Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோபல் பரிசைப் பெற்ற அலய்ஸ் மன்ரோ அம்மையார் யார் என அறிவீர்களா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோபல் பரிசைப் பெற்ற அலய்ஸ் மன்ரோ அம்மையார் யார் என அறிவீர்களா.

 

 

Alice_Munro_Nobel_Prize_Short_Stories_Ta

கனேடிய பெண் சிறுகதை எழுத்தாளரான 82 வயதான அலய்ஸ் மன்ரோ 2013-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார். நவீன சிறுகதைகளின் மேதை என்றழைக்கப்படும் அலய்ஸ் மன்ரோவின் எழுத்துக்கு நோபல் பரிசே மிகவும் குறைவானதே எனலாம்.

அவ்வளவு ஆழமான நுண்ணிய மனித உணர்வுகளால் பின்னப்பட்ட கதை மாந்தர்களையும் கதை அம்சங்களையும் உள்ளடக்கியது இவரது சிறு கதைகள். தன்னை பெண்ணியவாதி எனக் கூறிக் கொள்வதில் உடன்பாடில்லாத அவரது பெரும்பாலான பாத்திரங்கள் பெண்களின் உலகைச் சார்ந்தே இருந்தது.

தமிழ் மற்றும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட பன்னாட்டுச் சிறுகதைகள் சிலவற்றை வாசித்துள்ளேன். அலய்ஸ் மன்ரோவின் எழுத்துக்களை நான் வெகு காலந்தாழ்ந்தே அறிந்து கொண்டேன். கடந்த 2009-ஆம் ஆண்டு அவருக்கு மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு  வழங்கப்பட்டு இருந்தது. இப் பரிசை பெற்ற முதல் சிறுகதை எழுத்தாளரும் அவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அச் சமயமே அவரைக் குறித்த ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அவரது கதைகளைப் பரிச்சயமாக முன்னரே அலய்ஸ் மன்ரோவின் எளிமையான வாழ்க்கையும், அவரது படைப்புப் பின்னப்பட்ட சூழலும் என்னை மிகவும் கவர்ந்தது.

"நான் டைரிகள் வைத்துக் கொள்வதில்லை. எனக்கு நல்ல ஞாபக சக்தி உள்ளது", என ஒரு முறை அவர் கூறி இருந்தமையும் என்னை வியக்க வைத்தது.

ஒரு சில சிறுகதைகளைப் புனைந்து புத்தகங்களாக வெளியிட்டவர்களே தம்மைப் போன்ற எழுத்தாளர்களே இது வரை பிறந்ததில்லை என்று தம்மைத் தாமே கொண்டாடிக் கொண்டும், தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இக் காலக் கட்டத்தில் மிகவும் அமைதியாக இத்தனை ஆண்டுக் காலம் உலகத் தரத்திலான கதைகளைப் புனைந்த இந்த அம்மையார் பற்றி அறிந்த கொண்ட எவருமே அவரது கதைகளை வாசிக்கத் தொடங்கி விடுவார்கள்.

ஒருமுறை அவரது கதைகளை வாசிக்கத் தொடங்கினால் பின்னர் அதனை நிறுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை நான் உணர்ந்துள்ளேன்.

அவரது புனைவுகள் பெரும்பாலும் அவர் பிறந்த தென் மேற்கு ஒண்டாரியோவில் அமைந்துள்ள ஊரான் பிராதேசத்தைப் பின்னணியாகக் கொண்டிருப்பவை. ஒரு மிகச் சாதாரண விவசாயக் குடும்பத்தில் 1931-யில் பிறந்த அலைய்ஸ் தனது வாழ்வின் பெரும் பகுதியை விங்காம் எனப்படும் 3000 மக்களைக் கொண்ட மிகச் சிறிய நகரத்திலயே கழித்துள்ளார்.

நாட்டுப்புற வாழ்வியலையும், நாட்டுப்புற மக்களையும் அவர்களுக்கிடையிலான உறவுகளையும் உறவுகளோடு இயைந்த உணர்வுகளையும் பிரதிபலிக்கும் எதார்த்தம் தழுவிய கதைகளை விரும்பாதோர் இருக்க முடியாது.

தனது பன்னிரண்டாம் வயதில் கதைகளை எழுதத் தொடங்கியுள்ளார். பின்னர் மேற்கு ஒண்டாரியோ பல்கலைக் கழகத்தில் உதவிப் பணத்துடன் தமது மேற்படிப்பைத் தொடங்கலானார்.

அச் சமயத்திலயே, அதாவது 1950-யில் The Dimensions of a Shadow என்ற தமது முதல் சிறுகதையை வெளியிட்டார். ஆனால் பொருளாதாரப் பிரச்சனைகளால் அவரால் தமது கல்வியை மேற்கொண்டு தொடர முடியாது போனது. 1951-யில் பல்கலைக்கழகத் தோழனான ஜேம்ஸ் மன்ரோவை மணந்து கொண்டு விக்டோரியா நகரத்துக்குக் குடியேறினார். அத் திருமணம் தோல் கண்டதால், மீண்டும் தமது சொந்த ஊருக்கே திரும்பினார். அவர் பின் நாள்களில் ஜெரால்ட் பிரம்லின் என்பவரை மணந்து கொண்டார். அதன் பின்னரே அவர் தமது முழுமையான எழுத்துப் பணியைத் தொடரலானார்.

1968-ஆம் ஆண்டு அதாவது அவரது முப்பத்தேழாவது வயதில் தான் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான Dance of the Happy Shades வெளியானது. அத் தொகுப்புக்கு கனடாவின் உயர்ந்த இலக்கிய விருதான ஆளுநர் விருதைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து இதுவரை 14 சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகி பல விருதுகளையும், பாராட்டுக்களையும் குவித்திருக்கின்றது. அலய்ஸ் நவீன சிறுகதை உலகின் முதன்மையான ஓர் எழுத்தாளராகக் கொண்டாடப்படுகின்றார். எழுத்தாளர் சிந்தியா ஊசிக் அவரை நவீன செக்கோவ் எனப் புகழ்ந்துள்ளார்.

ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து இளம் வயதிலயே மணம் முடிக்கப்பட்ட நான்கு குழந்தைகளுக்குத் தாயாகிய நிலையில் அதுவும் உயர்கல்வியைத் தொடர முடியாமல், சொந்தமாக ஒரு புத்தகக் கடையைத் திறந்து அதனையும் கவனித்துக் கொண்டு குறிப்பாக 1960-களில் ஒரு பெண் எழுதுவது என்பது சாத்தியமற்றது என்பது எனது கணிப்பு. இருந்த போதும் அவரது எண்ணங்களை வார்த்தெடுத்து சிறுகதைகளாகப் புனைய தொடங்கினார், தமது நடுத்தர வயதில் திருமணத்தில் தோல்வி கண்டு தமது ஒரு மகளின் இறப்புக்கு பின்னர் மிச்சமிருந்த மூன்று குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு தமது சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் எந்தவொரு மனிதனாலும் எழுத்தைப் பற்றிச் சிந்தித்து இருக்கவே முடியாது. ஒருவேளை அலய்ஸ் தமது மனதில் இருந்த ஆற்றாமையை எழுத்தில் வடிக்கத் தொடங்கினாரோ என்னவோ.

அலய்சின் மகள் சீலா மன்ரோ 2002-யில் தமது தாயுடனான சிறு வயது ஓர்மைகளைத் தொகுத்து Lives of Mothers and Daughters: Growing Up With Alice Munro. என்ற நூலை வெளியிட்டு இருந்தார். அதன் ஊடாக அவர் தாய் சந்தித்த வலிகளையும், வாழ்க்கைப் போராட்டங்களையும் அதே சமயம் ஒரு தாயாகவும், எழுத்தாளராகவும் வெற்றிப் பெற்றத்தையும் அவரது மகள் மிகத் தெளிவாக விவரித்து இருந்தார்.

அலய்ஸ் மன்ரோ எவ்வாறு கதைகளைப் புனைகின்றார் என்ற கேள்விக்கு ஒரு முறை அவர் கூறி இருந்தார், " செஸ்டர்பீல்டில் ஒரு மூலையில் இருந்த சுவரை வெறித்து நோக்கிய படி இருப்பேன், அப்போது அவ் (எண்ணங்கள்) தானாகவே வரும், வந்து கொண்டே இருக்கும், மனதில் போதியளவு வந்தவுடன் எழுத தொடங்கி விடுவேன்" என்றார் என எழுத்தாளர் ராபர்ட் தாக்கர் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.

அலய்ஸ் மன்ரோ நாவல் ஒன்றை எழுதவும் முயன்றுள்ளார், ஆனால் அந்த நாவலில் கூடச் சிறுகதைக்கான பாங்கே மிகுந்திருந்தது. அதன் பின் எந்த நாவலையும் அவர் எழுதியதில்லை. 

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் தமது எழுத்துப் பணியை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

‘எழுத்து எழுத்து என்று இவ்வளவு காலமும் ஓட்டிவிட்டேன். இனிமேல் எழுதுவதை நிறுத்தப்போகிறேன். என்னாலே என் அலுவல்களைக் கவனிக்க முடியவில்லை. அந்தந்த மருந்துகளை அந்தந்த நேரத்துக்கு எடுக்கவேண்டும். தேகப்பியாசம் செய்வது, வீட்டைத் துப்புரவாக்குவது, சமைப்பது, குப்பைகளை அகற்றுவது எல்லாமே பெரும் சுமையாகத் தெரிகிறது’ என ஒருக் கூட்டத்தில் உரையாற்றும் போது அலைஸ் மன்ரோ அம்மையார் கூறியிருந்தமையை கனடாவின் தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் குறிப்பிடுகின்றார்.

அலய்ஸ் மன்ரோ புற உலகின் பாராட்டுக்களையும், விருதுகளையும் விரும்பியவர் இல்லை எனலாம். கனடாவின் ஆளுநர் விருதைப் பெற்ற போது கூட அரசாங்க அதிகாரிகளைச் சந்திக்க மறுத்தே விட்டாராம். அவர் நிச்சயம் சிறுகதை உலகின் மகாராணி எனக் கூறும் அளவுக்கு ஆளுமை நிறைந்தவராகவே காணப்படுகின்றார். அலய்ஸ் மன்ரோவுக்குக் கிடைக்கப்பட்டுள்ள நோபல் பரிசு நிச்சயமாக உலகின் தலை சிறந்த ஒரு எழுத்தாளரை கௌரவித்துள்ளது எனலாம், இல்லை இல்லை, நோபல் பரிசே அவரால் கௌரவப் பட்டுள்ளது எனக் கூறுவது சாலச் சிறந்தது எனலாம்.

http://www.vivaranam.net/2013/10/Alice-Munro-Nobel-Prize-Short-Stories-Tamil-Vivaranam.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அ.முத்துலிங்கம் இவரைச் சந்தித்துள்ளார். அது பற்றி அவர் வலைப்பூவில்

 

நோபல் பரிசு

 

அலிஸ் மன்றோவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள். பத்துவருடமாக எதிர்பார்த்த பரிசு இப்பொழுது  அவருடைய 82வது வயதில் கிடைத்திருக்கிறது. என்னுடைய வாழ்த்தை அவருடைய தகவல் பெட்டியில் விட்டிருக்கிறேன்.

இப்பொழுது யோசிக்கும்போது ஒரு முக்கியமான விசயம் நினைவுக்கு வருகிறது. இவர்தான் தற்கால சிறுகதைகளின் அரசி. அவர் சொன்னார் தான் சிறுகதைகளை எழுதி முடிவுக்கு கொண்டு வரும்போது குறைந்தது மூன்று முடிவுகளைப்பற்றி தீர ஆலோசிப்பாராம். சில சிறுகதைகளை 6 மாதகாலமாக எழுதி பின்னர் தூக்கிப்போட்டிருக்கிறார். சிறுகதை எழுத்தாளருக்கு நோபல் பரிசு கொடுப்பதில்லை. அலிஸ் மன்றோவுக்கு கொடுத்ததன் காரணம் இப்போது புரிகிறது.

2006ல் அவர் பற்றி நான் எழுதிய கட்டுரை.                             

 

ஆயிரம் பொன்

                                   அ.முத்துலிங்கம்

       பிரபலமான தமிழ் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை ஒன்று உண்டு. ஏற்கனவே புத்தகம் போட்ட எழுத்தாள நண்பர்கள் தங்கள் புத்தகங்களை இலவசமாக அனுப்பி வைப்பார்கள். ஆரம்ப எழுத்தாளர்களும் தங்கள் படைப்புகளைத் தந்து கருத்து கேட்பார்கள். வாசகர்கள் தங்கள் கையெழுத்துப் பிரதிகளை அனுப்புவார்கள். எல்லோருக்கும் பதில் எழுதவேண்டும்.

