Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உனக்கு தெய்வீகச் சிரிப்புய்யா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பெங்களூரில் வீடு கட்டிக் கொண்டிருந்த போது அனுமந்தா என்ற ஒரு மனிதருடன் பழக்கம் ஏற்பட்டிருந்தது. கன்னடத்தில் ஹனுமந்தாதான். ஆனால் கட்டட வேலை செய்தவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் என்பதால் அனுமந்தா ஆக்கிவிட்டார்கள். பழுத்த பழத்திலிருந்து, சித்தாள் வேலை செய்யும் பிஞ்சு வரைக்கும் எல்லோருக்குமே அனுமந்தாதான். பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். சில பெண்கள் மட்டும் அவரைக் கிண்டலடிப்பார்கள்- அனு, கண்ணு என்றெல்லாம். ‘எங்கிட்ட இதெல்லாம் வெச்சுக்காதீங்க..இழுத்து வெச்சு அறுத்து உட்டுடுவேன்...’ என்று அவர் கத்தினால் அடங்கிக் கொள்வார்கள். எதை அறுப்பார் என்று நாம் கன்ஃப்யூஸ் ஆகிவிடக் கூடாது என்பதற்காக ‘கொண்டையை....’ என்று முனகுவார். நாம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
கட்டடத்தில் போட்டு வைத்திருக்கும் இரும்பு, சிமெண்ட் மூட்டைகளுக்கு பாதுகாப்பாக இருக்கட்டும் என்று இஞ்சினியரே அனுமந்தாவைக் கொண்டு வந்து விட்டிருந்தார். அனுமந்தா சரியான காவல்காரன். நாற்பத்தைந்து வயது இருக்கும். மனிதர் நல்ல உயரம். ரகுவரனின் உயரத்தில் இருப்பார். அவரைப் போன்ற ஒற்றை நாடி உடம்பு. அதை ஒற்றை நாடி என்று கூட சொல்ல முடியாது. முக்கால் நாடிதான். நிறம் கூட ரகுவரனை ஒத்திருக்கும்தான்.  இப்படியே கற்பனை செய்து கொண்டு ஒரு ஹீரோவை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டாம். அனுவின் வாயில் இரண்டு பக்கமும் இருக்கும் புண் ஒரு கோரமான ‘லுக்’கை அவருக்கு கொடுத்துக் கொண்டிருக்கும். பக்கத்தில் நின்று பேச முடியாது. எங்கே பன்னீரைத் தெளித்துவிடுவாரோ என்று பயமாக இருக்கும்.
 
அனுமந்தா அப்பாவியான மனிதரும் கூட. வளர்ந்து கொண்டிருக்கும் கட்டடத்தின் பக்கத்திலேயே ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த அறையில் சிமெண்ட் மூட்டைகளை போட்டு வைத்திருப்பார்கள். அந்த சிமெண்ட் மூட்டைகளின் மீதாக அனுமந்தா படுத்துக் கொள்வார்.  மழை வந்தாலும் சரி, குளிரடித்தாலும் சரி. சிமெண்ட் மூட்டைதான் காணி. எவன் படுப்பான்? அனுமந்தா படுப்பார்.அவருக்கு சம்பளம் எல்லாம் கிடையாது. விடிந்ததிலிருந்து இருட்டுக் கட்டும் வரையில் கடும் வேலைகளை இழுத்துப் போட்டு செய்வார். மாலையில் இஞ்சினியரோ, மேஸ்திரியோ நூறு ரூபாய் கொடுப்பார்கள். வயிற்றுக்கு பெட்ரோல் ஊற்றிக் கொண்டு வந்து சிமெண்ட் மூட்டைகளின் மீது விழுந்துவிடுவார்.
 
