களைத்துப் போனால் இன்னொருவரின் கையைப் பற்றி நடக்க வேண்டிய அளவுக்கு வயதானவராகவும், குளிசைகளோடு வாழ்பவராகவும் காணப்படும் அவருடைய அரசியலை"

இது எவ்வளவு உண்மையான கூற்று? இபோ இவரை சில பு.பு க்கள் மங்கூஸ் மண்டையன், பஞ்சு தலையன், என்று கவு ண்டமணி ரேஞ்சுக்கு ஏசினாலும் வருங்காலம் இவரை ஒரு மிகசிறந்த தலைவராகவே குறிப்பு வைக்கும்.

சம்பந்தரின் personalty யை கண்டு கட்டுரையாசிரியர்  அஞ்கிறார் போல் படுகின்றதேயன்றி சம்பந்தரின் அரசியலை ஆசிரியர் விளங்கிக் கொண்டத்தாக இந்த கட்டுரை காட்ட இல்லை.. வழக்கம் போல பொய்யட் காடுரையின் அம்சங்களை ஆராயும் வலுவில்லாத அரசியல் காமாளைத்தனமான எலும்பும் தோலுமாக மெலிந்த கருத்தொன்றை வைத்துவிட்டு மாட்டிகொள்ளாமல் நழுவுகிறார். 

 

1. "De-tigering the TNA" என்ற கருத்து நகைப்புக்குரியது. கூட்டமைப்பில் புலிப்பெண் ஆனந்தி, சீறிதரன் மாவை எல்லாருமே முழு புலிகள்தான். சுரேசின் பிரச்சனை ஒன்றைப்பறி நான் பின்னல் சொல்லப் போகிறேனென்றாலும் அவரும் EPRLF தான். ஒருவருடத்திக்கு முன்பாக இருக்கலாம் என்று நினைக்கிறேன், அவர் இலங்கை அரசு ஆயுதங்களை எறிந்துவிட்டு அரசியலில் சேர்ந்த தம்மை திரும்ப ஆயுதம் தூக்கும் படியா கேட்கிறது? என்று B.B.C கொடுத்திருந்த பேட்டியில் கேட்டிருந்தார். ஏதோ ஆயுதங்களை போட்டுவிட்டார்கள், ஆனால் இவர்கள் யாரும் புலிகளின் பாதையில் இருந்து விலத்தவில்லை(விடுதலைதான் அவர்களின் குறிக்கோள்).  கூட்டமைப்பை பழைய போராளிகளின் கூட்டு என்ற நாமத்தில் இருந்துதான் சம்பந்தர் விடுவிக்க முயல்கிறார். புலியோ, EPRLF வோ, சிவாஜிலிங்கத்தின் TELOவோ. தேவனந்தாவின் EPDP யோ, கருணா, பிள்ளையானின் TPLTE எல்லோரும் வெளிநாடுகளால் ஒரேவிதமாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.  இவர்களில் பலர் வெளிநாடுகள் சென்று அரசியல் கூட்டங்களில் பங்கெடுக்க விசா கிடையாது.  இந்த அடையாளத்தைத்தான் சம்பந்தர் மாற்ற முயல்கிறார். புலிகள் மட்டுமல்ல சுரேசோ சிவாஜிங்கமோ வெளிநாடுகள் போக முடிவதில்லை. வெளிநாடுகள் இவர்களின் முகத்தை பார்க்க மறுத்தால் ராஜதந்திரதில், பொருள் இல்லாமல் வெளிநாடுகளின் காலில் விழலாம் அல்லது வேண்டாத முகங்களை பின்னால் விட்டுவிட்டு பேச்சுவார்த்தை நடத்தலாம்.  சுரேசையோ சிவாலிங்கத்தையோ எடுத்துசெல்ல முடியாத சம்பந்தான், துணைக்கு விக்கியை, சுமந்திரனை சேர்த்துக்கொள்கிறார். இதில் ஆயுத முகங்களை சம்பந்தர் தவிர்க்கிறாரேயல்லாமல் புலிகளை அல்ல.