       ஆங்கில எழுத்தாளர்களுக்கும் இதே தொல்லை உண்டு என்பதை சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கண்டுபிடித்தேன். சிலர் தங்கள் சிறுகதைகளை எப்படி பிரசுரம் செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்கள். வேறு சிலர் ஆசிரியருடைய மின்னஞ்சல் முகவரியை அறியத் துடித்தார்கள். இன்னும் சிலர், என் கண்ணுக்கு முன்னாலேயே பெரிய கட்டு ஒன்றை தூக்கிக் கொடுத்து வீட்டிலே போய் படித்துப் பார்க்கச் சொன்னார்கள்.

       இந்தச் சோதனை சோமர்செட்மோம் காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. அவர் இங்கிலாந்தில் வசித்த சமயம் அமெரிக்காவில் இருந்து இளம் எழுத்தாளர்கள் நாவல்கள் எழுதி அனுப்பிவைப்பார்கள். அவர் வாழ்ந்த காலத்தில் கடிதத்தை பெறுபவரே கட்டணம் செலுத்தவேண்டும். தொக்கையான பேப்பர் கட்டுகள் எல்லாம் வரும். சோமர்செட்மோம் பாவம் காசு கட்டி அதை தபால்காரரிடம் இருந்து மீட்பார். அது மாத்திரமல்ல, அதைப் படிக்கும் கஷ்டமும் அவர் தலையிலேயே விடியும்.

       நான் கலந்துகொண்ட கூட்டத்தில் இருந்த ஒரு எழுத்தாளர் குதிரையில் இருப்பவர் போல உயரமாக இருந்தார். பேசும் குரலில் இல்லாமல், பாடும் குரலில் அவர் பிரசங்கம் செய்தார். மற்றவர்கள் அவரைச் சுற்றி நின்று கேட்டார்கள். வாசகர்களிடமிருந்து தப்புவதற்கு அவர் வழி வகைகள் சொல்லிக்கொண்டிருந்தார்.

       'ஒரு நாள் எனக்கு கூரியரில் பார்சல் ஒன்று வந்தது. உள்ளே முன்பின் தெரியாத ஒருத்தர் 600 பக்க நாவல் ஒன்றை அனுப்பியிருந்தார். எழுத்துரு 8 சைசில் குறுக்கி குறுக்கி அச்சடிக்கப்பட்டிருந்தது. ஒரு லைன் போய்விடும் என்ற ஏக்கத்தில் பாரா பிரிவுகளைக் கூட அவர் கஞ்சத்தனமாகவே செய்திருந்தார். நான் முதலாம் பக்கத்தை வாசிக்கத் தொடங்கினேன். எல்லா எழுத்துக்களும் எறும்பு ஊர்வதுபோல ஓடின. நாவலின் தலைப்புக்கூட நீண்டது. 'என் தகுதிக்கு மீறிய ஆசைகளும், என் தகுதிக்கு குறைந்த காதல்களும், என் தகுதிக்கு சரியான தோல்விகளும்.' தலைப்பை வாசிக்கவே மூச்சு வாங்கியது. இருபது பக்கம் படித்த பிறகுதான் கதையை சொல்வது ஒரு பூனை என்று தெரியவந்தது. சகாரா பாலைவனத்தை கடந்துவிடலாம் ஆனால் அந்த எழுத்தை கடக்க முடியாதுபோல தோன்றியது. நான் அந்த ஆரம்ப எழுத்தாளருக்கு இப்படி ஒரு கடிதம் வரைந்தேன்.

              அன்புள்ள நண்பரே,

              உங்களுடைய இணைப்புக் கடிதத்தில் நாவல் ஒன்றை அனுப்புவதாக கூறியிருந்தீர்கள். கிடைக்கவில்லை. அச்சடித்த காகிதக் கட்டு ஒன்றுதான் வந்திருந்தது. நாவல் கிடைத்ததும் பதில் எழுதுவேன்.

 

       அவர் சொன்னதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். அந்தக் கடிதத்துக்கு பிறகு அவருக்கு வரும் இலவச பிரதிகளும், புத்தகங்களும் கணிசமாக குறைந்துவிட்டனவாம்.

       இந்த எழுத்தாளர் சொல்வதில் சிறிது அளவு உண்மை இருக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு நாவல், நாலு சிறுகதைகள், 15 கவிதைகள் வந்தால் பாவம்  எழுத்தாளர் என்ன செய்வார். அதிலும் நாவல்கள் ஓர் இலையானின் ஆயுட்காலம்கூட நின்றுபிடிக்க முடியாதவை. எழுத்தாளர் தன் எழுத்து வேலையை துறந்து,  முழுநேர வாசிப்பில் இறங்கினால்கூட முடிகின்ற விசயமா இது.

       வாசகர்கள் கொடுக்கும் தொல்லையினாலோ, என்னவோ மேலைநாட்டு எழுத்தாளர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். வாசகர்களை அவர்கள் கிட்ட அணுகவிடுவதில்லை. வாசிப்பு கூட்டங்களில் சந்தித்தால் சரி, மற்றும்படி தொலைபேசிப் பேச்சோ, கடிதப் போக்குவரத்தோ கிடையாது. அப்படி தீவிரமாக அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.

       ஆனால் என் விசயம் வேறு. எழுத்தாளர்களை தேடுவது என் வேலை. அவர்களிடம் கற்றுக்கொள்ள எனக்கு எவ்வளவோ இருக்கிறது. சந்திப்பு முடிந்ததும் அதை கட்டுரையாக எழுதிவிடுவேன். சந்திக்காவிட்டாலும் ஒன்றும் பெரிய நட்டமில்லை. அந்த முயற்சியே பெரும் அனுபவம்தான். அதையும் கட்டுரையாக்கிவிடுவேன். யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.

       1973ம் ஆண்டு பீட்டர் மாத்தீஸன் என்ற இயற்கை விஞ்ஞானி நேபாளத்தின் இமயமலைப் பிரதேசங்களில் பனிச்சிறுத்தை என்ற அபூர்வமான விலங்கை தேடி அலைந்தார். உறையவைக்கும் குளிரில் மாதக் கணக்காக தேடியும் அந்த மிருகம் தென்படவில்லை. திரும்பியதும் அவர் தான் தேடி அலைந்த அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதினார். அதன் தலைப்பு 'Snow Leopard'. இறுதிவரை தான் காணாத ஒரு மிருகத்தின் பெயரையே சூட்டினார். அந்தப் புத்தகம் வெற்றி பெற்றது. பலர் அதை classic என்று வர்ணித்தார்கள். தோல்வியை வெற்றியாக்கிவிட்டார் மாத்தீஸன். அவருடைய நூலுக்கு 1979ம் ஆண்டு The National Book Award கிடைத்தது. 