கான்கிரீட் போடும் சமயங்களில் இரும்புக்கம்பிகளை எல்லாம் ஒரு சங்கிலியால் கட்டி சங்கிலின் மறு நுனியை தனது தொடையில் சேர்த்து இறுகிக் கொண்டு படுத்துக் கொள்வார். அவர் படுத்த பிறகு நாம் அந்தப் பக்கத்தில் போகவே கூடாது. யாரென்றே தெரியாமல் கல்லால் அடிக்க ஆரம்பித்துவிடுவார் என்பதால் பிரளயமே வந்தாலும் சரி- விடிந்த பிறகு போவதுதான் நம் உயிருக்கு உத்தரவாதம். இப்படி இருப்பதாலோ என்னவோ ‘அனுமந்தா இருந்தால் ஒரு ஆணி கூட காணாமல் போகாது’ என்று இஞ்சினியர் பெருமை பேசுவார். ஆனால் அனுமந்தாவுக்கு பணம் மட்டும் கொடுக்க மாட்டார்.
 
அனுமந்தாவுக்கு பெட்ரோல் அதிகமாக போன சமயங்களில் போதை தலைக்கேறி ‘ஏ சார்...பணம் கொடி சார்’ என்று இஞ்சினியரிடம் கத்துவார். இஞ்சினியர் சிரித்துக் கொண்டே நிற்பார். அப்படித்தான் நிற்கவேண்டும். இல்லையென்றால் அனுமந்தாவுக்கும் இருக்கும் போதைக்கு இஞ்சினியரை நாறடித்துவிடுவார்.  டீலிங் எல்லாம் அடுத்த நாள்தான் நடக்கும். ‘ என்கிட்ட உன் பணம் முப்பதாயிரம் இருக்கு. கொடுத்தா நீ தண்ணியடிச்சே நாசமாக போறியே..அதனாலதான் பத்திரமா வெச்சிருக்கேன்’ என்று இஞ்சினியர் சொல்லும் போது அனுமந்தா அமைதியாக நின்று கொண்டிருப்பார். இஞ்சினியர் கொஞ்ச நேரம் பேசிவிட்டு நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு போவார். அதோடு அவர்களின் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்.
 
ஒரு காலத்தில் அனுமந்தாவுக்கு குடும்பம் குட்டியெல்லாம் உண்டு. இப்பொழுது யாருமே இல்லை. எப்பவோ மனைவி இறந்து போனாராம். ‘எப்படி இறந்தார்?’ என்று ஒரு நாள் கேட்டுவிட்டேன். அழத் தொடங்கிவிட்டார். ‘அவ ஒரு தேவிடியா சார். எயிட்ஸ் வந்து செத்து போய்ட்டா’ என்று அழுது கொண்டிருந்தவரை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை. அமைதியாக நகர்ந்துவிட்டேன். அந்த மாலையில் போதையேற்றிவிட்டு வந்து விடிய விடிய அவளைத் திட்டிக் கொண்டே கிடந்தார். இதைக் கேட்டிருக்கவே வேண்டியதில்லை என்று தோன்றியது. அதன் பிறகு அவர் குடும்பத்தைப் பற்றி கேட்பதையே விட்டுவிட்டேன்.
 
சில நாட்களில் காலையிலேயே சரக்கடித்துவிட்டால் அவ்வளவுதான். கட்டடத்தில் ஒரு வேலையும் செய்ய மாட்டார். ‘என்ன மசுருக்குச் செய்யறேன்? இஞ்சினியர வரச் சொல்லு..அவன் பணமே தர்றதில்ல’ என்று கத்தத் தொடங்கினால் மயக்கம் வரும் வரைக்கும் கத்திக் கொண்டிருப்பார். பிறகு மாலை வரைக்கும் மணல் மீதோ செங்கல் மீதோ கிடப்பார். போதை தெளிந்தால் எழுந்து வந்து தனது ஆஸ்பெஸ்டாஸ் அறைக்குள் சென்று கவிழ்ந்துவிடுவார். அனுமந்தா இப்படி கத்தும் போது கலைஞரின் பழமொழிதான் ஞாபகம் வந்து தொலைக்கும். மற்றவர்களுக்கு ‘நான்’ ‘நீ’ என்னும் போதுதான் உதடுகள் ஒட்டாது. ஆனால் போதையில் இருக்கும் போது அனுமந்தாவுக்கு எந்தச் சொல்லுக்குமே உதடுகள் ஒட்டாது. கர்நாடகக் காரன் அல்லவா? வாயில் காவிரியும் பொங்கி வழியும். யாரும் எதிர்த்து பேச மாட்டார்கள். 
 