 

இவர்கள் இருவரிலும் யாரும் தமிழரசுக்கட்சியினர் அல்ல. இவர்கள் வெளியார்கள். சுமந்திரன் கட்சியுட்ன் இணையலாம். இல்லையேல் ஒரு நாளைக்கு UNP யுடன் சேரலாம். விக்கியர் தான் எந்த கட்சியென்று வாய்விட்டு சொன்ன பேட்டியை நான் பார்க்கவில்லை. எனவே இங்கே தழரசுக் கட்சி வளர்க்கப்படவில்லை. சம்பந்தர் ஏதோ தான் நினைத்தை கூட்டமைப்புக்குள் செய்த்து வருகிறார். அவர் தமிழரசுக்கட்டிசியை தூக்கிவிட நினைத்தால் அதை தடுப்பது மற்றவர்களுக்கு சிரமம். இவ்வளவும் உண்மையாக இருக்கும் போது ஏன் மாவையை முதலமைச்சராக்க மறுத்தார். தமிழரசுக்கட்சியின் பல மட்டங்கள் இதனால் அவர் மீது வெகுண்டெழுந்து அவரை தூற்றினார்களே. மாவை முதலமைச்சருக்கு நின்றிருந்தால் சுரேசோ, சிவாஜிங்கமோ, சித்தார்த்தனோ , ஆனந்தத சங்கரியோ அவரை எதிர்த்திருக்க முடுயுமா? இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருந்தால் தமிழரசுக்கட்சி தான் இழந்த glory திரும்ப பெற்றிருக்காதா? தமிழரசுக் கட்சியை சம்பந்தர் திரும்பக் கொண்டுவந்த ஒரே ஒரு காரணம் ஆனந்த சங்கரி. FP மீளமைக்கத்தான் FPயை சம்பந்தர் கொண்டுவந்தார் என்பது சம்பந்தரின் எதிரிகள் அவர் மீது ஒளித்திருந்து விடும் பாணங்கள். 

 

கூட்டமைப்பை பதிவு செய்ய முடியாமைக்கு  இரண்டு காரணங்கள். ஒன்று வெளிநாடுகள். அவர்கள் கூட்டமைப்பை மீந்திருக்கும் ஆயுதப் போராளிகளாக காண விரும்பவில்லை. மூன்று போராளிக்கட்சிகளை கொண்ட கூட்டமைப்பு தலையும் பாரதூரமான மாற்றங்கள் செய்யாமல் வெளிநாடுகளை ஏமாற்ற முடியாது. அதை செய்தால் அதன் பின்னர்  கூட்டமைப்பை தேவையில்லை. ஆனால் இதில் மற்றைய கரணம் சுரேஸ். கூட்டமைப்பு ஒரு ஜனநாயக கடிசியாகபோகிறதகா இருந்தால் பின்னர் அதனுள் ஐந்து ஒன்றுக்கொன்ற் சமமான கட்சிகள் இருக்க முடியாது. ஜனநாயக தீர்ப்பின் படி தமிழர்சுக்கட்சி இவர்கள் யாரையும் விட பாரிய பெரிய கட்சி. அதன் அங்கத்தவர்களை அழித்து தலையே கவிழ்ந்துபோயிருக்கும் ஆனந்த சங்கரியின் கூட்டணிக்கு கூட சம அங்கத்துவ  அதஸ்துடன் இணைப்பது என்பது நடக்க போவத்தில்லை.  மந்திரிப்பதவி போட்டிக் காலத்தில் மற்ற கட்சிகள் சுரேசின் சர்வாதிகாரத்தை தமிழ் மக்கள் மதிக்க மாட்டர்கள் என்பது புரிந்து கொண்டன. இனி இணைப்பு பற்றிய சுற்று பேச்சுக்கள் வந்தால் அவர்கள், EPRLF தவிர,  யதார்தமான கோரிக்கைகளை வைக்கக் கூடும். 