      

       சுரா என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். எப்படி நீங்கள் பிரபலமான ஆங்கில எழுத்தாளர்களுடைய செவ்விகளை சுலபமாக பதிவு செய்துவிடுகிறீர்கள் என்று. அவருக்கு தெரியும் இந்த எழுத்தாளர்கள் தங்களைச் சுற்றி அத்தனை காவல் அரண்களை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள் என்று. இவர்களுடைய முகவரி கிடைக்காது. டெலிபோன் டைரக்டரியில் அவர்கள் பெயர் இருக்காது. மின்னஞ்சல் விலாசம் புதைக்கப்பட்டிருக்கும். ஒரு  பாதுகாப்பு வலயத்துக்குள் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அதுவே சுராவின் ஆச்சரியத்துக்கு காரணம்.

       நான் 'அது ஒரு ரகஸ்யம்' என்றேன். 'எப்படி?' என்றார். நான் சொன்னேன், 'முதலில், அவர்களுடைய மனைவிமார்களை பிடிக்கவேண்டும்.' சுரா சிரித்தார். அவர் இதை நம்பவில்லை.

       ரோபையாஸ் வூல்ஃப் என்பவர் தலைசிறந்த எழுத்தாளர். இவரை எழுத்தாளருக்கு எழுத்தாளர் என்று சொல்வார்கள். இவர் ஸ்டான்ஃபர்ட் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர்; புனைவு இலக்கியம் கற்றுக் கொடுப்பவர். இவருடைய செவ்வியை நான் சமீபத்தில் பதிவு செய்திருந்தேன். இவருக்கு கடிதம் மேல் கடிதம் எழுதினாலும் பதில் கிடைக்காது. ஒரு நாள் அவருடைய மனைவியிடம் இருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது, பேராசிரியர் வெளி மாநிலம் போயிருப்பதாக. நான் விடவில்லை. பேராசியருக்கு என்னை நினைவூட்டும்படி மனைவிக்கு கடிதம் எழுதத் தொடங்கினேன். தொல்லை தாங்காமல் ஒரு நாள் பேராசியரே தொடர்பு கொண்டார். பிறகு எல்லாமே சுலபமாகிவிட்டது.

       புக்கர் பரிசு பெற்ற மைகேல் ஒண்டாச்சி என்ற எழுத்தாளர் ரொறொன்ரோவில் இருக்கிறார். நான் இருக்கும் இடத்திலிருந்து இருபது மைல்களுக்கும் குறைவான தூரத்தில். இவரும் சந்திக்கமாட்டார், பதில் போடமாட்டார். இவருடைய மனைவி பெயர் லிண்டா. இவரை ஒரு விருந்தில் சந்தித்தேன். இவரிடம் நான் அவருடைய கணவரைச் சந்திக்க முடியாத அவலத்தை விவரித்தேன். அவர் என்னுடைய பெயரைக் கேட்டார். சொன்னேன். அந்தப் பெயர் தன்னுடைய ஞாபக சக்திக்கு சவாலாக இருக்கிறதென்றார். என்னுடைய பெயரை அவருடைய வசதிக்காக பாதியாக தறித்து முத்து, முத்து என்றால் pearl என்று சொல்லித் தந்தேன். அன்று அந்த விருந்து முடியும் வரை அந்த நல்ல பெண் ஒரு நாலாம் வகுப்பு மாணவிபோல என்னுடைய பெயரை மனனம் செய்தபடியே இருந்தார்.

       இப்படி பல யுக்திகள் என் கைவசம் இருந்தன. ஆனால் இவை எல்லாம் அலிஸ் மன்றோவின் முன் அடிபட்டுப் போய்விட்டன. அவரே ஒரு மனைவி. அவரை பிடிக்க நான் யாரைப் பிடிப்பது.

       நான் கனடாவுக்கு வந்த காலம் தொட்டு சந்திக்க விரும்பிய கனடிய எழுத்தாளர் அலிஸ் மன்றோ. இவரிலே எனக்கு பெரும் மதிப்பு இருந்தது. இன்று உலகிலே எழுதும் சிறுகதை எழுத்தாளர்களில் இவர் முன்னணியில் இருக்கிறார். பெண்களின் விடுபடல் பற்றியே பெரும்பாலும் பேசும் இவருடைய சிறுகதைகள் விரலினால் தொட்டு சொல்லமுடியாத ஒருவகையான நெகிழ்வை ஏற்படுத்திவிடும். புதுமைப்பித்தன் போல, Jorge Luis Borges போல இவர் சிறுகதைகளை மட்டுமே எழுதுவார். இவரிலே உள்ள சிறப்பு இத்தனை வயதாகியும் இவருடைய எழுத்தில் இளமை குன்றவில்லை. ஒரு சிறுகதையை எழுதி முடிப்பதற்குள் அவருடைய வயது அரை வருடம் கூடிவிடும். வயதேறும்போது சிலபேருடைய எழுத்து தரம் குறைந்துபோகும். இவர் விசயத்தில் அப்படி இல்லை. ஒவ்வொரு சிறுகதையும் அவர் அதற்கு முன் எழுதியதை வென்றுகொண்டே இருக்கும். இது அவ்வளவு சுலபமில்லை. ஏனென்றால் சிறுகதையை ஓர் அளவுக்கு மேலே தீட்ட முடியாது. இவர் என்றால் மிகவும் சாதுர்யமாக அதை செய்துகொண்டே இருக்கிறார்.

       இவருக்கு கிடைத்த பரிசுகளை பட்டியலிட்டால் அதுவே ஒரு பக்கத்துக்கு மேலே வரும். ஆளுநர் பரிசை மூன்று முறையும், கனடாவின் அதி உயர் இலக்கியப் பரிசான கில்லெர் விருதை இரண்டு தடவையும் பெற்றவர். உலக அளவில் பொதுநல நாடுகள் எழுத்தாளர் பரிசு, ஓ ஹென்றி பரிசு, ஸ்மித் இலக்கியப் பரிசு, ரில்லியம் புத்தகப் பரிசு என்று எல்லாவற்றையும் இவர் பார்த்துவிட்டார். இது தவிர National Book Critics Circle Award ம்,  US National Arts Club பரிசும் சமீபத்தில் இவருக்கு கிடைத்திருக்கிறது. இவர் எழுதிய புத்தகங்களில் அதிகம் பேசப்பட்டது Runaway சிறுகதைத் தொகுப்பு. இதற்குத்தான் 2004ம் வருடம் கனடாவில் கில்லெர் விருது கிடைத்தது.  