என்னதான் போதையேற்றிக் கொண்டாலும் வேலையில் மட்டும் அனுமந்தா கில்லாடி. காலையில் சூரியன் எழுந்து வருவதற்கு முன்பாகவே கட்டடத்திற்கு தண்ணீர் ஊற்றத் தொடங்கிவிடுவார். அனுமந்தா ஊரில் இருந்தால் கட்டடம் காயவே காயாது. தொடர்ந்து நனைத்துக் கொண்டேயிருப்பார். சந்தோஷத்தில் நூறு ரூபாய் கொடுத்தால் வேண்டாம் என்றுவிடுவார். ‘நீ எதுக்கு சார் கொடுக்குற? இஞ்சினியர்கிட்ட வாங்கிக்குறேன்’ என்று சொல்லிவிடுவார். கடும் போதையில் கூட அரைக்கல் செங்கற் சுவரின் மீது நின்று கொண்டு தண்ணீர் ஊற்றுவதை பார்த்திருக்கிறேன். ‘சலங்கை ஒலி’ கமலஹாசனின் நடனம்தான் ஞாபகம் வரும். நாற்பதடி உயரத்தில் இவரது சலங்கை ஒலியைப் பார்த்தால் நமக்கு நடுக்கம் வந்துவிடும். ‘அனுமந்தா...கீழ எறங்குய்யா’ என்றால் கெக்கபிக்கே என்று சிரிக்கத் தொடங்கிவிடுவார். நம்மை பயமுறுத்திப் பார்ப்பதில் அவருக்கு ஒரு சந்தோஷம். வேண்டுமென்றே ஒற்றைக்காலைத் தூக்கிக் கொண்டு நிற்பார். நமக்கு நடுங்கிவிடும். அதோடு வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டார். ‘சார் நான் விழுந்து செத்தால் அவ்வளவுதான். போலீஸூ, கேசுன்னு கட்ட வேலை நின்னுடும்’ என்று புளியைக் கரைத்துவிட்டு மீண்டும் கெக்கபிக்கேதான்.
 
பேசாமல் நகர்ந்துவிட வேண்டும் என்பதுதான் நமக்கிருக்கும் ஒரே வழி. எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்பதால் ‘ஆண்டவா அந்த மனுஷனை பத்திரமா கீழே இறக்கி உட்டுடு’ என்று வேண்டிக் கொள்வேன். ஆண்டவன் என்னைக் கைவிட்டதில்லை. ஒரு வழியாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கட்டட வேலை முடிந்துவிட்டது. 
 
கட்டட வேலை முடியும் தறுவாயில் அனுமந்தாவை வேறொரு கட்டடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். அதில் எனக்கு கொஞ்சம் வருத்தம்தான். கடைசி வேலை முடியும் வரைக்கும் அவர் இருக்க வேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால் நடக்கவில்லை. புதுமனை புகுவிழாவுக்காக வேலை செய்தவர்களுக்கு ஆளுக்கு ஒரு செட் துணி எடுத்து வைத்திருந்தோம். மற்றவர்கள் எல்லோரும் ஓரிரு நாட்கள் முன்பாகவே வந்து துணியை வாங்கிக் கொண்டார்கள். அனுமந்தாவை மட்டும் காணவில்லை. அனுமந்தாவுக்கு போன் எதுவும் கிடையாது. அவராக வந்தால்தான் உண்டு. சொல்லி அனுப்பியிருந்தோம். புதுமனை புகுவிழாவின் மதியம் வரைக்கும் காணவில்லை. இனிமேல் வரமாட்டார் என்று நினைத்துக் கொண்டிருந்த போது மதியத்திற்கு மேலாக வந்திருந்தார். துணியைக் கொடுத்துவிட்டு கையில் மூன்றாயிரம் ரூபாய் பணம் கொடுத்த போது வேண்டாம் என்றார். வலியுறுத்திக் கொடுத்த போது வாங்கிக் கொண்டார். வாயெல்லாம் பற்கள். சந்தோஷமாக இருந்தது. 
 
இனி மாதக்கணக்கில் போதையிலேயே கிடப்பார் என்று கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது. ஆனால் கொடுத்தாகிவிட்டது. அவ்வளவுதான். மறந்துவிட வேண்டும்.
 