 

புலிகளின் கைகளில் அதிகாரம் இருந்த போது கூட்டப்பட்டது கூட்டமைப்பு. அவர்கள் யாரையும் தலைவராக போட்டிருக்கலாம். குமரை போட்டிருக்கலாம். சுரேசை போட்டிருக்கலாம்.ஆனந்த சங்கரியை போட்டிருக்கலாம். வரதரையே கூட போட்டிருக்கலாம். அவர்கள் தமிழ் மக்களுக்கு ஒரு தலைமையை தேடினார்கள். தமக்கு பிடிக்கிறதோ இல்லையோ சம்பந்தரை தெரிந்தார்கள். இதையே சம்பந்தரின் நடதையிலும் பார்க்கலாம். மாவையை முதலமைச்சராக போட்டு FP யை மீட்டெடுத்ந்திருக்கலாம். ஆனால் அவரும் தமிழருக்கு ஒரு முதல் அமைச்சரை தேடினார். இதனால் கூட்டமைப்புக்கு வெளியே சென்று, நீதியரசரை அழைத்துவந்து கூட்டமைப்பை உடையாமல் காப்பாறினார். இதனால் FP மீட்டெடுக்கத்தக்கதாக இருந்த சந்தப்பத்தை வேண்டுமென்றேதான் போகவிட்டார்.

 

கஜேந்திரகுமாரை, கஜேந்திரனை நிலாந்தன் புலிகளாக நிலை நிறுத்துவது சரியா என்பதை எனக்கு தெரியாது. புலிகளின் உள்ளாட்களாக இருந்து  யாழில் எழுதுவோர் பலர் அதை நன்றாக ஆராய முடியும். ஆனால் தமிழ் மக்கள் தேசிய கூட்டு முன்னணி கடும் போக்கானது. கூட்டமைப்பு மென் போக்கானது. கூட்டமைப்பு எந்த சந்தர்ப்பத்திலும் தங்களுக்கு அரசு சரியான மாகாண சபையை தரும் என்று வாதடவில்லை. தங்களுக்கு உரிமை உள்ள மாகாண சபை கொடுத்தால் தாங்கள் திருப்தியாவார்கள் என்ற்தைதான் சொன்னார்கள். இதை கேட்கும் சம்பந்தருக்கு FP பலதடவைகளில் பல அரசுகளுடன் ஏமாந்தது நினவில்லையா என்பது கேள்வியே. கூட்டமைப்பிடம் அதற்கு சரியான பதில் எதும் இல்லை. ஆனால் அவர்களும் எதையும் மற்ந்தும் போகவும் இல்லை. வெளிநாடுகளின் தலையீடுகள் வேண்டுமாக இருந்தால் சம்பந்தர் குறைந்த பட்ச கோரிக்கைக்கு போக வேண்டும் என்று தள்ளப்பட்டிருக்கிறார். அவ்வள்வுதான். இதில் எதுவும் சம்பந்தர் புலி எதிர்ப்பாளரகவும், கஜேந்திர குமார் புலியும் ஆகிவிட்டது. ககஜேந்திரகுமார் புலி என்பதால் மக்கள் ஆதரவு அவருக்கு இல்லை என்பது போல எழுதுவது இட்டுக்கட்டு. கஜேந்திரகும்மார் கூட்டமைப்புக்குள் இல்லாமல் தமிழ் காங்கிரசுமீது இருக்கும் அவ நம்பியை போக்கி தமிழ் மக்கள் முன்னால் போக முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

50 வயதிற்கு மேற்பட்டவர்கள் யாரும் கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் இருக்கக்கூடாது

எனக் கூட்டமைப்பினர் தங்கள் கட்சிக்குள் ஒரு முடிவைக் கொண்டு வந்தால்

 

சிலவேளைகளில் பெருந்தலைவர்கள் விரைவில் உருவாகலாம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.