 

       இருபது வருடங்களுக்கு முன்னர் நான் ஒரு பயிலரங்கில் கலந்துகொண்டேன். கொடையாளர்களுடன் சந்திப்பதற்கான பயிற்சி எங்களுக்கு கொடுக்கப்பட்டது.

       'பல நாள் முயற்சிக்கு பின் உங்கள் காதலியை முதன்முதலாக சந்திக்கிறீர்கள். நீங்கள் மறக்காமல்  செய்ய வேண்டியது என்ன?' பயிற்சியாளர்  என்னைத்தான் கேட்டார். நான் கடவு எண்ணைத் தொலைத்ததுபோல திருதிருவென்று முழித்தேன். நான் எங்கே காதலியை கண்டேன்? என்றாலும் அழுத்தமான முத்தம் கொடுக்கவேண்டும் என்று அழுத்தி சொன்னேன். பிழை, ஒரேயொரு சரியான பதில்தான் உண்டு. காதலியுடனான அடுத்த சந்திப்புக்கு நீங்கள் ஒரு காரணம் உண்டாக்கவேண்டும். முதல் சந்திப்பின் வேலை அடுத்த சந்திப்புக்கு அடிபோடுவதுதான்.

       பீட்டர் செல்லர்ஸ் நடித்த 'விருந்து' படத்தின் கடைசிக் காட்சி ஞாபகத்தில் இருக்கும். முதல் சந்திப்புக்கு பிறகு காதலனும் காதலியும் பிரிகிறார்கள். காதலன் 'இதோ உங்கள் தொப்பி' என்கிறான். காதலி சொல்கிறாள் 'நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.' அவன் சொல்கிறான் 'இந்த தொப்பியை கொடுப்பதற்கு நாளைக்கு என்ன நேரத்துக்கு நான் வரட்டும்.'

       இதுதான் சூக்குமம். ஒரு பிரபலமான எழுத்தாளரைச் சந்திக்கும்போதும் இதே முறையைதான் கையாள வேண்டும். அடுத்த சந்திப்புக்கு ஒரு சாக்கு உண்டாக்கவேண்டும். அவரே உங்களைத் தொடர்பு கொள்வது மாதிரி செய்தால் உத்தமம். முதலாவது தொடர்பிலும் பார்க்க  இரண்டாவது சந்திப்பு முக்கியம்.

       பலவிதமான தந்திரங்களை பிரயோகித்து அலிஸ் மன்றோவை சந்திப்பதற்கு நான் எடுத்த அத்தனை முயற்சிகளும் படுதோல்வியில் முடிந்தன. இவருக்கு அனுப்பிய கடிதங்கள் இவரிடம் போய் சேர்ந்ததற்கான அடையாளமே  இல்லை.

       ஒரு முறை இவர் கொடுத்த செவ்வி ஒன்றை பத்திரிகையில் படித்தேன். அதில் இப்படி சொல்லியிருந்தார். 'கடந்த இருபது வருடங்களில் இன்னொருவருடைய தேவையை மதித்து நான் செயல்படாத நாள் ஒன்றுகூட இல்லை. என் எழுத்து வேலைகள் அவற்றை சுற்றித்தான் நடக்கின்றன.'

       நான் இதைப் பிடித்துக் கொண்டேன். அன்றே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். 'உங்கள் செவ்வியை படித்தேன். ஒரு நாளில் ஒருவருக்காவது நீங்கள் உதவி செய்வீர்கள் என்று அறிகிறேன். இன்று என்னுடைய முறை. என்னுடைய தேவைகளுக்கு இன்றைய நாளை ஏன் ஒதுக்கக்கூடாது.' இப்படி எழுதியதும் வழக்கம்போல மறந்துவிட்டேன்.

       கனடாவில் வசிப்பவர்களுக்கு ஒரு நிரந்திரமான துன்பம் உண்டு. நுளம்புக் கடி, கரப்பான் பூச்சி, இலையான் தொல்லை, இப்படி அல்ல. இவற்றிலும் பார்க்க மோசமானது, சந்தைப்படுத்துவோர் படுத்தும் பாடு. தொலைபேசி மூலம் விற்பனைக்காரரும், கடன் அட்டைக்காரரும், புள்ளிவிபர கணக்கெடுப்பாளர்களும் தொல்லைப் படுத்துவார்கள். அதுவும் ஓய்வு நாள் என்றால் உங்கள் நிம்மதி போய்விடும்.

       ஒரு நாள் அதிகாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இந்த நேரத்தில் என்னை ஒருவரும் கூப்பிடமாட்டார்கள். கைபேசியை எடுத்ததும் ஒரு குரல் என் முழுப்பெயரையும் உச்சரித்தது. அந்த புது உச்சரிப்பில் என் பெயரைக் கேட்டபோது அதுதான் என் பெயர் என்பது எனக்கே மறந்துவிட்டது; என் பெயர் அப்படி ஒரு சத்தம் கொடுக்காது. எடுத்த எடுப்பில் 'என்ன வேண்டும்?' என்றேன்.

       'நான் அலிஸ் மன்றோ' என்றார். அடுத்த கணம் நான் உருகிப்போனேன். என் காதுகளை நம்பமுடியவில்லை. நான் என்ன செய்கிறேன் என்று வினவினார். எதற்காக அவரை பார்க்கவேண்டும் என்றார். கிடைத்த அவகாசத்தில் நான் அவருடைய நீண்டகால வாசகன் என்றும், அவர்மேல் மிக்க மதிப்பு கொண்டிருக்கிறேன் என்றும், அவரை செவ்வி கண்டு ஒரு பத்திரிகைக்கு எழுத வேண்டும் என்றும், அவரை முதன்முதலாக தமிழுக்கு அறிமுகம் செய்யவேண்டும் என்றும் கூறினேன். அவர் கலகலவென்று சிரித்தார். ஒவ்வொரு வசனத்தின் முடிவிலும் முற்றுப்புள்ளிக்கு பதிலாக ஒரு சிரிப்பு சிரித்தார். 17 வயதுப் பெண்ணின் சிரிப்பு. 74 வயதுப் பெண்மணி என்று எனக்குத் தோன்றவே இல்லை. அவர் குரலில் இருந்த உற்சாகமும், சிரிப்பும், கருணையும் என்னால் என்றும் மறக்க முடியாததாக அமைந்தது.