அதன் பிறகு இஞ்சினியர் வந்திருந்தார். அனுமந்தாவுக்கு பணம் கொடுத்ததைத் தெரிந்து கொண்டு திட்டினார். அனுமந்தா குடித்துவிட்டுக் கிடந்தால் தனது வேலை பாதிக்கப்படும் என்பது அவரது கவலை. ‘யார் யாரை எப்படி நடத்தணுமோ அப்படி நடத்தணும்’ என்றார். எதுவும் பேசவில்லை. ‘லோ க்ளாஸ் சார் அவன். குடிச்சே சாவான்’ என்று சொல்லிவிட்டு போனார்.
 
வீட்டில் இருப்பவர்களும் அதையேதான் சொன்னார்கள். அனுமந்தா சாவதற்காக நான் பணம் கொடுத்துவிட்டதாகச் சொன்னார்கள். மூன்றாயிரம் ரூபாயில் ஒரு மனிதர் இறந்துவிடுவார் என்று தோன்றவில்லை. ஆனால் மற்றவர்கள் சொன்ன போது அப்படித்தான் இருந்தது. ஒருவேளை அனுமந்தா இறந்து போனால் அத்தனை பாவமும் எனக்குத்தான் வந்து சேரும் என்று நினைத்துக் கொண்டேன்.
 
இரவு கவியும் நேரத்தில் கதவைத் தட்டும் ஓசை. அனுமந்தாதான். கையில் மிகப்பெரிய பார்சல். சிரித்துக் கொண்டிருந்தார். எதுவுமே பேசாமல் பார்சலை நீட்டினார். வாங்கிக் கொண்ட போது பிரித்துப் பார்க்கச் சொன்னார். கடவுளின் படம். அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகளோடு இருந்தது. ‘எதுக்கு அனுமந்தா இதெல்லாம்?’ என்ற போது ‘என் ஞாவகமா இருக்கட்டும் வைங்க சார்’ என்றார். நம் புத்திதான் தெரியுமே. விலையைப் பார்த்தது. மூவாயிரத்து இருநூறு. வாங்கிய பணத்தோடு கூடுதலாக கைக்காசையும் போட்டு வாங்கி வந்திருக்கக் கூடும்.
 
வெட்கமாக இருந்தது. எளிய மனிதர்களை சர்வசாதாரணமாக எடை போட்டுவிடுகிறோம் என்று தோன்றியது. ஆனால் அனுமந்தா எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. வயிறாரச் சாப்பிட்டார். பிறகு போகும் போது ‘நூறு ரூவா கொடுங்க சார். ஒரு குவார்ட்டர் வாங்கறதுக்கு’ என்று சிரித்தார். அவர் அதுவரை என்னிடம் பணம் கேட்டதேயில்லை. முதல் முறையாக இப்பொழுதுதான் கேட்கிறார். அனேகமாக இதுதான் கடைசி முறையாகவும் இருக்கக் கூடும். இருநூறாகக் கொடுத்தேன். வாங்கி பாக்கெட்டில் வைத்தவர் என்ன நினைத்தாரோ திடீரென்று ஒரு நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். எதுவும் கேட்காமல் வாங்கிக் கொண்டேன். ‘பையனுக்கு பொம்மை வாங்கிக் கொடுங்க சார்’ சொல்லிவிட்டு சிரித்தார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன். அது ஏதோ தெய்வம் சிரிப்பது போலவே இருந்தது.
  • கருத்துக்கள உறவுகள்

எனது முதல் வேலையிலும் இப்படியான ஒரு மனிதர் இருந்தார்.. ஆள் இவ்வளவுக்கு நேர்மையானவர் இல்லை.. அதனால் சிமென்ட் வெற்றுப் பைகளையும் சேகரித்து வைக்கவேண்டும் என்று சட்டம் போட்டிருந்தோம்.. இது சிமென்ட் மூட்டைகள் ஏதாவது களவாடப் பட்டனவா என்பதை அறிவதற்காக..

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிபட்ட   சிலரால்தான் வேலை இடம் களைப்பு தெரியாமல் நடக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான மனிதரை இன்று வரை சந்தித்ததில்லை. :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.