       'நான் ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ளுகிறேன். திரும்பி வந்தவுடன் உங்களை தொடர்பு கொள்வேன்' என்றார். அது மாத்திரமல்ல, அவருடைய தொலைபேசி எண்ணையும், தன்னுடைய ஏஜண்டின் பெயரையும், அவருடைய முகவரியையும் தந்தார். அவர் சொல்லச் சொல்ல நான் எழுதினேன். அதன் பிறகு டெலிபோன் மௌனமானது.

       பல தடவைகள் அவர் கொடுத்த இலக்கத்தை அழைத்தபோது தொலைபேசி நேராக பதில் மெசினுக்கு போய்விடும். நான் தகவலை விடுவேன். அதற்கு எதிர்வினையே இல்லை. அவருடைய ஏஜண்டுக்கு கடிதம் எழுதுவேன். அது போன வேகத்திலேயே திரும்பிவிடும். சிரித்து சிரித்து பேசும் இந்த அருமையான பெண் என்னை ஏமாற்றுவதற்காகவா இப்படிச் செய்தார். நான் அதை நம்பத் தயாராக இல்லை.

       கனடாவில் இருந்து ஒருவருக்கும் இதுவரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. அது கிடைக்குமானால் அதற்கு தகுதியானவர்  மார்கரெட் அற்வூட். அவருக்கு அடுத்தபடி அலிஸ் மன்றோ என்கிறார்கள்.

       இவருடைய எழுத்தின் விசேஷம் காலத்தை முன்னும் பின்னும் மாற்றிப்போட்டு எழுதுவது.  எப்பொழுதும் கிராமத்துப் பின்னணியில் எழுதுவதே இவருக்குப் பிடிக்கும். தன்னுடைய பழைய கதைகளை திருப்பி படிக்கும்போது சில வசனங்கள் அழகாக செதுக்கப்பட்டு, அதி நேர்த்தியாக இருப்பதாக சொல்கிறார். இப்பொழுது எழுதும்போது, அப்படியான வசனங்கள் வரும் இடங்களை எல்லாம் தான் அடித்துவிடுகிறாராம். எழுதுவதற்கு உட்கார்ந்தால் இரவிரவாக எழுதுகிறார். அந்த இரவு தான் இறந்துபோகக்கூடும் என்பதுபோல செயல்படுகிறார்.

        என்னிலும் பார்க்க முயற்சிகூடிய ஒரு நிருபர் அவரை மடக்கி கேள்வி ஒன்று கேட்டார். 'நீங்கள் எழுதும் கதைகளில் உங்கள் பெற்றோர்கள் இருக்கிறார்கள். ஆனால் பிள்ளைகள் இல்லை. அது ஏன்?' அவர் 'என் பெற்றோர்கள் இறந்துவிட்டார்கள், ஆனால் பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்கள். முதியோர் இல்லத்தில் அவர்கள் என்னை வந்து பார்க்கவேண்டும் அல்லவா?' என்றார் நகைச்சுவையாக.        இவருடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றிப்போட்ட ஒரு சம்பவம் இவர் பல்கலைக்கழகத்தில் படித்தபோது நடந்தது. ஓரு மாணவன் இனிப்பை கடித்து சாப்பிட்டபோது ஒரு துண்டு உடைந்து கீழே விழுந்தது. 'நான் சாப்பிடுகிறேன்' என்று அந்த துண்டை அலிஸ் எடுத்தார். அந்த மாணவனுடைய பெயர் ஜேம்ஸ் மன்றோ. அவனைக் காதலித்து, உடனேயே மணம் புரிந்து தன் பெயரை அலிஸ் மன்றோ என்று மாற்றி, படிப்பையும் பாதியிலே நிறுத்தினார். இனிப்பிலே ஆரம்பித்த காதல் கசப்பாகி வெகு விரைவிலேயே மண முறிவு ஏற்படும் என்பதை அவர் அப்போது அறியவில்லை.

 

       ரொறொன்ரோ Harbourfront மையத்தில் எழுத்தாளர் கூட்டத்தில் அலிஸ் மன்றோ வாசிப்பதாக விளம்பரங்கள் வெளியானதும் நான் பதற்றமானேன். தான் எழுதிய ஒரு புத்தகத்தில் இருந்து இரண்டு பக்கங்கள் வாசிப்பார். அவ்வளவுதான். அதற்கு டிக்கட் $35. எப்படியும் அந்தக் கூட்டத்துக்கு போகலாம் என்று முன்கூட்டியே பணம் கட்டுவதற்கு தொலைபேசியில் அழைத்தால் எல்லா டிக்கட்டுகளும் முடிந்துவிட்டன.

       அலிஸ் மன்றோவுடன் உட்கார்ந்து விருந்து சாப்பிடுவதற்கு $150 என்றார்கள். இந்தக் கட்டணம் என்னுடைய பட்ஜெட்டுக்கு மிகவும் மேலே.  சரி, இதை விடக்கூடாது என்று என்னுடைய பெயரைக் கொடுத்தேன். எல்லா டிக்கட்டுகளும் இரண்டு வாரங்கள் முன்பாகவே விற்றுத் தீர்ந்துவிட்டனவாம். ஒரு எழுத்தாளருக்கு இது எத்தனை பெரிய கௌரவம் என்று நினைக்க நினைக்க பெருமையாக இருந்தது.

       எனக்கு தெரிந்த வித்தைகள் அனைத்தையும் பயன்படுத்தியும் அலிஸ் மன்றோவின் செவ்வி இதுவரை கிடைக்கவில்லை. அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகள் நிறைய இருந்தன. பீட்டர் மாத்தீஸன் நேபாளத்து மலைகளில் பனிச்சிறுத்தையை தேடி அலைந்ததுபோல நானும் அவருடைய சந்திப்புக்காக அலைந்ததுதான் மிச்சம்.

       கனடாவில் எழுத்தாளர்கள் தங்களுக்கு அமைக்கும் தற்காப்பு வியூகத்திலும் பார்க்க ஆச்சரியம் கொடுப்பது சபைகளில் அவர்களுக்கு தரப்படும் மரியாதை. ஒரு பிரபலமான சினிமா நடிகைக்கு கிடைப்பதுபோல, அரசியல்வாதிக்கு கிடைப்பதுபோல, விளையாட்டு வீரருக்கு கிடைப்பதுபோல சமூகத்தில் இவர்களுக்கு நிறைய கௌரவம் உண்டு. ஒரு எழுத்தாளனுக்கு செய்யும் சிறப்பை வைத்து அந்த நாட்டை மதிப்பிடலாம் என்பார்கள். அந்த வகையில் கனடா எனக்கு தரும் மகிழ்ச்சி சொல்லும் தரமல்ல.

       இன்னொரு விதத்தில் துயரமும் இருந்தது. எழுத்தாளர்கள், வாசகர்களிடமிருந்து தூர விலகிப் போகிறார்கள். அலிஸ் மன்றோ என்னை மறந்து போயிருப்பாரோ என்று நினைக்கிறேன். சிரித்து சிரித்துப் பேசும் இந்த முதிர் பெண்மணி என்னை ஏமாற்ற ஒருபோதும் விரும்பியிருக்கமாட்டார். அதிகாலையில் அடிக்கும் ஒரு தொலைபேசிக்காக நான் காத்திருக்கிறேன். இரண்டு வருடமாக. டெலிபோன் வந்தால் ஆயிரம் பொன். வராவிட்டால் என்ன? அதுவும் ஆயிரம் பொன்.

http://amuttu.net/viewArticle/getArticle/331

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா, நீ வென்றுவிட்டாய்.

 

alicemunro_muthulingam.jpg

           

ஓர் எழுத்தாளரைப் பற்றி நினைக்கும்போது மனதில் என்ன தோன்றுகிறது? அதுதான் முக்கியம். அலிஸ் மன்றோ பற்றி நினைத்துப் பார்த்தபோது அவருடைய கலகல சிரிப்பொலிதான் ஞாபகத்துக்கு வந்தது. பேசிவிட்டு சிரிப்பார் அல்லது சிரித்துவிட்டு பேசுவார். நான் சந்தித்தபோது அவருக்கு வயது எழுபத்தைந்து. குழந்தைப் பிள்ளைபோல சிரிப்பு. இன்று, 82 வது வயதில், 2013ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைத்துள்ளது. ஏழு வருடங்களுக்கு முன்னர் ஓரு காலை நேரம் அவர் என்னை தொலைபேசியில் அழைத்தார். கனடாவில் சந்தைக்காரர்கள் அதிகாலையிலேயே தங்கள் வேலையை ஆரம்பித்துவிடுவார்கள். தொலைபேசியில் ’நீங்கள் இதை வாங்குங்கள். உங்களுக்கு மட்டும் 50 வீதம் கழிவு கிடைக்கும்’ என்று தொந்திரவு கொடுப்பார்கள். நான் அசட்டையாக டெலிபோனை எடுத்து ’என்ன வேண்டும்?’ என்று கேட்டேன். அப்பொழுது அவர் ’நான் அலிஸ் மன்றோ பேசுகிறேன்’ என்றார். அவர் வெளிநாடு போவதால் திரும்பி வந்ததும் எனக்கு ஒரு செவ்வி தருவதாக ஒப்புக்கொண்டார். அவருடைய தொலைபேசி எண்ணை தந்தபோது கிட்டத்தட்ட நேர்காணல் முடிந்துவிட்டது என்று மகிழ்ச்சியில் திளைத்தேன்.

 

அது எத்தனை தவறு. அவர் கொடுத்த கெடு தாண்டியதும் அவருடைய தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் விட்டேன். பதில் இல்லை. மறுபடியும் தகவல் விட்டேன் பதில் இல்லை. நான் விட்ட தகவல்கள் எல்லாம் ஒன்றன்மேல் ஒன்றாக கிடந்தன. அவர் தகவல்களைக் கேட்பதில்லை என்ற விசயம் எனக்கு பின்னர்தான் தெரியவந்தது. நேர்காணல் தள்ளிப்போனது. அந்தச் சமயம் அவருடைய கூட்டம் ஒன்று பற்றி பேப்பரில் விளம்பரம் வந்தது. 35 டொலர் நுழைவுக்கட்டணம் கொடுத்து அந்தக் கூட்டத்துக்கு போனேன். எப்படியும் அவரைச் சந்தித்து நேர்காணல் செய்யவேண்டும் என்பதே என் நோக்கம். ’ஒருநாளைக்கு ஒரு நன்மையாவது செய்யவேண்டும்.’ இது அவருடைய மந்திரம் என்பதைப் படித்திருந்தேன். கூட்டம் முடிந்ததும் அவருடைய மந்திரத்தை ஞாபகப் படுத்தியதும் உடனேயே சம்மதித்தார். அப்படியே அவருடைய நேர்காணலை அடுத்த நாள் டெலிபோன்மூலம் நடத்தி முடித்தேன்.

 

அந்தக் கூட்டத்தில் உரையாற்றும்போது அலிஸ் மன்றோ சொன்ன ஒரு விசயம் ஆச்சரியமூட்டியது. ‘எழுத்து எழுத்து என்று இவ்வளவு காலமும் ஓட்டிவிட்டேன். இனிமேல் எழுதுவதை நிறுத்தப்போகிறேன். என்னாலே என் அலுவல்களைக் கவனிக்க முடியவில்லை. அந்தந்த மருந்துகளை அந்தந்த நேரத்துக்கு எடுக்கவேண்டும். தேகப்பியாசம் செய்வது, வீட்டைத் துப்புரவாக்குவது, சமைப்பது, குப்பைகளை அகற்றுவது எல்லாமே பெரும் சுமையாகத் தெரிகிறது’ என்றார். என்னால் நம்பமுடியவில்லை. எழுத்தாளரால் எப்படி எழுதுவதை நிறுத்தமுடியும். எழுதுவதுதானே அவர் மூச்சு. நான் நினைத்தது சரிதான். எழுதுவதை நிறுத்தப்போகிறேன் என்ற உரைக்கு பின்னர் அவர் எழுதி மூன்று புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. எழுத்தாளரால் எழுதுவதை நிறுத்தவே முடியாது.  ‘Dear Life’ என்ற தொகுப்புதான் தன்னுடைய கடைசி நூல் என்று அலிஸ் மன்றோ சொல்லியிருக்கிறார். அதை அவசரப்பட்டு நம்பக்கூடாது.

 

அவருக்கு  கிடைத்த பரிசுகளை பட்டியலிட்டால்அதுவேஒருபக்கத்துக்குமேலேவரும். ஆளுநர்பரிசைமூன்றுமுறையும், கனடாவின்அதிஉயர்இலக்கியப்பரிசானகில்லெர்விருதைஇரண்டுதடவையும்பெற்றவர். உலகஅளவில்பொதுநலநாடுகள்எழுத்தாளர்பரிசு,  ரில்லியம்புத்தகப்பரிசுஎன்றுஎல்லாவற்றையும்இவர்பார்த்துவிட்டார். இதுதவிர மான் புக்கர் சர்வதேச விருது 2009ம் ஆண்டு கிடைத்தது. இப்பொழுது இலக்கியத்தின் அதி உச்சமான நோபல் பரிசும் கிடைத்துவிட்டது. கடந்த பத்து வருடங்களாக எதிர்பார்த்த விருது இது.  இலக்கியத்துக்காக கனடிய எழுத்தாளர் ஒருவருக்கு கிடைத்த முதல் நோபல் பரிசு. ( ஸோல் பெல்லோவுக்கும் இலக்கியத்துக்காக நோபல் பரிசு கிடைத்தது. ஆனால் அவர் கனடாவில் பிறந்த அமெரிக்க எழுத்தாளர்.) இலக்கியத்துக்காக நோபல் பரிசுபெற்ற 13வதுபெண் எழுத்தாளர்.    இவர் புதுமைப்பித்தனைப்போல, Jorge Luis Borges போல சிறுகதைகள் மட்டுமே முக்கியமாக எழுதியவர்.  நோபல் பரிசு அங்கீகாரம் சிறுகதை இலக்கியத்துக்கு கிடைத்த அங்கீகாரம்.

 

அவரிடம் நான் ஒருமுறை கேட்டேன். ’உங்களுடைய சிறுகதைகளைப் படிக்கும்போது அழகான வசனங்களின் கீழே அடிக்கோடிடுவேன். ஆனால் சமீபத்தில் நீங்கள் ஓரிடத்தில் உங்கள் கதைகளில் அழகான வசனங்கள் வரும் இடங்களை வெட்டிவிடுவீர்கள் என்று படித்திருக்கிறேன். அது உண்மையா?’ அவர் சொன்னார். அழகான வசனம் அல்ல. கெட்டிக்காரத்தனமாகத் தோன்றும் வசனம். அல்லது திரும்பத்திரும்ப மினுக்கப்பட்ட அலங்காரமான வசனம். அவற்றை நான் விரும்புவதில்லை. அகற்றிவிடுவேன். காரணம் ஒரு கதையை சொல்லும்போது அந்தக் கதைதான் முக்கியம். ஓர் அலங்காரமான வசனம் வாசகருடைய கவனத்தை கதையின் மையத்திலிருந்து திருப்பிவிடும். ஆனால், கதை முடிவை நோக்கிச் செல்லும்போது வசன அமைப்பு முக்கியமாகிறது. அந்த வசனம் சொல்வது அதில் உள்ள வார்த்தைகளின் சேர்க்கையிலும் பார்க்க அதிகமாக இருக்கவேண்டும். அதை வரவேற்பேன். ஒரு வசனம் அது சொல்ல வந்ததிலும் பார்க்க கூடச்சொல்லவேண்டும். ஆனால் வன்னவேலை எனக்கு பிடிக்காது.’ அப்பொழுது நான் ‘நீங்கள் வெட்டியெறிந்த வசனங்களையெல்லாம் எனக்கு தரமுடியுமா?’ என்று கேட்டேன். அவர் பெரிதாக சத்தம்போட்டு சிரித்தார்.

 

’நோபல் பரிசு புனைவு இலக்கியத்துக்கு மட்டும்தானே கொடுக்கிறார்கள். அது அவ்வளவு முக்கியமானாதா?’ என்று அவரை ஒருதடவை கேட்டேன். அவர் சொன்னார். ’புனைவிலே கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. செக்கோவை நான் எப்பொழுது வேண்டுமானாலும் படிப்பேன். சமீபத்தில் டோல்ஸ்டோயுடைய ’போரும் சமாதானமும்’ நூலை மறுபடி படிக்கத் தொடங்கியிருக்கிறேன். இது ஒருதடவை படித்துவிட்டு மூடிவைக்கும் சமாச்சாரம் அல்ல. புனைவு படிப்பதுதான் என்னுடைய மூளைக்கு வேலை கொடுக்கிறது. மனநிலையை தளரவைக்க அபுனைவு படிக்கிறேன். ஆதிகாலத்தில் இருந்து இன்றுவரை மனிதன் புனைவு இலக்கியத்தில்தான் நாட்டம் செலுத்தியிருக்கிறான். தலைமுறை தலைமுறையாக புனைவுக் கதைகள்தான் சொல்லியிருக்கிறான். எந்த மொழியிலும் பழம்பெரும் இதிகாசங்கள் எல்லாம் புனைவுதானே.’

 

அலிஸ் மன்றோவுடைய சிறுகதைகள் மிக நீண்டவை. ஆகவே தமிழ் மொழிபெயர்ப்பில் அவர் சிறுகதைகள் அதிகம் படிக்க கிடைப்பதில்லை. அவர் என்னிடம் கேட்டார். ‘என்னுடைய சிறுகதைகளை உங்கள் மொழியில் மொழிபெயர்ப்பது சுலபமா?’ நான் சொன்னேன். ‘மிக எளிது. உங்கள் வசன அமைப்பு தமிழில் மொழிபெயர்ப்பதற்கு இலகுவானது. ஆனால் உங்கள் கதைகள் நீண்டுபோய் இருப்பதால் அவற்றை பிரசுரிப்பது கடினம். உங்கள் கதைகளின் நீளம் 70 பக்கம், எங்கள் சிறுபத்திரிகைகளின் முழு நீளம் 60 பக்கம்தான்’ என்றேன். அவர் மறுபடியும் சிரித்தார்.

 

நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்ட செய்தியை அவரிடம் தெரிவிப்பதற்கு நோபல் கமிட்டியின் செயலாளர் ஸ்வீடனில் இருந்து தொலைபேசியில் அவரை அழைத்தார். வழக்கம்போல அலிஸ் மன்றோ டெலிபோனை எடுக்கவில்லை. ஆகவே 1.2 மில்லியன் டொலர் நோபல் பரிசு விவரத்தை செயலாளர் தகவல் மெசினில் விட்டார். இது ஒன்றும் அறியாத அலிஸ் மன்றோ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். நடு இரவு அவருடைய மகள் டெலிபோனில் அழைத்து. ’அம்மா, நீ வென்றுவிட்டாய்’ என்று கத்தியபோதுதான் அவருக்கு விசயம் தெரிந்தது.

 

நானும் செய்தி கிடைத்தபோது அலிஸ் மன்றோவை அழைத்து  தகவல் பெட்டியில் என் வாழ்த்தை தெரிவித்தேன். நோபல் கமிட்டி செயலாளர் விட்ட தகவலுக்கு மேல் என் தகவலும் காத்திருக்கும். எப்போதாவது ஒருநாள் அலிஸ் மன்றோ அதைக் கேட்பார்.

END

http://amuttu.net/category/dailyNote

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி பெருமாள்! :D

பகிர்வுக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.